தமிழ் உரை – கலித்தொகை

எளிய தமிழ் உரை – வைதேகி

பாடல்கள் (14) – 6, 9, 23, 37, 39, 51, 70, 87, 110, 111, 113, 114, 116, 119, 133.

கலித்தொகை 6, பாலை பாடிய பெருங்கடுங்கோ, பாலை, தலைவி தலைவனிடம் சொன்னது
மரையா மரல் கவர மாரி வறப்ப
வரை ஓங்கு அருஞ் சுரத்து ஆர் இடைச் செல்வோர்
சுரை அம்பு மூழ்கச் சுருங்கிப் புரையோர் தம்
உள் நீர் வறப்பப் புலர் வாடு நாவிற்குத்
தண்ணீர் பெறாஅத் தடுமாற்று அருந்துயரம் 5
கண்ணீர் நனைக்கும் கடுமைய காடு என்றால்
என் நீர் அறியாதீர் போல இவை கூறல்
நின் நீர அல்ல நெடுந்தகாய் எம்மையும்
அன்பு அறச் சூழாதே ஆற்று இடை நும்மொடு
துன்பம் துணை ஆக நாடின் அது அல்லது 10
இன்பமும் உண்டோ எமக்கு.

பாடல் பின்னணி – பொருள் ஈட்டும்பொருட்டுத் தலைவன் செல்ல எண்ணியுள்ளான் என அறிந்த தலைவி, ‘என்னையும் உடன்கொண்டு செல்க’ என அவனிடம் கூறியது.

பொருளுரை: காட்டுப் பசுவானது உண்ண வேறு உணவு எதுவும் இல்லாததால் மரல் செடியை உண்ணுமாறு, மழை இல்லாது வறண்டு போக, மலை ஓங்கிய செல்லுதற்கரிய பாலை நிலத்தின் அரிய வழியில் செல்பவர்கள், ஆறலைக் கள்வர்களின் சுரை பொருந்திய அம்புகள் தங்கள் உடலைத் தைத்ததால், வருந்தி, நீர் வற்றி வறண்டு வருந்தும் நாவிற்கு நீர் பெற முடியாத சூழ்நிலையில் தம் கண்ணீரால் நாவின் வறட்சியை நீக்கிப் போக்கும் கொடுமையான காடு என்று காரணம் காட்டி என்னை விட்டுப் பிரிய நீர் நினைத்தீர் ஆயின், என்னை நீர் அறியாதவர் போல் இவற்றைக் கூறுகின்றீர்.  இவை நன்றாகிய தன்மை உடையவை அல்ல, ஐயா.  அன்பு நீங்க பிரிதலைக் கருதாது, உம்முடன் வழியில் துன்பத்திற்குத் துணையாக நான் வர விரும்புகின்றேன்.  அதைவிட வேறு இன்பம் எனக்கு உண்டா?

குறிப்பு:  சுரை = அம்பின் தலைப்பகுதி.  நீர் அறியாதீர் (7) – அ. விசுவநாதன் உரை – ஒருவனைப் பன்மையாற் கூறியது.  ‘நின் நீர அல்ல’ (8) எனப் பின்னர் அவனை ஒருமையாற் கூறியது – பன்மையும் ஒருமையும் மயங்கி நின்றன.  மரையா (1) – University of Madras Lexicon – மரை மான், Indian elk, sambur, or the Indian bison. 

சொற்பொருள்:  மரையா மரல் கவர – காட்டுப் பசு மரலை உண்ண, மரைமான் மரலை உண்ண, மாரி வறப்ப – மழை வறண்டு போக, வரை ஓங்கு அருஞ்சுரத்து ஆர் இடைச் செல்வோர் – மலை ஓங்கிய  செல்லுதற்கரிய பாலை நிலத்தின் அரிய வழியில் செல்பவர்கள், சுரை அம்பு மூழ்க – சுரையுடன் கூடிய அம்புகள் உடம்பில் தைக்க, சுருங்கி – சுருங்கி, புரையோர் – குற்றத்தையுடைய மறவர்கள், ஆறலை கள்வர்கள் (புரை – குற்றம்), தம் உள் நீர் வறப்ப – உள்ளுண்டாகிய நீர் வற்ற, புலர் வாடு நாவிற்குத் தண்ணீர் பெறாஅ – வறண்டு வருந்தும் நாவிற்கு நீர் பெற முடியாத (பெறாஅ – அளபெடை), தடுமாற்று அருந்துயரம் – மனத் தடுமாற்றத்தையுடைய கண்ணீர், நனைக்கும் – கண்ணீர் நனைக்கும், கடுமைய காடு என்றால் – கொடுமையான காடு என்றால், என் நீர் அறியாதீர் போல இவை கூறல் – என்னை நீர் அறியாதவர் போல் இவற்றைக் கூறுதல், நின் நீர அல்ல – இவை நுமக்கு நன்றாகிய தன்மை உடையவை அல்ல, நெடுந்தகாய் – தலைவனே, எம்மையும் அன்பு அறச் சூழாதே – அன்பு நீங்க பிரிதலைக் கருதாது, ஆற்று இடை நும்மொடு துன்பம் துணை ஆக நாடின் – உன்னுடன் வழியில் துன்பத்திற்கு துணையாக வர விரும்பினால், அது அல்லது இன்பமும் உண்டோ எமக்கு – அதை விட வேறு இன்பம் எனக்கு உண்டா (எமக்கு – தன்மைப் பன்மை)

கலித்தொகை 9, பாலை பாடிய பெருங்கடுங்கோ, பாலை, தலைவியின் செவிலித்தாயும் வைணவத் துறவியும் சொன்னது

பாடல் பின்னணி:  தலைவியும் தலைவனும் உடன்போக்கில் சென்றபின், பாலை நிலத்தில் அவர்களைத் தேடிச் செல்லும் செவிலித்தாய், வைணவ துறவி ஒருவரையும் அவருடைய மாணாக்கர்களையும் வழியில் கண்டபொழுது அவர்கள் தன் பெண்ணை கண்டார்களா என வினவுகின்றாள்.

செவிலித்தாய் வைணவத் துறவியிடமும் அவருடைய மாணாக்கர்களிடமும் சொன்னது :

எறித்தரு கதிர் தாங்கி ஏந்திய குடை நீழல்
உறித் தாழ்ந்த கரகமும் உரை சான்ற முக்கோலும்
நெறிப்பட சுவல் அசைஇ, வேறு ஓரா நெஞ்சத்துக்
குறிப்பு ஏவல் செயல் மாலைக் கொளை நடை அந்தணீர்!
வெவ் இடைச் செலல் மாலை ஒழுக்கத்தீர் இவ் இடை  5
என் மகள் ஒருத்தியும், பிறள் மகன் ஒருவனும்
தம் உளே புணர்ந்த தாம் அறி புணர்ச்சியர்
அன்னார் இருவரை காணிரோ பெரும?

வைணவத் துறவி:

காணேம் அல்லேம்!  கண்டனம்!  கடத்து இடை
ஆண் எழில் அண்ணலோடு அருஞ் சுரம் முன்னிய,  10
மாண் இழை மடவரல் தாயிர் நீர் போறீர்!

பல உறு நறும் சாந்தம் படுப்பவர்க்கு அல்லதை,
மலை உளே பிறப்பினும் மலைக்கு அவை தாம் என் செய்யும்?
நினையுங்கால் நும் மகள் நுமக்கும் ஆங்கு அனையளே!

சீர்கெழு வெண் முத்தம் அணிபவர்க்கு அல்லதை,  15
நீர் உளே பிறப்பினும் நீர்க்கு அவை தாம் என் செய்யும்?
தேருங்கால் நும் மகள் நுமக்கும் ஆங்கு அனையளே!

ஏழ் புணர் இன் இசை முரல்பவர்க்கு அல்லதை,
யாழ் உளே பிறப்பினும் யாழ்க்கு அவை தாம் என் செய்யும்?
சூழுங்கால் நும் மகள் நுமக்கும் ஆங்கு அனையளே!  20

என, ஆங்கு
இறந்த கற்பினாட்கு எவ்வம் படரன்மின்!
சிறந்தானை வழிபடீஇச் சென்றனள்,
அறம் தலை பிரியா ஆறும் மற்று அதுவே.

பொருளுரை:

செவிலித்தாய்:  காயும் ஞாயிற்றுக் கதிர்களின் வெப்பத்தைத் தாங்கி நிழலைத் தரும் குடைகளை உங்கள் கைகளில் ஏந்தி, உறியில் தொங்கும் தண்ணீர்க் கமண்டலத்தையும் முக்கோலையும் முறைப்பட தோளில் சுமந்து, இறைவனைத் தவிர வேறு எதையும் எண்ணாத நெஞ்சத்துடன், ஐம்பொறிகளும் நீங்கள் ஏவிய வழியில் நடக்கும் இயல்பைப் பெற்ற அந்தணர்களே!  வெப்பம் மிகுந்த இக்காட்டு வழியில் செல்லும் சிறந்த ஒழுக்கத்தை உடையவர்களே!

ஐயா!  பிறர் அறியாமல் இணைந்த என் மகளும் ஒருத்தியின் மகனும், பிறர் அறிந்த நிலையில் உள்ளனர். அத்தன்மையுடைய அவர்கள் இருவரும் இந்த வழியில் செல்லுவதை நீவிர் கண்டீர்களா?

வைணவத் துறவி:  நாங்கள் காணாது இருக்கவில்லை.  கண்டோம்.  அழகான சிறந்த ஆணுடன் கடுமையான காட்டு வழியில் செல்லும் அழகிய அணிகலன்களை அணிந்த இளம் பெண்ணின் தாயாக இருப்பீர் போலும்,

பல மணங்களையுடைய நறுமணச் சந்தனம் பயன்படுத்துபவர்களுக்கு பயன் கொடுப்பது அல்லாது, தான் பிறந்த மலைக்கு எந்த வகையில் பயன்படும்?  நினைத்துப் பார்த்தால் உன் மகளுக்கும் உனக்கும் உள்ள உறவு அத்தகையதே,

சிறப்பு மிகுந்த வெள்ளை முத்துக்கள் அணிபவர்களுக்கு அழகைக் கொடுப்பது அல்லாது, தாம் பிறந்த கடலுக்கு எந்த வகையில் பயன்படும்?  ஆராய்ந்து பார்த்தால் உன் மகளுக்கும் உனக்கும் உள்ள உறவு அத்தகையதே

ஏழு நரம்புகளில் எழும் இனிய இசை, இசைப்பவர்களுக்கு அல்லாது, யாழில் பிறந்தாலும் யாழ்க்கு எந்த வகையில் பயன்படும்?  நினைத்துப் பார்த்தால் உன் மகளுக்கும் உனக்கும் உள்ள உறவு அத்தகையதே

ஆதலால், சிறந்த கற்பு நெறியை மேற்கொண்டு, தலைசிறந்த ஒருவனை ஏற்றுக் கொண்டு சென்ற உன் மகளை எண்ணி வருந்தாதீர்!  அவள் சென்ற வழி அறத்தொடு ஒத்தது ஆகும்!

குறிப்பு:  முக்கோல் என்பது முத்தண்டு.  திரிதண்டம் என்றும் கூறப்படும்.  மூன்று கோல்களை இணைத்துக்  கட்டிய இதனை வைணவத் துறவிகள் (முக்கோல் பகவர், திரிதண்டி) கையில் வைத்திருப்பார்கள்.  முக்கோல் பகவர் என்பவர்கள் ‘உள்ளம், மெய், நா’ ஆகியவற்றை அடக்கியவர்கள்.  கலித்தொகை 126 – முக்கோல் கொள் அந்தணர், முல்லைப்பாட்டு 38 – கல் தோய்த்து உடுத்த படிவப் பார்ப்பான் முக்கோல்.  நச்சினார்க்கினியர் உரை – ‘அரி, அயன், அரன் என்னும் மூவரும் ஒருவர் என்று சொல்லுதல் தன்னிடத்தே அமைந்த முக்கோல்’.

சொற்பொருள்:  எறித்தரு கதிர் தாங்கி – காயும் ஞாயிற்றின் கதிர்களின் வெப்பத்தைத் தாங்கி, ஏந்திய குடை – பிடித்த குடை, நீழல் – நிழல் (நீழல் – நிழல் என்பதன் நீட்டல் விகாரம்), உறித் தாழ்ந்த கரகமும் – உறியில் தங்கிய கமண்டலமும், உரை சான்ற முக்கோலும் – புகழ் பெற்ற திரிதண்டமும், நெறிப்படச் சுவல் அசைஇ – முறைப்படத் தோளில் வைத்து (அசைஇ – அளபெடை), வேறு ஓரா நெஞ்சத்து – இறைவனைத் தவிர வேறு எதையும் எண்ணாத நெஞ்சத்துடன், குறிப்பு ஏவல் செயல் மாலைக் கொளை நடை அந்தணீர்- ஐம்பொறிகளும் நீங்கள் ஏவிய வழியில் நடக்கும் இயல்பைப் பெற்ற அந்தணர்களே (குறிப்பு – ஐம்பொறிகளுக்கு ஆகுபெயர்), வெவ் இடைச் செலல் – வெப்பம் மிகுந்த காட்டு வழியில் செல்லுதல், மாலை ஒழுக்கத்தீர் – சிறந்த ஒழுக்கத்தை உடையவர்களே, இவ் இடை – இந்த வழியில், என் மகள் ஒருத்தியும் – என் மகள் ஒருத்தியும், பிறள் மகன் ஒருவனும் – வேறு பெண்ணின் மகன் ஒருவனும், தம் உளே புணர்ந்த – பிறர் அறியாமல் தாங்கள் இணைந்த (உளே – இடைக்குறை), தாம் – அவர்கள், அறி புணர்ச்சியர் – அவர்களுடையப் புணர்ச்சி பிறரால் அறியப்பட்டது, அன்னார் இருவரை காணிரோ – அத்தன்மையுடைய அவர்கள் இருவரையும் கண்டீர்களா, பெரும – ஐயா (பெரும – நச்சினார்க்கினியர் உரை – பெரும என்றாள், அவர்கள் ஆசிரியனாக பெரியோனை),

காணேம் அல்லேம் – நாங்கள் காணாது இருக்கவில்லை, கண்டனம் – கண்டோம், கடத்து இடை  – காட்டில், ஆண் எழில் அண்ணலோடு – அழகான சிறந்த ஆணுடன், அருஞ்சுரம் முன்னிய – கடுமையான காட்டு வழியில் செல்லும், மாண் இழை மடவரல் தாயிர் நீர் போறீர் – நீங்கள் அழகிய அணிகலன்களை அணிந்த இளம் பெண்ணின் தாயாக இருப்பீர் போலும்,

பல உறு நறும் சாந்தம் – பல மணங்களையுடைய நறுமணச் சந்தனம்,  படுப்பவர்க்கு அல்லதை – பயன்படுத்துபவர்களுக்கு அல்லாமல், மலை உளே பிறப்பினும் – மலையில் பிறந்தாலும் (உளே – இடைக்குறை), மலைக்கு அவை தாம் என் செய்யும் – மலைக்கு எந்த வகையில் பயன்படும், நினையுங்கால் நும் மகள் நுமக்கும் ஆங்கு அனையளே – நினைத்துப் பார்த்தால் உன் மகளுக்கும் உனக்கும் உள்ள உறவு அத்தகையதே (நினையுங்கால் – கால் ஈற்று வினையெச்சம்),

சீர்கெழு – சிறப்பு மிகுந்த, வெண் முத்தம் – வெள்ளை முத்துக்கள், அணிபவர்க்கு அல்லதை – அணிபவர்களுக்கு இல்லாமல், நீர் உளே பிறப்பினும் – கடல் நீரில் பிறந்தாலும் (உளே – இடைக்குறை), நீர்க்கு அவை தாம் என் செய்யும் – கடலுக்கு எந்த வகையில் பயன்படும், தேருங்கால் நும் மகள் நுமக்கும் ஆங்கு அனையளே – ஆராய்ந்துப் பார்த்தால் உன் மகளுக்கும் உனக்கும் உள்ள உறவு அத்தகையதே (தேருங்கால் – கால் ஈற்று வினையெச்சம்),

ஏழ் புணர் – ஏழு நரம்புகளில் எழும் இசை, இன் இசை – இனிமையான இசை, முரல்பவர்க்கு அல்லதை – இசைப்பவர்களுக்கு அல்லாது, யாழ் உளே பிறப்பினும் – யாழில் பிறந்தாலும் (உளே – இடைக்குறை), யாழ்க்கு அவை தாம் என் செய்யும் – யாழ்க்கு எந்த வகையில் பயன்படும், சூழுங்கால் நும் மகள் நுமக்கும் ஆங்கு அனையளே – நினைத்துப் பார்த்தால் உன் மகளுக்கும் உனக்கும் உள்ள உறவு அத்தகையதே (சூழுங்கால் – கால் ஈற்று வினையெச்சம்),

என – என்று, ஆங்கு – அசைச்சொல், இறந்த கற்பினாட்கு – கற்பு நெறியை மேற்கொண்டவளுக்கு,  எவ்வம் படரன்மின் – வருந்தாதே, சிறந்தானை வழிபடீஇச் சென்றனள் – தலைசிறந்த ஒருவனை ஏற்றுக் கொண்டு சென்றுள்ளாள் (வழிபடீ- அளபெடை), அறம் தலை பிரியா ஆறும் மற்று அதுவே – அவள் சென்ற வழி அறத்தொடு ஒத்தது ஆகும்

கலித்தொகை 23, பாலை பாடிய பெருங்கடுங்கோ, பாலை, தலைவி தலைவனிடம் சொன்னது
இலங்கு ஒளி மருப்பின் கைம்மா உளம்புநர்,
புலம் கடி கவணையின் பூஞ்சினை உதிர்க்கும்
விலங்கு மலை வெம்பிய போக்கு அரு வெஞ்சுரம்
தனியே இறப்ப யான் ஒழிந்து இருத்தல்
நகுதக்கன்று இவ் அழுங்கல் ஊர்க்கே; 5
இனி யான்
உண்ணலும் உண்ணேன்; வாழலும் வாழேன்;

தோள் நலம் உண்டு துறக்கப்பட்டோர்
வேணீர் உண்ட குடை ஓரன்னர்,

நல்குநர் புரிந்து நலன் உணப்பட்டோர் 10
அல்குநர் போகிய ஊர் ஓரன்னர்,

கூடினர் புரிந்து குணன் உணப்பட்டோர்
சூடினர் இட்ட பூ ஓரன்னர்,

என ஆங்கு,
யானும் நின் அகத்து அனையேன்; ஆனாது 15
கொலை வெம் கொள்கையொடு நாய் அகப்படுப்ப
வலைவர்க்கு அமர்ந்த மட மான் போல,
நின் ஆங்கு வரூஉம் என் நெஞ்சினை
என் ஆங்கு வாராது ஓம்பினை கொண்மே.

பொருளுரை:  தங்கள் நிலத்தைக் காக்கும்பொருட்டு, விளங்குகின்ற ஒளியையுடைய தந்தங்களை உடைய யானையை ஒலி எழுப்பி விரட்டுபவர்கள், யானை மீது கற்களை வீசும் கவணினால், மரக்கிளைகளிலிருந்து பூக்களை உதிர்க்கும், குறுக்கிட்டு இருக்கும் மலையின் வெப்பம் மிகுந்த செல்லுவதற்கு அரிய பாலைநிலத்தில் தனியே செல்வதற்கு என்னை இங்கே விட்டு பிரிவது, ஆரவாரத்துடைய இந்த ஊர் நகுவதற்குத் தக்கது ஆக இருக்கும். நான் இனி உண்ணவும் செய்யேன், உயிர் வாழ்தலையும் செய்யேன்,

தங்கள் பெண்மை நலன்களை நுகர்ந்தது பின் கைவிடப்பட்ட பெண்கள், குடித்துவிட்டு பின் தூக்கி எறியப்பட்ட பனங்குடைகளை ஒத்தவர்கள்,

தம் அருளினால் பெண்மையின் நலன்களை நுகர்ந்து கைவிடப்பட்ட பெண்கள், குடியிருந்த மக்கள் விலகிச் சென்ற ஊரினைப் போல்வார்,

மனம் விரும்பி கூடின பின்னர் கைவிடப்பட்ட பெண்கள், சூடின மலர்களை அடுத்த நாள் வீசி எறியும் பூவினைப் போல்வார்,

நான் உன்னிடத்து பயன்படாதவளாக ஆகிவிட்டேன்.  கொலைத் தொழிலில் கடிய கொள்கை கொண்ட நாய் வேட்டையின் போது தனக்கு என்று அகப்படுத்திக் கொள்ள,  அதற்கு உரித்தாகாது வேடவரின் வலையில் அகப்பட்ட மான் போல், என்னிடம் வராது உன்னிடம் வரும் என் நெஞ்சினை பாதுகாத்துக் கொள்வாயாக!

சொற்பொருள்:  இலங்கு ஒளி மருப்பின் கைம்மா – விளங்குகின்ற ஒளியையுடைய தந்தங்களை உடைய (கைம்மா – தும்பிக்கையுடைய யானை) யானையை, உளம்புநர் – ஒலி எழுப்பி விரட்டுபவர்கள், புலம் கடி – நிலத்தைக் காக்க, கவணையின் – கவணினால், பூஞ்சினை உதிர்க்கும் – மரக்கிளைகளிலிருந்து பூக்களை உதிர்க்கும், விலங்கு மலை – குறுக்கிட்டு இருக்கும் மலை, வெம்பிய போக்கு அரு வெஞ்சுரம் – வெப்பம் மிகுந்த செல்லுவதற்கு அரிய பாலைநிலம், தனியே இறப்ப – தனியே செல்வதற்கு, யான் ஒழிந்து இருத்தல் – என்னை இங்கே இருக்குமாறு பிரிந்து, நகுதக்கன்று இவ் அழுங்கல் ஊர்க்கே – ஆரவாரத்துடைய இந்த ஊர் நகுவதற்குத் தக்கது, இனி யான் உண்ணலும் உண்ணேன் வாழலும் வாழேன் – நான் இனி உண்ணவும் செய்யேன், உயிர் வாழ்தலும் செய்யேன் (உண்ணலும், வாழலும் – எண் உம்மைகள்),

தோள் நலம் உண்டு துறக்கப்பட்டோர் – தங்கள் பெண்மை நலன்களை நுகர்ந்து கைவிடப்பட்ட பெண்கள், வேணீர் உண்ட குடை ஓரன்னர் – குடித்துவிட்டு பின் தூக்கி எறியப்பட்ட பனங்குடைகளை ஒத்தவர்கள்,

நல்குநர் புரிந்து நலன் உணப்பட்டோர் – தம் அருளினால் பெண்மையின் நலன்களை நுகர்ந்து கைவிடப்பட்ட பெண்கள் (உணப்பட்டோர் – உண உண்ண என்பதன் விகாரம்), அல்குநர் போகிய ஊர் ஓரன்னர் – குடியிருந்த மக்கள் விலகிச் சென்ற ஊரினைப் போல்வார்,

கூடினர் புரிந்து குணன் உணப்பட்டோர் – மனம் விரும்பி கூடி பின் கைவிடப்பட்ட பெண்கள் (குணன் குணம் என்றதன் போலி, ஏகாரம் அசைநிலை, an expletive, உணப்பட்டோர் – உண உண்ண என்பதன் விகாரம்), சூடினர் இட்ட பூ ஓரன்னர் – சூடின மலர்களை அடுத்த நாள் வீசி எறியும் பூவினைப் போல்வார்,

என ஆங்கு யானும் நின் அகத்து அனையேன் – நான் உன்னிடத்து பயன்படாதவளாக ஆகிவிட்டேன் (ஆங்கு – அசைநிலை), ஆனாது கொலை வெம் கொள்கையொடு நாய் அகப்படுப்ப – கொலைத் தொழிலில் கடிய கொள்கைக் கொண்ட நாய் வேட்டையின் போது தனக்கு என்று அகப்படுத்திக் கொள்ள, வலைவர்க்கு அமர்ந்த மட மான் போல – அதற்கு உரித்தாகாது வேடவரின் வலையில் அகப்பட்ட மான் போல், நின் ஆங்கு வரூஉம் என் நெஞ்சினை – உன்னிடம் வரும் என் நெஞ்சினை (வரூஉம் – அளபெடை), என் ஆங்கு வாராது – என்னிடம் வராது, ஓம்பினை கொண்மே – பாதுகாத்துக் கொள்வாயாக (மே – முன்னிலையசை)

கலித்தொகை 37, கபிலர், குறிஞ்சி, தோழி தலைவியிடம் சொன்னது
கய மலர் உண்கண்ணாய்! காணாய்! ஒருவன்
வய மான் அடித் தேர்வான் போலத் தொடை மாண்ட
கண்ணியன் வில்லன் வரும் என்னை நோக்குபு,
முன்னத்தின் காட்டுதல் அல்லது தான் உற்ற
நோய் உரைக்கல்லான் பெயரும் மன் பல் நாளும்,  5
பாயல் பெறேஎன் படர் கூர்ந்து அவன் வயின்
சேயேன் மன் யானும் துயர் உழப்பேன், ஆயிடைக்
கண் நின்று கூறுதல் ஆற்றான் அவன், ஆயின்
பெண் அன்று உரைத்தல் நமக்கு ஆயின் இன்னதூஉம்
காணான் கழிதலும் உண்டு என்று, ஒரு நாள் என் 10
தோள் நெகிழ்பு உற்ற துயரால் துணிதந்து, ஓர்
நாண் இன்மை செய்தேன், நறு நுதால், ஏனல்
இனக் கிளி யாம் கடிந்து ஓம்பும் புனத்து அயல்
ஊசல் ஊர்ந்து ஆட ஒரு ஞான்று, வந்தானை,
“ஐய சிறிது என்னை ஊக்கி” எனக் கூறத்  15
“தையால் நன்று” என்று அவன் ஊக்கக் கை நெகிழ்பு
பொய்யாக வீழ்ந்தேன் அவன் மார்பில், வாய்யாச் செத்து
ஒய்யென ஆங்கே எடுத்தனன் கொண்டான் மேல்,
மெய் அறியாதேன் போல் கிடந்தேன் மன், ஆயிடை
மெய் அறிந்து ஏற்று எழுவேன் ஆயின், மற்று ஒய்யென  20
“ஒண் குழாய்! செல்க!” எனக் கூறி விடும் பண்பின்
அங்கண் உடையன் அவன்.

பாடல் பின்னணி – தலைவியின் காதலை அறிந்த தோழி, தலைவி தன்னிடம் அதுபற்றி கூற வேண்டும் என்று எண்ணி, தான் ஒரு ஆடவனைக் கண்டு காதல் கொண்டதாக ஒரு பொய்யைக் கூறுகின்றாள்.

பொருளுரை:   குளத்தில் உள்ள குவளை மலர்போல் மைதீட்டிய கண்களை உடைய என் தோழியே!  நான் கூறுவதைக் கேட்பாயாக! வில்லை தன் கையில் ஏந்திய, மாட்சிமைப்பட்ட மலர்ச்சரத்தை அணிந்த ஒருவன், வலிமையான விலங்கின் காலடியைத் தேடுபவன் போல் வந்து, என்னை நோக்கி, அவனுடைய குறிப்பால் காட்டுவது அன்றி, என் மேல் தான் உற்ற காதல் நோயைப் பற்றிக் கூறாமல் சென்றான், பல நாட்களாக.  நான் உறக்கம் பெறாமல் வருத்தம் அடைந்தேன்.  அவனுடன் உறவில்லாத நான் பெரும் வருத்தத்தில் ஆழ்ந்தேன்.  என் முன்னால் வந்து தன்னுடைய மனதில் உள்ளதைக் கூற முடியாதவன் அவன்.  என்னுடைய உணர்வுகளைக் கூறுவது பெண்மைத் தன்மைக்கு ஏற்றது இல்லை.  ஆனால் அவன் என்னுடைய உணர்வை அறியாமல் போய் விடுவானோ என்று எண்ணி, ஒரு நாள், என் தோள்கள் மெலிந்து நான் உற்ற வருத்தத்தால், துணிவுடன், நாணம் இல்லாத செயல் ஒன்றை நான் செய்தேன், நறுமண நெற்றியையுடைய என் தோழியே!  கிளிகளை விரட்டி நாம் காக்கும் தினைப் புனத்திற்கு அருகில் உள்ள ஊஞ்சலில் நான் ஆடிக் கொண்டிருந்தேன்.  அப்பொழுது அங்கு வந்த அவனை நோக்கி, “ஐயா! என் ஊஞ்சலைக் கொஞ்சம் ஆட்டி விடு” என்று நான் கூற, “பெண்ணே! நல்லது!” என்று அவன் ஊஞ்சலை ஆட்ட, கை நழுவியது போல் நான் நடித்து அவன் மார்பில் பொய்யாக விழுந்தேன்.  அது உண்மை என்று எண்ணி, அவன் என்னை வாரி எடுத்து அணைத்துக் கொண்டான்.  அங்கு நான் உண்மையை அறியாதவள் போல் கிடந்தேன்.  நான் என்னுடைய உடல் மயக்கம் தீர்த்தாற்போல் எழுவேன் ஆயின், விரைந்து ‘ஒளியுடைய அணிகலன்களை அணிந்தவளே!  எழுந்து செல்” என்று கூறும் நல்ல கண்ணோட்டமுடைய பண்புடையவன் அவன்.

குறிப்பு:  மேல் (18) – நச்சினார்க்கினியர் உரை – மேல் என்றது அவன் மார்பில் என்னும் பொருட்டு.

சொற்பொருள்: கய மலர் – குளத்தில் உள்ள மலர்கள், உண்கண்ணாய் – மையிட்ட கண்களை உடையாய், காணாய் – காண்பாயாக, ஒருவன் – ஒருவன், வய மான் அடித் தேர்வான் போல – வலிமையான விலங்கின் அடியைத் தேடுபவன் போல், தொடை – தொடுத்த, மாண்ட கண்ணியன் – மாட்சிமைப்பட்ட மலர்ச் சரத்தை அணிந்தவன், வில்லன் – வில்லைக் கையில் கொண்டவன், வரும் என்னை நோக்குபு – வந்து என்னை நோக்கி, முன்னத்தின் காட்டுதல் அல்லது – குறிப்பால் காட்டுவது அன்றி, தான் உற்ற நோய் உரைக்கல்லான் பெயரும் – தான் உற்ற காதல் நோயைப் பற்றி அவன் கூறாமல் செல்வான், மன் – ஓர் அசை, பல் நாளும் – பல நாட்களும், பாயல் பெறேஎன் படர் கூர்ந்து – உறக்கம் பெறாமல் வருத்தம் அடைந்து (பெறேஎன் – அளபெடை), அவன் வயின் சேயேன் – அவனுடன் உறவில்லாத நான், மன் – ஓர் அசை, யானும் துயர் உழப்பேன் – நானும் வருத்தத்தில் ஆழ்வேன், ஆயிடைக் கண் நின்று கூறுதல் ஆற்றான் அவன் – அங்கு என் முன்னால் வந்து தன்னுடைய மனதில் உள்ளதைக் கூற முடியாதவன் அவன், ஆயின் பெண் அன்று உரைத்தல் நமக்கு – பெண்ணின் தன்மை இல்லை என் வருத்தத்தைக் கூற, ஆயின் இன்னதூஉம் காணான் கழிதலும் உண்டு என்று – ஆனால் அவன் என்னுடைய உணர்வை அறியாமல் போய் விடுவானோ என்று (இன்னதூஉம் – அளபெடை), ஒரு நாள் – ஒரு நாள், என் தோள் நெகிழ்பு உற்ற துயரால் – என் தோளை மெலியச் செய்த துயரத்தால், துணிதந்து ஓர் நாண் இன்மை செய்தேன் – துணிவுடன் நாணம் இல்லாத செயலை நான் செய்தேன், நறு நுதால் – நறுமணமான நெற்றியையுடைய என் தோழியே, ஏனல் இனக் கிளி யாம் கடிந்து ஓம்பும் புனத்து அயல் – கிளிகளை விரட்டி நாம் காக்கும் தினைப் புனத்திற்கு அருகில், ஊசல் ஊர்ந்து ஆட – நான் ஊஞ்சலில் ஆடிக் கொண்டிருந்தேன், ஒரு ஞான்று வந்தானை – அப்பொழுது அங்கு வந்தவனை, ஐய சிறிது என்னை ஊக்கி எனக் கூற – ஐயா! என் ஊஞ்சலைக் கொஞ்சம் ஆட்டி விடு என்று நான் கூற (ஊக்கி – முன்னிலை ஒருமை ஏவல் வினைமுற்று), “தையால் நன்று” என்று அவன் ஊக்க – “பெண்ணே! நல்லது” என்று அவன் ஊஞ்சலை ஆட்ட, கை நெகிழ்பு பொய்யாக வீழ்ந்தேன் அவன் மார்பில் – கை நழுவியது போல் நான் நடித்து அவன் மார்பில் பொய்யாக வீழ்ந்தேன், வாய்யாச் செத்து ஒய்யென ஆங்கே எடுத்தனன் கொண்டான் மேல் – அது உண்மை என்று எண்ணி என்னை வாரி எடுத்து அணைத்துக் கொண்டான் தன் மார்புடன் (வாய்யா – வாயாக, ஈறு கெட்டது), மெய் அறியாதேன் போல் கிடந்தேன் – அங்கு நான் உண்மையை அறியாதவள் போல் கிடந்தேன், மன் – ஓர் அசை, ஆயிடை மெய் அறிந்து ஏற்று எழுவேன் ஆயின் – அப்பொழுது நான் என்னுடைய உடல் மயக்கம் தீர்த்தாற்போல் எழுவேன் ஆயின், மற்று ஒய்யென ஒண் குழாய் செல்க எனக் கூறி விடும் பண்பின் அங்கண் உடையன் அவன் – அதன் பின் அவன் விரைவில் “ஒளியுடைய அணிகலன்களை அணிந்தவளே! எழுந்து செல்வாயாக” என்று கூறும் நல்ல கண்ணோட்டமுடைய பண்புடையவன் அவன் (மற்று – வினைமாற்றின்கண் வந்தது)

கலித்தொகை 39, கபிலர், குறிஞ்சி, தலைவியும் தோழியும் சொன்னது

தோழி:
“காமர் கடும் புனல் கலந்து எம்மோடு ஆடுவாள்
தாமரைக் கண் புதைத்து அஞ்சித் தளர்ந்து அதனோடு ஒழுகலான்,
நீள் நாக நறும் தண் தார் தயங்கப் பாய்ந்து அருளினால்,
பூண் ஆகம் உற தழீஇ போத்தந்தான் அகல் அகலம்
வருமுலை புணர்ந்தன என்பதனால் என் தோழி 5
அரு மழைதரல் வேண்டின் தருகிற்கும் பெருமையளே;

அவனும் தான் ஏனல் இதணத்து அகில் புகை உண்டு இயங்கும்
வான் ஊர் மதியம் வரை சேரின், அவ் வரைத்
தேனின் இறால் என ஏணி இழைத்திருக்கும்
கான் அகல் நாடன் மகன்; 10

சிறுகுடியீரே சிறுகுடியீரே
வள்ளி கீழ் வீழா; வரை மிசைத் தேன் தொடா;
கொல்லை குரல் வாங்கி ஈனா மலை வாழ்நர்
அல்ல புரிந்து ஒழுகலான்;

காந்தள் கடி கமழும் கண் வாங்கு இருஞ் சிலம்பின் 15
வாங்கு அமை மென்தோள் குறவர் மட மகளிர்
தாம் பிழையார் கேள்வர்த் தொழுது எழலால், தம் ஐயரும்
தாம் பிழையார் தாம் தொடுத்த கோல்
என ஆங்கு,
அறத்தொடு நின்றேனைக் கண்டு திறப்பட 20
என் ஐயர்க்கு உய்த்து உரைத்தாள் யாய்,

அவரும் தெரி கணை நோக்கிச் சிலை நோக்கிக் கண் சேந்து
ஒரு பகல் எல்லாம் உருத்து எழுந்து ஆறி,
இருவர் கண் குற்றமும் இல்லையால் என்று
தெருமந்து சாய்த்தார் தலை 25

தெரி இழாய் நீயும் நின் கேளும் புணர,
வரை உறை தெய்வம் உவப்ப உவந்து
குரவை தழீஇ யாம் ஆடக் குரவையுள்
கொண்டுநிலை பாடிக்காண்”;
தலைவி:
“நல்லாய்! 30
நன்னாள் தலைவரும் எல்லை நமர் மலைத்
தம் நாண் தாம் தாங்குவார், என் நோற்றனர் கொல்?

புன வேங்கைத் தாது உறைக்கும் பொன் அறை முன்றில்,
நனவில் புணர்ச்சி நடக்குமாம் அன்றோ?
நனவில் புணர்ச்சி நடக்கலும், ஆங்கே 35
கனவில் புணர்ச்சி கடிதுமாம் அன்றோ?”
தோழி:

“விண் தோய் கல் நாடனும் நீயும் வதுவையுள்
பண்டு அறியாதீர் போல் படர்கிற்பீர் மன் கொலோ?
பண்டு அறியாதீர் போல் படர்ந்தீர் பழம் கேண்மை
கண்டு அறியாதேன் போல் கரக்கிற்பென் மன் கொலோ? 40

மை தவழ் வெற்பன் மண அணி காணாமல்
கையால் புதை பெறூஉம் கண்களும் கண்களோ?”
தலைவி:
“என்னை மன் நின் கண்ணால் காண்பென் மன் யான்”
தோழி:
“நெய்தல் இதழ் உண்கண் நின் கண் ஆக என் கண் மன!
என ஆங்கு 45
நெறி அறி செறி குறி புரிதிரிபு அறியா அறிவனை முந்துறீஇத்,
தகை மிகு தொகை வகை அறியும் சான்றவர் இனம் ஆக,
வேய் புரை மென்தோள் பசலையும் அம்பலும்,
மாயப் புணர்ச்சியும் எல்லாம் உடன் நீங்கச்,
சேய் உயர் வெற்பனும் வந்தனன், 50
பூ எழில் உண்கணும் பொலிகமா இனியே.

பொருளுரை:  தோழி:  விரும்பத்தக்க விரைந்து ஓடும் நீரில் எம்மோடு நீராட அவள் வந்தாள். தாமரை போன்ற கண்களைப் புதைத்துக் கொண்டு அச்சம் கொண்டு, உடல் தளர்ந்து, நீருடன் அவள் போனதால், நீண்ட நாக மலர்களால் கட்டின குளிர்ந்த மாலை அசையும்படி அந்நீரில் குதித்து, அவன் அருளினான். பூண் அணிந்த அவளுடைய மார்பைத் தன்னுடை மார்பில் உரசும்படி அணைத்துக்கொண்டு கரையில் சேர்த்தான் அவளை. அவனுடைய அகன்ற மார்பில் இவளின் எழுகின்ற முலைகள் சேர்ந்தன எனப் பிறர் கூறினர் என்பதால், என் தோழி, அரிய மழையைப் பெய்விக்க விரும்பினால், அதனைத் தரக்கூடிய கற்புடைய பெருமை உடையவள் ஆனாள்,

தினைப்புனத்தில் இட்ட பரணிலிருந்து மேலே எழுந்த அகிற்புகையானது எழுந்து வானில் இயங்கும் நிலவை மறைக்கும் மலையிடத்தில் தங்கியிருக்குமானால், அந்நிலவை மலையில் உள்ள தேன்கூடு என நினைத்து, மலையில் வாழும் மக்கள் மூங்கிலால் செய்த ஏணிகளை அமைக்கும், காடு அகன்ற நாட்டை உடையவனின் மகன் ஆவான் அவன்,

சிறுகுடியில் உள்ளோரே! சிறுகுடியில் உள்ளோரே!  இவள் விருப்பத்தை அறியாது இவளுக்கு உதவியவர்க்கு இவளை மணம் முடித்து வைக்காது, பிறர்க்கு இவளைக் கொடுக்க எண்ணி மலைக் குறவர்கள் அறம் இல்லாதவர்களாய் வாழ்வதால், இம்மலையில் வள்ளிக்கொடியின் கிழங்குகள் கீழே உண்டாகா, மலை உச்சியில் தேன்கூடுகள் உண்டாகா, கொல்லையில் தினை விளைந்து கொத்துக்கள் ஆகத் தோன்றா. காந்தள் மணங்கமழும் கண்டவர்களின் கண்களை வாங்கும் கரிய மலையில் உள்ள வளைந்த மூங்கில் போலும் மென்மையான தோளினையுடைய, மடப்பத்தை உடைய மகளிர், தாம் பிழை செய்யாதவர்கள் ஆக, தங்கள் கணவரைக் கடவுள் என்று வணங்கி எழுவர். இதனால் அவர்களுடைய கணவர்களும் தாங்கள் குறித்த குறி தப்பாது கணை தொடுக்கும் ஆற்றல் உடையவர்கள் ஆனார்கள்,,

இவ்வாறு நான் செவிலித்தாயிடம் அறத்தொடு நின்றதைக் கண்டு, அவள் நற்றாய்க்கு அறத்தொடு நின்றாள்.  நற்றாய் அண்ணன்மார்க்கு மிகத் திறமையாக விவரித்தாள்.   அவர்களும் தங்களின் தேர்ந்தெடுத்த அம்புகளையும் வில்லையும் நோக்கி, கண் சிவந்து, ஒரு பகல் சினம் கொண்டு எழுந்து, அதன்பின் சினம் ஆறி,  இருவரிடமும் குற்றம் இல்லை என உணர்ந்து மனம் வருந்தி, தங்கள் தலையைச் சாய்த்தார்கள்.

தேர்ந்தெடுத்த அணிகலன்களை அணிந்தவளே!  நீயும் உன் தலைவனும் கூடும்படியாக,  இம்மலையில் வாழும் கடவுள் மகிழ, நாம் கைகோத்து குரவை ஆடுவோம்.  குரவைக்கூத்திற்கு உரியவற்றை நீ பாடுவாயாக!

தலைவி:  நல்லவளே! திருமணம் நிகழும்வரை, நம் குடும்பத்தார், மலையில் தம் நாணத்தைத் தாங்க, என்ன நல்வினையையை அவர்கள் செய்தார்களோ? காட்டு வேங்கைமர மலர்களின் தாது உதிர்ந்து பொன்னிறமாகத் தோன்றும் முற்றத்தில், நனவாகவே என்னை அவருடன் சேர்க்கும் திருமணம் நடக்கும் அல்லவா? அதன்பின் அவருடன் கனவில் சேரும் எண்ணத்தை நான் விட்டுவிடுவேன் அல்லவா?

தோழி:  வானத்தைத் தீண்டும் மலைநாடனும் நீயும் திருமணம் நிகழும் வேளையில் முன்பு ஒருவரையொருவர் அறியாதவர்கள் போல் நடந்து கொள்வீர்களா?  நீங்கள் இருவரும் அறியாதீர் போல நடந்து கொண்டாலும் உங்கள் பழைய உறவைக் கண்ட நான் அறியாதவள் போல் மறைக்க முடியுமா?  முகில் தவழும் மலைநாடனின் திருமணத்தைக் காணாமல் கையால் புதைத்துக் கொள்ளப்படும் கண்களும் கண்கள் ஆகுமோ?

தலைவிஅதனால் என்ன.  உன் கண்கள் மூலம் நானும் காண்பேன்,

தோழி:  உன்னுடைய நெய்தல் மலரிதழ் போலும் மையிட்டக் கண்கள் என் கண்கள் ஆவதாக! செய்யும் குறியில் பிழை அறியாதவனை முன்னாகக் கொண்டு, தகை மிகுந்து தொகைவகை அறிந்தவர்களாகச் சான்றோர்கள் சூழ, மூங்கில்போன்ற உன் மென்மையான தோளின் பசலையும், ஊரின் அலரும், கனவில் காணும் புணர்ச்சியும் உடனே நீங்குமாறு, மிக உயர்ந்த மலைநாடனும் வந்தான். உன் மலரை ஒத்த கண்கள் பொலிவனவாக!

குறிப்பு:  தோழி செவிலித்தாய்க்கு அறத்தொடு நின்று, செவிலித்தாய் நற்றாய்க்கு அறத்தொடு நின்று, நற்றாய் தந்தை தமையன்மாருக்கு அறத்தொடு நின்று அவர்கள் திருமணத்திற்கு உடன்பட்டமையால் தலைவியும் தோழியும் குரவைக் கூத்தாடினர். தொல். பொருளியல் 12 – எளித்தல், ஏத்தல், வேட்கை உரைத்தல், கூறுதல் உசாதல், ஏதீடு, தலைப்பாடு, உண்மை செப்புங் கிளவியொடு, தொகைஇ எழு வகைய என்மனார் புலவர் – இங்கு எளித்தல், ஏத்தல், வேட்கை உரைத்தல்.  தேன் எடுப்பதற்காக மலையில் ஏணியை வைத்தார்கள் – குறுந்தொகை 273, கலித்தொகை 39, புறநானூறு 105.

சொற்பொருள்:   தோழி:  காமர் கடும் புனல் கலந்து எம்மோடு ஆடுவாள் – விரும்பத்தக்க விரைந்து ஓடும் நீரில் எம்மோடு நீராட வந்தாள், தாமரைக் கண் புதைத்து அஞ்சி – தாமரை போன்ற கண்களைப் புதைத்துக் கொண்டு அஞ்சி, தளர்ந்து – தளர்ந்து, அதனோடு ஒழுகலான் – நீருடன் போனதால், நீள் நாக நறும் தண் தார் தயங்கப் பாய்ந்து – நீண்ட நாக மலர்களால் கட்டின குளிர்ந்த மாலை அசையும்படி அந்நீரில் குதித்து, surapunnai trees, long-leaved two-sepalled gamboge trees, or punnai trees, Laurel Tree, Mast wood Trees, Calophyllum inophyllum  according to the University of Madras Lexicon, Mesua ferrea according to P.L. Sami and R. Panchavarnam, அருளினால் – அவன் அருளினால், பூண் ஆகம் உற தழீஇ போத்தந்தான் – பூண் அணிந்த அவளுடைய மார்பைத் தன்னுடை மார்பில் உரசும்படி அணைத்துக்கொண்டு கரையில் சேர்த்தான் அவளை (தழீஇ – அளபெடை), அகல் அகலம் வருமுலை புணர்ந்தன என்பதனால் – அவனுடைய அகன்ற மார்பில் இவளின் எழுகின்ற முலைகள் சேர்ந்தன எனப் பிறர் கூறினர் என்பதால், என் தோழி – என் தோழி, அரு மழைதரல் வேண்டின் தருகிற்கும் பெருமையளே – அரிய மழையைப் பெய்விக்க விரும்பினால் அதனைத் தரக்கூடிய கற்புடைய பெருமை உடையவள் ஆனாள்,

அவனும் தான் – அவனும் தான், ஏனல் இதணத்து அகில் புகை உண்டு இயங்கும் வான் ஊர் மதியம் – தினைப்புனத்தில் இட்ட பரணிலிருந்து எழுந்த அகிற்புகையானது எழுந்து வானில் இயங்கும் நிலவை மறைக்கும், வரை சேரின் – மலையிடத்தில் தங்கியிருக்குமானால், அவ் வரைத் தேனின் இறால் என – நிலவை மலையில் உள்ள தேன்கூடு என நினைத்து, ஏணி இழைத்திருக்கும் – மலை மக்கள் ஏணி அமைக்கும், கான் அகல் நாடன் மகன் – காடு அகன்ற நாட்டை உடையவனின் மகன்,

சிறுகுடியீரே சிறுகுடியீரே – சிறுகுடியில் உள்ளோரே சிறுகுடியில் உள்ளோரே, வள்ளி கீழ் வீழா – வள்ளிக்கொடியின் கிழங்கு கீழே உண்டாகாது, வரை மிசைத் தேன் தொடா – மலை உச்சியில் தேன்கூடுகள் உண்டாகா, கொல்லை குரல் வாங்கி ஈனா – கொல்லையில் தினைக்கொத்துக்கள் ஆகத் தோன்றா, மலை வாழ்நர் அல்ல புரிந்து ஒழுகலான் – மலையில் வாழும் மக்கள் அறம் இல்லாது வாழ்வதால், காந்தள் கடி கமழும் கண் வாங்கு இருஞ் சிலம்பின் வாங்கு அமை மென்தோள் – காந்தள் மணங்கமழும் கண்டவர்களின் கண்களை வாங்கும் கரிய மலையில் உள்ள வளைந்த மூங்கில் போலும் மென்மையான தோளினையுடைய, குறவர் மட மகளிர் – மடப்பத்தை உடைய மகளிர், தாம் பிழையார் கேள்வர்த் தொழுது எழலால் – தாம் பிழை செய்யாதவர்கள் ஆக கணவரைக் கடவுள் என்று வணங்கி எழுவர், தம் ஐயரும் தாம் பிழையார் தாம் தொடுத்த கோல் – இதனால் அவர்களுடைய கணவர்களும் தாங்கள் குறித்த குறி தப்பாது கணை தொடுக்கும் ஆற்றல் உடையவர்கள் ஆனார்கள்,

என ஆங்கு அறத்தொடு நின்றேனைக் கண்டு – என நான் செவிலித்தாயிடம் அறத்தொடு நின்றதைக் கண்டு (ஆங்கு – அசைநிலை), திறப்பட என் ஐயர்க்கு உய்த்து உரைத்தாள் யாய் – அவள் நற்றாய்க்கு அறத்தொடு நின்று, அவள் அண்ணன்மார்க்கு மிகத் திறமையாக விவரித்தாள், அவரும் தெரி கணை நோக்கிச் சிலை நோக்கி – அவர்களும் தேர்ந்தெடுத்த அம்புகளை நோக்கி வில்லையும் நோக்கி, கண் சேந்து ஒரு பகல் எல்லாம் உருத்து எழுந்து – கண் சிவந்து ஒரு பகல் சினம் கொண்டு எழுந்து, ஆறி – அதன்பின் சினம் ஆறி, இருவர் கண் குற்றமும் இல்லையால் என்று தெருமந்து சாய்த்தார் தலை – இருவரிடமும் குற்றம் இல்லை என உணர்ந்து மனம் வருந்தி தலையைச் சாய்த்தார்கள்,

தெரி இழாய் – தேர்ந்தெடுத்த அணிகலன்களை அணிந்தவளே, நீயும் நின் கேளும் புணர – நீயும் உன் தலைவனும் கூடும்படியாக,  வரை உறை தெய்வம் உவப்ப – இம்மலையில் வாழும் கடவுள் மகிழ, உவந்து குரவை தழீஇ யாம் ஆட – நாம் கைகோத்து குரவை ஆடுவோம் (தழீஇ – அளபெடை, யாம் – ஆயத்தை உளப்படுத்திற்று), குரவையுள் கொண்டுநிலை பாடிக்காண் – குரவைக்கூத்திற்கு உரியவற்றை நீ பாடுவாயாக (கொண்டுநிலை – ஒருவகைப் பாடல்), பாடிக்காண் – பாடுக, முன்னிலை ஏவல் , காண் – முன்னிலை அசை,

தலைவி:  நல்லாய் – நல்லவளே, நன்னாள் தலைவரும் எல்லை – திருமணம் நிகழும்வரை, நமர் – நம் குடும்பத்தார், மலைத் தம் நாண் தாம் தாங்குவார் – மலையில் தம்முடைய நாணத்தைத் தாங்குவார்கள், என் நோற்றனர் கொல் – என்ன நல்வினையையை அவர்கள் செய்தார்களோ, புன வேங்கைத் தாது உறைக்கும் பொன் அறை முன்றில் – காட்டு வேங்கை மலர்களின் தாது உதிர்ந்துப் பொன்னிறமாகத் தோன்றும் முற்றத்தில், pterocarpus marsupium (முன்றில் – இல்முன்), நனவில் புணர்ச்சி நடக்கும் ஆம் அன்றோ – நனவாகவே என்னை அவருடன் சேர்க்கும் திருமணம் நடக்கும் அல்லவா (ஆம் – இடைக்குறை, ஆகும் என்பது ஆம் என நின்றது), நனவில் புணர்ச்சி நடக்கலும் ஆங்கே கனவில் புணர்ச்சி கடிதும் ஆம் அன்றோ – அவருடன் கனவில் சேரும் எண்ணத்தை நான் விட்டுவிடுவேன் அல்லவா (ஆம் – இடைக்குறை, ஆகும் என்பது ஆம் என நின்றது),

தோழி:  விண் தோய் கல் நாடனும் நீயும் வதுவையுள் பண்டு அறியாதீர் போல் படர்கிற்பீர் மன் கொலோ – வானத்தைத் தீண்டும் மலைநாடனும் நீயும் திருமணம் நிகழும் வேளையில் முன்பு ஒருவரையொருவர் அறியாதவர்கள் போல் நடந்து கொள்வீர்களா(மன் – மிகுதிக்குறிப்பு, கொலோ – ஓகாரம் ஐயம்), பண்டு அறியாதீர் போல் படர்ந்தீர் பழம் கேண்மை கண்டு அறியாதேன் போல் கரக்கிற்பென் மன் கொலோ – நீங்கள் இருவரும் அறியாதீர் போல நடந்து கொண்டாலும் உங்கள் பழைய உறவைக் கண்ட நான் அறியாதவள் போல் மறைக்க முடியுமா (மன் – மிகுதிக்குறிப்பு, கொலோ – ஓகாரம் ஐயம்), மை தவழ் வெற்பன் மண அணி காணாமல் கையால் புதை பெறூஉம் கண்களும் கண்களோ – முகில் தவழும் மலைநாடனின் திருமணத்தைக் காணாமல் கையால் புதைத்துக் கொள்ளப்படும் கண்களும் கண்கள் ஆகுமோ (பெறூஉம் – அளபெடை),

தலைவிஎன்னை மன் நின் கண்ணால் காண்பென் – அதனால் என்ன.  உன் கண்கள் மூலம் நானும் காண்பேன்,

தோழி:  யான் நெய்தல் இதழ் உண்கண் நின் கண் ஆக என் கண் மன – உன்னுடைய நெய்தல் மலரிதழ் போலும் மையிட்டக் கண்கள் என் கண்கள் ஆவதாக, என – என, ஆங்கு நெறி அறி  – நெறி அறிந்து (ஆங்கு – அசைநிலை), செறிகுறி புரிதிரிபு அறியா அறிவனை – செய்யும் குறியில் பிழை அறியாதவனை, முந்துறீஇ – முன்னாகக் கொண்டு (அளபெடை), தகை மிகு தொகை வகை அறியும் சான்றவர் இனம் ஆக – தகை மிகுந்து தொகைவகை அறிந்தவர்களாகச் சான்றோர்கள் சூழ, வேய் புரை மென்தோள் – மூங்கில்போன்ற உன் மென்மையான தோளின், பசலையும் – பசலையும்,அம்பலும் – அலரும், மாயப் புணர்ச்சியும் எல்லாம் உடன் நீங்க – கனவில் காணும் புணர்ச்சியும் நீங்க, சேய் உயர் வெற்பனும் வந்தனன் – மிக உயர்ந்த மலைநாடனும் வந்தான் (சேய் உயர் – ஒருபொருட் பன்மொழி), பூ எழில் உண்கணும் பொலிகமா இனியே –உன் மலரை ஒத்த கண்கள் பொலிவனவாக (கணும் – கண்ணும், இடைக்குறை, பொலிக + மா, மா – ஓர் அசைச் சொல்)

கலித்தொகை 51, கபிலர், குறிஞ்சி, தலைவி தோழியிடம் சொன்னது

சுடர் தொடீஇ! கேளாய்! தெருவில் நாம் ஆடும்
மணல் சிற்றில் காலின் சிதையா அடைச்சிய
கோதை பரிந்து வரிப் பந்து கொண்டு ஓடி
நோதக்க செய்யும் சிறு பட்டி, மேல் ஓர் நாள்,
அன்னையும் யானும் இருந்தேமா, “இல்லிரே  5
உண்ணு நீர் வேட்டேன்” என வந்தாற்கு அன்னை
“அடர் பொன் சிரகத்தால் வாக்கிச் சுடர் இழாய்
உண்ணு நீர் ஊட்டி வா” என்றாள் என, யானும்
தன்னை அறியாது சென்றேன், மற்று என்னை
வளை முன்கை பற்றி நலியத் தெருமந்திட்டு  10
“அன்னாய் இவன் ஒருவன் செய்தது காண்” என்றேனா,
அன்னை அலறிப் படர்தர, தன்னை யான்
“உண்ணு நீர் விக்கினான்” என்றேனா, அன்னையும்
தன்னைப் புறம்பு அழித்து நீவ, மற்று என்னைக்
கடைக் கண்ணால் கொல்வான் போல் நோக்கி நகைக்கூட்டம்  15
செய்தான் அக் கள்வன் மகன்.

பொருளுரை:  ஒளியுடைய வளையல்களை அணிந்த என் தோழியே!  இதைக் கேட்பாயாக!  முன்பு நம்முடைய சிறிய மணல் வீடுகளை உடைத்தும், நாம் சூடியிருந்த மலர்ச்சரத்தை அறுத்தும், நம்முடைய வரிப்பந்தை எடுத்துக் கொண்டும் ஓடி நோவுதலைச் செய்த பொறுப்பற்றவன், ஒரு நாள் என் தாயும் நானும் வீட்டிலிருந்த பொழுது வந்து, “வீட்டில் உள்ளவர்களே! நான் தாகத்தில் இருக்கின்றேன்.  எனக்குக் குடிக்க தண்ணீர் கொடுங்கள்” என்று கேட்டான்.  என்னுடைய தாய், “ஒளியுடைய அணிகலன்களை அணிந்தவளே!  அடர்ந்த பொற்கிண்ணத்தில் தண்ணீர் வார்த்து அவனுக்குக் கொடு” என்றாள்.  அவன் யார் என்பதை அறியாமல் நான் அவனிடம் சென்றேன்.  வளையல் அணிந்த என் முன் கையைப் பற்றி என்னை வருத்தினான் அவன்.  “அம்மா! இவன் செய்ததைப் பார்” என்று நான் கலக்கத்துடன் கூறினேன்.  என் தாய் அலறிப் புடைத்துக் கொண்டு ஓடி வந்தாள்.  அவள் அங்கு வந்தவுடன் “நீரைக் குடிக்கும்பொழுது விக்கினான்” என்று கூறினேன்.  என் தாய் அவனுடைய முதுகைத் தடவிக் கொடுத்தாள்.  தன் கடைக்கண்ணால் என்னைக் கொல்லுவது போல் பார்த்து நட்புடன் சிரித்தான், அந்தக் கள்வன்.

குறிப்பு: வரிப் பந்து (3) –  நச்சினார்க்கினியர் உரை – வரியினையுடைய பந்து.  திருமுருகாற்றுப்படை 68  – வரிப் புனை பந்து – பொ. வே. சோமசுந்தரனார் உரை – நூலால் வரிந்து புனையப்பட்ட பந்து,  நச்சினார்க்கினியர் உரை – நூலால் வரிந்து புனையப்பட்ட பந்து,  வை. மு. கோபாலகிருஷ்ணமாச்சாரி  உரை – நூலால் வரிந்து புனையப்பட்ட பந்து.  பெரும்பாணாற்றுப்படை 333 – பொ. வே. சோமசுந்தரனார் உரை – நூலால் வரியப்பட்ட பந்து, நச்சினார்க்கினியர் உரை – நூலால் வரிதலையுடைய பந்து, வை. மு. கோபாலகிருஷ்ணமாச்சாரி உரை – நூலால் வரிதலையுடைய பந்து.  சிதையா – சிதைத்து என்பது பொருள். செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம்.  எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது.  நகைக்கூட்டம்  செய்தான் (15) – நச்சினார்க்கினியர் உரை – மனமகிழ்ச்சியைத் தரும் கூட்டத்தை அவன் செய்தான்,  ச. வே. சுப்பிரமணியன் உரை – சிரித்தான்.  தலைவனைக் கள்வன் என்றல் – குறுந்தொகை 25 – யாரும் இல்லைத் தானே கள்வன், குறுந்தொகை 318 – கள்வனும் கடவனும் புணைவனும் தானே,  நற்றிணை 28 – கள்வர் போலக் கொடியன், நற்றிணை 40 – நள்ளென் கங்குல் கள்வன் போல, கலித்தொகை 144 – பொழில் தொறும் நாடுவேன் கள்வன் கரந்து இருக்கற்பாலன் கொல், கலித்தொகை145 – துயர் செய்த கள்வன், கலித்தொகை 51 – கடைக் கண்ணால் கொல்வான் போல் நோக்கி, நகைக்கூட்டம் செய்தான் அக் கள்வன் மகன்.

சொற்பொருள்:   சுடர் தொடீஇ – ஒளியுடைய வளையல்களை அணிந்தவளே (அன்மொழித்தொகை, விளி), கேளாய் – கேட்பாயாக, தெருவில் – தெருவில், நாம் ஆடும் – நாம் விளையாடும், மணல் சிற்றில் – சிறிய மணல் வீடு, காலின் சிதையா – காலினால் சிதைத்து, அடைச்சிய கோதை – சூடியிருந்த மலர்ச் சரத்தை, பரிந்து – அறுத்து, வரிப் பந்து கொண்டு ஓடி – வரிகளையுடைய பந்தை எடுத்துக் கொண்டு ஓடி, நோதக்க செய்யும் சிறு பட்டி – நோவுதலைச் செய்யும் பொறுப்பற்றவன், மேல் ஓர் நாள் – முன்னொரு நாள், அன்னையும் யானும் இருந்தேமா – அன்னையும் நானும் இருக்கும் பொழுது, இல்லிரே – வீட்டில் உள்ளவர்களே, உண்ணு நீர் வேட்டேன் – தாகத்தில் இருக்கின்றேன், என வந்தாற்கு – என்று வந்தவனுக்கு, அன்னை – தாய், அடர் பொன் சிரகத்தால் வாக்கி – அடர்ந்த பொன்னினால் செய்யப்பட்டக் கலத்தில் வார்த்து, சுடர் இழாய் – ஒளியுடைய அணிகலன்களை அணிந்தவளே, உண்ணு நீர் ஊட்டி வா – குடிக்க தண்ணீரைக் கொடுத்து விட்டு வா, என்றாள் என – கூறினாள் என்று, யானும் – நானும், தன்னை அறியாது – அவன் தான் என்று அறியாது, சென்றேன் – சென்றேன், மற்று என்னை வளை முன்கை பற்றி – அங்கு அவன் வளையல் அணிந்த என்னுடைய முன் கையைப் பற்றி, நலிய – வருத்த, தெருமந்திட்டு – கலக்கத்துடன், அன்னாய் – அம்மா, இவன் ஒருவன் செய்தது காண் – இவன் செய்ததை நீ பார், என்றேனா – என்று கூறினேன், அன்னை அலறிப் படர்தர – என்னுடைய தாய் அலறிப் புடைத்துக் கொண்டு ஓடி வந்தாள், தன்னை – அவனை, யான் – நான், உண்ணு நீர் விக்கினான் என்றேனா – நீர் குடிக்கும் போது விக்கினான் என்றேன், அன்னையும் – என்னுடைய தாயும், தன்னைப் புறம்பு அழித்து நீவ – அவனுடைய முதுகைத் தடவிக் கொடுத்தாள், மற்று என்னைக் கடைக் கண்ணால் கொல்வான் போல் நோக்கி – அதன் பின் அவன் தன் கடைக் கண்களால் கொல்பவன் போல் என்னை நோக்கி, நகைக்கூட்டம் செய்தான் – மகிழ்ச்சியுடன் நட்பைச் செய்தான், மகிழ்ச்சியுடன் சிரித்தான், அக் கள்வன் மகன் – அந்தக் கள்ளன்

கலித்தொகை 70, மருதன் இளநாகனார், மருதம், தோழி தலைவனிடம் சொன்னது

மணி நிற மலர்ப் பொய்கை மகிழ்ந்து ஆடும் அன்னம் தன்
அணி மிகு சேவலை அகல் அடை மறைத்தெனக்,
கதுமெனக் காணாது கலங்கி அம் மடப் பெடை,
மதி நிழல் நீர் உள் கண்டு அது என உவந்து ஓடித்,
துன்னத் தன் எதிர் வரூஉம் துணை கண்டு மிக நாணிப்,  5
பல் மலர் இடை புகூஉம் பழனம் சேர் ஊர! கேள்!

நலம் நீப்பத் துறந்து எம்மை நல்காய் நீ விடுதலின்,
பல நாளும் படாத கண் பாயல் கொண்டு இயைபவால்;
துணை மலர்க் கோதையார் வைகலும் பாராட்ட,
மண மனைத் ததும்பும் நின் மண முழ வந்து எடுப்புமே;  10

அகல நீ துறத்தலின் அழுது ஓவா உண்கண், எம்
புதல்வனை மெய் தீண்டப் பொருந்துதல் இயைபவால்;
நினக்கு ஒத்த நல்லாரை நெடு நகர்த் தந்து, நின்
தமர் பாடும் துணங்கையுள் அரவம் வந்து எடுப்புமே;

வாராய் நீ துறத்தலின் வருந்திய எமக்கு ஆங்கே,  15
நீர் இதழ் புலராக் கண் இமை கூம்ப இயைபவால்;
நேர் இழை நல்லாரை நெடு நகர்த் தந்து, நின்
தேர் பூண்ட நெடு நல் மான் தெள் மணி வந்து எடுப்புமே;

என ஆங்கு,
மெல்லியான் செவி முதல் மேல்வந்தான் காலை போல்,  20
எல்லாம் துயிலோ எடுப்புக, நின் பெண்டிர்
இல்லின் எழீஇய யாழ் தழீஇ, கல்லா வாய்ப்
பாணன் புகுதராக்கால்.

பாடல் பின்னணி – பரத்தையிடமிருந்து திரும்பிய தலைவன், தலைவியின் தோழியைக் கண்டு, தலைவி தன்னை ஏற்றுக் கொள்ளத் துணைபுரியாயாக என வேண்டிய வேளையில் (வாயில் வேண்ட), அத் தோழி கூறியது.

பொருளுரை:  பல மணிகள் போலும் நிறங்களுடைய மலர்களையுடைய பொய்கையில் மகிழ்ந்து விளையாடும் அன்னப்பறவை தன்னுடைய அழகுமிகுந்த சேவலை அகன்ற தாமரை இலை மறைத்தது என்று அதனைக் காணாது கலங்கி விரைந்து, மடமையுடைய அப்பெண் அன்னம் நிலாவின் நிழலை நீருள் கண்டு, அது தன்னுடைய துணை என்று எண்ணி மகிழ்ந்து ஓடி, அதன்பின் தனக்கு எதிரே நெருங்கி வரும் துணையைக் கண்டு நாணிப் பல மலர்களின் இடையே புகும், குளங்கள் உள்ள ஊரனே! கேள்!

எம் நலம் எம்மை விட்டு நீங்கும்படி எம்மை அருள் இல்லாது நீ கைவிட்டமையால், பல நாட்களும் துயிலாத எம் கண்கள் தளர்ச்சி அடைவதால் யாம் படுக்கையை இடமாகக் கொண்டு உறங்குவதும் கூடும்.  இணையாகத் தொடுத்த மலர் மாலை அணிந்த பரத்தையர் நாள்தோறும் பாராட்ட நீ மணங்கொள்ளும் மனைகள்தோறும் எழும் மண முரசின் ஒலி எம் உறக்கத்தைக் கெடுத்துவிடும்.

நீ எம்மை விட்டு அகன்றதால் அழுது ஓயாத எம் மையிட்ட கண்கள், புதல்வனை எம் மெய் தீண்டுவதால் சிறிது துயில்தல் கூடும்.  உனக்கு ஏற்ற பரத்தையரைப் பெரிய மனைக்கண் கொணர்ந்து, உன்னுடைய சுற்றமாகிய அவர்களுடன் நீ ஆடும் துணங்கைக் கூத்தின் ஆரவாரம் வந்து எம் உறக்கத்தைக் கெடுத்துவிடும்,

வராமல் நீ துறந்து கைவிடுவதால் வருந்திய எம்முடைய நீர் சொட்டும் மலர் போன்றுள்ள வற்றாது கண்ணீர் சொரியும் எம் கண்கள், உறங்குவதும் கூடும்.  அழகிய அணிகலன்களை அணிந்த பரத்தையரை நெடிய மனையின்கண் கொண்டுவந்து சேர்க்கும் உன்னுடைய தேரில் பூட்டிய நல்ல குதிரைகளின் தெளிவான மணியோசை எம் உறக்கத்தைக் கெடுத்துவிடும்,

வலிமை இல்லாது அரணில் அடங்கியிருப்பவன் காதில் படையெடுத்து வருபவனின் பாசறையில் எழும் ஒலி போலும் முற்கூறிய அவை எம் துயிலைக் கெடுக்கும்.  உன்னுடைய பரத்தையர் இல்லத்தில் வாசித்த யாழைத் தழுவி, திருந்தக் கற்காத பாணன் நம் இல்லின்கண் வராதவிடத்து என்னுடைய துன்பம் குறையும்.  அவன் வந்தால் அது மிகுதியான துன்பத்தைத் தரும்.

சொற்பொருள்:   மணி நிற மலர்ப் பொய்கை – பல மணிகள் போலும் நிறங்களுடைய மலர்களையுடைய பொய்கை, மகிழ்ந்து ஆடும் அன்னம் – மகிழ்ந்து விளையாடும் அன்னப்பறவை, தன் அணி மிகு சேவலை – தன்னுடைய அழகுமிகுந்த சேவலை, அகல் அடை மறைத்தென – அகன்ற தாமரை இலை மறைத்தது என்று, கதுமெனக் காணாது கலங்கி – காணாது கலங்கி விரைந்து, அம் மடப் பெடை மதி நிழல் நீர் உள் கண்டு – மடமையுடைய அப்பெண் அன்னம் நிலாவின் நிழலை நீருள் கண்டு, அது என உவந்து ஓடி – அது தன்னுடைய துணை என்று எண்ணி மகிழ்ந்து ஓடி, துன்னத் தன் எதிர் வரூஉம் துணை கண்டு – தனக்கு எதிரே நெருங்கி வரும் துணையைக் கண்டு (வரூஉம் – அளபெடை), மிக நாணிப் பல் மலர் இடை புகூஉம் – மிகவும் நாணிப் பல மலர்களின் இடையே புகும் (புகூஉம் – அளபெடை), பழனம் சேர் ஊர – குளங்கள் உள்ள ஊரனே, கேள் – கேள்

நலம் நீப்பத் துறந்து எம்மை நல்காய் நீ விடுதலின் – எம் நலம் எம்மை விட்டு நீங்கும்படி எங்களை அருள் இல்லாது நீ கைவிட்டமையால், பல நாளும் படாத கண் பாயல் கொண்டு இயைபவால் – பல நாட்களும் துயிலாத எம் கண்கள் தளர்ச்சியால் யாம் படுக்கையை இடமாகக் கொண்டு உறங்குவதும் கூடும் (இயைபவால் – ஆல் அசை நிலை), துணை மலர்க் கோதையார் – இணையாகத் தொடுத்த மலர் மாலை அணிந்த பரத்தையர், வைகலும் பாராட்ட – நாள்தோறும் பாராட்ட, மண மனைத் ததும்பும் நின் மண முழ வந்து எடுப்புமே – நீ மணங் கொள்ளும் மனைகள்தோறும் எழும் மண முரசின் ஒலி எம் உறக்கத்தைக் கெடுத்துவிடும்

அகல நீ துறத்தலின் அழுது ஓவா உண்கண் – நீ எம்மை விட்டு அகன்றதால் அழுது ஓயாத எம் மையிட்ட கண்கள், எம் புதல்வனை மெய் தீண்டப் பொருந்துதல் இயைபவால் – புதல்வனை எம் மெய் தீண்டுவதால் சிறிது துயில்தல் கூடும் (இயைபவால் – ஆல் அசை நிலை), நினக்கு ஒத்த நல்லாரை – உனக்கு ஏற்ற பரத்தையரை, நெடு நகர்த் தந்து – பெரிய மனைக்கண் கொணர்ந்து, நின் தமர் பாடும் துணங்கையுள் அரவம் வந்து எடுப்புமே – உன்னுடைய சுற்றமாகிய அவர்களுடன் நீ ஆடும் துணங்கைக் கூத்தின் ஆரவாரம் வந்து எம் உறக்கத்தைக் கெடுத்துவிடும்,

வாராய் நீ துறத்தலின் – வராமல் நீ துறந்து கைவிடுவதால், வருந்திய எமக்கு – வருந்திய எமக்கு, ஆங்கே நீர் இதழ் புலராக் கண் இமை கூம்ப இயைபவால் – நீர் சொட்டும் மலர் போல வற்றாது கண்ணீர் சொரியும் எம் கண்கள் உறங்குவதும் கூடும் (இயைபவால் – ஆல் அசை நிலை), நேர் இழை நல்லாரை நெடு நகர்த் தந்து – அழகிய அணிகலன்களை அணிந்த பரத்தையரை நெடிய மனையின்கண் கொண்டுவந்து சேர்க்கும், நின் தேர் பூண்ட நெடு நல் மான் தெள் மணி வந்து எடுப்புமே – உன்னுடைய தேரில் பூட்டிய நல்ல குதிரைகளின் தெளிவான மணியோசை எம் உறக்கத்தைக் கெடுத்துவிடும்,

என ஆங்கு – அசைநிலை, மெல்லியான் செவி முதல் மேல்வந்தான் காலை போல் – வலிமை இல்லாது அரணில் அடங்கியிருப்பவன் காதில் படையெடுத்து வருபவன் பாசறையில் எழும் ஒலி போலும், எல்லாம் துயிலோ எடுப்புக – எல்லாம் எம் துயிலைக் கெடுத்துவிடும், நின் பெண்டிர் இல்லின் எழீஇய யாழ் தழீஇ – உன்னுடைய பரத்தையர் இல்லத்தில் வாசித்த யாழைத் தழுவி (எழீஇய – அளபெடை, தழீஇ – அளபெடை), கல்லா வாய்ப் பாணன் புகுதராக்கால் – திருந்தக் கற்காத பாணன் நம் இல்லின்கண் வராதவிடத்து

கலித்தொகை 87, மருதன் இளநாகனார், மருதம், தலைவியும் தலைவனும் தோழியும் சொன்னது

தலைவி:

ஒரூஉ நீ, எம் கூந்தல் கொள்ளல்; யாம் நின்னை
வெரூஉதும் காணும் கடை.

தலைவன்:

தெரி இழாய்! செய் தவறு இல்வழி யாங்குச் சினவுவாய்,
மெய் பிரிந்து அன்னவர் மாட்டு?

தலைவி:

ஏடா! நினக்குத் தவறு உண்டோ? நீ வீடு பெற்றாய்;  5
இமைப்பின் இதழ் மறைபு ஆங்கே கெடுதி;
நிலைப் பால் அறியினும் நின் நொந்து நின்னைப்
புலப்பார் உடையர் தவறு.

தலைவன்:

அணைத் தோளாய்! தீயாரைப் போலத் திறன் இன்று உடற்றுதி;
காயும் தவறு இலேன் யான்.  10

தோழி:

மான் நோக்கி! நீ அழ நீத்தவன் ஆனாது
நாண் இலன் ஆயின், நலிதந்து அவன் வயின்
ஊடுதல் என்னோ இனி?

தலைவி:

இனி யாதும் மீக்கூற்றம் யாம் இலம் என்னும்
தகையது காண்டைப்பாய் நெஞ்சே, பனி ஆனாப்  15
பாடு இல் கண் பாயல் கொள!

பொருளுரை:

தலைவி:  என் கூந்தலைத் தொடாதே! செல்வாயாக! உன்னைப் பார்க்கும்போது நான் அஞ்சுகின்றேன்.

தலைவன்:  சிறந்த அணிகலன்களை அணிந்தவளே! நான் பரத்தையர்மாட்டு பிரிந்து தவறு செய்யாத போது நீ ஏன் சினம் கொள்கின்றாய்?

தலைவி:  ஏடா! உன் மீது குற்றம் உண்டா? நீ ஊராரால் கைவிடப்பட்டவன். கண் இமைத்தால் அக்கண்ணின் இமைக்கு உள்ளாகவே நீ ஒளிந்து கொள்வாயே. உன்னுடைய அத்தகைய நிலையை அறிந்தும் உன்னிடம் சினம் கொள்பவரே தவறுடையவர்,

தலைவன்:  தலையணைப் போன்ற தோளினையுடையாய்!  தீயாரைக் காய்வது போல் என்னிடம் நீ சினம் கொள்கின்றாய்.  நீ சினக்கும் அளவிற்கு நான் தவறு செய்யவில்லை,

தோழி:  மான் போன்ற கண்களையுடையவளே! உன்னை அழவிட்டு நீங்கியவன் இவன். சிறிதும் நாணம் இல்லாதவன் ஆயினும், அவனிடத்தில் நீ நொந்து ஊடல் கொள்வதனால் என்ன பயன்?

தலைவி:  என் நெஞ்சே உறக்கத்தை மறந்த நம் கண்கள் உறங்கும்படி, இனி நம்மை உயர்த்தி பிறரைத் தாழ்த்திக் கூறும் நிலை நமக்கு இல்லை என்று இத்தோழி கூறும் சொற்களின் அழகை நீ காண்பாயாக!

சொற்பொருள்:

தலைவி:  ஒரூஉ நீ – நீங்கு நீ, எம் கூந்தல் கொள்ளல் – என் கூந்தலைத் தொடாதே, யாம் நின்னை வெரூஉதும் காணும் கடை – உன்னைப் பார்க்கும்போது நான் அஞ்சுகின்றேன்.

தலைவன்:  தெரி இழாய் – சிறந்த அணிகலன்களை அணிந்தவளே, செய் தவறு இல்வழியாங்குச் சினவுவாய் மெய் பிரிந்து அன்னவர் மாட்டு – நான் பரத்தையர்மாட்டு பிரிந்து தவறு செய்யாத போது நீ ஏன் சினம் கொள்கின்றாய்,

தலைவி:  ஏடா! நினக்குத் தவறு உண்டோ – ஏடா! உன் மீது குற்றம் உண்டா? நீ வீடு பெற்றாய் – நீ ஊராரால் கைவிடப்பட்டவன், இமைப்பின் இதழ் மறைபு ஆங்கே கெடுதி – கண் இமைத்தால் அக்கண்ணின் இமைக்கு உள்ளாகவே நீ ஒளிந்து கொள்வாயே, நிலைப் பால் அறியினும் நின் நொந்து நின்னைப் புலப்பார் உடையர் தவறு – உன்னுடைய அத்தகைய நிலையை அறிந்தும் உன்னிடம் சினம் கொள்பவரே தவறுடையவர்,

தலைவன்:  அணைத் தோளாய் – தலையணைப் போன்ற தோளினையுடையாய், தீயாரைப் போலத் திறன் இன்று உடற்றுதி – தீயாரைக் காய்வது போல் என்னிடம் சினம் கொள்கின்றாய், காயும் தவறு இலேன் யான் – நீ சினக்கும் அளவிற்கு நான் தவறு செய்யவில்லை,

தோழி:  மான் நோக்கி – மான் போன்ற கண்களையுடையவளே, நீ அழ நீத்தவன் – உன்னை அழவிட்டு நீங்கியவன், ஆனாது நாண் இலன் ஆயின் – சிறிதும் நாணம் இல்லாதவன் ஆயினும், நலிதந்து அவன் வயின் ஊடுதல் என்னோ இனி – அவனிடத்தில் நொந்து ஊடல் கொள்வதனால் என்ன பயன்,

தலைவி:  இனி யாதும் மீக்கூற்றம் யாம் இலம் என்னும் தகையது – இனி உயர்த்திக் கூறும் நிலை நமக்கு இல்லை என்று இத்தோழி கூறும் சொற்களின் அழகை, காண்டைப்பாய் நெஞ்சே – நீ காண்பாயாக நெஞ்சே, பனி ஆனாப் பாடு இல் கண் பாயல் கொள – உறக்கத்தை மறந்த நம் கண்கள் உறங்கும்படி

கலித்தொகை 110, சோழன் நல்லுத்திரன், முல்லை, தலைவியும் தலைவனும் சொன்னது

தலைவி: 

கடி கொள் இருங்காப்பில் புல்லினத்து ஆயர்
குடிதொறும் நல்லாரை வேண்டுதி, எல்லா,
இடு தேள் மருந்தோ நின் வேட்கை? தொடுதரத்
துன்னித் தந்தாங்கே நகை குறித்து எம்மைத்
திளைத்தற்கு எளியமாக் கண்டை, அளைக்கு எளியாள் 5
வெண்ணெய்க்கும் அன்னள் எனக் கொண்டாய்,

தலைவன்: 

ஒண்ணுதால்!
ஆங்கு நீ கூறின் அனைத்து ஆக, நீங்குக,
அச்சத்தான் மாறி அசைவினான் போத்தந்து
நிச்சம் தடுமாறும், மெல் இயல் ஆய் மகள்,
மத்தம் பிணித்த கயிறு போல் நின் நலம் 10
சுற்றிச் சுழலும் என் நெஞ்சு,
விடிந்த பொழுதினும் இல் வயின் போகாது,
கொடும் தொழுவினுள் பட்ட கன்றிற்குச் சூழும்
கடுஞ்சூல் ஆ நாகு போல், நின் கண்டு நாளும்
நடுங்கு அஞர் உற்றது என் நெஞ்சு, 15

எவ்வம் மிகுதர, எம் திறத்து எஞ்ஞான்று,
நெய் கடை பாலின் பயன் யாதும் இன்று ஆகிக்
கை தோயல் மாத்திரை அல்லது செய்தி
அறியாது அளித்து என் உயிர்,

தலைவி:

அன்னையோ! மன்றத்துக் கண்டாங்கே சான்றார் மகளிரை 20
இன்றி அமையேன் என்று இன்னவும் சொல்லுவாய்
நின்றாய், நீ சென்றீ, எமர் காண்பர், நாளையும்
கன்றொடு சேறும் புலத்து.

பொருளுரை:

தலைவி:  மிகுந்த காவலையுடைய குடியிருப்புகளில் உள்ள ஆட்டு இடையர்களின் குடிகள் ஒவ்வொன்றிலும் உள்ள மகளிரை நீ விரும்புகிறாய். ஏடா!  உன்னுடைய விருப்பம் தேள் கடிக்கு விரைந்து இட வேண்டிய மருந்து போன்றதா?  உன்னை ஒரு முறை தொட விட்டதற்கு, என்னுடைய நகைதலை எண்ணி, நான் புணர்ச்சிக்கு எளிமையானவள் என்று எண்ணுகின்றாய் நீ.  சிறிது மோரை வேண்டியவர்க்குக் கொடுப்பதால் இவள் வெண்ணையையும் கொடுப்பாள் என்று எண்ணி விட்டாய்.

தலைவன்:  ஒளியுடைய நெற்றியை உடையவளே!  உன் கருத்து அவ்வாறு ஆயின் ஆகட்டும், நீங்கட்டும்.  மென்மையான ஆயர் குடும்பத்தின் பெண்ணே!  நீ கூறிய சொற்களினால் அச்சம் கொண்டு உன்னிடமிருந்து என்னிடம் வந்து, மீண்டும் உன்னிடம் வந்து, தயிர் கடையும் மத்தில் சுற்றிய கயிற்றைப் போல் சுழலுகின்றது, என்னுடைய நெஞ்சம்.  விடிந்த வேளையிலும் இல்லத்திற்குப் போகாமல் வளைந்த தொழுவினுள் இடப்பட்ட தன் கன்றினைச் சுற்றி வரும் முதற் கன்றை ஈன்ற இளம் பசுவைப் போல உன்னைக் கண்டு எந்நாளும் என் நெஞ்சு அஞ்சி நடுங்குகிறது மிகுந்த வருத்தத்தால்.  எப்பொழுதும் நெய்யை எடுத்த பின்னர் பால் பயன் இல்லாதது போன்று, கையால் தொடுகின்ற அளவாக ஆகிவிட்டது என் நிலைமை.  என் உயிர் பரிதாபத்திற்குரியது.

தலைவி: அப்படியா! சான்றாண்மை உடையவர்களின் பெண்களை பொது மன்றத்தில் கண்டால் ‘அவர்கள் இல்லாமல் வாழ மாட்டேன்’ என்று சொல்லி நிற்கிறாய்.  நீ இங்கிருந்து செல்வாயாக!  நீ இங்கிருந்தால் என்னுடைய சுற்றத்தார் உன்னைக் காண நேரிடும்.  நாளை கன்றுகளுடன் மேய்ப்புலத்திற்குச் செல்வேன்.  நீ அப்பொழுது அங்கு வருவாயாக!

சொற்பொருள்:  கடி கொள் இருங்காப்பில் – மிகுந்த காவலையுடைய குடியிருப்புகளில் உள்ள, புல்லினத்து ஆயர் குடிதொறும் – ஆட்டு இடையர்கள் குடிகள் ஒவ்வொன்றிலும், நல்லாரை வேண்டுதி நீ – மகளிரை நீ விரும்புகிறாய் நீ, எல்லா – ஏடா, இடு தேள் மருந்தோ நின் வேட்கை – உன்னுடைய விருப்பம் தேள் கடிக்கு விரைந்து இட வேண்டிய மருந்து போன்றதா, தொடுதரத் துன்னித் தந்தாங்கே – உன்னை ஒரு முறை தொட விட்டதற்கு, நகை குறித்து – நகைதலை எண்ணி, எம்மைத் திளைத்தற்கு எளியமாக் கண்டை. – நான் புணர்ச்சிக்கு எளிமையானவள் என்று எண்ணுகின்றாய் (எளிய + மா, மா – ஓர் அசைச் சொல்), அளைக்கு எளியாள் வெண்ணெய்க்கும் அன்னள் எனக் கொண்டாய் – சிறிது மோரை வேண்டியவர்க்கு கொடுப்பதால் வெண்ணையையும் கொடுப்பாள் என்று எண்ணி விட்டாய், 

ஒண்ணுதால் – ஒளியுடைய நெற்றியை உடையவளே, ஆங்கு நீ கூறின் அனைத்து ஆக – உன் கருத்து அவ்வாறு ஆயின் ஆகட்டும், நீங்குக – நீங்கட்டும், அச்சத்தான் மாறி அசைவினான் போத்தந்து நிச்சம் தடுமாறும் – நீ கூறிய சொற்களினால் அச்சம் கொண்டு உன்னிடமிருந்து என்னிடம் வந்து மீண்டும் உன்னிடம் வந்து, மெல் இயல் ஆய் மகள் – மென்மையான ஆயர் குடும்பத்தின் பெண்ணே, மத்தம் பிணித்த கயிறு போல் நின் நலம் சுற்றிச் சுழலும் என் நெஞ்சு – மத்தத்தில் கட்டிய கயிற்றைப் போல் சுழலுகின்றது என்னுடைய நெஞ்சம், விடிந்த பொழுதினும் – விடிந்த வேளையிலும், இல் வயின் போகாது – இல்லத்திற்கு போகாமல், கொடும் தொழுவினுள் பட்ட – வளைந்த தொழுவினுள் இடப்பட்ட, கன்றிற்குச் சூழும் – கன்றினைச் சுற்றி வரும், கடுஞ்சூல் ஆ நாகு போல் – முதற் கன்றை ஈன்ற பசுவைப் போல, நின் கண்டு நாளும் நடுங்கு அஞர் உற்றது என் நெஞ்சு – உன்னைக் கண்டு எந்நாளும் என் நெஞ்சு அஞ்சி நடுங்குகிறது, எவ்வம் மிகுதர – வருத்தம் மிகுந்து வர, எம் திறத்து – என்னிடத்து, எஞ்ஞான்று நெய் கடை பாலின் பயன் யாதும் இன்று ஆகி – எப்பொழுதும் நெய்யை எடுத்தப் பின்னர் பால் பயன் இல்லாதது, கை தோயல் மாத்திரை அல்லது செய்தி அறியாது – கையால் தொடுகின்ற அளவாக ஆகிவிட்டது, அளித்து என் உயிர் – என் உயிர் பரிதாபத்திற்குரியது,

அன்னையோ – அப்படியா, மன்றத்துக் கண்டாங்கே சான்றார் மகளிரை இன்றி அமையேன் என்று இன்னவும் சொல்லுவாய் நின்றாய் – சான்றாண்மை உடையவர்களின் பெண்களை பொது மன்றத்தில் கண்டால் அவர்கள் இல்லாமல் வாழ மாட்டேன் என்று சொல்லி நிற்கிறாய், நீ சென்றீ – நீ செல்வாயாக, எமர் காண்பர் – என்னுடைய சுற்றத்தார் காண்பார்கள், நாளையும் கன்றொடு சேறும் புலத்து – நாளை கன்றுகளுடன் மேய்ப்புலத்திற்குச் செல்வேன்

கலித்தொகை 111, சோழன் நல்லுருத்திரன், முல்லை, தலைவி தோழியிடம் சொன்னது

தீம் பால் கறந்த கலம் மாற்றக், கன்று எல்லாம்
தாம்பின் பிணித்து, மனை நிறீஇ, யாய் தந்த
பூங்கரை நீலம் புடை தாழ மெய் அசைஇ, பாங்கரும்
முல்லையும் தாய பாட்டங்கால், தோழி, நம்
புல்லினத்து ஆயர் மகளிரோடு எல்லாம் 5
ஒருங்கு விளையாட, அவ்வழி வந்த
குருந்தம் பூங்கண்ணிப் பொதுவன் மற்று என்னை,
“முற்று இழை ஏஎர் மட நல்லாய்! நீ ஆடும்
சிற்றில் புனைகோ சிறிது” என்றான். “எல்லா! நீ
பெற்றேம் யாம் என்று பிறர் செய்த இல் இருப்பாய், 10
கற்றது இலை மன்ற காண்” என்றேன். “முற்று இழாய்!
தாது சூழ் கூந்தல் தகைபெறத் தைஇய
கோதை புனைகோ நினக்கு?” என்றான். “எல்லா நீ
ஏதிலார் தந்த பூக் கொள்வாய் நனி மிகப்
பேதையை மன்ற பெரிது” என்றேன்.  “மாதராய்! 15
ஐய பிதிர்ந்த சுணங்கு அணி மென் முலை மேல்
தொய்யில் எழுதுகோ மற்று?” என்றான். “யாம் பிறர்
செய்புறம் நோக்கி இருத்துமோ, நீ பெரிது
மையலை மாதோ விடுக” என்றேன். தையலாய்
சொல்லிய ஆறு எல்லாம் மாறு மாறு யான் பெயர்ப்ப 20
அல்லாந்தான் போலப் பெயர்ந்தான் அவனை, நீ
ஆயர் மகளிர் இயல்பு உரைத்து, எந்தையும்
யாயும் அறிய உரைத்தீயின், யான் உற்ற
நோயும் களைகுவை மன்.

பாடல் பின்னணி – தோழியரிடைத் தலைவனை கண்டதும், அவன் கூறியவற்றைக் கூறியும், தலைவனை வரைவு கடாவி, யாய்க்கு அறத்தொடு நிற்கவேண்டும் என்றது.

பொருளுரை:  இனிய பாலைக் கறந்த கலங்களை எடுத்து வைத்து விட்டு, கன்றுகளை கயிற்றால் கட்டி, இல்லத்தில் நிறுத்தி, தாய் தந்த பூத்தொழிலையுடைய கரையை உடைய நீல ஆடை பக்கங்களில் தாழ என் உடலை அசைத்து, பாங்கர் மரங்களும் முல்லைக் கொடியும் பரந்த தோட்டத்தில், என் தோழியே, நம்முடைய ஆட்டு இனத்தையுடைய ஆயர் மகளிருடன் நான் ஒன்றாக விளையாட, அந்த வழியாக வந்த, குருந்தம் பூவால் செய்த கண்ணியை அணிந்த இடையன் ஒருவன் என்னை நோக்கி, “அணிகலன்களை அணிந்த, அழகினையும் மடப்பத்தையும் உடைய பெண்ணே! நீ கட்டும் சிற்றில்லை நானும் உன்னுடன் சிறிது சேர்ந்து கட்டலாமா?” என்றான். ” ஏடா, உனக்கு என்று ஒரு வீட்டைக் கட்டாது பிறர் கட்டிய வீட்டில் இருக்கக் கற்றவனே! நீ கற்றவன் இல்லை உறுதியாக. காண்பாயாக” என்றேன். ” திருத்தமான அணிகலன்களை அணிந்தவளே! சிறப்பாகச் செய்த மலர் மாலையைத் தாது உடைய உன்னுடைய கூந்தலில் அணியட்டுமா?” என்றான். “ஏடா! பிறர் பறித்த மலர்களைப் பெறுகின்றாய் நீ, நீ மிகவும் பெரிய பேதை உறுதியாக” என்றேன். அவன் “பெண்ணே! சிறிய சுணங்கு சிதறிய உன்னுடைய மென்மையான முலைகள் மேல் தொய்யில் வரையட்டுமா?” என்றான். நான் அதற்கு, “பிறர் கோலஞ் செய்ய வாளா பார்த்திருப்பேனா?  உனக்கு திருமணம் புரிந்து தொய்யில் எழுதும் நோக்கம் இல்லை. நீ மிகவும் காதல் மயக்கம் கொண்டவன்” என்றேன்.  என்னுடைய தோழியே,  இவ்வாறு அவன் சொல்லிய நெறிகள் எல்லாவற்றையும் நான் மறுக்க, வருந்துபவன் போல் அவன் சென்றான். அவனிடம் நீ ஆயர் மகளிரின் தன்மையை உரைத்து, என்னுடைய தந்தையும் தாயும் அறிய அவர்களிடம் சொல்லுவாய் ஆயின், நான் அடைந்த நோயை நீ போக்குவாய்.

சொற்பொருள்:  தீம் பால் கறந்த கலம் மாற்றக் கன்று எல்லாம் தாம்பின் பிணித்து – இனிய பாலைக் கறந்த கலங்களை எடுத்து வைத்து விட்டு கன்றுகளை கயிற்றால் கட்டி, மனை நிறீஇ – இல்லத்தில் நிறுத்தி, யாய் தந்த பூங்கரை நீலம் புடை தாழ – தாய் தந்த பூத் தொழிலையுடைய கரையை உடைய நீல ஆடை பக்கத்தில் தாழ, மெய் அசைஇ – உடலை அசைத்து, பாங்கரும் முல்லையும் தாய பாட்டங்கால் – பாங்கர் மரங்களும் முல்லைக் கொடியும் பரந்த தோட்டத்தில், தோழி – என் தோழி, நம் புல்லினத்து ஆயர் மகளிரோடு – நம்முடைய ஆட்டு இனத்தையுடைய ஆயர் மகளிருடன், எல்லாம் ஒருங்கு விளையாட – யாவரும் ஒன்றாக விளையாட, அவ்வழி வந்த குருந்தம் பூங்கண்ணிப் பொதுவன் – அந்த வழியாக வந்த குருந்தம் பூவால் செய்த கண்ணியை அணிந்த பொதுவன் ஒருவன், மற்று என்னை முற்று – பின்பு என்னை நோக்கி, இழை ஏஎர் மட நல்லாய் – அணிகலன்களை அணிந்த அழகினையும் மடப்பத்தையும் உடைய பெண்ணே, நீ ஆடும் சிற்றில் புனைகோ சிறிது – நீ கட்டும் சிற்றில்லை நானும் உன்னுடன் சிறிது சேர்ந்து கட்டலாமா, என்றான் – என்றான், எல்லா – ஏடா, நீ பெற்றேம் யாம் என்று பிறர் செய்த இல் இருப்பாய் – உனக்கு என்று ஒரு வீட்டைக் கட்டாது பிறர் கட்டிய வீட்டில் இருக்கக் கற்றவனே, கற்றது இலை – நீ கற்றவன் இல்லை, மன்ற – உறுதியாக, காண் என்றேன் – காண்பாயாக என்றேன், முற்று இழாய் – திருத்தமான அணிகலன்களை அணிந்தவளே, தாது சூழ் கூந்தல் தகைபெறத் தைஇய கோதை புனைகோ நினக்கு என்றான் – சிறப்பாகச் செய்த மலர் மாலையை தாது உடைய உன்னுடைய கூந்தலில் அணியட்டுமா, எல்லா – ஏடா, நீ ஏதிலார் தந்த பூக் கொள்வாய் – பிறர் பறித்த மலர்களைப் பெறுகின்றாய் நீ, நனி மிகப் பேதையை மன்ற உறுதியாக பெரிது என்றேன் – நீ மிகவும் பெரிய பேதை உறுதியாக என்றேன், மாதராய் – பெண்ணே, ஐய பிதிர்ந்த சுணங்கு அணி மென் முலை மேல் தொய்யில் எழுதுகோ மற்று என்றான் – சிறிய சுணங்கு சிதறிய உன்னுடைய மென்மையான முலைகள் மேல் தொய்யில் வரையட்டுமா என்றான், யாம் பிறர் செய்புறம் நோக்கி இருத்துமோ – பிறர் கோலஞ் செய்ய வாளா பார்த்திருப்பேனா?  உனக்கு மணம் புரிந்து எழுதும் நோக்கம் இல்லை, நீ பெரிது மையலை மாதோ விடுக என்றேன் – நீ மிகவும் காதல் மயக்கம் கொண்டவன் என்றேன், தையலாய் – இளம் பெண்ணே, சொல்லிய ஆறு எல்லாம் மாறு மாறு யான் பெயர்ப்ப – அவன் இவ்வாறு சொல்லிய நெறிகள் எல்லாவற்றையும் நான் மறுக்க, அல்லாந்தான் போலப் பெயர்ந்தான் – வருந்துபவன் போல் சென்றான், அவனை நீ ஆயர் மகளிர் இயல்பு உரைத்து – அவனிடம் நீ ஆயர் மகளிரின் தன்மையை உரைத்து, எந்தையும் யாயும் அறிய – என்னுடைய தந்தையும் தாயும் அறிய ,உரைத்தீயின் – சொல்லுவாய் ஆயின், யான் உற்ற நோயும் களைகுவை மன் – நான் அடைந்த நோயை நீ போக்குவாய்

கலித்தொகை 113, சோழன் நல்லுருத்திரன், முல்லை, தலைவனும் தலைவியும் சொன்னது

தலைவன்

நலம் மிக நந்திய நயவரு தட மென் தோள்
அலமரல் அமர் உண்கண் அம் நல்லாய் நீ உறீஇ
உலமரல் உயவு நோய்க்கு உய்யும் ஆறு உரைத்துச் செல்

தலைவி

பேர் ஏமுற்றார் போல முன் நின்று விலக்குவாய்
யார் எல்லா நின்னை அறிந்ததூஉம் இல்வழி  5

தலைவன்:

தளர் இயால் என் அறிதல் வேண்டின் பகை அஞ்சாப்
புல்லினத்து ஆயர் மகனேன் மற்று யான்

தலைவி

ஒக்கும் மன்
புல்லினத்து ஆயனை நீ ஆயின் குடம் சுட்டு
நல் இனத்து ஆயர் எமர்  10

தலைவன்:

எல்லா
நின்னொடு சொல்லின் ஏதமோ இல்லை மன்

தலைவி

ஏதம் அன்று எல்லை வருவான் விடு

தலைவன்

விடேன்
உடம்பட்டு நீப்பார் கிளவி மடம் பட்டு  15
மெல்லிய ஆதல் அறியினும் மெல்லியால்
நின் மொழி கொண்டு யானோ விடுவேன் மற்று என் மொழி கொண்டு

என் நெஞ்சம் ஏவல் செயின்

தலைவி

என் நெஞ்சம் ஏவல் செயின்
நெஞ்சு ஏவல் செய்யாது என நின்றாய்க்கு எஞ்சிய
காதல் கொள் காமம் கலக்குற ஏதிலார் 20
பொய்ம் மொழி தேறுவது என்

தலைவன்

தெளிந்தேன் தெரி இழாய் யான்

பல்கால் யாம் கான் யாற்று அவிர் மணல் தண் பொழில்
அல்கல் அகல் அறை ஆயமொடு ஆடி
முல்லை குருந்தொடு முச்சி வேய்ந்து எல்லை  25
இரவு உற்றது இன்னும் கழிப்பி அரவு உற்று
உருமின் அதிரும் குரல் போல் பொரு முரண்
நல் ஏறு நாகு உடன் நின்றன
பல் ஆன் இன நிரை நாம் உடன் செலற்கே.

பொருளுரை:

தலைவன்:  நன்மை மிகப் பெருகிய விருப்பம் தருகின்றன பெரிய மென்மையான தோளையும் சுழலும் பொருந்திய மையிட்ட கண்களையுமுடைய அழகிய நல்லாளே! நீ உண்டாக்கிய துன்ப நோயிலிருந்து உய்யும் வழியை கூறி விட்டு செல்வாயாக,

தலைவி:  பித்து பிடித்தவன் போல என் முன்னால் நின்று என்னைத் தடுக்கும் நீ யார்? ஏடா! நீ யார் என்பது எனக்குத் தெரியாது

தலைவன்:  மனம் நெகிழும் தன்மையுடையவளே!  நான் யார் என்பதை நீ அறிய வேண்டினால், பகைவர்களுக்கு அஞ்சாத ஆட்டினத்தையுடைய ஆயர்குடியின் மகன் நான்,

தலைவி:  அது மிகவும் ஒக்கும். நீ ஆட்டினத்தவன் ஆயின், எம்முடைய குடும்பத்தினர் குடத்தில் பால் கறக்கும் நல்ல ஆயர் இனத்தினர்,

தலைவன்:  ஏடி! உன்னுடன் சொல்லாடுவதில் குற்றம் எதுவும் இல்லை,

தலைவி:  குற்றம் இல்லையேல் நாளை நாம் பேசலாம்.  என்னைப் போக விடு,

தலைவன்:  முதலில் உடன்பட்டு பின் கைவிட்டுப் போவாரின் சொற்கள் நிலையற்றது என்பதை அறிந்தும், மென்மையானவளே, நீ கூறுவதைக் கேட்டு, நானா உன்னைப் போக விடுவேன்?  என் சொற்களைக் கேட்டும் என் நெஞ்சு பணியாது ஆதலால், உன்னைப் போக விடமாட்டேன்.

தலைவி:  உன் நெஞ்சு உனக்குப் பணியாது என்று கூறும் உனக்கு காதலால் மனம் கலங்கியுள்ளது. பிறர் கூறும் பொய் மொழிகளை எவ்வாறு நீ அறிவாய்?

தலைவன்:  நான் உண்மையை அறிந்துக் கொண்டேன், அழகிய அணிகலன்களை அணிந்தவளே.  முன்பு நாம் பலமுறை காட்டு ஆற்றின் ஒளியுடைய மணலில் உள்ள குளிர்ந்த சோலையில் அகன்ற பாறையில் தோழியருடன் விளையாடினோம், முல்லை மலர்களையும் குருந்த மலர்களையும் தலையில் அணிந்து.  பகல் இரவு ஆகிவிட்டது.  நீ அதை உணராமல் இருக்கின்றாய்.  பாம்பைக் கண்டு இடிக்கும் இடியின் குரல் போன்ற குரலையுடைய போரிடும் நல்ல ஏறுகள் தங்கள் பசுக்களுடன் நிற்கின்றன.  நாம் கூடுவதற்கு உடன்படுவாயாக.

சொற்பொருள்:  நலம் மிக நந்திய நயவரு தட மென் தோள் அலமரல் அமர் உண்கண் அம் நல்லாய் – நன்மை மிகப் பெருகிய விருப்பம் தருகின்றன பெரிய மென்மையான தோளையும் சுழலும் பொருந்திய மையிட்ட கண்களையுமுடைய அழகிய நல்லாளே, நீ உறீஇ உலமரல் உயவு நோய்க்கு உய்யும் ஆறு உரைத்துச் செல் – நீ உண்டாக்கிய துன்ப நோயிலிருந்து உய்யும் வழியை கூறி விட்டு செல்வாயாக,

பேர் ஏமுற்றார் போல முன் நின்று விலக்குவாய் யார் – பித்து பிடித்தவன் போல என் முன்னால் நின்று என்னைத் தடுக்கும் நீ யார், எல்லா – ஏடா, நின்னை அறிந்ததூஉம் இல்வழி – நீ யார் என்பது எனக்குத் தெரியாது

தளர் இயால் – மனம் நெகிழும் தன்மையுடையவளே, என் அறிதல் வேண்டின் – நான் யார் என்பதை நீ அறிய வேண்டினால், பகை அஞ்சாப் புல்லினத்து ஆயர் மகனேன் மற்று யான் – பகைவர்களுக்கு அஞ்சாத ஆட்டினத்தையுடைய ஆயர்குடியின் மகன் நான்,

ஒக்கும் மன் – மிகவும் ஒக்கும், புல்லினத்து ஆயனை நான் நீ ஆயின் குடம் சுட்டு நல் இனத்து ஆயர் எமர் – நீ ஆட்டினத்தவன் ஆயின் எம்முடைய குடும்பத்தினர் குடத்தில் பால் கறக்கும் நல்ல ஆயர் இனத்தினர்,

எல்லா – ஏடி, நின்னொடு சொல்லின் ஏதமோ இல்லை மன் – உன்னுடன் சொல்லாடுவதில் குற்றம் எதுவும் இல்லை,

ஏதம் அன்று எல்லை வருவான் விடு – குற்றம் இல்லையேல் நாளை பேசலாம்.  என்னைப் போக விடு,

விடேன் – உன்னைப் போக விடமாட்டேன், உடம்பட்டு நீப்பார் கிளவி மடம் பட்டு மெல்லிய ஆதல் அறியினும் – முதலில் உடன்பட்டு பின் கைவிட்டுப் போவாரின் சொற்கள் நிலையற்றது என்பதை அறிந்தும், மெல்லியால் – மென்மையானவளே, நின் மொழி கொண்டு – நீ கூறுவதைக் கேட்டு, யானோ விடுவேன் – நானா உன்னைப் போக விடுவேன், மற்று என் மொழி கொண்டு என் நெஞ்சம் ஏவல் செயின் – என் சொற்களைக் கேட்டும் என் நெஞ்சு பணியாது ஆதலால்,

நெஞ்சு ஏவல் செய்யாது என நின்றாய்க்கு எஞ்சிய காதல் கொள் காமம் கலக்குற – உன் நெஞ்சு உனக்குப் பணியாது என்று கூறும் உனக்கு காதலால் மனம் கலங்கியுள்ளது, ஏதிலார் பொய்ம் மொழி தேறுவது என் – பிறர் கூறும் பொய் மொழிகளை எவ்வாறு நீ அறிவாய்,

தெளிந்தேன் தெரி இழாய் – உண்மையை அறிந்து கொண்டேன் அழகிய அணிகலன்களை அணிந்தவளே, யான் – நான், பல்கால் – பலமுறை, யாம் – நாம், கான்யாற்று – காட்டு ஆறு, அவிர் மணல் – ஒளியுடைய மணல், தண் பொழில் அல்கல் அகல் அறை ஆயமொடு ஆடி – குளிர்ந்த சோலையில் அகன்ற பாறையில் தோழியருடன் விளையாடி, முல்லை குருந்தொடு முச்சி வேய்ந்து – முல்லை மலர்களையும் குருந்த மலர்களையும் தலையில் அணிந்து, எல்லை இரவு உற்றது இன்னும் கழிப்பி – பகல் இரவு ஆகியும் இன்னும் செல்லாமல் இருக்கின்றாய், அரவு உற்று உருமின் அதிரும் குரல் போல் – பாம்பைக் கண்டு இடிக்கும் இடியின் குரல்போல், பொரு முரண் நல் ஏறு நாகு உடன் நின்றன – போரிடும் நல்ல ஏறுகள் தங்கள் பசுக்களுடன் நின்றன, பல் ஆன் இன நிரை – பல பசுக் கூட்டங்கள், நாம் உடன் செலற்கே – நாமும் கூடுவதற்கு உடன்படுவாயாக

கலித்தொகை 114, சோழன் நல்லுருத்திரன், முல்லை, தலைவியும் தோழியும் சொன்னது

தலைவி: 

வாரி நெறிப்பட்டு இரும் புறம் தாஅழ்ந்த
ஓரிப் புதல்வன் அழுதனன் என்பவோ?
“புதுவ மலர் தைஇ எமர் என் பெயரால்
வதுவை அயர்வாரை கண்டு மதி அறியா
ஏழையை” என்று அகல நக்கு வந்தீயாய் நீ 5
தோழி, அவன் உழைச் சென்று

தோழி: 

சென்று யான் அறிவேன் கூறுக மற்று இனி

தலைவி: 

சொல் அறியாப் பேதை, மடவை, மற்று எல்லா
நினக்கு ஒரூஉம் மற்று என்று அகல் அகலும் நீடு இன்று
நினக்கு வருவதாக் காண்பாய் அனைத்து ஆகச் 10
சொல்லிய சொல்லும் வியங்கொளக் கூறு,
தருமணல் தாழப் பெய்து, இல் பூவல் ஊட்டி,
எருமைப் பெடையோடு எமர் ஈங்கு அயரும்
பெரு மணம் எல்லாம் தனித்தே ஒழிய,
வரி மணல் முன்துறைச் சிற்றில் புனைந்த 15
திரு நுதல் ஆயத்தார் தம்முள் புணர்ந்த
ஒரு மணம் தான் அறியும், ஆயின் எனைத்தும்
தெருமரல் கைவிட்டு இருக்கோ? அலர்ந்த
விரி நீர் உடுக்கை உலகம் பெறினும்
அரு நெறி ஆயர் மகளிர்க்கு 20
இரு மணம் கூடுதல் இல் இயல்பு அன்றே!

தலைவி:  வாரி முடித்து புறத்தே தாழ விட்ட தலை முடியையுடைய நம் தலைவன் அழுதான் என்று கூறுகின்றனரோ?  அவ்வாறு கூறுவார்களாயின், நீ அவனிடம் சென்று, “புதிய மலர்களைக் கட்டி அவளுடைய உறவினர்கள் அவளுக்குத் திருமண ஏற்பாடு செய்வதைக் கண்டும் ஒன்றும் செய்யாத அறிவற்றவனே” என்று நன்றாக எள்ளி நகைத்து விட்டு வா தோழி.

தோழி:  அவனிடம் சென்று சொல்வதை அறிவேன்.  இனி வேறு என்ன சொல்ல வேண்டும்?

தலைவி:  மடவாய்!  “நீ உன்னுடைய மண விருப்பத்தை அவளுடைய குடும்பத்தாரிடம் சொல்லத் தெரியாத மடப்பம் உடையவன்.  அதனால் திருமணம் உனக்குரியதாக இல்லாமல் உன்னிடமிருந்து அகலும்.  நீடிக்காமல் உடனேயே நிகழ்ந்து  விடும்.  அம்மணம் உனக்கே நிகழும் வழிகளை அறிந்து விரைந்து செயலாற்று” என்று அவனிடம் கூறு.  நீ கூறும் சொற்களை அவன் ஏற்றுக் கொள்ளும்படி உறுதியுடன் கூறு.

புதுமணல் பெய்து, மனைக்கு செம்மண் பூசி, பெண் எருமையின் கொம்பை நட்டி, கடவுளை வழிபட்டு என் குடும்பத்தார் நிகழ்த்தும் பெரிய திருமணம் அவனில்லாமல் நிகழும்.  திட்டுத் திட்டாக உள்ள மணலையுடையத் துறையில் சிற்றில் கட்டி விளையாடிய அழகிய நெற்றியையுடைய தோழியருடன் விளையாடிய பொழுது அவர்கள் அறியாதபடி என்னுடன் தான் புணர்ந்ததை அவன் அறிவான்.  அவ்வாறு இருக்க நான் உள்ளம் வருந்தி இருக்க வேண்டுமா?  நீர் சூழ்ந்த பெரிய உலகத்தையே பெற்றாலும், ஒழுக்க நெறியையுடைய ஆயர் பெண்களுக்கு, இருமணம் நிகழ்வது இயல்பு இல்லையே!

சொற்பொருள்:  வாரி நெறிப்பட்டு இரும் புறம் தாஅழ்ந்த ஓரிப் புதல்வன் – வாரி முடித்து புறத்தே தாழ விட்ட தலை முடியையுடைய நம் தலைவன், அழுதனன் என்பவோ – அழுதான் என்று கூறுகின்றனரோ, புதுவ மலர் தைஇ எமர் என் பெயரால் வதுவை அயர்வாரை கண்டு மதி அறியா ஏழையை – புதிய மலர்கள் கட்டி என்னுடைய உறவினர்கள் எனக்குத் திருமண ஏற்பாடு செய்வதைக் கண்டும் ஒன்றும் செய்யாத அறிவற்றவனே – என்று – என்று, அகல நக்கு வந்தீயாய் நீ – அவனை நன்றாக எள்ளி நகைத்து விட்டு வருக, தோழி – தோழி, அவன் உழைச் சென்று – அவனருகில் சென்று,

சென்று யான் அறிவேன் கூறுக மற்று இனி – அவனிடம் சென்று சொல்வதை அறிவேன். இனி என்ன சொல்ல வேண்டும்?

மடவை – மடவாய், சொல் அறியாப் பேதை – நீ உன்னுடைய மண விருப்பத்தை அவளுடைய குடும்பத்தாரிடம் சொல்லத் தெரியாத பேதைமை உடையவன், மற்று எல்லா நினக்கு ஒரூஉம் மற்று என்று அகல் அகலும் – அதனால் திருமணம் உனக்குரியதாக இல்லாமல் உன்னிடமிருந்து அகலும், நீடு இன்று – நீடிக்காமல் உடனேயே நிகழ்ந்து விடும், நினக்கு வருவதாக் காண்பாய் – அம்மணம் உனக்கே நிகழும் வழிகளை அறிந்து விரைந்து செயலாற்று, அனைத்து ஆகச் சொல்லிய சொல்லும் வியங்கொளக் கூறு – நீ கூறும் சொற்களை அவன் ஏற்றுக் கொள்ளும்படி உறுதியுடன் கூறுவாயாக (வியங்கொள – ஏவலுடன்),

தருமணல் தாழப் பெய்து – புதுமணல் பெய்து, இல் பூவல் ஊட்டி – மனைக்கு செம்மண் பூசி, எருமைப் பெடையோடு எமர் ஈங்கு அயரும் பெரு மணம் எல்லாம் – பெண் எருமையின் கொம்பை நட்டி கடவுளை வழிபட்டு என் குடும்பத்தார் நிகழ்த்தும் பெரிய திருமணம், தனித்தே ஒழிய – அவனில்லாமல் நிகழ, வரி மணல் முன்துறை – திட்டுத் திட்டாக உள்ள மணலையுடையத் துறையில், சிற்றில் புனைந்த – சிற்றில் கட்டி விளையாடிய, திரு நுதல் ஆயத்தார் தம்முள் புணர்ந்த ஒரு மணம் தான் அறியும் – அழகிய நெற்றியையுடைய தோழியருடன் விளையாடிய பொழுது அவர்கள் அறியாதபடி என்னுடன் புணர்ந்ததை அவன் அறிவான், ஆயின் எனைத்தும் தெருமரல் கைவிட்டு இருக்கோ – அவ்வாறு இருக்க நான் உள்ளம் வருந்தி இருப்பேனா, அலர்ந்த விரி நீர் உடுக்கை உலகம் பெறினும் – நீர் சூழ்ந்த பெரிய உலகத்தையே பெற்றாலும், அரு நெறி ஆயர் மகளிர்க்கு – ஒழுக்க நெறியையுடைய ஆயர் பெண்களுக்கு, இரு மணம் கூடுதல் இல் இயல்பு அன்றே – இருமணம் நிகழ்வது இயல்பு இல்லையே

கலித்தொகை 116, சோழன் நல்லுருத்திரன், முல்லை, தலைவியும் தலைவனும் சொன்னது

தலைவி: 

பாங்கு அரும் பாட்டங்கால் கன்றொடு செல்வேம் எம்
தாம்பின் ஒரு தலை பற்றினை ஈங்கு எம்மை
முன்னை நின்று ஆங்கே விலக்கிய எல்லா நீ
என்னை ஏமுற்றாய் விடு

தலைவன்: 

விடேஎன் தொடீஇய செல்வார்த் துமித்து எதிர் மண்டும் 5
கடு வய நாகு போல் நோக்கித் தொழு வாயில்
நீங்கிச் சினவுவாய் மற்று

தலைவி: 

நீ நீங்கு கன்று சேர்ந்தார்கண் கத ஈற்று ஆ சென்றாங்கு
வன்கண்ணள் ஆய்வரல் ஓம்பு

தலைவன்: 

யாய் வருக ஒன்றோ பிறர் வருக மற்று நின் 10
கோ வரினும் இங்கே வருக தளரேன் யான்
நீ அருளி நல்க பெறின்

தலைவி: 

நின்னை யான் சொல்லினவும் பேணாய் நினைஇ
கனை பெயல் ஏற்றின் தலை சாய்த்து எனையதூஉம்
மாறு எதிர் கூறி மயக்குப்படுகுவாய் 15
கலத்தொடு யாம் செல்வுழி நாடிப் புலத்தும்
வருவையால் நாண் இலி நீ.

பொருளுரை:

தலைவி:  பிறர் சேருதற்கரிய எங்கள் தோட்டத்திற்கு கன்றுடன் செல்லும் என் கயிற்றின் ஒரு முனையை நீ பற்றியுள்ளாய்.  இங்கு முன்பு என்னை இவ்வாறு விலக்கினாய் நீ. ஏடா!  உனக்கு பித்தம் பிடித்து விட்டது. என்னைப் போகவிடு,

தலைவன்:  நான் உன்னைப் போக விடமாட்டேன்.  தன்னைத் தொடுவாரைத் தாக்கித் தள்ளிவிட்டு எதிரே விரைந்து செல்லும் வலிமையான இளம் எருமையைப் போல நோக்கி, தொழுவின் வாசலில் இருந்து நீங்கி சினம் கொள்கின்றாய் நீ,

தலைவி:  நீ இங்கிருந்து போ.  தன்னுடைய கன்றின் அருகில் சென்றவர்கள்மேல் சினம் கொள்ளும் புதிதாக ஈன்ற பசுவைப் போன்று, என் தாய் கடுஞ்சினம் கொள்வாள்.  அவளிடமிருந்து உன்னைப் பாதுகாத்துக் கொள்,

தலைவன்:  உன் தாய் வரட்டும், அல்லது பிறர் வரட்டும்.  உன்னுடைய தந்தை வந்தாலும் வரட்டும்.  நான் அஞ்ச மாட்டேன், உன்னுடைய அருள் கிடைக்கப்பெற்றால்,

தலைவி:  நான் கூறிய எதையும் நீ ஏற்றுக்கொள்ளவில்லை.  செறிந்த மழையில் தலையைச் சாய்த்து நிற்கும் எருது போல, நான் கூறும் சொற்களுக்கு எதிர்ச்சொல் கூறி மயக்கமுற்றவனே!  மாடு மேய்க்கும் இடத்திற்கு நான் பால் கலத்துடன் செல்வதால், நீ அங்கு வா, நாணம் இல்லாதவனே.  அங்கு கூடி மகிழ்வோம்.

சொற்பொருள்:  பாங்கு அரும் பாட்டங்கால் – பிறர் சேருதற்கரிய தோட்டத்திற்கு, கன்றொடு செல்வேம் எம் தாம்பின் ஒரு தலை பற்றினை – கன்றுடன் செல்லும் என்னுடைய கயிற்றின் ஒரு முனையை நீ பற்றியுள்ளாய், ஈங்கு எம்மை முன்னை நின்று ஆங்கே விலக்கிய – இங்கு முன்பு இவ்வாறு விலக்கிய நீ, எல்லா – ஏடா, நீ என்னை ஏமுற்றாய் – உனக்கு பித்தம் பிடித்து விட்டது, விடு – என்னைப் போகவிடு,

விடேஎன் – நான் உன்னைப் போக விடமாட்டேன், தொடீஇய செல்வார்த் துமித்து – தன்னைத் தொடுவாரைத் தாக்கித் தள்ளிவிட்டு, எதிர் மண்டும் – எதிரே விரைந்து செல்லும், கடு வய நாகு போல் – வலிமையான இளம் எருமையைப் போல, நோக்கி – நோக்கி, தொழு வாயில் நீங்கிச் சினவுவாய் மற்று – தொழுவின் வாசலில் இருந்து நீங்கி சினம் கொள்கின்றாய்,

நீ நீங்கு – நீ இங்கிருந்து போ, கன்று சேர்ந்தார்கண் கத ஈற்று ஆ சென்றாங்கு – தன்னுடைய கன்றின் அருகில் சென்றவர்கள்மேல் சினம் கொள்ளும் புதிதாக ஈன்ற பசுவைப் போன்று, வன்கண்ணள் – தாய் கடுஞ்சினம் கொள்வாள், ஆய்வரல் ஓம்பு – வரும் அவளிடமிருந்து உன்னைப் பாதுகாத்துக் கொள்,

யாய் வருக – உன் தாய் வரட்டும், ஒன்றோ பிறர் வருக – அல்லது பிறர் வரட்டும், மற்று நின் கோ வரினும் இங்கே வருக – உன்னுடைய தந்தை வரட்டும், தளரேன் யான் – நான் அஞ்ச மாட்டேன், நீ அருளி நல்க பெறின் – உன்னுடைய அருள் கிடைக்கப்பெற்றால்,

நின்னை யான் சொல்லினவும் பேணாய் – நான் கூறிய எதையும் நீ ஏற்றுக்கொள்ளவில்லை, நினைஇ கனை பெயல் ஏற்றின் தலை சாய்த்து – செறிந்த மழையில் தலையைச் சாய்த்து நிற்கும் எருது போல, எனையதூஉம் மாறு எதிர் கூறி மயக்குப்படுகுவாய் – நான் கூறும் சொற்களுக்கு எதிர்ச்சொல் கூறி மயக்கமுற்றவனே, கலத்தொடு யாம் செல்வுழி நாடிப் புலத்தும் வருவையால் – மாடு மேய்க்கும் இடத்திற்கு நான் பால் கலத்துடன் செல்வதால் நீ அங்கு வா, நாண் இலி நீ – நாணம் இல்லாத நீ

கலித்தொகை 119, நல்லந்துவனார், நெய்தல், தலைவி தோழியிடம் சொன்னது

அகல் ஞாலம் விளக்கும் தன் பல் கதிர் வாய் ஆகப்
பகல் நுங்கியது போலப் படுசுடர் கல் சேர,
இகல் மிகு நேமியான் நிறம் போல இருள் இவர,
நிலவுக் காண்பது போல அணி மதி ஏர்தரக்,
கண் பாயல் பெற்ற போல் கணைக் கால மலர் கூம்பத்,  5
தம் புகழ் கேட்டார் போல் தலை சாய்த்து மரம் துஞ்ச,
முறுவல் கொள்பவை போல முகை அவிழ்பு புதல் நந்தச்
சிறு வெதிர் குழல் போலச் சுரும்பு இமிர்ந்து இம்மெனப்,
பறவை தம் பார்ப்பு உள்ளக் கறவை தம் பதி வயின்
கன்று அமர் விருப்பொடு மன்று நிறை புகுதர,  10
மா வதி சேர, மாலை வாள் கொள,
அந்தி அந்தணர் எதிர்கொள, அயர்ந்து
செந்தீச் செவ் அழல் தொடங்க, வந்ததை
வால் இழை மகளிர் உயிர் பொதி அவிழ்க்கும்
காலை ஆவது அறியார்,  15
மாலை என்மனார் மயங்கியோரே.

பாடல் பின்னணி – பிரிவிடை மாலைப்பொழுது கண்டு ஆற்றாத தலைவி தோழிக்கு உரைத்தது.

பொருளுரை:   அகன்ற உலகத்திற்கு ஒளியைத் தந்து பின் அப்பகல் வேளையை விழுங்கியது போல கதிரவன் கதிர்களைச் சுருக்கி மலையில் சேர, போரில் மிகுகின்ற சக்கரத்தை உடைய திருமாலின் நிறம் போல கருமை படர, நிலவாலே இருட்டை ஓட்டுவதுபோல அழகிய நிலா தோன்ற, துயிலைப் பெற்ற கண்களைப் போல திரண்ட தண்டினையுடைய மலர்கள் கூம்ப, தன் புகழைக் கேட்டு நாணிய சான்றோரைப் போல தலையைச் சாய்த்து மரங்கள் துயில, சிரிப்பவை போல அரும்புகள் புதர்களில் மலர்ந்து விளங்க, சிறிய மூங்கிலால் செய்த குழல் இசைபோல வண்டு பாட, ஆரவாரத்துடன் பறவைகள் தம் குஞ்சுகளை நினைத்து தங்கள் கூடு சேர, பசுக்கள் கன்றுகளை காணும்பொருட்டு விருப்பத்துடன் ஊரின் மன்றத்தை அடைய, விலங்குகள் தங்கள் தங்குமிடங்களை அடைய, மாலை ஒளி கொள்ள, அந்தணர்கள் அந்தி நேரத்தை எதிர்கொள்ள, மகளிர் செந்தீ உடைய விளக்குளை ஏற்ற, தூய அணிகலன்களை அணிந்த மகளிரின் உயிரை நீக்கும் பொழுது இம்மாலை நேரம் என்று அறியாதவராய், அதையும் ஒரு காலமாக எண்ணி மாலைக்காலம் என்று அறியாமையால் கூறுகின்றனர்.

குறிப்பு:  ஆ மன்றத்தில் புகுதல்: அகநானூறு 14 – கன்று பயிர் குரல மன்று நிறை புகுதரும், அகநானூறு 63 – கன்று காணாது புன்கண்ண செவி சாய்த்து மன்று நிறை பைதல் கூரப் பல உடன் கறவை, அகநானூறு 64 – மன்று நிறை புகுதரும் ஆ, அகநானூறு 253 – கன்றுடைப் பெரு நிரை மன்று நிறை தரூஉம், கலித்தொகை 119 – கன்று அமர் விருப்பொடு மன்று நிறை புகுதர, புறநானூறு 387 – மன்று நிறையும் நிரை, குறிஞ்சிப்பாட்டு 217 – ஆன் கணம் கன்று பயிர் குரல மன்று நிறை புகுதர.

சொற்பொருள்:  அகல் ஞாலம் விளக்கும் தன் பல் கதிர் வாய் ஆகப் பகல் நுங்கியது போலப் படுசுடர் கல் சேர – அகன்ற உலகத்திற்கு ஒளியைத் தந்து பின் அப்பகல் வேளையை விழுங்கியது போல கதிரவன் கதிர்களைச் சுருக்கி மலையில் சேர, இகல் மிகு நேமியான் நிறம் போல இருள் இவர – போரில் மிகுகின்ற சக்கரத்தை உடைய திருமாலின் நிறம் போல கருமை படர, நிலவுக் காண்பது போல – நிலவாலே இருட்டை ஓட்டுவதுபோல, அணி மதி ஏர்தர – அழகிய நிலா தோன்ற, கண் பாயல் பெற்ற போல் கணைக் கால மலர் கூம்ப – துயிலைப் பெற்ற கண்களைப் போல திரண்ட தண்டினையுடைய மலர்கள் கூம்ப, தம் புகழ் கேட்டார் போல் தலை சாய்த்து மரம் துஞ்ச – தன் புகழைக் கேட்ட சான்றோரைப் போல தலையைச் சாய்த்து மரங்கள் துயில, முறுவல் கொள்பவை போல முகை அவிழ்பு புதல் நந்த – சிரிப்பவை போல அரும்புகள் புதர்களில் மலர்ந்து விளங்க, சிறு வெதிர் குழல் போலச் சுரும்பு இமிர்ந்து – சிறிய மூங்கிலால் செய்த குழல் இசைபோல வண்டு பாட, இம்மெனப் பறவை தம் பார்ப்பு உள்ள – ஆரவாரத்துடன் பறவைகள் தம் குஞ்சுகளை நினைத்து தங்கள் கூடு சேர, கறவை தம் பதி வயின் கன்று அமர் விருப்பொடு மன்று நிறை புகுதர – பசுக்கள் கன்றுகளை காணும்பொருட்டு விருப்பத்துடன் ஊரின் மன்றத்தை அடைய, மா வதி சேர – விலங்குகள் தங்கள் தங்குமிடங்களை அடைய, மாலை வாள் கொள – மாலை ஒளி கொள்ள, அந்தி அந்தணர் எதிர்கொள – அந்தணர்கள் அந்தி நேரத்தை எதிர்கொள்ள, அயர்ந்து செந்தீச் செவ் அழல் தொடங்க – மகளிர் செந்தீ உடைய விளக்குளை ஏற்ற, வந்ததை வால் இழை மகளிர் உயிர் பொதி அவிழ்க்கும் காலை ஆவது அறியார் – தூய அணிகலன்களை அணிந்த மகளிரின் உயிரை நீக்கும் பொழுது என்று அறியாதவராய், மாலை என்மனார் மயங்கியோரே – அதையும் ஒரு காலமாக எண்ணி மாலைக்காலம் என்று அறியாமையால் கூறுகின்றனர்

கலித்தொகை 133, நல்லந்துவனார், நெய்தல், தோழி தலைவனிடம் சொன்னது

மா மலர் முண்டகம் தில்லையோடு ஒருங்கு உடன்
கானல் அணிந்த உயர் மணல் எக்கர் மேல், 
சீர் மிகு சிறப்பினோன் மர முதல் கை சேர்த்த
நீர் மலி கரகம் போல் பழம் தூங்கு முடத் தாழைப்
பூ மலர்ந்தவை போலப் புள் அல்கும் துறைவ! கேள்!  5

ஆற்றுதல் என்பது ஒன்று அலந்தவர்க்கு உதவுதல், 
போற்றுதல் என்பது புணர்ந்தாரை பிரியாமை,
பண்பு எனப்படுவது பாடு அறிந்து ஒழுகுதல்,
அன்பு எனப்படுவது தன் கிளை செறாஅமை,
அறிவு எனப்படுவது பேதையார் சொல் நோன்றல்,  10
செறிவு எனப்படுவது கூறியது மறாஅமை, 
நிறை எனப்படுவது மறை பிறர் அறியாமை,
முறை எனப்படுவது கண்ணோடாது உயிர் வௌவல், 
பொறை எனப்படுவது போற்றாரை பொறுத்தல்,

ஆங்கு அதை அறிந்தனிர் ஆயின், என் தோழி  15
நல் நுதல் நலன் உண்டு துறத்தல் கொண்க,   
தீம் பால் உண்பவர் கொள் கலம் வரைதல் 
நின்தலை வருந்தியாள் துயரம்
சென்றனை களைமோ! பூண்க நின் தேரே!

பொருளுரை:  கருமை நிற மலரையுடைய கழிமுள்ளி தில்லையுடன் சேர்ந்து சூழ்ந்த கடற்கரையில் அலைகள் இட்ட மணல் மேட்டின் மேல், புகழ் மிக்க தலைமையுடைய சிவபெருமான் மரத்தின் அடியில் தன் முன் எடுத்து வைத்திருந்த நீர் நிறைந்த பானைகள் போல், பழங்கள் தொங்கும் வளைந்த தாழையின் பூக்கள் மலர்ந்தவை போல் குருகு இனம் அத்தாழை மேல் தங்கும் துறைவனே!  நான் கூறுவனவற்றைக் கேட்பாயாக!

ஆற்றுதல் என்பது ஒன்று அலந்தவர்க்கு உதவுதல், போற்றுதல் என்பது நட்புடன் கூடியவரைப் பிரியாமை, பண்பு என்பது உலக நெறி அறிந்து ஒழுகுதல், அன்பு என்பதுஅறியாதவர்கள்  தன் சுற்றத்தார் மீது சினம் கொள்ளாதிருத்தல், அறிவு என்பது அறியாமையுடையோர் தன்னைப் பார்த்துச் சொல்லும் சொற்களைப் பொறுத்தல்,

செறிவு என்பது தான் கூறியதை என்றும் மறவாது இருத்தல், நிறை என்பது மறைவானவற்றை பிறர் அறியாதவாறு காத்தல், முறை என்பது தீமை செய்தவர் நம்மவர் ஆயினும் இரக்கம் காட்டாது அவர் குற்றத்திற்கு ஏற்ப அவர் உயிரைக் கொள்ளுதல், பொறை என்பது தன்னைப் போற்றாதவரிடம் பகை கொள்ளாது பொறுமையுடன் இருத்தல்,

இவற்றை நீர் அறிந்தீர் ஆயின், என் தோழியின் நல்ல நெற்றியின் அழகை உண்டு அதன் பின் நீர் அவளைத் துறத்தல், நெய்தல் நிலத் தலைவனே, இனிய பாலை உண்பவர் பால் இருந்த கிண்ணத்தைக் கைவிடுதல் போன்றது ஆகும்.  உன்பொருட்டு வருந்தியவளின் துயரை நீ நீக்குவாயாக!  உன்னுடைய தேரில் குதிரைகளைப் பிணிப்பாயாக!

குறிப்பு:  ஒழுகுதல், நோன்றல், பொறுத்தல் – தொழிற்பெயர்கள்.

சொற்பொருள்:  மா மலர் முண்டகம் தில்லையோடு ஒருங்கு உடன் – கருமை நிற மலரையுடைய கழிமுள்ளி தில்லையுடன் சேர்ந்து சூழ்ந்த, கானல் அணிந்த உயர் மணல் எக்கர் மேல் – கடற்கரையில் அலைகள் இட்ட மணல் மேட்டின் மேல், சீர் மிகு சிறப்பினோன் – புகழ் மிக்க தலைமையுடைய சிவன், மர முதல் கை சேர்த்த நீர் மலி கரகம் போல் – மரத்தின் அடியில் தன் முன் எடுத்து வைத்திருந்த நீர் நிறைந்த பானைகள் போல், பழம் தூங்கு முடத் தாழைப் பூ மலர்ந்தவை போல புள் அல்கும் துறைவ – பழங்கள் தொங்கும் வளைந்த தாழையின் பூக்கள் மலர்ந்தவை போல் குருகு இனம் அத்தாழை மேல் தங்கும் துறைவனே, கேள் – நான் கூறுவனவற்றைக் கேட்பாயாக,

ஆற்றுதல் என்பது ஒன்று அலந்தவர்க்கு உதவுதல் – ஆற்றுதல் என்பது வறுமை உற்றவர்களுக்கு உதவுதல், போற்றுதல் என்பது புணர்ந்தாரைப் பிரியாமை – போற்றுதல் என்பது நட்புடன் கூடியவரைப் பிரியாமை, பண்பு எனப்படுவது பாடு அறிந்து ஒழுகுதல் – பண்பு என்பது உலக நெறி அறிந்து ஒழுகுதல், அன்பு எனப்படுவது தன் கிளை செறாஅமை – அன்பு என்பதுஅறியாதவர்கள்  தன் சுற்றத்தார் மீது சினம் கொள்ளாதிருத்தல் (செறாஅமை – அளபெடை), அறிவு எனப்படுவது பேதையார் சொல் நோன்றல் – அறிவு என்பது அறியாமையுடையோர் தன்னைப் பார்த்துச் சொல்லும் சொற்களைப் பொறுத்தல்,

செறிவு எனப்படுவது கூறியது மறாஅமை – செறிவு என்பது தான் கூறியதை என்றும் மறவாது இருத்தல் (மறாஅமை – அளபெடை), நிறை எனப்படுவது மறை பிறர் அறியாமை – நிறை என்பது மறைவானவற்றை பிறர் அறியாதவாறு காத்தல், முறை எனப்படுவது கண்ணோடாது உயிர் வௌவல் – முறை என்பது தீமை செய்தவர் நம்மவர் ஆயினும் இரக்கம் காட்டாது அவர் குற்றத்திற்கு ஏற்ப அவர் உயிரைக் கொள்ளுதல், பொறை எனப்படுவது போற்றாரை பொறுத்தல் – பொறை என்பது தன்னைப் போற்றாதவரிடம் பகை கொள்ளாது பொறுமையுடன் இருத்தல்,

ஆங்கு அதை அறிந்தனிர் ஆயின் – இவற்றை நீர் அறிந்தீர் ஆயின் (ஆங்கு – அசைநிலை), என் தோழி நல் நுதல் நலன் உண்டு துறத்தல் – என் தோழியின் நல்ல நெற்றியின் அழகை உண்டு அதன் பின் துறத்தல், கொண்க – நெய்தல் நிலத் தலைவனே, தீம் பால் உண்பவர் கொள் கலம் வரைதல் – இனிய பாலை உண்பவர் பால் இருந்த கிண்ணத்தைக் கைவிடுதல் போன்றது ஆகும்  (மோ – முன்னிலையசை), நின்தலை வருந்தியாள் துயரம் சென்றனை களைமோ – உன்பொருட்டு வருந்தியவளின் துயரை நீ நீக்குவாயாக,பூண்க நின் தேரே –  உன்னுடைய தேரில் குதிரைகளைப் பிணிப்பாயாக (பூண்க – வியங்கோள் வினைமுற்று, தேரே – ஏகாரம் அசைநிலை)