நித்திலக்கோவை 301–400

அகநானூறு 301, அதியன் விண்ணத்தனார், பாலைத் திணைதலைவி தோழியிடம் சொன்னது
“வறன் உறு செய்யின் வாடுபு வருந்திப்,
படர் மிகப் பிரிந்தோர் உள்ளுபு நினைதல்
சிறு நனி ஆன்றிகம்” என்றி தோழி!
நல்குநர் ஒழித்த கூலிச் சில்பதம்
ஒடிவை இன்றி ஓம்பாது உண்டு,  5
நீர் வாழ் முதலை ஆவித்தன்ன
ஆரை வேய்ந்த அறைவாய்ச் சகடத்து,
ஊர் இஃது என்னாஅர் ஊறு இல் வாழ்க்கை,
சுரமுதல் வருத்தம் மரமுதல் வீட்டிப்
பாடு இன் தெண் கிணை கறங்கக் காண்வரக்  10
குவி இணர் எருக்கின் ததர் பூங்கண்ணி
ஆடூஉச் சென்னித் தகைப்ப, மகடூஉ,
முளரித் தீயின் முழங்கு அழல் விளக்கத்துக்
களரி ஆவிரைக் கிளர் பூங்கோதை
வண்ண மார்பின் வன முலைத் துயல்வரச்,  15
செறி நடைப் பிடியொடு களிறு புணர்ந்து என்னக்
குறு நெடுந்தூம்பொடு முழவுப் புணர்ந்து இசைப்பக்,
கார் வான் முழக்கின் நீர் மிசைத் தெவுட்டும்
தேரை ஒலியின் மானச் சீர் அமைத்து,
சில் அரி கறங்கும் சிறு பல் இயத்தொடு  20
பல்லூர் பெயர்வனர் ஆடி, ஒல்லெனத்,
தலைப் புணர்த்து அசைத்த பல் தொகைக் கலப்பையர்,
இரும்பேர் ஒக்கல் கோடியர் இறந்த
புன்தலை மன்றங்காணின், வழிநாள்
அழுங்கல் மூதூர்க்கு இன்னாது ஆகும் 25
அதுவே மருவினம் மாலை, அதனால்
காதலர் செய்த காதல்
நீடின்று மறத்தல் கூடுமோ, மற்றே?

பாடல் பின்னணி:  பிரிவிடை வேறுபட்ட தலைவி, வற்புறுத்தும் தோழியிடம் கூறியது.  

பொருளுரை:  தோழி!  வறட்சியுற்ற காலத்தில் வறண்ட வயல் போல், வருந்தி மிகவும் துன்புற்று, நம்மைப் பிரிந்த தலைவரை மீண்டும் மீண்டும் நினைதலை மிகச் சிறிய பொழுதேனும் நீக்கி அமைதியாக இருப்போம், எனக் கூறுகிறாய்.

வழங்குபவர் கொடுத்த கூலியாகிய சிறு உணவை இடையறவின்றிப் பாதுகாத்து உண்டு, நீரில் வாழும் முதலை கொட்டாவி விட்டாற்போன்ற பாயால் வேயப்பட்ட அறுத்து அமைத்த வாயையுடைய வண்டியில், இது எம் ஊர் எனச் சொல்லுதல் இல்லாத இடையூறு இல்லாத வாழ்க்கை உடையவராய் பாலை நிலத்தில் வந்து வெப்பத்தினால் உண்டான வருத்தத்தை மரத்தடியில் தங்கி நீக்கி, இசையின் இனிமை பொருந்திய தெளிந்த ஒளியையுடைய கிணை என்னும் முரசு முழங்க, காண்பதற்கு அழகாக உள்ள குவித்த கொத்துக்களையுடைய எருக்கின் நெருங்கிய பூக்களால் தொடுத்த மலர்ச்சரங்கள் ஆடவர்களின் தலையை அழுகுறுத்த, விறகுகள் எரிவதால் முழங்கும் தீயின் ஒளியுடைய காட்டில் உள்ள ஆவிரைச் செடியின் விளங்கும் பூக்களால் தொடுத்த மாலைகள் பெண்களின் நிறமிக்க மார்பின்கண் அழகிய முலைகளில் கிடந்து அசைய, செறிந்த நடையையுடைய பெண் யானையுடன் களிற்று யானை ஒன்றுகூடி பிளிறினாற்போல் குறிய தூம்பும் நெடிய தூம்பும் முழவுடன் இசைப்ப, கரிய முகில்கள் இடிக்கும்பொழுது நீரின்கண் ஒலிக்கும் தேரையின் ஒலியை ஒக்க தாளம் அமைத்து, சிறியவாகிய அரித்து ஒலிக்கும் சிறிய பல இசைக்கருவிகளுடன் பல ஊர்களுக்கும் சென்று ஆடி, விரைந்து தலைப்பினைச் சேர்த்துக் கட்டிய பல தொகுதியாகிய இசைக்கருவிகளையுடைய பையை உடையவர்களாகிய மிகப்பெரிய சுற்றத்தினையுடைய கூத்தர்கள், சென்று விட்ட மன்றகளைப் பின் நாளில் காணின், ஆரவாரமுடைய பண்டைய ஊரில் உள்ளவர்களுக்கு துன்பம் உண்டாகும்.

அத்தகைய துன்பத்தை மாலை நேரம் அடைந்துள்ளோம்.  அதனால், நம் தலைவர் செய்த காதல் நினைவுகள் நீள்வதன்றி மறத்தல் இயலுமோ?  இயலாது.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு ‘எஞ்சியோர்க்கும் எஞ்சுதல் இலவே’ (தொல்காப்பியம், அகத்திணையியல் 42) என வரும் விதி கொள்க.  அறைவாய்ச் சகடம் (7) – ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – ஒலியினைச் செய்யும் வாயினுடைய வண்டி, பொ. வே. சோமசுந்தரனார் உரை – அறுத்து அமைத்த வாயையுடைய சகடம்.  பெரும்பாணாற்றுப்படை 50 – பொ. வே. சோமசுந்தரனார் உரை – ‘அறைத்துச் செல்லும் வாயையுடைய’ எனினுமாம், ‘வாய் அறை சகடம் என மாறி வழியை அறுத்துச் செல்லும் சகடம்’ எனினுமாம்.  சகடத்து (7) – ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – சகடத்துச் செல்லும் என விரித்துச் செல்லும் வாழ்க்கையராய் என இயைக்க.  இரும்பேர் ஒக்கல் – நச்சினார்க்கினியர் உரை, பொ. வே. சோமசுந்தரனார் உரை – பொருநராற்றுப்படை 61, சிறுபாணாற்றுப்படை 139, 144, பெரும்பாணாற்றுப்படை 25, 470, மலைபடுகடாம் 157 – கரிய பெரிய சுற்றம், ஒளவை துரைசாமி உரை – புறநானூறு பாடல்கள் 69, 150, 370, 378, 390, 391, 393, 394, 396 – மிக்க பெரிய சுற்றத்தார், மிகப் பெரிய சுற்றம், புறநானூறு 320 – கரிய பெரிய சுற்றத்தார், பொ. வே. சோமசுந்தரனார் உரை, ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – அகநானூறு 301 – மிகப் பெரிய சுற்றத்தார்.  நனி – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3). சிறு நனி – அணி மாண் சிறுபுறம் காண்கம், அகநானூறு 261 – சிறு நனி ஏகு, அகநானூறு 301 – பிரிந்தோர் உள்ளுபு நினைதல் சிறு நனி ஆன்றிகம், ஐங்குறுநூறு 180 – சிறு நனி வரைந்தனை கொண்மோ, கலித்தொகை 12 – சிறு நனி நீ துஞ்சி ஏற்பினும், புறநானூறு 247 – சிறு நனி தமியள் ஆயினும் இன்னுயிர் நடுங்கும், புறநானூறு 376 – அந்தி சிறு நனி பிறந்த பின்றை, புறநானூறு 381 – சிறு நனி ஒருவழிப் படர்க என்றோனே.

சொற்பொருள்:  வறன் உறு செய்யின் வாடுபு வருந்திப் படர் மிகப் பிரிந்தோர் உள்ளுபு நினைதல் சிறு நனி ஆன்றிகம் – வறட்சியுற்ற காலத்தில் வறண்ட வயல் போல் வருந்தி மிகவும் துன்புற்று நம்மைப் பிரிந்த தலைவரை மீண்டும் மீண்டும் நினைதலை மிகச் சிறிய பொழுதேனும் நீக்கி அமைதியாக இருப்போம், என்றி – எனக் கூறுகிறாய் (முன்னிலை ஒருமை), தோழி – தோழி, நல்குநர் ஒழித்த கூலிச் சில்பதம் ஒடிவை இன்றி ஓம்பாது உண்டு – வழங்குபவர் கொடுத்த கூலியாகிய சிறு உணவை இடையறவின்றிப் பாதுகாத்து உண்டு, நீர் வாழ் முதலை ஆவித்தன்ன ஆரை வேய்ந்த அறைவாய்ச் சகடத்து – நீரில் வாழும் முதலை கொட்டாவி விட்டாற்போன்ற பாயால் வேயப்பட்ட அறுத்து அமைத்த வாயையுடைய வண்டியில், ஊர் இஃது என்னாஅர் ஊறு இல் வாழ்க்கை சுரமுதல் வருத்தம் மரமுதல் வீட்டி – இது எம் ஊர் எனச் சொல்லுதல் இல்லாத இடையூறு இல்லாத வாழ்க்கை உடையவராய் பாலை நிலத்தில் வந்து வெப்பத்தினால் உண்டான வருத்தத்தை வருத்தத்தை மரத்தடியில் தங்கி நீக்கி (என்னாஅர் – அளபெடை), பாடு இன் தெண் கிணை கறங்க – இசையின் இனிமை பொருந்திய தெளிந்த ஒளியையுடைய கிணை என்னும் முரசு முழங்க, காண்வரக் குவி இணர் எருக்கின் ததர் பூங்கண்ணி ஆடூஉச் சென்னித் தகைப்ப – காண்பதற்கு அழகாக உள்ள குவித்த கொத்துக்களையுடைய எருக்கின் நெருங்கிய பூக்களால் தொடுத்த மலர்ச்சரங்கள் ஆடவர்களின் தலையை அழுகுறுத்த (ஆடூஉ – அளபெடை), மகடூஉ முளரித் தீயின் முழங்கு அழல் விளக்கத்துக் களரி ஆவிரைக் கிளர் பூங்கோதை வண்ண மார்பின் வன முலைத் துயல்வர – விறகுகள் எரிவதால் முழங்கும் தீயின் ஒளியுடைய காட்டில் உள்ள ஆவிரைச் செடியின் விளங்கும் பூக்களால் தொடுத்த மாலைகள் பெண்களின் நிறமிக்க மார்பின்கண் அழகிய முலைகளில் கிடந்து அசைய (மகடூஉ – அளபெடை), செறி நடைப் பிடியொடு களிறு புணர்ந்து என்னக் குறு நெடுந்தூம்பொடு முழவுப் புணர்ந்து இசைப்ப – செறிந்த நடையையுடைய பெண் யானையுடன் களிற்று யானை ஒன்றுகூடி பிளிறினாற்போல் குறிய தூம்பும் நெடிய தூம்பும் முழவுடன் இசைப்ப (என்ன – உவமப்பொருள் தரும் சொல்), கார் வான் முழக்கின் நீர் மிசைத் தெவுட்டும் தேரை ஒலியின் மானச் சீர் அமைத்து – கரிய முகில்கள் இடிக்கும்பொழுது நீரின்கண் ஒலிக்கும் தேரையின் ஒலியை ஒக்க தாளம் அமைத்து (மான – உவம உருபு), சில் அரி கறங்கும் சிறு பல் இயத்தொடு பல்லூர் பெயர்வனர் ஆடி – சிறியவாகிய அரித்து ஒலிக்கும் சிறிய பல இசைக்கருவிகளுடன் பல ஊர்களுக்கும் சென்று ஆடி, ஒல்லெனத் தலைப் புணர்த்து அசைத்த பல் தொகைக் கலப்பையர் இரும்பேர் ஒக்கல் கோடியர் – விரைந்து தலைப்பினைச் சேர்த்துக் கட்டிய பல தொகுதியாகிய இசைக்கருவிகளையுடைய பையை உடையவர்களாகிய மிகப்பெரிய சுற்றத்தினையுடைய கூத்தர்கள் (இரும்பேர் – ஒருபொருட்பன்மொழி), இறந்த புன்தலை மன்றங் காணின் வழிநாள் – சென்று விட்ட மன்றகளைப் பின் நாளில் காணின், அழுங்கல் மூதூர்க்கு இன்னாது ஆகும் – ஆரவாரமுடைய பண்டைய ஊரில் உள்ளவர்களுக்கு துன்பம் உண்டாகும், அதுவே மருவினம் மாலை – அத்தகைய துன்பத்தை மாலை நேரம் அடைந்துள்ளோம், அதனால் – அதனால், காதலர் செய்த காதல் நீடின்று மறத்தல் கூடுமோ மற்றே – நம் தலைவர் செய்த காதல் நினைவுகள் நீள்வதன்றி மறத்தல் இயலுமோ (மற்றே – மற்று, ஏ அசைநிலைகள்)

அகநானூறு 302, மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார், குறிஞ்சித் திணைதோழி தலைவியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
சிலம்பில் போகிய செம்முக வாழை
அலங்கல் அம் தோடு அசைவளி உறுதொறும்,
பள்ளி யானைப் பரூஉப்புறம் தைவரும்
நல் வரை நாடனொடு அருவி ஆடியும்,
பல்லிதழ் நீலம் படுசுனைக் குற்றும்,  5
நறுவீ வேங்கை இன வண்டு ஆர்க்கும்
வெறி கமழ் சோலை நயந்து விளையாடலும்
அரிய போலும் காதலம் தோழி!
இருங்கல் அடுக்கத்து என் ஐயர் உழுத
கரும்பு எனக் கவினிய பெருங்குரல் ஏனல்,  10
கிளிபட விளைந்தமை அறிந்தும் “செல்க” என
நம் அவண் விடுநள் போலாள், கைம்மிகச்
சில் சுணங்கு அணிந்த, செறிந்து வீங்கு இளமுலை,
மெல்லியல் ஒலிவரும் கதுப்பொடு,
பல் கால் நோக்கும், அறன் இல் யாயே.  15

பாடல் பின்னணி:  பகற்குறிக்கண் வந்த தலைவன் இற்செறிப்பை அறியும்பொருட்டு, அவன் கேட்பத் தலைவிக்குச் சொல்லுவாளாய்த் தோழி கூறியது.  வரைவு கடாயது.

பொருளுரை:  அன்பு மிக்க தோழி!  மலையின்கண் நீண்டு வளர்ந்துள்ள செவ்வாழையின் அசையும் அழகிய இலைகள் அசையும் காற்று வந்து மோதுந்தோறும், அருகில் படுத்து உறங்கும் யானைகளின் பெரிய முதுகைத் தடவும், நல்ல மலை நாட்டினையுடைய நம் தலைவனுடன், அருவியில் விளையாடியும், பல இதழ்களையுடைய நீல மலர்களை அங்குள்ள சுனைகளில் பறித்தும், நறுமண மலர்களையுடைய வேங்கை மரங்களில் வண்டுகளின் கூட்டம் ஒலிக்கும் மணம் கமழும் சோலையின்கண் விரும்பி விளையாடியும் இன்புற்றன, இனி அரியவாகும் போலும்.

பெரிய கற்களையுடைய பக்க மலையில் என் அண்ணன்மார் உழுத இடத்தில் கரும்பு போல் திரண்ட அழகுற்ற பெரிய பெரிய தினைக்கொத்துகள் கிளிகள் வந்து கொய்யும்படி முதிர்ந்தமையை அறிந்தும், செல்வீராக என்று காவல் காக்க நம்மை அங்கு போக விடுவாள் போன்று இல்லாளாய் உள்ளாள், தன் இயல்புக்கு மாறாக மிகைபடும்படி உள்ள சில தேமலை உடைய நெருங்கிய பெருத்த இள முலைகளை மென்மையான அடர்ந்த கூந்தலொடு பல முறை நோக்கும், அறம் இல்லாத நம் தாய்.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு ‘நாற்றமும் தோற்றமும்’ (தொல்காப்பியம், களவியல் 23) என வரும் நூற்பாவின்கண் ‘அனை நிலை வகையான் வரைதல் வேண்டினும்’ என வரும் விதி கொள்க.  கைம்மிக (12) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – தன் இயல்பிற்கு மாறாக மிகைப்படும்படி, ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – அழகு மிக.  ஆடி – யாறும் குளனும் காவும் ஆடி பதி இகந்து (தொல்காப்பியம், கற்பியல் 50).

சொற்பொருள்:  சிலம்பில் போகிய செம்முக வாழை அலங்கல் அம் தோடு அசைவளி உறுதொறும் – மலையின்கண் நீண்டு வளர்ந்துள்ள செவ்வாழையின் அசையும் அழகிய இலைகள் அசையும் காற்று வந்து மோதுந்தோறும், பள்ளி யானைப் பரூஉப்புறம் தைவரும் – அருகில் படுத்து உறங்கும் யானைகளின் பெரிய முதுகைத் தடவும், நல் வரை நாடனொடு – நல்ல மலை நாட்டினையுடைய நம் தலைவனுடன் (பரூஉ – அளபெடை), அருவி ஆடியும் பல்லிதழ் நீலம் படுசுனைக் குற்றும் நறுவீ வேங்கை இன வண்டு ஆர்க்கும் வெறி கமழ் சோலை நயந்து விளையாடலும் அரிய போலும் – அருவியில் விளையாடியும் பல இதழ்களையுடைய நீல மலர்களை அங்குள்ள சுனைகளில் பறித்தும் நறுமண மலர்களையுடைய வேங்கை மரங்களில் வண்டுகளின் கூட்டம் ஒலிக்கும் மணம் கமழும் சோலையின்கண் விரும்பி விளையாடுதலும் இனி அரியவாகும் போலும் (பல்லிதழ் – அகரம் கெட்டுக் ‘குறியதன் முன்னர்த் தன்னுரு இரட்டலும்’ (தொல்காப்பியம், எழுத்ததிகாரம் 160) என்றதனால் லகரம் இரட்டித்துப் பல்லிதழ் என முடிந்தது), காதலம் தோழி – அன்பு மிக்க தோழி, இருங்கல் அடுக்கத்து என் ஐயர் உழுத கரும்பு எனக் கவினிய பெருங்குரல் ஏனல் கிளிபட விளைந்தமை அறிந்தும் – பெரிய கற்களையுடைய பக்க மலையில் என் அண்ணன்மார் உழுத இடத்தில் கரும்பு போல் திரண்ட அழகுற்ற பெரிய பெரிய தினைக்கொத்துகள் கிளிகள் வந்து கொய்யும்படி முதிர்ந்தமையை அறிந்தும், செல்க என நம் அவண் விடுநள் போலாள் – செல்வீராக என்று காவல் காக்க நம்மை அங்கு போக விடுவாள் போன்று இல்லாளாய் உள்ளாள், கைம்மிகச் சில் சுணங்கு அணிந்த செறிந்து வீங்கு இளமுலை மெல்லியல் ஒலிவரும் கதுப்பொடு பல் கால் நோக்கும் – தன் இயல்புக்கு மாறாக மிகைபடும்படி உள்ள சில தேமலை உடைய நெருங்கிய பெருத்த இள முலைகளை மென்மையான அடர்ந்த கூந்தலொடு பல முறை நோக்கும், அறன் இல் யாயே – அறம் இல்லாத நம் தாய் (அறன் – அறம் என்பதன் போலி, யாயே – ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 303, ஔவையார், பாலைத் திணைதலைவி தன் நெஞ்சிடம் சொன்னது
இடை பிறர் அறிதல் அஞ்சி, மறை கரந்து,
பேஎய் கண்ட கனவின், பன் மாண்
நுண்ணிதின் இயைந்த காமம் வென்வேல்
மறமிகு தானைப் பசும்பூண் பொறையன்
கார் புகன்றெடுத்த சூர் புகல் நனந்தலை  5
மா இருங்கொல்லி உச்சித் தாஅய்த்,
ததைந்து செல் அருவியின் அலர் எழப் பிரிந்தோர்
புலம் கந்தாக இரவலர் செலினே,
வரை புரை களிற்றொடு நன்கலன் ஈயும்
உரை சால் வண் புகழ்ப் பாரி பறம்பின்  10
நிரை பறைக் குரீஇ இனம் காலைப் போகி,
முடங்கு புறச் செந்நெல் தரீஇயர் ஓராங்கு
இரை தேர் கொட்பினவாகிப் பொழுதுபடப்
படர் கொள் மாலைப் படர்தந்தாங்கு,
வருவர் என்று உணர்ந்த மடங்கெழு நெஞ்சம்  15
ஐயந்தெளியரோ நீயே, பலவுடன்
வறன் மரம் பொருந்திய சிள்வீடு உமணர்
கண நிரை மணியின் ஆர்க்கும் சுரன் இறந்து,
அழிநீர் மீன் பெயர்ந்தாங்கு அவர்
வழிநடைச் சேறல் வலித்திசின் யானே.  20

பாடல் பின்னணி:  தலைவன் பிரிவின்கண் வேட்கை கொண்டுத் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. 

பொருளுரை:  நம்மிடை நிகழ்ந்தவற்றைப் பிறர் அறிதல் அஞ்சி, மறைத்ததை வெளிப்படுத்தாது அடக்கி, பேய் கண்ட கனவைப் போல் பல மாண்புகளுடன் நுட்பமாகப் பொருந்திய காதல், வெற்றி வேலினையும் மறம் பொருத்திய தானையையும் உடைய  பசிய அணிகலன்களை அணிந்த சேரனின் முகில்கள் தங்குவதற்கு விரும்பி எடுத்த கடவுள் விரும்பி உறையும் அகன்ற இடங்களையுடைய, மிகப் பெரிய கொல்லி மலையின் உச்சியில் பரவி, செறிந்து வீழும் அருவியின் ஒலி போன்று, அலர் எழுமாறு நம்மைப் பிரிந்து சென்ற நம் தலைவர்,

அறிவு பற்றுக்கோடாகப் பரிசில் வேண்டுபவர்கள் சென்றால், மலை போன்ற களிற்று யானைகளுடன் நல்ல அணிகலன்களையும் ஈயும் உரைத்தல் சிறப்பு அமைந்த வளவிய புகழையுடைய பாரியின் பறம்பு மலையில், வரிசையாகப் பறக்கும் குருவியின் கூட்டம் காலையில் சென்று வளைந்த புறத்தையுடைய சிவந்த நெற்கதிர்களைக் கொண்டுவரும் பொருட்டு, ஒருசேர அந்நெற்கதிர்கள் உள்ள இடத்தை ஆராய்ந்து திரிதலை உடையனவாகி கதிரவன் மறைய, துன்பத்தைத் தரும் மாலை நேரத்தில் மீண்டு வந்தாற்போல், அவர் மீண்டு வருவார் என்று எண்ணிய அறியாமையுடைய நெஞ்சே!  உன் ஐயத்தை நீக்கி தெளிவு அடைவாயாக! 

 பலவும் ஒன்றுசேர்ந்து, வற்றிய மரத்தைப் பொருந்திய சிள்வீடு என்னும் வண்டுகள் உப்பு வணிகர்களின் கூட்டமான எருதுகளின் மணியொலி போல் ஒலிக்கும், பாலைநில வழிகளைக் கடந்து, நீர் வற்றிய வேளையில் மீன்கள் நீரைத் தேடி சென்றாற்போல், அவர் சென்ற வழியில் செல்லுவதற்கு யான் துணிந்துள்ளேன்.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு ‘எஞ்சியோர்க்கும் எஞ்சுதல் இலவே’ (தொல்காப்பியம், அகத்திணையியல் 42) என வரும் விதி கொள்க.  பேஎய் கண்ட கனவின் (2) – ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – பேய் தான் கண்ட கனவினைக் கூறாதது போல, பொ. வே. சோமசுந்தரனார் உரை – பேயைக் கண்ட கனவினைப் பிறரிடம் கூறாமல் மறைப்பது போல.   அழிநீர் (19) – ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – வற்றும் நீர், பொ. வே. சோமசுந்தரனார் உரை – வடிகின்ற நீர்.  வரலாறு – பசும்பூண் பொறையன், கொல்லி மலை, பாரி, பறம்பு மலை.  சின் – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம், இடையியல் 26, சின் என்பது இசின் என்பதன் முதற்குறை – ச. பாலசுந்தரம் உரை), அவற்றுள், இகுமும் சின்னும் ஏனை இடத்தொடும் தகு நிலை உடைய என்மனார் புலவர் (தொல்காப்பியம், இடையியல் 27).  நனந்தலை – அகன்ற இடம், நனம் – நனவே களனும் அகலமும் செய்யும் (தொல்காப்பியம், உரியியல் 80).

சொற்பொருள்:  இடை பிறர் அறிதல் அஞ்சி மறை கரந்து – நம்மிடை நிகழ்ந்தவற்றைப் பிறர் அறிதல் அஞ்சி மறைத்ததை வெளிப்படுத்தாது அடக்கி, பேஎய் கண்ட கனவின் – பேய் கண்ட கனவைப் போல் (பேஎய் – அளபெடை), பன் மாண் நுண்ணிதின் இயைந்த காமம் – பல மாண்புகளுடன் நுட்பமாகப் பொருந்திய காதல், வென்வேல் மறமிகு தானைப் பசும்பூண் பொறையன் கார் புகன்று எடுத்த சூர் புகல் நனந்தலை மா இருங்கொல்லி உச்சித் தாஅய் – வெற்றி வேலினையும் மறம் பொருத்திய தானையையும் உடைய  பசிய அணிகலன்களை அணிந்த சேரனின் முகில்கள் தங்குவதற்கு விரும்பி எடுத்த கடவுள் விரும்பி உறையும் அகன்ற இடங்களையுடைய மிகப் பெரிய கொல்லி மலையின் உச்சியில் பரவி (தாஅய் – அளபெடை), ததைந்து செல் அருவியின் – செறிந்து வீழும் அருவியின் ஒலி போன்று (அருவியின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), அலர் எழப் பிரிந்தோர் – அலர் எழுமாறு நம்மைப் பிரிந்து சென்ற நம் தலைவர், புலம் கந்தாக இரவலர் செலினே வரை புரை களிற்றொடு நன்கலன் ஈயும் உரை சால் வண் புகழ்ப் பாரி பறம்பின் – அறிவு பற்றுக்கோடாகப் பரிசில் வேண்டுபவர்கள் சென்றால் மலை போன்ற களிற்று யானைகளுடன் நல்ல அணிகலன்களையும் ஈயும் உரைத்தல் சிறப்பு அமைந்த வளவிய புகழையுடைய பாரியின் பறம்பு மலையில், நிரை பறைக் குரீஇ இனம் காலைப் போகி முடங்கு புறச் செந்நெல் தரீஇயர் – வரிசையாகப் பறக்கும் குருவியின் கூட்டம் காலையில் சென்று வளைந்த புறத்தையுடைய சிவந்த நெற்கதிர்களைக் கொண்டுவரும் பொருட்டு (குரீஇ – அளபெடை, தரீஇயர் – அளபெடை), ஓராங்கு இரை தேர் கொட்பினவாகிப் பொழுதுபடப் படர் கொள் மாலைப் படர்தந்தாங்கு – ஒருசேர அந்நெற்கதிர்கள் உள்ள இடத்தை ஆராய்ந்து திரிதலை உடையனவாகி கதிரவன் மறைய துன்பத்தைத் தரும் மாலை நேரத்தில் மீண்டு வந்தாற்போல், வருவர் என்று உணர்ந்த மடங்கெழு நெஞ்சம் – அவர் மீண்டு வருவார் என்று எண்ணிய அறியாமையுடைய நெஞ்சே, ஐயம் தெளியரோ நீயே – உன் ஐயத்தை நீக்கி தெளிவு அடைவாயாக, பலவுடன் – பலவும் ஒன்றுசேர்ந்து, வறன் மரம் பொருந்திய சிள்வீடு உமணர் கண நிரை மணியின் ஆர்க்கும் – வற்றிய மரத்தைப் பொருந்திய சிள்வீடு என்னும் வண்டுகள் உப்பு வணிகர்களின் கூட்டமான எருதுகளின் மணியொலி போல் ஒலிக்கும், சுரன் இறந்து – பாலைநில வழிகளைக் கடந்து (சுரன் – சுரம் என்பதன் போலி), அழிநீர் மீன் பெயர்ந்தாங்கு – நீர் வற்றிய வேளையில் மீன்கள் நீரைத் தேடி சென்றாற்போல், அவர் வழிநடைச் சேறல் வலித்திசின் யானே – அவர் சென்ற வழியில் செல்லுவதற்கு யான் துணிந்துள்ளேன் (வலித்திசின் – சின் – தன்மை அசைச் சொல், யானே – ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 304, இடைக்காடனார், முல்லைத் திணைதலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது
இரு விசும்பு இவர்ந்த கருவி மா மழை
நீர் செறி நுங்கின் கண் சிதர்ந்தவை போல்,
சூர்ப் பனிப்பன்ன தண்வரல் ஆலியொடு
பரூஉப் பெயல் அழிதுளி தலைஇ வான் நவின்று,
குரூஉத் துளி பொழிந்த பெரும் புலர் வைகறை,  5
செய்து விட்டன்ன செந்நில மருங்கில்
செறித்து நிறுத்தன்ன தெள் அறல் பருகிச்
சிறு மறி தழீஇய தெறி நடை மடப் பிணை
வலந்திரி மருப்பின் அண்ணல் இரலையொடு
அலங்கு சினைக் குருந்தின் அல்கு நிழல் வதியச், 10
சுரும்பு இமிர்பு ஊதப், பிடவுத் தளை அவிழ,
அரும் பொறி மஞ்ஞை ஆல வரி மணல்
மணிமிடை பவளம் போல, அணிமிகக்
காயாஞ்செம்மல் தாஅய்ப், பலவும்
ஈயல் மூதாய் ஈர்ம் புறம் வரிப்பப்  15
புலன் அணி கொண்ட கார் எதிர் காலை
‘ஏந்து கோட்டு யானை வேந்தன் பாசறை
வினையொடு வேறு புலத்து அல்கி நன்றும்
அறவர் அல்லர் நம் அருளாதோர்’ என,
நம் நோய் தன்வயின் அறியாள்,  20
எம் நொந்து புலக்கும் கொல் மாஅயோளே?

பாடல் பின்னணி:  பாசறைக்கண் தலைவன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.  

பொருளுரை:  பெரிய வானில் பரவிய இடி மின்னல் முதலிய தொகுதிகளையுடைய முகில்கள், நீர் நிறைந்த நுங்கின் கண்கள் சிதறி விழுந்தவை போல் தோன்றும், அச்சம்தரும் கடவுள் நடுக்கஞ் செய்வது போல் நடுங்கச்செய்யும் குளிர்ச்சி பொருந்திய பனிக்கட்டிகளுடன், பருத்த மழையாகிய மிக்க துளிகளைப் பொருந்தி, வானத்தில் பயின்று நிறமுடைய துளிகளைப் பொழிந்த, இருள் மிகவும் புலர்ந்த விடியற்காலையில்,

ஓவியன் தீட்டினாற்போல் தோன்றும் சிவந்த நிலத்தில், நிரப்பிச் சேர்த்து வைத்தாற்போன்ற தெளிந்த அறல்பட்ட நீரைப் பருகித் தன் சிறிய குட்டியைத் தழுவிய துள்ளும் நடையையுடை பெண்மான், வலப்பக்கம் திரிந்த கொம்பினையுடைய தன் கலைமானுடன் அசையும் கிளைகளையுடைய குருந்த மரத்தின் பொருந்திய நிழலில் தங்கியிருக்க, வண்டுகள் ஒலித்து ஊதுவதால் பிடவத்தின் அரும்புகள் மலர, அரிய புள்ளிகளையுடைய மயில்கள் ஆட, வரிவரியாக உள்ள மணலில் நீலமணியுடன் கலந்த பவளம் போல் அழகு மிகுந்த காயாவின் உதிர்ந்த பூக்களும் தம்பலப்பூச்சிகள் பலவும் சேரப் பரவி ஈரமான இடத்தை அழகு செய்ய, காடு அழகு கொண்ட கார்காலம் தோன்றிய பொழுதில்,

‘உயர்ந்த மருப்பினையுடைய (தந்தங்களையுடைய) யானைகளையுடைய வேந்தனின் பாசறையில் வினையால் வேறு நாட்டில் தங்கி நமக்கு அருள் செய்யாதவர் பெரிதும் அறமுடையவர் அல்லர்’ எனக் கருதி, நம் துன்ப நோயை அறியாளவளாய், எம்மை நொந்து வெறுப்பாளோ, மாமை நிறம் பொருந்திய நம் தலைவி?

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு ‘ஒன்றாத் தமரினும்’ (தொல்காப்பியம், அகத்திணையியல் 41) என வரும் நூற்பாவின்கண் ‘பாசறைப் புலம்பலும்’ என வரும் விதி கொள்க.  கருவி மா மழை (1) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – மின்னல் முதலிய தொகுதியை உடையை கரிய முகில்கள்.  செய்து விட்டன்ன செந்நில மருங்கில் (6) – ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – செவ்வண்ணம் தீட்டி வைத்தாற் போன்ற சிவந்த நிலத்திடத்தே, பொ. வே. சோமசுந்தரனார் உரை – சிற்பக்கலை வல்லான் ஒருவன் செய்து போகட்டாற் போன்று தோன்றுகின்ற இச்செம்மண் நிலத்தின்கண். மூதாய் வரிப்ப – அகநானூறு 14 – ஈயல் மூதாய் வரிப்ப, அகநானூறு 74 – செம் மூதாய் பெருவழி மருங்கில் சிறு பல வரிப்ப, அகநானூறு 283 – மூதாய் தண் நிலம் வரிப்ப, அகநானூறு 304 – ஈயல் மூதாய் ஈர்ம் புறம் வரிப்ப.  மூதாய் – தம்பலப்பூச்சி, இந்திரகோபம், பட்டுப்பூச்சி, trombidium grandissimum.  சிறிய சிவந்த நிறமுடைய பூச்சிகள் இவை.  நிலத்தில் தவழ்வன.  வெல்வெட் போன்ற மேல்பகுதியைக் கொண்டவை.  மழைக்காலத்தில் இவற்றைக் காணலாம்.  இவை உள்ள பாடல்கள் – அகநானூறு 14, 54, 74, 134, 139, 283, 304, 374, கலித்தொகை 85, நற்றிணை 362.  கருவி – கருவி தொகுதி (தொல்காப்பியம், உரியியல் 58). 

சொற்பொருள்:  இரு விசும்பு இவர்ந்த கருவி மா மழை – பெரிய வானில் பரவிய இடி மின்னல் முதலிய தொகுதிகளையுடைய முகில்கள், நீர் செறி நுங்கின் கண் சிதர்ந்தவை போல் சூர்ப் பனிப்பு அன்ன தண்வரல் ஆலியொடு – நீர் நிறைந்த நுங்கின் கண்கள் சிதறி விழுந்தவை போல் தோன்றும் அச்சம்தரும் கடவுள் நடுக்கஞ் செய்வது போல் நடுங்கச்செய்யும் குளிர்ச்சி பொருந்திய பனிக்கட்டிகளுடன், பரூஉப் பெயல் அழிதுளி தலைஇ வான் நவின்று குரூஉத் துளி பொழிந்த – பருத்த மழையாகிய மிக்க துளிகளைப் பொருந்தி வானத்தில் பயின்று நிறமுடைய துளிகளைப் பொழிந்த (பரூஉ – அளபெடை, தலைஇ – அளபெடை, குரூஉ – அளபெடை), பெரும் புலர் வைகறை – இருள் மிகவும் புலர்ந்த விடியற்காலையில், செய்து விட்டன்ன செந்நில மருங்கில் – ஓவியன் தீட்டினாற்போல் தோன்றும் சிவந்த நிலத்தில், செறித்து நிறுத்தன்ன தெள் அறல் பருகிச் சிறு மறி தழீஇய தெறி நடை மடப் பிணை வலந்திரி மருப்பின் அண்ணல் இரலையொடு அலங்கு சினைக் குருந்தின் அல்கு நிழல் வதிய – நிரப்பிச் சேர்த்து வைத்தாற்போன்ற தெளிந்த அறல்பட்ட நீரைப் பருகித் தன் சிறிய குட்டியைத் தழுவிய துள்ளும் நடையையுடை பெண்மான் வலப்பக்கம் திரிந்த கொம்பினையுடைய தன் கலைமானுடன் அசையும் கிளைகளையுடைய குருந்த மரத்தின் பொருந்திய நிழலில் தங்கியிருக்க (தழீஇய – அளபெடை, அறல் நீர் – அறுத்துச் செல்லும் நீர், குருந்த மரம் – wild orange tree, citrus indica), சுரும்பு இமிர்பு ஊதப் பிடவுத் தளை அவிழ அரும் பொறி மஞ்ஞை ஆல – வண்டுகள் ஒலித்து ஊதுவதால் பிடவத்தின் அரும்புகள் மலர அரிய புள்ளிகளையுடைய மயில்கள் ஆட, வரி மணல் மணிமிடை பவளம் போல அணிமிகக் காயாஞ்செம்மல் தாஅய்ப் பலவும் ஈயல் மூதாய் ஈர்ம் புறம் வரிப்ப – வரிவரியாகஉள்ள மணலில் நீலமணியுடன் கலந்த பவளம் போல் அழகு மிகுந்த காயாவின் உதிர்ந்த பூக்களும் தம்பலப்பூச்சிகள் பலவும் சேரப் பரவி ஈரமான இடத்தை அழகு செய்ய (தாஅய் – அளபெடை), புலன் அணி கொண்ட கார் எதிர் காலை – காடு அழகு கொண்ட கார்காலம் தோன்றிய பொழுதில், ஏந்து கோட்டு யானை வேந்தன் பாசறை வினையொடு வேறு புலத்து அல்கி நன்றும்  அறவர் அல்லர் நம் அருளாதோர் என – ‘உயர்ந்த மருப்பினையுடைய (தந்தங்களையுடைய) யானைகளையுடைய வேந்தனின் பாசறையில் வினையால் வேறு நாட்டில் தங்கி நமக்கு அருள் செய்யாதவர் பெரிதும் அறமுடையவர் அல்லர்’ எனக் கருதி, நம் நோய் தன்வயின் அறியாள் – நம் துன்ப நோயை அறியாளவளாய், எம் நொந்து புலக்கும் கொல் – எம்மை நொந்து வெறுப்பாளோ, மாஅயோளே – மாமை நிறம் பொருந்திய நம் தலைவி, மாந்தளிர் நிறம் பொருந்திய நம் தலைவி (எம் – தன்மைப் பன்மை, மாஅயோளே – அளபெடை, ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 305, வடம வண்ணக்கன் பேரி சாத்தனார், பாலைத் திணைதலைவி தோழியிடம் சொன்னது அல்லது தோழி தலைவியிடம் சொன்னது
பகலினும் அகலாதாகி, யாமம்
தவல் இல் நீத்தமொடு ஐயெனக் கழியத்,
தளி மழை பொழிந்த தண்வரல் வாடையொடு
பனி மீக்கூரும் பைதல் பானாள்
பல்படை நிவந்த வறுமை இல்சேக்கை,  5
பருகுவன்ன காதலொடு திருகி
மெய் புகுவன்ன கை கவர் முயக்கத்து
ஓருயிர் மாக்களும் புலம்புவர் மாதோ,
அருள் இலாளர் பொருள்வயின் அகல
எவ்வம் தாங்கிய இடும்பை நெஞ்சத்து  10
யான் எவன் உளனோ தோழி, தானே
பராரைப் பெண்ணைச் சேக்கும் கூர்வாய்
ஒரு தனி அன்றில் உயவுக் குரல் கடைஇய,
உள்ளே கனலும் உள்ளம் மெல்லெனக்
கனை எரி பிறப்ப ஊதும் 15
நினையா மாக்கள் தீங்குழல் கேட்டே?

பாடல் பின்னணி:  (1) பிரிவு உணர்த்திய தோழியிடம் தலைவி உரைத்தது.  (2) தலைவன் பிரிவின்கண் தலைவிக்குத் தோழி சொல்லியது. 

பொருளுரை:  தோழி!  பகலிலும் நீங்காத, இரவிலும் நீங்குதல் இல்லாத வெள்ளம் காண்போர் வியக்கும்படிச் செல்லுமாறு, முகில்கள் மழையைப் பெய்தமையால், குளிர்ந்து வரும் வாடைக்காற்றால் நடுக்கம் மிகும் துன்பம் தரும் நடு இரவில், பல அடுக்கு மெத்தையால் உயர்ந்த வளம் மிகுந்த படுக்கையில், பருகுதல் போன்ற காதலுடன், மாறி ஒருவர் உடலில் ஒருவர் உடல் புகுவது போலும், கைகள் விரும்பும் தழுவலினால் இரண்டு உடல்களுக்கு ஓர் உயிர் எனத் தகும் காதலர்களும் வருந்துவர் அன்றோ!  

அருள் இல்லாத நம் தலைவர் பொருளின்பொருட்டு நீங்க, துன்பத்தைத் தாங்கிய வருத்தமுற்ற நெஞ்சத்தை உடையேன் ஆகிய யான், பருத்த அடியையுடைய பனை மரத்தில் துணையின்றித் தனியே இருக்கும் கூரிய அலகையுடைய அன்றிலின் வருத்தமுடைய குரல் மூட்டுவதால் அகத்தில் கொதிக்கும் உள்ளத்துடன், மெதுவாக மிக்க தீ உண்டாக, பிறரின் துன்பத்தை நினைக்காது ஊதும் ஆயர்களின் இனிய குழலின் ஓசையைக் கேட்டு, எவ்வாறு ஆற்றியிருப்பேன்?

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – (1) இதற்கு ‘எஞ்சியோர்க்கும் எஞ்சுதல் இலவே’ (தொல்காப்பியம், அகத்திணையியல் 42) என வரும் விதி கொள்க.  (2) – இதற்கு ‘தலைவரும் விழுமநிலை’ (தொல்காப்பியம், அகத்திணையியல் 31) என வரும் விதி கொள்க.  ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – ‘உரிப்பொருள் அல்லன மயங்கவும் பெறுமே’ (தொல்காப்பியம், அகத்திணையியல் 13) என்னுஞ் சூத்திரத்து, ‘இப்பாட்டினுள் பெருமணலுலகத்துப் பாலை வந்தது’, என்றனர் நச்சினார்க்கினியர்.  நினையா மாக்கள் (16) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – பிறரின் துன்பத்தைச் சிறிதும் நினைக்காத மாக்களாகிய ஆயர்கள், ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – சூழ்ச்சியில்லாத மாக்கள்.  கவர்வு – கவர்வு விருப்பு ஆகும் (தொல்காப்பியம், உரியியல் 66).

சொற்பொருள்:  பகலினும் அகலாது ஆகி யாமம் தவல் இல் நீத்தமொடு ஐயெனக் கழியத் தளி மழை பொழிந்த தண்வரல் வாடையொடு பனி மீக்கூரும் பைதல் பானாள் – பகலிலும் நீங்காத இரவிலும் நீங்குதல் இல்லாத வெள்ளம் காண்போர் வியக்கும்படிச் செல்லுமாறு முகில்கள் மழையைப் பெய்தமையால் குளிர்ந்து வரும் வாடைக்காற்றால் நடுக்கம் மிகும் துன்பம் தரும் நடு இரவில், பல்படை நிவந்த வறுமை இல் சேக்கை பருகுவன்ன காதலொடு திருகி மெய் புகுவன்ன கை கவர் முயக்கத்து ஓருயிர் மாக்களும் புலம்புவர் – பல அடுக்கு மெத்தையால் உயர்ந்த வளம் மிகுந்த படுக்கையில் பருகுதல் போன்ற காதலுடன் மாறி ஒருவர் உடலில் ஒருவர் உடல் புகுவது போலும் கைகள் விரும்பும் தழுவலினால் இரண்டு உடல்களுக்கு ஓர் உயிர் எனத் தகும் காதலர்களும் வருந்துவர், மாதோ – மாது ஓ அசைநிலைகள், அருள் இலாளர் பொருள்வயின் அகல – அருள் இல்லாத நம் தலைவர் பொருளின்பொருட்டு நீங்க, எவ்வம் தாங்கிய இடும்பை நெஞ்சத்து யான் எவன் உளனோ – துன்பத்தைத் தாங்கிய வருத்தமுற்ற நெஞ்சத்தை உடையேன் ஆக யான் எவ்வாறு ஆற்றியிருப்பேன், தோழி – தோழி, தானே  – தான் ஏ அசைநிலைகள், பராரைப் பெண்ணைச் சேக்கும் கூர்வாய் ஒரு தனி அன்றில் உயவுக் குரல் கடைஇய உள்ளே கனலும் உள்ளம் – பருத்த அடியையுடைய பனை மரத்தில் துணையின்றித் தனியே இருக்கும் கூரிய அலகையுடைய அன்றிலின் வருத்தமுடைய குரல் மூட்டுவதால் அகத்தில் கொதிக்கும் உள்ளத்துடன் (பராரை – பரு அரை பராரை எனப் புணர்ந்தது, கடைஇய – அளபெடை), மெல்லென – மெதுவாக, கனை எரி பிறப்ப – மிக்க தீ உண்டாக, ஊதும் நினையா மாக்கள் தீங்குழல் கேட்டே – பிறரின் துன்பத்தை நினைக்காது ஊதும் ஆயர்களின் இனிய குழலின் ஓசையைக் கேட்டு (கேட்டே – ஏகாரம் அசைநிலை )

அகநானூறு 306, மதுரை கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார், மருதத் திணை தோழி தலைவனுக்கு வாயில் மறுத்தது
பெரும் பெயர் மகிழ்ந! பேணாது அகன்மோ!
பரந்த பொய்கைப் பிரம்பொடு நீடிய
முள் கொம்பு ஈங்கைத் துய்த்தலைப் புது வீ
ஈன்ற மாத்தின் இளந்தளிர் வருட,
ஆர் குருகு உறங்கும் நீர் சூழ் வள வயல்  5
கழனிக் கரும்பின் சாய்ப் புறம் ஊர்ந்து,
பழன யாமை பசு வெயில் கொள்ளும்
நெல்லுடை மறுகின் நன்னர் ஊர!
இதுவோ மற்று நின் செம்மல்? மாண்ட
மதி ஏர் ஒண்ணுதல் வயங்கிழை ஒருத்தி,  10
இகழ்ந்த சொல்லும் சொல்லிச் சிவந்த
ஆய் இதழ் மழைக் கண் நோயுற நோக்கித்
தண் நறும் கமழ் தார் பரீஇயினள், நும்மொடு
ஊடினள், சிறு துனி செய்து எம்
மணன் மலி மறுகின் இறந்திசினோளே.  15

பாடல் பின்னணி:  தோழி தலைவனுக்கு வாயில் மறுத்தது. 

பொருளுரை:  பெரும் புகழையுடைய தலைவனே!  அகன்ற பொய்கையின் அருகில் வளரும் பிரம்புடன் முள் பொருந்திய கிளைகளையுடைய ஈங்கைச் செடியின் பஞ்சு போன்ற உச்சியையுடைய புதிய மலர்களும் புதிதாக ஈன்ற மா மரத்தின் இளம் தளிர்களும் வருட, இரையைத் தின்ற குருகு உறங்கும், நீர் சூழ்ந்த வளமான வயலின்கண் உள்ள கரும்பின் சாய்ந்த புறத்தில் ஊர்ந்து சென்று பொய்கையில் உள்ள ஆமைகள் இள வெயிலில் காயும், நெற்கூடுகள் அமைந்த தெருக்களையுடைய  நன்மையுடைய ஊரின் தலைவனே!

மாட்சிமையுடைய நிலவை ஒத்த ஒளி பொருந்திய நெற்றியையும் விளங்கும் அணிகலன்களையும் அணிந்த பரத்தை ஒருத்தி நின்னை இகழ்ந்து கூறும் சொற்களையும் சொல்லி, அதன் பின் சிவந்த அழகிய இதழ்களையுடைய தன் குளிர்ச்சியான கண்களில் துன்பம் மிக நோக்கி, நின் தண்ணிய நறுமணம் கமழும் மாலையை அறுத்து, நும்முடன் ஊடிச் சிறு கலகம் செய்து எம் மணல் நிறைந்த தெருவழியில் சென்றாள்.

இது தானா நின் தலைமைத் தன்மை?  எம்மைப் போற்றாது இங்கிருந்து செல்வீராக!

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு ‘பெறற்கு அரும் பெரும் பொருள்’ (தொல்காப்பியம், கற்பியல் 9) என வரும் நூற்பாவின்கண் ‘பிழைத்து வந்து இருந்த கிழவனை நெருங்கி இழைத்து ஆங்கு ஆக்கிக் கொடுத்தற்கண்ணும்’ என வரும் விதி கொள்க.  மோ – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம், இடையியல் 26).

சொற்பொருள்:  பெரும் பெயர் மகிழ்ந – பெரும் புகழையுடைய தலைவனே (பெரும் பெயர் – இகழ்ச்சிக்குறிப்பு, மகிழ்ந  – விளி), பேணாது அகன்மோ – எம்மைப் போற்றாது இங்கிருந்து செல்வீராக, பரந்த பொய்கைப் பிரம்பொடு நீடிய முள் கொம்பு ஈங்கைத் துய்த் தலைப் புது வீ ஈன்ற மாத்தின் இளந்தளிர் வருட – அகன்ற பொய்கையின் அருகில் வளரும் பிரம்புடன் முள் பொருந்திய கிளைகளையுடைய ஈங்கைச் செடியின் பஞ்சு போன்ற உச்சியையுடைய புதிய மலர்களும் புதிதாக ஈன்ற மா மரத்தின் இளம் தளிர்களும் வருட, ஆர் குருகு உறங்கும் – இரையைத் தின்ற குருகு உறங்கும், நீர் சூழ் வள வயல் கழனிக் கரும்பின் சாய்ப் புறம் ஊர்ந்து பழன யாமை பசு வெயில் கொள்ளும் – நீர் சூழ்ந்த வளமான வயலின்கண் உள்ள கரும்பின் சாய்ந்த புறத்தில் ஊர்ந்து சென்று பொய்கையில் உள்ள ஆமைகள் இள வெயிலில் காயும், நெல்லுடை மறுகின் நன்னர் ஊர – நெற்கூடுகள் அமைந்த தெருக்களையுடைய  நன்மையுடைய ஊரின் தலைவனே (நன்னர் – நல்ல, ஊர – அண்மை விளி), இதுவோ மற்று நின் செம்மல் – இது தானா நின் தலைமைத் தன்மை (மற்று –அசைநிலை), மாண்ட மதி ஏர் ஒண்ணுதல் வயங்கிழை ஒருத்தி இகழ்ந்த சொல்லும் சொல்லி – மாட்சிமையுடைய நிலவை ஒத்த ஒளி பொருந்திய நெற்றியையும் விளங்கும் அணிகலன்களையும் அணிந்த பரத்தை ஒருத்தி நின்னை இகழ்ந்து கூறும் சொற்களையும் சொல்லி (ஏர் – உவம உருபு), சிவந்த ஆய் இதழ் மழைக் கண் நோயுற நோக்கித் தண் நறும் கமழ் தார் பரீஇயினள் – சிவந்த அழகிய இதழ்களையுடைய குளிர்ச்சியான கண்களில் துன்பம் மிக நோக்கி நின் தண்ணிய நறுமணம் கமழும் மாலையை அறுத்தாள் (பரீஇயினள் – முற்றெச்சம், அளபெடை), நும்மொடு ஊடினள் சிறு துனி செய்து எம் மணன் மலி மறுகின் இறந்திசினோளே – நும்முடன் ஊடிச் சிறு கலகம் செய்து எம் மணல் நிறைந்த தெருவழியில் சென்றாள் (இறந்திசினோளே – இசின் படர்க்கையின் கண் வந்தது, ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 307, மதுரை ஈழத்துப் பூதன்தேவனார், பாலைத் திணை தோழி தலைவனிடம் சொன்னது
சிறு நுதல் பசந்து, பெருந்தோள் சாஅய்,
அகலெழில் அல்குல் அவ்வரி வாடப்,
பகலுங் கங்குலும் மயங்கிப் பையெனப்,
பெயல் உறு மலரின் கண் பனி வார,
ஈங்கிவள் உழக்கும் என்னாது, வினை நயந்து 5
நீங்கல் ஒல்லுமோ ஐய? வேங்கை
அடுமுரண் தொலைத்த நெடுநல் யானை
மையலங்கடாஅஞ் செருக்கி, மதஞ்சிறந்து,
இயங்குநர்ச் செகுக்கும் எய்படு நனந்தலைப்
பெருங்கை எண்கினம் குரும்பி தேரும்  10
புற்றுடைச் சுவர புதலிவர் பொதியிற்,
கடவுள் போகிய கருந்தாட் கந்தத்து
உடனுறை பழமையின் துறத்தல் செல்லாது
இரும்புறாப் பெடையொடு பயிரும்
பெருங்கல் வைப்பின் மலைமுதல் ஆறே?  15

பாடல் பின்னணி:  பிரிவு உணர்த்தப்பட்ட தோழி, தலைவனைச் செலவு விலக்கியது. 

பொருளுரை:  ஐயா!  புலியின் கொல்லும் முரண்பாட்டை அழித்த உயர்ந்த நல்ல யானை மயக்கத்தைத் தரும் மதத்தால் செருக்குற்று, முள்ளம் பன்றிகள் பொருந்திய அகன்ற காட்டிடத்தில் கரடிக்கூட்டம் புற்றாஞ்சோற்றை ஆராய்ந்து எடுக்கும் ஈயல் புற்றுக்களை உடைய, சுவர்களையுடைய புதர்கள் படர்ந்த அம்பலத்தில், கடவுள் சென்றுவிட்ட வலிய அடியையுடைய தூணில், நீண்ட காலம் உடன் உறைந்ததால், துறந்து நீங்காமல் பெரிய ஆண் புறாக்கள் தங்கள் துணையுடன் கூடி ஒலிக்கும், பெரிய கற்கள் பொருந்திய மலையடியில் உள்ள வழியில்,

சிறிய நெற்றி பசலை அடையவும் பெரிய தோள்கள் மெலியவும் அகன்ற அழகான அல்குலின் அழகிய வரிகள் வாடவும், பகலும் இரவும் மனம் கலங்கி, மெல்லென, மழை பெய்தலை ஏற்ற மலரை ஒத்த கண்களில் இருந்து கண்ணீர் வடிய இங்கு இவள் வருந்துவாள் எனக் கருதாது, பொருள் ஈட்டும் வினையை விரும்பி நீ பிரிந்து செல்லுதல் பொருந்துமோ?

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு ‘தலைவரும் விழுமநிலை’ (தொல்காப்பியம், அகத்திணையியல் 31) என வரும் விதி கொள்க.  ஒப்புமை –குரும்பி – பெரும்பாணாற்றுப்படை 277–278 – பாம்பு உறை புற்றின் குரும்பி ஏய்க்கும் பூம்புற நல் அடை, அகநானூறு 8 – ஈயல் புற்றத்து ஈர்ம் புறத்து இறுத்த குரும்பி, அகநானூறு 72 – மின்மினி மொய்த்த முரவுவாய்ப் புற்றம் பொன் எறி பிதிரின் சுடர வாங்கிக் குரும்பி கெண்டும் பெருங்கை ஏற்றை இரும்பு செய் கொல் எனத் தோன்றும், அகநானூறு 307 – பெருங்கை எண்கினம் குரும்பி தேரும் புற்றுடைச் சுவர.  கரடிகள் ஈயல் புற்றை உடைத்தல் – அகநானூறு 8, 72, 81, 88, 112, 149, 247, 257, 307, நற்றிணை 125, 325, 336.  நனந்தலை – அகன்ற இடம், நனம் – நனவே களனும் அகலமும் செய்யும் (தொல்காப்பியம், உரியியல் 80).

சொற்பொருள்:  சிறு நுதல் பசந்து பெருந்தோள் சாஅய் அகல் எழில் அல்குல் அவ்வரி வாடப் பகலும் கங்குலும் மயங்கி – சிறிய நெற்றி பசலை அடைய பெரிய தோள்கள் மெலிய அகன்ற அழகான அல்குலின் அழகிய வரிகள் வாட பகலும் இரவும் மனம் கலங்கி, பையென – மெல்லென, பெயல் உறு மலரின் கண் பனி வார ஈங்கு இவள் உழக்கும் என்னாது – மழை பெய்தலை ஏற்ற மலரை ஒத்த கண்களில் இருந்து கண்ணீர் வடிய இங்கு இவள் வருந்துவாள் எனக் கருதாது (உறு – ஏற்ற, மலரின்  – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), வினை நயந்து நீங்கல் ஒல்லுமோ – பொருள் ஈட்டும் வினையை விரும்பி நீ பிரிந்து செல்லுதல் பொருந்துமோ (ஒல்லுமோ – ஓகாரம் ஐயப்பொருட்டு), ஐய – ஐயா (விளி), வேங்கை அடு முரண் தொலைத்த நெடுநல் யானை மையல் கடாஅம் செருக்கி மதம் சிறந்து இயங்குநர்ச் செகுக்கும் – புலியின் கொல்லும் முரண்பாட்டை அழித்த உயர்ந்த நல்ல யானை மயக்கத்தைத் தரும் மதத்தால் செருக்குற்று (கடாஅம் – அளபெடை), எய்படு நனந்தலைப் பெருங்கை எண்கினம் குரும்பி தேரும் புற்று உடை – முள்ளம் பன்றிகள் பொருந்திய அகன்ற காட்டிடத்தில் கரடிக்கூட்டம் புற்றாஞ்சோற்றை ஆராய்ந்து எடுக்கும் ஈயல் புற்றுக்களை உடைய, சுவர புதல் இவர் பொதியில் – சுவர்களையுடைய புதர்கள் படர்ந்த அம்பலத்தில், கடவுள் போகிய கருந் தாள் கந்தத்து – கடவுள் சென்றுவிட்ட வலிய அடியையுடைய தூணில், உடன் உறை பழமையின் துறத்தல் செல்லாது இரும் புறாப் பெடையொடு பயிரும் – நீண்ட காலம் உடன் உறைந்ததால் துறந்து நீங்காமல் பெரிய ஆண் புறாக்கள் தங்கள் துணையுடன் கூடி ஒலிக்கும், பெருங்கல் வைப்பின் மலை முதல் ஆறே – பெரிய கற்கள் பொருந்திய மலையடியில் உள்ள வழி (ஆறே – ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 308, பிசிராந்தையார், குறிஞ்சித் திணைதோழி தலைவனிடம் சொன்னது, பகலில் வரும்படி
உழுவையொடு உழந்த உயங்கு நடை ஒருத்தல்
நெடுவகிர் விழுப்புண் கழாஅக், கங்குல்
ஆலி அழிதுளி பொழிந்த வைகறை,
வால் வெள் அருவிப் புனல் மலிந்து ஒழுகலின்
இலங்கு மலை புதைய வெண்மழை கவைஇக்,  5
கலம் சுடு புகையின் தோன்றும் நாட!
இரவின் வருதல் எவனோ? பகல் வரின்,
தொலையா வேலின் வண் மகிழ் எந்தை
களிறு அணந்து எய்தாக் கன் முகை இதணத்துச்
சிறு தினைப் படுகிளி எம்மொடு ஓப்பி,  10
மல்லல் அறைய மலிர் சுனைக் குவளை
தேம்பாய் ஒண்பூ நறும் பல அடைச்சிய
கூந்தல் மெல் அணைத் துஞ்சிப் பொழுதுபடக்,
காவலர்க் கரந்து கடி புனம் துழைஇய
பெருங்களிற்று ஒருத்தலின் பெயர்குவை  15
கருங்கோல் குறிஞ்சி நும் உறைவு இன் ஊர்க்கே.

பாடல் பின்னணி:  இரவில் வரும் தலைவனைப் பகலில் வா என்றது. 

பொருளுரை:  புலியுடன் போரிட்டதால் வருந்திய நடையுடைய களிற்று யானையின் முகத்தில் அப்புலியின் நீண்ட நகங்களினால் உண்டான மறச்சிறப்புடைய புண்ணைக் கழுவுவதாக, இரவில் ஆலங்கட்டியுடன் மிக்க மழை பெய்தமையால், விடியற்காலத்தில் மிக்க வெண்மையுடைய அருவியின் நீர் மிகுந்து ஓடும், விளங்கும் மலை மறையும்படி வெள்ளை முகில்கள் சூழ்ந்து, நோக்குபவர்களுக்கு மண் கலம் சுடும் சூளையின் புகை போல் தோன்றும் நாடனே!  இவ்வாறு உள்ள மழைக்காலத்து இரவில் நீ வருவது எதனால்?

நீ பகலில் வந்தால், குறியில் தொலைதல் இல்லாத வேலினையும் பெரும் மகிழ்ச்சியையுமுடைய எம் தந்தை, களிற்று யானை நிமிர்ந்து பற்ற இயலாத மலை முழையின் மேல் (குகையின் மேல்) அமைத்த பரணில், சிறிய தினையின் கதிர்கள் மேல் விழும் கிளிகளை எம்முடன் சேர்ந்து ஒட்டியும், பெரிய பாறையின்கண் உள்ள மிக்க நீரினையுடைய சுனையிலுள்ள குவளையின் தேன் வடியும் ஒளிரும் நறுமண மலர்கள் பலவற்றைச் சூடிய, இவளின் கூந்தலாகிய மெல்லிய அணையில் துயின்றும் பொழுது கழிய, காவலர்களிடமிருந்து மறைந்து காவல் பொருந்திய புனத்தில் நுழைந்த பெரிய களிற்று யானையைப் போல் செல்லுவாய், கரிய கிளைகளையுடைய குறிஞ்சிச் செடிகளைக் கொண்டு நும் இனிய ஊர்க்கு.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு ‘ நாற்றமும் தோற்றமும்’ (தொல்காப்பியம், களவியல் 23) என வரும் நூற்பாவின்கண் ‘அனைநிலை வகையான் வரைதல் வேண்டினும்’ என வரும் விதி கொள்க.  கருங்கோல் குறிஞ்சி – அகநானூறு 308 – கருங்கோல் குறிஞ்சி நும் உறைவின் ஊர்க்கே, குறுந்தொகை 3 – கருங்கோல் குறிஞ்சிப் பூக் கொண்டு, புறநானூறு 374 – கருங்கோல் குறிஞ்சி அடுக்கம்.  வண் மகிழ் எந்தை (8) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – வள்ளன்மையால் மகிழும் மகிழ்ச்சியையும் உடைய எம்முடைய தந்தை, ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – வளவிய மகிழ்ச்சியையுடைய எம் தந்தை.  கழாஅ – கழுவி என்பது பொருள்.  செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம்.  எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது.  விழு (விழுமம்) – விழுமம் சீர்மையும் சிறப்பும் இடும்பையும் (தொல்காப்பியம், உரியியல் 57).  விழுப்புண் – புறநானூறு 93, ஒளவை துரைசாமி உரை – சீரிய புண், சீரிய = சிறந்த.

சொற்பொருள்:  உழுவையொடு உழந்த உயங்கு நடை ஒருத்தல் நெடு வகிர் விழுப் புண் கழாஅ – புலியுடன் போரிட்டதால் வருந்திய நடையுடைய களிற்று யானையின் முகத்தில் அப்புலியின் நீண்ட நகங்களினால் உண்டான மறச்சிறப்புடைய புண்ணைக் கழுவி (கழாஅ – அளபெடை), கங்குல் ஆலி அழிதுளி பொழிந்த வைகறை வால் வெள் அருவிப் புனல் மலிந்து ஒழுகலின் – இரவில் ஆலங்கட்டியுடன் மிக்க மழை பெய்தமையால் விடியற்காலத்தில் மிக்க வெண்மையுடைய அருவியின் நீர் மிகுந்து ஓடுவதால் (வால் வெள் – ஒருபொருட் பன்மொழி), இலங்கு மலை புதைய வெண்மழை கவைஇக் கலம் சுடு புகையின் தோன்றும் நாட – விளங்கும் மலை மறையும்படி வெள்ளை முகில்கள் சூழ்ந்து நோக்குபவர்களுக்கு மண் கலம் சுடும் சூளையின் புகை போல் தோன்றும் நாடனே (கவைஇ – அளபெடை, புகையின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது, நாட – விளி), இரவின் வருதல் எவனோ – நீ இரவில் வருவது எதனால் (எவனோ – ஓகாரம் அசைநிலை), பகல் வரின் – நீ பகலில் வந்தால், தொலையா வேலின் வண் மகிழ் எந்தை களிறு அணந்து எய்தாக் கன் முகை இதணத்துச் சிறு தினைப் படுகிளி எம்மொடு ஓப்பி – குறியில் தொலைதல் இல்லாத வேலினையும் பெரும் மகிழ்ச்சியையுமுடைய எம் தந்தை களிற்று யானை நிமிர்ந்து பற்ற இயலாத மலை முழையின் மேல் (குகையின் மேல்) அமைத்த பரணில் சிறிய தினையின் கதிர்கள் மேல் விழும் கிளிகளை எம்முடன் சேர்ந்து ஒட்டியும் (எந்தை – எம் + தந்தை, மருஉ மொழி), களிறு, மல்லல் அறைய மலிர் சுனைக் குவளை தேம்பாய் ஒண்பூ நறும் பல அடைச்சிய கூந்தல் மெல் அணைத் துஞ்சிப் பொழுதுபட – பெரிய பாறையின்கண் உள்ள மிக்க நீரினையுடைய சுனையிலுள்ள குவளையின் தேன் வடியும் ஒளிரும் நறுமண மலர்கள் பலவற்றைச் சூடிய கூந்தலாகிய மெல்லிய அணையில் துயின்றும் பொழுது கழிய, காவலர்க் கரந்து கடி புனம் துழைஇய பெருங்களிற்று ஒருத்தலின் பெயர்குவை – காவலர்களிடமிருந்து மறைந்து காவல் பொருந்திய புனத்தில் நுழைந்த பெரிய களிற்று யானையைப் போல் செல்லுவாய் (துழைஇய – அளபெடை), கருங்கோல் குறிஞ்சி நும் உறைவு இன் ஊர்க்கே – கரிய கிளைகளையுடைய குறிஞ்சிச் செடிகளைக் கொண்டு நும் இனிய ஊர்க்கு (ஒருத்தலின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது, ஊர்க்கே – ஏகாரம் அசைநிலை, குறிஞ்சிச் செடி – Strobilanthes Kunthiana)

அகநானூறு 309, கருவூர்க் கந்தப்பிள்ளைச் சாத்தனார், பாலைத் திணைதலைவி தோழியிடம் சொன்னது
வயவாள் எறிந்து வில்லின் நீக்கி
பயம் நிரை தழீஇய கடுங்கண் மழவர்,
அம்பு சேண்படுத்து வன்புலத்து உய்த்தெனத்,
தெய்வம் சேர்ந்த பராரை வேம்பில்
கொழுப்பு ஆ எறிந்து குருதி தூஉய்ப்,  5
புலவுப் புழுக்குண்ட வான் கண் அகல் அறைக்
களிறு புறம் உரிஞ்சிய கருங்கால் இலவத்து
அரலை வெண்காழ் ஆலியின் தாஅம்
காடு மிக நெடிய என்னார், கோடியர்
பெரும் படைக் குதிரை நற்போர் வானவன்  10
திருந்து கழல் சேவடி நசைஇப் படர்ந்தாங்கு,
நாம் செலின் எவனோ தோழி? காம்பின்
விளை கழை உடைந்த கவண் விசைக் கடி இடிக்
கனை சுடர் அமையத்து வழங்கல் செல்லாது,
இரவுப் புனம் மேய்ந்த உரவுச்சின வேழம்  15
தண் பெரும் படாஅர் வெரூஉம்
குன்று விலங்கிய இயவின் அவர் சென்ற நாட்டே?

பாடல் பின்னணி:  பிரிவிடை வேறுபட்ட தலைவியின் வேறுபாடு கண்டு வேறுபட்ட தோழிக்குத் தலைவி கூறியது.

பொருளுரை:  வலிய வாளால் தாக்கியும் அம்பினை வில்லிலிருந்து நீக்கியும், பாலாகிய பயனைத் தரும் ஆனிரையைப் பற்றிக்கொண்ட அஞ்சாமையுடைய வெட்சி மறவர்கள், தொலைவின்கண் கொண்டு வந்து, வலிய காட்டு நிலத்தில் செலுத்தியவர்களாக, கடவுள் தங்கிய பருத்த அடியினையுடைய வேப்ப மரத்தடியில் கொழுப்பினையுடைய ஆக்களைக் கொன்று, அவற்றின் குருதியைப் பலியாக அம்மரத்தின்மேல் தூவி ஊனைப் புழுக்கி உண்ட, உயர்ந்த இடம் அமைந்த அகன்ற பாறையில், களிற்று யானைகள் தங்கள் புறத்தினை உரசிக்கொண்டு கரிய அடியையுடைய இலவ மரத்தின் விதையாகிய வெள்ளை நிறக்கொட்டைகள் ஆலங்கட்டிகள் போல் பரவியிருக்கும் காடுகள் மிகத் தொலைவு என நினையாதவராய், கூத்தர்கள் பெரிய குதிரைப்படையை உடைய நல்ல போர்த்திறன் வாய்ந்த சேரனின் திருந்திய கழல்கள் அணிந்த சிவந்த அடியிணை விரும்பிச் சென்றாற்போல்,

தோழி, மூங்கில்களின் விளைந்த தண்டுகள் உடைவதற்கு ஏதுவாகிய கவண் கற்கள் விரைந்து வந்து மோதுகின்ற வெப்பமான கதிர்களையுடைய பகற்பொழுதில், இரவில் புனத்தில் மேய்ந்த வலிய சினமுடைய யானை குளிர்ந்த பெரிய புதர்களுக்கு அஞ்சும், குன்றுகள் குறுக்கிடும் வழிகளையுடைய அவர் சென்ற நாட்டின்கண், நாம் சென்றால் என்னாகும்?

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு ‘எஞ்சியோர்க்கும் எஞ்சுதல் இலவே’ (தொல்காப்பியம், அகத்திணையியல் 42) என வரும் விதி கொள்க.  தெய்வம் (4) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – கொற்றவை.  கண் (6) – ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை –அசைநிலை, பொ. வே. சோமசுந்தரனார் உரை– இடம்.  மரங்களில் கடவுள் உறைதல்:  அகநானூறு 270 – கடவுள் மரத்த, அகநானூறு 309 – தெய்வம் சேர்ந்த பராரை வேம்பில், நற்றிணை 83 – கடவுள் முது மரத்து.  வரலாறு –வானவன் (சேரன்).  பாலைத் திணைப் பாடல்களில் கள்வர்கள் – அகநானூறு 1, 3, 7, 31, 63, 89, 91, 101, 151, 169, 245, 249, 257, 269, 285, 289, 291, 297, 309, 313, 319, 321, 327, 337, 363, 365, நற்றிணை 3, 33, 48, 164, 224, 362, குறுந்தொகை 16, 274, 283, 331, 350, 390, ஐங்குறுநூறு 329, 352, கலித்தொகை 6, 12,  குறிஞ்சித் திணைப் பாடல்களில் கள்வர்கள் – அகநானூறு 342, குறுந்தொகை 297.

சொற்பொருள்:  வய வாள் எறிந்து வில்லின் நீக்கி அம்பு – வலிய வாளால் தாக்கியும் அம்பினை வில்லிலிருந்து நீக்கியும், பயம் நிரை தழீஇய கடுங்கண் மழவர் – பாலாகிய பயனைத் தரும் ஆனிரையைப் பற்றிக்கொண்ட அஞ்சாமையுடைய வெட்சி மறவர்கள் (தழீஇய – அளபெடை), சேண்படுத்து – தொலைவின்கண் கொண்டு வந்து, வன்புலத்து உய்த்தெனத் தெய்வம் சேர்ந்த பராரை வேம்பில் கொழுப்பு ஆ எறிந்து – வலிய காட்டு நிலத்தில் செலுத்தியவர்களாக கடவுள் தங்கிய பருத்த அடியினையுடைய வேப்ப மரத்தடியில் கொழுப்பினையுடைய ஆக்களைக் கொன்று (பராரை – பரு அரை பராரை எனப் புணர்ந்தது), குருதி தூஉய்ப் புலவுப் புழுக்குண்ட – அவற்றின் குருதியைப் பலியாக அம்மரத்தின்மேல் தூவி ஊனைப் புழுக்கி உண்ட (தூஉய் – அளபெடை), வான் கண் அகல் அறை – உயர்ந்த இடம் அமைந்த அகன்ற பாறையில், களிறு புறம் உரிஞ்சிய கருங்கால் இலவத்து அரலை வெண்காழ் ஆலியின் தாஅம் காடு மிக நெடிய என்னார் – களிற்று யானைகள் தங்கள் புறத்தினை உரசிக்கொண்டு கரிய அடியையுடைய இலவ மரத்தின் விதையாகிய வெள்ளை நிறக்கொட்டைகள் ஆலங்கட்டிகள் போல் பரவியிருக்கும் காடுகள் மிகத் தொலைவு என நினையாதவராய் (ஆலியின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது, தாஅம் – அளபெடை, இலவ மர – Aerua javanica, Silk cotton tree), கோடியர் பெரும் படைக் குதிரை நற்போர் வானவன் திருந்து கழல் சேவடி நசைஇப் படர்ந்தாங்கு – கூத்தர்கள் பெரிய குதிரைப்படையை உடைய நல்ல போர்த்திறன் வாய்ந்த சேரனின் திருந்திய கழல்கள் அணிந்த சிவந்த அடியிணை விரும்பிச் சென்றாற்போல், நாம் செலின் எவனோ – நாம் சென்றால் என்னாகும் (எவனோ – ஓகாரம் அசைநிலை), தோழி – தோழி, காம்பின் விளை கழை உடைந்த கவண் விசைக் கடி இடிக் கனை சுடர் அமையத்து வழங்கல் செல்லாது – மூங்கில்களின் விளைந்த தண்டுகள் உடைவதற்கு ஏதுவாகிய கவண் கற்கள் விரைந்து வந்து மோதுகின்ற வெப்பமான கதிர்களையுடைய பொழுதில், இரவுப் புனம் மேய்ந்த உரவுச்சின வேழம் தண் பெரும் படாஅர் வெரூஉம் – இரவில் புனத்தில் மேய்ந்த வலிய சினமுடைய யானை குளிர்ந்த பெரிய புதர்களுக்கு அஞ்சும் (படாஅர் – அளபெடை, வெரூஉம் – அளபெடை), குன்று விலங்கிய இயவின் அவர் சென்ற நாட்டே – குன்றுகள் குறுக்கிடும் வழிகளையுடைய அவர் சென்ற நாட்டின்கண் (நாட்டே – ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 310, நக்கீரனார், நெய்தல் திணைதோழி தலைவனிடம் சொன்னது
கடுந்தேர் இளையரொடு நீக்கி, நின்ற
நெடுந்தகை நீர்மையை அன்றி, நீயும்
தொழுதகு மெய்யை அழிவு முந்துறுத்துப்
பன்னாள் வந்து பணி மொழி பயிற்றலின்,
குவளை உண்கண் கலுழ நின் மாட்டு  5
இவளும் பெரும் பேதுற்றனள், ஓரும்
தாயுடை நெடுநகர்த் தமர் பாராட்டக்
காதலின் வளர்ந்த மாதர் ஆகலின்,
பெருமடம் உடையரோ சிறிதே அதனால்,
குன்றின் தோன்றும் குவவு மணல் சேர்ப்ப!  10
இன்று இவண் விரும்பாதீமோ! சென்றப்
பூ விரி புன்னை மீது தோன்று பெண்ணைக்
கூஉம் கண்ணஃதே தெய்ய, ஆங்கண்
உப்பு ஒய் உமணர் ஒழுகையொடு வந்த
இளைப்படு பேடை இரியக், குரைத்து எழுந்து  15
உருமிசைப் புணரி உடைதரும்
பெருநீர் வேலி எம் சிறு நல் ஊரே.

பாடல் பின்னணி:  தகைவனுக்குக் குறை நேர்ந்த தோழி சொல்லியது.  பொ. வே. சோமசுந்தரனார் உரை – நீ நாளை அப்புன்னை மரச் சோலைக்கு வருதி என்பது குறிப்பாயிற்று. 

பொருளுரை:  மலை போல் தோன்றும் குவிந்த மணல் மேடுகளையுடைய நெய்தல் நிலத்தின் தலைவனே!  விரைந்து செல்லும் தேரினை ஏவலாளர்களுடன் தொலைவில் நிறுத்திவிட்டு, இங்கு வந்து நிற்கும் பெரும் தகைமையுடைய பண்பு உடையையாய் உள்ளாய் நீ.  அன்றியும் பிறர் கைதொழுது வணங்கத்தக்க தோற்றத்தை உடையையாய் ஆக இருந்தும், துன்பத்தை மேற்கொண்டு, பல நாட்கள் வந்து, பணிந்த சொற்களைப் பலமுறைக் கூறுவதால், குவளை மலரை ஒத்த மையுண்ட கண்கள் கலங்க, நின்னிடத்தில் பெரும் மயக்கத்தைக் கொண்டுள்ளாள் இவள்.

அதனால், இன்று இங்கு இவளைக் காண்பதற்கு விரும்பாதே.  உப்பினைச் செலுத்தி வந்த உப்பு வணிகர்களின் வண்டியுடன் வந்த பாதுகாவல் உடைய பேடை ஓடும்படி, இடி போலும் ஒலியுடைய அலைகள் முழங்கி எழுந்து சிதறி விழும், கடலை எல்லையாகக் கொண்ட எம் சிறிய நல்ல ஊர், சிறிது சென்று பூக்கள் விரிந்த புன்னை மரத்தின் மேல் தோன்றுகின்ற பனை மரத்திலிருந்து கூப்பிடு தொலைவில் இடம் உள்ளது.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு ‘நாற்றமும் தோற்றமும்’ (தொல்காப்பியம், களவியல் 23) என வரும் நூற்பாவின்கண் ‘பின்னிலை நிகழும் பல்வேறு மருங்கினும்’ என வரும் விதி கொள்க.  மோ – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம், இடையியல் 26).

சொற்பொருள்:  கடுந்தேர் இளையரொடு நீக்கி நின்ற நெடுந்தகை நீர்மையை – விரைந்து செல்லும் தேரினை ஏவலாளர்களுடன் தொலைவில் நிறுத்திவிட்டு இங்கு வந்து நிற்கும் பெரும் தகைமையுடைய பண்பு உடையையாய் உள்ளாய், அன்றி நீயும் தொழுதகு மெய்யை அழிவு முந்துறுத்துப் பன்னாள் வந்து பணி மொழி பயிற்றலின் – அன்றி நீயும் பிறர் கைதொழுது வணங்கத்தக்க தோற்றத்தை உடையையாய் ஆக இருந்தும் துன்பத்தை மேற்கொண்டு பல நாட்கள் வந்து பணிந்த சொற்களைப் பலமுறைக் கூறுவதால், குவளை உண்கண் கலுழ நின் மாட்டு இவளும் பெரும் பேதுற்றனள் – குவளை மலரை ஒத்த மையுண்ட கண்கள் கலங்க நின்னிடத்தில் பெரும் மயக்கத்தைக் கொண்டுள்ளாள், ஓரும் – அசைநிலை, தாயுடை நெடுநகர்த் தமர் பாராட்டக் காதலின் வளர்ந்த மாதர் ஆகலின் பெருமடம் உடையரோ சிறிதே – தாய்மார் உள்ள பெரிய மனையில் குடும்பத்தார் பாராட்ட பெரும் அன்புடன் வளர்ந்த மகளிர் சிறிது காலம் பெரும் நாணம் உடையவர்களாக இருப்பார்கள் (உடையரோ – ஓகாரம் அசைநிலை, சிறிதே – ஏகாரம் அசைநிலை), அதனால் – அதனால், குன்றின் தோன்றும் குவவு மணல் சேர்ப்ப – மலை போல் தோன்றும் குவிந்த மணல் மேடுகளையுடைய நெய்தல் நிலத்தின் தலைவனே (குன்றின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது, சேர்ப்ப – அண்மை விளி), இன்று இவண் விரும்பாதீமோ – இன்று இங்கு இவளைக் காண்பதற்கு விரும்பாதே (மோ – முன்னிலையசை), சென்றப் பூ விரி புன்னை மீது தோன்று பெண்ணைக் கூஉம் கண்ணஃதே – சிறிது சென்று பூக்கள் விரிந்த புன்னை மரத்தின் மேல் தோன்றுகின்ற பனை மரத்திலிருந்து கூப்பிடு தொலைவில் இடம் உள்ளது (கூஉம் – அளபெடை, கண்ணஃதே – ஆய்தம் விரித்தல், ஏகாரம் அசைநிலை, Calophyllum inophyllum, புன்னை மரம் – Laurel Tree, Mast wood Tree), தெய்ய – அசைநிலை, ஆங்கண் உப்பு ஒய் உமணர் ஒழுகையொடு வந்த இளைப்படு பேடை இரியக் குரைத்து எழுந்து உருமிசைப் புணரி உடைதரும் – அங்கு உப்பினைச் செலுத்தி வந்த உப்பு வணிகர்களின் வண்டியுடன் வந்த பாதுகாவல் உடைய பேடை ஓடும்படி இடி போலும் ஒலியுடைய அலைகள் முழங்கி எழுந்து சிதறி விழும், பெருநீர் வேலி எம் சிறு நல் ஊரே – கடலை எல்லையாகக் கொண்ட எம் சிறிய நல்ல ஊர் (ஊரே – ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 311, மாமூலனார், பாலைத் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
இரும் பிடிப் பரிசிலர் போலக் கடை நின்று,
அருங்கடிக் காப்பின் அகன் நகர் ஒரு சிறை,
எழுதியன்ன திண் நிலைக் கதவம்
கழுது வழங்கு அரை நாள் காவலர் மடிந்தெனத்,
திறந்து நம் புணர்ந்து, “நும்மின் சிறந்தோர்  5
இம்மை உலகத்து இல்” எனப் பன்னாள்
பொம்மல் ஓதி நீவிய காதலொடு
பயம் தலைப்பெயர்ந்து மாதிரம் வெம்ப,
வருவழி வம்பலர்ப் பேணிக், கோவலர்
மழ விடைப் பூட்டிய குழாஅய்த் தீம் புளி  10
செவி அடை தீரத் தேக்கிலைப் பகுக்கும்
புல்லி நன்னாட்டு உம்பர் செல் அரும்
சுரம் இறந்து ஏகினும் நீடலர்,
அருண்மொழி தேற்றி நம் அகன்றிசினோரே.

பாடல் பின்னணி:  பிரிவின்கண் வேறுபட்ட தலைமகளுக்குத் தோழி சொல்லியது.

பொருளுரை:  பெரிய பெண் யானையைப் பரிசில் பெரும் பாணர் போல நம்முடைய மனையின் நுழைவாயிலில் நின்று, அரிய காவலையுடைய அகன்ற மனையின் ஒரு பக்கம் ஓவியத்தில் எழுதி வைத்தாற் போன்ற திண்ணிய நிலையையுடைய கதவினை, பேய் வழங்கும் பாதி இரவில், காவலர்கள் சோர்ந்திருக்கும் நேரம் பார்த்து திறந்து, உன்னைக் கூடி, “உன்னைவிட சிறந்தவர்கள் இவ்வுலகத்தில் இல்லை” என்று பல நாட்கள் கூறி, உன் பொலிவுடைய கூந்தலைத் தடவி, நீர் இல்லாமல் பயன் எல்லாம் அழிந்து, திசையெல்லாம் கொதிக்க, வழியில் வரும் புதியவர்களைப் போற்றி, ஆயர்கள் தங்கள் இளைய காளைகளின் கழுத்தில் கட்டியுள்ள மூங்கில் குழாயில் உள்ள இனிய புளிச் சோற்றை, அப்புதியவரின் காதடைப்பு நீங்க தேக்கின் இலையில் பகிர்ந்து அளிக்கும், புல்லி என்ற அரசனின் நல்ல நாட்டிற்கு அப்பால் உள்ள கடத்தற்கரிய சுர நெறியைக் கடந்து சென்றிருப்பினும், உன்னை மறந்து காலம் தாழ்த்திருப்பவர் அல்லர், அன்புமொழி கூறி தெளிவித்து அகன்று சென்ற நம் தலைவர்.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு ‘தலைவரும் விழுமநிலை’ (தொல்காப்பியம், அகத்திணையியல் 31) என வரும் நூற்பாவின்கண் ‘நோய் மிகப் பெருகித் தன் நெஞ்சு கலுழ்ந்தோளை அழிந்தது களை என மொழிந்தது கூறி வன்புறை நெருங்கி வந்ததன் திறத்தொடு என்று இவை எல்லாம் இயல்புற நாடின் ஒன்றித் தோன்றும் தோழி மேன’ என வரும் விதி கொள்க.  வரலாறு – புல்லி.  மூங்கில் குழாயில் உணவு – அகநானூறு 253 – கோவலர் நெடு விளிப் பயிர் அறிந்து இனம் தலைத்தரூஉம் துளங்கு இமில் நல் ஏற்றுத் தழூஉப் பிணர் எருத்தம் தாழப் பூட்டிய அம் தூம்பு அகல் அமைக் கமம் செலப் பெய்த துறு காழ் வல்சியர், அகநானூறு 311– கோவலர் மழ விடைப் பூட்டிய குழாஅய்த் தீம் புளி.  இம்மை – அகநானூறு 66, 101, 311, குறுந்தொகை 49, கலித்தொகை 14, புறநானூறு 134, 236.  மறுமை – அகநானூறு 66, குறுந்தொகை 49, 199, கலித்தொகை 14, 103, and புறநானூறு 134 and 141. மழ – மழவும் குழவும் இளமைப் பொருள – (தொல்காப்பியம், உரியியல் 15).

சொற்பொருள்:  இரும் பிடிப் பரிசிலர் போல – பெரிய பெண் யானையைப் பரிசில் பெரும் பாணர் போல, கடை நின்று – நம்முடைய மனையின் நுழைவாயிலில் நின்று, அருங்கடிக் காப்பின் அகன் நகர் ஒரு சிறை – அரிய காவலையுடைய அகன்ற மனையின் ஒரு பக்கம், எழுதியன்ன திண் நிலைக் கதவம் – ஓவியத்தில் எழுதி வைத்தாற் போன்ற திண்ணிய நிலையையுடைய கதவு, கழுது வழங்கு அரை நாள் – பேய் வழங்கும் பாதி இரவில், காவலர் மடிந்தெனத் திறந்து – காவலர்கள் சோர்ந்திருக்கும் நேரம் பார்த்து அக்கதவைத் திறந்து, நம் புணர்ந்து – உன்னைக் கூடி, நும்மின் சிறந்தோர் இம்மை உலகத்து இல் எனப் பன்னாள் – உன்னைவிட சிறந்தவர்கள் இவ்வுலகத்தில் இல்லை என்று பல நாட்கள் கூறி, பொம்மல் ஓதி நீவிய காதலொடு – பொலிவுடைய கூந்தலைத் தடவி, பயம் தலைப்பெயர்ந்து மாதிரம் வெம்ப – பயன் எல்லாம் அழிந்து (நீர் இல்லாமல்) திசையெல்லாம் கொதிக்க, வருவழி வம்பலர்ப் பேணி – வழியில் வரும் புதியவர்களைப் போற்றி , கோவலர் மழ விடைப் பூட்டிய குழாஅய்த் தீம் புளி – ஆயர்கள் இளைய காளைகளின் கழுத்தில் கட்டியுள்ள மூங்கில் குழாயில் உள்ள இனிய புளிச் சோற்றை, செவி அடை தீரத் தேக்கிலைப் பகுக்கும் – அப்புதியவரின் காதடைப்பு நீங்க தேக்கின் இலையில் பகிர்ந்து அளிக்கும், புல்லி நன்னாட்டு உம்பர் – புல்லி என்பவனின் நல்ல நாட்டிற்கு அப்பால், செல் அரும் சுரம் இறந்து ஏகினும் – கடத்தற்கரிய சுர நெறியைக் கடந்து சென்றிருப்பினும், நீடலர் – நீட்டிக்க மாட்டார் தலைவர், அருண்மொழி தேற்றி நம் அகன்றிசினோரே – அன்புமொழி கூறி தெளிவித்து அகன்று சென்றவர் (அகன்றிசினோரே – இசின் படர்க்கையின் கண் வந்தது, ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 312, மதுரை மருதன் இளநாகனார், குறிஞ்சித் திணைதோழி சொன்னது, அல்லது தலைவி சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
நெஞ்சு உடம்படுதலின் ஒன்று புரிந்து அடங்கி,
இரவின் வரூஉம் இடும்பை நீங்க,
வரையக் கருதும் ஆயின் பெரிது  உவந்து,
ஓங்கு வரை இழிதரும் வீங்கு பெயல் நீத்தம்,
காந்தள் அம் சிறுகுடிக் கௌவை பேணாது,  5
அரிமதர் மழைக் கண் சிவப்ப நாளைப்
பெருமலை நாடன் மார்பு புணையாக,
ஆடுகம் வம்மோ, காதலம் தோழி,
வேய் பயில் அடுக்கம் புதையக் கால் வீழ்த்து
இன்னிசை முரசின் இரங்கி ஒன்னார்  10
ஓடுபுறம் கண்ட தாள் தோய் தடக்கை,
வெல்போர் வழுதி செல் சமத்து உயர்த்த
அடுபுகழ் எஃகம் போலக்,
கொடிபட மின்னிப் பாயின்றால் மழையே.

பாடல் பின்னணி:  1. வரையாது வந்தொழுகும் தலைவன் இரவுக்குறியிடத்தில் இருந்ததை அறிந்த தோழி சொன்னது.  2. வரையாது வந்தொழுகும் தலைவன் இரவுக்குறியிடத்தில் இருந்ததை அறிந்த தலைவி சொன்னது.  

பொருளுரை:  பேரன்பு மிக்க தோழியே!  மூங்கில்கள் மிகுந்துள்ள பக்க மலையில், மறைந்து போகும்படி, கால் இறங்கி, இனிய இசையையுடைய முரசு போல் முழங்கி, பகைவர்களின் ஓடும் புறத்தைக் கண்ட, முழங்காலைத் தொடும் பெரிய கைகளையுடைய போரில் வெல்லும் பாண்டியன், வெற்றி பெரும் போரில் தூக்கிய, கொல்லும் புகழ் பெற்ற வேல் போல் ஒழுங்குபட மின்னி, மழை பரவியுள்ளது.

இருவர் நெஞ்சும் உடன்படுவதால் இன்பம் ஒன்றையே விரும்பி பிறர் அறியாதவாறு மறைந்து, இரவில் வரும் துன்பம் நீங்க, திருமணம் புரிதலை கருதுவார் ஆனால், பெரிதும் மகிழ்ந்து, உயர்ந்த மலையிலிருந்து விழும் மிகுந்த மழையினால் உண்டான அருவி நீரில், காந்தள் மலர்களையுடைய இச்சிறு குடியில் உள்ளவர்களின் அலரைப் போற்றாது, சிவந்த வரிகளைக் கொண்ட மதர்த்த கண்கள் சிவக்கும்படி, நாளைக்கு, பெரிய மலையின் தலைவனின் மார்பு தெப்பம் ஆக நாம் விளையாடலாம்.  வருவாயாக.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – (1) இதற்கு ‘நாற்றமும் தோற்றமும்’ (தொல்காப்பியம், களவியல் 23) என வரும் நூற்பாவின்கண் ‘அனைநிலை வகையான் வரைதல் வேண்டினும்’ என வரும் விதி கொள்க. (2) இதனை ‘மறைந்தவற் காண்டல்’ (தொல்காப்பியம், களவியல் 20) என வரும் நூற்பாவின்கண் ‘அன்ன பிற’ என்பதனால் அமைத்துக் கொள்க.  வரலாறு –வழுதி (பாண்டியன்).  தட – தடவும் கயவும் நளியும் பெருமை (தொல்காப்பியம், உரியியல் 24).  மோ – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம், இடையியல் 26).

சொற்பொருள்:  நெஞ்சு உடம்படுதலின் ஒன்று புரிந்து அடங்கி – இருவர் நெஞ்சும் உடன்படுவதால் இன்பம் ஒன்றையே விரும்பி பிறர் அறியாதவாறு மறைந்து, இரவின் வரூஉம் இடும்பை நீங்க வரையக் கருதும் ஆயின் – இரவில் வரும் துன்பம் நீங்க திருமணம் புரிதலை கருதுவார் ஆனால் (வரூஉம் – அளபெடை), பெரிது  உவந்து – பெரிதும் மகிழ்ந்து, ஓங்கு வரை இழிதரும் வீங்கு பெயல் நீத்தம் – உயர்ந்த மலையிலிருந்து விழும் மிகுந்த மழையினால் உண்டான அருவி நீரில், காந்தள் அம் சிறுகுடிக் கௌவை பேணாது – காந்தள் மலர்களையுடைய இச்சிறு குடியில் உள்ளவர்களின் அலரைப் போற்றாது, அரிமதர் மழைக் கண் சிவப்ப – சிவந்த வரிகளைக் கொண்ட மதர்த்த கண்கள் சிவக்கும்படி, நாளை – நாளைக்கு, பெருமலை நாடன் மார்பு புணையாக ஆடுகம் – பெரிய மலையின் தலைவனின் மார்பு தெப்பம் ஆக நாம் விளையாடலாம், வம்மோ – வருவாயாக (மோ – முன்னிலையசை), காதல் அம் தோழி – பேரன்பு மிக்க தோழியே, வேய் பயில் அடுக்கம் புதையக் கால் வீழ்த்து இன்னிசை முரசின் இரங்கி – மூங்கில்கள் மிகுந்துள்ள பக்க மலையில் மறைந்து போகும்படி கால் இறங்கி இனிய இசையையுடைய முரசு போல் முழங்கி (முரசின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), ஒன்னார் ஓடுபுறம் கண்ட தாள் தோய் தடக்கை வெல்போர் வழுதி – பகைவர்களின் ஓடும் புறத்தைக் கண்ட முழங்காலைத் தொடும் பெரிய கைகளையுடைய போரில் வெல்லும் பாண்டியன், செல் சமத்து உயர்த்த – வெற்றி பெரும் போரில் தூக்கிய, அடு புகழ் எஃகம் போலக் கொடிபட மின்னிப் பாயின்றால் மழையே – கொல்லும் புகழ் பெற்ற வேல் போல் ஒழுங்குபட மின்னி மழை பரவியுள்ளது (பாயின்றால் – ஆல் அசைநிலை, மழையே – ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 313, சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோ, பாலைத் திணைதோழி தலைவியிடம் சொன்னது
“இனிப் பிறிதுண்டோ? அஞ்சல் ஓம்பு” என
அணிக் கவின் வளர முயங்கி, நெஞ்சம்
பிணித்தோர் சென்ற ஆறு நினைந்து, அல்கலும்
குளித்துப் பொரு கயலின் கண்பனி மல்க,
ஐயவாக வெய்ய உயிரா,  5
இரவும் எல்லையும் படரட வருந்தி
அரவு நுங்கு மதியின் நுதல் ஒளி கரப்பத்,
தம்மலதில்லா நம்மிவண் ஒழியப்,
பொருள் புரிந்து அகன்றனராயினும் அருள் புரிந்து
வருவர், வாழி தோழி! பெரிய  10
நிதியஞ்சொரிந்த நீவி போலப்
பாம்பூன் தேம்பும் வறங்கூர் கடத்திடை,
நீங்கா வம்பலர் கணையிடத் தொலைந்தோர்
வசிபடு புண்ணின் குருதி மாந்தி,
ஒற்றுச் செல் மாக்களின் ஒடுங்கிய குரல  15
இல் வழிப்படூஉங்காக்கைக்
கல்லுயர் பிறங்கல் மலை இறந்தோரே.

பாடல் பின்னணி:  பிரிவிடை வேறுபட்ட தலைவியைத் தோழி வற்புறுத்தியது.  

பொருளுரை:  தோழி!  நீ நீடு வாழ்வாயாக!  “இனி நீ வருந்துவதற்கு வேறு ஒரு காரணம் உண்டோ?  அஞ்சுதலை நீக்குவாயாக” என்று கூறி, உன் அழகு மேலும் அழகுறத் தழுவி நம் நெஞ்சைக் கவர்ந்த நம் தலைவர் சென்ற வழியை நினைந்து, நாள்தோறும், நீரில் மூழ்கிப் பொருதும் கயல் மீன்களைப்போன்ற கண்களில் கண்ணீர் பெருக, மென்மையாக வெப்பத்துடன் பெருமூச்சு விட்டு, இரவும் பகலும் துன்புற்று வருந்தி, பாம்பு விழுங்கிய நிலவு போல் நெற்றி ஒளியை இழந்திட, தம் அலது இல்லா நம் இவண் ஒழியப், பொருளை விரும்பி, அவர் அல்லாது புகல் வேறு இல்லாத நாம் இங்கே தங்கியிருக்க அகன்றனராயினும்,

பெரும் பொருளைச் சொரிந்த வெற்றுத் துணிப்பை போல் பாம்புகள் தசை வற்றி இருக்கும் வறட்சி மிகுந்த காட்டில், ஓடித் தப்ப இயலாது உயிர் இழந்த புதிய வழிப்போக்கர்களின் பிளந்த புண்களின் குருதியைக் குடித்து, ஒற்றுத் தொழில் செய்யும் மக்களைப் போல் உள்ளடங்கிய குரல் உடையனவாய் மனையிடத்தில் வந்து தங்கும் காக்கைகளை உடைய, கற்கள் உயர்ந்த பக்கமாலையைக் கடந்து சென்ற அவர் நம்பால் அருள் புரிந்து வருவார்.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு ‘தலைவரும் விழுமநிலை’ (தொல்காப்பியம், அகத்திணையியல் 31) என வரும் நூற்பாவின்கண் ‘நோய் மிகப் பெருகித் தன் நெஞ்சு கலுழ்ந்தோளை அழிந்தது களை என மொழிந்தது கூறி வன்புறை நெருங்கி வந்ததன் திறத்தொடு என்று இவை எல்லாம் இயல்புற நாடின் ஒன்றித் தோன்றும் தோழி மேன’ என வரும் விதி கொள்க.  ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – ‘அவைதாம் அன்ன ஏய்ப்ப’ என்னுஞ் சூத்திரத்து (தொல்காப்பியம், உவமையியல் 11) ‘குளித்துப் பொரு கயலிற் கண்பனி மல்க’ என்பது உவம உருபின்றி இன்னுருபு தன் பொருட்கண்ணும் வந்தது, என்றனர் நச்சினார்க்கினியர்.  அரவு நுங்கு மதி – குறுந்தொகை 395 – அரவு நுங்கு மதியினுக்கு, அகநானூறு 114 – அரவு நுங்கு மதியின், அகநானூறு 313 – அரவு நுங்கு மதியின், நற்றிணை 377 – அரவுக் குறைபடுத்த பசுங்கதிர் மதியத்து, புறநானூறு 260 – பாம்பின் வை எயிற்று உய்ந்த மதியின், கலித்தொகை 15 – பாம்பு சேர் மதி போல, கலித்தொகை 104 – பால் மதி சேர்ந்த அரவினை, பரிபாடல் 10–76 – அரவு செறி உவவு மதியென, பரிபாடல் 11 – பாம்பு ஒல்லை மதியம் மறையவரு நாளில், சிறுபாணாற்றுப்படை 185 – மதி சேர் அரவின்.  உயிரா – உயிர்த்து என்பது பொருள். செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம்.  எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது.  ஒற்றுச் செல் மாக்களின் ஒடுங்கிய குரல (15) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – ஒற்றுத் தொழிலை மேற்கொண்டு செல்லுகின்ற மக்களைப் போன்று அடங்கிய குரலை உடையவாய்.  பாலைத் திணைப் பாடல்களில் கள்வர்கள் – அகநானூறு 1, 3, 7, 31, 63, 89, 91, 101, 151, 169, 245, 249, 257, 269, 285, 289, 291, 297, 309, 313, 319, 321, 327, 337, 363, 365, நற்றிணை 3, 33, 48, 164, 224, 362, குறுந்தொகை 16, 274, 283, 331, 350, 390, ஐங்குறுநூறு 329, 352, கலித்தொகை 6, 12,  குறிஞ்சித் திணைப் பாடல்களில் கள்வர்கள் – அகநானூறு 342, குறுந்தொகை 297.

சொற்பொருள்:  இனிப் பிறிது உண்டோ – இனி நீ வருந்துவதற்கு வேறு ஒரு காரணம் உண்டோ (உண்டோ – ஓகாரம் வினா), அஞ்சல் ஓம்பு என – அஞ்சுதலை நீக்குவாயாக என்று கூறி, அணிக் கவின் வளர முயங்கி நெஞ்சம் பிணித்தோர் சென்ற ஆறு நினைந்து – உன் அழகு மேலும் அழகுறத் தழுவி நம் நெஞ்சைக் கவர்ந்த நம் தலைவர் சென்ற வழியை நினைந்து, அல்கலும் – நாள்தோறும், குளித்துப் பொரு கயலின் கண்பனி மல்க ஐயவாக வெய்ய உயிரா இரவும் எல்லையும் படர் அட வருந்தி – நீரில் மூழ்கிப் பொருதும் கயல் மீன்களைப்போன்ற கண்களில் கண்ணீர் பெருக மென்மையாக வெப்பத்துடன் பெருமூச்சு விட்டு இரவும் பகலும் துன்புற்று வருந்தி (குளித்து – நீரினில் மூழ்கி, கயலின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), அரவு நுங்கு மதியின் நுதல் ஒளி கரப்ப – பாம்பு விழுங்கிய நிலவு போல் நெற்றி ஒளியை இழந்திட (மதியின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), தம் அலது இல்லா நம் இவண் ஒழியப் பொருள் புரிந்து – அவர் அல்லாது புகல் வேறு இல்லாத நாம் இங்கே தங்கியிருக்க பொருளை விரும்பி, அகன்றனராயினும் அருள் புரிந்து வருவர் – சென்றாராயினும் அருள் புரிந்து வருவார், வாழி – நீ நீடு வாழ்வாயாக, தோழி – தோழி, பெரிய நிதியம் சொரிந்த நீவி போலப் பாம்பு ஊன் தேம்பும் வறம் கூர் கடத்திடை – பெரும் பொருளைச் சொரிந்த வெற்றுத் துணிப்பை போல் பாம்புகள் தசை வற்றி இருக்கும் வறட்சி மிகுந்த காட்டில், நீங்கா வம்பலர் கணையிடத் தொலைந்தோர் வசிபடு புண்ணின் குருதி மாந்தி – ஓடித் தப்ப இயலாது உயிர் இழந்த புதிய வழிப்போக்கர்களின் பிளந்த புண்களின் குருதியைக் குடித்து, ஒற்றுச் செல் மாக்களின் ஒடுங்கிய குரல இல் வழிப்படூஉம் காக்கை – ஒற்றுத் தொழில் செய்யும் மக்களைப் போல் உள்ளடங்கிய குரல் உடையனவாய் மனையிடத்தில் வந்து தங்கும் காக்கைகளை உடைய (மாக்களின் – இன் ஒப்புப்பொருளில் வந்தது, ஐந்தாம் வேற்றுமை உருபு), கல் உயர் பிறங்கல் மலை இறந்தோரே – கற்கள் உயர்ந்த பக்கமாலையைக் கடந்து சென்றவர் (இறந்தோரே – ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 314, மதுரை அளக்கர் ஞாழார் மகனார் அம்மள்ளனார், முல்லைத் திணை தோழி தலைவனிடம் சொன்னது
“நீலத்து அன்ன நீர் பொதி கருவின்
மாவிசும்பு அதிர முழங்கி ஆலியின்
நிலம் தண்ணென்று கானம் குழைப்ப,
இனந்தேர் உழவர் இன் குரல் இயம்ப,
மறியுடை மடப்பிணை தழீஇப் புறவின்  5
திரிமருப்பு இரலை பைம்பயிர் உகள,
ஆர் பெயல் உதவிய கார் செய் காலை,
நூல் நெறி நுணங்கிய கால் நவில் புரவிக்
கல்லெனக் கறங்கு மணி இயம்ப வல்லோன்
வாய்ச் செல வணக்கிய தாப் பரி நெடுந்தேர்  10
ஈர்ம் புறவு இயங்கு வழி அறுப்பத், தீந்தொடைப்
பையுள் நல் யாழ் செவ்வழி பிறப்ப
இந்நிலை வாரார் ஆயின் தம் நிலை
எவன் கொல் பாண உரைத்திசின், சிறிது” எனக்
கடவுட் கற்பின் மடவோள் கூறச்,  15
செய் வினை அழிந்த மையல் நெஞ்சில்
துனி கொள் பருவரல் தீர வந்தோய்
இனிது செய்தனையால், வாழ்க நின் கண்ணி!
வேலி சுற்றிய வால் வீ முல்லைப்
பெருந்தார் கமழும் விருந்து ஒலி கதுப்பின்  20
இன்னகை இளையோள் கவவ,
மன்னுக பெரும, நின் மலர்ந்த மார்பே.

பாடல் பின்னணி:  வினை முற்றி மீண்ட தலைவனிடம் தோழி கூறியது.   

பொருளுரை:  நீலமணியை ஒத்த பொதிந்த சூலுடன் கரிய வானில் ஒலியுடன் இடித்துப் பெய்த மழையினால், நிலம் குளிர்ந்து காடுகள் தழைத்திட, எருதுகளின் இனத்தை ஆராய்ந்து பூட்டிய உழவர்கள் இனிய குரலில் ஆரவாரிக்க, குட்டியினையுடைய இளைய பெண்மானைத் தழுவிக் கொண்டு முறுக்கிய கொம்பினையுடைய ஆண்மான் பசிய பயிர்களின் இடையில் துள்ள, முகில்கள் மிகுந்த பெயலைத் தந்த கார்ப்பருவத்தைச் செய்யும் காலத்தில்,

“பாணன!  புரவி நூல்கள் கற்கும் முறைப்படி நுண்மையாக அமைந்த, வேகத்தால் காற்று எனக் கூறத்தகும் குதிரைகள் கல்லென்று ஒலிக்கும் மணிகள் ஒலிக்கத் தாவிச் செல்ல, திறமையுடைய பாகனால் அடக்கி செலுத்தப்படும் தாவும் செல்லுதலையுடைய நெடிய தேர் ஈரம் பொருந்திய செல்லும் வழிகளை அறுத்துச் செல்ல, நல்ல யாழில் இனிய நரம்புத் தொடையினையுடைய செவ்வழிப் பண் தோன்ற, இத்தகைய வேளையில் அவர் வந்து சேரார் ஆயின், அவருடைய நிலைமை என்ன ஆகுமோ?  கூறுவாயாக, சிறிது” என்று கடவுள் கற்பினையும் மடப்பத்தையும் உடைய எம் தலைவி பாணனிடம் கூற,

பெருமானே!  செய்யப்படும் வினைகள் அழிவதற்கு ஏதுவாகிய கலங்கிய நெஞ்சில் வெறுப்புடன் கூடிய துன்பம் நீங்கும்படி வந்து, இனியதை செய்தாய் நீ.  நின் கண்ணி வாழ்வதாக! மனையின் வேலியாகச் சூழ்ந்த, முல்லையின் வெள்ளை மலர்களால் தொடுத்த பெரிய மாலையின் நறுமணம் கமழும் புதுமையுறத் தழைத்த கூந்தலையுடைய, இனிய நகையையுடைய இவள் தழுவிக்கொள்ள, நிலைபெறுவதாக நின் அகன்ற மார்பு!

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு ‘பெறற்கு அரும் பெரும் பொருள்’ (தொல்காப்பியம், கற்பியல் 9) என வரும் நூற்பாவின்கண் ‘பிறவும் வகைபட வந்த கிளவி’ என வரும் விதி கொள்க.  ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – ‘பெறற்கு அரும் பெரும் பொருள் முடிந்த பின் வந்த’ (தொல்காப்பியம், கற்பியல் 9) என்னுஞ் சூத்திரத்து, இச் செய்யுள் தோழி முன்பு தலைவிக்கு நிகழ்ந்த ஆற்றாமையும் அது கண்டு தான் கலங்கியவாறும் தலைவற்குக் கூறியது, என்றனர் நச்சினார்க்கினியர்.  கருவின் (1) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – சூலை உடைய.  சின் – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம், இடையியல் 26, சின் என்பது இசின் என்பதன் முதற்குறை – ச. பாலசுந்தரம் உரை).

சொற்பொருள்:  நீலத்து அன்ன நீர் பொதி கருவின் மாவிசும்பு அதிர முழங்கி ஆலியின் நிலம் தண்ணென்று கானம் குழைப்ப – நீலமணியை ஒத்த பொதிந்த சூலுடன் கரிய வானில் ஒலியுடன் இடித்துப் பெய்த மழையினால் நிலம் குளிர்ந்து காடுகள் தழைத்திட (நீலத்து – நீலம், அத்துச் சாரியை, ஆலி – மழைதுளிக்கு ஆகுபெயர்), இனம் தேர் உழவர் இன் குரல் இயம்ப – எருதுகளின் இனத்தை ஆராய்ந்து பூட்டிய உழவர்கள் இனிய குரலில் ஆரவாரிக்க, மறியுடை மடப்பிணை தழீஇப் புறவின் திரிமருப்பு இரலை பைம்பயிர் உகள – குட்டியினையுடைய இளைய பெண்மானைத் தழுவிக் கொண்டு முறுக்கிய கொம்பினையுடைய ஆண்மான் பசிய பயிர்களின் இடையில் துள்ள (தழீஇ – அளபெடை), ஆர் பெயல் உதவிய கார் செய் காலை – முகில்கள் மிகுந்த பெயலைத் தந்த கார்ப்பருவத்தைச் செய்யும் காலத்தில், நூல் நெறி நுணங்கிய கால் நவில் புரவிக் கல்லெனக் கறங்கு மணி இயம்ப வல்லோன் வாய்ச் செல வணக்கிய தாப் பரி நெடுந்தேர் ஈர்ம் புறவு இயங்கு வழி அறுப்ப – புரவி நூல்கள் கற்கும் முறைப்படி நுண்மையாக அமைந்த வேகத்தால் காற்று எனக் கூறத்தகும் குதிரைகள் கல்லென்று ஒலிக்கும் மணிகள் ஒலிக்கத் தாவிச் செல்ல திறமையுடைய பாகனால் அடக்கி செலுத்தப்படும் தாவும் செல்லுதலையுடைய நெடிய தேர் ஈரம் பொருந்திய செல்லும் வழிகளை அறுத்துச் செல்ல (கல்லென– ஒலிக்குறிப்பு மொழி, வாய் – வாவுதல், செல – செல்ல என்பதன் இடைக்குறை), தீந்தொடைப் பையுள் நல் யாழ் செவ்வழி பிறப்ப – நல்ல யாழில் இனிய நரம்புத் தொடையினையுடைய செவ்வழிப் பண் தோன்ற, இந்நிலை வாரார் ஆயின் – இத்தகைய வேளையில் அவர் வந்து சேரார் ஆயின், தம் நிலை எவன் கொல் – அவருடைய நிலைமை என்ன ஆகுமோ, பாண – பாணனே, உரைத்திசின் – கூறுவாயாக, சிறிது (சின் – முன்னிலை அசைச் சொல்), எனக் கடவுட் கற்பின் மடவோள் கூற – என்று கடவுள் கற்பினையும் மடப்பத்தையும் உடைய எம் தலைவி கூற, செய் வினை அழிந்த – செய்யப்படும் வினைகள் அழிவதற்கு ஏதுவாகிய, மையல் நெஞ்சில் துனி கொள் பருவரல் தீர வந்தோய் இனிது செய்தனையால் – கலங்கிய நெஞ்சில் வெறுப்புடன் கூடிய துன்பம் நீங்கும்படி வந்து இனியதை செய்தாய் நீ (வந்தோய் – ஆ ஓ ஆயிற்று செய்யுள் ஆகலின், ஆல் அசைநிலை), வாழ்க நின் கண்ணி – நின் கண்ணி வாழ்வதாக, வேலி சுற்றிய – மனையின் வேலியாகச் சூழ்ந்த, வால் வீ முல்லைப் பெருந்தார் கமழும் விருந்து ஒலி கதுப்பின் – முல்லையின் வெள்ளை மலர்களால் தொடுத்த பெரிய மாலையின் நறுமணம் கமழும் புதுமையுறத் தழைத்த கூந்தலையுடைய, இன்னகை இளையோள் கவவ –  இனிய நகையையுடைய இவள் தழுவிக்கொள்ள, மன்னுக – நிலைபெறுவதாக, பெரும – பெருமானே (விளி), நின் மலர்ந்த மார்பே – நின் அகன்ற மார்பு (மார்பே – ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 315, குடவாயில் கீரத்தனார், பாலைத் திணைமகட் போகிய தாய் சொன்னது
கூழையும் குறு நெறிக் கொண்டன, முலையும்
சூழி மென் முகம் செப்புடன் எதிரின,
பெண் துணை சான்றனள் இவள் எனப் பன் மாண்
கண் துணை ஆக நோக்கி நெருநையும்
அயிர்த்தன்று மன்னே, நெஞ்சம் பெயர்த்தும்  5
அறியாமையின் செறியேன் யானே,
பெரும் பெயர் வழுதி கூடல் அன்ன தன்
அருங்கடி வியன் நகர்ச் சிலம்பும் கழியாள்,
சேணுறச் சென்று வறுஞ்சுனைக்கு ஒல்கி
புறவுக் குயின்று உண்ட புன் காய் நெல்லிக்  10
கோடையுதிர்த்த குவி கண் பசுங்காய்
அறு நூல் பளிங்கின் துளைக் காசு கடுப்ப,
வறுநிலத்து உதிரும் அத்தம் கதுமெனக்
கூர் வேல் விடலை பொய்ப்பப் போகிச்
சேக்குவள் கொல்லோ தானே, தேக்கின்  15
அகல் இலை குவித்த புதல் போல் குரம்பை
ஊன் புழுக்கு அயரும் முன்றில்
கான் கெழு வாழ்நர் சிறுகுடியானே.

பாடல் பின்னணி:  நற்றாய் வருந்திக் கூறியது.  

பொருளுரை:  என் மகளின் தலைமயிரும் குறுகிய நெறிப்புகளைக் கொண்டன.  முலைகளும் நுனியில் மெல்லிய முகத்தால் சிமிழினின்று மாறுபட்டன.  இவள் பெண்ணின் தன்மைகளை உடையவள் என்று என் கண்களைத் துணையாகக் கொண்டு பல முறை பார்த்து என் நெஞ்சம் நேற்றும் மிகவும் ஐயமுற்றது.  அதன் பின்பும் என் அறியாமையினால், என் மகளை நான் இற்செறியாது இருந்துவிட்டேன்.

பெரும் புகழையுடைய பாண்டியனின் மதுரையை ஒத்த, தன் அரிய காவல் பொருந்திய பெரிய இல்லத்தில் சிலம்பு கழியும் நோன்பைப் பெறாதவளாய், நெடுந்தூரம் சென்று, நீர் இல்லாத சுனையில் நீர் பெறாது தளர்ந்து, புறா கொத்தித் துளைத்து உண்ட புல்லிய காய்களையுடைய நெல்லி மரத்தின்கண் மேல் காற்று வீசி உதிர்த்த, கண்ணிணையுடைய பசிய காய்கள், நூல் அறுந்து உதிர்ந்த துளையுடைய பளிங்குக் காசுகள் போல் உலறிய நிலத்தில் உதிர்ந்த பாலை நில வழியில், கூரிய வேலையுடைய அவள் தலைவன் பொய் கூறி அழைத்துச் செல்ல, விரைந்து சென்று அவள் தங்கியிருப்பாளா, புதரைப் போன்ற குடிசையின் முற்றத்தில், தேக்கு மரத்தின் அகன்ற இலையில் குவிக்கப்பெற்ற, புழுக்கிய ஊனை உண்ணும், காட்டில் பொருந்திய வாழ்க்கையை வாழ்பவர்களின் சிற்றூரில்?

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு ‘தன்னும் அவனும்’ (தொல்காப்பியம், அகத்திணையியல் 39) என வரும் நூற்பாவின்கண் ‘நற்றாய் சுட்டிப் போகிய திறத்துப் புலம்பலும்’ என வரும் விதி கொள்க.  முலையும் சூழி மென் முகம் செப்புடன் எதிரின (1–2) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – நுனியில் மெல்லிய முகத்தோடு அவள் முலைகளும் வளர்ந்து சிமிழ் போலாயின, ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – முலையும் உச்சியிலுள்ள மெல்லிய முகத்தால் சிமிழுடன் மாறுபட்டன.  குறுந்தொகை 159 – கொம்மை வரி முலை செப்புடன் எதிரின, குறுந்தொகை பாடலின் உரை – பொ. வே. சோமசுந்தரனார் உரை – பெருமையையும் தேமலையும் உடைய முலைகள் செப்போடு மாறுபட்டன, உ. வே. சாமிநாதையர் உரை – பெருமையையும் தேமலையும் உடைய நகில்கள் செப்போடு மாறுபட்டன.  புறவு – புற என வந்தது.  ‘குறியதன் இறுதிச் சினை கெட உகரம் அறிய வருதல் செய்யுளுள் உரித்தே’ (தொல்காப்பியம், உயிர் மயங்கியல் 32).  வரலாறு –வழுதி (பாண்டியன்), கூடல்.  சிலம்பு கழித்தல் நோன்பு – அகநானூறு 315, 369, 399, நற்றிணை 279, ஐங்குறுநூறு 399. 

சொற்பொருள்:  கூழையும் குறு நெறிக் கொண்டன – தலைமயிரும் குறுகிய நெறிப்புகளைக் (வளைவுகளைக்) கொண்டன, முலையும் சூழி மென் முகம் செப்புடன் எதிரின – முலைகளும் நுனியில் மெல்லிய முகத்தால் சிமிழ்கள் போல் ஆயின, முலைகளும் நுனியில் மெல்லிய முகத்தால் சிமிழினின்று மாறுபட்டன, பெண் துணை சான்றனள் இவள் எனப் பன் மாண் கண் துணை ஆக நோக்கி நெருநையும் அயிர்த்தன்று மன்னே நெஞ்சம் – இவள் பெண்ணின் தன்மைகளை உடையவள் என்று என் கண்களைத் துணையாகக் கொண்டு பல முறை பார்த்து என் நெஞ்சம் நேற்றும் மிகவும் ஐயமுற்றது (மன்னே – மன் மிகுதி, ஏ அசைநிலை), பெயர்த்தும் அறியாமையின் செறியேன் யானே – அதன் பின்பும் என் அறியாமையினால் என் மகளை நான் இற்செறியாது இருந்துவிட்டேன், பெரும் பெயர் வழுதி கூடல் அன்ன தன் அருங்கடி வியன் நகர்ச் சிலம்பும் கழியாள் – பெரும் புகழையுடைய பாண்டியனின் மதுரையை ஒத்த தன் அரிய காவல் பொருந்திய பெரிய இல்லத்தில் சிலம்பு கழியும் நோன்பைப் பெறாதவளாய், சேணுறச் சென்று – நெடுந்தூரம் சென்று, வறுஞ்சுனைக்கு ஒல்கி – நீர் இல்லாத சுனையில் நீர் பெறாது தளர்ந்து, புறவுக் குயின்று உண்ட புன் காய் நெல்லிக் கோடை உதிர்த்த குவி கண் பசுங்காய் – புறா கொத்தித் துளைத்து உண்ட புல்லிய காய்களையுடைய நெல்லி மரத்தின்கண் மேல் காற்று வீசி உதிர்த்த கண்ணிணையுடைய பசிய காய்கள் (புறவு – புறா புற என்றாகி உகரம் ஏற்றது), அறு நூல் பளிங்கின் துளைக் காசு கடுப்ப வறு நிலத்து உதிரும் அத்தம் – நூல் அறுந்து உதிர்ந்த துளையுடைய பளிங்குக் காசுகள் போல் உலறிய நிலத்தில் உதிர்ந்த பாலை நில வழியில் (கடுப்ப – உவம உருபு), கதுமெனக் கூர் வேல் விடலை பொய்ப்பப் போகிச் சேக்குவள் கொல்லோ – கூரிய வேலையுடைய அவள் தலைவன் பொய் கூறி அழைத்துச் செல்ல விரைந்து சென்று அவள் தங்கியிருப்பாளா (கொல் – ஐயப்பொருட்டு வந்த இடைச்சொல், ஓ – அசைநிலை), தானே – தான் ஏ அசைநிலைகள், தேக்கின் அகல் இலை குவித்த – தேக்கு மரத்தின் அகன்ற இலையில் குவிக்கப்பெற்ற, புதல் போல் குரம்பை – புதரைப் போன்ற குடிசையின், ஊன் புழுக்கு அயரும் – புழுக்கிய ஊனை உண்ணும், முன்றில் – இல்லத்தின் முற்றத்தில் (முன்றில் – இல்முன்), கான் கெழு வாழ்நர் சிறுகுடியானே – காட்டில் பொருந்திய வாழ்க்கையை வாழ்பவர்களின் சிற்றூரில் (சிறுகுடியானே – ஏகாரம் அசைநிலை, an expletive)

அகநானூறு 316, ஓரம்போகியார், மருதத் திணை தோழி தலைவியிடம் சொன்னது
துறை மீன் வழங்கும் பெருநீர்ப் பொய்கை
அரி மலர் ஆம்பல் மேய்ந்த நெறி மருப்பு
ஈர்ந்தண் எருமைச் சுவல்படு முது போத்துத்
தூங்கு சேற்று அள்ளல் துஞ்சிப், பொழுதுபடப்,
பைந்நிண வராஅல் குறையப் பெயர்தந்து,  5
குரூஉக்கொடிப் பகன்றை சூடி மூதூர்ப்
போர்ச்செறி மள்ளரிற் புகுதரும் ஊரன்
தேர்தர வந்த, தெரி இழை நெகிழ்தோள்,
ஊர் கொள்கல்லா மகளிர் தரத்தரப்
பரத்தைமை தாங்கலோ இலனென வறிது நீ  10
புலத்தல் ஒல்லுமோ, மனைகெழு மடந்தை?
அது புலந்து உறைதல் வல்லியோரே
செய்யோள் நீங்கச் சில் பதங்கொழித்துத்,
தாம் அட்டு உண்டு தமியர் ஆகித்
தேமொழிப் புதல்வர் திரங்கு முலை சுவைப்ப  15
வைகுநர் ஆகுதல் அறிந்தும்,
அறியார் அம்மவஃது உடலுமோரே.

பாடல் பின்னணி:  தலைவனுக்கு வாயில் நேர்ந்த தோழி, தலைவியை நெருங்கிச் சொல்லியது. 

பொருளுரை:  துறையின்கண் மீன்கள் இயங்கும் பெரிய நீர் மிக்க பொய்கையில், விளங்கும் மலர்களையுடைய ஆம்பல் கொடியை மேய்ந்த, நெறித்த (வளைவுகளுடைய) கோட்டினையும் மிக்க ஈரமான குளிர்ந்த முதுகையுமுடைய முதிய எருமைக்கடா, அசைகின்ற சேற்றுக் குழம்பில் இரவெல்லாம் துயின்று, ஞாயிறு தோன்றிய வேளையில் பசிய நிணத்தையுடைய வரால் மீன்கள் வெட்டுப்படும்படி நடந்து, நிறம் மிக்க மலர்களையுடைய பகன்றைக் கொடியினைச் சூடிக்கொண்டு, பண்டைய ஊரின்கண் போரில் வெற்றி அடைந்த மறவர் போல் புகும் ஊரையுடைய நம் தலைவன்,

தேரில் கொண்டு வந்த விளங்கும் அணிகலன்களையும் நெகிழ்ந்த தோள்களையும் உடைய ஊர் தாங்க இயலாத பரத்தையரை ஏவலர்கள் மீண்டும் மீண்டும் கொண்டு வர பரத்தமை ஒழுக்கத்தை மேற்கொள்வதிலிருந்து நீங்காதுள்ளான் என்று, மனை வாழ்க்கையை உடைய மடந்தையாகிய நீ, பயன் இல்லாது ஊடுதல் பொருந்துமோ? தலைவனின் பரத்தமையை வெறுத்துப் பிரிந்து வாழும் வலிமையுடையவர்கள், தம்மிடமிருந்து திருமகள் நீங்க, சிறு அரிசியை முறத்தால் புடைத்துத் தாமே சமைத்து உண்டு தனித்தோர் ஆகி, இனிய சொற்களையுடைய புதல்வர்கள் பால் இல்லாதுச் சுருங்கிய முலைகளைச் சுவைக்க, ஏழ்மையுடன் தங்குவார்கள் ஆகுதலை அறிந்தும், அறியாமை உடையவர்கள் அவ்வாறு மாறுபாடுபவர்கள்.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு ‘பெறற்கு அரும் பெரும் பொருள்’ (தொல்காப்பியம், கற்பியல் 9) என வரும் நூற்பாவின்கண் ‘உணர்ப்புவயின் வாரா ஊடல் உற்றோள்வயின் உணர்த்தல் வேண்டிய கிழவோன்பால் நின்று தான் வெகுண்டு ஆக்கிய தகுதிக்கண்ணும்’ என வரும் விதி கொள்க.  ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – ‘பெறற்கு அரும் பெரும் பொருள் முடிந்த பின்’ (தொல்காப்பியம், கற்பியல் 9) என்னுஞ் சூத்திரத்து, ‘உணர்ப்புவயின் வாரா ஊடல் உற்றோள்வயின் உணர்த்தல் வேண்டிய கிழவோன்பால் நின்று தான் வெகுண்டு ஆக்கிய தகுதிக்கண்ணும்’ என்னும் பகுதிக்கண், இச் செய்யுளைக் காட்டி, இது, தோழி தலைவியை வெகுண்டு ஆக்கியவாறு காண்க என்றும், ‘வருத்த மிகுதி சுட்டுங்காலை’ (தொல்காப்பியம், பொருளியல் 320) என்னுஞ் சூத்திரத்து, இச் செய்யுளுள் ‘அது புலந்துறைதல் வல்லியோரே’ எனப் புலவியால் நின் இல்வாழ்க்கை குறைபடுமெனத் தோழி கூறியவாறு காண்க, என்றும் கூறினர் நச்சினார்க்கினியர்.  ஒப்புமை –நற்றிணை 260 – தண்டு சேர் மள்ளரின் இயலி அயலது குன்று சேர் வெண்மணல் துஞ்சும் ஊர.  வறிது – வறிது சிறிது ஆகும் (தொல்காப்பியம், உரியியல் 40).

சொற்பொருள்:  துறை மீன் வழங்கும் பெரு நீர்ப் பொய்கை அரி மலர் ஆம்பல் மேய்ந்த – துறையின்கண் மீன்கள் இயங்கும் பெரிய நீர் மிக்க பொய்கையில் விளங்கும் மலர்களையுடைய ஆம்பல் கொடியை மேய்ந்த, நெறி மருப்பு ஈர்ந்தண் எருமைச் சுவல்படு முது போத்து – நெறித்த (வளைவுகளுடைய) கோட்டினையும் மிக்க ஈரமான குளிர்ந்த முதுகையுமுடைய முதிய எருமைக்கடா, தூங்கு சேற்று அள்ளல் துஞ்சிப் பொழுதுபடப் பைந்நிண வராஅல் குறையப் பெயர்தந்து குரூஉக்கொடிப் பகன்றை சூடி – அசைகின்ற சேற்றுக் குழம்பில் இரவெல்லாம் துயின்று ஞாயிறு தோன்றிய வேளையில் பசிய நிணத்தையுடைய வரால் மீன்கள் வெட்டுப்படும்படி நடந்து நிறம் மிக்க மலர்களையுடைய பகன்றைக் கொடியினைச் சூடிக்கொண்டு (வராஅல் – அளபெடை, பகன்றைக் கொடி – Operculina turpethum, Indian jalap), மூதூர்ப் போர்ச்செறி மள்ளரின் புகுதரும் ஊரன் – பண்டைய ஊரின்கண் போரில் வெற்றி அடைந்த மறவர் போல் புகும் ஊரையுடைய நம் தலைவன் (மள்ளரின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), தேர்தர வந்த தெரி இழை நெகிழ்தோள் ஊர் கொள்கல்லா மகளிர் தரத் தரப் பரத்தைமை தாங்கல் ஓவிலன் என – தேரில் கொண்டு வந்த விளங்கும் அணிகலன்களையும் நெகிழ்ந்த தோள்களையும் உடைய ஊர் தாங்க இயலாத பரத்தையரை ஏவலர்கள் மீண்டும் மீண்டும் கொண்டு வர பரத்தமை ஒழுக்கத்தை மேற்கொள்வதிலிருந்து நீங்காதுள்ளான் என்று, வறிது நீ புலத்தல் ஒல்லுமோ – பயன் இல்லாது நீ ஊடுதல் பொருந்துமோ (வறிது – உரிச்சொல், ஒல்லுமோ – ஓகாரம் வினா), மனைகெழு மடந்தை – மனை வாழ்க்கையை உடைய மடந்தையாகிய நீ, அது புலந்து உறைதல் வல்லியோரே – தலைவனின் பரத்தமையை வெறுத்துப் பிரிந்து வாழும் வலிமையுடையவர்கள் (வல்லியோரே – ஏகாரம் அசைநிலை), செய்யோள் நீங்கச் சில் பதம் கொழித்துத் தாம் அட்டு உண்டு தமியர் ஆகி – தம்மிடமிருந்து திருமகள் நீங்க சிறு அரிசியை முறத்தால் புடைத்துத் தாமே சமைத்து உண்டு தனித்தோர் ஆகி, தேமொழிப் புதல்வர் திரங்கு முலை சுவைப்ப – இனிய சொற்களையுடைய புதல்வர்கள் பால் இல்லாதுச் சுருங்கிய முலைகளைச் சுவைக்க, வைகுநர் ஆகுதல் அறிந்தும் அறியார் அம்ம அஃது உடலுமோரே – தங்குவார்கள் ஆகுதலை அறிந்தும் அறியாமை உடையவர்கள் அவ்வாறு மாறுபாடுபவர்கள் (அம்ம – அசைநிலை, உடலுமோரே – ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 317, வடமோதங்கிழார், பாலைத் திணைதோழி தலைவியிடம் சொன்னது
“மாக விசும்பின் மழை தொழில் உலந்தெனப்,
பாஅய் அன்ன பகல் இருள் பரப்பிப்,
புகை நிற உருவின் அற்சிரம் நீங்கக்,
குவி முகை முருக்கின் கூர் நுனை வை எயிற்று
நகை முக மகளிர் ஊட்டு உகிர் கடுக்கும்  5
முதிராப் பல்லிதழ் உதிரப் பாய்ந்து, உடன்
மலர் உண் வேட்கையின் சிதர் சிதர்ந்து உகுப்பப்,
பொன் செய் கன்னம் பொலிய, வெள்ளி
நுண் கோல் அறை குறைந்து உதிர்வன போல
அரவ வண்டினம் ஊதுதொறும் குரவத்து  10
ஓங்கு சினை நறுவீ கோங்கு அலர் உறைப்பத்,
துவைத்து எழு தும்பி தவிர் இசை விளரி
உதைத்து விடு நரம்பின் இம்மென இமிரும்,
மான் ஏமுற்ற காமர் வேனில்
வெயில் அவிர் புரையும் வீ ததை மராஅத்துக்  15
குயில் இடு பூசல் எம்மொடு கேட்ப
வருவேம்” என்ற பருவம் ஆண்டை
இல்லை கொல்லென மெல்ல நோக்கி,
நினைந்தனம் இருந்தனமாக நயந்தாங்கு
உள்ளிய மருங்கின் உள்ளம் போல,  20
வந்து நின்றனரே காதலர், நம் துறந்து
என் உழியது கொல் தானே, பன்னாள்
அன்னையும் அறிவுற அணங்கி
நன்னுதல் பாஅய பசலை நோயே?

பாடல் பின்னணி:  தலைவனின் வரவு உணர்ந்த தோழி, தலைவிக்குச் சொல்லியது.

பொருளுரை:  வானின்கண் மழை பெய்தல் ஒழிந்து, அதன்பின், பரப்பினாற்போன்ற இருளை பகலிலும் விரித்துப் புகையின் நிறம் போன்ற தோற்றத்தையுடைய பனிக்காலமும் நீங்க, கூரிய பற்களையும் ஒளி பொருந்திய முகத்தையும் உடைய மகளிரின் செம்பஞ்சுக் குழம்பு ஊட்டிய நகத்தைப் போன்றிருக்கும் குவிந்த அரும்புகளையுடைய முருக்க மரத்தின் முற்றாத பல பூ இதழ்கள் உதிருமாறுப் பாய்ந்து, மலர்களில் உள்ள தேனை உண்ணும் விருப்பினால் ஒருசேர வண்டுகள் பாய்ந்து கிண்டி உதிர்த்திட, பொன்னினால் செய்த துலாக்கோலின் கிண்ணங்கள் பொலிவுறும்படி வெள்ளியின் நுண்ணிய கம்பி அறுக்கப்பட்டு உதிர்ந்த துண்டுகள் போல், ஒலிக்கும் வண்டுகளின் கூட்டம் தாது உண்ணுந்தோறும் குரவ மரத்தின் உயர்ந்த கிளைகளில் உள்ள நறுமணமுடைய பூக்கள் கோங்க மலர்கள் மீது விழ, ஒலித்து எழும் வண்டுகளின் ஒலி தெறித்து விடும் விளரி நரம்பின் ஒலிபோல் இம்மென்று ஒலிக்கும், மான்கள் இன்பமுற்ற அழகிய வேனில் காலத்தில், வெயிலின் ஒளியை ஒத்த மலர்கள் செறிந்த கடம்ப மரத்திலிருந்து குயில்கள் செய்யும் ஆரவாரத்தை நம்முடன் கேட்க யாம் வருவேம், என்று அவர் கூறிய வருவம் அவர் இருக்குமிடத்தில் இல்லையோ என்று, மெல்ல நோக்கி நினைத்திருந்தோம் ஆக, அங்கு அவ்வாறு விரும்பி நினைத்த வேளையில், உள்ளத்தில் நினைந்தவை வந்தாற்போல், நம் தலைவர் வந்து நின்றார்.

நம்மைத் துறந்து எங்கு சென்றதோ, பல நாட்களாக நம் அன்னையும் அறிந்திட நம்மை வருத்தி நம் நல்ல நெற்றியில் பரவிய பசலை நோய்?

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு ‘மரபுநிலை திரியா மாட்சிய ஆகி விரவும் பொருளும் விரவும் என்ப’ (தொல்காப்பியம், அகத்திணையியல் 45) என வரும் விதி கொள்க.  உதைத்து விடு (13) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – மலர்களைக் காலால் துவைத்து எழுந்து போகின்ற, ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – தெறித்து விடும் விளரி நரம்பின் ஒலி.  வை – வையே கூர்மை (தொல்காப்பியம், உரியியல் 91).

சொற்பொருள்:  மாக விசும்பின் மழை தொழில் உலந்தெனப் பாஅய் அன்ன பகல் இருள் பரப்பிப் புகை நிற உருவின் அற்சிரம் நீங்க – வானின்கண் மழை பெய்தல் ஒழிந்ததாக பரப்பினாற்போன்ற இருளை பகலிலும் விரித்துப் புகையின் நிறம் போன்ற தோற்றத்தையுடைய பனிக்காலம் நீங்க (மாக விசும்பு – இருபெயரொட்டு, பாஅய் – அளபெடை), குவி முகை முருக்கின்  குவிந்த அரும்புகளையுடைய முருக்க மரத்தின் (முருக்க மரம் – Coral tree, Erythrina variegata), கூர் நுனை வை எயிற்று நகை முக மகளிர் ஊட்டு உகிர் கடுக்கும் – கூரிய பற்களையும் ஒளி பொருந்திய முகத்தையும் உடைய மகளிரின் செம்பஞ்சுக் குழம்பு ஊட்டிய நகத்தைப் போன்றிருக்கும், முதிராப் பல்லிதழ் உதிரப் பாய்ந்து  – முற்றாத பல பூ இதழ்கள் உதிருமாறுப் பாய்ந்து, உடன் – ஒருசேர, மலர் உண் வேட்கையின் சிதர் சிதர்ந்து உகுப்ப – மலர்களில் உள்ள தேனை உண்ணும் விருப்பினால் வண்டுகள் பாய்ந்து கிண்டி உதிர்த்திட, பொன் செய் கன்னம் பொலிய வெள்ளி நுண் கோல் அறை குறைந்து உதிர்வன போல – பொன்னினால் செய்த துலாக்கோலின் கிண்ணங்கள் பொலிவுறும்படி வெள்ளியின் நுண்ணிய கம்பி அறுக்கப்பட்டு உதிர்ந்த துண்டுகள் போல், அரவ வண்டினம் ஊதுதொறும் குரவத்து ஓங்கு சினை நறுவீ கோங்கு அலர் உறைப்ப – ஒலிக்கும் வண்டுகளின் கூட்டம் தாது உண்ணுந்தோறும் குரவ மரத்தின் உயர்ந்த கிளைகளில் உள்ள நறுமணமுடைய பூக்கள் கோங்க மலர்கள் மீது விழ (குரவ மரம் – Webera Corymbosa, கோங்க மரம் – Cochlospermum Gossypium), துவைத்து எழு தும்பி தவிர் இசை விளரி உதைத்து விடு நரம்பின் இம்மென இமிரும் – ஒலித்து எழும் வண்டுகளின் ஒலி தெறித்து விடும் விளரி நரம்பின் ஒலிபோல் இம்மென்று ஒலிக்கும், மான் ஏமுற்ற காமர் வேனில் – மான்கள் இன்பமுற்ற அழகிய வேனில் காலத்தில், வெயில் அவிர் புரையும் வீ ததை மராஅத்துக் குயில் இடு பூசல் எம்மொடு கேட்ப வருவேம் – வெயிலின் ஒளியை ஒத்த மலர்கள் செறிந்த கடம்ப மரத்திலிருந்து குயில்கள் செய்யும் ஆரவாரத்தை நம்முடன் கேட்க வருவேம் (மராஅத்து – அத்து சாரியை, மரா மரம் – கடம்ப மரம், Neolamarckia or Anthocephalus cadamba, Kadampa oak), என்ற பருவம் ஆண்டை இல்லை கொல் என – என்று அவர் கூறிய வருவம் அவர் இருக்குமிடத்தில் இல்லையோ என்று, மெல்ல நோக்கி நினைந்தனம் இருந்தனமாக – மெல்ல நோக்கி நினைத்திருந்தோம் ஆக, நயந்து ஆங்கு உள்ளிய மருங்கின் உள்ளம் போல – அங்கு விரும்பி நினைத்த வேளையில் உள்ளத்தில் நினைந்தவை வந்தாற்போல், வந்து நின்றனரே காதலர் – நம் தலைவர் வந்து நின்றார், நம் துறந்து என் உழியது கொல் – நம்மைத் துறந்து எங்கு சென்றதோ (கொல் – ஐயப்பொருட்டு வந்த இடைச்சொல்), தானே – தான், ஏ அசைநிலைகள், பன்னாள் அன்னையும் அறிவுற அணங்கி நன்னுதல் பாஅய பசலை நோயே – பல நாட்களாக நம் அன்னையும் அறிந்திட நம்மை வருத்தி நம் நல்ல நெற்றியில் பரவிய பசலை நோய் (நோயே – ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 318, கபிலர், குறிஞ்சித் திணை, தலைவி தலைவனிடம் சொன்னது
கான மான் அதர் யானையும் வழங்கும்,
வான மீமிசை உருமு நனி உரறும்,
அரவும் புலியும் அஞ்சுதகவுடைய
இரவுச் சிறு நெறி தமியை வருதி,
வரை இழி அருவிப் பாட்டொடு பிரசம்  5
முழவுச் சேர் நரம்பின் இம்மென இமிரும்,
பழ விறல் நனந்தலைப் பயமலை நாட!
மன்றல் வேண்டினும் பெறுகுவை, ஒன்றோ
இன்று தலையாக வாரல், வரினே,
ஏமுறு துயரமொடு யாம் இவண் ஒழிய,  10
எற் கண்டு பெயரும் காலை, யாழ நின்
கல் கெழு சிறுகுடி எய்திய பின்றை
ஊதல் வேண்டுமால் சிறிதே, வேட்டொடு
வேய் பயில் அழுவத்துப் பிரிந்த நின்
நாய் பயிர் குறி நிலை கொண்ட கோடே.  15

பாடல் பின்னணி:  இரவுக்குறி வந்த தலைவனை, இரவுக்குறி விலக்கி வரைவு கடாயது. 

பொருளுரை:  மலையிலிருந்து வீழும் அருவிகளின் ஒலியுடன் வண்டுகளின் ஒலி சேர்ந்து முழவு ஒலியுடன் கூடிய யாழ் நரம்பின் ஒலிபோல் இம்மென்று ஒலிக்கும் பயன்பொருந்திய மலைநாட்டின் தலைவனே!

காட்டு விலங்குகள் செல்லும் வழியில் யானைகளும் சில வேளைகளில் செல்லும்.  வானத்தில் மிக உயர்ந்த இடத்தில் இடியும் மிகுதியாக முழங்கும்.  பாம்புகளையும் புலிககளையும் அஞ்சுமாறு உள்ள இரவு நேரத்தில், தனியாக நீ வருகிறாய்.  திருமணம் புரிவதை நீ விரும்பினால் அதை நீ பெறுவாய். 

இன்று முதல் இவ்வாறு வராதே.  வந்தால், யாம் இங்கிருந்து கலக்கமுறுவதற்குக் காரணமான துன்பம் நீங்குமாறு, நீ என்னைக் கண்டு நீங்கும் பொழுது, நின் மலைகள் பொருந்திய சிற்றூரை அடைந்த பின் ஊத வேண்டும் சிறிது, நீ வேட்டைக்கு சென்றபொழுது மூங்கில்கள் செறிந்த காட்டில் பிரிந்த நாய்களை அழைக்கும் குறிப்பினைக் கொண்ட நின் கொம்பினை.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு ‘நாற்றமும் தோற்றமும்’ (தொல்காப்பியம், களவியல் 23) என வரும் நூற்பாவின்கண் ‘ஆற்றது தீமை அறிவுறு கலக்கமும்’ என வரும் விதி கொள்க.  ஒப்புமை –அகநானூறு 168 – மான் அதர்ச் சிறு நெறி, அகநானூறு 203 – மான் அதர் மயங்கிய மலை முதல் சிறு நெறி, அகநானூறு 318 – கான மான் அதர் யானையும் வழங்கும், அகநானூறு 388 – காட்டு மான் அடிவழி ஒற்றி.  நனந்தலை – அகன்ற இடம், நனம் – நனவே களனும் அகலமும் செய்யும் (தொல்காப்பியம், உரியியல் 80).  நனி – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3).

சொற்பொருள்:  கான மான் அதர் யானையும் வழங்கும் – காட்டு விலங்குகள் செல்லும் வழியில் யானைகளும் செல்லும், வான மீ மிசை உருமு நனி உரறும் – வானத்தில் மிக உயர்ந்த இடத்தில் இடியும் மிகுதியாக முழங்கும் (மீமிசை – ஒருபொருட் பன்மொழி), அரவும் புலியும் அஞ்சுதகவுடைய இரவுச் சிறு நெறி தமியை வருதி – பாம்புகளையும் புலிககளையும் அஞ்சுமாறு உள்ள இரவு நேரத்தில் தனியாக நீ வருகிறாய், வரை இழி அருவிப் பாட்டொடு பிரசம் முழவுச் சேர் நரம்பின் இம்மென இமிரும் பழ விறல் நனந்தலைப் பயமலை நாட – மலையிலிருந்து வீழும் அருவிகளின் ஒலியுடன் வண்டுகளின் ஒலி சேர்ந்து முழவு ஒலியுடன் கூடிய யாழ் நரம்பின் ஒலிபோல் இம்மென்று ஒலிக்கும் பயன்பொருந்திய மலைநாட்டின் தலைவனே (நரம்பின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது, இம்மென – ஒலிக்குறிப்பு மொழி), மன்றல் வேண்டினும் பெறுகுவை – திருமணம் புரிவதை நீ விரும்பினால் அதை நீ பெறுவாய், ஒன்றோ இன்று தலையாக வாரல் – இன்று முதல் இவ்வாறு வராதே (வாரல் – அல்லீற்று எதிர்மறை வியங்கோள் வினைமுற்று), வரினே ஏமுறு துயரமொடு யாம் இவண் ஒழிய – வந்தால் யாம் இங்கிருந்து கலக்கமுறுவதற்குக் காரணமான துன்பம் நீங்குமாறு (வரினே – ஏகாரம் அசைநிலை), என் கண்டு பெயரும் காலை – என்னைக் கண்டு நீங்கும் பொழுது, யாழ – அசைநிலை, நின் கல் கெழு சிறுகுடி எய்திய பின்றை ஊதல் வேண்டுமால் சிறிதே – நின் மலைகள் பொருந்திய சிற்றூரை அடைந்த பின் ஊத வேண்டும் சிறிது (வேண்டுமால் – வேண்டும் + ஆல், ஆல் அசைநிலை), வேட்டொடு வேய் பயில் அழுவத்துப் பிரிந்த நின் நாய் பயிர் குறி நிலை கொண்ட கோடே – வேட்டைக்கு சென்றபொழுது மூங்கில்கள் செறிந்த காட்டில் பிரிந்த நாய்களை அழைக்கும் குறிப்பினைக் கொண்ட கொம்பினை (கோடே – ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 319, எருக்காட்டூர்த் தாயங்கண்ணனார், பாலைத் திணைதோழி தலைவனிடம் சொன்னது
மணிவாய்க் காக்கை மா நிறப் பெருங்கிளை
பிணி வீழ் ஆலத்து அலங்கு சினை ஏறிக்,
கொடு வில் எயினர் குறும்பிற்கு ஊக்கும்
கடு வினை மறவர் வில்லிடத் தொலைந்தோர்
படுபிணங்கவரும் பாழ் படு நனந்தலை,  5
அணங்கென உருத்த நோக்கின், ஐயென
நுணங்கிய நுசுப்பின் நுண் கேழ் மாமைப்
பொன் வீ வேங்கைப் புது மலர் புரைய
நல் நிறத்து எழுந்த சுணங்கு அணி வன முலைச்
சுரும்பு ஆர் கூந்தல் பெருந்தோள், இவள் வயின்  10
பிரிந்தனிர் அகறல் சூழின், அரும் பொருள்
எய்துக மாதோ நுமக்கே கொய் குழைத்
தளிர் ஏர் அன்ன தாங்கரு மதுகையள்
மெல்லியள், இளையள், நனி பேர் அன்பினள்,
“செல்வேம்” என்னும் நும் எதிர்,  15
“ஒழிவேம்” என்னும் ஒண்மையோ இலளே.

பாடல் பின்னணி:  பிரிவு உணர்த்திய தலைவனுக்குத் தோழி செலவு அழுங்கச் சொல்லியது. 

பொருளுரை:  நீலமணி போன்ற அலகினை உடைய காக்கையின் கரிய நிறத்தையுடைய பெரிய சுற்றம், பிணிப்புற்ற விழுதுகளையுடைய ஆலமரத்தின் அசையும் கிளைகளில் ஏறி இருந்து அதன் பின், வளைந்த (கொடிய) வில்லையுடைய  எயினர்களாகிய தாம் வாழுமிடத்திலிருந்து ஊக்கத்துடன் எழும் கொடிய தொழிலையுடைய மறவர்கள், தங்கள் வில்லால் அம்புகளை எய்ததால் இறந்தவர்களின் விழுந்து கிடக்கும் பிணங்களைக் கவர்ந்து உண்ணும், பாழ்பட்ட அகன்ற பாலை நிலத்திற்கு,

வருத்தும் கடவுள் எண்ணுபடியான உருவம் கொண்ட கண்களையும், அழகிய மெலிந்த இடையினையும், நுண்ணிய மாமை (மாந்தளிர்) நிறத்தையும், பொன் நிற பூக்களையுடைய வேங்கை மரத்தின் புதிய மலர்களை ஒப்ப தேமலை அணிந்த நல்ல மார்பில் எழுந்த அழகிய முலைகளையும், வண்டுகள் மொய்க்கும் கூந்தலையும், பெரிய தோள்களையும் உடைய இவளிடமிருந்து பிரிந்து போகுதலை எண்ணுவீர் ஆயின், நுமக்கு அரிய பொருள் அடைவதாக!

கொய்யப்பட்ட குழையாகிய தளிரினை ஒத்தவளும், தாங்குவதற்கு அரிய வலிமையுடைவளும், மென்மை இயல்புகள் உடையவளும், இளையவளும், நும் மேல் பேரன்பு உடையவளும் ஆகிய இவள், “பிரிந்து போவோம்” எனக் கூறும் நும்மிடம் மறுமொழியாக, “யாம் ஆற்றியிருப்போம்” எனக் கூறும் அறிவுடைமை இல்லாதவள்.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு ‘தலைவரும் விழுமநிலை எடுத்துரைப்பினும்’ (தொல்காப்பியம், அகத்திணையியல் 31) என வரும் விதி கொள்க.  தாங்கரு மதுகையள் (13) – ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – தாங்கும் மதுகை இல்லாதவள் என்றபடி.  நனந்தலை – அகன்ற இடம், நனம் – நனவே களனும் அகலமும் செய்யும் (தொல்காப்பியம், உரியியல் 80).  ஒழிவேம் (16) – சோமசுந்தரனார் உரை – யாம் இறந்துபடுவேம், ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – பிரிந்து ஆற்றியிருப்பேம்.  குறும்பிற்கு ஊக்கும் (3) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – ஐந்தாவதன்கண் நான்காவது மயங்கிற்று.  நனி – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3).  பாலைத் திணைப் பாடல்களில் கள்வர்கள் – அகநானூறு 1, 3, 7, 31, 63, 89, 91, 101, 151, 169, 245, 249, 257, 269, 285, 289, 291, 297, 309, 313, 319, 321, 327, 337, 363, 365, நற்றிணை 3, 33, 48, 164, 224, 362, குறுந்தொகை 16, 274, 283, 331, 350, 390, ஐங்குறுநூறு 329, 352, கலித்தொகை 6, 12,  குறிஞ்சித் திணைப் பாடல்களில் கள்வர்கள் – அகநானூறு 342, குறுந்தொகை 297.

சொற்பொருள்:  மணிவாய்க் காக்கை மா நிறப் பெருங்கிளை பிணி வீழ் ஆலத்து அலங்கு சினை ஏறி – நீலமணி போன்ற அலகினை உடைய காக்கையின் கரிய நிறத்தையுடைய பெரிய சுற்றம் பிணிப்புற்ற விழுதுகளையுடைய ஆலமரத்தின் அசையும் கிளைகளில் ஏறி இருந்து (ஆலத்து – அத்து சாரியை), கொடு வில் எயினர் குறும்பிற்கு ஊக்கும் கடு வினை மறவர் வில்லிடத் தொலைந்தோர் படுபிணம் கவரும் – வளைந்த (கொடிய) வில்லையுடைய  எயினர்களாகிய தாம் வாழுமிடத்திலிருந்து ஊக்கத்துடன் எழும் கொடிய தொழிலையுடைய மறவர்கள் வில்லால் அம்புகளை எய்ததால் இறந்தவர்களின் விழுந்து கிடக்கும் பிணங்களைக் கவர்ந்து உண்ணும், பாழ் படு நனந்தலை – பாழ்பட்ட அகன்ற இடத்தில், அணங்கென உருத்த நோக்கின் – வருத்தும் கடவுள் எண்ணுபடியான உருவம் கொண்ட கண்களையும் (உருத்த – உருவம் கொண்ட), ஐயென நுணங்கிய நுசுப்பின் – அழகிய மெலிந்த இடையினையும், நுண் கேழ் மாமைப் பொன் வீ வேங்கைப் புது மலர் புரைய நல் நிறத்து எழுந்த சுணங்கு அணி வன முலைச் சுரும்பு ஆர் கூந்தல் பெருந்தோள் – நுண்ணிய மாமை (மாந்தளிர்) நிறத்தையும் பொன் நிற பூக்களையுடைய வேங்கை மரத்தின் புதிய மலர்களை ஒப்ப தேமலை அணிந்த நல்ல மார்பில் எழுந்த அழகிய முலைகளையும் வண்டுகள் மொய்க்கும் கூந்தலையும் பெரிய தோள்களையும் உடைய (புரை – உவம உருபு, வேங்கை மரம் – Pterocarpus marsupium), இவள் வயின் பிரிந்தனிர் அகறல் சூழின் – இவளிடமிருந்து பிரிந்து போகுதலை எண்ணுவீர் ஆயின், அரும் பொருள் எய்துக – பெறுவதற்கு அரிய பொருள் அடைவதாக, மாதோ – மாது ஓ அசைநிலைகள், நுமக்கே – நுமக்கு, கொய் குழைத் தளிர் ஏர் அன்ன தாங்கரு மதுகையள் மெல்லியள் இளையள் நனி பேர் அன்பினள் – கொய்யப்பட்ட குழையாகிய தளிரினை ஒத்தவளும் தாங்குவதற்கு அரிய வலிமையுடைவளும் மென்மை இயல்புகள் உடையவளும் இளையவளும் நும்மேல் பேரன்பு உடையவளும் ஆகிய இவள், செல்வேம் என்னும் நும் எதிர் ஒழிவேம் என்னும் ஒண்மையோ இலளே – பிரிந்து போவோம் எனக் கூறும் நும்மிடம் பதிலாக யாம் ஆற்றியிருப்போம் எனக் கூறும் அறிவுடைமை இல்லாதவள் (ஒண்மையோ – ஓகாரம் அசைநிலை, இலளே – ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 320, மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார், நெய்தற் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
ஓங்கு திரைப் பரப்பின் வாங்கு விசைக் கொளீஇத்,
திமிலோன் தந்த கடுங்கண் வயமீன்,
தழை அணி அல்குல் செல்வத் தங்கையர்,
விழவு அயர் மறுகின் விலை எனப் பகரும்
கானல் அம் சிறுகுடிப் பெருநீர்ச் சேர்ப்ப!  5
மலர் ஏர் உண்கண் எம் தோழி எவ்வம்
அலர்வாய் நீங்க, நீ அருளாய் பொய்ப்பினும்
நெடுங்கழி துழைஇய குறுங்கால் அன்னம்
அடும்பு அமர் எக்கர் அம் சிறை உளரும்
தடவு நிலைப் புன்னைத் தாது அணி பெருந்துறை,  10
நடுங்கு அயிர் போழ்ந்த கொடுஞ்சி நெடுந்தேர்
வண்டல் பாவை சிதைய வந்து, நீ
தோள் புதிது உண்ட ஞான்றைச்
சூளும் பொய்யோ, கடல் அறிகரியே?

பாடல் பின்னணி:  பகற்குறிக்கண் வந்த தலைவனைத் தோழி வரைவு கடாயது.

பொருளுரை:  உயர்ந்த அலைகளையுடைய கடற்பரப்பில் வலித்து இழுத்த விசையைக் கொண்ட படகையுடைய பரதவன் தந்த கடிய கண்களையுடைய வலிய மீன்களை, தழை ஆடையை இடையில் அணிந்த அப்பரதவரின் செல்வத் தங்கைமார் திருவிழா நடக்கும் தெருவில் கொணர்ந்து விற்கும் கடற்கரைச் சோலையையும் சிறிய குடியிருப்பையும் கொண்ட நெய்தற் பரப்பினையையும் உடைய தலைவனே!  மையிட்ட மலர்போன்ற கண்களையுடைய என் தோழி துன்பத்திலிருந்தும் ஊரின் அலர் மொழியிலிருந்தும் நீங்க நீ அருளாது அவளைத் திருமணம் புரியாமல் இருந்தாலும், நீண்ட கழியில் உள்ள நீரைத் துழாவி உணவைத் தேடும் அன்னப்பறவை, அடும்புக் கொடி படர்ந்த மணல் மேட்டில் அமர்ந்து தன்னுடைய அழகிய இறகினை அலகால் கோதுகின்ற, வளைந்து நிற்கும் புன்னை மரங்கள் பூந்தாதுகளால் அழகு செய்கின்ற பெரிய துறையிடத்தே, அசைகின்ற மணலைப் பிளந்துகொண்டு, கொடுஞ்சி என்ற உறுப்பையுடைய நெடிய தேரில் ஏறி எம்முடைய விளையாட்டுப் பாவை சிதைய வந்து, என் தோழியின் தோள்கள் தரும் இன்பத்தைப் புதிதாக உண்டபொழுது, நீ கொடுத்த உறுதிமொழியும் பொய்யோ?  இந்த கடல் தான் நேரில் கண்ட சான்று ஆகும்.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு ‘நாற்றமும் தோற்றமும்’ (தொல்காப்பியம், களவியல் 23) என வரும் நூற்பாவின்கண் ‘அனைநிலை வகையான் வரைதல் வேண்டினும்’ என வரும் விதி கொள்க.  தட – தடவும் கயவும் நளியும் பெருமை (தொல்காப்பியம், உரியியல் 24), அவற்றுள், தட என் கிளவி கோட்டமும் செய்யும் (தொல்காப்பியம், உரியியல் 25).  கொடுஞ்சி – கையால் பற்றுதற்குரிய தாமரை மொட்டுப் போன்ற தேர் உறுப்பு.

சொற்பொருள்:  ஓங்கு திரைப் பரப்பின் – உயர்ந்த அலைகளையுடைய கடற்பரப்பில், வாங்கு விசைக் கொளீஇத் திமிலோன் – வலித்து இழுத்த விசையைக் கொண்ட படகையுடைய பரதவன்  (கொளீஇ – அளபெடை), தந்த கடுங்கண் வயமீன் தழை அணி அல்குல் செல்வத் தங்கையர் – தந்த கடிய கண்களையுடைய வலிய மீன்களை தழை ஆடையை இடையில் அணிந்த அப்பரதவரின் செல்வத் தங்கைமார், விழவு அயர் மறுகின் விலை எனப் பகரும் – திருவிழா நடக்கும் தெருவில் கொணர்ந்து விற்கும், கானல் அம் சிறுகுடிப் பெருநீர்ச் சேர்ப்ப – கடற்கரைச் சோலையையும் சிறிய குடியிருப்பையும் கொண்ட நெய்தற் பரப்பினையையும் உடைய தலைவனே, மலர் ஏர் உண்கண் எம் தோழி – மையிட்ட மலர்போன்ற கண்களையுடைய என் தோழி (ஏர் – உவம உருபு), எவ்வம் அலர்வாய் நீங்க – துன்பத்திலிருந்தும் ஊரின் அலர் மொழியிலிருந்தும் நீங்க, நீ அருளாய் பொய்ப்பினும் – நீ அவளை திருமணம் புரியாமல் இருந்தாலும், நெடுங்கழி துழைஇய குறுங்கால் அன்னம் – நீண்ட கழியில் உள்ள நீரைத் துழாவி உணவைத் தேடும் அன்னப்பறவை (துழைஇய – அளபெடை), அடும்பு அமர் எக்கர் அம் சிறை உளரும் – அடும்புக் கொடி படர்ந்த மணல் மேட்டில் அமர்ந்து தன்னுடைய அழகிய இறகினை அலகால் கோதுகின்ற, தடவு நிலைப் புன்னைத் தாது அணி பெருந்துறை – வளைந்து நிற்கும் புன்னை மரங்கள் பூந்தாதுகளால் அழகு செய்கின்ற பெரிய துறையிடத்தே (புன்னை மரம் – Calophyllum inophyllum, Laurel Tree, Mast wood Tree), நடுங்கு அயிர் போழ்ந்த கொடுஞ்சி நெடுந்தேர் வண்டல் பாவை சிதைய வந்து – அசைகின்ற மணலைப் பிளந்துகொண்டு கொடுஞ்சி என்ற உறுப்பையுடைய நெடிய தேரில் ஏறி எம்முடைய விளையாட்டுப் பாவை சிதைய வந்து, நீ தோள் புதிது உண்ட ஞான்றை – என் தோழியின் தோள்கள் தரும் இன்பத்தைப் புதிதாக உண்டபொழுது, சூளும் பொய்யோ – உறுதிமொழியும் பொய்யோ (பொய்யோ– ஓகாரம் வினா), கடல் அறிகரியே – இந்த கடல் நேரில் கண்ட சான்று (அறிகரியே – ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 321, கயமனார், பாலைத் திணைமகட்போக்கிய செவிலித்தாய் சொன்னது
பசித்த யானைப் பழங்கண் அன்ன
வறுஞ்சுனை முகந்த கோடைத் தெள் விளி
விசித்து வாங்கு பறையின் விடரகத்து இயம்பக்,
கதிர்க் கால் அம்பிணை உணீஇய, புகல் ஏறு
குதிர்க் கால் இருப்பை வெண்பூ உண்ணாது,  5
ஆண் குரல் விளிக்கும் சேண் பால் வியன் சுரைப்
படுமணி இன நிரை உணீஇய, கோவலர்
விடுநிலம் உடைத்த கலுழ்கண் கூவல்,
கன்றுடை மடப் பிடி களிறொடு தடவரும்
புன்தலை மன்றத்து அம் குடிச் சீறூர்,  10
துணையொடு துச்சில் இருக்கும் கொல்லோ,
கணையோர் அஞ்சாக் கடுங்கண் காளையொடு
எல்லி முன்னுறச் செல்லும் கொல்லோ,
எவ்வினை செயுங்கொல், நோகோ யானே,
அரி பெய்து பொதிந்த தெரி சிலம்பு கழீஇ,  15
யாய் அறிவுறுதல் அஞ்சி
வேய் உயர் பிறங்கல் மலை இறந்தோளே?

பாடல் பின்னணி:  மகளை இழந்த செவிலித்தாய் வருந்திச் சொல்லியது.  

பொருளுரை:  தன் தாய் அவற்றின் ஒலியைக் கேட்பாள் என்று அஞ்சிப், பரல்கள் இட்டு மூடிய ஆராய்ந்து எடுத்த சிலம்பினை நீக்கி விட்டு, மூங்கில்கள் உடைய உயர்ந்த பக்க மலையையுடைய மலையைக் கடந்து சென்ற என் மகள்,

பசியற்ற யானையின் பொலிவிழந்த கண்கள் போன்ற நீர் வற்றிய சுனையில் மேல் காற்று புகுந்து எழுப்பிய தெளிந்த ஒலி, தோலை இழுத்துக்கட்டிய பறையொலி போல் மலையின் பிளப்புகளின் (முழைகளின், குகைகளின்) உள்ளே ஒலிக்க, மெலிந்த நீண்ட கால்களையுடைய தன் அழகிய பெண்மான் உண்ணும்பொருட்டு அதன்மேல் விருப்பம் கொண்ட ஆண்மான் குதிர் போன்ற அடியையுடைய இருப்பை மரத்தின் வெள்ளை மலர்களைத் தான் உண்ணாது தன் ஆண்குரலால் அதனை அழைக்கும் தொலைவில் உள்ள,

அகன்ற மடியையும் ஒலிக்கும் மணிகளையுமுடைய ஆனிரையின் கூட்டம் பருக, இடையர்கள் வறண்ட நிலத்தில் கற்களை உடைத்து இயற்றிய நீர் ஊறும் கண்களையுடைய கிணறுகளை, கன்றையுடைய இளைய பெண்யானை தன் களிற்று யானையுடன் தடவும் பொலிவற்ற இடத்தையுடைய மன்றத்தையும் அழகிய குடியிருப்புகளையும் உடைய சிற்றூரில், இரவில் தன் துணையுடன் ஒதுக்கிடத்தில் தங்கியிருப்பாளோ?  அம்பினையுடைய ஆரலைகள்வர்களுக்கு அஞ்சாத தறுகண்மையுடைய (மிக்க வலிமையுடைய) தன் தலைவனுடன், அவன் முன்னே நடந்து செல்லுவாளோ?  என்ன வினையை அவள் செய்வாளோ?  நான் அவளை எண்ணி வருந்துகின்றேன்.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு ‘எஞ்சியோர்க்கும் எஞ்சுதல் இலவே’ (தொல்காப்பியம், அகத்திணையியல் 42) என வரும் விதி கொள்க.  நற்றிணை 12, கயமனார் – வைகு புலர் விடியல் மெய் கரந்து, தன் கால் அரி அமை சிலம்பு கழீஇ, பல் மாண் வரி புனை பந்தொடு வைஇய செல்வோள்.  வறுஞ்சுனை முகந்த கோடை (2) – ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – நீரற்ற சுனையில் புகுந்துவரும் மேல் காற்று, நீர் அற்ற சுனை தன்னுள் முகத்ததால் காற்றினால் எழுந்த.  கலுழ்கண் கூவல் (8) – ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – பில்கும் ஊற்றுக்கண்ணை உடைய கூவல், பொ. வே. சோமசுந்தரனார் உரை – நீர் பிலிற்றுகின்ற ஊற்றுக்கண்ணை உடைய கிணறு.  செவிலி – ஆய் பெருஞ்சிறப்பின் அருமறை கிளத்தலின் தாய் எனப்படுவோள் செவிலி ஆகும் (தொல்காப்பியம், களவியல் 34).  பாலைத் திணைப் பாடல்களில் கள்வர்கள் – அகநானூறு 1, 3, 7, 31, 63, 89, 91, 101, 151, 169, 245, 249, 257, 269, 285, 289, 291, 297, 309, 313, 319, 321, 327, 337, 363, 365, நற்றிணை 3, 33, 48, 164, 224, 362, குறுந்தொகை 16, 274, 283, 331, 350, 390, ஐங்குறுநூறு 329, 352, கலித்தொகை 6, 12,  குறிஞ்சித் திணைப் பாடல்களில் கள்வர்கள் – அகநானூறு 342, குறுந்தொகை 297.

சொற்பொருள்:  பசித்த யானைப் பழங்கண் அன்ன வறுஞ்சுனை முகந்த கோடைத் தெள் விளி – பசியற்ற யானையின் பொலிவிழந்த கண்கள் போன்ற நீர் வற்றிய சுனையில் மேல் காற்று புகுந்து எழுப்பிய தெளிந்த ஒலி, விசித்து வாங்கு பறையின் விடர் அகத்து இயம்ப – தோலை இழுத்துக்கட்டிய பறையொலி போல் மலையின் பிளப்புகளின் (முழைகளின், குகைகளின்) உள்ளே ஒலிக்க, கதிர்க் கால் அம் பிணை உணீஇய புகல் ஏறு குதிர்க் கால் இருப்பை வெண்பூ உண்ணாது ஆண் குரல் விளிக்கும் சேண் பால் – மெலிந்த நீண்ட கால்களையுடைய அழகிய பெண்மான் உண்ணும்பொருட்டு அதன்மேல் விருப்பம் கொண்ட ஆண்மான் குதிர் போன்ற அடியையுடைய இருப்பை மரத்தின் வெள்ளை மலர்களைத் தான் உண்ணாது தன் ஆண்குரலால் அதனை அழைக்கும் தொலைவில் உள்ள (உணீஇய – அளபெடை, இருப்பை மரம் – இலுப்பை மரம், வஞ்சி மரம், Indian Butter Tree, South Indian Mahua), வியன் சுரைப் படுமணி இன நிரை உணீஇய கோவலர் விடுநிலம் உடைத்த கலுழ்கண் கூவல் – அகன்ற மடியையும் ஒலிக்கும் மணிகளையுமுடைய ஆனிரையின் கூட்டம் பருக இடையர்கள் வறண்ட நிலத்தில் கற்களை உடைத்து இயற்றிய நீர் ஊறும் கண்களையுடைய கிணறுகளை (கலுழ் – ஊற்று, உணீஇய – அளபெடை), கன்றுடை மடப் பிடி களிறொடு தடவரும் புன்தலை மன்றத்து அம் குடிச் சீறூர் – கன்றையுடைய இளைய பெண்யானை தன் களிற்று யானையுடன் தடவும் பொலிவற்ற இடத்தையுடைய மன்றத்தையும் அழகிய குடியிருப்புகளையும் உடைய சிற்றூரில், துணையொடு துச்சில் இருக்கும் கொல்லோ – தன் துணையுடன் ஒதுக்கிடத்தில் தங்கியிருப்பாளோ (கொல்லோ – கொல் ஐயப்பொருட்டு வந்த இடைச்சொல், ஓ அசைநிலை), கணையோர் அஞ்சாக் கடுங்கண் காளையொடு – அம்பினையுடைய ஆரலைகள்வர்களுக்கு அஞ்சாத தறுகண்மையுடைய (மிக்க வலிமையுடைய) தன் தலைவனுடன், எல்லி – இரவில், முன்னுறச் செல்லும் கொல்லோ – அவன் முன் நடந்து செல்லுவாளோ, எவ்வினை செயும் கொல் – என்ன வினையை அவள் செய்வாளோ (செயும் – செய்யும் என்பதன் இடைக்குறை, கொல் –அசைநிலை) நோகோ யானே – நான் வருந்துகின்றேன் (நோகோ – நோகு செய்கென்னும் தன்மை வினை, ஓ அசைநிலை, இரக்கக் குறிப்பு), அரி பெய்து பொதிந்த தெரி சிலம்பு கழீஇ யாய் அறிவுறுதல் அஞ்சி வேய் உயர் பிறங்கல் மலை இறந்தோளே – பரல்கள் இட்டு மூடிய ஆராய்ந்து எடுத்த சிலம்பினை நீக்கி தன் தாய் அறிவதை அஞ்சி மூங்கில்கள் உடைய உயர்ந்த பக்க மலையையுடைய மலையைக் கடந்து சென்ற என் மகள் (யாய் – நற்றாய், கழீஇ – அளபெடை, இறந்தோளே – ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 322, பரணர், குறிஞ்சித் திணைதலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது
வயங்கு வெயில் ஞெமியப் பாஅய், மின்னு வசிபு,
மயங்கு துளி பொழிந்த பானாள் கங்குல்,
ஆராக் காமம் அடூஉ நின்று அலைப்ப,
இறுவரை வீழ்நரின் நடுங்கித், தெறுவரப்,
பாம்பு எறி கோலின் தமியை வைகி,  5
தேம்புதி கொல்லோ நெஞ்சே, உருமிசைக்
களிறு கண்கூடிய வாள் மயங்கு ஞாட்பின்,
ஒளிறு வேல் தானைக் கடுந்தேர்த் திதியன்
வருபுனல் இழிதரு மரம் பயில் இறும்பில்
பிறை உறழ் மருப்பின் கடுங்கண் பன்றிக்  10
குறை ஆர் கொடுவரி குழுமும் சாரல்,
அறையுறு தீந்தேன் குறவர் அறுப்ப
முயலுநர் முற்றா ஏற்று அரு நெடுஞ்சிமைப்,
புகல் அரும் பொதியில் போலப்
பெறல் அருங்குரையள், எம் அணங்கியோளே.  15

பாடல் பின்னணி:  அல்ல குறிப்பட்டுத் தன் ஊர் திரும்பும் தலைவன், தன் நெஞ்சிற்குச் சொல்லியது.  

பொருளுரை:  என் நெஞ்சே!  இடி போன்ற முழக்கத்தையுடைய களிற்று யானைகள் ஓரிடத்தில் கூடிய, வாளுடன் வாள் பொருதும் போர்க்களத்தில், விளங்கும் வேலினையுடைய தானைகளையும் விரைந்து செல்லும் தேர்களையுமுடைய திதியன் என்பவனின் மலையிலிருந்து அருவிகள் வீழும் மரங்கள் செறிந்த காட்டில், பிறை நிலவை ஒத்த கோட்டினையும் அஞ்சாமையையும் உடைய பன்றிகளின் தசைத் துண்டுகளைத் தின்ற புலிகள் கூடி முழங்கும் பக்க மலையினையும், உச்சிப் பாறையில் உள்ள இனிய தேனுடைய தேனிறாலை அறுத்து எடுக்க முயலும் குறவர்களும் எய்ய இயலாத ஏறுவதற்கு அரிய நீண்ட உச்சி மலையையுடைய, புகுதற்கு அரிய மலையினைப் போல், பெறுதற்கு அரியவள் எம்மை வருத்தும் நம் தலைவி.

அதனை உணராது, விளங்கும் வெயில் மறையும்பொழுது முகில்கள் வானில் பரவி மின்னல் பிளந்திட மிக்க மழையைப் பொழிந்த நடுஇரவில், அமையாத காதல் வருத்தி நின்று துன்புறுத்த, பெரிய மலை உச்சியிலிருந்து வீழ்பவர் போல் அச்சம் உண்டாக நடுங்கிக் கோலால் அடிக்கப்பட்ட பாம்பு போல் தனியாக இருந்து நீ வாடுவாயோ?

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு ‘பண்பிற் பெயர்ப்பினும்’ (தொல்காப்பியம், களவியல் 23) என வரும் நூற்பாவின்கண் ‘பரிவுற்று மெலியினும்’ என வரும் விதி கொள்க.  இறுவரை (4) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – பெரிய மலை, ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – மலை முகடு (மலை உச்சி), ஐங்குறுநூறு உரைகளில் (309) – அ. தட்சிணாமூர்த்தி உரை – பெரிய மலை, முறிந்த மலையுமாம், ஒளவை துரைசாமி உரை – கற்கள் முறிந்து சரிந்து கிடக்கும் பக்கத்தையுடைய மலை, பொ. வே. சோமசுந்தரனார் உரை – செங்குத்தாக உயர்ந்திருக்கும் மலை.  தேம்புதி கொல்லோ நெஞ்சே (6) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – வருந்துவாய் போலும் நெஞ்சே, ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – வாடுவையோ நெஞ்சே.  ஒப்புமை – ஐங்குறுநூறு 264 – இளம் பிறையன்ன கோட்ட கேழல். மின்னல் பிளத்தல் – மின்னு வசிபு – அகநானூறு 162, 212, 322, நற்றிணை 228, 261, மலைபடுகடாம் 97, மின்னு வசி – நற்றிணை 334.  வரலாறு –திதியன், பொதியில்.  குரை – ஏயும் குரையும் இசைநிறை அசைநிலை ஆயிரண்டு ஆகும் இயற்கைய என்ப (தொல்காப்பியம், இடையியல் 24).  பாம்பு எறி கோலின் (5) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – பாம்பின் மீது வீசிய கோல் போல, ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – கோலால் அடிக்கப்பட்ட பாம்பு போல்.  களிறு கண்கூடிய வாள் மயங்கு ஞாட்பின் (7) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – யானைகள் ஓரிடத்தே திரண்டுள்ள வாளோடு வாள் பொருதுகின்ற போர்க்களத்தின்கண், ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – ஆண் யானைகள் திரண்ட வாட்கள் பின்னிய போர்க்கண்ணே.

சொற்பொருள்:  வயங்கு வெயில் ஞெமியப் பாஅய் மின்னு வசிபு மயங்கு துளி பொழிந்த பானாள் கங்குல் – விளங்கும் வெயில் மறையும்பொழுது முகில்கள் வானில் பரவி மின்னல் பிளந்திட மிக்க மழையைப் பொழிந்த நடுஇரவில் (ஞெமிய – மறைய, பாஅய் – அளபெடை), ஆராக் காமம் அடூஉ நின்று அலைப்ப – அமையாத காதல் வருத்தி நின்று துன்புறுத்த (அடூஉ – அளபெடை), இறுவரை வீழ்நரின் நடுங்கித் தெறுவரப் பாம்பு எறி கோலின் தமியை வைகி தேம்புதி கொல்லோ – பெரிய மலை உச்சியிலிருந்து வீழ்பவர் போல் அச்சம் உண்டாக நடுங்கிக் கோலால் அடிக்கப்பட்ட பாம்பு போல் தனியாக இருந்து நீ வாடுவாயோ (இறுவரை – மலையின் இறுவாய், வீழ்நரின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது, கோலின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது, கொல்லோ – கொல் – ஐயப்பொருட்டு வந்த இடைச்சொல், ஓ அசைநிலை) நெஞ்சே – என் நெஞ்சே, உருமிசைக் களிறு கண்கூடிய – இடி போன்ற முழக்கத்தையுடைய களிற்று யானைகள் ஓரிடத்தில் கூடிய, வாள் மயங்கு ஞாட்பின் ஒளிறு வேல் தானைக் கடுந்தேர்த் திதியன் வருபுனல் இழிதரு மரம் பயில் இறும்பில் – வாளுடன் வாள் பொருதும் போர்க்களத்தில் விளங்கும் வேலினையுடைய தானைகளையும் விரைந்து செல்லும் தேர்களையுமுடைய திதியன் என்பவனின் மலையிலிருந்து அருவிகள் வீழும் மரங்கள் செறிந்த காட்டில், பிறை உறழ் மருப்பின் கடுங்கண் பன்றிக் குறை ஆர் கொடுவரி குழுமும் சாரல் – பிறை நிலவை ஒத்த கோட்டினையும் அஞ்சாமையையும் உடைய பன்றிகளின் தசைத் துண்டுகளைத் தின்ற புலிகள் கூடி முழங்கும் பக்க மலையினையும் (உறழ் – உவம உருபு, கொடுவரி – புலி, ஆகுபெயர்), அறையுறு தீந்தேன் குறவர் அறுப்ப முயலுநர் முற்றா ஏற்று அரு நெடுஞ்சிமைப் புகல் அரும் பொதியில் போல – உச்சிப் பாறையில் உள்ள இனிய தேனுடைய தேனிறாலை அறுத்து எடுக்க முயலும் குறவர்களும் எய்ய இயலாத ஏறுவதற்கு அரிய நீண்ட உச்சி மலையையுடைய புகுதற்கு அரிய மலையினைப் போல், பெறல் அருங்குரையள் எம் அணங்கியோளே – பெறுதற்கு அரியளாக எம்மை வருத்தும் நம் தலைவி (அருங்குரையள் – குரை என்னும் இடைச்சொல் குறிப்பு வினைமுற்றாக ஆயிற்று, அணங்கியோளே – ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 323, புறநாட்டுப் பெருங்கொற்றனார், பாலைத் திணைதோழி தலைவியிடம் சொன்னது
இம்மென் பேர் அலர் இவ்வூர் நம்வயின்
செய்வோர் ஏச் சொல் வாடக், காதலர்
வருவர் என்பது வாய்வதாக,
ஐய செய்ய மதனில சிறிய நின்
அடி நிலன் உறுதல் அஞ்சிப், பையத்  5
தடவரல் ஒதுக்கம் தகை கொள இயலிக்
காணிய வம்மோ, கற்பு மேம்படுவி!
பலவுப் பல தடைஇய வேய் பயில் அடுக்கத்து,
யானைச் செல் இனம் கடுப்ப வானத்து
வயங்கு கதிர் மழுங்கப் பாஅய்ப், பாம்பின்  10
பை பட இடிக்கும் கடுங்குரல் ஏற்றொடு
ஆலி அழிதுளி தலைஇக்
கால் வீழ்த்தன்று, நின் கதுப்பு உறழ் புயலே.

பாடல் பின்னணி:  பிரிவிடை வேறுபட்ட தலைவியைத் தோழி வற்புறுத்தியது.  

பொருளுரை:  கற்பினால் மேம்பட்ட என் தோழியே!  நின் கூந்தலை ஒத்த முகில்கள், பலா மரங்கள் திரண்டுள்ள மூங்கில்கள் நெருங்கிய பக்க மலையில் செல்லும் யானையின் கூட்டம் போல், வானத்தில் விளங்கும் ஞாயிற்றின் கதிர்கள் மழுங்குமாறுப் பரவி, பாம்பின் படம் அழியும்படி இடிக்கும் கடிய குரலையுடைய இடியுடனும் ஆலங்கட்டிகளுடனும் மிக்க நீர்த்துளிகளைப் பெய்து, மழைக்கால்கள் இறங்கியுள்ளன.

இம்மென்று எழும் பெரிய அலரை இவ்வூரில் செய்பவர்களின் செருக்கான சொற்கள் அழியும்படி, நம் தலைவர் வருவார் என்பது வாய்மை ஆகுவதை,

அழகிய சிவந்த, வலிமை இல்லாத நின் சிறிய காலடிகள் நிலத்தில் உரசுவதற்கு அஞ்சி, மெதுவாக உடலை வளைத்து அழகுறும்படி நடந்து காண்பதற்கு வருவாயாக,

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு ‘மரபுநிலை திரியா மாட்சிய ஆகி விரவும் பொருளும் விரவும் என்ப’ (தொல்காப்பியம், அகத்திணையியல் 45) என வரும் விதி கொள்க.  இடி பாம்பைத் தாக்குதல் கொல்லுதல் – அகநானூறு 68, 92, 119, 182, 202, 274, 323, 328, கலித்தொகை 45, 113, குறுந்தொகை 158, 190, 268, 391, நற்றிணை 37, 51, 114, 129, 238, 255, 264, 347, 383, புறநானூறு 17, 58, 126, 211, 366, 369.  தட – தடவும் கயவும் நளியும் பெருமை (தொல்காப்பியம், உரியியல் 24).  மோ – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம், இடையியல் 26).

சொற்பொருள்:  இம்மென் பேர் அலர் இவ்வூர் நம்வயின் செய்வோர் ஏச் சொல் வாடக் காதலர் வருவர் என்பது வாய்வதாக – இம்மென்று எழும் பெரிய அலரை இவ்வூரில் செய்பவர்களின் செருக்கான சொற்கள் அழியும்படி நம் தலைவர் வருவார் என்பது வாய்மை ஆகுவதை (இம்மென் – ஒலிக்குறிப்பு), ஐய செய்ய – அழகிய சிவந்த, மதன் இல சிறிய நின் அடி நிலன் உறுதல் அஞ்சி – வலிமை இல்லாத நின் சிறிய காலடிகள் நிலத்தில் உரசுவதற்கு அஞ்சி (இல – இல்லை என்பதன் இடைக்குறை விகாரம், நிலன் – நிலம் என்பதன் போலி), பையத் தடவரல் ஒதுக்கம் தகை கொள இயலிக் காணிய வம்மோ – மெதுவாக உடலை வளைத்து அழகுறும்படி நடந்து காண்பதற்கு வருவாயாக (தடைஇய – தட என்னும் உரிச்சொல்லடியாகப் பிறந்த பெயரெச்ச வினை, அளபெடை, மோ – முன்னிலையசை), கற்பு மேம்படுவி – கற்பினால் மேம்பட்ட என் தோழியே (விளி), பலவுப் பல தடைஇய வேய் பயில் அடுக்கத்து யானைச் செல் இனம் கடுப்ப – பலா மரங்கள் திரண்டுள்ள மூங்கில்கள் நெருங்கிய பக்க மலையில் செல்லும் யானையின் கூட்டம் போல் (பலவு – ஈறு குறுகி உகரம் ஏற்றுப் புலவு என்றாயிற்று), வானத்து வயங்கு கதிர் மழுங்கப் பாஅய் – வானத்தில் விளங்கும் ஞாயிற்றின் கதிர்கள் மழுங்குமாறுப் பரவி (பாஅய் – அளபெடை), பாம்பின் பை பட இடிக்கும் கடுங்குரல் ஏற்றொடு ஆலி அழிதுளி தலைஇக் கால் வீழ்த்தன்று – பாம்பின் படம் அழியும்படி இடிக்கும் கடிய குரலையுடைய இடியுடனும் ஆலங்கட்டிகளுடனும் மிக்க நீர்த்துளிகளைப் பெய்து மழைக்கால்கள் இறங்கியுள்ளன, நின் கதுப்பு உறழ் புயலே – நின் கூந்தலை ஒத்த முகில்கள் (உறழ் – உவம உருபு, புயலே –ஏகாரம் அசைநிலை, புயல் – ஆகுபெயர் முகிலுக்கு)

அகநானூறு 324, ஒக்கூர் மாசாத்தியார், முல்லைத் திணைதலைவனுடன் தேரில் இருந்தவர்கள் தம்முள் சொன்னது
விருந்தும் பெறுகுநள் போலும், திருந்திழைத்,
தட மென் பணைத்தோள் மடமொழி அரிவை,
தளிரியல் கிள்ளை இனிதின் எடுத்த
வளராப் பிள்ளைத் தூவி அன்ன,
வார் பெயல் வளர்த்த பைம்பயிர்ப் புறவில்  5
பறைக் கண் அன்ன நிறைச் சுனைதோறும்
துளிபடு மொக்குள் துள்ளுவன சாலத்,
தொளி பொரு பொகுட்டுத் தோன்றுவன மாய
வளி சினை உதிர்த்தலின் வெறி கொள்பு தாஅய்ச்,
சிரல் சிறகு ஏய்ப்ப அறல் கண் வரித்த  10
வண்டு உண் நறுவீ  துமித்த நேமி
தண்ணில மருங்கில் போழ்ந்த வழியுள்,
நிரை செல் பாம்பின் விரைபு நீர் முடுகச்,
செல்லும் நெடுந்தகை தேரே,
முல்லை மாலை நகர் புகல் ஆய்ந்தே.  15

பாடல் பின்னணி:  வினைமுற்று மீளும் தலைவனின் எண்ணத்தை உணர்ந்த ஏவலர் தம்முள் கூறியது. 

பொருளுரை:  தளிர் போன்ற மென்மையுடைய கிளி இனிதாக வளர்த்த இளைய குஞ்சுகளின் சிறகை ஒத்த, நெடிய மழையால் வளர்க்கப்பட்ட பசிய பயிர்களையுடைய முல்லை நிலத்தில், பறை முரசின் கண்கள் போன்ற நீர்நிறைந்த சுனைகள்தொறும் மழைத்துளிகள் வீழ்வதால் உண்டாகிய குமிழிகள் குதிப்பதை ஒத்த, சேற்றில் நீர்த்துளிகள் விழுவதால் எழும் குமிழிகள் தோன்றி மறைய, காற்று கிளைகளிலிருந்து உதிர்த்ததால் நறுமணமுடன் பரவிச் சிச்சிலிப் பறவையின் சிறகுகளை ஒப்ப நுண்மணலில் கோலம் செய்த, வண்டுகள் தேன் பருகும் பூக்களை அறுத்துச் செல்லும் தேர் உருள்கள் குளிர்ந்த நிலத்திடத்தில் பிளந்து சென்ற வழியில், வரிசையாக ஒன்றின்பின் ஒன்று செல்லும் பாம்புகள் போல் நீர் மிக விரைந்து ஓட, நம் தலைவனின் நெடிய தேர், முல்லை மலர்கின்ற மாலைக்காலத்தில் நகரின்கண் புகுதலை ஆராய்ந்து செல்லும்.

திருந்திய அணிகலன்களையும் பெரிய மென்மையான மூங்கில் போன்ற தோள்களையும் மடப்பமுடைய சொற்களையுமுடைய தலைவி, இன்று விருந்து அயர்தலையும் பெறுவாள் போலும்.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு ‘ஆற்றது பண்பும் கருமத்து விளைவும் ஏவல் முடிவும் வினாவும் செப்பும் ஆற்றிடைக் கண்ட பொருளும் இறைச்சியும் தோற்றம் சான்ற அன்னவை பிறவும் இளையோர்க்கு உரிய கிளவி என்ப’ (தொல்காப்பியம், கற்பியல் 29) என வரும் விதி கொள்க.  ஆசிரியர் நச்சினார்க்கினியர் இதற்கு இச்செய்யுளையே காட்டினார்.  ஒப்புமை –அகநானூறு 178 – பறைக் கண் அன்ன நிறைச் சுனை பருகி, அகநானூறு 324 – பறைக் கண் அன்ன நிறைச் சுனை,  அகநானூறு 339 – வீங்கு விசைப் பிணித்த விரை பரி நெடுந்தேர் நோன் கதிர் சுமந்த ஆழி ஆழ் மருங்கில், பாம்பு என முடுகு நீர் ஓட.  தொளி பொரு பொகுட்டுத் தோன்றுவன மாய (வரி 8) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – தாக்குவதனால் சேற்றில் தாமரை மொட்டுக்கள் தோன்றி மறையும்படி, ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – சேற்றின் கண்ணே பொருதலால் எழும் குமிழிகள் தோன்றி மறைய.  தட – தடவும் கயவும் நளியும் பெருமை (தொல்காப்பியம், உரியியல் 24), அவற்றுள், தட என் கிளவி கோட்டமும் செய்யும் (தொல்காப்பியம், உரியியல் 25).

சொற்பொருள்:  விருந்தும் பெறுகுநள் போலும் – இன்று விருந்து அயர்தலையும் பெறுவாள் போலும், திருந்து இழைத் தட மென் பணைத்தோள் மடமொழி அரிவை – திருந்திய அணிகலன்களையும் பெரிய மென்மையான மூங்கில் போன்ற தோள்களையும் மடப்பமுடைய சொற்களையுமுடைய தலைவி, தளிர் இயல் கிள்ளை இனிதின் எடுத்த வளராப் பிள்ளைத் தூவி அன்ன வார் பெயல் வளர்த்த பைம்பயிர்ப் புறவில் – தளிர் போன்ற மென்மையுடைய கிளி இனிதாக வளர்த்த இளைய குஞ்சுகளின் சிறகை ஒத்த நெடிய மழையால் வளர்க்கப்பட்ட பசிய பயிர்களையுடைய முல்லை நிலத்தில், பறைக் கண் அன்ன நிறைச் சுனைதோறும் துளிபடு மொக்குள் துள்ளுவன சாலத் தொளி பொரு பொகுட்டுத் தோன்றுவன மாய – பறை முரசின் கண்கள் போன்ற நீர்நிறைந்த சுனைகள்தொறும் மழைத்துளிகள் வீழ்வதால் உண்டாகிய குமிழிகள் குதிப்பதை ஒத்த சேற்றில் நீர்த்துளிகள் விழுவதால் எழும் குமிழிகள் தோன்றி மறைய (சால – ஒப்ப என்னும் பொருட்டு, உவம உருபு, தொளி – சேறு, மொக்குள் – குமிழி),வளி சினை உதிர்த்தலின் வெறி கொள்பு தாஅய்ச் சிரல் சிறகு ஏய்ப்ப அறல் கண் வரித்த – காற்று கிளைகளிலிருந்து உதிர்த்ததால் நறுமணமுடன் பரவிச் சிச்சிலிப் பறவையின் சிறகுகளை ஒப்ப நுண்மணலில் கோலம் செய்த (வெறி –நறுமணம், தாஅய் – அளபெடை, ஏய்ப்ப – உவம உருபு), வண்டு உண் நறு வீ  துமித்த நேமி தண் நில மருங்கில் போழ்ந்த வழியுள் – வண்டுகள் தேன் பருகும் பூக்களை அறுத்துச் செல்லும் தேர் உருள்கள் குளிர்ந்த நிலத்திடத்தில் பிளந்து சென்ற வழியில், நிரை செல் பாம்பின் – வரிசையாக ஒன்றின்பின் ஒன்று செல்லும் பாம்புகள் போல் (பாம்பின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), விரைபு நீர் முடுக – நீர் மிக விரைந்து ஓடும், செல்லும் நெடுந்தகை தேரே – நம் தலைவனின் நெடிய தேர் செல்லும், முல்லை மாலை நகர் புகல் ஆய்ந்தே – முல்லை மலர்கின்ற மாலைக்காலத்தில் நகரின்கண் புகுதலை ஆராய்ந்து (ஆய்ந்தே –  ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 325, மாமூலனார், பாலைத் திணைதலைவி தோழியிடம் சொன்னது
அம்ம வாழி தோழி! காதலர்
‘வெண்மணல் நிவந்த பொலங்கடை நெடுநகர்,
நளி இருங்கங்குல் புணர் குறி வாய்த்த
களவும் கைம்மிக வளர்ந்தன்று அன்னையும்
உட்கொண்டு ஓவாள் காக்கும் பிற் பெரிது 5
இவண் உறைபு எவனோ? அளியள்!’ என்று அருளி,
ஆடு நடைப் பொலிந்த புகற்சியின் நாடு கோள்
அள்ளனைப் பணித்த அதியன் பின்றை
வள் உயிர் மாக்கிணை கண் அவிந்தாங்கு,
மலை கவின் அழிந்த கனை கடற்று அருஞ்சுரம் 10
வெய்ய மன்ற நின் வை எயிறு உணீஇய,
தண் மழை ஒரு நாள் தலைஇய ஒண்ணுதல்
ஒல்கு இயல் அரிவை நின்னொடு செல்கம்
சில் நாள் ஆன்றனையாக எனப் பன்னாள்
உலைவு இல் உள்ளமொடு வினை வலி உறீஇ 15
எல்லாம் பெரும் பிறிதாக வடாஅது,
நல் வேல் பாணன் நல் நாட்டு உள்ளதை
வாட்கண் வானத்து என்றூழ் நீள் இடை,
ஆள் கொல் யானை அதர் பார்த்து அல்கும்
சோலை அத்தம் மாலைப் போகி, 20
ஒழியச் சென்றோர் மன்ற
பழி எவன் ஆம் கொல், நோய்தரு பாலே?

பாடல் பின்னணி:  பிரிவிடை வேறுபட்ட தலைவி, ஆற்றாமையினால் தோழியிடம் சொல்லியது.  

பொருளுரை:  தோழி!  நீ நீடு வாழ்வாயாக!  நான் கூறுவதைக் கேட்பாயாக!  நம் தலைவர், வெள்ளை மணல் உயர்ந்த பொலிவு பெற்ற வாயிலையுடைய பெரிய இல்லத்தில் இருள் செறிந்த நடு இரவில், புணர்ச்சிக்குரிய குறி அமைந்த களவு ஒழுக்கமும் அளவுக்கு மீறி வளர்ந்துவிட்டது.  அன்னையும் நிலைமையை அறிந்துகொண்டு விடாமல் காவல் காக்கின்றாள்.  பின்னர்ப் பெரிதாக இங்கு இவள் தங்கியிருப்பது எவ்வாறு இயலும், இரங்கத்தக்கவள் இவள் என்று இரக்கம் கொண்டவர்.

வெற்றி அடைந்ததால் மேம்பட்ட விருப்பத்தினால், நாட்டைக் கொள்ளுமாறு அள்ளனைப் பணித்த அதியன் என்னும் மன்னனுக்குப் பிற்காலத்தில், வலிமையான ஒலியையுடைய பெரிய கிணையின் கண்களில் எழுந்த ஒலி அடங்கினாற்போல், மலையின் அழகு பாழ்பட்ட செறிந்த காடாகிய கடத்தற்கு அரிய பாலை நில வழிகள் கொடியன.

“உறுதியாக நின் கூரிய பற்களில் ஊறுகின்ற நீரை யான் பருகும்படி குளிர்ந்த மழை ஒரு நாள் பெய்வதாக, ஒளியுடைய நெற்றியையும் அசையும் நடையையுமுடைய அரிவையே!  நின்னுடன் யாம் செல்வேம்.  சில காட்கள் பொறுத்திருப்பாயாக” என்று, பல நாட்கள் தளர்வு இல்லாத உள்ளத்துடன், வினைவயின் செல்லும் வலிமைகொண்டு நாம் நினைத்தவை அழியும்படி, வடக்கில் நல்ல வேலையுடைய பாணன் என்பவனின் நல்ல நாட்டில் உள்ளதாகிய, ஒளியுடைய இடமாகிய வானில் உள்ள ஞாயிற்றின் வெப்பம் மிகுந்த நீண்ட பாலை நிலத்தில் வழியில் செல்பவர்களைக் கொல்லும் யானைகள் வழிகளைப் பார்த்துத் தங்கியிருக்கும் சோலைகளையுடைய காட்டு நெறியில் மாலை நேரத்தில் சென்றார்.  பழி யாது உண்டாகுமோ, துன்பத்தைத் தரும் ஊழினால்?

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு ‘தலைவரும் விழுமநிலை’ (தொல்காப்பியம், அகத்திணையியல் 31) என வரும் நூற்பாவின்கண் ‘போக்கற்கண்ணும்’ என வரும் விதி கொள்க.  வரலாறு –அள்ளன், அதியன், பாணன்.   பாணன் என்ற மன்னன் –அகநானூறு 113 – எழாஅப் பாணன், அகநானூறு 155 – பல் வயின் பய நிரை சேர்ந்த பாண் நாட்டு, அகநானூறு 226 – வலி மிகும் முன்பின் பாணனொடு, அகநானூறு 325 – நல் வேல் பாணன் நல் நாட்டு, அகநானூறு 386 – பாணன் மல்லடு மார்பின் வலியுற.  பறையன்பட்டு கல்வெட்டில் பாணனின் நாடான பாணாடு குறிக்கப்பட்டுள்ளது – Early Tamil Epigraphy, page 629, Iravatham Mahadevan, Harvard University Press.  நாடு கோள் அள்ளனைப் பணித்த அதியன் (7) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – தனது நாட்டினைக் கைக்கொண்டு ஆளும்படி அள்ளன் என்னும் மறவனுக்குக் கட்டளையிட்ட அதியன், ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – அள்ளன் என்பானை நாட்டினைக் கொள்ளுமாறு பணித்த அதியன்.  பின்றை (8) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – அதியன் என்னும் அரசனுக்குப் பிற்காலத்தில், ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – அதியன் என்பான் துஞ்சிய பிறகு.  வெய்ய மன்ற (11) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – தேற்றமாக என்னால் பெரிதும் விரும்பப்படுகின்ற, ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – ஒரு தலையாயக் கொடியன.  எயிறு உணீஇய (11) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – நின்னுடைய கூரிய எயிற்றில் ஊறுகின்ற நீரை யான் பருகும்படி, ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – நின் கூரிய பற்கள் நீர் பருகுமாறு.  நோய் தரு பால் (22) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – துன்பத்தைச் செய்யும் ஊழ், ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – நோயினைச் செய்யும் பகுதி.  எயிறு உண்குநற்றிணை 134 – ஒளவை துரைசாமி உரை – முத்தம் கொள்ளுதலை எயிறுண்டல் என்பது மரபு.  பிற பாடல்களில் எயிறு உண்ணுதல் – நற்றிணை 17 – நின் இலங்கு எயிறு உண்கு, நற்றிணை 134 – நின் முள் எயிறு உண்கு, நற்றிணை 204 – மடந்தை நின் கூர் எயிறு உண்கு, கலித்தொகை 112 – மெல்ல முயங்கு நின் முள் எயிறு உண்கும்.  என்றூழ் – கதிரவனின் முதிர்ந்த கதிர்கள், எல் (கதிரவன்) + ஊழ் (முதிர்ச்சி).  முனைவர் கு. வெ. பாலசுப்ரமணியன் அவர்களின் விளக்கம்.  மன்ற – மன்றவென் கிளவி தேற்றஞ்செய்யும் (தொல்காப்பியம், இடையியல் 17).  வாள் – வாள் ஒளி ஆகும் (தொல்காப்பியம், உரியியல் 71).  பொலம் – பொன் என் கிளவி ஈறு கெட முறையின் முன்னர்த் தோன்றும் லகார மகாரம் செய்யுள் மருங்கின் தொடர் இயலான (தொல்காப்பியம், புள்ளிமயங்கியல் 61). வை – வையே கூர்மை (தொல்காப்பியம், உரியியல் 91).  அம்ம – அம்ம கேட்பிக்கும் (தொல்காப்பியம், இடையியல் 28). 

சொற்பொருள்:  அம்ம – நான் கூறுவதைக் கேட்பாயாக (கேட்பித்தல் பொருளில் வந்த இடைச்சொல்), வாழி – நீ நீடு வாழ்வாயாக, அசைநிலை, தோழி – தோழி, காதலர் – நம் தலைவர், வெண்மணல் நிவந்த பொலன் கடை நெடுநகர் நளி இருங்கங்குல் – வெள்ளை மணல் உயர்ந்த பொலிவு பெற்ற வாயிலையுடைய பெரிய இல்லத்தில் இருள் செறிந்த நடு இரவில், புணர் குறி வாய்த்த களவும் கைம்மிக வளர்ந்தன்று – புணர்ச்சிக்குரிய குறி அமைந்த களவு ஒழுக்கமும் அளவுக்கு மீறி வளர்ந்துவிட்டது, அன்னையும் உட்கொண்டு ஓவாள் காக்கும் – அன்னையும் அறிந்துகொண்டு விடாமல் காவல் காக்கின்றாள், பிற் பெரிது இவண் உறைபு எவனோ – பின்னர்ப் பெரிதாக இங்கு இவள் தங்கியிருப்பது எவ்வாறு இயலும் (எவனோ – ஓகாரம் அசைநிலை), அளியள் என்று அருளி – இரங்கத்தக்கவள் என்று அருள் செய்து, ஆடு நடைப் பொலிந்த புகற்சியின் நாடு கோள் அள்ளனைப் பணித்த அதியன் பின்றை – வெற்றி அடைந்ததால் மேம்பட்ட விருப்பத்தினால் நாட்டைக் கொள்ளுமாறு அள்ளனைப் பணித்த அதியன் என்னும் மன்னனுக்குப் பிற்காலத்தில் (புகற்சி – விருப்பம்), வள் உயிர் மாக்கிணை கண் அவிந்தாங்கு – வலிமையான ஒலியையுடைய பெரிய கிணையின் கண்களில் எழுந்த ஒலி அடங்கினாற்போல், மலை கவின் அழிந்த கனை கடற்று அருஞ்சுரம் வெய்ய – மலையின் அழகு பாழ்பட்ட செறிந்த காடாகிய கடத்தற்கு அரிய பாலை நில வழிகள் கொடியன, மன்ற – உறுதியாக, நின் வை எயிறு உணீஇய தண் மழை ஒரு நாள் தலைஇய – நின் கூரிய பற்களில் ஊறுகின்ற நீரை யான் பருகும்படி குளிர்ந்த மழை ஒரு நாள் பெய்வதாக (உணீஇய – அளபெடை, எயிறு – வாய்க்கு ஆகுபெயர், தலைஇய – அளபெடை), ஒண்ணுதல் ஒல்கு இயல் அரிவை – ஒளியுடைய நெற்றியையும் அசையும் நடையையுமுடைய அரிவையே, நின்னொடு செல்கம் – நின்னுடன் செல்வேம், சில் நாள் ஆன்றனையாக என – சில காட்கள் பொறுத்திருப்பாயாக என்று, பன்னாள் உலைவு இல் உள்ளமொடு – பல நாட்கள் தளர்வு இல்லாத உள்ளத்துடன், வினை வலி உறீஇ எல்லாம் பெரும் பிறிதாக – வினைவயின் செல்லும் வலிமைகொண்டு நாம் நினைத்தவை அழியும்படி (உறீஇ – அளபெடை), வடாஅது நல் வேல் பாணன் நல் நாட்டு உள்ளதை – வடக்கில் நல்ல வேலையுடைய பாணன் என்பவனின் நல்ல நாட்டில் உள்ளதாகிய (வடாஅது – அளபெடை, ஏழாம் உருபின் பொருள்பட வந்தது), வாள் கண் வானத்து என்றூழ் நீள் இடை ஆள் கொல் யானை அதர் பார்த்து அல்கும் சோலை அத்தம் மாலைப் போகி ஒழியச் சென்றோர் – ஒளியுடைய இடமாகிய வானில் உள்ள ஞாயிற்றின் வெப்பம் மிகுந்த நீண்ட பாலை நிலத்தில் வழியில் செல்பவர்களைக் கொல்லும் யானைகள் வழிகளைப் பார்த்துத் தங்கியிருக்கும் சோலைகளையுடைய காட்டு நெறியில் மாலை நேரத்தில் சென்று, மன்ற பழி எவன் ஆம் கொல் – பழி யாது உண்டாகுமோ (ஆம் – இடைக்குறை, ஆகும் என்பது ஆம் என நின்றது, கொல் –அசைநிலை), நோய்தரு பாலே – துன்பத்தைத் தரும் ஊழ், துன்பத்தினைச் செய்யும் பகுதி

அகநானூறு 326, பரணர், மருதத் திணை தோழி தலைவனிடம் சொன்னது
ஊரல் அவ்வாய் உருத்த தித்திப்,
பேர் அமர் மழைக் கண், பெருந்தோள், சிறு நுதல்,
நல்லள் அம்ம குறுமகள், செல்வர்
கடும் தேர் குழித்த ஞெள்ளல் ஆங்கண்
நெடுங்கொடி நுடங்கும் அட்டவாயில்  5
இருங்கதிர்க் கழனிப் பெருங்கவின் அன்ன
நலம் பாராட்டி, நடையெழில் பொலிந்து
விழவிற் செலீஇயர் வேண்டும், வென்வேல்
இழை அணி யானைச் சோழர் மறவன்
கழை அளந்து அறியாக் காவிரிப் படப்பைப்  10
புனன் மலி புதவின் போஒர் கிழவோன்
பழையன் ஓக்கிய வேல்போல்,
பிழையல கண்ணவள் நோக்கியோர் திறத்தே.

பாடல் பின்னணி:  பரத்தையர் இல்லத்திலிருந்து வந்த தலைவனுக்குத் தோழி வாயில் மறுத்தது. 

பொருளுரை:  பரவிய அழகு வாய்ந்த உருவையுடைய தேமலையும், பெரிய விருப்பம் தரும் குளிர்ந்த கண்களையும், பெரிய தோள்களையும், சிறிய நெற்றியையும் உடைய அழகில் சிறந்தவள் உன் இளைய பரத்தை.

வெற்றி வேலையும் அணிகலன்கள் அணிந்த யானைகளையும் உடைய சோழ வேந்தனின் படைத்தலைவனான, ஓடக்கோலால் ஆழத்தை அறிய இயலாத காவிரி ஆற்றின் கரையைச் சார்ந்த தோட்டங்களையும் நீர் நிறைந்து ஓடும் மதகுகளையும் உடைய போஒர் என்னும் ஊரின் தலைவனான பழையன், பகைவர்கள் மீது எறிந்த வேல் போல், அவளால் பார்க்கப்பட்டார்களின் திறத்து, தைத்தலில் தவறுவதில்லை அவள் கண்கள்.

செல்வர்களின் விரைந்து செல்லும் தேர்கள் குழிகள் உண்டாக்கிய தெருக்களிடத்தில், நீண்ட கொடிகள் அசையும் அட்டவாயில் என்னும் ஊரில் உள்ள பெரிய கதிர்களையுடைய வயல்களின் பெரிய அழகை ஒத்த அவளுடைய அழகைப் பாராட்டி, அழகிய நடையால் பொலிவுற்று அவளுடன் விழாவிற்கு நீ செல்வதனை யாம் விரும்புகின்றோம்.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு ‘பெறற்கு அரும் பெரும் பொருள்’ (தொல்காப்பியம், கற்பியல் 9) என வரும் நூற்பாவின்கண் ‘புறம்படு விளையாட்டுப் புல்லிய புகற்சியும்’ என வரும் விதி கொள்க.  ஊரல் அவ்வாய் (1) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – பாலொடு தேன் கலந்தாற்போன்ற வாயூரலையும் அழகிய வாயையும், ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – ஊரலாகிய அழகு வாய்ந்த.  பேர் அமர் மழைக் கண் (2) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – பெரிய விருப்பத்தை உண்டாக்கும் குளிர்ந்த கண்கள், ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – பெரிய அமர் செய்யும் குளிர்ந்த கண்கள்.  வரலாறு –சோழர், போஒர் கிழவோன் பழையன், அட்டவாயில், காவிரி.

சொற்பொருள்:  ஊரல் அவ்வாய் உருத்த தித்திப் பேர் அமர் மழைக் கண் பெருந்தோள் சிறு நுதல் நல்லள் அம்ம குறுமகள் – பரவிய அழகு வாய்ந்த உருவையுடைய தேமலையும் பெரிய விருப்பம் தரும் குளிர்ந்த கண்களையும் பெரிய தோள்களையும் சிறிய நெற்றியையும் உடைய அழகில் சிறந்தவள் உன் இளைய பரத்தை (அம்ம –அசைநிலை), செல்வர் கடும் தேர் குழித்த ஞெள்ளல் ஆங்கண் நெடுங்கொடி நுடங்கும் அட்டவாயில் இருங்கதிர்க் கழனிப் பெருங்கவின் அன்ன நலம் பாராட்டி – செல்வர்களின் விரைந்து செல்லும் தேர்கள் குழிகள் உண்டாக்கிய தெருக்களிடத்தில் நீண்ட கொடிகள் அசையும் அட்டவாயில் என்னும் ஊரில் உள்ள பெரிய கதிர்களையுடைய வயல்களின் பெரிய அழகை ஒத்த அவளுடைய அழகைப் பாராட்டி, நடை எழில் பொலிந்து விழவிற் செலீஇயர் வேண்டும் – அழகிய நடையால் பொலிவுற்று அவளுடன் விழாவிற்கு நீ செல்வதனை யாம் விரும்புகின்றோம் (செலீஇயர் – அளபெடை, தொழிற்பெயர்), வென்வேல் இழை அணி யானைச் சோழர் மறவன் கழை அளந்து அறியாக் காவிரிப் படப்பைப் புனன் மலி புதவின் போஒர் கிழவோன் பழையன் ஓக்கிய வேல்போல் – வெற்றி வேலையும் அணிகலன்கள் அணிந்த யானைகளையும் உடைய சோழ வேந்தனின் படைத்தலைவனான ஓடக்கோலால் ஆழத்தை அறிய இயலாத காவிரி ஆற்றின் கரையைச் சார்ந்த தோட்டங்களையும் நீர் நிறைந்து ஓடும் மதகுகளையும் உடைய போஒர் என்னும் ஊரின் தலைவனான பழையன் பகைவர்கள் மீது எறிந்த வேல் போல், பிழையல கண்ணவள் – தைத்தலில் தவறுவதில்லை அவள் கண்கள், நோக்கியோர் திறத்தே – அவளால் பார்க்கப்பட்டார்களின் திறத்து (திறத்தே  – ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 327, மருங்கூர்ப்பாகைச் சாத்தன் பூதனார், பாலைத் திணைதலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது
‘இன்பமும் இடும்பையும், புணர்வும் பிரிவும்,
நன்பகல் அமையமும் இரவும் போல
வேறு வேறு இயல ஆகி, மாறு எதிர்ந்து
உள’ என உணர்ந்தனை ஆயின், ஒரூஉம்
இன்னா வெஞ்சுரம் நம் நசை துரப்பத்  5
துன்னலும் தகுமோ? துணிவு இல் நெஞ்சே!
நீ செல வலித்தனை ஆயின், யாவதும்
நினைதலும் செய்தியோ எம்மே, கனை கதிர்
ஆவி அவ்வரி நீரென நசைஇ
மா தவப் பரிக்கும் மரல் திரங்கு நனந்தலைக் 10
களர் கால்யாத்த கண் அகன் பரப்பின்
செவ்வரை கொழி நீர் கடுப்ப, அரவின்
அவ்வரி உரிவை அணவரும் மருங்கில்,
புற்று அரை யாத்த புலர் சினை மரத்த,
மைந்நிற உருவின் மணிக் கண் காக்கை  15
பைந்நிணம் கவரும் படுபிணக் கவலைச்
சென்றோர் செல் புறத்து இரங்கார் கொன்றோர்,
கோல் கழிபு இரங்கும் அதர,
வேய் பயில் அழுவம் இறந்த பின்னே?

பாடல் பின்னணி:  பொருளீட்டத் தூண்டிய நெஞ்சிற்குச் சொல்லியது.  

பொருளுரை:  துணிவு இல்லாத என் நெஞ்சே!  இன்பமும் துன்பமும் புணர்தலும் பிரிதலும், நல்ல பகல் பொழுதும் இரவும் போல வேறு வேறு இயல்புகளை உடையனவாகி மாறாக எதிர்ப்பட்டு இருப்பன என்பதனை நீ உணர்ந்தனை ஆயின், துன்பத்தையுடைய கொடிய பாலை நிலத்தில் நல்ல விருப்பம் செலுத்த சென்று சேர்தலும் தகுமோ?

நீ செல்வதற்குத் துணிந்தாய் ஆனால், ஞாயிற்றின் மிக்க கதிர்களால் தோன்றும் ஆவியாகிய கானல் நீரின் அலைகளை உண்மையான நீர் என நினைத்து விரும்பி, விலங்குகள் மிகுதியாக ஓடி அலையும் மரல் செடிகள் வாடிய அகன்ற இடத்தில், களர் படர்ந்த அகன்ற பாலை நிலத்தில், செங்குத்தான மலையிலிருந்து கற்களைக் கொழித்து வரும் அருவி நீர் போல் பாம்பின் அழகிய வரிகளையுடைய உரிக்கப்பட்ட தோல்கள் நிமிர்ந்து விழும் பக்கத்தில், புற்றுக்கள் அடியில் கட்டப்பட்ட காய்ந்த கிளைகளையுடைய மரங்களில் கரிய நிறத்தையும் நீலமணி போன்ற கண்களையும் உடைய காக்கைகள் பசிய கொழுப்பினைக் கவர்ந்து உண்ணும், பிணங்கள் கிடக்கும் பிரிவுகளையுடைய வழியில், வழிப்போக்கர்கள் பின்னிருந்து இரக்கம் இல்லாது அவர்களைக் கொன்ற ஆரலைகள்வர்கள், தங்கள் அம்புகள் செலவானதற்கு வருந்தும் நெறிகளையுடைய, மூங்கில்கள் செறிந்த காட்டினைக் கடந்த பின், சிறிதேனும் எம்மை நின்னைத்துப் பார்ப்பாயோ?

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு, ‘கரணத்தின் அமைந்து முடிந்த காலை’ (தொல்காப்பியம், கற்பியல் 5) என வரும் நூற்பாவின்கண் ‘வேற்று நாட்டு அகல்வயின் விழுமத்தானும்’ என வரும் விதி கொள்க.  ஒப்புமை –குறுந்தொகை 235 – பாம்பின் தூங்கு தோல் கடுக்கும் தூ வெள் அருவி.  நனந்தலை – அகன்ற இடம், நனம் – நனவே களனும் அகலமும் செய்யும் (தொல்காப்பியம், உரியியல் 80).  நல் நசை (5) – பழைய உரையிலும் ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரையிலும் இவ்வாறு உள்ளது.  பொ. வே. சோமசுந்தரனார் உரையில் ‘நம் நசை’ என உள்ளது.  கால்யாத்த (11) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – தன்மை பொருந்திய, ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – பரந்த.  மைந்நிற உருவின் (15) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – கரிய நிறத்தையுடைய, ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – பெய்யும் மேகத்தின் நிறம் போலும்.  பாலைத் திணைப் பாடல்களில் கள்வர்கள் – அகநானூறு 1, 3, 7, 31, 63, 89, 91, 101, 151, 169, 245, 249, 257, 269, 285, 289, 291, 297, 309, 313, 319, 321, 327, 337, 363, 365, நற்றிணை 3, 33, 48, 164, 224, 362, குறுந்தொகை 16, 274, 283, 331, 350, 390, ஐங்குறுநூறு 329, 352, கலித்தொகை 6, 12,  குறிஞ்சித் திணைப் பாடல்களில் கள்வர்கள் – அகநானூறு 342, குறுந்தொகை 297.

சொற்பொருள்:  இன்பமும் இடும்பையும் புணர்வும் பிரிவும் – இன்பமும் துன்பமும் புணர்தலும் பிரிதலும், நன்பகல் அமையமும் இரவும் போல வேறு வேறு இயல ஆகி மாறு எதிர்ந்து உள – நல்ல பகல் பொழுதும் இரவும் போல வேறு வேறு இயல்புகளை உடையனவாகி மாறாக எதிர்ப்பட்டு இருப்பன, என உணர்ந்தனை ஆயின் – என்பதனை நீ உணர்ந்தனை ஆயின், ஒரூஉம் இன்னா வெஞ்சுரம் நல் நசை துரப்பத் துன்னலும் தகுமோ – துன்பத்தையுடைய கொடிய பாலை நிலத்தில் நல்ல விருப்பம் செலுத்த சென்று சேர்தலும் தகுமோ (ஒரூஉம் – அளபெடை), துணிவு இல் நெஞ்சே – துணிவு இல்லாத என் நெஞ்சே, நீ செல வலித்தனை ஆயின் – நீ செல்வதற்குத் துணிந்தாய் ஆனால் (செல – செல்ல என்பதன் இடைக்குறை), யாவதும் நினைதலும் செய்தியோ எம்மே – சிறிதேனும் எம்மை நின்னைத்துப் பார்ப்பாயோ, கனை கதிர் ஆவி அவ்வரி நீர் என நசைஇ மா தவப் பரிக்கும் மரல் திரங்கு நனந்தலை – ஞாயிற்றின் மிக்க கதிர்களால் தோன்றும் ஆவியாகிய கானல் நீரின் அலைகளை உண்மையான நீர் என நினைத்து விரும்பி விலங்குகள் மிகுதியாக ஓடி அலையும் மரல் செடிகள் வாடிய அகன்ற இடத்தில், களர் கால்யாத்த கண் அகன் பரப்பின் – களர் படர்ந்த அகன்ற பாலை நிலத்தில், செவ்வரை கொழி நீர் கடுப்ப அரவின் அவ்வரி உரிவை அணவரும் மருங்கில் – செங்குத்தான மலையிலிருந்து கற்களைக் கொழித்து வரும் அருவி நீர் போல் பாம்பின் அழகிய வரிகளையுடைய உரிக்கப்பட்ட தோல்கள் நிமிர்ந்து விழும் பக்கத்தில் (கடுப்ப – உவம உருபு), புற்று அரை யாத்த புலர் சினை மரத்த மைந்நிற உருவின் மணிக் கண் காக்கை பைந்நிணம் கவரும் – புற்றுக்கள் அடியில் கட்டப்பட்ட காய்ந்த கிளைகளையுடைய மரங்களில் கரிய நிறத்தையும் நீலமணி போன்ற கண்களையும் உடைய காக்கைகள் பசிய கொழுப்பினைக் கவர்ந்து உண்ணும் (அகரம் பன்மை உருபு), படுபிணக் கவலை – பிணங்கள் கிடக்கும் பிரிவுகளையுடைய வழியில், சென்றோர் செல் புறத்து இரங்கார் கொன்றோர் – வழிப்போக்கர்கள் பின்னிருந்து இரக்கம் இல்லாது அவர்களைக் கொன்ற ஆரலைகள்வர்கள், கோல் கழிபு இரங்கும் அதர – தங்கள் அம்புகள் செலவானதற்கு வருந்தும் நெறிகளையுடைய, வேய் பயில் அழுவம் இறந்த பின்னே – மூங்கில்கள் செறிந்த காட்டினைக் கடந்த பின் (பின்னே – ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 328, மதுரைப் பண்ட வாணிகன் இளந்தேவனார், குறிஞ்சித் திணைதலைவி தோழியிடம் சொன்னது
வழை அமல் அடுக்கத்து வலன் ஏர்பு, வயிரியர்
முழவு அதிர்ந்தன்ன முழக்கத்து ஏறோடு,
உரவுப் பெயல் பொழிந்த நள்ளென் யாமத்து,
அரவின் பைந்தலை இடறிப் பானாள்
இரவின் வந்து எம் இடைமுலை முயங்கித்  5
துனி கண் அகல வளைஇக் கங்குலின்
இனிதின் இயைந்த நண்பு, அவர் முனிதல்
தெற்று ஆகுதல் நற்கு அறிந்தனம் ஆயின்,
இலங்கு வளை நெகிழப் பரந்து படர் அலைப்ப யாம்
முயங்குதொறும் முயங்குதொறும் உயங்க முகந்து கொண்டு  10
அடக்குவம் மன்னோ தோழி, மடப்பிடி
மழை தவழ் சிலம்பில் கடுஞ்சூல் ஈன்று
கழை தின் யாக்கை விழை களிறு தைவர,
வாழை அம் சிலம்பில் துஞ்சும்
சாரல் நாடன் சாயல் மார்பே.  15

பாடல் பின்னணி:  தலைவன் சிறைப்புறமாக வந்து நின்றதை அறிந்துத் தோழிக்குக் கூறுவாளாய், அவன் கேட்கும்படி உரைத்தது.  வரைவு கடாயது.  

பொருளுரை:  தோழி!  சுரபுன்னை மரங்கள் செறிந்த மலைச்சாரலில் முகில்கள் வலதுபுறமாக எழுந்து, கூத்தர்களின் முழவுகள் முழங்கினாற்போன்ற முழக்கத்தையுடைய இடிகளுடன் கூடி, மிக்க மழையைப் பெய்த நள் என்னும் ஓசையையுடைய இரவில், பாம்பின் பசிய தலைகளைக் காலால் இடறிக்கொண்டு நடுஇரவில் வந்து எம் முலையிடத்தே பொருந்தி, வருத்தம் தம்மிடத்திலிருந்து நீங்க நம்மை அணைத்து இரவில் இவ்வாறு இனிமையாகப் பொருந்திய நட்பினை, ஒளிரும் வளையல்கள் நெகிழவும் துன்பம் பரவி வருந்தவும், அவர் பின் வெறுத்தலைத் தெளிவாக நன்கு அறிந்திருந்தோமானால்,

அவர் அணைக்குந்தோறும் அணைக்குந்தோறும் வருந்த முகந்து நம் மார்பில் அடக்கியிருப்போம், முகில்கள் தவழும் பக்கமலையில் இளைய பெண் யானை தன் முதல் சூலை ஈன்று மூங்கிலை உண்ணும் தன் உடலை தன்பால் விருப்பம் மிக்க தன் ஆண் யானை தடவி விட, வாழை மரங்களையுடைய அழகிய பக்க மலையில் துயிலும், மலைநாடனின் மென்மையான மார்பினை.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு ‘ஒருதலை உரிமை வேண்டினும் மகடூஉப் பிரிதல் அச்சம் உண்மையானும் அம்பலும் அலரும் களவு வெளிப்படுக்கும் என்று அஞ்ச வந்த ஆங்கு இரு வகையினும் நோக்கொடு வந்த இடையூறு பொருளினும் போக்கும் வரைவும் மனைவிகண் தோன்றும்’ (தொல்காப்பியம், பொருளியல் 31) என வரும் விதி கொள்க.  பைந்தலை (4) – ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – பசிய தலை, பைந்தலை பைத்தலை என்பதன் விகாரம் எனக்கொண்டு படத்தினையுடைய தலை எனினுமாம்.  துனி கண் அகல (6) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – நம்முடைய துன்பமானது நீங்கும்படி, ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – தமது வருத்தம் தம்மிடத்திருந்தும் நீங்க.  முயங்குதொறும் முயங்குதொறும் (10) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – யாம் அவரைத் தழுவும் தோறும் தழுவும் தோறும், ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – அவர் முயங்குந்தோறும் முயங்குந்தோறும்.  வலன் ஏர்பு – அகநானூறு 43, 84, 188, 278, 298, 328, நற்றிணை 37, 264, 328, குறுந்தொகை 237, ஐங்குறுநூறு 469, பதிற்றுப்பத்து 24, 31, நெடுநல்வாடை 1, பட்டினப்பாலை 67, முல்லைப்பாட்டு 4, திருமுருகாற்றுப்படை. இடி பாம்பைத் தாக்குதல், கொல்லுதல் – அகநானூறு 68, 92, 119, 182, 202, 274, 323, 328, கலித்தொகை 45, 113, குறுந்தொகை 158, 190, 268, 391, நற்றிணை 37, 51, 114, 129, 238, 255, 264, 347, 383, புறநானூறு 17, 58, 126, 211, 366, 369.  சாயல் – சாயல் மென்மை (தொல்காப்பியம், உரியியல் 29).

சொற்பொருள்:  வழை அமல் அடுக்கத்து வலன் ஏர்பு வயிரியர் முழவு அதிர்ந்தன்ன முழக்கத்து ஏறோடு உரவுப் பெயல் பொழிந்த நள்ளென் யாமத்து – சுரபுன்னை மரங்கள் செறிந்த மலைச்சாரலில் முகில்கள் வலதுபுறமாக எழுந்து (வலிமையுடன் எழுந்து) கூத்தர்களின் முழவுகள் முழங்கினாற்போன்ற முழக்கத்தையுடைய இடிகளுடன் கூடி மிக்க மழையைப் பெய்த நள் என்னும் ஓசையையுடைய இரவில் (வழை – சுரபுன்னை மரம், Long–leaved two–sepalled gamboge tree, ochrocarpus longifolius tree, அமல் – செறிந்த), அரவின் பைந்தலை இடறிப் பானாள் இரவின் வந்து எம் இடைமுலை முயங்கி – பாம்பின் பசிய தலைகளைக் காலால் இடறிக்கொண்டு நடுஇரவில் வந்து எம் முலையிடத்தே பொருந்தி, துனி கண் அகல வளைஇக் கங்குலின் இனிதின் இயைந்த நண்பு – வருத்தம் தம்மிடத்திலிருந்து நீங்க நம்மை அணைத்து இரவில் இவ்வாறு இனிமையாகப் பொருந்திய நட்பினை (வளைஇ – அளபெடை), அவர் முனிதல் தெற்று ஆகுதல் நற்கு அறிந்தனம் ஆயின் – அவர் பின் வெறுத்தலைத் தெளிவாக நன்கு அறிந்திருந்தோமானால் (நற்கு – நன்கு என்பதன் விகாரம்), இலங்கு வளை நெகிழப் பரந்து படர் அலைப்ப யாம் முயங்குதொறும் முயங்குதொறும் உயங்க முகந்து கொண்டு அடக்குவம் – ஒளிரும் வளையல்கள் நெகிழவும் துன்பம் பரவி வருந்தவும் நாம் அவர் அணைக்குந்தோறும் அணைக்குந்தோறும் வருந்த முகந்து நம் மார்பில் அடக்கியிருப்போம், மன்னோ – மன், ஓ அசைநிலைகள், தோழி – தோழி, மடப்பிடி மழை தவழ் சிலம்பில் கடுஞ்சூல் ஈன்று கழை தின் யாக்கை – முகில்கள் தவழும் பக்கமலையில் இளைய பெண் யானை தன் முதல் சூலை ஈன்று மூங்கிலை உண்ணும் தன் உடலை தன்பால் விருப்பம் மிக்க தன் ஆண் யானை தடவி விட, விழை களிறு தைவர, வாழை அம் சிலம்பில் துஞ்சும் – வாழை மரங்களையுடைய அழகிய பக்க மலையில் துயிலும், சாரல் நாடன் சாயல் மார்பே – மலைநாடனின் மென்மையான மார்பினை (மார்பே – ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 329, உறையூர் முதுகூத்தனார், பாலைத் திணைதலைவி தோழியிடம் சொன்னது
பூங்கணும் நுதலும் பசப்ப, நோய் கூர்ந்து
ஈங்கியான் வருந்தவும், நீங்குதல் துணிந்து
வாழ்தல் வல்லுநர் ஆயின், காதலர்
குவிந்த குரம்பை அம் குடிச் சீறூர்ப்
படுமணி இயம்பப் பகல் இயைந்து, உமணர்  5
கொடு நுகம் பிணித்த செங்கயிற்று ஒழுகைப்
பகடு அயாக் கொள்ளும் வெம்முனைத் துகள் தொகுத்து
எறி வளி சுழற்றும் அத்தம், சிறிது அசைந்து
ஏகுவர் கொல்லோ தாமே, பாய் கொள்பு
உறுவெரிந் ஒடிக்கும் சிறுவரிக் குருளை 10
நெடு நல்யானை நீர் நசைக்கிட்ட
கை கறித்து உரறும் மை தூங்கு இறும்பில்,
புலி புக்கு ஈனும் வறுஞ்சுனைப்
பனிபடு சிமையப் பன் மலை இறந்தே?

பாடல் பின்னணி:  (1) பிரிவிடை வேறுபட்ட தலைவி ஆற்றாமையினால் தோழியிடம் சொல்லியது.(2) பிரிவு உணர்த்திய தோழிக்குத் தலைவி சொல்லியது.

பொருளுரை:  என் அழகிய கண்களும் நெற்றியும் பசலை அடையவும், துன்பம் மிகுந்து இங்கு யான் வருந்தவும், என்னைப் பிரிந்துப் போகத் துணிந்து வாழ்வதற்கு நம் தலைவர் வன்மை உடையவராயின், தலை குவிந்துள்ள குடிசைகளையுடைய அழகிய குடியிருப்புகளையுடைய சிறிய ஊரில், உப்பு வணிகர்கள் பகலில் தங்கி, வளைந்த நுகத்தில் பிணித்த சிவந்த (செவ்விய) கயிற்றினையுடைய வண்டிகளை, பொருந்திய மணிகள் ஒலிக்கும்படி இழுக்கும் எருதுகள் துன்புறும், வெப்பம் மிகுந்த இடங்களில் உள்ள புழுதியைத் திரட்டி வீசும் காற்றுச் சுழற்றும் பாலை நில வழிகளில், சிறிது தங்கியிருந்து,

பாய்தல் கொண்டு முதுகை நெளிக்கும் சிறிய வரிகளையுடைய புலிக்குட்டி, உயர்ந்த நல்ல யானை நீர் விருப்பத்தால் இட்ட தும்பிக்கையைக் கடித்து முழங்கும் முகில்கள் துஞ்சும் காட்டில் புலி புகுந்து ஈனும் நீரற்ற சுனையினையுடைய, பனியுடைய உச்சிகள் கொண்ட பல மலைகளைக் கடந்து, அவர் செல்லுவாரோ?

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இவற்றிற்கு ‘எஞ்சியோர்க்கும் எஞ்சுதல் இலவே’ (தொல்காப்பியம், அகத்திணையியல் 42) என வரும் விதியே அமையும்.  பாய் கொள்பு உறுவெரிந் ஒடிக்கும் சிறுவரிக் குருளை (10) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – உயிரினங்களின் மேல் பாய்ந்து அவற்றின் மேல் இருந்து மிகவும் அவற்றின் முதுகென்பினை ஒடிக்கும் சிறிய புலிக்குட்டி, ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – பாய்தல் கொண்டு நேர்மை பொருந்திய முதுகினை நெளிக்கும் குறுகிய வரிகளையுடைய புலிக்குட்டி.  செங்கயிற்று (6) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – சிவந்த கயிற்றையுடைய, ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – செவ்விதான கயிற்றினால்.

சொற்பொருள்:  பூங்கணும் நுதலும் பசப்ப நோய் கூர்ந்து ஈங்கு யான் வருந்தவும் – என் அழகிய கண்களும் (பூப்போன்ற கண்களும்) நெற்றியும் பசலை அடைய துன்பம் மிகுந்து இங்கு யான் வருந்தவும் (பூங்கணும் – பூங்கண்ணும், கண்ணும், இடைக்குறை), நீங்குதல் துணிந்து வாழ்தல் வல்லுநர் ஆயின் – என்னைப் பிரிந்துப் போகத் துணிந்து வாழ்வதற்கு வன்மை உடையவராயின், காதலர் – நம் தலைவர், குவிந்த குரம்பை அம் குடிச் சீறூர் – தலை குவிந்துள்ள குடிசைகளையுடைய அழகிய குடியிருப்புகளையுடைய சிறிய ஊரில், படுமணி இயம்ப – பொருந்திய மணிகள் ஒலிக்க, பகல் இயைந்து – பகலில் தங்கி, உமணர் கொடு நுகம் பிணித்த செங்கயிற்று ஒழுகைப் பகடு அயாக் கொள்ளும் – உப்பு வணிகர்கள் வளைந்த நுகத்தில் பிணித்த சிவந்த (செவ்விய) கயிற்றினையுடைய வண்டிகளை இழுக்கும் எருதுகள் துன்புறும், வெம்முனைத் துகள் தொகுத்து எறி வளி சுழற்றும் அத்தம் – வெப்பம் மிகுந்த இடங்களில் உள்ள புழுதியைத் திரட்டி வீசும் காற்றுச் சுழற்றும் பாலை நில வழிகளில், சிறிது அசைந்து – சிறிது தங்கியிருந்து, ஏகுவர் கொல்லோ – அவர் செல்லுவாரோ (கொல் – ஐயப்பொருட்டு வந்த இடைச்சொல், ஓ – அசைநிலை), தாமே – தாம் ஏ அசைநிலைகள், பாய் கொள்பு உறு வெரிந் ஒடிக்கும் சிறுவரிக் குருளை – பாய்தல் கொண்டு முதுகை நெளிக்கும் சிறிய வரிகளையுடைய புலிக்குட்டி, நெடு நல்யானை நீர் நசைக்கு இட்ட கை கறித்து உரறும் மை தூங்கு இறும்பில் புலி புக்கு ஈனும் வறுஞ்சுனை – உயர்ந்த நல்ல யானை நீர் விருப்பத்தால் இட்ட தும்பிக்கையைக் கடித்து முழங்கும் முகில்கள் துஞ்சும் காட்டில் புலி புகுந்து ஈனும் நீரற்ற சுனையினையுடைய (நசைக்கு – நசையால், வேற்றுமை மயக்கம்), பனிபடு சிமையப் பன் மலை இறந்தே – பனியுடைய உச்சிகள் கொண்ட பல மலைகளைக் கடந்து (இறந்தே – ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 330, உலோச்சனார், நெய்தல் திணைதோழி தலைவியிடம் சொன்னது
கழிப்பூக் குற்றும், கானல் அல்கியும்,
வண்டல் பாவை வரி மணல் அயர்ந்தும்,
இன்புறப் புணர்ந்தும், இளிவரப் பணிந்தும்,
தன் துயர் வெளிப்பட தவறு இல் நம் துயர்
அறியாமையின் அயர்ந்த நெஞ்சமொடு  5
செல்லும் அன்னோ மெல்லம்புலம்பன்,
செல்வோன் பெயர் புறத்து இரங்கி முன்னின்று
தகைஇய சென்ற என் நிறை இல் நெஞ்சம்
எய்தின்று கொல்லோ தானே? எய்தியும்
காமம் செப்ப நாணின்று கொல்லோ?  10
உதுவ காண் அவர் ஊர்ந்த தேரே!
குப்பை வெண்மணல் குவவு மிசையானும்,
எக்கர்த் தாழை மடல் வயினானும்,
ஆய் கொடிப் பாசடும்பு அரிய ஊர்பு இழிபு,
சிறுகுடிப் பரதவர் பெருங்கடல் மடுத்த  15
கடுஞ்செலல் கொடுந்திமில் போல,
நிவந்து படு தோற்றமொடு இகந்து மாயும்மே.

பாடல் பின்னணி:  தலைவனுக்குக் குறை நேர்ந்த தோழி, தலைவியிடம் அவன் வேண்டுகோளுக்கு உடன்படுமாறு கூறியது. 

பொருளுரை:  மென்னிலமாகிய நெய்தல் நிலத்தின் தலைவன், நம்முடன்உப்பங்கழியில் பூக்களைப் பறித்தும், கடற்கரைச் சோலையில் தங்கியும், விளையாட்டுப் பாவையை வரிவரியாக உள்ள மணலில் செய்தும், இன்பமுற வந்து கூடியும், சிறுமை தோன்ற பணிந்தும், தன் துயரம் வெளிப்பட்டுத் தோன்ற, குற்றமில்லாத நம் துயரை அறியாமையால், சோர்ந்த நெஞ்சத்துடன் செல்லுகின்றான். ஐயோ!

செல்லுபவன் போன திசையில் இரக்கமுற்று, முன்னே நின்று என் நிறைவு இல்லாத நெஞ்சம், அவனைச் சார்ந்ததோ?  அவனை அடைந்தும் அவன் மேல் நான் கொண்ட காதலைக் கூற நாணியதோ?  அங்கே காண்பாயாக!  அவன் ஏறிச் சென்ற தேர், திரண்ட வெள்ளை மணல் குவியல்கள் மேலும், மணல் மேட்டின்கண் உள்ள தாழை மடல்களினிடத்தும், அழகிய பசிய அடும்புக்கொடிகள் வெட்டுப்படும்படி அவற்றில் மேல் ஏறியும் இறங்கியும், சிறிய குடியிருப்பில் வாழும் பரதவர்களின் பெரிய கடலில் செலுத்திய விரைந்து செல்லும் வளைந்த படகுகள் போல், உயர்ந்து தோன்றும் தோற்றத்துடன் சென்று மறைகின்றது.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு ‘நாற்றமும் தோற்றமும்’ (தொல்காப்பியம், களவியல் 23) என வரும் நூற்பாவின்கண் ‘குறைந்த அவட் படரினும்’ என வரும் விதி கொள்க.  ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – ‘மறைந்தவற் காண்டல்’ (தொல்காப்பியம், களவியல் 23) என்னுஞ் சூத்திரத்து, இச் செய்யுளை எடுத்துக் காட்டி, இதனுள் ‘அறியாமையின் அயர்ந்த நெஞ்சமொடு’ என்பது தன்வயின் உரிமை இகந்து மாயும் என்பது அவன்வயிற் பரத்தமை, என்று கூறினர் நச்சினார்க்கினியர்.  அயர்ந்த (5) – ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – சோர்ந்த, பொ. வே. சோமசுந்தரனார் உரை – ஐயுற்ற.  ஊர்பு இழிபு – ஐங்குறுநூறு 101 – உதுக்காண்! ஏர் கொடிப் பாசடும்பு பரிய ஊர்பு இழிபு, நெய்தல் மயக்கி வந்தன்று, நின் மகள் பூப் போல் உண்கண் மரீஇய நோய்க்கு மருந்தாகிய, கொண்கன் தேரே.

சொற்பொருள்:  கழிப்பூக் குற்றும் கானல் அல்கியும் வண்டல் பாவை வரி மணல் அயர்ந்தும் இன்புறப் புணர்ந்தும் இளிவரப் பணிந்தும் – உப்பங்கழியில் பூக்களைப் பறித்தும் கடற்கரைச் சோலையில் தங்கியும் விளையாட்டுப் பாவையை வரிவரியாக உள்ள மணலில் செய்தும் இன்பமுற வந்து கூடியும் சிறுமை தோன்ற பணிந்தும், தன் துயர் வெளிப்பட – தன் துயரம் வெளிப்பட்டுத் தோன்ற, தவறு இல் நம் துயர் அறியாமையின் – குற்றமில்லாத நம் துயரை அறியாமையால், அயர்ந்த நெஞ்சமொடு செல்லும் – சோர்ந்த நெஞ்சத்துடன் செல்லுகின்றான், அன்னோ – ஐயோ (இரக்கக்குறிப்பு), மெல்லம்புலம்பன் – மென்னிலமாகிய நெய்தல் நிலத்தின் தலைவன் (மெல்லம்புலம்பன் – அம் – சாரியை, புலம்பு = கடற்கரை), செல்வோன் பெயர் புறத்து இரங்கி – செல்லுபவன் போன திசையில் இரக்கமுற்று, முன்னின்று தகைஇய சென்ற என் நிறை இல் நெஞ்சம் – முன்னே நின்று என் நிறைவு இல்லாத நெஞ்சம் (தகைஇய – அளபெடை), எய்தின்று கொல்லோ – அவனைச் சார்ந்ததோ (கொல் – ஐயப்பொருட்டு வந்த இடைச்சொல், ஓ அசைநிலை), தானே – தான் ஏ அசைநிலைகள், எய்தியும் காமம் செப்ப நாணின்று கொல்லோ – அவரை அடைந்தும் காதலைக் கூற நாணியதோ, உதுவ காண் – அங்கே காண்பாயாக, அவர் ஊர்ந்த தேரே – அவர் ஏறிச் சென்ற தேர், குப்பை வெண்மணல் குவவு மிசையானும் எக்கர்த் தாழை மடல் வயினானும் ஆய் கொடிப் பாசடும்பு அரிய ஊர்பு இழிபு – திரண்ட வெள்ளை மணல் குவியல்கள் மேலும் மணல் மேட்டின்கண் உள்ள தாழை மடல்களினிடத்தும் அழகிய பசிய அடும்புக்கொடிகள் வெட்டுப்படும்படி அவற்றில் மேல் ஏறியும் இறங்கியும் (அடும்புக்கொடி – Ipomoea pes caprae), சிறுகுடிப் பரதவர் பெருங்கடல் மடுத்த கடுஞ்செலல் கொடுந்திமில் போல – சிறிய குடியிருப்பில் வாழும் பரதவர்களின் பெரிய கடலில் செலுத்திய விரைந்து செல்லும் வளைந்த படகுகள் போல், நிவந்து படு தோற்றமொடு இகந்து மாயும்மே – உயர்ந்து தோன்றும் தோற்றத்துடன் சென்று மறையும் (மாயும்மே – செய்யுளோசை நோக்கி மகர ஒற்று விரிந்தது)

அகநானூறு 331, மாமூலனார், பாலைத் திணைதலைவி தோழியிடம் சொன்னது
நீடு நிலை அரைய செங்குழை இருப்பைக்
கோடு கடைந்தன்ன கொள்ளை வான் பூ,
ஆடு பரந்தன்ன ஈனல் எண்கின்
சேடு சினை உரீஇ உண்ட மிச்சில்,
பைங்குழை தழையர் பழையர் மகளிர்  5
கண் திரள் நீள் அமைக் கடிப்பின் தொகுத்து,
குன்றகச் சிறுகுடி மறுகுதொறும் மறுகும்
சீறூர் நாடு பல பிறக்கு ஒழியச்,
சென்றோர் அன்பிலர் தோழி, என்றும்
அருந்துறை முற்றிய கருங்கோட்டுச் சீறியாழ்ப்  10
பாணர் ஆர்ப்பப் பல் கலம் உதவி,
நாள் அவை இருந்த நனை மகிழ் திதியன்
வேளிரொடு பொரீஇய கழித்த
வாள்வாய் அன்ன வறுஞ்சுரம் இறந்தே.

பாடல் பின்னணி:  தலைவனின் பிரிவின்கண் ஆற்றாது வருந்தித் தோழியிடம் கூறியது. 

பொருளுரை:  தோழி!  நீண்ட நிலையாகிய அடியையும் சிவந்த தளிர்களையுமுடைய இருப்பை மரங்களின், யானைகளின் மருப்புகளைக் கடைந்தாற்போல் தோன்றும் மிகுதியான வெள்ளை மலர்களில், ஆடுகள் பரவியதை ஒத்த ஈன்ற பெண் கரடிகளின் கூட்டம் கிளைகளில் ஏறிக் கைகளால் உருவி உண்ட பின் உள்ள மீதியை, பசிய தளிர்களால் புனைந்த தழையாடையை அணிந்த எயினர் மகளிர், கணுக்கள் திரண்ட நீண்ட மூங்கில் குழாய்களில் திரட்டி மலையில் உள்ள சிற்றூரில் தெருக்கள்தோறும் திரிந்து விற்கும், அழகிய சிறிய பல நாடுகள் பின்னால் ஒழிய,

எப்பொழுதும், அரிய இசைத்துறைகளை முற்றிலும் உணர்ந்த கரிய தண்டினையுடைய சிறிய யாழினையுடைய பாணர்கள் மகிழ்ச்சியால் ஆரவாரம் செய்யும்படி அவர்களுக்குப் பல அணிகலன்களை அளித்து, நாள் அவையில் இருந்த கள்ளினால் மகிழ்வினையுடைய திதியன் வேளிர்களுடன் போர் புரிய உருவிய, வாளின் வாயை ஒத்த கொடிய வறண்ட பாலை நிலத்தைக் கடந்து, சென்ற நம் தலைவர் அன்பில்லாதவர்.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு ‘எஞ்சியோர்க்கும் எஞ்சுதல் இலவே’ (தொல்காப்பியம், அகத்திணையியல் 42) என வரும் விதி கொள்க.  பாட வேறுபாடு 4ம் அடியில் – சேடு, தோடு.  ஈனல் எண்கின் சேடு – பொ. வே. சோமசுந்தரனார் உரை – ‘ஈனல் எண்கின் தோடு’ எனப் பொருள் பகுதியில் மாற்றியுள்ளார், ‘குட்டிகளையுடைய கரடிகள் கூட்டம்’ என அதற்குப் பொருள் கொடுத்துள்ளார், ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – ஈன்ற பெண் கரடிகளின் திரட்சி.  கரடி இருப்பை மலரை உண்ணுதல் – அகநானூறு 15, 81, 95, 149, 171, 247, 267, 275, 331.  உரீஇ (4) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – உருவி, உருவித் தின்றன என்க, ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – பரந்து, உருவி என்றுமாம்.  வரலாறு –திதியன், வேளிர்.

சொற்பொருள்:  நீடு நிலை அரைய செங்குழை இருப்பைக் கோடு கடைந்தன்ன கொள்ளை வான் பூ – நீண்ட நிலையாகிய அடியையும் சிவந்த தளிர்களையுமுடைய இருப்பை மரங்களின் யானைகளின் மருப்புகளைக் கடைந்தாற்போல் தோன்றும் மிகுதியான வெள்ளை மலர்களில் (இருப்பை மரம் – Indian Butter Tree, South Indian Mahua, இலுப்பை மரம், வஞ்சி மரம், கோடு – கோடு, தந்தம்), ஆடு பரந்தன்ன ஈனல் எண்கின் சேடு சினை உரீஇ உண்ட மிச்சில் – ஆடுகள் பரவியதை ஒத்த ஈன்ற பெண் கரடிகளின் கூட்டம் கிளைகளில் ஏறிக் கைகளால் உருவி உண்ட பின் உள்ள மீதியை (உரீஇ – அளபெடை), பைங்குழை தழையர் பழையர் மகளிர் கண் திரள் நீள் அமைக் கடிப்பின் தொகுத்து குன்றகச் சிறுகுடி மறுகுதொறும் மறுகும் – பசிய தளிர்களால் புனைந்த தழையாடையை அணிந்த எயினர் மகளிர் கணுக்கள் திரண்ட நீண்ட மூங்கில் குழாய்களில் திரட்டி மலையில் உள்ள சிற்றூரில் தெருக்கள்தோறும் திரிந்து விற்கும் (பைங்குழை – பண்புத்தொகை, பழையர் = கள் விற்போர், எயினர்), சீறூர் நாடு பல பிறக்கு ஒழியச் சென்றோர் அன்பிலர் – அழகிய சிறிய பல நாடுகள் பின்னால் ஒழிய சென்ற நம் தலைவர் அன்பில்லாதவர், தோழி – தோழி, என்றும் அருந்துறை முற்றிய கருங்கோட்டுச் சீறியாழ்ப் பாணர் ஆர்ப்பப் பல் கலம் உதவி – எப்பொழுதும் அரிய இசைத்துறைகளை முற்றிலும் உணர்ந்த கரிய தண்டினையுடைய சிறிய யாழினையுடைய பாணர்கள் மகிழ்ச்சியால் ஆரவாரம் செய்யும்படி அவர்களுக்குப் பல அணிகலன்களை அளித்து, நாள் அவை இருந்த நனை மகிழ் திதியன் வேளிரொடு பொரீஇய கழித்த – நாள் அவையில் இருந்த கள்ளினால் மகிழ்வினையுடைய திதியன் வேளிர்களுடன் போர் புரிய உருவிய (பொரீஇய – அளபெடை), வாள்வாய் அன்ன வறும் சுரம் இறந்தே – வாளின் வாயை ஒத்த கொடிய வறண்ட பாலை நிலத்தைக் கடந்து (இறந்தே – ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 332, கபிலர், குறிஞ்சித் திணைதலைவி தோழியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
முளை வளர் முதல மூங்கில் முருக்கிக்
கிளையொடு மேய்ந்த கேழ் கிளர் யானை,
நீர் நசை மருங்கின் நிறம் பார்த்து ஒடுங்கிய
பொரு முரண் உழுவை தொலைச்சிக், கூர் நுனைக்
குருதிச் செங்கோட்டு அழிதுளி கழாஅக்,  5
கல் முகை அடுக்கத்து மென்மெல இயலிச்,
செறு பகை வாட்டிய செம்மலொடு அறு கால்
யாழிசைப் பறவை இமிரப், பிடி புணர்ந்து
வாழை அம் சிலம்பில் துஞ்சும் நாடன்
நின் புரைத் தக்க சாயலன் என, நீ  10
அன்பு உரைத்து அடங்கக் கூறிய இன் சொல்
வாய்த்தன, வாழி தோழி! வேட்டோர்க்கு
அமிழ்தத்து அன்ன கமழ் தார் மார்பின்
வண்டு இடைப்படாஅ முயக்கமும்,
தண்டாக் காதலும் தலைநாள் போன்மே.  15

பாடல் பின்னணி:  தலைவனின் வரவை அறியாதாள் போல அவனைப் பாராட்டித் தோழிக்குக் கூறுபவளாய்த் தலைவி கூறியது. 

பொருளுரை:  தோழி!  நீ நீடு வாழ்வாயாக!  முளைகள் வளரும் அடியையுடைய மூங்கில்களை ஒடித்துத் தன் இனத்துடன் தின்ற நிறம் விளங்கிய களிற்று யானை, நீரைப் பருக விரும்பிச் செல்லும் இடத்தில் தன் உருவத்தைப் பார்த்துத் தாக்குவதற்குப் பதுங்கிய போரிடும் முரண்பாடு உடைய புலியைக் கொன்றுத் தன் கூரிய முனையையுடைய குருதி படிந்த கொம்பினை (தந்தத்தை) மிக்க மழையால் கழுவிக்கொண்டுக், கற்கள் பொருந்திய குகைகளுடைய பக்க மலையில் மெல்ல மெல்லச் சென்று, சினம் கொண்ட தன் பகையைக் கொன்ற செருக்குடன் யாழின் இசை போன்று ஒலிக்கும் ஆறு கால்களையுடைய வண்டுகள் ஒலிக்கும்படி மதத்தை வடித்துத் தன் பெண் யானையுடன் கூடி, வாழை மரங்களுடைய மலையில் துயிலும் நாட்டவன் நம் தலைவன்.

“உன் உயர்வுக்கு ஏற்ற மென்மையுடையவன் அவன்” என நீ அன்புடன் யான் அமைதியுறும்படிக் கூறிய இனிய சொற்கள் வாய்மையாய் ஆயின.  விரும்பியவர்களுக்கு அமிர்தம் போன்ற இனிய நறுமண மலர்மாலை அணிந்த அவனுடைய மார்பின்கண், வண்டுகள் இடையில் வர இயலாத, தழுவலும் நீங்காத காதலும் முதல் நாள் போன்று உள்ளன.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு ‘மறைந்தவற் காண்டல்’ (தொல்காப்பியம், களவியல் 23) என வரும் நூற்பாவின்கண் ‘பெற்றவழி மலியினும்’ என வரும் விதி கொள்க.  உள்ளுறை உவமம் – பொ. வே. சோமசுந்தரனார் உரை – யானை தன் பகையான புலியைக் கொன்று அதனால் உண்டான குருதிக் கறையை மழையால் கழுவிக் கொண்டு தன் இருக்கைக்கு மெல்லச் சென்று பிடியைப் புணர்ந்து இனிது துயிலும் என்றது, தலைவன், அலர் தூற்றுவாருடைய வாயை அடக்கித் தமது ஒழுக்கத்தால் உண்டான பழியை நம்மை வரைந்து கொள்ளுகின்றதாலான நீரால் தூய்மை செய்து நம்மையும் அவன் இல்லத்திற்கு அழைத்துச் சென்று நம்மோடு புணர்ந்து தன் மனைக்கண் இனிமையாகத் துயில்வான் என்பது.  முளை வளர் முதல மூங்கில் (1) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – முளைகள் வளருவதற்கு இடமான தூற்றினையுடைய மூங்கில்களை, ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – முளைகள் வளரும் தூறுகளிலுள்ள மூங்கில்களை, ச. வே. சுப்பிரமணியன் உரை – மூங்கில் தூறுகளில் வளரும் முளைகளை.  செம்மலொடு (7) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – தலைமையுடன், ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – செருக்குடன்.  அமிழ்தத்து அன்ன கமழ் தார் மார்பின் (13) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – அமிழ்தம் போன்ற நறுமணம் கமழுகின்ற அவனுடைய மாலையணிந்த மார்பின்கண், ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – அமிழ்தம் போன்ற இனிய நறிய தாரினையுடைய மார்பின்கண்.  கழாஅ – கழுவி என்பது பொருள். செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம்.  எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது.  பறவை – இச்சொல் சங்கப்பாடல்களில் இன்றைய பயன்பாட்டில் உள்ளவாறும் உள்ளது.  தேனீ, வௌவால், தும்பி ஆகிவற்றைக் குறிக்கவும் பயன்படுத்தப்பட்டுள்ளது.  தேனீ – அகநானூறு 4–11, 132–10, 332–8, 371–13, நற்றிணை 55–5, 161–4, 185–9, ஐங்குறுநூறு 82–3, கலித்தொகை 22–7, பரிபாடல் 7–6, புறநானூறு 70–11, பதிற்றுப்பத்து 66–16, பெரும்பாணாற்றுப்படை 183, 229, வௌவால் – அகநானூறு 244–2, குறுந்தொகை 201–3, 352–2, புறநானூறு 370–11, தும்பி – நற்றிணை 277–9.

சொற்பொருள்:  முளை வளர் முதல மூங்கில் முருக்கிக் கிளையொடு மேய்ந்த கேழ் கிளர் யானை – முளைகள் வளரும் அடியையுடைய மூங்கில்களை ஒடித்துத் தன் இனத்துடன் தின்ற நிறம் விளங்கிய களிற்று யானை, நீர் நசை மருங்கின் நிறம் பார்த்து ஒடுங்கிய பொரு முரண் உழுவை தொலைச்சிக் கூர் நுனைக் குருதிச் செங்கோட்டு அழிதுளி கழாஅக் கல் முகை அடுக்கத்து மென்மெல இயலி –  நீரைப் பருக விரும்பிச் செல்லும் இடத்தில் தன் உருவத்தைப் பார்த்துத் தாக்குவதற்குப் பதுங்கிய போரிடும் முரண்பாடு உடைய புலியைக் கொன்றுத் தன் கூரிய முனையையுடைய குருதி படிந்த கொம்பினை (தந்தத்தை) மிக்க மழையால் கழுவிக்கொண்டுக் கற்கள் பொருந்திய குகைகளுடைய பக்க மலையில் மெல்ல மெல்லச் சென்று, செறு பகை வாட்டிய செம்மலொடு அறு கால் யாழ் இசைப் பறவை இமிரப் பிடி புணர்ந்து – சினம் கொண்ட தன் பகையைக் கொன்ற செருக்குடன் யாழின் இசை போன்று ஒலிக்கும் ஆறு கால்களையுடைய வண்டுகள் ஒலிக்கும்படி மதத்தை வடித்துத் தன் பெண் யானையுடன் கூடி, வாழை அம் சிலம்பில் துஞ்சும் நாடன் – வாழை மரங்களுடைய மலையில் துயிலும் நாட்டின் தலைவன், நின் புரைத் தக்க சாயலன் என நீ அன்பு உரைத்து அடங்கக் கூறிய இன் சொல் வாய்த்தன – உன் உயர்வுக்கு ஏற்ற மென்மையுடையவன் அவன் என நீ அன்புடன் யான் அமைதியுறும்படிக் கூறிய இனிய சொற்கள் வாய்மையாய் ஆயின, வாழி – நீ நீடு வாழ்வாயாக, தோழி – தோழி, வேட்டோர்க்கு அமிழ்தத்து அன்ன கமழ் தார் மார்பின் – விரும்பியவர்களுக்கு அமிர்தம் போன்ற இனிய நறுமண மலர்மாலை அணிந்த மார்பின்கண் (அமிழ்தத்து – அமிழ்தம், அத்துச் சாரியை), வண்டு இடைப்படாஅ முயக்கமும் தண்டாக் காதலும் தலைநாள் போன்மே – வண்டுகள் இடையில் வர இயலாத தழுவலும் நீங்காத காதலும் முதல் நாள் போன்று உள்ளன (இடைப்படாஅ – அளபெடை, போன்மே = போன்ம் + ஏ, போன்ம் – போலும் என்பது இடை உகரம் கெட்டு லகரம் னகரமாய்த் திரிந்து நின்றது, ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 333, கல்லாடனார், பாலைத் திணைதலைவி தோழியிடம் சொன்னது
யாஅ ஒண் தளிர் அரக்கு விதிர்த்தன்ன நின்
ஆக மேனி அம் பசப்பு ஊர,
அழிவு பெரிது உடையையாகி, அவர் வயின்
பழி தலைத்தருதல் வேண்டுதி, மொழி கொண்டு
தாங்கல் ஒல்லுமோ மற்றே, ஆங்கு நின்  5
எவ்வம் பெருமை உரைப்பின், செய்பொருள்
வயங்காது ஆயினும் பயங்கெடத் தூக்கி
நீடலர், வாழி தோழி! கோடையில்
குருத்து இறுபு உக்க வருத்தம் சொலாது,
தூம்புடைத் துய்த்தலைக் கூம்புபு திரங்கிய  10
வேனில் வெளிற்றுப் பனை போலக் கையெடுத்து
யானைப் பெருநிரை வானம் பயிரும்
மலைச் சேண் இகந்தனர் ஆயினும், நிலை பெயர்ந்து,
நாள் இடைப்படாமை வருவர் நமர், எனப்
பயந்தரு கொள்கையின் நயந்தலை திரியாது  15
நின் வாய் இன்மொழி நன்வாயாக
வருவர் ஆயினோ நன்றே, வாராது
அவணர் காதலர் ஆயினும், இவண் நம்
பசலை மாய்தல் எளிது மன் தில்ல,
சென்ற தேஎத்துச் செய் வினை முற்றி  20
மறுதரல் உள்ளத்தர் எனினும்,
குறுகு பெருநசையொடு தூது வரப்பெறினே.

பாடல் பின்னணி:  பிரிவிடை வற்புறுத்தும் தோழிக்குத் தலைவி கூறியது.  

பொருளுரை:  தோழி!  நீ நீடு வாழ்வாயாக!  “யா மரத்தின் ஒளிரும் தளிரில் அரக்குப் பொடியைச் சிதறிவிட்டாற்போன்ற நின் உடலின்கண் அழகிய பசலை ஊர, வருத்தம் மிகுதி உடையை ஆகி அவரிடத்தில் பழியைச் சுமத்த விரும்புகிறாய்.  அம்மொழிகளைக் கேட்டு அவரால் துன்பத்தைத் தாங்க முடியுமோ?  நின் துன்ப மிகுதியை அவரிடம் உரைத்ததால் ஈட்டப்படும் பொருள் முற்றாது ஆயினும், அதன் பயன் கருதி காலம் தாழ்த்த மாட்டார்.

கோடைக் காற்றினால் குருத்து ஒடிந்து உதிர்ந்த, நோய் நீங்காத, துளையை உடைய பஞ்சு பொதிந்த உச்சி சுருங்கிய, வேனில் காலத்து இளம் பனை மரம் போல், தும்பிக்கையை உயர்த்தி, யானையின் பெரிய கூட்டம் முகில்களை நோக்கி முழங்கும் மலையைக் கடந்து தொலைவின்கண் சென்றார் ஆயினும், கூறிய காலம் மாறாது நாட்கள் இடைப்படாமல் நம் தலைவர் வருவார்”, என்று பயன் தரும் கொள்கையுடன் இனிமை நீங்காது கூறும் நின் வாயின் இனிய சொற்கள் நன்கு உண்மையாகும்படி அவர் வருவார் ஆயின் நன்று.

அவ்வாறு வராது நம் தலைவர் அவ்விடத்தில் தங்குபவர் ஆயினும், சென்ற நாட்டில் தாம் செய்யும் தொழிலை முடித்துவிட்டு மீளும் உள்ளத்தை உடையவர் ஆனாலும், மீண்டு வரும் பெரும் விருப்பத்துடன் விடுக்கும் தூதினை யாம் பெறுவோமானால், இங்கு நம் பசலை மறைவது எளிது. 

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு ‘எஞ்சியோர்க்கும் எஞ்சுதல் இலவே’ (தொல்காப்பியம், அகத்திணையியல் 42) என வரும் விதி கொள்க.  (1–8) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – இவை தோழி தனக்குக் கூறியவற்றைத் தலைவி கொண்டு கூறியபடியாம்.  இது தூது விட வேண்டும் என்ற தலைவியைத் தோழி இடித்துரைத்தவாறு.  இங்ஙனம் கூறவே நீ ஆற்றியிருத்தலே நன்று, நாம் தூது விடுதல் கூடாது என்று அறிவுறுத்தவாறாயிற்று.  (1–14) – ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – இவ்வுரையில் இந்த அடிகள் தோழி தலைவியிடம் கூறியதை அவளிடம் தலைவி கூறுவதாக உள்ளது.  நயந்தலை (15) – ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – இனிமை, பொ. வே. சோமசுந்தரனார் உரை – பொருள்நயம்.

சொற்பொருள்:  யாஅ ஒண் தளிர் அரக்கு விதிர்த்தன்ன நின் ஆக மேனி அம் பசப்பு ஊர அழிவு பெரிது உடையை ஆகி அவர் வயின் பழி தலைத்தருதல் வேண்டுதி – யா மரத்தின் ஒளிரும் தளிரில் அரக்குப் பொடியைச் சிதறிவிட்டாற்போன்ற நின் உடலின்கண் அழகிய பசலை ஊர வருத்தம் மிகுதி உடையை ஆகி அவரிடத்தில் பழியைச் சுமத்த விரும்புகிறாய் (யாஅ – அளபெடை, ஆக மேனி – இரு பெயரொட்டு, யா மரம் – ஆச்சா மரம், Hardwickia binate), மொழி கொண்டு தாங்கல் ஒல்லுமோ – அம்மொழிகளைக் கேட்டு அவரால் துன்பத்தைத் தாங்க முடியுமோ, மற்றே – மற்று ஏ அசைநிலைகள், ஆங்கு நின் எவ்வம் பெருமை உரைப்பின் செய்பொருள் வயங்காது ஆயினும் பயன் கெடத் தூக்கி நீடலர் – அங்கு நின் துன்ப மிகுதியை அவரிடம் உரைத்ததால் ஈட்டப்படும் பொருள் முற்றாது ஆயினும் அதன் பயன் கருதி காலம் தாழ்த்த மாட்டார்,

வாழி – நீ நீடு வாழ்வாயாக, தோழி – தோழி, கோடையில் குருத்து இறுபு உக்க வருத்தம் சொலாது தூம்புடைத் துய்த்தலைக் கூம்புபு திரங்கிய – கோடைக் காற்றினால் குருத்து ஒடிந்து உதிர்ந்த நோய் நீங்காத துளையை உடைய பஞ்சு பொதிந்த உச்சி சுருங்கிய, வேனில் வெளிற்றுப் பனை போல – வேனில் காலத்து இளம் பனை மரம் போல், கையெடுத்து யானைப் பெருநிரை வானம் பயிரும் மலைச் சேண் இகந்தனர் ஆயினும் – தும்பிக்கையை உயர்த்தி யானையின் பெரிய கூட்டம் முகில்களை நோக்கி முழங்கும் மலையைக் கடந்து தொலைவின்கண் சென்றார் ஆயினும், நிலை பெயர்ந்து நாள் இடைப்படாமை வருவர் நமர் – கூறிய காலம் மாறாது நாட்கள் இடைப்படாமல் நம் தலைவர் வருவார், எனப் பயம் தரு கொள்கையின் நயந்தலை திரியாது நின் வாய் இன்மொழி நன்வாயாக வருவர் ஆயினோ நன்றே – என்று பயன் தரும் கொள்கையுடன் இனிமை நீங்காது கூறும் நின் வாயின் இனிய சொற்கள் நன்கு உண்மையாகும்படி வருவார் ஆயின் நன்று (பயம் – பயன், ஆயினோ – ஓகாரம் அசைநிலை, நன்றே – ஏகாரம் அசைநிலை), வாராது அவணர் காதலர் ஆயினும் – அவ்வாறு வராது நம் தலைவர் அவ்விடத்தில் தங்குபவர் ஆயினும், இவண் நம் பசலை மாய்தல் எளிது – இங்கு நம் பசலை மறைவது எளிது, மன் – அசைநிலை, தில்ல – தில் விழைவுப் பொருட்டு வந்த ஓர் இடைச்சொல், ஈறு திரிந்து வந்தது, சென்ற தேஎத்துச் செய் வினை முற்றி மறுதரல் உள்ளத்தர் எனினும் – சென்ற நாட்டில் தாம் செய்யும் தொழிலை முடித்துவிட்டு மீளும் உள்ளத்தை உடையவர் ஆனாலும், குறுகு பெருநசையொடு தூது வரப்பெறினே – மீண்டு வரும் பெரும் விருப்பத்துடன் விடுக்கும் தூதினை யாம் பெறுவோமானால் (பெறினே – ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 334, மதுரைக் கூத்தனார், முல்லைத் திணைதலைவன் தேர்ப்பாகனிடம் சொன்னது
ஓடா நல் ஏற்று உரிவை தைஇய
ஆடு கொள் முரசம் இழுமென முழங்க,
நாடு திறை கொண்டனம் ஆயின், பாக!
பாடு இமிழ் கடலின் எழுந்த சும்மையொடு
பெருங்களிற்றுத் தடக்கை புரையக் கால் வீழ்த்து,  5
இரும் பிடித் தொழுதியின் ஈண்டுவன குழீஇ,
வணங்கு இறை மகளிர் அயர்ந்தனர் ஆடும்
கழங்கு உறழ் ஆலியொடு கதழ் உறை சிதறிப்,
பெயல் தொடங்கின்றால் வானம் வானின்
வயங்கு சிறை அன்னத்து நிரை பறை கடுப்ப,  10
நால்குடன் பூண்ட கால் நவில் புரவிக்
கொடிஞ்சி நெடுந்தேர் கடும் பரி தவிராது,
இனமயில் அகவும் கார் கொள் வியன் புனத்து,
நோன் சூட்டு ஆழி ஈர் நிலம் துமிப்ப,
ஈண்டே காணக் கடவுமதி பூங்கேழ்ப்  15
பொலிவன அமர்த்த உண்கண்,
ஒலி பல் கூந்தல் ஆய் சிறு நுதலே.

பாடல் பின்னணி:  போர்த்தொழிலை மேற்கொண்டு சென்ற தலைவன், பகை வென்று, ஊருக்குத் திரும்பிப் போகக் கருதித் தேர்ப்பாகற்குச் சொல்லியது. 

பொருளுரை:  பாகனே!  ஒலியுடைய கடலில் எழுந்த முழக்கத்துடன், பெரிய களிற்று யானையின் பருத்த தும்பிக்கை போல் மழைக்கால் இறங்கி, இரும் கரிய பெண் யானைகளின் கூட்டம் போன்று ஒன்று சேர்ந்து, வளைந்த முன்கையை உடைய மகளிர் விளையாடும் கழங்கினை ஒத்த பனிக்கட்டிகளுடன் விரையும் நீர்துளிகளைச் சிதறி மழை பெய்தலைத் தொடங்கி விட்டன முகில்கள்.

புறங்கொடாத நல்ல காளையின் தோலால் போர்த்திய வெற்றி அடைந்த முரசம் இழும் என்று முழங்க, பகைவரின் நாட்டைத் திறையாகக் கொண்டோம் ஆகலின், அழகிய நிறத்துடன் பொலிவனவாய் ஒன்றோடு ஒன்று போரிடும் மையுண்ட கண்களையும் தழைத்த அடர்ந்த கூந்தலையும் அழகிய சிறிய நெற்றியையுமுடைய நம் தலைவியை இப்பொழுது காண்பதற்கு,

வானத்தில் விளங்கும் சிறகுகளையுடைய அன்னத்தின் கூட்டம் பறந்து செல்லுதலை ஒப்ப, நான்கு குதிரைகள் பூட்டப் பெற்ற, காற்று போல் வேகத்துடன் செல்லும் கொடுஞ்சியையுடைய நீண்ட தேரின் மிக்க வேகம் தளராது, மயில்களின் கூட்டம் ஆடும் கார்காலத்தின் இயல்பைக்கொண்ட அகன்ற முல்லை நிலத்தில், வலிய சூட்டினையுடைய தேரின் உருள்கள் நிலத்தைக் கிழிக்க, செலுத்துவாயாக.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு, ‘கரணத்தின் அமைந்து முடிந்த காலை’ (தொல்காப்பியம், கற்பியல் 5) என வரும் நூற்பாவின்கண் ‘பேரிசை ஊர்திப் பாங்கர் பாங்கினும்’ என வரும் விதி கொள்க.  ஓடா நல்லேற்று உரிவை (1) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – புலியொடு போரிட்டுப் புறங்கொடாது வென்ற காளையின் தோல்.  அமர்த்த உண்கண் (16) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – ஒன்றனோடு ஒன்று போர் செய்கின்ற மையிட்ட கண்கள், ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – மாறுபட்ட மையுண்ட கண்கள்.  கொடிஞ்சி – கையால் பற்றுதற்குரிய தாமரை மொட்டுப் போன்ற தேர் உறுப்பு.  மதி – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம், இடையியல் 26).  கதழ் – கதழ்வும் துனைவும் விரைவின் பொருள் (தொல்காப்பியம், உரியியல் 19).  தட – தடவும் கயவும் நளியும் பெருமை (தொல்காப்பியம், உரியியல் 24). 

சொற்பொருள்:  ஓடா நல் ஏற்று உரிவை தைஇய ஆடு கொள் முரசம் இழும் என முழங்க நாடு திறை கொண்டனம் ஆயின் – புறங்கொடாத நல்ல காளையின் தோலால் போர்த்திய வெற்றி அடைந்த முரசம் இழும் என்று முழங்க பகைவரின் நாட்டைத் திறையாகக் கொண்டோம் ஆகலின் (தைஇய – அளபெடை, இழுமென– ஒலிக்குறிப்பு), பாக – பாகனே, பாடு இமிழ் கடலின் எழுந்த சும்மையொடு – ஒலியுடைய கடலில் எழுந்த முழக்கத்துடன், பெருங் களிற்றுத் தடக் கை புரையக் கால் வீழ்த்து – பெரிய களிற்று யானையின் பருத்த தும்பிக்கை போல் மழைக்கால் இறங்கி, இரும் பிடித் தொழுதியின் ஈண்டுவன குழீஇ – கரிய பெண் யானைகளின் கூட்டம் போன்று ஒன்று சேர்ந்து (குழீஇ – அளபெடை, தொழுதியின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), வணங்கு இறை மகளிர் அயர்ந்தனர் ஆடும் கழங்கு உறழ் ஆலியொடு கதழ் உறை சிதறிப் பெயல் தொடங்கின்றால் வானம் –  வளைந்த முன்கையை உடைய மகளிர் விளையாடும் கழங்கினை ஒத்த பனிக்கட்டிகளுடன் விரையும் நீர்துளிகளைச் சிதறி மழை பெய்தலைத் தொடங்கி விட்டன முகில்கள் (உறழ் – உவம உருபு, தொடங்கின்றால் – ஆல் அசைநிலை), வானின் வயங்கு சிறை அன்னத்து நிரை பறை கடுப்ப – வானத்தில் விளங்கும் சிறகுகளையுடைய அன்னத்தின் கூட்டம் பறந்து செல்லுதலை ஒப்ப (பறை – பறத்தல், கடுப்ப – உவம உருபு), நால்குடன் பூண்ட கால் நவில் புரவிக் கொடிஞ்சி நெடுந்தேர் கடும் பரி தவிராது – நான்கு குதிரைகள் பூட்டப் பெற்ற காற்று போல் வேகத்துடன் செல்லும் கொடுஞ்சியையுடைய நீண்ட தேரின் மிக்க வேகம் தளராது (நால்கு – நான்கு என்னும் எண்ணுப்பெயர் திரிசொல்), இனமயில் அகவும் கார் கொள் வியன் புனத்து – மயில்களின் கூட்டம் ஆடும் கார்காலத்தின் இயல்பைக்கொண்ட அகன்ற முல்லை நிலத்தில், நோன் சூட்டு ஆழி ஈர் நிலம் துமிப்ப – வலிய சூட்டினையுடைய தேரின் உருள்கள் நிலத்தைக் கிழிக்க, ஈண்டே காண – இப்பொழுது காண்பதற்கு, கடவுமதி – செலுத்துவாயாக (மதி – முன்னிலையசை), பூங்கேழ்ப் பொலிவன அமர்த்த உண்கண் ஒலி பல் கூந்தல் ஆய் சிறு நுதலே – அழகிய நிறத்துடன் பொலிவனவாய் ஒன்றோடு ஒன்று போரிடும் மையுண்ட கண்களையும் தழைத்த அடர்ந்த கூந்தலையும் அழகிய சிறிய நெற்றியையுமுடைய நம் தலைவியை (ஆய் சிறு நுதலே – அன்மொழித்தொகை, நுதலே – ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 335, மதுரைத் தத்தங்கண்ணனார், பாலைத் திணைதலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது
இருள்படு நெஞ்சத்து இடும்பை தீர்க்கும்
அருள் நன்கு உடையர் ஆயினும், ஈதல்
பொருள் இல்லோர்க்கு அஃது இயையாது ஆகுதல்
யானும் அறிவென் மன்னே, யானை தன்
கொல் மருப்பு ஒடியக் குத்திச் சினஞ்சிறந்து,  5
இன்னா வேனில் இன் துணை ஆர,
முளி சினை யாஅத்துக் பொளி பிளந்து ஊட்ட,
புலம்பு வீற்றிருந்த நிலம் பகு வெஞ்சுரம்
அரிய அல்ல மன் நமக்கே, விரி தார்
ஆடு கொள் முரசின் அடுபோர்ச் செழியன் 10
மாட மூதூர் மதில் புறம் தழீஇ,
நீடு வெயில் உழந்த குறி இறைக் கணைக்கால்
தொடை அமை பன்மலர்த் தோடு பொதிந்து யாத்த,
குடை ஓரன்ன கோள் அமை எருத்தின்
பாளை பற்று அழிந்து ஒழியப் புறம் சேர்பு  15
வாள் வடித்தன்ன வயிறு உடைப் பொதிய,
நாள் உறத் தோன்றிய நயவரு வனப்பின்,
ஆரத்து அன்ன அணி கிளர் புதுப் பூ
வார் உறு கவரியின் வண்டு உண விரிய,
முத்தின் அன்ன வெள் வீ தாஅய்,  20
அலகின் அன்ன அரி நிறத்து ஆலி
நகை நனி வளர்க்குஞ்சிறப்பின், தகை மிகப்
பூவொடு வளர்ந்த மூவாப் பசுங்காய்
நீரினும் இனிய ஆகிக் கூர் எயிற்று
அமிழ்தம் ஊறும் செவ்வாய்  25
ஒண்தொடிக் குறுமகள் கொண்டனம் செலினே.

பாடல் பின்னணி:  பொருள் வேண்டிய நெஞ்சிற்குச் சொல்லித் தலைவன் செலவு அழுங்கியது. 

பொருளுரை:  பிறர் வறுமையினால் கலங்கியிருக்கும் பொழுது அவர்கள் நெஞ்சின் வருத்தத்தைப் போக்குகின்ற அருளினை உடையவர்கள் ஆயினும், பொருள் இல்லாதவர்களுக்கு ஈதல் இயலாததை யானும் அறிவேன்.  அறிந்தும் என்ன பயன்?

விரிந்த மலர்மாலையையும் வெற்றி பொருந்திய முரசினையும் வெல்லும் போரினையுமுடைய பாண்டிய மன்னனின் மாடங்களையுடைய பண்டைய ஊரான மதுரையின் மதிலின் புறத்தில் உள்ள, நீடிய வெயிலினால் வருந்திய குறிய கிளைகளையுடைய திரண்ட அடியையுடைய கமுக மரத்தின் தொடுத்து அமைத்த பல மலர்களைச் சேர்த்து மூடிக் கட்டிய குடையினை ஒத்த, காய்த்தல் பொருந்திய கழுத்தில் பாளை பற்று நீங்கி ஒழிய, புறத்தை அடைந்து, வாளை வடித்து வைத்தாற்போன்ற வயிற்றினையுடைய பொதியில், பருவம் அடைந்தபோது தோன்றிய இனிமை பொருந்திய அழகுடைய, ஆரம் போன்ற அழகு விளங்கும் புது மலர்கள், நீண்ட சாமரத்தைப் போன்று வண்டுகள் தேன் உண்ணும்படி விரிய, முத்துக்களைப் போன்ற வெள்ளை மலர்கள் பரவி சோழியை ஒத்த நிறத்தையுடைய ஆலங்கட்டி போல், மகிழ்ச்சியை மிகுதியாக உண்டாக்கும் சிறப்புடன், அழகான மலர்களுடன் வளர்ந்த முற்றாத இளங்காயின் நீரைவிடவும் இனிமையுடையவாகி, கூரிய பற்களில் அமிழ்தம் ஊறும் சிவந்த வாயினையும் ஒளிரும் வளையல்களையும் உடைய இளையவளான நம் தலைவியை நாம் உடன்கொண்டு சென்றால்,

களிற்று யானை தன் கொல்லும் கோடு (தந்தம்) ஒடிந்திடக் குத்திச் சினம் மிகுந்து கொடிய வேனிலில் தன் இனிய துணையாகிய பிடியானை உண்ணும்படி உலர்ந்த கிளைகளையுடைய யா மரத்தின் பட்டையைக் கிழித்து ஊட்ட, வருத்தம் தங்கியுள்ள நிலம் பிளந்த வெப்பமுடைய பாலை நிலத்தைக் கடப்பது நமக்கு அரியது இல்லை.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு, ‘கரணத்தின் அமைந்து முடிந்த காலை’ (தொல்காப்பியம், கற்பியல் 5) என வரும் நூற்பாவின்கண் ‘வேற்று நாட்டு அகல்வயின் விழுமத்தானும்’ என வரும் விதி கொள்க.  ஒப்புமை –குறுந்தொகை 37 – பிடி பசி களைஇய பெருங்கை வேழம் மென் சினை யாஅம் பொளிக்கும், குறுந்தொகை 232 – உரல் கால் யானை ஒடித்து உண்டு எஞ்சிய யாஅ வரி நிழல், குறுந்தொகை 255 – யாஅத்துப் பொரி அரை முழு முதல் உருவக் குத்தி மறங்கெழு தடக் கையின் வாங்கி உயங்கு நடைச் சிறு கண் பெருநிரை உறு பசி தீர்க்கும் தட மருப்பு யானை, அகநானூறு 335 – யானை தன் கொல் மருப்பு ஒடியக் குத்திச் சினஞ்சிறந்து இன்னா வேனில் இன் துணை ஆர முளி சினை யாஅத்து, மலைபடுகடாம் 429 – உம்பல் அகைத்த ஒண் முறி யாவும்.  அகநானூறு 335 வரிகள் 18–19 – புதுப் பூ வார் உறு கவரியின் வண்டு உண விரிய, நற்றிணை 241 – வேழ வெண்பூ விரிவன பலவுடன் வேந்து வீசு கவரியின்.  வரலாறு –செழியன் (பாண்டியன்).  நனி – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3).  வார் – வார்தல் போகல் ஒழுகல் மூன்றும் நேர்பும் நெடுமையும் செய்யும் பொருள – (தொல்காப்பியம், உரியியல் 21).  கணைக்கால் (12) – ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – ஆகுபெயர் கமுக மரத்திற்கு. கமுகம் பாளை அகத்தே தொடுத்த மாலைபோலும் பூக்களை உடைமையின் தொடையமை பன்மலர்த் தோடு பொதிந்து யாத்த குடையோரன்ன பாளை என உவமை கூறப்பட்டது.

சொற்பொருள்:  இருள்படு நெஞ்சத்து இடும்பை தீர்க்கும் அருள் நன்கு உடையர் ஆயினும் – பிறர் வறுமையினால் கலங்கியிருக்கும் பொழுது அவர்கள் நெஞ்சின் வருத்தத்தைப் போக்குகின்ற அருளினை உடையவர்கள் ஆயினும், ஈதல் பொருள் இல்லோர்க்கு அஃது இயையாது ஆகுதல் யானும் அறிவென் – பொருள் இல்லாதவர்களுக்கு ஈதல் இயலாததை யானும் அறிவேன், மன்னே – அறிந்தும் என்ன பயன், ஒழியிசை, ஏ அசைநிலை, யானை தன் கொல் மருப்பு ஒடியக் குத்திச் சினம் சிறந்து இன்னா வேனில் இன் துணை ஆர முளி சினை யாஅத்துக் பொளி பிளந்து ஊட்ட – களிற்று யானை தன் கொல்லும் கோடு (தந்தம்) ஒடிந்திடக் குத்திச் சினம் மிகுந்து கொடிய வேனிலில் தன் இனிய துணையாகிய பிடியானை உண்ணும்படி உலர்ந்த கிளைகளையுடைய யா மரத்தின் பட்டையைக் கிழித்து ஊட்ட (யா மரம் – ஆச்சா மரம், Hardwickia binate), புலம்பு வீற்றிருந்த நிலம் பகு வெஞ்சுரம் அரிய அல்ல மன் நமக்கே – வருத்தம் தங்கியுள்ள நிலம் பிளந்த வெப்பமுடைய பாலை நிலத்தைக் கடப்பது நமக்கு அரியது இல்லை (மன் – அசைநிலை), விரி தார் ஆடு கொள் முரசின் அடுபோர்ச் செழியன் மாட மூதூர் மதில் புறம் தழீஇ – விரிந்த மலர்மாலையையும் வெற்றி பொருந்திய முரசினையும் வெல்லும் போரினையுமுடைய பாண்டிய மன்னனின் மாடங்களையுடைய பண்டைய ஊரான மதுரையின் மதிலின் புறத்தில் உள்ள (தழீஇ – அளபெடை), நீடு வெயில் உழந்த குறி இறைக் கணைக்கால் – நீடிய வெயிலினால் வருந்திய குறிய கிளைகளையுடைய திரண்ட அடியையுடைய கமுக மரத்தின் (ஆகுபெயர் கமுக மரத்திற்கு), தொடை அமை பன்மலர்த் தோடு பொதிந்து யாத்த குடை ஓரன்ன – தொடுத்து அமைத்த பல மலர்களைச் சேர்த்து மூடிக் கட்டிய குடையினை ஒத்த, கோள் அமை எருத்தின் பாளை பற்று அழிந்து ஒழிய – காய்த்தல் பொருந்திய கழுத்தில் பாளை பற்று நீங்கி ஒழிய, புறம் சேர்பு – புறத்தை அடைந்து, வாள் வடித்தன்ன வயிறு உடைப் பொதிய – வாளை வடித்து வைத்தாற்போன்ற வயிற்றினையுடைய பொதியில், நாள் உறத் தோன்றிய நயவரு வனப்பின் – பருவம் அடைந்தபோது தோன்றிய இனிமைபொருந்திய அழகுடைய, ஆரத்து அன்ன அணி கிளர் புதுப் பூ – ஆரம் போன்ற அழகு விளங்கும் புது மலர்கள் (ஆரத்து – ஆரம், அத்துச் சாரியை), வார் உறு கவரியின் வண்டு உண விரிய – நீண்ட சாமரத்தைப் போன்று வண்டுகள் தேன் உண்ணும்படி விரிய (கவரியின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), முத்தின் அன்ன வெள் வீ தாஅய் அலகின் அன்ன அரி நிறத்து ஆலி – முத்துக்களைப் போன்ற வெள்ளை மலர்கள் பரவி சோழியை ஒத்த நிறத்தையுடைய ஆலங்கட்டி போல் (முத்தின் – இன் சாரியை, தாஅய் – அளபெடை, அலகின் – இன் சாரியை), நகை நனி வளர்க்கும் சிறப்பின் – மகிழ்ச்சியை மிகுதியாக உண்டாக்கும் சிறப்புடன், தகை மிகப் பூவொடு வளர்ந்த மூவாப் பசுங்காய் நீரினும் இனிய ஆகி – அழகான மலர்களுடன் வளர்ந்த முற்றாத கமுகின் இளங்காயின் நீரைவிடவும் இனிமையுடையவாகி, கூர் எயிற்று அமிழ்தம் ஊறும் செவ்வாய் ஒண்தொடிக் குறுமகள் கொண்டனம் செலினே – கூரிய பற்களில் அமிழ்தம் ஊறும் சிவந்த வாயினையும் ஒளிரும் வளையல்களையும் உடைய இளையவளான நம் தலைவியை நாம் உடன்கொண்டு சென்றால் (செலினே – ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 336, பாவைக் கொட்டிலார், மருதத் திணை பரத்தை ஒருவள் பிறப் பரத்தையரைப் பற்றிச் சொன்னது
குழற்கால் சேம்பின் கொழு மடல் அகல் இலைப்
பாசிப் பரப்பில் பறழொடு வதிந்த
உண்ணாப் பிணவின் உயக்கம் சொலிய,
நாள் இரை தரீஇய எழுந்த நீர்நாய்
வாளையொடு உழப்பத் துறை கலுழ்ந்தமையின்,  5
தெண் கள் தேறல் மாந்தி மகளிர்
நுண் செயல் அம் குடம் இரீஇப், பண்பின்
மகிழ்நன் பரத்தைமை பாடி அவிழ் இணர்க்
காஞ்சி நீழல் குரவை அயரும்,
தீம் பெரு பொய்கைத் துறை கேழ் ஊரன்,  10
தேர் தர வந்த நேரிழை மகளிர்
ஏசுப என்ப, என் நலனே, அதுவே
பாகன் நெடிது உயிர் வாழ்தல் காய் சினக்
கொல் களிற்று யானை நல்கல்மாறே,
தாமும் பிறரும் உளர் போல் சேறல்  15
முழவு இமிழ் துணங்கை தூங்கும் விழவின்
யான் அவண் வாராமாறே, வரினே, வான் இடைச்
சுடரொடு திரிதரும் நெருஞ்சி போல
என்னொடு திரியேன் ஆயின், வென்வேல்
மாரி அம்பின் மழைத்தோற் சோழர்  20
வில் ஈண்டு குறும்பின் வல்லத்துப் புற மிளை,
ஆரியர் படையின் உடைக என்
நேர் இறை முன் கை வீங்கிய வளையே.

பாடல் பின்னணி:  ஒரு பரத்தை இன்னொரு பரத்தையின் தோழியர் கேட்குமாறு கூறியது. 

பொருளுரை:  உட்துளை பொருந்திய தண்டினை உடைய கொழுவிய மடலில் உள்ள அகன்ற இலைகளுடன் கூடிய பாசியினை உடைய நீர்ப்பரப்பில், குட்டியுடன் இருக்கும் உணவு உண்ணாத பெண் நாயின் வருத்தத்தை நீக்குவதற்கு, காலை நேரத்தில் இரையைக் கொண்டு வந்து தருவதற்கு எழுந்த நீர்நாய் வாளை மீனை பற்றும்பொருட்டு அதனுடன் போரிட்டு நீர்த்துறை கலங்கியதால், தெளிந்த கள்ளினைப் பருகி மகளிர் நுண்ணிய முறையில் செய்த அழகிய குடங்களை வைத்துவிட்டு, பண்பு இல்லாத தலைவனின் பரத்தமைகைளைப் பாடி, விரிந்த மலர்க்கொத்துக்களை உடைய காஞ்சி மரத்தின் நிழலில் குரவைக் கூத்தை ஆடும், இனிய பெரிய பொய்கையின் துறையையுடைய ஊரின் தலைவனின், தேரில் கொணர்ந்த நேரிய அணிகலன்களை அணிந்த மகளிர் என் அழகினைப் பழிக்கின்றனர் எனக் கூறுகின்றனர்.

அது பாகன் நெடுங்காலம் உயிருடன் வாழ்வதற்குக் காரணம் மிகவும் சினம் கொண்ட கொல்லும் களிற்று யானை அருள் செய்து அவனைக் கொல்லாதது போலும்.  அம்மகளிரும் பிறரும் சிறப்புடையவர்கள் போல் செல்லுதல், முழவு ஒலிக்கும் துணங்கைக் கூத்து ஆடும் விழாவில் யான் அவ்விடத்திற்கு வராமையால் ஆனதே.  யான் அவ்விடத்திற்கு வந்தால், வானிடத்தில் உள்ள ஞாயிற்றின் செல்லுதலை நோக்கிச் சுழலும் நெருஞ்சி மலர் போல் அவர்களை என்னோடு திரியச் செய்யேன் ஆனால், வெற்றி வேலைகளையும் மழை போன்ற அம்புகளையும் முகில்கள் போன்ற கேடயங்களையும் உடைய சோழரின் விற்படை நெருங்கிய அரணையுடைய வல்லம் என்னும் ஊரின் புறத்தே உள்ள காவல் காட்டின்கண் வந்த, ஆரியர்களின் படை போல் உடைவதாக, என் நேரிய மூட்டினையுடைய முன்கையில் அணிந்த திரண்ட வளையல்கள்!

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு ‘புல்லுதல் மயக்கும்’ (தொல்காப்பியம், கற்பியல் 10) என வரும் நூற்பாவின்கண் ‘மனையோள் ஒத்தலின் தன்னோர் அன்னோர் மிகை எனக் குறித்த கொள்கைக்கண்ணும்’ என வரும் விதி கொள்க.  ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – ‘புல்லுதல் மயக்கும் புலவிக்கண்ணும்’ (தொல்காப்பியம், கற்பியல் 10) என்னுஞ் சூத்திரத்து, மனையோள் ஒத்தலில் தன்னோர் அன்னோர், மிகைபடக் குறித்த கொள்கைக் கண்ணும் என்னும் பகுதிக்கு இச் செய்யுளைக் காட்டி, இதனுள் ‘யானவண் வாராமாறே’ எனத் தான் மனையோளைப் போல் இல்லுறைதல் கூறி, ஆண்டுச் செல்லிற் சுடரோடு திரியும் நெருஞ்சி போல ஏனை மகளிரை யான் செல்வுழிச் செல்லும் சேடியர் போலத் தெரியும்படி பண்ணிக் கொள்வல் எனக் கூறியவாறு காண்க, என்பர் நச்சினார்க்கினியர்.  ‘உயர்ந்ததன் மேற்றே உள்ளுங்காலை’ (தொல்காப்பியம், உவமையியல் 3) என்னுஞ் சூத்திரத்து, உவமம் உயர்ந்ததாக வேண்டும் எனற்கு, இதனுள் மாரி அம்பின் மழைத்தோல் சோழர் என்பதனையும் காட்டி, உவமை உயர்ச்சியானே உவமிக்கப்படும் பொருட்குச் சிறப்பு எய்துவித்தவாறு கண்டு கொள்க, என்றார் பேராசிரியர்.  மகிழ்நன் பரத்தைமை பாடி (8) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – தலைவனுடைய பரத்தமை ஒழுக்கத்தைப் பொருளாகக் கொண்ட பாடல்களைப் பாடிக்கொண்டு, ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – தம் கணவரது நற்பண்பு இல்லாத பரத்தமைகளைப் பாடி.  என் நேரிறை முன் கை வீங்கிய வளையே (23) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – என்னுடைய நுண்ணிய கோடுகள் அமைந்த முன்கையில் செறிந்த வளையல்கள், ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – எனது நேரிய சந்தினையுடைய முன்கையில் திரண்ட வளையல்கள்.  ஆரியர்களைத் தோற்கடித்தல் – அகநானூறு 336 – சோழர் வில் ஈண்டு குறும்பின் வல்லத்துப் புற மிளை ஆரியர் படையின் உடைக, அகநானூறு 396 – ஆரியர் அலறத் தாக்கிப் பேர் இசைத் தொன்று முதிர் வட வரை வணங்கு வில் பொறித்து வெஞ்சின வேந்தரை, நற்றிணை 170 – ஆரியர் துவன்றிய பேர் இசை முள்ளூர் பலர் உடன் கழித்த ஒள் வாள் மலையனது.  நெருஞ்சி ஞாயிற்றை நோக்கி நிற்றல் – அகநானூறு 336 – சுடரொடு திரிதரும் நெருஞ்சி போல, புறநானூறு 155 – நெருஞ்சிப் பசலை வான் பூ ஏர்தரு சுடரின் எதிர் கொண்டாஅங்கு.  வளையலை உடைத்தல் – அகநானூறு 186 – காவிரி வைப்பின் போஒர் அன்ன என் செறி வளை உடைத்தலோ இலனே, அகநானூறு 336 – ஆரியர் படையின் உடைக என் நேர் இறை முன் கை வீங்கிய வளையே.வரலாறு – சோழர், வல்லம், ஆரியர்.  ஆரியர் – அகநானூறு 276–9, 336–22, 396–16, 398–18, நற்றிணை170–6, குறுந்தொகை 7–3, பதிற்றுப்பத்து 11–23. 

சொற்பொருள்:  குழல் கால் சேம்பின் கொழு மடல் அகல் இலைப் பாசிப் பரப்பில் பறழொடு வதிந்த உண்ணாப் பிணவின் உயக்கம் சொலிய – உட்துளை பொருந்திய தண்டினை உடைய கொழுவிய மடலில் உள்ள அகன்ற இலைகளுடன் கூடிய பாசியினை உடைய நீர்ப்பரப்பில் குட்டியுடன் இருக்கும் உணவு உண்ணாத பெண் நாயின் வருத்தத்தை நீக்குவதற்கு, நாள் இரை தரீஇய எழுந்த நீர்நாய் வாளையொடு உழப்ப – காலை நேரத்தில் இரையைக் கொண்டு வந்து தருவதற்கு எழுந்த நீர்நாய் வாளை மீனை பற்றும்பொருட்டுப் போரிட்டமையால் (தரீஇய – அளபெடை), துறை கலுழ்ந்தமையின் – நீர்த்துறை கலங்கியதால், தெண் கள் தேறல் மாந்தி மகளிர் நுண் செயல் அம் குடம் இரீஇப் பண்பு இல் மகிழ்நன் பரத்தைமை பாடி அவிழ் இணர்க் காஞ்சி நீழல் குரவை அயரும் – தெளிந்த கள்ளினைப் பருகி மகளிர் நுண்ணிய முறையில் செய்த அழகிய குடங்களை வைத்துவிட்டு பண்பு இல்லாத தலைவனின் பரத்தமைகைளைப் பாடி விரிந்த மலர்க்கொத்துக்களை உடைய காஞ்சி மரத்தின் நிழலில் குரவைக் கூத்தை ஆடும் (இரீஇ – அளபெடை), தீம் பெரு பொய்கைத் துறை கேழ் ஊரன் – இனிய பெரிய பொய்கையின் துறையையுடைய ஊரின் தலைவன், தேர் தர வந்த நேரிழை மகளிர் ஏசுப என்ப என் நலனே – தேரில் கொணர்ந்த நேரிய அணிகலன்களை அணிந்த மகளிர் என் அழகினைப் பழிக்கின்றனர் எனக் கூறுகின்றனர், அதுவே பாகன் நெடிது உயிர் வாழ்தல் காய் சினக் கொல் களிற்று யானை நல்கல்மாறே – அது பாகன் நெடுங்காலம் உயிருடன் வாழ்வதற்குக் காரணம் மிகவும் சினம் கொண்ட கொல்லும் களிற்று யானை அருள் செய்து அவனைக் கொல்லாதது போலும் (ஏகாரம் அசைநிலை, மாறு ஏதுப்பொருள் (காரணப் பொருள்) தரும் இடைச்சொல்), தாமும் பிறரும் உளர் போல் சேறல் – அம்மகளிரும் பிறரும் சிறப்புடையவர்கள் போல் செல்லுதல், முழவு இமிழ் துணங்கை தூங்கும் விழவின் யான் அவண் வாராமாறே – முழவு ஒலிக்கும் துணங்கைக் கூத்து ஆடும் விழாவில் யான் அவ்விடத்திற்கு வராமையால் ஆனதே (வாராமாறே – ஏகாரம் அசைநிலை, மாறு ஏதுப்பொருள் (காரணப் பொருள்) தரும் இடைச்சொல்), வரினே – யான் அவ்விடத்திற்கு வந்தால், வான் இடைச் சுடரொடு திரிதரும் நெருஞ்சி போல என்னொடு திரியேன் ஆயின் – வானிடத்தில் உள்ள ஞாயிற்றின் செல்லுதலை நோக்கிச் சுழலும் நெருஞ்சி மலர் போல் அவர்களை என்னோடு திரியச் செய்யேன் ஆனால், வென்வேல் மாரி அம்பின் மழைத்தோற் சோழர் வில் ஈண்டு குறும்பின் வல்லத்துப் புற மிளை – வெற்றி வேலைகளையும் மழை போன்ற அம்புகளையும் முகில்கள் போன்ற கேடயங்களையும் உடைய சோழரின் விற்படை நெருங்கிய அரணையுடைய வல்லம் என்னும் ஊரின் புறத்தே உள்ள காவல் காட்டின்கண் வந்த (அம்பின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), ஆரியர் படையின் உடைக – ஆரியர்களின் படை போல் உடைவதாக (படையின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), என் நேர் இறை முன் கை வீங்கிய வளையே – என் நேரிய மூட்டினையுடைய முன்கையில் அணிந்த திரண்ட வளையல்கள் (வளையே – ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 337, சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோ, பாலைத் திணைதலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது
சாரல் யாஅத்து உயர் சினை குழைத்த
மாரி ஈர்ந்தளிர் அன்ன மேனிப்,
பேர் அமர் மழைக் கண், புலம்பு கொண்டு ஒழிய
ஈங்குப் பிரிந்து உறைதல் இனிதன்று, ஆகலின்
அவணது ஆகப் பொருள் என்று உமணர்  5
கண நிரை அன்ன பல் கால் குறும்பொறைத்,
தூது ஒய் பார்ப்பான் மடி வெள் ஓலைப்
படையுடைக் கையர் வருதிறம் நோக்கி,
உண்ணா மருங்குல் இன்னோன் கையது
பொன் ஆகுதலும் உண்டு எனக், கொன்னே  10
தடிந்து உடன் வீழ்த்த கடுங்கண் மழவர்,
திறன் இல் சிதாஅர் வறுமை நோக்கிச்
செங்கோல் அம்பினர் கைந்நொடியாப் பெயரக்,
கொடிவிடு குருதித் தூங்கு குடர் கறீஇ,
வரி மரல் இயவின் ஒரு நரி ஏற்றை  15
வெண்பரல் இமைக்கும் கண் பறி கவலைக்,
கள்ளி நீழல் கதறுபு வதிய
மழை கண் மாறிய வெங்காட்டு ஆர் இடை,
எமியம் கழி தந்தோயே, பனி இருள்
பெருங்கலி வானம் தலைஇய  20
இருங்குளிர் வாடையொடு வருந்துவள் எனவே.

பாடல் பின்னணி:  முன்னொரு காலத்துப் பொருள்வயிற் பிரிந்து வந்த தலைவன், பின்னும் பொருள் ஈட்டவேண்டும் என ஊக்குவித்த நெஞ்சை இடித்துக் கூறியது.   

பொருளுரை:  என் நெஞ்சே!  பக்கமலையில் உள்ள யா மரத்தின் உயர்ந்த கிளைகளில் மாரிக்காலத்தில் தளிர்த்து குளிர்ந்த தளிர் போன்ற மேனியையும், பெரிய அமர்த்த குளிர்ந்த கண்களையும் உடைய தலைவி தனிமை கொண்டு பிரிந்திருக்க, நாம் இவ்விடத்தில் பிரிந்து தங்கியிருந்தால் இனியது அன்று ஆதலால், அவளுடன் அங்கு இருத்தலே பொருள் ஆகுக என்றும்,

நடுக்கஞ்செய்யும் இருளில் பெரிய ஆரவாரத்தை உடைய மழை பெய்தமையால் பெரும் குளிருடைய வாடைக்காற்றால் அவள் வருந்துவாள் என்றும்,

உப்பு வணிகர்களின் கழுதை கூட்டம் போன்ற பாறைகளின் வழியே பல முறையும் தூது செல்லும் பார்ப்பான் மடித்த வெள்ளை ஓலைகளைக் கையில் கொண்டு வரும் இயல்பினை நோக்கி, உண்ணாமையால் ஒடுங்கிய இடையையுடைய அவன் கையில் இருப்பது பொன்னாக இருக்கக்கூடும் எனக் கருதி பயனின்றி அவனைக் கொன்று வீழ்த்திய கொடிய மறவர்கள், அவனுடைய உடுத்தும் திறம் இல்லாத கந்தல் உடையைப் பார்த்துக் குருதியால் சிவந்த அம்பினையுடைய அவர்கள் கையை நொடித்துச் செல்ல, நீண்டு ஒழுகிய குருதியுடன் தொங்கிக் கிடந்த குடலைக் கடித்து, வரிகள் கொண்ட மரல் செடிகள் உள்ள வழியில் ஒரு ஆண் நரி, வெள்ளை பரல் கற்கள் மின்னும் கண்களின் ஒளியைக் கவரும் பிரிவுகளையுடைய வழியில் கள்ளியின் நிழலில் கதறித் தங்கியிருக்க, மழை பெய்யாது ஒழிந்த வெப்பம் மிக்க காட்டின் கடத்தற்கரிய இடத்திற்கு யாம் தனியாக வரும்படி செய்தாயே!

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு ‘ஒன்றாத் தமரினும்’ (தொல்காப்பியம், அகத்திணையியல் 42) என வரும் நூற்பாவின்கண் ‘ ஒன்றாப் பொருள்வயின் ஊக்கிய பாலினும்’ என வரும் விதி கொள்க.  எமியம் கழி தந்தோயே (19) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – யாம் தமியேமாய் வருந்தும்படி செய்தாய், ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – (முன்பு ஒருகால்) யாம் தமியேமாக நீ மீண்டு வந்தாய்.  நொடியா – நொடித்து என்பது பொருள்.  செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம்.  எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது.  புலம்பு – புலம்பே தனிமை (தொல்காப்பியம், உரியியல் 35).  பாலைத் திணைப் பாடல்களில் கள்வர்கள் – அகநானூறு 1, 3, 7, 31, 63, 89, 91, 101, 151, 169, 245, 249, 257, 269, 285, 289, 291, 297, 309, 313, 319, 321, 327, 337, 363, 365, நற்றிணை 3, 33, 48, 164, 224, 362, குறுந்தொகை 16, 274, 283, 331, 350, 390, ஐங்குறுநூறு 329, 352, கலித்தொகை 6, 12,  குறிஞ்சித் திணைப் பாடல்களில் கள்வர்கள் – அகநானூறு 342, குறுந்தொகை 297.

சொற்பொருள்:  சாரல் யாஅத்து உயர் சினை குழைத்த மாரி ஈர்ந்தளிர் அன்ன மேனிப் பேர் அமர் மழைக் கண் புலம்பு கொண்டு ஒழிய ஈங்குப் பிரிந்து உறைதல் இனிதன்று ஆகலின் – பக்கமலையில் உள்ள யா மரத்தின் உயர்ந்த கிளைகளில் மாரிக்காலத்தில் தளிர்த்து குளிர்ந்த தளிர் போன்ற மேனியையும் பெரிய அமர்த்த குளிர்ந்த கண்களையும் உடைய தலைவி தனிமை கொண்டு பிரிந்திருக்க நாம் இவ்விடத்தில் பிரிந்து தங்கியிருந்தால் இனியது அன்று ஆதலால் (யாஅத்து – அத்துச் சாரியை, பேர் அமர் மழைக் கண் – அன்மொழித்தொகை, யா மரம் – ஆச்சா மரம், Hardwickia binate), அவணது ஆகப் பொருள் என்று – அவளுடன் அங்கு இருத்தலே பொருள் ஆகுக என்று, உமணர் கண நிரை அன்ன பல் கால் குறும்பொறைத் தூது ஒய் பார்ப்பான் மடி வெள் ஓலைப் படையுடைக் கையர் வருதிறம் நோக்கி – உப்பு வணிகர்களின் கழுதை கூட்டம் போன்ற பாறைகளின் வழியே பல முறையும் தூது செல்லும் பார்ப்பான் மடித்த வெள்ளை ஓலைகளைக் கையில் கொண்டு வரும் இயல்பினை நோக்கி, உண்ணா மருங்குல் இன்னோன் கையது பொன் ஆகுதலும் உண்டு எனக் கொன்னே தடிந்து உடன் வீழ்த்த கடுங்கண் மழவர் – உண்ணாமையால் ஒடுங்கிய இடையையுடைய அவன் கையில் இருப்பது பொன்னாக இருக்கக்கூடும் எனக் கருதி பயனின்றி அவனைக் கொன்று வீழ்த்திய கொடிய மறவர்கள், திறன் இல் சிதாஅர் வறுமை நோக்கிச் செங்கோல் அம்பினர் கைந்நொடியாப் பெயர – உடுத்தும் திறம் இல்லாத கந்தல் உடையைப் பார்த்துக் குருதியால் சிவந்த அம்பினையுடைய அவர்கள் கையை நொடித்துச் செல்ல, கொடிவிடு குருதித் தூங்கு குடர் கறீஇ – நீண்டு ஒழுகிய குருதியுடன் தொங்கிக் கிடந்த குடலைக் கடித்து (குடர் – குடல் என்பதன் போலி, கறீஇ – அளபெடை), வரி மரல் இயவின் ஒரு நரி ஏற்றை – வரிகள் கொண்ட மரல் செடிகள் உள்ள வழியில் ஒரு ஆண் நரி (மரல் செடி – hemp, Sansevieria trifasciata), வெண்பரல் இமைக்கும் கண் பறி கவலைக் கள்ளி நீழல் கதறுபு வதிய –  வெள்ளை பரல் கற்கள் மின்னும் கண்களின் ஒளியைக் கவரும் பிரிவுகளையுடைய வழியில் கள்ளியின் நிழலில் கதறித் தங்கியிருக்க (நீழல் – நிழல் என்பதன் நீட்டல் விகாரம்), மழை கண் மாறிய வெங்காட்டு ஆர் இடை எமியம் கழி தந்தோயே – மழை பெய்யாது ஒழிந்த வெப்பம் மிக்க காட்டின் கடத்தற்கரிய இடத்திற்கு யாம் தனியாக வரும்படி செய்தாயே (எமியம் – தன்மைப் பன்மை, தந்தோயே – ஏகாரம் அசைநிலை), பனி இருள் பெருங்கலி வானம் தலைஇய இருங்குளிர் வாடையொடு வருந்துவள் எனவே – நடுக்கஞ்செய்யும் இருளில் பெரிய ஆரவாரத்தை உடைய மழை பெய்தமையால் பெரும் குளிருடைய வாடைக்காற்றால் அவள் வருந்துவாள் என்று (தலைஇய – அளபெடை, எனவே – ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 338, மதுரைக் கணக்காயனார், குறிஞ்சித் திணைதலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது
குன்று ஓங்கு வைப்பின் நாடு மீக்கூறும்
மறங்கெழு தானை அரசர் உள்ளும்,
அறங்கடைப்பிடித்த செங்கோலுடன், அமர்
மறஞ்சாய்த்து எழுந்த வலன் உயர் திணிதோள்,
பலர் புகழ் திருவின் பசும்பூண் பாண்டியன்,  5
அணங்குடை உயர்நிலைப் பொருப்பின் கவாஅன்,
சினை ஒண் காந்தள் நாறும் நறுநுதல்,
துணை ஈர் ஓதி மாஅயோள் வயின்,
நுண் கோல் அவிர் தொடி வண் புறம் சுற்ற
முயங்கல் இயையாது ஆயினும், என்றும்,  10
வயவுறு நெஞ்சத்து உயவுத் துணையாக,
ஒன்னார் தேஎம் பாழ்பட நூறும்
துன் அருந்துப்பின் வென்வேல் பொறையன்
அகல் இருங்கானத்துக் கொல்லி போலத்,
தவாஅலியரே, நட்பே, அவள் வயின்  15
அறாஅலியரே, தூதே, பொறாஅர்
விண் பொரக் கழித்த திண் பிடி ஒள் வாள்,
புனிற்று ஆன் தரவின் இளையர் பெருமகன்
தொகு போர்ச் சோழன் பொருள் மலி பாக்கத்து,
வழங்கல் ஆனாப் பெருந்துறை  20
முழங்கு இரு முந்நீர்த் திரையினும் பலவே.

பாடல் பின்னணி:  அல்ல குறிப்பட்ட தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது. 

பொருளுரை:  மலைகள் உயர்ந்துள்ள இவ்வுலகில் சிறப்பித்துக் கூறும் நாட்டையுடைய, மறம் பொருந்திய படைகளையுடைய அரசர்கள் உள்ளும், அறத்தினைக் கடைப்பிடித்த செங்கோல் ஆட்சியுடன் போரில் பகைவர்களின் வலிமையைக் கெடுத்து வளர்ந்த வெற்றி மிகுந்த திண்ணிய தோளையும், பலராலும் புகழப்படும் செல்வத்தினாலும் சிறந்த பசும்பூண் பாண்டியனின், கடவுள் இருக்கும் உயர்ந்த நிலை பொருந்திய பொதியிலின் பக்க மலையில் உள்ள கிளைத்த ஒளியுடைய காந்தள் மலர்கள் போல் மணக்கும் நறுமண நெற்றியையும் ஒத்த நெய்ப்புடைய கூந்தலையும் மாமை நிறத்தையுடைய தலைவியிடத்து, நுண்ணிய திரண்ட விளங்கும் வளையல்கள் அணிந்த கைகள், நம் வளமை பொருந்திய முதுகைச் சுற்றி அணைத்தல் நமக்குக் கிட்டாது ஆயினும்,

பகைவர்களின் நாடுகள் பாழ்பட அழிக்கும், பகைவர்களால் நெருங்க இயலாத அரிய வலிமையுடைய வெற்றி பொருந்திய வேலையுடைய சேரனின் பெரிய காட்டையுடைய கொல்லி மலைபோல், என்றும் வேட்கையுடைய நெஞ்சத்திற்கு உசாவும் துணையாக, அவளுடைய நட்பு நிலைபெறுவதாக.

பகைவர்கள் மேல் உலகை அடையுமாறு உருவிய திண்ணிய கைபிடியினை உடைய ஒளிரும் வாளையுடைய, அண்மையில் ஈன்ற பசுக்களைக் கவர்ந்து வரும் வெட்சி மறவர்களுக்குத் தலைவனான திரண்ட போர்களை வெல்லும் சோழனின், பொருட்கள் நிறைந்த பாக்கத்தின்கண் சென்று மீள இயலாத, முழங்கும் பெரிய கடலின் பெரிய துறையில் உள்ள அலைகளைவிடவும் பலவாக அவளிடம் நாம் விடும் தூது, ஒழியாது செல்வதாக.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு ‘பண்பிற் பெயர்ப்பினும்’ (தொல்காப்பியம், களவியல் 12) என வரும் நூற்பாவின்கண் ‘பரிவுற்று மெலியினும்’ என வரும் விதி கொள்க.  மூவேந்தர் – மதுரைக் கணக்காயனார் பாடிய இப்பாட்டில் மூவேந்தரும் குறிக்கப்பட்டுள்ளது போல், இவர் மகன் நக்கீரனார் பாடிய அகநானூறு 93 பாட்டில் மூவேந்தரும் குறிக்கப்பட்டுள்ளனர்.  உயர்நிலை (6) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – செந்தமிழும் பைந்தமிழும் சந்தனமும் வழங்குதலின் பொதிய மலையை உயர்நிலைப் பொருப்பு என்றார்.  துணை ஈர் ஓதி (8) – ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – அளவொத்த நீண்ட கூந்தல், பொ. வே. சோமசுந்தரனார் உரை – கடைப்பகுதி ஒத்த நெய்ப்புடைய கூந்தல்.  நுண் கோல் அவிர் தொடி வண் புறம் சுற்ற (9) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – நுண்ணிய திரண்ட ஒளி வீசுகின்ற பொன் வளையல்கள் அணிந்த கைகள் நமது வளமான முதுகினைச் சுற்றிக்கொள்ளும்படி, தொடி கைக்கு ஆகுபெயர்.  பொருள் மலி பாக்கத்து (19) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – பொருள் மிகுந்துள்ள காவிரிப்பூம்பட்டினத்தில் உள்ள பட்டினப் பாக்கத்தின்கண், ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – பண்டங்கள் நிறைந்த பாக்கத்தின்கண்.  முந்நீர் – தமிழகம் கிழக்கு தெற்கு மேற்கு ஆகிய மூன்று திசையானும் நீர்வளைவுண்டது.  முந்நீர் என்னும் தமிழ்க்கிளவி இம்முப்புறக் கடலமைப்பைச் சுட்டுவது – வ. சுப. மாணிக்கனாரின் ‘தமிழ்க்காதல்’ நூல், ஆற்று நீரும், ஊற்று நீரும் மழை நீரும் உடமையான் முந்நீர் – ஒளவை துரைசாமி புறநானூறு 9 உரை, நிலத்தைப் படைத்தலும் காத்தலும் அழித்தலுமாகிய நீர் – நச்சினார்க்கினியர் மதுரைக்காஞ்சி 75 உரை.  வரலாறு – பசும்பூண் பாண்டியன், பொறையன், கொல்லி மலை, சோழன்.  புனிறு – புனிறு என் கிளவி ஈன்றணிமைப் பொருட்டே (தொல்காப்பியம், உரியியல் 79).

சொற்பொருள்:  குன்று ஓங்கு வைப்பின் நாடு மீக்கூறும் மறங்கெழு தானை அரசர் உள்ளும் – மலைகள் உயர்ந்துள்ள இவ்வுலகில் சிறப்பித்துக் கூறும் நாட்டையுடைய மறம் பொருந்திய படைகளையுடைய அரசர்கள் உள்ளும், அறம் கடைப்பிடித்த செங்கோலுடன் அமர் மறம் சாய்த்து எழுந்த வலன் உயர் திணிதோள் பலர் புகழ் திருவின் பசும்பூண் பாண்டியன் – அறத்தினைக் கடைப்பிடித்த செங்கோல் ஆட்சியுடன் போரில் பகைவர்களின் வலிமையைக் கெடுத்து வளர்ந்த வெற்றி மிகுந்த திண்ணிய தோளையும் பலராலும் புகழப்படும் செல்வத்தினாலும் சிறந்த சிறந்த பசும்பூண் பாண்டியனின், அணங்குடை உயர்நிலைப் பொருப்பின் கவாஅன் சினை ஒண் காந்தள் நாறும் நறுநுதல் துணை ஈர் ஓதி மாஅயோள் வயின் – கடவுள் இருக்கும் உயர்ந்த நிலை பொருந்திய பொதியிலின் பக்க மலையில் உள்ள கிளைத்த ஒளியுடைய காந்தள் மலர்கள் போல் மணக்கும் நறுமண நெற்றியையும் ஒத்த நெய்ப்புடைய கூந்தலையும் மாமை நிறத்தையுடைய தலைவியிடத்து (கவாஅன் – அளபெடை, மாஅயோள் – அளபெடை), நுண் கோல் அவிர் தொடி வண் புறம் சுற்ற முயங்கல் இயையாது ஆயினும் – நுண்ணிய திரண்ட விளங்கும் வளையல்கள் அணிந்த கைகள் நம் வளமை பொருந்திய முதுகைச் சுற்றி அணைத்தல் நமக்குக் கிட்டாது ஆயினும், என்றும் வயவுறு நெஞ்சத்து உயவுத் துணையாக – என்றும் வேட்கையுடைய நெஞ்சத்திற்கு உசாவும் துணையாக, ஒன்னார் தேஎம் பாழ்பட நூறும் துன் அருந்துப்பின் வென்வேல் பொறையன் அகல் இருங்கானத்துக் கொல்லி போலத் தவாஅலியரே நட்பே – பகைவர்களின் நாடுகள் பாழ்பட அழிக்கும் பகைவர்களால் நெருங்க இயலாத அரிய வலிமையுடைய வெற்றி பொருந்திய வேலையுடைய சேரனின் பெரிய காட்டையுடைய கொல்லி மலைபோல் நிலைபெறுவதாக அவளுடைய நட்பு (வயா என்பது வயவு ஆயிற்று, தவாஅலியரே – வியங்கோள், அளபெடை, ஏகாரம் அசைநிலை), அவள் வயின் அறாஅலியரே – அவளிடம் விடும் தூது ஒழியாது செல்வதாக, தூதே, பொறாஅர் விண் பொரக் கழித்த திண் பிடி ஒள் வாள் – பகைவர்கள் மேல் உலகை அடையுமாறு உருவிய திண்ணிய கைபிடியினை உடைய ஒளிரும் வாளையுடைய (பொறாஅர் – அளபெடை), புனிற்று ஆன் தரவின் இளையர் பெருமகன் தொகு போர்ச் சோழன் – அண்மையில் ஈன்ற பசுக்களைக் கவர்ந்து வரும் வெட்சி மறவர்களுக்குத் தலைவனான திரண்ட போர்களை வெல்லும் சோழனின், பொருள் மலி பாக்கத்து வழங்கல் ஆனா – பொருட்கள் நிறைந்த பாக்கத்தின்கண் சென்று மீள இயலாத, பெருந்துறை முழங்கு இரு முந்நீர்த் திரையினும் பலவே – முழங்கும் பெரிய கடலின் பெரிய துறையில் உள்ள அலைகளைவிடவும் பலவாக (பலவே – ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 339, நரைமுடி நெட்டையர், பாலைத் திணை – தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது
வீங்கு விசைப் பிணித்த விரை பரி நெடுந்தேர்
நோன் கதிர் சுமந்த ஆழி ஆழ் மருங்கில்,
பாம்பு என முடுகு நீர் ஓடக், கூம்பிப்
பற்று விடு விரலின் பயறுகாய் ஊழ்ப்ப
அற்சிரம் நின்றன்றால் பொழுதே, முற்பட   5
ஆள் வினைக்கு எழுந்த அசைவு இல் உள்ளத்து,
ஆண்மை வாங்கக் காமம் தட்பக்
கவைபடு நெஞ்சம் கண்கண் அகைய,
இரு தலைக் கொள்ளி இடை நின்று வருந்தி,
ஒரு தலைப் படாஅ உறவி போன்றனம்,  10
நோம் கொல் அளியள் தானே, யாக்கைக்கு
உயிர் இயைந்தன்ன நட்பின் அவ்வுயிர்
வாழ்தல் அன்ன காதல்,
சாதல் அன்ன பிரிவு அரியோளே.

பாடல் பின்னணி:  பொருள்வயின் பிரிந்த தலைவன் இடைநெறியில் தன் நெஞ்சிடம் கூறியது.

பொருளுரை:  விரைந்த குதிரைகள் பூட்டப்பட்ட மிக்க விசையையுடைய (வேகத்தையுடைய) நெடிய தேரின் வலிய ஆர் கொண்ட உருளை (சக்கரம்) ஆழ்ந்து செல்லும் இடத்தில் பாம்பு போல விரைந்து செல்லும் நீர் ஓட, குவிந்து பின் ஒன்றோடு ஒன்று தொடர்பு விட்ட விரல்கள் போல பயற்றுச் செடியில் பயிர்கள் முற்ற, பனிப் பருவம் வந்தது.  ஆண் தொழிலுக்கு தளர்வு இல்லாத உள்ளத்துடன், ஆண்மை முன்னே இழுக்க, காமம் செல்ல விடாமல் தடுக்க, இருபாற்பட்ட நெஞ்சம் கணுக்களில் தீப்பற்றி எரிதலால் இருபுறமும் தீயுடைய மூங்கில் தட்டையின் நடுவில் நின்று வருந்தி, ஒரு புறமும் செல்ல இயலாத எறும்பினைப் போல் உள்ளோம் நாம்.   தலைவி வருந்தி இருப்பாளோ?  அவள் இரங்கத்தக்கவள்.  உடலோடு ஒன்றிய உயிர் போன்ற நட்பினையும், அவ்வுயிர் வாழ்தல் போன்ற காதலுடைய சாவுதல் போன்ற துன்பத்தைத் தரும் பிரிதலையும் உடையவள், பெறுவதற்கு அரிய நம் தலைவி.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு, ‘கரணத்தின் அமைந்து முடிந்த காலை’ (தொல்காப்பியம், கற்பியல் 5) என வரும் நூற்பாவின்கண் ‘மீட்டு வரவு ஆய்ந்த வகையின் கண்ணும்’ என வரும் விதி கொள்க.  ஒப்புமை – அகநானூறு 324 – தண்ணில மருங்கில் போழ்ந்த வழியுள், நிரை செல் பாம்பின் விரைபு நீர் முடுகச், செல்லும் நெடுந்தகை தேரே.

சொற்பொருள்:  வீங்கு விசைப் பிணித்த விரை பரி நெடுந்தேர் – விரைந்த குதிரைகள் பூட்டப்பட்ட மிக்க வேகத்தையுடைய நெடிய தேர், நோன் கதிர் சுமந்த ஆழி ஆழ் மருங்கில் – வலிய ஆர் கொண்ட உருளை (சக்கரம்) ஆழ்ந்து செல்லும் பக்கத்தில் , பாம்பு என முடுகு நீர் ஓட – பாம்பு போல விரைந்து செல்லும் நீர் ஓட, கூம்பிப் பற்று விடு விரலின் – குவிந்து பின் ஒன்றோடு ஒன்று தொடர்பு விட்ட விரல்கள் போல (விரலின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது), பயறுகாய் ஊழ்ப்ப – பயற்றுச் செடியில் பயிர்கள் முற்ற, அற்சிரம் நின்றன்றால் பொழுதே – பனிப் பருவமாக வந்தது (நின்றன்றால் – நின்னன்று + ஆல், ஆல் அசைநிலை, பொழுதே – ஏகாரம் –அசைநிலை), முற்பட – முன்னே, ஆள் வினைக்கு எழுந்த அசைவு இல் உள்ளத்து – ஆண் தொழிலுக்கு தளர்வு இல்லாத உள்ளத்துடன், ஆண்மை வாங்க – ஆண்மை முன்னே இழுக்க, காமம் தட்ப – காமம் தடுக்க, கவைபடு நெஞ்சம் – இருபாற்பட்ட நெஞ்சம், கண் கண் அகைய – கணுக்களில் தீப்பற்றி எரிதலால், இரு தலைக் கொள்ளி இடை நின்று வருந்தி – இருபுறமும் தீயுடைய மூங்கில் தட்டையின் நடுவில் நின்று வருந்தி, ஒரு தலைப் படாஅ உறவி போன்றனம் – ஒரு புறம் செல்ல இயலாத எறும்பினைப் போல் உள்ளோம் (படாஅ – அளபெடை), நோம் கொல் – வருந்தி இருப்பாளோ (கொல் – ஐயப்பொருட்டு வந்த இடைச்சொல்), அளியள் தானே – அவள் இரங்கத்தக்கவள் (தானே – தான் ஏ அசைநிலைகள்), யாக்கைக்கு உயிர் இயைந்தன்ன நட்பின் – உடலோடு ஒன்றிய உயிர் போன்ற நட்பினையும், அவ்வுயிர் வாழ்தல் அன்ன காதல் – அவ்வுயிர் வாழ்தல் போன்ற காதலுடைய, சாதல் அன்ன பிரிவு அரியோளே – அதற்கு சாவுதல் போன்ற துன்பத்தைத் தரும் பிரிதலை உடைய பெறுவதற்கு அரிய நம் தலைவி (அரியோளே – ஏகாரம் – அசைநிலை)

அகநானூறு 340, நக்கீரனார், நெய்தல் திணைதோழி தலைவனிடம் சொன்னது
பன்னாள் எவ்வம் தீரப் பகல் வந்து,
புன்னை அம் பொதும்பின் இன் நிழல் கழிப்பி,
மாலை மால் கொள நோக்கிப் பண் ஆய்ந்து,
வலவன் வண் தேர் இயக்க, நீயும்
செலவு விருப்புறுதல் ஒழிக தில் அம்ம,  5
செல்லா நல்லிசைப் பொலம் பூண் திரையன்
பல் பூங்கானல் பவத்திரி அன இவள்
நல் எழில் இள நலம் தொலைய, ஒல்லெனக்
கழியே ஓதம் மல்கின்று வழியே
வள் எயிற்று அரவொடு வய மீன் கொட்கும்,  10
சென்றோர் மன்ற மான்றன்று பொழுது, என
நின் திறத்து அவலம் வீட இன்று இவண்
சேப்பின் எவனோ, பூக்கேழ் புலம்ப!
பசு மீன் நொடுத்த வெண்ணெல் மாஅத் தயிர் மிதி
மிதவை மாஅ ஆர்க்குநவே நினக்கே,  15
வடவர் தந்த வான் கேழ் வட்டம்
குட புல உறுப்பின் கூட்டுபு நிகழ்த்திய
வண்டு இமிர் நறும் சாந்து அணிகுவம், திண் திமில்
எல்லுத் தொழின் மடுத்த வல் வினைப் பரதவர்
கூர் வளிக் கடு விசை மண்டலின் பாய்புடன்,  20
கோட் சுறாக் கிழித்த கொடு முடி நெடுவலை
தண் கடல் அசை வளி எறிதொறும் வினை விட்டு
முன்றில் தாழைத் தூங்கும்,
தெண் கடல் பரப்பின் எம் உறைவு இன் ஊர்க்கே.

பாடல் பின்னணி:  பகற்குறிக்கண் வந்த தலைவனிடம் தோழி கூறியது. 

பொருளுரை:  பூக்கள் பொருந்திய கடற்கரையின் தலைவனே!  கெடாத நல்ல புகழையும் பொன் அணிகலன்களையும் உடைய திரையன் என்பவனின் பல மலர்ச் சோலைகளையுடைய பவத்திரி என்னும் ஊர் போன்ற இவளுடை நல்ல அழகும் இளமை பெண்மை நலமும் தொலையுமாறு, நீ செல்லும் வழியில் ஒல்லென்னும் ஒலியுடன் கழியில் நீர் பெருகியுள்ளது.  கூரிய பற்களையுடைய பாம்புகளுடன் சுறா மீன்கள் திரியும் பொழுதும் பெரிது இருண்டுவிட்டது.  “நம் தலைவர் சென்று விட்டார்”, என்று கூறி, இவள் நின்னைப் பற்றி அடையும் துன்பம் நீங்க,

திண்மையான படகுகளுடன் சென்று பகலில் மீன் பிடிக்கும் தொழிலை மேற்கொண்ட வலிய செயலையுடைய மீன் பிடிப்பவர்கள், கடிய காற்றுடன் விரைந்து செல்லுகையில் பாய்ந்து கொல்லும் சுறா மீன்கள் கிழித்த வளைந்த முடிச்சுகளையுடைய நெடிய வலைகள், குளிர்ந்த கடலின் அசையும் காற்று வீசுந்தொறும் தொழில் முடிந்து, மனை முற்றங்களில் உள்ள தாழை மரங்களின் மீது கிடந்து அசையும், தெளிந்த கடல் பரப்பினையுடைய எம் வாழ்வதற்கு இனிய ஊரின்கண், இன்று எம்மிடத்தில் தங்கிச் சென்றால் வரும் குறை யாது?

பசிய மீனை விற்றுப் பெற்ற வெண்ணெல்லின் மாவைத் தயிரில் இட்டுப் பிசைந்த கூழ் குதிரைகளின் உணவாகும்.  நினக்கு, வடநாட்டில் உள்ளவர்கள் கொண்டு வந்த வெள்ளை நிற வட்டக் கல்லில் குடமலையின் சந்தனக் கட்டையால் பிற நறுமணப் பொருட்களையும் சேர்த்து அரைத்த வண்டுகள் ஒலிக்கும் நறுமணச் சாந்தினை அணிவிப்போம்.

பல நாட்கள் உங்கள் இருவரின் வருத்தம் நீங்கப் பகலில் வந்து, புன்னை மரங்களுடைய அழகிய சோலையில் இனிய நிழலில் பொழுதைக் கழித்து, மாலை நேரத்தை மயக்கமுற நோக்கி, குதிரைகளைப் பூட்டுதலை ஆராய்ந்து நின் பாகன் அழகிய தேரினை செலுத்த, நீயும் செல்லுவதற்கு விரும்புவதை ஒழிவாயாக!

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு ‘நாற்றமும் தோற்றமும்’ (தொல்காப்பியம், களவியல் 23) என வரும் நூற்பாவின்கண் ‘வேளாண் பெருநெறி வேண்டியவிடத்தும்’ என வரும் விதி கொள்க.  ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – ‘நாற்றமும் தோற்றமும்’ (தொல்காப்பியம், களவியல் 23) என்னுஞ் சூத்திரத்து, ‘வேளாண் பெருநெறி வேண்டியவிடத்தும்’ என்னும் பகுதிக்கு இச் செய்யுளை எடுத்துக்காட்டி, இதனுள் தனக்கும் புரவிக்கும் கொடுப்பன கூறித் தடுத்தவாறு என்பர் நச்சினார்க்கினியர்.  பாட வேறுபாடு (14–15) – பழைய உரை – பசு மீன் நொடுத்த வெண்ணெல் மாஅத் தயிர் மிதி மிதவை ஆர்க்குவ நினக்கே, பொ. வே. சோமசுந்தரனார் உரை, ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை– பசு மீன் நொடுத்த வெண்ணெல் மாஅத் தயிர் மிதி மிதவை மா ஆர்குநவே, புலியூர்க் கேசிகன் உரை, ச. வே. சுப்பிரமணியன் உரை – பசு மீன் நொடுத்த வெண்ணெல் மாஅத் தயிர் மிதி மிதவை ஆர்த்துவம் நினக்கே.  மாலை மால் கொள நோக்கி (3) – ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – மாலைப் பொழுது வர அதனை மயக்கம் தோன்றப் பார்த்து, பொ. வே. சோமசுந்தரனார் உரை – மாலைப் பொழுது வந்தவுடன் ஒருவரையொருவர் மயக்கமுறப் பார்த்து.  பண் ஆய்ந்து (3) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – ஒப்பனைகளை ஆராய்ந்து, ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – தேரினைப் பூட்டுதலை ஆராய்ந்து.  பொழுது மான்றன்று (11) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – பொழுது பெரிதும் இருண்டது, ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – பொழுது ஒருதலையாக மயங்கியது.  ஒப்புமை –நெடுநல்வாடை 51–52 – வடவர் தந்த வான் கேழ் வட்டம் தென் புல மருங்கில் சாந்தொடு துறப்ப.   வரலாறு –திரையன், பவத்திரி.  மன்ற – மன்றவென் கிளவி தேற்றஞ்செய்யும் (தொல்காப்பியம், இடையியல் 17).  உறுப்பின் (17) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – நறுமணப்பொருள்களாகிய உறுப்புகள், கலவைச் சாந்திற்கு உறுப்பாகிய மணப்பொருள், ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – சந்தனக் கட்டையால், குடபுலம் எனக்கொண்டு அதனில் உண்டாகிய கட்டையை உறுப்பு என்றார்.  பொலம் – பொன் என் கிளவி ஈறு கெட முறையின் முன்னர்த் தோன்றும் லகார மகாரம் செய்யுள் மருங்கின் தொடர் இயலான (தொல்காப்பியம், புள்ளிமயங்கியல் 61).  தில் – விழைவே, காலம், ஒழியிசைக் கிளவி, என்று அம் மூன்று என்ப தில்லைச் சொல்லே (தொல்காப்பியம், இடையியல் 5).  கூர் – கூர்ப்பும் கழிவும் உள்ளது சிறக்கும் (தொல்காப்பியம், உரியியல் 18).

சொற்பொருள்:  பன்னாள் எவ்வம் தீரப் பகல் வந்து புன்னை அம் பொதும்பின் இன் நிழல் கழிப்பி மாலை மால் கொள நோக்கி – பல நாட்கள் உங்கள் இருவரின் வருத்தம் நீங்கப் பகலில் வந்து புன்னை மரங்களுடைய அழகிய சோலையில் இனிய நிழலில் பொழுதைக் கழித்து மாலை நேரத்தை மயக்கமுற நோக்கி, பண் ஆய்ந்து வலவன் வண் தேர் இயக்க நீயும் செலவு விருப்புறுதல் ஒழிக – குதிரைகளைப் பூட்டுதலை ஆராய்ந்து நின் பாகன் அழகிய தேரினை செலுத்த நீயும் செல்லுவதற்கு விரும்புவதை ஒழிவாயாக (பண் – குதிரைக்கலனை, ஒப்பனை), தில் – விழைவின் கண் வந்த ஓர் இடைச்சொல் (விழைவு – விருப்பம்), அம்ம –அசைநிலை, செல்லா நல்லிசைப் பொலம் பூண் திரையன் பல் பூங்கானல் பவத்திரி அன இவள் நல் எழில் இள நலம் தொலைய – கெடாத நல்ல புகழையும் பொன் அணிகலன்களையும் உடைய திரையன் என்பவனின் பல மலர்ச் சோலைகளையுடைய பவத்திரி என்னும் ஊர் போன்ற இவளுடை நல்ல அழகும் இளமை பெண்மை நலமும் தொலையுமாறு, ஒல்லெனக் கழியே ஓதம் மல்கின்று – ஒல்லென்னும் ஒலியுடன் கழியில் நீர் பெருகியுள்ளது, வழியே – வழியானது, வள் எயிற்று அரவொடு வய மீன் கொட்கும் – கூரிய பற்களையுடைய பாம்புகளுடன் சுறா மீன்கள் திரியும், சென்றோர் – நம் தலைவர் சென்று விட்டார், மன்ற – தேற்றப்பொருளில் வரும் இடைச்சொல், மான்றன்று பொழுது – பொழுதும் பெரிது இருண்டுவிட்டது, என – என்று கூறி, நின் திறத்து அவலம் வீட – இவள் நின்னைப் பற்றி அடையும் துன்பம் நீங்க, இன்று இவண் சேப்பின் எவனோ – இன்று எம்மிடத்தில் தங்கிச் சென்றால் வரும் குறை யாது, பூக்கேழ் புலம்ப – பூக்கள் பொருந்திய கடற்கரையின் தலைவனே, பசு மீன் நொடுத்த வெண்ணெல் மாஅத் தயிர் மிதி மிதவை மாஅ ஆர்க்குநவே – பசிய மீனை விற்றுப் பெற்ற வெண்ணெல்லின் மாவைத் தயிரில் இட்டுப் பிசைந்த கூழ் குதிரைகளின் உணவாகும் (மாஅ – அளபெடை), நினக்கே – நினக்கு, (நினக்கே – ஏகாரம் அசைநிலை), வடவர் தந்த வான் கேழ் வட்டம் குட புல உறுப்பின் கூட்டுபு நிகழ்த்திய வண்டு இமிர் நறும் சாந்து அணிகுவம் – வடநாட்டில் உள்ளவர்கள் கொண்டு வந்த வெள்ளை நிற வட்டக் கல்லில் குடமலையின் சந்தனக் கட்டையால் பிற நறுமணப் பொருட்களையும் சேர்த்து அரைத்த வண்டுகள் ஒலிக்கும் நறுமணச் சாந்தினை அணிவிப்போம், திண் திமில் எல்லுத் தொழின் மடுத்த வல் வினைப் பரதவர் கூர் வளிக் கடு விசை மண்டலின் பாய்புடன் கோட் சுறாக் கிழித்த கொடு முடி நெடுவலை – திண்மையான படகுகளுடன் சென்று பகலில் மீன் பிடிக்கும் தொழிலை மேற்கொண்ட வலிய செயலையுடைய மீன் பிடிப்பவர்கள் கடிய காற்றுடன் விரைந்து செல்லுகையில் பாய்ந்து கொல்லும் சுறா மீன்கள் கிழித்த வளைந்த முடிச்சுகளையுடைய நெடிய வலைகள், தண் கடல் அசை வளி எறிதொறும் வினை விட்டு – குளிர்ந்த கடலின் அசையும் காற்று வீசுந்தொறும் தொழில் முடிந்து, முன்றில் தாழைத் தூங்கும் – மனை முற்றங்களில் உள்ள தாழை மரங்களின் மீது கிடந்து அசையும், தெண் கடல் பரப்பின் எம் உறைவு இன் ஊர்க்கே – தெளிந்த கடல் பரப்பினையுடைய எம் வாழ்வதற்கு இனிய ஊரின்கண் (முன்றில் – இல்முன், ஊர்க்கே – ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 341, ஆவூர் மூலங்கிழார், பாலைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
உய்தகை இன்றால் தோழி, பைபயக்
கோங்கும் கொய் குழை உற்றன, குயிலும்
தேம்பாய் மாஅத்து ஓங்கு சினை விளிக்கும்,
நாடு ஆர் காவிரிக் கோடு தோய் மலிர் நிறைக்
கழை அழி நீத்தம் சாஅய வழிநாள்,  5
மழை கழிந்தன்ன மாக்கால் மயங்கு அறல்,
பதவு மேயல் அருந்து துளங்கு இமில் நல் ஏறு,
மதவு உடை நாக்கொடு அசைவீடப் பருகி
குறுங்கால் காஞ்சிக் கோதை மெல் இணர்ப்
பொன் தகை நுண் தாது உறைப்பத் தொக்கு உடன்,  10
குப்பை வார் மணல் எக்கர்த் துஞ்சும்,
யாணர் வேனில் மன், இது
மாண் நலம் நுகரும் துணை உடையோர்க்கே.

பாடல் பின்னணி:  தலைவன் பிரிவின்கண் வற்புறுத்தும் தோழிக்குத் தலைவி சொன்னது. 

பொருளுரை:  தோழி!  மெல்ல மெல்ல கோங்க மரங்களும் கொய்யும் அளவிற்குத் தளிர்களை ஈன்றுள்ளன.  குயில்களும் மலர்களிலிருந்து தேன் வடியும் மாமரத்தின் உயர்ந்த கிளைகளிலிருந்து கூவுகின்றன.  நாட்டினை நீரால் நிறைக்கும் காவிரி ஆறு கரையைப் பொருந்தி, நிறைந்த நீர்பெருக்கம் கொண்டுள்ளது.  மூங்கிலாகிய ஓடக்கோலை மறைக்கும் வெள்ளம் வற்றிய பின்னாளில், மழைபொழிந்து கழிந்த வேளையில், வாய்க்காலில் உள்ள நீரை அருகம்புல்லை மேய்ந்து உண்ணும் அசைகின்ற திமிலையுடைய அழகிய காளைகள் தங்களுடைய வலிமையுடைய நாக்கினால் தளர்ச்சி நீங்க குடித்து, குறிய அடியையுடைய காஞ்சி மரத்தின் மாலைபோன்ற மெல்லிய பூங்கொத்துக்களிலிருந்து பொன் போன்ற நுண்ணியத் தங்கள் மேல் தாது உதிர, ஒருங்கே கூடிய நெடிய மேட்டு மணலில் உறங்கும், அழகான வேனில் பருவம் இது.  இது துணைவர்களுடன் கூடியிருக்கும் மகளிர்க்கே இனியதாகும்.  எமக்கு உய்வு இல்லையே!

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு ‘எஞ்சியோர்க்கும் எஞ்சுதல் இலவே’ (தொல்காப்பியம், அகத்திணையியல் 42) என வரும் விதி கொள்க.  மதவு நடை நாக்கொடு (8) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – வலிய நடையினையுடைய பசுக்களோடு, ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – வலிமையுடைய நாவினால்.  மேலும் பதவுரையில் ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரையில் ‘மதவு உடை’ என்கின்றனர், பொ. வே. சோமசுந்தரனார் ‘மதவு நடை’ என்கின்றார்.  மூங்கில் நீரில் மறைதல் – கழை மாய் நீத்தம் – அகநானூறு 72, நற்றிணை 7, கழை அழி நீத்தம் – அகநானூறு 341, கழை நிலை பெறாஅக் காவிரி நீத்தம் – அகநானூறு 6.  வரலாறு – காவிரி.  யாணர் – புதிதுபடற் பொருட்டே யாணர்க் கிளவி (தொல்காப்பியம், உரியியல் 83).  மதவு – மதவே மடனும் வலியும் ஆகும் (தொல்காப்பியம், உரியியல் 81). 

சொற்பொருள்:  உய்தகை இன்றால் தோழி – எமக்கு உய்வு இல்லை தோழி, பைபயக் கோங்கும் கொய் குழை உற்றன – மெல்ல மெல்ல கோங்க மரங்களும் கொய்யும் அளவிற்குத் தளிர்களை ஈன்றுள்ளன (கோங்க மரம் – Cochlospermum gossypium), குயிலும் தேம்பாய் மாஅத்து ஓங்கு சினை விளிக்கும் – குயில்களும் மலர்களிலிருந்து தேன் வடியும் மாமரத்தின் உயர்ந்த கிளைகளிலிருந்து கூவும் (மாஅத்து – அத்துச் சாரியை, தேம் – தேன் என்றதன் திரிபு), நாடு ஆர் காவிரி – நாட்டினை நீரால் நிறைக்கும் காவிரி ஆறு, கோடு தோய் மலிர் நிறை – கரையை பொருந்திய நிறைந்த நீர்பெருக்கம், கழை அழி நீத்தம் – மூங்கிலாகிய ஓடக்கோலை மறைக்கும் வெள்ளம், சாஅய வழிநாள் – வற்றிய  பின்னாளில் (சாஅய – அளபெடை), மழை கழிந்தன்ன மாக்கால் மயங்கு அறல் – மழைபொழிந்து கழிந்த வாய்க்காலில் உள்ள நீர், பதவு மேயல் அருந்து துளங்கு இமில் நல் ஏறு – அருகம்புல்லை மேய்ந்து உண்ணும் அசைகின்ற திமிலையுடைய அழகிய காளைகள், மதவு உடை நாக்கொடு அசைவீடப் பருகி – வலிமையுடைய நாக்கினால் தளர்ச்சி நீங்க குடித்து, குறுங்கால் காஞ்சிக் கோதை மெல் இணர்ப் பொன் தகை நுண் தாது உறைப்ப – குறிய அடியையுடைய காஞ்சி மரத்தின் மாலைபோன்ற மெல்லிய பூங்கொத்துக்களிலிருந்து பொன் போன்ற நுண்ணிய தாது உதிர (காஞ்சி மரம் – பூவரச மரம் – Thespesia populnea, Portia tree), தொக்கு உடன் குப்பை வார் மணல் எக்கர்த் துஞ்சும் – ஒருங்கே கூடிய நெடிய மேட்டு மணலில் உறங்கும், யாணர் வேனில் – அழகான வேனில் பருவம், மன் – அசைநிலை, இது – இது, மாண் நலம் நுகரும் துணை உடையோர்க்கே – துணைவர்களுடன் கூடியிருக்கும் மகளிர்க்கே இனியதாகும் (உடையோர்க்கே – ஏகாரம் அசைநிலை) 

அகநானூறு 342, மதுரைக் கணக்காயனார், குறிஞ்சித் திணை – தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது
ஒறுப்ப ஓவலை, நிறுப்ப நில்லலை,
புணர்ந்தோர் போலப் போற்றுமதி, நினக்கு யான்
கிளைஞன் அல்லனோ நெஞ்சே, தெனாஅது
வெல் போர்க் கவுரியர் நல் நாட்டு உள்ளதை
மண் கொள் புற்றத்து அருப்பு உழை திறப்பின்  5
ஆ கொள் மூதூர்க் கள்வர் பெருமகன்,
ஏவல் இளையர் தலைவன், மேவார்
அருங்குறும்பு எறிந்த ஆற்றலொடு, பருந்து படப்
பல் செருக் கடந்த செல் உறழ் தடக் கை
கெடாஅ நல் இசைத் தென்னன், தொடாஅ  10
நீர் இழி மருங்கில் கல் அளைக் கரந்த அவ்
வரையர மகளிரின் அரியள்,
அவ்வரி அல்குல் அணையாக் காலே.

பாடல் பின்னணி:  அல்ல குறிப்பட்ட தலைவன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.   

பொருளுரை:  என் நெஞ்சே!  தென்திசையில் உள்ள, போரில் வெற்றியடையும் பாண்டியர்களின் நல்ல நாட்டில் உள்ள மண்ணால் செய்த புற்றுக்களையுடைய கோட்டைகளைத் திறந்தலோடு பசுக்களைக் கவர்ந்துகொள்ளும் பழைய ஊரில் வாழும் கள்வர்களுக்கு அரசனும், அம்பை எய்தும் மறவர்களுக்குத் தலைவனுமான, பகைவரின் காவலுடைய அரண்களை அழித்த ஆற்றலுடன், பருந்துகள் வந்து வீழும்படி பல போர்களை வென்ற, முகிலை ஒத்த பெரிய கைகளையுடைய, கெடாத நற்புகழையுடைய பாண்டிய மன்னனின் தோண்டப்படாத நீராகிய அருவி வீழும் இடத்தில் உள்ள மலைக் குகைகளில் மறைந்திருக்கும் அழகிய வரையர மகளிர்போல, கிடைப்பதற்கு அரியவளாகிய, அழகிய வரிகளையுடைய அல்குலையுடைய நம் தலைவி நம்மை அணைக்காத பொழுது,

நான் இடித்துக் கூறினும் நீ அவளை எண்ணுவதை நீக்கவில்லை.  தடுத்தாலும் நீ அவள்பால் செல்லுவதை நிறுத்தவில்லை. நெருங்கிய நண்பர்போல் நான் கூறுவதை நீ போற்றுவாயாக. உனக்கு நான் உறவினன் அல்லவா?

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு ‘பண்புற்று மெலியினும்’ (தொல்காப்பியம், களவியல் 12) என வரும் நூற்பாவின்கண் ‘பரிவுற்று மெலியினும்’ என வரும் விதி கொள்க.  வரலாறு – கவுரியர் (பாண்டியர்), தென்னன் (பாண்டியன்).  ஏவல் இளையர் தலைவன் (7) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – அம்பு எறியும் தொழிலில் வல்லமையுடைய இளமையுடைய மறவர்களுக்குத் தலைவன், ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – ஏவுதலைச் செய்யும் வீரர்களுக்குத் தலைவன்.  செல் உறழ் தடக்கை (9) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – முகிலை ஒத்த பெரிய கை, ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – இடியுடன் மாறுபடும் பெரிய கை.  மதி – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம், இடையியல் 26).  ஐங்குறுநூறு 191 – வரையர மகளிரின் அரியள்.  தட – தடவும் கயவும் நளியும் பெருமை (தொல்காப்பியம், உரியியல் 24).  பாலைத் திணைப் பாடல்களில் கள்வர்கள் – அகநானூறு 1, 3, 7, 31, 63, 89, 91, 101, 151, 169, 245, 249, 257, 269, 285, 289, 291, 297, 309, 313, 319, 321, 327, 337, 363, 365, நற்றிணை 3, 33, 48, 164, 224, 362, குறுந்தொகை 16, 274, 283, 331, 350, 390, ஐங்குறுநூறு 329, 352, கலித்தொகை 6, 12,  குறிஞ்சித் திணைப் பாடல்களில் கள்வர்கள் – அகநானூறு 342, குறுந்தொகை 297.

சொற்பொருள்:  ஒறுப்ப ஓவலை – நான் இடித்துக் கூறினும் நீ அவளை எண்ணுவதை நீக்கவில்லை, நிறுப்ப நில்லலை – தடுத்தாலும் நீ அவள்பால் செல்லுவதை நிறுத்தவில்லை, புணர்ந்தோர் போலப் போற்றுமதி – நெருங்கிய நண்பர்போல் நான் கூறுவதை நீ போற்றுவாயாக (மதி – முன்னிலையசை), நினக்கு யான் கிளைஞன் அல்லனோ – உனக்கு நான் உறவினன் அல்லவோ, நெஞ்சே – என் நெஞ்சே, தெனாஅது வெல் போர்க் கவுரியர் நல் நாட்டு உள்ளதை – தென்திசையில் உள்ள போரில் வெற்றியடையும் பாண்டியர்களின் நல்ல நாட்டில் உள்ள (தெனாஅது – அளபெடை, ஏழாம் உருபின் பொருள்பட வந்தது, உள்ளதை – ஐகாரம் சாரியை), மண் கொள் புற்றத்து அருப்பு உழை திறப்பின் – மண்ணால் செய்த புற்றுக்களையுடைய கோட்டைகளைத் திறந்தலோடு (அருப்பம் அருப்பு என்றாயிற்று, உழை – இடம், திறப்பின் – திறத்தலோடு , வேற்றுமை மயக்கம்), ஆ கொள் மூதூர்க் கள்வர் பெருமகன் – பசுக்களை கவர்ந்துகொள்ளும் பழைய ஊரில் வாழும் கள்வர்களுக்கு அரசனும், ஏவல் இளையர் தலைவன் – அம்பை எய்தும் மறவர்களுக்கு தலைவனுமான, மேவார் அருங்குறும்பு எறிந்த ஆற்றலொடு – பகைவரின் காவலுடைய அரண்களை அழித்த ஆற்றலுடன், பருந்து படப் பல் செருக் கடந்த – பருந்துகள் வந்து வீழும்படி பல போர்களை வென்ற, செல் உறழ் தடக் கை – முகிலை ஒத்த பெரிய கைகள், கெடாஅ நல் இசைத் தென்னன் – கெடாத நற்புகழையுடைய பாண்டிய மன்னன், தொடாஅ நீர் இழி மருங்கில் – தோண்டப்படாத நீராகிய  அருவி வீழும் இடத்தில் (தொடாஅ – தோண்டப்படாத நீராகிய அருவி, வெளிப்படை, தொடாஅ – அளபெடை), கல் அளைக் கரந்த – மலைக் குகைகளில் மறைந்த, அவ் வரையர மகளிரின் அரியள் – அழகிய வரையர மகளிர்போல கிடைப்பதற்கு அரியள் (மகளிரின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), அவ்வரி அல்குல் அணையாக் காலே – அழகிய வரிகளையுடைய அல்குலையுடைய அவள் நம்மை அணைக்காத பொழுது (காலே – ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 343, மதுரை மருதன் இளநாகனார் பாலைத் திணைதலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது
வாங்கு அமை புரையும் வீங்கு இறைப் பணைத்தோள்,
சில் சுணங்கு அணிந்த பல் பூண் மென் முலை,
நல்லெழில் ஆகம் புல்லுதல் நயந்து,
மரம் கோள் உமண்மகன் பெயரும் பருதிப்
புன்தலை சிதைத்த வன்தலை நடுகல் 5
கண்ணி வாடிய மண்ணா மருங்குல்,
கூர் உளி குயின்ற கோடுமாய் எழுத்து அவ்
ஆறு செல் வம்பலர் வேறு பயம் படுக்கும்
கண் பொரி கவலைய கானத்து ஆங்கண்,
நனந்தலை யாஅத்து அம் தளிர்ப் பெருஞ்சினை 10
இல் போல் நீழல் செல் வெயில் ஒழிமார்,
நெடுஞ்செவிக் கழுதைக் குறுங்கால் ஏற்றைப்
புறம் நிறை பண்டத்துப் பொறை அசாஅக் களைந்த
பெயர்படை கொள்ளார்க்கு உயவுத்துணை ஆகி,
உயர்ந்த ஆள் வினை புரிந்தோய் பெயர்ந்து நின்று 15
உள்ளினை வாழி என் நெஞ்சே! கள்ளின்
மகிழின் மகிழ்ந்த அரிமதர் மழைக்கண்,
சின்மொழிப் பொலிந்த துவர்வாய்ப்,
பன் மாண் பேதையின் பிரிந்த நீயே.

பாடல் பின்னணி:  தலைவன் இடைச்சுரத்து மீளக் கருதிய தன் நெஞ்சினைக் கழறியது.

பொருளுரை:  வாங்கு அமை புரையும் வீங்கு இறைப் பணைத்தோள் – வளைந்த மூங்கிலை ஒத்த மிக்க இறையையுடைய (மூட்டினையுடைய) பெருத்த தோள்களையும், சில் சுணங்கு அணிந்த பல் பூண் மென் முலை நல் எழில் ஆகம் புல்லுதல் நயந்து – சில தேமல்களை உடைய பல அணிகலன்களை அணிந்த மென்மையான முலைகளையுடைய நல்ல அழகிய மார்பினைத் தழுவுதலை விரும்பி, மரம் கோள் உமண்மகன் பெயரும் பருதிப் புன்தலை சிதைத்த வன்தலை நடுகல் கண்ணி வாடிய மண்ணா மருங்குல் – வண்டியினைக் கொண்ட உப்பு வணிகர்களின் பெயரும் உருள்களின் பொலிவில்லாத பூண் சிதைத்த வலிய மேற்பகுதியை உடைய நடுகல்லில் அணியப்பெற்ற மலர்ச்சரம் வாடிய கழுவப்படாத பக்கத்தில், கூர் உளி குயின்ற கோடு மாய் எழுத்து – கூரிய உளியால் பொறித்த கோடுகள் மறைந்த எழுத்துக்கள், அவ் ஆறு செல் வம்பலர் வேறு பயம் படுக்கும் – அவ்வழியில் செல்லும் புதியவர்களுக்கு வேறு பொருள் உடையவனாகத் தோன்றும், கண் பொரி கவலைய கானத்து ஆங்கண் – இடங்கள் பொரிந்த பிரிவுகளையுடைய வழிகளையுடைய காடாகிய அவ்விடத்தில், நனந்தலை யாஅத்து அம் தளிர்ப் பெருஞ்சினை இல் போல் நீழல் செல் வெயில் ஒழிமார் – அகன்ற இடத்தில் உள்ள யா மரத்தின் அழகிய தளிர்களையுடைய பெரிய கிளைகளின் மனையில் இருப்பது போன்ற நிழலின் தாம் வந்த வெயிலின் வெப்பம் ஒழிவதற்கு, நெடுஞ்செவிக் கழுதைக் குறுங்கால் ஏற்றைப் புறம் நிறை பண்டத்துப் பொறை அசாஅக் களைந்த – நீண்ட செவிகளையும் குறிய கால்களையும் உடைய ஆண் கழுதைகளின் முதுகில் நிறைந்துள்ள பண்டங்களின் பாரத்தினால் ஆன களைப்பைக் களைந்த, பெயர்படை கொள்ளார்க்கு உயவுத் துணை ஆகி உயர்ந்த ஆள் வினை புரிந்தோய்  – மீண்டும் மேற்கொண்டு செல்லாதவர்களுக்கு துன்பத்திற்குத் துணையாக இருந்து சிறப்பான ஆண்மைக்குரிய செயலை நீ செய்தாய், பெயர்ந்து நின்று உள்ளினை – இம்முயற்சியைக் கைவிட நீ நினைத்துள்ளாய், வாழி – நீ நீடு வாழ்வாயாக, என் நெஞ்சே – என் நெஞ்சே, கள்ளின் மகிழின் மகிழ்ந்த அரி மதர் மழைக் கண் சின் மொழிப் பொலிந்த துவர் வாய் – கள்ளால் ஆகிய மகிழ்ச்சி போல் மகிழ்வதற்கு ஏதுவாகிய (காரணமாகிய) குளிர்ந்த கண்களையும் சிலவாகிய மொழிகளால் பொலிவுற்ற சிவந்த பவளம் போன்ற வாயினையும், பன் மாண் பேதையின் பிரிந்த நீயே – பல மாட்சிமைகளையுமுடைய நம் தலைவியைப் பிரிந்து வந்த நீ

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு, ‘கரணத்தின் அமைந்து முடிந்த காலை’ (தொல்காப்பியம், கற்பியல் 5) என வரும் நூற்பாவின்கண் ‘மீட்டு வரவு ஆய்ந்த வகையின் கண்ணும்’ என வரும் விதி கொள்க.  வன்தலை (5) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – வலிய தலையினையுடைய நடுகல், ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – வலிய பாறையிலுள்ள நடுகல்.  நனந்தலை – அகன்ற இடம், நனம் – நனவே களனும் அகலமும் செய்யும் (தொல்காப்பியம், உரியியல் 80).  பாலைத் திணைப் பாடல்களில் கள்வர்கள் – அகநானூறு 1, 3, 7, 31, 63, 89, 91, 101, 151, 169, 245, 249, 257, 269, 285, 289, 291, 297, 309, 313, 319, 321, 327, 337, 363, 365, நற்றிணை 3, 33, 48, 164, 224, 362, குறுந்தொகை 16, 274, 283, 331, 350, 390, ஐங்குறுநூறு 329, 352, கலித்தொகை 6, 12,  குறிஞ்சித் திணைப் பாடல்களில் கள்வர்கள் – அகநானூறு 342, குறுந்தொகை 297.

சொற்பொருள்:  வாங்கு அமை புரையும் வீங்கு இறைப் பணைத்தோள் – வளைந்த மூங்கிலை ஒத்த மிக்க இறையையுடைய (மூட்டினையுடைய) பெருத்த தோள்களையும், சில் சுணங்கு அணிந்த பல் பூண் மென் முலை நல் எழில் ஆகம் புல்லுதல் நயந்து – சில தேமல்களை உடைய பல அணிகலன்களை அணிந்த மென்மையான முலைகளையுடைய நல்ல அழகிய மார்பினைத் தழுவுதலை விரும்பி, மரம் கோள் உமண்மகன் பெயரும் பருதிப் புன்தலை சிதைத்த வன்தலை நடுகல் கண்ணி வாடிய மண்ணா மருங்குல் – வண்டியினைக் கொண்ட உப்பு வணிகர்களின் பெயரும் உருள்களின் பொலிவில்லாத பூண் சிதைத்த வலிய மேற்பகுதியை உடைய நடுகல்லில் அணியப்பெற்ற மலர்ச்சரம் வாடிய கழுவப்படாத பக்கத்தில், கூர் உளி குயின்ற கோடு மாய் எழுத்து – கூரிய உளியால் பொறித்த கோடுகள் மறைந்த எழுத்துக்கள், அவ் ஆறு செல் வம்பலர் வேறு பயம் படுக்கும் – அவ்வழியில் செல்லும் புதியவர்களுக்கு வேறு பொருள் உடையவனாகத் தோன்றும், கண் பொரி கவலைய கானத்து ஆங்கண் – இடங்கள் பொரிந்த பிரிவுகளையுடைய வழிகளையுடைய காடாகிய அவ்விடத்தில், நனந்தலை யாஅத்து அம் தளிர்ப் பெருஞ்சினை இல் போல் நீழல் செல் வெயில் ஒழிமார் – அகன்ற இடத்தில் உள்ள யா மரத்தின் அழகிய தளிர்களையுடைய பெரிய கிளைகளின் மனையில் இருப்பது போன்ற நிழலின் தாம் வந்த வெயிலின் வெப்பம் ஒழிவதற்கு, நெடுஞ்செவிக் கழுதைக் குறுங்கால் ஏற்றைப் புறம் நிறை பண்டத்துப் பொறை அசாஅக் களைந்த – நீண்ட செவிகளையும் குறிய கால்களையும் உடைய ஆண் கழுதைகளின் முதுகில் நிறைந்துள்ள பண்டங்களின் பாரத்தினால் ஆன களைப்பைக் களைந்த, பெயர்படை கொள்ளார்க்கு உயவுத் துணை ஆகி உயர்ந்த ஆள் வினை புரிந்தோய்  – மீண்டும் மேற்கொண்டு செல்லாதவர்களுக்கு துன்பத்திற்குத் துணையாக இருந்து சிறப்பான ஆண்மைக்குரிய செயலை நீ செய்தாய், பெயர்ந்து நின்று உள்ளினை – இம்முயற்சியைக் கைவிட நீ நினைத்துள்ளாய், வாழி – நீ நீடு வாழ்வாயாக, என் நெஞ்சே – என் நெஞ்சே, கள்ளின் மகிழின் மகிழ்ந்த அரி மதர் மழைக் கண் சின் மொழிப் பொலிந்த துவர் வாய் – கள்ளால் ஆகிய மகிழ்ச்சி போல் மகிழ்வதற்கு ஏதுவாகிய (காரணமாகிய) குளிர்ந்த கண்களையும் சிலவாகிய மொழிகளால் பொலிவுற்ற சிவந்த பவளம் போன்ற வாயினையும், பன் மாண் பேதையின் பிரிந்த நீயே – பல மாட்சிமைகளையுமுடைய நம் தலைவியைப் பிரிந்து வந்த நீ

அகநானூறு 344, மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார், முல்லைத் திணை தலைவன் தேர்ப்பாகனிடம் சொன்னது
வள மழை பொழிந்த வால் நிறக் களரி,
உளர்தரு தண் வளி உறுதொறும் நிலவெனத்
தொகு முகை விரிந்த முடக்கால் பிடவின்,
வை ஏர் வால் எயிற்று ஒண்ணுதல் மகளிர்
கை மாண் தோளி கடுப்பப், பையென,  5
மயில் இனம் பயிலும் மரம் பயில் கானம்
எல்லிடை உறாஅ அளவை வல்லே,
கழல் ஒலி நாவின் தெண் மணி கறங்க,
நிழல் ஒளிப்பன்ன நிமிர் பரிப் புரவி
வயக்குறு கொடிஞ்சி பொலிய வள்பு ஆய்ந்து  10
இயக்குமதி, வாழியோ, கையுடை வலவ!
பயப்புறு படர் அட வருந்திய
நயப்பு இன் காதலி நகை முகம் பெறவே.

பாடல் பின்னணி:  வினை முற்றிய தலைவன் தேர்ப்பாகனுக்குச் சொல்லியது. 

பொருளுரை:  குதிரைகளைச் செலுத்தும் தொழிலில் சிறப்புடைய பாகனே!  நீ நீடு வாழ்வாயாக!  பசலை அடைந்த துன்பம் வருத்த வருந்திய அன்புடைய இனிய தலைவியின் நகையுடன் கூடிய முகத்தினை அடைய,

நலம்தரும் மழை பொழிந்த வெண்ணிறக் களரி நிலமாகிய காட்டில், வீசும் குளிர்ந்த காற்று வீசுந்தொறும் நிலவு ஒளி போன்று கொத்தாக உள்ள அரும்புகள் விரிந்த வளைந்த அடியையுடைய பிடவ மரத்தின்கண், கூரிய அழகிய பற்களையும் ஒளியுடைய நெற்றியையுமுடைய மகளிர் கையால் சிறப்புண்டாக ஆடும் தோளி என்னும் கூத்தை ஒப்ப, மயில் கூட்டங்கள் மென்மையாக ஆடும், மரங்கள் நிறைந்த காட்டு நெறியில்,

இருள் வருவதற்கு முன், விரைந்து, கழலாகிய ஒலிக்கும் நாவினையுடைய தெளிந்த ஒலியையுடைய மணிகள் ஒலிக்க, ஒளியின் தழைத்தலை ஒத்த நிமிர்ந்த ஓட்டத்தையுடைய குதிரைகளை, விளங்கும் கொடுஞ்சி பொலியும்படிக் கடிவாளத்தை ஆராய்ந்து செலுத்துவாயாக.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு, ‘கரணத்தின் அமைந்து முடிந்த காலை’ (தொல்காப்பியம், கற்பியல் 5) என வரும் நூற்பாவின்கண் ‘பேரிசை ஊர்திப் பாங்கர் பாங்கினும்’ என வரும் விதி கொள்க.  முடக்கால் பிடவின் (3) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – முடம்பட்ட காலையுடைய பிடவஞ்செடிகளோடு, ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – வளைந்த அடியினுடைய பிடா மரத்தின்கண்.   கை மாண் தோளி (5) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – விறலியர் கையால் மாட்சிமையுண்டாக ஆடுகின்ற கூத்து, ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – மகளிரின் ஒழுங்கு மாட்சிமைப்பட்ட விளையாட்டு.  நிழல் ஒளிப்பன்ன (9) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – திங்களின் ஒளி திரண்டாற்போல.  வயக்குறு (10) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – வயப்படுத்துகின்ற, ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – விளக்கமுறும்.  தோளி (5) – ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – தோளை வீசி ஆடுதலின் தோளி எனப்பட்டது.  மதி – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம், இடையியல் 26). வை – வையே கூர்மை (தொல்காப்பியம், உரியியல் 91).  கொடிஞ்சி – கையால் பற்றுதற்குரிய தாமரை மொட்டுப் போன்ற தேர் உறுப்பு.  தோளி – இப்பாட்டில் மட்டுமே இச்சொல் ஆட்டத்தைக் குறிக்கின்றது.  அகநானூறு 121ம் பாடலில் ‘தோளை உடையவள்’ என்ற பொருளில் வந்துள்ளது.

சொற்பொருள்:  வள மழை பொழிந்த வால் நிறக் களரி உளர்தரு தண் வளி உறுதொறும் நிலவு எனத் தொகு முகை விரிந்த முடக்கால் பிடவின் – நலம்தரும் மழை பொழிந்த வெண்ணிறக் களரி நிலமாகிய காட்டில் வீசும் குளிர்ந்த காற்று வீசுந்தொறும் நிலவு ஒளி போன்று கொத்தாக உள்ள அரும்புகள் விரிந்த வளைந்த அடியையுடைய பிடவ மரத்தின்கண் (பிடவச் செடிகளும் பிடவ மரங்களும் உண்டு, Randia genus), வை ஏர் வால் எயிற்று ஒண்ணுதல் மகளிர் கை மாண் தோளி கடுப்பப் பையென மயில் இனம் பயிலும் மரம் பயில் கானம் – கூரிய அழகிய பற்களையும் ஒளியுடைய நெற்றியையுமுடைய மகளிர் கையால் சிறப்புண்டாக ஆடும் தோளி என்னும் கூத்தை ஒப்ப மயில் கூட்டங்கள் மென்மையாக ஆடும் மரங்கள் நிறைந்த காட்டு நெறியில் (கடுப்ப – உவம உருபு), எல்லிடை உறாஅ அளவை – இருள் வருவதற்கு முன் (உறாஅ – அளபெடை), வல்லே – விரைந்து, கழல் ஒலி நாவின் தெண் மணி கறங்க – கழலாகிய ஒலிக்கும் நாவினையுடைய தெளிந்த ஒலியையுடைய மணிகள் ஒலிக்க, நிழல் ஒளிப்பன்ன நிமிர் பரிப் புரவி – ஒளியின் தழைத்தலை ஒத்த நிமிர்ந்த ஓட்டத்தையுடைய குதிரைகளை, வயக்குறு கொடிஞ்சி பொலிய வள்பு ஆய்ந்து இயக்குமதி – விளங்கும் கொடுஞ்சி பொலியும்படிக் கடிவாளத்தை ஆராய்ந்து செலுத்துவாயாக (மதி – முன்னிலையசை), வாழியோ – நீ நீடு வாழ்வாயாக, அசைநிலை, கையுடை வலவ – குதிரைகளைச் செலுத்தும் தொழிலில் சிறப்புடைய பாகனே, பயப்புறு படர் அட வருந்திய நயப்பு இன் காதலி நகை முகம் பெறவே – பசலை அடைந்த துன்பம் வருத்த வருந்திய அன்புடைய இனிய தலைவியின் நகையுடன் கூடிய முகத்தினை அடைய (பெறவே – ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 345, குடவாயில் கீரத்தனார், பாலைத் திணைதலைவி தோழியிடம் சொன்னது
“விசும்பு தளி பொழிந்து வெம்மை நீங்கித்,
தண் பதம்படுதல் செல்க” எனப் பன்மாண்
நாம் செல விழைந்தனமாக, ஓங்கு புகழ்க்
கான் அமர் செல்வி அருளலின், வெண்கால்
பல் படைப் புரவி எய்திய தொல்லிசை  5
நுணங்கு நுண் பனுவற் புலவன் பாடிய
இன மழை தவழும் ஏழில் குன்றத்துக்,
கருங்கால் வேங்கைச் செம்பூம் பிணையல்
ஐது ஏந்து அல்குல் யாம் அணிந்து உவக்கும்
“சின்னாள்  கழிக”  என்று முன்னாள்  10
நம்மொடு பொய்த்தனர் ஆயினும், தம்மொடு
திருந்து வேல் இளையர் சுரும்பு உண மலைமார்
மா முறி ஈன்று மரக் கொம்பு அகைப்ப,
உறை கழிந்து உலந்த பின்றைப் பொறைய
சிறு வெள் அருவித் துவலையின் மலர்ந்த  15
கருங்கால் நுணவின் பெருஞ்சினை வான் பூச்
செம்மணற் சிறு நெறி கம்மென வரிப்பக்,
காடு கவின் பெறுக தோழி, ஆடு வளிக்கு
ஒல்கு நிலை இற்றி ஒரு தனி நெடுவீழ்
கல் கண் சீக்கும் அத்தம்,  20
அல்கு வெயில் நீழல் அசைந்தனர் செலவே.

பாடல் பின்னணி:  பொருள்வயின் தலைவன் பிரிவான் என்பதை அறிந்த தலைவி உடன் செல்ல வேண்டினாள்.  ‘சில நாட்கள் செல்லட்டும்’ என்று அவளிடம் கூறியவன் அவள் அறியா வண்ணம் பிரிந்து போயினான்.  அதுகுறித்துத் தலைவி கூறியது. 

பொருளுரை:  தோழி!  “வானம் மழை பொழிந்து வெப்பம் நீங்கிக் குளிர்ந்த நிலைமை அடைந்த பின் எம்மையும் உடன்கொண்டு செல்வீராக” என்று பல முறை நாம் உடன்செல்ல விரும்பி வேண்டினோமாக, மிகுந்த புகழையுடைய கொற்றவை அருள் செய்தமையால், வெள்ளை நிறக் கால்களையும் பல கலணைகளையும் உடைய குதிரைகளை அடைந்த பண்டைய புகழையுடைய நுண்ணிய செய்யுள்களை இயற்றிய புலவனால் பாடப்பட்ட, கூட்டமாக முகில்கள் தவழும் எழில் குன்றத்தின்கண், கரிய அடியையுடைய வேங்கை மரத்தின் சிவந்த மலர்களால் தொடுத்த மாலையை அழகிய உயர்ந்த அல்குலில் யாம் அணிந்து மகிழும் பருவமாகிய சில நாட்கள் கழியட்டும் என்று முன்னாளில் நம்மிடம் பொய் கூறி சென்றார் ஆயினும்,

அசைகின்ற காற்றினால் தளரும் நிலைமையை உடைய இற்றி மரத்தின் தனித்த நீண்ட விழுது, மலையின் இடத்தைத் துடைக்கும் பாலை நில வழியில், பொருந்திய வெயிலினால் நம் தலைவர் நிழலில் தங்கிச் செல்வதற்கு,

தம்முடன் திருந்திய வேலையுடைய ஏவலாளர்களும் வண்டுகள் உண்ணும்படி அணிவதற்கு, சிறந்த தளிர்களை ஈன்று மரங்களின் கிளைகள் செறியும்படி, மழை பெய்து நீங்கிய பின், மலையில் சிறிய வெள்ளை அருவிகளின் நீர்த் துவலைகளால் மலர்ந்த, கரிய அடியையுடைய நுணா மரத்தின் பெரிய கிளைகளில் பூத்த வெள்ளை மலர்கள், சிவந்த மணலுடைய சிறிய வழிகளில் கம் என்று மணக்குமாறு காடு அழகு அடையட்டும்.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு ‘எஞ்சியோர்க்கும் எஞ்சுதல் இலவே’ (தொல்காப்பியம், அகத்திணையியல் 42) என வரும் விதி கொள்க.  பனுவற் புலவர் (6) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – செய்யுள் பாடும் புலவன், பனுவற் புலவர் (பரிபாடல் 6–7) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – நூற்கேள்வியினையுடைய புலவர்கள்.  இற்றி மர விழுது – குறுந்தொகை 106 – புல் வீழ் இற்றிக் கல் இவர் வெள் வேர் வரை இழி அருவியின் தோன்றும், நற்றிணை 162 – வேனில் இற்றித் தோயா நெடுவீழ் வழிநார் ஊசலின் கோடை தூக்குதொறும் துஞ்சு பிடி வருடும் அத்தம் அகநானூறு 345 – ஒல்கு நிலை இற்றி ஒரு தனி நெடுவீழ் கல் கண் சீக்கும் அத்தம்.  கொற்றவையின் மகன் முருகன் என்ற குறிப்புகள் – கடுஞ்சூர் கொன்ற பைம்பூண் சேஎய் பயந்த மாமோட்டு துணங்கை அம் செல்விக்கு (பெரும்பாணாற்றுப்படை 457– 459), வெற்றி வெல்போர்க் கொற்றவை சிறுவ (திருமுருகாற்றுப்படை 258).  ஏழில் மலை – அகநானூறு 152–13, 345–7, 349–9, நற்றிணை 391–7, குறுந்தொகை 138–2.  கடவுள் பெயரிய கானமொடு – கொற்றவை, பதிற்றுப்பத்து 88.  வரலாறு –ஏழில் மலை.

சொற்பொருள்:  ‘விசும்பு தளி பொழிந்து வெம்மை நீங்கித் தண் பதம்படுதல் செல்க’ எனப் பன்மாண் நாம் செல விழைந்தனமாக – ‘வானம் மழை பொழிந்து வெப்பம் நீங்கிக் குளிர்ந்த நிலைமை அடைந்த பின் எம்மையும் உடன்கொண்டு செல்வீராக’ என்று பல முறை நாம் உடன்செல்ல விரும்பி வேண்டினோமாக (செல – செல்ல என்பதன் இடைக்குறை), ஓங்கு புகழ்க் கான் அமர் செல்வி அருளலின் – மிகுந்த புகழையுடைய கொற்றவை அருள் செய்தமையால், வெண்கால் பல் படைப் புரவி எய்திய தொல்லிசை நுணங்கு நுண் பனுவற் புலவன் பாடிய – வெள்ளை நிறக் கால்களையும் பல கலணைகளையும் உடைய குதிரைகளை அடைந்த பண்டைய புகழையுடைய நுண்ணிய செய்யுள்களை இயற்றிய புலவனால் பாடப்பட்ட, இன மழை தவழும் ஏழில் குன்றத்து – கூட்டமாக முகில்கள் தவழும் எழில் குன்றத்தின்கண், கருங்கால் வேங்கைச் செம்பூம் பிணையல் ஐது ஏந்து அல்குல் யாம் அணிந்து உவக்கும் – கரிய அடியையுடைய வேங்கை மரத்தின் சிவந்த மலர்களால் தொடுத்த மாலையை அழகிய உயர்ந்த அல்குலில் யாம் அணிந்து மகிழும் பருவமாகிய, ‘சின்னாள்  கழிக’  என்று முன்னாள் நம்மொடு பொய்த்தனர் ஆயினும் – சில நாட்கள் கழியட்டும் என்று முன்னாளில் நம்மிடம் பொய் கூறி சென்றார் ஆயினும், தம்மொடு திருந்து வேல் இளையர் சுரும்பு உண மலைமார் – தம்முடன் திருந்திய வேலையுடைய ஏவலாளர்களும் வண்டுகள் உண்ணும்படி அணிவதற்கு (உண – உண்ண என்பதன் விகாரம்), மா முறி ஈன்று மரக் கொம்பு அகைப்ப – சிறந்த தளிர்களை ஈன்று மரங்களின் கிளைகள் செறியும்படி, உறை கழிந்து உலந்த பின்றை – மழை பெய்து நீங்கிய பின், பொறைய சிறு வெள் அருவித் துவலையின் மலர்ந்த – மலையில் சிறிய வெள்ளை அருவிகளின் நீர்த் துவலைகளால் மலர்ந்த, கருங்கால் நுணவின் பெருஞ்சினை வான் பூ – கரிய அடியையுடைய நுணா மரத்தின் பெரிய கிளைகளில் பூத்த வெள்ளை மலர்கள் (நுணா மரம் – Morinda Tinctoria or Morinda Citrifolia), செம்மணற் சிறு நெறி கம்மென வரிப்பக் காடு கவின் பெறுக – சிவந்த மணலுடைய சிறிய வழிகளில் கம் என்று மணக்குமாறு காடு அழகு அடையட்டும், தோழி – தோழி, ஆடு வளிக்கு ஒல்கு நிலை இற்றி ஒரு தனி நெடுவீழ் கல் கண் சீக்கும் அத்தம் – அசைகின்ற காற்றினால் தளரும் நிலைமையை உடைய இற்றி மரத்தின் தனித்த நீண்ட விழுது மலையின் இடத்தைத் துடைக்கும் பாலை நில வழியில், அல்கு வெயில் நீழல் அசைந்தனர் செலவே – பொருந்திய வெயிலினால் நிழலில் தங்கிச் செல்வதற்கு (நீழல் – நிழல் என்பதன் நீட்டல் விகாரம், செலவே – ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 346, நக்கீரர், மருதத் திணை தோழி தலைவனுக்கு வாயில் மறுத்தது
நகை நன்று அம்ம தானே, இறை மிசை
மாரிச் சுதையின் ஈர்ம்புறத்து அன்ன
கூரல் கொக்கின் குறும்பறைச் சேவல்
வெள்ளி வெண்தோடு அன்ன கயல் குறித்துக்,
கள் ஆர் உவகைக் கலி மகிழ் உழவர்  5
காஞ்சி அம் குறுந்தறி குத்தித், தீஞ்சுவை
மென் கழைக் கரும்பின் நன் பல மிடைந்து,
பெருஞ்செய் நெல்லின் பாசவல் பொத்தி,
வருந்திக் கொண்ட வல்வாய்க் கொடுஞ்சிறை
மீது அழி கடு நீர் நோக்கிப் பைப்பயப்  10
பார்வல் இருக்கும் பயங்கேழ் ஊர!
யாம் அது பேணின்றோ இலமே, நீ நின்
பண் அமை நல் யாழ்ப் பாணனொடு விசி பிணி
மண் ஆர் முழவின் கண் அதிர்ந்து இயம்ப,
மகிழ் துணைச் சுற்றமொடு மட்டு மாந்தி,  15
எம் மனை வாராயாகி முன்னாள்
நும் மனைச் சேர்ந்த ஞான்றை, அம்மனைக்
குறுந்தொடி மடந்தை உவந்தனள், நெடுந்தேர்
இழை அணி யானைப் பழையன் மாறன்
மாட மலி மறுகின் கூடல் ஆங்கண்,  20
வெள்ளத் தானையொடு வேறு புலத்து இறுத்த
கிள்ளி வளவன் நல் அமர் சாஅய்க்,
கடும் பரிப் புரவியொடு களிறு பல வவ்வி
ஏதில் மன்னர் ஊர் கொளக்,
கோதை மார்பன் உவகையின் பெரிதே.  25

பாடல் பின்னணி:  தோழி தலைவனுக்கு வாயில் மறுத்தது. 

பொருளுரை:  வீட்டின் இறப்பின் மேல் மழைக்காலத்தில் சுதை பூசிய ஈரமான வெளிப்புறம் போன்ற சிறகுடைய குறுகக் குறுகப் பறக்கும் ஆண் கொக்கு, வெள்ளியினால் செய்த வெள்ளை மலர் இதழ் போன்ற கயல் மீனைப் பெற எண்ணி, கள்ளினைப் பருகி மகிழ்ந்த உழவர்கள், காஞ்சி மரத்தின் குறிய துண்டுகளை நிலத்தில் குத்தி, இனிய சுவையையும் மெல்லிய தண்டினையுமுடைய கரும்பின் கோல்களைக் கட்டிக் குறுக்கே வைத்து, பெரிய நெற்பயிர்களையுடைய வயலாகிய பெரிய பள்ளத்தில் நீரைத் தேக்கி வருத்தி இயற்றிய வலிய தலையையுடைய வளைந்த அணையின மேலே வழிந்து விரையும் நீரைப் பார்த்து மெல்ல மெல்லச் சென்று நோக்கியிருக்கும் பயன் பொருந்திய ஊரின் தலைவனே!

நீ நின் பண் திறமுடைய நல்ல யாழினையுடைய பாணனுடன் இறுகக் கட்டிய மார்ச்சனை அமைந்த (மண் பூசப்பட்ட) முழவின் கண்கள் முழங்கி ஒலிக்க, மகிழ்ச்சியுற்ற நினக்குத் துணையாகிய நின் சுற்றத்துடன் கள்ளினைப் பருகி, எம் மனைக்கு வராது, முன்னே நும் மனையாகிய நின் பரத்தையின் இல்லத்தில் இருந்த பொழுது,

அம் மனையின்கண் உள்ள சிறிய வளையல்களை அணிந்த நின் பரத்தை, நெடிய தேரினையும் இழைகள் அணிந்த யானைகளையும் உடைய பாண்டிய வேந்தன் பழையன் மாறன் என்பவனை மாடங்கள் மிகுந்த தெருக்களையுடைய கூடலில், வெள்ளம் போன்ற மிக்க சேனையுடன் வேற்றுப் புலத்தில் போர் புரிய வந்து தங்கியிருந்த சோழ வேந்தன் கிள்ளி வளவன் நல்ல போரில் தோற்கடித்து, விரைந்து ஓடும் குதிரைகளுடன் களிற்று யானைகள் பலவற்றையும் கைப்பற்றிக் கொண்டு, பகை மன்னரின் ஊரைப் பற்றிக் கொள்ள, கோதை மார்பன் என்ற சேரன் எய்திய மகிழ்ச்சியை விடவும் பெரிதாக, மகிழ்ச்சி அடைந்தாள்.

யாம் அதனைக் கருதியது இல்லை.  இதனைக் கேட்பாயாக!  நீ மறுப்பது எமக்கு மிகுந்த நகைப்பைத் தருகின்றது.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு ‘பெறற்கு அரும் பெரும் பொருள்’ (தொல்காப்பியம், கற்பியல் 9) என வரும் நூற்பாவின்கண் ‘பிழைத்து வந்து இருந்த கிழவனை நெருங்கி இழைத்து ஆங்கு ஆக்கிக் கொடுத்தற்கண்ணும்’ என வரும் விதி கொள்க.  ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – ‘பெறற்கு அரும் பெரும் பொருள் முடிந்த பின் வந்த’ (தொல்காப்பியம், கற்பியல் 9) என்னுஞ் சூத்திரத்து, ‘பிழைத்து வந்து இருந்த கிழவனை நெருங்கி இழைத்து ஆங்கு ஆக்கிக் கொடுத்தற்கண்ணும்’ என்னும் பகுதிக்கண், ‘பரத்தையர் மனைக்கண் தங்கி வந்து அகனகர் புகாது புறத்திருந்த தலைவனை மிகக் கழறிச் சில மொழிகளைக் கூறி, இதனானே தலைவி மனத்தின்கண் ஊடல் நீங்கும் தன்மை உளதாக்கிக் கூட்டும்’ என்றுரைத்து அதற்கு இச் செய்யுளைக் காட்டினர் நச்சினார்க்கினியர்.  வரலாறு –பழையன் மாறன் (பாண்டியன்), கூடல், கிள்ளி வளவன் (சோழன்), கோதை மார்பன் (சேரன்).

சொற்பொருள்:  நகை நன்று – நீ மறுப்பது மிகுந்த நகைப்பைத் தருகின்றது, அம்ம – கேட்பாயாக, தானே – தான், ஏ அசைநிலைகள், இறை மிசை மாரிச் சுதையின் ஈர்ம்புறத்து அன்ன – வீட்டின் இறப்பின் மேல் மழைக்காலத்தில் சுதை பூசிய ஈரமான வெளிப்புறம் போன்ற (சுதையின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது, ஈர்ம்புறத்து  – ஈர்ம்புறம், அத்துச் சாரியை), கூரல் கொக்கின் குறும்பறைச் சேவல் வெள்ளி வெண்தோடு அன்ன கயல் குறித்து – சிறகுடைய குறுகக் குறுகப் பறக்கும் ஆண் கொக்கு வெள்ளியினால் செய்த வெள்ளை மலர் இதழ் போன்ற கயல் மீனைப் பெற எண்ணி, கள் ஆர் உவகைக் கலி மகிழ் உழவர் – கள்ளினைப் பருகி மகிழ்ந்த உழவர்கள், காஞ்சி அம் குறுந்தறி குத்தித் தீஞ்சுவை மென் கழைக் கரும்பின் நன் பல மிடைந்து – காஞ்சி மரத்தின் குறிய துண்டுகளை நிலத்தில் குத்தி இனிய சுவையையும் மெல்லிய தண்டினையுமுடைய கரும்பின் கோல்களைக் கட்டிக் குறுக்கே வைத்து, பெருஞ்செய் நெல்லின் பாசு அவல் பொத்தி வருந்திக் கொண்ட வல்வாய்க் கொடுஞ்சிறை – பெரிய நெற்பயிர்களையுடைய வயலாகிய பெரிய பள்ளத்தில் நீரைத் தேக்கி வருத்தி இயற்றிய வலிய தலையையுடைய வளைந்த அணையின் (பாசு அவல் – பசிய அவல்), மீது அழி கடு நீர் நோக்கிப் பைப்பயப் பார்வல் இருக்கும் – மேலே வழிந்து விரையும் நீரைப் பார்த்து மெல்ல மெல்லச் சென்று நோக்கியிருக்கும் (பைப்பய – பையப்பைய பைப்பய என மருவியது), பயங்கேழ் ஊர – பயன் பொருந்திய ஊரின் தலைவனே, யாம் அது பேணின்றோ இலமே – யாம் அதனைக் கருதியது இல்லை (பேணின்றோ – ஓகாரம் அசைநிலை, இலமே – ஏகாரம் அசைநிலை), நீ நின் பண் அமை நல் யாழ்ப் பாணனொடு விசி பிணி மண் ஆர் முழவின் கண் அதிர்ந்து இயம்ப – நீ நின் பண் திறமுடைய நல்ல யாழினையுடைய பாணனுடன் இறுகக் கட்டிய மார்ச்சனை அமைந்த (மண் பூசப்பட்ட) முழவின் கண்கள் முழங்கி ஒலிக்க, மகிழ் துணைச் சுற்றமொடு மட்டு மாந்தி – மகிழ்ச்சியுற்ற நினக்குத் துணையாகிய நின் சுற்றத்துடன் கள்ளினைப் பருகி, எம் மனை வாராயாகி முன்னாள் நும் மனைச் சேர்ந்த ஞான்றை – எம் மனைக்கு வராது முன்னே நும் மனையாகிய நின் பரத்தையின் இல்லத்தில் இருந்த பொழுது, அம்மனைக் குறுந்தொடி மடந்தை – அம் மனையின்கண் உள்ள சிறிய வளையல்களை அணிந்த நின் பரத்தை, உவந்தனள் – மகிழ்ச்சி அடைந்தாள், நெடுந்தேர் இழை அணி யானைப் பழையன் மாறன் மாட மலி மறுகின் கூடல் ஆங்கண் – நெடிய தேரினையும் இழைகள் அணிந்த யானைகளையும் உடைய பாண்டிய வேந்தன் பழையன் மாறன் என்பவனை மாடங்கள் மிகுந்த தெருக்களையுடைய கூடலில், வெள்ளத் தானையொடு வேறு புலத்து இறுத்த கிள்ளி வளவன் நல் அமர் சாஅய்க் கடும் பரிப் புரவியொடு களிறு பல வவ்வி ஏதில் மன்னர் ஊர் கொளக் கோதை மார்பன் உவகையின் பெரிதே – வெள்ளம் போன்ற மிக்க சேனையுடன் வேற்றுப் புலத்தில் போர் புரிய வந்து தங்கியிருந்த சோழ வேந்தன் கிள்ளி வளவன் நல்ல போரில் தோற்கடித்து விரைந்து ஓடும் குதிரைகளுடன் களிற்று யானைகள் பலவற்றையும் கைப்பற்றிக் கொண்டு பகை மன்னரின் ஊரைப் பற்றிக் கொள்ள கோதை மார்பன் என்ற சேரன் எய்திய மகிழ்ச்சியை விடவும் பெரிதாக (சாஅய் – அளபெடை, பெரிதே – ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 347, மாமூலனார், பாலைத் திணைதலைவி தோழியிடம் சொன்னது
தோளும் தொல் கவின் தொலைய, நாளும்
நலம் கவர் பசலை நல்கு இன்று நலியச்,
சால் பெருந்தானைச் சேரலாதன்
மால் கடல் ஓட்டிக் கடம்பு அறுத்து இயற்றிய
பண் அமை முரசின் கண் அதிர்ந்தன்ன,  5
கவ்வை தூற்றும் வெவ்வாய்ச் சேரி
அம்பல் மூதூர் அலர் நமக்கு ஒழியச்,
சென்றனர் ஆயினும் செய் வினை அவர்க்கே
வாய்க்க தில், வாழி தோழி! வாயாது
மழை கரந்து ஒளித்த கழை திரங்கு அடுக்கத்து,  10
ஒண் கேழ் வயப் புலி பாய்ந்தென குவவு அடி
வெண்கோட்டு யானை முழக்கிசை வெரீஇக்,
கன்று ஒழித்து ஓடிய புன்தலை மடப் பிடி
கை தலை வைத்த மையல் விதுப்பொடு,
கெடு மகப் பெண்டிரின் தேரும்  15
நெடுமர மருங்கின் மலை இறந்தோரே.

பாடல் பின்னணி:  தலைவன் பிரிவின்கண் தோழிக்குத் தலைவி கூறியது.   

பொருளுரை:  தோழி!  நீ நீடு வாழ்வாயாக!  மழை பெய்யாது மறைந்து ஒளிந்தமையால் மூங்கில்கள் வற்றிய பக்கமலையில், ஒளிரும் நிறமுடைய வலிய புலி பாய்ந்ததால், திரண்ட அடியினையும் வெள்ளை மருப்புகளையும் (தந்தங்களையும்) உடைய களிற்று யானையின் முழங்கும் ஒலியினைக் கேட்டு அஞ்சித், தன் கன்றினை விட்டு ஓடிய பொலிவில்லாத தலையையுடைய இளைய பெண் யானை, கையைத் தலை மீது வைத்துக் கலக்கம் கொண்ட விரைவுடன், தம் மகவினைக் காணாதுத் தேடும் பெண்களைப் போல் தேடித் திரியும், உயர்ந்த மரங்களையுடைய பக்கத்தினையுடைய மலையைக் கடந்து சென்ற நம் தலைவர்,

தோள்கள் பண்டைய அழகை இழக்கவும், ஒவ்வொரு நாளும் அழகைக் கவரும் பசலை அருளின்றி வருந்தவும், நிறைந்த பெரிய சேனையையுடைய சேரலாதன் என்னும் வேந்தன் பெரிய கடலின்கண் பகைவர்களை விரட்டி அவர்களுடைய காவல் மரமாகிய கடம்பினை வெட்டி அமைத்த பண் அமைந்த முரசின் கண் முழங்கினாற்போல், பழியைத் தூற்றும் கொடிய வாயினையுடைய பழைய ஊரின் தெருப் பெண்களின் அம்பலும் அலரும் நம்மிடம் நிற்கும்படி விட்டுச் சென்றார் ஆயினும், அவர் மேற்கொண்ட பொருள் ஈட்டும் வினை கைகூடுவதாக!

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு ‘எஞ்சியோர்க்கும் எஞ்சுதல் இலவே’ (தொல்காப்பியம், அகத்திணையியல் 42) என வரும் விதி கொள்க.  ஒப்புமை – அகநானூறு 127 – வலம்படு முரசின் சேரலாதன் முந்நீர் ஓட்டிக் கடம்பு அறுத்து,பதிற்றுப்பத்து 17 (பாடப்பட்டோன் – இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்) – பலர் மொசிந்து ஓம்பிய திரள் பூங்கடம்பின் கடி உடை முழு முதல் துமிய ஏஎய், வென்று எறி முழங்கு பணை செய்த வெல் போர், நார் அரி நறவின், ஆர மார்பின், போர் அடு தானைச் சேரலாத, பதிற்றுப்பத்து 12 (பாடப்பட்டோன் – இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்) – அரசு தலை பனிப்பக், கடம்பு முதல் தடிந்த கடுஞ்சின வேந்தே, பதிற்றுப்பத்து 17 (பாடப்பட்டோன் – இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்) – பகைவர் பணிந்து திறை பகரக் கொள்ளுநை ஆதலின், துளங்கு பிசிர் உடைய மாக் கடல் நீக்கிக் கடம்பு அறுத்து இயற்றிய வலம்படு வியன் பணை ஆடுநர் பெயர்ந்து வந்து அரும் பலி தூஉய்க், கடிப்புக் கண் உறூஉம் தொடித் தோள் இயவர், இரு முந்நீர்த் துருத்தியுள் முரணியோர்த் தலைச்சென்று, பதிற்றுப்பத்து 20 (பாடப்பட்டோன் – இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்) கடம்பு முதல் தடிந்த கடுஞ்சின முன்பின் நெடுஞ்சேரலாதன்.  வரலாறு –சேரலாதன்.

சொற்பொருள்:  தோளும் தொல் கவின் தொலைய நாளும் நலம் கவர் பசலை நல்கு இன்று நலிய – தோள்கள் பண்டைய அழகை இழக்கவும் ஒவ்வொரு நாளும் அழகைக் கவரும் பசலை அருளின்றி வருந்தவும், சால் பெருந்தானைச் சேரலாதன் மால் கடல் ஓட்டிக் கடம்பு அறுத்து இயற்றிய பண் அமை முரசின் கண் அதிர்ந்தன்ன – நிறைந்த பெரிய சேனையையுடைய சேரலாதன் என்னும் வேந்தன் பெரிய கடலின்கண் பகைவர்களை விரட்டி அவர்களுடைய காவல் மரமாகிய கடம்பினை வெட்டி அமைத்த பண் அமைந்த முரசின் கண் முழங்கினாற்போல் (கடம்ப மம்ர– Anthocephalus cadamba, Kadampa oak), கவ்வை தூற்றும் வெவ்வாய்ச் சேரி அம்பல் மூதூர் அலர் நமக்கு ஒழியச் சென்றனர் ஆயினும் – பழியைத் தூற்றும் கொடிய வாயினையுடைய பழைய ஊரின் தெருப் பெண்களின் அம்பலும் அலரும் நம்மிடம் நிற்கும்படி விட்டுச் சென்றார் ஆயினும் (சேரி ஆகுபெயர் அங்கு வாழும் மக்களுக்கு), செய் வினை அவர்க்கே வாய்க்க – அவர் மேற்கொண்ட பொருள் ஈட்டும் வினை கைகூடுவதாக, தில் – விழைவின்கண் வந்தது, வாழி – நீ நீடு வாழ்வாயாக தோழி – தோழி, வாயாது மழை கரந்து ஒளித்த கழை திரங்கு அடுக்கத்து – மழை பெய்யாது மறைந்து ஒளிந்தமையால் மூங்கில்கள் வற்றிய பக்கமலையில், ஒண் கேழ் வயப் புலி பாய்ந்தென குவவு அடி வெண்கோட்டு யானை முழக்கு இசை வெரீஇக் கன்று ஒழித்து ஓடிய புன்தலை மடப் பிடி – ஒளிரும் நிறமுடைய வலிய புலி பாய்ந்ததால் திரண்ட அடியினையும் வெள்ளை மருப்புகளையும் (தந்தங்களையும்) உடைய களிற்று யானையின் முழங்கும் ஒலியினைக் கேட்டு அஞ்சி (வெரீஇ – அளபெடை, வெருவி என்ற வினையெச்சம் திரிந்து அளபெடுத்தது), தன் கன்றினை விட்டு ஓடிய பொலிவில்லாத தலையையுடைய இளைய பெண் யானை, கை தலை வைத்த மையல் விதுப்பொடு – கையைத் தலை மீது வைத்துக் கலக்கம் கொண்ட விரைவுடன், கெடு மகப் பெண்டிரின் தேரும் – தம் மகவினைக் காணாதுத் தேடும் பெண்களைப் போல் தேடித் திரியும் (பெண்டிரின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), நெடுமர மருங்கின் மலை இறந்தோரே – உயர்ந்த மரங்களையுடைய பக்கத்தினையுடைய மலையைக் கடந்து சென்ற நம் தலைவர் (இறந்தோரே – ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 348, மதுரை இளம்பாலாசிரியன் சேந்தன் கூத்தனார், குறிஞ்சித் திணைதலைவி தோழியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
என் ஆவது கொல் தானே, முன்றில்
தேன் தேர் சுவைய திரள் அரை மாஅத்துக்,
கோடைக்கு ஊழ்த்த கமழ் நறுந்தீங்கனிப்,
பயிர்ப்புறுப் பலவின் எதிர்ச் சுளை அளைஇ,
இறாலொடு கலந்த வண்டு மூசு அரியல்  5
நெடுங்கண் ஆடு அமைப் பழுநிக், கடுந்திறல்
பாப்புக் கடுப்பு அன்ன தோப்பி வான் கோட்டுக்
கடவுள் ஓங்கு வரைக்கு ஓக்கிக், குறவர்
முறித் தழை மகளிர் மடுப்ப மாந்தி,
அடுக்கல் ஏனல் இரும் புனம் மறந்துழி,  10
யானை வவ்வின தினை என நோனாது,
இளையரும் முதியரும் கிளையுடன் குழீஇச்,
சிலை ஆய்ந்து திரிதரும் நாடன்
நிலையா நல்மொழி தேறிய நெஞ்சே?

பாடல் பின்னணி:  தோழி சொல் எடுப்ப, அதைத் தொடர்ந்துத் தலைவி கூறியது.  இவ்வாறு உள்ளது பொ. வே. சோமசுந்தரனார் உரையிலும், ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரையிலும்.  புலியூர்க்கேசிகன் தன் உரையில், தோழி தலைவனைப் பழித்தபொழுது அதனைப் பொறுக்க இயலாத தலைவி கூறியது எனக் குறிப்பிட்டுள்ளார்.

பொருளுரை:  மனையின் முற்றத்தில் தேன் என எண்ணும்படியான சுவையை உடைய திரண்ட அடியையுடைய மா மரத்தின் கோடைக்காலத்தில் முதிர்ந்த மணம் கமழும் இனிய கனிகளுடன் பலா மரத்தின் பிசின் உடைய ஒன்றுக்கு ஒன்று ஒப்பான சுளைகளைக் கலந்து, தேனுடன் கலந்த வண்டு மொய்க்கும் அக்கூட்டினை, நெடிய கணுக்களையுடைய அசையும் மூங்கிலின் குழாயில் அடைத்து நெடிது வைத்து முதிரச் செய்தமையால் உண்டாகிய பாம்பின் சீற்றத்தை ஒத்த கள்ளினை, உயர்ந்த உச்சியையுடைய கடவுள் உறையும் உயர்ந்த மலைக்குப் படைத்து விட்டு, தளிரால் ஆன தழை ஆடை அணிந்த மகளிர் உண்பிக்க அதனைக் குறவர்கள் பருகி, பக்கமலையில் உள்ள பெரிய தினைப்புனக் காவலை மறந்தபொழுது, யானைகள் தினையைக் கவர்ந்து உண்டதைப் பொறுக்காது, இளையவர்களும் முதியவர்களும் சுற்றத்துடன் கூடி வில்லை ஆராய்ந்து கொண்டு திரியும் நாடனின், உறுதியில்லாத நல்ல சொற்களை மெய் என்று தெளிந்த என் நெஞ்சமே!  இனி என்ன ஆகுமோ நம் நிலைமை?

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு ‘மறைந்தவற் காண்டல்’ (தொல்காப்பியம், களவியல் 23) என வரும் நூற்பாவின்கண் ‘நொந்து தெளிவு ஒழிப்பினும்’ என வரும் விதி கொள்க.  பாம்பின் சினம் அன்ன கள் – பாப்புக் கடுப்பு அன்ன தோப்பி (7), சிறுபாணாற்றுப்படை 237 – பாம்பு வெகுண்டன்ன தேறல் நல்கி.  குடித்த பின் காவலை மறந்து –  மகளிர் மடுப்ப மாந்தி அடுக்கல் ஏனல் இரும் புனம் மறந்துழி (9–10), குறிஞ்சிப்பாட்டு – 155– தேம்பிழி தேறல் மாந்தி மகிழ் சிறந்து சேமம் மடிந்த பொழுதின்.  மூங்கிலில் விளைந்த கள்   அகநானூறு 348 – ஆடு அமைப் பழுநிக் கடுந்திறல் பாப்புக் கடுப்பு அன்ன தோப்பி, அகநானூறு 368 – அம் பணை விளைந்த தேக் கள் தேறல், நற்றிணை 276 – வாங்கு அமைப் பழுனிய நறவு உண்டு, பதிற்றுப்பத்து 81 – தூம்பு அகம் பழுனிய தீம் பிழி, திருமுருகாற்றுப்படை 195 – நீடு அமை விளைந்த தேக் கள் தேறல், மலைபடுகடாம் 171 – வேய்ப் பெயல் விளையுள் தேக்கட் தேறல், மலைபடுகடாம் 522 – திருந்து அமை விளைந்த தேக் கள் தேறல்.  எதிர்ச்சுளை (4) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – சமமான சுளைகள், ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – ஒளிபொருந்திய சுளைகள், சுவைமிக்க சுளைகள்.  இறாலொடு (5) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – தேன் அடையுடன், ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – தேனுடன்.  நிலையா நல்மொழி தேறிய நெஞ்சே (14) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – நிலைத்தல் இல்லாத கேட்டற்கினிய பொய்ம்மொழியை மெய்ம்மொழி என்று தெளிந்த என் மட நெஞ்சே, ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – உறுதியல்லாத இனிய சொல்லை மெய்யெனத் தெளிந்த நெஞ்சமே.

சொற்பொருள்:  என் ஆவது – இனி என்ன ஆகுமோ, கொல் – அசைநிலை, தானே – தான் ஏ அசைநிலைகள், முன்றில் தேன் தேர் சுவைய திரள் அரை மாஅத்துக் கோடைக்கு ஊழ்த்த கமழ் நறும் தீங்கனி – மனையின் முற்றத்தில் தேன் என எண்ணும்படியான சுவையை உடைய திரண்ட அடியையுடைய மா மரத்தின் கோடைக்காலத்தில் முதிர்ந்த மணம் கமழும் இனிய கனிகளுடன் (அத்துச் சாரியை), பயிர்ப்பு உறுப் பலவின் எதிர்ச் சுளை அளைஇ – பலா மரத்தின் பிசின் உடைய ஒன்றுக்கு ஒன்று ஒப்பான சுளைகளைக் கலந்து, இறாலொடு கலந்த வண்டு மூசு அரியல் – தேனுடன் கலந்த வண்டு மொய்க்கும் அக்கூட்டினை (அளைஇ – கலந்து, அளபெடை), நெடுங்கண் ஆடு அமைப் பழுநிக் கடுந்திறல் பாப்புக் கடுப்பு அன்ன தோப்பி – நெடிய கணுக்களையுடைய அசையும் மூங்கிலின் குழாயில் அடைத்து நெடிது வைத்து முதிரச் செய்தமையால் உண்டாகிய பாம்பின் சீற்றத்தை ஒத்த கள்ளினை (பாப்பு – வேற்றுமைப் புணர்ச்சிக்கண் மென்தொடர் வன்தொடர் ஆயிற்று), வான் கோட்டுக் கடவுள் ஓங்கு வரைக்கு ஓக்கி – உயர்ந்த உச்சியையுடைய கடவுள் உறையும் உயர்ந்த மலைக்குப் படைத்து விட்டு, குறவர் முறித் தழை மகளிர் மடுப்ப மாந்தி – தளிரால் ஆன தழை ஆடை அணிந்த மகளிர் உண்பிக்க அதனைக் குறவர்கள் பருகி, அடுக்கல் ஏனல் இரும் புனம் மறந்துழி – பக்கமலையில் உள்ள பெரிய தினைப்புனக் காவலை மறந்தபொழுது, யானை வவ்வின தினை என நோனாது – யானைகள் தினையைக் கவர்ந்து உண்டதைப் பொறுக்காது, இளையரும் முதியரும் கிளையுடன் குழீஇச் சிலை ஆய்ந்து திரிதரும் நாடன் – இளையவர்களும் முதியவர்களும் சுற்றத்துடன் கூடி வில்லை ஆராய்ந்து கொண்டு திரியும் நாடன் (குழீஇ – அளபெடை), நிலையா நல்மொழி தேறிய நெஞ்சே – உறுதியில்லாத நல்ல சொற்களை மெய் என்று தெளிந்த என் நெஞ்சே (நெஞ்சே – ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 349, மாமூலனார், பாலைத் திணைதலைவி தோழியிடம் சொன்னது
அரம் போழ் அவ் வளை செறிந்த முன் கை
வரைந்து தாம் பிணித்த தொல் கவின் தொலைய,
எவன் ஆய்ந்தனர் கொல் தோழி, ஞெமன்
தெரிகோல் அன்ன செயிர் தீர் செம்மொழி
உலைந்த ஒக்கல் பாடுநர் செலினே,  5
உரன் மலி உள்ளமொடு முனை பாழாக
அருங்குறும்பு எறிந்த பெருங்கல வெறுக்கை
சூழாது சுரக்கும் நன்னன் நல் நாட்டு,
ஏழில் குன்றத்துக் கவாஅன், கேழ் கொளத்
திருந்து அரை நிவந்த கருங்கால் வேங்கை  10
எரி மருள் கவளம் மாந்திக், களிறு தன்
வரி நுதல் வைத்த வலி தேம்பு தடக்கை
கல் ஊர் பாம்பின் தோன்றும்
சொல் பெயர் தேஎத்த சுரன் இறந்தோரே?

பாடல் பின்னணி:  பிரிவிடை வருந்திய தலைவியைத் தோழி ஆற்றிவிக்க, அவளைப் புலந்து தலைவி கூறியது.

பொருளுரை:  தோழி!  பொருட்களின் அளவை அறியும் துலாக்கோலை ஒத்த குற்றம் இல்லாத நடுநிலைமை உடையவனான, வறுமையால் துன்புற்ற சுற்றத்துடன் பாணர்கள் சென்றால், ஊக்கம் மிகுந்த நெஞ்சுடன், பகைவர்கள் போர்முனையில் பாழ்பட அவர்களின் அரிய அரண்களைத் தாக்கித் திறையாகப் பெற்ற விலை மிக்க அணிகலன்கள் முதலிய செல்வங்களை ஆராயாது வழங்கும், நன்னன் என்னும் மன்னனின் நல்ல நாட்டின்கண் உள்ள ஏழில் மலையின் பக்கமலையில், நிறம் பொருந்திய செவ்விதான அடிமரம் உயர்ந்த கரிய அடியையுடைய வேங்கை மரத்தின்,  தீயை ஒத்த நிறமுடைய பூக்களாகிய உணவினை உண்டுவிட்டு களிற்று யானை தன் வரிகளையுடைய நெற்றியில் வைத்த வலிமை குன்றிய பெரிய தும்பிக்கை, குன்றின் மேல் ஊர்ந்து செல்லும் பாம்பு போல் தோன்றும், மொழி வேறுபட்ட நாட்டிலுள்ள பாலைநில வழிகளைக் கடந்து சென்ற நம் தலைவர்,

அரத்தால் பிளக்கப்பட்டுச் செய்த அழகிய வளையல்கள் செறிந்த என் முன் கையைப் பற்றித் தாம் வரைந்தபொழுது இருந்த, பண்டைய அழகு கெடும்படி, என்ன பொருளைக் கருதினாரோ?

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு ‘எஞ்சியோர்க்கும் எஞ்சுதல் இலவே’ (தொல்காப்பியம், அகத்திணையியல் 42) என வரும் விதி கொள்க.  வரலாறு –நன்னன், ஏழில் மலை.  ஏழில் மலை – அகநானூறு 152–13, 345–7, 349–9, நற்றிணை 391–7, குறுந்தொகை 138–2.  தட – தடவும் கயவும் நளியும் பெருமை (தொல்காப்பியம், உரியியல் 24).  ஒப்புமை – குறிஞ்சிப்பாட்டு 231 – நேர் இறை முன் கை பற்றி நுமர் தர.

சொற்பொருள்:  அரம் போழ் அவ் வளை செறிந்த – அரத்தால் பிளக்கப்பட்டுச் செய்த அழகிய வளையல்கள் செறிந்த, முன் கை வரைந்து தாம் பிணித்த – முன் கையைப் பற்றித் தாம் வரைந்தபொழுது இருந்த, தொல் கவின் தொலைய எவன் ஆய்ந்தனர் – பண்டைய அழகு கெடும்படி என்ன பொருளைக் கருதினாரோ, கொல் – அசைநிலை, தோழி – தோழி, ஞெமன் தெரிகோல் அன்ன செயிர் தீர் செம்மொழி – பொருட்களின் அளவை அறியும் துலாக்கோலை ஒத்த குற்றம் இல்லாத நடுநிலைமை உடையவன், உலைந்த ஒக்கல் பாடுநர் செலினே – வறுமையால் துன்புற்ற சுற்றத்துடன் பாணர்கள் சென்றால், உரன் மலி உள்ளமொடு – ஊக்கம் மிகுந்த நெஞ்சுடன், முனை பாழாக அருங்குறும்பு எறிந்த பெருங்கல வெறுக்கை சூழாது சுரக்கும் – பகைவர்கள் போர்முனையில் பாழ்பட அவர்களின் அரிய அரண்களைத் தாக்கித் திறையாகப் பெற்ற விலை மிக்க அணிகலன்கள் முதலிய செல்வங்களை ஆராயாது வழங்கும், நன்னன் நல் நாட்டு ஏழில் குன்றத்துக் கவாஅன் – நன்னன் என்னும் மன்னனின் நல்ல நாட்டின்கண் உள்ள ஏழில் மலையின் பக்கமலையில் (கவாஅன் – அளபெடை), கேழ் கொளத் திருந்து அரை நிவந்த கருங்கால் வேங்கை – நிறம் பொருந்திய செவ்விதான அடிமரம் உயர்ந்த கரிய அடியையுடைய வேங்கை மரத்தின் (வேங்கை மரம் – Pterocarpus marsupium), எரி மருள் கவளம் மாந்திக் களிறு தன் வரி நுதல் வைத்த வலி தேம்பு தடக்கை – தீயை ஒத்த நிறமுடைய பூக்களாகிய உணவினை உண்டுவிட்டு களிற்று யானை தன் வரிகளையுடைய நெற்றியில் வைத்த வலிமை குன்றிய பெரிய தும்பிக்கை like (மருள் – உவம உருபு), கல் ஊர் பாம்பின் தோன்றும் – குன்றின் மேல் ஊர்ந்து செல்லும் பாம்பு போல் தோன்றும் (பாம்பின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), சொல் பெயர் தேஎத்த சுரன் இறந்தோரே – மொழி வேறுபட்ட நாட்டிலுள்ள பாலைநில வழிகளைக் கடந்து சென்றவர் (தேஎத்த – அளபெடை), சுரன் – சுரம் என்பதன் போலி, இறந்தோரே – ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 350, சேந்தங்கண்ணனார், நெய்தல் திணைதோழி தலைவனிடம் சொன்னது
கழியே சிறுகுரல் நெய்தலொடு காவி கூம்ப,
எறி திரை ஓதம் தரல் ஆனாதே,
துறையே மருங்கின் போகிய மாக்கவை மருப்பின்
இருஞ்சேற்று ஈர் அளை அலவன் நீப்ப,
வழங்குநர் இன்மையின் பாடு ஆன்றன்றே,  5
கொடு நுகம் நுழைந்த கணைக் கால் அத்திரி
வடி மணி நெடுந்தேர் பூண ஏவாது,
ஏந்து எழில் மழைக் கண் இவள் குறையாகச்
சேந்தனை சென்மோ பெருநீர்ச் சேர்ப்ப!
இலங்கு இரும் பரப்பின் எறி சுறா நீக்கி,  10
வலம்புரி மூழ்கிய வான் திமில் பரதவர்
ஒலிதலைப் பணிலம் ஆர்ப்பக் கல்லெனக்,
கலி கெழு கொற்கை எதிர்கொள, இழிதரும்
குவவு மணல் நெடுங்கோட்டு ஆங்கண்
உவக்காண் தோன்றும் எம் சிறு நல் ஊரே.  15

பாடல் பின்னணி:  பகற்குறிக்கண் வந்து நீங்கும் தலைவனுக்குத் தோழி உரைத்தது.  

பொருளுரை:  கடலையுடைய நெய்தல் நிலத்தின் தலைவனே!  உப்பங்கழியில் உள்ள சிறிய கொத்துக்களாக உள்ள நெய்தல் மலர்களும் கருங்குவளை மலர்களும் குவிய, மோதுகின்ற அலைகள் நீர்ப் பெருக்கத்தைத் தருதல் அடங்காத துறையில், பக்கத்தில் நீண்ட பெரிய பிரிவுகளையுடைய கோட்டையுடைய கரிய சேற்றில் உள்ள ஈரமுடைய பொந்திலிருக்கும் நண்டு வெளிப்பட, செல்லுபவர்கள் இல்லாமையால் ஒலி அடங்கியது,

விளங்கும் பெரிய கடல் பரப்பில் தாக்கும் சுறா மீன்களை ஒதுக்கி, வலம்புரிச் சங்குகளை எடுப்பதற்கு மூழ்கிய பெரிய படகினையுடைய பரதவர்கள், ஒலிய எழுப்பும் சங்குகளின் ஆரவாரத்துடன் கொற்கை மக்கள் எதிர்கொள்ள, படகிலிருந்து கீழே இறங்கும், குவிந்த மணலையுடைய நீண்ட கரையையுடைய அவ்விடத்தில் காண்பாயாக.  எம் சிறிய நல்ல ஊர் ஊங்கே தோன்றும். 

வளைந்த நுகத்தில் பூட்டப்பட்ட திரண்ட கால்களையுடைய கோவேறு கழுதையை வடித்த மணிகளையுடைய நின் நெடிய தேரில் பூணும்படி நின் பாகனுக்கு ஆணையிடாது, உயர்ந்த அழகிய குளிர்ந்த கண்களையுடைய இவள் பொருட்டுத் தங்கிவிட்டு நீ செல்வாயாக.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு ‘நாற்றமும் தோற்றமும்’ (தொல்காப்பியம், களவியல் 23) என வரும் நூற்பாவின்கண் ‘வேளாண் பெருநெறி வேண்டியவிடத்தும்’ என வரும் விதி கொள்க.  வான் திமில் (11) – ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – சிறந்த படகு, பொ. வே. சோமசுந்தரனார் உரை – பெரிய படகு.  வரலாறு –கொற்கை.  மோ – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம், இடையியல் 26).

சொற்பொருள்:  கழியே சிறு குரல் நெய்தலொடு காவி கூம்ப – உப்பங்கழியில் உள்ள சிறிய கொத்துக்களாக உள்ள நெய்தல் மலர்களும் கருங்குவளை மலர்களும் குவிய, எறி திரை ஓதம் தரல் ஆனாதே துறையே – மோதுகின்ற அலைகள் நீர்ப் பெருக்கத்தைத் தருதல் அடங்காத துறை (ஆனாதே, துறையே – ஏகாரம் அசைநிலைகள்), மருங்கின் போகிய மாக் கவை மருப்பின் இருஞ்சேற்று ஈர் அளை அலவன் நீப்ப – பக்கத்தில் நீண்ட பெரிய பிரிவுகளையுடைய கோட்டையுடைய கரிய சேற்றில் உள்ள ஈரமுடைய பொந்திலிருக்கும் நண்டு வெளிப்பட, வழங்குநர் இன்மையின் பாடு ஆன்றன்றே – செல்லுபவர்கள் இல்லாமையால் ஒலி அடங்கியது (ஆன்றன்றே – ஏகாரம் அசைநிலை, an expletive), கொடு நுகம் நுழைந்த கணைக் கால் அத்திரி வடி மணி நெடுந்தேர் பூண ஏவாது – வளைந்த நுகத்தில் பூட்டப்பட்ட திரண்ட கால்களையுடைய கோவேறு கழுதையை வடித்த மணிகளையுடைய நின் நெடிய தேரில் பூணும்படி நின் பாகனுக்கு ஆணையிடாது, ஏந்து எழில் மழைக் கண் இவள் குறையாகச் சேந்தனை சென்மோ – உயர்ந்த அழகிய குளிர்ந்த கண்களையுடைய இவள் பொருட்டுத் தங்கிவிட்டு நீ செல்வாயாக (மோ – முன்னிலையசை), பெருநீர்ச் சேர்ப்ப – கடலையுடைய நெய்தல் நிலத்தின் தலைவனே (பெருநீர் – கடல், சேர்ப்ப – அண்மை விளி), இலங்கு இரும் பரப்பின் எறி சுறா நீக்கி வலம்புரி மூழ்கிய வான் திமில் பரதவர் – விளங்கும் பெரிய கடல் பரப்பில் தாக்கும் சுறா மீன்களை ஒதுக்கி வலம்புரிச் சங்குகளை எடுப்பதற்கு மூழ்கிய பெரிய படகினையுடைய பரதவர்கள் (எறி சுறா – வினைத்தொகை), ஒலிதலைப் பணிலம் ஆர்ப்பக் கல்லெனக் கலி கெழு கொற்கை எதிர்கொள இழிதரும் – ஒலியை எழுப்பும் சங்குகளின் ஆரவாரத்துடன் கொற்கை மக்கள் எதிர்கொள்ள  படகிலிருந்து கீழே இறங்கும் (கல்லென – ஒலிக்குறிப்பு மொழி), குவவு மணல் நெடுங்கோட்டு ஆங்கண் – குவிந்த மணலையுடைய நீண்ட கரையையுடைய அவ்விடத்தில்,  உவக்காண் – ஊங்கே காண்பாயாக, தோன்றும் எம் சிறு நல் ஊரே – எம் சிறிய நல்ல ஊர் தோன்றும் (ஊரே – ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 351, பொருந்தில் இளங்கீரனார், பாலைத் திணைதலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது
வேற்று நாட்டு உறையுள் விருப்புறப் பேணி,
பெறல் அருங்கேளிர் பின் வந்து விடுப்ப,
பொருள் அகப்படுத்த புகல் மலி நெஞ்சமொடு
குறை வினை முடித்த நிறைவு இன் இயக்கம்,
அறிவுறூஉம் கொல்லோ தானே, கதிர் தெற,  5
கழல் இலை உகுத்த கால் பொரு தாழ் சினை
அழல் அகைந்தன்ன அம் குழைப் பொதும்பில்,
புழல் வீ இருப்பைப் புன் காட்டு அத்தம்,
மறுதரல் உள்ளமொடு குறுகத் தோற்றிய
செய்குறி ஆழி வைகல் தோறு எண்ணி,  10
எழுது சுவர் நனைந்த அழுது வார் மழைக் கண்
விலங்கு வீழ் அரிப் பனி பொலங்குழைத் தெறிப்ப,
திருந்திழை முன் கை அணல் அசைத்து ஊன்றி
இருந்து அணை மீது பொருந்துழிக் கிடக்கை
வருந்து தோள் பூசல் களையும் மருந்தென,  15
உள்ளுதொறு படூஉம் பல்லி
புள்ளுத் தொழுது உறைவி செவி முதலானே?

பாடல் பின்னணி:  தலைவன் தலைவியைப் பிரிந்து போய்த் தான் வேண்டுமளவு பொருளீட்டிக் கொண்டு இனிதே மீண்டு வருபவன், இடை வழியில் தலைவியை நினைந்து அவட்கு இரங்கித் தன் நெஞ்சிற்குச் சொல்லியது என்றவாறு. 

பொருளுரை:  வேற்று நாட்டு உறையுள் விருப்புறப் பேணி பெறல் அருங்கேளிர் பின் வந்து விடுப்ப – வேறு நாட்டிற்குச் சென்று தங்குதலில் விருப்பம் மிகக் கொண்டு பெறுவதற்கு அரிய சுற்றத்தார் பின் வந்து விடைதரச் சென்று, பொருள் அகப்படுத்த புகல் மலி நெஞ்சமொடு குறை வினை முடித்த நிறைவு இன் இயக்கம் – பொருளை ஈட்டிய விருப்பம் மிகுந்த நெஞ்சுடன் வினையைச் செய்து முடித்ததால் ஆகிய நிறைவுடன் கூடிய இனிய செலவை, அறிவுறூஉம் கொல்லோ – அறிவுறுத்துமோ (கொல்லோ – ஓகாரம் அசைநிலை), தானே – தான் ஏ அசைநிலைகள், கதிர் தெற கழல் இலை உகுத்த கால் பொரு தாழ் சினை அழல் அகைந்தன்ன – ஞாயிற்றின் கதிர்கள் சுடுவதால் காம்பு கழன்ற இலைகளை உதிர்த்த காற்று மோதும் தாழ்ந்த கிளைகளில் தீயானது தழைத்தாற்போல், அம் குழைப் பொதும்பில் புழல் வீ இருப்பைப் புன் காட்டு அத்தம் – அழகிய தளிர்களையுடைய இருப்பை மரச்செறிவில் உட்துளை பொருந்திய பூக்களையுடைய பொலிவு இல்லாத காட்டு வழியில், மறுதரல் உள்ளமொடு குறுக – மீளும் எண்ணத்துடன் நெருங்கி வரவும், தோற்றிய செய்குறி ஆழி வைகல் தோறு எண்ணி எழுது சுவர் நனைந்த அழுது வார் மழைக் கண் விலங்கு வீழ் அரிப் பனி பொலங்குழைத் தெறிப்ப – சுழித்த குறியாகிய வட்டத்தை நாள்தோறும் எண்ணி அவை எழுதப்பட்ட சுவர் நனைவதற்குக் காரணமான அழுததால் நீண்ட குளிர்ந்த கண்களிலிருந்து விலகி விழும் மெல்லிய கண்ணீர்த் துளிகள் பொன் காதணிகளில் தெறிப்ப, திருந்திழை முன் கை அணல் அசைத்து ஊன்றி இருந்து – திருந்திய அணிகலன்களை அணிந்த தலைவலி முன்கையை தன் நாடியில் வைத்து ஊன்றி இருந்து, அணை மீது பொருந்துழிக் கிடக்கை – அணையின் மேல் இருந்து பின் படுக்கையில் பொருந்திய பொழுது, வருந்து தோள் பூசல் களையும் மருந்தென உள்ளுதொறு – துன்புறும் தோளின் வருத்தத்தை நீக்கும் மருந்து என்று நினைக்குந்தோறும், படூஉம் பல்லி புள்ளுத் தொழுது உறைவி செவி முதலானே – ஒலிக்கும் பல்லியின் ஓசையை நல்ல நிமித்தமாகக் கொண்டு கைகூப்பித் தொழுது இருக்கும் செவியின்கண்

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு, ‘கரணத்தின் அமைந்து முடிந்த காலை’ (தொல்காப்பியம், கற்பியல் 5) என வரும் நூற்பாவின்கண் ‘மீட்டு வரவு ஆய்ந்த வகையின்கண்ணும்’ என வரும் விதி கொள்க.  ஆழி (10) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – மகளிர் குறிபார்த்தற்கு விரலால் சுழிக்கின்ற வட்டம்.  ஒவ்வொரு நாளும் சுவரில் வட்டம் கீறிப்பார்த்தலால் அவ்வட்டங்களே தலைவன் பிரிந்த நாளை அறிவுறுத்துவனவாகவும் அமையும்.  ஆதலால் அவற்றைச் சுவரோரத்தில் நின்று எண்ணுங்கால் அவர் கண்ணீர் சுவரை நனைத்துவிடும்.  பல்லி நிமித்தம் – அகநானூறு 9, 88, 151, 289, 351, 387, குறுந்தொகை 16, 140, நற்றிணை 98, 169, 246, 333, கலித்தொகை 11.  பறவை நிமித்தம் – நற்றிணை 161.  நல்ல நிமித்தம் பொருட்டுக் காத்திருத்தல் – நற்றிணை 40, முல்லைப்பாட்டு 11. 

சொற்பொருள்:  வேற்று நாட்டு உறையுள் விருப்புறப் பேணி பெறல் அருங்கேளிர் பின் வந்து விடுப்ப – வேறு நாட்டிற்குச் சென்று தங்குதலில் விருப்பம் மிகக் கொண்டு பெறுவதற்கு அரிய சுற்றத்தார் பின் வந்து விடைதரச் சென்று, பொருள் அகப்படுத்த புகல் மலி நெஞ்சமொடு குறை வினை முடித்த நிறைவு இன் இயக்கம் – பொருளை ஈட்டிய விருப்பம் மிகுந்த நெஞ்சுடன் வினையைச் செய்து முடித்ததால் ஆகிய நிறைவுடன் கூடிய இனிய செலவை, அறிவுறூஉம் கொல்லோ – அறிவுறுத்துமோ (அறிவுறூஉம் – அளபெடை, கொல்லோ – கொல் ஐயப்பொருட்டு வந்த இடைச்சொல், ஓ அசைநிலை), னே – தான் ஏ அசைநிலைகள், கதிர் தெற கழல் இலை உகுத்த கால் பொரு தாழ் சினை அழல் அகைந்தன்ன – ஞாயிற்றின் கதிர்கள் சுடுவதால் காம்பு கழன்ற இலைகளை உதிர்த்த காற்று மோதும் தாழ்ந்த கிளைகளில் தீயானது தழைத்தாற்போல், அம் குழைப் பொதும்பில் புழல் வீ இருப்பைப் புன் காட்டு அத்தம் – அழகிய தளிர்களையுடைய இருப்பை மரச்செறிவில் உட்துளை பொருந்திய பூக்களையுடைய பொலிவு இல்லாத காட்டு வழியில் (இருப்பை மரம்– இலுப்பை மரம், வஞ்சி மரம், Indian Butter Tree, South Indian Mahua), மறுதரல் உள்ளமொடு குறுக – மீளும் எண்ணத்துடன் நெருங்கி வரவும், தோற்றிய செய்குறி ஆழி வைகல் தோறு எண்ணி எழுது சுவர் நனைந்த அழுது வார் மழைக் கண் விலங்கு வீழ் அரிப் பனி பொலங்குழைத் தெறிப்ப – சுழித்த குறியாகிய வட்டத்தை நாள்தோறும் எண்ணி அவை எழுதப்பட்ட சுவர் நனைவதற்குக் காரணமான அழுததால் நீண்ட குளிர்ந்த கண்களிலிருந்து விலகி விழும் மெல்லிய கண்ணீர்த் துளிகள் பொன் காதணிகளில் தெறிப்ப, திருந்திழை முன் கை அணல் அசைத்து ஊன்றி இருந்து – திருந்திய அணிகலன்களை அணிந்த தலைவலி முன்கையை தன் நாடியில் வைத்து ஊன்றி இருந்து (திருந்திழை – அன்மொழித்தொகை), அணை மீது பொருந்துழிக் கிடக்கை – அணையின் மேல் இருந்து பின் படுக்கையில் பொருந்திய பொழுது, வருந்து தோள் பூசல் களையும் மருந்தென உள்ளுதொறு – துன்புறும் தோளின் வருத்தத்தை நீக்கும் மருந்து என்று நினைக்குந்தோறும், படூஉம் பல்லி புள்ளுத் தொழுது உறைவி செவி முதலானே – ஒலிக்கும் பல்லியின் ஓசையை நல்ல நிமித்தமாகக் கொண்டு கைகூப்பித் தொழுது இருக்கும் செவியின்கண் (படூஉம் – அளபெடை, முதலானே – ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 352, அஞ்சியத்தை மகள் நாகையார், குறிஞ்சித் திணைதலைவி தோழியிடம் சொன்னது
“முடவு முதிர் பலவின் குடம் மருள் பெரும்பழம்
பல் கிளைத் தலைவன் கல்லாக் கடுவன்,
பாடு இமிழ் அருவிப் பாறை மருங்கின்
ஆடு மயில் முன்னது ஆகக் கோடியர்
விழவு கொள் மூதூர் விறலி பின்றை  5
முழவன் போல அகப்படத் தழீஇ,
இன் துணைப் பயிரும் குன்ற நாடன்
குடி நன்கு உடையன், கூடுநர்ப் பிரியலன்,
கெடு நா மொழியலன், அன்பினன்”, என நீ
வல்ல கூறி வாய்வதின் புணர்த்தோய்,  10
நல்லை காண் இனிக் காதலம் தோழி,
கடும் பரி புரவி நெடுந்தேர் அஞ்சி
நல்லிசை நிறுத்த நயவரு பனுவல்,
தொல்லிசை நிறீஇய உரை சால் பாண்மகன்
எண்ணு முறை நிறுத்த பண்ணின் உள்ளும்,  15
புதுவது புனைந்த திறத்தினும்
வதுவை நாளினும் இனியனால் எமக்கே.

பாடல் பின்னணி:  (1) வரைவு எய்திய பின்றை மண மனைக்கண் சென்ற தோழிக்குத் தலைவி சொல்லியது.  (2) தலைவன் வரைய வருவதைக் கண்ட தோழி அச்செய்தியை தலைவியிடம் கூற, தலைவி அவளைப் பாராட்டிச் சொல்லியது.  

பொருளுரை:  அன்புமிக்க தோழியே!  இப்பொழுது ஆராயுங்கால் நீ மிகவும் நன்மையுடையை.

வளைந்த முதிர்ந்த பலா மரத்தின் குடம் போன்ற பெரிய பழத்தைப் பல சுற்றத்திற்குத் தலைவனான கல்லாத ஆண் குரங்கு, பெரிதும் முழங்கும் அருவியையுடைய பாறையின் பக்கத்தில், ஆடும் மயில் தனக்கு முன் நிற்க, கூத்தர்கள் விழாவினைக் கொண்டாடும் பண்டைய ஊரில் விறலியின் பின் நிற்கும் முழவு இசைப்பவன் போல் தன்னகத்தில் பொருந்தத் தழுவிக்கொண்டு, இனிய தன் துணையான பெண்குரங்கை அழைக்கும் மலைநாட்டின் தலைவன் நல்ல குடியில் பிறந்தவன், தன்னுடன் கூடியவர்களைப் பிரிய மாட்டான், கேடு விளைவிக்கும் சொற்களை நாவால் கூற மாட்டான், அன்பு உடையவன், என்று அவனுடைய சிறப்புகளைக் கூறி என்னை அவனுடன் கூட்டுவித்தாய்.

விரைந்து ஓடும் குதிரைகள் பூண்ட உயர்ந்த தேரினையுடைய அதியமான் அஞ்சியின் பழைய புகழை நிலைபெறச் செய்த புகழ்பெற்ற பாணன், நல்ல இசையை வரையறை செய்த இனிய நூலின், எண்ணின் முறைப்படி இயற்றிய பண்களைக் காட்டிலும், புதுமையாக இயற்றிய திறத்தைக் காட்டிலும், திருமணம் செய்த நாளைவிடவும் எமக்கு இனியவனாக உள்ளான்.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு ‘அவனறிவு ஆற்ற அறியும் ஆகலின்’ (தொல்காப்பியம், கற்பியல் 6) என வரும் நூற்பாவின்கண் ‘நிறுத்தற்கண்ணும்’ என வரும் விதி கொள்க.  ஆசிரியர் இளம்பூரண அடிகளார் இதற்கு இதனைக் காட்டி, ‘தலைவனது பண்பினை தோழி கூறியவாற்றால் தான் நிறுத்துக் கூறுதற்கண்ணும் என்றவாறு’ என விளக்குவார்.  காதல் அம் தோழி (11) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – அன்பிற் சிறந்த அழகுடைய என் ஆருயிர் தோழியே.  நற்றிணை 25ம் பாடல் உரையில் இவர் ‘காதலையுடைய தோழி’ எனப் பொருள் கொடுத்துள்ளார்.  அம் என்பதை அசை எனக் கொண்டுள்ளார்.  நற்றிணை 327ம் பாடலில் ‘அன்புமிக்க தோழி’ எனப் பொருள் கொடுத்துள்ளார்.  பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – நற்றிணை 25ம் பாடல் – காதலையுடைய தோழி, நற்றிணை 327ம் பாடல் – என்பால் அன்புமிக்க தோழி.  விறலி – ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – விறல்பட ஆடுபவள்.  உள்ளுறை உவமம் – ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – பல்கிளைத் தலைவனான கடுவன் பலாப் பழத்தைத் தழுவித் துணையை அழைக்கும் குன்ற நாடன் என்றது, தலைவன் பல சுற்றத்தையும் பேணித், தலைவிபால் மிக்க அன்புடையவனாக இருப்பன் என்பது.  வாய்வதின் (10) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – வாய்க்கும் வழியில் முயன்று, ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – பொருத்தமுற.  வரலாறு –அஞ்சி (அதியமான் நெடுமான் அஞ்சி).  எண்ணு முறை (10) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – எண்ணுகின்ற முறைப்படி, ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – அலகு முறைப்படி அமைந்த (அலகு – சுருதி).   

சொற்பொருள்:  முடவு முதிர் பலவின் குடம் மருள் பெரும்பழம் பல் கிளைத் தலைவன் கல்லாக் கடுவன் – வளைந்த முதிர்ந்த பலா மரத்தின் குடம் போன்ற பெரிய பழத்தைப் பல சுற்றத்திற்குத் தலைவனான கல்லாத ஆண் குரங்கு, பாடு இமிழ் அருவிப் பாறை மருங்கின் – பெரிதும் முழங்கும் அருவியையுடைய பாறையின் பக்கத்தில், ஆடு மயில் முன்னது ஆகக் கோடியர் விழவு கொள் மூதூர் – ஆடும் மயில் தனக்கு முன் நிற்க கூத்தர்கள் விழாவினைக் கொண்டாடும் பண்டைய ஊரில், விறலி பின்றை முழவன் போல அகப்படத் தழீஇ இன் துணைப் பயிரும் குன்ற நாடன் – விறலியின் பின் நிற்கும் முழவு இசைப்பவன் போல் தன்னகத்தில் பொருந்தத் தழுவிக்கொண்டு இனிய தன் துணையான பெண்குரங்கை அழைக்கும் மலைநாட்டின் தலைவன் (தழீஇ – அளபெடை), குடி நன்கு உடையன் – நல்ல குடியில் பிறந்தவன், கூடுநர்ப் பிரியலன் – தன்னுடன் கூடியவர்களைப் பிரிய மாட்டான், கெடு நா மொழியலன் – கேடு விளைவிக்கும் சொற்களை நாவால் கூற மாட்டான், அன்பினன் – அன்பு உடையவன், என நீ வல்ல கூறி வாய்வதின் புணர்த்தோய் – என்று அவனுடைய சிறப்புகளைக் கூறி என்னை அவனுடன் கூட்டுவித்தாய், நல்லை காண் – ஆராயுங்கால் நீ மிகவும் நன்மையுடையை, இனி – இப்பொழுது, காதல் அம் தோழி – அன்புமிக்க தோழியே (அம் அசைநிலை), கடும் பரி புரவி நெடுந்தேர் அஞ்சி – விரைந்து ஓடும் குதிரைகள் பூண்ட உயர்ந்த தேரினையுடைய அதியமான் அஞ்சியின், நல்லிசை நிறுத்த நயவரு பனுவல் – நல்ல இசையை வரையறை செய்த இனிய நூலின், தொல்லிசை நிறீஇய உரை சால் பாண்மகன் – பழைய புகழை நிலைபெறச் செய்த புகழ்பெற்ற பாணன் (நிறீஇய – அளபெடை), எண்ணு முறை நிறுத்த பண்ணின் உள்ளும் – எண்ணின் முறைப்படி இயற்றிய பண்களைக் காட்டிலும் (பண்ணின் – இன் உறழ்ச்சிப் பொருளில் வந்தது), புதுவது புனைந்த திறத்தினும் – புதுமையாக இயற்றிய திறத்தைக் காட்டிலும், வதுவை நாளினும் இனியனால் எமக்கே – திருமணம் செய்த நாளைவிடவும் எமக்கு இனியவனாக உள்ளான் (இனியனால் – இனிய + ஆல், ஆல் அசைநிலை, எமக்கே – ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 353, மதுரை அளக்கர் ஞாழலார் மகனார் மள்ளனார், பாலைத் திணை தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது
ஆள் வினைப் பிரிதலும் உண்டோ? பிரியினும்
கேள் இனி! வாழிய நெஞ்சே! நாளும்
கனவுக் கழிந்தனையவாகி நனவின்
நாளது செலவும் மூப்பினது வரவும்,
அரிது பெறு சிறப்பின் காமத்து இயற்கையும்  5
இந்நிலை அறியாய் ஆயினும், செந்நிலை
அமை ஆடு அம் கழை தீண்டிக், கல்லென
ஞெமை இலை உதிர்த்த எரிவாய்க் கோடை
நெடுவெண்களரி நீறு முகந்து சுழலக்
கடுவெயில் திருகிய வேனில் வெங்காட்டு  10
உயங்கு நடை மடப் பிணை தழீஇய வயங்கு பொறி
அறு கோட்டு எழில் கலை அறு கயம் நோக்கித்,
தெண் நீர் வேட்ட சிறுமையின் தழை மறந்து,
உண் நீர் இன்மையின் ஒல்குவன தளர,
மரம் நிழல் அற்ற இயவின் சுரன் இறந்து,  15
உள்ளுவை அல்லையோ மற்றே, உள்ளிய
விருந்து ஒழிவு அறியாப் பெருந்தண் பந்தர்,
வருந்தி வருநர் ஓம்பித் தண்ணெனத்
தாது துகள் உதிர்த்த தாழை அம் கூந்தல்
வீழ் இதழ் அலரி மெல்லகம் சேர்த்தி  20
மகிழ் அணி முறுவல் மாண்ட சேக்கை,
நம்மொடு நன் மொழி நவிலும்
பொம்மல் ஓதிப் புனை இழை குணனே?

பாடல் பின்னணி:  முன்னொரு காலத்தில் பொருள்வயிற் பிரிந்த தலைவன் பொருள் முற்றி வந்திருந்த காலத்தில், மீண்டும் பொருள் கடாவின நெஞ்சிற்குச் சொல்லியது. 

பொருளுரை:  நெஞ்சே – என் நெஞ்சே!  நீ நீடு வாழ்வாயாக!  பொருள் ஈட்டும் முயற்சியால் யாம் பிரிதலும் கூடுமோ?  யான் கூறுவதை இப்பொழுது நீ கேட்பாயாக.

நாள்தோறும் கனவில் பொருட்கள் தோன்றி மறையும் இயல்புடையனவாகி, நனவின்கண் நாட்கள் கழிதலும், முதுமையின் வரவும், அரிதாகப் பெறும் சிறப்பினையுடைய காதலின் தன்மையும், ஆகிய இவற்றின் நிலையை நீ அறிந்திலாய் ஆயினும்,

செவ்விதான நிலையையுடைய மூங்கிலின் அசையும் தண்டுகளைத் தாக்கி கல்லென்னும் ஒலியுடன் ஞெமை மரத்தின் இலைகளை உதிர்த்த மிக்க வெப்பம் பொருந்திய கோடைக்காற்று, நீண்ட வெள்ளை நிறக் களர் நிலத்தின் புழுதியை முகந்துகொண்டு சுழன்று கொடிய வெயில் அழித்த வேனிற்காலத்தில் வெப்பம் மிகுந்த காட்டில், வருந்திய நடையையுடைய இளைய பெண் மானை தழுவிச் செல்லும் விளங்கும் புள்ளிகளையும் அறுத்தாற்போல் தோன்றும் கொம்பினையும் உடைய அழகிய ஆண்மான், நீர் இல்லாத குளத்தினை நோக்கிச்சென்று தெளிந்த நீர் வேட்கையின் துன்பத்தால் தழை உண்ணுவதை மறந்து, உண்ணும் நீர் இல்லாதமையால் துன்புற்றுத் தளர, மரங்களின் நிழல் இல்லாத வழிகளையுடைய பாலை நிலத்தைக் கடந்து,

தன் மனையை நினைத்து வரும் விருந்தினர் ஒழிதல் அறியாத, பெரிய குளிர்ந்த பந்தலின்கண், வருந்தி வருபவர்களைப் பாதுகாத்து, குளிர்ச்சியாகத் தாழையின் தாதாகிய தூளை அப்பிய அழகிய பின்னலில் விரும்பப்படும் மலர்களின் இதழ்களைச் சேர்த்துப் பின்னி, மகிழ்ச்சியை அழகுபெறக் கொண்ட புன்னகையுடன் மாண்புற்ற பள்ளியின்கண் இருந்து நம்மிடம் நல்ல சொற்களைக் கூறும் பொலிவுடைய கூந்தலையும் அழகிய அணிகலன்களையும் உடைய நம் தலைவியின் இயல்புகளை, எண்ணுவாய் இல்லையா?

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு ‘நாளது சின்மையும் இளமையது அருமையும் தாளாண் பக்கமும் தகுதியது அமைதியும் இன்மையது இளிவும் உடைமையது உயர்ச்சியும் அன்பினது அகலமும் அகற்சியது அருமையும் ஒன்றாப் பொருள்வயின் ஊக்கிய பாலினும்’ (தொல்காப்பியம், அகத்திணையியல் 41) என வரும் விதி கொள்க.  அறு கோட்டு (12) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – அறுத்தாற் போன்ற கொம்பினையுடைய, ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – அறல்பட்ட கொம்பினையுடைய.

சொற்பொருள்:  ஆள் வினைப் பிரிதலும் உண்டோ பிரியினும் – பொருள் ஈட்டும் முயற்சியால் யாம் பிரிதலும் கூடுமோ, கேள் இனி – யான் கூறுவதை இப்பொழுது நீ கேட்பாயாக, வாழிய – நீ நீடு வாழ்வாயாக, நெஞ்சே – என் நெஞ்சே, நாளும் கனவுக் கழிந்தனையவாகி நனவின் நாளது செலவும் – நாள்தோறும் கனவில் பொருட்கள் தோன்றி மறையும் இயல்புடையனவாகி நனவின்கண் நாட்கள் கழிதலும், மூப்பினது வரவும் அரிது பெறு சிறப்பின் காமத்து இயற்கையும் – முதுமையின் வரவும் அரிதாகப் பெறும் சிறப்பினையுடைய காதலின் தன்மையும், இந்நிலை அறியாய் ஆயினும் – இந்நிலையை நீ அறிந்திலாய் ஆயினும், செந்நிலை அமை ஆடு அம் கழை தீண்டிக் கல்லென ஞெமை இலை உதிர்த்த எரிவாய்க் கோடை – செவ்விதான நிலையையுடைய மூங்கிலின் அசையும் தண்டுகளைத் தாக்கி கல்லென்னும் ஒலியுடன் ஞெமை மரத்தின் இலைகளை உதிர்த்த மிக்க வெப்பம் பொருந்திய கோடைக்காற்று (ஞெமை மரம் – Anogeissus latifolia), நெடு வெண் களரி நீறு முகந்து சுழலக் கடு வெயில் திருகிய வேனில் வெங்காட்டு – நீண்ட வெள்ளை நிறக் களர் நிலத்தின் புழுதியை முகந்துகொண்டு சுழன்று கொடிய வெயில் அழித்த வேனிற்காலத்தில் வெப்பம் மிகுந்த காட்டில், உயங்கு நடை மடப் பிணை தழீஇய வயங்கு பொறி அறு கோட்டு எழில் கலை – வருந்திய நடையையுடைய இளைய பெண் மானை தழுவிச் செல்லும் விளங்கும் புள்ளிகளையும் அறுத்தாற்போல் தோன்றும் கொம்பினையும் உடைய அழகிய ஆண்மான் (தழீஇய – அளபெடை), அறு கயம் நோக்கித் தெண் நீர் வேட்ட சிறுமையின் தழை மறந்து – நீர் இல்லாத குளத்தினை நோக்கிச்சென்று தெளிந்த நீர் வேட்கையின் துன்பத்தால் தழை உண்ணுவதை மறந்து, உண் நீர் இன்மையின் ஒல்குவன தளர – உண்ணும் நீர் இல்லாதமையால் துன்புற்றுத் தளர, மரம் நிழல் அற்ற இயவின் சுரன் இறந்து – மரங்களின் நிழல் இல்லாத வழிகளையுடைய பாலை நிலத்தைக் கடந்து (சுரன் – சுரம் என்பதன் போலி), உள்ளுவை அல்லையோ – எண்ணுவாய் இல்லையா, மற்றே – மற்று ஏ அசைநிலைகள், உள்ளிய விருந்து ஒழிவு அறியாப் பெருந்தண் பந்தர் வருந்தி வருநர் ஓம்பி – தன் மனையை நினைத்து வரும் விருந்தினர் ஒழிதல் அறியாத பெரிய குளிர்ந்த பந்தலின்கண் வருந்தி வருபவர்களைப் பாதுகாத்து (பந்தர் – பந்தல் என்பதன் போலி), தண்ணெனத் தாது துகள் உதிர்த்த தாழை அம் கூந்தல் வீழ் இதழ் அலரி மெல் அகம் சேர்த்தி – குளிர்ச்சியாகத் தாழையின் தாதாகிய தூளை அப்பிய அழகிய பின்னலில் விரும்பப்படும் மலர்களின் இதழ்களைச் சேர்த்துப் பின்னி, மகிழ் அணி முறுவல் மாண்ட சேக்கை நம்மொடு நன் மொழி நவிலும் பொம்மல் ஓதிப் புனை இழை குணனே – மகிழ்ச்சியை அழகுபெறக் கொண்ட புன்னகையுடன் மாண்புற்ற பள்ளியின்கண் இருந்து நம்மிடம் நல்ல சொற்களைக் கூறும் பொலிவுடைய கூந்தலையும் அழகிய அணிகலன்களையும் உடைய நம் தலைவியின் இயல்புகளை (புனை இழை – அன்மொழித்தொகை, குணன் – குணம் என்றதன் போலி, ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 354, மதுரைத் தமிழ்க் கூத்தன் கடுவன் மள்ளனார், முல்லைத் திணை தலைவனிடம் அருகில் உள்ளவர்கள் சொன்னது
மதவலி யானை மறலிய பாசறை
இடி உமிழ் முரசம் பொருகளத்து இயம்ப,
வென்று கொடி எடுத்தனன் வேந்தனும், கன்றொடு
கறவைப் பல்லினம் புறவு தொறு உகளக்
குழல் வாய் வைத்தனர் கோவலர், வல் விரைந்து  5
இளையர் ஏகுவனர் பரிய விரியுளைக்
கடு நடைப் புரவி வழிவாய் ஓட,
வலவன் வள்பு வலி உறுப்பப் புலவர்
புகழ் குறி கொண்ட பொலந்தார் அகலத்துத்
தண் கமழ் சாந்தம் நுண் துகள் அணிய,  10
வென்றி கொள் உவகையொடு புகுதல் வேண்டின்
யாண்டு உறைவது கொல் தானே, மாண்ட
போது உறழ் கொண்ட உண்கண்
தீது இலாட்டி திரு நுதல் பசப்பே?

பாடல் பின்னணி:  வினை முற்றிய தலைவனிடம் அருகில் உள்ளோர் சொல்லியது. 

பொருளுரை:  மிக்க வலிமையுடைய யானைகள் ஒன்றோடு ஒன்று மாறுபடும் பாசறைக்கண், இடி போல் ஒலிக்கும் முரசு போர்க்களத்தில் ஒலிக்க, வேந்தனும் போரில் வென்று வெற்றிக்கொடியை உயர்த்தினான்.  கன்றுகளுடன் கறவை பசுக்களையுடைய பல ஆனிரைகள் காடுகள்தோறும் தாவித் தொடர்ந்து வர, இடையர்கள் தங்கள் வாயில் குழலை வைத்து ஊதினார்கள்.   

ஏவல் இளைஞர்கள் மிக விரைந்து முன்செல்ல, விரிந்த பிடரி மயிரையும் விரைந்த நடையையும் உடைய குதிரைகள் வழியில் ஓடும்படி பாகன் கடிவாளத்தை வலிமையுடன் பிடித்துச் செலுத்த, புலவர்களால் புகழப்பட்ட, விழுப்புண் கொண்ட பொன் மாலையை அணிந்த மார்பில், குளிர்ந்த மணம் கமழும் சந்தனத்துடன் நுண்ணிய பொடிகளை அணிந்து, வெற்றி கொண்ட உவகையுடன் நின் மனையில் புகுதலை நீ விரும்பியமையால், 

மாண்புற்ற, குவளை மலர்களுடன் மாறுபட்ட மையுண்ட கண்களையுடைய, தீமை சிறிதும் இல்லாத தலைவியின் அழகிய நெற்றியில் படர்ந்த பசலை, இனி எங்கு சென்றுத் தங்கும்?  

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு ‘ஆற்றது பண்பும் கருமத்து விளைவும் ஏவல் முடிவும் வினாவும் செப்பும் ஆற்றிடைக் கண்ட பொருளும் இறைச்சியும் தோற்றம் சான்ற அன்னவை பிறவும் இளையோர்க்கு உரிய கிளவி என்ப’ (தொல்காப்பியம், கற்பியல் 29) என வரும் விதி கொள்க.  மதவலி (1) – ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – மதவலி எனப்பொருள்படும் உரிச்சொல்.  மதவலி ஒரு பொருள் இருசொல்.  மிக்க வலிமையுடைய என்றபடி, பொ. வே. சோமசுந்தரனார் உரை – மதத்தையும் வலிமையையும்.  மத (1) – மதவு, ஈறு கெட்டது, மதவு – மதவே மடனும் வலியும் ஆகும் (தொல்காப்பியம், உரியியல் 81).  பொலந்தார் (9) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – பொன்னால் இயன்ற வாகை மாலை, ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – அழகிய மாலை.

சொற்பொருள்:  மதவலி யானை மறலிய பாசறை – மிக்க வலிமையுடைய யானைகள் ஒன்றோடு ஒன்று மாறுபடும் பாசறைக்கண் (மதவலி – ஒருபொருட் பன்மொழி), இடி உமிழ் முரசம் பொருகளத்து இயம்ப வென்று கொடி எடுத்தனன் வேந்தனும் – இடி போல் ஒலிக்கும் முரசு போர்க்களத்தில் ஒலிக்க வேந்தனும் போரில் வென்று வெற்றிக்கொடியை உயர்த்தினான், கன்றொடு கறவைப் பல்லினம் புறவு தொறு உகள – கன்றுகளுடன் கறவை பசுக்களையுடைய பல ஆனிரைகள் காடுகள்தோறும் தாவித் தொடர்ந்து வர, குழல் வாய் வைத்தனர் கோவலர் – இடையர்கள் தங்கள் வாயில் குழலை வைத்து ஊதினார்கள், வல் விரைந்து இளையர் ஏகுவனர் பரிய – ஏவல் இளைஞர்கள் மிக விரைந்து முன்செல்ல, விரியுளைக் கடு நடைப் புரவி வழிவாய் ஓட – விரிந்த பிடரி மயிரையும் விரைந்த நடையையும் உடைய குதிரைகள் வழியில் ஓடும்படி, வலவன் வள்பு வலி உறுப்ப – பாகன் கடிவாளத்தை வலிமையுடன் பிடித்துச் செலுத்த, புலவர் புகழ் குறி கொண்ட பொலந்தார் அகலத்துத் தண் கமழ் சாந்தம் நுண் துகள் அணிய – புலவர்களால் புகழப்பட்ட விழுப்புண் கொண்ட பொன் மாலையை அணிந்த மார்பில் குளிர்ந்த மணம் கமழும் சந்தனத்துடன் நுண்ணிய பொடிகளை அணிந்திருக்க, வென்றி கொள் உவகையொடு புகுதல் வேண்டின் – வெற்றி கொண்ட உவகையுடன் நின் மனையில் புகுதலை நீ விரும்பியமையால், யாண்டு உறைவது கொல் – எங்குத் தங்கும் (கொல் ஐயப்பொருட்டு), தானே – தான் ஏ அசைநிலைகள், மாண்ட போது உறழ் கொண்ட உண்கண் தீது இலாட்டி திரு நுதல் பசப்பே – மாண்புற்ற குவளை மலர்களுடன் மாறுபட்ட மையுண்ட கண்களையுடைய தீமை சிறிதும் இல்லாத தலைவியின் அழகிய நெற்றியில் படர்ந்த பசலை (பசப்பே – ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 355, தங்கால் பொற்கொல்லனார், பாலைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
மாவும் வண் தளிர் ஈன்றன குயிலும்
இன் தீம் பல் குரல் கொம்பர் நுவலும்
மூது இலை ஒழித்த போது அவிழ் பெருஞ்சினை
வல்லோன் தைவரும் வள் உயிர்ப் பாலை
நரம்பு ஆர்த்தன்ன வண்டினம் முரலும்  5
துணி கயம் துன்னிய தூ மணல் எக்கர்த்
தாது உகு தண் பொழில் அல்கிக் காதலர்
செழு மனை மறக்கும் செவ்வி வேனில்
தானே வந்தன்று ஆயின் ஆனாது
இலங்கு வளை நெகிழ்ந்த எவ்வம் காட்டிப்  10
புலந்தனம் வருகம் சென்மோ தோழி
யாமே எமியம் ஆக நீயே
பொன் நயந்து அருள் இலையாகி
இன்னை ஆகுதல் ஒத்தன்றால் எனவே.

பாடல் பின்னணி:  பிரிவு உணர்த்திய தோழியிடம் தலைவி உரைத்தது.

பொருளுரை:  மாமரங்களும் அழகிய தளிர்களை ஈன்றன. குயில்களும் அவற்றின் கிளைகளில் அமர்ந்து இனிய பல குரல்களால் கூவுகின்றன. முதிர்ந்த இலைகள் உதிர்ந்த மலர்களையுடைய பெரிய கிளைகளில் யாழ் வல்லோன் தடவும் நரம்புகளின் இனிய இசையைக் கொண்ட பாலை பண்ணைப் போன்று வண்டு கூட்டங்கள் இசைக்கின்றன. தெளிந்த நீர்நிலைக்கு அடுத்த தூய மணல் மேட்டில் தாது உதிர்ந்த குளிர்ந்த சோலைகளில் தங்கி, காதலர் தம்முடைய செல்வ மனையை மறந்திருக்கும் இளவேனில் காலம் வந்து விட்டது.  ஆதலால். விடாமல் வழுக்கி விழும் ஒளியுடைய வளையல்களை உடைய நம் துன்பத்தை தலைவனுக்குக் காட்டி, நாம் அவனோடு ஊடுவோம்.  நாம் சென்று வருவோம் தோழி.  அவனிடம், “நாங்கள் தனியே இங்கு இருக்க, நீயோ பொருளை விரும்பி அருள் இல்லாதவனாக இருக்கின்றாய். இவ்வாறு ஆகுதல் உன்னுடைய தகுதிக்கு ஒத்தது இல்லை” எனக் கூறுவோம்.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு ‘எஞ்சியோர்க்கும் எஞ்சுதல் இலவே’ (தொல்காப்பியம், அகத்திணையியல் 42) என வரும் விதி கொள்க.  புலந்தனம் வருகம் (11) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – அவனோடு ஊடினேமாய் வருவேம், ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – அவனை வெறுத்து வருதற்கு நாம் செல்லக்கடவேம்.  ஒத்தன்றால் (14) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – நின் பெருந்தகைமைக்கு ஒரு சிறிதும் பொருத்தமுடையதன்று, ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – நின் தகுதிக்கு ஒத்தது அன்று.  மோ – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம், இடையியல் 26).

சொற்பொருள்:  மாவும் வண் தளிர் ஈன்றன – மாமரங்கள் அழகிய தளிர்களை ஈன்றன, குயிலும் இன் தீம் பல் குரல் கொம்பர் நுவலும் – குயில்களும் அவற்றின் கிளைகளில் அமர்ந்து இனிய பல குரல்களால் கூவும் (கொம்பர் – மொழி இறுதிப் போலி), மூது இலை ஒழித்த போது அவிழ் பெருஞ்சினை – முதிர்ந்த இலைகள் உதிர்ந்த மலர்களையுடைய பெரிய கிளைகள், வல்லோன் தைவரும் வள் உயிர்ப் பாலை நரம்பு ஆர்த்தன்ன வண்டினம் முரலும் – யாழ் வல்லோன் தடவும் நரம்புகளின் இனிய இசையைக் கொண்ட பாலை பண்ணைப் போன்று வண்டு கூட்டங்கள் இசைக்கும், துணி கயம் துன்னிய – தெளிந்த நீர்நிலைக்கு அடுத்த (துணிகயம் – வினைத்தொகை), தூ மணல் எக்கர்த் தாது உகு தண் பொழில் – தூய மணல் மேட்டில் தாது உதிர்ந்த குளிர்ந்த சோலைகள், அல்கி – தங்கி, காதலர் செழு மனை மறக்கும் – காதலர் தம்முடைய செல்வ மனையை மறந்திருக்கும், செவ்வி வேனில் தானே வந்தன்று – இளவேனில் காலம் வந்து விட்டது, ஆயின் – ஆதலால், ஆனாது இலங்கு வளை நெகிழ்ந்த எவ்வம் காட்டி – விடாமல் வழுக்கி விழும் ஒளியுடைய வளையல்களை உடைய நம் துன்பத்தைக் காட்டி, புலந்தனம் – நாம் அவனோடு ஊடுவோம், நாம் அவனை வெறுப்போம், வருகம் சென்மோ தோழி – நாம் சென்று வருவோம் தோழி, யாமே எமியம் ஆக – நாங்கள் தனியே இங்கு இருக்க, நீயே பொன் நயந்து – நீயோ பொருளை விரும்பி, அருள் இலையாகி – அருள் இல்லாதவனாகி (இலை – இல்லை என்பதன் இடைக்குறை விகாரம்), இன்னை ஆகுதல் ஒத்தன்றால் எனவே –இவ்வாறு ஆகுதல் உன்னுடைய தகுதிக்கு ஒத்தது இல்லை என்று (ஒத்தன்றால் – ஆல் அசைநிலை, எனவே – ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 356, பரணர், மருதத் திணை தோழி தலைவியிடம் சொன்னது
மேல் துறைக் கொளீஇய கழாலின் கீழ்த் துறை
உகுவு ஆர் அருந்தப் பகுவாய் யாமை
கம்புள் இயவன் ஆக விசி பிணித்
தெண் கண் கிணையின் பிறழும் ஊரன்,
இடை நெடுந்தெருவில் கதுமெனக் கண்டென்  5
பொன் தொடி முன் கை பற்றினனாக,
அன்னாய்” என்றனென் அவன் கை விட்டனனே,
தொன் நசை காவாமை நன்னன் பறம்பில்
சிறு காரோடன் பயினொடு சேர்த்திய
கல் போல் நாவினேனாகி மற்று அது  10
செப்பலென் மன்னால் யாய்க்கே, நல்தேர்க்
கடும் பகட்டு யானைச் சோழர் மருகன்
நெடுங்கதிர் நெல்லின் வல்லம் கிழவோன்
நல்லடி உள்ளானாகவும், ஒல்லார்
கதவ முயறலும் முயல்ப, அதாஅன்று  15
ஒலி பல் கூந்தல் நம்வயின் அருளாது,
கொன்றனன் ஆயினும் கொலை பழுது அன்றே,
அருவி ஆம்பல் கலித்த முன்துறை
நன்னன் ஆஅய் பறம்பு அன்ன
மின்னீர் ஓதி! என்னை நின் குறிப்பே?  20

பாடல் பின்னணி:  குறைவேண்டிப் பின்னின்ற தலைவனுக்குக் குறை நேர்ந்த தோழி, தலைவியிடம் சென்று தலைவனின் வேண்டுகோளுக்கு இணங்க வேண்டும் எனக் கூறியது.   

பொருளுரை:  அருவி நீரால் ஆம்பல் தழைத்துள்ள முன் துறையையுடைய நன்னனின் அழகிய பறம்பு மலை போல, மின்னுகின்ற குளிர்ந்த கூந்தலை உடையவளே!

துறையில் கள்ளினைக் கொண்ட கலங்களைக் கழுவுவதால் கீழ்த் துறையில் ஒழுகும் கள்ளுடைய நீரை அருந்திட பிளந்த வாயையுடைய ஆமை, சம்பங்கோழி இசைப்பவன் ஆக, இறுக்கமாகப் பிணித்த தெளிந்த கண்ணையுடைய கிணைப்பறை போல் பிறழும் ஊரின் தலைவன்,

நீண்ட தெருவிடத்தில் விரைந்து வந்து என்னைக் கண்டு என் பொன் வளையல்கள் அணிந்த முன் கையைப் பற்றினான்.  “அன்னாய்” என நான் கூவ, நசை காவாமை பண்டைய விருப்பத்தை நீக்காமல், அவன் என் கையை விட்டுவிட்டான்.  நன்னனின் பறம்பு மலையில் சாணைக்கல் செய்யும் சிறு தொழிலாளன் அரக்கு சேர்த்து இயற்றிய சாணைக்கல் போல், திண்மை உடைய நாவை உடையேனாகி அந்நிகழ்வை நம் தாயிடம் யான் கூறவில்லை.  

நல்ல தேர்களையும் கடிய களிற்று யானைகளையும் உடைய சோழரின் வழிமுறையில் வந்த, நீண்ட நெற்கதிர்களையுடைய வல்லம் என்னும் ஊரின் தலைவன் நன்மை உளனாக இருந்தும், பகைவர்கள் அவனைப் பற்ற முயல்கின்றனர்.  அது அன்றியும், தழைத்த அடர்ந்த நம்பால் அருள் செய்யாது துன்புறுத்தினானாயினும் அது குற்றம் ஆகாது.

நின் கருத்து யாது?

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு’நாற்றமும் தோற்றமும்’ (தொல்காப்பியம், களவியல் 23) என வரும் நூற்பாவின்கண் ‘பின்னிலை நிகழும் பல்வேறு மருங்கினும்’ என வரும் விதி கொள்க.  புலியூர்க்கேசிகன் உரை – தலைவனுக்கு அருளும்படியாகத் தலைவியின் உள்ளத்திலே பழைய நிகழ்ச்சிகளை நினைவுபடுத்தியவளாக இவ்வாறு கூறுகின்றாள்.  காரோடன் அரக்கோடு சேர்த்த கல்லானது, பின்னர் அதனின்றும் பெயராதது போலவே, தலைவியும் வன்மை அமைந்த நாவினளாகி நிகழ்ந்ததனைத் தாய்க்கு உரையாளாய், அவன்பால் தானும் காதலுற்றாளாக, அதனை மறைத்தனள் என்பதனால், அவள் உள்ளத்தே நிலவும் காதலைத் தான் அறிந்ததனைக் கூறி, அவளைத் தெளிவிக்க முயலுகின்றாள் தோழி.  மேல் துறைக் கொளீஇய கழாலின் கீழ்த் துறை –பொ. வே. சோமசுந்தரனார் உரை – மேல்துறை கீழ்த்துறை என்பன துறைமேல் துறைகீழ் எனற்பாலன மாறி நின்றன.  அகநானூறு 1 – சிறு காரோடன் பயினொடு சேர்த்திய கல் போல் பிரியலம்.  பறம்பு (19) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – பறம்பு மலை அன்று.  அப்பெயரையுடைய ஓர் ஊர் எனக் கொள்க.  நன்னன் ஆஅய் பறம்பு அன்ன மின்னீர் ஓதி (19–20) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – நன்னன் என்பவனின் பறம்பு என்னும் ஊர் போலும் நலம் சிறந்த மின்னற்கொடி போன்ற இடையினையும் நெய்ப்புடைய கூந்தலையுமுடைய எம் பெருமாட்டியே கேள்!, ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – நன்னனின் பறம்பு போன்ற மின்னுகின்ற குளிர்ந்த கூந்தலையுடையாளே!  வரலாறு –நன்னன், பறம்பு மலை, சோழர், வல்லம் கிழவோன்.

சொற்பொருள்:  மேல் துறைக் கொளீஇய கழாலின் கீழ்த் துறை உகுவு ஆர் அருந்தப் பகுவாய் யாமை – மேல் துறையில் கள்ளினைக் கொண்ட கலங்களைக் கழுவுவதால் கீழ்த் துறையில் ஒழுகும் கள்ளுடைய நீரை அருந்திட பிளந்த வாயையுடைய ஆமை (கொளீஇய – வினையாலணையும் பெயர், அளபெடை), கம்புள் இயவன் ஆக – சம்பங்கோழி இசைப்பவன் ஆக, விசி பிணித் தெண் கண் கிணையின் பிறழும் ஊரன் – இறுக்கமாகப் பிணித்த தெளிந்த கண்ணையுடைய கிணைப்பறை போல் பிறழும் ஊரின் தலைவன் (கிணையின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), இடை நெடுந்தெருவில் கதுமெனக் கண்டு என் பொன் தொடி முன் கை பற்றினனாக – நீண்ட தெருவிடத்தில் விரைந்து வந்து என்னைக் கண்டு என் பொன் வளையல்கள் அணிந்த முன் கையைப் பற்றினான் (கதுமென – விரைவுக்குறிப்பு), அன்னாய் என்றனென் அவன் கை விட்டனனே – அன்னாய் என நான் கூவ அவன் என் கையை விட்டுவிட்டான், தொன் நசை காவாமை – பண்டைய விருப்பத்தை நீக்காமல், நன்னன் பறம்பில் சிறு காரோடன் பயினொடு சேர்த்திய கல் போல் நாவினேனாகி மற்று அது செப்பலென் மன் ஆல் யாய்க்கே – நன்னனின் பறம்பு மலையில் சாணைக்கல் செய்யும் சிறு தொழிலாளன் அரக்கு சேர்த்து இயற்றிய சாணைக்கல் போல் திண்மை உடைய நாவை உடையேனாகி அந்நிகழ்வை நம் தாயிடம் யான் கூறவில்லை (மற்று –அசைநிலை), (மன், ஆல் – அசைநிலைகள்), நல்தேர்க் கடும் பகட்டு யானைச் சோழர் மருகன் நெடுங்கதிர் நெல்லின் வல்லம் கிழவோன் நல்லடி உள்ளானாகவும் – நல்ல தேர்களையும் கடிய களிற்று யானைகளையும் உடைய சோழரின் வழிமுறையில் வந்த நீண்ட நெற்கதிர்களையுடைய வல்லம் என்னும் ஊரின் தலைவன் நன்மை இருந்தும், ஒல்லார் கதவ முயறலும் முயல்ப – பகைவர்கள் அவனைப் பற்ற முயல்கின்றனர், அதாஅன்று – அது அன்றியும் (அது அன்று என்பன அதான்று எனப்புணர்ந்து வருமொழி முதல் அளபெடுத்து அதாஅன்று என்றாயிற்று.  அதாஅன்று அஃதன்றியும் என்னும் பொருட்டு, அளபெடை), ஒலி பல் கூந்தல் நம்வயின் அருளாது கொன்றனன் ஆயினும் கொலை பழுது அன்றே – தழைத்த அடர்ந்த நம்பால் அருள் செய்யாது துன்புறுத்தினானாயினும் அது குற்றம் ஆகாது (அன்றே – ஏகாரம் அசைநிலை), அருவி ஆம்பல் கலித்த முன்துறை நன்னன் ஆஅய் பறம்பு அன்ன – அருவி நீரால் ஆம்பல் தழைத்துள்ள முன் துறையையுடைய நன்னனின் அழகிய பறம்பு மலை போல, மின்னீர் ஓதி – மின்னும் குளிர்ந்த கூந்தலை உடையவளே (அன்மொழித்தொகை விளியேற்று நின்றது), என்னை நின் குறிப்பே – நின் கருத்து யாது (குறிப்பே – ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 357, எருக்காட்டூர்த் தாயங்கண்ணனார், பாலைத் திணைதோழி தலைவியிடம் சொன்னது
கொடு முள் ஈங்கைச் சூரலொடு மிடைந்த
வான் முகை இறும்பின் வயவொடு வதிந்த
உண்ணாப் பிணவின் உயக்கம் தீரிய
தட மருப்பு யானை வலம்படத் தொலைச்சி,
வியல் அறை சிவப்ப வாங்கி முணங்கு நிமிர்ந்து  5
புலவுப் புலி புரண்ட புல் சாய் சிறு நெறி
பயில் இருங்கானத்து வழங்கல் செல்லாது,
பெருங்களிற்று இன நிரை கை தொடூஉப் பெயரும்,
தீஞ்சுளைப் பலவின் தொழுதி உம்பல்
பெருங்காடு இறந்தனர் ஆயினும் யாழ நின்  10
திருந்திழைப் பணைத்தோள் வருந்த நீடி,
உள்ளாது அமைதலோ இலரே, நல்குவர்,
மிகு பெயல் நிலைஇய தீ நீர்ப் பொய்கை
அடை இறந்து அவிழ்ந்த தண் கமழ் நீலம்
காலொடு துயல்வந்தன்ன நின்  15
ஆய் இதழ் மழைக் கண் அமர்த்த நோக்கே.

பாடல் பின்னணி:  பிரிவிடை ஆற்றாளாகிய தலைவியைத் தோழி வற்புறுத்தியது.    

பொருளுரை:  வளைந்த முட்களையுடைய ஈங்கைச் செடிகள் பிரம்புடன் பின்னிக்கிடக்கும் வெள்ளை அரும்புகளையுடைய குறுங்காட்டில், சூல் வேட்கையுடன் (கர்ப்ப வேட்கையுடன்) இருந்த உண்ணாத தன் பெண்புலியின் வருத்தத்தை நீக்குவதற்கு, பெரிய கோட்டினையுடைய (தந்தத்தையுடைய) யானையை வலப்பக்கத்தில் விழும்படிக் கொன்று, அகன்ற பாறைகள் குருதியால் சிவக்கும்படி இழுத்து, உடலை நீட்டி நிமிர்ந்து புலவு நாறும் புலி புரண்டதால் புல் சாய்ந்து கிடக்கும் சிறிய வழிகளையுடைய, மிகப் பெரிய காட்டில், செல்லுவதைத் தவிர்த்து பெரிய களிற்று யானையின் கூட்டம் தும்பிக்கையால் தோண்டித் தின்றுவிட்டுச் செல்லும், இனிய சுளைகளையுடைய பலா மரங்கள் கூட்டமாக உள்ள பெரிய உம்பற்காட்டைக் கடந்து சென்றார் ஆயினும்,

நின் திருந்திய அணிகலன்களை அணிந்த மூங்கில் போன்ற தோள்கள் வருந்தி மெலியும்படிக் காலம் தாழ்த்தி, மிக்க மழை பெய்தமையால் நீர் நிரம்பிய பொய்கையில் இலைகளைக் கடந்து மேலெழுந்து விரிந்த குளிர்ந்த நறுமணம் கமழும் குவளை மலர்கள் காற்றினால் அசைவதை ஒத்த, நின் அழகிய இதழ்கள் பொருந்திய குளிர்ந்த கண்களின் விருப்பம் மிகுந்த நோக்கினை நினையாது இருப்பவர் அல்லர் நம் தலைவர்.  அவர் அருள் செய்வார்.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு’தலைவரும் விழுமநிலை’ (தொல்காப்பியம், அகத்திணையியல் 31) என வரும் நூற்பாவின்கண் ‘நோய் மிகப் பெருகித் தன் நெஞ்சு கலுழ்ந்தோளை அழிந்தது களை என மொழிந்தது கூறி வன்புறை நெருங்கி வந்ததன் திறத்தொடு என்று இவை எல்லாம் இயல்புற நாடின் ஒன்றித் தோன்றும் தோழி மேன’ என வரும் விதி கொள்க.  முணங்கு நிமிர்ந்து (5) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – சோம்பல் முறித்தது.  உம்பல் பெருங்காடு (9–10) – ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – சேர நாட்டகத்து உம்பற்காடு எனப் பெயரிய இடம் ஒன்று உண்டு என்பது, ‘உம்பற்காடு ஐந்நூறூர்’ (2ம் பத்து), ‘உம்பற்காட்டைத் தன் கோனிறீஇ’ (3ம் பத்து), ‘உம்பற்காட்டு வாரியையும்’ (5ம் பத்து) எனப் பதிற்றுப்பத்தின் பதிகங்களில் வருவதால் அறியப்படும்.  உம்பற்காடு என்பது யானையை மிகுதியாக உடைமையாற் பெற்ற பெயர் போலும்.  புல் சாய் சிறு நெறி – அகநானூறு 65 – புல் சாய் சிறு நெறி, அகநானூறு 89 – புல் சாய் விடரகம், 357 – அகநானூறு புல் சாய் சிறு நெறி.  சோம்பல் போக்குதல், மூரி நிமிர்ந்தல் – அகநானூறு 357 – முணங்கு நிமிர்ந்து புலவுப் புலி, புறநானூறு 52 – முணங்கு நிமிர் வயமான் முழு வலி ஒருத்தல், புறநானூறு 78 – முணங்கு நிமிர்ந்து அளைச் செறி உழுவை இரைக்கு வந்தன்ன.  தான் வேட்டையாடிப் பெற்ற விலங்கு இடது பக்கம் விழுந்தால் புலி அதனை உண்ணாது – அகநானூறு 3, 29, 238, 252, 357, 389, நற்றிணை 154, புறநானூறு 190.   தட – தடவும் கயவும் நளியும் பெருமை (தொல்காப்பியம், உரியியல் 24), அவற்றுள், தட என் கிளவி கோட்டமும் செய்யும் (தொல்காப்பியம், உரியியல் 25).  மழைக் கண் அமர்த்த நோக்கே (16) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – குளிர்ந்த கண்ணினது விருப்பமிக்க நோக்கம், ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – குளிர்ந்த கண்களின் அமரிய (மாறுபட்ட) பார்வை.

சொற்பொருள்:  கொடு முள் ஈங்கைச் சூரலொடு மிடைந்த வான் முகை இறும்பின் – வளைந்த முட்களையுடைய ஈங்கைச் செடிகள் பிரம்புடன் பின்னிக்கிடக்கும் வெள்ளை அரும்புகளையுடைய குறுங்காட்டில் (ஈங்கைச் செடி – இண்டஞ்செடி, Mimosa Pudica), வயவொடு வதிந்த உண்ணாப் பிணவின் உயக்கம் தீரிய தட மருப்பு யானை வலம்படத் தொலைச்சி – சூல் வேட்கையுடன் (கர்ப்ப வேட்கையுடன்) இருந்த உண்ணாத தன் பெண்புலியின் வருத்தத்தை நீக்குவதற்கு பெரிய கோட்டினையுடைய (தந்தத்தையுடைய) யானையை வலப்பக்கத்தில் விழும்படிக் கொன்று (தீரிய – செய்யிய என்னும் எச்சம்), வியல் அறை சிவப்ப வாங்கி – அகன்ற பாறைகள் குருதியால் சிவக்கும்படி இழுத்து, முணங்கு நிமிர்ந்து புலவுப் புலி புரண்ட புல் சாய் சிறு நெறி – உடலை நீட்டி நிமிர்ந்து புலவு நாறும் புலி புரண்டதால் புல் சாய்ந்து கிடக்கும் சிறிய வழிகளையுடைய, பயில் இருங்கானத்து – மிகப் பெரிய காட்டில், வழங்கல் செல்லாது பெருங்களிற்று இன நிரை கை தொடூஉப் பெயரும் – செல்லுவதைத் தவிர்த்து பெரிய களிற்று யானையின் கூட்டம் தும்பிக்கையால் தோண்டித் தின்றுவிட்டுச் செல்லும் (தொடூஉ – அளபெடை), தீஞ்சுளைப் பலவின் தொழுதி உம்பல் பெருங்காடு இறந்தனர் ஆயினும் – இனிய சுளைகளையுடைய பலா மரங்கள் கூட்டமாக உள்ள பெரிய உம்பற்காட்டைக் கடந்து சென்றார் ஆயினும், யாழ – அசைநிலை, நின் திருந்திழைப் பணைத்தோள் வருந்த நீடி – நின் திருந்திய அணிகலன்களை அணிந்த மூங்கில் போன்ற தோள்கள் வருந்தி மெலியும்படிக் காலம் தாழ்த்தி, உள்ளாது அமைதலோ இலரே – நினையாது இருக்க மாட்டார் (இலரே – ஏகாரம் அசைநிலை), நல்குவர் – அருள் செய்வார், மிகு பெயல் நிலைஇய தீ நீர்ப் பொய்கை அடை இறந்து அவிழ்ந்த தண் கமழ் நீலம் காலொடு துயல்வந்தன்ன – மிக்க மழை பெய்தமையால் நீர் நிரம்பிய பொய்கையில் இலைகளைக் கடந்து மேலெழுந்து விரிந்த குளிர்ந்த நறுமணம் கமழும் குவளை மலர்கள் காற்றினால் அசைவதை ஒத்த (நிலைஇய – அளபெடை), நின் ஆய் இதழ் மழைக் கண் அமர்த்த நோக்கே – நின் அழகிய இதழ்கள் பொருந்திய குளிர்ந்த கண்களின் விருப்பம் மிகுந்த நோக்கினை (நோக்கே – ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 358, மதுரை மருதன் இளநாகனார், குறிஞ்சித் திணைதோழி தலைவியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
நீலத்து அன்ன நிறம் கிளர் எருத்தின்
காமர் பீலி ஆய் மயில் தோகை
இன் தீம் குரல துவன்றி, மென் சீர்
ஆடு தகை எழில் நலம் கடுப்பக் கூடி,
கண் நேர் இதழ தண் நறும் குவளை  5
குறுந்தொடர் அடைச்சிய நறும் பல் கூழை
நீடு நீர் நெடுஞ்சுனை ஆயமொடு ஆடாய்,
உயங்கிய மனத்தையாகிப் புலம்பு கொண்டு
இன்னை ஆகிய நின் நிறம் நோக்கி,
அன்னை வினவினள் ஆயின், அன்னோ,  10
என்னென உரைக்கோ யானே, துன்னிய
பெருவரை இழிதரும் நெடு வெள்ளருவி,
ஓடை யானை உயர் மிசை எடுத்த
ஆடு கொடி கடுப்பத் தோன்றும்
கோடு உயர் வெற்பன் உறீஇய நோயே?  15

பாடல் பின்னணி:  தலைவியின் பிரிவு ஆற்றாமையைத் தலைவனுக்கு உணர்த்தும்பொருட்டு, அவன் கேட்குமாறுத் தலைவியிடம் தோழி கூறியது.   

பொருளுரை:  நீலமணியை ஒத்த நிறத்துடன் விளங்கும் கழுத்தினையும் அழகிய பீலியாகிய சிறந்த தோகையையுமுடைய மயில்கள் மிகவும் இனிய குரலை உடையனவாய் ஒன்றுகூடி, மெல்லிய தாளத்துடன் ஆடும் தகைமையுடன் கூடிய, மிகுந்த எழிலின் சிறப்பை ஒப்ப, தோழியருடன் சேர்ந்து, கண்கள் போன்ற இதழ்களையுடைய நறிய குவளை மலர்களால் தொடுத்த குறிய மாலையினை அணிந்த நறுமணம் பொருந்திய அடர்ந்த கூந்தலையுடைய நீ நீர் நிரம்பிய நெடிய சுனையில் அவர்களுடன் ஆடாய். 

வருந்திய மனதை உடையவளாய் தனிமைத் துன்பம் கொண்டு இவ்வாறு ஆகிய நின் மேனியின் நிற வேறுபாட்டை நோக்கி, நம் அன்னை காரணத்தைக் கேட்டாளாயின், ஐயோ, பொருந்திய பெரிய மலையிலிருந்து விழும் நீண்ட வெள்ளை அருவியானது, நெற்றிப் பட்டத்தையுடைய யானையின் மீது உயர்த்திய அசையும் கொடிபோல் தோன்றும் உச்சி உயர்ந்த மலையின் தலைவன் அடைவித்த காதல் நோயை, என்னவென்று யான் கூறுவேன்?

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு’நாற்றமும் தோற்றமும்’ (தொல்காப்பியம், களவியல் 23) என வரும் நூற்பாவின்கண் ‘அனைநிலை வகையான் வரைதல் வேண்டினும்’ என வரும் விதி கொள்க.  பொ. வே. சோமசுந்தரனார் உரை – தோழிமாரோடு கூடி ஆடுதற்கு மயில்கள் அவ்வாறு கூடி நின்று ஆடுதல் உவமை.  புலம்பு – புலம்பே தனிமை (தொல்காப்பியம், உரியியல் 35).

சொற்பொருள்:  நீலத்து அன்ன நிறம் கிளர் எருத்தின் காமர் பீலி ஆய் மயில் தோகை இன் தீம் குரல துவன்றி – நீலமணியை ஒத்த நிறத்துடன் விளங்கும் கழுத்தினையும் அழகிய பீலியாகிய சிறந்த தோகையையுமுடைய மயில்கள் மிகவும் இனிய குரலை உடையனவாய் ஒன்றுகூடி (நீலத்து – நீலம், அத்துச் சாரியை, இன் தீம் – ஒருபொருட் பன்மொழி), மென் சீர் ஆடு தகை – மெல்லிய தாளத்துடன் ஆடும் தகைமையுடன், எழில் நலம் கடுப்பக் கூடி –  மிகுந்த எழிலின் சிறப்பை ஒப்பக் கூடி, கண் நேர் இதழ தண் நறும் குவளை குறுந்தொடர் அடைச்ச நறும் பல் கூழை நீடு நீர் நெடுஞ்சுனை ஆயமொடு ஆடாய் – கண்கள் போன்ற இதழ்களையுடைய நறிய குவளை மலர்களால் தொடுத்த குறிய மாலையினை அணிந்த நறுமணம் பொருந்திய அடர்ந்த கூந்தலையுடைய நீ நீர் நிரம்பிய நெடிய சுனையில் தோழியருடன் ஆடாய், உயங்கிய மனத்தையாகிப் புலம்பு கொண்டு இன்னை ஆகிய நின் நிறம் நோக்கி அன்னை வினவினள் ஆயின் – வருந்திய மனதை உடையவளாய் தனிமைத் துன்பம் கொண்டு இவ்வாறு ஆகிய நின் மேனியின் நிற வேறுபாட்டை நோக்கி நம் அன்னை காரணத்தைக் கேட்டாளாயின், அன்னோ – ஐயோ, என்னென உரைக்கோ யானே – என்னவென்று யான் கூறுவேன் (உரைக்கோ – உரைக்கு + ஓ,  உரைக்கு – தன்மை வினைமுற்று, ஓ –அசைநிலை), துன்னிய பெருவரை இழிதரும் நெடு வெள்ளருவி ஓடை யானை உயர் மிசை எடுத்த ஆடு கொடி கடுப்பத் தோன்றும் கோடு உயர் வெற்பன் உறீஇய நோயே – பொருந்திய பெரிய மலையிலிருந்து விழும் நீண்ட வெள்ளை அருவி நெற்றிப் பட்டத்தையுடைய யானையின் மீது உயர்த்திய அசையும் கொடிபோல் தோன்றும் உச்சி உயர்ந்த மலையின் தலைவன் அடைவித்த காதல் நோய் (உயர் மிசை – ஒருபொருட் பன்மொழி, கடுப்ப – உவம உருபு, (உறீஇய – அடைவித்த, உறீஇய – அளபெடை, நோயே – ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 359, மாமூலனார், பாலைத் திணைதோழி தலைவியிடம் சொன்னது
பனி வார் உண்கணும் பசந்த தோளும்
நனி பிறர் அறியச் சாஅய, நாளும்
கரந்தனம் உறையும் நம் பண்பு அறியார்,
நீடினர் மன்னோ காதலர் என நீ
எவன் கையற்றனை இகுளை? அவரே  5
வானவரம்பன் வெளியத்து அன்ன நம்
மாண் நலம் தம்மொடு கொண்டனர், முனாஅது,
அருஞ்சுரக் கவலை அசைஇய கோடியர்
பெருங்கல் மீமிசை இயம் எழுந்தாங்கு
வீழ் பிடி கெடுத்த நெடுந்தாள் யானை  10
சூர் புகல் அடுக்கத்து மழை மாறு முழங்கும்,
பொய்யா நல்லிசை மா வண் புல்லி
கவைக் கதிர் வரகின் யாணர்ப் பைந்தாள்
முதைச் சுவல் மூழ்கிய கான் சுடு குரூஉப் புகை
அருவித் துவலையொடு மயங்கும்  15
பெருவரை அத்தம் இயங்கியோரே.

பாடல் பின்னணி:  பிரிவிடை வேறுபட்ட தலைவியிடம் தோழி சொல்லியது.  

பொருளுரை:  தோழி!  கண்ணீர் வடியும் மையுண்ட கண்களும், பசலை அடைந்த தோள்களும் பிறர் மிகவும் அறியும்படி வாடியிருக்க, அவற்றை மறைத்து வாழும் நம் இயல்பினை அறியாதவராய், வராது காலம் தாழ்த்தினர் நம் தலைவர் என்று, நீ செயலற்று இருப்பது எதற்காக?

முன்னால் உள்ளதாகிய, செல்லுதற்கு அரிய பாலை நிலத்தின் பிரிவுகளையுடைய வழிகளில் தங்கிய கூத்தர்களின் இசைக்கருவிகளின் முழக்கம், பெரிய மலையின் மிக உயர்ந்த இடத்தில் முழங்கினாற்போல், தான் விரும்பும் பெண் யானையை இழந்த நீண்ட கால்களையுடைய களிற்று யானையானது, கடவுள்கள் விரும்பி உறையும் மலைப்பக்கத்தில் இடியுடன் மாறுபட ஒலிக்கும், பரிசிலர்களுக்குப் பொய்க்காத நல்ல புகழையும் சிறந்த வள்ளன்மையையும் உடைய புல்லி என்பவனின், கிளைத்த வரகின் அழகிய பசிய தட்டைகளையுடைய பழங் கொல்லையாகிய மேட்டு நிலத்தைச் சுற்றியுள்ள காட்டைச் சுடுவதால் எழும் நிறமுடைய புகை, அருவியின் நீர்த்துவலைகளுடன் கலந்துத் தோன்றும், பெரிய மலையில் பொருந்திய பாலை நிலத்திற்குச் சென்ற அவர்,

அவர் வானவரம்பனின் வெளியம் என்னும் ஊரை ஒத்த நம் சிறந்த அழகை தம்முடன் கொண்டு சென்றார்.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு’தலைவரும் விழுமநிலை’ (தொல்காப்பியம், அகத்திணையியல் 31) என வரும் நூற்பாவின்கண் ‘நெஞ்சு மிகக் கலுழ்ந்தோளை அழிந்தது களை என மொழிந்தது கூறி வன்புறை நெருங்கி வந்ததன் திறத்தொடு என்று இவை எல்லாம் இயல்புற நாடின் ஒன்றித் தோன்றும் தோழி மேன’ என வரும் விதி கொள்க.  வரலாறு – வானவரம்பன், வெளியம், புல்லி.  யாணர் – புதிதுபடற் பொருட்டே யாணர்க் கிளவி (தொல்காப்பியம், உரியியல் 83).  நனி – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3).

சொற்பொருள்:  பனி வார் உண்கணும் பசந்த தோளும் நனி பிறர் அறியச் சாஅய நாளும் கரந்தனம் உறையும் நம் பண்பு அறியார் நீடினர் – கண்ணீர் வடியும் மையுண்ட கண்களும் பசலை அடைந்த தோள்களும் பிறர் மிகவும் அறியும்படி வாடியிருக்க அவற்றை மறைத்து வாழும் நம் இயல்பினை அறியாதவராய் வராது காலம் தாழ்த்தினர் (உண்கணும் – உண்கண்ணும், கணும் இடைக்குறை, சாஅய – அளபெடை), மன்னோ – மன் ஓ அசைநிலைகள், காதலர் என – நம் தலைவர் என்று, நீ எவன் கையற்றனை – நீ செயலற்று இருப்பது எதற்காக, இகுளை – தோழி, அவரே வானவரம்பன் வெளியத்து அன்ன நம் மாண் நலம் தம்மொடு கொண்டனர் – அவர் வானவரம்பனின் வெளியம் என்னும் ஊரை ஒத்த நம் சிறந்த அழகை தம்முடன் கொண்டு சென்றார், முனாஅது அருஞ்சுரக் கவலை அசைஇய கோடியர் பெருங்கல் மீ மிசை இயம் எழுந்தாங்கு – முன்னால் உள்ளதாகிய செல்லுதற்கு அரிய பாலை நிலத்தின் பிரிவுகளையுடைய வழிகளில் தங்கிய கூத்தர்களின் இசைக்கருவிகளின் முழக்கம் பெரிய மலையின் மிக உயர்ந்த இடத்தில் முழங்கினாற்போல்  (மீமிசை – ஒருபொருட் பன்மொழி), வீழ் பிடி கெடுத்த நெடுந்தாள் யானை சூர் புகல் அடுக்கத்து மழை மாறு முழங்கும் – தான் விரும்பும் பெண் யானையை இழந்த நீண்ட கால்களையுடைய களிற்று யானையானது கடவுள்கள் விரும்பி உறையும் மலைப்பக்கத்தில் இடியுடன் மாறுபட ஒலிக்கும், பொய்யா நல்லிசை மா வண் புல்லி – பரிசிலர்களுக்குப் பொய்க்காத நல்ல புகழையும் சிறந்த வள்ளன்மையையும் உடைய புல்லி என்பவனின், கவைக் கதிர் வரகின் யாணர்ப் பைந்தாள் முதைச் சுவல் மூழ்கிய கான் சுடு குரூஉப் புகை அருவித் துவலையொடு மயங்கும் –  கிளைத்த வரகின் அழகிய பசிய தட்டைகளையுடைய பழங் கொல்லையாகிய மேட்டு நிலத்தைச் சுற்றியுள்ள காட்டைச் சுடுவதால் எழும் நிறமுடைய புகை அருவியின் நீர்த்துவலைகளுடன் கலந்துத் தோன்றும், பெருவரை அத்தம் இயங்கியோரே – பெரிய மலையில் பொருந்திய பாலை நிலத்திற்குச் சென்றவர் (குரூஉ – அளபெடை, இயங்கியோரே – ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 360, மதுரைக் கண்ணத்தனார், நெய்தல் திணைதோழி தலைவனிடம் சொன்னது
பல் பூந்தண் பொழில் பகல் உடன் கழிப்பி,
ஒரு கால் ஊர்திப் பருதி அம் செல்வன்
குடவயின் மா மலை மறையக், கொடுங்கழித்
தண் சேற்று அடைஇய கணைக் கால் நெய்தல்
நுண் தாது உண்டு வண்டினம் துறப்ப,  5
வெருவரு கடுந்திறல் இரு பெரும் தெய்வத்து
உருவுடன் இயைந்த தோற்றம் போல,
அந்தி வானமொடு கடல் அணி கொளாஅ
வந்த மாலை பெயரின் மற்றிவள்
பெரும் புலம்பினளே தெய்ய அதனால் 10
பாணி பிழையா மாண் வினைக் கலிமா
துஞ்சு ஊர் யாமத்துத் தெவிட்டல் ஓம்பி,
நெடுந்தேர் அகல நீக்கிப் பையெனக்
குன்று இழி களிற்றின் குவவு மணல் நீந்தி,
இரவின் வம்மோ உரவு நீர்ச் சேர்ப்ப!  15
இனமீன் அருந்து நாரையொடு பனை மிசை
அன்றில் சேக்கும் முன்றில், பொன்னென
நன்மலர் நறுவீ தாஅம்
புன்னை நறும் பொழில் செய்த நம் குறியே.

பாடல் பின்னணி:  பகற்குறி வந்த தலைவனுக்குத் தோழி பகற்குறி மறுத்து இரவுக்குறி நேர்ந்தது. 

பொருளுரை:  வலிய கடலின் கரையின் தலைவனே!  பல மலர்களையுடைய சோலையில் பகல் பொழுதை இவளுடன் கழித்துவிட்டு, ஒற்றை உருளையுடைய (சக்கரத்தையுடைய) ஞாயிறு ஆகிய அழகிய செல்வன் மேற்கில் உள்ள பெரிய மலையில் மறைய, வளைந்த உப்பங்கழியில் உள்ள குளிர்ந்த சேற்றில் பொருந்திய திரண்ட தண்டையுடைய நெய்தல் பூவின் நுண்ணிய தாதினை உண்டுவிட்டு வண்டின் இனம் அங்கிருந்து நீங்க, அச்சம் தரும் மிக்க வலிமையுடைய இரு பெரும் கடவுள்களாகிய சிவபெருமானும் திருமாலும் ஆகிய இவர்களின் சிவப்பு நிறமும் கருமை நிறமும் பொருந்திய தோற்றத்தைப் போல் சிவந்த அந்தி வானத்தின் அழகுடன் கரிய கடலின் அழகையும் கொண்டு வந்த மாலை நேரத்தில் நீ நீங்கினால், இவள் பெரிதும் தனிமையுற்று வருந்துவாள்.

அதனால், ஊர் மக்கள் துயிலும் யாமத்தில், தாளம் தப்பாத ஓட்டத்தையுடைய, வினையில் மாண்புற்ற செருக்கான குதிரைகளின் கனைத்தலைப் பாதுகாத்து, நெடிய தேரினை தொலைவில் நிறுத்திவிட்டு, மலையிலிருந்து இறங்கும் களிற்று யானை போன்ற தோற்றமுடைய மணல் மேட்டினைக் கடந்து, மீன் இனத்தை உண்ணும் நாரைகளுடன் அன்றில் பனைமரத்தின் மேல் அடையும் இல்லத்தின் முற்றத்தில், பொன் போன்ற நல்ல நறுமண மலர்கள் உதிர்ந்து பரவும், புன்னை மரங்களையுடைய நறிய சோலையில் நாம் செய்த குறியிடத்திற்கு, இரவில் வருவாயாக.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு ‘நாற்றமும் தோற்றமும்’ (தொல்காப்பியம், களவியல் 23) என வரும் நூற்பாவின்கண் ‘அனைநிலை வகையான் வரைதல் வேண்டினும்’ என வரும் விதி கொள்க.  கொளாஅ – கொள்ள என்பது பொருள். செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம்.  எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது.  மோ – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம், இடையியல் 26).  பொன்னென நன்மலர் நறுவீ தாஅம் (16) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – பொன் துகள் போன்ற தாதுக்களை உதிர்க்கும் அழகிய மலர்ந்த நறிய மலர்கள் உதிர்ந்து பரவும், ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – பொன் போல நல்ல மலராகிய நறிய பூக்கள் உதிர்ந்து பரவும்.  இரவுக் குறியிடம் – இரவுக் குறியே இல்லகத்துள்ளும் மனையோர் கிளவி கேட்கும் வழியதுவே மனையகம் புகாஅக் காலையான (தொல்காப்பியம், களவியல் 40).

சொற்பொருள்:  பல் பூந்தண் பொழில் பகல் உடன் கழிப்பி – பல மலர்களையுடைய சோலையில் பகல் பொழுதை இவளுடன் கழித்துவிட்டு, ஒரு கால் ஊர்திப் பருதி அம் செல்வன் குடவயின் மா மலை மறைய – ஒற்றை உருளையுடைய (சக்கரத்தையுடைய) ஞாயிறு ஆகிய அழகிய செல்வன் மேற்கில் உள்ள பெரிய மலையில் மறைய, கொடுங்கழித் தண் சேற்று அடைஇய கணைக் கால் நெய்தல் நுண் தாது உண்டு வண்டினம் துறப்ப – வளைந்த உப்பங்கழியில் உள்ள குளிர்ந்த சேற்றில் பொருந்திய திரண்ட தண்டையுடைய நெய்தல் பூவின் நுண்ணிய தாதினை உண்டுவிட்டு வண்டின் இனம் அங்கிருந்து நீங்க, வெருவரு கடுந்திறல் இரு பெரும் தெய்வத்து உருவுடன் இயைந்த தோற்றம் போல அந்தி வானமொடு கடல் அணி கொளாஅ வந்த மாலை பெயரின் – அச்சம் தரும் மிக்க வலிமையுடைய இரு பெரும் கடவுள்களாகிய சிவபெருமானும் திருமாலும் ஆகிய இவர்களின் சிவப்பு நிறமும் கருமை நிறமும் பொருந்திய தோற்றத்தைப் போல் சிவந்த அந்தி வானத்தின் அழகுடன் கரிய கடலின் அழகையும் கொண்டு வந்த மாலை நேரத்தில் நீ நீங்கினால், மற்று இவள் பெரும் புலம்பினளே – இவள் பெரிதும் தனிமையுற்று வருந்துவாள், தெய்ய – அசைநிலை, அதனால் பாணி பிழையா மாண் வினைக் கலி மா – அதனால் தாளம் தப்பாத ஓட்டத்தையுடைய வினையில் மாண்புற்ற செருக்கான குதிரைகள், துஞ்சு ஊர் யாமத்து – ஊர் மக்கள் துயிலும் யாமத்தில், தெவிட்டல் ஓம்பி நெடுந்தேர் அகல நீக்கிப் பையென – கனைத்தலைப் பாதுகாத்து நெடிய தேரினை தொலைவில் நிறுத்திவிட்டு, குன்று இழி களிற்றின் குவவு மணல் நீந்தி – மலையிலிருந்து இறங்கும் களிற்று யானை போன்ற தோற்றமுடைய மணல் மேட்டினைக் கடந்து, இரவின் வம்மோ – இரவில் வருவாயாக (களிற்றின் – ஒப்புப்பொருளில் வந்தது, ஐந்தாம் வேற்றுமை உருபு), உரவு நீர்ச் சேர்ப்ப – வலிய கடலின் கரையின் தலைவனே (சேர்ப்ப – அண்மை விளி), இனமீன் அருந்து நாரையொடு பனை மிசை அன்றில் சேக்கும் முன்றில் – மீன் இனத்தை உண்ணும் நாரைகளுடன் பனைமரத்தின் மேல் அன்றில் அடையும் இல்லத்தின் முற்றத்தில் (முன்றில் – இல்முன்), பொன்னென நன்மலர் நறு வீ தாஅம் – பொன் போன்ற நல்ல நறுமண மலர்கள் உதிர்ந்து பரவும், புன்னை நறும் பொழில் செய்த நம் குறியே – புன்னை மரங்களையுடைய நறிய சோலையில் நாம் செய்த குறியிடத்திற்கு (புன்னை மரம் – Calophyllum inophyllum, Laurel Tree, Mast wood Tree, குறியே – ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 361, எயினந்தை மகனார் இளங்கீரனார், பாலைத் திணைதலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது
“தூ மலர்த் தாமரைப் பூவின் அங்கண்
மா இதழ்க் குவளை மலர் பிணைத்தன்ன
திரு முகத்து அலமரும் பெரு மதர் மழைக்கண்,
அணி வளை முன் கை ஆய் இதழ் மடந்தை
வார் முலை முற்றத்து நூல் இடை விலங்கினும்,  5
கவவுப் புலந்து உறையும் கழி பெருங்காமத்து
இன்புறு நுகர்ச்சியின் சிறந்தது ஒன்று இல்” என
அன்பால் மொழிந்த என் மொழி கொள்ளாய்,
பொருள் புரிவுண்ட மருளி நெஞ்சே,
கரியாப் பூவின் பெரியோர் ஆர,  10
அழல் எழு தித்தியம் மடுத்த யாமை
நிழலுடை நெடுங்கயம் புகல் வேட்டாஅங்கு,
உள்ளுதல் ஓம்புமதி இனி நீ முள் எயிற்றுச்
சின்மொழி அரிவை தோளே, பன்மலை
வெவ்வறை மருங்கின் வியன் சுரம்  15
எவ்வம் கூர இறந்தனம் யாமே.

பாடல் பின்னணி:  பொருள்வயின் பிரிந்த தலைவன், இடைச்சுரத்தில் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. 

பொருளுரை:  தூய மலராகிய தாமரைப் பூவில், கரிய இதழ்களையுடைய குவளை மலர்கள் இரண்டைச் சேர்த்து வைத்தாற்போன்ற அழகிய முகத்தில் சுழலும் பெரிய மதர்த்த குளிர்ந்த கண்களையும், அழகிய வளையல்கள் அணிந்த முன்கையினையும் அழகிய உதடுகளையும் கொண்ட நம் தலைவியின், கச்சு அணிந்த முலைப்பரப்பின் முயக்கத்தை ஒரு நூல் இடையில் தடுத்தாலும் அதனை வெறுத்து உறையும் மிகவும் பெரும் காதலுடன் இன்பம் துய்ப்பதை விடவும் சிறந்த இன்பம் வேறு இல்லை என்று, யான் அன்புடன் கூறிய சொற்களை நீ ஏற்றுக்கொள்ளவில்ல, பொருள் விருப்பத்தால் வந்த மயக்கத்தினை உடைய என் நெஞ்சே.

பல மலைகளையும் வெப்பமான பாறைகளையுமுடைய அகன்ற பாலை நிலத்தை மிகுந்த துன்பத்துடன் கடந்துள்ளோம் நாம்.  அதனால், வாடாத பூவினையுடைய வானோர்கள் உண்ணும் பொருட்டு, அழல் ஓங்கிய வேள்விக்குண்டத்தில் இடப்பட்ட ஆமையானது, நிழலுடைய பெரிய பொய்கைக்குச் செல்லுவதை விரும்புவது போல, கூரிய பற்களையும் சிலவாகிய சொற்களையும் உடைய நம் தலைவியின் தோள்களை இப்பொழுது நீ நினைத்தலை ஒழிவாயாக.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு, ‘கரணத்தின் அமைந்து முடிந்த காலை’ (தொல்காப்பியம், கற்பியல் 5) என வரும் நூற்பாவின்கண் ‘மீட்டு வரவு ஆய்ந்த வகையின் கண்ணும்’ என வரும் விதி கொள்க.  ஒப்புமை – அகநானூறு 51 – முலை முற்றம் வீங்க, அகநானூறு 279 – செறிய வீங்கிய மென் முலை முற்றம், அகநானூறு 263 – வருமுலை முற்றத்து, அகநானூறு 361 – வார் முலை முற்றத்து, அகநானூறு 362 – முலைச் சுணங்கணி முற்றத்து, நற்றிணை 191 – வன முலை முற்றத்து.  மதி – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம், இடையியல் 26).  கூர – கூர்ப்பும் கழிவும் உள்ளது சிறக்கும் (தொல்காப்பியம், உரியியல் 18).  கரியாப் பூ (10) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – வெப்பத்தால் கரியாத மலர், ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – வாடாத பூ.

சொற்பொருள்:  தூ மலர்த் தாமரைப் பூவின் அங்கண் மா இதழ்க் குவளை மலர் பிணைத்தன்ன திரு முகத்து அலமரும் பெரு மதர் மழைக்கண் – தூய மலராகிய தாமரைப் பூவில் கரிய இதழ்களையுடைய குவளை மலர்கள் இரண்டைச் சேர்த்து வைத்தாற்போன்ற அழகிய முகத்தில் சுழலும் பெரிய மதர்த்த (பெருமிதம் கொண்ட) குளிர்ந்த கண்களையும், அணி வளை முன் கை ஆய் இதழ் மடந்தை – அழகிய வளையல்கள் அணிந்த முன்கையினையும் அழகிய வாய் இதழ்களையும் (உதடுகளையும்) கொண்ட நம் தலைவியின், வார் முலை முற்றத்து நூல் இடை விலங்கினும் கவவுப் புலந்து உறையும் – கச்சு அணிந்த முலைப்பரப்பின் முயக்கத்தை ஒரு நூல் இடையில் தடுத்தாலும் அதனை வெறுத்து உறையும், கழி பெருங்காமத்து இன்புறு நுகர்ச்சியின் சிறந்தது ஒன்று இல் என – மிகவும் பெரும் காதலுடன் இன்பம் துய்ப்பதை விடவும் சிறந்த இன்பம் வேறு இல்லை என்று (நுகர்ச்சியின் – இன் உறழ்ச்சிப் பொருளில் வந்தது), அன்பால் மொழிந்த என் மொழி கொள்ளாய் – யான் அன்புடன் கூறிய சொற்களை நீ ஏற்றுக்கொள்ளவில்ல, பொருள் புரிவுண்ட மருளி நெஞ்சே – பொருள் விருப்பத்தால் வந்த மயக்கத்தினை உடைய என் நெஞ்சே, கரியாப் பூவின் பெரியோர் ஆர அழல் எழு தித்தியம் மடுத்த யாமை நிழலுடை நெடுங்கயம் புகல் வேட்டாஅங்கு – வாடாத பூவினையுடைய வானோர்கள் உண்ணும் பொருட்டு அழல் ஓங்கிய வேள்விக்குண்டத்தில் இடப்பட்ட ஆமை நிழலுடைய பெரிய பொய்கைக்குச் செல்லுவதை விரும்புவது போல (வேட்டாஅங்கு – அளபெடை), உள்ளுதல் ஓம்புமதி இனி நீ – இப்பொழுது நீ நினைத்தலை ஒழிவாயாக (மதி – முன்னிலையசை), முள் எயிற்றுச் சின்மொழி அரிவை தோளே – கூரிய பற்களையும் சிலவாகிய சொற்களையும் உடைய நம் தலைவியின் தோள்களை, பன்மலை வெவ்வறை மருங்கின் வியன் சுரம் எவ்வம் கூர இறந்தனம் யாமே – பல மலைகளையும் வெப்பமான பாறைகளையுமுடைய அகன்ற பாலை நிலத்தை மிகுந்த துன்பத்துடன் கடந்துள்ளோம் நாம் (யாமே – ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 362, வெள்ளிவீதியார், குறிஞ்சித் திணைதோழி தலைவியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
பாம்புடை விடர பனி நீர் இட்டுத் துறை
தேம் கலந்து ஒழுக யாறு நிறைந்தனவே,
வெண்கோட்டு யானை பொருத புண் கூர்ந்து,
பைங்கண் வல்லியம் கல் அளைச் செறிய,
முருக்கு அரும்பு அன்ன வள் உகிர் வயப் பிணவு  5
கடி கொள வழங்கார் ஆறே, ஆயிடை
எல்லிற்று என்னான் வென்வேல் ஏந்தி,
நசை தர வந்த நன்னராளன்
நெஞ்சு பழுதாக வறுவியன் பெயரின்,
இன்றிப் பொழுதும் யான் வாழலனே, 10
எவன் கொல்? வாழி தோழி, நம் இடை முலைச்
சுணங்கணி முற்றத்து ஆரம் போலவும்,
சிலம்பு நீடு சோலைச் சிதர் தூங்கு நளிர்ப்பின்
இலங்கு வெள் அருவி போலவும்,
நிலம் கொண்டனவால் திங்கள் அம் கதிரே.  15

பாடல் பின்னணி:  தலைவியின் கூற்றைத் தோழித் தன் கூற்றாகக் கொண்டு உரைத்தது.  வரைவு கடாயது.  பொ. வே. சோமசுந்தரனார் உரை – அஃதாவது தலைவன் திருமணம் செய்து கொள்ளுதலில் கருத்து ஊன்றாமல் நாள்தோறும் இரவுக் குறியின்கண் வந்து வந்து மீள்பவன் ஒரு நாள் இரவுக்குறியின்கண் வந்து ஒரு பக்கத்தே மறைய நின்றமை அறிந்த தோழி இரவுக்குறியின்கண் வருவதற்கு இடையூறுண்மை தோன்றவும் வாராது ஒழியின் தலைவி இறந்து படுவாள் என்பது தோன்றவும் அவன் கேட்பக் கூறுபவள் அவன் வருகை உணராதாள் போன்று தலைவியை நோக்கிச் சொல்லியது என்றவாறு.   

பொருளுரை:  தோழி!  நீ நீடு வாழ்வாயாக!  பாம்புகளை உடைய மலையின் பிளவுகளிலிருந்து வரும் குளிர்ந்த நீர், ஒடுக்கமாக உள்ள துறைகளின் வழியே தேனுடன் கலந்து ஒழுகுவதால் ஆறுகள் நிறைவுற்றன.  வெள்ளை மருப்புகளையுடைய (தந்தங்களை உடைய) களிற்று யானை போரிட்டுக் குத்தியதால் புண் மிகுந்து, பச்சைக் கண்களையுடைய ஆண்புலி மலைக் குகையில் ஒதுங்கியிருக்க, மரத்தின் அரும்பினை ஒத்த கூரிய நகத்தையுடைய வலிய பெண்புலி அதனைக் காவல் காப்பதால் யாவரும் அவ்வழியில் செல்லார்.  

இந்நிலையில் இருள் வந்துவிட்டது என எண்ணாதவனாக வெற்றியைத் தரும் வேலை ஏந்தி நல்ல நெஞ்சத்தை உடைய நம் தலைவன், தன் எண்ணம் பயனில்லாதாகி நம்மைக் கூடாது மீண்டால், இன்று இந்த இரவில் யான் உயிர் வாழேன் போலும்.  யாம் என்ன தான் செய்வது?  நம் முலையின் தேமல் பரந்த இடத்தில் கிடக்கும் முத்துமாலை போலவும், மலையில் உள்ள நீண்ட சோலையில் துளிகளைச் சிதறும் குளிர்ச்சியுடைய விளங்கும் வெள்ளை அருவிகள் போலவும், திங்களின் அழகிய கதிர்கள் நிலத்தில் பரவின.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு ‘நாற்றமும் தோற்றமும்’ (தொல்காப்பியம், களவியல் 23) என வரும் நூற்பாவின்கண் ‘களனும் பொழுதும் வரை நிலை விலக்கி காதல் மிகுதி உளப்படப் பிறவும் நாடும் ஊரும் இல்லும் குடியும் பிறப்பும் சிறப்பும் இறப்ப நோக்கி அவன்வயின் தோன்றிய கிளவியொடு தொகைஇ அனை நிலை வகையான் வரைதல் வேண்டினும்’ என வரும் விதி கொள்க.  ஒப்புமை – அகநானூறு 51 – முலை முற்றம் வீங்க, அகநானூறு 279 – செறிய வீங்கிய மென் முலை முற்றம், அகநானூறு 263 – வருமுலை முற்றத்து, அகநானூறு 361 – வார் முலை முற்றத்து, அகநானூறு 362 – முலைச் சுணங்கணி முற்றத்து, நற்றிணை 191 – வன முலை முற்றத்து.  தலைவி கூறுவது போல் தோழி கூறுதல் –அகநானூறு 362, நற்றிணை 28, 98, 124, 132, 175, 178, 191, 211, 251, 292, கலித்தொகை 18, 70, குறுந்தொகை 236, 238, ஐங்குறுநூறு 45. 

சொற்பொருள்:  பாம்புடை விடர பனி நீர் இட்டுத் துறை தேம் கலந்து ஒழுக யாறு நிறைந்தனவே – பாம்புகளை உடைய மலையின் பிளவுகளிலிருந்து வரும் குளிர்ந்த நீர் ஒடுக்கமாக உள்ள துறைகளின் வழியே தேனுடன் கலந்து ஒழுகுவதால் ஆறுகள் நிறைவுற்றன (தேம் – தேன் என்றதன் திரிபு, நிறைந்தனவே – ஏகாரம் அசைநிலை), வெண்கோட்டு யானை பொருத புண் கூர்ந்து பைங்கண் வல்லியம் கல் அளைச் செறிய – வெள்ளை மருப்புகளையுடைய (தந்தங்களை உடைய) களிற்று யானை போரிட்டுக் குத்தியதால் புண் மிகுந்து பச்சைக் கண்களையுடைய ஆண்புலி மலைக் குகையில் ஒதுங்கியிருக்க, முருக்கு அரும்பு அன்ன வள் உகிர் வயப் பிணவு கடி கொள வழங்கார் ஆறே – முருக்க மரத்தின் அரும்பினை ஒத்த கூரிய நகத்தையுடைய வலிய பெண்புலி அதனைக் காவல் காப்பதால் யாவரும் அவ்வழியில் செல்லார் (முருக்க மரம் – Coral tree, Erythrina variegate), ஆயிடை எல்லிற்று என்னான் வென்வேல் ஏந்தி நசை தர வந்த நன்னராளன் நெஞ்சு பழுதாக வறுவியன் பெயரின் – இந்நிலையில் இருள் வந்துவிட்டது என எண்ணாதவனாக வெற்றியைத் தரும் வேலை ஏந்தி நல்ல நெஞ்சத்தை உடைய நம் தலைவன் தன் எண்ணம் பயனில்லாதாகி நம்மைக் கூடாது மீண்டால், இன்றிப் பொழுதும் யான் வாழலனே – இன்று இந்த இரவில் யான் உயிர் வாழேன் போலும், எவன் கொல் – யாம் என்ன தான் செய்வது (கொல் – அசைநிலை), வாழி – நீ நீடு வாழ்வாயாக, தோழி – தோழி, நம் இடை முலைச் சுணங்கணி முற்றத்து ஆரம் போலவும் – நம் முலையின் தேமல் பரந்த இடத்தில் கிடக்கும் முத்துமாலை போலவும், சிலம்பு நீடு சோலைச் சிதர் தூங்கு நளிர்ப்பின் இலங்கு வெள் அருவி போலவும் – மலையில் உள்ள நீண்ட சோலையில் துளிகளைச் சிதறும் குளிர்ச்சியுடைய விளங்கும் வெள்ளை அருவிகள் போலவும், நிலம் கொண்டனவால் திங்கள் அம் கதிரே – திங்களின் அழகிய கதிர்கள் நிலத்தில் பரவின (கொண்டனவால் – ஆல் அசைநிலை, கதிரே – ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 363, மதுரைப் பொன்செய் கொல்லன் வெண்ணாகனார், பாலைத் திணைதோழி தலைவியிடம் சொன்னது
நிரை செலல் இவுளி விரைவுடன் கடைஇ,
அகல் இரு விசும்பிற் பகல் செலச் சென்று
மழுகு சுடர் மண்டிலம் மா மலை மறைய,
பொழுது கழி மலரின், புனை இழை! சாஅய்,
அணை அணைந்து இனையை ஆகல், கணை அரைப்  5
புல் இலை நெல்லிப் புகர் இல் பசுங்காய்
கல் அதர் மருங்கில் கடு வளி உதிர்ப்ப,
பொலம் செய் காசின் பொற்பத் தாஅம்
அத்தம் நண்ணி அதர் பார்த்திருந்த
கொலை வெங்கொள்கைக் கொடுந்தொழில் மறவர் 10
ஆறு செல் மாக்கள் அரு நிறத்து எறிந்த
எஃகு உறு விழுப்புண் கூர்ந்தோர் எய்திய,
வளைவாய்ப் பருந்தின் வள் உகிர்ச் சேவல்
கிளைதரு தெள் விளி கெழு முடைப் பயிரும்
இன்னா வெஞ்சுரம் இறந்தோர், முன்னிய  15
செய் வினை வலத்தர் ஆகி இவண் நயந்து
எய்த வந்தனரே தோழி, மை எழில்
துணை ஏர் எதிர்மலர் உண்கண்
பிணை ஏர் நோக்கம் பெருங்கவின் கொளவே.

பாடல் பின்னணி:  பிரிவிடை வேறுபட்ட தலைவியிடம் தோழி சொல்லியது. 

பொருளுரை:  தோழி!  திரண்ட அடியையும் சிறிய இலைகளையும் உடைய நெல்லி மரத்தின் வடு இல்லாத பசிய காய்களைக் கற்களையுடைய வழியில் கடிய காற்று உதிர்த்ததால், அவை பொன்னால் செய்த காசுபோல் பரவிக் கிடக்கும் காட்டினை அடைந்து, வழியில் வருபவர்களைப் பார்த்திருக்கும், கொலையை விரும்பும் கொள்கையை உடைய கொடிய தொழிலையுடைய ஆரலைகள்வர்கள், நெறியில் செல்பவர்களின் அரிய மார்பில் எறிந்த வேலால் மிகுந்த புண்களைக் கொண்டவர்களை அடைந்த, வளைந்த வாயையும் கூரிய நகத்தையும் உடைய ஆண் பருந்து அங்குள்ள ஊனை உண்ணுவதற்குத் தன் கிளை வரும்படி தெளிந்த குரலால் அழைக்கும், இன்னாமையைத் தரும் கொடிய சுரத்தைக் கடந்து சென்ற நம் தலைவர்,

தாம் கருதிச் சென்ற பொருள் ஈட்டும் வினையில் வெற்றி அடைந்தவர் ஆகி, வரிசையாகச் செல்லும் குதிரைகளை விரைவாகச் செலுத்தி, நம்மை விரும்பி இங்கு வந்து சேர்ந்தார், கரிய அழகிய இரண்டாகிய எதிர் எதிராகப் பொருந்திய மலர்கள் போன்ற மையுண்ட கண்களின் பெண்மானின் நோக்கத்தை ஒத்த நின் பார்வை பெரும் அழகு அடைய.

ஆதலால், அகன்ற பெரிய வானில் பகல் பொழுது கழியச் சென்று, மழுங்கிய ஒளியையுடைய ஞாயிறு பெரிய மலையில் மறைய, பகல் பொழுது கழிந்த பின் குவியும் மலர் போல் வாடி அழகிய அணிகலன்கள் விழும்படி மெலிந்து இத் தன்மை ஆகாது இருப்பாயாக.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு ‘தலைவரும் விழுமநிலை’ (தொல்காப்பியம், அகத்திணையியல் 31) என வரும் நூற்பாவின்கண் ‘நெஞ்சு மிகக் கலுழ்ந்தோளை அழிந்தது களை என மொழிந்தது கூறி வன்புறை நெருங்கி வந்ததன் திறத்தொடு என்று இவை எல்லாம் இயல்புற நாடின் ஒன்றித் தோன்றும் தோழி மேன’ என வரும் விதி கொள்க.  புனை இழை (4) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – பொலிவிழந்த அணிகலன்கள் (புனை இழை சாஅய் – பொலிவிழந்த அணிகலன்கள் வீழும்படி மெலிந்து), ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – அழகிய அணியுடையாளே (அன்மொழித்தொகை விளியேற்றதாகக் கொள்கின்றார்).  விழு (விழுமம்) – விழுமம் சீர்மையும் சிறப்பும் இடும்பையும் (தொல்காப்பியம், உரியியல் 57).  விழுப்புண் – புறநானூறு 93, ஒளவை துரைசாமி உரை – சீரிய புண், சீரிய = சிறந்த.  பொலம் – பொன் என் கிளவி ஈறு கெட முறையின் முன்னர்த் தோன்றும் லகார மகாரம் செய்யுள் மருங்கின் தொடர் இயலான (தொல்காப்பியம், புள்ளிமயங்கியல் 61).  பாலைத் திணைப் பாடல்களில் கள்வர்கள் – அகநானூறு 1, 3, 7, 31, 63, 89, 91, 101, 151, 169, 245, 249, 257, 269, 285, 289, 291, 297, 309, 313, 319, 321, 327, 337, 363, 365, நற்றிணை 3, 33, 48, 164, 224, 362, குறுந்தொகை 16, 274, 283, 331, 350, 390, ஐங்குறுநூறு 329, 352, கலித்தொகை 6, 12,  குறிஞ்சித் திணைப் பாடல்களில் கள்வர்கள் – அகநானூறு 342, குறுந்தொகை 297.

சொற்பொருள்:  நிரை செலல் இவுளி விரைவுடன் கடைஇ – வரிசையாகச் செல்லும் குதிரைகளை விரைவாகச் செலுத்தி, அகல் இரு விசும்பிற் பகல் செலச் சென்று – அகன்ற பெரிய வானில் பகல் பொழுது கழியச் சென்று (கடைஇ – அளபெடை), மழுகு சுடர் மண்டிலம் மா மலை மறைய – மழுங்கிய ஒளியையுடைய ஞாயிறு பெரிய மலையில் மறைய, பொழுது கழி மலரின் புனை இழை சாஅய் அணை அணைந்து இனையை ஆகல் – பகல் பொழுது கழிந்த பின் குவியும் மலர் போல் வாடி அழகிய அணிகலன்கள் விழும்படி மெலிந்து இத் தன்மை ஆகாது இருப்பாயாக (மலரின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது, ஆகல் – அல் ஈற்று எதிர்மறை வியங்கோள்), கணை அரைப் புல் இலை நெல்லிப் புகர் இல் பசுங்காய் கல் அதர் மருங்கில் கடு வளி உதிர்ப்ப – திரண்ட அடியையும் சிறிய இலைகளையும் உடைய நெல்லி மரத்தின் வடு இல்லாத பசிய காய்களைக் கற்களையுடைய வழியில் கடிய காற்று உதிர்த்ததால், பொலம் செய் காசின் பொற்பத் தாஅம் அத்தம் நண்ணி – பொன்னால் செய்த காசுபோல் பரவிக் கிடக்கும் காட்டினை அடைந்து (தாஅம் – அளபெடை), அதர் பார்த்திருந்த கொலை வெங்கொள்கைக் கொடுந்தொழில் மறவர் – வழியில் வருபவர்களைப் பார்த்திருக்கும் கொலையை விரும்பும் கொள்கையை உடைய கொடிய தொழிலையுடைய ஆரலைகள்வர்கள், ஆறு செல் மாக்கள் அரு நிறத்து எறிந்த எஃகு உறு விழுப்புண் கூர்ந்தோர் எய்திய – நெறியில் செல்லும் மக்களின் அரிய மார்பில் எறிந்த வேலால் மிகுந்த புண்களைக் கொண்டவர்களை அடைந்த, வளைவாய்ப் பருந்தின் வள் உகிர்ச் சேவல் கிளைதரு தெள் விளி கெழு முடைப் பயிரும் – வளைந்த வாயையும் கூரிய நகத்தையும் உடைய ஆண் பருந்து அங்குள்ள ஊனை உண்ணுவதற்குத் தன் கிளை வரும்படி தெளிந்த குரலால் அழைக்கும், இன்னா வெஞ்சுரம் இறந்தோர் – இன்னாமையைத் தரும் கொடிய சுரத்தைக் கடந்து சென்ற நம் தலைவர், முன்னிய  செய் வினை வலத்தர் ஆகி – தாம் கருதிச் சென்ற பொருள் ஈட்டும் வினையில் வெற்றி அடைந்தவர் ஆகி, இவண் நயந்து எய்த வந்தனரே – நம்மை விரும்பி இங்கு வந்து சேர்ந்தார், தோழி – தோழி, மை எழில் துணை ஏர் எதிர்மலர் உண்கண் பிணை ஏர் நோக்கம் பெருங்கவின் கொளவே – கரிய அழகிய இரண்டாகிய எதிர் எதிராகப் பொருந்திய மலர்கள் போன்ற மையுண்ட கண்களின் பெண்மானின் நோக்கத்தை ஒத்த நின் பார்வை பெரும் அழகு அடைய (கொளவே – ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 364, மதுரை மருதங்கிழார் மகனார் பெருங்கண்ணனார், முல்லைத் திணை தலைவி தோழியிடம் சொன்னது
மாதிரம் புதையப் பாஅய்க் கால் வீழ்த்து
ஏறுடைப் பெருமழை பொழிந்தென, அவல் தோறு
ஆடுகளப் பறையின் வரி நுணல் கறங்க,
ஆய் பொன் அவிர் இழை தூக்கியன்ன
நீடு இணர்க் கொன்றை கவின் பெறக், காடுடன்  5
சுடர் புரை தோன்றிப் புதல் தலைக் கொளாஅ
முல்லை இல்லமொடு மலரக், கல்ல
பகுவாய்ப் பைஞ்சுனை மா உண மலிரக்
கார் தொடங்கின்றே காலை, காதலர்
வெஞ்சின வேந்தன் வியன் பெரும் பாசறை  10
வென்றி வேட்கையொடு நம்மும் உள்ளார்,
யாது செய்வாம் கொல் தோழி? நோதகக்
கொலை குறித்தன்ன மாலை
துனைதரு போழ்தின், நீந்தலோ அரிதே.

பாடல் பின்னணி:  பருவம் கண்டு மிகவும் வருந்திய தலைவி, தோழிக்குச் சொல்லியது.  

பொருளுரை:  தோழி!  திசைகள் யாவும் மறையும்படிப் பரவி, மழைக்கால் இறங்கி, இடியேற்றினை உடைய பெரிய மழை பெய்ததால், பள்ளங்கள்தோறும் ஆடும் களத்தில் ஒலிக்கும் பறை போல் வரிகளையுடைய தேரைகள் ஒலிக்கவும், அழகிய பொன்னால் செய்த விளங்கும் அணிகலன்களைத் தொங்கவிட்டாற் போல நீண்ட பூங்கொத்துக்களை உடைய கொன்றை மரங்கள் அழகுபெறவும், காடு முழுவதும் விளக்குப் போன்ற தோன்றி மலர்கள் புதர்களின் உச்சியில் மலர்ந்து அழகு கொள்ளவும், முல்லை பூக்கள் தேற்றா மரத்தின் பூக்களுடன் மலரவும், மலையில் உள்ள பிளந்த வாயையுடைய பசிய சுனைகளில் விலங்குகள் பருகுமாறு நீர் நிறையவும் கார்காலம் தொடங்கிய பொழுது, நம் தலைவர் கொடிய சினத்தையுடைய வேந்தனின் மிகப்பெரும் பாசறையில் வெற்றி அடையும் விருப்பத்தால், நம்மை நினையாது இருக்கின்றார்.

நாம் வருந்தும்படி நம்மைக் கொல்லுதல் எண்ணி வருவது போன்ற மாலை விரைந்து வரும்பொழுது அதனைக் கடந்து செல்வது அரிதாகும்.  யாம் யாது செய்யலாம்?

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு ‘அவன் அறிவு ஆற்ற அறியும் ஆகலின்’ (தொல்காப்பியம், கற்பியல் 6) என வரும் நூற்பாவின்கண் ‘கொடுமை ஒழுக்கத்துத் தோழிக்கு உரியவை வடு அறு சிறப்பின் கற்பின் திரியாமை காய்தலும் உவத்தலும் பிரித்தலும் பெட்டலும் ஆவயின் வரூஉம் பல் வேறு நிலையினும்’ என்பதனுள் ‘காய்தலும்’ என்னும் விதி கொள்க.  ஆடுகளப் பறை – அகநானூறு 45 – ஆடுகளப் பறையின் அரிப்பன ஒலிப்ப, அகநானூறு 364 – ஆடுகளப் பறையின் வரி நுணல் கறங்க.  துனை – கதழ்வும் துனைவும் விரைவின் பொருள் (தொல்காப்பியம், உரியியல் 19).  கொளாஅ – கொள்ள என்பது பொருள். செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம்.  எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது.

சொற்பொருள்:  மாதிரம் புதையப் பாஅய்க் கால் வீழ்த்து ஏறுடைப் பெருமழை பொழிந்தென – திசைகள் யாவும் மறையும்படிப் பரவி மழைக்கால் இறங்கி இடியேற்றினை உடைய பெரிய மழை பெய்ததால், அவல் தோறு ஆடுகளப் பறையின் வரி நுணல் கறங்க – பள்ளங்கள்தோறும் ஆடும் களத்தில் ஒலிக்கும் பறை போல் வரிகளையுடைய தேரைகள் ஒலிக்கவும் (பறையின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), ஆய் பொன் அவிர் இழை தூக்கியன்ன நீடு இணர்க் கொன்றை கவின் பெற – அழகிய பொன்னால் செய்த விளங்கும் அணிகலன்களைத் தொங்கவிட்டாற் போல நீண்ட பூங்கொத்துக்களை உடைய கொன்றை மரங்கள் அழகுபெறவும் (கொன்றை மரம் – Golden Shower Tree, Cassia fistula, Laburnum), காடு உடன் சுடர் புரை தோன்றிப் புதல் தலைக் கொளாஅ – காடு முழுவதும் விளக்குப் போன்ற தோன்றி மலர்கள் புதர்களின் உச்சியில் மலர்ந்து அழகு கொள்ளவும் (புரை – உவம உருபு, Gloriosa superba, கொளாஅ – அளபெடை), முல்லை இல்லமொடு மலர – முல்லை பூக்கள் தேற்றா மரத்தின் பூக்களுடன் மலரவும் (தேற்றா மரம் – Clearing nut tree, Thetra tree), கல்ல பகுவாய்ப் பைஞ்சுனை மா உண மலிரக் கார் தொடங்கின்றே காலை – மலையில் உள்ள பிளந்த வாயையுடைய பசிய சுனைகளில் விலங்குகள் பருகுமாறு நீர் நிறையவும் கார்காலம் தொடங்கிய பொழுது (தொடங்கின்றே – ஏகாரம் அசைநிலை), காதலர் வெஞ்சின வேந்தன் வியன் பெரும் பாசறை வென்றி வேட்கையொடு நம்மும் உள்ளார் – நம் தலைவர் கொடிய சினத்தையுடைய வேந்தனின் மிகப்பெரும் பாசறையில் வெற்றி அடையும் விருப்பத்தால் நம்மை நினையாது இருக்கின்றார், யாது செய்வாம் – நாம் என்ன செய்யலாம், கொல் – அசைநிலை, தோழி – தோழி, நோதகக் கொலை குறித்தன்ன மாலை துனைதரு போழ்தின் நீந்தலோ அரிதே – நாம் வருந்தும்படி நம்மைக் கொல்லுதல் எண்ணி வருவது போன்ற மாலை விரைந்து வரும்பொழுது அதனைக் கடந்து செல்வது அரிதாகும் (அரிதே – ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 365, மதுரை மருதன் இளநாகனார், பாலைத் திணைதலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது
அகல்வாய் வானம் ஆல் இருள் பரப்ப,
பகல் ஆற்றுப்படுத்த பையென் தோற்றமொடு
சினவல் போகிய புன்கண் மாலை,
அத்தம் நடுகல் ஆள் என உதைத்த
கான யானைக் கதுவாய் வள் உகிர்,  5
இரும் பனை இதக்கையின் ஒடியும் ஆங்கண்,
கடுங்கண் ஆடவர் ஏ முயல் கிடக்கை
வருநர் இன்மையின் களையுநர்க் காணா
என்றூழ் வெஞ்சுரம் தந்த நீயே
துயர் செய்து ஆற்றாயாகிப் பெயர்பு ஆங்கு  10
உள்ளினை, வாழிய நெஞ்சே! வென்வேல்
மாவண் கழுவுள் காமூர் ஆங்கண்,
பூதம் தந்த பொரி அரை வேங்கைத்
தண் கமழ் புது மலர் நாறும்
அம் சில் ஓதி ஆய் மடத்தகையே.   15.

பாடல் பின்னணி:  பொருள்வயின் பிரிந்த தலைவன், இடைச்சுரத்தில் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.  

பொருளுரை:  என் நெஞ்ச!  நீ நீடு வாழ்வாயாக!  அகன்ற வானத்தில் மிக்க இருள் பரவும்படி ஞாயிற்றைப் போக்கிய, பசிய தோற்றத்துடன், சினத்தால் மிகுந்த துன்பத்தைத் தரும் மாலை நேரத்தில், சுரத்தில் உள்ள நடுகல்லை ஆள் என நினைத்து உதைத்த காட்டு யானையின் சிதைவுற்ற வளவிய நகம், பெரிய பனை நுங்கினுடைய தோடு போல் ஒடிந்திடும் அவ்விடத்தில், கொடிய கண்களையுடைய ஆரலைகள்வர்கள் அம்புகளை எய்தும் முயற்சியுடன் பதுங்கி இருக்கும் இடத்தில், வழியில் செல்பவர்கள் இல்லாமையால் தங்கள் வறுமையைக் களைவோரைக் காணாத, வெயிலின் வெப்பம் மிக்க கொடிய சுரத்திற்கு என்னை அழைத்து வந்த நீ,

எனக்குத் துயரத்தைக் கொடுத்து நீயும் ஆற்றாதாகி, மீண்டும், வெற்றி வேலினையும் சிறந்த வள்ளன்மையையும் உடைய கழுவுள் என்பவனின் காமூர் என்னும் ஊரில் உள்ள பூதத்தால் தரப்பட்ட, பொரிந்த அடியையுடைய வேங்கை மரத்தின் குளிர்ந்து மணக்கும் புது மலரின் நறுமணத்தை உடைய, அழகிய மென்மையான கூந்தலையுடைய நம் தலைவியின் அழகிய மடப்பமாகிய தன்மையை, நினைப்பாய் ஆயினை.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு, ‘கரணத்தின் அமைந்து முடிந்த காலை’ (தொல்காப்பியம், கற்பியல் 5) என வரும் நூற்பாவின்கண் ‘மீட்டு வரவு ஆய்ந்த வகையின் கண்ணும்’ என வரும் விதி கொள்க.  ஆல் இருள் (1) – ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – நிறைந்த இருள், மிக்க இருள், பொ. வே. சோமசுந்தரனார் உரை – மால் இருள் என்று பதவுரையில் குறித்து மயக்கத்தைத் தருகின்ற இருள், பேரிருள் என்றும் பொருள் கூறுகின்றார்.  பிற பாடல்களில் மிகுந்த இருட்டைக் குறிக்க ‘ஆர் இருள்’ என்றே உள்ளது.  ஒப்புமை –அகநானூறு 135 – அடு போர் வீயா விழுப்புகழ் விண் தோய் வியன் குடை ஈர் எழு வேளிர் இயந்து ஒருங்கு எறிந்த கழுவுள் காமூர் போல.  என்றூழ் – கதிரவனின் முதிர்ந்த கதிர்கள், எல் (கதிரவன்) + ஊழ் (முதிர்ச்சி).  முனைவர் கு. வெ. பாலசுப்ரமணியன் அவர்களின் விளக்கம்.  பாலைத் திணைப் பாடல்களில் கள்வர்கள் – அகநானூறு 1, 3, 7, 31, 63, 89, 91, 101, 151, 169, 245, 249, 257, 269, 285, 289, 291, 297, 309, 313, 319, 321, 327, 337, 363, 365, நற்றிணை 3, 33, 48, 164, 224, 362, குறுந்தொகை 16, 274, 283, 331, 350, 390, ஐங்குறுநூறு 329, 352, கலித்தொகை 6, 12,  குறிஞ்சித் திணைப் பாடல்களில் கள்வர்கள் – அகநானூறு 342, குறுந்தொகை 297.

சொற்பொருள்:  அகல்வாய் வானம் ஆல் இருள் பரப்ப பகல் ஆற்றுப்படுத்த – அகன்ற வானத்தில் மிக்க இருள் பரவும்படி ஞாயிற்றைப் போக்கிய, பையென் தோற்றமொடு சினவல் போகிய புன்கண் மாலை – பசிய தோற்றத்துடன் சினத்தால் மிகுந்த துன்பத்தைத் தரும் மாலை நேரத்தில், அத்தம் நடுகல் ஆள் என உதைத்த கான யானைக் கதுவாய் வள் உகிர் ரும் பனை இதக்கையின் ஒடியும் ஆங்கண் – சுரத்தில் உள்ள நடுகல்லை ஆள் என நினைத்து உதைத்த காட்டு யானையின் சிதைவுற்ற வளவிய நகம் பெரிய பனை நுங்கினுடைய தோடு போல் ஒடிந்திடும் அவ்விடத்தில், கடுங்கண் ஆடவர் ஏ முயல் கிடக்கை வருநர் இன்மையின் களையுநர்க் காணா – கொடிய கண்களையுடைய ஆரலைகள்வர்கள் அம்புகளை எய்தும் முயற்சியுடன் பதுங்கி இருக்கும் இடத்தில் வழியில் செல்பவர்கள் இல்லாமையால் தங்கள் வறுமையைக் களைவோரைக் காணாத (ஏ – அம்பு), என்றூழ் வெஞ்சுரம் தந்த நீயே – வெயிலின் வெப்பம் மிக்க கொடிய சுரத்திற்கு என்னை அழைத்து வந்த நீ, துயர் செய்து ஆற்றாயாகி – எனக்குத் துயரத்தைக் கொடுத்து நீயும் ஆற்றாதாகி, பெயர்பு – மீண்டும், ஆங்கு – அசைநிலை, உள்ளினை – நினைப்பாய் ஆயினை, வாழிய – நீ நீடு வாழ்வாயாக, நெஞ்சே – என் நெஞ்சே, வென்வேல் மா வண் கழுவுள் காமூர் ஆங்கண் பூதம் தந்த – வெற்றி வேலினையும் சிறந்த வள்ளன்மையையும் உடைய கழுவுள் என்பவனின் காமூர் என்னும் ஊரில் உள்ள பூதத்தால் தரப்பட்ட, பொரி அரை வேங்கைத் தண் கமழ் புது மலர் நாறும் – பொரிந்த அடியையுடைய வேங்கை மரத்தின் குளிர்ந்து மணக்கும் புது மலரின் நறுமணத்தை உடைய, அம் சில் ஓதி ஆய் மடத்தகையே – அழகிய மென்மையான கூந்தலையுடைய நம் தலைவியின் அழகிய மடப்பமாகிய தன்மையை

அகநானூறு 366, குடவாயில் கீரத்தனார், மருதத் திணை தோழி தலைவனிடம் சொன்னது, அவன் பரத்தையிடமிருந்து பிரிந்து வந்தப் பின்
தாழ் சினை மருதம் தகை பெறக் கவினிய
நீர் சூழ் வியன் களம் பொலியப் போர்பு அழித்து,
கள் ஆர் களமர் பகடு தலை மாற்றி
கடுங்காற்று எறியப் போகிய துரும்புடன்
காயல் சிறு தடிக் கண் கெடப் பாய்தலின்,  5
இரு நீர்ப் பரப்பின் பனித்துறைப் பரதவர்
தீம் பொழி வெள் உப்புச் சிதைதலின், சினைஇக்,
கழனி உழவரொடு மாறு எதிர்ந்து, மயங்கி
இருஞ்சேற்று அள்ளல் எறிசெருக் கண்டு,
நரை மூதாளர் கை பிணி விடுத்து  10
நனைமுதிர் தேறல் நுளையர்க்கு ஈயும்
பொலம் பூண் எவ்வி நீழல் அன்ன,
நலம் பெறு பணைத்தோள் நன்னுதல் அரிவையொடு,
மணங்கமழ் தண் பொழில் அல்கி நெருநை
நீ தற்பிழைத்தமை அறிந்து  15
கலுழ்ந்த கண்ணள் எம் அணங்கு அன்னாளே.

பாடல் பின்னணி:  பரத்தையிற் பிரிந்துவந்த தலைவன் வாயில் வேண்டினான்.  அது கேட்ட தோழி அவன் வேண்டுகோளுக்கு இணங்காளாய்க் கூறியது.  

பொருளுரை:  தாழ்ந்த கிளைகளையுடைய மருத மரத்தின் சிறப்பைப் பெற்று, அழகுடன் இருக்கும் நீர் சூழ்ந்த அகன்ற களம் பொலிவுற வைக்கோல் போரினைப் பிரித்துக் கடாவிட்டு, கள்ளைப் பருகிய உழவர்கள் அக்கடாக்களைக் கட்டு அவிழ்த்துவிட்டு கடிய காற்றில் நெல்லினைத் தூற்றுவதால் பறந்துப் பரவிய துரும்புகள் முழுவதும், உப்பளத்தில் சிறிய பாத்திகளில் இடம் பாழாக வீழ்ந்து பரவியதால், அருகில் உள்ள, பெரிய கடல் பரப்பின் துறையின்கண் உள்ள பரதவர்கள், தங்கள் இனிமையான வெள்ளை உப்பு கெட்டதால் சினந்து, வயல் உழவர்களுடன் மாறுபட்டு எதிர்த்து, கைகலந்து மிக்க சேற்றுக் குழம்பை எறிந்து புரியும் போரினைக் கண்டு, நரைத்த முடியையுடைய மருத நிலத்து முதியோர்கள் போரிடும் கைப் பிணிப்பை நீக்கித் தேனால் செய்த முற்றிய கள்ளினைப் பரதவர்களுக்குக் கொடுக்கும், பொன் அணிகலன்களை அணிந்த எவ்வி என்பவனின் நீழல் என்னும் ஊர் போன்ற அழகுடைய, மூங்கில் போன்ற தோள்களையும் நல்ல நெற்றியினையும் உடைய பரத்தையுடன், மணங்கமழும் சோலையில் தங்கி, நேற்று நீ தனக்குச் செய்த தீங்கினை அறிந்து அழுத கண்களையுடையவள் ஆகினாள், எம் கடவுள் போன்ற தலைவி.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு ‘பெறற்கு அரும் பெரும் பொருள்’ (தொல்காப்பியம், கற்பியல் 9) என வரும் நூற்பாவின்கண் ‘நீத்த கிழவனை நிகழுமாறு படீஇயர் காத்த தன்மையின் கண் இன்று பெயர்ப்பினும்’ என வரும் விதி கொள்க.  தீம் பொழி (7) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – தமது உணவிற்கு இனிமையைத் தருகின்ற, ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – இனிமை மிக்க.  வரலாறு –எவ்வி, நீழல்.  பொலம் – பொன் என் கிளவி ஈறு கெட முறையின் முன்னர்த் தோன்றும் லகார மகாரம் செய்யுள் மருங்கின் தொடர் இயலான (தொல்காப்பியம், புள்ளிமயங்கியல் 61).

சொற்பொருள்:  தாழ் சினை மருதம் தகை பெறக் கவினிய நீர் சூழ் வியன் களம் பொலியப் போர்பு அழித்து – தாழ்ந்த கிளைகளையுடைய மருத மரத்தின் சிறப்பைப் பெற்று அழகுடன் இருக்கும் நீர் சூழ்ந்த அகன்ற களம் பொலிவுற வைக்கோல் போரினைப் பிரித்துக் கடாவிட்டு (மருத மரம் – Terminalia arjuna), கள் ஆர் களமர் பகடு தலை மாற்றி கடுங்காற்று எறியப் போகிய துரும்பு உடன் – கள்ளைப் பருகிய உழவர்கள் அக்கடாக்களைக் கட்டு அவிழ்த்துவிட்டு கடிய காற்றில் நெல்லினைத் தூற்றுவதால் பறந்துப் பரவிய துரும்புகள் முழுவதும், காயல் சிறு தடிக் கண் கெடப் பாய்தலின் – உப்பளத்தில் சிறிய பாத்திகளில் இடம் பாழாக வீழ்ந்து பரவியதால், இரு நீர்ப் பரப்பின் பனித்துறைப் பரதவர் தீம் பொழி வெள் உப்புச் சிதைதலின் – பெரிய கடல் பரப்பின் துறையின்கண் உள்ள பரதவர்கள் இனிமையான வெள்ளை உப்பு கெட்டதால், சினைஇ – சினந்து  (அளபெடை), கழனி உழவரொடு மாறு எதிர்ந்து – வயல் உழவர்களுடன் மாறுபட்டு எதிர்த்து, மயங்கி இருஞ்சேற்று அள்ளல் எறி செருக் கண்டு – கைகலந்து மிக்க சேற்றுக் குழம்பை எறிந்து புரியும் போரினைக் கண்டு, நரை மூதாளர் கை பிணி விடுத்து முதிர் தேறல் நுளையர்க்கு ஈயும் – நரைத்த முடியையுடைய மருத நிலத்து முதியோர்கள் போரிடும் கைப் பிணிப்பை நீக்கித் தேனால் செய்த முற்றிய கள்ளினைப் பரதவர்களுக்குக் கொடுக்கும், பொலம் பூண் எவ்வி நீழல் அன்ன – பொன் அணிகலன்களை அணிந்த எவ்வி என்பவனின் நீழல் என்னும் ஊர் போன்ற, நலம் பெறு பணைத்தோள் நன்னுதல் அரிவையொடு – அழகுடைய மூங்கில் போன்ற தோள்களையும் நல்ல நெற்றியினையும் உடைய பரத்தையுடன், மணங்கமழ் தண் பொழில் அல்கி – மணங்கமழும் சோலையில் தங்கி, நெருநை நீ தற்பிழைத்தமை அறிந்து கலுழ்ந்த கண்ணள் எம் அணங்கு அன்னாளே – நேற்று நீ தனக்குச் செய்த தீங்கினை அறிந்து அழுத கண்களையுடையவள் ஆகினாள் எம் கடவுள் போன்ற தலைவி (அன்னாளே – ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 367, பரணர், பாலைத் திணைதலைவி தோழியிடம் சொன்னது
இலங்கு சுடர் மண்டிலம் புலம் தலைப்பெயர்ந்து,
பல் கதிர் மழுகிய கல் சேர் அமையத்து
அலந்தலை மூது ஏறு ஆண் குரல் விளிப்ப,
மனை வளர் நொச்சி மா சேர்பு வதிய
முனையுழை இருந்த அம் குடிச் சீறூர்க்,  5
கருங்கால் வேங்கைச் செஞ்சுவல் வரகின்
மிகு பதம் நிறைந்த தொகு கூட்டு ஒரு சிறைக்,
குவியடி வெருகின் பைங்கண் ஏற்றை
ஊன் நசைப் பிணவின் உயங்கு பசி களைஇயர்,
தளிர் புரை கொடிற்றின் செறி மயிர் எருத்தின்,  10
கதிர்த்த சென்னிக் கவிர்ப் பூ அன்ன
நெற்றிச் சேவல் அற்றம் பார்க்கும்
புல்லென் மாலையும் இனிது மன்றம்ம,
நல் அக வனமுலை அடையப் புல்லுதொறும்
உயிர் குழைப்பு அன்ன சாயல்  15
செயிர்தீர் இன் துணைப் புணர்ந்திசினோர்க்கே.

பாடல் பின்னணி:  பிரிவிடை வேறுபட்ட தலைவி. வற்புறுத்தும் தோழியிடம் கூறியது. 

பொருளுரை:  நல்ல மார்பில் உள்ள அழகிய முலைகளைப் பொருந்தத் தழுவுந்தொறும், உயிர் குழைவது போன்ற மென்மைத் தன்மையுடைய தம் குற்றமற்ற இனிய துணைவரைக் கூடியிருக்கும் மகளிர்க்கு,

விளங்குகின்ற ஒளிரும் ஞாயிறு வானிலிருந்து நீங்கிச் சென்றுத் தன் பலவாகிய கதிர்களின் ஒளி மழுங்குமாறு மேற்கு மலையை அடைந்த வேளையில், கலக்கமடைந்த முதிய ஆண்மான் தன் ஆண் குரலில் அழைக்க, மனையின் முற்றத்தில் வளரும் நொச்சி மரத்தின் அடியில் மான்கள் தங்கியிருக்க, காட்டு அரணின் அருகில் உள்ள அழகிய குடியிருப்புகளை உடைய சிறிய ஊரின்கண் கரிய அடியையுடைய வேங்கை மரங்கள் சூழ்ந்த சிவந்த மேட்டு நிலத்தில் வரகாகிய மிகுந்த உணவுப்பொருள் நிறைந்த தொகுதியாக உள்ள கூடுகளின் ஒரு பக்கத்தில், குவிந்த அடியினையும் பசிய கண்களையும் உடைய காட்டுப் பூனையின் ஆண், ஊனை விரும்பும் பெண் பூனையின் பசியை நீக்கும்பொருட்டுத், தளிரை ஒத்த கன்னத்தையும் அடர்ந்த மயிரையுடைய கழுத்தினையும் ஒளிரும் தலையையும் முருக்கம் பூவினை ஒத்த சூட்டினையும் உடைய கோழிச் சேவலைப் பற்றும் பொழுதைப் பார்த்திருக்கும், பொலிவில்லாத மாலை நேரமும் உறுதியாக இனிமையானது.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு ‘எஞ்சியோர்க்கும் எஞ்சுதல் இலவே’ (தொல்காப்பியம், அகத்திணையியல் 42) என வரும் விதி கொள்க.  மனை நொச்சி – அகநானூறு 21 – மனை இள நொச்சி, அகநானூறு 23 – மனைய தாழ்வின் நொச்சி, அகநானூறு 367 – மனை வளர் நொச்சி, நற்றிணை 246 – மனை மா நொச்சி, பொருநராற்றுப்படை 185 – மனை நொச்சி.  சின் – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம், இடையியல் 26, சின் என்பது இசின் என்பதன் முதற்குறை – ச. பாலசுந்தரம் உரை), அவற்றுள், இகுமும் சின்னும் ஏனை இடத்தொடும் தகு நிலை உடைய என்மனார் புலவர் (தொல்காப்பியம், இடையியல் 27).  சாயல் – சாயல் மென்மை (தொல்காப்பியம், உரியியல் 29).  கதிர்த்த (11) – ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – நிமிர்ந்த, பொ. வே. சோமசுந்தரனார் உரை – ஒளியுடைய.  அம்ம – அம்ம கேட்பிக்கும் (தொல்காப்பியம், இடையியல் 28).

சொற்பொருள்:  இலங்கு சுடர் மண்டிலம் புலம் தலைப்பெயர்ந்து பல் கதிர் மழுகிய கல் சேர் அமையத்து – விளங்குகின்ற ஒளிரும் ஞாயிறு வானிலிருந்து நீங்கிச் சென்று தன் பலவாகிய கதிர்களின் ஒளி மழுங்குமாறு மேற்கு மலையை அடைந்த வேளையில், அலந்தலை மூது ஏறு ஆண் குரல் விளிப்ப – கலக்கமடைந்த முதிய ஆண்மான் தன் ஆண் குரலில் அழைக்க, மனை வளர் நொச்சி மா சேர்பு வதிய – மனையின் முற்றத்தில் வளரும் நொச்சி மரத்தின் அடியில் மான்கள் தங்கியிருக்க (நொச்சி மரம் – Vitex leucoxylon, Chaste tree), முனை உழை இருந்த அம் குடிச் சீறூர்க் கருங்கால் வேங்கைச் செஞ்சுவல் வரகின் மிகு பதம் நிறைந்த தொகு கூட்டு ஒரு சிறை – காட்டு அரணின் அருகில் உள்ள அழகிய குடியிருப்புகளை உடைய சிறிய ஊரின்கண் கரிய அடியையுடைய வேங்கை மரங்கள் சூழ்ந்த சிவந்த மேட்டு நிலத்தில் வரகாகிய மிகுந்த உணவுப்பொருள் நிறைந்த தொகுதியாக உள்ள கூடுகளின் ஒரு பக்கத்தில், குவி அடி வெருகின் பைங்கண் ஏற்றை ஊன் நசைப் பிணவின் உயங்கு பசி களைஇயர் – குவிந்த அடியினையும் பசிய கண்களையும் உடைய காட்டுப் பூனையின் ஆண் ஊனை விரும்பும் பெண் பூனையின் பசியை நீக்கும்பொருட்டு (பைங்கண்– பண்புத்தொகை, பிணா பிணவு என ஆயிற்று), களைஇயர் – அளபெடை), தளிர் புரை கொடிற்றின் செறி மயிர் எருத்தின் கதிர்த்த சென்னிக் கவிர்ப் பூ அன்ன நெற்றிச் சேவல் அற்றம் பார்க்கும் – தளிரை ஒத்த கன்னத்தையும் அடர்ந்த மயிரையுடைய கழுத்தினையும் ஒளிரும் தலையையும் முருக்கம் பூவினை ஒத்த சூட்டினையும் உடைய கோழிச் சேவலைப் பற்றும் பொழுதைப் பார்த்திருக்கும் (புரை – உவம உருபு, நெற்றி – ஆகுபெயர் சேவலின் கொண்டைக்கு, முருக்க மரம் – Indian coral tree, Erythrina indica), புல்லென் மாலையும் இனிது மன்ற – பொலிவில்லாத மாலை நேரமும் உறுதியாக இனிமையானது, அம்ம – கேட்பித்தற்பொருட்டு, நல் அக வனமுலை அடையப் புல்லுதொறும் – உயிர் குழைப்பு அன்ன சாயல் செயிர்தீர் இன் துணைப் புணர்ந்திசினோர்க்கே – நல்ல மார்பில் உள்ள அழகிய முலைகளைப் பொருந்தத் தழுவுந்தொறும் உயிர் குழைவது போன்ற மென்மைத் தன்மையுடைய தம் குற்றமற்ற இனிய துணைவரைக் கூடியிருக்கும் மகளிர்க்கு (புணர்ந்திசினோர்க்கே – இசின் படர்க்கையின் கண் வந்தது, ஏ அசைநிலை)

அகநானூறு 368, மதுரை மருதன் இளநாகனார், குறிஞ்சித் திணைதோழி தலைவியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
தொடுதோல் கானவன் சூடுறு வியன் புனம்
கரி புறம் கழீஇய பெரும் பாட்டு ஈரத்துக்,
தோடு வளர் பைந்தினை நீடு குரல் காக்கும்,
ஒண்தொடி மகளிர்க்கு ஊசல் ஆக
ஆடு சினை ஒழித்த கோடு இணர் கஞலிய  5
குறும்பொறை அயலது நெடுந்தாள் வேங்கை,
மட மயில் குடுமியின் தோன்றும் நாடன்,
உயர்வரை மருங்கின் காந்தள் அம் சோலைக்
குரங்கு அறிவாரா மரம் பயில் இறும்பில்,
கடி சுனைத் தெளிந்த மணி மருள் தீ நீர்  10
பிடி புணர் களிற்றின் எம்மொடு ஆடிப்,
பல் நாள் உம்பர்ப் பெயர்ந்து, சில் நாள்
கழியாமையே வழிவழிப் பெருகி
அம் பணை விளைந்த தேக் கள் தேறல்
வண்டுபடு கண்ணியர் மகிழும் சீறூர்,  15
எவன் கொல், வாழி தோழி, கொங்கர்
மணி அரை யாத்து மறுகின் ஆடும்
உள்ளி விழவின் அன்ன
அலர் ஆகின்றது பலர் வாய்ப்பட்டே?

பாடல் பின்னணி:  தலைவிக்குச் சொல்லுவாளாய்த் தோழி சொல்லியது.  

பொருளுரை:  தோழி!  நீ நீடு வாழ்வாயாக!  காலில் செருப்பு அணிந்த குறவன் சுட்டு எரித்த அகன்ற கொல்லையில், கரிந்த இடங்களைக் கழுவிய பெரிய மழையினால் உண்டாகிய ஈரத்தில், இதழ்கள் வளர்ந்த பசிய தினையின் நீண்ட கொத்துக்களைக் காக்கும் ஒளிரும் வளையல்களை அணிந்த மகளிர்க்கு ஊஞ்சல் கட்டும்பொருட்டு அசையும் கிளைகளை நீக்காது விட்ட, சிறிய குன்றின் அருகில் உள்ள நெடிய அடியையுடைய வேங்கை மரத்தின் கிளைகளில் மலர்க்கொத்துக்கள் நெருங்கி, இள மயிலின் தலை உச்சியில் உள்ள குடுமி போல் தோன்றும் மலை நாட்டையுடைய நம் தலைவன்,

உயர்ந்த மலையின் அருகில் உள்ள, காந்தள் செடிகள் உடைய அழகிய சோலையாகிய, குரங்குகளும் ஏறி அறிய இயலாத உயர்ந்த மரங்கள் செறிந்த காட்டில், மணம் மிக்க சுனையில் உள்ள தெளிந்த பளிங்கு போன்ற இனிய நீரில் பிடியுடன் கூடிய களிறு போல் நம்முடன் பல நாட்கள் விளையாடி, அதன் பின் நம்மைப் பிரிந்து வேறிடம் சென்ற சில நாட்கள் கழியும் முன்பே, முறை முறையாகப் பெருகி, அழகிய மூங்கில் குழாய்களில் முற்றிய தேனாகிய கள்ளை வண்டுகள் மொய்க்கும் மலர்மாலையை அணிந்தவர்கள் பருகி மகிழும் சிறிய ஊரில், கொங்கு நாட்டவர் மணிகளை இடுப்பில் கட்டிக்கொண்டு தெருவில் ஆடும் உள்ளி விழாவின் ஆரவாரம் போல் அலர் ஆகிவிட்டது பலரால் பேசப்பட்டு.  இது எதனாலோ?

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு ‘நாற்றமும் தோற்றமும்’ (தொல்காப்பியம், களவியல் 23) என வரும் நூற்பாவின்கண் ‘அனை நிலை வகையான் வரைதல் வேண்டினும்’ என்னும் விதி கொள்க.  ஆடு சினை ஒழித்த (5) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – அசைகின்ற கிளையை வெட்டாது விடப்பட்ட, ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – ஆடும் கிளைகளைப் போக்கிய.  மூங்கிலில் விளைந்த கள் – அகநானூறு 348 – ஆடு அமைப் பழுநிக் கடுந்திறல் பாப்புக் கடுப்பு அன்ன தோப்பி, அகநானூறு 368 – அம் பணை விளைந்த தேக் கள் தேறல், நற்றிணை 276 – வாங்கு அமைப் பழுனிய நறவு உண்டு, பதிற்றுப்பத்து 81 – தூம்பு அகம் பழுனிய தீம் பிழி, திருமுருகாற்றுப்படை 195 – நீடு அமை விளைந்த தேக் கள் தேறல், மலைபடுகடாம் 171 – வேய்ப் பெயல் விளையுள் தேக்கட் தேறல், மலைபடுகடாம் 522 – திருந்து அமை விளைந்த தேக் கள் தேறல்.  வரலாறு – கொங்கர்.

சொற்பொருள்:  தொடுதோல் கானவன் சூடு உறு வியன் புனம் கரி புறம் கழீஇய பெரும்பாட்டு ஈரத்து – காலில் செருப்பு அணிந்த குறவன் சுட்டு எரித்த அகன்ற கொல்லையில் கரிந்த இடங்களைக் கழுவிய பெரிய மழையினால் உண்டாகிய ஈரத்தில் (தொடுதோல் – செருப்பு, கழீஇய – அளபெடை, பெரும்பாட்டு – பாட்டம் பாட்டமாகப் பெய்த மழை), தோடு வளர் பைந்தினை நீடு குரல் காக்கும் ஒண்தொடி மகளிர்க்கு ஊசல் ஆக ஆடு சினை ஒழித்த – இதழ்கள் வளர்ந்த பசிய தினையின் நீண்ட கொத்துக்களைக் காக்கும் ஒளிரும் வளையல்களை அணிந்த மகளிர்க்கு ஊஞ்சல் கட்டும்பொருட்டு அசையும் கிளைகளை நீக்காது விட்ட, கோடு இணர் கஞலிய குறும்பொறை அயலது நெடுந்தாள் வேங்கை – கிளைகளில் மலர்க்கொத்துக்கள் நெருங்கிய சிறிய குன்றின் அருகில் உள்ள நெடிய அடியையுடைய வேங்கை மரம் (வேங்கை மரம் – Kino tree, Pterocarpus marsupium), மட மயில் குடுமியின் தோன்றும் நாடன் – இள மயிலின் தலை உச்சியில் உள்ள குடுமி போல் தோன்றும் மலை நாட்டையுடைய நம் தலைவன் peacock (குடுமியின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), உயர் வரை மருங்கின் காந்தள் அம் சோலைக் குரங்கு அறிவாரா மரம் பயில் இறும்பில் – உயர்ந்த மலையின் அருகில் உள்ள காந்தள் செடிகள் உடைய அழகிய சோலையாகிய குரங்குகளும் ஏறி அறிய இயலாத உயர்ந்த மரங்கள் செறிந்த காட்டில், கடி சுனைத் தெளிந்த மணி மருள் தீ நீர் பிடி புணர் களிற்றின் எம்மொடு ஆடிப் பல் நாள் உம்பர்ப் பெயர்ந்து – மணம் மிக்க சுனையில் உள்ள தெளிந்த பளிங்கு போன்ற இனிய நீரில் பிடியுடன் கூடிய களிறு போல் நம்முடன் பல நாட்கள் விளையாடி அதன் பின் நம்மைப் பிரிந்து வேறிடம் சென்று (களிற்றின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), சில் நாள் கழியாமையே வழிவழிப் பெருகி – சில நாட்கள் கழியும் முன்பே முறை முறையாகப் பெருகி, அம் பணை விளைந்த தேக் கள் தேறல் வண்டுபடு கண்ணியர் மகிழும் சீறூர் – அழகிய மூங்கில் குழாய்களில் முற்றிய தேனாகிய கள்ளை வண்டுகள் மொய்க்கும் மலர்மாலையை அணிந்தவர்கள் பருகி மகிழும் சிறிய ஊரில், எவன் – எதனால், கொல் – அசைநிலை, வாழி – நீ நீடு வாழ்வாயாக, தோழி – தோழி, கொங்கர் மணி அரை யாத்து மறுகின் ஆடும் உள்ளி விழவின் அன்ன அலர் ஆகின்றது பலர் வாய்ப்பட்டே – கொங்கு நாட்டவர் மணிகளை இடுப்பில் கட்டிக்கொண்டு தெருவில் ஆடும் உள்ளி விழாவின் ஆரவாரம் போல் அலர் ஆகிவிட்டது பலரால் பேசப்பட்டு (விழவின் – இன் சாரியை, வாய்ப்பட்டே – ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 369, நக்கீரர், பாலைத் திணைமகட்போக்கிய செவிலித்தாய் சொன்னது
கண்டிசின் மகளே கெழீஇ இயைவெனை
ஒண்தொடி செறித்த முன் கை ஊழ்கொள்பு
மங்கையர் பல பாராட்டச் செந்தார்க்
கிள்ளையும் தீம் பால் உண்ணா மயில் இயல்
சேயிழை மகளிர் ஆயமும் அயரா  5
தாழியும் மலர் பல அணியா கேழ் கொளக்
காழ் புனைந்து இயற்றிய வனப்பமை நோன் சுவர்
பாவையும் பலி எனப் பெறாஅ நோய் பொர
இவை கண்டு இனைவதன் தலையும் நினைவிலேன்
கொடியோள் முன்னியது உணரேன் தொடியோய்  10
இன்று நின் ஒலி குரல் மண்ணல் என்றதற்கு
எற் புலந்து அழிந்தனளாகித் தன் தகக்
கடல் அம் தானைக் கைவண் சோழர்
கெடல் அரு நல்லிசை உறந்தை அன்ன
நிதியுடை நல்நகர்ப் புதுவது புனைந்து  15
தமர் மணன் அயரவும் ஒல்லாள் கவர் முதல்
ஓமை நீடிய உலவை நீளிடை
மணியணி பலகை மாக் காழ் நெடுவேல்
துணிவுடை உள்ளமொடு துதைந்த முன்பின்
அறியாத் தேஎத்து அருஞ்சுரம் மடுத்த  20
சிறியோற்கு ஒத்த என் பெரு மடத்தகுவி
சிறப்பும் சீரும் இன்றிச் சீறூர்
நல்கூர் பெண்டின் புல் வேய் குரம்பை
ஓர் ஆ யாத்த ஒரு தூண் முன்றில்
ஏதில் வறுமனைச் சிலம்புடன் கழீஇ  25
மேயினள் கொல் என நோவல் யானே.

பாடல் பின்னணி:  செவிலித்தாய், தன் மகளான தலைவியின் தோழிக்குச் சொல்லியது

பொருளுரை:  மகளே!  காண்பாயாக!  ஒருவருடன் ஒருவர் அன்பினால் நெஞ்சம் பொருந்துவதால் என்ன பயன்?

ஒளிரும் வளையல்களை அணிந்த முன் கையில் முறைப்படி ஏந்திக்கொண்டு மகளிர் பலமுறை பாராட்டி ஊட்டவும், சிவந்த கோடினை கழுத்தில் கொண்ட அவளுடைய கிளியும் இனிய பாலை உண்ணுவதில்லை.  மயில் போன்ற சாயலையும் சிவந்த அணிகலன்களையும் உடைய அவளுடைய தோழியர் கூட்டமும் விளையாடுவதில்லை. பூஞ்செடிகளையுடைய தாழிகளும் பல மலர்களை மலர்விக்கவில்லை.  நல்ல நிறம் அமையும்படி வலிய சுவரில் முத்து வடம் புனைந்து செய்த அழகு அமைந்த கடவுள் பாவைகளும் பலி எதனையும் பெறுவதில்லை.  இவற்றைக் கண்டு துன்ப நோய் வருத்த வருத்துவதன் மேலும், யான் நினைக்கவில்லை.

கொடியோளாகிய அவள் எண்ணியதை யான் உணரவில்லை.  “வளையல்களை அணிந்த மகளே!  இன்று நின் தழைத்த அடர்ந்த கூந்தலுக்கு நீராட்டு நாள்” எனக் கூறியதற்கு என்னை வெறுத்து மனம் உடைந்தவளாகி, தன் செல்வ நிலைக்கு ஏற்ப கடல் போன்ற சேனையையும் பெரும் வள்ளன்மையையும் உடைய சோழரின் கெடாத நல்ல புகழையுடைய உறையூர் போன்ற செல்வமுடைய நல்ல மனையில் தன் குடும்பத்தார் திருமணம் செய்விக்கவும் ஒத்துக்கொள்ளாதவள் ஆகி, கவர்த்த அடியினையுடைய ஓமை மரங்கள் உயர்ந்துள்ள காடாகிய நீண்ட இடத்தில், மணிகள் பதித்த கேடயத்தையும் சிறந்த காம்பை உடைய நீண்ட வேலினையும் துணிவு உடைய நெஞ்சத்துடன், மிக்க வலிமையையும் உடைய, அறியப்படாத நாட்டின்கண் கடத்தற்கரிய பாலை நில வழியில் கொண்டுபோன, இளையவனுக்குப் பொருந்திய என் பெரிதும் மடப்பத்தையும் தகைமையையும் உடைய மகள், சிறப்பும் உயர்வும் இல்லாமல் சிற்றூரில் வறுமையுற்ற பெண்ணின் புல்லால் வேயப்பட்ட குடிசையின் ஒரு பசு கட்டப்பட்ட ஒரு தூண் உடைய முற்றத்தில், பொருத்தம் இல்லாத வறிய அம்மனையில், சிலம்பை நீக்கும் நிகழ்வைச் செய்து, அவனுடன் பொருந்தினாளோ, என்று யான் வருந்துகின்றேன்.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு ‘எஞ்சியோர்க்கும் எஞ்சுதல் இலவே’ (தொல்காப்பியம், அகத்திணையியல் 42) என வரும் விதி கொள்க.  தொல்காப்பியம், களவியல் 35 – தோழி தானே செவிலி மகளே.  வரலாறு –சோழர், உறந்தை.  ஒப்புமை – குறுந்தொகை 171 – இது மற்று எவனோ நொதுமலர் தலையே.  சிலம்பு கழித்தல் நோன்பு – அகநானூறு 315, 369, 399, நற்றிணை 279, ஐங்குறுநூறு 399.  சின் – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம், இடையியல் 26, சின் என்பது இசின் என்பதன் முதற்குறை – ச. பாலசுந்தரம் உரை).  இயைவெனை (1) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – இயைவு எனை, பொருந்துவதாலே யாது பயன், ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – இயைவெனை, இயைந்து இருந்தேனுடைய நிலை.  ஒலி குரல் மண்ணல் என்றதற்கு (11) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – தழைத்த கூந்தலின்கண் மங்கல நீராட்டு நாளாம் என்று அறிவித்ததற்காக, மண்ணல் ஒரு சடங்கு, அஃதாவது மணப்பருவம் எய்திய மகளிரை மங்கல நீராட்டுவது என்று கொள்க, ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – தழைத்த கூந்தலைப் புனைக.  செவிலி – ஆய் பெருஞ்சிறப்பின் அருமறை கிளத்தலின் தாய் எனப்படுவோள் செவிலி ஆகும் (தொல்காப்பியம், களவியல் 34).  தோழி – தோழி தானே செவிலி மகளே (தொல்காப்பியம், களவியல் 25).   

சொற்பொருள்:  கண்டிசின் – காண்பாயாக (சின் – முன்னிலை அசைச் சொல்), மகளே – மகளே, கெழீஇ இயைவு எனை – ஒருவருடன் ஒருவர் அன்பினால் நெஞ்சம் பொருந்துவதால் என்ன பயன் (கெழீஇ – அளபெடை), ஒண்தொடி செறித்த முன் கை ஊழ்கொள்பு மங்கையர் பல பாராட்டச் செந்தார்க் கிள்ளையும் தீம் பால் உண்ணா – ஒளிரும் வளையல்களை அணிந்த முன் கையில் முறைப்படி ஏந்திக்கொண்டு மகளிர் பலமுறை பாராட்டி ஊட்டவும் சிவந்த கோடினை கழுத்தில் கொண்ட அவளுடைய கிளியும் இனிய பாலை உண்ணுவதில்லை, மயில் இயல் சேயிழை மகளிர் ஆயமும் அயரா – மயில் போன்ற சாயலையும் சிவந்த அணிகலன்களையும் உடைய அவளுடைய தோழியர் கூட்டமும் விளையாடுவதில்லை, தாழியும் மலர் பல அணியா – பூஞ்செடிகளையுடைய தாழிகளும் பல மலர்களை மலர்விக்கவில்லை, கேழ் கொளக் காழ் புனைந்து இயற்றிய வனப்பமை நோன் சுவர் பாவையும் பலி எனப் பெறாஅ – நல்ல நிறம் அமையும்படி வலிய சுவரில் முத்து வடம் புனைந்து செய்த அழகு அமைந்த கடவுள் பாவைகளும் பலி எதனையும் பெறுவதில்லை (பெறாஅ – அளபெடை), நோய் பொர இவை கண்டு இனைவ தன் தலையும் – இவற்றைக் கண்டு துன்ப நோய் வருத்த வருத்துவதன் மேலும், நினைவு இலேன் – யான் நினைக்கவில்லை, கொடியோள் முன்னியது உணரேன் – கொடியோளாகிய அவள் எண்ணியதை யான் உணரவில்லை, தொடியோய் – வளையல்களை அணிந்த மகளே, இன்று நின் ஒலி குரல் மண்ணல் என்றதற்கு எற் புலந்து அழிந்தனள் ஆகி – இன்று நின் தழைத்த அடர்ந்த கூந்தலுக்கு நீராட்டு நாள் எனக் கூறியதற்கு என்னை வெறுத்து மனம் உடைந்தவளாகி, தன் தகக் கடல் அம் தானைக் கைவண் சோழர் கெடல் அரு நல்லிசை உறந்தை அன்ன நிதியுடை நல்நகர்ப் புதுவது புனைந்து தமர் மணன் அயரவும் ஒல்லாள் – தன் செல்வ நிலைக்கு ஏற்ப கடல் போன்ற சேனையையும் பெரும் வள்ளன்மையையும் உடைய சோழரின் கெடாத நல்ல புகழையுடைய உறையூர் போன்ற செல்வமுடைய நல்ல மனையில் தன் குடும்பத்தார் திருமணம் செய்விக்கவும் ஒத்துக்கொள்ளாதவள் ஆகி, கவர் முதல் ஓமை நீடிய உலவை நீள் இடை – கவர்த்த (பிரிவுகள் உடைய) அடியினையுடைய ஓமை மரங்கள் உயர்ந்துள்ள காடாகிய நீண்ட இடத்தில் (ஓமை மரம் – Dillenia indica, Toothbrush Tree), மணியணி பலகை மாக் காழ் நெடுவேல் துணிவுடை உள்ளமொடு – மணிகள் பதித்த கேடயத்தையும் சிறந்த காம்பை உடைய நீண்ட வேலினையும் துணிவு உடைய நெஞ்சத்துடன், துதைந்த முன்பின் அறியாத் தேஎத்து அருஞ்சுரம் மடுத்த – மிக்க வலிமையையும் உடைய அறியப்படாத நாட்டின்கண் கடத்தற்கரிய பாலை நில வழியில் கொண்டுபோன (தேஎத்து – அளபெடை), சிறியோற்கு ஒத்த என் பெரு மடத்தகுவி – இளையவனுக்குப் பொருந்திய என் பெரிதும் மடப்பத்தையும் தகைமையையும் உடைய மகள், சிறப்பும் சீரும் இன்றிச் சீறூர் நல்கூர் பெண்டின் புல் வேய் குரம்பை ஓர் ஆ யாத்த ஒரு தூண் முன்றில் ஏதில் வறுமனைச் சிலம்புடன் கழீஇ மேயினள் கொல் – சிறப்பும் உயர்வும் இல்லாமல் சிற்றூரில் வறுமையுற்ற பெண்ணின் புல்லால் வேயப்பட்ட குடிசையின் ஒரு பசு கட்டப்பட்ட ஒரு தூண் உடைய முற்றத்தில் பொருத்தம் இல்லாத வறிய அம்மனையில் சிலம்பை நீக்கும் நிகழ்வைச் செய்து அவனுடன் பொருந்தினாளோ (கழீஇ – அளபெடை, கொல் – ஐயப்பொருட்டு வந்த இடைச்சொல், a particle implying doubt), என நோவல் யானே – என்று யான் வருந்துகின்றேன் (யானே – ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 370, அம்மூவனார், நெய்தல் திணைதோழி தலைவியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
வளைவாய்க் கோதையர் வண்டல் தைஇ
இளையோர் செல்ப, எல்லும் எல்லின்று,
அகல் இலைப் புன்னைப் புகர் இல் நீழல்,
பகலே எம்மொடு ஆடி, இரவே
காயல் வேய்ந்த தேயா நல் இல்  5
நோயொடு வைகுதி ஆயின், நுந்தை
அருங்கடிப் படுவலும் என்றி மற்று
செல்லல் என்றலும் ஆற்றாய், “செலினே
வாழலென்” என்றி ஆயின் ஞாழல்
வண்டு படத் ததைந்த கண்ணி நெய்தல்  10
தண் அரும் பைந்தார் துயல்வர அந்திக்
கடல் கெழு செல்வி கரை நின்றாங்கு
நீயே கானல் ஒழிய, யானே
வெறி கொள் பாவையின் பொலிந்த என் அணி துறந்து,
ஆடுமகள் போலப் பெயர்தல்  15
ஆற்றேன் தெய்ய, அலர்க இவ்வூரே.

பாடல் பின்னணி:  தலைவன் உணரும்படித் தலைவிக்குச் சொல்லுவாளாய்த் தோழி சொல்லியது.  

பொருளுரை:  வளைவு பொருந்திய மலர் மாலையை அணிந்த இள மகளிர் வண்டல் விளையாட்டைச் செய்துவிட்டு இல்லத்திற்குச் செல்லுவர்.  பகலும் ஒளியை இழந்து விட்டது.  அகன்ற இலைகளையுடைய புன்னை மரத்தின் புள்ளி இல்லாத நிழலில் பகலில் எம்முடன் விளையாடி, இரவில் காய்ந்த புல்லால் வேயப்பட்ட வளம் குன்றாத நல்ல இல்லத்தில் வருத்தத்துடன் பொருந்தி இருப்பாய் ஆயின், உன் தந்தையின் அரிய காவலுக்கு உட்படுவதாக நீ கூறுகின்றாய்.  இல்லத்திற்குச் சொல்லுக என யான் கூறுதலையும் ஆற்றாது உள்ளாய்.  “சென்றால் யான் வாழமாட்டேன்” என்கின்றனை. இவ்வாறு ஆனால்,

ஞாழலின் வண்டு மொய்க்க மலர்ந்த கண்ணியுடன் நெய்தலின் குளிர்ந்த அரிய பசிய மலர்மாலை அசைய, அந்தி நேரத்தில் கடலின் கடவுள் கரையில் நின்றது போல், நீ கடற்கரைச் சோலையில் தனித்து நிற்க, யான், வெறியாட்டம் ஆடுபவள் போன்று பொலிந்த என் அழகினைத் துறந்து, வெறியாட்டம் ஆடும் அவள் பின் பெயர்தல் போல் உன்னிடமிருந்து நீங்க இயலாதவளாக உள்ளேன்.  இவ்வூர் மக்கள் அலர் கூறினாலும் கூறட்டும்.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு ‘களனும் பொழுதும் வரை நிலை விலக்கி காதல் மிகுதி உளப்படப் பிறவும் நாடும் ஊரும் இல்லும் குடியும் பிறப்பும் சிறப்பும் இறப்ப நோக்கி அவன்வயின் தோன்றிய கிளவியொடு தொகைஇ அனை நிலை வகையான் வரைதல் வேண்டினும்’ (தொல்காப்பியம், களவியல் 24) என வரும் விதி கொள்க.  ஆடுமகள் – ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – பெயர் மாத்திரையாய் நின்றது.  காயல் (5) – ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – காய்ந்த புல்.  அல் பெயர் விகுதி.  செல்லல் என்றலும் (8) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – இல்லத்திற்குச் செல்வாயாக என்று யான் கூறுதலையும், ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – இல்லிற்குச் செல்க என்று நான் கூறுதலையும்.

சொற்பொருள்:  வளைவாய்க் கோதையர் வண்டல் தைஇ இளையோர் செல்ப – வளைவு பொருந்திய மலர் மாலையை அணிந்த இள மகளிர் வண்டல் விளையாட்டைச் செய்துவிட்டு இல்லத்திற்குச் செல்லுவர், எல்லும் எல்லின்று – பகலும் ஒளியை இழந்து விட்டது, அகல் இலைப் புன்னைப் புகர் இல் நீழல் பகலே எம்மொடு ஆடி – அகன்ற இலைகளையுடைய புன்னை மரத்தின் புள்ளி இல்லாத நிழலில் பகலில் எம்முடன் விளையாடி, இரவே காயல் வேய்ந்த தேயா நல் இல் நோயொடு வைகுதி ஆயின் – இரவில் காய்ந்த புல்லால் வேயப்பட்ட வளம் குன்றாத நல்ல இல்லத்தில் வருத்தத்துடன் பொருந்தி இருப்பாய் ஆயின், நுந்தை அருங்கடிப் படுவலும் என்றி – உன் தந்தையின் அரிய காவலுக்கு உட்படுவதாக நீ கூறுகின்றாய் (நுந்தை – நும் + தந்தை, மருஉ மொழி, படுவலும் – உம்மை அசைநிலை, என்றி – முன்னிலை ஒருமை), மற்று செல்லல் என்றலும் ஆற்றாய் – இல்லத்திற்குச் சொல்லுக என யான் கூறுதலையும் ஆற்றாது உள்ளாய் (செல்லல் – அல் ஈற்று உடன்பாட்டு வியங்கோள்), ‘செலினே வாழலென்’ என்றி – ‘சென்றால் யான் வாழமாட்டேன்’ என்கின்றனை, ஆயின் – இவ்வாறு ஆனால், ஞாழல் வண்டு படத் ததைந்த கண்ணி நெய்தல் தண் அரும் பைந்தார் துயல்வர – ஞாழலின் வண்டு மொய்க்க மலர்ந்த கண்ணியுடன் நெய்தலின் குளிர்ந்த அரிய பசிய மலர்மாலை அசைய (ஞாழல் – புலிநகக்கொன்றை, Cassia sophera, Tigerclaw tree), அந்திக் கடல் கெழு செல்வி கரை நின்றாங்கு – அந்தி நேரத்தில் கடலின் கடவுள் கரையில் நின்றது போல், நீயே – நீ (ஏகாரம் அசைநிலை), கானல் ஒழிய – கடற்கரைச் சோலையில் தனித்து நிற்க, யானே – யானே (ஏகாரம் அசைநிலை),  வெறி கொள் பாவையின் பொலிந்த என் அணி துறந்து ஆடுமகள் போலப் பெயர்தல் ஆற்றேன் – வெறியாட்டம் ஆடுபவள் போன்று பொலிந்த என் அழகினைத் துறந்து, வெறியாட்டம் ஆடும் அவள் பின் பெயர்தல் போல் உன்னிடமிருந்து நீங்க இயலாதவளாக உள்ளேன், தெய்ய – அசைநிலை, அலர்க இவ்வூரே – இவ்வூர் மக்கள் அலர் கூறினாலும் கூறட்டும் (ஊர் ஆகுபெயர் ஊர் மக்களுக்கு, இவ்வூரே – ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 371, எயினந்தை மகன் இளங்கீரனார், பாலைத் திணைதலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது
அவ் விளிம்பு உரீஇய விசை அமை நோன் சிலை
செவ்வாய்ப் பகழிச் செயிர் நோக்கு ஆடவர்
கணை இடக் கழிந்த தன் வீழ் துணை உள்ளிக்,
குறு நெடுந்துணைய மறி புடை ஆடப்,
புன்கண் கொண்ட திரி மருப்பு இரலை  5
மேய் பதம் மறுத்த சிறுமையொடு, நோய் கூர்ந்து,
நெய்தல் அம் படுவில் சில் நீர் உண்ணாது,
எஃகு உறு மாந்தரின் இனைந்து கண்படுக்கும்
பைது அற வெம்பிய பாழ் சேர் அத்தம்,
எமியம் நீந்தும் எம்மினும் பனி வார்ந்து  10
என்ன ஆம் கொல் தாமே, தெண் நீர்
ஆய் சுனை நிகர் மலர் போன்ம் என நசைஇ,
வீ தேர் பறவை விழையும்
போது ஆர் கூந்தல் நம் காதலி கண்ணே?

பாடல் பின்னணி:  பொருள்வயின் பிரிந்த தலைவன் இடைச்சுரத்தில் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.

பொருளுரை:  தெளிந்த நீரையுடைய அழகிய சுனையிலுள்ள ஒளியுடைய மலர் போலும்  என விரும்பி, பூக்களை ஆராயும் வண்டுகள் விரும்பும், மலர்கள் நிறைந்த கூந்தலையுடைய நம் காதலியின் கண்கள்,

அழகிய விளிம்பினை உருவி நாண் சேர்த்த விரைவு அமைந்த வலிய வில்லினையும், குருதியால் சிவந்த முனையையுடைய அம்பினையும் உடைய சினம் கொண்ட பார்வையையுமுடைய மறவர்கள், அம்பை எய்ததால் உயிரை இழந்த, தன் காதல் துணையான பெண் மானை நினைத்து, குறிய நெடிய தன் குட்டிகள் விளையாட, துன்பம் கொண்ட முறுக்குண்ட கோட்டையுடைய ஆண்மான், மேயும் உணவை வெறுத்த துன்பத்துடன், மிகுந்த வருத்தம் அடைந்து களர் நிலத்தின் குழியில் உள்ள சிறிய நீரைப் பருகாது, வேலால் குத்தப்பட்ட மக்களைப் போல் வருந்தித் துயின்று கிடக்கும், பசுமை இல்லாத வெப்பம் மிகுந்து இருக்கும் பாழ்பட்ட பாலை நிலத்தில், தமியேமாய்க் கடந்து செல்லும் நம்மைவிடவும், கண்ணீரை வடித்து என்ன துன்பத்தினை அடையுமோ?

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு ‘மீட்டு வரவு ஆய்ந்த வகையின் கண்ணும்’ (தொல்காப்பியம், கற்பியல் 5) என வரும் விதி கொள்க.  அவ்விளிம்பு உரீஇய (1) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – அழகிய விளிம்புகளைக் கையால் உருவி நாணேற்றிய, ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – அழகிய விளிம்பினை உருவி நாண் ஏற்றிய, அகநானூறு 175–1 – பொ. வே. சோமசுந்தரனார் உரை – தோளின் விளிம்பு உராயும்படி, ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – தோளின் விளிம்பினை உரசிய, குறுந்தொகை 297–1 – உ. வே. சாமிநாதையர் உரை – மேல் விளிம்பை உருவிய, தமிழண்ணல் உரை – இழுத்துக் கட்டிய, இரா. இராகவையங்கார் உரை – விளிம்பின் நாண் உருவி.   துணைய (4) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – இரட்டையாகிய, ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – அளவினையுடைய.  நிகர் மலர் (12) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – புதிய மலர், ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – ஒளி பொருந்திய மலர்.  பறவை – இச்சொல் சங்கப்பாடல்களில் இன்றைய பயன்பாட்டில் உள்ளவாறும் உள்ளது.  தேனீ, வௌவால், தும்பி ஆகிவற்றைக் குறிக்கவும் பயன்படுத்தப்பட்டுள்ளது.  தேனீ – அகநானூறு 4–11, 132–10, 332–8, 371–13, நற்றிணை 55–5, 161–4, 185–9, ஐங்குறுநூறு 82–3, கலித்தொகை 22–7, பரிபாடல் 7–6, புறநானூறு 70–11, பதிற்றுப்பத்து 66–16, பெரும்பாணாற்றுப்படை 183, 229, வௌவால் – அகநானூறு 244–2, குறுந்தொகை 201–3, 352–2, புறநானூறு 370–11, தும்பி – நற்றிணை 277–9.

சொற்பொருள்:  அவ் விளிம்பு உரீஇய விசை அமை நோன் சிலை – அழகிய விளிம்பினை உருவி நாண் சேர்த்த விரைவு அமைந்த வலிய வில்லினையும் (உரீஇய – அளபெடை), செவ்வாய்ப் பகழிச் செயிர் நோக்கு ஆடவர் கணை இடக் கழிந்த – குருதியால் சிவந்த முனையையுடைய அம்பினையும் உடைய சினம் கொண்ட பார்வையையுமுடைய மறவர்கள் அம்பை எய்ததால் உயிரை இழந்த (செவ்வாய் – பண்புத்தொகை), தன் வீழ் துணை உள்ளிக் குறு நெடுந்துணைய மறி புடை ஆடப் புன்கண் கொண்ட திரி மருப்பு இரலை மேய் பதம் மறுத்த சிறுமையொடு – தன் காதல் துணையான பெண் மானை நினைத்து குறிய நெடிய தன் குட்டிகள் விளையாட துன்பம் கொண்ட முறுக்குண்ட கோட்டையுடைய ஆண்மான் மேயும் உணவை வெறுத்த துன்பத்துடன் (துணைய – அளவில் உள்ள, இரட்டையாகிய), நோய் கூர்ந்து நெய்தல் அம் படுவில் சில் நீர் உண்ணாது – மிகுந்த வருத்தம் அடைந்து களர் நிலத்தின் குழியில் உள்ள சிறிய நீரைப் பருகாது (அம் – சாரியை), எஃகு உறு மாந்தரின் இனைந்து கண்படுக்கும் – வேலால் குத்தப்பட்ட மக்களைப் போல் வருந்தித் துயின்று கிடக்கும் (மாந்தரின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), பைது அற வெம்பிய பாழ் சேர் அத்தம் – பசுமை இல்லாத வெப்பம் மிகுந்து இருக்கும் பாழ்பட்ட பாலை நிலத்தில், எமியம் நீந்தும் எம்மினும் – தமியேமாய்க் கடந்து செல்லும் நம்மைவிடவும், பனி வார்ந்து என்ன ஆம் கொல் – கண்ணீரை வடித்து என்ன துன்பத்தினை அடையுமோ (ஆம் – இடைக்குறை, ஆகும் என்பது ஆம் என நின்றது, கொல் –அசைநிலை), தாமே – தாம் ஏ அசைநிலைகள், தெண் நீர் ஆய் சுனை நிகர் மலர் போன்ம் என நசைஇ – தெளிந்த நீரையுடைய அழகிய சுனையிலுள்ள ஒளியுடைய மலர் போலும்  என விரும்பி (நசைஇ – அளபெடை, போன்ம் – போலும் என்பது இடை உகரம் கெட்டு லகரம் னகரமாய்த் திரிந்து நின்றது), வீ தேர் பறவை விழையும் போது ஆர் கூந்தல் நம் காதலி கண்ணே – பூக்களை ஆராயும் வண்டுகள் விரும்பும் மலர்கள் நிறைந்த கூந்தலையுடைய நம் காதலியின் கண்கள் (கண்ணே – ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 372, பரணர், குறிஞ்சித் திணைதலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது
அருந்தெறல் மரபின் கடவுள் காப்பப்
பெருந்தேன் தூங்கும் நாடு காண் நனந்தலை,
அணங்குடை வரைப்பின் பாழி ஆங்கண்,
வேண் முது மாக்கள் வியன் நகர்க் கரந்த
அருங்கல வெறுக்கையின் அரியோள் பண்பு நினைந்து,  5
வருந்தினம் மாதோ எனினும், அஃது ஒல்லாய்,
இரும் பணை தொடுத்த பலர் ஆடு ஊசல்
ஊர்ந்து இழி கயிற்றின் செலவர வருந்தி,
நெடுநெறிக் குதிரைக் கூர் வேல் அஞ்சி
கடுமுனை அலைத்த கொடு வில் ஆடவர்  10
ஆ கொள் பூசலின் பாடு சிறந்து எறியும்
பெருந்துடி வள்பின் வீங்குபு நெகிழா
மேய் மணி இழந்த பாம்பின் நீ நனி
தேம்பினை, வாழி என் நெஞ்சே! வேந்தர்
கோண் தணி எயிலிற் காப்புச் சிறந்து,  15
ஈண்டு அருங்குரையள் நம் அணங்கியோளே.

பாடல் பின்னணி:  அல்ல குறிப்பட்டுப் போகும் தலைவன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.  

பொருளுரை:  என் நெஞ்சே!  நீ நீடு வாழ்வாயாக!  பிறரால் அழித்தற்கு அரிய கடவுளால் காக்கப்படும் பெரிய தேன் கூடுகள் தொங்கும் நாட்டின் காண்பதற்கு அரிய அகன்ற இடத்தையுடைய அச்சம் பொருந்திய (வருத்தும் கடவுள்களை உடைய) எல்லையில் அமைந்த பாழி மலையிடத்தில், பண்டைய வேளிர் குடி மக்கள் தம் அகன்ற ஊரில் மறைத்து வைத்த அரிய அணிகலன்களாகிய செல்வத்தைப் போல் பெறுவதற்கு அரியவளின் பண்பினை நினைந்து வருந்தினோம் என யான் கூறியும் அதனை நீ ஏற்றுக்கொள்ளவில்லை.  பெரிய கிளையில் கட்டப்பட்ட பலர் ஆடும் ஊஞ்சலின் ஏறி இறங்கும் கயிற்றைப் போல், குறியிடத்திற்கு அவளைக் காணச் சென்றும் அவளைக் காணாது வந்தும் வருந்தி, நீண்ட வழிகளையுடைய குதிரை மலைக்குத் தலைவனான கூரிய வேலையுடைய அஞ்சி என்னும் மன்னனின், கடிய போர் முனையில் வருத்திய வளைந்த வில்லை உடைய மறவர்கள், பகைவரின் ஆநிரைகளைக் கவரும் போரில் மிகுந்த ஒலியுடன் அடிக்கும் பெரிய உடுக்கையின் வாரைப் போல், செறிந்தும் நெகிழ்ந்து மேய்தற்பொருட்டு உமிழ்த்த மணியை இழந்த பாம்பினைப் போல், நீ மிகவும் வருந்தினாய்.

நம்மை வருத்திய நம் காதலி, வேந்தர்களின்  மாறுபாடு தணிவதற்குக் காரணமான மதில் போல் காவல் மிகுந்து இங்கு எய்துவதற்கு அரியவள்.  

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு’பண்பிற் பெயர்ப்பினும்’ (தொல்காப்பியம், களவியல் 12) என வரும் நூற்பாவின்கண் ‘பரிவுற்று மெலியினும்’ என வரும் விதி கொள்க.  வரலாறு –வேண் முதுமாக்கள் (வேளிர்), பாழி, குதிரை மலை, அஞ்சி (அதியமான் நெடுமான் அஞ்சி).  பாம்பு மணியை உமிழ்தல் – புறநானூறு 294, அகநானூறு 72, 92, 138, 192, 372, குறுந்தொகை 239, நற்றிணை 255.  அணங்குடை (3) – ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – அச்சம் பொருந்திய, பொ. வே. சோமசுந்தரனார் உரை – தீண்டி வருத்தும் தெய்வங்களையுடைய.   நெகிழா – நெகிழ்ந்து (தளர்ந்து) என்பது பொருள்.  செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம்.  எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது.  நனந்தலை – அகன்ற இடம், நனம் – நனவே களனும் அகலமும் செய்யும் (தொல்காப்பியம், உரியியல் 80).  நனி – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3).

சொற்பொருள்:  அருந்தெறல் மரபின் கடவுள் காப்பப் பெருந்தேன் தூங்கும் நாடு – பிறரால் அழித்தற்கு அரிய கடவுளால் காக்கப்படும் பெரிய தேன் கூடுகள் தொங்கும் நாட்டின், காண் நனந்தலை அணங்குடை வரைப்பின் பாழி ஆங்கண் – காண்பதற்கு அரிய அகன்ற இடத்தையுடைய அச்சம் பொருந்திய (வருத்தும் கடவுள்களை உடைய) எல்லையில் அமைந்த பாழி மலையிடத்தில், வேண் முது மாக்கள் வியன் நகர்க் கரந்த அருங்கல வெறுக்கையின் அரியோள் பண்பு நினைந்து வருந்தினம் மாதோ எனினும் அஃது ஒல்லாய் – பண்டைய வேளிர் குடி மக்கள் தம் அகன்ற ஊரில் மறைத்து வைத்த அரிய அணிகலன்களாகிய செல்வத்தைப் போல் பெறுவதற்கு அரியவளின் பண்பினை நினைந்து வருந்தினோம் என யான் கூறியும் அதனை நீ ஏற்றுக்கொள்ளவில்லை (வெறுக்கையின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), இரும் பணை தொடுத்த பலர் ஆடு ஊசல் ஊர்ந்து இழி கயிற்றின் செலவர வருந்தி – பெரிய கிளையில் கட்டப்பட்ட பலர் ஆடும் ஊஞ்சலின் ஏறி இறங்கும் கயிற்றைப் போல் குறியிடத்திற்கு அவளைக் காணச் சென்றும் அவளைக் காணாது வந்தும் வருந்தி (கயிற்றின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), நெடுநெறிக் குதிரைக் கூர் வேல் அஞ்சி – நீண்ட வழிகளையுடைய குதிரை மலைக்குத் தலைவனான கூரிய வேலையுடைய அஞ்சி என்னும் மன்னனின் (நெடுநெறிக் குதிரை – குதிரை மலைக்கு வெளிப்படை), கடுமுனை அலைத்த கொடு வில் ஆடவர் – கடிய போர் முனையில் வருத்திய வளைந்த வில்லை உடைய மறவர்கள், ஆ கொள் பூசலின் பாடு சிறந்து எறியும் – பகைவரின் ஆநிரைகளைக் கவரும் போரில் மிகுந்த ஒலியுடன் அடிக்கும், பெருந்துடி வள்பின் வீங்குபு நெகிழா மேய் மணி இழந்த பாம்பின் நீ நனி தேம்பினை – பெரிய உடுக்கையின் வாரைப் போல் செறிந்தும் நெகிழ்ந்து மேய்தற்பொருட்டு உமிழ்த்த மணியை இழந்த பாம்பினைப் போல் நீ மிகவும் வருந்தினாய் (வள்பின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது, பாம்பின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), வாழி – நீ நீடு வாழ்வாயாக, என் நெஞ்சே – என் நெஞ்சே, வேந்தர் கோண் தணி எயிலிற் காப்புச் சிறந்து ஈண்டு அருங்குரையள் நம் அணங்கியோளே – வேந்தர்களின்  மாறுபாடு தணிவதற்குக் காரணமான மதில் போல் காவல் மிகுந்து இங்கு எய்துவதற்கு அரியவள் நம்மை வருத்திய நம் காதலி (அருங்குரையள் – குரை என்னும் இடைச்சொல் குறிப்பு வினைமுற்றாக ஆயிற்று, அணங்கியோளே – ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 373, பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணனார், பாலைத் திணைதலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது
முனை கவர்ந்து கொண்டெனக் கலங்கிப் பீர் எழுந்து,
மனை பாழ் பட்ட மரை சேர் மன்றத்துப்
பணைத் தாள் யானை பரூஉப் புறம் உரிஞ்சக்,
செது காழ் சாய்ந்த முது கால் பொதியில்,
அருஞ்சுரம் நீந்திய வருத்தமொடு கையற்றுப்  5
பெரும் புன் மாலை புலம்பு வந்து உறுதர,
மீளி உள்ளம் செலவு வலியுறுப்பத்
தாள் கை பூட்டிய தனி நிலை இருக்கையொடு
தன்னிலை உள்ளும் நம் நிலை உணராள்,
இரும் பல் கூந்தல், சேயிழை மடந்தை,  10
கனை இருள் நடுநாள் அணையொடு பொருந்தி,
வெய்துற்றுப் புலக்கும் நெஞ்சமொடு ஐது உயிரா
ஆய் இதழ் மழைக் கண் மல்க நோய் கூர்ந்து
பெருந்தோள் நனைக்கும் கலுழ்ந்து வார் அரிப் பனி
மெல் விரல் உகிரின் தெறியினள், வென்வேல்  15
அண்ணல் யானை அடு போர் வேந்தர்
ஒருங்கு அகப்படுத்த முரவுவாய் ஞாயில்
ஓர் எயில் மன்னன் போலத்,
துயில் துறந்தனள் கொல்? அளியள் தானே.

பாடல் பின்னணி:  பொருள்வயின் பிரிந்த தலைவன் இடைச்சுரத்தில் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.   

பொருளுரை:  இரண்டு மன்னர்களின் படைகளும் அதனைப் போர்க்களமாகக் கொண்டுப் போரிட்டதால் நிலைகுலைந்து, பீர்க்கைக் கொடிகள் படர்ந்து, மக்கள் குடியிருக்கும் மனைகள் அங்கு இல்லாதாகி, மரை மான்கள் வந்து இருக்கும் மன்றத்தின்கண், பருத்த கால்களையுடைய யானைகள் தம் பருத்த முதுகினை உரசுவதால் சோர்ந்த விட்டம் (கூரையின் கைமரம்) வீழ்ந்த, முதிய தூண்களையுடைய அம்பலத்தில், கடத்தற்கரிய பாலை நிலத்தைக் கடந்து வருத்தத்துடன் செயலற்று இருக்கும் நம்மிடம், பெரிய பொலிவற்ற மாலையில் தனிமையும் வந்தடைய, திண்மையான நம் உள்ளம் பின்னும் ஆள்வினைக்குச் செல்லுதலை வலியுறுத்த, முழந்தாள்களைக் கைகளால் அணைத்துக்கொண்டு தனியாக இருக்குமிடத்தில் தன் நிலையையே எண்ணி, நம் நிலைமையை அறியாளாகி,

கரிய அடர்ந்த கூந்தலையும் சிவந்த அணிகலன்களையும் உடைய நம் தலைவி, செறிந்த இருளையுடைய நடு இரவில் அணையின்கண் இருந்து, கொதிப்புற்று நம்மை வெறுக்கும் நெஞ்சுடன், மென்மையாக பெருமூச்சு விட்டு, அழகிய மலர் இதழ் போன்ற குளிர்ந்த கண்களில் கண்ணீர் பெருக, மிகுந்த துன்பத்துடன் தன் பெரிய தோள் நனையுமாறு அழுததால் வடியும் நீர்த்துளிகளை மென்மையான விரல் நகத்தால் தெறிப்பவளாய், வெற்றி வேலினையும் தலைமை பொருந்திய யானைகளையும் பகைவர்களைப் போரில் கொல்லும் ஆற்றலையும் உடைய வேந்தர்கள் பலர் ஒன்றுகூடிச் சூழ்ந்ததால் ஒரு மதிலின்கண் அகப்பட்ட அரசனைப் போல், துயிலைத் துறந்து விட்டாளோ?  அவள் இரங்கத்தக்கவள்

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு,’கரணத்தின் அமைந்து முடிந்த காலை’ (தொல்காப்பியம், கற்பியல் 5) என வரும் நூற்பாவின்கண் ‘மீட்டு வரவு ஆய்ந்த வகையின் கண்ணும்’ என வரும் விதி கொள்க.  தாள் கை பூட்டிய தனி நிலை இருக்கையொடு தன்னிலை உள்ளும் நம் நிலை உணராள் (8–9) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – முழந்தாள்களை இரு கைகளாலும் அணைத்துக் கொண்டு தன்னந்தனியாளாய் இருக்கின்ற இருப்பில் இருந்து தனக்கு உண்டான துன்பத்தையே நினைவாள், ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – முழந்தாள்களைக் கையாற் பூட்டிய தனித்த நிலையினைதாகிய இருப்புடன் தனது நிலையினையே எண்ணியிருக்கும் நமது இயல்பினை அறியாளாகி.  ஆய் இதழ் மழைக் கண் (13) – ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – அழகிய பூவிதழ் போன்ற குளிர்ந்த கண்கள், பொ. வே. சோமசுந்தரனார் உரை – அழகிய மலர்போன்ற குளிர்ந்த கண்கள்.  ஒப்புமை –நற்றிணை 43 – உடை மதில் ஓர் எயில் மன்னன் போல.  புறநானூறு 338 – ஓர் எயில் மன்னன்.  அகநானூறு 167 – பெருங்கை யானை வெரிந் ஓங்கு சிறுபுறம் உரிஞ ஒல்கி இட்டிகை நெடுஞ்சுவர் விட்டம் வீழ்ந்தென.  உயிரா – உயிர்த்து என்பது பொருள். செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம்.  எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது.  புலம்பு – புலம்பே தனிமை (தொல்காப்பியம், உரியியல் 35).

சொற்பொருள்:  முனை கவர்ந்து கொண்டெனக் கலங்கிப் பீர் எழுந்து மனை பாழ் பட்ட மரை சேர் மன்றத்து – இரண்டு மன்னர்களின் படைகளும் அதனைப் போர்க்களமாகக் கொண்டுப் போரிட்டதால் நிலைகுலைந்து பீர்க்கைக் கொடிகள் படர்ந்து மக்கள் குடியிருக்கும் மனைகள் அங்கு இல்லாதாகி மரை மான்கள் வந்து இருக்கும் மன்றத்தின்கண், பணைத் தாள் யானை பரூஉப் புறம் உரிஞ்சக் செது காழ் சாய்ந்த முது கால் பொதியில் – பருத்த கால்களையுடைய யானைகள் தம் பருத்த முதுகினை உரசுவதால் சோர்ந்த விட்டம் (கூரையின் கைமரம்) வீழ்ந்த முதிய தூண்களையுடைய அம்பலத்தில் (பரூஉ – அளபெடை), அருஞ்சுரம் நீந்திய வருத்தமொடு கையற்றுப் பெரும் புன் மாலை புலம்பு வந்து உறுதர – கடத்தற்கரிய பாலை நிலத்தைக் கடந்து வருத்தத்துடன் செயலற்று பெரிய பொலிவற்ற மாலையில் தனிமையும் வந்தடைய, மீளி உள்ளம் செலவு வலியுறுப்ப – திண்மையான நம் உள்ளம் பின்னும் ஆள்வினைக்குச் செல்லுதலை வலியுறுத்த, தாள் கை பூட்டிய தனி நிலை இருக்கையொடு தன்னிலை உள்ளும் நம் நிலை உணராள் – முழந்தாள்களைக் கைகளால் அணைத்துக்கொண்டு தனியாக இருக்குமிடத்தில் தன் நிலையையே எண்ணி நம் நிலைமையை அறியாளாகி, இரும் பல் கூந்தல் சேயிழை மடந்தை கனை இருள் நடுநாள் அணையொடு பொருந்தி வெய்துற்றுப் புலக்கும் நெஞ்சமொடு – கரிய அடர்ந்த கூந்தலையும் சிவந்த அணிகலன்களையும் உடைய நம் தலைவி செறிந்த இருளையுடைய நடு இரவில் அணையின்கண் இருந்து கொதிப்புற்று நம்மை வெறுக்கும் நெஞ்சுடன், ஐது உயிரா ஆய் இதழ் மழைக் கண் மல்க நோய் கூர்ந்து பெருந்தோள் நனைக்கும் கலுழ்ந்து வார் அரிப் பனி மெல் விரல் உகிரின் தெறியினள் – மென்மையாக பெருமூச்சு விட்டு அழகிய மலர் இதழ் போன்ற குளிர்ந்த கண்களில் கண்ணீர் பெருக மிகுந்த துன்பத்துடன் தன் பெரிய தோள் நனையுமாறு அழுததால் வடியும் நீர்த்துளிகளை மென்மையான விரல் நகத்தால் அவள் தெறித்து (உயிரா – உயிர்த்து), வென்வேல் அண்ணல் யானை அடு போர் வேந்தர் ஒருங்கு அகப்படுத்த முரவுவாய் ஞாயில் ஓர் எயில் மன்னன் போலத் துயில் துறந்தனள் கொல் – வெற்றி வேலினையும் தலைமை பொருந்திய யானைகளையும் பகைவர்களைப் போரில் கொல்லும் ஆற்றலையும் உடைய வேந்தர்கள் பலர் ஒன்றுகூடிச் சூழ்ந்ததால் ஒரு மதிலின்கண் அகப்பட்ட அரசனைப் போல் துயிலைத் துறந்து விட்டாளோ, அளியள் தானே – அவள் இரங்கத்தக்கவள் (தானே – தான் ஏ அசைநிலைகள்)

அகநானூறு 374, இடைக்காடனார், முல்லைத் திணைதலைவன் தேர்ப்பாகனிடம் சொன்னது
மாக் கடல் முகந்து மாதிரத்து இருளி,
மலர்தலை உலகம் புதைய வலன் ஏர்பு
பழங்கண் கொண்ட கொழும் பல் கொண்மூ,
போழ்ந்த போலப் பலவுடன் மின்னி,
தாழ்ந்த போல நணி நணி வந்து  5
சோர்ந்த போலச் சொரிவன பயிற்றி,
இடியும் முழக்கும் இன்றிப் பாணர்
வடியுறு நல்யாழ் நரம்பு இசைத்தன்ன
இன் குரல் அழிதுளி தலைஇ, நன் பல
பெயல் பெய்து கழிந்த பூ நாறு வைகறைச்  10
செறி மணல் நிவந்த களர் தோன்று இயவில்,
குறு மோட்டு மூதாய் குறுகுறு ஓடி,
மணி மண்டு பவளம் போலக் காயா
அணிமிகு செம்மல் ஒளிப்பன மறையக்,
கார் கவின் கொண்ட காமர் காலைச்  15
செல்க தேரே, நல் வலம் பெறுந!
பெருந்தோள் நுணுகிய நுசுப்பின்,
திருந்திழை அரிவை விருந்து எதிர்கொளவே.

பாடல் பின்னணி:  வினை முற்றி மீளும் தலைவன் தேர்ப்பாகனுக்குச் சொல்லியது.  

பொருளுரை:  நல்ல திறமையுடைய பாகனே!  பெரிய கடலில் நீரை முகந்துகொண்டு திசைகளில் சென்று இருண்டு, அகன்ற இடத்தையுடைய உலகம் மறையும்படி வலப்பக்கமாக எழுந்து, நீரின் சுமையால் வருந்தும் வளமான பல முகில்கள், வானைப் பிளந்தன போல் பலவும் சேர்ந்து மின்னி, கீழே இறங்குவன போல் மிகவும் நெருக்கமாக வந்து, கவிழ்ந்தாற்போல மிகுதியாகப் பெய்து, இடியும் முழக்கமும் இல்லாது, பாணரின் வடித்தல் செய்த நல்ல யாழின் நரம்பு ஒலித்தாற்போல் இனிய குரலில் மிக்க துளிகளைப் பெய்து, நல்ல பல மழைகளைப் பெய்து, கழிந்த மலர்கள் நறுமணம் பரப்பும் விடியற்காலையில், செறிந்த மணல் மேடாக உயர்ந்த களர்மன் தோன்றும் வழியில், சிறிய வயிற்றினையுடைய தம்பலப்பூச்சிகள் குறுகக் குறுக ஓடி நீலமணியுடன் சேர்த்த பவளம்போல் காயாவின் அழகிய வாடிய மலர்களில் மறைய, கார்காலம் அழகு பெற்ற விருப்பம் பொருந்திய வேளையில், பெரிய தோள்களையும் நுணுகிய இடையையும் உடைய திருந்திய அணிகலன்களை அணிந்த நம் தலைவி நம்மை விருந்தாக ஏற்றுக்கொள்ள, தேர் செல்வதாக!

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு,’கரணத்தின் அமைந்து முடிந்த காலை’ (தொல்காப்பியம், கற்பியல் 5) என வரும் நூற்பாவின்கண் ‘பேரிசை ஊர்திப் பாகர் பாங்கினும்’ என வரும் விதி கொள்க.  மூதாய் – தம்பலப்பூச்சி, இந்திரகோபம், பட்டுப்பூச்சி, trombidium grandissimum.  சிறிய சிவந்த நிறமுடைய பூச்சிகள் இவை.  நிலத்தில் தவழ்வன.  வெல்வெட் போன்ற மேல்பகுதியைக் கொண்டவை.  மழைக்காலத்தில் இவற்றைக் காணலாம்.  இவை உள்ள பாடல்கள் – அகநானூறு 14, 54, 74, 134, 139, 283, 304, 374, கலித்தொகை 85, நற்றிணை 362.  கருவி – கருவி தொகுதி (தொல்காப்பியம், உரியியல் 58).  நனி – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3).

சொற்பொருள்:  மாக் கடல் முகந்து மாதிரத்து இருளி மலர்தலை உலகம் புதைய வலன் ஏர்பு பழங்கண் கொண்ட கொழும் பல் கொண்மூ – பெரிய கடலில் நீரை முகந்துகொண்டு திசைகளில் சென்று இருண்டு அகன்ற இடத்தையுடைய உலகம் மறையும்படி வலப்பக்கமாக எழுந்து நீரின் சுமையால் வருந்தும் வளமான பல முகில்கள், போழ்ந்த போலப் பலவுடன் மின்னி – வானைப் பிளந்தன போல் பலவும் சேர்ந்து மின்னி, தாழ்ந்த போல நணி நணி வந்து – கீழே இறங்குவன போல் மிகவும் நெருக்கமாக வந்து (நணி நணி – அடுக்குத்தொடர்), சோர்ந்த போலச் சொரிவன பயிற்றி இடியும் முழக்கும் இன்றி – கவிழ்ந்தாற்போல மிகுதியாகப் பெய்து இடியும் முழக்கமும் இல்லாது, பாணர் வடியுறு நல்யாழ் நரம்பு இசைத்தன்ன இன் குரல் அழிதுளி தலைஇ – பாணரின் வடித்தல் செய்த நல்ல யாழின் நரம்பு ஒலித்தாற்போல் இனிய குரலில் மிக்க துளிகளைப் பெய்து (தலைஇ – அளபெடை), நன் பல பெயல் பெய்து கழிந்த பூ நாறு வைகறை – நல்ல பல மழைகளைப் பெய்து கழிந்த மலர்கள் நறுமணம் பரப்பும் விடியற்காலையில், செறி மணல் நிவந்த களர் தோன்று இயவில் – செறிந்த மணல் மேடாக உயர்ந்த களர்மன் தோன்றும் வழியில், குறு மோட்டு மூதாய் குறுகுறு ஓடி மணி மண்டு பவளம் போலக் காயா அணிமிகு செம்மல் ஒளிப்பன மறைய – சிறிய வயிற்றினையுடைய தம்பலப்பூச்சிகள் குறுகக் குறுக ஓடி நீலமணியுடன் சேர்த்த பவளம்போல் காயாவின் அழகிய வாடிய மலர்களில் மறைய (காயா மரம் – Memecylon edule, ironwood tree), கார் கவின் கொண்ட காமர் காலை – கார்காலம் அழகு பெற்ற விருப்பம் பொருந்திய வேளையில், செல்க தேரே – தேர் செல்வதாக, நல் வலம் பெறுந – நல்ல திறமையுடைய பாகனே, பெருந்தோள் நுணுகிய நுசுப்பின் திருந்திழை அரிவை விருந்து எதிர்கொளவே – பெரிய தோள்களையும் நுணுகிய இடையையும் உடைய திருந்திய அணிகலன்களை அணிந்த நம் தலைவி நம்மை விருந்தாக ஏற்றுக்கொள்ள (கொளவே – ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 375, இடையன் சேந்தங்கொற்றனார், பாலைத் திணைதலைவி தோழியிடம் சொன்னது
“சென்று நீடுநர் அல்லர், அவர் வயின்
இனைதல் ஆனாய்” என்றிசின் இகுளை,
அம்பு தொடை அமைதி காண்மார் வம்பலர்
கலன் இலர் ஆயினும், கொன்று புள் ஊட்டும்
கல்லா இளையர் கலித்த கவலைக்,  5
கண நரி இனனொடு குழீஇ நிணன் அருந்தும்
நெய்த்தோர் ஆடிய மல்லல் மொசி விரல்,
அத்த எருவைச் சேவல் சேர்ந்த
அரை சேர் யாத்த வெண்திரள், வினை விறல்
எழாஅத் திணி தோள் சோழர் பெருமகன்  10
விளங்கு புகழ் நிறுத்த இளம்பெருஞ்சென்னி
குடிக் கடன் ஆகலின், குறை வினை முடிமார்
செம்பு உறழ் புரிசைப் பாழி நூறி
வம்ப வடுகர் பைந்தலை சவட்டிக்,
கொன்ற யானைக் கோட்டின் தோன்றும்  15
அஞ்சுவரு மரபின் வெஞ்சுரம் இறந்தோர்
நோய் இலர் பெயர்தல் அறியின்,
ஆழல மன்னோ தோழி என் கண்ணே.

பாடல் பின்னணி:  பிரிவிடை வேறுபட்ட தலைவி, தோழியிடம் சொல்லியது.  

பொருளுரை:  இகுளை – தோழி!   “நம் தலைவர் பொருள் ஈட்டச் சென்று காலம் நீட்டிப்பவர் இல்லை.  அவர்பொருட்டு வருந்தாதே” எனக் கூறுகின்றாய்.

தங்கள் அம்பு விடுத்தலின் திறமையைக் காணும்பொருட்டு, வழிப்போக்கர்கள் அணிகலன் முதலிய பொருள் எதுவும் இல்லாதவர்கள் ஆயினும், அவர்களைக் கொன்று பறவைகளுக்கு ஊட்டும் ஆறலைத்தல் அன்றி வேறு எதுவும் கற்காத இளைஞர்கள் செருக்குடன் இருக்கும் பிரிவுகளையுடைய வழிகளில், கூட்டமாக நரிகள் தம் இனத்துடன் கூடி நிணத்தை உண்ணும். 

குருதி படிந்த வளமான நெருங்கிய விரல்களையுடைய பாலை நிலத்தின் ஆண்பருந்து இருக்கும் அடிமரம் பொருந்திய யா மரத்தின் வெள்ளை கிளைகளின் கூட்டம், போர் வெற்றி நீங்காத திண்மையான தோளினையுடைய, சோழரின் பெரும் தலைவனான விளங்கும் புகழை நிலைநாட்டிய இளம்பெருஞ்சென்னி, தன் குடிகளின் நன்மைக்கு ஆற்றும் கடமை ஆதலால், போர் வினையை முடிக்கும்பொருட்டு, செம்பை ஒத்த மதிலையுடைய பாழி என்னும் அரணை அழித்து, புதிய வடுகர்களின் பசிய தலையைக் குத்திச் சிதைத்துக் கொன்ற யானைகளின் மருப்புகள் (தந்தங்கள்) போல் தோன்றும், அச்சம் வரும் தன்மையுடைய கொடிய சுரத்தைக் கடந்து சென்ற நம் தலைவர், துன்பம் இல்லாதவராய் மீண்டு வருவதை அறிய முடிந்தால், அழ மாட்டா தோழி, என் கண்கள்.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு ‘எஞ்சியோர்க்கும் எஞ்சுதல் இலவே’ (தொல்காப்பியம், அகத்திணையியல் 42) என வரும் விதி கொள்க.  செம்புச் சுவர் – புறநானூறு201 – செம்பு புனைந்து இயற்றிய சேண் நெடும் புரிசை, அகநானூறு 375, புறநானூறு 37 – செம்பு உறழ் புரிசை, மதுரைக்காஞ்சி 485 – செம்பு இயன்றன்ன செஞ்சுவர், நெடுநல்வாடை112 – செம்பு இயன்றன்ன செய்வுறு நெடுஞ்சுவர்.  வடுகர் – ஒளவை துரைசாமி உரை புறநானூறு 278 – தொண்டை நாட்டுத் திருவேங்கடத்திற்கு வடக்கில் உள்ள நாட்டவராதலால் வடுகர் எனப்பட்டனர், பொ. வே. சோமசுந்தரனார் உரை அகநானூறு 213 – தெலுங்கர்.  வடுகர் – அகநானூறு 107, 213, 253, 281, 295, 375, 381, குறுந்தொகை 11, நற்றிணை 212, புறநானூறு 378.  வரலாறு –சோழர், இளம்பெருஞ்சென்னி, பாழி, வடுகர். சின் – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம், இடையியல் 26, சின் என்பது இசின் என்பதன் முதற்குறை – ச. பாலசுந்தரம் உரை).

சொற்பொருள்:  சென்று நீடுநர் அல்லர் – நம் தலைவர் பொருள் ஈட்டச் சென்று காலம் நீட்டிப்பவர் இல்லை, அவர் வயின் இனைதல் ஆனாய் என்றிசின் – அவர்பொருட்டு வருந்தாதே எனக் கூறுகின்றாய் (சின் – முன்னிலை அசைச் சொல்), இகுளை – தோழி, அம்பு தொடை அமைதி காண்மார் வம்பலர் கலன் இலர் ஆயினும் – அம்பு விடுத்தலின் திறமையைக் காணும்பொருட்டு வழிப்போக்கர்கள் அணிகலன் முதலிய பொருள் எதுவும் இல்லாதவர்கள் ஆயினும், கொன்று புள் ஊட்டும் கல்லா இளையர் கலித்த கவலை – அவர்களைக் கொன்று பறவைகளுக்கு ஊட்டும் ஆறலைத்தல் அன்றி வேறு எதுவும் கற்காத இளைஞர்கள் செருக்குடன் இருக்கும் பிரிவுகளையுடைய வழிகளில், கண நரி இனனொடு குழீஇ நிணன் அருந்தும் – கூட்டமாக நரிகள் தம் இனத்துடன் கூடி நிணத்தை உண்ணும் (குழீஇ – அளபெடை, நிணன் – நிணம் என்பதன் போலி, நிணம் – கொழுப்பு, கொழுப்புடன் கூடிய தசை), நெய்த்தோர் ஆடிய மல்லல் மொசி விரல் அத்த எருவைச் சேவல் சேர்ந்த அரை சேர் யாத்த வெண்திரள் – குருதி படிந்த வளமான நெருங்கிய விரல்களையுடைய பாலை நிலத்தின் ஆண்பருந்து இருக்கும் அடிமரம் பொருந்திய யா மரத்தின் வெள்ளை கிளைகளின் கூட்டம் (யா மரம் – ஆச்சா மரம், Hardwickia binate), வினை விறல் எழாஅத் திணி தோள் சோழர் பெருமகன் விளங்கு புகழ் நிறுத்த இளம்பெருஞ்சென்னி – போர் வெற்றி நீங்காத திண்மையான தோளினையுடைய சோழரின் பெரும் தலைவனான விளங்கும் புகழை நிலைநாட்டிய இளம்பெருஞ்சென்னி, குடிக் கடன் ஆகலின் – தன் குடிகளின் நன்மைக்கு ஆற்றும் கடமை ஆதலால், குறை வினை முடிமார் – போர் வினையை முடிக்கும்பொருட்டு, செம்பு உறழ் புரிசைப் பாழி நூறி – செம்பை ஒத்த மதிலையுடைய பாழி என்னும் அரணை அழித்து (உறழ் – உவம உருபு), வம்ப வடுகர் பைந்தலை சவட்டிக் கொன்ற யானைக் கோட்டின் தோன்றும் – புதிய வடுகர்களின் பசிய தலையைக் குத்திச் சிதைத்துக் கொன்ற யானைகளின் மருப்புகள் (தந்தங்கள்) போல் தோன்றும், அஞ்சுவரு மரபின் வெஞ்சுரம் இறந்தோர் நோய் இலர் பெயர்தல் அறியின் – அச்சம் வரும் தன்மையுடைய கொடிய சுரத்தைக் கடந்து சென்ற நம் தலைவர் துன்பம் இல்லாதவராய் மீண்டு வருவதை அறிய முடிந்தால், ஆழல – அழ மாட்டா, மன்னோ – மன் ஓ அசைநிலைகள், தோழி – தோழி, என் கண்ணே – என் கண்கள் (கண்ணே – ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 376, பரணர், மருதத் திணை பரத்தை தலைவனிடம் சொன்னது
செல்லல் மகிழ்ந! நின் செய் கடன் உடையென் மன்,
கல்லா யானை கடி புனல் கற்றென,
மலி புனல் பொருத மருது ஓங்கு படப்பை
ஒலி கதிர்க் கழனிக் கழாஅர் முன்துறை,
கலி கொள் சுற்றமொடு கரிகால் காணத்  5
தண் பதம் கொண்டு தவிர்ந்த இன்னிசை
ஒண் பொறிப் புனை கழல் சேவடி புரளக்,
கருங்கச்சு யாத்த காண்பின் அவ்வயிற்று
இரும் பொலப் பாண்டில் மணியொடு தெளிர்ப்பப்,
புனல் நயந்து ஆடும் அத்தி அணி நயந்து  10
காவிரி கொண்டு ஒளித்தாங்கு மன்னோ,
நும் வயிற் புலத்தல் செல்லேம் எம் வயின்
பசந்தன்று காண்டிசின் நுதலே, அசும்பின்
அம் தூம்பு வள்ளை அழற்கொடி மயக்கி
வண் தோட்டு நெல்லின் வாங்கு பீள் விரியத்,  15
துய்த்தலை முடங்கிறாத் தெறிக்கும் பொற்புடைக்
குரங்கு உளைப் புரவிக் குட்டுவன்
மரந்தை அன்ன என் நலம் தந்து சென்மே.

பாடல் பின்னணி:  காதற் பரத்தை புலந்து கூறியது.  மரந்தை என்ற ஊர் மாந்தை என்றும் சில பாடல்களில் குறிப்பிடப்பதுள்ளது. 

பொருளுரை:  தலைவா!  செல்லாதே!  பாகனிடம் பயிற்சி பெறாத யானை விரைந்து ஓடும் நீரில் இறங்கி நீந்தக் கற்க, அதனால் மிகுந்து எழும் நீர் மோதியதால் தாக்குண்ட மருத மரங்கள் ஓங்கி வளர்ந்துள்ள தோப்புகளையும், தழைத்த கதிர்கள் கொண்ட வயல்களையும் உடைய கழார் என்னும் ஊரில் உள்ள காவிரி ஆற்றின் துறை முன், ஆரவாரம் மிகுந்த தன் சுற்றத்துடன் சோழ வேந்தன் கரிகாலன் கண்டு மகிழும்படி, நீராட்டு விழாவினை செய்து முடித்து, இனிய இசை தங்கிய, ஒளிரும் பொறிகளை உடைய அழகிய கழல்கள் சிவந்த அடிகளில் புரள, கரிய கச்சினைக் கட்டிய, காண்பதற்கு இனிய, அழகிய வயிற்றில் கட்டப்பட்ட பெரிய பொன்னால் செய்த கஞ்சதாளம் மணியுடன் ஒலிக்கப் புனலில் விருப்பத்துடன் ஆடிய அத்தி என்பவனின் அழகை விரும்பி காவிரி அவனைக் கவர்ந்துக்கொண்டு ஒளித்தாற்போல் சேரிப்பரத்தை நின்னைக் கவர்ந்து சென்றாளாகவும், நும்பால் வெறுப்பு உடையவள் இல்லை யாம்.  எம்மிடம் பசலை அடைந்த நெற்றியைக் காண்பாயாக,

 சேற்றில் அழகிய துளைகளையுடைய வள்ளையின் ஒளி பொருந்திய கொடிகளைப் பின்னுவித்து, வளமான இலைகளையுடைய வளைந்த கதிர்கள் விரிய, துய்யினைத் தலையில் கொண்ட வளைந்த இறால் மீன்கள் துள்ளும் இடமாகிய, பொலிவுடைய வளைந்த பிடரி மயிரையுடைய குதிரைகளையுடைய சேரனின் மரந்தை போன்ற என் அழகினைத் தந்து செல்வீராக!

நின்பால் செய்யும் கடமைகளை உடையேன் யான்!

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு’புல்லுதல் மயக்கும்’ (தொல்காப்பியம், கற்பியல் 10) என வரும் நூற்பாவின்கண் ‘மனையோள் ஒத்தலின் தன்னோர் அன்னோர் மிகை எனக் குறித்த கொள்கைக்கண்ணும்’ என வரும் விதி கொள்க.  வரலாறு –கழாஅர், கரிகாலன், குட்டுவன் (சேரன்), மரந்தை, காவிரி.  சின் – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம், இடையியல் 26, சின் என்பது இசின் என்பதன் முதற்குறை – ச. பாலசுந்தரம் உரை).  எம் நலத்தைத் தா என்றல் – குறுந்தொகை 236தந்தனை சென்மோ, தண் கடல் சேர்ப்ப, நீ உண்ட என் நலனே. குறுந்தொகை 238தொண்டி அன்ன என் நலம் தந்து, கொண்டனை சென்மோ மகிழ்ந நின் சூளே, குறுந்தொகை 349 –தண்ணந்துறைவன் தொடுத்து, நம் நலம் கொள்வாம் என்றி தோழி, நற்றிணை 395 –எம் வேட்டனை அல்லையால், நலம் தந்து சென்மே, அகநானூறு 376 –மரந்தை அன்ன என் நலம் தந்து சென்மே, அகநானூறு 396 –வஞ்சியன்ன என் நலம் தந்து சென்மே, ஐங்குறுநூறு 159 – தந்தனை சென்மோ கொண்ட இவள் நலனே.

சொற்பொருள்:  செல்லல் – செல்லாதே, மகிழ்ந – தலைவா (மகிழ்ந – விளி), நின் செய் கடன் உடையென் – நின்பால் செய்யும் கடமைகளை உடையேன் யான், மன் – அசைநிலை, கல்லா யானை கடி புனல் கற்றென மலி புனல் பொருத மருது ஓங்கு படப்பை ஒலி கதிர்க் கழனிக் கழாஅர் முன்துறை – பாகனிடம் பயிற்சி பெறாத யானை விரைந்து ஓடும் நீரில் இறங்கி நீந்தக் கற்க அதனால் மிகுந்து எழும் நீர் மோதியதால் தாக்குண்ட மருத மரங்கள் ஓங்கி வளர்ந்துள்ள தோப்புகளையும் தழைத்த கதிர்கள் கொண்ட வயல்களையும் உடைய கழார் என்னும் ஊரில் உள்ள காவிரி ஆற்றின் துறை முன், கலி கொள் சுற்றமொடு கரிகால் காண – ஆரவாரம் மிகுந்த தன் சுற்றத்துடன் சோழ வேந்தன் கரிகாலன் கண்டு மகிழ, தண் பதம் கொண்டு – நீராட்டு விழாவினை செய்து முடித்து, தவிர்ந்த இன்னிசை – இனிய இசை தங்கிய, ஒண் பொறிப் புனை கழல் சேவடி புரள – ஒளிரும் பொறிகளை உடைய அழகிய கழல்கள் சிவந்த அடிகளில் புரள, கருங்கச்சு யாத்த காண்பு இன் – கரிய கச்சினைக் கட்டிய காண்பதற்கு இனிய, அவ்வயிற்று இரும் பொலப் பாண்டில் மணியொடு தெளிர்ப்ப – அழகிய வயிற்றில் கட்டப்பட்ட பெரிய பொன்னால் செய்த கஞ்சதாளம் மணியுடன் ஒலிக்க, புனல் நயந்து ஆடும் அத்தி அணி நயந்து காவிரி கொண்டு ஒளித்தாங்கு – புனலில் விருப்பத்துடன் ஆடிய அத்தி என்பவனின் அழகை விரும்பி காவிரி அவனைக் கவர்ந்துக்கொண்டு ஒளித்தாற்போல் சேரிப்பரத்தை நின்னைக் கவர்ந்து சென்றாளாகவும், மன்னோ – மன் ஓ அசைநிலைகள், நும் வயிற் புலத்தல் செல்லேம் – நும்பால் வெறுப்பு உடையவள் இல்லை யாம், எம் வயின் பசந்தன்று காண்டிசின் நுதலே – எம்மிடம் பசலை அடைந்த நெற்றியைக் காண்பாயாக (சின் – முன்னிலை அசைச் சொல்), அசும்பின் அம் தூம்பு வள்ளை அழற்கொடி மயக்கி – சேற்றில் அழகிய துளைகளையுடைய வள்ளையின் ஒளி பொருந்திய கொடிகளைப் பின்னுவித்து (வள்ளைக்கொடி – Creeping bindweed, Ipomaea aquatic), வண் தோட்டு நெல்லின் வாங்கு பீள் விரிய – வளமான இலைகளையுடைய வளைந்த கதிர்கள் விரிய, துய்த்தலை முடங்கு இறாத் தெறிக்கும் – துய்யினைத் தலையில் கொண்ட வளைந்த இறால் மீன்கள் துள்ளும் இடமாகிய (முடங்கிறா – முடங்கு இறா, பண்புத்தொகை), பொற்புடைக் குரங்கு உளைப் புரவிக் குட்டுவன் மரந்தை அன்ன என் நலம் தந்து சென்மே – பொலிவுடைய வளைந்த பிடரி மயிரையுடைய குதிரைகளையுடைய சேரனின் மரந்தை போன்ற என் அழகினைத் தந்து செல்வீராக (சென்மே – முன்னிலை ஏவல் வினைமுற்று)

அகநானூறு 377, மாறோகத்துக் காமக்கணி நப்பாலத்தனார், பாலைத் திணை – தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது
கோடை நீடலின் வாடு புலத்து உக்க
சிறு புல் உணவு நெறிபட மறுகி,
நுண் பல் எறும்பு கொண்டு அளைச் செறித்த
வித்தா வல்சி வீங்கு சிலை மறவர்
பல்லூழ் புக்குப் பயன் நிரை கவரக்,  5
கொழுங்குடி போகிய பெரும் பாழ் மன்றத்து
நரை மூதாளர் அதிர்தலை இறக்கிக்
கவை மனத்து இருத்தும் வல்லு வனப்பு அழிய,
வரி நிறச் சிதலை அரித்தலின் புல்லென்று
பெரு நலம் சிதைந்த பேஎம் முதிர் பொதியில்  10
இன்னா ஒரு சிறைத் தங்கி, இன்னகைச்
சிறு மென் சாயல் பெருநலம் உள்ளி,
வம்பலர் ஆகியும் கழிப மன்ற
நசை தர வந்தோர் இரந்தவை
இசைபடப் பெய்தல் ஆற்றுவோரே.  15

பாடல் பின்னணி:  பொருள் ஈட்டி வருதல் வேண்டும் என்று இடைவிடாது ஊக்குவிக்கின்ற நெஞ்சிடம் தலைவன் கூறியது.  

பொருளுரை:  என் நெஞ்சே!  பொருள் விருப்பத்தால் தங்களிடம் வந்த இரவலர் வேண்டும் பொருளைப் புகழ் உண்டாக அவர்களுக்கு அளிக்க விரும்புபவர்கள்,

கோடைப்பருவம் நீட்டித்ததால் வறண்டு இருந்த நிலத்தில் உதிர்ந்த சிறு புல்லரிசியாகிய உணவை, வரிசையாகச் சென்று, நுண்ணிய பல எறும்புகள் கொண்டு வந்து தம் வளையில் சேர்த்து வைத்த, விதைத்து விளையாத அவ்வுணவை உண்ணும் பெரிய வில்லையுடைய மறவர்கள், பல முறை புகுந்துப் பயனைத் தரும் ஆனிரைகளைக் கவர்ந்தமையால், வளமான ஊரில் இருந்த குடிகள் நீங்கிச் சென்றுவிட்ட இடமாகிய பெரிய பாழாகிய மன்றத்தில், நரை முடியையுடைய முதியவர்கள் தம் நடுங்கும் தலையைக் கவிழ்த்து வெல்லுவோமோ தோற்போமோ என எண்ணும் தம் கவர்த்த மனதில் இருத்தி ஆடும் சூதாடும் இடத்தின் அழகு அழியும்படி, வரிகளுடைய நிறம் பொருந்திய கறையான்கள் அரித்ததால் பொலிவற்று பெரும் அழகு கெட்ட அச்சம் மிகுந்த மன்றத்தில், துன்பத்துடன் ஒரு பக்கம் தங்கி, இனிய நகையையும் சிறிய மென்மையான சாயலினையும் உடையவளின் பேரழகை நினைத்து, அயலார் போல் ஆகியும் மேலும் செல்லுவார்கள்.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்குவேற்று நாட்டு அகல்வயின் விழுமத்தானும்’ (தொல்காப்பியம், கற்பியல் 5) என வரும் விதி கொள்க.  கவை மனத்து இருத்தும் (8) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – வெல்லுவோமா, தோற்போமா என்ற கவர்த்த மனத்தோடு.  வீங்கு சிலை மறவர் (4) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – பெரிய வில்லையுடைய எயின மறவர்கள், ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – பெருத்த வில்லையுடைய மறவர்கள், அகநானூறு 89–10 – பொ. வே. சோமசுந்தரனார் உரை – கட்டிய வில்லையுடைய மறவர்கள், ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – விசைகொண்ட சிலையினரான மறவர்கள்.  மன்ற – மன்றவென் கிளவி தேற்றஞ்செய்யும் (தொல்காப்பியம், இடையியல் 17).  பேம் – பேம் நாம் உரும் என வரூஉம் கிளவி ஆ முறை மூன்றும் அச்சப் பொருள (தொல்காப்பியம், உரியியல் 69).  சாயல் – சாயல் மென்மை (தொல்காப்பியம், உரியியல் 29).  வல்லு – புறநானூறு 52 – நரை மூதாளர் நாய் இடக் குழிந்த வல்லின் நல்லகம்.

சொற்பொருள்:  கோடை நீடலின் வாடு புலத்து உக்க சிறு புல் உணவு – கோடைப்பருவம் நீட்டித்ததால் வறண்ட நிலத்தில் உதிர்ந்த சிறு புல்லரிசியாகிய உணவை, நெறிபட மறுகி – வரிசையாகச் சென்று, நுண் பல் எறும்பு கொண்டு அளைச் செறித்த வித்தா வல்சி – நுண்ணிய பல எறும்புகள் கொண்டு வந்து தம் வளையில் சேர்த்து வைத்த விதைத்து விளையாத அவ்வுணவை உண்ணும், வீங்கு சிலை மறவர் பல் ஊழ் புக்குப் பயன் நிரை கவரக் கொழுங்குடி போகிய பெரும் பாழ் மன்றத்து – பெரிய வில்லையுடைய மறவர்கள் பல முறை புகுந்துப் பயனைத் தரும் ஆனிரைகளைக் கவர்ந்தமையால் வளமான ஊரில் இருந்த குடிகள் நீங்கிச் சென்றுவிட்ட இடமாகிய பெரிய பாழாகிய மன்றத்தில், நரை மூதாளர் அதிர்தலை இறக்கிக் கவை மனத்து இருத்தும் வல்லு வனப்பு அழிய – நரை முடியையுடைய முதியவர்கள் தம் நடுங்கும் தலையைக் கவிழ்த்துத் தம் கவர்த்த மனதில் இருத்தி ஆடும் சூதாடும் இடத்தின் அழகு அழியும்படி, வரி நிறச் சிதலை அரித்தலின் புல்லென்று பெரு நலம் சிதைந்த பேஎம் முதிர் பொதியில் – வரிகளுடைய நிறம் பொருந்திய கறையான்கள் அரித்ததால் பொலிவற்று பெரும் அழகு கெட்ட அச்சம் மிகுந்த மன்றத்தில் (பேஎம் – அளபெடை), இன்னா ஒரு சிறைத் தங்கி – துன்பத்துடன் ஒரு பக்கம் தங்கி, இன்னகைச் சிறு மென் சாயல் பெருநலம் உள்ளி – இனிய நகையையும் சிறிய மென்மையான சாயலினையும் உடையவளின் பேரழகை நினைத்து, வம்பலர் ஆகியும் கழிப மன்ற – அயலார் போல் ஆகியும் மேலும் செல்லுவார்கள் (மன்ற – தேற்றப்பொருளில் வரும் இடைச்சொல்), நசை தர வந்தோர் – பொருள் விருப்பத்தால் தங்களிடம் வந்தவர்கள், இரந்தவை இசைபடப் பெய்தல் ஆற்றுவோரே – இரவலர் வேண்டும் பொருளைப் புகழ் உண்டாக அவர்களுக்கு அளிக்க விரும்புபவர்கள் (ஆற்றுவோரே – ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 378, காவட்டனார், குறிஞ்சித் திணைதலைவி தோழியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
“நிதியம் துஞ்சும் நிவந்து ஓங்கு வரைப்பின்,
வதுவை மகளிர் கூந்தல் கமழ் கொள,
வங்கூழ் ஆட்டிய அம் குழை வேங்கை
நன் பொன் அன்ன நறுந்தாது உதிரக்,
காமர் பீலி ஆய் மயில் தோகை  5
வேறு வேறு இனத்த வரை வாழ் வருடைக்
கோடு முற்று இளந்தகர் பாடு விறந்து, இயல
ஆடுகள வயிரின் இனிய ஆலிப்
பசும்புற மென் சீர் ஒசிய விசும்பு உகந்து
இருங்கண் ஆடு அமைத் தயங்க இருக்கும்  10
பெருங்கல் நாடன் பிரிந்த புலம்பும்,
உடன்ற அன்னை அமரா நோக்கமும்,
வடந்தை தூக்கும் வருபனி அற்சிரச்
சுடர் கெழு மண்டிலம் மழுங்க ஞாயிறு
குட கடல் சேரும் படர் கூர் மாலையும்,  15
அனைத்தும் அடூஉ நின்று நலிய நீ மற்று,
யாங்ஙனம் வாழ்தி” என்றி தோழி!
நீங்கா வஞ்சினம் செய்து நத்துறந்தோர்
உள்ளார் ஆயினும் உளெனே, அவர் நாட்டு
அள் இலைப் பலவின் கனி கவர் கைய  20
கல்லா மந்தி கடுவனோடு உகளும்
கடுந்திறல் அணங்கின் நெடும் பெருங்குன்றத்துப்,
பாடு இன் அருவி சூடி
வான் தோய் சிமையம் தோன்றலானே.

பாடல் பின்னணி:  தலைவன் வரையாது களவு ஒழுக்கத்தில் வந்து மீள்கின்றான்.  தோழி அவனைக் காணாள் போல தலைவியின் ஆற்றாமை கூறி வரைவு கடாவுவாள் தலைவியை நோக்கிச் சொல்லத் தொடங்க, அவளைத் தொடர்ந்து தலைவி தோழிக்குக் கூறுவாள் போல் தலைவன் கேட்பச் சொல்லியது. 

பொருளுரை:  தோழி!  செல்வம் தங்கும் மிகவும் உயர்ந்த மனையில் உள்ள திருமண மகளிரின் கூந்தல் போல் மணம் கமழுமாறு, காற்று வீசி அசைத்ததால் அழகிய தளிர்களையுடைய வேங்கை மரத்தின் நல்ல பொன் போன்ற நறிய பூந்தாதுக்கள் உதிர, காண்பவர்கள் விரும்பும் அழகிய தோகையையுடைய மயில், வேறு வேறு கூட்டமாக மலையில் வாழும் வருடை மான்களின் கொம்புகள் முதிர்ந்த இளைய கடாக்களின் ஒலியைக் கேட்டு அஞ்சி அங்கிருந்து நீங்கி, ஆடும் களத்தில் ஒலிக்கும் கொம்பு போல் இனிமையுடன் ஒலித்து, பசிய முதுகினை உடைய மெல்லிய இடம் வளையும்படி வானில் பறந்து சென்று, பெரிய கணுக்களையுடைய அசையும் மூங்கிலில் தங்கியிருக்கும் பெரிய மலை பொருந்திய நாட்டையுடைய நம் தலைவனின் பிரிவால் ஆகிய தனிமைத் துன்பமும், மாறுபட்ட நம் அன்னையின் கொடிய பார்வையும், வாடைக்காற்று வீசுவதால் பனி வரும் இப்பருவத்தில் தன் ஒளி பொருந்திய மண்டிலம் மழுங்கும்படி ஞாயிறு மேற்குக் கடலில் மறையும் துன்பம் மிகுந்த மாலை நேரமும், ஆகிய அனைத்தும் நின்னைத் தாக்கி நின்று வருத்தவும், நீ எவ்வாறு உயிர் வாழ்கின்றாய் என வினவுகின்றனை.

நீங்காமைக்கு உரிய உறுதிமொழி கொடுத்துப் பின் அதை மறந்து நம்மைத் துறந்த அவர் நினையாராயினும், அவருடைய நாட்டின், செறிந்த இலைகளையுடைய பலா மரத்தின் பழத்தைக் கவரும் கைகளையுடைய கல்லாத பெண்குரங்கு ஆண்குரங்குடன் துள்ளித் திரியும், மிகுந்த வலிமையுடைய கடவுள்கள் உடைய நீண்ட பெரிய மலையில், ஓசை இனிமையாக உள்ள அருவிகளை அணிந்து வானைத் தொடும் மலை உச்சியைக் காண்பதால், யான் உள்ளேன்.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு’களனும் பொழுதும் வரை நிலை விலக்கி காதல் மிகுதி உளப்படப் பிறவும் நாடும் ஊரும் இல்லும் குடியும் பிறப்பும் சிறப்பும் இறப்ப நோக்கி அவன்வயின் தோன்றிய கிளவியொடு தொகைஇ அனை நிலை வகையான் வரைதல் வேண்டினும்’ (தொல்காப்பியம், களவியல் 23) என வரும் விதியும், ‘தமர் தற்காத்த காரண மருங்கினும்’ (தொல்காப்பியம், களவியல் 21) என வரும் விதியும் கொள்க.  காமர் பீலி ஆய் மயில் தோகை (5) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – அழகிய தோகையினையுடைய பலரும் நன்றென்று ஆராய்ந்து மகிழும் தோகையையுடைய மயில், ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – விருப்பந்தரும் பீலி பொருந்திய சிறந்த தோகையையுடைய மயில்.  அமரா முகத்து அன்னை – அகநானூறு 253 – அன்னையும் அமரா முகத்தினள், அகநானூறு 378 – உடன்ற அன்னை அமரா நோக்கமும், நற்றிணை 122–9 – அன்னையும் அமரா முகத்தினள்.  உகந்து – உகப்பே உயர்தல் (தொல்காப்பியம், உரியியல் 8).

சொற்பொருள்:  நிதியம் துஞ்சும் நிவந்து ஓங்கு வரைப்பின் வதுவை மகளிர் கூந்தல் கமழ் கொள – செல்வம் தங்கும் மிகவும் உயர்ந்த மனையில் உள்ள திருமண மகளிரின் கூந்தல் போல் மணம் கமழ, வங்கூழ் ஆட்டிய அம் குழை வேங்கை நன் பொன் அன்ன நறுந்தாது உதிர – காற்று வீசி அசைத்ததால் அழகிய தளிர்களையுடைய வேங்கை மரத்தின் நல்ல பொன் போன்ற நறிய பூந்தாதுக்கள் உதிர (வேங்கை மரம் – Kino trees, Pterocarpus marsupium), காமர் பீலி ஆய் மயில் தோகை வேறு வேறு இனத்த வரை வாழ் வருடைக் கோடு முற்று இளந்தகர் பாடு விறந்து இயல – காண்பவர்கள் விரும்பும் அழகிய தோகையையுடைய மயில் வேறு வேறு கூட்டமாக மலையில் வாழும் வருடை மான்களின் கொம்புகள் முதிர்ந்த இளைய கடாக்களின் ஒலியைக் கேட்டு அஞ்சி அங்கிருந்து நீங்க, ஆடுகள வயிரின் இனிய ஆலி – ஆடும் களத்தில் ஒலிக்கும் கொம்பு போல் இனிமையுடன் ஒலித்து, பசும்புற மென் சீர் ஒசிய விசும்பு உகந்து – பசிய முதுகினை உடைய மெல்லிய இடம் வளையும்படி வானில் பறந்து சென்று (வயிரின் – இன் ஒப்புப் பொருளில் வந்தது, ஐந்தாம் வேற்றுமை உருபு), இருங்கண் ஆடு அமைத் தயங்க இருக்கும் பெருங்கல் நாடன் – பெரிய கணுக்களையுடைய அசையும் மூங்கிலில் தங்கியிருக்கும் பெரிய மலை பொருந்திய நாட்டையுடைய நம் தலைவன், பிரிந்த புலம்பும் உடன்ற அன்னை அமரா நோக்கமும் – பிரிவால் ஆகிய தனிமைத் துன்பமும் மாறுபட்ட நம் அன்னையின் கொடிய பார்வையும், வடந்தை தூக்கும் வருபனி அற்சிர – வாடைக்காற்று வீசுவதால் பனி வரும் இப்பருவத்தில், சுடர் கெழு மண்டிலம் மழுங்க – தன் ஒளி பொருந்திய மண்டிலம் மழுங்கும்படி, ஞாயிறு குட கடல் சேரும் படர் கூர் மாலையும் – ஞாயிறு மேற்குக் கடலில் மறையும் துன்பம் மிகுந்த மாலை நேரமும், அனைத்தும் அடூஉ நின்று நலிய நீ மற்று யாங்ஙனம் வாழ்தி என்றி – அனைத்தும் நின்னைத் தாக்கி நின்று வருத்தவும் நீ எவ்வாறு உயிர் வாழ்கின்றாய் என வினவுகின்றனை (அடூஉ – அளபெடை, என்றி – முன்னிலை ஒருமை), தோழி – தோழி, நீங்கா வஞ்சினம் செய்து நத்துறந்தோர் உள்ளார் ஆயினும் – நீங்காமைக்கு உரிய உறுதிமொழி கொடுத்துப் பின் அதை மறந்து நம்மைத் துறந்த அவர் நினையாராயினும் (நம் துறந்தோர் நத்துறந்தோர் என விகாரமாயிற்று), உளெனே – யான் உள்ளேன், அவர் நாட்டு அள் இலைப் பலவின் கனி கவர் கைய கல்லா மந்தி கடுவனோடு உகளும் கடுந்திறல் அணங்கின் நெடும் பெருங்குன்றத்துப் பாடு இன் அருவி சூடி வான் தோய் சிமையம் தோன்றலானே – அவருடைய நாட்டின் செறிந்த இலைகளையுடைய பலா மரத்தின் பழத்தைக் கவரும் கைகளையுடைய கல்லாத பெண்குரங்கு ஆண்குரங்குடன் துள்ளித் திரியும் மிகுந்த வலிமையுடைய கடவுள்கள் உடைய நீண்ட பெரிய மலையில் ஓசை இனிமையாக உள்ள அருவிகளை அணிந்து வானைத் தொடும் மலை உச்சியைக் காண்பதால் (தோன்றலானே – ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 379, சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோ, பாலைத் திணை – தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது 
நம் நயந்து உறைவி தொன்னலம் அழியத்
தெருளாமையின் தீதொடு கெழீஇ,
அருளற நிமிர்ந்த முன்பொடு பொருள் புரிந்து,
ஆள் வினைக்கு எதிரிய மீளி நெஞ்சே!
நினையினை ஆயின் எனவ கேண்மதி!  5
விரி திரை முந்நீர் மண் திணி கிடக்கைப்
பரிதி அம் செல்வம் பொதுமை இன்றி,
நனவின் இயன்றது ஆயினும் கங்குற்
கனவின் அற்று அதன் கழிவே, அதனால்
விரவுறு பன் மலர் வண்டு சூழ்பு அடைச்சிச்,  10
சுவல் மிசை அசைஇய நிலைதயங்கு உறுமுடி
ஈண்டு பல் நாற்றம் வேண்டுவயின் உவப்பச்,
செய்வுறு விளங்கிழைப் பொலிந்த தோள் சேர்பு,
எய்திய கனை துயில் ஏற்றொறும் திருகி
மெய் புகு வன்ன கை கவர் முயக்கின்  15
மிகுதி கண்டன்றோ இலெனே, நீ நின்
பல் பொருள் வேட்கையின் சொல் வரை நீவிச்
செலவு வலியுறுத்தனை ஆயின், காலொடு
கனை எரி நிகழ்ந்த இலையில் அம் காட்டு
உழைப்புறத்து அன்ன புள்ளி நீழல்  20
அசைஇய பொழுதில் பசைஇ வந்து இவள்
மறப்பு அரும் பல் குணம் நிறத்து வந்து உறுதர,
ஒரு திறம் நினைத்தல் செல்லாய், திரிபு நின்று
உறு புலி உழந்த வடு மருப்பு ஒருத்தற்குப்
பிடியிடு பூசலின் அடிபடக் குழிந்த  25
நிரம்பா நீளிடைத் தூங்கி,
இரங்குவை அல்லையோ, உரங்கெட மெலிந்தே?

பாடல் பின்னணி:  முன்னொரு காலத்தில் பொருள்வயிற் பிரிந்த தலைவன் பொருள் முற்றி வந்திருந்த காலத்தில், மீண்டும் பொருள் கடாவின நெஞ்சிற்குச் சொல்லியது. 

பொருளுரை:  நம்மை விரும்பி வாழும் நம் தலைவியின் பண்டைய அழகு அழியும்படி, தெளிவு இல்லாமையால் தீமையுடன் பொருந்தி, அருள் இல்லாது, மிகுந்த வலிமையுடன் பொருளை விரும்பி அதனை ஈட்டும் முயற்சிக்கு முற்பட்ட என் வலிய நெஞ்சமே!  நினைத்துப் பார்ப்பாய் ஆனால், நான் கூறுவதைக் கேட்பாயாக!  

விரிந்த அலைகளையுடைய கடல் சூழ்ந்த மண் திணிந்த உலகத்தில், ஆட்சிச் சக்கரத்தைச் செலுத்தும் செல்வம் பிறர்க்கு பொதுவாக இல்லாது, உண்மையாகக் கைகூடினும், இரவில் கனவில் தோன்றி மறையும் தன்மையுடையது அதன் போக்கு. அதனால், பல்வேறு மலர்களைக் கலந்து வண்டுகள் மொய்க்கும்படி அணிந்து, பிடரி மீது இருந்த நிலையிலிருந்து அசைந்த பெரிய கூந்தலின், செறிந்துள்ள பலவாகிய நறுமணங்களையும் வேண்டும் பொழுது பெற்று மகிழ, செய்யப்பட்ட விளங்கும் அணிகலன்களால் பொலிந்த தோளை அணைத்து அடைந்த மிகுந்த துயிலை ஏற்குந்தோறும், அவளுடன் எதிர்ந்து, ஒருவர் உடலில் ஒருவர் புகுவது போன்று கைகளால் விரும்பி அணைப்பதற்கு மேலான பொருளை, யான் கண்டது இல்லை.

நீ நின் பல்வேறு பொருட்கள் மீது உள்ள விருப்பத்தால் சொற்களின் அளவை மீறிச் செல்லுவதற்கு வறுபுறுத்துவாய் ஆயின், காற்றினால் மிக்க தீ எழுந்து எரித்ததால் இலை இல்லாத காட்டில், உழை மானின் முதுகில் உள்ள புள்ளிகள் போல் நிழல் தங்கியிருக்கும் பொழுதில், பற்றுக்கோடாக வந்து, இவளுடைய மறத்தற்கு அரிய பல தன்மைகளும் நெஞ்சத்தில் வந்து புக, ஒன்றினை நீ நினையாது உள்ளாய்.  மனம் குழம்பி நின்று, வலிமை கெடும்படி மெலிந்து, பெரிய புலியுடன் போரிட்டு வருந்திய வடுக்கள் உடைய மருப்புகளையுடைய (தந்தங்களையுடைய) தன் களிற்று யானையின் பொருட்டுப் பெண் யானை ஆரவாரத்துடன் இட்ட அடிகளால் பள்ளமாகிய, சென்று முடியாத நீண்ட வழியிடத்தில் தங்கி, இரக்கம் கொள்வாய் இல்லையா?

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு’நாளது சின்மையும் இளமையது அருமையும் தாளாண் பக்கமும் தகுதியது அமைதியும் இன்மையது இளிவும் உடைமையது உயர்ச்சியும் அன்பினது அகலமும் அகற்சியது அருமையும் ஒன்றாப் பொருள்வயின் ஊக்கிய பாலினும்’ (தொல்காப்பியம், அகத்திணையியல் 41) என வரும் விதி கொள்க.  மதி – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம், இடையியல் 26).  மீளி நெஞ்சே (4) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – மீளி நெஞ்சே என்பது இகழ்ச்சி.  பேதை நெஞ்சே என்பது கருத்து. முந்நீர் – தமிழகம் கிழக்கு தெற்கு மேற்கு ஆகிய மூன்று திசையானும் நீர்வளைவுண்டது.  முந்நீர் என்னும் தமிழ்க்கிளவி இம்முப்புறக் கடலமைப்பைச் சுட்டுவது – வ. சுப. மாணிக்கனாரின் ‘தமிழ்க்காதல்’ நூல், ஆற்று நீரும், ஊற்று நீரும் மழை நீரும் உடமையான் முந்நீர் – ஒளவை துரைசாமி புறநானூறு 9 உரை, நிலத்தைப் படைத்தலும் காத்தலும் அழித்தலுமாகிய நீர் – நச்சினார்க்கினியர் மதுரைக்காஞ்சி 75 உரை.  உறு – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3).

சொற்பொருள்:  நம் நயந்து உறைவி தொல் நலம் அழியத் தெருளாமையின் தீதொடு கெழீஇ – நம்மை விரும்பி வாழும் நம் தலைவியின் பண்டைய அழகு அழியும்படி தெளிவு இல்லாமையால் தீமையுடன் பொருந்தி (கெழீஇ – அளபெடை), அருள் அற நிமிர்ந்த முன்பொடு பொருள் புரிந்து ஆள் வினைக்கு எதிரிய மீளி நெஞ்சே – அருள் இல்லாது மிகுந்த வலிமையுடன் பொருளை விரும்பி அதனை ஈட்டும் முயற்சிக்கு முற்பட்ட என் வலிய நெஞ்சமே (எதிரிய – முற்பட்ட, மேற்கொண்ட), நினையினை ஆயின் எனவ கேண்மதி – நினைத்துப் பார்ப்பாய் ஆனால் நான் கூறுவதைக் கேட்பாயாக (எனவ – அ விரித்தல் விகாரம், பலவறி சொல், கேண்மதி – மதி முன்னிலையசை), விரி திரை முந்நீர் மண் திணி கிடக்கை – விரிந்த அலைகளையுடைய கடல் சூழ்ந்த மண் திணிந்த உலகத்தில், பரிதி அம் செல்வம் பொதுமை இன்றி நனவின் இயன்றது ஆயினும் – ஆட்சிச் சக்கரத்தைச் செலுத்தும் செல்வம் பிறர்க்கு பொதுவாக இல்லாது உண்மையாகக் கைகூடினும், கங்குல் கனவின் அற்று அதன் கழிவே – இரவில் கனவில் தோன்றி மறையும் தன்மையுடையது அதன் போக்கு, அதனால் – அதனால், விரவுறு பன் மலர் வண்டு சூழ்பு அடைச்சி – பல்வேறு மலர்களைக் கலந்து வண்டுகள் மொய்க்கும்படி அணிந்து (சூழ்பு – சூழ எனத் திரிக்க), சுவல் மிசை அசைஇய நிலைதயங்கு உறுமுடி – பிடரி மீது இருந்த நிலையிலிருந்து அசைந்த பெரிய கூந்தலின், ஈண்டு பல் நாற்றம் வேண்டுவயின் உவப்ப – செறிந்துள்ள பலவாகிய நறுமணங்களையும் வேண்டும் பொழுது பெற்று மகிழ,  செய்வுறு விளங்கு இழைப் பொலிந்த தோள் சேர்பு – செய்யப்பட்ட விளங்கும் அணிகலன்களால் பொலிந்த தோளை அணைத்து, எய்திய கனை துயில் ஏற்றொறும் – அடைந்த மிகுந்த துயிலை ஏற்குந்தோறும், திருகி மெய் புகு வன்ன கை கவர் முயக்கின் மிகுதி – எதிர்ந்து ஒருவர் உடலில் ஒருவர் புகுவது போன்று கைகளால் விரும்பி அணைப்பதற்கு மேலான பொருளை, கண்டன்றோ இலெனே – யான் கண்டது இல்லை (கண்டன்றோ – ஓகாரம் அசைநிலை, இலெனே – ஏகாரம் அசைநிலை), நீ நின் பல் பொருள் வேட்கையின் சொல் வரை நீவிச் செலவு வலியுறுத்தனை ஆயின் – நீ நின் பல்வேறு பொருட்கள் மீது உள்ள விருப்பத்தால் சொற்களின் அளவை மீறிச் செல்லுவதற்கு வறுபுறுத்துவாய் ஆயின், காலொடு கனை எரி நிகழ்ந்த இலை இல் அம் காட்டு உழைப் புறத்து அன்ன புள்ளி நீழல் அசைஇய பொழுதில் – காற்றினால் மிக்க தீ எழுந்து எரித்ததால் இலை இல்லாத காட்டில் உழை மானின் முதுகில் உள்ள புள்ளிகள் போல் நிழல் தங்கியிருக்கும் பொழுதில் (உழைப்புறத்து – உழைப்புறம், அத்துச் சாரியை, நீழல் – நிழல் என்பதன் நீட்டல் விகாரம், அசைஇய – அளபெடை), பசைஇ வந்து – பற்றுக்கோடாக வந்து (பசைஇ – அளபெடை), இவள் மறப்பு அரும் பல் குணம் நிறத்து வந்து உறுதர ஒரு திறம் நினைத்தல் செல்லாய் – இவளுடைய மறத்தற்கு அரிய பல தன்மைகளும் நெஞ்சத்தில் வந்து புக ஒன்றினை நீ நினையாது உள்ளாய், திரிபு நின்று – மனம் குழம்பி நின்று, உறு புலி உழந்த வடு மருப்பு ஒருத்தற்குப் பிடியிடு பூசலின் அடிபடக் குழிந்த – பெரிய புலியுடன் போரிட்டு வருந்திய வடுக்கள் உடைய மருப்புகளையுடைய (தந்தங்களையுடைய) தன் களிற்று யானையின் பொருட்டுப் பெண் யானை ஆரவாரத்துடன் இட்ட அடிகளால் பள்ளமாகிய, நிரம்பா நீள் இடைத் தூங்கி இரங்குவை அல்லையோ – சென்று முடியாத நீண்ட வழியிடத்தில் தங்கி இரக்கம் கொள்வாய் இல்லையா, உரங்கெட மெலிந்தே – வலிமை கெடும்படி மெலிந்து (மெலிந்தே – ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 380, மதுரை மருதன் இளநாகனார், நெய்தல் திணை –தோழி தலைவியிடம் சொன்னது 
தேர் சேண் நீக்கித் தமியன் வந்து, “நும்
ஊர் யாது?” என்ன நணி நணி ஒதுங்கி
முன்னாள் போகிய துறைவன், நெருநை
அகல் இலை நாவல் உண் துறை உதிர்த்த
கனி கவின் சிதைய வாங்கிக் கொண்டு, தன்  5
தாழை வேர் அளை வீழ் துணைக்கு இடூஉம்
அலவன் காட்டி ‘நற்பாற்று இது’ என
நினைந்த நெஞ்சமொடு நெடிது பெயர்ந்தோனே,
உதுக்காண் தோன்றும் தேரே இன்றும்
நாம் எதிர்கொள்ளாம் ஆயின், தான் அது  10
துணிகுவன் போலாம் நாணுமிக உடையன்,
வெண்மணல் நெடுங்கோட்டு மறைகோ?
அம்ம தோழி கூறுமதி நீயே.

பாடல் பின்னணி:  தலைவியைக் கூட்டுவிக்கத் தோழியைத் தலைவன் வேண்டினான்.  அதற்கு உடன்பட்ட தோழி, தலைவியிடம் சென்று தலைவனின் விருப்பத்திற்கு இணங்குமாறு கூறியது. 

பொருளுரை:  தோழி!  நான் கூறுவதைக் கேட்பாயாக!  தன் தேரினைத் தொலைவில் நிறுத்திவிட்டு தனியனாக வந்து “நுமது ஊர் யாது?” என்று வினவி, அதற்கு நாம் விடை கொடுக்காமையால் குறுகக் குறுக நடந்து, முன்னாளில் சென்ற துறையின் தலைவன், நேற்று, அகன்ற இலைகளையுடைய நாவல் மரமானது நீர் உண்ணும் துறையில் உதிர்த்த கனியை, அதன் அழகு சிதையும்படி இழுத்துக்கொண்டு, தாழையின் வேர்ப்பகுதியில் உள்ள வளையில் உள்ள தன் அன்புடைய பெண் நண்டிற்குத் தரும் ஆண் நண்டினைக் காட்டி ‘இது நல்ல பண்பை உடையது’ எனக் கூறி, நெடிது எதனயோ நினைத்த நெஞ்சத்துடன் சென்றான். 

உதோ பார்.  இன்றும் அவன் தேர் தோன்றியுள்ளது.  நாம் அவனை எதிர்கொண்டு ஏற்றுகொள்ளாவிடின், அதை மெய் என்று எண்ணித் தான் நினைத்த காரியத்தைச் செய்வதற்குத் துணிவான் போலும்.  நாணம் மிகவும் உடையவன்.  யான் வெள்ளை மணலுடைய உயர்ந்த கரையில் மறைந்து கொள்வேனா?  நீ உன் எண்ணத்தைக் கூறுவாயாக.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு ‘பின்னிலை நிகழும் பல் வேறு மருங்கினும்’ (தொல்காப்பியம், களவியல் 23) என வரும் விதி கொள்க.  ஒப்புமை – குறுந்தொகை 24 – ஆற்று அயல் எழுந்த வெண்கோட்டு அதவத்து எழு குளிறு மிதித்த ஒரு பழம் போல.  மதி – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம், இடையியல் 26).  ஒதுங்கி முன்னாள் போகிய (2–3) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – ஏமாற்றத்துடன் முன்னாளில் சென்ற , ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – முன்னாளில் நடந்து சென்ற.

சொற்பொருள்:  தேர் சேண் நீக்கித் தமியன் வந்து, ‘நும் ஊர் யாது’ என்ன நணி நணி ஒதுங்கி முன்னாள் போகிய துறைவன் – தன் தேரினைத் தொலைவில் நிறுத்திவிட்டு தனியனாக வந்து ‘நுமது ஊர் யாது’ என்று வினவி குறுகக் குறுக நடந்து முன்னாளில் சென்ற துறையின் தலைவன், நெருநை அகல் இலை நாவல் உண் துறை உதிர்த்த கனி கவின் சிதைய வாங்கிக் கொண்டு – நேற்று அகன்ற இலைகளையுடைய நாவல் மரமானது நீர் உண்ணும் துறையில் உதிர்த்த கனியை அதன் அழகு சிதையும்படி இழுத்துக்கொண்டு, தன் தாழை வேர் அளை வீழ் துணைக்கு இடூஉம் அலவன் காட்டி ‘நற்பாற்று இது’ என நெடிது பெயர்ந்தோனே – தாழையின் வேர்ப்பகுதியில் உள்ள வளையில் உள்ள தன் அன்புடைய பெண் நண்டிற்குத் தரும் ஆண் நண்டினைக் காட்டி ‘இது நல்ல பண்பை உடையது’ எனக் கூறி நெடிது எதனயோ நினைத்த நெஞ்சத்துடன் சென்றான் (இடூஉம் – அளபெடை), உதுக்காண் – உதோ பார், தோன்றும் தேரே இன்றும் – இன்றும் அவன் தேர் தோன்றியுள்ளது (தேரே – ஏகாரம் அசைநிலை), நாம் எதிர்கொள்ளாம் ஆயின் – நாம் அவனை எதிர்கொண்டு ஏற்றுகொள்ளாவிடின், தான் அது துணிகுவன் போலாம் – அதை மெய் என்று எண்ணித் தான் நினைத்த காரியத்தைச் செய்வதற்குத் துணிவான் போலும், நாணு மிக உடையன் – நாணம் மிகவும் உடையவன், வெண்மணல் நெடுங்கோட்டு மறைகோ – யான் வெள்ளை மணலுடைய உயர்ந்த கரையில் மறைந்து கொள்வேனா, அம்ம – நான் கூறுவதைக் கேட்பாயாக, தோழி – தோழி, கூறுமதி நீயே – நீ உன் எண்ணத்தைக் கூறுவாயாக (கூறுமதி – மதி முன்னிலையசை, நீயே – ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 381, மதுரை இளங்கௌசிகனார், பாலைத் திணை – தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது  
ஆளி நன்மான் அணங்குடை ஒருத்தல்
மீளி வேழத்து நெடுந்தகை புலம்ப,
ஏந்தல் வெண்கோடு வாங்கிக் குருத்து அருந்தும்
அஞ்சுவரத் தகுந ஆங்கண், மஞ்சு தப
அழல் கான்று திரிதரும் அலங்கு கதிர் மண்டிலம்  5
நிழல் சூன்று உண்ட நிரம்பா நீளிடை,
கற்று உரிக் குடம்பைக் கத நாய் வடுகர்
விற்சினம் தணிந்த வெருவரு கவலை,
குருதி ஆடிய புலவு நாறு இருஞ்சிறை
எருவைச் சேவல் ஈண்டு கிளைத் தொழுதி,  10
பச்சூன் கொள்ளை சாற்றிப் பறை நிவந்து,
செக்கர் வானின் விசும்பு அணி கொள்ளும்
அருஞ்சுரம் நீந்திய நம்மினும், பொருந்தார்
முனை அரண் கடந்த வினைவல் தானைத்
தேன் இமிர் நறுந்தார் வானவன் உடற்றிய  15
ஒன்னாத் தெவ்வர் மன்னெயில் போலப்,
பெரும் பாழ் கொண்ட மேனியள் நெடிது உயிர்த்து
வருந்தும் கொல், அளியள் தானே, சுரும்பு உண
நெடுநீர் பயந்த நிரை இதழ்க் குவளை
எதிர்மலர் இணைப் போது அன்ன தன்  20
அரிமதர் மழைக்கண் தெண்பனி கொளவே.

பாடல் பின்னணி:  பொருள்வயின் பிரிந்த தலைவன் இடைச்சுரத்தில் தலைவியை நினைந்து வருந்தித் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.  

பொருளுரை:  என் நெஞ்சே!  ஆளியாகிய நல்ல விலங்கின் வருத்தும் ஏறு, வலிமையுடைய யானையின் தலைவனானது வருந்தும்படி, அதன் உயர்ந்த வெள்ளை மருப்பைப் பறித்து அதன் குருத்தினை உண்ணும், அச்சம் வரத்தகுந்த பாலை நிலத்தில், முகில்கள் பெய்யாது ஒழிந்ததால் நெருப்பை வீசித் திரிகின்ற அசையும் கதிர்களையுடை ஞாயிறு, நிழலை அகழ்ந்து உண்ட, செல்லத் தொலையாத நீண்ட இடத்தில், கன்றின் தோலால் செய்த குடில்களையும் சினம் மிக்க நாய்களையும் உடைய வடுகர்களின் வில்லின் சினம் தணிந்த பிரிவுகளையுடைய வழிகளில், கொல்லப்பட்ட வழிப்போக்கர்களின் குருதியில் படிந்த புலால் நாறும் பெரிய சிறகையுடைய பருந்தின் சேவல்களும், அவற்றுடன் கூடிய கிளையின் கூட்டமும், பசிய ஊனின் மிகுதியை பிற பறவைகளுக்கு அறிவித்துப் பறந்து எழுந்து, செவ்வானம் போல் வானத்தின்கண் அழகு பெறுகின்ற கடத்தற்கு அரிய சுரத்தினைக் கடந்து வந்த நம்மைக்காட்டிலும்,

நம் தலைவி, பகைவரின் போர்முனையாகிய அரணை வென்ற, போரில் வல்ல சேனைகளையும் வண்டுகள் ஒலிக்கும் நறுமண மாலைகளையும் உடைய சேரன் போரிட்டு அழித்த, மாறுபட்ட பகைவர்களின் நிலைபெற்ற அரண் போல், மிகவும் பாழ்பட்ட மேனியை உடையவளாகி, வண்டுகள் தேனை உண்ணும்படி நெடிய நீர்நிலையில் தோன்றிய, வரிசையாக இதழ்களை உடைய குவளையின் இரண்டு மலர்கள் போன்ற தன் செவ்வரி படர்ந்த மதர்த்த குளிர்ந்த கண்கள் தெளிந்த நீரைக் கொள்ள, நீண்ட நேரம் பெருமூச்சு விட்டு வருந்தியிருப்பாள்.  அவள் இரங்கத்தக்கவள். 

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு,’கரணத்தின் அமைந்து முடிந்த காலை’ (தொல்காப்பியம், கற்பியல் 5) என வரும் நூற்பாவின்கண் ‘மீட்டு வரவு ஆய்ந்த வகையின் கண்ணும்’ என வரும் விதி கொள்க.  செக்கர் வானின் விசும்பு அணி கொள்ளும் (12) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – செவ்வானம் போன்று வானத்தின்கண் அழகு பெறுகின்ற, ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – செவ்வானம் போல விசும்பினை அழகு செய்யும்.  வருந்தும் கொல் (18) – ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – வருந்தி இருப்பாளோ, பொ. வே. சோமசுந்தரனார் உரை – துன்புறுவாள் போலும்.  ஆளி (1) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – சிங்கத்தில் ஒரு வகை.  ஒப்புமை –நற்றிணை 205 – ஆளி நன்மான் வேட்டு எழு கோள் உகிர்ப் பூம்பொறி உழுவை தொலைச்சிய வைந்நுதி ஏந்து வெண்கோட்டு வயக் களிறு இழுக்கும்.  ஆளி இருக்கும் பாடல்கள் – அகநானூறு 78, 252, 381, நற்றிணை 205, புறநானூறு 207, குறிஞ்சிப்பாட்டு 252, பெரும்பாணாற்றுப்படை 258, பொருநராற்றுப்படை 139.  வடுகர் – ஒளவை துரைசாமி உரை புறநானூறு 278 – தொண்டை நாட்டுத் திருவேங்கடத்திற்கு வடக்கில் உள்ள நாட்டவராதலால் வடுகர் எனப்பட்டனர், பொ. வே. சோமசுந்தரனார் உரை அகநானூறு 213 – தெலுங்கர்.  வடுகர் – அகநானூறு 107, 213, 253, 281, 295, 375, 381, குறுந்தொகை 11, நற்றிணை 212, புறநானூறு 378.வரலாறு – வடுகர், வானவன் (சேரன்).  சூன்று (6) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – நிலம் வெடித்திருத்தலின் வெடிப்பினூடும் ஒளி புகுந்து நிழலின்றிச் செய்தமையின் கதிர் மண்டிலம் நிழல் சூன்று உண்ட நீளிடை என்றான்.  ஆளி (பொருநராற்றுப்படை 139) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – அரிமா, அரிமாப் போன்ற வேறொரு விலங்கென எண்ணவும் இடமுள்ளது.  பாட வேறுபாடு, 3வது அடியில் – குருகு அருந்தும்.  குருகு என்னும் சொல்லிற்குக் குருத்து என்னும் பொருளும் உண்டு.

சொற்பொருள்:  ஆளி நன்மான் அணங்குடை ஒருத்தல் – ஆளியாகிய நல்ல விலங்கின் வருத்தும் ஏறு, மீளி வேழத்து நெடுந்தகை புலம்ப ஏந்தல் வெண்கோடு வாங்கிக் குருத்து அருந்தும் – வலிமையுடைய யானையின் தலைவனானது வருந்தும்படி அதன் உயர்ந்த வெள்ளை மருப்பைப் பறித்து அதன் குருத்தினை உண்ணும், அஞ்சுவரத் தகுந ஆங்கண் – அச்சம் வரத்தகுந்த பாலை நிலத்தில், மஞ்சு தப அழல் கான்று திரிதரும் அலங்கு கதிர் மண்டிலம் – முகில்கள் பெய்யாது ஒழிந்ததால் நெருப்பை வீசித் திரிகின்ற அசையும் கதிர்களையுடை ஞாயிறு, நிழல் சூன்று உண்ட நிரம்பா நீளிடை – நிழலை அகழ்ந்து உண்ட செல்லத் தொலையாத நீண்ட இடத்தில், கற்று உரிக் குடம்பைக் கத நாய் வடுகர் விற்சினம் தணிந்த வெருவரு கவலை – கன்றின் தோலால் செய்த குடில்களையும் சினம் மிக்க நாய்களையும் உடைய வடுகர்களின் வில்லின் சினம் தணிந்த பிரிவுகளையுடைய வழிகளில், குருதி ஆடிய புலவு நாறு இருஞ்சிறை எருவைச் சேவல் ஈண்டு கிளைத் தொழுதி பச்சூன் கொள்ளை சாற்றிப் பறை நிவந்து – கொல்லப்பட்ட வழிப்போக்கர்களின் குருதியில் படிந்த புலால் நாறும் பெரிய சிறகையுடைய பருந்தின் சேவல்களும் அவற்றுடன் கூடிய கிளையின் கூட்டமும் பசிய ஊனின் மிகுதியை பிற பறவைகளுக்கு அறிவித்துப் பறந்து எழுந்து (பச்சூன் = பசுமை + ஊன்), செக்கர் வானின் விசும்பு அணி கொள்ளும் அருஞ்சுரம் நீந்திய நம்மினும் – செவ்வானம் போல் வானத்தின்கண் அழகு பெறுகின்ற கடத்தற்கு அரிய சுரத்தினைக் கடந்து வந்த நம்மைக்காட்டிலும் (வானின் – இன் ஒப்புப்பொருளில் வந்தது, ஐந்தாம் வேற்றுமை உருபு), பொருந்தார் முனை அரண் கடந்த வினை வல் தானைத் தேன் இமிர் நறுந்தார் வானவன் உடற்றிய ஒன்னாத் தெவ்வர் மன் எயில் போல – பகைவரின் போர்முனையாகிய அரணை வென்ற போரில் வல்ல சேனைகளையும் வண்டுகள் ஒலிக்கும் நறுமண மாலைகளையும் உடைய சேரன் போரிட்டு அழித்த மாறுபட்ட பகைவர்களின் நிலைபெற்ற அரண் போல், பெரும் பாழ் கொண்ட மேனியள் நெடிது உயிர்த்து – மிகவும் பாழ்பட்ட மேனியை உடையவளாகி நீண்ட நேரம் பெருமூச்சு விட்டு, வருந்தும் கொல் – வருந்துவாளோ, வருந்தியிருப்பாள் (கொல் அசை அல்லது ஐயப்பொருட்டு), அளியள் – இரங்கத்தக்கவள், தானே – தான், ஏ அசைநிலைகள், சுரும்பு உண நெடுநீர் பயந்த நிரை இதழ்க் குவளை எதிர்மலர் இணைப் போது அன்ன தன் அரி மதர் மழைக்கண் தெண்பனி கொளவே – வண்டுகள் தேனை உண்ணும்படி நெடிய நீர்நிலையில் தோன்றிய வரிசையாக இதழ்களை உடைய குவளையின் இரண்டு மலர்கள் போன்ற தன் செவ்வரி படர்ந்த மதர்த்த குளிர்ந்த கண்கள் தெளிந்த நீரைக் கொள்ள (கொளவே – ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 382, கபிலர், குறிஞ்சித் திணைதோழி தலைவியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
“பிறர் உறு விழுமம் பிறரும் நோப,
தம் உறு விழுமம் தமக்கோ தஞ்சம்,
கடம்பு கொடி யாத்துக் கண்ணி சூட்டி
வேறு பல் குரல ஒரு தூக்கு இன்னியம்
காடு கெழு நெடுவேள் பாடு கொளைக்கு ஏற்ப,  5
அணங்கு அயர் வியன் களம் பொலியப் பையத்
தூங்குதல் புரிந்தனர் நமர்” என ஆங்கு அவற்கு
அறியக் கூறல் வேண்டும் தோழி!
அருவி பாய்ந்த கருவிரல் மந்தி
செழுங்கோட் பலவின் பழம் புணை ஆகச்  10
சாரல் பேரூர் முன்துறை இழிதரும்,
வறன் உறல் அறியாச் சோலை
விறன் மலை நாடன் சொல் நயந்தோயே.

பாடல் பின்னணி:  வரையாது களவு ஒழுக்கத்தில் ஒழுகும் தலைவன் இரவுக்குறியில் வந்து ஒரு பக்கத்தே நிற்பதைக் கண்ட தோழி, அவன் தலைவியை மணந்து கொள்ள வேண்டும் என்னும் கருத்தை, அவன் கேட்பத் தலைவிக்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது. 

பொருளுரை:  தோழி!  அருவியில் பாய்ந்த கரிய விரலையுடைய பெண்குரங்கு, வளவிய காய்ப்பினையுடைய பலா மரத்தின் பழத்தினைத் தெப்பமாகக் கொண்டு பக்க மலையில் உள்ள பெரிய ஊரில் உள்ள துறை முன் வந்து இறங்கும், வறட்சி அடைதலை அறியாத வெற்றி பொருந்திய மலைநாட்டின் தலைவனது சொற்களை நீ விரும்பி ஏற்றாய்.

சான்றோர், பிறர் அடையும் துன்பத்திற்கு அவர்கள் வருந்துவது போல் தாமும் வருந்துவார்கள்.   தாம் அடையும் துன்பத்தினை எளிதாகக் கொள்வார்கள்.  கடம்ப மரத்தில் கொடியைக் கட்டி மாலையைச் சூட்டி, பல்வேறு ஒலிகளையுடைய ஒரு தூக்கினையுடைய இனிய இசைக்கருவிகளுடன் குறிஞ்சி நிலத்தில் பொருந்திய முருகவேளைப் பாடும் பாட்டிற்குப் பொருந்த, வெறியாட்டம் புரியும் பெரிய களம் பொலியும்படி மெல்ல ஆடுதலை விரும்பினார்கள் நம் குடும்பத்தார் என, அங்கு அவர் அறியும்படி நாம் கூற வேண்டும்.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு’அனை நிலை வகையான் வரைதல் வேண்டினும்’ (தொல்காப்பியம், களவியல் 23) என வரும் விதி கொள்க.  ஒரு தூக்கு இன்னியம் (4) – ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – தாளங்களின் வழிவரும் செந்தூக்கு முதலிய எழு வகைத் தூக்கினுள் ஒன்றினைப் பொருந்திய இன்னியம்.  விழுமம் – விழுமம் சீர்மையும் சிறப்பும் இடும்பையும் (தொல்காப்பியம், உரியியல் 57).

சொற்பொருள்:  பிறர் உறு விழுமம் பிறரும் நோப – பிறர் அடையும் துன்பத்திற்கு அவர்கள் வருந்துவது போல் தாமும் வருந்துவார்கள், தம் உறு விழுமம் தமக்கோ தஞ்சம் – தாம் அடையும் துன்பத்தினை எளிதாகக் கொள்வார்கள், கடம்பு கொடி யாத்துக் கண்ணி சூட்டி – கடம்ப மரத்தில் கொடியைக் கட்டி மாலையைச் சூட்டி, வேறு பல் குரல ஒரு தூக்கு இன் இயம் காடு கெழு நெடுவேள் பாடு கொளைக்கு ஏற்ப – பல்வேறு ஒலிகளையுடைய ஒரு தூக்கினையுடைய இனிய இசைக்கருவிகளுடன் குறிஞ்சி நிலத்தில் பொருந்திய முருகவேளைப் பாடும் பாட்டிற்குப் பொருந்த (காடு ஆகுபெயர் குறிஞ்சி நிலத்திற்கு), அணங்கு அயர் வியன் களம் பொலியப் பையத் தூங்குதல் புரிந்தனர் நமர் என – வெறியாட்டம் புரியும் பெரிய களம் பொலியும்படி மெல்ல ஆடுதலை விரும்பினார்கள் நம் குடும்பத்தார் என (அணங்கு – வெறியாட்டத்திற்கு ஆகுபெயர்), ஆங்கு அவற்கு அறியக் கூறல் வேண்டும் – அங்கு அவர் அறியும்படி நாம் கூற வேண்டும், தோழி – தோழி, அருவி பாய்ந்த கருவிரல் மந்தி செழுங்கோள் பலவின் பழம் புணை ஆகச் சாரல் பேரூர் முன்துறை இழிதரும் – அருவியில் பாய்ந்த கரிய விரலையுடைய பெண்குரங்கு வளவிய காய்ப்பினையுடைய பலா மரத்தின் பழத்தினைத் தெப்பமாகக் கொண்டு பக்க மலையில் உள்ள பெரிய ஊரில் உள்ள துறை முன் வந்து இறங்கும், வறன் உறல் அறியாச் சோலை விறன் மலை நாடன் சொல் நயந்தோயே – வறட்சி அடைதலை அறியாத வெற்றி பொருந்திய மலைநாட்டின் தலைவனது சொற்களை நீ விரும்பி ஏற்றாய் (நயந்தோயே – ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 383, கயமனார், பாலைத் திணைமகட்போக்கிய செவிலித்தாய் வயலைக் கொடியிடம் சொன்னது
தற் புரந்து எடுத்த என் துறந்து உள்ளாள்,
ஊருஞ்சேரியும் ஓராங்கு அலர் எழக்
காடுங்கானமும் அவனொடு துணிந்து,
நாடுந் தேயமும் நனி பல இறந்த
சிறு வன்கண்ணிக்கு ஏர் தேறுவர் என,  5
வாடினை, வாழியோ வயலை! நாள்தொறும்
பல் கிளைக் கொடி கொம்பு அலமர மலர்ந்த
அல்குல் தழைக்கூட்டு அம் குழை உதவிய,
வினை அமை வர நீர் விழுத்தொடி தத்தக்
கமஞ்சூல் பெரு நிறை தயங்க முகந்து கொண்டு,  10
ஆய் மடக் கண்ணள் தாய் முகம் நோக்கிப்
பெய் சிலம்பு ஒலிப்பப் பெயர்வனள், வைகலும்
ஆர நீர் ஊட்டிப் புரப்போர்
யார் மற்றுப் பெறுகுவை? அளியை நீயே.

பாடல் பின்னணி:  தலைவி உடன்போக்கில் தலைவனுடன் சென்ற பின், செவிலித்தாய் வருந்திக் கூறியது.  

பொருளுரை:  வயலைக்கொடியே!  நீடு வாழ்வாயாக!   தன்னைப் பேணி வளர்த்த என்னை நினையாமல் துறந்து, ஊரிலும் தெருவிலும் அலர் எழ, காட்டினூடும் சோலையினூடும் அவனுடன் போகத் துணிந்து மிகப் பல நாடுகளையும் பாலை நிலப்பரப்பையும் கடந்த கண்ணோட்டமில்லாத என் இளைய மகளுக்கு, அழகு செய்யும் தோழியர் போல் நீ வாடியுள்ளாய்.

ஒவ்வொரு நாளும் பல கிளைகளை உடைய நின் கொடியும் கொம்புகளும் சுமையினால் வருந்தும்படி மலர்ந்த, அல்குலில் அணியும் தழை ஆடைக்குக் கூட்டும் அழகிய தளிர்களை, நீ கொடுத்து உதவும்பொருட்டு, மூங்கில் குழாய் வழியாக வரும் நீரை, சிறந்த தன் வளையல்கள் அசைய, நிறைந்த நீரைக் கொண்ட பெரிய கலம் ததும்பும்படி முகந்து கொண்டு, அழகிய மடப்பம் பொருந்திய கண்களையுடைய என் மகள், நின் தாயைப் போல நின் முகத்தைப் பார்த்துக் காலில் அணிந்த சிலம்புகள் ஒலிக்கும்படி செல்வாள். இனி நாள்தோறும் நிறைய நீர் ஊட்டி உன்னைக் பாதுகாப்பவர் யாரை நீ பெறுவாய்? நீ இரங்கத்தக்காய்.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு ‘எஞ்சியோர்க்கும் எஞ்சுதல் இலவே’ (தொல்காப்பியம், அகத்திணையியல் 42) என வரும் விதி கொள்க.  ஒப்புமை –அகநானூறு 385 – சிறு வன்கண்ணி.  நாடுந் தேயமும் (4) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – மக்கள் வாழும் நாடும் பாழ்வெளியும்.  தாய் முகம் நோக்கி (11) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – நின்னுடைய தாய்போல் நின்னுடைய  முகத்தைப் பார்த்து, ச. வே. சுப்பிரமணியன் உரை – ஒரு தாயைப் போல் உன்னை எண்ணி உன் முகத்தைப் பார்த்து, ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – தாயைப் போல நின் முகத்தினைப் பார்த்து.  கமம் – நிறைவு, கமம் நிறைந்தியலும் (தொல்காப்பியம், உரியியல் 57).  விழு (விழுமம்) – விழுமம் சீர்மையும் சிறப்பும் இடும்பையும் (தொல்காப்பியம், உரியியல் 57).  நனி – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3).  செவிலி – ஆய் பெருஞ்சிறப்பின் அருமறை கிளத்தலின் தாய் எனப்படுவோள் செவிலி ஆகும் (தொல்காப்பியம், களவியல் 34). 

சொற்பொருள்:  தற் புரந்து எடுத்த என் துறந்து உள்ளாள் – தன்னைப் பேணி வளர்த்த என்னை நினையாமல் துறந்து, ஊரும் சேரியும் ஓராங்கு அலர் எழ – ஊரிலும் தெருவிலும் அலர் எழ, காடும் கானமும் அவனொடு துணிந்து நாடும் தேயமும் நனி பல இறந்த சிறு வன்கண்ணிக்கு – காட்டினூடும் சோலையினூடும் அவனுடன் போகத் துணிந்து மிகப் பல நாடுகளையும் பாலை நிலப்பரப்பையும் கடந்த கண்ணோட்டமில்லாத என் இளைய மகளுக்கு, ஏர் தேறுவர் என வாடினை – அழகு செய்யும் தோழியர் போல் நீ வாடியுள்ளாய், வாழியோ – நீடு வாழ்வாயாக (வாழியோ – ஓகாரம் அசை), வயலை – வயலைக்கொடியே (Purslane vine, Portulaca quadrifida), நாள்தொறும் பல் கிளைக் கொடி கொம்பு அலமர மலர்ந்த – ஒவ்வொரு நாளும் பல கிளைகளை உடைய நின் கொடியும் கொம்புகளும் சுமையினால் வருந்தும்படி மலர்ந்த, அல்குல் தழைக்கூட்டு அம் குழை உதவிய வினை அமை வர நீர் – அல்குலில் அணியும் தழை ஆடைக்குக் கூட்டும் அழகிய தளிர்களை நீ கொடுத்து உதவும்பொருட்டு மூங்கில் குழாய் வழியாக வரும் நீரை, விழுத்தொடி தத்த – சிறந்த வளையல்கள் அசைய, கமஞ்சூல் பெரு நிறை தயங்க முகந்து கொண்டு – நிறைந்த நீரைக் கொண்ட பெரிய கலம் ததும்பும்படி முகந்து கொண்டு, ஆய் மடக் கண்ணள் – அழகிய மடப்பம் பொருந்திய கண்களையுடைய என் மகள், தாய் முகம் நோக்கிப் பெய் சிலம்பு ஒலிப்ப – நின் தாயைப் போல நின் முகத்தைப் பார்த்துக் காலில் அணிந்த சிலம்புகள் ஒலிக்கும்படி, பெயர்வனள் – செல்பவள், வைகலும் ஆர நீர் ஊட்டிப் புரப்போர் யார் மற்றுப் பெறுகுவை – நாள்தோறும் நிறைய நீர் ஊட்டி உன்னைக் பாதுகாப்பவர் யாரை நீ பெறுவாய் (மற்று – வினை மாற்றின்கண் வந்தது), அளியை நீயே – நீ இரங்கத்தக்காய் (நீயே – ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 384, ஒக்கூர் மாசாத்தியார், முல்லைத் திணை, தேரில் கூடச்சென்ற பிறரால் சொல்லப்பட்டது
“இருந்த வேந்தன் அருந்தொழில் முடித்தெனப்
புரிந்த காதலொடு பெருந்தேர் யானும்
ஏறியது அறிந்தன்று அல்லது, வந்த
ஆறு நனி அறிந்தன்றோ இலெனே, தாஅய்
முயல் பறழ் உகளும் முல்லை அம் புறவில் 5
கவைக் கதிர் வரகின் சீறூர் ஆங்கண்
மெல்லியல் அரிவை இல் வயின் நிறீஇ,
இழிமின் என்ற நின் மொழி மருண்டிசினே,
வான் வழங்கு இயற்கை வளி பூட்டினையோ?
மான் உரு ஆக நின் மனம் பூட்டினையோ?  10
உரைமதி, வாழியோ வலவ!” எனத்தன்
வரை மருள் மார்பின் நளிப்பனன் முயங்கி,
மனைக் கொண்டு புக்கனன், நெடுந்தகை
விருந்தேர் பெற்றனள் திருந்து இழையோளே.

பாடல் பின்னணி:  வினை முற்றிய தலைவனின் வரவு கண்டு, அருகில் உள்ளோர் சொல்லியது. 

பொருளுரை:  “பாகனே!  நீ நீடு வாழ்வாயாக!  பாசறையில் இருந்த நம் வேந்தன் அரிய போரினை வென்று முடித்ததால், விரும்பிய காதலுடன் யானும் தேரில் ஏறி அமர்ந்ததை அறிந்தேனே அன்றி, இங்கு வந்த வழியை நன்கு அறிந்திலேன்.  தாவித் தாவி முயல் குட்டிகள் ஓடும் முல்லை மலர்களையுடைய அழகிய காட்டில், பிரிவுகள் கொண்ட கதிர்களையுடைய வரகுப்பயிர் மிகுந்த சிற்றூரில், மென்மையான இயல்புகளைக் கொண்ட என் தலைவியின் மனையின்கண் தேரை நிறுத்தி விட்டு, இறங்குக என்ற நின் சொல்லைக் கேட்டு நான் மருண்டேன்.  காற்றினைக் குதிரையின் உருவமாகத் தேரில் பூட்டினையோ?  அன்றி, நின் மனத்தினைப் பூட்டி வந்தாயோ?  கூறுவாயாக” எனக் கூறி,

பெரும் தலைமையுடையவன், மலையை ஒத்த தன் மார்பின்கண் அவனைச் செறியத் தழுவினவனாகத் தன் மனைக்கண் உடன்கொண்டு புகுந்தான்.  திருந்திய அணிகலன்களை அணிந்த தலைவி விருந்தோம்பும் சிறப்பைப் பெற்றாள்.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு’ஆற்றது பண்பும் கருமத்து விளைவும் ஏவல் முடிவும் வினாவும் செப்பும் ஆற்றிடைக் கண்ட பொருளும் இறைச்சியும் தோற்றம் சான்ற அன்னவை பிறவும் இளையோர்க்கு உரிய கிளவி என்ப’ (தொல்காப்பியம், கற்பியல் 29) என வரும் விதியும் கொள்க.  மதி – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம், இடையியல் 26).  சின் – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம், இடையியல் 26, சின் என்பது இசின் என்பதன் முதற்குறை – ச. பாலசுந்தரம் உரை), அவற்றுள், இகுமும் சின்னும் ஏனை இடத்தொடும் தகு நிலை உடைய என்மனார் புலவர் (தொல்காப்பியம், இடையியல் 27).  பறழ் – நாயே பன்றி புலி முயல் நான்கும் ஆயும் காலை குருளை என்ப.  குட்டியும் பறழும் கூற்று அவண் வரையார் (தொல்காப்பியம், மரபியல் 8,10).  நனி – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3).  நளி – நளி என் கிளவி செறிவும் ஆகும் – (தொல்காப்பியம், உரியியல் 27).

சொற்பொருள்:  இருந்த வேந்தன் அருந்தொழில் முடித்தெனப் புரிந்த காதலொடு பெருந்தேர் யானும் ஏறியது அறிந்தன்று அல்லது – பாசறையில் இருந்த நம் வேந்தன் அரிய போரினை வென்று முடித்ததால் விரும்பிய காதலுடன் யானும் தேரில் ஏறி அமர்ந்ததை அறிந்தேனே அன்றி, வந்த ஆறு நனி அறிந்தன்றோ இலெனே – இங்கு வந்த வழியை நன்கு அறிந்திலேன், தாஅய் முயல் பறழ் உகளும் முல்லை அம் புறவில் – தாவித் தாவி முயல் குட்டிகள் ஓடும் முல்லை மலர்களையுடைய அழகிய காட்டில் (தாஅய் – அளபெடை), கவைக் கதிர் வரகின் சீறூர் ஆங்கண் – கவர்த்த (பிரிவுகளையுடைய) கதிர்களையுடைய வரகுப்பயிர் மிகுந்த சிற்றூரில், மெல்லியல் அரிவை இல் வயின் நிறீஇ இழிமின் என்ற நின் மொழி மருண்டிசினே – மென்மையான இயல்புகளைக் கொண்ட தலைவியின் மனையின்கண் தேரை நிறுத்தி விட்டு இறங்குக என்ற நின் சொல்லைக் கேட்டு நான் மருண்டேன் (நிறீஇ – அளபெடை, மருண்டிசினே – சின் தன்மை அசை, ஏ அசைநிலை), வான் வழங்கு இயற்கை வளி பூட்டினையோ மான் உரு ஆக – வானில் இயங்கும் தன்மையுடைய காற்றினைக் குதிரையின் உருவமாகத் தேரில் பூட்டினையோ, நின் மனம் பூட்டினையோ – நின் மனத்தினைப் பூட்டி வந்தாயோ, உரைமதி – கூறுவாயாக (மதி – முன்னிலையசை), வாழியோ – நீ நீடு வாழ்வாயாக, வலவ – பாகனே, எனத் தன் வரை மருள் மார்பின் நளிப்பனன் முயங்கி மனைக் கொண்டு புக்கனன் – எனக் கூறி மலையை ஒத்த தன் மார்பின்கண் அவனைச் செறியத் தழுவினவனாகத் தன் மனைக்கண் உடன்கொண்டு புகுந்தான் (மருள் – உவம உருபு, நளிப்பனன் – முற்றெச்சம்), நெடுந்தகை – பெரும் தலைமையுடையவன், விருந்து ஏர் பெற்றனள் திருந்து இழையோளே – திருந்திய அணிகலன்களை அணிந்த தலைவி விருந்தோம்பும் சிறப்பைப் பெற்றாள் (இழையோளே – ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 385, குடவாயில் கீரத்தனார், பாலைத் திணை – மகட்போக்கிய செவிலித்தாய் சொன்னது
தன்னோரன்ன ஆயமும், மயிலியல்
என்னோரன்ன தாயரும் காணக்,
கைவல் யானைக் கடுந்தேர்ச் சோழர்
காவிரிப் படப்பை உறந்தை அன்ன
பொன்னுடை நெடுநகர் புரையோர் அயர,  5
நன்மாண் விழவில் தகரம் மண்ணி,
யாம் பல புணர்ப்பச் செல்லாள் காம்பொடு
நெல்லி நீடிய கல்லறைக் கவாஅன்,
அத்த ஆலத்து அலந்தலை நெடுவீழ்
தித்திக் குறங்கில் திருந்த உரிஞ,  10
வளையுடை முன் கை அளைஇக், கிளைய
பயில் இரும் பிணையல் பசுங்காழ்க் கோவை
அகல் அமை அல்குல் பற்றிக், கூந்தல்
ஆடு மயில் பீலியின் பொங்க நன்றும்
தானமர் துணைவன் ஊக்க ஊங்கி,  15
உள்ளாது கழிந்த முள் எயிற்றுத் துவர்வாய்ச்
சிறு வன்கண்ணி சிலம்பு கழீஇ
அறியாத் தேஎத்தள் ஆகுதல் கொடிதே.

பாடல் பின்னணி:  தலைவி உடன்போக்கில் தலைவனுடன் பின் செவிலித்தாய் வருந்திக் கூறியது.

பொருளுரை:  மயில்போலும் சாயல் உடைய என் மகள், தன்னை ஒத்த தோழிமாரும், என்னை ஒத்த தாய்மாரும் கண்டு மகிழும்படி, தும்பிக்கையால் போர் புரியும் யானைகளையும் விரைந்து இயங்கும் தேரினையும் உடைய சோழரின் காவிரியின் அருகில் உள்ள (தோப்புகளை உடைய) உறந்தை அன்ன, செல்வம் மிகுந்த இல்லத்தில் உயர்ந்தவர்கள் நிகழ்த்த, நல்ல மாட்சிமையுடைய மணவிழாவில் அவளுடைய கூந்தலில் நறுமண மயிர்ச்சாந்தினை தடவி மண நீராட்டி யாம் பல பொருத்திய சிறப்புகளையும் செய்விக்க மணம் புரியாதவளாய், மூங்கிலுடன் நெல்லி மரங்கள் உயர்ந்து வளர்ந்துள்ள கற்பாறைகள் உடைய பக்க மலையில் வழியில் உள்ள ஆலமரத்தின் நீண்ட விழுது தன் தேமல் பொருந்திய தொடையில் உரச, அவளுடைய கூந்தல் ஆடும் மயிலின் தோகைபோல் பொங்கி பரவ, அவளால் விரும்பப்பட்ட தலைவன் வளையல் அணிந்த அவளுடைய முன்னங்கையைப் பற்றியும், பல கிளைகளை உடைய நெருங்கி பெரியதாகப் பிணைத்த அழகிய வடங்களை உடைய மேகலையைப் பற்றியும், நன்றாக ஊக்கம் தர ஊக்கம் கொண்டு, எம்மை என்னாது சென்ற கூர்மையான பற்களையும் பவளம் போன்ற வாயினையும் உடைய என்னுடைய சிறுமியாகிய கண்ணோட்டம் இல்லாத என் மகள், அறியப்படாத நாட்டில் சிலம்பு கழிதல் என்னும் சடங்கினைச் செய்தல் கொடுமை.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு’எஞ்சியோர்க்கும் எஞ்சுதல் இலவே’ (தொல்காப்பியம், அகத்திணையியல் 42) என வரும் விதி கொள்க.  கைவல் யானை (3) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – கையால் போர்த் தொழில் செய்யும் வன்மையுடைய யானைகளையும், ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – வலிய கையினையுடைய யானையினையும்.  அலந்தலை (9) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – அசைகின்ற, ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – வாடி அசைகின்ற.  வன்கண்ணி (17) – ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – அஞ்சாமையுடையவள், பொ. வே. சோமசுந்தரனார் உரை – கண்ணோட்டம் இல்லாதவள்.  வரலாறு – சோழர், காவிரி, உறந்தை.  ஒப்புமை –  அகநானூறு 383 – சிறு வன்கண்ணிக்கு.  சிலம்பு கழித்தல் நோன்பு – அகநானூறு 315, 369, 399, நற்றிணை 279, ஐங்குறுநூறு 399.  செவிலி – ஆய் பெருஞ்சிறப்பின் அருமறை கிளத்தலின் தாய் எனப்படுவோள் செவிலி ஆகும் (தொல்காப்பியம், களவியல் 34).  தன்னோரன்ன ஆயமும் மயிலியல் என்னோரன்ன தாயரும் காண – மயிலியல் தன் ஓர் அன்ன ஆயமும் என் ஓர் அன்ன தாயரும் காண எனக் கொள்ளவும்.

சொற்பொருள்:  தன்னோரன்ன ஆயமும் – தன்னை ஒத்த தோழிமாரும், மயிலியல் – மயில்போலும் சாயல் உடைய என் மகள், என்னோரன்ன தாயரும் காண – என்னை ஒத்த தாய்மாரும் கண்டு மகிழ், கைவல் யானைக் கடுந்தேர்ச் சோழர் காவிரிப் படப்பை உறந்தை அன்ன – தும்பிக்கையால் போர் புரியும் யானைகளையும் விரைந்து இயங்கும் தேரினையும் உடைய சோழரின் காவிரியின் அருகில் உள்ள (தோப்புகளை உடைய) உறந்தை அன்ன, பொன்னுடை நெடுநகர் – செல்வம் மிகுந்த இல்லத்தில், புரையோர் அயர – உயர்ந்தவர்கள் நிகழ்த்த, நன்மாண் விழவில் தகரம் மண்ணி – நல்ல மாட்சிமையுடைய மணவிழாவில் அவளுடைய கூந்தலில் நறுமண மயிர்ச்சாந்தினை தடவி மண நீராட்டி, யாம் பல புணர்ப்பச் செல்லாள் – யாம் பல பொருத்திய சிறப்புகளையும் செய்விக்க மணம் புரியாதவளாய், காம்பொடு நெல்லி நீடிய – மூங்கிலுடன் நெல்லி மரங்கள் உயர்ந்து வளர்ந்துள்ள, கல்லறைக் கவாஅன் – கற்பாறைகள் உடைய பக்க மலையில், அத்த ஆலத்து அலந்தலை நெடுவீழ் – வழியில் உள்ள ஆலமரத்தின் நீண்ட விழுது, தித்திக் குறங்கில் திருந்த உரிஞ – தன் தேமல் பொருந்திய தொடையில் உரச, வளையுடை முன் கை அளைஇ – வளையல் அணிந்த முன்னங்கையைப் பற்றி, கிளைய பயில் இரும் பிணையல் பசுங்காழ்க் கோவை அகல் அமை அல்குல் பற்றி – பல கிளைகளை உடைய நெருங்கி பெரியதாகப் பிணைத்த அழகிய வடங்களை உடைய மேகலையைப் பற்றி, கூந்தல் ஆடு மயில் பீலியின் பொங்க –– கூந்தல் ஆடும் மயிலின் தோகைபோல் பொங்க, நன்றும் – நன்றாக, தானமர் துணைவன் – அவளால் விரும்பப்பட்ட தலைவன், ஊக்க ஊங்கி – ஊக்க ஊக்கம் கொண்டு, உள்ளாது கழிந்த – எம்மை என்னாது சென்ற, முள் எயிற்றுத் துவர்வாய்ச் சிறு வன்கண்ணி – கூர்மையான பற்களையும் பவளம் போன்ற வாயினையும் உடைய என்னுடைய சிறுமியாகிய கண்ணோட்டம் இல்லாத என் மகள், சிலம்பு கழீஇ அறியாத் தேஎத்தள் ஆகுதல் கொடிதே – அறியப்படாத நாட்டில் சிலம்பு கழிதல் என்னும் சடங்கினைச் செய்தல் கொடுமை

அகநானூறு 386, பரணர், மருதத் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
பொய்கை நீர்நாய்ப் புலவு நாறு இரும் போத்து
வாளை நாள் இரை தேரும் ஊர!
நாணினென் பெரும யானே, பாணன்
மல்லடு மார்பின் வலியுற வருந்தி,
எதிர் தலைக்கொண்ட ஆரியப் பொருநன்  5
நிறைத் திரண் முழவுத் தோள் கையகத்து ஒழிந்த
திறன் வேறு கிடக்கை நோக்கி, நற்போர்க்
கணையன் நாணியாங்கு மறையினள்
மெல்ல வந்து நல்ல கூறி,
“மை ஈர் ஓதி மடவோய்! யானும் நின்  10
சேரியேனே, அயல் இலாட்டியேன்,
நுங்கை ஆகுவென் நினக்கு” எனத் தன் கைத்
தொடுமணி மெல் விரல் தண்ணெனத் தைவர
நுதலும் கூந்தலும் நீவி,
பகல் வந்து பெயர்ந்த வாணுதல் கண்டே.  15

பாடல் பின்னணி:  தோழி தலைவனுக்கு வாயில் மறுத்தது.  தலைவியின் தகுதி சொல்லி வாயில் மறுத்தது எனினுமாம்.

பொருளுரை:  பொய்கையில் உள்ள புலவு நாற்றமுடைய நீர்நாயின் ஆண், வாளை மீனை அதிகாலையில் இரைக்கு ஆராய்ந்து உண்ணும் ஊரனே!

பிறர் அறியாதபடி மறைந்து மெல்ல வந்து, தலைவியிடம் நல்ல சொற்களைக் கூறி, “கரிய கூந்தலை உடைய இளமைப் பொருந்தியவளே! நானும் உன்னுடைய தெருவின்கண் குடியிருப்பவள் தான், உனக்கு அருகில் உள்ள இல்லத்தில் தான் வாழ்கின்றேன், உனக்கு நான் தங்கை முறை ஆவேன்” என மோதிரம் அணிந்த தன்னுடைய மென்விரலால் அவளை உடல் குளிரும்படி தடவி, அவளுடைய நெற்றியையும் கூந்தலையும் தடவி, பகலில் வந்து சென்ற ஒளியுடைய நெற்றியையுடைய உன் பரத்தையைக் கண்டு, பாணன் என்பவனின் போர் செய்வதில் திறமையான மார்பின் வலிமையால் வருந்தி, அவனைப் போரில் எதிர்கொண்ட ஆரியப்பொருநன் என்பவனின் நிறைந்த திரண்ட முழவு போன்ற தோள்கள் அப்பாணன் கையில் அகப்பட்டு, அவன் அழிந்து பிணமாகக் கிடக்கும் கிடக்கையைப் பார்த்து, நல்ல போரில் ஈடுபடும் கணையன் என்பவன் நாணினாற்போல, நான் நாணம் அடைந்தேன் பெருமானே!

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு ‘பெறற்கு அரும் பெரும் பொருள் (தொல்காப்பியம், கற்பியல் 9) என வரும் நூற்பாவின்கண் ‘பேணா ஒழுக்கம் நாணிய பொருளினும்’ என்னும் பகுதிக்கண் காட்டி, இதனுள் யான் நினக்குத் தோழியாவேன் எனப் பரத்தை நீவிய பேணா ஒழுக்கத்திற்குத் தலைவி நாணியது கண்டு, தான் நாணினேன் என்று தலைவற்குத் தோழி கூறியவாறு காண்க என்றார் நச்சினார்க்கினியர்.  இதற்கு ‘நீத்த கிழவனை நிகழுமாறு படீஇயர் காத்த தன்மையின் கண் இன்று பெயர்ப்பினும்’ (தொல்காப்பியம், கற்பியல் 9) என வரும் விதி கோடலுமாம்.  மல்லடு (4) – மற்போர் செய்தல்.  பாணன் என்ற மன்னன் –அகநானூறு 113 – எழாஅப் பாணன், அகநானூறு 155 – பல் வயின் பய நிரை சேர்ந்த பாண் நாட்டு, அகநானூறு 226 – வலி மிகும் முன்பின் பாணனொடு, அகநானூறு 325 – நல் வேல் பாணன் நல் நாட்டு, அகநானூறு 386 – பாணன் மல்லடு மார்பின் வலியுற.  பறையன்பட்டு கல்வெட்டில் பாணனின் நாடான பாணாடு குறிக்கப்பட்டுள்ளது – Early Tamil Epigraphy, page 629, Iravatham Mahadevan, Harvard University Press.  வாள் – வாள் ஒளி ஆகும் (தொல்காப்பியம், உரியியல் 71).  வரலாறு – பாணன், ஆரியப் பொருநன், கணையன்.   

சொற்பொருள்:  பொய்கை நீர்நாய்ப் புலவு நாறு இரும் போத்து – பொய்கையில் உள்ள புலவு நாற்றமுடைய நீர்நாயின் ஆண், வாளை நாள் இரை தேரும் ஊர – வாளை மீனை அதிகாலையில் இரைக்கு ஆராய்ந்து உண்ணும் ஊரனே,  நாணினென் பெரும யானே – நான் நாணம் அடைந்தேன் ஐயா, பாணன் மல்லடு மார்பின் வலியுற வருந்தி – பாணன் என்பவன் போர் செய்வதில் திறமையான மார்பின் வலிமையால் வருந்தி, எதிர் தலைக்கொண்ட – அவனை போரில் எதிர்கொண்ட, ஆரியப் பொருநன் நிறைத் திரண் முழவுத் தோள் – ஆரியப்பொருநன் என்பவனின் நிறைந்த திரண்ட முழவு போன்ற தோள்கள், கையகத்து ஒழிந்த திறன் வேறு கிடக்கை நோக்கி – அப்பாணன் கையில் பட்டு அழிந்து பிணமாகக் கிடக்கும் கிடக்கையைப் பார்த்து, நற்போர்க் கணையன் நாணியாங்கு – நல்ல போரில் ஈடுபடும் கணையன் என்பவன் நாணினாற்போல, மறையினள் மெல்ல வந்து – மறைந்து மெல்ல வந்து, நல்ல கூறி – நல்ல சொற்களைக் கூறி, மை ஈர் ஓதி மடவோய் – கரிய கூந்தலை உடைய இளமைப்  பொருந்தியவளே, யானும் நின் சேரியேனே – நானும் உன்னுடைய தெருவின்கண் குடியிருப்பவள் தான், அயல் இலாட்டியேன் – உனக்கு அருகில் உள்ள இல்லத்தில் தான் வாழ்கின்றேன், நுங்கை ஆகுவென் நினக்கு – உனக்கு நான் தங்கை முறை ஆவேன், எனத் தன் கைத் தொடுமணி மெல் விரல் தண்ணெனத் தைவர – எனத் தன் மோதிரம் அணிந்த மென்விரலால் உடல் குளிரும்படி தடவி, நுதலும் கூந்தலும் நீவி – நெற்றியையும் கூந்தலையும் தடவி, பகல் வந்து பெயர்ந்த வாணுதல் கண்டே – பகலில் வந்து சென்ற ஒளியுடைய நெற்றியையுடைய உன் பரத்தையைக் கண்டு

அகநானூறு 387, மதுரை மருதன் இளநாகனார், பாலைத் திணைதோழி தலைவனிடம் சொன்னது
திருந்திழை நெகிழ்ந்து, பெருந்தோள் சாஅய்,
அரிமதர் மழைக்கண் கலுழச் செல்வீர்!
வருவீர் ஆகுதல் உரைமின் மன்னோ,
உவர் உணப் பறைந்த ஊன் தலைச் சிறாஅரொடு
அவ்வரி கொன்ற கறை சேர் வள் உகிர்ப்  5
பசை விரல் புலைத்தி நெடிது பிசைந்து ஊட்டிய
பூந்துகில் இமைக்கும் பொலங்காழ் அல்குல்,
அவ்வரி சிதைய நோக்கி வெவ்வினைப்
பயில் அரில் கிடந்த வேட்டு விளி வெரீஇ,
வரிப் புற இதலின் மணிக்கண் பேடை  10
நுண் பொறி அணிந்த எருத்தின், கூர் முள்
செங்கால் சேவல் பயிரும் ஆங்கண்
வில் ஈண்டு அருஞ்சமம் ததைய நூறி,
நல்லிசை நிறுத்த நாணுடை மறவர்
நிரை நிலை நடுகல் பொருந்தி இமையாது,  15
இரை நசைஇக் கிடந்த முதுவாய்ப் பல்லி
சிறிய தெற்றுவதாயின், பெரிய
ஓடை யானை உயர்ந்தோர் ஆயினும்,
நின்று ஆங்குப் பெயரும் கானம்
சென்றோர் மன்னென இருக்கிற்போர்க்கே.  20

பாடல் பின்னணி:  தலைவியின் குறிப்பறிந்து தோழி தலைவனைச் செலவு அழுங்கச் சொல்லியது.  

பொருளுரை:  இவளுடைய திருந்திய அணிகலன்கள் நெகிழவும், பெரிய தோள்கள் மெலியவும், செவ்வரி படர்ந்த மதர்த்த குளிர்ந்த கண்கள் கலங்கி அழவும், பொருள் ஈட்டும்பொருட்டுச் செல்லும் தலைவரே!

தம்மால் சுமக்கப்படும் உவர் மண் அரித்ததால், தலையில் தேய்ந்த ஊனையுடைய சிறுவர்களுடன், ஆடையில் உள்ள மறுக்களை அழித்த, கறை பொருந்திய கூர்மையான நகத்தையும் கஞ்சியின் பசை கொண்ட விரலையுமுடைய வண்ணாத்தி, நீண்ட நேரம் பிசைந்து கஞ்சி ஊட்டிய அழகிய ஆடை விளங்கும் பொன் வடம் அணிந்த அல்குலின்கண் அழகிய திதலை அழிவதைக் கண்டு,

கொடிய தொழிலை உடையவர்களும் கொடிகள் பிணங்கியிருக்கும் இடத்தில் தங்கியிருப்பவர்களுமான வேடவர்களின் அழைப்பு ஒலிக்கு அஞ்சி, புறத்தில் வரிகளை உடைய காடையின் நீலமணியை ஒத்த கண்களையுடைய பேடை நுண்ணிய புள்ளிகளை உடைய கழுத்தினையும் கூரிய முள் போன்ற சிவந்த கால்களையும் உடைய தன் சேவலை அழைக்கும் அவ்விடத்தில்,

விற்படை நெருங்கிய அரிய போரில் பகைவர்களைக் கொன்று நல்ல புகழை நிலைநாட்டி வீழ்ந்த மானம் மிக்க மறவர்களின் வரிசையாக உள்ள நடுகல்லில் பொருந்தி இருந்து, கண்களை இமைக்காது உணவை விரும்பிக் கிடந்த, நிமித்தமாகப் பின்னால் நிகழ்வதைக் கூறும் பல்லி ஒலியால் சிறிது தடைப்படுத்தினாலும், பெரிய நெற்றிப்பட்டம் அணிந்த யானையில் மேல் செல்லும் அரசராயினும் அங்கிருந்து மேலும் செல்லாது மீளும் காட்டிற்கு, நம் தலைவர் சென்றார் எனக் கூறி, ஆற்றியிருக்க வல்லவர்களுக்கு, நீவீர் விரைந்து வருவதைக் கூறுவீராக.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு ‘தலைவரும் விழுமநிலை எடுத்துரைப்பினும்’ (தொல்காப்பியம், அகத்திணையியல் 31) என வரும் விதி கொள்க.  முதுவாய்ப் பல்லி சிறிய தெற்றுவதாயின் (16–17) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – முதுமையையுடைய பல்லி சிறிய சில ஒலிகளை ஒலிப்பது ஆயின், ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – முதுமை வாய்ந்த பல்லி சிற்றளவில் தடைப்படுத்துவது ஆயின்.  புலைத்தி – அகநானூறு 34 – பசை கொல் மெல் விரல் பெருந்தோள் புலைத்தி, அகநானூறு 387 – பசை விரல் புலைத்தி நெடிது பிசைந்து ஊட்டிய பூந்துகில், நற்றிணை 90 – வறன் இல் புலைத்தி எல்லித் தோய்த்த புகாப் புகர் கொண்ட புன் பூங்கலிங்கமொடு, குறுந்தொகை 330 – நலத்தகைப் புலைத்தி பசை தோய்த்து, கலித்தொகை 72 – ஆடை கொண்டு ஒலிக்கும் நின் புலைத்தி, புறநானூறு 311 – புலைத்தி கழீஇய தூ வெள் அறுவை, புறநானூறு 259 முருகு மெய்ப்பட்ட புலைத்தி போல, கலித்தொகை 117 மாதர்ப் புலைத்தி விலை ஆகச் செய்தது ஓர் போழில் புனைந்த வரிப் புட்டில்.   பல்லி நிமித்தம் – அகநானூறு 9, 88, 151, 289, 351, 387, குறுந்தொகை 16, 140, நற்றிணை 98, 169, 246, 333, கலித்தொகை 11.  பறவை நிமித்தம் – நற்றிணை 161.  நல்ல நிமித்தம் பொருட்டுக் காத்திருத்தல் – நற்றிணை 40, முல்லைப்பாட்டு 11.  அவ்வரி கொன்ற (5) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – அழகிய கோடுகளை அழித்த, ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – ஆடையின் மறுக்களைச் சிதைத்த.  கறை (5) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – ஆடையில் அமைந்த கோடுகளை மறையச் செய்த அழுக்கு, ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – கறை பொருந்திய கூரிய நகம்.  இருக்கிற்போர்க்கே (20) – வே. சோமசுந்தரனார் உரை – யாம் என் செய்தும் என வருந்தி உயிர் வாழ்ந்திருக்க வல்லார்க்கு, ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – ஆற்றியிருக்க வல்லார்க்கு. 

சொற்பொருள்:  திருந்து இழை நெகிழ்ந்து பெருந்தோள் சாஅய் அரிமதர் மழைக்கண் கலுழச் செல்வீர் – இவளுடைய திருந்திய அணிகலன்கள் நெகிழவும் பெரிய தோள்கள் மெலியவும் செவ்வரி படர்ந்த மதர்த்த குளிர்ந்த கண்கள் கலங்கி அழவும் செல்லும் தலைவரே (சாஅய் – அளபெடை), வருவீர் ஆகுதல் உரைமின் – நீவீர் விரைந்து வருவதைக் கூறுவீராக, மன்னோ – மன் ஓ அசைநிலைகள், உவர் உணப் பறைந்த ஊன் தலைச் சிறாஅரொடு – உவர் மண் அரித்ததால் தலையில் தேய்ந்த ஊனையுடைய சிறுவர்களுடன், அவ்வரி கொன்ற கறை சேர் வள் உகிர்ப் பசை விரல் புலைத்தி – ஆடையில் உள்ள மறுக்களை அழித்த கறை பொருந்திய கூர்மையான நகத்தையும் கஞ்சியின் பசை கொண்ட விரலையுமுடைய வண்ணாத்தி, நெடிது பிசைந்து ஊட்டிய பூந்துகில் இமைக்கும் பொலங்காழ் அல்குல் அவ்வரி சிதைய நோக்கி – நீண்ட நேரம் பிசைந்து கஞ்சி ஊட்டிய அழகிய ஆடை விளங்கும் பொன் வடம் அணிந்த அல்குலின்கண் அழகிய திதலை அழிவதைக் கண்டு, வெவ்வினைப் பயில் அரில் கிடந்த வேட்டு விளி வெரீஇ – கொடிய தொழிலை உடையவர்களும் கொடிகள் பிணங்கியிருக்கும் இடத்தில் தங்கியிருப்பவர்களுமான வேடவர்களின் அழைப்பு ஒலிக்கு அஞ்சி (வெரீஇ – அளபெடை, வெருவி என்ற வினையெச்சம் திரிந்து அளபெடுத்தது), வரிப் புற இதலின் மணிக்கண் பேடை நுண் பொறி அணிந்த எருத்தின் கூர் முள் செங்கால் சேவல் பயிரும் ஆங்கண் – புறத்தில் வரிகளை உடைய காடையின் நீலமணியை ஒத்த கண்களையுடைய பேடை நுண்ணிய புள்ளிகளை உடைய கழுத்தினையும் கூரிய முள் போன்ற சிவந்த கால்களையும் உடைய தன் சேவலை அழைக்கும் அவ்விடத்தில், வில் ஈண்டு அருஞ்சமம் ததைய நூறி நல்லிசை நிறுத்த நாணுடை மறவர் நிரை நிலை நடுகல் பொருந்தி – விற்படை நெருங்கிய அரிய போரில் பகைவர்களைக் கொன்று நல்ல புகழை நிலைநாட்டி வீழ்ந்த மானம் மிக்க மறவர்களின் வரிசையாக உள்ள நடுகல்லில் பொருந்தி இருந்து, இமையாது இரை நசைஇக் கிடந்த முதுவாய்ப் பல்லி சிறிய தெற்றுவதாயின் – கண்களை இமைக்காது உணவை விரும்பிக் கிடந்த நிமித்தமாகப் பின்னால் நிகழ்வதைக் கூறும் பல்லி ஒலியால் சிறிது தடைப்படுத்தினாலும் (நசைஇ – அளபெடை, தெற்றுவது – தடைப்படுத்துவது, சொல்லுவது), பெரிய ஓடை யானை உயர்ந்தோர் ஆயினும் நின்று ஆங்குப் பெயரும் கானம் சென்றோர் மன் என – பெரிய நெற்றிப்பட்டம் அணிந்த யானையில் மேல் செல்லும் அரசராயினும் அங்கிருந்து மேலும் செல்லாது மீளும் காட்டிற்கு நம் தலைவர் சென்றார் எனக் கூறி (மன் – ஒழியிசை), இருக்கிற்போர்க்கே – ஆற்றியிருக்க வல்லவர்களுக்கு (இருக்கிற்போர்க்கே – ஏகாரம் –அசைநிலை)

அகநானூறு 388, ஊட்டியார், குறிஞ்சித் திணைதலைவி தோழியிடம் சொன்னது, அல்லது தோழி தலைவியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
அம்ம வாழி தோழி! நம் மலை
அமை அறுத்து இயற்றிய வெவ்வாய்த் தட்டையின்
நறுவிரை ஆரம் அறவெறிந்து உழுத
உளைக் குரல் சிறுதினை கவர்தலின், கிளை அமல்
பெருவரை அடுக்கத்துக் குரீஇ ஓப்பி,  5
ஓங்கு இருஞ்சிலம்பின் ஒள் இணர் நறுவீ
வேங்கையம் கவட்டு இடை நிவந்த இதணத்துப்,
பொன் மருள் நறும் தாது ஊதும் தும்பி
இன்னிசை ஓரா இருந்தனமாக,
“மையீர் ஓதி மட நல்லீரே!  10
நொவ்வு இயல் பகழி பாய்ந்தெனப் புண் கூர்ந்து
எவ்வமொடு வந்த உயர் மருப்பு ஒருத்தல் நும்
புனத்து உழிப் போகல் உறுமோ மற்று?” என
சினவுக் கொள் ஞமலி செயிர்த்துப்புடை ஆடச்
சொல்லிக் கழிந்த வல் வில் காளை  15
சாந்தார் அகலமும் தகையும் மிக நயந்து,
ஈங்கு நாம் உழக்கும் எவ்வம் உணராள்,
நன்னர் நெஞ்சமொடு மயங்கி, வெறியென
அன்னை தந்த முதுவாய் வேலன்
“எம் இறை அணங்கலின் வந்தன்று இந்நோய்,  20
தணி மருந்து அறிவல்” என்னும் ஆயின்,
வினவின் எவனோ மற்றே, கனல் சின
மையல் வேழம் மெய் உளம் போக,
ஊட்டியன்ன ஊன் புரள் அம்பொடு
காட்டு மான் அடிவழி ஒற்றி  25
வேட்டம் செல்லுமோ நும் இறை எனவே.

பாடல் பின்னணி:  தலைவி தோழியிடம் சொன்னது, அல்லது தோழி தலைவியிடம் சொன்னது, வரையாது ஒழுகும் தலைவன் கேட்கும்படி. 

பொருளுரை: தோழி!  நீ நீடு வாழ்வாயாக!  நான் கூறுவதைக் கேட்பாயாக!  நம் மலையின் மூங்கிலை அறுத்து இயற்றிய வெவ்விய ஓசையையுடைய தட்டைகளால், நறிய மணம் கொண்ட சந்தன மரங்களை முற்றிலும் வெட்டி உழுது விதைத்த தினைப்புனத்தில் உள்ள துய்யை உடைய சிறுதினையின் கதிர்களைக் கவர்வதால், கிளைகளாகச் செறிந்த பெரிய மூங்கில்கள் உடைய மலைச்சாரல் பக்கத்தில் அவற்றை உண்ண வரும் குருவிகளை ஒட்டி, உயர்ந்த பெரிய மலையில் ஒளிரும் நறுமணம் பொருந்திய மலர்க் கொத்துக்களையுடைய வேங்கை மரத்தின் கிளைகளின் இடையில் கட்டப்பட்ட உயரமான பரணில், பொன்னை ஒத்த நறிய தாதினை நுகரும் தும்பிகள் செய்யும் இனிய இசையைச் செவியுற்று நாம் இருந்தோமாக,

“கரிய, நெய்ப்புடைய கூந்தலையும் இளமையையும் உடைய மகளிரே!  விரையும் இயல்புடைய அம்பு பாய்ந்ததால் புண் மிகுந்து, துன்பத்துடன் வந்த உயர்ந்த கோட்டினையுடைய களிற்று யானை, நும் புனத்தின் வழியே ஓடியதோ?” என்று, சினம் கொண்ட நாய் பெருஞ்சினத்துடன் தன் பக்கத்தில் தொடர, நம்மிடம் வினவிச் சென்ற வலிய வில்லையுடைய இளைஞனான தலைவனின், சந்தனம் பொருந்திய மார்பும் அழகையும் மிகவும் விரும்பி இங்கு நாம் வருந்தும் துன்பத்தினை அறியாதவளாகி, தன் நல்ல நெஞ்சில் தவறாக உணர்ந்து, வெறியாடல் வேண்டும் என்று அழைத்து வந்த அறிவுடைய வேலன், “எம் இறைவனான முருகனின் வருத்துதலால் வந்தது இந்த நோய்.  இதனைத் தணிவிக்கும் மருந்தை யான் அறிவேன்” என்று கூறுவானாயின், “கொதிக்கும் சினமும் மத மயக்கமும் உடைய களிற்று யானையின் உடலினுள் உருவிச் செல்ல, செந்நிறம் பூசினாற்போன்ற ஊனில் பொருந்திய அம்புடன் சென்ற காட்டு விலங்குகளின் அடிச்சுவட்டைத் தொடர்ந்து, நும் இறைவனான முருகவேள் வேட்டையாடுவதற்குச் செல்லுதல் உண்டோ” என்று, நாம் அவனிடம் வினவினால் என்னாகும்?

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – தலைவி கூற்றாயின், இதற்கு ‘மறைந்தவற் காண்டல்’ (தொல்காப்பியம், களவியல் 23) என வரும் நூற்பாவின்கண் ‘வெறியாட்டு இடத்து வெருவின்கண்ணும்’ என வரும் விதி கொள்க.  தோழி கூற்றாயின், இதற்கு ‘அனை நிலை வகையான் வரைதல் வேண்டினும்’ (தொல்காப்பியம், களவியல் 23) என வரும் விதி கொள்க.  வெவ்வாய்த் தட்டையின் (2) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – ஓசை பறவைகளை அச்சுறுத்தலின் வெவ்வாய்த் தட்டை என்றார்.  முதுவாய் வேலன் (19) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – முதுவாய் வேலன் என்றது இகழ்ச்சி.  ஒப்புமை – அகநானூறு 168 – மான் அதர்ச் சிறு நெறி, அகநானூறு 203 – மான் அதர் மயங்கிய மலை முதல் சிறு நெறி, அகநானூறு 318 – கான மான் அதர் யானையும் வழங்கும், அகநானூறு 388 – காட்டு மான் அடிவழி ஒற்றி.  வேலன் – நச்சினார்க்கினியர் உரை திருமுருகாற்றுப்படை 222 – பிள்ளையார் வேலைத் (பிள்ளையான முருகனின் வேல்) தனக்கு அடையாளமாகக் கொண்டு திரிதலின் வேலன் என்றார்.  ஓரா (9) – செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம்.  எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது.  மெய் உளம் (23) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – உடலும் உள்ளமும், ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – உடலின் உள்ளிடம். 

சொற்பொருள்:  அம்ம – நான் கூறுவதைக் கேட்பாயாக, வாழி – நீ நீடு வாழ்வாயாக, தோழி – தோழி, நம் மலை அமை அறுத்து இயற்றிய வெவ்வாய்த் தட்டையின் – நம் மலையின் மூங்கிலை அறுத்து இயற்றிய வெவ்விய ஓசையையுடைய தட்டைகளால் (வெவ்வாய், கொடிய ஓசையை உடைய, பறவைகளை அச்சுறுத்தி விரட்டுவதால்) நறு விரை ஆரம் அற எறிந்து உழுத உளைக் குரல் சிறுதினை கவர்தலின் – நறிய மணம் கொண்ட சந்தன மரங்களை முற்றிலும் வெட்டி உழுது விதைத்த தினைப்புனத்தில் உள்ள துய்யை உடைய சிறுதினையின் கதிர்களைக் கவர்வதால், கிளை அமல் பெரு வரை அடுக்கத்துக் குரீஇ ஓப்பி – கிளைகளாகச் செறிந்த பெரிய மூங்கில்கள் உடைய மலைச்சாரல் பக்கத்தில் அவற்றை உண்ண வரும் குருவிகளை ஒட்டி (குரீஇ – அளபெடை), ஓங்கு இரும் சிலம்பின் ஒள் இணர் நறு வீ வேங்கை அம் கவட்டு இடை நிவந்த இதணத்து – உயர்ந்த பெரிய மலையில் ஒளிரும் நறுமணம் பொருந்திய மலர்க் கொத்துக்களையுடைய வேங்கை மரத்தின் கிளைகளின் இடையில் கட்டப்பட்ட உயரமான பரணில், பொன் மருள் நறும் தாது ஊதும் தும்பி இன்னிசை ஓரா இருந்தனமாக – பொன்னை ஒத்த நறிய தாதினை நுகரும் தும்பிகள் செய்யும் இனிய இசையைச் செவியுற்று இருந்தோமாக (மருள் – உவம உருபு), மையீர் ஓதி மட நல்லீரே – கரிய நெய்ப்புடைய கூந்தலையும் இளமையையும் உடைய மகளிரே, நொவ்வு இயல் பகழி பாய்ந்தெனப் புண் கூர்ந்து எவ்வமொடு வந்த உயர் மருப்பு ஒருத்தல் நும் புனத்து உழிப் போகல் உறுமோ மற்று என – விரையும் இயல்புடைய அம்பு பாய்ந்ததால் புண் மிகுந்து துன்பத்துடன் வந்த உயர்ந்த கோட்டினையுடைய களிற்று யானை நும் புனத்தின் வழியே ஓடியதோ என்று (மற்று – அசைநிலை), சினவுக் கொள் ஞமலி செயிர்த்துப் புடை ஆட – சினம் கொண்ட நாய் பெருஞ்சினத்துடன் தன் பக்கத்தில் தொடர, சொல்லிக் கழிந்த வல் வில் காளை – வினவிச் சென்ற வலிய வில்லையுடைய இளைஞனான தலைவனின், சாந்து ஆர் அகலமும் தகையும் மிக நயந்து ஈங்கு நாம் உழக்கும் எவ்வம் உணராள் – சந்தனம் பொருந்திய மார்பும் அழகையும் மிகவும் விரும்பி இங்கு நாம் வருந்தும் துன்பத்தினை அறியாதவளாகி, நன்னர் நெஞ்சமொடு மயங்கி – தன் நல்ல நெஞ்சில் தவறாக உணர்ந்து (நன்னர் – நல்ல), வெறியென அன்னை தந்த முதுவாய் வேலன் – வெறியாடல் வேண்டும் என்று அழைத்து வந்த அறிவுடைய வேலன், எம் இறை அணங்கலின் வந்தன்று இந்நோய் – எம் இறைவனான முருகனின் வருத்துதலால் வந்தது இந்த நோய், தணி மருந்து அறிவல் என்னும் ஆயின் – இதனைத் தணிவிக்கும் மருந்தை யான் அறிவேன் என்று கூறுவானாயின், வினவின் எவனோ மற்றே – நாம் வினவினால் என்னாகும் (மற்றே – மற்று ஏ அசைநிலைகள்), கனல் சின மையல் வேழம் மெய் உளம் போக – கொதிக்கும் சினமும் மத மயக்கமும் உடைய களிற்று யானையின் உடலினுள் உருவிச் செல்ல, ஊட்டியன்ன ஊன் புரள் அம்பொடு காட்டு மான் அடிவழி ஒற்றி – செந்நிறம் பூசினாற்போன்ற ஊனில் பொருந்திய அம்புடன் சென்ற காட்டு விலங்குகளின் அடிச்சுவட்டைத் தொடர்ந்து, வேட்டம் செல்லுமோ நும் இறை எனவே – நும் இறைவனான முருகவேள் வேட்டையாடுவதற்குச் செல்லுதல் உண்டோ என்று (எனவே – ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 389, நக்கீரனார், பாலைத் திணைதலைவி தோழியிடம் சொன்னது
அறியாய் வாழி தோழி! நெறி குரல்
சாந்து ஆர் கூந்தல் உளரிப் போது அணிந்து,
தேங்கமழ் திரு நுதல் திலகம் தைஇயும்,
பல்லிதழ் எதிர்மலர் கிள்ளி வேறுபட
நல் இள வனமுலை அல்லியொடு அப்பியும்,  5
பெருந்தோள் தொய்யில் வரித்தும், சிறு பரட்டு
அம் செஞ் சீறடிப் பஞ்சி ஊட்டியும்,
எம்  புறந்தந்து நின் பாராட்டிப்
பல் பூஞ்சேக்கையின் பகலும் நீங்கார்,
மனை வயின் இருப்பவர் மன்னே, துனை தந்து  10
இரப்போர் ஏந்து கை நிறையப் புரப்போர்
புலம்பு இல் உள்ளமொடு புதுவ தந்து உவக்கும்
அரும் பொருள் வேட்டம் எண்ணி, கறுத்தோர்
சிறு புன் கிளவிச் செல்லல் பாழ் பட
நல்லிசை தம் வயின் நிறுமார், வல்வேல்  15
வானவரம்பன் நல்நாட்டு உம்பர்,
வேனில் நீடிய வெங்கடற்று அடைமுதல்
ஆறு செல் வம்பலர் வேறு பிரிந்து அலறக்
கொலை வெம்மையின் நிலை பெயர்ந்து உறையும்
பெருங்களிறு தொலைச்சிய இருங்கேழ் ஏற்றை  20
செம்புல மருங்கில் தன் கால் வாங்கி,
வலம்படு வென்றியொடு சிலம்பகம் சிலம்பப்
படுமழை உருமின் முழங்கும்
நெடுமர மருங்கின் மலை இறந்தோரே.

பாடல் பின்னணி:  பிரிவிடை வேறுபட்ட தலைவி, வற்புறுத்தும் தோழியிடம் கூறியது.  

பொருளுரை:  வாழி – தோழி – தோழி!  நீ நீடு வாழ்வாயாக!  நீ என் நிலைமை அறியாது கூறுகின்றாய்.

நெறிந்த கொத்தாக உள்ள மயிற்சாந்து அணிந்த என் கூந்தலைக் கோதிவிட்டு அக்கூந்தலில் மலர்களைச் சூட்டியும், இனிமையாக மணக்கும் என் நெற்றியில் பொட்டு இட்டும், பல இதழ்களையுடைய புதிய மலர்களைக் கிள்ளி அவற்றிலிருந்து நிறம் வேறுபடும் பொடிகளை என் இளைய அழகிய முலைகளில் அப்பியும், என் பெரிய தோள்களில் தொய்யில் வரைந்தும், சிறிய புரட்டினை உடைய என் அழகிய சிவந்த அடிகளில் செம்பஞ்சிக் குழம்பினைத் தடவியும், என்னைப் பாதுகாத்தும், நின்னைப் பாராட்டியும், பல மலர்கள் பரப்பிய படுக்கையில் பகல் பொழுதிலும் நீங்காதவராக மனையில் இருப்பவராகிய நம் தலைவர்,

விரைந்து வந்து இரப்பவர்களுக்கு வழங்கி அவர்களைப் பேணும் கொடையாளியாக, வருத்தம் இல்லாத உள்ளத்துடன், புதிய பொருட்களைத் தந்து மகிழ்வதற்குரிய அரிய பொருளை விரும்பி அடைய எண்ணி, பகைவர்களின் சிறிய புல்லிய சொற்களால் துன்பம் தன்னிடம் இல்லையாக்கும்படி நல்ல புகழினை நிலைநிறுத்தும் பொருட்டு, வலிய வேலையுடைய சேரனின் நல்ல நாட்டின் அப்பால் உள்ள, வேனில் பருவம் நீடித்ததால் வெப்பம் மிக்க காட்டை அடைகின்ற இடத்தில், வழியில் செல்லும் புதியவர்கள் வெவ்வேறு திசைகளில் பிரிந்து ஓடி அலறும்படி, கொல்லும் வேட்கையால் தன் நிலையிலிருந்து நீங்கி வேறு இடத்தில் தங்கிய பெரிய களிற்று யானையைக் கொன்ற, மிக்க நிறமுடைய ஆண் புலி குருதியால் சிவந்த நிலத்தில் தன் கால்களை வளைத்துத் தாவி வலப்பக்கமாக வீழ்த்திய வெற்றியால் மலையில் எதிரொலி செய்ய இடியைப் போல் முழங்கும், உயர்ந்த மரங்களையுடைய மலையைக் கடந்து சென்று விட்டார்.  நான் ஆற்றியிருப்பது எவ்வாறு இயலும்?

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு ‘எஞ்சியோர்க்கும் எஞ்சுதல் இலவே’ (தொல்காப்பியம், அகத்திணையியல் 42) என வரும் விதி கொள்க.  எம் புறந்தந்து நின் பாராட்டி (5) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – என்னைப் பேணுதலோடு என்னை அவரோடு கூட்டிய நன்றி கருதி நின்னையும் பெரிதும் பாராட்டியவராய்.  வரலாறு – வானவரம்பன் (சேரன்).  ஒப்புமை –பெரும்பாணாற்றுப்படை 162 – குறு நெறிக்கொண்ட கூந்தல்.  தான் வேட்டையாடிப் பெற்ற விலங்கு இடது பக்கம் விழுந்தால் புலி அதனை உண்ணாது – அகநானூறு 3, 29, 238, 252, 357, 389, நற்றிணை 154, புறநானூறு 190.  துனை – கதழ்வும் துனைவும் விரைவின் பொருள் (தொல்காப்பியம், உரியியல் 19).  அடைமுதல் – இருங்கடற்று அடைமுதல் – அகநானூறு 75, வெங்கடற்று அடைமுதல் – அகநானூறு 389, வெங்கடற்று அடைமுதல் – நற்றிணை 164.  பல்லிதழ் (4) – அகரம் கெட்டுக் ‘குறியதன் முன்னர்த் தன்னுரு இரட்டலும்’ (தொல்காப்பியம், எழுத்ததிகாரம் 160) என்றதனால் லகரம் இரட்டித்துப் பல்லிதழ் என முடிந்தது.  எதிர்மலர் (5) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – புதிய மலர்கள்.  செல்லல் – செல்லல் இன்னல் இன்னாமையே (தொல்காப்பியம், உரியியல் 6).

சொற்பொருள்:  அறியாய் வாழி – நீ நீடு வாழ்வாயாக, தோழி – தோழி, நெறி குரல் சாந்து ஆர் கூந்தல் உளரிப் போது அணிந்து தேங்கமழ் திரு நுதல் திலகம் தைஇயும் – நெறிந்த கொத்தாக உள்ள மயிற்சாந்து அணிந்த கூந்தலைக் கோதிவிட்டு அக்கூந்தலில் மலர்களைச் சூட்டியும் இனிமையாக மணக்கும் நெற்றியில் பொட்டு இட்டும் (தைஇ – அளபெடை), பல்லிதழ் எதிர்மலர் கிள்ளி வேறுபட நல் இள வனமுலை அல்லியொடு அப்பியும் – பல இதழ்களையுடைய புதிய மலர்களைக் கிள்ளி அவற்றிலிருந்து நிறம் வேறுபடும் பொடிகளை இளைய அழகிய முலைகளில் அப்பியும், பெருந்தோள் தொய்யில் வரித்தும் – பெரிய தோள்களில் தொய்யில் வரைந்தும், சிறு பரட்டு அம் செஞ் சீறடிப் பஞ்சி ஊட்டியும் – சிறிய புரட்டினை உடைய அழகிய சிவந்த அடிகளில் செம்பஞ்சிக் குழம்பினைத் தடவியும், எம்  புறந்தந்து நின் பாராட்டிப் பல் பூஞ்சேக்கையின் பகலும் நீங்கார் மனை வயின் இருப்பவர் – என்னைப் பாதுகாத்தும் நின்னைப் பாராட்டியும் பல மலர்கள் பரப்பிய படுக்கையில் பகல் பொழுதிலும் நீங்காதவராக மனையில் இருப்பவராகிய நம் தலைவர், மன்னே – மன் – ஒழியிசை, ஏ அசைநிலை, துனை தந்து இரப்போர் ஏந்து கை நிறையப் புரப்போர் புலம்பு இல் உள்ளமொடு புதுவ தந்து உவக்கும் அரும் பொருள் வேட்டம் எண்ணி – விரைந்து வந்து இரப்பவர்களுக்கு வழங்கி அவர்களைப் பேணும் கொடையாளியாக வருத்தம் இல்லாத உள்ளத்துடன் புதிய பொருட்களைத் தந்து மகிழ்வதற்குரிய அரிய பொருளை விரும்பி அடைய எண்ணி, கறுத்தோர் சிறு புன் கிளவிச் செல்லல் பாழ் பட நல் இசை தம் வயின் நிறுமார் – பகைவர்களின் சிறிய புல்லிய சொற்களால் துன்பம் தன்னிடம் இல்லையாக்கும்படி நல்ல புகழினை நிலைநிறுத்தும் பொருட்டு, வல்வேல் வானவரம்பன் நல்நாட்டு உம்பர் – வலிய வேலையுடைய சேரனின் நல்ல நாட்டின் அப்பால் உள்ள, வேனில் நீடிய வெங்கடற்று அடைமுதல் – வேனில் பருவம் நீடித்ததால் வெப்பம் மிக்க காட்டை அடைகின்ற இடத்தில், ஆறு செல் வம்பலர் வேறு பிரிந்து அலறக் கொலை வெம்மையின் நிலை பெயர்ந்து உறையும் பெருங்களிறு தொலைச்சிய – வழியில் செல்லும் புதியவர்கள் வெவ்வேறு திசைகளில் பிரிந்து ஓடி அலறும்படி கொல்லும் வேட்கையால் தன் நிலையிலிருந்து நீங்கி வேறு இடத்தில் தங்கிய பெரிய களிற்று யானையைக் கொன்ற, இருங்கேழ் ஏற்றை செம்புல மருங்கில் தன் கால் வாங்கி வலம்படு வென்றியொடு சிலம்பகம் சிலம்பப் படுமழை உருமின் முழங்கும் – மிக்க நிறமுடைய ஆண் புலி குருதியால் சிவந்த நிலத்தில் தன் கால்களை வளைத்துத் தாவி வலப்பக்கமாக வீழ்த்திய வெற்றியால் மலையில் எதிரொலி செய்ய இடியைப் போல் முழங்கும், நெடுமர மருங்கின் மலை இறந்தோரே – உயர்ந்த மரங்களையுடைய மலையைக் கடந்து சென்று விட்டார் (இறந்தோரே – ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 390, அம்மூவனார், நெய்தல் திணைதலைவன் தன் நெஞ்சிடம் அல்லது தன் நண்பனிடம் சொன்னது
உவர் விளை உப்பின் கொள்ளை சாற்றி,
அதர்படு பூழிய சேண் புலம் படரும்
ததர் கோல் உமணர் போகும் நெடுநெறிக்
கண நிரை வாழ்க்கை தான் நன்று கொல்லோ?
வணர் சுரி முச்சி முழுதும் மன் புரள,  5
ஐது அகல் அல்குல் கவின் பெறப் புனைந்த
பல் குழைத் தொடலை ஒல்கு வயின் ஒல்கி,
“நெல்லும் உப்பும் நேரே ஊரீர்!
கொள்ளீரோ?” எனச் சேரிதொறும் நுவலும்,
“அவ் வாங்கு உந்தி அமைத் தோளாய்! நின்  10
மெய் வாழ் உப்பின் விலை எய்யாம்” எனச்
சிறிய விலங்கினமாகப், பெரிய தன்
அரி வேய் உண்கண் அமர்த்தனள் நோக்கி,
யாரீரோ எம் விலங்கியீர்?” என
மூரல் முறுவலள் பேர்வனள் நின்ற  15
சில் நிரை வால் வளைப் பொலிந்த
பல் மாண் பேதைக்கு ஒழிந்தது, என் நெஞ்சே.

பாடல் பின்னணி:  இயற்கைப்புணர்ச்சிக்குப் பின் ஆற்றாமையால் மெய் வேறுபட்ட தலைவன் கூறியது. 

பொருளுரை:  உவர்நிலத்தில் விளைந்த உப்பின் விலையைக் கூறி வழியில் தோன்றிய புழுதியுடைய தொலைவில் உள்ள இடங்களுக்குச் செல்லும் செறிந்த கோல்களையுடைய உப்பு வணிகர்கள் போகும் நீண்ட வழிகளில், கூட்டமாகக் கூடிப் போகும் வாழ்க்கை சிறந்தது போலும். 

வளைந்து சுரிந்த கூந்தல் முழுவதும் பெரிதும் புரள, மெல்லிய அகன்ற அல்குல் அழகுபெறும்படி அணிந்த தளிருடன் கூடிய தழையாடையுடன், அசைந்து நடந்து, “ஊரில் உள்ளவர்களே!  நெல்லும் உப்பும் விலையில் ஒப்பாகும்.  நெல்லைத் தந்து உப்பைக் கொள்வீர்!” என்று தெருக்கள் தோறும் கூறி விற்கும் அவளிடம், “அழகிய வளைந்து கொப்பூளையும், மூங்கில் போன்ற தோள்களையும் உடையவளே!  நின் உடலில் உள்ள உப்பின் விலையை யாம் அறியேம்” எனக் கூறி சிறிது விலகினேமாக, தன் பெரிய செவ்வரி படர்ந்த மையுண்ட கண்களால் மாறுபட்டவள் போல் என்னை நோக்கி, “எம்மைத் தடுக்கும் நீவீர் யாரோ” என்று புன்னகை உடையவளாய்ச் சிறிது நகர்ந்து நின்று, சிலவாய வரிசையான வெண்ணிற வளையல்களால் பொலிந்த பல மாண்புகளையுடைய, உப்பை விற்கும் அப்பெண்ணின் பின் சென்று ஒழிந்தது என் நெஞ்சம்.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு ‘மெய்தொட்டுப் பயிறல்’ (தொல்காப்பியம், களவியல் 11) என வரும் நூற்பாவின்கண் ‘குற்றம் காட்டிய வாயில் பெட்பினும்’ என வரும் விதியும் கொள்க.  நின் மெய் வாழ் உப்பின் விலை எய்யாம் (10–11) – ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – நினது உடலின்கண் உளதாம் இன்பத்திற்கு விலையினை அறிந்திலம், பொ. வே. சோமசுந்தரனார் உரை – நின்னினுடைய உடம்பில் வாழும் உப்பின் விலையை நான் அறிகிலேன், மெய்வாழ் உப்பு = உடம்பிலே வாழ்ந்திருக்கின்ற இன்பம்.  திருக்குறள் 1328 – ‘ ஊடிப் பெறுகுவம் கொல்லோ நுதல் வெயர்ப்பக் கூடலில் தோன்றிய உப்பு’.  உண்கண் (13) – ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – மையுண்ட கண்கள், பொ. வே. சோமசுந்தரனார் உரை – நோக்கப்பட்டார் நெஞ்சத்தை உண்ணும் இயல்புடைய கண்கள்.  பண்ட மாற்று – அகநானூறு 60, 61, 126, 140, 245, 296, 390, நற்றிணை 183, குறுந்தொகை 221, 269, ஐங்குறுநூறு 47, பொருநராற்றுப்படை 214–215, 216–7, பட்டினப்பாலை 28–30, மலைபடுகடாம் 413–414.  ததர் (3) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – நுனி சிதைந்த கோல், ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – செறிந்த கோல்.  கொள்ளீரோ (9) – ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – நெல்லைத் தந்து உப்பைக் கொள்வீர், பொ. வே. சோமசுந்தரனார் உரை – நெல்லும் உப்பும் விலையால் சமமாகும்.  வாங்குவீர் உளீரோ?

சொற்பொருள்:  உவர் விளை உப்பின் கொள்ளை சாற்றி அதர்படு பூழிய சேண் புலம் படரும் ததர் கோல் உமணர் போகும் நெடுநெறிக் கண நிரை வாழ்க்கை தான் நன்று – உவர்நிலத்தில் விளைந்த உப்பின் விலையைக் கூறி வழியில் தோன்றிய புழுதியுடைய தொலைவில் உள்ள இடங்களுக்குச் செல்லும் செறிந்த கோல்களையுடைய உப்பு வணிகர்கள் போகும் நீண்ட வழிகளில் கூட்டமாகக் கூடிப் போகும் வாழ்க்கை சிறந்தது போலும் (தான் – அசைநிலை), கொல்லோ – கொல் ஓ – அசைநிலைகள், வணர் சுரி முச்சி முழுதும் மன் புரள ஐது அகல் அல்குல் கவின் பெறப் புனைந்த பல் குழைத் தொடலை ஒல்கு வயின் ஒல்கி – வளைந்து சுரிந்த கூந்தல் முழுவதும் பெரிதும் புரள மெல்லிய அகன்ற அல்குல் அழகுபெறும்படி அணிந்த தளிருடன் கூடிய தழையாடையுடன் அசைந்து நடந்து, நெல்லும் உப்பும் நேரே – நெல்லும் உப்பும் விலையில் ஒப்பாகும், ஊரீர் – ஊரில் உள்ளவர்களே, கொள்ளீரோ – நெல்லைத் தந்து உப்பைக் கொள்வீர், எனச் சேரிதொறும் நுவலும் – என்று தெருக்கள் தோறும் கூறி விற்கும், அவ் வாங்கு உந்தி அமைத் தோளாய் – அழகிய வளைந்து கொப்பூளையும் மூங்கில் போன்ற தோள்களையும் உடையவளே, நின் மெய் வாழ் உப்பின் விலை எய்யாம் – நின் உடலில் உள்ள உப்பின் விலையை யாம் அறியேம், எனச் சிறிய விலங்கினமாக – எனக் கூறி சிறிது விலகினேமாக, பெரிய தன் அரி வேய் உண்கண் அமர்த்தனள் நோக்கி – தன் பெரிய செவ்வரி படர்ந்த மையுண்ட கண்களால் மாறுபட்டவள் போல் நோக்கி, யாரீரோ எம் விலங்கியீர் – எம்மைத் தடுக்கும் நீவீர் யாரோ, என மூரல் முறுவலள் பேர்வனள் நின்ற – என்று புன்னகை உடையவளாய்ச் சிறிது நகர்ந்து நின்று, சில் நிரை வால் வளைப் பொலிந்த பல் மாண் பேதைக்கு – சிலவாய வரிசையான வெண்ணிற வளையல்களால் பொலிந்த பல மாண்புகளையுடைய பெண்ணிற்கு, ஒழிந்தது என் நெஞ்சே – பின் சென்று ஒழிந்தது என் நெஞ்சம் (நெஞ்சே – ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 391, காவன்முல்லைப் பூதனார், பாலைத் திணைதலைவி தோழியிடம் சொன்னது
பார்வல் வெருகின் கூர் எயிற்று அன்ன
வரி மென் முகைய நுண்கொடி அதிரல்
மல்கு அகல் வட்டியர், கொள்வு  இடம் பெறாஅர்,
விலைஞர் ஒழித்த தலை வேய் கான் மலர்
தேம்பாய் முல்லையொடு ஞாங்கர்ப் போக்கி,  5
தண் நறும் கதுப்பில் புணர்ந்தோர், புனைந்த என்
பொதி மாண் முச்சி காண்தொறும், பண்டைப்
பழ அணி உள்ளப்படுமால் தோழி,
இன்றொடு சில் நாள் வரினும், சென்று நனி
படாஅ வாகுமெம் கண்ணே கடாஅ  10
வான் மருப்பு அசைத்தல் செல்லாது, யானை தன்
வாய் நிறை கொண்ட வலி தேம்பு தடக்கை
குன்று புகு பாம்பின் தோன்றும்,
என்றூழ் வைப்பின் சுரன் இறந்தோரே.

பாடல் பின்னணி:  பிரிவிடை வற்புறுத்தும் தோழிக்குத் தலைவி கூறியது. 

பொருளுரை:  தோழி  தன் இரையைப் பார்த்திருக்கும் காட்டுப்பூனையின் கூரிய பற்களை ஒத்த வரிகளுடைய, மெல்லிய அரும்புகளையுடைய நுண்ணிய கொடியாகிய காட்டு மல்லிகையின் மலர்கள், நிறைந்த அகன்ற கூடையை உடையவர்களாய் விலைக்குக் கொள்ளும் இடம் பெறாதவராய் விற்பவர் நம்மிடம் கொடுத்த, என் தலையில் சூடிய நறுமணம் கமழும் மலர்களைத் தேன் பாயும் முல்லைப் பூக்களுடன் புறத்தே நீக்கி, என் குளிர்ந்த நறிய கூந்தலில் துயின்ற தலைவர்,

மதம் கொண்ட களிற்று யானை வெள்ளை கோட்டினை (தந்தத்தை) அசைத்து நகர்த்த இயலாது, தன் வாயில் நிறையும்படி புகுத்திய வலிமை குன்றிய பெரிய தும்பிக்கை, மலை முழைஞ்சினுள் நுழையும் பாம்பு போல் தோன்றும் வெப்பம் மிகுந்த இடங்களையுடைய பாலை நிலத்தைக் கடந்து சென்றார்.

அவர் புனைந்த என் நிறைந்த மாண்புமிக்க கூந்தல் முடியினைக் காணுந்தோறும், முன்பு இருந்த என் பழைய அழகு என்னால் நினைக்கப்படுகின்றது.  அவர் சென்ற பின் இன்றுடன் சில நாட்களே ஆயினும், என் கண்கள் மிகவும் துயிலாதனவாக உள்ளன.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு ‘எஞ்சியோர்க்கும் எஞ்சுதல் இலவே’ (தொல்காப்பியம், அகத்திணையியல் 42) என வரும் விதி கொள்க.  காட்டுப் பூனையின் பற்களைப் போன்ற முல்லை அரும்பு – அகநானூறு 391 – பார்வல் வெருகின் கூர் எயிற்று அன்ன வரி மென் முகைய, குறுந்தொகை 220 – முல்லை வெருகு சிரித்தன்ன பசு வீ மென் பிணி குறு முகை அவிழ்ந்த, குறுந்தொகை 240 – வெருக்குப்பல் உருவின் முல்லையொடு, புறநானூறு 117 – பிள்ளை வெருகின் முள் எயிறு புரையப் பாசிலை முல்லை முகைக்கும்.  தட – தடவும் கயவும் நளியும் பெருமை (தொல்காப்பியம், உரியியல் 24).  நனி – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3).  கான் – மணம், அகநானூறு 391 – தலை வேய் கான் மலர் தேம் பாய் முல்லையொடு, பதிற்றுப்பத்து 30 – கான்மிகு குளவிய, திருமுருகாற்றுப்படை 198 – விரல் உளர்ப்பு அவிழ்ந்த வேறுபடு நறுங்கான், மதுரைக்காஞ்சி 337 – கான் பொழில் தழீஇய அடைகரை தோறும்.  என்றூழ் – கதிரவனின் முதிர்ந்த கதிர்கள், எல் (கதிரவன்) + ஊழ் (முதிர்ச்சி).  முனைவர் கு. வெ. பாலசுப்ரமணியன் அவர்களின் விளக்கம்.

சொற்பொருள்:  பார்வல் வெருகின் கூர் எயிற்று அன்ன வரி மென் முகைய நுண்கொடி அதிரல் – தன் இரையைப் பார்த்திருக்கும் காட்டுப்பூனையின் கூரிய பற்களை ஒத்த வரிகளுடைய மெல்லிய அரும்புகளையுடைய நுண்ணிய கொடியாகிய காட்டு மல்லிகையின் மலர்கள் (பார்வல் – பார்வை), மல்கு அகல் வட்டியர் கொள்வு  இடம் பெறாஅர் விலைஞர் ஒழித்த – நிறைந்த அகன்ற கூடையை உடையவர்களாய் விலைக்குக் கொள்ளும் இடம் பெறாதவராய் விற்பவர் நம்மிடம் கொடுத்த (பெறாஅர் – அளபெடை), தலை வேய் கான் மலர் தேம்பாய் முல்லையொடு ஞாங்கர்ப் போக்கி – தலையில் சூடிய நறுமணம் கமழும் மலர்களைத் தேன் பாயும் முல்லைப் பூக்களுடன் புறத்தே நீக்கி, தண் நறும் கதுப்பில் புணர்ந்தோர் – என் குளிர்ந்த நறிய கூந்தலில் துயின்ற தலைவர், புனைந்த என் பொதி மாண் முச்சி காண்தொறும் – அவர் புனைந்த என் நிறைந்த மாண்புமிக்க கூந்தல் முடியினைக் காணுந்தோறும், பண்டைப் பழ அணி உள்ளப்படுமால் – முன்பு இருந்த என் பழைய அழகு என்னால் நினைக்கப்படுகின்றது (உள்ளப்படுமால் – ஆல் அசைநிலை), தோழி – தோழி, இன்றொடு சில் நாள் வரினும் சென்று – அவர் சென்ற பின் இன்றுடன் சில நாட்களே ஆயினும், நனி படாஅ ஆகும் எம் கண்ணே – என் கண்கள் மிகவும் துயிலாதனவாகும், கடாஅ வான் மருப்பு அசைத்தல் செல்லாது யானை தன் வாய் நிறை கொண்ட வலி தேம்பு தடக் கை – மதம் கொண்ட களிற்று யானை வெள்ளை கோட்டினை (தந்தத்தை) அசைத்து நகர்த்த இயலாது தன் வாயில் நிறையும்படி புகுத்திய வலிமை குன்றிய பெரிய தும்பிக்கை, குன்று புகு பாம்பின் தோன்றும் என்றூழ் வைப்பின் சுரன் இறந்தோரே – மலை முழைஞ்சினுள் நுழையும் பாம்பு போல் தோன்றும் வெப்பம் மிகுந்த இடங்களையுடைய பாலை நிலத்தைக் கடந்து சென்றார் (பாம்பின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது, சுரன் – சுரம் என்பதன் போலி, இறந்தோரே – ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 392, மோசிகீரனார், குறிஞ்சித் திணைதோழி தலைவியிடம் சொன்னது
தாழ் பெருந்தடக்கை தலைஇய கானத்து
வீழ் பிடி கெடுத்த வெண்கோட்டு யானை
உண் குளகு மறுத்த உயக்கத்தன்ன,
பண்புடை யாக்கைச் சிதைவு நன்கு அறீஇப்
பின்னிலை முனியான் ஆகி, நன்றும்  5
தாது செய் பாவை அன்ன தையல்
மாதர் மெல்லியல் மட நல்லோள் வயின்
தீது இன்றாக நீ புணை புகுக என
என்னும் தண்டும் ஆயின், மற்று அவன்
அழிதகப் பெயர்தல் நனி இன்னாதே  10
ஒல் இனி, வாழி தோழி! கல்லெனக்
கண மழை பொழிந்த கான் மடி இரவில்,
தினை மேய் யானை இனன் இரிந்து ஓடக்,
கல் உயர் கழுதில் சேணோன் எறிந்த
வல்வாய்க் கவணின் கடு வெடி ஒல்லென  15
மறப் புலி உரற, வாரணம் கதற,
நனவுறு கட்சியின் நன் மயில் ஆல,
மலையுடன் வெரூஉம் மாக் கல் வெற்பன்
பிரியுநன் ஆகலே அரிதே, அதாஅன்று,
உரிது அல் பண்பின் பிரியுநன் ஆயின்  20
வினை தவப் பெயர்ந்த வென்வேல் வேந்தன்
முனை கொல் தானையொடு முன் வந்து இறுப்பத்,
தன் வரம்பு ஆகிய மன்னெயில் இருக்கை
ஆற்றாமையின் பிடித்த வேல் வலித்
தோற்றம் பிழையாத் தொல் புகழ் பெற்ற,  25
விழைதக ஓங்கிய கழை துஞ்சு மருங்கிற்
கான் அமர் நன்னன் போல,
யான் ஆகுவல் நின் நலம் தருவேனே.

பாடல் பின்னணி:  தலைவியை கூட்டுவிக்கத் தோழியைத் தலைவன் வேண்டினான்.  அதற்கு உடன்பட்ட தோழி, தலைவியிடம் வந்து தலைவனின் விருப்பத்திற்கு இணங்குமாறு கூறியது. 

பொருளுரை:  தோழி!  நீ நீடு வாழ்வாயாக!  இப்பொழுது யான் கூறுவதை நீ மனம் பொருந்திக் கேட்பாயாக!

கல்லென்னும் ஓசையுடன் கூட்டமான முகில்கள் மழையைப் பொழிந்த, காடு அடங்கிய இரவில், தினையை மேய்ந்த யானையின் கூட்டம் அஞ்சி ஓடும்படி, மலையில் உள்ள உயர்ந்த பரணில் கானவன் வீசி எறிந்த வலிய விசைவு வாய்ந்த கவண் கல்லின் கடிய ஓசை ஒல்லென ஒலிக்க, அதனைக் கேட்டு அச்சமுற்று மறமுடைய புலிகள் முழங்கவும், யானைகள் கதறவும், அகன்ற காட்டில் உள்ள அழகிய மயில்கள் ஆடவும், மலை முழுவதும் அஞ்சும் பெரிய கற்களை உடைய மலையின் தலைவன்,

காட்டில், தாழ்ந்து தொங்கும் மிகப் பெரிய தும்பிக்கை பொருந்திய, தான் விரும்பும் பெண் யானையை இழந்த வெள்ளை மருப்புகளை (தந்தங்களை) உடைய களிற்று யானை, உண்ணும் தழையை உண்ணாது மறுத்த மெலிவை ஒத்த, பண்பு மிக்க தன் உடலின் மெலிவை நன்கு அறிந்திருந்தும், நம் பின் நின்று இரத்தலை வெறுக்காதவன் ஆகி,

“பொன்னால் செய்த பாவை போன்ற, அழகும் விருப்பமும் மென்மைத் தன்மையும் கொண்ட தலைவியின்பால், தீங்கு இல்லாதவாறு நீ புணையாகப் புகுவாயாக” எனக் கூறி, தனக்கு உரியது அல்லாத ஒரு பண்பினால் பிரிவான் ஆயின், அவன் வருந்தும்படி நாம் செல்லுதல் மிகவும் துன்பமானது ஆகும்.  அவன் நம்மைப் பிரிந்து செல்லுதல் அரிது.  அது அன்றியும், போர் வினை கெட்டதால் நீங்கிய வெற்றி வேலையுடைய வேந்தன், போரின்கண் கொல்லும் சேனையுடன் வந்து தங்கியிருக்க, தன் எல்லையாகிய நிலைபெற்ற அரணில் தங்கியிருந்தல் இயலாமையின், கையில் கொண்ட வேலையுடைய தன் வலிமையான தோற்றம் பிழையாதவாறுத் தன் பழைய புகழை நிலைநாட்டிய, கண்டவர்கள் விரும்பும்படி உயர்ந்த மூங்கில்கள் செறிந்த மலைப்பக்கத்தில் உள்ள காட்டில் இருந்த, நன்னனைப் போல யான் நினது நலத்தை மீட்டித் தருவேன்.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு ‘நாற்றமும் தோற்றமும்’ (தொல்காப்பியம், களவியல் 23) என வரும் நூற்பாவின்கண் ‘பின்னிலை நிகழும் பல்வேறு மருங்கினும்’ என வரும் விதியும் கொள்க.  தாது செய் பாவை (6) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – கரும்பொன்னால் செய்த பாவை, தாது இரும்பிற்கும் பொன்னிற்கும் பொது, ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – பொன்னால் செய்த பாவை. குறுந்தொகை 48ம் பாடல் – தாதின் செய்த தண் பனிப் பாவை – உ. வே. சாமிநாதையர் உரை – பூந்தாது முதலிய பொடிகளாற் செய்யப்பட்ட பாவை, பொ. வே. சோமசுந்தரனார் உரை – பூந்தாது முதலியவற்றாற் செய்த பாவை.  வல்வாய்க் கவண் (15) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – வலிய வாயையுடைய கவண், ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – வலிய விசை வாய்ந்த கவண்.  ஒப்புமை –குறுந்தொகை 48 – தாதின் செய்த தண் பனிப் பாவை, அகநானூறு 392 – தாது செய் பாவை அன்ன.  வரலாறு – நன்னன்.  தட – தடவும் கயவும் நளியும் பெருமை (தொல்காப்பியம், உரியியல் 24).  நனி – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3).  நன – நனவே களனும் அகலமும் செய்யும் – (தொல்காப்பியம், உரியியல் 80).  சேணோன் – உ. வே. சாமிநாதையர் உரை, குறுந்தொகை 150ம் பாடலில் – வேங்கை மரத்தின் மீது கட்டப்பட்ட பரணிலும் யானைகளாலும் எட்ட முடியாத குன்றின் மீது கட்டப்பட்ட பரணிலும் இருப்பவன் ஆதலின் இவன் சேணோன் எனப்பட்டான்.

சொற்பொருள்:  தாழ் பெரும் தடக்கை தலைஇய – தாழ்ந்து தொங்கும் மிகப் பெரிய தும்பிக்கை பொருந்திய, கானத்து – காட்டில், வீழ் பிடி கெடுத்த வெண்கோட்டு யானை – தான் விரும்பும் பெண் யானையை இழந்த வெள்ளை மருப்புகளை (தந்தங்களை) உடைய களிற்று யானை, உண் குளகு மறுத்த உயக்கத்தன்ன பண்புடை யாக்கைச் சிதைவு நன்கு அறீஇ – உண்ணும் தழையை உண்ணாது மறுத்த மெலிவை ஒத்த பண்பு மிக்க தன் உடலின் மெலிவை நன்கு அறிந்திருந்தும்  (அறீஇ – அளபெடை), பின்னிலை முனியான் ஆகி – நம் பின் நின்று இரத்தலை வெறுக்காதவன் ஆகி, நன்றும் தாது செய் பாவை அன்ன – பொன்னால் செய்த பாவை போன்ற, பூந்தாதினால் செய்யப்பட்ட பாவை போன்ற, தையல் மாதர் மெல்லியல் மட நல்லோள் வயின் – அழகும் விருப்பமும் மென்மைத் தன்மையும் கொண்ட தலைவியின்பால், தீது இன்றாக நீ புணை புகுக என – தீங்கு இல்லாதவாறு நீ புணையாகப் புகுவாயாக எனக் கூறி, என்னும் தண்டும் ஆயின் – அவன் சிறிதும் விலகுவானாயின், மற்று – அசைநிலை, அவன் அழிதகப் பெயர்தல் நனி இன்னாதே – அவன் வருந்தும்படி நாம் செல்லுதல் மிகவும் துன்பமானது ஆகும், ஒல் இனி – இப்பொழுது யான் கூறுவதை நீ மனம் பொருந்திக் கேட்பாயாக, வாழி – நீ நீடு வாழ்வாயாக, தோழி – தோழி, கல்லெனக் கண மழை பொழிந்த கான் மடி இரவில் தினை மேய் யானை இனன் இரிந்து ஓட – கல்லென்னும் ஓசையுடன் கூட்டமான முகில்கள் மழையைப் பொழிந்த காடு அடங்கிய இரவில் தினையை மேய்ந்த யானையின் கூட்டம் அஞ்சி ஓட, கல் உயர் கழுதில் சேணோன் எறிந்த வல்வாய்க் கவணின் கடு வெடி ஒல்லென – மலையில் உள்ள உயர்ந்த பரணில் கானவன் வீசி எறிந்த வலிய விசைவு வாய்ந்த கவண் கல்லின் கடிய ஓசை ஒல்லென ஒலிக்க, மறப் புலி உரற – அச்சமுற்று மறமுடைய புலிகள் முழங்கவும், வாரணம் கதற – யானைகள் கதறவும், நனவுறு கட்சியின் நன் மயில் ஆல – அகன்ற காட்டில் உள்ள அழகிய மயில்கள் ஆடவும், மலை உடன் வெரூஉம் மாக் கல் வெற்பன் – மலை முழுவதும் அஞ்சும் பெரிய கற்களை உடைய மலையின் தலைவன், பிரியுநன் ஆகலே அரிதே – நம்மைப் பிரிந்து செல்லுதல் அரிது, அதாஅன்று – அது அன்றியும் (அது அன்று என்பன அதான்று எனப்புணர்ந்து வருமொழி முதல் அளபெடுத்து அதாஅன்று என்றாயிற்று. அதாஅன்று அஃதன்றியும் என்னும் பொருட்டு, அளபெடை), உரிது அல் பண்பின் பிரியுநன் ஆயின் – தனக்கு உரியது அல்லாத ஒரு பண்பினால் பிரிவான் ஆயின், வினை தவப் பெயர்ந்த வென்வேல் வேந்தன் முனை கொல் தானையொடு முன் வந்து இறுப்ப – போர் வினை கெட்டதால் நீங்கிய வெற்றி வேலையுடைய வேந்தன் போரின்கண் கொல்லும் சேனையுடன் வந்து தங்கியிருக்க, தன் வரம்பு ஆகிய மன்னெயில் இருக்கை ஆற்றாமையின் – தன் எல்லையாகிய நிலைபெற்ற அரணில் தங்கியிருந்தல் இயலாமையின், பிடித்த வேல் வலித் தோற்றம் பிழையாத் தொல் புகழ் பெற்ற – கையில் கொண்ட வேலையுடைய தன் வலிமையான தோற்றம் பிழையாதவாறுத் தன் பழைய புகழை நிலைநாட்டிய (பிழையா – ஈறுகெட்ட எதிர்மறை வினையெச்சம்), விழைதக ஓங்கிய கழை துஞ்சு மருங்கிற் கான் அமர் – கண்டவர்கள் விரும்பும்படி உயர்ந்த மூங்கில்கள் செறிந்த மலைப்பக்கத்தில் உள்ள காட்டில் இருந்த, நன்னன் போல யான் ஆகுவல் நின் நலம் தருவேனே – நன்னனைப் போல யான் நினது நலத்தை மீட்டித் தருவேன் (தருவேனே – ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 393, மாமூலனார், பாலைத் திணைதோழி தலைவியிடம் சொன்னது
கோடு உயர் பிறங்கல் குன்று பல நீந்தி,
வேறு புலம் படர்ந்த வினை தரல் உள்ளத்து
ஆறு செல் வம்பலர் காய் பசி தீரிய,
முதைச் சுவல் கலித்த ஈர் இலை நெடுந்தோட்டுக்
கவைக் கதிர் வரகின் கால் தொகு பொங்கழி,  5
கவட்டு அடிப் பொருத பல் சினை உதிர்வை
அகன் கண் பாறைச் செவ்வயின் தெறீஇ,
வரி அணி பணைத்தோள் வார் செவித்தன்னையர்
பண்ணை வெண்பழத்து அரிசி ஏய்ப்பச்,
சுழல்மரம் சொலித்த சுளகு அலை வெண்காழ்  10
தொடி மாண் உலக்கை ஊழின் போக்கி
உரல் முகம் காட்டிய சுரை நிறை கொள்ளை
ஆங்கண் இருஞ்சுனை நீரொடு முகவாக்,
களிபடு குழிசிக் கல் அடுப்பு ஏற்றி
இணர் ததை கடுக்கை ஈண்டிய தாதின்,  15
குடவர் புழுக்கிய பொங்கு அவிழ்ப் புன்கம்
மதர்வை நல் ஆன் பாலொடு பகுக்கும்
நிரை பல குழீஇய நெடுமொழிப் புல்லி
தேன் தூங்கு உயர்வரை நல் நாட்டு உம்பர்,
வேங்கடம் இறந்தனர் ஆயினும் ஆண்டு அவர்  20
நீடலர், வாழி தோழி! தோடு கொள்
உருகெழு மஞ்ஞை ஒலி சீர் ஏய்ப்பத்,
தகரம் மண்ணிய தண் நறுமுச்சிப்
புகரில் குவளைப் போதொடு தெரி இதழ்
வேனில் அதிரல் வேய்ந்த நின்  25
ஏமுறு புணர்ச்சி இன்துயில் மறந்தே.

பாடல் பின்னணி:  பிரிவிடை வேறுபட்ட தலைவியைத் தோழி வற்புறுத்தியது. 

பொருளுரை:  தோழி!  நீ நீடு வாழ்வாயாக!   உச்சியுடைய உயர்ந்த விளங்கும் மலைகள் பலவற்றைக் கடந்து, வேறு நாட்டிற்குச் சென்று பொருள் ஈட்டிக் கொண்டுவரும் உள்ளத்தால்,

வழியில் செல்லும் புதியவர்களின் மிகுந்த பசி தீரும்படி, பழைய கொல்லையில் தழைத்த பசிய இலையின் நீண்ட மடலையுடைய கவர்த்த கதிர்களையுடைய வரகின் தட்டைகளைத் தொகுத்த குவியலில், மாடுகளின் கவர்த்த அடிகளால் கவர்த்த கிளைகளிலிருந்து உதிர்ந்த வரகினை, இடம் அகன்ற பாறையில் செவ்விய இடத்தில் குவித்து, வரிகள் பொருந்திய பருத்த தோள்களையும் நீண்ட செவிகளையுமுடைய தாய்மார்கள், பண்ணைக் கீரையின் வெள்ளை பழத்தின் அரிசியை ஒப்ப திரிமரம் தேய்த்த சுளகினால் கொழிக்கப்பட்ட வெள்ளை அரிசியைப் பூணால் மாண்புற்ற உலக்கையால் முறைப்படி குத்தி நீக்கி, உரலில் சொரிந்து தீட்டிய உரலின் குழியில் நிறைந்த அந்த அரிசியை, அங்குள்ள பெரிய சுனையில் நீருடன் முகந்து களிமண்ணால் செய்த பானையில் கற்களை அடுக்கி அமைத்த அடுப்பில் ஏற்றி, கொத்துக்கள் நிறைந்த கொன்றை மலர்களின் பூந்தாது போல், இடையர்கள் சமைத்த பொங்கிய அவிழாகிய வரகுச் சோற்றை நல்ல பாலுடன் கூட்டி அளிக்கும், ஆனிரைகள் பல கூடியிருக்கும், மிகுந்த புகழையுடைய புல்லி என்பவனின், தேனிறால் தொங்கும் உயர்ந்த மலைகளையுடைய நல்ல நாட்டிற்கு அப்பால் உள்ள, வேங்கட மலையைக் கடந்து சென்றார் ஆயினும்,  

தொகுதி கொண்ட அழகிய மயிலின் தழைத்த தோகையை ஒப்ப மயிர்ச்சாந்து பூசப்பட்ட, குளிர்ந்த நறுமணம் பொருந்திய கூந்தலில், குற்றமில்லாத குவளை பூக்களுடன், விளங்கும் இதழ்களையுடைய வேனில் காலத்தின் காட்டு மல்லிகை மலர்களைச் சூடிய நின் இன்பம் பொருந்திய கூட்டமாகிய இனிய துயிலை மறந்து, அங்கு அவர் காலம் தாழ்த்தியிருப்பவர் அல்லர்.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு ‘தலைவரும் விழுமநிலை’ (தொல்காப்பியம், அகத்திணையியல் 39) என வரும் நூற்பாவின்கண் ‘நோய் மிகப் பெருகித் தன் நெஞ்சு கலுழ்ந்தோளை அழிந்தது களை என மொழிந்தது கூறி வன்புறை நெருங்கி வந்ததன் திறத்தொடு என்று இவை எல்லாம் இயல்புற நாடின் ஒன்றித் தோன்றும் தோழி மேன’ என வரும் விதி கொள்க.  உரல் முகம் (12) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – உரலின் வாய், ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – உரலின் குழி.  இணர் ததை கடுக்கை ஈண்டிய தாதின் குடவர் புழுக்கிய (15) – ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – கொத்துக்கள் நிறைந்த கொன்றையின் நிறைந்த பூந்தாது போல இடையர் ஆக்கிய, பொ. வே. சோமசுந்தரனார் உரை – பூங்கொத்துக்கள் செறிந்த கொன்றையினது செறிந்த விறகினால் இடையர்கள் அவித்த.  தெரி இதழ் (24) – ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – விளங்கும் இதழ்களுடைய, பொ. வே. சோமசுந்தரனார் உரை – ஆராய்ந்து எடுத்த இதழ்களையுடைய.  வரலாறு –புல்லி, வேங்கடம்.  முகவா – முகுந்து என்பது பொருள்.  செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம்.  எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது.  வார் – வார்தல் போகல் ஒழுகல் மூன்றும் நேர்பும் நெடுமையும் செய்யும் பொருள – (தொல்காப்பியம், உரியியல் 21).  முதைச் சுவல் (4) – பழைய உரையில் இவ்வாறு உள்ளது.  பொ. வே. சோமசுந்தரனார் உரை, ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை ஆகியவற்றில் இதைச் சுவல் என உள்ளது.

சொற்பொருள்:  கோடு உயர் பிறங்கல் குன்று பல நீந்தி வேறு புலம் படர்ந்த வினை தரல் உள்ளத்து – உச்சியுடைய உயர்ந்த விளங்கும் மலைகள் பலவற்றைக் கடந்து வேறு நாட்டிற்குச் சென்று பொருள் ஈட்டிக் கொண்டுவரும் உள்ளத்தால், ஆறு செல் வம்பலர் காய் பசி தீரிய – வழியில் செல்லும் புதியவர்களின் மிகுந்த பசி தீரும்படி, முதைச் சுவல் கலித்த ஈர் இலை நெடுந்தோட்டுக் கவைக் கதிர் வரகின் – பழைய கொல்லையில் தழைத்த பசிய இலையின் நீண்ட மடலையுடைய கவர்த்த (பிரிவுகள் கொண்ட) கதிர்களையுடைய வரகின், கால் தொகு பொங்கழி – தட்டைகளைத் தொகுத்த குவியலில், கவட்டு அடிப் பொருத பல் சினை உதிர்வை அகன் கண் பாறைச் செவ்வயின் தெறீஇ – மாடுகளின் கவர்த்த அடிகளால் கவர்த்த கிளைகளிலிருந்து உதிர்ந்த வரகினை இடம் அகன்ற பாறையில் செவ்விய இடத்தில் குவித்து, வரி அணி பணைத்தோள் வார் செவித் தன்னையர் – வரிகள் பொருந்திய பருத்த தோள்களையும் நீண்ட செவிகளையுமுடைய தாய்மார்கள், பண்ணை வெண்பழத்து அரிசி ஏய்ப்பச் சுழல்மரம் சொலித்த சுளகு அலை வெண்காழ் தொடி மாண் உலக்கை ஊழின் போக்கி – பண்ணைக் கீரையின் வெள்ளை பழத்தின் அரிசியை ஒப்ப திரிமரம் தேய்த்த சுளகினால் கொழிக்கப்பட்ட வெள்ளை அரிசியைப் பூணால் மாண்புற்ற உலக்கையால் முறைப்படி குத்தி நீக்கி (ஏய்ப்ப – உவம உருபு), உரல் முகம் காட்டிய சுரை நிறை கொள்ளை ஆங்கண் இருஞ்சுனை நீரொடு முகவாக் களிபடு குழிசிக் கல் அடுப்பு ஏற்றி – உரலில் சொரிந்து தீட்டிய உரலின் குழியில் நிறைந்த அந்த அரிசியை அங்குள்ள பெரிய சுனையில் நீருடன் முகந்து களிமண்ணால் செய்த பானையில் கற்களை அடுக்கி அமைத்த அடுப்பில் ஏற்றி, இணர் ததை கடுக்கை ஈண்டிய தாதின் – கொத்துக்கள் நிறைந்த கொன்றை மலர்களின் பூந்தாது போல் (இன் உருபு ஒப்புப் பொருளது, ஐந்தாம் வேற்றுமை உருபு), குடவர் புழுக்கிய பொங்கு அவிழ்ப் புன்கம் மதர்வை நல் ஆன் பாலொடு பகுக்கும் – இடையர்கள் சமைத்த பொங்கிய அவிழாகிய வரகுச் சோற்றை நல்ல பாலுடன் கூட்டி அளிக்கும், நிரை பல குழீஇய – ஆனிரைகள் பல கூடியிருக்கும் (குழீஇய – அளபெடை), நெடுமொழிப் புல்லி தேன் தூங்கு உயர்வரை நல் நாட்டு உம்பர் வேங்கடம் இறந்தனர் ஆயினும் – மிகுந்த புகழையுடைய புல்லி என்பவனின் தேனிறால் தொங்கும் உயர்ந்த மலைகளையுடைய நல்ல நாட்டிற்கு அப்பால் உள்ள வேங்கட மலையைக் கடந்து சென்றார் ஆயினும், ஆண்டு அவர் நீடலர் – அங்கு அவர் காலம் தாழ்த்தியிருப்பவர் அல்லர், வாழி – நீ நீடு வாழ்வாயாக, தோழி – தோழி, தோடு கொள் உருகெழு மஞ்ஞை ஒலி சீர் ஏய்ப்பத் தகரம் மண்ணிய தண் நறு முச்சி – தொகுதி கொண்ட அழகிய மயிலின் தழைத்த தோகையை ஒப்ப மயிர்ச்சாந்து பூசப்பட்ட குளிர்ந்த நறுமணம் பொருந்திய கூந்தலில் (ஏய்ப்ப – உவம உருபு, a comparison word), புகர் இல் குவளைப் போதொடு – குற்றமில்லாத குவளை பூக்களுடன், தெரி இதழ் வேனில் அதிரல் வேய்ந்த நின் ஏமுறு புணர்ச்சி இன்துயில் மறந்தே – விளங்கும் இதழ்களையுடைய வேனில் காலத்தின் காட்டு மல்லிகை மலர்களைச் சூடிய நின் இன்பம் பொருந்திய கூட்டமாகிய இனிய துயிலை மறந்து (மறந்தே – ஏகாரம் அசைநிலை, an expletive)

அகநானூறு 394, நன்பலூர் சிறுமேதாவியார், முல்லைத் திணைதோழி தலைவனிடம் சொன்னது
களவும் புளித்தன, விளவும் பழுநின,
சிறுதலைத் துருவின் பழுப்புறு விளை தயிர்
இதைப் புன வரகின் அவைப்பு மாண் அரிசியொடு,
கார் வாய்த்து ஒழிந்த ஈர்வாய்ப் புற்றத்து
ஈயல் பெய்து அட்ட இன் புளி வெஞ்சோறு  5
சேதான் வெண்ணெய் வெம் புறத்து உருக,
இளையர் அருந்தப் பின்றை நீயும்
இடு முள் வேலி முடக்கால் பந்தர்ப்
புதுக்கலத்து அன்ன செவ்வாய்ச் சிற்றில்,
புனை இருங்கதுப்பின் நின் மனையோள் அயரப்,  10
பாலுடை அடிசில் தொடீஇய ஒரு நாள்,
மா வண் தோன்றல்! வந்தனை சென்மோ,
காடு உறை இடையன் யாடு தலைப்பெயர்க்கும்
மடி விடு வீளை வெரீஇக் குறுமுயல்
மன்ற இரும் புதல் ஒளிக்கும்  15
புன்புல வைப்பின் எம் சிறு நல் ஊரே.

பாடல் பின்னணி:  தலைவியை இடத்து உய்த்து வந்த தோழி, தலைவனை வரைவு கடாயது.  

பொருளுரை:  பெரும் வள்ளன்மையுடைய தலைவனே!  காட்டில் வாழும் இடையன் தன் தன் ஆடுகளை வேறு இடத்திற்கு அழைத்துச் செல்லும்பொருட்டு, வாயை மடித்து எழுப்பும் சீழ்க்கை ஒலிக்கு அஞ்சி, குறுமுயலானது மன்றத்தில் உள்ள பெரிய புதரில் மறைந்து கொள்ளும், முல்லை நிலத்து ஊராகிய எம் சிறிய நல்ல ஊரின்கண்,

களாக்காய்கள் பழுத்துப் புளிப்பை அடைந்தன.  விளாவும் முதிர்ந்து பழுத்தன.  சிறிய தலையினை உடைய செம்மறி ஆட்டின் பழுப்பு நிறமடைந்த விளைந்த தயிரில், புதுக் கொல்லையில் விளைந்த வரகின் குத்துதலால் மாட்சிமையுற்ற அரிசியைப் பெய்து, கார்கால மழையினால் ஈரமாகிய வாயையுடைய புற்றிலிருந்து வெளிப்பட்ட ஈயலை இட்டுச் சமைத்த, இனிய புளிப்புடைய விருப்பம் தரும் சோற்றை, சிவந்த பசுவின் வெண்ணையை வெப்பம் உடைய பகுதியில் உருகும்படி விட்டு, உன் இளைய ஏவலர் முதலில் உண்ண, பின் நீயும், முள்ளை இட்டுக் கட்டிய வேலியின் அகத்தில் வளைந்த கால்கள் கொண்ட பந்தலையுடைய புது மண்பானை போன்ற செம்மண் பூசிய சிறிய இல்லில், புனைந்த கரிய கூந்தலையுடைய நின் மனைவி விருந்து பறிமாற, பால் ஊற்றி சமைத்த உணவினை உண்ணுவதற்கு ஒரு நாள் வந்து செல்வாயாக.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு ‘களனும் பொழுதும் வரை நிலை விலக்கி காதல் மிகுதி உளப்படப் பிறவும் நாடும் ஊரும் இல்லும் குடியும் பிறப்பும் சிறப்பும் இறப்ப நோக்கி அவன்வயின் தோன்றிய கிளவியொடு தொகைஇ அனை நிலை வகையான் வரைதல் வேண்டினும்’ (தொல்காப்பியம், களவியல் 23) என வரும் விதி கொள்க.  ஒப்புமை –பெரும்பாணாற்றுப்படை 275 – அவையா அரிசி, அகநானூறு 394 – அவைப்பு மாண் அரிசியொடு, சிறுபாணாற்றுப்படை 193 – உலக்கை இரும்பு முகம் தேய்த்த அவைப்பு மாண் அரிசி.  சிறுபாணாற்றுப்படை 175 – இன் புளி வெஞ்சோறு.  சிறுதலைத் துருவின் பழுப்புறு விளை தயிர் (2) – சிறிய தலையினையுடைய செம்மறியாட்டின் பழுப்பு நிறம் வாய்ந்த முதிர்ந்த தயிர் – அகநானூறு 394, நன்பலூர் சிறுமேதாவியார்.  நின் மனையோள் அயர (10) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – நின் மனையோள் அயர என்றது இப்பொழுது நின் காதலியாய் இருப்பவளை மணச்சடங்கினால் மனைவியாக்கிக் கொண்ட பின்னர் அவள் விருந்து அயர என்றபடியாம்.  தலைவியை மனைவியாக்கிக் கொண்ட பின் ஒரு நாள் நின் இளையருடன் வருவாயாக என வரைவு கடாயபடியாம்.  மோ – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம், இடையியல் 26).

சொற்பொருள்:  களவும் புளித்தன – களாக்காய்கள் பழுத்துப் புளிப்பை அடைந்தன, விளவும் பழுநின – விளாவும் முதிர்ந்து பழுத்தன, சிறுதலைத் துருவின் பழுப்புறு விளை தயிர் இதைப் புன வரகின் அவைப்பு மாண் அரிசியொடு – சிறிய தலையினை உடைய செம்மறி ஆட்டின் பழுப்பு நிறமடைந்த விளைந்த தயிரில் புதுக் கொல்லையில் விளைந்த வரகின் குத்துதலால் மாட்சிமையுற்ற அரிசியைப் பெய்து, கார் வாய்த்து ஒழிந்த ஈர்வாய்ப் புற்றத்து ஈயல் பெய்து அட்ட – கார்கால மழையினால் ஈரமாகிய வாயையுடைய புற்றிலிருந்து வெளிப்பட்ட ஈயலை இட்டுச் சமைத்த, இன் புளி வெஞ்சோறு – இனிய புளிப்புடைய விருப்பம் தரும் சோற்றை, சேதான் வெண்ணெய் வெம் புறத்து உருக – சிவந்த பசுவின் வெண்ணையை வெப்பம் உடைய பகுதியில் உருகும்படி விட்டு, இளையர் அருந்தப் பின்றை நீயும் – உன் இளைய ஏவலர் முதலில் உண்ண பின் நீயும், இடு முள் வேலி முடக்கால் பந்தர்ப் புதுக்கலத்து அன்ன செவ்வாய்ச் சிற்றில் புனை இருங்கதுப்பின் நின் மனையோள் அயர – முள்ளை இட்டுக் கட்டிய வேலியின் அகத்தில் வளைந்த கால்கள் கொண்ட பந்தலையுடைய புது மண்பானை போன்ற செம்மண் பூசிய சிறிய இல்லில் புனைந்த கரிய கூந்தலையுடைய நின் மனைவி விருந்து பறிமாற (பந்தர் – பந்தல் என்பதன் போலி, கலத்து – கலம், அத்துச் சாரியை, செவ்வாய் – பண்புத்தொகை),  பாலுடை அடிசில் தொடீஇய ஒரு நாள் – பால் ஊற்றி சமைத்த உணவினை உண்ணுவதற்கு ஒரு நாள் (தொடீஇய – அளபெடை), மா வண் தோன்றல் – பெரும் வள்ளன்மையுடைய தலைவனே (தோன்றல் – விளி), வந்தனை சென்மோ – வந்து செல்வாயாக (மோ – முன்னிலையசை), காடு உறை இடையன் யாடு தலைப்பெயர்க்கும் மடி விடு வீளை வெரீஇக் குறுமுயல் மன்ற இரும் புதல் ஒளிக்கும் புன்புல வைப்பின் எம் சிறு நல் ஊரே – காட்டில் வாழும் இடையன் தன் தன் ஆடுகளை வேறு இடத்திற்கு அழைத்துச் செல்லும்பொருட்டு வாயை மடித்து எழுப்பும் சீழ்க்கை ஒலிக்கு அஞ்சி குறுமுயலானது மன்றத்தில் உள்ள பெரிய புதரில் மறைந்து கொள்ளும் முல்லை நிலத்து ஊராகிய எம் சிறிய நல்ல ஊரின்கண் (குறுமுயல் – பண்புத்தொகை, வெரீஇ – அளபெடை, வெருவி என்ற வினையெச்சம் திரிந்து அளபெடுத்தது, ஊரே – ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 395, எயினந்தை மகனார் இளங்கீரனார், பாலைத் திணைதலைவி தோழியிடம் சொன்னது
தண் கயம் பயந்த வண் கால் குவளை
மாரி மா மலர் பெயற்கு ஏற்றன்ன,
நீரொடு நிறைந்த பேர் அமர் மழைக்கண்
பனி வார் எவ்வம் தீர இனிவரின்,
நன்று மன், வாழி தோழி! தெறு கதிர்  5
ஈரம் நைத்த நீர் அறு நனந்தலை
அழல் மேய்ந்து உண்ட நிழன் மாய் இயவின்
வறன் மரத்து அன்ன கவை மருப்பு எழில் கலை,
அறல் அவிர்ந்தன்ன தேர் நசைஇ ஓடிப்,
புலம்பு வழிப்பட்ட உலமரல் உள்ளமொடு  10
மேய் பிணைப் பயிரும் மெலிந்தழி படர் குரல்
அருஞ்சுரம் செல்லுநர் ஆள் செத்து ஓர்க்கும்,
திருந்து அரை ஞெமைய பெரும் புனக் குன்றத்து
ஆடு கழை இரு வெதிர் நரலும்
கோடு காய் கடற்ற காடு இறந்தோரே.  15

பாடல் பின்னணி:  பிரிவின்கண் வேறுபட்ட தலைவி, வற்புறுத்தும் தோழிக்குச் சொல்லியது. 

பொருளுரை:  தோழி!  நீ நீடு வாழ்வாயாக!   சுடுகின்ற ஞாயிற்றின் கதிர்கள் ஈரத்தைத் தொலைத்ததால் நீர் இல்லாது போன அகன்ற இடத்தில் உள்ள, தீ கவர்ந்து எரித்தமையால் மரங்களின் நிழல் ஒழிந்த வழியில், வறண்ட மரக்கிளையை ஒத்த கவர்ந்த கொம்பினையுடைய அழகிய ஆண்மான் பேய்த் தேரை (கானல் நீரை) நீர் என்று விரும்பி ஓடித் தனிமையால் துன்புற்றதால், கலங்கிய உள்ளத்துடன் தன்னுடன் மேயும் தன் பெண் மானை அழைக்கும் துன்பத்தைத் தரும் குரலை, கடத்தற்கரிய பாலை நிலத்தில் செல்லுபவர்கள் ஆளின் குரல் என்று நினைத்துக் கேட்டு ஆராயும், செவ்விய அடி பொருந்திய ஞெமை மரங்களையுடைய பெரிய கொல்லைகளையுடைய குன்றில், அசையும் தண்டினையுடைய பெரிய மூங்கில்கள் ஒன்றோடொன்று உரசி ஒலிக்கும் உச்சி காய்ந்த மலையில் பொருந்திய காட்டைக் கடந்து சென்ற நம் தலைவர்,

குளிர்ந்த குளம் தோற்றுவித்த வளமான தண்டையுடைய குவளையின் கார்காலத்தில் மலர்ந்த பெரிய (கரிய) மலரானது மழையை எதிரேற்றாற் போல், கண்ணீர் நிறைந்த பெரிய அமர்த்த குளிர்ந்த கண்களிலிருந்து கண்ணீர் வடியும் துன்பம் தீர இப்பொழுது வருவாராயின் நன்றாக இருக்கும்.  

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு ‘எஞ்சியோர்க்கும் எஞ்சுதல் இலவே’ (தொல்காப்பியம், அகத்திணையியல் 42) என வரும் விதி கொள்க.  கடற்ற காடு (15) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – மலங்காடு.  மலங்காடு – மலையங்காடு, மலையைச் சார்ந்த காடு.  நனந்தலை – அகன்ற இடம், நனம் – நனவே களனும் அகலமும் செய்யும் (தொல்காப்பியம், உரியியல் 80).  புலம்பு – புலம்பே தனிமை (தொல்காப்பியம், உரியியல் 35).

சொற்பொருள்:  தண் கயம் பயந்த வண் கால் குவளை மாரி மா மலர் பெயற்கு ஏற்றன்ன – குளிர்ந்த குளம் தோற்றுவித்த வளமான தண்டையுடைய குவளையின் கார்காலத்தில் மலர்ந்த பெரிய (கரிய) மலரானது மழையை எதிரேற்றாற் போல், நீரொடு நிறைந்த பேர் அமர் மழைக்கண் பனி வார் எவ்வம் தீர இனிவரின் நன்று – கண்ணீருடன் நிறைந்த பெரிய அமர்த்த குளிர்ந்த கண்களிலிருந்து கண்ணீர் வடியும் துன்பம் தீர இப்பொழுது வருவாராயின் நன்றாக இருக்கும், மன் – அசைநிலை, வாழி – நீ நீடு வாழ்வாயாக, தோழி – தோழி, தெறு கதிர் ஈரம் நைத்த நீர் அறு நனந்தலை – சுடுகின்ற ஞாயிற்றின் கதிர்கள் ஈரத்தைத் தொலைத்ததால் நீர் இல்லாது போன அகன்ற இடத்தில் உள்ள, அழல் மேய்ந்து உண்ட நிழன் மாய் இயவின் – தீ கவர்ந்து எரித்தமையால் மரங்களின் நிழல் ஒழிந்த வழியில் (நிழன் – நிழல் என்பதன் போலி), வறன் மரத்து அன்ன கவை மருப்பு எழில் கலை அறல் அவிர்ந்தன்ன தேர் நசைஇ ஓடிப் புலம்பு வழிப்பட்ட – வறண்ட மரக்கிளையை ஒத்த கவர்ந்த (பிரிவுகளையுடைய) கொம்பினையுடைய அழகிய ஆண்மான் பேய்த் தேரை (கானல் நீரை) நீர் என்று விரும்பி ஓடித் தனிமையால் துன்புற்றதால் (மரத்து – மரம், அத்துச் சாரியை, மரம் ஆகுபெயர் மரக்கிளைக்கு, நசைஇ – அளபெடை), உலமரல் உள்ளமொடு மேய் பிணைப் பயிரும் மெலிந்தழி படர் குரல் – கலங்கிய உள்ளத்துடன் தன்னுடன் மேயும் தன் பெண் மானை அழைக்கும் துன்பத்தைத் தரும் குரலை, அருஞ்சுரம் செல்லுநர் ஆள் செத்து ஓர்க்கும் திருந்து அரை ஞெமைய பெரும் புனக் குன்றத்து – கடத்தற்கரிய பாலை நிலத்தில் செல்லுபவர்கள் ஆளின் குரல் என்று நினைத்துக் கேட்டு ஆராயும் செவ்விய அடி பொருந்திய ஞெமை மரங்களையுடைய பெரிய கொல்லைகளையுடைய குன்றில், ஆடு கழை இரு வெதிர் நரலும் கோடு காய் கடற்ற காடு இறந்தோரே – அசையும் தண்டினையுடைய பெரிய மூங்கில்கள் ஒலிக்கும் உச்சி காய்ந்த மலையில் பொருந்திய காட்டைக் கடந்து சென்ற நம் தலைவர் (இறந்தோரே – ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 396, பரணர், மருதத் திணை பரத்தை தலைவனிடம் சொன்னது
தொடுத்தேன் மகிழ்ந! செல்லல்! கொடித்தேர்ப்
பொலம் பூண் நன்னன் புனனாடு கடிந்தென,
யாழிசை மறுகின் பாழி ஆங்கண்
அஞ்சல் என்ற ஆஅய் எயினன்
இகல் அடு கற்பின் மிஞிலியொடு தாக்கித்,  5
தன் உயிர் கொடுத்தனன் சொல்லியது அமையாது,
தெறல் அரும் கடவுள் முன்னர்த் தேற்றி
மெல் இறை முன் கை பற்றிய சொல் இறந்து,
ஆர்வ நெஞ்சம் தலைத்தலை சிறப்ப நின்
மார்பு தருகல்லாய் பிறன் ஆயினையே  10
இனியான் விடுக்குவென் அல்லென், மந்தி
பனி வார் கண்ணள் பல புலந்து உறையக்
கருந்திறல் அத்தி ஆடு அணி நசைஇ,
நெடுநீர்க் காவிரி கொண்டு ஒழித்தாங்கு, நின்
மனையோள் வவ்வலும் அஞ்சுவல், சினைஇ  15
ஆரியர் அலறத் தாக்கிப் பேர் இசைத்
தொன்று முதிர் வட வரை வணங்கு வில் பொறித்து
வெஞ்சின வேந்தரைப் பிணித்தோன்
வஞ்சியன்ன என் நலம் தந்து சென்மே.

பாடல் பின்னணி:  தலைவனுடன் ஊடிய பரத்தை உரைத்தது. 

பொருளுரை:  தலைவா!  நின்னை யான் பற்றிக் கொண்டேன்.  செல்லாதே!

கொடி பொருந்திய தேரினையும் பொன்னால் ஆன அணிகலன்களையும் உடைய நன்னன் என்பவன், புன்னாடு என்னும் நாட்டில் உள்ளவர்களை வெகுண்டானாக, யாழின் இசை பொருந்திய தெருக்களையுடைய பாழி என்னும் ஊரில், “அஞ்சாதீர்” என அவர்களிடம் கூறிய ஆஅய் எயினன் என்பவன், சொன்ன சொற்கள் பிழையாதுப், பகைவரைக் கொல்லும் போர்க் கல்வியுடையவனும் நன்னனின் படைத்தலைவனுமான மிஞிலி என்பவனுடன் போரிட்டுத் தன் உயிரையும் தந்தான்.   

ஆனால் நீயோ, வெல்வதற்கு அரிய கடவுள் முன் தெளிவித்து, என் மெல்லிய இறை பொருந்திய முன்கையைப் பற்றிச் சொன்ன சொற்களைக் கடந்து, அன்பு மிகுந்த உள்ளம் மேலும் மேலும் சிறக்க, நின் மார்பைத் தராது ஏதிலன் ஆனாய்.  இப்பொழுது யான் நின்னைப் போக விடமாட்டேன்.  ஆதிமந்தி நீர் வடியும் கண்களுடன் பலவற்றை வெறுத்து இருக்க, அவள் கணவனாகிய மிக்க ஆற்றலுடைய அத்தியின் ஆடும் அழகினை விரும்பி, மிக்க நீர்ப்பெருக்கினை உடைய காவிரி ஆறு அவனைக் கொண்டு மறைந்தாற்போல், நின் மனைவி நின்னைக் கவர்ந்துக் கொள்வாள் என அஞ்சுகிறேன்.  சினம் கொண்டு எழுந்து ஆரியர்கள் அலறும்படி அவர்களைத் தாக்கிப் பெரும் புகழையுடைய மிகவும் பழையதான வடமலையாகிய இமயத்தில் தன் வளைந்த வில்லின் சின்னத்தைப் பொறித்துக் கொடிய சினம் பொருந்திய பகை வேந்தரைப் பிணித்துச் சிறைப்படுத்தியவனான சேரனின், வஞ்சி நகரைப் போன்ற என் அழகினை என்னிடத்தில் தந்துவிட்டுச் செல்வாயாக!

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு ‘புல்லுதல் மயக்கும்’ (தொல்காப்பியம், கற்பியல் 10) என வரும் நூற்பாவின்கண் ‘என்று இவற்றொடு பிறவும்’ என்பதனால் அமைத்துக் கொள்க.  ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – ‘புல்லுதல் மயக்கும் புலவிக் கண்ணும்’ (தொல்காப்பியம், கற்பியல் 10) என்னுஞ் சூத்திரத்து, இச் செய்யுளைக் காட்டி, இது காணக்கிழத்தி என் நலம் தா என்றது என்றனர் நச்சினார்க்கினியர்.  புனனாடு (2) – ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – குட கடற் பக்கத்தொரு நாடு, புள்ளுநாடு என்பதும் பாடமாகக் காணப்படுதலின் புண்ணாடென்பது புன்னாடெனச் சிதைந்தது எனலுமாம்.  ஆதிமந்தி – அகநானூறு 45 – காதலர் கெடுத்த சிறுமையொடு நோய் கூர்ந்து ஆதிமந்தி போலப் பேதுற்று அலந்தனென் உழல்வென் கொல்லோ, அகநானூறு 76 – கச்சினன், கழலினன், தேம் தார் மார்பினன் வகை அமைப் பொலிந்த வனப்பு அமை தெரியல் சுரியல் அம் பொருநனைக் காண்டிரோ என ஆதிமந்தி பேதுற்று இனைய, அகநானூறு 135 – ஆதிமந்தியின் அறிவு பிறிதாகிப் பேதுற்றிசினே காதலம் தோழி, அகநானூறு 222 – ஆட்டன் அத்தி நலன் நயந்து உரைஇத் தாழ் இருங்கதுப்பின் காவிரி வவ்வலின் மரதிரம் துழைஇ மதி மருண்டு அலந்த ஆதிமந்தி, அகநானூறு 236 – கடல் கொண்டன்று எனப் புனல் ஒளித்தன்று எனக் கலுழ்ந்த கண்ணள் காதலற் கெடுத்த ஆதிமந்தி போல, 396 – மந்தி பனி வார் கண்ணள் பல புலந்து உறைய.  குறுந்தொகை 31, ஆதிமந்தியார் பாடல் – யாண்டும் காணேன் மாண்டக்கோனை யானும் ஓர் ஆடுகள மகளே, என் கைக் கோடு ஈர் இலங்கு வளை நெகிழ்த்த பீடு கெழு குரிசலும் ஓர் ஆடுகள மகனே.  வரலாறு –நன்னன், புனனாடு, பாழி, ஆஅய் எயினன், மிஞிலி, காவிரி, ஆதிமந்தி, ஆட்டனத்தி, வஞ்சி (இன்றைய கரூர்), சேரன், ஆரியர். ஆரியர்களைத் தோற்கடித்தல் – அகநானூறு 336 – சோழர் வில் ஈண்டு குறும்பின் வல்லத்துப் புற மிளை ஆரியர் படையின் உடைக, அகநானூறு 396 – ஆரியர் அலறத் தாக்கிப் பேர் இசைத் தொன்று முதிர் வட வரை வணங்கு வில் பொறித்து வெஞ்சின வேந்தரை, நற்றிணை 170 – ஆரியர் துவன்றிய பேர் இசை முள்ளூர் பலர் உடன் கழித்த ஒள் வாள் மலையனது.  பொலம் – பொன் என் கிளவி ஈறு கெட முறையின் முன்னர்த் தோன்றும் லகார மகாரம் செய்யுள் மருங்கின் தொடர் இயலான (தொல்காப்பியம், புள்ளிமயங்கியல் 61).  ஆரியர் – அகநானூறு 276–9, 336–22, 396–16, 398–18, நற்றிணை 170–6, குறுந்தொகை 7–3, பதிற்றுப்பத்து 11–23.  எம் நலத்தைத் தா என்றல் –  குறுந்தொகை 236தந்தனை சென்மோ, தண் கடல் சேர்ப்ப, நீ உண்ட என் நலனே. குறுந்தொகை 238தொண்டி அன்ன என் நலம் தந்து, கொண்டனை சென்மோ மகிழ்ந நின் சூளே, குறுந்தொகை 349 –தண்ணந்துறைவன் தொடுத்து, நம் நலம் கொள்வாம் என்றி தோழி, நற்றிணை 395 –எம் வேட்டனை அல்லையால், நலம் தந்து சென்மே, அகநானூறு 376 –மரந்தை அன்ன என் நலம் தந்து சென்மே, அகநானூறு 396 –வஞ்சியன்ன என் நலம் தந்து சென்மே, ஐங்குறுநூறு 159 – தந்தனை சென்மோ கொண்ட இவள் நலனே.  கடவுள் முன் சூளுரைத்தல் – அகநானூறு 110 – கொடுஞ்சுழிப் புகாஅர்த் தெய்வம் நோக்கிக் கடுஞ்சூள் தருகுவன் நினக்கே, அகநானூறு 266 – திரு மணி விளக்கின் அலைவாய்ச் செருமிகு சேஎயொடு உற்ற சூளே, அகநானூறு 396 – தெறல் அரும் கடவுள் முன்னர்த் தேற்றி மெல் இறை முன் கை பற்றிய சொல் இறந்து, நற்றிணை 386 – அணங்குடை அரும் சூள் தருகுவென் என, குறுந்தொகை 53 – நேர் இறை முன்கை பற்றிச் சூரர மகளிரோடு உற்ற சூளே, கலித்தொகை 108 – மலையொடு மார்பு அமைந்த செல்வன் அடியைத் தலையினால் தொட்டு உற்றேன் சூள், கலித்தொகை 124 – பிரிவு இல்லாய் போல நீ தெய்வத்தின் தெளித்தக்கால் அரிது என்னாள்.

சொற்பொருள்:  தொடுத்தேன் – நின்னை யான் பற்றிக் கொண்டேன், மகிழ்ந – தலைவா, செல்லல் – செல்லாதே, கொடித்தேர்ப் பொலம் பூண் நன்னன் புனனாடு கடிந்தென – கொடி பொருந்திய தேரினையும் பொன்னால் ஆன அணிகலன்களையும் உடைய நன்னன் என்பவன் புன்னாடு என்னும் நாட்டில் உள்ளவர்களை வெகுண்டானாக, யாழ் இசை மறுகின் பாழி ஆங்கண் – யாழின் இசை பொருந்திய தெருக்களையுடைய பாழி என்னும் ஊரில், அஞ்சல் என்ற ஆஅய் எயினன் – அஞ்சாதீர் என அவர்களிடம் கூறிய ஆஅய் எயினன் என்பவன் (ஆஅய் – அளபெடை), இகல் அடு கற்பின் மிஞிலியொடு தாக்கித் தன் உயிர் கொடுத்தனன் – பகைவரைக் கொல்லும் போர்க் கல்வியுடையவனும் நன்னனின் படைத்தலைவனுமான மிஞிலி என்பவனுடன் போரிட்டுத் தன் உயிரையும் தந்தான், சொல்லியது அமையாது – சொன்ன சொற்கள் பிழையாது, தெறல் அரும் கடவுள் முன்னர்த் தேற்றி மெல் இறை முன் கை பற்றிய சொல் இறந்து – வெல்வதற்கு அரிய கடவுள் முன் தெளிவித்து என் மெல்லிய இறை பொருந்திய முன்கையைப் பற்றிச் சொன்ன சொற்களைக் கடந்து, ஆர்வ நெஞ்சம் தலைத்தலை சிறப்ப – அன்பு மிகுந்த உள்ளம் மேலும் மேலும் சிறக்க, நின் மார்பு தருகல்லாய் பிறன் ஆயினையே – நின் மார்பைத் தராது ஏதிலன் ஆனாய் (ஆயினையே – ஏகாரம் அசைநிலை), இனி யான் விடுக்குவென் அல்லென் – இப்பொழுது யான் நின்னை நின்னைப் போக விடமாட்டேன், மந்தி பனி வார் கண்ணள் பல புலந்து உறைய – ஆதிமந்தி நீர் வடியும் கண்களுடன் பலவற்றை வெறுத்து இருக்க, கருந்திறல் அத்தி ஆடு அணி நசைஇ நெடுநீர்க் காவிரி கொண்டு ஒழித்தாங்கு – மிக்க ஆற்றலுடைய அத்தியின் ஆடும் அழகினை விரும்பி மிக்க நீர்ப்பெருக்கினை உடைய காவிரி ஆறு அவனைக் கொண்டு மறைந்தாற்போல் (நசைஇ – அளபெடை), நின் மனையோள் வவ்வலும் அஞ்சுவல் – நின் மனைவி நின்னைக் கவர்ந்துக் கொள்வாள் என அஞ்சுகிறேன் (அஞ்சுவல் – தன்மையொருமை வினைமுற்று), சினைஇ ஆரியர் அலறத் தாக்கிப் பேர் இசைத் தொன்று முதிர் வட வரை வணங்கு வில் பொறித்து வெஞ்சின வேந்தரைப் பிணித்தோன் – சினம் கொண்டு எழுந்து ஆரியர்கள் அலறும்படி அவர்களைத் தாக்கிப் பெரும் புகழையுடைய மிகவும் பழையதான வடமலையாகிய இமயத்தில் தன் வளைந்த வில்லின் சின்னத்தைப் பொறித்துக் கொடிய சினம் பொருந்திய பகை வேந்தரைப் பிணித்துச் சிறைப்படுத்தியவனான சேரனின் (சினைஇ – அளபெடை), வஞ்சி அன்ன என் நலம் தந்து சென்மே – வஞ்சி நகரைப் போன்ற என் அழகினை என்னிடத்தில் தந்துவிட்டுச் செல்வாயாக (சென்மே – முன்னிலை ஏவல் வினைமுற்று)

அகநானூறு 397, கயமனார், பாலைத் திணை – மகட்போக்கிய செவிலித்தாய் சொன்னது
என் மகள் பெரு மடம் யான் பாராட்டத்,
தாய் தன் செம்மல் கண்டு கடன் இறுப்ப,
முழவு முகம் புலரா விழவு உடை வியன் நகர்
மணன் இடையாகக் கொள்ளான், கல் பகக்
கண மழை துறந்த கான் மயங்கு அழுவம்  5
எளியவாக ஏந்து கொடி பரந்த
பொறி வரி அல்குல் மாஅயோட்கு எனத்
தணிந்த பருவம் செல்லான், படர்தரத்
துணிந்தோன் மன்ற, துனை வெங்காளை,
கடும் பகட்டு ஒருத்தல் நடுங்கக் குத்திப்  10
போழ் புண்படுத்த பொரி அரை ஓமைப்
பெரும் பொளிச் சேயரை நோக்கி, ஊன் செத்துச்
கருங்கால் யாத்துப் பருந்து வந்து இறுக்கும்
சேண் உயர்ந்து ஓங்கிய வானுயர் நெடுங்கோட்டுக்
கோடை வெவ் வளிக்கு உலமரும்  15
புல் இலை வெதிர நெல் விளை காடே.

பாடல் பின்னணி:  தலைவி உடன்போக்கில் சென்ற பின் செவிலித்தாய் வருந்திச் சொன்னது.  

பொருளுரை:  விரைதலை உடைய வெவ்விய காளை போன்றவன்,

என் மகளின் பெரும் நாணத்தை யான் பாராட்டவும், அவளை ஈன்ற தாய் தன் தலைமையை உணர்ந்து கடமைகளைச் செய்யவும், முழவு முகம் புலரா விழவு உடை முழவின் ஒலி அடங்காத விழாவுடைய எம் அகன்ற இல்லத்தில் மணம் புரியக் கருதாதவனாக,  

பாறைகள் பிளக்குமாறு, கூட்டமாக உள்ள முகில்கள் மழை பெய்யாது துறந்த காடுகள் பொருந்திய பாலை நிலத்தில், புள்ளிகளும் வரிகளும் பொருந்திய அல்குலையுடைய மாந்தளிரின் நிறத்தை உடையவளுக்கு, ஏந்து கொடி உயர்ந்த கொடிகள் பரவிய இடம் கடந்து செல்வதற்கு எளியவாகும் என்று, வெப்பம் தணிந்த பருவத்தில் செல்லாதவனாக,

கடிய செருக்கான களிற்று யானை நடுங்கும்படி குத்தி பிளந்து புண்ணாக்கியதால் பொரிகள் பொருந்திய அடியையுடைய ஓமை மரத்தின் பெரிய பட்டை உரிந்த சிவந்த அடியை நோக்கி ஊன் என்று நினைத்துக் கரிய அடியையுடைய யா மரத்தின்கண் இருந்த பருந்துகள் வந்து தங்கும், வானளவு உயர்ந்த நெடிய மலையுச்சியில் உள்ள, கோடையின் வெப்பமான காற்றிற்கு அசையும் புல்லிய இலைகளையுடைய மூங்கிலின் விதை விளையும் காட்டின்கண், அவளை உடன் கொண்டு செல்வதற்குத் தேற்றமாகத் துணிந்தவன்.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு ‘எஞ்சியோர்க்கும் எஞ்சுதல் இலவே’ (தொல்காப்பியம், அகத்திணையியல் 42) என வரும் விதி கொள்க.  ஒப்புமை – புறநானூறு 271 – தெரியல் ஊன் செத்துப் பருந்து கொண்டு உகப்ப யாம் கண்டனம்.  முழவு முகம் புலரா – அகநானூறு பாடல்கள் 206, 222, 397 – ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – முழவின் ஒலி ஓயாத, பொ. வே. சோமசுந்தரனார் உரை – முழவின் முழக்கம் ஒழியாத.  முழவு முகம் புலர்ந்து – நற்றிணை 360 – ஒளவை துரைசாமி உரை – முழவின் மார்ச்சனை புலர்ந்து, பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – மத்தள முகத்து வைத்த மார்ச்சனை வறந்து.  நகர் – இல்லம், ஊர் என்ற இரண்டு பொருளிலும் வரும் சொல்.  விழவு உடை வியன் நகர் (3) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – விழாவுடைய அகன்ற மனையில், ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – திருவிழாக்களை உடைய அகன்ற எமது நகரத்தில்.  ஊரும் விழாவும் – அகநானூறு 4 – கறங்கு இசை விழவின் உறந்தை, 17 – விழவுத் தலைக்கொண்ட பழ விறல் மூதூர், 115 – அழியா விழவின் அஞ்சுவரு மூதூர், 116 – பொய்யா விழவின் கூடல், 122 – அழுங்கல் மூதூர் விழவு இன்றாயினும் துஞ்சாது ஆகும், 149 – ஒடியா விழவின் நெடியோன் குன்றத்து, 352 – கோடியர் விழவு கொள் மூதூர், நற்றிணை 90 – ஆடு இயல் விழவின் அழுங்கல் மூதூர், 138 – விழவு ஆடு மகளிர் முழங்கு திரை இன் சீர் தூங்கும் அழுங்கல் மூதூர், 348 – ஊரே ஒலிவரும் சும்மையொடு மலிபு தொகுபு ஈண்டிக் கலி கெழு மறுகின் விழவு அயரும்மே, குறுந்தொகை 223 – பேரூர் கொண்ட ஆர்கலி விழவில்.  மணமனையில் முழவு ஒலித்தல் – அகநானூறு 66 – இமிழ் கண் முழவின் இன் சீர் அவர் மனைப் பயிர்வன போல வந்து இசைப்பவும் தவிரான் கழங்கு ஆடு ஆயத்து அன்று நம் அருளிய பழம் கண்ணோட்டமும் நலிய அழுங்கினன் அல்லனோ அயர்ந்த தன் மணனே.  துனை – கதழ்வும் துனைவும் விரைவின் பொருள் (தொல்காப்பியம், உரியியல் 19).  மன்ற – மன்றவென் கிளவி தேற்றஞ்செய்யும் (தொல்காப்பியம், இடையியல் 17).  செவிலி – ஆய் பெருஞ்சிறப்பின் அருமறை கிளத்தலின் தாய் எனப்படுவோள் செவிலி ஆகும் (தொல்காப்பியம், களவியல் 34). 

சொற்பொருள்:  என் மகள் பெரு மடம் யான் பாராட்ட – என் மகளின் பெரும் நாணத்தை யான் பாராட்டவும், தாய் தன் செம்மல் கண்டு கடன் இறுப்ப – அவளை ஈன்ற தாய் தன் தலைமையை உணர்ந்து கடமைகளைச் செய்யவும், முழவு முகம் புலரா விழவு உடை வியன் நகர் மணன் இடையாகக் கொள்ளான் – முழவின் ஒலி அடங்காத விழாவுடைய எம் அகன்ற இல்லத்தில் மணம் புரியக் கருத்தாதவனாக, முழவின் ஒலி அடங்காத திருவிழாக்களை உடைய எம் அகன்ற ஊரில் மணம் புரியக் கருத்தாதவனாக, கல் பகக் கண மழை துறந்த கான் மயங்கு அழுவம் – பாறைகள் பிளக்குமாறு கூட்டமாக உள்ள முகில்கள் மழை பெய்யாது துறந்த காடுகள் பொருந்திய பாலை நிலத்தில், எளியவாக – கடந்து செல்வதற்கு எளியவாகும் என்று, ஏந்து கொடி பரந்த – உயர்ந்த கொடிகள் பரவிய, பொறி வரி அல்குல் மாஅயோட்கு என – புள்ளிகளும் வரிகளும் பொருந்திய அல்குலையுடைய மாமை நிறத்தை உடையவளுக்கு, புள்ளிகளும் வரிகளும் பொருந்திய அல்குலையுடைய மாந்தளிரின் நிறத்தை உடையவளுக்கு, தணிந்த பருவம் செல்லான் – வெப்பம் தணிந்த பருவத்தில் செல்லாதவனாக, படர்தரத் துணிந்தோன் மன்ற – அவளை உடன் கொண்டு செல்வதற்குத் தேற்றமாகத் துணிந்தவன், துனை வெங்காளை – விரைதலை உடைய வெவ்விய காளை போன்றவன், கடும் பகட்டு ஒருத்தல் நடுங்கக் குத்திப் போழ் புண்படுத்த பொரி அரை ஓமைப் பெரும் பொளிச் சேயரை நோக்கி ஊன் செத்துச் கருங்கால் யாத்துப் பருந்து வந்து இறுக்கும் – கடிய செருக்கான களிற்று யானை நடுங்கும்படி குத்தி பிளந்து புண்ணாக்கியதால் பொரிகள் பொருந்திய அடியையுடைய ஓமை மரத்தின் பெரிய பட்டை உரிந்த சிவந்த அடியை நோக்கி ஊன் என்று நினைத்துக் கரிய அடியையுடைய யா மரத்தின்கண் இருந்த பருந்துகள் வந்து தங்கும்  (யா மரம் – ஆச்சா மரம், Hardwickia binata tree, யாத்து – அத்துச் சாரியை), சேண் உயர்ந்து ஓங்கிய – மிகவும் உயர்ந்து ஓங்கிய (உயர்ந்து ஓங்கிய – ஒருபொருட் பன்மொழி), வான் உயர் நெடுங்கோட்டு – வானளவு உயர்ந்த நெடிய மலையுச்சியில் உள்ள, கோடை வெவ் வளிக்கு உலமரும் புல் இலை வெதிர நெல் விளை காடே – கோடையின் வெப்பமான காற்றிற்கு அசையும் புல்லிய இலைகளையுடைய மூங்கிலின் விதை விளையும் காட்டின்கண் (காடே – ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 398, இம்மென் கீரனார், குறிஞ்சித் திணைதலைவி ஆற்றிடம் சொன்னது

இழை நிலை நெகிழ்ந்த எவ்வம் கூரப்,
படர் மலி வருத்தமொடு பல புலந்து அசைஇ,
மென்தோள் நெகிழச் சாஅய்க், கொன்றை
ஊழுறு மலரின் பாழ்பட முற்றிய
பசலை மேனி நோக்கி நுதல் பசந்து,  5
இன்னேம் ஆகிய எம்மிவண் அருளான்,
நும்மோன் செய்த கொடுமைக்கு இம்மென்று
அலமரல் மழைக் கண் தெண் பனி மல்க
நன்று புறமாறி அகறல், யாழ நின்
குன்று கெழு நாடற்கு என் எனப்படுமோ?  10
கரை பொரு நீத்தம் உரை எனக் கழறி,
நின்னொடு புலத்தல் அஞ்சி அவர் மலைப்
பன் மலர் போர்த்து நாணு மிக ஒடுங்கி
மறைந்தனை கழியும் நிற்றந்து செலுத்தி,
நயன் அறத் துறத்தல் வல்லியோரே,  15
நொதுமலாளர் அது கண்ணோடாது,
அழற் சினை வேங்கை நிழல் தவிர்ந்து அசைஇ
மாரி புறந்தர நந்தி, ஆரியர்
பொன்படு நெடுவரை புரையும் எந்தை
பல் பூங்கானத்து அல்கி, இன்றிவண்  20
சேந்தனை செலினே சிதைகுவது உண்டோ?
குயவரி இரும் போத்துப் பொருத புண் கூர்ந்து,
உயங்கு பிடி தழீஇய மதன் அழி யானை
வாங்கு அமைக் கழையின் நரலும், அவர்
ஓங்கு மலை நாட்டின் வருஉவோயே.  25

பாடல் பின்னணி:  ஆற்றை நோக்கி, அதனொடு புலந்து கூறியது.  

பொருளுரை:  கரையைப் பொருது வரும் வெள்ளம் பொருந்திய ஆறே!

அரிவாள் போன்ற வரிகள் பொருந்திய பெரிய ஆண்புலி தாக்கியதால் புண் மிகுந்து, வருந்தும் தன் பெண் யானையால் தழுவப்படும் வலிமை குன்றிய களிற்று யானை, வளைந்த மூங்கிலால் செய்த தூம்பு போல் ஒலிக்கும் அவருடைய உயர்ந்த மலைகள் பொருந்திய நாட்டிலிருந்து வருவோய்! 

அணிகலன்கள் நிலையிலிருந்து நெகிழ்வதற்குக் காரணமான துன்பம் மிக, நினைவு மிக்க வருத்தத்துடன், பலவற்றையும் வெறுத்துத் தங்கி, மெல்லிய தோள்கள் மெலிய வருந்தி, கொன்றை மரத்தின் நன்கு மலர்ந்த பூக்களைப் போல் பாழ்பட நிறைந்த பசலை அடைந்த மேனியைப் பார்த்து, நெற்றி பசந்து இவ்வாறு ஆகினேம் ஆகிய எமக்கு இங்கு வந்து அருளாதவனாக நும் தலைவன் செய்த கொடுமைக்கு, இம்மென்ற ஒலியுடன் சுழன்று வந்து, என்னுடைய குளிர்ந்த கண்களில் தெளிந்த கண்ணீர் நிறையவும் அறம் இல்லாது நீ நீங்குதல், நின் மலைகள் பொருந்திய நாட்டையுடைய தலைவனுக்கு யாதெனப்படுமோ? 

என்னுடைய நிலைமையாய் அவரிடம் உரைப்பாயாக எனக் கூறி நின்னுடன் யாம் வெறுத்தலை அஞ்சி, அவர் மலையின் பல மலர்களைத் போர்த்திக்கொண்டு நாணத்தால் மிகவும் ஒடுங்கி மறைந்து நீங்கும் நின்னைத் தந்து போக்கி, அன்பு இல்லாது துறப்பதற்கு வல்லவர் ஏதிலாளர்.  நோக்காது, தீயினை ஒத்த மலர்களை உடைய கிளைகளையுடைய வேங்கை மரத்தின் நிழலில் நின் செலவைத் தவிர்ந்து தங்கி, இங்கே பெய்யும் மழையின் பேணுதலால் பெருகி, ஆரியர்களின் பொன் உடைய உயர்ந்த இமைய மலையை ஒக்கும் எம் தந்தையின் பூக்களுடைய காட்டில் தங்கி, இன்று இவ்விடத்தில் சேர்ந்திருந்து சென்றால் உனக்குக் கெடுதல் எதுவும் உண்டோ?

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு, ‘மறைந்தவற் காண்டல்’ (தொல்காப்பியம், களவியல் 23) என வரும் நூற்பாவின்கண் ‘பிரிந்தவழிக் கலங்கினும்’ என வரும் விதி கொள்க.  வரலாறு –ஆரியர், நெடுவரை (இமயம்).  அலமரல் – தெருமரல் ஆயிரண்டும் சுழற்சி (தொல்காப்பியம், சொல் 310).  கூர – கூர்ப்பும் கழிவும் உள்ளது சிறக்கும் (தொல்காப்பியம், உரியியல் 18).  ஆரியர் – அகநானூறு 276–9, 336–22, 396–16, 398–18, நற்றிணை 170–6, குறுந்தொகை 7–3, பதிற்றுப்பத்து 11–23. 

சொற்பொருள்:  இழை நிலை நெகிழ்ந்த எவ்வம் கூரப் படர் மலி வருத்தமொடு – அணிகலன்கள் நிலையிலிருந்து நெகிழ்வதற்குக் காரணமான துன்பம் மிக நினைவு மிக்க வருத்தத்துடன், பல புலந்து அசைஇ மென்தோள் நெகிழச் சாஅய் – பலவற்றையும் வெறுத்துத் தங்கி மெல்லிய தோள்கள் மெலிய வருந்தி (சாஅய் – அளபெடை), கொன்றை ஊழுறு மலரின் பாழ்பட முற்றிய பசலை மேனி நோக்கி நுதல் பசந்து இன்னேம் ஆகிய – கொன்றை மரத்தின் நன்கு மலர்ந்த பூக்களைப் போல் பாழ்பட நிறைந்த பசலை அடைந்த மேனியைப் பார்த்து நெற்றி பசந்து இவ்வாறு ஆகினேம் ஆகிய (மலரின் – இன் உருபு ஒப்புப் பொருளது, ஐந்தாம் வேற்றுமை உருபு, கொன்றை மரம் – Laburnum, Golden Shower Tree, Cassia fistula), எம் இவண் அருளான் நும்மோன் செய்த கொடுமைக்கு – எமக்கு இங்கு வந்து அருளாதவனாக நும் தலைவன் செய்த கொடுமைக்கு, இம்மென்று அலமரல் – இம்மென்ற ஒலியுடன் சுழன்று, மழைக் கண் தெண் பனி மல்க நன்று புறமாறி அகறல் – என்னுடைய குளிர்ந்த கண்களில் தெளிந்த கண்ணீர் நிறையவும் அறம் இல்லாது நீ நீங்குதல், யாழ – அசைநிலை, நின் குன்று கெழு நாடற்கு என் எனப்படுமோ – நின் மலைகள் பொருந்திய நாட்டையுடைய தலைவனுக்கு யாதெனப்படுமோ, கரை பொரு நீத்தம் – கரையைப் பொருது வரும் வெள்ளம் பொருந்திய ஆறே, உரை எனக் கழறி நின்னொடு புலத்தல் அஞ்சி – உரைப்பாயாக எனக் கூறி நின்னுடன் யாம் வெறுத்தலை அஞ்சி, அவர் மலைப் பன் மலர் போர்த்து நாணு மிக ஒடுங்கி மறைந்தனை கழியும் நின் தந்து செலுத்தி – அவர் மலையின் பல மலர்களைத் போர்த்திக்கொண்டு நாணத்தால் மிகவும் ஒடுங்கி மறைந்து நீங்கும் நின்னைத் தந்து போக்கி, நயன் அறத் துறத்தல் வல்லியோரே – அன்பு இல்லாது துறந்து – அன்பு இல்லாது துறப்பதற்கு வல்லவர், நொதுமலாளர் – ஏதிலாளர், அது கண்ணோடாது – அதனை நோக்காது, அழற் சினை வேங்கை நிழல் தவிர்ந்து அசைஇ மாரி புறந்தர நந்தி – தீயினை ஒத்த மலர்களை உடைய கிளைகளையுடைய வேங்கை மரத்தின் நிழலில் நின் செலவைத் தவிர்ந்து தங்கி பெய்யும் மழையின் பேணுதலால் பெருகி (வேங்கை மரம் – Pterocarpus marsupium),ஆரியர் பொன்படு நெடுவரை புரையும் எந்தை பல் பூங்கானத்து அல்கி – ஆரியர்களின் பொன் உடைய உயர்ந்த இமைய மலையை ஒக்கும் எம் தந்தையின் பூக்களுடைய காட்டில் தங்கி (புரை – உவம உருபு), இன்று இவண் சேந்தனை செலினே சிதைகுவது உண்டோ – இன்று இவ்விடத்தில் சேர்ந்திருந்து சென்றால் கெடுதல் உண்டோ, குயவரி இரும் போத்துப் பொருத புண் கூர்ந்து உயங்கு பிடி தழீஇய மதன் அழி யானை வாங்கு அமைக் கழையின் நரலும் அவர் ஓங்கு மலை நாட்டின் வருஉவோயே – அரிவாள் போன்ற வரிகள் பொருந்திய பெரிய ஆண்புலி தாக்கியதால் புண் மிகுந்து வருந்தும் தன் பெண் யானையால் தழுவப்படும் வலிமை குன்றிய களிற்று யானை வளைந்த மூங்கிலால் செய்த தூம்பு போல் ஒலிக்கும் அவருடைய உயர்ந்த மலைகள் பொருந்திய நாட்டிலிருந்து வருவோய் (பண்புத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை, ஆகுபெயருமாம், தழீஇய – அளபெடை, வருஉவோயே – ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 399, எயினந்தை மகன் இளங்கீரனார், பாலைத் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
சிமைய குரல சாந்து அருந்தி, இருளி,
இமையக் கானம் நாறும் கூந்தல்
நன்னுதல் அரிவை இன்னுறல் ஆகம்
பருகுவன்ன காதல் உள்ளமொடு,
திருகுபு முயங்கல் இன்றியவண் நீடார்,  5
கடற்று அடை மருங்கின் கணிச்சியின் குழித்த
உடைக் கண் நீடு அமை ஊறல் உண்ட
பாடு இன் தெண் மணி பயங்கெழு பெரு நிரை
வாடு புலம் புக்கெனக், கோடு துவைத்து அகற்றி,
ஒல்கு நிலைக் கடுக்கை அல்கு நிழல் அசைஇப்,  10
பல் ஆன் கோவலர் கல்லாது ஊதும்
சிறு வெதிர்ந்தீங்குழல் புலம்பு கொள் தெள் விளி,
மையில் பளிங்கின் அன்ன தோற்றப்
பல் கோள் நெல்லிப் பைங்காய் அருந்தி,
மெல்கிடு மட மரை ஓர்க்கும் அத்தம்  15
காய் கதிர் கடுகிய கவின் அழி பிறங்கல்
வேய் கண் உடைந்த சிமைய
வாய்படு மருங்கின் மலை இறந்தோரே.

பாடல் பின்னணி:  தலைவன் பொருள்வயின் பிரிந்தான்.  பிரிவாற்றாது வருந்திய தலைவியைத் தோழி வற்புறுத்தியது. 

பொருளுரை:  உச்சியில் பூங்கொத்துக்களை உடையதாகவும், மயிர்ச் சாந்து பூசப்பட்டதும், கருமை நிறம் உடையதும் ஆகிய, இமய மலையில் உள்ள கானம் போல் நாறும் கூந்தலையும், நல்ல நெற்றியையும் உடைய தலைவியே!

காட்டின் அருகில் குந்தாலியில் தோண்டிய குழியிடத்தில், நெடிது ஊறிப் பொருந்திய  ஊற்று நீரை உண்ட, இனிய தெளிந்த மணிகளைப் பூண்ட, பயன் மிகுந்த பெரிய ஆனிரை வறண்ட நிலத்தில் புகுந்ததாக, ஊதுகொம்பால் ஓசையை உண்டாக்கி ஆக்களை அங்கிருந்து நீக்கித் தளர்ந்த நிலையில் உள்ள கொன்றை மரத்தின் குறைந்த நிழலில் தங்கி, பல பசுக்களையுடைய கோவலர் இசையை முறையாகக் கற்காது ஊதும், சிறிய மூங்கிலால் செய்த இனிய குழலிலிருந்து எழும் தனிமை கொண்ட தெளிந்த ஓசையை, குற்றமற்ற பளிங்கினைப் போல் தோன்றும் பலவாகக் காய்த்த நெல்லியின் பசிய காய்களைத் தின்றுவிட்டு அசையிடுகின்ற இளைய மரைமான் கூர்ந்து கேட்கும், காயும் ஞாயிற்றின் கதிர்கள் சுடுவதால் அழகு இழந்த மலையின்கண், மூங்கிலின் கணுக்கள் உடைந்த உச்சிகளையும், இடம் அகன்ற பக்க மலையையுமுடைய, மலையினைக் கடந்து சென்ற நம் தலைவர்,

உன்னுடைய இனிமை பொருந்திய மார்பினை பருகுதல் போலும் காதல் உள்ளத்துடன் பின்னித் தழுவுதல் இல்லாது, அங்குக் காலம் தாழ்த்த மாட்டார்.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு, ‘நோய் மிகப் பெருகித் தன் நெஞ்சு கலுழ்ந்தோளை அழிந்தது களை என மொழிந்தது கூறி வன்புறை நெருங்கி வந்ததன் திறத்தொடு என்று இவை எல்லாம் இயல்புற நாடின் ஒன்றித் தோன்றும் தோழி மேன’ (தொல்காப்பியம், அகத்திணையியல் 42) என வரும் விதி கொள்க.  திருகுபு முயங்கல் (5) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – மீண்டு வந்து தழுவிக் கொள்ளுதல், ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – பின்னித் தழுவுதல்.  வாய்படு மருங்கின் மலை (18):  ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – இடமகன்ற பக்க மலையினையுமுடைய மலை, பொ. வே. சோமசுந்தரனார் உரை – குவடுகளின் இடத்தின் பக்கத்தே அமைந்த மலை.  மரை நெல்லி உண்ணுதல்: அகநானூறு 69 – புல் இலைப் பராரை நெல்லியம் புளித் திரள் காய் கான மடமரைக் கண நிரை கவரும்.  அகநானூறு 399 – மையில் பளிங்கின் அன்ன தோற்றப் பல் கோள் நெல்லிப் பைங்காய் அருந்தி, மெல்கிடு மட மரை ஓர்க்கும் அத்தம், குறுந்தொகை 235 – நெல்லி மரை இனம் ஆரும் முன்றில், புறநானூறு 170 – மரை பிரித்து உண்ட நெல்லி வேலி.  புலம்பு – புலம்பே தனிமை (தொல்காப்பியம், உரியியல் 35).

சொற்பொருள்:  சிமைய குரல சாந்து அருந்தி இருளி இமையக் கானம் நாறும் கூந்தல் நன்னுதல் அரிவை – தலையின் உச்சியில் பூங்கொத்துக்களை உடையதாகவும் மயிர்ச் சாந்து பூசப்பட்டதும் கருமை நிறம் உடையதும் ஆகிய இமய மலையில் உள்ள கானம் போல் நாறும் கூந்தலையும் நல்ல நெற்றியையும் உடைய தலைவியே, இன் உறல் ஆகம் பருகுவன்ன காதல் உள்ளமொடு திருகுபு முயங்கல் இன்றி அவண் நீடார் – இனிமை பொருந்திய மார்பினை பருகுதல் போலும் காதல் உள்ளத்துடன் பின்னித் தழுவுதல் இல்லாது அங்குக் காலம் தாழ்த்த மாட்டார், கடற்று அடை மருங்கின் கணிச்சியின் குழித்த உடைக் கண் – காட்டின் அருகில் குந்தாலியில் தோண்டிய குழியிடத்தில், நீடு அமை ஊறல் உண்ட பாடு இன் தெண் மணி – நெடிது ஊறிப் பொருந்திய  ஊற்று நீரை உண்ட இனிய தெளிந்த மணிகளைப் பூண்ட, பயங்கெழு பெரு நிரை வாடு புலம் புக்கென – பயன் மிகுந்த பெரிய ஆனிரை வறண்ட நிலத்தில் புகுந்ததாக, கோடு துவைத்து அகற்றி ஒல்கு நிலைக் கடுக்கை அல்கு நிழல் அசைஇ – ஊதுகொம்பால் ஓசையை உண்டாக்கி ஆக்களை அங்கிருந்து நீக்கித் தளர்ந்த நிலையில் உள்ள கொன்றை மரத்தின் குறைந்த நிழலில் தங்கி, பல் ஆன் கோவலர் கல்லாது ஊதும் சிறு வெதிர் தீம் குழல் புலம்பு கொள் தெள் விளி – பல பசுக்களையுடைய கோவலர் இசையை முறையாகக் கற்காது ஊதும் சிறிய மூங்கிலால் செய்த இனிய குழலிலிருந்து எழும் தனிமை கொண்ட தெளிந்த ஓசையை, மை இல் பளிங்கின் அன்ன தோற்றப் பல் கோள் நெல்லிப் பைங்காய் அருந்தி மெல்கிடு மட மரை ஓர்க்கும் அத்தம் – குற்றமற்ற பளிங்கினைப் போல் தோன்றும் பலவாகக் காய்த்த நெல்லியின் பசிய காய்களைத் தின்றுவிட்டு அசையிடுகின்ற இளைய மரைமான் கூர்ந்து கேட்கும் (பளிங்கின் – இன் சாரியை), பைங்காய் பைங்காய் – பண்புத்தொகை), காய் கதிர் கடுகிய கவின் அழி பிறங்கல் – காயும் ஞாயிற்றின் கதிர்கள் சுடுவதால் அழகு இழந்த மலையின்கண், வேய் கண் உடைந்த சிமைய வாய்படு மருங்கின் மலை இறந்தோரே – மூங்கிலின் கணுக்கள் உடைந்த உச்சிகளையும் இடம் அகன்ற பக்க மலையையுமுடைய மலையினைக் கடந்து சென்ற நம் தலைவர் (இறந்தோரே – ஏகாரம் அசைநிலை)

அகநானூறு 400, உலோச்சனார், நெய்தல் திணைதோழி தலைவியிடம் சொன்னது
நகை நன்று அம்ம தானே, அவனொடு
மனை இறந்து அல்கினும் அலர் என நயந்து,
கானல் அல்கிய நம் களவு அகல
பல் புரிந்து இயறல் உற்ற நல் வினை
நூல் அமை பிறப்பின், நீல உத்திக்,  5
கொய் மயிர் எருத்தம் பிணர் படப் பெருகி,
நெய்ம் மிதி முனைஇய கொழுஞ்சோற்று ஆர்கை
நிரல் இயைந்து ஒன்றிய செலவின், செந்தினைக்
குரல் வார்ந்தன்ன குவவுத்தலை நந்நான்கு
வீங்கு சுவல் மொசியத் தாங்கு நுகம் தழீஇப்,  10
பூம்பொறிப் பல்படை ஒலிப்பப் பூட்டி,
மதியுடைய வலவன் ஏவலின் இகு துறைப்
புனல் பாய்ந்தன்ன வாமான் திண் தேர்க்
கணை கழிந்தன்ன நோன் கால் வண் பரிப்
பால் கண்டன்ன ஊதை வெண்மணல்  15
கால் கண்டன்ன வழிபடப் போகி,
அயிர்ச் சேற்று அள்ளல் அழுவத்து ஆங்கண்,
இருள் நீர் இட்டுச்சுரம் நீந்தித் துறை கெழு
மெல்லம்புலம்பன் வந்த ஞான்றை
பூ மலி இருங்கழித் துயல்வரும் அடையொடு,  20
நேமி தந்த நெடுநீர் நெய்தல்
விளையா இளங்கள் நாறப் பலவுடன்
பொதி அவிழ் தண் மலர் கண்டும், நன்றும்
புதுவது ஆகின்று அம்ம, பழ விறல்
பாடு எழுந்து இரங்கு முந்நீர் 25
நீடு இரும் பெண்ணை நம் அழுங்கல் ஊரே.

பாடல் பின்னணி:  தலைவன் தலைவியைத் திருமணம் செய்துகொண்ட பின், தோழி மகிழ்ச்சியுடன் தலைவியிடம் கூறியது. 

பொருளுரை:  தோழி!  நான் கூறுவதைக் கேட்பாயாக!  இது பெரும் நகைப்புத் தருவதாகும்!   நம் தலைவனுடன், நாம் நம் மனையைக் கடந்து சென்று தங்கினும், அலராகும் என அஞ்சி, விரும்பிச் சோலையில் தங்கிய நம் களவொழுக்கம் நீங்கும்படி, முற்பிறவியில் பல நற்செயல்களைச் செய்த நல்வினையால்,

குதிரை நூல் கூறும் உயர்ந்த பிறப்பினையும், நீலமணி பதித்த நெற்றிச் சுட்டியையும், கொய்யப்பட்ட மயிரையுடைய கழுத்தையும், சருச்சரை உண்டாக மிகுதியாகப் பெய்யப்பட்டு, நெய் இட்டு மிதித்துச் செய்த கவளத்தை வெறுத்து, கொழுவிய சோற்றை உண்ணுதலையுடைய, வரிசையாகப் பொருந்தி ஒன்றாகச் செல்லும் செலவினையும், செந்தினையின் கதிர்க்கொத்துக்கள் நீண்டு வளைந்தாற்போன்ற வளைந்த தலையினையும் உடைய நல்ல நான்கு குதிரைகளின் பருத்த கழுத்தில் நெருக்கமாக அணிந்த தாங்கும் நுகத்தினைப் பொருத்தி, அழகிய புள்ளிகளையுடைய பல வடங்கள் ஒலிக்கும்படி பூட்டி, அறிவுடைய பாகன் செலுத்துவதால், தாழ்ந்த துறையில் நீ பாய்ந்தாற்போல் தாவிச் செல்லும் குதிரைகள் பூட்டிய திண்ணிய தேரின், அம்பு பாய்ந்தாற்போல் வலிய காலின் (சக்கரத்தின்) விரைந்த ஓட்டம், பாலைக் கண்டாற்போல் தோன்றும் காற்றால் இடப்பட்ட வெள்ளை மணலில், வாய்க்காலைக் கண்டாற்போல் சுவடு உண்டாகப் போய், நுண்ணிய குழம்பாகிய சேற்றின் பரப்பினை உடைய அவ்விடத்தில், இருண்ட நீரையுடைய ஒடுக்கமான வழியைக் கடந்து துறைகள் பொருந்திய மெல்லிய கடற்கரையின் தலைவன், பூக்கள் நிறைந்த கரிய உப்பங்கழியில் அசையும் இலைகளுடன், தலைவனின் தேர் ஆழி (சக்கரம்) தந்த நெடிய நீரின் நெய்தல் மலர்களின் முதிராத இளங்கள் நாறும்படி பலவும் கட்டு அவிழ்ந்து மலர்ந்து இருந்த குளிர்ந்த பூக்களைக் கண்டும், மிகவும் நன்மை உடையது ஆகின்றது, பழைய வெற்றியையும் ஆரவாரம் மிகுந்து முழங்கும் கடலையும், உயர்ந்த பெரிய பனை மரங்களையும் உடைய ஆரவாரம் மிக்க நம் ஊர்.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதற்கு, ‘நாற்றமும் தோற்றமும்’ (தொல்காப்பியம், களவியல் 23) என வரும் நூற்பாவின்கண் ‘வகை’ என்றதனால் அமைத்துக்கொள்க.  பூம்பொறிப் பல்படை ஒலிப்பப் பூட்டி (11) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – அழகிய ஓவியம் பொறிக்கப் பெற்ற பல அணிகலன்களையும் ஆரவாரம் உண்டாகும்படி அவற்றின் கழுத்திலே பூட்டி.  நேமி தந்த நெடுநீர் நெய்தல் (21) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – தலைவனுடைய தேர் ஆழி (சக்கரம்) கொணர்ந்த நெடிய நீர்ப்பூவாகிய நெய்தல் பூக்கள், நீரில் இறங்கி வந்தபொழுது தேர் ஆழிகளில் சிக்குண்டமையால் அவ்வாழிகள் நெய்தலை இலையோடும் மலரோடும் கொடிகளோடும் கொணர்ந்தன என்க.  ந. மு. வேங்கடசாமி நாட்டார், இரா. வேங்கடாசலம் பிள்ளை உரை – ஆழமான நீரையுடைய கடல் தந்த நெய்தல்.  முந்நீர் – தமிழகம் கிழக்கு தெற்கு மேற்கு ஆகிய மூன்று திசையானும் நீர்வளைவுண்டது.  முந்நீர் என்னும் தமிழ்க்கிளவி இம்முப்புறக் கடலமைப்பைச் சுட்டுவது – வ. சுப. மாணிக்கனாரின் ‘தமிழ்க்காதல்’ நூல், ஆற்று நீரும், ஊற்று நீரும் மழை நீரும் உடமையான் முந்நீர் – ஒளவை துரைசாமி புறநானூறு 9 உரை, நிலத்தைப் படைத்தலும் காத்தலும் அழித்தலுமாகிய நீர் – நச்சினார்க்கினியர் மதுரைக்காஞ்சி 75 உரை.  ஒப்புமை –புறநானூறு 299 – நெய்ம் மிதி அருந்திய கொய் சுவல் எருத்தின் தண்ணடை மன்னர் தாருடைப் புரவி.  நெய்ம்மிதி – யகர இறுதி வேற்றுமைப் பொருள்வயின் வல்லெழுத்து இயையின் அவ்வெழுத்து மிகுமே (தொல்காப்பியம், புள்ளி மயங்கியல் 62), மெல்லெழுத்துறழும் மொழியு மாருளவே (தொல்காப்பியம், புள்ளி மயங்கியல் 65).  வார் – வார்தல் போகல் ஒழுகல் மூன்றும் நேர்பும் நெடுமையும் செய்யும் பொருள – (தொல்காப்பியம், உரியியல் 21).

சொற்பொருள்:  நகை நன்று – பெரும் நகைப்புத் தருவதாகும், அம்ம – நான் கூறுவதைக் கேட்பாயாக, தானே – தான் ஏ அசைநிலைகள், அவனொடு – நம் தலைவனுடன், மனை இறந்து அல்கினும் – மனையைக் கடந்து சென்று தங்கினும், அலர் என – அலராகும் என அஞ்சி, நயந்து கானல் அல்கிய நம் களவு அகல – விரும்பிச் சோலையில் தங்கிய நம் களவொழுக்கம் நீங்கும்படி, பல் புரிந்து இயறல் உற்ற நல் வினை – முற்பிறவியில் பல நற்செயல்களைச் செய்த நல்வினையால் (பொ. வே. சோமசுந்தரனார் உரை – பல் புரிந்து என்றது வரைவு கடாஅதற் பொருட்டுத் தோழியும் தலைவியும் செய்த பல்வேறு செயல்களையும் குறித்தபடியாம்), நூல் அமை பிறப்பின் – குதிரை நூல் கூறும் உயர்ந்த பிறப்பினையும், நீல உத்திக் கொய் மயிர் எருத்தம் – நீலமணி பதித்த நெற்றிச் சுட்டியையும் கொய்யப்பட்ட மயிரையுடைய கழுத்தையும், பிணர் படப் பெருகி – சருச்சரை உண்டாக மிகுதியாகப் பெய்யப்பட்டு, நெய்ம் மிதி முனைஇய கொழுஞ்சோற்று ஆர்கை – நெய் இட்டு மிதித்துச் செய்த கவளத்தை வெறுத்து கொழுவிய சோற்றை உண்ணுதலையுடைய, நிரல் இயைந்து ஒன்றிய செலவின் – வரிசையாகப் பொருந்தி ஒன்றாகச் செல்லும் செலவினையும், செந்தினைக் குரல் வார்ந்தன்ன குவவுத்தலை நல் நான்கு – செந்தினையின் கதிர்க்கொத்துக்கள் நீண்டு வளைந்தாற்போன்ற வளைந்த தலையினையும் உடைய நல்ல நான்கு குதிரைகளின் (நான்கு – ஆகுபெயர் குதிரைகளுக்கு), வீங்கு சுவல் மொசியத் தாங்கு நுகம் தழீஇப் பூம்பொறிப் பல்படை ஒலிப்பப் பூட்டி – பருத்த கழுத்தில் நெருக்கமாக அணிந்த தாங்கும் நுகத்தினைப் பொருத்தி அழகிய புள்ளிகளையுடைய பல வடங்கள் ஒலிக்கும்படி பூட்டி (தழீஇ – அளபெடை), மதியுடைய வலவன் ஏவலின் – அறிவுடைய பாகன் செலுத்துவதால், இகு துறைப் புனல் பாய்ந்தன்ன வாமான் திண் தேர் – தாழ்ந்த துறையில் நீ பாய்ந்தாற்போல் தாவிச் செல்லும் குதிரைகள் பூட்டிய திண்ணிய தேரின், கணை கழிந்தன்ன நோன் கால் வண் பரி – அம்பு பாய்ந்தாற்போல் வலிய காலின் (சக்கரத்தின்) விரைந்த ஓட்டம், பால் கண்டன்ன ஊதை வெண்மணல் – பாலைக் கண்டாற்போல் தோன்றும் காற்றால் இடப்பட்ட வெள்ளை மணலில், கால் கண்டன்ன வழிபடப் போகி – வாய்க்காலைக் கண்டாற்போல் சுவடு உண்டாகப் போய், அயிர்ச் சேற்று அள்ளல் அழுவத்து ஆங்கண் – நுண்ணிய குழம்பாகிய சேற்றின் பரப்பினை உடைய அவ்விடத்தில், இருள் நீர் இட்டுச் சுரம் நீந்தித் துறை கெழு மெல்லம்புலம்பன் வந்த ஞான்றை – இருண்ட நீரையுடைய ஒடுக்கமான வழியைக் கடந்து துறைகள் பொருந்திய மெல்லிய  கடற்கரையின் தலைவன் (அம் – சாரியை, புலம்பு = கடற்கரை), பூ மலி இருங்கழித் துயல்வரும் அடையொடு – பூக்கள் நிறைந்த கரிய உப்பங்கழியில் அசையும் இலைகளுடன், நேமி தந்த நெடுநீர் நெய்தல் விளையா இளங்கள் நாறப் பலவுடன் பொதி அவிழ் தண் மலர் கண்டும் – தலைவனின் தேர் ஆழி (சக்கரம்) தந்த நெடிய நீரின் நெய்தல் மலர்களின் முதிராத இளங்கள் நாறும்படி பலவும் கட்டு அவிழ்ந்து மலர்ந்து இருந்த குளிர்ந்த பூக்களைக் கண்டும், நன்றும் புதுவது ஆகின்று – மிகவும் நன்மை உடையது ஆகின்றது, அம்ம – அசைநிலை, பழ விறல் பாடு எழுந்து இரங்கு முந்நீர் – பழைய வெற்றியையும் ஆரவாரம் மிகுந்து முழங்கும் கடலையும், நீடு இரும் பெண்ணை நம் அழுங்கல் ஊரே – உயர்ந்த பெரிய பனை மரங்களையும் உடைய ஆரவாரம் மிக்க நம் ஊர் (ஊரே – ஏகாரம் அசைநிலை)