புறநானூறு

எளிய உரை:  வைதேகி

தமிழ் உரை நூல்கள்
புறநானூறு – ஔவை துரைசாமி – தமிழ் மண் பதிப்பகம், சென்னை
புறநானூறு மூலமும் எளிய உரையும் – இர. பிரபாகரன் – காவ்யா பதிப்பகம், சென்னை

96 பாடல்கள் –  5, 8, 12, 45, 46, 47, 56, 74, 75, 83, 84, 85, 86, 87, 91, 92, 94, 95, 101, 104, 105, 107, 108, 110, 111, 112, 118, 119, 121, 128, 130, 133, 134, 139, 142, 143, 144, 145, 146, 147,148, 149, 155, 158, 162 163, 164, 165, 173, 181, 184, 185, 186, 187, 188, 189, 191, 192, 195, 199, 200, 201, 202, 212, 215, 216, 218, 219, 222, 223, 226, 227, 230, 232, 234, 235, 236, 240, 245, 248, 250, 255, 256, 264, 265, 272, 277, 278, 279, 310, 312, 327, 349, 354, 356, 385, 394

புறநானூறு 5, பாடியவர்நரிவெரூஉத்தலையார்பாடப்பட்டோன்சேரமான் கருவூரேறிய ஒள்வாட் கோப்பெருஞ்சேரல் இரும்பொறைதிணைபாடாண்துறைசெவியறிவுறூஉ, பொருண் மொழிக் காஞ்சி

பாடல் பின்னணி:   தன்னைக் காண்போருக்கு நலம் விளைவிக்கும் தோற்றச் சிறப்பு மிக்க கோப்பெருஞ்சேரல் இரும்பொறையைக் கண்டு உடல் நலம் பெற்ற நரிவெரூஉத்தலையார், அவனது தோற்றப் பொலிவை வியந்து, தனக்குச் செய்தது போலப் பிறர்க்கும் இன்பம் செய்யும் இயல்பு குன்றாதிருக்க, தீய எண்ணம் உள்ளவர்களோடு சேராமல் ஆளும் நாட்டினைக் குழந்தையைப் போல் பாதுகாக்குமாறு அறிவுறுத்தி இயற்றிய பாடல் இது.

எருமை அன்ன கருங்கல் இடைதோறும்
ஆனின் பரக்கும் யானைய முன்பின்
கானக நாடனை நீயோ பெரும!
நீயோர் ஆகலின் நின் ஒன்று மொழிவல்,
அருளும் அன்பும் நீக்கி நீங்கா  5
நிரயம் கொள்பவரொடு ஒன்றாது காவல்
குழவி கொள்பவரின் ஓம்புமதி,
அளிதோ தானே அது பெறல் அருங்குரைத்தே.

பொருளுரை:   எருமைகள் போல் தோற்றமளிக்கும் கரிய நிறமுடைய கற்கள் நிறைந்த இடமெல்லாம் மாடுகளைப் போலப் பரவியிருக்கும் யானைகள் நிறைந்த வலிமையான காடுகளைக் கொண்ட நாட்டை ஆளும் தலைவனே!

நீ இவ்வாறு வளமும், சிறப்பும் பெற்றவனாக இருப்பதால் உனக்கு ஒன்று சொல்கிறேன். கேட்பாயாக! அருளும், அன்பும் இல்லாமல், தீமைகள் செய்து, நரகத்தைத் தனது இடமாகக் கொண்டு வாழும் தீயவரோடு சேராமல், உனது நாட்டை, ஒரு குழந்தையை வளர்ப்பவர்கள் அக்குழந்தையைப் பாதுகாப்பது போல் பாதுகாப்பாயாக.  அளிக்கத் தக்கது அக்காவல். அத்தகைய காக்கும் வாய்ப்பைப் பெறுவது அரியதாகும்.

குறிப்பு:  ஒளவை துரைசாமி உரை – அருளும் அன்பும் நீக்கி, நீங்கா நிரயங் கொள்பவரொடு ஒன்றாது என்றமையால் பொருண்மொழிக் காஞ்சி ஆயிற்று.  மதி – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம்.  சொல்லதிகாரம்.  இடையியல் 26).  அளிதோ தானே (8) – ஒளவை துரைசாமி உரை – அளிக்கத்தக்கது ஒன்று அதன் காவல், உ. வே. சாமிநாதையர் உரை – அளிக்கத்தக்கது ஒன்று அதன் காவல்.  அளிதோ தானே என்ற சொற்கள் வரும் பாடல்கள் (புறநானூறு 109-1, 111-1, 243-11) பிறவற்றில் இவ்விரு அறிஞர்களும் ‘இரங்கத்தக்கது அது’ என பொருள் கூறியுள்ளனர்.  குரை – ஏயும் குரையும் இசைநிறை அசைநிலை ஆயிரண்டு ஆகும் இயற்கைய என்ப (தொல்காப்பியம், இடையியல் 24).

சொற்பொருள்:   எருமை – எருமை மாடுகள், அன்ன – போல, கருங்கல் – கரிய கற்கள், இடைதோறும் – இடங்கள் எல்லாம், ஆனின் – மாடுகளைப் போல், பரக்கும் – பரவியிருக்கும், யானைய – யானைகள் உடைய, முன்பின் – வலிமையான, கானக – காடுகளை அகத்தே கொண்ட, நாடனை – நாட்டினை உடையனாய் (நாடனை – ஐகாரம் முன்னிலைக்கண் வந்தது), நீயோ – நீ தான் (ஓகாரம் அசைநிலை), பெரும – பெருமகனே, நீயோர் ஆகலின் – நீ இவ்வாறு இருப்பதால், நின் – உனக்கு, ஒன்று – ஒன்று மொழிவல் – சொல்கிறேன், அருளும் – நெஞ்சில் ஈரமும், அன்பும் – அன்பும், நீக்கி – விலக்கி, நீங்கா – நீங்காத, நிரயம் – நரகம், கொள்பவரொடு – இடமாகக் கொள்பவரோடு, ஒன்றாது – சேராமல், காவல் – காக்கும் நாட்டை (காவல் – ஆகுபெயர் காக்கப்படும் நாட்டிற்கு, குழவி – குழந்தை, கொள்பவரின் – வளர்ப்பவர்களைப் போல் (இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), ஓம்புமதி – பாதுகாப்பாயாக (மதி முன்னிலையசை), அளிதோ தானே – அளிக்கத் தக்கது அக்காவல் (அளிதோ – ஓகாரம் அசைநிலை, தானே – தான், ஏ அசைநிலைகள்), அது பெறல் – அத்தகைய காக்கும் வாய்ப்புப் பெறுவது, அருங்குரைத்தே – அரியது ஆகும் (அருங்குரைத்தே – குரை என்னும் இடைச்சொல் குறிப்பு வினைமுற்றாக ஆயிற்று, ஏகாரம் அசைநிலை)

புறநானூறு 8, பாடியவர்: கபிலர், பாடப்பட்டோன்: சேரமான் செல்வக்கடுங்கோ வாழியாதன், திணை: பாடாண், துறை: இயன் மொழி, பூவை நிலை

பாடல் பின்னணி கதிரவனுடன் சேரமான் செல்வக்கடுங்கோ வாழியாதனை ஒப்பிட்டு, கதிரவன் சேரமானுக்கு இணை இல்லை என்று கூறுகின்றார் கபிலர்.

வையம் காவலர் வழிமொழிந்து ஒழுகப்
போகம் வேண்டிப், பொதுச் சொல் பொறாஅது,
இடம் சிறிது என்னும் ஊக்கம் துரப்ப,
ஒடுங்கா உள்ளத்து, ஓம்பா ஈகைக்
கடந்து அடு தானைச் சேரலாதனை 5
யாங்கனம் ஒத்தியோ வீங்கு செலல் மண்டிலம்,
பொழுது என வரைதி, புறக்கொடுத்து இறத்தி,
மாறி வருதி, மலை மறைந்து ஒளித்தி,
அகல் இரு விசும்பினானும்
பகல் விளங்குதியால் பல் கதிர் விரித்தே?

பொருளுரை:   விரைந்து செல்லும் கதிரவனே! உலகத்தைக் காக்கும் மன்னர்கள் தனக்குப் பணிந்து நடக்க வேண்டும் என்ற இன்பத்தை விரும்பி, இவ்வுலகம் யாவர்க்கும் பொது என்ற சொல் பொறுக்காமல், தன்னுடைய நாடு சிறியது என்ற எண்ணத்தால் உந்தப்பட்டு, ஊக்கமுடைய உள்ளத்துடன் குறையாத ஈகையுடனும் பகைவரை வெல்லும் படையையுடைய சேரமான் செல்வக்கடுங்கோ வாழியாதனுக்கு நீ எவ்வாறு ஒப்பு ஆகுவாய்?

நீ பகற்பொழுதை உனக்கென்று கூறுபடுத்துகின்றாய். பின் புறமுதுகிட்டு போகின்றாய்.  மாறி மாறி வருகின்றாய். மலையின் பின் மறைந்து ஒளிகின்றாய்.  அகன்ற பெரிய ஆகாயத்தில் பகல் பொழுதில் பல கதிர்களை விரித்து ஒளியுடன் விளங்குகின்றாய்.

குறிப்பு:  பொழுது என வரைதி (7) – ஒளவை துரைசாமி உரை – என்பதற்கு காலத்தை பல பொழுதுகளாக (சிறுபொழுது பெரும்பொழுதுகளாக) வகுத்தற்கு ஏதுவாகுவை என்று உரைப்பினும் அமையும் உரை கிடந்தவாறே கொள்ளுமிடத்து.  பகற்பொழுது நினக்கென கூறுபடுக்கும் நீ அப்பகல் போதில்தான் பல் கதிர்களையும் பரப்பி விளங்குவை என்றதாகக் கொள்க.

சொற்பொருள்:  வையம் காவலர் வழிமொழிந்து ஒழுக – உலகத்தைக் காக்கும் மன்னர்கள் தனக்குப் பணிந்து நடக்க, போகம் வேண்டி – இன்பத்தை விரும்பி, பொதுச் சொல் பொறாஅது – இவ்வுலகம் யாவர்க்கும் பொது என்ற சொல் பொறுக்காமல் (பொறாஅது – அளபெடை), இடம் சிறிது என்னும் ஊக்கம் துரப்ப – தன்னுடைய நாடு சின்னது என்ற எண்ணத்தால் உந்தப்பட்டு, ஒடுங்கா உள்ளத்து – ஊக்கமுடைய உள்ளத்துடன், ஓம்பா ஈகைக் கடந்து அடு தானைச் சேரலாதனை யாங்கனம் ஒத்தியோ – குறையாத ஈகையுடனும் பகைவரை வெல்லும் படையையுடைய சேரமான் செல்வக்கடுங்கோ வாழியாதனுக்கு நீ எவ்வாறு ஒப்பு ஆகுவாய் (ஒத்தியோ – ஒத்தி – முன்னிலை வினைமுற்று, ஓகாரம் வினா), வீங்கு செலல் மண்டிலம் – விரைந்து செல்லும் கதிரவனே, பொழுது என வரைதி – பகற்பொழுதை உனக்கென்று கூறுபடுத்துகின்றாய் (வரைதி – முன்னிலை வினைமுற்று), புறக்கொடுத்து இறத்தி – புறமுதுகிட்டு போகின்றாய் (இறத்தி – முன்னிலை வினைமுற்று), மாறி வருதி – மாறி மாறி வருகின்றாய் (வருதி – முன்னிலை வினைமுற்று), மலை மறைந்து ஒளித்தி – மலையின் பின் மறைந்து ஒளிகின்றாய் (ஒளித்தி – முன்னிலை வினைமுற்று), அகல் இரு விசும்பினானும் பகல் விளங்குதியால் பல் கதிர் விரித்தே – அகன்ற பெரிய ஆகாயத்தில் பகல் பொழுதில் பல கதிர்களை விரித்து ஒளியுடன் விளங்குகின்றாய் (விளங்குதியால் – ஆல் அசைநிலை, விரித்தே – ஏகாரம் அசைநிலை)

புறநானூறு 12, பாடியவர்நெட்டிமையார்பாடப்பட்டோன்பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதிதிணைபாடாண்துறைஇயன் மொழி

பாடல் பின்னணிபாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியை நெட்டிமையார் பழிப்பது போல் புகழ்ந்து இயற்றிய பாடல் இது.

பாணர் தாமரை மலையவும், புலவர்
பூ நுதல் யானையோடு புனை தேர் பண்ணவும்,
அறனோ மற்று இது விறல் மாண் குடுமி,
இன்னா ஆகப்  பிறர் மண் கொண்டு
இனிய செய்தி நின் ஆர்வலர் முகத்தே?

பொருளுரை:   முதுகுடுமிப் பெருவழுதியே! பாணர்க்குப் பொன்னால் செய்த தாமரை மாலை சூட்டியும், புலவர்க்கு அலங்கரிக்கப்பட்ட தேருடன் நெற்றியில் பொற்பட்டத்தால் அலங்கரிக்கப்பட்ட யானையையும் அளித்து, உன்னிடம் பரிசு பெறுவோர்க்கு நீ நல்லவை செய்து, மறுபுறம் உன் பகைவர்களுக்கு துன்பம் நேரும்படி அவர்களுடைய நாட்டை வெற்றி கொள்வது அறமான செயல்தானா?

குறிப்பு:  இது பழித்தது போல் புகழ்ந்தது.

சொற்பொருள்:   பாணர் – பாடல் இசைப்பவர்கள், தாமரை – பொற்றாமரை மலர்கள், மலையவும் – சூடவும், புலவர் – புலவர்கள், பூ –  பொற்பட்டம் (யானைகளின் நெற்றியில் சூடும் அணிகலன்), நுதல் – நெற்றி, யானையோடு – யானையோடு, புனை – அலங்கரிக்கப்பட்ட, தேர் – தேர், பண்ணவும் – அமைக்கவும், அறனோ – அறம் தானோ, மற்று – அசைநிலை, இது – இவ்வாறு செய்தல், விறல் – வெற்றி, மாண் – மாட்சி, பெருமை, குடுமி – பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி, இன்னா ஆக – துன்பம் ஆகுமாறு, பிறர் மண் கொண்டு – பிறர் நாட்டை வெற்றி கொண்டு, இனிய – இனியவற்றை, செய்தி – செய்வை (செய்தி – முன்னிலை வினைமுற்று), நின் – உன்னிடம், ஆர்வலர் – பரிசு பெறுவோர், முகத்தே – இடத்தில் (முகத்தே – ஏகாரம் அசைநிலை)

புறநானூறு 45, பாடியவர்கோவூர் கிழார்பாடப்பட்டோர்சோழன் நலங்கிள்ளியும் நெடுங்கிள்ளியும்திணைவஞ்சிதுறைதுணை வஞ்சி

பாடல் பின்னணி: உறவினர்களான சோழன் நலங்கிள்ளிக்கும் சோழன் நெடுங்கிள்ளிக்கும் இடையே போர் மூண்டது. நலங்கிள்ளி உறையூரை முற்றுகையிட்டான்.  நெடுங்கிள்ளி உள்ளே அடைபட்டு இருந்தான்.  சோழர் குலத்தில் தோன்றிய இருவரும் போரிடுவது ஏற்றதில்லை என்று கோவூர் கிழார் அவர்களிடம் எடுத்துரைக்கின்றார்.

பாண்டிய மன்னர்கள் வேப்ப மாலையை அணிந்தனர்.  சேர மன்னர்கள் பனை இலையினால் (மடலினால்) செய்த மாலையை அணிந்தனர்.  சோழ மன்னர்கள் ஆத்தி மலர் மாலையை அணிந்தனர்.

இரும்பனை வெண்தோடு மலைந்தோன் அல்லன்,
கருஞ்சினை வேம்பின் தெரியலோன் அல்லன்,
நின்ன கண்ணியும் ஆர் மிடைந்தன்றே, நின்னொடு
பொருவோன் கண்ணியும் ஆர் மிடைந்தன்றே,
ஒருவீர் தோற்பினும் தோற்ப நும் குடியே,  5
இருவீர் வேறல் இயற்கையும் அன்றே, அதனால்
குடிப்பொருள் அன்று நும் செய்தி, கொடித்தேர்
நும்மோர் அன்ன வேந்தர்க்கு
மெய்ம்மலி உவகை செய்யும் இவ் விகலே.

பொருளுரை:  பெரிய பனை மரத்தினது வெண்மை நிறம் கொண்ட குருத்து இலை மாலை அணிந்தவன் இல்லை (சேர மன்னனைப் போல்).  கரிய கிளைகளையுடைய வேம்பின் மாலை அணிந்தவன் இல்லை (பாண்டிய மன்னனைப் போல்).  உன்னுடைய மாலையும் ஆத்தி மலர்களால் நெருக்கமாகக் கட்டப்பட்டது.  உன்னுடன் போரிடுபவன் மாலையும் ஆத்தி மலர்களால் நெருக்கமாகக் கட்டப்பட்டது. இப்பகையினால் உண்டாகும் போரில், ஒருவர் தோற்றாலும் உங்கள் சோழர் குலம் தோற்றதாக ஆகும்.  போரில்,  இருவரும் வெற்றி பெறுவது என்பது இயலாதது.   உங்களது குலத்திற்குப் பொருந்தாதது  உங்களுடைய இந்தச் செய்கை.  அழகிய கொடியால் அலங்கரிக்கப்பட்ட தேர்களைக் கொண்ட உங்களைப் போன்ற பிற மன்னர்களுக்கு (சேர, பாண்டிய மன்னர்களுக்கு) உடல் பூரிக்கும்படி மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுக்கும் உங்களது இந்தப் பகைமை.

குறிப்பு:  நின்ன (3) – ஒளவை துரைசாமி உரை – நின கண்ணியுமென்பது நின்ன கண்ணியுமென விகாரமாயிற்று.

சொற்பொருள்:   இரும் பனை – பெரிய பனை மரம், கரிய பனைமரம், வெண்தோடு – வெள்ளை நிற இலை, மலைந்தோன் அல்லன் – அணிந்தவன் இல்லை, கருஞ்சினை – கரிய கிளைகளையுடைய, வேம்பின் – வேப்ப மரத்தின், தெரியலோன் அல்லன் – மாலை அணிந்தவன் இல்லை (தெரியல் – பூ மாலை), நின்ன கண்ணியும் –  உன்னுடைய மாலையும், ஆர் மிடைந்தன்றே – ஆத்தி மலர்களால் நெருக்கமாகக் கட்டப்பட்டது (மிடைந்தன்றே – ஏகாரம் அசைநிலை), நின்னொடு பொருவோன் – உன்னுடன் போரிடுபவன், கண்ணியும் – மாலையும், ஆர் மிடைந்தன்றே – ஆத்தி மலர்களால் நெருக்கமாக கட்டப்பட்டது (மிடைந்தன்றே – ஏகாரம் அசைநிலை), ஒருவீர் தோற்பினும் – உங்களில் ஒருவர் தோற்றாலும், தோற்ப – தோற்பது, நும் குடியே – உங்கள் குலம் தான் (சோழர் குலம்), இருவீர் – இருவர், வேறல் – வெல்லுதல், இயற்கையும் அன்றே – இயற்கையும் இல்லை (ஏகாரம் அசைநிலை), அதனால் – அதனால், குடிப் பொருள் – குடிக்கு ஏற்றது, அன்று – இல்லை, நும் செய்தி – உங்கள் செய்கை, கொடித்தேர் – கொடியுடைய தேர்களைக் கொண்ட, நும்மோர் அன்ன – உங்களைப் போன்ற, வேந்தர்க்கு – பிற மன்னர்களுக்கு (சேரர், பாண்டியர்), மெய் – உடம்பு, மலி உவகை – மிகுந்த மகிழ்ச்சி, செய்யும் – செய்யும், இவ் – இந்த, இகலே – பகைமை (ஏகாரம் அசைநிலை)

புறநானூறு 46, பாடியவர் – கோவூர் கிழார்பாடப்பட்டோன்சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்திணைவஞ்சிதுறைதுணை வஞ்சி

பாடல் பின்னணிசோழ மன்னன் கிள்ளிவளவன் தன் பகைவனான மலையமான் திருமுடிக்காரியின் குழந்தைகளை யானையின் காலின் கீழே இட்டுக் கொலை செய்ய முயன்றான். கோவூர்கிழார், கிள்ளிவளவனைத் தடுத்து, அவனது மனதை மாற்ற இயற்றிய பாடல் இது.

கடையெழு வள்ளல்களில் ஒருவன் குறுநில மன்னன் மலையமான்இந்தப் பாடலில் சோழர்கள் புறாவின் துன்பத்தை நீக்கிய சிபிச்சக்கரவர்த்தியின் மரபினர் என்று கோவூர் கிழார் கூறுகின்றார்.

நீயே புறவின் அல்லல் அன்றியும் பிறவும்
இடுக்கண் பலவும் விடுத்தோன் மருகனை,
இவரே புலன் உழுது உண்மார் புன்கண் அஞ்சித்
தமது பகுத்து உண்ணும் தண்ணிழல் வாழ்நர்,
களிறு கண்டு அழூஉம் அழாஅல் மறந்த  5
புன்தலைச் சிறாஅர் மன்று மருண்டு நோக்கி
விருந்திற் புன்கண் நோவுடையர்,
கேட்டனையாயின் நீ வேட்டது செய்ம்மே.

பொருளுரை:   நீ தான் புறாவின் துன்பம் மட்டுமல்லாமல் மற்ற துன்பங்கள் பலவற்றையும் நீக்கிய சோழ மரபின் வழித்தோன்றல்.  இச்சிறுவர்களின் மூதாதையர், கற்றவர்களது வறுமையைக் கண்டு அஞ்சி, தமது உணவைப் பங்கிட்டு உண்டு, அவர்களுக்குக் குளிர்ந்த நிழலாக விளங்கி வாழ்ந்தவர்கள்.

ஆனால் இங்கே, கொல்ல வரும் யானையைக் கண்டு அழுது, பின்பு அழுகையை மறந்து, பொலிவிழந்த தலையுடைய இச்சிறுவர்கள், மன்றத்தை மருண்டு நோக்கி வாழ்வில் முன்பு அறியாத புதிய துன்பத்தை அடைந்திருக்கின்றனர்.  நான் கூறிய அனைத்தையும் நீ கேட்டாய் என்றால், இனி நீ விரும்பியதைச் செய்.

சொற்பொருள்:   நீயே – நீ தான், புறவின் அல்லல் – புறாவின் துன்பம், அன்றியும் – மட்டும் அல்லாது, பிறவும் – பிறவும், இடுக்கண் பலவும் – துன்பம் பலவற்றையும், விடுத்தோன் – நீக்கியவன், மருகனை – வழித்தோன்றல் நீ (சோழ மரபின் வழித்தோன்றல்), இவரே – இவர்கள் தான், புலன் உழுது உண்மார் – அறிவால் உழுது உண்பவர்கள், புன்கண் – வறுமை, அஞ்சி – அச்சம் கொண்டு, தமது – தங்களது, பகுத்து உண்ணும் – பங்கிட்டு உண்ணும், தண் நிழல் – குளிர்ந்த நிழல், வாழ்நர் – வாழ்ந்தவர்கள் (இச்சிறுவர்களின் மூதாதையர்), களிறு – யானை, கண்டு – கண்டு, அழூஉம் – அழும் (அழூஉம் – அளபெடை), அழாஅல் – அழுகை மறந்த (அழாஅல் – அளபெடை), புன்தலை – பொலிவிழந்த தலை, குறைவாக முடியுடைய தலை, சிறாஅர் – சிறுவர்கள் (சிறாஅர் – அளபெடை), மன்று – மன்றம், மருண்டு – அச்சம் கொண்டு, நோக்கி – நோக்கி, விருந்திற் புன்கண் – புதியதான துன்பம், நோவுடையர் – துன்பத்தை உடையவர்கள், கேட்டனையாயின் – இதைக் கேட்டாய் என்றால், நீ வேட்டது – நீ விரும்பியதை, செய்ம்மே – செய்வாயாக (செய்ம்மே – ஈற்று மிசை உகரம் கெட்ட செய்யுமென் முற்றன்று, ஏவற் பொருட்டு வந்தது)

புறநானூறு 47, பாடியவர்: கோவூர் கிழார், பாடப்பட்டோன்: சோழன் நெடுங்கிள்ளி, திணை: வஞ்சி, துறை: துணை வஞ்சி

பாடல் பின்னணி இளந்தத்தன் என்ற புலவர் உறையூருக்குச் சென்றார். அவரை ஒற்றன் என்று எண்ணிய நெடுங்கிள்ளி அவரைக் கொல்ல நினைத்தான். அதைக் கண்ட கோவூர்கிழார், இளந்தத்தன் ஒற்றன் இல்லை என்று நெடுங்கிள்ளிக்கு எடுத்துக் கூறி புலவரைக் காப்பாற்றினார்.

வள்ளியோர்ப் படர்ந்து, புள்ளின் போகி,
நெடிய என்னாது சுரம் பல கடந்து,
வடியா நாவின் வல்லாங்குப் பாடிப்,
பெற்றது மகிழ்ந்தும், சுற்றம் அருத்தி,
ஓம்பாது உண்டு, கூம்பாது வீசி,  5
வரிசைக்கு வருந்தும் இப்பரிசில் வாழ்க்கை,
பிறர்க்குத் தீது அறிந்தன்றோ இன்றே, திறப்பட
நண்ணார் நாண, அண்ணாந்து ஏகி,
ஆங்கு இனிது ஒழுகின் அல்லது, ஓங்கு புகழ்
மண்ணாள் செல்வம் எய்திய  10
நும்மோர் அன்ன, செம்மலும் உடைத்தே.

பொருளுரை வள்ளன்மையுடையவர்களை எண்ணி, பழமரத்தை நோக்கிச் செல்லும் பறவைகளைப் போலப் போய், வழி நீண்டது என்று எண்ணாது, அரிய வழிகள் பலவற்றைக் கடந்து, தங்களுடைய திருந்தாத நாவினால் தம் திறமையின்படி பாடி, பெற்ற பரிசால் மகிழ்ந்து, சுற்றத்தார்க்கு உண்ணக் கொடுத்து, தானும் இருப்பதைப் பாதுகாக்காது உண்டு, மகிழ்ச்சியுடன் பிறருக்கு வழங்கி, தம்மை ஆதரிப்பவர்கள் தமக்குச் செய்யும் சிறப்பிற்காக வருந்தும், இந்தப் பரிசிலரின் வாழ்க்கையானது, பிறர்க்குத் தீமைச் செய்யாதது. கல்வியினால் தம்மோடு மாறுபட்டவர்களைத் தம் புலமையால் நாணச் செய்து, தலைநிமிர்ந்து நடந்து, அங்கு இனிதாக ஒழுகுதல் மட்டுமல்லாமல், உயர்ந்த புகழுடைய நிலத்தை ஆளும் செல்வமுடைய உன்னைப் போன்றவர்களைப் போன்று, அவர்கள் தலைமையுடையவர்கள்.

சொற்பொருள்:  வள்ளியோர்ப் படர்ந்து – வள்ளன்மையுடையவர்களை எண்ணி, புள்ளின் போகி – பழமரத்தை நோக்கிச் செல்லும் பறவைகளைப் போலப் போய் (புள்ளின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), நெடிய என்னாது – நீண்டது என்று எண்ணாது, சுரம் பல கடந்து – அரிய வழிகள் பலவற்றைக் கடந்து, வடியா நாவின் வல்லாங்குப் பாடி – திருந்தாத நாவினால் தன் திறமையின்படி பாடி, பெற்றது மகிழ்ந்தும் – பெற்ற பரிசால் மகிழ்ந்தும், சுற்றம் அருத்தி – சுற்றத்தார்க்கு உண்ணக் கொடுத்து, ஓம்பாது உண்டு – தானும் பாதுகாக்காது உண்டு, கூம்பாது வீசி – மகிழ்ச்சியுடன் வழங்கி, வரிசைக்கு வருந்தும் – தம்மை ஆதரிப்பார் தமக்குச் செய்யும் சிறப்பிற்காக வருந்தும், இப்பரிசில் வாழ்க்கை – இந்த பரிசிலரின் வாழ்க்கை, பிறர்க்குத் தீது அறிந்தன்றோ இன்றே – பிறர்க்குத் தீமை செய்ய மாட்டார்கள், திறப்பட நண்ணார் நாண – கல்வியினால் தம்மோடு மாறுபட்டவர்களைத் தம் புலமையால் நாண, அண்ணாந்து ஏகி – தலைநிமிர்ந்து நடந்து, ஆங்கு இனிது ஒழுகின் அல்லது – அங்கு இனிதாக ஒழுகுதல் அன்றி, ஓங்கு புகழ் – உயர்ந்த புகழ், மண்ணாள் – நிலத்தை ஆளும், செல்வம் எய்திய நும்மோர் அன்ன – செல்வம் அடைந்த உன்னைப் போன்றவர்களைப் போன்று, செம்மலும் உடைத்தே – தலைமையுடையவர்கள் (உடைத்தே – ஏகாரம் அசைநிலை)

புறநானூறு 56, பாடியவர்: மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார், பாடப்பட்டோன்: பாண்டியன் இலவந்திகைப்பள்ளித் துஞ்சிய நன்மாறன், திணை: பாடாண், துறை: பூவை நிலை
ஏற்று வலன் உயரிய எரி மருள் அவிர் சடை,
மாற்று அருங் கணிச்சி மணி மிடற்றோனும்,
கடல் வளர் புரி வளை புரையும் மேனி,
அடல் வெந்நாஞ்சில் பனைக்கொடியோனும்,
மண்ணுறு திருமணி புரையும் மேனி,  5
விண் உயர் புள் கொடி விறல் வெய்யோனும்,
மணி மயில் உயரிய மாறா வென்றிப்
பிணிமுக ஊர்தி ஒண் செய்யோனும், என
ஞாலங் காக்கும் கால முன்பின்,
தோலா நல் இசை நால்வர் உள்ளும்,  10
கூற்று ஒத்தீயே மாற்று அருஞ் சீற்றம்,
வலி ஒத்தீயே வாலியோனைப்,
புகழ் ஒத்தீயே இகழுநர் அடுநனை,
முருகு ஒத்தீயே முன்னியது முடித்தலின்,
ஆங்கு ஆங்கு அவரவர் ஒத்தலின் யாங்கும்  15
அரியவும் உளவோ நினக்கே அதனால்,
இரவலர்க்கு அருங்கலம் அருகாது ஈயா
யவனர் நன்கலம் தந்த தண் கமழ் தேறல்
பொன் செய் புனை கலத்து ஏந்தி நாளும்
ஒண்தொடி மகளிர் மடுப்ப, மகிழ் சிறந்து,  20
ஆங்கு இனிது ஒழுகுமதி ஓங்கு வாள் மாற
அங்கண் விசும்பின் ஆரிருள் அகற்றும்
வெங்கதிர்ச் செல்வன் போலவும், குடதிசைத்
தண் கதிர் மதியம் போலவும்
நின்று நிலைஇயர், உலகமோடு உடனே!  25

பொருளுரை காளை மாட்டினை வெற்றியாக உயர்த்திய அழல் போல் ஒளியுடைய சடையினையும் விலக்குதற்கு அரிய மழுவை உடைய நீலமணிபோலும் கழுத்தை உடைய சிவனும், கடலில் வளரும் புரியுடைய சங்கினை ஒத்த மேனியையுடைய கொலையை விரும்பும் கலப்பையையும் பனைக் கொடியையுமுடைய பலராமனும், கழுவிய அழகிய நீலமணிபோலும் மேனியையும் வான் அளவிற்கு ஓங்கிய கருடக்கொடியையுடைய வெற்றியை விரும்புவோனும் ஆகிய மாயோனும், நீலமணிபோலும் நிறத்தையுடைய மயிற்கொடியை உயர்த்திய, மாறாத வெற்றியையுடைய பிணிமுகம் என்ற ஊர்தியைக் கொண்ட முருகனும், என உலகத்தைக் காக்கும் முடிவுகாலத்தைச் செய்யும் வலிமையினையும் தோல்வியில்லாத நற்புகழினையுமுடைய இந்த நால்வர் உள்ளும், விலக்க முடியாத சினத்தால் கூற்றுவனை ஒத்தவை, வலிமையில் பலராமனை ஒத்தவை, புகழில் பகைவரைக் கொல்லும் மாயோனை ஒத்தவை, எண்ணியதை முடிப்பதில் முருகனை ஒத்தவை. அப்படி அப்படி அவரவரை ஒத்ததால் எங்கும் அரியவை உளதோ நுமக்கு? அதனால் பரிசில் வேண்டி வருவோர்க்கு பெரிதும் வழங்கி, யவனர் நல்ல குப்பியில் கொண்டு வந்த குளிர்ந்த நறுமணமான தேறலை பொன்னால் செய்த கலத்தில் ஏந்தி, நாள்தோறும் ஒளியுடைய வளையல்கள் அணிந்த பெண்கள் அதை உனக்கு ஊட்ட, மகிழ்ச்சி மிகுந்து இனிதாக இருப்பாயாக, உயர்ந்த வாளை உடைய மாறனே!  அங்கே வானின் மிக்க இருளை அகற்றும் வெம்மையான கதிர்களையுடைய கதிரவன் போலவும், மேற்கில் தோன்றும் குளிர்ந்த கதிர்களையுடைய நிலவுபோலும், இவ்வுலகுடன் நீ நின்று நிலைபெறுவாயாக

குறிப்பு:  பிணிமுக ஊர்தி (8) – ஒளவை துரைசாமி உரை – பிணிமுகம் யானை என்றும் சொல்லுப.  மதி – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம்.  சொல்லதிகாரம்.  இடையியல் 26).  ஈயா – ஈந்து என்பது பொருள். செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம்.  எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது.  யவனர் – அயோனியா என்ற கிரேக்க நாட்டின் பகுதியிலிருந்து வருபவர்களை இச்சொல் குறித்தாலும் இது பின்னால் வந்த ரோமானியர், துருக்கர், எகிப்தியர் ஆகியோரையும் குறித்திருக்கலாம் எனச் சில அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

சொற்பொருள்:  ஏற்று வலன் உயரிய – காளை மாட்டினை வெற்றியாக உயர்த்திய, எரி மருள் அவிர் சடை – அழல் போல் ஒளியுடைய சடை (மருள் – உவம உருபு), மாற்று அரும் கணிச்சி மணி மிடற்றோனும் – விலக்குதற்கு அரிய மழுவை உடைய நீலமணியை ஒத்த கழுத்தை உடையவனும் (சிவனும்), கடல் வளர் புரி வளை புரையும் மேனி – கடலில் வளரும் புரியுடைய சங்கினை ஒத்த மேனியையுடைய, அடல் வெந்நாஞ்சில்   பனைக்கொடியோனும் – கொலையை விரும்பும் கலப்பையையும் பனைக் கொடியையுமுடைய பலராமனும், மண்ணுறு திருமணி புரையும் மேனி – கழுவிய அழகிய நீலமணிபோலும் மேனியையும், விண் உயர் புள் கொடி விறல் வெய்யோனும் – வான் அளவிற்கு ஓங்கிய கருடக்கொடியையுடைய வெற்றியை விரும்புவோனும், மணி மயில் உயரிய – நீலமணிபோலும் நிறத்தையுடைய மயிற்கொடியை உயர்த்திய, மாறா வென்றி பிணிமுக ஊர்தி ஒண் செய்யோனும் – மாறாத வெற்றியையுடைய பிணிமுகம் என்ற ஊர்தியைக் கொண்ட முருகனும் (பிணிமுகம் – மயில், யானை), என – என, ஞாலம் காக்கும்  கால முன்பின் – உலகத்தைக் காக்கும் முடிவுகாலத்தைச் செய்யும் வலிமையினையும், தோலா நல் இசை நால்வர் உள்ளும் – தோல்வியில்லாத நற்புகழினையுமுடைய நால்வர் உள்ளும், கூற்று ஒத்தீயே மாற்று அரும் சீற்றம் – விலக்க முடியாத சினத்தால் கூற்றுவனை ஒத்தவை (ஒத்தீயே – ஏகாரம் அசைநிலை), வலி ஒத்தீயே வாலியோனை – வலிமையில் பலராமனை ஒத்தவை (ஒத்தீயே – ஏகாரம் அசைநிலை), புகழ் ஒத்தீயே இகழுநர் அடுநனை – புகழில் பகைவரைக் கொல்லும் மாயோனை ஒத்தவை (ஒத்தீயே – ஏகாரம் அசைநிலை), முருகு ஒத்தீயே முன்னியது முடித்தலின் – எண்ணியதை முடிப்பதில் முருகனை ஒத்தவை (ஒத்தீயே – ஏகாரம் அசைநிலை), ஆங்கு ஆங்கு அவரவர் ஒத்தலின் யாங்கும் அரியவும் உளவோ நினக்கே – அப்படி அப்படி அவரவரை ஒத்ததால் எங்கும் அரியவை உளதோ நுமக்கு, அதனால் இரவலர்க்கு அருங்கலம் அருகாது ஈயா – பரிசில் வேண்டி வருவோர்க்கு பெரிதும் வழங்கி, யவனர் நன்கலம் தந்த தண் கமழ் தேறல் பொன் செய் புனை கலத்து ஏந்தி – யவனர் நல்ல குப்பியில் கொண்டு வந்த குளிர்ந்த நறுமணமான தேறலை பொன்னால் செய்த கலத்தில் ஏந்தி, நாளும் ஒண்தொடி மகளிர் மடுப்ப மகிழ் சிறந்து ஆங்கு இனிது ஒழுகுமதி – நாள்தோறும் ஒளியுடைய வளையல்கள் அணிந்த பெண்கள் ஊட்ட மகிழ்ச்சி மிகுந்து இனிதாக இருப்பாயாக (மதி – முன்னிலையசை), ஓங்கு வாள் மாற – உயர்ந்த வாளை உடைய பாண்டியனே, அங்கண் விசும்பின் ஆரிருள் அகற்றும் வெங்கதிர்ச் செல்வன் போலவும் – அங்கே வானின் மிக்க இருளை அகற்றும் வெம்மையான கதிர்களையுடைய கதிரவன் போலவும், குடதிசைத் தண் கதிர் மதியம் போலவும் – மேற்கில் தோன்றும் குளிர்ந்த கதிர்களையுடைய நிலவுபோலும், நின்று நிலைஇயர் உலகமோடு உடனே – இவ்வுலகுடன் நீ நின்று நிலைபெறுவாயாக  (நிலைஇயர் – அளபெடை, உடனே – ஏகாரம் அசைநிலை)

புறநானூறு 74, பாடியவர் –  சேரமான் கணைக்கால் இரும்பொறைதிணைபொதுவியல்துறைமுதுமொழிக் காஞ்சி

பாடல் பின்னணி: சேரமான் கணைக்கால் இரும்பொறையும் சோழ மன்னன் செங்கணானும் பெரும்படையுடன் போரிட்டனர்.  போரின் முடிவில் சேரமான் தோற்று, கைது செய்யப்பட்டுக் குடவாயிற்கோட்டச் சிறையில் அடைக்கப்பட்டான்.  சிறையில் ஒருநாள் சேரமான் தாகமுற்று, காவலர்களை நீர் கொடுக்குமாறு கேட்டான். சேரமானை அவமதிக்கும்படி சிறைக்காவலன் சில நேரம் கழித்து நீர் கொண்டு வந்து கொடுத்தான்.   அவமானம் அடைந்த மன்னன் வருந்திப் பாடிய பாடல் இது.

குழவி இறப்பினும், ஊன் தடி பிறப்பினும்,
ஆள் அன்று என்று வாளின் தப்பார்,
தொடர்ப்படு ஞமலியின் இடர்ப்படுத்து  இரீஇய
கேளல் கேளிர் வேளாண் சிறுபதம்
மதுகை இன்றி வயிற்றுத் தீத் தணியத்  5
தாம் இரந்து உண்ணும் அளவை,
ஈன்மரோ இவ் உலகத்தானே?

பொருளுரைகுழந்தை பிறந்து இறந்தாலும், உறுப்பில்லாத சதைப் பிண்டமாகப் பிறந்தாலும், அதையும் ஒரு ஆளாகக் கருதி, வாளால் வெட்டிக் காயம் செய்து புதைப்பார்கள்.  அந்தக் குடியில் பிறந்த நான் பகைவரின் வாள் பட்டு இறக்காமல், சங்கிலியால் கட்டப்பட்ட நாயைப் போல் துன்பத்தில் ஆழ்த்திய நட்பு இல்லாத பகைவரின் உதவியால் கிடைக்கும் தண்ணீரை, ஒதுக்கும் மன வலிமையின்றி, வயிற்றுப் பசியைத் தணிக்க, கையேந்தி இரந்து  உண்ணும்  நிலையில் இருக்கின்றேன்.    இப்படி வாழ்வதற்காகவா இவ்வுலகில் என்னை என் பெற்றோர் பெற்றனர்?

குறிப்பு: ஒளவை துரைசாமி உரை – அரசர்க்கு மானத்தின்மிக்க அறனும் பொருளும் இன்பமுமில்லை என்று கூறினமையின் இது முதுமொழிக்காஞ்சி ஆயிற்று.  புறநானூறு 93 – பீடு இல் மன்னர் நோய்ப்பால் விளிந்த யாக்கை தழீஇக் காதல் மறந்து அவர் தீது மருங்கு அறுமார் அறம் புரி கொள்கை நான்மறை முதல்வர் திறம் புரி பசும் புல் பரப்பினர் கிடப்பி மறம் கந்து ஆக நல் அமர் வீழ்ந்த நீள் கழல் மறவர் செல்வுழிச் செல்க என வாள் போழ்ந்து அடக்கலும் உய்ந்தனர்.

சொற்பொருள்:  குழவி இறப்பினும் – குழந்தை இறந்தாலும், ஊன் – தசை, தடி – தசை, பிறப்பினும் – பிறந்தாலும், ஆள் அன்று  –  ஒரு ஆள் இல்லை, என்று – என்று கருதி, வாளின் – வாளிலிருந்து, தப்பார் – தப்ப மாட்டார்கள், தொடர்ப்படு – சங்கிலியால் கட்டப்பட்டு,  சங்கிலியால் பிணிக்கப்பட்டு, ஞமலியின் – நாயைப் போல (ஞமலியின் – இன் ஒப்புப்பொருளில் வந்தது, ஐந்தாம் வேற்றுமை உருபு), இடர் – துன்பம், படுத்து – செய்து, இரீஇய – இருத்திய (இரீஇய – அளபெடை), ஆழ்த்திய, கேள் அல்  – நட்பு இல்லாத, கேளிர் – சுற்றி உள்ளவர்கள், வேளாண் – உதவியால் வரும், சிறு பதம் – சிறு உணவானத் தண்ணீர், மதுகை – வலிமை,  இன்றி – இல்லாமல், வயிற்றுத் தீ – வயிற்றின் தீ எனும் பசி, தணிய – தணிய, தாம் – தான், இரந்து – கையேந்தி வேண்டி, உண்ணும் – உணவு உண்ணும், அளவை – அளவு உடையவரை, ஈன்மரோ – பெற்றார்களா, இவ் உலகத்தானே – இந்த உலகத்தில் (உலகத்தானே – ஏகாரம் அசைநிலை)

புறநானூறு 75, பாடியவன்: சோழன் நலங்கிள்ளி, திணை: பொதுவியல், துறை: முதுமொழிக் காஞ்சி
மூத்தோர் மூத்தோர்க் கூற்றம் உய்த்தெனப்
பால் தர வந்த பழ விறல் தாயம்
எய்தினம் ஆயின், எய்தினம் சிறப்பு என
குடி புரவு இரக்கும் கூரில் ஆண்மைச்
சிறியோன் பெறின், அது சிறந்தன்று மன்னே,  5
மண்டு அமர்ப் பரிக்கும் மதனுடை நோன் தாள்
விழுமியோன் பெறுகுவன் ஆயின், தாழ் நீர்
அறு கய மருங்கின் சிறு கோல் வெண்கிடை
என்றூழ் வாடு வறல் போல, நன்றும்
நொய்தால் அம்ம தானே, மையற்று  10
விசும்புற ஓங்கிய வெண்குடை
முரசு கெழு வேந்தர் அரசு கெழு திருவே.

பொருளுரை:   தன் குடியில் உள்ள மூத்தவர்களைக் கூற்றுவன் கொண்டு சென்றதால் (அவர்கள் இறந்ததால்), விதி கொடுக்கத் தன்னிடம் முறைப்படி வந்த, பழைய வெற்றிகளால் உண்டான தன் குடியின் அரச உரிமையை அடைந்து ‘இப்பெரும் சிறப்பை நான் பெற்றேன்’ என்று எண்ணி குடிமக்களிடம் மிகுதியாக வரி கேட்கும் ஆண்மை மிகுதியாக இல்லாத சிறியோனாக ஒருவன் இருந்தால், அது சிறப்பானது இல்லை.  அந்த அரச உரிமை அவனுக்குப் பாரமுடையதாக இருக்கும்.

போரில் துணிந்து போரிடும் மன எழுச்சியையும் வலுவான முயற்சியையும் உடைய ஓர் உயர்ந்தவன், அரச உரிமையைப் பெறுவான் ஆயின், ஆட்சி செய்வது, குறைந்த நீரையுடைய வற்றிய குளத்திடத்து மிதக்கும் சிறிய தண்டாகிய வெளிய (எடை இல்லாத) நெட்டியினது கோடைக்காலத்தில் உலர்ந்த சுள்ளியைப் போல் மெல்லிதாக, பாரம் இல்லாமல் இருக்கும்.  குற்றம் இல்லாத, வானைத் தொடும் அளவிற்கு உயர்ந்த வெண்குடையையும் முரசினையும் உடைய அரசரது ஆட்சியைப் பொருந்திய செல்வம் அதுவே.

குறிப்பு:  விழுமம் – விழுமம் சீர்மையும் சிறப்பும் இடும்பையும் (தொல்காப்பியம் உரியியல் 57).   சிறு கோல் வெண்கிடை என்றூழ் வாடு வறல் போல.  சிறு கோல் வெண்கிடை என்றூழ் வாடு வறல் போல (8-9) –  ஒளவை துரைசாமி உரை, உ. வே. சாமிநாதையர் உரை –  சிறிய தண்டாகிய வெளிய கிடேச்சியினது கோடைக்கண் உலர்ந்த சுள்ளியைப் போல.  மையற்று விசும்புற ஓங்கிய வெண்குடை (10-11) – ஒளவை துரைசாமி உரை, உ. வே. சாமிநாதையர் உரை – குற்றமற்று விண்ணின்கண் பொருந்த உயர்ந்த வெண்குடை.

சொற்பொருள்:  மூத்தோர் மூத்தோர்க் கூற்றம் உய்த்தென – தன்னுடைய குடியில் உள்ள மூத்தவர்களைக் கூற்றுவன் கொண்டு சென்றதால் (அவர்கள் சாவை அடைந்ததால்), பால் தர – விதி கொடுக்க, வந்த – தம்மிடம் வந்த, பழ விறல் – பழைய வெற்றி, தாயம் எய்தினம் ஆயின் –  அரச உரிமையை அடைந்தோம் ஆயின், எய்தினம் சிறப்பு என – இத் தலைமையை நாம் பெற்றோம் என்று, குடி புரவு இரக்கும் – குடிமக்களிடம் வேண்டி கேட்கும், கூரில் ஆண்மைச் சிறியோன் பெறின் – மிகுதியில்லாத ஆண்மையுடைய சிறியோன் பெற்றால், அது சிறந்தன்று – அது சிறந்ததன்று (சிறந்ததன்று, தகரம் செய்யுள் விகாரத்தாற் கெட்டுச் சிறந்தன்று என நின்றது), மன்னே – மன் ஆக்கத்தின்கண் வந்த இடைச்சொல், ஏ அசைநிலை, மண்டு அமர்ப் பரிக்கும் – அடுத்து போரிடும் போரைப் பொறுக்கும், மதனுடை நோன் தாள் – மன எழுச்சியை உடைய வலுவான முயற்சி, விழுமியோன் பெறுகுவன் ஆயின் – உயர்ந்தவன் பெறுவான் ஆயின், தாழ் நீர் அறு கய மருங்கின் – குறைந்த நீரையுடைய வற்றிய குளத்திடத்து, சிறு கோல் வெண்கிடை – சிறிய தண்டாகிய நெட்டி, சிறிய தண்டாகிய சிறிய தண்டாகிய கிடேச்சி (மிதக்கும் தன்மையுடையது), என்றூழ் – கோடைக்காலம், கதிரவன், வெயில், வாடு வறல் போல – உலர்ந்த சுள்ளியைப் போல, நன்றும் நொய்தால் (நொய்து +ஆல், ஆல் அசைநிலை) – மிகவும் வெளிய, மிகவும் மெல்லியது, பாரம் இல்லாதது, அம்ம – அசைநிலை, தானே – தான், ஏ அசைநிலைகள், மையற்று – குற்றம் இல்லாத, விசும்பு உற ஓங்கிய – வானைத் தொடும் அளவிற்கு உயர்ந்த, வெண்குடை – வெண்குடை, முரசு கெழு வேந்தர் – முரசினையுடைய அரசர், அரசு கெழு திருவே – அரசாட்சி உடைய செல்வம்

புறநானூறு 83, பாடியவர்: பெருங்கோழி நாய்கண் மகள் நக்கண்ணையார், பாடப்பட்டோன்: சோழன் போரவைக்கோப் பெருநற்கிள்ளி,
திணை: கைக்கிளை, துறை: பழிச்சுதல்

பாடல் பின்னணி:   சோழ மன்னன் மீது காதல் கொள்கின்றார் ஓர் இளம் பெண் புலவர். தன் தாய்க்குத் தான் அஞ்சுவதைப் பற்றியும், தன் காதல் பெருமையை அறியாத ஊரைப் பற்றியும் எண்ணி, இந்தப் பாடலை எழுதியுள்ளார்.

அடி புனை தொடு கழல் மை அணல் காளைக்கு என்
தொடி கழித்திடுதல் யான் யாய் அஞ்சுவலே,
அடு தோள் முயங்கல் அவை நாணுவலே,
என் போல் பெரு விதுப்புறுக, என்றும்
ஒரு பால் படாஅது ஆகி  5
இரு பாற்பட்ட இம் மையல் ஊரே.

பொருளுரை வீரக்கழல் அணிந்த கால்களையும் கருமை நிறத் தாடியையுமுடைய இளைஞன் மேல் நான் கொண்ட காதலால், என் வளையல்கள் என் கையிலிருந்து கழலுகின்றன.  என்னுடைய காதல் என் தாய்க்குத் தெரிந்து விடுமோ என்று நான் அஞ்சுகிறேன்.  என் தலைவனின் பகைவர்களைக் கொல்லும் வலிய தோள்களைத் தழுவ விரும்புகின்றேன்.  ஆனால் அவையில் பலரும் இருப்பதால் எனக்கு நாணமாக உள்ளது.  என்னைப் போன்று பெரியதாக நடுங்கட்டும், ஒரு பக்கமும் சாராது, இரு பக்கமுமாக உள்ள இந்த மயங்கும் ஊர்.

குறிப்புஅவை நாணுவலே (3) – ஒளவை துரைசாமி உரை – சான்றோர் கூடிய அவையினர் ஒருத்தியை ஒருவனுக்குத் திருமணத்தால் கூட்டி வைப்பர் ஆதலின், அவர் தாம் விரும்பியவாறு தாமே சென்று கூடற்கு அவ்வயையினர் இகழ்வர் என்பதுபற்றி ‘அவை நாணுவர்’ என்றார்.  இரு பாற்பட்ட இம் மையல் ஊரே (6) – ஒளவை துரைசாமி உரை – யாயும் அவையுமாகிய இரு கூற்றிற் பட்ட இம் மயக்கத்தையுடைய ஊர்.   

சொற்பொருள்:   அடி புனை தொடு கழல் – வீரக்கழல் அணிந்த கால்கள், மை அணல் காளைக்கு – கருநிறத் தாடியையுடைய இளைஞன் மேல் கொண்ட காதலால், என் தொடி கழித்திடுதல் – என்னுடைய வளையல்கள் என் கையிலிருந்து கழலுதலால் (நெகிழ்வதால்), யான் யாய் அஞ்சுவலே – என் தாய்க்கு அஞ்சுகிறேன் (அஞ்சுவல் – தன்மையொருமை வினைமுற்று, ஏகாரம் அசைநிலை), அடு தோள் முயங்கல் – அவனுடைய பகைவர்களைக் கொல்லும் வலிய தோள்களைத் தழுவுதல், அவை நாணுவலே – ஆனால் அவையின் முன் அவனைத் தழுவதற்கு நாணுகின்றேன், என் போல் பெரு விதுப்புறுக – என்னைப் போன்று பெரியதாக நடுங்கட்டும், என்றும் ஒரு பால் படாஅது ஆகி – ஒரு பக்கமும் சாராது (படாஅது – அளபெடை), இரு பாற்பட்ட – இரு பக்கமாக உள்ள, இம் மையல் ஊரே – இந்த புரியாமல் மயங்கும் ஊர் (ஊரே – ஏகாரம் அசைநிலை)

புறநானூறு 84, பாடியவர்: பெருங்கோழி நாய்கன் மகள் நக்கண்ணையார், பாடப்பட்டோன்: சோழன் போரவைக்கோப் பெருநற்கிள்ளி, திணை: கைக்கிளை, துறை: பழிச்சுதல்
என் ஐ புற்கை உண்டும் பெருந்தோளன்னே;
யாமே புறஞ்சிறை இருந்தும் பொன் அன்னம்மே;
போர் எதிர்ந்து என் ஐ போர்க்களம் புகினே
கல்லென் பேரூர் விழவுடை ஆங்கண்,
ஏமுற்றுக் கழிந்த மள்ளர்க்கு  5
உமணர் வெரூஉம் துறை அன்னன்னே.

பொருளுரை என்னுடைய தலைவன் கஞ்சியை உண்டாலும், பெரிய தோளினையுடையவன்.  நானே, அவன் இருக்கும் இடத்தின் சுவரின் புறப்பகுதியில் இருந்தும், பொன்னைப்போன்ற பசலை உடையவளாக உள்ளேன்.  போரை ஏற்று, என் தலைவன் போர்க்களத்தில் புகுந்தால், பெரும் ஆரவாரத்தையுடைய விழாக்கள் கொண்ட ஊரிடத்தில், செருக்குற்ற (தங்கள் மறம் பேசி மகிழ்ந்த) வீரர்களுக்கு, அவன் உப்பு வணிகர்கள் அஞ்சும் ஏற்றத் தாழ்வு உடைய துறையைப் போன்றவன்.

குறிப்பு என்னை, என் – அன்னை என்னை என்றலும் உளவே தொல் நெறி முறைமை சொல்லினும் எழுத்தினும் தோன்றா மரபின என்மனார் புலவர் (தொல்காப்பியம், பொருளியல் 50).

சொற்பொருள்:   என் ஐ புற்கை உண்டும் – என்னுடைய தலைவன் கஞ்சியை உண்டாலும், பெருந்தோளன்னே – பெரிய தோளினையுடையவன் (பெருந்தோளன்னே – ஏகாரம் அசைநிலை), யாமே – நானே, புறஞ்சிறை இருந்தும் – சுவரின் புறப்பகுதியில் இருந்தும், பொன் அன்னம்மே – பசலை உடையவளாக உள்ளேன் (அன்னம்மே – தன்மைப் பன்மை, செய்யுளோசை நோக்கி மகர ஒற்று விரிந்தது), போர் எதிர்ந்து என் ஐ போர்க்களம் புகினே – போரை ஏற்று என் தலைவன் போர்க்களத்தில் புகுந்தால் (புகினே – ஏகாரம் அசைநிலை), கல்லென் பேரூர் விழவுடை ஆங்கண் – பெரும் ஆரவாரத்தையுடைய விழாக்கள் கொண்ட ஊரிடத்தில் (கல்லென் – ஒலிக்குறிப்பு), ஏமுற்றுக் கழிந்த மள்ளர்க்கு – செருக்குற்ற (தங்கள் மறம் பேசி மகிழ்ந்த) வீரர்களுக்கு, உமணர் வெரூஉம் துறை அன்னன்னே – உப்பு வணிகர்கள் அஞ்சும் ஏற்றத் தாழ்வு உடைய துறையைப் போன்றவன் (வெரூஉம் – அளபெடை, அன்னன்னே – ஏகாரம் அசைநிலை)

புறநானூறு 85, பாடியவர்: பெருங்கோழி நாய்கன் மகள் நக்கண்ணையார், பாடப்பட்டோன்: சோழன் போரவைக்கோப் பெருநற்கிள்ளி, திணை: கைக்கிளை, துறை: பழிச்சுதல்

பாடல் பின்னணி:   சோழ மன்னன் ஆமூர் மல்லனுடன் போர் புரிவதை நக்கண்ணையார் கண்டார்.  அவன் வெற்றி அடைந்ததைக் கண்டார். மகிழ்ந்து இவ்வாறு அவர் கூறுகின்றார்.

என் ஐக்கு ஊர் இஃது அன்மையானும்,
என் ஐக்கு நாடு இஃது அன்மையானும்,
ஆடு ஆடு என்ப ஒரு சாரோரே,
ஆடன்று என்ப ஒரு சாரோரே,
நல்ல பல்லோர் இரு நன் மொழியே,  5
அம் சிலம்பு ஒலிப்ப ஓடி எம் இல்
முழா அரைப் போந்தை பொருந்தி நின்று,
யான் கண்டனன் அவன் ஆடாகுதலே.

பொருளுரை  என்னுடைய தலைவனுக்கு இது ஊர் இல்லையாயினும், என் தலைவனுக்கு இது நாடு இல்லையாயினும், அவன் வெற்றியடைவான் எனக் கூறுவார்கள் ஒரு சிலர்.  அவன் வெற்றியடைய மாட்டான் என்பார்கள் ஒரு சிலர்.  பலர் கூறும் சொற்களும் நல்லவையே ஆகும்.  அழகிய சிலம்புகள் ஒலிக்க, நான் ஓடி, எங்கள் மனையின்கண் உள்ள, முழவைப்போன்ற அடியையுடைய பனை மரத்தில் பொருந்தி நின்று, அவன் வெற்றியடையதலைக் கண்டேன்.

குறிப்பு நல்ல (5) – உ. வே. சாமிநாதையர் உரை – இகழ்ச்சிக்குறிப்பு.  என்னை, என் – அன்னை என்னை என்றலும் உளவே தொல் நெறி முறைமை சொல்லினும் எழுத்தினும் தோன்றா மரபின என்மனார் புலவர் (தொல்காப்பியம், பொருளியல் 50).

சொற்பொருள்:  என் ஐக்கு ஊர் இஃது அன்மையானும் – என்னுடைய தலைவனுக்கு இது ஊர் இல்லையாயினும், என் ஐக்கு நாடு இஃது அன்மையானும் – என் தலைவனுக்கு இது நாடு இல்லையாயினும், ஆடு ஆடு என்ப ஒரு சாரோரே – அவன் வெற்றியடைவான் எனக் கூறுவார்கள் ஒரு சிலர், ஆடன்று என்ப ஒரு சாரோரே – அவன் வெற்றியடைய மாட்டான் என்பார்கள் ஒரு சிலர் (சாரோரே – ஏகாரம் அசைநிலை), நல்ல பல்லோர் இரு நன் மொழியே – பலர் கூறும் சொற்களும் நல்லவையே ஆகும் (மொழியே – ஏகாரம் அசைநிலை), அம் சிலம்பு ஒலிப்ப ஓடி – அழகிய சிலம்புகள் ஒலிக்க நான் ஓடி, எம் இல் முழா அரைப் போந்தை பொருந்தி நின்று – எங்கள் மனையின்கண் உள்ள, முழவைப்போன்ற அடியையுடைய பனை மரத்தில் பொருந்தி நின்று, யான் கண்டனன் – நான் கண்டேன், அவன் ஆடாகுதலே – அவன் வெற்றியடையதலை (ஆடாகுதலே – ஏகாரம் அசைநிலை)

புறநானூறு 86, பாடியவர்காவற்பெண்டுதிணைவாகைதுறை –  ஏறாண் முல்லை

பாடல் பின்னணி:  பெண் புலவர் காவற்பெண்டின் வீட்டிற்கு வந்த ஒருவர், “உங்கள் மகன் எங்கு உள்ளான்?” என்று அவரிடம் கேட்க, அதற்கு அந்த மறத்தாயின் பதிலாக அமைந்த பாடல் இது.

சிற்றில் நற்றூண் பற்றி, நின் மகன்
யாண்டு உளனோ என வினவுதி, என் மகன்
யாண்டு உளன் ஆயினும் அறியேன், ஓரும்
புலி சேர்ந்து போகிய கல் அளை போல
ஈன்ற வயிறோ இதுவே  5
தோன்றுவன் மாதோ போர்க் களத்தானே.

பொருளுரை:   என் சிறிய இல்லத்தில் உள்ள நல்ல தூணைப் பற்றிக் கொண்டு “உன் மகன் எங்கு உள்ளான்?” என்று நீ கேட்கிறாய்.  என் மகன் எங்கு இருக்கிறான் என்பது எனக்குத் தெரியாது.  அவனைப் பெற்ற என் வயிறு புலி இருந்து விட்டுப் போன கல் குகையைப் போன்றது .  அத்தகைய வீரம் பொருந்திய அவன் போர்க்களத்தில் தோன்றுவான்.  அங்கு அவனைக் காணலாம்!

சொற்பொருள்:   சிற்றில் –  சிறிய இல்லம், நற்றூண் –  நல்ல தூண், பற்றி – பற்றிக் கொண்டு, நின் மகன் – உன் மகன், யாண்டு உளனோ – எங்கு உள்ளான், என – என்று, வினவுதி – நீ வினவுகிறாய் (வினவுதி – முன்னிலை வினைமுற்று), என் மகன் – என் மகன், யாண்டு உளன் ஆயினும் – எங்கு உள்ளான் என்று, அறியேன் – நான் அறியவில்லை, ஓரும் – அசைச்சொல், புலி – புலி, சேர்ந்து – கிடந்து, போகிய – போன, கல் அளை – கல் குகை, போல – போல, ஈன்ற வயிறோ – பெற்ற வயிறு, இதுவே – இது தான், தோன்றுவன் – தோன்றுவான்,  மாதோ – அசைச்சொல், போர்க் களத்தானே – போர்க்களத்தில் (போர்க்களத்தானே – ஏகாரம் அசைநிலை)

புறநானூறு 87, பாடியவர்ஔவையார்பாடப்பட்டோன்அதியமான் நெடுமான் அஞ்சிதிணைதும்பைதுறைதானை மறம்

பாடல் பின்னணிஅதியமானின் எதிரிகள் அவனோடு போர் செய்யத் திட்டமிட்டனர்.  அதை அறிந்த ஔவையார் அவர்களிடம் சென்று அதியமானின் வலிமையைப் புகழ்ந்து, போர் செய்வதைத் தவிருங்கள் என்று அறிவுரை கூறுவதை நாம் இப்பாடலில் காணலாம்.

களம் புகல் ஓம்புமின் தெவ்விர், போர் எதிர்ந்து
எம்முளும் உளன் ஒரு பொருநன், வைகல்
எண்தேர் செய்யும் தச்சன்
திங்கள் வலித்த கால் அன்னோனே.

பொருளுரை பகைவர்களே!   போர்க்களத்தில் புகுவதைத் தவிருங்கள்.  எதிர்த்துப் போரிடும் வீரன் ஒருவன் எங்களிடத்தும் இருக்கின்றான்.   ஒரே நாளில் எட்டு வலிமையான தேர்களைச் செய்யும் திறனுடைய தச்சன் ஒருவன், ஒரு மாதம் கருத்துடன் உழைத்துச் செய்த தேர்ச்சக்கரம் போன்றவன் அவன்.

சொற்பொருள்:   களம் – போர்க்களம், புகல் – புகுதல், ஓம்புமின் – பாதுகாத்துக் கொள்ளுங்கள் (மின் – முன்னிலைப் பன்மை வினைமுற்று விகுதி), தெவ்விர் – பகைவர்களே,  போர் – போர் செய்ய, எதிர்ந்து – எதிர்த்து, எம்முளும் –  எங்கள் உள்ளும், உளன் – உள்ளான், ஒரு பொருநன் – ஒரு போர் வீரன், வைகல் – நாள், எண் தேர் – எட்டுத் தேர்கள், செய்யும் – செய்யும் திறன் கொண்ட, தச்சன் – மர வேலைப்பாடு செய்பவன், திங்கள் – மாதம், வலித்த – கருத்துடன் செய்த, கால் –  தேர்ச் சக்கரம், அன்னோனே – போன்றவன் (ஏகாரம் அசைநிலை)

புறநானூறு 91, பாடியவர்: ஔவையார், பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி, திணை: பாடாண், துறை: வாழ்த்தியல்
வலம்படு வாய்வாள் ஏந்தி ஒன்னார்

பாடல் பின்னணி தன்னுடைய நாட்டில் ஒருமுறை அதியமான் உயர்ந்த மலைப்பிளவு ஒன்றில் உள்ள நெல்லி மரத்தின் இனிய கனி ஒன்றைப் பறித்துக்கொண்டு வந்தான்.  அதை உண்பவர்கள் நீண்ட நாட்கள் வாழ்வார்கள் என அறிந்தான்.  தான் அதை உண்ணாது, ஒளவையாருக்கு அதைக் கொடுத்தான்.  அவனைப் புகழ்ந்து ஒளவைப் பெருமாட்டி இயற்றிய பாடல் இது.

வலம்படு வாய்வாள் ஏந்தி ஒன்னார்
களம் படக் கடந்த கழல் தொடி தடக்கை,
ஆர்கலி நறவின் அதியர் கோமான்!
போர் அடு திருவின் பொலந்தார் அஞ்சி!
பால் புரை பிறை நுதல் பொலிந்த சென்னி  5
நீலமணி மிடற்று ஒருவன் போல
மன்னுக பெரும! நீயே தொன் நிலைப்
பெருமலை விடர் அகத்து அரு மிசை கொண்ட
சிறியிலை நெல்லித் தீங்கனி குறியாது,
ஆதல் நின் அகத்து அடக்கிச்  10
சாதல் நீங்க எமக்கு ஈத்தனையே.

பொருளுரை:   வெற்றி மிகுந்த குறி தவறாத வாளை எடுத்துப் பகைவர்களைப் போரில் தோற்கும்படி வென்ற, கழல விடப்பட்ட வீர வளையல்களை அணிந்த பெரிய கைகளையும், ஆரவாரத்தைச் செய்யும் கள்ளையுமுடைய அதியர் தலைவனே!
போரில் பகைவரைக் கொல்லும் மறச் செல்வத்தை உடையவனும், பொன்னால் செய்யப்பட்ட மாலையையும் அணிந்தவனுமான நெடுமான் அஞ்சியே!
பால் போன்ற பிறை நிலா நெற்றியில் பொலியும் தலையையும், நீலமணியைப் போன்ற கறையுள்ள கழுத்தையுடைய சிவனைப் போல நீ நிலைபெறுவாயாகப் பெருமானே!
பழைய நிலைமையுடைய பெரிய மலையின் பிளவில் உள்ள, ஏறுவதற்கு அரிய உச்சியில் உள்ள, சிறிய இலையையுடைய நெல்லி மரத்தின் இனிய கனியைப் பெறுவதற்கு அரிது என்று கருதாது, அதனால் வரும் பயனை அறிந்தும் அதை என்னிடம் கூறாது உனக்குள்ளேயே வைத்து, சாதல் நீங்க எனக்கு அதை அளித்தாயே!

சொற்பொருள்:  வலம்படு வாய்வாள் ஏந்தி – வெற்றியுண்டான குறி தவறாத வாளை எடுத்து, ஒன்னார் களம் படக் கடந்த – பகைவர்கள் போரில் தோற்கும்படி வென்ற, கழல் தொடி தடக்கை – கழல விடப்பட்ட வீர வளை அணிந்த பெரிய கை, ஆர்கலி நறவின் அதியர் கோமான் – ஆரவாரத்தை செய்யும் கள்ளையுடைய அதியர் தலைவனே, போர் அடு திருவின் – போரில் கொல்லும் மறச் செல்வத்தையும், பொலந்தார் அஞ்சி – பொன்னால் செய்யப்பட்ட மாலையை அணிந்த அஞ்சியே, பால் புரை பிறை நுதல் பொலிந்த சென்னி – பால் போல் பிறை நெற்றியில் பொலியும் தலை (புரை – உவம உருபு), நீலமணி மிடற்று ஒருவன் போல – நீலமணி போன்ற கறையுள்ள கழுத்தையுடைய சிவன் போல, மன்னுக பெரும நீயே – நிலைபெறுவாயாக பெருமானே நீ, தொன் நிலைப் பெருமலை விடர் அகத்து – பழைய நிலைமையுடைய பெரிய மலைப் பிளவில் உள்ள, அரு மிசை கொண்ட – அரிய உச்சியில் உள்ள, சிறியிலை நெல்லித் தீங்கனி – சிறிய இலையையுடைய நெல்லியின் இனிய கனி (சிறியிலை – சிறிய இலை அல்லது சிற்றிலை என்பதன் திரிபு), குறியாது ஆதல் – பெறுவதற்கு அரிது என்று கருதாது, நின் அகத்து அடக்கி – உனக்குள்ளேயே அந்த உண்மையை வைத்து, சாதல் நீங்க எமக்கு ஈத்தனையே – சாதல் நீங்க எனக்கு அளித்தாயே (ஈத்தனையே – ஏகாரம் அசைநிலை)

புறநானூறு 92, பாடியவர் –  ஔவையார்பாடப்பட்டோன்அதியமான் நெடுமான் அஞ்சிதிணைபாடாண்துறைஇயன் மொழி

பாடல் பின்னணி:   நீண்ட காலம் உயிர்வாழச் செய்யும் அரிய நெல்லிக் கனியைப் பெற்ற அதியமான், அதை ஒளவைக்கு வழங்க, அப்பண்பைக் கண்டு வியந்த ஒளவையார் அதியமானைப் புகழ்ந்து இயற்றிய பாடல் இது.

யாழொடும் கொள்ளா, பொழுதொடும் புணரா,
பொருள் அறிவாரா, ஆயினும் தந்தையர்க்கு
அருள் வந்தனவால் புதல்வர் தம் மழலை,
என் வாய்ச் சொல்லும் அன்ன, ஒன்னார்
கடி மதில் அரண் பல கடந்து 5
நெடுமான் அஞ்சி நீ அருளல்மாறே.

பொருளுரை:  குழந்தைகளின் மழலைமொழி யாழ் இசையோடு பொருந்தாது.   காலத்தோடும் பொருந்தாது.  பொருளை அறிவதற்கும் இயலாது.   அவ்வாறு இருப்பினும், தந்தையர்க்கு அம்மழலைச் சொற்கள் குழந்தைகள் மீது அன்பை வரவழைக்கின்றன.

காவல் மிகுந்த மதில்களைக் கொண்ட கோட்டைகள் பலவற்றை வென்ற அதியமான் நெடுமான் அஞ்சியே!  என் சொற்களும் குழந்தையின் மழலைச் சொற்களைப் போன்றவை, நீ அருள் மிகுந்து (ஒரு தந்தையைப் போல்) இருப்பதால்.

குறிப்பு:  அருளல்மாறே – ஏகாரம் அசைநிலை.  வந்தனவால் – வந்தன + ஆல், ஆல் ஓர் அசைச் சொல்.

சொற்பொருள்:  யாழொடும் கொள்ளா – யாழிசையுடன் ஒத்து வராது, பொழுதொடும்  புணரா – காலத்தோடும் பொருந்தாது, பொருள் அறிவாரா –  பொருளை அறிய இயலாது, ஆயினும் – ஆனாலும், தந்தையர்க்கு – தந்தைகளுக்கு, அருள் வந்தனவால் – அருளை வரவழைக்கின்றன (வந்தன + ஆல், ஆல் ஓர் அசைச்சொல்), புதல்வர் தம் மழலை – தம் குழந்தைகளின் மழலை, என்  வாய்ச் சொல்லும் – என் வாயிலிருந்து வரும் சொற்களும், அன்ன – போல, ஒன்னார் – பகைவர், கடி – காவல், மதில் – மதில் சுவர், அரண் – கோட்டை, பல – பலவற்றை, கடந்து –  வென்று, நெடுமான் அஞ்சி – அதியமான் நெடுமான் அஞ்சியே, நீ அருளல்மாறே – நீ அருள்வதால் (அருளல்மாறே – ஏகாரம் அசைநிலை, மாறு ஏதுப்பொருள் (காரணப் பொருள்) தரும் இடைச்சொல்)

புறநானூறு 94, பாடியவர் –  ஔவையார்பாடப்பட்டோன்அதியமான் நெடுமான் அஞ்சிதிணைவாகைதுறைஅரச வாகை

பாடல் பின்னணிபெருஞ்சபையில் அரசர்கள் சூழ இருப்பினும், போர்க்களத்தில் படைகள் சூழ இருப்பினும், ஔவையாருக்கும் மற்ற புலவர்களுக்கும் இன்முகமும், இன்சொல்லும் உடையவனாய் இருக்கும் அதியமான் நெடுமான் அஞ்சியின் பண்பைக் குறித்து ஔவையார் இயற்றிய பாடல் இது.

ஊர்க் குறுமாக்கள் வெண் கோடு கழாஅலின்,
நீர்த் துறை படியும் பெருங்களிறு போல,
இனியை  பெரும  எமக்கே, மற்று அதன்
துன் அருங் கடாஅம் போல
இன்னாய் பெரும, நின்  ஒன்னாதோர்க்கே.  5

பொருளுரை பெருமானே!   தன்னுடைய வெண்மையான தந்தங்களை, ஊரில் உள்ள சிறுவர்கள் கழுவுவதால், நீர்த்துறையில் அமர்ந்திருக்கும் பெரிய யானை இனிமையாக இருப்பது போல நீ எங்களுக்கு இனிமையானவன்.  ஆனால் அதன் நெருங்க முடியாத மதம்பட்ட நிலைமை எவ்வாறு துன்பம் தருமோ, அது போல, பெருமானே, நீ உன் பகைவர்களுக்கு துன்பத்தை அளிப்பாய்.

குறிப்பு:  கடாஅம் – ஆகுபெயராய்க் கடாம் உண்டாகிய நிலைமை குறித்து நின்றது.

சொற்பொருள்:   ஊர் – ஊரில் உள்ள, குறு மாக்கள் – சிறு பிள்ளைகளுக்கு, வெண்கோடு –   வெண்மையான தந்தம், கழாஅலின் – கழுவுவதால் (கழாஅலின் – அளபெடை), நீர்த்துறை – நீர் நிலையின் கரையில், படியும் – படிந்து இருக்கும், அமர்ந்திருக்கும், பெருங்களிறு  –  பெரிய ஆண் யானை, போல – போல, நீ இனியை – நீ இனியவன், பெரும – பெருமகனே, எமக்கே – எங்களுக்கு, மற்று அதன் –  ஆனால் அதனுடைய (மற்று – வினைமாற்றின்கண் வந்தது), துன் – நெருங்க, அரும் – அரிய, கடாஅம் – மதம் கொண்ட நிலை (கடாஅம் – அளபெடை), போல – போல, இன்னாய் – துன்பத்தை அளிப்பாய், பெரும – பெருமகனே, நின் – உனது,  ஒன்னாதோர்க்கே – பகைவர்களுக்கு (ஒன்னாதோர் – பகைவர், ஒன்னாதோர்க்கே – ஏகாரம் அசைநிலை)

புறநானூறு  95, பாடியவர்ஔவையார்பாடப்பட்டோன்அதியமான் நெடுமான் அஞ்சிதிணைபாடாண்துறைவாள் மங்கலம்

பாடல் பின்னணி:   தொண்டை நாட்டை ஆண்டு வந்த தொண்டைமான் என்ற குறுநில மன்னன் அதியமான் மீது பகைமை கொண்டான்.  அதியமானோடு போர் புரிய எண்ணினான். அதை அறிந்த அதியமான் ஔவையாரை அவனிடம் தூதுவராக அனுப்பினான். தொண்டைமான் தன் படைப் பெருமையை ஒளவையாருக்குக் காட்ட எண்ணித் தன் படைக்கலக் கொட்டிலுக்கு அவரை அழைத்துச் சென்றான்.  அவன் எண்ணத்தை அறிந்த ஔவையார் தொண்டைமானிடம் இவ்வாறு கூறுகின்றார்.

இவ்வே பீலி அணிந்து மாலை சூட்டிக்
கண் திரள் நோன் காழ்  திருத்தி நெய் அணிந்து
கடி உடை வியன் நகர், அவ்வே அவ்வே
பகைவர்க் குத்திக் கோடு நுதி சிதைந்து
கொல் துறைக் குற்றில மாதோ, என்றும்  5
உண்டாயின் பதம் கொடுத்து
இல்லாயின் உடன் உண்ணும்
இல்லோர் ஒக்கல் தலைவன்,
அண்ணல் எம் கோமான், வைந்நுதி வேலே.

பொருளுரை:   இங்கே இருக்கும் போர்க்கருவிகள் அனைத்தும் மயில் இறகு அணியப்பட்டு, பூமாலை சூடப்பட்டுத் திரண்ட வலிமையான காம்புகள் அழகுற செய்யப்பட்டு,  நெய் பூசப்பட்டுக் காவலுடைய பெரிய அரண்மனையில் உள்ளன.  அங்கே அதியமான்  அரண்மனையில் இருப்பவையோ, பகைவரைக் குத்தியதால் வேலின் பக்கமும் நுனியும் சிதைந்து, எப்பொழுதும் கொல்லனின் பணியிடமாகிய சிறிய பட்டறையில் கொட்டிக் கிடக்கின்றன.  செல்வமும், உணவும் நிறைந்திருக்கும் பொழுது எல்லோருக்கும் உணவளித்த பின் உணவு உண்ணுகின்றவனும், இல்லாத பொழுது உணவை அனைவருக்கும் பங்கிட்டு உடன் சேர்ந்து உண்ணுகின்றவனுமான வறியவர்களின் சுற்றத்திற்குத் தலைவன் எங்கள் மன்னன்.

குறிப்பு:  வேலே – ஏகாரம் அசைநிலை.

சொற்பொருள்:   இவ்வே – இவை, வேல்கள், போர்க்கருவிகள், பீலி அணிந்து – மயில் இறகு அணியப்பட்டு, மாலை – பூமாலை, சூட்டி – சூடப்பட்டு, கண் திரள் – உடல் பகுதி திரண்ட, நோன்காழ் – வலிமையான காம்பு, திருத்தி – அழகு செய்து, நெய் அணிந்து – நெய் பூசப்பட்டு, கடி உடை-  காவல் உடைய, வியன் நகர் –  பெரிய வீடு, அரண்மனை, அவ்வே அவ்வே – அவையே அவையே, பகைவர் குத்தி – பகைவரைக் குத்தி, கோடு – வேலின் பக்கம், நுதி சிதைந்து – நுனி சிதைந்து, கொல் துறை – கொல்லனின் பட்டறை, குற்றில – சிறிய இடம், மாதோ – மாது, ஓ அசைநிலைகள், என்றும் – எப்பொழுதும், உண்டாயின் – உண்டு என்றால், பதம் கொடுத்து – உணவு கொடுத்து, இல்லாயின் – இல்லை என்றால்,  உடன் உண்ணும் – உடன் சேர்ந்து உண்ணும், இல்லோர் – இல்லாதவர்களின், ஒக்கல் – சுற்றம்,  தலைவன் – தலைவன், அண்ணல் – தலைமையுடையவன், எம் கோமான் –  எங்கள் மன்னன், வைந்நுதி – கூர்மையான நுனி, வேலே –  வேற்படை, வேல்கள்

புறநானூறு 101, பாடியவர்ஔவையார்பாடப்பட்டோன்அதியமான் நெடுமான் அஞ்சிதிணைபாடாண்துறைபரிசில் கடாநிலை

பாடல் பின்னணி ஔவையாரின் மீது மிக்க மதிப்பும், அவரது பாடல்கள் மீது மிகுந்த விருப்பமும் கொண்டவன் அதியமான் நெடுமான் அஞ்சி.  ஒருமுறை, ஒளவையார் அதியமானிடம் பரிசில் வேண்டி அவனிடம் சென்று பாடினார்.  அதியமான் பரிசிலை உடனே வழங்காது காலம் தாழ்த்தினான்.  காலதாமதம் ஆனாலும் அதியமான் நிச்சயம் பரிசளிப்பான் என்று தன் நெஞ்சிடம் கூறுகின்றார் ஔவையார்.

ஒரு நாள் செல்லலம், இரு நாள் செல்லலம்,
பல நாள் பயின்று பலரொடு செல்லினும்,
தலை நாள் போன்ற விருப்பினன் மாதோ,
அணி பூண் அணிந்த யானை இயல் தேர்
அதியமான் பரிசில் பெறூஉங் காலம்  5
நீட்டினும்  நீட்டாது ஆயினும், யானை தன்
கோட்டு இடை  வைத்த  கவளம்  போலக்
கையகத்தது, அது பொய் ஆகாதே,
அருந்த ஏமாந்த நெஞ்சம்
வருந்த வேண்டா, வாழ்க அவன் தாளே.  10

பொருளுரை  ஒரு நாள் அல்ல, இரண்டு நாட்கள் அல்ல, யாம் பலரோடு கூடிப் பல நாட்கள் தொடர்ந்து சென்ற போதும் முதல் நாள் போல அன்பு செய்தவன் அவன்.   அழகிய அணிகலன்கள் அணிவிக்கப்பட்ட யானையையும், நன்கு புனையப்பட்ட தேரையும் கொண்ட அதியமான் அஞ்சியிடமிருந்து பரிசில் பெறும் காலம் நீண்டதாக இருந்தாலும், இல்லாவிட்டாலும் யானையின் தந்தங்களுக்கு இடையில் வைக்கப்பட்ட உணவுக் கவளம் எப்படித் தவறாமல் யானைக்கு உணவாகச் சென்று சேருமோ அதுபோல் அதியமானின் பரிசிலும் தவறாமல் நம் கைகளை வந்து அடையும்.  அதை விருப்பத்துடன் எதிர் நோக்கி இருக்கும் நெஞ்சே!  நீ வருந்த வேண்டாம்!  அதியமானின் முயற்சி வாழ்க!

குறிப்பு:  ஏமாந்த (9) – ஒளவை துரைசாமி உரை – ஏமாத்தல் = ஆசைப்படுதல்.  மலைபடுகடாம் 565-566 – தலைநாள் அன்ன புகலொடு வழி சிறந்து பல நாள் நிற்பினும் பெறுகுவிர்.  மாதோ – மாது, ஓ – அசைநிலைகள், ஆகாதே – ஏகாரம் அசைநிலை, தாளே – ஏகாரம் அசைநிலை, பெறூஉம் – அளபெடை.  செல்லலம் – தன்மைப் பன்மை வினைமுற்று.

சொற்பொருள்:   ஒருநாள் – ஒருநாள், செல்லலம் – செல்லவில்லை யாம், இருநாள் – இரண்டு நாட்கள், செல்லலம் – செல்லவில்லை யாம், பல நாள் – பல நாட்கள், பயின்று – தொடர்ந்து சென்று, பலரொடு செல்லினும் – பலருடன் சென்றாலும், தலை நாள் – முதல் நாள்,  போன்ற – போன்று, விருப்பினன் – அன்பு செய்தான், மாதோ – அசைச் சொல், அணி – அழகிய, பூண் – அணிகலன், அணிந்த – சூடிய, யானை – யானை, இயல் தேர் – நன்கு புனையப்பட்ட தேர், இயலும் தேர், அதியமான் – அதியமான் நெடுமான் அஞ்சி, பரிசில் – பரிசு, பெறூஉங் காலம் – பெறும் காலம், நீட்டினும் – நீண்டாலும், நீட்டாது – நீண்டு இல்லாது, ஆயினும் – ஆனாலும், யானை தன் – யானை தன்னுடைய, கோட்டு – தந்தங்களின், இடை – இடையே, வைத்த – வைத்த, கவளம் – யானையின் உணவுக் கவளம், போல – போல, கையகத்து – கையினுள் உள்ள, அது – அப்பரிசு, பொய் ஆகாதே – பொய் ஆகாது, அருந்த – உண்ண, பெற்றுக் கொள்ள, ஏமாந்த – விரும்பிய, நெஞ்சம் – நெஞ்சம், மனது, வருந்த வேண்டா – வருத்தம் அடைய வேண்டாம், வாழ்க – வாழ்க, அவன் – அதியமான், தாளே – முயற்சி

புறநானூறு 104, பாடியவர் –  ஔவையார்பாடப்பட்டோன்அதியமான் நெடுமான் அஞ்சிதிணைவாகைதுறைஅரச வாகை

பாடல் பின்னணிஅதியமானைப் போரில் வெல்லும் பொருட்டு, அவன் ஊராகிய தகடூரைப் பகை மன்னர்கள் முற்றுகை இட்டனர்.  தகடூர் என்பது இன்றைய தருமபுரி.  போர் மூண்டது.  அதியமான் வெற்றி பெற்றான்.  அதியமான் போரில் வெற்றி அடைந்த பின் போரில் தோல்வியுற்ற பகை அரசர்களிடம் ஔவையார் இவ்வாறு கூறுகின்றார்.

போற்றுமின் மறவீர், சாற்றுதும் நும்மை,
ஊர்க் குறுமாக்கள்  ஆடக்  கலங்கும்
தாள் படு  சின்னீர்க் களிறு அட்டு வீழ்க்கும்
ஈர்ப்பு உடைக்  கராஅத்து  அன்ன என்னை
நுண்பல் கருமம்  நினையாது  5
இளையன் என்று  இகழின், பெறல் அரிது  ஆடே.

பொருளுரை:   உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள் மறவர்களே!  உங்களுக்கு ஒன்றை அறிவிக்கிறோம்.  கேளுங்கள்!   ஊரில் உள்ள சிறுவர்கள் விளையாடக் கலங்கும்படியான கால் அளவுள்ள நீருக்குள் யானையைக் கொன்று வீழ்த்தி இழுத்துச் செல்லும் முதலையைப் போன்ற என்னுடைய தலைவனான அதியமானின் நுட்பமாக ஆய்ந்து செய்யும் பல செயல்களைக் கருத்தில் கொள்ளாமல், அவனை இளையவன் என்று இகழ்ந்தால், நீங்கள் வெற்றி பெறுவது அரிது.

சொற்பொருள்:  போற்றுமின் – பாதுகாத்துக் கொள்வீர் (மின் முன்னிலைப் பன்மை வினைமுற்று விகுதி), மறவீர் – வீரர்களே, சாற்றுதும் – பறை சாற்றுவோம், அறிவிப்போம், நும்மை – உங்களுக்கு, ஊர் – ஊரில் உள்ள குறுமாக்கள் – சிறு பிள்ளைகள், ஆட – விளையாட, கலங்கும் – கலங்கும், தாள்படு – கால் அளவுபட்ட, சின்னீர் – குறைந்த தண்ணீர், களிறு – ஆண் யானை, அட்டு – கொன்று, அழித்து, வீழ்க்கும் – வீழ்த்தும், ஈர்ப்பு உடை – இழுத்துச் செல்லும் திறன் உடைய, கராஅத்து அன்ன – முதலையைப் போல (கராஅத்து – கராம், அத்து சாரியை), என் ஐ – என்னுடைய தலைவன், நுண்பல் – நுண்ணிய பல, கருமம் – செயல்கள், நினையாது – நினைக்காமல், இளையன் என்று – இளையவன் என்று கூறி, இகழின் – இகழ்ந்தால், பெறல் – பெறுவது, அரிது – அரிது, இயலாது, ஆடே – வெற்றி (ஆடே – ஏகாரம் அசைநிலை)

புறநானூறு 105, பாடியவர் –  கபிலர்பாடப்பட்டோன்வேள் பாரிதிணைபாடாண்துறை –  விறலி ஆற்றுப்படை

பாடல் பின்னணி விறலியர் ஆடுவதிலும் பாடுவதிலும் வல்லவர்கள். அவர்கள் பாணர் குடும்பத்தைச் சார்ந்த பெண்கள். வேள்பாரியிடம் சென்று, பாட்டுப்பாடி பரிசு பெறுமாறு ஒரு விறலியிடம் கூறுகின்றார் கபிலர்.

சேயிழை பெறுகுவை வாள் நுதல் விறலி,
தடவு வாய்க் கலித்த மா இதழ்க் குவளை
வண்டு படு புது மலர்த் தண் சிதர் கலாவப்,
பெய்யினும்,  பெய்யாது ஆயினும், அருவி
கொள் உழு வியன் புலத்து  உழைகால் ஆக  5
மால்பு உடை நெடு வரைக் கோடு தொறு இழிதரும்
நீரினும் இனிய சாயல்
பாரி வேள்பால், பாடினை செலினே.

பொருளுரை:   ஒளி பொருந்திய நெற்றியை உடைய விறலி!   பெரிய சுனையில் தழைத்த கரிய இதழுடைய குவளை மலர்கள் மலர்ந்திருக்க, வண்டுகள் மொய்க்கும் புது மலர்களில் குளிர்ந்த நீர்த்துளி சிதறிக் கலக்க, மழை பெய்தாலும் பெய்யாமல் போனாலும் அருவியானது கொள் பயிரிட உழுத பரந்த நிலத்தினிடத்தில் வாய்க்கால் ஆக ஒட, மூங்கில் ஏணிகள் உடைய நெடிய மலைச் சிகரங்கள் தோறும் கீழே வழியும் நீரை விட இனிய தன்மையுடைய வேள்பாரியிடம் நீ பாடிச் சென்றால், சிவந்த பொன் நிறமுடைய அணிகலன்களைப் பெறுவாய்.

குறிப்பு:  நீரினும் இனிய சாயல் (7) – ஒளவை துரைசாமி உரை – நீரினும் மிக இனிமையுடைய,  உ. வே. சாமிநாதையர் உரை – நீரினும் மிக இனிய மென்மையையுடைய.  வாள் – வாள் ஒளி ஆகும் (தொல்காப்பியம் உரியியல் 71).  சாயல் – சாயல் மென்மை (தொல்காப்பியம்,  உரியியல் 29).  குறுந்தொகை 95 – நீர் ஓரன்ன சாயல், கலித்தொகை 42 – நீரினும் சாயல் உடையன், புறநானூறு 105 – நீரினும் இனிய சாயல், பதிற்றுப்பத்து 86 – நீரினும் தீந்தண் சாயலன், மலைபடுகடாம் 61 – புது நிறை வந்த புனல் அம் சாயல்.  தட – தடவும் கயவும் நளியும் பெருமை (தொல்காப்பியம், உரியியல் 24).

சொற்பொருள்:   சேயிழை – சிவந்த/செம்மையான பொன்னால் செய்த அணிகலன், பெறுகுவை – பெறுவாய், வாள் – ஒளி, நுதல் – நெற்றி, விறலி – இசை, நடனம் புரியும் பெண், தடவுவாய் –  பெரிய வாயையுடைய (தடவு வாய் = சுனைக்கு ஆகுபெயர்), கலித்த – தழைத்த, மா இதழ் – கரிய இதழ், பெரிய இதழ், குவளை – குவளை மலர், வண்டு படு – வண்டுகள் மொய்க்கும், புது மலர் – புதிதாய் பூத்த மலர்களிடம், தண் சிதர் –  குளிர்ந்த நீர்த்துளி சிதறி, கலாவ – கலக்கும், பெய்யினும் – மழை பெய்தாலும், பெய்யாது ஆயினும் – பெய்யாமல் போனாலும் – அருவி – அருவி, கொள்உழு –  கொள் தானியத்தைப் பயிரிட,  வியன் புலத்து – பரந்த நிலத்தில், உழைகால் ஆக – வாய்க்கால் ஆக, மால்பு –  மூங்கிலின் கணுவிடத்தில் புள் செருகிய ஏணி (மால்பு – கண்ணேணி), உடை – உடைய, நெடு வரை – நெடிய மலை, கோடு தொறு – சிகரம் தோறும், இழிதரும் – கீழே வழியும், நீரினும் – நீரை விட, இனிய சாயல் – இனிய தன்மையுடைய, பாரி வேள் பால் – வேள் பாரியின் இடத்தில், பாடினை செலினே –  நீ பாடிச் சென்றால் (செலினே – ஏகாரம் அசைநிலை)

புறநானூறு 107, பாடியவர் –  கபிலர்பாடப்பட்டோன்வேள் பாரிதிணை –  பாடாண்துறைஇயன் மொழி

பாடல் பின்னணிபாரியின் கொடைச் சிறப்பைக்கூற கபிலர் இயற்றிய பாடல் இது.

‘பாரி  பாரி’ என்று பல ஏத்தி,
ஒருவர்ப் புகழ்வர்  செந்நாப் புலவர்,
பாரி ஒருவனும் அல்லன்,
மாரியும்  உண்டு, ஈண்டு உலகு புரப்பதுவே.

பொருளுரை செம்மையான நாக்கை உடைய புலவர்கள் எல்லாம் அவனுடைய புகழை வாழ்த்தி அவன் ஒருவனையே ‘பாரி பாரி’ என்று புகழ்கின்றனர்.  இங்கே பாரி ஒருவன் மட்டும் இல்லை, மழையும் உண்டு இந்த உலகைக் காப்பதற்கு.

குறிப்பு:  பழித்ததுபோல் புகழ்வது.

சொற்பொருள்:   பாரி பாரி – பாரி பாரி, என்று பல ஏத்தி – என்று பல செயல்களை வாழ்த்தி, ஒருவர்ப் புகழ்வர் – ஒருவனையே புகழ்கின்றனர், செந்நா புலவர் – செம்மையான நாக்கை உடைய புலவர்கள், பாரி – வேள் பாரி, ஒருவனும் அல்லன் – ஒருவன் மட்டும் இல்லை, மாரியும் உண்டு – மழையும் உண்டு, ஈண்டு – இங்கே, உலகு – உலகம், புரப்பதுவே  – பாதுகாப்பதற்கு (புரப்பதுவே – ஏகாரம் அசைநிலை)

புறநானூறு 108, பாடியவர்கபிலர்பாடப்பட்டோன்வேள் பாரிதிணை –  பாடாண்துறை –  இயன் மொழி

பாடல் பின்னணி பறம்பு மலையின் 300 ஊர்களையும் பரிசில் வேண்டிப் பாடி வந்தவர்களுக்குக் கொடையாக அளித்துவிட்ட பாரி, தன்னையே கொடையாக அளிக்கத் துணிவான் என்று பாரியின் கொடை வண்மையைப் புகழ்ந்து கபிலர் இயற்றிய பாடல் இது.

குறத்தி மாட்டிய வறற்கடைக் கொள்ளி
ஆரம் ஆதலின், அம் புகை அயலது
சாரல் வேங்கைப் பூஞ்சினைத் தவழும்
பறம்பு  பாடினர் அதுவே அறம் பூண்டு
பாரியும் பரிசிலர்  இரப்பின்,  5
வாரேன் என்னான், அவர் வரையன்னே.

பொருளுரை குறத்தி எரித்த காய்ந்த சந்தனக் கொள்ளியால் வெளிப்பட்ட அந்த அழகிய நறுமணப் புகை, அருகில் உள்ள மலைச் சரிவில் உள்ள வேங்கை மரத்தில் பூக்களையுடைய கிளைகளில் படர்ந்துத் தவழும் அழகிய பறம்பு மலையைப் பாடிப் பரிசில் பெற்றவர்களுக்குச் சொந்தமாகிவிட்டது.  கொடுப்பதையே அறமாக மேற்கொண்ட பாரி, பரிசில் வேண்டுவோர் கேட்டால் வரமாட்டேன் என்று கூறாமல், தன்னையே கொடையாக அளித்து அவர்களுடைய எல்லையில் சென்று நிற்பான்.

சொற்பொருள்:   குறத்தி – மலையில் வாழும் பெண், மாட்டிய – எரித்த, வறற் கடைகொள்ளி – உலர்ந்த  ஒரு முனையில் எரியும் கொள்ளிக்கட்டை,  ஆரம் – சந்தனம், ஆதலின் –  ஆதலால், அம் புகை –  அழகிய புகை, அயல் அது – அருகில் உள்ள, சாரல் – மலைச் சரிவு, வேங்கைப் – வேங்கை மரம், பூஞ்சினை  –  பூக்களைக் கொண்ட மரக்கிளை, தவழும் – தவழும், பறம்பு – பறம்பு மலை, பாடினர் – பாடிப் பரிசில் பெற்றவர்கள், அதுவே – அவர்களுடையது (ஏகாரம் அசைநிலை), அறம் பூண்டு – அறத்தைக் கடமையாக மேற்கொண்டு, பாரியும் – பாரியும், பரிசிலர் – பரிசில் வேண்டுவோர், இரப்பின் – கேட்டால், வாரேன் – வரமாட்டேன், என்னான் – என்று கூறமாட்டான், அவர் – அவர்கள் வரையன்னே –  எல்லையில் நிற்பான் (வரையன்னே – ஏகாரம் அசைநிலை)

புறநானூறு 110, பாடியவர் –  கபிலர்பாடப்பட்டோன்வேள் பாரி, மூவேந்தர்திணைநொச்சிதுறைமகண்மறுத்தல்

பாடல் பின்னணி:   மூவேந்தர்களான சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் பாரியின் பறம்பு மலையைப் பெரும்படையுடன் சூழ்ந்து கொண்டனர்.   பாரியின் நண்பரும் புலவருமான கபிலர், பாரியின் போர் வல்லமையையும், கொடை வண்மையையும் புகழ்ந்து, அவர்களை அறிவுறுத்தும்படியாக இயற்றிய பாடல் இது.

கடந்து அடு தானை மூவிரும் கூடி
உடன்றனிர் ஆயினும்  பறம்பு கொளற்கு அரிதே,
முந்நூறு ஊர்த்தே தண் பறம்பு நல்நாடு,
முந்நூறு ஊரும் பரிசிலர் பெற்றனர்,
யாமும் பாரியும்  உளமே,  5
குன்றும் உண்டு, நீர் பாடினிர் செலினே.

பொருளுரைகடந்து சென்று அழிக்கும் படையோடு நீங்கள் மூவரும் கூடிப் போர் செய்தாலும் பறம்பு மலையை வெல்வதற்கு இயலாது.  முந்நூறு ஊர்களைக் கொண்டது இந்தக் குளிர்ந்த, நல்ல பறம்பு நாடு.  முந்நூறு ஊர்களையும் பரிசில் வேண்டி வந்தவர்கள் பெற்றுக் கொண்டு விட்டனர்.  இங்கே நானும் பாரியும் உள்ளோம்.  நீங்கள் பாடியபடி பாரியிடம் சென்றால், பறம்பு மலையும் உங்களுக்கு உண்டு.

சொற்பொருள்கடந்து – கடந்து சென்று, அடு – கொல்லும், அழிக்கும், தானை – படை, மூவிரும் – நீங்கள் மூவரும், கூடி – சேர்ந்து, உடன்றனிர் ஆயினும் – போர் செய்தீர்கள் ஆனாலும், பறம்பு – பறம்பு மலையை, கொளற்கு அரிதே – கைப்பற்றுவதற்கு அரிது, முந்நூறு – முந்நூறு, ஊர்த்தே – ஊர்களைக் கொண்ட, தண் – குளிர்ந்த, அழகிய, பறம்பு –  பறம்பு, நல் நாடு – நல்ல நாடு, முந்நூறு ஊரும் – முந்நூறு ஊர்களையும், பரிசிலர் – பரிசு வேண்டி வந்தவர்கள், பெற்றனர் – பெற்றனர், யாமும் – நானும், பாரியும் – பாரியும், உளமே – உள்ளோம் (உளமே – ஏகாரம் அசைநிலை), குன்றும் உண்டு – பறம்பு மலையும் உண்டு, நீர் – நீங்கள், பாடினிர் – பாடுபவராய், செலினே –  சென்றால் (செலினே – ஏகாரம் அசைநிலை)

புறநானூறு 111, பாடியவர்கபிலர்பாடப்பட்டோன்வேள் பாரிதிணைநொச்சிதுறைமகண் மறுத்தல்

பாடல் பின்னணி:   பறம்பு மலை இரங்கத்தக்கது.  அதை வேந்தர்கள் கைப்பற்ற முடியாது.  ஆனால் கிணையையுடைய விறலிக்கு எளிதில் அது பரிசாகக் கிடைக்கும் என்று இந்தப் பாடலில் கபிலர் கூறுகின்றார்.

அளிதோ தானே பேர் இரும் குன்றே,
வேலின் வேறல் வேந்தர்க்கோ அரிதே,
நீலத்து இணை மலர் புரையும் உண்கண்
கிணை மகட்கு எளிதால், பாடினள் வரினே.

பொருளுரைஇரங்கத்தக்க இந்தப் பெரிய கரிய பறம்பு மலையை, வேல் கொண்டு வென்று பெறுவது என்பது பகை வேந்தர்களுக்கு இயலாதது.  ஆனால், மை தீட்டப்பட்ட, நீல நிறமுடைய குவளை மலர்களைப் போன்ற கண்களையுடைய விறலி கிணைப் பறையோடு பாடி வந்தால் பறம்பு மலையைப் பெறுவது எளிது .

சொற்பொருள்:   அளிதோ தானே –  இரங்கத்தக்கது (அளிதோ – ஓகாரம் அசைநிலை, தானே – தான், ஏ அசைநிலைகள்), பேர் இரும்  – பெரிய கரிய, குன்றே – மலை (ஏகாரம் அசைநிலை), வேலின் – வேல் கொண்டு, வேறல் – வெல்லுதல், வேந்தர்க்கோ அரிதே – பகை மன்னர்களுக்கு இயலாது (அரிதே – ஏகாரம் அசைநிலை), நீலத்து – நீல நிறமுடைய குவளை மலர்களின், இணை மலர் – இணைந்த மலர்கள், புரையும் – போல, உண்கண் –  மையிட்ட கண்கள்,  கிணை மகட்கு –  கிணைப்பறை இசைக்கும் பெண்ணிற்கு, எளிதால் – எளிதாகும் (ஆல் – அசைநிலை), பாடினள் வரினே –  அவள் பாடியபடி வந்தால் (வரினே – ஏகாரம் அசைநிலை)

புறநானூறு 112, பாடியவர் –  பாரியின் இரண்டு பெண்கள்பாடப்பட்டோன்வேள் பாரிதிணைபொதுவியல்துறைகையறு நிலை

பாடல் பின்னணி:   பாரி இறந்த பின்னர், பாரியின் மகளிரைக் கபிலர் தன் பெண்களாக ஏற்றுப் பாதுகாத்து வந்தார்.  இறந்த தங்கள் தந்தையை நினைத்து வருந்தி அந்த மகளிர் பாடும் பாடல் இது.

அற்றைத் திங்கள் அவ்வெண் நிலவின்,
எந்தையும் உடையேம், எம்  குன்றும் பிறர் கொளார்,
இற்றைத் திங்கள் இவ்வெண் நிலவின்,
வென்று எறி முரசின் வேந்தர் எம்
குன்றும் கொண்டார், யாம் எந்தையும் இலமே.  5

பொருளுரைநாங்கள் கடந்த மாத வெண்ணிலவு  ஒளியின் கீழ் எங்கள் தந்தையை உடையவர்களாக இருந்தோம்.   எங்கள் பறம்பு மலையையும் பிறர் கொள்ளவில்லை.  இன்றைய மாதத்தில், இந்த வெண்ணிலவின் கீழ், வென்று அறைந்த  முரசினையுடைய வேந்தர்கள் எங்கள் பறம்பு மலையைக் கைப்பற்றிக் கொண்டனர்.  நாங்கள் எங்கள் தந்தையையும் இழந்து தனித்து இருக்கின்றோம்.

குறிப்பு:  வென்று எறி முரசின் வேந்தர் –  ஒளவை துரைசாமி உரை – ஈண்டு இகழ்ச்சிக் குறிப்பு.

சொற்பொருள்:   அற்றை – அன்றைய, திங்கள் – திங்கள், மாதம், அவ்வெண் நிலவின்  –  அந்த – வெண்நிற நிலவின் கீழ், எந்தையும் – எம் தந்தையும், உடையேம் – உடையவர்களாக இருந்தோம், எம் குன்றும் – எங்கள் மலையையும், பிறர் கொளார் –   மற்றவர்கள் கைப்பற்றவில்லை, இற்றை – இன்றைய, திங்கள் – திங்கள், மாதம், இவ்வெண்நிலவின்  – இந்த வெள்ளை நிற நிலவின் கீழ், வென்று எறி முரசின் – வென்று அறைந்த  முரசினையுடைய, வேந்தர் – வேந்தர்கள், எம் குன்றும் – எங்கள் மலையையும், கொண்டார் – கைப்பற்றினர், யாம் – நாங்கள், எந்தையும் – எங்கள் தந்தையும்,  இலமே – இல்லை (இலமே – ஏகாரம் அசைநிலை)

புறநானூறு 118, பாடியவர்கபிலர்பாடப்பட்டோன் –  வேள் பாரிதிணைபொதுவியல்துறைகையறு நிலை

பாடல் பின்னணி பாரியின் நண்பரும் புலவருமான கபிலர், பாரியின் இறப்பிற்குப் பின் பறம்பு நாட்டின் அழிவைப் பற்றி மனம் வருந்தி இயற்றிய பாடல் இது.

அறையும் பொறையும் மணந்த தலைய,
எண் நாள் திங்கள் அனைய கொடும் கரைத்
தெண்ணீர்ச் சிறுகுளம் கீள்வது மாதோ,
கூர் வேல் குவைஇய மொய்ம்பின்
தேர் வண் பாரி தண் பறம்பு  நாடே.  5

பொருளுரைபாறைகளையும், சிறு குன்றுகளையும் கொண்ட இடமாக, எட்டாம் நாள் நிலவு போல வளைந்த கரையை உடைய தெளிந்த நீர் நிறைந்த சிறிய குளமானது, கூரிய வேல் ஏந்திய திரண்ட தோள்கள் கொண்டவனும் தேர்களைப் பரிசாகக் கொடுத்தவனுமான பாரியின் குளிர்ந்த பறம்பு மலை நாட்டில், இன்று பாதுகாப்பார் இன்றி உடைந்து கெட்டழிந்து போகின்றது.

குறிப்பு:  சிறிய குளத்தின் கரை உடைந்தது போல் பாரியின் பறம்பு நாடு பாழாகி விட்டது என்பது இப் பாடலின் உட்பொருள்.

சொற்பொருள்:  அறையும் – பாறைகளையும், பொறையும் – சிறு குன்றுகளையும், மணந்த – சேர்ந்த, தலைய – இடத்தையுடையவாக, எண் நாள் – எட்டாம் நாள், திங்கள் – நிலவு, அனைய – போல, கொடும் கரை – வளைந்த கரை, தெண்ணீர் – தெளிந்த நீர், சிறு குளம் – சிறிய குளம், கீள்வது – உடைந்தது, மாதோ – மாது, ஓ அசைநிலைகள், கூர்வேல் – கூரிய வேல், குவைஇய மொய்ம்பின் – திரண்ட தோளையுடைய (குவைஇய – அளபெடை), தேர் வண் – தேர்களைக் கொடுத்த,  பாரி – பாரி, தண் பறம்பு நாடே – குளிர்ந்த பறம்பு நாடு (நாடே – ஏகாரம் அசைநிலை)

புறநானூறு 119, பாடியவர்கபிலர்பாடப்பட்டோன்வேள் பாரிதிணைபொதுவியல்துறைகையறு நிலை

பாடல் பின்னணிகபிலர், பாரியின் கொடைத் தன்மைப் பற்றியும், அவனது இறப்பினால் பறம்பு நாட்டிற்கு ஏற்பட்ட அழிவைப் பற்றியும் மனம் வருந்தி இயற்றிய பாடல் இது.

கார்ப் பெயல் தலைஇய காண்பு இன் காலைக்
களிற்று முக வரியின் தெறுழ் வீ பூப்பச்
செம்புற்று ஈயலின் இன் அளைப் புளித்து
மென் தினை யாணர்த்து நந்தும் கொல்லோ,
நிழலில் நீள் இடைத் தனி மரம் போலப்,  5
பணை கெழு வேந்தரை இறந்தும்,
இரவலர்க்கு ஈயும் வள்ளியோன் நாடே?

பொருளுரை பாரி இருந்த பொழுது, கார் காலத்தில் மழை பெய்து ஓய்ந்த இனிய நேரத்தில், யானையின் முகத்தில் உள்ள புள்ளிகளைப் போல் தெறுழ்ப் பூக்கள் மலர்ந்தன.  செந்நிறப் புற்றில் உள்ள ஈசல் இனிய மோருடனும் புளியுடனும் சமைக்கப்பட்டது.  மென்மையான தினையுடன் செழிப்பு உடையதாய் இருந்தது பறம்பு  நாடு.   நிழல் இல்லாத நீண்ட வழியில் நின்று நிழலளிக்கும் தனி மரம் போல, முரசுடை வேந்தர்களை விட அதிகமாக வழங்கிய வள்ளலின் நாடு இனி அழிந்து விடுமோ?

குறிப்பு:  யாணர் – புதிதுபடற் பொருட்டே யாணர்க் கிளவி (தொல்காப்பியம், உரியியல் 83).

சொற்பொருள்:  கார் – கார் காலத்தில், பெயல் – மழை பெய்து, தலைஇய – மாறிய (தலைஇய – அளபெடை) , காண்பு – காட்சி, இன் காலை – இனிய காலம், களிற்று – ஆண் யானையின், முக வரியின் – முகத்தில் உள்ள புள்ளிகளைப் போன்று (வரியின் – இன் ஒப்புப்பொருளில் வந்தது, ஐந்தாம் வேற்றுமை உருபு), தெறுழ் – தெறுழ் மலர்கள், வீ பூப்ப – மலர் பூத்திருக்க (பூப்ப – வினையெச்சம்), செம்புற்று  – சிவப்பு நிறத்துப் புற்று, ஈயலின் – ஈசலை, இன் அளை – இனிய மோர், புளித்து – புளியைச் சேர்த்து, மென் தினை – மென்மையான  தினை, யாணர்த்து – புதிய வருவாயை உடையது, செல்வம் உடையது, நந்தும்  கொல்லோ – அழிந்து விடுமோ, நிழலில் – நிழலின், நீள் இடை – நீண்டவழி, தனி மரம் – தனித்து இருக்கும் மரம், போல – போல, பணை கெழு – பணை முரசையுடைய, வேந்தரை இறந்தும்  – வேந்தர்களைக் கடந்தும், இரவலர்க்கு – கேட்பவர்களுக்கு, ஈயும் – கொடுக்கும்,  வள்ளியோன் – கொடைத் தன்மை உடையோன், நாடே  –  நாடு (நாடே – ஏகாரம் அசைநிலை)

புறநானூறு 121, பாடியவர்கபிலர்பாடப்பட்டோன்மலையமான் திருமுடிக்காரிதிணைபொதுவியல்துறைமுதுமொழிக் காஞ்சி

பாடல் பின்னணி கடையெழு வள்ளல்களுள் ஒருவன் மலையமான் திருமுடிக்காரி. ஒருமுறை கபிலர் மலையமானைக் காணச் சென்றார்.  மற்ற புலவர்களைப் போலவே கபிலரையும் கருதி வரவேற்றுச் சிறப்புச் செய்தான் மலையமான்.  அதனை விரும்பாத கபிலர், எல்லா புலவர்களையும் ஒரே விதமாகக் கருதாமல் புலவர்களின் தகுதி அறிந்து நடத்துமாறு வலியுறுத்துகின்றார் இந்தப் பாடலில்.

ஒரு திசை ஒருவனை உள்ளி நாற்றிசைப்
பலரும் வருவர் பரிசில் மாக்கள்,
வரிசை அறிதலோ அரிதே, பெரிதும்
ஈதல் எளிதே, மாவண் தோன்றல்,
அது நற்கு அறிந்தனை ஆயின்,  5
பொது நோக்கு ஒழிமதி, புலவர் மாட்டே.

பொருளுரை பரிசில் பெற வேண்டி பலரும் நான்கு திசைகளிலிருந்தும் உன் ஒருவனின் திசை நோக்கி வருவார்கள்.  மிகுதியாகக் கொடை கொடுப்பது எளிது.   ஆனால் பரிசில் பெறுவோரின் தகுதி அறிவது அரிது.  பெரும் வண்மையுடைய மன்னனே!   அதை நன்கு அறிந்தாய் என்றால் புலவர்களின் தகுதியைக் கருதாமல் ஒரே விதமாய் யாவரையும் நடத்துவதைக் கைவிடுவாயாக.

குறிப்பு:  மதி – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம்.  சொல்லதிகாரம்.  இடையியல் 26).

சொற்பொருள்:   ஒரு திசை – ஒரு திசை, ஒருவனை உள்ளி – ஒருவனை நினைத்து, நாற்றிசை  – நான்கு திசை, பலரும் – பலரும், வருவர் – வருவார்கள், பரிசில் மாக்கள் – பரிசில் பெற வேண்டி வருபவர்கள், வரிசை – தகுதி, அறிதலோ – அறிதல் என்பது (அறிதலோ – ஓகாரம் அசைநிலை), அரிதே – கடினமானது (அரிதே – ஏகாரம் அசைநிலை), பெரிதும் – பெரியதாக, ஈதல் – கொடை கொடுப்பது, எளிதே – எளிதானது (எளிதே – ஏகாரம் அசைநிலை), மா வண் – பெரிய ஈகை, தோன்றல் – தலைவனே, அது நற்கு அறிந்தனை ஆயின் – அதை நன்கு அறிந்தாய் என்றால், பொது நோக்கு – பொதுவாய் நோக்குவதை, ஒழிமதி – கைவிடுவாயாக (மதி – முன்னிலையசை), புலவர் – புலவர்கள், மாட்டே – இடத்தில் (மாட்டே – ஏகாரம் அசைநிலை)

புறநானூறு 128, பாடியவர்உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்பாடப்பட்டோன் –  ஆய் அண்டிரன்திணை –  பாடாண்துறை –  இயன் மொழி

பாடல் பின்னணி  ஆய் அண்டிரன், கடையெழு வள்ளல்களுள் ஒருவன்.  பகைவர்கள் அவனைப் போரில் வெல்வது அரிது என்பதைப் புலவர் இந்தப் பாடலில் கூறுகின்றார்.

மன்றப் பலவின் மாச்சினை  மந்தி
இரவலர் நாற்றிய விசிகூடு முழவின்
பாடின் தெண் கண் கனி செத்து அடிப்பின்,
அன்னச்  சேவல் மாறு எழுந்து ஆலும்,
கழல் தொடி ஆஅய் மழை தவழ் பொதியில், 5
ஆடுமகள் குறுகின் அல்லது,
பீடு கெழு மன்னர் குறுகலோ அரிதே.

பொருளுரை ஊர்ப் பொது இடத்தில் உள்ள பலா மரத்தின் பெரிய கிளையில் இருந்த பெண் குரங்கு, பரிசில் வேண்டி வந்தவர்கள் கிளையில் தொங்கவிட்ட இறுகக் கட்டிய மத்தளத்தைப் பலாப்பழம் என்று கருதி  அதன் தெளிந்த கண்ணில் அடிக்க, அதனால் எழுந்த இசைக்கு மாறாக அவ்விடத்தில் உள்ள அன்னச் சேவல் எழுந்து ஒலிக்கும்,  கால்களில் வீரக்கழலும் கைகளில் தொடியும் அணிந்த ஆய் அண்டிரனின் மழை மேகம் தவழும் பொதியின் மலையில்.  அம் மலையை, ஆடி வரும் மகளிரால் அணுக முடியுமே தவிரப் பெருமை பொருந்திய மன்னர்களால் அணுக முடியாது.

சொற்பொருள்:   மன்றப் பலவின் – பொது இடத்தில் உள்ள பலா மரத்தின், மாச் சினை – பெரிய மரக் கிளை, மந்தி – பெண் குரங்கு, இரவலர் – பரிசில் வேண்டி வந்தவர்கள், நாற்றிய – தொங்கவிட்ட, விசி கூடு முழவின் – பிணிப்புப் பொருந்திய மத்தளத்தின், பாடின் – இனிய இசை, தெண்கண்  – முரசின் தெளிந்த கண், கனி செத்து – கனி என்று கருதி, அடிப்பின் – அடிப்பதால், அன்னச்சேவல் – அன்னச் சேவல், மாறு எழுந்து – மாறாக எழுந்து, ஆலும் – ஒலிக்கும், ஆடும், கழல் – காலில் அணியப்படும் வீரக்கழல், தொடி – கையில் அணியப்படும் அணிகலன், ஆஅய் – ஆய் அண்டிரனின் (ஆஅய் – அளபெடை), மழை தவழ் – மழை மேகம் தவழும், பொதியில் – பொதியில் மலை, ஆடுமகள் – ஆடும் பெண், குறுகின் – நெருங்கினால்,  அல்லது – அல்லாமல், பீடு கெழு – பெருமையுடைய, மன்னர் – அரசர் குறுகலோ – அணுகுதல், அரிதே –  கடினம் (அரிதே – ஏகாரம் அசைநிலை)

புறநானூறு 130, பாடியவர்உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்பாடப்பட்டோன்ஆய் அண்டிரன்திணைபாடாண்துறைஇயன் மொழி

பாடல் பின்னணி கடையெழு வள்ளல்களுள் ஒருவன் ஆய் அண்டிரன்.  அவனிடம் வந்த பரிசிலர்க்கு யானைகளை மிகுதியாக அவன் வழங்குவதைக் கண்டு பெரும் வியப்புக் கொண்டு பாடுகின்றார் முடமோசியார்.

விளங்கு மணிக் கொடும் பூண் ஆஅய், நின்னாட்டு
இளம் பிடி ஒரு சூல் பத்து ஈனும்மோ,
நின்னும் நின் மலையும் பாடி வருநர்க்கு
இன் முகம் கரவாது உவந்து நீ அளித்த
அண்ணல் யானை எண்ணின், கொங்கர்க்  5
குட கடல் ஓட்டிய ஞான்றைத்
தலைப் பெயர்த் திட்ட வேலினும் பலவே.

பொருளுரை ஒளியுடைய மணிகளால் செய்யப்பட வளைந்த அணிகலன்களை அணிந்த ஆய் அண்டிரனே!  உனது நாட்டில் இளம் பெண் யானைகள் ஒரு கர்ப்பத்தில் பத்துக் கன்றுகள் பெற்றெடுக்குமோ?  உன்னையும், உனது மலையையும் பாடி வருபவர்களுக்கு உன் இனிய முகத்தை மறைக்காமல் மனம் உவந்து, நீ அளித்த உயர்ந்த யானைகளின் எண்ணிக்கையைக் கொண்டு பார்த்தால் உன்னால்  மேற்குக் கடல் திசை நோக்கி விரட்டியடிக்கப்பட்ட கொங்கர்கள், தோற்று ஓடும் பொழுது விட்டுச் சென்ற வேல்களின் எண்ணிக்கையை விடப் பலவாகும்.

சொற்பொருள்:   விளங்கு மணி –   ஒளியுடைய மணிகள், கொடும் பூண் –  வளைந்த  அணிகலன்கள்,  ஆஅய் – ஆய் அண்டிரன் (ஆஅய் – அளபெடை), நின்னாட்டு – உனது நாட்டில், இளம் பிடி –   இளைய பெண் யானைகள், ஒரு சூல் – ஒரு கர்ப்பம், பத்து – பத்துக் கன்றுகள், ஈனும்மோ –  பெற்றெடுக்குமோ (செய்யுளோசை நோக்கி மகர ஒற்று விரிந்தது), நின்னும் – உன்னையும், நின் மலையும் – உனது மலையையும், பாடி வருநர்க்கு – பாடல் பாடி வருபவர்க்கு, இன்முகம் – இனிய முகம், கரவாது – ஒளிக்காமல், உவந்து – மனம் மகிழ்ந்து, நீ அளித்த – நீ அளித்த, அண்ணல் யானை – உயர்ந்த யானைகள், எண்ணின் – எண்ணினால், கொங்கர் – ஆய் அண்டிரனுடன் மீது போர் செய்த கொங்கர் அரசர், குட கடல் – மேற்கு திசைக் கடல் (குடக்கு – மேற்கு), ஓட்டிய – விரட்டியடிக்கப்பட்ட, ஞான்றை – நாளில் (ஞான்று – நாள்), தலைப் பெயர்த்து – அங்கிருந்து ஓடி, இட்ட – கீழே விட்டுச் சென்ற, வேலினும் – வேல்களின் எண்ணிக்கையை விட, பலவே – பல (பலவே – ஏகாரம் அசைநிலை)

புறநானூறு – 133, பாடியவர் –  உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்பாடப்பட்டோன்ஆய் அண்டிரன்திணை –  பாடாண்துறைவிறலியாற்றுப்படை

பாடல் பின்னணிஆய் அண்டிரனிடம் பாடிப் பரிசு பெற்ற ஒரு விறலி, மற்றொரு விறலியிடம் ஆய் அண்டிரனின் வண்மையைப் பற்றிக் கூறி, அவனைச் சென்று காணுமாறு வழிகாட்டி அனுப்புவதாக முடமோசியார் இயற்றிய பாடல் இது.

மெல்லியல் விறலி! நீ  நல்லிசை செவியில்
கேட்பின் அல்லது காண்பு அறியலையே,
காண்டல் வேண்டினை ஆயின், மாண்ட நின்
விரை வளர் கூந்தல் வரை வளி உளரக்
கலவ மஞ்ஞையின் காண்வர இயலி,  5
மாரியன்ன வண்மைத்
தேர் வேள் ஆயைக் காணிய சென்மே.

பொருளுரைமென்மையான இயல்புடைய விறலியே!   நீ ஆய் அண்டிரனின் புகழைப் பற்றிக் கேட்டிருப்பாய்.  ஆனால் அவனைக் கண்டிருக்க மாட்டாய்.  அவனைக் காண வேண்டும் என்று விரும்பினாய் ஆயின், அழகுடைய உன் நறுமணமான  கூந்தலை மலை காற்றுப் புகுந்து கோதிட, தோகை விரித்த மயில் போலக் காட்சியளிக்கும்படியாகச் செய்து,  மழை போல் கொடை வழங்கும் தேரை உடைய ஆய் அண்டிரனைக் காண்பதற்குச் செல்வாயாக.

சொற்பொருள்:   மெல்லியல் –  மென்மையான இயல்புடைய, விறலி – இசையும் நடனமும் புரியும் பெண்ணே, நீ – நீ, நல்லிசை – நல்ல புகழ், செவியில் – காதில்,  கேட்பின் அல்லது – கேட்டிருப்பாய் ஆனால்,  காண்பு அறியலையே – கண்டிருக்க மாட்டாய் (அறியலையே – ஏகாரம் அசைநிலை), காண்டல் – காண்பதற்கு, வேண்டினை ஆயின் – விரும்பினாய் ஆயின், மாண்ட – மாட்சிமைப் பட்ட, நின் – உனது, விரை வளர் –  நறுமணம் உடைய, கூந்தல் – கூந்தல், வரை – மலை, வளி – காற்று, உளர – கோதிட , கலவ – பீலி, இறகு, மஞ்ஞையின் – மயிலைப் போல (இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது),, காண்வர – காட்சியுண்டாக, இயலி – நடந்து, மாரி – மழை, அன்ன – போல, வண்மை – ஈகை, தேர் – தேர், வேள் ஆயை – வேள் குடியின் ஆய் அண்டிரனை, காணிய – காண்பதற்கு, சென்மே – செல்வாயாக (சென்மே – முன்னிலை ஏவல் வினைமுற்று)

புறநானூறு 134, பாடியவர்உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்பாடப்பட்டோன்ஆய் அண்டிரன்திணை–  பாடாண்துறைஇயன் மொழி

பாடல் பின்னணி:   ஆய் அண்டிரன் கடையெழு வள்ளல்களில் ஒருவன்.  கொடைத் தன்மை மிகுந்தவன். அடுத்த பிறவியின் பலன் கருதாமல் வாரி வழங்குபவன். அறச் செயல்களைச் செய்வது தான் சான்றோர் நெறி என்று உணர்ந்து தானும் அறச் செயல்களைச் செய்கின்றான் என்று இப்பாடலில் புலவர் முடமோசியார் கூறுகின்றார்.

இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம் எனும்
அற விலை வணிகன் ஆஅய் அல்லன், பிறரும்
சான்றோர் சென்ற நெறியென,
ஆங்குப்  பட்டன்று அவன் கை வண்மையே.

பொருளுரை இப்பிறவியில் செய்யும் ஈகை மறு பிறவிக்கும் நன்மை சேர்க்கும் என்று எண்ணி, நன்மை செய்து அறப் பயனை விலையாகக் கொள்ளும் அறவிலை வணிகன் அல்ல ஆய் அண்டிரன்.  சான்றோர்கள் பலரும் பின்பற்றிய, நல்வழி என்று உலகத்தார் கருதும்படியான அந்த உயர்ந்த வழியையே தனது வழியாகக் கொண்டது அவனது கொடைச் செயல்கள்.

குறிப்புஅறவிலை வணிகன் (2) – ஒளவை துரைசாமி உரை – மறுமைப் பயன் அறப்பயனாதலின் இம்மையில் நலம் செய்து மறுமையில் இன்பம் கருதுவோரை ‘அறவிலை வணிகன்’ என்றார்.

சொற்பொருள்இம்மை – இப்பிறவியில், செய்தது – செய்தது, மறுமைக்கு – மறு   பிறவிக்கும், ஆம் – ஆகும் (இடைக்குறை, ஆகும் என்பது ஆம் என நின்றது), எனும் – என்னும், அறவிலை வணிகன் – நன்மை செய்து அறத்தை விலையாக கொள்பவன், ஆஅய் – ஆய் அண்டிரன்(அளபெடை), அல்லன் – இல்லை, பிறரும் – பிறரும், சான்றோர் – சான்றோர்கள், சென்ற – பின்பற்றிய,  நெறியென –  நல்ல வழி என்று, ஆங்கு – அந்த, பட்டன்று –  வழிப்பட்டது,  அவன் கை – அவனது கையின், வண்மையே – ஈகைத் தன்மை (ஏகாரம் அசைநிலை)

புறநானூறு 139, பாடியவர்: மருதன் இளநாகனார், பாடப்பட்டோன்: நாஞ்சில் வள்ளுவன், திணை: பாடாண். துறை: பரிசில் கடாநிலை

பாடல் பின்னணி:  நாஞ்சில் வள்ளுவன் சேர மன்னனுக்குக் கீழ் இருந்த குறுநில மன்னன். குறுநில மன்னர்களில் சிலர் மூவேந்தர்களுக்கு அடியில் இருந்துள்ளனர். அவர்களுடைய ஆதரவையும் பெற்றுள்ளனர். புலவர் மருதன் இளநாகனார் நாஞ்சில் வள்ளுவனிடம் பரிசில் வேண்டிச் சென்றார்.

சுவல் அழுந்தப் பல காய
சில் ஓதிப் பல் இளைஞருமே,
அடி வருந்த நெடிது ஏறிய
கொடி மருங்குல் விறலியருமே,
வாழ்தல் வேண்டிப்  5
பொய் கூறேன், மெய் கூறுவல்,
ஓடாப் பூட்கை உரவோர் மருக,
உயர் சிமைய உழாஅ நாஞ்சில் பொருந,
மாயா உள்ளமொடு, பரிசில் துன்னிக்
கனி பதம் பார்க்கும் காலையன்றே,  10
ஈதல் ஆனான் வேந்தே, வேந்தற்குச்
சாதல் அஞ்சாய் நீயே, ஆயிடை,
இரு நிலம் மிளிர்ந்திசினாஅங்கு ஒரு நாள்
அருஞ்சமம் வருகுவதாயின்,
வருந்தலும் உண்டு, என் பைதலம் கடும்பே.  15

பொருளுரை தோளில் அழுந்தியதால் பல காயங்களுடைய சிலவாகிய மயிரையுடைய என்னுடைய பல இளைஞர்களும், தங்கள் காலடி வருந்த நீண்ட பொழுது மலையில் ஏறிய விறலியரும், வாழ்தலை விரும்பி நான் பொய்யைக் கூற மாட்டேன். மெய்யைக் கூறுவேன். புறமுதுகிட்டு ஓடாத வலியர்களின் வழித் தோன்றலே! உயர்ந்த உச்சியையுடைய உழாத நாஞ்சில் மலையின் தலைவனே! பரிசுக்கான பொருத்தமான வேளை இது என்று நீ எண்ணும் காலம் இது இல்லை. உனக்கு விடாது தருகின்றான் உன் சேர மன்னன். அவனுக்காகச் சாவதற்கு அஞ்சாதவன் நீ. அவ்விடத்தில், பெரிய நிலம் பிறழ்ந்தாற் போல், ஒரு நாள் அரிய போர் வருவதானால், என் சுற்றத்தார் வருந்துவதுவார்கள்.

குறிப்புஉழாஅ நாஞ்சில் (8) – உழுகின்ற கலப்பையின் பெயரையுடைய, நாஞ்சில் மலை,  நாஞ்சில் மலைக்கு வெளிப்படை.

சொற்பொருள்சுவல் அழுந்தப் பல காய – தோளில் அழுந்தியதால் பல காயங்களுடைய, சில் ஓதிப் பல் இளைஞருமே – சிலவாகிய மயிரையுடைய பல இளைஞர்களும் (இளைஞருமே – ஏகாரம் அசைநிலை), அடி வருந்த நெடிது ஏறிய கொடி மருங்குல் விறலியருமே – தங்கள் காலடி வருந்த நீண்ட பொழுது ஏறிய விறலியரும், வாழ்தல் வேண்டிப் பொய் கூறேன் – வாழ்தலை விரும்பி பொய்யைக் கூற மாட்டேன், மெய் கூறுவல் – மெய்யைக் கூறுவேன், ஓடாப் பூட்கை உரவோர் மருக – புறமுதுகிட்டு ஓடாத வலியர்களின் வழித் தோன்றலே, உயர் சிமைய உழாஅ நாஞ்சில் பொருந – உயர்ந்த உச்சியையுடைய உழாத நாஞ்சில் மலையின் தலைவனே (உழாஅ – அளபெடை), மாயா உள்ளமொடு – மறவாத உள்ளத்துடன்,பரிசில் துன்னி – பரிசுக்காக வந்து, கனி பதம் பார்க்கும் காலை அன்றே – ஏற்ற வேளை இல்லை (அன்றே – ஏகாரம் அசைநிலை, ஈதல் ஆனான் வேந்தே – உனக்கு விடாது தருகின்றான் உன் மன்னன், வேந்தற்குச் சாதல் அஞ்சாய் நீயே – உன்னுடைய மன்னனுக்காக சாவதற்கு அஞ்சாதவன் நீ, ஆயிடை – அவ்விடத்தில், இரு நிலம் மிளிர்ந்திசினாஅங்கு – பெரிய நிலம் பிறழ்ந்தாற் போல் (மிளிர்ந்திசினாஅங்கு – அளபெடை), ஒரு நாள் – ஒரு நாள், அருஞ்சமம் வருகுவதாயின் – அரிய போர் வருவதானால், வருந்தலும் உண்டு – வருந்துவது உண்டு, என் பைதலம் கடும்பே – என் வருந்தும் சுற்றத்தார் (கடும்பே – ஏகாரம் அசைநிலை)

புறநானூறு 142, பாடியவர்பரணர்பாடப்பட்டோன்வையாவிக் கோப்பெரும் பேகன்திணைபாடாண்துறைஇயன் மொழி

பாடல் பின்னணிவையாவிக் கோப்பெரும் பேகன் கடையெழு வள்ளல்களில் ஒருவன்.  அவனுடைய கொடைத் தன்மையையும் போர்த் தன்மையையும் இந்தப் பாடலில் பரணர் புகழ்கின்றார்.

அறு குளத்து உகுத்தும், அகல் வயல் பொழிந்தும்,
உறுமிடத்து உதவாது உவர் நிலம் ஊட்டியும்,
வரையா மரபின்  மாரி போலக்,
கடாஅ  யானைக் கழல் கால் பேகன்
கொடை மடம் படுதல் அல்லது,  5
படை மடம் படான், பிறர் படை  மயக்குறினே.

பொருளுரை வற்றிய குளங்களில் பெய்தும், அகன்ற வயல்களில் பொழிந்தும், இவ்வாறு பயன்படும் இடங்களுக்கு மட்டும் உதவாமல், எதுவும் விளையாத களர் நிலத்தையும் நிறைத்து வரையறை இல்லாத மரபினை உடைய மழையைப் போன்றது பேகனின் கொடைத்தன்மை.   அவன் ஆராயாமல் பரிசளிப்பதால் கொடைமடம் கொண்டவன் எனக் கருதப்படலாம்.  ஆனால் மதம் கொண்ட யானைகளையும் வீரக்கழல் அணிந்த கால்களையும் உடைய பேகன்,  பிறர் படையுடன் வந்து போரிட்டால் அறநெறியிலிருந்து தவற மாட்டான்.  போரிடுவான்.  அவன் படை மடமை கொண்டவன் இல்லை.

சொற்பொருள்:   அறு குளத்து –  வற்றிய குளத்தில், உகுத்தும் – பெய்தும், அகல் வயல் –  அகன்ற வயல்களில், பொழிந்தும் – பொழிந்தும், உறுமிடத்து உதவாது – பயன்படும் இடங்களுக்கு மட்டும் உதவாமல், உவர் நிலம் – ஏதும் விளையாத களர் நிலம், ஊட்டியும் – நீர் ஊற்றியும், வரையா மரபின் – எல்லையில்லாத மரபினை உடைய, மாரி – மழை, போல – போல, கடாஅ – கடாம் – மதம் கொண்ட (கடாஅ – அளபெடை), யானை – யானை,  கழல் கால் – வீரக்கழல் அணிந்த கால்கள், பேகன் – வையாவிக் கோப்பெரும் பேகன், கொடை மடம்படுதல் – கொடை வழங்குமிடத்தில் அறியாமை அடைதல், அல்லது – இல்லாது, படை மடம்படான் – போர் மடமை இல்லான், பிறர் படை – பிறரின் படை, மயக்குறினே  – போரிடக் கலந்தால் (மயக்குறினே – ஏகாரம் அசைநிலை)

புறநானூறு 143, பாடியவர்: கபிலர், பாடப்பட்டோன்: வையாவிக் கோப்பெரும் பேகன், திணை: பெருந்திணை, துறை: குறுங்கலி, தாபத நிலை

பாடல் பின்னணி:   கடையெழு வள்ளல்களுள் ஒருவனான பேகன் வேறு ஒரு பெண்ணிடம் உறவு கொண்டதால் தன் மனைவியைப் பிரிந்திருந்தான்.  அப்பொழுது கபிலர் அவனைக் கண்டு இவ்வாறு பாடினார்.

“மலைவான் கொள்க!” என உயர் பலி தூஉய்,
“மாரி ஆன்று மழை மேக்கு உயர்க” எனக்
கடவுள் பேணிய குறவர் மாக்கள்,
பெயல் கண் மாறிய உவகையர் சாரல்
புனத் தினை அயிலும் நாட! சினப் போர்க்  5
கைவள் ஈகைக் கடு மான் பேக!
யார் கொல் அளியள் தானே, நெருநல்
சுரன் உழந்து வருந்திய ஒக்கல் பசித்தெனக்
குணில் பாய் முரசின் இரங்கும் அருவி
நளி இருஞ்சிலம்பின் சீறூர் ஆங்கண்,  10
வாயில் தோன்றி வாழ்த்தி நின்று
நின்னும் நின் மலையும் பாட, இன்னாது
இகுத்த கண்ணீர் நிறுத்தல் செல்லாள்,
முலையகம் நனைப்ப விம்மிக்,
குழல் இனைவது போல் அழுதனள் பெரிதே.  15

பொருளுரை தங்கள் மலையை மழை வந்து சூழ வேண்டும் என்று மிக்க பலியைத் தூவி, பின் மழை மிகுதியாகப் பெய்ததால் முகில்கள் மேலே போகவேண்டுமெனக் கடவுளைப் போற்றிய மலைக் குறவர்கள், மழையின் நிலைமை மாறியதால் உவகை அடைந்தவர்களாய், மலைச் சரிவில் புனத்தில் விளையும் தினையை உண்ணும் நாடனே!

சினத்தினால் செய்யும் போரையும், கொடைத் தன்மையும் உடைய, விரைந்து செல்லும் குதிரைகளையுடைய பேகனே! யார் அந்த அளியத்தக்கவள்? நேற்று, சுரத்தில் நடந்து வருந்திய என்னுடைய சுற்றத்திற்கு ஏற்பட்ட பசியினால், கோலால் அடிக்கப்பட்ட முரசைப்போல் ஒலிக்கும் அருவியையுடைய பெரிய உயர்ந்த மலையையுடைய சிற்றூரில், உன் வாயிலில் தோன்றி உன்னையும் உன் மலையையும் வாழ்த்தி நான் பாடினேன்.  அப்பொழுது வருந்தி வடித்த கண்ணீரை அவள் நிறுத்தவில்லை.  தன்னுடைய முலைகள் நனைய விம்மி அழுது, குழல் ஒலிப்பதுபோல் மிகவும் அழுதாள்.

குறிப்புஒளவை துரைசாமி உரை – பேகனால் துறக்கப்பட்ட கண்ணகியை அவனோடு கூட்டலுறுவார் அருளப்பண்ண வேண்டும் என இரந்துகொண்டு கூறினமையின் குறுங்கலி ஆயிற்று. நற்றிணை 113 – பெருங்களத்து இயவர் ஊதும் ஆம்பல் அம் குழலின் ஏங்கி கலங்கு அஞர் உறுவோள் புலம்பு கொள் நோக்கே.  நற்றிணை 165 – அணங்கொடு நின்றது மலை வான் கொள்க எனக் கடவுள் ஓங்கு வரை பேண்மார் வேட்டு எழுந்து கிளையொடு மகிழும் குன்ற நாடன்.

சொற்பொருள்:   மலைவான் கொள்க என – மலையை மழை வந்து சூழ வேண்டும் என்று, உயர் பலி தூஉய் – மிக்க பலியைத் தூவி (தூஉய் – அளபெடை), மாரி ஆன்று மழை மேக்கு உயர்க என – மழை மிகுதியாகப் பெய்ததால் முகில்கள் மேலே போகவேண்டுமென, கடவுள் பேணிய குறவர் மாக்கள் – கடவுளைப் போற்றிய மலைக் குறவர்கள் (குறவர் மாக்கள் – இருபெயரொட்டுப் பண்புத்தொகை), பெயல் கண் மாறிய உவகையர் – மழை மாறியதால் உவகை அடைந்தவர்கள், சாரல் புனத் தினை அயிலும் நாட – மலைச் சரிவில் புனத்தில் விளையும் தினையை உண்ணும் நாடனே, சினப் போர்க் கைவள் ஈகைக் கடு மான் பேக – சினத்தினால் செய்யும் போரையும் கொடைத் தன்மையும் உடைய விரைந்து செல்லும் குதிரைகளையுடைய பேகனே, யார் கொல் அளியள் தானே – யார் அந்த அளியத்தக்கவள், நெருநல் – நேற்று, சுரன் உழந்து வருந்திய ஒக்கல் பசித்தென – சுரத்தில் நடந்து வருந்திய என்னுடைய சுற்றத்திற்கு ஏற்பட்ட பசியினால் (சுரன் – சுரம் என்பதன் போலி), குணில் பாய் முரசின் – கோலால் அடிக்கப்பட்ட முரசைப்போல் முரசின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது, இரங்கும் அருவி – ஒலிக்கும் அருவி, நளி இருஞ்சிலம்பின் சீறூர் – பெரிய உயர்ந்த மலையையுடைய சிற்றூர், ஆங்கண் – அங்கே, வாயில் தோன்றி வாழ்த்தி நின்று நின்னும் நின் மலையும் பாட – உன் வாயிலில் தோன்றி உன்னையும் உன் மலையையும் வாழ்த்தி நான் பாடினேன், இன்னாது இகுத்த கண்ணீர் நிறுத்தல் செல்லாள் – அப்பொழுது வருந்தி வடித்த கண்ணீரை அவள் நிறுத்தவில்லை, முலையகம் நனைப்ப விம்மி – முலைகள் நனைய விம்மி அழுது, குழல் இனைவது போல் அழுதனள் பெரிதே – குழல் ஒலிப்பதுபோல் மிகவும் அழுதாள் (பெரிதே – ஏகாரம் அசைநிலை)

புறநானூறு 144, பாடியவர்: பரணர், பாடப்பட்டோன்: வையாவிக் கோப்பெரும் பேகன், திணை: பெருந்திணை, துறை: குறுங்கலி, தாபத நிலை

பாடல் பின்னணி:   கண்ணகியாரைக் கைதுறந்து ஒழுகும் பேகனின் புறத்தொழுக்கத்தைக் கேள்வியுற்ற பரணர் பேகனிடம் பாடியது இது.

அருளாய் ஆகலோ கொடிதே! இருள் வரச்
சீறியாழ் செவ்வழி பண்ணி, யாழ நின்
கார் எதிர் கானம் பாடினேமாக,
நீல் நறு நெய்தலின் பொலிந்த உண்கண்
கலுழ்ந்து வார் அரிப் பனி பூண் அகம் நனைப்ப,  5
இனைதல் ஆனாளாக, “இளையோய்!
கிளையை மன் எம் கேள் வெய்யோற்கு” என
யாம் தன் தொழுதனம் வினவக், காந்தள்
முகை புரை விரலின் கண்ணீர் துடையா,
“யாம் அவன் கிளைஞரேம் அல்லேம், கேள்! இனி 10
எம் போல் ஒருத்தி நலன் நயந்து, என்றும்
வரூஉம் என்ப வயங்கு புகழ்ப் பேகன்
ஒல்லென ஒலிக்கும் தேரொடு
முல்லை வேலி நல்லூரானே”.

பொருளுரை நீ அவளுக்கு அருள் செய்யாதது கொடிது.  இருள் சூழ்ந்த மாலை வேளையில் சிறிய யாழில் இரங்கல் பண்ணாகிய செவ்வழியில், மழையை ஏற்றுக்கொண்ட உன் காட்டினைப் பாடினோம் ஆக, நீல நிற நெய்தல் மலரைப்போன்ற பொலிந்த மையிட்ட கண்கள் கலங்கி விழுந்த இடைவிட்ட கண்ணீர்த் துளிகள் அணிகலன் அணிந்த மார்பை நனைப்ப, வருந்தி அமையாதவளாக அவள் இருந்தாள். “இளையவளே! நீ உறவினளா எம் நட்பை விரும்புவோனுக்கு?” என்று நாங்கள் அவளை வணங்கி வினவ, அவள் தன் காந்தள் அரும்புப் போலும் விரலாலே தன் கண்ணீரைத் துடைத்து, “நான் அவன் உறவினள் இல்லை. கேள்! இப்பொழுது என்னை ஒத்த ஒருவளின் அழகை விரும்பி, முல்லை வேலியையுடைய நல்லூரின்கண் விளங்கும் புகழையுடைய பேகன் ஒல்லென ஒலிக்கும் தேருடன் எந்நாளும் வருகின்றான் என்று கூறுகின்றனர்.

குறிப்புகிளையை (7) – உ. வே. சாமிநாதையர் உரை – கிளையையோ என ஓகாரமும் என்றாள் என்ற ஒருசொல்லும் வருவித்துரைக்கப்பட்டன.  துடையா – துடைத்து என்பது பொருள்.  செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம்.  எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது.

சொற்பொருள்:   அருளாய் ஆகலோ கொடிதே – நீ அவளுக்கு அருள் செய்யாதது கொடிது (ஆகலோ – ஓகாரம் அசைநிலை, கொடிதே – ஏகாரம் அசைநிலை) இருள் வரச் சீறியாழ் செவ்வழி பண்ணி – மாலை வேளையில் சிறிய யாழில் இரங்கல் பண்ணாகிய செவ்வழியில், யாழ – அசைநிலை, நின் கார் எதிர் கானம் பாடினேமாக – மழையை ஏற்றுக்கொண்ட உன் காட்டினைப் பாடினோம் ஆக , நீல் நறு நெய்தலின் பொலிந்த உண்கண் – நீல நிற நெய்தல் மலரைப்போன்ற பொலிந்த மையிட்ட கண்கள் (நீல் – கடைக்குறை, நெய்தலின்- இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), கலுழ்ந்து வார் அரிப் பனி பூண் அகம் நனைப்ப – கலங்கி விழுந்த இடைவிட்ட கண்ணீர்த் துளிகள் அணிகலன் அணிந்த மார்பை நனைப்ப, இனைதல் ஆனாளாக – வருந்தி அமையாதவளாக, இளையோய் கிளையை மன் எம் கேள் வெய்யோற்கு – இளையவளே நீ உறவு உடையவளோ எம் நட்பை விரும்புவோனுக்கு (மன் – ஒழியிசைப் பொருளில் வந்த இடைச்சொல்), என யாம் தன் தொழுதனம் வினவ – என்று நாங்கள் வணங்கி வினவ (யாம், தொழுதனம் – தன்மைப் பன்மை), காந்தள் முகை புரை விரலின் கண்ணீர் துடையா – தன் காந்தள் அரும்புப் போலும் விரலாலே தன் கண்ணீரைத் துடைத்து (துடையா – துடைத்து), யாம் அவன் கிளைஞரேம் அல்லேம் – நான் அவன் உறவினள் இல்லை, கேள் – கேட்பாயாக, இனி எம் போல் ஒருத்தி நலன் நயந்து – இப்பொழுது என்னை ஒத்த ஒருவளின் அழகை விரும்பி, என்றும் வரூஉம் என்ப – எந்நாளும் வருகின்றான் என்று கூறுகின்றனர் (வரூஉம் – அளபெடை), வயங்கு புகழ்ப் பேகன் – விளங்கும் புகழையுடைய பேகன், ஒல்லென ஒலிக்கும் தேரொடு – ஒல்லென ஒலிக்கும் தேருடன், முல்லை வேலி நல்லூரானே – முல்லை வேலியையுடைய நல்லூரின்கண் (நல்லூரானே – ஏகாரம் அசைநிலை)

புறநானூறு 145, பாடியவர்பரணர்பாடப்பட்டோன்வையாவிக் கோப்பெரும் பேகன்திணைபெருந்திணைதுறைகுறுங்கலி

பாடல் பின்னணி:   கடையெழு வள்ளல்களுள் ஒருவனான பேகன் வேறு ஒரு பெண்ணிடம் உறவு கொண்டதால் தன் மனைவியைப் பிரிந்திருந்தான்.  அந்த நேரத்தில் பரணர் பேகனிடம் சென்று பாடினார்.  அவருக்குப் பேகன் பரிசில் அளிக்க முன்வந்தான்.  அதைக் கண்ட பரணர், “நான் பசியால் இங்கு வரவில்லை.  எனக்குப் பாரமும் கிடையாது.  நான் வேண்டும் பரிசு, நீ இன்று இரவே சென்று உன் மனைவியின் துயரத்தைத் தீர்ப்பது தான்” என்று கூறுகின்றார்.

மடத்தகை மாமயில் பனிக்கும் என்று அருளிப்
படாஅம் ஈத்த கெடாஅ நல்லிசைக்
கடாஅ யானைக் கலிமான் பேக!
பசித்தும் வாரோம், பாரமும் இலமே,
களங்கனியன்ன கருங்கோட்டுச் சீறியாழ்  5
நயம் புரிந்து உறையுநர் நடுங்கப் பண்ணி,
அறம் செய்தீமோ, அருள் வெய்யோய் என
இஃது யாம் இரந்த பரிசில் அஃது, இருளின்
இன மணி நெடுந்தேர் ஏறி
இன்னாது உறைவி அரும் படர் களைமே.  10

பொருளுரை மென்மையான தகைமையும், கருமை நிறமும் உள்ள மயில் குளிரால் நடுங்குவதாக எண்ணி அருள் செய்து அதற்குப் போர்வையைக் கொடுத்து அழியாத நல்ல புகழைப் பெற்ற, மதம் கொண்ட யானைகளையும் செருக்குடைய குதிரைகளையும் கொண்ட பேகனே!  நான் பசியுடன் வரவில்லை.  சுற்றத்தாரைக் காக்கும் பாரமும் எனக்குக் கிடையாது.  களாப்பழம் போன்ற கரிய நிறத் தண்டை உடைய சிறிய யாழின் இசை நயம் தெரிந்தோர், தலையசைத்துக் கேட்குமாறு ‘அறம் செய்க, அருளை விரும்புபவனே!’ எனப் பாடி உன்னிடம் நான் கேட்பது என்னவென்றால், இந்த இரவிலேயே நிறைந்த மணிகளுடைய பெரிய தேரில் நீ ஏறிச் சென்று, துயரத்துடன் வாழும் உன் மனைவியின் பெரும் துன்பத்தைக் களைய வேண்டும் என்பது தான்.

குறிப்புபடாஅம் – அளபெடை, கெடாஅ – அளபெடை, கடாஅ – அளபெடை, வாரேம் – தன்மைப் பன்மை, இலமே – தன்மைப் பன்மை, யாம் – தன்மைப் பன்மை, களைமே – முன்னிலை எதிர்மறை முற்றுவினைத் திரிசொல்.

சொற்பொருள்:   மடத் தகை – மென்மையான தகைமை, மா மயில் –  கருமை நிற மயில், பனிக்கும் – குளிரால் நடுங்கும், என்று – என்று எண்ணி, அருளி – அருள் செய்து, படாஅம்  – போர்வை (அளபெடை), ஈத்த – கொடுத்த, கெடாஅ – கெடாத (அளபெடை),  நல் இசை – நல்ல புகழ், கடாஅ – மதம் கொண்ட, யானை – யானை, கலி – செருக்கு, மான்  – குதிரை, பேக – பேகனே, பசித்தும் – பசியுடன், வாரோம் – யாம் வரவில்லை (தன்மைப் பன்மை), பாரமும் – சுமையும், இலமே – யாம் இல்லை (தன்மைப் பன்மை), களங்கனி – களாப்பழம், அன்ன – போன்ற, கருங்கோட்டு –  கரிய நிறத்துத் தண்டை உடைய, சீறியாழ் – சிறிய யாழை, நயம் – இசையின் தன்மை, புரிந்து –   தெரிந்து, உறையுநர் – வாழ்வோர், நடுங்கப் பண்ணி – தலையை அசைத்துக் கொண்டாடும்படி, அறம் செய்தீமோ – அறத்தை செய்வாயாக (தீ, மோ – முன்னிலையசைகள்), அருள் வெய்யோய் – அருளை விரும்புபவனே, என – என்று, இஃது யாம் – இது யாம் (தன்மைப் பன்மை), இரந்த – வேண்டும், பரிசில் – பரிசு, அஃது – அது, இருளின் – இரவில், இனமணி – நிறைய மணியை உடைய, நெடுந்தேர் – பெரிய தேர்,  ஏறி – ஏறி, இன்னாது – துன்பத்தில், உறைவி – உறைபவள், மனைவி, அரும் படர் – பெரும் துன்பம், களைமே –  களைவாயாக (களைமே – முன்னிலை எதிர்மறை முற்றுவினைத் திரிசொல்)

புறநானூறு 146, பாடியவர்: அரிசில் கிழார், பாடப்பட்டோன்: வையாவிக் கோப்பெரும் பேகன், திணை: பெருந்திணை, துறை: குறுங்கலி, தாபத நிலை

பாடல் பின்னணி:   சான்றோராகிய அரிசில் கிழார் பாடக் கேட்ட பேகன் பரிசில் அளிக்க முன்வந்தான். அதை அறிந்த அரிசில் கிழார் இவ்வாறு பாடுகின்றார்.

அன்னவாக நின் அருங்கல வெறுக்கை
அவை பெறல் வேண்டேம் அடு போர்ப் பேக!
சீறியாழ் செவ்வழி பண்ணி நின் வன்புல
நன்னாடு பாட என்னை நயந்து
பரிசில் நல்குவையாயின், குரிசில், நீ  5
நல்காமையின் நைவரச் சாஅய்,
அருந்துயர் உழக்கும், நின் திருந்திழை அரிவை
கலி மயில் கலாவம் கால் குவித்தன்ன
ஒலிமென் கூந்தல் கமழ் புகை கொளீஇத்
தண் கமழ் கோதை புனைய,  10
வண் பரி நெடுந்தேர் பூண்க நின் மாவே.

பொருளுரை அத்தன்மையுடையவாக, உன்னால் தரப்பட்ட பெறுதற்கு அரிய அணிகலனையும் செல்வத்தையும் பெறும் விருப்பம் எமக்கு இல்லை, கொல்லும் போரினைப் புரியும் பேகனே!  சிறிய யாழில் செவ்வழிப் பண்ணை இசைத்து, உன்னுடைய வலிய நாடான மலைநாட்டை நான் பாட, என்னை விரும்பி நீ பரிசில் தருவாயாயின், தலைவனே, நீ அருள் புரியாமையால், கண்டவர்கள் இரங்க மெலிந்து, அரிய துயரத்தால் வருந்தும் திருந்திய அணிகலன் அணிந்த உன்னுடைய இளைய மனைவி, தழைத்த மயிலின் தோகை காற்றில் குவிந்தாற்போல் உள்ள தன் அடர்ந்த மென்கூந்தலில் நறுமணம் கமழும் புகையை ஊட்டி, குளிர்ந்த மணங்கமழும் மாலையைச் சூடுமாறு, விரைந்து செல்லும் குதிரைகளை உன்னுடைய உயர்ந்த தேரில் பூட்டுவாயாக!

குறிப்புவேண்டேம் – தன்மைப் பன்மை, சாஅய் – அளபெடை, கொளீஇ – அளபெடை, மாவே – ஏகாரம் அசைநிலை.

சொற்பொருள்:   அன்னவாக – அத்தன்மையுடையவாக, நின் அருங்கல வெறுக்கை – உன்னால் தரப்பட்ட பெறுதற்கு அரிய அணிகலனும் செல்வமும், அவை பெறல் வேண்டேம் – அவற்றைப் பெறுவதில் எமக்கு விருப்பம் இல்லை (வேண்டேம் – தன்மைப் பன்மை), அடு போர்ப் பேக – கொல்லும் போரினைப் புரியும் பேகனே, சீறியாழ் செவ்வழி பண்ணி – சிறிய யாழில் செவ்வழியாகப் பண்ணி இசைத்து, நின் வன்புல நன்னாடு பாட – உன்னுடைய வலிய நாடான மலைநாட்டைப் பாட, என்னை நயந்து பரிசில் நல்குவையாயின் – என்னை விரும்பி நீ பரிசில் தருவாயாயின், குரிசில் – தலைவனே, நீ நல்காமையின் – நீ அருள் புரியாமையால், நைவரச் சாஅய் – கண்டவர்கள் இரங்க மெலிந்து (சாஅய் – அளபெடை), அருந்துயர் உழக்கும் – அரிய துயரத்தால் வருந்தும், நின் திருந்திழை அரிவை – திருந்திய அணிகலன் அணிந்த உன்னுடைய இளைய மனைவி, கலி மயில் கலாவம் கால் குவித்தன்ன – தழைத்த மயிலின் தோகை காற்றில் குவிந்தாற்போல், ஒலிமென் கூந்தல் – அடர்ந்த மென்கூந்தல், கமழ் புகை கொளீஇ – மணம் கமழும் புகையை ஊட்டி (கொளீஇ – அளபெடை), தண் கமழ் கோதை புனைய – குளிர்ந்த மணங்கமழும் மாலையை அணிய, வண் பரி நெடுந்தேர் பூண்க நின் மாவே – விரைந்து செல்லும் குதிரைகளை உன்னுடைய உயர்ந்த தேரில் பூட்டுவாயாக (மாவே – ஏகாரம் அசைநிலை)

புறநானூறு 147, பாடியவர்: பெருங்குன்றூர் கிழார், பாடப்பட்டோன்: வையாவிக் கோப்பெரும் பேகன், திணை: பெருந்திணை, துறை: குறுங்கலி, தாபத நிலை

பாடல் பின்னணி:   பெருங்குன்றூர் கிழார் பேகனை மனைவியிடம் செல்லுமாறு வேண்டுகின்றார் இப்பாடலில்.

கல் முழை அருவிப் பன் மலை நீந்திச்,
சீறியாழ் செவ்வழி பண்ணி வந்ததைக்
கார் வான் இன் உறை தமியள் கேளா,
நெருநல் ஒரு சிறைப் புலம்பு கொண்டு உறையும்
அரி மதர் மழைக் கண் அம் மா அரிவை  5
நெய்யொடு துறந்த மை இருங்கூந்தல்
மண்ணுறு மணியின் மாசு அற மண்ணிப்,
புது மலர் கஞல இன்று பெயரின்,
அது மன் எம் பரிசில் ஆவியர் கோவே.

குறிப்புகேளா – கேட்டு என்பது பொருள். செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம்.  எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது.  உறை – துளி, ஆகுபெயரால் துளி ஓசை.

பொருளுரை மலைக் குகைகளிருந்து வடியும் அருவிகளையுடைய பல மலைகளைக் கடந்து, என்னுடைய சிறிய யாழில் செவ்வழி என்னும் பண்ணை இசைக்கும்படி பண்ணி நான் வந்ததற்கு, கார்காலத்தின் மழையினது இனிய துளி விழும் ஓசையை நேற்று ஒரு பக்கத்தில் தனிமையில் கேட்டு இருந்த, அரி படர்ந்த குளிர்ச்சியுடைய கண்களையுடைய அழகிய மாமை நிறத்தினையுடைய உன்னுடைய இளைய மனைவி, அவளுடைய நெய்யால் துறக்கப்பட்ட மைபோலும் கரிய கூந்தலை நீலமணியைப் போன்று மாசு இல்லாமல் கழுவி, அதில் புதிய மலர்கள் அணியும்படி, இன்று அவளிடம் செல்வாயாயின், அதுவே நீ எமக்கு அளிக்கும் பரிசு, ஆவியர் குடியின் வேந்தே!

சொற்பொருள்:  கல் முழை அருவிப் பன் மலை நீந்தி – மலைக் குகைகளிருந்து வடியும் அருவிகளையுடைய பல மலைகளைக் கடந்து, சீறியாழ் செவ்வழி பண்ணி வந்ததை – என்னுடைய சிறிய யாழில் செவ்வழி என்னும் பண்ணை இசைக்கும்படி பண்ணி நான் வந்ததற்கு, கார் வான் இன் உறை தமியள் கேளா நெருநல் ஒரு சிறைப் புலம்பு கொண்டு உறையும் – கார்காலத்தின் மழையினது இனிய துளி விழும் ஓசையை நேற்று ஒரு பக்கத்தில் தனிமையில் கேட்டு இருந்த (உறை – துளி, ஆகுபெயரால் துளியோசை), அரி மதர் மழைக் கண் அம் மா அரிவை – அரி படர்ந்த குளிர்ச்சியுடைய கண்களையுடைய அழகிய மாமை நிறத்தினையுடைய உன்னுடைய இளைய மனைவி, நெய்யொடு துறந்த மை இருங்கூந்தல் – அவளுடைய நெய்யால் துறக்கப்பட்ட மைபோலும் கரிய கூந்தலை, மண்ணுறு மணியின் மாசு அற மண்ணி – நீலமணியைப் போன்று மாசு இல்லாமல் கழுவி (மணியின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), புது மலர் கஞல – அதில் புதிய மலர்கள் அணியும்படி, இன்று பெயரின்- இன்று அவளிடம் செல்வாயாயின், அது மன் எம் பரிசில் ஆவியர் கோவே – அதுவே நீ எமக்கு அளிக்கும் பரிசு, ஆவியர் குடியின் வேந்தே (மன் – அசை, கோவே – ஏகாரம் அசைநிலை)

புறநானூறு 148, பாடியவர்வன்பரணர்பாடப்பட்டோன்  –  கண்டீரக் கோப்பெரு நள்ளிதிணைபாடாண்துறை –  பரிசில் துறை

பாடல் பின்னணி கடையெழு வள்ளல்களுள் ஒருவன் கண்டீரக் கோப்பெருநள்ளி.   ஒருமுறை புலவர் வன்பரணர் நள்ளியிடம் சென்று அவனது கொடைத் தன்மையைப் பாராட்ட, அத்தகைய பாராட்டிற்குத் தான் தகுதி படைத்தவனோ என நள்ளி ஐயமுற்றான்.  அவனது  ஐயத்திற்குப் பதிலளிக்க வன்பரணர் இயற்றிய பாடல் இது.

கறங்கு மிசை அருவிய பிறங்கு மலை நள்ளி! நின்
அசைவு இல் நோந்தாள் நசை வளன் ஏத்தி
நாடொறும் நன்கலம் களிற்றொடு  கொணர்ந்து
கூடு விளங்கு வியன் நகர்ப்  பரிசில் முற்று அளிப்பப்,
பீடு  இல் மன்னர்ப் புகழ்ச்சி வேண்டிச்  5
செய்யா கூறிக் கிளத்தல்,
எய்யாதாகின்று எம் சிறு செந்நாவே.

பொருளுரை பெரும் ஒலியுடன் மேலிருந்து ஆர்ப்பரித்து விழும் அருவிகளையுடைய  மலையை ஆளும் நள்ளி!   உன் தளர்வு இல்லாத வலிமையான முயற்சியால் திரட்டிய விரும்பத்தக்க செல்வத்தை வாழ்த்தி, நாள்தோறும் நல்ல அணிகலன்களை யானையோடு கொண்டு வந்து நெற்குதிர்கள் நிறைந்து விளங்கும் பெரிய நகரில் பரிசாக முழுவதையும் அளிக்கின்றாய்.   பெருமை இல்லாத மன்னர்களைப் புகழ்வதற்கு வேண்டி, அவர்கள் செய்யாதவற்றை வியந்து கூறுவதை அறியாது, என்னுடைய சிறிய நேர்மையான நாக்கு.

சொற்பொருள்:   கறங்கு – ஒலி, மிசை – மேல், அருவிய – அருவியை உடைய, பிறங்கு மலை – உயர்ந்த மலை, ஒளியுடைய மலை, நள்ளி – நள்ளி, நின் – உன், அசைவு இல் – தளர்வு இல்லாத, நோந்தாள்  – வலிமையான முயற்சி, நசை – விருப்பம், வளன் –  செல்வம், ஏத்தி – புகழ்ந்து, நாடொறும் – நாள்தோறும்,  நன்கலம் –  நல்ல அணிகலன், களிற்றொடு – யானையோடு, கொணர்ந்து – கொண்டு வந்து, கூடு – நெற்குதிர், விளங்கு – விளங்கும், வியன் நகர் – பெரிய ஊர், பெரிய இல்லம், பரிசில் முற்று அளிப்ப – பரிசாக முழுவதையும் அளிப்பதால், பீடு இல் –  பெருமை இல்லாத, மன்னர் – மன்னர்களை, புகழ்ச்சி – புகழ்வதற்கு, வேண்டி – வேண்டி, செய்யா – செய்யாதவற்றை,  கூறி – கூறி, கிளத்தல் – பேசுதல், எய்யாதாகின்று – அறியாததாக ஆயிற்று, எம் – என் (எம் – தன்மைப் பன்மை), சிறு – சிறிய, செந்நாவே – நேர்மையான நாக்கு (செந்நாவே – ஏகாரம் அசைநிலை)

புறநானூறு 149, பாடியவர் –  வன்பரணர்பாடப்பட்டோன்கண்டீரக் கோப்பெரு நள்ளிதிணைபாடாண்துறைஇயன் மொழி

பாடல் பின்னணி:   நள்ளியிடம் பரிசில் பெற்று, விருந்துண்டு மகிழ்ந்த பாணர்கள் அன்றைய மாலைப் பொழுதில், யாழை இசைத்துப் பாடி அனைவரையும் மகிழ்வித்தனர்.  அப்போது அவர்கள் காலையில் பாட வேண்டிய மருதப் பண்ணை மாலையிலும், மாலையில் பாட வேண்டிய செவ்வழிப் பண்ணைக் காலையிலும் பாடினர்.  அது குறித்து வன்பரணரிடம் நள்ளி வியப்புடன் வினவ, அதன் காரணத்தை விளக்கி வன்பரணர் இயற்றிய பாடல் இது.

நள்ளி! வாழியோ நள்ளி! நள்ளென்
மாலை மருதம் பண்ணிக், காலைக்
கைவழி  மருங்கில் செவ்வழி பண்ணி,
வரவு எமர் மறந்தனர், அது நீ
புரவுக் கடன் பூண்ட வண்மையானே.  5

குறிப்பு:  கைவழி (3) – ஒளவை துரைசாமி உரை – கையகத்து எப்பொழுதும் இருத்தலால் யாழைக் கைவழி என்றார், ஆகுபெயரால்.

பொருளுரை:  நள்ளி!   நீ வாழ்க!  கொடுப்பதைக் கடமையாக மேற்கொண்டு நீ அளித்த கொடையால் ஏற்பட்ட வளத்தால், இருள் சூழ்ந்த மாலைப் பொழுதில் மருதப் பண்ணை இசைத்தும், காலைப் பொழுதில் கையின் வழியாக யாழ் கொண்டு செவ்வழிப் பண்ணை இசைத்தும், இசை மரபு முறையை எம் பாணர்கள் மறந்துவிட்டனர்.   

சொற்பொருள்:   நள்ளி – கோப்பெரு நள்ளி,  வாழியோ – வாழ்க (ஓகாரம் அசைநிலை), நள்ளி – நள்ளி, நள்ளென் – இருள் சூழ்ந்த, மாலை – மாலைப் பொழுது, மருதம் பண்ணி – மருதப் பண் இசைத்து, காலை – காலைப் பொழுது, கைவழி மருங்கில் – கையின் வழியாக யாழ் கொண்டு, செவ்வழி பண்ணி – செவ்வழிப் பண் இசைத்து, வரவு – மரபு முறை,  எமர் – எம்மவர், பாணர்கள், மறந்தனர் – மறந்துவிட்டனர், அது – அதன் காரணம், நீ – நீ, புரவுக் கடன் –  கொடுப்பதைக் கடமையாக, பூண்ட – மேற்கொண்ட, வண்மையானே – கொடைத் தன்மையால் (ஏகாரம் அசைநிலை)

புறநானூறு 155, பாடியவர்: மோசி கீரனார், பாடப்பட்டோன்: கொண்கானங்கிழான், திணை: பாடாண், துறை: பாணாற்றுப்படை
வணர் கோட்டுச் சீறியாழ் வாடு புடைத் தழீஇ,
உணர்வோர் யார் என் இடும்பை தீர்க்க எனக்
கிளக்கும் பாண! கேள் இனி! நயத்தின்
பாழ் ஊர் நெருஞ்சிப் பசலை வான் பூ
ஏர்தரு சுடரின் எதிர் கொண்டு ஆஅங்கு,  5
இலம்படு புலவர் மண்டை, விளங்கு புகழ்க்
கொண்பெருங்காலத்துக் கிழவன்
தண் தார் அகலம் நோக்கின, மலர்ந்தே.

பொருளுரை:  வளைந்த தண்டினையுடைய சிறிய யாழினை மெலிந்த இடையில் தழுவி, அறிந்தவர்கள் யார் என் துன்பத்தைத் தீர்க்க என்று விருப்பத்துடன் சொல்லும் பாணனே! இப்பொழுது நான் கூறுவதைக் கேட்பாயாக! பாழான ஊரில் நெருஞ்சி மலரின் பொன்னிறத்தை உடைய தூய மலர்கள் எழுகின்ற கதிரவனை எதிர்கொண்டாற் போல, ஆங்கு வறுமையுற்ற புலவர்களின் கிண்ணங்கள், விளங்கும் புகழைக் கொண்ட கொங்கானத்தின் தலைவனின் குளிர்ந்த மாலையை அணிந்த மார்பை மலர்ந்து நோக்கின.

சொற்பொருள்:   வணர் கோட்டுச் சீறியாழ் – வளைந்த தண்டினையுடைய சிறிய யாழ், வாடு புடைத் தழீஇ – மெலிந்த பக்கத்தில் தழுவி (தழீஇ – அளபெடை), உணர்வோர் யார் என் இடும்பை தீர்க்க என – அறிந்தவர்கள் யார் என் துன்பத்தைத் தீர்க்க என்று, கிளக்கும் பாண – சொல்லும் பாணனே, கேள் இனி – இப்பொழுது கேட்பாயாக, நயத்தின் – விருப்பத்துடன், பாழ் ஊர் நெருஞ்சிப் பசலை வான் பூ – பாழான ஊரில் நெருஞ்சி மலரின் பொன்னிறத்தை உடைய தூய மலர்கள், ஏர்தரு சுடரின் எதிர் கொண்டு – எழுகின்ற கதிரவனை எதிர்கொண்டாற் போல (சுடரின் – ஒளவை துரைசாமி உரை – இன் சாரியை, அது தோற்றம் வேண்டாத் தொகுதிக்கண் வந்தது.  அன்றி, ஐகாரம் விகாரத்தால் தொக்கது எனவும் அமையும்), ஆஅங்கு – ஆங்கு (அளபெடை), இலம்படு புலவர் மண்டை – வறுமையுற்ற புலவர்களின் கிண்ணங்கள், விளங்கு புகழ்க் கொண்பெருங்காலத்துக் கிழவன் – விளங்கும் புகழைக் கொண்ட கொங்கானத்தின் தலைவன், தண் தார் அகலம் நோக்கின – குளிர்ந்த மாலையை அணிந்த மார்பை நோக்கின, மலர்ந்தே – மலர்ந்து (ஏகாரம் அசைநிலை)

புறநானூறு 158, பாடியவர்பெருஞ்சித்திரனார், பாடப்பட்டோன்குமணன், திணைபாடாண், துறைவாழ்த்தியல், பரிசில் கடாநிலை
முரசு கடிப்பு இகுப்பவும், வால் வளை துவைப்பவும்,
அரசுடன் பொருத அண்ணல் நெடுவரைக்
கறங்கு வெள் அருவி கல் அலைத்து ஒழுகும்
பறம்பின் கோமான் பாரியும், பிறங்கு மிசைக்
கொல்லி ஆண்ட வல்வில் ஓரியும்,  5
காரி ஊர்ந்து பேர் அமர்க் கடந்த
மாரி ஈகை மறப்போர் மலையனும்,
ஊராது ஏந்திய குதிரைக் கூர் வேல்
கூவிளங் கண்ணிக் கொடும் பூண் எழினியும்,
ஈர்ந்தண் சிலம்பின் இருள் தூங்கும் நளி முழை  10
அருந்திறல் கடவுள் காக்கும் உயர் சிமைப்
பெருங்கல் நாடன் பேகனும், திருந்து மொழி
மோசி பாடிய ஆயும், ஆர்வமுற்று
உள்ளி வருநர் உலைவு நனி தீரத்
தள்ளாது ஈயும் தகை சால் வண்மைக்  15
கொள்ளார் ஓட்டிய நள்ளியும், என ஆங்கு
எழுவர் மாய்ந்த பின்றை, அழி வரப்
பாடி வருநரும் பிறருங் கூடி,
இரந்தோர் அற்றம் தீர்க்கு என விரைந்து, இவண்
உள்ளி வந்தனென் யானே, விசும்பு உறக்  20
கழை வளர் சிலம்பின் வழையொடு நீடி
ஆசினிக் கவினிய பலவின் ஆர்வுற்று,
முள் புற முது கனி பெற்ற கடுவன்,
துய்த்தலை மந்தியைக் கையிடூஉப் பயிரும்,
அதிரா யாணர் முதிரத்துக் கிழவ,  25
இவண் விளங்கு சிறப்பின் இயல் தேர்க் குமண,
இசை மேந் தோன்றிய வண்மையொடு
பகை மேம்படுக, நீ ஏந்திய வேலே.

பொருளுரை:  முரசு குறுந்தடியால் அறையவும், வெள்ளைச் சங்கு முழங்கவும், வேந்தருடன் போரிட்ட தலைமை உடையவனும், உயர்ந்த மலையின் ஒலிக்கும் வெள்ளை அருவிகள் கற்களை உருட்டி ஓடும் பறம்பு நாட்டு மன்னவனுமான பாரியும், உயர்ந்த உச்சியை உடைய கொல்லி மலையை ஆண்ட வல்வில் ஓரியும், காரி என்னும் பெயரை உடைய குதிரையைச் செலுத்தி பெரிய போரினை வென்றவனும், மாரிபோலும் வண்மையையும்,  செலுத்தப்படாத உயர்ந்த குதிரை என்னும் மலையை உடையவனும், கூர்மையான வேலையும், கூவிள மலர்க்கண்ணியும், வளைந்த அணிகளையும் உடைய எழினி அதியமானும், மிக்க குளிர்ந்த மலையில் அடர்ந்த இருளைக் கொண்ட குகைகளைக் கொண்ட, அரிய வலிமையை உடைய கடவுள் காக்கும் உயர்ந்த சிகரங்களை உடைய பெரிய மலையின் மன்னனான பேகனும், திருந்திய சொற்களை உடைய உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் என்னும் புலவர் பாடிய ஆய் அண்டிரனும், ஆர்வத்துடன் தன்னை எண்ணி வருபவர்களின் வறுமை மிகவும் நீங்க, கொடுக்கும் பெரும் வண்மையும், பகைவர்களை விரட்டிய நள்ளியும்,  என்ற அந்த ஏழு பேர் இறந்த பின்னர், இரக்கம் வரப் பாடி வருபவர்களும் மற்றவர்களும் கூட, கேட்டு வருபவர்களின் துன்பத்தைத் தீர்ப்பேன் என்று நீ இருப்பதால், விரைந்து இங்கு வந்தேன் நான், உன்னை நினைத்து.  வானத்தைத் தொடும் அளவு மூங்கில் வளர்ந்த மலையில் சுரபுன்னையுடன் உயர்ந்து, ஆசினிப் பலாவுடன் அழகு பெற்ற, பலா மரத்தின் பழத்தின் மேல் ஆசைப்பட்டு, முள்ளைப் புறத்தே உடைய முதிர்ந்த பலாப் பழத்தைப் பெற்ற ஆண் குரங்கு பஞ்சியைப் போன்ற தலையை உடைய பெண் குரங்கைக் கையால் குறி செய்து அழைக்கும், தளராத வளமையை உடைய முதிர மலையின் தலைவனே!  இங்கு விளங்குகின்ற தலைமையை உடைய இயற்றப்பட்ட தேரினை உடைய குமணனே!  புகழ் மேம்பட்ட வன்மையுடன், பகைவர்களிடத்து  உயர்வதாக, நீ கையில் ஏந்திய வேல்!

குறிப்புயாணர் – புதிதுபடற் பொருட்டே யாணர்க் கிளவி (தொல்காப்பியம், உரியியல் 83).  நனி – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3).

சொற்பொருள்:   முரசு – முரசு,  கடிப்பு இகுப்பவும் – குறுந்தடியால் அறையவும், வால் வளை துவைப்பவும் – வெள்ளைச் சங்கு முழங்கவும், அரசுடன் பொருத அண்ணல் – வேந்தருடன் போரிட்ட தலைமை உடையவன், நெடு வரை – உயர்ந்த மலை, கறங்கு வெள் அருவி – ஒலிக்கும் வெள்ளை அருவி, கல் அலைத்து ஒழுகும் – கற்களை உருட்டி ஓடும், பறம்பின் கோமான் பாரியும் – பறம்பு நாட்டு மன்னவனான  பாரியும், பிறங்கு மிசை – உயர்ந்த உச்சி, விளங்கும் உச்சி, கொல்லி ஆண்ட வல்வில் ஓரியும் –  கொல்லி மலையை ஆண்ட வல்வில் ஓரியும், காரி ஊர்ந்து – காரி என்னும் பெயரை உடைய குதிரையைச் செலுத்தி, பேர் அமர்க் கடந்த – பெரிய போரினை வென்ற, மாரி ஈகை மறப்போர் மலையனும் – மாரிபோலும் வண்மையும், ஊராது ஏந்திய குதிரை – செலுத்தப்படாத உயர்ந்த குதிரை என்னும் மலை (ஊர்ந்துச் செல்லாத நெடிய குதிரையாகிய குதிரை மலை, வெளிப்படை), கூர் வேல் – கூர்மையான வேல்,  கூவிளங் கண்ணி – கூவிள மலர்க்கண்ணி, கொடும் பூண் எழினியும் – வளைந்த அணிகளை உடைய எழினி அதியமானும், ஈர்ந்தண் சிலம்பின் – மிக்க குளிர்ந்த மலையில், இருள் தூங்கும் நளி முழை – அடர்ந்த இருளைக் கொண்ட குகைகள், அருந்திறல் கடவுள் காக்கும் – அரிய வலிமையை உடைய கடவுள் காக்கும்,  உயர் சிமைப் பெருங்கல் நாடன் பேகனும் – உயர்ந்த சிகரங்களை உடைய பெரிய மலையின் மன்னனான பேகனும்,  திருந்து மொழி மோசி பாடிய ஆயும் – திருந்திய சொற்களை உடைய உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் என்னும் புலவர் பாடிய ஆய் அண்டிரனும் (புறநானூறு 127-135), ஆர்வமுற்று உள்ளி வருநர் உலைவு நனி தீர – ஆர்வத்துடன் தன்னை எண்ணி வருபவர்களின் வறுமை மிகவும் நீங்க, தள்ளாது ஈயும் – தவிராது கொடுக்கும்,  தகை சால் வண்மை – பெரும் வண்மை, கொள்ளார் ஓட்டிய நள்ளியும் – பகைவர்களை விரட்டிய நள்ளியும், என ஆங்கு எழுவர் மாய்ந்த பின்றை – என்ற ஏழு பேர் இறந்த பின்னர், அழி வரப் பாடி வருநரும் –  இரக்கம் வரப் பாடி வருபவர்களும், பிறருங்கூடி  – மற்றவர்களும் கூடி, இரந்தோர் அற்றம் தீர்க்கு – கேட்டு வருபவர்களின் துன்பத்தைத் தீர்ப்பேன் என்று நீ இருப்பதால், என விரைந்து – என்று விரைந்து, இவண் – இங்கு, உள்ளி வந்தனென் – நினைத்து வந்தேன்,  யானே – நான், விசும்பு உறக் கழை வளர் சிலம்பின்- வானத்தைத் தொடும் அளவு மூங்கில் வளர்ந்த மலையில், வழையொடு நீடி – சுரபுன்னையுடன் உயர்ந்து,  ஆசினிக் கவினிய –  ஆசினிப் பலாவுடன் அழகு பெற்ற, பலவின் ஆர்வுற்று – பலாப் பழத்தின் மேல் ஆசைப்பட்டு, முள் புற முது கனி பெற்ற கடுவன் – முள்ளைப் புறத்தே உடைய முதிர்ந்த பலாப் பழத்தைப் பெற்ற ஆண் குரங்கு,  துய்த்தலை மந்தியை – பஞ்சியைப் போன்ற தலையை உடைய பெண் குரங்கை, கையிடூஉப் பயிரும் – கையால் குறி செய்து அழைக்கும் (கையிடூஉ – அளபெடை), அதிரா யாணர் முதிரத்துக் கிழவ – தளராத வளமையை உடைய முதிர மலையின் தலைவனே,  இவண் விளங்கு சிறப்பின் – இங்கு விளங்குகின்ற தலைமையை உடைய, இயல் தேர்க் குமண –  இயற்றப்பட்ட தேரினை உடைய குமணனே, இசை மேந்தோன்றிய வண்மையொடு – புகழ் மேம்பட்ட வன்மையுடன், பகை மேம்படுக – பகைவர்களிடம்  உயர்வதாக, நீ ஏந்திய வேலே – நீ கையில் ஏந்திய வேல் (வேலே – ஏகாரம் அசைநிலை)

புறநானூறு 162, பாடியவர்: பெருஞ்சித்திரனார், பாடப்பட்டோன்: இளவெளிமான், திணை: பாடாண், துறை: பரிசில் விடை

பாடல் பின்னணி வெளிமான் என்பவர் ஒரு கொடை வள்ளல்.  அவருடைய தம்பியான இளவெளிமான் அவரைப் போன்று ஈகைத் தன்மையுடையவர் இல்லை.  அவன் கொடுத்ததை ஏற்காத புலவர் பெருஞ்சித்திரனார், குமணனிடம் சென்று பரிசில் பெற்று வந்து இளவெளிமானிடம் இவ்வாறு கூறுகின்றார்.

இரவலர் புரவலை நீயும் அல்லை,
புரவலர் இரவலர்க்கு இல்லையும் அல்லர்,
இரவலர் உண்மையும் காண் இனி, இரவலர்க்கு
ஈவோர் உண்மையும் காண் இனி, நின் ஊர்க்
கடி மரம் வருந்தத் தந்து யாம் பிணித்த  5
நெடு நல் யானை எம் பரிசில்,
கடுமான் தோன்றல், செல்வல் யானே.

பொருளுரை:  இரப்போர்க்குப் பொருள் கொடுத்துப் பாதுகாப்பவன் அல்ல நீ! இரப்போர்க்குப் பொருள் கொடுத்து உதவும் புரவலர்கள் இல்லாமல் இல்லை!  இனி இரவலர் உண்மையை நீ காண்!  இரப்போர்க்குப் பொருள் கொடுத்து உதவும் புரவலர்களின் உண்மையையும் இனி நீ காண்!  உன் ஊரில் உள்ள உன்னுடைய காவல் மரம் வருந்துமாறு நான் கட்டிய உயர்ந்த நல்ல யானை உனக்கு நான் தரும் பரிசு, விரைந்து செல்லும் குதிரைகளையுடைய தலைவனே, நான் செல்கின்றேன்.

சொற்பொருள்:  இரவலர் புரவலை நீயும் அல்லை – இரப்போர்க்கு கொடுத்து பாதுகாப்பவை அல்ல நீ, புரவலர் இரவலர்க்கு இல்லையும் அல்லர் – இரப்போர்க்கு பொருள் கொடுத்து உதவும் புரவலர்கள் இல்லாமல் இல்லை, இரவலர் உண்மையும் காண் இனி – இனி இரவலர் உண்மையை நீ காண், இரவலர்க்கு ஈவோர் உண்மையும் காண் இனி – இரப்போர்க்கு பொருள் கொடுத்து உதவும் புரவலர்களின் உண்மையையும் நீ காண், நின் ஊர்க் கடி மரம் வருந்தத் தந்து யாம் பிணித்த – உன் ஊரில் உள்ள உன்னுடைய காவல் மரம் வருந்துமாறு நான் கட்டிய, நெடு நல் யானை – உயர்ந்த நல்ல யானை, எம் பரிசில் – என்னுடைய பரிசு, கடுமான் தோன்றல் – விரைந்துச் செல்லும் குதிரைகளையுடைய தலைவனே, செல்வல் யானே – நான் செல்லுகின்றேன் (யானே – ஏகாரம் அசைநிலை)

புறநானூறு 163, பாடியவர்: பெருஞ்சித்திரனார், பாடப்பட்டோர்: புலவரின் மனைவி, திணை: பாடாண், துறை: பரிசில்
நின் நயந்து உறைநர்க்கும், நீ நயந்து உறைநர்க்கும்,
பன் மாண் கற்பின் நின் கிளை முதலோர்க்கும்,
கடும்பின் கடும் பசி தீர யாழ நின்
நெடுங்குறி எதிர்ப்பை நல்கியோர்க்கும்,
இன்னோர்க்கு என்னாது, என்னோடும் சூழாது,  5
வல்லாங்கு வாழ்தும் என்னாது, நீயும்
எல்லோர்க்கும் கொடுமதி, மனை கிழவோயே,
பழந்தூங்கு முதிரத்துக் கிழவன்
திருந்து வேல் குமணன், நல்கிய வளனே.

பொருளுரை:  என் மனைவியே! உன்னை விரும்பி வாழ்பவர்களுக்கும், நீ விரும்பி வாழ்பவர்களுக்கும், பல சிறந்த கற்புடைய உன்னுடைய சுற்றத்தாருள் மூதோர்க்கும், உறவினர்களின் கொடிய பசி தீர உனக்குக் கடன் தந்தவர்களுக்கும், யாரென்று நினையாது, என்னோடும் கலந்து ஆலோசிக்காமல், நாம் சிறப்பாக வாழலாம் என்றும் எண்ணாது, நீயும் எல்லோருக்கும் கொடுப்பாயாக, பழங்கள் தொங்கும் முதிர மலைக்குத் தலைவனான, திருந்திய வேலையுடைய குமணன் கொடுத்த செல்வத்தை.

குறிப்புமதி – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம்.  சொல்லதிகாரம்.  இடையியல் 26).

சொற்பொருள்:   நின் நயந்து உறைநர்க்கும் – உன்னை விரும்பி வாழ்பவர்களுக்கும், நீ நயந்து உறைநர்க்கும் – நீ விரும்பி வாழ்பவர்களுக்கும், பன் மாண் கற்பின் நின் கிளை முதலோர்க்கும் – பல சிறந்த கற்புடைய உன்னுடைய சுற்றத்தாருள் மூதோர்க்கும், கடும்பின் கடும் பசி – உறவினர்களின் கொடிய பசி தீர, யாழ – ஓர் அசைச் சொல், நின் நெடுங்குறி எதிர்ப்பை நல்கியோர்க்கும் – உனக்கு கடன் தந்தவர்களுக்கும், இன்னோர்க்கு என்னாது – யாரென்று நினையாது, என்னோடும் சூழாது – என்னோடும் கலந்து ஆலோசிக்காமல், வல்லாங்கு வாழ்தும் என்னாது – நாம் சிறப்பாக வாழலாம் என்று எண்ணாது, நீயும் எல்லோர்க்கும் கொடுமதி – நீயும் எல்லோருக்கும் கொடுப்பாயாக, மனை கிழவோயே – என் மனைக்கு உரியோயே, பழந்தூங்கு முதிரத்துக் கிழவன் – பழங்கள் தொங்கும் முதிர மலைக்குத் தலைவன், திருந்து வேல் குமணன் – திருந்திய வேலையுடைய குமணன், நல்கிய வளனே – கொடுத்த செல்வத்தை (வளனே – வளன் வளம் என்பதன் போலி, ஏகாரம் அசைநிலை)

புறநானூறு 164, பாடியவர்: பெருந்தலைச் சாத்தனார், பாடப்பட்டோன்: குமணன், திணை: பாடாண், துறை: பரிசில் கடாநிலை
ஆடு நனி மறந்த கோடு உயர் அடுப்பின்
ஆம்பி பூப்பத் தேம்பு பசி உழவாப்
பாஅல் இன்மையின் தோலொடு திரங்கி
இல்லி தூர்த்த பொல்லா வறு முலை
சுவைத்தொறும் அழூஉம் தன் மகத்துவம் நோக்கி  5
நீரொடு நிறைந்த ஈர் இதழ் மழைக் கண் என்
மனையோள் எவ்வம் நோக்கி நினைஇ
நிற் படர்ந்திசினே நற்போர்க் குமண
என் நிலை அறிந்தனை ஆயின் இந்நிலைத்
தொடுத்தும் கொள்ளாது அமையலென் அடுக்கிய  10
பண் அமை நரம்பின் பச்சை நல் யாழ்
மண் அமை முழவின் வயிரியர்
இன்மை தீர்க்கும் குடிப் பிறந்தோயே.

பாடல் பின்னணி:  தன் குடும்பத்தின் வறுமையையும் தன் மனைவி படும் துயரத்தையும் குமணனிடம் எடுத்துரைக்கின்றார் புலவர் பெருந்தலைச் சாத்தனார். பிற விவரங்களுக்கு அடுத்த பாடலைப் பார்க்கவும்.

பொருளுரை:  எங்கள் இல்லத்தில் சமையலை மிகவும் மறந்த, பக்கங்கள் உயர்ந்த அடுப்பில், காளான் பூத்திருக்கின்றது.  மெலியும் பசியால் வருந்தி, பால் இல்லாததால், தோலுடன் தளர்ந்து துளை மூடிய பொல்லாத வற்றிய முலையைச் சுவைக்கும் பொழுதெல்லாம், அழும் தன்னுடைய குழந்தையின் முகத்தை நோக்கி, கண்ணீருடன் ஈரம் படிந்த கண்களைக் கொண்டவளாக இருக்கின்றாள் என் மனைவி.  அவளுடைய துன்பத்தை நினைத்து நினைத்து உன்னை நாடி வந்தேன், நல்ல முறையில் போரிடும் குமணா!  என்னுடைய நிலைமையை நீ அறிவாய் ஆயின், இந்த நிலையில் உன்னிடம் பரிசில் பெறாமல் விடமாட்டேன், அடுக்கப்பட்ட   இசை அமைந்த  நரம்பினையுடைய தோலினால் போர்த்தப்பட்ட நல்ல யாழையும் மார்ச்சுனைப் பூசிய மத்தளத்தையுடைய, கூத்தர்களின் வறுமையைப் போக்கும் குடியில் பிறந்தவனே!

குறிப்புசின் – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம்.  சொல்லதிகாரம்.  இடையியல் 26, சின் என்பது இசின் என்பதன் முதற்குறை – ச. பாலசுந்தரம் உரை), அவற்றுள், இகுமும் சின்னும் ஏனை இடத்தொடும் தகு நிலை உடைய என்மனார் புலவர் (தொல்காப்பியம், இடையியல் 27).  உழவா – உழந்து என்பது பொருள். செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம்.  எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது.

சொற்பொருள்ஆடு நனி மறந்த – அடுதலை மிகவும் மறந்த, சமையலை மிகவும் மறந்த, கோடு உயர் அடுப்பின் –  பக்கங்கள் உயர்ந்த அடுப்பில், ஆம்பி பூப்ப – காளான் பூக்க, தேம்பு பசி உழவா – மெலியும் பசியால் வருந்தி,  பாஅல் இன்மையின் –  பால் இல்லாததால் (பாஅல் – அளபெடை), தோலொடு திரங்கி – தோலுடன் தளர்ந்து, இல்லி தூர்த்த – துளை மூடிய, பொல்லா வறு முலை சுவைத்தொறும் –  பொல்லாத வற்றிய முலையைச் சுவைக்கும் பொழுதெல்லாம் அழூஉம் தன் மகத்துவம் நோக்கி – அழும் தன்னுடைய குழந்தையின் முகத்தை நோக்கி, நீரொடு நிறைந்த ஈர் இதழ் மழைக் கண் என் மனையோள் – கண்ணீருடன் ஈரம் படிந்த கண்களைக் கொண்ட என் மனைவி,  எவ்வம் நோக்கி – துன்பத்தை நோக்கி, நினைஇ நிற் படர்ந்திசினே – நினைந்து உன்னை நாடி வந்தேன் (நினைஇ – அளபெடை, படர்ந்திசினே – சின் தன்மை அசை), நற்போர்க் குமண – நல்ல முறையில் போரிடும் குமணா,  என் நிலை அறிந்தனை ஆயின் – என்னுடைய நிலைமையை நீ அறிவாய் ஆயின், இந்நிலைத் தொடுத்தும் கொள்ளாது அமையலென் – இந்த நிலையில் உன்னிடம் பரிசில் பெறாமல் விடமாட்டேன், அடுக்கிய – அடுக்கப்பட்ட, பண் அமை நரம்பின் பச்சை நல் யாழ் –  இசை அமைந்த  நரம்பினையுடைய தோலினால் போர்த்தப்பட்ட நல்ல யாழ், மண் அமை முழவின் – மார்ச்சுனைப் பூசிய மத்தளத்தையுடைய, வயிரியர் இன்மை தீர்க்கும் – கூத்தர்களின் வறுமையைப் போக்கும், குடிப் பிறந்தோயே – குடியில் பிறந்தவனே

புறநானூறு 165, பாடியவர்: பெருந்தலைச் சாத்தனார், பாடப்பட்டோன்: குமணன், திணை: பாடாண், துறை: பரிசில் விடை
மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர்
தம் புகழ் நிறீஇத் தாம் மாய்ந்தனரே
துன் அருஞ் சிறப்பின் உயர்ந்த செல்வர்
இன்மையின் இரப்போர்க்கு ஈஇயாமையின்
தொன்மை மாக்களின் தொடர்பு அறியலரே  5
தாள் தாழ் படு மணி இரட்டும் பூ நுதல்
ஆடியல் யானை பாடுநர்க்கு அருகாக்
கேடு இல் நல்லிசை வயமான் தோன்றலைப்
பாடி நின்றனென் ஆகக் கொன்னே
பாடு பெறு பரிசிலன் வாடினன் பெயர்தல் என்  10
நாடு இழந்ததனினும் நனி இன்னாது என
வாள் தந்தனனே தலை எனக்கு ஈயத்
தன்னின் சிறந்தது பிறிது ஒன்று இன்மையின்
ஆடு மலி உவகையோடு வருவல்
ஓடாப் பூட்கை நின் கிழமையோன் கண்டே.  15

பாடல் பின்னணி:  குமணனின் தம்பி நாட்டைக் கைப்பற்றிக் கொண்டு குமணனை விரட்டிவிட்டான். குமணன் காட்டிலிருந்த பொழுது, புலவர் பெருந்தலைச் சாத்தனார் குமணனை பரிசுக்காக அணுகிய வேளையில் தன்னிடம் கொடுக்க ஒன்றும் இல்லாததால், தன் தலையைக் கொய்து தன் தம்பியிடம் கொடுத்து புலவர் பரிசு வாங்கும் பொருட்டு குமணன் வாளை அவரிடம் கொடுத்தான். இதைப் புலவர் தம்பியிடம் கூறினார். தன் தவறுக்கு வருந்தி, குமணனை அழைத்து வந்து நாட்டை அண்ணனிடம் கொடுத்தான் இளங்குமணன்.

பொருளுரை:  நிலையில்லாத உலகத்தில் நிலைபெற எண்ணினவர்கள், தங்களுடைய புகழை நிறுவித் தாங்கள் இறந்தனர்.  அணுகுதற்கரிய சிறப்புடைய உயர்ந்த செல்வந்தர்கள் வறுமையால் வருபவர்களுக்கு கொடாமையால், பழைய வள்ளல்களின் வரிசையில் சேராதவர்களாக இருக்கின்றனர்.  கால்வரைத் தாழ்ந்து மாறி மாறி ஒலிக்கும் மணிகளையுடைய, நெற்றியில் புள்ளிகளையுடைய, அசையும் தன்மையுடைய யானைகளை பாடுபவர்களுக்கு குறைக்காது கொடுக்கும் கேடு இல்லாத நல்ல புகழுடைய வலிய குதிரைகளையுடைய மன்னனைப் பாடி நின்றேனாக,  தன்னின் சிறந்தது பிறிது ஒன்று இன்மையின் “பயன் இன்றி பெருமை மிக்க பரிசிலர் பரிசு பெறாமல் வாடிச் செல்லுதல், என் நாட்டை இழந்ததைவிட கொடுமையானது” என்று கூறி வாளை என்னிடம் கொடுத்தான், தன்னுடைய தலையை எனக்கு ஈய.  வெற்றி அடைந்த உவகையால் வந்தேன்,  போரில் புறம் காட்டி ஓடாத கொள்கையுடைய உன் தமையனைக் கண்டு.

சொற்பொருள்மன்னா உலகத்து – நிலையில்லாத உலகத்தில், மன்னுதல் குறித்தோர் – நிலைபெற எண்ணினவர்கள்,  தம் புகழ் நிறீஇத் தாம் மாய்ந்தனரே – தங்களுடைய புகழை நிறுவித் தாங்கள் இறந்தனர் (நிறீஇ – அளபெடை, மாய்ந்தனரே – ஏகாரம் அசைநிலை),   துன் அருஞ் சிறப்பின் – அணுகுதற்கரிய சிறப்புடைய, உயர்ந்த செல்வர் – உயர்ந்த செல்வந்தர்கள், இன்மையின் – இல்லாததால், இரப்போர்க்கு ஈஇயாமையின் – வறுமையால் வருபவர்களுக்கு கொடாமையால் (ஈஇயாமையின் – அளபெடை), தொன்மை மாக்களின் தொடர்பு அறியலரே – பழைய வள்ளல்களின் வரிசையில் சேராதவர்களாக இருக்கின்றனர் (அறியலரே – ஏகாரம் அசைநிலை), தாள் தாழ் படு மணி இரட்டும் – கால்வரைத் தாழ்ந்து மாறி மாறி ஒலிக்கும் மணி, பூ நுதல் ஆடியல் யானை – நெற்றியில் புள்ளிகளையுடைய அசையும் தன்மையுடைய யானைகள்,  பாடுநர்க்கு அருகா –  பாடுபவர்களுக்கு குறைக்காது கொடுக்கும், கேடு இல் நல்லிசை – கேடு இல்லாத நல்ல புகழ், வயமான் தோன்றலைப் பாடி நின்றனென் ஆக – வலிய குதிரைகளையுடைய மன்னனைப் பாடி நின்றேனாக,  கொன்னே – பயன் இன்றி,  பாடு பெறு பரிசிலன் வாடினன் பெயர்தல் – பெருமை மிக்க பரிசிலர் பரிசு பெறாமல் வாடிச் செல்லுதல், என் நாடு இழந்ததனினும் நனி இன்னாது என – என் நாட்டை இழந்ததைவிட கொடுமையானது என்று, வாள் தந்தனனே – வாளை என்னிடம் கொடுத்தான், தலை எனக்கு ஈய – தன்னுடைய தலையை எனக்கு ஈய, தன்னின் சிறந்தது பிறிது ஒன்று இன்மையின் – தன்னிடம் கொடுக்க தன்னைவிட சிறந்தது எதுவும் இல்லாததால், ஆடு மலி உவகையோடு வருவல்  – வெற்றி அடைந்த உவகையால் வந்தேன், ஓடாப் பூட்கை – போரில் புறம் காட்டி ஓடாத கொள்கை, நின் கிழமையோன் கண்டே – உன் தமையனைக் கண்டு (கண்டே – ஏகாரம் அசைநிலை)

புறநானூறு 173, பாடியவர்: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன், பாடப்பட்டோன்: சிறுகுடி கிழான் பண்ணன், திணை: பாடாண், துறை: இயன் மொழி

பாடல் பின்னணி:  பாடலின் புலவர் ஒரு சோழ மன்னர்.  சிறுகுடி என்ற சோழ நாட்டின் ஊரில் உள்ள தலைவனான பண்ணனை பாராட்டுகிறார்.  தன் கூற்றாகப் பாடாமல் பாணன் ஒருவனின் கூற்றாகப் பாடலைப் பாடியுள்ளார்.

யான் வாழும் நாளும் பண்ணன் வாழிய,
பாணர் காண்க, இவன் கடும்பினது இடும்பை,
யாணர்ப் பழுமரம் புள் இமிழ்ந்தன்ன,
ஊண் ஒலி அரவம் தானும் கேட்கும்,
பொய்யா எழிலி பெய்விடம் நோக்கி,  5
முட்டை கொண்டு வன்புலம் சேரும்,
சிறு நுண் எறும்பின் சில் ஒழுக்கு ஏய்ப்பச்,
சோறுடைக் கையர் வீறு வீறு இயங்கும்
இருங்கிளைச் சிறாஅர்க் காண்டும் கண்டும்,
மற்றும் மற்றும் வினவுதும் தெற்றெனப்,  10
பசிப் பிணி மருத்துவன் இல்லம்
அணித்தோ சேய்த்தோ கூறுமின் எமக்கே?

பொருளுரை:  நான் உயிர் வாழும் நாட்களையும் சேர்த்துப் பெற்று பண்ணன் வாழ்வானாக!  பாணர்களே காண்பீர்களாக, இந்தப் பாணனின் சுற்றத்தாரின் வறுமையை!  பழங்கள் நிறைந்திருக்கும் மரத்தின்கண் பறவைகள் ஒலித்தாற்போல், உணவினால் உண்டான ஆரவாரத்தைக் கேட்கின்றோம்.  காலம் தப்பாது மழை பெய்யும் முகிலை நோக்கித் தம்முடைய முட்டைகளை மேட்டு நிலத்திற்குக் கொண்டு சென்று சேரும் மிகச் சிறிய எறும்பினது வரிசையைப் போல, சோறுடைய கையினராக வேறு வேறு செல்லும் பெரிய சுற்றத்தாருடன் கூடிய பிள்ளைகளைக் காண்கின்றோம்.  அதைக் கண்ட பிறகு மீண்டும் மீண்டும் கேட்கின்றோம், தெளிவாக, “பசி நோயை நீக்கும் மருத்துவனின் இல்லம் அருகில் உள்ளதா? தொலைவில் உள்ளதா? கூறுவீர் எமக்கு”.

குறிப்புபெய்விடம் (5) – ஒளவை துரைசாமி உரை – பெய்விடம் என்றவிடத்து இடம் காலம் குறித்து நின்றது.  பழ மரமும் புள்ளும்:  புறநானூறு 173 – பழுமரம் புள் இமிழ்ந்தன்ன, புறநானூறு 370 – பழுமரம் உள்ளிய பறவை போல, பெரும்பாணாற்றுப்படை 20 – பழுமரம் தேரும் பறவை போல, பொருநராற்றுப்படை 64 – பழுமரம் உள்ளிய பறவையின், மதுரைக்காஞ்சி 576 – பழம் தேர் வாழ்க்கைப் பறவை போல.  யாணர் – புதிதுபடற் பொருட்டே யாணர்க் கிளவி (தொல்காப்பியம், உரியியல் 83).

சொற்பொருள்யான் வாழும் நாளும் பண்ணன் வாழிய – நான் உயிர் வாழும் நாட்களையும் பெற்று பண்ணன் வாழ்வானாக, பாணர் காண்க – பாணர்களே காண்பீர்களாக, இவன் கடும்பினது இடும்பை – இவனுடைய சுற்றத்தாரின் வறுமையை, யாணர்ப் பழுமரம் புள் இமிழ்ந்தன்ன – பழங்கள் நிறைந்திருக்கும் மரத்தின்கண் பறவைகள் ஒலித்தாற்போல், ஊண் ஒலி அரவம் தானும் கேட்கும் – உணவினால் உண்டான ஆரவாரத்தைக் கேட்கின்றோம் (தானும் – தான், உம் அசைநிலைகள்), பொய்யா எழிலி பெய்விடம் நோக்கி – தப்பாது மழை பெய்யும் முகிலை நோக்கி, முட்டை கொண்டு வன்புலம் சேரும் – தம்முடைய முட்டைகளை மேட்டு நிலத்திற்குக் கொண்டு சென்று சேரும், சிறு நுண் எறும்பின் சில் ஒழுக்கு ஏய்ப்ப – மிகச் சிறிய எறும்பினது ஒழுக்கத்தைப் போல (ஏய்ப்ப – உவம உருபு), சோறுடைக் கையர் வீறு வீறு இயங்கும் – சோறுடைய கையினராக வேறு வேறு செல்லும், இருங்கிளைச் சிறாஅர்க் காண்டும் – பெரிய சுற்றத்தாருடன் கூடிய பிள்ளைகளைக் காண்போம் (சிறாஅர் – அளபெடை), கண்டும் மற்றும் மற்றும் வினவுதும் – அதைக் கண்ட பிறகு மீண்டும் மீண்டும் கேட்கின்றோம், தெற்றென – தெளிவாக, பசிப் பிணி மருத்துவன் இல்லம் அணித்தோ சேய்த்தோ – பசி நோயை நீக்கும் மருத்துவனின் இல்லம் அருகில் உள்ளதா தொலைவில் உள்ளதா, கூறுமின் எமக்கே – கூறுவீர் எனக்கு (கூறுமின் – மின் முன்னிலைப் பன்மை வினைமுற்று விகுதி, எமக்கே – ஏகாரம் அசைநிலை)

புறநானூறு 181, பாடியவர்: சோணாட்டு முகையலூர்ச் சிறுகருந்தும்பியார், பாடப்பட்டோன்: வல்லார் கிழான் பண்ணன், திணை: வாகை, துறை: வல்லாண் முல்லை

பாடல் பின்னணி வறுமையில் வாடும் பாணன் ஒருவனை புலவர் சிறுகருந்தும்பியார் வல்லார் கிழான் பண்ணனிடத்து ஆற்றுப்படுத்துவது.

மன்ற விளவின் மனை வீழ் வெள்ளில்,
கருங்கண் எயிற்றி காதல் மகனொடு
கான இரும் பிடிக் கன்று தலைக்கொள்ளும்,
பெருங்குறும்பு உடுத்த, வன்புல இருக்கைப்,
புலாஅ அம்பின், போர் அருங்கடி மிளை  5
வலாஅரோனே, வாய்வாள் பண்ணன்,
உண்ணா வறுங்கடும்பு உய்தல் வேண்டின்,
இன்னே சென்மதி நீயே, சென்று அவன்
பகைப்புலம் படரா அளவை, நின்
பசிப் பகைப் பரிசில் காட்டினை கொளற்கே.  10

பொருளுரை:   பொது மன்றத்தில் உள்ள விளாமரத்திலிருந்து அருகில் இருந்த இல்லத்தின் முற்றத்தில் விழுந்த விளாம்பழம் ஒன்றை கரிய கண்களையுடைய மறக்குடிப் பெண் ஒருத்தியின் அன்பிற்குரிய மகனுடன் காட்டில் வாழும் பெண் யானையின் கன்றும் பழத்தை எடுக்கச் செல்லும், பெரிய அரண்கள் சூழ்ந்த, வலிய நிலத்தின்கண் உள்ள ஊர் வல்லார்.  புலால் நாறும் அம்புகளையும், போர் செய்வதற்கு அரிய காவற்காடும் உடைய அந்த ஊரிடத்து, குறி தப்பாத வாளையுடைய பண்ணன் இருக்கின்றான்.  வறுமையுற்ற உன் சுற்றம் பிழைக்க வேண்டுமானால், உடனேயே நீ அவனிடம் செல்லுவாயாக. அவன் போருக்குச் செல்வதற்கு முன்பே சென்று, உன் பசிக்குப் பகையாகிய பரிசிலைப் பெற்றுக் கொள்வாயாக.

குறிப்புமதி – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம்.  சொல்லதிகாரம்.  இடையியல் 26).

சொற்பொருள்:   மன்ற விளவின் – மன்றத்தில் உள்ள விளாமரத்திலிருந்து, மனை வீழ் வெள்ளில் – அங்கு இருந்த இல்லத்தின் முற்றத்தில் விழுந்த விளாம்பழம், கருங்கண் எயிற்றி – கரிய கண்களையுடைய மறக்குடிப் பெண், காதல் மகனொடு – அன்பிற்குரிய மகனுடன், கான இரும் பிடிக் கன்று தலைக்கொள்ளும் – காட்டில் வாழும் பெண் யானையின் கன்றும் பழத்தை எடுக்க அவனுடன் செல்லும், பெருங்குறும்பு உடுத்த – பெரிய அரண்கள் சூழ்ந்த, வன்புல இருக்கை – வலிய நிலத்தின்கண் உள்ள ஊர், புலாஅ அம்பின் – புலால் நாறும் அம்புகளையும், போர் அருங்கடி மிளை – போர் செய்வதற்கு அரிய காவற்காடு, வலாஅரோனே – வல்லார் என்ற ஊரிடத்து இருப்போன் (இசைநிறை அளவெடை, ஏகாரம் அசைநிலை), வாய்வாள் பண்ணன் – குறி தப்பாத வாளையுடைய பண்ணன், உண்ணா வறுங்கடும்பு உய்தல் வேண்டின் – வறுமையுற்ற உன் சுற்றம் பிழைக்க வேண்டுமானால், இன்னே சென்மதி நீயே – உடனேயே செல்லுவாயாக நீ (மதி – முன்னிலையசை), சென்று – சென்று, அவன் பகைப்புலம் படரா அளவை – அவன் போருக்குச் செல்வதற்கு முன்பு, நின் பசிப் பகைப் பரிசில் காட்டினை கொளற்கே – உன் பசிக்குப் பகையாகிய பரிசிலைப் பெற்றுக் கொள்வாயாக (கொளற்கே – ஏகாரம் அசைநிலை)

புறநானூறு 184, பாடியவர் –  பிசிராந்தையார்பாடப்பட்டோன்பாண்டியன் அறிவுடைநம்பிதிணை –  பாடாண்துறைசெவியறிவுறூஉ

பாடல் பின்னணி:   பாண்டிய நாட்டை ஆண்டுவந்த மன்னன் அறிவுடை நம்பி மக்களிடம் மிகுந்த வரி வசூலித்துத் துன்பமுண்டாக்கினான்.    அவனைத் திருத்த யாரும் முன் வரவில்லை.  அவனுக்கு அறிவுரை வழங்குமாறு மக்கள் புலவர் பிசிராந்தையாரை வேண்டினர். அவர் மன்னனிடம் கூறிய அறிவுரை தான் இந்தப் பாடல்.

காய் நெல் அறுத்துக் கவளங் கொளினே,
மா நிறைவு இல்லதும் பன்னாட்கு ஆகும்,
நூறு செறு ஆயினும் தமித்துப் புக்கு உணினே,
வாய் புகுவதனினும் கால் பெரிது கெடுக்கும்,
அறிவுடை வேந்தன் நெறி அறிந்து கொளினே,  5
கோடியாத்து  நாடு பெரிது  நந்தும்,
மெல்லியன் கிழவன் ஆகி வைகலும்
வரிசை அறியாக் கல்லென் சுற்றமொடு
பரிவு தப எடுக்கும் பிண்டம்  நச்சின்,
யானை புக்க புலம் போலத்,  10
தானும் உண்ணான், உலகமும் கெடுமே.

பொருளுரை:   விளைந்த நெல்லை அறுவடை செய்து யானைக்குக் கவளமாகக் கொடுத்தால், ஒரு மா அளவை விட குறைவான நிலத்தில் விளையும் பொருள் யானைக்குப்  பல நாட்களுக்கு உணவாகும்.  நூறு வயல்கள் ஆனாலும், யானை தானாகத் தனித்துப் புகுந்து உண்டால், வாயில் புகுவதை விட அதன் கால்களால் மிகுதியான உணவு வீணாகும்.  அறிவுடைய வேந்தன் நில வரியை நிர்ணயிக்கும் நெறிமுறை அறிந்து வரியை வாங்கினால், கோடிப் பொருட்களை ஈட்டி நாடு பெரிதும் தழைக்கும்.  வேந்தன், அறிவால் மெல்லியன் ஆகி நாள்தோறும் தகுதி அறியாத, உறுதித்தன்மை இல்லாத சுற்றத்தோடு சேர்ந்து அன்பு கெட வாங்கும் வரிப் பொருட்களை விரும்பினால், யானை புகுந்த நிலம் போலத் தானும் பயனடையாமல் தன் நாடும் கெடும்.

சொற்பொருள்:   காய்நெல் – காய்ந்த நெல், அறுத்து –  அறுவடை செய்து, கவளம் – யானையின் உணவு, கொளினே –  கொண்டால், மா – ஒரு சிறிய நில அளவு, நிறைவு – நிறைவாக, இல்லதும் – இல்லாவிட்டாலும், பன்னாட்கு – பல நாட்களுக்கு, ஆகும் – உணவாகும், நூறு – நூறு, செறு – வயல், ஆயினும் – ஆனாலும், தமித்துப் புக்கு  – தனித்து புகுந்து, உணினே –  உணவு உண்டால் (ஏகாரம் அசைநிலை), வாய் புகுவதனினும் – வாயில் புகுவதை விட,  கால் – கால்கள், பெரிது – மிகுதியாக, கெடுக்கும் – கெடுக்கும், அறிவுடை – அறிவுடைய, வேந்தன் – மன்னன், நெறி அறிந்து – வரி நெறி முறை அறிந்து, கொளினே – கொண்டால் (ஏகாரம் அசைநிலை), கோடியாத்து –  கோடி ஈட்டி,  நாடு – நாடு, பெரிது – மிகவும், நந்தும் – தழைக்கும், மெல்லியன் – அறிவால் மெல்லியன், கிழவன் – வேந்தன், ஆகி – ஆகிட, வைகலும் – நாள் தோறும், வரிசை – தரம், தகுதி, அறியா – அறியாத, கல்லென் – உறுதி இல்லாத, சுற்றமொடு – சுற்றத்தோடு, பரிவு – அன்பு, தப – கெட, எடுக்கும் – வலிய வாங்கும், பிண்டம் – பொருட்கள், வரிப்பணம்,  நச்சின் – விரும்பினால், யானை புக்க – யானை புகுந்த, புலம் – நிலம், போல – போல, தானும் – தானும், உண்ணான் – உண்ண மாட்டான், உலகமும் – அவனைச் சுற்றியுள்ள உலகமும், கெடுமே – கெடும் (ஏகாரம் அசைநிலை)

புறநானூறு 185, பாடியவர்தொண்டைமான் இளந்திரையன்திணைபொதுவியல்துறைபொருண்மொழிக் காஞ்சி

பாடல் பின்னணி:   தொண்டைமான் இளந்திரையன் தொண்டை நாட்டை ஆண்ட குறுநில மன்னன்.  அவன் ஆட்சியாளர்களின் ஆட்சி செய்யும் முறையை விளக்குகின்றான் இந்தப் பாடலில்.

கால் பார் கோத்து ஞாலத்து இயக்கும்
காவல் சாகாடு உகைப்போன் மாணின்
ஊறு இன்றாகி ஆறு இனிதுபடுமே,
உய்த்தல் தேற்றான் ஆயின், வைகலும்
பகைக் கூழ் அள்ளல் பட்டு,  5
மிகப் பல் தீ நோய் தலைத்தலைத் தருமே.

பொருளுரை:   சக்கரத்தையும் நெடுஞ்சட்டத்தையும் இணைத்து இயங்கும் வண்டியைப் போன்றது இவ்வுலகம்.  வண்டியை ஓட்டுபவன் திறமை உடையவனாக இருந்தால், அது இடையூறு இல்லாமல் செம்மையாகச் செல்லும்.  அவன் திறமை இல்லாதவனாக இருந்தால் வண்டி சேற்றில் சிக்கிக் கொள்ளும்.  அது போல் மாண்பு உடையவனாக மன்னன் இருந்தால் நாடு நலம் பெரும்.  மன்னன் தெளிவு இல்லாதவனாக இருந்தால், பகை என்னும் செறிந்த சேற்றில் நாடு மூழ்கி ஒவ்வொரு நாளும் பல துன்பங்களை அடையும்.

சொற்பொருள்:   கால் – வண்டியின் சக்கரம், பார் – வண்டியின் அடி மரம், நெடுஞ்சட்டம், கோத்து – இணைத்து, ஞாலத்து – உலகத்தை, இயக்கும் – இயங்கச்செய்யும், காவல் – பாதுகாப்பாக, சாகாடு – வண்டி, உகைப்போன் – செலுத்துபவன், மாணின் –  மாண்பு உடையவன் ஆக இருந்தால், ஊறு – துன்பம், இன்றாகி – இல்லாமல் போய், ஆறு – வழி, இனிதுபடுமே – இனிமையாக அமையும் (இனிதுபடுமே – ஏகாரம் அசைநிலை, உய்த்தல் – சேர்க்கும் வழி, தேற்றான் – அறியாதவன், ஆயின் – ஆனால், வைகலும் – நாள்தோறும், பகைக்கூழ் அள்ளல் பட்டு – பகை என்னும் செறிந்த சேற்றில் பட்டு, மிகப் பல் – மிகுந்த பல, தீ நோய் – தீய துன்ப நோய்களை, தலைத்தலை – மேன்மேலும், தருமே – தரும் (ஏகாரம் அசைநிலை)

புறநானூறு 186, பாடியவர்மோசி கீரனார்திணைபொதுவியல்துறைபொருண்மொழிக் காஞ்சி

பாடல் பின்னணி:    இவ்வுலகிற்கு மன்னன் இன்றியமையாதவன் என்பதை அறிந்து நடப்பது மன்னனின் கடமை என்று இப்பாடலில் புலவர் மோசிகீரனார் வலியுறுத்துகின்றார்.

நெல்லும் உயிர் அன்றே, நீரும் உயிர் அன்றே,
மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்,
அதனால், யான் உயிர் என்பது அறிகை,
வேல் மிகு தானை வேந்தற்குக் கடனே.

பொருளுரைநெல்லும் உயிர் இல்லை.  நீரும் உயிர் இல்லை.  இந்த பரந்த உலகம் மன்னனையே உயிராகக் கொண்டது.  அதனால், தான் உயிர் என்பதை அறிவது வேல்களுடன் கூடிய படைகளைக் கொண்ட வேந்தனின் கடமை.

சொற்பொருள்:   நெல்லும் – நெல்லும், உயிர் அன்றே – உயிர் இல்லை (அன்றே – ஏகாரம் அசைநிலை), நீரும் – நீரும், உயிர் அன்றே – உயிர் இல்லை, மன்னன் உயிர்த்தே –  மன்னனே உயிர் (உயிர்த்தே – ஏகாரம் அசைநிலை), மலர்தலை – பரந்த இடம், உலகம் – உலகம், அதனால் – அதனால், யான் உயிர் என்பது – தான் உயிர் என்பது, அறிகை – அறிவது, வேல் மிகு – வேல் மிகுந்த, தானை – படை,  வேந்தற்கு –  மன்னனுக்கு, கடனே – கடமை (ஏகாரம் அசைநிலை)

புறநானூறு 187, பாடியவர்ஔவையார்திணைபொதுவியல்துறைபொருண்மொழிக் காஞ்சி

பாடல் பின்னணி:   நாட்டின் இயல்பு அங்கு வாழும் மக்களின் இயல்பைப் பொருத்தது என்ற கருத்தை இப்பாடலில் ஔவையார் கூறுகின்றார்.

நாடாக ஒன்றோ, காடாக ஒன்றோ,
அவலாக ஒன்றோ, மிசையாக ஒன்றோ,
எவ்வழி நல்லவர் ஆடவர்,
அவ்வழி நல்லை வாழிய நிலனே.

பொருளுரை நிலமே!  நீ நாடாகவோ, காடாகவோ, பள்ளமாகவோ அல்லது மேடாகவோ, எப்படி இருந்தாலும், அங்கு வாழும் ஆண்கள் நல்லவர்களாக இருந்தால் நீயும் நல்ல நிலமாக இருப்பாய்.  நீ வாழ்க!

குறிப்புஒன்றோ – எண்ணிடைச்சொல்.

சொற்பொருள்நாடாக ஒன்றோ – நாடு என்ற ஒன்றாகவும்,  காடாக ஒன்றோ – காடு என்ற ஒன்றாகவும், அவலாக ஒன்றோ – பள்ளம் என்ற ஒன்றாகவும்,  மிசையாக ஒன்றோ – மேடு என்ற ஒன்றாகவும், எவ்வழி – எவ்வாறு ஆனாலும்,  நல்லவர் – நல்லவர்களாகிய, ஆடவர் – ஆண்கள், அவ்வழி – அந்த வழி, நல்லை – நலமுடையை,  வாழிய – வாழ்வாயாக, நிலனே – நிலமே (நிலன் – நிலம் என்பதன் போலி, நிலனே – ஏகாரம் அசைநிலை)

புறநானூறு 188, பாடியவர்பாண்டியன் அறிவுடைநம்பிதிணைபொதுவியல்துறைபொருண்மொழிக் காஞ்சி

பாடல் பின்னணிமக்கட்பேற்றால் வரும் இன்பத்தைச் சிறப்பித்துப் பாடுகின்றான் பாண்டிய மன்னன் அறிவுடைநம்பி.

படைப்புப் பல படைத்துப் பலரோடு உண்ணும்
உடைப்பெருஞ் செல்வர் ஆயினும், இடைப்படக்
குறுகுறு நடந்து, சிறுகை நீட்டி,
இட்டும், தொட்டும், கவ்வியும், துழந்தும்,
நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும்,  5
மயக்குறு மக்களை இல்லோர்க்குப்,
பயக்குறை இல்லைத், தாம் வாழும் நாளே.

பொருளுரைபடைக்கப்படும் செல்வங்கள் பலவற்றைப் படைத்துப் பலரோடு உணவு உண்ணும் உடைமை கொண்டபெரும் செல்வந்தர் ஆயினும், குறுக்கிட்டுச் சிறுச் சிறு அடியெடுத்து நடை செய்து, சிறு கைகளை நீட்டி, உணவைக் கீழே இட்டும், கைகளால் பிசைந்து தோண்டியும், வாயால் கவ்வியும், கைகள் கொண்டு துழவியும், நெய் சேர்த்த உணவை உடலெங்கும் படுமாறு சிதறி மனதை மயக்கும் சிறு குழந்தைகள் இல்லாதோர்க்கு தாங்கள் வாழும் நாட்களால் பயனும், நிறைவும் இல்லை.

குறிப்புகுறை (7) – உ. வே. சாமிநாதையர் உரை- இன்றியமையாப்பொருள்.

சொற்பொருள்:   படைப்பு – படைக்கப்படும் செல்வம், பல – பலவற்றை, படைத்து –  செய்து, பலரோடு – பலருடன், உண்ணும் – உணவு உண்ணும், உடை – உடைமை கொண்ட, பெருஞ் செல்வர் – பெரும் செல்வந்தர்கள், ஆயினும் – ஆனாலும், இடைப்பட – குறுக்கிட்டு, குறு குறு – குறுகக் குறுக, நடந்து – நடந்து, சிறு கை நீட்டி – சிறிய கைகளை நீட்டி, இட்டும் – கீழே இட்டும், தொட்டும் – கைகளால் பிசைந்து தோண்டியும், கவ்வியும் – வாயால் கவ்வியும், துழந்தும் – துழாவியும், நெய்யுடை – நெய் உடைய, அடிசில் – உணவு, மெய்பட – உடம்பில் பட, விதிர்த்தும் – சிதறியும், மயக்குறு மக்களை – மயக்கும்  சிறு குழந்தைளை (மக்களை – இரண்டாம் வேற்றுமை விரி), இல்லோர்க்கு – இல்லாதோர்க்கு, பயக்குறை இல்லை – பயனாகிய நிறைவு இல்லை (இரா. இளங்குமரன் உரை – பயக்குறை – பயக்கு + உறை, பயன் அமைதல்), தாம் வாழும் – தாங்கள் வாழும், நாளே – நாட்களில் (நாளே – ஏகாரம் அசைநிலை)

புறநானூறு 189, பாடியவர்மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார்திணைபொதுவியல்துறைபொருண்மொழிக் காஞ்சி

பாடல் பின்னணிவேந்தனாக இருந்தாலும் வேடுவனாக இருந்தாலும் உணவு, உடை போன்ற அடிப்படைத் தேவைகள் எல்லோருக்கும் ஒன்று தான்.  அளவுக்கு மீறிய செல்வம் இருந்தால் அதை அனுபவிக்க முடியாது.  செல்வத்தின் பயன் ஈதல் என்று இப்பாடலில் நக்கீரனார் கூறுகின்றார்.

தெண்கடல் வளாகம் பொதுமை இன்றி
வெண்குடை நிழற்றிய ஒருமையோர்க்கும்,
நடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான்
கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும்,
உண்பது  நாழி,  உடுப்பவை இரண்டே,  5
பிறவும் எல்லாம் ஓரொக்குமே,
செல்வத்துப் பயனே ஈதல்,
துய்ப்பேம் எனினே தப்புந பலவே.

பொருளுரை: தெளிந்த கடலால் சூழப்பட்ட இந்த உலகைப் பிற வேந்தர்களுக்குப் பொதுவானது என எண்ணாமல் தானே ஆட்சி செய்யும் மன்னனுக்கும்,  இரவிலும் பகல் பொழுதிலும் தூங்காது விரைந்து செல்லும் விலங்குகளை வீழ்த்தப் பார்க்கும் கல்வி கற்காத ஒருவனுக்கும், தேவை நாழி அளவு உணவு தான்.  அவர்கள் உடுப்பது இரண்டு ஆடைகள் தான்.  மற்ற தேவைகளிலும் இருவரும் ஒப்பானவர்களே.  செல்வத்தின் பயன் என்பது பிறர்க்குக் கொடுத்தல்.  செல்வத்தைப் பிறருக்கு அளிக்காமல் தானே அனுபவிக்கலாம் என்று ஒருவன் நினைத்தால், அவன் பல  பயன்களை இழப்பான்.

குறிப்புபல (9) – உ. வே. சாமிநாதையர் உரை – பல என்பது அறம், பொருள் இன்பங்களை.

சொற்பொருள்:   தெண் கடல் –  தெளிந்த கடல், வளாகம் – சூழப்பட்ட இடம், பொதுமை – பிற வேந்தர்களுக்கு பொதுவானது என, இன்றி – இல்லாமல், வெண்குடை – ஆட்சிக் குடை, நிழற்றிய – நிழலின் கீழ், ஒருமையோர்க்கும் – ஒரு தன்மை உடையோர்க்கும், நடு நாள் யாமத்தும் – நடு இரவிலும், பகலும் – பகல் பொழுதும், துஞ்சான் – தூங்காதவன், கடு மா – விரைந்து செல்லும் விலங்குகள், பார்க்கும் – வீழ்த்தப் பார்க்கும், கல்லா ஒருவற்கும் – கல்வி கற்காத ஒருவற்கும், உண்பது – உண்பது, நாழி – ஒரு அளவு, உடுப்பவை – உடையாக உடுப்பது, இரண்டே – இரண்டு தான், பிறவும் எல்லாம் – மற்றவை எல்லாம், ஓரொக்குமே – ஒத்திருப்பவை (ஓரொக்குமே – ஏகாரம் அசைநிலை), செல்வத்துப் பயனே – செல்வத்தின் பயனே (பயனே – ஏகாரம் அசைநிலை),  ஈதல் – பிறர்க்கு கொடுத்தல், துய்ப்பேம் – நானே நுகர்வேன் (தன்மைப் பன்மை), எனினே – என்றால் (ஏகாரம் அசைநிலை), தப்புந – தவறுவன, பலவே – பல (பலவே – ஏகாரம் அசைநிலை)

புறநானூறு 191, பாடியவர்பிசிராந்தையார்திணைபொதுவியல்துறைபொருண்மொழிக் காஞ்சி

பாடல் பின்னணி:  தனக்கு வயதாகியும் நரையின்றி வாழ்வதின் காரணங்களை இப்பாடலில் பிசிராந்தையார் கூறுகின்றார்.

யாண்டு பலவாக, நரையில ஆகுதல்
யாங்கு ஆகியர் என வினவுதிர் ஆயின்,
மாண்ட என் மனைவியோடு மக்களும் நிரம்பினர்,
யான் கண்ட அனையர், இளையரும், வேந்தனும்
அல்லவை செய்யான், காக்க அதன்தலை  5
ஆன்று அவிந்து அடங்கிய கொள்கைச்
சான்றோர் பலர், யான் வாழும் ஊரே.

பொருளுரை:   ஆண்டுகள் பல ஆகியும் தலையில் நரை இல்லாதபடி எப்படி இவ்வாறு இருக்கின்றீர்கள் என்று நீங்கள் என்னைக் கேட்டால், சிறந்த என் மனைவியும், அறிவு நிறைந்த பிள்ளைகளும், நான் எண்ணுவது போல் எண்ணும் என்னிடம் பணிபுரிவோரும், தீமைகளைச் செய்யாத மன்னனும், மேலும், பணிவும் அடக்கமும் கொண்ட உயர்ந்த கொள்கைகளின்படி வாழும் சான்றோர்கள் பலரும் நான் வாழும் ஊரில் இருப்பதாலும் தான்.  

சொற்பொருள்யாண்டு – ஆண்டு, பலவாக –  பல ஆகிவிட்டது, நரை – நரை முடி, இல – இல்லாமல், ஆகுதல் – ஆகியதற்கு, யாங்கு – எப்படி, ஆகியர் – ஆனீர்கள், என – என்று, வினவுதிர் –  கேட்டீர்கள் (வினவுதிர் – முன்னிலை வினைமுற்று), ஆயின் – ஆனால், மாண்ட – மாட்சிமையுடைய, என் மனைவியோடு – என் மனைவியோடு, மக்களும் – பிள்ளைகளும், நிரம்பினர் – அறிவு நிரம்பினர், யான் கண்ட அனையர் – நான் கருதிய அதனையேக் கருதுபவர்கள், இளையரும் – பணியாட்கள், வேந்தனும் – மன்னனும், அல்லவை – தீயவை, செய்யான் – செய்யாதவன், காக்க – பாதுகாத்து, அதன்தலை – அதற்கு மேல், ஆன்று – நிறைந்து, அவிந்து – பணிந்து, அடங்கிய – அடக்கம் கொண்ட, கொள்கைச் சான்றோர் பலர் – கொள்கையின்படி வாழும் சான்றோர்கள் பலர், யான் வாழும் – நான் வாழும், ஊரே – ஊரில் (ஊரே – ஏகாரம் அசைநிலை)

புறநானூறு 192, பாடியவர்கணியன் பூங்குன்றனார்திணைபொதுவியல்துறைபொருண்மொழிக் காஞ்சி

பாடல் பின்னணிகணியன் பூங்குன்றனார் வேந்தரையும், வள்ளலையும் புகழ்ந்து பாடாமல், உலக இயல்பைப் பற்றிப் பாடுகின்றார்.

யாதும் ஊரே யாவரும் கேளிர்,
தீதும் நன்றும் பிறர் தர வாரா,
நோதலும் தணிதலும்  அவற்றோர் அன்ன
சாதலும் புதுவது அன்றே, வாழ்தல்
இனிது என மகிழ்ந்தன்றும் இலமே, முனிவின்  5
இன்னாது என்றலும் இலமே, மின்னொடு
வானம் தண் துளி தலைஇ ஆனாது
கல் பொருது இரங்கும் மல்லற் பேர்யாற்று
நீர் வழிப்படூஉம் புணை போல, ஆருயிர்
முறை வழிப்படூஉம் என்பது திறவோர்  10
காட்சியின் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே,
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.

பொருளுரை:   யாவும் நமது ஊர்.  அனைவரும் நமது உறவினர்கள்.   தீமையும் நன்மையும் பிறர் தந்து நமக்கு வருவதில்லை.   துன்புறுவதும் துன்பத்தைத் தவிர்த்தலும் அதைப் போன்றவை தான்.  சாதல் என்பது புதிது இல்லை.  வாழ்தல் இனிமையானது என்று  நாம் மகிழ்வதும் இல்லை.   வெறுப்பால் வாழ்க்கை இனியது இல்லை என்று கூறுவதும் இல்லை.  மின்னலுடன் வானம் குளிர்ந்த மழை பெய்வதால் முடிவில்லாது கல்லுடன் மோதி ஒலிக்கும் வலிமை மிக்க பெரிய ஆற்றின் நீர் ஓட்டத்தின் வழியே செல்லும் தெப்பத்தைப் போன்று, நம் வாழ்க்கை முறைப்படி அமையும் என்பதை அறிஞர்களின் அறிவுரைகள் மூலம் அறிந்தோம்.  ஆதலால், சிறப்பு மிக்க பெரியோர் என்று யாரையும் கண்டு நாம்  வியப்பதும் இல்லை.    சிறியோர் என்று யாரையும் நாம் இகழ்வதும் இல்லை.

சொற்பொருள்:   யாதும் – அனைத்தும், ஊரே – நமது ஊர் (ஊரே – ஏகாரம் அசைநிலை), யாவரும் – அனைவரும், கேளிர் – உறவினர்,  தீதும் – தீயவையும், நன்றும் – நல்லவையும், பிறர் தர – பிறர் தருவதால், வாரா – வருவதல்ல, நோதலும் – வருந்துவதும், தணிதலும் – அது தீர்வதும், அவற்றோர் – அவற்றை, அன்ன – போல, சாதலும் – சாவது, புதுவது – புதிது, அன்றே  –  இல்லை (அன்றே – ஏகாரம் அசைநிலை), வாழ்தல் – வாழ்தல், இனிது என – இனியது என, மகிழ்ந்தன்றும் – மகிழ்வதும், இலமே – இல்லை (இலமே – ஏகாரம் அசைநிலை), முனிவின் – வெறுத்து, இன்னாது – துன்பம் மிக்கது, என்றலும் – என்று சொல்வதும், இலமே – இல்லை (இலமே – ஏகாரம் அசைநிலை), மின்னொடு – மின்னலுடன், வானம் – வானம், தண் துளி –  குளிர்ந்த மழைத் துளி, தலைஇ – பெய்வதால், ஆனாது – இடை விடாது, கல் பொருது – கல்லுடன் மோதி, இரங்கும் – ஒலிக்கும், மல்லல் – வலிமை மிக்க, பேர்யாற்று – பெரிய ஆற்றில், நீர் வழிப்படூஉம் – நீரின் ஓட்டத்தின் வழியே செல்லும் (வழிப்படூஉம் – அளபெடை), பயணப்படும், புணை போல – மிதவை போல,  தெப்பம் போல,  ஆர் உயிர் –  அரிய உயிர், முறை வழிப்படூஉம் – முறைப்படி செல்லும் (வழிப்படூஉம் – அளபெடை), என்பது – என்பது, திறவோர் – திறம் கொண்டு அறிந்தோர், காட்சியின் – தந்த அறிவின் மூலம், தெளிந்தனம் – தெளிவு பெற்றோம், ஆகலின் – ஆனதால், மாட்சியின் – பெருமை மிக்க, பெரியோரை – பெரியவர் என்று, வியத்தலும் – வியந்து அடிபணிவதும், இலமே – இல்லை (இலமே – ஏகாரம் அசைநிலை),  சிறியோரை – சிறியோர் என்று, இகழ்தல் –  பழித்தல், அதனினும் – அதனை விட, இலமே – இல்லை (இலமே – ஏகாரம் அசைநிலை)

புறநானூறு 195, பாடியவர் –  நரிவெரூஉத்தலையார்திணைபொதுவியல்துறைபொருண்மொழிக் காஞ்சி

பாடல் பின்னணிமுதியோராக இருந்தும் தம் அறிவையும் ஆற்றலையும் நல்ல வழியில் பயன்படுத்தாத சிலரை நல்வழிப்படுத்த நரிவெரூஉத்தலையார் இவ்வாறு கூறுகின்றார்.

பல் சான்றீரே! பல் சான்றீரே!
கயல் முள் அன்ன நரை முதிர் திரை கவுள்
பயன் இல் மூப்பின் பல் சான்றீரே!
கணிச்சிக் கூர்ம்படைக் கடுந்திறல் ஒருவன்
பிணிக்கும் காலை இரங்குவிர் மாதோ,  5
நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும்,
அல்லது செய்தல் ஓம்புமின், அதுதான்
எல்லாரும் உவப்பது, அன்றியும்
நல் ஆற்றுப்படூஉம் நெறியுமார் அதுவே.

பொருளுரை:   பல நல்ல தன்மைகளை உடைய சான்றோர்களே!  பல நல்ல தன்மைகளை உடைய சான்றோர்களே!  கெண்டை மீனின் முள் போன்ற நரை முடியுடனும், முதுமையால் ஏற்படும் தோல் சுருக்கம் கொண்ட கன்னத்துடனும்,  பயன் இல்லாத முதுமையை அடைந்த பல நல்ல தன்மைகளை உடைய சான்றோர்களே!  கூர்மையான கோடரிப்  படைக்கலன் கொண்டு மிகுதியான வலிமை கொண்ட காலன் கயிற்றால் பிணைத்து இழுத்துச் செல்லும் நேரத்தில் நீங்கள் வருந்துவீர்கள்.  நல்ல செயல்களைச் செய்யாவிட்டாலும், தீய செயல்கள் செய்வதைத் தவிர்க்கவும்.  அது தான் எல்லாருக்கும் மகிழ்ச்சி அளிப்பது.   அதுமட்டுமல்லாமல், அதுதான் உங்களை நல்ல வழியில் செலுத்தும்.

குறிப்புசான்றீரே – ஒளவை துரைசாமி உரை – இகழ்ச்சிக்குறிப்பு.

சொற்பொருள்:  பல் சான்றீரே – பல நல்ல தன்மைகள் அமைந்த சான்றோர்களே, கயல் முள் – கெண்டை மீன் முள், அன்ன – போல, நரை – நரைத்த முடி, முதிர் – முதிர்ந்த, திரை கவுள் –  சுருங்கிய கன்னம், பயன் இல் – பயன் இல்லாத, மூப்பின் – முதுமையின், பல் சான்றீரே – பல நல்ல தன்மைகள் கொண்ட சான்றோர்களே, கணிச்சி – மழு, கோடரி, கூர் – கூர்மையான, படை – படைக் கலன், கடுந் திறல் – மிகுந்த வலிமை, ஒருவன் – ஒருவன் (யமன்), பிணிக்கும் – கயிற்றால் பிணைத்து இழுத்திச் செல்லும், காலை – நேரத்தில், இரங்குவிர் –  வருந்துவீர், மாதோ – அசைச்சொல், நல்லது செய்தல் – நன்மை செய்தல், ஆற்றீர் ஆயினும் – நீங்கள் செய்யாவிட்டாலும் கூட, அல்லது செய்தல் – தீமை செய்தல், ஓம்புமின் – தவிருங்கள் (மின் – முன்னிலைப் பன்மை வினைமுற்று விகுதி), அது தான் – அந்தச் செயல் தான், எல்லாரும் – அனைவரும், உவப்பது – மகிழ்வது, அன்றியும் – மட்டுமல்லாமல், நல் ஆற்றுவழிபடூஉம் – நல்ல வழியில் செலுத்தும் (ஆற்றுவழிபடூஉம்  – அளபெடை), நெறியுமார் அதுவே – பாதையும் அது தான் (நெறியுமார் – ஆர் அசைநிலை, அதுவே – ஏகாரம் அசைநிலை)

புறநானூறு – 199, பாடியவர்பெரும்பதுமனார்திணைபாடாண்துறைபரிசில் கடாநிலை

பாடல் பின்னணி:   பாணர், விறலியர், கூத்தர், பொருநர், புலவர் ஆகியோர் மீண்டும் மீண்டும் செல்வந்தர்களிடம் சென்று பரிசு பெறுவதைப் பற்றித் தன் எண்ணத்தை இப்பாடலில் கூறுகின்றார் புலவர் பெரும்பதுமனார்.

கடவுள் ஆலத்துத் தடவுச்சினைப்  பல்பழம்
நெருநல் உண்டனம் என்னாது, பின்னும்
செலவு ஆனாவே கலி கொள் புள்ளினம்
அனையர், வாழியோ  இரவலர், அவரைப்
புரவு எதிர் கொள்ளும்  பெருஞ்செய் ஆடவர்  5
உடைமை ஆகும் அவர் உடைமை,
அவர் இன்மை ஆகும் அவர்  இன்மையே.

பொருளுரை கடவுள் வசிக்கும் ஆலமரத்தின் பெரிய மரக்கிளைகளில் இருந்த பழங்களை நேற்று உண்டோம் என்று நினைக்காது, மீண்டும் மீண்டும் அம்மரத்தையே நாடிச் சென்று மகிழும் பறவை இனத்தைப் போன்று வாழ்பவர்கள், பரிசில் பெறும் இரவலர்கள்.  இரவலர்களை எதிர்கொண்டு வரவேற்கும் பெரும் குணமுடைய புரவலர்களின் செல்வம் தான் இரவலர்களின் செல்வம்.  புரவலர்கள் வறுமையுற்றால் இரவலர்களும் வறுமை அடைவார்கள்.

சொற்பொருள்கடவுள் – கடவுள், ஆலத்து – ஆலமரத்து, தடவுச் சினை – பெரிய மரக்கிளை, பல் பழம் – பல பழங்கள், நெருநல் – நேற்று, உண்டனம் – உண்டோம், என்னாது – என்று நினைக்காது, பின்னும் – பின்பும், மீண்டும், செலவு – செல்லுதல், ஆனாவே – நீங்காது (ஆனாவே – ஏகாரம் அசைநிலை), கலி கொள் – மகிழ்ச்சி கொள்ளும், புள் இனம் – பறவை இனம், அனையர் – போன்றோர், வாழி – அசைநிலை, ஓ – அசைநிலை, இரவலர் – பரிசில் பெறுவோர், அவரை – அவர்களை, புரவு – ஆதரிக்க, எதிர் கொள்ளும் – வரவேற்கும், பெருஞ்செய் – பெரும் செய்கை உடைய,  ஆடவர் – ஆண் மக்கள், உடைமை ஆகும் – செல்வம் ஆகும், அவர் உடைமை – இரப்போரின் செல்வம், அவர் இன்மை – அவர்களது (ஆதரிப்போரின்) வறுமை, ஆகும் – ஆகும், அவர் இன்மையே – இரப்போரின் வறுமையும் (இன்மையே – ஏகாரம் அசைநிலை)

புறநானூறு 200, பாடியவர்கபிலர், பாடப்பட்டவன்: விச்சிக்கோ, திணை: பாடாண் துறை, துறை: பரிசில்

பாடல் பின்னணி:  பாரி இறந்த பின்னர், கபிலர் பாரியின் பெண்களை தன்னுடைய பெண்களாக ஏற்று, அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க எண்ணி குறுநில மன்னனான விச்சிக்கோவை அணுகுகின்றார்.

பனி வரை நிவந்த பாசிலைப் பலவின்
கனி கவர்ந்து உண்ட கருவிரல் கடுவன்
செம்முக மந்தியொடு சிறந்து, சேண் விளங்கி
மழை மிசை அறியா மால் வரை அடுக்கத்துக்
கழை மிசைத் துஞ்சும் கல்லக வெற்ப,  5
நிணந்தின்று செருக்கிய நெருப்புத்தலை நெடுவேல்
களங்கொண்டு கனலும் கடுங்கண் யானை
விளங்கு மணி கொடும் பூண் விச்சிக்கோவே,
இவரே பூத்தலை அறாஅப் புனை கொடி முல்லை
நாத் தழும்பு இருப்பப் பாடாது ஆயினும்  10
கறங்கு மணி நெடுந்தேர் கொள்கெனக் கொடுத்த
பரந்து ஓங்கு சிறப்பின் பாரி மகளிர்,
யானே பரிசிலன் மன்னும் அந்தணன், நீயே
வரிசையில் வணக்கும் வாள் மேம்படுநன்,
நினக்கியான் கொடுப்பக் கொண்மதி, சினப்போர்  15
அடங்கா மன்னரை அடக்கும்,
மடங்கா விளையுள் நாடு கிழவோயே.

பொருளுரைகுளிர்ந்த மலையில் ஓங்கிய பசுமையான இலைகளையுடைய பலா மரத்தின் பழத்தை உண்ட கருமையான விரலையுடைய ஆண் குரங்கு சிவந்த முகத்தையுடைய தன்னுடைய பெண் குரங்குடன், தொலைவில் விளங்கி முகிலினம் எட்ட முடியாத உயரத்தையுடைய அடுக்கு மலையில், மூங்கிலின் மேல் துயிலும் மலை நாடனே!

கொழுப்பைத் தின்று களித்த நெருப்புப் போலும் தலையையுடைய நீண்ட வேலையும், போர்க்களத்தைத் தனதாக்கிக் கொண்டு சினமடையும் கொடூரமான யானைகளையும் உடைய, ஒளியுடைய மணிகளைக் கொண்ட வளைந்த அணிகலன்களை அணிந்த விச்சிக்கோவே!

இவர்கள், பூவைத் தன்னுடைய தலையில் மாறாது ஒப்பனைச் செய்தாற்போல் கொண்டிருந்த முல்லைக் கொடி, தன்னுடைய நாவில் தழும்பு ஏற்படப் பாடவில்லை என்றாலும், “ஒலிக்கும் மணிகளையுடைய என்னுடைய நெடியத் தேரை நீ கொள்வாயாக” என அதற்குக் கொடுத்த, பரந்து மேம்பட்ட பாரியின் பெண்கள்.  நான் பரிசில் வேண்டும் நிலைபெற்ற அந்தணன்.  நீ பகைவரைப் போரில் வென்று பணிய வைக்கும் வாளால் சிறப்படைந்தவன்.  இந்த மகளிரை உனக்கு நான் கொடுப்ப நீ அவர்களை ஏற்றுக் கொள்வாயாக, அடங்காத பகை மன்னர்களை அடக்கும் குறைவில்லாத மிக்க விளைதலையுடைய நாட்டின் தலைவனே!

குறிப்புமன்னும் அந்தணன் (13) – ஒளவை துரைசாமி உரை- பெண் பேசுதற்கும், கொடுத்தற்கும், தூது போதலும், காதலர் இருவருள் ஒருவர்க்கொருவரது காம நிலை உரைத்தலும், இவை போல்வன பிறவும் செய்தலும் பார்ப்பனர்க்கு அமையுமெனத் தொல்காப்பியம் முதலிய பண்டைத் தமிழ் நூல்கள் கூறுதலின் ‘மன்னும் அந்தணன்’ என்றார்.  மதி – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம்.  சொல்லதிகாரம்.  இடையியல் 26).

சொற்பொருள்:  பனி வரை நிவந்த – குளிர்ந்த மலையில் ஓங்கிய, பாசிலைப் பலவின் கனி கவர்ந்து உண்ட – பசுமையான இலைகளையுடைய பலா மரத்தின் பழத்தை உண்ட, கருவிரல் கடுவன் – கருமையான விரல் ஆண் குரங்கு, செம்முக மந்தியொடு – சிவந்த முகத்தையுடைய பெண் குரங்குடன், சிறந்து சேண் விளங்கி – தொலைவில் விளங்கி, மழை மிசை அறியா – முகிலினம் அறியாத உயரம், மால் வரை அடுக்கத்துக் கழை மிசைத் துஞ்சும் – உயர்ந்த அடுக்கு மலையில் மூங்கிலின் மேல் துயிலும், கல்லக வெற்ப – மலை நாடனே, நிணந் தின்று – கொழுப்பைத் தின்று, செருக்கிய நெருப்புத்தலை நெடுவேல் – களித்த நெருப்பு போலும் தலையையுடைய நீண்ட வேல், களங்கொண்டு – போர்க்களத்தை தனதாக்கிக் கொண்டு, கனலும் கடுங்கண் யானை – சினமுடைய கொடூரமான யானைகள், விளங்கு மணி கொடும் பூண் விச்சிக்கோவே – ஒளியுடைய மணிகளை உடைய வளைந்த அணிகலன்களை அணிந்த விச்சிக்கோவே, இவரே – இவர்களே (ஏகாரம் அசைநிலை), பூத்தலை அறாஅப் புனை கொடி முல்லை – பூவை தன்னுடைய தலையில் மாறாது ஒப்பனைச் செய்தாற்போலும் முல்லைக் கொடி (அறாஅ – அளபெடை), நாத் தழும்பு இருப்பப் பாடாது ஆயினும் – தன்னுடைய நாவில் தழும்பு ஏற்பட பாடவில்லை என்றாலும், கறங்கு மணி நெடுந்தேர் கொள்கெனக் கொடுத்த – ஒலிக்கும் மணிகளையுடைய உயர்ந்த தேரை நீ கொள்வாயாக எனக் கொடுத்த, பரந்து ஓங்கு சிறப்பின் பாரி மகளிர் – பரந்து சிறப்புற்ற பாரியின் பெண்கள், யானே பரிசிலன் மன்னும் அந்தணன் – நானே பரிசில் வேண்டும் நிலைபெற்ற அந்தணன் (யானே – ஏகாரம் அசைநிலை), நீயே வரிசையில் வணக்கும் வாள் மேம்படுநன் – நீயே பகைவரைப் போரில் வென்று பணிய வைக்கும் வாளால் சிறப்படைந்தவன் (நீயே – ஏகாரம் அசைநிலை), நினக்கியான் கொடுப்பக் கொண்மதி – உனக்கு நான் கொடுப்ப நீ கொள்வாயாக (மதி – முன்னிலையசை), சினப்போர் அடங்கா மன்னரை அடக்கும் – அடங்காத பகை மன்னர்களை அடக்கும், மடங்கா விளையுள் நாடு கிழவோயே – குறையாத மிக்க விளைதலையுடைய நாட்டின் தலைவனே (கிழவோயே – ஏகாரம் அசைநிலை)

புறநானூறு 201, பாடியவர்: கபிலர், பாடப்பட்டோன்: இருங்கோவேள், திணை: பாடாண், துறை: பரிசில்

பாடல் பின்னணி:  பாரி இறந்த பின்னர், கபிலர் பாரியின் பெண்களை தன்னுடைய பெண்களாக ஏற்று, அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க எண்ணி குறுநில மன்னனான இருங்கோவேளை அணுகுகின்றார்.

இவர் யார் என்குவை ஆயின், இவரே
ஊருடன் இரவலர்க்கு அருளித் தேருடன்
முல்லைக்கு ஈத்த செல்லா நல்லிசை
படுமணி யானைப் பறம்பின் கோமான்
நெடுமாப் பாரி மகளிர், யானே  5
தந்தை தோழன், இவர் என் மகளிர்,
அந்தணன், புலவன் கொண்டு வந்தனனே,
நீயே வடபால் முனிவன் தடவினுள் தோன்றிச்
செம்பு புனைந்து இயற்றிய சேண் நெடும் புரிசை
உவரா ஈகைத் துவரை யாண்டு  10
நாற்பத்தொன்பது வழிமுறை வந்த
வேளிருள் வேள விறல் போர் அண்ணல்,
தார் அணி யானைச் சேட்டு இருங்கோவே,
ஆண் கடன் உடைமையின் பாண் கடன் ஆற்றிய
ஒலியற் கண்ணிப் புலிகடிமாஅல்,  15
யான் தர இவரைக் கொண்மதி, வான் கவித்து
இருங்கடல் உடுத்த இவ் வையகத்து அருந்திறல்
பொன்படு மால் வரைக் கிழவ, வென் வேல்
உடலுநர் உட்கும் தானைக்
கெடல் அருங்குரைய நாடு கிழவோயே.  20

பொருளுரை இவர்கள் யார் என்று என்னிடம் நீ கேட்பாய் ஆயின், இவர்களே தன்னுடைய ஊர்கள் எல்லாவற்றையும் இரவலர்க்கு கொடுத்து, தன்னுடைய தேரை முல்லைக் கொடிக்குக் கொடுத்த, தொலையாத நல்ல புகழையுடைய ஒலிக்கும் மணிகளையுடைய யானைகளையுடைய பறம்பு மலையின் மன்னனான மிகப் பெரிய பாரியின் மகளிர்.  நான் இவர்களுடைய தந்தையின் நண்பன்.  இவர்கள் என்னுடைய மகளிர்.  நான் ஓர் அந்தணன்.  புலவனான நான் இவர்களைக் கொண்டு வந்துள்ளேன்.

நீ வடபக்கத்து முனிவனுடைய ஓமகுண்டத்தில் தோன்றி செம்பால் செய்யப்பட்ட மிக உயர்ந்த மதிலையுடைய துவரையை ஆண்டு, விடாத ஈகை உடையவராய் 49 தலைமுறையாக வந்த வேளிர் பரம்பரையில் வந்த போரில் வெற்றிகரமான தலைவனே! மாலைகள் அணிந்த யானைகளையுடைய பெரிய இருங்கோவே!  ஆண் தன்மையைக் கடமையாகக் கொண்டமையால், பாணர்க்குச் செய்ய வேண்டிய கடமையை ஆற்றிய, தழைத்த மலர்க் கண்ணியை அணிந்த புலிகடிமால்!

நான் உனக்குத் தர நீ இவர்களை ஏற்றுக் கொள்வாயாக!  வானால் கவிக்கப்பட்டப் பெரிய கடல் சூழ்ந்த இந்த உலகத்தில், அணுகுதற்கரிய வலிமை உடைய பொன்னையுடைய உயர்ந்த மலையின் தலைவனே!  வெற்றி வேலையுடைய பகைவர் அஞ்சும் கேடு இல்லாத நாட்டின் தலைவனே!

குறிப்புசெம்புச் சுவர்: புறநானூறு 201 – செம்பு புனைந்து இயற்றிய சேண் நெடும் புரிசை, அகநானூறு 375, புறநானூறு 37 – செம்பு உறழ் புரிசை, மதுரைக்காஞ்சி 485 – செம்பு இயன்றன்ன செஞ்சுவர், நெடுநல்வாடை 112 – செம்பு இயன்றன்ன செய்வுறு நெடுஞ் சுவர்.  மதி – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம்.  சொல்லதிகாரம்.  இடையியல் 26).  வடபால் முனிவன் (8) – ஒளவை துரைசாமி உரை – மைசூர் நாட்டுத் துவரை.  இப்புறப்பாட்டில் முனிவன் என்றும், துவரை என்றும் புலிகடிமால் என்றும் வருவனவற்றைக் கொண்டு, இது ஹொய்சளக் கதை என நினைக்கப்படுகிறது.  வடபால் முனிவன் சம்பு முனிவனாக இருக்கலாமென உ. வேசா ஐயரவர்கள் ஊகிக்கின்றார்கள்.  துவரை என்றது, வடநாட்டில் ‘நிலங்கடந்த நெடுமுடியண்ணல்’ இருந்து ஆட்சிபுரிந்த துவரையென்னும் அவன் பாலிருந்து மலயமாதவனான குறுமுனிவன் கொணர்ந்த வேளிர்கள் என்றும் பதினெண்குடியினர் என்றும் நச்சினார்க்கினியர் குறிக்கின்றார், ஐராவதம் மகாதேவன் – அகத்தியர்.  தடவினுள் (8) – ஒளவை துரைசாமி உரை – ஓமகுண்டத்தின்கண், உ. வே. சாமிநாதையர் உரை – ஓமகுண்டத்தின்கண்.  Iravatham Mahadevan who traces Akathiyar from the Dravidian Indus Valley Civilization to the South, quotes M. Raghava Iyengar’s interpretation of the word தடவு as ‘sacrificial vessel’ in the latter’s book வேளிர் வரலாறு.  He adds, “Even he missed the obvious connection between Akathiyar and his inseparable water pitcher.  He adds further, “The word tadavu (variant taṭa, தட) means a ‘big clay pot’ (DEDR 3027) etymologically related to taṭa (தட) ‘thick, large’ (DEDR 3020).  The matter has now been put beyond doubt as the word tada occurs in a Tamil-Brahmi inscription (ca.2nd cen l. BCE) incised on a broken storage jar excavated at Kodumanal, Tamilnadu.  The fragmentary inscription reads ‘earthen jar storing (?) cold (and) hot water’.  The word tatavu ‘jar’ is also attested in Tamil literature. It occurs twice in a poem in Nācciyār Tirumoḻi; (9:6), assigned to ca. 8th cent. CE: nūru taṭāvil veṇṇey (நூறு தடாவில் வெண்ணெய்) – ‘a hundred jars of butter’; nūru taṭā niṟaintha akkāra adicil (நூறு தடா நிறைந்த அக்கார அடிசில்) – ‘a hundred jars of sweet morsel’”.

சொற்பொருள்  இவர் யார் என்குவை ஆயின் – இவர்கள் யார் என்று கேட்பாய் ஆயின், இவரே – இவர்களே, ஊருடன் இரவலர்க்கு அருளி – ஊர் எல்லாவற்றையும் இரவலர்க்கு கொடுத்து,தேருடன் முல்லைக்கு ஈத்த – தேரை முல்லைக் கொடிக்குக் கொடுத்த, செல்லா நல்லிசை – அழியாத நல்ல புகழ், படுமணி யானை – ஒலிக்கும் மணிகளையுடைய யானைகளையுடைய, பறம்பின் கோமான் நெடுமாப் பாரி மகளிர் – பறம்பு மலையின் மன்னனான மிக்க பெரிய பாரியின் மகளிர், யானே தந்தை தோழன் – நான் இவர்களுடைய தந்தையின் நண்பன், இவர் என் மகளிர் – இவர்கள் என்னுடைய மகளிர், அந்தணன் புலவன் கொண்டு வந்தனனே – புலவனான நான் அவர்களைக் கொண்டு வந்துள்ளேன், நீயே வடபால் முனிவன் தடவினுள் தோன்றி – நீயே வடபக்கத்து முனிவனுடைய ஓமகுண்டத்தில் தோன்றி, செம்பு புனைந்து இயற்றிய சேண் நெடும் புரிசை – செம்பால் செய்யப்பட்ட மிக உயர்ந்த மதில், உவரா ஈகை – விடாத ஈகை, துவரை யாண்டு – துவரையை ஆண்டு, நாற்பத்தொன்பது வழிமுறை வந்த வேளிருள் – 49 தலைமுறையாக வந்த வேளிருள், வேள விறல் போர் அண்ணல் – வேளிர் பரம்பரையின் போரில் வெற்றிகரமான தலைவனே, தார் அணி யானைச் சேட்டு இருங்கோவே – மாலைகள் அணிந்த யானைகளையுடைய பெரிய இருங்கோவே, ஆண் கடன் உடைமையின் – ஆண் தன்மையைக் கடமையாக கொண்டமையால், பாண் கடன் ஆற்றிய – பாணர்க்கு செய்ய வேண்டிய கடமையை ஆற்றிய, ஒலியற் கண்ணிப் புலிகடிமாஅல் – தழைத்த மலர்க் கண்ணியை அணிந்த புலிகடிமால், யான் தர இவரைக் கொண்மதி – நான் தர நீ இவர்களை ஏற்றுக் கொள்வாயாக, வான் கவித்து – வானால் கவிக்கப்பட்டு, இருங்கடல் உடுத்த இவ் வையகத்து – பெரிய கடல் சூழ்ந்த இந்த உலகத்தில், அருந்திறல் – அணுகுதற்கரிய வலிமை, பொன்படு மால் வரைக் கிழவ – பொன்னையுடைய உயர்ந்த மலையின் தலைவனே, வென் வேல் உடலுநர் உட்கும் தானை – வெற்றி வேலையுடைய பகைவர் அஞ்சும் தானை, கெடல் அருங்குரைய நாடு கிழவோயே – கேடு இல்லாத நாட்டின் தலைவனே (குரைய – ஓர் அசைநிலை, கிழவோயே – ஏகாரம் அசைநிலை)

புறநானூறு 202, பாடியவர்: கபிலர், பாடப்பட்டோன்: இருங்கோவேள், திணை: பாடாண், துறை: பரிசில்

பாடல் பின்னணி:  பாரி இறந்த பின்னர், கபிலர் பாரியின் பெண்களை தன்னுடைய பெண்களாக ஏற்று, அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க எண்ணி குறுநில மன்னனான இருங்கோவேளை அணுகுகின்றார்.

வெட்சிக் கானத்து வேட்டுவர் ஆட்டக்
கட்சி காணாக் கடமா நல் ஏறு
கடறு மணி கிளரச் சிதறு பொன் மிளிரக்
கடிய கதழும் நெடு வரைப் படப்பை,
வென்றி நிலைஇய விழுப் புகழ் ஒன்றி,  5
இரு பால் பெயரிய உருகெழு மூதூர்க்
கோடி பல அடுக்கிய பொருள் நுமக்கு உதவிய
நீடு நிலை அரையத்துக் கேடும் கேள் இனி,
நுந்தை தாயம் நிறைவுற எய்திய
ஒலியற் கண்ணிப் புலிகடிமாஅல்,  10
நும் போல் அறிவின் நுமருள் ஒருவன்
புகழ்ந்த செய்யுள் கழாஅத் தலையை
இகழ்ந்ததன் பயனே, இயல் தேர் அண்ணல்,
எவ்வி தொல் குடிப் படீஇயர், மற்று இவர்
கைவண் பாரி மகளிர் என்ற என்  15
தேற்றாப் புன் சொல் நோற்றிசின் பெரும,
விடுத்தனென், வெலீஇயர் நின் வேலே, அடுக்கத்து
அரும்பு அற மலர்ந்த கருங்கால் வேங்கை
மாத்தகட்டு ஒள் வீ தாய துறுகல்
இரும்புலி வரிப் புறம் கடுக்கும்  20
பெருங்கல் வைப்பின் நாடு கிழவோயே.

பொருளுரை:   வெட்சி செடிகளையுடைய காட்டில் வேடுவர்கள் விரட்ட, புகலிடம் காணாத காட்டு மாவினது நல்ல ஏறு, மலைச் சரிவில், மணி மேலே கிளம்பவும் சிதறிய பொன் விளங்கவும் விரைந்தோடும் உயர்ந்த மலையின் பக்கத்தில், வெற்றி நிலைபெற்ற சிறந்த புகழ் பொருந்திய சிற்றரையம் பேரரையம் என்று இரண்டு பகுதிகளைக் கொண்ட அச்சம் பொருந்திய பழைய ஊர் பல கோடியாக அடுக்கப்பட்டிருந்த பொன்னை நுமக்கு கொடுத்து உதவியது.  அந்த பெரிய அரையத்தினது கேட்டை கேட்பாயாக இனி, உன் தந்தையின் அரசு உரிமையை நிறைய பெற்ற தழைத்த மலர்க் கண்ணியை அணிந்த புலிகடிமாலே! உன்னைப் போல் அறிவில் ஒத்த, உன் குடியின் ஒருவன், புகழ்ந்த செய்யுளையுடைய கழாத்தலையார் என்ற புலவரை அவமதித்ததன் பயனே அது.

இயற்றப்பட்ட தேரையுடைய தலைவனே!  இவர்கள் எவ்வியின் தொன்மையான குடியில் பொருந்துவார்களாக, பின்னை இவர்கள் கொடைத் தன்மையுடைய பாரியின் பெண்கள் என்று சொல்லிய என் பொருந்தாத புல்லிய சொற்களைப் பொறுத்துக்கொள்வாயாக பெருமானே!  நான் விடை பெறுகிறேன்.  உன் வேல் வெல்லட்டும், மலையில் அரும்பு இல்லாமல் மலர்ந்த கரிய அடியை உடைய வேங்கை மரத்தின் கரிய புற இதழையுடைய மலர்கள் பரவியதால் பாறைகள் வரியுடைய பெரிய புலிகள் போன்று தோன்றும் பெரிய மலையை உடைய நாட்டின் தலைவனே!

குறிப்புசின் – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம்.  சொல்லதிகாரம்.  இடையியல் 26, சின் என்பது இசின் என்பதன் முதற்குறை – ச. பாலசுந்தரம் உரை).  விழு (விழுமம்) – விழுமம் சீர்மையும் சிறப்பும் இடும்பையும் (தொல்காப்பியம் உரியியல் 57).

சொற்பொருள்  வெட்சிக் கானத்து வேட்டுவர் ஆட்ட – வெட்சி செடிகளையுடைய காட்டில் வேடுவர்கள் விரட்ட, கட்சி காணாக் கடமா நல் ஏறு – புகலிடம் காணாத காட்டு மாவினது நல்ல ஏறு, கடறு மணி கிளரச் சிதறு பொன் மிளிர – மலைச் சரிவில் மணி மேலே கிளம்பவும் சிதறிய பொன் விளங்கவும், கடிய கதழும் – விரைந்தோடும், நெடு வரைப் படப்பை – உயர்ந்த மலையின் பக்கம், வென்றி நிலைஇய விழுப் புகழ் ஒன்றி – வெற்றி நிலைபெற்ற சிறந்த புகழ் பொருந்தி (நிலைஇய – அளபெடை), இரு பால் பெயரிய உருகெழு மூதூர் – சிற்றரையம் பேரரையம் என்று இரண்டு பகுதிகளைக் கொண்ட அச்சம் பொருந்திய பழைய ஊர், கோடி பல அடுக்கிய பொருள் நுமக்கு உதவிய – பல கோடியாக உள்ள பொன்னை நுமக்கு உதவிய, நீடு நிலை அரையத்துக் கேடும் கேள் இனி – அரையத்தினது கேட்டையும் கேட்பாயாக இனி, நுந்தை தாயம் நிறைவுற எய்திய – உன் தந்தையின் உரிமையை நிறைய பெற்ற, ஒலியற் கண்ணிப் புலிகடிமாஅல் – தழைத்த மலர்க் கண்ணியை அணிந்த புலிகடிமால் (புலிகடிமாஅல் – அளபெடை), நும் போல் அறிவின் நுமருள் ஒருவன் – உன்னைப் போல் அறிவில் ஒத்த உன் குடியின் ஒருவன், புகழ்ந்த செய்யுள் கழாஅத்தலையை இகழ்ந்ததன் பயனே – புகழ்ந்த செய்யுளையுடைய கழாத்தலையார் என்ற புலவரை அவமதித்ததன் பயனே (பயனே – ஏகாரம் அசைநிலை), இயல் தேர் அண்ணல் – இயற்றப்பட்ட தேரையுடைய தலைவனே, எவ்வி தொல் குடிப் படீஇயர் – இவர்கள் எவ்வியின் தொன்மையான குடியில் பொருந்துவார்களாக (படீஇயர் – அளபெடை), மற்று இவர் கைவண் பாரி மகளிர் என்ற – பின்னை இவர்கள் கொடைத் தன்மையுடைய பாரியின் பெண்கள் என்று சொல்லிய, என் தேற்றாப் புன் சொல் நோற்றிசின் பெரும – என் பொருந்தாத புல்லிய சொற்களைப் பொறுத்துக்கொள்வாயாக பெருமானே, விடுத்தனென் – நான் விடை பெற்றேன், வெலீஇயர் நின் வேலே – உன் வேல் வெல்லட்டும் (வெலீஇயர் – அளபெடை, வியங்கோள் வினைமுற்று விகுதி, வேலே – ஏகாரம் அசைநிலை), அடுக்கத்து – மலையில், அரும்பு அற மலர்ந்த கருங்கால் வேங்கை மாத்தகட்டு ஒள் வீ தாய – அரும்பு இல்லாமல் மலர்ந்த கரிய அடியை உடைய வேங்கை மரத்தின் பெரிய/கரிய புற இதழையுடைய மலர்கள் பரவி, துறுகல் இரும்புலி வரிப் புறம் கடுக்கும் – பாறைகள் வரியுடைய பெரிய புலிகள் போன்று தோன்றும் (கடுக்கும் – உவம உருபு), பெருங்கல் வைப்பின் நாடு கிழவோயே – பெரிய மலையை உடைய நாட்டின் தலைவனே (கிழவோயே – ஏகாரம் அசைநிலை)

புறநானூறு 212, பாடியவர்பிசிராந்தையார், பாடப்பட்டோன்கோப்பெருஞ் சோழன், திணைபாடாண், துறை –  இயன் மொழி 

பாடல் பின்னணி:  பாண்டிய நாட்டில் இருந்த புலவர் பிசிராந்தையார் கோப்பெருஞ்சோழனிடம் மிகுந்த நட்புகொண்டவராக இருந்தார். அவர்களின் நட்பின் காரணமாக மன்னனைத் தன் வேந்தராகவே கருதினார்.  மன்னனின் சிறப்பை இந்தப் பாடலில் குறிப்பிடுகின்றார்.

நுங்கோ யார் என வினவின், எங்கோக்
களமர்க்கு அரித்த விளையல் வெங்கள்
யாமைப் புழுக்கின் காமம் வீட ஆரா
ஆரல் கொழுஞ் சூடு அம் கவுள் அடாஅ
வைகு தொழின் மடியும் மடியா விழவின்  5
யாணர் நல் நாட்டுள்ளும், பாணர்
பைதல் சுற்றத்துப் பசிப் பகை ஆகிக்,
கோழியோனே கோப்பெருஞ்சோழன்,
பொத்தில் நண்பின் பொத்தியொடு கெழீஇ,
வாய் ஆர் பெரு நகை வைகலும் நக்கே.  10

பொருளுரை:   உன்னுடைய மன்னன் யார் என்று என்னைக் கேட்பீராயின், என்னுடைய மன்னன் உழவர்களுக்காக வடிக்கப்பட்ட விரும்பத்தக்க கள்ளை ஆமையின் அவித்த இறைச்சியுடன் ஆசைதீர அந்த உழவர்கள் உண்டு, சுடப்பட்ட கொழுத்த விலாங்கு மீனின் இறைச்சியைத் தங்கள் கன்னத்தில் அடக்கித் தம்முடைய தொழிலை மறந்து நீங்காத விழாக்களைக் கொண்டாடும் வளமை மிகுந்த சோழ நாட்டின் உறையூரில் உள்ள மன்னன் கோப்பெருஞ்சோழன்.  அவன் பாணர்களின் வருத்தமடைந்த சுற்றத்தாரின் பசியாகிய பகையைப் போக்குபவன்.   அவன் குறையில்லாத நண்பரான புலவர் பொத்தியாரோடு கூடி நாள்தோறும் பெருமகிழ்ச்சியுடன் இருக்கின்றான்.

குறிப்புகோழி – உறையூர்.  யாணர் – புதிதுபடற் பொருட்டே யாணர்க் கிளவி (தொல்காப்பியம், உரியியல் 83).  அடாஅ – செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம்.  எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது.  அடாஅ – அடக்கி என்பது பொருள்.  செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம்.  எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது.  ஆரா – ஆர்ந்து, செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம்.  எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது.

சொற்பொருள்  நுங்கோ யார் என வினவின் – உன்னுடைய மன்னன் யார் என்று என்னைக் கேட்பீராயின்,  எங்கோ – என்னுடைய மன்னன், களமர்க்கு – வயலில் பணி புரிபவர்களுக்கு, அரித்த விளையல் வெங்கள் – வடிகட்டிய முதிர்ந்த விரும்பத்தக்க மது, யாமைப் புழுக்கின் – ஆமையின் அவித்த இறைச்சியுடன், காமம் வீட ஆரா – வேட்கைதீர, ஆரல் கொழுஞ் சூடு – விலங்கு மீனின் சுடப்பட்ட கொழுத்த இறைச்சியை,  அம் கவுள் அடாஅ – அழகிய கன்னத்தில் அடக்கி (அடாஅ – அளபெடை), வைகு தொழின் மடியும் – இருந்து செய்ய வேண்டிய தொழிலை மறந்து, மடியா விழவின் – நீங்காத விழாக்களையுடைய,  யாணர் நல் நாட்டுள்ளும் – வளமை மிகுந்த நாட்டுள்ளும்,  பாணர் பைதல் சுற்றத்துப் பசிப் பகை ஆகி – பாணரின் வருத்தமுற்ற சுற்றத்தாரின் பசிக்குப் பகையாய், கோழியோனே – உறையூர் என்னும் ஊரில் உள்ளவன், கோப்பெருஞ்சோழன் – கோப்பெருஞ்சோழன் பொத்தில் நண்பின் பொத்தியொடு கெழீஇ  – குற்றமில்லாத நட்பினையுடைய பொத்தியார் என்னும் புலவரோடு கூடி (கெழீஇ – அளபெடை), வாய் ஆர் பெரு நகை வைகலும் நக்கே – நாள்தோறும் பெருமகிழ்ச்சியுடன் இருக்கின்றான் (நக்கே – ஏகாரம் அசைநிலை)

புறநானூறு 215, பாடியவர்: கோப்பெருஞ் சோழன், திணை: பாடாண், துறை: இயன் மொழி

பாடல் பின்னணி: கோப்பெருஞ்சோழன் வடக்கிருக்கையில் சான்றோர் பலர் அவனைச் சூழ்ந்திருந்தனர்.  பலர் கூடவே இருந்தாலும் அவனது எண்ணம் பிசிராந்தையார்பால் ஒன்றியிருந்தது.  புலவர் பிசிராந்தையார் தன்னைக் காண வருவார் என்ற நம்பிக்கையுடன் இருக்கின்றான் மன்னன்.

கவைக் கதிர் வரகின் அவைப்புறுவாக்கல்
தாதெரு மறுகின் போதொடு பொதுளிய
வேளை வெண் பூ வெண் தயிர்க் கொளீஇ
ஆய் மகள் அட்ட அம் புளி மிதவை
அவரை கொய்யுநர் ஆர மாந்தும்,  5
தென்னம் பொருப்பன் நன்னாட்டு உள்ளும்,
பிசிரோன் என்ப, என் உயிர் ஓம்புநனே,
செல்வக் காலை நிற்பினும்,
அல்லல் காலை நில்லலன் மன்னே.

பொருளுரை:   பிளவுபட்ட கதிர்களையுடைய வரகைக் குத்திச் சமைக்கப்பட்ட சோற்றையும்,  தாதாக உதிர்ந்த எருவுடைய தெருவில் அரும்புகளோடு தழைத்த வேளைச்செடியின் வெண்ணிறப் பூக்களை வெள்ளை நிறமுள்ள தயிரில் இட்டு, ஆயர்மகள் சமைத்த அழகிய புளிக்கூழையும், அவரைக்காயைக் கொய்பவர்கள் நிறைய உண்ணும், தெற்கில் உள்ள பொதிகை மலையையுடைய நல்ல பாண்டிய நாட்டில் உள்ள பிசிர் என்னும் ஊரில் உள்ளவன்.  அவன் என் உயிரைப் பாதுகாப்பவன்.  நான் செல்வத்துடன் ஆட்சியில் இருந்த வேளையில் என்னைப் பார்க்காவிட்டாலும், நான் துன்பத்தில் இருக்கும் பொழுது என்னைப் பார்க்காமல் இருக்க மாட்டான்.

சொற்பொருள் கவைக் கதிர் வரகின் அவைப்புறு ஆக்கல் – பிளவுபட்ட கதிர்களையுடைய வரகைக் குத்திச் சமைக்கப்பட்ட சோறு, தாதெரு மறுகின் – தாதாக உதிர்ந்த எருவுடைய தெருவில், போதொடு பொதுளிய – மலர்களுடன் தழைத்த, மொட்டுக்களுடன் தழைத்த, வேளை வெண் பூ – வேளையின் வெள்ளை மலர்கள், வெண் தயிர் கொளீஇ – வெள்ளை நிறமுள்ள தயிரில் இட்டு, ஆய் மகள் அட்ட அம் புளி மிதவை – இடைமகள் சமைத்த அழகிய புளிக்கூழ், அவரைக் கொய்யுநர் ஆர மாந்தும் – அவரைக்காயைக் கொய்பவர்கள் நிறைய உண்ணும், தென்னம் பொருப்பன் நன்னாட்டு உள்ளும் – தெற்கில் பொதிகை மலையையுடைய நல்ல நாட்டிலுள்ளும், பிசிரோன் என்ப – பிசிர் என்னும் ஊரினன் என்று சொல்லுவார்கள், என் உயிர் ஓம்புநனே – என் உயிரைப் பாதுகாப்பவன் (ஓம்புநனே – ஏகாரம் அசைநிலை), செல்வக் காலை நிற்பினும் – நான் செல்வமுடன் ஆண்ட காலத்தில் என்னைப் பார்க்காவிட்டாலும், அல்லல் காலை நில்லலன் – நான் துன்பத்தில் இருக்கும் பொழுது என்னைக் காணாமல் இருக்க மாட்டான், மன் – அசை, ஏ – அசை

புறநானூறு 216, பாடியவர்: கோப்பெருஞ்சோழன், திணை: பாடாண், துறை: இயன் மொழி

பாடல் பின்னணி:  புலவர் பிசிராந்தையார் தன்னைக் காண வருவாரோ என்று ஐயம் கொள்ளும் சான்றோர்களுக்கு இதை உரைக்கின்றான் கோப்பெருஞ்சோழன்.

“கேட்டல் மாத்திரை அல்லது, யாவதும்
காண்டல் இல்லாது, யாண்டு பல கழிய
வழு இன்று பழகிய கிழமையர் ஆயினும்
அரிதே, தோன்றல், அதற்பட ஒழுகல்” என்று
ஐயம் கொள்ளன்மின் ஆர் அறிவாளீர்!  5
இகழ்விலன், இனியன், யாத்த நண்பினன்,
புகழ் கெட வரூஉம் பொய் வேண்டலனே,
தன் பெயர் கிளக்கும் காலை, “என் பெயர்
பேதைச் சோழன்” என்னும் சிறந்த
காதற் கிழமையும் உடையவன், அதன்தலை,  10
இன்னது ஓர் காலை நில்லலன்,
இன்னே வருகுவன், ஒழிக்க அவற்கு இடமே.

பொருளுரை:   “உன்னைப் பற்றி அவன் கேட்டிருக்கின்றானே தவிரச் சிறிதும் கண்டதில்லை. பல ஆண்டுகள் செல்ல, தவறு இல்லாது நெருங்கிப் பழகியவர் என்றாலும், குற்றமில்லாத முறையில் ஒழுகுதல் அரிதே, தோன்றல்” என்று ஐயம் கொள்ளாதீர்கள், அறிவுடையவர்களே!
என்னை இகழ்பவன் இல்லை அவன்.  அவன் இனியவன்.  மிக நெருங்கிய நட்பினையுடையவன்.  புகழை அழிக்கும் பொய்யைக் வேண்ட மாட்டான்.  தன்னுடைய பெயரைப் பிறர்க்குச் சொல்லும் பொழுது, “என்னுடைய பெயர் பேதமையுடைய சோழன்” என்று என் பெயரைக் கூறுவான்.  மிகுந்த அன்பு உரிமைக் கொண்டவன்.
அதற்குமேல், இந்த நிலையில் வராதிருக்க மாட்டான்.  இப்பொழுதே வருவான்.  அவனுக்கு ஓரிடம் ஒதுக்குங்கள்.

சொற்பொருள்:   கேட்டல் மாத்திரை அல்லது யாவதும் காண்டல் இல்லாது – உன்னைப் பற்றி அவன் கேட்டிருக்கின்றானே தவிர சிறிதும் கண்டதில்லை, யாண்டு பல கழிய – பல ஆண்டுகள் செல்ல, வழு இன்று பழகிய கிழமையர் ஆயினும் – தவறு இல்லாது நெருங்கிப் பழகியவர் என்றாலும், அரிதே தோன்றல் – அரிது தலைவனே (அரிதே – ஏகாரம் அசைநிலை), அதற்பட ஒழுகல் என்று – குற்றமில்லாத முறையில் ஒழுகுதல், ஐயம் கொள்ளன்மின் – ஐயம் கொள்ளாதீர்கள், ஆர் அறிவாளீர் – நிறைந்த அறிவுடையவர்கள், இகழ்விலன் – என்னை இகழ்பவன் இல்லை அவன், இனியன் – அவன் இனியவன், யாத்த நண்பினன் – மிக நெருங்கிய நட்பினையுடையவன், புகழ் கெட வரூஉம் பொய் வேண்டலனே – புகழை அழிக்கும் பொய்யைக் வேண்ட மாட்டான் (வரூஉம் – அளபெடை, வேண்டலனே – ஏகாரம் அசைநிலை), தன் பெயர் கிளக்கும் காலை – தன்னுடைய பெயரைப் பிறர்க்குச் சொல்லும் பொழுது, என் பெயர்பேதைச் சோழன் என்னும் – என்னுடைய பெயர் பேதமையுடைய சோழன் என்று என் பெயரைக் கூறுவான், சிறந்த காதற் கிழமையும் உடையவன் – மிகுந்த அன்பு உரிமைக் கொண்டவன், அதன்தலை – அதற்குமேல், இன்னது ஓர் காலை நில்லலன் – இந்த நிலையில் வராதிருக்க மாட்டான், இன்னே வருகுவன் – இப்பொழுதே வருவான், ஒழிக்க அவற்கு இடமே – அவனுக்கு ஓரிடம் ஒதுக்குங்கள் (இடமே – ஏகாரம் அசைநிலை)

புறநானூறு 218, பாடியவர்கண்ணகனார்திணைபொதுவியல்துறைகையறு நிலை

பாடல் பின்னணி மன்னன் கோப்பெருஞ்சோழன் இறந்த பின் அவனுடைய நண்பரான புலவர் பிசிராந்தையார் பாண்டிய நாட்டிலிருந்து சோழ நாட்டிற்கு வந்து, வடக்கிருந்து உயிர் துறந்தார்.   அதைக்கண்ட புலவர் கண்ணகனார், அவர்கள் இருவரும் வேறு வேறு நாட்டினரானாலும் நட்பால் ஒன்றுபட்டதை வியந்து வடித்த பாடல் இது.

பொன்னும், துகிரும், முத்தும், மன்னிய
மா மலை பயந்த காமரு மணியும்,
இடை படச் சேய ஆயினும் தொடை புணர்ந்து
அரு விலை நன் கலம் அமைக்கும் காலை
ஒரு வழித் தோன்றியாங்கு, என்றும் சான்றோர்  5
சான்றோர் பாலர் ஆப,
சாலார் சாலார் பாலர் ஆகுபவே.

பொருளுரை:   பொன், பவளம், முத்து, நிலைபெற்ற பெரிய மலை தரும் விரும்பத்தக்க நீலமணி, ஆகியவை ஒன்றுக்கொன்று தொலைவான இடத்தில் தோன்றினாலும், பெருமதிப்புடைய நல்ல அணிகலன்களில் தொடுக்கும் பொழுது, ஒரே இடத்தில் சேர்ந்திருக்கின்றன.  அதைப் போல், எப்பொழுதும் சான்றோர்கள் சான்றோருடன் சேர்வர்.  சான்றாண்மை இல்லாதவர்கள், சான்றாண்மை இல்லாதவர்களையே சேர்ந்திருப்பர்.

சொற்பொருள்:   பொன்னும் – பொன்னும், துகிரும் – பவளமும், முத்தும் – முத்தும், மன்னிய – நிலைபெற்ற, மா மலை – பெரும் மலை, பயந்த – கொடுத்த, காமரு – விரும்பத்தக்க, மணியும் – நீல மணியும், இடை பட – இடைப்பட்டது, சேய – தொலைவு, ஆயினும் – ஆனாலும், தொடை – தொடுத்தல், புணர்ந்து – சேர்த்து, அரு விலை –  விலை மதிப்புமிக்க, நன் கலம் – நல்ல அணிகலன், அமைக்கும் காலை – அமைக்கும் பொழுது, ஒரு வழி – ஓர் இடத்தில், தோன்றியாங்கு – தோன்றினாற்போல், என்றும் – எப்போதும், சான்றோர் சான்றோர் பாலர் ஆப – சான்றோர்கள் சான்றோர்கள் பக்கம் ஆவர், சாலார் – சான்றோர் அல்லாதவர்கள், சாலார் பாலர் ஆகுபவே – சான்றாண்மை அல்லாதவர்கள் பக்கம் ஆவர் (ஆகுபவே – ஏகாரம் அசைநிலை)

புறநானூறு 219, பாடியவர்: கருவூர்ப் பெருஞ்சதுக்கத்துப் பூதநாதனார், பாடப்பட்டோன்: கோப்பெருஞ்சோழன், திணை: பொதுவியல், துறை: கையறு நிலை

பாடல் பின்னணி:  புலவர் பெருஞ்சதுக்கத்துப் பூதநாதனார் கோப்பெருஞ்சோழனைக் காணச் சென்றார். வடக்கிருந்த மன்னன் உடல் தளர்வினால் அவரிடம் பேசும் நிலையில் இல்லை. “என்னுடன் புலந்து இருக்கின்றாய் போலும்” என்று புலவர் கூறுகின்றார்.

உள் ஆற்றுக் கவலைப் புள்ளி நீழல்
முழூஉ வள்ளூரம் உணக்கும் மள்ள!
புலவுதி மாதோ நீயே,
பலரால் அத்தை நின் குறி இருந்தோரே.

பொருளுரை:  ஆற்றிடை உள்ள நிலத்தில் (அரங்கத்தில்) புள்ளிப்பட்ட மர நிழலில், உடலில் உள்ள தசை அனைத்தையும் வாட்டும் வீரனே, பலர் உன் கருத்திற்கேற்ப உன்னுடன் வடக்கிருந்தனர். நீ என்னை வெறுத்தாய்.

குறிப்பு:  மள்ள (2) – ஒளவை துரைசாமி உரை – அரசு துறந்து வடக்கிருந்து உயிர் நீத்த மிகுதியான் ‘மள்ள’ என்றார்.

சொற்பொருள் உள் ஆற்றுக் கவலை – ஆற்றிடை உள்ள நிலம், அரங்கம், புள்ளி நீழல் – புள்ளிப்பட்ட மர நிழல் (நீழல் – நிழல் என்பதன் விகாரம்), முழூஉ வள்ளூரம் உணக்கும் மள்ள – உடலில் உள்ள தசை அனைத்தையும் வாட்டும் வீரனே (முழூஉ – அளபெடை), புலவுதி – நீ வெறுத்தாய், மாதோ – மாது, ஓ அசைநிலைகள், நீயே – நீயே , பலரால் – பலர் (ஆல் அசைநிலை), அத்தை – ஓர் அசைச் சொல், நின் குறி இருந்தோரே – உன் கருத்திற்கேற்ப உன்னுடன் வடக்கிருந்தோர் (இருந்தோரே – ஏகாரம் அசைநிலை)

புறநானூறு 222, பாடியவர்: பொத்தியார், பாடப்பட்டோன்: கோப்பெருஞ்சோழன், திணை: பொதுவியல், துறை: கையறு நிலை

பாடல் பின்னணி:  கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்த பொழுது, புலவர் பொத்தியார் அவனுடன் வடக்கிருக்க விரும்பினார். ஆனால் கோப்பெருஞ்சோழன், “உன் மனைவிக்குக் குழந்தை பிறந்த பிறகு நீ என்னோடு வடக்கிருக்கலாம்” என்று கூறி அவரை அனுப்பினார். தன்னுடைய மனைவிக்குக் குழந்தை பிறந்த பின் பொத்தியார் வடக்கிருக்க வந்தார். ஆனால் கோப்பெருஞ்சோழன் இறந்து விட்டான். அவனுக்கு நடுகல் ஒன்று நாட்டப்பட்டது. அதைக் கண்ட பொத்தியார், இவ்வாறு பாடுகின்றார்.

“அழல் அவிர் வயங்கிழைப் பொலிந்த மேனி
நிழலினும் போகா நின் வெய்யோள் பயந்த
புகழ் சால் புதல்வன் பிறந்த பின் வா” என
என் இவண் ஒழித்த அன்பிலாள!
எண்ணாது இருக்குவை அல்லை,  5
என் இடம் யாது, மற்று இசை வெய்யோயே?

பொருளுரை:   தீயைப் போல விளங்கும் பொன் அணிகலன்களை அணிந்த மேனியுடைய, உன் நிழலை விட்டு நீங்காத, உன்னை விரும்பும் மனைவி உன்னுடைய புகழ் நிறைந்த புதல்வனைப் பெற்றபின் வா எனக் கூறி, என்னை இங்கிருந்து போகச் சொன்ன அன்பில்லாதவனே! நீ நம்முடைய நட்பை எண்ணிப் பார்க்காமல் இருந்திருக்க மாட்டாய். எனக்குரிய இடம் எது, புகழை விரும்புபவனே?

சொற்பொருள் அழல் அவிர் வயங்கிழைப் பொலிந்த மேனி – தீயைப் போல விளங்கும் பொன் அணிகலன்களை அணிந்த மேனி, நிழலினும் போகா நின் வெய்யோள் – உன் நிழலை விட்டு நீங்காத உன்னை விரும்பும் மனைவி, பயந்த புகழ் சால் புதல்வன் பிறந்த பின் வா – உன்னுடைய புகழ் நிறைந்த புதல்வனைப் பெற்றபின் வா, என – எனக் கூறி, என் இவண் ஒழித்த அன்பிலாள – இங்கிருந்து போகச் சொன்ன அன்பில்லாதவனே, எண்ணாது இருக்குவை அல்லை – நம்முடைய நட்பை எண்ணிப் பார்க்காமல் இருந்திருக்க மாட்டாய், என் இடம் யாது – எனக்குரிய இடம் எது, மற்று – ஓர் அசைச் சொல், இசை வெய்யோயே – புகழை விரும்புபவனே (வெய்யோயே – ஏகாரம் அசைநிலை)

புறநானூறு 223, பாடியவர்: பொத்தியார், பாடப்பட்டோன்: கோப்பெருஞ்சோழன், திணை: பொதுவியல், துறை: கையறு நிலை
பலர்க்கு நிழலாகி, உலகம் மீக்கூறித்,
தலைப்போகன்மையின் சிறுவழி மடங்கி,
நிலைபெறு நடுகல் ஆகியக் கண்ணும்
இடங்கொடுத்து அளிப்ப மன்ற, உடம்போடு
இன்னுயிர் விரும்பும் கிழமைத்  5
தொல் நட்புடையார், தம் உழைச் செலினே.

பொருளுரை:   பலருக்கு அருள்தரும் நிழல் ஆகி, உலகத்தாரால் மிகவும் சிறப்பாகப் பேசப்பட்டு, தங்கள் அரசாளும் பணியை முற்றிலும் முடிக்காமல் இறந்து, சிறிய இடத்தில் இருந்து, நிலைபெற்ற நடுகல்லாக ஆகிய பொழுதும், உடம்புடன் இனிய உயிர் விரும்பும் உரிமை போலத் தொன்மையான நட்புடையவர்கள் அவர்களிடம் சென்றால், அவர்களுக்கு இடம் கொடுப்பார்கள்.

குறிப்புமன்ற – மன்றவென் கிளவி தேற்றஞ் செய்யும் (தொல்காப்பியம், இடையியல் 17).

சொற்பொருள் பலர்க்கு நிழலாகி – பலருக்கு அருள் நிழல் ஆகி, உலகம் மீக்கூறி – உலகத்தாரால் மிகவும் சிறப்பாகப் பேசப்பட்டு, தலைப்போகன்மையின் – அரசாளும் பணியை முற்றிலும் முடிக்காமல், சிறுவழி மடங்கி – சிறிய இடத்தில் இருந்து, நிலைபெறு நடுகல் ஆகியக் கண்ணும் – நிலைபெற்ற நடுகல்லாக ஆகியப் பொழுதும், இடங்கொடுத்து அளிப்ப – இடம் கொடுப்பார்கள், மன்ற – ஓர் அசைச் சொல், உடம்போடு இன்னுயிர் விரும்பும் கிழமை – உடம்புடன் இனிய உயிர் விரும்பும் உரிமைப் போல, தொல் நட்புடையார் தம் உழைச் செலினே – தொன்மையான நட்புடையவர்கள் அவர்களிடம் சென்றால் (செலினே – ஏகாரம் அசைநிலை)

புறநானூறு 226, பாடியவர்: மாறோக்கத்து நப்பசலையார்பாடப்பட்டோன்: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்திணை: பொதுவியல்துறை: கையறு நிலை
செற்றன்று ஆயினும், செயிர்த்தன்று ஆயினும்,
உற்றன்று ஆயினும், உய்வின்று மாதோ,
பாடுநர் போலக் கைதொழுது, ஏத்தி,
இரந்தன்று ஆகல் வேண்டும், பொலந்தார்
மண்டு அமர் கடக்கும் தானைத்  5
திண் தேர் வளவன், கொண்ட கூற்றே.

பொருளுரை:   பொன் மாலை அணிந்த, கொடிய போரில் பகைவரை அழிக்கும் படையையுடைய, திண்மையான தேரினையுடைய வளவனை, பகையுடனோ, சினங்கொண்டோ, தொட்டாலோ, அவனிடமிருந்து தப்பும் வாய்ப்பு இருந்திருக்க முடியாது கூற்றுவனுக்கு.
அதனால், பாடுபவர்களைப் போலக் கைதொழுது, புகழ்ந்து, அவனை வணங்கியிருக்க வேண்டும், அவன் உயிரைக் கொண்ட கூற்றுவன்.

சொற்பொருள்:  செற்றன்று ஆயினும் – பகையுடனோ, செயிர்த்தன்று ஆயினும் – சினங்கொண்டோ,   உற்றன்று ஆயினும் – தொட்டாலோ,  உய்வின்று – தப்பும் வழியில்லை, மாதோ – மாது, ஓ – அசைநிலைகள், பாடுநர் போல – பாடுபவர்கள் போல, கைதொழுது ஏத்தி – கையால் தொழுதுப் புகழ்ந்து,  இரந்தன்று ஆகல் வேண்டும் – வணங்கியிருக்க வேண்டும், பொலந்தார் – பொன் மாலை,  மண்டு அமர் கடக்கும் தானை – கொடிய போரில் பகைவரை அழிக்கும் படை, திண் தேர் வளவன் – திண்மையான தேரினையுடை வளவன், கொண்ட கூற்றே – உயிரை எடுத்துக் கொண்ட கூற்று (கூற்றே – ஏகாரம் அசைநிலை)

புறநானூறு  227, திணைபொதுவியல்துறைகையறுநிலைபாடியவர்ஆவடுதுறை மாசாத்தனார்பாடப்பட்டோன் –  சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்

பாடல் பின்னணி:   குளமுற்றத்தில் கிள்ளிவளவன் இறந்ததை அறிந்த ஆவடுதுறை மாசாத்தனார், மனம் ஆற்றாமல் துடித்துப் பாடிய கையறுநிலைப் பாடல் இது.

நனி பேதையே, நயன் இல் கூற்றம்!
விரகு இன்மையின் வித்து அட்டு உண்டனை,
இன்னும்  காண்குவை  நன்வாய் ஆகுதல்,
ஒளிறு வாள் மறவரும், களிறும், மாவும்
குருதி அம் குரூஉப்புனல் பொரு களத்து  ஒழிய,  5
நாளும் ஆனான் கடந்து அட்டு என்று நின்
வாடு பசி அருத்திய பழி தீர் ஆற்றல்
நின்னோர் அன்ன பொன் இயல் பெரும்பூண்
வளவன்  என்னும் வண்டு மூசு கண்ணி
இனையோன் கொண்டனை ஆயின்,  10
இனி யார் மற்று, நின் பசி தீர்ப்போரே.

பொருளுரை மிகுந்த அறிவற்ற, இரக்கம் இல்லாத கூற்றமே!   உனக்கு ஆராயும் அறிவு இல்லாததால் விதையை அழித்து உணவாக உண்டாய்.  எனது சொற்களின் உண்மையை மேலும் காண்பாய்.   ஒளி வீசும் வாள் கொண்ட வீரர்களும், யானைகளும், குதிரைகளும் போர்க்களத்தில் நிறம் மிகுந்த குருதி வெள்ளத்தில் இறந்தும் அமையாதவனாய், உன் வாட்டும் பசியைத் தணிப்பதற்காக, நாள்தோறும் பகைவரின் படைகளை அழித்து வெல்லும்  பழியற்ற ஆற்றல் மிகுந்தவனும், உன்னைப் போன்றவனுமான, பொன்னால் செய்யப்பட்ட பெரும் அணிகலன்களை அணிந்த வளவன் என்னும் வண்டுகள் மொய்க்கும் பூ மாலை அணிந்த மன்னனின் உயிரை எடுத்துக் கொண்டாய்.  ஆதலால்,  இனி உன் பசியைத் தீர்ப்பவர் யார்?      

சொற்பொருள்:   நனி – மிகுந்த, பேதையே – அறிவற்றவையே, நயன் இல் – இரக்கம்  இல்லாத, கூற்றம் – கூற்றுவன், விரகு – ஆராயும் அறிவு, இன்மையின் – இல்லாமையால், வித்து – விதையை, அட்டு – கொன்று, அழித்து, உண்டனை – உண்டாய், இன்னும் – இன்னும், காண்குவை – காண்பாய், நன்வாய் – சொற்களின் உண்மை, ஆகுதல் – ஆவதை, ஒளிறு – ஒளி வீசும், வாள் – வாள், மறவரும் – வீரர்களையும், களிறும் – களிற்று யானைகளையும் (ஆண் யானைகளையும்), மாவும் – குதிரைகளையும், குருதி அம் – குருதி நிறத்து அழகிய, குரூஉ – நிறம் மிகுந்த (குரூஉ – அளபெடை), புனல் – ஆறு, பொரு களத்து – போர்க் களத்தில், ஒழிய – இறக்க, நாளும் – நாள்தோறும், ஆனான் –  அமையாதவன், கடந்து – எதிர் சென்று, அட்டு –  கொன்று, என்றும் – எப்போதும், நின் – உன், வாடு பசி – வாட்டும் பசி, அருத்திய – தணிப்பதற்கு,  ஊட்டிய – ஊட்டிய, பழி தீர் – பழி இல்லாத, ஆற்றல் – திறமை, நின்னோர் அன்ன – உன்னைப் போன்ற, பொன் இயல் – பொன்னால் செய்யப்பட்ட, பெரும் பூண் – பெரிய அணிகலன்கள், வளவன் – கிள்ளிவளவன், என்னும் – என்று அழைக்கப்படும், வண்டு – வண்டுகள், மூசு – மொய்க்கும், கண்ணி – பூ மாலை, இனையோன் – இத் தன்மையுடையோன், கொண்டனை – எடுத்துக் கொண்டாய் (உயிரை), ஆயின் – ஆதலால், இனி யார் – இனி யார், மற்று – மேலும், நின் பசி – உன் பசியை, தீர்ப்போரே – தீர்ப்பவர் (தீர்ப்போரே – ஏகாரம் அசைநிலை)

புறநானூறு 230, பாடியவர்: அரிசில் கிழார், பாடப்பட்டோன்: அதியமான் தகடூர் பொருது வீழ்ந்த எழினி, திணை: பொதுவியல், துறை: கையுறு நிலை

பாடல் பின்னணிஅதியமான் போரில் இறந்த பின், புலவர் அரிசில்கிழார், நட்பின் காரணமாக, அதியமானைக் கொன்ற பெருஞ்சேரன் இரும்பொறையைப் பழிக்காமல், கூற்றுவனைப் பழிக்கின்றார்.

கன்று அமர் ஆயம் கானத்து அல்கவும்,
வெங்கால் வம்பலர் வேண்டு புலத்து உறையவும்,
களம் மலி குப்பை காப்பு இல வைகவும்,
விலங்கு பகை கடிந்த கலங்காச் செங்கோல்,
வையகம் புகழ்ந்த வயங்கு வினை ஒள் வாள்,  5
பொய்யா எழினி பொருது களம் சேர,
ஈன்றோள் நீத்த குழவி போலத்
தன் அமர் சுற்றம் தலைத்தலை இனையக்
கடும் பசி கலக்கிய இடும்பை கூர் நெஞ்சமொடு
நோய் உழந்து வைகிய உலகிலும், மிக நனி  10
நீ இழந்தனையே அறன் இல் கூற்றம்!
வாழ்தலின் வரூஉம் வயல் வளன் அறியான்,
வீழ் குடி உழவன் வித்து உண்டாஅங்கு
ஒருவன் ஆருயிர் உண்ணாய் ஆயின்,
நேரார் பல் உயிர் பருகி  15
ஆர்குவை மன்னோ, அவன் அமர் அடு களத்தே.

பொருளுரை கன்றுகளுடைய ஆனிரையின் (பசுக்களின்) கூட்டம் காட்டில் தங்கி இருக்கவும், வறண்ட நிலத்தில் நடந்ததால் வெம்மையுற்ற காலினையுடைய வழிப்போக்கர்கள் தாங்கள் விரும்பிய இடங்களில் தங்கவும், களங்களில் பெரிய நெற்குவியல்கள் காவல் இன்றியே கிடக்கவும், எதிர்த்து வந்த பகையை அழித்து நிலம் கலங்காத செங்கோல் ஆட்சி புரிந்த, உலகத்தார் புகழும் போரைப் புரியும் ஒளி பொருந்திய வாளையுடைய, பொய் கூறாத (வாய்மையுடைய) எழினி இறந்து விட்டான். பெற்ற தாயினால் கைவிடப்பட்ட குழந்தைபோலத் தன்னை விரும்பிய சுற்றம் இடந்தொறும் இடந்தொறும் வருந்த, பசியினால் கலக்கம் மிகுந்த நெஞ்சத்துடன், அவனை இழந்து வருந்தி இருக்கும் இந்த உலகைவிட நீ மிக அதிகமாக இழந்துவிட்டாய் அறம் இல்லாத கூற்றுவனே! தன் வாழ்க்கைக்கு உதவும் வயலின் வளமையை அறியாத குடியில் உள்ள உழவன் ஒருவன் விதைக்க வேண்டிய விதையை விதைக்காமல் உண்டாற்போல, அவனுடைய பெறுவதற்கு அரிய உயிரை நீ உண்ணாது இருந்திருப்பாயாயின், பகைவர்களின் பல உயிர்களை நீ உண்டு நிறைவடைந்திருப்பாய், அவனுடைய பகைவரைக் கொல்லும் போர்க்களத்தில்!

சொற்பொருள்:   கன்று அமர் ஆயம் கானத்து அல்கவும் – கன்றுகளுடைய ஆனிரையின் (பசுக்களின்) கூட்டம் காட்டில் தங்கி இருக்கவும், வெங்கால் வம்பலர் வேண்டு புலத்து உறையவும் – வறண்ட நிலத்தில் நடந்ததால் வெம்மையுற்ற காலினையுடைய வழிப்போக்கர்கள் தாங்கள் விரும்பிய இடங்களில் தங்கவும், களம் மலி குப்பை காப்பு இல வைகவும் – களங்களில் பெரிய நெற்குவியல்கள் காவல் இன்றியே கிடக்கவும், விலங்கு பகை கடிந்த கலங்காச் செங்கோல் – எதிர்த்து வந்த பகையை அழித்து நிலம் கலங்காத செங்கோல் ஆட்சி புரிந்த, வையகம் புகழ்ந்த வயங்கு வினை ஒள் வாள் – உலகத்தார் புகழும் போரைப் புரியும் ஒளி பொருந்திய வாளையுடைய, பொய்யா எழினி பொருது களம் சேர – பொய் கூறாத (வாய்மையுடைய) எழினி, ஈன்றோள் நீத்த குழவி போல – பெற்ற தாயினால் கைவிடப்பட்ட குழந்தைபோல, தன் அமர் சுற்றம் தலைத்தலை இனைய – தன்னை விரும்பிய சுற்றம் இடந்தொறும் இடந்தொறும் வருந்த, கடும் பசி கலக்கிய இடும்பை கூர் நெஞ்சமொடு – கடுமையான பசியினால் கலக்கம் மிகுந்த நெஞ்சத்துடன், நோய் உழந்து வைகிய உலகிலும் – அவனை இழந்து வருந்தி இருக்கும் உலகைவிட, மிக நனி நீ இழந்தனையே – நீ மிக அதிகமாக இழந்துவிட்டாய், அறன் இல் கூற்றம் – அறம் இல்லாத கூற்றுவனே (அறன் – அறம் என்பதன் போலி), வாழ்தலின் வரூஉம் வயல் வளன் அறியான் – தன் வாழ்க்கைக்கு உதவும் வயலின் வளமையை அறியாதவன், வீழ் குடி உழவன் வித்து உண்டாஅங்கு – தளர்ந்த குடிகளையுடைய உழவன் ஒருவன் விதையை உண்டாற்போல, ஒருவன் ஆருயிர் உண்ணாய் ஆயின் – அவனுடைய பெறுவதற்கு அரிய உயிரை நீ உண்ணாது இருந்தால் , நேரார் பல் உயிர் பருகி – பகைவர்களின் பல உயிர்களை உண்டு, ஆர்குவை – நீ உண்ணுவாய், மன்னோ – மன் கழிவின்கண் வந்தது, ஓகாரம் அசைநிலை, அவன் அமர் அடு களத்தே – அவனுடைய பகைவரைக் கொல்லும் போர்க்களத்தில் (களத்தே – ஏகாரம் அசைநிலை)

புறநானூறு 232, பாடியவர்ஔவையார்பாடப்பட்டோன்அதியமான் நெடுமான் அஞ்சிதிணைபொதுவியல்துறைகையறு நிலை

பாடல் பின்னணி அதியமான் இறந்த பிறகு, அவன் நினைவாக நட்டிய நடுகல்லில் மயில் தோகை சூட்டி, கள்ளைப் படைத்து வழிபட்டனர். அப்பொழுது அதியமானை நினைவு கூர்ந்து தன் வருத்தத்தை இப்பாடலில் கூறுகின்றார் ஔவையார்.     .

இல்லாகியரோ காலை மாலை,
அல்லாகியர் யான் வாழும் நாளே,
நடுகல் பீலி சூட்டி, நார் அரி
சிறு கலத்து உகுப்பவும், கொள்வன் கொல்லோ,
கோடு உயர் பிறங்கு மலை கெழீஇய  5
நாடு உடன்  கொடுப்பவும்  கொள்ளாதோனே?

பொருளுரை காலையும் மாலையும் இனி இல்லாமல் போகட்டும்!   என் வாழ் நாட்களும் இனி இல்லாமல் போகட்டும்!  உயர்ந்த சிகரங்களையுடைய ஒளிரும் மலை பொருந்திய நாட்டைக் கொடுத்தாலும் பெற்றுக் கொள்ளாதவனாகிய அதியமான், தன் நடுகல்லின் மேல் மயிலிறகு சூட்டி, நாரினால் வடிகட்டப்பட்டக் கள்ளைச் சிறிய கலத்தில் கொடுத்தால் ஏற்றுக் கொள்வானோ?

சொற்பொருள்:   இல்லாகியரோ – இல்லாமல் போகட்டும் (இல்லாகியரோ – ஓகாரம் அசைநிலை), காலை மாலை – காலையும் மாலையும், அல்லாகியர் – பயனில்லாது போகட்டும், யான் வாழும் நாளே – நான் வாழும் – நாட்கள் (நாளே – ஏகாரம் அசைநிலை), நடுகல் – வீரனுக்காக நடப்படும் நினைவுக்கல், பீலி – மயில் இறகு, சூட்டி – அணிவித்து, நார் அரி – நாரினால் அரிக்கப்பட்ட, நாரினால் வடிகட்டப்பட்ட (கள்ளை), சிறு கலத்து – சிறிய கலத்தில், சிறிய கிண்ணத்தில், உகுப்பவும் – வார்க்கவும், கொள்வன் கொல்லோ – ஏற்றுக் கொள்வானோ (கொல்லோ – கொல் ஐயப்பொருட்டு வந்த இடைச்சொல், ஓகாரம் அசைநிலை), கோடு – சிகரம், உயர் – உயர்ந்த, பிறங்கு மலை – ஒளிரும் மலை, கெழீஇய நாடு – பொருந்திய நாடு (கெழீஇய – அளபெடை), உடன் –  முழுவதும், கொடுப்பவும் – கொடுத்தாலும், கொள்ளாதோனே – பெற்றுக்கொள்ளாதவன் (கொள்ளாதோனே – ஏகாரம் அசைநிலை)

புறநானூறு 234, பாடியவர்: வெள்ளெருக்கிலையார், பாடப்பட்டோன்: வேள் எவ்வி, திணை: பொதுவியல், துறை: கையறு நிலை

பாடல் பின்னணி:  கொடைவள்ளல் எவ்வி இறந்ததை அறிந்த புலவர் வெள்ளெருக்கிலையார், அவருடைய இல்லத்திற்குச் சென்றார். அங்கு எவ்வியின் மனைவி கைம்மை நோன்பு நோற்பதைக் கண்டார்.  மிகவும் வருத்தமுற்று இப்பாடலைப் பாடினார்.

நோகோ யானே தேய்கமா காலை
பிடி அடி அன்ன சிறு வழி மெழுகித்
தன் அமர் காதலி புன் மேல் வைத்த
இன் சிறு பிண்டம் யாங்கு உண்டனன் கொல்
உலகு புகத் திறந்த வாயில்  5
பலரோடு உண்டல் மரீஇயோனே?

பொருளுரைவருந்துகின்றேன் நான். என்னுடைய நெடிய வாழ்நாட்கள் அழியட்டும். பெண் யானையின் அடி அளவே உள்ள சிறு இடத்தை மெழுகி, தன்னை விரும்பிய மனைவி புல்லின் மீது அவனுக்காக வைத்த இனிய சிறிதளவு உணவை எப்படி உண்ணுவான், உலகத்து மக்கள் எல்லாம் புகுந்து உண்ணக்கூடிய திறந்த வாசலை உடைய, பலரோடும் சேர்ந்து உண்ட வேள் எவ்வி?

குறிப்புஇன் சிறு பிண்டம் – உ. வே. சாமிநாதையர் உரை – இகழ்ச்சிக்குறிப்பு.

சொற்பொருள்:  நோகோ யானே – வருந்துகின்றேன் நான் (நோகோ – நோகு செய்கென்னும் தன்மை வினை, ஓகாரம் அசைநிலை, இரக்கக் குறிப்பு), தேய்கமா காலை – என்னுடைய நெடிய வாழ்நாட்கள் அழியட்டும் (மா – அசைநிலை), பிடி அடி அன்ன சிறு வழி மெழுகி – பெண் யானையின் கால் அளவே உள்ள சிறு இடத்தை மெழுகி, தன் அமர் காதலி – தன்னை விரும்பிய மனைவி, புன் மேல் வைத்த இன் சிறு பிண்டம் – புல்லின் மீது வைத்த இனிய சிறிதளவு உணவு, யாங்கு உண்டனன் கொல் – எப்படி உண்ணுவான், உலகு புகத் திறந்த வாயில் – உலகத்து மக்கள் எல்லாம் புகுந்து உண்ணக்கூடிய திறந்த வாசல், பலரோடு உண்டல் மரீஇயோனே – பலரோடும் சேர்ந்து உண்டவன் (மரீஇயோனே – அளபெடை, ஏகாரம் அசைநிலை)

புறநானூறு 235, பாடியவர்: ஔவையார், பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி, திணை: பொதுவியல், துறை: கையறு நிலை

பாடல் பின்னணி அதியமான் இறந்த பிறகு, தன் வருத்தத்தை இப்பாடலில் கூறுகின்றார் ஔவையார்.

சிறிய கள் பெறினே எமக்கு ஈயும் மன்னே,
பெரிய கள் பெறினே
யாம் பாடத் தான் மகிழ்ந்து உண்ணும் மன்னே,
சிறு சோற்றானும் நனி பல கலத்தன் மன்னே,
பெருஞ் சோற்றானும் நனி பல கலத்தன் மன்னே,  5
என்பொடு தடி படு வழி எல்லாம் எமக்கு ஈயும் மன்னே,
அம்பொடு வேல் நுழை வழி எல்லாம் தான் நிற்கும் மன்னே,
நரந்தம் நாறும் தன் கையால்
புலவு நாறும் என் தலை தைவரும் மன்னே,
அருந்தலை இரும் பாணர் அகன் மண்டைத் துளை உரீஇ 10
இரப்போர் கையுளும் போகி
புரப்போர் புன் கண் பாவை சோர
அம் சொல் நுண் தேர்ச்சிப் புலவர் நாவில்
சென்று வீழ்ந்தன்று அவன்
அரு நிறத்து இயங்கிய வேலே,  15
ஆசாகு எந்தை யாண்டு உளன் கொல்லோ,
இனிப் பாடுநரும் இல்லை, பாடுநர்க்கு ஒன்று ஈகுநரும் இல்லை,
பனித் துறைப் பகன்றை நறைக் கொள் மா மலர்
சூடாது வைகியாங்குப் பிறர்க்கு ஒன்று
ஈயாது வீயும் உயிர்தவப் பலவே.  20

பொருளுரை:   சிறிதளவு கள்ளைப் பெற்றால் எங்களுக்குத் தருவான். நிறையக் கள்ளைப் பெற்றால் எங்களுக்கு அளித்து நாங்கள் பாட அதைக் கேட்டு மகிழ்ந்து அவனும் உண்பான். சிறிதளவு சோறு இருந்தாலும் அதைப் பலருடன் பகிர்ந்து உண்ணுவான். பெருமளவு சோறு கிடைத்தாலும் அதைப் பலரோடு பகிர்ந்து உண்ணுவான். எலும்புடன் கூடிய தசைக் கிடைத்தால் அதை எங்களுக்கு அளிப்பான். அம்புடன் வேல் உடைய போர்க்களமானால் தானே அங்குச் சென்று நிற்பான். நரந்த நறுமணமிக்கத் தன் கையால் புலவு நாற்றமுடைய என் தலையை அன்புடன் தடவுவான்.
அவனுடைய மார்பைத் துளைத்த வேல், அரிய தலைமையையுடைய பெரிய கூட்டமாக உள்ள பாணர்களின் அகன்ற பாத்திரங்களைத் துளைத்து, இரப்போர்க் கைகளையும் துளைத்து, அவனால் பாதுகாக்கப்படுபவர்களின் கண்களில் ஒளி மழுங்கச் செய்து, அழகிய சொற்களும் ஆராய்ந்த அறிவையுமுடைய புலவர்கள் நாவில் சென்று விழுந்தது.
எங்களுக்குப் பற்றுக்கோடாக இருந்தவன் எங்கு உளனோ? இனி பாடுபவர்கள் இல்லை. பாடுபவர்களுக்குக் கொடுப்போரும் இல்லை.  குளிர்ந்த நீர்த்துறையில், தேனையுடைய பெரிய பகன்றை மலர்கள் சூடுவார் இல்லாது வாடுவது போல், பிறர்க்கு ஒன்றும் கொடுக்காமல் வாழ்ந்து இறப்பவர்கள் மிகப் பலர்.

சொற்பொருள் சிறிய கள் பெறினே எமக்கு ஈயும் – சிறிதளவு கள்ளைப் பெற்றால் எங்களுக்குத் தருவான், மன் – கழிவுக் குறிப்பு, ஏ – அசைநிலை, பெரிய கள் பெறினே யாம் பாடத் தான் மகிழ்ந்து உண்ணும் – நிறையக் கள்ளைப் பெற்றால் எங்களுக்கு அளித்து நாங்கள் பாட அதைக் கேட்டு மகிழ்ந்து அவனும் உண்பான், மன் – கழிவுக் குறிப்பு, ஏ – அசைநிலை, சிறு சோற்றானும் நனி பல கலத்தன் – சிறிதளவு சோறு இருந்தாலும் அதைப் பலருடன் பகிர்ந்து உண்ணுவான், மன் – கழிவுக் குறிப்பு, ஏ – அசைநிலை, பெருஞ் சோற்றானும் நனி பல கலத்தன் – பெருமளவு சோறு கிடைத்தாலும் அதைப் பலரோடு பகிர்ந்து உண்ணுவான், மன் – கழிவுக் குறிப்பு, ஏ – அசைநிலை, என்பொடு தடி படு வழி எல்லாம் எமக்கு ஈயும் – எலும்புடன் கூடிய தசைக் கிடைத்தால் அதை எங்களுக்கு அளிப்பான், மன் – கழிவுக் குறிப்பு, ஏ – அசைநிலை, அம்பொடு வேல் நுழை வழி எல்லாம் தான் நிற்கும் – அம்புடன் வேல் உடைய போர்க்களமானால் தானே அங்குச் சென்று நிற்பான், மன் – கழிவுக் குறிப்பு, ஏ – அசைநிலை, நரந்தம் நாறும் தன் கையால் புலவு நாறும் என் தலை தைவரும் – நரந்த நறுமணமிக்கத் தன் கையால் புலவு நாற்றமுடைய என் தலையை அன்புடன் தடவுவான், மன் – கழிவுக் குறிப்பு, ஏ – அசைநிலை, அருந்தலை – அறிய தலைமை, இரும் பாணர் அகன் மண்டைத் துளை உரீஇ – பெரிய கூட்டமாக உள்ள பாணர்களின் அகன்ற பாத்திரங்களைத் துளைத்து (உரீஇ – அளபெடை), இரப்போர் கையுளும் போகி – இரப்போர்க் கைகளையும், புரப்போர் – பாதுகாக்கப்படுபவர்கள், புன்கண், துன்பம், பாவை சோர – கருவிழி மழுங்க, அம் சொல் – அழகிய சொற்கள், நுண் தேர்ச்சி – நுண்மையான ஆராய்ச்சி, புலவர் நாவில் சென்று வீழ்ந்தன்று – புலவர்களின் நாவில் சென்று வீழ்ந்தது, அவன் அரு நிறத்து இயங்கிய வேலே – அவனுடைய மார்பைத் துளைத்த வேல், ஆசாகு எந்தை யாண்டு உளன் கொல்லோ – எங்களுக்குப் பற்றுக்கோடாக இருந்த எங்கள் தலைவன் எங்கு இருக்கிறானோ (கொல்லோ – கொல் ஐயப்பொருட்டு வந்த இடைச்சொல், ஓகாரம் அசைநிலை), இனி பாடுநரும் இல்லை – இனிமேல் பாடுபவர்களும் இல்லை, பாடுநர்க்கு ஒன்று ஈகுநரும் இல்லை – பாடுபவர்களுக்குக் கொடுப்பவர்களும் இல்லை, பனித் துறைப் பகன்றை – குளிர்ந்த நீர்த் துறையில் உள்ள பகன்றை மலர்கள், நறைக் கொள் மா மலர் – தேனையுடைய பெரிய மலர்கள், சூடாது வைகியாங்கு – சூடப்படாது கழிந்தாற்போல், பிறர்க்கு ஒன்று ஈயாது – பிறர்க்கு ஒன்றும் கொடுக்காது, வீயும் உயிர்தவப் பலவே – மாய்ந்துப் போகும் உயிர்கள் மிகப் பல (பலவே – ஏகாரம் அசைநிலை)

புறநானூறு 236, பாடியவர்கபிலர்பாடப்பட்டோன் –  வேள் பாரி, திணைபொதுவியல் துறைகையறு நிலை
கலை உணக் கிழிந்த முழவு மருள் பெரும் பழம்
சிலை கெழு குறவர்க்கு அல்கு மிசைவு ஆகும்,
மலை கெழு நாட மா வண் பாரி,
கலந்த கேண்மைக்கு ஒவ்வாய் நீ என்
புலந்தனை ஆகுவை புரந்த யாண்டே  5
பெருந்தகு சிறப்பின் நட்பிற்கு ஒல்லாது,
ஒருங்கு வரல் விடாஅது ‘ஒழிக’ எனக் கூறி,
இனையை ஆதலின் நினக்கு மற்று யான்
மேயினேன் அன்மையானே, ஆயினும்,
இம்மை போலக் காட்டி, உம்மை  10
இடை இல் காட்சி நின்னோடு
உடன் உறைவு ஆக்குக, உயர்ந்த பாலே.

பாடல் பின்னணி:  தன் நண்பர் பாரி இறந்த பின்னர், மிகுந்த துக்கத்தில் ஆழ்கின்றார் புலவர் கபிலர்.  பாரியின் மகளிரைப் பொறுப்பானவரிடம் ஒப்படைத்துவிட்டு, நண்பனை அடையத் துடிக்கின்றார்.

பொருளுரை:  ஆண் குரங்கு கிழித்து உண்ட முரசைப் போன்ற பெரிய பழம், மலையில் வாழும் வில்லுடைய  மக்களுக்கு, சில நாட்களுக்கு வைத்து உண்ணும் உணவு ஆகும்.  அத்தகைய பலாமரங்கள் நிறைந்த மலைகள் பொருந்திய நாட்டையுடைய பெரிய வள்ளல் தன்மை வாய்ந்த பாரி!

நம்முடைய நட்புக்கு பொருந்தாத முறையில் நீ நடந்து கொண்டாய்.  நீ என்னை வெறுத்தாய் போலும்.  என்னை நீ பல ஆண்டுகளாகப் பாதுகாத்தாலும், பெருமையுடைய தலைமை மிக்க நட்பிற்குப் பொருந்தாது,  உன்னுடன் நான் செல்வதற்கு ஒத்துக்கொள்ளாது, ‘இங்கேயே இரு’ எனக் கூறிவிட்டுச் சென்றாய்.  இவ்வாறு நீ வேறுபட்டதால், உனக்கு நான் ஏற்றவனாக இல்லை என்று எண்ணுகின்றேன்.  ஆனாலும்,  இப்பிறவியில் நாம் ஒன்றாக இருப்பதைப் போல்,  மறுபிறப்பில் நாம் இடைவிடாது சேர்ந்து இருக்கும் நிலைமையைக் காட்டி, உன்னோடு நான் ஒன்றாக இருப்பதற்கு வழி செய்யட்டும், உயர்ந்த விதி.

சொற்பொருள்:  கலை உணக் கிழிந்த – ஆண் குரங்கு கிழித்து உண்ட (உண உண்ண என்பதன் விகாரம்), முழவு மருள் பெரும் பழம் – முரசைப் போன்ற பெரிய பழம் ((மருள் – உவம உருபு), சிலை கெழு குறவர்க்கு – வில்லையுடைய மலையில் வாழும் மக்களுக்கு, அல்கு மிசைவு ஆகும் –  வைத்து உண்ணும் உணவு ஆகும், மலை கெழு நாட – மலையுடைய நாட்டையுடையவனே, மா வண் பாரி –  பெரிய வள்ளல் தன்மை வாய்ந்த பாரி, கலந்த கேண்மைக்கு ஒவ்வாய் நீ  – கலந்த நட்புக்கு பொருந்தாத முறையில் நீ நடந்துக் கொண்டாய்,  என் புலந்தனை ஆகுவை – நீ என்னை வெறுத்தாய் போலும்,  புரந்த யாண்டே –  என்னை நீ பல ஆண்டுகளாகப் பாதுகாத்தாலும்,  பெருந்தகு சிறப்பின் நட்பிற்கு ஒல்லாது – பெருமையுடைய தலைமை மிக்க நட்பிற்குப் பொருந்தாது,  ஒருங்கு வரல் விடாஅது – உன்னுடன் நான் செல்வதற்கு ஒத்துக்கொள்ளாது (விடாஅது – அளபெடை), ஒழிக எனக் கூறி – இங்கே இரு எனக் கூறி,  இனையை ஆதலின் – இவ்வாறு நீ வேறுபட்டதால், நினக்கு மற்று யான் மேயினேன் அன்மையானே – உனக்கு நான் ஏற்றவனாக இல்லை என்று எண்ணுகின்றேன் (அன்மையானே – ஏகாரம் அசைநிலை), ஆயினும் – ஆனாலும்,  இம்மை போலக் காட்டி – இப்பிறவியில் நாம் ஒன்றாக இருப்பதைப் போல் காட்டி,  உம்மை  இடை இல் காட்சி – மறுபிறப்பில் நாம் இடைவிடாது சேர்ந்து இருக்கும் நிலைமையைக் காட்டி, நின்னோடு உடன் உறைவு ஆக்குக – உன்னோடு நான் ஒன்றாக இருப்பதற்கு வழி செய்யட்டும், உயர்ந்த பாலே – உயர்ந்த விதி (பாலே  – ஏகாரம் அசைநிலை)

புறநானூறு 240, பாடியவர்: குட்டுவன் கீரனார், பாடப்பட்டோன்: ஆய் அண்டிரன், திணை: பொதுவியல், துறை: கையறு நிலை
ஆடு நடைப் புரவியும், களிறும், தேரும்,
வாடா யாணர் நாடும், ஊரும்,
பாடுநர்க்கு அருகா ஆஅய் அண்டிரன்,
கோடு ஏந்து அல்குல் குறுந்தொடி மகளிரொடு,
காலன் என்னும் கண்ணிலி உய்ப்ப,  5
மேலோர் உலகம் எய்தினன், எனாஅப்,
பொத்த அறையுள் போழ்வாய்க் கூகை
‘சுட்டுக் குவி’ எனச் செத்தோர்ப் பயிரும்,
கள்ளியம் பறந்தலை ஒரு சிறை அல்கி,
ஒள் எரி நைப்ப உடம்பு மாய்ந்தது,  10
புல்லென் கண்ணர், புரவலர்க் காணாது,
கல்லென் சுற்றமொடு, கையழிந்து, புலவர்
வாடிய பசியர் ஆகிப், பிறர்
நாடுபடு செலவினர் ஆயினர், இனியே.

பொருளுரை:   தாளத்திற்கேற்ப நடக்கும் குதிரைகளையும், களிற்று யானைகளையும், தேர்களையும், அழியாத வளமையையுடைய நாடுகளையும் ஊர்களையும் பாடுவர்களுக்குக் குறையாது வழங்கும் ஆய் அண்டிரன், பக்கங்கள் உயர்ந்த இடையையுடைய சிறிய வளையல்களை அணிந்த பெண்களுடன், காலன் என்னும் அருள் இல்லாதவன் கொண்டு போக, மேல் உலகத்தை அடைந்தான். பொந்தில் வாழும் பிளந்த வாயையுடைய ஆந்தை, ‘சுட்டுக் குவி’ என்று செத்தோரை அழைப்பது போன்று கூவும் கள்ளிச் செடியுடைய பாழிடத்தில், ஒரு பக்கத்தில் ஒளியுடைய தீயினால் அவனுடைய உடல் எரிக்கப்பட்டது. புரவலர்களைக் காணாது, பொலிவில்லாத கண்களையுடையவர்களாக, ஆரவாரத்தையுடைய சுற்றத்தாருடன், செயலற்று, பசியுடையவர்களாக ஆகி, புலவர்கள் இப்பொழுது வேறு நாடுகளுக்குச் செல்கின்றனர்.

குறிப்புயாணர் – புதிதுபடற் பொருட்டே யாணர்க் கிளவி (தொல்காப்பியம், உரியியல் 83).  கூகை சுட்டுக் குவி எனச் செத்தோர்ப் பயிரும் (7-8) – ஒளவை துரைசாமி உரை – பேராந்தை செத்தவர்களை விரையத் தன்பால் வருமாறு அழைப்பது போலிருத்தலின் ‘சுட்டுக் குவி எனச் செத்தோர்ப் பயிரும்’ என்று உரைத்தார்.

சொற்பொருள்:   ஆடு நடைப் புரவியும் – தாளத்திற்கேற்ப நடக்கும் குதிரைகளும், களிறும் தேரும் – களிற்று யானைகளும், தேர்களும், வாடா யாணர் நாடும் ஊரும் – அழியாத வளமையையுடைய நாடுகளையும் ஊர்களையும், பாடுநர்க்கு அருகா ஆஅய் அண்டிரன் – பாடுவர்களுக்கு குறையாது வழங்கும் ஆய் அண்டிரன் (ஆஅய் – அளபெடை), கோடு ஏந்து அல்குல் – பக்கங்கள் உயர்ந்த அல்குல், குறுந்தொடி மகளிரொடு – சிறிய வளையல்களை அணிந்த பெண்களுடன், காலன் என்னும் கண்ணிலி உய்ப்ப மேலோர் உலகம் எய்தினன் – காலன் என்னும் அருள் இல்லாதவன் கொண்டு போக மேல் உலகத்தை அடைந்தான், எனாஅ – அவ்வாறு ஆகியதால் (எனாஅ – அளபெடை),பொத்த அறையுள் போழ்வாய்க் கூகை – பொந்தில் வாழும் பிளந்த வாயையுடைய ஆந்தை, சுட்டுக் குவி எனச் செத்தோர்ப் பயிரும் – ‘சுட்டுக் குவி’ என்று செத்தோரை அழைக்கும், கள்ளியம் பறந்தலை – கள்ளிச் செடியுடைய பாழிடத்தில், ஒரு சிறை அல்கி – ஒரு பக்கத்தில் தங்கி, ஒள் எரி நைப்ப உடம்பு மாய்ந்தது – ஒளியுடைய தீச் சுட உடம்பு மாய்ந்து விட்டது, புல்லென் கண்ணர் – பொலிவில்லாத கண்களையுடையவர்கள், புரவலர்க் காணாது – புரவலர்களைக் காணாது, கல்லென் சுற்றமொடு – ஆரவாரத்தையுடைய சுற்றத்தாருடன் (கல்லென் – ஒலிக்குறிப்பு), கையழிந்து புலவர் வாடிய பசியர் ஆகி – செயலற்ற பசியுடையவர்களாக ஆகி, பிறர் நாடுபடு செலவினர் ஆயினர் இனியே – இப்பொழுது வேறு நாடுகளுக்குச் செல்கின்றனர் (இனியே – ஏகாரம் அசைநிலை)

புறநானூறு 245, பாடியவர்: சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை, திணை: பொதுவியல், துறை: கையறு நிலை

பாடல் பின்னணி: சேர மன்னன் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதையின் மனைவி இறந்தாள். அவள் உடல் ஈமத் தீயில் எரிக்கப்பட்டது. அதைக் கண்ட மன்னன், வருந்திப் பாடிய பாடல் இது.

யாங்குப் பெரிது ஆயினும், நோய் அளவு எனைத்தே
உயிர் செகுக்கல்லா மதுகைத்து அன்மையின்,
கள்ளி போகிய களரியம் பறந்தலை
வெள்ளிடைப் பொத்திய விளை விறகு ஈமத்து
ஒள் அழல் பள்ளிப் பாயல் சேர்த்தி,  5
ஞாங்கர் மாய்ந்தனள் மடந்தை,
இன்னும் வாழ்வல் என் இதன் பண்பே?

பொருளுரை:  என் மனைவியைப் பிரிந்ததால் நான் உற்ற நோய் எவ்வளவு பெரியது ஆனாலும், அதற்கு என் உயிரைப் போக்க முடியாத வலிமை இல்லாததால், கள்ளிச் செடிகள் படர்ந்த களர் நிலமாகிய பாழிடத்தில் பாடையில் மூட்டிய ஒளியுடைய ஈமத் தீயுடைய விறகுப் பள்ளியில் படுக்க வைக்கப்பட்ட அவள் மேல் உலகத்திற்குச் சென்ற பின்பும் நான் வாழ்கின்றேன்.  இந்த உலகத்தின் தன்மைதான் என்ன?

குறிப்புஉ. வே. சாமிநாதையர் உரை – எனைத்தென்றது உயிரைப் போக்க மாட்டாமையின் நோயை இகழ்ந்து கூறியவாறு.

சொற்பொருள்:   யாங்குப் பெரிது ஆயினும் – எவ்வளவு பெரியது ஆகினும், நோய் அளவு எனைத்தே உயிர் செகுக்கல்லா மதுகைத்து அன்மையின் – என் உயிரைப் போக்க முடியாத வலிமை இல்லாமையால் (எனைத்தே – ஏகாரம் அசைநிலை), கள்ளி போகிய களரியம் பறந்தலை – கள்ளிச் செடிகள் படர்ந்த களர் நிலமாகிய பாழிடம், வெள்ளிடைப் பொத்திய – பாடையில் மூட்டிய, விளை விறகு ஈமத்து ஒள் அழல் பள்ளிப் பாயல் சேர்த்தி – தீயை விளைவிக்கும் விறகுகளால் அமைத்த ஒளியுடைய ஈமத் தீயுடைய பள்ளியில் படுக்க வைத்து, ஞாங்கர் மாய்ந்தனள் மடந்தை இன்னும் வாழ்வல் – அங்கு அவள் இறந்த பின்பும் நான் வாழ்கின்றேன், என் இதன் பண்பே – இந்த உலகத்தின் தன்மைதான் என்ன (பண்பே – ஏகாரம் அசைநிலை)

புறநானூறு 248, பாடியவர்: ஒக்கூர் மாசாத்தனார், திணை: பொதுவியல், துறை: தாபத நிலை

பாடல் பின்னணி:  தன் கணவனை இழந்த பெண் ஒருத்தி கைம்மை நோன்பை மேற்கொண்டாள். அவள் வருந்தி இந்தப் பாடலைப் பாடுகின்றாள்.

அளிய தாமே சிறு வெள்ளாம்பல்,
இளையம் ஆகத் தழையாயினவே, இனியே,
பெருவளக் கொழுநன் மாய்ந்தெனப், பொழுது மறுத்து
இன்னா வைகல் உண்ணும்,
அல்லிப்படூஉம் புல் ஆயினவே.  5

பொருளுரை:  இரங்கத்தக்கன, சிறிய வெள்ளை அல்லிக் கொடிகள். சிறு வயதில் அல்லியின் இலைகள் எனக்குத் தழை ஆடையாய் இருந்தன. இப்பொழுது என் பெரும் செல்வமுடைய கணவன் இறந்ததால், உண்ண வேண்டிய வேளையில் உண்ணாது துன்பத்துடன் தினமும் உண்ணும் புல்லரிசியாக இந்த அல்லி பயன்படுகின்றது.

 குறிப்புஅல்லிப் படுஉம் புல் ஆயினவே (5) – உ. வே. சாமிநாதையர் உரை – அல்லியிடத்துண்டாம் புல்லரிசியாய் உதவின.  நெல் அல்லா உணவெல்லாம் புல்லென்றால் மரபு.  புல்லரிசி – சென்னைப் பல்கலைக்கழக அகராதி – பஞ்சகாலத்தில் ஏழைகள் உண்ணும் அரிசி போன்ற தானியம்.

சொற்பொருள்:  அளிய தாமே – இரங்கத்தக்கன, சிறு வெள்ளாம்பல் – சிறிய வெள்ளை அல்லிக் கொடி, இளையம் ஆகத் தழையாயினவே – சிறு வயதில் அல்லியின் இலைகள் எனக்கு தழை ஆடையாய் இருந்தன (இளையம் – தன்மைப் பன்மை, தழையாயினவே – ஏகாரம் அசைநிலை), இனியே பெருவளக் கொழுநன் மாய்ந்தென – இப்பொழுது என் பெரும் செல்வமுடைய கணவன் இறந்ததால், பொழுது மறுத்து இன்னா வைகல் உண்ணும் அல்லிப்படூஉம் புல் ஆயினவே – உண்ண வேண்டிய வேளையில் உண்ணாது துன்பத்துடன் தினமும் உண்ணும் புல்லரிசியாக இந்த அல்லி பயன்படுகின்றது (அல்லிப்படுஉம் – அளபெடை, ஆயினவே – ஏகாரம் அசைநிலை)

புறநானூறு 250, பாடியவர்: தாயங்கண்ணியார், திணை: பொதுவியல், துறை: தாபத நிலை

பாடல் பின்னணி: செல்வத்துடன் வாழ்ந்த ஒருவன் இறந்த பிறகு, அவன் மனைவி கைம்மை நோன்பை மேற்கொண்டாள். அவளைக் கண்ட புலவர் இவ்வாறு பாடுகின்றார்.

மலிந்த கொழுந் துவை அடிசில்,
இரவலர்த் தடுத்த வாயில், புரவலர்
கண்ணீர்த் தடுத்த தண் நறும் பந்தர்க்,
கூந்தல் கொய்து, குறுந்தொடி நீக்கி,
அல்லி உணவின் மனைவியொடு, இனியே  5
புல்லென்றனையால் வளங்கெழு திருநகர்,
வான் சோறு கொண்டு, தீம் பால் வேண்டும்,
முனித்தலைப் புதல்வர் தந்தை,
தனித்தலைப் பெருங்காடு முன்னிய பின்னே.

பொருளுரை:  செல்வமுடைய அழகிய மாளிகையே! நன்கு தாளித்த வளமான துவையலுடன் கூடிய உணவை அளித்து இரவலர்களை வேறு எங்கும் செல்ல முடியாமல் தடுத்த வாயிலையும், ஆதரவைத் தேடி வந்தவர்களின் கண்ணீரைத் துடைத்த குளிர்ச்சி மிக்க நறுமணமுள்ள பந்தலையும் உடையதாக நீ முன்பு இருந்தாய்.

வெள்ளைச் சோற்றை உண்டு இனிய பாலை விரும்பிய குடுமித் தலையையுடைய புதல்வர்களின் தந்தை தனியிடமாகிய சுடுகாட்டை அடைந்த பின்பு, அவனுடைய மனைவி கூந்தலைக் களைந்து, சிறிய வளையல்களை நீக்கி, அல்லி அரிசியுடைய உணவை உண்கின்றாள்.  இப்பொழுது நீயும் அவளைப் போன்று பொலிவிழந்து உள்ளாய்.

சொற்பொருள்:  குய் குரல் மலிந்த கொழுந்துவை அடிசில் – நன்கு தாளித்த வளமான துவையலுடன் கூடிய உணவு, இரவலர்த் தடுத்த வாயில் – இரவலர்களை வேறு எங்கும் செல்ல முடியாதபடி தடுத்த வாசல், புரவலர் கண்ணீர்த் தடுத்த – ஆதரவு தேடி வந்தவர்களின் கண்ணீரைத் துடைத்த, தண் நறும் பந்தர் – குளிர்ச்சி மிக்க நறுமணமான பந்தல், கூந்தல் கொய்து குறுந்தொடி நீக்கி – கூந்தலைக் களைந்து சிறிய வளையல்களை நீக்கி, அல்லி உணவின் மனைவியொடு – அல்லி அரிசியுடைய மனைவியுடன், இனியே புல்லென்றனையால் – இப்பொழுது பொலிவிழந்து உள்ளாய் (புல்லென்றனையால் – ஆல் அசைநிலை), வளங்கெழு திரு நகர் – செல்வமுடைய அழகிய மாளிகை, வான் சோறு கொண்டு தீம் பால் வேண்டும் – வெள்ளைச் சோற்றை உண்டு இனிய பாலை விரும்பி , முனித்தலைப் புதல்வர் தந்தை – குடுமித் தலையையுடைய புதல்வர்களின் தந்தை, தனித்தலைப் பெருங்காடு முன்னிய பின்னே — தனியிடமாகிய சுடுகாட்டை அடைந்த பின்பு (பின்னே – ஏகாரம் அசைநிலை)

புறநானூறு 255, பாடியவர்வன்பரணர்திணைபொதுவியல்துறைமுதுபாலை

பாடல் பின்னணிபோர் முடிந்தபின் போர்க்களத்தில் வீழ்ந்த கணவனைக் கண்டாள் ஒரு பெண். அவன் உடலைத் தழுவிக் கண்ணீர் வடித்தாள். அக்காட்சியைக் கண்ட புலவர் வன்பரணர் வடித்த பாடல் இது.

ஐயோ எனின் யான் புலி அஞ்சுவலே,
அணைத்தனன் கொளினே அகன் மார்பு எடுக்கல்லேன்,
என் போல் பெருவிதிர்ப்பு உறுக,  நின்னை
இன்னாது உற்ற  அறன் இல் கூற்றே,
நிரை வளை முன் கை  பற்றி  5
வரை நிழல் சேர்கம்  நடந்திசின்  சிறிதே.

பொருளுரை:   ஐயோ என்று நான் கதறினால் புலி வந்து விடுமோ என்று அஞ்சுகிறேன்.  உன்னை அணைத்துக் கொண்டு செல்லலாம் என்றால் உன் அகன்ற மார்புடைய உடலை என்னால் தூக்க முடியவில்லை.  உன்னைக் கொன்ற அறம் இல்லாத கூற்றம் என்னைப் போல் பெரிது நடுக்கமுறுவானாக!  வரிசையான வளையல்களையுடைய என் முன்கையைப் பற்றிக் கொண்டு நீ மெல்ல நடந்தால்  நாம் மலையின் நிழலுக்குச் சென்றுவிடலாம்.

குறிப்புசின் – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம்.  சொல்லதிகாரம்.  இடையியல் 26, சின் என்பது இசின் என்பதன் முதற்குறை – ச. பாலசுந்தரம் உரை).  விதிர்ப்பு – அதிர்வும் விதிர்ப்பும் நடுக்கம் செய்யும் (தொல்காப்பியம், உரியியல் 20).  இன்னாது (4) – ஒளவை துரைசாமி உரை – இன்னாது இறந்துபாடு, சாக்காடு ஈண்டு இன்னாது எனப்பட்டது.  

சொற்பொருள்:   ஐயோ எனின் – ஐயோ என்று, யான் – நான், புலி அஞ்சுவலே – புலி வந்து விடுமோ என்று அஞ்சுகிறேன் (அஞ்சுவல் – தன்மையொருமை வினைமுற்று, ஏகாரம் அசைநிலை), அணைத்தனன் கொளினே – நான் அணைத்துக் கொள்ளலாம் என்றால், அகன் – அகன்ற, மார்பு – மார்பு, எடுக்கல்லேன் –  என்னால் எடுக்க இயலவில்லை, என் போல் – என்னைப் போல், பெரு – பெரிய, விதிர்ப்பு – நடுக்கம், உறுக – உண்டாகுக, நின்னை – உன்னை, இன்னாது – துன்பத்தில் (மரண துன்பத்தில்), உற்ற – நேரச் செய்த, அறன் இல் – அறம் இல்லாத (அறன் – அறம் என்பதன் போலி), கூற்றே – கூற்றுவனே, நிரை – வரிசை, வளை – வளையல்கள் நிறைந்த, முன் கை – முன் கை, பற்றி – பிடித்துக் கொண்டு, வரை – மலை, நிழல் – நிழல், சேர்கம் – சேர்வோம், நடந்திசின் – நடந்து வருக (சின் – முன்னிலை அசைச் சொல்), சிறிதே – சிறிது (ஏகாரம் அசைநிலை)

புறநானூறு 256, பாடியவர் –  பெயர் தெரியவில்லைதிணைபொதுவியல்துறைமுதுபாலை

பாடல் பின்னணி கணவன் இறந்துவிட்டதால் அவனை அடக்கம் செய்ய தாழி ஒன்றைச் செய்யுமாறு குயவனிடம் கேட்கின்றாள் ஒரு பெண்.   தாழி என்பது பெரிய மண் பாண்டம்.

கலம் செய்கோவே, கலம் செய்கோவே,
அச்சுடைச் சாகாட்டு ஆரம் பொருந்திய
சிறு வெண் பல்லி போலத், தன்னொடு
சுரம் பல வந்த எமக்கும் அருளி,
வியன் மலர் அகன் பொழில் ஈமத் தாழி  5
அகலிது ஆக வனைமோ,
நனந்தலை மூதூர்க் கலம் செய் கோவே.

பொருளுரைதாழி செய்யும் குயவனே!  தாழி செய்யும் குயவனே!  அச்சு உடைய வண்டியின் சக்கர ஆரத்தைப் பற்றிக்கொண்டு வந்த சிறிய வெண் நிறப் பல்லியைப் போல், என் தலைவனோடு பாலை நிலங்கள் பலவற்றை கடந்து வந்த எனக்கு அருள் செய்க.  நானும் அவனோடு கூடியிருக்கும்படி பெரிய தாழியைச் செய்வாயாக, இந்தப் பழமையான பெரிய ஊரில் தாழி செய்யும் குயவனே!

குறிப்பு:  கோவே (1) – ஒளவை துரைசாமி உரை – கலஞ் செய்யும் எனச் சிறப்பிக்கவே கோ வேட்கோ என்பதாயிற்று.  வேட்கோ – University of Madras Lexicon – குயவன், வேள்+கோ.  வியன் மலர் அகன் பொழில் ஈமத் தாழி (5) – ஒளவை துரைசாமி உரை – யானும் அவனோடு கூடியிருக்கும்படி பெரிய பரப்பினையுடைய அகலிய பூமியிடத்துக் காட்டின்கண் முதுமக்கள் தாழியை.  வேட்கோ = குயவன்.  நனந்தலை – அகன்ற இடம், நனம் – நனவே களனும் அகலமும் செய்யும் (தொல்காப்பியம் உரியியல் 80).  கலம் செய்கோவே!  கலம் செய்கோவே (1) – உ. வே. சாமிநாதையர் உரை – அடுக்கு விரைவின்கண் வந்தது.

சொற்பொருள்:  கலம் – தாழி, செய்கோவே – செய்பவரே (வேட்கோ –  குயவன்), கலம் செய்கோவே – தாழி செய்பவரே, அச்சுடை – அச்சு உடைய, சாகாட்டு – வண்டியின், ஆரம் – சக்கரத்தின் ஆரம் (ஆரக்கால்), பொருந்திய – பொருந்திய, சேர்ந்த, சிறுவெண் –  சிறிய வெண் நிற, பல்லி – பல்லி, போல – போல, தன்னொடு – தலைவன்  தன்னோடு, சுரம் – பாலைநிலம், பல – பலவற்றை, வந்த – கடந்து வந்த, எமக்கும் – எனக்கும், அருளி – அருள் செய்க, வியன் மலர் – பெரிய பரப்புடைய, அகன் பொழில் – பெரிய இடம், ஈமத்தாழி – இறந்தவரை இட்டுப் புதைக்கும் தாழி, அகலிது ஆக – அகன்றதாக,  வனைமோ – செய்வாயாக (மோ – முன்னிலையசை), நனந்தலை – பெரிய இடம், மூதூர் – பழமையான ஊர், கலம் செய் கோவே – தாழி செய்பவரே (கோவே – ஏகாரம் அசைநிலை)

புறநானூறு 264, பாடியவர்: உறையூர் இளம்பொன் வாணிகனார், திணை: கரந்தை துறை: கையறு நிலை
பரலுடை மருங்கில் பதுக்கை சேர்த்தி,
மரல் வகுந்து தொடுத்த செம்பூங் கண்ணியொடு,
அணி மயில் பீலி சூட்டிப், பெயர் பொறித்து,
இனி நட்டனரே கல்லும், கன்றொடு
கறவை தந்து பகைவர் ஓட்டிய  5
நெடுந்தகை கழிந்தமை அறியாது,
இன்றும் வருங் கொல் பாணரது கடும்பே?

பொருளுரைபரல் கற்களையுடைய மேட்டு இடத்தில் மரல் செடியிலிருந்து எடுத்த நாரால் தொடுத்த சிவந்த மலர்ச் சரங்களுடன், அழகான மயிலின் இறகைச் சூட்டி, அவனுடைய பெயரைப் பொறித்து நடுகல்லை இப்பொழுது நட்டிவிட்டார்களே! கன்றுடன் கறவை பசுக்களையும் மீட்டுத் தந்து பகைவரை விரட்டிய பெரும் தலைவன் இறந்ததை அறியாது, இன்னும் அவனைக் காண வருமா, பாணரின் கூட்டம்?

குறிப்பு:  பெரும்பாணாற்றுப்படை 181-182 – மரல் புரி நரம்பின் வில் யாழ் இசைக்கும், மலைபடுகடாம் 430-431 – தளிரொடு மிடைந்த காமரு கண்ணி திரங்கு மரல் நாரில் பொலியச் சூடி, புறநானூறு 264 – மரல் வகுந்து தொடுத்த செம்பூங் கண்ணியொடு.

சொற்பொருள்:   பரலுடை மருங்கில் பதுக்கை சேர்த்தி – பரல் கற்களையுடைய மேட்டு இடத்தில், மரல் வகுந்து தொடுத்த – மரல் செடியிலிருந்து எடுத்த நாரால் தொடுத்த, செம்பூங் கண்ணியொடு – சிவந்த மலர்ச் சரங்களுடன், அணி மயில் பீலி சூட்டி – அழகான மயிலின் இறகைச் சூட்டி, பெயர் பொறித்து – பெயரைப் பொறித்து, இனி நட்டனரே – இப்பொழுது நட்டினரே (நட்டனரே – ஏகாரம் அசைநிலை), கல்லும் – நடுகல்லும், கன்றொடு கறவை தந்து – கன்றுடன் கறவைப் பசுக்களையும் மீட்டுத் தந்து, பகைவர் ஓட்டிய நெடுந்தகை – பகைவரை விரட்டிய பெரும் அண்ணல், கழிந்தமை அறியாது – இறந்ததை அறியாது, இன்றும் வருங் கொல் பாணரது கடும்பே – இன்னும் வருவார்களா பாணரின் சுற்றத்தார் (கடும்பே – ஏகாரம் அசைநிலை)

புறநானூறு 265, பாடியவர்: சோணாட்டு முகையலூர்ச் சிறுகருந்தும்பியார், திணை: கரந்தை, துறை: கையறு நிலைபண்ணனின் மறைவிற்குப்பின் எழுதப்பட்டது
ஊர் நனி இறந்த பார் முதிர் பறந்தலை,
ஓங்கு நிலை வேங்கை ஒள் இணர் நறு வீப்
போந்தை அம் தோட்டின் புனைந்தனர் தொடுத்துப்
பல் ஆன் கோவலர் படலை சூட்டக்,
கல் ஆயினையே, கடு மான் தோன்றல்,  5
வான் ஏறு புரையும் நின் தாள் நிழல் வாழ்க்கைப்
பரிசிலர் செல்வம் அன்றியும், விரி தார்க்
கடும் பகட்டு யானை வேந்தர்
ஒடுங்க வென்றியும், நின்னொடு செலவே.

பொருளுரை:  ஊரை மிகவும் கடந்த, பாறைகள் நிறைந்த பாழிடத்தில், உயர்ந்த நிலையையுடைய வேங்கை மரங்களின் ஒளியுடைய கொத்தாகிய நறுமணமான மலர்களைப் பனை ஓலையால் அலங்கரித்துத் தொடுத்து, பல பசுக்களையுடைய இடையர்கள் மாலைச் சூட்டி வழிபடும் நடுகல் ஆகிவிட்டாயே நீ, விரைந்து செல்லும் குதிரைகளையுடைய தலைவனே! வானத்தில் உள்ள இடியைப் போன்று இருந்த உன்னுடைய காலடி நிழலில் வாழும் வாழ்க்கையுடைய பரிசிலர்களின் செல்வம் மட்டுமல்லாமல், விரைந்து செல்லும் வலிமையுடைய யானைகளைக் கொண்ட, மலர் மாலைகள் அணிந்த வேந்தர்களின் வெற்றியும், உன்னுடன் கழிந்தது.

சொற்பொருள்:  ஊர் நனி இறந்த – ஊரை மிகவும் கடந்த, பார் முதிர் பறந்தலை – பாறைகள் நிறைந்த பாழிடம், ஓங்கு நிலை வேங்கை ஒள் இணர் நறு வீ – உயர்ந்த நிலையையுடைய வேங்கை மரங்களின் ஒளியுடைய கொத்தாகிய நறுமணமான மலர்கள், போந்தை அம் தோட்டின் புனைந்தனர் தொடுத்து – பனை ஓலையால்  அலங்கரித்துத் தொடுத்து, பல் ஆன் கோவலர் படலை சூட்ட – பல பசுக்களையுடைய இடையர்கள் மாலைச் சூட்டி வழிபடும், கல் ஆயினையே – நடுகல் ஆகிவிட்டாயே (ஆயினையே – ஏகாரம் அசைநிலை), கடு மான் தோன்றல் – விரைந்த குதிரைகளையுடைய தலைவனே, வான் ஏறு புரையும் – வானத்தில் உள்ள இடியைப் போன்ற, நின் தாள் நிழல் வாழ்க்கை – உன் காலடி நிழலில் வாழும் வாழ்க்கை, பரிசிலர் செல்வம் அன்றியும் – உன்னிடம் பரிசு பெறுபவர்கள் செல்வம் மட்டுமல்லாமல், விரி தார்க் கடும் பகட்டு யானை வேந்தர் ஒடுங்க வென்றியும் – விரைந்து செல்லும் வலிமையுடைய யானைகளை உடைய மலர் மாலைகள் அணிந்த வேந்தர்களின் வெற்றியும், நின்னொடு செலவே -உன்னுடன் கழிய (செலவே – ஏகாரம் அசைநிலை)

புறநானூறு 272, பாடியவர்: மோசி சாத்தனார், திணை: நொச்சி, துறை: செருவிடை வீழ்தல்

மணி துணர்ந்தன்ன மாக்குரல் நொச்சி!
போது விரி பன் மரனுள்ளும் சிறந்த
காதல் நன் மரம் நீ, மற்றிசினே,
கடி உடை வியன் நகர்க் காண்வரப் பொலிந்த
தொடி உடை மகளிர் அல்குலும் கிடத்தி, 5
காப்புடைப் புரிசை புக்குமாறு அழித்தலின்,
ஊர்ப் புறங்கொடாஅ நெடுந்தகை
பீடு கெழு சென்னிக் கிழமையும் நினதே.

பொருளுரை:  மணிகள் கொத்தாக அமைந்த பெரிய கொத்துக்களையுடைய நொச்சி மரமே! பூக்கள் நிறைந்த பல மரங்களுள்ளும், சிறந்த அன்பு செய்வதற்கு உரிய மரம் நீயே! மற்றும், காவலுடைய பெரிய இல்லங்களில் கண்ணுக்கு அழகாக விளங்கும் வளையல் அணிந்த மகளிரின் இடுப்பில் தழை ஆடையாகக் கிடக்கின்றாய் நீ! காவல் மிகுந்த எயிலில் நின்று, பகைவரை அழிப்பதால், ஊர்ப்புறத்தைக் காக்கும் பெருந்தலைவனின் பெருமை பொருந்திய தலையில் சூடப்படும் உரிமையும் உன்னுடையதே!

குறிப்பு:  ஊர்ப் புறங்கொடாஅ நெடுந்தகை (4) – ஒளவை துரைசாமி உரை – நகர்ப்புறத்தைக் கை விடாது காக்கும் நெடுந்தகை, ஊர்ந்து பொரும் போரின்கண் புறங்கொடாத நெடுந்தகை எனினுமாம்.  சின் – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம்.  சொல்லதிகாரம்.  இடையியல் 26), அவற்றுள், இகுமும் சின்னும் ஏனை இடத்தொடும் தகு நிலை உடைய என்மனார் புலவர் (தொல்காப்பியம், இடையியல் 27).  சின் என்பது இசின் என்பதன் முதற்குறை – ச. பாலசுந்தரம் உரை.

சொற்பொருள்:  மணி துணர்ந்தன்ன மாக்குரல் நொச்சி – மணிகள் கொத்தாக அமைந்த பெரிய கொத்துக்களையுடைய நொச்சி மரமே, போது விரி பன் மரனுள்ளும் சிறந்த காதல் நன் மரம் நீ – பூக்கள் நிறைந்த பல மரங்களுள்ளும் சிறந்த அன்பு செய்வதற்கு உரிய மரம் நீ, மற்றிசினே – மற்றும், கடி உடை வியன் – காவலுடைய பெரிய இல்லம், நகர்க் காண்வரப் பொலிந்த தொடி உடை மகளிர் அல்குலும் கிடத்தி – கண்ணுக்கு அழகாக விளங்கும் வளையல்கள் அணிந்த மகளிரின் அல்குலில் தழை ஆடையாய் கிடப்பாய், காப்புடைப் புரிசை புக்கு – காவல் மிகுந்த எயிலில் நின்று, மாறு அழித்தலின் பகைவரை அழிப்பதால், ஊர்ப் புறங்கொடாஅ நெடுந்தகை – ஊர்ப்புறத்தைக் காக்கும் பெருந்தலைவன் (கொடாஅ – அளபெடை), பீடு கெழு – பெருமை பொருந்திய, சென்னிக் கிழமையும் நினதே – தலையில் சூடப்படும் உரிமையும் உன்னுடையதே (நினதே – ஏகாரம் அசைநிலை)

புறநானூறு 277, பாடியவர்பூங்கணுத்திரையார்திணைதும்பைதுறைஉவகைக் கலுழ்ச்சி

பாடல் பின்னணி போருக்குச் சென்ற  தன் மகன் விழுப்புண்பட்டு இறந்தான் என்ற செய்தியைக் கேட்டு ஒரு முதிய தாய் பெருமையால் மகிழ்ந்து கண்ணீர் வடித்தாள். பூங்கணுத்திரையார் அவளது மறமாண்பு கண்டு வியந்து எழுதிய பாடல் இது.

மீன் உண் கொக்கின் தூவி அன்ன,
வால் நரைக் கூந்தல் முதியோள்  சிறுவன்,
களிறு எறிந்து  பட்டனன் என்னும் உவகை
ஈன்ற  ஞான்றினும் பெரிதே,  கண்ணீர்
நோன் கழை துயல்வரும் வெதிரத்து  5
வான் பெயத் தூங்கிய சிதரினும்  பலவே.

பொருளுரை:  மீன் உண்ணும் கொக்கின் இறகுகளைப் போல் வெண்மையான நரைத்த கூந்தலை உடைய முதிய தாய், தன் மகன் யானையை எதிர்த்துப் போரிட்டு இறந்தான் என்ற செய்தியைக் கேட்டவுடன் அடைந்த மகிழ்ச்சி, அவள் அவனைப் பெற்ற பொழுது அடைந்த மகிழ்ச்சியை விட அதிகமானது.   அவளுடைய கண்ணீர்த் துளிகள், வலிய மூங்கிலில் தொங்கிச் சொட்டும் மழைத் துளிகளை விட அதிகமானவை.    

சொற்பொருள்:  மீன் உண் – மீன் உண்ணும், கொக்கின் – கொக்கினுடைய, தூவி – இறகு, அன்ன – போல, வால் – வெண்மை, நரைக் கூந்தல் – நரைத்த தலைக் கூந்தல், முதியோள் – முதிர்ந்த வயதினள், சிறுவன் – மகன், களிறு – யானை, எறிந்து – அழித்து, பட்டனன் – இறந்தான், என்னும் – என்கின்ற, உவகை – மகிழ்ச்சி, ஈன்ற – பெற்ற, ஞான்றினும் – பொழுதை விட, பெரிதே – பெரியது (ஏகாரம் அசைநிலை), கண்ணீர் – கண்ணீர்,  நோன் – வலிமையான, கழை – மூங்கில், துயல்வரும் – அசையும், வெதிரத்து –  மூங்கிலில், வான் பெய – மழை பெய்ய, தூங்கிய – தொங்கிய, சிதரினும் – துளிகளை விட, பலவே – பலவாகும் (ஏகாரம் அசைநிலை)

புறநானூறு 278, பாடியவர்காக்கைபாடினியார் நச்செள்ளையார்திணைதும்பைதுறைஉவகைக் கலுழ்ச்சி

பாடல் பின்னணி:   போருக்குச் சென்ற தன் மகன், பகைவர்க்குப் புறமுதுகு காட்டி மாண்டான் என்று சிலர் கூறக் கேட்ட அவனுடைய முதிய தாய், மிகுந்த கோபம் கொண்டு போர்க்களத்திற்குச் சென்றாள்.  இறந்துக் கிடந்த மகன் வீர மரணம் அடைந்ததைக் கண்டு மகிழ்ந்தாள். அவளுடைய வீரத்தைக் காக்கைபாடினியார் இப்பாடலில் பாடுகின்றார்.

நரம்பு எழுந்து  உலறிய  நிரம்பா மென்தோள்,
முளரி மருங்கின் முதியோள் சிறுவன்,
படை அழிந்து மாறினன் என்று பலர் கூற,
மண்டு அமர்க்கு உடைந்தனன் ஆயின் உண்ட என்
முலை அறுத்திடுவென் யான் எனச் சினைஇக்,  5
கொண்ட  வாளொடு படுபிணம் பெயராச்
செங்களம்  துழவுவோள் சிதைந்து வேறாகிய
படுமகன் கிடக்கை காணூஉ,
ஈன்ற  ஞான்றினும் பெரிது உவந்தனளே.

பொருளுரை நரம்புகள் வெளியே தெரியும்படி சதை நிரம்பாத உலர்ந்த மெல்லிய தோள்கள் கொண்ட, தாமரை இலை போன்ற அடிவயிற்றினையுடைய முதிய தாய், தன் மகன் போருக்கு அஞ்சிப் புறமுதுகிட்டான் என்று பலர் கூறக் கேட்டு, ‘நெருங்கிப் போரிடும் போர்க்களத்தில் என் மகன் தோற்று ஓடினான் என்றால் அவன் பால் உண்ட என் முலைகளை அறுத்திடுவேன்’ என்று கூறிக் கோபம் கொண்டு, கையில் வாளோடு போர்க்களம் நோக்கிச் சென்றாள்.  அங்கு கிடந்த மறவர்கள் பிணங்களைப் பெயர்த்துப் பார்த்தபடி குருதியால் சிவந்த போர்க்களம் முழுவதையும் தேடித் துழாவினாள்.  சிதைந்து துண்டு துண்டாக தன் மகன் கிடப்பதைக் கண்டதும் அவனைப் பெற்ற நாளில் அடைந்ததைவிடப் பெருமகிழ்ச்சி அடைந்தாள்.

குறிப்புபெயரா (6) – பெயர்த்து, செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம்.  எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது.

சொற்பொருள்:   நரம்பு – நரம்பு, எழுந்து –  எழுந்து, உலறிய – உலர்ந்த, நிரம்பா – நிரம்பாத (சதை நிரம்பாத), மென் தோள் – மெல்லிய தோள்கள்,  முளரி மருங்கின் – தாமரை இலை போன்ற அடி வயிற்றையுடைய, முதியோள் – முதிய தாய், சிறுவன் –  மகன், படை – எதிரியின் படை, அழிந்து மாறினன் – போருக்கு அஞ்சி புறமுதுகிட்டான், என்று பலர் கூற – என்று பலர் கூற, மண்டு – நெருங்கி, அமர்க்கு – போரில், உடைந்தனன் – தோற்று ஓடினான், ஆயின் – என்றால், உண்ட – பால் உண்ட, என் – எனது, முலை – மார்பு, அறுத்திடுவென் – அறுத்திடுவேன், யான் – நான், என – என்று, சினைஇ – சினந்து, கொண்ட வாளோடு – கையில் கொண்ட வாளோடு, படுபிணம் – உயிரிழந்துக் கிடக்கும் பிணங்கள், பெயரா – பெயர்த்துப் பார்த்து, செங்களம் –  குருதியால் சிவந்த போர்க்களம், துழவுவோள் – தேடுகின்றவள், சிதைந்து – சிதைந்து, வேறாகிய – துண்டு துண்டாக, படுமகன் – வீழ்ந்த மகன், கிடக்கை – கிடப்பதை, காணூஉ – கண்டு (காணூஉ – அளபெடை), ஈன்ற – பெற்றெடுத்த, ஞான்றினும் – நாளைவிட, பெரிது – பெரியதாக, உவந்தனளே – மகிழ்ச்சி அடைந்தாள் (உவந்தனளே – ஏகாரம் அசைநிலை)

புறநானூறு 279, பாடியவர்ஒக்கூர் மாசாத்தியார்திணைவாகைதுறைமூதின் முல்லை

பாடல் பின்னணி முதிய மறக்குடியில் பிறந்த ஒரு பெண் தன் தந்தையையும் கணவனையும் போரில் இழந்தாள்.  எனினும், போர்ப் பறையின் ஒலி கேட்டவுடன் தன் இளம் மகனைப் போருக்கு அனுப்புகின்றாள்.  ஒக்கூர் மாசாத்தியார் அதை வியந்து பாடுகின்றார்.

கெடுக சிந்தை, கடிது இவள் துணிவே,
மூதின் மகளிர் ஆதல் தகுமே,
மேல் நாள் உற்ற செருவிற்கு, இவள் தன் ஐ
யானை எறிந்து களத்து ஒழிந்தன்னே,
நெருநல் உற்ற செருவிற்கு, இவள் கொழுநன்  5
பெரு நிரை விலக்கி ஆண்டுப்பட்டனனே,
இன்றும் செருப்பறை கேட்டு விருப்புற்று, மயங்கி
வேல் கைக் கொடுத்து வெளிது விரித்து உடீஇப
பாறு மயிர்க் குடுமி எண்ணெய் நீவி
ஒரு மகன் அல்லது இல்லோள்  10
செருமுக நோக்கிச் செல்க, என விடுமே.

பொருளுரை கெடுக இவளது சிந்தை.  கடுமையானது இவளது துணிவு.  இவள் முதிய மறக்குடியின் பெண்ணாக இருப்பதற்கு தகுந்தவள் தான்.  முந்தா நாள் நிகழ்ந்த போரில் இவள் தந்தை யானையைக் கொன்று களத்தில் உயிர் நீத்தான்.  நேற்று நிகழ்ந்த போரில் இவளது கணவன் பகைவரின் பெரும் பசுக் கூட்டத்தைக் கவரும் முயற்சியைத் தடுத்துக் களத்தில் உயிர் துறந்தான்.  இன்று தெருவில் பறையின் ஒலியைக் கேட்டதும், விருப்பத்தால் மயங்கி, தன் ஒரே மகனுக்கு வெண்ணிற ஆடையை உடுத்தி, அவனுடைய உலர்ந்த குடுமியில் எண்ணையைத் தடவிச் சீவி முடித்து, அவன் கையில் வேலைக் கொடுத்துப் ‘போர்க் களத்தை நோக்கி செல்க’ என்று அனுப்பினாள். 

குறிப்புஒளவை துரைசாமி உரை – ‘கெடுக சிந்தை’ ‘கடிது இவள் துணிவே’ என்றும் கூறியது இகழ்வு போலப் புகழ்ந்தவாறு.

சொற்பொருள்:   கெடுக – கெட்டு விடுக (கெடுக – வியங்கோள் வினைமுற்று), சிந்தை – மனம், கடிது – கடுமையானது, இவள் துணிவே – இவளது துணிவு (துணிவே – ஏகாரம் அசைநிலை), மூதின் – முதிய மறக்குடியின், மகளிர் ஆதல் – பெண்ணாக இருத்தல் தகுமே – தகுந்ததே (தகுமே – ஏகாரம் அசைநிலை), மேல் நாள் – முன் ஒரு நாளில், உற்ற – உண்டான, நிகழ்ந்த, செருவிற்கு – போருக்கு, இவள் தன் ஐ – இவள் தந்தை (ஐ = தந்தை/தமையன்/ தலைவன்), யானை எறிந்து – யானையை கொன்று (எறிதல் – அழித்தல்), களத்து – களத்தில், ஒழிந்தன்னே – இறந்தான் (ஒழிந்தனனே – ஏகாரம் அசைநிலை), நெருநல் – நேற்று, உற்ற – நிகழ்ந்த, செருவிற்கு – போருக்கு, இவள் கொழுநன் – இவளது கணவன், பெரு நிரை – பெரிய பசுக் கூட்டம், விலக்கி – தடுத்து, ஆண்டுப் பட்டனனே –  அவ்விடம் இறந்தான் (பட்டனனே – ஏகாரம் அசைநிலை), இன்றும் – இன்று செருப் பறை  – போர்ப்பறை ஒலி, கேட்டு –  கேட்டு, விருப்புற்று – விருப்பம் கொண்டு, மயங்கி – அறிவு மயங்கி, வேல் கை கொடுத்து – வேல் எடுத்து கையில் கொடுத்து, வெளிது – வெண்மையான ஆடையை, விரித்து – விரித்து, உடீஇ – உடுத்தி (அளபெடை), பாறு மயிர் – உலர்ந்த தலைமயிர், குடுமி – தலைக் குடுமியை, எண்ணெய் நீவி – எண்ணெய் இட்டு சீவி, ஒரு மகன் – இந்த ஒரு மகன், அல்லது – அல்லது, இல்லோள் – யாரும் இல்லாதவள், செரு முக – போர் முகம், நோக்கி – நோக்கி, செல்க – செல்லுக, என விடுமே – என்று அனுப்பினாள் (விடுமே – ஏகாரம் அசைநிலை)

புறநானூறு 310, பாடியவர்பொன்முடியார்திணைதும்பைதுறைநூழிலாட்டு

பாடல் பின்னணிபோர்க்களத்தில் தன் மகனின் வீரச்செயலைக் கண்ட மறத்தாய் ஒருத்தியின் வியப்பைப் பதிவு செய்யும் வகையில் புலவர் பொன்முடியார் இயற்றிய அழகிய பாடல் இது.

பால் கொண்டு மடுப்பவும் உண்ணான், ஆகலின்
செறாஅது  ஓச்சிய சிறு கோல் அஞ்சியொடு
உயவொடு வருந்தும் மனனே! இனியே
புகர் நிறங் கொண்ட களிறு  அட்டு ஆனான்
முன் நாள் வீழ்ந்த உரவோர் மகனே,  5
உன்னிலன் என்னும் புண் ஒன்று  அம்பு
மான் உளை அன்ன குடுமித்
தோல் மிசைக் கிடந்த புல் அணலோனே.

பொருளுரை:   பிள்ளைப் பருவத்தில் பாலை ஊட்டினால் குடிக்க மாட்டான்.  சினம் கொள்ளாது பொய்ச் சினம் காட்டிச் சிறிய கோலை  நான் ஓங்கிய போது அச்சம் கொண்ட மகனை எண்ணிக் கவலை கொண்டு வருந்தும் மனமே!  இப்பொழுது நெற்றியில் புள்ளிகள் கொண்ட யானைகளைக் கொன்றும் அமையாதவனான இவன், முந்தைய நாளில் போரிட்டு வீழ்ந்த வீரனின் மகன்.  மார்பில் புண்ணோடு தைத்து நிற்கும் அம்பை அறியேன் என்றவன், உறுதியுடன் போரிட்டு, குதிரையின் பிடரி மயிர் போன்ற குடுமியுடனும், சிறிய தாடியோடும் கேடயத்தின் மேல் வீழ்ந்து கிடக்கிறான். 

சொற்பொருள்:   பால்கொண்டு – பாலைக் கையில் கொண்டு, மடுப்பவும் – ஊட்டவும்,  உண்ணான் – குடிக்க மாட்டான், ஆகலின் – ஆதலால், செறாஅது – சினம் கொள்ளாது (அளபெடை, செறுதல் – சினத்தல்), ஓச்சிய – ஓங்கிய, சிறுகோல் – சிறிய கோல், அஞ்சியொடு – அச்சம் கொண்டு, உயவொடு – கவலையோடு, வருந்தும் – வருந்தும், மனனே – மனமே (மனன் – மனம் என்பதன் போலி), இனியே – இப்பொழுது, புகர்  –  புள்ளி,  நிறம் –  தன்மை, கொண்ட – கொண்ட, களிறு – களிற்று யானை ஆண் யானை, அட்டு ஆனான் – கொன்றும் அமையாதவன், முன் நாள் – முன்னாள், வீழ்ந்த – போரிட்டு வீழ்ந்த, இறந்த, உரவோர் மகனே – வீரனின் மகனே, உன்னிலன் – அறியேன், என்னும் – என்னும், புண் ஒன்று அம்பு – புண்ணோடு ஒன்றி தைத்து நிற்கும் அம்பு, மான் உளை – குதிரையின் பிடரிமயிர் (மான் – குதிரை), அன்ன – போல, குடுமி – தலைக் குடுமி, தோல் மிசைக் – கேடயத்தின் மேல் (தோல் – கேடயம், மிசை – மேல்), கிடந்த – வீழ்ந்து கிடந்த, புல் அணலோனே – சிறிய தாடியை உடையோன் (அணலோனே – ஏகாரம் அசைநிலை)

புறநானூறு 312, பாடியவர் –  பொன்முடியார்திணைவாகைதுறைமூதின் முல்லை

பாடல் பின்னணி ஒரு நாடு சிறப்பாக விளங்க, ஒவ்வொருவரும் தமது கடமையை அறிந்து, உணர்ந்து செயலாற்ற வேண்டும் என்பதை மறக்குடியில் பெண் ஒருத்தியின் கூற்றாகப் புலவர் பொன்முடியார் அமைத்த பாடல் இது.

புறநானூறு 312

ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே,
சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே,
வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே,
நன்னடை  நல்கல் வேந்தற்குக் கடனே,
ஒளிறு வாள் அருஞ்சமம் முருக்கிக்  5
களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே.

பொருளுரைமகனைப் பெற்று வளர்த்துவிடுதல் எனது முதன்மையான கடமை.  அவனைக் கல்வியும், நற்பண்புகளும் நிறையப் பெற்ற சான்றோனாக ஆக்குவது அவனுடைய தந்தையின் கடமை.  அவனுக்குக் கூரிய வேலை வடித்துக் கொடுப்பது கொல்லனின் கடமை.  அவனுக்கு நல்ல ஒழுக்கத்தைக் கற்பிப்பது வேந்தனின் கடமை.  ஒளிரும் வாள் கொண்டு வெல்வதற்கு அரிய போர் செய்து பகைவரின் யானைகளைக் கொன்று வெற்றியோடு திரும்பி வருவது அந்த இளைஞனின் கடமை.   

சொற்பொருள்:  ஈன்று புறம் தருதல் – பெற்று வளர்த்துவிடுதல், என்தலைக் கடனே – எனது முதன்மையான கடமை (கடனே – ஏகாரம் அசைநிலை), சான்றோன் – சான்றோன், நற்பண்புகள் நிறந்தவன், ஆக்குதல் – ஆக்குவது, தந்தைக்கு – தந்தையின், கடனே – கடமை (கடனே – ஏகாரம் அசைநிலை), வேல் – வேல், வடித்துக் கொடுத்தல் – செய்து கொடுதல், கொல்லற்குக் கடனே – கொல்லனின் கடமை (கடனே – ஏகாரம் அசைநிலை) , நன்னடை – நல்லொழுக்கம், நல்கல் – கற்பித்தல், வேந்தற்குக் கடனே – வேந்தனின் கடமை (கடனே – ஏகாரம் அசைநிலை), ஒளிறு வாள் – ஒளிரும் வாள், அரும் – அரிய,  சமம் – போர், முருக்கி – செய்து, களிறு – யானை, எறிந்து – கொன்று, பெயர்தல் – வெற்றியோடு மீளுதல், காளைக்குக் கடனே – இளங் காளையான ஆண்மகனின் கடமை (கடனே – ஏகாரம் அசைநிலை)

புறநானூறு 327, பாடியவர்: பெயர் தெரிந்திலது, திணை: வாகை, துறை: மூதின் முல்லை
எருது கால் உறாஅது, இளைஞர் கொன்ற
சில்விளை வரகின் புல்லென் குப்பை,
தொடுத்த கடவர்க்குக் கொடுத்த மிச்சில்,
பசித்த பாணர் உண்டு கடை தப்பலின்,
ஒக்கல் ஒற்கம் சொலியத், தன்னூர்ச்  5
சிறு புல்லாளர் முகத்தவை கூறி
வரகுடன் இரக்கும் நெடுந்தகை,
அரசு வரின், தாங்கும் வல்லாளன்னே.

பொருளுரை எருதுகளைப் பிணித்துக் கடா விடுதல் அன்றி இளையவர்கள் காலால் மிதித்து எடுத்த சிலவாக விளைந்த புல்லிய குவியலில், வளைத்துக் கொண்ட கடன்காரர்க்குக் கொடுத்தது போக மிஞ்சியதை, பசியுடன் வந்த பாணர்கள் உண்டதால், தன்னுடைய புறங்கடையில் ஒன்றும் இல்லாததால், சுற்றத்தாரின் வறுமையைக் களைய, தன்னுடைய ஊரில் வாழும் அற்பமானவர்களிடம் வரகினைக் கடனாகக் கேட்டுப் பெறும் பெருந்தலைவன் வறுமையில் இருந்தாலும், வேந்தர்கள் போரிட்டு வந்தால், அதைத் தாங்கி வெல்லும் வல்லமையுடையவன்

குறிப்புஒற்கம் – இலம்பாடு ஒற்கம் ஆயிரண்டும் வறுமை (தொல்காப்பியம், உரியியல் 64).

சொற்பொருள்:   எருது கால் உறாஅது – எருதுகளைப் பிணித்து கடா விடுதல் அன்றி (உறாஅது – அளபெடை), இளைஞர் கொன்ற சில்விளை வரகின் புல்லென் குப்பை – இளையவர்கள் காலால் மிதித்து எடுத்த சிலவாக விளைந்த புல்லிய குவியலில், தொடுத்த கடவர்க்குக் கொடுத்த மிச்சில் – வளைத்துக் கொண்ட கடன்காரர்க்கு கொடுத்தது போக மிஞ்சியது, பசித்த பாணர் உண்டு கடை தப்பலின் – பசியுடன் வந்த பாணர்கள் உண்ட பின்னர் புறங்கடையில் ஒன்றும் இல்லாததால், ஒக்கல் ஒற்கம் சொலிய – சுற்றத்தாரின் வறுமையைக் களைய, தன்னூர்ச் சிறு புல்லாளர் – தன்னுடைய ஊரில் வாழும் அற்பமானவர்கள், முகத்தவை கூறி வரகுடன் இரக்கும் – வரகினைக் கடனாக கேட்டுப் பெறும், நெடுந்தகை – பெருந்தலைவன், அரசு வரின் தாங்கும் வல்லாளன்னே – வேந்தர்கள் போரிட்டு வந்தால் அதைத் தாங்கி வெல்லும் வல்லமையுடையவன் (வல்லாளன்னே – ஏகாரம் அசைநிலை)

புறநானூறு 349, பாடியவர்: மதுரை மருதன் இளநாகனார், திணை: காஞ்சி, துறை: மகட்பாற் காஞ்சி

மகட்பாற் காஞ்சி:  மகட்பாற் காஞ்சி  என்பது ‘உன் மகளைத் தா’ என்று ஒரு இளம் பெண்ணின் தந்தையிடம் ஒரு மன்னர் கேட்பது.  அந்தப் பெண்ணின் தந்தையும் அண்ணன்மாரும் மறுக்கும்பொழுது மன்னன் போரிட வருவான்.  அவளின் தந்தையும் அண்ணன்மாரும் துணிவுடன் மன்னனுடன் போரிடுவார்கள். ஊரில் உள்ள மக்கள் துன்பத்தில் ஆழ்வார்கள் – அவர்களுடைய நீர் நிலைகள் மன்னனின் யானைகளால் பாழ்படும்.  அவர்களின் மரங்களில் யானைகள் கட்டப்படுவதால் அவை சாயும்.  இந்தத் துறையில் மொத்தம் 20 பாடல்கள் உள்ளன (புறநானூறு 336 – 355).

நுதி வேல் கொண்டு நுதல் வியர் துடையாக்
கடிய கூறும் வேந்தே, தந்தையும்
நெடிய அல்லது பணிந்து மொழியலனே,
இஃது இவர் படிவம் ஆயின், வை எயிற்று,
அரி மதர் மழைக்கண், அம் மா அரிவை,  5
மரம் படு சிறு தீப் போல,
அணங்காயினள், தான் பிறந்த ஊர்க்கே.

பொருளுரை:  வேலின் கூரிய இலையால் தன் நெற்றி வியர்வையைத் துடைத்து அஞ்சத்தக்க மொழிகளை மன்னன் கூறுகின்றான்.  இவளுடைய தந்தையும் பெரிய சொற்களைக் கூறுகின்றானே தவிரப் பணிவானச் சொற்களைக் கூறவில்லை.  இது தான் இவர்களின் கொள்கை. ஆராய்ந்து பார்த்தால், விறகை கடைவதால் தோன்றும் தீ விறகையே அழிப்பது போல, கூர்மையான பற்களையும், செவ்வரி படர்ந்த செருக்கான ஈரமான கண்களையும் உடைய அழகிய கருமை நிறமுடைய இந்த இளம் பெண், தான் பிறந்த ஊருக்கு வருத்தம் விளைவிப்பவள் ஆனாள்.

குறிப்பு:  துடையா – துடைத்து என்பது பொருள்.  செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம்.  எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது.

சொற்பொருள்:  நுதி வேல் கொண்டு – வேலின் கூரிய இலையால், நுதல் வியர் துடையா – நெற்றி வியர்வையைத் துடைத்து, கடிய கூறும் வேந்தே – அஞ்சத்தக்க மொழிகளை மன்னன் கூறுகின்றான் (வேந்தே – ஏகாரம் அசைநிலை), தந்தையும் நெடிய அல்லது பணிந்து மொழியலனே – இவளுடைய தந்தையும் பெரிய சொற்களைக் கூறுகின்றானே தவிர பணிவானச் சொற்களைக் கூறவில்லை (மொழியலனே- ஏகாரம் அசைநிலை), இஃது இவர் படிவம் – இது தான் இவர்களின் கொள்கை, ஆயின் – ஆராய்ந்து பார்த்தல், வை எயிற்று – கூர்மையான பற்களையுடைய (எயிறு – பல்), அரி மதர் மழைக்கண் – செவ்வரி படர்ந்த செருக்கான ஈரக் கண்கள், அம் மா அரிவை – அழகிய கருமையான இளம் பெண், மரம் படு சிறு தீப் போல – விறகை கடையும் பொழுது தோன்றும் தீ விறகையே  அழிப்பது போல, அணங்காயினள் – வருத்தம் விளைவிப்பவள் ஆகினாள், தான் பிறந்த ஊர்க்கே – தான் பிறந்த ஊருக்கு (ஊர்க்கே – ஏகாரம் அசைநிலை)

புறநானூறு 354, பாடியவர்: பரணர், திணை: காஞ்சி, துறை: மகட்பாற் காஞ்சி
அரைசு தலைவரினும் அடங்கல் ஆனா,
நிரை காழ் எஃகம் நீரின் மூழ்கப்
புரையோர் சேர்ந்தெனத் தந்தையும் பெயர்க்கும்,
வயல் அமர் கழனி வாயில் பொய்கைக்
கயல் ஆர் நாரை உகைத்த வாளை  5
புனலாடு மகளிர் வள மனை ஒய்யும்
ஊர் கவின் இழப்பவும் வருவது கொல்லோ,
சுணங்கு அணிந்து எழிலிய அணந்து ஏந்து இள முலை
வீங்கு இறைப் பணைத்தோள் மடந்தை
மான் பிணையன்ன மகிழ் மட நோக்கே?  10

பொருளுரை:   வேந்தர்கள் போரிட வந்தாலும், அடங்காதவன் இவளுடைய தந்தை.  ஒழுங்காகக் காம்புடன் பொருந்திய வேலை நீராட்டுவதற்குப் போரில் சிறந்த வீரர்கள் கூடியவுடன், அவர்களை நீர்நிலைக்குச் செல்லுவதற்கு விடுக்கின்றான்.  வயல்கள் பொருந்திய கழனி வாயிலில் உள்ள குளத்தில், கயல் மீனை உண்ணும் நாரைகளால் துரத்தப்பட்ட வாளை மீனை நீராடும் பெண்கள் தங்களுடைய செல்வமுடைய இல்லங்களுக்குக் கொண்டு செல்வார்கள் இந்த ஊரில்.  இந்த ஊர் தன்னுடைய அழகை இழந்துவிடுமோ, தேமல் படர்ந்த, அழகான, உயர்ந்த, நிமிர்ந்த இள முலைகளையும், பெருத்த சந்து பொருந்திய மூங்கில் போலும் தோளையுடைய இளம் பெண்ணின் பெண் மானைப் போன்ற மருண்ட மகிழ்ச்சியுடைய பார்வையினால்?

சொற்பொருள்:   அரைசு தலைவரினும் – வேந்தர்கள் போரிட வந்தாலும், அடங்கல் ஆனா – அடங்குதல் அமையாது, நிரை காழ் எஃகம் – ஒழுங்காக காம்புடன் பொருந்திய வேல், நீரின் மூழ்க – நீராட்டுவதற்கு, புரையோர் – போர் வீரர்கள், சேர்ந்தென – கூடியவுடன், தந்தையும் பெயர்க்கும் – செல்லுவதற்கு விடுக்கின்றான் தந்தை, வயல் அமர் கழனி வாயில் – வயல்கள் பொருந்திய கழனி வாயில், பொய்கை – குளம்,கயல் ஆர் நாரை உகைத்த வாளை – கயல் மீனை உண்ணும் நாரைகளால் துரத்தப்பட்ட வாளை மீன், புனலாடு மகளிர் – நீராடும் பெண்கள், வள மனை ஒய்யும் – செல்வமுடைய இல்லங்களுக்குக் கொண்டு செல்லும், ஊர் கவின் இழப்பவும் – ஊர் அழகை இழப்பதும், வருவது கொல்லோ – வருமோ (கொல்லோ – ஓகாரம் அசைநிலை), சுணங்கு அணிந்து – தேமல் படர்ந்து, எழிலிய – அழகான, அணந்து ஏந்து இள முலை – உயர்ந்த நிமிர்ந்த இள முலைகள், வீங்கு இறைப் பணைத்தோள் மடந்தை – பெருத்த சந்து பொருந்திய மூங்கில் போலும் தோளையுடைய இளம் பெண், மான் பிணையன்ன மகிழ் மட நோக்கே – பெண் மானின் மருண்ட மகிழ்ச்சியுடைய பார்வை (நோக்கே – ஏகாரம் அசைநிலை)

புறநானூறு  356, பாடியவர் –  கதையங்கண்ணனார்திணைகாஞ்சிதுறைபெருங்காஞ்சி

பாடல் பின்னணி உலகத்து மக்கள் எல்லாம் முடிவில் அடையும் இடம் சுடுகாடு.  அச்சுடுகாடு தான் இறுதியில் வெற்றி அடைகின்றது. சுடுகாற்றை வென்றவர்கள் யாருமில்லை என்பதைப் புலவர் கதையங்கண்ணனார் அழகாக விவரிக்கின்றார் இந்தப் பாடலில்.  ‘உலகை ஆளும் பெரு மணிமுடி மன்னனும் முடிவில் ஒரு பிடிச்சாம்பலே’ என்ற வாழ்க்கையின் நிலையற்ற தன்மையை விளக்கும் பாடல் இது.

களரி பரந்து, கள்ளி போகிப்
பகலும் கூஉம் கூகையொடு பேழ்வாய்
ஈம  விளக்கின் பேஎய் மகளிரொடு
அஞ்சு வந்தன்று, இம்  மஞ்சுபடு முதுகாடு,
நெஞ்சு அமர் காதலர் அழுத கண்ணீர்  5
என்பு படு சுடலை வெண்ணீறு அவிப்ப,
எல்லார் புறனும் தான் கண்டு உலகத்து
மன்பதைக் கெல்லாம் தானாய்த்
தன் புறம் காண்போர்க் காண்பு அறியாதே!

பொருளுரை:   பரந்த களர் நிலத்தில் கள்ளி முளைத்துள்ளது.  பகல் பொழுதில் கூவும் ஆந்தைகளாலும், பிணத்தை எரிக்கும் தீயின் ஒளியாலும், அகன்ற வாயையுடைய பேய் மகளிராலும், இந்தப் புகை தவழும் சுடுகாடு காண்போர்க்கு அச்சத்தைத் தருகின்றது.  மனத்தால் விரும்புபவர்கள் அழுது சொரியும் கண்ணீர் எலும்புகள் கிடக்கும் சுடுகாட்டுச் சாம்பல் தீயை அடக்குகின்றது.  எல்லோருடைய முதுகையும் கண்டு, உலகிலுள்ள மக்களுக்கெல்லாம் முடிவிடமாய் விளங்கும் இந்தச் சுடுகாட்டின் முதுகைக் காணும் வல்லவரை இதுவரை இந்தச் சுடுகாடு கண்டதில்லை.

குறிப்பு:  இந்தப் பாடல் ‘மகட்பாற் காஞ்சி’ என்னும் துறையைச் சார்ந்தது என்று ஔவை துரைசாமிப் பிள்ளையின் உரை கூறுகின்றது.  ஆனால் இந்தப் பாடலில் மகளைக் கேட்டு வருவதோ, தர மறுப்பதோ இல்லை.  இது நிலையாமையைக் கூறும் பெருங்காஞ்சியாகத் தான் இருக்கக்கூடும்.  இதை அடுத்து வரும் 8 பாடல்களும் நிலையாமையைக் கூறும் பெருங்காஞ்சித் துறையைச் சார்ந்தவை. 

சொற்பொருள்:   களரி – உவர் நிலமுடைய காடு, பரந்து – பரந்து, படர்ந்து, கள்ளி – கள்ளிச் செடி, போகி – மிகுந்து, பகலும் – பகலிலும், கூஉம் – கூவும் (இன்னிசை அளபெடை), கூகையொடு – ஆந்தையோடு, பேழ் வாய் – அகன்ற வாயையுடைய, ஈம விளக்கின் – பிணம் எரியும் தீயாகிய விளக்காலும், பேஎய் மகளிரொடு – பேய் மகளிரோடு (பேஎய் – அளபெடை), அஞ்சு வந்தன்று – அச்சம் வரச்செய்யும், இம் மஞ்சுபடு – இந்த புகை தவழும் (இங்கு மஞ்சு என்பது புகையைக் குறிக்கின்றது), முது காடு – சுடுகாடு, நெஞ்சு அமர் காதலர் – மனம் விரும்பும் காதலர்கள்,  அழுத கண்ணீர் -அழுததால் வந்த கண்ணீர், என்பு படு – எலும்புகள் கிடக்கும், சுடலை – சுடுகாடு, வெண்ணீறு – சாம்பல், அவிப்ப – அடக்க,  எல்லார் – எல்லோருடைய, புறனும் – முதுகும், தான் கண்டு – தான் கண்டு, உலகத்து – உலகத்தில் உள்ள, மன்பதைக் கெல்லாம் – மக்களுக்கெல்லாம், தானாய் – தானே முடிவிடமாய், தன் புறம் – தன் முதுகு, காண்போர்க் காண்பு – காண்பவரைக் காண்பது, அறியாதே – அறியாது (ஏகாரம் அசைநிலை)

புறநானூறு 385, பாடியவர்: கல்லாடனார், பாடப்பட்டோன்: அம்பர் கிழான் அருவந்தை, திணை: பாடாண், துறை: வாழ்த்தியல்
வெள்ளி தோன்றப் புள்ளுக் குரல் இயம்ப
புலரி விடியல் பகடு பல வாழ்த்தித்
தன் கடைத் தோன்றினும் இலனே பிறன் கடை
அகன் கண் தடாரிப் பாடு கேட்டு அருளி
வறன் யான் நீங்கல் வேண்டி என் அரை  5
நிலந்தினச் சிதைந்த சிதாஅர் களைந்து
வெளியது உடீஇ என் பசி களைந்தோனே
காவிரி அணையும் தாழ் நீர்ப் படப்பை
நெல் விளை கழனி அம்பர் கிழவோன்
நல் அரு வந்தை வாழியர் புல்லிய  10
வேங்கட விறல் வரைப் பட்ட
ஓங்கல் வானத்து உறையினும் பலவே.

பொருளுரை வானத்தில் வெள்ளி தோன்றியது. பறவைகள் ஒலித்தன. பொழுது புலர்ந்தது. அவனுடைய எருதுகளை வாழ்த்தி நான் அவனுடைய வாயிலில் தோன்றவில்லை. அருகில் உள்ள மனை வாயிலில் என்னுடைய அகன்ற கண்ணையுடைய தடாரிப் பறையின் ஒலியைக் கேட்டு, அருளி, என்னுடைய வறுமையை நீக்க விரும்பி, என் இடையில் கட்டிய நிலம் தின்ற கந்தல் ஆடையை நீக்கி, வெண்ணிற ஆடையை எனக்கு உடுப்பித்து, என்னுடைய பசியை நீக்கினான், காவிரி ஆறு பாயும் தாழ்ந்த நிலத்தில் உள்ள தோட்டங்களையும் நெல் விளையும் வயல்களையுமுடைய அம்பர் என்ற ஊருக்கு உரியவனாக நல்ல அருவந்தை என்பவன். அவன் நீடு வாழ்வானாக!  புல்லி என்பவனின் வேங்கட மலையில் உயர்ந்த வானத்திலிருந்து விழும் மழைத் துளிகளைவிடப் பல ஆண்டுகள் வாழ்வானாக!

குறிப்புவெள்ளி தோன்ற:  புறநானூறு 385 – வெள்ளி தோன்றப் புள்ளுக் குரல் இயம்ப புலரி விடியல், புறநானூறு 397 – வெள்ளியும் இரு விசும்பு ஏர்தரும் புள்ளும் உயர் சினைக் குடம்பைக் குரல் தோற்றினவே பொய்கையும் போது கண் விழித்தன பையச் சுடரும் சுருங்கின்று ஒளியே பாடெழுந்து இரங்கு குரல் முரசமொடு வலம்புரி ஆர்ப்ப இரவுப் புறங்கண்ட காலைத் தோன்றி, புறநானூறு 398 – மதி நிலாக் கரப்ப வெள்ளி ஏர்தர வகை மாண் நல் இல், பொருநராற்றுப்படை 72 – வெள்ளி முளைத்த நள்ளிருள் விடியல்.

சொற்பொருள் வெள்ளி தோன்ற – வானத்தில் வெள்ளி தோன்றியது, புள்ளுக் குரல் இயம்ப – பறவைகள் ஒலித்தன, புலரி விடியல் – பொழுது புலர்ந்தது, பகடு பல வாழ்த்தி – எருதுகளை வாழ்த்தி, தன் கடைத் தோன்றினும் இலனே – அவனுடைய வாயிலில் நான் தோன்றவில்லை (இலனே – ஏகாரம் அசைநிலை), பிறன் கடை – பிறர் வாயில், அகன் கண் தடாரிப் பாடு கேட்டு – என்னுடைய அகன்ற கண்ணையுடைய தடாரிப் பறையின் ஒலியைக் கேட்டு, அருளி – அருளி, வறன் யான் நீங்கல் வேண்டி – என்னுடைய வறுமையை நீக்க விரும்பி, என் அரை நிலந்தினச் சிதைந்த சிதாஅர் களைந்து – என் இடையில் கட்டிய நிலம் தின்ற கந்தல் ஆடையை நீக்கி (சிதாஅர் – அளபெடை), வெளியது உடீஇ – வெண்ணிற ஆடையை எனக்கு உடுப்பித்து (உடீஇ – அளபெடை), என் பசி களைந்தோனே – என்னுடைய பசியை நீக்கினான் (களைந்தோனே – ஏகாரம் அசைநிலை), காவிரி அணையும் தாழ் நீர்ப் படப்பை நெல் விளை கழனி அம்பர் கிழவோன் – காவிரி ஆறு பாயும் தாழ்ந்த நிலத்தில் உள்ள தோட்டங்களையும் நெல் விளையும் வயல்களையுமுடைய அம்பர் என்ற ஊருக்கு உரியவன், நல் அருவந்தை – நல்ல அருவந்தை என்பவன், வாழியர் – நீடு வாழ்வானாக, புல்லிய வேங்கட விறல் வரைப் பட்ட ஓங்கல் வானத்து உறையினும் பலவே –  புல்லி என்பவனின் வேங்கட மலையில் உயர்ந்த வானத்திலிருந்து விழும் மழைத் துளிகளைவிடப் பல ஆண்டுகள் வாழ்வானாக (பலவே – ஏகாரம் அசைநிலை)

புறநானூறு 394, பாடியவர்: கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார், பாடப்பட்டோன்: சோழிய ஏனாதி திருக்குட்டுவன், திணை: பாடாண், துறை: கடை நிலை
சிலை உலாய் நிமிர்ந்த சாந்துபடு மார்பின்,
ஒலி கதிர்க் கழனி வெண்குடைக் கிழவோன்,
வலி துஞ்சு தடக்கை வாய்வாள் குட்டுவன்,
வள்ளியன் ஆதல் வையகம் புகழினும்,
உள்ளல் ஓம்புமின், உயர் மொழிப் புலவீர்!  5
யானும் இருள் நிலாக் கழிந்த பகல் செய் வைகறை
ஒரு கண் மாக் கிணை தெளிர்ப்ப ஒற்றிப்,
பாடு இமிழ் முரசின் இயல் தேர்த் தந்தை
வாடா வஞ்சி பாடினேன் ஆக,
அக மலி உவகையொடு அணுகல் வேண்டிக்,  10
கொன்று சினந் தணியாப் புலவு நாறு மருப்பின்
வெஞ்சின வேழம் நல்கினன், அஞ்சி
யான் அது பெயர்த்தனென் ஆகத், தான் அது
சிறிதென உணர்ந்தமை நாணிப், பிறிதும் ஓர்
பெருங்களிறு நல்கியோனே, அதற்கொண்டு,  15
இரும்பேர் ஒக்கல் பெரும் புலம்பு உறினும்,
துன்னரும் பரிசில் தரும் என
என்றும் செல்லேன், அவன் குன்று கெழு நாட்டே.

பொருளுரை:   விற்பயிற்சியால் உயர்ந்த, சந்தனம் பூசப்பட்ட மார்பினையுடைய, தழைத்த கதிர்களை உடைய வயல்களைக் கொண்ட வெண்குடை என்ற ஊரின் தலைவனான வலிமையுடைய பெரிய கைகளையும் குறி தப்பாத வாளையுமுடைய திருக்குட்டுவன் வள்ளன்மை உடையவன் என்று உலக மக்கள் புகழ்ந்தாலும், அவனை நினைத்தலைக் கைவிடுவீர்களாக, உயர்ந்த கருத்துக்கள் அமைந்த சொற்களையுடைய புலவர்களே!

நானும், இருளும் நிலவும் கழிந்த அதிகாலையில் ஒரு கண்ணையுடைய கிணைப் பறை ஒலிக்குமாறு இசைத்து, ஒலி ஒலிக்கின்ற முரசினையும் இயற்றிய தேரினையும் உடைய அவனுடைய தந்தையின் புகழை வஞ்சித் துறையில் பாடினேன் ஆக, அவன் தன் உள்ளத்தில் மிக்க மகிழ்ச்சியுடன் தன்பால் நான் நெருங்கி இருக்க வேண்டி, பகைவரைக் கொன்றும் சினம் தணியாத புலவு நாற்றமுடைய தந்தங்களையுடைய யானை ஒன்றை எனக்கு ஈந்தான்.  அச்சம் கொண்டு நான் விலகினேன் ஆக, தான் கொடுத்தது சிறிது என்று உணர்ந்து நாணம் அடைந்தவனாக, அதைவிடப் பெரிய களிற்று யானையை எனக்கு ஈந்தான்.  அதன் பின்னர், என்னுடைய மிகப் பெரிய சுற்றத்தாருடன் நான் பெரிய துன்பத்தை அடைந்தாலும், நெருங்க முடியாத பரிசைத் தருவான் அவன் என்று, நான் எப்பொழுதும் செல்லமாட்டேன், மலைகள் பொருந்திய அவனுடைய நாட்டிற்கு.

குறிப்புஇரும்பேர் ஒக்கல் – நச்சினார்க்கினியர் உரை, பொ. வே. சோமசுந்தரனார் உரை – பொருநராற்றுப்படை 61, சிறுபாணாற்றுப்படை 139, 144, பெரும்பாணாற்றுப்படை 25, 470, மலைபடுகடாம் 157 – கரிய பெரிய சுற்றம், ஒளவை துரைசாமி உரை – புறநானூறு பாடல்கள் 69, 150, 370, 378, 390, 391, 393, 394, 396 – மிக்க பெரிய சுற்றத்தார், மிகப் பெரிய சுற்றம், புறநானூறு 320 – கரிய பெரிய சுற்றத்தார், பொ. வே. சோமசுந்தரனார் உரை, இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – அகநானூறு 301 – மிகப் பெரிய சுற்றத்தார்.

சொற்பொருள்:   சிலை உலாய் நிமிர்ந்த – விற்பயிற்சியால் உயர்ந்த, சாந்துபடு மார்பின் – சந்தனம் பூசப்பட்ட மார்பினையுடைய, ஒலி கதிர்க் கழனி – தழைத்த கதிர்களை உடைய வயல்கள், வெண்குடைக் கிழவோன் – வெண்குடை என்ற ஊரின் தலைவன், வலி துஞ்சு தடக்கை – வலிமையுடைய பெரிய கைகள், வாய்வாள் குட்டுவன் – குறி தப்பாத வாளையுடைய திருக்குட்டுவன், வள்ளியன் ஆதல் வையகம் புகழினும் – வள்ளன்மை உடையவன் என்று உலக மக்கள் புகழ்ந்தாலும், உள்ளல் ஓம்புமின் – நினைத்தலை கைவிடுவீர்களாக, உயர் மொழிப் புலவீர் – உயர்ந்த சொற்களையுடைய புலவர்களே, யானும் – நானும், இருள் நிலாக் கழிந்த பகல் செய் வைகறை – இருளும் நிலவும் கழிந்த அதிகாலை, ஒரு கண் மாக் கிணை தெளிர்ப்ப ஒற்றி – ஒரு கண்ணையுடைய கிணைப் பறை ஒலிக்குமாறு இசைத்து, பாடு இமிழ் முரசின் இயல் தேர்த் தந்தை வாடா வஞ்சி பாடினேன் ஆக – ஒலி ஒலிக்கின்ற முரசினையும் இயற்றிய தேரினையும் உடைய அவனுடைய தந்தையின் புகழை வஞ்சித் துறையில் பாடினேன் ஆக, அக மலி உவகையொடு – உள்ளத்தில் மிக்க மகிழ்ச்சியுடன், அணுகல் வேண்டி – தன்பால் நெருங்க வேண்டி, பகைவரைக் கொன்று சினந் தணியாப் புலவு நாறு மருப்பின் வெஞ்சின வேழம் நல்கினன் – எனக்கு கொன்றும் சினம் தணியாத புலவு நாற்றமுடைய தந்தங்களையுடைய யானை ஒன்றை எனக்கு ஈந்தான், அஞ்சி யான் அது பெயர்த்தனென் ஆக – அச்சம் கொண்டு நான் விலகினேன் ஆக, தான் அது சிறிதென உணர்ந்தமை நாணி – அவன் அது சிறிது என்று உணர்ந்து நாணம் அடைந்து, பிறிதும் ஓர் பெருங்களிறு நல்கியோனே – அதைவிட பெரிய களிற்று யானையை எனக்கு ஈந்தான், அதற்கொண்டு – அதன் பின்னர், இரும்பேர் ஒக்கல் – மிகப் பெரிய சுற்றத்தாருடன், பெரும் புலம்பு உறினும் – பெரிய துன்பத்தை அடைந்தாலும், துன்னரும் பரிசில் தரும் என – நெருங்க முடியாத பரிசு தருவான் என்று, என்றும் செல்லேன் – எப்பொழுதும் செல்லவில்லை, அவன் குன்று கெழு நாட்டே – மலைகள் பொருந்திய அவனுடைய நாட்டிற்கு