குறிஞ்சிப்பாட்டு

எளிய உரை:  வைதேகி

பாடியவர் – கபிலர்
திணை – குறிஞ்சி
துறை – அறத்தொடு நிற்றல்
பா வகை –  அகவல்பா (ஆசிரியப்பா)
மொத்த அடிகள் –
261

புலவர்:   புலவர் கபிலர் இப்பாடலை எழுதியவர். இப்புலவர் பெருமான் எழுதிய பாடல்கள் யாவும் மிகச் சிறப்பானவை. தமிழின் இனிமையை வெளிப்படுத்துபவை. அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை, புறநானூறு, பதிற்றுப்பத்து ஆகியவற்றில் இவர் எழுதிய பாடல்கள் உள்ளன. கடையெழு வள்ளல்களில் ஒருவரான பாரியின் நண்பர் இவர். பாரி இறந்தபின் அவருடைய பெண் குழந்தைகளைத் தன் குழந்தைகளாக ஏற்றுக் கொண்டவர். அயன்மொழியாளனாகிய ஆரிய மன்னனுக்குத் தமிழர்களின் களவு ஒழுக்கம் கற்பு ஒழுக்கம் ஆகியவற்றை அறிவுறுத்த எழுதிய குறிஞ்சிப்பாட்டு நம்முடைய பெருஞ்செல்வம்.  அறத்தொடு நிற்றல் என்னும் துறையில் கபிலர் இதைப் படைத்துள்ளார்.

குறிஞ்சிப்பாட்டு:  குறிஞ்சிப்பாட்டு என்ற பெயர் குறிஞ்சித் திணையைப் பற்றிய பாடல்.  குறிஞ்சி என்பது புணர்தலை உரிப்பொருளாகக் கொண்ட திணை.  நச்சினார்க்கினியர் கூற்று, “இதற்குக் குறிஞ்சி என்று பெயர் கூறினார்.  இயற்கைப் புணர்ச்சியும் பின்னர் நிகழும் புணர்ச்சிகளுக்கு நிமித்தங்களும் கூறுதலின், அன்றியும் முதலானும் கருவானும் குறிஞ்சிக்கு உரியயாகவே கூறுதலானும் அப்பெயர் கூறினார்”.  இந்தப் பாடல் தோழி செவிலித்தாயிடம் கூறும் கூற்றாக அமைந்துள்ளது.

அறத்தொடு நிற்றல்:  அகத்திணையில் களவு ஒழுக்கம், கற்பு ஒழுக்கம் என்ற இரண்டு பிரிவுகள் உண்டு. இவ்விரண்டையும் இணைத்து நிற்பது அறத்தொடு நிற்றலாகும். தலைவியின் களவு ஒழுக்கத்தை வெளிப்படுத்துதல் அறத்தொடு நிற்றல் ஆகும்.  தலைவி, தோழி, செவிலித்தாய், நற்றாய் ஆகியவர்கள் அறத்தொடு நிற்பதுண்டு.  அறத்தொடு நிற்றலின் விளைவு, தலைவியை அவள் விரும்பிய தலைவனுடன் கற்பு வாழ்க்கையில் இணைப்பதாகும்.  தலைவியைத் தலைவனுக்குத் திருமணம் செய்வித்தல் ஆகும்.

கதைச்சுருக்கம்:  தோழி செவிலித்தாயிடம் தலைவனுக்கும் தலைவிக்கும் இடையே ஏற்பட்ட காதல் உறவு பற்றிக் கூறுவதாக அமைந்த பாடல் இது.  மிகத் திறமையுடன் அவள் அதை விவரித்துத் திருமணம் வேண்டுகின்றாள்.  தலைவனும் தலைவியும் ஒருவரையொருவர் எவ்வாறு சந்தித்தார்கள் என விவரிக்கின்றாள்.  தலைவியும் தோழியும் தினைப்புன காவலுக்குச் சென்றது, அருவியில் விளையாடியது, 99 வித மலர்களால் ஆடை புனைந்து அணிந்தது, அங்கு வந்த தலைவனைக் கண்டது, அவன் அவர்களை நாய்களிடமிருந்தும் யானையிடமிருந்தும் காப்பாற்றியது, தலைவனுக்கும் தலைவிக்கும் இடையே காதல் ஏற்பட்ட சூழ்நிலை, தலைவன் திருமணம் புரிவேன் என்று உறுதிமொழி கொடுத்தது, கற்பு வாழ்க்கையில் விரும்தோம்பலுடன் வாழ்வோம் என அவன் கூறியது, இரவுக்குறியில் அவன் வருவது, வரும் வழியில் அவனுக்கு ஏற்படும் இடையூறுகள், அதை எண்ணி வருந்தும் தலைவியின் நிலைமை ஆகியவற்றை எல்லாம் மிகத் தெளிவாக எடுத்துரைக்கின்றாள்.

தோழி செவிலித்தாயை அணுகி வேண்டுதல்

அன்னாய் வாழி! வேண்டு அன்னை, ஒண்ணுதல்
ஒலி மென் கூந்தல் என் தோழி மேனி
விறல் இழை நெகிழ்த்த வீவு அரும் கடு நோய்,
அகலுள் ஆங்கண் அறியுநர் வினாயும்,
பரவியும், தொழுதும், விரவு மலர் தூயும்,   5
வேறு பல் உருவில் கடவுள் பேணி,
நறையும் விரையும் ஓச்சியும், அலவுற்று,
எய்யா மையலை, நீயும் வருந்துதி (1-8)

பொருளுரை:  தாயே நீ நீடு வாழ்வாயாக!  நான் கூறுவதைக் கேட்பாயாக!  ஒளியுடைய நெற்றியையும் அடர்ந்த மென்மையான கூந்தலையும் உடைய என் தோழியின் மேனியில் அணிந்த சிறப்பான அணிகலன்களை நெகிழச் செய்த அழிக்க முடியாத கொடூர நோயைக் கண்டு, அகன்ற ஊரில் உள்ள, நடக்கப்போவதை அறிவிக்கும் கட்டுவிச்சி, வேலன் முதலியோரைக் கேட்டும், வெவ்வேறு உருவங்களில் உள்ள கடவுளைப் பேணியும், பாராட்டியும், வணங்கியும், பல நிற மலர்களைக் கலந்து தூவியும், அகில் முதலிய நறுமணப் புகையையும், சந்தனம் முதலிய நறுமணப் பொருட்களையும் செலுத்தி, கலக்கமுற்று, காரணம் அறியாது, மயக்கமுடையவளாக நீயும் வருந்துகின்றாய்.

குறிப்பு:  வேறு பல் உருவில் கடவுள் பேணி (6) – நச்சினார்க்கினியர் உரை – வேறுபட்ட வடிவங்களையுடைய பல தெய்வங்களை, பொ. வே. சோமசுந்தரனார் உரை – பலவாகிய ஒன்றனை ஒன்றொவ்வாது வேறுபட்ட வடிவங்களில் எல்லாம் உள்ளுறையும் இறைவன்.  அன்னை வருந்துதல்:  அகநானூறு 156 – கள்ளும் கண்ணியும் கையுறையாக நிலைக் கோட்டு வெள்ளை நாள் செவிக் கிடாஅய் நிலைத் துறைக் கடவுட்கு உளப்பட ஓச்சித் தணி மருங்கு அறியாள் யாய் அழ மணி மருள் மேனி பொன் நிறம் கொளலே.  அகநானூறு 48 -அன்னாய் வாழி வேண்டு அன்னை நின் மகள் பாலும் உண்ணாள் பழங்கண் கொண்டு நனி பசந்தனள் என வினவுதி, நற்றிணை 351 – இளமை தீர்ந்தனள் இவள் என வள மனை அருங்கடிப்படுத்தனை ஆயினும் சிறந்து இவள் பசந்தனள் என்பது உணராய் பல் நாள் எவ்வ நெஞ்சமொடு தெய்வம் பேணி வருந்தல் வாழி வேண்டு அன்னை.  அன்னாய் – அன்னை அன்னாய் என வந்தது, ஐ ஆய் ஆகும் (தொல்காப்பியம், விளிமரபு 4).  அலமரல் – அலமரல் தெருமரல் ஆயிரண்டும் சுழற்சி (தொல்காப்பியம், உரியியல் 14).  எய்யாமை – எய்யாமையே அறியாமையே (தொல்காப்பியம், உரியியல் 46). பரவும் – பரவும் பழிச்சும் வழுத்தின் பொருள (தொல்காப்பியம், உரியியல் 86). செவிலி – தாய் எனப்படுவோள் செவிலி ஆகும் (தொல்காப்பியம், களவியல் 34).

சொற்பொருள்:  அன்னாய் வாழி – தாயே நீ நீடு வாழ்வாயாக, வேண்டு அன்னை – நான் கூறுவதைக் கேட்பாயாக, ஒள் நுதல் – ஒளியுடைய நெற்றி, ஒலி மென் கூந்தல் – அடர்ந்த மென்மையான கூந்தல், என் தோழி மேனி – என் தோழியின் மேனி, விறல் இழை – சிறப்பான அணிகலன்கள், நெகிழ்த்த – நெகிழச் செய்த, வீவு அரும் கடு நோய் – அழிக்க முடியாத கொடூர நோய், அகலுள் – அகன்ற ஊரில், ஆங்கண் – அங்கே, அறியுநர்  – நடக்கப்போவதை அறிபவர்கள் (கட்டுவிச்சி, வேலன் முதலியோர்), வினாயும் – கேட்டும், பரவியும் – பாராட்டியும், தொழுதும் – வணங்கியும், விரவு மலர் தூயும் – பல நிற மலர்களைக் கலந்து தூவியும், வேறு பல் உருவில் கடவுள் பேணி – வேறு பல உருவங்களில் உள்ள கடவுளைப் பேணி, நறையும் – அகில் முதலிய நறுமணப் புகையும், விரையும் – சந்தனம் முதலிய நறுமணப் பொருட்களும், ஓச்சியும் – செலுத்தியும், அலவுற்று – கலக்கமுற்று, எய்யா – காரணம் அறியாமை, மையலை – மயக்கமுடையாய் (முன்னிலை ஒருமை வினைமுற்று), நீயும் – நீயும்,  வருந்துதி – வருந்துகின்றாய் (முன்னிலை ஒருமை வினைமுற்று)

தோழியின் சொல் வன்மை

நற்கவின் தொலையவும், நறும் தோள் நெகிழவும்,
புள் பி்றர் அறியவும், புலம்பு வந்து அலைப்பவும்,   10
உள்கரந்து உறையும் உய்யா அரும் படர்,
செப்பல் வன்மையின் செறித்தியான் கடவலின், (9-12)

பொருளுரை:  என் தோழியின் நல்ல அழகு கெடவும், அவளுடைய நறுமணமான தோள் மெலியவும், கை வளை வழுக்கி விழுவதை பிறர் அறியவும், தனிமையில் அவள் வருந்தவும், அவள் நெஞ்சின் உள் மறைந்திருக்கும் தாங்க முடியாத அரிய நோயை, என் சொல்லின் வன்மையால் அவளை நெருக்கி, கூறுமாறு நான் ஏவியதால்,

குறிப்பு:  உய்யா அரும் படர் (11) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – உயிர் கொண்டு பிழைத்தற்கரிய நோய், ஜெகந்நாதாசார்யர் உரை – பிரிவு ஆற்றாளாகிய தலைமகள் தான் உறுகின்ற துன்பத்தினை எப்பொழுதும் நினைத்தலால் ஆகிய நினைவு. புலம்பு – புலம்பே தனிமை (தொல்காப்பியம், உரியியல் 35).

சொற்பொருள்: நற்கவின் தொலையவும் – நல்ல அழகு கெடவும், நறும் தோள் நெகிழவும் – நறுமணமான தோள் மெலியவும், புள் – கை வளை, பிறர் அறியவும் – பிறர் அறியவும், புலம்பு வந்து அலைப்பவும் – தனிமையில் வருந்தவும், உள் கரந்து உறையும் – நெஞ்சின் உள் மறைந்திருக்கும், உய்யா அரும் படர் – தாங்க முடியாத அரிய நோய், செப்பல் வன்மையின் – என்னுடைய சொல்லின் வன்மையால், செறித்தியான் கடவலின் – அவள் நெஞ்சை நெருக்கி நான் தூண்டியதால் (செறித்தியான் – குற்றியலிகரம், செறித்து யான்)

அறம் உரைக்கும் தலைவியின் ஆற்றொணாத் துன்பம்

“முத்தினும், மணியினும், பொன்னினும், அத்துணை
நேர்வருங் குரைய கலங்கெடின் புணரும்,
சால்பும், வியப்பும், இயல்பும் குன்றின்,   15
மாசறக் கழீஇ வயங்கு புகழ் நிறுத்தல்
ஆசறு காட்சி ஐயர்க்கும் அந்நிலை
எளிய என்னார் தொல் மருங்கு அறிஞர்,
மாதரும் மடனும் ஓராங்குத் தணப்ப
நெடுந்தேர் எந்தை அருங்கடி நீவி,  20
இருவேம் ஆய்ந்த மன்றல் இதுவென
நாம் அறிவுறாலின் பழியும் உண்டோ?
ஆற்றின் வாரார் ஆயினும் ஆற்ற
ஏனை உலகத்தும் இயைவதால் நமக்கென”,
மான் அமர் நோக்கம் கலங்கிக் கையற்று,   25
ஆனாச் சிறுமையள் இவளும் தேம்பும் (13-26)

பொருளுரை:   என் தோழி கூறுகின்றாள், “முத்தினாலும் மணியினாலும் பொன்னினாலும், அளவுக்கு ஏற்றபடி இணைத்து இயற்றப்பட்ட அணிகலன்கள் பாழ்பட்டால், அவற்றைச் சேர்த்து இணைக்க முடியும்.  சான்றாண்மையும் பெருமையும் ஒழுக்கமும் கெட்டால், மாசற்ற விளங்கும் புகழை பழைய நிலைக்குக் கொண்டு வருதல், குற்றமில்லாத காட்சியை உடைய சான்றோர்க்கும் அது எளிமையான செயல், என்று கூற மாட்டார்கள் பழைய நூல்களை அறிந்த அறிஞர்கள். பெற்றோரும் அவர்கள் தேர்ந்தெடுப்பவர்க்கு என்னைக் கொடுக்க எண்ணுவதையும் என்னுடைய மடமையும், ஒரு சேரக் கெட, உயர்ந்த தேரை உடைய என் தந்தையின் அரிய காவலைக் கடந்து, இருவரும் ஆய்ந்த (நாணமும் மடமும் நுணுகியவழி எம்மிடத்தில் பிறந்த) களவு மணம் இது என நாம் தாயிடம் கூறுமிடத்து, பழியும் உண்டோ? அறிவுறுத்திய பின்னர், இசைந்து வாராது இருப்பினும், பொறுத்திருந்து, இம்மை மாறி மறுமை அடைந்த பொழுது நான் அவனை அடைவதாக என இருப்பேன்”.

மானைப் போன்ற விரும்புதற்குக் காரணமான அழகையுடைய தன் விழிகள் கலங்கிக் கையற்று, ஆற்ற முடியாத நோய் உடையவளாகத் தேம்புகின்றாள் அவள்.

குறிப்பு:  ஆய்ந்த மன்றல் (21) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – யானும் தலைவனுமே தேர்ந்துகொண்ட களவு மணம்.  மாதர் – மாதர் காதல் (தொல்காப்பியம், உரியியல் 32).

சொற்பொருள்: முத்தினும் மணியினும் பொன்னினும் – முத்தினாலும் மணியினாலும் பொன்னினாலும், அத்துணை நேர்வரும் – அளவுக்கு ஏற்றபடி இணைத்து இயற்றுதலால் தோன்றும், குரைய – ஓர் அசை, கலங்கெடின் – அணிகலன் பாழ்பட்டால், புணரும் – சேர்க்க முடியும், சால்பும் வியப்பும் இயல்பும் குன்றின் – சான்றாண்மையும் பெருமையும் ஒழுக்கமும் கெட்டால், மாசறக் கழீஇ – அழுக்கு இல்லாது கழுவி (கழீஇ – அளபெடை), வயங்கு புகழ் – விளங்கும் புகழ், அந்நிலை நிறுத்தல் – பழைய நிலை உண்டாக நிற்கச் செய்தல், ஆசு அறு காட்சி ஐயர்க்கும் – குற்றமில்லாத காட்சியை உடைய சான்றோர்க்கும், அந்நிலை எளிய என்னார் – அது எளிமையான செயல் என்று கூற மாட்டார்கள், தொல் மருங்கு அறிஞர் – பழைய நூல்களை அறிந்த அறிஞர்கள், மாதரும் – பெற்றோரும், மடனும் – மடமையும், ஓராங்கு – ஒன்று சேர, தணப்ப – கெட, நெடுந்தேர் எந்தை – உயர்ந்த தேரை உடைய என் தந்தை, அருங்கடி நீவி – அரிய காவலைக் கடந்து, இருவேம் ஆய்ந்த – இருவரும் தேர்ந்த, மன்றல் – களவு மணம், இது என – இது என, நாம் அறிவுறாலின் – நாம் தாயிடம் கூறுமிடத்து, பழியும் உண்டோ – பழியும் உண்டோ, ஆற்றின் – அறிவுறுத்திய பின்னர், வாரார் ஆயினும் – இசைந்து வாராது இருப்பினும், ஆற்ற – பொறுத்திருந்து, ஏனை உலகத்தும் இயைவதால் நமக்கென – இம்மை மாறி மறுமை அடைந்த பொழுது தான்  நமக்கு எய்துவதாக உள்ளது (இயைவதால் – ஆல் அசை நிலை), மான் அமர் நோக்கம் – மானைப் போன்ற விரும்புதற்குக் காரணமான அழகையுடைய தன் விழிகள், கலங்கிக் கையற்று – வருந்தி செயலற்று, ஆனா சிறுமையள் – ஆற்ற முடியாத நோய் உடையவள், இவளும் தேம்பும் –  என் தோழி தேம்புகின்றாள்

தன்னிலை கூறும் தோழி

இகல் மீக் கடவும் இரு பெரு வேந்தர்
வினை இடை நின்ற சான்றோர் போல,
இரு பேர் அச்சமோடியானும் ஆற்றலேன். (27-29)

பொருளுரை:  பகைமை மேற்கொண்டு தாக்கும் இரண்டு பெரிய வேந்தர்கள் இருவரை ஒன்றுசேர்க்கும் பணியில் இருக்கும் சான்றோர் போல, உனக்கும் என் தோழிக்கும் இடையே, நான் அச்சத்துடன் மிகவும் வருந்தி இருக்கின்றேன்.

குறிப்பு:  அறத்தொடு நிற்கும் காலத்தன்றி அறத்தியல் மரபிலள் தோழி என்ப (தொல்காப்பியம், பொருளதிகாரம் 12).

சொற்பொருள்: இகல் மீக் கடவும் – பகைமை மேற்கொண்டு தாக்கும், இரு பெரு வேந்தர் – இரண்டு பெரிய வேந்தர்கள், வினையிடை நின்ற – இருவரையும் ஒன்றுசேர்க்கும் பணியில் இருந்த, சான்றோர் போல – சான்றோர் போல, இரு பேர் அச்சமோடியானும் (அச்சமோடு யானும்) ஆற்றலேன் –  உனக்கும் என் தோழிக்கும் இடையே அச்சத்துடன், நானும் பெரிதும் வருந்துகின்றேன் (அச்சமோடியானும் – குற்றியலிகரம், அச்சமோடு யானும்)

தலைவியின் மனம் கூறும் தோழி

கொடுப்பின் நன்கு உடைமையும், குடி நிரல் உடைமையும்,   30
வண்ணமும் துணையும் பொரீஇ எண்ணாது,
எமியேம் துணிந்த ஏமம் சால் அருவினை
நிகழ்ந்த வண்ணம் நீ நனி உணரச்
செப்பல், ஆன்றிசின், சினவாதீமோ! (30-34)

பொருளுரை:  மகட் கொடை கொடுக்குமிடத்தில் எல்லாம் நன்றாக முடியும் என்பதையும், தலைவனின் குடியும் தன்னுடைய குடியும் ஒத்தது என்பதையும், தலைவனின் பண்புகளையும், அவனது சுற்றத்தாரின் இயல்புகளையும் ஒப்பிட்டு நினைக்காது, நாங்கள் தனியாக, துணிந்து களவு ஒழுக்கத்தின் காவலை உடைய, அரிய செயலை நடத்தினோம்.  நீ நன்றாக அறிவதற்கு, அது நடந்த வண்ணம் நான் கூறுகின்றேன்.  சினம் கொள்ளாதே!

குறிப்பு:  பிறப்பே குடிமை ஆண்மை ஆண்டொடு உருவு நிறுத்த காம வாயில் நிறையே அருளே உணர்வொடு திரு என முறையுறக் கிளந்த ஒப்பினது வகையே (தொல்காப்பியம், மெய்ப்பாட்டியல் 25).  சின் – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம், சொல்லதிகாரம்.  இடையியல் 26, சின் என்பது இசின் என்பதன் முதற்குறை – ச. பாலசுந்தரம் உரை), அவற்றுள், இகுமும் சின்னும் ஏனை இடத்தொடும் தகு நிலை உடைய என்மனார் புலவர் (தொல்காப்பியம், இடையியல் 27).  எமியேம் (32) –  C. ஜெகந்நாதாசாரியர் உரை – எமியேம் என்று தோழி தன்னையும் உளப்படுத்திக்கொண்டது தானும் புணர்ச்சிக்குப்பின் உடம்படுதலை நோக்கி.  நனி – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3).

சொற்பொருள்: கொடுப்பின் – மகளை கொடுக்குமிடத்தில், நன்கு உடைமையும் – எல்லாம் நன்றாக முடியும் என்பதையும், குடி நிரல் உடைமையும் – தலைவனின் குடியும் தன்னுடைய குடியும் ஒத்தது என்பதையும் (நிரல் – ஒத்த தன்மை), வண்ணமும் – பண்புகளும், துணையும் – அவனது சுற்றத்தாரும், பொரீஇ – ஒப்பிட்டு (அளபெடை), எண்ணாது – நினைக்காது, எமியேம் – நாங்கள் தனியாக, துணிந்த ஏமம் சால் – துணிந்த காவலுடைய, அரு வினை – அரிய செயல், நிகழ்ந்த வண்ணம் – நடந்த வண்ணம், நீ நனி உணர – நீ நன்றாக அறிய, செப்பல் ஆன்றிசின் – உனக்கு நான் கூறுகின்றேன், சினவாதீமோ – சினம் கொள்ளாதே (ஈயும் ஓவும் முன்னிலைக்கண் வந்த அசைகள்)

தலைவனோடு தலைவிக்கு ஏற்பட்ட தொடர்பின் தொடக்கம்
தினைப்புனம் காவல்

“நெல் கொள் நெடு வெதிர்க்கு அணந்த யானை   35
முத்து ஆர் மருப்பின் இறங்கு கை கடுப்ப,
துய்த்தலை வாங்கிய புனிறு தீர் பெருங்குரல்,
நல் கோள் சிறு தினைப் படு புள் ஓப்பி
எல் பட வருதியர்” என நீ விடுத்தலின், (35-39)

பொருளுரை:  “விதையை உடைய மூங்கிலைத் தின்பதற்கு மேல் நோக்கி நின்ற யானை, தன்னுடைய முத்துக்கள் நிறைந்த தந்தத்தில் இறக்கி வைத்த தும்பிக்கையைப் போல, பஞ்சை ஒத்த மேல் பகுதி உடைய, வளைந்த, முதிர்ந்த, பெரிய கதிர்களை நன்றாகத் தன்னிடம் கொண்ட சிறு தினையைத் தாக்கும் பறவைகளை விரட்டி விட்டு, கதிரவன் மறையும்பொழுதில் திரும்பி வருவீர்களாக”, எனக் கூறி நீ அனுப்பியதால்,

குறிப்பு:  யானையின் தந்தத்தில் முத்து:  அகநானூறு 282 – வால் மருப்பு ஒடிய உக்க தெண் நீர் ஆலி கடுக்கும் முத்தமொடு, நற்றிணை 202 – புலி பொரச் சிவந்த புலால் அம் செங் கோட்டு ஒலி பல் முத்தம், புறநானூறு 161 – முத்துப்படு முற்றிய உயர் மருப்பு ஏந்திய வரை மருள் நோன் பகடு, புறநானூறு 170 –  வெண்கோடு பயந்த ஒளி திகழ் முத்தம், பதிற்றுப்பத்து 32 – முத்துடை மருப்பின், கலித்தொகை 40 – முத்து ஆர் மருப்பின், திருமுருகாற்றுப்படை 304 – பெருங்களிற்று முத்துடை வான்கோடு தழீஇ,  குறிஞ்சிப்பாட்டு 36 – முத்து ஆர் மருப்பின், மலைபடுகடாம் 518 – முத்துடை மருப்பின்.  புள் (38) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – ஈண்டுக் கிளி என்க.  புனிறு – புனிறு என் கிளவி ஈன்றணிமைப் பொருட்டே (தொல்காப்பியம், உரியியல் 79)

சொற்பொருள்: நெல் கொள் – விதையை உடைய, நெடு வெதிர்க்கு – உயர்ந்த மூங்கிலைத் தின்பதற்கு, அணந்த யானை – மேல் நோக்கி நின்ற யானை, முத்து ஆர் மருப்பின் – முத்துக்கள் நிறைந்த தந்தத்தில், இறங்கு கை கடுப்ப – இறக்கி வைத்த தும்பிக்கையைப் போல, துய்த்தலை – பஞ்சை ஒத்த மேல் பகுதி, வாங்கிய – வளைந்த, புனிறு தீர் – ஈன்ற அணிமை தீர்ந்த, முதிர்ந்த, பெருங்குரல் – பெரிய கொத்துக்கள், பெரிய கதிர்கள், நல் கோள் – நன்றாகத் தன்னிடம் கொண்ட, சிறு தினை – சிறு தினை, படு புள் – தாக்கும் பறவைகள், ஓப்பி – விரட்டி விட்டு, எல் பட – கதிரவன் மறையும் பொழுதில், வருதியர் என – திரும்பி வருவீர்களாக என்று, நீ விடுத்தலின் – நீ அனுப்பியதால்

பறவை ஓட்டும் பாவையர்

கலி கெழு மர மிசைச் சேணோன் இழைத்த   40
புலி அஞ்சு இதணம் ஏறி, அவண,
சாரல் சூரல் தகை பெற வலந்த
தழலும், தட்டையும், குளிரும், பிறவும்,
கிளி கடி மரபின ஊழ் ஊழ் வாங்கி,
உரவுக் கதிர் தெறூஉம் உருப்பு அவிர் அமயத்து, (40-45)

பொருளுரை:  ஆரவாரம் மிகுந்த மரத்தின் உச்சியில், தினைப் புனத்தின் காவலாளி, புலியின் மேல் கொண்ட அச்சத்தினால் செய்த பரணில் ஏறி, அங்கு மலைச் சரிவில் உள்ள பிரம்பினால் அழகாகப் பின்னிய தழல் என்ற கருவியையும், தட்டை என்ற கருவியையும், குளிர் என்ற கருவியையும், பிறவற்றையும், கிளியை ஓட்டும் மரபினை உடையவற்றை, முறைப்படி முறை முறையாகக் கையில் கொண்டு, ஞாயிற்றின் மிகுந்த கதிர்கள் சுடும் வெப்பத்துடன் அமைந்த ஒளியுடைய வேளையில்,

குறிப்பு:  புலி அஞ்சு இதணம் (41) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – புலியை அஞ்சி உறைதற்குரிய இதணம் என்றும், புலி அஞ்சுவதற்குக் காரணமான இதணம் என்றும், இரு வேற்றுமைப் பொருளிலும் கொள்ளலாம், கலிகெழு (40) – பயன்படு பழுமரம் என்றவாறு.  உணவினை நாடிவரும் பல்வேறு பறவைகளின் ஆரவாரமும் பழுமரத்திற்கல்லது இல்லையாகலின் என்க, தட்டை (43) – மூங்கிலை குறுக்கே நறுக்கிப் பலவாகப் பிளந்து ஓசையுண்டாகும்படி ஒன்றிலே தட்டும் கருவி, தழல் (43) – கையால் சுழற்றினால் ஓசை ஏற்படுத்தும் கருவி, குளிர் (43) – மூங்கிலை வீணை போல் கட்டி ஓசை எழுப்பும் கருவி. கலி – கம்பலை சும்மை கலியே அழுங்கல் என்று இவை நான்கும் அரவப் பொருள (தொல்காப்பியம், உரியியல் 53). சேணோன் – உ. வே. சாமிநாதையர் உரை (குறுந்தொகை 150) – பரண் மீது இருக்கும் குறவன். ஒப்புமை – குறுந்தொகை 223 – தழலும் தட்டையும்.  

சொற்பொருள்: கலி கெழு – ஆரவாரம் மிகுந்த, மர மிசை சேணோன் இழைத்த – மரத்தின் உச்சியில் புனத்தில் பரணில் இருக்கும் காவலாளி செய்த, புலி அஞ்சு இதணம் – புலியை அஞ்சுவதற்கு காரணமான பரண், புலி அஞ்சும் பரண், ஏறி – ஏறி, அவண – அங்கு, சாரல் – மலைச் சரிவு, சூரல் – பிரம்பு, தகை பெற – அழகாக, வலந்த – பின்னிய, தழலும் – தழல் என்ற கருவியையும், தட்டையும் – தட்டை என்ற கருவியையும், குளிரும் – குளிர் என்ற கருவியையும், பிறவும் – பிறவற்றையும், கிளி கடி மரபின – கிளியை ஓட்டும் மரபினை உடையவற்றை (மரபின – பலவின்பாற் பெயர்), ஊழ் ஊழ் – முறை முறையாக, வாங்கி – கையில் கொண்டு, உரவுக் கதிர் – ஞாயிற்றின் மிகுந்த கதிர்கள், தெறூஉம் – சுடும் (அளபெடை), உருப்பு – வெப்பம், அவிர் அமயத்து – ஒளியுடைய வேளையில்

மழை பொழிந்த நண்பகல் நேரம்

விசும்பு ஆடு பறவை வீழ் பதிப் படர,
நிறை இரும் பெளவம் குறைபட முகந்து கொண்டு
அகல் இரு வானத்து வீசு வளி கலாவலின்,
முரசு அதிர்ந்தன்ன இன் குரல் ஏற்றொடு,
நிரை செலல் நிவப்பின் கொண்மூ மயங்கி,   50
இன்னிசை முரசின் சுடர்ப் பூண் சேஎய்
ஒன்னார்க்கு ஏந்திய இலங்கு இலை எஃகின்
மின் மயங்கு கருவிய கல் மிசைப் பொழிந்தென, (46-53)

பொருளுரை:  வானத்தில் பறக்கும் பறவைகள் தாங்கள் விரும்பும் கூடுகளுக்குச் செல்லுமாறு, நீர் நிறைந்த பெரிய கடல் குறையுமாறு, முகில் கூட்டங்கள் நீரை அள்ளிக் கொண்டு, மிக அகன்ற வானத்தில் வீசுகின்ற காற்றுடன் கலப்பதால், முரசு அதிர்ந்தாற்போன்ற இனிய குரலை உடைய இடியுடன் கூடி வரிசையாக மேலே சென்று கலங்கி, இனிய இசையை உடைய முரசினையும் ஒளியுடைய அணிகலன்களையும் உடைய முருகன், பகைவர்களைக் கொல்லும்பொருட்டு, கையில் கொண்ட விளங்கும் இலையையுடைய வேல் ஆயுதத்தைப் போன்று உள்ள மின்னலுடனும் இடியுடனும் கூடிய தொகுதி உடையனவாக, மலை மீது மழையைப் பொழிந்ததால்,

குறிப்பு:  கருவிய (53) – இடி மின்னல் முதலிய தொகுதிகளையுடைய முகில்கள்.  கருவி – கருவி தொகுதி (தொல்காப்பியம், உரியியல் 50).

சொற்பொருள்: விசும்பு ஆடு பறவை – வானத்தில் பறக்கும் பறவைகள், வீழ் பதிப் படர – தாங்கள் விரும்பும் கூடுகளுக்குச் செல்ல, நிறை இரும் பெளவம் – நிறைந்த பெரிய கடல், குறைபட முகந்து கொண்டு – குறையுமாறு நீரை அள்ளிக் கொண்டு, அகல் இரு வானத்து – மிக அகன்ற வானத்தில், அகன்ற கரிய வானத்தில், வீசு வளி – வீசுகின்ற காற்று, கலாவலின் – கலப்பதால், முரசு அதிர்ந்தன்ன – முரசு அதிர்ந்தாற்போல், இன் குரல் – இனிய குரல், ஏற்றொடு – இடியுடன், நிரை செலல் – வரிசையாக செல்லல் (செலல் – இடைக்குறை), நிவப்பின் – மேலே, கொண்மூ – முகில், மயங்கி – கலங்கி, இன்னிசை முரசின் – இனிய இசையை உடைய முரசினையும், சுடர்ப்பூண் – ஒளியுடைய அணிகலன்கள், சேஎய் – முருகன் (அளபெடை), ஒன்னார்க்கு – பகைவர்க்கு, ஏந்திய – கையில் கொண்ட, இலங்கு இலை எஃகின் – விளங்கும் இலையையுடைய வேலைப் போன்று (எஃகின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), மின் மயங்கு கருவிய – மின்னலுடனும் இடியுடனும் கூடிய தொகுதியுடையதாக, கல் மிசைப் பொழிந்தென – மலை மீது பொழிந்ததால்

அருவியில் ஆடிய அரிவையர்

அண்ணல் நெடுங்கோட்டு இழிதரு, தெள் நீர்
அவிர் துகில் புரையும் அவ்வெள் அருவி,   55
தவிர்வு இல் வேட்கையேம் தண்டாது ஆடிப்
பளிங்கு சொரிவு அன்ன பாய் சுனை குடைவுழி,
நளிபடு சிலம்பில் பாயம் பாடிப்
பொன் எறி மணியின் சிறுபுறம் தாழ்ந்த எம்
பின்னிருங் கூந்தல் பிழிவனம் துவரி,   60
உள்ளகம் சிவந்த கண்ணேம். (54-61)

பொருளுரை:  தலைவனின் நெடிய மலை உச்சியிலிருந்து வீழும் தெளிந்த நீரையுடைய, விளங்குகின்ற, துணியைப் போன்ற அழகிய வெள்ளை அருவியில், நீங்குதல் இல்லாத விருப்பமுடையவர்களாக ஒழிவின்றி விளையாடி, பளிங்கினைக் கரைத்து சொரிந்தாற்போன்ற அகன்ற சுனையில் குடைந்து விளையாடும் இடத்தே, அடர்ந்த மலையில், எங்கள் மனதுக்கு ஏற்றாற்போல் பாடி, பொன்னில் பதிக்கப்பட்ட நீலமணியின் நிறத்தையொத்த, எங்கள் சிறிய முதுகில் தாழ்ந்து கிடந்த பின்னப்பட்ட கரிய கூந்தலைப் பிழிந்து உலர்த்தினோம்.  உள்ளிடம் சிவந்த கண்களுடையவர்களாக ஆனோம்.

குறிப்பு:  பாயம் (58) – குறிஞ்சிப்பாட்டு 342 – பொ. வே. சோமசுந்தரனார் உரை – மனவிருப்பம், பாசம் என்னும் வடமொழி பாயம் என்று நின்றது.  சிலம்பு – பொ. வே. சோமசுந்தரனார் உரை – ஓசை என்னும் பொருட்டாதலின் எதிரொலி செய்யும் மலையடுக்கங்களுக்கு ஆகுபெயர் என்க.  நளி – நளி என் கிளவி செறிவும் ஆகும் (தொல்காப்பியம், உரியியல் 27). நீலமணிபோல் பெண்ணின் கூந்தல் – அகநானூறு 8 – மணி ஏர் ஐம்பால், நற்றிணை 10 – மணியின் தாழ்ந்த நல் நெடுங்கூந்தல், நற்றிணை 133 – மணி ஏர் ஐம்பால், 214 – மணி இருங்கதுப்பு, 245 – மணி மருள் ஐம்பால், 337 – மணி மருள் ஐம்பால், 366 – மணி ஏர் ஐம்பால், 374 – வீழ் மா மணிய புனை நெடுங்கூந்தல், கலித்தொகை 22 – மணி ஒளி விட்டன்ன ஐவகை, கலித்தொகை 77 – மாசு அற மண்ணுற்ற மணி ஏசும் இருங்கூந்தல், பரிபாடல் 10, குறிஞ்சிப்பாட்டு 69 – பொன் எறி மணியின் சிறுபுறம் தாழ்ந்த எம் பின்னிருங் கூந்தல்.

சொற்பொருள்: அண்ணல் நெடுங்கோட்டு – தலைவனின் நெடிய மலை உச்சியிலிருந்து, இழிதரு – விழுகின்ற, தெள் நீர் – தெளிந்த நீர், அவிர் துகில் – விளங்குகின்ற துணி, ஒளியுடைய துணி, புரையும் – போல, அவ்வெள் அருவி – அழகிய வெள்ளை அருவி, தவிர்வு இல் – நீங்குதல் இல்லாத, வேட்கையேம் – விருப்பமுடையோமாய், தண்டாது – ஒழிவின்றி, குறையாது, ஓய்ந்திருக்காது, ஆடி – விளையாடி, பளிங்கு சொரிவு அன்ன – பளிங்கினைக் கரைத்து சொரிந்தாற்போல், பாய் சுனை – அகன்ற சுனை, அகன்ற குளம், குடைவுழி – குடைந்து விளையாடும் இடத்தே (குடைவுழி – குடைவு + உழி, உழி – ஏழாம் வேற்றுமை உருபு), நளிபடு சிலம்பில் – அடர்ந்த மலையில், பாயம் பாடி – மனதுக்கு ஏற்றாற்போல் பாடி, பொன் எறி மணியின் – பொன்னில் பதிக்கப்பட்ட நீலமணியின் நிறத்தையொத்த (மணியின் – இன் ஒப்புப்பொருளில் வந்தது, ஐந்தாம் வேற்றுமை உருபு), சிறுபுறம் தாழ்ந்த – சிறிய முதுகில் தாழ்ந்து கிடந்த, எம் பின் இருங்கூந்தல் – எங்களுடைய பின்னப்பட்ட கரிய கூந்தல், பிழிவனம் துவரி – நாங்கள் பிழிந்து உலர்த்தினோம் (பிழிவனம் என்ற முற்றெச்சமாய் நின்றது), உள் அகம் சிவந்த கண்ணேம் – உள்ளிடம் சிவந்த கண்களுடையவர்களாக ஆனோம் (உள் அகம் – இருபெயரொட்டு பண்புத்தொகை)

பாறையில் மலர் குவித்த பாவையர்

———– ———— ———– வள் இதழ்
ஒண் செங்காந்தள், ஆம்பல், அனிச்சம்,
தண் கயக் குவளை, குறிஞ்சி, வெட்சி,
செங்கொடுவேரி, தேமா, மணிச்சிகை,
உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ், கூவிளம்,  65
எரி புரை எறுழம், சுள்ளி, கூவிரம்,
வடவனம், வாகை, வான் பூங் குடசம்,
எருவை, செருவிளை, மணிப்பூங் கருவிளை,
பயினி, வானி, பல்லிணர்க் குரவம்,
பசும்பிடி, வகுளம், பல்லிணர்க் காயா,   70
விரி மலர் ஆவிரை, வேரல், சூரல்,
குரீஇப் பூளை, குறுநறுங்கண்ணி,
குருகிலை, மருதம், விரிபூங் கோங்கம்,
போங்கம், திலகம், தேங்கமழ் பாதிரி,
செருந்தி, அதிரல், பெருந்தண் சண்பகம்,   75
கரந்தை, குளவி, கடிகமழ் கலிமாத்,
தில்லை, பாலை, கல் இவர் முல்லை,
குல்லை, பிடவம், சிறுமாரோடம்,
வாழை, வள்ளி, நீள் நறு நெய்தல்,
தாழை, தளவம், முள் தாள் தாமரை   80
ஞாழல், மௌவல், நறுந்தண் கொகுடி,
சேடல், செம்மல், சிறுசெங்குரலி,
கோடல், கைதை, கொங்கு முதிர் நறுவழை,
காஞ்சி, மணிக்குலைக் கள் கமழ் நெய்தல்,
பாங்கர், மராஅம், பல்பூந் தணக்கம்,   85
ஈங்கை, இலவம், தூங்கு இணர்க் கொன்றை,
அடும்பு, அமர் ஆத்தி, நெடுங்கொடி அவரை,
பகன்றை, பலாசம், பல்பூம் பிண்டி,
வஞ்சி, பித்திகம், சிந்துவாரம்,
தும்பை, துழாஅய் சுடர்ப்பூந் தோன்றி,   90
நந்தி, நறவம், நறும் புன்னாகம்,
பாரம், பீரம், பைங்குருக்கத்தி,
ஆரம், காழ்வை, கடிஇரும் புன்னை,
நரந்தம், நாகம், நள்ளிருள்நாறி,
மாஇருங் குருந்தும், வேங்கையும் பிறவும்,   95
அரக்கு விரித்தன்ன பரு ஏர் அம் புழகுடன்
மால் அங்கு உடைய மலிவனம் மறுகி,
வான்கண் கழீஇய அகல் அறைக் குவைஇப், (61-98)

பொருளுரை:  அரக்கை விரித்தாற்போல் உள்ள பருத்த அழகிய மலை எருக்கம்பூவுடன், பிற மலர்களின் அழகிலும் மயங்கியதால், விருப்பத்துடன் திரிந்து அவற்றைப் பறித்து, மழை பெய்து கழுவிய அகன்ற பாறையில் குவித்தோம்.  இந்த மலர்கள் – பெரிய இதழுடைய ஒளியுடைய செங்காந்தள், ஆம்பல், அனிச்சம், குளிர்ந்த குளத்தின் குவளை, குறிஞ்சி, வெட்சி, செங்கொடுவேரி, தேமா, மணிச்சிகை, தனக்கு உரித்தாக நாறும் விரிந்த கொத்துக்களையுடைய உந்தூழ், கூவிளம், தீயைப் போன்ற எறுழம், சுள்ளி, கூவிரம், வடவனம், வாகை, வான் பூங் குடசம், எருவை, செருவிளை, மணிப்பூங் கருவிளை, பயினி, வானி, பல கொத்துக்களையுடைய குரவம், பசும்பிடி, வகுளம், பல கொத்துக்களையுடைய காயா, விரிந்த மலராகிய ஆவிரை, வேரல், சூரல், குரீஇப் பூளை, குறுநறுங்கண்ணி, குருகிலை, மருதம், விரிபூங் கோங்கம், போங்கம், திலகம், தேனின் மணத்தையுடைய பாதிரி, செருந்தி, அதிரல், பெரிதும் குளிர்ச்சியுடைய சண்பகம், கரந்தை, குளவி, நறுமணம் கமழும் தழைத்த மா, தில்லை, பாலை, பாறைகளில் படர்ந்த முல்லை, குல்லை, பிடவம், சிறுமாரோடம், வாழை, வள்ளி, நீண்ட நறுமணமான நெய்தல், தாழை, தளவம், முள்ளுடைய காம்பையுடைய தாமரை, ஞாழல், மௌவல், நறுமணமான குளிர்ந்த கொகுடி, சேடல், செம்மல், சிறுசெங்குரலி, கோடல், கைதை, கொங்கு முதிர் நறுவழை, காஞ்சி, மணிக்குலைக் கள் கமழ் நெய்தல், பாங்கர், மராஅம், பல பூக்களையுடைய தணக்கம், ஈங்கை, இலவம், தொங்கும் கொத்துக்களையுடைய கொன்றை, அடும்பு, அமர் ஆத்தி, நெடுங்கொடி அவரை, பகன்றை, பலாசம், பல பூக்களையுடைய பிண்டி, வஞ்சி, பித்திகம், சிந்து வாரம், தும்பை, துழாஅய், சுடர்ப்பூந் தோன்றி, நந்தி, நறவம், நறும் புன்னாகம், பாரம், பீரம், பைங்குருக்கத்தி, ஆரம், காழ்வை, கடிஇரும் புன்னை, நரந்தம், நாகம், நள்ளிருள்நாறி, கருமையான பெரிய குருந்தும், வேங்கையும் பிறவும்,

சொற்பொருள்: 1. செங்காந்தள் – Red malabar Glory Lily, Gloriosa Superba, 2. ஆம்பல் – White Water lily, Nymphaea lotus, அல்லி 3. அனிச்சம் – possibly Anaallis arvensis Linn, 4. குவளை – Nymphaea stellate/Nymphaea odorata, Blue Nelumbo, 5. குறிஞ்சி – Square branched conehead, Strobilanthes kunthiana, 6. வெட்சி – Scarlet Ixora, Ixora Coccinea, 7. செங்கொடுவேரி – Rosy-flowered leadwort, Plumbago rosea, 8. தேமா – மாமரம், Mango tree, Mangifera indica, 9. மணிச்சிகை – Ipomoea sepiaria, Koenig ex Roxb, 10. உந்தூழ் – பெருமூங்கில், Bambusa arundinaca, 11. கூவிளம் – வில்வம் மரம், Bael, Aegle marmelos, 12. எறுழம்பூ – Calycopteris floribunda, 13. சுள்ளி – Barleria prionitis,  14. கூவிரம் – Crateva religiosa, 15. வடவனம் – Ocimum sanctum/Ocimum gratissimum/Ocimum tenuiflorum, holy basil, 16. வாகை – மரம், Albyzzia Lebbeck, 17. குடசம் – Holarrhena antidysentrica,  18. எருவை – நாணல், Typha angustata, reed, 19. செறுவிளை – White-flowered mussel-shell creeper, Clitoria ternatea-albiflora, 20. கருவிளம், Mussell-shell creeper, Clitoria ternatea, 21. பயினி – Vateria indica, hill country tree, 22. வானி – Euonymus dichotomous, 23. குரவம் – Webera corymbosa, 24. பசும்பிடி – பச்சிலை, மரம், Mysore gamboge, Garcinia xanthochymus, 25. வகுளம் – மகிழ் மரம், Pointed-leaved ape-flower, Mimusops elengi, 26. காயா – காசாமரம், Ironwood tree, Memecylon edule, 27. ஆவிரை – செடி, Tanner’s senna, Cassia auriculata, 28. வேரல் – சிறுமூங்கில்- Swollen node-ringed semi-solid medium bamboo, Arundinaria wightiana Nees, 29. சூரல் – Calamus rotang – R. Panchavarnam, சூரை செடி –  Oblique-leaved jujube or small-fruited jujube, Zizyphus oenoplia, P.L. Sami and Palaniappan Vairam Parthasarathy, 30. குரீஇப்பூளை, சிறுப் பூளை – களை, A common weed, Aerua lanata, 31. குறுநறுங்கண்ணி – குன்றி, குன்னி முத்து, Crab’s eye, Abrus precatorius, 32. குருகிலை – Butea frondosa/ficus virens, 33. மருதம் – மருதமரம், நீர்மருது, Black winged myrobalan, கருமருது, Terminalia elliptica/Terminalia arjuna, 34. கோங்கம் – இலவு மரம், False tragacanth, Cochlospermum gossypium, 35. போங்கம் – மரம், Osmosia travancorica, 36. திலகம் – Adenanthera pavonina, 37. பாதிரி – மரம், yellow flower trumpet tree, Stereospermum chelonoides, 38. செருந்தி – மரம், Panicled golden-blossomed pear tree, Ochna squarrosa, 39. அதிரல் – Derris Scandens மல்லிகைவகை, Wild jasmine, 40. சண்பகம் – மரம், champak, Michelia champaca, 41. கரந்தை – Spaeranthus indicus, 42. குளவி – பன்னீர் பூ, மரமல்லிகை, Millingtonia hortensis, 43. மா – மாமரம், Mango tree, Mangifera indica, 44. தில்லை – மரம், Excoecaria agallocha, Blinding tree, 45. பாலை – Wrightia tinctoria/Mimusops kauki, 46. முல்லை – Jasminum sambac, 47. கஞ்சங்குல்லை – Cannabis sativa, 48. பிடவம் – Bedaly emetic-nut, Randia malabarica, 49. சிறுமோரோடம், செங்கருங்காலி, Acacia sundra/Acacia catechu, 50. வாழை – plantain, Musa paradisiaca, 51. வள்ளி – கிழங்கு கொடி, Dioscorea alata/Convolvulus batatas, 52. நெய்தல் – Nymphaea Stellata, Blue waterlily, 53. தாழை – Coconut tree, Cocos nucifera, 54. தளவம் – மஞ்சள் முல்லை, Jasminum elongatum/Jasminum polyanthum, 55. தாமரை – Lotus, Nelumbium speciosum, 56. ஞாழல் – University of Madras Lexicon – புலிநகக்கொன்றை, Cassia sophera, Tigerclaw tree, Heritiera Littoralis/ Caesalpinia, 57. மௌவல் – Jasminum officinale,  58. கொகுடி – Jasminun pubescens, முல்லைக்கொடி வகை, 59. சேடல் – Nyctanthes arbor-tristis, Night-flowering jasmine, பவளமல்லிகை,  60. செம்மல் – சாதிப்பூ, Jasminum grandiflorum, முல்லைப்பூ வகை, 61. சிறுசெங்குரலி – Trapa bispinosa Roxb, 62. கோடல் – வெண் காந்தள், Gloriosa superba, 63. கைதை – தாழ், தாழம்பூ, Pandanus odoratissimus, 64. வழை – சுரபுன்னை, Long-leaved two-sepalled gamboge, Ochrocarpus longifolius, 65. காஞ்சி – பூவரச மரம், portia tree, Thespesia populnea, 66. கருங்குவளை – மணிக் குலை, குவளை வகை, Blue Nelumbo, Nymphaea Stellata/Nymphaea rubra, 67. பாங்கர் – Tooth-brush tree, Salvadora persica; ஓமை, Sandpaper-tree, Dillenia indica, உவாமரம், 68. மரவம் – வெண்கடம்பு, Seaside Indian oak, Barringtonia racemosa, 69. தணக்கம் – நுணா என்னுங் கொடி, Small ach root, Morinda umbellate – University of Madras Lexicon, 70. ஈங்கை – ஈங்கு செடி, Mimosa rubicaulis, 71. இலவம் – மரம், Red-flowered silk-cotton tree, Bombax malabaricum, 72. கொன்றை – சரக்கொன்றை, Indian laburnum, Cassia fistula, 73, அடும்பு  – கொடி, Ipomaea pes caprae, 74. ஆத்தி – மரம், Common mountain ebony, Bauhinia racemosa/Bauhinia tomentosa, 75. அவரை – கொடி, Field-bean, Dolichos lablab, 76. பகன்றை – சிவதை கொடி, Indian jalap, Operculina turpethum, 77. பலாசம் – புரசமரம், Palas-tree, Butea frondosa, 78. பிண்டி – Asōka tree, Saraca indica, 79. வஞ்சி – Salis tetrosperma, இலுப்பை மரம், Bassia malabarica, 80. பித்திகம் – பித்திகை, Jasminum augustifolium, 81. சிந்துவாரம் – கருநொச்சி, Three-leaved Chaste tree, Vitex negundo/Vitex trifolia, 82. தும்பை – செடி, White dead nettle, Leucas, Bitter toombay, Leucas aspera, 83. துழாய், tulasī, Sacred basil, Ocimum sanctum, 84. தோன்றி – Gloriosa superba, Red Malabar glory lily, செங்காந்தள், 85. நந்தி – நந்தியாவட்டம், East Indian rosebay, Tabernaemontana coronaria, 86. நறவம் – நறுமணக்கொடி, Luvunga scandens, 87. புன்னாகம் – சிறு மரம், Callophylum elatum, 88. பாரம் – பருத்தி செடி, Indian cotton-plant, Gossypium herbaceum, 89. பீரம் – பீர்க்கு, Luffa acutangula, 90. குருக்கத்தி – மாதவிக்கொடி, Hiptage madablota, 91. ஆரம் – சந்தனம், Sandalwood tree, Santalum album, 92. காழ்வை – அகில், Eagle-wood, Aquilaria agallocha, 93. புன்னை – மரம், Mast-wood, Calophyllum inophyllum, 94. நரந்தம் – நாரத்தை, Bitter orange or Cymbopogon flexuosus – grass, 95. நாகப்பூ – Iron wood of Ceylon, Mesua ferrea, 96. நள்ளிருணாறி – இருவாட்சி, big jasmine variety, Jasminum sambac, 97. குருந்தம் – புனவெலுமிச்சை, wild lime, Atlantia monophylla, wild orange, citrus indica, 98. வேங்கை – East Indian kino tree, Pterocarpus marsupium, 99. புழகு – Calotropis gigantea, அரக்கு விரித்தன்ன – அரக்கை விரித்தாற்போல், பரு ஏர் அம் புழகுடன் – பருத்த அழகிய மலை எருக்கம்பூவுடன், மால் அங்கு உடைய – நாங்கள் மயங்கினோம், மலிவனம் – அவா மிகுந்து, மறுகி – திரிந்து (பறித்து), வான்கண் கழீஇய – மழை பெய்து கழுவிய (கழீஇய – அளபெடை), அகல் அறை – அகன்ற பாறை, குவைஇ – குவித்து (அளபெடை),

மர நிழலில் தங்கிய மங்கையர்

புள்ளார் இயத்த விலங்கு மலைச் சிலம்பின்
வள் உயிர் தெள் விளி இடை இடைப் பயிற்றிக்   100
கிள்ளை ஓப்பியும், கிளை இதழ் பறியாப்
பை விரி அல்குல் கொய் தழை தைஇப்
பல் வேறு உருவின் வனப்பு அமை கோதை எம்
மெல் இரு முச்சிக் கவின் பெறக் கட்டி,
எரி அவிர் உருவின் அம் குழைச் செயலைத்   105
தாது படு தண்ணிழல் இருந்தனம் ஆக, (99-106)

பொருளுரை:  பறவைகள் ஒலியாகிய இசைக்கருவிகளை உடைய, குறுக்கிட்டுக் கிடக்கும் மலைச் சரிவில், பெரிய ஒலியுடன் தெளிந்த சொற்களை இடையிடையே கூறி, கிளிகளை விரட்டியும், புற இதழ்களைக் களைந்து, பாம்பின் படத்தைப் போன்று படர்ந்த அல்குலில், கொய்த தழையினால் செய்த ஆடையைக் கட்டி, பல்வேறு உருவங்களில் அழகான மலர்மாலைகளை எங்களுடைய மெல்லிய கரிய கொண்டையில் அழகாகக் கட்டி, நெருப்பைப் போல உள்ள நிறத்தையுடைய அழகிய தளிரையுடைய அசோக மர மலர்த் தாது விழுகின்ற, குளிர்ச்சியான நிழலில் இருந்தோம்.

குறிப்பு:  ஒப்புமை – கலித்தொகை 125 – தட அரவு அல்குல், நற்றிணை 366 – அரவுக் கிளர்ந்தன்ன விரவுறு பல் காழ் வீடுறு நுண் துகில் ஊடு வந்து இமைக்கும் திருந்து இழை அல்குல்.  பை (102) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – பாம்பின் படம்.  இஃது அல்குலுக்கு உவமை.  பறியா – பறித்து என்பது பொருள்.  செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம்.  எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது.

சொற்பொருள்: புள் ஆர் இயத்த – பறவைகள் ஒலியாகிய இசைக்கருவிகளை உடைய, விலங்கு மலை – குறுக்கிட்டுக் கிடக்கும் மலை, சிலம்பின் – மலையின், வள் உயிர் – பெரிய ஒலி, தெள் விளி – தெளிந்த சொற்கள், இடை இடைப் பயிற்றி – இடையிடையே கூறி, கிள்ளை ஓப்பியும் – கிளிகளை விரட்டியும், கிளை இதழ் பறியா – புற இதழ்களைக் களைந்து, பைவிரி அல்குல் – பாம்பின் படத்தைப் போன்று படர்ந்த அல்குல், கொய் தழை – கொய்த தழை, தைஇ – கட்டி, பல் வேறு உருவின் – பல்வேறு உருவங்களில், வனப்பு அமை கோதை – அழகான மலர்மாலை, எம் மெல் இரு முச்சி – எங்களுடைய மெல்லிய கரிய கொண்டையில், கவின் பெறக் கட்டி – அழகாக கட்டி, எரி அவிர் உருவின் – நெருப்பைப் போல உள்ள நிறத்தையுடைய, அம் குழை – அழகிய தளிர், செயலை – அசோக மரம், தாது – மலரின் தாது, படு – விழுகின்ற,  தண்ணிழல் இருந்தனம் ஆக – குளிர்ச்சியான நிழலில் இருந்தோம்

தலைவனின் எழில்

எண்ணெய் நீவிய சுரி வளர் நறும் காழ்த்
தண் நறும் தகரம் கமழ மண்ணி,
ஈரம் புலர விரல் உளர்ப்பு அவிழா,
காழ் அகில் அம் புகை கொளீஇ, யாழிசை   110
அணி மிகு வரி மிஞிறு ஆர்ப்பத் தேங்கலந்து
மணி நிறம் கொண்ட மா இருங் குஞ்சியின்,
மலையவும், நிலத்தவும், சினையவும், சுனையவும்,
வண்ண வண்ணத்த மலர் ஆய்பு விரைஇய
தண் நறும் தொடையல், வெண் போழ்க் கண்ணி,   115
நலம் பெறு சென்னி நாம் உற மிலைச்சி, (107-116)

பொருளுரை:  அவன் தன்னுடைய எண்ணெய் தடவிய, சுருண்டு வளர்ந்த, கருமை நிறமுடைய, நீலமணியின் நிறத்தைக் கொண்ட பெரிய கருமையான மயிரின்கண், குளிர்ந்த நறுமணமான மயிர்ச்சாந்தினை மணம் கமழப் பூசி, ஈரம் உலர விரலால் கோதி, பிணைப்பை அவிழ்த்து, யாழ் இசையைப் போன்று பாடும், அழகு மிகுந்த தேனீக்கள் அந்த மணத்தை விரும்பி ஆரவாரிக்குமாறு, வைரம் பாய்ந்த (அடர்ந்த மரம்) அகிலின் அழகிய புகையை ஊட்டியிருந்தான். மலையிலிருந்தும், நிலத்திலிருந்தும், மரத்தின் கிளைகளிலிருந்தும், சுனையிலிருந்தும், பல நிறங்களில் மலர்களைத் தேர்ந்து தொடுத்த, குளிர்ச்சியுடைய நறுமணமான மலர் மாலையையும், வெள்ளைப் பனை மடலின் கண்ணியாலும், சிறப்பைப் பெற்ற தலையில் அணிந்து, முருகன் எனக் கண்டோர் அச்சம் உண்டாகுமாறு அவன் தோற்றமளித்தான்,

குறிப்பு:  நாம் – பேம் நாம் உரும் என வரூஉம் கிளவி ஆ முறை மூன்றும் அச்சப் பொருள (தொல்காப்பியம், உரியியல் 69).  அவிழா – அவிழ்த்து என்பது பொருள். செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம்.  எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது.  மிஞிறு (111) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – ஞிமிறு என்றே இப்பெயர்ச்சொல் இலக்கியங்களில் பயில வழங்குவதாம்.  மிஞிறு என்றல் எழுத்துநிலை மாறுதல் என்ப. நீலமணிபோல் பெண்ணின் கூந்தல்:  அகநானூறு 8 – மணி ஏர் ஐம்பால், நற்றிணை 10 – மணியின் தாழ்ந்த நல் நெடுங்கூந்தல், நற்றிணை 133 – மணி ஏர் ஐம்பால், 214 – மணி இருங்கதுப்பு, 245 – மணி மருள் ஐம்பால், 337 – மணி மருள் ஐம்பால், 366 – மணி ஏர் ஐம்பால், 374 – வீழ் மா மணிய புனை நெடுங்கூந்தல், கலித்தொகை 22 – மணி ஒளி விட்டன்ன ஐவகை, கலித்தொகை 77 – மாசு அற மண்ணுற்ற மணி ஏசும் இருங்கூந்தல், பரிபாடல் 10, குறிஞ்சிப்பாட்டு 69 – பொன் எறி மணியின் சிறுபுறம் தாழ்ந்த எம் பின்னிருங் கூந்தல், 112 – மணி நிறம் கொண்ட மா இருங் குஞ்சி.

சொற்பொருள்:  எண்ணெய் நீவிய – எண்ணெய் தடவிய, சுரி வளர் – சுருண்டு வளர்ந்த, நறும் – நறுமணமான, காழ் – கருமை நிறமுடைய, தண் நறும் தகரம் – குளிர்ந்த நறுமணமான மயிர்ச்சாந்து, கமழ – மணம் கமழ, மண்ணி – பூசி, ஈரம் புலர – ஈரம் உலர, விரல் உளர்ப்பு – விரலால் அலைத்து, அவிழா – பிணைப்பை அவிழ்த்து, காழ் அகில் – வைரம் பாய்ந்த (அடர்ந்த) அகில், அம் புகை – அழகிய புகை, கொளீஇ – கொளுத்தி (அளபெடை), யாழ் இசை – யாழ் இசை, அணி மிகு – அழகு மிகுகின்ற, வரி – பாட்டு, மிஞிறு – தேனீ, ஆர்ப்ப – ஒலிக்க, தேம் கலந்து – இனிமை கலந்து (தேம் – தேன் என்றதன் திரிபு), மணி நிறம் கொண்ட – நீலமணியின் நிறத்தைக் கொண்ட, மா இரு குஞ்சியின் – பெரிய கருமையான மயிரின்கண் (குஞ்சி – ஆணின் மயிர்), மலையவும் – மலையிலிருந்தும், நிலத்தவும் – நிலத்திலிருந்தும், சினையவும் – மரத்தின் கிளைகளிலிருந்தும், சுனையவும் – சுனையிலிருந்தும், வண்ண வண்ணத்த மலர் – பல நிறங்களில் மலர்கள், ஆய்பு – தேர்ந்து, விரைஇய – தொடுத்த (அளபெடை), தண் நறும் தொடையல் – குளிர்ச்சியுடைய நறுமணமான மலர் மாலை, வெள் போழ்க் கண்ணி – வெள்ளைப் பனை மடலின் கண்ணி, நலம் பெற – சிறப்பைப் பெற்ற, அழகுடைய, சென்னி – தலை, நாம் உற – அச்சம் உண்டாக, மிலைச்சி – அணிந்து

பைங்கால் பித்திகத்து ஆய் இதழ் அலரி
அம் தொடை ஒரு காழ் வளைஇச் செந்தீ
ஒண் பூம் பிண்டி ஒரு காது செரீஇ,
அம் தளிர்க் குவவு மொய்ம்பு அலைப்பச் சாந்து அருந்தி   120
மைந்து இறை கொண்ட மலர்ந்து ஏந்து அகலத்து,
தொன்று படு நறும் தார் பூணொடு பொலிய,
செம் பொறிக்கு ஏற்ற வீங்கு இறைத் தடக் கையின்
வண்ண வரிவில் ஏந்தி அம்பு தெரிந்து,
நுண் வினைக் கச்சைத் தயக்கு அறக் கட்டி,   125
இயல் அணிப் பொலிந்த ஈகை வான் கழல்
துயல்வருந்தோறும் திருந்தடிக் கலாவ,  (117-127)

பொருளுரை:  பச்சைக் காம்பையுடைய பிச்சி மலரின் அழகிய இதழ்களால் அழகாகத் தொடுத்த ஒரு மாலையைத் தலைமயிரில் சுற்றி, சிவப்பு நெருப்பைப் போன்ற ஒளியுடைய பிண்டி பூக்களை அழகிய தளிருடன் ஒரு காதில் செருகி, அத் தளிர் அவனுடைய திரண்ட தோளில் அலைப்ப (உரச), சாந்தைத் தடவிய வலிமை கொண்ட அகன்ற உயர்ந்த மார்பில் தொன்றுதொட்டு அணியும் மரபாகிய நறுமணமான மாலையை அணிகலன்களுடன் பொலிய அணிந்து, சிவப்புப் பொறிகள் பொருந்திய பெரிய முன்னங்கையை உடைய பெரிய கைகளில், நிறமுடைய வரிந்து கட்டப்பட்ட வில்லை ஏந்தி, அம்பை ஆராய்ந்து பிடித்து, நுண்ணிதாக செய்த ஆடையினை அசையாதபடி கட்டி, இயல்பாக அழகாக பொலிந்த பொன்னால் ஆன உயர்ந்த வீரக்கழல்கள் அவன் திருத்தமாக அடியெடுத்து நடக்கும் பொழுதெல்லாம் உயர்ந்தும் தாழ்ந்தும் அசைய அவன் வந்தான்.

குறிப்பு:  கச்சை (125) – உடலைச் சுற்றி அணியும் ஆடை.

சொற்பொருள்: பைங்கால் பித்திகத்து – பச்சைக் காம்பையுடைய பிச்சி மலரின், ஆய் இதழ் – அழகிய இதழ்கள், நுண்ணிய இதழ்கள், அலரி – மலர்கள், அம் தொடை – அழகாகத் தொடுத்த, ஒரு காழ் – ஒரு சரம், வளைஇ – வளைத்து (அளபெடை), செந்தீ – சிவப்புத் தீ, ஒண் பூம் பிண்டி – ஒளியுடைய பிண்டி மலர்கள், ஒருகாது செரீஇ – ஒரு காதில் செருகி (செரீஇ – அளபெடை), அம் தளிர் – அழகிய தளிர், குவவு மொய்ம்பு அலைப்ப – திரண்ட தோளில் அலைப்ப, சாந்து அருந்தி – சாந்தைத் தடவி, மைந்து இறை கொண்ட – வலிமை கொண்ட, மலர்ந்து ஏந்து அகலத்து – உயர்ந்த மார்பில், தொன்று படு – தொன்று தொட்டு அணியும், நறும் தார் – நறுமணமான மாலை, பூணொடு பொலிய – அணிகலன்களுடன் பொலிய, செம் பொறிக்கு ஏற்ற – சிவப்பு பொறிகளுக்கு ஏற்ப, வீங்கு இறை – பெரிய முன்னங்கை, தடக் கையின் – பெரிய கைகளில், வண்ண வரி வில் ஏந்தி – நிறமுடைய வரிந்து கட்டப்பட்ட வில்லை ஏந்தி, அம்பு தெரிந்து – அம்பை ஆராய்ந்து, நுண் வினைக் கச்சை – நுண்ணிதாக செய்த ஆடையினை, தயக்கு அற – அசைவு இல்லாமல், கட்டி – கட்டி, இயல் அணிப் பொலிந்த – இயல்பாக அழகாக பொலிந்த, ஈகை – பொன், வான் கழல் – உயர்ந்த வீரக்கழல், துயல்வருந்தொறும் – அசையும் தோறும், திருந்தடி- திருத்தமான அடிகள், கலாவ – அசைய, உயர்ந்தும் தாழ்ந்தும் அசைய

வந்தன நாய்கள்

முனை பாழ்படுக்கும் துன்னருந் துப்பின்,
பகை புறங் கண்ட பல்வேல் இளைஞரின்,
உரவுச்சினம் செருக்கித் துன்னுதொறும் வெகுளும்   130
முளை வாள் எயிற்ற வள் உகிர் ஞமலி,
திளையாக் கண்ண வளைகுபு நெரிதர,
நடுங்குவனம், எழுந்து நல்லடி தளர்ந்து யாம்
இடும்பை கூர் மனத்தேம், மருண்டு புலம் படர, (128-134)

பொருளுரை:  பகைப் புலத்தைப் பாழ்படுத்தும், நெருங்க முடியாத வலிமையுடன், பகைவர்கள் புறமுதுகிட்டு ஓடுவதைக் கண்ட பல வேற்படையை உடைய இளைய மறவர்களைப் போன்று மிகுந்த சினத்தால் செருக்குற்று, நெருங்கும்தோறும் சினக்கும், மூங்கில் முளையைப் போன்ற ஒளியுடைய பற்களையும் கூர்மையான நகங்களையும் உடைய அவனுடைய நாய்கள், இமைக்காத கண்களுடன் எங்களைச் சுற்றி வளைத்து நெருங்க, நாங்கள் நடுங்கினோம்.  எழுந்து, அடி தளர்ந்து, நாங்கள் வருத்தம் மிக்க நெஞ்சுடையவர்களாக மருண்டு, இடத்தைவிட்டுச் செல்ல,

குறிப்பு:  கூர் (134) – கூர்ப்பும் கழிவும் உள்ளது சிறக்கும் (தொல்காப்பியம், உரியியல் 18).

சொற்பொருள்:  முனை பாழ்படுக்கும் – பகைப் புலத்தைப் பாழ்படுத்தும், துன் அரும் துப்பின் – நெருங்க முடியாத வலிமையுடன், பகைப் புறம் கண்ட – பகைவர்கள் புறமுதுகிட்டு ஓடுவதைக் கண்ட, பல் வேல் இளைஞரின் – பல வேற்படையை உடைய இளைய மறவர்களைப் போன்று (இளைஞரின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), உரவுச்சினம் செருக்கி – மிகுந்த சினத்தால் செருக்குற்று, துன்னுதொறும் – நெருங்கும்தோறும், வெகுளும் – சினக்கும், முளை வாள் எயிற்ற – மூங்கில் முளையைப் போன்ற ஒளியுடைய பற்களுடன், வள் உகிர் – கூர்மையான நகங்கள், ஞமலி – நாய்கள், திளையாக் கண்ண – இமைக்காத கண்களையுடையனவாய், வளைகுபு – வளைத்து, நெரிதர – நெருங்க, நடுங்குவனம் – நடுங்கினோம், எழுந்து – எழுந்து, நல்லடி தளர்ந்து – அடி தளர்ந்து, யாம் இடும்பை கூர் மனத்தேம் –  நாங்கள் வருத்தம் மிக்க நெஞ்சுடையேமாக, மருண்டு – மருண்டு, புலம் படர – இடத்தைவிட்டு செல்ல

நாய்களை அடக்கிக் கெடுதி வினவிய தலைவன்

மாறு பொருது ஓட்டிய புகல்வின் வேறு புலத்து   135
ஆ காண் விடையின், அணி பெற வந்து, எம்
அலமரல் ஆயிடை வெரூஉதல் அஞ்சி,
மெல்லிய இனிய மேவரக் கிளந்து, எம்
ஐம்பால் ஆய் கவின் ஏத்தி, “ஒண் தொடி
அசைமென் சாயல் அவ்வாங்கு உந்தி   140
மட மதர் மழைக் கண் இளையீர்! இறந்த
கெடுதியும் உடையேன்” என்றனன்.  (135-142)

பொருளுரை:  தனக்குப் பகையாகிய பிற காளைகளை விரட்டிய, செருக்கு மிக்க, வேறு நிலத்துப் பசுக்களைக் கண்ட காளையைப் போல, அழகுடன் வந்து, நாங்கள் மனக் கலக்கம் அடைந்த வேளையில், நாங்கள் அஞ்சுவதைக் கண்டு தானும் அஞ்சி, எங்களிடம் மென்மையான இனிமையான சொற்களைப் பொருந்துமாறு கூறி, எங்களுடைய ஐந்து பிரிவாகிய கூந்தலையும், எங்களின் பலரால் ஆராயப்பட்ட அழகையும் புகழ்ந்து, அதன் பின், “ஒளியுடைய வளையல்களையும், அசையும் மென்மையான சாயலையும், அழகிய வளைந்த கொப்பூழினையும், மடமையுடைய அழகான ஈரக் கண்களையுமுடைய இளையவர்களே!  நான் வேட்டையாடிய விலங்கு தப்பிப் போன நிலையில் உள்ளேன்” என்றான்.

குறிப்பு:  சாயல் – சாயல் மென்மை (தொல்காப்பியம், உரியியல் 29). அலமரல் – அலமரல் தெருமரல் ஆயிரண்டும் சுழற்சி (தொல்காப்பியம், உரியியல் 14).

சொற்பொருள்: மாறு பொருது ஓட்டிய – பகைவரை விரட்டிய, புகல்வின் – செருக்கு மிக்க, வேறு புலத்து – வேறு நிலத்து, ஆ காண் விடையின் – பசுக்களைக் கண்ட காளையைப் போல (விடையின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), அணி பெற வந்து – அழகுடன் வந்து, எம் அலமரல் – எங்கள் மனக் கலக்கம், ஆயிடை – அவ்வேளையில், வெரூஉதல் – நாங்கள் அஞ்சுவதற்கு (அளபெடை), அஞ்சி – அவன் அஞ்சி, மெல்லிய இனிய – மென்மையான இனிமையான, மேவரக் கிளந்து – பொருந்துமாறு கூறி, எம் ஐம்பால் – எங்களுடைய ஐந்து பிரிவாகிய கூந்தல், ஆய் கவின் – ஆராய்ந்த அழகு, நுண்மையான அழகு, ஏத்தி – புகழ்ந்து, ஒண் தொடி – ஒளியுடைய வளையல்கள், அசை – அசைகின்ற, மென் சாயல் – மென்மையான சாயல் (ஒருபொருட் பன்மொழி), அவ்வாங்கு உந்தி – அழகிய வளைந்த கொப்பூழ், மடமதர் மழைக்கண் – மடமையுடைய அழகான ஈர கண்கள், இளையீர் – இளையவர்களே, இறந்த – தப்பிப் போன, கெடுதியும் – நான் வேட்டையாடிய விலங்கு,  உடையேன் –  உடையேனாக உள்ளேன், என்றனன் – என்றான்

தலைவியின் சொல்லை எதிர்பார்த்து நின்றான் தலைவன்

——– ———- ———– அதன் எதிர்
சொல்லேம் ஆதலின், அல்லாந்து கலங்கிக்
“கெடுதியும் விடீஇர் ஆயின் எம்மொடு
சொல்லலும் பழியோ மெல்லியலீர்” என   145
நைவளம் பழுநிய பாலை வல்லோன்
கை கவர் நரம்பின், இம்மென இமிரும்
மாதர் வண்டொடு சுரும்பு நயந்து இறுத்த
தாது அவிழ் அலரித் தா சினை பிளந்து,
தாறு அடு களிற்றின் வீறு பெற ஓச்சி,   150
கல்லென் சுற்றக் கடுங்குரல் அவித்து, எம்
சொல்லற் பாணி நின்றனன் ஆக (142-152)

பொருளுரை:  நாங்கள் அதற்குப் பதில் கூறவில்லை.  அதனால் அவன் வருந்தி, கலங்கி, “என்னிடமிருந்து தப்பிய விலங்கை நீங்கள் காட்டாவிட்டாலும், என்னுடன் பேசுவது உங்களுக்குப் பழியாகுமா, மென்மையானவர்களே?” என்று நட்ட ராகம் முற்றுப் பெற்ற பாலை யாழில் வல்லவன் தன் கையினால் தெறித்த நரம்பைப் போல இம்மென்று இசைக்கும், காதலுடைய பெண் வண்டுகளுடன் ஆண் வண்டுகள் விரும்பி வந்து தங்கும் பூந்தாது உடைய மலர்கள் மலர்ந்த தழைத்து விரிந்த ஒரு மரக்கிளையை ஒடித்து, பாகனின் பரிக்கோலை மீறிய களிற்று யானையைப் போல், அக் கிளையை வெற்றியுண்டாக வீசி, ஓசையுண்டாகக் குரைக்கும் தன்னுடைய சுற்றியுள்ள வேட்டை நாய்களின் கடுமையான குரைத்தலை அடக்கி, எங்கள் விடைக்காகக் காத்து நின்றான்.

குறிப்பு:  ஒப்புமை – குறிஞ்சிப்பாட்டு 146 – நைவளம் பழுநிய பாலை வல்லோன், சிறுபாணாற்றுப்படை 36 – நைவளம் பழுநிய நயந்தெரி பாலை.  மாதர் – மாதர் காதல் (தொல்காப்பியம், உரியியல் 32).  மாதர் (148) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – காதல்.  இக்குறிப்பால் மாதர் வண்டென்றதற்குப் பெடை வண்டு எனப் பொருள் கூறப்பட்டது.

சொற்பொருள்:  அதன் எதிர் சொல்லேம் – நாங்கள் அதற்கு பதில் கூறவில்லை, ஆதலின் – அதனால், அல்லாந்து கலங்கி – வருந்தி கலங்கி, கெடுதியும் விடீஇர் ஆயின் – என்னிடமிருந்து தப்பிய விலங்கை நீங்கள் காட்டாவிட்டாலும் (விடீஇர் – அளபெடை), எம்மோடு – என்னுடன், சொல்லலும் பழியோ – பேசுவது உங்களுக்கு பழியாகுமா, மெல்லியலீர் – மென்மையானவர்களே, என – என்று, நைவளம் பழுநிய பாலை வல்லோன் – நட்ட ராகம் முற்றுப் பெற்ற பாலை யாழில் வல்லவன், கை கவர் நரம்பின் – தன் கையினால் தெறித்த நரம்பைப் போல (நரம்பின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது), இம்மென இமிரும் – இம்மென்று இசைக்கும், மாதர் வண்டொடு – காதலுடைய வண்டுகளுடன், சுரும்பு நயந்து இறுத்த – ஆண் வண்டுகள் விரும்பி வந்து தங்கி, தாது – பூந்தாது, அவிழ் – விரிந்த, அலரி – மலர்கள், தா சினை – தழைத்து விரிந்த ஒரு மரக்கிளை, பிளந்து – பிளந்து, தாறு அடு களிற்றின் – பரிக்கோலை மீறிய களிற்று யானையைப் போல், அங்குசத்தை மீறிய களிற்று யானையைப் போல் (களிற்றின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), வீறு பெற ஓச்சி – வெற்றியுண்டாக வீசி, கல்லென் சுற்றம் – ஓசையுண்டாகக் குரைக்கும் சுற்றியுள்ள நாய்கள் (கல்லென் – ஒலிக்குறிப்பு), கடுங்குரல் அவித்து – கடுமையான குரைத்தலை அடக்கி, எம் சொல்லற் பாணி நின்றனன் ஆக – எங்கள் விடையைப்பெறும் வேளைக்காக அவன் காத்து நின்றான்

காவலன் எய்திய அம்பினால் சினமடைந்த யானை

இருவி வேய்ந்த குறுங்கால் குரம்பைப்
பிணை ஏர் நோக்கின் மனையோள் மடுப்ப,
தேம்பிழி தேறல் மாந்தி மகிழ் சிறந்து,   155
சேமம் மடிந்த பொழுதின், வாய்மடுத்து
இரும் புனம் நிழத்தலின், சிறுமை நோனாது,
அரவு உறழ் அம் சிலை கொளீஇ, நோய்மிக்கு
உரவுச்சின முன்பால் உடல் சினம் செருக்கிக்
கணை விடு புடையூக் கானம் கல்லென   160
மடி விடு வீளையர் வெடிபடுத்து எதிரக்
கார்ப் பெயல் உருமிற் பிளிறிச் சீர்த் தக
இரும்பிணர்த் தடக்கை இரு நிலம் சேர்த்திச்
சினம் திகழ் கடாஅம் செருக்கி மரம் கொல்பு
மையல் வேழம் மடங்கலின் எதிர்தர,   165
உய்வு இடம் அறியேம் ஆகி, ஒய்யென
திருந்து கோல் எல் வளை தெழிப்ப, நாணு மறந்து,
விதுப்புறு மனத்தேம் விரைந்து அவற் பொருந்திச்
சூர் உறு மஞ்ஞையின் நடுங்க, (153-169)

பொருளுரை:  தினை அரிந்த தாளால் செய்த குறுகிய கால்களையுடைய குடிலில் பெண் மானின் அழகிய நோக்கினையுடைய மனைவி குடிக்கக் கொடுக்க, ஒருவன் தேனால் செய்த கள்ளினைக் குடித்து, மிகவும் மகிழ்ச்சி அடைந்து, தினைப்புனத்தின் காவலை நிறுத்திய பொழுது, ஒரு யானை பெரிய புனத்தில் தினையை உண்டு அழித்ததால், சிறிய அளவு தினையையும் பெறாது, பாம்பை ஒத்த அழகிய வில்லில் நாணை ஏற்றி, வருத்தம் மிகுந்ததால் மிகுந்த சினம் கொண்டு, வலிமையுடன், உடலில் சினத்திற்குரிய அடையாளங்கள் தோன்ற, அம்பைச் செலுத்தி,  தன்னுடன் பணி புரியும் இளைஞர்களுடன் சேர்ந்து தட்டை முதலியவற்றை தட்டி ஒலி உண்டாக்கி, காட்டில் கல்லென்ற ஒலி பிறக்கும்படி அவர்களுடன் வாயை மூடி சீழ்க்கையடித்து மிக்க ஒலியை உண்டாக்கி அவன் யானையை விரட்ட, கார்கால இடிபோல் பிளிறி, தன் தலைமைக்குத் தக்க கரிய சருச்சரை (சொரசொரப்பு) உடைய பெரிய தும்பிக்கையைப் பெரிய நிலத்தில் சேர்த்துச் சினம் திகழ்வதற்குக் காரணமான மதத்தால் செருக்குடன் மரங்களை முறித்துப் போட்டது, அந்தக் கலக்கமடைந்த யானை.  அது கூற்றுவனைப் போல் எங்களை நோக்கி வர, தப்பிக்க இடம் அறியாது, விரைவாக, எங்கள் திருத்தமான திரண்ட ஒளியுடைய வளையல்கள் ஒலிக்க, எங்களின் நாணத்தை மறந்து, விரைந்து, நடுங்கும் மனது உடையவர்களாக, அவனை அடைந்து, கடவுள் ஏறிய மயிலைப் போல நாங்கள் நடுங்க,

குறிப்பு:  குடித்த பின் காவலை மறந்து: தேம்பிழி தேறல் மாந்தி மகிழ் சிறந்து சேமம் மடிந்த பொழுதின் 155-156, அகநானூறு 348 – பாப்புக் கடுப்பு அன்ன தோப்பி வான் கோட்டுக் கடவுள் ஓங்கு வரைக்கு ஓக்கிக் குறவர் முறித் தழை மகளிர் மடுப்ப மாந்தி அடுக்கல் ஏனல் இரும் புனம் மறந்துழி.  வீளையர் 161 – C. ஜெகந்நாதாசாரியர் உரை – மனையோள் என்னும் ஒருமை சுட்டிய பெயர், மேல் வீளையர் என வருதலால் பன்மை சுட்டியவாறுமாம், பொ. வே. சோமசுந்தரனார் உரை – இளைஞர் சீழ்க்கையராய்.

சொற்பொருள்:  இருவி வேய்ந்த – தினை அரிந்த தாளால் செய்த, குறுங்கால் குரம்பை – குறுகிய கால்களையுடைய குடில், பிணை ஏர் நோக்கின் மனையோள் – பெண் மானின் அழகிய நோக்கினையுடைய மனைவி, மடுப்ப – குடிக்கக் கொடுக்க, தேம்பிழி தேறல் மாந்தி – தேனால் செய்த கள்ளினைக் குடித்து, மகிழ்சிறந்து – மிகவும் மகிழ்ச்சி அடைந்து, சேமம் மடிந்த பொழுதில் – காவலை நிறுத்திய பொழுது, வாய் மடுத்து இரும்புனம் நிழத்தலின் – யானை பெரிய புனத்தில் தினையை உண்டு அழித்ததால், சிறுமை நோனாது – எஞ்சி இருந்த சிறிய அளவையும் பெறாது, அரவு உறழ் – பாம்பை ஒத்த (உறழ் – உவமை உருபு), அம் சிலை – அழகிய வில், கொளீஇ – நாண் ஏற்றி, நோய் மிக்கு உரவுச்சின – வருத்தம் மிகுந்ததால் மிகுந்த சினம் கொண்டு, முன்பால் – வலிமையுடன், உடல் சினம் செருக்கி – உடலில் சினத்திற்குரிய அடையாளங்கள் தோன்ற, கணை விடு – அம்பைச் செலுத்தி (கணைவிடு என்றவிடத்து ‘விடுபு’ என்ற செய்பு என் எச்சம் ‘விடு’ என விகாரப்பட்டு நின்றது), புடையூ – தட்டை முதலியவற்றைத் தட்டி ஒலி உண்டாக்கி (புடையூ – புடைத்து, செய்யூ என்னெச்சம்), கானம் கல்லென – காட்டில் கல்லென்ற ஒலி பிறக்கும்படி (கல்லென – ஒலிக்குறிப்பு), மடி விடு வீளையர் – வாயை மூடி சீழ்க்கையடித்தவர்களாய், வெடிபடுத்து எதிர – மிக்க ஒலியை உண்டாக்கி யானையை விரட்ட,  கார்ப் பெயல் உருமின் பிளிறி – கார்கால இடிபோல் பிளிறி (உருமின் – இன் ஒப்புப்பொருளில் வந்தது, ஐந்தாம் வேற்றுமை உருபு), சீர் தக இரும் பிணர்த் தடக்கை இரு நிலம் சேர்த்தி – தன் தலைமைக்குத் தக்க கரிய சருச்சரை உடைய பெரிய தும்பிக்கையை பெரிய நிலத்தில் சேர்த்து, சினம் திகழ் கடாம் – சினம் திகழ்வதற்கு காரணமான மதம், செருக்கி மரம் கொல்பு – செருக்குடன் மரங்களை முறித்து, மையல் வேழம் – கலங்கிய யானை, மடங்கலின் எதிர்தர – கூற்றுவனைப் போல் எங்களை நோக்கி வர (மடங்கலின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), உய்விடம் அறியேம் ஆகி – நாங்கள் தப்பிக்க இடம் அறியாதவர்கள் ஆகி, ஒய்யென – விரைவாக (ஒய்யென – விரைவுக்குறிப்பு), திருந்து கோல் எல் வளை – திருத்தமான திரண்ட ஒளியுடைய வளையல்கள், தெழிப்ப – ஒலிக்க, நாணு மறந்து – நாணத்தை மறந்து, விதுப்பு உறு மனத்தேம் விரைந்து – நடுங்கும் மனதுடையவர்களாக விரைந்து, அவற் பொருந்தி – அவனை அடைந்து, சூர் உறு மஞ்ஞையின் நடுங்க – கடவுள் ஏறிய மயிலைப் போல நடுங்க (மஞ்ஞையின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது),

யானை மீது அம்பைச் செலுத்தினான் தலைவன்

——— ——————————  வார் கோல்
உடு உறும் பகழி வாங்கிக் கடு விசை   170
அண்ணல் யானை அணி முகத்து அழுத்தலின்,
புண் உமிழ் குருதி முகம் பாய்ந்து இழிதரப்
புள்ளி வரி நுதல் சிதைய, நில்லாது
அயர்ந்து புறங்கொடுத்த பின்னர், நெடுவேள்
அணங்கு உறு மகளிர் ஆடுகளம் கடுப்பத் (169-175)

பொருளுரை:  நீண்ட கோலையுடைய உடுச் சேர்ந்த கணையை, இழுத்து விரைவாகச் செல்லும்படி ஏவி, தலைமையுடைய யானையின் அழகிய முகத்தில் புகுத்தியதால் புண்ணாகி, அந்தப் புண்ணிலிருந்து கொட்டும் குருதி முகத்தில் பரவி கீழே வடிய, புள்ளியும் வரியும் உடைய நெற்றி அழிய, நிற்காது தன்னை மறந்து புறமுதுகிட்டு ஓடிய பின்னர், முருகன் தீண்டியதால் வருத்தமுற்ற பெண்களுக்காக ஏற்படுத்தப்பட்ட வெறியாட்டுக் களத்தைப் போன்று,

குறிப்பு:  புள்ளி வரி (173) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – புகர்களும் வரிகளும், C. ஜெகந்நாதாசாரியர் உரை – புள்ளி வரி, ஒரு பொருட்பன்மொழி. வார் -வார்தல் போகல் ஒழுகல் மூன்றும் நேர்பும் நெடுமையும் செய்யும் பொருள (தொல்காப்பியம், உரியியல் 21).

சொற்பொருள்:  வார் கோல் – நீண்ட கோல், உடு உறும் – நாணைக் கொள்ளும் பொருட்டு கணையில் அமைந்த இடத்தில் சேர்ந்த, பகழி – அம்பு, வாங்கி – இழுத்து, கடு விசை – விரைவாக செல்லும்படி ஏவி, அண்ணல் யானை – தலைமையுடைய யானை, அணி முகத்து அழுத்தலின் – அழகிய முகத்தில் புகுத்தியதால், புண் உமிழ் குருதி – புண்ணிலிருந்து கொட்டும் குருதி, முகம் பாய்ந்து – முகத்தில் பரவி, இழிதர – கீழே வடிய, புள்ளி வரி – புள்ளியும் வரியும், நுதல் சிதைய – நெற்றி அழிய, நில்லாது – நிற்காது, அயர்ந்து – தன்னை மறந்து, புறங்கொடுத்த பின்னர் – புறமுதுகிட்டு ஓடிய பின்னர், நெடுவேள் அணங்கு உறு மகளிர் – முருகன் தீண்டி வருத்தமுற்ற பெண்கள், ஆடுகளம் கடுப்ப – வெறியாட்டுக் களத்தைப் போன்று

திணி நிலைக் கடம்பின் திரள் அரை வளைஇய
துணையறை மாலையின், கை பிணி விடேஎம்,
நுரையுடைக் கலுழி பாய்தலின் உரவுத் திரை
அடுங் கரை வாழையின் நடுங்கப் பெருந்தகை,
“அஞ்சில் ஓதி! அசையல்! யாவதும்   180
அஞ்சல், ஓம்பு நின் அணி நலம் நுகர்கு” என
மாசு அறு சுடர் நுதல் நீவி, நீடு நினைந்து,
என் முகம் நோக்கி நக்கனன்.   (176-183)

பொருளுரை:  திண்மையான கடம்ப மரத்தின் திரண்ட அடிப்பகுதியில் வளையச் சூட்டிய மகளிர் ஒழுங்குக்கு ஒப்புச் சாற்றுதலையுடைய மாலையைப் போன்று, நாங்கள் எங்கள் கோத்த கைகளை விடவில்லை.  நுரையையுடைய புது வெள்ளம் பாய்ந்ததால் வலிமையான அலைகள் கரையை இடிக்கும்பொழுது நடுங்கும் வாழை மரத்தைப் போல் நாங்கள் நடுங்கினோம்.  பெரும் தலைமையுடைய அவன், “அழகிய மென்மையான கூந்தலை உடையவளே!  தடுமாறாதே!  அச்சம் கொள்ளாதே! உன்னுடைய அழகிய நலத்தை நுகர்வேன் நான்” என, மாசு இல்லாத தலைவியின் ஒளியுடைய நெற்றியைத் தடவி, அதன் பின் நீண்ட நேரமாக நினைத்து, தலைவியின் தோழியான என்னுடைய முகத்தை நோக்கி நகைத்தான்.

குறிப்பு:  துணை அறை மாலை (177) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – மகளிர் ஒழுங்குக்கு ஒப்புச் சாற்றுதலையுடைய மாலையைப் போன்று, கடம்பினை முருகனாகக் கருதி மாலை சூடுதல் மரபு.

சொற்பொருள்: திணி நிலைக் கடம்பின் – திண்மையான கடம்ப மரத்தின், திரள் அரை – திரண்ட அடிப்பகுதி, வளைஇய – வளைந்த (அளபெடை), துணை அறை மாலையின் – மகளிர் ஒழுங்குக்கு ஒப்புச் சாற்றுதலையுடைய மாலையைப் போன்று (மாலையின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), கை பிணி விடேஎம் – நாங்கள் கோத்த கைகளை விடவில்லை (விடேஎம் – அளபெடை), நுரையுடைக் கலுழி பாய்தலின் – நுரையையுடைய புது வெள்ளம் பாய்ந்ததால், உரவுத்திரை – வலிமையான அலைகள், அடுங் கரை – கரையை இடிக்கும், வாழையின் நடுங்க – வாழை மரத்தைப் போல் நடுங்கி (வாழையின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), பெருந்தகை – பெரும் தலைமையுடையவன், அம் சில் ஓதி – அழகிய மென்மையான மயிர் (அன்மொழித்தொகை), அசையல் – தடுமாறாதே, யாவதும் அஞ்சல் ஓம்பு – அச்சம் கொள்ளாதே,  நின் அணி நலம் – உன்னுடைய அழகிய நலம், நுகர்கு என – நுகர்வேன் என (நுகர்கு – தன்மை ஒருமை வினைமுற்று), மாசு அறு – மாசு இல்லாத, சுடர் நுதல் – ஒளியுடைய நெற்றி, நீவி – தடவி, நீடு நினைந்த – நீண்ட நேரமாக நினைத்து, என் முகம் நோக்கி நக்கனன் – என்னுடைய முகத்தை நோக்கி நகைத்தான்

தலைவி தலைவனோடு கூடல்

——— ————— அந்நிலை
நாணும் உட்கும் நண்ணுவழி அடைதர,
ஒய்யெனப் பிரியவும் விடாஅன், கவைஇ, 185
ஆகம் அடைய முயங்கலின். (183-186)

பொருளுரை:  அவளை அவன் அணுகினபொழுது நாணமும் அச்சமும் அவளிடம் தோன்றியன.  அவளை விரைவாக பிரியவும் விடவில்லை அவன்.  அவளை அணைத்து அவளுடைய மார்பு தன்னுடைய மார்பிலே ஒடுங்குமாறு அவளைத் தழுவினான்.

சொற்பொருள்:  அந்நிலை – அந்த நிலையில், நாணும் உட்கும் – நாணமும் அச்சமும், நண்ணுவழி – அணுகின இடத்து, அடைதர – வந்து தோன்றுகையால், ஒய்யெனப் பிரியவும் விடாஅன் – விரைவாக பிரியவும் விடவில்லை அவன் (ஒய்யென – விரைவுக்குறிப்பு, விடாஅன் – அளபெடை), கவைஇ – அணைத்து (அளபெடை), ஆகம் அடைய முயங்கலின் – இவளுடைய மார்பு தன்னுடைய மார்பிலே ஒடுங்குமாறு அவளைத் தழுவுவதனால்

தலைவன் நாட்டின் சிறப்பு

———- ———  அவ்வழி
பழு மிளகு உக்க பாறை நெடுஞ்சுனை
முழு முதற் கொக்கின் தீங்கனி உதிர்ந்தென,
புள் எறி பிரசமொடு ஈண்டி, பலவின்
நெகிழ்ந்து உகு நறும் பழம் விளைந்த தேறல்,   190
நீர் செத்து அயின்ற தோகை, வியல் ஊர்ச்
சாறு கொள் ஆங்கண் விழவுக் களம் நந்தி
அரிக்கூட்டு இன்னியம் கறங்க ஆடுமகள்
கயிறு ஊர் பாணியின் தளரும், சாரல்
வரையர மகளிரின் சாஅய் விழைதக,   195
விண் பொரும் சென்னிக் கிளைஇய காந்தள்
தண் கமழ் அலரி தாஅய் நன் பல
வம்பு விரி களத்தின், கவின் பெறப் பொலிந்த
குன்று கெழு நாடன் (186-199)

பொருளுரை:  அங்கு, பழுத்த மிளகு உதிர்ந்து கிடக்கின்ற பாறை ஒன்றின் மேல் உள்ள பெரிய சுனையில், பெரிய அடிப்பகுதியை உடைய மாவின் இனிய கனிகள் உதிர்ந்தன.  அதனுடன் வண்டுகள் சிதறிய தேனும், பலா மரத்தின் வெடித்து தேன் சொரியும் நறுமணமான பழங்களின் சாறும் கலந்து, அச்சுனை நீர் விளைந்த கள்ளாகியது.  அதனை நீர் என்று எண்ணிக் குடித்த மயில் ஒன்று, பெரிய ஊரின் விழாக் களத்தில் மிகுந்து அரித்து எழும் ஓசையைக் கூட்டிய இனிய இசைக் கருவிகள் ஒலிக்க, கயிறாடும் பெண் கயிற்றில் ஏறித் தாளத்திற்கு ஏற்ப ஆடிப் பின் தளர்ந்தது போல் தளர்ந்தது.  மலையில் உள்ள பெண் கடவுள்கள் ஆடுவதால், காண்பவர் விரும்பும்படி விண்ணைத் தொடும் மலை உச்சியில் உள்ள குளிர்ச்சியுடைய மணம் வீசும் மலர்களைக் கொண்ட, கிளையுடைய காந்தள் செடிகள் கீழ் நிலத்தில் படர்ந்து, சிறிது கெட்டாலும், நல்ல பல துணிகளை விரித்த திருவிழாக்களத்தைப் போன்று அழகாகப் பொலிந்த மலை பொருந்திய நாட்டின் தலைவன்,

குறிப்பு:  நச்சினார்க்கினியர் உரை (187-191) – மிளகு உக்க பாறை அந்நிலத்து மாக்கள் உறைகின்ற ஊராகவும், நெடுஞ்சுனை தலைவன் குடியாகவும், மாம்பழத்தாலும் பலாப்பழத்தாலும் விளைந்த தேறல் தந்தையாலும் தாயாலும் உளனாகிய தலைவனாகவும், பிரசம் இவரைக்கூட்டின பால்வரை தெய்வமாகவும், அதனை உண்ட மயில் உயர்ந்த தலைவனைத் தன் குலத்திற்கு ஒத்தானாகக் கருதி நுகர்ந்த தலைவியாகவும், அத் தேறலில் பிறந்த களிப்பு களவொழுக்கத்திற் பிறந்த பேரின்பமாகவும், மயில் ஆடவாற்றாத் தன்மை வருந்திக் குறைந்த தன்மையாகவும் உள்ளுறை உவமம் கொள்க.  நச்சினார்க்கினியர் உரை (196-199)– உயர் நிலத்தே நின்று மணக்கின்ற காந்தள் வரையர மகளிராற் கீழ் நிலத்தே பரந்து அவ்விடத்தைக் கச்சு விரித்தாற்போல் அழகு பெறுத்தும் என்றதனால் நம்மில் உயர்ச்சியுடைய தலைவன் நமது நல்வினையால் தனது பெருமைதானும் ஒழிந்து இவ்விடத்தே வந்து கூடி நமக்கும் உயர்ச்சியுளதாக்கி நம்மை அழகு பெறுத்துகின்றான் என்று உள்ளுறை உவமம் எய்திற்று.  ஒப்புமை – அகநானூறு 2 – கோழ் இலை வாழைக் கோள் முதிர் பெருங்குலை ஊழுறு தீங்கனி உண்ணுநர்த் தடுத்த சாரல் பலவின் சுளையொடு ஊழ்படு பாறை நெடுஞ்சுனை விளைந்த தேறல் அறியாது உண்ட கடுவன் அயலது கறி வளர் சாந்தம் ஏறல் செல்லாது நறு வீ அடுக்கத்து மகிழ்ந்து கண்படுக்கும். 

சொற்பொருள்:  அவ்வழி – அங்கு, பழு மிளகு – பழுத்த மிளகு, உக்க பாறை – உதிர்ந்து கிடக்கின்ற பாறை, நெடுஞ்சுனை – பெரிய சுனை, முழு முதல் – பெரிய அடிப்பகுதி, கொக்கின் தீம் கனி உதிர்ந்தென – மாவின் இனிய கனிகள் உதிர்ந்தனவாக (கொக்கு – மாமரம்), புள் எறி – வண்டுகள் சிதறிய, பிரசமொடு – தேனுடன், ஈண்டு – கூடி, பலவின் – பலா மரத்தின், நெகிழ்ந்து உகு – விரிந்து தேன் சொரியும், நறும் பழம் – நறுமணமான பழம், விளைந்த தேறல் – விளைந்த கள், நீர் செத்து – நீர் என்று எண்ணி, அயின்ற தோகை – குடித்த மயில், வியல் ஊர் சாறு கொள் – பெரிய ஊரில் விழா கொள்ளும், ஆங்கண் – அங்கு, விழவுக் களம் – விழாக் களம், நந்தி – மிக்கு, அரி கூட்டு இன் இயம் கறங்க – தாளத்தின் எழும் ஓசையை கூட்டிய இனிய இசைக் கருவிகள் ஒலிக்க, அரித்து எழும் ஓசையை கூட்டிய இனிய இசைக் கருவிகள் ஒலிக்க, ஆடுமகள் கயிறு ஊர் பாணியின் – ஆடும் பெண் கயிற்றில் ஏறி ஆடுகின்ற தாளத்தினால், தளரும் – தளரும், சாரல் – மலைச் சரிவு, வரையர மகளிரில் – மலையில் உள்ள பெண் கடவுள்களினால், வரையரமகளிர் ஆடுகையாலே, சாஅய் – சிறிது கெட்டு (அளபெடை), விழை தக – விரும்பும்படி, விண் பொரும் – விண்ணைத் தொடும், சென்னி – சிகரங்கள், கிளைஇய காந்தள் – கிளையுடைய காந்தள் செடிகள் (கிளைஇய – அளபெடை), தண் கமழ் அலரி – குளிர்ச்சியுடைய மணம் வீசும் மலர்கள், தாஅய் – படர்ந்து, நன் பல – நல்ல பல, வம்பு விரி களத்தின் – துணியை விரித்த திருவிழாக்களத்தைப் போன்று (களத்தின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), கவின் பெற பொலிந்த – அழகாக பொலிந்த, குன்று கெழு நாடன் – மலை பொருந்திய நாட்டின் தலைவன்

இல்லறம் நாடினான் இனியவன்

———————–எம் விழைதரு பெருவிறல்
உள்ளத் தன்மை உள்ளினன் கொண்டு, 200
“சாறு அயர்ந்தன்ன மிடாஅச் சொன்றி
வருநர்க்கு வரையா வளநகர் பொற்ப
மலரத் திறந்த வாயில் பலர் உண
பைந்நிணம் ஒழுகிய நெய்ம் மலி அடிசில்
வசை இல் வான் திணைப் புரையோர் கடும்பொடு   205
விருந்து உண்டு எஞ்சிய மிச்சில், பெருந்தகை,
நின்னோடு உண்டலும் புரைவது” என்று ஆங்கு
அறம் புணை ஆகத் தேற்றி, (199-208)

பொருளுரை:   தலைவியை விரும்புகின்ற பெரிய வெற்றியை உடையவன், தலைவியின் உள்ளத்தின் தன்மையை எண்ணிக் கொண்டு, “விழாக் கொண்டாடினாற்போல் பெரிய பானையில் சோறு சமைத்து, வருபவர்களுக்கு எல்லையில்லாமல் உண்ணுவதற்குக் கொடுத்து, செல்வமுடைய இல்லம் பொலியுமாறு அகலத் திறந்த வாசலுடன் பலர் உண்ணுவதற்கு, பசுமையான கொழுப்பு, நெய் நிறைந்த சோறு ஆகியவற்றை, குற்றமில்லாத உயர்ந்த குடியின் சான்றோர், மற்றும் சுற்றத்தாரும் விருந்து உணவாக உண்டு மிஞ்சியதை, தகமையுடையவளே! உன்னுடன் உண்ணுதல் உயர்ந்தது”, என்று அங்கு, அறத்தையுடைய இல்லறம் தங்களுக்குப் புணையாக இருக்கும் என்று தலைவிக்கு விளக்கி,

குறிப்பு:  பொற்பு – பொற்பே பொலிவு (தொல்காப்பியம், உரியியல் 39).

சொற்பொருள்:  எம் விழைதரு பெரு விறல் – எம்மை விரும்புகின்ற பெரிய வெற்றியை உடையவன், உள்ளத் தன்மை உள்ளினன் கொண்டு – தலைவியின் உள்ளத்தின் தன்மையை எண்ணிக் கொண்டு, சாறு அயர்ந்து அன்ன – விழாக் கொண்டாடினாற்போல், மிடாஅச் சொன்றி – பெரிய பானையில் சோறு (மிடாஅ – அளபெடை), வருநர்க்கு – வருபவர்களுக்கு, வரையா – எல்லையில்லாது, வளநகர் – வளமையான இல்லம், பொற்ப – பொலிய, மலரத் திறந்த வாயில் – அகலத் திறந்த வாசல், பலர் உண – பலர் உண்ணுவதற்கு (உண உண்ண என்பதன் விகாரம், இடைக்குறை விகாரம்), பை நிணம் – பசுமையான கொழுப்பு, ஒழுகிய – வடிகின்ற, நெய்ம் மலி அடிசில் – நெய் நிறைந்த சோறு, வசை இல் வான் திணைப் புரையோர் – குற்றமில்லாத உயர்ந்த குடியின் சான்றோர், கடும்பொடு – சுற்றத்தாருடன், விருந்து உண்டு எஞ்சிய மிச்சில் – விருந்து உணவு உண்டு மிஞ்சியது, பெருந்தகை – தகமையுடையவளே, நின்னோடு உண்டலும் – உன்னுடன் உண்ணுதல், புரைவது – உயர்ந்தது, என்று ஆங்கு – என்று அங்கு, அறம் புணையாகத் தேற்றி – அறத்தையுடைய இல்லறம் தங்களுக்கு புணையாக இருக்கும் என்று விளக்கி

ஆணை தந்து ஆற்றுவித்தான் தலைவன்

————– பிறங்கு மலை
மீ மிசைக் கடவுள் வாழ்த்திக் கைதொழுது,
ஏமுறு வஞ்சினம் வாய்மையின் தேற்றி, 210
அம் தீம் தெள் நீர் குடித்தலின், நெஞ்சமர்ந்து
அரு விடர் அமைந்த களிறு தரு புணர்ச்சி,
வான் உரி உறையுள் வயங்கியோர் அவாவும்
பூ மலி சோலை அப்பகல் கழிப்பி, (208-214)

பொருளுரை:  பெரிய மலையின் மிக உயரத்தில் உள்ள கடவுளான முருகனை வாழ்த்தி, கையால் தொழுது, தலைவி இன்பமுறுவதற்காகச் சூளுரையை உண்மையாகத் தெளிவித்து, அழகிய இனிய தெளிந்த நீரை அவன் குடித்ததால், தலைவியின் நெஞ்சு அவனது சூளுரையில் பொருந்தியது.  வானத்தில் உறையும் தேவர்கள் விரும்பும் பூக்கள் நிறைந்த சோலையில், அரிய காட்டில் உள்ள களிற்று யானையால் அவர்கள் கூடினார்கள்.  இவ்வாறு பகற்பொழுது கழிந்தது.

சொற்பொருள்: பிறங்கு மலை மீ மிசை கடவுள் வாழ்த்தி – பெரிய மலையின் மிக உயரத்தில் உள்ள கடவுளை வாழ்த்தி, ஒளியுடைய மலையின் மீதுள்ள கடவுளை வாழ்த்தி, கைதொழுது – கையால் தொழுது, ஏமுறு – தலைவி இன்பமுறுவதற்காக, வஞ்சினம் வாய்மையின் தேற்றி – உறுதிமொழியை உண்மையாகத் தெளிவித்து,  சூளுரையை உண்மையாகத் தெளிவித்து, அம் தீம் தெள் நீர் – அழகிய இனிய தெளிந்த நீர், குடித்தலின் – அவன் குடித்ததால், நெஞ்சு அமர்ந்து – நெஞ்சில் அமர்ந்து, அரு விடர் அமைந்த – அரிய காட்டில் பொருந்திய, களிறு தரு புணர்ச்சி – களிற்று யானையால் இணைந்தமை, வான் உரி உறையுள் வயங்கியோர் – வானத்தில் உறையும் தேவர்கள் (உரி – உரிய), அவாவும் – விரும்பும், பூ மலி சோலை அப்பகல் கழிப்பி – பூக்கள் நிறைந்த சோலையில் அந்த பகலைக் கழித்து

வந்தது மாலைக் காலம்!

எல்லை செல்ல ஏழ் ஊர்பு இறைஞ்சிப்   215
பல் கதிர் மண்டிலம் கல் சேர்பு மறைய,
மான் கணம் மர முதல் தெவிட்ட, ஆன் கணம்
கன்று பயிர் குரல மன்று நிறை புகுதர,
ஏங்கு வயிர் இசைய கொடு வாய் அன்றில்
ஓங்கு இரும் பெண்ணை அக மடல் அகவப்   220
பாம்பு மணி உமிழப் பல் வயின் கோவலர்
ஆம்பல் அம் தீம் குழல் தெள் விளி பயிற்ற,
ஆம்பல் ஆய் இதழ் கூம்புவிட, வள மனைப்
பூந்தொடி மகளிர் சுடர் தலைக் கொளுவி,
அந்தி அந்தணர் அயரக் கானவர்   225
விண் தோய் பணவை மிசை ஞெகிழி பொத்த,
வானம் மாமலைவாய் சூழ்பு கறுப்பக் கானம்
கல்லென்று இரட்ட, புள்ளினம் ஒலிப்ப,
சினைஇய வேந்தன் செல் சமம் கடுப்பத்
துனைஇய மாலை துன்னுதல் காணூஉ, (215-230)

பொருளுரை:  பகல் நேரம் போகும்படி ஏழு குதிரைகள் உடைய தேரைச் செலுத்தி பல கதிர்களையுடைய கதிரவன் மலையை அடைந்து மறையவும், மான் கூட்டம் மரத்தின் அடியில் திரளவும், பசுக்கூட்டம் கன்றுகளை அழைக்கும் குரலை உடையவையாய் கொட்டில்கள் நிறையுமாறு புகவும், ஊதுகின்ற கொம்பைப் போல் இசையை உடைய வளைந்த வாயையுடைய அன்றில் பறவை உயர்ந்தக் கரிய பனை மரத்தின் உள் மடலில் இருந்து தன் துணையை அழைக்கவும், பாம்பு மணியைக் கக்கவும், பல இடங்களில் இடையர்கள் ஆம்பல் என்னும் பண்ணினை இனிய குழலில் ஊதவும், ஆம்பல் மலர்களின் அழகிய இதழ்கள் கூம்பவும், செல்வமுடைய இல்லங்களில் உள்ள அழகிய வளையல்களை அணிந்த பெண்கள் விளக்கை ஏற்றவும், அந்தணர்கள் அந்திக் கடனை ஆற்றவும், காட்டில் வாழ்பவர்கள் வானத்தைத் தீண்டும் பரண் மேல் தீக்கடையும் கோலால் நெருப்பைப் பிறப்பித்து எரிக்கவும், முகில்கள் பெரிய மலையிடத்தே சூழ்ந்து கருமை அடையவும், கானத்தில் கல்லென்று ஒலி எழும்பவும், பறவைகள் ஆரவாரிக்கவும், சினமுடைய மன்னன் போருக்குச் செல்வதைப் போல விரைதலையுடைய மாலைப் பொழுது நெருங்கி வருதலைக் கண்டு,

குறிப்பு:  பாம்பு மணியைக் கக்குதல் – புறநானூறு 294, அகநானூறு 72, 92, 138, 192, 372, குறுந்தொகை 239 and நற்றிணை 255.  ஆ மன்றத்தில் புகுதல்: அகநானூறு 14 – கன்று பயிர் குரல மன்று நிறை புகுதரும், அகநானூறு 63 – கன்று காணாது புன்கண்ண செவி சாய்த்து மன்று நிறை பைதல் கூரப் பல உடன் கறவை, அகநானூறு 64 – மன்று நிறை புகுதரும் ஆ, அகநானூறு 253 – கன்றுடைப் பெரு நிரை மன்று நிறை தரூஉம், கலித்தொகை 119 – கன்று அமர் விருப்பொடு மன்று நிறை புகுதர, புறநானூறு 387 – மன்று நிறையும் நிரை, குறிஞ்சிப்பாட்டு 217 –  ஆன் கணம் கன்று பயிர் குரல மன்று நிறை புகுதர.  துனை – கதழ்வும் துனைவும் விரைவின் பொருள் (தொல்காப்பியம், உரியியல் 19).

சொற்பொருள்:  எல்லை செல்ல – பகல் நேரம் போகும்படி, ஏழ் ஊர்பு இறைஞ்சி – ஏழு குதிரைகள் உடைய தேரைச் செலுத்தி, பல் கதிர் மண்டிலம் – பல கதிர்களையுடைய கதிரவன், கல் சேர்பு மறைய – மலையை அடைந்து மறையவும், மான் கணம் – மான் கூட்டம், மரம் முதல் – மரத்தின் அடியில், தெவிட்ட – திரளவும், அசையிடவும்,  ஆன் கணம் – பசுக்கூட்டம், கன்று பயிர் குரல – கன்றுகளை அழைக்கும் குரலை உடையவையாய், மன்று நிறை புகுதர – கொட்டில்கள் நிறையுமாறு புகவும், ஏங்கு வயிர் இசைய – ஊதுகின்ற கொம்பைப் போல் இசையை உடைய, கொடுவாய் அன்றில் – வளைந்த வாயையுடைய அன்றில் பறவை, ஓங்கு இரும் பெண்ணை அக மடல் – உயர்ந்த கரிய பனை மரத்தின் உள் மடல், அகவ – தன் துணையை அழைக்கவும், பாம்பு மணி உமிழ – பாம்பு மணியைக் கக்கவும், பல்வயின் கோவலர் ஆம்பல் தீங்குழல் தெள் விளி பயிற்ற – பல இடங்களில் இடையர்கள் ஆம்பல் என்னும் பண்ணினை இனிய குழலில் ஊதவும், ஆம்பல் ஆய் இதழ் கூம்பு விட – ஆம்பல் மலர்களின் அழகிய இதழ்கள் கூம்பவும், வள மனை பூந்தொடி மகளிர் சுடர்தலைக் கொளுவி – செல்வமுடைய இல்லங்களில் உள்ள அழகிய வளையல்களை அணிந்த பெண்கள் விளக்கை ஏற்றவும், அந்தி அந்தணர் அயர – அந்தணர்கள் அந்திக் கடனை ஆற்றவும், கானவர் – காட்டில் வாழ்பவர்கள், விண் தோய் பணவை மிசை – வானத்தைத் தீண்டும் பரண் மேல், ஞெகிழி பொத்த – தீக்கடையும் கோலால் நெருப்பை பிறப்பித்து எரிப்பவும், வானம் மாமலைவாய் சூழ்பு கறுப்ப – முகில்கள் பெரிய மலையிடத்தே சூழ்ந்து கருமை அடையவும், கானம் கல்லென்று இரட்ட –  கானத்தில் கல்லென்று ஒலி எழும்பவும் (கல்லென்று – ஒலிக்குறிப்பு), புள்ளினம் ஒலிப்ப – பறவைகள் கூவவும், சினைஇய வேந்தன் செல் சமம் கடுப்ப – சினமுடைய மன்னன் போருக்குச் செல்வதைப் போல (சினைஇய – அளபெடை), துனைஇய மாலை – விரைதலையுடைய மாலைப் பொழுது (துனைஇய – அளபெடை), துன்னுதல் காணூஉ – நெருங்கி வருதலைக் கண்டு (காணூஉ – அளபெடை, செய்யூ என்னும் வாய்பாட்டு வினையெச்சம்)

மன்றலில் மணப்பேன் என்று கூறிப் பிரிதல்

“நேர் இறை முன் கை பற்றி, நுமர் தர,
நாடு அறி நன் மணம் அயர்கம் சில் நாள்,
கலங்கல் ஓம்புமின், இலங்கு இழையீர்!” என
ஈர நல் மொழி தீரக் கூறி,
துணை புணர் ஏற்றின் எம்மொடு வந்து, 235
துஞ்சா முழவின் மூதூர் வாயில்
உண் துறை நிறுத்துப் பெயர்ந்தனன். (231-237)

பொருளுரை:  தலைவன், “நுண்ணிய மூட்டுவாய் உடைய முன்கையைப் பற்றி, உன்னை உன் உறவினர் எனக்குத் தர, நாடறியும் நல்ல மணத்தினை நான் நடத்துவேன் இன்னும் சில நாட்களில்!  கலங்குதலைப் பாதுகாப்பீர்களாக, விளங்குகின்ற அணிகலன்களை அணிந்தவர்களே!” என்று நல்ல சொற்களைத் தலைவியின் துன்பம் தீருமாறுக் கூறி, பசுவைப் புணர்ந்த ஏறு போல், எங்களுடன் வந்து, முழவின் ஓசை நிற்காத பழைய நம்மூரின் வாயிலில் பலரும் நீரை உண்ணும் துறையில் எங்களை நிறுத்திவிட்டுச் சென்றான்.

சொற்பொருள்:  நேர் இறை – நுண்ணிய மூட்டுவாய், முன்கை பற்றி – முன்கையைப் பற்றி, நுமர் தர – உன்னை உன் உறவினர் எனக்குத் தர, நாடறி நன்மணம் அயர்கம் – நாடறியும் நல்ல மணத்தினை நான் நடத்துவேன், சில் நாள் – சில நாட்களில், கலங்கல் ஓம்புமின் – கலங்குதலைப் பாதுகாப்பீர்களாக, இலங்கு இழையீர் – விளங்குகின்ற அணிகலன்களை அணிந்தவர்களே, என – என்று, நன் மொழி தீரக் கூறி – நல்ல சொற்களைத் தலைவியின் துன்பம் தீருமாறு கூறி, துணை புணர் ஏற்றின் எம்மொடு வந்து – பசுவைப் புணர்ந்த ஏறு போல் எங்களுடன் வந்து (ஏற்றின் – ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது), துஞ்சா முழவின் மூதூர் வாயில் உண் துறை – முழவின் ஓசை நிற்காத பழைய நம்மூரின் வாயிலில் பலரும் நீரை உண்ணும் துறையில், நிறுத்துப் பெயர்ந்தனன் – எங்களை நிறுத்திவிட்டு சென்றான்

தொடர்ந்தது தோன்றலின் உறவு!

—————- ————– அதற்கொண்டு,
அன்றை அன்ன விருப்பொடு, என்றும்
இரவரல் மாலையனே, வருதோறும்
காவலர் கடுகினும், கத நாய் குரைப்பினும், 240
நீ துயில் எழினும், நிலவு வெளிப்படினும்,
வேய் புரை மென் தோள் இன்துயில்
பெறாஅன், பெயரினும், முனியல் உறாஅன்,
இளமையின் இகந்தன்றும் இலனே, வளமையில்
தன் நிலை தீர்ந்தன்றும் இலனே. (237-245)

பொருளுரை:   அப்புணர்ச்சி தொடங்கி, முதல் நாளில் கொண்ட விருப்பத்துடன் என்றும் இரவில் வரும் தன்மையுடையவன் அவன்.  அவ்வாறு அவன் வரும்பொழுதெல்லாம், காவலர் விரைந்துக் காவல் காப்பினும், சினம் மிகுந்த நாய்கள் குரைத்தாலும், தூக்கத்திலிருந்து நீ விழித்தாலும், நிலா ஒளியைப் பரப்பினும், தலைவியைக் காணாது அவளது மூங்கில் போன்ற மென்மையான தோளில் இனிய துயிலை அவன் பெறாவிட்டாலும், குறி இல்லாததை தலைவன் செய்தக் குறியாகக் கருதிச் சென்று மீண்டு மனையில் புகுந்தாலும் வெறுத்தலைச் செய்யான்.  அவன் இளமையைக் கடந்தவன் இல்லை.  தன் செல்வத்தின் செருக்கால், நல்ல குடியில் பிறந்த தனக்குரிய நல்ல செயல்களிலிருந்து விலகியவனும் இல்லை. 

குறிப்பு:  இர (239) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – இரா, இறுதியினின்ற ஆகாரம் குறுகி ‘இர’ என நின்றது.  குறி – குறி எனப்படுவது இரவினும் பகலினும் அறியக் கிளந்த ஆற்றது என்ப (தொல்காப்பியம், களவியல் 38).   அகநானூறு 122 – இரும்பிழி மாரி அழுங்கல் மூதூர் விழவு இன்றாயினும் துஞ்சாது ஆகும், மல்லல் ஆவணம் மறுகுடன் மடியின் வல் உரைக் கடும் சொல் அன்னை துஞ்சாள், பிணி கோள் அருஞ்சிறை அன்னை துஞ்சின் துஞ்சாக் கண்ணர் காவலர் கடுகுவர், இலங்கு வேல் இளையர் துஞ்சின் வை எயிற்று வலஞ்சுரித் தோகை ஞாளி மகிழும், அரவவாய் ஞமலி மகிழாது மடியின் பகலுரு உறழ நிலவுக் கான்று விசும்பின் அகல்வாய் மண்டிலம் நின்று விரியும்மே, திங்கள் கல் சேர்வு கனை இருள் மடியின் இல் எலி வல்சி வல்வாய்க் கூகை கழுது வழங்கு யாமத்து அழிதகக் குழறும், வளைக் கண் சேவல் வாளாது மடியின் மனைச் செறி கோழி மாண் குரல் இயம்பும்.  மாலை (239) – தன்மை.  மாலை இயல்பே.(தொல்காப்பியம், உரியியல் 17).  மாலையனே – ஏகாரம் ஈற்றசை

சொற்பொருள்:  அதற்கொண்டு – அப் புணர்ச்சி தொடங்கி, அன்றை அன்ன – முதல் நாள் போன்ற, விருப்பொடு – விருப்பத்துடன், என்றும் – என்றும், இரவரல் மாலையனே – இரவில் வரும் தன்மையுடையவன் (இர – இரா, இறுதியினின்ற ஆகாரம் குறுகி இர என நின்றது), வருதோறும் – வரும்பொழுதெல்லாம், காவலர் கடுகினும் – காவலர் விரைந்து காவல் காப்பினும், கத நாய் குரைப்பினும் – சினம் மிகுந்த நாய்கள் குரைத்தாலும், நீ துயில் எழினும் – தூக்கத்திலிருந்து நீ விழித்தாலும், நிலவு வெளிப்படினும் – நிலா ஒளியைப் பரப்பினும், வேய் புரை மென்தோள் இன்துயில் என்றும் பெறாஅன் – தலைவியின் மூங்கில் போன்ற மென்மையான தோளில் இனிய துயிலை அவன் பெறுவதில்லை (பெறாஅன்  – அளபெடை), பெயரினும் – குறி இல்லாததை தலைவன் செய்த குறியாக கருதிச் சென்று மீண்டு மனையில் புகுந்தாலும், முனியல் உறாஅன் – வெறுத்தலைச் செய்யான் (உறாஅன் – அளபெடை), இளமையின் இகந்தன்றும் இலனே – இளமையைக் கடந்தவன் இல்லை, வளமையில் – தன்னுடைய செல்வத்தால், தன் நிலை தீர்ந்தன்றும் இலன் – தனக்குரிய நல்ல செயல்களிலிருந்து விலகியவனும் இல்லை

தலைவியின் துயரம்

———- ———- கொன் ஊர்
மாய வரவின் இயல்பு நினைஇத் தேற்றி,
நீர் எறி மலரின் சாஅய், இதழ் சோரா,
ஈரிய கலுழுமிவள் பெரு மதர் மழைக் கண்
ஆகத்து அரிப் பனி உறைப்ப, நாளும்
வலைப் படு மஞ்ஞையின் நலம் செலச் சாஅய், 250
நினைத்தொறும் கலுழுமால் இவளே. ———- (245-251)

பொருளுரை:  அச்சம் தரும் ஊரின்கண் இரவுக் குறியில் கூடுவதற்கு அவன் வரும் நிலையற்ற நிலையை ஒழுக்கம் அன்று என்று எண்ணி திருமணத்தை விரும்பி, மழைத் துளிகளால் தாக்கப்படும் மலரைப் போல், தன்னுடைய அழகு அழிந்து, இமை சோர்ந்து, கண்களில் ஈரத்தை உடையவளாய், கலங்குகின்றாள் இவள்.  இவளுடைய பெரிய, அழகிய, குளிர்ந்த கண்களிலிருந்து தொடர்ந்து கண்ணீர் மார்பில் சொட்ட, நாள்தோறும் வலையில் அகப்பட்ட மயிலைப் போன்று, நலம் தொலைய, மெலிந்து, அவனை நினைக்கும்பொழுதெல்லாம் இவள் அழுகின்றாள்,

குறிப்பு:  சோரா – சோர்ந்து என்பது பொருள். செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம்.  எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது.

சொற்பொருள்: கொன் ஊர் – அலர் முதலியவற்றால் தலைவிக்கு அச்சம் தரும் ஊர், மாய வரவின் இயல்பு நினைஇத் தேற்றி – பொய்யாக இருக்கின்ற இரவுக் குறியில் கூடுவதற்கு அவன் வரும் வரவின் நிலையற்ற நிலையை ஒழுக்கம் அன்று என்று எண்ணி திருமணத்தை விரும்பி (நினைஇ – அளபெடை), நீர் எறி மலரின் – மழைத் துளிகளால் தாக்கப்படும் மலரைப் போல் (மலரின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), சாஅய் – அழகு அழிந்து (அளபெடை), இதழ் சோரா – இமை சோர்ந்து, ஈரிய – ஈரத்தை உடையவையாய், கலுழும் இவள் – கலங்குகின்றாள் இவள், பெரு மதர் மழைக்கண் ஆகத்து அரிப்பனி உறைப்ப – பெரிய அழகிய குளிர்ந்த கண்களிலிருந்து தொடர்ந்து கண்ணீர் மார்பில் சொட்ட, நாளும் வலைப்படு மஞ்ஞையின் – நாள்தோறும் வலையில் அகப்பட்ட மயிலைப் போன்று (மஞ்ஞையின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), நலம் செல – நலம் போக (செல – இடைக்குறை), சாஅய் – மெலிந்து (அளபெடை), நினைத்தொறும் கலுழுமால் இவளே – அவனை நினைக்கும்பொழுதெல்லாம் இவள் அழுகின்றாள் (கலுழுமால் – கலுழும் + ஆல், ஆல் – இடைச் சொல்)

அவன் வரும் வழி இடர்கள் வாட்டியது இவளை!

———— —————— —————– கங்குல்
அளைச்செறி உழுவையும், ஆளியும், உளியமும்,
புழல் கோட்டு ஆமான் புகல்வியும், களிறும்,
வலியின் தப்பும் வன்கண் வெஞ்சினத்து
உருமும், சூரும், இரை தேர் அரவமும், 255
ஒடுங்கு இருங்குட்டத்து அருஞ்சுழி வழங்கும்
கொடுந்தாள் முதலையும் இடங்கரும் கராமும்,
நூழிலும், இழுக்கும் ஊழ் அடி முட்டமும்,
பழுவும், பாந்தளும், உளப்படப் பிறவும்,
வழுவின் வழாஅ விழுமம், அவர்   260
குழுமலை விடர் அகம் உடையவால் எனவே. (251-261)

பொருளுரை:  இரவில் குகையில் உறையும் புலிகளும், ஆளியும், கரடியும், உள்ளே துளையுடைய கொம்பையுடைய காட்டு ஆவினத்தின் காளைகளும், களிற்று யானைகளும், வலிமையால் கெடுக்கும் கொடூரமான சினத்துடன் கூடிய இடியும், வருத்தும் கடவுள்களும், இரை தேடும் பாம்புகளும், ஒடுக்கமான கருமையான குளங்களில், கடினமான சுழிகள் இருக்குமிடத்தில் இருக்கும் வளைந்த கால்களையுடைய முதலையும் இடங்கரும் கராமும், ஆறலை கள்வர்கள் கொன்று குவிக்கும் இடங்களும், வழுக்கும் இடங்களும், முறையான பாதையாகத் தோன்றி செல்லச் செல்ல மறைந்து விடும் பாதைகளும், பேய்களும், மலைப் பாம்புகளும், உட்படப் பிறவும், தப்ப முடியாத தொல்லையைத் தருவன ஆகியவையும் அவருடைய தொகுதியாக உள்ள மலையின் பிளவுகளில் இருப்பதால்.

குறிப்பு:  இடங்கர் கராம் ஆகிய இரண்டும் முதலை வகையைச் சார்ந்தவை.  ஒப்புமை – நற்றிணை 205 – ஆளி நன்மான் வேட்டு எழு கோள் உகிர்ப் பூம் பொறி உழுவை தொலைச்சிய வைந் நுதி ஏந்து வெண் கோட்டு வயக் களிறு இழுக்கும்.  ஊழ் அடி முட்டமும் (258) – நச்சினார்க்கினியர் உரை – முறைப்படியாயப் பின்பு வழி முட்டாயிருக்கும் இடங்களும், பொ. வே. சோமசுந்தரனார் உரை – நடை பாதைபோல் தோன்றிச் செல்லத் தேய்ந்து பின்னர் நெறியே காணப்படாது மாறிவிடும் நெறி. ஆளி (பொருநராற்றுப்படை 139) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – அரிமா, அரிமாப் போன்ற வேறொரு விலங்கென எண்ணவும் இடமுள்ளது.  ஆளி – அகநானூறு 78, 252, 381, நற்றிணை 205, புறநானூறு 207, குறிஞ்சிப்பாட்டு 252, பெரும்பாணாற்றுப்படை 258, பொருநராற்றுப்படை 139.

சொற்பொருள்: கங்குல் அளைச்செறி உழுவையும் ஆளியும் உளியமும் – இரவில் குகையில் உறையும் புலிகளும், ஆளியும், கரடியும், புழல் கோட்டு ஆமான் புகல்வியும் – உள்ளே துளையுடைய கொம்பையுடைய காட்டு ஆவினத்தின் காளையும், களிறும் – ஆண் யானைகளும், வலியின் தப்பும் – வலிமையால் கெடுக்கும், வன்கண் வெஞ்சினத்து – கொடூரமான சினத்துடன், உருமும் – இடியும், சூரும்– வருத்தும் கடவுள்களும், இரை தேர் அரவமும் – இரை தேடும் பாம்புகளும், ஒடுங்கு இருங்குட்டத்து – ஒடுக்கமான கருமையான குளங்களில், அருஞ்சுழி வழங்கும் கொடுந்தாள் முதலையும் இடங்கரும் கராமும் – கடினமான சுழிகள் இருக்குமிடத்தில் இருக்கும் வளைந்த கால்களையுடைய முதலையும், இடங்கரும், கராமும், நூழிலும் – ஆறலை கள்வர்கள் கொன்று குவிக்கும் இடங்களும், இழுக்கும் – வழுக்கும் இடங்களும், ஊழ் அடி முட்டமும் – முறையான பாதையாகத் தோன்றி செல்லச் செல்ல மறைந்து விடும் பாதைகளும், பழுவும் – பேய்களும், பாந்தளும் – மலைப் பாம்புகளும், உளப்படப் பிறவும் – உட்படப் பிறவும், வழுவின் வழாஅ விழுமம் – தப்ப முடியாத தொல்லையைத் தருவன (வழாஅ – அளபெடை), அவர் குழு மலை விடர் அகம் உடையவால் எனவே – தலைவனுடைய தொகுதியாக உள்ள மலையின் பிளவுகளில் இருப்பதால் (உடையவால் – ஆல் அசைநிலை, எனவே – ஏகாரம் அசைநிலை)