அகநானூறு – தமிழ் உரை

தமிழ் உரை நூல்கள்:
அகநானூறு – ந. மு. வேங்கடசாமி நாட்டார் – தமிழ் மண் பதிப்பகம், சென்னை
அகநானூறு – பொ. வே. சோமசுந்தரனார்
அகநானூறு – புலியூர் கேசிகன்
அகநானூறு – ச.வே. சுப்பிரமணியன்

பாடல்கள் (11): 12, 28, 80, 86, 105, 122, 136, 147, 200, 203, 281

அகநானூறு 12, கபிலர், குறிஞ்சித் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
யாயே கண்ணினும் கடுங்காதலளே,
எந்தையும் நிலன் உரப் பொறாஅன் ‘சீறடி சிவப்ப
எவன் இல குறுமகள் இயங்குதி’ என்னும்,
யாமே பிரிவு இன்று இயைந்த துவரா நட்பின்
இரு தலைப் புள்ளின் ஓர் உயிர் அம்மே,  5
ஏனல் அம் காவலர் ஆனாது ஆர்த்தொறும்
கிளி விளி பயிற்றும், வெளில் ஆடு பெருஞ்சினை
விழுக்கோட் பலவின் பழுப் பயங் கொண்மார்
குறவர் ஊன்றிய குரம்பை புதைய,
வேங்கை தாஅய தேம்பாய் தோற்றம்  10
புலி செத்து  வெரீஇய புகர் முக வேழம்,
மழை படு சிலம்பில் கழை படப் பெயரும்,
நல் வரை நாட! நீ வரின்,
மெல் இயல் ஓரும் தான் வாழலளே.

பொருளுரை:  எங்கள் தாய்த் தன்னுடைய கண்களைவிட இவள்பால் மிகுந்த அன்பை உடையவள். எங்கள் தந்தை இவள் நிலத்தில் நடப்பதைப் பொறுக்காதவன். “ஏடி மகளே! உன் சிறிய அடிகள் சிவக்க எவ்வாறு நடக்கின்றாய்?” என்று கேட்பான். நானும் அவளும் இரு தலைப் பறவையைப் போல் ஓர் உயிர் கொண்டவர்கள்.  தினைப் புனத்தைக் காக்கும் அழகிய பெண்கள் விடாது ஆரவாரிக்கும் பொழுதெல்லாம் கிளிகள் தங்கள் இனத்தை அழைக்கும் இடத்தில், குறவர்கள் அணில் விளையாடும் கிளைகளையுடைய பெரிய பழங்களையுடைய பலா மரத்தின் பழங்களின் பயனைக் கொள்வதற்குக் குறவர்கள் நட்டிய குடிசை மறையும்படி தேன் சொட்டும் வேங்கை மலர்கள் பரவியதைப் புலி என்று நினைத்து அஞ்சி புள்ளியுடைய யானைகள் மேகங்கள் பொருந்திய மலைச் சரிவில் மூங்கில் முறிபட ஓடும் நல்ல மலைகளையுடைய நாடனே! நீ இரவு நேரத்தில் வந்தால் மென்மையான என் தோழி உயிர் வாழ மாட்டாள்!

சொற்பொருள்:  யாயே – தாயே, கண்ணினும் கடுங்காதலளே – தன்னுடைய கண்களைவிட இவள்பால் மிகுந்த அன்பை உடையவள், எந்தையும் – எங்கள் தந்தையும், நிலன் உரப் பொறாஅன் – இவள் நிலத்தில் நடப்பதைப் பொறுக்காதவன், சீறடி சிவப்ப – சிறிய அடிகள் சிவப்ப, எவன் – எவ்வாறு, இல குறுமகள் – ஏடி மகளே, இயங்குதி – நடக்கின்றாய், என்னும் – என்று கூறும், யாமே – நாங்கள், பிரிவு இன்று இயைந்த – பிரிவு இல்லாது ஒன்றிய, துவரா நட்பின் – துவர் இல்லாத நட்புடன், இரு தலைப் புள்ளின் ஓர் உயிர் – இரு தலைப் பறவையைப் போல் இரண்டு உடலுக்கு ஓர் உயிர், அம்மே – ஓர் அசைச் சொல், ஏனல் அம் காவலர் – தினைப் புனம் காக்கும் அழகிய பெண்கள், ஆனாது – ஓயாது, ஆர்த்தொறும் – ஆரவாரிக்கும் பொழுதெல்லாம், கிளி விளி பயிற்றும் – கிளிகள் தங்கள் இனத்தை அழைக்கும், வெளில் ஆடு – அணில்கள் ஆடும், பெருஞ்சினை – பெரிய கிளைகள், விழுக்கோட் பலவின் பழுப் பயங் கொண்மார் – பெரிய பழங்களையுடைய பலா மரத்தின் பழங்களின் பயனைக் கொள்வதற்கு, குறவர் ஊன்றிய குரம்பை புதைய – குறவர்கள் நட்டிய குடிசை மறைய, வேங்கை தாஅய – வேங்கை மரத்தின் மலர்கள் படர, தேம்பாய் – தேன் ஒழுகும், தோற்றம் – தோற்றம், புலி செத்து – புலி என்று நினைத்து, வெரீஇய – அஞ்சிய, புகர் முக வேழம் – முகத்தில் புள்ளிகள் உள்ள யானை, மழை படு – மேகங்கள் பொருந்திய, சிலம்பில் – மலைச் சரிவில், கழை படப் பெயரும் – மூங்கில் முறிபட விலகிச் செல்லும், நல் வரை நாட – நல்ல மலைகளையுடைய நாடனே! நீ வரின் – நீ வந்தால், மெல் இயல் – மென்மையான தலைவி, ஓரும் – ஓர் அசைச் சொல், தான் வாழலளே – இவள் வாழ மாட்டாள்

அகநானூறு 28, பாண்டிய மன்னன் அறிவுடைநம்பி, குறிஞ்சித் திணை – தோழி தலைவியிடம் சொன்னது , தலைவன் கேட்கும்படியாக
மெய்யின் தீரா மேவரு காமமொடு
எய்யாய் ஆயினும் உரைப்பல் தோழி
கொய்யா முன்னும் குரல் வார்பு தினையே
அருவி ஆன்ற பைங்கால் தோறும்
இருவி தோன்றின பலவே நீயே  5
முருகு முரண் கொள்ளும் தேம்பாய் கண்ணி
பரியல் நாயொடு பன்மலைப் படரும்
வேட்டுவற் பெறலொடு அமைந்தனை யாழ நின்
பூக்கெழு தொடலை நுடங்க எழுந்து எழுந்து
கிள்ளைத் தெள் விளி இடை இடை பயிற்றி  10
ஆங்காங்கு ஒழுகாய் ஆயின் அன்னை
சிறு கிளி கடிதல் தேற்றாள் இவள் எனப்
பிறர்த் தந்து நிறுக்குவள் ஆயின்
உறற்கு அரிது ஆகும் அவன் மலர்ந்த மார்பே.

பொருளுரை:  ஒருவர் மெய்யிலிருந்து ஒருவர் மெய் நீங்காதவாறு உள்ள உன்னுடைய காதலினால் நீ நிலைமையை அறியவில்லை. ஆனாலும், நான் உனக்கு நான் கூறுகின்றேன், தோழி! கேட்பாயாக!
நீர்ப் பாய்ச்சல் இல்லாத நம் தினைப் புனத்தில் உள்ள கொத்துக்களையுடைய நீண்ட தினைக் கதிர்களைக் கொய்வதற்கு முன், பச்சைத் தாள்களிடையே எல்லாம் உலர்ந்த தட்டைகள் பல தோன்றியுள்ளன. நீ, பல்வேறு நறுமணங்கள் உடைய தேன் பாயும் மலர் மாலையை அணிந்த, விரைந்து செல்லும் நாய்களுடன் பல மலைகள் வழியாக வேட்டையாடி வரும் உன் தலைவனை எண்ணியபடி உள்ளாய். உன்னுடைய பூமாலை அசையும்படி நீ அவ்வப்பொழுது எழுந்து, கிளிகளை விரட்டுவதற்காகத் தெளிவாக இடையிடைய ஒலியை எழுப்பாது இருந்தாய் ஆனால், அன்னை, இவளுக்குக் கிளிகளை விரட்டுவதற்குத் தெரியாது என்று கருதி, பிறரைக் கொண்டு வந்து நிறுத்துவாள். அவ்வாறு அவள் செய்தால், நீ உன் தலைவனின் படர்ந்த மார்பை அணைத்து மகிழ முடியாது.

சொற்பொருள்:  மெய்யின் தீரா மேவரு காமமொடு எய்யாய் – ஒருவர் மெய்யிலிருந்து ஒருவர் மெய் நீங்காதவாறு உள்ள உன்னுடைய காதலினால் நீ நிலைமையை அறியவில்லை, ஆயினும் – ஆனாலும், உரைப்பல் தோழி – கூறுகின்றேன் தோழி, கொய்யா முன்னும் – கொய்வதற்கு முன், குரல் வார்பு தினையே – கொத்துக்களையுடைய நீண்ட தினைக் கதிர்கள், அருவி ஆன்ற – நீர்ப் பாய்ச்சல் இல்லாத, பைங்கால் தோறும் இருவி தோன்றின – பச்சைத் தாள்களிடையே எல்லாம் உலர்ந்த தட்டைகள் தோன்றுகின்றன, பலவே – பல தோன்றியுள்ளன, நீயே – நீ, முருகு முரண் கொள்ளும் தேம்பாய் கண்ணி – பல்வேறு நறுமணங்கள் உடைய தேன் பாயும் மலர் மாலை, பரியல் நாயொடு பன்மலைப் படரும் வேட்டுவற் பெறலொடு அமைந்தனை – விரைவான நாய்களுடன் பல மலைகள் வழியாக வேட்டையாடி வரும் உன் தலைவனை எண்ணியபடி உள்ளாய், யாழ – ஓர் அசை,நின் பூக்கெழு தொடலை நுடங்க – உன்னுடைய பூமாலை அசைய, எழுந்து எழுந்து கிள்ளைத் தெள் விளி இடை இடை பயிற்றி ஆங்காங்கு ஒழுகாய் ஆயின் – நீ அவ்வப்பொழுது எழுந்து கிளிகளை விரட்டத் தெளிவாக இடையிடைய ஒலியை எழுப்பாது இருந்தாய் ஆனால், அன்னை – அன்னை, சிறு கிளி கடிதல் தேற்றாள் இவள் என – இவளுக்குக் கிளிகளை விரட்டுவதற்குத் தெரியாது என்று, பிறர்த் தந்து நிறுக்குவள் – பிறரைக் கொண்டு வந்து நிறுத்துவாள், ஆயின் உறற்கு அரிது ஆகும் அவன் மலர்ந்த மார்பே – அவ்வாறு அவள் செய்தால் உன் தலைவனின் படர்ந்த மார்பை நீ அணைத்து மகிழ முடியாது

அகநானூறு 80, மருங்கூர் கிழார் பெருங்கண்ணணார், நெய்தற் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
கொடுந்தாள் முதலையொடு கோட்டு மீன் வழங்கும்
இருங்கழி இட்டுச் சுரம் நீந்தி இரவின்
வந்தோய் மன்ற, தண் கடல் சேர்ப்ப,
நினக்கு எவன் அரியமோ யாமே? எந்தை
புணர் திரைப் பரப்பகம் துழைஇத் தந்த 5
பல் மீன் உணங்கல் படு புள் ஓப்புதும்,
முண்டகம் கலித்த முதுநீர் அடைகரை
ஒண் பன் மலரக் கவட்டு இலை அடும்பின்
செங்கேழ் மென் கொடி ஆழி அறுப்ப,
இன மணிப் புரவி நெடுந்தேர் கடைஇ,  10
மின் இலைப் பொலிந்த விளங்கு இணர் அவிழ் பொன்
தண் நறும் பைந்தாது உறைக்கும்
புன்னை அம் கானல், பகல் வந்தீமே.

பொருளுரை:   நெய்தல் நிலத்தின் தலைவனே! வளைந்த கால்களையுடைய முதலைகளோடு கொம்பையுடைய மீன்கள் உலவும் பெரிய உப்பங்கழி வழியாகக் குறுகிய அரிய பாதையில் வந்துள்ளாய்!
நீர் முள்ளிச் செடிகள் தழைத்த நீரடைந்த கடற்கரையில், ஒளியுடைய பல மலர்களையுடைய பிளவுபட்ட இலைகளையுடைய அடும்பின் சிவந்த நிறமுடைய மெல்லிய கொடிகளை உன்னுடைய தேரின் உருள் (சக்கரம்) அறுத்துவர, வரிசையாக உள்ள மணிகளை அணிந்த குதிரைகளைப் பூட்டிய உயர்ந்த தேரினைச் செலுத்தி, ஒளியுடைய இலைகளுடன் பொலிந்து விளங்கும் பூங்கொத்துக்கள் மலர்ந்த பொன்போலும் குளிர்ச்சியடைய, நறுமணமான, பசுமையான தாதுக்களைச் சொரியும் புன்னை மரங்களுடைய அழகிய கடற்கரைச் சோலைக்குப் பகலில் வருவாயாக.
அங்கு நாங்கள், எங்கள் தந்தை பொருந்திய அலைகளையுடைய கடலில் துழாவிக் கொணர்ந்த, பல வகை மீன்களை உலர வைத்து, அவற்றைத் தாக்கும் பறவைகளை விரட்டிக் கொண்டிருப்போம்.  இவ்வாறு எம்மிடம் வருவது கடினம் என்று ஏன் நினைக்கின்றாய்?

சொற்பொருள்:  கொடும் தாள் – வளைந்த கால்கள், முதலையொடு – முதலைகளோடு, கோட்டு மீன் வழங்கும் – கொம்பையுடைய மீன் திரியும், சுறா மீன் திரியும், இருங்கழி – பெரிய உப்பங்கழி, கரிய உப்பங்கழி, இட்டுச் சுரம் நீந்தி – குறுகிய அரிய பாதையில், இரவின் வந்தோய் – இரவு வேளையில் வருகின்றாய், மன்ற – ஓர் அசைச் சொல், தண் கடல் சேர்ப்ப – குளிர்ந்த கடலையுடைய நெய்தல் நிலத் தலைவனே,  நினக்கு எவன் அரியமோ யாமே – எம்மை அடைவது எவ்வாறு கடினமோ, எந்தை –  எங்கள் தந்தை, புணர் திரைப் பரப்பகம் – அலைகள் பொருந்திய அகன்ற கடல், துழைஇத் தந்த – நுழைந்து வலை முதலியவற்றால் பிடித்துக் கொண்டு தந்த, பல் மீன் உணங்கல் – பல மீன் வற்றல், படு புள் ஓப்புதும் – தாக்கும் பறவைகளை விரட்டிக் கொண்டிருப்போம்  நாங்கள், முண்டகம் கலித்த – நீர் முள்ளிச் செடிகள் நிறைந்த, முதுநீர் அடை கரை – நீர் அடைகின்ற கடற்கரையில், ஒண் பன் மலர – ஒளியுடைய பல மலர்களையுடைய, கவட்டு இலை – பிளவுப்பட்ட இலைகள், அடும்பின் – அடும்பினது, செங்கேழ் – சிவந்த நிறமுடைய, மென் கொடி – மெல்லிய கொடிகள், ஆழி அறுப்ப – தேரின் சக்கரங்கள் அறுக்கும்படி, இன மணி  – வரிசையாக உள்ள மணிகள், ஒரே மாதிரியான மணிகள், புரவி – குதிரைகள், நெடுந்தேர் கடைஇ – உயர்ந்த தேரினைச் செலுத்தி, மின் இலைப் பொலிந்த – ஒளியுடைய இலைகளோடு பொலிந்து விளங்கும்,  விளங்கு இணர் – ஒளியுடைய மலர் கொத்துக்கள், அவிழ் – மலர்ந்த, பொன் தண் நறும் பைந்தாது – பொன்னிறமான நறுமணமுடைய புதிய தாதினை, உறைக்கும் – கொட்டும், புன்னை – புன்னை மரங்கள், அம் கானல் – அழகிய கடற்கரைச் சோலை, பகல் வந்தீமே – பகலில் வருவாயாக

அகநானூறு 86 , நல்லாவூர் கிழார், மருதத் திணை – தலைவன் தோழியிடம் சொன்னது
உழுந்து தலைப்பெய்த கொழுங்கனி மிதவை
பெருஞ்சோற்று அமலை நிற்ப, நிரை கால்
தண் பெரும் பந்தர்த் தரு மணல் ஞெமிரி,
மனை விளக்குறுத்து, மாலை தொடரிக்,
கனை இருள் அகன்ற கவின் பெறு காலைக்,  5
கோள் கால் நீங்கிய கொடு வெண் திங்கள்
கேடு இல் விழுப் புகழ் நாள் தலைவந்தென,
உச்சிக் குடத்தர், புத்தகன் மண்டையர்,
பொது செய் கம்பலை முது செம் பெண்டிர்,
முன்னவும் பின்னவும் முறை முறை தரத்தரப்,  10
புதல்வற் பயந்த திதலை அவ் வயிற்று
வால் இழை மகளிர் நால்வர் கூடிக்,
‘கற்பினின் வழாஅ நற் பல உதவிப்
பெற்றோற் பெட்கும் பிணையை ஆக’ என,
நீரொடு சொரிந்த ஈர் இதழ் அலரி  15
பல் இருங்கதுப்பின் நெல்லொடு தயங்க
வதுவை நன் மணம் கழிந்த பின்றைக்,
கல்லென் சும்மையர் ஞெரேரெனப் புகுதந்து
பேர் இற் கிழத்தி ஆக எனத் தமர் தர,
ஓர் இற் கூடிய உடன் புணர் கங்குல்,  20
கொடும் புறம் வளஇக் கோடிக் கலிங்கத்து
ஒடுங்கினள் கிடந்த ஓர் புறம் தழீஇ,
முயங்கல் விருப்பொடு, முகம் புதை திறப்ப
அஞ்சினள் உயிர்த்த காலை, யாழ, ‘நின்
நெஞ்சம் படர்ந்தது எஞ்சாது உரை’ என,  25
இன் நகை இருக்கை பின் யான் வினவலின்,
செஞ்சூட்டு ஒண் குழை வண் காது துயல் வர
அகமலி உவகையள் ஆகி, முகன் இகுத்து
ஒய்யென இறைஞ்சியோளே, மாவின்
மடங் கொள் மதைஇய நோக்கின்  30
ஒடுங்கு ஈர் ஓதி மாஅயோளே.

பொருளுரை:   உழுந்தம் பருப்பைக் கூட்டிச் சமைத்த பொங்கலோடு பெரிய சோற்றுத் திரளை உண்ணுதல் ஆரவாரத்துடன் நிகழ, வரிசையாகக் கால்களையுடைய (கம்பங்கையுடைய, தூண்களுடைய) பெரிய பந்தலில், கொணர்ந்து இட்ட புதிய மணலைப் பரப்பி, மனையில் விளக்குகளை ஏற்றி வைத்து, மாலைகளைத் தொங்கவிட்டு, தீயக் கோள்களின் தொடர்பு நீங்கிய, வளைந்த வெண்ணிலாவை குற்றமற்ற சிறந்த புகழையுடைய உரோகிணி என்னும் நாள் அடைந்த வேளையில், மிக்க இருள் நீங்கிய அழகான காலை நேரத்தில், தலை உச்சியில் குடத்தை வைத்திருப்பவர்களும், புதிய அகன்றப் பானைகளைத் தூக்கி வைத்திருப்பவர்களும் ஆகிய திருமணத்தினைச் செய்து வைக்கும் ஆரவாரமுடைய முதிய மங்கல மகளிர் முன்னே தருவனவாகவும் பின்னே தருவனவாகவும் முறையே தந்திட, புதல்வர்களைப் பெற்ற, தேமலுடைய அழகிய வயிற்றையுடைய, தூய அணிகளை அணிந்த நான்கு பெண்கள் கூடி, ‘கற்பினின்று வழுவாது நல்ல பேறுகளைத் தந்து உன்னை எய்தியக் கணவனை விரும்பிப் பேணும் பெண்ணாக நீ ஆக’ என்று தண்ணீருடன் கூடிய ஈரமான இதழ்களையுடைய பூக்களை நெல்லுடன் அவளுடைய அடர்ந்தக்  கருமையான கூந்தலில் தூவி வாழ்த்தினர்.  இவ்வாறு திருமணம் முடிந்த பின்னர், அவளுடைய சுற்றத்தார் ஒலியுடன் விரைந்து வந்து,  ‘பெரிய மனைக் கிழத்தி ஆவாயாக நீ’ என்று அவளை வாழ்த்தி,  என்னிடம் அவளைத் தந்தனர்.

நாங்கள் இருவரும் புணர்ச்சிக்குரிய ஓர் அறையில் தனிமையில் இருந்தோம்.  தன் முதுகினை வளைத்து, நாணத்துடன் தன்னுடைய புத்தாடையில் ஒதுங்கினாள் அவள்.  அவளை அணைக்கும் விருப்பத்துடன்,  நாணத்தினால் அவள் தன் முகத்தினை மறைத்த ஆடையை நான் நீக்க, அவள் அஞ்சி பெருமூச்சு விட்டாள்.  ‘உன் நெஞ்சில் உள்ளதை மறைக்காது என்னிடம் கூறு’ என்றேன் நான்.   இனிய மகிழ்ச்சியுடன்,  நாங்கள் ஒன்றாக இருந்த அந்த இருக்கையில், மானின் மடப்பத்தையும், பெருமையான பார்வையையும், ஒடுங்கிய குளிர்ந்தக் கூந்தலையும் உடையவளாக, சிவப்பு மணிகள் பதித்த காதணி தன் அழகிய காதுகளில் அசைய, நெஞ்சில் மிக்க மகிழ்ச்சியுடன், விரைந்து தலைகுனிந்தாள் அந்த மாமை நிறத்துடைய பெண்.

குறிப்பு:  அகநானூறு 136 – அம் கண் இரு விசும்பு விளங்கத் திங்கள் சகடம் (உரோகிணி) மண்டிய துகள் தீர் கூட்டத்து.  பொது செய் கம்பலை முது செம் பெண்டிர் (9) – வேங்கடசாமி நாட்டார் உரை – மணத்தினைச் செய்து வைக்கும் ஆரவாரமுடைய முதிய மங்கல மகளிர், பொ. வே. சோமசுந்தரனார் உரை – பொதுப்பணி செய்வதில் ஆர்வமும் ஆரவாரமும் உடைய முதுமையுடைய மங்கல நாண் உடைய பேரிளம் பெண்டிர்.

சொற்பொருள்: உழுந்து தலைப்பெய்த கொழுங்கனி மிதவை – உழுந்தம் பருப்பைக் கூட்டிச் சமைத்த பொங்கலோடு,  பெருஞ்சோற்று அமலை நிற்ப – பெரிய சோற்றுத் திரளை உண்ணுதல் ஆரவாரத்துடன் நிகழ, நிரை கால் – வரிசையான கால்கள், தண் பெரும் பந்தர் – குளிர்ந்தப் பெரிய பந்தல், தரு மணல் – கொணர்ந்து இட்ட மணல், ஞெமிரி – பரப்பி, மனை விளக்கு உறுத்து – மனையில் விளக்குகளை ஏற்றி, மாலை – மலர் மாலைகள், தொடரி – தொங்கவிட்டு, கனை இருள் – மிக்க இருள், அகன்ற – நீங்கிய, கவின் பெறு காலை – அழகிய விடியற்காலை, கோள் கால் நீங்கிய – தீயக் கோள்களின் தொடர்பு நீங்கிய, கொடு வெண் திங்கள் – வளைந்த வெண்ணிலா, கேடு இல் – குற்றமற்ற, விழுப்புகழ் – சிறந்த புகழ், நாள் தலை வந்தென – உரோகிணி என்னும் நாள் அடைந்த வேளையில், உச்சி குடத்தர் – தலை உச்சியில் குடத்தை வைத்திருப்பவர்கள், புத்தகன் மண்டையர் – புதிய அகன்ற பானைகளைத் தூக்கி வைத்திருப்பவர்கள், பொது செய் கம்பலை – மணத்தினைச் செய்து வைக்கும் ஆரவாரம், முது செம் பெண்டிர் – வயதான மங்கல மகளிர், முன்னவும் பின்னவும் – முன்னும் பின்னும், முறை முறை – முறையாக, தரத்தர – தந்திட, புதல்வற் பயந்த – புதல்வர்களைப் பெற்ற, திதலை – தேமல், அவ் வயிற்று – அழகிய வயிற்றையுடைய, வால் இழை மகளிர் – தூய அணிகளையுடைய மகளிர், நால்வர் கூடி – நான்கு பேர் கூடி, கற்பினின் வழாஅ – கற்பினின்று வழுவாது , நற்பல உதவி – நல்ல பேறுகளைத் தந்து, பெற்றோர் – உன்னை அடைந்தவன், பெட்கும் பிணையை ஆக – விரும்பிப் பேணும் பெண்ணாக நீ ஆக, என – என்று, நீரொடு – தண்ணீருடன், சொரிந்த – ஊற்றிய, ஈர் இதழ் அலரி – ஈரமான இதழ்களையுடையப் பூக்கள், பல் இருங்கதுப்பின் – அடர்ந்த கருமையான கூந்தலில், நெல்லொடு – நெல்லுடன், தயங்க – விளங்க,  வதுவை – மணம்,  நன்மணம் – நல்ல மணம், கழிந்த பின்றை – முடிந்தப் பின்பு, கல்லென் – ஆரவாரத்துடன், சும்மையர் – ஒலியினர், ஞெரேரெனப் புகுதந்து – விரைந்து வந்து, பேர் இல் கிழத்தி ஆக – பெரிய மனைக் கிழத்தி ஆவாயாக, என – என்று, தமர் தர – அவள் குடும்பத்தினர் அவளை எனக்குத் தர, ஓர் இல் – ஓர் அறை, கூடிய உடன் புணர் கங்குல் –  உடன்கூடிய புணர்ச்சிக்குரிய இரவு, கொடும் புறம் வளஇ – முதுகினை வளைத்து, கோடிக் கலிங்கத்து – புத்தாடையில், ஒடுங்கினள் கிடந்த ஓர் புறம் – ஒரு புறம் ஒதுங்கினாள், தழீஇ – தழுவி, முயங்கல் விருப்பொடு – அணைக்கும் விருப்பத்துடன், முகம் புதை – மறைத்த முகம், திறப்ப – திறக்க, அஞ்சினள் – அஞ்சினாள், உயிர்த்த காலை – பெருமூச்சு விட்டப் பொழுது, யாழ – ஓர் அசைச் சொல், நின் நெஞ்சம் படர்ந்தது எஞ்சாது உரை – உன் நெஞ்சில் உள்ளதை மறைக்காது கூறு, என – என்று, இன்நகை – இனிய மகிழ்ச்சி, இருக்கை – இடம், பின்யான் வினவலின் – நான் கேட்டதால், செஞ்சூட்டு – சிவந்த மணிகள் பதித்த, ஒண் குழை – விளங்கும் காதணிகள், வண் காது – அழகிய காது, துயல்வர – அசைய, அகமலி உவகையள் ஆகி – உள்ளத்தில் மகிழ்ச்சியுடையவள் ஆக ஆகி, முகன் இகுத்து – முகத்தைத் தாழ்த்தி, ஒய்யென இறைஞ்சியோளே – விரைந்துத் தலைகுனிந்தாள், மாவின் – மானின், மடம் கொள் – மடத்தினைக் கொண்டதும், மதைஇய நோக்கின் – செருக்கான பார்வையும், ஒடுங்கு – ஒடுங்கிய, ஈர் ஓதி – ஈரமான கூந்த,  மாஅயோளே – மாமை நிறைத்தையுடையவள், கருமையான பெண்

அகநானூறு 105, தாயங்கண்ணனார், பாலைத் திணை – உடன்போக்கில் தலைவியும் தலைவனும் சென்ற பொழுது தலைவியின் தாய் சொன்னது
அகல் அறை மலர்ந்த அரும்பு முதிர் வேங்கை
ஒள் இலைத் தொடலை தைஇ, மெல்லென
நல் வரை நாடன் தற்பாராட்ட,
யாங்கு வல்லுநள் கொல் தானே, தேம் பெய்து
மணி செய் மண்டைத் தீம்பால் ஏந்தி  5
ஈனாத் தாயர் மடுப்பவும் உண்ணாள்,
நிழல் கயத்தன்ன நீள் நகர் வரைப்பின்
எம்முடைச் செல்வமும் உள்ளாள், பொய்ம் மருண்டு,
பந்து புடைப்பன்ன பாணிப் பல்லடிச்
சில் பரிக் குதிரை பல் வேல் எழினி  10
கெடல் அருந் துப்பின் விடு தொழில் முடிமார்
கனை எரி நடந்த கல் காய் கானத்து
வினை வல் அம்பின் விழுத்தொடை மறவர்
தேம் பிழி நறுங்கள் மகிழின் முனை கடந்து,
வீங்கு மென் சுரைய ஏற்று இனம் தரூஉம்  15
முகை தலை திறந்த வேனில்
பகை தலைமணந்த பல் அதர்ச் செலவே?

பொருளுரை:  அகன்ற பாறையிடத்து மலர்ந்த வேங்கை மலர்களோடு ஒளியுடைய இலைகளைத் தொடுத்த மாலையை அணிந்த அவளைப் பாராட்டிய நல்ல மலை நாடனான தலைவனுடன் சென்று விட்டாள் என் மகள்.  மணிகள் இழைத்த பொற்கலத்தில் உள்ள இனிய பாலில் தேனை ஊற்றி, கையில் ஏந்தி, அவளுடைய செவிலித் தாய்மார் ஊட்டினாலும் குடிக்க மாட்டாள்.  நிழலுடைய குளத்தைப் போன்ற எங்கள் இல்லத்தில் உள்ள மிகுந்த செல்வத்தையும் அவள் எண்ணவில்லை.  அவளுடைய காதலனின் பொய்யை மெய் என்று நம்பி விட்டாள்.

பந்துப் புடைக்கப்பட்டு எழுவதை ஓத்தத் தாளத்தினை உடைய பல அடிகளையும் சில  ஓட்டங்களையும் உடைய குதிரைகளையும், பல வேற்படைகளையும் உடைய எழினி என்ற குறுநில மன்னனுடைய, கெடுதல் இல்லாத வலிமை பொருந்திய,  ஏவி விட்ட தொழிலை முடிக்கும் பொருட்டு மிகுந்த தீப் படர்ந்ததால் காய்ந்திருக்கும் பாறையுடைய காட்டில், போர்த் திறமையினால் அம்பைக் குறி தவறாது செலுத்தும் மறவர்கள், பிழிந்த தேனால் செய்த கள்ளினை உண்ட மகிழ்ச்சியால், போர் முனையை வென்று, பருத்த மெல்லிய மடியை உடைய பசுக்களோடும் ஏறுகளோடும் உடைய ஆநிரைகளைக் கொணர்ந்து தரும், மலைக் குகைகள் வெடித்த வேனில் காலத்தில் பகைவர்களுடன் போரிடுதலை உடைய, பல பாதைகளில் செல்வதற்கு எவ்வாறு வல்லமை உடையவள் ஆயினாள் என் மகள்?

சொற்பொருள்:  அகல் அறை – அகன்ற பாறை,  மலர்ந்த அரும்பு முதிர் வேங்கை – அரும்பு முதிர்ந்த வேங்கை மலரோடு,  ஒள் இலைத் தொடலை தைஇ – ஒளியுடைய இலைகளையுடைய மாலையை தொடுத்து, மெல்லென – மெல்ல மெல்ல,  நல் வரை நாடன் – நல்ல மலை நாடனான தலைவன், தற்பாராட்ட – தன்னைப் பாராட்ட, யாங்கு வல்லுநள் கொல் – எவ்வாறு வல்லமை உடையவள் ஆயினாள், தானே – தானே, தேம் பெய்து மணி செய் மண்டைத் தீம்பால்  – இனிய பாலில் தேனை ஊற்றி மணிகள் இழைத்த பொற்கலத்தில் கலந்து, ஏந்தி – கையில் ஏந்தி, ஈனாத் தாயர் மடுப்பவும் உண்ணாள் –  அவளை ஈனாத செவிலித் தாய்மார் ஊட்டவும் குடிக்க மாட்டாள்,  நிழல் கயத்தன்ன- நிழலுடைய குளத்தைப்போல்,  நீள் நகர் வரைப்பின் எம்முடைச் செல்வமும் உள்ளாள் – எங்கள் இல்லத்தில் உள்ள மிகுந்த செல்வத்தையும் அவள் எண்ணவில்லை, பொய்ம் மருண்டு – பொய்யை மெய் என்று மயங்கி,  பந்து புடைப்பன்ன பாணிப் பல்லடிச் சில் பரிக் குதிரை –  பந்து புடைக்கப்பட்டு எழுவதை ஓத்த தாளத்தினை உடைய பல அடிகளையும் சில ஓட்டங்களையுடைய குதிரைகள், பல் வேல் எழினி – பல வேற்படைகளை உடைய,  எழினி – எழினி என்ற குறுநில மன்னன்,  கெடல் அருந் துப்பின் – கெடுதல் இல்லாத வலிமைப் பொருந்திய,  விடு தொழில் முடிமார் – ஏவி விட்ட தொழிலை முடிக்கும் பொருட்டு , கனை எரி நடந்த கல் காய் கானத்து – மிகுந்த எரி படர்ந்ததால் காய்ந்திருக்கும் பாறையுடைய காட்டில்,  வினை வல் அம்பின் விழுத்தொடை மறவர் – போர்த் திறமையினால் அம்பைக் குறி தவறாது செலுத்தும் மறவர்கள்,  தேம் பிழி நறுங்கள் மகிழின் – பிழிந்த தேனால் செய்த கள்ளினை உண்ட மகிழ்ச்சியால், முனை கடந்து – போர் முனையை வென்று,  வீங்கு மென் சுரைய ஏற்று இனம் தரூஉம் –  பருத்த மெல்லிய மடியை உடைய பசுக்களோடும் ஏறுகளோடும் உடைய ஆநிரைகளைக் கொணர்ந்து தரும்,  முகை தலை திறந்த – மலைக் குகைகள் வெடித்த,  வேனில் – வேனில் காலத்தில், பகை தலைமணந்த பல் அதர்ச் செலவே – பகைவர்களுடன் போரிடுதலை உடைய பல பாதைகளில் செல்லுதல்

அகநானூறு 122, பரணர், குறிஞ்சித் திணை – தலைவி தோழியிடம் சொன்னது, தலைவன் கேட்கும்படியாக
இரும்பிழி மாரி அழுங்கல் மூதூர்
விழவு இன்றாயினும் துஞ்சாது ஆகும்,
மல்லல் ஆவணம் மறுகுடன் மடியின்,
வல் உரைக் கடும் சொல் அன்னை துஞ்சாள்,
பிணி கோள் அருஞ்சிறை அன்னை துஞ்சின்,  5
துஞ்சாக் கண்ணர் காவலர் கடுகுவர்,
இலங்கு வேல் இளையர் துஞ்சின், வை எயிற்று
வலம் சுரித் தோகை ஞாளி மகிழும்,
அரவ வாய் ஞமலி மகிழாது மடியின்,
பகலுரு உறழ நிலவுக் கான்று விசும்பின்  10
அகல் வாய் மண்டிலம் நின்று விரியும்மே,
திங்கள் கல் சேர்வு கனை இருள் மடியின்,
இல் எலி வல்சி வல்வாய்க் கூகை
கழுது வழங்கு யாமத்து அழிதகக் குழறும்,
வளைக் கண் சேவல் வாளாது மடியின்,  15
மனைச் செறி கோழி மாண் குரல் இயம்பும்,
எல்லாம் மடிந்த காலை, ஒரு நாள்
நில்லா நெஞ்சத்து அவர் வாரலரே, அதனால்
அரி பெய் புட்டில் ஆர்ப்பப் பரி சிறந்து
ஆதி போகிய பாய் பரி நன் மா  20
நொச்சி வேலித் தித்தன் உறந்தைக்
கல் முதிர் புறங்காட்டன்ன,
பல் முட்டின்றால் தோழி, நம் களவே.

குறிப்பு:  நில்லா நெஞ்சத்து அவர் வாரலரே (வரி 18) –   வேங்கடசாமி நாட்டார் – ‘நிலைபெறாத நெஞ்சத்தினையுடைய நம் தலைவர் வருதிலர்’, பொ. வே. சோமசுந்தரானார் – ‘நில்லாத நமது நெஞ்சத்தின்கண் உறைபவராகிய நம்பெருமான் ஈண்டு வாராதொழிவர்’.  குறிஞ்சிப்பாட்டு 239-243 –   வருதொறும் காவலர் கடுகினும், கத நாய் குரைப்பினும், நீ துயில் எழினும், நிலவு வெளிப்படினும், வேய் புரை மென் தோள் இன்துயில் பெறாஅன், பெயரினும், முனியல் உறாஅன்.

பொருளுரை:    மழையைப் போன்று மிக்க கள்ளுடைய ஆரவாரத்தையுடைய பழைய ஊரானது, திருவிழா இல்லாவிட்டாலும் உறங்காது.  அங்குள்ள வளமான கடைவீதியும் வேறு தெருக்களும் அடங்கினாலும், வலிய ஒலியுடன் கூடிய கடியச் சொற்களைக் கூறும் அன்னை உறங்க மாட்டாள்.  என்னை இறுக்கமாகப் பிடித்துக் காவல் காக்கும் அன்னைத் தூங்கினாலும், காவலாளிகள் உறங்காது சுற்றி வருவார்கள்.  ஒளியுடைய வேலையுடைய இளைய காவலாளிகள் தூங்கினாலும், வலது பக்கமாகச் சுருண்ட வாலையுடைய நாய்கள் குரைக்கும்.  ஒலிமிக்க நாய்கள் குரைக்காமல் தூங்கினாலும், பகலின் ஒளியினை ஒத்த நிலவினைத் தந்து வானத்தில் அகன்ற நிலா நின்று ஒளி வீசும். நிலா மலையை அடைந்து மிக்க இருள் தங்கினால், வீட்டில் உள்ள எலியைத் தின்னும் வலுவான வாயை உடைய ஆந்தையானது, பேய்கள் திரியும் இரவு நேரத்தில், அழிவு உண்டாகும்படிக் கூவும்.  பொந்தில் வாழும் அந்த ஆந்தைத் தூங்கினால், வீட்டில் உள்ள சேவல் பலமான ஒலியை எழுப்பும்.  இவை எல்லாம் மடிந்த பொழுது, நிலைபெறாத நெஞ்சத்தையுடைய அவர் வரவில்லை.
அதனால், பரலையுடைய சலங்கைகள் ஒலிக்க, ஓட்டத்தில் சிறந்து, ஆதி என்னும் ஓட்டத்தில் தேர்ச்சிப் பெற்ற, பாய்ந்து ஓடும் நல்ல குதிரைகளையுடைய, மதிலாகிய வேலியையுடைய தித்தனின் உறந்தையின் பாறைகள் நிறைந்த காவற்காடு போன்ற பல தடங்கல்களை உடையது என்னுடைய களவு ஒழுக்கம்.

சொற்பொருள்:  இரும்பிழி – நிறைய கள், மாரி – மழை, அழுங்கல் மூதூர் – ஆரவாரத்தையுடைய பழைய ஊர், விழவு இன்றாயினும் துஞ்சாது ஆகும் – திருவிழா இல்லாவிட்டாலும் தூங்காது, மல்லல் ஆவணம் மறுகுடன் மடியின் – வளமான கடைவீதியும் வேறு தெருக்களும் அடங்கினாலும், வல் உரைக் கடும் சொல் அன்னை துஞ்சாள் – வலிய ஒலியுடன் கூடிய கடியச் சொற்களைக் கூறும் அன்னை உறங்க மாட்டாள், பிணி கோள் அருஞ்சிறை அன்னை துஞ்சின் – இறுக்கமாகப் பிடித்துக் காவல் காக்கும் அன்னைத் தூங்கினாலும், துஞ்சாக் கண்ணர் காவலர் – காவலாளிகள் உறங்க மாட்டார்கள், கடுகுவர் – சுற்றி வருவார்கள், இலங்கு வேல் இளையர் துஞ்சின் – ஒளியுடைய வேலையுடைய இளைய காவலாளிகள் தூங்கினால், வை எயிற்று – கூர்மையான பற்கள், வலம் சுரித் தோகை – வலப்புறமாகச் சுருண்ட வால், ஞாளி – நாய்கள், மகிழும் – குரைக்கும், அரவ வாய் ஞமலி மகிழாது மடியின் – ஒலிமிக்க நாய்கள் குரைக்காது தூங்கினாலும், பகலுரு உறழ நிலவுக் கான்று – பகலின் ஒளியினை ஒத்த நிலவினைத் தந்து, விசும்பின் அகல் வாய் மண்டிலம் நின்று விரியும்மே – வானத்தில் அகன்ற நிலா நின்று ஒளி வீசும், திங்கள் கல் சேர்வு கனை இருள் மடியின் – நிலா மலையை அடைந்து மிக்க இருள் தங்கினால், இல் எலி வல்சி வல்வாய்க் கூகை – வீட்டில் உள்ள எலியைத் தின்னும் வலுவான வாயை உடைய ஆந்தை, கழுது வழங்கு யாமத்து – பேய்கள் திரியும் இரவு நேரத்தில், அழிதகக் குழறும் – அழிவு உண்டாகும்படிக் கூவும், வளைக் கண் சேவல் வாளாது மடியின் – பொந்தில் வாழும் அந்த ஆந்தைத் தூங்கினால், மனைச் செறி கோழி மாண் குரல் இயம்பும் – வீட்டில் உள்ள சேவல் பலமான ஒலியை எழுப்பும், எல்லாம் மடிந்த காலை – இவை எல்லாம் மடிந்த பொழுது, ஒரு நாள் – ஒரு நாள், நில்லா நெஞ்சத்து – நிலைபெறாத நெஞ்சத்தையுடைய, அவர் வாரலரே – அவர் வரவில்லை, அதனால் – அதனால், அரி பெய் புட்டில் – பரலையுடைய சலங்கைகள், ஆர்ப்ப – ஒலிக்க, பரி சிறந்து – ஓட்டத்தில் சிறந்து, ஆதி போகிய – ஆதி என்னும் ஓட்டத்தில் தேர்ச்சி பெற்ற, பாய் பரி நன் மா – பாய்ந்து ஓடும் நல்ல குதிரைகள், நொச்சி வேலித் தித்தன் உறந்தை – மதிலாகிய வேலியையுடைய தித்தனின் உறந்தை, கல் முதிர் புறங்காட்டன்ன – கல் நிறைந்த காவற்காடு போன்ற, பல் முட்டின்றால் – பல முட்டுக்களைப் போன்றது, தோழி – என் தோழியே, நம் களவே – என்னுடைய களவு

அகநானூறு 136, விற்றூற்று மூதெயினனார், மருதம் தினை – தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது
மைப்பு அறப் புழுக்கின் நெய்க்கனி வெண்சோறு,
வரையா வண்மையொடு புரையோர்ப் பேணிப்,
புள்ளுப் புணர்ந்து, இனிய ஆகத் தெள் ஒளி
அம் கண் இரு விசும்பு விளங்கத் திங்கள்
சகடம் மண்டிய துகள் தீர் கூட்டத்துக்,  5
கடி நகர் புனைந்து, கடவுள் பேணிப்,
படு மண முழவொடு பரூஉப்பணை இமிழ,
வதுவை மண்ணிய மகளிர் விதுப்புற்றுப்
பூக்கணும் இமையார் நோக்குபு, மறைய,
மென்பூ வாகைப் புன்புறக் கவட்டிலை  10
பழங்கன்று கறித்த பயம்பு அமல் அறுகைத்
தழங்கு குரல் வானின் தலைப்பெயற்கு ஈன்ற
மண்ணு மணி அன்ன மா இதழ்ப் பாவைத்
தண் நறு முகையொடு வெந்நூல் சூட்டித்,
தூ உடைப் பொலிந்து, மேவரத் துவன்றி,  15
மழை பட்டன்ன மணன் மலி பந்தர்,
இழை அணி சிறப்பின் பெயர் வியர்ப்பு ஆற்றித்
தமர் நமக்கு ஈத்த தலை நாள் இரவின்,
உவர் நீங்கு கற்பின் எம் உயிர் உடம் படுவி
முருங்காக் கலிங்கம் முழுவதும் வளைஇப்,  20
‘பெரும் புழுக்கு உற்ற நின் பிறை நுதல் பொறி வியர்
உறு வளி ஆற்றச் சிறு வரை திற’ என,
ஆர்வ நெஞ்சமொடு போர்வை வவ்வலின்,
உறை கழி வாளின் உருவு பெயர்ந்து இமைப்ப,
மறை திறன் அறியாள் ஆகி ஒய்யென 25
நாணினள் இறைஞ்சியோளே, பேணிப்
பரூஉப் பகை ஆம்பல் குரூஉத் தொடை நீவிச்
சுரும்பு இமிர் ஆய் மலர் வேய்ந்த
இரும் பல் கூந்தல் இருள் மறை ஒளித்தே.

பொருளுரை:  குற்றம் உண்டாகாதபடிச் சமைக்கப்பட்ட நெய் மிக்க வெள்ளைச் சோற்றை எல்லை இல்லாத வள்ளன்மைப் பண்புடன் சுற்றத்தார்க்கும் சான்றோர்களுக்கும்  உண்ணக் கொடுத்து அவர்களைக் கவனித்து,  புள் நிமித்தம் (நல்ல நேரம்) பொருந்தி இருக்கும் இனிமையான வேளையில், தெளிவான அழகிய பெரிய வானம் ஒளியாகும்படி நிலவை உரோகிணிக் கூடிய குற்றமற்ற நல்ல நாளில், மண மனையை அழகுப்படுத்தி, கடவுளை வழிபட்டு, ஒலிக்கும் மண முரசுடன், பணை முரசும் ஒலிக்க, தலைவியை நீராட்டிய பெண்கள், தங்களின் மலர் போன்றக் கண்களால் இமைக்காமல் அவளை நோக்கி, பின் விரைந்து மறைய, முதிய கன்று மென்மையான மலர்களையுடைய வாகை மரத்தின் புல்லிய (சிறப்பு இல்லாத) பின்புறத்தையுடைய பிரிவு உடைய இலைகளை உண்டப் பள்ளத்தில் படர்ந்துள்ள, ஒலிக்கும் வானின் முதல் மழைக்குத் துளிர்த்த கழுவிய நீலமணியை ஒத்தக் கரிய இதழ்களையும் கிழங்கையும் உள்ள அறுகம் புல்லின் குளிர்ந்த நறுமணமான அரும்புடன் தொடுத்த வெள்ளை நூலை அவளுக்குச் சூட்டி, மேகம் ஒலித்தாற்போல் ஒலியுடைய திருமணப் பந்தலில், அணிகளைச் சிறப்புடன் அணிந்த அவளின் வியர்வையைத் துடைத்து, அவள் குடும்பத்தார் அவளை எனக்குத் தர, முதல் நாள் இரவில், வெறுப்பு இல்லாத கற்புடைய அவள், என் உயிர்க்கு உடம்பாகப் பொருந்தும் அவள், கசங்காத புத்தாடையால் தான் உடலை முழுக்கப் போர்த்தியிருக்க, “உன் பிறை நெற்றியில் அதிகப் புழுக்கத்தினால் அரும்பியுள்ள வியர்வையைப் போக்க, உன் ஆடையைக் கொஞ்சம் திற” என்று கூறி ஆர்வ நெஞ்சத்துடன் மூடிய அவளுடைய ஆடையை நான் கவர, உறையினின்று எடுத்த வாள் போல அவள் உருவம் வெளிப்பட்டு விளங்க, மறைக்கும் வழியை அறியாதவள் ஆகி, விரைவாக நாணம் அடைந்து, வண்டுகள் சூழ்ந்து ஒலிக்கும் அழகிய நிறம் பொருந்தியப் பருமனான ஆம்பல் மலர்ச் சரம் அணிந்த தன்னுடைய கருமையான அடர்ந்தக் கூந்தலால், தன் உடலை மறைத்து என் முன் தலைக் குனிந்தாள்.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – பழந்தமிழ் மக்கள் உரோகிணியைத் திருமணத்திற்குச் சிறந்த நாளாகக் கொண்டிருந்தனர். கடவுள் பேணி என்பதனால், திருமணத்தின் தொடக்கத்தில் கடவுளை வழிபடும் வழக்கம் பண்டும் உளதென்பது பெற்றதாம்.  அகநானூறு 86 – கோள் கால் நீங்கிய கொடு வெண் திங்கள் கேடு இல் விழுப் புகழ் நாள் தலைவந்தென.  மழை பட்டன்ன மணன் மலி பந்தர் (16) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – மழை பெய்தாற்போன்ற ஒலியை உடைய புது மணல் மிக்க மணப் பந்தரிலே, வேங்கடசாமி நாட்டார்  உரை – மேகம் ஒலித்தால் ஒத்த மண ஒலி மிக்க பந்தலிலே.

சொற்பொருள்:   மைப்பு அற – குற்றம் இல்லாத, புழுக்கின் நெய்க்கனி வெண்சோறு – சமைக்கப்பட்ட நெய் மிக்க வெள்ளைச் சோறு, வரையா வண்மையொடு – எல்லை இல்லாத வள்ளன்மைப் பண்புடன், புரையோர்ப் பேணி – சான்றோர்களுக்கு உணவைக் கொடுத்து அவர்களைக் கவனித்து,  புள்ளுப் புணர்ந்து இனிய ஆக – புள் நிமித்தம் பொருந்தி இனிமையாக,  தெள் ஒளி – தெளிவான ஒளி, அம் கண் – அழகிய இடம்,  இரு விசும்பு – பெரிய வானம்,  விளங்க – ஒளிர, திங்கள் சகடம் மண்டிய துகள் தீர் கூட்டத்து – நிலவை உரோகிணிக் கூடிய குற்றமற்ற நல்ல நாள் சேர்கையில்,  கடி நகர் புனைந்து – மண மனையை அழகுப்படுத்தி,  கடவுள் பேணி – கடவுளை வழிபட்டு,  படு மண முழவொடு – ஒலிக்கும் மண முரசுடன், பரூஉப்பணை இமிழ – பணை முரசும் ஒலிக்க,  வதுவை மண்ணிய மகளிர் – தலைவிக்கு நீராட்டிய பெண்கள், விதுப்புற்று – விரைந்து,  பூக்கணும் இமையார் நோக்குபு – மலர் போன்ற கண்களால் இமைக்காமல் நோக்கி,  மறைய – மறைய,  மென்பூ – மென்மையான மலர்கள்,  வாகை – வாகை மரம், புன்புறக் கவட்டிலை – புல்லிய பின்புறத்தையுடைய பிளவு உடைய இலை, பழங்கன்று கறித்த – முதிய கன்று உண்ட,  பயம்பு அமல் அறுகை – பள்ளத்தில் படர்ந்த அறுகம்புல்,  தழங்கு குரல் – ஒலிக்கும் குரல், வானின் தலைப்பெயற்கு – மேகத்தின் முதல் மழை பெய்தலால், ஈன்ற – ஈன்ற,  மண்ணு மணி அன்ன – கழுவிய நீலமணியை ஒத்த,  மா இதழ் – கரிய இதழுடைய,  பாவை – அறுகம்புல்லின் கிழங்கு, தண் நறு முகையொடு – தண்ணிய நறுமணமான அரும்புடன், வெந்நூல் சூட்டி – வெள்ளை நூலைச் சூட்டி, தூ உடைப் பொலிந்து – தூய உடையால் பொலியச் செய்து, மேவரத் துவன்றி – விருப்பம் உண்டாகக் கூடி,  மழை பட்டன்ன – மழை பெய்தாற்போல், மேகம் ஒலித்தாற்போல்,  மணன் மலி பந்தர் – மண ஒலியுடைய பந்தல், மணல் நிறைந்த பந்தல், இழை அணி சிறப்பின் – அணிகளை அணிந்த சிறப்புடன்,  பெயர் வியர்ப்பு ஆற்றி – தோன்றிய வியர்வையை துடைத்து, தமர் நமக்கு ஈத்த – அவள் குடும்பத்தார் எனக்குத் தந்த,  தலை நாள் இரவின் – முதல் நாள் இரவில்,  உவர் நீங்கு கற்பின் – வெறுப்பு நீங்கிய கற்புடைய,  எம் உயிர் உடம் படுவி – என் உயிர்க்கு உடம்பாகப் பொருந்தும் இவள்,  முருங்காக் கலிங்கம் முழுவதும் வளைஇ – கசங்காத புத்தாடையால் முழுக்க போர்த்தி,  பெரும் புழுக்கு உற்ற – அதிகமாக புழுக்கமாகிய,  நின் பிறை நுதல் – உன் பிறை நெற்றி,  பொறி வியர் – அரும்பியுள்ள வியர்வை, உறு வளி ஆற்ற – காற்றால் போக்க, சிறு வரை திற – சிறிது நேரம் திற, என ஆர்வ நெஞ்சமொடு – என்று ஆர்வ நெஞ்சுடன்,  போர்வை வவ்வலின் – மூடிய ஆடையை பற்றிக் கவர்ந்ததால், உறை கழி வாளின் – உறையினின்று எடுத்த வாள் போல,  உருவு பெயர்ந்து இமைப்ப – உருவம் வெளிப்பட்டு விளங்க,  மறை திறன் அறியாள் ஆகி – மறைக்கும் வழியை அறியாதவள் ஆகி,  ஒய்யென நாணினள் – விரைவாக நாணம் அடைந்தாள்,  இறைஞ்சியோளே பேணி –  கெஞ்சினாள், என்னை வணங்கினாள், பரூஉப் பகை –  பருமையால் பகையாகிய, ஆம்பல் – ஆம்பல் மலர்கள்,  குரூஉ  – நிறம் பொருந்திய, தொடை – மாலை, நீவி – நீக்கி,  சுரும்பு இமிர் – வண்டு ஒலிக்கும், ஆய் மலர் வேய்ந்த – அழகிய மலர்களை அணிந்த, தேர்ந்தெடுத்த மலர்களை அணிந்த,  இரும் பல் கூந்தல் – கருமையான அடர்ந்தக் கூந்தல்,  இருள் – இருள், மறை ஒளித்தே – மறைத்து ஒளித்து

அகநானூறு 147, ஔவையார், பாலைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
ஓங்கு மலைச் சிலம்பில் பிடவுடன் மலர்ந்த
வேங்கை வெறித் தழை வேறு வகுத்தன்னை
ஊன்பொதி அவிழாக் கோட்டு உகிர்க் குருளை
மூன்றுடன் ஈன்ற முடங்கர் நிழத்த
துறுகல் விடர் அளைப் பிணவு பசி கூர்ந்தெனப்  5
பொறி கிளர் உழுவைப் போழ் வாய் ஏற்றை
அறு கோட்டு உழை மான் ஆண் குரல் ஓர்க்கும்
நெறி படு கவலை நிரம்பா நீளிடை
வெள்ளி வீதியைப் போல நன்றும்
செலவு அயர்ந்திசினால் யானே பல புலந்து  10
உண்ணா உயக்கமொடு உயிர் செலச் சாஅய்
தோளும் தொல் கவின் தொலைய நாளும்
பிரிந்தோர் பெயர்வுக்கு இரங்கி
மருந்து பிறிது இன்மையின் இருந்து வினை இலனே.

பொருளுரை:   தோழி! தலைவன் பிரிந்ததால், பலவற்றையும் வெறுத்து, உண்ணாத வருத்தத்துடன், உயிர் போகுமளவு மெலிந்து, தோளின் அழகுக் கெட்டு, நாள்தோறும் துன்புறுகின்றேன்.  அவர் நீங்கிய வருத்தத்திற்கு மருந்து ஒன்றும் இல்லாததால், உயிரோடு இருந்தும் செயலற்று இருக்கின்றேன்.

ஆதலால், உயர்ந்த மலைச் சாரலில், பிடவ மலர்களுடன் மலர்ந்த நறுமணமான வேங்கை மலர்களின் இலையைப் போல், பகுதி, பகுதியாக வகுத்து வைத்தாற்போல், தசையின் மறைப்பு நீங்காத வளைந்த நகத்தையுடைய குட்டிகள் மூன்றைப் பெற்ற, ஒதுங்கிய இடத்தில, மலைப் பிளவாகிய குகையில் உள்ள தன் பெண் புலி மிகுந்த பசியை அடைந்ததால், பொறி விளங்கும் பிளந்த வாயை உடைய ஆண் புலி, உடைந்த கொம்பையுடைய ஆண் மானின் குரலைக் கேட்கும், பிரிந்தப் பாதைகள் பொருந்திய எல்லையில்லாத பெரிய காட்டிலே, தன் கணவனைத் தேடிச் சென்ற வெள்ளிவீதியைப் போல் செல்லுதலைப் பெரிதும் விரும்புகின்றேன்.

சொற்பொருள்:  ஓங்கு மலை – உயர்ந்த மலை, சிலம்பில் மலைச் சரிவில், பிடவுடன் மலர்ந்த வேங்கை – பிடவத்துடன் மலர்ந்த வேங்கை மலர்கள், வெறி – நறுமணம், தழை வேறு வகுத்தன்னை – இலை வேறு வேறாகப் பிரித்தாற்போல், ஊன் பொதி அவிழா – தசையின் மறைப்பு நீங்காத, கோட்டு உகிர் குருளை மூன்றுடன் – வளைந்த நகத்தையுடைய குட்டிகள் மூன்றுடன், ஈன்ற – பெற்ற, முடங்கர் – முடக்கமான இடத்தில், நிழத்த – ஓய்ந்திருக்கும், துறுகல் விடர் அளை – கல்லின் பிளவு, குகை, பிணவு – பெண், பசி கூர்ந்தென – பசி மிகுந்தலால், பொறி கிளர் – புள்ளிகள் திகழும், உழுவை – புலி, போழ் வாய் ஏற்றை – பிளந்த வாயையுடைய ஆண், அறு கோட்டு – உடைந்த கொம்பு, உழை மான் – உழை மான், ஆண் குரல் ஓர்க்கும் – ஆண் குரலைக் கேட்கும், நெறி படு கவலை – பிரிவு உடையப் பாதை, நிரம்பா நீளிடை – எல்லையில்லாத நீண்டப் பாதை, வெள்ளி வீதியைப் போல – வெள்ளி வீதியைப் போல, நன்றும் செலவு அயர்ந்திசினால் யானே – பெரிதும் செல்லத் துணிந்தேன், பல புலந்து – பலவற்றை வெறுத்து, உண்ணா உயக்கமொடு – உண்ணாது வருந்தி, உயிர் செல – உயிர் போகுமளவு, சாஅய் – மெலிந்து, தோளும் தொல் கவின் தொலைய – தோள்கள் பழைய அழகை இழக்க, நாளும் – தினமும், பிரிந்தோர் பெயர்வுக்கு இரங்கி – பிரித்துச் சென்ற தலைவருக்காகத் தினமும் வருந்தி, மருந்து பிறிது இன்மையின் – வேறு ஒரு மருந்தும் இல்லாததால், இருந்து – உயிரோடு இருந்து, வினை இலனே – செயலற்று இருக்கின்றேன்

அகநானூறு 200, உலோச்சனார், நெய்தற் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
நிலாவின் இலங்கு மணல் மலி மறுகில்
புலால் அம் சேரிப் புல் வேய் குரம்பை ஊர் என
உணராச் சிறுமையொடு நீர் உடுத்து
இன்னா உறையுட்டு ஆயினும் இன்பம்
ஒரு நாள் உறைந்திசினோர்க்கும் வழி நாள்  5
தம் பதி மறக்கும் பண்பின் எம் பதி
வந்தனை சென்மோ வளை மேய் பரப்ப
பொம்மல் படு திரை கம்மென உடைதரும்
மரன் ஓங்கு ஒரு சிறை பல பாராட்டி
எல்லை எம்மொடு கழிப்பி எல் உற  10
நல் தேர் பூட்டலும் உரியீர் அற்றன்று
சேந்தனிர் செல்குவிர் ஆயின் யாமும்
எம் வரை அளவையின் பெட்குவம்
நும் ஒப்பதுவோ உரைத்திசின் எமக்கே.

பொருளுரை: சங்கு மேயும் நெய்தல் நிலத்தின் தலைவனே! நிலாவைப் போல் வெண்மையான மணல் உள்ள தெருவில் உள்ள புல்லால் வேயப்பட்ட குடிசைகளையுடைய, மீனின நாற்றத்தைக் கொண்ட எங்கள் குடியிருப்பு, ஓர் ஊர் என்ற உணராத சிறுமையுடன், நீரால் சூழப்பட்டு, இன்னா உடையது ஆனாலும், ஒரு நாள் தங்குபவர்களுக்கு அது இன்பமானது. அடுத்து வரும் நாளில், அவர்கள் தங்களுடைய ஊரை மறக்கச் செய்யும் தன்மையுடையது. எங்கள் ஊருக்கு வந்துவிட்டுச் செல்வாயாக.  நிறைந்த அலைகள் ஒலித்து உடையும் கரையில், உயர்ந்த மரங்கள் ஒரு பக்கம் இருக்கும் இடத்தில், உன்னுடைய தன்மைகளை நாங்கள் பாராட்ட, பகல் பொழுதை எங்களுடன் கழித்து விட்டு, இரவு ஆகும்பொழுது, உன்னுடைய நல்ல தேரைப் பூட்டி செல்வதற்கு உரியர் ஆகுவீர். ஆனால், எங்கள் ஊரில் தங்கிவிட்டு செல்லுவீர் ஆயின், நாங்கள் எங்களால் முடிந்த அளவில் உன்னைப் பேணுவோம். இது உனக்கு ஒப்புதல் ஆக உள்ளதா? எங்களிடம் கூறுவாயாக.

சொற்பொருள்:  நிலாவின் இலங்கு மணல் மலி மறுகில் – நிலாவைப் போல் மணல் உள்ள தெருவில், புலால் அம் சேரி – புலால் (மீனின நாற்றம்) நாறும் குடியிருப்பு, புல் வேய் குரம்பை – புல்லால் வேயப்பட்ட குடிசைகள், ஊர் என உணராச் சிறுமையொடு – ஓர் ஊர் என்ற உணராத சிறுமையுடன், நீர் உடுத்து – நீர் சூழப்பட்டு, இன்னா உறையுட்டு ஆயினும் – இன்னா உடையது ஆனாலும், இன்பம் ஒரு நாள் உறைந்திசினோர்க்கும் – ஒரு நாள் தங்குபவர்களுக்கும் இன்பமானது, வழி நாள் – பின் உள்ள நாள், தம் பதி மறக்கும் பண்பின் – தம்முடைய ஊரை மறக்கச் செய்யும் தன்மையுடையது, எம் பதி வந்தனை சென்மோ – எங்கள் ஊருக்கு வந்துவிட்டு செல்வாயாக, வளை மேய் பரப்ப – சங்கு மேயும் நெய்தல் நிலத்தின் தலைவனே, பொம்மல் படு திரை கம்மென உடைதரும் – நிறைந்த அலைகள் ஒலித்து கரையில் உடையும், மரன் ஓங்கு ஒரு சிறை – மரங்கள் உயர்ந்து இருக்கும் ஒரு பக்கம், பல பாராட்டி – பலவாக பாராட்டி, எல்லை எம்மொடு கழிப்பி – பகல் பொழுதினை எங்களுடன் கழித்து, எல் உற – இரவு ஆகும்பொழுது, நல் தேர் பூட்டலும் உரியீர் – உன்னுடைய நல்ல தேரைப் பூட்டி செல்வதற்கு உரியர் ஆகுவீர், அற்றன்று – அதுவே அன்றி, சேந்தனிர் செல்குவிர் ஆயின் – எங்கள் ஊரில் தங்கிவிட்டு செல்லுவீர் ஆயின், யாமும் எம் வரை அளவையின் பெட்குவம் – நாங்கள் எங்களால் முடிந்த அளவில் உன்னைப் பேணுவோம், நும் ஒப்பதுவோ – இது உனக்கு ஒப்புதல் ஆக உள்ளதா, உரைத்திசின் எமக்கே – எங்களிடம் கூறுவாயாக

அகநானூறு 203, கபிலர், பாலைத் திணை – மகட்போக்கிய தாய் அல்லது செவிலித்தாய் சொன்னது
உவக்குநள் ஆயினும், உடலுநள் ஆயினும்,
யாய் அறிந்து உணர்க என்னார், தீ வாய்
அலர் வினை மேவல் அம்பல் பெண்டிர்,
இன்னள் இனையள் நின் மகள் எனப் பல் நாள்
எனக்கு வந்து உரைப்பவும், தனக்கு உரைப்பு அறியேன்,  5
நாணுவள் இவள் என நனி கரந்து உறையும்
யான் இவ் வறுமனை ஒழிய, தானே
அன்னை அறியின் இவண் உறை வாழ்க்கை
எனக்கு எளிது ஆகல் இல் எனக் கழல் கால்
மின் ஒளிர் நெடு வேல் இளையோன் முன்னுறப்  10
பன் மலை அருஞ்சுரம் போகிய தனக்கு, யான்
அன்னேன் அன்மை நன் வாய்யாக,
மான் அதர் மயங்கிய மலை முதல் சிறு நெறி
வெய்து இடையுறாஅது எய்தி முன்னர்ப்
புல்லென் மா மலைப் புலம்பு கொள் சீறூர்  15
செல் விருந்து ஆற்றித் துச்சில் இருத்த
நுனை குழைத்து அலமரும் நொச்சி
மனை கெழு பெண்டு யான் ஆகுக மன்னே.

பொருளுரை:  கொடிய வாயினால் பேசி, பழித் தூற்றுதலை விரும்பும் புறங்கூறும் பெண்கள், தாய் மகிழ்வாள் ஆயினும், ஆத்திரம் அடைவாள் ஆயினும், தானே அவள் உணரட்டும் என்று எண்ணாது, பல நாட்களாக ‘உன் மகள் இவ்வாறு உள்ளாள்’ என்று என்னிடம் உரைத்தார்கள். நான் அந்தச் செய்தியை என் மகளிடம் கூறவில்லை. அவள் நாணம் அடைவாள் என்று மிகவும் மறைத்து விட்டேன்.  தன்னுடைய தாய், தன் களவு ஒழுக்கத்தைப் பற்றி அறிந்தால், இங்கு வாழ்வது கடினம் என்று எண்ணி, என்னைத் தனியே இந்த வெற்று மனையில் விட்டு விட்டு, வீரக் கழல்களைக் காலில் அணிந்த, ஒளியுடைய நீண்ட வேலையுடைய இளைஞனைப் பின்பற்றிப் பல மலைகளையுடைய பாலை நிலத்தின் வழியே சென்று விட்டாள் என் மகள். நான் அத்தன்மை உடையவளாக அல்லாது உண்மையாகத் தோன்றும் பொருட்டு, விலங்குகள் நடந்து உண்டாக்கிய மலை அடிவாரத்தில் உள்ள பின்னியப் பாதையில், தீங்கு உண்டாகாதவாறு அவர்களுக்கு முன்னமே சென்று சேர்ந்து, பொலிவற்ற பெரிய மலையைச் சார்ந்த தனிமையான சிறிய ஊரில், அவர்கள் இருவரையும் விருந்தினராய் ஏற்று அவர்களுக்கு உணவைக் கொடுத்துத் தங்குவதற்குத் தனியிடம் கொடுத்து, முனைகள் தளிர்க்கப்பெற்று அசைந்தாடும் நொச்சி மரங்கள் சூழ்ந்த இல்லத்தின் பெண்ணாக நான் ஆவேனாக!

சொற்பொருள்:  உவக்குநள் ஆயினும் – மகிழ்வாள் ஆயினும், உடலுநள் ஆயினும் – ஆத்திரம் கொள்வாள் ஆயினும், யாய் அறிந்து உணர்க என்னார் – தாய் அறிந்து உணரட்டும் என்று எண்ணாதவர்கள், தீ வாய் – தீயச் சொற்கள், அலர் வினை மேவல் அம்பல் பெண்டிர் – பழித் தூற்றுதலையே விரும்பும் புறங் கூறும் பெண்கள், இன்னள் இனையள் நின் மகள் எனப் பல் நாள் எனக்கு வந்து உரைப்பவும் – உன் மகள் இவ்வாறு உள்ளாள் என்று பல நாட்கள் என்னிடம் கூறவும், தனக்கு உரைப்பு அறியேன் – நான் அவளிடம் கூறவில்லை, நாணுவள் இவள் என – இவள் நாணம் அடைவாள் என்று, நனி கரந்து உறையும் – மிகவும் மறைந்து இருக்கும், யான் இவ் வறுமனை ஒழிய – இந்த வெற்று இல்லத்தில் நான் தனித்து இருக்க விட்டு, தானே – அவளே, அன்னை அறியின் இவண் உறை வாழ்க்கை எனக்கு எளிது ஆகல் இல் என – தாய் என்னுடைய களவு ஒழுக்கத்தை அறிந்தால் இங்கு வாழ்க்கை எளியதாக இருக்காது என்று, கழல் கால் – வீரக் கழல்களை அணிந்த கால்கள், மின் ஒளிர் நெடு வேல் – மின்னலைப் போன்ற ஒளியுடைய நீண்ட வேல், இளையோன் – இளைஞன், முன்னுற – முன்னே செல்ல, பன் மலை அருஞ்சுரம் போகிய தனக்கு – பல மலைகளையுடைய பாலை நிலத்தின் வழியே சென்ற அவளுக்கு, யான் அன்னேன் அன்மை – நான் அத்தன்மை உடையவளாக அல்லாது, நன் வாய்யாக – உண்மையாகத் தோன்றும் பொருட்டு, மான் – விலங்குகள், அதர் மயங்கிய – பின்னியப் பாதைகள் , மலை முதல் – மலையடி, சிறு நெறி – சிறிய பாதை, வெய்து இடையுறாஅது – துன்பம் நிகழாது, எய்தி – சேர்ந்து, முன்னர் – முன்னர், புல்லென் மா மலை – பொலிவு அற்ற பெரிய மலை, புலம்பு கொள் – தனிமை உடைய, சீறூர் – சிறிய ஊர், செல் விருந்து ஆற்றி – வருகின்ற விருந்தாக ஏற்று அவர்களுக்கு உணவுக் கொடுத்து, துச்சில் இருத்த – தனியிடத்தில் இருக்கச் செய்து, நுனை குழைத்து அலமரும் நொச்சி மனை கெழு பெண்டு யான் ஆகுக மன்னே – முனைகள் தளிர்க்கப்பெற்று அசைந்தாடும் நொச்சி மரங்கள் சூழ்ந்த இல்லத்தின் பெண்ணாக நான் ஆவேனாக! மன்னே – ஓர் அசைச் சொல்

அகநானூறு 281, மாமூலனார், பாலைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
செய்வது தெரிந்திசின் தோழி! அல்கலும்
அகலுள் ஆண்மை அச்சறக் கூறிய
சொல் பழுது ஆகும் என்றும் அஞ்சாது,
ஒல்கு இயல் மட மயில் ஒழித்த பீலி
வான் போழ் வல்வில் சுற்றி நோன் சிலை  5
அவ்வார் விளிம்பிற்கு அமைந்த நொவ்வியல்
கனை குரல் இசைக்கும் விரை செல் கடுங்கணை
முரண் மிகு வடுகர் முன்னுற, மோரியர்
தென் திசை மாதிரம் முன்னிய வரவிற்கு
விண்ணுற ஓங்கிய பனி இருங்குன்றத்து  10
ஒண் கதிர்த் திகிரி உருளிய குறைத்த
அறை இறந்து அவரோ சென்றனர்,
பறை அறைந்தன்ன, அலர் நமக்கு ஒழித்தே.

பொருளுரை:  செய்ய வேண்டியதை ஆராய்ந்துக் காண்பாயாகத் தோழி! தினமும் நம்முடைய பெரிய ஊரில் அவர் நமக்கு அச்சம் இல்லாது கூறியச் சொற்கள் பொய்க்கும் என்று அஞ்சாமல், தளர்ந்து நடக்கும், மடப்பமுடைய மயில் உதிர்த்து விட்ட தோகையை நீண்டப் பிளப்புகளையுடைய வலிய வில்லில் சுற்றி, அந்த வில்லின் அழகிய வார் விளிம்பில் பொருத்தி, மிக்க ஒலியுடன் விரைந்து செல்லும் கொடிய அம்புகளையுடைய செலுத்தும் மாறுபாடு மிக்க உடைய வடுகர் முன்னே வர, மோரியர் தெற்கில் உள்ள நாட்டைப் பற்ற வரும் பொருட்டு விண்ணளவு உயர்ந்த குளிர்ந்தப் பெரிய மலையில் ஒளியுடைய சக்கரங்கள் உருளுவதற்காகச் செதுக்கிய பாறைகளைக் கடந்து, நம் மீது பறையைக் கொட்டியதைப் போன்ற பழிச் சொற்கள் எழுமாறு தலைவர் சென்றார்.

சொற்பொருள்:  செய்வது தெரிந்திசின் தோழி – செய்ய வேண்டியதை ஆராய்ந்துக் காண்பாயாகத் தோழி, அல்கலும் – தினமும், அகலுள் – ஊரில், பெரிய இடத்தில், ஆங்கண் – அங்கு, அச்சற – அச்சம் இல்லாது, கூறிய சொல் பழுது ஆகும் என்றும் அஞ்சாது – கூறியச் சொற்கள் பொய்க்கும் என்று அஞ்சாமல், ஒல்கு இயல் – ஒதுங்கி நடக்கும், தளர்ந்து நடக்கும், மட மயில் – மடப்பமுடைய மயில், ஒழித்த பீலி – உதிர்த்து விட்ட தோகை, வான் போழ் வல்வில் சுற்றி – நீண்டப் பிளப்புகளையுடைய வலிய வில்லில் சுற்றி, நோன் சிலை – வலிய வில், அவ்வார்- அழகிய வார், விளிம்பிற்கு அமைந்த – விளிம்பிற்குப் பொருந்திய, நொவ்வு இயல் – விரைந்த தன்மை, கனை குரல் – மிக்க ஒலி, இசைக்கும் – ஒலிக்கும், விரை செல் கடுங்கணை – விரைந்து செல்லும் கொடிய அம்பு, முரண் மிகு வடுகர் – மாறுபாடு மிக்க உடைய வடுகர் (தெலுங்கர்), முன்னுற – முன்னே வர, மோரியர் தென் திசை மாதிரம் முன்னிய வரவிற்கு – மோரியர் தெற்கில் உள்ள நாட்டைப் பற்ற வரும் பொருட்டு, விண்ணுற ஓங்கிய – விண்ணளவு உயர்ந்த, பனி இருங்குன்றத்து – குளிர்ந்தப் பெரிய மலையில், ஒண் கதிர் திகிரி உருளிய – ஒளியுடைய சக்கரங்கள் உருளுவதற்காக, குறைத்த அறை – செதுக்கிய பாறை, இறந்து அவரோ சென்றனர் – அவர் கடந்து சென்றார், பறை அறைந்தன்ன – பறையைக் கொட்டியதைப் போல், அலர் நமக்கு ஒழித்தே – நமக்கு அலரைக் கொடுத்து

Advertisements