நற்றிணை – தமிழ் உரையுடன்    

எளிய தமிழ் உரை – வைதேகி

Copyright ©  All Rights Reserved

உரை நூல்கள்
நற்றிணை – ஔவை துரைசாமி – தமிழ் மண் பதிப்பகம், சென்னை
நற்றிணை – வித்துவான் H. வேங்கடராமன் – உ. வே. சாமிநாதையர் நூல் நிலையம், சென்னை
நற்றிணை – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் – சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை

குறிஞ்சித் திணை – புணர்தலும் புணர்தல் நிமித்தமும்

முல்லைத் திணை – இருத்தலும் இருத்தல் நிமித்தமும்

மருதத் திணை – ஊடலும் ஊடல் நிமித்தமும்

நெய்தல்  திணை – இரங்கலும் இரங்கல் நிமித்தமும்

பாலைத் திணை – பிரிதலும் பிரிதல் நிமித்தமும்

மருதத் திணையில் அடிக்கடி வரும் சொற்கள்:  வயல், பழனம் (pond), கழனி,  குளம், வாளை மீன், வாகை மீன், கெண்டை மீன் , ஆமை, உழவர், அரிநர், நெல், மாமரம், ஞாழல் மரம், நொச்சி மரம், கரும்பு, நீர்நாய்  (otter), ஆம்பல் (white waterlily), தாமரை, பொய்கை, கயம் (pond), குருவி, கோழி, சேவல்,  கழனி, கொக்கு, காரான் (buffalo), காஞ்சி மரம்,  மருத மரம், அத்தி மரம்,  கரும்பு, குளம்,  தாமரை மலர், எருமை,  பொய்கை, ஆம்பல், முதலை, களவன் (நண்டு)

குறிஞ்சித் திணையில் அடிக்கடி வரும் சொற்கள்:  வரை (mountain),  மலை, குன்று, சாரல் (mountain slope), அடுக்கம் (mountain range), கிளி,   ஏனல் (தினை), அவணை (millet field),  தினை,  இறடி (millet),  இருவி (millet stubble), தாள் (stubble), குரல் (millet spikes),  தட்டை (stubble) – and also bamboo rattle to chase parrots – வெதிர் புனை தட்டை, குளிர், தழல் (gadgets used to chase parrots), கவண், தினை, புனவன் (mountain farmer),  குறவன்,  கானவன், கொடிச்சி, கழுது, இதண், மிடை  (Platform in the millet field), ஓப்புதல் (chase parrots and other birds that come to eat the grain),  கொடிச்சி, யானை, குரங்கு, மஞ்ஞை (peacock), புலி,  பாம்பு, பன்றி (wild boar), வரை ஆடு,  அருவி, சுனை, பலாமரம், பலாப்பழம், சந்தன மரம், மா மரம், பணை (bamboo), வேங்கை மரம், அகில் மரம், மாமரம்,   குறிஞ்சி, குவளை, காந்தள், தேன், வண்டு, சுரும்பு, ஞிமிறு, தும்பி (honeybee), மஞ்சு,  மழை (word is used for both cloud and rain),  பெயல் (rain), ஐவனம் (wild rice)

நெய்தல் திணையில்  அடிக்கடி வரும் சொற்கள் –  கடல், கடற்கரை, பரதவர், மீன், சுறா, முதலை, திரை (wave), அலை, கானல் (கடற்கரை சோலை),  திமில் (boat), அம்பி (boat), சேரி (settlement) , புன்னை, ஞாழல், தாழை, கைதல், கைதை (screwpine),   உப்பு, உமணர் (salt merchant), உப்பங்கழி (salty land), மணல், எக்கர் (மணல் மேடு), அலவன் (நண்டு), அடும்பு (a creeper with beautiful pink flowers), நெய்தல் ஆம்பல் (white waterlily), கோடு, வளை (conch shell), வலை, குருகு, நாரை, அன்றில்

முல்லைத் திணையில் அடிக்கடி வரும் சொற்கள் – புறவு (முல்லை நிலம்), இரலை மான், முயல், ஆ (பசு), கன்று, மழை, முல்லை, காயா, கொன்றை, தோன்றல், தேர், பாகன், மாரி, பித்திகம், கோவலர், ஆயர் (cattle herders), ஆடு, குழல், மஞ்ஞை (peacock),  குருந்தம், மழை,  மான், முயல்

பாலைத் திணையில்  அடிக்கடி வரும் சொற்கள்  – அத்தம் (harsh path), சுரம் (wasteland), எயினர் (tribes living in the wasteland), பல்லி, ஓதி, ஓந்தி (big garden lizard), பாதிரி (summer blooming flower), கள்ளி (cactus), யா மரம், ஓமை மரம், குரவம், கள்ளிச்செடி, கோங்கு மரம்,  ஞெமை, இருப்பை மரம், வேம்பு, யாமரம், உகாய், கழுகு, கடுஞ்சுரம், அருஞ்சுரம் (harsh wasteland), செந்நாய் (red fox), யானை, புலி, மூங்கில், பதுக்கை (leaf heap, usually a shallow grave), நெல்லி, நெறி (path), ஆறு (path), வேனிற்காலம்,  பரல் கற்கள், இறத்தல் (கடப்பது)

நற்றிணை 1, கபிலர், குறிஞ்சித் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
நின்ற சொல்லர், நீடு தோறு இனியர்,
என்றும் என் தோள் பிரிபு அறியலரே,
தாமரைத் தண் தாது ஊதி மீமிசைச்
சாந்தில் தொடுத்த தீம் தேன் போலப்
புரைய மன்ற, புரையோர் கேண்மை,  5
நீர் இன்று அமையா உலகம் போலத்
தம் இன்று அமையா நம் நயந்து அருளி,
நறுநுதல் பசத்தல் அஞ்சிச்
சிறுமை உறுபவோ? செய்பு அறியலரே.

பாடல் பின்னணி:  பிரிவு உணர்த்திய தலைவிக்குத் தோழி கூறியது.

பொருளுரைஅவர் சொல்லிய சொல்லிலிருந்து மாறுபடாதவர்.  இனிமையாகப் பழகும் தன்மையுடையர். என் தோள்களை என்றும் பிரிதலை அறியாதவர்.   (வண்டு) தாமரைப்பூவின் குளிர்ச்சியான தாதினைத் துளைத்து எடுத்து, உயர்ந்து நிற்கும் சந்தன மரத்தின் உச்சியில் கொண்டு போய் சேர்த்து வைத்த இனிய தேனைப் போல உறுதியாக உயர்வினை உடையது உயர்ந்தோராகிய தலைவரின் நட்பு.   நீர் இன்றி இவ்வுலகமானது சிறக்கவியலாது.  அதுபோல, அவர் இன்றி நாம் சிறத்தலில்லை.   அவரும் நம்மீது கொண்ட விருப்பத்தின் காரணமாக அருளுடன் நடப்பவர்.  பிரிவதால் நம் மணம் வீசும் நெற்றியில் ஏற்படும் பசலை படர்வதற்கு அஞ்சுதலையுடைய அவர், பிரிதல் என்ற சிறுமையான செயலைச் செய்ய நினைப்பாரோ? அவ்வாறு செய் வதற்குக்கூட அறியாதவர் அவர்!

குறிப்பு:  ஒளவை துரைசாமி உரை – ‘அவனறிவு ஆற்ற அறியுமாகலின்’ (தொல்காப்பியம், கற்பியல் 6) என்ற நூற்பாவில் ஏற்றற்கண் நிகழும் தலைவி கூற்றுக்கு இதனைக் காட்டுவர் இளம்பூரணர்.  பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – தாமரைத்தாது தலைவன் உள்ளத்திற்கும் சந்தனத்தாது தலைவியின் உள்ளத்திற்கும் உவமையாக்கி இருவர் கருத்தும் ஒத்த வழி சாந்திலே தீந்தேனிறால் வைத்தது போலத் தலைவன் தலைவிபால் அன்பு வைத்தான் எனப் பொருந்த உரைக்க.  ஒளவை துரைசாமி உரை – தாமரைத் தேனைச் சாந்தம் தன் மணத்தை ஊட்டிச் சிறப்பிப்பது போலத் தன்பால் வைத்த புல்லிய என் அன்பை உள்ளத்திற் கொண்டு கேண்மையாம் பெருமை உறுவித்தார் என்பாள், சாந்தில் தொடுத்த தீம் தேன் போல புரைய மன்ற என்றாள்.  மன்ற – மன்றவென் கிளவி தேற்றஞ் செய்யும் (தொல்காப்பியம், இடையியல் 17).  இன்று – ஒளவை துரைசாமி உரை – இன்றி என்பது செய்யுளாதலின் இன்று என வந்தது.  இன்றி என்னும் வினையெஞ்சு இறுதி நின்ற இகரம் உகரம் ஆதல், தொன்றியல் மருங்கின் செய்யுளில் உரித்தே  (தொல்காப்பியம், எழுத்ததிகாரம் 237).  புரை – புரை உயர்பு ஆகும் (தொல்காப்பியம், உரியியல் 4).

சொற்பொருள்:  நின்ற சொல்லர் – மாறுபடாத சொல்லினை உடையர், நீடு – நிலைத்த, தோன்று இனியர் – இனிய தன்மையுடையர், என்றும் என் தோள் – என்றும் என் தோள்களை, பிரிபு அறியலரே– பிரிவதற்கு அறியாதவர், தாமரைத் தண் தாது – தாமரை மலரின் குளிர்ச்சியான தாதினை, ஊதி – துளைத்து, மீமிசை – மேலே (ஒருபொருட் பன்மொழி), சாந்தில் தொடுத்த – சந்தனமரத்தில் சேர்த்துவைத்த, தீம் தேன் போல – இனிய தேன் போல, புரைய – உயர்வு, மன்ற – உறுதியாக (மன்ற – தேற்றப்பொருளில் வரும் இடைச்சொல்), புரையோர் – உயர்ந்தோர்,  கேண்மை – நட்பு, நீர் இன்று – நீர் இல்லாது,  அமையா– சிறப்பாகாத, உலகம் போல – உலகத்தைப் போல, தம் இன்று – அவர் இல்லாது, அமையா – சிறப்படையா, நம் – நம்மை, நயந்து அருளி – விரும்பி அருளுடன், நறு நுதல் – மணம் வீசும் நெற்றி,  பசத்தல் அஞ்சி – பசலை படரும் என்பதற்கு அஞ்சி, சிறுமை உறுபவோ? – சிறுமையான செயலைச் செய்தற்கு நினைப்பாரோ, செய்பு அறியலரே– செய்தற்கு அறியாதவரே (அறியலரே – ஏகாரம் அசை நிலை)

நற்றிணை 2, பெரும்பதுமனார், பாலைத் திணை – கண்டோர் சொன்னது
அழுந்து பட வீழ்ந்த பெருந்தண் குன்றத்து,
ஒலி வல் ஈந்தின் உலவையங்காட்டு,
ஆறு செல் மாக்கள் சென்னி எறிந்த
செம்மறுத் தலைய, நெய்த்தோர் வாய,
வல்லியப் பெருந்தலைக் குருளை, மாலை,  5
மரல் நோக்கு இண்டு இவர் ஈங்கைய சுரனே
வை எயிற்று ஐயள் மடந்தை முன் உற்று
எல் இடை நீங்கும் இளையோன் உள்ளம்,
காலொடு பட்ட மாரி
மால் வரை மிளிர்க்கும் உருமினும் கொடிதே.  10

பாடல் பின்னணி:  தலைவனையும் தலைவியையும் பாலை நிலத்தில் கண்டவர்கள் சொன்னது.  

பொருளுரைஆழ்ந்துப்பட்டு இருந்த பெரிய குளிர்ச்சியான மலையின் தழைத்த மிகுந்த வலிமையுடைய ஈத்த மரங்களையுடைய காற்று சுழன்று வீசும் காட்டில், வழியில் செல்லும் மக்களின் தலையில் மோதியதால் குருதி படிந்த மாறுபட்ட தலையையும், குருதி பூசிய வாயையும், பெரிய தலையையும் உடைய புலிக்குட்டிகள் மாலை நேரத்தில் தாம் பதுங்கியிருக்கும் மரல் செடிகளை நிமிர்ந்து நோக்கும் இண்டுக் கொடியுடன் ஈங்கைப் பரவிய பாலை நிலத்தில், கூரிய பற்களையுடைய மெல்லியளான இளம் பெண்ணை முன்னே போக விட்டு இரவுப் பொழுதில் அவள் பின் செல்லும் இளைஞனின் உள்ளம், காற்றுடன் கலந்து மழை பெய்யும் பொழுது பெரிய பாறைகளைப் புரண்டு விழுமாறு மோதுகின்ற இடியைக் காட்டிலும் கொடுமையானது.

குறிப்பு:  இறைச்சிப் பொருள் – பொ. வே. சோமசுந்தரனார் உரை – குடிப்பிறப்புடையாளை மயக்கி அவள் சுற்றத்தினின்றும் பெயர்த்து அழைத்தேகுகின்றான் என்னும் இறைச்சிப் பொருள் தோன்றக் காலொடு பட்ட மாரி மால் வரை மிளிர்க்கும் உரும் என்றார் என்க.  ஒளவை துரைசாமி உரை – ‘பொழுதும் ஆறும் உட்கு வரத் தோன்றி வழுவின் ஆகிய குற்றம் காட்டலும்’ எனத் துவங்கும் நூற்பாவில்…………சேய் நிலைக்கு அகன்றோர் செலவினும் வரவினும், கண்டோர் மொழிதல் கண்டது என்ப’ (தொல்காப்பியம், அகத்திணையியல் 43) என்பதற்கு இதனைக்காட்டி இது செலவின்கண் கூறியது என்பர் நச்சினார்க்கினியர்.  மடந்தை முன் உற்று (7) – ஒளவை துரைசாமி உரை – காதலியின் மேனி நலமும் நடைவனப்பும் கண்டு மகிழ்வதோடு கண்முன் நிறுத்திக் காவல் செய்து போதரும் தலைவனது காப்பு மறம் புலப்பட மடந்தையை முன்னுய்த்துத் தான் பின்னே செல்கின்றான் என்பார்.  வல்லியம் குருளை – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – புலிக்குட்டிகள், ஒளவை துரைசாமி உரை – வலிய புலிகள் தம்முடைய குட்டிகளுடன்.  வை – வையே கூர்மை (தொல்காப்பியம், உரியியல் 91). குருளை – மாற்ற அருஞ் சிறப்பின் மரபு இயல் கிளப்பின் பார்ப்பும் பறழும் குட்டியும் குருளையும் கன்றும் பிள்ளையும் மகவும் மறியும் என்று ஒன்பதும் குழவியொடு இளமைப் பெயரே (தொல்காப்பியம், மரபியல் 1).  நாயே பன்றி புலி முயல் நான்கும் ஆயும் காலை குருளை என்ப (தொல்காப்பியம், மரபியல் 8).

சொற்பொருள்:  அழுந்து பட வீழ்ந்த பெருந்தண் குன்றத்து – ஆழ்ந்துப்பட்டு இருந்த பெரிய குளிர்ச்சியான மலையின், ஒலி வல் ஈந்தின் உலவை அம் காட்டு – தழைத்த மிகுந்த வலிமையுடைய ஈத்த மரங்களையுடைய காற்று சுழன்று வீசும் காட்டில் (உலவையங்காட்டு – அம் சாரியை), ஆறு செல் மாக்கள் – வழியில் செல்லும் மக்கள், சென்னி எறிந்த செம்மறுத் தலைய – தலையில் மோதியதால் குருதி படிந்த மாறுபட்ட தலையையுடைய, நெய்த்தோர் வாய – குருதி பூசிய வாயையுடைய, வல்லியப் பெருந்தலைக் குருளை – பெரிய தலையையுடைய புலிக்குட்டிகள், மாலை – மாலை நேரத்தில், மரல் நோக்கு இண்டு இவர் ஈங்கைய சுரனே – மரல் செடிகளை நிமிர்ந்து நோக்கும் இண்டுக் கொடியுடன் ஈங்கைப் பரவிய பாலை நிலமே, வை எயிற்று ஐயள் மடந்தை முன் உற்று – கூரிய பற்களையுடைய மெல்லியளான இளம் பெண்ணை முன்னே போக விட்டு, எல் இடை நீங்கும் இளையோன் உள்ளம் – இரவுப் பொழுதில் செல்லும் இளைஞனின் உள்ளம், காலொடு பட்ட மாரி மால் வரை மிளிர்க்கும் உருமினும் கொடிதே – காற்றுடன் கலந்து மழை பெய்யும் பொழுது பெரிய பாறைகளைப் புரண்டு விழுமாறு மோதுகின்ற இடியைக் காட்டிலும் கொடுமையானது (கொடிதே – ஏகாரம் அசை நிலை)

நற்றிணை 3, இளங்கீரனார், பாலைத் திணை – தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது
ஈன் பருந்து உயவும் வான் பொரு நெடுஞ்சினைப்
பொரி அரை வேம்பின் புள்ளி நீழல்,
கட்டளை அன்ன இட்டு அரங்கு இழைத்துக்
கல்லாச் சிறாஅர் நெல்லி வட்டு ஆடும்,
வில் ஏர் உழவர் வெம்முனைச் சீறூர்ச்  5
சுரன் முதல் வந்த உரன் மாய் மாலை
உள்ளினென் அல்லெனோ யானே, உள்ளிய
வினை முடித்தன்ன இனியோள்
மனை மாண் சுடரொடு படர் பொழுது எனவே?

பாடல் பின்னணி:  முன்னொரு காலத்தில் பொருள்வயின் பிரிந்த கணவன் பின்னும் பொருள்தேடும்படி கருதிய தன் நெஞ்சிடம் சொன்னது.

பொருளுரைகுஞ்சுகளைப் பெற்ற பருந்து வருந்தி வாழும் வானைத் தொடும் உயர்ந்த கிளைகளையும் பொரிந்த அடியையும் உடைய வேப்ப மரத்தின் புள்ளி போன்ற நிழலில், பொன்னை உரைத்துப் பார்க்கும் கல்லைப் போன்ற அரங்கை வட்டியால் கீறி, நெல்லிக்காயை வட்டாகக் கொண்டு, தொழில் எதுவும் கற்காத சிறுவர்கள் பாண்டில் விளையாடும், வில்லால் வழியில் செல்லுபவர்களைத் துன்புறுத்தி உண்ணும் வேடரின் கொடிய குடியிருப்பை உடைய சிற்றூர்களைக் கொண்டிருக்கும் பாலை நிலத்தின்கண், வலிமையை அழிக்கும் மாலைப் பொழுதில் நினைத்தேன் அல்லவா நான், கருதிய வினையை முடித்தாற்போன்ற இனிமையுடைய நம் தலைவி இல்லத்தில் மாட்சிமைப்பட்ட விளக்கை ஏற்றி துன்புற்று வருந்தும் பொழுதாகும் இது என்று?  அதனால், என் நெஞ்சே, மீண்டும் பிரியக் கருதலை எண்ணாதே.  இனி நான் பிரிய மாட்டேன்.

குறிப்பு:  இறைச்சிப் பொருள் – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – பருந்து வருந்தியிருக்கும் வேம்பின் நிழலில் அப்பருந்தின் வருத்தத்தை ஏறிட்டு நோக்காது, சிறார் நெல்லிவட்டாடி மகிழாநிற்பர் (மகிழ்வர்) என்றது, யான் இவளைப் பிரிதலால் வரும் துன்பத்திற்கு அஞ்சி வருந்தவும் அதனைக் கருதாத என் நெஞ்சே, நீ பொருள்மேற் சென்று மீளும் மகிழ்ச்சியை உடையையாயிரா நின்றாய் என்பது.  ஒளவை துரைசாமி உரை – ‘உள்ளிய வினைமுடித்தன்ன இனியோள்’ என வருவதை ‘ஆங்கவை ஒருபாலாக’ என்ற நூட்பாவில் கூறப்படும் இன்புறல் என்னும் மெய்ப்பாட்டுக்கும், முன்பு நிகழ்ந்ததனைக் கூறிப் போகாது ஒழிந்ததற்கும் இதனைக் காட்டுவர் இளம்பூரணர்.  நச்சினார்க்கினியர் ‘தலைவன் நினைந்து செலவு அழுங்குவதற்கு நிமித்தமாயவாறு காண்க’ என இதனைக் காட்டுவர்.  ‘பிறப்பே குடிமை’ (மெய்ப்பாட்டியல் 25) என்புழிக் குடிமைக்கு ‘உள்ளி …. படர்பொழுதெனவே’ என்பது காட்டி, ‘தலைமகன் தனது இல்லறத்தைத் தலைமேல் வைத்துச் சொல்லினமையின் குடிமையாயிற்று’ என்பர் பேராசிரியர்.

சொற்பொருள்:  ஈன் பருந்து உயவும் – குஞ்சுகளைப் பெற்ற பருந்து வருந்தி இருக்கும், வான் பொரு நெடுஞ்சினைப் பொரி அரை வேம்பின் புள்ளி நீழல் – வானைத் தொடும் உயர்ந்த கிளைகளையும் பொரிந்த அடியையும் உடைய வேப்ப மரத்தின் புள்ளி போன்ற நிழலில் (நீழல் – நிழல் என்பதன் விகாரம்), கட்டளை அன்ன இட்டு அரங்கு இழைத்துக் கல்லாச் சிறாஅர் நெல்லி வட்டு ஆடும் – பொன்னை உரைத்துப் பார்க்கும் கட்டளைக் கல் போன்ற அரங்கை வட்டியால் கீறி நெல்லிக்காயை வட்டாகக் கொண்டு பாண்டில் விளையாடும் தொழில் எதுவும் கற்காத சிறுவர்கள் (சிறாஅர் – அளபெடை), வில் ஏர் உழவர் வெம்முனைச் சீறூர்ச் சுரன் முதல் வந்த – வில்லால் வழியில் செல்லுபவர்களைத் துன்புறுத்தி உண்ணும் வேடரின் கொடிய குடியிருப்பை உடைய சிற்றூர்களைக் கொண்டிருக்கும் பாலை நிலத்தின்கண் வந்த (சுரன் – சுரம் என்பதன் போலி), உரன் மாய் மாலை – வலிமையை அழிக்கும் மாலைப் பொழுது, உள்ளினென் அல்லெனோ யானே – நினைத்தேன் அல்லவா நான் (யானே – ஏகாரம் அசை நிலை), உள்ளிய வினை முடித்தன்ன – கருதிய வினையை முடித்தாற்போன்ற, இனியோள் – இனிமையுடைய நம் தலைவி, மனை மாண் சுடரொடு படர் பொழுது எனவே – இல்லத்தில் மாட்சிமைப்பட்ட விளக்கை ஏற்றி துன்புற்று வருந்தும் பொழுதாகும் என்று (எனவே – ஏகாரம் அசை நிலை)

நற்றிணை 4, அம்மூவனார், நெய்தல் திணை – தோழி தலைவியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
கானலஞ் சிறுகுடிக் கடல் மேம் பரதவர்
நீல் நிறப் புன்னைக் கொழு நிழல் அசைஇத்,
தண் பெரும் பரப்பின் ஒண் பதம் நோக்கி,
அம் கண் அரில் வலை உணக்கும் துறைவனொடு,
‘அலரே அன்னை அறியின் இவண் உறை வாழ்க்கை  5
அரிய ஆகும் நமக்கு’ எனக் கூறின்,
கொண்டும் செல்வர் கொல் தோழி, உமணர்
வெண்கல் உப்பின் கொள்ளை சாற்றிக்
கண நிரை கிளர்க்கும் நெடு நெறிச் சகடம்
மணல் மடுத்து உரறும் ஓசை கழனிக்  10
கருங்கால் வெண்குருகு வெரூஉம்
இருங்கழிச் சேர்ப்பின் தம் உறைவின் ஊர்க்கே?

பாடல் பின்னணி:  அலர் ஏற்பட்டதைக் கூறி வரைவு கடாயது (திருமணம் வேண்டியது).

பொருளுரைகடற்கரைச் சோலையில் உள்ள சிறுகுடியிலிருந்து கடல் மேல் செல்லும் பரதவர் நீல நிறமுடைய புன்னையின் அடர்ந்த நிழலில் தங்கி, குளிர்ச்சியுடைய கடல் பரப்பில் செல்வதற்கு உரிய நேரம் பார்த்து, முறுக்குண்டு கிடந்த வலையை உலர்த்தும் நெய்தல் நிலத் தலைவனுடன் ஏற்பட்ட உறவினால் நமக்கு உண்டான பழிச் சொல்லை அன்னை அறிந்தால், இங்கு வாழ்வது நமக்குக் கடினமாகும் என்று அவரிடம் கூறினால் உன்னைஅழைத்துக் கொண்டு செல்வாரா தோழி, உப்பு வணிகர் வெள்ளை உப்பின் விலையைக் கூறிக் கூட்டமாகிய தங்கள் எருதுகளை எழுப்பிப் போகச்செய்யும் நீண்ட வழியில் செல்லும் வண்டியின் உருளிகள் மணலை உரசும் ஓசைக்கு வயலில் உள்ள கரிய காலையுடைய வெள்ளைக் குருகு அஞ்சும் கரிய உப்பங்கழி சூழ்ந்த நெய்தல் நிலத்தில் உள்ள தாம் வாழும் ஊருக்கு?

குறிப்பு:  அம் கண் அரில் வலை (4) – ஒளவை துரைசாமி உரை – அழகிய கண்களோடு கூடித் தம்மிற் பின்னிச் சிக்குண்டு கிடக்கும் வலை, பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – முறுக்குண்டு கிடந்த வலை.  உள்ளுறை (1) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – பரதவர் புன்னையின் கீழிருந்து கடலிற் செல்லுதற்குப் பத நோக்கி அதுகாறும் வலையை உணக்கும் துறைவன் என்றது, தலைவன் சிறைப்புறத்திலிருந்து, தலைவியைக் கூடுவதற்கு யாருமில்லாத பதம் பார்த்து அதுகாறும் ஆராய்ந்து கொண்டிருப்பது என்றதாம்.  உள்ளுறை (2) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – சகடம் மணலில் மடுத்து முழங்கும் ஓசைக்குக் கழனி நாரை வெருவும் என்றது, தலைவன் சான்றோரை முன்னிட்டு அருங்கலன் தந்து வரைவரு மண முரசொலி கேட்பின் அலரெடுக்கும் ஏதிலாட்டியர் வாய் வெருவி ஒடுங்கா நிற்பர் என்றதாம்.  கணநிரை கிளர்க்கும் (9) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – நெறியில் படுத்திருக்கும் ஆநிரையை எழுப்புகின்ற, ஒளவை துரைசாமி உரை – ஈர்த்தற்பொருட்டு உடன்கொண்டு செல்லும் கூட்டமாகிய எருதுகளை ஊக்கிச் செலுத்தும்.

சொற்பொருள்:  கானல் அம் சிறுகுடிக் கடல் மேம் பரதவர் – கடற்கரைச் சோலையில் உள்ள சிறுகுடியிலிருந்து கடல் மேல் செல்லும் பரதவர் (கானலஞ் சிறுகுடி – அம் சாரியை), நீல் நிறப் புன்னைக் கொழு நிழல் அசைஇ – நீல நிறமுடைய புன்னையின் அடர்ந்த நிழலில் தங்கி (நீல் – கடைக்குறை, அசைஇ – அளபெடை), தண் பெரும் பரப்பின் ஒண் பதம் நோக்கி – குளிர்ச்சியுடைய கடல் பரப்பில் செல்வதற்குரிய நேரம் பார்த்து, அம் கண் அரில் வலை உணக்கும் துறைவனொடு – முறுக்குண்டு கிடந்த வலையை உலர்த்தும் நெய்தல் நிலத் தலைவனுடன், அலரே அன்னை அறியின் – நமக்கு உண்டான பழிச் சொல்லை அன்னை அறிந்தால், இவண் உறை வாழ்க்கை அரிய ஆகும் நமக்கு எனக் கூறின் கொண்டும் செல்வர் கொல் தோழி – இங்கு வாழ்வது நமக்குக் கடினமாகும் என்று அவரிடம் கூறினால் அழைத்துக் கொண்டு செல்வாரா தோழி, உமணர் வெண்கல் உப்பின் கொள்ளை சாற்றி – உப்பு வணிகர் வெள்ளை உப்பின் விலையைக் கூறி, கண நிரை கிளர்க்கும் – கூட்டமாகிய தங்கள் எருதுகளை எழுப்புகின்ற, நெடு நெறிச் சகடம் மணல் மடுத்து உரறும் ஓசை – நீண்ட வழியில் செல்லும் வண்டியின் உருளிகள் மணலை உரசும் ஓசை, கழனிக் கருங்கால் வெண்குருகு வெரூஉம் – வயலில் உள்ள கரிய காலையுடைய வெள்ளைக் குருகு அஞ்சும் (வெரூஉம் – செய்யுளிசை அளபெடை), இருங்கழிச் சேர்ப்பின் தம் உறைவின் ஊர்க்கே – கரிய உப்பங்கழி சூழ்ந்த நெய்தல் நிலத்தில் உள்ள தாம் வாழும் ஊருக்கு (ஊர்க்கே – ஏகாரம் அசை நிலை)

நற்றிணை 5, பெருங்குன்றூர் கிழார், குறிஞ்சித் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
நிலம் நீர் ஆரக், குன்றம் குழைப்ப,
அகல்வாய்ப் பைஞ்சுனைப் பயிர் கால்யாப்பக்,
குறவர் கொன்ற குறைக் கொடி நறைப் பவர்
நறுங்காழ் ஆரம் சுற்றுவன அகைப்பப்
பெரும் பெயல் பொழிந்த தொழில எழிலி  5
தெற்கு ஏர்பு இரங்கும் அற்சிரக் காலையும்
அரிதே, காதலர்ப் பிரிதல் இன்று செல்
இகுளையர்த் தரூஉம் வாடையொடு
மயங்கு இதழ் மழைக் கண் பயந்த தூதே.

பாடல் பின்னணி:  வினைவயின் செல்லும் தலைவனின் குறிப்பு அறிந்து வேறுபட்ட தலைவிக்குத் தோழி சொல்லியது.

பொருளுரைநிலம் நீரால் நிரம்பப்பெற்று, மலையில் உள்ள மரம் செடி தழைப்ப, அகன்ற வாயையுடைய சுனையில் நீர் நிறைந்ததால் அங்குள்ள பயிர் நெருங்கி வளர, மலையில் வாழ்பவர்களால் வெட்டப்பட்ட நறைக்கொடி, நறுமணமுடைய வைரம் பாய்ந்த சந்தன மரத்தைச் சுற்றிப் படர, பெருமழையைப் பொழிந்த தொழிலையுடைய முகில்கள் தென்திசையின்கண் எழுந்து ஒலிக்கும் முன்பனிக் காலத்தில் நீ காதலரைப் பிரிந்து வாழ்தல் அரிதாகும்.  பிரிந்து செல்லும் தோழியரை வாடைக்காற்று செல்லாமல் கூட்டுகின்றது.  துன்பத்தைத் தரும் வாடைக்காற்றினால் வருந்தும் இதழுடைய கண்ணீர் விடும் உன் கண்கள் அவருக்குத் தூதை அனுப்பி வைத்தன.  அதனால் அவர் உன்னைப் பிரிய மாட்டார்.

குறிப்பு:  குழைப்ப (1)ஒளவை துரைசாமி உரை – குழை இளந்தளிர், குழைப்ப என்றது பெயரடியாகப் பிறந்த வினை.  கால்யாப்ப (2) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – நெருங்கி வளர.  இறைச்சிப் பொருள் – பொ. வே. சோமசுந்தரனார் உரை – குறவர் கொன்ற குறைக் கொடி நறைப்பவர் நறுங்காழ் ஆரம் சுற்றுவன அகைப்ப என்புழி, நீ அவர் பிரிவார் என்ற கருத்தால் மெலிந்த மெலிவு அகன்று நின் காதலனை இனி ஆர முயங்கி உடல் பூரித்திடுக என்பது.  தெற்கு ஏர்பு இரங்கும் அற்சிரக் காலையும் (6) ஒளவை துரைசாமி உரை – மேகம் தென்திசை நோக்கி எழுந்து சென்று முழங்கும் வாடைக்காலமும். பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – மேகமானது தென் திசையின்கண்ணே எழுந்து செல்லுதலாலே பிரிந்தோர் இரங்குகின்ற முன்பனிக் காலத்தும்.  இன்று செல் இகுளையர் தரூஉம் வாடை – கு. வெ. பாலசுப்பிரமணியன் உரை – இன்று பிரிந்து செல்லும் தோழியரை, வாடைக் காற்று செல்லாது கூட்டுகிறது. காழ் – அகக் காழனவே மரம் என மொழிப (தொல்காப்பியம், மரபியல் 87).

சொற்பொருள்:  நிலம் நீர் ஆர – நிலம் நீரால் நிரம்பப்பெற்று, குன்றம் குழைப்ப – மலையில் உள்ள மரம் செடி தழைப்ப, அகல்வாய்ப் பைஞ்சுனைப் பயிர் கால்யாப்ப – அகன்ற வாயையுடைய சுனையில் நீர் நிறைந்ததால் அங்குள்ள பயிர் நெருங்கி வளர, குறவர் கொன்ற குறைக் கொடி நறைப் பவர்– மலையில் வாழ்பவர்களால் வெட்டப்பட்ட நறைக்கொடி, நறுங்காழ் ஆரம் சுற்றுவன அகைப்ப – நறுமணமுடைய வைரம் பாய்ந்த சந்தன மரத்தைச் சுற்றிப் படர, பெரும் பெயல் பொழிந்த – பெருமழையைப் பொழிந்த, தொழில எழிலி – தொழிலையுடைய முகில்கள், தெற்கு ஏர்பு – தென் திசையின்கண் எழுந்து, இரங்கும் – ஒலிக்கும், வருந்தும், அற்சிரக் காலையும் அரிதே – முன்பனிக் காலத்தில் அரிதாகும், காதலர்ப் பிரிதல் – நீ காதலரைப் பிரிதல், இன்று செல் தோழியரைத் தரூஉம் வாடையொடு – இன்று பிரிந்து செல்லும் தோழியரை செல்லாமல் கூட்டும் வாடைக்காற்றினால் (தரூஉம் – செய்யுளிசை அளபெடை), மயங்கு இதழ் மழைக் கண் – வருந்தும் இதழுடைய ஈரக் கண்கள், பயந்த தூதே – தூதை விடுத்தன (தூதே – ஏகாரம் அசை நிலை)

நற்றிணை 6, பரணர், குறிஞ்சித் திணை – தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது, தோழி கேட்கும்படி
நீர் வளர் ஆம்பல் தூம்புடைத் திரள் கால்
நார் உரித்தன்ன மதன் இல் மாமைக்,
குவளை அன்ன ஏந்து எழில் மழைக் கண்,
திதலை அல்குல், பெருந்தோள் குறுமகட்கு,
எய்தச் சென்று செப்புநர்ப் பெறினே,  5
‘இவர் யார்?’ என்குவள் அல்லள், முனாஅது
அத்தக் குமிழின் கொடு மூக்கு விளை கனி
எறி மட மாற்கு வல்சி ஆகும்
வல் வில் ஓரி கானம் நாறி,
இரும் பல் ஒலிவரும் கூந்தல்  10
பெரும் பேதுறுவள் யாம் வந்தனம் எனவே.

பாடல் பின்னணி:  இரவுக்குறி வேண்டிச் சென்ற தலைவன், தலைவியிடம் சென்று கூறுவாரை நான் பெறவில்லையே என்று வருந்திக் கூறியது.

பொருளுரைநீரில் வளரும் ஆம்பலின் துளையுடைய, நார் உரித்த தண்டு போல் அழகையுடையவள் என் காதலி.  உயர்ந்து மலரும் குவளை மலர்களை ஒத்தது அவளுடைய நீர் நிறைந்த கண்கள்.  தேமல் உடையது அவளுடைய அடி வயிறு. பெரிய தோளையுடைய இளம் பெண்ணான அவளிடம் யாராவது தூதாகச் சென்றால், அவரை நோக்கி, இவர் யார் என்று  கேட்க மாட்டாள்.  நாம் வந்திருக்கின்றோம் என்று பெரிதும் மகிழ்வாள்.  காட்டு வழியில் உள்ள குமிழ மரத்தில் உள்ள வளைந்த மூக்குடைய பழுத்தப் பழங்களை உணவாக உண்ணும் குதித்து விளையாடும் மடமைப்பொருந்திய மான்களுடைய காட்டில் உள்ள நறுமணத்தைக் கொண்டது அவளுடைய அடர்ந்த, கருமையான கூந்தல்.

குறிப்பு:  ஒப்புமை:  நற்றிணை 6 – அத்தக் குமிழின் கொடு மூக்கு விளை கனி, நற்றிணை 24 – விளவின் ஆட்டு ஒழி பந்தின் கோட்டு மூக்கு இறுபு, நற்றிணை 372 – பெண்ணைத் தேனுடை அழி பழம் வள் இதழ் நெய்தல் வருந்த மூக்கு இறுபு அள்ளல் இருஞ் சேற்று ஆழப் பட்டென, ஐங்குறுநூறு 213 – நறு வடி மாஅத்து மூக்கு இறுபு உதிர்த்த.  மூக்கு – பொ. வே. சோமசுந்தரனார் உரை, ஐங்குறுநூறு 213, மூக்கு – காம்பு.  இறைச்சிப் பொருள் – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – குமிழின் கனி மானுக்கு உணவாகும் என்றது யாம் வந்திருக்கின்றேம் என்று கூறும் அச் சொல்லானது நமது தலைவிக்கு மகிழ்வு அளிக்கும் என்றதாம்.  கடையெழு வள்ளல்கள் – ஆய், பாரி, காரி, ஓரி, அதிகன், பேகன், நள்ளி.  கு. வெ. பாலசுப்பிரமணியன் உரை – புணர்ச்சி விருப்பம் குறித்ததால் இப்பாட்டு குறிஞ்சியாயிற்று.

சொற்பொருள்:  நீர் வளர் ஆம்பல் – நீரில் வளரும் வெள்ளை ஆம்பல், தூம்புடை திரள் கால் – தூம்பு உள்ள திரண்ட தண்டின்,  நார் உரித்தன்ன – நாரை உரித்தாற்போல், மதன் இல் மாமை – செருக்கு இல்லாத மா நிறம், குவளை அன்ன – குவளை மலர்கள் போன்ற, ஏந்து – உயர்ந்த, எழில் – அழகு,  மழைக் கண் – நீர் நிறைந்த கண், திதலை அல்குல் – பசலைப் படர்ந்த அடி வயிறு, பெருந்தோள் – பெரிய தோள்கள், குறுமகட்கு – இளம் பெண்ணிடம், எய்தச் சென்று – தூதாகச் சென்று, செப்புநர்ப் பெறினே – சொன்னார்கள் என்றால் (பெறினே – ஏகாரம் அசைநிலை), இவர் யார் என்குவள் அல்லள் – ‘அவர் யார்?” என்று அவள் கேட்க மாட்டாள், முனாஅது – வெறுப்பு இன்றி (முனாஅது – அளபெடை), அத்த – காட்டு வழியில்,  குமிழின் – குமிழ மரத்தின் (Gmelina arborea), கொடு மூக்கு – வளைந்த மூக்குடைய, விளை கனி – பழுத்தப் பழம், எறி மட மாற்கு – குதித்து விளையாடும் மடமைப்பொருந்திய மான்களுக்கு, வல்சி ஆகும் – உணவு ஆகும், வல் வில் ஓரி – வலுவான வில்லையுடைய ஓரி, கானம் – காடு,  நாறி – நறுமணமுடையவாகி, இரும் – கருமை, பல் ஒலி வரும் கூந்தல் – அடர்ந்தக் கூந்தல், பெரும் பேதுறுவள் யாம் வந்தனம் எனவே – நாம் வந்திருக்கின்றோம் என்று பெரிதும் மகிழ்வாள் (யாம் – தன்மைப் பன்மை, வந்தனம் – தன்மைப் பன்மை, எனவே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 7, நல்வெள்ளியார், பாலைத் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
சூருடை நனந்தலைச் சுனை நீர் மல்கப்,
பெருவரை அடுக்கத்து அருவி ஆர்ப்பக்,
கல் அலைத்து இழிதரும் கடுவரல் கான்யாற்றுக்
கழை மாய் நீத்தம் காடு அலை ஆர்ப்பத்,
தழங்கு குரல் ஏறொடு முழங்கி வானம்  5
இன்னே பெய்ய மின்னுமால் தோழி,
வெண்ணெல் அருந்திய வரி நுதல் யானை
தண் நறுஞ்சிலம்பில் துஞ்சும்
சிறியிலைச் சந்தின வாடு பெருங்காட்டே.

பாடல் பின்னணி:  களவொழுக்கம் வெளிப்பட்ட பின்பும் திருமணம் செய்து கொள்ளாமல் தலைவன் பொருள்தேடி நெடுந்தூரம் பிரிந்து போனான்.  அந்நிலை ஆற்றாத தலைவிக்குத் தோழி கூறியது.

பொருளுரைதோழி!  வெள்ளை அரிசியின் நெல்லை (ஐவன அரிசியின் நெல்லை) உண்ட நெற்றியில் வரியுடைய யானை, குளிர்ச்சியுடைய நறுமண மலைச்சரிவில் உறங்கும் சிறிய இலைகளையுடைய சந்தன மரங்கள் வாடிய பெரிய காட்டில், அச்சத்தை உடைய (கடவுள்கள் உறையும்) அகன்ற அகன்ற இடத்தில் உள்ள சுனைகளில் நீர் நிறையவும், பெரிய மூங்கில்களையுடைய மலைச்சரிவில் அருவிகள் ஆரவாரிக்கவும், கற்களைப் புரட்டிக்கொண்டு ஓடி வருகின்ற மிக்க விரைவையுடைய காட்டு ஆற்றின் ஓடக்கால்கள் நிலைபெறாத ஆழ்ந்த நீர்ப்பெருக்குக் காட்டில் பரந்து அலைகளுடன் ஒலிக்க, முழங்குகின்ற ஓசையையுடைய இடியுடன் முழங்கி முகில்கள் மழை பெய்ய வேண்டி மின்னும். கார்காலம் வருவதைக் கண்டதும் நம் தலைவர் வந்து உன்னை வரைந்துக் கொள்வார்!  நீ வருந்தாதே!

குறிப்பு:  ஒளவை துரைசாமி உரை – இவர் மதுரை நெல்வெள்ளியார் என்று கோடற்கும் இடமுண்டு.  சூருடை (1) – ஒளவை துரைசாமி உரை – தெய்வம் உறையும், சூர் தெய்வம், அச்சமுமாம், பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – அச்சத்தை உடைய.  பெருவரை அடுக்கத்து (2) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை, பொ. வே. சோமசுந்தரனார் உரை – பெரிய மூங்கில்களை உடைய மலைப்பக்கத்தில், ஒளவை துரைசாமி உரை – பெரிய மலைப்பக்கங்களில்.  மூங்கில் நீரில் மறைதல் கழை மாய் நீத்தம் – அகநானூறு 72, நற்றிணை 7, கழை அழி நீத்தம் – அகநானூறு 341, கழை நிலை பெறாஅக் காவிரி நீத்தம் – அகநானூறு 6.  இறைச்சிப் பொருள் (1) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – வாடுகின்ற பெருங்காட்டிலே அக்காடு தழைப்ப மழை பெய்யத் தொடங்கும் என்றது, வருந்திய நின்மாட்டு அருள் செய்ய வேண்டி இன்னே வருவர் என்பதாம்.  இறைச்சிப் பொருள் (2) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – நெல்லருந்திய யானை கவலைகெடத் துயிலும் என்றது, காதலனோடு இன்பம் நுகர்ந்த நீ கவற்சியின்றி சேக்கையிலே துயிலப் பெறுவாய் என்பது.  நனந்தலை – அகன்ற இடம், நனம் – நனவே களனும் அகலமும் செய்யும் (தொல்காப்பியம், உரியியல் 80).

சொற்பொருள்:  சூருடை நனந்தலை சுனை நீர் மல்க – அச்சத்தை உடைய (கடவுள்கள் உறையும்) அகன்ற அகன்ற இடத்தில் உள்ள சுனைகளில் நீர் நிறையவும், கடவுள் உடைய அகன்ற இடத்தையுடைய சுனைகளில் நீர் நிறையவும், பெருவரை அடுக்கத்து – பெரிய மலைப்பக்கங்களில், பெரிய மூங்கில்களையுடைய மலைப்பக்கத்தில், அருவி ஆர்ப்ப – அருவிகள் ஆரவாரிக்க, கல் அலைத்து இழிதரும் கடுவரல் கான் யாற்று – கற்களைப் புரட்டிக்கொண்டு ஓடி வருகின்ற மிக்க விரைவையுடைய காட்டு ஆற்றின், கழை மாய் நீத்தம் – ஓடக்கால்கள் நிலைபெறாத ஆழ்ந்த நீர்ப்பெருக்கு, காடு அலை ஆர்ப்ப – காட்டில் பரந்து அலைகளுடன் ஒலிக்க, தழங்கு குரல் ஏறொடு முழங்கி – முழங்குகின்ற ஓசையையுடைய இடியுடன் முழங்கி, வானம் இன்னே பெய்ய மின்னுமால் தோழி – முகில்கள் மழை பெய்ய வேண்டி மின்னும், (மின்னுமால் – ஆல் அசைநிலை), தோழி – தோழி, வெண்ணெல் அருந்திய வரி நுதல் யானை – வெள்ளை அரிசியின் நெல்லை (ஐவன அரிசியின் நெல்லை) உண்ட நெற்றியில் வரியுடைய யானை, தண் நறுஞ்சிலம்பில் துஞ்சும் – குளிர்ச்சியுடைய நறுமண மலைச்சரிவில் உறங்கும், சிறியிலைச் சந்தின வாடு பெருங்காட்டே – சிறிய இலைகளையுடைய சந்தன மரங்கள் வாடிய பெரிய காட்டில் (சிறியிலை – சிறிய இலை, தொகுத்தல் விகாரம், பெருங்காட்டே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 8, பாடியவர் பெயர் கிடைக்கவில்லை, குறிஞ்சித் திணை – தலைவன் சொன்னது
அல்கு படர் உழந்த அரி மதர் மழைக்கண்,
பல்பூம் பகைத் தழை நுடங்கும் அல்குல்,
திரு மணி புரையும் மேனி மடவோள்
யார் மகள் கொல்? இவள் தந்தை வாழியர்!
துயரம் உறீஇயினள் எம்மே; அகல்வயல்  5
அரிவனர் அரிந்தும் தருவனர்ப் பெற்றும்
தண் சேறு தாஅய் மதனுடை நோன் தாள்
கண் போல் நெய்தல் போர்வில் பூக்கும்
திண் தேர்ப் பொறையன் தொண்டி
தன் திறம் பெறுக இவள் ஈன்ற தாயே.  10

பாடல் பின்னணி:  இயற்கைப் புணர்ச்சியின் இறுதிக்கண் தலைவியை அவள் தோழியருடன் கண்ட தலைவன் இவள் எனக்கு எய்தற்கு அரியாளாம் என ஆற்றானாகி, அவள் பெற்றோரை வாழ்த்தியது.

பொருளுரைமிகுந்த துன்பத்தில் உழந்த செவ்வரி படர்ந்த மதர்த்த கண்களையும் பலவகை மலர்களுடன் மாறுபடத் தொடுக்கப்பட்ட தழையுடன் அசையும் அல்குலையும், அழகிய நீலமணியை ஒத்த மேனியையும் உடைய இந்த இளம்பெண் யார் மகள்?  இவளுடைய தந்தை நீடு வாழ்வாராக!  அசையாத நெஞ்சையுடைய எமக்கே இவள் துயரம் செய்தாள்.  அகன்ற வயல்களில் உழவர்களால் அரியப்பட்டும் நெற்கதிரை எடுப்பவர்களால் கொண்டு வரப்பட்டும், குளிர்ந்த சேறு பரவிய அழகிய வலிய தண்டினையுடைய கண்களைப் போன்ற நெய்தல் மலர்கள் நெற்போர்களில் பூக்கும், திண்ணிய தேரையுடைய பொறையனின் தொண்டி நகரம் போன்ற சிறப்பினை இவளைப் பெற்ற தாய் பெருவாளாக!

குறிப்பு:  புலவரின் பெயர் – ஒளவை துரைசாமி உரை – இச்சான்றோர் பெயர் அச்சுப்படிகளில் காணப்படவில்லை.  ஆயினும் புதுப்பட்டி ஏட்டிலும் தேவர் ஏட்டிலும் கண்ணகனார் என்ற குறிப்பு ஒன்று துறைக்கூற்றின் இறுதியில் காணப்படுகின்றது.  ஒளவை துரைசாமி உரை – ‘புணர்தல் பிரிதல்’ (தொல்காப்பியம், அகத்திணையியல் 16) என்ற நூற்பா உரையின்கண், இப்பாட்டைக் காட்டி இது ‘புணர்தல் நிமித்தம்’ எனவும், மெய்தொட்டுப் பயிறல் எனத் தொடங்கும் களவியல் நூற்பா உரையில் இதனைக் காட்டி, ‘இது நீங்கியவழிப் பிறந்த வருத்தம் கூறியது’ எனவும் கூறுவர் நச்சினார்க்கினியர்.  உள்ளுறை – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – நெய்தல் அரிவோரால் அரிந்து கொணரப்பட்டுக் கதிர்ப் போரினும் மலரும் என்றதனாலே, இவள் யாண்டுச் செல்லினும் ஆண்டுச் சிறப்பு எய்துக என்றவாறு.  உள்ளுறை – ஒளவை துரைசாமி உரை – அரிவனர் அரிந்து கொணர்ந்து தொகுக்கப்பட்ட நெற்போர்வின்கண் தான் படினும் நெய்தல் கண் போல் மலரும் என்றது, கூர்வேல் இளையர் பலர் சூழ்தரப் போந்து அவரிற் பிரிந்து தனிப்பட்ட யான், இவண் இவளை எய்தியது போலவே ஆயமகளிர் பலர் சூழ்வரப் போந்து அவரிற் பிரிந்து தனிமையுற்று இவண் எய்தினாளாயினும் தன் மலர்போன்ற கண்களை விழித்துப் பொதுவும் சிறப்புமாகிய இருநோக்கமும் எனக்கு அருளி மகிழ்வித்தாள் என்றது.  வரலாறு:  பொறையன், தொண்டி.

சொற்பொருள்:  அல்கு படர் உழந்த – மிகுந்த துன்பத்தில் உழந்த, அரி மதர் மழைக்கண் – செவ்வரி படர்ந்த மதர்த்த (செருக்கான, களிப்பு மிக்க, செழுமையுடைய) கண்கள், பல்பூம் பகைத் தழை நுடங்கும் அல்குல் – பலவகை மலர்களுடன் மாறுபடத் தொடுக்கப்பட்ட தழையுடன் அசையும் அல்குல் (அல்குல் – இடை, இடைக்குக் கீழ் உள்ள பகுதி), திரு மணி புரையும் மேனி மடவோள் – அழகிய நீலமணியை ஒத்த மேனியை உடைய இளம்பெண் (புரை – உவமை உருபு), யார் மகள் கொல் – யார் மகள் இவள், இவள் தந்தை வாழியர் – இவளுடைய தந்தை நீடு வாழ்வாராக, துயரம் உறீஇயினள் எம்மே – எமக்கு இவள் துயரம் செய்தாள் (உறீஇயினள் – அடைவித்தவள், செய்யுளிசை அளபெடை, எம்மே – எம் தன்மைப் பன்மை, ஏகாரம் தெளிவின்கண் வந்தது), அகல்வயல் அரிவனர் அரிந்தும் தருவனர்ப் பெற்றும் – அகன்ற வயல்களில் உழவர்களால் அரியப்பட்டும் நெற்கதிரை எடுப்பவர்களால் கொண்டு வரப்பட்டும், தண் சேறு தாஅய் – குளிர்ந்த சேறு பரவ (தாஅய் – செய்யுளிசை அளபெடை), மதனுடை நோன் தாள் – அழகுடைய வலிய தண்டு, கண் போல் நெய்தல் – கண்களைப் போன்ற நெய்தல் மலர்கள், போர்வில் பூக்கும் – நெற்போரில் பூக்கும், திண் தேர்ப் பொறையன் தொண்டி – திண்ணிய தேரையுடைய பொறையனின் தொண்டி நகரம், தன் திறம் பெறுக இவள் ஈன்ற தாயே – அதைப்போன்ற சிறப்பினை இவளைப் பெற்ற தாய் பெருவாளாக (தாயே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 9, சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோ, பாலைத் திணை – தலைவன் தலைவியிடம் சொன்னது
அழிவிலர் முயலும் ஆர்வ மாக்கள்
வழிபடு தெய்வம் கண் கண்டாஅங்கு,
அலமரல் வருத்தம் தீர, யாழ நின்
நல மென் பணைத்தோள் எய்தினம் ஆகலின்,
பொரிப் பூம் புன்கின் எழில் தகை ஒண் முறி  5
சுணங்கு அணி வன முலை அணங்கு கொளத் திமிரி,
நிழல் காண்தோறும் நெடிய வைகி,
மணல் காண்தோறும் வண்டல் தைஇ,
வருந்தாது ஏகுமதி வால் எயிற்றோயே,
மா நனை கொழுதி மகிழ் குயில் ஆலும்  10
நறுந்தண் பொழில கானம்
குறும் பல் ஊர, யாம் செல்லும் ஆறே.

பாடல் பின்னணி:  உடன்போக்கில் தலைவியை அழைத்துச் செல்லும் தலைவன் கூறியது.

பொருளுரைவெள்ளைப் பற்களை உடையவளே ! மா மரத்தின் அரும்புகளைக் கொத்தி மகிழ்ந்து குயில்கள் பாடும் நறுமணம் உடைய குளிர்ந்த சோலைகளை உடையது காடு.  நாம் செல்லும் வழியில் சிறிய பல ஊர்கள் உள்ளன.  அழிவு இல்லாத செயல்களைச் செய்யும் ஊக்கமுடைய மக்கள், தாம் வணங்கும் கடவுளைத் தங்கள் கண்முன் கண்டாற்போல், எம் சுழற்சியுடைய துன்பம் நீங்கும்படி, உன்னுடைய அழகிய மெல்லிய மூங்கில் போன்ற தோள்களை யாம் பெற்றோம் . ஆதலால், பொரியை ஒத்த புன்க மரத்தின் அழகிய ஒளியுடைய தளிர்களைச் சுணங்கு உடைய அழகிய முலையில் அதன் அழகு மேலும் சிறக்குமாறு அப்பி, நிழலைக் காணும்பொழுதெல்லாம் நெடிது தங்கி மணலைக் காணும்பொழுதெல்லாம் சிற்றில் இழைத்து வழி நடை வருத்தத்தைப் போக்கி எம்முடன் செல்வாயாக.

குறிப்பு:  ஒளவை துரைசாமி உரை – உடன்போக்கில் தலைவன் இடைச்சுரத்திற் கூறுதற்கு இதனைக் காட்டுவர் இளம்பூரணர்.  ‘ஒன்றாத் தமரினும்’ (தொல்காப்பியம், பொருளதிகாரம் 41) எனத் தொடங்கும் நூற்பா உரையில் ‘அப்பாற்பட்ட ஒரு திறத்தானும்’ என்றதனானே தலைவியிடத்துத் தலைவன் கூறின பலவுங் கொள்க, என்றுரைத்து, இப்பாட்டைக் காட்டி, ‘இது புணர்ச்சி மகிழ்ந்தபின் வழிவந்த நன்மை கூறி வருந்தாது ஏகென்றது என்பர் நச்சினார்க்கினியர்.  ‘இனி இடைச்சுர மருங்கிற் கிழவன் கிழத்தியொடு வழக்கியலாணையிற் கிளத்தற்கும் உரியவன்’ (தொல்காப்பியம், பொருளதிகாரம் 195–6) என்பதன் உரையில் இப்பாட்டினைக் காட்டி, இதனுள் ‘வருந்தாது ஏகுமதி; எனவே வழிபடு தெய்வம் கட்கண்டால் விடுவார் இல்லாதது போல, நின்னை விடுதல் எனக்கு அறமன்று எனக் கூறி மெல்லெனச் செல்க என மருட்டிக் கூறியவாறு காண்க’ என்பர் பேராசிரியர்.  அணங்கு கொள (6) – H. வேங்கடராமன் – அதன் அழகு மேன்மையுறுமாறு, ஒளவை துரைசாமி – தெய்வம் வீற்றிக்கிருக்குமாறு, பின்னத்தூர் – வீற்றிருக்கும் தெய்வம் சிறக்குமாறு, ச. வே. சுப்ரமணியன் – கண்டாரை வருத்தும்படி உள்ள.  நற்றிணை 76 – வருமழை கரந்த வால் நிற விசும்பின் நுண் துளி மாறிய உலவை அம் காட்டு ஆல நீழல் அசைவு நீக்கி அஞ்சுவழி அஞ்சாது, அசைவழி அசைஇ வருந்தாது ஏகுமதி, வால் இழைக் குறுமகள்!  இம்மென் பேர் அலர் நும் ஊர்ப் புன்னை வீ மலர் உதிர்ந்த தேன் நாறு புலவின் கானல் வார் மணல் மரீஇ கல் உறச் சிவந்த நின் மெல் அடி உயற்கே.  மதி – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம், சொல்லதிகாரம், இடையியல் 26).  நெற்பொரியைப் போல் புன்கு – அகநானூறு 116 – பொரி எனப் புன்கு அவிழ் அகன் துறை, பொரிப் பூம் புன்கின் அழல் தகை ஒண் முறி, நற்றிணை 9 – பொரிப் பூம் புன்கின் அழல் தகை ஒண் முறி, குறுந்தொகை 53 – நனை முதிர் புன்கின் பூத்தாழ் வெண்மணல் வேலன் புனைந்த வெறி அயர் களந்தொறும் செந்நெல் வான் பொரி சிதறியன்ன, குறுந்தொகை 341 – பொரிப் பூம் புன்கொடு, ஐங்குறுநூறு 347 – பொரிப்பூம் புன்கின், ஐங்குறுநூறு 368 – எரிப்பூ இலவத்து ஊழ் கழி பன் மலர் பொரிப்பூம் புன்கின் புகர் நிழல் வரிக்கும்.  அலமரல் – அலமரல் தெருமரல் ஆயிரண்டும் சுழற்சி (தொல்காப்பியம், சொல்லதிகாரம் 310).

சொற்பொருள்:  அழிவு இலர் முயலும் ஆர்வ மாக்கள் – அழிவு இல்லாத செயல்களைச் செய்யும் ஊக்கமுடைய மக்கள், வழிபடு தெய்வம் கண் கண்டாஅங்கு – தாம் வணங்கும் கடவுளைக் கண்முன் கண்டாற்போல் (கண்டாஅங்கு – அளபெடை), அலமரல் வருத்தம் தீர – சுழற்சியுடைய துன்பம் நீங்கும்படி, யாழ – அசைநிலை, நின் நல மென் பணைத்தோள் எய்தினம் ஆகலின் – உன்னுடைய அழகிய மெல்லிய மூங்கில் போன்ற தோள்களைப் பெற்றோம் ஆகவே, பொரிப் பூம் புன்கின் எழில் தகை ஒண் முறி – பொரியை ஒத்த புன்க மரத்தின் அழகிய ஒளியுடைய தளிர்களை (புன்கு – புங்கம், புன்கம், Indian Beech tree, Pongamia Glabra or Pongamia Pinnata), சுணங்கு அணி வன முலை அணங்கு கொளத் திமிரி – சுணங்கு உடைய அழகிய முலையில் அதன் அழகு சிறக்குமாறு அப்பி, நிழல் காண்தோறும் நெடிய வைகி மணல் காண்தோறும் வண்டல் தைஇ – நிழலைக் காணும் பொழுதெல்லாம் நெடிது தங்கி மணலைக் காணும் பொழுதெல்லாம் சிற்றில் இழைத்து, (தைஇ – சொல்லிசை அளபெடை), வருந்தாது ஏகுமதி – வருந்தாமல் என்னுடன் செல்லுவாயாக (மதி – முன்னிலை அசை), வால் எயிற்றோயே – வெள்ளைப் பற்களை உடையவளே (ஏகாரம் அசைநிலை), மா நனை கொழுதி மகிழ் குயில் ஆலும் நறும் தண் பொழில கானம் – மா மரத்தின் அரும்புகளைக் கொத்தி மகிழ்ந்து குயில்கள் பாடும் நறுமணம் உடைய குளிர்ந்த சோலைகளை உடையது இக்காடு, குறும் பல் ஊர யாம் செல்லும் ஆறே – நாம் செல்லும் வழியில் சிறிய பல ஊர்கள் உள்ளன (ஆறே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 10, பாடியவர் பெயர் கிடைக்கவில்லை, பாலைத் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
அண்ணாந்து ஏந்திய வன முலை தளரினும்,
பொன் நேர் மேனி மணியின் தாழ்ந்த
நல் நெடுங்கூந்தல் நரையொடு முடிப்பினும்,
நீத்தல் ஓம்புமதி, பூக்கேழ் ஊர!
இன் கடுங்கள்ளின் இழை அணி நெடுந்தேர்க்  5
கொற்றச் சோழர் கொங்கர்ப் பணீஇயர்
வெண்கோட்டு யானைப் போஒர் கிழவோன்
பழையன் வேல் வாய்த்தன்ன, நின்
பிழையா நல் மொழி தேறிய இவட்கே.

பாடல் பின்னணி:  தலைவி விரும்பியவாறு தோழி இருவரையும் ஒருப்படுத்தி, தலைவியை தலைவன்பால் சேர்த்து, ‘இவளை நன்றாக பாதுகாப்பாயாக’ என்று தலைவனிடம் கூறியது.

பொருளுரைமலர்கள் நிறைந்த பொழில்களை உடைய ஊரனே!  இனிய கடுப்புடைய கள்ளையும் அணி செய்யப்பட்ட நெடிய தேர்களையுடைய வெற்றியுடைய சோழ மன்னர்கள் கொங்கு நாட்டவரை ஒடுக்கும் பொருட்டு, வெண்மையான கோடுகளைக் கொண்ட களிற்று யானைகளையுடைய போஒர் என்ற ஊர்க்கு உரிய தலைவனான தளபதி பழையன் என்பவன் எறிந்த வேல் தவறாமல் வெற்றி அளித்தாற்போல், உன்னுடைய பிழையில்லாத நல்ல சொற்களைக் கேட்டுத் தெளிந்த இவளுக்கு, இவளுடைய நிமிர்ந்து உயர்ந்த அழகிய முலைகள் தளர்ந்தாலும், அவளுடைய பொன்னைப் போன்ற மேனியில் நீலமணியின் கரிய நிறத்துடன் தாழ்ந்த இருக்கும் நல்ல நீண்ட கூந்தல் நரைத்து முடியப்பட்ட போதும், நீ பாதுகாப்பாக இருப்பாயாக!

குறிப்பு:  ஒளவை துரைசாமி உரை – ‘இறப்பே நிகழ்வே எதிரதென்னும்’ (தொல்காப்பியம், பொருளதிகாரம் 503) என்று தொடங்கும் நூற்பா உரையின்கண் இப்பாட்டைக் காட்டி, ‘நிகழ்காலம் இளமைப்பருவம் என்பது தோன்ற வந்தது; இதனுள் நீத்தல் ஓம்புமதி என்பது எதிர்காலம் குறித்து நின்றது’ என்பர் இளம்பூரணர்.    ‘தானே சேறலும்’ (தொல்காப்பியம், பொருளதிகாரம் 27) என்று தொடங்கும் நூற்பா உரையில் ‘கொற்றச் சோழர்…….தேறிய இவட்கே’ என்பதைக் காட்டி, ‘இது குறுநில மன்னர் போல்வார் சென்றமை தோன்றக் கூறியது’ என்றும் ‘தலைவரு விழும நிலை’ (தொல்காப்பியம், பொருளதிகாரம் 39) என்ற நூற்பா உரையில் இதனைக் காட்டி, ‘இந்நற்றிணை தலைவியைப் பாதுகாக்க எனத் தோழி கையடுத்தது’ என்றும் கூறுவர் நச்சினார்க்கினியர்.  வரலாறு:  போஒர், பழையன்.  பழையன்:  அகநானூறு 186 – மாரி அம்பின் மழைத்தோல் பழையன் காவிரி வைப்பின் போஒர் அன்ன.  மதி – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம், சொல்லதிகாரம், இடையியல் 26).  பூக்கேழ் ஊர (4) – ஒளவை துரைசாமி உரை – பூக்கேழ் ஊர எனப் பூக்களைக் காட்டிக் கூறியது, பூக்கள் தேனை உண்ணும் வண்டினத்தால் தேன் குன்றியதும் கைவிடப்படுதல் போல, நீயும் இவளது இளநலம் வாடியபோது இவளைக் கைவிடற்பாலையல்லை என்றதற்கு.  பூக்கேழ் ஊரனாகலின் நின்னூர்க்கண் பூவோரன்ன மகளிர்க்குக் குறையில்லை ஆகலின், நீ வண்டோரனையையாய் மாறுதல் கூடாது என்பது விளங்க நீங்கற்க என்னாமல் ஓம்புமதி என வற்புறுத்தினாள் என்றுமாம்.  நீலமணிபோல் பெண்ணின் கூந்தல்:  அகநானூறு 8 – மணி ஏர் ஐம்பால், நற்றிணை 10 – மணியின் தாழ்ந்த நல் நெடுங்கூந்தல், நற்றிணை 133 – மணி ஏர் ஐம்பால், 214 – மணி இருங்கதுப்பு, 245 – மணி மருள் ஐம்பால், 337 – மணி மருள் ஐம்பால், 366 – மணி ஏர் ஐம்பால், 374 – வீழ் மா மணிய புனை நெடுங்கூந்தல், கலித்தொகை 22 – மணி ஒளி விட்டன்ன ஐவகை, கலித்தொகை 77 – மாசு அற மண்ணுற்ற மணி ஏசும் இருங்கூந்தல், பரிபாடல் 10, குறிஞ்சிப்பாட்டு 69 – பொன் எறி மணியின் சிறுபுறம் தாழ்ந்த எம் பின்னிருங் கூந்தல்.

சொற்பொருள்:  அண்ணாந்து ஏந்திய வன முலை தளரினும் – நிமிர்ந்து உயர்ந்த அழகிய முலைகள் தளர்ந்தாலும், பொன் நேர் மேனி மணியின் தாழ்ந்த நல் நெடுங்கூந்தல் நரையொடு முடிப்பினும் – பொன்னைப் போன்ற மேனியில் நீலமணியின் கரிய நிறத்துடன் தாழ்ந்த நல்ல நீண்ட கூந்தல் நரைத்து முடியப்பட்ட போதும், நீத்தல் ஓம்புமதி – இவளைக் கைவிடாது இருப்பாயாக (மதி – முன்னிலை அசை), பூக்கேழ் ஊர – மலர்கள் நிறைந்த பொழில்களை உடைய ஊரனே (ஊர – அண்மை விளி), இன் கடுங்கள்ளின் இழை அணி நெடுந்தேர்க் கொற்றச் சோழர் – இனிய கடுப்புடைய கள்ளையும் அணி செய்யப்பட்ட நெடிய தேர்களையுமுடைய வெற்றியுடைய சோழ மன்னர்கள், கொங்கர்ப் பணீஇயர் வெண்கோட்டு யானை போஒர் கிழவோன் பழையன் வேல் வாய்த்தன்ன – கொங்கு நாட்டவரை ஒடுக்கும் பொருட்டு வெண்மையான கோடுகளைக் கொண்ட களிற்று யானைகளையுடைய போஒர் என்ற ஊர்க்கு உரிய தலைவனான பழையன் என்பவன் எறிந்த வேல் தவறாமல் வெற்றி அளித்தாற்போல் (பணீஇயர் – அளபெடை, கோடு = மருப்பு, தந்தம்), நின் பிழையா நல் மொழி தேறிய இவட்கே – உன்னுடைய பிழையில்லாத நல்ல சொற்களைக் கேட்டுத் தெளிந்த இவளுக்கு (பிழையா – ஈறுகெட்ட எதிர்மறை வினையெச்சம், இவட்கே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 11, உலோச்சனார், நெய்தல் திணை – தோழி தலைவியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
பெய்யாது வைகிய கோதை போல
மெய் சாயினை, அவர் செய் குறி பிழைப்ப
உள்ளி நொதுமலர் நேர்பு உரை தெள்ளிதின்
வாரார் என்னும் புலவி உட்கொளல்,
ஒழிக மாள நின் நெஞ்சத்தானே,  5
புணரி பொருத பூ மணல் அடைகரை
ஆழி மருங்கின் அலவன் ஓம்பி
வலவன் வள்பு ஆய்ந்து ஊர,
நிலவு விரிந்தன்றால் கானலானே.

பாடல் பின்னணி:  காவல் மிகுதியால் தலைவனைக் கூடப் பெறாமையால் ஆற்றாது வருந்திய தலைவிக்குக் கூறுவாளாய், சிறைப்புறத்திருந்த தலைவன் வரைவொடு வருமாறு தோழி சொல்லியது.

பொருளுரை:  அவருடையக் குறியைத் தப்பியதால் (குறிப்பிட்டபடி அவரைச் சந்திக்க முடியாமல் போனதால்), உன்னுடைய உடல் அணியாது தங்கிப் போன மலர் மாலையைப்போல் தளர்ந்து விட்டது.  பழிச்சொற்கள் கூறுபவர்களை நினைத்து நீ வருந்துகின்றாய்.  உறுதியாக அவர் வர மாட்டார் என்று நீ நினைத்து ஊடல் கொண்டாய். உன் நெஞ்சில் எழும் இந்த எண்ணங்களை ஒழித்து விடு.  அலைகள் மோதியதால் குவிந்த பூக்கள் உடைய மணல் நிறைந்த கடற்கரைக் கானலில், அவருடைய தேர் வரும். அவருடைய தேரோட்டி நண்டுகளின் மேல் தேரின் சக்கரங்கள் (தேரின் கால்கள்) படாதவாறு தேரை கவனத்துடன் செலுத்தி, நிலவொளி நிறைந்த கடற்கரையில் அவருடன் வருவான்.

குறிப்பு:  ஒளவை துரைசாமி உரை – இஃது அலர் அறிவுறுத்து வரைவு கடாவும் ஒரு நெறி.  பூ மணல் (6) – ஒளவை துரைசாமி உரை – பூக்கள் விழுந்து கிடக்கும் மணல், பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – இளமணல்.   இறைச்சி – கு. வெ. பாலசுப்பிரமணியன் உரை – அலவனுக்கு ஊறு ஏற்படாதவாறு தேர் செலுத்தப்படுமென்றது தலைவி பழிச்சொல்லால் வருந்தாத வண்ணம் வரைந்து கொள்வான் என்பதாம்.

சொற்பொருள்:  பெய்யாது – அணியாது, வைகிய – தங்கிப் போன, கோதை போல – மாலையைப்போல், மெய் – உடல், சாயினை – நீ தளர்ந்தாய், அவர் செய் குறி – அவர் கூறியக் குறி, பிழைப்ப – தப்பியதால், உள்ளி – நினைத்து, நொதுமலர் – வம்பு பேசுபவர்கள், நேர்பு உரை – பழிச்சொல், தெள்ளிதின் – தெளிவாக, வாரார் – அவர் வர மாட்டார், என்னும் – என்று, புலவி – ஊடல், உட்கொளல் – செய்யாதே, ஒழிக – ஒழித்து விடு, மாள – முன்னிலை அசை, நின் நெஞ்சத்தானே – உன்னுடைய நெஞ்சத்தில் (நெஞ்சத்தானே – ஏகாரம் அசை நிலை), புணரி பொருத – அலைகள் மோதும், பூ மணல் – மலர் நிறைந்த மணல், அழகிய மணல், மென்மையான மணல், அடைகரை – மணல் நிறைந்த கரை, நீர் நிறைந்த கரை, ஆழி மருங்கின் – தேர்ச்சக்கரத்தின் அருகில், தேர்க்காலின் அருகில், கடற்கரை அருகில், அலவன் – நண்டு, ஓம்பி – பாதுகாத்து, வலவன் – தேரோட்டி, வள்பு – கடிவாள வார், ஆய்ந்து ஊர – கவனத்துடன் செலுத்தி, நிலவு விரிந்தன்றால் கானலானே – கடற்கைக் கானலில் நிலவொளி படரும் பொழுது (விரிந்தன்றால் = விரிந்தன்று + ஆல் , ஆல் அசைநிலை, கானலானே – ஏகாரம் அசை நிலை)

நற்றிணை 12, கயமனார், பாலைத் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
விளம்பழம் கமழும் கமஞ்சூல் குழிசிப்
பாசம் தின்ற தேய் கால் மத்தம்
நெய் தெரி இயக்கம் வெளில் முதல் முழங்கும்
வைகு புலர் விடியல் மெய் கரந்து, தன் கால்
அரி அமை சிலம்பு கழீஇ, பல் மாண்  5
வரி புனை பந்தொடு வைஇய செல்வோள்
‘இவை காண்தோறும் நோவர் மாதோ,
அளியரோ அளியர் என் ஆயத்தோர்’ என
நும்மொடு வரவு தான் அயரவும்,
தன் வரைத்து அன்றியும் கலுழ்ந்தன கண்ணே.  10

பாடல் பின்னணி:  தலைவனோடு தலைவி செல்லத் தோழி உடம்படுத்தினாள்.  பின்பு தலைவியிடம் அவ்வுடன்போக்கு இப்போது வேண்டாம் என்று நிறுத்தினாள்.  தலைவனிடம் சென்று, ‘தலைவி உன்னுடன் வர உடன்பட்டாள்.  ஆனால் தோழியர் நோகுவர் என வருந்தினாள்’ என்று அச்செலவைத் தவிர்த்தாள்.  திருமணத்திற்கு முயல்க என அறிவுறுத்துகின்றாள்.

பொருளுரை:  பெரிய  தயிர்ப்பானையில் உள்ள நாற்றத்தைப் போக்க விளாம்பழத்தை இட்டு வைத்துள்ளனர்.  அதன் மணம் கமழ்கின்றது. தயிர்ப்பானையைத் தயிர் கடையும் கயிறு ஆடி தேய்த்ததால், மத்தின் தண்டு தேய்ந்திருக்கின்றது.  வெண்ணை எடுக்கக் கடைவதால் அதன் ஓசை அதிகாலையில் தூணின் அடியிலிருந்து  முழங்கும். அப்பொழுது அவள் தன் உடம்பை மறைத்து, காலில் உள்ள சிலம்பைக் கழற்றினாள்.  அதையும் வரியுடைய பந்தையும் ஒருசேர வைக்கச் சென்றாள்.  தன் தோழிமார் இதனைக் கண்டால் வருந்துவார்களே என்று நினைத்தாள்.  அவள் கண்கள், அவளுடைய கட்டுப்பாட்டையும் மீறி கண்ணீரைச் சொரிந்தன.  ஆனாலும் உன்னோடு வருவதற்குத் தான் அவள் விரும்புகின்றாள்.

குறிப்பு:  ஒளவை துரைசாமி உரை – ‘தலைவரு விழும நிலை’ (தொல்காப்பியம், பொருளாளகாரம் 39) என்று தொடங்கும் நூற்பா உரையின்கண் இதனைக் காட்டி, ‘இந் நற்றிணை போக்குத் தவிர்ந்ததாம்’ என்றும், ‘தாயத்தினடையா’ (தொல்காப்பியம், பொருளாளகாரம் 25) என்ற நூற்பா உரையில் ‘தன் கால் அரி அமை சிலம்பு கழீஇ, பல் மாண் வரி புனை பந்தொடு வைஇய செல்வோள் ‘இவை காண்தோறும் நோவர் மாதோ’ என்ற இப்பகுதியைக் காட்டி, ‘என்பதும் இதன்கண் அடங்கும்’ என்று கூறுவர் நச்சினார்க்கினியர்.  இஃது உடன்போக்குத் தவித்தற்பொருட்டுக் கூறியதென்பர் இளம்பூரணர். பாசம் தின்ற (2) – ஒளவை துரைசாமி உரை – பசிய நாரால் திரிக்கப்பட்டுப் பசுமை நிறம் படிந்திருப்பது தோன்றப் பாசம் என்றார்.  கயிறு என்பது வடமொழியில் பாசம் எனப்படுதல் பற்றிப் பாசம் என்றார் என்பாருமுளர்.  வெளில் முதல் முழங்கும் (3) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – தறியடியில் ஓசை முழங்குகின்ற, ஒளவை துரைசாமி உரை – மன்றுவெளி காறும் முழங்கும், நாட்காலையில் ஊர் ஆனிரைகள் வந்து தொகும் வெளியிடம், இனி இதை தூண் எனக் கோடலும் உண்டு.  வரிப் பந்து – நற்றிணை 12 – வரி புனை பந்தொடு – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை, ஒளவை துரைசாமி உரை – வரிந்து புனையப்பட்ட பந்தொடு, திருமுருகாற்றுப்படை 68 – வரிப் புனை பந்தொடு – பொ. வே. சோமசுந்தரனார் உரை – நூலால் வரிந்து புனையப்பட்ட பந்தும், நச்சினார்க்கினியர் உரை – நூலால் வரிந்து புனையப்பட்ட பந்தும், வை. மு. கோபாலகிருஷ்ணமாச்சாரி  உரை – நூலால் வரிந்து புனையப்பட்ட பந்தோடு, கலித்தொகை 51 – வரிப் பந்து – நச்சினார்க்கினியர் உரை – வரியினையுடைய பந்து, பரிபாடல் 9 – வரிப் பந்து – பொ. வே. சோமசுந்தரனார் உரை – வரியினையுடைய பந்து, பெரும்பாணாற்றுப்படை 333 – வரிப்பந்து – பொ. வே. சோமசுந்தரனார் உரை – நூலால் வரியப்பட்ட பந்து.  தலைவி பந்துடன் விளையாடுதல் – புலவர் கயமனார் எழுதிய நற்றிணை 12, 305, 324 மற்றும் குறுந்தொகை 396 ஆகிய பாடல்களில் தலைவி பந்துடன் விளையாடும் குறிப்பு உள்ளது.

சொற்பொருள்:  விளம்பழம் கமழும் – விளாம்பழம் மணம் கமழும், கமஞ்சூல் குழிசி – பெரிய பானை (நிறைசூல் கொண்ட மகளிரது வயிற்றைப் போலத் தோன்றும், கமஞ்சூல் – கம என்னும் உரிச்சொல் நிறைவுப் பொருளில் வந்தது), பாசம் தின்ற – கயிறு உரசி தேய்த்த, தேய் கால் மத்தம் – தேய்ந்த மத்து, நெய் தெரி இயக்கம் – வெண்ணையைச் செய்யும் கடைதல், வெளில் முதல் முழங்கும் – தூணின் அடியிலிருந்து வரும் ஒலிகள் முழங்கும், வைகு புலர் விடியல் – விடியக்காலையில், மெய் கரந்து – உடம்பை மறைத்து, தன் கால் – தன்னுடைய கால், அரி அமை சிலம்பு – பரல் கற்களைக்கொண்ட அழகான கொலுசுகள், ஒலிக்கும் அழகான கொலுசுகள், கழீஇ – கழற்றி (கழீஇ – செய்யுளிசை அளபெடை), பல் மாண் – மாண்புடைய, வரிப் புனை பந்தொடு – கோடு போட்ட பந்துடன், வைஇய – வைப்பதற்கு (அளபெடை), செல்வோள் – அவள் செல்லும் பொழுது, இவை காண்தோறும் நோவர் – இவற்றைக் கண்டால் வருந்துவார்கள், மாதோ – மாது, ஓ அசைநிலைகள், அளியரோ அளியர் – மிகவும் இரங்கத்தக்கவர்கள், என் ஆயத்தோர் – என் தோழிகள், என – என்று, நும்மொடு வரவு – உன்னோடு வர, தான் அயரவும் – தான் உடன்பட்டும், தன் வரைத்து அன்றியும் – தன் கட்டுப்பாட்டையும் மீறி, கலுழ்ந்தன கண்ணே – கண்களில் நீர் நிறைந்துள்ளது, கண்கள் கலங்கின (கண்ணே – ஏகாரம் அசை நிலை)

நற்றிணை 13, கபிலர், குறிஞ்சித் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
எழாஅ ஆகலின் எழில் நலம் தொலைய
அழாஅதீமோ, நொதுமலர் தலையே!
ஏனல் காவலர் மா வீழ்த்துப் பறித்த
பகழி அன்ன சேயரி மழைக் கண்
நல்ல பெருந்தோளோயே! கொல்லன்  5
எறி பொன் பிதிரின் சிறு பல தாஅய்
வேங்கை வீ உகும் ஓங்கு மலைக் கட்சி
மயில் அறிபு அறியா மன்னோ,
பயில் குரல் கவரும் பைம்புறக் கிளியே.

பாடல் பின்னணி:  இயற்கைப் புணர்ச்சியின் பிற்றை ஞான்று, தலைவியின் உடல் வேறுபாடு கண்ட தோழி, இந்த வேறுபாடு எதனால் ஆயிற்று எனக் கேட்டதற்குத் தலைவி மறைத்துக் கூறியதால், அவளது களவொழுக்கத்தைத் தான் அறிந்ததைத் தோழி சொல்லியது.

பொருளுரை:  தினைக் காவலர் விலங்குகளைக் கொன்று பறித்த அம்பைப் போன்ற செவ்வரிகள் கொண்ட ஈர கண்களையும் நல்ல பெரிய தோளையுமுடையவளே!  கொல்லனின் உலைக்களத்தில் அடிக்கும் இரும்பின் பொறி சிதறுவது போலச் சிறிய பலகாய்களையுடைய வேங்கை மரத்தின் மலர்கள் உதிர்கின்ற உயர்ந்த மலையின் கூட்டில் இருக்கும் மயில்கள் அறியாது என்று கருதி, நெருங்கிய தினைக் கொத்துக்களை எடுத்துச் செல்லுகின்றன, பச்சைப் புறத்தையுடைய கிளிகள்.  நீ அவற்றை விரட்டுவதற்கு எழாது இருக்கின்றாய்.  கதிர்கள் அழிந்து போகின்றன. உன் அழகிய நலம் எல்லாம் கெடுமாறு நீ அழாதே, அயலார் இருக்கும் இவ்விடத்தில்.

குறிப்பு:  ஒளவை துரைசாமி உரை – ‘நாற்றமும் தோற்றமும்’ (தொல்காப்பியம், களவியல் 24) என்று தொடங்கும் நூற்பா உரையில், இப்பாட்டைக் காட்டி, ‘இது தலைவி வேறுபாடு கண்டு ஆராயும் தோழி தனது ஆராய்ச்சியை மறைத்துக் கூறியது என்பர் நச்சினார்க்கினியர்.  இறைச்சிப் பொருள் – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – வேங்கை மலர் உதிரப் பெற்ற கூட்டிலிருக்கும் மயில் தினைக் கதிர்களைக் கிளிகள் கொண்டுபோவதனை அறிந்திருந்தும் ‘நாம் கொய்து கொண்டு போவதை அம்மயில்கள் அறியாவாகும்’ என்று கிளிகள் கருதிக் கவர்ந்தேகுதல் போல, அன்னை பலகாலுந் தூண்டியதனால் நின்னைக் காவல் செய்துறையும் யான் நின் களவொழுக்கத்தை அறிந்து வைத்தும் ‘யான் அறிந்திலேன்’ என நீ கருதி இதனை மறைத்தொழுகா நின்றாய் என்றதாம்.  உள்ளுறை – ஒளவை துரைசாமி உரை – பொற்பிதிர் போல ஒளி திகழும் வேங்கைப் பூ காய் தோன்றும் காலத்தில் அம்மரத்தினின்றும் உதிர்ந்து நீங்கும் என்றது, பிறந்த மனைக்குத் தம் பொற்பால் அழகு விளங்கத் தோன்றிய மகளிர், காமச் செவ்வி எய்துங் காலத்துத் தம் பெற்றோரின் நீங்கிப் பிறர்பால் உள்ளத்தை விடுதல் தவறன்று.  அது இயற்கை அறம் எனத் தோழி தலைவியின் செயலுக்கு அமைதி கூறுவாளாய் உள்ளுறைத்து உரைத்தாள்.  அழாஅதீமோ –அளபெடை, ஒளவை துரைசாமி உரை – அழாதி என்ற முன்னிலை வினை ஈறு நீண்டது, H. வேங்கடராமன் உரை – அழாதீம்.

சொற்பொருள்:  எழாஅ ஆகலின் – நீ எழாததால் (எழாஅ – செய்யுளிசை அளபெடை), எழில் நலம் தொலைய – உன் அழகு கெட, அழாஅதீமோ – அழாதே (செய்யுளிசை அளபெடை, மோ – முன்னிலையசை), நொதுமலர் தலையே – அயலார் இருக்கும் இவ்விடத்தில் (தலையே – ஏகாரம் அசை நிலை), ஏனல் காவலர் மா வீழ்த்துப் பறித்த பகழி அன்ன சேயரி மழைக் கண் – தினைக் காவலர் விலங்குகளைக் கொன்று பறித்த அம்பைப் போன்ற செவ்வரிகள் கொண்ட ஈர கண்கள், நல்ல பெருந்தோளோயே – நல்ல பெரிய தோளையுடையவளே, கொல்லன் எறி பொன் பிதிரின் சிறு பல தாஅய் வேங்கை வீ உகும் – கொல்லனின் உலைக்களத்தில் அடிக்கும் இரும்பின் பொறி சிதறுவது போலச் சிறிய பலகாய்களையுடைய வேங்கை மரத்தின் மலர்கள் உதிர்கின்ற (பிதிரின் – இன் உருபு ஒப்புப் பொருளது, தாஅய் – செய்யுளிசை அளபெடை), ஓங்கு மலைக் கட்சி மயில் – உயர்ந்த மலையின் கூட்டில் இருக்கும் மயில், அறிபு அறியா – அறிவதை அறியாத, மன் – கழிவுக் குறிப்பு, ஓகாரம் அசை நிலை, பயில் குரல் – நெருங்கிய கொத்துக்கள், கவரும் பைம்புறக் கிளியே – பசுமை நிறத்தின் புறத்தையுடைய கிளிகள் எடுத்துச் செல்லும் (கிளியே – ஏகாரம் அசை நிலை)

நற்றிணை 14, மாமூலனார், பாலைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
தொல்கவின் தொலைய, தோள் நலம் சாஅய,
நல்கார் நீத்தனர் ஆயினும் நல்குவர்,
நட்டனர் வாழி தோழி, குட்டுவன்
அகப்பா அழிய நூறி செம்பியன்
பகல் தீ வேட்ட ஞாட்பினும் மிகப் பெரிது  5
அலர் எழச் சென்றனர் ஆயினும், மலர் கவிழ்ந்து
மா மடல் அவிழ்ந்த காந்தள் அம் சாரல்
இனம் சால் வயக் களிறு பாந்தள் பட்டென,
துஞ்சாத் துயரத்து அஞ்சு பிடிப் பூசல்
நெடு வரை விடரகத்து இயம்பும்  10
கடுமான் புல்லிய காடு இறந்தோரே.

பாடல் பின்னணி:  தலைவனின் இயல்புகளைப் பழித்த தோழியிடம் அவனுடைய நல்ல இயல்புகளைத் தலைவி உரைத்தது.

பொருளுரை:  தோழி!  பூக்கள் கட்டு அவிழ்ந்து பெரிய இதழ்கள் மலர்ந்த காந்தள் மலர்களையுடைய மலைச்சரிவில், இனத்துடன் இருந்த வலிய களிற்று யானை ஒன்று மலைப்பாம்பின் வாயில் பட்டதால், கண் உறங்கமுடியாத துக்கத்தால் அஞ்சிக் கதறி அதன் பிடி யானை புலம்ப, நெடிய மலைப்பிளவில் அதன் குரல் எதிரொலிக்கும், விரைந்து செல்லும் குதிரைகளையுடைய புல்லி என்ற குறுநில மன்னனின் வேங்கட நாட்டுக்காட்டைக் கடந்து சென்ற நம் தலைவர், நம் பழைய அழகு கெடவும், தோளின் பண்டைய அழகு குறையவும், அருள் புரியாதவர்.  சேரரின் அகப்பா என்னும் கோட்டையைச் சோழர் அழித்துத் தீயிட்டுக் கொளுத்திய போரைக்காட்டிலும் மிக்க அலர் எழ அவர் பிரிந்தார் ஆயினும், அருளுவார்.  நம் மீது அன்பு கொண்டவர் அவர். அவர் நீடு வாழ்வாராக!

குறிப்பு:  குட்டுவன் (3) – ஒளவை துரைசாமி உரை – பல்யானைச் செல்கெழு குட்டுவனாகிய சேரமான்.  இறைச்சிப் பொருள் – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – களிறு பாந்தளின்வாய்ப் பட்டதாகப் பிடி பிளிறும் பூசல் சென்று விடரகத்து ஒலிக்குமென்றது, தலைவன் பிரிவால் யான் வருந்திய வருத்தம் நோக்கி ஊராரெடுத்த அலர் சேரிசென்று பரவினும் பரவுக என்றதாம்.  வரலாறு:  குட்டுவன், செம்பியன், புல்லி, அகப்பா.  புல்லி – வேங்கட மலையின் மன்னன். அவனைப்பற்றின குறிப்புகள் இப்பாடல்களில் உள்ளன – அகநானூறு 61, 83, 209, 295, 311, 359, 393. அகப்பா கோட்டை – பதிற்றுப்பத்து 22 – அண்ணல் அம் பெருங்கோட்டு அகப்பா எறிந்த பொன் புனை உழிஞை வெல் போர்க் குட்டுவ!  பிடி – பிடி என் பெண் பெயர் யானை மேற்றே (தொல்காப்பியம், மரபியல் 52).

சொற்பொருள்:  தொல் கவின் தொலைய – நம் பழைய அழகு கெடவும் (தொலைய – வினையெச்சம்), தோள் நலம் சாஅய – தோளின் பண்டைய அழகு குறையவும் (சாஅய – வினையெச்சம், அளபெடை), நல்கார் – அருள் புரியாதவர் (முற்றெச்சம்), நீத்தனர் ஆயினும் – பிரிந்தார் ஆயினும், நல்குவர் – அருளுவார், நட்டனர் – அன்பு கொண்டவர், வாழி – அசைநிலை, நீடு வாழி, அவர் நீடு வாழ்வாராக, தோழி – தோழி, குட்டுவன் அகப்பா அழிய நூறி செம்பியன் பகல் தீ வேட்ட ஞாட்பினும் – சேரரின் அகப்பா என்னும் கோட்டையைச் சோழர் அழித்துத் தீயிட்டுக் கொளுத்திய போரினும், மிகப் பெரிது அலர் எழச் சென்றனர் – மிக்க அலர் எழ அவர் சென்றார், ஆயினும் – ஆயினும், மலர் கவிழ்ந்து மா மடல் அவிழ்ந்த காந்தள் அம் சாரல் – பூக்கள் கட்டு அவிழ்ந்து பெரிய இதழ்கள் மலர்ந்த காந்தள் மலர்களையுடைய மலைச்சரிவில் (காந்தள் – Gloriosa superba), இனம் சால் வயக் களிறு பாந்தள் பட்டென – இனத்துடன் இருந்த வலிய களிற்று யானை மலைப்பாம்பின் வாயில் பட்டதால், துஞ்சாத் துயரத்து அஞ்சு பிடி பூசல் நெடு வரை விடர் அகத்து இயம்பும் – கண் உறங்கமுடியாத துக்கத்தால் அஞ்சிக் கதறிப் பிடி யானை புலம்ப நெடிய மலைப்பிளவில் அதன் குரல் எதிரொலிக்கும், கடுமான் புல்லிய காடு இறந்தோரே – விரைந்து செல்லும் குதிரைகளையுடைய புல்லி என்ற குறுநில மன்னனின் வேங்கட நாட்டுக்காட்டைக் கடந்து சென்ற நம் தலைவர் (கடுமான் – பண்புத்தொகை, இறந்தோரே – ஏகாரம்  அசைநிலை)

நற்றிணை 15, பாண்டிய மன்னன் அறிவுடை நம்பி, நெய்தல் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
முழங்கு திரை கொழீஇய மூரி எக்கர்
நுணங்கு துகில் நுடக்கம் போல கணம் கொள
ஊதை தூற்றும் உரவு நீர்ச் சேர்ப்ப!
பூவின் அன்ன நலம் புதிது உண்டு
நீ புணர்ந்த அனையேம் அன்மையின் யாமே,  5
நேர்புடை நெஞ்சம் தாங்கத் தாங்கி
மாசு இல் கற்பின் மடவோள் குழவி
பேஎய் வாங்கக் கைவிட்டாங்கு,
சேணும் எம்மொடு வந்த
நாணும் விட்டேம், அலர்க இவ் ஊரே.  10

பாடல் பின்னணி:  வரைவு நீட்டித்தவழித் தோழி தலைவனிடம் சொல்லி வரைவு கடாயது.

பொருளுரை:  முழங்கும் அலைகள் கொண்டு வந்து குவித்த பெரிய மணல் மேட்டைப் போல் துகிலின் (துணியின்) அசைவைபோல மிகுதிப்பட ஊதைக் காற்று வீசும் வலிமையான கடற்கரையின் தலைவனே!  மலரைப்போன்ற இவளது நலத்தைப் புதிதாக நீ நுகர்ந்தும் நீ அதன் அருமையை உணரவில்லை.  ஆகையால் யாம் உனக்கு உடன்படுதல் உடைய எம் உள்ளத்தில் வருத்தமுற அதனை ஏற்று, மாசற்ற இளைய பெண் ஒருவள் தன் குழந்தையைப் பேய்மகள் பற்ற அக்குழந்தையை விட்டாற்போல், எம்முடன் நீண்ட நாள் வந்த நாணத்தையும் கைவிட்டோம்.  இந்த ஊரில் அலர் எழட்டும்.

குறிப்பு:  நுணங்கு (2) – H. வேங்கடராமன் உரை – வருத்திய, ஒளவை துரைசாமி உரை – நுண்ணிய.  துணியைப் போன்ற மணல் – அகநானூறு 11 – வம்பு விரித்தன்ன பொங்கு மணல்,  நற்றிணை 15 – தோழியிடம் முழங்கு திரை கொழீஇய மூரி எக்கர் நுணங்கு துகில் நுடக்கம் போல கணம் கொள, கலித்தொகை 124 – நீல நீர் உடை போலத் தகைபெற்ற வெண்திரை.  உள்ளுறை – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – கடல் கொழித்து ஒதுக்கிய எக்கர் மணலிற் சிலவற்றைக் காற்று அள்ளித் தூற்றுதல் போல நின்னால் நீக்கப்பட்ட எம்மை ஊரார் அலர் தூற்றாநிற்பர் (தூற்றுவர்) என்பது.  கு. வெ. பாலசுப்பிரமணியன் உரை – மடவோள் என்பது ஈண்டு மடந்தைப் பருவத்தினைக் குறிக்கவில்லை.  யாரிடம் குழந்தையைக் கொடுப்பது என்று தெரியாத அறிவின்மையைக் குறித்தது.  ஒளவை துரைசாமி உரை – புண்ணுற்று வீழ்ந்த தன் கணவன் பொருட்டுத் தன் குழவியைப் பேய் கைக்கொடுத்த கற்புடைய மகளிர்போல் நின்பால் உளதாகிய காதலின் பொருட்டு யாம் எம் நாணத்தையும் விட்டேம்.  அனையேம், யாமே, விட்டேம் – தோழி தனக்கும் தலைவிக்கும் உள்ள ஒற்றுமை பற்றி தன்மைபன்மையாற் கூறினாள்.

சொற்பொருள்:  முழங்கு திரை கொழீஇய மூரி எக்கர் நுணங்கு துகில் நுடக்கம் போல கணம் கொள – முழங்கும் அலைகள் கொண்டு வந்து குவித்த பெரிய மணல் மேட்டைப் போல் துகிலின் (துணியின்) அசைவைபோல மிகுதிப்பட (கொழீஇய – செய்யுளிசை அளபெடை), ஊதை தூற்றும் – ஊதைக் காற்று வீசும், உரவு நீர்ச் சேர்ப்ப – வலிமையான கடற்கரையின் தலைவனே (சேர்ப்ப – அண்மை விளி), பூவின் அன்ன நலம் புதிது உண்டு நீ புணர்ந்த அனையேம் அன்மையின் – மலரைப்போன்ற இவளது நலத்தைப் புதிதாக நீ நுகர்ந்தும் நீ அதன் அருமையை உணரவில்லை ஆகையால் (பூவின் – இன் சாரியை),  யாமே – யாம் (ஏகாரம் அசைநிலை), நேர்புடை நெஞ்சம் தாங்கத் தாங்கி – உனக்கு உடன்படுதல் உடைய எம் உள்ளத்தில் வருத்தமுற அதனை ஏற்று, மாசு இல் கற்பின் மடவோள் குழவி பேஎய் வாங்கக் கைவிட்டாங்கு – மாசற்ற இளைய பெண் ஒருவள் தன் குழந்தையைப் பேய்மகள் பற்ற அக்குழந்தையை விட்டாற்போல் (பேஎய் – செய்யுளிசை அளபெடை), சேணும் எம்மொடு வந்த நாணும் விட்டேம் – எம்முடன் நீண்ட நாள் வந்த நாணத்தையும் கைவிட்டோம், அலர்க இவ்வூரே – இந்த ஊரில் அலர் எழட்டும் (ஊரே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 16, சிறைக்குடி ஆந்தையார், பாலைத் திணை – தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது
புணரின் புணராது பொருளே, பொருள்வயின்
பிரியின் புணராது புணர்வே, ஆயிடைச்
செல்லினும், செல்லாய் ஆயினும், நல்லதற்கு
உரியை வாழி என் நெஞ்சே! பொருளே
வாடாப் பூவின் பொய்கை நாப்பண்  5
ஓடு மீன் வழியின் கெடுவ; யானே
விழுநீர் வியல் அகம் தூணி ஆக
எழு மாண் அளக்கும் விழுநிதி பெறினும்,
கனங்குழைக்கு அமர்த்த சேயரி மழைக் கண்
அமர்ந்து, இனிது நோக்கமொடு செகுத்தன  10
எனைய ஆகுக! வாழிய பொருளே!

பாடல் பின்னணி:  தலைவியை விட்டுப் பிரிந்து சென்று பொருள் ஈட்ட விரும்பிய தன் நெஞ்சிடம் தலைவன் சொன்னது.

பொருளுரை:  நாம் தலைவியுடன் இருந்தால் பொருளை அடைய முடியாது. பொருளுக்காக நாம் பிரிந்தால் தலைவியுடன் இணைய முடியாது.  அதனால் சென்றாலும் செல்லா விட்டாலும், நல்லது செய்வதற்கு உரியை நீ, என் நெஞ்சே.  நீடு வாழ்வாயாக நீ!  பொருளானது, வாடாத மலர்களையுடைய பொய்கையின் நடுவில் ஓடும் மீன் செல்லும் வழி கெடுவது போன்றது.  நானே, பெரிய கடல் சூழ்ந்த இந்த உலகத்தையே மரக்காலாகக் கொண்டு, ஏழு முறை பெரும் மாட்சி பெற்ற அளவு பெருஞ்செல்வத்தை அடைந்தாலும், கனமான காதணி அணிந்த தலைவியின் மாறுபட்ட சிவந்த வரிகளுடைய குளிர்ச்சியுடையக் கண்கள் இனிதாக நோக்கும் நோக்கத்தால், பொருளை நாட மாட்டேன்.  நான் செல்லும் எண்ணத்தை அவள் கண்கள் அழித்தது. என்னவானாலும் ஆகட்டும். போற்றுவாரிடத்து வாழட்டும் அப் பொருள்!

குறிப்பு:  நற்றிணை 46 – எய் கணை நிழலின் கழியும்.  ஒளவை துரைசாமி உரை – நீர்ப்பூ தேன் ஒழிந்தவிடத்து மணம் இழந்து அழுகிக் கெடுவல்லது, நிலப்பூப் போல வாடுவதின்மையின், வாடாப் பூவின் பொய்கையை என்று சிறப்பித்தார்.  விழு (விழுமம்) – விழுமம் சீர்மையும் சிறப்பும் இடும்பையும் (தொல்காப்பியம், உரியியல் 57).

சொற்பொருள்:  புணரின் புணராது பொருளே – நாம் தலைவியுடன் இருந்தால் பொருளை அடைய முடியாது (பொருளே – ஏகாரம் அசைநிலை), பொருள்வயின் பிரியின் புணராது புணர்வே – பொருளுக்காக நாம் பிரிந்தால் தலைவியுடன் இணைய முடியாது (புணர்வே – ஏகாரம் அசைநிலை), ஆயிடைச் செல்லினும் செல்லாய் ஆயினும் – அதனால் சென்றாலும் செல்லா விட்டாலும், நல்லதற்கு உரியை – நல்லது செய்வதற்கு உரியை நீ, வாழி – நீ நீடு வாழ்வாயாக, என் நெஞ்சே – என்னுடைய நெஞ்சே, பொருளே – பொருளானது (பொருளே – ஏகாரம் அசைநிலை), வாடாப் பூவின் பொய்கை நாப்பண் – வாடாத மலர்களையுடைய பொய்கையின் நடுவில், ஓடு மீன் வழியின் கெடுவ – ஓடும் மீன் செல்லும் வழி கெடும், யானே – நானே, விழுநீர் வியல் அகம் – பெரிய கடல் சூழ்ந்த உலகம், தூணி ஆக – மரக்கால் ஆக, எழு – ஏழு முறை, மாண் அளக்கும் – பெரும் மாட்சி பெற்ற அளவு, விழுநிதி பெறினும் – பெருஞ்செல்வத்தை நான் அடைந்தாலும், கனங்குழைக்கு – கனமான காதணி அணிந்த தலைவிக்கு (அன்மொழித்தொகை), அமர்த்த – மாறுபட்ட, சேயரி – சிவந்த வரிகள், மழைக் கண் – குளிர்ச்சியுடைய கண்கள், அமர்ந்து, இனிது நோக்கமொடு செகுத்தன – அழித்தன இனிதாக நோக்கும் நோக்கத்தால் , எனைய ஆகுக – என்னவானாலும் ஆகட்டும், வாழிய – போற்றுவாரிடத்து வாழட்டும், பொருளே – பொருள் (பொருளே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 17, நொச்சி நியமங்கிழார், குறிஞ்சித் திணை – தலைவி தோழியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
நாள் மழை தலைஇய நல் நெடுங்குன்றத்து
மால் கடல் திரையின் இழிதரும் அருவி
அகல் இருங்கானத்து அல்கு அணி நோக்கித்,
தாங்கவும் தகைவரை நில்லா நீர் சுழல்பு
ஏந்து எழில் மழைக் கண் கலுழ்தலின், அன்னை,  5
‘எவன் செய்தனையோ? நின் இலங்கு எயிறு உண்கு’ என
மெல்லிய இனிய கூறலின், வல் விரைந்து
உயிரினும் சிறந்த நாணும் நனி மறந்து
உரைத்தல் உய்ந்தனனே தோழி! சாரல்
காந்தள் ஊதிய மணி நிறத் தும்பி  10
தீம் தொடை நரம்பின் இமிரும்
வான் தோய் வெற்பன் மார்பு அணங்கு எனவே.

பாடல் பின்னணி:  வரையாது பகற்குறிக்கண் வந்தொழுகும் தலைவன் ஒரு பொழுது வாராதிருத்தலால் வருத்தமுற்ற தலைவி, பின் ஒரு நாள் அவன் அருகில் இருப்பதை அறிந்து, அவன் விரைவில் வரைந்துகொள்ள வேண்டித் தோழியிடம் கூறியது.

பொருளுரை:  தோழி! விடியற்காலையில் மழை பெய்த நல்ல உயர்ந்த மலையிலிருந்து பெரிய கடலின் அலையைப்போன்று வீழும் அருவிகள் உடைய அகன்ற பெரிய காட்டில் தங்கி அழகை நோக்கி, அது அவரை எதிர்ப்பட்ட இடமாததால் நான் தடுக்கவும் தடைப்பட்டு நில்லாது, என் அழகு பொருந்திய கண்கள் கண்ணீருடன் கலங்கின. அதனைக் கண்ட அன்னை, “ஏன் அழுகின்றாய்? உன்னுடைய விளங்குகின்ற பற்களை நான் முத்தம் கொள்வேன்” என்று இனிதாகக் கூறினாள். நான் மிக விரைந்து, உயிரைக்காட்டிலும் சிறந்த நாணத்தை மிக்க மறந்து, “மலைச்சரிவில் உள்ள காந்தள் மலர்களின் தேனை உண்ட நீலமணியின் நிறத்தையுடைய தும்பி, யாழின் இனிய நரம்பைப்போல் ஒலிக்கும், வானளவு உயர்ந்த மலையின் தலைவனின் மார்பைப் பிரிந்ததனால் உண்டாகிய வருத்தம்” என்று கூற எண்ணி அதன் பின் கூறாது தப்பித்தேன்.

குறிப்பு:  ஒளவை துரைசாமி உரை – ‘மறைந்தனற் காண்டல்’ (தொல்காப்பியம், களவியல் 21) என்ற நூற்பா உரையில், இப்பாட்டைக் காட்டி, ‘யான் அவனை எதிர்ப்பட்ட இடம் கண்டு அழுதேனாக, அதனைக் கண்டு நீ எவன் செய்தனை என வினாய அன்னைக்கு, இம்மறையினைக் கூறலுற்றுத் தவிர்ந்தேன் எனத் தாய் களவு அறிவுற்றவாறு கூறக் கருதி அவன்வயிற் பரத்தமை கூறிற்று’ என்பர் நச்சினார்க்கினியர்.  இறைச்சி – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – காந்தளை ஊதிய தும்பி, இன்னும் தேனசையால் முரன்று இயங்கும் மலை நாடனாக இருந்தும், முன்பு என் நலம் உண்டு துறந்து அகன்றான்.  அவன் நாட்டு அஃறினைப் பொருள் இயல்பையேனும் நோக்கி அறிந்திலன் என இரங்கியதாம், கு. வெ. பாலசுப்பிரமணியன் உரை – காந்தளை ஊதிய தும்பி, மேலும் விருப்பம் கொண்டு ஊதும் என்றது, களவு ஒழுக்கத்தை நீட்டிக்க விரும்பும் தலைமகன் செயலை உணர்த்தியது.  ஒளவை துரைசாமி உரை – அன்னை ‘எவன் செய்தனை நின் இலங்கு எயிறு உண்கு’ என மெல்லிய இனிய கூறலின் என்றும், அன்னை சொல்லின் மென்மையும் இனிமையும் என் அறிவை மயக்கியமையின், உயிரினும் சிறந்த நாணத்தையும் மறக்கும் தன்மை எய்தினேன் என்பாள்.  காந்தளை ஊதிய தும்பி யாழ் நரம்பு போல இன்னிசை செய்யும் என்றது, காதலன் மார்பில் படிந்து இன்புற்ற உவகையால் என் நெஞ்சம் அவன் திறமே நினைந்து ஒழுகுகின்றது என்றவாறு.  நனி – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3).  எயிறு உண்கு (6) – ஒளவை துரைசாமி உரை – முத்தம் கொள்வேன், பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – முத்தம் கொள்வென்.  பிற பாடல்களில் எயிறு உண்ணுதல் – நற்றிணை 134 – நின் முள் எயிறு உண்கு, நற்றிணை 204 – மடந்தை நின் கூர் எயிறு உண்கு, அகநானூறு 325 – வெய்ய மன்ற நின் வை எயிறு உணீஇய, கலித்தொகை 112 – மெல்ல முயங்கு நின் முள் எயிறு உண்கும்.

சொற்பொருள்:  நாள் மழை தலைஇய நல் நெடுங்குன்றத்து மால் கடல் திரையின் இழிதரும் அருவி அகல் இருங்கானத்து அல்கு அணி நோக்கி – விடியற்காலையில் மழை பெய்த நல்ல உயர்ந்த மலையிலிருந்து பெரிய கடலின் அலையைப்போன்று வீழும் அருவிகள் உடைய அகன்ற பெரிய காட்டில் தங்கி அழகை நோக்கி (தலைஇய – அளபெடை, திரையின் – இன் உருபு ஒப்புப் பொருளது), தாங்கவும் தகைவரை நில்லா – தடுக்கவும் தடைப்பட்டு நில்லாது (நில்லா – நில்லாது என்ற வினையெச்சம் விகாரத்தால் ஈறு கெட்டது), நீர் சுழல்பு – நீர் நிறைந்து (சுழல்பு – நிறைந்து, பெருக்கி, கலித்தொகை 142 – நோய் எரி ஆகச் சுடினும் சுழற்றி என் ஆய் இதழ் உள்ளே கரப்பன்), ஏந்து எழில் மழைக் கண் கலுழ்தலின் – அழகு பொருந்திய கண்கள் கண்ணீருடன் கலங்கியதால், அன்னை – அன்னை, எவன் செய்தனையோ – ஏன் அழுகின்றாய், நின் இலங்கு எயிறு உண்கு என மெல்லிய இனிய கூறலின் – உன்னுடைய விளங்குகின்ற பற்களை முத்தம் கொள்வேன் என்று இனிதாகக் கூறினாள், வல் விரைந்து உயிரினும் சிறந்த நாணும் நனி மறந்து – நான் மிக விரைந்து உயிரைக்காட்டிலும் சிறந்த நாணத்தை மிக்க மறந்து (உயிரினும் – உம்மை சிறப்பு), உரைத்தல் உய்ந்தனனே – சொல்லுவதற்கு நான் தொடங்கியதிலிருந்து நான் தப்பித்தேன் (உய்ந்தனனே – ஏகாரம் அசைநிலை), தோழி – தோழி, சாரல் காந்தள் ஊதிய மணி நிறத் தும்பி – மலைச்சரிவில் உள்ள காந்தள் மலர்களின் தேனை உண்ட நீலமணியின் நிறத்தையுடைய தும்பி (காந்தள் – Gloriosa superba), தீம் தொடை நரம்பின் இமிரும் – யாழின் இனிய நரம்பைப்போல் ஒலிக்கும் (நரம்பின் – இன் உருபு ஒப்புப் பொருளது), வான் தோய் வெற்பன் – வானளவு உயர்ந்த மலையின் தலைவன், மார்பு அணங்கு எனவே – மார்பைப் பிரிந்ததனால் உண்டாகிய வருத்தம் (எனவே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 18, பொய்கையார், பாலைத் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
பருவரல் நெஞ்சமொடு பல் படர் அகல
வருவர், வாழி தோழி, மூவன்
முழு வலி முள் எயிறு அழுத்திய கதவின்
கானல் அம் தொண்டிப் பொருநன், வென் வேல்
தெறல் அருந்தானைப் பொறையன் பாசறை  5
நெஞ்சம் நடுக்குறூஉம் துஞ்சா மறவர்
திரை தபு கடலின் இனிது கண்படுப்ப
கடாஅம் கழீஇய கதன் அடங்கு யானைத்
தடாஅ நிலை ஒரு கோட்டன்ன
ஒன்று இலங்கு அருவிய குன்று இறந்தோரே.  10

பாடல் பின்னணி:  தலைவன் பிரிந்து வேற்று நாட்டுச் சென்றபொழுது வருந்திய தலைவியிடம் தோழி கூறியது.

பொருளுரை:  தோழி!  நீ நீடு வாழ்வாயாக!   மூவன் என்பவனின் முழு வலிமையை அழித்து அவனுடைய முள்ளைப்போன்ற பற்களைப் பிடுங்கிப் பதிக்கப்பட்ட கதவையுடைய கடற்கரைச் சோலையையுடைய தொண்டி நகரின் தலைவனான வெல்லும் வேற்படையையும் வெல்வதற்கு அரிய தானையையும் உடைய சேரன் கணைக்கால் இரும்பொறையின் பாசறையில், மத யானை இருப்பதால் நெஞ்சம் நடுங்குதலால் அஞ்சி உறங்காத போர்மறவர்கள் அலைகள் அடங்கிய கடல்போல் இனிதாக உறங்குமாறு, மதம் ஒழிந்த சினம் தணிந்த அக்களிற்று யானையின் பெரியதாய் நிலைத்துள்ள ஒரு கொம்பைப் போன்ற (தந்தத்தைப் போன்ற), ஒன்றாக விளங்கிய அருவியையுடைய மலையைக் கடந்து சென்ற நம் தலைவர், நீ வருந்தும் நெஞ்சுடன் கொண்ட பல துன்பமும் நீங்க, விரைவில் வருவார்.

குறிப்பு:  இதனுட் பொதிந்த கதை – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – பொறையனது பாசறைக்கண்ணே ஒற்றை மருப்பையுடைய களிறொன்று மதங்கொண்டு வீரர் துயிலாதவாறு வருத்தி அப்பால் மதம் அடங்கிற்று என்பதாம்.   மறவர் இனிது கண்படுப்பக் கதன் அடங்கிய யானை என்க.  ஒப்புமை: அகநானூறு 211 – கடுஞ்சின வேந்தன் ஏவலின் எய்தி நெடுஞ்சேண் நாட்டில் தலைத்தார்ப் பட்ட கல்லா எழினி பல் எறிந்து அழுத்திய வன்கண் கதவின் வெண்மணி வாயில் மத்தி.  வரலாறு:  பொறையன், மூவன்.  இப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ள மன்னர் சேரமான் கணைக்கால் இரும்பொறை.  இவர் புறநானூறு 74ம் பாடலை எழுதியவர்.  ‘களவழி நாற்பது’ இவருக்காக பொய்கையார் எழுதியது என்ற கருத்து உள்ளது.  தட – தடவும் கயவும் நளியும் பெருமை (தொல்காப்பியம், இடையியல் 22).

சொற்பொருள்:  பருவரல் நெஞ்சமொடு பல் படர் அகல வருவர் – நீ வருந்தும் நெஞ்சுடன் கொண்ட பல துன்பமும் நீங்க வருவார், வாழி – அசைநிலை, நீடு வாழ்வாயாக, தோழி – தோழி, மூவன் முழு வலி முள் எயிறு அழுத்திய கதவின் கானல் அம் தொண்டிப் பொருநன் வென் வேல் தெறல் அருந்தானைப் பொறையன் பாசறை – மூவன் என்பவனின் முழு வலிமையை அழித்து அவனுடைய முள்ளைப்போன்ற பற்களைப் பிடுங்கிப் பதிக்கப்பட்ட கதவையுடைய கடற்கரைச் சோலையையுடைய தொண்டி நகரின் தலைவனான வெல்லும் வேற்படையையும் வெல்வதற்கு அரிய தானையையும் உடைய சேரன் கணைக்கால் இரும்பொறையின் பாசறை, நெஞ்சம் நடுக்குறூஉம் துஞ்சா மறவர் திரை தபு கடலின் இனிது கண்படுப்ப – நெஞ்சம் நடுங்குதலால் அஞ்சி உறங்காத போர்மறவர்கள் அலைகள் அடங்கிய கடல்போல் இனிதாக உறங்குமாறு (நடுக்குறூஉம் – செய்யுளிசை அளபெடை, கடலின் – இன் உருபு ஒப்புப் பொருளது, ஐந்தாம் வேற்றுமை உருபு), கடாஅம் கழீஇய – மதம் ஒழிந்த (கடாஅம் – அளபெடை, கழீஇய – செய்யுளிசை அளபெடை), கதன் அடங்கு யானைத் தடாஅ நிலை ஒரு கோட்டன்ன – சினம் தணிந்த யானையின்  பெரியதாய் நிலைத்துள்ள ஒரு கொம்பைப் போன்ற (தடாஅ – அளபெடை), ஒன்று இலங்கு அருவிய குன்று இறந்தோரே – ஒன்றாக விளங்கிய அருவியையுடைய  மலையைக் கடந்து சென்ற நம் தலைவர் (அருவிய – குறிப்புப் பெயரெச்சம், இறந்தோரே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 19, நக்கண்ணையார், நெய்தல் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
இறவுப் புறத்து அன்ன பிணர்படு தடவு முதல்
சுறவுக் கோட்டன்ன முள் இலைத் தாழை,
பெருங்களிற்று மருப்பின் அன்ன அரும்பு முதிர்பு,
நன்மான் உழையின் வேறுபடத் தோன்றி,
விழவுக் களம் கமழும் உரவு நீர்ச் சேர்ப்ப!  5
இன மணி நெடுந்தேர் பாகன் இயக்கச்
செலீஇய சேறி ஆயின், இவளே
வருவை ஆகிய சில் நாள்
வாழாள், ஆதல் நற்கு அறிந்தனை சென்மே.

பாடல் பின்னணி:  தலைவியைப் புணர்ந்து நீங்கிய தலைவனைத் தோழி வரைவு கடாயது.

பொருளுரை:  இறால் மீனின் மேற்புறத்தைப் போன்ற சருக்கரை உடைய பெரிய அடிப்பகுதியையும் சுறா மீனின் கொம்பு போன்ற முட்கள் கொண்ட இலைகளையுமுடைய தாழையானது, பெரிய ஆண் யானையின் கொம்பு (தந்தம்) போன்ற அரும்புகள் முதிர்ந்திருக்க, நல்ல பெண்மான் தலைசாய்த்து நிற்றலைப் போல் போன்று வேறாகத் தோன்றி, திருவிழாவைப்போன்று நறுமணம் வீசும், வலிய நீரையுடைய கடல் நிலத்தையுடைய தலைவனே!  நிறைய மணிகள் கட்டிய நெடிய தேரை உன் பாகன் செலுத்த, நீ உன் ஊர் செல்லும் பொருட்டுப் போவாய் ஆதலால், இவள் நீ வருவாய் எனக் குறிப்பிட்ட சில நாள் அளவும் வாழ மாட்டாள்.  ஆதலால் இதை நன்கு அறிந்துகொண்டு நீ செல்வாயாக!

குறிப்பு:  ஒளவை துரைசாமி உரை – ‘நாற்றமும் தோற்றமும்‘ (தொல்காப்பியம், களவியல் 24) என்று தொடங்கும் நூற்பாவிற் கூறிய ‘வேண்டாப் பிரிவினும்’ என்புழி நிகழும் தோழி கூற்றுக்கு இப்பாட்டைக் காட்டி ‘இது தலைவன் பிரிவு வேண்டியவழிக் கூறியது’ என்பர் நச்சினார்க்கினியர்.  ஒளவை துரைசாமி உரை – தாழை நின்ற கழிக்கானற் குறியிடம் விழவுக் களம் போலும் எனத் தோழி புனைந்து கூறியது.  கானற்கண் உள்ள எமது மனையகம் விரைவில் மணமனையாதல் வேண்டுமெனத் தன் விழைவு குறித்தவாறு.  சுறவு, இறவு – சுறா சுறவு எனவும், இறா இறவு எனவும் வந்தன.  குறியதன் இறுதிச் சினை கெட உகரம் அறிய வருதல் செய்யுளுள் உரித்தே (தொல்காப்பியம், உயிர் மயங்கியல் 32).

சொற்பொருள்:  இறவுப் புறத்து அன்ன பிணர்படு  தடவு முதல் சுறவுக் கோட்டன்ன முள் இலைத் தாழை – இறால் மீனின் மேற்புறத்தைப் போன்ற சருக்கரை உடைய பெரிய அடிப்பகுதியையுடைய சுறா மீனின் கொம்பு போன்ற முட்களுடைய இலைகளையுடைய தாழை (இறவு – இறா என்பதன் ஆகாரம் குறுகி உகரம் ஏற்றது, புறத்து – புறம், அத்துச் சாரியை, சுறவு – சுறா என்பதன் ஆகாரம் குறுகி உகரம் ஏற்றது, தாழை – Pandanus odoratissimus), பெருங்களிற்று மருப்பின் அன்ன அரும்பு முதிர்பு – பெரிய ஆண் யானையின் கொம்பு (தந்தம்) போன்ற அரும்புகள் முதிர்ந்திருக்க (மருப்பின் – இன் சாரியை), நன்மான் உழையின் வேறுபடத் தோன்றி – நல்ல பெண்மான் போன்று வேறாகத் தோன்றி (உழையின் – இன் உருபு ஒப்புப் பொருளது, ஐந்தாம் வேற்றுமை உருபு), விழவுக் களம் கமழும் உரவு நீர்ச் சேர்ப்ப – திருவிழாவைப்போன்று நறுமணம் வீசும் வலிய நீரையுடைய கடல் நிலத்தையுடைய தலைவனே (சேர்ப்ப – அண்மை விளி), இன மணி நெடுந்தேர் பாகன் இயக்க – நிறைய மணிகள் கட்டிய நெடிய தேரின் பாகன் செலுத்த, செலீஇய – நீ உன் ஊர் செல்லும் பொருட்டு (அளபெடை), சேறி ஆயின் – போவாய் ஆதலால், இவளே – இவளே (ஏகாரம் அசைநிலை), வருவை ஆகிய சில் நாள் வாழாள் – நீ வருவாய் எனக் குறிப்பிட்ட சில நாள் அளவும் வாழ மாட்டாள், ஆதல் நற்கு அறிந்தனை சென்மே – ஆதலால் இதை நன்கு அறிந்துகொண்டு நீ செல்வாயாக (நற்கு – நன்கு என்பதன் விகாரம், சென்மே – ஏகார ஈற்று முன்னிலை வினைச்சொல், மகர மெய்யூர்ந்து வந்தது)

நற்றிணை 20, ஓரம்போகியார், மருதத் திணை – தலைவி தலைவனிடம் சொன்னது, அல்லது தோழி தலைவியிடம் சொன்னது
ஐய! குறுமகள் கண்டிகும்; வைகி
மகிழ்நன் மார்பில் துஞ்சி, அவிழ் இணர்த்
தேம் பாய் மராஅம் கமழும் கூந்தல்
துளங்கு இயல் அசைவர, கலிங்கம் துயல் வரச்
செறி தொடி தெளிர்ப்ப வீசி, மறுகில்  5
பூப் போல் உண்கண் பெயர்ப்ப நோக்கிச்
சென்றனள், வாழிய மடந்தை! நுண் பல்
சுணங்கு அணிவுற்ற விளங்கு பூணள்,
மார்புறு முயக்கிடை ஞெமிர்ந்த சோர் குழைப்,
பழம் பிணி வைகிய தோள் இணைக்  10
குழைந்த கோதை கொடி முயங்கலளே.

பாடல் பின்னணி:  பரத்தையிற் பிரிந்து வந்த தலைவன் ‘யாரையும் அறியேன்’ என்றாற்குத் தலைவி கூறியது.  வாயிலாகப் புக்க தோழி தலைவிக்குச் சொல்லியதுமாம்.

பொருளுரை:  ஐயா!  நின் காதலியான இளமகளை யாம் கண்டேம்.  நின்னிடத்துத் தங்கி நின் மார்பில் உறங்கிய அவள், தேன் வண்டுகள் பாயும் கடம்ப மரத்தின் விரிந்த பூங்கொத்துக்களின் மணம் வீசும் கூந்தல் சிறுபுறத்தில் வீழ்ந்து அசைய, அவளது ஆடை தளர்ந்து அசைய, நெருங்கிய வளையல்கள் ஒலிக்க, தெருவில் மலர்களை ஒத்த மையிட்ட கண்கள் சுழலும்படி பார்த்துச் சென்றாள்.  நுட்பமான பல சுணங்குகளை உடையவளும், ஒளியுடைய அணிகலன்களை அணிந்தவளும், நின் மார்பின்கண் பெற்ற முயக்கத்தால் (அணைத்ததால்) நெரிந்த சோர்ந்த பூந்தளிர்களையும் நீட்டித்த பிணியுற்ற இரண்டு தோள்களையும் துவன்ற மாலையையும் உடையவளாக, கொடி போன்ற நின் முயக்கத்திலிருந்து நீங்கினவளான அவள் நீடு வாழ்வாள் ஆக!

குறிப்பு:  ஐய (1) – கு. வெ. பாலசுப்பிரமணியன் உரை – ஐய என்பது மெல்லிய எனவும் பொருள்பட அமையுமெனில், அது வாயிலாக புக்க தோழி தலைவிக்குக் கூறியதாகும்.  தோழியின் கூற்றாக இதைக் கொண்டால், ‘ஐய குறுமகள்’ என்பதை ‘ மெல்லிய இளம் பரத்தை’ எனக் கொள்ள வேண்டும்.  தலைவன் மீது ஊடல் கொண்ட தலைவியிடம் ‘அவள் காம நுகர்ச்சிக்குப் பொருந்தாத சிறு வயதினள் எனக்கூறி, தலைவியின் ஊடலைத் தீர்த்துத் தலைவனுடன் சேர்த்து வைக்கின்றாள் எனக் கொள்ள வேண்டும்.  தேம் பாய் மராஅம் கமழும் (3) – ஒளவை துரைசாமி உரை – தேன் சொரியும் மரவம் பூவின் மணம் நாறும், H. வேங்கடராமன் உரை – வண்டுகள் பாயப்பெற்ற வெண்கடம்ப மரத்தின் பூங்கொத்துக்களின் மணம் வீசுகின்ற.  கொடி முயங்கலளே (11) – ஒளவை துரைசாமி உரை – தொய்யிற்கொடி எழுதப் படாமையால் வருந்துவளாதலின் அவள் பாலே செல்க, H. வேங்கடராமன் உரை – கொடி போன்ற நின் முயக்கம் நீங்கினவளாகி, பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – கொடி போன்று நின் முயக்கம் நீங்கினவளாக.  இகும் – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல்.  அவற்றுள் இகுமும் சின்னும் ஏனை இடத்தொடும் தகுநிலையுடைய என்மனார் புலவர் (தொல்காப்பியம், சொல்லதிகாரம், இடையியல் 2).

சொற்பொருள்:  ஐய – ஐயா, குறுமகள் கண்டிகும் – நின் காதலியான இளமகளை யாம் கண்டேம் (கண்டிகும் தன்மை வினைமுற்று திரிசொல், இகும் தன்மைக்கண் வந்த அசைநிலை), வைகி மகிழ்நன் மார்பில் துஞ்சி – நின்னிடத்துத் தங்கி நின் மார்பில் உறங்கி, அவிழ் இணர்த் தேம் பாய் மராஅம் கமழும் கூந்தல் துளங்கு இயல் அசைவர – தேன் வண்டுகள் பாயும் கடம்ப மரத்தின் விரிந்த பூங்கொத்துக்களின் மணம் வீசும் கூந்தல் சிறுபுறத்தில் வீழ்ந்து அசைய (தேம் தேன் என்றதன் திரிபு, மராஅம் – அளபெடை, Anthocephalus cadamba, Kadampa Oak), கலிங்கம் துயல் வரச் செறி தொடி தெளிர்ப்ப வீசி – அவளது ஆடை தளர்ந்து அசைய நெருங்கிய வளையல்கள் ஒலிக்க, மறுகில் – தெருவில், பூப்போல் உண்கண் பெயர்ப்ப நோக்கிச் சென்றனள் – மலர்களை ஒத்த மையிட்ட கண்கள் சுழலும்படி பார்த்துச் சென்றாள், வாழிய மடந்தை – அவள் நீடு வாழ்வாள் ஆக, நுண் பல் சுணங்கு அணிவுற்ற விளங்கு பூணள் மார்புறு முயக்கிடை – நுட்பமான பல சுணங்குகளை உடையவளாக ஒளியுடைய அணிகலன்களை உடையவளாக நின் மார்பின்கண் பெற்ற முயக்கத்தால் (அணைத்ததால்), ஞெமிர்ந்த சோர் குழை – நெரிந்த சோர்ந்த பூந்தளிர்கள், பழம் பிணி வைகிய தோள் இணைக் குழைந்த கோதை – நீட்டித்த பிணியுற்ற இரண்டு தோள்களையும் துவன்ற மாலையையும் உடையவளாக, கொடி முயங்கலளே – கொடி போன்ற நின் முயக்கத்திலிருந்து நீங்கினவள் (முயங்கலளே – ஏகாரம்  அசைநிலை)

நற்றிணை 21, மருதன் இளநாகனார், முல்லைத் திணை – தலைவன் தேர்ப்பாகனிடம் சொன்னது
விரைப் பரி வருந்திய வீங்கு செலல் இளையர்
அரைச் செறி கச்சை யாப்பு அழித்து அசைஇ,
வேண்டு அமர் நடையர் மென்மெல வருக
தீண்டா வை முள் தீண்டி நாம் செலற்கு
ஏமதி வலவ தேரே! உதுக்காண்!  5
உருக்குறு நறு நெய் பால் விதிர்த்தன்ன,
அரிக்குரல் மிடற்ற அம் நுண் பல் பொறிக்
காமரு தகைய கான வாரணம்
பெயல் நீர் போகிய வியல் நெடும் புறவில்
புலரா ஈர் மணல் மலிரக் கெண்டி, 10
நாள் இரை கவர மாட்டித் தன்
பேடை நோக்கிய பெருந்தகு நிலையே.

பாடல் பின்னணி:  வினை முற்றி மீளும் தலைவன் தேர்ப்பாகனிடம் கூறியது.

பொருளுரை:  விரைந்து செல்வதனால் வருந்திய மிக்க நடையுடைய ஏவலர்கள் இடையில் கட்டிய கச்சையின் கட்டை அவிழ்த்துவிட்டு இளைப்பாறி, விரும்பியவாறு நடந்து வருபவர்கள் மெல்ல வருவார்களாக! இதுவரை பயன்படுத்தாத கூரிய தாற்றுக்கோல் முள்ளால் குதிரையைத் தொட்டுத் தூண்டித் தேரை நீ செலுத்துவாயாகப் பாகனே!  அதோ பார்!  உருக்கப்பட்ட நறுமண நெய்யைப் பாலில் தெளித்தாற்போல் அரித்த ஓசையைச் செய்யும் கழுத்தையும் அழகிய நுண்ணியப் பல பொறிகளையும் உடைய, காண்பவர்களுக்கு விருப்பம் தரும் அழகுடைய காட்டுக்கோழி ஒன்று, மழை பெய்து நீர் வடிந்த அகன்ற நெடிய காட்டில் ஈரம் புலராத மண்ணை நன்றாகக் கிண்டிவிட்டுக் காலை இரையாகிய புழுவைக் கவர்ந்துக் கொன்று, அதைத் தன் அலகினால் பற்றிக்கொண்டு தன் பெடைக்குக் கொடுக்க வேண்டி அதை நோக்கிச் செல்லும் பெரிய தகைமை பொருந்திய நிலையை!

குறிப்பு:  அரிக்குரல் (7) – ஒளவை துரைசாமி உரை – அரித்தெழும் ஒலி, பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – கடைகின்ற குரல், ச. வே. சுப்பிரமணியன் – தேரையின் குரல், காமரு தகைய (8) – ஒளவை துரைசாமி உரை – விரும்பத்தக்க அழகுப் பொருந்திய, பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – விருப்பம் தரும் தகுதிப்பாட்டினையுடைய.  நாள் இரை (11) – ஒளவை துரைசாமி உரை – நாட் காலையில் பெற்ற இரையாகிய புழு, பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – நாட்காலை உணவாகிய நாங்கூழ்.  உள்ளுறை – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – கானவாரணம் புறவில் மணல் கெண்டிப் பெற்ற நாங்கூழாகிய நாள் இரையைத் தன் பெடையை ஊட்டி மகிழ்தற்கு அதனை விரும்பி நோக்கியிருந்தால் போன்று யாமும் வேற்று நாட்டின்கண் ஊக்கத்தோடு முயன்றீட்டிய நம் பொருளை மனையாளோடு இருந்து அறஞ்செய்து இன்புறுதற்கு அதற்கு இன்றியமையாத் துணையாகிய என் காதலியைக் காண்டற்குப் பெரிதும் கண் விதுப்புறா நின்றோம் என்பது உள்ளுறை.  மதி – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம், சொல்லதிகாரம், இடையியல் 26).  வை – வையே கூர்மை (தொல்காப்பியம், உரியியல் 91).

சொற்பொருள்:  விரைப் பரி வருந்திய வீங்கு செலல் இளையர் – விரைந்து செல்வதனால் வருந்திய மிக்க செலவுடைய ஏவலர்கள் (செலல் – இடைக்குறை), அரைச் செறி கச்சை யாப்பு அழித்து அசைஇ – இடையில் கட்டிய கச்சையின் கட்டை அவிழ்த்து த்தங்கி (இளைப்பாறி), (அசைஇ – அளபெடை), வேண்டு அமர் நடையர் மென்மெல வருக – விரும்பியவாறு நடந்து வருபவர்கள் மெல்ல வருவார்களாக, தீண்டா வை முள் தீண்டி நாம் செலற்கு – இதுவரை பயன்படுத்தாத கூரிய தாற்றுக்கோல் முள்ளால் குதிரையைத் தொட்டுத் தூண்டி, ஏமதி வலவ தேரே – தேரை நீ செலுத்துவாயாகப் பாகனே (ஏவுமதி என்பது ஏமதி ஆயிற்று, மதி – முன்னிலையசை), உதுக்காண் – அதோ பார் (உது – இடைச்சுட்டு), உருக்குறு நறு நெய் பால் விதிர்த்தன்ன அரிக்குரல் மிடற்ற அம் நுண் பல் பொறி – உருக்கப்பட்ட நறுமண நெய்யைப் பாலில் தெளித்தாற்போல் அரித்த ஓசையைச் செய்யும் கழுத்தையும் அழகிய நுண்ணியப் பல பொறிகளையும் உடைய, காமரு தகைய – விருப்பம் தரும் அழகுடைய (காமர் + மருவும்: காமர் – கா எனக் கடைக்குறைந்து நின்றது, மருவும் – மவ்வீறு சந்தியால் கெட்டு ஈற்றுமிசை உகரம் மெய்யொடுங்கெட்டது, தகைய – அழகிய, தகுதியுடைய), கான வாரணம் – காட்டுக்கோழி, Gallus sonneratii, பெயல் நீர் போகிய வியல் நெடும் புறவில் புலரா ஈர் மணல் மலிரக் கெண்டி – மழை பெய்து நீர் வடிந்த அகன்ற நெடிய காட்டில் ஈரம் புலராத மண்ணை நன்றாகக் கிண்டி, நாள் இரை கவர மாட்டி தன் பேடை நோக்கிய பெருந்தகு நிலையே – காலை இரையாகிய புழுவைக் கவர்ந்துக் கொன்று அதைத் தன் அலகினால் பற்றிக்கொண்டு தன் பெடைக்குக் கொடுக்க வேண்டி அதை நோக்கிச் செல்லும் பெரிய தகைமை பொருந்திய நிலையை (நிலையே ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 22, பாடியவர் பெயர் கிடைக்கவில்லை, குறிஞ்சித் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
கொடிச்சி காக்கும் அடுக்கல் பைந்தினை
முந்து விளை பெருங்குரல் கொண்ட மந்தி
கல்லாக் கடுவனொடு நல் வரை ஏறி,
அங்கை நிறைய ஞெமிடிக் கொண்டு தன்
திரை அணல் கொடுங்கவுள் நிறைய முக்கி,  5
வான் பெயல் நனைந்த புறத்த நோன்பியர்
தை ஊண் இருக்கையின் தோன்றும் நாடன்
வந்தனன், வாழி தோழி, உலகம்
கயம் கண் அற்ற பைது அறு காலைப்,
பீளொடு திரங்கிய நெல்லிற்கு,  10
நள்ளென் யாமத்து மழை பொழிந்தாங்கே.

பாடல் பின்னணி:  வரைந்துகொள்ள வேண்டித் தலைவன் வரக்கண்ட தோழி மகிழ்ந்து கூறியது.

பொருளுரை:  தோழி!  நீ நீடு வாழ்வாயாக! குறமகள் (மலையில் வாழும் பெண்) காவல் காக்கும் மலைப்பக்கத்தில் விளைந்த பசுமையான தினைப்பயிரில் முற்பட விளைந்த பெரும் கதிர்க்கொத்துக்களைக் கொய்த பெண் குரங்கு ஒன்று, பாய்ந்து செல்லும் தொழிலைத் தவிர வேறு எதுவும் கற்காத தன் ஆண் குரங்குடன் நல்ல மலையின் மீது ஏறி, உள்ளங்கை நிறைய அக்கதிர்களைக் கசக்கிக் கொண்டு கடுவனுக்கு அளித்துத் தன்னுடைய திரைத்த அணலையுடைய (மோவாயையுடைய) வளைந்த கன்னம் நிறையத் தானும் உண்டு, மழை விழுந்ததால் இரு குரங்குகளின் முதுகுப்புறம் நனைந்து, அதனால், தைத் திங்களில் நீரில் மூழ்கி எழுந்து, அதன் பின் உணவை உண்ணும் நோன்பியர்போல் தோன்றும் மலைநாடன் வரைவுடன் வந்துள்ளான், உலகத்தில் உள்ள குளங்கள் எல்லாம் நீர் வற்றி உலர்ந்த வேளை, சூலொடு வாடிய நெற்பயிர்களுக்கு நள்ளிரவுப்பொழுதில் மழை பொழிந்தாற்போல!

குறிப்பு:  ஒளவை துரைசாமி உரை – ‘நாற்றமும் தோற்றமும்’ (தொல்காப்பியம், களவியல் 24) என்ற நூற்பாவின் ‘ஆங்கதன் தன்மையின் வன்புறை’ என்ற பகுதிக்கு இதனைக்காட்டி, ‘இதனுள் தினைவினை காலம் வதுவைக் காலமாயினும் வம்பமாரி இடையிடுதலன்றி யான் கூறிய வரைவு பொய்த்தனரேனும் இன்று மெய்யாகவே வந்தனர் என்றாள்’ என்பர் நச்சினார்க்கினியர்.  உள்ளுறை – ஒளவை துரைசாமி உரை – பெருங்குரல் கவர்ந்த மந்தி கடுவனொடு நல்வரை ஏறி என்றாள்.  நீயும் மணவாழ்வு மேற்கொண்டு தலைவனுடன் அவன் மனையகம் அடைந்து அவன் தாளாற்றித் தந்த பொருளைப் பாத்துண்டு இனிது வாழ்வாய் என்பது.  கண் அற்ற (9) – ஒளவை துரைசாமி உரை – ஈரமின்றிப் புலர்தல், பொ. வே. சோமசுந்தரனார் உரை (அகநானூறு 189 உரை) – சுனைகள் ஊற்றுக்கண் அற்றுப்போன.  மந்தி – பேடையும் பெடையும் பெட்டையும் பெண்ணும் மூடும் நாகும் கடமையும் அளகும் மந்தியும் பாட்டியும் பிணையும் பிணவும் அந்தம் சான்ற பிடியொடு பெண்ணே (தொல்காப்பியம், மரபியல் 3).

சொற்பொருள்:  கொடிச்சி காக்கும் அடுக்கல் பைந்தினை முந்து விளை பெருங்குரல் கொண்ட மந்தி கல்லாக் கடுவனொடு நல் வரை ஏறி அங்கை நிறைய ஞெமிடி கொண்டு – குறமகள் (மலையில் வாழும் பெண்) காவல் காக்கும் மலைப்பக்கத்தில் விளைந்த பசுமையான தினைப்பயிரில் முற்பட விளைந்த பெரும் கதிர்க்கொத்துக்களைப் பறித்த பெண் குரங்கு பாய்ந்து செல்லும் தொழிலைத் தவிர வேறு எதுவும் கற்காத தன் ஆண் குரங்குடன் நல்ல மலையின் மீது ஏறி உள்ளங்கை நிறைய கசக்கிக் கொண்டு, தன் திரை அணல் கொடும் கவுள் நிறைய முக்கி வான் பெயல் நனைந்த புறத்த நோன்பியர் தை ஊண் இருக்கையின் தோன்றும் – தன்னுடைய திரைத்த அணலையுடைய (நாடியையுடைய, மோவாயையுடைய) வளைந்த கன்னம் நிறைய உண்டு மழை விழுந்ததால் முதுகுப்புறம் நனைந்து அதனால் தைத் திங்களில் நீரில் மூழ்கி எழுந்து பின் உணவை உண்ணும் நோன்பியர்போல் தோன்றும் (இருக்கையின் – இன் உருபு ஒப்புப் பொருளது, ஐந்தாம் வேற்றுமை உருபு), நாடன் வந்தனன் – மலைநாடன் வந்தான், வாழி – அசைநிலை, நீடு வாழ்வாயாக, தோழி – தோழி, உலகம் கயம் கண் அற்ற பைது அறு காலை – உலகத்தில் உள்ள குளங்கள் எல்லாம் நீர் வற்றி உலர்ந்த வேளை, பீளொடு திரங்கிய நெல்லிற்கு நள்ளென் யாமத்து மழை பொழிந்தாங்கே – சூலொடு வாடிய நெற்பயிர்களுக்கு நள்ளிரவுப்பொழுதில் மழை பொழிந்தாற்போல (பொழிந்தாங்கே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 23, கணக்காயனார், குறிஞ்சித் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
தொடி பழி மறைத்தலின் தோள் உய்ந்தனவே;
வடிக் கொள் கூழை ஆயமோடு ஆடலின்
இடிப்பு மெய்யது ஒன்று உடைத்தே; கடிக் கொள
அன்னை காக்கும் தொல் நலம் சிதையக்,
காண்தொறும் கலுழ்தல் அன்றியும், ஈண்டு நீர் 5
முத்துப்படு பரப்பின் கொற்கை முன்துறைச்
சிறு பாசடைய செப்பு ஊர் நெய்தல்
தெண் நீர் மலரின் தொலைந்த
கண்ணே காமம் கரப்பு அரியவ்வே.

பாடல் பின்னணி:  களவொழுக்கத்தை நீட்டித்து வரையாது ஒழுகும் தலைவனிடம் தோழி வரைவு கடாயது.

பொருளுரை:  வாரி முடித்த கூந்தலையுடைய இவள் தன்னுடைய வளையல்களைக் கழலாதவாறு செறித்து (இறுக்கமாக) மறைத்ததால், இவளுடைய தோள்களின் மெலிவு பிறர்க்குத் தோன்றாது ஆயின.  தன் தோழியருடன் விளையாடுவதால் இவள் உடலில் களைப்புத் தோன்றியது.  பாதுகாக்கும்பொருட்டு இவளது அன்னையானவள் காக்கும் பண்டைய அழகு பாழ்பட, அதனைப் பார்க்கும்பொழுதெல்லாம் இவள் அழுதாள்.  அல்லாமலும், இங்கு நீர் மிக்க முத்துக்கள் விளைகின்ற கொற்கை நகரத்தின் துறை முன் சிறிய பசிய இலைகளையுடைய அழகு அமைந்த நெய்தலின் தெளிந்த நீரில் உள்ள மலர்களைப்போல இருந்த அழகை இழந்த கண்கள், உன் மீது உள்ள காதலை மறைக்க முடியாது உள்ளன.

குறிப்பு:  H. வேங்கடராமன் உரை – பாட்டின் கருத்து – விரைந்து வந்து தலைவியை மணந்துகொள்வாயாக என்பதாம்.  வடிக் கொள் கூழை (2) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – வாரி முடித்த கூந்தல், ஒளவை துரைசாமி உரை – வடு வகிர்ந்து வாரி முடிக்கப்படும் கூந்தல்.  செப்பு ஊர் நெய்தல் (7) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – அழகு அமைந்த நெய்தல், செப்பு – செப்பம், கடைக்குறை.  பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – கொற்கை நீரில் முத்து விளையும் என்றது நும் வதுவையால் தலைவி இல்லகத்தார் மகிழ்ச்சி அடைவார் என்றவாறு.  வரலாறு:  கொற்கை.  காமம் – கமம் என்னும் சொல்லின் முதல் நீண்ட வடிவம், ‘நிறைந்த அன்பு’ என்பது இச்சொல்லின் பொருள் – பேரறிஞர் கு.வெ. பாலசுப்பிரமணியன் அவர்களின் விளக்கம், (கமம் நிறைந்து இயலும் – தொல்காப்பியம், சொல்லியல் 355).

சொற்பொருள்:  தொடி பழி மறைத்தலின் தோள் உய்ந்தனவே – இவள் தன்னுடைய வளையல்களைக் கழலாதவாறு செறித்து (இறுக்கமாக) மறைத்ததால் தோள்களின் மெலிவு பிறர்க்குத் தோன்றாது ஆயின (உய்ந்தனவே – ஏகாரம் அசைநிலை), வடிக் கொள் கூழை – வாரி முடித்த கூந்தல், ஆயமோடு ஆடலின் – தன் தோழியருடன் விளையாடுவதால், இடிப்பு மெய்யது ஒன்று உடைத்தே – உடலில் களைப்புத் தோன்றியது, கடிக் கொள அன்னை காக்கும் தொல் நலம் சிதைய – பாதுகாக்க இவளது அன்னையானவள் காக்கும் பண்டைய அழகு பாழ்பட, காண்தொறும் கலுழ்தல் அன்றியும் – பார்க்கும்பொழுதெல்லாம் அழுதாள் அல்லாமலும், ஈண்டு நீர் முத்துப்படு பரப்பின் கொற்கை முன்துறை – இங்கு நீர் மிக்க முத்துக்கள் விளைகின்ற கொற்கை நகரத்தின் துறை முன் (முன்துறை – துறைமுன்), சிறு பாசடைய செப்பு ஊர் நெய்தல் தெண் நீர் மலரின் தொலைந்த கண்ணே – சிறிய பசிய இலைகளையுடைய அழகு அமைந்த நெய்தலின் தெளிந்த நீரில் உள்ள மலரைப்போல இருந்த அழகை இழந்த கண்கள் (மலரின் – இன் ஒப்புப்பொருளில் வந்தது, ஐந்தாம் வேற்றுமை உருபு, கண்ணே – ஏகாரம் அசைநிலை), காமம் கரப்பு அரியவ்வே – உன் மீது உள்ள காதலை மறைக்க முடியாது உள்ளன (விரிக்கும் வழி விரித்தல், ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 24, பாடியவர் பெயர் கிடைக்கவில்லை, பாலைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
பார் பக வீழ்ந்த வேருடை விழுக் கோட்டு
உடும்பு அடைந்தன்ன நெடும் பொரி விளவின்
ஆட்டு ஒழி பந்தின் கோட்டு மூக்கு இறுபு,
கம்பலத்து அன்ன பைம் பயிர்த் தாஅம்
வெள்ளில் வல்சி வேற்று நாட்டு ஆர் இடைச் 5
‘சேறும் நாம்’ எனச் சொல்ல சேயிழை,
‘நன்று’ எனப் புரிந்தோய், நன்று செய்தனையே;
செயல்படு மனத்தர் செய் பொருட்கு
அகல்வர் ஆடவர், அது அதன் பண்பே.

பாடல் பின்னணி:  தலைவனின் பொருட் பிரிவுக்கு உடன்பட்ட தோழியைத் தலைவி உவந்து கூறியது.

பொருளுரைசெவ்விய அணிகலன்களை அணிந்தவளே! நிலம் பிளவுபடுமாறு கீழே இறங்கிய வேர்களையும் பெரிய கிளைகளையும் உடும்பு பொருந்தியிருப்பதை ஒத்த பொரிந்த செதில்களையுடைய மேற்பட்டையையும் உடைய உயர்ந்த விளவு மரத்தின் கிளைகளில் காம்பு உடைந்து உதிர்ந்த பழங்கள், விளையாடுதல் முடிந்த பந்தினைப்போலப் பரவி, காண்பதற்குக் கம்பளத்தை விரித்தாற்போன்று இருக்கும் பசுமையான பயிர் நிறைந்த வயலில் பரவி இருக்கும்.  “விளாம்பழங்களை உணவாகக் கொள்ளும் அயல்நாட்டின் செல்வதற்கு அரிய வழியின்கண் யாம் செல்வோம்” என்று நம் தலைவர் கூற, அவ்வாறு அவர் செல்வது நல்லது எனக் கூறி, நல்லது ஒன்றை நீ செய்தாய். பொருளை ஈட்ட வேண்டும் என்ற எண்ணத்தையுடையவர்கள் ஆடவர்கள்.  அவர்கள் பொருள் ஈட்டச் செல்வார்கள்.  அது அவர்களின் பண்பாகும்.

குறிப்பு:  ஒளவை துரைசாமி உரையில் புலவரின் பெயர்குன்றூர் கிழார் மகனார் கண்ணத்தனார் என்று உள்ளது.  ஒளவை துரைசாமி உரை – ‘அவனறிவு ஆற்ற அறியுமாகலின்’ (தொல்காப்பியம், கற்பியல் 6) என்ற நூற்பாவிலுள்ள ‘கொடுமை ஒழுக்கம் தோழிக்கு உரியவை, வடு அறு சிறப்பின் கற்பின் திரியாமை காய்தலும் உவத்தலும் பிரித்தலும் பெட்டலும், ஆவயின் வரூஉம் பல் வேறு நிலையினும்’ என்ற பகுதிக்கு இப்பாட்டை எடுத்துக்காட்டி, ‘இது நன்று செய்தனை எனத் தலைவி உவந்து கூறியது’ என்பர் நச்சினார்க்கினியர்.  ஒப்புமை:  நற்றிணை 6 – அத்தக் குமிழின் கொடு மூக்கு விளை கனி, நற்றிணை 24 – விளவின் ஆட்டு ஒழி பந்தின் கோட்டு மூக்கு இறுபு, நற்றிணை 372 – பெண்ணைத் தேனுடை அழி பழம் வள் இதழ் நெய்தல் வருந்த மூக்கு இறுபு அள்ளல் இருஞ்சேற்று ஆழப் பட்டென, ஐங்குறுநூறு 213 – நறு வடி மாஅத்து மூக்கு இறுபு உதிர்த்த.  மூக்கு – பொ. வே. சோமசுந்தரனார் உரை, ஐங்குறுநூறு 213, மூக்கு – காம்பு.  இறைச்சி – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – விளங்கனியே உணவாக இருந்தும் அவை எடுப்பார் மிக்கின்மையால் பயிரிற் பரவிக்கிடக்கும் என்றது, செல்லும் தேயத்து ஆண்டுள்ளாரும் பொருள் வேட்கையாராயினும், ஈட்டுவார் மிக்கின்மையின் நம் காதலர் அங்கே சென்றவுடன் விரைவில் ஈட்டுமாறு கிட்டுவதாகும் என்றதாம்.  விழு (விழுமம்) – விழுமம் சீர்மையும் சிறப்பும் இடும்பையும் (தொல்காப்பியம், உரியியல் 57).  அது அதன் பண்பே (9) – ஒளவை துரைசாமி உரை – அச்செலவு பொருள் கருதும் உள்ளத்தின் பண்பாகும், பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – அவர் அகலும்பொழுது மறுத்துக் கூறாமல் உடன்படுவதே அதற்குரிய பண்பாகும்.

சொற்பொருள்:  பார் பக வீழ்ந்த வேருடை விழுக் கோட்டு உடும்பு அடைந்தன்ன நெடும் பொரி விளவின் ஆட்டு ஒழி பந்தின் – நிலம் பிளவுபடுமாறு கீழே இறங்கிய வேர்களையும் பெரிய கிளைகளையும் உடும்பு பொருந்தியிருப்பதை ஒத்த பொரிந்த செதில்களையுடைய உயர்ந்த விளவு மரத்தின் விளையாடுதல் முடிந்த பந்தினைப்போல உள்ள பழங்கள் (விளவு – Limonia acidissima, பந்தின் – இன் உருபு ஒப்புப் பொருளது), கோட்டு மூக்கு இறுபு கம்பலத்து அன்ன  – கிளைகளிலிருந்து காம்பு உடைந்து விழுந்து காண்பதற்குக் கம்பளத்தைப் போன்று இருக்கும் (கம்பலத்து – கம்பலம், அத்துச் சாரியை), பைம் பயிர்த் தாஅம் – பசுமையான பயிரில் பரவி இருக்கும் (தாஅம் – செய்யுளிசை அளபெடை), வெள்ளில் வல்சி வேற்று நாட்டு ஆர் இடைச் சேறும் நாம் எனச் சொல்ல – விளாம்பழங்களை உணவாக உடைய அயல்நாட்டில் செல்வதற்கு அரிய வழியில் யாம் செல்வோம் என்று தலைவர் கூற (சேறும் – தன்மைப் பன்மை, நாம் – தன்மைப் பன்மை), சேயிழை – செவ்விய அணிகலன்களை அணிந்தவளே (அன்மொழித்தொகை விளியேற்று நின்றது), நன்று எனப் புரிந்தோய் நன்று செய்தனையே – அவ்வாறு அவர் செல்வது நல்லது எனக் கூறி நல்லது ஒன்றை நீ செய்தாய் (செய்தனையே – ஏகாரம்  அசைநிலை), செயல்படு மனத்தர் – பொருளை ஈட்ட வேண்டும் என்ற எண்ணத்தையுடையவர், செய் பொருட்கு அகல்வர் ஆடவர் – பொருள் ஈட்ட ஆடவர்கள் செல்வார்கள், அது அதன் பண்பே – அது அவர்களின் பண்பாகும், மறுத்துக் கூறாமல் உடன்படுவதே பண்பாகும் (பண்பே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 25, பேரி சாத்தனார், குறிஞ்சித் திணை தோழி தலைவியிடம் சொன்னது
அவ் வளை வெரிநின் அரக்கு ஈர்த்தன்ன
செவ்வரி இதழ சேண் நாறு பிடவின்
நறுந்தாது ஆடிய தும்பி பசுங்கேழ்ப்
பொன் உரை கல்லின் நல் நிறம் பெறூஉம்
வளமலை நாடன் நெருநல் நம்மொடு  5
கிளை மலி சிறுதினைக் கிளி கடிந்து அசைஇச்,
சொல்லிடம் பெறாஅன் பெயர்ந்தனன், பெயர்ந்தது
அல்லல் அன்று அது காதல் அம் தோழி,
தாது உண் வேட்கையின் போது தெரிந்து ஊதா
வண்டு ஓரன்ன அவன் தண்டாக் காட்சி  10
கண்டும், கழல் தொடி வலித்த என்
பண்பு இல் செய்தி நினைப்பு ஆகின்றே.

பாடல் பின்னணி:  தலைவியைத் தோழி குறை நயப்பக் கூறியது.  தலைவனை தன்னுள்ளம் விரும்பினதுப் போலத் தலைவி அதனை ஆராய்ந்து ‘தன்னை விரும்பினன்’ எனக் கொள்ளும் வண்ணம் தோழி கூறியது.

பொருளுரைஅன்புமிக்க தோழியே! அழகிய சங்கின் (வளையின், கோடின்) முதுகில் செவ்வரக்கினால் வரிகளைத் தீட்டினாற்போல் சிவந்த வரியுடைய இதழ்களையுடைய தொலைவில் நறுமணம் வீசும் பிடவம்பூவின் நறுமணமுடைய தாதில் படிந்து உண்ட தும்பி, பசுமையான நிறமுள்ள பொன்னை உரசும் கல்லைப்போன்று நல்ல நிறம் பெறும், வளப்பத்தையுடைய மலைநாட்டின் தலைவன், நேற்று நம்முடன் கிளைகள் மிகுந்த சிறுதினையை உண்ண வரும் கிளிகளை விரட்டியும் அங்குத் தங்கியும் தன்னுடைய குறையை நம்பால் சொல்ல வாய்ப்பு இல்லாது நீங்கினான்.  அவ்வாறு அவன் சென்றது நமக்குத் துன்பம் தருவது அன்று. தாது உண்ணும் விருப்பத்தினால் ஊதுதற்கு உரிய மலர்களை அறிந்து ஊதாத வண்டைப்போலும் அவனது கெடாத தோற்றத்தைக் கண்டும், கழன்ற வளையல்களைச் செறித்த (இறுக்கிய) என் பண்பு இல்லாத செய்கையை எண்ணுகின்றது என் நெஞ்சம்.

குறிப்பு:  ஒளவை துரைசாமி உரை – ‘நாற்றமும் தோற்றமும்’ (தொல்காப்பியம், களவியல் 24) என்ற நூற்பாவில் வரும் ‘மறைந்தவள் அருக தன்னொடும் அவளொடும் முதல் மூன்று அளைஇ பின்னிலை நிகழும் பல் வேறு நிலையினும்’ என்புழி வரும் பல்வேறு நிலையின்கண் இப்பாட்டைக் காட்டி இங்கே ஓதியவற்றின் வேறுபட வந்தது கொள்க’ என்பர் நச்சினார்க்கினியர்.   ஒளவை துரைசாமி உரை – அவனது வண்டோரன்ன தண்டாக்காட்சி நிலைபேறின்றித் தடுமாறுவது கண்டு தனக்கும் அவன்பால் அன்பு உண்டாயிற்று என்பாளாய் கண்டும் கழல் தொடி வலித்த என் செய்தி என்றும், அதனால் தலைவியின் முகம் பொறாமையால் சிவத்தல் கண்டு, அஃது எனக்குப் பாடறிந்தொழுகாத செயல் என்பதை உணர்கின்றேன் என்பாள் என் பண்பு இல் செய்தி என்றும், அந்நிகழ்ச்சி என் நெஞ்சின்கண் மிக்கு நிற்றலின் நின்பால் உரைப்பேனாயினேன் என்பாள் நினைப்பாகின்றது என்றும் உரைத்தாள்.

சொற்பொருள்:  அவ்வளை வெரிநின் அரக்கு ஈர்த்தன்ன செவ்வரி இதழ சேண் நாறு பிடவின் நறுந்தாது ஆடிய தும்பி – அழகிய சங்கின் (வளையின், கோடின்) முதுகில் செவ்வரக்கினால் வரிகளைத் தீட்டினாற்போல் சிவந்த வரியுடைய இதழ்களையுடைய தொலைவில் நறுமணம் வீசும் பிடவம்பூவின் நறுமணமுடைய தாதில் படிந்து உண்ட தும்பி (பிடவம் – Randia malabarica, wild jasmine), பசுங்கேழ் பொன் உரை கல்லின் நல் நிறம் பெறூஉம் – பசுமையான நிறமுள்ள பொன்னை உரசும் கல்லைப்போன்று நல்ல நிறம் பெறும் (கல்லின் – இன் ஒப்புப்பொருளில் வந்தது, ஐந்தாம் வேற்றுமை உருபு, பெறூஉம் – செய்யுளிசை அளபெடை), வளமலை நாடன் – வளப்பத்தையுடைய மலைநாட்டின் தலைவன், நெருநல் நம்மொடு கிளை மலி சிறுதினைக் கிளி கடிந்து அசைஇச் சொல்லிடம் பெறாஅன் பெயர்ந்தனன் – நேற்று நம்முடன் கிளைகள் மிகுந்த சிறுதினையை உண்ண வரும் கிளிகளை விரட்டியும் அங்குத் தங்கியும் தன்னுடைய குறையை நம்பால் சொல்ல வாய்ப்பு இல்லாது நீங்கினான் (அசைஇ – அளபெடை, பெறாஅன் – அளபெடை), பெயர்ந்தது அல்லல் அன்று அது– அவ்வாறு அவன் சென்றது நமக்குத் துன்பம் தருவது அன்று, காதல் அம் தோழி – அன்புமிக்க தோழியே, தாது உண் வேட்கையின் போது தெரிந்து ஊதா வண்டு ஓரன்ன அவன் தண்டாக் காட்சி கண்டும் – தாது உண்ணும் விருப்பத்தினால் ஊதுதற்கு உரிய மலர்களை அறிந்து ஊதாத வண்டைப்போலும் அவனது கெடாத தோற்றத்தைக் கண்டும், கழல் தொடி வலித்த என் பண்பு இல் செய்தி நினைப்பு ஆகின்றே – கழன்ற வளையல்களைச் செறித்த (இறுக்கிய) என் பண்பு இல்லாத செய்கையை எண்ணுகின்றது என் நெஞ்சம் (ஆகின்றே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 26, சாத்தந்தையார், பாலைத் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
நோகோ யானே, நெகிழ்ந்தன வளையே,
செவ்வி சேர்ந்த புள்ளி வெள் அரை
விண்டுப் புரையும் புணர் நிலை நெடுங்கூட்டுப்
பிண்ட நெல்லின் தாய் மனை ஒழியச்,
சுடர் முழுது எறிப்பத் திரங்கிச் செழுங்காய்  5
முட முதிர் பலவின் அத்தம் நும்மொடு
கெடுதுணை ஆகிய தவறோ, வை எயிற்றுப்
பொன் பொதிந்தன்ன சுணங்கின்
இருஞ்சூழ் ஓதிப் பெருந்தோளாட்கே?

பாடல் பின்னணி:  தலைவி பிரிவு உணர்ந்து வேறுபட்டமை சொல்லி, தோழி தலைவனின் செலவு அழுங்குவித்தது.

பொருளுரை:  புள்ளிகள் பொருந்திய வெள்ளை அடிப்பகுதியை உடைய மலைபோன்ற அடுக்கிய நிலை அமைந்த பெரிய நெற்கூட்டில் நிறைய நெல் உள்ள தாயின் வீட்டை நீங்கி, கதிரவன் முழுவதும் வெயிலை வீசுவதால் செழுமையான காய்கள் உலர்ந்த முடமுடைய பலா மரங்களையுடைய பாலை நிலத்திற்கு நீவிர் தனியாகச் சென்று வருந்தாதபடி நும்முடன் துணையாகச் சென்ற தவற்றினாலோ, கூர்மையான பற்களையும் பொன்னைப் பொதித்து வைத்தாற்போன்ற தேமலையும் அடர்ந்த கரிய கூந்தலையும் பெரிய தோள்களையும் உடைய என் தோழிக்கு இப்பொழுது வளையல்கள் கைகளிலிருந்து வழுக்கி விழுகின்றன?  அவளுக்காக  நான் வருந்துகின்றேன்.

குறிப்பு:  ஒளவை துரைசாமி உரை – ‘களவின்கண் இவளுடைய தமர் வரைவு மறுத்த போது நீ உடன்போக்கினைத் துணிந்தாய்.  நின்பாற் கொண்ட பெருங்காதலால் நினக்குத் துணையாய் என் தோழி வந்தாளன்றோ?’ என்று பண்டு நிகழ்ந்த காதல் செயலை நினைப்பித்து செலவு அழுங்குவித்தாள் தோழி.  பிண்ட நெல்லின் தாய் மனை (4) – கு. வெ. பாலசுப்பிரமணியன் உரை – பிண்ட நெல்லின் மனை என்றது, தாய் வீடு செல்வம் மிக்கதாய் இருந்தும் அதனை விட்டு உம்மோடு வந்தது நும்மொடு வாழும் பேற்றைக் கருதியன்றோ என்கின்றாள்.  கெடு துணை (4) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – உள்ளத்து எழுந்த அவாக் கெடுமாறு அருகுற்ற துணை, ஒளவை துரைசாமி உரை – கெட்டார்க்கு வேண்டுவன உதவி அக் கேட்டினின்றும் எடுக்கும் துணைவர்; கெடுங்காலை வேண்டுவன உதவும் துணை என்றுமாம்; கெடாதவாறு காக்கும் துணை கெடுதுணை எனப்பட்டது.  துணையாதல் தவறன்மை புலப்படுத்தலின் ஓகாரம் எதிர்மறை.  வை – வையே கூர்மை (தொல்காப்பியம், உரியியல் 91).

சொற்பொருள்:  நோகோ – நான் வருந்துகின்றேன் (நோகு – செய்கென்னும் தன்மை வினை, ஓகாரம் அசைநிலை, இரக்கக் குறிப்பு), யானே – யான் (ஏகாரம் அசைநிலை), நெகிழ்ந்தன வளையே – கைவளையல்கள் வழுக்கி விழுகின்றன, செவ்வி சேர்ந்த புள்ளி வெள் அரை விண்டுப் புரையும் புணர் நிலை நெடுங்கூட்டுப் பிண்ட நெல்லின் தாய் மனை ஒழியச் சுடர் முழுது எறிப்பத் திரங்கிச் செழுங்காய் முட முதிர் பலவின் – புள்ளிகள் பொருந்திய வெள்ளை அடிப்பகுதியை உடைய மலைபோன்ற அடுக்கிய நிலை அமைந்த பெரிய நெற்கூட்டில் நிறைய நெல் உள்ள தாயின் வீட்டை நீங்கி கதிரவன் முழுவதும் வெயிலை வீசுவதால் செழுமையான காய்கள் உலர்ந்த முடமுடைய பலா மரங்களையுடைய (புரை – உவம உருபு, பலவு – Artocarpus heterophyllus), அத்தம் நும்மொடு கெடு துணை ஆகிய தவறோ – பாலை நிலத்திற்கு நும்முடன் துணையாகச் சென்ற தவற்றினாலோ (தவறோ – ஓகாரம் ஐயப்பொருட்டு), வை எயிற்று பொன் பொதிந்தன்ன சுணங்கின் இருஞ்சூழ் ஓதி பெருந்தோளாட்கே – கூர்மையான பற்களையும் பொன்னைப் பொதித்து வைத்தாற்போன்ற தேமலையும் அடர்ந்த கரிய கூந்தலையும் பெரிய தோள்களையும் உடைய என் தோழிக்கு (பெருந்தோளாட்கே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 27, குடவாயிற் கீரத்தனார், நெய்தல் திணை – தோழி தலைவியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
நீயும் யானும், நெருநல் பூவின்
நுண் தாது உறைக்கும் வண்டினம் ஓப்பி,
ஒழி திரை வரித்த வெண்மணல் அடைகரைக்
கழி சூழ் கானல் ஆடியது அன்றிக்,
கரந்து நாம் செய்தது ஒன்று இல்லை, உண்டு எனின்  5
பரந்து பிறர் அறிந்தன்றும் இலரே, நன்றும்
எவன் குறித்தனள் கொல் அன்னை, கயந்தோறு
இற ஆர் இனக் குருகு ஒலிப்ப சுறவம்
கழி சேர் மருங்கின் கணைக் கால் நீடிக்
கண் போல் பூத்தமை கண்டு நுண் பல  10
சிறு பாசடைய நெய்தல்
குறுமோ சென்று எனக் கூறாதோளே?

பாடல் பின்னணி:  பகற்குறி வந்து ஒழுகும் தலைவன், வந்து ஒரு புறமாக இருந்ததை அறிந்த தோழி, களவு ஒழுக்கம் நீட்டியாமல் வரைந்து கொள்ள வேண்டித் தம்மை அன்னை இற்செறித்ததாகக் கருதுமாறு, தலைவியிடம் கூறுவது போல உரைத்தது.

பொருளுரை:  நீயும் நானும் நேற்று மலரின் நுண்ணிய தாதில் பாய்ந்து விழும் வண்டுகள் அதை உதிர்ப்பது கண்டு அவற்றை விரட்டி, கரையை உடைக்கும் அலைகளால் அழகுறுத்தப்பட்ட வெண்மணல் நிறைந்த கரையில், உப்பங்கழி சூழ்ந்த சோலையில் விளையாடியது அன்றி, நாம் மறைத்து எதையும் செய்யவில்லை.  அவ்வாறு செய்தது எதுவும் இருந்திருந்தால், அது பெரிதும் பரவி, அதனைப் பிறர் அறிந்திருப்பார்கள்.  அப்படி இருந்தும் தாய் பெரிதும் எதனைக் கருதுகின்றாள், குளங்கள்தோறும் சென்று இறா மீன்களை உண்ணும் குருகுகள் ஆரவாரிக்கும், சுறா மீன்கள் உப்பங்கழியில் சேரும் இடத்தின் பக்கத்தில் உள்ள, திரண்ட தண்டு நீண்டு, கண் போல் மலர்ந்த, நுண்ணிய பல சிறிய பசுமையான இலைகளையுடைய நெய்தல் மலர்களைச் சென்று பறித்து வாருங்கள் என்று நம்மிடம் கூறாதவள்?

குறிப்பு:  உறைக்கும் வண்டினம் (2) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – பாய்ந்து விழுகின்ற வண்டினம், H. வேங்கடராமன் உரை – திளைக்கும் வண்டினம்.  திரை வரித்த (3) – ஒளவை துரைசாமி உரை – அலைகளால் அழகுறுத்தப்பட்ட, பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – திரை கொழித்த.  உள்ளுறை – ஒளவை துரைசாமி உரை – இறாமீனை உண்ணும் குருகினம் ஆரவாரிக்கச் சுறாமீன் கழியின்கண் உலவும் என்றது, நம் நலம் காணும் அயற்பெண்டிர் அலரெடுத்து உரைக்குமாறு தலைமகன் குறியிடம் நோக்கிப் போக்குவரவு புரிகின்றான் என்றவாறு. எனவே வரைவு நினைந்திலன் எனத் தோழி உரைத்தாள்.  நன்று – நன்று பெரிது ஆகும் (தொல்காப்பியம், உரியியல் 45).

சொற்பொருள்:  நீயும் யானும் – நீயும் நானும், நெருநல் – நேற்று,  பூவின் நுண் தாது உறைக்கும் வண்டினம் ஓப்பி – மலரின் நுண்ணிய தாதில் படியும் வண்டுகள் அதை உதிர்ப்பது கண்டு அவற்றை விரட்டி (உறைக்கும் – உதிர்க்கும்), ஒழி திரை வரித்த வெண்மணல் அடைகரை – கரையை உடைக்கும் அலைகளால் அழகுறுத்தப்பட்ட வெண்மணல் நிறைந்த கடற்கரை (அடைகரை – நீர் அடைந்த கரை, மணல் நிறைந்த கரை), கழி சூழ் கானல் – உப்பங்கழி சூழ்ந்த கடற்கரைச் சோலை, ஆடியது அன்றி – விளையாடியது அன்றி, கரந்து நாம் செய்தது ஒன்று இல்லை – நாம் மறைத்து எதையும் செய்யவில்லை, உண்டு எனின் – செய்தது எதுவும் இருந்தால், பரந்து – பரவி, பிறர் அறிந்தன்றும் இலரே – பிறர் அறியவும் இல்லை (இலரே – ஏகாரம் அசைநிலை), நன்றும் எவன் குறித்தனள் கொல் அன்னை – அப்படி இருந்தும் தாய் பெரிதும் எதனைக் கருதுகின்றாள் (கொல் – அசைநிலை), கயந்தோறு – குளங்கள்தோறும், இற ஆர் இனக் குருகு ஒலிப்ப – இறா மீன்களை உண்ணும் குருகுகள் ஆரவாரிக்க, சுறவம் கழி சேர் மருங்கின் – சுறா மீன்கள் உப்பங்கழியில் சேரும் இடத்தில், கணைக் கால் நீடிக் கண் போல் பூத்தமை கண்டு நுண் பல – திரண்ட தண்டு நீண்டு கண் போல் மலர்ந்த நுண்ணிய பல, சிறு பாசடைய நெய்தல் – சிறிய பசுமையான இலைகளையுடைய நெய்தல் மலர்கள், குறுமோ சென்று எனக் கூறாதோளே – பறித்து வாருங்கள் என்று கூறவில்லை (குறுமோ – முன்னிலை அசை, கூறாதோளே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 28, முதுகூற்றனார், பாலைத் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
என் கைக் கொண்டு தன் கண் ஒற்றியும்,
தன் கைக் கொண்டு என் நன்னுதல் நீவியும்,
அன்னை போல இனிய கூறியும்,
கள்வர் போலக் கொடியன் மாதோ,
மணி என இழிதரும் அருவி பொன் என  5
வேங்கை தாய ஓங்கு மலை அடுக்கத்து
ஆடு கழை நிவந்த பைங்கண் மூங்கில்
ஓடு மழை கிழிக்கும் சென்னிக்
கோடு உயர் பிறங்கல் மலை கிழவோனே.

பாடல் பின்னணி:  பிரிவின்கண் ஆற்றாளாகிய தலைவிக்குத் தோழி சொல்லியது.  குறை நயப்புமாம்.  கு. வெ. பாலசுப்பிரமணியன் உரை – தலைவி கூற்றுக் கூறின் ஏதம் வருமென அஞ்சி இவ்வாறு கூறினள் தோழி என்பர்.

பொருளுரை:  நீலமணி நிறத்தில் வீழும் அருவியையுடைய, பொன்னிற வேங்கை மலர்கள் உதிர்ந்த உயர்ந்த மலைப்பக்கத்தில், அசைகின்ற உயர்ந்த பசிய கணுக்களையுடைய மூங்கில் ஓடும் முகில்களைக் கிழிக்கின்ற உச்சிகளையும் கோடுகளையும் (சிகரங்களையும்) உடைய பெரிய மலையின் தலைவன், முன்பு என் கைகளைப் பற்றித் தன் கண்களில் ஒற்றிக்கொண்டும், என்னுடைய நல்ல நெற்றியைத் தடவி விட்டும், ஒரு தாயைப்போன்று இனிமையானச் சொற்களை என்னிடம் கூறியும் அருள் செய்தவன், கள்வர் போல் கொடியவன் ஆனான்.

குறிப்பு:  ஔவை துரைசாமி உரை – ‘அவன் அறிவு ஆற்ற அறியும் ஆகலின்’ (தொல்காப்பியம், கற்பியல் 6) என்ற நூற்பாவில் வரும், ‘கிழவனை மகடூஉப் புலம்பு பெரிது ஆகலின் அலமரல் பெருகிய காமத்து மிகுதியும்’ என்பதற்கு இப்பாட்டினை எடுத்தோதிக் காட்டுவர் இளம்பூரணர்.  பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – தலைவி கூற்றாகக் கூறிய வழி அன்னை முதலோர் கேட்பின் ஐயுற்று ஏதம் இழைப்பாராதலின் அவள் கூற்றை ஒழித்துத் தோழி தன் கூற்றாகக் கூறப்பெறுவள்.  ஒன்றித் தோன்றுந்தோழி மேன (தொல்காப்பியம், அகத்திணையியல் 42) என்பதனால் தோழி கூற்றும் தலைவி கூற்றாகும் எனக் கூறுவர் பேராசிரியர்.  ஔவை துரைசாமி உரை – பிரிவுத் துன்பத்திற்கு இரையாகி உள்ளம் மெலிந்து வன்மை குன்றியிருந்த தலைவிக்குப் பொறாமையும் மனவன்மையும் தோற்றுவித்ததற்குத் தோழி தலைவனைக் கொடுமைக் கூறிப் பழித்த சூழ்ச்சித் திறம்.  கு. வெ. பாலசுப்பிரமணியன் உரை – கள்வர் போலக் கொடியவர் என்றது சிறுமை பற்றி வந்த நகை உவமம்.  அன்னை போல என்றது சிறப்பு நிலைக்களமாகப் பிறந்த பண்பு உவமம்.  தலைவனைக் கள்வன் என்றல் – குறுந்தொகை 25 – யாரும் இல்லைத் தானே கள்வன், குறுந்தொகை 318 – கள்வனும் கடவனும் புணைவனும் தானே,  நற்றிணை 28 – கள்வர் போலக் கொடியன், நற்றிணை 40 – நள்ளென் கங்குல் கள்வன் போல , கலித்தொகை 144 – பொழில் தொறும் நாடுவேன் கள்வன் கரந்து இருக்கற்பாலன் கொல், கலித்தொகை 145 – துயர் செய்த கள்வன், கலித்தொகை 51 – கடைக் கண்ணால் கொல்வான் போல் நோக்கி, நகைக்கூட்டம் செய்தான் அக் கள்வன் மகன்.  தலைவி கூறுவதுபோல் தோழி கூறுதல் – அகநானூறு 362, நற்றிணை 28, 98, 124, 132, 175, 178, 191, 211, 251, 292, கலித்தொகை 18, 70, குறுந்தொகை 236, 238, ஐங்குறுநூறு 45.

சொற்பொருள்:  என் கைக் கொண்டு தன் கண் ஒற்றியும் தன் கைக் கொண்டு என் நன்னுதல் நீவியும் அன்னை போல இனிய கூறியும் – என் கைகளைப் பற்றித் தன் கண்களில் ஒற்றிக்கொண்டும் என்னுடைய நல்ல நெற்றியைத் தடவி விட்டும் ஒரு தாயைப்போன்று இனிமையானச் சொற்களை என்னிடம் கூறியும், கள்வர் போலக் கொடியன் – கள்வர் போல் கொடியவன், மாதோ – மாது + ஓ – அசைநிலைகள், மணி என இழிதரும் அருவி – நீலமணி நிறத்தில் வீழும் அருவியையுடைய, பொன் என வேங்கை தாய – பொன்னிற வேங்கை மலர்கள் உதிர்ந்த (வேங்கை – Pterocarpus marsupium, Kino tree), ஓங்கு மலை அடுக்கத்து ஆடுகழை நிவந்த பைங்கண் மூங்கில் ஓடு மழை கிழிக்கும் – உயர்ந்த மலைப்பக்கத்தில் அசைகின்ற உயர்ந்த பசிய கணுக்களையுடைய மூங்கில் ஓடும் முகில்களைக் கிழிக்கின்ற, சென்னி கோடு உயர் பிறங்கல் மலை கிழவோனே – உச்சிகளையும் கோடுகளையும் (சிகரங்களையும்) உடைய பெரிய மலையின் தலைவன்  (கிழவோனே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 29, பூதனார், பாலைத் திணை – தலைவியின் தாய் சொன்னது
நின்ற வேனில் உலந்த காந்தள்
அழல் அவிர் நீள் இடை நிழலிடம் பெறாஅது,
ஈன்று கான் மடிந்த பிணவுப் பசி கூர்ந்தென,
மான்ற மாலை வழங்குநர்ச் செகீஇய
புலி பார்த்து உறையும் புல் அதர்ச் சிறுநெறி  5
யாங்கு வல்லுநள் கொல் தானே? யான் ‘தன்
வனைந்து ஏந்து இள முலை நோவ கொல்?’ என
நினைந்து கைந்நெகிழ்ந்த அனைத்தற்குத் தான் தன்
பேர் அமர் மழைக் கண் ஈரிய கலுழ,
வெய்ய உயிர்க்கும் சாயல்,  10
மை ஈர் ஓதி பெருமடத்தகையே.

பாடல் பின்னணி:  மகட் போக்கிய நற்றாய் சொன்னது.

பொருளுரைவேனில் பருவம் நிலைப்பெற்றதால் வாடிய காந்தள் மலர்கள் உடைய நெருப்பென விளங்கும் நீண்ட இடத்தில் நிழலைப் பெறாமல், குட்டிகளை ஈன்று காட்டில் மடிந்து இருக்கும் தன் பெண்புலி மிகவும் பசியுடையது என்று, மயக்கமுடைய மாலைவேளையில், வழியில் செல்பவர்களைக் கொல்லும் பொருட்டு ஆண்புலி அவ்வழியைப் பார்த்திருக்கும், புல்லிய சிறிய வழியில் நடந்து செல்வதற்கு எங்கனம் வலிமை உடையவள் ஆனாள், நான் அவளுடைய தொய்யில் வரைந்த உயர்ந்த இளமுலைகள் நோவுமோ என எண்ணி என் கைகளை நெகிழ்த்த அளவிற்கும், தன்னுடைய பெரிய அமர்ந்த குளிர்ச்சிபொருந்திய கண்கள் கண்ணீரால் கலங்க வெம்மையுடன் பெருமூச்சு விடும் மென்மையான கருமை நிற கூந்தலையும் பெரிய மடப்பத்தையுமுடைய என் மகள்?

குறிப்பு:  ஒளவை துரைசாமி உரை – மான்ற என்றது மால் என்னும் சொல்லடியாகப் பிறந்த தெரிநிலைப் பெயரெச்சம்.  இறைச்சி (1) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – பிணவின் பசியைப் போக்க புலி உணவுதேடி நெறியில் பார்க்கும் என்றது, தலைவியின் அயர்ச்சியைப் போக்க வேண்டித் தலைமகன் மாலைப் பொழுதிலே தங்குமிடம் தேடி ஆங்கு இருவரும் தங்குவர் என ஆற்றுவாள் என்றதாம்.  இறைச்சி (2) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – ஈன்று கான் மடிந்த பிணவென்றது தலைமகள் இனி மக்களோடு மகிழ்ந்து மனை அறம் காக்கும் என்று ஆற்றுவாள் என்றவாறு.  சாயல் – சாயல் மென்மை (தொல்காப்பியம், உரியியல்  29).  அண்மையில் ஈன்ற துணைக்கு உணவு தேடல்:  புலி – நற்றிணை 29, 148, 332, 383, அகநானூறு 112, 147, 238, கழுகு – அகநானூறு 3, செந்நாய் – அகநானூறு 21, அகநானூறு 85, புறா – நற்றிணை 384, யானை – நற்றிணை 393, நாரை – நற்றிணை 263.

சொற்பொருள்:  நின்ற வேனில் உலந்த காந்தள் – வேனில் பருவம் நிலைப்பெற்றதால் வாடிய காந்தள் மலர்கள் (உலந்த – வாடிய, உலர்ந்த, காந்தள் – Malabar Glory lily, Gloriosa superba), அழல் அவிர் நீள் இடை நிழலிடம் பெறாஅது – நெருப்பென விளங்கும் நீண்ட இடத்தில் நிழலைப் பெறாமல் (பெறாஅது – அளபெடை), ஈன்று கான் மடிந்த பிணவுப் பசி கூர்ந்தென – குட்டிகளை ஈன்று காட்டில் மடிந்து இருக்கும் பெண்புலி மிகவும் பசியுடையது என்று, மான்ற மாலை – மயக்கமுடைய மாலைவேளையில் (மான்ற – மால் என்னும் சொல்லடியாகப் பிறந்த தெரிநிலைப் பெயரெச்சம்), வழங்குநர்ச் செகீஇய – வழியில் செல்பவர்களைக் கொல்லும் பொருட்டு (செகீஇய – அளபெடை), புலி பார்த்து உறையும் – ஆண்புலி அவ்வழியைப் பார்த்திருக்கும், புல் அதர்ச் சிறுநெறி – புல்லிய சிறிய வழி (அதர், நெறி – வழி), யாங்கு வல்லுநள் கொல் தானே – எங்கனம் அங்குச் செல்வதற்கு வலிமை உடையவள் ஆனாள் (கொல் – அசைநிலை, தானே – தான், ஏகாரம் அசைநிலை), யான் தன் வனைந்து ஏந்து இள முலை நோவ கொல் என நினைந்து கை நெகிழ்ந்த அனைத்தற்கு – நான் அவளுடைய தொய்யில் வரைந்த உயர்ந்த இளமுலைகள் நோவுமோ என எண்ணி என் கைகளை நெகிழ்த்த அளவிற்கு, தான் தன் பேர் அமர் மழைக் கண் ஈரிய கலுழ வெய்ய உயிர்க்கும் சாயல் மை ஈர் ஓதிப் பெருமடத்தகையே – அவள் தன்னுடைய பெரிய அமர்ந்த குளிர்ச்சிபொருந்திய கண்கள் கண்ணீரால் கலங்க வெம்மையுடன் பெருமூச்சு விடும் மென்மையான கருமை நிற கூந்தலையும் பெரிய மடப்பத்தையுமுடைய என் மகள் (பெருமடத்தகையே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 30, கொற்றனார், மருதத் திணை– தோழி தலைவனிடம் சொன்னது
கண்டனென் மகிழ்ந! கண்டு எவன் செய்கோ?
பாணன் கையது பண்புடைச் சீறியாழ்
யாணர் வண்டின் இம்மென இமிரும்
ஏர்தரு தெருவின், எதிர்ச்சி நோக்கி நின்
மார்பு தலைக்கொண்ட மாணிழை மகளிர்,  5
கவல் ஏமுற்ற வெய்து வீழ் அரிப் பனி
கால் ஏமுற்ற பைதரு காலைக்
கடல்மரம் கவிழ்ந்தெனக் கலங்கி உடன் வீழ்பு
பலர் கொள் பலகை போல,
வாங்க வாங்க நின்று ஊங்கு அஞர் நிலையே.  10

பாடல் பின்னணி:  பரத்தையிற் பிரிந்து வந்த தலைவன் ‘யாரையும் அறியேன்’ என்றாற்குத் தோழி சொல்லியது.

பொருளுரைதலைவனே!  பாணர்களின் கைகளில் உள்ள பண்புடைய சிறிய யாழ் புதுத்தேன் உண்ட வண்டுகளைப் போல ஓசை எழுப்புகின்ற, நீ வரும் தெருவில், உன் வரவை எதிர்பார்த்து உன்னுடைய மார்பை முன்பு பற்றிக்கொண்ட மாட்சிமையுடைய அணிகலன்களை அணிந்த பரத்தையர் பலரும், கவலையும் கலக்கமும் அடைந்து வெப்பமுடன் வடிகின்ற கண்ணீருடன், புயல்காற்று சுழன்று அடித்ததால் துன்பம் அடைந்த வேளையில் கப்பல் கவிழ்ந்து விட்டதால் கலங்கி ஒன்றாக நீரில் விழுந்த பலரும் பற்றி ஈர்க்கும் மரப்பலகையைப் போல உன்னை மீண்டும் மீண்டும் இழுக்கும் வருந்துகின்ற நிலையை, நான் கண்டேன்.  கண்டும் நான் என்ன செய்ய முடியும்?

குறிப்பு:  கு. வெ. பாலசுப்பிரமணியன் உரை – தலைவியும் இந்நிலை அறிந்தவளே என்பதைக் ‘களவு உடம்படுநரின் கவிழ்ந்து நிலம் கிளையா நாணி நின்றோள்’ (அகநானூறு 16) பரத்தையின் நிலையால் அறியப்படும்.  யாணர் வண்டின் (3) – ஒளவை துரைசாமி உரை – புதுத்தேன் உண்ட வண்டு போல , பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – அழகிய வண்டு.  யாணர் – புதிதுபடற் பொருட்டே யாணர்க் கிளவி (தொல்காப்பியம், உரியியல் 83).  ஊங்கு நிலை – ஒளவை துரைசாமி உரை – முன்னும் பின்னுமாக அசைந்தாடும் நிலை.

சொற்பொருள்:  கண்டனென் – நான் கண்டேன், மகிழ்ந – தலைவனே, கண்டு எவன் செய்கோ – கண்டும் நான் என்ன செய்ய முடியும் (செய்கு தன்மை ஒருமை வினைமுற்று, ஓகாரம் அசைநிலை), பாணன் கையது பண்புடைச் சீறியாழ் யாணர் வண்டின் இம்மென இமிரும் – பாணர்களின் கைகளில் உள்ள பண்புடைய சிறிய யாழ் புதுத்தேன் உண்ட வண்டுகளைப் போல ஓசை எழுப்பும் (இம்மென – ஒலிக்குறிப்பு, வண்டின் – இன் உருபு ஒப்புப் பொருளது), ஏர்தரு தெருவின் எதிர்ச்சி நோக்கி நின் மார்பு தலைக்கொண்ட மாணிழை மகளிர் – நீ வரும் தெருவில் உன் வரவை எதிர்பார்த்து உன்னுடைய மார்பை முன்பு பற்றிக்கொண்ட மாட்சிமையுடைய அணிகலன்களை அணிந்த மகளிர், கவல் ஏமுற்ற வெய்து வீழ் அரிப் பனி – கவலையும் கலக்கமும் அடைந்து வெப்பமுடன் வடிகின்ற கண்ணீருடன், கால் ஏமுற்ற பைதரு காலை கடல்மரம் கவிழ்ந்தென கலங்கி உடன் வீழ்பு பலர் கொள் பலகை போல – புயல்காற்று சுழன்று அடித்ததால் துன்பம் அடைந்த வேளையில் கப்பல் கவிழ்ந்து விட்டதால் கலங்கி ஒன்றாக நீரில் விழுந்து பலரும் பற்றி ஈர்க்கும் மரப்பலகையைப் போல, வாங்க வாங்க நின்று ஊங்கு அஞர் நிலையே – அவரவர் உன்னை மீண்டும் மீண்டும் இழுக்கும் வருந்துகின்ற நிலையை  (நிலையே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 31, நக்கீரனார், நெய்தல் திணை – தலைவி தோழியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
மா இரும் பரப்பு அகம் துணிய நோக்கிச்
சேயிறா எறிந்த சிறுவெண்காக்கை
பாய் இரும் பனிக் கழி துழைஇ, பைங்கால்
தான் வீழ் பெடைக்குப் பயிரிடூஉ சுரக்கும்
சிறு வீ ஞாழல் துறையுமார் இனிதே;  5
பெரும் புலம்பு உற்ற நெஞ்சமொடு பல நினைந்து,
யானும் இனையேன் ஆயின், ஆனாது
வேறு பல் நாட்டில் கால் தர வந்த
பல உறு பண்ணியம் இழிதரு நிலவு மணல்
நெடுஞ்சினை புன்னை கடுஞ்சூல் வெண்குருகு  10
உலவுத் திரை ஓதம் வெரூஉம்
உரவு நீர்ச் சேர்ப்பனொடு மணவா ஊங்கே.

பாடல் பின்னணி:  வரைவிடை வைத்துப் பிரிந்த தலைவன் மீண்டும் சிறைப்புறமாக வருதலை அறிந்த தோழி, அவன் விரைவில் வரைந்து கொள்ளும் வகையில் தலைவியிடம் ‘அவர் இப்போதே வருவார்.  நீ வருந்தாதே’ எனக் கூறியபொழுது தலைவி இவ்வாறு தோழியிடம் உரைத்தாள்.

பொருளுரைபெரிய கரிய கழியில் துணிவுடன் அதனைப் பார்த்துச் சிவப்பு இறால்மீனை பிடிப்பதற்குப் பாய்ந்த சிறுவெண்காக்கை, பரந்த பெரிய குளிர்ந்த உப்பங்கழியில் தான் துழாவி எடுத்ததைப் பசுமையான கால்களை உடைய தன் விருப்பமுடைய பெடையை அழைத்துத் தான் எடுத்ததை அதற்குக் கொடுக்கும், சிறிய மலர்களையுடைய ஞாழல் மரங்கள் உடைய துறையானது காண்பதற்கு இனிமையாக இருந்தது, வேறு பல நாடுகளிலிருந்து காற்றினால் செலுத்தப்பட்ட கப்பல்களில் வந்த பல வகைப் பொருட்களை இறக்கிய நிலவை ஒத்த வெண்மணலில் உள்ள புன்னை மரத்தில் முதிர்ந்த கருப்பத்தையுடைய வெள்ளை நாரை உலவுகின்ற அலைகளின் ஓசைக்கு அஞ்சும் வலிய நீர்ப்பரப்பினை உடைய தலைவனுடன் கூடுவதற்கு முன்பு.  ஆனால் இப்பொழுது, அமையாத வருத்தமுடைய நெஞ்சுடன் பலவற்றை நான் எண்ணி இவ்வாறு ஆயினேன்.

குறிப்பு:  நிலவு மணல்:  அகநானூறு 20 – நிலவு மணல், அகநானூறு 200 – நிலாவின் இலங்கு மணல் மலி மறுகில், நற்றிணை 31 – நிலவு மணல், நற்றிணை 140 – நிலவு மணல், நற்றிணை 159 – நிலவுக் குவித்தன்ன மோட்டு மணல், நற்றிணை 183 – நிலவு மணல், குறுந்தொகை 123 – நிலவுக் குவித்தன்ன வெண்மணல், கலித்தொகை 13 – வாள் நிலா ஏய்க்கும் வயங்கு ஒளி எக்கர், புறநானூறு 17 – நிலவு மணல் வியன் கானல், பொருநராற்றுப்படை 213 – நிலவு எக்கர், மதுரைக்காஞ்சி 114 – நிலவுக் கானல்.  உள்ளுறை (1) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – புன்னையஞ் சினைக்கணுள்ள சூல் முதிர்ந்த குருகு கடலோசைக்கு வெருவுமென்றது,  பிறந்தகத்திருந்து காதலை மேற்கொண்ட யான் அன்னையின் கடுஞ்சொல் கேட்குந்தோறும் வெருவாநின்றேன் என்பதாம்.  உள்ளுறை (2) – ஒளவை துரைசாமி உரை – காதலர் பிரிவாற்றி யான் மனைக்கண் இருப்பினும் காதற் பெருமையால் என் மேனி எய்தும் வேறுபாடு கண்டு அயற்பெண்டிர் தூற்றும் அலர்க்கு அஞ்சுகின்றேன் என்ற கருத்து, நெடுஞ்சினைப் புன்னைக் கடுஞ்சூல் வெண்குருகு உரவுத்திரை ஓதம் வெரூஉம் என்றதன்கண் உள்ளுறுத்தப்பட்டு உள்ளது.  இறைச்சி – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – இறாமீனைப் பிடித்து வந்த காக்கை தன் பெடையை விளித்து அதன் வாயில் இரையைக் கொடுக்கும் துறையுடையவனாயிருந்தும், தலைவன் என்னை அழைத்து முயங்கி இன்பம் உய்த்தான் இலன்.  மணவா – பொருந்துவதற்கு (கூடுவதற்கு, கலத்தற்கு) என்பது பொருள்.  செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம்.  எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது.  ஒப்புமை:  அகநானூறு 290 – தணவா நெஞ்சமொடு தமியன் வந்து, நம் மணவா முன்னும், நற்றிணை 31 – உரவு நீர்ச் சேர்ப்பனொடு மணவா ஊங்கே, குறுந்தொகை 357 – வான் தோய் வெற்பன் மணவா ஊங்கே.

சொற்பொருள்:  மா இரும் பரப்பு அகம் துணிய நோக்கிச் சேயிறா எறிந்த சிறுவெண்காக்கை – பெரிய கரிய கழியில் துணிவுடன் அதனைப் பார்த்துச் சிவத்த இறால்மீனை பிடிப்பதற்குப் பாய்ந்த சிறுவெண்காக்கை (சிறுவெண்காக்கை – sea gull, Larus ichthyactus, சேயிறா – பண்புத்தொகை), பாய் இரும் பனிக் கழி துழைஇ – பரந்த பெரிய குளிர்ந்த உப்பங்கழியில் துழாவி எடுத்த (துழைஇ – அளபெடை), பைங்கால் தான் வீழ் பெடைக்குப் பயிரிடூஉ சுரக்கும் – பசுமையான கால்களை உடைய தன் விருப்பமுடைய பெடையை அழைத்துத் தான் எடுத்ததை அதற்குக் கொடுக்கும் கொடுக்கும் (பயிரிடூஉ – அளபெடை), சிறு வீ ஞாழல் துறையும் ஆர் இனிதே – சிறிய மலர்களையுடைய ஞாழல் மரங்கள் உடைய துறையும் காண்பதற்கு இனிமையாக இருந்தது (ஞாழல் – புலிநகக்கொன்றை, Cassia Sophera, Tigerclaw tree, ஆர் – அசைச் சொல், இனிதே – ஏகாரம் அசைநிலை), பெரும் புலம்பு உற்ற நெஞ்சமொடு பல நினைந்து யானும் இனையேன் ஆயின் – வருத்தமுடைய நெஞ்சுடன் பலவற்றை நான் எண்ணி இவ்வாறு ஆயினேன், ஆனாது – அமையாமல், வேறு பல் நாட்டில் கால் தர வந்த பல உறு பண்ணியம் இழிதரு – வேறு பல நாடுகளிலிருந்து காற்றினால் செலுத்தப்பட்ட கப்பல்களில் வந்த பல வகைப் பொருட்களை இறக்கிய, நிலவு மணல் நெடுஞ்சினை புன்னை – நிலவை ஒத்த வெண்மணலில் உள்ள புன்னை மரத்தில் (புன்னை – Mast wood Tree, Calophyllum inophyllum), கடுஞ்சூல் வெண்குருகு உலவுத் திரை ஓதம் வெரூஉம் – முதிர்ந்த கருப்பத்தையுடைய வெள்ளை நாரை உலவுகின்ற அலைகளின் ஓசைக்கு அஞ்சும் (வெரூஉம் – செய்யுளிசை அளபெடை), உரவு நீர்ச் சேர்ப்பனொடு மணவா ஊங்கே – வலிய நீர்ப்பரப்பினை உடைய தலைவனுடன் கூடுவதற்கு முன்பு (ஊங்கே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 32, கபிலர், குறிஞ்சித் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
மாயோன் அன்ன மால் வரைக் கவாஅன்,
வாலியோன் அன்ன வயங்கு வெள்ளருவி,
அம் மலை கிழவோன் நம் நயந்து என்றும்
வருந்தினன் என்பது ஓர் வாய்ச் சொல் தேறாய்,
நீயும் கண்டு நுமரொடும் எண்ணி  5
அறிவு அறிந்து அளவல் வேண்டும்; மறுத்தரற்கு
அரிய, வாழி தோழி, பெரியோர்
நாடி நட்பின் அல்லது
நட்டு நாடார் தம் ஒட்டியோர் திறத்தே.

பாடல் பின்னணி:  தலைவிக்குக் குறை நயப்பக் கூறியது.

பொருளுரைதோழி! நீடு வாழ்வாயாக!  திருமாலைப்போல் உள்ள பெரிய மலைப்பக்கத்தில் பலராமனைப்போல் வெள்ளை நிற அருவிகளையுடைய அழகியமலையின் தலைவன், நம்மை விரும்பி நாளும் வருந்தினான் என்று கூறப்படுகின்றது. நீ தெளிவு அடையவில்லை. அதனை நீயும் கண்டு நின்மேல் அன்புடைய தோழியருடனும் ஆராய்ந்து அளவளாவுதல் (பொருந்துதல்) வேண்டும்.  இது மறுப்பதற்கு அரிது. பெரியவர்கள் ஒருவரை ஆராய்ந்து நட்பு செய்வார்களே அன்றி, பொருந்திய பின்னர்ப் பொருந்தியவர்களுடைய நல்லதையும் தீயதையும் ஆராய மாட்டார்கள்.

குறிப்பு:  ஒளவை துரைசாமி உரை – ‘நாற்றமும் தோற்றமும்’ (தொல்காப்பியம், களவியல் 24) எனத் தொடங்கும் நூற்பாவில் வரும், ‘ மறைந்தவள் அருக தன்னொடும் அவளொடும் முதல் மூன்று அளைஇ பின்னிலை நிகழும் பல் வேறு மருங்கினும்’ என்னும் பகுதிக்கு இதனை எடுத்தோதிக் காட்டுவர் இளம்பூரணர்; நச்சினார்க்கினியரும் இப்பகுதிக்கே காட்டுவர்.  ஒளவை துரைசாமி உரை – அவனும் தகுதி உடையான் என்பாள் மலைகிழவோன் என்றாள்.  ஈன்று யான் கூறியதனை ஆராய்கின்றாய் போலும்.  இவ்வாராய்ச்சி இயற்கைப் புணர்ச்சிக்கு முன்னரே வேண்டும் என்றாள்.  பலராமன் – புறநானூறு 56 – கடல் வளர் புரி வளை புரையும் மேனி அடல் வெந்நாஞ்சில் பனைக்கொடியோனும்.

சொற்பொருள்:  மாயோன் அன்ன மால் வரைக் கவாஅன் – திருமாலைப்போல் உள்ள பெரிய மலைப்பக்கத்தில்  (கவாஅன் – அளபெடை), வாலியோன் அன்ன வயங்கு வெள் அருவி அம் மலை கிழவோன் – பலராமனைப்போல் வெள்ளை நிற அருவிகளையுடைய அழகியமலையின் தலைவன், நம் நயந்து என்றும் வருந்தினன் – நம்மை விரும்பி நாளும் வருந்தினான், என்பது ஓர் வாய்ச் சொல் – என்று கூறப்படுகின்றது, தேறாய் – நீ தெளிவு அடையவில்லை, நீயும் கண்டு நுமரொடும் எண்ணி அறிவு அறிந்து அளவல் வேண்டும் – அதனை நீயும் கண்டு நின்மேல் அன்புடைய தோழியருடனும் ஆராய்ந்து அளவளாவுதல் (பொருந்துதல்) வேண்டும், மறுத்தரற்கு அரிய – மறுப்பதற்கு அரிது, வாழி – அசைநிலை, நீடு வாழ்வாயாக, தோழி – தோழி, பெரியோர் நாடி நட்பின் அல்லது நட்டு நாடார் தம் ஒட்டியோர் திறத்தே – பெரியவர்கள் ஒருவரை ஆராய்ந்து நட்பு செய்வார்களே அன்றி பொருந்தியவர்களுடைய நல்லதையும் தீயதையும் ஆராய மாட்டார்கள் (திறத்தே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 33, இளவேட்டனார், பாலைத் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
‘படுசுடர் அடைந்த பகுவாய் நெடு வரை,
முரம்பு சேர் சிறுகுடி, பரந்த மாலை,
புலம்பு கூட்டுண்ணும் புல்லென் மன்றத்துக்,
கல்லுடை படுவில் கலுழி தந்து,
நிறை பெயல் அறியாக் குறை ஊண் அல்லில்,  5
துவர் செய் ஆடை செந்தொடை மறவர்
அதர் பார்த்து அல்கும் அஞ்சுவரு நெறியிடை,
இறப்ப எண்ணுவர் அவர் எனின், மறுத்தல்
வல்லுவம் கொல்லோ, மெல்லியல் நாம்?’ என
விம்முறு கிளவியள் என் முகம் நோக்கி,  10
நல் அக வன முலைக் கரை சேர்பு
மல்கு புனல் பரந்த மலர் ஏர் கண்ணே.

பாடல் பின்னணி:  பிரிவு உணர்த்தப்பட்ட தலைவியினது குறிப்பு உணர்ந்த தோழி தலைவனிடம் சொல்லியது.

பொருளுரைதலைவா!  தலைவி என்னிடம், “மெல்லியோளே!  மறைகின்ற கதிரவன் சேர்ந்த அகன்ற பிளப்பையுடைய உயர்ந்த மலைப்பக்கத்தில் உள்ள முரம்பு நிலத்தில் (வலிய நிலத்தில்) அமைந்த சிறுகுடியில், தனித்தோர் (அல்லது அச்சம் கொண்டவர்கள்) சேர்ந்து உண்ணும் பொலிவிழந்த மன்றத்தில் கற்களுடைய குழியில் உள்ள கலங்கல் நீரைக் கொண்டு வந்து கொடுக்கும், நிறைய மழையை அறியாத அவ்விடத்தில், குறைந்த உணவையுடைய இரவில், அழுக்குடைய ஆடையையும் கூர்மையான அம்புகளையுமுடைய ஆறலை கள்வர் வழியைப் பார்த்து இருக்கும் அச்சம் தரும் வழியில், தலைவர் செல்ல எண்ணினால் யாம் எவ்வாறு மறுக்கும் வலிமை உடையேம்”, என்று துயருடன் குழறும் சொற்களை உடையவளாய் என் முகத்தை நோக்கினாள்.  அவளுடைய நல்ல மார்பில் உள்ள அழகிய முலைகள் மேல் கண்ணீர் விழும்படி நிறைந்த கண்ணீர் பரவியது அவளுடைய மலர் போன்ற கண்களில்.

குறிப்பு:  பகுவாய் நெடு வரை (1) – ஒளவை துரைசாமி உரை – அகன்ற பிளப்பையுடைய நெடிய மலை.  புலம்பு கூட்டுண்ணும் புல்லென் மன்றத்து (3) – H. வேங்கடராமன் உரை – கள்வர் பிறர்க்கு அச்சம் தோன்ற ஒருங்கிருந்து உண்ணும், பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – அச்சம் மிக்கிருக்கும் பொழிவழிந்த பொதியில் உணவையுடைய, ஒளவை துரைசாமி உரை – தனித்தோர் கூடியிருந்து உண்ணும் பொலிவில்லாத மன்றத்தின்கண்.  ஒளவை துரைசாமி உரை – பெருகி வழியும் கண்ணீர் என்றதற்கு மல்குபுனல் என்றும் அதனால், தொய்யில் எழுதி அழகுற வனையப்பட்ட மார்பகம் பொலிவு அழிந்தது என்பாள், நல்லக வனமுலை நனைப்ப என்றும், இவ்வாற்றல் மலர் புரையும் கண்களும் அவ்வனப்பு இழந்து வாடின என்றற்கு மலர் ஏர் உண்கண் என்றும் கூறினாள்.

சொற்பொருள்:  படுசுடர் அடைந்த பகுவாய் நெடு வரை முரம்பு சேர் சிறுகுடிப் பரந்த மாலை – மறைகின்ற கதிரவன் சேர்ந்த அகன்ற பிளப்பையுடைய உயர்ந்த மலைப்பக்கத்தில் முரம்பு நிலத்தில் (வலிய நிலத்தில்) அமைந்த சிறுகுடியில், புலம்பு  கூட்டுண்ணும் புல்லென் மன்றத்துக் கல்லுடை படுவில் – தனித்தோர் (அச்சம் கொண்டவர்கள்) சேர்ந்து உண்ணும் பொலிவிழந்த மன்றத்தில் கற்களுடைய குழியில், கலுழி தந்து நிறை பெயல் அறியாக் குறை ஊண் அல்லில் – கலங்கல் நீரைக் கொண்டுவந்து கொடுத்து குறைந்த உணவையுடைய இரவில் கொடுத்து நிறைய மழையை அறியாத, துவர் செய் ஆடை செந்தொடை மறவர் அதர் பார்த்து அல்கும் அஞ்சுவரு நெறியிடை – அழுக்குடைய ஆடையையும் கூர்மையான அம்புகளையுமுடைய ஆறலை கள்வர் வழியைப் பார்த்து இருக்கும் அச்சம் தரும் வழியில், இறப்ப எண்ணுவர் அவர் எனின் மறுத்தல் வல்லுவம் கொல்லோ – அவர் செல்ல எண்ணினால் யாம் எவ்வாறு மறுக்கும் வலிமை உடையேம் (வல்லுவம், நாம் – தன்மைப் பன்மை, கொல் – ஐயப்பொருட்டு வந்தது, ஓகாரம் அசைநிலை), மெல்லியல் – மெல்லியோளே (அன்மொழித்தொகை விளியேற்று நின்றது), நாம் என – நாம் என்று (நாம் – தன்மைப் பன்மை), விம்முறு கிளவியள் என் முகம் நோக்கி – துயருடன் குழறும் சொற்களை உடையவளாய் என்னுடைய முகத்தை நோக்கி, நல் அக வன முலைக் கரை சேர்பு – நல்ல மார்பில் உள்ள அழகிய முலைகள் மேல் கண்ணீர் விழும்படி, மல்கு புனல் பரந்த மலர் ஏர் கண்ணே – நிறைந்த கண்ணீர் பரவியது அவளுடைய மலர் போன்ற கண்களிலிருந்து (ஏர் – உவம உருபு, கண்ணே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 34, பிரமசாரி, குறிஞ்சித் திணை – தோழி முருகனிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
கடவுட் கற்சுனை அடை இறந்து அவிழ்ந்த
பறியாக் குவளை மலரொடு காந்தள்
குருதி ஒண் பூ உரு கெழக் கட்டிப்,
பெருவரை அடுக்கம் பொற்பச் சூர்மகள்
அருவி இன் இயத்து ஆடும் நாடன்,  5
மார்புதர வந்த படர் மலி அரு நோய்,
நின் அணங்கு அன்மை அறிந்தும், அண்ணாந்து
கார் நறுங்கடம்பின் கண்ணி சூடி
வேலன் வேண்ட வெறிமனை வந்தோய்,
கடவுள் ஆயினும் ஆக  10
மடவை மன்ற, வாழிய முருகே!

பாடல் பின்னணி:  தோழி முருகனுக்கு உரைப்பாளாய் வெறி விலக்கியது.  களவு நீட்டித்து ஒழுகும் தலைவனிடம் வரைவு கடாயதுமாம்.

பொருளுரை:  முருகனே!  நீடு வாழ்வாயாக! கண்டிப்பாக நீ அறியாமையுடையவன்! கடவுள் தன்மை பொருந்திய மலையில் உள்ள சுனையில் உள்ள இலைகளை விலக்கி விட்டு, பிறர் பறிக்காத, மலர்ந்த குவளை மலர்களுடன் குருதி நிறமுள்ள ஒளியுடைய காந்தள் மலர்களை நல்ல வடிவத்துடன் கட்டி, பெரிய மலையின் பக்கங்கள் விளங்க சூர் மகள் அருவியின் இனிய ஒலியை இசைக்கருவிகளாகக் கொண்டு கொண்டு ஆடுகின்ற நாட்டினது தலைவனின் மார்பைத் தழுவியதால் இவளுக்கு ஏற்பட்ட பசலைப் படர்ந்த அரிய காதல் நோய் உன்னால் ஏற்பட்டது இல்லை என்று அறிந்தும், மழைக் காலத்தின் நறுமணமான கடம்ப மலர் மாலையைத் தலை நிமிர்ந்து அணிந்து வேலன் உனக்குப் பலியைக் கொடுத்து அழைத்ததால், நீ வெறியாட்டம் நிகழும் இல்லத்திற்கு வந்துள்ளாய்!

குறிப்பு:  ஒளவை துரைசாமி உரை – ‘அறத்தொடு நிற்கும் காலத்து அன்றி அறத்து இயல் மரபு இலள் தோழி என்ப’ (தொல்காப்பியம்,பொருளியல் 11) என்பதற்கு இப்பாட்டைக் குறித்து ‘இது வெறியாட்டு எடுத்தவழி அறத்தொடு நின்றது” என்றும், இது முருகற்குக் கூறியது என்றும் கூறுவர் நச்சினார்க்கினியர்.  இளம்பூரணர், இது முருகனை முன்னிலையாகக் கூறியது என்றும், ஆடிய சென்றுழி அழிவு தலைவரின் நிகழும் கூற்று என்றும் கொள்வர்.  இறைச்சிப் பொருள் – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – சூரரமகள் மாலைசூடி அருவியை இனிய வாச்சியமாகக் கொண்டு ஆடுமென்றதனாலே தலைமகள் தலைவனை மணமாலை அணிந்து மணந்து என்னை எஞ்ஞான்றும் தனக்கு உசாத்துணையாக நீங்காது கொண்டு இல்லறம் நிகழ்த்தக் கருத்தியிருக்கும் என்றவாறு.  ஒளவை துரைசாமி உரை – முருகன் தன்கண் மெய்யுற்று வந்திருப்பதாகச் சொல்லி, வேலன் கண்ணி சூடி வேலேந்தி ஆடுதலின் அவனை முருகனாகக் குறித்து முருகே என அவனை முன்னிலைப்படுத்தி மொழிந்தாள்; ஆகவே, இதனால் எய்தும் வசை வேலற்கே; முருகவேட்கு அன்று எனக் கொள்க.  கு. வெ. பாலசுப்பிரமணியன் உரை – ‘முருகனே!  இதனை நீ அறியாமையின் உண்மையில் நீ அறிவுற்றவனே ஆவாய்’ என்கிறாள்.  அருவி இன் இயத்து (5) – ஒளவை துரைசாமி உரை – அருவியின் இனிய முழக்கத்திற்கு, கு. வெ. பாலசுப்பிரமணியன் உரை – அருவியின் ஒலியே இனிய இசைக் கருவிகளாகக் கொண்டு.  மன்ற – மன்றவென் கிளவி தேற்றஞ் செய்யும் (தொல்காப்பியம், இடையியல் 17).

சொற்பொருள்:  கடவுட் கற்சுனை – கடவுள் தன்மை பொருந்திய மலையில் உள்ள சுனையில்,  அடை இறந்து – இலைகளை விலக்கி, அவிழ்ந்த – மலர்ந்த, பறியா – பிறரால் பறிக்கப்படாத, குவளை மலரொடு – குவளை மலர்களுடன், காந்தள் குருதி ஒண் பூ – குருதி நிறமுள்ள ஒளியுடைய காந்தள் மலர்களை, உரு கெழக் கட்டி – வடிவு விளங்க மாலையாகக் கட்டி,  பெரு வரை அடுக்கம் – பெரிய மலையின் பக்கங்களில்,  பொற்ப – பொலிய,  சூர்மகள் – சூரர மகளிர், அருவி இன் இயத்து – அருவியின் இனிய ஒலியை இசைக்கருவிகளாகக் கொண்டு கொண்டு, ஆடும் நாடன் – ஆடுகின்ற நாட்டினது தலைவன், மார்பு தர வந்த – மார்பைத் தழுவி அதனால் வந்த, படர் மலி அரு நோய் – பசலைப் படர்ந்த நீக்குவதற்கு அரிய காதல் நோய், நின் அணங்கு அன்மை அறிந்தும்  – உன்னால் ஏற்பட்டது இல்லை என்று அறிந்தும், அண்ணாந்து – தலை நிமிர்ந்து, கார் – மழைக் காலம், நறுங் கடம்பின் கண்ணி சூடி – நறுமணமான கடம்ப மலர்களையுடைய மாலையை  அணிந்து, வேலன் வேண்ட – வேலன் அழைக்க, வெறி மனை வந்தோய் – வெறியாட்டம் நடத்தப்படும் இல்லத்திற்குப் பலியை பெற வந்தாய், கடவுள் ஆயினும் ஆக – கடவுளே ஆனாலும், மடவை மன்ற – கண்டிப்பாக நீ அறியாமையுடையவன், வாழிய – நீடு வாழ்வாயாக, முருகே – முருகனே

நற்றிணை 35, அம்மூவனார், நெய்தல் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
பொங்கு திரை பொருத வார் மணல் அடைகரைப்
புன்கால் நாவல் பொதிப் புற இருங்கனி
கிளை செத்து மொய்த்த தும்பி பழம் செத்துப்
பல்கால் அலவன் கொண்ட கோட்கு அசாந்து
கொள்ளா நரம்பின் இமிரும் பூசல்  5
இரை தேர் நாரை எய்தி விடுக்கும்
துறை கெழு மரந்தை அன்ன இவள் நலம்,
பண்டும் இற்றே; கண்டிசின் தெய்ய;
உழையின் போகாது அளிப்பினும் சிறிய
ஞெகிழ்ந்த கவின் நலம் கொல்லோ, மகிழ்ந்தோர்  10
கள் களி செருக்கத்து அன்ன
காமம் கொல் இவள் கண் பசந்ததுவே?

பாடல் பின்னணி:  வரைந்தபின் மணமனை புக்கத் தோழி தலைவனிடம் ‘பிரிவு காலத்தில் நீ தலைவியை நன்கு ஆற்றுவித்தாய்’ என்ற தலைவனிடம் தோழி கூறியது.

பொருளுரை:  பொங்கி எழும் அலைகளால் ஒதுக்கப்பட்ட நீண்ட மணல் பரவி அடர்ந்த கரையில் உதிர்ந்து கிடந்த மெல்லிய காம்பையுடைய நாவல் மரத்தின் கனியைத் தம் வண்டு இனம் என்று எண்ணி ஒரு வண்டு மொய்க்கவும், அதனைப் பழம் என்றே அறிந்த பல கால்களையுடைய நண்டு ஒன்று அப்பழத்தைக் கைக்கொண்டதால் வருந்தி யாழின் ஓசையைப் போல் மிக்கு ஒலிக்கும் வண்டின் பூசலினால், இரையைத் தேடும் நாரை ஒன்று வந்ததால் நண்டு அப்பழத்தைக் கைவிட்டு நீங்கி விடும், துறை பொருந்திய மரந்தை நகரைப்போல் இருக்கும் இவளுடைய எழில் நலம் முன்பும் இத்தன்மை உடையது.  இதனை நீ காண்பாயாக.  அவள் அருகில் இருந்து விலகாது நீ அருள் செய்தபொழுதும் உன் கை சிறிது நெகிழ்த்தாலும் இவளுடைய கண்கள் பசப்பு அடைந்தன, உண்டாகிய அழகின் சிறப்பு ஆகுமோ?  கள் உண்டு மகிழ்த்தோர்க்குக் கள் இல்லாதபொழுது பிறந்த வேறுபாடு போன்று காதல் மயக்கத்தின் இவள் வேறுபாடு அடைந்தாளோ?  இதனை யான் அறியேன்.

குறிப்பு:  புன்கால் நாவல் (2) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – புல்லிய காம்பையுடைய நாவல் கனி, ஒளவை துரைசாமி உரை – புல்லிய காலையுடைய நாவல் மரம்.  ஒளவை துரைசாமி உரை – ‘பெறற்கு அரும் பெரும் பொருள்’ (தொல்காப்பியம், கற்பியல் 9) என்ற நூற்பாவில் வரும் ‘சீருடைப் பெரும் பொருள் வைத்தவழி மறப்பினும்’ என்ற பகுதிக்கு இப்பாட்டை எடுத்தோதிக் காட்டுவர் இளம்பூரணர்.  உள்ளுறை – ஒளவை துரைசாமி உரை – நாவற்கனி தலைவிக்கும், தும்பி தோழிக்கும், அலவன் செயல் பெற்றோர் செய்த இற்செறிப்புக்கும், நாரை தலைமகன் பொருட்டு மகட்கொடை வேண்டி வந்த சான்றோர்க்கும் உள்ளுறையாய்க் களவின்கண் நிகழ்ந்தது.  வரலாறு:  மரந்தை.  சின் – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம், சொல்லதிகாரம், இடையியல் 26, சின் என்பது இசின் என்பதன் முதற்குறை – ச. பாலசுந்தரம் உரை).  கொள்ளா (5) – H. வேங்கடராமன் உரை – கொள்ளப்படாதனவாய், ஒளவை துரைசாமி உரை – யாழொடு கொள்ளாத.  வார்தல் போகல் ஒழுகல் மூன்றும் நேர்பும் நெடுமையும் செய்யும் பொருள (தொல்காப்பியம், உரியியல் 21).  காமம் – கமம் என்னும் சொல்லின் முதல் நீண்ட வடிவம், ‘நிறைந்த அன்பு’ என்பது இச்சொல்லின் பொருள் – பேரறிஞர் கு.வெ. பாலசுப்பிரமணியன் அவர்களின் விளக்கம், (கமம் நிறைந்து இயலும் – தொல்காப்பியம், சொல்லியல் 355).

சொற்பொருள்:  பொங்கு திரை பொருத வார் மணல் அடைகரை புன் கால் நாவல் பொதிப் புற இருங்கனி கிளை செத்து மொய்த்த தும்பி – பொங்கி எழும் அலைகளால் ஒதுக்கப்பட்ட நீண்ட மணல் பரவி அடர்ந்த கரையில் உதிர்ந்து கிடந்த மெல்லிய காம்பையுடைய நாவல் மரத்தின் கனியைத் தம் வண்டு இனம் என்று எண்ணி ஒரு வண்டு மொய்க்கும் (நாவல் – Syzygium cumini), பழம் செத்துப் பல் கால் அலவன் கொண்ட கோட்கு அசாந்து கொள்ளா நரம்பின் இமிரும் பூசல் – அதனைப் பழம் என எண்ணிய பல கால்களையுடைய நண்டு அப்பழத்தைக் கைக்கொண்டதால் வருந்தி யாழின் ஓசையைப் போல் மிக்கு ஒலிக்கும் வண்டின் பூசல் (கூர்ந்து – மிகுந்து, நரம்பின் – இன் உருபு ஒப்புப் பொருளது, ஐந்தாம் வேற்றுமை உருபு), இரை தேர் நாரை எய்தி விடுக்கும் – இரையைத் தேடும் நாரை வந்ததால் நண்டு பழத்தை விடுக்கும் (நாரை – Ciconia ciconia,  or pelican, or crane), துறை கெழு மரந்தை அன்ன இவள் நலம் பண்டும் இற்றே – துறை பொருந்திய மரந்தை நகரைப்போல் இருக்கும் இவளுடைய எழில் நலம் முன்பும் இத்தன்மை உடையது , கண்டிசின் – காண்பாயாக (இசின் – முன்னிலை அசையில் வந்தது), தெய்ய – அசை, உழையின் போகாது அளிப்பினும் சிறிய ஞெகிழ்ந்த – பக்கத்தில் இருந்து விலகாது அருள் செய்தாலும் சிறிது கை நெகிழ்த்தாலும் (ஞெகிழ் – நெகிழ் என்பதன் போலி), கவின் நலம் கொல்லோ – அழகின் சிறப்பு ஆகுமோ (கொல் – ஐயப்பொருட்டு, ஓகாரம் அசைநிலை), மகிழ்ந்தோர் கள் களி செருக்கத்து அன்ன காமம் கொல் – கள் உண்டு மகிழ்த்தோர்க்குக் கள் இல்லாதபொழுது பிறந்த வேறுபாடு போன்ற (செருக்கத்து – செருக்கம், அத்துச் சாரியை), இவள் கண் பசந்ததுவே – இவளுடைய கண்கள் பசப்பு அடைந்தன (பசந்ததுவே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 36, சீத்தலைச் சாத்தனார், குறிஞ்சித் திணை – தோழி தலைவியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
குறுங்கை இரும்புலிக் கோள் வல் ஏற்றை
பூ நுதல் இரும் பிடி புலம்ப தாக்கித்,
தாழ் நீர் நனந்தலை பெருங்களிறு அடூஉம்
கல்லக வெற்பன் சொல்லின் தேறி,
யாம் எம் நலன் இழந்தனமே; யாமத்து  5
அலர்வாய்ப் பெண்டிர் அம்பலொடு ஒன்றிப்
புரை இல் தீ மொழி பயிற்றிய உரை எடுத்து,
ஆனா கௌவைத்து ஆகத்
தான் என் இழந்தது, இவ்வழுங்கல் ஊரே?

பாடல் பின்னணி:  தலைவன் இரவுக்குறி வந்து ஓரிடத்தில் நிற்பதை அறிந்த தோழி, அவன் விரைவில் வரைந்து கொள்ளுதல் வேண்டி, தலைவியிடம் உரைத்தது.

பொருளுரை:  குறுகிய முன்னங்கால்களை உடைய பெரிய கொல்லுதற்கு வல்ல ஆண் புலி, பொலிவுடைய நெற்றியையுடைய பெண் யானை புலம்பும்படி அதனைத் தாக்கி நீர் இல்லாத அகன்ற இடத்தில் பெரிய ஆண்யானையைக் கொல்லும் மலையின் தலைவனின் சொற்களை உண்மை என எண்ணி, நாம் நம் நலத்தை இழந்துவிட்டோம்.  இரவிலும் துயிலாது ஆயினோம்.  பழிகூறும் பெண்களின் அம்பலுடன் சேர்ந்து, இந்த ஊர் மேன்மை இல்லாத தீய சொற்களைக் கூறுவதற்கு வேண்டிய பேச்சுக்களை மேற்கொண்டது, அடங்காத பழிமொழிகளாக.  ஆரவாத்தையுடைய இந்த ஊர் எதனை இழந்தது?

குறிப்பு:  ஒளவை துரைசாமி உரை – ‘ஆற்றலொடு புணர்ந்த ஆண்பாற்கு எல்லாம் ஏற்றைக் கிளவி உரித்து என மொழிப’ (தொல்காப்பியம், மரபியல் 50) என்பதற்குக் ‘குறுங்கை இரும்புலிக் கோள் வல் ஏற்றை’ என்ற இப்பாட்டின் முதலடியைக் காட்டுவர் பேராசிரியர்.  தாழ் நீர் (3) – ஒளவை துரைசாமி உரை – ஆழ்ந்த நீர், பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – நீர் அற்ற.  உள்ளுறை – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – புலியானது களிற்றைத் தாக்கிக் கொல்லாநிற்கும் நாடன் என்றதனால், இரவுக்குறியில் நீ இந்நெறிக்கண் வரின் யாம் புலம்புமாறு எமர் நின்னை ஏதஞ் செய்யாநிற்பர் என்றதாம்.  எம்மைச் சார்ந்தோர் நினக்கு ஏதம் செய்வர் என்றதாம்.  அழுங்கல் – கம்பலை சும்மை கலியே அழுங்கல் என்று இவை நான்கும் அரவப் பொருள (தொல்காப்பியம், உரியியல் 53).  நனந்தலை – அகன்ற இடம், நனம் – நனவே களனும் அகலமும் செய்யும் (தொல்காப்பியம், உரியியல் 80).  யாம் எம் நலன் இழந்தனமே – தலைவியும் தோழியும் மிக நெருங்கிய நட்பு உடையவர்கள் என்பதாலும், தலைவியின் களவு ஒழுக்கத்திற்குத் தோழி உதவுவதாலும், தலைவனைத் தோழி நன்கு அறிந்தவள் என்பதாலும், இவ்வாறு பன்மையாற் கூறினாள் தோழி.  பிடி – பிடி என் பெண் பெயர் யானை மேற்றே (தொல்காப்பியம், மரபியல் 52).

சொற்பொருள்:  குறுங்கை இரும்புலி கோள் வல் ஏற்றை பூ நுதல் இரும் பிடி புலம்பத் தாக்கித் தாழ் நீர் நனந்தலை பெருங்களிறு அடூஉம் – குறுகிய முன்னங்கால்களை உடைய பெரிய கொல்லுதற்கு வல்ல ஆண் புலி பொலிவுடைய நெற்றியையுடைய பெண் யானை புலம்பும்படி தாக்கி நீர் இல்லாத அகன்ற இடத்தில் பெரிய ஆண்யானையைக் கொல்லும் (அடூஉம் – அளபெடை), கல்லக வெற்பன் சொல்லின் தேறி – மலை நாடன் சொற்களை நம்பி, மலை நாடனின் சொற்களை உண்மை என எண்ணி, யாம் எம் நலன் இழந்தனமே – யாம் எம் நலத்தை இழந்துவிட்டோம், (இழந்தனமே – ஏகாரம் அசைநிலை), யாமத்து – இரவிலும் துயிலாது ஆயினோம், அலர்வாய்ப் பெண்டிர் அம்பலொடு ஒன்றி – பழிகூறும் பெண்களின் அம்பலுடன் சேர்ந்து, புரை இல் தீ மொழி பயிற்றிய உரை எடுத்து – மேன்மை இல்லாத தீய சொற்களைக் கூறுவதற்கு வேண்டிய பேச்சுக்களை மேற்கொண்டது, ஆனா கௌவைத்து ஆக – அடங்காத பழிமொழிகளாக, தான் என் இழந்தது இவ்வழுங்கல் ஊரே – ஆரவாத்தையுடைய இந்த ஊர் எதனை இழந்தது (ஊரே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 37, பேரி சாத்தனார், பாலைத் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
பிணங்கு அரில் வாடிய பழவிறல் நனந்தலை
உணங்கு ஊண் ஆயத்து ஓர் ஆன் தெள் மணி
பைபய இசைக்கும் அத்தம், வை எயிற்று
இவளொடும் செலினோ நன்றே; குவளை
நீர் சூழ் மா மலர் அன்ன கண் அழக்  5
கலை ஒழி பிணையின் கலங்கி மாறி
அன்பு இலிர் அகறிர் ஆயின், என் பரம்
ஆகுவது அன்று இவள் அவலம் நாகத்து
அணங்குடை அருந்தலை உடலி, வலன் ஏர்பு
ஆர்கலி நல் ஏறு திரிதரும்  10
கார் செய் மாலை வரூஉம் போழ்தே.

பாடல் பின்னணி:  வரைவிடை வைத்துப் பிரிவின்கண் தோழி தலைவனிடம் கூறியது.

பொருளுரை:  ஒன்றோடொன்று பின்னிக்கிடக்கும் வாடிய தூறுகளையும் பழமையான நல்ல தோற்றத்தையும் உடைய அகன்ற இடத்தி ல் உலர்ந்த புல்லினை உணவாகக் கொள்ளும் ஆனிரையின் ஒற்றை ஆவினுடைய தெளிந்த மணியோசை மெல்ல ஒலிக்கும் வழியில், கூரிய பற்களையுடைய இவளை உடன்கொண்டு செல்வீராயின் நல்லது.  குவளையின் நீர் நிறைந்த கரிய மலர் போன்ற இவள் கண்கள் கலங்கி, கலைமானை இழந்த பெண்மான் போன்று துன்புறுமாறு, மாறுபட்டு அன்பின்றி இவளைப் பிரிந்து செல்வீர் ஆயின், இவளுடைய துன்பம் என்னால் தாங்கப்படுவது அன்று, பாம்பினது அரிய தலை துணியும்படி (வெட்டுப்படும்படி) சினந்து வலது புறமாக ஏறி மிகுந்த முழக்கத்தையுடைய நல்ல இடியேறு திரிகின்ற கார்காலத்தில் மாலைப்பருவம் வரும்பொழுதில்.

குறிப்பு:  ஒளவை துரைசாமி உரை – ‘நாற்றமும் தோற்றமும்’ (தொல்காப்பியம், களவியல் 24) என்ற நூற்பாவின் ‘ஓம்படைக் கிளவிப் பாங்கின்கண்ணும்’ என்ற பகுதியில் இப்பாட்டினை எடுத்தோதிக்காட்டி, ‘இது வரைவிடைப் பிரிகின்றான் ஆற்றுவித்து கொண்டிரு என்றதற்குத் தோழி கூறியது என்பர் நச்சினார்க்கினியர்.  ஒளவை துரைசாமி உரை – பாம்பின் தலையைத் துமித்து பெருமுழக்கத்தோடு திரியும் இடியேறு போல, ஏதிலாட்டியார் தலைமடங்க முரசு முழங்க நீ இவளை வரைந்துகொள்வான் வருதல் வேண்டும்; அதற்குரிய கார்காலம் அடுத்து வருதற்கு அமைந்தது என்பது குறிப்பு.  வலன் ஏர்பு – அகநானூறு 43, 84, 188, 278, 298, 328, நற்றிணை 37, 264, 328, குறுந்தொகை 237, ஐங்குறுநூறு 469, பதிற்றுப்பத்து 24, 31, நெடுநல்வாடை 1, பட்டினப்பாலை 67, முல்லைப்பாட்டு 4, திருமுருகாற்றுப்படை 1.  அணங்குடை அருந்தலை – அகநானூறு 108, நற்றிணை 37, பரிபாடல் 1–1.  இடி பாம்புகளை வருத்தவும் கொல்லவும் செய்யும் என்னும் செய்தி உள்ள பாடல்கள் – அகநானூறு 92, 119, 182, 202, 274, 323, 328, கலித்தொகை 45, 113, குறுந்தொகை 158, 190, 268, 391, நற்றிணை 37, 51, 114, 129, 238, 255, 264, 347, 383, புறநானூறு 17, 37, 58, 126, 211, 366, 369.  கலி – கம்பலை சும்மை கலியே அழுங்கல் என்று இவை நான்கும் அரவப் பொருள (தொல்காப்பியம், உரியியல் 53).  வை– வையே கூர்மை (தொல்காப்பியம், உரியியல் 91).  நனந்தலை – அகன்ற இடம், நனம் – நனவே களனும் அகலமும் செய்யும் (தொல்காப்பியம், உரியியல் 80).

சொற்பொருள்:  பிணங்கு அரில் வாடிய பழவிறல் நனந்தலை உணங்கு ஊண் ஆயத்து ஓர் ஆன் தெள் மணி பைபய இசைக்கும் அத்தம் வை எயிற்று இவளொடும் செலினோ நன்றே – ஒன்றோடொன்று பின்னிக்கிடக்கும் வாடிய தூறுகளையும் பழமையான நல்ல தோற்றத்தையும் உடைய அகன்ற இடத்தில் உலர்ந்த புல்லினை உணவாகக் கொள்ளும் ஆனிரையின் ஒற்றை ஆவினுடைய தெளிந்த மணியோசை மெல்ல ஒலிக்கும் வழியில் கூரிய பற்களையுடைய இவளை உடன்கொண்டு செல்வீராயின் நல்லது (பைபய – பையப்பைய பைபய என மருவியது, செலினோ – ஓகாரம் அசைநிலை, நன்றே – ஏகாரம் அசைநிலை), குவளை நீர் சூழ் மா மலர் அன்ன கண் அழ கலை ஒழி பிணையின் கலங்கி – குவளையின் நீர் நிறைந்த கரிய மலர் போன்ற கண்கள் அழ கலைமானை இழந்த பெண்மான் போன்று துன்புற்று (பிணையின் – இன் உருபு ஒப்புப் பொருளது, ஐந்தாம் வேற்றுமை உருபு, கலங்கி – கலங்க எனற்பாலது கலங்கி எனத் திரிந்தது), மாறி அன்பு இலிர் அகறிர் ஆயின் என் பரம் ஆகுவது அன்று – மாறுபட்டு அன்பின்றி இவளைப் பிரிந்து செல்வீர் ஆயின் அது என்னால் தாங்கப்படுவது அன்று (பரம் – பாரம் என்பதன் குறுக்கல் விகாரம்), இவள் அவலம் – இவளுடைய துன்பம், நாகத்து அணங்குடை அருந்தலை உடலி வலன் ஏர்பு ஆர்கலி நல் ஏறு திரிதரும் கார் செய் மாலை வரூஉம் போழ்தே – பாம்பினது அரிய தலை துணியும்படி (வெட்டுப்படும்படி) சினந்து வலது புறமாக ஏறி மிகுந்த முழக்கத்தையுடைய நல்ல இடியேறு திரிகின்ற கார்காலத்தில் மாலைப்பருவம் வரும்பொழுது (வரூஉம் – செய்யுளிசை அளபெடை, போழ்தே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 38, உலோச்சனார், நெய்தல் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
வேட்டம் பொய்யாது வலை வளம் சிறப்ப,
பாட்டம் பொய்யாது பரதவர் பகர,
இரும் பனந்தீம் பிழி உண்போர் மகிழும்
ஆர்கலி யாணர்த்து ஆயினும், தேர் கெழு
மெல்லம்புலம்பன் பிரியின், புல்லெனப்  5
புலம்பு ஆகின்றே தோழி! கலங்கு நீர்க்
கழி சூழ் படப்பை காண்டவாயில்
ஒலி கா ஓலை முள் மிடை வேலி
பெண்ணை இவரும் ஆங்கண்,
வெண்மணல் படப்பை எம் அழுங்கல் ஊரே.  10

பாடல் பின்னணி:  தலைவன் வரைவிடை வைத்துப் பொருள்வயின் பிரிந்த காலத்தில் வருந்திய தலைவியிடம், ‘நீ வருந்துவது புறத்தார்க்குப் புலனாயின் அலராகும்’ என்று தோழி கூற, ‘நம்மூர் இனிமையானதாயினும் தலைவன் பிரிந்ததால் நான் வருந்துகின்றேன்’ என்று தலைவி கூறுகின்றாள்.

பொருளுரை:  தோழி!  கடலில் மீன் வேட்டம் பொய்ப்படாது வலைகளில் மீன் நிறைந்துச் சிறக்க, மழையும் தவறாமல் பெய்ய, மீனவர்கள் மீனை விற்க, மக்கள் கரிய பனைமரத்தின் கள்ளை உண்டு மகிழும் ஆரவாரத்தையுடைய வளமையான இடமாயினும், தேரையுடைய நெய்தல் நிலத்தின் தலைவன் பிரிந்தால் பொலிவின்றி வருத்தத்தைத் தருகின்றது, கலங்கிய நீரைக் கொண்ட உப்பங்கழி சூழ்ந்த தோட்டங்களையும், ஒலித்தலையுடைய பனை ஓலைகளுடன் முட்களைச் சேர்த்துக் கட்டப்பட்ட வேலியிடத்தில் உள்ள பனை மரங்கள் உயர்ந்திருக்கும் எம்முடைய காண்டவாயில் என்ற ஆராவாரமுடைய ஊர்.

குறிப்பு:  வரலாறு:  காண்டவாயில்.  யாணர் – புதிதுபடற் பொருட்டே யாணர்க் கிளவி (தொல்காப்பியம், உரியியல் 83).  அழுங்கல் – கம்பலை சும்மை கலியே அழுங்கல் என்று இவை நான்கும் அரவப் பொருள (தொல்காப்பியம், உரியியல் 53).  கா ஓலை (8) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – முற்றிய ஓலை, முற்றிக் காய்ந்த ஓலையுமாம், ச. வே. சுப்பிரமணியன் உரை – முற்றிய ஓலை.

சொற்பொருள்:  வேட்டம் பொய்யாது வலை வளம் சிறப்ப பாட்டம் பொய்யாது பரதவர் பகர இரும் பனந்தீம் பிழி உண்போர் மகிழும் ஆர்கலி யாணர்த்து ஆயினும் – கடலில் மீன் வேட்டம் பொய்ப்படாது வலைகளில் மீன் நிறைந்துச் சிறக்க மழையும் தவறாமல் பெய்ய மீனவர்கள் மீனை விற்க கரிய பனைமரத்தின் கள்ளை உண்டு மகிழும் ஆரவாரத்தையுடைய வளமையான இடமாயினும், தேர் கெழு மெல்லம்புலம்பன் பிரியின் புல்லென புலம்பு ஆகின்றே – தேரையுடைய நெய்தல் நிலத்தின் தலைவன் பிரிந்தால் பொலிவின்றி வருத்தத்தைத் தருகின்றது (மெல்லம்புலம்பன் – அம் சாரியை, ஆகின்றே – ஏகாரம் அசைநிலை), தோழி – தோழி, கலங்கு நீர் கழிசூழ் படப்பை காண்டவாயில் – கலங்கிய நீரைக் கொண்ட உப்பங்கழி சூழ்ந்த தோட்டங்களையும் உடைய காண்டவாயில் என்ற ஊர், ஒலி கா ஓலை முள் மிடை வேலிப் பெண்ணை இவரும் வெண்மணல் படப்பை எம் அழுங்கல் ஊரே – ஒலித்தலையுடைய முற்றிக் காய்ந்த பனை ஓலைகளுடன் முட்களைச் சேர்த்துக் கட்டப்பட்ட வேலியிடத்தில் உள்ள பனைமரங்கள் உயர்ந்திருக்கும் எம்முடைய ஆராவாரமுடைய ஊர் (ஆங்கண் – அங்கு, அசையுமாம், ஊரே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 39, மருதன் இளநாகனார், குறிஞ்சித் திணை – தலைவன் தலைவியிடம் சொன்னது
சொல்லின் சொல் எதிர் கொள்ளாய், யாழ நின்
திரு முகம் இறைஞ்சி நாணுதி கதுமெனக்
காமம் கைம்மிகின் தாங்குதல் எளிதோ?
கொடுங்கேழ் இரும் புறம் நடுங்கக் குத்திப்
புலி விளையாடிய புலவு நாறு வேழத்தின்  5
தலை மருப்பு ஏய்ப்ப, கடைமணி சிவந்த நின்
கண்ணே கதவ அல்ல; நண்ணார்
அரண்தலை மதிலர் ஆகவும், முரசு கொண்டு,
ஓம்பு அரண் கடந்த அடு போர் செழியன்
பெரும் பெயர்க் கூடல் அன்ன நின்  10
கரும்புடைத் தோளும் உடையவால் அணங்கே.

பாடல் பின்னணி:  இயற்கைப் புணர்ச்சிக்குப் பின் இடந்தலைப்பாடு உற்றுச் சென்று முந்துறக் கண்ட தலைவன் தலைவியிடம் கூறியது.

பொருளுரை:  யான் கூறும் சொற்களுக்கு நீ எதிர்சொல் சொல்லுகின்றாய்  இல்லை.  உன் அழகிய முகத்தைக் கவிழ்த்துக்கொண்டு, விரைவாக நாணம் அடைகின்றாய்.  காதல் கைகடந்துச் சென்றால் அதைத் தாங்குதல் எளிதோ?  வளைந்த வரிகளையுடைய பெரிய முதுகு நடுங்குமாறு புலியைக் கொன்றதால் புலவு நாற்றம் உடைய யானையின் தலையில் உள்ள குருதிப்படிந்த கொம்புகளைப்போல (தந்தங்களைப்போல) கடைப்பகுதி சிவந்த நின் கண்கள் எம்மை வருத்துகின்றன. அவை மட்டும் என்னை வருத்துவன இல்லை.  பகைவர்களின் கோட்டையில் உள்ள மதிலைக் கடந்து அவர்களுடைய முரசைக் கைப்பற்றி அவர்களால் பாதுகாக்கப்பட்ட அரண்களையும் கைப்பற்றும், போரில் பகைவரைக் கொல்லும் பாண்டியனின் பெரும் புகழையுடைய கூடல் (மதுரை) நகரை ஒத்த உன்னுடைய தொய்யில் வரையப்பட்ட தோள்களும் என்னை வருத்துகின்றன.

குறிப்பு:  ஒளவை துரைசாமி உரை – ‘முன்னிலையாக்கல் சொல்வழிப் படுத்தல்’ (தொல்காப்பியம், களவியல் 10) என்ற நூற்பாவில் ‘தன்னிலை உரைத்தல்’ என்றதற்கு இப்பாட்டினை எடுத்துரைத்து இதனுள் வரும் ‘காமம் கைம்மிகின் தாங்குதல் எளிதோ……கடைமணி சிவந்த நின் கண்ணே கதவ அல்ல’ என்பதைக் காட்டித் ‘தன்னிலை உரைத்தவாறு காண்க’ என்பர் இளம்பூரணர்.  இனி ‘மெய்தொட்டுப் பயிறல்’ (தொல்காப்பியம், களவியல் 11) என்னும் நூற்பாவில் வரும் ‘இடையூறு கிளத்தல் நீடு நினைந்து இரங்கல் கூடுதல் உறுதல்’ என்னும் பகுதிகட்கு இப்பாட்டினை ஓதிக்காட்டி, ‘மெய்தீண்டி நின்றவன் யான் தழீஇக்கொண்டு கூறின் அதனை ஏற்றுக் கொள்ளாயாய் இறைஞ்சி நின்று நாணத்தாற் கண்ணைப் புதைத்தியென இடையூறு கிளத்தல் கூறிக் ‘காமம் கைம்மிகின் தாங்குதல் எளிதோ’ என நீடு நினைந்திரங்கல் கூறிப், புலியிடைத் தோய்ந்து சிவந்த கோடுபோல என்னிடைத் தோய்ந்து சிவந்த கண் எனக் கொடுத்தாலும் கூறிற்று’ என்பர் நச்சினார்க்கினியர்.  இனி, பேராசிரியர் ‘காமப்புணர்ச்சியும் இடந்தலைப்பாடும்’ (தொல்காப்பியம், செய்யுளியல் 177) என்ற நூற்பா உரையில் இதனை எடுத்தோதி, இஃது இடந்தலைப்பாடு என்பர்.  சிவந்த நின் கண்ணே கதவ அல்ல (5–6) – ஒளவை துரைசாமி உரை – சிவந்து தோன்றும் நின் கண்கள் என்னை வருத்துமெனக் கருதி அவற்றை மறைத்தாயாயினும், என்னை வருத்தவன அவை மட்டும் இல்லை.  தலை மருப்பு ஏய்ப்ப  (5–6) – ஒளவை துரைசாமி உரை – மருப்பின் நுனி போல.  பெரும் பெயர்க் கூடல் (10) – ஒளவை துரைசாமி உரை – தமிழால் புகழ் நிலைபெற்ற கூடல்.  என்றற்குப் பெரும் பெயர்க்கூடல் என்றார்.   கரும்புடைத் தோளும் உடையவால் அணங்கே (11) – ஒளவை துரைசாமி உரை – கரும்பு எழுதப் பெற்ற நின் தோள்களும் என்னை வருத்துதலையுடைய யாதலை அறிவாயாக.  வரலாறு:  செழியன், கூடல்.  காமம் – கமம் என்னும் சொல்லின் முதல் நீண்ட வடிவம், ‘நிறைந்த அன்பு’ என்பது இச்சொல்லின் பொருள் – பேரறிஞர் கு.வெ. பாலசுப்பிரமணியன் அவர்களின் விளக்கம், (கமம் நிறைந்து இயலும் – தொல்காப்பியம், சொல்லியல் 355).

சொற்பொருள்:  சொல்லின் சொல் எதிர் கொள்ளாய் – யான் கூறும் சொற்களுக்கு எதிர்சொல் சொல்லுகின்றாய் இல்லை, யாழ – அசைநிலை, நின் திரு முகம் இறைஞ்சி நாணுதி கதுமென – உன் அழகிய முகத்தைக் கவிழ்த்துக்கொண்டு நாணம் அடைகின்றாய் விரைவாக (கதுமென – விரைவுக்குறிப்பு), காமம் கைம்மிகின் தாங்குதல் எளிதோ – காதல் கைகடந்துச் சென்றால் தாங்குதல் எளிதோ, கொடுங்கேழ் இரும் புறம் நடுங்கக் குத்தி புலி விளையாடிய புலவு நாறு வேழத்தின் தலை மருப்பு ஏய்ப்ப – வளைந்த வரிகளையுடைய பெரிய முதுகு நடுங்குமாறு புலியைக் கொன்றதால் புலவு நாற்றம் உடைய யானையின் தலையில் உள்ள கொம்புகளைப்போல (தந்தங்களைப் போல, மருப்புகளைப் போல்), கடைமணி சிவந்த நின் கண்ணே – கடைப்பகுதி சிவந்த நின் கண்கள், கதவ அல்ல – வருத்துவன அவை மட்டும் இல்லை, நண்ணார் அரண்தலை மதிலர் ஆகவும் முரசு கொண்டு ஓம்பு அரண் கடந்த  அடு போர் செழியன் பெரும் பெயர்க் கூடல் அன்ன – பகைவர்களின் கோட்டையில் உள்ள மதிலைக் கடந்து அவர்களுடைய முரசைக் கைப்பற்றி அவர்களால் பாதுகாக்கப்பட்ட அரண்களையும் பற்றிய போரில் பகைவரைக் கொல்லும் பாண்டியனின் பெரும் புகழையுடைய கூடல் (மதுரை) நகரம் போன்ற, நின் கரும்புடைத் தோளும் உடையவால் அணங்கே – உன்னுடைய தொய்யில் வரையப்பட்ட தோள்களும் என்னை வருத்துகின்றன (உடையவால் – ஆல் அசைநிலை, அணங்கே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 40, கோண்மா நெடுங்கோட்டனார், மருதத் திணை – பரத்தை சொன்னது
நெடுநா ஒள் மணி கடி மனை இரட்ட,
குரை இலைப் போகிய விரவு மணல் பந்தர்ப்
பெரும்பாண் காவல் பூண்டென ஒரு சார்த்
திருந்திழை மகளிர் விரிச்சி நிற்ப,
வெறி உற விரிந்த அறுவை மெல் அணைப்  5
புனிறு நாறு செவிலியொடு புதல்வன் துஞ்ச,
ஐயவி அணிந்த நெய்யாட்டு ஈரணிப்
பசு நெய் கூர்ந்த மென்மை யாக்கைச்
சீர் கெழு மடந்தை ஈர் இமை பொருந்த,
நள்ளென் கங்குல் கள்வன் போல,  10
அகல் துறை ஊரனும் வந்தனன்,
சிறந்தோன் பெயரன் பிறந்தமாறே.

பாடல் பின்னணி:  தலைவியின் தோழியர் கேட்கும்படி பரத்தை சொன்னது.

பொருளுரை:  நெடிய நாக்கையுடைய ஒளியுடைய மணி காவலுடைய மனையில் ஒலிக்க, ஒலிக்கின்ற ஓலைகளால் வேயப்பட்ட புதுமணல் பரப்பிய பந்தலில், பெரும்பாணர் முன்பு தலைவனைச் சூழ்ந்து காவல் காத்தாற்போல் ஒரு புறம் திருத்தமான அணிகலன்களை அணிந்த பெண்கள் நல்ல நிமித்தமாக இருக்க, நறுமணம் அமையுமாறு விரிக்கப்பட்ட துணியிலான மெல்லிய மெத்தையின் மீது ஈன்ற மணம் உடைய புதல்வன் செவிலித்தாயுடன் உறங்க, வெண்கடுகு அப்பிய எண்ணெய் தேய்த்துக் குளித்ததனால் ஈரமான அணிகலன்களுடனே, குளிர்ந்த நெய் பூசிய மிக்க மென்மையான உடம்பையும் அழகையும் உடைய அவனுடைய மனைவி இரண்டு இமைகளையும் பொருந்தி உறங்க, நள்ளிரவில் கள்வன் போல அகன்ற நீர்த்துறையையுடைய ஊரன் வந்தான், தனக்குச் சிறந்தவனாக இருக்கும் அவனுடைய தந்தையின் பெயரைக் கொண்ட தன் புதல்வன் பிறந்ததால்.

குறிப்பு:  ‘பெறற்கு அரும் பெரும் பொருள்’ (தொல்காப்பியம், கற்பியல் 9) என்ற நூற்பாவில் வரும் ‘சிறந்த புதல்வனைத் தேராது புலம்பினும்’ என்பதற்கு இப்பாட்டை எடுத்தோதிக் காட்டுவர் இளம்பூரணர்.  ‘கரணத்தின் அமைந்து முடிந்த காலை’ (தொல்காப்பியம், கற்பியல் 5) என்ற நூற்பாவில் வரும், ‘செய்பெருஞ் சிறப்போடு சேர்தற்கண்ணும்’ என்றதற்கு இதனை எடுத்துக்காட்டி, இது நெய்யணி மயக்கம் பற்றித் தலைவன் கூறியது’ என்பர் நச்சினார்க்கினியர்.  பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – இப்பாட்டு முன்பு வரும் காலத்தில் வராது மைந்தன் பிறந்ததால் வந்தான் எனத் தோழி கூறியதாக உரைப்பினும் அமையும்.  விரிச்சி:  நற்றிணை 40 – விரிச்சி நிற்ப, குறுந்தொகை 218 – விரிச்சியும் நில்லாம், புறநானூறு 280 – விரிச்சி ஓர்க்கும், முல்லைப்பாட்டு 11 – விரிச்சி நிற்ப.  ஒளவை துரைசாமி உரை – மகன் முகத்தையும், மனைவி முகத்தையும் ஏனை மங்கல மகளிர் காண நோக்குமிடத்துச் சுருங்கிய பார்வையுடையனாய்ச் சட்டென நீங்கினமையின் கள்வன் போல என்றும், அதுவும் தன் தந்தை பெயரன் பிறந்தமையால் அவன் வந்தானே அன்றி என் நலம் உவர்த்தம்மை அன்று என்பாள், சிறந்தோன் பெயரன் பிறந்தமாரே என்றும் இயம்பினாள்.  பெரும்பாண் காவல் பூண்டென (3) – ஒளவை துரைசாமி உரை – அழுகுரலும் அமங்கலச் சொல்லும் நன்மக்கள் செவிப்படாதவாறு காவல் பூண்டாற்போலக் கடிமனை (திருமண இல்லம்) பந்தர்க்கண் பெரும்பாணர் இருந்து யாழும் குழலும் இசைத்தனர்.  ஐயவி (7) – ஒளவை துரைசாமி உரை – சிறுதெய்வங்களும் பேய் முதலியனவும் அணங்காமைப் பொருட்டு ஐயவி அணிவது பண்டையோர் மரபு.  தலைவனைக் கள்வன் என்றல் – குறுந்தொகை 25 – யாரும் இல்லைத் தானே கள்வன், குறுந்தொகை 318 – கள்வனும் கடவனும் புணைவனும் தானே,  நற்றிணை 28 – கள்வர் போலக் கொடியன், நற்றிணை 40 – நள்ளென் கங்குல் கள்வன் போல , கலித்தொகை 144 – பொழில் தொறும் நாடுவேன் கள்வன் கரந்து இருக்கற்பாலன் கொல், கலித்தொகை 145 – துயர் செய்த கள்வன், கலித்தொகை 51 – கடைக் கண்ணால் கொல்வான் போல் நோக்கி, நகைக்கூட்டம் செய்தான் அக் கள்வன் மகன்.  புனிறு – புனிறு என் கிளவி ஈன்றணிமைப் பொருட்டே (தொல்காப்பியம், உரியியல் 79).  கடி – கடி என் கிளவி வரைவே கூர்மை காப்பே புதுமை விரைவே விளக்கம் மிகுதி சிறப்பே அச்சம் முன்தேற்று ஆயீர் ஐந்தும் மெய்ப்படத் தோன்றும் பொருட்டு ஆகும்மே (தொல்காப்பியம், உரியியல் 87).

சொற்பொருள்:  நெடுநா ஒள் மணி – நெடிய நாக்கையுடைய ஒளியுடைய மணி, கடி மனை இரட்ட – காவலுடைய மனையில் ஒலிக்க, நறுமணமுடைய மனையில் ஒலிக்க, குரை இலைப் போகிய விரவு மணல் பந்தர் – ஒலிக்கின்ற ஓலைகளால் வேயப்பட்ட புதுமணல் பரப்பிய பந்தலில் (பந்தர் – பந்தல் என்பதன் போலி), பெரும்பாண் காவல் பூண்டென ஒரு சார் திருந்திழை மகளிர் விரிச்சி நிற்ப – பெரும்பாணர் முன்பு தலைவனைச் சூழ்ந்து காவல் காத்தாற்போல் ஒரு புறம் திருத்தமான அணிகலன்களை அணிந்த பெண்கள் நல்ல நிமித்தமாக இருக்க, வெறி உற விரிந்த அறுவை மெல் அணை புனிறு நாறு செவிலியொடு புதல்வன் துஞ்ச – நறுமணம் அமையுமாறு விரிக்கப்பட்ட துணியிலான மெல்லிய மெத்தையின் மீது ஈன்ற மணம் உடைய புதல்வன் செவிலித்தாயுடன் உறங்க, ஐயவி அணிந்த நெய் ஆட்டு  ஈரணி – வெண்கடுகு அப்பிய எண்ணெய் தேய்த்துக் குளித்ததனால் ஈரமான அணிகலன்களுடனே (நெய் – எண்ணெய், ஆட்டு – நீராடுதல், குளித்தல்), பசு நெய் கூர்ந்த மென்மை யாக்கைச் சீர் கெழு மடந்தை ஈர் இமை பொருந்த நள்ளென் கங்குல் கள்வன் போல அகல் துறை ஊரனும் வந்தனன் – குளிர்ந்த நெய் பூசிய மிக்க மென்மையான உடம்பையும் அழகையும் உடைய அவனுடைய மனைவி இரண்டு இமைகளையும் பொருந்தி உறங்க நள்ளிரவில் கள்வன் போல அகன்ற நீர்த்துறையையுடைய ஊரன் வந்தான், சிறந்தோன் பெயரன் பிறந்தமாறே – தனக்குச் சிறந்தவனாக அவனுடைய தந்தையின் பெயரைக் கொண்ட தன் புதல்வன் பிறந்ததால் (பிறந்தமாறே – ஏகாரம் அசைநிலை, மாறு ஏதுப்பொருள் (காரணப் பொருள்) தரும் இடைச்சொல்)

நற்றிணை 41, இளந்தேவனார், பாலைத் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
பைங்கண் யானை பரூஉ தாள் உதைத்த
வெண்புறக் களரி விடு நீறு ஆடிச்
சுரன் முதல் வருந்திய வருத்தம் பைபயப்
பாஅர் மலி சிறு கூவலின் தணியும்
நெடுஞ்சேண் சென்று வருந்துவர் மாதோ,  5
எல்லி வந்த நல் இசை விருந்திற்குக்
கிளர் இழை அரிவை நெய் துழந்து அட்ட
விளர் ஊன் அம் புகை எறிந்த நெற்றிச்
சிறு நுண் பல் வியர் பொறித்த
குறு நடைக் கூட்டம் வேண்டுவோரே.  10

பாடல் பின்னணி:  பிரிவு உணர்த்தப்பட்டு ஆற்றாளாகிய தலைவியைத் தோழி உலகியல் கூறி வற்புறுத்தியது.

பொருளுரை:  சிறந்த அணிகலன்களை அணிந்த தலைவியே!  இரவில் வந்த நல்ல புகழையுடைய விருந்தினர்களுக்கு, நெய் பெய்து கொழுவிய தசையைச் சமைத்ததனால் அழகிய புகை படிந்த நெற்றியில் சிறிய நுண்ணியப் பல வியர்வைத் துளிகளைக் கொன்ற நெற்றியையும் குறுகிய நடையையுமுடைய உன்னுடன் இணைவதற்கு விரும்பும் நம் தலைவர், பசிய கண்களையுடைய யானையானது பருத்த கால்களால் உதைத்ததனால் பொடிப்பட்ட வெண்மையான மேற்புறத்தில் உள்ள பாழ் நிலத்தின்கண் எழுந்த புழுதியில் மூழ்கப்பெற்ற, சுரத்திற்கு வந்து வருந்திய வருத்தம் எல்லாம் மெல்ல மெல்ல நீங்க, பாறைகள் நிறைந்த சிறிய கிணற்றின் நீரால் தாகத்தைத் தணிக்கும், நெடுந்தொலைவில் உள்ள இடத்திற்குச் சென்று வருந்துவார். இதனை அறியாது நீ வருந்துகின்றாய்.

குறிப்பு:  இறைச்சி – பொ. வே. சோமசுந்தரனார் உரை – சுரன் முதல் வருந்திய வருத்தம் கூவலில் தணியும் என்றதன்கண் இக்காலத்தே நம் பெருமான் பிரிவினால் நீ எய்தும் துன்பம் அவன் ஈட்டி வரும் பொருளாலே நீ இல்லிலிருந்து இயற்றும் அறத்தினாலே சிறந்த பயன் தரும் என்பது.  பாஅர் மலி சிறு கூவலின் (4) – ‘பார மலி சிறு கூவலின்’ என்றும், ‘பரல் மலி ஊறல் கூவலின்’ என்றும் பாட வேறுபாடுகள் உண்டு.  பாரம் = பருத்தி.

சொற்பொருள்:  பைங்கண் யானைப் பரூஉத் தாள் உதைத்த வெண்புறக் களரி விடு நீறு ஆடி – பசிய கண்களையுடைய யானையின் பருத்த கால்களால் உதைத்ததனால் பொடிப்பட்ட வெண்மையான மேற்புறத்தில் உள்ள பாழ் நிலத்தின்கண் எழுந்த புழுதியில் மூழ்கப்பெற்ற (பரூஉ – செய்யுளிசை அளபெடை), சுரன் முதல் வருந்திய வருத்தம் – சுரத்திற்கு வந்து வருந்திய வருத்தம் எல்லாம் (சுரன் – சுரம் என்பதன் போலி), பைபய – மெல்ல மெல்ல  (பையபைய பைபய என மருவியது), பாஅர் மலி சிறு கூவலின் தணியும் – பாறைகள் நிறைந்த சிறிய கிணற்றின் நீர் தணிக்கும் (பாஅர் – செய்யுளிசை அளபெடை, தணியும் – தணிக்கும்), நெடுஞ்சேண் சென்று வருந்துவர் – நெடுந்தொலைவில் உள்ள இடத்திற்குச் சென்று வருந்துவார், மாதோ – மாது ஓ அசைநிலைகள், எல்லி வந்த நல் இசை விருந்திற்கு – இரவில் வந்த நல்ல புகழையுடைய விருந்தினர்களுக்கு, கிளர் இழை அரிவை – சிறந்த அணிகலன்களை அணிந்த தலைவியே, நெய் துழந்து அட்ட  விளர் ஊன் அம் புகை எறிந்த நெற்றி சிறு நுண் பல் வியர் பொறித்த குறு நடைக் கூட்டம் வேண்டுவோரே – நெய் பெய்து கொழுவிய தசையைச் சமைத்ததனால் அழகிய புகை படிந்த நெற்றியில் சிறிய நுண்ணியப் பல வியர்வைத் துளிகள் உடைய நெற்றியையும் குறுகிய நடையையுமுடைய உன்னுடன் இணைவதற்கு விரும்புபவர் (ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 42, கீரத்தனார், முல்லைத் திணை – தலைவன் தேர்ப்பாகனிடம் சொன்னது
மறத்தற்கு அரிதால் பாக! பல் நாள்
வறத்தொடு பொருந்திய உலகு தொழில் கொளீஇய
பழ மழை பொழிந்த புது நீர் அவல
நா நவில் பல் கிளை கறங்க, நாவுடை
மணி ஒலி கேளாள் வாணுதல்; அதனால் 5
‘ஏகுமின்’ என்ற இளையர் வல்லே
இல் புக்கு அறியுநர் ஆக, மெல்லென
மண்ணாக் கூந்தல் மாசு அறக் கழீஇச்,
சில் போது கொண்டு பல் குரல் அழுத்திய
அந்நிலை புகுதலின், மெய் வருத்துறாஅ  10
அவிழ்பூ முடியினள் கவைஇய
மட மா அரிவை மகிழ்ந்து அயர் நிலையே.

பாடல் பின்னணி:  வினை முற்றி மீளும் தலைவன் தேர்ப்பாகற்குக் கூறியது.

பொருளுரை:  பாகனே!  பல நாட்கள் மழை பெய்யாது வறண்ட உலகத்தில் உள்ள மக்கள் தங்கள் தொழில்களைப் புரியுமாறு தொன்மையான மழை பொழிந்ததால், புதிய நீர் நிறைந்த பள்ளங்களில் நாவினால் ஒலிக்கும் பல கிளைகளையுடைய தவளைகள் ஒலித்ததால், ஒளிபொருந்திய நெற்றியையுடைய நம் தலைவி நாவுடைய மணியின் ஒலியைக் கேட்கவில்லை. அதனால், “நீங்கள் முன்னே சென்று அறிவியுங்கள்” என்று நான் கூற, அக்கட்டளையை ஏற்ற இளையவர்கள் விரைந்து மனைக்குள் புகுந்து அவளிடம் அறிவித்தனர் ஆக, மெதுவாகத் தன் சீவப்படாத கூந்தலை அழுக்குப் போகும்படி கழுவி, சில மலர்களைக்கொண்டு அடர்ந்த கூந்தலில் சூடிக்கொண்டிருந்த வேளையில் நான் புகுந்ததால், உடல் வாட்டமடைய, முடி அவிழ்ந்து பூ விழும் முடியினை உடையவள் ஆக என்னை அணைத்து, இளமையும் மாமையும் உடைய அவள் மகிழ்ச்சி அடைந்து கொண்டாடும் தன்மையை என்னால் மறக்க முடியாது.

குறிப்பு:  ஒளவை துரைசாமி உரை – ‘கரணத்தின் அமைந்து முடிந்த காலை’ (தொல்காப்பியம், கற்பியல் 5) என்ற நூற்பாவில் வரும் ‘பேர் இசை ஊர்திப் பாகர் பாங்கினும்’ என்றதற்கு இப்பாட்டினைக் காட்டுவர் இளம்பூரணர்.  இப்பகுதிக்கு இதனையே காட்டிய நச்சினார்க்கினியர், ‘இது தானுற்ற இன்பத்தினைப் பாகற்குக் கூறியது.   அவிழ்பூ முடியினள் (11) – ஒளவை துரைசாமி உரை – முடி அவிழ்ந்து பூவுதிரவிழும் கூந்தலுடையவள், பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – அவிழ்ந்து குலையும் முடியினள்.  வருத்துறாஅ – வருந்தி என்பது பொருள்.  செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம்.  எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது.  வாள் – வாள் ஒளி ஆகும் (தொல்காப்பியம், உரியியல் 71).

சொற்பொருள்:  மறத்தற்கு அரிது ஆல் – மறப்பதற்கு அரிது (ஆல் – அசைநிலை), பாக – பாகனே, பல் நாள் வறத்தொடு பொருந்திய உலகு தொழில் கொளீஇய – பல நாட்கள் மழை பெய்யாது வறண்ட உலகத்தில் உள்ள மக்கள் தங்கள் தொழில்களைப் புரியுமாறு  (கொளீஇய – அளபெடை), பழ மழை பொழிந்த புது நீர் அவல நா நவில் பல் கிளை கறங்க – தொன்மையான மழை பொழிந்ததால் புதிய நீர் நிறைந்த பள்ளங்களில் நாவினால் ஒலிக்கும் பல கிளைகளையுடைய தவளைகள் ஒலித்ததால், நாவுடை மணி ஒலி கேளாள் வாள் நுதல் – ஒளிபொருந்திய நெற்றியையுடைய நம் தலைவி நாவுடைய மணியின் ஒலியைக் கேட்கவில்லை, (வாள் நுதல் – பண்புத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை), அதனால் ஏகுமின் என்ற இளையர் வல்லே இல் புக்கு அறியுநர் ஆக – அதனால் நீங்கள் முன்னே சென்று அறிவியுங்கள் என்று நான் கூற அக்கட்டளையை ஏற்ற இளையவர்கள் விரைந்து மனைக்குள் புகுந்து அறிவித்தனர் ஆக (மின் – முன்னிலைப் பன்மை வினைமுற்று விகுதி, அறியுநர் – அறிவிக்குநர் என்பதன் விவ் விகுதி தொக்கது), மெல்லென மண்ணா கூந்தல் மாசு அறக் கழீஇ – மெதுவாகத் தன் சீவப்படாத கூந்தலை அழுக்குப் போகும்படி கழுவி (கழீஇ – செய்யுளிசை அளபெடை), சில் போது கொண்டு பல் குரல் அழுத்திய  அந்நிலை புகுதலின் – சில மலர்களைக்கொண்டு அடர்ந்த கூந்தலில் சூடிக்கொண்டிருந்த வேளையில் புகுந்ததால், மெய் வருத்துறாஅ – உடல் வாட்டமடைய (வருத்துறாஅ – அளபெடை, வருத்து – அம் கெட்டு வருத்து என நின்றது, முதனிலைத் தொழிற்பெயருமாம், உறுதல் – வெளிப்படத் தோன்றல்), அவிழ்பூ முடியினள் – முடி அவிழ்ந்து பூ விழும் முடியினை உடையவள், அவிழ்ந்து குலையும் முடியினை உடையவள், கவைஇய – அணைத்து (அளபெடை), மட மா அரிவை மகிழ்ந்து அயர் நிலையே – இளமையும் மாமையும் உடைய அவள் மகிழ்ச்சி அடைந்து கொண்டாடும் தன்மை (நிலையே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 43, எயினந்தையார், பாலைத் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
துகில் விரித்தன்ன வெயில் அவிர் உருப்பின்
என்றூழ் நீடிய குன்றத்துக் கவாஅன்,
ஓய்ப்பசி செந்நாய் உயங்கு மரை தொலைச்சி
ஆர்ந்தன ஒழிந்த மிச்சில் சேய் நாட்டு
அருஞ்சுரம் செல்வோர்க்கு வல்சி ஆகும்  5
வெம்மை ஆர் இடை இறத்தல் நுமக்கே
மெய்ம்மலி உவகை ஆகின்று; இவட்கே
‘அஞ்சல்’ என்ற இறை கைவிட்டெனப்
பைங்கண் யானை வேந்து புறத்து இறுத்தலின்,
களையுநர்க் காணாது கலங்கிய உடை மதில்  10
ஓர் எயில் மன்னன் போல,
அழிவு வந்தன்றால் ஒழிதல் கேட்டே.

பாடல் பின்னணி:  பிரிவு உணர்த்தப்பட்டு தோழி, தலைவனைச் செலவு அழுங்குவித்தது.

பொருளுரை:  வெண்ணிற ஆடையை விரித்தாற்போன்ற வெயிலின் ஒளியையும் வெப்பத்தையும் தந்த கதிரவன் நீடிய மலைப்பகுதியில், மிகுந்த பசியையுடைய செந்நாய் ஒன்று, தளர்ந்த மான் ஒன்றைக் கொன்று, அதன் தசையை உண்ட பின்னர் உள்ள மிச்சில், தொலைவிலுள்ள வேறு நாட்டின் கடிய வழியில் செல்பவர்களுக்கு உணவு ஆகும், வெம்மையுடைய அரிய வழியில் செல்லுதல் நுமக்கு உடம்பு திளைக்கும் மகிழ்ச்சியைக் கொடுக்கின்றது. ஆனால் இவளுக்கு, “அஞ்சாதே நீ” எனக் கூறித் துணையாக வந்த அரசன் அதன்பின் கைவிட்டுச் சென்றதாலும் பகைவேந்தன் தன் பசிய கண்களையுடைய யானைப்படையுடன் மதிற்புறத்தில் வந்து தங்கியதாலும், தனக்கு ஏற்பட்ட துன்பத்தைப் போக்குபவரைக் காணாமல் மனம் கலங்கிய, உடைந்த ஒரு கோட்டையை உடைய மன்னன் போல, அழிக்கும் துன்பம் வந்தது, நீர் செல்வதைக் கேட்டு.

குறிப்பு:  ஒப்புமை  அகநானூறு 373 – முரவுவாய் ஞாயில் ஓர் எயில் மன்னன் போல, புறநானூறு 338 – ஓர் எயில் மன்னன்.  நற்றிணை 99 – துகில் விரித்தன்ன வெயில் அவிர் உருப்பின்.  இறைச்சி – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – செந்நாய் தின்ற மரையாவின் தசை நெறியிற் செல்வோர்க்கு உணவாகும் என்றதனாலே, நீ உண்டு எஞ்சிய தலைவியினது நலனைப் பசலை உண்டு ஒழிக்கும் என்றதாம்.  மரை (3) – ஒரு வித மான்.  என்றூழ் – கதிரவனின் முதிர்ந்த கதிர்கள், எல் (கதிரவன்) + ஊழ் (முதிர்ச்சி).  பேரறிஞர் கு. வெ. பாலசுப்பிரமணியன் அவர்களின் விளக்கம்.

சொற்பொருள்:  துகில் விரித்தன்ன வெயில் அவிர் உருப்பின் என்றூழ் நீடிய குன்றத்துக் கவாஅன் – வெண்ணிற ஆடையை விரித்தாற்போன்ற வெயிலின் ஒளியையும் வெப்பத்தையும் தந்த கதிரவன் நீடிய மலைப்பகுதி (கவாஅன் – அளபெடை), ஓய்ப்பசி செந்நாய் உயங்கு மரை தொலைச்சி ஆர்ந்தன ஒழிந்த மிச்சில் சேய் நாட்டு அருஞ்சுரம் செல்வோர்க்கு வல்சி ஆகும் – மிகுந்த பசியையுடைய செந்நாய் தளர்ந்த மான் ஒன்றைக் கொன்று உண்ட மிச்சம் தொலைவிலுள்ள வேறு நாட்டின் கடிய வழியில் செல்பவர்களுக்கு உணவு ஆகும் (Wild dog – Cuon alpinus dukhunensis), வெம்மை ஆர் இடை இறத்தல் நுமக்கே மெய்ம்மலி உவகை ஆகின்று – வெம்மையுடைய அரிய வழியில் செல்லுதல் நுமக்கு உடம்பு திளைக்கும் மகிழ்ச்சியைக் கொடுக்கின்றது (ஆகின்று – இறந்தகால முற்று வினைத் திரிசொல்), இவட்கே – இவளுக்கு (ஏகாரம் அசைநிலை), அஞ்சல் என்ற இறை கைவிட்டென பைங்கண் யானை வேந்து புறத்து இறுத்தலின் – அஞ்சாதே நீ எனக் கூறித் துணையாக வந்த அரசன் அதன்பின் கைவிட்டுச் சென்றதாலும் பகைவேந்தன் தன் பசிய கண்களையுடைய யானைப்படையுடன் மதிற்புறத்தில் வந்து தங்கியதாலும், களையுநர்க் காணாது கலங்கிய உடை மதில் ஓர் எயில் மன்னன் போல – தனக்கு ஏற்பட்ட துன்பத்தைப் போக்குபவரைக் காணாமல் மனம் கலங்கிய உடைந்த ஒரு கோட்டையை உடைய மன்னன் போல், அழிவு வந்தன்றால் – அழிவு வந்தது (வந்தன்றால் – ஆல் அசைநிலை, வந்தன்று – இறந்தகால முற்று வினைத் திரிசொல்), ஒழிதல் கேட்டே – நீர் செல்வதைக் கேட்டு (கேட்டே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 44, பெருங்கௌசிகனார், குறிஞ்சித் திணை – தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது
பொரு இல் ஆயமோடு அருவி ஆடி,
நீர் அலைச் சிவந்த பேர் அமர் மழைக் கண்
குறியா நோக்கமொடு முறுவல் நல்கி,
மனை வயின் பெயர்ந்த காலை, நினைஇய
நினக்கோ அறியுநள் நெஞ்சே, புனத்த  5
நீடு இலை விளை தினை கொடுங்கால் நிமிரக்
கொழுங்குரல் கோடல் கண்ணி, செழும் பல,
பல் கிளைக் குறவர் அல்கு அயர் முன்றில்,
குடக்காய் ஆசினிப் படப்பை நீடிய
பல் மர உயர் சினை மின்மினி விளக்கத்துச்,  10
செல் மழை இயக்கம் காணும்
நல் மலை நாடன் காதல் மகளே.

பாடல் பின்னணி:  தலைவி இற்செறிக்கப்பட்ட பின்பு, குறியிடத்திற்கு வந்த தலைவன் உரைத்தது.

பொருளுரை:  நெஞ்சே! கொல்லையில் நீண்ட இலையுடைய விளைந்த தினைப் பயிரின் வளைந்த அடிப்பகுதி நிமிருமாறு கொழுத்த கதிர்களைக் கொய்யக் கருதிக் கூட்டமுடைய பற்பல உறவினர்கள் ஆக உள்ள மலை மக்கள், தங்கி அயர்வு நீக்கும் முற்றத்தில் குடம் போல் இருக்கும் காய்களையுடைய ஆசினிப்பலா இருக்கும் தோப்பில் நெடிது உயர்ந்த மரங்களின் கிளைகளில் தங்கி ஒளிரும் மின்மினிப் பூச்சிக்களின் ஒளியில் வானில் செல்லும் முகிலின் இயக்கத்தைக் காணும் நல்ல மலை நாடனின் அன்பு மகள், ஒப்பில்லாத தோழியருடன் அருவியில் நீராடி, நீர் அலைத்ததால் சிவந்த பெரிய அமர்ந்த குளிர்ச்சியுடையக் கண்களால் பொது நோக்கம் கொண்டு, புன்னகையை நமக்கு நல்கிவிட்டு, தன் மனைக்குச் சென்றபொழுது, அவளை எண்ணி வந்த உன்னாலோ அறிந்து கொள்ளத்தக்க எளியவள்.

குறிப்பு:  உள்ளுறை – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – குறவர் மின்மினியை விளக்காகக் கொண்டு மழை இயக்கத்தை நோக்கியிருத்தல் போல நீயும் தோழி கூற்றால் தலைவியின் இயக்கத்தைக் காண முயலுகின்றனை போலும் என்றதாம்.  இறைச்சி – பொ. வே. சோமசுந்தரனார் உரை – குறவர் முன்றிலின்கண் நின்று இரவின்கண் வானிலே இயங்கும் முகிலின் இயக்கத்தைக் கண்டு நாளை மழை பெய்யும் அல்லது பெய்யாது என்று அறியும் நுண்ணறிவு உடையோர் ஆதலின் அங்ஙனமே நம்முடைய களவொழுக்கத்தையும் மறைவிலிருந்து ஒற்றியுணர்ந்து தலைவியை இற்செறித்தனர் போலும் என்று பரிவுற்று மெலிந்தான்.  குறியா நோக்கம் (3) – ஒளவை துரைசாமி உரை – பொது நோக்கமொடு, பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – குறிக்கப்படாத பார்வை, H. வேங்கடராமன் உரை – குறிப்பிட்ட நோக்கத்தோடு.

சொற்பொருள்:  பொரு இல் ஆயமோடு அருவி ஆடி நீர் அலைச் சிவந்த பேர் அமர் மழைக் கண் குறியா நோக்கமொடு முறுவல் நல்கி மனை வயின் பெயர்ந்த காலை – ஒப்பில்லாத தோழியருடன் அருவியில் நீராடி நீர் அலைத்ததால் சிவந்த பெரிய அமர்ந்த குளிர்ச்சியுடையக் கண்களால் பொது நோக்கம் கொண்டு (குறித்த நோக்கம் கொண்டு) புன்னகையையும் தந்து தன் மனைக்குச் சென்ற[பொழுது, நினைஇய – அவளை எண்ணி வந்த (நினைஇய – அளபெடை), நினக்கோ அறியுநள் – உன்னாலோ அறிந்து கொள்ளத்தக்க எளியவள் (நினக்கோ – ஓகாரம் அசைநிலை), நெஞ்சே – நெஞ்சே, புனத்த நீடு இலை விளை தினைக் கொடுங்கால் நிமிரக் கொழுங்குரல் கோடல் கண்ணி – கொல்லையில் நீண்ட இலையுடைய விளைந்த தினைப் பயிரின் வளைந்த அடிப்பகுதி நிமிருமாறு கொழுத்த கதிர்களைக் கொய்யக் கருதி, செழும் பல பல் கிளை – மிக்க கூட்டமுடைய பற்பல உறவினர்கள், குறவர் – மலை மக்கள், அல்கு அயர் முன்றில் குடக்காய் ஆசினிப் படப்பை நீடிய பல் மர உயர் சினை மின்மினி விளக்கத்துச் செல் மழை இயக்கம் காணும் – தங்கி அயர்வு நீக்கும் முற்றத்தில் குடம் போல் இருக்கும் காய்களையுடைய ஆசினிப்பலா இருக்கும் தோப்பில் நெடிது உயர்ந்த மரங்களின் கிளைகளில் தங்கி ஒளிரும் மின்மினிப் பூச்சிக்களின் ஒளியில் வானில் செல்லும் முகிலின் இயக்கத்தைக் காணும், நல் மலை நாடன் காதல் மகளே – நல்ல மலை நாடனின் அன்பு மகள் (ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 45, பாடியவர் பெயர் கிடைக்கவில்லை, நெய்தல் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
இவளே, கானல் நண்ணிய காமர் சிறுகுடி
நீல் நிறப் பெருங்கடல் கலங்க உள்புக்கு
மீன் எறி பரதவர் மகளே; நீயே,
நெடுங்கொடி நுடங்கும் நியம மூதூர்க்
கடுந்தேர்ச் செல்வன் காதல் மகனே;  5
நிணச் சுறா அறுத்த உணக்கல் வேண்டி
இனப் புள் ஓப்பும் எமக்கு நலன் எவனோ?
புலவு நாறுதும், செல நின்றீமோ!
பெரு நீர் விளையுள் எம் சிறு நல் வாழ்க்கை
நும்மொடு புரைவதோ அன்றே;  10
எம்மனோரில் செம்மலும் உடைத்தே

பாடல் பின்னணி:  குறை வேண்டி நின்ற தலைவனைத் தோழி சேட்படுத்தியது.

பொருளுரைஎன் தோழியோ கடற்கரைச் சோலையின் அருகில் உள்ள அழகிய சிற்றூரில் உள்ள, கடலில் சென்று மீனைப் பிடிக்கும் பரதவரின் மகள்.   நீயோ பெரிய கொடிகள் பறக்கும் கடை வீதிகள் உள்ள பழமையான ஊரில் விரைந்துச் செல்லும் தேரையுடைய செல்வந்தரின் அன்பு மகன்.  கொழுத்த சுறா மீனை அறுத்துக் காய வைத்து பறவைகளை விரட்டும் எங்களுக்கு உன்னால் என்ன பயன்?  இங்கு மீன் நாற்றம் அடிக்கின்றது.  நிற்காமல் இங்கிருந்து போய் விடு.   பெரிய கடல் தரும் பயனால் நாங்கள் எளிய நல்ல வாழ்க்கையை வாழ்கின்றோம்.  அது உன்னுடையதைப் போன்று உயர்வானது இல்லை.  ஆனால், எங்கள் நடுவிலும் உயர்ந்தோர் உள்ளனர்!

குறிப்பு:  ஒளவை துரைசாமி உரை – ‘நாற்றமும் தோற்றமும்’ (தொல்காப்பியம், களவியல் 24) என்ற நூற்பாவின் ‘பெருமையிற் பெயர்ப்பினும்’ என்ற பகுதிக்கு இப்பாட்டினை ஓதிக் காட்டுவர் இளம்பூரணர்.  நச்சினார்க்கினியரும் அதற்கே இதனைக் காட்டினர்.  ‘ஏனோர் பாங்கினும்’ (தொல்காப்பியம், புறத்திணையியல் 23) என்ற நூற்பா உரையுள் ‘கடுந்தேர்ச் செல்வன் காதல் மகனே!’ என்றது அருமை செய்து அயர்த்தலின் அவனை இகழ்ச்சிக் குறிப்பால் தலைமையாகக் கூறினாள் என்பர் நச்சினார்க்கினியர்.  எமக்கு நலன் எவனோ (9) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – எமக்கு நின் சிறந்த நலன்தான் யாது வேண்டிக்கிடந்தது?  ஒன்றும் வேண்டா, ஒளவை துரைசாமி உரை – எம்பால் அமைந்த நலம் யாது பயன் தருவதாம், H. வேங்கடராமன் உரை – எமக்கு நலன் என்பது யாதாகுமோ.  பெருநீர் (9) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – பெருநீர் என்பது அன்மொழித்தொகை.  கடல் என்பது பொருள்.

சொற்பொருள்:  இவளே – இவள், கானல் நண்ணிய – கடற்கரை சோலை அருகே உள்ள, காமர் சிறுகுடி – அழகிய சிற்றூர்,  நீல் நிறப் பெருங் கடல் – நீல நிறமுடைய பெரிய கடல், கலங்க – கலங்க, உள்புக்கு – உள்ளே புகுந்து,  மீன் எறி பரதவர் மகளே – மீனை பிடிக்கும் பரதவர் மகள், நீயே – நீ, நெடுங் கொடி நுடங்கும் – பெரிய கொடி பறக்கும், நியம மூதூர் – கடைவீதி உள்ள பழமையான ஊர்,  கடுந் தேர்ச் செல்வன் காதல் மகனே – விரைவாகச் செல்லும் தேரையுடைய செவந்தரின் அன்பு மகன், நிணச் சுறா அறுத்த உணக்கல் வேண்டி – கொழுத்த சுறா மீனை அறுத்துக் காய வைக்க வேண்டி, இனப் புள் ஓப்பும் எமக்கு – பறவைகளை விரட்டும் எங்களுக்கு, நலன் எவனோ – என்ன பயன், புலவு நாறுதும் – இங்கு மீன் நாற்றம் அடிக்கின்றது, செல நின்றீமோ – நிற்காமல் நீ சென்று விடு (நின்றீமோ – முன்னிலை ஒருமை முற்றுவினைத் திரிசொல், இகரவீறு நீண்டு மோ என்னும் முன்னிலையசை பெற்றது), பெரு நீர் விளையுள் – கடலின் பலனால், எம் சிறு நல் வாழ்க்கை – எங்களுடைய எளிமையான நல்ல வாழ்க்கை, நும்மொடு புரைவதோ அன்றே – உன்னுடையதைப் போன்று உயர்வானது இல்லை (புரை – உவம உருபு, அன்றே – ஏகாரம் அசை நிலை), எம்மனோரில் செம்மலும் உடைத்தே – எங்களிலும் உயர்ந்தோர் உள்ளனர் (உடைத்தே – ஏகாரம் அசை நிலை)

நற்றிணை 46, பாடியவர் பெயர் கிடைக்கவில்லை, பாலைத் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
வைகல்தோறும் இன்பமும் இளமையும்
எய் கணை நிழலின் கழியும் இவ் உலகத்துக்,
காணீர் என்றலோ அரிதே; அது நனி
பேணீர் ஆகுவிர் ஐய! என் தோழி
பூண் அணி ஆகம் புலம்ப, பாணர்  5
அயிர்ப்புக் கொண்டன்ன கொன்றை அம் தீம் கனி
பறை அறை கடிப்பின் அறை அறையாத் துயல்வர,
வெவ்வளி வழங்கும் வேய் பயில் அழுவத்து,
எவ்வம் மிகூஉம் அருஞ்சுரம் இறந்து,
நன்வாய் அல்லா வாழ்க்கை  10
மன்னாப் பொருட்பிணிப் ‘பிரிதும் யாம்’ எனவே.

பாடல் பின்னணி:  பிரிவு உணர்த்திய தலைவனிடம் தோழி சொன்னது.

 பொருளுரை:  ஐயா! என் தோழியின் அணிகலன் அணிந்த மார்பகம் தனிமையால் வருந்துமாறு, பாணர்கள் தங்கள் பறையை அடிக்கும் குறுந்தடிகளோ என ஐயம் கொள்ளும்படியான ஓசையுடன் கொன்றை மரத்தின் இனிய கனிகள் பாறையில் விழும்படி மரக் கிளைகள் அசைய, வெப்பம் மிகுந்த காற்று வீசும் மூங்கில்கள் நிறைந்த இடத்திற்குத் துன்பம் மிக்குள்ள பாலை நிலத்தைக் கடந்து, நன்மை அமையாத வாழ்விற்குரிய நிலையில்லாத “பொருளை ஈட்டுவதில் பிணித்த நெஞ்சை உடைய யாம் பிரிவோம்” என்று நீர் கூறுகின்றீர். நாள்தோறும், எய்யப்படும் அம்பின் நிழல்போல் இன்பமும் இளமையும் மறையும் இந்த உலகத்தின் பண்பை நீவீர் காணவில்லை என்றால் அது அரிதாகும். அதை நன்றாக அறிந்து இவளைப் பேணும் தன்மையுடையவராக ஆவீராக!

குறிப்பு:  ஒப்புமை:  நற்றிணை 16 – பொருளே வாடாப் பூவின் பொய்கை நாப்பண் ஓடு மீன் வழியின் கெடுவ.  அறை அறையா (7) – ஒளவை துரைசாமி உரை – பாறையின் மேல் அறைந்து, H. வேங்கடராமன் உரை – பாறையில் விழும்படி.  அறையா – அறைந்து என்பது பொருள்.  செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம்.  எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது.  நனி – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3).  பாணர் அயிர்ப்புக் கொண்டன்ன (5,6) – கு. வெ. பாலசுப்பிரமணியன் உரை – பாணர் தம் பறையை முழக்கும் குறுந்தடிகளோ என ஐயுறுமாறு.

சொற்பொருள்:  வைகல்தோறும் இன்பமும் இளமையும் எய் கணை நிழலின் கழியும் இவ் உலகத்துக் காணீர் என்றலோ அரிதே – நாள்தோறும் இன்பமும் இளமையும் எய்யப்படும் அம்பின் நிழல்போல் மறையும் இந்த உலகத்தின் பண்பை நீவீர் காணவில்லை என்றால் அது அரிதாகும் (நிழலின் – இன் உருபு ஒப்புப் பொருளது, ஐந்தாம் வேற்றுமை உருபு), அரிதே – ஏகாரம் அசைநிலை); அது நனி பேணீர் – அதை நன்றாக பேணும் தன்மையுடையவராக ஆவீராக, ஐய – ஐயா (அண்மை விளி), என் தோழி பூண் அணி ஆகம் புலம்ப – என் தோழியின் அணிகலன் அணிந்த மார்பகம் வருந்த, பாணர் அயிர்ப்புக் கொண்டன்ன கொன்றை அம் தீம் கனி பறை அறை கடிப்பின் அறை அறையாத் துயல்வர வெவ்வளி வழங்கும் வேய் பயில் அழுவத்து எவ்வம் மிகூஉம் அருஞ்சுரம் இறந்து – பாணர்கள் தங்கள் பறையை அடிக்கும் குறுந்தடிகளோ என ஐயம் கொள்ளும்படியான ஓசையுடன் கொன்றை மரத்தின் இனிய கனிகள் பாறையில் விழும்படி கிளைகள் அசைய வெப்பம் மிகுந்த காற்று வீசும் மூங்கில்கள் நிறைந்த இடத்திற்குத் துன்பம் மிக்குள்ள பாலை நிலத்தைக் கடந்து (அயிர்ப்பு – ஐயம், கடிப்பின் – குறுந்தடிபோல், இன் ஒப்புப்பொருளில் வந்தது, ஐந்தாம் வேற்றுமை உருபு), நன்வாய் அல்லா வாழ்க்கை மன்னாப் பொருட்பிணிப் ‘பிரிதும் யாம்’ எனவே – நன்மை அமையாத வாழ்விற்குரிய நிலையில்லாத பொருளை ஈட்டுவதில் பிணித்த நெஞ்சை உடைய யாம் பிரிவோம் என்று (எனவே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 47, நல்வெள்ளியார், குறிஞ்சித் திணை – தோழி தலைவியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
பெருங்களிறு உழுவை அட்டென, இரும் பிடி
உயங்கு பிணி வருத்தமொடு இயங்கல் செல்லாது,
நெய்தல் பாசடை புரையும் அம் செவிப்
பைதல் அம் குழவி தழீஇ, ஒய்யென
அரும் புண் உறுநரின் வருந்தி வைகும்  5
கானக நாடற்கு, ‘இது என’ யான் அது
கூறின் எவனோ தோழி, வேறு உணர்ந்து
அணங்கு அறி கழங்கின் கோட்டம் காட்டி,
வெறி என உணர்ந்த உள்ளமொடு மறி அறுத்து
அன்னை அயரும் முருகு நின்  10
பொன் நேர் பசலைக்கு உதவாமாறே?

பாடல் பின்னணி:  பிரிந்து நீட்டித்துச் சென்ற தலைவன் சிறைப்புறத்தானாக இருப்பதை அறிந்த தோழி, தலைவிக்குக் கூறுவாளாய் அவனிடம் கூறியது.

பொருளுரைதோழி! தலைவனைப் பிரிந்த உன் நிலையை வேறு என்று எண்ணி முருகனால் ஏற்பட்டது எனக் கழங்கின் மாறுபாட்டைக் காட்டி, வெறியாட்டம் நிகழ்த்தினால் உன் நிலை மாறும் என உணர்ந்த உள்ளத்துடன், ஆட்டுக்குட்டியை அறுத்து அன்னை நிகழ்த்தும் வெறியாட்டத்தினால் முருகவேள் உன் பொன்னை ஒத்த பசலையைப் போக்குவதற்கு உதவாமையினால், பெரிய களிற்று யானையைப் புலி கொன்றதால் அதன் கரிய பெண் யானை வாடிய துன்பத்துடனும் வருத்தத்துடனும் அகன்று செல்ல இயலாமல், நெய்தலின் பசுமையான இலைகளை ஒத்த அழகிய காதுகளையுடைய துன்புறும் தன் கன்றினை அணைத்துக்கொண்டு விரைவாக, தீர்ப்பதற்கு அரிய புண் அடைந்தவர்களைப் போல வருந்தி இருக்கும் காட்டையுடைய நம் தலைவனிடம் இங்கு நிகழ்வது என்ன எனக் கூறினால் என்னவாம்?

குறிப்பு:  உள்ளுறை – கு. வெ. பாலசுப்பிரமணியன் உரை – களிற்றைப் புலி கொன்றதனால் பிடியானை கன்றோடு வருந்தி நிற்கும் என்றது, நம் பெருந்தகைமையை அலர் கெடுத்தற்கு வருந்தி நான் உன்னுடன் சேர்ந்து வருந்துவேன் என்பதாம், ஒளவை துரைசாமி உரை – காதற் பெருங்களிற்றை உழுவை கொன்றதனால் பிடியானை வருத்தமொடு இயங்குதல் இன்றித் தன் கன்றைத் தழீஇக் கொண்டு வைகும் என்றது, தலைமகன் தொடர்பால் மேனி நலம் பசலையால் வேறுபட்டு அறியவே தலைவி அவனது காதல் அன்பு ஒன்றையே தழீஇக் கொண்டு வேறு செயலற்றி இருக்கின்றாள் என்றவாறு.  கோட்டம் (8) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – மாறுபாடு, பொ. வே. சோமசுந்தரனார் உரை – மாறுபாடு, ஒளவை துரைசாமி உரை – வெறியாடுதற்கு அமைந்த களம்.  குழவி (4) – யானையும் குதிரையும் கழுதையும் கடமையும் மானொடு ஐந்தும் கன்று எனற்கு உரிய.  எருமையும் மரையும் வரையார் ஆண்டே.  கவரியும் கராமும் நிகர் அவற்றுள்ளே.  ஒட்டகம் அவற்றொடு ஒரு வழி நிலையும்.  குஞ்சரம் பெறுமே குழவிப் பெயர்க்கொடை.  ஆவும் எருமையும் அது சொலப்படுமே (தொல்காப்பியம், மரபியல் 15–20).  பிடி – பிடி என் பெண் பெயர் யானை மேற்றே (தொல்காப்பியம், மரபியல் 52).  மறி – மாற்ற அருஞ் சிறப்பின் மரபு இயல் கிளப்பின் பார்ப்பும் பறழும் குட்டியும் குருளையும் கன்றும் பிள்ளையும் மகவும் மறியும் என்று ஒன்பதும் குழவியொடு இளமைப் பெயரே (தொல்காப்பியம், மரபியல் 1). யாடும் குதிரையும் நவ்வியும் உழையும் ஓடும் புல்வாய் உளப்பட மறியே (தொல்காப்பியம், மரபியல் 12).

சொற்பொருள்:  பெருங்களிறு உழுவை அட்டென இரும் பிடி உயங்கு பிணி வருத்தமொடு இயங்கல் செல்லாது – பெரிய களிற்று யானையைப் புலி கொன்றதால் கரிய பெண் யானை வாடிய துன்பத்துடனும் வருத்தத்துடனும் அகன்று செல்ல இயலாமல், நெய்தல் பாசடை புரையும் அம் செவிப் பைதல் அம் குழவி தழீஇ –நெய்தலின் பசுமையான இலைகளை ஒத்த அழகிய காதுகளையுடைய துன்புறும் தன் கன்றினை அணைத்துக்கொண்டு (புரை – உவம உருபு, இரண்டாவது அம் சரியை, தழீஇ செய்யுளிசை அளபெடை), ஒய்யென – விரைவாக (விரைவுக்குறிப்பு), அரும் புண் உறுநரின் வருந்தி வைகும் – தீர்ப்பதற்கு அரிய புண் அடைந்தவர்களைப் போல வருந்தி இருக்கும் (உறுநரின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), கானக நாடற்கு இது என யான் அது கூறின் எவனோ – கானக நாடனான நம் தலைவனிடம் இங்கு நிகழ்வது என்ன எனக் கூறினால் என்னவாம் (எவனோ – ஓகாரம் ஐயப்பொருட்டு), தோழி – தோழி, வேறு உணர்ந்து – தலைவனைப் பிரிந்த உன் நிலையை வேறு என்று எண்ணி, அணங்கு அறி கழங்கின் கோட்டம் காட்டி – முருகனால் ஏற்பட்டது எனக் கழங்கின் மாறுபாட்டைக் காட்டி (கழங்கு – molucca seeds, caesalpinia crista seeds), வெறி என உணர்ந்த உள்ளமொடு – வெறியாட்டம் நிகழ்த்தினால் உன் நிலை மாறும் என உணர்ந்த உள்ளத்துடன், மறி அறுத்து அன்னை அயரும் முருகு நின் பொன் நேர் பசலைக்கு உதவாமாறே – ஆட்டுக்குட்டியை அறுத்து அன்னை நிகழ்த்தும் வெறியாட்டத்தினால் முருகவேள் உன் பொன்னை ஒத்த பசலையைப் போக்குவதற்கு உதவாமையினால் (உதவாமாறே – ஏகாரம் அசைநிலை, மாறு ஏதுப்பொருள் (காரணப் பொருள்) தரும் இடைச்சொல்)

நற்றிணை 48, பாலை பாடிய பெருங்கடுங்கோ, பாலைத் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
அன்றை அனைய ஆகி இன்றும் எம்
கண் உள போலச் சுழலும் மாதோ,
புல் இதழ்க் கோங்கின் மெல் இதழ்க் குடைப் பூ
வைகுறு மீனின் நினையத் தோன்றி
புறவு அணி கொண்ட பூ நாறு கடத்திடை,  5
கிடின் என இடிக்கும் கோல் தொடி மறவர்
வடி நவில் அம்பின் வினையர் அஞ்சாது
அமர் இடை உறுதர நீக்கி, நீர்
எமர் இடை உறுதர ஒளித்த காடே.

பாடல் பின்னணி:  கற்பு வாழ்வில் பிரிவு உணர்த்திய தலைவனிடம், தோழி களவில் நடந்ததை நினைவூட்டியது.

பொருளுரைஅன்று நடந்தது இன்றும் எம் கண்களில் சுழல்கின்றது.  சிறிய மெல்லிய இதழ்களையுடைய குடையைப் போன்ற கோங்க மலர்கள், அதிகாலையின் விண்மீன்கள் என்று நினைக்குமாறு தோன்றிக் காட்டை அலங்கரித்தன.  மலர்களின் நறுமணத்தை உடைய காட்டில், திரண்ட வளையல்களைக் கையில் அணிந்த மறவர்கள் கூர்மையான அம்புடன் ஆரவாரத்துடன் வந்த பொழுது, நீ அஞ்சாது, அவர்களுடன் போரிட்டு, அவர்களை விரட்டினாய்.  ஆனால் எங்கள் உறவினர்கள் காட்டிற்கு வந்தவுடன், நீ ஒளிந்துக் கொண்டாய்.

குறிப்பு:  ஒளவை துரைசாமி உரை (நற்றிணை 318) – உடன்போக்கின்கண் தோழியும் உடன்சேறல் இல்லையாயினும், தலைவிக்கும் தோழிக்கும் உள்ள ஒருமையுளப்பாடு கருதி ‘நாம்’ என்றார்.  இவ்வாறு வருவனற்றை, ‘ஒன்றித் தோன்றும் தோழி மேன’ (தொல்காப்பியம், பொருளதிகாரம் 39) என்பதனால் அமைப்பர் நச்சினார்க்கினியர்.  ஒளவை துரைசாமி உரை – மறவர் காண்பவர்க்கு அச்சமுண்டாகுமாறு முழங்கிக் கொண்டு போந்தமை குறிப்பாள், கிடின் என இடிக்கும் கோல் தொடி மறவர் என்றாள்.  கோல் தொடி (6) – ஒளவை துரைசாமி உரை – திரண்ட வளையல்கள், பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – வீர வளையல்கள்.  மறவர் (6) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – ஆறலை கள்வராகிய மறவர்கள், ஒளவை துரைசாமி உரை – தமர் (தலைவியின் உறவினர்) விடுத்த மறவர்கள்.  இறைச்சி – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – கோங்கம் பூ மலர்ந்து காடு அழகு கொண்டவென்றது, நீயிர் தலைவிபால் முகமலர்ந்து உறைதலால் இல்லறம் அழகாக நடைபெறுகின்றது என்பதாம்.  கிடின் – ஒலிக்குறிப்பு.  ஒப்புமை:  நற்றிணை 362 – அமர் வரின் அஞ்சேன் பெயர்க்குவென் நுமர் வரின் மறைகுவென் மாஅயோளே.

சொற்பொருள்:  அன்றை அனைய ஆகி இன்றும் எம் கண் உள போலச் சுழலும் – அன்று நடந்தது இன்றும் எம் கண்களில் சுழல்கின்றது,  மாதோ – மாது, ஓ அசைநிலைகள், புல் இதழ்க் கோங்கின் மெல் இதழ்க் குடைப் பூ – சிறிய மெல்லிய இதழ்களையுடைய குடையைப் போன்ற கோங்க மலர்கள், வைகுறு மீனின் நினையத் தோன்றி – அதிகாலை விண்மீன் என நினையுமாறு தோன்றின, புறவு அணி கொண்ட – காட்டை அழகு செய்த, பூ நாறு கடத்திடை – பூவின் நாற்றதையுடைய காட்டில், கிடின் என இடிக்கும் – பலத்த ஒலியுடன் ஒலிக்கும், கோல் தொடி மறவர் – திரண்ட வளையல்களைக் கையில் அணிந்த மறவர்கள், வடி நவில் அம்பின் வினையர் அஞ்சாது – கூர்மையான அம்பை எய்துவோரின் அம்பிற்கு அஞ்சாது, அமர் இடை உறுதர நீக்கி – போரிட வந்த அவர்களுடன் போரிட்டு அவர்களை விரட்டி (உறுதர – வந்தபொழுது), நீர் – நீ, எமர் இடை உறுதர ஒளித்த காடே – எங்கள் உறவினர் அங்கு வந்தவுடன் காட்டில் ஒளிந்துக் கொண்டாய் (காடே – ஏகாரம் அசைநிலை, உறுதர – எதிரே வர)

நற்றிணை 49, நெய்தல் தத்தனார், நெய்தல் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
படுதிரை கொழீஇய பால் நிற எக்கர்த்
தொடியோர் மடிந்தெனத் துறை புலம்பின்றே;
முடி வலை முகந்த முடங்கு இறா பரவைப்
படுபுள் ஓப்பலின் பகல் மாய்ந்தன்றே;
கோட்டு மீன் எறிந்த உவகையர் வேட்டம் மடிந்து  5
எமரும் அல்கினர் ஏமார்ந்தனம் எனச்
சென்று நாம் அறியின் எவனோ தோழி!
மன்றப் புன்னை மாச் சினை நறு வீ
முன்றில் தாழையொடு கமழும்
தெண் கடல் சேர்ப்பன் வாழ் சிறு நல் ஊர்க்கே?  10

பாடல் பின்னணி:  தலைவி தலைவனைக் கூடுதற்கு இரவுக்குறி விரும்பும்படி தோழி கூறியது.  தலைவன் சிறைப்புறமாகத் தோழி ஆற்றாமை வியந்ததுமாம்.

பொருளுரை:  தோழி!  ஒலிக்கின்ற அலைகள் குவித்த பால் நிறத்தையுடை வெள்ளை மணல் மேட்டில் விளையாடும் வளையல்களை அணிந்த இளமகளிர், மனைகளில் உறங்கிவிட்டதால் கடற்கரை தனிமையுற்றது. முடிச்சுக்கள் உடைய வலைகளினால் பிடித்துக் கொண்டுவரப்பட்ட வளைந்த இறால்மீன் உணங்கலை (காய வைத்ததை) கவர வரும் பறவைகளை விரட்டுவதால் பகற்பொழுது கழிந்தது. கொம்பினையுடைய சுறா மீன்களைப் பிடித்துக் கொணர்ந்த எம்முடைய மகிழ்ச்சியுடைய ஐயன்மாரும் (அண்ணன்மாரும்) மீன் வேட்டைக்குச் செல்வதைக் கைவிட்டு மனையில் தங்கினர்.

மன்றத்தில் உள்ள புன்னை மரங்களின் பெரிய கிளைகளிலுள்ள நறுமண மலர்கள் இல்லத்தின் முற்றத்திலுள்ள தாழையுடன் நறுமணம் வீசும் தெளிந்த கடலின் துறைவன் வாழும் சிறிய நல்ல ஊர்க்குச் சென்று, நாம் கலக்கம் உடையவர்களாக உள்ளோம் எனக் கூறினால் என்ன?

குறிப்பு:  ஒளவை துரைசாமி உரை – ‘வரைவிடை வைத்த காலத்து வருந்தினும்’ (தொல்காப்பியம், களவியல் 22) என்ற நூற்பாவின் ‘வரையா நாளிடை வந்தோன் முட்டினும்’ என்னும் பகுதிக்கு இப்பாட்டினை எடுத்தோதி. ‘இதன்கண் என்றான் என ஒருசொல் வருவிக்க’ என்றார் இளம்பூரணர்.  உள்ளுறை – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – புன்னை மலர் தாழை மலரோடு சேர மணங்கமழா நிற்கும் என்றதனால், நீ தலைவனோடு முன்றிற் சோலையுட் கூடி இன்பந்துய்ப்பாயாக என்பதாம்.  பரவை (3) – ச. வே. சுப்பிரமணியன் உரை – பரவை (கடல்) என உள்ளது.  பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை மற்றும் ஒளவை துரைசாமி உரையில் இச்சொல் பாவை என உள்ளது.  ஒளவை துரைசாமி உரை இச்சொல்லை முன்னிலைப் பெயரென்றும் ‘பாவை போலும் நீ ஓட்டும் செயலில் ஈடுபடுவதால்’ எனவும் பொருள் தந்துள்ளார்.  பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் ‘இறாமீன் பாவை போன்றது’ எனப் பொருள் தந்துள்ளார்.   மன்றப் புன்னை (8) – ஒளவை துரைசாமி உரை – ஊர் மன்றத்தின்கண் நிற்கும் புன்னை, பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – மன்றம் போல் அமைந்த புன்னை.  தொடியோர் மடிந்தென (2) – ஒளவை துரைசாமி உரை – வளை அணிந்த இளமகளிர் மடிந்து அடங்கியமையின், பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – வளையுடை கையராக பரத்தையர் யாவரும் தத்தம் மனையகத்து துயில்கின்றமையால்.  பொ. வே. சோமசுந்தரனார் தன் அகநானூறு பாடல் உரையில் (109–10) மடிந்து என்பதை ‘இல்லையாகிய’ என்று விளக்குகின்றார்.  பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் தன் நற்றிணை பாடல் (257–8) உரையில் இவ்வாறே விளக்குகின்றார்.  அறியின் (7) – ஒளவை துரைசாமி உரை – அவனிடம் அறிவித்தால், பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – அவன் கருத்தை ஆராய்ந்து அறிந்தால்.  புலம்பு – புலம்பே தனிமை (தொல்காப்பியம், உரியியல் 35).

சொற்பொருள்:  படுதிரை கொழீஇய பால் நிற எக்கர்– ஒலிக்கின்ற அலைகள் குவித்த பால் நிறத்தையுடை வெள்ளை மணல் குவியல் (கொழீஇய – செய்யுளிசை அளபெடை), தொடியோர் மடிந்தென துறை புலம்பின்றே – வளையல்களை அணிந்த இளமகளிர் மனைகளில் உறங்கியதால் கடற்கரை தனிமையுற்றது, முடி வலை முகந்த முடங்கு இறாப் பரவைப் படுபுள் ஓப்பலின் – முடிச்சுக்கள் உடைய வலைகளினால் பிடித்துக் கொண்டுவரப்பட்ட வளைந்த இறால்மீன் உணங்கலை (காய வைத்ததை) கவர வரும் பறவைகளை விரட்டுவதால், பகல் மாய்ந்தன்றே – பகற்பொழுது கழிந்தது, கோட்டு மீன் எறிந்த உவகையர் வேட்டம் மடிந்து எமரும் அல்கினர் – கொம்பினையுடைய சுறா மீன்களைப் பிடித்துக் கொணர்ந்த எம்முடைய மகிழ்ச்சியுடைய ஐயன்மாரும் (அண்ணன்மாரும்) மீன் வேட்டைக்குச் செல்வதைக் கைவிட்டு மனையில் தங்கினர், ஏமார்ந்தனம் எனச் சென்று நாம் அறியின் எவனோ தோழி – நாம் கலக்கம் உடையவர்களாக உள்ளோம் எனச் சென்று கூறினால் என்ன தோழி, மன்றப் புன்னை – மன்றத்தில் உள்ள புன்னை மரங்களின் (புன்னை – Mast wood Tree, Calophyllum inophyllum), மா சினை நறு வீ முன்றில் தாழையொடு கமழும் – பெரிய கிளைகளிலுள்ள நறுமண மலர்கள் இல்லத்தின் முற்றத்திலுள்ள தாழையுடன் நறுமணம் வீசும் (தாழை – Pandanus odoratissimus), தெண் கடல் சேர்ப்பன் வாழ் சிறு நல் ஊர்க்கே – தெளிந்த கடலின் துறைவன் வாழும் சிறிய நல்ல ஊர்க்கு (ஊர்க்கே –ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 50, மருதம் பாடிய இளங்கடுங்கோ, மருதத் திணை – தோழி பாணற்கு வாயில் மறுத்துத் தலைவியிடம் சொன்னது, தலைவன் கேட்கும்படி
அறியாமையின், அன்னை, அஞ்சிக்,
குழையன் கோதையன் குறும் பைந்தொடியன்
விழவு அயர் துணங்கை தழூஉகம் செல்ல,
நெடு நிமிர் தெருவில் கை புகு கொடு மிடை
நொதுமலாளன் கதுமெனத் தாக்கலின்,  5
‘கேட்போர் உளர் கொல், இல்லை கொல்? போற்று’ என
‘யாணது பசலை’ என்றனன்; அதன் எதிர்,
‘நாண் இலை எலுவ’ என்று வந்திசினே,
செறுநரும் விழையும் செம்மலோன் என
நறுநுதல் அரிவை! போற்றேன்,  10
சிறுமை பெருமையின் காணாது துணிந்தே.

பாடல் பின்னணி:  தோழி பாணற்கு வாயில் மறுத்தது.

பொருளுரைஅன்னையே!  நறுமண நெற்றியை உடைய தலைவியே!  என் அறியாமையினால் நின்னை அஞ்சி, காதில் குண்டலத்தை அணிந்தவனும் கழுத்தில் மாலையை அணிந்தவனும் பசிய வளையல்களைக் கையில் அணிந்தவனுமான நம் தலைவன் விழாக்களத்தில் துணங்கை ஆடுதலை யாம் கையும் களவுமாய்ப் பிடிப்பதற்குச் செல்ல, நீண்ட உயர்ந்த தெரு முனையில் வேறொரு வழியில் புகுந்து அயலானாகிய அவன் விரைந்து வந்து எதிர்பட்டான்.  “இவ்வாறு செய்யும் உன்னைக் கேட்பார் உள்ளார்களா? இல்லையா?   அறிந்துகொள்” என யான் கூற, அவன் “பசலை அழகாக உள்ளது” எனக் கூறினான். அதற்கு எதிர் உரையாக, ஆராயாது துணிந்து, “நீ நாணம் உடையவன் இல்லை” எனக் கூறிவிட்டு வந்து விட்டேன். பகைவரும் விரும்பும் செம்மல் என நான் அவனைப் போற்றவில்லை, என் சிறுமை பெரியது ஆகலின்.

குறிப்பு:  கூற்று விளக்கம் – கு. வெ. பாலசுப்பிரமணியன் உரை – தலைமகன் பரத்தையிற் பிரிந்தான்.  பின்பு சிறைப்புறமாக வந்து நின்று வாயில் வேண்டிய பாணனைத்  தலைவியிடத்து விடுத்தான்.  தோழி அத் தலைமகன் கேட்கத் தலைவியை நோக்கித் “தலைவன் பரத்தையரோடு துணங்கை ஆடும்போது கையும் களவுமாய்ப் பிடிக்கச் சென்றோம்.  அவனோ வேறொரு வழி புகுந்து தப்ப முயன்று எம்மை எதிர்ப்பட்டனன்.  அறியாதான்போல் என்னிடத்து பசலை அழகாக உள்ளதே என வியந்தனன்.  நான் அவனை நீ நாணுடையை அல்லை என்று கூறி வந்தேன்”: என்றாள்.  பொ. வே. சோமசுந்தரனார் உரை – அன்னாய், நம் ஊர்க்கண் நிகழ்ந்த விழாவில் மகளிர் துணங்கைக் கூத்தாடினார்.  அதற்குத் தலைக்கை தருவான் சென்ற தலைமகன் குழையும் கோதையும் குறுந்தொடியும் கொண்டுச் சென்றான்.  கூத்து நிகழுங்கால் இப்பாணன் அதன் கொடுமிடையில் அகப்பட்ட என்னைக் கதுமெனக் கைப்பற்றி ஈர்த்தனன்.  அறியாமையின் (1) – பொ. வே. சோமசுந்தரனார் உரை– தோழியின் அறியாமையாலே, ஒளவை துரைசாமி உரை – பாணனின் அறியாமையால்.  குழையன் கோதையன் (2) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – குழை பெய்து மாலை சூடி, வேங்கடராமன் உரை – குண்டலத்தை அணிந்தனவாகவும் மாலையை அணிந்தவனாகவும்.  சின் – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம், சொல்லதிகாரம், இடையியல் 26, சின் என்பது இசின் என்பதன் முதற்குறை – ச. பாலசுந்தரம் உரை), அவற்றுள், இகுமும் சின்னும் ஏனை இடத்தொடும் தகு நிலை உடைய என்மனார் புலவர் (தொல்காப்பியம், இடையியல் 27).  யாணு – யாணுக் கவின் ஆம் (தொல்காப்பியம், உரியியல் 83).  கொடுமிடை (4) – ஒளவை துரைசாமி உரை – வளைந்த இடம்.  துணங்கை காணும் மகளிர்க்கென வளைத்த இடம் கொடுமிடை.  ஏறுகோள் காணும் மகளிர்க்கென அமைக்கும் இடத்தையும் மிடை என்பர்.  மக்கள் மிடைதலின் மிடையாயிற்று.

சொற்பொருள்:  அறியாமையின் – அறியாமையால், அன்னை – அன்னையே, அஞ்சி – நின்னை அஞ்சி, குழையன் கோதையன் குறும் பைந்தொடியன் விழவு அயர் துணங்கை தழூஉகம் செல்ல – காதில் குண்டலத்தை அணிந்தவனும் கழுத்தில் மாலையை அணிந்தவனும் பசிய வளையல்களைக் கையில் அணிந்தவனுமான நம் தலைவன் விழாக்களத்தில் துணங்கை ஆடுதலை யாம் கையும் களவுமாய்ப் பிடிப்பதற்குச் செல்ல (தழூஉகம் – அளபெடை), நெடு நிமிர் தெருவில் கை புகு கொடு மிடை நொதுமலாளன் கதுமெனத் தாக்கலின் – நீண்ட உயர்ந்த தெரு முனையில் வேறொரு வழியில் புகுந்து அயலானாகிய அவன் விரைந்து வந்து எதிர்பட்டான் (கதுமென – விரைவுக்குறிப்பு), கேட்போர் உளர் கொல் – இவ்வாறு செய்யும் உன்னைக் கேட்பார் உள்ளார்களா, இல்லை கொல் – இல்லையா, போற்று என – அறிந்துகொள் என யான் கூற, யாணது  பசலை என்றனன் – பசலை அழகாக உள்ளது எனக் கூறினான் (யாணது – அழகானது), அதன் எதிர் – அதற்கு எதிர் உரையாக, நாண் இலை எலுவ என்று வந்திசினே – நீ நாணம் உடையவன் இல்லை எனக் கூறிவிட்டு வந்து விட்டேன் (இலை – இல்லை என்பதன் விகாரம், சின் – தன்மை அசைச்சொல், ஏகாரம் அசைநிலை), செறுநரும் விழையும் செம்மலோன் என – பகைவரும் விரும்பும் செம்மல் என, நறுநுதல் அரிவை – நறுமண நெற்றியை உடையவளே, போற்றேன் – நான் அவனைப் போற்றவில்லை, சிறுமை பெருமையின் – என் சிறுமை பெரியது ஆகலின், காணாது துணிந்தே – ஆராயாது துணிந்தே (துணிந்தே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 51, பேராலவாயர், குறிஞ்சித் திணை – தலைவி தோழியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
யாங்குச் செய்வாம் கொல் தோழி, ஓங்கு கழைக்
காம்புடை விடர் அகம் சிலம்ப பாம்பு உடன்று
ஓங்கு வரை மிளிர ஆட்டி, வீங்கு செலல்
கடுங்குரல் ஏறொடு கனை துளி தலைஇப்
பெயல் ஆனாதே வானம் பெயலொடு  5
மின்னு நிமிர்ந்தன்ன வேலன் வந்தெனப்
பின்னு விடு முச்சி அளிப்பு ஆனாதே,
பெருந்தண் குளவி குழைத்த பா அடி
இருஞ்சேறு ஆடிய நுதல கொல் களிறு
பேதை ஆசினி ஒசித்த  10
வீ தா வேங்கைய மலை கிழவோற்கே?

பாடல் பின்னணி:  தாய் வெறியாட்டு நிகழ்த்தக் கருதினாள்.  சிறைப்புறமாக இருக்கும் தலைவனுக்கு உணர்த்தக் கருதிய தலைவி, தோழியிடம் வருந்திக் கூறியது.

பொருளுரைதோழி!  உயர்ந்த தண்டினையுடைய மூங்கில்களைக் கொண்ட மழைப் பிளவுகளில் எல்லாம் ஒலித்துப் பாம்புகள் வருந்தி உயர்ந்த மலையில் புரளுமாறு துன்புறுத்தி விரைந்த செலவையுடைய கடிய முழக்கமுடைய இடியுடன் முகில்கள் மிக்க துளிகளைப் பெய்யத் தொடங்கி, அப்பெய்தலும் நிற்கவில்லை.  மழையுடன் கூடிய மின்னலை நேராக நிறுத்தினாற்போன்ற ஒளிரும் வேலைக் கையில் கொண்டு வெறியோடும் வேலனும் வந்தானாக, பின்னிய கொண்டையில் மலர்களைக் குலையாது காத்தல் அரிதாயிற்று.  பெரிய குளிர்ந்த காட்டு மல்லிகை மரத்தைச் சிதைத்த பெரிய காலடிகளையும் கரிய சேற்றினை அப்பிய நெற்றியையுமுடைய, கொல்லும் தன்மையுடைய களிற்று யானை, அறியாமையால் ஆசினிப்பலா மரத்தை முறித்துப்போட்ட பின்பு மலர்கள் உதிர்ந்த வேங்கை மரத்தின் அடியில் தங்கியிருக்கும் அம்மலையின் தலைவனுக்கு யாம் என்ன செய்ய முடியும்?

குறிப்பு:  பின்னு விடு முச்சி (7) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – பின்னி விடுத்தற்குரிய கொண்டையில், ஒளவை துரைசாமி உரை – பின்னப்படுகின்ற கூந்தலில்.  வீ தா வேங்கைய (11) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – மலர் உதிர்ந்து பரவிய வேங்கை மரத்தின் கீழே தங்காநிற்கும், ஒளவை துரைசாமி உரை – பூக்கள் பரந்து தோன்றும் வேங்கை மரங்களுடைய.  உள்ளுறை (1) – பூத்த வேங்கையைக்கண்டு நெருங்காதொழியும் என்றது, தலைவியின் நலன் நுகர்ந்து தன் ஒழுக்கத்தால் அவள் மேனியில் வேறுபாடு பிறப்பித்து வெறியும் அலரும் விளைவித்து வருத்துதல் அல்லது வரைவு கருதாது ஒழுகுகின்றான் என்று தலைவி உள்ளுறுத்து உரைத்தவாறு.  உள்ளுறை (2) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – குளவியைக் குழைத்த களிறு தலைவியை நலனுண்டு வாடவிட்ட தலைவனாகவும், அது சேற்றை நெற்றியிலணிந்து ஊரார் தூற்றும் பழிச்சொல்லைத் தலைவன் மேற்கொண்டதாகவும், அறியாமையால் ஆசினியை ஒசித்தது அவன் அறியாமையால் இதுகாறும் வரைந்தெய்து நெறியைக் கைவிட்டதாகவும், களிறு வேங்கையின் கீழ் தங்கியிருப்பது தலைவன் ஒருசிறைப் புறமாகவந்து தங்கியிருப்பதாகவும் கொள்க.  இது வினையுவமப் போலி.  மின்னல் நிமிர்ந்தாற்போல்:  மின்னு நிமிர்ந்தன்ன – அகநானூறு 124, 158, நற்றிணை 51, புறநானூறு 57, மின்னு நிமிர்ந்தாங்கு – பெரும்பாணாற்றுப்படை 484,  மின்னு நிமிர்ந்தனைய – மதுரைக்காஞ்சி 679.  இடி பாம்புகளை வருத்தவும் கொல்லவும் செய்யும் என்னும் செய்தி உள்ள பாடல்கள் – அகநானூறு 92, 119, 182, 202, 274, 323, 328, கலித்தொகை 45, 113, குறுந்தொகை 158, 190, 268, 391, நற்றிணை 37, 51, 114, 129, 238, 255, 264, 347, 383, புறநானூறு 17, 37, 58, 126, 211, 366, 369.  வேலன் – நச்சினார்க்கினியர் உரை, திருமுருகாற்றுப்படை 222 – பிள்ளையார் வேலைத் (பிள்ளையான முருகனின் வேலை) தனக்கு அடையாளமாகக் கொண்டு திரிதலின் வேலன் என்றார்.  யாங்குச் செய்வாம் (1) – ஒளவை துரைசாமி உரை – யாதனைச் செய்வோம், பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – யாம் என்ன செய்ய மாட்டுவேம், கு. வெ. பாலசுப்பிரமணியன் உரை – யாம் என்ன செய்யக்கூடும், ச. வே. சுப்பிரமணியன் உரை – நாம் என்ன செய்ய முடியும்.

சொற்பொருள்:  யாங்குச் செய்வாம் கொல் – யாம் என்ன செய்ய முடியும் (கொல் – அசைநிலை), தோழி – தோழி, ஓங்கு கழைக் காம்புடை விடர் அகம் சிலம்பப் பாம்பு உடன்று ஓங்கு வரை மிளிர ஆட்டி வீங்கு செலல் – உயர்ந்த தண்டினையுடைய மூங்கில்கள் கொண்ட மழைப் பிளவுகளில் எல்லாம் ஒலித்துப் பாம்புகள் வருந்தி உயர்ந்த மலையில் புரளுமாறு துன்புறுத்தி விரைந்த செலவையுடைய (செலல் – இடைக்குறை), கடுங்குரல் ஏறொடு கனை துளிப் பெயல் ஆனாதே தலைஇ – கடிய முழக்கமுடைய இடியுடன் மிக்க துளிகளைப் பெய்யத் தொடங்கி அப்பெய்தலும் நிற்கவில்லை (ஆனாதே – ஏகாரம் அசைநிலை, தலைஇ – அளபெடை), வானம் – முகில்கள் (வானம் – ஆகுபெயர் முகிலுக்கு), பெயலொடு – மழையுடன், மின்னு நிமிர்ந்தன்ன – மின்னலால் செய்தாற்போன்று, மின்னலை நேராக நிறுத்தினாற்போன்று, வேலன் வந்தென – வெறியாடும் வேலனும் வந்தானாக, பின்னு விடு முச்சி அளிப்பு ஆனாதே – பின்னிய கொண்டையில் மலர்களைக் குலையாது காத்தல் அரிதாயிற்று, பின்னிய கொண்டையில் மலர்கள் அணியப்படுவது நீங்கப்படவில்லை, பெருந்தண் குளவி – பெரிய குளிர்ந்த காட்டு மல்லிகை மரம் (cork tree, Millingtonia hortensis), குழைத்த பா அடி இருஞ்சேறு ஆடிய நுதல கொல் களிறு – சிதைத்த பெரிய காலடிகளையுடைய கரிய சேற்றினை அப்பிய நெற்றியையுடைய கொல்லும் தன்மையுடைய களிற்று யானை, பேதை ஆசினி ஒசித்த வீ தா வேங்கைய – அறியாமையால் ஆசினிப்பலா மரத்தை முறித்துப்போட்ட பின்பு மலர்கள் உதிர்ந்த வேங்கை மரத்தின் அடியில் தங்கியிருக்கும் (வேங்கை மரம் – kino tree, Pterocarpus marsupium), மலை கிழவோற்கே – அம்மலையின் தலைவனுக்கு (ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 52, பாலத்தனார், பாலைத் திணை – தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது
மாக் கொடி அதிரல் பூவொடு பாதிரித்
தூத் தகட்டு எதிர்மலர் வேய்ந்த கூந்தல்
மணம் கமழ் நாற்றம் மரீஇ, யாம் இவள்
சுணங்கு அணி ஆகம் அடைய முயங்கி,
வீங்கு உவர்க் கவவின் நீங்கல் செல்லேம்;  5
நீயே, ஆள் வினை சிறப்ப எண்ணி, நாளும்
பிரிந்து உறை வாழ்க்கை புரிந்து அமையலையே;
அன்பு இலை, வாழி என் நெஞ்சே! வெம்போர்
மழவர் பெருமகன் மா வள் ஓரி
கை வளம் இயைவது ஆயினும்  10
ஐது, ஏகு அம்ம இயைந்து செய் பொருளே.

பாடல் பின்னணி:  பொருள்வயின் பிரியும் தலைவன், உள்ளம் கலங்கித் தன் நெஞ்சிடம் உரைத்தது.

பொருளுரை:  என் நெஞ்சே! கரிய கொடியையுடைய காட்டு மல்லிகை பூவுடன் தூய பொற்தகட்டைப் போல் இருக்கும் பாதிரி பூக்கள் மலர்களை எதிரே வைத்து வேய்ந்த மலர் மாலையைச் சூடிய கூந்தலின் மணம் கமழும் நறுமணத்தைப் பெற்று, யாம் இவளுடைய தேமல் பொருந்திய மார்பினை அடைந்து கொண்டு மிக்க சுவையுடைய அந்த அணைப்பிலிருந்து நீங்குதலைச் செய்யேம்.  நீ பொருள் ஈட்டும் முயற்சியை உயர்வு என்று எண்ணி நாள்தோறும் இவளைப் பிரிந்து வாழும் வாழ்க்கையை விரும்பி என்னுடன் பொருந்தாய் ஆகி உள்ளாய்.  என்னிடத்தில் உனக்கு அன்பு இல்லை. கொடிய போரைச் செய்யும் மழவர்களுக்குத் தலைவனான பெரும் வள்ளன்மை உடைய ஓரி என்பவனின் பெரும் செல்வம் கிடைத்தாலும், உன்னுடன் கூடிச் செய்யும் அப்பொருள் இவளுடைய இன்பதைக்காட்டிலும் மெல்லியது.  அதனால் நீ மட்டும் செல்வாயாக!

குறிப்பு:  ஒளவை துரைசாமி உரை – நீ என்பால் அன்புடை அல்லை என்பான், அன்பிலை என்றும், நெருங்கிக் கூறலின் வாழி என்றும் கூறினான்.  பாதிரித் தூத் தகட்டு எதிர்மலர் (1–2) – ஒளவை துரைசாமி உரை – பாதிரியினது தூய இதழுடைய புதுமலர், பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – தூய பொற்தகடு போன்ற பாதிரிமலர்.  ஐது (11) – மெல்லியது; அதாவது அத்துணை அருமையுடைத்தன்று என்பது.  வரலாறு:  ஓரி.  கடையெழு வள்ளல்கள் – ஆய், பாரி, காரி, ஓரி, அதிகன், பேகன், நள்ளி.

சொற்பொருள்:  மாக் கொடி அதிரல் பூவொடு பாதிரித் தூத் தகட்டு எதிர்மலர் வேய்ந்த கூந்தல் மணம் கமழ் – கரிய கொடியையுடைய காட்டு மல்லிகை பூவுடன் தூய பொற்தகட்டைப் போல் இருக்கும் பாதிரி பூக்கள் சேர எதிரே மலர்களை வைத்து வேய்ந்த மலர் மாலையைச் சூடிய கூந்தலின் நறுமணம் கமழும் (அதிரல் – Wild jasmine, Derris Scandens, Jewel vine, பாதிரி – trumpet flowers, Stereospermum chelonoides), நாற்றம் மரீஇ – நறுமணத்தைப் பெற்று (மரீஇ – செய்யுளிசை அளபெடை), யாம் இவள் சுணங்கு அணி ஆகம் அடைய முயங்கி வீங்கு உவர்க் கவவின் நீங்கல் செல்லேம் – யாம் இவளுடைய தேமல் பொருந்திய மார்பினை அடைந்துக் கொண்டு மிக்க சுவையுடைய அந்த அணைப்பிலிருந்து நீங்குதலைச் செய்யேம், நீயே ஆள் வினை சிறப்ப எண்ணி நாளும் பிரிந்து உறை வாழ்க்கை புரிந்து அமையலையே – நீ பொருள் ஈட்டும் முயற்சியை உயர்வு என்று எண்ணி நாள்தோறும் பிரிந்து வாழும் வாழ்க்கையை விரும்பி என்னுடன் பொருந்தாய் ஆகி உள்ளாய், அன்பு இலை – என்னிடத்தில் உனக்கு அன்பு இல்லை (இலை – இல்லை என்பதன் விகாரம்), வாழி – அசைநிலை, வாழ்வாயாக, என் நெஞ்சே – என் நெஞ்சே, வெம்போர் மழவர் பெருமகன் மா வள் ஓரி கை வளம் இயைவது ஆயினும் – கொடிய போரைச் செய்யும் மழவர்களுக்குத் தலைவனான பெரும் வள்ளன்மை உடைய ஓரி என்பவனின் பெரும் செல்வம் கிடைத்தாலும், ஐது – மெல்லியது, ஏகு – நீ செல்வாயாக, அம்ம – அசைநிலை, இயைந்து செய் பொருளே – உன்னுடன் கூடிச் செய்யும் பொருள் (ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 53, நல்வேட்டனார், குறிஞ்சித் திணை – தோழி தலைவியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
யான் அஃது அஞ்சினென் கரப்பவும் தான் அஃது
அறிந்தனள் கொல்லோ? அருளினள் கொல்லோ?
எவன் கொல் தோழி அன்னை கண்ணியது?
‘வான் உற நிவந்த பெருமலைக் கவாஅன்
ஆர்கலி வானம் தலைஇ நடுநாள் 5
கனை பெயல் பொழிந்தென கானக் கல் யாற்று
முளி இலை கழித்தன முகிழ் இணரொடு வரும்
விருந்தின் தீம் நீர் மருந்தும் ஆகும்,
தண்ணென உண்டு கண்ணின் நோக்கி
முனியாது ஆடப் பெறின் இவள் 10
பனியும் தீர்குவள், செல்க’ என்றோளே!

பாடல் பின்னணி:  வரைவு நீட்டிப்பத் தோழி சிறைப்புறமாகச் சொல்லியது.

பொருளுரைதோழி!  அன்னை அறிந்துவிடுவாள் என அஞ்சி, நான் நீ தலைவனின் பிரிவால் இளைத்தனை என்பதை மறைத்தபோதும், அதை அவள் அறிந்துக் கொண்டாளோ?  இல்லை அன்பு மிகுதியால் உரைத்தாளோ?  அன்னை எண்ணியது என்னவோ?  அவள் என்னை நோக்கி, “வானளவு உயர்ந்த மலைப்பக்கத்தில் இடியோசை உடைய முகில்கள் மழை பெய்யத்தொடங்கிய நள்ளிரவில் மிக்க மழையைப் பொழிந்ததால், கற்கள் உடைய காட்டு ஆற்றில் காய்ந்த இலைகளையும் அரும்புகளுடன் கூடிய மலர்க்கொத்துக்களையும் கொண்டு வரும் புதிய இனிய ஆற்று நீர் இவளுக்கு மருந்து ஆகும்.  அதைக் குளிர்ச்சி அடையப்பருகி, கண்களால் நோக்கி, வெறுப்பின்றி நீராடினால், இவளது நடுக்கமும் தீரும். நீங்கள் செல்வீராக” என்றாள்.

குறிப்பு:  ஒளவை துரைசாமி உரை – பழந்தமிழர் வாழ்வில் புதுப்புனலாடல் சிறந்த நிகழ்ச்சியாகும்.  அக்காலை மன்னரென்றும் மக்களென்றும் வேறுபாடின்றி எல்லோரும் புனலாடல் மேவுவர்.  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இதன்கண் மரம் செடி கொடிகள் நிரம்பிய காட்டின்கண் மழை பெய்தமையால் அம்மழை நீர் பெருகி வரும் யாற்று நீரில் ஆடினால் அது பல்வேறு மருந்து சேர்க்கை உடமையான் ஆடுவாருடைய உடல் நோயைத் தீர்க்கும் என்னும் ஓர் அருமந்த கொள்கையைப் பண்டைய தமிழ்ச் சான்றோர் கொண்டிருந்தமை புலனாதல் உணர்க.

சொற்பொருள்:  யான் அஃது அஞ்சினென் கரப்பவும் – நான் அதை அஞ்சி மறைக்கவும், தான் அஃது அறிந்தனள் கொல்லோ – அதனை அறிந்துக் கொண்டாளோ (கொல் – ஐயப்பொருட்டு, ஓகாரம் அசைநிலை), அருளினள் கொல்லோ – அருள் செய்தாளா (கொல் – ஐயப்பொருட்டு, ஓகாரம் அசைநிலை), எவன் கொல் – எதனால் (கொல் – அசைநிலை), தோழி – தோழி, அன்னை கண்ணியது – அன்னை எண்ணியது, வான் உற நிவந்த பெருமலை கவாஅன் – வானளவு உயர்ந்த மலைப்பக்கத்தில் (கவாஅன் – அளபெடை), ஆர்கலி வானம் தலைஇ நடுநாள் கனை பெயல் பொழிந்தென – இடியோசை உடைய முகில்கள் மழை பெய்யத்தொடங்கிய நள்ளிரவில் மிக்க மழையைப் பொழிந்ததால் (தலைஇ – அளபெடை), கானக் கல் யாற்று முளி இலை கழித்தன முகிழ் இணரொடு வரும் விருந்தின் தீம் நீர் மருந்தும் ஆகும் – கற்கள் உடைய காட்டு ஆற்றில் காய்ந்த இலைகளையும் அரும்புகளுடன் கூடிய மலர்க்கொத்துக்களையும் கொண்டு வரும் புதிய இனிய நீர் மருந்து ஆகும், தண்ணென உண்டு – குளிர்ச்சி அடையப்பருகி, கண்ணின் நோக்கி – கண்களால் நோக்கி, முனியாது ஆடப் பெறின் – வெறுப்பின்றி ஆடப்பெற்றால், இவள் பனியும் தீர்குவள் – இவளது நடுக்கமும் தீரும், செல்க என்றோளே – செல்வீராக என்றாள் (என்றோளே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 54, சேந்தங்கண்ணனார், நெய்தல் திணை – தலைவி குருகிடம் சொன்னது
வளை நீர் மேய்ந்து, கிளைமுதல் செலீஇ,
வாப் பறை விரும்பினை ஆயினும், தூச் சிறை
இரும் புலா அருந்தும் நின் கிளையொடு சிறிது இருந்து,
கருங்கால் வெண்குருகு, எனவ கேண்மதி,
பெரும் புலம்பின்றே சிறு புன் மாலை,  5
அது நீ அறியின் அன்புமார் உடையை,
நொதுமல் நெஞ்சம் கொள்ளாது, என் குறை
இற்றாங்கு உணர உரைமதி, தழையோர்
கொய் குழை அரும்பிய குமரி ஞாழல்
தெண் திரை மணிப் புறம் தைவரும்  10
கண்டல் வேலி நும் துறை கிழவோற்கே.

பாடல் பின்னணி:  இருவகைக் குறியானும் வந்தொழுகும் தலைவன் இடையீடுப் பட்டு வாராது ஒழியக்கண்ட தலைவி, வரைதல் வேட்கையளாய், குருகிடம் இரந்து கூறியது.

பொருளுரை:  கரிய கால்களை உடைய வெண்ணிற குருகே!  கடலில் உண்டுவிட்டு, உன் சுற்றத்துடன் சென்று, தாவிப் பறந்து வருதலை நீ விரும்பினாய் ஆயினும், தூய சிறகுகளையுடைய, மிக்கப் புலவை உண்ணும் உன் சுற்றத்துடன் சிறிது நேரம் தங்கிஇருந்து, நான் கூறுவதைக் கேட்பாயாக!  எனக்குப் பெரும் வருத்தத்தைத் தருகின்றது இந்தப் புல்லிய மாலை நேரம். அதை நீ அறிந்தால், நீ என்னிடம் அன்பு உடையை ஆவாய்.  என்னை அயலாராக எண்ணாமல் என்னுடைய குறை இத்தன்மை உடையது என்பதை, தழை ஆடை அணிபவர்கள் கொய்தற்கு உரிய குழைகள் தழைத்திருக்கும் இள ஞாழல் மரமானது தெளிந்த அலைகளின் நீலமணி நிறப்பக்கத்தைத் தடவி நிற்கும், தாழை மரங்களை வேலியாக உள்ள நும்முடைய துறையின் தலைவனிடம் அவர் உணருமாறு நீ கூறுவாயாக!

குறிப்பு:  உள்ளுறை – கு. வெ. பாலசுப்பிரமணியன் உரை – ஞாழலின் கரிய புறத்தினைத் தெண் திரை தடவும் என்றது, ‘தலைவன் தன்னைத் தழுவி முதுகைத் தடவுதல் வேண்டும்’ என்ற தலைவியின் வேட்கையை உணர்த்தியது.  வளை நீர் (5) – ச. வே. சுப்பிரமணியன் – சூழ்ந்த நீராகிய கடல், பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – வளைந்த நீர்ப்பரப்பு, ஒளவை துரைசாமி உரை – சங்குகள் வாழும் கடல்.  நற்றிணையின் தூது பாடல்கள் – தலைவியின் தூது, பறவை மூலமும் வண்டு மூலமும் தலைவனுக்கு அனுப்பியன – 54, 70, 102, 277, 376.  தோழி ஆந்தையிடம் கூறியது, தலைவன் கேட்கும்படிநற்றிணை 83.  மதி – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம், சொல்லதிகாரம், இடையியல் 26).  புலம்பு – புலம்பே தனிமை (தொல்காப்பியம், உரியியல் 35).

சொற்பொருள்:  வளை நீர் – கடல் (அன்மொழித்தொகை), மேய்ந்து கிளைமுதல் செலீஇ – உண்டுவிட்டு உன் சுற்றத்துடன் சென்று (செலீஇ – அளபெடை), வாப் பறை விரும்பினை ஆயினும் – தாவிப் பறந்து வருதலை விரும்பினாய் ஆயினும், தூச் சிறை – தூய சிறகு, இரும் புலா அருந்தும் நின் கிளையொடு சிறிது இருந்து – மிக்கப் புலவை உண்ணும் உன் சுற்றத்துடன் சிறிது தங்கி, கருங்கால் வெண்குருகு – கரிய கால்களை உடைய வெண்ணிற குருகே (விளி), எனவ கேண்மதி – நான் கூறுவதைக் கேட்பாயாக (எனவ – அ விரித்தல் விகாரம், பலவறி சொல், மதி – முன்னிலை அசை), பெரும் புலம்பின்றே சிறு புன் மாலை – எனக்குப் பெரும் வருத்தத்தைத் தருகின்றது இப்புல்லிய மாலை நேரம், அது நீ அறியின் – அதை நீ அறிந்தால், அன்பும் ஆர் உடையை – நீ என்னிடம் அன்பு உடையை ஆவாய் (ஆர் – அசைச் சொல்), நொதுமல் நெஞ்சம் கொள்ளாது என் குறை இற்றாங்கு உணர உரைமதி – என்னை அயலாராக எண்ணாமல் என்னுடைய குறை இத்தன்மை உடையது என்பதை அவர் உணருமாறு நீ கூறுவாயாக (மதி – முன்னிலை அசை), தழையோர் கொய் குழை அரும்பிய குமரி ஞாழல் – தழை ஆடை அணிபவர்கள் கொய்தற்கு உரியகுழைகள் தழைத்திருக்கும் இள ஞாழல் மரம் (ஞாழல் – புலிநகக்கொன்றை, tigerclaw tree, Cassia Sophera), தெண் திரைமணிப் புறம் தைவரும் – கண்டல் வேலி நும் துறை கிழவோற்கே – தெளிந்த அலைகளின் நீலமணி நிறப்பக்கத்தைத் தடவி நிற்கும் தாழை மரங்களை வேலியாக உள்ள நும்முடைய துறையின் தலைவனிடம் (கண்டல் – University of Madras Lexicon – Rhizophora mucronate, அல்லது Pandanus odoratissimus, கிழவோற்கே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 55, பெருவழுதி, குறிஞ்சித் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
ஓங்கு மலை நாட! ஒழிக நின் வாய்மை!
காம்பு தலைமணந்த கல் அதர்ச் சிறு நெறி
உறு பகை பேணாது இரவின் வந்து, இவள்
பொறி கிளர் ஆகம் புல்ல, தோள் சேர்பு
அறுகாற் பறவை அளவு இல மொய்த்தலின்,  5
கண் கோள் ஆக நோக்கி, ‘பண்டும்
இனையையோ?’ என வினவினள் யாயே,
அதன் எதிர் சொல்லாளாகி, அல்லாந்து
என் முகம் நோக்கியோளே ‘அன்னாய்,
யாங்கு உணர்ந்து உய்குவள் கொல்’ என மடுத்த  10
சாந்த ஞெகிழி காட்டி,
‘ஈங்கு ஆயினவால்’ என்றிசின் யானே.

பாடல் பின்னணி:  மணம் புரியும் பொருட்டுப் பொருள் தேடிச் சென்று மீண்டு வந்த தலைவனிடம் தோழி உரைத்தது.  தலைவியை அவன் விரைவில் வரைந்து கொள்ள வேண்டும் என்று வேண்டுகின்றாள்.

பொருளுரைஉயர்ந்த மலைகளையுடைய நாட்டின் தலைவனே!  உன்னுடைய வாய்மை ஒழிவதாக!  மூங்கில்கள் ஒன்றோடு ஒன்று நெருங்கி இருக்கும் கற்கள் நிறைந்த சிறு வழியில் ஏற்படும் மிக்க துன்பத்தைப் பொருட்படுத்தாமல் நீ இரவில் வந்து, இவளின் தேமல் படர்ந்த மார்பைத் தழுவித் தோளுடன் தோள் சேர்த்து மகிழ்ந்ததால் உண்டான புதுமணத்தைக் கருதி, ஆறு கால்களையுடைய வண்டுகள் அளவின்றி இவளை மொய்த்ததால், அன்னை தன் கண்களால் கொல்லுபவளைப் போல் இவளை நோக்கி, “முன்பும் இவ்வாறு இந்த மணத்தை உடையையோ?” என வினவினாள். அதற்கு இவள் விடை கூறாதவளாக வருந்தி என் முகத்தை நோக்கினாள். இவள் எவ்வாறு ஆராய்ந்து இந்நிலையிலிருந்து தப்புவாள் என எண்ணி, நெருப்பில் எரிந்துக் கொண்டிருக்கும் சந்தன விறகின் கொள்ளியைக் காட்டி, “அன்னையே! சந்தன விறகை எரிப்பதால் அதிலிருந்த இங்குள்ள வண்டுகள் இப்போது இவளுடைய தோள்களை மொய்க்கின்றன” எனக் கூறினேன் நான்.

குறிப்பு:  ஒளவை துரைசாமி உரை – களவு அலர் ஆயினும் (தொல்காப்பியம், களவியல் 24) என்ற நூற்பாவில் வரும் ‘தோழியை வினவலும்’ என்றதற்கு இப்பாட்டினை எடுத்தோதிக் காட்டி ‘இது செவிலி வினாயினமையைத் தோழிகொண்டு கூறினாள்’ என்றும், இன்னும் இந்நூற்பாவில் உள்ள ‘அன்ன பிறவும்’ என்ற இலேசினால், ‘கண்கோளாக நோக்கிப் பண்டும் இனையையோ’ என்றலும் போல்வன பிறவும் கொள்க என்றும் நச்சினார்க்கினியர் கூறுவர்.  பொ. வே. சோமசுந்தரனார் உரை – தலைவன், உதோ அணுமையிலேயே வரைந்து கொள்வல் வரைந்து கொள்வல் என்று பின்னரும் வரைந்து கோடலிற் கருத்தின்றிக் களவின்பமே காமுற்று வருதலின் நின் வாய்மை ஒழிக என்றாள்.  அறுகாற் பறவை (5) – ஒளவை துரைசாமி உரை – தேன்வண்டு வண்டுக்கும் கால் நான்கே ஆயினும், முகத்தில் முந்தி நீண்டிருக்கும் உணரிகள் இரண்டினையும் கூட்டி, அறுகால் என்பது பண்டையோர் வழக்கு.  ‘அறுகால் யாழிசைப் பறவை இமிர’ (அகநானூறு 332) எனக் கபிலர் கூறுவது காண்க.  ஒளவை துரைசாமி உரை – நின் கூட்டத்தால் தலைவி மேனிக்கண் எழும் நாற்றம் அன்னையின் ஆராய்ச்சிக்கு உரியதாயிற்றென புலப்படுத்துகின்றாள்.  சந்தனத்தை எரித்தல் – ஐங்குறுநூறு 212, 253, 254, புறநானூறு 108, 168, 320.  சின் – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம், சொல்லதிகாரம், இடையியல் 26, சின் என்பது இசின் என்பதன் முதற்குறை – ச. பாலசுந்தரம் உரை), அவற்றுள், இகுமும் சின்னும் ஏனை இடத்தொடும் தகு நிலை உடைய என்மனார் புலவர் (தொல்காப்பியம், இடையியல் 27).  உறு – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3).  பறவை – இச்சொல் சங்கப்பாடல்களில் இன்றைய பயன்பாட்டில் உள்ளவாறும் உள்ளது.  தேனீ, வௌவால், தும்பி ஆகிவற்றைக் குறிக்கவும் பயன்படுத்தப்பட்டுள்ளது.  தேனீ – அகநானூறு 4–11, 132–10, 332–8, 371–13, நற்றிணை 55–5, 161–4, 185–9, ஐங்குறுநூறு 82–3, கலித்தொகை 22–7, பரிபாடல் 7–6, புறநானூறு 70–11, பதிற்றுப்பத்து 66–16, பெரும்பாணாற்றுப்படை 183, 229, வௌவால் – அகநானூறு 244–2, குறுந்தொகை 201–3, 352–2, புறநானூறு 370–11, தும்பி – நற்றிணை 277–9.

சொற்பொருள்:  ஓங்கு மலை நாட – உயர்ந்த மலைகளையுடைய நாட்டின் தலைவனே, ஒழிக நின் வாய்மை – உன்னுடைய வாய்மை ஒழிவதாக, காம்பு தலைமணந்த கல் அதர்ச் சிறு நெறி உறு பகை பேணாது இரவின் வந்து – மூங்கில்கள் ஒன்றோடு ஒன்று நெருங்கி இருக்கும் கற்கள் நிறைந்த சிறு வழியில் உள்ள மிக்க துன்பத்தைப் பொருட்படுத்தாமல் இரவில் வந்து (உறு – மிக்க), இவள் பொறி கிளர் ஆகம் புல்ல தோள் சேர்பு – இவளின் தேமல் படர்ந்த மார்பைத் தழுவித் தோளுடன் தோள் சேர்த்து, அறுகாற் பறவை அளவு இல மொய்த்தலின் – ஆறு கால்களையுடைய வண்டுகள் அளவின்றி மொய்ப்பதால் (இல – இல்லை என்பதன் இடைக்குறை விகாரம்), கண் கோள் ஆக நோக்கிப் பண்டும் இனையையோ என வினவினள் யாயே – அன்னை தன் கண்களால் கொல்லுபவளைப் போல் நோக்கி முன்பும் இவ்வாறு இந்த மணத்தை உடையையோ என வினவினாள், அதன் எதிர் சொல்லாளாகி அல்லாந்து என் முகம் நோக்கியோளே – அதற்கு விடை கூறாதவளாக வருந்தி என் முகத்தை நோக்கினாள், அன்னாய் – அன்னையே (அண்மை விளி), யாங்கு உணர்ந்து உய்குவள் கொல் என மடுத்த சாந்த ஞெகிழி காட்டி – இவள் எவ்வாறு ஆராய்ந்து தப்புவாள் என நெருப்பில் எரிந்துக்கொண்டிருக்கும் சந்தன விறகின் கொள்ளியைக் காட்டி, ஈங்கு ஆயினவால் – இங்குள்ள வண்டுகளால் ஆனது (ஆயினவால் – ஆல் அசைநிலை), என்றிசின் – எனக் கூறினேன் (இசின் – தன்மை அசை), யானே – நான் (ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 56, பெருவழுதி, பாலைத் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
குறு நிலைக் குரவின் சிறு நனை நறு வீ
வண்டுதரு நாற்றம் வளி கலந்து ஈயக்,
கண் களி பெறூஉம் கவின் பெறு காலை,
எல் வளை ஞெகிழ்த்தோர்க்கு அல்லல் உறீஇச்
சென்ற நெஞ்சம் செய் வினைக்கு அசாவா,  5
ஒருங்குவரல் நசையொடு வருந்தும் கொல்லோ?
அருளான் ஆதலின், அழிந்து இவண் வந்து,
தொல் நலன் இழந்த என் பொன் நிறம் நோக்கி,
‘ஏதிலாட்டி இவள்’ எனப்
போயின்று கொல்லோ நோய் தலைமணந்தே?  10

பாடல் பின்னணி:  வரைபொருள் ஈட்டத் தலைவன் சென்ற பொழுது, ஆற்றுப்படுத்திய தோழியிடம் தலைவி உரைத்தது.

பொருளுரைகுறிய உயரத்தை உடைய குரவ மரத்தின் சிறிய அரும்புகள் முதிர்ந்த நறுமண மலர்களை வண்டுகள் கிளர்வதால் எழும் மணத்தைக் காற்று கலந்து வீசுவதால், கண்கள் அவற்றைக் கண்டு மகிழ்ச்சியடையும் அப்பொழுதில், என் ஒளியுடைய வளையல்களை நெகிழச் செய்த தலைவரை எண்ணித் துன்பமுற்று அவரிடம் சென்ற என் நெஞ்சு, அவருடைய செயலுக்குத் துணையாக அவ்விடம் இருந்து, செயலை முடித்துவிட்டு அவருடன் வருவதற்கு விருப்பத்துடன் வருந்தியுள்ளதோ?  இல்லை அவர் அருள் செய்யாததால் வருந்தி இங்கு வந்து பண்டைய அழகை இழந்த என் பசலை படர்ந்த மேனியை நோக்கி ‘இவள் நமக்கு அயலவள்’ என எண்ணிப் போய்விட்டதோ, வருத்தம் மிகுந்து?

குறிப்பு:  ஒளவை துரைசாமி உரை – ‘நோயும் இன்பமும்’ (தொல்காப்பியம், பொருளியல் 1) என்ற நூற்பாவின்கண் இப்பாட்டினை ஓதிக்காட்டி, ‘இஃது உணர்வுடையது போல் இளிவரல் பற்றி வந்த தலைமகள் கூற்று’ என்பர் இளம்பூரணர். இனி, ‘மறைந்தவற் காண்டல்’ (தொல்காப்பியம், களவியல் 21) என்ற நூற்பாவின்கண் குறிக்கப்படும் ‘பிரிந்தவழிக் கலங்கினும்’ என்றதற்கும், ‘நோயும் இன்பமும்’ என்பதன் உரையில் இப்பாட்டையே காட்டி, நெஞ்சினை உறுப்பும் உணர்வும் உடையது போல இளிவரல் பற்றிக் கூறுதற்கும் இதனைக் காட்டுவர் நச்சினார்க்கினியர்.  எல் – எல்லே இலக்கம் (தொல்காப்பியம், இடையியல் 21).

சொற்பொருள்:  குறுநிலைக் குரவின் சிறு நனை நறு வீ வண்டுதரு நாற்றம் வளி கலந்து ஈய – குறிய நிற்றலை உடைய குரவ மரத்தின் சிறிய அரும்புகள் முதிர்ந்த நறுமண மலர்களில் வண்டுகள் கிளர்வதால் வீசுகின்ற மணத்தைக் காற்று கலந்து வீசுவதால் (குரவ மரம் – Bottle Flower Tree, Webera Corymbosa),கண் களி பெறூஉம் கவின் பெறு காலை – கண்கள் அவற்றைக் கண்டு மகிழ்ச்சியடையும் அப்பொழுதில் (பெறூஉம் – செய்யுளிசை அளபெடை), எல் வளை ஞெகிழ்த்தோர்க்கு – ஒளியுடைய வளையல்களை நெகிழச் செய்தவர்க்கு (ஞெகிழ் – நெகிழ் என்பதன் போலி), அல்லல் உறீஇச் சென்ற நெஞ்சம் – துன்பமுற்று அவரிடம் சென்ற என் நெஞ்சு (உறீஇ – செய்யுளிசை அளபெடை), செய் வினைக்கு அசாவா ஒருங்குவரல் நசையொடு வருந்தும் கொல்லோ – அவருடைய செயலுக்குத் துணையாக இருந்து செயலை முடித்துவிட்டு அவருடன் வருவதற்கு விருப்பத்துடன் வருந்தியுள்ளதோ (கொல் – ஐயப்பொருட்டு, ஓகாரம் அசைநிலை), அருளான் ஆதலின் அழிந்து இவண் வந்து தொல் நலன் இழந்த என் பொன் நிறம் நோக்கி ஏதில் ஆட்டி இவள் எனப் போயின்று கொல்லோ – அவர் அருள் செய்யாததால் வருந்தி இங்கு வந்து பண்டைய அழகை இழந்த என் பசலை படர்ந்த மேனியை நோக்கி இவள் நமக்கு அயலவள் என எண்ணிப் போய்விட்டதோ (ஏதில் – வேறு, ஆட்டி – பெண், கொல் – ஐயப்பொருட்டு, ஓகாரம் அசைநிலை), நோய் தலைமணந்தே – வருத்தம் மிகுந்து (ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 57, பொதும்பில் கிழார், குறிஞ்சித் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
தடங்கோட்டு ஆமான், மடங்கல் மா நிரைக்
குன்ற வேங்கைக் கன்றொடு வதிந்தெனத்,
துஞ்சு பதம் பெற்ற துய்த்தலை மந்தி
கல்லென் சுற்றம் கை கவியாக் குறுகி,
வீங்கு சுரை ஞெமுங்க வாங்கி தீம்பால்  5
கல்லா வன்பறழ்க் கைந்நிறை பிழியும்
மாமலை நாட! மருட்கை உடைத்தே,
செங்கோல் கொடுங்குரல் சிறு தினை வியன் புனம்
கொய் பதம் குறுகும் காலை, எம்
மை ஈர் ஓதி மாண் நலம் தொலைவே.  10

பாடல் பின்னணி:  பகற்குறியில் வந்தொழுகும் தலைவனிடம், தோழி ‘தினை கொய்யும் காலம் நெருங்கியதால் இனி தலைவியைக் காண இயலாது’ எனக் கூறித் திருமணம் புரியத் தூண்டியது.

பொருளுரை:  வளைந்த கொம்புகளையுடைய காட்டுப்பசு ஒன்று, சிங்கம் முதலாய விலங்குகளின் பெருங்கூட்டம் உள்ள மலையில் உள்ள வேங்கை மரத்தின் அடியில் தன் கன்றுடன் தங்கியிருந்ததாக, அவை துயில்வதைக் கண்ட பஞ்சுபோல் தலையுடைய பெண் குரங்கு ஒன்று ஆரவாரமுடைய தன் சுற்றத்தை ஒலிக்காதவாறு கையைக் கவித்து அடக்கி, பசுவை நெருங்கி, அப்பசுவின் பால் நிறைந்த மடியை அழுத்தி இழுத்து, ஒழுகும் இனிய பாலை, குரங்குத்தொழில் கற்காத தன் வலிய குட்டியின் கை நிறையப் பிழியும், பெரிய மலையின் தலைவா!  சிவந்த தண்டுகளையும் வளைந்த கதிர்களையும் கொண்ட சிறிய தினைப் பயிரை உடைய அகன்ற புனத்தில் தினையைக் கொய்யும் பருவம் வந்துவிட்டது.  எம்முடைய கரிய ஈர கூந்தலையுடைய தலைவியின் மாட்சிமையுடைய அழகு பாழ்படும்படி அவள் இற்செறிக்கப்படுவாள்.  இது மருட்சியுடையதாக உள்ளது,

குறிப்பு:  உள்ளுறை (1) – ஒளவை துரைசாமி உரை – ஆமான் உறங்கும் செவ்வி கண்டு தன் சுற்றத்தைக் கைகவியா அடக்கித் தன் பறழ்க்கு மந்தி வீங்கு சுரை வாங்கித் தீம்பால் பிழிதல் போல, இவளைக் கொண்டுதலைக் கழியக் கருதுவாயின், மனையவர் உறங்கும் செவ்வி நோக்கிக் காவலையிகந்து இவளைக் கொணர்ந்து நின் கையடைப்படுத்துவேன் எனக் குறிப்பால் உணர்த்தியவாறு.  இது உவமப் பொருளால் வந்த உள்ளுறை.  உள்ளுறை (2) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – மந்தி கொடிய விலங்கிற்கு அஞ்சாது பதம் பெற்றுச் சென்று பாலைப் பிழிந்து ஊட்டிப் பறழைக் காக்குமாறு, நீயும் கொடிய சுரநெறியிற் சென்று பொருள் ஈட்டிக் கொணர்ந்து கொடுத்து இவளை மணந்து பாதுகாப்பாயாக என்றதாம்.  கவியா (4) – கவித்து, செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம்.  எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது.  கவியா – நற்றிணை 57 – கல்லென் சுற்றம் கை கவியாக் குறுகி, கலித்தொகை 42 – தாழ் இருங் கூந்தல் என் தோழியைக் கை கவியா, அகநானூறு 9 – கை கவியாச் சென்று.  மந்தி – பேடையும் பெடையும் பெட்டையும் பெண்ணும் மூடும் நாகும் கடமையும் அளகும் மந்தியும் பாட்டியும் பிணையும் பிணவும் அந்தம் சான்ற பிடியொடு பெண்ணே (தொல்காப்பியம், மரபியல் 3).  கன்று – யானையும் குதிரையும் கழுதையும் கடமையும் மானொடு ஐந்தும் கன்று எனற்கு உரிய (தொல்காப்பியம், மரபியல் 15).

சொற்பொருள்:  தடங்கோட்டு ஆமான் – வளைந்த கொம்புகளையுடைய காட்டுப்பசு, மடங்கல் – சிங்கம், மா நிரை – விலங்குகளின் பெரும் கூட்டம், குன்ற வேங்கை கன்றொடு வதிந்தென – மலையில் உள்ள வேங்கை மரத்தின் அடியில் தன் கன்றுடன் தங்கியிருந்ததாக (வேங்கை மரம் – kino tree, Pterocarpus marsupium), துஞ்சு பதம் பெற்ற துய்த்தலை மந்தி கல்லென் சுற்றம் கை கவியாக் குறுகி – அவை துயில்வதைக் கண்ட பஞ்சுபோல் தலையுடைய பெண் குரங்கு ஆரவாரமுடைய தன் சுற்றத்தை ஒலிக்காதவாறு கையைக் கவித்து அடக்கி பசுவை நெருங்கி, வீங்கு சுரை ஞெமுங்க வாங்கித் தீம் பால் கல்லா வன் பறழ் கைந்நிறை பிழியும் – அப்பசுவின் பால் நிறைந்த மடியை அழுத்தி இழுத்து இனிய பாலை தன்னுடைய குரங்குத்தொழில் கற்காத தன் வலிய குட்டியின் கை நிறையப் பிழியும், மா மலை நாட – பெரிய மலையின் தலைவா, மருட்கை உடைத்தே – மருட்சியுடையதாக உள்ளது (உடைத்தே ஏகாரம் அசைநிலை), செங்கோல் கொடுங்குரல் சிறு தினை வியன் புனம் கொய் பதம் குறுகும் காலை – சிவந்த தண்டுகளையும் வளைந்த கதிர்களையும் கொண்ட சிறிய தினைப் பயிரை உடைய அகன்ற புனத்தில் தினையைக் கொய்யும் பருவம் நெருங்கும் காலம், எம் மை ஈர் ஓதி – எம்முடைய கரிய ஈர கூந்தலையுடைய தலைவி (எம் – தன்மைப் பன்மை, மை ஈர் ஓதி – பண்புத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை), மாண் நலம் தொலைவே – மாட்சிமையுடைய அழகு பாழ்பட (தொலைவே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 58, முதுகூற்றனார், நெய்தல் திணை – தோழி சொன்னது
பெருமுது செல்வர் பொன்னுடைப் புதல்வர்
சிறுதோட் கோத்த செவ்வரிப் பறையின்
கண்ணகத்து எழுதிய குரீஇப் போல,
கோல் கொண்டு அலைப்பப் படீஇயர் மாதோ,
வீரை வேண்மான் வெளியன் தித்தன்  5
முரசு முதல் கொளீஇய மாலை விளக்கின்
வெண்கோடு இயம்ப நுண் பனி அரும்பக்,
கையற வந்த பொழுதொடு மெய் சோர்ந்து,
அவல நெஞ்சினம் பெயர, உயர் திரை
நீடுநீர்ப் பனித் துறைச் சேர்ப்பன்  10
ஓடுதேர் நுண் நுகம் நுழைந்த மாவே.

பாடல் பின்னணி:  பகற்குறி வந்து நீங்கும் தலைவன் போக்கு நோக்கி, தோழி மாவின் மேல் வைத்துச் சொல்லி வரைவு கடாயது.

பொருளுரைவீரை நகரில் ஆண்ட வேளிர் மன்னன் வெளியன் தித்தனுடைய முரசுடன் வெண்சங்கு ஒலிக்க மாலையில் ஏற்றப்பட்ட விளக்குகளுடன், நுட்பமான பனித்துளிகள் அரும்ப மகளிர் செயலறும்படி வந்த பொழுது உடல் தளர்ந்து துன்ப நெஞ்சினோம் ஆக யாம் ஆகும்படி செல்லுகின்ற, ஓங்கிய அலைகளையுடைய நீண்ட நீர் வடிவாய் உள்ள குளிர்ந்த துறையையுடைய தலைவனின் ஓடும் தேரின் நுண்ணிய நுகத்தில் கட்டப்பட்ட குதிரைகள், பெரும் செல்வந்தர்களின் பொன் அணிகலன்களை அணிந்த சிறுவர்கள் தங்கள் தோளில் மாட்டிய, செவ்விதாக ஒலிக்கும் பறையின் மீது எழுதப்பட்ட (வரையப்பட்ட) குருவி, கோல்கொண்டு அடிப்படுவதுபோல் துன்பம் அடையட்டும்,

குறிப்பு:  வரலாறு:  வீரை, வேண்மான் வெளியன் தித்தன்.  ஒளவை துரைசாமி உரை – நாற்றமும் தோற்றமும் (தொல்காப்பியம், களவியல் 24) என்ற நூற்பாவின்கண் ‘அன்பு தலையடுத்த வன்புறை’ என்றதனால், இப்பாட்டைக் காட்டி, ‘இது பகற்குறி வந்து போகின்ற தலைவன் புறக்கிடை நோக்கி ஆற்றாத தலைவி குறிப்பறிந்து மாவின்மேல் வைத்து வற்புறுத்தது’ என்பர் நச்சினார்க்கினியர்.  வீரை வேண்மான் வெளியன் தித்தன் (5) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – உறையூரின் கண் அரசாண்ட வீரை வேண்மான் வெளியன் என்னும் தித்தன், ஒளவை துரைசாமி உரை – வீரை நகர்க்குரியவனாகிய வேண்மானான வெளியன் என்பானுடைய மகன் தித்தன்.  மாலை விளக்கின் (6) – கு. வெ. பாலசுப்பிரமணியன் உரை – மாலைப்பொழுதை விளக்குகள் சென்று எதிர்கொள்ளும், H. வேங்கடராமன் உரை – மாலைக் காலத்து விளக்குகளின் ஒளியோடு சென்று.

சொற்பொருள்:  பெருமுது செல்வர் பொன்னுடைப் புதல்வர் சிறு தோள் கோத்த செவ்வரி பறையின் கண் அகத்து எழுதிய குரீஇப் போல – பெரும் செல்வந்தர்களின் பொன் அணிகலன்களை அணிந்த சிறுவர்கள் தங்கள் தோளில் மாட்டிய செவ்விதாக ஒலிக்கும் பறையின் மீது எழுதப்பட்ட குருவிபோன்று (குரீஇ – இயற்கை அளபெடை), கோல் கொண்டு அலைப்ப படீஇயர் – கோல்கொண்டு அடிப்படுவதுபோல் துன்பம் அடையட்டும் அவை (படீஇயர் – இயர் வியங்கோள் வினைமுற்று விகுதி, இகழ்ச்சிப்பொருளில் வந்தது, செய்யுளிசை அளபெடை), மாதோ – மாது, ஓ அசைநிலைகள், வீரை வேண்மான் வெளியன் தித்தன் – வீரை நகரில் ஆண்ட வேளிர் மன்னன் வெளியன் தித்தன், முரசு முதல் – முரசுடன், கொளீஇய மாலை விளக்கின் – மாலையில் ஏற்றப்பட்ட விளக்குகளுடன் (கொளீஇய – அளபெடை), வெண்கோடு இயம்ப – வெண்சங்கு ஒலிக்க, நுண் பனி அரும்ப கையற வந்த பொழுதொடு மெய் சோர்ந்து அவல நெஞ்சினம் – நுட்பமான பனித்துளிகள் அரும்ப மகளிர்  செயலறும்படி வந்த பொழுது உடல் தளர்ந்து துன்ப நெஞ்சினோம் ஆக உள்ளோம், பெயர – செல்லும்படி, உயர் திரை நீடு நீர் பனித் துறைச் சேர்ப்பன் – ஓங்கிய அலைகளையுடைய நீண்ட நீர் வடிவாய் உள்ள குளிர்ந்த துறையின் தலைவன், ஓடு தேர் நுண் நுகம் நுழைந்த மாவே – ஓடும் தேரின் நுண்ணிய நுகத்தில் கட்டப்பட்ட குதிரைகள் (மாவே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 59, கபிலர், முல்லைத் திணை – தலைவன் தேர்ப் பாகனிடம் சொன்னது
உடும்பு கொரீஇ, வரி நுணல் அகழ்ந்து,
நெடுங்கோட்டுப் புற்றத்து ஈயல் கெண்டி,
எல்லு முயல் எறிந்த வேட்டுவன் சுவல
பல் வேறு பண்டத் தொடை மறந்து, இல்லத்து,
இரு மடைக் கள்ளின் இன் களி செருக்கும்  5
வன்புலக் காட்டு நாட்டதுவே; அன்பு கலந்து
நம்வயின் புரிந்த கொள்கையொடு, நெஞ்சத்து
உள்ளினள் உறைவோள் ஊரே; முல்லை
நுண் முகை அவிழ்ந்த புறவின்
பொறை தலைமணந்தன்று உயவுமார் இனியே.  10

பாடல் பின்னணி:  வினை முற்றி மீளும் தலைவன் தேர்ப்பாகனுக்குச் சொல்லியது.

பொருளுரை:  உடும்பினை ஈட்டியால் குத்தி எடுத்து, மண்ணில் உள்ள வரிகளை உடைய தவளையை மண்வெட்டியால் தோண்டி எடுத்து, நெடிய உச்சிகளையுடைய புற்றில் உள்ள ஈயலைத் திரட்டிக்கொண்டு, பகற்பொழுதில் முயலை வேட்டையாடிய வேட்டுவன், அவற்றைத் தோளில் சுமந்து பல்வேறு பண்டங்களையும் கட்டிய மூடையுடனே யாவற்றையும் இல்லத்தில் போட்டுவிட்டு மறந்து, மிக்கப் பருகிய கள்ளினால் உண்டான இனிய மயக்கத்தால் செருக்குண்டு இருக்கும், வன்புலமாகிய காடுடைய நாட்டில் உள்ளது, பெரும் அன்பினால் நம்மிடம் விரும்பிய கொள்கையுடன் தன் நெஞ்சத்தில் நம்மை எண்ணி வாழும் தலைவியின் ஊர்.  முல்லையின் நுண்ணிய அரும்புகள் மலர்ந்த காட்டின்கண் இருந்தாலும் அவளுடைய உள்ளம் பொறுமையுடன் உள்ளது, இனியும் நாம் செல்லாவிட்டால் அவள் மிகவும் வருந்துவாள்.

குறிப்பு:  ஒளவை துரைசாமி உரை – ‘மாயோன் மேய’ (தொல்காப்பியம், அகத்திணையியல் 4) என்ற நூற்பா உரையில், ‘நால்வகை ஒழுக்கத்திற்கும் நால்வகை நிலனும் உரியவாயினவாறு காண்க’ என்பார், இப்பாட்டின்கண் முல்லை ஒழுக்கத்துக்கு முல்லை நிலன் உரியதாதற்கு ‘வன்புலக் காட்டு நாட்டதுவே’ என்ற இப்பாட்டடியைக் காட்டுவர் நச்சினார்க்கினியர்.  உள்ளுறை – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – உடும்பு முதலாயவற்றைக் கொண்டு வந்த வேட்டுவன் அவைகளை இல்லின்கண்ணே போட்டுக் கள்ளின் செருக்கினால் மயங்கிக் கிடக்குமென்றது, அயல்நாடு சென்று பலவகையாலே பொருளீட்டிவந்த யான் அவற்றை இல்லின்கண் இட்டு நமது காதலி நலனையுண்டு காமக்களியாலே செருக்கெய்தி மயங்கிக் கிடப்பேன் என்றதாம்.

சொற்பொருள்:  உடும்பு கொரீஇ – உடும்பினை ஈட்டியால் குத்தி எடுத்து (கொரீஇ – செய்யுளிசை அளபெடை), வரி நுணல் அகழ்ந்து –மண்ணில் உள்ள வரிகளை உடைய தவளையை மண்வெட்டியால் தோண்டி எடுத்து, நெடுங்கோட்டுப் புற்றத்து ஈயல் கெண்டி – நெடிய உச்சிகளையுடைய புற்றில் ஈயலைத் திரட்டிக்கொண்டு, எல்லு முயல் எறிந்த வேட்டுவன் சுவல பல் வேறு பண்டத் தொடை மறந்து இல்லத்து – பகற்பொழுதில் முயலை வேட்டையாடிய வேட்டுவன் அவற்றைத் தோளில் சுமந்து பல்வேறு பண்டங்களைக் கட்டிய மூடையுடனே யாவற்றையும் இல்லத்தில் போட்டுவிட்டு மறந்து, இரு மடைக் கள்ளின் இன்களி செருக்கும் – மிக்கப் பருகிய கள்ளினால் உண்டான இனிய மயக்கத்தால் செருக்குண்டு இருக்கும், வன்புலக் காட்டு நாட்டதுவே – வன்புலமாகிய காடுடைய நாட்டில் உள்ளது (நாட்டதுவே – ஏகாரம் அசைநிலை), அன்பு கலந்து நம் வயின் – பெரும் அன்பினால் நம்மிடம் (நம் – தன்மைப் பன்மை), புரிந்த கொள்கையொடு நெஞ்சத்து உள்ளினள் உறைவோள் ஊரே – விரும்பிய கொள்கையுடன் தன் நெஞ்சத்தில் நம்மை எண்ணி வாழும் தலைவியின் ஊர் (ஊரே – ஏகாரம் அசைநிலை), முல்லை நுண் முகை அவிழ்ந்த புறவின் பொறை தலைமணந்தன்று – முல்லையின் நுண்ணிய அரும்புகள் மலர்ந்த காட்டின்கண் இருந்தாலும் அவளுடைய உள்ளம் பொறுமையுடன் உள்ளது, உயவுமார் இனியே – இனி வருந்தும் நாம் செல்லாவிட்டால், இனியும் நாம் செல்லாவிட்டால் அவள் மிகவும் வருந்துவாள் (உயவும் + ஆர், ஆர் – அசைச்சொல், இனியே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 60, தூங்கலோரியார், மருதத் திணை – தோழி சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
மலை கண்டன்ன நிலை புணர் நிவப்பின்
பெரு நெல் பல் கூட்டு எருமை உழவ!
கண்படை பெறாஅது தண் புலர் விடியல்,
கருங்கண் வராஅல் பெருந்தடி மிளிர்வையொடு
புகர்வை அரிசிப் பொம்மல் பெருஞ்சோறு  5
கவர்படு கையை கழும மாந்தி,
நீர் உறு செறுவின் நாறு முடி அழுத்த, நின்
நடுநரொடு சேறி ஆயின், அவண்
சாயும் நெய்தலும் ஓம்புமதி; எம் இல்
மா இருங்கூந்தல் மடந்தை  10
ஆய் வளை கூட்டும் அணியுமார் அவையே.

பாடல் பின்னணி:  மருதத்துள் நெய்தல்.  தலைவி இற்செறிக்கபட்டாள் என்பதனை தலைவனுக்கு உணர்த்துகின்றாள் தோழி.  வரைவு கடாயது.

பொருளுரை:  மலையைப் போன்ற நிலைப் பொருந்திய உயர்ந்த பல நெற்குதிர்களையும் எருமைகளையும் உடைய உழவனே!  நீ உறங்காமல், அதிகாலையில் எழுந்து பெரிய துண்டங்களாக வெட்டிய கரிய கண்களை உடைய வரால் மீன் குழம்பை நிறைய சோற்றுடன் பெரிய திரளாக விரும்பி கையினால் உண்டு விட்டு, பின் நீர் உள்ள சேற்றில் உன் நடுபவர்களுடன் நாற்றினை நடுவதற்குச் செல்வாய்.  அப்பொழுது பிடுங்கி எறியும் கோரைப் புல்லையும் குவளை மலர்களையும் பாதுகாப்பாயாக.  எங்கள் இல்லத்தில் உள்ள கரிய அடர்ந்த கூந்தலை உடைய இளம் பெண் அவற்றை அழகிய வளையல்களாகவும் ஆடையாகவும் அணிந்து கொள்வாள்.

குறிப்பு:  ஒளவை துரைசாமி உரை – களவின்கண் சிறைப்புறத்தானாகிய தலைமகற்குத் தலைவி இற்செறிப்புண்டு மேனி மெலிந்திருக்கும் திறத்தைச் சொல்லி, வரைவு கடாவும் கருத்தினளாகலின், தோழி, மறுநாட் காலையில் நாற்று நடுவதற்கு நடுநரை நாடிச் செல்லும் உழவனை நோக்கிக் கூறுவாளாய், நெல் நாற்றின் மெல்லிய வேர்கள் இனிது பற்றுமாறு செறுவை எருமைகொண்டு ஆழ உழுது பயன்படுத்தி மென் சேற்றைப் பரப்பிட்டுச் செம்மை செய்து நீர் நோக்கி வந்தமை போன்ற எருமை உழவ என்றும், நடும்வினை முடியுங்காறும் பசியின்றி நடுநரொடு உடனிருக்க வேண்டிப் பெருஞ்சோறு உண்டு செல்கின்றனை என்பாள், பொம்மற் பெருஞ்சோறு கழும மாந்தி நடுநரோடு சேறி என்றும் கூறினாள்.  கவர்படு கையை (6) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – விருப்பம் மிக்க கையை உடையையாய்.  மிகுதியாக அள்ளிகொள்ளுதலுடைய கையுமாம்.  மதி – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம், சொல்லதிகாரம், இடையியல் 26).

சொற்பொருள்:  மலை கண்டன்ன நிலை புணர் நிவப்பின் – மலையைக் கண்டாற்போல் நிலை பொருந்திய உயர்ந்த, பெரு நெற் பல் கூட்டு எருமை – எருமைகளையும் பல பெரிய நெற் குதிர்களைக் கொண்ட, உழவ – உழவனே, கண் படை பெறாஅது – கண்களை மூடாமல் (உறங்காமல்), (பெறாஅது –அளபெடை), தண் புலர் விடியல் – குளிர்ந்த அதி காலையில், கருங் கண் வராஅல் – கரிய கண்களை உடைய வரால் மீன்,  பெருந்தடி மிளிர்வையொடு – பெரிய துண்டுகளாக மிளிரும் வண்ணம் (வராஅல் – அளபெடை), புகர்வை – உணவு, அரிசிப் பொம்மல் பெருஞ் சோறு – அரிசியால் சமைத்த பெரிய சோற்றுத் திரளை, கவர்படு கையை – விரும்பி உண்ணும் கையை உடையையாய், கழும மாந்தி – நிறைய உண்டு, நீர் உறு செறுவின் – நீர் உள்ள சேற்றில், நாறு முடி அழுத்த – நாற்றினை நடுவதற்கு, நின் – உன், நடுநரொடு – நடுபவர்களுடன், சேறி ஆயின் – செல்வாய் ஆயின், அவண் – அங்கு, சாயும் – கோரைப்புல்லும், நெய்தலும் – குவளையும், ஓம்புமதி – பாதுகாப்பாயாக (மதி முன்னிலை அசை), எம் இல்  – எங்கள் வீட்டில் உள்ள, மா இருங் கூந்தல்  – கரிய அடர்ந்த கூந்தல், மடந்தை – இளம் பெண், ஆய் வளை கூட்டும் – அழகு வளையல்களாகக் கட்டி, அணியும் ஆர் அவையே – அவை அணிவதற்கு உரியவாம் (அணியுமார் – ஆர் அசைநிலை, அவையே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 61, சிறுமோலிகனார், குறிஞ்சித் திணை – தோழி தலைவியிடம் சொன்னது அல்லது தலைவி தோழியிடம் சொன்னது
கேளாய் எல்ல தோழி! அல்கல்
வேண் அவா நலிய வெய்ய உயிரா,
ஏ மான் பிணையின் வருந்தினெனாக,
துயர் மருங்கு அறிந்தனள் போல, அன்னை,
‘துஞ்சாயோ என் குறுமகள்?’ என்றலின்,  5
சொல் வெளிப்படாமை மெல்ல என் நெஞ்சில்,
‘படுமழை பொழிந்த பாறை மருங்கில்
சிரல் வாய் உற்ற தளவின் பரல் அவல்
கான் கெழு நாடற் படர்ந்தோர்க்குக்
கண்ணும் படுமோ?’ என்றிசின் யானே.  10

பாடல் பின்னணி:  தலைவன் வரவு உணர்ந்து உரைத்தது.

பொருளுரைதோழி!  இதனைக் கேள்!  நேற்று இரவு அவன் மீதுக் கொண்ட அதிக விருப்பத்தால் வருந்தி, பெருமூச்சு விட்டு, அம்புப்பட்ட பெண் மான் போல் துடித்தேன்.  என் மிகுந்த துன்பத்தை அறிந்தவள் போல் அன்னை ‘இள மகளே, தூங்காமல் இருக்கின்றாயா?’ என்று கேட்டாள்.  என்னிடமிருந்து சொற்கள் வெளி வரவில்லை.  ஆனால் என் நெஞ்சுக்குள் சொல்லிக் கொண்டேன், ‘மிக்க மழை பொழிந்த கற்பாறையின் அருகில் மீன் கொத்திப் பறவையின் வாயைப்போன்ற அரும்புகளை உடைய  காட்டு மல்லிகைக் கொடிகளையும்,  பரல் கற்கள் நிறைந்த பள்ளங்களையும் உடைய காடு சூழ்ந்த நாட்டினை உடைய தலைவனைப் பிரிந்தவளுக்கு உறக்கம் வருமா?’ என்று.

குறிப்பு:  அறிஞர்கள் ஒளவை துரைசாமி, கு. வெ. பாலசுப்பிரமணியன், H. வேங்கடராமன், ச. வே. சுப்பிரமணியன் உரைகளில் தோழியின் கூற்றாகவே உள்ளது.   பொ. வே. சோமசுந்தரனார் தலைவியின் கூற்றாகக் கொள்கின்றார்.  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இச்செய்யுளைத் தலைவி கூற்றாகவே கொண்டு ஆசிரியர் நச்சினார்க்கினியர், ‘மனைப்பட்டுக் கலங்கிக் சிதைந்த வழித் தோழிக்கு நினைத்த சான்றல் அருமறை உயிர்த்தலும் (தொல்காப்பியம், களவியல் 21) என்னும் துறைக்கு எடுத்துக் காட்டினர்.  தலைவி கூற்றெனலே நேரிதாம்.  ஒளவை துரைசாமி உரை – ‘மறைந்தவற் காண்டல்’ (தொல்காப்பியம், களவியல் 21) என்ற நூற்பாவின்கண் வரும் ‘மனைப்பட்டுக் கலங்கிச் சிதைந்தவழித் தோழிக்கு நினைத்தல் சான்ற அரு மறை உயிர்த்தலும்’ என்ற பகுதிக்கு இப்பாட்டினை எடுத்தோதி, ‘இதனுள் துஞ்சாயோ எனத் தாய் கூறியவழி மனைப்பட்டுக் கலங்கியவாறும், படர்ந்தோர்க்கு என மறை உயிர்த்தவாறும், கண்படாக் கொடுமை செய்தான் எனப் பரத்தமை கூறியவாறும் காண்க’ என்பர் நச்சினார்க்கினியர்.  பரல் அவல் (8) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – பரல்கள் நிரம்பிய பள்ளம், பொ. வே. சோமசுந்தரனார் உரை – பரல் ஆகுபெயராக மேட்டு நிலத்தைக் குறித்து நின்றது.  எனவே மிசையும் அவலும் உடைய கான் என்பதாயிற்று.  மேற்கோள்:  ஐங்குறுநூறு 447–2 – தளவின் சிரல் வாய்ச் செம்முகை.  உயிரா – உயிர்த்து, செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம்.  எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது.  சின் – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம், சொல்லதிகாரம், இடையியல் 26), சின் என்பது இசின் என்பதன் முதற்குறை – ச. பாலசுந்தரம் உரை), அவற்றுள், இகுமும் சின்னும் ஏனை இடத்தொடும் தகு நிலை உடைய என்மனார் புலவர் (தொல்காப்பியம், இடையியல் 27).

சொற்பொருள்:  கேளாய் எல்ல தோழி – கேட்பாயாக தோழி,  அல்கல் – நேற்று இரவு, வேணவா – அதிக விருப்பத்தினால்,  நலிய – வருந்த,  வெய்ய – வெப்பம், உயிரா – பெருமூச்சு, ஏ – அம்பு, மான் பிணையின் – பெண் மானைப் போன்று (பிணையின் – இன் உருபு ஒப்புப் பொருளது), நான் வருந்தினெனாக – வருந்தியபொழுது, துயர் மருங்கு அறிந்தனள் போல – என் மிகுந்த துன்பத்தை அறிந்தவள் போல் (மருங்கு –மிகுதி), அன்னை – அன்னை, துஞ்சாயோ என் குறுமகள் என்றலின் – தூங்காமல் இருக்கின்றாயா எனது இள மகளே என்று கேட்டாள், சொல் வெளிப்படாமை – சொற்கள் வெளி வரவில்லை, மெல்ல என் நெஞ்சில் – மெதுவாக என் நெஞ்சில், படு மழை பொழிந்த – பெருமழையைப் பொழிந்த, பாறை மருங்கில் – பாறை அருகில், சிரல் வாய் உற்ற – மீன் கொத்திப்பறவையின் வாயைப்போன்ற, தளவின் – காட்டு மல்லியின் கொடி, பரல் அவல் – சிறிய பரல் கற்கள் நிறைந்த பள்ளம், கான் கெழு – நிறைந்த காடு, நாடற் – நாட்டவன், படர்ந்தோர்க்கு – பிரிந்தோர்க்கு, கண்ணும் படுமோ என்றிசின் யானே – உறங்க முடியுமா என்று எனக்குள்ளே நான் கூறிக் கொண்டேன் (என்றிசின் – இசின் அசை நிலை, யானே – ஏகாரம் அசை நிலை)

நற்றிணை 62, இளங்கீரனார், பாலைத் திணை – தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது
வேர் பிணி வெதிரத்துக் கால் பொரு நரல் இசை
கந்து பிணி யானை அயர் உயிர்த்தன்ன
என்றூழ் நீடிய வேய் பயில் அழுவத்து,
குன்று ஊர் மதியம் நோக்கி, நின்று, நினைந்து,
உள்ளினென் அல்லெனோ யானே, ‘முள் எயிற்று  5
திலகம் தைஇய தேம் கமழ் திரு நுதல்,
எமதும் உண்டு ஓர் மதி நாட் திங்கள்,
உரறு குரல் வெவ்வளி எடுப்ப நிழல் தப
உலவை ஆகிய மரத்த
கல் பிறங்கு உயர் மலை உம்பர் அஃது’ எனவே?  10

பாடல் பின்னணி:  முன்னொரு காலத்துப் பொருள்வயின் பிரிந்து மீண்ட தலைவன், பின்னும் பொருள் வேண்டிய நெஞ்சிடம் சொல்லிச் செலவு அழுங்குவித்தது.

பொருளுரை:  வேர்கள் ஒன்றோடு ஒன்று நிலத்தில் பிணித்திருக்கும் மூங்கிலில் காற்று மோதுததால் ஒலிக்கின்ற ஒலியானது தூணில் கட்டப்பட்ட யானை வருந்தி பெருமூச்சு விட்டாற்போல் இருக்கும், கோடை நீண்ட, மூங்கில்கள் நிறைந்த பாலைநில வழியில், மலையிடம் ஊர்ந்து செல்லும் நிலவை நோக்கி, அங்கு நின்று நினைந்து எண்ணினேன் இல்லையா நான், கூர்மையான பற்களையும் பொட்டு அணிந்த மணம் கமழ்கின்ற அழகிய நெற்றியையும் உடைய நாள்நிறைந்த ஒரு நிலவு எம்மிடத்தும் உள்ளது, முழங்கும் ஒலியுடைய வெப்பமான காற்று வீச நிழலைத் தரும் இலைகள் உதிர்ந்து உலர்ந்த மரங்களையுடைய கற்கள் நிறைந்த உயர்ந்த மலைக்கு அப்பால் உள்ள நாட்டில் என்று?

குறிப்பு:  ஒளவை துரைசாமி உரை – ‘நிகழ்ந்தது நினைத்தற்கு ஏதுவும் ஆகும்’ (தொல்காப்பியம், அகத்திணையியல் 46) என்ற நூற்பா உரையின்கண், இப்பாட்டினை எடுத்தோதி, ‘தலைவிகண் நிகழ்ந்தனவும் அவள் தன்மையும் பின்னர்த் தலைவன் நினைந்து செலவு அழுங்குதற்கு நிமித்தமாயவாறு காண்க’ என்பர் நச்சினார்க்கினியர்.  என்றூழ் – கதிரவனின் முதிர்ந்த கதிர்கள், எல் (கதிரவன்) + ஊழ் (முதிர்ச்சி).  பேரறிஞர் கு. வெ. பாலசுப்பிரமணியன் அவர்களின் விளக்கம்.

சொற்பொருள்:  வேர் பிணி வெதிரத்துக் கால் பொரு நரல் இசை கந்து பிணி யானை அயர் உயிர்த்தன்ன என்றூழ் நீடிய வேய் பயில் அழுவத்து – வேர்கள் ஒன்றோடு ஒன்று பிணித்திருக்கும் மூங்கிலில் காற்று மோதுததால் ஒலிக்கின்ற ஒலி தூணில் கட்டப்பட்ட யானை வருந்தி பெருமூச்சு விட்டாற்போல் இருக்கும் கோடை நீண்ட மூங்கில்கள் நிறைந்த பாலைநில வழியில், குன்று ஊர் மதியம் நோக்கி – மலையிடம் ஊர்ந்து செல்லும் நிலவை நோக்கி, நின்று நினைந்து உள்ளினென் அல்லெனோ யானே – அங்கு நின்று நினைந்து எண்ணினேன் இல்லையா நான் (யானே – ஏகாரம் அசைநிலை), முள் எயிற்று – கூர்மையான பற்களையுடைய, திலகம் தைஇய தேம் கமழ் திரு நுதல் – பொட்டு அணிந்த மணம் கமழ்கின்ற அழகிய நெற்றி (தைஇய – சொல்லிசை அளபெடை, தேம் தேன் என்றதன் திரிபு), எமதும் உண்டு – எம்மிடத்தும் உள்ளது (எமதும் – தன்மைப் பன்மை), ஓர் மதி – ஒரு நிலவு, நாட் திங்கள் – பகல் நிலவு, உரறு குரல் வெவ்வளி எடுப்ப நிழல் தப உலவை ஆகிய மரத்த – முழங்கும் ஒலியுடைய வெப்பமான காற்று வீச நிழலைத் தரும் இலைகள் உதிர்ந்து உலர்ந்த மரங்களையுடைய (மரத்த – அகரம் பன்மை உருபு), கல் பிறங்கு உயர் மலை – கற்கள் நிறைந்த உயர்ந்த மலை, உம்பர் அஃது எனவே – அப்பால் உள்ள நாட்டில் உள்ளது (எனவே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 63, உலோச்சனார், நெய்தல் திணை – தோழி சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
உரவுக் கடல் உழந்த பெருவலைப் பரதவர்
மிகு மீன் உணக்கிய புது மணல் ஆங்கண்,
கல்லென் சேரிப் புலவற் புன்னை
விழவு நாறு விளங்கு இணர் அவிழ்ந்து உடன் கமழும்
அழுங்கல் ஊரோ அறன் இன்று; அதனால்  5
அறன் இல் அன்னை அருங்கடிப்படுப்ப
பசலை ஆகி விளிவது கொல்லோ,
புள் உற ஒசிந்த பூ மயங்கு அள்ளல்
கழிச் சுரம் நிவக்கும் இருஞ்சிறை இவுளி
திரைதரு புணரியின் கழூஉம்  10
மலி திரைச் சேர்ப்பனொடு அமைந்த நம் தொடர்பே?

பாடல் பின்னணி:  அலர் அச்சத்தால் தலைவி அன்னையால் இற்செறிக்கப்பட்டாள் என்பதை தோழி உணர்த்தியது.

பொருளுரை:  வலிமையுடைய கடலில் மீன் வேட்டம் புரிந்த பெரிய வலைகளையுடைய மீனவர்கள், மிகுந்த மீன்களைக் காயப்போட்ட புதிய மணலை உடைய ஆரவாரமுடைய குடியிருப்பில், அங்குள்ள மீன் நாற்றம் நீங்குமாறு புன்னைமரங்களின் ஒளிரும் மணமுடைய மலர்க்கொத்துக்கள், திருவிழாவைப் போன்ற மணத்தைப் பரப்பும், அறம் இல்லாத அலர் கூறும் ஆரவாரமுடைய ஊர் இது.  அதனால், பறவைகள் அமர்வதால் கீழே உதிர்ந்த மலர்கள் கலந்த சேற்றினையுடைய உப்பங்கழியாகிய இடத்தில் தலை நிமிர்ந்து ஓடும் பெரிய கட்டினையுடைய குதிரைகள் அலைகள் எழுந்து வரும் கடல் நீரால் கழுவப்படும் மிக்க அலைகளையுடைய கடல்வளத்தையுடைய தலைவனுடன் அமைந்த நம் தொடர்பு, அறம் இல்லாத தாய், அரிய காவலில் வைத்ததால் பசலை அடைந்து அழிந்துவிடுமோ?

குறிப்பு:  திரைதரு புணரியின் கழூஉம் (10) – ஒளவை துரைசாமி உரை – கடலலையால் கழியிடை வந்து கலக்கும் நீரால் கழுவிக் கொள்ளும், பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – அலை எழுந்து வரும் கடல் நீராலே கழுவப்படுகின்ற.  உள்ளுறை – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – கழிச் சேற்றிலோடுங் குதிரைகளின் உடம்பிலே பட்ட சேறு கடல் நீரால் கழுவப்படுமென்றது, களவொழுக்கத்தை மேற்கொண்ட தலைமகள் மேலும் தலைமகன் மீதும் ஏறிய அலர் அவ்விருவரும் வரைந்து கொள்ளுதலால் நீக்கப்பட வேண்டும் என்றதாம்.  இறைச்சி – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – மணற் பரப்பிலே பரதவர் மீன் உணக்கலாகிய புலவு நாற்றத்தைப் புன்னை மலர் மணம் வீசுதலாற் போக்கிக் கமழாநிற்குமென்றது, சேரியிடத்தே தலைவிக்காக எமர் பெறக்கருதிய பொருளாசையைத் தலைவன் சான்றோரை முன்னிட்டுத் தரும் அருங்கலம் முதலியவற்றாலே போக்கி வரைவு மாட்சிமைப்பட முடிப்பானாக என்றதாம்.  அறன் இல் யாய் – குறுந்தொகை 244, 262, நற்றிணை 63, 145, 376.  அழுங்கல் – கம்பலை சும்மை கலியே அழுங்கல் என்று இவை நான்கும் அரவப் பொருள (தொல்காப்பியம், உரியியல் 53).

சொற்பொருள்:  உரவுக் கடல் உழந்த பெருவலைப் பரதவர் மிகு மீன் உணக்கிய புது மணல் ஆங்கண் கல்லென் சேரி – வலிமையுடைய கடலில் மீன் வேட்டம் புரிந்த பெரிய வலைகளையுடைய மீனவர்கள் மிகுந்த மீன்களைக் காயப்போட்ட புதிய மணலை உடைய அங்கு ஆரவாரமுடைய குடியிருப்பு, புலவல் – புலால் நாற்றமுடைய, புன்னை விழவு நாறு விளங்கு இணர் அவிழ்ந்து உடன் கமழும் – புன்னை மரங்கள் ஒளியுடைய மலர்க்கொத்துக்களின் நறுமணம் திருவிழாவைப் போன்ற மணத்தைப் பரப்பும் (புன்னை – Laurel Tree, Mast wood Tree, Calophyllum inophyllum), அழுங்கல் ஊரோ – அலர் கூறும் ஆரவாரமுடைய ஊர் (ஊரோ – ஓகாரம் அசைநிலை), அறன் இன்று – அறம் இல்லாதது (அறன் – அறம் என்பதன் போலி), அதனால் – அதனால், அறன் இல் அன்னை – அறம் இல்லாத தாய் (அறன் – அறம் என்பதன் போலி), அருங்கடிப்படுப்ப பசலை ஆகி விளிவது கொல்லோ – அரிய காவலில் அவளை வைத்ததால் பசலை அடைந்து அழிந்துவிடுவாளோ (கொல் – ஐயப்பொருட்டு, ஓகாரம் அசைநிலை), புள் உற ஒசிந்த பூ மயங்கு அள்ளல் கழிச் சுரம் நிவக்கும் இருஞ்சிறை இவுளி திரைதரு புணரியின் கழூஉம் – பறவைகள் அமர்வதால் கீழே உதிர்ந்த மலர்கள் கலந்த சேற்றினையுடைய உப்பங்கழியாகிய இடத்தில் தலை நிமிர்ந்து ஓடும் பெரிய கட்டினையுடைய குதிரைகள் அலைகள் எழுந்து வரும் கடல் நீரால் கழுவப்படும் (இவுளி – குதிரை, கழூஉம் – அளபெடை), மலி திரைச் சேர்ப்பனொடு – மிக்க அலைகளையுடைய கடல்வளத்தையுடைய தலைவனுடன், அமைந்த நம் தொடர்பே – அமைந்த நம் உறவு (தொடர்பே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 64, உலோச்சனார், குறிஞ்சித் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
என்னர் ஆயினும் இனி நினைவு ஒழிக!
அன்னவாக இனையல் தோழி! யாம்
இன்னமாக நத்துறந்தோர் நட்பு எவன்?
மரல் நார் உடுக்கை மலை உறை குறவர்
அறியாது அறுத்த சிறியிலைச் சாந்தம்  5
வறனுற்று ஆர முருக்கி, பையென
மரம் வறிதாகச் சோர்ந்து உக்காங்கு, என்
அறிவும் உள்ளமும் அவர்வயின் சென்றென,
வறிதால் இகுளை என் யாக்கை; இனி அவர்
வரினும் நோய் மருந்து அல்லர்; வாராது  10
அவணர் ஆகுக காதலர் இவண் நம்
காமம் படர் அட வருந்திய
நோய் மலி வருத்தம் காணன்மார் எமரே.

பாடல் பின்னணி:  பிரிவிடைத் தலைவியது அருமைகண்டு தூதுவிடக் கருதிய தோழிக்குத் தலைவி உரைத்தது.

பொருளுரை:  தோழி!  நம் தலைவர் எவ்வளவு சிறப்பு உடையவராக இருந்தாலும் அவரை நினைப்பதை கைவிடுவாயாக. அவ்வாறே இருக்கட்டும்.  நீ வருந்தாதே.  நாம் இவ்வாறு துன்பம் அடையுமாறு நம்மைவிட்டுப் பிரிந்தவரின் நட்பினால் நமக்கு என்ன பயன்?  மரல் செடியின் மடலிலிருந்து எடுத்த நாரால் செய்த ஆடையை அணிந்த மலையில் வாழும் குறவர்கள் அறியாமையினால் மரத்தின் மேற்பட்டையை அறுத்த சிறிய இலையையுடைய சந்தன மரங்கள் உலர்ந்து மிகவும் அழிந்து, மெல்ல மரம் சோர்ந்து, அதனிடத்து உள்ள நீர் வடிந்தாற்போல், என் அறிவும் உள்ளமும் அவர்பால் சென்றன சிறிது.  இனி அவர் வந்தாலும் என் காதல் நோய்க்கு அவர் மருந்து இல்லை.  வராது அங்கேயே இருக்கட்டும் அவர்.  வலிமையில்லாது ஒடுங்கிவிட்டது என் உடல்.  இங்கே காதலரால் ஏற்பட்ட காதல் துன்பம் வருத்தும் நோயானது தரும் துயரத்தை எம்முடைய உறவினர்கள் காணாது இருக்கட்டும்.

குறிப்பு:  ஒளவை துரைசாமி உரை – ‘மறைத்தவற் காண்டல்’ (தொல்காப்பியம், களவியல் 21) என்னும் நூற்பாவில் வரும் ‘வழிபாடு மறுத்தல்’ என்பதற்கு இதனைக் காட்டுவர் நச்சினார்க்கினியர்.  வறிது – வறிது சிறிது ஆகும் (தொல்காப்பியம், உரியியல் 40).  காமம் – கமம் என்னும் சொல்லின் முதல் நீண்ட வடிவம், ‘நிறைந்த அன்பு’ என்பது இச்சொல்லின் பொருள் – பேரறிஞர் கு.வெ. பாலசுப்பிரமணியன் அவர்களின் விளக்கம், (கமம் நிறைந்து இயலும் – தொல்காப்பியம், சொல்லியல் 355).

சொற்பொருள்:  என்னர் ஆயினும் இனி நினைவு ஒழிக – தலைவர் எவ்வளவு சிறப்பு உடையவராக இருந்தாலும் அவரை நினைப்பதை கைவிடுவாயாக, அன்னவாக – அவ்வாறே இருக்கட்டும், இனையல் – நீ வருந்தாதே, தோழி – தோழி, யாம் இன்னம் ஆக நத்துறந்தோர் – நாம் இவ்வாறு துன்பம் அடையுமாறு நம்மைவிட்டுப் பிரிந்தவர்  (நம் துறந்தோர் நத்துறந்தோர் என விகாரமாயிற்று), நட்பு எவன் – நட்பினால் என்ன பயன், மரல் நார் உடுக்கை மலை உறை குறவர் அறியாது அறுத்த சிறியிலை சாந்தம் – மரல் செடியின் மடலிலிருந்து எடுத்த நாரால் செய்த ஆடையை அணிந்த மலையில் வாழும் குறவர்கள் அறியாமையினால் மரத்தின் மேற்பட்டையை அறுத்த சிறிய இலையையுடைய சந்தன மரத்தில் (சிறியிலை – சிறிய இலை அல்லது சிற்றிலை என்பதன் திரிபு), வறனுற்று ஆர முருக்கி பையென மரம் வறிதாகச் சோர்ந்து உக்காங்கு – உலர்ந்து மிகவும் அழிந்து மெல்ல மரம் சோர்ந்து அதனிடத்து உள்ள நீர் வடிந்தாற்போல், என் அறிவும் உள்ளமும் அவர் வயின் சென்றென – என் அறிவும் உள்ளமும் அவர்பால் சென்றன, வறிது ஆல் – ஒன்றுமில்லாமல் ஆயிற்று (ஆல் – அசைநிலை), இகுளை – தோழி, என் யாக்கை – என் உடல், இனி அவர் வரினும் நோய் மருந்து அல்லர் – இனி அவர் வந்தாலும் என் காதல் நோய்க்கு அவர் மருந்து இல்லை, வாராது அவணர் ஆகுக – வராது அங்கேயே இருக்கட்டும், காதலர் – காதலர், இவண் – இங்கே, நம் காமம் படர் அட வருந்திய நோய் மலி வருத்தம் காணன்மார் எமரே – நம் காதல் துன்பம் வருத்தும் நோயானது தரும் துயரத்தை எம்முடைய உறவினர்கள் காணாது இருக்கட்டும்  (காணன்மார் – மார் ஈற்று முற்றுச் சொல் எதிர்மறைப் பொருட்டு, எமரே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 65, கபிலர், குறிஞ்சித் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
அமுதம் உண்க நம் அயல் இலாட்டி!
கிடங்கில் அன்ன இட்டுக் கரைக் கான்யாற்றுக்
கலங்கும் பாசி நீர் அலைக் கலாவ,
ஒளிறு வெள்ளருவி ஒண் துறை மடுத்து,
புலியொடு பொருத புண் கூர் யானை  5
நற்கோடு நயந்த அன்பு இல் கானவர்
வில் சுழிப்பட்ட நாமப் பூசல்
உருமிடைக் கடி இடி கரையும்
பெருமலை நாடனை ‘வரூஉம்’ என்றோளே.

பாடல் பின்னணி:  தலைவன் தான் குறித்த பருவத்து வாராமையால் வருந்திய தலைவியிடம் தோழி சொன்னது.

பொருளுரைசாவா மருந்தாகிய அமிழ்தத்தை உண்பாளாக நம் பக்கத்து வீட்டுப்பெண்! கிடங்கில் என்னும் ஊர் போன்றது, நல்ல நிமித்தம் கூறிய அவளுடைய இனிமையான சொற்கள்.  சிறிய கரையையுடைய காட்டாற்றில் கலங்கும் பாசியை நீர் அங்கும் இங்கும் அலைத்தலால் அது கலப்ப, ஒளியுடைய வெள்ளை அருவியின் ஒளிரும் துறையின்கண் புலியுடன் பாய்ந்துப் போரிட்டதால் புண்கள் மிகுந்த களிற்று யானையின் மருப்பை (தந்தத்தை) விரும்பும் அன்பு இல்லாத கானவர்களின் வில்லிலிருந்து விடுக்கப்பட்ட அம்புத் தைத்ததால் ஆன அச்சத்தைத் தரும் அந்த யானையின் பிளிற்று ஓசை, இடி இடித்ததால் உண்டாகும் மிக்க ஒலிபோல் ஒலிக்கும், பெரிய மலையின் தலைவனை வருவான் எனக் கூறினாள் அவள்!

குறிப்பு:  ஒப்புமை:  குறுந்தொகை 201 – அமுதம் உண்க நம் அயல் இலாட்டி.  உள்ளுறை – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – புலி பொருதலாலே புண் மிக்க யானை காமநோய் பொருதலால் வருத்தமுற்ற தலைவியையும், வேடர் யானையின் மருப்புப் போக அம்பு விடுவது ஏதிலாட்டியர் தலைவியின் உயிருக்கே ஏதம் உண்டாம்படி அலர் எடுத்ததாகவும், அம்பு பட்ட யானை பூசலிடுவது அலரைப் பொறாளாய தலைவி வருந்துவதாகவும், அப்பூசல் மலையிற்சென்று மோதுதலானது அவ்வருத்தச் செய்தி தலைவன் மாட்டுஞ்சென்று விட்டதாகவும், அத்தகைய மலைநாடனாதலின் இன்னே வருகுவன் எனவும் கொள்க.  வரலாறு:  கிடங்கில்.  நாம் – பேம் நாம் உரும் என வரூஉம் கிளவி ஆ முறை மூன்றும் அச்சப் பொருள (தொல்காப்பியம், உரியியல் 69).  கடி – கடி என் கிளவி வரைவே கூர்மை காப்பே புதுமை விரைவே விளக்கம் மிகுதி சிறப்பே அச்சம் முன்தேற்று ஆயீர் ஐந்தும் மெய்ப்படத் தோன்றும் பொருட்டு ஆகும்மே (தொல்காப்பியம், உரியியல் 87).

சொற்பொருள்:  அமுதம் உண்க நம் அயல் இல் ஆட்டி – சாவா மருந்தாகிய அமிழ்தத்தை (வானோரின் உணவாகிய அமிழ்தத்தை) உண்பாளாக நம் பக்கத்து வீட்டுப்பெண் (ஆட்டி – பெண்), கிடங்கில் அன்ன – கிடங்கில் என்னும் ஊர் போன்ற, இட்டுக் கரைக் கான் யாற்றுக் கலங்கும் பாசி நீர் அலைக் கலாவ – சிறிய கரையையுடைய காட்டாற்றில் கலங்கும் பாசியை நீர் அங்கும் இங்கும் அலைத்தலால் கலப்ப, ஒளிறு வெள் அருவி ஒண் துறை மடுத்து புலியொடு பொருத புண் கூர் யானை – ஒளியுடைய வெள்ளை அருவியின் ஒளிரும் துறையின்கண் புலியுடன் பாய்ந்துப் போரிட்டதால் புண்கள் மிகுந்த யானை, நற் கோடு நயந்த அன்பு இல் கானவர் – அதன் மருப்பை (கோட்டை, தந்தத்தை) விரும்பும் அன்பு இல்லாத கானவர்கள், வில் சுழிப்பட்ட நாமப் பூசல் – வில்லிலிருந்து விடுக்கப்பட்ட அம்பினால் ஆன அச்சத்தைத் தரும் பிளிற்று ஓசை (நாம – அச்சம். நாம் என்னும் உரிச்சொல் ஈறு திரிந்தது), உருமிடைக் கடி இடி கரையும் – இடி இடித்ததால் உண்டாகும் மிக்க ஒலிபோல் ஒலிக்கும், பெருமலை நாடனை வரூஉம் என்றோளே – பெரிய மலையின் தலைவனை வருவான் எனக் கூறினாள் (வரூஉம் – செய்யுளிசை அளபெடை, என்றோளே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 66, இனிசந்தநாகனார், பாலைத் திணை – தலைவியின் தாய் சொன்னது
மிளகு பெய்தனைய சுவைய புன் காய்
உலறுதலை உகாஅய்ச் சிதர் சிதர்ந்து உண்ட
புலம்பு கொள் நெடுஞ்சினை ஏறி, நினைந்து, தன்
பொறி கிளர் எருத்தம் வெறிபட மறுகிப்,
புன் புறா உயவும் வெந்துகள் இயவின்,  5
நயந்த காதலற் புணர்ந்தனள் ஆயினும்,
சிவந்து ஒளி மழுங்கி அமர்த்தன கொல்லோ,
கோதை மயங்கினும் குறுந்தொடி நெகிழினும்,
காழ் பெயல் அல்குல் காசு முறை திரியினும்,
மாண் நலம் கையறக் கலுழும் என்  10
மாயக் குறுமகள் மலர் ஏர் கண்ணே?

பாடல் பின்னணி:  உடன்போக்கில் தலைவனும் தலைவியும் போன பின் தலைவியின் தாய் (நற்றாய்) சொன்னது.

பொருளுரைமிளகைப் பெய்தாற்போன்ற சுவையை உடைய புல்லிய காயை, வண்டுகளை விரட்டிவிட்டு உண்டதால் வருந்தும், உயர்ந்த மரக்கிளையில் ஏறி தான் தின்ற தவற்றை எண்ணி தன் புள்ளிகள் பொருந்திய கழுத்தைச் சிலிர்த்து மயக்கமுற்று வருந்தும் மெல்லிய புறா இருக்கும் வெப்பமுடைய புழுதியுடைய வழியில் தான் விரும்பிய காதலனுடன் கூடிச் சென்றாள் ஆயினும், வழியின் துன்பத்தால் ஒளி மழுங்கி கலக்கம் அடைந்தனவோ, சூடிய மாலை சிக்குண்டாலும் சிறிய வளையல்கள் நெகிழ்ந்தாலும் மேகலை அணிந்த அல்குலின்மேல் தொங்குகின்ற காசுகள் முறையிலிருந்து மாறினும், அவற்றைச் சரிபண்ண அறியாதவளாய் அழும் என்னுடைய அழகிய இளமகளின் மலரை ஒத்த கண்கள்?

குறிப்பு:  சிதர் சிதர்ந்து (2) – ஒளவை துரைசாமி உரை – மொய்த்த வண்டுகளை விலக்கி, பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் – வண்டுகள் நெருங்காதபடி போக்கி.  வெறிபட (4) – ஒளவை துரைசாமி உரை – மணம் உண்டாக, பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – வெறுப்பினால்.  மாயக் குறுமகள் (11) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – வஞ்சமுடைய சிறுமி, ஒளவை துரைசாமி உரை – மாமை நிறமுடைய என் இளமகள், பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – அழகிய இளம் புதல்வி.  இறைச்சி – கு. வெ. பாலசுப்பிரமணியன் உரை – புறா உகாய்க் காயைத் தின்று வருந்தியது போல தன்மகள் ஏதிலாளனின் மாய இன்பம் நல்லதெனக் கொண்டு சென்று வருந்துவாளோ என்று கருத்துப்பட நின்றது.  அல்குல் – இடை, இடைக்கு கீழ் உள்ள பகுதி.

சொற்பொருள்:  மிளகு பெய்தனைய சுவைய புன்காய் உலறு தலை உகாஅய் – மிளகைப் பெய்தாற்போன்ற சுவையை உடைய புல்லிய காயை (உகாஅய் – Toothbrush Tree, Salvadora persica, உகாஅய் – செய்யுளிசை அளபெடை), சிதர் சிதர்ந்து உண்ட புலம்பு கொள் – வண்டுகளை விரட்டிவிட்டு உண்டதனாலாகிய வருந்தும், நெடுஞ்சினை ஏறி நினைந்து தன் பொறி கிளர் எருத்தம் வெறிபட மறுகி புன் புறா உயவும் – உயர்ந்த மரக்கிளையில் ஏறி தான் தின்ற தவற்றை எண்ணி தன் புள்ளிகள் பொருந்திய கழுத்தைச் சிலிர்த்து மயக்கமுற்று வருந்தும் மெல்லிய புறா, வெந்துகள் இயவின் நயந்த காதலற் புணர்ந்தனள் ஆயினும் – வெப்பமுடைய புழுதியுடைய வழியில் தான் விரும்பிய காதலனுடன் கூடிச் சென்றாள் ஆயினும், சிவந்து ஒளி மழுங்கி அமர்த்தன கொல்லோ – வழி துன்பத்தால் ஒளி மழுங்கி கலக்கம் அடைந்தனவோ (கொல் – ஐயப்பொருட்டு, ஓகாரம் அசைநிலை), கோதை மயங்கினும் குறுந்தொடி நெகிழினும் காழ் பெயல் அல்குல் காசு முறை திரியினும் – சூடிய மாலை சிக்குண்டாலும் சிறிய வளையல்கள் நெகிழ்ந்தாலும் மேகலை அணிந்த அல்குலின்மேல் தொங்குகின்ற காசுகள் முறையிலிருந்து மாறினும், மாண் நலம் கையற  கலுழும் என் மாயக் குறுமகள் மலர் ஏர் கண்ணே – அவற்றைச் சரிபண்ண அறியாதவளாய் அழும் என்னுடைய அழகிய இளமகளின் மலரை ஒத்த கண்கள்  (ஏர் – உவம உருபு, கண்ணே – ஏகாரம் அசைநிலை

நற்றிணை 67, பேரிசாத்தனார், நெய்தல் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
சேய் விசும்பு இவர்ந்த செழுங்கதிர் மண்டிலம்
மால் வரை மறைய துறை புலம்பின்றே;
இறவு அருந்தி எழுந்த கருங்கால் வெண்குருகு
வெண்கோட்டு அருஞ்சிறைத் தாஅய், கரைய
கருங்கோட்டுப் புன்னை இறை கொண்டனவே;  5
கணைக் கால் மா மலர் கரப்ப, மல்கு கழித்
துணைச் சுறா வழங்கலும் வழங்கும்; ஆயிடை,
எல் இமிழ் பனிக் கடல் மல்கு சுடர்க் கொளீஇ
எமரும் வேட்டம் புக்கனர்; அதனால்
தங்கின் எவனோ தெய்ய, பொங்கு பிசிர்  10
முழவு இசைப் புணரி எழுதரும்
உடை கடல் படப்பை எம் உறைவின் ஊர்க்கே?

பாடல் பின்னணி:  பகற்குறி வந்து நீங்கும் தலைவனைத் தோழி வரைவு கடாயது.

பொருளுரைதொலைவில் உள்ள வானில் உயர்ந்து செல்லும் செழுமையான கதிர்களையுடைய கதிரவன் பெரிய மலையில் மறைய, துறை தனிமை உடையதாயிற்று. இறால் மீன்களை உண்டுவிட்டு எழுந்த வெள்ளை நாரைகள் வெள்ளை மணல் குவியலில் அரிய சிறகுகளை வீசி பரவி, கரையில் உள்ள கரிய கிளைகளை உடைய புன்னை மரத்தில் தங்கின.  பெரிய தண்டினையுடைய கரிய நெய்தல் மலர்கள் மறையும்படி நீர் உடைய உப்பங்கழியில் சுறா மீன்கள் தங்கள் துணையுடன் நீந்தும் ஆங்கு இரவில் ஒலிக்கின்ற குளிர்ச்சியுடையக் கடலில், ஒளி மிகுந்த விளக்குகளை எடுத்துக்கொண்டு எங்கள் உறவினர்கள் மீன் வேட்டையாடச் சென்றுள்ளனர்.  அதனால், இங்கு நீவிர் தங்கினால் என்ன ஆகும், பொங்கும் நீர்துளிகளையும் முழவு போன்ற ஓசையையுமுடைய அலைகள் எழுந்து உடையும் கடலின் அருகே தோப்புகள் உடைய எம்முடைய இனிய ஊரில்?

குறிப்பு:  ஒளவை துரைசாமி உரை – நாற்றமும் தோற்றமும் (தொல்காப்பியம், களவியல் 24) என்ற நூற்பாவின்கண் வரும் ‘புணர்ச்சி வேண்டினும்’ என்ற பகுதிக்கண் இப்பாட்டினை எடுத்தோதி ‘இஃது இரவுக்குறி வேண்டிய தலைமகற்குத் தோழி உடன்பட்டுக் கூறியது என்பர் நச்சினார்க்கினியர்.  இறா இறவு என வந்தது. ‘குறியதன் இறுதிச் சினை கெட உகரம் அறிய வருதல் செய்யுளுள் உரித்தே’ (தொல்காப்பியம், உயிர் மயங்கியல் 32).  உறைவின் ஊர்க்கு (12) – ஒளவை துரைசாமி உரை – தங்குதற்கு இனிய ஊர், பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – உறைதலையுடைய ஊர்.  புலம்பு – புலம்பே தனிமை (தொல்காப்பியம், உரியியல் 35).

சொற்பொருள்:  சேய் விசும்பு இவர்ந்த செழுங்கதிர் மண்டிலம் மால் வரை மறையத் துறை புலம்பின்றே – தொலைவில் உள்ள வானில் உயர்ந்து செல்லும் செழுமையான கதிர்களையுடைய கதிரவன் பெரிய மலையில் மறைய துறை தனிமை உடையதாயிற்று (புலம்பின்றே – ஏகாரம் அசைநிலை), இறவு அருந்தி எழுந்த வெண்குருகு வெண்கோட்டு அருஞ்சிறைத் தாஅய் – இறால் மீன்களை உண்டு எழுந்த வெள்ளை நாரைகள் வெள்ளை மணல் குவியலில் அரிய சிறகுகளை வீசி பரவி (இறவு – இறா இற என்றாகி உகரம் ஏற்றது, தாஅய் – செய்யுளிசை அளபெடை), கரைய கருங்கோட்டுப் புன்னை இறை கொண்டனவே – கரையில் உள்ள கரிய கிளைகளை உடைய புன்னை மரத்தில் தங்கின (கொண்டனவே – ஏகாரம் அசைநிலை, புன்னை – நாகம், Laurel Tree, Mast wood Tree, Calophyllum inophyllum), கணைக் கால் மாமலர் கரப்ப மல்கு கழித் துணைச் சுறா வழங்கலும் வழங்கும் ஆயிடை எல் இமிழ் பனிக் கடல் – பெரிய தண்டினையுடைய கரிய நெய்தல் மலர்கள் மறையும்படி நீர் உடைய உப்பங்கழியில் சுறா மீன்கள் தங்கள் துணையுடன் நீந்தும் ஆங்கு இரவில் ஒலிக்கின்ற குளிர்ச்சியுடையக் கடலில், மல்கு சுடர்க் கொளீஇ எமரும் வேட்டம் புக்கனர் – ஒளி மிகுந்த விளக்குகளை எடுத்துக்கொண்டு எங்கள் உறவினர்கள் மீன் வேட்டையாடச் சென்றுள்ளனர் (கொளீஇ – அளபெடை), அதனால் – அதனால், தங்கின் எவனோ – இங்கு தங்கினால் என்ன ஆகும், தெய்ய – அசைநிலை, பொங்கு பிசிர் முழவு இசைப் புணரி எழுதரும் உடை கடல் படப்பை எம் உறைவு இன் ஊர்க்கே – பொங்கும் நீர்துளிகளையும் முழவு போன்ற ஓசையையுமுடைய அலைகள் எழுந்து உடையும் கடலின் அருகே படப்பைகள் (தோப்புகள்) உடைய எம்முடைய இனிய ஊரில் (ஊர்க்கே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 68, பிரான் சாத்தனார், குறிஞ்சித் திணை – தோழி தலைவியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
‘விளையாடு ஆயமொடு ஓரை ஆடாது,
இளையோர் இல்லிடத்து இற்செறிந்திருத்தல்
அறனும் அன்றே, ஆக்கமும் தேய்ம்’ எனக்
குறு நுரை சுமந்து நறு மலர் உந்தி
பொங்கிவரு புது நீர் நெஞ்சு உண ஆடுகம்  5
வல்லிதின் வணங்கிச் சொல்லுநர்ப் பெறினே,
‘செல்க’ என விடுநள் மன் கொல்லோ? எல் உமிழ்ந்து
உரவு உரும் உரறும் அரை இருள் நடுநாள்,
கொடி நுடங்கு இலங்கின மின்னி,
ஆடு மழை இறுத்தன்று அவர் கோடு உயர் குன்றே.  10

பாடல் பின்னணி:  தலைவிக்கு உரைப்பாளாய், தலைவி இற்செறிக்கப்பட்டாள் எனத் தோழி அறிவுறுத்தியது.  வரைவு கடாயது.

பொருளுரைஒளியைப் பரப்பி வலிய இடி முழங்குகின்ற இருளுடைய நடு இரவில் கொடி அசைந்தாற்போல் அசைந்து ஒளியுடன் மின்னும் மின்னலுடன் அசைகின்ற முகில்கள் மழையைப் பொழிகின்றன தலைவனின் உச்சி உயர்ந்த மலையில். விளையாடும் தோழியருடன் ஓரை விளையாட்டு விளையாடாதபடி இளைய மகளிரை இல்லத்தில் அடைத்து வைத்தல் அறமுடைய செயல் இல்லை.  அதனால் அவர்களுடைய இளமையின் ஆக்கமும் அழியும் என்று, அன்னையிடம் வற்புறுத்தி வணங்கிச் சொல்லுபவர்களைப் பெற்றால், சிறிய நுரைகளைச் சுமந்துகொண்டு நறுமணமான மலர்களைத் தள்ளிக்கொண்டு ஆற்றில் பொங்கிவரும் புது நீரில் மகிழ்ச்சி அடையும்படி நாம் விளையாடலாம். “நீராடச் செல்வீராக” எனக் கூறி நம்மை அன்னை செல்வதற்கு விடுவாளோ?

குறிப்பு:  ஒளவை துரைசாமி உரை – நாற்றமும் தோற்றமும் (தொல்காப்பியம், களவியல் 24) என்ற நூற்பாவின்கண் வரும் ‘அன்பு தலையடுத்த வன்புறை’ என்றதற்கு இப்பாட்டினை எடுத்தோதி, ‘இது வரைவு நீட ஆற்றாத தலைவி வேறுபாடு புறத்தார்க்குப் புலனாகாமையும் இயையும், இங்ஙனம் கூறுவாரைப் பெறின் எனக் கூறி வற்புறுத்தது’ என்பர் நச்சினார்க்கினியர்.  செல்க’ என விடுநள் மன் கொல்லோ (7) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – நீவிர் செல்வீராக என விடுப்பாளோ, ஒளவை துரைசாமி உரை – நீவிர் சென்று வருக என விடுவாள் (கொல் என்னும் சொல்லை அசையாகக் கொள்கின்றார் ஒளவை துரைசாமி).  உள்ளுறை – கு. வெ. பாலசுப்பிரமணியன் உரை – கோடுயர் குன்றத்தில் மின்னி மழை பெய்தாற்போல அன்னையிடத்து உரைப்பாரைப் பெற்று மணவாழ்வின் ஒளி பெற வேண்டுமென்பது வற்புறுத்தப் பெற்றது.  ஓரை விளையாட்டு – அகநானூறு 49, 60, 219, நற்றிணை 68, 143, 155, 398, குறுந்தொகை 48, 316, 401, கலித்தொகை 75.  எல் – எல்லே இலக்கம் (தொல்காப்பியம், இடையியல் 21).  மன் (7) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – விடுநள் மன் கொல்லோ என்பதன்கண் உள்ள மன்னைப் பிரித்து ஆடுகமன் எனக் கூட்டுக. மன் ஈண்டு ஒழியிசை.  அதன் பொருள் அங்ஙனம் கூறுவாரைப் பெற்றிலேம் ஆதலால் யாங் கொண்ட அவா வீணே கழிந்தது என்பதாம்.

சொற்பொருள்:  விளையாடு ஆயமொடு ஓரை ஆடாது இளையோர் இல்லிடத்து இற்செறிந்திருத்தல் அறனும் அன்றே – விளையாடும் தோழியருடன் ஓரை விளையாடாதபடி இளைய மகளிரை இல்லத்தில் அடைத்து வைத்தல் அறமுடைய செயல் இல்லை (அறன் – அறம் என்பதன் போலி , அன்றே – ஏகாரம் அசைநிலை), ஆக்கமும் தேய்ம் என – அவர்களுடைய ஆக்கமும் அழியும் என்று, குறுநுரை சுமந்து நறு மலர் உந்தி பொங்கிவரு புது நீர் நெஞ்சு உண ஆடுகம் – சிறிய நுரைகளைச் சுமந்துகொண்டு நறுமணமான மலர்களைத் தள்ளிக்கொண்டு ஆற்றில் பொங்கிவரும் புது நீரில் மகிழ்ச்சி அடையும்படி விளையாடுவோம் (உண உண்ண என்பதன் விகாரம்), வல்லிதின் வணங்கிச் சொல்லுநர்ப் பெறினே – வற்புறுத்தி வணங்கிச் சொல்லுபவர்களைப் பெற்றால் (பெறினே – ஏகாரம் அசைநிலை), செல்க என விடுநள் மன் கொல்லோ – செல்வீராக என விடுவாளோ (கொல் – ஐயப்பொருட்டு, ஓகாரம் அசைநிலை), எல் உமிழ்ந்து உரவு உரும் உரறும் அரை இருள் நடுநாள் கொடி நுடங்கு இலங்கின மின்னி ஆடு மழை இறுத்தன்று – ஒளியைப் பரப்பி வலிய இடி முழங்குகின்ற இருளுடைய நடு இரவில் கொடி அசைந்தாற்போல் அசைந்து ஒளியுடன் மின்னும் மின்னலுடன் அசைகின்ற முகில்கள் மழையைப் பொழிகின்றன, அவர் கோடு உயர் குன்றே – தலைவனின் உச்சி உயர்ந்த மலை (குன்றே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 69, சேகம்பூதனார், முல்லைத் திணை – தலைவி சொன்னது
பல் கதிர் மண்டிலம் பகல் செய்து ஆற்றி
சேய் உயர் பெரு வரைச் சென்று அவண் மறைய
பறவை பார்ப்பு வயின் அடைய புறவில்
மா எருத்து இரலை மடப் பிணை தழுவ
முல்லை முகை வாய் திறப்ப பல் வயின்  5
தோன்றி தோன்றுபு புதல் விளக்கு உறாஅ
மதர்வை நல் ஆன் மாசு இல் தெண் மணி
கொடுங் கோல் கோவலர் குழலோடு ஒன்றி
ஐது வந்து இசைக்கும் அருள் இல் மாலை
ஆள் வினைக்கு அகன்றோர் சென்ற நாட்டும்  10
இனையவாகித் தோன்றின்
வினை வலித்து அமைதல் ஆற்றலர் மன்னே.

பாடல் பின்னணி:  தலைவன் பொருள்வயின் பிரிந்த வேளையில் தோழியிடம் தலைவி கூறியது.

பொருளுரை: பல கதிர்களையுடைய கதிரவன் பகலில் ஒளி தந்து, தன் பணியை முடித்து, மிக உயர்ந்த பெரிய மலையை அடைந்து அங்கு மறைய, பறவைகள் தங்கள் குஞ்சுகளுடன் கூட்டில் அடைய, காட்டில் கரிய கழுத்தையுடைய கலைமான்கள் தங்கள் இளமையுடைய பெண்மான்களைத் தழுவ, முல்லை அரும்புகள் மலர, பல இடங்களில் காந்தள் மலர்கள் தோன்றி புதர்களில் ஒளியுடன் திகழ, செருக்குடைய நல்ல பசுக்களின் மாசில்லாத தெளிவான மணிகள், வளைந்த கோலையுடைய இடையர்களின் குழலுடன் மெல்லிதாக வந்து இசைக்கும் அருள் இல்லாத மாலை வேளை, பொருள் ஈட்ட சென்றவர் சென்ற நாட்டிலும் இவ்வாறாகத் தோன்றினால், தலைவர் தான் மேற்கொண்ட செயலில் உறுதி கொண்டு தங்கியிருக்க மாட்டார் அங்கு.

குறிப்பு:  சேய் உயர் – ஒருபொருட் பன்மொழி, உறாஅ – செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது, கொடுங்கோல் – பொ. வே. சோமசுந்தரனார் உரை, நெடுநல்வாடை 3 – ஆ முதலியவற்றை அலைத்து அச்சுறுத்தும் கோலாகலான் கொடுங்கோல்.  இனி வளைந்த கோல் எனினுமாம், மன்னே – மன் கழிவுக்குறிப்பு, ஏகாரம் அசை.  மன் – கழிவே, ஆக்கம், ஒழியிசைக் கிளவி, என்று அம் மூன்று என்ப மன்னைச் சொல்லே (தொல்காப்பியம், இடையியல் 4).  பார்ப்பு – பார்ப்பும் பிள்ளையும் பறப்பவற்று இளமை (தொல்காப்பியம், மரபியல் 4).

சொற்பொருள்:  பல் கதிர் மண்டிலம் – பல கதிர்களையுடைய கதிரவன், பகல் செய்து ஆற்றி – பகலில் ஒளி தந்து தன் பணியை முடித்து, சேய் உயர் பெரு வரைச் சென்று – மிக உயர்ந்த பெரிய மலையை அடைந்து, அவண் மறைய – அவ்விடம் மறைய, பறவை பார்ப்பு வயின் அடைய – பறவைகள் தங்கள் குஞ்சுகளுடன் கூட்டில் அடைய, புறவில் மா எருத்து இரலை மடப் பிணை தழுவ – காட்டில் கரிய கழுத்தையுடைய கலைமான்கள் தங்கள் இளமையுடைய பெண்மான்களைத் தழுவ, முல்லை முகை வாய் திறப்ப – முல்லை அரும்புகள் மலர, பல் வயின் – பல இடங்களில், தோன்றி தோன்றுபு – காந்தள் மலர்கள் தோன்றி (தோன்றி – காந்தள்), புதல் விளக்கு உறாஅ – புதர்களில் ஒளியுடன் திகழவும், மதர்வை நல் ஆன் – செருக்குடைய நல்ல பசுக்களும், மாசு இல் தெண் மணி – மாசில்லாத தெளிவான மணிகள், கொடுங் கோல் கோவலர் – வளைந்த கோலை உடைய இடையர்கள், கொடிய கோலை உடைய இடையர்கள், குழலோடு ஒன்றி ஐது வந்து இசைக்கும் – குழலுடன் மெல்லிதாக வந்து இசைக்கும், அருள் இல் மாலை – அருள் இல்லாத மாலை வேளை, ஆள் வினைக்கு அகன்றோர் – பொருள் ஈட்ட சென்றவர், சென்ற நாட்டும் இனையவாகித் தோன்றின் – சென்ற நாட்டிலும் இவ்வாறாகத் தோன்றினால், வினை வலித்து அமைதல் ஆற்றலர் மன்னே – தலைவர் தான் மேற்கொண்ட செயலில் உறுதி கொண்டு தங்கியிருக்க மாட்டார் அங்கு

நற்றிணை 70, வெள்ளிவீதியார், மருதத் திணை – தலைவி குருகிடம் சொன்னது
சிறு வெள்ளாங்குருகே! சிறு வெள்ளாங்குருகே!
துறை போகு அறுவைத் தூ மடி அன்ன
நிறம் கிளர் தூவிச் சிறு வெள்ளாங்குருகே!
எம் ஊர் வந்து எம் உண் துறைத் துழைஇ,
சினைக் கெளிற்று ஆர்கையை அவர் ஊர்ப் பெயர்தி;  5
அனைய அன்பினையோ, பெரு மறவியையோ,
ஆங்கண் தீம் புனல் ஈங்கண் பரக்கும்
கழனி நல் ஊர் மகிழ்நர்க்கு என்
இழை நெகிழ் பருவரல் செப்பாதோயே?

பாடல் பின்னணி:  தலைவி வரைதல் வேட்கை கொண்டு குருகிடம் உரைத்தது.

பொருளுரைசிறிய வெள்ளை நிறக் குருகே!  சிறிய வெள்ளை நிறக் குருகே!  துவைக்கும் துறையில் துவைத்த தூய்மையான வெள்ளை ஆடைகளின் நிறத்தையுடைய சிறகுகளையுடைய சிறிய வெள்ளைக் குருகே!  எங்கள் ஊருக்கு வந்து குடிக்கும் நீர் துறைகளில் தேடி, சினைக் கெளிற்று மீன்களை நிறைய உண்டு விட்டு, அவருடைய ஊருக்குச் சென்று மறக்காமல் அன்புடன் ‘அவள் வருந்துகின்றாள்.  அவளுடைய வளையல்கள் நெகிழ்ந்து விழுகின்றன’ என்று நீரும் வயல்களும் நிறைந்த ஊரினனான என் தலைவனிடம் சொல்லாது இருக்கின்றாய் நீ.  சொல்ல மாட்டாயா?

குறிப்பு:  ஒளவை துரைசாமி உரை – மறைந்தவற் காண்டல் (தொல்காப்பியம், களவியல் 21) என்ற நூட்பாவுரையின்கண் இப்பாட்டினைக் காட்டி, இது காப்புச் சிறை மிக்க கையறு கிளவி என்பர் நச்சினார்க்கினியர்.  பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – ஆங்கண் தீம்புனல் ஈங்கண் பரக்குங் கழனி என்றது அவர் ஊரிலுள்ள இனிய புனலே இங்கு வருவதால் அங்கும் இரையைப் பெறுதற்கு இயலும் என்றும் கழனியின் புனல் ஈண்டு வருவதால் ஊரும் அணித்தேயாம் ஆதலின் வருந்தாதேகுதற்கு இயலும் என்றுங் கூறியதாம்.  அனைய அன்பினையோ என்றது எம்மூர் வந்துண்ட நன்றி மறவாமல் இனி அவரிடம் கூறுதற்குத் தக்க அத்தகைய அன்புடையயோ என்றதாம்.  ஒளவை துரைசாமி உரை – அவர் ஊர் ஆங்கட் கழனி ஆதாரமானாற்போல, ஈங்கு உறையும் யான் உயிர் தாங்கி வாழ்வதற்கு ஆங்கு அவர் வரவு ஆதாரம் என்றாளாயிற்று.  நற்றிணையின் தூது பாடல்கள் – தலைவியின் தூது, பறவை மூலமும் வண்டு மூலமும் தலைவனுக்கு அனுப்பியன – 54, 70, 102, 277, 376.  தோழி ஆந்தையிடம் கூறியது, தலைவன் கேட்கும்படிநற்றிணை 83.

சொற்பொருள்:  சிறு வெள்ளாங்குருகே – சிறிய வெள்ளை நிறக் குருகே (குருகு – நாரை), சிறு வெள்ளாங்குருகே – சிறிய வெள்ளை நிறக் குருகே, துறை போகு – நீர் துறைக்குப் போகும், அறுவை – துணிகள், தூமடி – தூய்மையான ஆடைகள், துவைத்த ஆடைகள், அன்ன – போல்,  நிறம் – நிறம்,  கிளர் – ஒளி, தூவி – சிறகு, சிறு வெள்ளாங்குருகே – சிறிய வெள்ளைக் குருகே, எம் ஊர் வந்து – என்னுடைய ஊருக்கு வந்து, எம் – எங்கள், உண்துறை – குடி நீர் துறையில், துழைஇ – தேடி (அளபெடை), சினைக் கெளிற்று – சினையுடையக் கெளிற்று மீனை, ஆர்கையை – நிரம்ப உண்டு, அவர் ஊர்ப் பெயர்தி – அவருடைய ஊருக்குச் சென்று, அனைய அன்பினையோ – அன்புடன், பெரு மறவியையோ – மறக்காமல், ஆங்கண் – there, தீம் புனல் – இனிய நீர், ஈங்கண் – இங்கே, பரக்கும் – படர்ந்த, கழனி நல் ஊர் – வயலுடைய நல்ல ஊர், மகிழ்நர்க்கு – என்னை மகிழ்வித்த, என் – என், இழை நெகிழ் – நகைகள் (வளையல்கள்) நெகிழ்ந்தன, பருவரல் – வருந்துகின்றேன், செப்பாதோயே – சொல்லாது இருக்கின்றாய் நீ (செப்பாதோயே – ஏகாரம் அசை நிலை)

நற்றிணை 71, வண்ணப்புறக் கந்தரத்தனார், பாலைத் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
மன்னாப் பொருள் பிணி முன்னி, ‘இன்னதை
வளை அணி முன் கை நின் இகுளைக்கு உணர்த்து’ எனப்
பல் மாண் இரத்திர் ஆயின், ‘சென்ம்’ என
விடுநள் ஆதலும் உரியள்; விடினே,
கண்ணும் நுதலும் நீவி, முன் நின்று,  5
பிரிதல் வல்லிரோ ஐய, செல்வர்
வகை அமர் நல் இல் அக இறை உறையும்
வண்ணப் புறவின் செங்கால் சேவல்
வீழ் துணைப் பயிரும் கையறு முரல் குரல்
நும் இலள் புலம்பக் கேட்டொறும்  10
பொம்மல் ஓதி பெருவிதுப்புறவே?

பாடல் பின்னணி:  தலைவனைத் தோழி செலவு அழுங்குவித்தது.

பொருளுரைநிலையில்லாத பொருள் மேல் உள்ள பற்றினால் நீவிர் பிரிய இருக்கும் இந்நிலைமையை “வளையல்களை முன்கையில் அணிந்த உன் தோழிக்கு உணர்த்துவாயாக” எனப் பலமுறை மாட்சிமையுடன் என்னிடம் வேண்டினீர்.  ஆதலால், “நீவிர் செல்வீராக” என அவள் நும்மைச் செல்ல விடுவாளாயினும் விடுவாள். அவ்வாறு அவள் நும்மை செல்ல விட்டாலும் அவளுடைய கண்களையும் நெற்றியையும் தடவிக் கொடுத்து அவளைப் பிரிந்து போகும் வலிமை உடையீரா ஐயா, செல்வந்தர்களின் பல அறைகளைக் கொண்ட சிறந்த இல்லத்தின் உள் இறைப்பக்கத்தில் வாழும் நிறங்கள் உடைய புறாவின் சிவந்த கால்களையுடைய ஆண், தான் விரும்பும் துணையைக் காதலால் அழைக்கும் செயலற்று ஒலிக்கின்ற ஓசையைக் கேட்கும்பொழுதெல்லாம், பொலிவு மிகுந்த கூந்தலையுடைய தலைவி உம்முடைய பிரிவினால் பெரிதாக நடுங்கி வருந்தும்படி?

குறிப்பு:  சென்ம் (3) – ஒளவை துரைசாமி உரை – சென்மென செல்லும் என்னும் ஏவல் கண்ணிய முன்னிலை வினை.  ஈற்றுமிசை உகரம் மெய்யொடும் கெட்டது.  இறை – இல்லத்தின் முற்றத்தில் கூரைக்குக் கீழ் உள்ள, மரப்பலகைகள் கொண்ட பகுதி.  குருவிகள், புறாக்கள் ஆகியவை இந்த மரப்பலகைகளில் அமர்வது உண்டு.  இந்தப் பலகைகளில் கூடு கட்டுவதும் உண்டு.  சேவல் – சேவல் பெயர்க்கொடை சிறகொடு சிவணும் மா இருந் தூவி மயில் அலங்கடையே (தொல்காப்பியம், மரபியல் 49).

சொற்பொருள்:  மன்னாப் பொருள் பிணி முன்னி இன்னதை வளை அணி முன் கை நின் இகுளைக்கு உணர்த்து எனப் பல் மாண் இரத்திர் ஆயின் – நிலையில்லாத பொருள் மேல் உள்ள பற்றினால் பிரிய இருக்கும் இந்நிலைமையை வளையல்களை முன்கையில் அணிந்த உன் தோழிக்கு உணர்த்துவாயாக எனப் பலமுறை மாட்சிமையுடன் வேண்டினீர் ஆதலால், சென்ம் என விடுநள் ஆதலும் உரியள் – நீவிர் செல்வீராக என செல்ல விடுவாளாயினும் விடுவாள், விடினே கண்ணும் நுதலும் நீவி முன் நின்று பிரிதல் வல்லிரோ ஐய – அவ்வாறு அவள் நும்மைச் செல்ல விட்டாலும் அவளுடைய கண்களையும் நெற்றியையும் தடவி அவளைப் பிரிந்து போகும் வலிமை உடையீரா ஐயா (விடினே – ஏகாரம் அசைநிலை, வல்லிரோ – ஓகாரம் ஐயப்பொருட்டு), செல்வர் வகை அமர் நல் இல் அக இறை உறையும் வண்ணப் புறவின் செங்கால் சேவல் வீழ் துணைப் பயிரும் கையறு முரல் குரல் நும் இலள் புலம்பக் கேட்டொறும் பொம்மல் ஓதி பெருவிதுப்புறவே – செல்வந்தர்களின் பல அறைகளைக் கொண்ட சிறந்த இல்லத்தின் உள் இறைப்பக்கத்தில் வாழும் நிறங்கள் உடைய புறாவின் சிவந்த கால்களையுடைய ஆண் தான் விரும்பும் துணையைக் காதலால் அழைக்கும் செயலற்று ஒலிக்கின்ற ஓசையைக் கேட்கும்பொழுதெல்லாம் பொலிவு மிகுந்த கூந்தலையுடைய தலைவி பெரிதாக நடுங்கி வருந்தும்படி (பெருவிதுப்புறவே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 72, இளம்போதியார், நெய்தல் திணை – தோழி தலைவியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
‘பேணுப பேணார் பெரியோர்’ என்பது
நாணு தக்கன்று அது காணுங்காலை;
உயிர் ஓரன்ன செயிர் தீர் நட்பின்
நினக்கு யான் மறைத்தல் யாவது? மிகப் பெரிது
அழிதக்கன்றால் தானே, கொண்கன்,  5
‘யான் யாய் அஞ்சுவல்’ எனினும், தான் எற்
பிரிதல் சூழான் மன்னே; இனியே
கானல் ஆயம் அறியினும், ‘ஆனாது
அலர் வந்தன்று கொல்’ என்னும்; அதனால்
‘புலர்வது கொல் அவன் நட்பு’ எனா  10
அஞ்சுவல் தோழி, என் நெஞ்சத்தானே.

பாடல் பின்னணி:  தோழி சிறைப்புறமாகத் தலைவிக்கு உரைப்பாளாய்ச் சொல்லியது.  வரைவு கடாயது.

பொருளுரைபேண வேண்டியவற்றைப் பேண மாட்டார்கள் பெரியவர்கள் என்பது நாணுவதற்குத் தக்கது.  அதனை ஆராயும்பொழுது, உயிரை ஒத்த குற்றமில்லாத நட்பினை உடைய நின்பால் நான் எவ்வாறு அதை மறைப்பது?  அது மிகப் பெரிய வருத்தத்திற்கு உரியதாகும்.  முன்பு, ” தாய்க்கு நான் அஞ்சுகிறேன்.  அதனால் அகன்று அகன்று செல்வாயாக” என்று நான் கூறியபோதும், நம்மை விட்டுப் பிரிவதைத் தலைவன் கருதவில்லை.  இப்பொழுது, கடற்கரைச் சோலையில் விளையாடும் தோழியர் கூட்டம் அறிந்தாலும், விடாது அலர் வருமோ என அஞ்சுகின்றான்.  அதனால், அவனுடைய நட்பு இல்லாது போய்விடுமோ என்று, நான் அஞ்சுகிறேன் தோழி, என் நெஞ்சில்.

குறிப்பு:  புலவரின் பெயர் – ஒளவை துரைசாமி உரை – இவர் பெயர் அச்சுப்பிரதியிலும் தமிழ்ச்சங்க ஏட்டிலும் இளம்போதியார் என்று காணப்படுகின்றது.  ஏனை ஏடுகளில் இளம்பூதி என்பதே உளது.  மேலும், பூதி என்னும் பெயர் சங்க காலத்திலும் அதனையடுத்துப் போந்த கல்வெட்டுக்கள் காலத்திலும் தமிழர்களிடையே மக்கட் பெயராகப் பயில வழங்கினமையின் பூதி என்ற பாடமே பொருத்தமாக உள்ளது. வெண்பூதியார், வெண்மணிப்பூதியார், அப்பூதியார் எனப் பலர் இருந்திருப்பதைத் தமிழ்ப் பயின்றோர் நன்கு அறிவர்.  ஒளவை துரைசாமி உரை – ‘மறைந்தவற் காண்டல்’ (தொல்காப்பியம், களவியல் 21) என்ற நூற்பாவின்கண் தான் காட்டும் எண்வகை மெய்ப்பாட்டினுள் ‘அச்சத்தின் அகறல்’ என்பதற்கு இப்பாட்டினை எடுத்தோதுவர் இளம்பூரணர்.  ‘உயிராக்காலத்து உயிர்த்தல்’ வகையாக இப்பாட்டினைக் காட்டுவர் நச்சினார்க்கினியர்.  அழிதக்கன்றால் (5) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – மானக் கேடாக உள்ளது, ஒளவை துரைசாமி உரை – வருத்தம் தருவது.  மன் – கழிவே, ஆக்கம், ஒழியிசைக் கிளவி, என்று அம் மூன்று என்ப மன்னைச் சொல்லே (தொல்காப்பியம், இடையியல் 4).

சொற்பொருள்:  பேணுப பேணார் பெரியோர் என்பது நாணு தக்கன்று – பேண வேண்டியவற்றைப் பேண மாட்டார்கள் பெரியவர்கள் என்பது நாணுவதற்குத் தக்கது, அது காணுங்காலை – அதனை ஆராயும்பொழுது, உயிர் ஓரன்ன செயிர் தீர் நட்பின் நினக்கு யான் மறைத்தல் யாவது – உயிரை ஒத்த குற்றமில்லாத நட்பினை உடைய நின்பால் நான் எவ்வாறு மறைப்பது, மிகப் பெரிது அழிதக்கன்றால் தானே – மிகப் பெரிய வருத்தத்திற்கு உரியதாகும் (அழிதக்கன்றால் – ஆல் அசைநிலை), தானே – தான், ஏகாரம் அசைநிலைகள்), கொண்கன் – தலைவன், யான் யாய் அஞ்சுவல் எனினும் – நான் தாய்க்கு அஞ்சுகிறேன் என்றாலும் (அஞ்சுவல் – தன்மையொருமை வினைமுற்று), தான் எற் பிரிதல் சூழான் – நம்மை விட்டுப் பிரிவதை அவன் கருதவில்லை, மன்னே – முன்பு, அது கழிந்தது, மன் கழிவுக்குறிப்பு, ஏகாரம் அசைநிலை, இனியே – இப்பொழுது, கானல் ஆயம் அறியினும் – கடற்கரைச் சோலையில் விளையாடும் தோழியர் கூட்டம் அறிந்தாலும், ஆனாது அலர் வந்தன்று கொல் என்னும் – விடாது அலர் வருமோ என அஞ்சுகிறான் (கொல் – ஐயப்பொருட்டு வந்தது), அதனால் – அதனால், புலர்வது கொல் அவன் நட்பு எனா – இல்லாது போய்விடுமோ அவனுடைய நட்பு என்று (கொல் – ஐயப்பொருட்டு வந்தது), அஞ்சுவல் தோழி – நான் அஞ்சுகிறேன் தோழி (அஞ்சுவல் – தன்மையொருமை வினைமுற்று), என் நெஞ்சத்தானே – என் நெஞ்சில் (நெஞ்சத்தானே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 73, மூலங்கீரனார், பாலைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
வேனில் முருக்கின் விளை துணர் அன்ன
மாணா விரல வல்வாய்ப் பேஎய்
மல்லல் மூதூர் மலர்ப் பலி உணீஇய,
மன்றம் போழும் புன்கண் மாலை,
தம்மொடும் அஞ்சும் நம் இவண் ஒழியச்  5
செல்ப என்ப தாமே, செவ்வரி
மயிர் நிரைத்தன்ன வார் கோல் வாங்கு கதிர்ச்
செந்நெல் அம் செறுவின் அன்னம் துஞ்சும்
பூக் கெழு படப்பைச் சாய்க்காடு அன்ன என்
நுதல் கவின் அழிக்கும் பசலையும்,  10
அயலோர் தூற்றும் அம்பலும் அளித்தே.

பாடல் பின்னணி:  செலவு குறிப்பறிந்து வேறுபட்ட தலைவி தோழியிடம் சொல்லியது. 

பொருளுரைவேனில் காலத்தில் மலரும் முருக்க மரத்தின் முதிர்ந்த உலர்ந்த மலர் கொத்துக்கள் போன்ற மாண்பில்லாத விரல்களையும் வலிய வாயினையும் உடைய பேயானது பழமையான ஊரின்கண் கடவுளுக்குப் படைக்கப்படும் மலர்களுடன் சேர்ந்த பலி உணவை உண்ணும்பொருட்டு, ஊர் மன்றத்தைப் பிளந்து வரும் துன்பம் தரும் மாலை நேரத்தில், தலைவருடன் இருக்கும்பொழுதும் அஞ்சும் நம்மை இவ்விடத்தில் தனியே இருக்கும்படி நீங்கிச் செல்ல எண்ணுகிறார் என்கின்றனர், செவ்விதான மெல்லிய மயிரை ஒழுங்காக வைத்தாற்போல் நீண்ட திரண்ட வளைந்த கதிர்களையுடைய செந்நெல்லின் அழகிய வயல்களில் அன்னப்பறவைகள் உறங்கும் மலர்கள் நிறைந்த தோப்புக்களை உடைய சாய்க்காடு போன்ற என் நெற்றியின் அழகை அழிக்கும் பசலையையும் அயலவர்கள் கூறும் பழிமொழிகளையும் நமக்கு அளித்து.

குறிப்பு:  வேனில் முருக்கின் விளை துணர் அன்ன (1) – ஒளவை துரைசாமி உரை – வேனிற் காலத்தில் மலரும் முருக்கமரத்தின்கண் தோன்றும் பூங்கொத்துப் போன்ற, பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – வேனிற் காலத்துச் செம்முருக்கின் பூங்கொத்தில் காய்த்துப் பழுத்து முற்றிய நெற்றுப் போன்ற.  செவ்வரி மயிர் நிரைத்தன்ன (6–7) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – செவ்விய ஐதாகிய மயிரை நிரைத்து வைத்தாற்போன்று, ஒளவை துரைசாமி உரை – செவ்வரி நாரையின் மயிரை நிரல்பட வைத்தாற் போல, கு. வெ. பாலசுப்பிரமணியன் உரை – சிவந்த மெல்லிய மயிரை நிரைத்து வைத்தாற்போன்ற.  இறைச்சி (1) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – பேய் மலர்ப்பலி உண்ண வேண்டி மன்றத்தைப் புடைத்து எழுமென்றது, பசலையானது என் நலத்தை உண்ண வேண்டி நெஞ்சைப் புடைத்து நெற்றியில் எழுமென்றதாம்.  இறைச்சி (2) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – செறுவில் அன்னம் துஞ்சுமென்றது யானும் சேக்கையின்கண்ணே அவர் மார்பில் துஞ்சியிருந்தேன்.  இப்பொழுது அஃது இல்லை போலும் என்று இரங்கியதாம்.  வரலாறு:  சாய்க்காடு.  மல்லல் – மல்லல் வளனே (தொல்காப்பியம், உரியியல் 7).  வார்தல் போகல் ஒழுகல் மூன்றும் நேர்பும் நெடுமையும் செய்யும் பொருள (தொல்காப்பியம், உரியியல் 21).

சொற்பொருள்:  வேனில் முருக்கின் விளை துணர் அன்ன மாணா விரல வல்வாய்ப் பேஎய் மல்லல் மூதூர் மலர்ப் பலி உணீஇய மன்றம் போழும் புன்கண் மாலை – வேனில் காலத்தில் மலரும் முருக்க மரத்தின் முதிர்ந்த உலர்ந்த மலர் கொத்துக்கள் போன்ற மாண்பில்லாத விரல்களையுடை வலிய வாயையுடைய பேய் பழமையான ஊரின்கண் கடவுளுக்குப் படைக்கப்படும் மலர்களுடன் சேர்ந்த பலி உணவை உண்ணும்பொருட்டு ஊர் மன்றத்தைப் பிளந்து வரும் துன்பம் தரும் மாலை நேரத்தில் (பேஎய் – செய்யுளிசை அளபெடை, உணீஇய – அளபெடை), தம்மொடும் அஞ்சும் – தலைவருடன் இருக்கும்பொழுதும் அஞ்சும், நம் இவண் ஒழியச் செல்ப என்ப தாமே – அவர் நம்மை நீங்கிச் செல்ல எண்ணுகிறார் என்கின்றனர் அறிந்தவர்கள் (தாமே – ஏகாரம் பிரிநிலை), செவ்வரி மயிர் நிரைத்தன்ன வார் கோல் வாங்கு கதிர்ச் செந்நெல் அம் செறுவின் அன்னம் துஞ்சும் பூக் கெழு படப்பைச் சாய்க்காடு அன்ன என் நுதல் கவின் அழிக்கும் பசலையும் அயலோர் தூற்றும் அம்பலும் அளித்தே – செவ்விதான மெல்லிய மயிரை ஒழுங்காக வைத்தாற்போல் நீண்ட திரண்ட வளைந்த கதிர்களையுடைய செந்நெல்லின் அழகிய வயல்களில் அன்னப்பறவைகள் உறங்கும் மலர்கள் நிறைந்த தோப்புக்களை உடைய சாய்க்காடு போன்ற என் நெற்றியின் அழகை அழிக்கும் பசலையையும் அயலவர்கள் கூறும் பழிமொழிகளையும் அளித்து (அளித்தே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 74, உலோச்சனார், நெய்தல் திணை – தலைவி பாணனிடம் சொன்னது
வடிக் கதிர் திரித்த வல் ஞாண் பெருவலை
இடிக் குரல் புணரிப் பௌவத்து இடுமார்,
நிறையப் பெய்த அம்பி, காழோர்
சிறை அருங் களிற்றின், பரதவர் ஒய்யும்
சிறு வீ ஞாழல் பெருங்கடல் சேர்ப்பனை,  5
‘ஏதிலாளனும்’ என்ப; போது அவிழ்
புது மணல் கானல் புன்னை நுண் தாது,
கொண்டல் அசை வளி தூக்குதொறும், குருகின்
வெண்புறம் மொசிய வார்க்கும், தெண் கடல்
கண்டல் வேலிய ஊர், அவன்  10
பெண்டு என அறிந்தன்று; பெயர்த்தலோ அரிதே.

பாடல் பின்னணி:  நெய்தத்துள் மருதம்.  தலைவன் பாணனைத் தலைவியின் ஊடலைத் தீர்க்க அனுப்புகிறான்.  தலைவன் உறவுகொண்ட பரத்தையைப் பற்றி இவ்வூர் அறிந்தது எனக் கூறி வாயில் மறுத்தது.

பொருளுரைதிருத்தமாகச் செய்யப்பட்ட கதிரால் திரித்த வலிமையான கயிற்றினால் பின்னப்பட்ட பெரிய வலையை, இடிபோல் முழங்கும் அலைகளையுடைய கடலில் வீசி எறியும்பொருட்டு, நிறையும்படி அவ்வலை ஏற்றப்பட்ட படகினை, கோல் வைத்திருக்கும் யானைப்பாகர்கள் பிணித்துச் செலுத்தும் களிற்று யானைகளைப் போல் மீனவர்கள் செலுத்தும், சிறிய மலர்களைக் கொண்ட ஞாழல் மரங்கள் உடைய பெரிய கடற்கரைத் தலைவனை “அயலான் ஆகினான்” எனக் கூறுகின்றனர், மலர்கள் மலர்கின்ற புதிய மணலுடைய கடற்கரைச் சோலையில் உள்ள புன்னைமர மலர்களின் நுண்ணியத் தாது கீழ்க்காற்று வீசும்போதெல்லாம் நாரையின் வெள்ளை முதுகில் சென்று படிந்து முதுகை மறைக்கும், தெளிந்த கடலின் கடற்கரையில் உள்ள தாழையை வேலியாகக் கொண்ட ஊரின் மக்கள்.  அவன் உறவுக்கொண்டிருக்கும் பரத்தையை “அவனுடைய பெண்டு” என அவர்கள் அழைக்கின்றனர்.  அந்த எண்ணத்தை மாற்றுவது அரிது.  ஆதலால், அவன்பொருட்டு வாயில்வேண்டி இங்கு நீ வராதே.

குறிப்பு:  இறைச்சி – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – கீழ்க்காற்று மோதுதலாலே புன்னை நுண் தாது குருகின் மேல் உதிர்ந்து அதனை மறைக்குமென்றது, தலைவன் பிரிதலினாகிய காம நோயாலே பசலை தோன்றி என் மெய்ம் முழுது மூடி மறைத்து வேறுபடுத்தியது என்றதாம். உள்ளுறை – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – பரதவர் தாம் திரித்த பெறுவலையைக் கடலில் இட்டு மீன் பிடிக்க எண்ணித் தோணியில் ஏற்றிச் செலுத்துவது என்றதனாலே தலைவன் தான் கற்ற சூழ்ச்சியை ஒரு தூது வழியே விடுத்து என்னை வயமாக்க எண்ணி அச்சூழ்ச்சியை நினக்குக் கற்பித்து நின்னை வர விடுத்தான் என்பதாம்.  களிற்றின் என்ற ஏனை உவமம் பரதவர் வலையைத் தோணியில் ஏற்றிச் செலுத்துமென்ற உள்ளுறை உவமத்தைத் தருகின்ற கருப்பொருட்குச் சிறப்புக் கொடுத்து நின்றது.

சொற்பொருள்:  வடிக் கதிர் திரித்த வல் ஞாண் பெருவலை இடிக் குரல் புணரிப் பௌவத்து இடுமார் நிறையப் பெய்த அம்பி – திருத்தமாகச் செய்யப்பட்ட கதிரால் திரித்த வலிமையான கயிற்றால் பின்னப்பட்ட பெரிய வலையை இடிபோல் முழங்கும் அலைகளையுடைய கடலில் வீசி எறியும்பொருட்டு நிறையும்படி ஏற்றப்பட்ட படகினை (கதிர் – கயிற்றைத் திரிக்கும் கருவி), காழோர் சிறை அருங் களிற்றின் பரதவர் ஒய்யும் – கோல் வைத்திருக்கும் யானைப்பாகர்கள் பிணித்துச் செலுத்தும் களிற்று யானைகளைப் போல் மீனவர்கள் செலுத்தும் (களிற்றின் – இன் உருபு ஒப்புப் பொருளது, ஐந்தாம் வேற்றுமை உருபு), சிறு வீ ஞாழல் பெருங்கடல் சேர்ப்பனை ஏதிலாளனும் என்ப – சிறிய மலர்களையுடைய ஞாழல் மரங்கள் உடைய பெரிய கடற்கரைத் தலைவனை அயலான் ஆகினான் எனக் கூறுகின்றனர் (ஞாழல் – புலிநகக் கொன்றை, Cassia Sophera, ஏதிலாளனும் – உம்மை இசைநிறை), போது அவிழ் புது மணல் கானல் புன்னை நுண் தாது கொண்டல் அசை வளி தூக்குதொறும் குருகின் வெண்புறம் மொசிய வார்க்கும் – மலர்கள் மலர்கின்ற புதிய மணலுடைய கடற்கரைச் சோலையில் உள்ள புன்னைமர மலர்களின் நுண்ணியத் தாது கீழ்க்காற்று வீசும்போதெல்லாம் நாரையின் வெள்ளை முதுகில் சென்று படிந்து மறைக்கும், தெண் கடல் கண்டல் வேலிய ஊர் – தெளிந்த கடலின் கடற்கரையில் உள்ள தாழையை வேலியாகக் கொண்ட ஊரின் மக்கள் (ஊர் – ஆகுபெயர் அங்கு வாழும் மக்களுக்கு), அவன் பெண்டு என அறிந்தன்று – பரத்தையை அவனுடைய பெண்டு என அழைக்கின்றனர், பெயர்த்தலோ அரிதே – அதை மாற்றுவது அரிது (அரிதே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 75, மாமூலனார், குறிஞ்சித் திணை – தலைவன் தோழியிடம் சொன்னது
நயன் இன்மையின், பயன் இது என்னாது,
பூம்பொறிப் பொலிந்த அழல் உமிழ் அகன் பைப்
பாம்பு உயிர் அணங்கியாங்கும் ஈங்கு இது
தகாஅது, வாழியோ குறுமகள்! நகாஅது
உரைமதி, உடையும் என் உள்ளம், சாரல்  5
கொடு வில் கானவன் கோட்டுமா தொலைச்சிப்
பச்சூன் பெய்த பகழி போல
சேயரி பரந்த ஆய் இதழ் மழைக் கண்
உறாஅ நோக்கம் உற்ற என்
பைதல் நெஞ்சம் உய்யுமாறே.  10

பாடல் பின்னணி:  தலைவி கிடைத்தற்கு அறியளாம் என அவளைச் சேட்படுத்திக் கூறியத் தோழியிடம் கூறியது.

பொருளுரைஇளையமகளே!  நீ நீடு வாழ்வாயாக! இரக்கம் இல்லாமல், இது தான் பயன் என்றும் கருதாமல், அழகிய பொறிகளையும் நஞ்சாகிய தீயைக் கக்கும் அகன்ற படத்தையுமுடைய பாம்பு உயிர்களை வருத்தினாற்போல் என்னைத் துன்புறுத்தும் உன் சொற்கள் பொருத்தமானவை இல்லை.  மலைச்சரிவில் வளைந்த (கொடிய) வில்லையுடைய வேட்டுவன் கொம்புகளையுடைய பன்றியைக் கொன்று அதன் பசிய தசையில் பாய்ச்சின அம்பைப் போலச் சிவந்த வரிகள் படர்ந்த அழகிய பூ இதழ் போன்ற குளிர்ச்சி பொருந்திய கண்களின் கடைப்பகுதியால் பார்க்கும் பார்வையால் தாக்குண்ட என் வருந்தும் நெஞ்சம் வருத்தம் நீங்கிப் பிழைக்கும்படி, நகைக்காமல் கூறுவாயாக.  நீ நகைப்பின் என் உள்ளம் பெரிதும் வருந்தும்.

குறிப்பு:  ஒளவை துரைசாமி உரை – ‘பண்பிற் பெயர்ப்பினும்’ (தொல்காப்பியம், களவியல் 12) என்ற நூற்பாவின்கண் ‘அன்புற்று நகினும்’ என்றதற்கு இப்பாட்டினைக் காட்டுவர் இளம்பூரணர்.  ‘இஃது அன்புற்று நக்குழித் தலைவன் கூறியது’ என்பர் நச்சினார்க்கினியர்.  கோட்டுமா (6) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – கோட்டினையுடைய பன்றி, ஒளவை துரைசாமி உரை – கொம்புகளையுடைய யானை.  ஒப்புமை:  நற்றிணை 13 – ஏனல் காவலர் மா வீழ்த்துப் பறித்த பகழி அன்ன சேயரி மழைக் கண்.  உறாஅ நோக்கம் (9) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – செவ்வனே பாராது கடைக்கண்ணால் நோக்கும் நோக்கம், ஒளவை துரைசாமி உரை – பொது நோக்கம்.  கானவர் பன்றி வேட்டையாடல் – நற்றிணை 75, 82, 119, 336, அகநானூறு 248.  மதி – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம், சொல்லதிகாரம், இடையியல் 26).  பறித்த பகழி அன்ன – நற்றிணை 13 – மா வீழ்த்துப் பறித்த பகழி அன்ன சேயரி மழைக் கண், நற்றிணை 75 – கொடு வில் கானவன் கோட்டுமா தொலைச்சிப் பச்சூன் பெய்த பகழி போல சேயரி பரந்த மா இதழ் மழைக் கண், குறுந்தொகை 272 – சிலை மாண் கடு விசைக் கலை நிறத்து அழுத்திக் குருதியொடு பறித்த செங்கோல் வாளி மாறு கொண்டன்ன உண்கண்.

சொற்பொருள்:  நயன் இன்மையின் பயன் இது என்னாது – இரக்கம் இல்லாமல் இது பயன் என்று கருதாமல், பூம்பொறிப் பொலிந்த அழல் உமிழ் அகன் பைப் பாம்பு உயிர் அணங்கியாங்கும் – அழகிய பொறிகளையும் நஞ்சாகிய தீயைக் கக்கும் அகன்ற படத்தையுமுடைய பாம்பு உயிர்களை வருத்தினாற்போல், ஈங்கு இது தகாஅது – உன் சொற்கள் பொருந்துவன இல்லை (தகாஅது – செய்யுளிசை அளபெடை), வாழியோ – நீ நீடு வாழ்வாயாக, இகழ்ச்சிக் குறிப்புமாம் (ஓகாரம் அசைநிலை), குறுமகள் – இளையமகளே (அண்மை விளி) நகாஅது உரைமதி – நகைக்காமல் கூறுவாயாக (நகாஅது – செய்யுளிசை அளபெடை, மதி முன்னிலையசை), உடையும் என் உள்ளம் – என் மனம் துன்புறும், சாரல் கொடு வில் கானவன் கோட்டுமா தொலைச்சிப் பச்சூன் பெய்த பகழி போல சேயரி பரந்த ஆய் இதழ் மழைக் கண் உறாஅ நோக்கம் உற்ற – மலைச்சரிவில் வளைந்த (கொடிய) வில்லையுடைய வேட்டுவன் கொம்புகளையுடைய (தந்தங்களையுடைய) பன்றியைக் கொன்று (யானையைக் கொன்று) அதன் பசிய தசையில் பாய்ச்சின அம்பைப் போலச் சிவந்த வரிகள் படர்ந்த அழகிய பூ இதழ்போன்ற குளிர்ச்சி பொருந்திய கண்களின் கடைப்பகுதியால் பார்க்கும் பார்வையால் தாக்குண்ட (பச்சூன் = பசுமை + ஊன், உறாஅ – அளபெடை), என் பைதல் நெஞ்சம் உய்யுமாறே – என் வருந்தும் நெஞ்சம் வருத்தம் நீங்கிப் பிழைக்கும்படி (உய்யுமாறே – மாறு ஏதுப்பொருள் (காரணப் பொருள்) தரும் இடைச்சொல், ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 76, அம்மூவனார், பாலைத் திணை – தலைவன் தலைவியிடம் சொன்னது
வருமழை கரந்த வால் நிற விசும்பின்
நுண் துளி மாறிய உலவை அம் காட்டு
ஆல நீழல் அசைவு நீக்கி,
அஞ்சுவழி அஞ்சாது, அசைவழி அசைஇ,
வருந்தாது ஏகுமதி, வால் இழைக் குறுமகள்!  5
இம்மென் பேர் அலர் நும் ஊர்ப் புன்னை
வீ மலர் உதிர்ந்த தேன் நாறு புலவின்
கானல் வார் மணல் மரீஇ,
கல் உறச் சிவந்த நின் மெல் அடி உயற்கே.

பாடல் பின்னணி:  உடன்போக்கின் பொழுது தலைவன் தலைவியிடம் உரைத்தது.

பொருளுரைதூய அணிகலன்களை அணிந்த இளைய பெண்ணே!  மெல்லிய பெரிய பழிச் சொற்களைக் கூறுகின்ற உன் ஊரில் உள்ள புன்னை மரங்களின் காம்பு ஒடிந்த மலர்கள் கீழே உதிர்ந்ததால் அவற்றின் தேன் மணம் வீசுகின்ற புலால் நாற்றமுடைய கடற்கரைச் சோலையில் மணலில் நடந்த நீ, இப்பொழுது கற்களில் நடப்பதால் சிவந்த உன்னுடைய மென்மையான அடிகள் வருந்தாது இருக்கும் பொருட்டு, வருகின்ற மழை பெய்யாது வெள்ளை நிற வானில் நுண்ணிய நீர்த்துளிகள் இல்லாது ஆகிய காற்று சுழன்று வீசும் அழகிய காட்டில் ஆல மரத்தின் நிழலின் தங்கி இளைப்பாறி, அஞ்சவேண்டிய இடங்களில் அஞ்சாதுத் தங்கி, தங்க வேண்டிய இடங்களில் தங்கி, வருந்தாமல் என்னுடன் வருவாயாக,

குறிப்பு:  வீ மலர் (17) – வினைத்தொகை, இருபெயரொட்டுமாம்.  மதி – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம், சொல்லதிகாரம், இடையியல் 26).  வார் – வார்தல் போகல் ஒழுகல் மூன்றும் நேர்பும் நெடுமையும் செய்யும் பொருள (தொல்காப்பியம், உரியியல் 21).  வீ மலர் (7) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – காம்பு இற்ற மலர்,  ஒளவை துரைசாமி உரை – மலர்கள் (இருபெயரொட்டுப் பண்புத் தொகை).

சொற்பொருள்:  வருமழை கரந்த வால் நிற விசும்பின் நுண் துளி மாறிய உலவை அம் காட்டு ஆல நீழல் அசைவு நீக்கி – வருகின்ற மழை பெய்யாது வெள்ளை நிற வானில் நுண்ணிய நீர்த்துளிகள் இல்லாது ஆகிய காற்று சுழன்று வீசும் அழகிய காட்டில் ஆல மரத்தின் நிழலின் தங்கி இளைப்பாறி (கரந்த – ஒளித்த, நீழல் – நிழல் என்பதன் நீட்டல் விகாரம், அம் – அழகு, சாரியையுமாம்),  அஞ்சுவழி அஞ்சாது அசைவழி அசைஇ –அஞ்சவேண்டிய இடங்களில் அஞ்சாதுத் தங்கி தங்க வேண்டிய இடங்களில் தங்கி (அசைஇ – அளபெடை), வருந்தாது ஏகுமதி – வருந்தாமல் என்னுடன் வருவாயாக (மதி – முன்னிலை அசை), வால் இழைக் குறுமகள் – தூய அணிகலன்களை அணிந்த இளைய பெண்ணே, இம்மென் பேர் அலர் நும் ஊர்ப் புன்னை வீ மலர் உதிர்ந்த தேன் நாறு புலவின் கானல் வார் மணல் மரீஇ கல் உறச் சிவந்த நின் மெல் அடி உயற்கே – மெல்லிய பெரிய பழிச் சொற்களைக் கூறுகின்ற உன் ஊரில் உள்ள புன்னை மரங்களின் காம்பு ஒடிந்த மலர்கள் உதிர்ந்ததால் தேன் மணம் வீசுகின்ற புலால் நாற்றமுடைய கடற்கரைச் சோலையில் மணலில் நடந்த நீ இப்பொழுது கற்களில் நடப்பதால் சிவந்த உன்னுடைய மென்மையான அடிகள் வருந்தாது இருக்கும் பொருட்டு (ஊர் – ஆகுபெயர், ஊரில் உள்ளவர்களைக் குறிக்கின்றது, மரீஇ – செய்யுளிசை அளபெடை, இம்மென் – ஒலிக்குறிப்பு, புன்னை  – laurel tree flowers, Mast wood Tree, Calophyllum inophyllum, உயற்கே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 77, கபிலர், குறிஞ்சித் திணை – தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது
மலையன் மா ஊர்ந்து போகி, புலையன்
பெருந்துடி கறங்கப் பிற புலம் புக்கு அவர்
அருங்குறும்பு எருக்கி அயா உயிர்த்தாஅங்கு
உய்த்தன்று மன்னே, நெஞ்சே! செவ் வேர்ச்
சினைதொறும் தூங்கும் பயங்கெழு பலவின்  5
சுளையுடை முன்றில், மனையோள் கங்குல்
ஒலி வெள்ளருவி ஒலியின் துஞ்சும்
ஊரலஞ்சேரிச் சீறூர், வல்லோன்
வாள் அரம் பொருத கோள் நேர் எல் வளை
அகன் தொடி செறித்த முன் கை ஒண்ணுதல், 10
திதலை அல்குல், குறுமகள்
குவளை உண்கண் மகிழ் மட நோக்கே.

பாடல் பின்னணி:  தோழியை மதியுடம்படுக்கச் சென்ற தலைவன், அவளிடம் உரையாடுங்கால் ‘இத் தலைவன் குறையுடையவன்’ எனக் கருதிய தோழி அவனை ஆராய்ந்தாள்.  அதைப் பொறுத்துக் கொள்ளுமாறு, தலைவன் தன் நெஞ்சை வேண்டியது.

பொருளுரைஎன் நெஞ்சே!  சிவந்த வேர்களில் உள்ள கிளைகள்தோறும் தொங்கும் பயன்பொருந்திய பழங்கள் நிறைந்த வேர்ப்பலாவின் சுளைகள் உடைய முன் முற்றத்தை உடைய மனைக்கு உரிய நம் தலைவி, இரவில் ஓசையுடைய வெள்ளை அருவியின் ஒலியைக் கேட்டு உறங்கும் ஊரானது, பெரிய ஊர் அல்லாத அழகிய தெருக்களையுடைய சிறிய ஊர்.  கைத்தொழிலில் திறமையுடைய ஒருவன் கூர்மையான அரத்தால் அறுத்த வளைந்த அழகிய ஒளியுடைய வளையல்களையும் அகன்ற தொடிகளையும் அணிந்த முன்னங்கையையும் ஒளியுடைய நெற்றியையும் தேமல் படர்ந்த அல்குலையும் இளமையுமுடைய நம் தலைவியின் குவளை மலர்களைப் போன்ற மையிட்ட கண்களின் மகிழ்ச்சியைத் தரும் மென்மையான பார்வை, மலையன் என்னும் மன்னன் தன் களிற்றின் மேல் போய்ப் புலையன் ஒருவன் பெரிய துடியை ஒலிக்க, வேற்று நாட்டினுள் புகுந்து அவர்களுடைய அரிய கோட்டைகளை அழித்து இளைத்துப் பெருமூச்சு விட்டாற்போல், நம்மை அவளிடம் இழுத்துச் செல்கின்றது.

குறிப்பு:  ஒப்புமை: அகநானூறு 24 – வேளாப் பார்ப்பான்  வாள் அரம் துமித்த வளை.  வரலாறு:  மலையன்.  கடையெழு வள்ளல்கள் – ஆய், பாரி, காரி, ஓரி, அதிகன், பேகன், நள்ளி.  மலையன் (மலையமான் திருமுடிக்காரி) பற்றின குறிப்புகள் உள்ள பாடல்கள் – நற்றிணை 77–1, 100–9, 170, குறுந்தொகை 198–6, 312–2, புறநானூறு 123–3, 124–5, 125–14, 158.  எல் – எல்லே இலக்கம் (தொல்காப்பியம், இடையியல் 21).  சங்கை வெட்டி இயற்றிய வளையல் – அகநானூறு 24 – வேளாப் பார்ப்பான் வாள் அரம் துமித்த வளை, நற்றிணை 77 – வல்லோன் வாள் அரம் பொருத கோள் நேர் எல் வளை, ஐங்குறுநூறு 194 – கடல் கோடு அறுத்த அரம் போழ் அவ்வளை, மதுரைக்காஞ்சி – அரம் போழ்ந்து அறுத்த கண் நேர் இலங்கு வளை.  மலையன் மா (1) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – மலைய மா, ஒளவை துரைசாமி உரை – மலையன் மா.  கோள் நேர் (9) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – வளைந்த அழகிய, ஒளவை துரைசாமி உரை – பொருந்திய நேரிய.  கோள் நேர் (நற்றிணை 340ம் பாடலின் உரை) – ஒளவை துரைசாமி உரை – கோடற்கு அமைந்த, பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – கோல் தொழில் அமைந்த, கு. வெ. பாலசுப்பிரமணியன் உரை – செறிந்து கொண்டிருந்தும் நேர்த்தி உடையதும்.  மன் – கழிவே ஆக்கம் ஒழியிசைக் கிளவி என்று அம் மூன்று என்ப மன்னைச் சொல்லே (தொல்காப்பியம், இடையியல் 4).

சொற்பொருள்:  மலையன் மா ஊர்ந்து போகி புலையன் பெருந்துடி கறங்கப் பிற புலம் புக்கு அவர் அருங்குறும்பு எருக்கி அயா உயிர்த்தாஅங்கு உய்த்தன்று – மலையன் என்னும் மன்னன் தன் களிற்றின் மேல் போய்ப் புலையன் ஒருவன் பெரிய துடியை ஒலிக்க வேற்று நாட்டினுள் புகுந்து அவர்களுடைய அரிய கோட்டைகளை அழித்து இளைத்துப் பெருமூச்சு விட்டாற்போல் நம்மை தலைவியிடம் இழுத்துச் செல்கின்றது (உயிர்த்தாஅங்கு – செய்யுளிசை அளபெடை), மன்னே – மன் மிகுதி, ஏகாரம் அசைநிலை, நெஞ்சே – என் நெஞ்சே, செவ்வேர்ச் சினைதொறும் தூங்கும் பயங்கெழு பலவின் சுளையுடை முன்றில் – சிவந்த வேர்களில் உள்ள கிளைகள்தோறும் தொங்கும் பயன்பொருந்திய பழங்கள் நிறைந்த வேர்ப்பலாவின் சுளைகள் உடைய முன் முற்றம் (முன்றில் – இல் முன்), மனையோள் கங்குல் ஒலி வெள்ளருவி ஒலியின் துஞ்சும் ஊர் அல் அம் சேரிச் சீறூர் – தலைவி இரவில் ஓசையுடைய வெள்ளை அருவியின் ஒலியைக் கேட்டு உறங்கும் பெரிய ஊர் அல்லாத அழகிய தெருக்களையுடைய சிறிய ஊர், வல்லோன் வாள் அரம் பொருத கோள் நேர் எல் வளை அகன் தொடி செறித்த முன் கை ஒண்ணுதல் திதலை அல்குல் குறுமகள் குவளை உண்கண் மகிழ் மட நோக்கே – கைத்தொழிலில் திறமையுடைய ஒருவன் கூர்மையான அரத்தால் அறுத்த வளைந்த அழகிய ஒளியுடைய வளையல்களையும் அகன்ற தொடிகளையும் அணிந்த முன்னங்கையையும் ஒளியுடைய நெற்றியையும் தேமல் படர்ந்த அல்குலையும் இளமையுமுடைய நம் காதலியின் குவளை மலர்களைப் போன்ற மையிட்ட கண்களின் மகிழ்ச்சியைத் தரும் மென்மையான பார்வை (அல்குல் – இடை, இடைக்குக் கீழ் உள்ள பகுதி, நோக்கே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 78, கீரங்கீரனார், நெய்தல் திணை, தோழி தலைவியிடம் சொன்னது
கோட் சுறா வழங்கும் வாள் கேழ் இருங்கழி
மணி ஏர் நெய்தல் மா மலர் நிறைய,
பொன் நேர் நுண் தாது புன்னை தூஉம்,
வீழ் தாழ் தாழைப் பூக் கமழ் கானல்,
படர் வந்து நலியும் சுடர் செல் மாலை,  5
நோய் மலி பருவரல் நாம் இவண் உய்கம்,
கேட்டிசின், வாழி தோழி!  தெண்கழி
வள்வாய் ஆழி உள்வாய் தோயினும்,
புள்ளு நிமிர்ந்தன்ன பொலம் படைக் கலி மா
வலவன் கோல் உற அறியா,  10
உரவு நீர்ச் சேர்ப்பன் தேர் மணிக் குரலே.

பாடல் பின்னணி:  தலைவன் திருமணம் புரிந்துகொள்ள வருவதை அறிந்த தோழி. தலைவியிடம் உரைத்தது.

பொருளுரைதோழி!  நீ வாழ்வாயாக!  தெளிந்த நீரையுடைய உப்பங்கழியில் கூரிய வாயையுடைய தேர்க்கால்களின் (உருள்களின், சக்கரங்களின்) உட்பகுதி ஆழ்ந்து மணலில் அமுங்கினாலும் பறவை பறந்தாற்போல் பொன்னால் செய்யப்பட்ட அணிகலன்களை அணிந்த செறுக்குடைய குதிரைகள் பாகனின் முட்கோல் அறியாதவையாக உள்ள வலிய கடல்நீர் சேர்ப்பனின் தேர் மணியின் ஓசையை நீ கேட்பாயாக!  கொல்லும் சுறா மீன்கள் நீந்தும் ஒளிரும் நிறத்தையுடைய பெரிய உப்பங்கழியில் நீலமணி போன்ற நெய்தலின் கரிய மலர்கள் நிறையும்படி பொன்னை ஒத்த பூந்தாதினைப் புன்னை மரங்களின் மலர்கள் தூவும், வீழ்ந்து தாழ்ந்த தாழையின் பூ மணம் கமழும் கடற்கரைச் சோலையில் துன்பம் வந்து வருத்தும் கதிரவன் மறையும் மாலைப் பொழுதில் காதல் நோயின் மிகுதியால் வரும் துன்பத்திலிருந்து இனி நாம் தப்பித்து வாழ்வோம்.

குறிப்பு:  இறைச்சி (1) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – இருங்கழியின் நெய்தல் மலர் நிறைய நுண்ணிய தாதைப் புன்னை பரப்பாநிற்குமென்றது, சேரியிடத்து நமர் கையேற்ப நிரம்பிய பொற்குவியலைச் சேர்ப்பன் நம்மை வரைதற்பொருட்டுக் கொடாநிற்கும் என்றதாம்.  இறைச்சி (2) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – தாழம்பூவின் மணம் கானலெங்கும் கமழுமென்றது, நின் வரைவு நாடெங்கும் மாட்சிமைப்படும் என்றதாம்.  பொலம் படை மா:  அகநானூறு 114 – பொலம்படைக் கலி மா, அகநானூறு 124 – பொன் இயல் புனை படைக் கொய் சுவல் புரவி, நற்றிணை 78 – பொலம் படைக் கலி மா, நற்றிணை 361 – பொலம் படைக் கலி மா, புறநானூறு 116 – பொலம் படைக் கலி மா, புறநானூறு 135 – ஒளிறு படைப் புரவிய தேரும், புறநானூறு 359 – பொலம் படைய மா, மலைபடுகடாம் 574 – பொலம் படைப் பொலிந்த கொய் சுவற் புரவி.  சின் – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம், சொல்லதிகாரம், இடையியல் 26, சின் என்பது இசின் என்பதன் முதற்குறை – ச. பாலசுந்தரம் உரை).  சக்கரம் – தேர்க்கால், ஆழி, உருள், உருளி, உருளை.  நாம் இவண் உய்கம் (6) – தலைவியும் தோழியும் மிக நெருங்கிய நட்பு உடையவர்கள் என்பதாலும், தலைவியின் களவு ஒழுக்கத்திற்குத் தோழி உதவுவதாலும், தலைவனைத் தோழி நன்கு அறிந்தவள் என்பதாலும் ‘நீ அவனை மணந்து இங்கிருந்து உய்வாய்’ எனப்பொருள் பட ‘ நாம் இவண் உய்கம்’ எனப் பன்மையால் கூறினாள்.

சொற்பொருள்:  கோள் சுறா வழங்கும் வாள் கேழ் இருங்கழி மணி ஏர் நெய்தல் மா மலர் நிறைய பொன் நேர் நுண் தாது புன்னை தூஉம் வீழ் தாழ் தாழைப் பூக் கமழ் கானல் – கொல்லும் சுறா மீன்கள் நீந்தும் ஒளிரும் நிறத்தையுடைய பெரிய உப்பங்கழியில் நீலமணி போன்ற நெய்தலின் கரிய மலர்கள் நிறையும்படி பொன்னை ஒத்த பூந்தாதினைப் புன்னை மரங்களின் மலர்கள் தூவும் வீழ்ந்து தாழ்ந்த தாழையின் பூ மணம் கமழும் கடற்கரைச் சோலை (தூஉம் – அளபெடை), படர் வந்து நலியும் சுடர் செல் மாலை நோய் மலி பருவரல் நாம் இவண் உய்கம் – துன்பம் வந்து வருத்தும் கதிரவன் மறையும் மாலைப் பொழுதில் காதல் நோயின் மிகுதியால் வரும் துன்பத்திலிருந்து இனி நாம் தப்பித்து வாழ்வோம், கேட்டிசின் – நீ கேட்பாயாக (சின் – முன்னிலையசை), வாழி – நீ வாழ்வாயாக, தோழி – தோழி, தெண்கழி வள்வாய் ஆழி உள்வாய் தோயினும் – தெளிந்த நீரையுடைய உப்பங்கழியில் கூரிய வாயையுடைய தேர்க்கால்களின் (உருள்களின், சக்கரங்களின்) உள்ளிடம் (உட்பகுதி) ஆழ்ந்து மணலில் அமுங்கினாலும், புள்ளு நிமிர்ந்தன்ன பொலம் படைக் கலிமா வலவன் கோல் உற அறியா உரவு நீர்ச் சேர்ப்பன் தேர் மணிக் குரலே – பறவை பறந்தாற்போல் பொன்னால் செய்யப்பட்ட அணிகலன்களை அணிந்த செறுக்குடைய குதிரைகள் பாகனின் முட்கோல் அறியாதவையாக உள்ள வலிய கடல்நீர் சேர்ப்பனின் தேர் மணியின் ஓசை (குரலே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 79, கண்ணகனார், பாலைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
“சிறை நாள் ஈங்கை உறை நனி திரள் வீ,
கூரை நல் மனைக் குறுந்தொடி மகளிர்
மணல் ஆடு கழங்கின் அறை மிசைத் தாஅம்
ஏர்தரல் உற்ற இயக்கு அருங்கவலைப்
பிரிந்தோர் வந்து நப்புணரப் புணர்ந்தோர்  5
பிரிதல் சூழ்தலின், அரியதும் உண்டோ?”
என்று நாம் கூறிக் காமம் செப்புதும்;
செப்பாது விடினே, உயிரொடும் வந்தன்று,
அம்ம வாழி தோழி!
யாதனின் தவிர்க்குவம் காதலர் செலவே?  10

பாடல் பின்னணி:  தலைவனின் பிரிவு உணர்ந்து வேறுபட்ட தலைவி, தோழிக்குச் சொல்லியது.

பொருளுரைதோழி!  நீ வாழ்வாயாக! நான் கூறுவதைக் கேட்பாயாக! மூடியுள்ள தேன் துளிகள் திரண்டிருக்கும் ஈங்கையின் புதிய மலர்கள், கூரைகளையுடைய நல்ல இல்லங்களில் வாழும் மகளிர் மணலில் விளையாடுவதற்கு இட்ட கழங்குபோல் பாறைகளின் மீது விழுந்து பரவியிருக்கும் அழகு பொருந்திய, செல்வதற்கு அரிய பிரிவுகளைக் கொண்ட வழியில் செல்லும்பொருட்டு நம்மைப் பிரிந்தவர், இப்பொழுது வந்து நம்மைக் கூட விரும்புபவர், நம்மைப் பிரிவதை எண்ணுவதைவிடக் கொடியது வேறு உண்டோ என்று நாம் கூறி நம் அன்பின் மிகுதியைக் கூறுவோம்.  கூறாது விட்டால், நம் உயிருக்கும் தீங்கு ஏற்படும். எவ்வாறு தவிர்க்க முடியும் காதலர் செல்வதை?

குறிப்பு:  மணல் ஆடு கழங்கின் அறை மிசைத் தாஅம் (3) – ஒளவை துரைசாமி உரை – மணலைப் பெய்து கழங்காடுதற்கு இட்ட கற்பாறை மேல் உதிரும், பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை, – கற்பாறையின் மேல் உதிர்ந்து பரவி மணற்பரப்பில் விளையாடுவதற்கு இட்ட கழங்கு போல் விளங்கும்.  ஏர்தரல் உற்ற (4) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – அழகு பொருந்திய, ஒளவை துரைசாமி உரை – எழுச்சி பொருந்திய.  இறைச்சி – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – தேன் நிறைந்த மலர் கற்பாறை மிசை தாஅம் என்றது, வேட்கை நிறைந்த என் நெஞ்சம் அவர் வயிற் சென்று ஒழிந்தது என்றதாம்.  ஒளவை துரைசாமி உரை – ஈங்கையின் திரள் வீ மகளிராடும் கழங்கு அறையின் மேல் உதிர்ந்து அதை மறைத்தாற்போலத் தலைமகனோடு கூடி உறையும் இன்ப வாழ்வில் பிரிவு நிகழ்ச்சிகள் போந்து இடையூறு செய்கின்றன என்பது குறிப்பு.  நனி – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3).  அம்ம – அம்ம கேட்பிக்கும் (தொல்காப்பியம், இடையியல் 28).  நப்புணர (5) – நம்புணர என்றது நப்புணர என்றானது வலித்தல் விகாரம்.  காமம் – கமம் என்னும் சொல்லின் முதல் நீண்ட வடிவம், ‘நிறைந்த அன்பு’ என்பது இச்சொல்லின் பொருள் – பேரறிஞர் கு.வெ. பாலசுப்பிரமணியன் அவர்களின் விளக்கம், (கமம் நிறைந்து இயலும் – தொல்காப்பியம், சொல்லியல் 355).

சொற்பொருள்:  சிறை நாள் ஈங்கை உறை நனி திரள் வீ – மூடியுள்ள தேன் துளிகள் திரளும் ஈங்கையின் புதிய மலர்கள் (நாள் – புதிதாக மலர்ந்த, சிறை – தடுப்புகள், இங்கே மூடியிருப்பதைக் குறிக்கின்றது), கூரை நல் மனைக் குறுந்தொடி மகளிர் மணல் ஆடு கழங்கின் அறை மிசைத் தாஅம் ஏர் தரல் உற்ற – கூரைகளையுடைய நல்ல இல்லங்களில் வாழும் மகளிர் மணலில் விளையாடுவதற்கு இட்ட கழங்குபோல பாறைகளின் மீது விழுந்து பரவியிருக்கும் அழகு பொருந்திய (கழங்கின் – இன் உருபு ஒப்புப் பொருளது, ஐந்தாம் வேற்றுமை உருபு, தாஅம் – செய்யுளிசை அளபெடை), இயக்கு அருங்கவலைப் பிரிந்தோர் வந்து நப்புணரப் புணர்ந்தோர் பிரிதல் சூழ்தலின் அரியதும் உண்டோ – செல்வதற்கு அரிய பிரிவுகளைக் கொண்ட வழியில் பிரிந்தவர் இப்பொழுது வந்து நம்மைக் கூட விரும்புபவர் பிரிவதை எண்ணுவதைவிடக் கொடியது வேறு உண்டோ, என்று நாம் கூறிக் காமம் செப்புதும் – என்று நாம் கூறி நம் அன்பின் மிகுதியைக் கூறுவோம், செப்பாது விடினே – கூறாது விட்டால், உயிரொடும் வந்தன்று – நம் உயிருக்கும் தீங்கு ஏற்படும், அம்ம – நான் கூறுவதைக் கேட்பாயாக, வாழி – நீ வாழ்வாயாக, அசைநிலை, தோழி – தோழி, யாதனின் தவிர்க்குவம் காதலர் செலவே – எவ்வாறு தவிர்க்க முடியும் காதலர் செல்வதை (செலவே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 80, பூதன்தேவனார், மருதத் திணை – தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது, தோழி கேட்கும்படியாக
‘மன்ற எருமை மலர் தலைக் காரான்
இன் தீம் பால் பயங்கொண்மார், கன்று விட்டு,
ஊர்க் குறுமாக்கள் மேற்கொண்டு கழியும்
பெரும் புலர் விடியலின் விரும்பிப் போத்தந்து,
தழையும் தாரும் தந்தனன் இவன்’ என,  5
இழை அணி ஆயமொடு தகு நாண் தடைஇ,
தைஇத் திங்கள் தண் கயம் படியும்
பெருந்தோள் குறுமகள் அல்லது,
மருந்து பிறிது இல்லை, யான் உற்ற நோய்க்கே.

பாடல் பின்னணி:  தலைவன் தலைவியைக் காண்பது அரிதாயிற்று.  அதனால் வருந்திய தலைவியின் காதற் பெருமையை அறிந்த தோழி, தலைவன் விரைவில் திருமணம் புரிய வேண்டி, களவுப் புணர்ச்சியை மறுத்தாள்.  அதனால் வருந்திய தலைவன் உரைத்தது.

பொருளுரைதொழுவத்தில் உள்ள அகன்ற தலையையுடைய கரிய எருமைகளின் மிக இனிய பாலாகிய பயனைக் கொள்ளும்பொருட்டு அவற்றின் கன்றுகளைத் தொழுவத்தில் விட்டுவிட்டு ஊரில் உள்ள மாடு மேய்க்கும் இளம் சிறுவர்கள் அந்த எருமைகளின் மேல் ஏறி ஓட்டிச் செல்லும் இருள் மிகவும் நீங்கும் விடியற்காலையில், விருப்பத்துடன் வந்து தழை ஆடையையும் அணிய மாலையையும் தந்தான் இவன் என்று, அணிகலன்களை அணிந்த தோழியருடன் தன் பெண்மைக்குத் தகுந்த நாணத்தால் கட்டுப்பட்டுத் தை மாதத்தில் குளிர்ந்த குளத்தில் நீராடும் பெரிய தோள்களையுடைய இளைய மகளாகிய தலைவியை அன்றி வேறு மருந்து இல்லை, யான் அடைந்த காதல் நோய்க்கு.

குறிப்பு:  இறைச்சி – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – குறுமாக்கள் தலைவியாகவும் எருமையின் பால் மிகுதியாகக் கறக்க விரும்புதல் நோன்பின் பயனை மிக விரும்புவதாகவும், அவற்றை ஊர்ந்து செல்லுதல் தைத்திங்கள் விடியலில் நீராடச் செல்லுதலாகவும் அதற்கேற்றவாறு கொள்க.  ஒளவை துரைசாமி உரை – பாற்பயம் கொண்மார் கன்றைவிட்டுக் காரானைப் புறத்தே செலுத்தினாற் போலத் தலைவியை அருமை செய்து என்னைச் சேட்படுத்தி வரைவாகிய பயன்கொள்ளக் கருதுகின்றனை எனவும், கன்றை மனைக்கண் விட்டு ஊர்க்குறு மாக்களை மேற்கொண்டு கழியும் காரான் போலத் தலைவியை நின்னொடு விடுத்து வேட்கை நோயும் கலக்கமும் உள்ளத்திற் கொண்டு செல்கின்றேன் எனவும் தலைவன் தோழிக்குக் குறிப்பாய் உணர்த்தியவாறாகக் கொள்க.  தைத் திங்களில் மகளிர் நீராடல் – நற்றிணை 80 – தைஇத் திங்கள் தண் கயம் படியும் பெருந்தோள் குறுமகள், ஐங்குறுநூறு 84 – நறு வீ ஐம்பால் மகளிர் ஆடும் தைஇத் தண் கயம் போல, கலித்தொகை 59–13 – நீ தையில் நீர் ஆடிய தவம் தலைப்படுவாயோ, பரிபாடல் 11–81 – அம்பா ஆடலின் ஆய் தொடிக் கன்னியர் முனித்துறை முதல்வியர் முறைமை காட்ட (அம்பா ஆடல் – தைந் நீராடல்), பரிபாடல் 11–91 – தாய் அருகா நின்று தவத் தைந் நீராடுதல், பரிபாடல் 11–134 – இன்ன பண்பின் நின் தைந்நீராடல் மின் இழை நறுநுதல் மகள்.

சொற்பொருள்:  மன்ற எருமை மலர்தலைக் காரான் இன் தீம் பால் பயங்கொண்மார் கன்று விட்டு ஊர்க் குறுமாக்கள் மேற்கொண்டு கழியும் பெரும் புலர் விடியலின் – தொழுவத்தில் உள்ள அகன்ற தலையையுடைய கரிய எருமைகளின் மிக இனிய பாலாகிய பயனைக் கொள்ளும்பொருட்டு அவற்றின் கன்றுகளைத் தொழுவத்தில் விட்டுவிட்டு ஊரில் உள்ள மாடு மேய்க்கும் இளம் சிறுவர்கள் அந்த எருமைகளின் மேல் ஏறி ஓட்டிச் செல்லும் இருள் மிகவும் நீங்கும் விடியற்காலையில் (இன் தீம் – ஒருபொருட் பன்மொழி), விரும்பிப் போத்தந்து தழையும் தாரும் தந்தனன் இவன் என – விருப்பத்துடன் வந்து தழை ஆடையையும் மாலையையும் தந்தான் இவன் என்று, இழை அணி ஆயமொடு தகு நாண் தடைஇ தைஇத் திங்கள் தண் கயம் படியும் பெருந்தோள் குறுமகள் அல்லது மருந்து பிறிது இல்லை – அணிகலன்களை அணிந்த தோழியருடன் தன் பெண்மைக்குத் தகுந்த நாணத்தால் கட்டுப்பட்டுத் தை மாதத்தில் குளிர்ந்த குளத்தில் நீராடும் பெரிய தோள்களையுடைய இளைய மகளாகிய தலைவியை அன்றி வேறு மருந்து இல்லை, (தடைஇ – சொல்லிசை அளபெடை, தைஇ – சொல்லிசை அளபெடை), யான் உற்ற நோய்க்கே – யான் அடைந்த காதல் நோய்க்கு (நோய்க்கே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 81, அகம்பன்மாலாதனார், முல்லைத் திணை – தலைவன் தேர்ப்பாகனிடம் சொன்னது
இரு நிலம் குறையக் கொட்டிப் பரிந்தின்று
ஆதி போகிய அசைவு இல் நோன் தாள்,
மன்னர் மதிக்கும் மாண் வினைப் புரவி
கொய்ம் மயிர் எருத்தில் பெய்ம் மணி ஆர்ப்ப,
பூண்க தில் பாக, நின் தேரே! பூண் தாழ்  5
ஆக வன முலைக் கரை வலம் தெறிப்ப
அழுதனள் உறையும் அம் மா அரிவை
விருந்து அயர் விருப்பொடு வருந்தினள் அசைஇய
முறுவல் இன்னகை காண்கம்,
உறு பகை தணித்தனன், உரவு வாள் வேந்தே.  10

பாடல் பின்னணி:  வினை முற்றிய தலைவன் தேர்ப்பாகற்கு உரைத்தது.

பொருளுரைபாகனே!  மிக்கப் பகையை அடக்கிவிட்டான் வலிமையுடைய வாட்படையை உடைய நம் வேந்தன்.  பெரிய நிலம் குழியும்படி காலால் கொட்டி நடந்து விரைந்து நேராக ஓடுகின்ற தளர்ச்சி இல்லாத வலிமையான கால்களையுடைய, மன்னர்கள் மதிக்கும் மாட்சிமைபட்ட ஓட்டத்தை உடைய குதிரைகளின் கொய்யப்பட்ட மயிருடைய பிடரியில் கட்டப்பட்ட மணிகள் ஒலிக்க, உன் தேரில் அவற்றைப் பூட்டிச் செலுத்துவாயாக!  அணிகலன்கள் தாழ்ந்து தொங்கும் மார்பின்கண் உள்ள அழகிய முலையின் முகட்டில் கண்ணீர் தெறித்து விழும்படி அழுதவளாகத் தங்கியிருக்கும் அழகிய மாமை நிறத்தையுடைய தலைவி விருந்தைப் படைக்கும் ஆர்வம் உடையவளாக அப்பணிகளைச் செய்து அதனால் களைப்படைந்த அவளுடைய முறுவலுடன் கூடிய இனிய நகையை நாம் காண்போம்!

குறிப்பு:  தில் (5) – ஒளவை துரைசாமி உரை – அசைநிலை, விழையுமாம், பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – விழைவின்கண் வந்தது, வலம் (6) – ஒளவை துரைசாமி உரை – ஏழனுருபு, உறு – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3).

சொற்பொருள்:  இரு நிலம் குறையக் கொட்டிப் பரிந்தின்று ஆதி போகிய அசைவு இல் நோன் தாள் மன்னர் மதிக்கும் மாண் வினைப் புரவி கொய்ம் மயிர் எருத்தில் பெய்ம் மணி ஆர்ப்ப பூண்க தில் பாக நின் தேரே – பெரிய நிலம் குழியும்படி காலால் கொட்டி நடந்து விரைந்து நேராக ஓடுகின்ற தளர்ச்சி இல்லாத வலிமையான கால்களையுடைய மன்னர்கள் மதிக்கும் மாட்சிமைபட்ட ஓட்டத்தை உடைய குதிரைகளின் கொய்யப்பட்ட மயிருடைய பிடரியில் கட்டப்பட்ட மணிகள் ஒலிக்க உன் தேரில் அவற்றைப் பூட்டிச் செலுத்துவாயாக பாகனே (தில் – விழைவின்கண் (விருப்பத்தின்கண்) வந்த இடைச்சொல், பாக – அண்மை விளி), பூண் தாழ் ஆக வன முலை கரை வலம் தெறிப்ப அழுதனள் உறையும் அம் மா அரிவை விருந்து அயர் விருப்பொடு வருந்தினள் அசைஇய முறுவல் இன் நகை காண்கம் – அணிகலன்கள் தாழ்ந்து தொங்கும் மார்பின்கண் உள்ள அழகிய முலையின் முகட்டில் கண்ணீர் தெறித்து விழும்படி அழுதவளாகத் தங்கியிருக்கும் அழகிய மாமை நிறத்தையுடைய தலைவி விருந்தைப் படைக்கும் ஆர்வம் உடையவளாக வருந்தி அதனால் களைப்படைந்த அவளுடைய முறுவலுடன் கூடிய இனிய நகையை நாம் காண்போம்  (அசைஇய – அளபெடை), உறு பகை தணித்தனன் உரவு வாள் வேந்தே – மிக்க பகையை அடக்கிவிட்டான் வலிமையுடைய வாட்படையை உடைய வேந்தன் (வேந்தே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 82, அம்மள்ளனார், குறிஞ்சித் திணை – தலைவன் தலைவியிடம் சொன்னது
நோயும் நெகிழ்ச்சியும் வீடச் சிறந்த
வேய் வனப்புற்ற தோளை நீயே,
என்னுள் வருதியோ, நல் நடைக் கொடிச்சி
முருகு புணர்ந்து இயன்ற வள்ளி போல, நின்
உருவு கண் எறிப்ப நோக்கல் ஆற்றலெனே,  5
போகிய நாகப் போக்கு அருங்கவலை
சிறுகண் பன்றிப் பெருஞ்சின ஒருத்தல்
சேறு ஆடு இரும் புறம் நீறொடு சிவண,
வெள் வசிப் படீஇயர், மொய்த்த வள்பு அழீஇக்
கோள் நாய் கொண்ட கொள்ளைக்  10
கானவர் பெயர்க்கும் சிறுகுடியானே?

பாடல் பின்னணி:  தலைவியைக் கூடிய தலைவன் தன் நெஞ்சில் உள்ள எண்ணத்தைத் தலைவியிடம் கூறியது.

பொருளுரை:  நான் கொண்ட காதல் நோயும் உடல் தளர்ச்சியும் நீங்கும்படியான சிறந்த மூங்கிலின் அழகையுடைய தோளையுடையவை நீ.  நல்ல ஒழுக்கத்தைக் கொண்ட குறிஞ்சிநில மகளே!  உயர்ந்து வளர்ந்த நாக மரங்கள் உடைய அரிய பிரிவுகளையுடைய வழியில் சிறிய கண்களையும் பெரிய சினத்தையுமுடைய ஆண் பன்றி சேற்றில் புரண்டதால் சேறு அதன் கரிய முதுகில் படிய வெற்று நிலத்தில் உள்ள குழியில் விழ, சூழ்ந்திருந்த வலையிலிருந்து விடுவித்துக் கொல்லும் நாய்கள் உண்டபின் உள்ள தசையை அவற்றிடமிருந்து மீட்டு வரும் கானவரின் சிறுகுடிக்கு நீ என்னுடன் வருவாயோ, முருகனுடன் கூடி உடன்சென்ற வள்ளியைப் போல்?  உன்னுடைய உருவத்தின் ஒளி என் கண்களில் வீசுவதால் உன்னைக் காண இயலாதுள்ளேன்.

குறிப்பு:  ஒளவை துரைசாமி உரை – ‘பண்பிற் பெயர்ப்பினும்’ (தொல்காப்பியம், களவியல் 12) என்ற நூற்பாவின்கண் ‘பரிவுற்று மெலியினும்’ என்றதற்கு இதனைக் காட்டுவர் நச்சினார்க்கினியர்.  உள்ளுறை (1) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – பன்றி தலைவியாகவும், வார் இனகப்படுதல் தலைவி காம நோய்ப்பட்டதாகவும், பன்றியின் தசையை நாய் பற்றுதல் தலைவியின் நலத்தைப் பசலை பற்றிக் கெடுத்ததாகவும், கானவர் பெயர்க்குதல் அப்பசலையை நீக்குவதாகவும் கொள்க.  உள்ளுறை (2) – ஒளவை துரைசாமி உரை – வெள்வசிப் படுவித்து மொய்த்த கோணாய் கொண்ட கொள்ளையாகிய பன்றி ஒருத்தலைக் கானவர் வள்பு அழீஇச் சிறுகுடிக்குப் பெயர்க்குவர் என்றது, நின் தோளிடைப் படுவித்து உருவாகிய வலையில் பிணித்துக் கொண்ட என் உள்ளத்தை, நின் சிறுகுடிக்குக் கொண்டு போகா நின்றனை எனத் தலைமகன் தன் வேட்கை மிகுதியை உள்ளுறையாற் கூறியது.  ஒளவை துரைசாமி உரை – சிறுகுடிக்கு முருகு புணர்ந்து இயன்ற வள்ளி போல என்னுடன் வருதியோ என மாறிக்கூட்டி வினை முடிவு செய்க.  நல் நடைக் கொடிச்சி (3) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – நல்ல நடையையுடைய கொடிச்சீ, ச. வே. சுப்பிரமணியன் உரை – அழகிய நடையையுடைய கொடிச்சியே, ஒளவை துரைசாமி உரை – நல்ல ஒழுக்கத்தையுடைய கொடிச்சியே.  கானவர் பன்றி வேட்டையாடல் – நற்றிணை 75, 82, 119, 336, அகநானூறு 248.

சொற்பொருள்:  நோயும் நெகிழ்ச்சியும் வீடச் சிறந்த வேய் வனப்புற்ற தோளை நீயே – நான் கொண்ட காதல் நோயும் உடல் தளர்ச்சியும் நீங்கும்படி சிறந்த மூங்கிலின் அழகையுடைய தோளையுடையவை நீ (வேய் – மூங்கில்), என்னுள் வருதியோ நல் நடைக் கொடிச்சி – நீ என்னுடன் வருவாயோ நல்ல ஒழுக்கத்தைக் கொண்ட குறிஞ்சிநில மகளே, முருகு புணர்ந்து இயன்ற வள்ளி போல – முருகனுடன் கூடி உடன்சென்ற வள்ளியைப் போல், நின் உருவு கண் எறிப்ப நோக்கல் ஆற்றலெனே – உன்னுடைய உருவத்தின் ஒளி என் கண்களில் வீசுவதால் உன்னைக் காண இயலாதுள்ளேன், போகிய நாகப் போக்கு அருங்கவலை சிறுகண் பன்றிப் பெருஞ்சின ஒருத்தல் சேறு ஆடு இரும் புறம் நீறொடு சிவண வெள் வசிப் படீஇயர் – உயர்ந்து வளர்ந்த நாக மரங்கள் உடைய அரிய பிரிவுகளையுடைய வழியில் சிறிய கண்களையும் பெரிய சினத்தையுமுடைய ஆண் பன்றி சேற்றில் புரண்டதால் சேறு அதன் கரிய முதுகில் படிய வெற்று நிலத்தில் உள்ள குழியில் விழ (சிவண – பொருந்த, படிய, படீஇயர் – செய்யுளிசை அளபெடை), மொய்த்த வள்பு அழீஇக் கோள் நாய் கொண்ட கொள்ளைக் கானவர் பெயர்க்கும் சிறுகுடியானே – சூழ்ந்திருந்த வலையிலிருந்து விடுவித்துக் கொல்லும் நாய்கள் உண்டபின் உள்ள தசையை அவற்றிடமிருந்து மீட்டு வரும் கானவரின் சிறுகுடிக்கு (அழீஇ – செய்யுளிசை அளபெடை, சிறுகுடியானே – அசைநிலை)

நற்றிணை 83, பெருந்தேவனார், குறிஞ்சித் திணை – தோழி கூகையிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
எம் ஊர் வாயில் உண் துறைத் தடைஇய
கடவுள் முது மரத்து, உடன் உறை பழகிய
தேயா வளை வாய், தெண் கண், கூர் உகிர்,
வாய்ப் பறை அசாஅம், வலிமுந்து கூகை!
மை ஊன் தெரிந்த நெய் வெண்புழுக்கல்,  5
எலி வான் சூட்டொடு, மலியப் பேணுதும்;
எஞ்சாக் கொள்கை எம் காதலர் வரல் நசைஇத்
துஞ்சாது அலமரு பொழுதின்,
அஞ்சு வரக் கடுங்குரல் பயிற்றாதீமே.

பாடல் பின்னணி:  இரவுக்குறி வந்த தலைவன் சிறைப்புறத்தானாகத் தோழி கூறியது.

பொருளுரை:  எம்முடைய ஊரின் முகப்பில் உள்ள உண்ணும் நீருடைய துறையில் உள்ள, பருத்த, கடவுள் வாழும் முதிய மரத்திலிருந்து, எம் அருகில் உறைதலைச் செய்து பழகிய தேயாத வளைந்த வாயினையும் கூரிய நகத்தையுமுடைய வாயாகிய பறையால் ஒலி எழுப்பிப் பிறரை வருத்தும் வலிமை வாய்ந்த கூகையே!  ஆட்டு இறைச்சியுடன் தெளிந்த நெய் இட்டுச் சமைத்த வெண்மையான சோற்றினை வெள்ளை எலியின் சுட்ட இறைச்சியுடன் கலந்து உனக்கு நிறையக் கொடுப்போம். கெடாத கொள்கையையுடைய எம் தலைவர் வருதலை விரும்பி யாம் இரவில் துஞ்சாது வருந்தும் பொழுது, அஞ்சத்தக்க உன் கொடிய குரலைக் குழறி எம்மை வருத்தாதே.

குறிப்பு:  ஒளவை துரைசாமி உரை – ‘நாற்றமும் தோற்றமும்’ (தொல்காப்பியம், களவியல் 24) என்ற நூற்பா உரையில் இப்பாட்டினை எடுத்தோதி, ‘இஃது இரவுக்குறி வந்த தலைவன் சிறைப்புறமாகக் கூகைக்கு உரைப்பாளாய்த் தோழி கூறியது’ என்பர் நச்சினார்க்கினியர்.  மரங்களில் கடவுள் உறைதல்:  அகநானூறு 270 – கடவுள் மரத்த, அகநானூறு 309 – தெய்வம் சேர்ந்த பராரை வேம்பில், நற்றிணை 83 – கடவுள் முது மரத்து.  தடைஇய (1) – ஒளவை துரைசாமி உரை – பெருமைப் பொருளதாகிய தட என்னும் உரிச்சொல் அடியாகப் பிறந்த பெயரெச்ச வினை.  தட – தடவும் கயவும் நளியும் பெருமை (தொல்காப்பியம், உரியியல் 24).  எம் காதலர் – தலைவியும் தோழியும் மிக நெருங்கிய நட்பு உடையவர்கள் என்பதாலும், தலைவியின் களவு ஒழுக்கத்திற்குத் தோழி உதவுவதாலும், தலைவனைத் தோழி நன்கு அறிந்தவள் என்பதாலும் ‘ எங்கள் அன்பிற்குரிய தலைவர்’ எனப் பொருள்பட ‘ எம் காதலர்’ என்றாள்.

சொற்பொருள்:  எம் ஊர் வாயில் உண் துறைத் தடைஇய கடவுள் முது மரத்து உடன் உறை பழகிய தேயா வளை வாய் தெண் கண் கூர் உகிர் வாய்ப் பறை அசாஅம் வலிமுந்து கூகை – எம்முடைய ஊரின் முகப்பில் உள்ள உண்ணும் நீருடைய துறையில் உள்ள பருத்த கடவுள் வாழும் முதிய மரத்திலிருந்து எம் அருகில் உறைதலைச் செய்து பழகிய தேயாத வளைந்த வாயினையும் தெளிந்த கண் பார்வையையும் கூரிய நகத்தையுமுடைய வாயாகிய பறையால் ஒலி எழுப்பிப் பிறரை வருத்தும் வலிமை வாய்ந்த கூகையே (தடைஇய – அளபெடை, அசாஅம் – அளபெடை), மை ஊன் தெரிந்த நெய் வெண்புழுக்கல் எலி வான் சூட்டொடு மலியப் பேணுதும் – ஆட்டு இறைச்சியுடன் தெளிந்த நெய் இட்டுச் சமைத்த வெண்மையான சோற்றினை வெள்ளை எலியின் சுட்ட இறைச்சியுடன் கலந்து நிறைய கொடுப்போம் (மை – ஆடு), எஞ்சாக் கொள்கை எம் காதலர் வரல் நசைஇத் துஞ்சாது அலமரு பொழுதின் அஞ்சு வரக் கடுங்குரல் பயிற்றாதீமே – கெடாத கொள்கையையுடைய எம் தலைவர் வருதலை விரும்பி யாம் இரவில் துஞ்சாது வருந்தும் பொழுது அஞ்சத்தக்க உன் கொடிய குரலைக் குழறி எம்மை வருத்தாதே (நசைஇ – அளபெடை, பயிற்றாதீமே – முன்னிலை எதிர்மறை முற்றுவினைத் திரிசொல், ஏகாரம் அசைநிலை))

நற்றிணை 84, பாடியவர் பெயர் கிடைக்கவில்லை, பாலைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
கண்ணும், தோளும், தண் நறும் கதுப்பும்,
திதலை அல்குலும், பல பாராட்டி,
நெருநலும் இவணர் மன்னே! இன்றே
பெருநீர் ஒப்பின் பேஎய் வெண்தேர்
மரன் இல் நீள் இடை மான் நசையுறூஉம்,  5
சுடு மண் தசும்பின் மத்தம் தின்ற
பிறவா வெண்ணெய் உருப்பு இடந்தன்ன
உவர் எழு களரி ஓமை அம் காட்டு,
வெயில் வீற்றிருந்த வெம்பலை அருஞ்சுரம்
ஏகுவர் என்ப தாமே தம் வயின்  10
இரந்தோர் மாற்றல் ஆற்றா
இல்லின் வாழ்க்கை வல்லாதோரே.

பாடல் பின்னணி:  பிரிவிடை ஆற்றாளாகிய தலைவி, தோழிக்குச் சொல்லியது.

பொருளுரைஎன்னுடைய கண்களையும் தோள்களையும் குளிர்ந்த மணம் கமழும் கூந்தலையும் தேமல் படர்ந்த அல்குலையும் மிகவும் பாராட்டி நேற்றும் அவர் இங்கு இருந்தார்.  இன்று பெரிய நீர்நிலையை ஒத்துத் தோன்றும் வெள்ளை கானல்நீரை மரங்கள் இல்லாத நீண்ட வழியில் மான்கள் கண்டு நீரென்று எண்ணி விரும்பி ஓடும், மண்ணால் செய்து சுடப்பட்ட தயிர் பானையில் மத்தால் கடையப்பட்டு வெண்ணெய் வெப்பத்தால் சிதறினாற்போல் உவர்மண் மிகுந்திருக்கும் களர் நிலத்தையுடைய ஓமை மரங்களுடைய காட்டில் வெயில் மிகுந்து வெம்மையுடைய அரிய பாலை நிலத்திற்குத் தனியே செல்லுவார் எனக் கூறுகின்றனர், தம்மிடம் இரந்து பொருளைக் கேட்டு வருபவர்களின் நிலைமையை மாற்ற இயலாத இல்லற வாழ்க்கையை வாழ வலிமை இல்லாத நம் தலைவர்.

குறிப்பு:  இறைச்சி – கு. வெ. பாலசுப்பிரமணியன் உரை – கானல் நீரைக் குடிநீராகக் கொண்டு மான்கள் விரும்பி ஓடும் என்றது அருளில்லாத தலைவனிடம் அறமுடையான் என்று கருதித் தலைவி மயங்கினாள் என்பது குறித்து அமைந்தது.  இரந்தோர் மாற்றல் ஆற்றா இல்லின் வாழ்க்கை வல்லாதோரே (11–12) – ஒளவை துரைசாமி உரை – தம்பாற் போந்து இரந்தவரது இன்மையைப் போக்க மாட்டாத இல்லின்கண் வறுமையுற்று வாழும் வாழ்க்கையை விரும்பாதார், H. வேங்கடராமன் உரை – யாசிப்பவர் விரும்பிய பொருளைக் கொடுத்து அவரது பொருளாசையைப் போக்குவதற்கு அரிய இல்லற வாழ்க்கையில் பயின்று அறியாத நம் தலைவர், கு. வெ. பாலசுப்பிரமணியன் உரை – இரந்து நிற்பார்க்கு அவர் வேண்டும் பொருளைத் தந்து அவருடைய விருப்பத்தினை நிறைவேற்றுவதற்குரிய இல்லறத்தில் பயின்றறியாதவர் நம் தலைவர்.  மன் – கழிவே ஆக்கம் ஒழியிசைக் கிளவி என்று அம் மூன்று என்ப மன்னைச் சொல்லே (தொல்காப்பியம், இடையியல் 4).

சொற்பொருள்:  கண்ணும் தோளும் தண் நறும் கதுப்பும் திதலை அல்குலும் பல பாராட்டி நெருநலும் இவணர் – என்னுடைய கண்களையும் தோள்களையும் குளிர்ந்த மணம் கமழும் கூந்தலையும் தேமல் படர்ந்த அல்குலையும் மிகவும் பாராட்டி நேற்றும் அவர் இங்கு இருந்தார் (அல்குல் – இடை, இடைக்குக்கீழ் உள்ள பகுதி), மன்னே – கழிவுப்பொருளில் வந்தது, ஏகாரம் அசைநிலை, இன்றே பெருநீர் ஒப்பின் பேஎய் வெண்தேர் மரன் இல் நீள் இடை மான் நசையுறூஉம் – இன்று பெரிய நீர்நிலையை ஒத்துத் தோன்றும் வெள்ளை கானல்நீரை மரங்கள் இல்லாத நீண்ட வழியில் மான்கள் கண்டு நீரென்று எண்ணி விரும்பி ஓடும் (இன்றே – ஏகாரம் அசைநிலை, பேய்த்தேர் = கானல் நீர், பேஎய் – செய்யுளிசை அளபெடை, மரன் – மரம் என்பதன் போலி, நசையுறூஉம் – செய்யுளிசை அளபெடை), சுடு மண் தசும்பின் மத்தம் தின்ற பிறவா வெண்ணெய் உருப்பு இடந்தன்ன உவர் எழு களரி ஓமை அம் காட்டு வெயில் வீற்றிருந்த வெம்பலை அருஞ்சுரம் ஏகுவர் என்ப தாமே – மண்ணால் செய்து சுடப்பட்ட தயிர் பானையில் மத்தால் கடையப்பட்டு வெண்ணெய் வெப்பத்தால் சிதறினாற்போல் உவர்மண் மிகுந்திருக்கும் களர் நிலத்தையுடைய ஓமை மரங்களுடைய காட்டில் வெயில் மிகுந்து வெம்மையுடைய அரிய பாலை நிலத்திற்குத் தனியே செல்லுவார் எனக் கூறுகின்றனர் (ஓமை – Toothbrush Tree, Dillenia indica, வெம்பலை = வெப்பத்தையுடைய, ஐ – சாரியை, தாமே – ஏகாரம் பிரிநிலை), தம் வயின் இரந்தோர் மாற்றல் ஆற்றா இல்லின் வாழ்க்கை வல்லாதோரே – தம்மிடம் இரந்து (பிச்சைக்கேட்டு) வருபவர்களின் நிலைமையை மாற்ற இயலாத இல் வாழ்க்கையை வாழ வலிமை இல்லாதவர் (வல்லாதோரே – ஏகாரம் அசைநிலை))

நற்றிணை 85, நல்விளக்கனார், குறிஞ்சித் திணை – தோழி தலைவியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
ஆய் மலர் மழைக் கண் தெண் பனி உறைப்பவும்,
வேய் மருள் பணைத்தோள் விறல் இழை நெகிழவும்,
அம்பல் மூதூர் அரவம் ஆயினும்,
குறு வரி இரும்புலி அஞ்சிக் குறு நடைக்
கன்றுடை வேழம் நின்று காத்து அல்கும்,  5
ஆர் இருள் கடுகிய அஞ்சுவரு சிறு நெறி
வாரற்க தில்ல தோழி, சாரல்
கானவன் எய்த முளவுமான் கொழுங்குறை,
தேம் கமழ் கதுப்பின் கொடிச்சி கிழங்கொடு
காந்தள் அம் சிறுகுடிப் பகுக்கும்  10
ஓங்கு மலை நாடன், நின் நசையினானே.

பாடல் பின்னணி:  தலைவன் வரவு உணர்ந்த தோழி, தலைவிக்கு உரைத்தது.  வரைவு கடாயது.

பொருளுரைதோழி!  உன் அழகிய மலர்போன்ற குளிர்ச்சியுடைய கண்களிலிருந்து தெளிந்த கண்ணீர் வடிந்து விழவும், உன் மூங்கில்போன்ற பருத்த தோள்களிலிருந்து சிறப்பான வளையல்கள் நெகிழ்ந்து விழவும், பழிகூறும் இப்பழைய ஊர் மிக்க அலர் தூற்றனாலும், குறுகிய வரியுடைய கரும்புலிக்கு அஞ்சி. மெல்லிய நடையையுடைய தன் கன்றைப் பிடியானை காத்து நிற்கும் அடர்ந்த இருள் பெருகிய அச்சம்தரும் சிறிய வழியில் வராது இருப்பானாக, மலைச்சரிவில் வேடன் கொன்ற முள்ளம்பன்றியின் கொழுத்த தசையைத் தேன் மணம் கமழும் கூந்தலையுடைய குறமகள் கிழங்குடன் காந்தள் மலர்ந்துள்ள சிறுகுடியில் உள்ளவர்களுக்குப் பகுத்துக் கொடுக்கும் உயர்ந்த மலைநாட்டையுடைய நம் தலைவன், உன் மீது உள்ள விருப்பத்தினால்.

குறிப்பு:  புலவர் பெயர் – ஒளவை துரைசாமி உரை – நல்விளக்கனார் என அச்சுப் பிரதியிற் காணப்படும் இப்பெயர் ஏடுகளில் நல்விளக்குன்றனார் என்று இருக்கிறது.  பூங்குன்றன், முதுகுன்றன் என்றாற் போல விளக்குன்றன் என்பது மக்கட் பெயர்வகையுள் ஒன்றாகவும் இருக்கலாம். ஏடு எழுதினார் நல்விளக்கனார் எனப் பிழைத்திருக்கலாம்.  உள்ளுறை – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – கானவன் தலைவனாகவும், கொடிச்சி தலைவியாகவும், பன்றித்தசை தலைவன் வரைந்து கொண்டு பொருள் ஈட்டித் தலைவிபால் அளிப்பதாகவும், சிறுகுடிப் பகுத்தல் அப்பொருளைக் கொண்டு இல்லறம் நடத்தற்பாலாகவும் கொள்க.  இறைச்சி – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – புலியை அஞ்சி பிடியானை தன் கன்றைக் காத்துத் தங்குமென்றது, பிரிவினாலே தலைவிக்கு வரும் ஏதத்தை அஞ்சி யான் அவளைக் காத்திருக்கின்றேன் என்றதாம்.  ஒளவை துரைசாமி உரை – கன்றின் பொருட்டு உயிரைப் பொருள் எனக் கருதாது பிடி யானை நின்று காத்து அல்கும் என்றது, தலைவி தலைவனிடத்துக் கொண்ட காதலின் பொருட்டு மேனி வேறுபாடும் அலரும் ஆகியவற்றைப் பொருளாகக் கருதாது மனைக்கண் உறையுமாறு கூறியதாகக் கொள்க.  கன்று – பார்ப்பும் பறழும் குட்டியும் குருளையும் கன்றும் பிள்ளையும் மகவும் மறியும் என்று ன்பதும் குழவியொடு இளமைப் பெயரே (தொல்காப்பியம், மரபியல் 1).

சொற்பொருள்:  ஆய் மலர் மழைக் கண் தெண் பனி உறைப்பவும் – அழகிய மலர்போன்ற குளிர்ச்சியுடைய கண்களிலிருந்து தெளிந்த கண்ணீர் வடிந்து விழவும், வேய் மருள் பணைத்தோள் விறல் இழை நெகிழவும் – மூங்கில்போன்ற பருத்த தோள்களிலிருந்து சிறப்பான (வெற்றிகரமான) அணிகலன்கள் நெகிழ்ந்து விழவும் (மருள் – உவம உருபு), அம்பல் மூதூர் அரவம் ஆயினும் – பழிகூறும் பழைய ஊர் மிக்க அலர் தூற்றனாலும், குறு வரி இரும்புலி அஞ்சிக் குறு நடைக் கன்றுடை வேழம் நின்று காத்து அல்கும் ஆர் இருள் கடுகிய அஞ்சுவரு சிறு நெறி வாரற்க – குறுகிய வரியுடைய கரும்புலிக்கு அஞ்சி மெல்லிய நடையையுடைய தன் கன்றைப் பிடியானை காத்து நிற்கும் அடர்ந்த இருள் பெருகிய அச்சம்தரும் சிறிய வழியில் வராது இருப்பானாக, தில்ல – தில் ஒழியிசை என்னும் பொருள்களில் வரும் ஓர் இடைச்சொல் அல்லது விழைவின்கண் (விருப்பத்தின்கண்) வந்த இடைச்சொல், ஈறு திரிந்தது வந்தது, தோழி – தோழி, சாரல் கானவன் எய்த முளவுமான் கொழுங்குறை தேம் கமழ் கதுப்பின் கொடிச்சி கிழங்கொடு காந்தள் அம் சிறுகுடிப் பகுக்கும் ஓங்கு மலை நாடன் – மலைச்சரிவில் வேடன் கொன்ற முள்ளம்பன்றியின் கொழுத்த தசையைத் தேன் மணம் கமழும் கூந்தலையுடைய குறமகள் (மலையில் வாழும் பெண்) கிழங்குடன் காந்தள் மலர்ந்துள்ள சிறுகுடியில் உள்ளவர்களுக்குப் பகுத்துக் கொடுக்கும் உயர்ந்த மலைநாட்டையுடைய நம் தலைவன் (தேம் தேன் என்றதன் திரிபு), நின் நசையினானே – உன் மீது உள்ள விருப்பத்தினால் (நசையினானே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 86, நக்கீரர், பாலைத் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
அறவர் வாழி தோழி, மறவர்
வேல் என விரிந்த கதுப்பின் தோல
பாண்டில் ஒப்பின் பகன்றை மலரும்
கடும் பனி அற்சிரம், நடுங்க, காண்தகக்
கை வல் வினைவன் தையுபு சொரிந்த  5
சுரிதக உருவின ஆகிப் பெரிய
கோங்கம் குவி முகை அவிழ, ஈங்கை
நல் தளிர் நயவர நுடங்கும்
முற்றா வேனில் முன்னி வந்தோரே.

பாடல் பின்னணி:  குறித்த பருவத்தில் வினை முடித்து தலைவன் வந்தமை கேட்ட தோழி, தலைவிக்கு உரைத்தது.

பொருளுரை:  தோழி!  மறவர்களின் வேல் போன்று விரிந்த மயிரை ஒத்த தோலையுடைய வெள்ளி வட்டிலைப் போல் பகன்றை மலரும் கடுமையான முன்பனியுடைய அற்சிரக்காலத்தில் நாம் நடுங்குமாறு நம்மை விட்டுப் பிரிந்து, அழகு பொருந்துமாறு விளங்கும் கைத்தொழிலில் திறமையுடைய பொற்கொல்லன் பலநிறக் கற்களை இட்டு இழைத்த பொன்னாலாகிய சுரிதகம் என்னும் அணிகலனைப் போன்ற வடிவத்தையுடைய கோங்க மரத்தின் குவிந்த அரும்புகள் மலர. ஈங்கையின் நல்ல தளிர்கள் காண்பவர்களுக்கு விருப்பம் வருமாறு அசையும் முதிராத இளவேனில் காலத்தில், நம்மைக் கருதி வந்த, அறநெறியுடைய நம் தலைவர் நீடு வாழ்வாராக!

குறிப்பு:  ஒப்புமை:  கலித்தொகை 78 – பகன்றைப் பூ உற நீண்ட பாசடைத் தாமரை கண் பொர ஒளி விட்ட வெள்ளிய வள்ளத்தால், அகநானூறு 217 – பகன்றை நீல் உண் பச்சை நிற மறைத்து அடைச்சிய தோல் எறி பாண்டிலின் வாலிய மலர.  வாழி – இச்சொல் பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் உரையில் தலைவரை வாழ்த்துவதாக உள்ளது.  ஒளவை துரைசாமி உரையில் தோழியை  வாழ்த்துவதாக உள்ளது.  பகன்றை – Operculina turpethum, Indian jalap, கோங்கம் – Cochlospermum gossypium, ஈங்கை – Mimosa Pudica.

சொற்பொருள்:  அறவர் – அறநெறியுடைய நம் தலைவர், வாழி – நீடு வாழ்வாராக, நீ நீடு வாழ்வாயாக, தோழி – தோழியே, மறவர் வேல் என விரிந்த கதுப்பின் தோல பாண்டில் ஒப்பின் பகன்றை மலரும் கடும் பனி அற்சிரம் நடுங்க – மறவர்களின் வேல் போன்று விரிந்த மயிர்போல் தோலையுடைய வெள்ளி வட்டிலைப் போல் பகன்றை மலரும் கடுமையான முன்பனியுடைய அற்சிரக்காலத்தில் நாம் நடுங்குமாறு, காண்தகக் கை வல் வினைவன் தையுபு சொரிந்த சுரிதக உருவின ஆகிப் பெரிய கோங்கம் குவி முகை அவிழ ஈங்கை நல் தளிர் நயவர நுடங்கும் முற்றா வேனில் முன்னி வந்தோரே – அழகு பொருந்துமாறு விளங்கும் கைத்தொழிலில் திறமையுடைய பொற்கொல்லன் பலநிறக் கற்களை இட்டு இழைத்த பொன்னாலாகிய சுரிதகம் என்னும் அணிகலனைப் போன்ற வடிவத்தையுடைய கோங்க மரத்தின் குவிந்த அரும்புகள் மலர ஈங்கையின் நல்ல தளிர்கள் காண்பவர்களுக்கு விருப்பம் வருமாறு அசையும் முதிராத இளவேனில் காலத்தில் நம்மைக் கருதி வந்தவர் (வந்தோரே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 87, நக்கண்ணையார், நெய்தல் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
உள்ளூர் மாஅத்த முள் எயிற்று வாவல்
ஓங்கல் அம் சினைத் தூங்கு துயில் பொழுதின்,
வெல் போர்ச் சோழர் அழிசி அம் பெருங்காட்டு
நெல்லி அம் புளிச் சுவைக் கனவியாஅங்கு,
அது கழிந்தன்றே தோழி, அவர் நாட்டுப்  5
பனி அரும்பு உடைந்த பெருந்தாட் புன்னை
துறை மேய் இப்பி ஈர்ம் புறத்து உறைக்கும்
சிறுகுடிப் பரதவர் மகிழ்ச்சியும்,
பெருந்தண் கானலும் நினைந்த அப் பகலே.

பாடல் பின்னணி:  வரைவிடை வைத்துப் பிரிய ஆற்றாளாய தலைவி, கனாக்கண்டு தோழிக்கு உரைத்தது.

பொருளுரைதோழி!  தலைவரது நாட்டில் உள்ள பெரிய அடியையுடைய புன்னை மரத்தின் குளிர்ந்த அரும்புகள் உடைந்து, அவற்றின் தாது கடலின் துறையில் மேய்கின்ற சிப்பியின் ஈரமான புறத்தில் விழும் சிறுகுடியில் உள்ள பரதவர் அடைந்த மகிழ்ச்சியையும் பெரிய குளிர்ந்த கரையில் உள்ள சோலையையும் நான் நினைத்த அப்பகல் பொழுதில், ஊரில் உள்ள மாமரத்தில் இருக்கின்ற முள் போன்ற பற்களையுடைய வௌவால் உயர்ந்த ஒரு கிளையில் தொங்கியபடி தூங்கும் பொழுதிலே, போர்களில் வெற்றி அடையும் சோழ மன்னனான ஆற்காட்டில் உள்ள அழிசியின் பெரிய காட்டில் உள்ள நெல்லிக்கனியின் இனிய புளிச்சுவையைத் தான் பெற்றதாகக் கனவு கண்டாற்போல், தலைவரோடு இருந்ததாக நான் கனவு கண்டேன்.  ஆனால் அவ்வின்பம் நான் விழித்தவுடன் ஒழிந்தது.

குறிப்பு:  உள்ளுறை – கு. வெ. பாலசுப்பிரமணியன் உரை – இப்பியின் புறத்தைப் புன்னையின் தாது மூடிக்கொள்ளும் என்றது, பசலை தலைவியின் மேனியை மறைக்குமாறு பரவும் என்பது.  வரலாறு:  சோழர், அழிசி. .

சொற்பொருள்:  உள்ளூர் மாஅத்த முள் எயிற்று வாவல் – ஊரில் உள்ள மாமரத்தில் இருக்கின்ற முள் போன்ற பற்களையுடைய வௌவால் (மாஅத்த – அத்துச்சாரியை அகர விகுதி பெற்றது), ஓங்கல் அம் சினைத் தூங்கு துயில் பொழுதின் – உயர்ந்த ஒரு கிளையில் தொங்கியபடி தூங்கும் பொழுதிலே, வெல் போர்ச் சோழர் அழிசி அம் பெருங்காட்டு நெல்லி அம் புளிச் சுவைக் கனவியாஅங்கு – போர்களில் வெற்றி அடையும் சோழ மன்னனான ஆற்காட்டில் உள்ள அழிசியின் பெரிய காட்டில் உள்ள நெல்லிக்கனியின் இனிய புளிச்சுவையை தான் பெற்றதாகக் கனவு கண்டாற்போல் (கனவியாஅங்கு – செய்யுளிசை அளபெடை), அது கழிந்தன்றே – அந்த இன்பம் ஒழிந்தது (கழிந்தன்றே – ஏகாரம் அசை நிலை), தோழி – தோழி, அவர் நாட்டுப் பனி அரும்பு உடைந்த பெருந்தாட் புன்னை – தலைவரது நாட்டில் உள்ள பெரிய அடியையுடைய புன்னை மரத்தின் குளிர்ந்த அரும்புகள் உடைந்து அதன் தாது, துறை மேய் இப்பி ஈர்ம் புறத்து உறைக்கும் – கடல் துறையில் மேய்கின்ற சிப்பியின் ஈரமான புறத்தில் விழும், சிறுகுடிப் பரதவர் மகிழ்ச்சியும் பெருந்தண் கானலும் நினைந்த அப் பகலே – சிறுகுடியில் உள்ள பரதவர் அடைந்த மகிழ்ச்சியையும் பெரிய குளிர்ந்த கானலையும் நான் நினைத்த அப்பகல் பொழுதில் (பகலே – ஏகாரம் அசை நிலை)

நற்றிணை 88, நல்லந்துவனார், குறிஞ்சித் திணை – தோழி தலைவியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
யாம் செய் தொல் வினைக்கு எவன் பேதுற்றனை?
வருந்தல், வாழி தோழி! யாம் சென்று
உரைத்தனம் வருகம் எழுமதி! புணர் திரைக்
கடல் விளை அமுதம் பெயற்கு ஏற்றா அங்கு
உருகி உகுதல் அஞ்சுவல், உதுக்காண், 5
தம்மோன் கொடுமை நம் வயின் எற்றி,
நயம் பெரிது உடைமையின் தாங்கல் செல்லாது
கண்ணீர் அருவியாக
அழுமே தோழி, அவர் பழமுதிர் குன்றே.

பாடல் பின்னணி:  வரையாது வந்தொழுகும் தலைவன் சிறைப்புறமாக இருப்பதை அறிந்த தோழி, தலைவியிடம் கூறியது.  வரைவு கடாயது.

பொருளுரைநாம் செய்த பழைய வினை அவ்வாறு இருக்க, அதை ஆராயாது, எதற்காக வருந்துகின்றாய்? வருந்தாதே!  நீடு வாழ்வாயாகத் தோழி!  நாம் தலைவனிடம் சென்று பேசி வருவோம்.  நீ எழுவாயாக. பொருந்திய அலைகளையுடைய கடலில் விளைந்த உப்பு மழையை ஏற்று உருகியதைப் போல் நீ உருகுகின்றாய் என்று நான் அஞ்சுகின்றேன்.  அங்கே பார்!  தலைவன் நமக்கு இழைத்த கொடுமையை எண்ணி, நம்பால் அன்பு பெரிதும் உடைமையாலே. தன் வருத்தத்தை அடக்கிக் கொள்ள முடியாது, தன்னுடைய கண்ணீரை அருவியாக வடிக்கின்றது தோழி, தலைவனுடைய பழங்கள் விழுகின்ற குன்று.

குறிப்பு:  ஒளவை துரைசாமி உரை – ‘நாற்றமும் தோற்றமும்’ (தொல்காப்பியம், களவியல் 24) என்ற நூற்பாவின்கண் ‘என்பு நெகப் பிரிந்தோள் வழிச் சென்று கடைஇ அன்பு தலையடுத்த வன்புறைக் கண்ணும்’ என்றதற்கு இப்பாட்டை எடுத்தோதி ‘இது பிரிவிடைத் தோழி இயற்பழித்து வற்புறுத்தது’ என்பர் நச்சினார்க்கினியர்.  ஒப்புமை: அகநானூறு 208 – உப்புச் சிறை நில்லா வெள்ளம் போல நாணு வரை நில்லாக் காமம், கலித்தொகை 138 – உப்பு இயல் பாவை உறை உற்றது போல உக்கு விடும் என் உயிர்.  அகநானூறு 208 – உப்புச் சிறை நில்லா வெள்ளம் போல நாணு வரை நில்லாக் காமம், கலித்தொகை 138 – உப்பு இயல் பாவை உறை உற்றது போல உக்கு விடும் என் உயிர்.   யாம் செய் தொல் வினைக்கு எவன் பேதுற்றனை (1) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – நாம் செய்த பழவினை அங்ஙனமாயிருக்க அதனை ஆராயாது நீ இதன்பொருட்டு மயங்குகின்றனை?, ஒளவை துரைசாமி உரை – பண்டு நாம் செய்த பழவினை போந்து வருந்துதற்கு மயங்கி வருந்துவது என்ன பயனுடைத்தாம்.  மதி – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம், சொல்லதிகாரம்,  இடையியல் 26).

சொற்பொருள்:  யாம் செய் தொல் வினைக்கு – நாம் செய்த பழைய வினை, எவன் பேதுற்றனை – எதற்காக வருந்துகின்றாய், வருந்தல் – வருந்தாதே, வாழி தோழி – நீடு வாழ்வாயாக தோழி, யாம் சென்று உரைத்தனம் வருகம் – நாம் தலைவனிடம் சென்று பேசி வருவோம், எழுமதி – எழுவாயாக (மதி – முன்னிலையசை, தன்மையொருமை வினைமுற்று), புணர் திரைக் கடல் விளை அமுதம் பெயற்கு ஏற்றாஅங்கு உருகி உகுதல் அஞ்சுவல் – பொருந்திய அலைகளையுடைய கடலில் விளைந்த உப்பு மழையை ஏற்று உருகியதைப் போல் நீ உருகுகின்றாய் என்று நான் அஞ்சுகின்றேன் (கடல் விளை அமுதம் – உப்பு), உதுக்காண் – அங்கே பார், தம்மோன் கொடுமை நம் வயின் எற்றி – தலைவன் நமக்கு இழைத்த கொடுமையை நினைத்து, நயம் பெரிது உடைமையின் – நம்பால் அன்பு பெரிதும் உடைமையாலே, தாங்கல் செல்லாது – வருத்தத்தை அடக்கிக் கொள்ள முடியாது, கண்ணீர் அருவியாக அழுமே தோழி – தன்னுடைய கண்ணீரை அருவியாக வடிக்கின்றது தோழி, அவர் பழம் உதிர் குன்றே – தலைவருடைய பழங்கள் விழுகின்ற குன்று (குன்றே – ஏகாரம் அசை நிலை)

நற்றிணை 89, இளம்புல்லூர்க் காவிதி, முல்லைத் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
கொண்டல் ஆற்றி விண் தலைச்செறீஇயர்,
திரைப் பிதிர் கடுப்ப முகடு உகந்து ஏறி,
நிரைத்து நிறை கொண்ட கமஞ்சூல் மா மழை
அழிதுளி கழிப்பிய அழிபெயல் கடை நாள்,
இரும் பனிப் பருவத்த மயிர்க் காய் உழுந்தின்,  5
அகல் இலை அகல வீசி, அகலாது
அல்கலும் அலைக்கும் நல்கா வாடை,
பரும யானை அயா உயிர்த்தாஅங்கு,
இன்னும் வருமே தோழி, வாரா
வண்கணாளரோடு இயைந்த  10
புன்கண் மாலையும் புலம்பும் முந்துறுத்தே.

பாடல் பின்னணி:  தலைவன் பொருள் முற்றி மீண்டான் என்பதை அறிந்த தோழி, தலைவியிடம் உரைத்தது.

பொருளுரைகீழ்க்காற்று செலுத்துவதால் வானில் அடர்ந்து நீர் அலையில் உள்ள பிசிர் போல் தோன்றி மலையுச்சியில் விருப்பத்துடன் ஏறி ஒழுங்காக (வரிசையாக) நிரம்பிய கருவுற்ற கரிய முகில்கள் மிக்க மழைத்துளிகளைப் பெய்து ஒழிந்த கார்காலத்தின் இறுதியில், அகலாமல் நாள்தோறும் வருத்தும் நம்மிடம் அன்பு செலுத்தாத வாடைக் காற்று, பருமம் பூண்ட யானை தளர்ச்சியில் பெருமூச்சு விட்டாற்போல் மேலும் வருமே தோழி, இதுவரை வராது இருந்த அருள் இல்லாத தலைவருடன் பொருந்திய துன்பத்தைத் தரும் மாலைப் பொழுதையும் தனிமையையும் முற்பட விட்டுக்கொண்டு.

குறிப்பு:  கமம் – நிறைவு, கமம் நிறைந்தியலும் (தொல்காப்பியம், உரியியல் 57).  புலம்பு – புலம்பே தனிமை (தொல்காப்பியம், உரியியல் 35).

சொற்பொருள்:  கொண்டல் ஆற்றி விண் தலைச்செறீஇயர் திரைப் பிதிர் கடுப்ப முகடு உகந்து ஏறி நிரைத்து நிறை கொண்ட கமஞ்சூல் மா மழை அழிதுளி கழிப்பிய அழிபெயல் கடை நாள் – கீழ்க்காற்று செலுத்துவதால் வானில் அடர்ந்து நீர் அலையில் உள்ள பிசிர் போல் மலையுச்சியில் விருப்பத்துடன் ஏறி ஒழுங்காக (வரிசையாக) நிரம்பிய கருவுற்ற கரிய முகில்கள் மிக்க மழைத்துளிகளைப் பெய்து ஒழிந்த கார்காலத்தின் இறுதி நாள் (செறீஇயர் – செய்யுளிசை அளபெடை, கடுப்ப – உவம உருபு), இரும் பனிப் பருவத்த மயிர்க் காய் உழுந்தின் அகல் இலை அகல வீசி – மிக்க முன்பனிப் பருவத்தில் மயிர்கள் அமைந்த உழுந்தின் இலைகள் சிதையும்படி வீசி, அகலாது அல்கலும் அலைக்கும் நல்கா வாடை – அகலாமல் நாள்தோறும் வருத்தும் நம்மிடம் அன்பு செலுத்தாத வாடைக் காற்று, பரும யானை அயா உயிர்த்தாஅங்கு இன்னும் வருமே தோழி – பருமம் பூண்ட யானை தளர்ச்சியில் பெருமூச்சு விட்டாற்போல் மேலும் வருமே தோழி (பருமம் – குதிரைக்கலனை, சேணம், உயிர்த்தாஅங்கு – செய்யுளிசை அளபெடை), வாரா வண்கணாளரோடு – இதுவரை வராது இருந்த அருள் இல்லாத தலைவருடன், இயைந்த – பொருந்திய, புன்கண் மாலையும் புலம்பும் முந்துறுத்தே – துன்பத்தைத் தரும் மாலைப் பொழுதையும் தனிமையையும் முற்பட விட்டுக்கொண்டு (முந்துறுத்தே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 90, அஞ்சில் அஞ்சியார், மருதத் திணை – தோழி தலைவியிடம் சொன்னது, பாணன் கேட்கும்படியாக
ஆடு இயல் விழவின் அழுங்கல் மூதூர்,
உடையோர் பன்மையின் பெருங்கை தூவா,
வறன் இல் புலைத்தி எல்லித் தோய்த்த
புகாப் புகர் கொண்ட புன் பூங்கலிங்கமொடு
வாடா மாலை துயல்வர, ஓடிப்  5
பெருங்கயிறு நாலும் இரும் பனம் பிணையல்
பூங்கண் ஆயம் ஊக்க ஊங்காள்,
அழுதனள் பெயரும் அம் சில் ஓதி,
நல்கூர் பெண்டின் சில் வளைக் குறுமகள்,
ஊசல் உறு தொழில் பூசல் கூட்டா  10
நயன் இல் மாக்களொடு கெழீஇ,
பயன் இன்று அம்ம, இவ் வேந்துடை அவையே.

பாடல் பின்னணி:  பரத்தையினால் பிரிந்த தலைவன், தலைவியின் ஊடல் தணியப் பாணனை அனுப்புகிறான்.  அப்பாணன் கேட்குமாறு தோழி தலைவியிடம், “அப்பரத்தை ஊஞ்சலாடாது அழுதாள்.  அவளை ஆற்றுவித்து மீண்டும் ஊஞ்சலாடுமாறு செய்ய அமையாதவனாய் உள்ளான் நம் தலைவன்.  அவள் ஊடியதால் இங்கு வர விரும்புகின்றான்” எனக் கூறி வாயில் மறுத்தது.

பொருளுரை:  கேட்பாயாக!  நடனமாடுகின்ற விழாக்களில் ஒலியை உடைய பழமையான ஊரில் ஆடைகளைத் துவைக்கும், பெரிதும் தன் கை ஓயாத வறுமை இல்லாத வண்ணாத்தி இரவில் துவைத்த சோற்றின் கஞ்சியை இட்ட சிறிய பூ வேலைப்பாடு அமைந்த ஆடையுடன், தன் பொன் மாலை அசைய ஓடிச் சென்று பெரிய கயிற்றால் தொங்கவிட்ட கரிய பனை நாரால் செய்யப்பட்ட ஊஞ்சலில் மலரைப் போலும் கண்களையுடைய தோழியர் ஆட்டவும் ஆடாமல் அழுது நகரும், அழகிய மென்மையான கூந்தலையுடைய, சில வளையல்களை அணிந்த, மிகவும் வருந்தும் இளம் பெண்ணின் ஊஞ்சலாடுகின்ற ஆரவாரத்தில் சேராத, விருப்பம் இல்லாத மக்களுடன் சேர்ந்து, பயன் இல்லாது உள்ளது தலைவனின் சுற்றம்.

குறிப்பு:  ஒளவை துரைசாமி உரை – ‘அவன் அறிவு ஆற்ற அறியும் ஆகலின்’ (தொல்காப்பியம், கற்பியல் 6) என்ற நூற்பாவின்கண் வரும், ‘வாயிலின் வாயிலின் வரூஉம் வகையொடு தொகைஇ கிழவோள் செப்பல் கிழவது என்ப’ என்பதன் உரையில் இப்பாட்டைக் காட்டி, ‘இது பாங்கனைக் குறித்துக் கூறியது’ என்பர் இளம்பூரணர்; ‘இது பாணனைக் குறித்துக் கூறியது’ என்பர் நச்சினார்க்கினியர்.  பயன் இன்று வேந்துடை அவை (12) – ஒளவை துரைசாமி உரை – வேந்தனாகிய தலைவனது சுற்றம் பயன் தருவதன்று, பாணன் முதலிய சுற்றம் சூழஇருப்பு அவை எனப்பட்டது.  அம்ம (12) – ஒளவை துரைசாமி உரை– கேட்பாயாக (அம்ம கேட்பிக்கும் (தொல்காப்பியம், இடையியல் 28), பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – என்ன வியப்பு.  புலைத்தி – அகநானூறு 34 – பசை கொல் மெல் விரல் பெருந்தோள் புலைத்தி, அகநானூறு 387 – பசை விரல் புலைத்தி நெடிது பிசைந்து ஊட்டிய பூந்துகில், நற்றிணை 90 – வறன் இல் புலைத்தி எல்லித் தோய்த்த புகாப் புகர் கொண்ட புன் பூங்கலிங்கமொடு, குறுந்தொகை 330 – நலத்தகைப் புலைத்தி பசை தோய்த்து, கலித்தொகை 72 – ஆடை கொண்டு ஒலிக்கும் நின் புலைத்தி, புறநானூறு 311 – புலைத்தி கழீஇய தூ வெள் அறுவை, புறநானூறு 259 – முருகு மெய்ப்பட்ட புலைத்தி போல, கலித்தொகை 117 – மாதர்ப் புலைத்தி விலை ஆகச் செய்தது ஓர் போழில் புனைந்த வரிப் புட்டில்.

சொற்பொருள்:  ஆடு இயல் விழவின் – கூத்தாடுகின்ற (நடனமாடுகின்ற) விழாக்களில், அழுங்கல் மூதூர் – ஒலியை உடைய பழமையான ஊர், உடையோர் பன்மையின் – ஆடைகளைத் துவைக்கும் தன்மையில் (பான்மை – முறைமை), பெருங்கை தூவா வறன் இல் புலைத்தி – பெரிதும் தன் கை ஓயாத வறுமை இல்லாத துவைக்கும் பெண், எல்லித் தோய்த்த – இரவில் துவைத்த, புகாப் புகர் கொண்ட – சோற்றின் கஞ்சியை இட்ட, புன் பூங்கலிங்கமொடு – சிறிய பூ வேலைப்பாடு அமைந்த ஆடையுடன், வாடா மாலை துயல்வர – வாடாத மாலை அசைய, பொன் மாலை அசைய, ஓடி – ஓடி, பெருங்கயிறு நாலும் – பெரிய கயிற்றால் தொங்கவிட்ட, இரும் பனம் பிணையல் – கரிய பனை நாரால் செய்யப்பட்ட ஊஞ்சலில், பூங்கண் ஆயம் ஊக்க – மலரைப் போலும் கண்களையுடைய தோழியர் ஆட்டவும், ஊங்காள் அழுதனள் பெயரும் – ஆடாமல் அழுது நகரும், அம் சில் ஓதி – அழகிய மென்மையான கூந்தல், நல்கூர் பெண்டின் சில் வளைக் குறுமகள் – வருந்தும் பெண்ணாகிய சில வளையல்களை அணிந்த இளம் பெண், ஊசல் உறு தொழில் பூசல் கூட்டா – ஊஞ்சலாடுகின்ற தொழிலின் ஆரவாரத்தில் சேராத, நயன் இல் மாக்களொடு கெழீஇ – விருப்பம் இல்லாத மக்களுடன் சேர்ந்து (கெழீஇ – செய்யுளிசை அளபெடை), பயன் இன்று – பயன் இல்லை, அம்ம – கேட்பாயாக, வியப்பு, அசை நிலையுமாம், இவ் வேந்துடை அவையே – வேந்தனாகிய இத் தலைவனின் சுற்றம் (அவையே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 91, பிசிராந்தையார், நெய்தல் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
நீ உணர்ந்தனையே தோழி, வீ உகப்
புன்னை பூத்த இன் நிழல் உயர் கரைப்
பாடு இமிழ் பனிக் கடல் துழைஇ, பெடையோடு
உடங்கு இரை தேரும் தடந்தாள் நாரை
ஐய சிறுகண் செங்கடைச் சிறுமீன்,  5
மேக்கு உயர் சினையின் மீமிசைக் குடம்பைத்
தாய்ப் பயிர் பிள்ளை வாய்ப்படச் சொரியும்
கானல் அம் படப்பை ஆனா வண் மகிழ்ப்
பெருநல் ஈகை நம் சிறுகுடிப் பொலிய,
புள் உயிர்க் கொட்பின் வள் உயிர் மணித்தார்க்  10
கடு மாப் பூண்ட நெடுந்தேர்
நெடு நீர்ச் சேர்ப்பன் பகல் இவண் வரவே?

பாடல் பின்னணி:  பொருள் தேடிப் பிரிந்த தலைவன் வினை முற்றி பகல் பொழுதில் பலரும் காணுமாறு வருவதைக் கண்ட தோழி, தலைவியிடம் உரைத்தது.

பொருளுரைமலர்கள் விழும்படி புன்னை மரங்கள் மலர்ந்திருக்கின்ற இனிய நிழலையுடைய உயர்ந்த கரையையுடைய ஓசை முழங்கும் குளிர்ந்த கடலில் துழாவி தன் பெடையுடன் சேர்ந்து ஒன்றாக இரையைத் தேடுகின்ற பெரிய கால்களையுடைய நாரை, மெல்லிய சிறிய கண்களையுடைய சிறு மீன்களைப் பிடித்து மேலோங்கிய கிளையில் உள்ள ஓங்கிய உயர்ந்த இடத்தில் உள்ள கூட்டிலிருந்து தம் தாய் நாரையைக் கூவி அழைக்கும் பிள்ளைகளின் வாயில் பெய்யும், கடற்கரைச் சோலைகளையும் தோப்புக்களையும் உடைய குறையாத மிக்க உணவையும் பெரிய நல்ல கொடையையும் உடைய நம் சிறுகுடி பொலியுமாறு, பறவைகள் ஒலித்தாற்போல் சுழற்சியுடைய பெரிய ஓசையுடன் மணிகள் மாலையாகக் கட்டப்பட்ட விரைந்து செல்லும் குதிரைகள் பூட்டிய உயர்ந்த தேரில் நீண்ட கடற்கரையின் தலைவன் பகல் நேரத்தில் இங்கு வருவதனை நீ அறிந்தாயோ?

குறிப்பு:  உள்ளுறை – கு. வெ. பாலசுப்பிரமணியன் உரை – நாரை கடலிற் சென்று இரை தேடித் தம் பிள்ளையை அருத்தும் என்றது, தலைவன் வேற்று நாட்டிற் சென்று பொருள் தேடித் தமரைப் பேணுதல் என்பதாம்.  நீ உணர்ந்தனையே (1) – ஒளவை துரைசாமி உரை – நீ உணர்ந்தனையே என்றவிடத்து ஏகாரம் வினா.  எதிர்மறைப் பொருளும் கண்ணி நிற்றலின் உணர்ந்தாய் அல்லையோ என உரை கூறப்பட்டது.  இதனை மாறுகோள் எச்சம் என்பர் தொல்காப்பியர். மாறு கொள் எச்சமும் வினாவும் எண்ணும் கூறிய வல்லெழுத்து இயற்கை ஆகும் (தொல்காப்பியம், எழுத்ததிகாரம் 275).  ஐய சிறுகண் செங்கடைச் சிறுமீன் (5) – ஒளவை துரைசாமி உரை – மெல்லிய தோல் போர்த்தப்பட்ட சிறிய கண்ணையும் சிவந்த செதிலையுமுடைய சிறு மீன், பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – மெல்லிய சிவந்த சிறிய கண் கடையையுடைய சிறிய மீன், கு. வெ. பாலசுப்பிரமணியன் உரை – மெல்லிதான சிவந்த கடைக்கண் பகுதிகொண்ட சிறிய மீன்.  தட – தடவும் கயவும் நளியும் பெருமை (தொல்காப்பியம், உரியியல் 25).

சொற்பொருள்:  நீ உணர்ந்தனையே – நீ அறிந்தாயோ, தோழி – தோழி, வீ உகப் புன்னை பூத்த இன் நிழல் உயர் கரைப் பாடு இமிழ் பனிக் கடல் துழைஇ பெடையோடு உடங்கு இரை தேரும் தடந்தாள் நாரை – மலர்கள் விழும்படி புன்னை மரங்கள் மலர்ந்திருக்கின்ற இனிய நிழலையுடைய உயர்ந்த கரையையுடைய ஓசை முழங்கும் குளிர்ந்த கடலில் துழாவி தன் பெடையுடன் சேர்ந்து ஒன்றாக இரையைத் தேடுகின்ற பெரிய கால்களையுடைய நாரை (புன்னை – Calophyllum inophyllum, Mast wood Tree, துழைஇ – அளபெடை), ஐய சிறுகண் செங்கடைச் சிறுமீன் மேக்கு உயர் சினையின் மீமிசைக் குடம்பைத் தாய்ப் பயிர் பிள்ளை வாய்ப்படச் சொரியும் – மெல்லிய சிறிய கண்களையுடைய சிறிய மீன்களைப் பிடித்து மேலோங்கிய கிளையில் உள்ள ஓங்கிய உயர்ந்த இடத்தில் உள்ள கூட்டிலிருந்து தம் தாய் நாரையைக் கூவி அழைக்கும் பிள்ளைகளின் வாயில் பெய்யும் (மீமிசை – ஒருபொருட் பன்மொழி), கானல் அம் படப்பை ஆனா வண் மகிழ்ப் பெருநல் ஈகை நம் சிறுகுடிப் பொலிய – கடற்கரைச் சோலைகளையும் தோப்புக்களையும் உடைய குறையாத மிக்க உணவையும் பெரிய நல்ல கொடையையும் உடைய நம் சிறுகுடி பொலியுமாறு, புள் உயிர்க் கொட்பின் வள் உயிர் மணித்தார்க் கடு மாப் பூண்ட நெடுந்தேர் நெடு நீர்ச் சேர்ப்பன் பகல் இவண் வரவே – பறவைகள் ஒலித்தாற்போல் சுழற்சியுடைய பெரிய ஓசையுடன் மணிகள் மாலையாகக் கட்டப்பட்ட விரைந்துச் செல்லும் குதிரைகள் பூட்டிய உயர்ந்த தேரில் நீண்ட கடற்கரையின் தலைவன் பகல் நேரத்தில் இங்கு வருவதனை (வரவே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 92, பாடியவர் பெயர் கிடைக்கவில்லை, பாலைத் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
உள்ளார் கொல்லோ தோழி, துணையொடு
வேனில் ஓதி பாடு நடை வழலை
வரி மரல் நுகும்பின் வாடி, அவண
வறன் பொருந்து குன்றத்து உச்சி கவாஅன்
வேட்டச் சீறூர் அகன் கண் கேணிப்  5
பய நிரைக்கு எடுத்த மணி நீர்ப் பத்தர்,
புன்தலை மடப் பிடி கன்றோடு ஆர,
வில் கடிந்து ஊட்டின பெயரும்
கொல் களிற்று ஒருத்தல் சுரன் இறந்தோரே?

பாடல் பின்னணி:  பிரிவிடை வருந்திய தலைவிக்குத் தோழி சொல்லியது.

பொருளுரைதன் துணையுடன், வேனில் காலத்தில் வருந்திய நடையையுடைய வழலைப் பாம்புபோல் நகரும் ஓணான் வரியுடைய மரல் இளமடலின் போல் வாடிய அவ்விடத்தில் உள்ள வறட்சியுடைய குன்றின் பக்கத்திலுள்ள வேடவரின் சிற்றூரின்கண், அகன்ற வாயையுடைய கிணற்றிலிருந்து பயன்தரும் ஆநிரை உண்ணுமாறு எடுத்து வைத்த தெளிந்த நீருடைய தொட்டியில் உள்ள நீரை உண்ணுவதற்காக, புல்லிய தலையையுடைய இளம் பிடி தன் கன்றுடன் வந்து, அத் தொட்டியின் வாயில் உள்ள விற்பொறியை உடைத்து நீருண்டு விலகும், கொல்லும் களிற்று யானைகள் உடைய பாலை நிலத்தைக் கடந்து சென்ற நம் தலைவர், நம்மை நினைப்பாரா தோழி?

குறிப்பு:  வழலை (2) – ச. வே. சுப்பிரமணியன் உரை – கருவழலைப் பாம்பு, University of Madras Lexicon – ஒருவகைப் பாம்பு, Lycodontidae, ஒளவை துரைசாமி உரை – ஆண் ஓந்தி, பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – ஓந்தியாகிய வழலை, வழலை ஒரு வகைப் பாம்பு.  பாடு நடை (2) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – வருந்திய நடை, ஒளவை துரைசாமி உரை – ஓசையிட்டுச் செல்லும் நடை.  பிடி – பிடி என் பெண் பெயர் யானை மேற்றே (தொல்காப்பியம், மரபியல் 52).

சொற்பொருள்:  உள்ளார் கொல்லோ தோழி – நம்மை நினைப்பாரா தோழி (கொல் – ஐயப்பொருட்டு, ஓகாரம் அசைநிலை), துணையொடு – தன் துணையுடன், வேனில் ஓதி பாடு நடை வழலை வரி மரல் நுகும்பின் வாடி – வேனில் காலத்தில் வருந்திய நடையையுடைய வழலைப் போன்று நகரும் ஓணான் வரியுடைய மரல் இளமடலின் போல் வாடி (வழலை – ஒருவகைப் பாம்பு, ground snake, Lycodontidae), அவண – அவ்விடத்தில், வறன் பொருந்து குன்றத்து உச்சி கவாஅன் வேட்டச் சீறூர் – வறட்சியுடைய குன்றின் பக்கத்திலுள்ள வேடவரின் சிற்றூர் (கவாஅன் – அளபெடை), அகன் கண் கேணிப் பய நிரைக்கு எடுத்த மணி நீர்ப் பத்தர் – அகன்ற வாயையுடைய கிணற்றிலிருந்து பயன்தரும் ஆநிரை உண்ணுமாறு எடுத்து வைத்த தெளிந்த நீருடைய தொட்டியின், புன்தலை மடப் பிடி கன்றோடு – புல்லிய தலையையுடைய இளம் பிடி தன் கன்றுடன் (புன்தலை – சிறிய தலை, மயிர் குறைவாக உள்ள தலை, மென்மையான தலை), ஆர வில் கடிந்து ஊட்டின பெயரும் – நீர் உண்ணுவதற்காக அத் தொட்டியின் வாயில் உள்ள விற்பொறியை உடைத்து நீருண்டு விலகும், கொல் களிற்று ஒருத்தல் சுரன் இறந்தோரே – கொல்லும் களிற்று யானைகள் உடைய பாலை நிலத்தைக் கடந்து சென்ற நம் தலைவர் (இறந்தோரே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 93, மலையனார், குறிஞ்சித் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
பிரசம் தூங்க, பெரும் பழம் துணர,
வரை வெள்ளருவி மாலையின் இழிதரக்,
கூலம் எல்லாம் புலம் புக, நாளும்
மல்லற்று அம்ம இம் மலை கெழு வெற்பு எனப்
பிரிந்தோர் இரங்கும் பெருங்கல் நாட!  5
செல்கம், எழுமோ, சிறக்க நின் ஊழி!
மருங்கு மறைத்த திருந்திழைப் பணைத்தோள்,
நல்கூர் நுசுப்பின் மெல்லியல் குறுமகள்,
பூண் தாழ் ஆகம் நாண் அட வருந்திய
பழங்கண் மாமையும் உடைய; தழங்கு குரல் 10
மயிர்க் கண் முரசின் ஓரும் முன்
உயிர்க் குறி எதிர்ப்பை பெறல் அருங்குரைத்தே.

பாடல் பின்னணி:  தோழி வரைவு கடாயது.

பொருளுரை:  தேனிறால்கள் மரங்களிலும் பாறைகளிலும் தொங்க, பலாவின் பெரிய பழங்கள் கொத்துக் கொத்தாகப் பழுக்க, மலையில் வெள்ளை அருவிகள் இறங்கிவர, நெல் தினை முதலிய கூலங்கள் எல்லாம் விதைக்கப்பட்டுப் பொலிய, சிறிய குன்றுகள் பொருந்திய இப்பெரிய மலையை விட்டுப் பிரிந்தவர்கள் வருந்தும் பெரிய மலையின் நாடனே!  யாம் இங்கிருந்து எம் ஊர்க்குச் செல்கின்றோம். நீயும் எழுந்து செல்வாயாக. உன் வாழ்நாட்கள் மிகுவதாக! பக்கங்களை மறைக்கும் சிறந்த அணிகலன்களை உடைய பெரிய தோள்களையும் (மூங்கில்போன்ற தோள்களையும்) சிறிய இடையையும் உடைய மென்மையான தன்மையுடைய இந்த இளமகள், அணிகலன்கள் தாழ்ந்து தொங்கும் மார்புகள் நாணம் துன்புறுத்துவதால் வருந்திய துன்பம் கொண்ட, மாந்தளிர் நிறம் உடைய, ஒலிக்கும் ஓசையுடைய மயிர் சீவாத தோல் போர்த்தப்பட்ட முரசின் ஒலியைக் கேட்டதனால் நீ திருமணம் புரிய வந்தாய் என்று அறியும் அந்த நாள் வருவதற்குள் இவள் சாவாமல் இருப்பது அரிது.

குறிப்பு:  அம்ம (4) – ஒளவை துரைசாமி உரை – கேட்க, உரையசை, H. வேங்கடராமன் உரை – வியப்பு.  இறைச்சி – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – நின்னைப் புகல்ப்புக்கேமைக் கைவிடுகின்ற நினது மலையாயிருந்தும் பிரிந்தோர் இரங்குமாறு இன்னும் வளனுடைத்தாயிரா நின்றது. இஃதென்ன வியப்போ எனப் பொருட்புறத்தே இறைச்சி தோன்றியது காண்க.  அம்ம  – அம்ம கேட்பிக்கும் (தொல்காப்பியம், இடையியல் 28).  குரை – ஏயும் குரையும் இசைநிறை அசைநிலை ஆயிரண்டு ஆகும் இயற்கைய என்ப (தொல்காப்பியம், இடையியல் 24).

சொற்பொருள்:  பிரசம் தூங்க பெரும் பழம் துணர வரை வெள்ளருவி மாலையின் இழிதரக் கூலம் எல்லாம் புலம் புக நாளும் மல்லற்று அம்ம இம் மலை கெழு வெற்பு எனப் பிரிந்தோர் இரங்கும் பெருங்கல் நாட – தேனிறால்கள் மரங்களிலும் பாறைகளிலும் தொங்க பலாவின் பெரிய பழங்கள் கொத்துக் கொத்தாகப் பழுக்க மலையில் வெள்ளை அருவிகள் இறங்கிவர நெல் தினை முதலிய கூலங்கள் எல்லாம் விதைக்கப்பட்டுப் பொலிய சிறிய குன்றுகள் பொருந்திய இப்பெரிய மலையை விட்டுப் பிரிந்தவர்கள் வருந்தும் பெரிய மலையின் நாடனே (மல்லற்று – வளமையுடையது), செல்கம் – யாம் இங்கிருந்து எம் ஊர்க்குச் செல்கின்றோம், எழுமோ – நீயும் எழுந்து செல்வாயாக (மோ – முன்னிலையசை), சிறக்க நின் ஊழி – உன் வாழ்நாட்கள் மிகுவதாக (சிறக்க – வியங்கோள் வினைமுற்று), மருங்கு மறைத்த திருந்திழைப் பணைத்தோள் நல்கூர் நுசுப்பின் மெல்லியல் குறுமகள் – பக்கங்களை மறைக்கும் சிறந்த அணிகலன்களை உடைய பெரிய தோள்களையும் (மூங்கில்போன்ற தோள்களையும்) சிறிய இடையையும் உடைய மென்மையான தன்மையுடைய இந்த இளமகள், பூண் தாழ் ஆகம் நாண் அட வருந்திய பழங்கண் மாமையும் உடைய – அணிகலன்கள் தாழ்ந்து தொங்கும் மார்புகள் நாணம் துன்புறுத்துவதால் வருந்திய துன்பம் கொண்ட மாந்தளிர் நிறமும் உடைய, தழங்கு குரல் மயிர்க் கண் முரசின் ஓரும் முன் உயிர்க் குறி எதிர்ப்பை பெறல் அருங்குரைத்தே – ஒலிக்கும் ஓசையுடைய மயிர் சீவாத தோல் போர்த்தப்பட்ட முரசின் ஒலியைக் கேட்டதனால் நீ திருமணம் புரிய வந்தாய் என்று அந்த நாள் வருவதற்குள் இவள் சாவாமல் இருப்பது அரிது (அருங்குரைத்தே – குரை என்னும் இடைச்சொல் குறிப்பு வினைமுற்றாக ஆயிற்று, ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 94, இளந்திரையனார், நெய்தல் திணை – தலைவி தோழியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
நோய் அலைக் கலங்கிய மதன் அழி பொழுதில்,
காமம் செப்பல் ஆண்மகற்கு அமையும்;
யானே பெண்மை தட்ப நுண்ணிதின் தாங்கிக்,
கை வல் கம்மியன் கவின் பெறக் கழாஅ
மண்ணாப் பசு முத்து ஏய்ப்ப குவி இணர்ப்  5
புன்னை அரும்பிய புலவு நீர்ச் சேர்ப்பன்
என்ன மகன் கொல் தோழி, தன் வயின்
ஆர்வம் உடையர் ஆகி
மார்பு அணங்குறுநரை அறியாதோனே?

பாடல் பின்னணி:  தலைவன் சிறைப்புறமாகத் தலைவி தோழிக்கு உரைப்பாளாய்ச் சொல்லியது.

பொருளுரைகாதல் நோயானது நம்மை வருத்துகின்றபோது நாம் மனம் கலங்கி வலிமை அழிகின்ற வேளையில் அன்போடு வந்து அருகில் இருந்து நம்மை ஆற்றுவித்தல் ஆண்மகனுக்கு உரிய சிறந்த பண்பாகும்.  நான் என்னுடைய நலனைத் தாங்கி என் பெண்மையால் தடுத்துக் கொண்டேன்.  கைத்தொழிலில் வல்லவன் அழகுபெற கழுவாத பசிய முத்து தன்னுடைய ஒளியை வெளியே செலுத்தாதது போல, குவிந்த பூங்கொத்துக்களையுடைய புன்னை மரத்தில் புலவு நாற்றத்தையுடைய நீர் தெறித்ததால் மலர்ந்த கடற்கரையின் தலைவன் அவன் மார்பால் வருத்தமுற்ற என் இயல்பை அறியாத காதலன் என்ன மகன் எனக் கூறப்படுவானோ?

குறிப்பு:  புன்னை அரும்பிய (6) – ஒளவை துரைசாமி உரை – பூங்கொத்துக்களையுடைய புன்னை மரம், அலராமற் குவிந்த பூங்கொத்துக்கள்.   ஒளவை துரைசாமி உரை– ‘மறைந்தவற் காண்டல்’ (தொல்காப்பியம், களவியல் 21) என்ற நூற்பாவின்கண் வரும் ‘ஏமம் சான்ற உவகைக்கண்ணும்’ என்றதற்கு இப்பாட்டினை எடுத்தோதிக் காட்டி ‘கழுவாத பசிய முத்தம் தனது மிக்க ஒளியை மறைத்துக் காட்டினாற்போல் யாமும் புணர்ச்சியால் நிகழ்ந்த மிக்க நலனைப் புலப்படாமல் அரிதாகத் தாங்கிப் பெண்மையால் தகைத்துக் கொள்ளும் படியாகத் தன் மார்பால் வருத்தமுற்றாரைக் கண்டு அறியாதோனாகிய சேர்ப்பனை என்ன மகன் என்று சொல்லப்படும் என மகிழ்ந்து கூறினாள்; ஆர்வமுடையவராக வேண்டி மார்பு அணங்குறுநரை அறியாதோன் என்க; அலராமற் குவித்த கொத்தையுடைய புன்னைக் கண்ணே புலால் நாற்றத்தையுடைய நீர் தெறித்து அரும்பிய சேர்ப்பன் என்றதனால், புன்னையிடத்துத் தோன்றிய புலால் நாற்றத்தைப் பூ விரித்து கெடுக்குமாறு போல, வரைந்துகொண்டு வந்த குற்றம் வழிகெட ஒழுகுவன் என்பது உள்ளுறை’ என்பர் நச்சினார்க்கினியர். கழாஅ – கழுவி என்பது பொருள்.  செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம்.  எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது.  காமம் – கமம் என்னும் சொல்லின் முதல் நீண்ட வடிவம், ‘நிறைந்த அன்பு’ என்பது இச்சொல்லின் பொருள் – பேரறிஞர் கு.வெ. பாலசுப்பிரமணியன் அவர்களின் விளக்கம், (கமம் நிறைந்து இயலும் – தொல்காப்பியம், சொல்லியல் 355).

சொற்பொருள்:  நோய் அலைக் கலங்கிய மதன் அழி பொழுதில் காமம் செப்பல் ஆண்மகற்கு அமையும் – காதல் நோயானது நம்மை வருத்துகின்றபோது நாம் மனம் கலங்கி வலிமை அழிகின்ற வேளையில் அன்போடு வந்து அருகில் இருந்து நம்மை ஆற்றுவித்தல் ஆண்மகனுக்கு உரிய சிறந்த பண்பாகும், யானே பெண்மை தட்ப நுண்ணிதின் தாங்கி – நான் என்னுடைய நலனைத் தாங்கி என் பெண்மையால் தடுத்துக் கொண்டேன், கை வல் கம்மியன் கவின் பெறக் கழாஅ மண்ணாப் பசு முத்து ஏய்ப்ப – கைத்தொழிலில் வல்லவன் அழகுபெற கழுவாத பசிய முத்து தன்னுடைய ஒளியை வெளியே செலுத்தாதது போல (கழாஅ  – செய்யுளிசை அளபெடை, ஏய்ப்ப – உவம உருபு), குவி இணர்ப் புன்னை அரும்பிய புலவு நீர்ச் சேர்ப்பன் என்ன மகன் கொல் தோழி – குவிந்த பூங்கொத்துக்களையுடைய புன்னை மரத்தில் புலவு நாற்றத்தையுடைய நீர் தெறித்ததால் மலர்ந்த கடற்கரையின் தலைவன் என்ன மகன் எனக் கூறப்படுவானோ, தன் வயின் ஆர்வம் உடையர் ஆகி மார்பு அணங்குறுநரை அறியாதோனே – அவன் மார்பால் வருத்தமுற்ற என் இயல்பை அறியாத காதலன் (அறியாதோனே – ஏகாரம் அசை நிலை)

நற்றிணை 95, கோட்டம்பலவனார், குறிஞ்சித் திணை  – தலைவன் தன் தோழனிடம் சொன்னது
கழை பாடு இரங்க, பல் இயம் கறங்க,
ஆடுமகள் நடந்த கொடும் புரி நோன் கயிற்று
அதவத் தீம் கனி அன்ன செம்முகத்
துய்த்தலை மந்தி வன் பறழ் தூங்க,
கழைக் கண் இரும் பொறை ஏறி விசைத்து எழுந்து,  5
குறக் குறுமாக்கள் தாளம் கொட்டும் அக்
குன்றகத்ததுவே, குழு மிளைச் சீறூர்;
சீறூரோளே நாறு மயிர்க் கொடிச்சி
கொடிச்சி கையகத்ததுவே, பிறர்
விடுத்தற்கு ஆகாது பிணித்த என் நெஞ்சே.  10

பாடல் பின்னணி:  தலைவன் பாங்கற்கு, இவ்விடத்து இத்தன்மையத்து என உரைத்தது.

பொருளுரை:  புல்லாங்குழல் ஒலிக்க, பல இசைக் கருவிகளும் முழங்க, ஆடும் மகள் நடந்த முறுக்குடைய வலிமையான கயிற்றில், இனிய அத்திப் பழத்தைப் போன்ற சிவந்த முகத்தைக் கொண்ட பெண் குரங்கின் வலுவான குட்டியானது இறுக்கமாக பற்றிக் கொண்டு தொங்கி ஆட , சிறுவர்கள் மூங்கில் அருகில் உள்ள பெரிய பாறையின் மீது ஏறி, வேகமாக எழுந்துத் தாளம் கொட்டும் அம்மலையில் உள்ள வளமான காவல் உடையச் சிற்றூரில் வாழும் நறுமணம் மிகுந்த கூந்தலை உடைய மலைக் குறவனின் மகளின் கைகளில் உள்ள என் நெஞ்சை, பிறரால் விடுவிக்க முடியாது.  அது அவளுடன் பிணிக்கப்பட்டது.

குறிப்பு:  ஒளவை துரைசாமி உரை – ‘மெய் தொட்டுப் பயிறல்’ (தொல்காப்பியம், களவியல் 11) என்ற நூற்பாவின் கண் வரும் ‘குற்றம் காட்டிய வாயில் பெட்பினும்’ என்றதற்கு இப்பாட்டினைக் காட்டுவர் இளம்பூரணர்.  இறைச்சி – கு. வெ. பாலசுப்பிரமணியன் உரை – கழைக்கூத்தி ஆடிய கயிற்றின் மேல் குரங்கின் குட்டி ஆடக்கண்டு குறச்சிறார் கைகொட்டி நகைப்பர் என்றது, உலகின் சிறந்த நெறிகளில் விலகாது நடந்தொழுகும் என் உள்ளத்தில் ஒரு கொடிச்சி வந்து உறைந்தனள் என்பதறிந்து நீ கைகொட்டி நகைத்தற்காயிற்று என்பது உணர்த்தவாம்.  மந்தி – பேடையும் பெடையும் பெட்டையும் பெண்ணும் மூடும் நாகும் கடமையும் அளகும் மந்தியும் பாட்டியும் பிணையும் பிணவும் அந்தம் சான்ற பிடியொடு பெண்ணே (தொல்காப்பியம், மரபியல் 3).

சொற்பொருள்:  கழை – மூங்கில் (புல்லாங்குழல்), பாடு இரங்க – இசை ஒலிக்க,  பல் இயம் கறங்க – பல வகை இசைக் கருவிகளும் முழங்க, ஆடு மகள் நடந்த – ஆடும் பெண் நடந்த, கொடும் புரி நோன் கயிற்று – பெரும் முறுக்குண்ட வலிமையான கயிற்றில், அதவத் தீம் கனி அன்ன – அத்தியின் இனிய பழத்தைப்போன்ற, செம்முக – சிகப்பு முகம், துய்த் தலை மந்தி – பஞ்சு போன்ற தலையை உடைய பெண் குரங்கின், வன் பறழ் தூங்க – வலிமையான  குட்டி தொங்க, கழைக் கண் – மூங்கில் அருகில், இரும் பொறை ஏறி – பெரிய பாறையின் மீது ஏறி, விசைத்து எழுந்து – வேகமாக எழுந்து, குற குறுமாக்கள் – மலையில் வாழ்பவர்களின் சிறுவர்கள், தாளம் கொட்டும் – தாளம் கொட்டுவார்கள், அக் குன்றகத்ததுவே – அந்த மலையிலே, குழு – வளமான, மிளை சீறூர் – காவலுடைய சிற்றூர், சீறூரோளே – சிற்றூரில் உள்ளவளே, நாறு மயிர்க் கொடிச்சி – நறு மணமுள்ள கூந்தலை உடைய மலை நாட்டுப்பெண், கொடிச்சி – மலைக் குறவனின் மகள், கையகத்ததுவே – கையில் உள்ளது, பிறர் – பிறரால்,  விடுத்தற்கு ஆகாது – விடுவிக்க முடியாது, பிணித்த என் நெஞ்சே – பிணிக்கப்பட்ட என் நெஞ்சு (நெஞ்சே – ஏகாரம் அசை நிலை)

நற்றிணை 96, கோக்குளமுற்றனார், நெய்தல் திணை – தோழி தலைவியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
இதுவே, நறு வீ ஞாழல் மா மலர் தாஅய்,
புன்னை ததைந்த வெண்மணல் ஒரு சிறைப்,
புதுவது புணர்ந்த பொழிலே; உதுவே,
பொம்மல்படு திரை நம்மோடு ஆடி,
புறம் தாழ்பு இருளிய பிறங்கு குரல் ஐம்பால்  5
துவரினர் அருளிய துறையே அதுவே,
கொடுங்கழி நிவந்த நெடுங்கால் நெய்தல்
அம் பகை நெறித் தழை அணிபெறத் தைஇத்,
தமியர் சென்ற கானல் என்று ஆங்கு
உள்ளுதோறு உள்ளுதோறு உருகி,  10
பைஇப் பையப் பசந்தனை பசப்பே.

பாடல் பின்னணி:  வரைவு கடாயது.

பொருளுரை“இதுவே, நறுமணம் கமழும் பூக்களையுடைய ஞாழல் மரத்தின் மலர்கள் உதிர்ந்து பரவிய புன்னை மரங்கள் அடர்ந்த வெள்ளை மணலின் ஒரு புறம் என்னுடன் அவர் இணைந்த பொழில்.  அதன் பின்னதே, பொலிவுடைய கடலலையில் நம்முடன் விளையாடி என் முதுகில் தாழ்ந்து கரிதாக உள்ள நீண்ட அடர்ந்த ஐந்து பகுதியாக உள்ள கூந்தலைப் பிழிந்து துவட்டினராக அவர் அருள் செய்த துறை. அதுவே வளைந்த உப்பங்கழியில் உயர்ந்த நீண்ட அடியையுடைய நெய்தலின் அழகிய ஒன்றோடு ஒன்று மாறுபடத் தொடுத்த தழை ஆடையை எனக்கு அணிவித்துத் தனியர் ஆக அவர் சென்ற கடற்கரைச்சோலை”, என்று அங்கு நினைக்குந்தோறும் நினைக்குந்தோறும் உள்ளம் உருகி பசப்பை மேற்கொண்டு நீ பசந்து காட்டினாய்.

குறிப்பு:  புதுவது புணர்ந்த பொழிலே (3) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – என்னைப் புதுவதாக இயற்கைப்புணர்ச்சி புணர்ந்த சோலை, ஒளவை துரைசாமி உரை – புதுத்தளிரும் புது மலரும் செறிந்து புதுமைக்காட்சி வழங்கும் பொழிலிடம் ஆகும்.  நெய்தல்அம் பகை நெறித் தழை (7–8) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – நெய்தலின் அழகிய ஒன்றோடொன்று மாறுபடத் தொடுத்த நெறிப்பையுடைய தழை உடை, ஒளவை துரைசாமி உரை – நெய்தலின் பூவோடு வேறு நிறங்களையுடைய பூவும் தளிரும் கொண்டு தொடுத்த தழை உடை.   ஒப்புமை:  ஐங்குறுநூறு 187 – நெய்தல் அம் பகைத்தழை, குறுந்தொகை 293 – வெள் ஆம்பல் அம் பகை நெறித் தழை.

சொற்பொருள்:  இதுவே நறு வீ ஞாழல் மா மலர் தாஅய் புன்னை ததைந்த வெண்மணல் ஒரு சிறைப் புதுவது புணர்ந்த பொழிலே – இதுவே நறுமணம் கமழும் பூக்களையுடைய ஞாழல் மரத்தின் மலர்கள் உதிர்ந்து பரவிய புன்னை மரங்கள் அடர்ந்த வெள்ளை மணலின் ஒரு புறம் என்னுடன் இணைந்த பொழில் (ஞாழல் – புலிநகக்கொன்றை, tigerclaw tree, Cassia Sophera, புன்னை – Laurel Tree, Mast wood Tree, Calophyllum inophyllum, தாஅய் – செய்யுளிசை அளபெடை), உதுவே பொம்மல்படு திரை நம்மோடு ஆடி புறம் தாழ்பு இருளிய பிறங்கு குரல் ஐம்பால் துவரினர் அருளிய துறையே – அதன் பின்னது பொலிவுடைய கடலலையில் நம்முடன் விளையாடி என் முதுகில் தாழ்ந்து கரிதாக உள்ள நீண்ட அடர்ந்த ஐந்து பகுதியாக உள்ள கூந்தலைப் பிழிந்து துவட்டினராக அருள் செய்த துறை (துறையே – ஏகாரம் அசைநிலை), அதுவே கொடுங்கழி நிவந்த நெடுங்கால் நெய்தல் அம் பகை நெறித் தழை அணிபெறத் தைஇத் தமியர் சென்ற கானல் – அதுவே வளைந்த உப்பங்கழியில் உயர்ந்த நீண்ட அடியையுடைய நெய்தலின் அழகிய ஒன்றோடு ஒன்று மாறுபடத் தொடுத்த தழை ஆடையை எனக்கு அணிவித்துத் தனியர் ஆகச்சென்ற கடற்கரைச்சோலை (தைஇ – சொல்லிசை அளபெடை), என்று – என்று, ஆங்கு உள்ளுதோறு உள்ளுதோறு உருகி பைஇப் பையப் பசந்தனை பசப்பே – அங்கு நினைக்குந்தோறும் நினைக்குந்தோறும் உள்ளம் உருகி மெல்ல மெல்ல பசப்பை மேற்கொண்டு நீ பசந்து காட்டினாய் (பைஇ – அளபெடை, பசப்பே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 97, மாறன் வழுதி, முல்லைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
அழுந்துபடு விழுப்புண் வழும்புவாய் புலரா
எவ்வ நெஞ்சத்து எஃகு எறிந்தாங்குப்,
பிரிவில புலம்பி நுவலும் குயிலினும்
தேறு நீர் கெழீஇய யாறு நனி கொடிதே;
அதனினும் கொடியள் தானே, ‘மதனில்  5
துய்த்தலை இதழ பைங்குருக்கத்தியொடு
பித்திகை விரவு மலர் கொள்ளீரோ?’ என
வண்டு சூழ் வட்டியள் திரிதரும்
தண்டலை உழவர் தனி மட மகளே.

பாடல் பின்னணி:  பருவங்கண்டு ஆற்றாளாகிய தலைவி, தோழிக்கு உரைத்தது.

பொருளுரை:  ஆழ்ந்த பெரிய புண்ணின் மேல் தசை காயாத துன்பம் தாங்கிய மார்பில் வேலைப் பாய்ச்சினாற்போல், பிரியாதிருப்பினும் வருந்திக் கூவும் குயிலைக்காட்டிலும் தெளிந்த நீர் நிறைந்து வரும் ஆறு மிகவும் கொடியது.  அதைக்காட்டிலும் கொடியவள் ஆக உள்ளாள், வலிமை இல்லாத பஞ்சுபோன்ற மேற்பகுதியுடைய இதழ்களைக் கொண்ட பசிய குருக்கத்தி மலர்களுடன் பிச்சியின் மலர்களையும் கலந்த “விலைக்குக் கொள்வீர்களா” எனக் கூவி வண்டுகள் சூழும் பூக்கூடையை எடுத்துக்கொண்டு எங்கும் சுற்றி வரும், சோலையில் வாழும் உழவரின் ஒப்பற்ற இளைய மகள்.

குறிப்பு:  ஒப்புமை:  நற்றிணை 118 – புது மலர் தெருவுதொறு நுவலும் நொதுமலாட்டிக்கு நோம் என் நெஞ்சே, புறநானூறு 293 – பிறர் மனை புகுவள் கொல்லோ அளியள் தானே பூ விலைப் பெண்டே. பெரும்பாணாற்றுப்படை 355 – தண்டலை உழவர் தனி மனைச் சேப்பின்.  பிரிவில (3) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – என்னருகிலிருந்து பிரியாதனவாய், ஒளவை துரைசாமி உரை – துணையிற் பிரியாதிருந்து.  துணையோடு கூடியிருப்பினும் இசைக்குங்கால் தனித்திருப்பது குயிற்கு இயல்பு.  பித்திகை (7) – ஒளவை துரைசாமி உரை – உலக வழக்கில் பிச்சி என்பர்.  பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – குயிலோசை செவியளவே இன்பம் செய்ய, ஏனைப் புலன்கள் இன்பம் பெறாமையின் குயில் கொடிது என்றாள்.  யாற்று நீர் குளிர்ச்சி செய்தலின் அக்குளிருக்குத் தணிக்கிடை வருத்துவதே என யாறு கொடிது என்றாள்.  ஆடவனது மெய் தோயப்பெற்று அம்மெய்ம்மணம் நுகர்ந்தவழி நறுமலரின் மணம் சிறக்குமாகலின் அது காரணமாகப் பூவிலை மடந்தை கொடியவள் என்றாள்.  நனி – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3).  விழு (விழுமம்) – விழுமம் சீர்மையும் சிறப்பும் இடும்பையும் (தொல்காப்பியம், உரியியல் 57).

சொற்பொருள்:  அழுந்துபடு விழுப்புண் வழும்புவாய் புலரா எவ்வ நெஞ்சத்து எஃகு எறிந்தாங்குப் பிரிவில புலம்பி நுவலும் குயிலினும் – ஆழ்ந்த பெரிய புண்ணின் மேல் தசை காயாத துன்பம் தாங்கிய மார்பில் வேலைப் பாய்ச்சினாற்போல் பிரியாதிருப்பினும் வருந்திக் கூவும் குயிலைக்காட்டிலும், தேறு நீர் கெழீஇய யாறு நனி கொடிதே – தெளிந்த நீர் நிறைந்து வரும் ஆறு மிகவும் கொடியது (கெழீஇய – செய்யுளிசை அளபெடை), அதனினும் கொடியள் தானே மதன் இல் துய்த்தலை இதழ பைங்குருக்கத்தியொடு பித்திகை விரவு மலர் கொள்ளீரோ வண்டு சூழ் வட்டியள் திரிதரும் தண்டலை உழவர் தனி மட மகளே – அதைக்காட்டிலும் கொடியவள் வலிமை இல்லாத பஞ்சுபோன்ற மேற்பகுதியுடைய இதழ்களைக் கொண்ட பசிய குருக்கத்தி மலர்களுடன் பிச்சியின் மலர்களையும் கலந்த விலைக்குக் கொள்வீர்களா எனக் கூவி வண்டுகள் சூழும் பூக்கூடையை எடுத்துக்கொண்டு எங்கும் சுற்றி வரும் சோலையில் வாழும் உழவரின் ஒப்பற்ற இளைய மகள் (குருக்கத்தி – மாதவிக்கொடி, Common delight of the woods, Hiptage madablota, மகளே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 98, உக்கிரப் பெருவழுதி, குறிஞ்சித் திணை  – தோழி தலைவனிடம் சொன்னது
எய்ம் முள் அன்ன பரூஉ மயிர் எருத்தின்
செய்ம்ம் மேவல் சிறுகண் பன்றி
ஓங்கு மலை வியன் புனம் படீஇயர், வீங்கு பொறி
நூழை நுழையும் பொழுதில் தாழாது
பாங்கர்ப் பக்கத்துப் பல்லி பட்டென,  5
மெல்ல மெல்லப் பிறக்கே பெயர்ந்து தன்
கல் அளைப் பள்ளி வதியும் நாடன்!
எந்தை ஓம்பும் கடி உடை வியல் நகர்த்
துஞ்சாக் காவலர் இகழ்பதம் நோக்கி,
இரவின் வரூஉம் அதனினும் கொடிதே;  10
வைகலும் பொருந்தல் ஒல்லாக்
கண்ணொடு வாரா என் நார் இல் நெஞ்சே.

பாடல் பின்னணி:  இரவுக்குறி வந்தொழுகும் தலைவனைத் தோழி வரைவு கடாயது.  இது தலைவி கூற்றைத் தன் கூற்றாகத் தோழி கொண்டு கூறியது.  தன் உறு வேட்கை கிழவன் முன் கிளத்தல் எண்ணும் காலை கிழத்திக்கு இல்லை (தொல்காப்பியம், களவியல் 28).

பொருளுரை:  முள்ளம்பன்றியின் முள்ளைப் போன்ற பருத்த மயிரை உடைய பிடரியினைக் கொண்ட, வயலில் உண்ணுவதற்கு விருப்பமுடைய சிறிய கண்களை உடைய பன்றி, உயர்ந்த மலையில் உள்ள தினைப்புனத்தில் மேய எண்ணியது. அந்தப் பன்றி, பன்றியைப் பிடிக்க வைத்திருக்கும் பொறியை உடைய சிறு பாதையில் நுழையும் பொழுது விரைந்து அருகில் இருந்த பல்லி ஒலிக்கக் கேட்டு, தன் மலைக் குகைக்குத் திரும்பி விட்டது.  இவ்வாறு உள்ள மலையின் நாடனே! என் தந்தையால் பாதுக்காக்கப்படும் காவல் மிக்கப் பெரிய இல்லத்தில் காவலர் சிறிது அயரும் பொழுது நீ இரவில் வருவதை விட, நாள்தோறும் இமைகள் பொருந்தா என் கண்களும், உன்னிடத்தில் சென்று மீண்டும் என்னிடம் வராத என் அன்பு இல்லாத நெஞ்சமும் கொடுமையானவை.

குறிப்பு:  உள்ளுறை – கு.வெ. பாலசுப்பிரமணியன் உரை – பன்றி நூழையுட் புகுங்கால் பல்லியின் ஒலிகேட்டுத் திரும்பும் என்றது, காவல்மிக்க மாளிகையின் உள்ளே தலைவன் நுழைய முயலும் போது, காவலர் வரினும், நிலவு வெளிப்படினும் இது தக்க வேளை அன்று என்று தலைவன் தன் இடம் நோக்கிப் பெயர்தலை உணர்த்திற்று.  எய்ம் முள் (1) – ஒளவை துரைசாமி உரை – எய்யப்படும் முள், பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – முள்ளம்பன்றியின் முள்.   நூழை (4) – ஒளவை துரைசாமி உரை – நுழைவோர் உடலைச் சுருக்கி அல்லது நுழையாவாறு அமைவது பற்றி நூழை எனப்பட்டது.  நிமித்தம்:  பறவை நிமித்தம் – நற்றிணை 161, குறுந்தொகை 218, கலித்தொகை 11, பல்லி நிமித்தம் – அகநானூறு 9, 88, 151, 289, 351, 387, நற்றிணை 98, 169, 246, 333, குறுந்தொகை 16,140.  பெண்கள் நல்ல நிமித்தத்திற்காகக் காத்து நிற்றல் – நற்றிணை 40, முல்லைப்பாட்டு 11.  தலைவி கூறுவதுபோல் தோழி கூறுதல் – அகநானூறு 362, நற்றிணை 28, 98, 124, 132, 175, 178, 191, 211, 251, 292, கலித்தொகை 18, 70, குறுந்தொகை 236, 238, ஐங்குறுநூறு 45.

சொற்பொருள்:  எய்ம் முள் அன்ன – முள்ளம்பன்றியைப் போல், பரூஉ மயிர் – பருத்த மயிர் (பரூஉ – செய்யுளிசை அளபெடை), எருத்தின் – கழுத்தில், செய்ம்ம் மேவல் – வயலில் உண்ணுவதற்கு விருப்பமுடைய (செய்ம்ம் – ஒளவை துரைசாமி உரை – மகரம் மிக்கு முடிந்தது), சிறு கட் பன்றி – சிறிய கண்களையுடைய பன்றி, ஓங்கு மலை – உயர்ந்த மலை, வியன் புனம் – அகன்ற மலைக் கொல்லை, படீஇயர் – பிடிக்க (செய்யுளிசை அளபெடை), வீங்கு – பெரிய, பொறி – பொறி, நூழை – சிறிய பாதை, நுழையும் பொழுதில் – நுழையும் பொழுது, தாழாது – நேரம் தாழ்த்தாது, விரைந்து, பாங்கர்ப் பக்கத்து – பக்கத்தில் (ஒருபொருட்பன்மொழி), பல்லி பட்டென – பல்லி ஒலித்ததால் கெட்ட நிமித்தம் என்று எண்ணி, மெல்ல மெல்லப் பிறக்கே பெயர்ந்து தன் – மெதுவாக திரும்பி சென்று விட்டது (பிறக்கே – ஏகாரம் அசை நிலை), கல் அளை – மலைக் குகைக்கு,  பள்ளி – உறங்குவதற்கு, வதியும் – வசிக்கும், நாடன் – நாட்டவன், எந்தை ஓம்பும் – என் தந்தை காக்கும்,  கடியுடை – காவலுடைய, வியல் நகர் – பெரிய வீடு, துஞ்சாக் காவலர் – உறங்காக் காவலர்,  இகழ் பதம் நோக்கி – அவர்கள் அயர்வதைப் பார்த்து, இரவின் வரூஉம் – இரவில் வருவது (வரூஉம் – செய்யுளிசை அளபெடை), அதனினும் கொடிதே – அதை விட கொடியது (கொடிதே – ஏகாரம் அசை நிலை), வைகலும் – நாள்தோறும், பொருந்தல் ஒல்லா – மூடாத, கண்ணொடு – கண்களுடன், வாரா – திரும்பி வராத, என் நார் இல் நெஞ்சே – என் அன்பு இல்லாத நெஞ்சு (நெஞ்சே – ஏகாரம் அசை நிலை)

நற்றிணை 99, இளந்திரையனார், முல்லைத் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
‘நீர் அற வறந்த நிரம்பா நீள் இடைத்,
துகில் விரித்தன்ன வெயில் அவிர் உருப்பின்,
அஞ்சுவரப் பனிக்கும் வெஞ்சுரம் இறந்தோர்
தாம் வரத் தெளித்த பருவம் காண்வர
இதுவோ?’ என்றிசின் மடந்தை! மதி இன்று,  5
மறந்து கடல் முகந்த கமஞ்சூல் மா மழை
பொறுத்தல் செல்லாது இறுத்த வண் பெயல்
கார் என்று அயர்ந்த உள்ளமொடு, தேர்வு இல,
பிடவமும் கொன்றையும் கோடலும்
மடவ ஆகலின், மலர்ந்தன பலவே.  10

பாடல் பின்னணி:  பருவம் கண்டு ஆற்றாளாய தலைவியைத் தோழி, ‘பருவம் அன்று’ என்று வற்புறுத்தியது.

பொருளுரை:  தோழி!  நீர் இல்லாது வறண்ட ஒன்றும் நிரம்பாத நீண்ட வழியில் வெள்ளை ஆடையை விரித்தாற்போன்று வெயிலின் ஒளி வீசும் வெப்பத்தினால் காண்பவர்கள் அஞ்சும்படியாக நடுங்கச்செய்யும் கொடிய பாலைநிலத்தின்கண் சென்ற நம் தலைவர் தாம் வருவோம் எனத் தெளிவாகக் கூறிய பருவம் இதுவோ எனக் கேட்கின்றாய்.  அறிவு இல்லாது பருவத்தை மறந்து கடல் நீரை உண்ட கருக்கொண்ட கரிய முகில்கள் சுமையைப் பொறுக்க இயலாது பெய்த மழையைக் கண்டு இது கார்காலம் என மறதியுடைய உள்ளத்துடன் தெளிவு இல்லாத பிடவமும் கொன்றையும் கோடலும் அறிவில்லாதவை ஆதலால் மிக மலர்ந்துள்ளன.  இவற்றைக் கண்டு இது கார்காலம் என்று நீ கலங்காதே.

குறிப்பு:  ஒப்புமை:  நற்றிணை 43 – துகில் விரித்தன்ன வெயில் அவிர் உருப்பின்.  குறுந்தொகை 66 – மடவ மன்ற தடவு நிலைக் கொன்றை கல் பிறங்கு அத்தம் சென்றோர் கூறிய பருவம் வாரா அளவை நெரிதரக் கொம்பு சேர் கொடி இணர் ஊழ்த்த வம்ப மாரியைக் கார் என மதித்தே, குறுந்தொகை 94 – பெரும் தண் மாரிப் பேதைப் பித்திகத்து அரும்பே முன்னும் மிகச் சிவந்தனவே, குறுந்தொகை 251 – மடவ வாழி மஞ்ஞை மா இனம் கால மாரி பெய்தென அதன் எதிர் ஆலலும் ஆலின பிடவும் பூத்தன.  சின் – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம், சொல்லதிகாரம், இடையியல் 26, சின் என்பது இசின் என்பதன் முதற்குறை – ச. பாலசுந்தரம் உரை).  கமம் – நிறைவு, கமம் நிறைந்தியலும் (தொல்காப்பியம், உரியியல் 57).  வறந்த – வறம் என்னும் சொல்லடியாகப் பிறந்த பெயரெச்சம்.

சொற்பொருள்:  நீர் அற வறந்த நிரம்பா நீள் இடைத் துகில் விரித்தன்ன வெயில் அவிர் உருப்பின் அஞ்சுவரப் பனிக்கும் வெஞ்சுரம் இறந்தோர் தாம் வரத் தெளித்த பருவம் காண்வர இதுவோ என்றிசின் மடந்தை – நீர் இல்லாது வறண்ட ஒன்றும் நிரம்பாத நீண்ட வழியில் வெள்ளை ஆடையை விரித்தாற்போன்று வெயிலின் ஒளி வீசும் வெப்பத்தினால் அஞ்சும்படியாக நடுங்கச்செய்யும் கொடிய பாலைநிலத்தின்கண் சென்ற நம் தலைவர் தாம் வருவோம் எனத் தெளிவாகக் கூறிய பருவம் இதுவோ எனக் கேட்கின்றாய் தோழியே (சின் – முன்னிலை அசை), மதி இன்று மறந்து கடல் முகந்த கமஞ்சூல் மா மழை பொறுத்தல் செல்லாது இறுத்த வண் பெயல் கார் என்று அயர்ந்த உள்ளமொடு தேர்வு இல பிடவமும் கொன்றையும் கோடலும் மடவ ஆகலின் மலர்ந்தன பலவே – அறிவு இல்லாது பருவத்தை மறந்து கடல் நீரை உண்ட கருக்கொண்ட கரிய முகில்கள் பொறுக்க இயலாது பெய்த மழையைக் கண்டு இது கார்காலம் என மறதியுடைய உள்ளத்துடன் தெளிவு இல்லாத பிடவமும் கொன்றையும் கோடலும் அறிவில்லாதவை ஆதலால் மிக மலர்ந்துள்ளன (கம என்னும் உரிச்சொல் நிறைவுப் பொருளில் வந்தது, பிடவம் – wild jasmine flowers, Randia malabarica, கொன்றை – laburnum flowers, Golden Shower Tree, Cassia fistula, பலவே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 100, பரணர், மருதத் திணை – பரத்தை விறலியிடம் சொன்னது
உள்ளுதொறும் நகுவேன் தோழி, வள் உகிர்
மாரிக் கொக்கின் கூர் அலகு அன்ன
குண்டு நீர் ஆம்பல் தண் துறை ஊரன்
தேம் கமழ் ஐம்பால் பற்றி என் வயின்
வான் கோல் எல் வளை வெளவிய பூசல்  5
சினவிய முகத்து, ‘சினவாது சென்று நின்
மனையோட்கு உரைப்பல்’ என்றலின், முனை ஊர்ப்
பல் ஆ நெடு நிரை வில்லின் ஒய்யும்
தேர் வண் மலையன் முந்தை, பேர் இசைப்
புலம் புரி வயிரியர் நலம் புரி முழவின்  10
மண் ஆர் கண்ணின் அதிரும்,
நன்னராளன் நடுங்கு அஞர் நிலையே.

பாடல் பின்னணி:  பரத்தை, தலைவியின் தோழியர் கேட்ப, தன் தோழியாகிய விறலியிடம் கூறியது.

பொருளுரை:  பெரிய நகங்களையுடைய மழைக் காலத்தில் உலவும் கொக்கின் கூர்மையான அலகைப் போன்ற ஆம்பல் பூவை உடைய தண்ணிய நீர்த் துறையின் ஊரன், என் கூந்தலைப் பற்றி இழுத்து, என் கையில் உள்ள வெள்ளிய வேலைப்பாடு அமைந்த வளையல்களைக் கழற்றிக் கொண்ட பூசலினால், சினம் கொண்ட முகத்துடன் அவனை நோக்கி, “சினம் கொள்ளாமல் உன் மனைவியிடம் சென்று உரைப்பேன்” என்று நான் சொன்னவுடன் ஊர்க் கோடியில் உள்ள பல நெடிய ஆனிரைகளை விற் போரால் வென்று செலுத்திக் கொண்டு வருபவனும், வருகின்ற இரவலர்க்குத் தேர் கொடுப்பவனும் ஆகிய மலையமானின் அவைக்கு முன்பு வேறு நாட்டிலிருந்து வந்த நல்ல இசையுடைய கூத்தர்களின் நன்மையை அறிவிக்கும் மார்ச்சனை பொருந்திய பகுதி அதிர்வது போன்ற அதிர்ச்சியுடன், நன்மையை விரும்பும் அவன் நடுங்கி வருத்துகின்ற நிலைமையை நினைக்கும் பொழுதெல்லாம் நான் சிரிப்பேன், தோழி!

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இந்நிகழ்ச்சியைத் தலைவி அறியின் பெரிதும் ஏதமாம் என்று அங்ஙனம் அறிந்து நடுங்கினள் என்பது கருத்து.  எல் – எல்லே இலக்கம் (தொல்காப்பியம், இடையியல் 21).  மலையன் (மலையமான் திருமுடிக்காரி) பற்றின குறிப்புகள் உள்ள பாடல்கள் – நற்றிணை 77–1, 100–9, 170, குறுந்தொகை 198–6, 312–2, புறநானூறு 123–3, 124–5, 125–14, 158.

சொற்பொருள்:  உள்ளுதொறும் – நினைக்கும் பொழுதெல்லாம், நகுவேன் தோழி – சிரிப்பேன் தோழி, வள் உகிர் – பெரிய நகங்கள்,  மாரிக் கொக்கின் – மழைக் காலத்தில் உலவும் கொக்கின், கூர் அலகு – கூர்மையான அலகு, அன்ன – போன்ற, குண்டு நீர் – குளத்து நீர், ஆம்பல் – ஆம்பல் மலர், தண் துறை ஊரன் – தண்ணிய நீர்த் துறையின் ஊரன், தேம் கமழ் – தேனின் மணம் வீசும் (தேம் – தேன் என்றதன் திரிபு), ஐம்பால் – ஐந்துப் பகுதியாக பிரித்துக் கட்டிய கூந்தல், பற்றி – பற்றி, என் வயின் – என்னிடம் உள்ள, வான் கோல் – வெள்ளிய வேலைப்பாடு அமைந்த, எல் வளை – ஒளியுடைய வளையல்கள், வெளவிய – கழற்றிக் கொண்ட, பூசல் – பூசல், சினவிய முகத்து – சினம் கொண்ட முகத்தோடு, சினவாது சென்று – சினம் கொள்ளாமல், நின் மனையோட்கு உரைப்பல் – உன் மனைவியிடம் சொல்லுவேன், என்றலின் – என்று நான் கூறியதால், முனை ஊர் – ஊரின் எல்லை, பல் ஆ நெடு நிரை – பல நெடிய ஆனிரைகளை, வில்லின் ஒய்யும் – விற் போரால் செலுத்திக் கொண்டு, தேர் வண் மலையன் – இரவலர்க்குத் தேர் கொடுக்கும் மலையமான்,  முந்தை – முன்பு, பேர் இசை – சிறப்பான இசை, புலம் புரி வயிரியர் – வேறு நாட்டிலிருந்து வந்த கலைஞர்கள், நலம் புரி முழவின் – நன்மையை முழங்குகின்ற மத்தளத்தின், மண் ஆர் கண்ணின் அதிரும் – மார்ச்சனை பொருந்திய பகுதி போல் அதிரும் (கண்ணின் – இன் உருபு ஒப்புப் பொருளது), நன்னராளன் – நன்மையை மேற்கொள்ளும் அவன், நடுங்கு – நடுங்கு, அஞர் நிலையே – துன்ப நிலைமை (நிலையே – ஏகாரம் அசை நிலை)

நற்றிணை 101, வெள்ளியந்தின்னனார், நெய்தல் திணை – தலைவன் சொன்னது, தோழி கேட்கும்படியாக
முற்றா மஞ்சள் பசும்புறம் கடுப்பச்
சுற்றிய பிணர சூழ் கழி இறவின்
கணம் கொள் குப்பை உணங்கு திறன் நோக்கிப்,
புன்னை அம் கொழு நிழல் முன் உய்த்துப் பரப்பும்
துறை நணி இருந்த பாக்கமும் உறை நனி  5
இனிது மன்; அளிதோ தானே, துனி தீர்ந்து,
அகன்ற அல்குல் ஐது அமை நுசுப்பின்
மீனெறி பரதவர் மடமகள்
மானமர் நோக்கம் காணா ஊங்கே.

பாடல் பின்னணி:  தலைவியின் மேல் உள்ள காதலினால் அடைந்த பெரும் துன்பத்தைத் தோழி உணரும் வகையில் கூறுகின்றான் தலைவன்.

பொருளுரைஅகன்ற அல்குலையும், மெல்லிதான இடையையும், மான் போன்ற பார்வையையும் கொண்ட, மீன் பிடிக்கும் பரதவரது இள மகளை, நான் காண்பதற்கு முன்னே, முற்றாத மஞ்சளின் பசுமையான புறத்தைப் போன்ற சொரசொரப்பான தோலையுடைய, சூழ்ந்தக் கழியில் உள்ள இறா மீனின் கூட்டமான குவியலை, அடர்ந்த நிழலையுடைய புன்னை மரத்திற்கு அருகே காய்வதை நோக்க, துறையும் அருகில் இருந்த ஊரும் இனிமையாக இருந்தது.  இப்பொழுது  இரங்கத்தக்கதாய் உள்ளது.

குறிப்பு:  இறைச்சி – கு. வெ. பாலசுப்பிரமணியன் உரை – இறா மீன்கள் காய்வதற்காகப் புன்னை மர நிழலில் பரப்பப் பெறும் என்பது, தலைவனும் தலைவியும் காம நோய் நீங்குமாறு பகற்குறி கருதலாம் என்ற இறைச்சி பயந்தது.  ஒளவை துரைசாமி உரை – இறவின் குப்பையது உணங்கு திறன் நோக்கிப் பாக்கத்து உறையும் பரதவர் அதனைப் புன்னை மரநிழலில் முன்னுய்த்துப் பரப்புவர் என்றது, தலைமகளது மானமர் நோக்கத்தால் வருந்தி உணங்கும் தன் திறம் நோக்கித் தலைமகளைப் புன்னை நீழற்கண் கொண்டுய்த்தல் வேண்டும் எனத் தலைமகன் குறிப்பால் தோழியிடம் சொல்லியது.

சொற்பொருள்:  முற்றா மஞ்சள் – முற்றாத மஞ்சள், பசும் புறம் கடுப்ப – பசுமையான புறத்தைப்போன்ற (கடுப்ப – உவம உருபு), சுற்றிய – சுற்றிய, பிணர – சருச்சரையை உடைய, சொரசொரப்பான, சூழ் – சூழ்ந்த, கழி இறவின் – உப்பங்கழியின் இறா மீனின், கணம் கொள் – கூட்டம் கொண்ட, குப்பை – குவியல், உணங்கு திறன் நோக்கி – காய்வதை நோக்கி, புன்னையங் கொழு நிழல் – புன்னையின் அடர்ந்த நிழல், முன் உய்த்து – முன்னே மகிழ்ந்து, பரப்பும் துறை – பரப்பும் துறை, நணி இருந்த பாக்கமும் – அருகில் இருந்த கடற்கரை அருகில் உள்ள ஊரும், உறை – உறைவதற்கு, நனி – மிக, இனிது – இனிமையானது, மன் – ஓர் அசைச் சொல், அளிதோ – இரங்கத்தக்கது (அளிதோ – ஓகாரம் அசை நிலை), தானே – தான், ஏ அசை நிலைகள், துனி தீர்ந்து – வருத்தம் இன்றி, அகன்ற அல்குல் – அகன்ற அல்குல் (அல்குல் – இடைக்குக் கீழ் உள்ள பகுதி), ஐது அமை நுசுப்பின் – மெல்லிதாக அமைந்த இடையை உடைய, மீன் எறி – மீன் பிடிக்கின்ற, பரதவர் மட மகள் – பரதவரது இள மகள், மான் அமர் நோக்கம் – மான் போன்ற பார்வை, காணா ஊங்கே – காண்பதற்கு முன்னே (ஊங்கே – ஏகாரம் அசை நிலை)

நற்றிணை 102, செம்பியனார், குறிஞ்சித் திணை – தலைவி கிளியிடம் சொன்னது
கொடுங்குரல் குறைத்த செவ்வாய்ப் பைங்கிளி!
அஞ்சல் ஓம்பி ஆர் பதம் கொண்டு
நின் குறை முடித்த பின்றை என் குறை
செய்தல் வேண்டுமால் கைதொழுது இரப்பல்!
பல் கோட் பலவின் சாரல் அவர் நாட்டு 5
நின் கிளை மருங்கின் சேறி ஆயின்,
அம் மலை கிழவோற்கு உரைமதி “இம் மலைக்
கானக் குறவர் மட மகள்
ஏனல் காவல் ஆயினள்” எனவே.

பாடல் பின்னணி:  இருவகைக் குறியானும் வந்தொழுகும் தலைவன் இடையீடுபட்டு வராததால், தலைவி வரைதல் விரும்பி கிளியிடம் இரந்து கூறியது.

பொருளுரை:  வளைந்த தினைக் கொத்துக்களைக் கொய்த, சிவந்த வாயையுடைய பைங்கிளியே!  அஞ்சாமல் வேண்டிய உணவை உண்டு, உன்னுடைய குறை யாவும் முடிந்தபின், என் குறைபாட்டை நீ செய்து முடிக்க வேண்டும் என்று என் இரு கைகளைக் குவித்து நான் உன்னைக் கெஞ்சுகின்றேன். பல பழக்குலைகளை உடைய பலா மரங்களைக் கொண்ட மலைச் சரிவையுடைய அவருடைய நாட்டில் உள்ள உன் உறவினர்களிடம் நீ செல்லுவாய் ஆயின், அம்மலைக்கு உரியவரான என் தலைவரிடம் கூறுவாயாக “இந்த மலையில் உள்ள காட்டில் உள்ள குறவருடைய இளமகள் கொல்லைக்கு நல்ல காவலாக அமைந்து அங்கு இருக்கின்றாள் என்று”.

குறிப்பு:  இறைச்சி – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – என்னைக் கைவிட்ட கொடுமையையுடையவர் சாரலாயிருந்தும் அச்சாரலின்கண் உள்ள பலா மரங்கள் பிறர்க்குப் பயன்படுமாறு காய்க்கின்றனவே; இஃது என்ன வியப்போ எனப் பொருட்புறத்தே இறைச்சி தோன்றியது அறிக.  நற்றிணையின் தூது பாடல்கள் – தலைவியின் தூது, பறவை மூலமும் வண்டு மூலமும் தலைவனுக்கு அனுப்பியன – 54, 70, 102, 277, 376.  தோழி ஆந்தையிடம் கூறியது, தலைவன் கேட்கும்படிநற்றிணை 83மதி – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம், சொல்லதிகாரம், இடையியல் 26).

சொற்பொருள்:  கொடுங்குரல் குறைத்த – வளைந்த கொத்துக்களைக் கொய்த, செவ்வாய்ப் பைங்கிளி – சிவப்பு வாயையுடைய பைங்கிளியே (பைங்கிளி – அண்மை விளி), அஞ்சல் ஓம்பி ஆர் பதம் கொண்டு – அஞ்சாமல் வேண்டிய உணவை உண்டு, நின் குறை முடித்த பின்றை – உன்னுடைய குறை யாவும் முடிந்தபின், என் குறை செய்தல் வேண்டுமால் – என் குறைபாட்டை நீ செய்து முடிக்க வேண்டும் என்று (வேண்டுமால் – ஆல் ஓர் அசைச்சொல்), கைதொழுது இரப்பல் – என் இரு கைகளைக் குவித்து நான் கெஞ்சுகின்றேன், பல் கோட் பலவின் சாரல் – பல பழக்குலைகளை உடைய பலா மரங்களுடைய மலைச் சரிவு, அவர் நாட்டு – அவருடைய நாட்டிற்கு, நின் கிளை மருங்கின் சேறி ஆயின் – உன் உறவினர்களிடம் செல்லுவாய் ஆயின், அம் மலை கிழவோற்கு உரைமதி – அம்மலைக்கு உரியவரான என் தலைவனிடம் கூறுவாயாக (உரைமதி – மதி முன்னிலையசை), இம் மலைக் கானக் குறவர் மட மகள் – இந்த மலையில் உள்ள காட்டில் உள்ள குறவருடைய இளமகள், ஏனல் காவல் ஆயினள் எனவே – கொல்லைக்கு நல்ல காவலாக அமைந்து அங்கு இருக்கின்றாள் என்று (எனவே – ஏகாரம் அசை நிலை)

நற்றிணை 103, மருதன் இளநாகனார், பாலைத் திணை – தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது
ஒன்று தெரிந்து உரைத்திசின் நெஞ்சே, புன் கால்
சிறியிலை வேம்பின் பெரிய கொன்று
கடாஅம் செருக்கிய கடுஞ்சின முன்பின்
களிறு நின்று இறந்த நீரல் ஈரத்துப்,
பால் அவி தோல் முலை அகடு நிலம் சேர்த்திப்  5
பசி அட முடங்கிய பைங்கண் செந்நாய்
மாயா வேட்டம் போகிய கணவன்
பொய்யா மரபின் பிணவு நினைந்து இரங்கும்
விருந்தின் வெங்காட்டு வருந்துதும் யாமே,
ஆள் வினைக்கு அகல்வாம் எனினும்,  10
மீள்வாம் எனினும் நீ துணிந்ததுவே.

பாடல் பின்னணி:  பொருள்வயின் பிரிந்த தலைவன் இடைச் சுரத்து ஆற்றாதாகிய நெஞ்சினைக் கழறியது.

பொருளுரை:  நெஞ்சே!  இரண்டினுள் ஒன்றை ஆராய்ந்து நீ கூறுவாயாக! மெல்லிய காம்புகளையுடைய சிறிய இலைகளைக் கொண்ட வேப்ப மரத்தின் பெரிய கிளைகளை உடைத்து மதத்தால் செருக்குண்ட மிக்க சினத்தையும் வலிமையையும் உடைய களிற்று யானை நின்று பெய்த நீர் அல்லாத ஈரமாகிய சிறுநீரை உடைய இடத்தில் பால் இல்லாத வெறும் தோலாகிய முலையுடன் வயிற்றை நிலத்தில் சேர்த்து பசி துன்புறுத்துவதால் முடங்கிக் கிடந்த பசிய கண்களையுடைய பெண் செந்நாய், அழியாத வேட்டைக்குச் சென்ற தன் கணவனை உண்மையான மரபின்படி நினைந்து வருந்தும், புதிதாக யாம் நுழையும் வெப்பம் மிகுந்த (கொடிய) இக்காட்டில் வருந்துகின்றோம். பொருள் ஈட்டச் செல்லலாம் என்றாலும் ஊருக்குத் திரும்பிச் செல்லலாம் என்றாலும், துணிவுடன் ஒன்றைக் கூறுவாயாக.

குறிப்பு:  உள்ளுறை – கு. வெ. பாலசுப்பிரமணியன் உரை – நீரல்லாத ஈரத்தில் செந்நாய்ப் பிணவு வருந்த, அதன் கணவனாகிய ஆண் நாய் சென்றவிடத்தில் தன் துணையைக்கருதி வருந்தும் என்பது, பிரிவின்கண் வருந்தும் தலைவனின் உள நிலையை உள்ளுறுத்திற்று.  ஒளவை துரைசாமி உரை – இக்கூற்றின்கண் ஆள்வினைக்கு அகல்வாம் என்ற கருத்தே முற்பட்டு நிற்றலின், பொருள்வயிற் பிரிந்த தலைவன் அதனை முடித்தல்லது மீளான் என அறிக.  சின் – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம், சொல்லதிகாரம்.  இடையியல் 26, சின் என்பது இசின் என்பதன் முதற்குறை – ச. பாலசுந்தரம் உரை), அவற்றுள், இகுமும் சின்னும் ஏனை இடத்தொடும் தகு நிலை உடைய என்மனார் புலவர் (தொல்காப்பியம், இடையியல் 27).

சொற்பொருள்:  ஒன்று தெரிந்து உரைத்திசின் – இரண்டினுள் ஒன்றை ஆராய்ந்து நீ கூறுவாயாக (உரைத்திசின் – சின் முன்னிலை அசை), நெஞ்சே – நெஞ்சே (அண்மை விளி), புன் கால் சிறியிலை வேம்பின் பெரிய கொன்று கடாஅம் செருக்கிய கடுஞ்சின முன்பின் களிறு நின்று இறந்த நீரல் ஈரத்துப் பால் அவி தோல் முலை அகடு நிலம் சேர்த்திப் பசி அட முடங்கிய பைங்கண் செந்நாய் – மெல்லிய காம்புகளையுடைய சிறிய இலைகளைக் கொண்ட வேப்ப மரத்தின் பெரிய கிளைகளை உடைத்து மதத்தால் செருக்குண்ட மிக்க சினத்தையும் வலிமையையும் உடைய களிற்று யானை நின்று பெய்த நீர் அல்லாத ஈரமாகிய சிறுநீரை உடைய இடத்தில் பால் இல்லாத வெறும் தோலாகிய முலையை உடைய வயிற்றை நிலத்தில் சேர்த்து பசி துன்புறுத்துவதால் முடங்கிக் கிடந்த பசிய கண்களையுடைய செந்நாய், மாயா வேட்டம் போகிய கணவன் பொய்யா மரபின் பிணவு நினைந்து இரங்கும் – அழியாத வேட்டத்திற்குச் சென்ற தன் கணவனை உண்மையான மரபின்படி நினைந்து வருந்தும், விருந்தின் வெங்காட்டு வருந்துதும் யாமே – புதிதாக நுழையும் வெப்பம் மிகுந்த (கொடிய) காட்டில் வருந்துகின்றோம் யாம், ஆள் வினைக்கு அகல்வாம் எனினும் மீள்வாம் எனினும் நீ துணிந்ததுவே – பொருள் ஈட்டச் செல்லலாம் என்றாலும் ஊருக்குத் திரும்பிச் செல்லலாம் என்றாலும் துணிவுடன் ஒன்றைக் கூறுவாயாக (துணிந்ததுவே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 104, பேரிசாத்தனார், குறிஞ்சித் திணை – தலைவி சொன்னது
பூம்பொறி உழுவைப் பேழ்வாய் ஏற்றை
தேம் கமழ் சிலம்பின் களிற்றொடு பொரினே,
துறுகல் மீமிசை உறுகண் அஞ்சாக்
குறக் குறுமாக்கள் புகற்சியின் எறிந்த
தொண்டகச் சிறு பறைப் பாணி அயலது  5
பைந்தாள் செந்தினைப் படுகிளி ஓப்பும்
ஆர்கலி வெற்பன் மார்பு நயந்து உறையும்
யானே அன்றியும், உளர் கொல், பானாள்
பாம்புடை விடர ஓங்கு மலை மிளிர,
உருமு சிவந்து எறியும் பொழுதொடு, பெருநீர்  10
போக்கு அற விலங்கிய சாரல்,
நோக்கு அருஞ்சிறு நெறி நினையுமோரே?

பாடல் பின்னணி:  தலைவி வழியைப் பார்த்து உற்ற அச்சத்தால் சொல்லியது.

பொருளுரைஅழகிய வரியையுடை பிளந்தாற்போன்ற வாயையுடைய ஆண் புலி ஒன்று தேன் மணம் கமழும் மலையில் களிற்று யானையுடன் போர் செய்கையில், பெரிய பாறையின் மேல் ஏறித் துன்பத்திற்கு அஞ்சாத மலை மக்களின் இளஞ்சிறுவர்கள் மனச்செருக்குடன் அடித்த தொண்டகம் என்னும் சிறு பறையின் ஓசை அருகில் உள்ள பசிய அடியையுடைய சிவந்த கதிர்களைக் கொண்ட தினைப்புனத்தில் தினையை உண்ணவரும் கிளிகளை விரட்டும் ஆரவாரம் உடைய மலைநாடனாகிய தலைவனின் மார்பை விரும்பி வாழும் நான் மட்டுமே அன்றியும், பிறர் யாரேனும் உள்ளார்களா, நடு இரவில் பாம்புகள் இருக்கும் மலைப்பிளவுகளை உடைய உயர்ந்த மலை உச்சிகள் பிளந்து விழும்படி இடி சினத்துடன் தாக்கும் இக்காலத்தில், பெரு வெள்ளம் செல்லுதலைத் தடுத்துக் குறுக்கிட்டு ஓடுகின்ற மலைச் சரிவில் காண்பதற்கு அரிய சிறிய வழியைக் கருதி அஞ்சுபவருள்?

குறிப்பு:  உள்ளுறை – கு. வெ. பாலசுப்பிரமணியன் உரை – கிளிகள் தினையைக் கவரும் செயலைத் தொண்டகப் பறையொலி அலைக்கும்.  அது போல வேற்றவர் வரைவு நிகழினும் நிகழும் என உள்ளுறை பயின்றது.  பொ. வே. சோமசுந்தரனார் உரை – ஏற்றையும் களிறும் போர் செய்வதனைக் கண்ட குறுமாக்கள் எறிந்த பறை பாணி திணையிற் படியும் கிளியை ஓட்டும் என்றது, நம் பெருமானும் யாமும் ஒழுகும் களவொழுக்கம் புலப்பட்டுழி இவ்வூர் பெண்டிர் தூற்றும் அலரானே என்னாவி அகலும் என்பது.  கலி – கம்பலை சும்மை கலியே அழுங்கல் என்று இவை நான்கும் அரவப் பொருள (தொல்காப்பியம், உரியியல் 53).  ஏற்றை – ஆற்றலொடு புணர்ந்த ஆண்பாற்கு எல்லாம் ஏற்றைக் கிளவி உரித்து என மொழிப (தொல்காப்பியம், மரபியல் 50).  தேனுடைய மலை (நற்றிணையில்):  104 – தேம் கமழ் சிலம்பின், 147 – தேம்படு சாரல், 185 – தேனுடை நெடு வரை, 188 – குன்றத்துத் தேம் முதிர், 243 – தேம்படு சிலம்பில், 259 – தேம் கமழ் சாரல், 389 – தேம்படு நெடு வரை, 395 – தேன் தூங்கு உயர்வரை.  தேம்படு சிலம்பில், தேம்படு நெடுவரை – ஆகிவற்றிற்கு தேன் உண்டாகின்ற பக்கமாலையிலே, தேன் மணம் மிக்க நெடிய மலை என்றே விளக்கியுள்ளார் பின்னத்தூர் நாராயணசாமி ஐயர்.

சொற்பொருள்:  பூம்பொறி உழுவைப் பேழ்வாய் ஏற்றை தேம் கமழ் சிலம்பின் களிற்றொடு பொரினே – அழகிய வரியையுடை பிளந்தாற்போன்ற வாயையுடைய ஆண் புலி தேன் மணம் கமழும் மலையில் களிற்று யானையுடன் போர் செய்கையில், துறுகல் மீமிசை உறுகண் அஞ்சாக் குறக் குறுமாக்கள் – பெரிய பாறையின் மேல் ஏறித் துன்பத்திற்கு அஞ்சாத மலை மக்களின் இளஞ்சிறுவர்கள் (மீமிசை – ஒருபொருட் பன்மொழி), புகற்சியின் எறிந்த தொண்டகச் சிறு பறைப் பாணி அயலது பைந்தாள் செந்தினைப் படுகிளி ஓப்பும் – செருக்குடன் அடித்த தொண்டகம் என்னும் சிறு பறையின் ஓசை அருகில் உள்ள பசிய அடியையுடைய சிவந்த கதிர்களைக் கொண்ட தினைப்புனத்தில் தினையை உண்ணவரும் கிளிகளை விரட்டும், ஆர்கலி வெற்பன் மார்பு நயந்து உறையும் யானே அன்றியும் உளர் கொல் – ஆரவாரம் உடைய மலைநாடனாகிய தலைவனின் மார்பை விரும்பி வாழும் நான் மட்டுமே அன்றியும் பிறர் யாரேனும் உள்ளார்களா, பானாள் பாம்புடை விடர ஓங்கு மலை மிளிர உருமு சிவந்து எறியும் பொழுதொடு  – நடு இரவில் பாம்புகள் இருக்கும் மலைப்பிளவுகளை உடைய உயர்ந்த மலை உச்சிகள் பிளந்து விழும்படி இடி சினத்துடன் தாக்கும் இக்காலத்தில், பெருநீர் போக்கு அற விலங்கிய சாரல் நோக்கு அருஞ்சிறு நெறி நினையுமோரே – பெரு வெள்ளம் செல்லுதலைத் தடுத்துக் குறுக்கிட்டு ஓடுகின்ற மலைச் சரிவில் காண்பதற்கு அரிய சிறிய வழியைக் கருதுகின்றவர் (நினையுமோரே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 105, முடத்திருமாறன், பாலைத் திணை – தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது
முளி கொடி வலந்த முள் அரை இலவத்து
ஒளிர் சினை அதிர வீசி, விளிபட
வெவ்வளி வழங்கும் வேய் பயில் மருங்கில்
கடு நடை யானை கன்றொடு வருந்த,
நெடு நீர் அற்ற நிழல் இல் ஆங்கண்  5
அருஞ்சுரக் கவலைய என்னாய் நெடுஞ்சேண்
பட்டனை, வாழிய நெஞ்சே, குட்டுவன்
குடவரைச் சுனைய மா இதழ்க் குவளை
வண்டுபடு வான் போது கமழும்
அம் சில் ஓதி அரும் படர் உறவே.  10

பாடல் பின்னணி:  பொருள்வயின் பிரிந்த தலைவன் தன் நெஞ்சிடம் இகழ்ச்சிப்பட கூறியது.

பொருளுரைநீடு வாழ்வாக என் நெஞ்சே!  காய்ந்த கொடிகள் சுற்றிய முட்கள் பொருந்திய அடியுடைய இலவ மரத்தின் ஒளியுடைய கிளைகள் நடுங்கும்படி வீசி அவை உடையும்படி கொடிய காற்று வீசுகின்ற மூங்கில் நிறைந்த இடத்தில், விரைந்த நடையையுடைய யானைகள் தங்கள் கன்றுடன் வருந்துமாறு நீண்ட வழியில் நீர் இல்லாத நிழல் இல்லாத அவ்விடம் செல்லுதற்கு அரிய பிரிவுகளையுடை வழி என்று நீ எண்ணவில்லை.  நெடுந்தூரம் வந்துவிட்டாய், சேரனின் குடமலையில் உள்ள சுனையில் உள்ள பெரிய இதழ்களையுடைய குவளை மலர்களின் வண்டுகள் மொய்க்கும் பெரிய மலர்களை அணிவதால் மணம் கமழும் அழகிய மென்மையான கூந்தலையுடைய நம் தலைவி பெரும் துன்பத்தை அடையும்படி.

குறிப்பு:  இறைச்சி – கு. வெ. பாலசுப்பிரமணியன் உரை – இலவ மரத்தின் கிளை முறியக் காற்று வீசும் என்பது நின் நினைவைக் கெடுக்கும்படியாகக் காமம் தலையெடுத்தது என்னும் பொருள் குறித்தற்காம். யானை கன்றோடு வருந்தும் நீரற்ற சுரம் என்பது தலைவன் தலைவியுடன் சேரும் நிலையைக் கருதி வருந்துதலை உரைத்தது.  வரலாறு:  குட்டுவன்.  கன்று – யானையும் குதிரையும் கழுதையும் கடமையும் மானொடு ஐந்தும் கன்று எனற்கு உரிய (தொல்காப்பியம், மரபியல் 15).

சொற்பொருள்:  முளி கொடி வலந்த முள் அரை இலவத்து ஒளிர் சினை அதிர வீசி விளிபட வெவ்வளி வழங்கும் வேய் பயில் மருங்கில் – காய்ந்த கொடிகள் சுற்றிய முட்கள் பொருந்திய அடியுடைய இலவ மரத்தின் ஒளியுடைய கிளைகள் நடுங்கும்படி வீசி அவை உடையும்படி கொடிய காற்று வீசுகின்ற மூங்கில் நிறைந்த இடத்தில், கடு நடை யானை கன்றொடு வருந்த நெடு நீர் அற்ற நிழல் இல் ஆங்கண் – விரைந்த நடையையுடைய யானைகள் தங்கள் கன்றுடன் வருந்துமாறு நீண்ட வழியில் நீர் இல்லாத நிழல் இல்லாத அங்கு, அருஞ்சுரக் கவலைய என்னாய் – செல்லுதற்கு அரிய பிரிவுகளையுடை வழி என்று நீ எண்ணவில்லை, நெடுஞ்சேண் பட்டனை – நெடுந்தூரம் வந்துவிட்டாய், வாழிய நெஞ்சே – நீடு வாழ்வாக நெஞ்சே, குட்டுவன் குடவரைச் சுனைய மா இதழ்க் குவளை வண்டுபடு வான் போது கமழும் அம் சில் ஓதி அரும் படர் உறவே – சேரனின் குடமலையில் உள்ள சுனையில் உள்ள பெரிய இதழ்களையுடைய குவளை மலர்களின் வண்டுகள் மொய்க்கும் பெரிய மலர்களை அணிவதால் மணம் கமழும் அழகிய மென்மையான கூந்தலையுடைய நம் தலைவி பெரும் துன்பத்தை அடைய (அம் சில் ஓதி – அன்மொழித்தொகை, உறவே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 106, தொண்டைமான் இளந்திரையன், நெய்தல் திணை – தலைவன் தேர்ப்பாகனிடம் சொன்னது
அறிதலும் அறிதியோ பாக, பெருங்கடல்
எறி திரை கொழீஇய எக்கர் வெறி கொள,
ஆடு வரி அலவன் ஓடு வயின் ஆற்றாது,
அசைஇ உள் ஒழிந்த வசை தீர் குறுமகட்கு
உயவினென் சென்று, யான் உள் நோய் உரைப்ப,  5
மறுமொழி பெயர்த்தல் ஆற்றாள், நறு மலர்
ஞாழல் அம் சினைத் தாழ் இணர் கொழுதி,
முறி திமிர்ந்து உதிர்த்த கையள்
அறிவு அஞர் உறுவி ஆய் மட நிலையே?

பாடல் பின்னணி:  வினைவயின் சென்ற தலைவன் அவ்வினையை முடித்துத் திரும்பும்பொழுது தேர்ப்பாகனிடம் உரைத்தது.

பொருளுரைதேர்ப்பாகனே!  பெரிய கடலின் மோதும் அலைகளால் குவிக்கப்பட்ட மணல் மேட்டில் நறுமணம் வீச, அங்கு விளையாடும் வரியுடைய நண்டுகளை விரட்டி மேலும் செல்ல விரும்பாது களைப்புறும் குற்றம் இல்லாத இளைய தலைவியிடம், வருந்தியவனாக நான் சென்று என் உள்ளத்தில் இருக்கும் பிரிவு நோய்த் துன்பத்தை உரைக்கவும், அதற்குப் பதில் கூற இயலாதவள் ஆக, நறுமண மலர்களையுடைய ஞாழல் மரத்தின் அழகிய கிளையிலுள்ள தாழ்ந்த மலர்க் கொத்துக்களைப் பறித்து அதனுடன் தளிரையும் சேர்த்துப் பிசைந்து அவற்றை உதிர்த்த கைகளை உடையவளாக ஆகி, அறிவு கலங்கியதால் அடைந்த மடப்ப நிலையை, நீ அறிந்தனையோ அறியாயோ!

குறிப்பு:  கு. வெ. பாலசுப்பிரமணியன் உரை – மலரையும் தளிரையும் உதிர்த்தவாறு தன் மனநிலையைக் காட்டினாள் தலைவி.  இம்மன்னன் எழுதிய பாடல் புறநானூறு 185.  பெரும்பாணாற்றுப்படை இவனுக்காக எழுதப்பட்டது, கடியலூர் உருத்திரங்கண்ணனார் என்ற புலவரால்.  அறிதலும் அறிதியோ (1) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – நீ அறிந்திருத்தலையும் உடையையோ, ஒளவை துரைசாமி உரை நீ இதனை நன்கு அறியவாயன்றே, கு. வெ. பாலசுப்பிரமணியன் உரை – நீ அறிந்தனையோ அறியாயோ. அறிவு அஞர் உறுவி (9) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – அறிவு மயக்கமுற்றவள்,  ஒளவை துரைசாமி உரை – என் அறிவுக்கு வருத்தத்தை உண்டுபண்ணினவள்.

சொற்பொருள்:  அறிதலும் அறிதியோ – நீ அறிந்தனையோ அறியாயோ, பாக – தேர்ப்பாகனே (அண்மை விளி), பெருங்கடல் எறி திரை கொழீஇய எக்கர் வெறி கொள ஆடு வரி அலவன் ஓடு வயின் ஆற்றாது அசைஇ உள் ஒழிந்த வசை தீர் குறுமகட்கு – பெரிய கடலின் மோதும் அலைகளால் குவிக்கப்பட்ட மணல் மேட்டில் நறுமணம் வீச விளையாடும் வரியுடைய நண்டுகளை விரட்டி மேலும் செல்ல விரும்பாது களைப்புறும் குற்றம் இல்லாத இளைய தலைவியிடம் (கொழீஇய – செய்யுளிசை அளபெடை), உயவினென் சென்று யான் உள் நோய் உரைப்ப மறுமொழி பெயர்த்தல் ஆற்றாள் – வருந்தியவனாக நான் சென்று என் உள்ளத்தில் இருக்கும் பிரிவு நோய்த் துன்பத்தை உரைக்கவும் பதில் கூற இயலாதவள் ஆக, நறு மலர் ஞாழல் அம் சினைத் தாழ் இணர் கொழுதி முறி திமிர்ந்து உதிர்த்த கையள் அறிவு அஞர் உறுவி ஆய் மட நிலையே – நறுமண மலர்களையுடைய ஞாழல் மரத்தின் அழகிய கிளையிலுள்ள தாழ்ந்த மலர்க் கொத்துக்களைப் பறித்து அதனுடன் தளிரையும் சேர்த்துப் பிசைந்து அவற்றை உதிர்த்த கைகளை உடையவளாக ஆகி அறிவு கலங்கியதால் அடைந்த மடப்ப நிலை (ஞாழல் – புலிநகக்கொன்றை, tiger claw tree, Cassia sophera, நிலையே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 107, பாடியவர் பெயர் கிடைக்கவில்லை, பாலைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
உள்ளுதொறும் நகுவேன் தோழி, வள் உகிர்ப்
பிடி பிளந்திட்ட நார் இல் வெண்கோட்டுக்
கொடிறு போல் காய வால் இணர்ப் பாலை
செல் வளி தூக்கலின் இலை தீர் நெற்றம்
கல் இழி அருவியின் ஒல்லென ஒலிக்கும்  5
புல் இலை ஓமைய புலி வழங்கு அத்தம்
சென்ற காதலர் வழி வழிப்பட்ட
நெஞ்சே, நல் வினைப்பாற்றே ஈண்டு ஒழிந்து,
ஆனாக் கௌவை மலைந்த
யானே தோழி, நோய்ப்பாலேனே.  10

பாடல் பின்னணி:  பிரிவிடை வருந்திய தலைவி, தோழிக்குச் சொல்லியது.

பொருளுரைநினைக்கும்பொழுதெல்லாம் நான் நகைத்தேன் தோழி! பெரிய நகங்களையுடைய பெண் யானை மேல் பட்டையை உரித்ததனால் நார் இல்லாத வெள்ளைக் கிளைகளையும் குறடு போன்ற காய்களையும் உடைய பாலை மரங்களின், வீசும் காற்று அசைப்பதால் இலைகள் உதிர்ந்த கிளையில் உள்ள விதைக்கூடுகள், மலையிலிருந்து விழும் அருவியைப் போன்று ஒல்லென ஒலிக்கும் புல்லிய இலைகளையுடைய ஓமை மரங்களுடைய புலிகள் இயங்கும் பாலை நிலம் சென்ற காதலரின் பின் சென்ற என் நெஞ்சம் இப்பொழுது நல்ல வினையின் பயனைத் துய்த்துள்ளது.  இங்குத் தங்கி மிக்கப் பழியைப் பெற்ற நான், தீவினையின் பயனை நுகர்கின்றேன் தோழி!

குறிப்பு:  உள்ளுறை – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – பிடி தலைவனாகவும், பாலை தலைவியாகவும், புலி அன்னை முதலியனோர் ஆகவும், அத்தம் தோழியாகவுங் கொண்டு, பிடி தோலைப் பொளித்துக்கொண்டது போலத் தலைவியின் நலத்தைத் தலைவன் பெற்றுண்டு போகலும் அந்தப் பாலையின் இலை தீர்ந்த நெற்று ஒலிப்பது போல நெஞ்சழிந்த தலைவி புலம்ப, அங்கிருந்த தோழி புலி வழங்குதல் போல அன்னை முதலானோர் இடையே இயங்கப் பெறுதலாலே தலைவியைத் தேற்றவும் இயலாதிருந்தனள் எனக் கொள்க.  பிடி – பிடி என் பெண் பெயர் யானை மேற்றே (தொல்காப்பியம், மரபியல் 52).

சொற்பொருள்:  உள்ளுதொறும் நகுவேன் – நினைக்கும்பொழுதெல்லாம் நான் நகைத்தேன், தோழி – தோழி, வள் உகிர்ப் பிடி பிளந்திட்ட நார் இல் வெண்கோட்டுக் கொடிறு போல் காய வால் இணர்ப் பாலை – பெரிய நகங்களையுடைய பெண் யானை மேல் தோலை உரித்ததனால் நார் இல்லாத வெள்ளைக் கிளைகளையும் குறடு போன்ற காய்களையும் உடைய பாலை மரங்கள் (பாலை – Ivorywood Tree, Wrightia tinctoria), செல் வளி தூக்கலின் இலை தீர் நெற்றம் கல் இழி அருவியின் ஒல்லென ஒலிக்கும் புல் இலை ஓமைய புலி வழங்கு அத்தம் சென்ற காதலர் – வீசும் காற்று அசைப்பதால் இலைகள் உதிர்ந்த கிளையில் உள்ள விதைக்கூடுகள் மலையிலிருந்து விழும் அருவியைப் போன்று ஒல்லென ஒலிக்கும் புல்லிய இலைகளையுடைய ஓமை மரங்களுடைய புலிகள் இயங்கும் பாலை நிலம் சென்ற காதலர் (ஒல்லென – ஒலிக்குறிப்பு, ஓமை – Toothbrush Tree, Dillenia indica), வழி வழிப்பட்ட நெஞ்சே நல் வினைப்பாற்றே – அவர் பின் சென்ற என் நெஞ்சம் இப்பொழுது நல்ல வினையின் பயனைத் துய்த்துள்ளது (நெஞ்சே – ஏகாரம் அசைநிலை, வினைப்பாற்றே – ஏகாரம் அசைநிலை), ஈண்டு ஒழிந்து ஆனாக் கௌவை மலைந்த யானே – இங்குத் தங்கி மிக்கப் பழியைப் பெற்ற நான், தோழி – தோழி, நோய்ப்பாலேனே – தீவினையின் பயனை நுகர்கின்றேன் (ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 108, பாடியவர் பெயர் கிடைக்கவில்லை, குறிஞ்சித் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
மலை அயல் கலித்த மை ஆர் ஏனல்
துணையின் தீர்ந்த கடுங்கண் யானை
அணையக் கண்ட அம் குடிக் குறவர்,
கணையர், கிணையர், கை புனை கவணர்,
விளியர், புறக்குடி ஆர்க்கும் நாட!  5
பழகிய பகையும் பிரிவு இன்னாதே;
முகை ஏர் இலங்கு எயிற்று இன்னகை மடந்தை
சுடர் புரை திரு நுதல் பசப்பத்
தொடர்பு யாங்கு விட்டனை? நோகோ யானே.

பாடல் பின்னணி:  தலைவன் வரையாது நெடுங்காலம் வந்தொழுகியதால் தோழி தலைவியின் ஆற்றாமை கூறி வரைவு கடாயது.

பொருளுரைமலைப்பக்கத்தில் தழைத்த கரிய நிறமுடைய தினைக்கதிர்களை விரும்பி தான் துணையிடமிருந்து நீங்கிய கொடிய களிற்று யானை ஒன்று நெருங்குவதைக் கண்ட அழகிய குடியிருப்பில் உள்ள குறவர் அம்பை உடையர்களாகவும் கிணைப்பறையை உடையவர்களாகவும் கையில் உள்ள கவணால் கற்களைச் செலுத்தியவர்களாகவும் பெரும் ஒலியை எழுப்புபவர்களாகவும் புறம் எல்லாம் ஆரவாரம் செய்யும் மலை நாடனே!   நெடிது பழகி அதன் பின் அவர்கள் பகைவர்கள் ஆனாலும் அவர்களிடமிருந்து பிரிவது துன்பம்.  முல்லையின் அரும்புகளை ஒத்த ஒளிரும் பற்களையும் இனிய புன்னகையையுமுடைய தலைவியின் சுடர் போன்ற அழகிய நெற்றியில் பசலை படருமாறு அவளது நட்பை எவ்வாறு நீ  கைவிட்டாய்?  இதற்காக நான் வருந்துகின்றேன்.

குறிப்பு:  உள்ளுறை – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – ஏனல் தலைவியாகவும், யானை தலைவனாகவுங் கொண்டு தினைப்புனத்துப் புகுந்து உண்ண வந்த யானையைக் கண்ட குறவர் அதனை ஒறுக்கும்படி படையினராய் ஆர்த்தல் போல, நீ களவொழுக்கத்துத் தலைவியை முயங்க வருவதைக் குறவர் அறிந்தால் நின்னை ஏதஞ் செய்யுமாறு படையினராய்ச் சூழ்ந்து கொள்வாராயின் வரைந்து எய்துக  என்பதாம்.

சொற்பொருள்:  மலை அயல் கலித்த மை ஆர் ஏனல் துணையின் தீர்ந்த கடுங்கண் யானை அணையக் கண்ட அம் குடிக் குறவர் கணையர் கிணையர் கை புனை கவணர் விளியர் புறக்குடி ஆர்க்கும் நாட – மலைப்பக்கத்தில் தழைத்த கரிய நிறமுடைய தினைக்கதிர்களை விரும்பி தான் துணையிடமிருந்து நீங்கிய கொடிய களிற்று யானை ஒன்று நெருங்குவதைக் கண்ட அழகிய குடியிருப்பில் உள்ள குறவர் அம்பை உடையர்களாகவும் கிணைப்பறையை உடையவர்களாகவும் கையில் உள்ள கவணால் கற்களைச் செலுத்தியவர்களாகவும் பெரும் ஒலியை எழுப்புபவர்களாகவும் புறம் எல்லாம் ஆரவாரம் செய்யும் மலை நாடனே (குறவர் – மலையில் வாழ்பவர்கள்), பழகிய பகையும் பிரிவு இன்னாதே – நெடிது பழகி அதன் பின் பகைவர்கள் ஆனாலும் அவர்களிடமிருந்து பிரிவது துன்பம் (இன்னாதே – ஏகாரம் அசைநிலை), முகை ஏர் இலங்கு எயிற்று இன்னகை மடந்தை சுடர் புரை திரு நுதல் பசப்பத் தொடர்பு யாங்கு விட்டனை – முல்லையின் அரும்புகளை ஒத்த ஒளிரும் பற்களையும் இனிய புன்னகையையுமுடைய தலைவியின் சுடர் போன்ற அழகிய நெற்றியில் பசலை படருமாறு அவளது நட்பை எவ்வாறு நீ  கைவிட்டாய் (ஏர் – உவம உருபு, புரை – உவம உருபு), நோகோ யானே – வருந்துகின்றேன் நான் (நோகு + ஓ, நோகு – செய்கென்னும் தன்மை வினை, யானே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 109, மீளிப் பெரும்பதுமனார், பாலைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
ஒன்றுதும் என்ற தொன்றுபடு நட்பின்
காதலர் அகன்றென, கலங்கிப் பேதுற்று,
‘அன்னவோ இந்நன்னுதல் நிலை?’ என
வினவல் ஆனாப் புனை இழை! கேள் இனி!
உரைக்கல் ஆகா எவ்வம், இம்மென  5
இரைக்கும் வாடை இருள் கூர் பொழுதில்,
துளியுடைத் தொழுவில் துணிதல் அற்றத்து
உச்சிக் கட்டிய கூழை ஆவின்
நிலை என, ஒருவேன் ஆகி
உலமர கழியும், இப் பகல் மடி பொழுதே.  10

பாடல் பின்னணி:  பிரிவிடை ஆற்றாளாய தலைவியின் நிலைகண்ட தோழிக்குத் தலைவி சொல்லியது.

பொருளுரை“நாம் ஒன்றாக இருப்போம்” எனக் கூறிய நீண்ட கால நட்புடைய காதலர் பிரிந்ததால், மனம் கலங்கி அறிவு மயங்கி இவ்வாறோ இந்த நல்ல நெற்றியை உடையவளின் நிலைமை என்று வினவுதலை நீக்காத அழகிய அணிகலன்களை அணிந்த தோழியே!  இப்பொழுது யான் கூறுவதைக் கேட்பாயாக!  கூறமுடியாத பெரும் துன்பம் விரைந்து பற்ற, இம்மென்ற ஓசையுடன் வாடைக்காற்று அலைக்கும் இருள் மிகுந்த மாலை வேளையில், மழைத்துளிகள் சொட்டும் தொழுவில் வேறு இடத்தில் கட்டவேண்டிய வேளையில், படுக்க முடியாதபடி உச்சியில் கட்டப்பட்ட குறுமையான பசுவின் நிலைமையைப் போல், நான் தனிமையில் இருந்து உள்ளம் சுழன்று வருந்துமாறு மெல்ல மெல்ல நீங்கும் இந்தப் பகல் முடியும் மாலைப் பொழுது.  இந்த நிலையில் நான் எவ்வாறு ஆற்றியிருப்பேன்?

குறிப்பு:  துணிதல் அற்றம் (7) – பெயர்த்து வேறு இடத்தில் கட்டும் காலம்,   கூழை (8) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை, ச. வே. சுப்பிரமணியன் உரை – சேறு, ஒளவை துரைசாமி உரை – குறிய, H. வேங்கடராமன் உரை – குறுமையான.  தொளியுடை என்றும் பாடம் உண்டு.  தொளி – சேறு.

சொற்பொருள்:  ஒன்றுதும் என்ற தொன்றுபடு நட்பின் காதலர் அகன்றென – நாம் ஒன்றாக இருப்போம் எனக் கூறிய நீண்ட கால நட்புடைய காதலர் பிரிந்ததால், கலங்கிப் பேதுற்று ‘அன்னவோ இந்நன்னுதல் நிலை என வினவல் ஆனாப் புனை இழை – மனம் கலங்கி அறிவு மயங்கி இவ்வாறோ இந்த நல்ல நெற்றியை உடையவளின் நிலைமை என்று வினவுதல் ஒழியாத அழகிய அணிகலன்களை அணிந்த தோழி (நன்னுதல் – பண்புத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை, புனை இழை – அன்மொழித்தொகை விளியேற்று நின்றது), கேள் இனி – இப்பொழுது கேட்பாயாக, உரைக்கல் ஆகா எவ்வம் இம்மென இரைக்கும் வாடை இருள் கூர் பொழுதில் – கூறமுடியாத பெரும் துன்பம் விரைந்து பற்ற இம்மென்ற ஓசையுடன் வாடைக்காற்று அலைக்கும் இருள் மிகுந்த மாலை வேளையில் (இம்மென – ஒலிக்குறிப்பு), துளியுடைத் தொழுவின் துணிதல் அற்றத்து உச்சிக் கட்டிய கூழை ஆவின் நிலை என – மழைத்துளிகள் சொட்டும் தொழுவில் வேறு இடத்தில் கட்டவேண்டிய வேளையில் படுக்க முடியாதபடி உச்சியில் கட்டப்பட்ட குறுமையான பசுவின் நிலைமையைப் போல், ஒருவேன் ஆகி உலமர கழியும் இப் பகல் மடி பொழுதே – நான் தனிமையில் இருந்து உள்ளம் சுழன்று வருந்துமாறு மெல்ல மெல்ல நீங்கும் இந்தப் பகல் முடியும் மாலைப் பொழுதில் (பொழுதே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 110, போதனார், பாலைத் திணை – தலைவியின் தாய் சொன்னது
பிரசம் கலந்த வெண்சுவைத் தீம் பால்
விரி கதிர்ப் பொற்கலத்து ஒரு கை ஏந்திப்,
புடைப்பின் சுற்றும் பூந்தலைச் சிறு கோல்
‘உண்’ என்று ஓக்குபு புடைப்ப தெண் நீர்
முத்து அரிப் பொற்சிலம்பு ஒலிப்பத் தத்துற்று,  5
அரி நரைக் கூந்தல் செம் முது செவிலியர்
பரி மெலிந்து ஒழிய பந்தர் ஓடி,
ஏவல் மறுக்கும் சிறு விளையாட்டி
அறிவும் ஒழுக்கமும் யாண்டு உணர்ந்தனள் கொல்,
கொண்ட கொழுநன் குடி வறன் உற்றெனக்  10
கொடுத்த தந்தை கொழுஞ்சோறு உள்ளாள்,
ஒழுகு நீர் நுணங்கு அறல் போல,
பொழுது மறுத்து உண்ணும் சிறு மதுகையளே?

பாடல் பின்னணி:  1.  நற்றாய் உடன்போக்கு மேற்கொண்ட மகளை எண்ணி வருந்தி உரைத்தது.  2.  மணம் நிகழ்ந்தபின் தலைவியின் இல்லச் சிறப்பினைக் கண்டு வந்து விவரித்த செவிலித்தாயிடம் நற்றாய் உரைத்தது.

பொருளுரைதேன் கலந்த வெண்மையான சுவையான இனிய பாலைக் கொண்ட விரிந்த ஒளியையுடைய பொற்கலத்தை ஒரு கையில் ஏந்தியவண்ணம், மென்மையான நுனியைக் கொண்ட சிறிய கோலை உயர்த்தி என் மகளை அச்சமூட்டி “இதைக் குடி” என்று அவளுடைய மென்மையாக நரைத்த கூந்தலையுடைய செவ்விதான முது செவிலித் தாயார்கள் கூறவும், அதனை மறுத்துத் தெளிந்த நீரின் முத்துக்கள் பரலாக உள்ள தன்னுடைய பொற்சிலம்புகள் ஒலிக்கப் பாய்ந்து அவள் ஓட, நடைத் தளர்ந்து அவள் பின்னால் ஓட முடியாமல் அவர்கள் இருக்க, அவள் எங்கள் இல்லத்திற்கு முன் இருக்கும் பந்தலுக்கு ஓடி விடுவாள்.  இவ்வாறு பாலைக் குடிக்க மறுத்த என்னுடைய விளையாட்டுப் பெண், இப்பொழுது எவ்வாறு அறிவையும் ஒழுக்கத்தையும் அறிந்தாள்?  திருமணம் புரிந்த கணவனின் குடும்பத்தில் வறுமை ஏற்பட்டதால், அவளுடைய தந்தை கொடுத்த செல்வமிக்க உணவை எண்ணவில்லை. நீர் இருக்கும் பொழுது நனைந்து பின் நீர் இல்லாத பொழுது உலரும் நுண்ணிய மணல் போல, ஒரு பொழுதின்றி ஒரு பொழுது உண்ணும் சிறிய வலிமையுடையவள் ஆக இருக்கின்றாள் இப்பொழுது.

குறிப்பு:  பிரசம் கலந்த வெண்சுவைத் தீம் பால் (1) – நற்றிணை 110 – பிரசம் கலந்த வெண்சுவைத் தீம் பால் – ஒளவை துரைசாமி உரை – தேன் கலந்த சுவை மிக்க வெண்மையான இனிய பால், H. வேங்கடராமன் உரை – தேனை கலந்தாற்போன்ற நல்ல சுவையை உடைய இனிய வெள்ளிய பால், பொ. வே. சோமசுந்தரனார் உரை – தேன் கலந்தாலொத்த நல்ல சுவையையுடைய இனிய வெளிய பால்.  பூந்தலை (3) – ஒளவை துரைசாமி உரை – மென்மையான நுனி, H. வேங்கடராமன் உரை – பூக்களைத் தலையிலே கொண்ட, பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – பூவொத்த மெல்லிய நுனி.

சொற்பொருள்:  பிரசம் கலந்த – தேன் கலந்த, வெண் சுவைத் தீம் பால் – வெண்மையான சுவையான இனிய பால், விரி கதிர்ப் பொற்கலத்து – விரிந்த ஒளியையுடைய பொற்கலத்தில், ஒரு கை ஏந்தி – ஒரு கையில் ஏந்தியவண்ணம், புடைப்பின் சுற்றும் – முனையில் சுற்றிய, பூந்தலைச் சிறு கோல் – பூக்களைத் தலையில் கொண்ட சிறிய கோல், மென்மையான மேல்பகுதியைக் கொண்ட சிறு கோல், உண் என்று – ‘இதைக் குடி’ என்று, ஓக்குபு புடைப்ப – ஓங்கி அடிக்க, தெண் நீர் முத்து அரிப் பொற்சிலம்பு ஒலிப்ப – தெளிந்த நீரின் முத்துக்கள் பரலாக உள்ள பொற்சிலம்பு ஒலிக்க, தத்துற்று – பாய்ந்து, அரி நரைக் கூந்தல் செம் முது செவிலியர் – சிறிதாக நரைத்த கூந்தலையுடைய செவ்விதான முது செவிலித் தாயார்கள், பரி மெலிந்து ஒழிய – நடையின் தளர்ந்து ஓட முடியாமல், பந்தர் ஓடி – பந்தலுக்கு ஓடி (பந்தர் – பந்தல் என்பதன் போலி), ஏவல் மறுக்கும் – ‘இதைக் குடி’ என்று அவர்கள் கூறுவதை மறுக்கும், சிறு விளையாட்டி – விளையாடும் இளைய பெண், அறிவும் ஒழுக்கமும் யாண்டு உணர்ந்தனள் கொல் – எவ்வாறு அறிவையும் ஒழுக்கத்தையும் அறிந்தாள், கொண்ட கொழுநன் குடி வறன் உற்றென – திருமணம் புரிந்த கணவனின் குடும்பத்தில் வறுமை உற்றதால், கொடுத்த தந்தை கொழுஞ் சோறு உள்ளாள் – அவளுடைய தந்தை கொடுக்கும் செல்வமிக்க உணவை எண்ணவில்லை, ஒழுகு நீர் நுணங்கு அறல் போல – ஓடுகின்ற நீரில் இருக்கும் நுண்ணிய மணல் போல, பொழுது மறுத்து உண்ணும் சிறு மதுகையளே – ஒரு பொழுதின்றி ஒரு பொழுது உண்ணும் சிறிய வலிமையுடையவளே (மதுகையளே – ஏகாரம் அசை நிலை)

நற்றிணை 111, பாடியவர் பெயர் கிடைக்கவில்லை, நெய்தல் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
அத்த இருப்பைப் பூவின் அன்ன
துய்த்தலை இறவொடு தொகை மீன் பெறீஇயர்,
வரி வலைப் பரதவர் கருவினைச் சிறாஅர்,
மரன் மேற்கொண்டு மான் கணம் தகைமார்
வெந்திறல் இளையவர் வேட்டு எழுந்தாங்குத்,  5
திமில் மேற்கொண்டு திரைச் சுரம் நீந்தி,
வாள்வாய்ச் சுறவொடு வய மீன் கெண்டி,
நிணம் பெய் தோணியர் இகு மணல் இழிதரும்
பெருங்கழிப் பாக்கம் கல்லென
வருமே தோழி, கொண்கன் தேரே.  10

பாடல் பின்னணி:  தலைவனின் பிரிவால் தலைவி வருந்தியதை அறிந்த தோழி, அவன் வருவதற்கு அறிகுறியாகிய நல்ல நிமித்தம் தோன்ற, தலைவியை ஆற்றியிருக்குமாறு கூறியது.

பொருளுரைதோழி!  சுரத்தில் உள்ள இருப்பைப் பூக்கள் போன்று மெல்லிய தலையையுடைய இறால் மீன்களுடன் திரளாக உள்ள பிற மீன்களையும் பிடிக்கும் பொருட்டு வரிந்து கட்டப்பட்ட வலையையுடைய மீனவர்களின் வலிமை மிக்க தொழில் செய்யும் சிறுவர்கள், மரங்களின் மேல் ஏறி மான் கூட்டங்களைப் பிடிக்க வேண்டி மிகுந்த வலிமையுடைய வேட்டுவரின் சிறுவர்கள் விருப்பத்துடன் எழுந்தாற்போலப் படகில் ஏறி, அலைகள் உடைய கடற்பரப்பிற்குச் சென்று வாள்போன்ற வாயையுடைய சுறா மீன்களுடன் பெரிய மீன்களையும் பிடித்து வெட்டி, அவற்றின் தசையை நிரப்பிய தோணியராகக் காற்று பரப்பிய மணலில் இறக்கிவிடும், பெரிய உப்பங்கழியை உடைய மீனவர் வாழும் குடிக்குக் கல்லென்ற ஒலியுடன் வரும், நம் தலைவனின் தேர்.  நீ வருந்தாதே!

குறிப்பு:  மான் கணம் தகைமார் (4) – ஒளவை துரைசாமி உரை, கு. வெ. பாலசுப்பிரமணியன் உரை – தடுக்கும் பொருட்டு, H. வேங்கடராமன் உரை – பிடிக்கும் பொருட்டு.  இறைச்சி – கு. வெ. பாலசுப்பிரமணியன் உரை – சிறார் மீனினங்களைக் கொண்டு வந்து பரப்புவது போலத் தலைவன் வேற்று நாட்டில் பெற்ற பொருளையெல்லாம் கொண்டு வந்து இல்லத்தை நிறைப்பான் என்ற பொருள் தோன்ற நின்றது.

சொற்பொருள்:  அத்த இருப்பைப் பூவின் அன்ன துய்த்தலை இறவொடு தொகை மீன் பெறீஇயர் வரி வலைப் பரதவர் கருவினைச் சிறாஅர் – சுரத்தில் உள்ள இருப்பைப் பூக்கள் போன்று மெல்லிய தலையையுடைய இறால் மீன்களுடன் திரளாக உள்ள பிற மீன்களையும் பிடிக்கும் பொருட்டு வரிந்து கட்டப்பட்ட வலையையுடைய மீனவர்களின் வலிமை மிக்க தொழில் செய்யும் சிறுவர்கள் (பெறீஇய – செய்யுளிசை அளபெடை, சிறாஅர் – அளபெடை), மரன் மேற்கொண்டு மான் கணம் தகைமார் வெந்திறல் இளையவர் வேட்டு எழுந்தாங்குத் திமில் மேற்கொண்டு – மரங்களின் மேல் ஏறி மான் கூட்டங்களைப் பிடிக்க வேண்டி மிகுந்த வலிமையுடைய வேட்டுவரின் சிறுவர்கள் விருப்பத்துடன் எழுந்தாற்போலப் படகில் ஏறி (மரன் – மரம் என்பதன் போலி), திரைச் சுரம் நீந்தி வாள்வாய்ச் சுறவொடு வய மீன் கெண்டி – அலைகள் உடைய கடற்பரப்பிற்குச் சென்று வாள்போன்ற வாயையுடைய சுறா மீன்களுடன் பெரிய மீன்களையும் பிடித்து வெட்டி, நிணம் பெய் தோணியர் இகு மணல் இழிதரும் – தசையை நிரப்பிய தோணியராகக் காற்று பரப்பிய மணலில் இறக்கிவிடும், பெருங்கழிப் பாக்கம் கல்லென வருமே – பெரிய உப்பங்கழியை உடைய மீனவர் வாழும் குடிக்குக் கல்லென்ற ஒலியுடன் வரும், தோழி – தோழி, கொண்கன் தேரே – தலைவனின் தேர் (கல்லென்ற – ஒலிக்குறிப்பு, தேரே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 112, பெருங்குன்றூர் கிழார், குறிஞ்சித் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
விருந்து எவன் செய்கோ தோழி, சாரல்
அரும்பு அற மலர்ந்த கருங்கால் வேங்கைச்
சுரும்பு இமிர் அடுக்கம் புலம்பக் களிறு அட்டு,
உரும்பு இல் உள்ளத்து அரிமா வழங்கும்
பெருங்கல் நாடன் வரவு அறிந்து விரும்பி,  5
மாக் கடல் முகந்து, மணி நிறத்து அருவித்
தாழ் நீர் நனந்தலை அழுந்துபடப் பாஅய்
மலை இமைப்பது போல் மின்னிச்,
சிலை வல் ஏற்றொடு செறிந்த இம் மழைக்கே?

பாடல் பின்னணி:  பருவ வரவின்கண் ஆற்றாளாய தலைவியைத் தோழி வற்புறுத்தியது.

பொருளுரைதோழி!  மலைச்சரிவில் அரும்புகள் இல்லாதபடி முற்றிலும் மலர்ந்த கரிய அடியையுடைய வேங்கை மரங்களில் வண்டுகள் ஒலிக்கும் பக்கமலையெல்லாம் அஞ்சும்படி, களிற்று யானையைக் கொன்று அச்சமற்ற உள்ளத்தைக் கொண்ட சிங்கம் உலவும் பெரிய மலையின் நாடனாகிய நம் தலைவனின் வரவை அறிந்து, விருப்பத்துடன் பெரிய (கரிய) கடலின் நீரை முகந்து நீலமணி நிறத்தையுடைய அருவியிலிருந்து வடிகின்ற நீரையுடைய அகன்ற இடங்கள் மறையுமாறு பரவி,  மலை இமைப்பது போல் மின்னி, ஒலிக்கும் வலிய இடியுடன் கலந்து வந்த இந்த மழைக்கு, விருந்தாக யான் என்ன கைம்மாறு செய்ய முடியும்?

குறிப்பு:  பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – கைகோள் (தலைவன் தலைவியின் கனவு கற்பு ஒழுக்கம்) இரண்டுக்கும் (களவு, கற்பு) பொது. பொ. வே. சோமசுந்தரனார் உரை – கார்ப்பருவத்தே மீண்டு வருவேன் என்று கூறி பிரிதல் களவிற்கு ஏலாமையின் இதற்கு கைகோள் கற்பு என்றே கொள்க.  இரண்டற்கும் பொதுவெனல் பொருந்தாமை உணர்க.  இறைச்சி – கு. வெ. பாலசுப்பிரமணியன் உரை – மலை புலம்புமாறு களிற்று யானையைக் கொன்று சிங்கம் இயங்கும் என்றது, உன் பசலை கெடுமாறு உனக்குண்டாகிய காம நோயைப் போக்கி உன்னைப் பலகாறும் தலைவன் தழுவுவான் என்றுக் காட்டி நின்றது.  ஒளவை துரைசாமி உரை – பெய்த நீர் பள்ளத்தே சென்று தங்குதல் இயல்பாகலின், தாழ் நீர் நனந்தலை அழுந்துபட என்றும் கூறினாள்.  பொருளின்மையால் தாழ்ந்திருக்கும் சுற்றத்துக்கும் இரவலர் கூட்டத்துக்கும் ஈட்டி வரும் செல்வத்தை ஈந்து வாழ்விக்கும் தலைமகனது ஏற்றம் இதனால் சுட்டியவாறு.  நனந்தலை – அகன்ற இடம், நனம் – நனவே களனும் அகலமும் செய்யும் (தொல்காப்பியம், உரியியல் 80).  மழைக்கே (9) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – மழைக்கு, ஒளவை துரைசாமி உரை – மழை முகிலுக்கு.

சொற்பொருள்:  விருந்து எவன் செய்கோ – விருந்தாக யான் என்ன கைம்மாறு செய்ய முடியும் (செய்கோ – செய்கு + ஓ, செய்கு – தன்மை ஒருமை வினைமுற்று, ஓ அசைநிலை), தோழி – தோழி, சாரல் அரும்பு அற மலர்ந்த கருங்கால் வேங்கைச் சுரும்பு இமிர் அடுக்கம் புலம்பக் களிறு அட்டு உரும்பு இல் உள்ளத்து அரிமா வழங்கும் பெருங்கல் நாடன் – மலைச்சரிவில் அரும்புகள் இல்லாதபடி முற்றிலும் மலர்ந்த கரிய அடியையுடைய வேங்கை மரங்களில் வண்டுகள் ஒலிக்கும் பக்கமலையெல்லாம் அஞ்சும்படி களிற்று யானையைக் கொன்று அச்சமற்ற உள்ளத்தைக் கொண்ட சிங்கம் உலவும் பெரிய மலைநாடனாகிய நம் தலைவன், வரவு அறிந்து விரும்பி மாக் கடல் முகந்து மணி நிறத்து அருவித் தாழ் நீர் நனந்தலை அழுந்துபடப் பாஅய் மலை இமைப்பது போல் மின்னிச் சிலை வல் ஏற்றொடு செறிந்த இம் மழைக்கே – வரவை அறிந்து விருப்பத்துடன் பெரிய (கரிய) கடலின் நீரை முகந்து நீலமணி நிறத்தையுடைய அருவியிலிருந்து வடிகின்ற நீரையுடைய அகன்ற இடங்கள் மறையுமாறு பரவி மலை இமைப்பது போல் மின்னி ஒலிக்கும் வலிய இடியுடன் கலந்து வந்த இந்த மழைக்கு (பாஅய் – செய்யுளிசை அளபெடை, மழைக்கே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 113, இளங்கீரனார், பாலைத் திணை – தலைவன் சொன்னது
உழை அணந்து உண்ட இறை வாங்கு உயர் சினைப்
புல் அரை இரத்திப் பொதிப் புறப் பசுங்காய்
கல் சேர் சிறு நெறி மல்கத் தாஅம்
பெருங்காடு இறந்தும், எய்த வந்தனவால்,
‘அருஞ்செயல் பொருட்பிணி முன்னி, யாமே  5
சேறும் மடந்தை!’ என்றலின், தான் தன்
நெய்தல் உண்கண் பைதல் கூரப்,
பின் இருங்கூந்தலின் மறையினள், பெரிது அழிந்து,
உதியன் மண்டிய ஒலிதலை ஞாட்பின்
இம்மென் பெருங்களத்து இயவர் ஊதும்  10
ஆம்பல் அம் குழலின் ஏங்கி
கலங்கு அஞர் உறுவோள் புலம்பு கொள் நோக்கே.

பாடல் பின்னணி:  பொருள்வயிற் பிரிந்த தலைவன் இடைச்சுரத்து ஆற்றானாகி உரைத்தது.

பொருளுரைமானினம் தலையை நிமிர்த்தி உண்ட, வளைந்து உயர்ந்த கிளைகளையும் புல்லிய (பொலிவில்லாத) அடியையும் உடைய இலந்தை மரங்களின் மேல்புறத்தில் உள்ள பசிய காய்கள், கற்கள் பொருந்திய சிறிய வழியில் மிகுதியாகப் பரவியிருக்கும் பெரிய காடுகளைக் கடந்தும், என் முன் வந்தன, “செய்தற்கரிய பொருளைச் செய்ய எண்ணி யாம் செல்கின்றோம் மடப்பத்தை உடையவளே” என யான் கூறியதால், அவள் தன்னுடைய நெய்தல் மலர்களை ஒத்த மையுண்ட கண்களில் வருத்தம் மிகுந்து பின்னப்பட்ட கரிய கூந்தலில் தன் முகத்தை மறைத்துக்கொண்டு மிகவும் கலங்கி, உதியஞ்சேரல் சினந்து சென்ற ஒலியுடைய போர்க்களத்தில் இம்மென ஆராவாரமுடைய பெரிய இடத்தில் இன்னிசை கருவி இசைப்போர் ஊதும் ஆம்பல் என்னும் பண்ணில் புல்லாங்குழல் இசை போல அழுது கலங்கி துன்பம் அடைவோளின், வருத்தமுடைய பார்வை.

குறிப்பு:  ஒப்புமை:  புறநானூறு 143 – முலையகம் நனைப்ப விம்மிக் குழல் இனைவது போல் அழுதனள் பெரிதே.  ஒளவை துரைசாமி உரை – ‘கரணத்தின் அமைந்து முடிந்த காலை’ (தொல்காப்பியம், கற்பியல் 5) எனத் தொடங்கும் ‘மீட்டு வரவு ஆய்ந்த வகையின்கண்’ தலைவன் நிகழ்த்தும் கூற்றுக்கு இதனைக் காட்டி, இஃது உருவு வெளிப்பட்டுழிக் கூறியது’, என்பர் நச்சினார்க்கினியர்.  இறைச்சி – கு. வெ. பாலசுப்பிரமணியன் உரை – இலந்தை மானினத்தால் உண்ணப்பட்ட நிலையிலும் பாலை வழியில் கனிகள் பலவற்றை உதிர்க்கும் என்றது, தலைவி பசலையால் துன்புற்று நலன் உண்ணப்பட்டிருப்பினும் தலைவன் சென்ற அளவில் மிக்க இன்பம் தருவாளாய் விளங்குவாள் எனக் குறித்து.  வரலாறு:  உதியன்.  கூர – கூர்ப்பும் கழிவும் உள்ளது சிறக்கும் (தொல்காப்பியம், உரியியல் 18).

சொற்பொருள்:  உழை அணந்து உண்ட – மானினம் தலையை நிமிர்த்தி உண்ட, இறை வாங்கு உயர் சினைப் புல் அரை இரத்திப் பொதிப் புறப் பசுங்காய் – வளைந்து உயர்ந்த கிளைகளையும் புல்லிய (பொலிவில்லாத) அடியையும் உடைய இலந்தை மரங்களின் மேல்புறத்தில் உள்ள பசிய காய்கள், கல் சேர் சிறு நெறி மல்கத் தாஅம் பெருங்காடு இறந்தும் – கற்கள் பொருந்திய சிறிய வழியில் மிகுதியாகப் பரவியிருக்கும் பெரிய காடுகளைக் கடந்தும் (தாஅம் – செய்யுளிசை அளபெடை), எய்த வந்தனவால் – என் முன் வந்தன (வந்தனவால் – ஆல் அசைநிலை), அருஞ்செயல் பொருட்பிணி முன்னி யாமே சேறும் மடந்தை என்றலின் – செய்தற்கரிய பொருளைச் செய்ய எண்ணி யாம் செல்கின்றோம் மடப்பத்தை உடையவளே எனக் கூறியதால், தான் தன் நெய்தல் உண்கண் பைதல் கூரப் பின் இருங்கூந்தலின் மறையினள் பெரிது அழிந்து – அவள் தன்னுடைய நெய்தல் மலர்களை ஒத்த மையுண்ட கண்களில் வருத்தம் மிகுந்து பின்னப்பட்ட  கரிய கூந்தலில் தன் முகத்தை மறைத்துக்கொண்டு மிகவும் கலங்கி, உதியன் மண்டிய ஒலிதலை ஞாட்பின் இம்மென் பெருங்களத்து இயவர் ஊதும் ஆம்பல் அம் குழலின் ஏங்கி கலங்கு அஞர் உறுவோள் புலம்பு கொள் நோக்கே – உதியஞ்சேரல் சினந்து சென்ற ஒலியுடைய போர்க்களத்தில் இம்மென ஆராவாரமுடைய பெரிய இடத்தில் இன்னிசை கருவி இசைப்போர் ஊதும் ஆம்பல் என்னும் பண்ணில் புல்லாங்குழல் இசை போல அழுது கலங்கி துன்பம் அடைவோளின் வருத்தமுடைய பார்வை (இம்மென் – ஒலிக்குறிப்பு, குழலின் – இன் உருபு ஒப்புப் பொருளது, ஐந்தாம் வேற்றுமை உருபு, நோக்கே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 114, தொல்கபிலர், குறிஞ்சித் திணை – தோழி தலைவியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
வெண்கோடு கொண்டு வியல் அறை வைப்பவும்,
பச்சூன் கெண்டி வள் உகிர் முணக்கவும்,
மறுகுதொறு புலாவஞ் சிறுகுடி அரவம்
வைகிக் கேட்டுப் பையாந்திசினே;
அளிதோ தானே தோழி, அல்கல்  5
வந்தோன் மன்ற குன்ற நாடன்,
துளி பெயல் பொறித்த புள்ளித் தொல் கரை
பொரு திரை நிவப்பின் வரும் யாறு அஞ்சுவல்,
ஈர்ங்குரல் உருமின் ஆர்கலி நல் ஏறு
பாம்பு கவின் அழிக்கும் ஓங்கு வரை பொத்தி,  10
மையின் மடப் பிடி இனையக்
கை ஊன்றுபு இழிதரு களிறு எறிந்தன்றே.

பாடல் பின்னணி:  தலைவி கூற்றைத் தன் கூற்றாகக் கொண்டு தோழி உரைத்தது.  ஆறு பார்த்து உற்ற அச்சத்தால் உரைத்தது. வரைவு கடாயது.

பொருளுரைதோழி!  குளிர்ந்த மழையுடன் ஒலிக்கும் பெரிய ஓசையையுடைய இடியானது பாம்பின் அழகை அழித்து உயர்ந்த மலை மேல் மோதி, கரிய இளம் பெண்யானை வருந்துமாறு தன் தும்பிக்கையை ஊன்றி கீழே இறங்கும் களிற்று யானையைக் கொன்றது.  அங்ஙனம் கொல்லப்பட்ட யானையின் வெள்ளை தந்தங்களை எடுத்து அகன்ற பாறையில் வைக்கவும், அதன் பசிய ஊனை (தசையை) அறுத்துப் பெரிய நகங்களைப் புதைக்கவும், தெருக்கள்தோறும் புலால் நாற்றமுடைய சிறுகுடியின் ஆரவாரத்தை நான் கேட்டு இரவில் உறங்காது வருந்தினேன். இரவில் வந்தான் மலைநாடன்.  மழைத் துளிகள் பெய்ததால் புள்ளி பொருந்திய பண்டைய கரையை மோதுகின்ற உயர்ந்த அலைகளுடன் வருகின்ற காட்டாற்றின் பெருக்கைக் கண்டு நான் அஞ்சுகிறேன்.  இரக்கத்திற்குரியது இது.

குறிப்பு:  இடி பாம்புகளை வருத்தவும் கொல்லவும் செய்யும் என்னும் செய்தி உள்ள பாடல்கள் – அகநானூறு 92, 119, 182, 202, 274, 323, 328, கலித்தொகை 45, 113, குறுந்தொகை 158, 190, 268, 391, நற்றிணை 37, 51, 114, 129, 238, 255, 264, 347, 383, புறநானூறு 17, 37, 58, 126, 211, 366, 369.  மன்ற – மன்றவென் கிளவி தேற்றஞ்செய்யும் (தொல்காப்பியம், இடையியல் 17).  சின் – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம், சொல்லதிகாரம், இடையியல் 26, சின் என்பது இசின் என்பதன் முதற்குறை – ச. பாலசுந்தரம் உரை), அவற்றுள், இகுமும் சின்னும் ஏனை இடத்தொடும் தகு நிலை உடைய என்மனார் புலவர் (தொல்காப்பியம், இடையியல் 27).  கலி – கம்பலை சும்மை கலியே அழுங்கல் என்று இவை நான்கும் அரவப் பொருள (தொல்காப்பியம், உரியியல் 53).  ஈர்ங்குரல் (9) – ஒளவை துரைசாமி உரை – குளிர்ந்த மழை ஒலி, H. வேங்கடராமன் உரை – ஈரிய ஒலி.  பாம்பு கவின் அழிக்கும் (10) – ஒளவை துரைசாமி உரை – இடியோசை கேட்ட பாம்பு தன் படம் விரித்து அவிந்து கெடும் என்பவாகலின், பாம்பு கவின் அழிக்கும் என்றார்.  கவின் ஈண்டு படத்தின் பொலிவு, மை கருமை.  பிடி – பிடி என் பெண் பெயர் யானை மேற்றே (தொல்காப்பியம், மரபியல் 52).

சொற்பொருள்:  வெண்கோடு கொண்டு வியல் அறை வைப்பவும் – களிற்று யானையின் வெள்ளை தந்தங்களை எடுத்து அகன்ற பாறையில் வைக்கவும், பச்சூன் கெண்டி வள் உகிர் முணக்கவும் – பசிய ஊனை (தசையை) அறுத்துப் பெரிய நகங்களைப் புதைக்கவும் (பச்சூன் = பசுமை + ஊன், கெண்டி – வெட்டி), மறுகுதொறு புலாவஞ் சிறுகுடி – தெருக்கள்தோறும் புலால் நாற்றமுடைய சிறுகுடி, அரவம் வைகிக் கேட்டுப் பையாந்திசினே – ஆரவாரத்தை நான் கேட்டு வேறு எதுவும் செய்யாது (இரவில் உறங்காது) வருந்தினேன் (பையாந்திசினே – சின் தன்மை அசை, ஏகாரம் அசைநிலை), அளிதோ – இரங்குவதற்கு உரியது இது, தானே – தான், ஏ அசைநிலைகள், தோழி – தோழி, அல்கல் வந்தோன் மன்ற குன்ற நாடன் – இரவில் வந்தான் மலைநாடன் (மன்ற – தேற்றப்பொருளில் வரும் இடைச்சொல்), துளி பெயல் பொறித்த புள்ளித் தொல் கரை பொரு திரை நிவப்பின் வரும் யாறு அஞ்சுவல் – மழைத் துளிகள் பெய்ததால் புள்ளி பொருந்திய பண்டைய கரையை மோதுகின்ற உயர்ந்த அலைகளுடன் வருகின்ற காட்டாற்றின் பெருக்கைக் கண்டு நான் அஞ்சுகிறேன் (அஞ்சுவல் – தன்மையொருமை வினைமுற்று), ஈர்ங்குரல் உருமின் ஆர்கலி நல் ஏறு பாம்பு கவின் அழிக்கும் ஓங்கு வரை பொத்தி – குளிர்ந்த மழையுடன் ஒலிக்கும் இடியின் பெரும் ஓசை பாம்பின் அழகை அழித்து உயர்ந்த மலை மேல் மோதி, மையின் மடப் பிடி இனையக் கை ஊன்றுபு இழிதரு களிறு எறிந்தன்றே – மை போல் கரிய இளம் (மடப்பத்தையுடைய) பெண் யானை வருந்துமாறு தன் தும்பிக்கையை ஊன்றி இறங்குகின்ற களிற்றைக் கொன்றது (மையின் – இன் ஒப்புப்பொருளில் வந்தது, ஐந்தாம் வேற்றுமை உருபு, எறிந்தன்றே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 115, பாடியவர் பெயர் கிடைக்கவில்லை, முல்லைத் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
மலர்ந்த பொய்கைப் பூக் குற்று அழுங்க
அயர்ந்த ஆயம் கண் இனிது படீஇயர்,
அன்னையும் சிறிது தணிந்து உயிரினள் இன் நீர்த்
தடங்கடல் வாயில் உண்டு சில் நீர் என
மயில் அடி இலைய மாக் குரல் நொச்சி  5
மனை நடு மௌவலொடு ஊழ் முகை அவிழக்,
கார் எதிர்ந்தன்றால் காலை; காதலர்
தவச் சேய் நாட்டர் ஆயினும், மிகப் பேர்
அன்பினர், வாழி தோழி, நன் புகழ்
உலப்பு இன்று பெறினும் தவிரலர்,  10
கேட்டிசின் அல்லெனோ, விசும்பின் தகவே?

பாடல் பின்னணி:  பிரிவிடை ஆற்றாளாகிய தலைவியைத் தோழி பருவம் காட்டி வற்புறுத்தியது.

பொருளுரை:  நீடு வாழ்வாயாக தோழி!   பெரிய பொய்கையில் உள்ள மலர்களைப் பறித்ததால் களைப்பு அடைந்த தோழிகளை, அவர்கள் வருத்தம் நீங்குமாறு, இனிமையாக நடத்தி, தாய் நம் மீதுக் கொண்ட சினம் தணியுமாறு  பெரு மூச்சு விட்டாள்.  முகில்கள் பெரிய கடலின் இனிய நீரை வாயினால் உண்டதால் எஞ்சிய கடல் நீர் சிறிது நீர் என்னும்படி ஆயிற்று.  மயிலின் அடியைப் போன்ற இலைகளையும், பெரிய கொத்தான மலர்களையும் உடைய நொச்சி மரத்தில், நம் வீட்டின் நடுவே உள்ள முல்லைக் கொடி படர்ந்துள்ளது.  அதன் முதிர்ந்த மொட்டுக்கள் மலரும் காலம் வந்து விட்டது.  உன்னுடைய காதலர் தொலை தூர நாட்டிற்குச் சென்றாலும் உன்னிடம் மிகுந்த அன்பை உடையவர்.  அங்கு சென்ற பணியை முடித்து நல்ல புகழைப் பெற்றாலும் அங்கு தங்குபவர் இல்லை.  வானத்தில் இடியின் முழக்கத்தைக் கேட்டேன்.  கார் காலம் தொடங்குகின்றது.  அவர் வருவார்.

குறிப்பு:  ஒப்புமை: நற்றிணை 305 – மயில் அடி அன்ன மாக் குரல் நொச்சியும், நற்றிணை 115 – மயில் அடி இலைய மாக் குரல் நொச்சி, குறுந்தொகை 138 – மயில் அடி இலைய மா குரல் நொச்சி.  உள்ளுறை – ஒளவை துரைசாமி உரை – மனையில் நட்ட மௌவல் நொச்சிமேற் படர்ந்து மலர்வது கூறியது, இம்மனைக்கண் வளர்ந்த நீ தலைவனை மணந்து இன்புறுவாய் என்ற கருத்தை உள்ளுறுத்து நின்றது.  கேட்டிசின் (11) – கு. வெ. பாலசுப்பிரமணியன் உரை – கேட்டேன், ஒளவை துரைசாமி உரை – கேட்கின்றேன், H. வேங்கடராமன் உரை – கேட்பாயாக, பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – நான் கேளா நின்றேன்.  சின் – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம், சொல்லதிகாரம்.  இடையியல் 26, சின் என்பது இசின் என்பதன் முதற்குறை – ச. பாலசுந்தரம் உரை), அவற்றுள், இகுமும் சின்னும் ஏனை இடத்தொடும் தகு நிலை உடைய என்மனார் புலவர் (தொல்காப்பியம், இடையியல் 27).  மனைநடு (6) – ஒளவை துரைசாமி உரை – மனையிடத்து நட்டிய, பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – இல்லின் நடுமுற்றத்தில்.  தட – தடவும் கயவும் நளியும் பெருமை (தொல்காப்பியம், உரியியல் 24).

சொற்பொருள்:  மலர்ந்த பொய்கைப் பூ – பெரிய குளத்தில் மலர்ந்த பூக்களை, குற்று – பறித்து, அழுங்க – நீங்க, அயர்ந்த ஆயம் கண் – வருந்திய தோழியர் மீது, இனிது படீஇயர் – இனிதாகும்படி (படீஇயர் – செய்யுளிசை அளபெடை), அன்னையும் சிறிது தணிந்து உயிரினள் – தாயும் சிறிது சினம் தணிந்து பெரு மூச்சு விட்டாள், இன் நீர் – இனிய நீர், தடங் கடல் – பெரிய கடல், வாயில் உண்டு சில் நீர் என – வாயினால் உண்டதால் சில நீர் என்று, மயில் அடி இலைய – மயிலின் அடிப் போன்ற இலையையும், மாக் குரல் நொச்சி – கருமையான மலர் கொத்துக்களையுடைய நொச்சி மரம், மனை நடு மௌவலொடு – வீட்டில் உள்ள முல்லைக் கொடியோடு, ஊழ் முகை அவிழ – முதிர்ந்த மொட்டுக்கள் மலர, கார் எதிர்ந்தன்றால் காலை – கார் காலம் வந்த வேளை (எதிர்ந்தன்றால் – ஆல் அசைநிலை), காதலர் தவச் சேய் – காதலர் மிகுந்த தொலைவில் உள்ள, நாட்டர் ஆயினும் – நாட்டிற்குச் சென்றாலும், மிகப் பேர் அன்பினர் – உன்னிடம் மிகுந்த அன்பை உடையவர், வாழி தோழி – வாழ்த்துக்கள் தோழி, நன் புகழ் – நல்ல புகழ், உலப்பு இன்று – அழிவு இன்றி, பெறினும் தவிரலர் – பெற்றாலும் தங்குபவர் இல்லை, கேட்டிசின் – கேட்பாயாக, நான் கேட்டேன் (கேட்டிசின் – சின் முன்னிலை அசை, சின் தன்மை அசை), அல்லெனோ – மிகுந்த ஒலி (இடி), விசும்பின் தகவே – அல்லெனோ வானத்தின் முழக்கத்தை (தகவு – ஒலி, தகவே – ஏகாரம் அசை நிலை)

நற்றிணை 116, கந்தரத்தனார், குறிஞ்சித் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
தீமை கண்டோர் திறத்தும் பெரியோர்
தாம் அறிந்து உணர்க என்ப மாதோ,
வழுவப் பிண்டம் நாப்பண் ஏமுற்று
இரு வெதிர் ஈன்ற வேற்றிலை கொழு முளை,
சூல் முதிர் மடப் பிடி நாள் மேயல் ஆரும்  5
மலை கெழு நாடன் கேண்மை பலவின்
மாச் சினை துறந்த கோள் முதிர் பெரும் பழம்
விடர் அளை வீழ்ந்து உக்காஅங்கு, தொடர்பு அறச்
சேணும் சென்று உக்கன்றே அறியாது
ஏ கல் அடுக்கத்து இருள் முகை இருந்த  10
குறிஞ்சி நல் ஊர்ப் பெண்டிர்
இன்னும் ஓவார், என் திறத்து அலரே.

பாடல் பின்னணி:  வரைவு நீட்டிப்ப ஆற்றாளாகிய தலைவி, ‘நீ பொறுத்திரு’ என்ற தோழியிடம் கூறியது.

பொருளுரைதீமை செய்வோரிடத்து அதனைக் கண்ட பொழுதும் பெரியவர்கள் அதனை அறிந்து, அவ்வாறு தீமை செய்பவர்கள் இனி அதனைச் செய்யமாட்டார்கள் என நாம் பொறுத்திருப்போம் என்பார்கள்.  கர்ப்பம் முதிர்ந்த இளம் பிடியானை தன் கரு அழிந்து விழுமாறு இடையில் அறிவு மயங்கி, பெரிய மூங்கிலின் இலை அல்லாத கொழுத்த முளையை விடியற்காலையில் சென்று தின்னும் மலைகள் பொருந்திய நாடனாகிய தலைவனின் நட்பு, பலா மரத்தின் பெரிய கிளையிலிருந்து கனிந்து விழுகின்ற முதிர்ந்த பெரிய பழம் மலையின் பிளவில் விழுந்து உடைந்தாற்போல், தொடர்பு இல்லாமல் நெடுந்தொலைவு சென்று அழிந்தது.  அதை அறியாது, பெரிய மலை அடுக்கத்தின் இருள் மிகுந்த குன்றுகள் உடைய குறிஞ்சி நிலத்தின் நல்ல ஊரில் உள்ள பெண்கள் இன்னும் நிறுத்தவில்லை என் மீது கூறும் பழியை.  நான் எவ்வாறு ஆற்றுவேன்?

குறிப்பு:  ஒளவை துரைசாமி உரை – ‘மறைந்தவற் காண்டல்’ (தொல்காப்பியம், களவியல் 21) எனத் தொடங்கும் நூற்பாவின்கண் ‘அருமை செய்து அயர்ப்பினும்’ என்பதற்கு இப்பாட்டைக்காட்டி, தீங்கு செய்தாரையும் பொறுக்கிற்பார் நம்மைத் துறத்தலின், நாம் அரியேமாகியது பற்றித் தாமும் அரியராயினார் போலும் என அவ்விரண்டும் கூறினாள்’ என்பர் நச்சினார்க்கினியர்.  உள்ளுறை – கு. வெ. பாலசுப்பிரமணியன் உரை – சூல் முற்றிய பிடியானை மூங்கில் முளையைத் தின்றால் தனது சூல் கெட்டுப் போகும் என்பதை அறியாது அதனைத் தின்று சூல் கெட்டு வருந்தும் என்பது, நாண் முதலியவற்றால் மேம்பட்ட தலைவி அறியாமல் அவனுக்கு இசைந்ததால் அலர் எழுந்து அவளுடைய நலத்தைக் கெடுத்தது என்பதை உணர்த்திற்று.  பிடி – பிடி என் பெண் பெயர் யானை மேற்றே (தொல்காப்பியம், மரபியல் 52).  – ஏ பெற்று ஆகும் (தொல்காப்பியம், உரியியல் 8).  பெற்று – பெருக்கம்.

சொற்பொருள்:  தீமை கண்டோர் திறத்தும் பெரியோர் தாம் அறிந்து உணர்க என்ப – தீமை செய்வோரிடத்து அதனைக் கண்ட பொழுதும் பெரியவர்கள் அதனை அறிந்து அவ்வாறு தீமை செய்பவர்கள் இனி அதனைச் செய்யமாட்டார்கள் என நாம் பொறுத்திருப்போம் என்பார்கள், மாதோ – மாது, ஓ அசை நிலைகள், வழுவப் பிண்டம் நாப்பண் ஏமுற்று இரு வெதிர் ஈன்ற வேற்றிலை கொழு முளை – கரு அழிந்து விழுமாறு இடையில் அறிவு மயங்கி பெரிய மூங்கிலின் இலை அல்லாத கொழுத்த முளை, சூல் முதிர் மடப் பிடி நாள் மேயல் ஆரும் – கர்ப்பம் முதிர்ந்த இளம் பிடியானை விடியற்காலையில் சென்று தின்னும் (மேயல் – ஆகுபெயர் உணவிற்கு), மலை கெழு நாடன் கேண்மை – மலைகள் பொருந்திய நாடனாகிய தலைவனின் நட்பு, பலவின் மாச் சினை துறந்த கோள் முதிர் பெரும் பழம் விடர் அளை வீழ்ந்து உக்காஅங்கு – பலா மரத்தின் பெரிய கிளையிலிருந்து கனிந்து விழுகின்ற முதிர்ந்த பெரிய பழம் மலையின் பிளவில் விழுந்து உடைந்தாற்போல் (விடர் அளை – இருபெயரொட்டு, உக்காஅங்கு – செய்யுளிசை அளபெடை), தொடர்பு அறச் சேணும் சென்று உக்கன்றே – தொடர்பு இல்லாமல் நெடுந்தொலைவு சென்று அழிந்தது, அறியாது – அறியாது, ஏ கல் அடுக்கத்து இருள் முகை இருந்த குறிஞ்சி நல் ஊர்ப் பெண்டிர் இன்னும் ஓவார் என் திறத்து அலரே – பெரிய மலை அடுக்கத்தின் இருள் மிகுந்த குன்றுகள் உடைய குறிஞ்சி நிலத்தின் நல்ல ஊரில் உள்ள பெண்கள் இன்னும் நிறுத்தவில்லை என் மீது கூறும் பழியை (அலரே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 117, குன்றியனார், நெய்தல் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
பெருங்கடல் முழங்க, கானல் மலர
இருங்கழி ஓதம் இல் இறந்து மலிர,
வள் இதழ் நெய்தல் கூம்பப் புள் உடன்
கமழ் பூம் பொதும்பர்க் கட்சி சேரச்,
செல் சுடர் மழுங்கச் சிவந்து வாங்கு மண்டிலம்  5
கல் சேர்பு நண்ணிப், படர் அடைபு நடுங்கப்,
புலம்பொடு வந்த புன்கண் மாலை
அன்னர் உன்னார் கழியின், பல் நாள்
வாழலென், வாழி தோழி, என் கண்
பிணி பிறிதாகக் கூறுவர்,  10
பழி பிறிதாகல் பண்புமார் அன்றே.

பாடல் பின்னணி:  வரைவு நீட்டிப்ப ஆற்றாளாகிய தலைவி, தேற்றிய தோழியிடம் கூறியது.  சிறைப்புறமுமாம்.

பொருளுரைதோழி!  நீ வாழ்வாயாக!  பெரிய கடல் முழங்க, கடற்கரைச் சோலையில் மலர்கள் மலர, கரிய உப்பங்கழியின் வெள்ளம் நம் இல்லத்தைக் கடந்து நிறைந்திருக்க, பெரிய இதழ்களையுடைய நெய்தல் மலர்கள் குவிய, பறவைகள் ஒன்றுகூடி பூக்கள் நிறைந்த தோப்பில் உள்ள தங்கள் கூடுகளில் சேர, செல்லும் கதிர்கள் மழுங்கவும் சிவந்து தோன்றும் கதிரவன் மலையை அடைந்து அணுகி, துன்பங்கள் சேர்ந்து நடுங்கும்படி தனிமைப்பட வந்த வருத்தும் மாலை நேரத்தில், தலைவர் என்னை எண்ணாது பல நாட்கள் கழிந்ததால்,  நான் பல நாட்கள் உயிரோடு வாழ மாட்டேன்.  என்னிடத்து உண்டாகிய நோய் வேறு என்று ஊரினர் தவறாகக் கூறுவார்கள்.  பழி வேறு ஒன்றாகக் கூறுதல் பண்புடைய செயல் அன்று.

குறிப்பு:  பிணி பிறிதாகக் கூறுவர் (10) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – முருகு அணங்கியதால் வந்ததாகும் என்று ஊரிலுள்ளார் கூறுவர்.  பண்புமார் அன்றே (11) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – அயலார் கூறுதல் பண்புடையது அன்று, ஒளவை துரைசாமி உரை – காதலன் பொருட்டு வேட்கை நோய் உண்டாவது நமக்குப் பண்பாகாது.  புலம்பு – புலம்பே தனிமை (தொல்காப்பியம், உரியியல் 35).

சொற்பொருள்:  பெருங்கடல் முழங்க – பெரிய கடல் முழங்க, கானல் மலர – கடற்கரைச் சோலையில் மலர்கள் மலர, இருங்கழி ஓதம் இல் இறந்து மலிர – கரிய உப்பங்கழியின் வெள்ளம் நம் இல்லத்தைக் கடந்து நிறைந்திருக்க, வள் இதழ் நெய்தல் கூம்பப் புள் உடன் கமழ் பூம் பொதும்பர்க் கட்சி சேர – பெரிய இதழ்களையுடைய நெய்தல் மலர்கள் குவியவும் பறவைகள் ஒன்றுகூடி பூக்கள் நிறைந்த தோப்பில் உள்ள தங்கள் கூடுகளில் சேர, செல் சுடர் மழுங்கச் சிவந்து வாங்கு மண்டிலம் கல் சேர்பு நண்ணி – செல்லும் கதிர்கள் மழுங்கவும் சிவந்து தோன்றும் கதிரவன் மலையை அடைந்து அணுகி, படர் அடைபு நடுங்கப் புலம்பொடு வந்த புன்கண் மாலை – துன்பம் சேர்ந்து நடுங்கும்படி தனிமைப்பட வந்த வருத்தும் மாலை நேரம், அன்னர் உன்னார் கழியின் – தலைவர் என்னை எண்ணாது பல நாட்கள் கழிந்ததால், பல் நாள் வாழலென் – நான் பல நாட்கள் உயிரோடு வாழ மாட்டேன், வாழி – அசைநிலை, நீடு வாழ்வாயாக, தோழி – தோழி, என் கண் பிணி பிறிதாகக் கூறுவர் – என்னிடத்து உண்டாகிய நோய் வேறு என்று ஊரினர் தவறாகக் கூறுவார்கள், பழி பிறிதாகல் பண்புமார் அன்றே – பழியை  வேறு ஒன்றாகக் கூறுதல் பண்புடைத்து அன்று (மார் – அசைநிலை, அன்றே – அளபெடை)

நற்றிணை 118, சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோ, பாலைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
அடைகரை மாஅத்து அலங்கு சினை ஒலியத்
தளிர் கவின் எய்திய தண் நறும் பொதும்பில்,
சேவலொடு கெழீஇய செங்கண் இருங்குயில்
புகன்று எதிர் ஆலும் பூ மலி காலையும்,
அகன்றோர் மன்ற நம் மறந்திசினோர் என,  5
இணர் உறுபு உடைவதன் தலையும், புணர் வினை
ஓவ மாக்கள் ஒள் அரக்கு ஊட்டிய
துகிலிகை அன்ன துய்த் தலைப் பாதிரி
வால் இதழ் அலரி வண்டு பட ஏந்திப்,
புது மலர் தெருவுதொறு நுவலும்  10
நொதுமலாட்டிக்கு, நோம் என் நெஞ்சே.

பாடல் பின்னணி:  பருவங்கண்டு ஆற்றாளாகிய தலைவி கூறியது.

பொருளுரைகரையில் உள்ள மாமரங்களின் நெருங்கிய கிளைகள் எல்லாம் தழைத்து தளிர் ஈன்று, அழகு அடைந்த நறுமணமுடைய சோலையில், தன்னுடைய சேவலுடன் பொருந்திய கரிய கண்ணையுடைய கரிய குயில், ஒன்றையொன்று விரும்பி, எதிரிலிருந்து ஆரவாரிக்கும் கொத்தாக மலர்கள் மலரும் இளவேனில் காலத்திலும், நம்மை விட்டு அகன்ற காதலர் நம்மை மறந்து விட்டார் என்று நாம் வருந்துவதன் மேலும், தம் தொழிலில் வல்ல ஓவியர் ஒளியுடைய அரக்கை ஊட்டிய எழுதுகோல் போன்ற மேல் பகுதி பஞ்சுபோன்று உள்ள பாதிரியின் ஒளியுடைய மலர்களை ஏந்தி, புதிய மலர்களை வண்டுகள் மொய்க்குமாறு தெருதோறும் விற்கும் அயலாளாகிய பூ விற்கும் பெண்ணை நோக்கும் பொழுது என் நெஞ்சு வருந்துகின்றது.

குறிப்பு:  ஒப்புமை: குறுந்தொகை 147 – வேனில் பாதிரிக் கூன் மலர் அன்ன மயிர் ஏர்பு ஒழுகிய அம் கலுழ் மாமை.  அடைகரை – மணல் அடைந்த கரை, நீர் நிறைந்த கரை, ஆற்றின் கரை.  மன்ற – மன்றவென் கிளவி தேற்றஞ் செய்யும் (தொல்காப்பியம், இடையியல் 17).

சொற்பொருள்:  அடைகரை மாஅத்து – கரையில் உள்ள மாமரங்கள் (மாஅத்து – அத்துச் சாரியை), அலங்கு சினை ஒலியத் தளிர் – நெருங்கிய கிளைகள் எல்லாம் தழைத்த தளிர் ஈன்று, கவின் எய்திய – அழகு அடைந்த, தண் நறும் பொதும்பில் – நறுமணமுடைய சோலையில், சேவலொடு கெழீஇய செங்கண் இருங்குயில் – தன்னுடைய சேவலுடன் பொருந்திய கரிய கண்ணையுடைய கரிய குயில் (கெழீஇய – செய்யுளிசை அளபெடை), புகன்று எதிர் ஆலும் – விரும்பி எதிரிலிருந்து ஆரவாரிக்கும், பூ மலி காலையும் – கொத்தாக மலர்கள் மலரும் இளவேனில் காலத்திலும், அகன்றோர் மன்ற நம் மறந்திசினோர் என – நம்மை விட்டு அகன்ற காதலர் மறந்துவிட்டார் என்று (நம் – தன்மைப் பன்மை), இணர் உறுபு – பூங்கொத்துக்கள் மலரும் இளவேனிற்காலத்திலும், உடைவதன் தலையும் – வருந்துவதன் மேலும், புணர் வினை ஓவ மாக்கள் ஒள் அரக்கு ஊட்டிய – தம் தொழில் வல்ல ஓவியர் ஒளியுடைய அரக்கை ஊட்டிய, துகிலிகை அன்ன துய்த் தலைப் பாதிரி வால் இதழ் அலரி வண்டு பட ஏந்தி – எழுதுகோல் போன்ற தலையில் பஞ்சுபோன்ற பாதிரியின் மலர்களை ஏந்தி வண்டுகள் மொய்க்குமாறு, புது மலர் தெருவுதொறு நுவலும் நொதுமலாட்டிக்கு – அயலாளாகிய புதிய மலரை தெருதோறும் விற்கும் பெண்ணிற்கு, நோம் என் நெஞ்சே – என் நெஞ்சு வருந்துகின்றது (நெஞ்சே – ஏகாரம் அசை நிலை)

நற்றிணை 119, பெருங்குன்றூர் கிழார், குறிஞ்சித் திணை – தோழி சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
தினை உண் கேழல் இரிய, புனவன்
சிறு பொறி மாட்டிய பெருங்கல் அடாஅர்,
ஒண் கேழ் வயப் புலி படூஉம் நாடன்
ஆர் தர வந்தனன் ஆயினும், படப்பை
இன் முசுப் பெருங்கலை நன் மேயல் ஆரும்  5
பல் மலர்க் கான்யாற்று உம்பர், கருங்கலை
கடும்பு ஆட்டு வருடையொடு தாவன உகளும்
பெருவரை நீழல் வருகுவன், குளவியொடு
கூதளம் ததைந்த கண்ணியன் யாவதும்
முயங்கல் பெறுகுவன் அல்லன்,  10
புலவி கொளீஇயர், தன் மலையினும் பெரிதே.

பாடல் பின்னணி:  தலைவி இற்செறிக்கப்பட்டமை அறிவுறுத்தி வரைவு கடாயது.

பொருளுரை:  தினைப்புனத்திற்குத் தினையை உண்ண வரும் பன்றி அஞ்சி நீங்கும் பொருட்டுக் குறவன் சிறிய பொறிபோல் அமைத்து வைத்த பெரிய கல்லின் கீழ் ஒளியுடைய நிறத்தையும் வலிமையையும் உடைய புலி அகப்படும் நாடன், யாரால் தருவிக்கப்பட்டு இங்கு வந்தானாயினும், தோப்பில் இனிய முசுவின் பெரிய ஆண் குரங்கு நல்ல உணவை உண்ணும் பலவாகிய மலர்களையுடைய காட்டாற்றின் மேல் உள்ள, கரையில் பெரிய கலைமான் கூட்டமாகிய மலை ஆடுகளுடன் தாவிக் குதிக்கும் பெரிய மூங்கிலின் நிழலில், காட்டு மல்லிகையுடன் கூதள மலர்களைச் சேர்த்துத் தொடுத்த மாலையை அணிந்தவனாக வருவான். தலைவியின் அணைப்பை அவன் அடைய மாட்டான்.  தன் மலையைக் காட்டிலும் பெரிதாக அவன் புலந்தாலும் புலந்துகொள்ளட்டும்!

குறிப்பு:  ஒளவை துரைசாமி உரை – ‘பொழுதும் ஆறும் காப்பும்’ (தொல்காப்பியம், பொருளியல் 15) எனத் தொடங்கும் நூற்பா உரையில், இதனைக் காட்டி, ‘இது நொதுமலர் வரைவு சிறைப்புறமாகக் கூறியது’ என்பர் நச்சினார்க்கினியர்.  விலங்கைப் பிடிக்கும் பொறி: மலைபடுகடாம் 193–194 – கேழல் அஞ்சிப் புழைதொறும் மாட்டிய இருங்கல் அடாஅர், நற்றிணை 119 – தினை உண் கேழல் இரிய புனவன் சிறு பொறி மாட்டிய பெருங்கல் அடாஅர், புறநானூறு 19 – இரும்புலி வேட்டுவன் பொறி அறிந்து மாட்டிய பெருங்கல் அடாரும்.  இறைச்சி – ஒளவை துரைசாமி உரை – படப்பைக்கண் முசுக்கலை நாண் மேயல் ஆர, கருங்கலை வருடையொடு தாவுவன உகளும் என்றதனால், தலைவியை வரைந்து கொண்டு தலைமகன் இன்புறக் கண்டு தாயாரும் தமரும் ஆயமும் பிறரும் மகிழ்ச்சி மலியக் கடவர் என்பது உணர்த்தி, அது நினையாது ஒழுகுதலால் முயங்கல் பெறுவனல்லனாயினான் எனத் தோழி கூறுவாளாயிற்று.  உள்ளுறை – கு. வெ. பாலசுப்பிரமணியன் உரை – பன்றிக்கென வைத்த பொறியில் புலி அகப்படும் என்றது இத்தலைவன் மணம் புரியத் தாமதிப்பதால் இவனினும் சிறந்த ஒருவன் தலைவியை ‘நொதுமலர் வரைவாய்’ மணம் புரிய வேண்டி வந்தனன் என்பதைக் குறித்தது.  அடார் – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – கருங்கற் பலகையை ஒருபால் சாய்வாக நிமிர்த்திக் கீழே முட்டுக்கொடுத்து உள்ளே உணவை வைப்ப, அவ்வுணவை விலங்கு சென்று தொடுதலுங் கல் வீழ்ந்து கொல்லும் பொறி.  கானவர் பன்றி வேட்டையாடல் – நற்றிணை 75, 82, 119, 336, அகநானூறு 248

சொற்பொருள்:  தினை உண் கேழல் இரிய புனவன் சிறு பொறி மாட்டிய பெருங்கல் அடாஅர் ஒண் கேழ் வயப் புலி படூஉம் நாடன் – தினைப்புனத்திற்குத் தினையை உண்ண வரும் பன்றி அஞ்சி நீங்கும் பொருட்டுக் குறவன் (மலையில் வாழ்பவன்) சிறிய பொறிபோல் அமைத்து வைத்த பெரிய கல்லின் கீழ் ஒளியுடைய நிறத்தையும் வலிமையையும் உடைய புலி அகப்படும் நாடன் (அடாஅர் – அளபெடை, படூஉம் – அளபெடை), ஆர் தர வந்தனன் ஆயினும் – யாரால் தருவிக்கப்பட்டு இங்கு வந்தானாயினும், படப்பை இன் முசுப் பெருங்கலை நன் மேயல் ஆரும் பல் மலர்க் கான்யாற்று உம்பர் – தோப்பில் இனிய முசுவின் பெரிய ஆண் குரங்கு நல்ல உணவை உண்ணும் பலவாகிய மலர்களையுடைய காட்டாற்றின் மேல், கருங்கலை கடும்பு ஆட்டு வருடையொடு தாவன உகளும் பெருவரை நீழல் – பெரிய கலைமான் கூட்டமாகிய மலை ஆடுகளுடன் தாவிக் குதிக்கும் பெரிய மூங்கிலின் நிழலில் (கருமை – பெரிய, வரை – மூங்கில், நீழல் – நிழல் என்பதன் நீட்டல் விகாரம்), வருகுவன் – வருவான், குளவியொடு கூதளம் ததைந்த கண்ணியன் யாவதும் முயங்கல் பெறுகுவன் – காட்டு மல்லிகையுடன் கூதள மலர்களைச் சேர்த்துத் தொடுத்த மாலையை அணிந்தவன் (கூதளம் – Convolvulus ipome, a three–lobed nightshade vine), அல்லன் – அடைய மாட்டான், புலவி கொளீஇயர் தன் மலையினும் பெரிதே – தன் மலையைக் காட்டிலும் பெரிதாக அவன் புலந்தாலும் புலந்துகொள்ளட்டும் (கொளீஇயர் – அளபெடை, பெரிதே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 120, மாங்குடி கிழார், மருதத் திணை – தலைவன் சொன்னது
தட மருப்பு எருமை மட நடைக் குழவி
தூண்தொறும் யாத்த காண்தகு நல் இல்,
கொடுங்குழை பெய்த செழுஞ்செவி பேதை
சிறு தாழ் செறித்த மெல் விரல் சேப்ப,
வாளை ஈர்ந்தடி வல்லிதின் வகைஇ,  5
புகை உண்டு அமர்த்த கண்ணள், தகை பெறப்
பிறை நுதல் பொறித்த சிறு நுண் பல் வியர்
அம் துகில்தலையில் துடையினள், நப் புலந்து,
அட்டிலோளே அம் மா அரிவை,
எமக்கே வருகதில் விருந்தே, சிவப்பு ஆன்று  10
சிறு முள் எயிறு தோன்ற
முறுவல் கொண்ட முகம் காண்கம்மே.

பாடல் பின்னணி:  பரத்தையிற் பிரிந்த தலைவன் விருந்தினரோடு புகுந்தான்.  தலைவி ஊடலை மறைத்து விருந்து பேணினாள்.  அது கண்ட தலைவன் கூறியது.

பொருளுரைவளைந்த கொம்புகளையுடைய எருமைகளின் மெதுவாக நடக்கும் கன்றுகள், எல்லாத் தூண்களிலும் கட்டப்பட்டிருக்கும் தகைமை உள்ள இல்லத்தில் வளைந்த காதணிகளை அணிந்திருப்பாள், செழுமையான, பேதமையுடைய என் காதலி. கையில் சிறிய மோதிரத்தை அணிந்திருப்பாள்.  வாளை மீனை துண்டுத் துண்டாக வெட்டி, சமைப்பாள்.  அதன் புகை அவள் கண்களை அடையும். பிறைப் போன்ற அவளுடைய நெற்றியில் சிறிய வியர்வைத் துளிகள் தோன்றும்.  அதைத் தன் சேலைத் தலைப்பால் துடைப்பாள். என்னோடு ஊடல் கொண்டாலும் சமையல் செய்வாள், அழகிய கருமையான அவள்.  விருந்தினர் வந்தால் சினத்தில் கண் சிவக்காமல், சிறிய முட்களைப் போன்ற தன் பற்கள் தோன்றுமாறு அவள் முறுவல் கொள்வதைக் காண முடியும்.

குறிப்பு:  ஒளவை துரைசாமி உரை – ‘கரணத்தின் அமைந்து முடிந்த காலை’  என்ற நூற்பாவில் வரும் ‘ நன்னெறிப் படரும் தொல் நலப் பொருளினும்’ கண் நிகழும் தலைவன் கூற்றுக்கு இப்பாட்டைக் காட்டி, ‘இதனுள் ஊடல் குறிப்பினளாகிய தலைவி மனை வாழ்க்கைத் தருமமாகிய விருந்து புறந்தருதல் விரும்பினள் ஆதலின் நன்னெறிப் படர்தல் ஆயிற்று’ என்பர் இளம்பூரணர்.  இனி நச்சினார்க்கினியர், ‘இது விருந்தொடு புக்கோன் கூற்று; செவிலி கூற்றுமாம் என்று சொல்லி, ‘இந்நற்றிணை வாளை ஈர்ந்தடி வகைஇ என்றலின் வேளாண் வருணமாயிற்று’ என்பர்.  குழவி (1) – யானையும் குதிரையும் கழுதையும் கடமையும் மானொடு ஐந்தும் கன்று எனற்கு உரிய.  எருமையும் மரையும் வரையார் ஆண்டே.  கவரியும் கராமும் நிகர் அவற்றுள்ளே.  ஒட்டகம் அவற்றொடு ஒரு வழி நிலையும்.  குஞ்சரம் பெறுமே குழவிப் பெயர்க்கொடை.  ஆவும் எருமையும் அது சொலப்படுமே (தொல்காப்பியம், மரபியல் 15–20).  தட – தடவும் கயவும் நளியும் பெருமை (தொல்காப்பியம், உரியியல் 24), அவற்றுள், தட என் கிளவி கோட்டமும் செய்யும் (தொல்காப்பியம், உரியியல் 25).  அட்டிலோளே (9) – ஒளவை துரைசாமி உரை – செய்யுளாகலின் ஆ ஓவாயிற்று.  நப்புலந்து (8) – நம்புலந்து என்றது நப்புலந்து என்றானது வலித்தல் விகாரம்.

சொற்பொருள்:  தட மருப்பு எருமை – வளைந்த கொம்புகளை உடைய எருமைகளின், மட நடைக் குழவி – மெதுவாக நடக்கும் கன்றுகள், தூண்தொறும் யாத்த – எல்லா தூண்களிலும் கட்டப்பட்ட, காண்தகு நல் இல் – காண்பதற்கு நல்ல இல்லம், கொடுங் குழை – வளைந்த காதணி, பெய்த – தொங்கும், செழுஞ் செய் பேதை – செழுமையான பேதைமையுடைய காதலி, சிறு தாழ் – சிறிய மோதிரம், செறித்த மெல் விரல் – அணிந்த மென்மையான விரல், சேப்ப – சிவக்க, வாளை ஈர் – வாளை மீனை வெட்டி, தடி – துண்டு, வல்லிதின் வகைஇ – விரைவாக பகிர்ந்து (வகைஇ – அளபெடை), புகை உண்டு அமர்த்த கண்ணள் – புகையை உண்ட கண்கள், தகை பெற – தகை அடைய, பிறை நுதல் பொறித்த – பிறையைப் போன்ற நெற்றியில் பொறித்த, சிறு நுண் பல் வியர் – சிறிய பல வியர்வை, அம் துகில் – அழகிய ஆடையின், தலையில் துடையினள் – தலைப்பில் துடைத்தாள், நப் புலந்து – எம்மோடு ஊடல் கொண்டு, அட்டிலோளே – சமைப்பாள்,  அம் மா அரிவை – அழகியக் கருமையான பெண், எமக்கே – எனக்கே, வருக தில் விருந்தே – விருந்தினர் வந்தால் (தில் – விழைவின்கண் (விருப்பத்தின்கண்) வந்த இடைச் சொல்), சிவப்பு அன்று – சினத்தில் கண் சிவக்காமல், சிறு முள் எயிறு தோன்ற – சிறிய முள் போன்ற பற்கள் தோன்றுமாறு, முறுவல் கொண்ட – முறுவல் கொண்ட, முகம் காண்கம்மே – முகத்தைக் காண முடியும் (காண்கம்மே – செய்யுளோசை நோக்கி மகர ஒற்று விரிந்தது)

நற்றிணை 121, ஒரு சிறைப் பெரியனார், முல்லைத் திணை – தேர்ப்பாகன் தலைவனிடம் சொன்னது
விதையர் கொன்ற முதையல் பூழி,
இடு முறை நிரப்பிய ஈர் இலை வரகின்
கவைக் கதிர் கறித்த காமர் மடப் பிணை,
அரலை அம் காட்டு இரலையொடு வதியும்
புறவிற்று அம்ம நீ நயந்தோள் ஊரே;  5
எல்லி விட்டன்று வேந்து எனச் சொல்லுபு
பரியல், வாழ்க நின் கண்ணி! காண்வர
விரி உளைப் பொலிந்த வீங்கு செலல் கலி மா
வண் பரி தயங்க எழீஇ, தண் பெயல்
கான் யாற்று இகு மணல் கரை பிறக்கு ஒழிய,  10
எல் விருந்து அயரும் மனைவி
மெல் இறைப் பணைத்தோள் துயில் அமர்வோயே.

பாடல் பின்னணி:  வினை முற்றி மீளும் தலைவனிடம் தேர்ப்பாகன் கூறியது.

பொருளுரைவிதையை விதைக்கும் முல்லை நிலத்தினர் பலமுறை உழுத பழங்கொல்லையின் புழுதியில், முறையாக விதைக்கப்பட்டுள்ள ஈர இலையையுடைய வரகின் பிரிவுடைய கதிர்களைத் தின்ற, கண்டவர்களுக்கு விருப்பம் தருகின்ற இளைய பெண் மான், விதைகள் உதிர்ந்து கிடக்கும் அழகிய காட்டில் தன் கலைமானுடன் கூடி உறையும் முல்லைக் காட்டின்கண் உள்ளது, நீ விரும்பும் தலைவியின் ஊர்.  நேற்று இரவு போர் முடிந்தது என அரசன் கூறினான் என்று நீ வருந்தாதே.  நீடு வாழ்வதாக உன்னுடைய மாலை!  காண்பதற்கு அழகாக உள்ள விரிந்த தலையணி அணிந்த விரைந்த ஓட்டத்தை உடைய செருக்கான வளவிய குதிரைகள் விளங்கும்படி செலுத்தி, குளிர்ந்த மழை பெய்ததால் காட்டு ஆற்றின் பெருக்கினால் இடப்பட்ட மணலுடைய கரை பின்னே செல்லும்படி, நுமக்கு புதிய விருந்தைச் செய்யும் நும் மனைவியின் மெல்லிய மூட்டு உடைய மூங்கில் போன்ற தோள்களில் துயிலை விரும்பிப் பெறுவாயாக!

குறிப்பு:  இறைச்சி – கு. வெ. பாலசுப்பிரமணியன் உரை – கவைக் கதிரைத் தின்ற பெண் மான், காட்டில் ஆண் மானுடன் தங்கும் என்றது, நின் செல்வத்தைத் துய்க்கும் தலைவி நின்னுடன் கூடி மனையிலே இன்புற்று வாழ்வாள் என்பதனைக் குறித்தது.  அரலை (4) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – மரல் விதை, ஒளவை துரைசாமி உரை – அரலி என்னும் கள்ளி, மரல் வித்துமாம், அகநானூறு 309 – இலவத்து அரலை (இலவ விதை), மலைபடுகடாம் 139 – புண் அரிந்து அரலை உக்கன நெடுந்தாள் ஆசினி.  காண்வர (7) – ஒளவை துரைசாமி உரை – அழகிதாக, H. வேங்கடராமன் உரை – காட்சி வரும்படியாக. பிறக்கு (10) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – அசைநிலை இடைச்சொல், ஒளவை துரைசாமி உரை – பின்னால்.  அம்ம – அம்ம கேட்பிக்கும் (தொல்காப்பியம், இடையியல் 28).

சொற்பொருள்:  விதையர் கொன்ற முதையல் பூழி – விதையை விதைக்கும் முல்லை நிலத்தினர் பலமுறை உழுத பழங்கொல்லையின் புழுதியில், இடு முறை நிரப்பிய ஈர் இலை வரகின் கவைக் கதிர் கறித்த காமர் மடப் பிணை அரலை அம் காட்டு இரலையொடு வதியும் புறவிற்று – முறையாக விதைக்கப்பட்டுள்ள ஈர இலையையுடைய வரகின் பிரிவுடைய கதிர்களைத் தின்ற கண்டவர்களுக்கு விருப்பம் தருகின்ற இளைய பெண் மான் விதைகள் உதிர்ந்து கிடக்கும் அழகிய காட்டில் தன் கலைமானுடன் கூடி உறையும் முல்லைக் காட்டின்கண் உள்ளது, அம்ம – கேட்பாயாக, அசைநிலையுமாம், நீ நயந்தோள் ஊரே – நீ விரும்பும் தலைவியின் ஊர் (ஊரே – ஏகாரம் அசைநிலை), எல்லி விட்டன்று வேந்து எனச் சொல்லுபு – இரவு போர் முடிந்தது என அரசன் கூறி (விட்டன்று – இறந்தகால முற்று வினைத் திரிசொல்), பரியல் – நீ வருந்தாதே, வாழ்க நின் கண்ணி – நீடு வாழ்வதாக உன்னுடைய மாலை, காண்வர விரி உளைப் பொலிந்த வீங்கு செலல் கலி மா வண் பரி தயங்க எழீஇ – காண்பதற்கு அழகாக உள்ள விரிந்த தலையணி அணிந்த விரைந்த ஓட்டத்தை உடைய செருக்கான வளவிய குதிரைகள் விளங்கும்படி எழுந்து (செலல் – செல்லல் என்பதன் இடைக்குறை, எழீஇ – செய்யுளிசை அளபெடை), தண் பெயல் கான் யாற்று இகு மணல் கரை பிறக்கு ஒழிய – குளிர்ந்த மழை பெய்ததால் காட்டு ஆற்றின் பெருக்கினால் இடப்பட்ட மணலுடைய கரை பின்னே செல்லும்படி, எல் விருந்து அயரும் மனைவி மெல் இறைப் பணைத்தோள் துயில் அமர்வோயே – நுமக்கு புதிய விருந்தைச் செய்யும் மனைவியின் மெல்லிய மூட்டு உடைய மூங்கில் போன்ற தோள்களில் துயிலை விரும்பிப் பெறுவாயாக (அமர்வோயே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 122, செங்கண்ணனார், குறிஞ்சித் திணை – தோழி தலைவியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
இருங்கல் அடுக்கத்து என் ஐயர் உழுத
கருங்கால் செந்தினை கடியுமுண்டென,
கல்லக வரைப்பில் கான் கெழு சிறுகுடி
மெல் அவல் மருங்கின் மௌவலும் அரும்பின,
நரை உரும் உரறும் நாம நள் இருள்  5
வரையக நாடன் வரூஉம் என்பது
உண்டு கொல் அன்று கொல் யாது கொல் மற்று? என
நின்று மதி வல் உள்ளமொடு மறைந்தவை ஆடி,
அன்னையும் அமரா முகத்தினள், நின்னொடு
நீயே சூழ்தல் வேண்டும்,  10
பூவேய் கண்ணி, அது பொருந்துமாறே.

பாடல் பின்னணி:  தலைவன் விரைவில் தலைவியை வரைந்து கொள்ள வேண்டும் எனும் கருத்தில் தோழி கூறியது.

பொருளுரை:  மலர்போன்ற கண்களை உடையாய்!  பெரிய மலையின் பக்கத்தில் என் அண்ணன்மார் உழுது விதைத்த கரிய அடித்தண்டை உடைய செந்தினை கொய்யப்பட்டன.  மலை சூழ்ந்த எல்லையில் காடுகள் பொருந்திய சிறுகுடியில் சிறிய பள்ளங்களில் மல்லிகையும் அரும்பு உண்டாயின. வெளுத்த மின்னொளியுடன் இடி முழங்கும் அச்சம் தரும் நள்ளிருளில் மலைநாடன் வருவான் என்பது உண்மையா, இல்லையா, வேறு என்ன என்று நின்று நாம் மறைத்த களவொழுக்கத்தை அறிந்து கூறிக் கொண்டு அன்னையும் கொடிய முகத்துடன் இருக்கின்றாள்.  ஆராய வல்ல உள்ளத்துடன், நீயே உன் உள்ளத்தில் ஆராய்ந்து அறிய வேண்டும், களவு ஒழுக்கம் பொருந்துமா என்று.

குறிப்பு:  ஆடி (8) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – ஆடி என்பது ஒற்றாடி, அஃதாவது ஒற்றறிய முயன்று என்றபடியாம்.  மறைந்தவை ஆடி (8) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – மறைந்து அவை ஆடி, அயலார்க்கு தெரியாதபடி அவற்றைக் கூறிக்கொண்டு, ஒளவை துரைசாமி உரை – மறைந்தவை நாடி, களவின்கண் நிகழ்ந்ததை ஆராய்ந்து அறிந்து.  அன்னை (9) – ஒளவை துரைசாமி உரை – அன்னையென்றது ஈண்டுச் செவிலியை. ‘ஆய்பெருஞ் சிறப்பின் அருமறை கிளத்தலின், தாய் எனப்படுவோள் செவிலியாகும்’ (தொல்காப்பியம், பொருளதிகாரம், களவியல் 112).  நாம் – பேம் நாம் உரும் என வரூஉம் கிளவி ஆ முறை மூன்றும் அச்சப் பொருள (தொல்காப்பியம், உரியியல் 69).  அமரா முகத்து அன்னை – அகநானூறு 253 – அன்னையும் அமரா முகத்தினள், அகநானூறு 378 – உடன்ற அன்னை அமரா நோக்கமும், நற்றிணை 122–9 – அன்னையும் அமரா முகத்தினள்.

சொற்பொருள்:  இருங்கல் அடுக்கத்து என் ஐயர் உழுத கருங்கால் செந்தினை கடியும் உண்டென – பெரிய மலையின் பக்கத்தில் என் அண்ணன்மார் உழுது விதைத்த கரிய அடித்தண்டை உடைய செந்தினை கொய்யப்பட்டன (கடிதல் – கொய்தல்), கல்லக வரைப்பில் கான் கெழு சிறுகுடி மெல் அவல் மருங்கின் மௌவலும் அரும்பின – மலை சூழ்ந்த எல்லையில் காடுகள் பொருந்திய சிறுகுடியில் சிறிய பள்ளங்களில் மல்லிகையும் அரும்பு உண்டாயின, நரை உரும் உரறும் நாம நள் இருள் வரையக நாடன் வரூஉம் என்பது – வெளுத்த மின்னொளியுடன் இடி முழங்கும் அச்சம் தரும் நள்ளிருளில் மலைநாடன் வருவான் என்பது (நாம – நாம் என்னும் உரிச்சொல் ஈறு திரிந்தது, நாம் – அச்சம், வரூஉம் – செய்யுளிசை அளபெடை), உண்டு கொல் – உண்மையா, அன்று கொல் – இல்லையா, யாது கொல் – வேறு என்ன, மற்று – அசைநிலை, என நின்று மதி வல் உள்ளமொடு மறைந்தவை ஆடி அன்னையும் அமரா முகத்தினள் – என்று நின்று ஆராய வல்ல உள்ளத்துடன் நாம் மறைத்த களவொழுக்கத்தை அறிந்து கூறிக் கொண்டு அன்னையும் கொடிய முகத்துடன் இருக்கின்றாள், நின்னொடு நீயே சூழ்தல் வேண்டும் – நீயே உன் உள்ளத்தில் ஆராய்ந்து அறிய வேண்டும், பூவேய் கண்ணி – பூப்போன்ற கண்களை உடையாய், அது பொருந்துமாறே – அது (களவு ஒழுக்கம்) பொருந்துமா (பொருந்துமாறே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 123, காஞ்சிப் புலவனார், நெய்தல் திணை – தோழி தலைவியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
உரையாய், வாழி தோழி, இருங்கழி
இரை ஆர் குருகின் நிரை பறைத் தொழுதி
வாங்கு மடல் குடம்பை தூங்கு இருள் துவன்றும்
பெண்ணை ஓங்கிய வெண்மணல் படப்பைக்,
கானல் ஆயமொடு காலைக் குற்ற  5
கள் கமழ் அலர தண் நறுங்காவி
அம் பகை நெறித் தழை அணிபெறத் தைஇ,
வரி புனை சிற்றில் பரி சிறந்து ஓடிப்,
புலவுத் திரை உதைத்த கொடுந்தாள் கண்டல்
சேர்ப்பு ஏர் ஈர் அளை அலவன் பார்க்குஞ்  10
சிறு விளையாடலும் அழுங்கி,
நினக்கு பெருந்துயரம் ஆகிய நோயே.

பாடல் பின்னணி:  தலைவன் அருகில் இருந்ததை அறிந்த தோழி, அவன் விரைவில் வந்து தலைவியை மணம் புரிய வேண்டும் என்று எண்ணி இவ்வாறு கூறுகின்றாள்.

பொருளுரைதோழி!  நீ  நீடு வாழ்வாயாக!  கரிய உப்பங்கழியில் உணவை உண்ட குருகுகளின் வரிசையாகப் பறக்கின்ற கூட்டம் வளைந்த பனைமடலில் கட்டிய கூடுகளில் மிக்க இருளில் நெருங்கி உறையும் பனைமரங்கள் ஓங்கிய வெள்ளை மணல் சூழ்ந்த தோப்புக்களையுடை கடற்கரைச்சோலையில் தோழியருடன், காலையில் பறித்த தேன் மணம் கமழும் மலர்ந்த குளிர்ந்த நறுமணம் உடைய குவளை மலர்களை அழகிய மாறுபட்ட நெறிப்பை உடைய தழை ஆடையாக அழகு பொருந்த உடுத்தவில்லை.  கோலம் இட்ட சிறுமனையில் சிறப்பாக விளையாடவில்லை.  புலவு நாற்றத்தையுடைய அலைகள் மோதும் வளைந்த அடியையுடைய தாழை மரத்தின் ஈரமான வளைகளில் (பொந்துகளில்) இருக்கும் நண்டுகளைக் கண்டு மகிழும் சிறு விளையாடலைச் செய்யவில்லை. யாவும் கெடும்படி உனக்குப் பெரும் துயரமாகிய இந்த நோய் யாது?  எனக்கு உரைப்பாயாக

குறிப்பு:  மாங்குடி கிழார், மாங்குடி மருதனார், மதுரை காஞ்சி புலவர் ஆகிய பெயர்கள் ஒரே புலவருக்கு உரியன என்று கருதப்படுகின்றது.  வரி புனை சிற்றில் (8) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – கோலமிடுதலையுற்ற சிற்றில், ஒளவை துரைசாமி உரை – கோலமிட்ட மணல் சிறுவீடு.  கோலம் பற்றின குறிப்பு உள்ள பாடல்கள் – நற்றிணை 123, 283, 378.  துவன்று – துவன்று நிறைவு ஆகும் (தொல்காப்பியம், உரியியல் 36).

சொற்பொருள்:  உரையாய் – உரைப்பாயாக, வாழி – நீ நீடு வாழ்வாயாக, தோழி – தோழி, இருங்கழி இரை ஆர் குருகின் நிரை பறைத் தொழுதி வாங்கு மடல் குடம்பை தூங்கு இருள் துவன்றும் பெண்ணை ஓங்கிய வெண்மணல் படப்பைக் கானல் – கரிய உப்பங்கழியில் உணவை உண்ட குருகுகளின் வரிசையாகப் பறக்கின்ற கூட்டம் வளைந்த பனைமடலில் கட்டிய கூடுகளில் மிக்க இருளில் நெருங்கி உறையும் பனைமரங்கள் ஓங்கிய வெள்ளை மணல் சூழ்ந்த தோப்புக்களையுடை கடற்கரைச்சோலை, ஆயமொடு – தோழியருடன், காலைக் குற்ற கள் கமழ் அலர தண் நறுங்காவி அம் பகை நெறித் தழை அணிபெறத் தைஇ – காலையில் பறித்த தேன் மணம் கமழும் மலர்ந்த குளிர்ந்த நறுமணம் உடைய குவளை மலர்களை அழகிய மாறுபட்ட நெறிப்பை உடைய தழை ஆடையாக அழகு பொருந்த உடுத்தி (தைஇ – சொல்லிசை அளபெடை), வரி புனை சிற்றில் பரி சிறந்து ஓடி – கோலம் இட்ட சிறுமனையில் சிறப்பாக ஓடி, புலவுத் திரை உதைத்த கொடுந்தாள் கண்டல் சேர்ப்பு ஏர் ஈர் அளை அலவன் பார்க்குஞ் சிறு விளையாடலும் – புலவு நாற்றத்தையுடைய அலைகள் மோதிய வளைந்த அடியையுடைய தாழை மரத்தின் ஈரமான வளைகளில் (பொந்துகளில், அளைகளில்) நண்டுகளைக் கண்டு மகிழும் சிறு விளையாடலும், அழுங்கி நினக்கு பெருந்துயரம் ஆகிய நோயே – கெடும்படி உனக்குப் பெரும் துயரமாகியது இக்காதல் நோய் (நோயே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 124, மோசி கண்ணத்தனார், நெய்தல் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
ஒன்று இல் காலை அன்றில் போலப்
புலம்பு கொண்டு உறையும் புன்கண் வாழ்க்கை
யானும் ஆற்றேன், அது தானும் வந்தன்று,
நீங்கல் வாழியர் ஐய, ஈங்கை
முகை வீ அதிரல் மோட்டு மணல் எக்கர்  5
நவ்வி நோன் குளம்பு அழுந்தென, வெள்ளி
உருக்குறு கொள்கலம் கடுப்ப விருப்புறத்
தெண் நீர்க் குமிழி இழிதரும்
தண்ணீர் ததைஇ நின்ற பொழுதே.

பாடல் பின்னணி:  தலைவனால் பிரிவு உணர்த்தப்பட்ட தோழி அவனிடம் வருந்தி உரைத்தது.  இது தலைவியின் கூற்றைத் தன் கூற்றாகக் கொண்டு உரைத்ததாம்.  கூதிர்ப் பருவம் வந்துற்றது என வருந்துவாள் தலைவி.  ஆகையால் இனிப் பிரியாதிருப்பாயாக என வருந்தி உரைத்தது.  தன் உறு வேட்கை கிழவன் முன் கிளத்தல் எண்ணும் காலை கிழத்திக்கு இல்லை (தொல்காப்பியம், களவியல் 28).

பொருளுரை:  தன் துணையாகிய ஒன்று உடன் இல்லாத பொழுது வருந்தும் அன்றில் பறவையைப் போல் தனிமையுற்று வருந்தியிருக்கும் துன்ப வாழ்க்கையை நானும் தாங்க இயலாமல் உள்ளேன்.  ஈங்கையின் அரும்புகளும் புனமல்லிகை மலர்களும் உதிர்ந்த உயர்ந்த மணல் மேட்டில் மான்கள் தங்கள் வலிய குளம்பினால் அழுத்துவதால் வெள்ளியை உருக்கிச் சாய்க்கும் கலம்போல், காண்பதற்கு விருப்பம்வரும்படி தெளிந்த நீர், குமிழியாக வடியும் குளிர்ந்த நீர் நிறைந்து நின்ற கூதிர்ப்பருவம் வந்துவிட்டது.  என்னை விட்டு நீங்கிச் செல்லாதீர்.  நீடு வாழ்வீராக ஐயா!

குறிப்பு:  தலைவி கூறுவதுபோல் தோழி கூறுதல் – அகநானூறு 362, நற்றிணை 28, 98, 124, 132, 175, 178, 191, 211, 251, 292, கலித்தொகை 18, 70, குறுந்தொகை 236, 238, ஐங்குறுநூறு 45.    குறுந்தொகை 236 பாடலின் தமிழண்ணல் உரை – இது நாடக வழக்கு.  வழக்கறிஞர் கட்சிக்காரராக தம்மை எண்ணிப் பேசுவது போன்றது.  தலைவி கூற்று எனற்பாலது சிறிது மிகைப்படின், பண்பு கருதி தோழி கூற்றென வகுத்துள்ளனர்.  தோழியாகவே தோன்றும் உண்மைப் பாத்திரமாகவும் தலைவியின் குரலாக ஒலிக்கும் நிழற்பாத்திரமாகவும் இருவகைப்பட இருப்பதைப் பகுத்தறிய வேண்டும்.  புலம்பு – புலம்பே தனிமை (தொல்காப்பியம், உரியியல் 35).

சொற்பொருள்:  ஒன்று இல் காலை அன்றில் போலப் புலம்பு கொண்டு உறையும் புன்கண் வாழ்க்கை – துணையாகிய ஒன்று உடன் இல்லாத பொழுது வருந்தும் அன்றில் பறவைப் போல் தனிமையுற்று வருந்தியிருக்கும் துன்ப வாழ்க்கை, யானும் ஆற்றேன் – நானும் தாங்க இயலாமல் உள்ளேன், அது தானும் வந்தன்று – அது வந்துவிட்டது (தானும் – உம்மை சிறப்பு), நீங்கல் – என்னை விட்டு நீங்கிச் செல்லாதீர், வாழியர் ஐய – நீடு வாழ்வீராக ஐயா, ஈங்கை முகை வீ அதிரல் மோட்டு மணல் எக்கர் நவ்வி நோன் குளம்பு அழுந்தென வெள்ளி உருக்குறு கொள்கலம் கடுப்ப விருப்புறத் தெண் நீர்க் குமிழி இழிதரும் தண்ணீர் ததைஇ நின்ற பொழுதே – ஈங்கையின் அரும்புகளும் புனமல்லிகை மலர்களும் உதிர்ந்த உயர்ந்த மணல் மேட்டில் மான் வலிய குளம்பினால் அழுத்துவதால் வெள்ளியை உருக்கிச் சாய்க்கும் கலம்போல் விரும்பும்படி தெளிந்த நீர் குமிழியாக வடியும் குளிர்ந்த நீர் நிறைந்து நின்ற பொழுது (கடுப்ப – உவம உருபு, ததைஇ – சொல்லிசை அளபெடை, பொழுதே – அசைநிலை)

நற்றிணை 125, பாடியவர் பெயர் கிடைக்கவில்லை, குறிஞ்சித் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
‘இரை தேர் எண்கின் பகுவாய் ஏற்றை
கொடு வரிப் புற்றம் வாய்ப்ப வாங்கி,
நல் அரா நடுங்க உரறி கொல்லன்
ஊது உலைக் குருகின் உள் உயிர்த்து அகழும்
நடுநாள் வருதல் அஞ்சுதும் யாம்’ என  5
வரைந்துவரல் இரக்குவம் ஆயின், நம் மலை
நன்னாள் வதுவை கூடி நீடு இன்று
நம்மொடு செல்வர் மன் தோழி, மெல்ல
வேங்கைக் கண்ணியர் எருது எறி களமர்
நிலம் கண்டன்ன அகன் கண் பாசறை,  10
மென் தினை நெடும் போர் புரிமார்
துஞ்சு களிறு எடுப்பும் தம் பெருங்கல் நாட்டே.

பாடல் பின்னணி:  தலைவன் திருமணம் புரியாமல் இரவுக்குறியின்கண் வருவதைக் கண்டு வருந்திய தலைவியிடம் தோழி உரைத்தது.

பொருளுரை:  தோழி!  “இரை தேடும் கரடியின் பிளந்த வாயையுடைய ஆண் வளைந்த வரிகளையுடைய ஈசல் புற்றைக் கண்டு அதனை உடைத்து அதில் வாழும் நல்ல பாம்பு நடுங்கும்படி முழங்கி, கொல்லனின் ஊதுகின்ற துருத்திபோல் பெருமூச்சு விட்டு அங்குள்ள ஈசல்களை உறிஞ்சி உண்ணும் நடு இரவில் நீ வருவதை நாங்கள் அஞ்சுகின்றோம்” என்று அவர் வந்து உன்னை மணம் புரியும்படி நாம் இரங்கி வேண்டினோம் ஆனால், நம் மலையில் நல்ல நாளில் உன்னை மணம் புரிந்து கொண்டு காலம் தாழ்த்தாமல் உன்னை அழைத்துக்கொண்டு மெல்லச் செல்வார், வேங்கை மலர்மாலை சூடியிருக்கும் குறவர் எருதை ஓட்டி மருத நிலத்து உழவர் போன்று களம் செப்பம் செய்தாற்போன்ற அகன்ற இடத்தையுடைய பசிய பாறைமேல் மெல்லிய தினையை உயர்ந்த போராக விடும்பொருட்டு உறங்குகின்ற களிற்று யானைகளை எழுப்பும் தன்னுடைய பெரிய நாட்டிற்கு.

குறிப்பு:  இறைச்சி – கு. வெ. பாலசுப்பிரமணியன் உரை – கரடி புற்றிலே கிடந்த பாம்பு நடுங்கும்படி அகழ்ந்து உண்ணும் என்றது, தலைவர் கூடுகையில் தலைவியின் மேனியிடத்து அமைந்த பசலை நடுங்கி ஒழியமாறு கூடுவர் என்பதாம்.  மென் தினை நெடும் போர் புரிமார் (11) – ஒளவை துரைசாமி உரை – மெல்லிய தினைக் கதிரை போரிட்டு அடிக்கும் பொருட்டு, பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – மெல்லிய தினையைத் துவைத்து அதன் தாளை நெடிய போராக விடும்பொருட்டு.   துஞ்சு களிறு எடுப்பும் (11) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – குறவர் தினைக் கதிர்களைத் துவைத்தற்கு யானைகளைப் பிணித்துத் துவைப்பர் என அவர் திருவுடைமையைச் சிறப்பித்தபடியாம் என்க.  நம்மொடு செல்வர் (8) – தலைவியும் தோழியும் மிக நெருங்கிய நட்பு உடையவர்கள் என்பதாலும், தலைவியின் களவு ஒழுக்கத்திற்குத் தோழி உதவுவதாலும், தலைவனைத் தோழி நன்கு அறிந்தவள் என்பதாலும் ‘உன்னுடன் செல்வார்’ எனப் பொருள்பட ‘நம்மொடு செல்வர்’ என்றாள்.  நம்மொடு செல்வர் மெல்ல (8) – ஒளவை துரைசாமி உரை – மெல்ல நம்மைத் தம்மோடு கொண்டு செல்வார், பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – சின்னாள் அளவும் நின்னைப் பன்முறை முயங்கிய பின்பு செல்வார் என்பதாம்.  கரடி ஈசல் புற்றைத் தாக்குதல் – நற்றிணை 125, 325, 336, அகநானூறு 8, 72, 81, 88, 112, 149, 247, 257, 307.  தினையைக் கொய்யும் வேளையில் வேங்கை மரத்தின் பூக்கள் மலர்தல் – அகநானூறு 132, நற்றிணை 125, 259, 313, 389.  ஏற்றை – ஆற்றலொடு புணர்ந்த ஆண்பாற்கு எல்லாம் ஏற்றைக் கிளவி உரித்து என மொழிப (தொல்காப்பியம், மரபியல் 50).

சொற்பொருள்:  இரை தேர் எண்கின் பகுவாய் ஏற்றை கொடு வரிப் புற்றம் வாய்ப்ப வாங்கி நல் அரா நடுங்க உரறி கொல்லன் ஊது உலைக் குருகின் உள் உயிர்த்து அகழும் நடுநாள் வருதல் அஞ்சுதும் யாம் – இரை தேடும் கரடியின் பிளந்த வாயையுடைய ஆண் வளைந்த வரிகளையுடைய ஈசல் புற்றைக் கண்டு அதனை உடைத்து அதில் வாழும் நல்ல பாம்பு நடுங்கும்படி முழங்கி கொல்லனின் ஊதுகின்ற துருத்திபோல் பெருமூச்சு விட்டு ஈசல்களை உறிஞ்சி உண்ணும் நடு இரவில் நீங்கள் வருவதை நாங்கள் அஞ்சுகின்றோம் (புற்றம் – புற்று அம் என்பதைப் பெற்றுப் புற்றம் என ஆகியது, குருகின் – இன் ஒப்புப்பொருளில் வந்தது, ஐந்தாம் வேற்றுமை உருபு), என வரைந்துவரல் இரக்குவம் ஆயின் – என்று மணம் புரியும்படி நாம் இரங்கி வேண்டினோம் ஆனால், நம் மலை நன்னாள் வதுவை கூடி நீடு இன்று நம்மையும் உடன் அழைத்துச் செல்வர் மன் தோழி – நம் மலையில் நல்ல நாளில் மணம் புரிந்து கொண்டு காலம் தாழ்த்தாமல் நம்முடன் செல்வார் தோழி (மன் – அசைநிலை), மெல்ல – மெல்ல, வேங்கைக் கண்ணியர் எருது எறி களமர் நிலம் கண்டன்ன அகன் கண் பாசறை மென் தினை நெடும் போர் புரிமார் துஞ்சு களிறு எடுப்பும் தம் பெருங்கல் நாட்டே – வேங்கை மலர்மாலை சூடியிருக்கும் குறவர் (மலையில் வாழ்பவர்) எருதை ஓட்டி மருத நிலத்து உழவர் போன்று களம் செப்பம் செய்தாற்போன்ற அகன்ற இடத்தையுடைய பசிய பாறைமேல் மெல்லிய தினையை உயர்ந்த போராக விடும்பொருட்டு உறங்குகின்ற ஆண் யானைகளை எழுப்பும் தன்னுடைய பெரிய நாட்டிற்கு (புரிமார் – மார் ஈற்று முற்றுவினை, நாட்டே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 126, பாடியவர் பெயர் கிடைக்கவில்லை, பாலைத் திணை – தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது
பைங்காய் நல் இடம் ஒரீஇய செங்காய்க்
கருங்களி ஈந்தின் வெண்புறக் களரி
இடு நீறு ஆடிய கடு நடை ஒருத்தல்
ஆள் பெறல் நசைஇ, நாள் சுரம் விலங்கித்,
துனைதரும் வம்பலர்க் காணாது, அச் சினம்  5
பனைக் கான்று ஆறும் பாழ் நாட்டு அத்தம்,
இறந்து செய் பொருளும் இன்பம் தரும் எனின்,
இளமையின் சிறந்த வளமையும் இல்லை;
இளமை கழிந்த பின்றை வளமை
காமம் தருதலும் இன்றே; அதனால்,  10
நில்லாப் பொருட்பிணிச் சேறி
வல்லே நெஞ்சம், வாய்க்க நின் வினையே.

பாடல் பின்னணி:  பொருள் விரும்பிய நெஞ்சிடம் தலைவன் உரைத்துச் செலவு அழுங்கியது.

பொருளுரை:  என் நெஞ்சே!  பசிய காய்களின் நல்ல மேல் பகுதி நிறம் மாறி செங்காய்களாக ஆகி கருங்களியாய் மாறும் ஈத்த மரங்களுடைய வெள்ளை நிறமுடைய உவர் நிலத்தின் புழுதியில் படிந்த விரைந்த நடையுடைய ஆண் யானை வழியில் செல்பவர்களைக் கொல்ல விரும்பி, விடியற்காலையில் சுரத்தில் குறுக்கிட்டுச் சென்று, விரைந்து வரும் வழிப்போக்கர்களைக் காணாது, சினம் கொண்டு, அச்சினத்தால் பனைமரத்தில் மோதி அடங்கும் பாழ்பட்ட பாலை நிலத்தைக் கடந்து ஈட்டும் பொருளும் இன்பம் தரும் என்றால், இளமையில் பெரும் காதல் இன்பத்தைக் காட்டிலும் சிறந்த இன்பம் வேறு இல்லை.  இளமையைப் பொருள் ஈட்டுவதில் கழித்தால் பின்பு அப்பொருள்வளம் முதுமையில் காதல் இன்பத்தைக் கொடுப்பதும் இல்லை.  அதனால், நிலையில்லாத பொருள் விருப்பம் உன்னைப் பிணித்ததனால் செல்கிறாய் விரைந்து.  முற்றுவதாக நீ எண்ணும் வினை! 

குறிப்பு:  ஒரீஇய (1) – ஒளவை துரைசாமி உரை – நிறம் பெற்ற, H. வேங்கடராமன் உரை – நிறம் மாறிய, கு. வெ. பாலசுப்பிரமணியன் உரை – நீங்கிய.  இறைச்சி (1) – கு. வெ. பாலசுப்பிரமணியன் உரை – ஈந்தின் பசுங்காய் செங்காயாகிப் பின் கனியாகும் என்றது யாக்கையும் இளமை போய் முதிர்ந்து தளரும் என்பதனைக் குறிப்பித்து இளமை நில்லாமை உணர்த்திற்று.  இறைச்சி (2) – ஒளவை துரைசாமி உரை – நச்சிய ஆள் பெறாமையால் களிற்று ஒருத்தல் வெஞ்சினம் கொள்ளும் என்றது, கருதிய அளவில் முற்றாவழிப் பொருள் இளிவரவு தோற்றுவிக்கும் எனவும் அவ்வொருத்தல் தன் சினம் தனியுமாறு இயைபு இல்லாத பனையைத் தாக்குதல் கூறியது, அப்பொருள் இல்லையாயின் இரவலரும் பரிசிலருமாகிய மக்கள் வருந்துவர் எனவும் கொள்ள நின்றன.  துனை – கதழ்வும் துனைவும் விரைவின் பொருள் (தொல்காப்பியம், உரியியல் 19).  காமம் – கமம் என்னும் சொல்லின் முதல் நீண்ட வடிவம், ‘நிறைந்த அன்பு’ என்பது இச்சொல்லின் பொருள் – பேரறிஞர் கு.வெ. பாலசுப்பிரமணியன் அவர்களின் விளக்கம், (கமம் நிறைந்து இயலும் – தொல்காப்பியம், சொல்லியல் 355).

சொற்பொருள்:  பைங்காய் நல் இடம் ஒரீஇய செங்காய்க் கருங்களி ஈந்தின் வெண்புறக் களரி இடு நீறு ஆடிய கடு நடை ஒருத்தல் ஆள் பெறல் நசைஇ – பசிய காய்களின் நல்ல மேல் பகுதி நிறம் மாறி செங்காய்களாக ஆகி கருங்களியாய் மாறும் ஈத்த மரங்களுடைய வெள்ளை நிறமுடைய உவர் நிலத்தின் புழுதியில் படிந்த விரைந்த நடையுடைய ஆண் யானை வழியில் செல்பவர்களைக் கொல்ல விரும்பி (ஒரீஇய – செய்யுளிசை அளபெடை, நசைஇ – அளபெடை), நாள் சுரம் விலங்கித் துனைதரும் வம்பலர்க் காணாது அச் சினம் பனைக் கான்று ஆறும் பாழ் நாட்டு அத்தம் இறந்து செய் பொருளும் இன்பம் தரும் எனின் – விடியற்காலையில் சுரத்தில் குறுக்கிட்டுச் சென்று விரைந்து வரும் வழிப்போக்கர்களைக் காணாது அச்சினத்தால் பனைமரத்தில் மோதி அடங்கும் பாழ்பட்ட பாலை நிலத்தைக் கடந்து ஈட்டும் பொருளும் இன்பம் தரும் என்றால், இளமையின் சிறந்த வளமையும் இல்லை – இளமையில் பெரும் காதல் இன்பத்தைக் காட்டிலும் சிறந்தது இல்லை, இளமை கழிந்த பின்றை வளமை காமம் தருதலும் இன்றே – இளமை கழிந்த பின்பு பொருள் வளம் காதல் இன்பத்தைக் கொடுப்பதும் இல்லை (இன்றே  – ஏகாரம் அசைநிலை); அதனால் – அதனால், நில்லாப் பொருட்பிணிச் சேறி வல்லே – நிலையில்லாத பொருள் விருப்பம் உன்னைப் பிணித்ததனால் செல்கிறாய் விரைந்து, நெஞ்சம் – நெஞ்சே, வாய்க்க நின் வினையே – முற்றுவதாக நீ எண்ணும் வினை (வினையே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 127, சீத்தலைச் சாத்தனார், நெய்தல் திணை – தோழி பாணனிடம் சொன்னது
இருங்கழி துழைஇய ஈர்ம் புற நாரை
இறகு எறி திவலையின் பனிக்கும் பாக்கத்து,
உவன் வரின், எவனோ பாண? பேதை
கொழு மீன் ஆர்கைச் செழு நகர் நிறைந்த
கல்லாக் கதவர் தன் ஐயர் ஆகவும்,  5
வண்டல் ஆயமொடு பண்டு தான் ஆடிய
ஈனாப் பாவை தலையிட்டு ஓரும்,
மெல்லம்புலம்பன் அன்றியும்
செல்வாம் என்னும் கானலானே.

பாடல் பின்னணி:  நெய்தலுள் மருதம்.  தோழி பாணற்கு வாயில் மறுத்தது.

பொருளுரைபாணனே!  கரிய உப்பங்கழியில் இரையைத் தேடித் துழாவும் ஈரமான முதுகுப்புறத்தை உடைய நாரை தன்னுடைய சிறகை உதறுகின்ற நீர்த்துவலையால் நடுங்கும் நம் பாக்கத்திற்குத் தலைவன் வருவதனால் என்ன பயன்?  பேதையான தலைவி கொழுத்த மீனை உண்ணும் வளமான மனையில் நிறைந்த தன் தொழிலன்றி வேறு எதுவும் கற்காத சினமுடைய தன் அண்ணன்மார் இருப்பவும், விளையாட்டைச் செய்யும் தோழியருடன் முன்பு இளமையில் தான் விளையாடிய பாவையைத் தலையில் வைத்துக்கொண்டு, “மெல்லிய கடற்கரையின் தலைவன் இன்றியும் விளையாடும் பொருட்டு நாம் கடற்கரைச் சோலைக்குச் செல்லுவோம்” எனக் கூறுபவள் ஆக உள்ளாள்.  ஆகையால் அவன் இனி இங்கு வர வேண்டாம்.

குறிப்பு:  உள்ளுறை – ஒளவை துரைசாமி உரை – கழி துழைஇய நாரை தன் ஈர்ம்புறத்து இறகை எறிதலால் தெறிக்கும் திவலையால் எம் பாக்கம் குளிர்மிக்கு நடுங்கும் என்றதனால், பரத்தையர் சேரிக்கண் மகளிர் நலம் நயத்தொழுகும் எழும் அலர் ஊரெங்கும் பரந்து எம்மை நாணால் நடுங்கச் செய்தது என்பது.

சொற்பொருள்:  இருங்கழி துழைஇய ஈர்ம் புற நாரை இறகு எறி திவலையின் பனிக்கும் பாக்கத்து உவன் வரின் எவனோ பாண – கரிய (பெரிய) உப்பங்கழியில் இரையைத் தேடித் துழாவும் ஈரமான முதுகுப்புறத்தை உடைய நாரை தன்னுடைய  சிறகை உதறுகின்ற நீர்த்துவலையால் நடுங்கும் நம் பாக்கத்திற்குத் (கடற்கரை ஊர்க்கு) தலைவன் வருவதனால் என்ன பயன் பாணனே (துழைஇய – அளபெடை), பேதை கொழு மீன் ஆர்கைச் செழு நகர் நிறைந்த கல்லாக் கதவர் தன் ஐயர் ஆகவும் – பேதையான தலைவி கொழுத்த மீனை உண்ணும் வளமான மனையில் நிறைந்த தன் தொழிலன்றி வேறு எதுவும் கற்காத சினமுடைய தன் அண்ணன்மார் இருப்பவும் (ஐயர் – அண்ணன்மார்), வண்டல் ஆயமொடு பண்டு தான் ஆடிய ஈனாப் பாவை தலையிட்டு ஓரும் மெல்லம்புலம்பன் அன்றியும் செல்வாம் என்னும் கானலானே – வண்டல் விளையாட்டைச் செய்யும் தோழியருடன் முன்பு இளமையில் தான் விளையாடிய பாவையைத் தலையில் வைத்துக்கொண்டு மெல்லிய கடற்கரையின் தலைவன் இன்றியும் விளையாடும்பொருட்டு நாம் கடற்கரைச் சோலைக்குச் செல்லுவோம் எனக் கூறுபவள் (ஈனாப் பாவை – பெறாத குழந்தையாகிய விளையாட்டுப் பாவை, வண்டற் பாவை, வெளிப்படை, ஓரும் – அசைநிலை, கானலானே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 128, நற்சேந்தனார், குறிஞ்சித் திணை – தலைவி தோழியிடம் சொன்னது, அல்லது தோழி தலைவியிடம் சொன்னது
‘பகல் எரி சுடரின் மேனி சாயவும்,
பாம்பு ஊர் மதியின் நுதல் ஒளி கரப்பவும்,
எனக்கு நீ உரையாய்  ஆயினை; நினக்கு யான்
உயிர் பகுத்தன்ன மாண்பினேன் ஆகலின்,
அது கண்டிசினால் யானே’ என்று நனி  5
அழுதல் ஆன்றிசின் ஆயிழை, ஒலி குரல்
ஏனல் காவலினிடை உற்று ஒருவன்,
கண்ணியன், கழலன், தாரன், தண் எனச்
சிறுபுறம் கவையினனாக, அதற்கொண்டு
அஃதே நினைந்த நெஞ்சமொடு  10
இஃது ஆகின்று, யான் உற்ற நோயே.

பாடல் பின்னணி:  குறை நேர்ந்த தோழி, தலைவி குறை நயப்பக் கூறியது.  தலைவி அறத்தொடு நின்றதூஉம் ஆம்.

பொருளுரை:  ஆராய்ந்த அணிகலன்களை அணிந்தவளே!  பகலில் எரியும் விளக்கைப் போன்று மேனி வாடவும், பாம்பினால் விழுங்கப்பட்ட நிலவின் ஒளி மழுங்குவது போல் நெற்றியின் ஒளி மறையவும், நீ என்னிடம் இவை நேர்ந்ததற்குக் காரணத்தைக் கூறாதவளாக ஆயினாய்.  நான் உனக்கு ஓருடல் ஈருயிர் ஆகப் பகுக்கப்பட்டது போல் நட்பு மாட்சிமை உடையேன் ஆதலால், அதை அறிந்தேன் எனக் கூறி மிகவும் அழுதலைக் கைவிடுவாயாக.  தழைத்த கதிர்களையுடைய தினைப்புனத்தில் காவல் புரியும் இடத்திற்கு வந்து ஒருவன் தலையில் மாலை அணிந்தவன் காலில் கழல் அணிந்தவன் கழுத்தில் மாலை அணிந்தவன் குளிர்ச்சியுடன் என் முதுகைத் தழுவினானாக, அது முதற்கொண்டு அதனையே எண்ணிய நெஞ்சத்துடன் இவ்வாறு ஆகின்றது எனக்கு வந்த இந்தக் காதல் நோய்.

குறிப்பு:  ஒளவை துரைசாமி உரை – ‘வரைவு இடை வைத்த காலத்து வருந்தினும் வரையா நாளிடை வந்தோன் முட்டினும் உரை எனத் தோழிக்கு உரைத்தற்கண்ணும் தானே கூறும் காலமும் உளவே’ (தொல்காப்பியம், களவியல் 22) என்பதன் உரையில் ‘உம்மையால் தோழி வினவியவிடத்துக் கூறலே வலியுடைத்து’ என்று கூறி இப்பாட்டைக் காட்டி ‘இது தோழி வினாவியவழித் தலைவி கூறியது’ என்பர் நச்சினார்க்கினியர்.  கு. வெ. பாலசுப்பிரமணியன் உரைதோழியின் கூற்று – தலைவிக்குத் தோழி ‘தலைவன் தன்னைத் தழுவியதால் ஏற்பட்ட காதல் நோய் என்று கூறுகின்றாள்.  தலைவன் தழுவ இவள் இசைந்தமையால் தலைவியின் காதலைப் பெறுவதற்குத் தலைக்கீடாகத் தோழியைக் குறை நேர்ந்தான் என்பதும், அது கொண்டு தலைவியின் களவொழுக்கத்தைத் தோழி உணர்ந்தாள் என்பதும் பெறப்படும்.  தலைவன் புறத்தொழுக்கம் மேற்கொள்ளவும் நேரும் என்ற குறிப்பினைத் தலைவிக்கு உணர்த்தி அவள் நாணம் நீங்குமாறு குறை நயந்து நின்றாள்.  தலைவி மறைத்த நிகழ்ச்சியைத் தோழி தன் மேல் ஏற்றிக் கூறி உண்மை உரைத்ததும் ஆகும்.  தலைவியின் கூற்று – “தோழி! நிகழ்ந்ததை மறைத்தேன் என வருந்தாதே!  யான் தலைவன் செய்த செயலால் ஏற்பட்ட காதலால் வருந்துகின்றேன்” எனக் கூறித் தலைவி அறத்தொடு நின்றதாக அமையும்.  ஒப்புமை:  அகநானூறு 32 – சிறுபுறம் கவையினனாக அதற்கொண்டு இகு பெயல் மண்ணின் ஞெகிழ்பு அஞர் உற்ற.  சின் – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம், சொல்லதிகாரம், இடையியல் 26, சின் என்பது இசின் என்பதன் முதற்குறை – ச. பாலசுந்தரம் உரை).  நனி – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3).

சொற்பொருள்:  பகல் எரி சுடரின் மேனி சாயவும் – பகலில் எரியும் விளக்கைப் போன்று மேனி வாடவும் (சுடரின் – இன் உருபு ஒப்புப் பொருளது, ஐந்தாம் வேற்றுமை உருபு), பாம்பு ஊர் மதியின் நுதல் ஒளி கரப்பவும் – பாம்பினால் விழுங்கப்பட்ட (இராகுவினால் விழுங்கப்பட்ட நிலா – கிரகணம்) நிலவின் ஒளி மழுங்குவது போல் நெற்றியின் ஒளி மறையவும், எனக்கு நீ உரையாய் ஆயினை – நீ என்னிடம் கூறாதவளாக ஆயினாய்; நினக்கு யான் உயிர் பகுத்தன்ன மாண்பினேன் – நான் உனக்கு ஓருடல் ஈருயிர் ஆகப் பகுக்கப்பட்டது போல் நட்பு மாட்சிமை உடையேன், ஆகலின் – ஆதலால், அது கண்டிசினால் யானே – அதை அறிந்தேன் நான் (கண்டிசினால் = கண்டிசின் + ஆல், சின் – தன்மை அசை), என்று நனி அழுதல் ஆன்றிசின் – எனக் கூறி மிகவும் அழுதலைக் கைவிடுவாயாக (ஆன்றிசின் – முன்னிலை அசை), ஆயிழை – ஆராய்ந்த அணிகலன்களை அணிந்தவளே, அழகிய அணிகலன்களை அணிந்தவளே (அன்மொழித்தொகை விளியேற்று நின்றது), ஒலி குரல் ஏனல் காவலினிடை உற்று ஒருவன் கண்ணியன் கழலன் தாரன் தண் எனச் சிறுபுறம் கவையினனாக – தழைத்த கதிர்களையுடைய தினைப்புனத்தில் காவல் புரியும் இடத்திற்கு வந்து ஒருவன் தலையில் மாலை அணிந்தவன் காலில் கழல் அணிந்தவன் கழுத்தில் மாலை அணிந்தவன் குளிர்ச்சியுடன் என் முதுகைத் தழுவினானாக, அதற்கொண்டு அஃதே நினைந்த நெஞ்சமொடு இஃது ஆகின்று யான் உற்ற நோயே – அது முதற்கொண்டு அதனையே எண்ணிய நெஞ்சத்துடன் இவ்வாறு ஆகின்றது எனக்கு வந்த இந்தக் காதல் நோய் (நோயே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 129, ஒளவையார், குறிஞ்சித் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
பெருநகை கேளாய் தோழி, காதலர்
ஒரு நாள் கழியினும் உயிர் வேறுபடூஉம்
பொம்மல் ஓதி நம் இவண் ஒழியச்
செல்ப என்ப தாமே, சென்று,
தம் வினை முற்றி வரூஉம் வரை நம் மனை  5
வாழ்தும் என்ப நாமே, அதன்தலை,
கேழ் கிளர் உத்தி அரவுத் தலை பனிப்பப்,
படுமழை உருமின் உரற்று குரல்
நடுநாள் யாமத்தும் தமியம் கேட்டே.

பாடல் பின்னணி:  பிரிவு உணர்த்தப்பட்ட தோழி, தலைவியிடம் உரைத்தது.

பொருளுரை:  தோழி!  காதலர் ஒரு நாள் பிரியினும் உயிரின் தன்மை வேறுபடுகின்ற, பொலிவுடைய கூந்தலை உடையாய்!  பெரிதாக நகைக்க வல்ல ஒரு செய்தியைக் கேட்பாயாக! நம்மை இங்கே இருக்க விட்டு நம் தலைவர் வினையின் பொருட்டுத் தனியே செல்வார் எனக் கூறுகின்றனர்.  அதற்கு மேலும், சென்று தன்னுடைய வினை முடிந்து வரும் வரையில், நிறம் விளங்கும் படத்தில் பொறிகளையுடைய பாம்பின் தலை நடுங்கும்படி பெய்கின்ற முகிலிடைத் தோன்றும் இடியின் முழக்கம் முழங்குகின்ற ஓசையை நள்ளிரவாகிய நடு யாமத்தில் தனியராகக் கேட்டு நாம் மனையில் உயிர் வாழ்ந்திருப்போம் என்றும் கூறுகின்றனர்.

குறிப்பு:  இடி பாம்புகளை வருத்தவும் கொல்லவும் செய்யும் என்னும் செய்தி உள்ள பாடல்கள் – அகநானூறு 92, 119, 182, 202, 274, 323, 328, கலித்தொகை 45, 113, குறுந்தொகை 158, 190, 268, 391, நற்றிணை 37, 51, 114, 129, 238, 255, 264, 347, 383, புறநானூறு 17, 37, 58, 126, 211, 366, 369.  கேழ் கிளர் உத்தி அரவுத் தலை (7) – ஒளவை துரைசாமி உரை – நிறம் பொருந்திய படத்தின்கட் பொறிகளையுடைய பாம்பின் தலை, பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – நிறம் விளங்கிய படப்பொறிகளையுடைய அரவினது தலை.

சொற்பொருள்:  பெருநகை கேளாய் – பெரிதாக நகைக்க வல்ல ஒரு செய்தியைக் கேட்பாயாக, தோழி – தோழி, காதலர் ஒரு நாள் கழியினும் உயிர் வேறுபடூஉம் பொம்மல் ஓதி – காதலர் ஒரு நாள் பிரியினும் உயிரின் தன்மை வேறுபடுகின்ற பொலிவுடைய கூந்தலை உடையாய் (வேறுபடூஉம் – அளபெடை, பொம்மல் ஓதி – அன்மொழித்தொகை விளியேற்று நின்றது), நம் இவண் ஒழியச் செல்ப என்ப – நம்மை இங்கே இருக்க விட்டு அவர் செல்வார் எனக் கூறுகின்றனர், தாமே – அவரே (ஏகாரம் பிரிநிலை இடைச்சொல்), சென்று தம் வினை முற்றி வரூஉம் வரை நம் மனை வாழ்தும் என்ப – சென்று தன்னுடைய வினை முடிந்து வரும் வரையில் நாம் மனையில் உயிர் வாழ்ந்திருப்போம் என்று கூறுகின்றனர் (வரூஉம் – செய்யுளிசை அளபெடை), நாமே – நாம் (ஏகாரம் அசைநிலை), அதன்தலை – அதற்கு மேலும், கேழ் கிளர் உத்தி அரவுத் தலை பனிப்பப் படுமழை உருமின் உரற்று குரல் நடுநாள் யாமத்தும் தமியம் கேட்டே – நிறம் விளங்கும் படத்தில் பொறிகளையுடைய பாம்பின் தலை நடுங்கும்படி பெய்கின்ற முகிலிடைத் தோன்றும் இடியின் முழக்கம் முழங்குகின்ற ஓசையை நள்ளிரவாகிய நடு யாமத்தில் தனியராகக் கேட்டு (கேட்டே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 130, நெய்தல் தத்தனார், நெய்தல் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
வடு இன்று நிறைந்த மான் தேர்த்தெண் கண்
மடிவாய்த் தண்ணுமை நடுவண் ஆர்ப்பக்,
கோலின் எறிந்து காலைத் தோன்றிய
செந்நீர்ப் பொது வினைச் செம்மல் மூதூர்த்
தமது செய் வாழ்க்கையின் இனியது உண்டோ?  5
எனை விருப்புடையர் ஆயினும், நினைவிலர்;
நேர்ந்த நெஞ்சும் நெகிழ்ந்த தோளும்
வாடிய வரியும் நோக்கி நீடாது,
‘எவன் செய்தனள் இப் பேர் அஞர் உறுவி’? என்று
ஒரு நாள் கூறின்றும் இலரே; விரி நீர் 10
வையக வரையளவு இறந்த,
எவ்வ நோய் பிறிது உயவுத் துணை இன்றே.

பாடல் பின்னணி:  பிரிவிடை வருந்திய தலைவியை ஆற்றியிருக்கும்படி வற்புறுத்திய தோழியிடம் தலைவி உரைத்தது.

பொருளுரை:  தெளிந்த ஓசையையுடைய, இடம் அகன்ற, தோலை மடித்துப் போர்த்திய தண்ணுமை முரசு இடையில் ஒலிக்க, குற்றமற்ற திறமை நிறைந்த குதிரைகள் பூட்டிய தேரைக் கோல் ஓச்சி செலுத்தி, காலையில் தோன்றிய செம்மையாகிய தன்மையையும் பொதுவாக உள்ள செயலையுமுடைய தலைவர், இப்பழைய ஊரில் தாம் செய்யும் இல்வாழ்க்கையைவிட இனிமையானது உண்டோ?  என் மேல் எவ்வளவு விருப்பமுடையவர் ஆயினும் இப்பொழுது அவர் என்னை நினையார்.  அவருடன் உடன்பட்ட என் நெஞ்சையும், நெகிழ்ந்த என் தோளையும், மேனியில் வாடிய வரியையும் பார்த்துக் காலம் தாழ்த்தாது, “என்ன காரியம் செய்தாளோ இப்பெரும் துன்பம் அடைந்தவள்” என்று ஒரு நாளேனும் கூறவில்லை அவர்.  விரிந்த கடல் சூழ்ந்த உலகின் எல்லை அளவையும் கடந்த துன்ப நோய் என்னை வருத்துகிறது. ஆனால் ஆற்றுவிக்க யாரும் இல்லை எனக்குத் துணையாக.

குறிப்பு:  நினைவிலர் (6) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – தனக்குத் தும்மல், புரையேறுதல் முதலாயின தோன்றாமையாலே தன்னை அவர் கருதிலர் என்றாள்.  நற்றிணை 397 – தோளும் அழியும், நாளும் சென்றென, நீள் இடை அத்தம் நோக்கி வாள் அற்றுக் கண்ணும் காட்சி தௌவின, என் நீத்து அறிவும் மயங்கி பிறிது ஆகின்றே நோயும் பெருகும், மாலையும் வந்தன்று யாங்கு ஆகுவென் கொல் யானே?

சொற்பொருள்:  வடு இன்று நிறைந்த மான் தேர் – குற்றமின்றி திறமை நிறைந்த குதிரைகள் பூட்டிய தேர், தெண் கண் மடிவாய்த் தண்ணுமை நடுவண் ஆர்ப்பக் கோலின் எறிந்து காலைத் தோன்றிய செந்நீர்ப் பொது வினைச் செம்மல் – தெளிந்த ஓசையையுடைய இடம் அகன்ற தோலை மடித்துப் போர்த்திய தண்ணுமை முரசு இடையில் ஒலிக்கக் கோலால் ஓச்சி காலையில் தோன்றிய செம்மையாகிய தன்மையையும் பொதுவாக உள்ள செயலையுமுடைய தலைவர்,  மூதூர்த் தமது செய் வாழ்க்கையின் இனியது உண்டோ – பழைய ஊரில் தாம் செய்யும் இல்வாழ்க்கையைவிட இனிமையானது உண்டோ, எனை விருப்புடையர் ஆயினும் நினைவு இலர் – எவ்வளவு விருப்பமுடையவர் ஆயினும் இப்பொழுது என்னை நினையார், நேர்ந்த நெஞ்சும் நெகிழ்ந்த தோளும் வாடிய வரியும் நோக்கி நீடாது எவன் செய்தனள் இப் பேர் அஞர் உறுவி என்று ஒரு நாள் கூறின்றும் இலரே – அவருடன் உடன்பட்ட என் நெஞ்சையும் நெகிழ்ந்த என் தோளையும் மேனியில் வாடிய வரியையும் பார்த்துக் காலம் தாழ்த்தாது என்ன காரியம் செய்தாளோ இப்பெரும் துன்பம் அடைந்தவள் என்று ஒரு நாளேனும் கூறவில்லை அவர் (இலரே – ஏகாரம் அசைநிலை); விரி நீர் வையக வரையளவு இறந்த எவ்வ நோய் – விரிந்த கடல் சூழ்ந்த உலகின் எல்லை அளவையும் கடந்த துன்ப நோய், பிறிது உயவுத் துணை இன்றே – மற்று ஆற்றுவிக்க யாரும் இல்லை எனக்குத் துணையாக (இன்றே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 131, உலோச்சனார், நெய்தல் திணை – தோழி தலைவனிடம் சொன்னது, தலைவியும் தலைவனும் திருமணம் புரிந்த பின்
ஆடிய தொழிலும் அல்கிய பொழிலும்,
உள்ளல் ஆகா உயவு நெஞ்சமொடு
ஊடலும், உடையமோ, உயர் மணல் சேர்ப்ப,
திரை முதிர் அரைய தடந்தாள் தாழைச்
சுறவு மருப்பு அன்ன முள் தோடு ஒசிய,  5
இறவு ஆர் இனக் குருகு இறை கொள இருக்கும்,
நறவு மகிழ் இருக்கை நல் தேர்ப் பெரியன்,
கள் கமழ் பொறையாறு அன்ன என்
நல் தோள் நெகிழ மறத்தல் நுமக்கே.

பாடல் பின்னணி:  மணமனையிற் பிற்றை ஞான்று புக்க தோழியைத் தலைவன் ‘தலைவியை முன்பு நீ நன்கு காத்தாய்.  நீ பெரியை’ என்று புகழ்ந்தபோது, அவனைப் புகழ்ந்து தோழி உரைத்தது.

பொருளுரை:  விளையாடிய தொழிலையும் தங்கியிருப்பதற்குரிய சோலையையும் நினைத்தல் ஆகாத வருந்தும் நெஞ்சத்துடன் ஊடலையும் உடையேமோ, உயர்ந்த மணல் மேடுகளுடைய கரையின் தலைவனே?  இல்லையே.  திரைத்த முதிர்ந்த அடியையும் வளைந்த தாளையும் உடைய தாழையின் சுறாமீனின் கொம்பு போன்ற முள்ளையுடைய மடல்கள் சாயும்படி இரால்மீனை உண்ணும் குருகின் கூட்டம் தங்குதல் கொண்டு இருக்கும், கள்ளுண்டு மகிழும் ஊரில் உள்ள நல்ல தேர்களையுடை பெரியன்  என்பவனின் கள்ளின் மணம் கமழும் பொறையாறு அன்ன சிறந்த தலைவியின் நல்ல தோள்கள் மெலியும்படி மறத்தல் இல்லை நுமக்கு.

குறிப்பு:  உள்ளுறை – ஒளவை துரைசாமி உரை – கழிக்கண் இறாமீனை வயிறார உண்ட குருகுகள் தாழை மிசை இனஞ் சூழ இருக்கும் என்றது, என் தோழியாகிய தலைமகளின் நலன்களை நனி நுகர்ந்த நீ நின் சுற்றம் பரவ அவனது நெஞ்சின்கண் நிறைந்து வீற்றிருக்கின்றாய் எனத் தோழி இனிது கிளவியால் உள்ளுறுத்துப் பாராட்டியவாறு.  சுறவு, இறவு, நறவு – சுறா சுறவு எனவும், இறா இறவு எனவும், நறா நறவு எனவும் வந்தன.  ‘குறியதன் இறுதிச் சினை கெட உகரம் அறிய வருதல் செய்யுளுள் உரித்தே’ (தொல்காப்பியம், உயிர் மயங்கியல் 32).  வரலாறு:  பெரியன், பொறையாறு.  தட – தடவும் கயவும் நளியும் பெருமை (தொல்காப்பியம், உரியியல் 24), அவற்றுள், தட என் கிளவி கோட்டமும் செய்யும் (தொல்காப்பியம், உரியியல் 25).  அரைய தடந்தாள் (4) – ஒளவை துரைசாமி உரை – வேரை ஒட்டிய பகுதி தாள் எனவும், அதற்கு மேலுள்ள பகுதி அரை எனவும் வேறுபடுத்தி உணர்க.  என் நல் தோள் – ஒளவை துரைசாமி உரை– என் தலைவியின் நல்ல தோள். தலைவியின் தோளைத் தோழி என் தோள் என்றது ‘ஒன்றித் தோன்றும் தோழி மேன – தொல்காப்பியம், பொருளதிகாரம் 39’ என்பதால் அமையும்.

சொற்பொருள்:  ஆடிய தொழிலும் அல்கிய பொழிலும் உள்ளல் ஆகா உயவு நெஞ்சமொடு ஊடலும் உடையமோ – விளையாடிய தொழிலையும் தங்கியிருப்பதற்குரிய சோலையையும் நினைத்தல் ஆகாத வருந்தும் நெஞ்சத்துடன் ஊடலையும் உடையேமோ, உயர் மணல் சேர்ப்ப – உயர்ந்த மணல் மேடுகளுடைய கரையின் தலைவனே (சேர்ப்ப – அண்மை விளி), திரை முதிர் அரைய தடந்தாள் தாழைச் சுறவு மருப்பு அன்ன முள் தோடு ஒசிய இறவு ஆர் இனக் குருகு இறை கொள இருக்கும் – திரைத்த முதிர்ந்த அடியையும் வளைந்த தாளையும் உடைய தாழையின் சுறாமீனின் கொம்பு போன்ற முள்ளையுடைய மடல்கள் சாயும்படி இரால்மீனை உண்ணும் குருகின் கூட்டம் தங்குதல் கொண்டு இருக்கும் (திரைத்த – மடிப்புடைய), நறவு மகிழ் இருக்கை நல் தேர்ப் பெரியன் கள் கமழ் பொறையாறு அன்ன என் நல் தோள் நெகிழ மறத்தல் நுமக்கே – கள்ளுண்டு மகிழும் ஊரில் உள்ள நல்ல தேர்களையுடை பெரியன்  என்பவனின் கள்ளின் மணம் கமழும் பொறையாறு அன்ன சிறந்த என் (தலைவியின்) நல்ல தோள்கள் மெலியும்படி மறத்தல் இல்லை நுமக்கு (நுமக்கே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 132, பாடியவர் பெயர் கிடைக்கவில்லை, நெய்தல் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
பேர் ஊர் துஞ்சும்; யாரும் இல்லை;
திருந்து வாய்ச் சுறவம் நீர் கான்று ஒய்யெனப்
பெருந்தெரு உதிர்தரு பெயலுறு தண் வளி
போர் அமை கதவப் புரைதொறும் தூவ,
கூர் எயிற்று எகினம் நடுங்கும் நல் நகர்ப்  5
பயில் படை நிவந்த பல் பூஞ்சேக்கை
அயலும் மாண் சிறையதுவே; அதன்தலைக்
‘காப்புடை வாயில் போற்று ஓ’ என்னும்
யாமம் கொள்பவர் நெடு நா ஒண் மணி
ஒன்று எறி பாணியின் இரட்டும்;  10
இன்று கொல், அளியேன் பொன்றும் நாளே?

பாடல் பின்னணி:  காப்பு மிகுதிக்கண் ஆற்றாளாகிய தலைவிக்குத் தோழி உரைத்தது.  இது தலைவி கூற்றைத் தோழி தன் கூற்றாகக் கொண்டு உரைத்தது.  தன் உறு வேட்கை கிழவன் முன் கிளத்தல் எண்ணும் காலை கிழத்திக்கு இல்லை (தொல்காப்பியம், களவியல் 28).

பொருளுரை:  பெரிய ஊரினர் உறங்குகின்றனர். விழித்திருப்பவர்கள் யாரும் இல்லை. திருந்திய வாயையுடைய சுறா மீன்கள் நீரைக் கக்குவதால் அந்நீர் விரைவாகப் பெரிய தெருவில் உதிர்கின்ற மழையாகக் குளிர்ந்த காற்றுடன் ஒன்றி, பொருந்திய இரட்டை வாயிற்கதவின் துளைகள்தோறும் தூவ, கூரிய பற்களையுடைய நாய் நடுங்குகின்ற நல்ல மனையில் துயிலுமாறு உயர்ந்த மலர்கள் தூவிய படுக்கையின் பக்கத்திலும் மிகுந்த காப்புடையதாக உள்ளது.  அதற்குமேல் காவலை உடைய வாயிலைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள் ஓ என்று இரவு காவலர் நீண்ட நாக்கையுடைய ஒளியுடைய மணியை அடிக்கும் ஒலி தாளத்தில் ஒன்றியிருக்கும் ஒலிபோல் ஒலிக்கும், இன்று தானா இரங்கத்தக்கவளான நான் இறக்கும் நாள்.

குறிப்பு:  புலவர் பெயர் – பிற உரை நூல்களில் புலவரின் பெயர் குறிக்கப்படவில்லை.  ஒளவை துரைசாமி உரையில் புலவரின் பெயர் பெருங்கண்ணனார் என்று உள்ளது.  பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – இல் செறிக்கப்பட்ட தலைமகள் காவல் மிகுதியால் தலைவனை அடைய முடியாமையைக் கருதிய தோழி, தலைவி கூறியதுபோலக் கூறுவாளாய்த் தலைவியை நோக்கி, ‘ஊரும் துயிலாநின்றது. யாருமில்லை.  இக்காலத்து அவரை அடையப் பெறாதபடி இல் செறிப்புற்று அயலிலும் காவல் உடையாதாகியதன்றி ஊர் காவலர் மணியும் ஒலியாநிற்குமாதலின், யான் பொன்று நாள் இன்று தானோ’ என அழுங்கிக் கூறாநிற்பது.  ஒளவை துரைசாமி உரை – காப்பு மிகுதியால் இரவுக்குறிக்கண் கூட்டம் பெறாதொழிவது பற்றித் தலைவி எய்தக் கடவ ஆற்றாமையைத் தான் ஏறட்டுக் கொண்டு தோழி தலைமகளை ஆற்றவிக்கும் சூழ்ச்சியும், மதிநுட்பமும் வெளிப்பட விளங்குவது பெருங்கண்ணனாரது புலமையைப் பணிகொள்ளவும், இப்பாட்டுத் தோன்றுவதாயிற்று.  திருந்து வாய்ச் சுறவம் நீர் கான்று (2) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – திருந்திய வாயையுடைய சுறாமீன் நீரை கக்குதலாய்  ஒளவை துரைசாமி உரை, திருந்திய மனைக்கூரையின் மேல் சுறாமீனின் வாய்போல் செய்தமைத்த தூம்பு நீரைச் சொரிதலால்.  தலைவி கூறுவதுபோல் தோழி கூறுதல் – அகநானூறு 362, நற்றிணை 28, 98, 124, 132, 175, 178, 191, 211, 251, 292, கலித்தொகை 18, 70, குறுந்தொகை 236, 238, ஐங்குறுநூறு 45.

சொற்பொருள்:  பேர் ஊர் துஞ்சும் – பெரிய ஊரினர் உறங்குகின்றனர் (ஊர் ஆகுபெயர் ஊரில் வாழ்பவர்களுக்கு), யாரும் இல்லை – விழித்திருப்பவர்கள் யாரும் இல்லை, திருந்து வாய்ச் சுறவம் நீர் கான்று ஒய்யெனப் பெருந்தெரு உதிர்தரு பெயலுறு தண் வளி போர் அமை கதவப் புரைதொறும் தூவ – திருந்திய வாயையுடைய சுறா மீன்கள் நீரைக் கக்குவதால் அந்நீர் விரைவாகப் பெரிய தெருவில் உதிர்கின்ற மழையாகக் குளிர்ந்த காற்றுடன் ஒன்றி பொருந்திய இரட்டை வாயிற்கதவின் துளைகள்தோறும் தூவ (ஒய்யென – விரைவுக்குறிப்பு), கூர் எயிற்று எகினம் நடுங்கும் நல் நகர்ப் பயில் படை நிவந்த பல் பூஞ்சேக்கை அயலும் மாண் சிறையதுவே – கூரிய பற்களையுடைய நாய் நடுங்குகின்ற நல்ல மனையில் துயிலுமாறு உயர்ந்த மலர்கள் தூவிய படுக்கையின் பக்கத்திலும் மிகுந்த காப்புடையதாக உள்ளது (சிறையதுவே – ஏகாரம் அசைநிலை), அதன்தலைக் காப்புடை வாயில் போற்று ஓ என்னும் யாமம் கொள்பவர் நெடு நா ஒண் மணி ஒன்று எறி பாணியின் இரட்டும்  – அதற்குமேல் காவலை உடைய வாயிலைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள் ஓ என்று இரவுக் காவலர் நீண்ட நாக்கையுடைய ஒளியுடைய மணியை அடிக்கும் ஒலி தாளத்தில் ஒன்றியிருக்கும் ஒலிபோல் ஒலிக்கும், இன்று கொல் அளியேன் பொன்றும் நாளே – இன்று தானா இரங்கத்தக்கவளான நான் இறக்கும் நாள் (நாளே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 133, நற்றமனார், குறிஞ்சித் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
‘தோளே தொடி கொட்பு ஆனா, கண்ணே
வாள் ஈர் வடியின் வடிவு இழந்தனவே,
நுதலும் பசலை பாயின்று, திதலைச்
சில் பொறி அணிந்த பல் காழ் அல்குல்
மணி ஏர் ஐம்பால் மாயோட்கு’ என்று  5
வெவ்வாய்ப் பெண்டிர் கவ்வை தூற்ற,
நாம் உறு துயரம் செய்யலர் என்னும்
காமுறு தோழி, காதல் அம் கிளவி,
இரும்பு செய் கொல்லன் வெவ் உலைத் தெளித்த
தோய் மடல் சில் நீர் போல,  10
நோய் மலி நெஞ்சிற்கு ஏமம் ஆம் சிறிதே.

பாடல் பின்னணி:  வரைவிடை வைத்து பிரிவாற்றாளாகிய தலைவி, வற்புறுத்தும் தோழியிடம் கூறியது.

பொருளுரை:  விருப்பம் மிக்க தோழி!  “தோள்களில் அணிந்த வளையல்கள் கழன்று விழுதலைத் தடுப்பன அல்ல, வாளால் பிளக்கப்பட்ட மாவடு போன்ற கண்களும் அழகை இழந்தன, நெற்றியிலும் பசலை பரவியது, தேமல் சில புள்ளிகளாக உடைய பல வடங்களையுடைய அல்குலையும் நீலமணி போன்ற ஐந்துப் பகுதியாகப் பின்னப்பட்ட கூந்தலையும் உடைய மாந்தளிர் நிறமுடையவளுக்கு”, என்று கொடிய வாயையுடைய பெண்கள் பழிச் சொற்களைக் கூற, நாம் அடைந்த துயரத்தை அவர் செய்யவில்லை. என்னை ஆற்றுப்படுத்தும் உன்னுடைய அன்பு மிகுந்த இந்தச் சொற்கள், இரும்பு வேலை செய்யும் கொல்லன் வெப்பம் மிக்க உலையில் தெளித்த பனைமடலால் தோய்த்த சிறு அளவு நீர் வெப்பத்தைக் குறைப்பது போல் எனக்கு ஆறுதல் அளித்துத் துன்பநோய் மிகுந்த நெஞ்சிற்குச் சிறிது காவலாக இருக்கின்றது.

குறிப்பு:  ஒளவை துரைசாமி உரை – ‘மறைந்தவற் காண்டல்’ (தொல்காப்பியம், களவியல் 21) என்று தொடங்கும் நூற்பாவில் வரும் ‘கூறிய வாயில் கொள்ளாக் காலையும்’  என்பதற்கு இதனைக்காட்டி, இதனுள் ‘தோழி கூற்றை நன்கு மதியாது கூறினாள்’ என்பர் நச்சினார்க்கினியர்.  நாம் உறு துயரம் (7) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – அச்சம் மிகுகின்ற துன்பம்,  ஒளவை துரைசாமி உரை – நாம் பொறுத்தற்கரிய வருத்தம்.  மாவடுவைப் பிளந்தாற்போன்ற கண்கள் – அகநானூறு 29 – எஃகு உற்று இரு வேறு ஆகிய தெரிதகு வனப்பின் மாவின் நறுவடி போலக் காண்தொறும் மேவல் தண்டா மகிழ் நோக்கு உண்கண், நற்றிணை 133 – கண்ணே வாள் ஈர் வடியின் வடிவு, கலித்தொகை 64 – உற்ற இரும்பு ஈர் வடி அன்ன உண்கட்கும், கலித்தொகை 108 – இள மாங்காய் போழ்ந்தன்ன கண்ணினால், பரிபாடல் 7 – இரும்பு ஈர் வடி ஒத்து மை விளங்கும் கண்.  நீலமணிபோல் பெண்ணின் கூந்தல்:  அகநானூறு 8 – மணி ஏர் ஐம்பால், நற்றிணை 10 – மணியின் தாழ்ந்த நல் நெடுங்கூந்தல், நற்றிணை 133 – மணி ஏர் ஐம்பால், 214 – மணி இருங்கதுப்பு, 245 – மணி மருள் ஐம்பால், 337 – மணி மருள் ஐம்பால், 366 – மணி ஏர் ஐம்பால், 374 – வீழ் மா மணிய புனை நெடுங்கூந்தல், கலித்தொகை 22 – மணி ஒளி விட்டன்ன ஐவகை, கலித்தொகை 77 – மாசு அற மண்ணுற்ற மணி ஏசும் இருங்கூந்தல், பரிபாடல் 10, குறிஞ்சிப்பாட்டு 69 – பொன் எறி மணியின் சிறுபுறம் தாழ்ந்த எம் பின்னிருங் கூந்தல்.

சொற்பொருள்:  தோளே தொடி கொட்பு ஆனா – தோள்களில் அணிந்த வளையல்கள் கழன்று விழுதலைத் தடுப்பன அல்ல (தோளே – ஏகாரம் அசைநிலை), கண்ணே வாள் ஈர் வடியின் வடிவு இழந்தனவே – வாளால் பிளக்கப்பட்ட மாவடு போன்ற கண்களும் அழகை இழந்தன (இழந்தனவே – ஏகாரம் அசைநிலை), நுதலும் பசலை பாயின்று – நெற்றியிலும் பசலை பரவியது, திதலைச் சில் பொறி அணிந்த பல் காழ் அல்குல் மணி ஏர் ஐம்பால் மாயோட்கு – தேமல் சில புள்ளிகளாக உடைய பல வடங்களையுடைய அல்குலையும் நீலமணி போன்ற ஐந்துப் பகுதியாகப் பின்னப்பட்ட கூந்தலையும் உடைய மாந்தளிர் நிறமுடையவளுக்கு (அல்குல் – இடுப்பு, இடுப்பிற்குக் கீழ் உள்ள பகுதி), என்று வெவ்வாய்ப் பெண்டிர் கவ்வை தூற்ற – என்று கொடிய வாயையுடைய பெண்கள் பழிச் சொற்களைக் கூற, நாம் உறு துயரம் செய்யலர் – அச்சம் தரும் துன்பம் செய்பவர் அல்லர் (நாம் – அச்சம் என்னும் பொருள், உரிச்சொல்), நாம் அடைந்த துயரத்தை அவர் செய்யவில்லை, என்னும் காமுறு தோழி – என்ற விருப்பம் மிக்க தோழி, காதல் அம் கிளவி – அன்பு மிகுந்த இந்தச் சொற்கள், இரும்பு செய் கொல்லன் வெவ் உலைத் தெளித்த தோய் மடல் சில் நீர் போல நோய் மலி நெஞ்சிற்கு ஏமம் ஆம் சிறிதே – இரும்பு வேலை செய்யும் கொல்லன் வெப்பம் மிக்க உலையில் தெளித்த பனைமடலால் தோய்த்த சிறு அளவு நீர் வெப்பத்தைக் குறைப்பது போல் துன்பநோய் மிகுந்த நெஞ்சிற்குச் சிறிது காவலாக இருக்கின்றது (சிறிதே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 134, பாடியவர் பெயர் கிடைக்கவில்லை, குறிஞ்சித் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
‘இனிதின் இனிது தலைப்படும்’ என்பது
இது கொல்? வாழி தோழி! காதலர்
பெறுகுறி செய்த வரையகச் சிறு தினைச்
செவ்வாய்ப் பாசினம் கடீஇயர், ‘கொடிச்சி!
அவ்வாய்த் தட்டையொடு கவணை கொள்கென’ 5
ஏவினன் மன்னே நுந்தை, யாயும்,
‘அம் மா மேனி ஆய்தொடிக் குறுமகள்!
செல்லாயோ நின் முள் எயிறு உண்கு’ என,
மெல்லிய இனிய கூறலின்,
ஒல்லேன் போல உரையாடுவலே.  10

பாடல் பின்னணி:  ‘இற்செறிப்பார்’ என ஆற்றாளாய தலைவியை, ‘அஃது இலர்’ என்பதுபடத் தோழி சொல்லியது.

பொருளுரைநீடு வாழ்வாயாகத் தோழி!  இனிதாகிய ஒன்றை நுகருங்கால் இனியது மேலும் நிகழும் எனச் சான்றோர் கூறுவது இது தானோ?  நம் தலைவர் உன்னைக் காண வருவதற்குக் குறி செய்த மலையிடத்தில் உள்ள சிறுதினை உள்ள புனத்தில் சிவந்த வாயையுடைய பச்சைக்கிளிகளை விரட்டும் பொருட்டு, “குறிஞ்சிநிலத்தின் பெண்ணே! அழகிய மூங்கில் தட்டையுடன் கவணையும் கொண்டு செல்க” என ஏவினான் உன் தந்தை.  நின் தாயும், “அழகிய மாந்தளிர் போன்ற மேனியையும் ஆராய்ந்த (அழகிய) தொடியையுமுடைய இளையவளே! செல்வாயாக!  நின் முள்போலும் பற்களையுடைய வாயில் முத்தம் கொள்வேனாக” என்று மெல்லிய சொற்களால் இனிமையாகக் கூறினாள்.  அதற்கு உடன்படாதவள் போல் நான் சில சொற்களைக் கூறினேன்.

குறிப்பு:  இப்பாடல் ஒளவை துரைசாமி உரையில் உள்ள பாடல்.  பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் உரையிலிருந்து சிறிது மாறுபாடு உடையது.  நின் முள் எயிறு உண்கு (8) – பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் உரையில் – ‘அம் மா மேனி நிரைதொடிக் குறுமகள்!  செல்லாயோ நின் முள் எயிறு உண்கு’ என்பது தந்தையின் சொற்களாக உள்ளன.  ஒளவை துரைசாமி உரையில் அவை தாயின் சொற்களாக உள்ளன.  ஒப்புமை:  நற்றிணை 206 – அவ்வாய்த் தட்டையும் புடைத்தனை கவணையும் தொடுக்க என எந்தை வந்து உரைத்தனனாக.  இனிதின் இனிது தலைப்படும் (1) – ஒளவை துரைசாமி உரை – இனியதொன்று நுகரப்படுங்கால் இனிய ஒன்று மேலும் தொடர்ந்து தோன்றும், கு. வெ. பாலசுப்பிரமணியன் உரை – இனியவை யாவற்றிலும் இனிதாய் அடையத்தக்கதாய் இருக்கிறது, H. வேங்கடராமன் உரை – இனிய ஒரு பொருளைக் காட்டிலும் இனிமையானது வந்துறும், ச. வே. சுப்பிரமணியன் உரை – இனிமையிலும் இனியதாக அமைகின்றது.  அம் மா மேனி (7) – H. வேங்கடராமன் உரை, ஒளவை துரைசாமி உரை – அழகிய மாந்தளிர் போன்ற மேனி.  எயிறு உண்கு (8) – ஒளவை துரைசாமி உரை – முத்தம் கொள்ளுதலை எயிறுண்டல் என்பது மரபு, பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – நின் முள் எயிற்றை முத்தங்கொள்வல்.  பிற பாடல்களில் எயிறு உண்ணுதல் – நற்றிணை 17 – நின் இலங்கு எயிறு உண்கு, நற்றிணை 204 – மடந்தை நின் கூர் எயிறு உண்கு, அகநானூறு 325 – வெய்ய மன்ற நின் வை எயிறு உணீஇய, கலித்தொகை 112 – மெல்ல முயங்கு நின் முள் எயிறு உண்கும்.  மன் – கழிவே ஆக்கம் ஒழியிசைக் கிளவி என்று அம் மூன்று என்ப மன்னைச் சொல்லே (தொல்காப்பியம், இடையியல் 4).

சொற்பொருள்:  இனிதின் இனிது தலைப்படும் என்பது இது கொல் – இனிதாகிய ஒன்றை நுகருங்கால் இனியது மேலும் நிகழும் எனச் சான்றோர் கூறுவது இது தானோ, வாழி தோழி – நீடு வாழ்வாயாகத் தோழி, காதலர் பெறுகுறி செய்த வரையகச் சிறு தினைச் செவ்வாய்ப் பாசினம் கடீஇயர் – நம் தலைவர் உன்னைக் காண வருவதற்குக் குறி செய்த மலையிடத்தில் உள்ள சிறுதினை உள்ள புனத்தில் சிவந்த வாயையுடைய பச்சைக்கிளிகளை விரட்டும் பொருட்டு (கடீஇயர் – செய்யுளிசை அளபெடை), கொடிச்சி – குறிஞ்சிநிலத்தின் பெண்ணே (அண்மை விளி), அவ்வாய்த் தட்டையொடு கவணை கொள்கென ஏவினன் மன்னே நுந்தை – அழகிய மூங்கில் தட்டையுடன் கவணையும் கொண்டு செல்க என ஏவினான் உன் தந்தை (அவ்வாய் – அழகு அமைந்த, மன்னே – மன் ஏ அசைநிலைகள்), யாயும் – நின் தாயும், அம் மா மேனி ஆய்தொடிக் குறுமகள் – அழகிய மாந்தளிர் போன்ற மேனியையும் ஆராய்ந்த (அழகிய) தொடியையுமுடைய இளையவளே (குறுமகள் – அண்மை விளி), செல்லாயோ நின் முள் எயிறு உண்கு என மெல்லிய இனிய கூறலின் – செல்வாயாக நின் முள்போலும் பற்களையுடைய வாயில் முத்தம் கொள்வேனாக என்று மெல்லிய சொற்களால் இனிமையாகக் கூறியதால், ஒல்லேன் போல உரையாடுவலே – உடன்படாதவள் போல் நான் சில சொற்களைக் கூறினேன் (உரையாடுவலே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 135, கதப்பிள்ளையார், நெய்தல் திணை – தோழி தலைவியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
தூங்கல் ஓலை ஓங்கு மடல் பெண்ணை
மா அரை புதைத்த மணன் மலி முன்றில்,
வரையாத் தாரம் வருவிருந்து அயரும்
தண் குடி வாழ்நர் அம் குடிச் சீறூர்
இனிது மன் அம்ம தானே, பனிபடு  5
பல் சுரம் உழந்த நல்கூர் பரிய,
முழங்கு திரைப் புது மணல் அழுந்தக் கொட்கும்
வால் உளைப் பொலிந்த புரவித்
தேரோர் நம்மொடு நகாஅ ஊங்கே.

பாடல் பின்னணி:  தலைவன் வரையாது நீட்டிப்பதால் ஊரார் பழி கூறுவர் எனத் தோழி வருந்தித் தலைவியிடம் உரைத்தது.

பொருளுரை:  தோழி!  நான் கூறுவதை நீ கேட்பாயாக!  தொங்குகின்ற ஓலைகளையும் நீண்ட மடல்களையுமுடைய பனையின் கரிய அடிமரப் பகுதி புதையுமாறு மணல் மிகுந்த முற்றத்தில் எல்லையின்றி உணவுப் பண்டங்களை வரும் விருந்தினர்களுக்குப் பகுத்துக் கொடுக்கும் குளிர்ந்த குடியில் வாழ்க்கை உடையவர்கள் வாழும் அழகிய குடியிருப்பை உடைய சிற்றூர் இனிமையாக இருந்தது, குளிர்ச்சி பொருந்திய பல காடுகளைக் கடந்ததால் வருந்திய, வலிமை குறைந்த செல்லுதல் உடைய ஒலிக்கும் அலைகள் குவித்த புது மணலில் கால்கள் (சக்கரங்கள்) அழுத்திச் செல்ல இயலாது சுழலும், வெள்ளை பிடரி மயிர் பொலிந்த குதிரைகள் பூட்டிய தேரை உடைய தலைவர் நம்முடன் மகிழ்வதற்கு முன்பு.

குறிப்பு:  நகாஅ – செய என்னும் வாய்பாட்டு வினையெச்சம்.  அம்ம – அம்ம கேட்பிக்கும் (தொல்காப்பியம், இடையியல் 28).  மன் – கழிவே, ஆக்கம், ஒழியிசைக் கிளவி, என்று அம் மூன்று என்ப மன்னைச் சொல்லே (தொல்காப்பியம், இடையியல் 4).

சொற்பொருள்:  தூங்கல் ஓலை ஓங்கு மடல் பெண்ணை மா அரை புதைத்த மணன் மலி முன்றில் – தொங்குகின்ற ஓலைகளையும் நீண்ட மடல்களையுமுடைய பனையின் கரிய அடிமரப் பகுதி புதையுமாறு மணல் மிகுந்த முற்றம் (முன்றில் – இல்முன்), வரையாத் தாரம் வருவிருந்து அயரும் தண் குடி வாழ்நர் அம் குடிச் சீறூர் இனிது மன் – எல்லையின்றி உணவுப் பண்டங்களை வரும் விருந்தினர்களுக்குப் பகுத்துக் கொடுக்கும் குளிர்ந்த குடியில் வாழ்க்கை உடையவர்கள் வாழும் அழகிய குடியிருப்பை உடைய சிற்றூர் இனிமையாக இருந்தது (மன் – ஒழியிசை), அம்ம – கேட்பாயாக (கேட்பித்தல் பொருளில் வந்த இடைச்சொல்), தானே – அதுவே (ஏகாரம் பிரிநிலை), பனிபடு பல் சுரம் உழந்த நல்கூர் பரிய முழங்கு திரைப் புது மணல் அழுந்தக் கொட்கும் வால் உளைப் பொலிந்த புரவித் தேரோர் நம்மொடு நகாஅ ஊங்கே – குளிர்ச்சி பொருந்திய பல காடுகளைக் கடந்ததால் வருந்திய வலிமை குறைந்த செல்லுதல் உடைய ஒலிக்கும் அலைகள் குவித்த புது மணலில் கால்கள் (சக்கரங்கள், உருளைகள், ஆழிகள்) அழுத்திச் செல்ல இயலாது சுழலும் வெள்ளை பிடரி மயிர் பொலிந்த குதிரைகள் பூட்டிய தேரை உடைய தலைவர் நம்முடன் மகிழ்வதற்கு முன்பு (நகாஅ – செய்யுளிசை அளபெடை, ஊங்கே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 136, நற்றங்கொற்றனார், குறிஞ்சித் திணை – தலைவி தோழியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
திருந்து கோல் எல் வளை வேண்டி யான் அழவும்,
அரும் பிணி உறுநர்க்கு வேட்டது கொடாஅது
மருந்து ஆய்ந்து கொடுத்த அறவோன் போல,
என் ஐ வாழிய, பலவே பன்னிய
மலை கெழு நாடனொடு நம்மிடைச் சிறிய  5
தலைப்பிரிவு உண்மை அறிவான் போல,
நீப்ப நீங்காது வரின் வரை அமைந்து
தோள் பழி மறைக்கும் உதவிப்
போக்கு இல் பொலந்தொடி செறீஇயோனே.

பாடல் பின்னணி:  களவு ஒழுக்கத்தில் தலைவன் பிரிவால் வருந்தும் தலைவி, தன் மேனி வேறுபடுவதை உணர்ந்து, தலைவன் அவளை மணம் புரிய வேண்டும் என்று கருதினாள்.  அவன் அருகில் இருப்பதை அறிந்து இவ்வாறு உரைக்கின்றாள்.  தலைவன் பிரிதலால் மெலிந்த தலைவிக்கு அவளுடைய தந்தை இறுக்கமான வளையல்களைத் தந்தார்.  அது ஊராரின் அலரைத் தடுத்தது என்று தலைவி தோழியிடம் கூறியது.

பொருளுரைஅழகான திரண்ட ஒளியுடைய வளையல்களை விரும்பி, அவை வேண்டும் என்று நான் அழவும், நோயுற்றவர்களுக்கு அவர்கள் வேண்டியது கொடுக்காமல் நல்ல மருந்தை ஆராய்ந்து கொடுத்த மருத்துவன் போல, என் தந்தை, பலராலும் புகழப்பெற்ற மலைகள் பொருந்திய நாட்டையுடைய என்னுடைய தலைவனுடன் எனக்கு ஏற்பட்ட சிறிய பிரிவு உண்மையை அறிந்தவன் போன்று, கழற்றினாலும் கழன்று நீங்காது, தன் எல்லையில் தங்கி என் தோளின் பழியை மறைக்கின்ற, எனக்கு உதவும், கலப்பு இல்லாத பொன்னாலாகிய தோள் வளையல்களைத் தந்து இறுக்கமாக இருக்குமாறு செய்தான்.  அவன் பல்லாண்டு வாழ்வானாக!

குறிப்பு:  ஒளவை துரைசாமி உரை – தமது களவு நெறி தாயர் தந்தையர்க்கு புலனாகும் நிலையில் பெருகிப் பிறர் அலர் கூறும் அளவிற் சிறந்தமை கூறி, இது கண்டும் தலைமகன் வரைந்து கோடாமை நினையாது ஒழுகல் நன்றன்று எனக் குறிப்பால் தலைவி வரைவு கடாயினமை காண்க.  எல் – எல்லே இலக்கம் (தொல்காப்பியம், இடையியல் 21).

சொற்பொருள்:  திருந்து கோல் – திருத்தமான திரண்ட, அழகான திரண்ட, எல் வளை வேண்டி யான் அழவும் – ஒளியுடைய வளையல்களை விரும்பி வேண்டும் என்று நான் அழவும், அரும் பிணி உறுநர்க்கு வேட்டது கொடாஅது – நோயுற்றவர்களுக்கு அவர்கள் வேண்டியது கொடுக்காமல் (கொடாஅது –அளபெடை), மருந்து ஆய்ந்து கொடுத்த அறவோன் போல – மருந்தை ஆராய்ந்து கொடுத்த மருத்துவன் போல, என் ஐ வாழிய – என் தந்தை பல்லாண்டு வாழ்வானாக, பலவே பன்னிய – பலராலும் புகழப்பெற்ற, மலை கெழு நாடனொடு – மலைகள் பொருந்திய நாட்டையுடைய தலைவனுடன், நம்மிடைச் சிறிய தலைப்பிரிவு உண்மை அறிவான் போல – சிறிதளவு அவன் பிரிகின்றதன் உண்மையை அறிந்தவன் போன்று, நீப்ப நீங்காது – கழற்றினாலும் கழன்று நீங்காது, வரின் வரை அமைந்து – தன் எல்லையில் தங்கி, தோள் பழி மறைக்கும் – தோளின் பழியை மறைக்கின்ற, உதவி – உதவியையுடைய, போக்கு இல் – கலப்பு இல்லாத, பொலந்தொடி செறீஇயோனே – பொன்னாலாகிய தோள் வளையல்களை தந்து செறிக்கச் செய்தான் (செறீஇயோனே – இறுக்கமாக இருக்குமாறு செய்தான், செய்யுளிசை அளபெடை, ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 137, பெருங்கண்ணனார், பாலைத் திணை – தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது
தண்ணிய கமழும் தாழ் இருங்கூந்தல்,
தட மென் பணைத்தோள், மட நல்லோள் வயின்
பிரியச் சூழ்ந்தனை ஆயின், அரியது ஒன்று
எய்தினை, வாழிய நெஞ்சே, செவ்வரை
அருவி ஆன்ற நீர் இல் நீள் இடைக்,  5
கயந்தலை மடப் பிடி உயங்கு பசி களைஇயர்
பெருங்களிறு தொலைத்த முடத் தாள் ஓமை
அருஞ்சுரம் செல்வோர்க்கு அல்கு நிழல் ஆகும்,
குன்ற வைப்பின் கானம்
சென்று, சேண் அகறல் வல்லிய நீயே.  10

பாடல் பின்னணி:  வினைவயிற் பிரிந்து செல்லக் கருதும் தலைவன் தன் நெஞ்சிடம் கூறியது.

பொருளுரை:  குளிர்ந்த மணம் கமழும் தாழ்ந்த கரிய கூந்தலையும் பெரிய மெல்லிய மூங்கில் போன்ற தோள்களையும் இளமையையும் உடைய நல்லவளை விட்டு நீ பிரிய எண்ணினாய் ஆயின் அடைவதற்கு அரியது ஒன்றை நீ அடைந்து விட்டாய்.  நீ வாழ்வாயாக என் நெஞ்சே! செம்மையான மலையின் அருவி வற்றியதால் நீர் இல்லாது ஆகிய நீண்ட வழியில் பெரிய மெல்லிய தலையையுடைய இளம் பெண்யானையின் வருத்தும் பசியை நீக்கும் பொருட்டுப் பெரிய களிற்று யானை முறித்த வளைந்த அடியையுடைய ஓமை மரம் அரிய பாலை நிலத்தில் செல்பவர்களுக்குத் தங்கும் நிழல் ஆகும், குன்றுகளை இடையில் கொண்ட காட்டைக் கடந்து நெடுந்தொலைவு போக எண்ணிய, நீ வலிமை உடையை ஆவாய்!

குறிப்பு:  அரியது (3) – ஒளவை துரைசாமி உரை – அருமை வாய்ந்த ஒன்று, கு. வெ. பாலசுப்பிரமணியன் உரை – இவளினும் சிறந்ததாகதொரு பொருள்.  செவ்வரை அருவி ஆன்ற (5) – ஒளவை துரைசாமி உரை – செவ்விய மலையினின்று அருவி வற்றினமையின், பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை, H. வேங்கடராமன் உரை – செவ்விய மலையருவியின்கண்.  உள்ளுறை – கு. வெ. பாலசுப்பிரமணியன் உரை – பிடி யானைக்காக களிறு முறித்து வீழ்த்திய ஓமை மரம் பாலை நில வழிச் செல்வார்க்குத் தங்கும் நிழலாகும் என்றது, பொருளின் பொருட்டு நின்னால் பிரியப் பெறும் தலைவி நலம் கெடப் பசலை பரந்து தங்குமாறு ஆகும்.  ஓமை வாடுவது போல வாடி நிற்கும் என்ற கருத்தினை உள்ளுறுத்தியும் மொழியப்பட்டது.  தட – தடவும் கயவும் நளியும் பெருமை (தொல்காப்பியம், உரியியல் 24), அவற்றுள், தட என் கிளவி கோட்டமும் செய்யும் (தொல்காப்பியம், உரியியல் 25).  பிடி – பிடி என் பெண் பெயர் யானை மேற்றே (தொல்காப்பியம், மரபியல் 52).

சொற்பொருள்:  தண்ணிய கமழும் தாழ் இருங்கூந்தல் தட மென் பணைத்தோள் மட நல்லோள் வயின் பிரியச் சூழ்ந்தனை ஆயின் அரியது ஒன்று எய்தினை – குளிர்ந்த மணம் கமழும் தாழ்ந்த கரிய கூந்தலையும் பெரிய மெல்லிய மூங்கில் போன்ற தோள்களையும் இளமையையும் உடைய நல்லவளை விட்டு நீ பிரிய எண்ணினாய் ஆயின் அடைவதற்கு அரியது ஒன்றை நீ அடைந்து விட்டாய், வாழிய நெஞ்சே – நீ வாழ்வாயாக நெஞ்சே, செவ்வரை அருவி ஆன்ற நீர் இல் நீள் இடைக் கயந்தலை மடப் பிடி உயங்கு பசி களைஇயர் பெருங்களிறு தொலைத்த முடத் தாள் ஓமை அருஞ்சுரம் செல்வோர்க்கு – செம்மையான மலையின் அருவி வற்றியதால் நீர் இல்லாது ஆகிய நீண்ட வழியில் பெரிய மெல்லிய தலையையுடைய இளம் பெண்யானையின் வருத்தும் பசியை நீக்கும் பொருட்டுப் பெரிய ஆண் யானை முறித்த வளைந்த அடியையுடைய ஓமை மரம் அரிய பாலை நிலத்தில் செல்பவர்களுக்கு (களைஇயர் – சொல்லிசை அளபெடை, ஓமை மரம் – Toothbrush tree, Dillenia indica), அல்கு நிழல் ஆகும் – தங்கும் நிழல் ஆகும், குன்ற வைப்பின் கானம் சென்று சேண் அகறல் வல்லிய நீயே – குன்றுகளை இடையில் கொண்ட காட்டைக் கடந்து நெடுந்தொலைவு போக எண்ணிய நீ வலிமை உடையை ஆவாய் (நீயே – ஏகாரம் அசைநிலை

நற்றிணை 138, அம்மூவனார், நெய்தல் திணை – தோழி தலைவியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
உவர் விளை உப்பின் குன்று போல் குப்பை
மலை உய்த்துப் பகரும் நிலையா வாழ்க்கைக்,
கணம் கொள் உமணர் உயங்குவயின் ஒழித்த
பண் அழி பழம் பார் வெண்குருகு ஈனும்
தண்ணந்துறைவன், முன் நாள் நம்மொடு  5
பாசடைக் கலித்த கணைக் கால் நெய்தல்
பூவுடன் நெறிதரு தொடலை தைஇக்,
கண் அறிவு உடைமை அல்லது நுண் வினை
இழை அணி அல்குல் விழவு ஆடு மகளிர்
முழங்கு திரை இன் சீர் தூங்கும்  10
அழுங்கல் மூதூர் அறிந்தன்றோ இன்றே.

பாடல் பின்னணி:  ‘அலர் ஆயிற்று’ என ஆற்றாளாகிய தலைவியிடம் தோழி கூறியது.  வரைவு கடாயது.

பொருளுரை:  உவர் நிலத்தில் விளையும் உப்பின் குன்று போன்ற குவியலை மலை நாட்டிற்குச் சென்று விற்கும் நிலையில்லாத வாழ்க்கை உடைய கூட்டமாகச் செல்லும் உப்பு வணிகர்கள், வண்டியின் பாரம் தாங்க முடியாமல் நீக்கி விட்டுச்சென்ற இயல்பு கெட்ட பழைய நெடுஞ்சட்டத்தில் வெள்ளை குருகு முட்டையை ஈனும், குளிர்ந்த அழகிய கடற்கரையின் தலைவன், முன்னொரு நாளில் நம்முடன் பசிய இலைகளிலிருந்து தழைத்து வெளியில் வந்த திரண்ட தண்டையுடைய நெய்தல் மலர்களுடன் புற இதழ்கள் உடைக்கப்பட்டுத் தொடுத்த மாலையை நினக்கு அணிவித்ததைக் கண்டு அறிந்தது அன்றி, நுண்ணிதாக இயற்றப்பட்ட அணிகலன்களை அணிந்த அல்குலையுடைய, விழாக்களில் மகளிர் துணங்கையாடும்பொழுது ஒலிக்கும் இனிய தாளத்திற்கு ஏற்ப கடல் அலைகள் முழங்கும் ஆரவாரத்தையுடைய இந்தப் பண்டைய ஊர், வேறு ஒன்றையும் அறிந்தது இல்லை. நீ ஆற்றாது வருந்துவது எதனால்?

குறிப்பு:  மலரின் புறவிதழ் நீக்குதல் – புறநானூறு 116 – முழு நெறி, கலித்தொகை 143 – நெய்தல் நெறிக்க, குறுந்தொகை 80 – முழு நெறி, நற்றிணை 138 – பூவுடன் நெறிதரு.  தொடலை தைஇ (7) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – தொடுத்த மாலையை நினக்குச் சூட்ட, ஒளவை துரைசாமி உரை – தொடுக்கப்பட்ட மாலையை வண்டல் பாவைக்குச் சூட்டிய.  குறுந்தொகை 142 – உ. வே. சாமிநாதையர் உரை – மாலையைக் கட்டி.  முழங்கு திரை இன் சீர் தூங்கும் (10) – ஒளவை துரைசாமி உரை – கூத்தின் இனிய காலத்திற்கேற்ப முழங்குகின்ற கடலலைகள் ஒலிக்கும், பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – துணங்கையாடும் மகளிரினுடைய இனிய தாள அறுதி முழங்குங் கடலோசை போலே பரவாநிற்கும்.  உள்ளுறை – ஒளவை துரைசாமி உரை – உமணர் ஒழித்த பழம்பாரின் பண்ணழிவு கண்டு வெண்குருகு முட்டையிட்டு வாழும் என்றதால், தலைமகனால் வரைவு நீட்டிக்கப்பட்ட தலைவியது மேனி வேறுபாடு கண்டு, ஊரவர் அலர் கூறுகின்றனர் என்பது.  இறைச்சி – ஒளவை துரைசாமி உரை – மகளிர் ஆடும் துணங்கை இன்சீர்க்கேற்பக் கடலலை ஒலிக்கும் என்றது, வரைவு நிகழுந்துணையும் இவ்வூர் அலர் உரைக்கும் என்றவாறு.  அழுங்கல் – கம்பலை சும்மை கலியே அழுங்கல் என்று இவை நான்கும் அரவப் பொருள (தொல்காப்பியம், உரியியல் 53).

சொற்பொருள்:  உவர் விளை உப்பின் குன்று போல் குப்பை மலை உய்த்துப் பகரும் நிலையா வாழ்க்கைக் கணம் கொள் உமணர் உயங்குவயின் ஒழித்த பண் அழி பழம் பார் வெண்குருகு ஈனும் தண்ணந்துறைவன் – உவர் நிலத்தில் விளையும் உப்பின் குன்று போன்ற குவியலை மலை நாட்டிற்குச் சென்று விற்கும் நிலையில்லாத வாழ்க்கை உடைய கூட்டமாக உள்ள உப்பு வணிகர்கள் பாரம் தாங்க முடியாமல் நீக்கி விட்டுச்சென்ற இயல்பு கெட்ட பழைய நெடுஞ்சட்டத்தில் வெள்ளை குருகு முட்டையை ஈனும் குளிர்ந்த அழகிய கடற்கரையின் தலைவன் (தண்ணந்துறைவன் – தண்டுறைவன் என்பது தண்ணந்துறைவன் ஆவது, அம் – சாரியை, விரிக்கும் வழி விரித்தல்), முன் நாள் நம்முடன் பாசடைக் கலித்த கணைக் கால் நெய்தல் பூவுடன் நெறிதரு தொடலை தைஇ – முன்னொரு நாளில் பசிய இலைகளிலிருந்து தழைத்து வெளியில் வந்த திரண்ட தண்டையுடைய நெய்தல் மலர்களுடன் புற இதழ்கள் உடைக்கப்பட்டுத் தொடுத்த மாலையை அணிவித்து (தைஇ – சொல்லிசை அளபெடை), கண் அறிவு உடைமை அல்லது – கண்ணால் அறிந்தது அன்றி, நுண் வினை இழை அணி அல்குல் – நுண்ணிதாக இயற்றப்பட்ட அணிகலன்களை அணிந்த அல்குலையுடைய (அல்குல் – இடுப்பு, இடுப்பிற்குக் கீழ் உள்ள பகுதி), விழவு ஆடு மகளிர் முழங்கு திரை இன் சீர் தூங்கும் அழுங்கல் மூதூர் – விழாக்களில் துணங்கையாடும் மகளிர் ஒலிக்கும் அலைகள் இனிய தாளத்திற்கு ஏற்ப முழங்கும் ஆரவாரத்தையுடைய இந்தப் பண்டைய ஊர், அறிந்தன்றோ இன்றே – வேறு ஒன்றையும் அறிந்தது இல்லை (இன்றே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 139, பெருங்கௌசிகனார், முல்லைத் திணை – தலைவன் முகிலிடம் சொன்னது
உலகிற்கு ஆணியாகப் பலர் தொழப்,
பல வயின் நிலைஇய குன்றின் கோடுதோறு
ஏயினை உரைஇயரோ, பெருங்கலி எழிலி!
படுமலை நின்ற நல் யாழ் வடி நரம்பு
எழீஇயன்ன உறையினை! முழவின்  5
மண் ஆர் கண்ணின் இம்மென இமிரும்
வணர்ந்து ஒலி கூந்தல் மாயோளொடு
புணர்ந்து இனிது நுகர்ந்த சாரல் நல் ஊர்
விரவு மலர் உதிர வீசி,
இரவுப் பெயல் பொழிந்த உதவியோயே.  10

பாடல் பின்னணி:  தலைவன் வினை முற்றி வந்து தலைவியுடன் இருக்கும்பொழுது முகிலை வாழ்த்தியது.

பொருளுரை:  பெரிய முழக்கத்தை உடைய முகிலே!  முரசின் மார்ச்சனை அமைந்த கண்போல் ஒலிக்கும் இடியோசையுடன், நெறித்துத் தழைத்த கூந்தலுடைய மாமை நிறத்தையுடைய தலைவியுடன் யான் கூடி அவள் நலனை இனிதாக நுகரும்படி மலைச்சரிவில் உள்ள ஊரில் பலவகையான மலர்கள் உதிரும்படி மோதி இரவில் மழையாக விழுந்து உதவினாய்.  நிலைபெற்ற நல்ல யாழின் முறுக்கிய நரம்பிலிருந்து படுமலை என்ற பண்ணினை எழுப்பினாற்போன்ற ஓசையுடன், உலகம் என்னும் தேர்க்கு அச்சாணியாகப் பலரும் தொழுமாறு பல இடங்களில் நிலைபெற்று இருக்கும் குன்றுகளின் உச்சிதோறும் நன்கு பொருந்தி உலாவுவாயாக!

குறிப்பு:  ஆணி (1) – ஒளவை துரைசாமி உரை – உலகாகிய தேர்க்கு அச்சாணியாய், பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – இவ்வுலகத்தோர் ஆதாரமாக.  படுமலை (4) – ஒளவை துரைசாமி உரை – படுமலை பாலைப் பண் வகை ஏழனுள் ஒன்று.  அவை ஏழும் செம்பாலை, படுமலைப்பாலை, செவ்வழிப்பாலை, அரும்பாலை, கோடிப்பாலை, விளரிப்பாலை, மேற்செம்பாலை என வரும்.

சொற்பொருள்:  உலகிற்கு ஆணியாகப் பலர் தொழப் பல வயின் நிலைஇய குன்றின் கோடுதோறு ஏயினை உரைஇயரோ – உலகம் என்னும் தேர்க்கு அச்சாணியாகப் பலரும் தொழுமாறு பல இடங்களில் நிலைபெற்று இருக்கும் குன்றுகளின் உச்சிதோறும் நன்கு பொருந்தி உலாவுவாயாக (நிலைஇய – அளபெடை, ஏயினை – நீ பொருந்தி, உரைஇயரோ – வியங்கோள் வினைமுற்று, அளபெடை, ஓகாரம் அசைநிலை), பெருங்கலி எழிலி – பெரிய முழக்கத்தை உடைய முகிலே (அண்மை விளி), படுமலை நின்ற நல் யாழ் வடி நரம்பு எழீஇயன்ன உறையினை – படுமலை என்ற பண்ணினை எழுப்பினாற்போன்ற நிலைபெற்ற நல்ல யாழின் முறுக்கிய நரம்பிலிருந்து ஓசையுடன் பெய்யும் மழையை உடையை ஆகி (எழீஇ – செய்யுளிசை அளபெடை), முழவின் மண் ஆர் கண்ணின் இம்மென இமிரும் – முரசின் மார்ச்சனை அமைந்த கண்போல் ஒலிக்கும் (இம்மென – ஒலிக்குறிப்பு), வணர்ந்து ஒலி கூந்தல் மாயோளொடு புணர்ந்து இனிது நுகர்ந்த சாரல் நல் ஊர் விரவு மலர் உதிர வீசி இரவுப் பெயல் பொழிந்த உதவியோயே – நெறித்துத் தழைத்த கூந்தலுடைய மாமை நிறத்தையுடைய தலைவியுடன் யான் கூடி அவள் நலனை இனிதாக நுகரும்படி மலைச்சரிவில் உள்ள ஊரில் பலவகையான மலர்கள் உதிரும்படி மோதி இரவில் மழையாக விழுந்து உதவினாய் (வணர் – வளைவு, நெறிப்பு, உதவியோயே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 140, பூதங்கண்ணனார், குறிஞ்சித் திணை – தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது
கொண்டல் மா மழை குடக்கு ஏர்பு குழைத்த
சிறு கோல் இணர பெருந்தண் சாந்தம்
வகை சேர் ஐம்பால் தகை பெற வாரிப்,
புலர்விடத்து உதிர்த்த துகள்படு கூழைப்
பெருங்கண் ஆயம் உவப்ப, தந்தை  5
நெடுந்தேர் வழங்கும் நிலவு மணல் முற்றத்துப்,
பந்தொடு பெயரும் பரிவிலாட்டி
அருளினும் அருளாள் ஆயினும், பெரிது அழிந்து
பின்னிலை முனியல்மா நெஞ்சே, என்னதூஉம்
அருந்துயர் அவலம் தீர்க்கும்  10
மருந்து பிறிது இல்லை யான் உற்ற நோய்க்கே.

பாடல் பின்னணி:  குறை மறுக்கப்பட்ட தலைவன் ஆற்றாமையைத் தன் நெஞ்சிடம் உரைத்தது.

பொருளுரை:  என் நெஞ்சே!  கீழ்காற்றுக் கொண்டு வந்த கரிய மழை முகில்கள் மேற்திசைக்கு எழுந்துச் செல்வதால் தழைத்த சிறிய கிளைகளில் பூங்கொத்துக்கள் உடைய பெரிய குளிர்ந்த சந்தன மரத்தின் துண்டுகளுடன், பலவகையான பொருள்களையும் சேர்த்துச் செய்த குழம்பினைப் பூசிய ஐந்து பகுதியாக உள்ள கூந்தலை அழகாக வாரி அச்சாந்தம் காய்ந்து உதிர்ந்த துகள் பொருந்திய கூந்தலையும் பெரிய கண்களையுமுடைய தோழிகள் மகிழுமாறு, தன் தந்தையின் உயர்ந்த தேர் ஓடும் நிலவின் ஒளி போன்ற வெள்ளை மணலையுடைய இல்லத்தின் முற்றத்தில் பந்துடன் செல்லும் அன்பில்லாத நம் தலைவி அருள் புரிந்தாளாயினும் அருள் புரியாவிட்டாலும், நீ பெரிதாக மனம் அழிந்து, இரந்து, பின் வெறுப்பு அடையாதே.  எத்துணையும் பெருந்துயர் தீர்க்கும் மருந்து அவள் அன்றி வேறு எதுவும் இல்லை யான் அடைந்த இக்காதல் நோய்க்கு.

குறிப்பு:  கொண்டல் (1) – ஒளவை துரைசாமி உரை – கீழ்காற்று, பொ. வே. சோமசுந்தரனார் உரை – கீழ்காற்று, பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – நீரை முகந்து கொள்ளுதலையுடைய.  நிலவு மணல்: அகநானூறு 20 – நிலவு மணல், அகநானூறு 200 – நிலாவின் இலங்கு மணல் மலி மறுகில், நற்றிணை 31 – நிலவு மணல், நற்றிணை 140 – நிலவு மணல், நற்றிணை 159 – நிலவுக் குவித்தன்ன மோட்டு மணல், நற்றிணை 183 – நிலவு மணல், குறுந்தொகை 123 – நிலவுக் குவித்தன்ன வெண்மணல், கலித்தொகை 13 – வாள் நிலா ஏய்க்கும் வயங்கு ஒளி எக்கர், புறநானூறு 17 – நிலவு மணல் வியன் கானல், பொருநராற்றுப்படை 213 – நிலவு எக்கர், மதுரைக்காஞ்சி 114 – நிலவுக் கானல்.  துகள்படு கூழை (4) – ஒளவை துரைசாமி உரை – நுண்ணிய துகள் படிந்து தோன்றும் கூந்தல், பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – சாந்தம் பூசிய கூந்தல், H. வேங்கடராமன் உரை – ஐந்து வகையாக வகுக்கப்பட்ட கூந்தல்.

சொற்பொருள்:  கொண்டல் மா மழை குடக்கு ஏர்பு குழைத்த சிறு கோல் இணர பெருந்தண் சாந்தம் – கீழ்காற்றுக் கொண்டு வந்த கரிய முகில்கள் மேற்திசைக்கு எழுந்துச் செல்வதால் தழைத்த சிறிய கிளைகளில் பூங்கொத்துக்கள் உடைய பெரிய குளிர்ந்த சந்தன மரத்தின் துண்டுகளுடன், வகை சேர் ஐம்பால் தகை பெற வாரிப் புலர்விடத்து உதிர்த்த துகள்படு கூழைப் பெருங்கண் ஆயம் உவப்ப – பலவகையான பொருள்களையும் சேர்த்துச் செய்த குழம்பினைப் பூசிய (கலவையைப் பூசிய) ஐந்து பகுதியாக உள்ள கூந்தலை அழகாக வாரி அச்சாந்தம் காய்ந்து உதிர்ந்த துகள் பொருந்திய கூந்தலையும் பெரிய கண்களையுமுடைய தோழிகள் மகிழ (கூழை – கூந்தல், துகள் – பொடி), தந்தை நெடுந்தேர் வழங்கும் நிலவு மணல் முற்றத்துப் பந்தொடு பெயரும் பரிவிலாட்டி அருளினும் அருளாள் ஆயினும் – தன் தந்தையின் உயர்ந்த தேர் ஓடும் நிலவின் ஒளி போன்ற மணலுடைய முற்றத்தில் பந்துடன் செல்லும் அன்பில்லாதவள் அருள் புரிந்தாளாயினும் அருள் புரியாவிட்டாலும், பெரிது அழிந்து பின்னிலை முனியல்மா நெஞ்சே – நீ பெரிதாக மனம் அழிந்து இரந்து பின் வெறுப்பு அடையாதே என் நெஞ்சே (முனியல்மா – முனியல் அல் ஈற்று எதிர்மறை வியங்கோள், மா வியங்கோள் அசைச்சொல்), என்னதூஉம் அருந்துயர் அவலம் தீர்க்கும் மருந்து பிறிது இல்லை யான் உற்ற நோய்க்கே – எத்துணையும் பெருந்துயர் தீர்க்கும் மருந்து வேறு எதுவும் இல்லை யான்அடைந்த காதல் நோய்க்கு (என்னதூஉம் – அளபெடை, நோய்க்கே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 141, சல்லியங்குமரனார், பாலைத் திணை – தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது
இருஞ்சேறு ஆடிய கொடுங்கவுள், கயவாய்
மாரி யானையின் மருங்குல் தீண்டிப்,
பொரி அரை ஞெமிர்ந்த புழற் காய்க் கொன்றை,
நீடிய சடையோடு ஆடா மேனிக்
குன்று உறை தவசியர் போல, பல உடன்  5
என்றூழ் நீள் இடைப் பொற்பத் தோன்றும்
அருஞ்சுரம் எளிய மன், நினக்கே; பருந்து பட,
பாண்டிலொடு பொருத பல் பிணர்த் தடக் கை
ஏந்து கோட்டு யானை இசை வெங்கிள்ளி
வம்பு அணி உயர் கொடி அம்பர் சூழ்ந்த  10
அரிசில் அம் தெள் அறல் அன்ன, இவள்
விரி ஒலி கூந்தல் விட்டு அமைகலனே.

பாடல் பின்னணி:  பொருள் தேடுதலில் விருப்புற்று நிற்கும் நெஞ்சிடம் தலைவன் இகழ்ச்சிபட உரைத்தது.

பொருளுரைஎன் நெஞ்சே!  கரிய சேற்றில் படிந்தாடிய வளைந்த கன்னத்தையும் பெரிய வாயையுமுடைய, மழையில் நனைந்த யானைகள், அவற்றின் பக்கங்களை உரசுவதால் பொரிந்துள்ள அடிமரத்தையும், துளை பொருந்திய காய்களையுமுடைய கொன்றை மரங்கள், நீண்ட சடையுடன் நீராடாத உடலையுடைய குன்றில் வாழும் தவத்தோர்களைப் போல, பலவாக வெயில் நிலைபெற்ற இடங்களில் அழகாகத் தோன்றும், செல்லுதற்கு அரிய பாலை நிலம் நினக்கு மிக எளியதாகும்.  பருந்துகள் இறந்தவர்களின் உடலைத் தின்பதற்கு அவற்றின் மேல் விழுமாறு பகைவர்களின் தேர்ப்படையுடன் போரிட்டு வென்ற பலவாகிய சருச்சரையை (சொரசொரப்பை) உடைய பெரிய தும்பிக்கையையும் உயர்ந்த மருப்புகளையும் (கோடுகளையும், தந்தங்களையும்) உடைய யானைப் படையை உடைய, புகழை விரும்பும் கிள்ளி வளவனின், புதிய ஒப்பனையுடன் உயர்ந்த கொடிகள் கட்டப்பட்ட அம்பர் என்னும் ஊரைச் சூழ்ந்த அரிசில் ஆற்றின் தெளிந்த கருமணலை ஒத்த இவளுடைய விரிந்த அடர்ந்த கூந்தலில் உறங்குதலைக் கைவிட்டு நான் வாழமாட்டேன்.

குறிப்பு:  வரலாறு:  கிள்ளி, அம்பர், அரிசில்.  பொற்பு – பொற்பே பொலிவு (தொல்காப்பியம், உரியியல் 39).  ஞெமிர்தல் – ஞெமிர்தலும் பாய்தலும் பரத்தல் பொருள (தொல்காப்பியம், உரியியல் 65).  ஆடா மேனி (4) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – அசையாத மெய், ஒளவை துரைசாமி உரை – நீராடாத மேனி, H. வேங்கடராமன் உரை – நீராடாத உடல்.  ஒப்புமை:  அகநானூறு 123 – ஆடாப் படிவத்து ஆன்றோர் போல. தட – தடவும் கயவும் நளியும் பெருமை (தொல்காப்பியம், உரியியல் 24), அவற்றுள், தட என் கிளவி கோட்டமும் செய்யும் (தொல்காப்பியம், உரியியல் 25).  என்றூழ் – கதிரவனின் முதிர்ந்த கதிர்கள், எல் (கதிரவன்) + ஊழ் (முதிர்ச்சி).  பேரறிஞர் கு. வெ. பாலசுப்பிரமணியன் அவர்களின் விளக்கம்.

சொற்பொருள்:  இருஞ்சேறு ஆடிய கொடுங்கவுள் கயவாய் மாரி யானையின் மருங்குல் தீண்டிப் பொரி அரை ஞெமிர்ந்த புழற் காய்க் கொன்றை – கரிய சேற்றில் படிந்தாடிய வளைந்த கன்னத்தையும் பெரிய வாயையுமுடைய மழையில் நனைந்த யானைகள் அவற்றின் பக்கங்களை உரசுவதால் பொரிந்துள்ள அடிமரத்தையும் துளை பொருந்திய காய்களையுமுடைய கொன்றை மரங்கள் (கொன்றை – laburnum trees, Golden shower trees, Cassia fistula), நீடிய சடையோடு ஆடா மேனிக் குன்று உறை தவசியர் போல – நீண்ட சடையுடன் நீராடாத உடலையுடைய குன்றில் வாழும் தவத்தோர்களைப் போல, பல உடன் என்றூழ் நீள் இடைப் பொற்பத் தோன்றும் அருஞ்சுரம் எளிய மன் நினக்கே – பலவாக வெயில் நிலைபெற்ற இடங்களில் அழகாகத் தோன்றும் செல்லுதற்கு அரிய பாலை நிலம் நினக்கு மிக எளியதாகும் (மன் – மிகுதிக் குறிப்பு, நினக்கே – ஏகாரம் அசைநிலை), பருந்து பட பாண்டிலொடு பொருத பல் பிணர்த் தடக் கை ஏந்து கோட்டு யானை இசை வெங்கிள்ளி  – பருந்துகள் இறந்தவர்களின் உடலைத் தின்னுமாறு அவற்றின் மேல் விழ பகைவர்களின் தேர்ப்படையுடன் போரிட்டு வென்ற பலவாகிய சருச்சரையை (சொரசொரப்பை) உடைய பெரிய தும்பிக்கையையும் உயர்ந்த மருப்புகளையும் (கோடுகளையும், தந்தங்களையும்) உடைய யானைப் படையை உடைய புகழை விரும்பும் கிள்ளி வளவனின், வம்பு அணி உயர் கொடி அம்பர் சூழ்ந்த அரிசில் அம் தெள் அறல் அன்ன – புதிய ஒப்பனையுடன் உயர்ந்த கொடிகள் கட்டப்பட்ட அம்பர் என்னும் ஊரைச் சூழ்ந்த அரிசில் ஆற்றின் தெளிந்த கருமணலை ஒத்த, இவள் விரி ஒலி கூந்தல் விட்டு அமைகலனே – இவளுடைய விரிந்த அடர்ந்த கூந்தலில் உறங்குதலைக் கைவிட்டு நான் வாழமாட்டேன் (அமைகலனே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 142, இடைக்காடனார், முல்லைத் திணை – தலைவன் தேர்ப்பாகனிடம் சொன்னது
வான் இகுபு சொரிந்த வயங்கு பெயல் கடை நாள்,
பாணி கொண்ட பல் கால் மெல் உறி
ஞெலிகோல் கலப்பை அதளொடு சுருக்கி,
பறிப் புறத்து இட்ட பால் நொடை இடையன்
நுண் பல் துவலை ஒரு திறம் நனைப்ப,  5
தண்டு கால் வைத்த ஒடுங்கு நிலை மடி விளி
சிறுதலைத் தொழுதி ஏமார்த்து அல்கும்
புறவினதுவே, பொய்யா யாணர்,
அல்லில் ஆயினும் விருந்து வரின் உவக்கும்,
முல்லை சான்ற கற்பின்  10
மெல் இயற் குறுமகள் உறைவின் ஊரே.

பாடல் பின்னணி:  வினை முற்றி மீளும் தலைவன் தேர்ப்பாகற்குச் சொல்லியது. 

பொருளுரை:  மழைகால் இறங்கி பொழிந்த விளங்கிய மழைக்காலத்தின் இறுதி நாளில், கையில் பலவாகிய காலிட்டுப் பின்னிய உறியுடன் தீக்கடைக் கோல் முதலிய கருவிகளை வைத்த சிறு பையைத் தோலால் செய்த பையில் வைத்துச் சுருக்கிக் கட்டி, பனை ஓலைப் பாயுடன் முதுகில் கட்டி இட்ட பால் விலை கூறும் இடையன், நுண்ணியப் பல மழைத் துளிகள் உடலில் ஒரு பக்கத்தை நனைப்ப, கைக்கோலைத் தரையில் ஊன்றி அதன் மேல் ஒரு காலை வைத்து ஒடுங்கிய நிலையில் நின்று, வாயைக் குவித்து ஊதும் வீளை ஒலியைக் கேட்டு சிறிய தலையையுடைய ஆட்டின் கூட்டம் அவனது பாதுகாப்பை அடைந்து நிற்கும் முல்லை நிலத்தில் உள்ளது, எப்பொழுதும் வளமை இருப்பதால், இரவு நேரம் ஆனாலும், விருந்தினரைக் கண்டு மகிழும் இல்லத்திலிருந்து நல்ல அறம் செய்யும் கற்பினையும் மென்மையான தன்மையையும் உடைய இளம் தலைவி வாழும் ஊர்.

குறிப்பு:  உள்ளுறை – கு. வெ. பாலசுப்பிரமணியன் உரை – வேற்றிடம் புகும் ஆட்டுக்கூட்டம் இடையன் விளித்த அளவில் மீண்டு சேர்ந்து தங்கும் என்றது, சோர்வுற்ற தன் நெஞ்சம் பாகன் விரைந்து தேரைச் செலுத்துவதால் சோர்வு நீங்கி நிற்கும் என்பதை உணர்த்திற்று.  முல்லை சான்ற கற்பின் (10) – ஒளவை துரைசாமி உரைமுல்லை இருத்தல் என்னும் கற்பு நெறி, வேங்கடசாமி நாட்டார் உரை அகநானூறு 274 – முல்லை சான்ற கற்பின் ‘முல்லை மலர் அணிந்த கற்புபினையுடைய’, பொ. வே. சோமசுந்தரனார் உரை அகநானூறு 274 – முல்லை மாலை சூடுதற்கு அமைந்த கற்பொழுக்கதையுடைய, பொ. வே. சோமசுந்தரனார் உரை சிறுபாணாற்றுப்படை 30 – முல்லை சூடுதற்கு அமைந்த கற்பொழுக்கதையுடைய.   முல்லை முறை – பொ. வே. சோமசுந்தரனார் உரை பரிபாடல் 15 – முல்லை மகளிரின் கற்பு.   ஒப்புமை::  அகநானூறு 274, இடைக்காடனாரின் பாடல் – தண்டு கால் ஊன்றிய தனி நிலை இடையன் மடி விடு வீளை கடிது சென்று இசைப்ப.  யாணர் – புதிதுபடற் பொருட்டே யாணர்க் கிளவி (தொல்காப்பியம், உரியியல் 83).  உறைவின் ஊரே (12) – ஒளவை துரைசாமி உரை – உறைதலால் இனிமையை உடையதாகிய ஊர், பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – உறைகின்ற ஊர்.  முல்லை சான்ற கற்பின் – அகநானூறு 274 – முல்லை சான்ற கற்பின் மெல்லியல் குறுமகள் உறைவு இன் ஊரே, நற்றிணை 142 – முல்லை சான்ற கற்பின் மெல் இயற் குறுமகள் உறைவின் ஊரே, சிறுபாணாற்றுப்படை 30–31 – முல்லை சான்ற கற்பின் மெல்லியல் மட மான் நோக்கின் வாணுதல் விறலியர்.

சொற்பொருள்:  வான் இகுபு சொரிந்த வயங்கு பெயல் கடை நாள் – மழைகால் இறங்கி பொழிந்த விளங்கிய மழைக்காலத்தின் இறுதி நாளில், பாணி கொண்ட பல் கால் மெல் உறி ஞெலிகோல் கலப்பை அதளொடு சுருக்கி பறிப் புறத்து இட்ட பால் நொடை இடையன் – கையில் பலவாகிய காலிட்டுப் பின்னிய உறியுடன் தீக்கடைக் கோல் முதலிய கருவிகளை வைத்த சிறு பையைத் தோலால் செய்த பையில் வைத்துச் சுருக்கிக் கட்டி பனை ஓலைப் பாயுடன் முதுகில் கட்டி இட்ட பால் விலை கூறும் இடையன் (பாணி – கை, கலப்பை, கலம் + பை – கருவிகள் உடைய பை),  நுண் பல் துவலை ஒரு திறம் நனைப்ப தண்டு கால் வைத்த ஒடுங்கு நிலை மடி விளி சிறுதலைத் தொழுதி ஏமார்த்து அல்கும் புறவினதுவே – நுண்ணியப் பல மழைத் துளிகள் உடலில் ஒரு பக்கத்தை நனைப்ப கைக்கோலைத் தரையில் ஊன்றி அதன் மேல் ஒரு காலை வைத்து ஒடுங்கிய நிலையில் நின்று வாயைக் குவித்து ஊதும் வீளை ஒலியைக் கேட்டு சிறிய தலையையுடைய ஆட்டின் கூட்டம் அவனது பாதுகாப்பை அடைந்து நிற்கும் முல்லை நிலத்தில் உள்ளது (புறவினதுவே – ஏகாரம் அசைநிலை), பொய்யா யாணர் அல்லில் ஆயினும் விருந்து வரின் உவக்கும் முல்லை சான்ற கற்பின் மெல் இயற் குறுமகள் உறைவின் ஊரே – எப்பொழுதும் வளமை இருப்பதால் இரவு நேரம் ஆனாலும் விருந்தினரைக் கண்டு மகிழும் இல்லத்திலிருந்து நல்ல அறம் செய்யும் கற்பினையும் மென்மையான தன்மையையும் உடைய இளம் தலைவி வாழும் ஊர் (ஊரே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 143, கண்ணகாரன் கொற்றனார், பாலைத் திணை – தலைவியின் தாய் சொன்னது
ஐதே காமம் யானே, ஒய்யெனத்
தருமணல் ஞெமிரிய திரு நகர் முற்றத்து
ஓரை ஆயமும் நொச்சியும் காண்தொறும்,
நீர் வார் கண்ணேன் கலுழும் என்னினும்
கிள்ளையும் கிளை எனக் கூஉம், இளையோள் 5
வழு இலள் அம்ம தானே, குழீஇ
அம்பல் மூதூர் அலர்வாய்ப் பெண்டிர்
இன்னா இன் உரை கேட்ட சில் நாள்
அறியேன் போல உயிரேன்,
‘நறிய நாறும் நின் கதுப்பு’ என்றேனே.  10

பாடல் பின்னணி:  தலைவி தலைவனோடு கூடி உடன்போனாள் என்பதை அறிந்த நற்றாய் உரைத்தது.

பொருளுரை:  காதல் வியப்பானது!  விரைவாக புதிய மணலைக் கொணர்ந்து பரப்பிய எங்கள் அழகிய இல்லத்தின் முற்றத்தில் அவளுடைய தோழியரையும் நொச்சி மரத்தையும் காணும்பொழுதெல்லாம், கண்ணீர் வடிக்கும் கண்களையுடைய என்னைவிடவும், அவளுடைய கிளியும் தன்னுடைய உறவினள் அவள் என்று கருதி அவளை அழைக்கும்.  என்னுடைய மகள் மாசற்றவள்.  ஒருசேரக் கூடி அலர் மிக்க பரப்பும் இந்தப் பழைய ஊரில் தூற்றும் வாயையுடைய பெண்களின் கொடியவும் இனியவாகவும் உள்ள சொற்களைக் கேட்ட நான், சில நாட்கள் ஒன்றும் அறியாதவள் போல இருந்தேன்.  மூச்சு விட முடியாமல் இருக்கின்றேன். “உன்னுடைய கூந்தல் நறுமணமாக உள்ளது” என்று என் மகளிடம் நான் கூறினேனே.

குறிப்பு:  கு. வெ. பாலசுப்பிரமணியன் உரை – இன்னா இன்னுரை என்பது முரண் தொடர்.  அயலார் தலைவியின் களவொழுக்கத்தைப் பழித்தமையால் இன்னா உரை என்றும் களவும் ஓர் அறநெறியே ஆதலால் இனிய உரை என்றும் தாய் கருதினாள்.  நறிய நாறும் நின் கதுப்பு (10) – கு. வெ. பாலசுப்பிரமணியன் உரை – தலைவன் வேற்றுப் புலத்தான்.  அவன் தந்த பூவும் தம் நிலத்திற்குரியது அன்று.  எனவே பூ வேறுபாட்டினைத் தாய் உணர்ந்தாள்.  ஓரை விளையாட்டு – அகநானூறு 49, 60, 219, நற்றிணை 68, 143, 155, 398, குறுந்தொகை 48, 316, 401, கலித்தொகை 75.

சொற்பொருள்:  ஐதே காமம் யானே – காதல் வியப்பானது, ஒய்யென – விரைவாக (ஒய்யென – விரைவுக்குறிப்பு), தருமணல் ஞெமிரிய திரு நகர் முற்றத்து – மணலைக் கொணர்ந்து பரப்பிய அழகிய இல்லத்தின் முற்றத்தில், ஓரை ஆயமும் நொச்சியும் காண்தொறும் – அவளுடைய தோழியரையும் நொச்சி மரத்தையும் காணும்பொழுதெல்லாம், நீர் வார் கண்ணேன் கலுழும் என்னினும் – கண்ணீர் வடிக்கும் கண்களையுடைய என்னைவிடவும், கிள்ளையும் கிளை எனக் கூஉம் – அவளுடைய கிளியும் உறவினள் அவள் என்று கருதி அழைக்கும் (கூஉம் – செய்யுளிசை அளபெடை), இளையோள் வழு இலள் – என்னுடைய மகள் மாசற்றவள், அம்ம – அசை, தானே – அவள், குழீஇ அம்பல் மூதூர் அலர்வாய்ப் பெண்டிர் – ஒருசேரக் கூடி அலர் மிக்க இந்த பழைய ஊரில் தூற்றும் வாயையுடைய பெண்கள் (குழீஇ – செய்யுளிசை அளபெடை), இன்னா இன் உரை கேட்ட – கொடியவும் இனியவாகவும் உள்ள சொற்களைக் கேட்ட, சில் நாள் – சில நாட்கள், அறியேன் போல – அறியாதவள் போல, உயிரேன் – மூச்சு விட முடியாமல் இருக்கின்றேன், நறிய நாறும் நின் கதுப்பு என்றேனே – உன்னுடைய கூந்தல் நறுமணமாக உள்ளது என்று என் மகளிடம் கூறினேன் (என்றேனே – ஏகாரம் அசை நிலை)

நற்றிணை 144, கச்சிப்பேட்டுப் பெருந்தச்சனார், குறிஞ்சித் திணை – தலைவி தோழியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
பெருங்களிறு உழுவை தாக்கலின், இரும் பிடி
கருவி மா மழையின் அரவம் அஞ்சுபு,
போது ஏர் உண்கண் கலுழவும், ஏதில்
பேதை நெஞ்சம் கவலை கவற்ற
ஈங்கு ஆகின்றால் தோழி, பகுவாய்ப்  5
பிணவுப் புலி வழங்கும் அணங்கு அருங்கவலை
அவிர் அறல் ஒழுகும் விரை செலல் கான்யாற்றுக்
கரை அருங்குட்டம் தமியர் நீந்தி,
விரவு மலர் பொறித்த தோளர்
இரவின் வருதல் அறியாதேற்கே.  10

பாடல் பின்னணி:  இரவுக்குறி வரும் தலைமகன் சிறைப்புறத்தானாய் இருக்க, அவன் கேட்டு திருமணம் புரிந்து கொள்ளும் வகையில் தலைவி கூறினாள்.

பொருளுரைதோழி!  பெரிய களிற்று யானையைப் புலி தாக்கியதால், அதன் கரிய பிடியானை மின்னல் முதலிய தொகுதியையுடைய  கரிய முகில்கள் முழங்குவது போன்று பிளிறும் ஓசையைக் கேட்டு அஞ்சி, மலர்கள் போன்ற மையிட்ட கண்கள் கலங்கவும் எதுவும் இல்லாத பேதைமை உடைய என் நெஞ்சம் கவலையால் துன்புறும்.  இவ்வாறு நிலைமை உள்ளது, பிளந்த வாயையுடைய பெண் புலி திரியும் நீக்குவதற்கு அரிய பிளவுகளுடைய வழியில் விளங்குகின்ற நீர் நிறைந்து விரைந்து ஓடும் காட்டாற்றில் கரை இல்லாத ஆழமுடைய இடத்தில் தனியராக நீந்தி, நீரில் உள்ள பலவகை மலர்கள் பொருந்திய தோளுடன் வந்த நம் தலைவர் இரவில் வருவதை எண்ணி, அறியாமை உடைய எனக்கு.

குறிப்பு:  கருவி மா மழையின் (2) – H. வேங்கடராமன் உரை – மின்னல் முதலாய தொகுதிகளையுடைய கரிய மேகத்தைப் போன்று.  உள்ளுறை – கு. வெ. பாலசுப்பிரமணியன் உரை – புலியால் களிறு கொல்லப்பட்டப் பிடி புலம்பும் என்றது, வழியில் ஏற்படும் தொல்லைகட்குத் தலைவன் ஆவானோ என்று தலைவி புலம்பி நிற்றலைக் குறித்தது.  குட்டம் (8) – ஒளவை துரைசாமி உரை – ஆழமான மடு.  கருவி – கருவி தொகுதி (தொல்காப்பியம், உரியியல் 58).  பிடி – பிடி என் பெண் பெயர் யானை மேற்றே (தொல்காப்பியம், மரபியல் 52).

சொற்பொருள்:  பெருங்களிறு உழுவை தாக்கலின் இரும் பிடி கருவி மா மழையின் அரவம் அஞ்சுபு – பெரிய களிற்று யானையைப் புலி தாக்கியதால் அதன் கரிய பிடியானை மின்னல் முதலிய தொகுதியையுடைய  கரிய முகில்கள் முழங்குவது போன்று பிளிறும் ஓசையைக் கேட்டு அஞ்சி (மழையின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), போது ஏர் உண்கண் கலுழவும் ஏதில் பேதை நெஞ்சம் கவலை கவற்ற ஈங்கு ஆகின்றால் தோழி – மலர்கள் போன்ற மையிட்ட கண்கள் கலங்கவும் எதுவும் இல்லாத பேதைமை உடைய என் நெஞ்சம் கவலையால் துன்புறும் இவ்வாறு என் நிலைமை ஆகியது தோழி (ஏர் – உவம உருபு, ஆகின்றால் – ஆல் அசைநிலை), பகுவாய்ப் பிணவுப் புலி வழங்கும் அணங்கு அருங்கவலை அவிர் அறல் ஒழுகும் விரை செலல் கான்யாற்றுக் கரை அருங்குட்டம் தமியர் நீந்தி விரவு மலர் பொறித்த தோளர் இரவின் வருதல் அறியாதேற்கே – பிளந்த வாயையுடைய பெண் புலி திரியும் நீக்குவதற்கு அரிய பிளவுகளுடைய வழியில் விளங்குகின்ற நீர் நிறைந்து விரைந்து ஓடும் காட்டாற்றில் கரை இல்லாத ஆழமுடைய இடத்தில் தனியராக நீந்தி நீரில் உள்ள பலவகை மலர்கள் பொருந்திய தோளுடன் வந்த நம் தலைவர் இரவில் வருவதை அறியாத எனக்கு (செலல் – செல்லல் என்பதன் இடைக்குறை, அறியாதேற்கே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 145, நம்பி குட்டுவனார், நெய்தல் திணை – தோழி தலைவியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
இருங்கழி பொருத ஈர வெண்மணல்
மாக் கொடி அடும்பின் மா இதழ் அலரி
கூந்தல் மகளிர் கோதைக் கூட்டும்
காமர் கொண்கன், நாம் வெங்கேண்மை
ஐது ஏய்ந்து இல்லா ஊங்கும், நம்மொடு  5
புணர்ந்தனன் போல உணரக் கூறி,
‘தான் யாங்கு’ என்னும் அறன் இல் அன்னை;
யான் எழில் அறிதலும் உரியள், நீயும்; நம்
பராரைப் புன்னைச் சேரி மெல்ல
நள்ளென் கங்குலும் வருமரோ,  10
அம்ம வாழி தோழி, அவர் தேர் மணிக் குரலே.

பாடல் பின்னணி:  இரவுக்குறி வந்த தலைவன் சிறைப்புறத்தானாக இருந்த பொழுது தலைவியிடம் கூறுவாளாய்த் தோழி வரைவு கடாயது.

பொருளுரைதோழி!  நீ நீடு வாழ்வாயாக!  நான் கூறுவதைக் கேட்பாயாக!  கரிய உப்பங்கழியில் உள்ள நீர் மோதுவதால் ஈரமாகிய வெள்ளை மணலில் படர்ந்த பெரிய கொடியாகிய அடும்பின் பெரிய இதழ்களையுடைய மலர்களை, மகளிரின் கூந்தலில் அணிகின்ற மாலையில் தொடுத்துக் கொள்ளும், கண்டோர் விரும்பும் தன்மையுடைய நெய்தல் நிலத்தின் தலைவனுடன் நாம் விரும்பிக் கொண்ட நட்பு, முன்பு பொருந்தி இப்பொழுது இல்லாதபோதும், நம்முடன் அவன் கூடினான் என்று மாறாக எண்ணி “அவன் எங்கு உள்ளான்?” என வினவும் அறம் இல்லாத அன்னை, நீயும் நின் எழுச்சியையும் என் மூலம் அறிவதற்கு உரியவள்.  நம் பருத்த அடியுடைய புன்னை மரங்களையுடைய சேரிக்கு மெல்ல இருள் செறிந்த இரவில் வருகின்றது நம் தலைவரின் தேர் மணியோசை.  இதற்கு யான் என்ன செய்வேன்?

குறிப்பு:  அறன் இல் யாய் – குறுந்தொகை 244, 262, நற்றிணை 63, 145, 376.  உள்ளுறை – ஒளவை துரைசாமி உரை – கழிக்கரை வெண்மணற் பரப்பில் பூத்த அடும்பின் பூ மகளிர் கோதை தொடுத்தற்கு அமைந்தாற் போலக் கானற்கண் தலைமகனொடு நமக்கு உளதாகிய கேண்மை ஊரவர் உரைக்கும் அலர்க்குப் பொருளாயிற்று என்பது.  உள்ளுறை – கு. வெ. பாலசுப்பிரமணியன் உரை – அடும்பின் மலர் மகளிர் கூந்தலுக்குரிய மாலையில் சேர்க்கப்படும் என்பது, நீ இவளைப் பலருமறிய மணந்து பூச்சூட்டிப் பெறுவாய் என்பது.  அம்ம – அம்ம கேட்பிக்கும் (தொல்காப்பியம், இடையியல் 28).  நாம் வெங்கேண்மை (4) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – அச்சந்தரும் வெய்ய நட்பு, ஒளவை துரைசாமி உரை – நாம் விரும்பிக் கொண்ட நட்பு.

சொற்பொருள்:  இருங்கழி பொருத ஈர வெண்மணல் மாக் கொடி அடும்பின் மா இதழ் அலரி கூந்தல் மகளிர் கோதைக் கூட்டும் காமர் கொண்கன் – கரிய உப்பங்கழியில் உள்ள நீர் மோதுவதால் ஈரமாகிய வெள்ளை மணலில் படர்ந்த பெரிய கொடியாகிய அடும்பின் பெரிய இதழ்களையுடைய மலர்களை மகளிரின் கூந்தலில் அணிகின்ற மாலையில் தொடுத்துக் கொள்ளும் கண்டோர் விரும்பும் தன்மையுடைய நெய்தல் நிலத்தின் தலைவன், நாம் வெங்கேண்மை – நாம் விரும்பிக் கொண்ட நட்பு, ஐது ஏய்ந்து இல்லா ஊங்கும் – முன்பு பொருந்தி இப்பொழுது இல்லாதபோதும், நம்மொடு புணர்ந்தனன் போல உணரக் கூறி தான் யாங்கு என்னும் அறன் இல் அன்னை – நம்முடன் அவன் கூடினான் என்று மாறாக எண்ணி அவன் எங்கு உள்ளான் என வினவும் அறம் இல்லாத அன்னை, யான் எழில் அறிதலும் உரியள் – நின் எழுச்சியை என் மூலம் அறிவதற்கு உரியவள், நீயும் – நீயும், நம் பராரைப் புன்னைச் சேரி மெல்ல நள்ளென் கங்குலும் வருமரோ – நம் பருத்த அடியுடைய புன்னை மரங்களையுடைய சேரிக்கு மெல்ல இருள் செறிந்த இரவில் வருகின்றது (பராரை – பரு அரை பராரை எனப் புணர்ந்தது, புன்னை – Laurel Tree, Mast wood Tree, Calophyllum inophyllum, வருமரோ – வரும், ஓகாரம் அசைநிலை), அம்ம – நான் கூறுவதைக் கேட்பாயாக, வாழி நீடு வாழ்வாயாக, தோழி – தோழி, அவர் தேர் மணிக் குரலே – அவருடைய தேரின் மணியோசை (குரலே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 146, கந்தரத்தனார், குறிஞ்சித் திணை – தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது, தோழி கேட்கும்படியாக
‘வில்லாப் பூவின் கண்ணி சூடி,
நல் ஏமுறுவல் என பல் ஊர் திரிதரு
நெடு மாப் பெண்ணை மடல் மானோயே!
கடன் அறி மன்னர் குடை நிழல் போலப்
பெருந்தண்ணென்ற மர நிழல் சிறிது இழிந்து 5
இருந்தனை சென்மோ, வழங்குக சுடர் என’,
அருளிக் கூடும் ஆர்வ மாக்கள்,
‘நல்லேம்’ என்னும் கிளவி, வல்லோன்
எழுதி அன்ன காண்தகு வனப்பின்
ஐயள், மாயோள், அணங்கிய 10
மையல் நெஞ்சம் என் மொழிக் கொளினே.

பாடல் பின்னணி:  தலைவன் பன்னாள் தோழியை இரந்து தன் குறையை உணர்த்தினான்.  அவனுடைய வேண்டுதல் நிறைவேறாதலால், மடல் ஏறத்துணிந்த தன் நெஞ்சிடம் கூறுவான் போல், தோழி கேட்க உரைத்தான்.

பொருளுரைஅருளுடைய உள்ளத்தால் வந்து கூடியிருக்கும் அன்புடைய மக்கள் ‘நாம் நல்லேம்’ என நம்மைப் புகழ்வார்கள்.  ஓவியத்தில் வல்லவன் வரைந்தாற்போல் காண்பதற்கு உரிய அழகையுடைய மெல்லியவளான மாமை நிறத்துடைய அவளால் நோயுற்று வருந்திய மயக்கத்தையுடைய என் நெஞ்சமே!  விலைக்கு விற்க இயலாத மலர்களைச் சூடி, நான் நல்ல பித்தேறினேன் என்னும்படி பல ஊர்களில் சென்று திரிகின்ற நெடிய கரிய பனை மடலால் செய்யப்பட்ட மடல் குதிரையை உடையாய்!  நீ என் சொற்களை ஏற்றுக்கொள்ள விரும்புவாயாயின், ஞாயிறு வெயில் வீசி அடங்கும் அளவும், முறை அறிந்து கடமையை ஆற்றும் மன்னர்களின் குடை நிழல் போல உள்ள பெரிய குளிர்ச்சியான மரத்தின் நிழலில் குதிரையிலிருந்து இறங்கி சிறிது தங்கியிருந்து பின்னர் செல்வாயாக!

குறிப்பு:  ஒளவை துரைசாமி உரை – மடலூர்தல் என்பது தமிழகத்தில் எங்கும் எக்காலத்திலும் நடைபெறாத ஒரு கற்பனைச் செயல்.  வில்லாப் பூ (1) – ச. வே. சுப்பிரமணியன் உரை – விற்கப்படாத பூக்கள், பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – விற்க இயலாத பூ, ஒளவை துரைசாமி உரை – வில்லாப்பூ பிற்காலத்தில் வில்லாப்பூ எனவும் வில்லா மரம் வில்வ மரம் என்றும் வழங்குவவாயின.  வில்லாப்பூவை விலைக்கு விற்கப்படாத பூ என்று பொருள் கொள்வாருமுண்டு, H. வேங்கடராமன் உரை – விலைப்படுத்தற்கு ஆகாத பயனற்ற பூவாகிய பூளை, உழிஞை, எருக்கம், ஆவிரம் முதலிய பூக்கள்.  நல்லேம் என்னும் (8) – கு. வெ. பாலசுப்பிரமணியன் உரை – நாம் நல்லேம் என நம்மைப் புகழ்வர், ஒளவை துரைசாமி உரை – உமக்கு யாம் நல்லம்.  எம் இல்லம் வருக என்றும் சொல்லுதலையுடையவர்கள், பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – யாம் நல்லேம் என்னும் புகழ்ச்சொல் அடையப்பெற்ற சித்திரம் தீட்ட வல்ல ஓவியன்.   கு. வெ. பாலசுப்பிரமணியன் உரை:  ‘கடனறி மன்னர் குடைநிழல்’ என்றது மன்னர் எங்ஙனம் குடிகள் வருத்தம் நீங்குமாறு குடைநிழல் கொண்டு காப்பாரோ அங்ஙனம் தலைவியால் நேர்ந்த துயர் நீங்கத் தோழி கருதிட வேண்டும் எனவும் குறித்தது.  மடல் ஏறுதல் – சங்க இலக்கியத்தில் மொத்தம் 16 பாடல்களில் மடல் ஏறுதல் பற்றிய குறிப்புகள் உள்ளன – குறுந்தொகை 14, 17, 32, 173, 182, நற்றிணை 146, 152, 220, 342, 377, கலித்தொகை 58, 61, 138, 139, 140, 141.  கலித்தொகை 138, 139, 140, 141 பாடல்களில் மட்டுமே தலைவன் மடல் குதிரையின் மீது செல்கின்றான்.  கலித்தொகை 138, 141 ஆகிய பாடல்களில் மடல் ஏறியதால் தலைவியை அடைகின்றான்.  மோ – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம், சொல்லதிகாரம், இடையியல் 26).

சொற்பொருள்:  வில்லாப் பூவின் கண்ணி சூடி – விலைக்கு விற்க இயலாத மலர்களைச் சூடி, நல் ஏமுறுவல் என – நான் நல்ல பித்தேறினேன் என்னும்படி, பல் ஊர் திரிதரு – பல ஊர்களில் சென்று திரிகின்ற, நெடு மாப் பெண்ணை மடல் மானோயே – நெடிய கரிய பனை மடலால் செய்யப்பட்ட மடல் குதிரையை உடையாய், கடன் அறி மன்னர் குடை நிழல் போல – முறை அறிந்து கடமையை ஆற்றும் மன்னர்களின் குடை நிழல் போல, பெருந்தண்ணென்ற மர நிழல் சிறிது இழிந்து இருந்தனை சென்மோ – பெரிய குளிர்ச்சியான மரத்தின் நிழலில் குதிரையிலிருந்து இறங்கி சிறிது தங்கியிருந்து பின்னர் செல்வாயாக (சென்மோ – மோ முன்னிலை அசை), வழங்குக சுடர் என – ஞாயிறு வெயில் வீசி அடங்கும் அளவும், அருளிக் கூடும் ஆர்வ மாக்கள் – அருளுடன் கூடிய அன்புடைய மக்கள், நல்லேம் என்னும் கிளவி – யாம் நல்லவர்கள் என்னும் புகழ்ச் சொல், வல்லோன் எழுதி அன்ன – ஓவியத்தில் வல்லவன் வரைந்தாற்போல், காண்தகு வனப்பின் ஐயள் – காண்பதற்கு அழகுடையவள் மெல்லியள், மாயோள் – மாமை நிறத்துடையவள், அணங்கிய – வருந்திய, மையல் நெஞ்சம் – நோயுற்று மயக்கத்தையுடைய என் நெஞ்சமே, என் மொழிக் கொளினே – நீ என் சொற்களை ஏற்றுக்கொள்ள விரும்புவாயாயின் (கொளினே – ஏகாரம் அசை நிலை)

நற்றிணை 147, கொள்ளம்பக்கனார், குறிஞ்சித் திணை – தோழி தலைவியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
யாங்கு ஆகுவமோ ‘அணி நுதல் குறுமகள்!
தேம்படு சாரல் சிறு தினைப் பெருங்குரல்
செவ்வாய்ப் பைங்கிளி கவர, நீ மற்று
எவ்வாய்ச் சென்றனை அவண்?’ எனக் கூறி
அன்னை ஆனாள் கழற, முன் நின்று,  5
‘அருவி ஆர்க்கும் பெருவரை நாடனை
அறியலும் அறியேன், காண்டலும் இலனே,
வெதிர் புனை தட்டையேன் மலர் பூக் கொய்து
சுனை பாய்ந்து ஆடிற்றும் இலன்’ என நினைவிலை
பொய்யல், அந்தோ! வாய்த்தனை, அது கேட்டுத்  10
தலை இறைஞ்சினளே அன்னை,
செலவு ஒழிந்தனையால், அளியை நீ புனத்தே?

பாடல் பின்னணி:  பகல்குறியில் வந்தொழுகும் தலைவன் திருமணம் புரியாமல் காலம் தாழ்த்தினான்.  அவன் சிறைப்புறமாக இருப்பதை அறிந்த தோழி கூறியது.  வரைவு கடாயது.

பொருளுரை“அழகிய நெற்றியையுடைய இளமகளே!  மலைச்சரிவில் சிறு தினையுடைய பெரிய கொத்துக்களைச் சிவந்த வாயையுடைய பச்சைக்கிளி கவர வரும்வேளையில் நீ அங்கிருந்து விலகி எங்குச் சென்றாய்?” என்று கூறி அன்னை அமையாதவளாகி உன்னை வினவ, அவள் முன் நின்று, “அருவி ஒலிக்கும் பெரிய மலைநாடனை யான் அறியேன்.  அவனை யான் கண்டதும் இல்லை. மூங்கிலால் செய்த கிளி விரட்டும் தட்டையை உடைய யான் மலர்ந்த பூக்களைக் கொய்து அவனுடன் சுனையில் பாய்ந்து ஆடியதும் இல்லை”, என நினைவு இல்லாது பொய்யை நீ கூறவில்லை. ஐயோ! உண்மையைக் கூறிவிட்டாய் நீ!  அதைக் கேட்டு நாணத்தால் தன் தலையைக் கவிழ்த்துக் கொண்டாள் அன்னை. இனி நாம் தினைப்புனத்திற்குச் செல்லுவதைப் போக்கி விட்டாய். நீ இரங்கத்தக்கவள்!  எவ்வாறு ஆவோமோ நாம்?

குறிப்பு:  ஒளவை துரைசாமி உரை – ‘மறைந்தவற் காண்டல்’ (தொல்காப்பியம், களவியல் 21) எனத் தொடங்கும் நூற்பா உரையில் , ‘களவு உற்றவழிக் கூறியது’ என இப்பாட்டைக் காட்டுவர் இளம்பூரணர்.  தேம்படு (2) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – இடம் அகன்ற, ஒளவை துரைசாமி உரை – தேன் பொருந்திய.  தலை இறைஞ்சினளே அன்னை (11) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – அன்னை சினத்தோடு வெள்கித் தலையிறைஞ்சி நின்றனள், ஒளவை துரைசாமி உரை – அன்னை நாணத்தால் தலை தாழ்த்துச் சென்றாள்.  தேனுடைய மலை (நற்றிணையில்):  104 – தேம் கமழ் சிலம்பின், 147 – தேம்படு சாரல், 185 – தேனுடை நெடு வரை, 188 – குன்றத்துத் தேம் முதிர், 243 – தேம்படு சிலம்பில், 259 – தேம் கமழ் சாரல், 389 – தேம்படு நெடு வரை, 395 – தேன் தூங்கு உயர்வரை.  தேம்படு சிலம்பில், தேம்படு நெடுவரை – ஆகிவற்றிற்கு தேன் உண்டாகின்ற பக்கமாலையிலே, தேன் மணம் மிக்க நெடிய மலை என்றே விளக்கியுள்ளார் பின்னத்தூர் நாராயணசாமி ஐயர்.

சொற்பொருள்யாங்கு ஆகுவமோ – எவ்வாறு ஆவோமோ நாம், அணி நுதல் குறுமகள் தேம்படு சாரல் சிறு தினைப் பெருங்குரல் செவ்வாய்ப் பைங்கிளி கவர நீ மற்று எவ்வாய்ச் சென்றனை அவண் எனக் கூறி அன்னை ஆனாள் கழற – “அழகிய நெற்றியையுடைய இளமகளே!  மலைச்சரிவில் சிறு தினையுடைய பெரிய கொத்துக்களைச் சிவந்த வாயையுடைய பச்சைக்கிளி கவர வரும்வேளையில்  நீ அங்கிருந்து விலகி எங்குச் சென்றாய் என்று கூறி அன்னை அமையாதவளாகி உன்னை வினவ (மற்று – வினைமாற்று), முன் நின்று – அவள் முன் நின்று, அருவி ஆர்க்கும் பெருவரை நாடனை அறியலும் அறியேன் – அருவி ஒலிக்கும் பெரிய மலைநாடனை யான் அறியேன், காண்டலும் இலனே – அவனை யான் கண்டதும் இல்லை (இலனே – ஏகாரம் அசைநிலை), வெதிர் புனை தட்டையேன் மலர் பூக் கொய்து சுனை பாய்ந்து ஆடிற்றும் இலன் – மூங்கிலால் செய்த கிளி விரட்டும் தட்டையை உடைய யான் மலர்ந்த பூக்களைக் கொய்து அவனுடன் சுனையில் பாய்ந்து ஆடியதும் இல்லை, என நினைவு இலை பொய்யல் – என நினைவு இல்லாது பொய்யை நீ கூறவில்லை (இலை – இல்லை என்பதன் விகாரம்), அந்தோ – ஐயோ, வாய்த்தனை – உண்மையைக் கூறிவிட்டாய், அது கேட்டுத் தலை இறைஞ்சினளே அன்னை – அதைக் கேட்டு நாணத்தால் தன் தலையைக் கவிழ்த்துக் கொண்டாள், செலவு ஒழிந்தனையால் – செல்லுவதைப் போக்கி விட்டாய், அளியை நீ – இரங்கத்தக்கவள் நீ, புனத்தே – புனத்திற்கு (ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 148, கள்ளம்பாளனார், பாலைத் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
வண்ணம் நோக்கியும், மென்மொழி கூறியும்,
‘நீ அவண் வருதல் ஆற்றாய்’ எனத் தாம்
தொடங்கி ஆள்வினைப் பிரிந்தோர், இன்றே,
நெடுங்கயம் புலர்ந்த நீர் இல் நீள் இடை,
செங்கால் மராஅத்து அம் புடைப் பொருந்தி,  5
வாங்கு சிலை மறவர் வீங்கு நிலை அஞ்சாது
கல் அளைச் செறிந்த வள் உகிர்ப் பிணவின்
இன் புனிற்று இடும்பை தீர, சினம் சிறந்து
செங்கண் இரும்புலிக் கோள் வல் ஏற்றை
உயர் மருப்பு ஒருத்தல் புகர் முகம் பாயும்  10
அருஞ்சுரம் இறப்ப என்ப,
வருந்தேன் தோழி, வாய்க்க அவர் செலவே.

பாடல் பின்னணி:  பிரிவு உணர்ந்து வேறுபட்ட தலைவியைத் தோழி வற்புறுத்தியது.

பொருளுரைதோழி!  உன்னுடைய மென்மைத் தன்மையை நோக்கி மென்மையான சொற்களைக் கூறியும் “நீ என்னுடன் பாலை நிலத்திற்கு வருவதற்கு ஆற்றாய்” என்று தாம் தொடங்கிய பொருள் ஈட்டும் முயற்சிக்காகப் பிரிந்த நம் தலைவர், இன்றே, நெடிய குளங்கள் புலர்ந்ததால் நீர் இல்லாத நீண்ட வழியில் சிவந்த அடியையுடைய கடம்ப மரத்தின் அழகிய பக்கத்தில் பொருந்தி வளைந்த வில்லையுடைய மறவர்கள் மிகுந்திருக்கின்ற நிலைமைக்கு அஞ்சாது, மலைக் குகையில் ஒடுங்கியிருக்கும் கூர்மையான நகங்களையுடைய பெண்புலியின் இனிய குட்டிகளை ஈன்ற பசி நோய் நீங்க வேண்டி, சினம் மிகுந்த சிவந்த கண்களையுடைய கொல்லுதல் வல்ல பெரிய புலி ஓங்கிய கொம்பினை (மருப்பை, தந்தத்தை) உடைய களிற்று யானையின் புள்ளியுடைய முகத்தில் பாயும் செல்லுதற்கரிய சுரத்தைக் கடந்து செல்வர் எனக் கூறுகின்றனர்.  நான் வருந்த மாட்டேன்.  அவருடைய செலவு கைகூடுவதாக!

குறிப்பு:  வண்ணம் (1) – ஒளவை துரைசாமி உரை – பண்பு,  பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – நிறத்தின் மென்மை.  இறைச்சி – கு. வெ. பாலசுப்பிரமணியன் உரை – பெண்புலியின் பசியும் நோயும் தீர்க்கும் பொருட்டு, வீரர்களைக் கண்டும் அஞ்சாத ஆண்புலி களிற்றின் மேல் பாயும் என்றது, நின்னொடு தடையில்லாமல் இல்லறம் பேணியொழுகக் கொடிய பாலைவழியும் அஞ்சாது பொருளீட்டி வரச் சென்றனன் தலைவன் என்றதாம்.  அண்மையில் ஈன்ற துணைக்கு உணவு தேடல்:  புலி – நற்றிணை 29, 148, 332, 383, அகநானூறு 112, 147, 238, கழுகு – அகநானூறு 3, செந்நாய் – அகநானூறு 21, அகநானூறு 85, புறா – நற்றிணை 384, யானை – நற்றிணை 393, நாரை – நற்றிணை 263.  புனிறு – புனிறு என் கிளவி ஈன்றணிமைப் பொருட்டே (தொல்காப்பியம், உரியியல் 79).  ஏற்றை – ஆற்றலொடு புணர்ந்த ஆண்பாற்கு எல்லாம் ஏற்றைக் கிளவி உரித்து என மொழிப (தொல்காப்பியம், மரபியல் 50).

சொற்பொருள்வண்ணம் நோக்கியும் மென்மொழி கூறியும் நீ அவண் வருதல் ஆற்றாய் எனத் தாம் தொடங்கி ஆள்வினைப் பிரிந்தோர் – உன்னுடைய மென்மைத் தன்மையை நோக்கி மென்மையான சொற்களைக் கூறியும் நீ என்னுடன் பாலை நிலத்திற்கு வருவதற்கு ஆற்றாய் என்று தாம் தொடங்கிய பொருள் ஈட்டும் முயற்சிக்காகப் பிரிந்தவர், இன்றே – இன்றே, நெடுங்கயம் புலர்ந்த நீர் இல் நீள் இடை செங்கால் மராஅத்து அம் புடைப் பொருந்தி வாங்கு சிலை மறவர் வீங்கு நிலை அஞ்சாது (மராஅத்து – அளபெடை) – நெடிய குளங்கள் புலர்ந்ததால் நீர் இல்லாத நீண்ட வழியில் சிவந்த அடியையுடைய கடம்ப மரத்தின் அழகிய பக்கத்தில் பொருந்தி வளைந்த வில்லையுடைய மறவர்கள் மிகுந்திருக்கின்ற நிலைமைக்கு அஞ்சாது (புலர்ந்து என்னும் பெயரெச்சம் எதுப் பொருட்டு), கல் அளைச் செறிந்த வள் உகிர்ப் பிணவின் இன் புனிற்று இடும்பை தீர – மலைக் குகையில் ஒடுங்கியிருக்கும் கூர்மையான நகங்களையுடைய பெண்புலியின் இனிய குட்டிகளை ஈன்ற பசி நோய் நீங்க வேண்டி, சினம் சிறந்து செங்கண் இரும்புலிக் கோள் வல் ஏற்றை உயர் மருப்பு ஒருத்தல் புகர் முகம் பாயும் அருஞ்சுரம் இறப்ப என்ப – சினம் மிகுந்த சிவந்த கண்களையுடைய கொல்லுதல் வல்ல பெரிய புலி ஓங்கிய கொம்பினை மருப்பை, தந்தத்தை) உடைய களிற்று யானையின் புள்ளியுடைய முகத்தில் பாயும் செல்லுதற்கரிய சுரத்தைக் கடந்து செல்வர் எனக் கூறுகின்றனர், வருந்தேன் – நான் வருந்த மாட்டேன், தோழி – தோழி, வாய்க்க அவர் செலவே – அவருடைய செலவு கைகூடுவதாக (செலவே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 149, உலோச்சனார், நெய்தல் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
சிலரும் பலரும் கடைக்கண் நோக்கி,
மூக்கின் உச்சிச் சுட்டு விரல் சேர்த்தி,
மறுகில் பெண்டிர் அம்பல் தூற்ற,
சிறு கோல் வலந்தனள் அன்னை அலைப்ப,
அலந்தனென் வாழி தோழி, கானல்  5
புது மலர் தீண்டிய பூ நாறு குரூஉச் சுவல்
கடு மா பூண்ட நெடுந்தேர் கடைஇ,
நடுநாள் வரூஉம் இயல் தேர்க் கொண்கனொடு
செலவு அயர்ந்திசினால் யானே,
அலர் சுமந்து ஒழிக, இவ் அழுங்கல் ஊரே.  10

பாடல் பின்னணி:  தலைவியை உடன்போகுமாறு ஒருப்படுத்தக் கருதித் தோழி உரைத்தது.  தலைவன் சிறைப்புறமாக இருப்பதுமாம்.

பொருளுரைதோழி! நீடு வாழ்வாயாக!  சிலரும் பலரும் கடைக்கண்ணால் உன்னை நோக்கி மூக்கின் உச்சியில் சுட்டு விரலை வைத்துத் தெருவில் பெண்கள் பழிமொழிகள் கூற, சிறிய கோலால் உன்னை அன்னை சுழற்றி அடித்ததால் யான் மிகவும் துன்புற்றேன்.  சோலையில் உள்ள புது மலர்களைத் தீண்டி வருவதால் அம்மலர்களின் மணம் கமழும் சிவந்த நிறமுடைய விரைந்து செல்லும் குதிரைகள் பூண்ட உயர்ந்த தேரைச் செலுத்தி, நடு இரவில் வரும் இயலும் தேரையுடைய தலைவனுடன் நீ செல்ல வேண்டுமென யான் கருதுகின்றேன். பழி தூற்றிக் கொண்டு இருக்கட்டும் இந்த ஆரவாரத்தையுடைய ஊர்!

குறிப்பு:  ஒளவை துரைசாமி உரை – ‘ஒரு தலை உரிமை வேண்டினும்’ (தொல்காப்பியம், பொருளியல் 29) எனத் தொடங்கும் நூற்பா உரையில், ‘போக்கும் வரைவும் மனைவிகண் தோன்றும்’ என்றதற்கு இப்பாட்டைக் காட்டி, ‘இது போக்குக் குறித்தது’ என்பர் இளம்பூரணர்.  சின் – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம், சொல்லதிகாரம், இடையியல் 26, சின் என்பது இசின் என்பதன் முதற்குறை – ச. பாலசுந்தரம் உரை), அவற்றுள், இகுமும் சின்னும் ஏனை இடத்தொடும் தகு நிலை உடைய என்மனார் புலவர் (தொல்காப்பியம், இடையியல் 27).  ஒளவை துரைசாமி உரை – தமர் வரைவு மறுத்தவிடத்தும் வேற்று வரைவு வருமிடத்தும் நிகழற்பாலதாய உடன்போக்கினைத் தோழி இப்போழ்து வற்புறுத்தற்கு ஏது ஊரவர் கூறும் அலர் மிகுதியும், தாயறிவும், அவை வாயிலாகப் பிறக்கும் இற்செறிப்பும் என்பது யாப்புறுத்தற்கு, அலர் சுமந்தொழிக இவ்வழுங்கல் ஊர் என்றாள்.  அழுங்கல் – கம்பலை சும்மை கலியே அழுங்கல் என்று இவை நான்கும் அரவப் பொருள (தொல்காப்பியம், உரியியல் 53).  குரு – குருவும் கெழுவும் நிறன் ஆகும்மே (தொல்காப்பியம், உரியியல் 5).

சொற்பொருள்சிலரும் பலரும் கடைக்கண் நோக்கி மூக்கின் உச்சிச் சுட்டு விரல் சேர்த்தி மறுகில் பெண்டிர் அம்பல் தூற்ற – சிலரும் பலரும் கடைக்கண்ணால் நோக்கி மூக்கின் உச்சியில் சுட்டு விரலை வைத்துத் தெருவில் பெண்கள் பழிமொழிகள் கூற, சிறு கோல் வலந்தனள் அன்னை அலைப்ப அலந்தனென் – சிறிய கோலால் அன்னை சுழற்றி அடித்ததால் யான் மிகவும் துன்புற்றேன், வாழி – நீடு வாழ்வாயாக, அசைநிலை, தோழி – தோழி, கானல் புது மலர் தீண்டிய பூ நாறு குரூஉச் சுவல் கடு மா பூண்ட நெடுந்தேர் கடைஇ நடுநாள் வரூஉம் இயல் தேர்க் கொண்கனொடு செலவு அயர்ந்திசினால் யானே – சோலையில் உள்ள புது மலர்களைத் தீண்டி வருவதால் அம்மலர்களின் மணம் கமழும் சிவந்த நிறமுடைய விரைந்து செல்லும் குதிரைகள் பூண்ட உயர்ந்த தேரைச் செலுத்தி நடு இரவில் வரும் இயலும் தேரையுடைய தலைவனுடன் நீ செல்ல வேண்டுமென யான் கருதுகின்றேன் (குரூஉ – செய்யுளிசை அளபெடை, கடைஇ – அளபெடை, வரூஉம் – செய்யுளிசை அளபெடை, அயர்ந்திசினால் – சின் – தன்மை அசை, ஆல் அசைநிலை, யானே – ஏகாரம் அசைநிலை), அலர் சுமந்து ஒழிக இவ் அழுங்கல் ஊரே – பழி தூற்றிக் கொண்டு இருக்கட்டும் இந்த ஆரவாரத்தையுடைய ஊர் (ஊரே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 150, கடுவன் இளமள்ளனார், மருதத் திணை – பரத்தை பாணனிடம் சொன்னது
நகை நன்கு உடையன் பாண நும் பெருமகன்,
மிளை வலி சிதையக் களிறு பல பரப்பி
அரண் பல கடந்த முரண் கொள் தானை
வழுதி வாழிய பல எனத் தொழுது ஈண்டு
மன் எயில் உடையோர் போல, அஃது யாம்  5
என்னதும் பரியலோ இலம் எனத் தண் நடைக்
கலி மா கடைஇ வந்து, எம் சேரித்
தாரும் கண்ணியும் காட்டி ஒருமைய
நெஞ்சம் கொண்டமை விடுமோ? அஞ்சக்
கண்ணுடைச் சிறு கோல் பற்றிக்  10
கதம் பெரிது உடையள், யாய் அழுங்கலோ இலளே.

பாடல் பின்னணி:  தலைவன் காதற்பரத்தை ஒருவளைக் கூடிப் பின் அவளைக் கைவிட்டு அயற்பரத்தையிடம் சென்றான்.  பாணனைத் தூதாகத் தலைவனிடம் அனுப்பும் காதற்பரத்தை கூறியது இது.

பொருளுரைநன்கு நகுதற்குரியவன் பாணனே நும்முடைய தலைவன்.  காவல் காடுகளால் உண்டான வலிமை சிதையும்படி களிற்று யானைகள் உடைய படையைச் செலுத்தி, அரணங்கள் பலவற்றை வென்ற வலிமை மிகுந்த சேனைகளை உடைய பாண்டியன் வழுதி நீடு வாழ்வானாக என வணங்கி, எஞ்சிய நிலைபெற்ற கோட்டைகளையுடைய குறுநில மன்னர்களைப் போல், அதற்காக நாம் சிறிதும் வருந்துதல் உடையேம் அல்லேம் என்று மென்மையான நடையையும் செருக்கையுமுடைய குதிரையைச் செலுத்தி, எம்முடைய தெருவிற்கு வந்து மாலையையும் மலர்ச்சரத்தையும் காட்டி, ஒருமையுடைய எம் நெஞ்சத்தைத் தனதாகக் கொண்டமையின் அப்பழி விடுமோ?  நீ அஞ்சுமாறு நெருங்கிய கணுக்களையுடைய சிறிய மூங்கில் கோலை உடையவள் எம் சினம்கொண்ட தாய்.  அவள் அதன் விளைவை எண்ணி வருந்துபவள் இல்லை.

குறிப்பு:  வரலாறு:  வழுதி.  ஒருமைய நெஞ்சம் – ஒளவை துரைசாமி உரை – ஒருமை நெறியையுடைய எம் நெஞ்சம், பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – ஒருமைப்பாட்டையுடைய எம் நெஞ்சம்.  பரியல் (6) – ஒளவை துரைசாமி உரை – நேர்தல், பின்னத்தூர் அ.  நாராயணசாமி ஐயர் உரை – வருந்துதல்.

சொற்பொருள்நகை நன்கு உடையன் பாண நும் பெருமகன் – நன்கு நகுதற்குரியவன் பாணனே நும்முடைய தலைவன், மிளை வலி சிதையக் களிறு பல பரப்பி அரண் பல கடந்த முரண் கொள் தானை வழுதி வாழிய பல எனத் தொழுது ஈண்டு மன் எயில் உடையோர் போல – காவல் காடுகளால் உண்டான வலிமை சிதையும்படி களிற்று யானைகள் உடைய படையைச் செலுத்தி அரணங்கள் பலவற்றை வென்ற வலிமை மிகுந்த சேனைகளை உடைய பாண்டியன் வழுதி நீடு வாழ்வானாக என வணங்கி எஞ்சிய நிலைபெற்ற கோட்டைகளையுடைய குறுநில மன்னர்களைப் போல், அஃது யாம் என்னதும் பரியலோ இலம் எனத் தண் நடைக் கலி மா கடைஇ வந்து – அதற்காக நாம் சிறிதும் வருந்துதல் உடையேம் அல்லேம் என்று மென்மையான நடையையும் செருக்கையுமுடைய குதிரையைச் செலுத்தி (கடைஇ – அளபெடை), எம் சேரித் தாரும் கண்ணியும் காட்டி – எம்முடைய தெருவிற்கு வந்து மாலையையும் மலர்ச்சரத்தையும் காட்டி, ஒருமைய நெஞ்சம் கொண்டமை விடுமோ – ஒருமையுடைய எம் நெஞ்சத்தைத் தனதாகக் கொண்டமையின் அது விடுமோ (ஒருமைய – பெயரெச்சக் குறிப்பு, விடுமோ – ஓகாரம் எதிர்மறை), அஞ்சக் கண்ணுடைச் சிறு கோல் பற்றிக் கதம் பெரிது உடையள் யாய் – நீ அஞ்சுமாறு நெருங்கிய கணுக்களையுடைய சிறிய மூங்கில் கோலை உடையவள் எம் தாய், அழுங்கலோ இலளே – வருந்துபவள் இல்லை (இலளே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 151, இளநாகனார், குறிஞ்சித் திணை – தோழி தலைவியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
நன்னுதல் பசப்பினும், பெருந்தோள் நெகிழினும்,
கொல் முரண் இரும்புலி அரும் புழைத் தாக்கிச்
செம் மறுக் கொண்ட வெண்கோட்டு யானை
கல் மிசை அருவியின் கழூஉஞ்சாரல்
வாரற்க தில்ல, தோழி, கடுவன்  5
முறி ஆர் பெருங்கிளை அறிதல் அஞ்சி
கறி வளர் அடுக்கத்து, களவினில் புணர்ந்த
செம்முக மந்தி செய்குறி கருங்கால்
பொன் இணர் வேங்கைப் பூஞ்சினைச் செலீஇயர்,
குண்டு நீர் நெடுஞ்சுனை நோக்கிக் கவிழ்ந்து, தன்  10
புன்தலைப் பாறு மயிர் திருத்தும்,
குன்ற நாடன் இரவினானே.

பாடல் பின்னணி:  களவின்பத்தில் ஒழுகி மணம் புரியாது தலைவன் இரவுக்குறியில் வந்தான்.  அப்பொழுது தோழி கடிந்துரைத்தது.

பொருளுரை தோழி!  மிளகுக் கொடிகள் வளரும் மலைப்பக்கத்தில் களவொழுக்கத்தில் கடுவனுடன் கூடிய சிவந்த முகத்தையுடை பெண் குரங்கு ஒன்று, தளிரை உண்ணும் தன்னுடைய பெரிய குரங்குக்கூட்டம் அதை அறிவதை அஞ்சி, பொன்னிற மலர்க்கொத்துக்களையுடைய வேங்கை மரத்தின் மலர்கள் நிறைந்த கிளை மீது சென்று, ஆழமுடைய பெரிய சுனை நீரை நோக்கித் தன் தலையைக் கவிழ்த்தி, தன் மெல்லிய தலையில் புணர்ச்சியால் சிதைந்த மயிரைத் திருத்தும் மலை நாட்டின் தலைவன், உன்னுடைய நல்ல நெற்றி பசலை அடைந்தாலும் பெரிய தோள்கள் மெலிந்தாலும், கொல்லும் தன்மையுடைய வலிமையான பெரிய புலியை அரிய குகையில் தாக்கிக் கொன்று, சிவந்த குருதிக்கறைகள் படிந்த வெள்ளை மருப்புடைய யானை மலையின் மேலிருந்து வடியும் அருவி நீரில் மருப்பைக் கழுவும் மலைப்பக்க வழியில் வராது இருப்பானாக இரவு நேரத்தில்.

குறிப்பு:  கடுவன் – போத்தும் கண்டியும் கடுவனும் பிறவும் யாத்த ஆண்பாற் பெயர் என மொழிப (தொல்காப்பியம், மரபியல் 2).  மந்தி – பேடையும் பெடையும் பெட்டையும் பெண்ணும் மூடும் நாகும் கடமையும் அளகும் மந்தியும் பாட்டியும் பிணையும் பிணவும் அந்தம் சான்ற பிடியொடு பெண்ணே (தொல்காப்பியம், மரபியல் 3).  உள்ளுறை – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – களவில் புணரப்பட்ட மந்தி, அப்புணர்குறியைத் தன் சுற்றம் நோக்கும் என்று அஞ்சி பாறுமயிர் திருத்தும் என்றது, களவொழுக்கத்தாலே புணரப்பட்ட தலைமகள் அப்புணர்ச்சி வேறுபாட்டைத் தன் சுற்றத்தார் அறிவர் என்று அஞ்சி நாள்தோறும் மெய்யை முன்போல் ஆகும்படி திருத்திக் கொள்ள வேண்டியவள் ஆகின்றாள்.  ஆதலின் இவ்வச்சம் தீர வரைக என்பதாம்.  இறைச்சி – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – புலியை யானை சென்றழித்துத் தன் கோட்டினைக் கழுவும் என்றது, ஏதிலாட்டியர் எடுத்த பழிச் சொல்லைக்  கெடுத்து, ஓரையும் நாளும் நோக்காது கலந்ததனாலாகிய ஏதத்தை வரைந்து போக்கிக் கொள்வானாக என்றதாம்.  புலியைக் கொன்ற பின் யானை தன் மருப்பைக் கழுவுதல். – நற்றிணை 151 – இரும்புலி அரும் புழைத் தாக்கிச் செம் மறுக் கொண்ட வெண்கோட்டு யானை கல் மிசை அருவியின் கழூஉம், நற்றிணை 247 – தொன்று படு துப்பொடு முரண் மிகச் சினைஇக் கொன்ற யானைச் செங்கோடு கழாஅ.

சொற்பொருள்நன்னுதல் பசப்பினும் பெருந்தோள் நெகிழினும் – நல்ல நெற்றி பசலை அடையவும் பெரிய தோள்கள் மெலியவும், கொல் முரண் இரும்புலி அரும் புழைத் தாக்கிச் செம் மறுக் கொண்ட வெண்கோட்டு யானை கல் மிசை அருவியின் கழூஉம் சாரல் வாரற்க – கொல்லும் தன்மையுடைய வலிமையான பெரிய புலியை அரிய குகையில் தாக்கிக் கொன்று சிவந்த குருதிக்கறைகள் படிந்த வெள்ளை மருப்புடைய யானை மலையின் மேலிருந்து வடியும் அருவி நீரில் கழுவும் மலைப்பக்க வழியில் வராது இருப்பானாக (கழூஉம் – அளபெடை),  தில்ல – தில் ஒழியிசை என்னும் பொருளில் வரும் ஓர் இடைச்சொல், விழைவின்கண் (விருப்பத்தின்கண்) வந்த இடைச்சொல், தோழி – தோழி, கடுவன் – கடுவனுடன், முறி ஆர் பெருங்கிளை அறிதல் அஞ்சி – தளிரை உண்ணும் தன்னுடைய பெரிய குரங்குக்கூட்டம் அறிவதை அஞ்சி, கறி வளர் அடுக்கத்து களவினில் புணர்ந்த செம்முக மந்தி செய்குறி கருங்கால் பொன் இணர் வேங்கைப் பூஞ்சினைச் செலீஇயர் குண்டு நீர் நெடுஞ்சுனை நோக்கிக் கவிழ்ந்து தன் புன்தலைப் பாறு மயிர் திருத்தும் குன்ற நாடன் இரவினானே – மிளகுக் கொடிகள் வளரும் மலைப்பக்கத்தில் களவொழுக்கத்தில் கூடிய சிவந்த முகத்தையுடை பெண் குரங்கு பொன்னிற மலர்க்கொத்துக்களையுடைய வேங்கை மரத்தின் மலர்கள் நிறைந்த (அழகிய) கிளை மீது சென்று ஆழமுடைய பெரிய சுனை நீரை நோக்கித் தலையைக் கவிழ்த்தி தன் மெல்லிய தலையில் புணர்ச்சியால் சிதைந்த மயிரைத் திருத்தும் மலை நாட்டின் தலைவன் வராது இருப்பானாக இரவில் (செலீஇயர் – அளபெடை, இரவினானே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 152, ஆலம்பேரி சாத்தனார், நெய்தல் திணை – தலைவன் சொன்னது, தோழி கேட்கும்படி
மடலே காமம் தந்தது, அலரே
மிடை பூ எருக்கின் அலர் தந்தன்றே,
இலங்கு கதிர் மழுங்கி எல் விசும்பு படரப்
புலம்பு தந்தன்றே புகன்று செய் மண்டிலம்,
எல்லாம் தந்ததன் தலையும், பையென  5
வடந்தை துவலை தூவ, குடம்பைப்
பெடை புணர் அன்றில் உயங்கு குரல் அளைஇ
கங்குலும் கையறவு தந்தன்று,
யாங்கு ஆகுவென் கொல்? அளியென் யானே.

பாடல் பின்னணி:  இரந்து குறை நீங்கப் பெறாத நிலையில் மடலேறக் கருதினான் தலைவன்.  தோழியின் முன்னிலையில் வேறு ஒருவரிடம் கூறுவான் போன்று, தன் குறையை முடிக்கும்படி கூறுகின்றான்.

பொருளுரைநான் கொண்ட காதல் பனை மடல் குதிரை மேல் ஏறும் நிலையைத் தந்தது.  ஊரார் தூற்றிய பழிச் சொற்கள் நெருங்கிய இதழ்களையுடைய எருக்க மாலையைத் தந்தது.  உலகம் உவக்கும்படி ஒளியைப் பரப்பும் கதிரவனின் விளங்கிய கதிர்கள் ஒளி மழுங்கி எனக்குத் துன்பத்தைத் தந்தது.  இவை யாவும் தந்தவற்றின் மேலும், மெல்ல வாடைக்காற்று பனித்துளியைத் தூவுவதால் கூட்டில் தன் பெடையுடன் கூடி வாழும் அன்றில் பறவையின் வருந்தும் குரலுடன் கலந்து, இரவிலும் நான் செயலற்று வருந்தும் நிலையைத் தந்தது.  எவ்வாறு ஆகுவேன்?  இரங்கத்தக்கவன் யான்!

குறிப்பு:  எருக்கின் அலர் தந்தன்றே (2) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – ஆவிரை பூளை உழிஞை என்று இன்ன மலர்களை இடையிட்டுக் கட்டிய எருக்கம்பூமாலையைத் தந்தது, ஒளவை துரைசாமி உரை – எருக்கின் பூவாலாகிய கண்ணியும் தாரும் தந்தது.  மடல் ஏறுதல் – சங்க இலக்கியத்தில் மொத்தம் 16 பாடல்களில் மடல் ஏறுதல் பற்றிய குறிப்புகள் உள்ளன – குறுந்தொகை 14, 17, 32, 173, 182, நற்றிணை 146, 152, 220, 342, 377, கலித்தொகை 58, 61, 138, 139, 140, 141.  கலித்தொகை 138, 139, 140, 141 பாடல்களில் மட்டுமே தலைவன் மடல் குதிரையின் மீது செல்கின்றான்.  கலித்தொகை 138, 141 ஆகிய பாடல்களில் மடல் ஏறியதால் தலைவியை அடைகின்றான்.  எல் – எல்லே இலக்கம் (தொல்காப்பியம், இடையியல் 21).  காமம் – கமம் என்னும் சொல்லின் முதல் நீண்ட வடிவம், ‘நிறைந்த அன்பு’ என்பது இச்சொல்லின் பொருள் – பேரறிஞர் கு.வெ. பாலசுப்பிரமணியன் அவர்களின் விளக்கம், (கமம் நிறைந்து இயலும் – தொல்காப்பியம், சொல்லியல் 355).

சொற்பொருள்மடலே காமம் தந்தது – நான் கொண்ட காதல் பனை மடல் குதிரை மேல் ஏறும் நிலையைத் தந்தது (மடலே – ஆகுபெயர் குதிரைக்கு, ஏகாரம் அசைநிலை), அலரே மிடை பூ எருக்கின் அலர் தந்தன்றே – ஊரார் தூற்றிய பழி நெருங்கிய இதழ்களையுடைய எருக்க மாலையைத் தந்தது, ஊரார் தூற்றிய பழி ஆவிரை பூளை உழிஞை ஆகிய மலர்களை இடையில் வைத்துக் கட்டிய மலர்மாலையைத் தந்தது (அலரே – பழிமொழி, ஏகாரம் அசைநிலை, மிடை – நெருக்கம், கலத்தல், அலர் – ஆகுபெயர் மலர்மாலைக்கு), இலங்கு கதிர் மழுங்கி எல் விசும்பு படரப் புலம்பு தந்தன்றே – கதிரவனின் விளங்கிய கதிர்கள் ஒளி மழுங்கி எனக்குத் துன்பத்தைத் தந்தது, புகன்று செய் மண்டிலம் – உலகம் உவக்கும்படி ஒளியைப் பரப்பும் கதிரவன், எல்லாம் தந்ததன் தலையும் – இவை யாவும் தந்தவற்றின் மேலும், பையென வடந்தை துவலை தூவ குடம்பைப் பெடை புணர் அன்றில் உயங்கு குரல் அளைஇ கங்குலும் கையறவு தந்தன்று – மெல்ல வாடைக்காற்று பனித்துளியைத் தூவுவதால் கூட்டில் தன் பெடையுடன் கூடி வாழும் அன்றில் பறவையின் வருந்தும் குரலுடன் கலந்து (அளைஇ – சொல்லிசை அளபெடை), கங்குலும் கையறவு தந்தன்று – இரவிலும் செயலற்று வருந்தும் நிலையைத் தந்தது, யாங்கு ஆகுவென் கொல் – எவ்வாறு ஆகுவேன் (கொல் – அசைநிலை), அளியென் யானே – இரங்கத்தக்கவன் யான் (யானே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 153, தனிமகனார், பாலைத் திணை – தலைவி சொன்னது
குணகடல் முகந்து, குடக்கு ஏர்பு, இருளி
மண் திணி ஞாலம் விளங்க கம்மியர்
செம்பு சொரி பானையின் மின்னி, எவ்வாயும்
தன் தொழில் வாய்த்த இன் குரல் எழிலி
தென்புல மருங்கில் சென்று அற்றாங்கு,  5
நெஞ்சம் அவர் வயின் சென்றென, ஈண்டு ஒழிந்து
உண்டல் அளித்து என் உடம்பே, விறல் போர்
வெஞ்சின வேந்தன் பகை அலைக்கலங்கி
வாழ்வோர் போகிய பேர் ஊர்ப்
பாழ் காத்திருந்த தனி மகன் போன்றே.  10

பாடல் பின்னணி:  பிரிவிடை வருந்திய தலைவி சொல்லியது.

பொருளுரைகிழக்குக் கடலின் நீரை முகந்து மேற்குத் திசையில் ஏறி இருண்டு, மண் செறிந்த உலகம் விளங்குமாறு, கொல்லர்கள் செம்பை உருக்கிச் செய்த பானைபோல் மின்னி, எங்கும் தன் பெய்யும் தொழிலை மேற்கொண்ட இனிய குரலுடைய முகில்கள் தென்திசையின்கண் சென்று ஒழிந்தாற்போல் என் நெஞ்சம் என்னை விட்டு அகன்று அவரிடம் சென்றதனால், இங்குத் தனித்து இருந்து உண்ணுதலால் காக்கப்படுகின்றது என் உடல் மட்டுமே, வெற்றியைத் தரும் போர் செய்ய வல்ல கொடிய சினத்தையுடைய பகை மன்னனின் படை துன்புறுத்தலால் கலங்கி ஊரில் வாழ்பவர்கள் குடிபெயர்ந்துவிட்ட பாழ்பட்ட ஊரைக் காத்திருந்த, ஒற்றை மனிதன் போல்.

குறிப்பு:  ஒப்புமை:  குறுந்தொகை 41 – சீறூர் மக்கள் போகிய அணில் ஆடு முன்றில் புலம்பில் போலப் புல்லென்று அலப்பென், கலித்தொகை 23 – நல்குநர் புரிந்து நலன் உணப்பட்டோர் அல்குநர் போகிய ஊர் ஓரன்னர்.

சொற்பொருள்:  குணகடல் முகந்து குடக்கு ஏர்பு இருளி மண் திணி ஞாலம் விளங்க கம்மியர் செம்பு சொரி பானையின் மின்னி – கிழக்குக் கடலின் நீரை முகந்து மேற்குத் திசையில் ஏறி இருண்டு மண் செறிந்த உலகம் விளங்குமாறு கொல்லர்கள் செம்பை உருக்கிச் செய்த பானைபோல் மின்னி (பானையின் – இன் உருபு ஒப்புப் பொருளது, ஐந்தாம் வேற்றுமை உருபு), எவ்வாயும் தன் தொழில் வாய்த்த இன் குரல் எழிலி தென்புல மருங்கில் சென்று அற்றாங்கு நெஞ்சம் அவர் வயின் சென்றென – எங்கும் தன் பெய்யும் தொழிலை மேற்கொண்ட இனிய குரலுடைய முகில்கள் தென்திசையின்கண் சென்று ஒழிந்தாற்போல் என் நெஞ்சம் அவரிடம் சென்றதனால், ஈண்டு ஒழிந்து உண்டல் அளித்து என் உடம்பே – இங்குத் தனித்து இருந்து உண்ணுதலால் காக்கப்படுகின்றது என் உடல் (உடம்பே – ஏகாரம் அசைநிலை), விறல் போர் வெஞ்சின வேந்தன் பகை அலைக்கலங்கி வாழ்வோர் போகிய பேர் ஊர்ப் பாழ் காத்திருந்த தனி மகன் போன்றே – வெற்றியைத் தரும் போர் செய்ய வல்ல கொடிய சினத்தையுடைய பகை மன்னனின் படை துன்புறுத்தலால் கலங்கி ஊரில் வாழ்பவர்கள் குடிபெயர்ந்துவிட்ட பாழ்பட்ட ஊரைக் காத்திருந்த ஒற்றை மனிதன் போல் (போன்றே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 154, நல்லாவூர் கிழார், குறிஞ்சித் திணை – தோழி தலைவியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
கானமும் கம்மென்றன்றே, வானமும்
வரை கிழிப்பு அன்ன மை இருள் பரப்பி
பல் குரல் எழிலி பாடு ஓவாதே,
மஞ்சு தவழ் இறும்பில் களிறு வலம்படுத்த
வெஞ்சின உழுவைப் பேழ்வாய் ஏற்றை  5
அஞ்சுதக உரறும் ஓசை கேளாது
துஞ்சுதியோ இல தூவிலாட்டி,
பேர் அஞர் பொருத புகர்படு நெஞ்சம்
நீர் அடு நெருப்பின் தணிய, இன்று அவர்
வாரார் ஆயினோ நன்றே, சாரல்  10
விலங்கு மலை ஆர் ஆறு உள்ளுதொறும்
நிலம் பரந்து ஒழுகும் என் நிறை இல் நெஞ்சே?

பாடல் பின்னணி:  தலைவன் சிறைப்புறத்தானாக, அவன் இரவின்கண் வருவதை விலக்கி வரைவு கடாயது.

பொருளுரைகாடும் கம்மென்று ஒலி இல்லாது அடங்கியது. வானமும் மலையைக் கிழித்தாற் போன்றுள்ள குகையில் உள்ள கரிய இருளை எங்கும் பரப்பிப் பல இடி முழக்கத்தை உடைய முகில்கள் இடைவிடாது செய்யும் முழக்கம் அடங்காததாக உள்ளது. முகில்கள் தவழ்கின்ற சிறிய காட்டில், களிற்று யானையை, அது வலப்பக்கமாக விழும்படி கொன்ற கொடிய சினத்தையுடைய பெரிய வாயையுடைய ஆண்புலி அச்சமடையும்படி முழங்கும் ஓசையை நீ கேளாது உறங்குகின்றாயோ, வலிமை இல்லாத பெண்ணே? பெரும்துன்பம் வந்து தாக்கியதால் குற்றமுடைய நெஞ்சம் நீரைப் பெய்த நெருப்புப் போல் தணிய, இன்று அவர் வராவிட்டால் நல்லது.  மலையின் சரிவில் குறுக்கிட்ட மலையில் செல்லும் அரிய வழியை நினைக்கும் பொழுதெல்லாம் அந்நிலத்தில் பரந்து செல்கின்றது நிலையற்ற என் நெஞ்சம்.  யான் என்ன செய்வேன்?

குறிப்பு:  புலி தான் கொன்ற விலங்கின் உடல் இடது புறம் விழுந்தால் அதை உண்ணாது – அகநானூறு 3, 29, 238, 252, 357 and 389, நற்றிணை154, புறநானூறு 190.  ஏற்றை – ஆற்றலொடு புணர்ந்த ஆண்பாற்கு எல்லாம் ஏற்றைக் கிளவி உரித்து என மொழிப (தொல்காப்பியம், மரபியல் 50).

சொற்பொருள்:  கானமும் கம்மென்றன்றே – காடும் கம் என்னும் ஒலி இல்லாது அடங்கியது (கம்மென்றன்றே – ஓசை அடங்கும் குறிப்பு, ஏகாரம் அசைநிலை), வானமும் வரை கிழிப்பு அன்ன மை இருள் பரப்பிப் பல் குரல் எழிலி பாடு ஓவாதே – வானமும் மலையைக் கிழித்தாற்போன்றுள்ள குகையில் உள்ள கரிய இருளை எங்கும் பரப்பி பல இடி முழக்கத்தை உடைய முகில்கள் இடைவிடாது செய்யும் முழக்கம் அடங்காது (ஓவாதே – ஏகாரம் அசைநிலை), மஞ்சு தவழ் இறும்பில் களிறு வலம்படுத்த வெஞ்சின உழுவைப் பேழ்வாய் ஏற்றை அஞ்சுதக உரறும் ஓசை கேளாது துஞ்சுதியோ – முகில்கள் தவழ்கின்ற சிறிய காட்டில் களிற்று யானையை அது வலப்பக்கமாக விழும்படி கொன்ற கொடிய சினத்தையுடைய பெரிய வாயையுடைய ஆண்புலி அச்சமடையும்படி முழங்கும் ஓசையை நீ கேளாது உறங்குகின்றாயோ, இல தூ இல் ஆட்டி – வலிமை இல்லாத பெண்ணே, பேர் அஞர் பொருத புகர்படு நெஞ்சம் நீர் அடு நெருப்பின் தணிய – பெரும் துன்பம் வந்து தாக்கியதால் குற்றமுடைய நெஞ்சம் நீரைப் பெய்த நெருப்புப் போல் தணிய (நெருப்பின் – இன் ஒப்புப் பொருளில் வந்தது, ஐந்தாம் வேற்றுமை உருபு), இன்று அவர் வாரார் ஆயினோ நன்றே – இன்று அவர் வராவிட்டால் நல்லது (நன்றே – ஏகாரம் அசைநிலை), சாரல் விலங்கு மலை ஆர் ஆறு உள்ளுதொறும் நிலம் பரந்து ஒழுகும் என் நிறை இல் நெஞ்சே – மலையின் சரிவில் குறுக்கிட்ட மலையில் செல்லும் அரிய வழியை நினைக்கும் பொழுதெல்லாம் அந்நிலத்தில் பரந்து செல்லும் நிலையற்ற என் நெஞ்சம் (நெஞ்சே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 155, பராயனார், நெய்தல் திணை – தலைவன் தலைவியிடம் சொன்னது
‘ஒள்ளிழை மகளிரொடு ஓரையும் ஆடாய்,
வள் இதழ் நெய்தல் தொடலையும் புனையாய்,
விரி பூங்கானல் ஒரு சிறை நின்றோய்,
யாரையோ? நிற் தொழுதனெம் வினவுதும்,
கண்டோர் தண்டா நலத்தை தெண் திரைப்  5
பெருங்கடல் பரப்பின் அமர்ந்து உறை அணங்கோ?
இருங்கழி மருங்கு நிலை பெற்றனையோ?
சொல் இனி மடந்தை’ என்றனென், அதன் எதிர்
முள் எயிற்று முறுவல் திறந்தன
பல்லிதழ் உண்கணும் பரந்தவால் பனியே?  10

பாடல் பின்னணி:  (1) இடந்தலைப்பாடு கொண்டு (இரண்டாம் கூட்டம்) கூடுமாறு சென்ற தலைவன் சொன்னது.  (2) பரத்தையிற் பிரிந்து வந்த தலைவனுடன் தலைவி ஊடிய போது உரைத்தது.

பொருளுரைநீ ஒளியுடைய அணிகலன்களை அணிந்த பெண்களுடன் ஓரை விளையாட்டு விளையாடவில்லை.  பெரிய இதழ்களை உடைய நெய்தல் மலர்களை மாலையாகத் தொடுத்து அணியவில்லை.  மலர்களை உடைய பெரிய கடற்கரைச் சோலையில் இருக்கும் உன்னை நான் தொழுது கேட்கின்றேன்.  நீ யார்? காண்போர் கண்ணுக்கு, குறையில்லாத அழகை உடைய, தெளிந்த அலைகளை உடைய பரந்த கடலின் பரப்பில் விரும்பி உறையும் கடவுளோ நீ?  நீ கரிய உப்பங்கழியுடைய இடத்தில் வாழ்கின்றாயா?  சொல் பெண்ணே என்றேன்.  அதற்குப் பதிலாகக் கூர்மையான பற்களுடன் புன்னகையை உதிர்த்தாள்.  பல இதழ்களையுடைய மலர்களைப் போன்ற அவளுடைய மையிட்ட கண்களில் கண்ணீர் படர்ந்தது.

குறிப்பு:  ஒளவை துரைசாமி உரை – ‘முன்னிலை ஆக்கல்’ (தொல்காப்பியம், களவியல் 10) எனத் தொடங்கும் நூற்பா உரையில், இப்பாட்டினைக் காட்டுவர் இளம்பூரணர்; இனி நச்சினார்க்கினியர் மெய் தொட்டுப் பயிறல் (தொல்காப்பியம், களவியல் 11) எனத் தொடங்கும் நூற்பாவின்கண் ‘அறிந்தோள் அயர்ப்பின் அவ் வழி மருங்கின் கேடும் பீடும் கூறலும்’ என்றதன் உரையில் இப்பாட்டைக் காட்டுகின்றார்.  .  நெய்தல் தொடலையும் புனையாய் (2) – ஒளவை துரைசாமி உரை – நெய்தல் மலர்களைக் கொய்து மாலை தொடுத்தலைச் செய்யாய், H. வேங்கடராமன் உரை – நெய்தல் மலர் மாலையைச் சூடினாய் இல்லை, பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – நெய்தல் மலர் மாலையையும் புனையாய்.  யாரையோ (4) – இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை (அகநானூறு 46 – ம் பாடலின் உரையில் கூறியது) ஐகாரம் முன்னிலைக்கண் வந்தது, சாரியையுமாம்.  அணங்கோ (6) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – நீரரமகளோ, ஒளவை துரைசாமி உரை – பெண் தெய்வமோ, பொ. வே. சோமசுந்தரனார் உரை – தெய்வ மகளோ.  ஓரை விளையாட்டு – அகநானூறு 49, 60, 219, நற்றிணை 68, 143, 155, 398, குறுந்தொகை 48, 316, 401, கலித்தொகை 75.

சொற்பொருள்:  ஒள் இழை மகளிரொடு – ஒளியுடைய அணிகலன்களை அணிந்த பெண்களுடன், ஓரையும் ஆடாய் – ஓரை விளையாட்டு விளையாடவில்லை நீ, வள் இதழ் நெய்தல் தொடலையும் புனையாய் – பெரிய இதழ்களை உடைய நெய்தல் மலர் மாலையையும் நீ தொடுத்து அணியவில்லை, விரி பூங் கானல் – விரிந்த மலர்களையுடைய கடற்கரைச் சோலை அல்லது மலர்களை உடைய பெரிய கடற்கரைச் சோலை, யாரையோ – நீ யார் (யாரை முன்னிலைக்கண் வந்த வினா, ஓகாரம் அசைநிலை), நிற் தொழுதனெம் வினவுதும் – உன்னைத் தொழுது கேட்கின்றேன் (தொழுதனெம் – தன்மைப் பன்மை), கண்டோர் – காண்போரால், தண்டா நலத்தை – கெடாத அழகை, தெண் திரைப் பெருங்கடல் பரப்பின் அமர்ந்து உறை – தெளிந்த அலைகளை உடைய பரந்த கடலின் பரப்பில் விரும்பி உறையும், அணங்கோ – கடவுளோ, இருங்கழி மருங்கு நிலை பெற்றனையோ – கரிய உப்பங்கழியுடைய இடத்தில் வாழ்கின்றாயா, சொல் இனி மடந்தை என்றனென் – சொல் பெண்ணே என்றேன், அதன் எதிர் – அதற்குப் பதிலாக, முள் எயிற்று முறுவல் – கூர்மையான பல்லுடன் புன்னகை, திறந்தன – திறந்தன, பல்லிதழ் – பல இதழ்களையுடைய மலர்கள் (பூவிற்கு ஆகுபெயர், அகரம் கெட்டுக் ‘குறியதன் முன்னர்த் தன்னுரு இரட்டலும்’ – தொல்காப்பியம், எழுத்ததிகாரம் 160, என்றதனால் லகரம் இரட்டித்துப் பல்லிதழ் என முடிந்தது), உண்கணும் பரந்தவால் பனியே – மையிட்ட கண்களில் படர்ந்தது கண்ணீர் (பரந்தவால் – ஆல் அசைநிலை, பனியே – ஏகாரம் அசை நிலை)

நற்றிணை 156, கண்ணங்கொற்றனார், குறிஞ்சித் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
நீயே அடி அறிந்து ஒதுங்கா ஆர் இருள் வந்து, எம்
கடியுடை வியல் நகர்க் காவல் நீவியும்,
பேர் அன்பினையே பெருங்கல் நாட!
யாமே நின்னும் நின் மலையும் பாடி, பல் நாள்
சிறுதினை காக்குவம் சேறும்; அதனால்  5
பகல் வந்தீமோ, பல் படர் அகல;
எருவை நீடிய பெருவரைச் சிறுகுடி
அரியல் ஆர்ந்தவர் ஆயினும் பெரியர்,
பாடு இமிழ் விடர் முகை முழங்க,
ஆடு மழை இறுத்தது, எம் கோடு உயர் குன்றே.  10

பாடல் பின்னணி:  இரவுக்குறி மறுத்து, பகற்குறி நேர்வாள் போன்று வரைவு வேண்டியது.

பொருளுரைபெரிய மலை நாடனே!  நீ அடியெடுத்து நடத்தற்குரிய வழியை அறிய முடியாத செறிந்த இருளில் வந்து எம்முடைய காவலுடைய பெரிய இல்லத்தின் காவலைக் கடந்து வரும் பேரன்புடையை.  யாம் நின்னையும் நின் மலையையும் பாடி பல நாட்கள் எங்கள் சிறுதினையுடைய புனத்தைக் காக்கச் செல்வோம்.  கொறுக்கச்சி மிக வளர்ந்துள்ள பெரிய மலையில் உள்ள சிறுகுடியில் உள்ள எம் உறவினர் கள்ளைக் குடித்தாலும் மிகுந்த சினம் உடையவர்கள்.  மேலும், முழங்கும் ஓசையுடைய பிளவுபட்ட மலைக் குகைகளில் ஒலிக்கும்படி அசைந்து வரும் மழை முகில்கள் தங்குதலைக் கொண்டது எம் உச்சி உயர்ந்த குன்றம்.  அதனால் யாம் அடைந்த பல துன்பங்கள் விலக, பகலில் நீ வருவாயாக!

குறிப்பு:  பகற்குறி – அகநானூறு 80 – புன்னை அம் கானல் பகல் வந்தீமே, அகநானூறு 218 – தண் பெருஞ்சாரல் பகல் வந்தீமே, நற்றிணை 156 – அதனால் பகல் வந்தீமோ.  பெரியர் (8) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – அவர் தாம் வெகுளியில் மிகப் பெரியவராயிரா நின்றார், ஒளவை துரைசாமி உரை – பிறரை ஒதுக்கும் வன்கண்மையில் பெரிதும் கொடியவராவர், H. வேங்கடராமன் உரை – சினம் மிகுந்தவர் ஆவர்.

சொற்பொருள்:  நீயே அடி அறிந்து ஒதுங்கா ஆர் இருள் வந்து எம் கடியுடை வியல் நகர்க் காவல் நீவியும் பேர் அன்பினையே பெருங்கல் நாட – நீ அடியெடுத்து நடத்தற்குரிய வழியை அறிய முடியாத செறிந்த இருளில் வந்து எம்முடைய காவலுடைய பெரிய இல்லத்தின் காவலைக் கடந்து வரும் பேரன்புடையை பெரிய மலை நாடனே (அன்பினையே – ஏகாரம் அசைநிலை), யாமே நின்னும் நின் மலையும் பாடி பல் நாள் சிறுதினை காக்குவம் சேறும் – யாம் நின்னையும் நின் மலையையும் பாடி பல நாட்கள் எங்கள் சிறுதினையுடைய புனத்தைக் காக்கச் செல்வோம் (யாமே – ஏகாரம் அசைநிலை), அதனால் பகல் வந்தீமோ – அதனால் பகலில் நீ வருவாயாக (மோ – முன்னிலை அசை), பல் படர் அகல – யாம் அடைந்த பல துன்பங்கள் விலக, எருவை நீடிய பெருவரைச் சிறுகுடி அரியல் ஆர்ந்தவர் ஆயினும் பெரியர் – கொறுக்கச்சி மிக வளர்ந்துள்ள பெரிய மலையில் உள்ள சிறுகுடியில் உள்ள எம் உறவினர் கள்ளைக் குடித்தாலும் மிகுந்த சினம் உடையவர்கள், பாடு இமிழ் – முழங்கும் ஓசை, விடர் முகை முழங்க ஆடு மழை இறுத்தது எம் கோடு உயர் குன்றே – பிளவுபட்ட மலைக் குகைகளில் முழங்கும்படி அசைந்து வரும் மழை முகில்கள் தங்குதலைக் கொண்டது எம் உச்சி உயர்ந்த குன்றம் (குன்றே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 157, இளவேட்டனார், பாலைத் திணை – தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது
இருங்கண் ஞாலத்து ஈண்டு தொழில் உதவிப்
பெரும் பெயல் பொழிந்த வழிநாள் அமையத்துப்,
பல் பொறி அரவின் செல் புறம் கடுப்ப
யாற்று அறல் நுணங்கிய நாட் பத வேனில்,
இணர் துதை மாஅத்த புணர் குயில் விளித்தொறும்,  5
நம் வயின் நினையும் நெஞ்சமொடு கைம்மிகக்
கேட்டொறும் கலுழுமால் பெரிதே, காட்ட
குறும்பொறை அயல நெடுந்தாள் வேங்கை
அம் பூந்தாது உக்கன்ன
நுண் பல் தித்தி மாஅயோளே.  10

பாடல் பின்னணி:  பொருள்வயிற் பிரிந்த தலைவன் வினை முடிக்குமுன் இளவேனில் பருவம் வந்ததைக் கண்டு, வருந்திக் கூறியது.

பொருளுரை:  பெரிய இடத்தையுடைய இந்த உலகில் இங்கு யாவரும் தங்கள் தொழில்களைப் புரியுமாறு உதவிப் பெரிய மழை பொழிந்த அடுத்த நாள் காலை வேளையில், பல புள்ளிகளைக் கொண்ட பாம்பு வளைந்து செல்லும் பொழுது அதன் முதுகு நெளிந்தாற்போல் ஆற்று நீர் நுணுகி ஓடுகின்ற செவ்விதான (அழகுடைய) வேனில் காலத்தில், பூங்கொத்துக்கள் நிறைந்த மாமரத்தில் வாழும் பெடையுடன் கூடும் குயில்கள் கூவும் பொழுதெல்லாம், காட்டில் உள்ள சிறிய மலையின் பக்கத்தில் உள்ள நெடிய அடியையுடைய வேங்கை மரத்தின் அழகிய மலர்த்தாது உதிர்ந்தாற்போல் பல தேமல்களைக் கொண்ட மாமை நிறமுடைய நம் தலைவி நம்மை நினைந்த நெஞ்சத்துடன், பிரிவுத் துன்பம் மிகுந்து, அக்குயில்கள் ஒன்றை ஒன்று அழைக்கும் ஓசையைக் கேட்கும் பொழுதெல்லாம் அழுவாள் மிகவும்.

குறிப்பு:  மாயோள் (10) – ஒளவை துரைசாமி உரை – மாந்தளிர் போலும் நிறத்தையுடையவள்.  இது மாமை நிறம் எனவும் வழங்கும்.  மாமை கருமையுமாம் – மாமைக் களங்கனியன்ன (மலைபடுகடாம் 35), பொ. வே. சோமசுந்தரனார் உரை – கரிய நிறத்தாலே களம்பழத்தின் நிறத்தை ஒத்ததாய்.

சொற்பொருள்:  இருங்கண் ஞாலத்து ஈண்டு தொழில் உதவிப் பெரும் பெயல் பொழிந்த வழிநாள் அமையத்துப் பல் பொறி அரவின் செல் புறம் கடுப்ப யாற்று அறல் நுணங்கிய நாட்பத வேனில் – பெரிய இடத்தையுடைய இந்த உலகில் இங்கு யாவரும் தொழில் புரியுமாறு உதவிப் பெரிய மழை பொழிந்த அடுத்த நாள் காலை வேளையில் பல புள்ளிகளைக் கொண்ட பாம்பு வளைந்து செல்லும் பொழுது அதன் முதுகு நெளிந்தாற்போல் ஆற்று நீர் நுணுகி ஓடுகின்ற செவ்விதான (அழகுடைய) வேனில் காலத்தில் (கடுப்ப – உவம உருபு), இணர் துதை மாஅத்த புணர் குயில் விளித்தொறும் – பூங்கொத்துக்கள் நிறைந்த மாமரத்தில் வாழும் பெடையுடன் கூடும் குயில்கள் கூவும் பொழுதெல்லாம் (மாஅத்த – அத்துச்சாரியை அகர விகுதி பெற்றது), நம் வயின் நினையும் நெஞ்சமொடு – நம்மை நினைந்த நெஞ்சத்துடன், கைம்மிகக் கேட்டொறும் கலுழுமால் பெரிதே – பிரிவுத் துன்பம் மிகுந்து கேட்கும் பொழுதெல்லாம் அழுவாள் மிகவும் (கலுழுமால் – ஆல் அசைநிலை, பெரிதே – ஏகாரம் அசைநிலை), காட்ட குறும்பொறை அயல நெடுந்தாள் வேங்கை அம் பூந்தாது உக்கன்ன நுண் பல் தித்தி மாஅயோளே – காட்டில் உள்ள சிறிய மலையின் பக்கத்தில் உள்ள நெடிய அடியையுடைய வேங்கை மரத்தின் அழகிய மலர்த்தாது உதிர்ந்தாற்போல் பல தேமல்களைக் கொண்ட மாமை நிறமுடையவள் (மாஅயோளே – அளபெடை, ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 158, வெள்ளைக்குடி நாகனார், குறிஞ்சித் திணை – தோழி தலைவியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
அம்ம வாழி தோழி! நம் வயின்
யானோ காணேன், அது தான் கரந்தே,
கல் அதர் மன்னும் கால் கொல்லும்மே,
கனை இருள் மன்னும் கண் கொல்லும்மே,
விடர் முகைச் செறிந்த வெஞ்சின இரும்புலி  5
புகர் முக வேழம் புலம்பத் தாக்கி,
குருதி பருகிய கொழுங்கவுள் கயவாய்
வேங்கை முதலொடு துடைக்கும்
ஓங்கு மலை நாடன் வரூஉம் ஆறே.

பாடல் பின்னணி:  ஆறு பார்த்து (வழியைப்  பார்த்து) உற்ற அச்சத்தால் தோழி கூறியது.  வரைவு கடாயது. 

பொருளுரைநீடு வாழ்வாயாகத் தோழி! நான் கூறுவதைக் கேட்பாயாக!  மலைப் பிளவுகளில் வாழும் கொடிய சினமுடைய பெரிய புலி புள்ளிகள் முகத்தில் பொருந்திய களிற்று யானையை வருந்த தாக்கிக் கொன்று, அதன் குருதியைப் பருகிய கொழுத்த கன்னங்களையும் பெரிய வாயையும் வேங்கையின் அடிமரத்தில் துடைக்கின்ற உயர்ந்த மலைநாடன் வரும் வழியை, இதுவரை யான் கண்டதில்லை. அந்த வழி மறைவாக இருந்து மலை வழியில் நடப்போரின் கால்களைத் துன்புறுத்தும். செறிந்த இருள் அங்குப் படர்ந்து வந்து கண்ணுக்குத் தோன்றாதவாறு மறைத்துத் துன்புறுத்தும். யான் யாது செய்வேன்?

குறிப்பு:  கல் அதர் மன்னும் கால் கொல்லும்மே (3) – ஒளவை துரைசாமி உரை – கல்லும் முள்ளும் நிறைந்த மலைக் காட்டுவழி நடப்போர் காலை வருத்தும், பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – மலைவழியிலே பொருந்தியிருக்கின்ற காட்டின் வடிவங்கொண்டு என் முன்னின்று இது தான் அவன் வருகின்ற காடென்பதனை நீ காண் என்று என்னைக் கொல்லாநிற்கும். கனை இருள் மன்னும் கண் கொல்லும்மே (4) – ஒளவை துரைசாமி உரை – பேரிருள் பரந்து யாதும் கண்ணுக்குத் தோன்றாதவாறு மறைத்து வருத்தும், பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – மிக்க இருள் வடிவமாய் நின்று இது தான் அவன் வருகின்ற இருட்பொழுது என்று என் கண்களைக் கொல்லா நிற்கும்.   உள்ளுறை – ஒளவை துரைசாமி உரை – வேழத்தைத் தாக்கிக் கொன்றதனால் குருதி ஆடிய வாயை இரும்புலி வேங்கை முதலோடு துடைக்கும் என்றது, தன் தொடர்பால் நம்பால் தோன்றி வருந்தும் மேனி வேறுபாட்டைச் சான்றோரை விடுத்துச் செய்யும் வரைவினால் போக்கற்பாலவன் என்றவாறு.  அம்ம – அம்ம கேட்பிக்கும் (தொல்காப்பியம், இடையியல் 28).

சொற்பொருள்:  அம்ம – நான் கூறுவதைக் கேட்பாயாக, வாழி தோழி – நீடு வாழ்வாயாகத் தோழி. நம் வயின் யானோ காணேன் – இதுவரை யான் கண்டதில்லை, அது தான் கரந்தே கல் அதர் மன்னும் கால் கொல்லும்மே – அந்த வழி மறைவாக இருந்து மலை வழியில் நடப்போரின் கால்களைத் துன்புறுத்தும் (கொல்லும்மே – செய்யுளோசை நோக்கி மகர ஒற்று விரிந்தது), கனை இருள் மன்னும் கண் கொல்லும்மே – செறிந்த இருள் அங்குப் படர்ந்து வந்து கண்ணுக்குத் தோன்றாதவாறு மறைத்துத் துன்புறுத்தும் (மன்னும் – மன், உம் – அசைநிலைகள், கொல்லும்மே – செய்யுளோசை நோக்கி மகர ஒற்று விரிந்தது), விடர் முகைச் செறிந்த வெஞ்சின இரும்புலி புகர் முக வேழம் புலம்பத் தாக்கி குருதி பருகிய கொழுங்கவுள் கயவாய் வேங்கை முதலொடு துடைக்கும் ஓங்கு மலை நாடன் வரூஉம் ஆறே – மலைப் பிளவுகளில் வாழும் கொடிய சினமுடைய பெரிய புலி புள்ளிகள் முகத்தில் பொருந்திய களிற்று யானையை வருந்தத் தாக்கிக் கொன்று அதன் குருதியைப் பருகிய கொழுத்த கன்னங்களையும் பெரிய வாயையும் வேங்கையின் அடிமரத்தில்  துடைக்கின்ற உயர்ந்த மலைநாடன் வரும் வழி (வரூஉம் – செய்யுளிசை அளபெடை, ஆறே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 159, கண்ணம் புல்லனார், நெய்தல் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
மணி துணிந்தன்ன மா இரும் பரப்பின்
உரவுத் திரை கொழீஇய பூ மலி பெருந்துறை
நிலவுக் குவித்தன்ன மோட்டு மணல் இடிகரைக்,
கோடு துணர்ந்தன்ன குருகு ஒழுக்கு எண்ணி,
எல்லை கழிப்பினம் ஆயின் மெல்ல  5
வளி சீத்து வரித்த புன்னை முன்றில்,
கொழு மீன் ஆர்கைச் செழு நகர்ச் செலீஇய
எழு எனின் அவளும் ஒல்லாள், யாமும்
ஒழி என அல்லம் ஆயினம், யாமத்து
உடை திரை ஒலியின் துஞ்சும் மலி கடல்  10
சில் குடிப் பாக்கம் கல்லென
அல்குவதாக நீ அமர்ந்த தேரே.

பாடல் பின்னணி:  தலைவியின் ஆற்றாமையையும் உலக இயலும் கூறி வரைவு கடாயது.

பொருளுரைநீலமணி களங்கம் இன்றித் தெளிந்திருந்தாற் போன்ற பெரிய கரிய கடற்பரப்பில் வலிமையான அலைகள் வந்து பொருந்துகின்ற மலர்கள் நிறைந்த பெரிய கடற்கரையில் நிலவின் ஒளியைக் குவித்து வைத்தாற்போன்ற உயர்ந்த மணல் மேட்டின் இடிந்து சரிந்த கரையில் சங்குகளைச் சேர்த்துத் தொகுத்தாற்போன்ற குருகுகளின் வரிசையை எண்ணி பகற்பொழுதை நின்னுடன் கழித்தோம் ஆயின், மெதுவாகக் காற்று வீசி அழகு செய்த புன்னை மரமுடைய இல்முன் கொழுத்த மீன் உணவை உண்ணும் வளமுடைய மனைக்கண் செல்லும் பொருட்டு, “நீ எழுந்து வருவாயாக” என்றால் அவளும் உடன்படமாட்டாள்.  யாமும் அவளிடம், “உன் உள்ளத்தில் உள்ள எண்ணத்தை ஒழிப்பாயாக” எனக் கூறும் தகுதி உடையேம் அல்லேம்.  நடு இரவில் அலைகள் கரையில் மோதி இடிக்கும் ஒலியைக் கேட்டு உறங்கும், நிறைந்த கரையில் அமைந்துள்ள சில குடியிருப்புகளை உடைய எம் ஊரில், கல்லென ஆரவாரம் உண்டாகும்படி தங்குவதாக நீ அமர்ந்த தேர்.

குறிப்பு:  நிலவு மணல்:  அகநானூறு 20 – நிலவு மணல், அகநானூறு 200 – நிலாவின் இலங்கு மணல் மலி மறுகில், நற்றிணை 31 – நிலவு மணல், நற்றிணை 140 – நிலவு மணல், நற்றிணை 159 – நிலவுக் குவித்தன்ன மோட்டு மணல், நற்றிணை 183 – நிலவு மணல், குறுந்தொகை 123 – நிலவுக் குவித்தன்ன வெண்மணல், கலித்தொகை  13 – வாள் நிலா ஏய்க்கும் வயங்கு ஒளி எக்கர், புறநானூறு 17 – நிலவு மணல் வியன் கானல், பொருநராற்றுப்படை 213 – நிலவு எக்கர், மதுரைக்காஞ்சி 114 – நிலவுக் கானல்.  ஒழி என அல்லம் ஆயினம் (9) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – நீ கொண்ட உள்ளக்கருத்தை ஒழிப்பாயாக என்று கூறும் தகுதிப்பாடு உடையேமல்லேம், ஒளவை துரைசாமி உரை – நீ ஈண்டு இருந்தொழிக என்று விட்டுச் செல்லகில்லேம்.

சொற்பொருள்:  மணி துணிந்தன்ன மா இரும் பரப்பின் உரவுத் திரை கொழீஇய பூ மலி பெருந்துறை நிலவுக் குவித்தன்ன மோட்டு மணல் இடிகரைக் கோடு துணர்ந்தன்ன குருகு ஒழுக்கு எண்ணி எல்லை கழிப்பினம் ஆயின் – நீலமணி களங்கம் இன்றித் தெளிந்திருந்தாற் போன்ற பெரிய கரிய (கரிய பெரிய) கடற்பரப்பில் வலிமையான அலைகள் வந்து பொருந்துகின்ற மலர்கள் நிறைந்த பெரிய கடற்கரையில் நிலவின் ஒளியைக் குவித்து வைத்தாற்போன்ற உயர்ந்த மணல் மேட்டின் இடிந்து சரிந்த கரையில் சங்குகளைச் சேர்த்துத்  தொகுத்தாற்போன்ற குருகுகளின் வரிசையை எண்ணி பகற்பொழுதை நின்னுடன் கழித்தோம் ஆயின் (கொழீஇய – செய்யுளிசை அளபெடை, மோடு – உயர்ந்த), மெல்ல வளி சீத்து வரித்த புன்னை முன்றில் கொழு மீன் ஆர்கைச் செழு நகர்ச் செலீஇய எழு எனின் அவளும் ஒல்லாள் – மெதுவாகக் காற்று வீசி அழகு செய்த புன்னை மரமுடைய இல்முன் கொழுத்த மீன் உணவை உண்ணும் வளமுடைய மனைக்கண் செல்லும் பொருட்டு நீ எழுந்து வருவாயாக என்றால் அவளும் உடன்படமாட்டாள் (புன்னை – laurel tree, நாகம், Mast wood Tree, Calophyllum inophyllum, செலீஇய – அளபெடை), யாமும் ஒழி என அல்லம் ஆயினம் – யாமும் அவளிடம் உன் உள்ளத்தில் உள்ள எண்ணத்தை ஒழிப்பாயாக எனக் கூறும் தகுதி உடையேம் அல்லேம், யாமத்து உடை திரை ஒலியின் துஞ்சும் மலி கடல் சில் குடிப் பாக்கம் கல்லென அல்குவதாக நீ அமர்ந்த தேரே – நடு இரவில் அலைகள் கரையில் மோதி இடிக்கும் ஒலியைக் கேட்டு உறங்கும் நிறைந்த கரையில் அமைந்துள்ள சில குடியிருப்புகளை உடைய எம் ஊரில் கல்லென ஆரவாரம் உண்டாகும்படி தங்குவதாக நீ அமர்ந்த தேர் (தேரே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 160, பாடியவர் பெயர் கிடைக்கவில்லை, குறிஞ்சித் திணை – தலைவன் தோழனிடம் சொன்னது
நயனும், நண்பும், நாணு நன்கு உடைமையும்,
பயனும், பண்பும், பாடு அறிந்து ஒழுகலும்,
நும்மினும் அறிகுவென் மன்னே, கம்மென
எதிர்த்த தித்தி ஏர் இள வன முலை
விதிர்த்து விட்டன்ன அம் நுண் சுணங்கின்  5
ஐம்பால் வகுத்த கூந்தல் செம்பொன்
திரு நுதல் பொலிந்த தேம் பாய் ஓதி,
முதுநீர் இலஞ்சிப் பூத்த குவளை
எதிர்மலர்ப் பிணையல் அன்ன இவள்
அரி மதர் மழைக் கண் காணா ஊங்கே.  10

பாடல் பின்னணி:  இடித்துரைத்த தோழனிடம் தலைவன் கூறியது.

பொருளுரைமேலும் மேலும் தோன்றிய தேமல் பொருந்திய எழுச்சியையுடைய இள அழகிய முலைகள் மேல் தெளித்தாற் போன்ற அழகிய நுண்ணிய தேமலையும், ஐந்து பகுதியாகப் பிரிக்கப்பட்ட பின்னலையும், சிவந்த பொன்னைப்போல் விளங்கிய அழகிய நெற்றியின் மேல் பொலிந்த தேன் பரவிய (அணிந்த மலர்களால்) கூந்தலையும், பண்டைய நீர் நிறைந்த பொய்கையில் பூத்த குவளை மலர்களை ஒன்றுடன் ஒன்று எதிரே வைத்துத் தொடுத்தாற்போன்ற இவளின் செவ்வரி படர்ந்த மதர்த்த குளிர்ச்சியுடைய கண்களையும் காண்பதற்கு முன், நடுவு நிலைமையும் நட்பும் நாணமும் ஆகியவற்றை நன்கு பெற்றிருத்தலும் கொடைத் தன்மையையும் நல்ல பண்பையும் உலக இயல்பை அறிந்து நடத்தலும் ஆகியவற்றிலும் உம்மைவிட நிறைவாக நான் பெற்றிருந்தேன்,

குறிப்பு:  ஒளவை துரைசாமி உரை – ‘மெய்தொட்டு பயிறல்’ (தொல்காப்பியம், களவியல் 11) என்ற நூற்பா உரையில் ‘நிற்பவை நினைஇ நிகழ்பவை உரைப்பினும்’ என்பதன் உரையில் இப்பாட்டைக் காட்டி, இது நிகழ்பவை உரைப்பது என்பர் நச்சினார்க்கினியர். கம்மென (3) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – மேன்மேலும, ஒளவை துரைசாமி உரை – விதந்து (மிகுந்து).  மலர்ப் பிணையல் அன்ன கண்கள் – அகநானூறு 149–18 – எதிர்மலர்ப் பிணையல் அன்ன இவள் அரி மதர் மழைக் கண், நற்றிணை 160 – எதிர்மலர்ப் பிணையல் அன்ன இவள் அரி மதர் மழைக் கண், பரிபாடல் 2–53 – கண்ணே புகழ் சால் தாமரை அலர் இணைப் பிணையல்.  மன் – கழிவே ஆக்கம் ஒழியிசைக் கிளவி என்று அம் மூன்று என்ப மன்னைச் சொல்லே (தொல்காப்பியம், இடையியல் 4).

சொற்பொருள்:  நயனும் நண்பும் நாணு நன்கு உடைமையும் பயனும் பண்பும் பாடு அறிந்து ஒழுகலும் நும்மினும் அறிகுவென் மன்னே – நடுவு நிலைமையும் நட்பும் நாணமும் ஆகியவற்றை நன்கு பெற்றிருத்தலும் கொடைத் தன்மையையும் நல்ல பண்பையும் உலக இயல்பை அறிந்து நடத்தலும் ஆகியவற்றிலும் உம்மைவிட நிறைவாக நான் பெற்றிருந்தேன் (மன்னே – மன் கழிவுக்குறிப்பு, ஏகாரம் அசைநிலை), கம்மென எதிர்த்த தித்தி ஏர் இள வன முலை விதிர்த்து விட்டன்ன அம் நுண் சுணங்கின் ஐம்பால் வகுத்த கூந்தல் – மேலும் மேலும் தோன்றிய தேமல் பொருந்திய எழுச்சியையுடைய இள அழகிய முலைகள் மேல் தெளித்தாற் போன்ற அழகிய நுண்ணிய தேமலையும் ஐந்து பகுதியாகப் பிரிக்கப்பட்ட பின்னலையும், செம்பொன் திரு நுதல் பொலிந்த தேம் பாய் ஓதி முதுநீர் இலஞ்சிப் பூத்த குவளை எதிர்மலர்ப் பிணையல் அன்ன இவள் அரி மதர் மழைக் கண் காணா ஊங்கே – சிவந்த பொன்னைப்போல் விளங்கிய அழகிய நெற்றியின் மேல் பொலிந்த தேன் பரவிய (அணிந்த மலர்களால்) கூந்தலையும் பண்டைய நீர் நிறைந்த பொய்கையில் பூத்த குவளை மலர்களை ஒன்றுடன் ஒன்று எதிரே வைத்துத் தொடுத்தாற்போன்ற இவளின் செவ்வரி படர்ந்த மதர்த்த குளிர்ச்சியுடைய கண்களையும் காண்பதற்கு முன் (எதிர்மலர் – புதிய மலர்கள், ஒத்த மலர்கள், ஊங்கே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 161, பாடியவர் பெயர் கிடைக்கவில்லை, முல்லைத் திணை – தலைவன் தேர்ப்பாகனிடம் சொன்னது
இறையும் அருந்தொழில் முடித்தென, பொறைய,
கண் போல் நீலம் சுனைதொறும் மலர,
வீ ததர் வேங்கைய வியல் நெடும் புறவின்
இம்மென் பறவை ஈண்டு கிளை இரிய,
நெடுந்தெரு அன்ன நேர் கொள் நெடுவழி,  5
இளையர் ஏகுவனர் பரிப்ப, வளை எனக்
காந்தள் வள் இதழ் கவி குளம்பு அறுப்பத்,
தோள் வலி யாப்ப ஈண்டு நம் வரவினைப்
புள் அறிவுறீஇயின கொல்லோ, தெள்ளிதின்
காதல் கெழுமிய நலத்தள், ஏதில்  10
புதல்வற் காட்டிப் பொய்க்கும்
திதலை அல்குல் தேமொழியாட்கே?

பாடல் பின்னணி:  வினைமுற்றி மீளும் தலைவன் கூறியது.

பொருளுரைஅரசனும் அரிய போர்த்தொழிலை செய்து முடித்ததால், மலையில் உள்ள சுனைகளில் எல்லாம் கண்கள் போலும் குவளை மலர்கள் மலர, மலர்கள் நிறைந்த வேங்கை மரங்களுடைய அகன்ற நெடிய காட்டில் இம்மென ஒலிக்கும் வண்டுகளின் நெருங்கிய கூட்டம் சிதறியோட, சோழ நாட்டில் உள்ள நெடுந்தெரு என்னும் ஊர்போன்று அழகு பொருந்திய நீண்ட வழியில் இளைய போர் மறவர்கள் (வீரர்கள்) ஆங்காங்கே தங்கிச் செல்ல, சங்கு உடைந்து கிடந்தாற்போல் வெண்காந்தளின் வளவிய இதழ்கள் குதிரையின் கவிந்த குழம்புகளால் அறுபட்டு இருக்க, தோள்களில் வலி மிக இங்கு நாம் வருதலை பறவைகள் அறிவித்தனவோ, தெளிவாக எம் மீது விருப்பம் மிக்க நலத்தை உடையவளாய், தொடர்பில்லாத வேறு ஒன்றினைத் தன் புதல்வனுக்குக் காட்டி ஆற்றுவிக்கும் திதலை படர்ந்த அல்குலையும் இனிய மொழியையுமுடைய எம் தலைவிக்கு?

குறிப்பு:  வரலாறு:  நெடுந்தெரு.  நிமித்தம்:  பறவை நிமித்தம் – நற்றிணை 161, குறுந்தொகை 218, கலித்தொகை 11, பல்லி நிமித்தம் – அகநானூறு 9, 88, 151, 289, 351, 387, நற்றிணை 98, 169, 246, 333, குறுந்தொகை 16, 140.  பெண்கள் நல்ல நிமித்தத்திற்காகக் காத்து நிற்றல் – நற்றிணை 40, முல்லைப்பாட்டு 11.  பறவை – இச்சொல் சங்கப்பாடல்களில் இன்றைய பயன்பாட்டில் உள்ளவாறும் உள்ளது.  தேனீ, வௌவால், தும்பி ஆகிவற்றைக் குறிக்கவும் பயன்படுத்தப்பட்டுள்ளது.  தேனீ – அகநானூறு 4–11, 132–10, 332–8, 371–13, நற்றிணை 55–5, 161–4, 185–9, ஐங்குறுநூறு 82–3, கலித்தொகை 22–7, பரிபாடல் 7–6, புறநானூறு 70–11, பதிற்றுப்பத்து 66–16, பெரும்பாணாற்றுப்படை 183, 229, வௌவால் – அகநானூறு 244–2, குறுந்தொகை 201–3, 352–2, புறநானூறு 370–11, தும்பி – நற்றிணை 277–9.

சொற்பொருள்:  இறையும் அருந்தொழில் முடித்தென – அரசனும் அரிய போர்த்தொழிலை செய்து முடித்ததால், பொறைய கண் போல் நீலம் சுனைதொறும் மலர – மலையில் கண்கள் போலும் சுனைகளில் எல்லாம் குவளை மலர்கள் மலர, வீ ததர் வேங்கைய வியல் நெடும் புறவின் இம்மென் பறவை ஈண்டு கிளை இரிய – மலர்கள் நிறைந்த வேங்கை மரங்களுடைய அகன்ற நெடிய காட்டில் இம்மென ஒலிக்கும் வண்டுகளின் நெருங்கிய கூட்டம் சிதறியோட (இம்மென் – ஒலிக்குறிப்பு), நெடுந்தெரு அன்ன நேர் கொள் நெடுவழி இளையர் ஏகுவனர் பரிப்ப – சோழ நாட்டில் உள்ள நெடுந்தெரு என்னும் ஊர்போன்று அழகு பொருந்திய நீண்ட வழியில் இளைய போர் மறவர்கள் (வீரர்கள்) ஆங்காங்கே தங்கிச் செல்ல, வளை எனக் காந்தள் வள் இதழ் கவி குளம்பு அறுப்ப – சங்கு உடைந்து கிடந்தாற்போல் வெண்காந்தளின் வளவிய இதழ்கள் குதிரையின் கவிந்த குழம்புகளால் அறுபட்டு இருக்க, தோள் வலி யாப்ப ஈண்டு நம் வரவினைப் புள் அறிவுறீஇயின கொல்லோ – தோள்களில் வலி மிக இங்கு நாம் வருதலை பறவைகள் அறிவித்தனவோ (அறிவுறீஇயின – செய்யுளிசை அளபெடை, கொல் – ஐயப்பொருட்டு, ஓகாரம் அசைநிலை), தெள்ளிதின் காதல் கெழுமிய நலத்தள் ஏதில் புதல்வற் காட்டிப் பொய்க்கும் திதலை அல்குல் தேமொழியாட்கே – தெளிவாக எம் மீது விருப்பம் மிக்க நலத்தை உடையவளாய் தொடர்பில்லாத வேறு ஒன்றினைத் தன் புதல்வனுக்குக் காட்டி ஆற்றுவிக்கும் திதலை படர்ந்த அல்குலையும் இனிய மொழியையுமுடைய எம் தலைவிக்கு (ஏதில் – தொடர்பில்லாத, அல்குல் – இடை, இடைக்குக் கீழ் உள்ள பகுதி, தேமொழியாட்கே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 162, பாடியவர் பெயர் கிடைக்கவில்லை, பாலைத் திணை – தலைவன் தலைவியிடம் சொன்னது
‘மனை உறை புறவின் செங்கால் பேடைக்
காமர் துணையொடு சேவல் சேர,
புலம்பின்று எழுதரு புன்கண் மாலைத்
தனியே இருத்தல் ஆற்றேன்’ என்று, நின்
பனி வார் உண்கண் பைதல கலுழ,  5
‘நும்மொடு வருவல்’ என்றி, எம்மொடு
பெரும் பெயர்த் தந்தை நீடு புகழ் நெடு நகர்
யாயொடு நனி மிக மடவை! முனாஅது
வேனில் இற்றித் தோயா நெடு வீழ்,
வழிநார் ஊசலின் கோடை தூக்குதொறும்  10
துஞ்சு பிடி வருடும் அத்தம்
வல்லை ஆகுதல் ஒல்லுமோ, நினக்கே?

பாடல் பின்னணி:  தன்னுடன் வருவேன் என்ற தலைவியிடம் தலைவன் கூறியது.

பொருளுரைபெரும் புகழையுடைய தந்தையின் பெருஞ்செல்வம் நிறைந்த பெரும் மாளிகையில் தாயோடு பிரியாது இருக்கும் மிக்க இளமையுடையாய்!  மனையில் வாழும் புறாவின் செங்காலையுடைய அழகிய பெண் புறாவோடு ஆண் புறா சேர, வருத்தம் உண்டாகுமாறு எழுந்த, வருத்தம் செய்யும் மாலையில் தனியே இருக்கும் துன்பத்தை ஆற்ற முடியவில்லை என்னால், என்று உன்னுடைய கண்ணீர் வடியும் மையிட்ட கண்கள் துன்புற்றுக் கலங்க, ‘நும்முடன் வருவேன்’ எனக் கூறுகின்றாய். எம்முடன் வந்தால், வேனில் காலத்தின் இற்றி மரத்தின் தரையில் தோயாத, தொங்கும் நீண்ட விழுது, கோடையின் மேல்காற்று வீசும்பொழுதெல்லாம், ஊஞ்சலாடுவது போல் அசைந்து, கீழே உள்ள பெண்  யானையின் மீது உரசும் பாலை நிலத்தில் செல்லுதல் உனக்குப் பொருந்துமா?

குறிப்பு:  முனாஅது (8) – ஒளவை துரைசாமி உரை – வெறுப்பின்றி, பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – முன்பு.  இற்றி மர விழுது:  குறுந்தொகை 106 – புல் வீழ் இற்றிக் கல் இவர் வெள் வேர் வரை இழி அருவியின் தோன்றும்,   நற்றிணை 162 – வேனில் இற்றித் தோயா நெடு வீழ் வழிநார் ஊசலின் கோடை தூக்குதொறும் துஞ்சு பிடி வருடும் அத்தம் அகநானூறு 345 – ஒல்கு நிலை இற்றி ஒரு தனி நெடு வீழ் கல் கண் சீக்கும் அத்தம்.  இறைச்சி – கு. வெ. பாலசுப்பிரமணியன் உரை – கோடைக் காற்று வீசும்போதெல்லாம் இற்றியின் விழுது பிடியை வருடும் என்றது, யான் மீண்டு வருமளவும் ஆற்றாமை உண்டாகியபோது தோழி நின்னை ஆற்றுவிப்பாள் என்று உணர்த்தற்காம்.  நனி – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3).  பிடி – பிடி என் பெண் பெயர் யானை மேற்றே (தொல்காப்பியம், மரபியல் 52).  சேவல் – சேவல் பெயர்க்கொடை சிறகொடு சிவணும் மா இருந் தூவி மயில் அலங்கடையே (தொல்காப்பியம், மரபியல் 49).

சொற்பொருள்:  மனை உறை புறவின் செங்கால் பேடைக் காமர் துணையொடு – மனையில் வாழும் புறாவின் செங்காலையுடைய அழகிய பெண் புறாவோடு (காமர் – அழகுடைய, விருப்பமுடைய), சேவல் சேர – ஆண் புறா சேர, புலம்பின்று எழுதரு – வருத்தம் உண்டாகுமாறு எழுந்த, புன்கண் மாலைத் தனியே இருத்தல் ஆற்றேன் – வருத்தம் செய்யும் மாலையில் தனியே இருக்கும் துன்பத்தை ஆற்ற முடியவில்லை என்னால், என்று – என்று, நின் பனி வார் உண்கண் – உன்னுடைய கண்ணீர் வடியும் மையிட்ட கண்கள், பைதல கலுழ – துன்புற்றுக் கலங்க, நும்மொடு வருவல் – நும்முடன் வருவேன், என்றி – எனக் கூறுகின்றாய் (என்றி – முன்னிலை ஒருமை), எம்மொடு – என்னுடன், பெரும் பெயர்த் தந்தை – பெரும் புகழையுடைய தந்தை, நீடு புகழ் நெடு நகர் – பெருஞ்செல்வம் (பெருஞ்சிறப்பு) நிறைந்த பெரும் மனை, யாயொடு நனி மிக மடவை – தாயோடு பிரியாது இருக்கும் மிக்க இளமையுடையாய் (நனிமிக,  ஒரு பொருட் பன்மொழி), முனாஅது – முன்பு, வெறுப்பின்றி (அளபெடை), வேனில் – வேனில் காலத்தின், இற்றித் தோயா நெடு வீழ் வழிநார் – இற்றி மரத்தின் தரையில் தோயாத தொங்கும் நீண்ட விழுது , ஊசலின் கோடை தூக்குதொறும் துஞ்சு பிடி வருடும் – கோடையின் மேல்காற்று வீசும் பொழுதெல்லாம் ஊஞ்சலாடுவது போல் அசைந்து கீழே உள்ள பெண்யானையின் மீது உரசும் (இன் ஒப்புப்பொருளில் வந்தது, ஐந்தாம் வேற்றுமை உருபு), அத்தம் வல்லை ஆகுதல் ஒல்லுமோ – பாலை நிலத்தில் செல்லுதல் பொருந்துமா, நினக்கே – உனக்கு, ஏகாரம் அசைநிலை

நற்றிணை 163, பாடியவர் பெயர் கிடைக்கவில்லை, நெய்தல் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
உயிர்த்தன ஆகுக, அளிய, நாளும்
அயிர்த் துகள் முகந்த ஆனா ஊதையொடு
எல்லியும் இரவும் என்னாது, கல்லெனக்
கறங்கு இசை இன மணி கைபுணர்ந்து ஒலிப்ப,
நிலவுத் தவழ் மணல் கோடு ஏறிச் செலவர  5
இன்று என் நெஞ்சம் போல, தொன்று நனி
வருந்துமன் அளிய தாமே, பெருங்கடல்
நீல் நிறப் புன்னைத் தமி ஒண் கைதை,
வானம் மூழ்கிய வயங்கு ஒளி நெடுஞ்சுடர்க்
கதிர் காய்ந்து எழுந்து அகம் கனலி ஞாயிற்று  10
வைகுறு வனப்பின் தோன்றும்
கைதை அம் கானல் துறைவன் மாவே.

பாடல் பின்னணி:  தலைவன் வரைந்து கொள்ள வருகின்றான் என்பதை அறிந்த தோழி, தலைவியிடம் கூறியது.

பொருளுரை:  பெரிய கடலின் அருகில் உள்ள கரிய நிறப் புன்னை மரத்தின் அருகில் தனியாக இருக்கின்ற சிறந்த தாழையின் ஒளியுடைய மடல், வானம் எங்கும் பரவிய விளங்கும் ஒளியுடைய வெயிலின் நெடிய கதிர்கள் காய்ந்து எழுந்து இருளை ஒட்டி உள்ளே கொதிக்கும் கதிரவனின் காலை அழகு போல் தோன்றும், தாழைகள் உடைய சோலை உடைய கடற்கரைத்தலைவனின் குதிரைகள் அளியை.  நாள்தோறும் நுண்ணிய மணலை முகந்த அடங்காத ஊதைக்காற்றுடன் பகலும் இரவும் என்னாது கல்லென்னும் ஒலியுடன் ஒலிக்கும் நிறைய மணிகள் ஒருசேரக் கழுத்தில் கட்டப்பட்டு ஒலிக்க, வெண்மை நிறுத்தினால் நிலவின் ஒளி போல் தோன்றும் மணல் மேட்டில் ஏறிச் செல்வதால், இப்பொழுது என் நெஞ்சம் போல் பண்டு முதல் மிகவும் வருந்தின. களைப்பு நீங்குவன ஆகுக!  அவை இரங்கத்தக்கவை!

குறிப்பு:  இறைச்சி – கு. வெ. பாலசுப்பிரமணியன் உரை – புன்னையும் தாழையும் ஒருசேர இருக்கும் துறைவன் என்றது, அவ்விரண்டின் மணமும் ஒருசேரக் கலந்து விளங்குதல் போலத் ‘தலைவனும் தலைவியுமாகிய நீவிர் மணம் கொண்டு புதல்வனை ஈன்று சிறக்க’ என்பதை உணர்த்தவாம்.  கனலி ஞாயிற்று (10) – ஒளவை துரைசாமி உரை – கனலியாகிய ஞாயிறு, ஞாயிறு படியுங்கால் நெருப்புப் பிழம்பு போல் தோன்றுததால் கனலி ஞாயிறு என்றும் கூறினார், H. வேங்கடராமன் உரை – கொதித்திருக்கும் ஞாயிறு, கு. வெ. பாலசுப்பிரமணியன் உரை – ஒளியினையுடைய சூரியன்.  நனி – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3).  மன் – கழிவே, ஆக்கம், ஒழியிசைக் கிளவி, என்று

அம் மூன்று என்ப மன்னைச் சொல்லே (தொல்காப்பியம், இடையியல் 4).

சொற்பொருள்:  உயிர்த்தன ஆகுக – களைப்பு நீங்குவன ஆகுக, அளிய – அவை அளியத்தக்கன, நாளும் அயிர்த் துகள் முகந்த ஆனா ஊதையொடு எல்லியும் இரவும் என்னாது கல்லெனக் கறங்கு இசை இன மணி கைபுணர்ந்து ஒலிப்ப நிலவுத் தவழ் மணல் கோடு ஏறிச் செலவர – நாள்தோறும் நுண்ணிய மணலை முகந்த அடங்காத ஊதைக்காற்றுடன் பகலும் இரவும் என்னாது கல்லென்னும் ஒலியுடன் ஒலிக்கும் நிறைய மணிகள் ஒருசேரக் கழுத்தில் கட்டப்பட்டு ஒலிக்க வெண்மை நிறுத்தினால் நிலவின் ஒளி போல் தோன்றும் மணல் மேட்டில் ஏறிச் செல்வதால் (கல்லென – ஒலிக்குறிப்பு), என் நெஞ்சம் போல தொன்று நனி வருந்துமன் – இப்பொழுது என் நெஞ்சம் போல் பண்டு முதல் மிகவும் வருந்தின, அளிய தாமே – இரங்கத்தக்கவை அவை (தாமே – ஏகாரம் அசைநிலை), பெருங்கடல் நீல் நிறப் புன்னைத் தமி ஒண் கைதை வானம் மூழ்கிய வயங்கு ஒளி நெடுஞ்சுடர்க் கதிர் காய்ந்து எழுந்து அகம் கனலி ஞாயிற்று வைகுறு வனப்பின் தோன்றும் கைதை அம் கானல் துறைவன் மாவே – பெரிய கடலின் அருகில் உள்ள கரிய நிறப் புன்னை மரத்தின் அருகில் தனியாக இருக்கின்ற சிறந்த தாழையின் ஒளியுடைய மடல் வானம் எங்கும் பரவிய விளங்கும் ஒளியுடைய வெயிலின் நெடிய கதிர்கள் காய்ந்து எழுந்து இருளை ஒட்டி உள்ளே கொதிக்கும் கதிரவனின் காலை அழகு போல் தோன்றும் தாழைகள் உடைய சோலைகள் உடைய கடற்கரைத்தலைவனின் குதிரைகள் (நீல் – கடைக்குறை, வனப்பின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புக் பொருளில் வந்தது, மாவே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 164, பாடியவர் பெயர் கிடைக்கவில்லை, பாலைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
‘உறை துறந்திருந்த புறவில், தனாது
செங்கதிர்ச் செல்வன் தெறுதலின், மண் பக
உலகு மிக வருந்தி அயாவுறு காலைச்
சென்றனர் ஆயினும் நன்று செய்தனர்’ எனச்
சொல்லின் தெளிப்பவும், தெளிதல் செல்லாய்,  5
செங்கோல் வாளிக் கொடு வில் ஆடவர்
வம்ப மாக்கள் உயிர்த் திறம் பெயர்த்தென,
வெங்கடற்று அடைமுதல் படுமுடை தழீஇ,
உறு பசிக் குறுநரி குறுகல் செல்லாது
மாறு புறக்கொடுக்கும் அத்தம்,  10
ஊறு இலர் ஆகுதல் உள்ளாமாறே.

பாடல் பின்னணி:  தலைவன் பொருள் முற்றி வந்தான் என்பதை வாயில்கள் மூலம் கேட்ட தோழி, தலைவிக்கு உரைத்தது.

பொருளுரை:  மழை பெய்யாதொழிந்த காட்டில் ஆட்சி புரியும் செங்கதிர்களையுடைய கதிரவன் காய்வதால் நிலம் வெடித்து உலகில் உள்ள உயிர்கள் மிகவும் வருந்தி தளர்ச்சி அடையும் வேனில் காலத்தில் தலைவர் சென்றார் ஆயினும், பொருள் ஈட்டும்பொருட்டு சென்றதால் நல்ல செயலை அவர் செய்தார் என்று நான் கூறியும் நீ தெளிதல் அடையவில்லை.  வளையாத கோலாகிய அம்பினால் வளைந்த வில்லையுடைய ஆரலைக் கள்வர் வழியில் செல்லும் புதியவர்களைக் கொன்று அவர்களின் உடல்களைக் கொடிய காட்டில் இலைகளால் மூடுவதால் அங்கு மிகுந்த நாற்றம் எழ மிக்கப் பசியையுடைய சிறு நரிகள் அம்முடை நாற்றத்தைப் பொறுக்க இயலாமல் அருகில் செல்லாது, பின்னே திரும்பி செல்லும் பாலைநிலத்தில், சிறிதும் இடையூறு இல்லாமல் அவர் வருவதை நீ நினையாமையால் நீ தெளிவு பெறவில்லை.  அவர் இன்று வந்து விட்டார்.

குறிப்பு:  இறைச்சி – கு. வெ. பாலசுப்பிரமணியன் உரை – பிணத்தைத் தின்ன வந்த நரி அதனில் உண்டாகும் முடை நாற்றத்தினை வெறுத்துப் பெயரும் என்றது, தலைவியைப் பிரிந்தபோது வருந்தியிருந்த தலைவியின் நலனை உண்ண வந்த பசலை அவர் மீண்டு வந்து தலைவியின் மாட்டுச் செய்யும் அன்பால் நீங்கிப் பெயர்ந்தது என உணர்த்தற்காம்.  அடைமுதல் – இருங்கடற்று அடைமுதல் – அகநானூறு 75, வெங்கடற்று அடைமுதல் – அகநானூறு 389, வெங்கடற்று அடைமுதல் – நற்றிணை 164.  அடைமுதல் (இருங்கடற்று அடைமுதல்)அகநானூறு 75 – பொ. வே. சோமசுந்தரனார் உரை – இலை முதலியன, இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – புகுமிடம், அடைமுதல் (வெங்கடற்று அடைமுதல்) – அகநானூறு 389 – பொ. வே. சோமசுந்தரனார் உரை – அடைகின்ற அடைத்தே, இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – அடைந்த இடத்தே.  உறு – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3).

சொற்பொருள்:  உறை துறந்திருந்த புறவில் தனாது செங்கதிர்ச் செல்வன் தெறுதலின் மண் பக உலகு மிக வருந்தி அயாவுறு காலைச் சென்றனர் ஆயினும் – மழை பெய்யாதொழிந்த காட்டில் ஆட்சி புரியும் செங்கதிர்களையுடைய கதிரவன் காய்வதால் நிலம் வெடித்து உலகில் உள்ள உயிர்கள் மிகவும் வருந்தி தளர்ச்சி அடையும் வேனில் காலத்தில் தலைவர் சென்றார் ஆயினும் (தனாது  – தன்னுடையது), நன்று செய்தனர் எனச் சொல்லின் தெளிப்பவும் தெளிதல் செல்லாய் – பொருள் ஈட்டும்பொருட்டு சென்றதால் நல்ல செயலை அவர் செய்தார் என்று நான் கூறியும் நீ தெளிதல் அடையவில்லை, செங்கோல் வாளிக் கொடு வில் ஆடவர் வம்ப மாக்கள் உயிர்த் திறம் பெயர்த்தென வெங்கடற்று அடைமுதல் படுமுடை தழீஇ உறு பசிக் குறுநரி குறுகல் செல்லாது மாறு புறக்கொடுக்கும் அத்தம் ஊறு இலர் ஆகுதல் உள்ளாமாறே – வளையாத கோலாகிய அம்பினால் வளைந்த வில்லையுடைய ஆரலைக் கள்வர் வழியில் செல்லும் புதியவர்களைக் கொன்று அவர்களின் உடல்களைக் கொடிய காட்டில் இலைகளால் மூடுவதால் அங்கு மிகுந்த நாற்றம் எழ மிக்கப் பசியையுடைய சிறு நரிகள் அம்முடை நாற்றத்தைப் பொறுக்க இயலாமல் அருகில் செல்லாது பின்னே திரும்பி செல்லும் பாலைநிலத்தில் சிறிதும் இடையூறு இல்லாமல் அவர் வருவதை நீ நினையாமையால் (கோல் வாளி – இரு பெயரொட்டு, தழீஇ – செய்யுளிசை அளபெடை, தழுவ எனத் திரிக்க, உள்ளாமாறே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 165, பாடியவர் பெயர் கிடைக்கவில்லை, குறிஞ்சித் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
அமர்க் கண் ஆமான் அரு நிறம் முள்காது,
பணைத்த பகழிப் போக்கு நினைந்து கானவன்,
அணங்கொடு நின்றது ‘மலை வான் கொள்க’ எனக்
கடவுள் ஓங்கு வரை பேண்மார், வேட்டு எழுந்து
கிளையொடு மகிழும் குன்ற நாடன்  5
அடைதரும்தோறும், அருமை தனக்கு உரைப்ப,
‘நம் புணர்வு இல்லா நயன் இலோர் நட்பு
அன்ன ஆகுக’ என்னான்,
ஒல்காது ஒழி, மிகப் பல்கின தூதே.

பாடல் பின்னணி:  நொதுமலர் வரையும் பருவத்தில் தோழி தலைவியிடம், ‘அன்னையர் வினவும்போது நீ அறத்தொடு நிற்பாய்’ எனக் கூறியது.  குன்ற நாடன் நின் அருமை உணர்ந்தனன்.  நீ அறத்தொடு நிற்பாய்.  திருமணம் கூடும் என்றதுமாம்.

பொருளுரை:  மருண்ட பார்வையுடைய காட்டுப்பசுவின் அரிய மார்பில் பாய்ந்து தங்காது குறி தவறிய பெரிய அம்பின் போக்கை எண்ணி கானவன் இம்மலை அணங்குற்றது என்பதால் மழை பெய்தால் அக்கடவுளின் சினம் தணியும் எனக் கருதி மழையை வேண்டி உயர்ந்த மலையில் உறையும் கடவுளை வழிபடும் பொருட்டு விரும்பி எழுந்து தன் சுற்றத்துடன் விழா எடுத்து மகிழும் மலைநாடன், உன்னைக் காணவரும் பொழுதெல்லாம் உன் அருமையை நான் அவனுக்கு உரைக்க, நீ கூறுவது போல் “நம்மைப் புணராத அன்பில்லாதவருடைய நட்பு அன்பில்லாமல் போகட்டும்” என அவன் கூறவில்லை.  நீ வருந்தாதே.  உன்னை மணம் புரிய அயலவர் விடும் தூது மிகப் பல ஆயின.  ஆகையால் நாம் தாயர்க்கு அறத்தொடு நிற்றல் வேண்டும்.

 

குறிப்பு:  அமர்க் கண் (1) – ஒளவை துரைசாமி உரை – அமர்த்த கண்ணையுடைய ஆமான்.  மருண்ட பார்வையுடைமைபற்றி ஆமாவின் கண் அமர்த்த கண் எனப்பட்டது.  குறுந்தொகை 322 – உ. வே. சாமிநாதையர் உரை – மேவுதலையுடைய காட்டுப்பசு.  பணைத்த பகழி (2) – ஒளவை துரைசாமி உரை – வளைந்து சென்ற அம்பு, பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை– குறி தவறி ஒழிந்துபோன அம்பு, H. வேங்கடராமன் உரை – பெரிய அம்பு.  மலை வான் கொள்க (3) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – மழை பெய்தலோ அதன் வீறு தனியுமாதலின் மலையை மழை வந்து சூழ்க,  ஒளவை துரைசாமி உரை – தெய்வம் மலையேறி வானகம் செல்வதாக என்று.  ஒப்புமை: புறநானூறு 143 – “மலைவான் கொள்க!” என உயர் பலி தூஉய், “மாரி ஆன்று மழை மேக்கு உயர்க” எனக் கடவுள் பேணிய குறவர் மாக்கள், பெயல் கண் மாறிய உவகையர் சாரல் புனத் தினை அயிலும் நாட!  கானவன் ….. பேண்மார் (4) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – வழிபடும் பொருட்டு, கானவர் ….. பேண்மார் (4) ஒளவை துரைசாமி உரை – வழிபடுவாராய், மார் ஈற்று வினை முற்று; வினையொடு முடிதல் இதற்கு இலக்கணமென அறிக.  அருமை தனக்கு உரைப்ப (6) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை, நினது அருமையை அவனுக்கு உரைத்ததால், ச. வே. சுப்பிரமணியன் உரை – உன் சிறப்பினை அவனுக்குச் சொல்வேன், ஒளவை துரைசாமி உரை – அவனது கூட்டம் பெறுவதற்குரிய அருமைகளை அவற்கு வெளிப்படையாகவும் குறிப்பாகவும் பன்முறையும் எடுத்துச் சொல்லியும்.  ஒப்புமை:  புறநானூறு 143 – மலைவான் கொள்க என உயர் பலி தூஉய் மாரி ஆன்று மழை மேக்கு உயர்க எனக் கடவுள் பேணிய குறவர் மாக்கள்.

சொற்பொருள்:  அமர்க் கண் ஆமான் அரு நிறம் முள்காது பணைத்த பகழிப் போக்கு நினைந்து கானவன் அணங்கொடு நின்றது மலை வான் கொள்க எனக் கடவுள் ஓங்கு வரை பேண்மார் – மருண்ட பார்வையுடைய காட்டுப்பசுவின் அரிய மார்பில் பாய்ந்து தங்காது குறி தவறிய பெரிய அம்பின் போக்கை எண்ணி கானவன் இம்மலை அணங்குற்றது என்பதால் மழை பெய்தால் அக்கடவுளின் சினம் தணியும் எனக் கருதி மழையை வேண்டி உயர்ந்த மலையில் உறையும் கடவுளை வழிபடும் பொருட்டு, வேட்டு எழுந்து கிளையொடு மகிழும் குன்ற நாடன் – விரும்பி எழுந்து தன் சுற்றத்துடன் விழா எடுத்து மகிழும் மலைநாடன், அடைதரும்தோறும் அருமை தனக்கு உரைப்ப – உன்னைக் காணவரும் பொழுதெல்லாம் உன் அருமையை நான் அவனுக்கு உரைக்க, நம் புணர்வு இல்லா நயன் இலோர் நட்பு அன்ன ஆகுக என்னான் – நம்மைப் புணராத அன்பில்லாதவருடைய நட்பு அன்பில்லாமல் போகட்டும் என அவன் கூறவில்லை, ஒல்காது ஒழி – நீ வருந்தாதே, மிகப் பல்கின தூதே – உன்னை மணம் புரிய அயலவர் விடும் தூது மிகப் பல ஆயின (தூதே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 166, பாடியவர் பெயர் கிடைக்கவில்லை, பாலைத் திணை – தலைவன் தலைவியிடம் சொன்னது
பொன்னும் மணியும் போலும், யாழ நின்
நன்னர் மேனியும் நாறு இருங்கதுப்பும்,
போதும் பணையும் போலும், யாழ நின்
மாதர் உண்கணும் வனப்பின் தோளும்,
இவை காண்தோறும் அகம் மலிந்து, யானும்  5
அறம் நிலை பெற்றோர் அனையேன், அதன்தலை,
பொலந்தொடிப் புதல்வனும் பொய்தல் கற்றனன்,
வினையும் வேறு புலத்து இலெனே, நினையின்
யாதனின் பிரிவாம் மடந்தை?
காதல் தானும் கடலினும் பெரிதே.  10

பாடல் பின்னணி:  தலைவன் வினைவயின் செல்லும் குறிப்பறிந்து வருந்தும் தலைவியிடம் சொல்லியது.

பொருளுரை:  பொன்னையும் நீலமணியையும் போல் விளங்குகின்றன நின்னுடைய அழகிய மேனியும் நறுமணமுடைய கூந்தலும்.  குவளை மலர்களைப் போலும் மூங்கில் போலும் உள்ளன நின் அழகிய மையிட்ட கண்களும் அழகிய தோள்களும்.  இவற்றைக் காணும்பொழுதெல்லாம் யான் மனம் மகிழ்ந்து அறத்துடன் வாழ்வோர் பெரும் பயனைப் பெற்றவனாயினேன். அதற்கு மேலும், பொன் தொடிகளை அணிந்த நம் புதல்வனும் பொய்தல் விளையாட்டைக் கற்றான். வேறு நாட்டிற்குச் சென்று செய்யும் வினை எதுவும் எனக்கு இல்லை.  நினைத்தால் என்ன காரணத்தினால் உன்னை யான் பிரிவேன் மடந்தையே?  உன்மேல் நான் கொண்ட காதல் கடலைக் காட்டிலும் பெரியது.

குறிப்பு:  ஒளவை துரைசாமி உரை – ‘கரணத்தின் அமைந்து முடிந்த காலை’ (தொல்காப்பியம், கற்பியல் 5) என்ற நூற்பாவின்கண் ‘புலம்பிய பிரிவின் எச்சத்துப் புலம்பிய இருவரைப் பரிவின் நீக்கிய பகுதிக்கண்ணும்’ என்பதன் உரையில் இப்பாட்டைக் காட்டி, ‘இக்கூற்று இருவர்மாட்டும் ஒக்கும்’ என்பர் இளம்பூரணர்.

சொற்பொருள்:  பொன்னும் மணியும் போலும் யாழ நின் நன்னர் மேனியும் நாறு இருங்கதுப்பும் – பொன்னையும் நீலமணியையும் போல் விளங்குகின்றன நின்னுடைய அழகிய மேனியும் நறுமணமுடைய கூந்தலும், போதும் பணையும் போலும் யாழ நின் மாதர் உண்கணும் வனப்பின் தோளும் – மலர்களைப் போலும் மூங்கில் போலும் உள்ளன நின் அழகிய மையிட்ட கண்களும் அழகிய தோள்களும் (யாழ – அசைநிலை, கணும் – கண்ணும்), இவை காண்தோறும் அகம் மலிந்து யானும் அறம் நிலை பெற்றோர் அனையேன் – இவற்றைக் காணும்பொழுதெல்லாம் யான் மனம் மகிழ்ந்து அறத்துடன் வாழ்வோர் பெரும் பயனைப் பெற்றவனாயினேன் (இடைக்குறை), அதன்தலை – அதற்கு மேலும், பொலந்தொடிப் புதல்வனும் பொய்தல் கற்றனன் – பொன் தொடிகளை அணிந்த நம் புதல்வனும் பொய்தல் விளையாட்டைக் கற்றான், வினையும் வேறு புலத்து இலெனே – வேறு நாட்டிற்குச் சென்று செய்யும் வினை எதுவும் எனக்கு இல்லை (இலெனே – ஏகாரம் அசைநிலை), நினையின் யாதனின் பிரிவாம் மடந்தை – நினைத்தால் என்ன காரணத்தினால் உன்னை யான் பிரிவேன் மடந்தையே, காதல் தானும் கடலினும் பெரிதே – உன்மேல் நான் கொண்ட காதல் கடலைக் காட்டிலும் பெரியது (பெரிதே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 167, பாடியவர் பெயர் கிடைக்கவில்லை, நெய்தல் திணை – தோழி பாணனிடம் சொன்னது
கருங்கோட்டுப் புன்னைக் குடக்கு வாங்கு பெருஞ்சினை
விருந்தின் வெண்குருகு ஆர்ப்பின், ஆஅய்
வண் மகிழ் நாளவைப் பரிசில் பெற்ற
பண் அமை நெடுந்தேர்ப் பாணியின் ஒலிக்கும்
தண்ணந்துறைவன் தூதொடும் வந்த  5
பயன் தெரி பனுவல் பை தீர் பாண!
நின் வாய்ப் பணி மொழி களையா, பல் மாண்
புது வீ ஞாழலொடு புன்னை தாஅம்
மணம் கமழ் கானல், மாண் நலம் இழந்த
இறை ஏர் எல் வளைக் குறுமகள்  10
பிறை ஏர் திரு நுதல் பாஅய பசப்பே.

பாடல் பின்னணி:  நெய்தலுள் மருதம் – பரத்தையிற் பிரிந்து வந்த தலைவனின் தூதாக வந்த பாணற்குத் தோழி வாயில் மறுத்தது.  வினைவயிற் சென்ற தலைவன் தன் வருகையைத் தலைவிக்கு முன்னரே தெரிவிக்கத் தூதாக விடுத்த பாணனிடம், தோழி உரைத்ததுமாம்.

பொருளுரை:  கரிய கிளைகளையுடைய புன்னை மரத்தின் வளைந்த பெரிய கிளையில் புதிதாக வந்த வெள்ளை குருகுகளின் ஒலி, ஆய் அண்டிரன் என்னும் மன்னனின் வளமான கள்ளை உண்டு மகிழும் நாளவையில் இரவலர்கள் பரிசாகப் பெற்ற ஒப்பனைச் செய்யப்பட்ட நெடிய தேரின் மணியொலி போல் ஒலிக்கும், குளிர்ச்சியுடைய துறையையுடைய தலைவனின் தூதாக வந்துள்ள பயனுக்கு ஏற்ப சொற்களைக் கூறும் வருத்தம் இல்லாத பாணனே!  நின் வாயிலிருந்து வரும் பணிவான சொற்கள் நீங்குவன அல்ல.  பல மாட்சிமையுடைய புதிய ஞாழல் மரத்தின் மலர்களுடன் புன்னை மரத்தின் மலர்களும் உதிர்ந்து பரவிய நறுமணமுடைய கடற்கரைச் சோலையில், தன்னுடைய மாட்சிமையுடைய அழகை இழந்த, முன்னங்கையில் ஒளிரும் அழகிய வளையல்களை உடைய தலைவியின் பிறை நிலா போன்ற நெற்றியில் படர்ந்தது பசப்பு.

குறிப்பு:  இறைச்சி – கு. வெ. பாலசுப்பிரமணியன் உரை – நாரை ஒலித்தல் தேரின் ஒலி போன்றது என்றது, பாணன் நயந்து கூறும் மொழி எமக்கு இடி இடிப்பது போன்றது என்று உணர்த்தவாம்.  உள்ளுறை – கு. வெ. பாலசுப்பிரமணியன் உரை – ஞாழலொடு புன்னையும் மணம் கமழும் என்றது, தலைவன் தலைவியை ஒப்பப் பரத்தையையும் கருதினன் என உணர்த்தற்காம்.  பை தீர் பாண (6) – ஒளவை துரைசாமி உரை– வருத்தமுடையனாகிய பாணனே, பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – வருத்தமில்லாத பாணனே’.  மலைபடுகடாம் 40 – பொ. வே. சோமசுந்தரனார் உரை – ‘பை தீர் பாணரொடு’ – ‘பை – பசுமை, ஈங்கு செல்வமுடைமையின் மேற்று.  செல்வத்தை பசுமை என்றும் நல்குரவைக் கருமை என்றும் கூறுதல் மரபு.  இனி, பை இளமை எனக் கொண்டு இளமை தீர்ந்த பாணர் எனினுமாம்’.  பெரும்பாணாற்றுப்படை 105 – பொ. வே. சோமசுந்தரனார் உரை – ‘பைதீர் கடும்பொடு’ – பசுமை தீர்ந்த குடும்பத்தோடே.    வரலாறு:  ஆஅய்.  கடையெழு வள்ளல்கள் – ஆய், பாரி, காரி, ஓரி, அதிகன், பேகன், நள்ளி.  எல் – எல்லே இலக்கம் (தொல்காப்பியம், இடையியல் 21).

சொற்பொருள்:  கருங்கோட்டுப் புன்னைக் குடக்கு வாங்கு பெருஞ்சினை விருந்தின் வெண்குருகு ஆர்ப்பின் ஆஅய் வண் மகிழ் நாளவைப் பரிசில் பெற்ற பண் அமை நெடுந்தேர்ப் பாணியின் ஒலிக்கும் – கரிய கிளைகளையுடைய புன்னை மரத்தின் வளைந்த பெரிய கிளையில் புதிதாக வந்த வெள்ளை குருகுகளின் ஒலி ஆய் அண்டிரன் என்னும் மன்னனின் வளமான கள்ளை உண்டு மகிழும் நாளவையில் இரவலர்கள் பரிசாகப் பெற்ற ஒப்பனைச் செய்யப்பட்ட நெடிய தேரின் மணியொலி போல் ஒலிக்கும் (ஆஅய் – அளபெடை, ஆர்ப்பின் – ஆர்ப்பு + இன், இன் அல்வழிச் சாரியை), தண்ணந்துறைவன் தூதொடும் வந்த பயன் தெரி பனுவல் பை தீர் பாண – குளிர்ச்சியுடைய துறையையுடைய தலைவனின் தூதாக வந்துள்ள பயனுக்கு ஏற்ப சொற்களைக் கூறும் வருத்தம் இல்லாத பாணனே (தண்டுறைவன் என்பது தண்ணந்துறைவன் ஆவது, அம் – சாரியை, விரிக்கும் வழி விரித்தல், பாண – அண்மை விளி), நின் வாய்ப் பணி மொழி களையா – நின் வாயிலிருந்து வரும் பணிவான சொற்கள் நீங்குவன அல்ல, பல் மாண் புது வீ ஞாழலொடு புன்னை தாஅம் மணம் கமழ் கானல் – பல மாட்சிமையுடைய புதிய ஞாழல் மரத்தின் மலர்களுடன் புன்னை மரத்தின் மலர்களும் உதிர்ந்து பரவிய நறுமணமுடைய கடற்கரைச் சோலை (ஞாழல் – cassia sophera, புலிநகக்கொன்றை, tigerclaw tree, புன்னை – அளபெடை, நாகம், Laurel Tree, Mast wood Tree, Calophyllum inophyllum, தாஅம் – செய்யுளிசை அளபெடை), மாண் நலம் இழந்த இறை ஏர் எல் வளைக் குறுமகள் பிறை ஏர் திரு நுதல் பாஅய பசப்பே – தன்னுடைய மாட்சிமையுடைய அழகை இழந்த முன்னங்கையில் ஒளிரும் அழகிய வளையல்களை உடைய தலைவியின் பிறை நிலா போன்ற நெற்றியில் படர்ந்தது பசப்பு (பாஅய – செய்யுளிசை அளபெடை, பசப்பே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 168, பாடியவர் பெயர் கிடைக்கவில்லை, குறிஞ்சித் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
சுரும்பு உண விரிந்த கருங்கால் வேங்கைப்
பெருஞ்சினைத் தொடுத்த கொழுங்கண் இறாஅல்
புள்ளுற்றுக் கசிந்த தீம் தேன், கல் அளைக்
குறக் குறுமாக்கள் உண்ட மிச்சிலைப்
புன்தலை மந்தி வன் பறழ் நக்கும்  5
நன் மலை நாட! பண்பு எனப்படுமோ,
நின் நயந்து உறைவி இன் உயிர் உள்ளாய்,
அணங்குடை அரவின் ஆர் இருள் நடுநாள்,
மைபடு சிறு நெறி எஃகு துணை ஆக
ஆரம் கமழும் மார்பினை,  10
சாரல் சிறுகுடி ஈங்கு நீ வரலே?

பாடல் பின்னணி:  தலைவன் இரவுக்குறி வருதலை விலக்கித் தலைவியை வரைந்து கொள்ளுமாறு வேண்டக் கருதி தோழி கூறியது.

பொருளுரை:  வண்டுகள் உண்ணுமாறு மலர்கள் விரிந்த கரிய அடியையுடைய வேங்கை மரத்தின் பெரிய கிளையில் கட்டிய கொழுவிய கண்களையுடைய தேனடையை வண்டுகள் மொய்த்ததால், அதிலிருந்து கசிந்த இனிய தேன் கீழ் உள்ள கற்குழிகளில் வடிய, அதைக் குறவர்களின் சிறுவர்கள் நக்கி உண்ட பின் உள்ள மீதியை மெல்லிய தலையையுடைய மந்தியின் வலிய குட்டி நக்கி உண்ணும் நல்ல மலைநாட்டுத் தலைவனே!  உன்னை விரும்பி வாழும் இவளுடைய இனிய உயிரை எண்ணாது உள்ளாய் நீ.  வருத்தும் பாம்புகள் இருக்கும் நள்ளிருளுடைய நடு இரவில் மயக்கம் தரும் சிறு வழியில் வேலைத் துணையாகக் கொண்டு சந்தன மணம் கமழும் மார்பினை உடையையாய் மலைச்சரிவில் உள்ள சிறுகுடியாகிய இங்கு நீ வருவது, பண்பு எனக் கொள்ளத்தக்கதோ?

குறிப்பு:  உள்ளுறை – கு. வெ. பாலசுப்பிரமணியன் உரை – வேங்கையைத் தலைவியாகவும், சுரும்புண விரிந்ததை ஏதிலாட்டியர் பழிச்சொல் கூறப் பொருந்திய செயலாகவும், இறாலின் தேன் தலைவியின் இன்பமாகவும், புள் மொய்த்தலைத் தமர் சூழ்வாகவும், கசிந்த தேனைக் குறச்சிறுவர் உண்ணுதலைத் தலைவி நலனை பசலை உண்பதாகவும், எஞ்சிய தேனைப் பறழ் உண்ணுதல் எஞ்சியிருக்கும் நலத்தைத் தலைவன் துய்ப்பதாகவும் உள்ளுறை செய்தனர்.  மந்தி – பேடையும் பெடையும் பெட்டையும் பெண்ணும் மூடும் நாகும் கடமையும் அளகும் மந்தியும் பாட்டியும் பிணையும் பிணவும் அந்தம் சான்ற பிடியொடு பெண்ணே (தொல்காப்பியம், மரபியல் 3).

சொற்பொருள்:  சுரும்பு உண விரிந்த கருங்கால் வேங்கைப் பெருஞ்சினைத் தொடுத்த கொழுங்கண் இறாஅல் புள் உற்றுக் கசிந்த தீம் தேன் கல் அளைக் குறக் குறுமாக்கள் உண்ட மிச்சிலைப் புன்தலை மந்தி வன் பறழ் நக்கும் நன் மலை நாட – வண்டுகள் உண்ணுமாறு மலர்கள் விரிந்த கரிய அடியையுடைய வேங்கை மரத்தின் பெரிய கிளையில் கட்டிய கொழுவிய கண்களையுடைய தேனடையை வண்டுகள் மொய்த்ததால் கசிந்த இனிய தேன் கற்குழிகளில் வடிய அதை குறவர்களின் (குறவர்கள் – மலைவாழ் மக்கள்) சிறுவர்கள் உண்ட பின் உள்ள மீதியை மெல்லிய தலையையுடைய மந்தியின் வலிய குட்டி நக்கி உண்ணும் நல்ல மலைநாட்டுத் தலைவனே (சுரும்பு, புள் – வண்டு, உண – உண்ண என்பதன் இடைக்குறை, வேங்கை மரம் – Kino Tree, Pterocarpus marsupium, இறாஅல் – தேனடை, அளபெடை), பண்பு எனப்படுமோ – பண்பு எனக் கொள்ளத்தக்கதோ, நின் நயந்து உறைவி இன் உயிர் உள்ளாய் – உன்னை விரும்பி வாழும் இவளுடைய இனிய உயிரை எண்ணாது உள்ளாய் நீ, அணங்குடை அரவின் ஆர் இருள் நடுநாள் மைபடு சிறு நெறி எஃகு துணை ஆக ஆரம் கமழும் மார்பினை சாரல் சிறுகுடி ஈங்கு நீ வரலே – வருத்தும் பாம்புகள் இருக்கும் நள்ளிருளுடைய நடு இரவில் மயக்கம் தரும் சிறு வழியில் வேலைத் துணையாகக் கொண்டு சந்தன மணம் கமழும் மார்பினை உடையையாய் மலைச்சரிவில் உள்ள சிறுகுடியாகிய இங்கு நீ வருவது (ஆரம் – சந்தனம், எஃகு – வேல், வரலே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 169, பாடியவர் பெயர் கிடைக்கவில்லை, முல்லைத் திணை – தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது
‘முன்னியது முடித்தனம் ஆயின், நன்னுதல்,
வருவம்’ என்னும் பருவரல் தீர,
படும் கொல் வாழி நெடுஞ்சுவர்ப் பல்லி,
பரல்தலை போகிய சிரல் தலைக் கள்ளி
மீமிசைக் கலித்த வீ நறு முல்லை  5
ஆடு தலைத் துருவின் தோடு தலைப்பெயர்க்கும்
வன் கை இடையன் எல்லிப் பரீஇ,
வெண்போழ் தைஇய அலங்கல் அம் தொடலை
மறுகுடன் கமழும் மாலை,
சிறுகுடிப் பாக்கத்து எம் பெரு நகரானே?  10

பாடல் பின்னணி:  வினை முற்றி மீளுங்கால் தலைவன் தன் நெஞ்சிடம் கூறியது.

பொருளுரை:  என் நெஞ்சே!  நீடு வாழ்வாயாக!  மேற்கொண்ட பணியை முடித்தோம் ஆயின், நல்ல நெற்றியையுடைய என் தலைவிக்கு, நாம் திரும்பி வருவோம் அவளுடைய துயரம் நீங்குமாறு என்று, நெடிய சுவரில் இருக்கும் பல்லி ஒலித்துத் தெரிவிக்குமா, பரல் கற்கள் நிறைந்த பாலை நிலத்தில் உள்ள சிரல் பறவையைப் போன்ற மேல் பகுதியைக் கொண்ட கள்ளிச் செடியின் மேலே படர்ந்து தழைத்த முல்லையின் நறுமணமான மலர்களை, அசைகின்ற தலைகளையுடைய ஆடுகளின் கூட்டத்தை மேய விடுகின்ற இடையன் இரவிலே கொய்து, வெள்ளையான நாரால் தொடுத்து அணிந்த அசைகின்ற மாலையின் நறுமணம் தெருவில் கமழும் இந்த மாலைப் பொழுதில், சிறிய குடியில் உள்ள எம்முடைய பெரிய இல்லத்தில்?

குறிப்பு:  சிரல் தலைக் கள்ளி (4) – ஒளவை துரைசாமி உரை – சிரப்பறவையின் கொண்டை போல் பூத்துள்ள கள்ளி மரம், பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – சிச்சிலிப்பறவை போன்ற தலையையுடைய கள்ளி.  இறைச்சி – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – இடையன் தொடுத்த கண்ணி போழுடனே கமழும் என்றது, பல்லி அடிப்பக்கண்ட தலைவி தன் புதல்வனுடன் மகிழ்ந்து நம் வரவினாலே களிப்பெய்தி இருக்கும் என்றதாம்.  நிமித்தம்:  பறவை நிமித்தம் – நற்றிணை 161, குறுந்தொகை 218, கலித்தொகை 11, பல்லி நிமித்தம் – அகநானூறு 9, 88, 151, 289, 351, 387, நற்றிணை 98, 169, 246, 333, குறுந்தொகை 16, 140.  பெண்கள் நல்ல நிமித்தத்திற்காகக் காத்து நிற்றல் – நற்றிணை 40, முல்லைப்பாட்டு 11.

சொற்பொருள்:  முன்னியது முடித்தனம் ஆயின்– எடுத்த பணியை முடித்தோம் ஆயின், நன்னுதல் – அழகிய நெற்றியை உடையவள் (நன்னுதல் – பண்புத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை), வருவம் என்னும் – வருவோம் என்னும் (வருவம் – தன்மைப் பன்மை), பருவரல் தீர – துன்பம் தீர, படும் கொல் – கத்தித் தெரிவிக்குமா (கொல் ஐயப்பொருட்டு வந்தது), வாழி – நீடு வாழ்வாயாக, நெடுஞ்சுவர் பல்லி – பெரிய நெடிய சுவரில் இருக்கும் பல்லி, பரல் தலை போகிய சிரல் தலைக் கள்ளி – மீன்கொத்திப் பறவை போன்ற தலையையுடைய கள்ளி, மீமிசைக் கலித்த – மேலே படர்ந்து தழைத்த (மீமிசை – ஒருபொருட் பன்மொழி), வீ – மலர்கள், நறு முல்லை – நறுமணமான முல்லை மலர்கள், ஆடு தலைத் துருவின் – ஆடுகின்ற தலையையுடைய ஆட்டின், தோடு தலைப்பெயர்க்கும் – கூட்டத்தை மேய விடுகின்ற, வன் கை இடையன் – வலிய கையையுடைய இடையன், எல்லிப் பரீஇ – இரவிலே பறித்து (பரீஇ – செய்யுளிசை அளபெடை), வெண் போழ் – வெண்மையான நாரால் , தைஇய – தொடுத்த (தைஇய – சொல்லிசை அளபெடை), அலங்கல் – அசையும், அம் தொடலை – அழகிய மாலை, மறுகுடன் – தெருவில், கமழும் மாலை – நறுமணமான மாலை நேரம், சிறுகுடிப் பாக்கத்து – கடற்கரைச் சிற்றூரின்கண் உள்ள, எம் பெரு நகரானே – எங்கள் பெரிய இல்லத்தில் (நகரானே – ஏகாரம் அசை நிலை)

நற்றிணை 170, பாடியவர் பெயர் கிடைக்கவில்லை, மருதத் திணை – பரத்தையின் தோழி தன் ஆயத்தாரிடம் சொன்னது
மடக்கண், தகரக் கூந்தல், பணைத்தோள்,
வார்ந்த வால் எயிற்று, சேர்ந்து செறி குறங்கின்,
பிணையல் அம் தழை தைஇ, துணையிலள்
விழவுக் களம் பொலிய வந்து நின்றனளே;
எழுமினோ எழுமின், எம் கொழுநற் காக்கம்  5
ஆரியர் துவன்றிய பேர் இசை முள்ளூர்ப்,
பலர் உடன் கழித்த ஒள் வாள் மலையனது
ஒரு வேற்கு ஓடியாங்கு, நம்
பன்மையது எவனோ, இவள் வன்மை தலைப்படினே?

பாடல் பின்னணி:  ஒளவை துரைசாமி உரை – பரத்தைத் தோழியின் உரை இது.  ஒருகால் தலைமகன் புறத்தொழுக்கம் மேற்கொண்டு சிறப்புடைய பரத்தை ஒருத்திபால் தொடர்பு பெற்றான்.  சின்னாட்குப்பின் வேறொரு பரத்தையின் நட்பு அவனுக்கு உண்டாயிற்று. அதனால் முன்னைப் பரத்தைக்குப் பொறாமை உண்டாயிற்று.  அவன் சென்றபோது அவள் பெரிதும் புலந்து வாயில் மறுத்தாள்.  அவன் விறலி ஒருத்தியை அப்பரத்தை மனைக்குத் தன்பொருட்டுத் தூது சென்று வாயில் பெறுமாறு முன்னர் விடுத்து பின்னர் அவள் மனையில் நடந்த விழாவிற்கு அவன் வந்தான்.  விறலி வரக்கண்ட பரத்தையின் தோழி ஏனை மகளிரை நோக்கிக் கூறுகின்றாள்.  பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – பரத்தையிற் பிரிந்து மீண்டு வந்த தலைமகன் தலைமகளது ஊடல் தீர்ப்பான் விறலியை விடுத்தலும், அவளை நோக்கிய தோழி, வெகுண்டு கூறாநிற்பது.

பொருளுரை:  மடப்பத்தையுடைய பார்வையையும் நறுமணச்சாந்து அணிந்த கூந்தலையும் பருத்த தோள்களையும் நேரான வெள்ளைநிறப் பற்களையும் திரண்டு நெருங்கிய தொடைகளையும் உடையவளாகத் தொடுத்த தழையாடையையும் உடுத்திக் கொண்டு, துணையில்லாமல் தனியே விழாக்களம் பொலியுமாறு விறலி வந்து நிற்கின்றாள்.  எழுங்கள் எழுங்கள்!  நம் தலைவனை இவள் வேறு ஒரு பரத்தையிடம் செலுத்தாதவாறு நாம் அவனைப் பாதுகாப்போம்.  ஆரியர்கள், நெருங்கிச் செய்த போரில் பெரிய புகழையுடைய முள்ளூர்ப் போர்க்களத்திற்குப் பல போர் மறவர்களுடன் சென்று உறையிலிருந்து எடுத்த ஒளியுடைய வாளை உடைய மலையனின் ஒப்பற்ற வேற்படைக்கு அஞ்சி ஆரியப்படைகள் ஓடினாற்போல், நம்முடைய கூட்டமும் ஒழிய வேண்டியதோ இவளது வலிமை மேம்பட்டால்?

குறிப்பு:  அவன் விறலி ஒருத்தியை அப்பரத்தை மனைக்குத் தன்பொருட்டுத் தூது சென்று வாயில் பெறுமாறு முன்னர் விடுத்து பின்னர் அவள் மனையில் நடந்த விழாவிற்கு அவன் வந்தான்.  விறலி வரக்கண்ட பரத்தையின் தோழி ஏனை மகளிரை நோக்கிக் கூறுகின்றாள்.  வரலாறு:  மலையன், முள்ளூர், ஆரியர்.  ஆரியர்களைத் தோற்கடித்தல் – அகநானூறு 336 – சோழர் வில் ஈண்டு குறும்பின் வல்லத்துப் புற மிளை ஆரியர் படையின் உடைக, அகநானூறு 396 – ஆரியர் அலறத் தாக்கிப் பேர் இசைத் தொன்று முதிர் வட வரை வணங்கு வில் பொறித்து வெஞ்சின வேந்தரை, நற்றிணை 170 – ஆரியர் துவன்றிய பேர் இசை முள்ளூர் பலர் உடன் கழித்த ஒள் வாள் மலையனது.  துவன்று – துவன்று நிறைவு ஆகும் (தொல்காப்பியம், உரியியல் 36).  ஆரியர் – அகநானூறு 276–9, 336–22, 396–16, 398–18, நற்றிணை, 170–6, குறுந்தொகை 7–3, பதிற்றுப்பத்து 11–23. முள்ளூர் – அகநானூறு 209–12, நற்றிணை 170–6, 291–7, குறுந்தொகை, 312–3, புறநானூறு 123–5, 126–8, 174–13.  மலையன் – மலையமான் திருமுடிக்காரி – நற்றிணை 77–1, 100–9, 170–7, குறுந்தொகை 198–6, 312–2, புறநானூறு 123–3, 124–5, 125–14, 158–7.  மலையன் (மலையமான் திருமுடிக்காரி) பற்றின குறிப்புகள் உள்ள பாடல்கள் – நற்றிணை 77–1, 100–9, 170, குறுந்தொகை 198–6, 312–2, புறநானூறு 123–3, 124–5, 125–14, 158.

சொற்பொருள்:  மடக்கண் தகரக் கூந்தல் பணைத்தோள் வார்ந்த வால் எயிற்று சேர்ந்து செறி குறங்கின் பிணையல் அம் தழை தைஇ துணையிலள் விழவுக் களம் பொலிய வந்து நின்றனளே – மடப்பத்தையுடைய பார்வையையும் நறுமணச்சாந்து அணிந்த கூந்தலையும் பருத்த தோள்களையும் நேரான வெள்ளைநிறப் பற்களையும் திரண்டு நெருங்கிய தொடைகளையும் உடையவளாகத் தொடுத்த தழையாடையையும் உடுத்திக் கொண்டு துணையில்லாமல் தனியே விழாக்களம் பொலியுமாறு விறலி வந்து நிற்கின்றாள் (தைஇ – சொல்லிசை அளபெடை), எழுமினோ எழுமின் – எழுங்கள் எழுங்கள் (எழுமினோ – எழுமின்+ ஓ, மின் முன்னிலைப் பன்மை ஏவல் வினைமுற்று விகுதி, ஓகாரம் அசைநிலை), எம் கொழுநற் காக்கம் – நம் தலைவனை நாம் பாதுகாப்போம், ஆரியர் துவன்றிய பேர் இசை முள்ளூர்ப் பலர் உடன் கழித்த ஒள் வாள் மலையனது ஒரு வேற்கு ஓடியாங்கு – ஆரியர்கள் நெருங்கிச் செய்த போரில் பெரிய புகழையுடைய முள்ளூர்ப் போர்க்களத்திற்குப் பலருடன் சென்று உறையிலிருந்து எடுத்த ஒளியுடைய வாளை உடைய மலையனின் ஒப்பற்ற வேற்படைக்கு அஞ்சி ஆரியப்படைகள் ஓடினாற்போல், நம் பன்மையது எவனோ இவள் வன்மை தலைப்படினே – நம்முடைய கூட்டமும் ஒழிய வேண்டியதோ இவளது வலிமை மேம்பட்டால் (தலைப்படினே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 171, பாடியவர் பெயர் கிடைக்கவில்லை, பாலைத் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
நீர் நசைக்கு ஊக்கிய உயவல் யானை
வேனில் குன்றத்து வெவ்வரைக் கவாஅன்
நிலம் செல செல்லாக் கயந்தலைக் குழவி
சேரி அம் பெண்டிர் நெஞ்சத்து எறிய
ஊர் ஆன் கன்றொடு புகுதும் நாடன்  5
பன் மலை அருஞ்சுரம் இறப்பின், நம் விட்டு,
யாங்கு வல்லுந மற்றே, ஞாங்கர்
வினைப் பூண் தெண் மணி வீழ்ந்தன நிகர்ப்பக்
கழுது கால் கொள்ளும் பொழுது கொள் பானாள்,
ஆர்வ நெஞ்சமொடு அளைஇ,  10
மார்பு உறப்படுத்தல் மரீஇய கண்ணே?

பாடல் பின்னணி:  பிரிவு உணர்த்தப்பட்ட தோழி, தலைவியிடம் உரைத்தது.

பொருளுரை:  நீர் விருப்பம் மிகுந்ததால் வருந்திய பிடி யானை வெப்பமுடைய குன்றுகள் சூழ்ந்த சூடுமிக்க மலைப்பக்கத்தில் செல்ல, அதனுடன் செல்லாத மெல்லிய (பெரிய) தலையையுடைய கன்று குடியிருப்பில் உள்ள பெண்களின் நெஞ்சம் துண்ணெனும்படி ஊரில் உள்ள பசுவின் கன்றுகளுடன் சேர்ந்து ஊருக்குள் புகும் நாடன், பல மலைகளையுடைய  பாலை நிலத்திற்குச் சென்றால், எவ்வாறு வல்லமை உடையன,  மேலே வேலைப்பாடு அமைந்த பூணிடத்து அமைந்த தெளிந்த ஓசையையுடைய மணிகள் களையப்பட்ட வேற்படைகளை ஒப்ப பேய்கள் உலாவும் நடு இரவில், ஆர்வ நெஞ்சத்துடன் கலந்து அவன் மார்பில் உறங்கிய உன் கண்கள்?

குறிப்பு:  ஞாங்கர் வினைப் பூண் தெண் மணி வீழ்ந்தன நிகர்ப்ப (7–8) – ஒளவை துரைசாமி உரை – மேலே நல்ல வேலைப்பாடு அமைந்த தெள்ளிய பூணிடத்து அமைந்த மணியை கெடுத்து வீழ்த்தவர் உறங்காது வருந்துவதுப் போல், பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – தெளிந்த ஓசைகளை உடைய மணிகளைக் கொண்ட களையப்பட்ட வேற்படையை ஒப்ப.  உள்ளுறை – கு. வெ. பாலசுப்பிரமணியன் உரை – யானை மலைப்பக்கம் செல்கையில் அதன் கன்று தாயை விட்டு ஆன் கன்றினைச் சேர்ந்து புகும் என்றது, தலைவன் பொருள்வயிற் பிரிய, தலைவி எவ்வாறு ஆற்றாள் என்று ஆயத்தார் வருந்த, தலைவி தோழியோடு உறைவாள் என்பதை உள்ளுறுத்திற்று.  குழவி (3) – யானையும் குதிரையும் கழுதையும் கடமையும் மானொடு ஐந்தும் கன்று எனற்கு உரிய.  எருமையும் மரையும் வரையார் ஆண்டே.  கவரியும் கராமும் நிகர் அவற்றுள்ளே.  ஒட்டகம் அவற்றொடு ஒரு வழி நிலையும்.  குஞ்சரம் பெறுமே குழவிப் பெயர்க்கொடை.  ஆவும் எருமையும் அது சொலப்படுமே (தொல்காப்பியம், மரபியல் 15–20).  நீர் நசைக்கு ஊக்கிய உயவல் யானை – ஐங்குறுநூறு 377.  மரீஇய கண் (11) – ஒளவை துரைசாமி உரை – துயிலுதலைப் பொருந்திய நம் கண்கள், பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – நெருங்கப்படுதலைப் பொருந்திய கண்கள்.

சொற்பொருள்:  நீர் நசைக்கு ஊக்கிய உயவல் யானை வேனில் குன்றத்து வெவ்வரைக் கவாஅன் நிலம் செல செல்லாக் கயந்தலைக் குழவி சேரி அம் பெண்டிர் நெஞ்சத்து எறிய ஊர் ஆன் கன்றொடு புகுதும் நாடன் – நீர் விருப்பம் மிகுந்ததால் வருந்திய யானை வெப்பமுடைய குன்றுகள் சூழ்ந்த சூடுமிக்க மலைப்பக்கத்தில் செல்ல அதனுடன் செல்லாத மெல்லிய (பெரிய) தலையையுடைய கன்று குடியிருப்பில் உள்ள பெண்களின் நெஞ்சம் துண்ணெனும்படி ஊரில் உள்ள பசுவின் கன்றுகளுடன் சேர்ந்து ஊருக்குள் புகும் நாடன் (செல – இடைக்குறை, கவாஅன் – அளபெடை), பன் மலை அருஞ்சுரம் இறப்பின் – பல மலைகளையுடைய பாலை நிலத்திற்குச் சென்றால், நம் விட்டு யாங்கு வல்லுந – எவ்வாறு வல்லமை உடையன, மற்றே – மற்று அசைநிலை, ஏகாரம் அசைநிலை, ஞாங்கர் வினைப் பூண் தெண் மணி வீழ்ந்தன நிகர்ப்பக் கழுது கால் கொள்ளும் பொழுது கொள் பானாள் – மேலே வேலைப்பாடு அமைந்த பூணிடத்து அமைந்த தெளிந்த ஓசையையுடைய மணிகள் களையப்பட்ட வேற்படைகளை ஒப்ப பேய்கள் உலாவும் நடு இரவில், ஆர்வ நெஞ்சமொடு அளைஇ மார்பு உறப்படுத்தல் மரீஇய கண்ணே – ஆர்வ நெஞ்சத்துடன் கலந்து அவன் மார்பில் உறங்கிய கண்கள் (அளைஇ – சொல்லிசை அளபெடை, மரீஇய – செய்யுளிசை அளபெடை, கண்ணே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 172, பாடியவர் பெயர் கிடைக்கவில்லை, நெய்தல் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
விளையாடு ஆயமொடு வெண்மணல் அழுத்தி,
மறந்தனம் துறந்த காழ் முளை அகைய,
நெய் பெய் தீம் பால் பெய்து, இனிது வளர்ப்ப,
‘நும்மினும் சிறந்தது நுவ்வை ஆகும்’ என்று
அன்னை கூறினள் புன்னையது நலனே;  5
அம்ம நாணுதும், நும்மொடு நகையே,
விருந்தின் பாணர் விளர் இசை கடுப்ப
வலம்புரி வான் கோடு நரலும் இலங்கு நீர்த்
துறை கெழு கொண்க! நீ நல்கின்,
நிறைபடு நீழல் பிறவுமார் உளவே.  10

பாடல் பின்னணி:  பகற்குறி வந்த தலைவனைத் தோழி வரைவு கடாயது.  “தலைவனே!  சந்திக்கும் இடத்திற்கு அன்னை அடிக்கடி வருகின்றாள்.  களவு வெளிப்படும்” எனக் கூறி வரைவு நாடினாள்.

பொருளுரை:  புதிதாக வந்த பாணர் பாடுகின்ற மெல்லிய இசைபோல, வலம்புரியுடைய வெள்ளைச் சங்கு ஒலிக்கும், விளங்கும் நீரையுடைய துறை பொருந்திய நெய்தல் நிலத் தலைவனே!

விளையாடுகின்ற தோழியருடன் வெள்ளை மணலில் புன்னையின் விதையைப் புதைத்து விட்டு, நாங்கள் அதை மறந்து சென்றபின், அவ்விதையானது வேரூன்றி முளைத்துத் தோன்ற, அதற்கு நெய்கலந்த இனிய பாலை ஊற்றி, நாங்கள் இனிதாக வளர்க்க, “உங்களை விடச் சிறப்பானது ஆகும், உங்கள் தங்கை முறைகொண்ட இப்புன்னை மரம்” என்று அன்னை கூறினாள்.  இப்புன்னை மரத்தின் சிறப்பு இது.  நும்முடன் அதன் கீழிருந்து நகையாடி மகிழ எமக்கு நாணமாக உள்ளது.  நீ அருளினால், நிறைய நிழல் உடைய மரங்கள் பிற உள்ளன.

குறிப்பு:  ஒளவை துரைசாமி உரை – ‘உடனுறை உவமம் சுட்டு நகை’ (தொல்காப்பியம், பொருளியல் 46) என்னும் நூற்பா உரையில் இப்பாட்டைக் காட்டி, ‘இதனுள் புன்னைக்கு நாணுதும் எனவே, அவ்வழித் தான் வளர்த்த புன்னையென்றும், பலகாலும் அன்னை வருவள் என்றும் உடனுறை கூறி விலக்கியவாறு’ என்பர் இளம்பூரணர்.  இனி, ‘மறைந்தவற் காண்டல்’ (தொல்காப்பியம், களவியல் 21) என்னும் நூற்பாவின்கண் ‘நாணு மிக வரினும்’ என்றதற்கு இதனைக் காட்டி, ‘இதனுள் அம்ம நாணுதும் எனப் புதிது வந்தோர் நாணுமிகுதி தோன்ற மறுத்து உரைத்தலின் தன்வயின் உரிமையும் அவன்வயிற் பரத்தமையும் கூறினாள்’ என்றும் ‘உடனுறை உவமம் சுட்டு’ (தொல்காப்பியம், பொருளியல் 46) என்ற நூற்பா உரையில், ‘இதனுட் புன்னையை அன்னை நுவ்வை ஆகுமென்றதனால் இவளெதிர் நும்மை நகையாடுதல் அஞ்சுதும் என நகையாடிப் பகற்குறி எதிரே கொள்ளாமைக் குறிப்பினால் மறைத்துக் கூறியவாறு காண்க; இதனைச் செவ்வனம் கூறாமையின் அமைத்தார்’ என்றும் கூறுவர் நச்சினார்க்கினியர்.  நெய் பெய் தீம் பால் பெய்து இனிது வளர்ப்ப (3) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – அதனை நோக்கி மகிழ்ந்து நெய் கலந்த இனிய பாலை நீராக ஊற்றி மேன்மேலும் பெய்து இனியதாக வளர்ப்ப, ச. வே. சுப்பிரமணியன் உரை – அதனை எடுத்துக் கொண்டு என் தாய் இனிதாக வளர்த்தாள்.  நுவ்வை (4) – ஒளவை துரைசாமி உரை – நுவ்வை நுமக்கு முன் பிறந்தாளெனப் பொருள் தருமாயினும், ஈண்டு பின் தோன்றியமை பற்றி நும் தங்கை எனக்கூறல் வேண்டிற்று.

சொற்பொருள்:  விளையாடு ஆயமொடு – விளையாடுகின்ற தோழியருடன்,  வெண்மணல் அழுத்தி – வெள்ளை மணலில் புதைத்து, மறந்தனம் துறந்த – நாங்கள் மறந்து சென்ற, காழ் முளை அகைய – விதையானது வேரூன்றி முளைத்துத் தோன்ற, நெய் பெய் தீம் பால் பெய்து – நெய்கலந்த இனிய பாலை ஊற்றி, இனிது வளர்ப்ப – நாங்கள் அதனை இனிதாக வளர்க்க, அன்னை அதனை இனிதாக வளர்க்க, நும்மினும் சிறந்தது நுவ்வை ஆகும் என்று அன்னை கூறினள் – உங்களை விட சிறப்பானது ஆகும் உங்கள் தங்கை முறையான இப்புன்னை மரம் என்று அன்னை கூறினாள், புன்னையது நலனே – புன்னையின் சிறப்பு (நலனே – ஏகாரம் அசைநிலை), அம்ம – அசைநிலை, நாணுதும் நும்மொடு நகையே – நும்முடன் நகைக்க நாணமாக உள்ளது எமக்கு (நகையே – ஏகாரம் அசைநிலை), விருந்தின் பாணர் விளர் இசை கடுப்ப – புதிதாக வந்த பாணர் பாடுகின்ற மெல்லிய இசைபோல (கடுப்ப – உவம உருபு), வலம்புரி வான் கோடு நரலும் – வலம்புரிக் கொண்ட வெள்ளைச் சங்கு (கோடு) ஒலிக்கும், இலங்கு நீர்த் துறை கெழு கொண்க – விளங்கும் நீரையுடைய துறை பொருந்திய நெய்தல் நிலத் தலைவனே, நீ நல்கின் – நீ அருளினால், நிறைபடு நீழல் பிறவுமார் உளவே – நிறைய நிழல் உடைய மரங்கள் பிற உள்ளன (பிறவுமார் – பிறவும் +ஆர், ஆர் அசை நிலை, உளவே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 173, பாடியவர் பெயர் கிடைக்கவில்லை, குறிஞ்சித் திணை – தோழி தலைவியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
சுனைப் பூக் குற்றும், தொடலை தைஇயும்,
மலைச் செங்காந்தள் கண்ணி தந்தும்,
தன் வழிப்படூஉம் நம் நயந்தருளி,
வெறி என உணர்ந்த அரிய அன்னையைக்,
கண்ணினும் கனவினும் காட்டி, ‘இந்நோய்  5
என்னினும் வாராது; மணியின் தோன்றும்
அம் மலை கிழவோன் செய்தனன் இது’ எனின்,
படுவண்டு ஆர்க்கும் பைந்தார் மார்பின்
நெடுவேட்கு ஏதம் உடைத்தோ?
தொடியோய் கூறுமதி, வினவுவல் யானே.  10

பாடல் பின்னணி:  தோழி தலைவிக்கு உரைப்பாளாய்ச் சிறைப்புறமாகச் சொல்லியது.  ‘அன்னை வெறி அயர்வாள்; ஆகவே தலைவியே, நீ அறத்தொடு நிற்பாய்’ எனத் தோழி கூறியதுமாம்.

பொருளுரை:  தொடியை அணிந்தவளே!  கூறுவாயாக! யான் ஒன்றை வினவுகின்றேன்! சுனையில் உள்ள மலர்களைக் கொய்தும், அம்மலர்களை மாலைகளாகத் தொடுத்தும், மலையில் உள்ள செங்காந்தள் மலர்களைக் கண்ணியாகத் தொடுத்தும், அவற்றைச் சூட்டி முருகனை வழிபடும் நம்பால் அன்புற்று, வெறி எனத் தவறாக உணர்ந்த அரிய அன்னைக்கு, நனவில் கண் காணக் குறிப்பாகக் காட்டியும் கனவில் காட்டியும், “இவளுடைய இந்த மெலிவு நோய் என்னிடமிருந்து வருவது அன்று.  நீலமணி போலத் தோன்றும் அழகிய மலையின் தலைவன் இதைச் செய்தான்” எனக் கூறினால், மொய்க்கும் வண்டுகள் ஆரவாரிக்கும் பசுமையான மாலையை அணிந்த நெடுவேளாகிய முருகனுக்குக் குற்றம் உண்டோ?

குறிப்பு:  சுனைப் பூக் குற்றும், தொடலை தைஇயும் ……. தன் வழிப்படூஉம் – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – சுனையிலுள்ள மலர் கொய்தும் அவைகளை மாலையாகத் தொடுத்தும் மலையிலுள்ள செங்காந்தள் மலர் கொய்து முருகவேளை வழிபாடு செய்கின்ற நம்மை ஆதரஞ் செய்யுமாறு விரும்பி அருளி, ஒளவை துரைசாமி உரை – சுனைப் பூக் குற்றும், தொடலை தைஇயும் மலைச் செங்காந்தள் கண்ணி தந்தும் நயந்தருளி  உயங்கும் அன்னை தன் கருத்தின்படியே நடக்கும்.  இறைச்சி – கு. வெ. பாலசுப்பிரமணியன் உரை – நம்மைக் கை நெகிழ்த்தவன் மலை நீலமணி போலத் தோன்றுவது என்ன அறம் என்பதுபடக் கூறினாள்.   மதி – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம், சொல்லதிகாரம், இடையியல் 26).

சொற்பொருள்:  சுனைப் பூக் குற்றும் தொடலை தைஇயும் மலைச் செங்காந்தள் கண்ணி தந்தும் தன் வழிப்படூஉம் – சுனையில் உள்ள மலர்களைக் கொய்தும் அம்மலர்களை மாலைகளாகத் தொடுத்தும் மலையில் உள்ள செங்காந்தள் மலர்களைக் கண்ணியாகத் தொடுத்தும் அவற்றைச் சூட்டி முருகனை வழிபடும் (தைஇ – சொல்லிசை அளபெடை, வழிப்படூஉம் – அளபெடை), நம் நயந்தருளி – நம்பால் அன்புற்று, வெறி என உணர்ந்த அரிய அன்னையைக் கண்ணினும் கனவினும் காட்டி – வெறி எனத் தவறாக உணர்ந்த அரிய அன்னைக்கு நனவில் கண் காணக் குறிப்பாகக் காட்டியும் கனவில் காட்டியும் (அன்னையை – உருபு மயக்கம்), இந்நோய் என்னினும் வாராது – இவளுடைய இந்த நோய் என்னிடமிருந்து வருவது அன்று (என்னினும் – உம்மை இசைநிறை, செய்யுளில் இசைநிறைத்தற்கு வரும் சொல்), மணியின் தோன்றும் அம் மலை கிழவோன் செய்தனன் இது எனின் – நீலமணி போலத் தோன்றும் அழகிய மலையின் தலைவன் இதைச் செய்தான் எனக் கூறினால், படுவண்டு ஆர்க்கும் பைந்தார் மார்பின் நெடுவேட்கு ஏதம் உடைத்தோ – மொய்க்கும் வண்டுகள் ஆரவாரிக்கும் பசுமையான மாலையை அணிந்த நெடுவேளாகிய முருகனுக்குக் குற்றம் உண்டோ, தொடியோய் – தொடியை அணிந்தவளே, கூறுமதி – கூறுவாயாக (மதி – முன்னிலையசை), வினவுவல் யானே – யான் ஒன்றை வினவுகின்றேன் (வினவுவல் – தன்மை ஒருமை வினைமுற்று, யானே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 174, பாடியவர் பெயர் கிடைக்கவில்லை, பாலைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
‘கற்றை ஈந்தின் முற்றுக் குலை அன்ன
ஆள் இல் அத்தத் தாள்அம் போந்தைக்
கோள் உடை நெடுஞ்சினை ஆண் குரல் விளிப்பின்,
புலி எதிர் வழங்கும் வளி வழங்கு ஆர் இடைச்
சென்ற காதலர் வந்து, இனிது முயங்கி,  5
பிரியாது ஒருவழி உறையினும் பெரிது அழிந்து
உயங்கினை மடந்தை’ என்றி தோழி!
அற்றும் ஆகும் அஃது அறியாதோர்க்கே;
வீழாக் கொள்கை வீழ்ந்த கொண்டி
மல்லல் மார்பு மடுத்தனன்  10
புல்லு மற்று எவனோ, அன்பு இலங்கடையே?

பாடல் பின்னணி:  பாலையுள் மருதம்.  வினைவயிற் பிரிந்த தலைவன் வினை முடித்து மீண்ட காலத்து அவன் பரத்தையரைச் சேர்ந்தமை பற்றித் தலைவி வருந்தினாள்.  ‘தலைவனுடன் இருக்கும்பொழுதும் ஏன் வருந்துகின்றாய்?’ எனக் கேட்ட தோழியிடம் தலைவி சொன்னது.

பொருளுரை:  தோழி!  “திரண்ட ஈந்தின் முற்றிய குலை போன்ற மக்கள் செல்லாத வழியில் உள்ள தாளிப்பனையின் குலைகளை உடைய நீண்ட மடலிலிருந்து ஆண் பறவை தன் பெண் பறவையை அழைத்தால், புலி அதற்கு எதிராக முழங்கும் காற்று வீசுகின்ற அரிய வழியில் சென்ற உன்னுடைய காதலர் வந்து, உன்னை இனிதாக அணைத்துப் பிரியாது உன்னுடன் ஒன்றியிருப்பவும் நீ மிகவும் நெஞ்சு அழிந்து வருந்துகின்றாய்” எனக் கூறுகிறாய்.  அதன் காரணத்தை அறியாதவர்களுக்கு அவ்வாறு தோன்றும்.  பிற பெண்டிரை விரும்பாத கொள்கையுடையவன் ஆக இருந்தவன் இப்பொழுது பொருளைக் கொள்ளும் பரத்தையரிடம் தன் வளமையான மார்பைக் கொடுத்துவிட்டான்.  அன்பு இல்லாதவிடத்து அவனைத் தழுவிக் கொள்வதனால் என்ன பயன்?

குறிப்பு:  இறைச்சி (1) – கு. வெ. பாலசுப்பிரமணியன் உரை – ஈந்தின் முற்றுக் குலை போன்றது தாளிப் பனை என்றது, பரத்தையும் தலைவனுக்கு என் போல் உரியவள் ஆயினாள் என உணர்த்தவாம்.  இறைச்சி (2) – கு. வெ. பாலசுப்பிரமணியன் உரை – ஆண் பறவை பெண் பறவையை அழைக்கப் புலி எதிர்க்குரல் எழுப்பும் என்றது, வீட்டிலிருக்கும் யான் தலைவனை விரும்பி வரவேற்க, அயலே பரத்தை அவனை எதிர்நோக்கி அழைப்பாள் என்பது புலப்படுத்தவாம்.

சொற்பொருள்:  கற்றை ஈந்தின் முற்றுக் குலை அன்ன ஆள் இல் அத்தத் தாள்  அம் போந்தைக் கோள் உடை நெடுஞ்சினை ஆண் குரல் விளிப்பின் புலி எதிர் வழங்கும் வளி வழங்கு ஆர் இடைச் சென்ற காதலர் வந்து – திரண்ட ஈந்தின் முற்றிய குலை போன்ற மக்கள் செல்லாத வழியில் உள்ள தாளிப்பனையின் குலைகளை உடைய நீண்ட மடலிலிருந்து ஆண் பறவை தன் பெண் பறவையை அழைத்தால் புலி அதற்கு எதிராக முழங்கும் காற்று வீசுகின்ற அரிய வழியில் சென்ற உன்னுடைய காதலர் வந்து (தாளிப்பனை – Corypha umbraculifera), இனிது முயங்கி பிரியாது ஒருவழி உறையினும் பெரிது அழிந்து உயங்கினை மடந்தை – உன்னை இனிதாக அணைத்துப் பிரியாது உன்னுடன் ஒன்றியிருப்பவும் நீ மிகவும் நெஞ்சு அழிந்து வருந்துகின்றாய், என்றி தோழி – என்கின்றாய் தோழி (என்றி – முன்னிலை ஒருமை), அற்றும் ஆகும் அஃது அறியாதோர்க்கே – காரணத்தை அறியாதவர்களுக்கு அவ்வாறு தோன்றும், வீழாக் கொள்கை வீழ்ந்த கொண்டி மல்லல் மார்பு மடுத்தனன் – பிற பெண்டிரை விரும்பாத கொள்கையுடையவன் ஆக இருந்தவன் இப்பொழுது பொருளைக் கொள்ளும் பரத்தையரிடம் தன் வளமையான மார்பைக் கொடுத்துவிட்டான், புல்லு மற்று எவனோ அன்பு இலங்கடையே – அன்பு இல்லாதபொழுது தழுவிக் கொள்வதனால் என்ன பயன் (மற்று – அசைநிலை, இலங்கடையே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 175, பாடியவர் பெயர் கிடைக்கவில்லை, நெய்தல் திணை – தோழி சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
நெடுங்கடல் அலைத்த கொடுந்திமில் பரதவர்
கொழு மீன் கொள்ளை அழி மணல் குவைஇ,
மீன் நெய் அட்டிக் கிளிஞ்சில் பொத்திய
சிறு தீ விளக்கில் துஞ்சும், நறுமலர்ப்
புன்னை ஓங்கிய துறைவனொடு அன்னை  5
தான் அறிந்தன்றோ இலளே; பானாள்
சேரி அம் பெண்டிர் சிறு சொல் நம்பிச்
சுடுவான் போல நோக்கும்,
அடு பால் அன்ன என் பசலை மெய்யே.

பாடல் பின்னணி:  இது தலைவியின் கூற்றைத் தோழித் தன் கூற்றாகக் கொண்டு உரைத்தது.  வரைவு கடாயது.

பொருளுரை:  பெரிய கடலில் மீன்களை வருத்திப் பிடித்த மீனவர்கள் தாங்கள் பிடித்துக் கொண்டு வந்த மீன்களைப் பெரிய மணற்பரப்பில் குவித்து விட்டு, மீனின் எண்ணையை ஊற்றி கிழிஞ்சில் ஏற்றிய விளக்கு ஒளியில் உறங்குகின்ற நறுமண மலர்களையுடைய புன்னை மரங்கள் உயர்ந்து வளர்ந்திருக்கும் துறையின் தலைவனுடன் நாம் கொண்ட உறவை, அன்னை சிறிதும் அறியவில்லை.  ஆனால், நடு இரவில் நம் தெருவில் உள்ள பெண்கள் கூறும் சில பழிச் சொற்களை நம்பி கொதிக்கும் பால் போன்று பசலையடைந்த என் மேனியை அன்னைச் சுடுபவள் போல் நோக்குகின்றாள்.  என்னை வீட்டில் செறிப்பாள் போலும்.

குறிப்பு:  ஒளவை துரைசாமி உரை – ஒன்றித் தோன்றும் தோழி மேன (தொல்காப்பியம், அகத்திணையியல் 42) என்பதனால் தோழி தலைவியின் மெய்யை ‘என் மெய்’ என்றாள்.  உள்ளுறை (1) – கு. வெ. பாலசுப்பிரமணியன் உரை – மீனவர் மீன்களைப் பிடித்து வந்து கடற்கரையிலே குவித்து உறங்குவர் என்றது, தலைவன் பொருள் ஈட்டி வந்து தமர் விரும்பிய வண்ணம் அவர் வாயிலில் குவித்துப் பின் பலர் அறியத் தலைவியை மணந்து முயங்கல் வேண்டும் என்பதை உள்ளுரைத்தி அமைந்தது.  உள்ளுறை (2) – ஒளவை துரைசாமி உரை – பரதவர் தாம் கொணர்ந்த மீனை மணலிற் குவித்து விட்டுக் கிளிஞ்சில் விளக்கொளியில் துஞ்சுவர் என்றது, வரை பொருட்கு பிரிந்த போந்த தலைவன் வரைதற்கு முயலாது, தன் மனையின் கண்ணே காதலின்ப நினைவின்றிக் கிடக்கிறான் என்பது.  மீன் நெய் – நற்றிணை 175 – மீன் நெய் அட்டிக் கிளிஞ்சில் பொத்திய சிறு தீ விளக்கில், நற்றிணை 215 – மீன் நிணம் தொகுத்த ஊன் நெய் ஒண் சுடர், பொருநராற்றுப்படை 215 – மீன் நெய்யொடு.  அழி மணல் (2) –பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – நெகிழ்ச்சியுடைய மணற்பரப்பு, ஒளவை துரைசாமி உரை – மிக்க மணல் பரந்த கரை.  பெருமழையை அழிதுளி என்றல் போல மிக்க மணல் பரந்த இடத்தை அழிமணல் என்றார்.  அடுபால் (9) – ஒளவை துரைசாமி உரை – பசலை வெண்ணிறமுடைமை பற்றி அதனை மிகவும் புனைந்து அடுபால் அன்ன பசலை என்றார்.  அடுபால் என்றதனை இறந்த காலம் தொக்க வினைத்தொகையாக்கின் அட்ட பால் செந்நிறம் பெற்று பசலைக்கு உவவமாகும்.  தலைவி கூறுவதுபோல் தோழி கூறுதல் – அகநானூறு 362, நற்றிணை 28, 98, 124, 132, 175, 178, 191, 211, 251, 292, கலித்தொகை 18, 70, குறுந்தொகை 236, 238, ஐங்குறுநூறு 45.

சொற்பொருள்:  நெடுங்கடல் அலைத்த கொடுந்திமில் பரதவர் கொழு மீன் கொள்ளை அழி மணல் குவைஇ மீன் நெய் அட்டிக் கிளிஞ்சில் பொத்திய சிறு தீ விளக்கில் துஞ்சும் நறுமலர்ப் புன்னை ஓங்கிய துறைவனொடு – பெரிய கடலில் மீன்களை வருத்திப் பிடித்த மீனவர்கள் தாங்கள் பிடித்துக் கொண்டு வந்த மீன்களைப் பெரிய மணற்பரப்பில் குவித்து மீனின் எண்ணையை ஊற்றி கிழிஞ்சில் ஏற்றிய விளக்கு ஒளியில் உறங்குகின்ற நறுமண மலர்களையுடைய புன்னை மரங்கள் உயர்ந்து வளர்ந்திருக்கும் துறையின் தலைவனுடன் (குவைஇ – அளபெடை, புன்னை – Laurel Tree, Mast wood Tree, Calophyllum inophyllum), அன்னை தான் அறிந்தன்றோ இலளே – அன்னை சிறிதும் அறியவில்லை; பானாள் சேரி அம் பெண்டிர் சிறு சொல் நம்பிச் சுடுவான் போல நோக்கும் அடு பால் அன்ன என் பசலை மெய்யே – நடு இரவில் நம் தெருவில் உள்ள பெண்கள் கூறும் சில பழிச் சொற்களை நம்பி கொதிக்கும் பால் போன்று பசலையடைந்த என் மேனியை அன்னைச் சுடுபவள் போல் நோக்குகின்றாள் (மெய்யே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 176, பாடியவர் பெயர் கிடைக்கவில்லை, குறிஞ்சித் திணை – பரத்தை விறலியிடம் சொன்னது
எம் நயந்து உறைவி ஆயின், யாம் நயந்து
நல்கினம் விட்டது என்? நலத்தோன் அவ் வயின்
சால்பின் அளித்தல் அறியாது, அவட்கு அவள்
காதலள் என்னுமோ? உரைத்திசின் தோழி!
நிரைத்த யானை முகத்து வரி கடுப்பப்  5
போது பொதி உடைந்த ஒண் செங்காந்தள்
வாழை அம் சிலம்பின் வம்புபடக் குவைஇ,
யாழ் ஓர்த்தன்ன இன் குரல் இன வண்டு,
அருவி முழவின் பாடொடு ஒராங்கு,
மென்மெல இசைக்கும் சாரல்,  10
குன்ற வேலித் தம் உறைவின் ஊரே.

பாடல் பின்னணி:  பரத்தை தோழியின் ஆயத்தார் கேட்ப, தன் தோழியான விறலியிடம் சொன்னது.

பொருளுரை:  தோழி!  என்னிடம் அன்புகொண்டு உறைபவளாகத் தலைவி இருக்கையில் யாம் விருப்பத்துடன் தலைவனை அவளிடம் செல்லவிடுவது எவ்வாறு? நமக்கு நலம்புரியும் தலைவனை அத்தலைவியிடம் நாம் பெருந்தன்மையால் போகவிட்டதை அறியாது, கூட்டமாக இருக்கும் யானையின் முகத்தில் உள்ள வரிகளைப் போல அரும்புகள் பொதிந்தனவை எல்லாம் மலர்ந்த ஒளியுடைய செங்காந்தள் மலர்கள் வாழையையுடைய மலையில் புதிதாகக் தோன்றி திரண்டு இருக்க, யாழின் இசையைக் கேட்பதை ஒத்த இனிய குரலையுடைய கூட்டமாகிய வண்டுகள் அருவியாகிய முழவொலியுடன் மெல்ல மெல்ல ஒலிக்கின்ற மலையில் குன்றுகளை வேலியாகக் கொண்ட அவர்கள் இருக்கும் ஊரில் உள்ளவர்கள், என்னைப்பற்றி, “தலைவிபால் அப்பரத்தை மிக்க அன்புடையவள்.  அதனால் தலைவனை அவள்பால் விடுத்தாள் எனக் கூறுவார்களோ?  கூறுவாயாக!

குறிப்பு:  வம்புபட (7) – ஒளவை துரைசாமி உரை – புதுமை காட்சி உண்டாக, பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – மணங்கமழாநிற்ப.  உள்ளுறை – கு. வெ. பாலசுப்பிரமணியன் உரை – மலையிலே செங்காந்தள் மலர்களும் வண்டுகள் அருவி ஒலியோடு சேர மெல்ல மெல்லப் பாடாநிற்கும் என்றது, தலைவியொடு தலைவன் மகிழ்ந்திருப்பானாதலின் நாம் முழவு முதலியவற்றோடு இசைக்க அவன் நம்வயின் ஆவான் என்பது.   சின் – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம், சொல்லதிகாரம், இடையியல் 26, சின் என்பது இசின் என்பதன் முதற்குறை – ச. பாலசுந்தரம் உரை).  அருவி முழவின் பாடொடு (9) – பொ. வே. சோமசுந்தரனார், கு. வெ. பாலசுப்பிரமணியன் ஆகியோர் உரைகளில் இவ்வாறு உள்ளது.  ஒளவை துரைசாமி உரை – அருவி முழக்கின் பாடு ஓர்த்து, பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – அருவி முழவின் பாட்டொடு.

சொற்பொருள்:  எம் நயந்து உறைவி ஆயின் யாம் நயந்து நல்கினம் விட்டது என் – என்னிடம் அன்புகொண்டு உறைபவளாக தலைவி இருக்கையில் யாம் விருப்பத்துடன் அளித்துவிடுவது எவ்வாறு, நலத்தோன் அவ் வயின் சால்பின் அளித்தல் அறியாது – தலைவனை அத்தலைவியிடம் நாம் பெருந்தன்மையால் போகவிட்டதை அறியாது, அவட்கு அவள் காதலள் என்னுமோ – தலைவிபால் அவள் மிக்க அன்புடையவள் என என்னைக் கூறுவார்களோ, உரைத்திசின் – கூறுவாயாக (சின் – முன்னிலை அசை), தோழி – தோழி, நிரைத்த யானை முகத்து வரி கடுப்பப் போது பொதி உடைந்த ஒண் செங்காந்தள் வாழை அம் சிலம்பின் வம்புபடக் குவைஇ – கூட்டமாக இருக்கும் யானையின் முகத்தில் உள்ள வரிகளைப் போல அரும்புகள் பொதிந்தனவை எல்லாம் மலர்ந்த ஒளியுடைய செங்காந்தள் மலர்கள் வாழையையுடைய மலையில் புதிதாகக் தோன்றி திரண்டு இருக்க (கடுப்ப – உவம உருபு, குவைஇ – அளபெடை), யாழ் ஓர்த்தன்ன இன் குரல் இன வண்டு அருவி முழவின் பாடொடு ஒராங்கு மென்மெல இசைக்கும் சாரல் குன்ற வேலித் தம் உறைவின் ஊரே – யாழின் இசையைக் கேட்பதை ஒத்த இனிய குரலையுடைய கூட்டமாகிய வண்டுகள் அருவியாகிய முழவொலியுடன் மெல்ல மெல்ல ஒலிக்கின்ற மலையில் குன்றுகளை வேலியாகக் கொண்ட அவர்கள் இருக்கும் ஊரில் உள்ளவர்கள், (ஊரே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 177, பாடியவர் பெயர் கிடைக்கவில்லை, பாலைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
பரந்துபடு கூர் எரி கானம் நைப்ப,
மரம் தீயுற்ற மகிழ்தலை அம் காட்டு
ஒதுக்கு அரும் வெஞ்சுரம் இறந்தனர் மற்று அவர்,
குறிப்பின் கண்டிசின் யானே; நெறிப்பட
வேலும் இலங்கு இலை துடைப்ப, பலகையும்  5
பீலி சூட்டி மணி அணிபவ்வே,
பண்டினும் நனி பல அளிப்ப இனியே
வந்தன்று போலும் தோழி, நொந்து நொந்து,
எழுது எழில் உண்கண் பாவை
அழிதரு வெள்ளம் நீந்தும் நாளே.  10

பாடல் பின்னணி:  செலவு குறிப்பறிந்த தலைவி தோழிக்கு உரைத்தது .

பொருளுரை:  பரந்துபட்ட மிக்க தீ எரிக்க, மரங்கள் எல்லாம் தீய்ந்து, மகிழ்ச்சி அழிந்த காட்டில், நிழலில் ஒதுங்குவதற்கு இடமில்லாத கொடிய காட்டு வழியில் சென்று விட்டார் என்று அவருடைய செய்கைகளினால் நான் அறிந்தேன்.  ஒழுங்குபட வேலின் ஒளியுடைய இலையைத் துடைத்தார்.  கிடுகிற்கும் (கேடயத்திற்கும்) மயில் இறகு சூடி மணியால் ஒப்பனை செய்தார்.  முன்னை விட மிகுதியாகவே என்னிடம் அன்பாக இருந்தார்.  நான் வருந்தி வருந்தி ஓவியர் வரைவதற்குத் தகுந்த அழகு அமைந்த என்னுடைய மையிட்ட கண்களில் பாவை தோன்றாதபடி வெள்ளம் போன்று கண்ணீர் வடிய, அவ்வெள்ளத்தின்கண் விழுந்து நீந்தி வருந்தும் நாள் வந்துவிட்டது போலும் தோழி.

குறிப்பு:  கண்ணின் பாவை – நற்றிணை 177 – உண்கண் பாவை அழிதரு வெள்ளம், அகநானூறு 5 – பாவை மாய்த்த பனி நீர் நோக்கமொடு, அகநானூறு 229 – பல் இதழ் மழைக் கண் பாவை மாய்ப்ப.  ஒதுக்கு அரும் (3) – ஒளவை துரைசாமி உரை – செல்லுதற்கரிய, பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – ஒதுங்கியிருத்தலுக்கு நிழலில்லாத கொடிய.  நெறிப்பட (4) – ஒளவை துரைசாமி உரை – நெறியில் செல்லுவதற்காக, பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – ஒழுங்குபட.

சொற்பொருள்:  பரந்துபடு கூர் எரி கானம் நைப்ப – பரந்து பட்ட மிக்க தீ எரிக்க, மரம் தீயுற்ற மகிழ்தலை அம் காட்டு – மரங்கள் எல்லாம் தீய்ந்து மகிழ்ச்சி அழிந்த காட்டில் (அம் – சாரியை), ஒதுக்கு அரும் வெஞ்சுரம் இறந்தனர் – நிழலில் ஒதுங்குவதற்கு இடமில்லாத கொடிய காட்டு வழியில் சென்றார், மற்று அவர் குறிப்பின் கண்டிசின் யானே – அவருடைய செய்கைகளினால் நான் அறிந்தேன் (மற்று – அசை நிலை, கண்டிசின் – இசின் தன்மை அசை), நெறிப்பட வேலும் இலங்கு இலை துடைப்ப – ஒழுங்குபட வேலின் ஒளியுடைய இலையைத் துடைத்தார், பலகையும் பீலி சூட்டி மணி அணிபவ்வே – கிடுகிற்கும் (கேடயத்திற்கும்) மயில் இறகு சூடி மணியால் ஒப்பனை செய்தார் (வகரம் விரித்தல் விகாரம்), பண்டினும் நனி பல அளிப்ப – முன்னை விட மிகுதியாகவே என்னிடம் அன்பாக இருந்தார், இனியே – இனியே, வந்தன்று போலும் தோழி – வந்து விட்டது போலும் தோழி, நொந்து நொந்து எழுது எழில் உண்கண் பாவை அழிதரு வெள்ளம் நீந்தும் நாளே – நான் வருந்தி வருந்தி ஓவியர் வரைவதற்குத் தகுந்த அழகு அமைந்த மையிட்ட கண்களில் பாவை தோன்றாத வெள்ளம் போன்று கண்ணீர் வடிய அவ்வெள்ளத்தின்கண் விழுந்து நீந்தி வருந்தும் நாள் (நாளே – ஏகாரம் அசை நிலை)

நற்றிணை 178, பாடியவர் பெயர் கிடைக்கவில்லை, நெய்தல் திணை – தோழி சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
ஆடு அமை ஆக்கம் ஐது பிசைந்தன்ன
தோடு அமை தூவித் தடந்தாள் நாரை,
நலன் உணப்பட்ட நல்கூர் பேடை
கழி பெயர் மருங்கில் சிறு மீன் உண்ணாது,
கைதை அம் படுசினைப் புலம்பொடு வதியும்  5
தண்ணந்துறைவன் தேரே, கண்ணின்
காணவும் இயைந்தன்று மன்னே, நாணி
நள்ளென் யாமத்தும் கண்படை பெறேஎன்,
புள் ஒலி மணி செத்து ஓர்ப்ப
விளிந்தன்று மாது, அவர்த் தெளிந்த என் நெஞ்சே.  10

பாடல் பின்னணி:  தலைவி கூற்றைத் தோழி தன் கூற்றாகக் கூறியது.  பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – சிறைப்புறத்தானாகிய தலைவன் கேட்டு வரைவொடு புகுமாற்றானே தோழி தலைவியை இல்வயிற்செறித்தமையை அறிவுறுத்துவாளாய்த் தலைவனது தேரையும் பார்க்க முடியாதாயிற்று.  நாண் மிகுதலாலே துயிலவும் இல்லை.  என் நெஞ்சம் அழிந்ததென்று கூறி, உள்ளுறையாலே தலைவியினுடைய ஏனைய நிலைமையுங்கூறி வரைவு கடாவா நிற்பது.   தன் உறு வேட்கை கிழவன் முன் கிளத்தல் எண்ணும் காலை கிழத்திக்கு இல்லை (தொல்காப்பியம், களவியல் 28).

பொருளுரை:  அசையும் மூங்கிலின் உட்பகுதியில் உரிக்கப்படும் உரியை மென்மையாகப் பிசைந்தது போன்ற தொகுதியையுடைய பெரிய கால்களையுடைய நாரையினால் இன்பம் நுகரப்பெற்ற துன்புறும் பேடை உப்பங்கழியின் நகரும் அலைகளில் உள்ள சிறு மீன்களை உண்ணாது, தாழையின் பெரிய கிளையில் வருத்தத்துடன் தங்கும் குளிர்ந்த துறையின் தலைவனின் தேர், முன்பு கண்களால் காண்பதற்குப் பொருந்தியிருந்தது.  நான் நாணி நள்ளிரவிலும் உறங்க இயலாது உள்ளேன்,  அருகில் பறவைகளின் ஒலி அவருடைய தேரின் மணிபோல் ஒலித்ததால் அந்த ஒலியைக் கேட்டு, முன்பு தெளிவுற்று இருந்த என் நெஞ்சம் இப்பொழுது வருந்துகின்றது.

குறிப்பு:  உள்ளுறை (1) – கு. வெ. பாலசுப்பிரமணியன் உரை – நாரையால் நலன் உண்ணப்பட்ட பேடை பின்பு சேவல் இல்லாமல் தனியே இரை கொள்ளாது கிளையில் தனித்திருக்கும் என்றது, தலைவனாலே நலன் உண்ணப்பட்ட தலைவி உண்ணாது தனிமையில் இற்செறிக்கப்பட்டாள் என்பது உணர்த்தவாம்.  உள்ளுறை (2) – ஒளவை துரைசாமி உரை – தடந்தாள் நாரையால் நலன் உணப்பட்ட நல்கூர் பேடை, நாரையின் வரவு நோக்கிச் சிறுமீனும் உண்ணாது கைதையஞ் சினையின்கண் புலம்பொடு வதியும் என்றது, தலைமகனால் நலன் நுகரப்பட்டு உண்டி வெறுத்து, உடம்பு நனி சுருங்கி, இற்செறிப்புண்டு உறையும் தலைமகள் தலைமகன் வரைவொடு வருதலை எதிர் நோக்கியிருப்பது உள்ளுறைத்தவாறு.  ஆடு அமை ஆக்கம் ஐது பிசைந்தன்ன (1) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – அசைகின்ற மூங்கிலின் உள்ளே உரிக்கப்படும் உரியை மடித்து மெல்லிதாகப் பிசைந்து வைத்தாலொத்த, ஒளவை துரைசாமி உரை – அசைகின்ற மூங்கிலிடத்தே உண்டாகிய நெல்லை மெல்லப் பிசைந்து கொள்ள நின்ற தோகை போல.  தலைவி கூறுவதுபோல் தோழி கூறுதல் – அகநானூறு 362, நற்றிணை 28, 98, 124, 132, 175, 178, 191, 211, 251, 292, கலித்தொகை 18, 70, குறுந்தொகை 236, 238, ஐங்குறுநூறு 45.  மன் – கழிவே ஆக்கம் ஒழியிசைக் கிளவி என்று அம் மூன்று என்ப மன்னைச் சொல்லே (தொல்காப்பியம், இடையியல் 4).

சொற்பொருள்:  ஆடு அமை ஆக்கம் ஐது பிசைந்தன்ன தோடு அமை தூவித் தடந்தாள் நாரை நலன் உணப்பட்ட நல்கூர் பேடை கழி பெயர் மருங்கில் சிறு மீன் உண்ணாது கைதை அம் படுசினைப் புலம்பொடு வதியும் தண்ணந்துறைவன் தேரே – அசையும் மூங்கிலின் உட்பகுதியில் உரிக்கப்படும் உரியை மென்மையாகப் பிசைந்தது போன்ற தொகுதியையுடைய (கூட்டத்தை உடைய) பெரிய கால்களையுடைய நாரையினால் இன்பம் நுகரப்பெற்ற துன்புறும் பேடை (மெல்லிய பேடை) உப்பங்கழியின் நகரும் அலைகளில் உள்ள சிறு மீன்களை உண்ணாது தாழையின் பெரிய கிளையில் வருத்தத்துடன் தங்கும் குளிர்ந்த துறையின் தலைவனின் தேர் (அமை – மூங்கில், கைதை – தாழை, Pandanus odoratissimus, தண்டுறைவன் என்பது தண்ணந்துறைவன் ஆவது, ஏகாரம் அசைநிலை, விரிக்கும் வழி விரித்தல்), கண்ணின் காணவும் இயைந்தன்று மன்னே – கண்களால் காண்பதற்குப் பொருந்தியிருந்தது (மன்னே – மன் கழிவுக்குறிப்பு தேரே – ஏகாரம் அசைநிலை), நாணி நள்ளென் யாமத்தும் கண்படை பெறேஎன் – நாணி நள்ளிரவிலும் உறங்க இயலாது உள்ளேன் (பெறேஎன் – அளபெடை), புள் ஒலி மணி செத்து ஓர்ப்ப விளிந்தன்று மாது அவர்த் தெளிந்த என் நெஞ்சே – அருகில் பறவைகளின் ஒலி அவருடைய தேரின் மணிபோல் ஒலித்ததால் அந்த ஒலியைக் கேட்டு வருந்தும் என் முன்பு தெளிவுற்று இருந்த என் நெஞ்சம் (மாது – அசைநிலை, நெஞ்சே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 179, பாடியவர் பெயர் கிடைக்கவில்லை, பாலைத் திணை – தலைவியின் தாய் சொன்னது
இல் எழு வயலை ஈற்று ஆ தின்றென,
பந்து நிலத்து எறிந்து பாவை நீக்கி,
அவ் வயிறு அலைத்த என் செய் வினைக் குறுமகள்,
மான் அமர்ப்பன்ன மையல் நோக்கமொடு
யானும் தாயும் மடுப்ப தேனொடு  5
தீம் பால் உண்ணாள், வீங்குவனள் விம்மி,
நெருநலும் அனையள் மன்னே, இன்றே
மை அணல் காளை பொய் புகல் ஆக,
அருஞ்சுரம் இறந்தனள் என்ப, தன்
முருந்து ஏர் வெண்பல் முகிழ் நகை திறந்தே.  10

பாடல் பின்னணி:  தலைவனுடன் தலைவி உடன்போக்கில் சென்றபின் வருந்திய நற்றாய் உரைத்தது.

பொருளுரை:  எங்கள் இல்லத்தில் வளரும் வயலைக் கொடியை, கன்றை ஈன்ற பசு தின்றதால், தன்னுடைய பந்தை நிலத்திலே எறிந்து விட்டு, விளையாட்டுப் பாவையை (பொம்மையை) விலக்கி விட்டு, தன்னுடைய அழகிய வயிற்றில் அடித்துக் கொண்ட, செயலில் திறமையுடைய என்னுடைய இளமகள், மானோடு பொருந்திய கலங்கிய பார்வையை உடையவளாய், நானும் செவிலித் தாயும் தேனுடன் கூடிய இனிய பாலைக் குடிக்க ஊட்ட, குடிக்க மாட்டாள்.  விம்மி அழுவாள்.  நேற்றும் அவ்வாறு தான் இருந்தாள்.
இன்று, கருமையான தாடியையுடைய இளைஞன் ஒருவனின் பொய்ம்மொழிகளை உண்மை என்று ஏற்று, மயில் சிறகின் அடியைப் போன்ற தனது வெண்மையான பற்களில் நகையைத் தோற்றுவித்து, செல்லுதற்கு அரிய சுரத்தின்கண் சென்றனள் எனக் கூறுகின்றனர்.

குறிப்பு:  என் செய் வினைக் குறுமகள் (3) – ஒளவை துரைசாமி உரை – யான் செய்த நல்வினைப் பயனாத் தோன்றிய இளையவள், பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – செய்யும் காரியங்களில் வல்ல என் இளம் புதல்வி.  வயிற்றில் அடித்தல் – நற்றிணை 179 – அவ் வயிறு அலைத்த என் செய் வினைக் குறுமகள், நற்றிணை 379 – அவ் வயிறு அலைத்தலின், நற்றிணை 398 – அவ் வயிறு அலைப்ப உடன் இயைந்து ஓரை மகளிரும், அகநானூறு 106 –பாணன் எறியும் தண்ணுமை கண்ணின் அலைஇயர் தன் வயிறே.  மன் – கழிவே ஆக்கம் ஒழியிசைக் கிளவி என்று அம் மூன்று என்ப மன்னைச் சொல்லே (தொல்காப்பியம், இடையியல் 4).

சொற்பொருள்:  இல் எழு வயலை ஈற்று ஆ தின்றென – இல்லத்தில் வளரும் வயலைக் வயலைக் கன்றை ஈன்ற பசு தின்றதால், பந்து நிலத்து எறிந்து – தன்னுடைய பந்தை நிலத்திலே எறிந்து, பாவை நீக்கி – விளையாட்டுப் பொம்மையை விலக்கி, அவ் வயிறு அலைத்த – தன்னுடைய அழகிய வயிற்றில் அடித்துக் கொண்ட, என் செய் வினைக் குறுமகள் – என்னுடைய செயலில் திறமையுடைய இளமகள், யான் செய்த நல்வினைப் பயனால் தோன்றிய இளையவள், மான் அமர்ப்பன்ன மையல் நோக்கமொடு – மானோடு பொருந்திய கலங்கிய பார்வையுடன், யானும் தாயும் மடுப்ப – நானும் செவிலித் தாயும் குடிக்க ஊட்ட, தேனொடு தீம் பால் உண்ணாள் – தேனுடன் கூடிய இனிய பாலை குடிக்க மாட்டாள், வீங்குவனள் விம்மி – விம்மி அழுவாள், நெருநலும் அனையள் – நேற்றும் அவ்வாறு இருந்தாள், மன்னே – மன் கழிவுக்குறிப்பு, ஏ அசை நிலை, இன்றே – இன்று (ஏகாரம் அசை நிலை), மை அணல் காளை – கருமையான தாடியையுடைய இளைஞன், பொய் புகல் ஆக – பொய்யைப் பற்றுக்கோடாக எண்ணி, அருஞ்சுரம் இறந்தனள் என்ப – செல்லுதற்கு அரிய சுரத்தின்கண் சென்றனள் எனக் கூறுவர், தன் முருந்து ஏர் – தன்னுடைய மயில் சிறகின் அடியைப் போன்ற (ஏர் – உவம உருபு), வெண் பல் – வெண்மையான பற்கள், முகிழ் நகை திறந்தே – நகையைத் தோற்றுவித்து (திறந்தே – ஏகாரம் அசை நிலை)

நற்றிணை 180, பாடியவர் பெயர் கிடைக்கவில்லை, மருதத் திணை – தோழி சொன்னது
பழனப் பாகல் முயிறு மூசு குடம்பை
கழனி நாரை உரைத்தலின், செந்நெல்
விரவு வெள்ளரிசியின் தாஅம் ஊரன்
பலர்ப் பெறல் நசைஇ, நம் இல் வாரலனே;
மாயோள் நலத்தை நம்பி விடல் ஒல்லாளே;  5
அன்னியும் பெரியன்; அவனினும் விழுமிய
இரு பெருவேந்தர் பொரு களத்து ஒழித்த
புன்னை விழுமம் போல,
என்னொடு கழியும், இவ் இருவரது இகலே.

பாடல் பின்னணி:  தலைவனுக்கு வாயில் நேர்ந்த தோழி, தலைவி சினந்து உடன்படாமையால் வருந்தி உரைத்தது.

பொருளுரை:  வயல் அருகில் உள்ள பலா மரத்தில் இலைகளால் செய்த கூடுகளில் நெருங்கி உறையும் முயிறுகளைக் கழனியில் இரை உண்ணும் நாரை உறிஞ்சுதலால் அம்முயிறுகளும் அவற்றின் முட்டைகளும் சிவப்பு அரிசியும் வெள்ளை அரிசியும் உதிர்ந்து கலந்தாற்போல் பரவி இருக்கும் வயல் சூழ்ந்த ஊரையுடைய தலைவன், பல மகளிரைப் பெறுவதற்கு விரும்பி இருப்பதால், நம்முடைய இல்லத்திற்கு வருவதில்லை. மாமை நிறத்தையுடைய இவள் அவனது நலமுடைய தகைமையை விரும்பித் தான் அதற்கு எதிராகக் கொண்ட ஊடலை விடாது உள்ளாள்.  அன்னியும் பெரியன் திதியன் ஆகிய சிறப்புடைய இரு பெரும் வேந்தர்கள் போரிட்ட குறுக்கை என்னும் ஊரில் உள்ள போர்க் களத்தில் அழிந்த புன்னை மரம்போல் தலைவனும் தலைவியும் கொண்ட பகைமை, நான் இறந்தால் என்னுடன் நீங்கும் போலும்.

குறிப்பு:  உள்ளுறை – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – நாரை உறிஞ்சுவதால் கூட்டிலிருந்து முயிறுகள் உதிருமென்றது, தலைவி சினமிகுத்தலினால் என் உடலிருந்து உயிர் நீங்கும் போலும் என்றதாம்.  வரலாறு:  அன்னி, பெரியன் (திதியன்).  பழனப் பாகல் முயிறு மூசு குடம்பை (1) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – வயல் அருகிலிருக்கின்ற பலா மரத்தின் இலைகளைக் கூடாக்கி முயிறுகள் முட்டையிட்டு நெருங்கியுறைகின்ற கூடுகள், ஒளவை துரைசாமி உரை – பழனக் கரையினின்ற பலாமரத்தில் வாழும் முயிறுகள் கூடியமைத்த கூடு.   ஐங்குறுநூறு 99 – பழனப் பாகல் முயிறு மூசு குடம்பை – ஒளவை துரைசாமி உரை – பழனங்களில் உள்ள பாகற்கொடி இலைகளில் முயிறுகள் உறைகின்ற கூடுகள், பொ. வே. சோமசுந்தரனார் உரை – பழனத்தின்கண் படர்ந்த பாகற் கொடியின்கண் முயிற்று எறும்புகள் மொய்த்து இயற்றிய கூடு.  குறுக்கையில் அன்னி திதியனின் மரத்தை வெட்டியது – அகநானூறு 45, 126, 145. அன்னி பற்றின குறிப்புகள் – அகநானூறு 45, 126, 45.  அன்னி மிஞிலி என்பவன் பற்றின குறிப்புகள் – அகநானூறு 196, 262.  விழுமம் – விழுமம் சீர்மையும் சிறப்பும் இடும்பையும் (தொல்காப்பியம், உரியியல் 57).

சொற்பொருள்:  பழனப் பாகல் முயிறு மூசு குடம்பை – வயல் அருகில் உள்ள பலா மரத்தில் முயிறுகள் (செந்நிற எறும்புகள்) நெருங்கி உறையும் கூடுகள், கழனி நாரை உரைத்தலின் செந்நெல் விரவு வெள்ளரிசியின் தாஅம் ஊரன் – கழனியில் இரை உண்ணும் நாரை உறிஞ்சுதலால் அம்முயிறுகளும் அவற்றின் முட்டைகளும் சிவப்பு அரிசியும் வெள்ளை அரிசியும் உதிர்ந்து கலந்தாற்போல் பரவி இருக்கும் ஊரையுடைய தலைவன் (தாஅம் – செய்யுளிசை அளபெடை, செந்நெல் – ஆகுபெயர் சிவப்பு அரிசிக்கு), பலர்ப் பெறல் நசைஇ நம் இல் வாரலனே – பல மகளிரைப் பெறுவதற்கு விரும்பி இருப்பதால் நம்முடைய இல்லத்திற்கு அவன் வருவதில்லை (நசைஇ – அளபெடை), மாயோள் நலத்தை நம்பி விடல் ஒல்லாளே – மாமை நிறத்தையுடைய இவள் அவனது நலமுடைய தகைமையை விரும்பித் தான் அதற்கு எதிராகக் கொண்ட ஊடலை விடாது உள்ளாள் (ஒல்லாளே – ஏகாரம் அசைநிலை), அன்னியும் பெரியன் அவனினும் விழுமிய இரு பெருவேந்தர் பொரு களத்து ஒழித்த புன்னை விழுமம் போல என்னொடு கழியும் இவ் இருவரது இகலே – அன்னியும் பெரியன் திதியன் ஆகிய சிறப்புடைய இரு பெரும் வேந்தர்கள் போரிட்ட களத்தில் அழிந்த புன்னை மரம்போல் தலைவனும் தலைவியும் கொண்ட பகைமை நான் இறந்தால் என்னுடன் நீங்கும் போலும் (புன்னை – Laurel Tree, Mast wood Tree, Calophyllum inophyllum, இகலே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 181, பாடியவர் பெயர் கிடைக்கவில்லை, முல்லைத் திணை – வினைமுற்று வந்த தலைவனைக் கண்ட தோழி சொன்னது
உள் இறைக் குரீஇக் கார் அணல் சேவல்
பிற புலத் துணையோடு உறை புலத்து அல்கி,
வந்ததன் செவ்வி நோக்கி, பேடை
நெறி கிளர் ஈங்கைப் பூவின் அன்ன
சிறு பல் பிள்ளையொடு குடம்பை கடிதலின்,  5
துவலையின் நனைந்த புறத்தது அயலது
கூரல் இருக்கை அருளி நெடிது நினைந்து,
ஈர நெஞ்சின் தன் வயின் விளிப்பக்
கையற வந்த மையல் மாலை
இரீஇய ஆகலின், இன் ஒலி இழந்த  10
தார் அணி புரவி தண் பயிர் துமிப்ப
வந்தன்று பெருவிறல் தேரே;
உய்ந்தன்று ஆகும், இவள் ஆய் நுதற் கவினே.

பாடல் பின்னணி:  மாலைப்பொழுதில் தலைவனின் தேர் வந்ததாதலின் தோழி மகிழ்ந்து, இனித் தலைவியின் அழகு பசலையால் கெடாதென்றும், முன்பு பரத்தையிற் பிரிந்த தலைவனைத் தலைவி வெறுத்தாற்போல வெறுக்காது, இப்பொழுது வினை முற்றி மீளும் தலைவனை உவந்து வரவேற்பாள் என உள்ளுறையானும் கூறியது.

பொருளுரை:  வீட்டின் கூரை அடியில் உள்ள மரப்பலகையில் வாழ்கின்ற குருவியின் கரிய கழுத்தை உடைய ஆண் பறவை, வேற்றுப் புலம் சென்று அங்குள்ள குருவி பெடையுடன் கூடியதனால் தாழ்ந்து இல்லத்திற்கு வந்ததன் நிலைமையை நோக்கி, அதன் பெண் குருவியானது அடர்ந்திருக்கும் ஈங்கைப் பூவைப் போன்ற தன் குஞ்சுகளுடன், கூட்டுக்குள் நுழையாதபடி அதைத் தடுத்ததால் மழையில் நனைந்த புறத்தை உடையதாய் அது  அருகில் நடுங்கி இருப்பதை நோக்கி, அருள் செய்து நெடிய நேரம் நினைந்து, அன்பார்ந்த உள்ளத்துடன் தன்னிடம் வருமாறு அழைக்கும் செயலற்று வரும் மயக்கத்தைக் தரும் மாலை நேரம், வந்து தங்கியதாகலின் இனிய ஒலியை இழந்த மாலைகள் அணிந்த குதிரைகள் மெல்லிய பயிர்களைக் காலால் மிதித்து வெட்டியபடி வந்தது பெரிய வெற்றி பொருந்திய தலைவனின் தேர்.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – ‘பெறற்கு அரும் பெரும் பொருள்’ என்னும் நூற்பாவின்கண் வரும் (தொல்காப்பியம், கற்பியல் 9) ‘பிறவும் வகைபட வந்த கிளவி’ என்பதனால் அமைத்துக் கொள்க.  கார் அணற் சேவல் (1) – ஒளவை துரைசாமி உரை – கரிய கழுத்தையுடைய சேவற்குருவி, பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – கரிய தாழ்வாயையுடைய கரிய சேவல்.  சேவல் – சேவல் பெயர்க்கொடை சிறகொடு சிவணும் மா இருந் தூவி மயில் அலங்கடையே (தொல்காப்பியம், மரபியல் 49).

சொற்பொருள்:  உள் இறைக் குரீஇக் கார் அணல் சேவல் பிற புலத் துணையோடு உறை புலத்து அல்கி வந்ததன் செவ்வி நோக்கி – வீட்டின் கூரையின் அடியில் வாழ்கின்ற குருவியின் கரிய கழுத்தை உடைய ஆண் வேற்றுப் புலம் சென்று அங்குள்ள குருவி பெடையுடன் கூடி வந்ததன் நிலைமையை நோக்கி (குரீஇ – இயற்கை அளபெடை), பேடை நெறி கிளர் ஈங்கைப் பூவின் அன்ன சிறு பல் பிள்ளையொடு – பெண் குருவி அடர்ந்திருக்கும் ஈங்கைப் பூவைப் போன்ற தன் குஞ்சுகளுடன் (பூவின் – இன் சாரியை), குடம்பை கடிதலின் துவலையின் நனைந்த புறத்தது அயலது கூரல் இருக்கை அருளி நெடிது நினைந்து – கூட்டுக்குள் நுழையாதபடி அதைத் தடுத்ததால் மழையில் நனைந்த புறத்தை உடையதாய் அருகில் நடுங்கி இருப்பதை நோக்கி அருள் செய்து நெடிய நேரம் நினைந்து, ஈர நெஞ்சின் தன் வயின் விளிப்பக் கையற வந்த மையல் மாலை – அன்பார்ந்த உள்ளத்துடன் தன்னிடம் வருமாறு அழைக்க செயலற்று வரும் மயக்கத்தைக் தரும் மாலை நேரம், இரீஇய ஆகலின் – வந்து தங்கியதாகலின் (இரீஇய – செய்யுளிசை அளபெடை), இன் ஒலி இழந்த தார் அணி புரவி தண் பயிர் துமிப்ப வந்தன்று பெருவிறல் தேரே – இனிய ஒலியை இழந்த மாலைகள் அணிந்த குதிரைகள் மெல்லிய பயிர்களை மிதிக்க வந்தது பெரிய வெற்றி பொருந்திய தலைவனின் தேர் (தேரே – ஏகாரம் அசைநிலை), ஆகும், உய்ந்தன்று இவள் ஆய் நுதற் கவினே – பிழைத்தது இவளுடைய அழகிய நெற்றி (கவினே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 182, பாடியவர் பெயர் கிடைக்கவில்லை, குறிஞ்சித் திணை – தோழி தலைவியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
நிலவும் மறைந்தன்று, இருளும் பட்டன்று,
ஓவத்து அன்ன இடனுடை வரைப்பின்
பாவை அன்ன நிற் புறங்காக்கும்
சிறந்த செல்வத்து அன்னையும் துஞ்சினள்,
கெடுத்துப்படு நன்கலம் எடுத்துக் கொண்டாங்கு,  5
நன் மார்பு அடைய முயங்கி மென்மெல
கண்டனம் வருகம், சென்மோ தோழி,
கீழும் மேலும் காப்போர் நீத்த
வறுந்தலைப் பெருங்களிறு போல,
தமியன் வந்தோன், பனி அலை நிலையே.  10

பாடல் பின்னணி:  வரைவு நீட்டிப்பத் தலைவியின் ஆற்றாமை அறிந்த தோழி சிறைப்புறமாகச் சொல்லி வரைவு கடாயது.

பொருளுரை:  தோழி!  நிலவும் மறைந்தது, இருளும் வந்து பொருந்தியது, ஓவியம் போன்ற இடத்தையுடைய வீட்டின் எல்லையில் பாவையைப்போன்று இருக்கும் உன்னைக் காக்கும் சிறந்த சிறப்பினையுடைய அன்னையும் உறங்கினாள்.  காணாமல் போன நல்ல அணிகலன்களைக் கண்டு எடுத்தாற்போன்று, தலைவனின் நல்ல மார்பைத் தழுவி மெல்ல மெல்ல கண்டு வருவோம். நீ வருவாயாக.  தறியில் தன்னைக் கட்டிக் காப்பவர்களிடமிருந்தும் தன் மேல் ஏறிச் செலுத்துபவர்களிடமிருந்தும் விலகி வந்த ஒப்பனையில்லாத தலையையுடைய பெரிய களிற்றுயானை போல அவன் தனியாக வந்தான், பனி துன்புறுத்தியதால் கலங்கிய நிலையில்.

குறிப்பு:  ஒளவை துரைசாமி உரை – நாற்றமும் தோற்றமும் (தொல்காப்பியம், களவியல் 24) என்ற நூற்பாவில் வரும் ‘நல் நயம் பெற்றுழி நயம் புரி இடத்தினும்’ என்பதன் உரையில் இதனைக்காட்டி, ‘இது வந்தான் எனக் கூறியது’ என்பர் இளம்பூரணர் நாற்றமும் தோற்றமும் (தொல்காப்பியம், களவியல் 24) என்ற நூற்பாவின்கண் வரும் ‘புணர்ச்சி வேண்டினும் என்றதற்கு இதனைக் காட்டி, ‘இது தலைவனைக் கண்டு முயங்குகம் வம்மோ’ என்றது என்பர் நச்சினார்க்கினியர்.  ஒப்புமை:  நற்றிணை 335 – குவவு மணல் ஏறி கண்டனம் வருகம் சென்மோ தோழி, குறுந்தொகை 275 – முல்லை ஊர்ந்த கல் உயர் ஏறிக் கண்டனம் வருகம் சென்மோ தோழி.  மோ – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம், சொல்லதிகாரம், இடையியல் 26).  உ. வே. சாமிநாதையர் உரை – குறுந்தொகை 275 – ‘கண்டனம் வருகம் சென்மோ’, என்பதற்கு ‘கண்டு வருவோம் வருவாயாக’ என உள்ளது.  மோ – முன்னிலை அசை என உள்ளது. கண்டனம் வருகம், சென்மோ (7) – ஒளவை துரைசாமி உரை – கண்டு வருவதற்கு நாமே பையச் செல்லலாமோ.

சொற்பொருள்:  நிலவும் மறைந்தன்று இருளும் பட்டன்று ஓவத்து அன்ன இடனுடை வரைப்பின் பாவை அன்ன நிற் புறங்காக்கும் சிறந்த செல்வத்து அன்னையும் துஞ்சினள் – நிலவும் மறைந்தது இருளும் வந்து பொருந்தியது ஓவியம் போன்ற இடத்தையுடைய வீட்டின் எல்லையில் பாவையைப்போன்று இருக்கும் உன்னைக் காக்கும் சிறந்த சிறப்பினையுடைய அன்னையும் உறங்கினாள் (ஓவத்து – ஓவம், அத்துச் சாரியை, இடன் – இடம் என்பதன் போலி), கெடுத்துப்படு நன்கலம் எடுத்துக் கொண்டாங்கு – காணாமல் போன நல்ல அணிகலன்களைக் கண்டு எடுத்தாற்போன்று, நன் மார்பு அடைய முயங்கி  – தலைவனின் நல்ல மார்பைத் தழுவி, மென்மெல கண்டனம் வருகம் – மெல்ல மெல்ல கண்டு வருவோம் (கண்டனம் – முற்றெச்சம்), சென்மோ – நீ வருவாயாக, செல்லலாமோ, (மோ – முன்னிலை அசை), தோழி – தோழி, கீழும் மேலும் காப்போர் நீத்த வறுந்தலைப் பெருங்களிறு போல தமியன் வந்தோன் – தறியில் தன்னைக் கட்டிக் காப்பவர்களிடமிருந்தும் தன் மேல் ஏறிச் செலுத்துபவர்களிடமிருந்தும் விலகி வந்த ஒப்பனையில்லாத தலையையுடைய பெரிய களிற்றுயானை போல தனியாக வந்தான்,  பனி அலை நிலையே – பனி துன்புறுத்தியதால் கலங்கிய நிலை (நிலையே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 183, பாடியவர் பெயர் கிடைக்கவில்லை, நெய்தல் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
தம் நாட்டு விளைந்த வெண்ணெல் தந்து,
பிற நாட்டு உப்பின் கொள்ளை சாற்றி,
நெடு நெறி ஒழுகை நிலவு மணல் நீந்தி,
அவண் உறை முனிந்த ஒக்கலொடு புலம் பெயர்ந்து,
உமணர் போகலும் இன்னாது ஆகும்,  5
மடவை மன்ற கொண்க! வயின்தோறு
இன்னாது அலைக்கும் ஊதையொடு ஓரும்
நும் இல் புலம்பின் மாலையும் உடைத்தே;
இன மீன் ஆர்ந்த வெண்குருகு மிதித்த
வறுநீர் நெய்தல் போல,  10
வாழாள் ஆதல் சூழாதோயே.

பாடல் பின்னணி:  பொருள் ஈட்டுவதற்காகப் பிரியும் தலைவனிடம் தோழி உரைத்தது.

பொருளுரை:  தலைவனே!  தம்முடைய மருத நிலத்தில் விளைந்த வெள்ளை நெல்லைக் கொடுத்து நெய்தல் நிலத்தின் உப்பைப் பண்டமாற்றாகப் பெற்று அதன் விலையைக் கூறி நீண்ட வழியில் வண்டிகளுடன் நிலவொளி போன்ற வெள்ளை மணலைக் கடந்துச் சென்று வேறு ஊரில் தங்கி உப்பை விற்று விட்டு அதன்பின் அவ்விடத்தில் தனியே இருப்பதை வெறுத்து உப்பு விற்பவர்கள் தங்கள் சுற்றத்துடன் ஒன்றாக அவ்விடத்தைவிட்டு நீங்கிச் செல்லுதலும் துன்பமுடையது ஆகும் அவ்வூரில் உள்ளவர்களுக்கு.  இடந்தோறும் துன்புறுத்தி வீசும் குளிர்ந்த ஊதைக் காற்றுடன் நீ இல்லாத தனிமையான மாலை நேரமும் துன்பம் உடையது இவளுக்கு, நீ அருகில் இல்லாத பொழுது.  மீன்களை நிறையத் தின்ற வெள்ளை நிறக் குருகு மிதித்த நீர் வற்றிய குளத்தின் நெய்தல் மலர்போல, இவள் உயிர் வாழ மாட்டாள் என்பதை நீ நினையாது உள்ளாய்.  நீ உறுதியாக அறியாமை உடையவன்.

குறிப்பு:  கு. வெ. பாலசுப்பிரமணியன் உரை– வெண்ணெல் தந்து உப்பைப் பெற்று விலை கூறும் உமணர் ஆங்காங்குத் தங்கிச் செல்வர், வணிகப் பொருட்டாக அவர்கள் தங்கும் சிற்றூர்களை விட்டு அவர்கள் நீங்கும் போது ஊரினர் துயர் உறுவர்.  பண்ட மாற்று – அகநானூறு 60, 61, 126, 140, 245, 296, 390, நற்றிணை 183, குறுந்தொகை 221, 269, ஐங்குறுநூறு 47, 48, 49 பொருநராற்றுப்படை 214–215, 216–7, பட்டினப்பாலை 28–30, மலைபடுகடாம் 413–414.  ஒப்புமை:  பெருங் கயிற்று ஒழுகை மருங்கில் காப்பச் சில்பத உணவின் கொள்ளை சாற்றிப் பல் எருத்து உமணர் பதி போகு நெடு நெறி – பெரும்பாணாற்றுப்படை 63–65.  நிலவு மணல்: அகநானூறு 20 – நிலவு மணல், அகநானூறு 200 – நிலாவின் இலங்கு மணல் மலி மறுகில், நற்றிணை 31 – நிலவு மணல், நற்றிணை 140 – நிலவு மணல், நற்றிணை 159 – நிலவுக் குவித்தன்ன மோட்டு மணல், நற்றிணை 183 – நிலவு மணல், குறுந்தொகை 123 – நிலவுக் குவித்தன்ன வெண்மணல், கலித்தொகை 13 – வாள் நிலா ஏய்க்கும் வயங்கு ஒளி எக்கர், புறநானூறு 17 – நிலவு மணல் வியன் கானல், பொருநராற்றுப்படை 213 – நிலவு எக்கர், மதுரைக்காஞ்சி 114 – நிலவுக் கானல்.  மன்ற – மன்றவென் கிளவி தேற்றஞ்செய்யும் (தொல்காப்பியம், இடையியல் 17).  புலம்பு – புலம்பே தனிமை (தொல்காப்பியம், உரியியல் 35).

சொற்பொருள்:  தம் நாட்டு விளைந்த வெண்ணெல் தந்து பிற நாட்டு உப்பின் கொள்ளை சாற்றி நெடு நெறி ஒழுகை நிலவு மணல் நீந்தி அவண் உறை முனிந்த ஒக்கலொடு புலம் பெயர்ந்து உமணர் போகலும் இன்னாது ஆகும் – தம்முடைய மருத நிலத்தில் விளைந்த வெள்ளை நெல்லைக் கொடுத்து நெய்தல் நிலத்தின் உப்பைப் பண்டமாற்றாகப் பெற்று அதன் விலையைக் கூறி நீண்ட வழியில் வண்டிகளுடன் நிலவொளி போன்ற வெள்ளை மணலைக் கடந்து தனியே இருப்பதை வெறுத்துத் தம் சுற்றத்துடன் அவ்விடத்தைவிட்டு உப்பு விற்பவர்கள் நீங்கிச் செல்லுதலும் துன்பமுடையது ஆகும், மடவை மன்ற – நீ அறியாமை உடையவன் உறுதியாக, கொண்க – தலைவனே, வயின்தோறு இன்னாது அலைக்கும் ஊதையொடு ஓரும் நும் இல் புலம்பின் மாலையும் உடைத்தே – இடந்தோறும் துன்புறுத்தி வீசும் குளிர்ந்த ஊதைக் காற்றுடன் நீ இல்லாத தனிமையான மாலை நேரமும் துன்பம் உடையது (ஓரும் – அசைநிலை), இன மீன் ஆர்ந்த வெண்குருகு மிதித்த வறுநீர் நெய்தல் போல வாழாள் ஆதல் சூழாதோயே – மீன்களை நிறையத் தின்ற வெள்ளை நிறக் குருகு மிதித்த நீர் வற்றிய குளத்தின் நெய்தல் மலர்போல இவள் உயிர் வாழ மாட்டாள் என்பதை நீ நினையாது உள்ளாய் (சூழாதோயே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 184, பாடியவர் பெயர் கிடைக்கவில்லை, பாலைத் திணை – தலைவியின் தாய் சொன்னது
ஒரு மகள் உடையேன் மன்னே, அவளும்
செரு மிகு மொய்ம்பின் கூர் வேல் காளையொடு
பெருமலை அருஞ்சுரம் நெருநல் சென்றனள்,
இனியே ‘தாங்கு நின் அவலம்’ என்றிர், அது மற்று
யாங்ஙனம் ஒல்லுமோ, அறிவுடையீரே?  5
உள்ளின் உள்ளம் வேமே, உண்கண்
மணி வாழ் பாவை நடை கற்றன்ன என்
அணி இயற் குறுமகள் ஆடிய
மணி ஏர் நொச்சியும் தெற்றியும் கண்டே.

பாடல் பின்னணி:  தலைவி தலைவனுடன் உடன்போக்கில் சென்றபின் நற்றாய் வருந்தி உரைக்கின்றாள்.

பொருளுரை:  ஒரு மகளை மட்டுமே உடையவள் நான். அவளும் போரில் மிகுந்த வலிமையையும் கூரிய வேலையுமுடைய ஒரு இளைஞனோடு நேற்று பெரிய மலையில் உள்ள அரிய பாலை நிலத்திற்குச் சென்றாள்.  இனி உன்னுடைய துன்பத்தைப் பொறுத்துக் கொள் எனக் கூறுகின்றீர்கள்.  அது எவ்வாறு இயலும் அறிவு உடையவர்களே?  மை தீட்டிய கண்ணின் மணியில் வாழும் பாவை வெளியே நடந்து வந்தாற்போல, அழகிய சாயலை உடைய என்னுடைய இளைய மகள் விளையாடிய நீலமணியைப் போன்ற மலர்களையுடைய நொச்சி மரத்தையும் திண்ணையையும் நோக்கி, அவளை நினைத்தால் என் உள்ளம் வெந்து போகும்.

குறிப்பு:  மணி வாழ் பாவை நடை கற்றன்ன (7) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – அவளதருமை கூறுவாள் கண்மணியுள் வாழ் பாவையை உவமித்தாள், ஒளவை துரைசாமி உரை – கண்ணிற் பாவை, மகளாகிய பாவை போல நடையுடைய தன்மையின் நடைகற்றன என்றாள்.  மன் – கழிவே ஆக்கம் ஒழியிசைக் கிளவி என்று அம் மூன்று என்ப மன்னைச் சொல்லே (தொல்காப்பியம், இடையியல் 4).

சொற்பொருள்:  ஒரு மகள் உடையேன் – ஒரு மகளை மட்டுமே உடையவள் நான், மன் – கழிவுக்குறிப்பு, ஏ – அசை நிலை, அவளும் செரு மிகு மொய்ம்பின் கூர் வேல் காளையொடு – அவளும் போரில் மிகுந்த வலிமையையும் கூரிய வேலையுமுடைய ஒரு இளைஞனோடு, பெருமலை அருஞ்சுரம் நெருநல் சென்றனள் – நேற்று பெரிய மலையில் உள்ள அரிய பாலை நிலத்திற்குச் சென்றாள், இனியே தாங்கு நின் அவலம் என்றிர் – இனி உன்னுடைய துன்பத்தைப் பொறுத்துக் கொள் எனக் கூறுகின்றீர்கள் (இனியே – ஏகாரம் அசை நிலை), அது மற்று யாங்ஙனம் ஒல்லுமோ அறிவுடையீரே – அது எவ்வாறு இயலும் அறிவு உடையவர்களே (அறிவுடையீரே – ஏகாரம் அசை நிலை), உள்ளின் உள்ளம் வேமே – அவளை நினைத்தால் என் உள்ளம் வெந்து போகும் (வேமே – ஏகாரம் அசை நிலை), உண்கண் மணி வாழ் பாவை நடை கற்றன்ன – மை தீட்டிய கண்ணின் மணியில் வாழும் பாவை நடை கற்றாற்போல், என் அணி இயற் குறுமகள் ஆடிய – அழகிய சாயலை உடைய என்னுடைய இளைய மகள் விளையாடிய, மணி ஏர் நொச்சியும் தெற்றியும் கண்டே – நீலமணியைப் போன்ற மலர்களையுடைய நொச்சி மரத்தையும் திண்ணையையும் நோக்கி (ஏர் – உவம உருபு, கண்டே – ஏகாரம் அசை நிலை)

நற்றிணை 185, பாடியவர் பெயர் கிடைக்கவில்லை, குறிஞ்சித் திணை – தலைவன் தோழனிடம் சொன்னது, அல்லது, தலைவன் தோழியிடம் சொன்னது
ஆனா நோயோடு அழிபடர்க் கலங்கிக்,
காமம் கைம்மிக கையறு துயரம்
காணவும், நல்காய் ஆயின், பாணர்
பரிசில் பெற்ற விரி உளை நல் மான்
கவி குளம்பு பொருத கல் மிசைச் சிறு நெறி,  5
இரவலர் மெலியாது ஏறும், பொறையன்
உரை சால் உயர்வரைக் கொல்லிக் குடவயின்,
அகல் இலைக் காந்தள் அலங்கு குலைப் பாய்ந்து,
பறவை இழைத்த பல் கண் இறாஅல்
தேனுடை நெடு வரை, தெய்வம் எழுதிய  10
வினை மாண் பாவை அன்னோள்
கொலை சூழ்ந்தனளால், நோகோ யானே.

பாடல் பின்னணி:  இது தோழனுக்குத் தலைவன் சொன்னது.  சேட்படுத்தும் தோழிக்குத் தலைவன் சொல்லியதுமாம்.

பொருளுரை:  பாணர்கள் பரிசாகப் பெற்ற விரிந்த பிடரி மயிரையுடைய சிறந்த குதிரைகளின் கவிழ்ந்த குளம்புகள் மோதுவதால் செப்பம் செய்யப்பட்ட சிறு வழியில், பரிசில் வேண்டி வந்தவர்கள் தளராது ஏறும் சேர மன்னனின் புகழ் உடைய உயந்த கொல்லி மலையின் மேற்குப் பகுதியில், அகன்ற இலையையுடைய காந்தளின் அசைகின்ற மலர்க்கொத்துக்களில் பாய்ந்து வண்டுகள் தேனைப் பருகி இழைத்த பல கண்களையுடைய தேன் கூடுகளில் தேன் இருக்கும் உயர்ந்த மலையில் தெய்வம் எழுதிய மாட்சிமையுடைய பாவையைப் போல் உள்ளவள், என்னைக் கொலை செய்யும்படி ஆராய்ந்து நன்கு அறிந்தவள்.  அடங்காத நோயுடன் மிக்க மன வருத்தத்தால் நான் கலங்கி உள்ளேன்.  என்னுடைய காதல் நோய் அளவுக்கு மீறி உள்ளது. நான் செயலற்றுத் துன்பம் அடைந்ததைக் கண்டும் நீ அருளாய் ஆனால், யான் வருந்துவேன்.  வேறு ஒன்றும் செய்வதற்கு இயலாது உள்ளேன்.

குறிப்பு:  ஒளவை துரைசாமி உரை – ‘பண்பிற் பெயர்ப்பினும்’ (தொல்காப்பியம், களவியல் 12) ‘பரிவுற்று மெலியினும்’ என்பதன் உரையில் இப்பாட்டைக் காட்டி, ‘இது பகற்குறியிற் பரிவுற்றது’ என்பர் நச்சினார்க்கினியர்.  இறைச்சி (1) – கு. வெ. பாலசுப்பிரமணியன் உரை – குதிரைக் குளம்பினால் செப்பமாகிய மலை நெறியில் இரவலர் மெலியாது ஏறுவர் என்றது, நீ சென்று அவளைக் கண்டு இயைவிப்பாய் ஆயின் அந்நெறியே சென்று யான் வருந்தாது கூடுவேன் என்பது உணர்த்தவாம்.  இறைச்சி (2)  – கு. வெ. பாலசுப்பிரமணியன் உரை – கொல்லி மலையில் உள்ள தேனை வண்டு அடையிற் கொண்டு வைக்கும் என்றது, என் அறிவு என் நெஞ்சினைப் பற்றிபோய் அவள்பால் வைத்தது என்பது உணர்த்தற்காம்.  வரலாறு:  பொறையன், கொல்லி.  காமம் – கமம் என்னும் சொல்லின் முதல் நீண்ட வடிவம், ‘நிறைந்த அன்பு’ என்பது இச்சொல்லின் பொருள் – பேரறிஞர் கு.வெ. பாலசுப்பிரமணியன் அவர்களின் விளக்கம், (கமம் நிறைந்து இயலும் – தொல்காப்பியம், சொல்லியல் 355).  பறவை – இச்சொல் சங்கப்பாடல்களில் இன்றைய பயன்பாட்டில் உள்ளவாறும் உள்ளது.  தேனீ, வௌவால், தும்பி ஆகிவற்றைக் குறிக்கவும் பயன்படுத்தப்பட்டுள்ளது.  தேனீ – அகநானூறு 4–11, 132–10, 332–8, 371–13, நற்றிணை 55–5, 161–4, 185–9, ஐங்குறுநூறு 82–3, கலித்தொகை 22–7, பரிபாடல் 7–6, புறநானூறு 70–11, பதிற்றுப்பத்து 66–16, பெரும்பாணாற்றுப்படை 183, 229, வௌவால் – அகநானூறு 244–2, குறுந்தொகை 201–3, 352–2, புறநானூறு 370–11, தும்பி – நற்றிணை 277–9.  தேனுடைய மலை (நற்றிணையில்):  104 – தேம் கமழ் சிலம்பின், 147 – தேம்படு சாரல், 185 – தேனுடை நெடு வரை, 188 – குன்றத்துத் தேம் முதிர், 243 – தேம்படு சிலம்பில், 259 – தேம் கமழ் சாரல், 389 – தேம்படு நெடு வரை, 395 – தேன் தூங்கு உயர்வரை.  தேம்படு சிலம்பில், தேம்படு நெடுவரை – ஆகிவற்றிற்கு தேன் உண்டாகின்ற பக்கமாலையிலே, தேன் மணம் மிக்க நெடிய மலை என்றே விளக்கியுள்ளார் பின்னத்தூர் நாராயணசாமி ஐயர்.

சொற்பொருள்:  ஆனா நோயோடு அழிபடர்க் கலங்கிக் காமம் கைம்மிக கையறு துயரம் காணவும் நல்காய் ஆயின் – அடங்காத நோயுடன் மிக்க மன வருத்தத்தால் கலங்கி காதல் அளவுக்கு மீறி உள்ளதால் நான் செயலற்றுத் துன்பம் அடைந்ததைக் கண்டும் நீ அருளாய் ஆனால், பாணர் பரிசில் பெற்ற விரி உளை நல் மான் கவி குளம்பு பொருத கல் மிசைச் சிறு நெறி இரவலர் மெலியாது ஏறும் பொறையன் உரை சால் உயர்வரைக் கொல்லிக் குடவயின் – பாணர்கள் பரிசாகப் பெற்ற விரிந்த பிடரி மயிரையுடைய சிறந்த குதிரைகளின் கவிழ்ந்த குளம்புகள் மோதுவதால் செப்பம் செய்யப்பட்ட சிறு வழியில் பரிசில் வேண்டி வந்தவர்கள் தளராது ஏறும் சேர மன்னனின் புகழ் உடைய உயர்ந்த கொல்லி மலையின் மேற்குப் பகுதியில், அகல் இலைக் காந்தள் அலங்கு குலைப் பாய்ந்து பறவை இழைத்த பல் கண் இறாஅல் தேனுடை நெடுவரை தெய்வம் எழுதிய வினை மாண் பாவை அன்னோள் – அகன்ற இலையையுடைய காந்தளின் அசைகின்ற மலர்க்கொத்துக்களில் பாய்ந்து வண்டுகள் தேனைப் பருகி இழைத்த பல கண்களையுடைய தேன் கூடுகளில் தேன் இருக்கும் உயர்ந்த மலையில் தெய்வம் எழுதிய மாட்சிமையுடைய பாவையைப் போல் உள்ளவள் (இறாஅல் – அளபெடை), கொலை சூழ்ந்தனளால் – என்னைக் கொலை செய்யும்படி ஆராய்ந்து நன்கு அறிந்தவள் (சூழ்ந்தனளால் – சூழ்ந்தனள் +ஆல் அசைநிலை), நோகோ யானே – யான் வருந்துகின்றேன் (நோகோ – செய்கென்னும் தன்மை வினை, ஓகாரம் அசைநிலை, யானே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 186, பாடியவர் பெயர் கிடைக்கவில்லை, பாலைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
கல் ஊற்று ஈண்டல கயன் அற, வாங்கி,
இரும் பிணர்த் தடக் கை நீட்டி, நீர் நொண்டு
பெருங்கை யானை பிடி எதிர் ஓடும்
கானம் வெம்பிய வறம் கூர் கடத்திடை,
வேனில் ஓதி நிறம் பெயர் முது போத்துப்,  5
பாண் யாழ் கடைய வாங்கி, பாங்கர்
நெடு நிலை யாஅம் ஏறும் தொழில,
பிறர்க்கு என முயலும் பேர் அருள் நெஞ்சமொடு
காமர் பொருட்பிணி போகிய
நாம் வெங்காதலர் சென்ற ஆறே.  10

பாடல் பின்னணி:  பிரிவிடை மெலிந்த தோழிக்குத் தலைவி கூறியது.

பொருளுரை:  கற்பாறை அருகில் ஊறுகின்ற பள்ளத்தில் சேர்கின்ற நீரை அச்சிறு குளமாகிய பள்ளத்தில் நீர் இல்லாதபடி முற்றிலும் பெரிய சருச்சரையையுடைய நீண்ட தும்பிக்கையை நீட்டிக் குடிக்கும் பெரிய தும்பிக்கையை உடைய களிற்று யானை தன் பிடி யானையின் எதிரே ஓடும் காடு கொடியதாக உள்ள வெப்பம் மிக்கப் பாலை நிலத்தில், பிறர்க்கு முயன்று உதவும் பெரிய அருளுடைய நெஞ்சத்துடன் விரும்பத்தக்க பொருள் விருப்பத்தினால் சென்ற நாம் விரும்பும் நம் காதலர் சென்ற வழி, வேனிற்காலத்தில் நிறம் மாறி வேறுபடும் முதிய ஓணான் பாணர்கள் தங்கள் தளர்ச்சி நீங்குமாறு யாழை இசைக்க அந்த யாழ் இசையைக் கேட்டு முன்பு ஏற்கமுடியாத நிலைமை மாறி, பக்கத்தில் உள்ள யா மரத்தின் மீது ஏறும் தொழிலை உடையன என்பார்கள்.

குறிப்பு:  இறைச்சி (1) – கு. வெ. பாலசுப்பிரமணியன் உரை – நீரற்ற காலத்துக் கல்லூற்றிலே ஊறும் நீர் கொண்டு களிறு தன் பிடியை ஓம்பும் என்றது, பொருளற்ற காலத்துத் தலைவன் தன் முயற்சியால் சென்றவிடத்துக் கிடைக்கும் பொருள் கொண்டு இல்லறம் பேணுவான்.  ஆதலின் நான் ஆற்றியிருப்பேன் என்று உணர்த்தற்காம்.  பிடி – பிடி என் பெண் பெயர் யானை மேற்றே (தொல்காப்பியம், மரபியல் 52).

சொற்பொருள்:  கல் ஊற்று ஈண்டல கயன் அற வாங்கி இரும் பிணர்த் தடக் கை நீட்டி நீர் நொண்டு பெருங்கை யானை பிடி எதிர் ஓடும் கானம் வெம்பிய வறம் கூர் கடத்திடை – கற்பாறை அருகில் ஊறுகின்ற பள்ளத்தில் சேர்கின்ற நீரை அச்சிறு குளத்தில் நீர் இல்லாதபடி முற்றிலும் பெரிய சருச்சரையையுடைய நீண்ட தும்பிக்கையை நீட்டிக் குடிக்கும் பெரிய தும்பிக்கையை உடைய களிற்று யானை தன் பிடி யானையின் எதிரே ஓடும் காடு கொடியதாக உள்ள வெப்பம் மிக்கப் பாலை நிலத்தில் (கயன் – கயம் என்பதன் போலி), வேனில் ஓதி நிறம் பெயர் முது போத்துப் பாண் யாழ் கடைய வாங்கி பாங்கர் நெடு நிலை யாஅம் ஏறும் தொழில – வேனிற்காலத்தில் நிறம் மாறி வேறுபடும் முதிய ஓணான் பாணர்கள் தங்கள் தளர்ச்சி நீங்குமாறு யாழை இசைக்க அந்த யாழ் இசையைக் கேட்டு பக்கத்தில் உள்ள யா மரத்தின் மீது ஏறும் தொழிலை உடையன என்பார்கள் (கடைய – செலுத்த, இசைக்கருவிகளை இயக்க, யாஅம் – செய்யுளிசை அளபெடை, யா மரம் – ஆச்சா மரம், Hardwickia binate), பிறர்க்கு என முயலும் பேர் அருள் நெஞ்சமொடு காமர் பொருட்பிணி போகிய நாம் வெங்காதலர் சென்ற ஆறே – பிறர்க்கு முயன்று உதவும் பெரிய அருளுடைய நெஞ்சத்துடன் விரும்பத்தக்க பொருள் விருப்பத்தினால் சென்ற நாம் விரும்பும் காதலர் சென்ற வழி (ஆறே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 187, ஒளவையார், நெய்தல் திணை – தலைவி தன் நெஞ்சிடம் சொன்னது
நெய்தல் கூம்ப, நிழல் குணக்கு ஒழுக,
கல் சேர் மண்டிலம் சிவந்து நிலம் தணியப்,
பல் பூங்கானலும் அல்கின்றன்றே;
இன மணி ஒலிப்ப பொழுதுபடப் பூட்டி
மெய்ம்மலி காமத்து யாம் தொழுது ஒழியத்  5
தேரும் செல் புறம் மறையும்; ஊரொடு
யாங்கு ஆவது கொல், தானே தேம்பட
ஊது வண்டு இமிரும் கோதை மார்பின்
மின் இவர் கொடும் பூண் கொண்கனொடு
இன்னகை மேவி நாம் ஆடிய பொழிலே?  10

பாடல் பின்னணி:  பகற்குறி வந்து செல்லும் தலைவனை நோக்கித் தலைவி தனக்குள் கூறியது.

பொருளுரை:  நெஞ்சே!  நெய்தல் மலர்கள் கூம்ப, நிழல் எல்லாம் கீழ்த்திசையை அடைய, மலையை அடைந்த ஞாயிறு சிவந்த நிறமுற்று நிலத்தின்கண் தான் காட்டிய வெப்பத்தைத் தணிக்க, பல மலர்களையுடைய கடற்கரைச் சோலையும் பொலிவு இழந்ததே.  மிகுதியாக உள்ள மணிகள் ஒலிக்க, உடலில் காதல் உணர்வு உடைய யாம் காதல் பெறாது தொழுது ஒழிய தலைவனின் குதிரைகளைப் பூட்டிய தேரும் சென்று மறையும்.  இந்த ஊருடன் நமக்கு இனி எவ்வாறு ஆகுமோ, தேன் பொருந்திய வண்டுகள் ஒலிக்கும் மாலையை அணிந்த மார்பில் மின்னும் வளைந்த அணிகலன்களை அணிந்த தலைவனுடன் இனிய உவகையுடன் நாம் ஆடிய சோலை?

குறிப்பு:  ஒப்புமை:  குறுந்தொகை 276 – யாங்கு ஆவது கொல்.  யாங்கு (7) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – எப்படி, அறிகிலேன், சொல்லெச்சம், இது துன்பத்துப் புலம்பல்.

சொற்பொருள்:  நெய்தல் கூம்ப – நெய்தல் மலர்கள் கூம்ப, நிழல் குணக்கு ஒழுக – நிழல் எல்லாம் கீழ்த்திசையை அடைய, கல் சேர் மண்டிலம் சிவந்து நிலம் தணிய – மலையை அடைந்த ஞாயிறு சிவந்த நிறமுற்று நிலத்தின்கண் தான் காட்டிய வெப்பம் தணிய, பல் பூங்கானலும் அல்கின்றன்றே – பல மலர்களையுடைய கடற்கரைச் சோலையும் பொலிவு இழந்ததே (அல்கின்றன்றே – ஏகாரம் அசை நிலை), இன மணி ஒலிப்ப – மிகுதியாக உள்ள மணிகள் ஒலிக்க, பொழுதுபடப் பூட்டி – பொழுதுபட குதிரைகளைப் பூட்டி, மெய்ம்மலி காமத்து யாம் தொழுது ஒழிய – உடலில் காதல் உணர்வு உடைய யாம் தலைவனின் காதல் பெறாது தொழுது ஒழிய, தேரும் செல் புறம் மறையும் – தேரும் சென்று மறையும், ஊரொடு யாங்கு ஆவது கொல் – இந்த ஊருடன் என்ன ஆகுமோ, தானே தேம்பட ஊது வண்டு இமிரும் – தேன் பொருந்திய வண்டுகள் ஒலிக்கும் (தேம் தேன் என்றதன் திரிபு), கோதை மார்பின் – மாலை அணிந்த மார்பில், மின் இவர் கொடும் பூண் கொண்கனொடு – மின்னும் வளைந்த அணிகலன்களை அணிந்த தலைவனுடன், இன்னகை மேவி நாம் ஆடிய பொழிலே – இனிய உவகையுடன் நாம் ஆடிய பொழில் (பொழிலே – ஏகாரம் அசை நிலை)

நற்றிணை 188, பாடியவர் பெயர் கிடைக்கவில்லை, குறிஞ்சித் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
படுநீர்ச் சிலம்பில் கலித்த வாழைக்
கொடு மடல் ஈன்ற கூர்வாய்க் குவி முகை,
ஒள்ளிழை மகளிர் இலங்கு வளைத் தொடூஉம்
மெல் விரல் மோசை போல, காந்தள்
வள் இதழ் தோயும் வான் தோய் வெற்ப!  5
‘நன்றி விளைவும் தீதொடு வரும்’ என
அன்று நற்கு அறிந்தனள் ஆயின், குன்றத்துத்
தேம் முதிர் சிலம்பில் தடைஇய
வேய் மருள் பணைத்தோள் அழியலள் மன்னே.

பாடல் பின்னணி:  பகற்குறி மறுத்து வரைவு கடாயது.

பொருளுரை:  ஆழ்ந்த சுனைகளில் நீரையுடைய மலையில் வளர்ந்த வாழையின் வளைந்த மடலிலிருந்து வெளிவந்த கூரிய முனையையுடைய குவிந்த மொட்டு ஒளியுடைய அணிகலன்களை அணிந்த பெண்களின் விளங்கும் வளையல்களுடன் பிணிக்கப்பட்டிருக்கும் மெல்லிய விரலில் அணிந்த மோதிரம் போல், காந்தள் மலர்களின் வளமான இதழ்களின் மீது உரசும் வானைத் தொடும் உயர்ந்த மலையின் தலைவா! நன்றாக முடியும் செயலும் ஒரு காலத்தில் தீதாக முடியும் என்று முன்பு உன்னுடன் கூடிய பொழுது இவள் அறிந்திருப்பாள் ஆனால், குன்றிடத்தில் முற்றிய தேனையுடைய பக்க மலையில் வளைந்த மூங்கில்போலும் பருத்த தோளுடைய இவள் இப்பொழுது வருந்தியிருக்க மாட்டாள்.  இனி இதனைக் கூறுவதனால்  என்ன பயன்?

குறிப்பு:  உள்ளுறை – H. வேங்கடராமன் உரை – வாழை முகை விரலணி போலக் காந்தளிலே தொய்ந்து விரலணி ஆகாதன்றே.  அகங்ஙனமாக நீ நல்லவன் போல வந்து தலைவியைத் தோய்ந்தும் இங்ஙனம் தலைவி வாடும்படி வரையாது அருகி வருவதால் நன்மகன் அல்லை என்றாள்.  தட – தடவும் கயவும் நளியும் பெருமை (தொல்காப்பியம், உரியியல் 24), அவற்றுள், தட என் கிளவி கோட்டமும் செய்யும் (தொல்காப்பியம், உரியியல் 25).  மன் – கழிவே ஆக்கம் ஒழியிசைக் கிளவி என்று அம் மூன்று என்ப மன்னைச் சொல்லே (தொல்காப்பியம், இடையியல் 4).  தேனுடைய மலை (நற்றிணையில்):  104 – தேம் கமழ் சிலம்பின், 147 – தேம்படு சாரல், 185 – தேனுடை நெடு வரை, 188 – குன்றத்துத் தேம் முதிர், 243 – தேம்படு சிலம்பில், 259 – தேம் கமழ் சாரல், 389 – தேம்படு நெடு வரை, 395 – தேன் தூங்கு உயர்வரை.  தேம்படு சிலம்பில், தேம்படு நெடுவரை – ஆகிவற்றிற்கு தேன் உண்டாகின்ற பக்கமாலையிலே, தேன் மணம் மிக்க நெடிய மலை என்றே விளக்கியுள்ளார் பின்னத்தூர் நாராயணசாமி ஐயர்.

சொற்பொருள்:  படுநீர்ச் சிலம்பில் கலித்த வாழைக் கொடு மடல் ஈன்ற கூர்வாய்க் குவி முகை ஒள்ளிழை மகளிர் இலங்கு வளைத் தொடூஉம் மெல் விரல் மோசை போல காந்தள் வள் இதழ் தோயும் வான் தோய் வெற்ப – ஆழ்ந்த சுனைகளில் நீரையுடைய மலையில் வளர்ந்த வாழையின் வளைந்த மடலிலிருந்து வெளிவந்த கூரிய முனையையுடைய குவிந்த மொட்டு ஒளியுடைய அணிகலன்களை அணிந்த பெண்களின் விளங்கும் வளையல்களுடன் பிணிக்கப்பட்டிருக்கும் மெல்லிய விரலில் அணிந்த மோதிரம் போல் காந்தள் மலர்களின் வளமான இதழ்களின் மீது உரசும் வானைத் தொடும் உயர்ந்த மலையின் தலைவா (தொடூஉம் – அளபெடை), நன்றி விளைவும் தீதொடு வரும் என அன்று நற்கு அறிந்தனள் ஆயின் – நன்றாக முடியும் செயலும் ஒரு காலத்தில் தீதாக முடியும் என்று முன்பு இவள் அறிந்திருப்பாள் ஆனால் (நற்கு – நன்கு என்பதன் விகாரம்), குன்றத்துத் தேம் முதிர் சிலம்பில் தடைஇய வேய் மருள் பணைத்தோள் அழியலள் மன்னே – குன்றிடத்தில் முற்றிய தேனையுடைய பக்க மலையில் வளைந்த மூங்கில்போலும் பருத்த தோளுடைய இவள்  வருந்தியிருக்க மாட்டாள் (தேம் தேன் என்றதன் திரிபு, தடைஇய – அளபெடை, தட என்னும் உரிச்சொல்லடியாகப் பிறந்த பெயரெச்ச வினை, மன்னே – மன் கழிவுக்குறிப்பு, ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 189, பாடியவர் பெயர் கிடைக்கவில்லை, பாலைத் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
தம் அலது இல்லா நம் நயந்து அருளி
இன்னும் வாரார்; ஆயினும் சென்னியர்
தெறல் அருங்கடவுள் முன்னர், சீறியாழ்
நரம்பு இசைத்தன்ன இன்குரல் குருகின்
கங்கை வங்கம் போகுவர் கொல்லோ,  5
எவ் வினை செய்வர் கொல் தாமே, வெவ்வினைக்
கொலை வல் வேட்டுவன் வலை பரிந்து போகிய
கானப் புறவின் சேவல் வாய்நூல்
சிலம்பி அம் சினை வெரூஉம்,
அலங்கல் உலவை அம் காடு இறந்தோரே?  10

பாடல் பின்னணி:  பிரிவிடை மெலிந்த தலைவியைத் தோழி வற்புறுத்தியது.

பொருளுரை:  கொடிய கொலைத் தொழிலைச் செய்ய வல்ல வேட்டுவனின் வலையை அறுத்து விட்டு ஓடிய காட்டில் வாழும் புறாவின் ஆண் தன் வாயில் உண்டாகும் நூலால் கட்டிய சிலந்தியின் கூடு அமைந்த மரக்கிளையைக் கண்டு அஞ்சும், சுழன்று அடிக்கும் சூறைக்காற்றை உடைய காட்டிற்குச் சென்ற நம் தலைவர், அவரை அன்றி வாழ்தல் இல்லாத நம்மை விரும்பி இன்னும் வரவில்லை ஆனாலும், பாணர்கள் வருத்துகின்ற சினம் கொண்ட கடவுளின் முன் சிறிய யாழின் நரம்பை இசைப்பதை ஒத்த இனிய குரலையுடைய குருகுகள் இருக்கின்ற கங்கை ஆற்றில் ஓடுகின்ற மரக்கலத்தில் போயிருப்பாரோ?  எந்தச் செயலை அவர் செய்வார்?  வேறு செயல் எதையும் செய்ய மாட்டார்.  அவர் விரைவில் வருவார்.

குறிப்பு:  இறைச்சி – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – வேட்டுவன் விரித்த வலையினின்றும் தப்பிய புறா சிலந்தி வலைக்கு அஞ்சும் என்றது, ‘களவுக்காலப் பிரிவுகளுக்கு அஞ்சாத தலைவி, கற்புக் காலத்துப் பொருள்வயின் பிரிவுக்கு அஞ்சுவது ஏனோ’ என்ற கருத்து உணர்த்தலாம்.  சென்னியர் (2) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – சென்னி பிச்சையெடுக்கும் மண்டை போன்றதொரு கலம்.  அதனை உடைமையிற் பாணர் சென்னியரெனப்பட்டார்.  சிலம்பி அம் சினை வெரூஉம் (9) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – சிலம்பியின் கோட்டையைக் கண்டு அஞ்சாநிற்கும் (அஞ்சும்), ஒளவை துரைசாமி உரை – சிலந்தி கூடு அமைந்த மரக்கிளையைக் கண்டு அஞ்சி நீங்கும்.  தெறல் அருங்கடவுள் (3) – ஒளவை துரைசாமி உரை – மாற்றுதற்கு அரிய தெறலையுடைய தெய்வம், பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – தெறுகின்ற சினம் தணிவதற்கு அரிய தெய்வம்,  அகநானூறு 13 – தெறல் அரு மரபின் கடவுள் – வேங்கடசாமி நாட்டார் உரை– துன்புறுத்தல் இல்லாத கடவுள், பொ. வே. சோமசுந்தரனார் உரை – வெல்லுதற்கு அரிதாகிய கடவுள்,  அகநானூறு 372 – அருந்தெறல் மரபின் கடவுள் – வேங்கடசாமி நாட்டார் உரை – அரிய ஆற்றலையுடைய கடவுள், பொ. வே. சோமசுந்தரனார் உரை – அழித்தற்கரிய கடவுள், அகநானூறு 396 – தெறல் அரும் கடவுள் – வேங்கடசாமி நாட்டார் உரை – தேறுதற்கு அரிய தெய்வம், பொ. வே. சோமசுந்தரனார் உரை – வெல்லுதற்கரிய தெய்வம்.  சேவல் – சேவல் பெயர்க்கொடை சிறகொடு சிவணும் மா இருந் தூவி மயில் அலங்கடையே (தொல்காப்பியம், மரபியல் 49).

சொற்பொருள்:  தம் அலது இல்லா நம் நயந்து அருளி இன்னும் வாரார் ஆயினும் – அவரை அன்றி வாழ்தல் இல்லாத நம்மை விரும்பி இன்னும் வரவில்லை ஆனாலும்; சென்னியர் தெறல் அருங்கடவுள் முன்னர் சீறியாழ் நரம்பு இசைத்தன்ன இன்குரல் குருகின் கங்கை வங்கம் போகுவர் கொல்லோ – பாணர்கள் வருத்துகின்ற சினம் கொண்ட கடவுளின் முன் சிறிய யாழின் நரம்பை இசைப்பதை ஒத்த இனிய குரலையுடைய குருகுகள் இருக்கின்ற கங்கை ஆற்றில் ஓடுகின்ற மரக்கலத்தில் போயிருப்பாரோ (சென்னியர் – பாணர்கள், கொல்லோ – கொல் ஐயப்பொருட்டு, ஓகாரம் அசைநிலை), எவ் வினை செய்வர் கொல் தாமே – எந்தச் செயலை அவர் செய்வார் (தாமே – ஏகாரம் அசைநிலை), வெவ்வினைக் கொலை வல் வேட்டுவன் வலை பரிந்து போகிய கானப் புறவின் சேவல் வாய்நூல் சிலம்பி அம் சினை வெரூஉம் அலங்கல் உலவை அம் காடு இறந்தோரே – கொடிய கொலைத் தொழிலைச் செய்ய வல்ல வேட்டுவனின் வலையை அறுத்து விட்டு ஓடிய காட்டுப் புறாவின் ஆண் தன்வாயில் உண்டாகும் நூலால் கட்டிய சிலந்தியின் கூடு அமைந்த மரக்கிளையைக் கண்டு அஞ்சும் சுழன்று அடிக்கும் சூறைக்காற்றை உடைய காட்டிற்குச் சென்ற நம் தலைவர் (வெரூஉம் – செய்யுளிசை அளபெடை, இறந்தோரே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 190, பாடியவர் பெயர் கிடைக்கவில்லை, குறிஞ்சித் திணை – தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது
நோ இனி, வாழிய நெஞ்சே! மேவார்
ஆர் அரண் கடந்த மாரி வண் மகிழ்த்
திதலை எஃகின் சேந்தன் தந்தை,
தேம் கமழ் விரி தார் இயல் தேர் அழிசி,
வண்டு மூசு நெய்தல் நெல்லிடை மலரும்  5
அரியல் அம் கழனி ஆர்க்காடு அன்ன
காமர் பணைத்தோள் நலம் வீறு எய்திய
வலை மான் மழைக் கண் குறுமகள்
சின்மொழித் துவர் வாய் நகைக்கு மகிழ்ந்தோயே.

பாடல் பின்னணி:  தலைவனை குறையுடையான் என்று தோழி கருதியபோது அவன் தன் நெஞ்சிடம் கூறியது.  அல்ல குறிப்பட்டு மீளும் தலைவன் தன் நெஞ்சிடம் கூறியதுமாம்.  தலைவன் சுரத்தில் தன் காதலியை நினைத்து, மீண்டு வரக் கருதிய நெஞ்சை இடித்துரைத்ததாம்.

பொருளுரை:  நெஞ்சே!  பகைவர்களின் பற்றுதற்கு அரிய கோட்டைகளை வென்று கைக்கொண்ட, மழையைப் போன்ற கொடையையும், கள்ளையும், தேமல் (கறை) படர்ந்த வேல்களையும் உடைய சேந்தன் என்பவனின் தந்தையாகிய, தேன் மணம் கமழும் விரிந்த மாலையையும் சிறப்பாகச் செய்யப்பட்ட தேரையுமுடைய அழிசி என்பவனின், நெற்கதிர்களின் இடையே வண்டுகள் மொய்க்கும் நெய்தல் பூக்கள் மலர்ந்து அவற்றிலிருந்து தேன் வடிதல் உடைய வயல்களுடைய ஆர்க்காடு என்னும் ஊரை ஒத்த, விருப்பம் தருகின்ற மூங்கில் போன்ற தோள்களின் (பருத்த தோள்களின்) அழகுடன் பெருமையடைந்த, வலையில் அகப்பட்ட மானின் கண்கள் போன்ற குளிர்ச்சியான கண்களையுடைய இளமகளின் சிலவாகிய சொற்களையுடைய சிவந்த வாயின் முறுவலுக்கு நீ மகிழ்ச்சி கொண்டாய்.  இனிமேல் நீ துன்பத்துடன் நீடு வாழ்வாயாக!

குறிப்பு:  ஒப்புமை:  குறுந்தொகை 258 – சேந்தன் தந்தை அரியல் அம் புகவின் அம் தோட்டு வேட்டை நிரைய ஒள் வாள் இளைஞர் பெருமகன் அழிசி.  ஆர்க்காடு. நற்றிணை 87 – வெல் போர்ச் சோழர் அழிசி அம் பெருங்காட்டு, நற்றிணை 265 – மாரி வண் மகிழ் ஓரி.  வரலாறு:  சேந்தன், அழிசி.

சொற்பொருள்:  நோ இனி வாழிய – இனிமேல் நீ துன்பத்துடன் நீடு வாழ்வாயாக, நெஞ்சே – நெஞ்சே, மேவார் ஆர் அரண் கடந்த மாரி வண் மகிழ்த் திதலை எஃகின் சேந்தன் தந்தை தேம் கமழ் விரி தார் இயல் தேர் அழிசி – பகைவர்களின் பற்றுதற்கு அரிய கோட்டைகளை வென்று கைக்கொண்ட மழையைப் போன்ற கொடையையும் கள்ளையும் தேமல் (கறை) படர்ந்த வேல்களையும் உடைய சேந்தன் என்பவனின் தந்தையாகிய தேன் மணம் கமழும் விரிந்த மாலையையும் இயன்ற (செய்யப்பட்ட, இயலும், செல்லும்) தேரையுமுடைய அழிசி என்பவனின் (எஃகு – ஆகுபெயர் வேலுக்கு, தேம் – தேன் என்றதன் திரிபு), வண்டு மூசு நெய்தல் – வண்டுகள் மொய்க்கும் நெய்தல், நெல்லிடை மலரும் அரியல் அம் கழனி ஆர்க்காடு அன்ன – நெற்கதிர்களின் இடையே மலர்ந்து அவற்றிலிருந்து தேன் வடிதலை உடைய வயல்களுடைய ஆர்க்காடு என்னும் ஊரை ஒத்த, காமர் பணைத்தோள் நலம் வீறு எய்திய வலை மான் மழைக் கண் குறுமகள் சின்மொழித் துவர் வாய் நகைக்கு மகிழ்ந்தோயே – விருப்பம் தருகின்ற மூங்கில் போன்ற தோள்களின் (பருத்த தோள்களின்) அழகுடன் பெருமையடைந்த வலையில் அகப்பட்ட மானின் கண்கள் போன்ற குளிர்ச்சியான கண்களையுடைய தலைவியின் சிலவாகிய சொற்களையுடைய சிவந்த வாயின் முறுவலுக்கு மகிழ்ச்சி கொண்டாய் (வீறு – சிறப்பு, மகிழ்ந்தோயே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 191, உலோச்சனார், நெய்தல் திணை – தோழி தலைவியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
சிறு வீ ஞாழல் தேன் தோய் ஒள் இணர்
நேர் இழை மகளிர் வார் மணல் இழைத்த
வண்டல் பாவை வன முலை முற்றத்து
ஒண் பொறிச் சுணங்கின் ஐதுபடத் தாஅம்
கண்டல் வேலிக் காமர் சிறுகுடி,  5
‘எல்லி வந்தன்றோ தேர்’ எனச் சொல்லி,
அலர் எழுந்தன்று இவ்வூரே; பலருளும்
என் நோக்கினளே அன்னை, நாளை
மணிப் பூ முண்டகம் கொய்யேன் ஆயின்,
அணிக் கவின் உண்மையோ அரிதே, மணிக் கழி  10
நறும் பூங்கானல் வந்து அவர்
வறுந்தேர் போதல் அதனினும் அரிதே.

பாடல் பின்னணி:  தலைவியைத் தானாகக் கொண்டு கூறியது.  களவில் வந்தொழுகும் தலைவனிடம் தலைவியைத் தமர் இற்செறிப்பர் எனக் கூறியது.  வரைவு கடாயது.

பொருளுரை:  சிறிய மலர்களையுடைய ஞாழலின் தேன் பொருந்திய ஒளியுடைய பூங்கொத்துக்கள் அழகிய அணிகலன்கள் அணிந்த மகளிர் நீண்ட மணற்பரப்பில் வண்டல் மணலால் செய்த பாவையின் அழகிய கொங்கைகளில் ஒளியுடைய பொறியுடைய சுணங்கு போல மெல்லிதாகப் படும்படி உதிர்ந்து பரவியிருக்கும், கண்டல் மரங்களாகிய வேலியையுடைய அழகிய குடித்தெருவில், “நேற்று இரவில் ஒரு தேர் வந்தது” என்று உரையாடி இந்த ஊரில் அலர் எழுந்தது.  பலர் இருக்க என்னையே குறிப்பாக அன்னை நோக்கினாள்.  நாளை கழி அருகில் உள்ள நீலமணி போன்ற மலரை நான் கொய்யாவிட்டால், என்னுடைய மிகுந்த அழகு நிலைத்து இருப்பது அரிதாகும்.  நீலமணி போலும் கரிய உப்பங்கழி அருகில் உள்ள நறுமணமுடைய பூஞ்சோலையில் அவர் வந்து எம்மை அணைக்காது தேரில் செல்லுதல் அதனினும் துன்பமானது.

குறிப்பு:  ஒப்புமை:  அகநானூறு 51 – முலை முற்றம் வீங்க, அகநானூறு 279 – செறிய வீங்கிய மென் முலை முற்றம், அகநானூறு 263 – வருமுலை முற்றத்து, அகநானூறு 361 – வார் முலை முற்றத்து, அகநானூறு 362 – முலைச் சுணங்கணி முற்றத்து, நற்றிணை 191 – வன முலை முற்றத்து.   எல்லி (6) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – இரவு, பகலுமாம்.  உள்ளுறை – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – ஞாழலின் ஒள்ளிய பூங்கொத்து மகளிர் இழைத்த வண்டல் பாவையின் மார்பிலே தேமல் போல பரக்குமென்றது, அன்னையின் காவல் தலைவியின் மீது ஒறுப்பது போல தாக்காநிற்குமென்றதாம்.  தலைவி கூறுவதுபோல் தோழி கூறுதல் – அகநானூறு 362, நற்றிணை 28, 98, 124, 132, 175, 178, 191, 211, 251, 292, கலித்தொகை 18, 70, குறுந்தொகை 236, 238, ஐங்குறுநூறு 45.  வார் – வார்தல் போகல் ஒழுகல் மூன்றும் நேர்பும் நெடுமையும் செய்யும் பொருள (தொல்காப்பியம், உரியியல் 21).  குறுந்தொகை 236 பாடலின் தமிழண்ணல் உரை – இது நாடக வழக்கு.  வழக்கறிஞர் கட்சிக்காரராக தம்மை எண்ணிப் பேசுவது போன்றது.  தலைவி கூற்று எனற்பாலது சிறிது மிகைப்படின், பண்பு கருதி தோழி கூற்றென வகுத்துள்ளனர்.  தோழியாகவே தோன்றும் உண்மைப் பாத்திரமாகவும் தலைவியின் குரலாக ஒலிக்கும் நிழற்பாத்திரமாகவும் இருவகைப்பட இருப்பதைப் பகுத்தறிய வேண்டும்.  தன் உறு வேட்கை கிழவன் முன் கிளத்தல் எண்ணும் காலை கிழத்திக்கு இல்லை (தொல்காப்பியம், களவியல் 28).

சொற்பொருள்:  சிறு வீ ஞாழல் தேன் தோய் ஒள் இணர் – சிறிய மலர்களையுடைய ஞாழலின் தேன் பொருந்திய ஒளியுடைய பூங்கொத்துக்கள், நேர் இழை மகளிர் வார் மணல் இழைத்த – அழகிய அணிகலன்களையுடைய மகளிர் நீண்ட மணற்பரப்பில் செய்த, வண்டல் பாவை – வண்டல் மணலால் செய்த பாவையின், வன முலை முற்றத்து ஒண் பொறிச் சுணங்கின் ஐதுபடத் தாஅம் – அழகிய கொங்கைகளில் ஒளியுடைய பொறியுடைய சுணங்கு போல மெல்லிதாகப் படும்படி பரவியிருக்கும் (சுணங்கின் – இன் உருபு ஒப்புப் பொருளது, ஐந்தாம் வேற்றுமை உருபு, தாஅம் – செய்யுளிசை அளபெடை), கண்டல் வேலிக் காமர் சிறுகுடி – கண்டல் மரங்களாகிய வேலியையுடைய அழகிய சிறுகுடித் தெருவில், எல்லி வந்தன்றோ தேர் எனச் சொல்லி – நேற்று இரவில் ஒரு தேர் வந்தது என்று உரையாடி, அலர் எழுந்தன்று இவ்வூரே – இந்த ஊரில் அலர் எழுந்தது, பலருளும் என் நோக்கினளே அன்னை – பலர் இருக்க என்னையே குறிப்பாக அன்னை நோக்கினாள், நாளை மணிப் பூ முண்டகம் கொய்யேன் ஆயின் – நாளை கழி அருகில் நீலமணி போன்ற மலரை நான் கொய்யாவிட்டால், அணிக் கவின் உண்மையோ அரிதே – என்னுடைய மிகுந்த அழகு நிலைப்பது அரிதாகும், மணிக் கழி நறும் பூங்கானல் வந்து அவர் வறுந்தேர் போதல் அதனினும் அரிதே – நீலமணி போலும் கரிய உப்பங்கழி அருகில் உள்ள நறுமணமுடைய பூஞ்சோலையில் அவர் வந்து எம்மை அணைக்காது தேரில் செல்லுதல் அதனினும் துன்பமானது (அரிதே – ஏகாரம் அசை நிலை)

நற்றிணை 192, பாடியவர் பெயர் கிடைக்கவில்லை, குறிஞ்சித் திணை – தலைவன் தலைவியிடம் சொன்னது
‘குருதி வேட்கை உருகெழு வயமான்
வலி மிகு முன்பின் மழ களிறு பார்க்கும்
மரம் பயில் சோலை மலிய, பூழியர்
உருவத் துருவின், நாள் மேயல் ஆரும்
மாரி எண்கின் மலைச் சுர நீள் இடை ,  5
நீ நயந்து வருதல் எவன்’ எனப் பல புலந்து,
அழுதனை உறையும் அம் மா அரிவை!
பயங்கெழு பலவின் கொல்லிக் குடவரைப்
பூதம் புணர்த்த புதிது இயல் பாவை
விரி கதிர் இள வெயில் தோன்றி அன்ன நின்  10
ஆய் நலம் உள்ளி வரின், எமக்கு
ஏமம் ஆகும், மலை முதல் ஆறே.

பாடல் பின்னணி:  இரவுக்குறி மறுக்கப்பட்டு ஆற்றானாய தலைவன் சொல்லியது.

பொருளுரை:  ‘குருதியை உண்ணும் விருப்பத்துடன் கண்டவர்களுக்கு அச்சம் தரும் வலிமையுடைய புலி வலிமை மிகுந்த இளைய களிற்று யானையைக் கொல்லுவதற்கு நோக்கி இருக்கும், மரங்கள் அடர்ந்த சோலை நிரம்பப் பூழியரின் நிறமுடைய ஆட்டு மந்தைகள் போல் அதிகாலையில் மழை பெய்யும் வேளையில் உணவை உண்ணும் கரடிகளை உடைய மலையில் பாலை நிலத்தின் நீண்ட வழியில் நீ என்னை விரும்பி வருவதால் என்ன ஆகும்’ என்று பலவாக வருந்தி அழுதவாறு இருக்கும் அழகிய மாமை நிறத்தையுடைய மடந்தையே!  மலையிலுள்ள வழியில் வரும் எனக்கு, பயன் பொருந்திய பலா மரங்களையுடைய கொல்லி மலையின் மேற்குப் பகுதியில் உள்ள கடவுளால் செய்யப்பட்ட இயங்குகின்ற பாவையானது, விரிந்த கதிர்களையுடைய கதிரவனின் இள வெயிலில் தோன்றினாற்போல் உள்ள உன்னுடைய அழகிய நலத்தை எண்ணி வருவது, காவலாக அமையும்.  நீ வருந்த வேண்டாம்.

குறிப்பு:  புலவர் பெயர் – பிற உரை நூல்களில் புலவரின் பெயர் குறிக்கப்படவில்லை.  ஒளவை துரைசாமி உரையில் புலவரின் பெயர் பரணர் என்று உள்ளது.  ஒளவை துரைசாமி உரை – ‘பண்பிற் பெயர்ப்பினும்’ (தொல்காப்பியம், களவியல் 12) என்ற நூற்பாவின்கண் வரும் ‘ஆற்றிடை உறுதலும்’ என்றதற்குத் ‘தலைவியும் தோழியும் வருவழி அருமை கூறியவழித் தலைவன் கூற்று நிகழும்’ எனக் கருத்துரைத்து, இப்பாட்டை எடுத்தோதி, ‘தலைவி ஆற்றினது அருமை கூறியதற்குத் தலைவன் கூறியது’ என்பர் நச்சினார்க்கினியரும் இளம்பூரணரும்.  இனி, இளம்பூரணர் ‘இரு வகைக் குறி பிழைப்பு ஆகிய இடத்தும்’ (தொல்காப்பியம், களவியல் 17) என்ற நூற்பாவின்கண் ‘வேளாண் எதிரும் விருப்பின்கண்ணும்’ என்பதற்கு இப்பாட்டையே காட்டுவர்.  ஒப்புமை: அகநானூறு 62 – கடவுள் எழுதிய பாவையின்.  இறைச்சி – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – புலி களிற்றைப் பார்க்குஞ் சோலையின்கண்ணே கரடி அஞ்சாது இயங்குமென்றது, அன்னை காவலாயிருக்கும் மனையகத்து யான் அஞ்சாது வரவல்லேன் என்பதாம்.  வரலாறு:  கொல்லி.  மழ – மழவும் குழவும் இளமைப் பொருள (தொல்காப்பியம், உரியியல் 15).  பூழியர் நாட்டில் ஆட்டு நிரை – குறுந்தொகை 163பூழியர் சிறுதலை வெள்ளைத் தோடு பரந்தன்ன மீன் ஆர் குருகின் கானலம் பெருந்துறை.

சொற்பொருள்:  குருதி வேட்கை உருகெழு வயமான் வலி மிகு முன்பின் மழ களிறு பார்க்கும் – இரத்தத்தை உண்ணும் விருப்பத்துடன் கண்டவர்களுக்கு அச்சம் தரும் வலிமையுடைய புலி வலிமை மிகுந்த இளைய களிற்று யானையைக் கொல்லுவதற்கு நோக்கும், மரம் பயில் சோலை மலிய பூழியர் உருவத் துருவின் நாள் மேயல் ஆரும் மாரி எண்கின் மலைச் சுர நீள் இடை நீ நயந்து வருதல் எவன் – மரங்கள் அடர்ந்த சோலை நிரம்பப் பூழியரின் நிறமுடைய ஆட்டு மந்தைகள் போல் அதிகாலையில் மழை பெய்யும் வேளையில் உணவை உண்ணும் கரடிகளுடைய மலையில் பாலை நிலத்தின் நீண்ட வழியில் நீ என்னை விரும்பி வருவதால் என்ன ஆகும் (மேயல் – ஆகுபெயர் உணவிற்கு), எனப் பல புலந்து அழுதனை உறையும் அம் மா அரிவை – என்றுப் பலவாக வருந்தி அழுதவாறு இருக்கும் அழகிய மாமை நிறத்தையுடைய மடந்தையே (அரிவை –,அண்மை விளி), பயங்கெழு பலவின் கொல்லிக் குடவரைப் பூதம் புணர்த்த புதிது இயல் பாவை விரி கதிர் இள வெயில் தோன்றி அன்ன நின் ஆய் நலம் உள்ளி வரின் எமக்கு ஏமம் ஆகும் மலை முதல் ஆறே – பயன் பொருந்திய பலா மரங்களையுடைய கொல்லி மலையின் மேற்குப் பகுதியில் உள்ள கடவுளால் செய்யப்பட்ட இயங்குகின்ற பாவை விரிந்த கதிர்களையுடைய கதிரவனின் இள வெயிலில் தோன்றினாற்போல் உள்ள உன்னுடைய அழகிய நலத்தை எண்ணி வரும் எனக்குக் காவலாக அமையும் மலையிலுள்ள வழி (எமக்கு – தன்மைப் பன்மை, ஆறே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 193, பாடியவர் பெயர் கிடைக்கவில்லை, பாலைத் திணை – தலைவி சொன்னது, வாடைக் காற்றிடம்
அட்டரக்கு உருவின் வட்டு முகை ஈங்கைத்
துய்த் தலைப் புது மலர்த் துளி தலைக் கலாவ,
நிறை நீர்ப் புனிற்றுப் புலம் துழைஇ ஆனாய்,
இரும் புறம் தழூஉம் பெருந்தண் வாடை,
நினக்குத் தீது அறிந்தன்றோ இலமே,  5
பணைத்தோள் எல் வளை ஞெகிழ்த்த எம் காதலர்
அருஞ்செயல் பொருட்பிணிப் பிரிந்தனராக,
யாரும் இல் ஒரு சிறை இருந்து,
பேர் அஞர் உறுவியை வருத்தாதீமே.

பாடல் பின்னணி:  பொருள்வயின் பிரிந்த தலைவன் குறித்த காலத்தில் வராததால், ஆற்றாளாகிய தலைவி கூறியது.

பொருளுரை:  உருக்கிய அரக்குப் போன்ற வட்ட அரும்பையுடைய ஈங்கையின் பஞ்சை (துய் போன்ற) ஒத்த தலையையுடைய புது மலர்களின் தேன் துளிகள் கலப்ப, புதிதாக மழை பெய்து நீர் நிறைந்த நிலத்திற்குள் நுழைந்து பெரிய பக்கங்களில் எல்லாம் சூழ்ந்து வரும் பெரிய குளிர்ச்சியுடைய வாடைக் காற்றே!  யாம் நினக்குத் தீங்கு எதுவும் செய்ய எண்ணியதில்லை.  எம்முடைய பருத்த தோள்களில் உள்ள ஒளிரும் வளையல்களை நெகிழச்செய்த எம் காதலர் அரிய பொருள் மேல் உள்ள பற்றினால் பிரிந்தார் ஆதலால், துணை யாரும் இல்லாது ஒரு புறம் இருந்து பெரிய துன்பத்துடன் உள்ளேம் யாம்.  எம்மை நீ வருத்தாதே!

குறிப்பு:  புலவர் பெயர் – பிற உரை நூல்களில் புலவரின் பெயர் குறிக்கப்படவில்லை.  ஒளவை துரைசாமி உரையில் புலவரின் பெயர் நற்றாமனார் என்று உள்ளது.  உறுவியை (9) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – தன்னைப் படர்க்கையாகக் கூறிய இடவழுவமைதி.  புனிறு – புனிறு என் கிளவி ஈன்றணிமைப் பொருட்டே (தொல்காப்பியம், உரியியல் 79).  எல் – எல்லே இலக்கம் (தொல்காப்பியம், இடையியல் 21).

சொற்பொருள்:  அட்ட அரக்கு உருவின் வட்டு முகை ஈங்கைத் துய்த் தலைப் புது மலர்த் துளி தலைக் கலாவ நிறை நீர்ப் புனிற்றுப் புலம் துழைஇ ஆனாய் இரும் புறம் தழூஉம் பெருந்தண் வாடை – உருக்கிய அரக்குப் போன்ற வட்ட அரும்பையுடைய ஈங்கையின் பஞ்சை ஒத்த (துய் போன்ற) தலையையுடைய புது மலர்களின் தேன் துளிகள் கலப்ப புதிதாக  மழை பெய்து நீர் நிறைந்த நிலத்திற்குள் நுழைந்து பெரிய பக்கங்களில் எல்லாம் சூழ்ந்து வரும் பெரிய குளிர்ச்சியுடைய வாடைக் காற்றே (ஈங்கை – Mimosa Pudica, துழைஇ – அளபெடை, வாடை – விளி), நினக்குத் தீது அறிந்தன்றோ இலமே – யாம் நினக்குத் தீங்கு செய்ய எண்ணியதில்லை (இலமே – தன்மைப் பன்மை, ஏகாரம் அசைநிலை), பணைத்தோள் எல் வளை ஞெகிழ்த்த எம் காதலர் அருஞ்செயல் பொருட்பிணிப் பிரிந்தனராக – எம்முடைய பருத்த தோள்களில் (மூங்கில் போன்ற தோள்களில்) உள்ள ஒளிரும் வளையல்களை நெகிழச்செய்த எம் காதலர் பொருள் மேல் உள்ள பற்றினால் பிரிந்தார் ஆதலால் (ஞெகிழ் – நெகிழ் என்பதன் போலி), யாரும் இல் ஒரு சிறை இருந்து பேர் அஞர் உறுவியை வருத்தாதீமே – துணை யாரும் இல்லாது ஒரு புறம் இருந்து பெரிய துன்பத்துடன் இருக்கும் என்னை நீ வருத்தாதே (வருத்தாதீமே – ஏகாரம் அசைநிலை, முன்னிலை எதிர்மறை முற்றுவினைத் திரிசொல்)

நற்றிணை 194, மதுரை மருதன் இளநாகனார், குறிஞ்சித் திணை  – தோழி தலைவியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
அம்ம வாழி தோழி! கைம்மாறு
யாது செய்வாம் கொல் நாமே, கயவாய்க்
கன்றுடை மருங்கின் பிடி புணர்ந்து இயலும்
வலன் உயர் மருப்பின் நிலம் ஈர்த் தடக் கை
அண்ணல் யானைக்கு அன்றியும், கல் மிசைத்  5
தனி நிலை இதணம் புலம்பப் போகி,
மந்தியும் அறியா மரம் பயில் ஒரு சிறை
குன்ற வெற்பனொடு நாம் விளையாட,
விரும்பு கவர் கொண்ட ஏனல்
பெருங்குரல் கொள்ளாச் சிறு பசுங்கிளிக்கே?  10

பாடல் பின்னணி:  தலைவன் வரைதலை மேற்கொள்ளாது களவின்கண் வந்தொழுகுகின்றான்.  அந்நிலையில் தன்னை இற்செறித்தனர் என்பதைத் தோழிக்கு உரைப்பாள் போலத் தலைவனுக்கு உரைத்து, வரைவு கடாயது.

பொருளுரை:  வாழி தோழி! கேட்பாயாக! சிறிய பச்சைக் கிளிகளுக்கும், குட்டியுடன் இருக்கும் தன் பெண் யானையைப் புணர்ந்த வலிமை மிக்க தந்தங்களையும் (கோடுகளையும்) நிலத்தில் தோயும் பெரிய வாயையும் பெரிய தும்பிக்கையும் உடைய பெருமை மிக்க களிற்று யானைக்கும், நாம் எவ்வாறு கைம்மாறு செய்யப் போகின்றோம்?  தனியாகக் கட்டப்பட்ட நம் காவல் பரணை விட்டு விலகி நாம் மந்தியும் ஏறி அறியாத அடர்ந்த மரங்களை உடைய இடத்தில் மலை நாடனுடன் விளையாடிய பொழுது அவை கதிர் கொத்துக்களைத் தின்று அழிக்காததற்கு?

குறிப்பு:  ஒப்புமை: அகநானூறு 92 – மந்தியும் அறியா மரம் பயில் இறும்பின், நற்றிணை 194 – மந்தியும் அறியா மரம் பயில், திருமுருகாற்றுப்படை 42 – மந்தியும் அறியா மரன் பயில் அடுக்கத்து.  கய – தடவும் கயவும் நளியும் பெருமை (தொல்காப்பியம், உரியியல் 24).  கொல் – கொல்லே ஐயம் (தொல்காப்பியம், இடையியல் 20).  கவர்வு – கவர்வு விருப்பு ஆகும் (தொல்காப்பியம் களவியல் 66).  புலம்பு – புலம்பே தனிமை (தொல்காப்பியம், உரியியல் 35).  அம்ம – அம்ம கேட்பிக்கும் (தொல்காப்பியம், இடையியல் 28).  மந்தி – பேடையும் பெடையும் பெட்டையும் பெண்ணும் மூடும் நாகும் கடமையும் அளகும் மந்தியும் பாட்டியும் பிணையும் பிணவும் அந்தம் சான்ற பிடியொடு பெண்ணே (தொல்காப்பியம், மரபியல் 3).  கன்று – பார்ப்பும் பறழும் குட்டியும் குருளையும் கன்றும் பிள்ளையும் மகவும் மறியும் என்று ன்பதும் குழவியொடு இளமைப் பெயரே (தொல்காப்பியம், மரபியல் 1).  பிடி – பிடி என் பெண் பெயர் யானை மேற்றே (தொல்காப்பியம், மரபியல் 52).

சொற்பொருள்:  அம்ம – கேட்பாயாக, வாழி தோழி – வாழி தோழி, கைம்மாறு யாது செய்வாம் கொல் நாமே – நாம் எப்படி கைம்மாறு செய்யலாம் (நாமே – ஏகாரம் அசை நிலை), கய வாய் – பெரிய வாய், கன்றுடை மருங்கின் – கன்றை பக்கத்தில் உடைய, பிடி புணர்ந்து இயலும் – பெண் யானையோடு புணர்ந்து இயங்குகின்ற, வலன் உயர் மருப்பின் – வலிமை மிக்க தந்தங்கள் (கோடுகள்), நிலம் ஈர்த் தடக் கை – நிலத்தின் கண் ஈர்த்தலையுடைய பெரிய தும்பிக்கை, அண்ணல் யானைக்கு – பெருமையுடைய யானைக்கு, அன்றியும் – அல்லாமலும், கல் மிசை – மலை மேலே, தனி நிலை இதணம் – தனியாகக் கட்டப்பட்ட பரண், புலம்பப் போகி – வறிது ஆகும்படி, மந்தியும் அறியா – பெண் குரங்குகளும் அறியாத, மரம் பயில் – மரங்கள் நிறைந்த, ஒரு சிறை – ஒரு புறம், குன்ற வெற்பனொடு – மலை நாடனுடன், நாம் விளையாட – நாம் விளையாட, விரும்பு கவர் கொண்ட – விருப்பம் கொண்ட, ஏனல் பெருங்குரல் கொள்ளா – பெரிய தினைக் கதிர் கொத்துக்களைத் தின்று அழிக்காத, சிறு பசுங்கிளிக்கே – சிறிய பச்சைக் கிளிகளுக்கு (பசுங்கிளிக்கே – ஏகாரம் அசை நிலை)

நற்றிணை 195, பாடியவர் பெயர் கிடைக்கவில்லை, நெய்தல் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
அருளாய் ஆகலோ கொடிதே, இருங்கழிக்
குருளை நீர்நாய் கொழு மீன் மாந்தி
தில்லை அம் பொதும்பில் பள்ளி கொள்ளும்
மெல்லம்புலம்ப! யான் கண்டிசினே!
கல்லென் புள்ளின் கானல் அம் தொண்டி  5
நெல் அரி தொழுவர் கூர் வாள் உற்றென,
பல்லிதழ் தயங்கிய கூம்பா நெய்தல்
நீர் அலைத் தோற்றம் போல,
ஈரிய கலுழும் நீ நயந்தோள் கண்ணே.

பாடல் பின்னணி:  தலைவன் களவின்கண் நெடுங்காலம் வந்தொழுக ஆற்றாளாயின தோழி, வரைவு கடாயது.

பொருளுரை:  கரிய உப்பங்கழியில் உள்ள நீர்நாயின் குட்டி கொழுத்த மீன்களைப் பிடித்துத் தின்று, தில்லை மரத்தின் பொந்துகளில் படுத்து உறங்கும் மெல்லிய கடற்கரையின் தலைவனே!  கல்லென ஒலிக்கும் பறைவைகளையுடைய கடற்கரைச் சோலைகளையுடைய தொண்டி நகரின் வயல்களில் நெற்கதிர்களை அறுக்கும் உழவர்களின் கூர்மையான வாளினால் அறுபட்டதால் பல இதழ்கள் விளங்கிய குவியாத நெய்தல் மலர் நீரில் நனைந்து தோன்றுவது போல், கண்ணீருடன் கலங்கியுள்ளது நீ விரும்பிய உன் காதலியின் கண்கள்.  அதனை யான் கண்டுள்ளேன்.  நீ அருளாது இருப்பது மிகவும் கொடியது!

குறிப்பு:  புலவர் பெயர் – பிற உரை நூல்களில் புலவரின் பெயர் குறிக்கப்படவில்லை.  ஒளவை துரைசாமி உரையில் புலவரின் பெயர் பெருங்குன்றூர் கிழார் என்று உள்ளது.   இறைச்சி – கு. வெ. பாலசுப்பிரமணியன் உரை – தொண்டி நகரின்கண் உள்ள கானற்சோலையில் புள்ளினம் ஒலி செய்யும் என்றது, ஊர்க்கண் மகளிரின் அலர் பரவும் என்பது உணர்த்தவாம்.   உள்ளுறை – கு. வெ. பாலசுப்பிரமணியன் உரை – நீர்நாயின் குட்டி மீனைத் தின்று மரப்பொதும்பில் பள்ளி கொள்ளும் என்றது, தலைவன் இரவெல்லாம் தலைவியின் நலம் நுகர்ந்து மணம்புரியும் கவலையற்று தன்னிடத்தில் வைகுவன் என்பது உணர்த்தவாம்.  சின் – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம், சொல்லதிகாரம், இடையியல் 26, சின் என்பது இசின் என்பதன் முதற்குறை – ச. பாலசுந்தரம் உரை), அவற்றுள், இகுமும் சின்னும் ஏனை இடத்தொடும் தகு நிலை உடைய என்மனார் புலவர் (தொல்காப்பியம், இடையியல் 27).  குருளை – மாற்ற அருஞ் சிறப்பின் மரபு இயல் கிளப்பின் பார்ப்பும் பறழும் குட்டியும் குருளையும் கன்றும் பிள்ளையும் மகவும் மறியும் என்று ஒன்பதும் குழவியொடு இளமைப் பெயரே (தொல்காப்பியம், மரபியல் 1).  நாயே பன்றி புலி முயல் நான்கும் ஆயும் காலை குருளை என்ப (தொல்காப்பியம், மரபியல் 8).   பல்லிதழ் – அகரம் கெட்டுக் ‘குறியதன் முன்னர்த் தன்னுரு இரட்டலும்’ – தொல்காப்பியம், எழுத்ததிகாரம் 160, என்றதனால் லகரம் இரட்டித்துப் பல்லிதழ் என முடிந்தது.

சொற்பொருள்:  அருளாய் ஆகலோ கொடிதே – அருளாது இருப்பது கொடியது (கொடிதே – ஏகாரம் அசைநிலை), இருங்கழிக் குருளை நீர்நாய் கொழு மீன் மாந்தி தில்லை அம் பொதும்பில் பள்ளி கொள்ளும் மெல்லம்புலம்ப – கரிய (பெரிய) உப்பங்கழியில் உள்ள நீர்நாயின் குட்டி கொழுத்த மீன்களைப் பிடித்துத் தின்று தில்லை மரத்தின் பொந்துகளில் படுத்து உறங்கும் மெல்லிய கடற்கரையின் தலைவனே (அம் – சாரியை, புலம்பு – கடற்கரை, தில்லை – Exocoeria agallocha), யான் கண்டிசினே – அதனை யான் கண்டுள்ளேன் (கண்டிசினே – சின் தன்மை அசை, ஏகாரம் அசைநிலை), கல்லென் புள்ளின் கானல் அம் தொண்டி நெல் அரி தொழுவர் கூர் வாள் உற்றென பல்லிதழ் தயங்கிய கூம்பா நெய்தல் நீர் அலைத் தோற்றம் போல ஈரிய கலுழும் நீ நயந்தோள் கண்ணே – கல்லென ஒலிக்கும் பறைவைகளையுடைய கடற்கரைச் சோலைகளையுடைய தொண்டி நகரின் வயல்களில் நெற்கதிர்களை அறுப்பவர்களின் கூர்மையான வாளினால் அறுபட்டதால் பல இதழ்கள் விளங்கிய குவியாத நெய்தல் மலர் நீரில் நனைந்து தோன்றுவது போல் கண்ணீருடன் கலங்கியுள்ளது நீ விரும்பிய உன் காதலியின் கண்கள் (கண்ணே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 196, வெள்ளைக்குடி நாகனார், நெய்தல் திணை – தலைவி நிலாவிடம் சொன்னது
பளிங்கு செறிந்தன்ன பல் கதிர் இடை இடைப்,
பால் முகந்தன்ன பசு வெண் நிலவின்,
மால்பிடர் அறியா, நிறையுறு மதியம்!
சால்பும் செம்மையும் உடையை ஆதலின்,
நின் கரந்து உறையும் உலகம் இன்மையின்  5
என் கரந்து உறைவோர் உள்வழி காட்டாய்,
நற் கவின் இழந்த என் தோள் போல் சாஅய்
சிறுகுபு சிறுகுபு செரீஇ,
அறிகரி பொய்த்தலின், ஆகுமோ அதுவே?

பாடல் பின்னணி:  தலைவன் பொருள்வயிற் பிரிந்த காலத்து ஆற்றாளாகிய தலைவி, நிலவை நோக்கி உரைத்தது.

பொருளுரை:  பளிங்குக் கற்களை ஒன்றாக நெருக்கமாக இணைத்து வைத்தாற்போலப் பல கதிர்களுக்கு இடை இடையே பாலை முகந்து வைத்தாற்போலக் குளிர்ச்சியுடைய வெண்ணிலவினையுடைய, முகிலின் பிடர் மேல் தோன்றி பிறரால் அறியப்படாத, நிறைவுற்ற திங்களே!  நீ நிறைவும் நேர்மையும் உடையை!  உனக்குத் தெரியாதபடி மறைந்து வாழும் உலகம் எதுவும் இல்லாததால், என்னிடமிருந்து மறைந்து வாழ்பவர் இருக்கும் இடத்தைக் காட்டுவாயாக!  நல்ல அழகினை இழந்த என் தோள் போன்று வாட்டமுற்று சிறுகிச் சிறுகிக் குறைந்து, நீ சாட்சி கூறாது பொய்யை மேற்கொண்டதால், அது உன்னால் இயலுமா?

குறிப்பு:  மால்பிடர் அறியா நிறையுறு மதியம் (3) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை, பொ. வே. சோமசுந்தரனார் உரை ஆகிய இரண்டு உரைகளிலும் – மேகத்தின் பிடர் (பிடரி) மேல் தோன்றிப் பிறரால் அறியப்படாத எல்லாக் கலைகளும் நிறைவுற்ற திங்களே.  மால் – மேகம்.  இனி மால்பு இடர் எனக் கொண்டு நிலத்தைக் குறிஞ்சியாக்கி எமர் தேனெடுக்கச் சமைத்த கண்ணேணியாலே இடரப்பட்டு அறியாத திங்கள் என உரைப்பினுமாம்.  ‘மால்பு இடர் அறியா’ – பொ. வே. சோமசுந்தரனார் உரையில் அவர் மேலும் கூறும் பொருள் – மயங்கி எம்மனோர் இடர் அறியா.  பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரையில் அவர் மேலும் கூறும் பொருள் – எமர் தேனெடுக்கச் சமைத்த கண்ணேணியாலே இடரப்பட்டு அறியாத திங்கள் எனவும் உரைப்பினுமாம்.  பொ. வே. சோமசுந்தரனார் உரை:  சொற்பொருளில் அவரும் பின்னத்தூர் நாராயணசாமி ஐயரும் ஒத்துள்ளனர்.  எனினும் இவ்வாறு மேலும் இப்பாடலுக்கு உரை எழுதி, இதுவே பொருந்தும் எனக் கூறுகின்றார் சோமசுந்தரனார்:  பலவாகிய கதிர்களையும் இடையே இடையே பால்முகந்தன்னை பசு வெண்ணிலவையும் உடைய செல்வச் செருக்குடைமையால் மயங்கி எம்மனோர் இடர் அறியா நிறைவுறு மதியமே!  நீ தானும் சால்பும் செம்மையும் உடைமை ஆதலின் நினக்கிந்த பொச்சாப்பு ஆகுமோ?  ஆகாதன்றே!  அஃது உண்மையின் எற் கரைந்து உறைவோர் உள்வழி காட்டாய்; ஆதலின் நீ அறிகரி பொய்த்தாய், அங்ஙனம் பொய்த்தலின் நீ என் தோள் போல் நாடொறும் சிறுகுபு சிறுகுபு வானத்தூடே செரித்தொழியக்கடவாய்!  காட்டாய் (6) – ஒளவை துரைசாமி உரை – நீ காட்டுகின்றாய் இல்லை, பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – நீ காட்டுவாயாக.

சொற்பொருள்:  பளிங்கு செறிந்தன்ன – பளிங்குக் கற்களை ஒன்றாக நெருக்கமாக இணைத்து வைத்தாற்போல, பல் கதிர் இடை இடைப் பால் முகந்தன்ன – பல கதிர்களுக்கு இடை இடையே பாலை முகந்து வைத்தாற்போல, பசு வெண் நிலவின் – குளிர்ச்சியுடைய வெண்ணிலவினையுடைய, மால்பிடர் அறியா – முகிலின் பிடர் மேல் தோன்றி பிறரால் அறியப்படாத, நிறையுறு மதியம் – நிறைவுற்ற திங்களே (விளி), சால்பும் செம்மையும் உடையை – நீ நிறைவும் நேர்மையும் உடையை, ஆதலின் – ஆதலால், நின் கரந்து உறையும் – உனக்குத் தெரியாதபடி மறைந்து வாழும், உலகம் இன்மையின் – உலகம் எதுவும் இல்லாததால், என் கரந்து உறைவோர் உள்வழி காட்டாய் – என்னிடமிருந்து மறைந்து வாழ்பவர் இருக்கும் இடத்தைக் காட்டுவாயாக, நற்கவின் இழந்த என் தோள் போல் – நல்ல அழகினை இழந்த என் தோள் போன்று, சாஅய் – வருந்தி (அளபெடை), சிறுகுபு சிறுகுபு செரீஇ – சிறுகிச் சிறுகிக் குறைந்து (செரீஇ – செய்யுளிசை அளபெடை), அறிகரி பொய்த்தலின் – நீ சாட்சி கூறாது பொய்யை மேற்கொண்டதால், ஆகுமோ அதுவே – உன்னால் இயலுமா (அதுவே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 197, நக்கீரர், பாலைத் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
‘தோளே தொடி நெகிழ்ந்தனவே, நுதலே
பீர் இவர் மலரின் பசப்பு ஊர்ந்தன்றே,
கண்ணும் தண் பனி வைகின, அன்னோ
தெளிந்தனம் மன்ற தேயர் என் உயிர்’ என
ஆழல், வாழி தோழி, நீ நின்  5
தாழ்ந்து ஒலி கதுப்பின் வீழ்ந்த காலொடு
வண்டுபடு புது மலர் உண் துறைத் தரீஇய,
பெருமட மகளிர் முன்கைச் சிறு கோல்
பொலந்தொடி போல மின்னி, கணங்கொள்
இன் இசை முரசின் இரங்கி, மன்னர்  10
எயில் ஊர் பல் தோல் போலச்
செல் மழை தவழும், அவர் நல் மலை நாட்டே.

பாடல் பின்னணி:  வரைவு நீட ஆற்றாளாகிய தலைவியைத் தோழி ஆற்றுவித்தது.

பொருளுரை:  தோழி!  நீ நீடு வாழ்வாயாக!  “தோள்களில் வளையல்கள் நெகிழ்ந்தன, நெற்றியில் பீர்க்கை மலரைப்போல் பசலை படர்ந்தது, கண்களில் குளிர்ந்த நீர் தங்கின, ஐயோ!  என் உயிர் பிரிவது உறுதி என அறிந்தோம்” என்று அழாதே.  உன்னுடைய தாழ்ந்த அடர்ந்த கூந்தலைப் போல் வீழ்ந்த மழையின் காலுடன் வண்டுகள் பொருந்திய புது மலர்களையுடைய நீர் உண்ணும் துறையின்கண் கொய்து கொண்டுவந்த பெரிய மடப்பத்தையுடைய மகளிரின் முன்னங்கையில் உள்ள சிறிய திரண்ட பொன்னால் செய்த வளையல்களைப் போல் மின்னி, கூட்டமாக உள்ள இனிய ஓசையையுடைய முரசுபோல் முழங்கி, மன்னர்களின் கோட்டை மதில் மேல் உள்ள பல கேடயங்களைப் போல் வானில் செல்லும் முகில்கள் தவழும் அவருடைய மலைநாட்டில்.  அதைக் காணுங்கால் அவர் உன்னை நினைத்து வருவார்.

குறிப்பு:  மன்ற – மன்றவென் கிளவி தேற்றஞ்செய்யும் (தொல்காப்பியம், இடையியல் 17).  தேயர் (4) – ஒளவை துரைசாமி உரை – தேயியர் தேயர் என நின்றது.

சொற்பொருள்:  தோளே தொடி நெகிழ்ந்தனவே நுதலே பீர் இவர் மலரின் பசப்பு ஊர்ந்தன்றே கண்ணும் தண் பனி வைகின – தோள்களில் வளையல்கள் நெகிழ்ந்தன நெற்றியில் பீர்க்கை மலரைப்போல் பசலை படர்ந்தது கண்களில் குளிர்ந்த நீர் தங்கின (தோளே, நெகிழ்ந்தனவே, நுதலே, ஊர்ந்தன்றே – ஏகாரங்கள் அசைநிலை, மலரின் – இன் ஒப்புப்பொருளில் வந்தது, ஐந்தாம் வேற்றுமை உருபு), அன்னோ – ஐயோ, தெளிந்தனம் மன்ற தேயர் என் உயிர் – என் உயிர் பிரிவது உறுதி என அறிந்தோம், என ஆழல் – என்று அழாதே (ஆழல் – நீட்டல் விகாரம், அல் ஈற்று எதிர்மறை வியங்கோள்), வாழி – நீடு வாழ்வாயாக, தோழி – தோழி, நீ நின் தாழ்ந்து ஒலி கதுப்பின் வீழ்ந்த காலொடு வண்டுபடு புது மலர் உண் துறைத் தரீஇய பெருமட மகளிர் முன்கைச் சிறு கோல் பொலந்தொடி போல மின்னி – உன்னுடைய தாழ்ந்த அடர்ந்த கூந்தலைப் போல் வீழ்ந்த மழையின் காலுடன் வண்டுகள் பொருந்திய புது மலர்களையுடைய நீர் உண்ணும் துறையின்கண் கொய்து கொண்டுவந்த பெரிய மடப்பத்தையுடைய மகளிரின் முன்னங்கையில் உள்ள சிறிய திரண்ட பொன்னால் செய்த வளையல்களைப் போல் மின்னி (கதுப்பின் – இன் ஒப்புப்பொருளில் வந்தது, ஐந்தாம் வேற்றுமை உருபு, தரீஇய – செய்யுளிசை அளபெடை), கணங்கொள் இன் இசை முரசின் இரங்கி – கூட்டமாக உள்ள இனிய ஓசையையுடைய முரசுபோல் முழங்கி (முரசின் – இன் உருபு ஒப்புப் பொருளது, ஐந்தாம் வேற்றுமை உருபு), மன்னர் எயில் ஊர் பல் தோல் போலச் செல் மழை தவழும் அவர் நல் மலை நாட்டே – மன்னர்களின் கோட்டை மதில் மேல் இருந்த பல கேடயங்களைப் போல் வானில் செல்லும் முகில்கள் தவழும் அவருடைய மலைநாட்டில் (நாட்டே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 198, கயமனார், பாலைத் திணை – செவிலித்தாய் கண்டாரிடம் சொன்னது
சேயின் வரூஉம் மதவலி! யா உயர்ந்து
ஓமை நீடிய கான் இடை அத்தம்,
முன் நாள் உம்பர்க் கழிந்த என் மகள்
கண்பட நீர் ஆழ்ந்தன்றே; தந்தை
தன் ஊர், இடவயின் தொழுவேன், நுண் பல்  5
கோடு ஏந்து அல்குல் அரும்பிய திதலை
வார்ந்து இலங்கு வால் எயிற்று பொலிந்த தாஅர்
சில் வளை பல் கூந்தலளே அவளே,
மை அணல் எருத்தின், முன்பின் தடக் கை,
வல் வில் அம்பின் எய்யா வண் மகிழ்த்  10
தந்தை தன் ஊர் இதுவே,
ஈன்றேன் யானே, பொலிக நும் பெயரே.

பாடல் பின்னணி:  சுரத்தில் தலைவியைத் தேடிச் சென்ற செவிலித்தாய் உரைத்தது.

பொருளுரை:  தொலைவிலிருந்து வரும் வலிமை மிக்க ஆடவனே!  யா மரங்கள் உயர்ந்துள்ள ஓமை மரங்கள் நீண்டு வளர்ந்த காட்டின் இடையில் உள்ள பாலை நிலத்தில் நேற்று நெடுந்தொலைவு சென்ற என் மகள் என் கண்களில் தோன்றுவதால், என் கண்களில் கண்ணீர் நிறைந்துள்ளது.  அவளுடைய தந்தையின் ஊரிலிருந்து உம்மை நான் தொழுகின்றேன்.  நுண்ணியப் பல வரிகளையுடைய உயர்ந்த அல்குலையும் தோன்றிய தேமலையும் நேராக இருக்கும் ஒளிரும் வெள்ளை பற்களையும் விளங்கிய மாலையையும் சில வளையல்களையும் அடர்ந்த கூந்தலையும் உடையவள் அவள்.  கரிய தாடியையும் வலிமையான பெரிய கைகளையும் வலிய வில்லையும் அம்பையும் உரைக்க இயலாத அளவு கொடையையும் கள்ளையும் உடைய தந்தையின் ஊர் இது. நான் அவளைப் பெற்றேன்.  நீவிர் அவளைக் கண்டு பேசிய முறையை என்னுடன் கூறுவீராயின் நுமக்குப் புகழ் உண்டாவதாக!

குறிப்பு:  சேயின் வரூஉம் (1) – கு. வெ. பாலசுப்பிரமணியன் உரை – தொலைவிலிருந்து வருகின்ற, ஒளவை துரைசாமி உரை– முருகெனக் காண்போர் கருதுமாறு வருகின்ற.  மதவலி (1) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – அரசகுமரனே, ஒளவை துரைசாமி உரை – வலிமிக்க காளையே, கு. வெ. பாலசுப்பிரமணியன் உரை – உடல் வலிமை மிக்க ஆடவனே.  ஈன்றேன் யானே (12) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – வருத்தம் மிகுதியுடையவள் என்று கருதி மகளொடு நுவன்றவை கரவாது கூறும் பொருட்டு ஈன்றேன் யானே என்றாள்.  இஃது அன்பு மிகுதிபற்றி.  செவிலி – ஆய் பெருஞ்சிறப்பின் அருமறை கிளத்தலின் தாய் எனப்படுவோள் செவிலி ஆகும் (தொல்காப்பியம், களவியல் 34).  தட – தடவும் கயவும் நளியும் பெருமை (தொல்காப்பியம், உரியியல் 24),

சொற்பொருள்:  சேயின் வரூஉம் மதவலி – தொலைவிலிருந்து வரும்  வலிமை மிக்க ஆடவனே (வரூஉம் – செய்யுளிசை அளபெடை, மதவலி – அன்மொழித்தொகை விளியேற்று நின்றது), யா உயர்ந்து ஓமை நீடிய கான் இடை அத்தம் முன் நாள் உம்பர்க் கழிந்த என் மகள் கண்பட நீர் ஆழ்ந்தன்றே – யா மரங்கள் உயர்ந்துள்ள ஓமை மரங்கள் நீண்டு வளர்ந்த காட்டின் இடையில் உள்ள பாலை நிலத்தில் நேற்று நெடுந்தொலைவு சென்ற என் மகள் என் கண்களில் தோன்றுவதால் கண்ணீர் நிறைந்துள்ளது (யா மரம் – ஆச்சா மரம், Hardwickia binata tree, ஓமை மரம், Toothbrush Tree, Dillenia indica, ஆழ்ந்தன்றே – ஏகாரம் அசைநிலை), தந்தை தன் ஊர் – தந்தையின் ஊர், இடவயின் தொழுவேன் – இவ்வூரிலிருந்து உம்மை நான் தொழுகின்றேன், நுண் பல் கோடு ஏந்து அல்குல் அரும்பிய திதலை வார்ந்து இலங்கு வால் எயிற்று பொலிந்த தாஅர் சில் வளை பல் கூந்தலளே அவளே – நுண்ணியப் பல வரிகளையுடைய உயர்ந்த அல்குலையும் தோன்றிய தேமலையும் நேராக இருக்கும் ஒளிரும் வெள்ளை பற்களையும் விளங்கிய மாலையையும் சில வளையல்களையும் அடர்ந்த கூந்தலையும் உடையவள் அவள் (அல்குல் – இடை, இடைக்குக் கீழ் உள்ள பகுதி, தாஅர் – செய்யுளிசை அளபெடை, கூந்தலளே – ஏகாரம் அசைநிலை, அவளே – ஏகாரம் அசைநிலை), மை அணல் எருத்தின் முன்பின் தடக் கை வல் வில் அம்பின் எய்யா வண் மகிழ்த் தந்தை தன் ஊர் இதுவே – கரிய தாடியையும் வலிமையான பெரிய கைகளையும் வலிய வில்லையும் அம்பையும் உரைக்க இயலாத அளவு கொடையையும் கள்ளையும் உடைய தந்தையின் ஊர் இது, ஈன்றேன் யானே – நான் அவளைப் பெற்றேன் (யானே – ஏகாரம் அசைநிலை), பொலிக நும் பெயரே – நுமக்குப் புகழ் உண்டாவதாக (பெயரே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 199, பேரிசாத்தனார், நெய்தல் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
ஓங்கு மணல் உடுத்த நெடு மாப் பெண்ணை
வீங்கு மடல் குடம்பைப் பைதல் வெண்குருகு,
நள்ளென் யாமத்து உயவுதோறு உருகி,
அள்ளல் அன்ன என் உள்ளமொடு உள் உடைந்து,
உளெனே, வாழி தோழி! வளை நீர்க்  5
கடுஞ்சுறா எறிந்த கொடுந்திமில் பரதவர்
வாங்கு விசைத் தூண்டில் ஊங்கு ஊங்கு ஆகி,
வளி பொரக் கற்றை தாஅய், நளி சுடர்
நீல் நிற விசும்பின் மீனொடு புரையப்,
பைபய இமைக்கும் துறைவன்  10
மெய் தோய் முயக்கம் காணா ஊங்கே.

பாடல் பின்னணி:  தலைவன் பிரிந்தபொழுது வருந்திய தலைவியை, வருந்த வேண்டாம் என உரைத்த தோழியிடம் தலைவி கூறியது.

பொருளுரை:  தோழி!  நீ நீடு வாழ்வாயாக!  சூழ்ந்திருக்கும் நீராகிய கடலில் (சங்கு வாழும் கடலில்) விரைந்து நீந்தும் சுறாமீன்களைப் பிடிக்க வலையை வீசி எறிந்த வளைந்த படகையுடைய மீனவர்கள் இழுக்கும் வேகத்தையுடைய தூண்டிலின் இடையிடையே வந்து காற்று தாக்குவதால் எரியும் திரட்சியுடைய பரவிய நெருங்கிய விளக்கின் ஒளி நீல நிற வானின் விண்மீன்கள் போல் மெல்ல மெல்ல சுடர்வீசும் துறையையுடைய தலைவனின் உடலைத் தழுவி முயங்குதலை யான் பெறாதபொழுது, மணல் மேடு சூழ்ந்த உயர்ந்த கரிய பனைமரத்தின் விரிந்த மடலில் உள்ள கூட்டிலிருந்து வருந்தும் வெள்ளை நிறக் குருகு நள்ளென்ற நடு இரவில் துன்பத்தில் ஒலிக்கும் பொழுதெல்லாம் உருகிச் சேற்றைப் போல் குழம்பியிருக்கும் என் உள்ளத்துடன் என்னுள் இருக்கும் எண்ணங்களும் சிதைந்து, நான் இன்னும் உயிருடன் இருக்கின்றேன்!

குறிப்பு:  விசைத் தூண்டில் (7) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – விசையையுடைய தூண்டில், H. வேங்கடராமன் உரை – வேகத்தையுடைய தூண்டில்.    அள்ளல் (4) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – அள்ளும் தன்மையதாகிய சேற்றின் குழம்பு.

சொற்பொருள்:  ஓங்கு மணல் உடுத்த நெடு மாப் பெண்ணை வீங்கு மடல் குடம்பைப் பைதல் வெண்குருகு நள்ளென் யாமத்து உயவுதோறு உருகி அள்ளல் அன்ன என் உள்ளமொடு உள் உடைந்து உளெனே – மணல் மேடு சூழ்ந்த உயர்ந்த கரிய பனைமரத்தின் விரிந்த மடலில் உள்ள கூட்டிலிருந்து வருந்தும் வெள்ளை நிறக் குருகு நள்ளென்ற நடு இரவில் துன்பத்தில் ஒலிக்கும்பொழுதெல்லாம் உருகிச் சேற்றைப் போல் குழம்பியிருக்கும் என் உள்ளத்துடன் என்னுள் இருக்கும் எண்ணங்களும் சிதைந்து நான் இன்னும் உயிருடன் இருக்கின்றேன் (உளெனே – ஏகாரம் அசைநிலை), வாழி – நீடு வாழ்வாயாக, அசைநிலை, தோழி – தோழி, வளை நீர்க் கடுஞ்சுறா எறிந்த கொடுந்திமில் பரதவர் வாங்கு விசைத் தூண்டில் ஊங்கு ஊங்கு ஆகி வளி பொரக் கற்றை தாஅய் நளி சுடர் நீல் நிற விசும்பின் மீனொடு புரையப் பைபய இமைக்கும் துறைவன் மெய் தோய் முயக்கம் காணா ஊங்கே – சூழ்ந்திருக்கும் நீராகிய கடலில் (சங்கு வாழும் கடலில்) விரைந்து நீந்தும் சுறாமீன்களைப் பிடிக்க வலையை வீசி எறிந்த வளைந்த படகையுடைய மீனவர்கள் இழுக்கும் வேகத்தையுடைய தூண்டிலின் இடையிடையே வந்து காற்று தாக்குவதால் எரியும் திரட்சியுடைய பரவிய நெருங்கிய விளக்கின் ஒளி நீல நிற வானின் விண்மீன்கள் போல் மெல்ல மெல்ல சுடர்வீசும் துறையையுடைய தலைவனின் உடலைத் தழுவி முயங்குதலை யான் பெறாதபொழுது (புரை – உவம உருபு, கற்றை – திரட்சி, தாஅய் – செய்யுளிசை அளபெடை, பைபய – பையப்பைய பைபய என மருவியது, ஊங்கே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 200, கூடலூர் பல்கண்ணனார், மருதத் திணை – தோழி குயவனிடம் சொன்னது, வாயிலாக வந்த பாணன் கேட்கும்படி
கண்ணி கட்டிய கதிர அன்ன
ஒண் குரல் நொச்சித் தெரியல் சூடி,
யாறு கிடந்தன்ன அகல் நெடுந்தெருவில்
‘சாறு’ என நுவலும் முதுவாய்க் குயவ!
ஈதும் ஆங்கண் நுவன்றிசின் மாதோ,  5
ஆம்பல் அமன்ற தீம் பெரும் பழனத்துப்
பொய்கை ஊர்க்குப் போவோய் ஆகி,
‘கை கவர் நரம்பின் பனுவல் பாணன்
செய்த அல்லல் பல்குவ, வை எயிற்று
ஐது அகல் அல்குல் மகளிர், இவன்  10
பொய் பொதி கொடுஞ்சொல் ஓம்புமின்’ எனவே.

பாடல் பின்னணி:  பரத்தையிற் பிரிந்து வந்த தலைவனால் தூதாக விடப்பட்ட பாணன் இருப்பதை அறிந்த தோழி உரைத்தது.

பொருளுரைசரமாகக் கட்டிய கதிர் போன்ற ஒளியையுடைய நொச்சி மலர் மாலையைச் சூடி ஆறு கிடந்தாற்போன்ற அகன்ற நீண்ட தெருவில் ‘திருவிழா’ என்று அறிவிக்கும் அறிவு சான்ற குயவனே!  நெருக்கமாக ஆம்பல் மலர்கள் மலர்ந்த இனிய பெரிய வயல்களையும் குளங்களையும் உடைய ஊருக்குச் சென்று நீ அறிவிக்கும் பொழுது இதையும் சேர்த்துக் கொள்வாயாக, கூர்மையான பற்களையும் மென்மையான அகன்ற அல்குலையும் உடைய மகளிரிடம், “விரும்புவதற்குக் காரணமான நரம்பையுடைய யாழை மீட்டி பாடும் பாணன் செய்த துன்பம் பல. பொய் பேசி கொடுஞ்சொல் கூறுபவன். நீங்கள் உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்”.

குறிப்பு:  கண்ணி கட்டிய (1) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை, H. வேங்கடராமன் உரை – அரும்பு தோன்றல், ஒளவை துரைசாமி உரை – கண்ணியிடத்தே வைத்துக் கட்டிய.  மேற்கோள்:  குறுந்தொகை 127 – ஒரு நின் பாணன் பொய்யனாக உள்ள பாணர் எல்லாம் கள்வர் போல்வர், ஐங்குறுநூறு 139 – நின்னினும் பாணன் நல்லோர் நலம் சிதைக்கும்மே.  மதுரைக்காஞ்சி 359 – யாறு கிடந்தன்ன அகல் நெடுந்தெருவில்.  சின் – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம், சொல்லதிகாரம்.  இடையியல் 26, சின் என்பது இசின் என்பதன் முதற்குறை – ச. பாலசுந்தரம் உரை), அவற்றுள், இகுமும் சின்னும் ஏனை இடத்தொடும் தகு நிலை உடைய என்மனார் புலவர் (தொல்காப்பியம், இடையியல் 27).  வை– வையே கூர்மை (தொல்காப்பியம், உரியியல் 91).   கவர்வு – கவர்வு விருப்பு ஆகும் (தொல்காப்பியம் களவியல் 66).

சொற்பொருள்:  கண்ணி கட்டிய – சரமாக கட்டிய, கதிர அன்ன – கதிர் போன்ற, ஒண் குரல் நொச்சி – ஒளியுடைய நொச்சி மலர்கள், தெரியல் சூடி – மாலையைச் சூடி, யாறு கிடந்தன்ன – ஆறு கிடந்தாற்போல், அகல்  நெடுந் தெருவில் – அகன்ற நீண்ட தெருவில், சாறு என நுவலும் – திருவிழா என்று அறிவிக்கும், முதுவாய்க் குயவ – அறிவு சான்ற குயவனே, ஈதும் ஆங்கண் நுவன்றிசின் – இதையும் சேர்த்துக் கூறுவாயாக, மாதோ – மாது, ஓ அசைநிலைகள், ஆம்பல் அமன்ற – ஆம்பல் மலர்கள் நெருங்கிய, தீம் பெரும் பழனத்துப் பொய்கை ஊர்க்கு – இனிய பெரிய வயலும் பொய்கையும் உடைய ஊரின்கண், போவோய் ஆகி – நீ செல்வாய் ஆகி, கை கவர் நரம்பின் – கை விரும்புவதற்குக் காரணமாக உள்ள நரம்பை உடைய, பனுவல் பாணன் – பாடும் பாணன், செய்த அல்லல் – செய்த துன்பம், பல்குவ – மிக பல, வை எயிற்று – கூர்மையான பற்களையுடைய, ஐது அகல் அல்குல் – மென்மையான அகன்ற அல்குல், மகளிர்  – பெண்கள், இவன் பொய் பொதி கொடுஞ் சொல் – பொய் பேசும் இந்தப் பாணனின் கொடிய சொற்கள்,  ஓம்புமின் – உங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள் (ஓம்புமின்  – மின் முன்னிலைப் பன்மை வினைமுற்று விகுதி, எனவே – ஏகாரம் அசை நிலை), எனவே – என (ஏகாரம் அசை நிலை)

நற்றிணை 201, பரணர், குறிஞ்சித் திணை – தலைவன் தன் தோழனிடம் சொன்னது
‘மலை உறை குறவன் காதல் மட மகள்,
பெறல் அருங்குரையள், அருங்கடிக் காப்பினள்,
சொல் எதிர் கொள்ளாள், இளையள், அனையோள்
உள்ளல் கூடாது’ என்றோய்! மற்றும்
செவ் வேர்ப் பலவின் பயங்கெழு கொல்லித்  5
தெய்வம் காக்கும் தீது தீர் நெடுங்கோட்டு,
அவ் வெள்ளருவிக் குடவரை அகத்து
கால் பொருது இடிப்பினும், கதழ் உறை கடுகினும்,
உரும் உடன்று எறியினும் ஊறு பல தோன்றினும்
பெருநிலம் கிளரினும், திரு நல உருவின்  10
மாயா இயற்கைப் பாவையின்,
போதல் ஒல்லாள் என் நெஞ்சத்தானே.

பாடல் பின்னணி:  கழறிய தோழனுக்குத் தலைவன் உரைத்தது.

பொருளுரை“மலையில் வாழும் குறவனின் அன்பான இளமகள் பெறுவதற்கு அரியவள், அரிய காவலை உடையவள், நீ கூறும் சொற்களை உணர்ந்து ஏற்கும் தன்மையில்லாதவள், மிகவும் இளையவள், இத்தன்மையானவள் என்பதால் அவளை நினைத்தல் கூடாது” எனக் கூறும் நண்பனே!  சிவந்த வேரையுடைய பலா மரங்களுடைய பயனாகிய பழங்கள் பொருந்திய கொல்லி மலையில் உள்ள கடவுளால் பாதுகாக்கப்படும் குற்றமில்லாத உயர்ந்த மலை உச்சிகளையும், அழகிய வெள்ளை அருவிகளையுமுடைய மேற்குப் பகுதியில் காற்று மோதி அடித்தாலும், வலிய மழை விரைந்துப் பெய்தாலும் இடி முழங்கித் தாக்கினாலும், வேறு பல இடையூறுகள் தோன்றினாலும், பெரிய நிலம் நடுங்கினாலும், அழகிய நல்ல வடிவம் கெடாத இயல்பையுடைய பாவையைப் போல, நீங்கிச் செல்பவள் அல்லள் என் நெஞ்சிலிருந்து.

குறிப்பு:  வரலாறு:  கொல்லி.  கதழ் – கதழ்வும் துனைவும் விரைவின் பொருள் (தொல்காப்பியம், உரியியல் 19).  குரை – ஏயும் குரையும் இசைநிறை அசைநிலை ஆயிரண்டு ஆகும் இயற்கைய என்ப (தொல்காப்பியம், இடையியல் 24).

சொற்பொருள்:  மலை உறை குறவன் காதல் மட மகள் பெறல் அருங்குரையள் – மலையில் வாழும் குறவனின் அன்பான இளமகள் பெறுவதற்கு அரியவள் (அருங்குரையள் – குரை அசைநிலை), அருங்கடிக் காப்பினள் – அரிய காவலை உடையவள், சொல் எதிர் கொள்ளாள் – நீ கூறும் சொற்களை உணர்ந்து ஏற்கும் தன்மையில்லாதவள், இளையள் – மிகவும் இளையவள், அனையோள் உள்ளல் கூடாது என்றோய் – அவளை நினைத்தல் கூடாது எனக் கூறுபவனே, மற்றும் செவ் வேர்ப் பலவின் பயங்கெழு கொல்லித் தெய்வம் காக்கும் தீது தீர் நெடுங்கோட்டு அவ் வெள்ளருவிக் குடவரை அகத்து கால் பொருது இடிப்பினும் – சிவந்த வேரையுடைய பலா மரங்களுடைய பயனாகிய பழங்கள் பொருந்திய கொல்லி மலையில் உள்ள கடவுளால் பாதுகாக்கப்படும் குற்றமில்லாத உயர்ந்த மலை உச்சிகளையும் அழகிய வெள்ளை அருவிகளையுமுடைய மேற்குப் பகுதியில் காற்று மோதி அடித்தாலும் (மற்றும் – வினை மாற்று, உம்மை இசை நிறை), கதழ் உறை கடுகினும் உரும் உடன்று எறியினும் – வலிய மழை விரைந்துப் பெய்தாலும் இடி முழங்கித் தாக்கினாலும், ஊறு பல தோன்றினும் – இடையூறுகள் பல தோன்றினாலும், பெருநிலம் கிளரினும் – பெரிய நிலம் நடுங்கினாலும், திரு நல உருவின் மாயா இயற்கைப் பாவையின் போதல் ஒல்லாள் என் நெஞ்சத்தானே – அழகிய நல்ல வடிவம் கெடாத இயல்பையுடைய பாவையைப் போல  நீங்கிச் செல்பவள் அல்லள் என் நெஞ்சிலிருந்து (பாவையின் – இன் உருபு ஒப்புப் பொருளது, ஐந்தாம் வேற்றுமை உருபு, நெஞ்சத்தானே – ஐந்தாவதன்கண் மூன்றாவது மயங்கிற்று, ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 202, சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோ, பாலைத் திணை – தலைவன் தலைவியிடம் சொன்னது
புலி பொரச் சிவந்த புலால் அம் செங்கோட்டு
ஒலி பல் முத்தம் ஆர்ப்ப, வலி சிறந்து
வன் சுவல் பராரை முருக்கி கன்றொடு
மடப் பிடி தழீஇய தடக் கை வேழம்,
தேன் செய் பெருங்கிளை இரிய வேங்கைப்  5
பொன் புரை கவளம் புறந்தருபு ஊட்டும்
மா மலை விடரகம் கவைஇ காண்வர,
கண்டிசின், வாழியோ குறுமகள்! நுந்தை
அறுமீன் பயந்த அறம் செய் திங்கள்
செல் சுடர் நெடுங்கொடி போலப்,  10
பல் பூங்கோங்கம் அணிந்த காடே.

பாடல் பின்னணி:  தலைவன் தலைவியை உடன்கொண்டு உடன்போக்கு மேற்கொண்டான்.  செல்லும் வழியில் தலைவியிடம் அவன் கூறியது.

பொருளுரைஇள மடந்தையே!   நீ நீடு வாழ்வாயாக!  புலியுடன் போரிட்டதால் குருதி (இரத்தம்) படிந்து சிவந்த புலால் நாற்றத்தையுடைய அழகிய சிவந்த மருப்பில் (தந்தத்தில், கோட்டில்) உள்ள மிகுந்த பல முத்துக்கள் ஒலிக்க, வலிமை மிகுந்து வலிய மேட்டு நிலத்தில் இருந்த பருத்த அடியையுடைய வேங்கை மரத்தை முறித்து விட்டுத் தன் கன்றுடன் தன் இள பிடியானையைத் தழுவிய களிற்று யானை, தேனைச் சேர்க்கும் தேனீக்களின் பெரிய கூட்டம் அஞ்சி ஓடுமாறு, வேங்கை மரத்தின் பொன்னைப் போன்ற பூங்கொத்துக்களாகிய உணவைப் பாதுகாத்து அவர்களுக்கு ஊட்டும், பெரிய மலையின் பிளப்பு இடங்களைச் சூழ்ந்த, அழகு மிக்க, கார்த்திகை விண்மீன்களுடன் கூடிய அறம் செய்வதற்கு அமைந்த திங்களில் விண்ணில் ஒளி பரவும்படி ஏற்றிய விளக்குகளின் நீண்ட வரிசையைப் போன்றுள்ள பூக்களையுடைய கோங்க மரங்களினால் அழகுபெற்ற, உன் தந்தையின் காட்டினை நீ காண்பாயாக.

குறிப்பு:  கவழம் , கவளம் (6) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – கவழம் என உள்ளது, ஒளவை துரைசாமி உரை – கவளம் என உள்ளது.  இறைச்சி – கு. வெ. பாலசுப்பிரமணியன் உரை – கன்றொடு பிடியையும் தழுவிய வேழம், வேங்கைப் பூங்கொத்தை கவளமாக ஊட்டும் என்றது, தலைவியுடன் நிகழ்த்தும் இல்லறத்தில் பெறும் மக்கட் செல்வத்துடன் அவளையும் பொருள் தேடிக் கொணர்ந்து தலைவன் காக்கும் வினை அறத்தை குறிப்பித்தது.  புலி பொர (1) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – புலியொடு போர் செய்ததால், ஒளவை துரைசாமி உரை – புலியைக் கொன்றதனால்.  திங்கள் செல் சுடர் நெடுங்கொடி போல (10) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – திங்களின் எடுக்கப்பட்ட விசும்பில் செல்லுகின்ற நீண்ட விளக்குகளின் வரிசை போல, ஒளவை துரைசாமி உரை – முழுத்திங்கள் விளங்கும் நாளின்கண் வரிசையாகச் செல்லுகின்ற ஒளிபொருந்திய நெடிய விளக்குகளின் ஒளியைப் போல், கு.வெ. பாலசுப்பிரமணியன் உரை – திங்களில் விண்ணில் ஒளிபரவும்படி எடுக்கப்பட்ட விளக்குகளின் வரிசை போல.  யானையின் தந்தத்தில் முத்து:  அகநானூறு 282 – வால் மருப்பு ஒடிய உக்க தெண் நீர் ஆலி கடுக்கும் முத்தமொடு, நற்றிணை 202 – புலி பொரச் சிவந்த புலால் அம் செங்கோட்டு ஒலி பல் முத்தம், புறநானூறு 161 – முத்துப்படு முற்றிய உயர் மருப்பு ஏந்திய வரை மருள் நோன் பகடு, புறநானூறு 170 – வெண்கோடு பயந்த ஒளி திகழ் முத்தம், பதிற்றுப்பத்து 32 – முத்துடை மருப்பின், கலித்தொகை 40 – முத்து ஆர் மருப்பின், திருமுருகாற்றுப்படை 304 – பெருங்களிற்று முத்துடை வான்கோடு தழீஇ,  குறிஞ்சிப்பாட்டு 36 – முத்து ஆர் மருப்பின், மலைபடுகடாம் 518 – முத்துடை மருப்பின்.  சின் – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம், சொல்லதிகாரம், இடையியல் 26, சின் என்பது இசின் என்பதன் முதற்குறை – ச. பாலசுந்தரம் உரை).  கன்று – யானையும் குதிரையும் கழுதையும் கடமையும் மானொடு ஐந்தும் கன்று எனற்கு உரிய (தொல்காப்பியம், மரபியல் 15).  பிடி – பிடி என் பெண் பெயர் யானை மேற்றே (தொல்காப்பியம், மரபியல் 52).

சொற்பொருள்:  புலி பொரச் சிவந்த புலால் அம் செங்கோட்டு ஒலி பல் முத்தம் ஆர்ப்ப – புலியுடன் போரிட்டதால் குருதி (இரத்தம்) படிந்து சிவந்த புலால் நாற்றத்தையுடைய அழகிய சிவந்த மருப்பில் (தந்தத்தில், கோட்டில்) உள்ள மிகுந்த பல முத்துக்கள் ஒலிக்க, வலி சிறந்து வன் சுவல் பராரை முருக்கி கன்றொடு மடப் பிடி தழீஇய தடக் கை வேழம் – வலிமை மிகுந்து வலிய மேட்டு நிலத்தில் இருந்த பருத்த அடியையுடைய வேங்கை மரத்தை முறித்துத் தன் கன்றுடன் தன் இள பிடியானையைத் தழுவிய களிற்று யானை (பராரை – பரு அரை பராரை எனப் புணர்ந்தது, தழீஇய – செய்யுளிசை அளபெடை), தேன் செய் பெருங்கிளை இரிய – தேனைச் சேர்க்கும் தேனீக்களின் பெரிய கூட்டம் அஞ்சி ஓடுமாறு, வேங்கைப் பொன் புரை கவளம் புறந்தருபு ஊட்டும் – வேங்கை மரத்தின் பொன்னைப் போன்ற பூங்கொத்துக்களாகிய உணவைப் பாதுகாத்து ஊட்டும் (புரை – உவம உருபு), மா மலை விடரகம் கவைஇ – பெரிய மலையின் பிளப்பு இடங்களைச் சூழ்ந்து (கவைஇ – அளபெடை), காண்வர – அழகு மிக்க, கண்டிசின் – காண்பாயாக (சின் – முன்னிலை அசை), வாழியோ – நீ நீடு வாழ்வாயாக, குறுமகள் – இள மடந்தையே (அண்மை விளி), நுந்தை உன் தந்தையின், அறுமீன் பயந்த அறம் செய் திங்கள் செல் சுடர் நெடுங்கொடி போலப் பல் பூங்கோங்கம் அணிந்த காடே – கார்த்திகை விண்மீன்களுடன் கூடிய அறம் செய்வதற்கு அமைந்த திங்களில் விண்ணில் ஒளி பரவும்படி ஏற்றிய விளக்குகளின் நீண்ட வரிசையைப் போன்றுள்ள பூக்களையுடைய கோங்க மரங்களினால் அழகுபெற்ற காடு (கோங்க மரம் – Cochlospermum gossypium, காடே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 203, உலோச்சனார், நெய்தல் திணை – தோழி சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
முழங்கு திரை கொழீஇய மூரி எக்கர்,
தடந்தாள் தாழை முள்ளுடை நெடுந்தோட்டு
அக மடல் பொதுளிய முகை முதிர் வான் பூங்
கோடு வார்ந்தன்ன, வெண்பூத் தாழை
எறி திரை உதைத்தலின், பொங்கித் தாது சோர்பு  5
சிறுகுடிப் பாக்கத்து மறுகு புலா மறுக்கும்
மணம் கமழ் கானல், இயைந்த நம் கேண்மை
ஒரு நாள் பிரியினும் உய்வு அரிது என்னாது,
கதழ் பரி நெடுந்தேர் வரவு ஆண்டு அழுங்கச்
செய்த தன் தப்பல் அன்றியும்,  10
உயவுப் புணர்ந்தன்று இவ் அழுங்கல் ஊரே.

பாடல் பின்னணி:  தலைவன் மணம் புரியாது காலம் தாழ்த்தியதால், அவன் அருகில் இருப்பதை அறிந்த தோழி, இதைக் கூறினாள்.  வரைவு கடாயது.

பொருளுரைமுழங்குகின்ற அலைகளால் குவிக்கப்பட்ட பெரிய மணல் மேட்டின் மேல் உள்ள வளைந்த அடியையுடைய தாழையின், முள்ளையுடைய நீண்ட மடல்களின் உள் மடலில் தோன்றிய அரும்பு முதிர்ந்த வெள்ளை நிறத்தையுடைய பொலிவு பெற்ற சங்கை நீட்டி வைத்தாற்போல் வெள்ளை பூக்களையுடைய தாழையை மோதுகின்ற அலைகள் தாக்குதலால், பொங்கித் தாது உதிர்வதால் சிறிய குடியையுடைய பாக்கத்தின் தெருக்களில் புலால் நாற்றத்தை நீக்கும், நறுமணம் வீசுகின்ற கடற்கரைச் சோலையில் தலைவருடன் ஒன்றிய நம் நட்பு, ஒரு நாள் பிரிந்தாலும் உயிர் வாழ்தல் அரிது என எண்ணாமல், விரைந்த ஓட்டத்தையுடைய குதிரைகள் பூட்டிய அவருடை உயர்ந்த தேரின் வரவை அங்கு வராது இருக்குமாறு அலரால் தடுக்கப்பட்ட தன் தவறு மட்டும் அல்லாது, அதை உணராது இங்குத் தேர் வந்தது எதனால் என ஆராய்ந்து வருத்தமும் அடைகின்றது இந்த ஆரவாரத்தையுடை ஊர்.

குறிப்பு:  சங்கு – மனவு, பணிலம், வளை, கோடு. உள்ளுறை (1) – கு. வெ. பாலசுப்பிரமணியன் உரை – அலை மோதித் தாழையின் மகரந்தம் உதிர, அதன் மணம் பாக்கத்துத் தெருவின் புலால் நாற்றம் நீக்கும் என்றது, தலைவன் தலைவியுடன் கொண்ட காதல் தூண்டப் பொருள் பலவற்றை நம் இல்லத்திற்குக் கொணர்ந்து மணம் முடித்து, ஊரில் எழுந்த அலரை நீக்குவான் என்பதை உள்ளுறுத்திற்று.  உள்ளுறை (2) – ஒளவை துரைசாமி உரை – எக்கர்த் தாழையின் வெண்பூத் திரை உதைத்தலாற் பொங்கித் தாது சொரிந்து பாக்கத்து மறுகின்கண் உண்டாய புலால் நாற்றத்தை மாற்றுதல் போல, நீயும் கூட்டம் இடையீடு வரைந்து கொள்ளுமாற்றால் ஊரவர் எடுத்த அலர்க்குக் காரணமாகிய இவளது மேனி மெலிவைப் போக்குதல் வேண்டும் எனத் தோழி கூறியது.  நம் கேண்மை – தலைவியும் தோழியும் மிக நெருங்கிய நட்பு உடையவர்கள் என்பதாலும், தலைவியின் களவு ஒழுக்கத்திற்குத் தோழி உதவுவதாலும், தலைவனைத் தோழி நன்கு அறிந்தவள் என்பதாலும், இவ்வாறு பன்மையாற் கூறினாள் தோழி.  கதழ் – கதழ்வும் துனைவும் விரைவின் பொருள் (தொல்காப்பியம், உரியியல் 19).  அழுங்கல் – கம்பலை சும்மை கலியே அழுங்கல் என்று இவை நான்கும் அரவப் பொருள (தொல்காப்பியம், உரியியல் 53).  தட – தடவும் கயவும் நளியும் பெருமை (தொல்காப்பியம், உரியியல் 24), அவற்றுள், தட என் கிளவி கோட்டமும் செய்யும் (தொல்காப்பியம், உரியியல் 25).  வார்தல் போகல் ஒழுகல் மூன்றும் நேர்பும் நெடுமையும் செய்யும் பொருள (தொல்காப்பியம், உரியியல் 21).

சொற்பொருள்:  முழங்கு திரை கொழீஇய மூரி எக்கர் தடந்தாள் தாழை முள்ளுடை நெடுந்தோட்டு அக மடல் பொதுளிய முகை முதிர் வான் பூங்கோடு வார்ந்தன்ன வெண்பூத் தாழை எறி திரை உதைத்தலின் – முழங்குகின்ற அலைகளால் குவிக்கப்பட்ட பெரிய மணல் மேட்டின் மேல் உள்ள வளைந்த அடியையுடைய தாழையின் முள்ளையுடைய நீண்ட மடல்களின் உள் மடலில் தோன்றிய அரும்பு முதிர்ந்த வெள்ளை நிறத்தையுடைய பொலிவு பெற்ற சங்கை நீட்டி வைத்தாற்போல் வெள்ளை பூக்களையுடைய தாழையை மோதுகின்ற அலைகள் தாக்குதலால் (கொழீஇய – செய்யுளிசை அளபெடை), பொங்கித் தாது சோர்பு சிறுகுடிப் பாக்கத்து மறுகு புலா மறுக்கும் – பொங்கித் தாது உதிர்வதால் சிறிய குடியையுடைய பாக்கத்தின் தெருக்களில் புலால் நாற்றத்தை நீக்கும், மணம் கமழ் கானல் இயைந்த நம் கேண்மை – நறுமணம் வீசுகின்ற கடற்கரைச் சோலையில் தலைவருடன் ஒன்றிய நம் நட்பு, ஒரு நாள் பிரியினும் உய்வு அரிது என்னாது – ஒரு நாள் பிரிந்தாலும் உயிர் வாழ்தல் அரிது என எண்ணாமல், கதழ் பரி நெடுந்தேர் வரவு ஆண்டு அழுங்கச் செய்த தன் தப்பல் அன்றியும் உயவுப் புணர்ந்தன்று இவ் அழுங்கல் ஊரே – விரைந்த ஓட்டத்தையுடைய குதிரைகள் பூட்டிய அவருடை உயர்ந்த தேரின் வரவை அங்கு வராது இருக்குமாறு அலரால் தடுக்கப்பட்ட தன் தவறு மட்டும் அல்லாது அதை உணராது இங்குத் தேர் வந்தது எதனால் என ஆராய்ந்து வருத்தமும் அடைகின்றது இந்த ஆரவாரத்தையுடை ஊர் (ஊரே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 204, மள்ளனார், குறிஞ்சித் திணை – தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது, தோழி கேட்கும்படியாக
‘தளிர் சேர் தண் தழை தைஇ நுந்தை
குளிர்வாய் வியன் புனத்து எல்பட வருகோ?
குறுஞ்சுனைக் குவளை அடைச்சி நாம் புணரிய
நறுந்தண் சாரல் ஆடுகம் வருகோ?
இன் சொல் மேவலைப்பட்ட என் நெஞ்சு உணக்  5
கூறு இனி மடந்தை நின் கூர் எயிறு உண்கு’ என
யான் தன் மொழிதலின், மொழி எதிர் வந்து
தான் செய் குறியில் இனிய கூறி,
ஏறு பிரி மடப் பிணை கடுப்ப வேறுபட்டு
உறு கழை நிவப்பின் சிறுகுடிப் பெயரும்  10
கொடிச்சி செல் புறம் நோக்கி,
விடுத்த நெஞ்சம் விடல் ஒல்லாதே.

பாடல் பின்னணி:  தோழி தன் குறை முடிக்க வேண்டும் என்று கருதிய தலைவன் தோழி கேட்குமாறு தன் நெஞ்சிற்குச் சொல்லியது.

பொருளுரை“மடந்தையே!  தளிர் சேர்ந்த மெல்லிய தழை ஆடையை உடுத்தி உன் தந்தையின் குளிர் என்னும் கிளியை விரட்டும் கருவியால் பாதுகாக்கப்படும் அகன்ற தினைப்புனத்திற்கு யான் வரலாமா?  சிறிய சுனைகளில் மலர்ந்த குவளை மலர்களை அணிந்து நாம் கூடிய நறுமணமுடைய குளிர்ந்த மலைப்பக்கத்தில் விளையாடுவதற்கு யான் வரலாமா?  இவற்றிற்கு மேம்பட்ட இனிய மொழியை விரும்பி அதைப் பெறாமல் வருந்தும் என் நெஞ்சு மகிழும்படி ஒரு சொல் கூறு இப்பொழுது.  உன்னுடைய கூரிய பற்களில் ஊறும் அமுதைச் சுவைத்து மகிழ்வேன்” என யான் கூறியதால், நெஞ்சே! என் சொல்லுக்கு எதிராக வந்து, தான் செய்த குறியிடத்திற்கு என்னைக் கொண்டு சென்று இனிய சொற்களைக் கூறி, கலைமானைப் பிரிந்த பெண்மான் போல் வேறுபட்டு, மிக்க மூங்கில்கள் உயர்ந்த சிறுகுடிக்குச் செல்லும் தலைவியின் முதுகை நோக்கி அவளை நினைத்தலைக் கைவிடாது வருந்துகின்றாய்.  இப்பொழுது யான் என்ன செய்வேன்?

குறிப்பு:  ஒளவை துரைசாமி உரை – ‘மெய்தொட்டுப் பயிறல்’ (தொல்காப்பியம், களவியல் 11) என்னும் நூற்பாவில் ‘சொல் அவட் சார்த்தலின் புல்லிய வகையினும்’ என்றவிடத்து ‘வகை என்றதனானே, இதனின் வேறுபட வருவனவும் கொள்க’ என்று உரைத்து காட்டுவர் நச்சினார்க்கினியர்.  பகற்குறி, இரவுக்குறி – பகற்குறி தினைப்புனம் மற்றும் பிற இடங்களில் நிகழும்.  இரவுக்குறி இல்லத்தை ஒட்டியே நிகழும்.  எல்பட (2) – ஒளவை துரைசாமி உரை – ஞாயிறு தோன்றி விளங்கும் காலைப் பொழுது, எல்பட என்றவிடத்துப் படுதல், தோன்றுதல், பின்னத்தூர், அ. நாராயணசாமி ஐயர் உரை– பொழுது போதலும், H. வேங்கடராமன் உரை – கதிரவன் மறைந்த பின்.  உறு – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3).  எயிறு உண்கு (6) – ஒளவை துரைசாமி உரை – நின் பற்களிடத்து ஊறும் அமுதினைப் பருகுவேன், பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – நின்னுடைய எயிற்றைச் சுவைத்து மகிழ்வேன். எயிறு உண்கு (நற்றிணை 134) – ஒளவை துரைசாமி உரை – முத்தம் கொள்ளுதலை எயிறுண்டல் என்பது மரபு, பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – நின் முள் எயிற்றை முத்தங்கொள்வல்.  பிற பாடல்களில் எயிறு உண்ணுதல் – நற்றிணை 17 – நின் இலங்கு எயிறு உண்கு, நற்றிணை 134 – நின் முள் எயிறு உண்கு,  அகநானூறு 325 – வெய்ய மன்ற நின் வை எயிறு உணீஇய, கலித்தொகை 112 – மெல்ல முயங்கு நின் முள் எயிறு உண்கும்.

சொற்பொருள்:  தளிர் சேர் தண் தழை தைஇ நுந்தை குளிர்வாய் வியன் புனத்து எல்பட வருகோ – தளிர் சேர்ந்த மெல்லிய தழை ஆடையை உடுத்தி உன் தந்தையின் குளிர் என்னும் கிளியை விரட்டும் கருவியால் பாதுகாக்கப்படும் அகன்ற தினைப்புனத்திற்கு யான் வரலாமா (தைஇ – சொல்லிசை அளபெடை, குளிர்வாய் – குளிர் என்னும் கிளி கடி கருவியால் பாதுகாக்கப்படுகின்ற, வருகோ – வருகு தன்மை ஒருமை வினைமுற்று, ஓகாரம் அசைநிலை), குறுஞ்சுனைக் குவளை அடைச்சி நாம் புணரிய நறுந்தண் சாரல் ஆடுகம் வருகோ – சிறிய சுனைகளில் மலர்ந்த குவளை மலர்களை அணிந்து நாம் கூடிய நறுமணமுடைய குளிர்ந்த மலைப்பக்கத்தில் விளையாடுவதற்கு யான் வரலாமா (வருகோ – வருகு தன்மை ஒருமை வினைமுற்று, ஓகாரம் அசைநிலை), இன் சொல் மேவு அலைப்பட்ட என் நெஞ்சு உணக் கூறு – இவற்றிற்கு மேம்பட்ட இனிய மொழியை விரும்பி அதைப் பெறாமல் வருந்தும் என் நெஞ்சு மகிழும்படி ஒரு சொல் கூறு, இனி – இப்பொழுது, மடந்தை – மடந்தையே (அண்மை விளி), நின் கூர் எயிறு உண்கு என யான் தன் மொழிதலின் – உன்னுடைய கூரிய பற்களில் ஊறும் அமுதைச் சுவைத்து மகிழ்வேன் என யான் கூறியதால், மொழி எதிர் வந்து தான் செய் குறியில் இனிய கூறி – என் சொல்லுக்கு எதிராக வந்து தான் செய்த குறியிடத்திற்கு என்னைக் கொண்டு சென்று இனிய சொற்களைக் கூறி, ஏறு பிரி மடப் பிணை கடுப்ப வேறுபட்டு – கலைமானைப் பிரிந்த பெண்மான் போல் வேறுபட்டு (கடுப்ப – உவம உருபு), உறு கழை நிவப்பின் சிறுகுடிப் பெயரும் கொடிச்சி செல்புறம் நோக்கி விடுத்த நெஞ்சம் விடல் ஒல்லாதே – மிக்க மூங்கில்கள் உயர்ந்த சிறுகுடிக்குச் செல்லும் தலைவியின் முதுகை நோக்கி அவளை நினைத்தலைக் கைவிடாது (ஒல்லாதே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 205, இளநாகனார், பாலைத் திணை – தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது அல்லது தோழி தலைவனிடம் சொன்னது
அருவி ஆர்க்கும் பெருவரை அடுக்கத்து,
ஆளி நன்மான், வேட்டு எழு கோள் உகிர்ப்
பூம்பொறி உழுவை தொலைச்சிய வைந்நுதி
ஏந்து வெண்கோட்டு வயக் களிறு இழுக்கும்
துன் அருங்கானம் என்னாய், நீயே  5
குவளை உண்கண் இவள் ஈண்டு ஒழிய,
ஆள் வினைக்கு அகறி ஆயின், இன்றொடு
போயின்று கொல்லோ தானே, படப்பைக்
கொடு முள் ஈங்கை நெடு மா அம் தளிர்
நீர் மலி கதழ் பெயல் தலைஇய  10
ஆய் நிறம் புரையும் இவள் மாமைக் கவினே.

பாடல் பின்னணி:  செலவு அழுங்கியது.

பொருளுரைஅருவிகள் ஒலிக்கும் பெரிய மலைப்பக்கத்தில், ஆளி என்னும் நல்ல விலங்கு இரையை விரும்பி எழுந்து, கொல்ல வல்ல நகங்களையும் அழகிய வரிகளையுமுடைய புலியால் கொல்லப்பட்ட கூரிய நுனியையுடைய வெள்ளை நிறக் கோட்டையுடைய (தந்தத்தையுடைய, மருப்பையுடைய) வலிமையுடைய களிற்று யானையின் உடலை இழுத்துச் செல்லும், மக்கள் செல்லுவதற்கு அரிய காடு என நீ எண்ணாது உள்ளாய்.  குவளை மலர்கள் போன்ற மையிட்ட கண்களையுடைய இவள் இங்கே தனிமையுற்று இருக்குமாறு, நீ பொருள் ஈட்டுவதற்குச் செல்வாய் ஆயின், இன்றுடன் போய் விடும், தோப்பில் உள்ள வளைந்த முள்ளையுடைய இண்டின் நெடிய கரிய அழகிய தளிர் மீது நீர் மிக்க விரைந்து பெய்த மழை பெய்தபொழுது உண்டாகிய அழகிய நிறத்தை ஒத்திருக்கும் மாந்தளிர் நிறம் கொண்ட இவளுடைய அழகு.

குறிப்பு:  ஒளவை துரைசாமி உரை – ‘கரணத்தின் அமைந்து முடிந்த காலை’ (தொல்காப்பியம், கற்பியல் 5) என்ற நூற்பாவின்கண் ‘வேற்று நாட்டு அகல்வயின் விழுமத்தானும்’ என்பதன் உரையில் விழுமமாவன பிரியக் கருதியவன் பள்ளியிடத்துக் கனவிற் கூறுவனவும், போவேமோ, தவிர்வேமா என வருந்திக் கூறுவனவும், இவள் நலம் திரியும் என்றலும், பிரியுங்கொல் என்று ஐயுற்ற தலைவியை ஐயந்தீரக் கூறலும், நெஞ்சிற்குச் சொல்லி அழுங்குதலும் பிறவுமாம்’ என்று கூறி இப்பாட்டைக் காட்டி ‘இஃது இவள் நலன் அழியும் என்று செலவு அழுங்கியது’ என்பர் நச்சினார்க்கினியர்.  ஆளி நன்மான் வேட்டு எழு கோள் உகிர்ப் பூம்பொறி உழுவை தொலைச்சிய வைந்நுதி ஏந்து வெண்கோட்டு வயக் களிறு இழுக்கும் (வரிகள் 2–4) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – நல்ல ஆளி என்ற விலங்கு புலியால் அடிக்கப்பட்ட களிற்று யானையை இரையாக இழுத்துச் செல்லும், ஒளவை துரைசாமி உரை – ஆளியாகிய நல்ல விலங்கு புலியொடு பொருது அதனைக் கொன்ற களிற்றினைக் கொன்று ஈர்த்துக் கொண்டு செல்லும்.  ஆளி – அகநானூறு 78, 252, 381, நற்றிணை 205, புறநானூறு 207, பொருநராற்றுப்படை 140, குறிஞ்சிப்பாட்டு 252.  ஆளி (பொருநராற்றுப்படை 140) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – அரிமா, அரிமாப் போன்ற வேறொரு விலங்கென எண்ணவும் இடமுள்ளது.  தானே (8) – ஒளவை துரைசாமி உரை – கட்டுரைச் சுவைபட வந்தது.  மாமைக்கவின் (11) – ஒளவை துரைசாமி உரை – மாந்தளிரின் தன்மையையுடைய நிறவழகு.  கதழ் – கதழ்வும் துனைவும் விரைவின் பொருள் (தொல்காப்பியம், உரியியல் 19).  வை – வையே கூர்மை (தொல்காப்பியம், உரியியல் 91).

சொற்பொருள்:  அருவி ஆர்க்கும் பெருவரை அடுக்கத்து ஆளி நன்மான் வேட்டு எழு கோள் உகிர்ப் பூம்பொறி உழுவை தொலைச்சிய வைந்நுதி ஏந்து வெண்கோட்டு வயக் களிறு இழுக்கும் துன் அருங்கானம் என்னாய் – அருவிகள் ஒலிக்கும் பெரிய மலைப்பக்கத்தில் ஆளி என்னும் நல்ல விலங்கு இரையை விரும்பி எழுந்து கொல்ல வல்ல நகங்களையும் அழகிய வரிகளையுமுடைய புலியால் கொல்லப்பட்ட கூரிய நுனியையுடைய வெள்ளை நிறக் கோட்டையுடைய (தந்தத்தையுடைய, மருப்பையுடைய) வலிமையுடைய களிற்று யானையின் உடலை இழுத்துச் செல்லும் மக்கள் செல்லுவதற்கு அரிய காடு என நீ எண்ணாது உள்ளாய், நீயே – நீ (ஏகாரம் அசைநிலை), குவளை உண்கண் இவள் ஈண்டு ஒழிய ஆள் வினைக்கு அகறி ஆயின் – குவளை மலர்கள் போன்ற மையிட்ட கண்களையுடைய இவள் இங்கே தனிமையுற்று இருக்குமாறு நீ பொருள் ஈட்டுவதற்குச் செல்வாய் ஆயின், இன்றொடு போயின்று கொல்லோ தானே – இன்றுடன் போய் விடும் அது (கொல்லோ – கொல் ஓ அசைநிலைகள்), படப்பைக் கொடு முள் ஈங்கை நெடு மா அம் தளிர் நீர் மலி கதழ் பெயல் தலைஇய ஆய் நிறம் புரையும் இவள் மாமைக் கவினே – தோப்பில் உள்ள வளைந்த முள்ளையுடைய இண்டின் நெடிய கரிய அழகிய தளிர் மீது நீர் மிக்க விரைந்து பெய்த மழை பெய்த பொழுது உண்டாகிய அழகிய நிறத்தை ஒத்திருக்கும் மாந்தளிர் நிறம் கொண்ட இவளுடைய அழகு (ஈங்கை – தொட்டாற்சுருங்கி, touch–me–not plant, Mimosa Pudica, தலைஇய – அளபெடை, புரை – உவம உருபு, கவினே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 206, ஐயூர் முடவனார் குறிஞ்சித் திணை – தோழி சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
‘துய்த் தலைப் புனிற்றுக் குரல் பால் வார்பு இறைஞ்சித்,
தோடு அலைக் கொண்டன ஏனல் என்று,
துறுகல் மீமிசைக் குறுவன குழீஇச்
செவ்வாய்ப் பாசினம் கவரும்’ என்று அவ்வாய்த்
தட்டையும் புடைத்தனை கவணையும் தொடுக்க என  5
எந்தை வந்து உரைத்தனனாக, அன்னையும்,
‘நன்னாள் வேங்கையும் மலர்கமா இனி’ என
என் முகம் நோக்கினள் எவன் கொல் தோழி?
செல்வாள் என்று கொல்? செறிப்பல் என்று கொல்?
கல் கெழு நாடன் கேண்மை  10
அறிந்தனள் கொல்? அஃது அறிகலென் யானே.

பாடல் பின்னணி:  வேங்கை மரங்கள் மலரும் காலமே தினை முற்றி அறுவடைக்கு உரியதாகும்.  வேங்கை மலர்கள் மலர்ந்து, கதிர்கள் அறுக்கப்படுமாயின், தலைவி தினைப்புனத்திற்கு வாராள்.  இற்செறிப்புக்கு உள்ளாவாள் என்பதை உணர்த்தினாள்.  வரைவு கடாயது.

பொருளுரை“பஞ்சு போன்ற நுனியையுடைய இளம் கதிர் கொத்துக்கள் பால்கொண்டு முற்றியதனால் தலை சாய்ந்து மேலே உள்ள தோடுகள் அசைதல் கொண்டன.  பாறையின் மேல் தினையைக் கொய்வதற்காக ஒன்று சேர்ந்து திரண்ட சிவந்த வாயையுடைய பச்சைக்கிளியின் கூட்டம் தினையைக் கவர்ந்துகொண்டு போகும்.  அங்கு நீ சென்று தட்டையையும் புடைத்துக் கவணில் கற்களையும் தொடுத்து அவற்றை விரட்டிவிட்டு வா” என என் தந்தை கூறிச் சென்றானாக, அன்னையும், “நல்ல நாளை அறிவிக்கும் வேங்கை மரங்களும் மலரட்டும்” என்றாள்.  எதனால் தோழி? தினைப்புனத்தைக் காக்க இவளை அனுப்பலாம் என்றோ?  இல்லத்தில் இவளைச் செறித்து வைக்கலாம் என்றோ?  மலைகள் பொருந்திய நாடனின் நட்பை அவள் அறிந்தாளோ?  அதை யான் அறியேன்.

குறிப்பு:  புனிறு – புனிறு என் கிளவி ஈன்றணிமைப் பொருட்டே (தொல்காப்பியம், உரியியல் 79).

சொற்பொருள்:  துய்த் தலைப் புனிற்றுக் குரல் பால் வார்பு இறைஞ்சித் தோடு அலைக் கொண்டன ஏனல் என்று துறுகல் மீமிசைக் குறுவன குழீஇச் செவ்வாய்ப் பாசினம் கவரும் என்று அவ்வாய்த் தட்டையும் புடைத்தனை கவணையும் தொடுக்க என எந்தை வந்து உரைத்தனனாக – பஞ்சு போன்ற நுனியையுடைய இளம் கதிர்க் கொத்துக்கள் பால்கொண்டு (மாவு கொண்டு) முற்றி அதனால் தலை சாய்ந்து மேலே உள்ள தோடுகள் அசைதல் கொண்டன என்று பாறையின் மேல் கொய்வதற்காக ஒன்று சேர்ந்து திரண்டு சிவந்த வாயையுடைய பச்சைக்கிளியின் கூட்டம் கவர்ந்துகொண்டு போகும் என்று அங்கு நீ சென்று தட்டையையும் புடைத்து கவணில் கற்களையும் தொடுத்து வா என என் தந்தை கூறிச் சென்றானாக (மீமிசை – ஒருபொருட் பன்மொழி, குழீஇ – செய்யுளிசை அளபெடை, அவ்வாய் – அவ்விடம்), அன்னையும் நன்னாள் வேங்கையும் மலர்கமா இனி என என் முகம் நோக்கினள் – அன்னையும் நல்ல நாளை அறிவிக்கும் வேங்கை மரங்களும் மலரட்டும் என என் முகம் நோக்கினள் (வேங்கை மரம் – Kino Tree, Pterocarpus marsupium, மலர்கமா – மா வியங்கோள் அசைநிலை), எவன் கொல் தோழி – எதனால் தோழி (கொல் – அசைநிலை), செல்வாள் என்று கொல் – தினைப்புனத்தைக் காக்க இவளை அனுப்பலாம் என்றோ (கொல் – ஐயப்பொருட்டு), செறிப்பல் என்று கொல் – இல்லத்தில் இவளைச் செறித்து வைக்கலாம் என்றோ (கொல் – ஐயப்பொருட்டு), கல் கெழு நாடன் கேண்மை அறிந்தனள் கொல் – மலைகள் பொருந்திய நாடனின் நட்பை அவள் அறிந்தாளோ, அஃது அறிகலென் யானே – அதை யான் அறியேன் (யானே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 207, பாடியவர் பெயர் கிடைக்கவில்லை, நெய்தல் திணை – தோழி செவிலித்தாயிடம் சொன்னது
கண்டல் வேலிக் கழி சூழ் படப்பை
முண்டகம் வேய்ந்த குறியிறைக் குரம்பைக்
கொழு மீன் கொள்பவர் பாக்கம் கல்லென,
நெடுந்தேர் பண்ணிவரல் ஆனாதே;
குன்றத்து அன்ன குவவு மணல் நீந்தி  5
வந்தனர் பெயர்வர் கொல் தாமே? அல்கல்
இளையரும் முதியரும் கிளையுடன் குழீஇக்,
கோட் சுறா எறிந்தென சுருங்கிய நரம்பின்
முடி முதிர் பரதவர் மட மொழிக் குறுமகள்,
வலையும் தூண்டிலும் பற்றி, பெருங்கால்  10
திரை எழு பௌவம் முன்னிய
கொலை வெஞ்சிறாஅர்பாற் பட்டனளே.

பாடல் பின்னணி:  தோழி செவிலித்தாய்க்கு அறத்தொடு நின்றது.  அயலார் வரைவு வேண்டி வருவதை அறிந்த தோழி உரைத்தது.

பொருளுரைகண்டல் மரங்களை வேலியாகவுடைய உப்பங்கழியால் சூழப்பட்ட தோட்டங்களில் அமைந்த முள்ளிச் செடிகளால் வேய்ந்த குறுகிய கூரைகளையுடைய குடில்களில் வாழும் கொழுத்த மீன்களைப் பிடிக்கும் பரதவர்களின் ஊர் முழுவதும் கல்லென்னும் ஓசையுண்டாகும்படி நெடிய தேரைச் செலுத்திக் கொண்டு நம் தலைவர் வருவது தடுக்கக்கூடியது இல்லை.  குன்றை ஒத்த உயர்ந்த மணல் பரப்பைக் கடந்து வந்த நம் தலைவர் தனியே இனித் திரும்பிச் செல்வாரோ?  இரவில் இளைஞர்களும் முதியவர்களும் தங்கள் சுற்றத்துடன் கூடி கொல்லும் தன்மையுடைய சுறா மீன்கள் வலையைக் கிழித்ததால், சுருங்கிய நரம்புகளைக் கொண்டு அந்த வலையை முடிகின்ற முதிய பரதவரின் மடப்பம் நிறைந்த சொற்களையுடைய இளமகள், வலையையும் தூண்டிலையும் பற்றிப் பெரிய காற்று வீசுவதால் அலைகள் எழுகின்ற கடலில் செல்லுகின்ற கொலைத் தொழிலையுடைய கொடிய சிறுவர்களிடம் அகப்பட்டு அழிவாள்.

குறிப்பு:  தொல்காப்பியம், களவியல் 35 – தோழி தானே செவிலி மகளே.  உள்ளுறை – ஒளவை துரைசாமி உரை – கொலை வெஞ்சிறார் ஆகலின், அவர் கைப்படுவன இறந்துபடுதல் போலத் தலைமகளும் இறந்துபடுவாள் என்றும் தோழி உள்ளுறுத்து உரைத்தமை காண்க.  ஒளவை துரைசாமி உரை – ‘நாற்றமும் தோற்றமும்’ (தொல்காப்பியம், களவியல் 24) என்ற நூற்பாவின்கண் ‘பிறன் வரைவாயினும்’ என்றதற்கு இதனைக் காட்டி, ‘இது நொதுமலர் வரைவு மலிந்தமை தோழி சிறைப்புறமாகக் கூறியது என்றும்’ இதனுள் ‘பாற்பட்டனன் எனத் தெளிவுபற்றி இறந்தகாலத்தாற் கூறினள்’ என்றும் கூறுவர் நச்சினார்க்கினியர்.

சொற்பொருள்:  கண்டல் வேலிக் கழி சூழ் படப்பை முண்டகம் வேய்ந்த குறியிறைக் குரம்பைக் கொழு மீன் கொள்பவர் பாக்கம் கல்லென நெடுந்தேர் பண்ணிவரல் ஆனாதே – கண்டல் மரங்களை வேலியாகவுடைய உப்பங்கழியால் சூழப்பட்ட தோட்டங்களில் முள்ளிச் செடிகளால் வேய்ந்த குறுகிய கூரைகளையுடைய குடில்களில் வாழும் கொழுத்த மீன்களைப் பிடிக்கும் மீனவர்களின் ஊர் முழுவதும் கல்லென்னும் ஓசையுண்டாக நெடிய தேரைச் செலுத்திக் கொண்டு நம் தலைவர் வருவது தடுக்கக்கூடியது இல்லை (கண்டல் – Rhizophora mucronate which is a mangrove tree or Pandanus odoratissimus according to the University of Madras Lexicon, முண்டகம் – நீர் முள்ளி, Hygrophila spinosa), குன்றத்து அன்ன குவவு மணல் நீந்தி வந்தனர் பெயர்வர் கொல் – குன்றை ஒத்த உயர்ந்த மணல் பரப்பைக் கடந்து வந்த நம் தலைவர் தனியே இனித் திரும்பிச் செல்வாரோ (குன்றத்து – குன்றம், அத்துச் சாரியை, கொல் – ஐயப்பொருட்டு), தாமே – தாம் ஏ அசைநிலைகள், அல்கல் இளையரும் முதியரும் கிளையுடன் குழீஇக் கோட் சுறா எறிந்தென சுருங்கிய நரம்பின் முடி முதிர் பரதவர் மட மொழிக் குறுமகள் – இரவில் இளைஞர்களும் முதியவர்களும் தங்கள் சுற்றத்துடன் கூடி கொல்லும் தன்மையுடைய சுறா மீன்கள் கிழித்ததால் சுருங்கிய நரம்புகளைக் கொண்டு வலையை முடிகின்ற முதிய பரதவரின் மடப்பம் நிறைந்த சொற்களையுடைய இளமகள் (குழீஇ – செய்யுளிசை அளபெடை), வலையும் தூண்டிலும் பற்றி பெருங்கால் திரை எழு பௌவம் முன்னிய கொலை வெஞ்சிறாஅர்பாற் பட்டனளே – வலையையும் தூண்டிலையும் பற்றிப் பெரிய காற்று வீசுவதால் அலைகள் எழுகின்ற கடலில் செல்லுகின்ற கொலைத் தொழிலையுடைய கொடிய சிறுவர்களிடம் அகப்பட்டு அழிவாள் (சிறாஅர் – அளபெடை, பட்டனளே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 208, நொச்சி நியமங்கிழார், பாலைத் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
விறல் சால் விளங்கு இழை நெகிழ விம்மி,
அறல் போல் தெள் மணி இடை முலை நனைப்ப,
விளிவு இல கலுழும் கண்ணொடு பெரிது அழிந்து,
எவன் இனைபு வாடுதி, சுடர் நுதல் குறுமகள்?
செல்வார் அல்லர் நம் காதலர்; செலினும்  5
நோன்மார் அல்லர் நோயே; மற்று அவர்
கொன்னும் நம்புங்குரையர் தாமே;
சிறந்த அன்பினர்; சாயலும் உரியர்;
பிரிந்த நம்மினும் இரங்கி, அரும் பொருள்
முடியாது ஆயினும் வருவர்; அதன்தலை  10
இன் துணைப் பிரிந்தோர் நாடித்
தருவது போலும், இப் பெருமழைக் குரலே?

பாடல் பின்னணி:  பொருள்வயின் தலைவன் பிரிவான் என்பதைக் குறிப்பால் உணர்ந்து வருந்திய தலைவியைத் தோழி ஆற்றுவித்தது.

பொருளுரைஒளிரும் நெற்றியையுடைய இளமகளே!  அழகு மிக்க ஒளிரும் அணிகலன்கள் நெகிழ, முத்து போன்ற கண்ணீர்த் துளிகள் வடிந்து முலைகளை நனைக்கக் கண்ணீர் நீங்காத கலங்கிய கண்களுடன் மிகவும் வருந்தி எதனைக் கருதி நீ வாடுகின்றாய்?  நம்மைவிட்டு நீங்கிச் செல்லமாட்டார் நம் தலைவர்.  சென்றாலும் அவர் காதல் துன்பத்தைப் பொறுக்கும் ஆற்றல் உடையவர் இல்லை.  உன் மேல் மிகவும் விருப்பமுடையவர் அவர்.  சிறந்த அன்புடையவர்.  மென்மையுடையவர்.  நம்மைக்காட்டிலும் இரக்கம் கொண்டு, ஈட்டுவதற்குரிய அரிய பொருளை அடையாவிட்டாலும் அவர் திரும்பி வருவார்.  அதற்கு மேலும் இனிய துணையைப் பிரிந்தவர்களை நாடிச்சென்று அவர்களைக் கொண்டு வந்து கூட்டுவது போல் உள்ளது இப்பெரிய மழை முகிலின் இடி குரல்.  நீ வருந்தாதே!

குறிப்பு:  கொன் – அச்சம், பயம் இலி, காலம், பெருமை, என்று அப் பால் நான்கே கொன்னைச் சொல்லே (தொல்காப்பியம், இடையியல் 6).  குரை – ஏயும் குரையும் இசைநிறை அசைநிலை ஆயிரண்டு ஆகும் இயற்கைய என்ப (தொல்காப்பியம், இடையியல் 24).  நம் காதலர் – தலைவியும் தோழியும் மிக நெருங்கிய நட்பு உடையவர்கள் என்பதாலும், தலைவியின் களவு ஒழுக்கத்திற்குத் தோழி உதவுவதாலும், தலைவனைத் தோழி நன்கு அறிந்தவள் என்பதாலும், இவ்வாறு பன்மையாற் கூறினாள் தோழி.

சொற்பொருள்:  விறல் சால் விளங்கு இழை நெகிழ விம்மி – அழகு மிக்க ஒளிரும் அணிகலன்கள் நெகிழ அழுது, அறல் போல் தெள் மணி இடை முலை நனைப்ப விளிவு இல கலுழும் கண்ணொடு பெரிது அழிந்து எவன் இனைபு வாடுதி – முத்து போன்ற கண்ணீர்த் துளிகள் முலைகளை நனைக்க கண்ணீர் நீங்காத கலங்கிய கண்களுடன் மிகவும் வருந்தி எதனைக் கருதி நீ வாடுகின்றாய் (இல – இல்லை என்பதன் இடைக்குறை விகாரம், வாடுதி – முன்னிலை வினைமுற்று), சுடர் நுதல் குறுமகள் – ஒளிரும் நெற்றியையுடைய இளமகளே (குறுமகள் – அண்மை விளி), செல்வார் அல்லர் நம் காதலர் – செல்லமாட்டார் நம் தலைவர், செலினும் நோன்மார் அல்லர் நோயே – சென்றாலும் காதல் துன்பத்தைப் பொறுக்கும் ஆற்றல் உடையவர் இல்லை அவர், மற்று – அசைநிலை, அவர் கொன்னும் நம்புங்குரையர் – உன் மேல் மிகவும் விருப்பமுடையவர் (கொன் – பெருமை உணர்த்தியது, நம்புங்குரையர் – குரை என்னும் இடைச்சொல் குறிப்பு வினைமுற்றாக ஆயிற்று), தாமே – தாம், ஏ அசைநிலைகள், சிறந்த அன்பினர் – சிறந்த அன்புடையவர், சாயலும் உரியர் – மென்மையுடையவர், பிரிந்த நம்மினும் இரங்கி அரும் பொருள் முடியாது ஆயினும் வருவர் – நம்மைக்காட்டிலும் இரக்கம் கொண்டு ஈட்டுவதற்குரிய அரிய பொருளை அடையாவிட்டாலும் திரும்பி வருவார், அதன்தலை இன் துணைப் பிரிந்தோர் நாடித் தருவது போலும் இப் பெருமழைக் குரலே – அதற்கு மேலும் இனிய துணையைப் பிரிந்தவர்களை நாடிச்சென்று அவர்களைக் கொண்டு வந்து கூட்டுவது போல் உள்ளது இப்பெரிய மழை முகிலின் இடி குரல் (குரலே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 209, நொச்சி நியமங்கிழார், குறிஞ்சித் திணை – தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது
மலை இடம்படுத்துக் கோட்டிய கொல்லைத்
தளி பதம் பெற்ற கான் உழு குறவர்,
சில வித்து அகல இட்டென பல விளைந்து,
இறங்கு குரல் பிறங்கிய ஏனல் உள்ளாள்,
மழலை அம் குறுமகள் மிழலை அம் தீங்குரல்  5
கிளியும் தாம் அறிபவ்வே; எனக்கே
படுங்கால் பையுள் தீரும்; படாஅது
தவிரும் காலை ஆயின், என்
உயிரோடு எல்லாம் உடன் வாங்கும்மே.

பாடல் பின்னணி:  தலைவியால் குறை மறுக்கப்பட்டுப் பின்னின்ற தலைவன் வருந்தித் தன் நெஞ்சிடம் கூறியது.

பொருளுரைமலையிடத்தில் அகலப்படுத்தி வளைத்த கொல்லையில் மழை பெய்ததால் உழவிற்கு உரிய பதம் பெற்ற காட்டினை உழுகின்ற குறவர் (குறிஞ்சி நிலத்தவர்) சில விதைகளை இடையில் இடம் இருக்குமாறு விதைத்து அவை மிக்க விளைந்து சாய்ந்த கதிர்களின் கொத்துக்களுடன் விளங்கிய தினைப்புனத்தில் உள்ள மழலை மாறாத இளமகளின் பேசும் இனிய குரலைக் கிளிகளும் அறியும்.  அவள் என்னருகிலிருந்து பேசினால் என் காதல் நோய் தீரும். அவள் என் அருகிலிருந்து பேசாவிட்டால் என் உயிருடன் என் அறிவு நாணம் ஆகிய எல்லாம் நீங்கும்.

குறிப்பு:  இறைச்சி – கு. வெ. பாலசுப்பிரமணியன் உரை – சில விதைகள் இடப் பலவாகப் பயன் தரும் ஏனல் என்றது அவ்வேனல் காக்கும் இளையோளை விரும்பிய தலைவனும் தோழியிடம் கூறும் சில மொழிகளால் தலைவியிடம் பலவாய இன்பம் பெறுவான் என்று குறித்தது.

சொற்பொருள்:  மலை இடம்படுத்துக் கோட்டிய கொல்லைத் தளி பதம் பெற்ற கான் உழு குறவர் சில வித்து அகல இட்டென பல விளைந்து இறங்கு குரல் பிறங்கிய ஏனல் உள்ளாள் மழலை அம் குறுமகள் – மலையிடத்தில் அகலப்படுத்தி வளைத்த கொல்லையில் மழை பெய்ததால் உழவிற்கு உரிய பதம் பெற்ற காட்டினை உழுகின்ற குறவர் (குறிஞ்சி நிலத்தவர்) சில விதைகளை இடையில் இடம் இருக்குமாறு விதைத்து அவை மிக்க விளைந்து சாய்ந்த கதிர்களின் கொத்துக்களுடன் விளங்கிய தினைப்புனத்தில் உள்ள மழலை மாறாத இளமகள், மிழலை அம் தீங்குரல் கிளியும் தாம் அறிபவ்வே – பேசும் இனிய குரலைக் கிளிகளும் அறியும் (அறிபவ்வே – வகரம் விரித்தல் விகாரம்), எனக்கே படுங்கால் பையுள் தீரும் – அவள் என்னருகிலிருந்து பேசினால் என் காதல் நோய் தீரும் (படுங்கால் – கால் ஈற்று வினையெச்சம்), படாஅது தவிரும் காலை ஆயின் என் உயிரோடு எல்லாம் உடன் வாங்கும்மே – என் அருகிலிருந்து அவள் பேசாவிட்டால் என் உயிருடன் என் அறிவு நாணம் ஆகிய எல்லாம் நீங்கும் (படாஅது – அளபெடை, வாங்கும்மே – செய்யுளோசை நோக்கி மகர ஒற்று விரிந்தது)

நற்றிணை 210, மிளைகிழார் நல்வேட்டனார், மருதத் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
அரிகால் மாறிய அம் கண் அகல்வயல்
மறு கால் உழுத ஈரச் செறுவின்,
வித்தொடு சென்ற வட்டி பற்பல
மீனொடு பெயரும் யாணர் ஊர!
நெடிய மொழிதலும் கடிய ஊர்தலும்  5
செல்வம் அன்று; தன் செய் வினைப் பயனே
சான்றோர் செல்வம் என்பது, சேர்ந்தோர்
புன்கண் அஞ்சும் பண்பின்
மென்கண் செல்வம் என்பதுவே.

பாடல் பின்னணி:  பாரத்தையிற் பிரிந்து வந்தான் தலைவன்.  தலைவி ஊடினாள்.  அப்பொழுது தோழியின் உதவியை நாடிய தலைவனிடம் தோழி உரைத்தது.

பொருளுரைநெல்லை அறுத்து நீக்கிய அழகிய இடம் அகன்ற வயலில் மறுபடியும் உழுதற்குரிய ஈரமான சேற்று நிலத்தில் விதைக்க கூடைகளில் (கடகப்பெட்டியில்) விதையுடன் சென்று மிகப் பலவாகிய மீன்களுடன் வரும் வளமையுடைய ஊரின் தலைவனே!  பெருமொழிகளைக் கூறுவதும் விரைந்த செலவினையுடைய தேரில் செல்வதும் செல்வம் அன்று.  முன்பு செய்த வினையின் பயனே அவை.  சான்றோர் செல்வம் எனக் கூறுவது, தம்மைச் சேர்ந்தவர்களின் துன்பத்தைக் கண்டு அஞ்சி அவர்களின் துன்பத்தைப் போக்கி அருளுடன் அவர்களைக் காக்கும் பண்பு தான்.

குறிப்பு:  வட்டி (3) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – கடகப்பெட்டி, ஒளவை துரைசாமி உரை – கூடைகள்.  நெடிய மொழிதலும் (5) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – உயர்த்துக் கூறப்படுவது, ஒளவை துரைசாமி உரை – சொல்லும் செயலும் வேறுபடாமை வற்புறுத்தும் ஆண்மை மொழிகளை வழங்குவதும்.  உள்ளுறை (1) – ஒளவை துரைசாமி உரை – ஈரச் செறுவயின் உயர்ந்த வித்தொடு சென்ற வட்டி, அதனால் பெறலாகும் விளை பயனைப் பெறுமுன், இழிந்த பல்வேறு மீன்களைக் கொடுபோந்தாற்போல, உயர்ந்த தலைவியொடு கூடி இல்லின்கண் நல்லறஞ்செய்ய புக்க நீ அதன் பயனைப் பெறுமுன் பரத்தையர் பலர்பாற் பெறலாகும் இழிந்தப் பயனைப் பெறாநின்றனை என்பது.  உள்ளுறை (2) – கு. வெ. பாலசுப்பிரமணியன் உரை – விதைகளுடன் கொண்டு சென்ற  கடகப் பெட்டியில் மீனொடு பெயரும் என்பது பரத்தையரைக் கொணர்ந்து தலைவனைப் புணர்த்திய பாணன் தான் விரும்பும் பொருளைப் பெற்று  மீள்வான் என்பது.  யாணர் – புதிதுபடற் பொருட்டே யாணர்க் கிளவி (தொல்காப்பியம், உரியியல் 83).

சொற்பொருள்:  அரிகால் மாறிய அம் கண் அகல் வயல் மறு கால் உழுத ஈரச் செறுவின் வித்தொடு சென்ற வட்டி பற்பல மீனொடு பெயரும் யாணர் ஊர – நெல்லை அறுத்து நீக்கிய அழகிய இடம் அகன்ற வயலில் மறுபடியும் உழுதற்குரிய ஈரமான சேற்று நிலத்தில் விதைக்க கூடைகளில் (கடகப்பெட்டியில்) விதையுடன் சென்று மிகப் பலவாகிய மீன்களுடன் வரும் வளமையுடைய ஊரின் தலைவனே (அரிகால் – பயிரின் அரிந்த தாள், ஊர – அண்மை விளி), நெடிய மொழிதலும் கடிய ஊர்தலும் செல்வம் அன்று – பெருமொழிகளைக் கூறுவதும் விரைந்த செலவினையுடைய தேரில் செல்வதும் செல்வம் அன்று, தன் செய் வினைப் பயனே – முன்பு செய்த வினையின் பயனே, சான்றோர் செல்வம் என்பது – சான்றோர் செல்வம் எனக் கூறுவது, சேர்ந்தோர் புன்கண் அஞ்சும் பண்பின் மென்கண் செல்வம் என்பதுவே – தம்மைச் சேர்ந்தவர்களின் துன்பத்தைக் கண்டு அஞ்சி அவர்களின் துன்பத்தைப் போக்கி அருளுடன் அவர்களைக் காக்கும் பண்பே செல்வம் ஆகும் (என்பதுவே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 211, கோட்டியூர் நல்லந்தையார், நெய்தல் திணை – தோழி சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
யார்க்கு நொந்து உரைக்கோ யானே, ஊர் கடல்
ஓதம் சென்ற உப்புடைச் செறுவில்,
கொடுங்கழி மருங்கின், இரை வேட்டு எழுந்த
கருங்கால் குருகின் கோள் உய்ந்து போகிய
முடங்கு புற இறவின் மோவாய் ஏற்றை,  5
எறி திரை தொகுத்த எக்கர் நெடுங்கோட்டுத்
துறு கடற் தலைய தோடு பொதி தாழை
வண்டுபடு வான் போது வெரூஉம்
துறை கெழு கொண்கன் துறந்தனன் எனவே?

பாடல் பின்னணி:  தலைவியின் கூற்றைத் தோழி தன் கூற்றாகக் கொண்டு கூறியது.  களவொழுக்கத்தை மேற்கொண்ட தலைவன் மணம் செய்து கொள்ளாது நீட்டித்ததாலே, தலைவி ஒருபடியாக ஆற்றாளாமென்று அறிந்த தோழி, அங்கு ஒருபுறம் வந்திருந்த தலைவன் அறிந்து விரைவில் மணம் புரிந்துகொள்ளுமாறு உள்ளுறையாலே தலைவி படும் துன்பத்தைக் கூறுகின்றாள்.  தன் உறு வேட்கை கிழவன் முன் கிளத்தல் எண்ணும் காலை கிழத்திக்கு இல்லை (தொல்காப்பியம், களவியல் 28).

பொருளுரைஊர்ந்து செல்லுகின்ற கடலின் நீர் ஓடிச்சென்று அடையும் உப்புடைய சேற்றுடன் இருக்கும் வளைந்த உப்பங்கழியின் அருகில் இரையை விரும்பி எழுந்த கரிய காலையுடைய குருகின் கொள்ளுதலில் இருந்து தப்பித்து ஓடிய வளைந்த முதுகையும் உயர்ந்த வாயையுமுடைய இறால் மீனின் ஆண், மோதுகின்ற அலைகள் கூட்டிய மணல் மேடாகிய நீண்ட கரையில் உள்ள நெருங்கிய கடலின் புறத்தில் இலைகள் பொதிந்த தாழையின் வண்டுகள் மொய்க்கின்ற வெள்ளை மலர்களைக் கண்டு அஞ்சி ஓடும் துறை பொருந்திய தலைவன் என்னைத் துறந்தான் என்று, யாரிடம் நான் வருந்தி உரைப்பேன்?

குறிப்பு:  உள்ளுறை – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – இரை தேடி வந்த குருகு பற்றுதலைத் தப்பியோடிய இறாமீன் தாழம்பூவை நோக்கிக் குருகெனக் கருதி, அஞ்சுமென்றது, ஊரார் பழித் தூற்றத் தொடங்கலும் அதற்கஞ்சிய தலைவி அன்னையைக் கண்டவிடத்தும் ஏதிலாட்டியர் கூற்றை மேற்கொண்டு சினந்து வருவாள் கொல்லோவென அஞ்சாநிற்கும் என்றதாம்.  ஊர்கடல் (1) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – ஊர்ந்து செல்லுகின்ற கடல்நீர், ஒளவை துரைசாமி உரை – பரந்த கடலின் பேருக்கு.  மோவாய் (5) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – உயர்ந்த வாய், ஒளவை துரைசாமி உரை – நீண்ட மீசை.  தலைவி கூறுவதுபோல் தோழி கூறுதல் – அகநானூறு 362, நற்றிணை 28, 98, 124, 132, 175, 178, 191, 211, 251, 292, கலித்தொகை 18, 70, குறுந்தொகை 236, 238, ஐங்குறுநூறு 45.  ஏற்றை – ஆற்றலொடு புணர்ந்த ஆண்பாற்கு எல்லாம் ஏற்றைக் கிளவி உரித்து என மொழிப (தொல்காப்பியம், மரபியல் 50).

சொற்பொருள்:  யார்க்கு நொந்து உரைக்கோ யானே – யாரிடம் நான் வருந்தி உரைப்பேன் (உரைக்கோ – உரைக்கு தன்மை வினைமுற்று, ஓ அசைநிலை, யானே – ஏகாரம் அசைநிலை), ஊர் கடல் ஓதம் சென்ற உப்புடைச் செறுவில் கொடுங்கழி மருங்கின் இரை வேட்டு எழுந்த கருங்கால் குருகின் கோள் உய்ந்து போகிய முடங்கு புற இறவின் மோவாய் ஏற்றை எறி திரை தொகுத்த எக்கர் நெடுங்கோட்டுத் துறு கடற் தலைய தோடு பொதி தாழை வண்டுபடு வான் போது வெரூஉம் துறை கெழு கொண்கன் துறந்தனன் எனவே – ஊர்ந்து செல்லுகின்ற கடலின் நீர் ஓடிச்சென்று அடையும் உப்புடைய சேற்றுடன் இருக்கும் வளைந்த உப்பங்கழியின் அருகில் இரையை விரும்பி எழுந்த கரிய காலையுடைய குருகின் கொள்ளுதலில் இருந்து தப்பித்து ஓடிய வளைந்த முதுகையும் உயர்ந்த வாயையுமுடைய இறால் மீனின் ஆண் மோதுகின்ற அலைகள் கூட்டிய மணல் மேடாகிய நீண்ட கரையில் உள்ள நெருங்கிய கடலின் புறத்தில் இலைகள் பொதிந்த தாழையின் வண்டுகள் மொய்க்கின்ற வெள்ளை மலர்களைக் கண்டு அஞ்சி ஓடும் துறை பொருந்திய தலைவன் துறந்தான் என்று (தாழை – Pandanus odoratissimus, வெரூஉம் – செய்யுளிசை அளபெடை, எனவே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 212, குடவாயிற் கீரத்தனார், பாலைத் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
பார்வை வேட்டுவன் படுவலை வெரீஇ
நெடுங்கால் கணந்துள் அம் புலம்பு கொள் தெள் விளி
சுரஞ்செல் கோடியர் கதுமென இசைக்கும்,
நரம்பொடு கொள்ளும் அத்தத்து ஆங்கண்,
கடுங்குரல் பம்பைக் கத நாய் வடுகர்  5
நெடும் பெருங்குன்றம் நீந்தி நம் வயின்
வந்தனர், வாழி தோழி, கையதை
செம்பொன் கழல் தொடி நோக்கி மா மகன்
கவவுக் கொள் இன் குரல் கேட்டொறும்,
அவவுக் கொள் மனத்தேம் ஆகிய நமக்கே.  10

பாடல் பின்னணி:  பொருள்வயின் பிரிந்த தலைவன் மீண்டு வருவதை அவனுடன் வந்த இளைஞர்கள் மூலம் அறிந்த தோழி உவந்து கூறியது.

பொருளுரைதோழி!  நீ நீடு வாழ்வாயாக!  பார்வை ஒன்றை வைத்து வேட்டுவன் அமைத்த பறவைகளைப் பற்றும் வலைக்கு அஞ்சி நீண்ட கால்களையுடைய கணந்துள் என்ற பறவையின் தனித்து எழுப்பும் தெளிந்த ஓசை பாலை நில வழியில் செல்லும் கூத்தர்கள் விரைந்து இசைக்கும் யாழ் இசையுடன் ஒத்து ஒலிக்கும் வழியில், கடிய ஒலியையுடைய பம்பை முரசுகளையும் சின நாய்களையுமுடைய வடுகர்கள் இருக்கும் உயர்ந்த பெரிய குன்றைக் கடந்து வந்தார், செம்பொன்னால் செய்யப்பட்ட கழன்று விழும் கை வளையல்களை நோக்கி நம் சிறந்த புதல்வன் நம்மைத் தழுவிக்கொண்டு வினவும் இனிய சொற்களைக் கேட்கும்தோறும் விருப்பம் கொள்ளும் மனத்தையுடைய நம்மிடம்.

குறிப்பு:  ஒளவை துரைசாமி உரை – ‘பெறற்கு அரும் பெரும் பொருள்’ (தொல்காப்பியம், கற்பியல் 9) என்ற நூற்பாவின்கண், ‘பிரியும் காலை எதிர் நின்று சாற்றிய மரபு உடை எதிரும் உளப்பட பிறவும்’ என்றவிடத்துப் ‘பிறவாவன தலைவன் வரவு மலிந்து கூறுவனவும், வந்த பின்னர் முன்பு நிகழ்ந்தன கூறுவனவும் வற்புறுப்பாள் பருவம் அன்றெனப் படைத்து மொழிவனவும், தூது கண்டு கூறுவனவும், தூது விடுவனவும், சேணிடைப் பிரிந்தோன் இடை நிலத்துத் தங்காது இரவின் வந்துழிக் கூறுவனவும், நிமித்தம் காட்டிக் கூறுவனவும், உடன் சேறலை மறுத்துக் கூறுவனவும் பிறவுமாம்’ என்று உரைத்து, இப்பாட்டைக் காட்டி, ‘இது தலைவிக்கு வரவு மலிந்தது’ என்பர் நச்சினார்க்கினியர்.  இறைச்சி – கு. வெ. பாலசுப்பிரமணியன் உரை – கணந்துட் பறவையின் ஓசை யாழோசையுடன் சேர்ந்து இசைக்கும் என்றது தலைவி தலைவனுடன் கூடி எங்கும் இசை பரவ வாழ்வாள் என்பதனைக் குறிப்பித்து நின்றது.  வடுகர் – ஒளவை துரைசாமி உரை புறநானூறு 278 – தொண்டை நாட்டுத் திருவேங்கடத்திற்கு வடக்கில் உள்ள நாட்டவராதலால் வடுகர் எனப்பட்டனர், பொ. வே. சோமசுந்தரனார் உரை அகநானூறு 213 – தெலுங்கர்.  வரலாறு:  வடுகர்.  இன் குரல் (9) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – அழுகின்ற இனிய குரல், ஒளவை துரைசாமி உரை – வினவும் இனிய சொல்.  அவவு (10) – ஒளவை துரைசாமி உரை – அவா என்பது அவவு என வந்தது.  நமக்கு (10) – ஒளவை துரைசாமி உரை – ஏழாவதன்கண் நான்காவது வந்து மயங்கிற்று.  பார்வை (1) – கழகத் தமிழ் அகராதி – பார்வை விலங்கு என்பது விலங்கைப் பிடிக்க பழகிய விலங்கு.  பார்வை வேட்டுவன் படுவலை (1) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – பார்வை ஒன்றனை வைத்து வேட்டுவன் அமைத்த வலை.  பெரும்பாணாற்றுப்படை 95 – பார்வை யாத்த பறை தாள் விளவின்.  பார்வை:  பார்வை வேட்டுவன் நற்றிணை 212–1, 312–4, கலித்தொகை 95–17, பார்வை யாத்த – பெரும்பாணாற்றுப்படை 95, பார்வை மடப் பிணை 20–4.  புலம்பு – புலம்பே தனிமை (தொல்காப்பியம், உரியியல் 35).

சொற்பொருள்:  பார்வை வேட்டுவன் படுவலை வெரீஇ நெடுங்கால் கணந்துள் அம் புலம்பு கொள் தெள் விளி சுரஞ்செல் கோடியர் கதுமென இசைக்கும் நரம்பொடு கொள்ளும் அத்தத்து ஆங்கண் – பார்வை ஒன்றை வைத்து வேட்டுவன் அமைத்த பறவைகளைப் பற்றும் வலைக்கு அஞ்சி நீண்ட கால்களையுடைய கணந்துள் என்ற பறவையின் தனித்து எழுப்பும் தெளிந்த ஓசை பாலை நில வழியில் செல்லும் கூத்தர்கள் விரைந்து இசைக்கும் யாழ் இசையுடன் ஒத்து ஒலிக்கும் வழியில் (வெரீஇ – அஞ்சி, செய்யுளிசை அளபெடை, புலம்பு – தனிமை, கதுமென – விரைவுக்குறிப்பு, நரம்பு ஆகுபெயர் யாழுக்கு), கடுங்குரல் பம்பைக் கத நாய் வடுகர் நெடும் பெருங்குன்றம் நீந்தி நம்வயின் வந்தனர் – கடிய ஒலியையுடைய பம்பையையும் சின நாய்களையுமுடைய வடுகர்கள் இருக்கும் உயர்ந்த பெரிய குன்றைக் கடந்து நம்மிடம் வந்தார், வாழி – நீடு வாழ்வாயாக, தோழி – தோழி, கையதை செம்பொன் கழல் தொடி நோக்கி மா மகன் கவவுக் கொள் இன் குரல் கேட்டொறும் அவவுக் கொள் மனத்தேம் ஆகிய நமக்கே – செம்பொன்னால் செய்யப்பட்ட கழன்று விழும் கை வளையல்களை நோக்கி நம் சிறந்த புதல்வன் நம்மைத் தழுவிக்கொண்டு வினவும் இனிய சொற்களைக் கேட்கும்தோறும் விருப்பம் கொள்ளும் மனத்தையுடைய நமக்கு (நமக்கே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 213, கச்சிப்பேட்டுப் பெருந்தச்சனார், குறிஞ்சித் திணை – தலைவன் தலைவியிடமும் தோழியிடமும் சொன்னது
அருவி ஆர்க்கும் பெரு வரை நண்ணிக்,
கன்று கால்யாத்த மன்றப் பலவின்
வேர்க் கொண்டு தூங்கும் கொழுஞ்சுளைப் பெரும் பழம்
குழவிச் சேதா மாந்தி, அயலது
வேய் பயில் இறும்பின் ஆம் அறல் பருகும்  5
பெருங்கல் வேலிச் சிறுகுடி யாது என
சொல்லவும் சொல்லீர்; ஆயின், கல்லெனக்
கருவி மா மழை வீழ்ந்தென, எழுந்த
செங்கேழ் ஆடிய செழுங்குரல் சிறு தினைக்
கொய் புனம் காவலும் நுமதோ,  10
கோடு ஏந்து அல்குல் நீள் தோளீரே?

பாடல் பின்னணி:  இயற்கைப் புணர்ச்சியின்பின் தலைவன் தோழியை மதி உடம்படுப்பானாய், தலைவியும் தோழியும் இருக்கும் இடத்திற்குச் சென்று, தலைவியையும் தோழியையும் நோக்கித், தான் புதியவன் போல் உரைத்தான்.

பொருளுரைஉயர்ந்த அல்குலையும் பெருத்த தோளையுமுடைய மகளிரே!  அருவி ஒலிக்கின்ற பெரிய மலையை அடைந்து, ஆவின் கன்றின் காலில் கட்டிய கயிறு பிணித்த பொது மன்றத்தில் உள்ள பலா மரத்தின் வேர்க்கு அருகில் தொங்கும் தழைத்த சுளைகளையுடைய பெரிய பழத்தை அக்கன்றின் தாயானது தின்று, அருகில் உள்ள மூங்கில் நிறைந்த சிறிய மலையில் உள்ள நீரைப் பருகும் பெரிய மலைகள் சூழ்ந்துள்ள உங்கள் சிற்றூர் எது என நான் கேட்கவும் மறுமொழி சொல்ல மாட்டீர்கள்!  அது இருக்க, மிகுந்த ஒலியுடன் இடி மின்னல் ஆகியவற்றின் தொகுதியுடன் மிகுதியான மழை விழுந்ததால், விளைந்த சிவந்த நிறம் பொருந்திய செழிப்பான கதிர்களையுடைய கொய்யத் தக்க சிறுதினையுடைய புனத்தின் காவல் தொழில் உங்களுடையதோ?

குறிப்பு:  ஒளவை துரைசாமி உரை – ‘மெய்தொட்டுப் பயிறல்’ (தொல்காப்பியம், களவியல் 11) என்று தொடங்கும் நூற்பாவின்கண் ‘ஊரும் பேரும் கெடுதியும் பிறவும் நீரின் குறிப்பின் நிரம்பக் கூறித் தோழியைக் குறையுறும் பகுதியும்’ என்றதன் உரையில் இதனைக் காட்டி, இஃது ஊர் வினாயது என்பர் இளம்பூரணர்; இஃது ஊரும் பிறவும் வினாயது என்பர் நச்சினார்க்கினியர்.  உள்ளுறை – கு. வெ. பாலசுப்பிரமணியன் உரை – கன்றையுடைய சிவந்த பசு, பலாப்பழத்தைத் தின்று அயலிலுள்ள மலை நீரைப் பருகும் என்றது, தலைவியை முன்பே இயற்கைப்புணர்ச்சியில் கூடி இன்புற்ற தலைவன் தினைப்புனத்தில் பகற்குறியாகக் கூடி அவர்தம் சிறுகுடி இரவுக்குறியிலும் கூடித் தலைவியை நுகர்ந்து மகிழ்வான் என்பதனை உள்ளுறுத்திற்று.  மன்றப் பலவின் (2) – ஒளவை துரைசாமி உரை – மன்றத்தில் நிற்கும் பலா மரத்தின், H. வேங்கடராமன் உரை – மன்றம் போன்ற தழைத்த பலா மரத்தின்.  ஒப்புமை: மன்றப் பலவின் – புறநானூறு 128, 375.  கருவி மா மழை (8) – H. வேங்கடராமன் உரை – மின்னல் இடி முதலிய தொகுதிகளையுடைய மேகம்.  கருவி – கருவி தொகுதி (தொல்காப்பியம், உரியியல் 58). குழவி (4) – யானையும் குதிரையும் கழுதையும் கடமையும் மானொடு ஐந்தும் கன்று எனற்கு உரிய.  எருமையும் மரையும் வரையார் ஆண்டே.  கவரியும் கராமும் நிகர் அவற்றுள்ளே.  ஒட்டகம் அவற்றொடு ஒரு வழி நிலையும்.  குஞ்சரம் பெறுமே குழவிப் பெயர்க்கொடை.  ஆவும் எருமையும் அது சொலப்படுமே (தொல்காப்பியம், மரபியல் 15–20).

சொற்பொருள்:  அருவி ஆர்க்கும் பெரு வரை நண்ணி – அருவி ஒலிக்கின்ற பெரிய மலையை அடைந்து, கன்று கால்யாத்த மன்றப் பலவின் வேர்க் கொண்டு தூங்கும் கொழுஞ்சுளைப் பெரும் பழம் – ஆவின் கன்றின் காலில் கட்டிய கயிறு பிணித்த பொது மன்றத்தில் உள்ள பலா மரத்தின் வேர்க்கு அருகில் தொங்கும் தழைத்த சுளைகளையுடைய பெரிய பழம், குழவிச் சேதா மாந்தி – அக்கன்றின் தாயானது தின்று, அயலது வேய் பயில் இறும்பின் ஆம் அறல் பருகும் – அருகில் உள்ள மூங்கில் நிறைந்த சிறிய மலையில் உள்ள நீரைப் பருகும், பெருங்கல் வேலிச் சிறுகுடி யாது என சொல்லவும் சொல்லீர் – பெரிய மலைகள் சூழ்ந்துள்ள உங்கள் சிற்றூர் எது என நான் கேட்கவும் மறுமொழி சொல்ல மாட்டீர்கள், ஆயின் – அது கிடக்க, மிகுந்த ஒலியுடன் கல்லெனக் கருவி மா மழை வீழ்ந்தென – இடி மின்னல் ஆகியவற்றின் தொகுதியுடன் மிகுதியான மழை விழுந்ததால் (கல்லென – ஒலிக்குறிப்பு), எழுந்த செங்கேழ் ஆடிய செழுங்குரல் சிறு தினைக் கொய் புனம் காவலும் நுமதோ – விளைந்த சிவந்த நிறம் பொருந்திய செழிப்புடையக் கதிர்களையுடைய கொய்யத் தக்க சிறுதினையுடைய புனத்தின் காவல் தொழில் உங்களுடையதோ, கோடு ஏந்து அல்குல் நீள் தோளீரே – உயர்ந்த அல்குலையும் பெருத்த தோளையுமுடைய மகளிரே (தோளீரே – ஏகாரம் அசை நிலை)

நற்றிணை 214, கருவூர்க் கோசனார், பாலைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
இசையும் இன்பமும் ஈதலும் மூன்றும்
அசையுநர் இருந்தோர்க்கு அரும் புணர்வு இன்ம் என,
வினை வயின் பிரிந்த வேறுபடு கொள்கை,
‘அரும்பு அவிழ் அலரிச் சுரும்பு உண் பல் போது
அணிய வருதும் நின் மணி இருங்கதுப்பு’ என,  5
எஞ்சா வஞ்சினம் நெஞ்சு உணக் கூறி,
மை சூழ் வெற்பின் மலை பல இறந்து,
செய் பொருட்கு அகன்ற செயிர் தீர் காதலர்
கேளார் கொல்லோ தோழி, தோள
இலங்கு வளை நெகிழ்த்த கலங்கு அஞர் எள்ளி  10
நகுவது போல மின்னி
ஆர்ப்பது போலும், இக் கார்ப் பெயல் குரலே?

பாடல் பின்னணி:  பொருள்வயின் பிரிந்த தலைவன் குறித்த பருவத்தில் வராதது கண்ட தலைவி, வருந்திக் கூறியது.

பொருளுரைதோழி! புகழும் இன்பமும் கொடையும் ஆகிய இவை மூன்றும், செயலற்று இல்லத்தில் இருந்தவர்களுக்கு அருமையாகக் கைகூடுவதில்லை என எண்ணி, பொருள் ஈட்டும் பொருட்டு வேறுபட்ட கொள்கையுடன் பிரிந்த என் காதலர், “அரும்புகள் விரிந்த மலர்களில் தேனை உண்ண வரும் வண்டுகள் மொய்க்கும் பூக்களை யாம் அணிய வருவோம் நின் நீலமணி நிற நீண்ட கூந்தலில்” எனக் குறையாத உறுதிமொழிகளை என் நெஞ்சு ஏற்கும்படி உரைத்து விட்டுச் சென்றார்.  என் தோள்களில் அணிந்த ஒளிரும் வளையல்களை நெகிழச்செய்த கலங்கிய துன்பத்தை நோக்கி எள்ளி நகைத்தது போல் மின்னி ஆராவாரம் செய்வது போல் உள்ள இந்த மழை பெய்யும் முகிலின் இடிமுழக்கத்தை, முகில்கள் சூழ்ந்த வெற்பாகிய மலைகளைக் கடந்து பொருள் ஈட்டுவதற்கு அகன்ற குற்றமற்ற அவர் கேட்கமாட்டாரா?

குறிப்பு:  நீலமணிபோல் பெண்ணின் கூந்தல்:  அகநானூறு 8 – மணி ஏர் ஐம்பால், நற்றிணை 10 – மணியின் தாழ்ந்த நல் நெடுங்கூந்தல், நற்றிணை 133 – மணி ஏர் ஐம்பால், 214 – மணி இருங்கதுப்பு, 245 – மணி மருள் ஐம்பால், 337 – மணி மருள் ஐம்பால், 366 – மணி ஏர் ஐம்பால், 374 – வீழ் மா மணிய புனை நெடுங்கூந்தல், கலித்தொகை 22 – மணி ஒளி விட்டன்ன ஐவகை, கலித்தொகை 77 – மாசு அற மண்ணுற்ற மணி ஏசும் இருங்கூந்தல், பரிபாடல் 10, குறிஞ்சிப்பாட்டு 69 – பொன் எறி மணியின் சிறுபுறம் தாழ்ந்த எம் பின்னிருங் கூந்தல்.

சொற்பொருள்:  இசையும் இன்பமும் ஈதலும் மூன்றும் அசையுநர் இருந்தோர்க்கு அரும் புணர்வு இன்ம் என வினை வயின் பிரிந்த வேறுபடு கொள்கை – புகழும் இன்பமும் கொடையும் ஆகிய இவை மூன்றும் செயலற்று இல்லத்தில் இருந்தவர்களுக்கு அருமையாகக் கைகூடுவதில்லை என எண்ணி பொருள் ஈட்டும் பொருட்டு வேறுபட்ட கொள்கையுடன் (இசை – புகழ், இன்ம் – இன்மை என்பது இன்ம் எனத் திரிந்தது), ‘அரும்பு அவிழ் அலரிச் சுரும்பு உண் பல் போது அணிய வருதும் நின் மணி இருங்கதுப்பு’ என எஞ்சா வஞ்சினம் நெஞ்சு உணக் கூறி – அரும்புகள் விரிந்த மலர்களில் தேனை உண்ண வரும் வண்டுகள் மொய்க்கும் பூக்களை யாம் அணிய வருவோம் நின் நீலமணி நிற நீண்ட கூந்தலில் எனக் குறையாத உறுதிமொழிகளை என் நெஞ்சு ஏற்கும்படி உரைத்து, மை சூழ் வெற்பின் மலை பல இறந்து செய் பொருட்கு அகன்ற செயிர் தீர் காதலர் கேளார் கொல்லோ – முகில்கள் சூழ்ந்த வெற்பாகிய மலைகளைக் கடந்து பொருள் ஈட்டுவதற்கு அகன்ற குற்றமற்ற நம் தலைவர் கேட்கமாட்டாரா (கொல்லோ – கொல் ஐயப்பொருட்டு, ஓ அசைநிலை), தோழி – தோழி, தோள இலங்கு வளை நெகிழ்த்த – தோளில் அணிந்த ஒளிரும் வளையல்களை நெகிழச்செய்த, கலங்கு அஞர் எள்ளி நகுவது போல மின்னி ஆர்ப்பது போலும் இக் கார்ப் பெயல் குரலே – கலங்கிய துன்பத்தை நோக்கி எள்ளி நகைத்தது போல் மின்னி ஆராவாரம் செய்வது போல் உள்ள இந்த மழை பெய்யும் முகிலின் இடிமுழக்கத்தை (குரலே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 215, மதுரைச் சுள்ளம் போதனார், நெய்தல் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
குணகடல் இவர்ந்து குரூஉக் கதிர் பரப்பிப்,
பகல் கெழு செல்வன் குடமலை மறையப்,
புலம்பு வந்து இறுத்த புன்கண் மாலை,
இலங்கு வளை மகளிர் வியல் நகர் அயர,
மீன் நிணம் தொகுத்த ஊன் நெய் ஒண் சுடர்  5
நீல் நிறப் பரப்பில் தயங்கு திரை உதைப்பக்,
கரை சேர்பு இருந்த கல்லென் பாக்கத்து
இன்று நீ இவணை ஆகி, எம்மொடு
தங்கின் எவனோ தெய்ய? செங்கால்
கொடு முடி அவ் வலை பரியப் போகிய  10
கோட் சுறாக் குறித்த முன்பொடு
வேட்டம் வாயாது எமர் வாரலரே.

பாடல் பின்னணி:  பகற்குறி வந்து மீளும் தலைவனிடம் தோழி உரைத்தது.  இரவுக்குறி மறுத்து வரைவு கடாயதுமாம்.

பொருளுரைகிழக்குக் கடலில் தோன்றி, நிறமுடைய கதிர்களைப் பரப்பிக் கொண்டு பகலைச் செய்யும் கதிரவன் மேற்கு மலையில் மறையவும், தனிமை வந்து தங்கிய துன்பம் மிக்க மாலை நேரத்தில், ஒளிரும் வளையல்களை அணிந்த மகளிர் பெரிய இல்லங்களில் விருந்தினர்களை எதிர்கொள்ள, மீனின் கொழுப்பை உருக்கிய ஊனாகிய நெய்யை வார்த்து ஏற்றிய ஒளிரும் விளக்கின் ஒளியையுடைய நீல நிறக் கடற்பரப்பின் அசையும் அலைகள் மோதக் கரையைச் சார்ந்து இருந்த கல்லென்னும் ஆரவாரத்தையுடைய கடற்கரை ஊரில் இன்று நீ இவ்விடத்தில் இருப்பவனாகி எம்முடன் தங்கினால் ஏதேனும் குறைபாடு ஆகுமோ?  சிவந்த கோல்களுடன் வளைந்த முடியையுடைய அழகிய வலை கிழியுமாறு அறுத்துக்கொண்டு சென்ற கொல்லும் தன்மையுடைய சுறா மீன்களைக் கருதி, மிகுந்த வலிமையுடன் பிடித்துக் கொண்டு வராது எம் உறவினர்கள் மீண்டு வரமாட்டார்கள்.

குறிப்பு:  மீன் நெய் – நற்றிணை 175 – மீன் நெய் அட்டிக் கிளிஞ்சில் பொத்திய சிறு தீ விளக்கில், நற்றிணை 215 – மீன் நிணம் தொகுத்த ஊன் நெய் ஒண் சுடர், பொருநராற்றுப்படை 215 – மீன் நெய்யொடு.  வலையின் செங்கோல்:  அகநானூறு 60 – செங்கோல் அவ் வலை நெடுந்திமில் தொழிலொடு,  அகநானூறு 220 – இருங்கழி முகந்த செங்கோல் அவ்வலை, நற்றிணை 215 – செங்கால் கொடு முடி அவ் வலை,  நற்றிணை 303 – பரதவர் இட்ட செங்கோல் கொடு முடி அவ் வலை.  இலங்கு வளை மகளிர் (4) – ஒளவை துரைசாமி உரை – காதலரொடு கூடி உறையும் மனைமகளிரைக் காட்டிற்று.  குரு – குருவும் கெழுவும் நிறன் ஆகும்மே (தொல்காப்பியம், உரியியல் 5).  புலம்பு – புலம்பே தனிமை (தொல்காப்பியம், உரியியல் 35).

சொற்பொருள்:  குணகடல் இவர்ந்து குரூஉக் கதிர் பரப்பிப் பகல் கெழு செல்வன் குடமலை மறையப் புலம்பு வந்து இறுத்த புன்கண் மாலை இலங்கு வளை மகளிர் வியல் நகர் அயர – கிழக்குக் கடலில் தோன்றி நிறமுடைய கதிர்களைப் பரப்பிக் கொண்டு பகலைச் செய்யும் கதிரவன் மேற்கு மலையில் மறையவும் தனிமை வந்து தங்கிய துன்பம் மிக்க மாலை நேரத்தில் ஒளிரும் வளையல்களை அணிந்த மகளிர் பெரிய இல்லங்களில் எதிர்கொள்ள (குரூஉ – செய்யுளிசை அளபெடை), மீன் நிணம் தொகுத்த ஊன் நெய் ஒண் சுடர் நீல் நிறப் பரப்பில் தயங்கு திரை உதைப்பக் கரை சேர்பு இருந்த கல்லென் பாக்கத்து இன்று நீ இவணை ஆகி எம்மொடு தங்கின் எவனோ – மீனின் கொழுப்பை உருக்கிய ஊனாகிய நெய்யை வார்த்து ஏற்றிய ஒளிரும் விளக்கின் ஒளியையுடைய நீல நிறக் கடற்பரப்பின் அசையும் அலைகள் மோதக் கரையைச் சார்ந்து இருந்த கல்லென்னும் ஆரவாரத்தையுடைய கடற்கரை ஊரில் இன்று நீ இவ்விடத்தில் இருப்பவனாகி எம்முடன் தங்கினால் ஏதேனும் குறைபாடு ஆகுமோ (எவனோ – ஓகாரம் வினா), தெய்ய – அசைநிலை, செங்கால் கொடு முடி அவ் வலை பரியப் போகிய கோட் சுறாக் குறித்த முன்பொடு வேட்டம் வாயாது எமர் வாரலரே – சிவந்த கோல்களுடன் வளைந்த முடியையுடைய அழகிய வலை கிழியுமாறு அறுத்துக்கொண்டு சென்ற கொல்லும் தன்மையுடைய சுறா மீன்களைக் கருதி மிகுந்த வலிமையுடன் பிடித்துக் கொண்டு வராது எம் உறவினர்கள் மீண்டு வரமாட்டார்கள் (வாரலரே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 216, மதுரை மருதன் இளநாகனார், மருதத் திணை – பரத்தை சொன்னது பாணற்கோ அல்லது விறலிக்கோ, தலைவியின் தோழியர் கேட்குமாறு
துனி தீர் கூட்டமொடு துன்னார் ஆயினும்,
இனிதே காணுநர்க் காண்புழி வாழ்தல்;
கண்ணுறு விழுமம் கை போல் உதவி
நம் உறு துயரம் களையார் ஆயினும்,
இன்னாது அன்றே அவர் இல் ஊரே;  5
எரி மருள் வேங்கைக் கடவுள் காக்கும்
குருகு ஆர் கழனியின் இதணத்து ஆங்கண்,
ஏதிலாளன் கவலை கவற்ற,
ஒரு முலை அறுத்த திருமாவுண்ணிக்
கேட்டோர் அனையர் ஆயினும்,  10
வேட்டோர் அல்லது பிறர் இன்னாரே.

பாடல் பின்னணி:  தலைவியின் பாங்காய் அமைந்த பாணன் விறலி ஆகிய இருவருள், ஒருவரை முன்னிலைப்படுத்தி உரைத்தது.

பொருளுரைஊடலைத் தீர்த்து நம்முடன் கூடுவதற்கு அவர் வராவிட்டாலும், ஒருவரை ஒருவர் காணுதல் அமையும் இடத்தில் வாழ்வது இனிதாகும். கண்ணில் விழும் நுண்ணிய தூசியையும் கை நீக்குவதை ஒத்த, நாம் உற்ற துயரத்தை அவர் நீக்கார் ஆனாலும், அவர் இல்லாத ஊர் துன்பம் தருவது ஆக உள்ளது. நெருப்புப் போன்ற மலர்களையுடைய வேங்கை மரத்திலிருந்து கடவுள் காக்கும், குருகுகள் ஆரவாரிக்கும் வயலருகில் உள்ள பரணில் அயலான் ஒருவன் செய்த துன்பம் தன்னை வருத்துவதால் ஒரு முலையை அறுத்த திருமாவுண்ணியை அறிந்தவர்கள் அத்தன்மையர் ஆயினும் அவள் மேல் அன்பு கொண்டவர்கள் மட்டுமே வருந்துவார்கள் அன்றிப் பிறர் வருந்துபவர்கள் அல்லர்.  தலைவனைப் பிரிந்த தலைவி வருந்தினாலும் நான் அடைந்த துயரத்தை அவள் அடையவில்லை.

குறிப்பு:  துனி (1) – ஒளவை துரைசாமி உரை – வெறுப்பு, உணர்ப்புவயின் வாரா ஊடல் பரத்தைக்கின்மை பற்றித் துனிதீர் கூட்டம் என்றார்.  துன்னுதல், புணர்தல்:  ‘துன்னலம் பெரும பிறர்த் தோய்ந்த நின் மார்பே’ – ஐங்குறுநூறு 62 என்பது காண்க, பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – புலவி.  இனிதே காணுநர்க் காண்புழி வாழ்தல் (2) – ஒளவை துரைசாமி உரை – ஒருவரையொருவர் காணுமாறமைந்த இடத்தே வாழ்வது இன்பம் தருவதாம்.  பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – காணும் தரத்தினரை நோக்கியிருந்தாலும் உயிரொடு வாழ்வது இனியதாகும்.  விழுமம் – விழுமம் சீர்மையும் சிறப்பும் இடும்பையும் (தொல்காப்பியம், உரியியல்  57).

சொற்பொருள்:  துனி தீர் கூட்டமொடு துன்னார் ஆயினும் – ஊடலைத் தீர்த்து நம்முடன் கூடுவதற்கு வராவிட்டாலும், இனிதே காணுநர்க் காண்புழி வாழ்தல் – ஒருவரை ஒருவர் காணுதல் அமையும் இடத்தில் வாழ்வது இனிது, கண்ணுறு விழுமம் கை போல் உதவி நம் உறு துயரம் களையார் ஆயினும் – கண்ணில் விழும் நுண்ணிய தூசியைக் கை நீக்குவதை ஒத்த நாம் உற்ற துயரத்தை அவர் நீக்கார் ஆனாலும், இன்னாது அன்றே அவர் இல் ஊரே – அவர் இல்லாத ஊர் துன்பம் தருவது (ஊரே – ஏகாரம் அசைநிலை), எரி மருள் வேங்கைக் கடவுள் காக்கும் – நெருப்புப் போன்ற மலர்களையுடைய வேங்கை மரத்திலிருந்து கடவுள் காக்கும் (வேங்கை மரம் – kino tree, Pterocarpus marsupium), குருகு ஆர் கழனியின் இதணத்து ஆங்கண் ஏதிலாளன் கவலை கவற்ற ஒரு முலை அறுத்த திருமாவுண்ணிக் கேட்டோர் அனையர் ஆயினும் வேட்டோர் அல்லது பிறர் இன்னாரே – குருகுகள் ஆரவாரிக்கும் வயலருகில் உள்ள பரணில் அயலான் ஒருவன் செய்த துன்பம் வருத்துவதால் ஒரு முலையை அறுத்த திருமாவுண்ணியை அறிந்தவர்கள் அத்தன்மையர் ஆயினும் அவள்மேல் அன்பு கொண்டவர்கள் மட்டுமே வருந்துவார்கள் அன்றிப் பிறர் வருந்துபவர்கள் அல்லர் (இன்னாரே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 217, கபிலர், குறிஞ்சித் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
இசைபட வாழ்பவர் செல்வம் போலக்
காண்தொறும் பொலியும் கதழ்வாய் வேழம்,
இருங்கேழ் வயப் புலி வெரீஇ அயலது
கருங்கால் வேங்கை ஊறுபட மறலிப்,
பெருஞ்சினம் தணியும் குன்ற நாடன்  5
நனி பெரிது இனியனாயினும், துனி படர்ந்து
ஊடல் உறுவேன் தோழி, நீடு
புலம்பு சேண் அகல நீக்கிப்,
புலவி உணர்த்தல் வண்மையானே.

பாடல் பின்னணி:  பரத்தையிற் பிரிந்த தலைவன் தலைவியின் ஊடலைத் தீர்க்கத் தோழியை அனுப்பினான்.  தலைவி அவளுக்கு வாயில் மறுத்தாள்.  

பொருளுரைதோழி! புகழ் அடையும்படி வாழ்பவர் செல்வம் போல், காணும்பொழுதெல்லாம் சிறந்து விளங்கும் விரைந்து செல்லுதலையுடைய களிற்று யானையானது, கரிய நிறத்தையுடைய வலிமை மிக்கப் புலி அதனைக் கண்டு அஞ்சி ஓடியதால், அருகில் உள்ள கரிய அடியையுடைய வேங்கை மரம் சிதையுமாறு அதை முறித்துத் தன்னுடைய பெரிய சினத்தைத் தணிக்கும் மலை நாடன், என்னுடைய நீடிய வருத்தம் தொலைவிற்கு அகன்று போகும்படியும், நான் கொண்ட ஊடலை நீக்குவதற்கும், பணிந்து என்னிடம் அன்பு மிகுதி கொண்டுள்ளான்.  அவன் மிகப் பெரிது இனியவனாக இருந்தாலும், வருத்தம் அடைந்து நான் அவனுடன் ஊடல் கொள்வேன்.

குறிப்பு:  குறிஞ்சியில் மருதம்.  உள்ளுறை – கு. வெ. பாலசுப்பிரமணியன் உரை – ஆண்யானை, தன்னிடம் புலி அஞ்சி ஓடியதால், தன் சினத்தை அயலிலுள்ள வேங்கை மரத்தில் மோதித் தணித்துக் கொள்ளும் என்றது, தலைவி கொண்ட புலவிக்குத் தலைவன் அஞ்சி அகலுதலாலே அவன் கொண்ட பரத்தமையை இகழ்ந்து கூறிச் சினம் தணிவள் என்பது.  கருங்கால் வேங்கை ஊறுபட மறலி (4) – ஒளவை துரைசாமி உரை – கரிய அடியையுடைய வேங்கையைத் தன் உடம்பில் புண் உண்டாகுமாறு மோதித் தாக்கி, பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – கரிய அடியையுடைய வேங்கை மரம் சிதையுமாறு முறித்துத் தள்ளி, H. வேங்கடராமன் உரை – கரிய அடியினையுடைய வேங்கை மரம் சிதைவுறுமாறு பகைத்து முறித்துத் தள்ளி.  இனியன் (6) – கு.வெ. பாலசுப்பிரமணியன் உரை – இனியன் என்பதை இகழ்ச்சிக் குறிப்பாகவும் கொள்க.   கதழ் – கதழ்வும் துனைவும் விரைவின் பொருள் (தொல்காப்பியம், உரியியல் 19).  நனி – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3).  புலம்பு – புலம்பே தனிமை (தொல்காப்பியம், உரியியல் 35).

சொற்பொருள்:  இசைபட வாழ்பவர் செல்வம் போலக் காண்தொறும் பொலியும் கதழ்வாய் வேழம் இருங்கேழ் வயப் புலி வெரீஇ – புகழ் அடையும்படி வாழ்பவர் செல்வம் போல் காணும்பொழுதெல்லாம் சிறந்து விளங்கும் விரைந்து செல்லுதலையுடைய களிற்று யானை கரிய நிறத்தையுடைய வலிமை மிக்கப் புலி அஞ்சி ஓடியதால் (வெரீஇ – செய்யுளிசை அளபெடை), அயலது கருங்கால் வேங்கை ஊறுபட மறலிப் பெருஞ்சினம் தணியும் குன்ற நாடன் – அருகில் உள்ள கரிய அடியையுடைய வேங்கை மரம் சிதையுமாறு அதை முறித்துத் தன்னுடைய பெரிய சினத்தைத் தணிக்கும் மலை நாடன் (வேங்கை மரம் – kino tree, Pterocarpus marsupium, தணியும் – தணிக்கும்), நனி பெரிது இனியனாயினும் – மிகப் பெரிது இனியவனாக இருந்தாலும், துனி படர்ந்து ஊடல் உறுவேன் – வருத்தம் அடைந்து நான் அவனுடன் ஊடல் கொள்வேன், தோழி – தோழி, நீடு புலம்பு சேண் அகல நீக்கி – நீடிய வருத்தம் தொலைவிற்கு அகன்று போகும்படி நீக்கி, புலவி உணர்த்தல் வண்மையானே – ஊடலை நீக்குவதற்குப் பணிந்து என்னிடம் அன்பு மிகுதி கொண்டுள்ளான் (வண்மையானே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 218, கிடங்கில் காவிதிக் கீரங்கண்ணனார், நெய்தல் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
ஞாயிறு ஞான்று கதிர் மழுங்கின்றே;
எல்லியும் பூ வீ கொடியின் புலம்பு அடைந்தன்றே;
வாவலும் வயின்தொறும் பறக்கும், சேவலும்
வளைவாய்க் இரும் பெடை நகுதொறும் விளிக்கும்;
மாயாக் காதலொடு அதர்ப் படத் தெளித்தோர்  5
கூறிய பருவம் கழிந்தன்று; பாரிய
பராரை வேம்பின் படுசினை இருந்த
குராஅல் கூகையும் இராஅ இசைக்கும்;
ஆனா நோய் அட வருந்தி இன்னும்
தமியேன் கேட்குவென் கொல்லோ,  10
பரியரைப் பெண்ணை அன்றில் குரலே?

பாடல் பின்னணி:  களவினின்று மணம் செய்துக் கொள்ள வேண்டிய தலைவன் நீட்டித்ததால், வருந்திய தலைவியைப் பொறுத்திருக்கும்படி வற்புறுத்திய தோழியிடம் மனம் தளர்ந்து உரைத்தது.

பொருளுரைகதிரவன் மேற்குத் திசையில் இறங்கியதால் வெயிலும் மழுங்கிவிட்டது. இரவும் மலர்களை இழந்த கொடியைப் போல் பொலிவை இழந்துவிட்டது.  வௌவாலும் இடங்கள்தோறும் பறக்கின்றன.  ஆந்தைச் சேவலும் வளைந்த வாயையுடைய தன் பெரிய பெடை மகிழ்ந்து கூவும் பொழுதெல்லாம் அதற்கு எதிராகக் கூவும்.  குறையாத பேரன்புடன் நெறிப்பட என்னைத் தேற்றிய நம் தலைவர் கூறிய பருவம் சென்று விட்டது. பருத்த அடியையுடைய வேம்பின் உலர்ந்த கிளையில் இருக்கும் குராலாகிய கூகையும் இரவில் கூவும்.  மேலும், பருத்த அடியையுடை பனை மரத்தில் இருக்கும் அன்றிலின் குரலைத் தீராத நோயினால் மிகவும் வருந்தி இன்னும் தனித்து இருக்கும் நான் கேட்பேனோ?  இனி எவ்வாறு நான் ஆற்றியிருப்பேன்?

குறிப்பு:  படுசினை (7) – ஒளவை துரைசாமி உரை – பட்டுப்போன கிளை, பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – பெரிய கிளை.  கூகை குழறினால் மகளிர் அஞ்சுதல் – அகநானூறு 158 – வெருவர மன்ற மராஅத்த கூகை குழறினும் நெஞ்சு அழிந்து அரணம் சேரும், நற்றிணை 83 – கூகை …… அஞ்சு வரக் கடுங்குரல் பயிற்றாதீமே, நற்றிணை 218 – பராரை வேம்பின் படுசினை இருந்த குராஅல் கூகையும் இராஅ இசைக்கும் ஆனா நோய் அட வருந்தி, குறுந்தொகை 153 – குன்றக் கூகை குழறினும் முன்றில் பலவின் இருஞ்சினைக் கலை பாய்ந்து உகளினும் அஞ்சுமன் அளித்து என் நெஞ்சம்.  புலம்பு – புலம்பே தனிமை (தொல்காப்பியம், உரியியல் 35).

சொற்பொருள்:  ஞாயிறு ஞான்று கதிர் மழுங்கின்றே – கதிரவன் மேற்குத் திசையில் இறங்கியதால் வெயிலும் மழுங்கியது (மழுங்கின்றே – ஏகாரம் அசைநிலை), எல்லியும் பூ வீ கொடியின் புலம்பு அடைந்தன்றே – இரவும் மலர்களை இழந்த கொடியைப் போல் பொலிவை இழந்துவிட்டது (கொடியின் – இன் உருபு ஒப்புப் பொருளது, ஐந்தாம் வேற்றுமை உருபு, அடைந்தன்றே – ஏகாரம் அசைநிலை), வாவலும் வயின்தொறும் பறக்கும் – வௌவாலும் இடங்கள்தோறும் பறக்கின்றன, சேவலும் வளைவாய்க் இரும் பெடை நகுதொறும் விளிக்கும் – ஆந்தைச் சேவலும் வளைந்த வாயையுடைய பெரிய பெடை மகிழ்ந்து கூவும் பொழுதெல்லாம் அதற்கு எதிராகக் கூவும், மாயாக் காதலொடு அதர்ப் படத் தெளித்தோர் கூறிய பருவம் கழிந்தன்று – குறையாத பேரன்புடன் நெறிப்பட என்னைத் தேற்றிய நம் தலைவர் கூறிய பருவம் சென்று விட்டது, பாரிய பராரை வேம்பின் படுசினை இருக்கும் குராஅல் கூகையும் இராஅ இசைக்கும்  – நிழல் பரவிய பருத்த அடியையுடைய வேம்பின் உலர்ந்த கிளையில் இருந்த குராலாகிய கூகையும் இரவில் கூவும் (பராரை – பரு அரை பராரை எனப் புணர்ந்தது, வேம்பு – Azadirachta indica, குராஅல் – அளபெடை, இராஅ – அளபெடை), பரியரைப் பெண்ணை அன்றில் குரலே – பருத்த அடியையுடை பனை மரத்தில் இருக்கும் அன்றிலின் குரல், ஆனா நோய் அட வருந்தி இன்னும் தமியேன் கேட்குவென் கொல்லோ – தீராத நோயினால் மிகவும் வருந்தி இன்னும் தனித்து இருக்கும் நான் கேட்பேனோ (கொல்லோ – கொல் ஐயப்பொருட்டு, ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 219, தாயங்கண்ணனார், நெய்தல் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
கண்ணும், தோளும், தண் நறுங்கதுப்பும்,
பழ நலம் இழந்து பசலை பாய,
இன் உயிர் பெரும்பிறிது ஆயினும், என்னதூஉம்
புலவேன், வாழி தோழி, சிறு கால்
அலவனொடு பெயரும் புலவுத் திரை நளி கடல்  5
பெருமீன் கொள்ளும் சிறுகுடிப் பரதவர்
கங்குல் மாட்டிய கனை கதிர் ஒண் சுடர்
முதிரா ஞாயிற்று எதிர் ஒளி கடுக்கும்,
கானல் அம் பெருந்துறைச் சேர்ப்பன்
தானே யானே புணர்ந்தமாறே.  10

பாடல் பின்னணி:  பொருள் ஈட்டுவதற்காகத் தலைவன் பிரிந்ததால் ஆற்றாளாய தலைவி உரைத்தது.

பொருளுரைதோழி!  நீ நீடு வாழ்வாயாக!  கண்களும், தோள்களும், மெல்லிய நறிய கூந்தலும், பழைய அழகு கெட்டுப் பசலை உடலில் பரவவும், என்னுடைய இனிய உயிர் இறந்துபடுவது ஆனாலும், சிறிதும் ஊடல் கொள்ள மாட்டேன் நான், சிறிய கால்களையுடைய நண்டுகளுடன் நகர்ந்து போகும் புலால் நாற்றமுடைய அலைகளையுடைய செறிந்த கடலில் பெரிய மீன்களைப் பிடிக்கும் சிறுகுடியில் உள்ள மீனவர்கள் இரவில் கொளுத்திய செறிந்த கதிர்களுடன் ஒளிரும் விளக்குகள் இள ஞாயிற்றின் எதிரே தோன்றிய ஒளிக்கு ஒப்பாகும் கடற்கரைச் சோலைகளையுடைய பெரிய துறையையுடைய தலைவன் தனியாக வந்து என்னைக் கூடியதனால்.

குறிப்பு:  ஒளவை துரைசாமி உரை – சிறுகுடியினராயினும் பரதவர் பெருங்கடற்கண் பெருமீன் கொள்ளும் பெருநோக்கினராதல் போல, நம் பெண்மையால் மேனி வேறுபடினும் பெருங்குடியில் தோன்றிய பெருமகன் தொடர்பு நோக்கி அமைதல் வேண்டும் என்றற்கு, நளிகடற்பெருமீன் கொள்ளும் சிறுகுடிப் பரதவர் என்றும், பரதவர் மாட்டிய கனைகதிர் இள ஞாயிற்றின் எதிரொளி தோன்றுதல் போலத் தலைமகன் தன் பிரிவின்கண் வற்புறுத்த சொல் என் உள்ளத்தே உறுதி இழவாவாறு நின்று இலங்குகிறது என்பாள், கங்குல் மாட்டிய கனை கதிர் ஒண்சுடர் முதிரா ஞாயிற்று எதிரொளி என்றும் உள்ளுறுத்து மொழிந்தாள்.

சொற்பொருள்:  கண்ணும் தோளும் தண் நறுங்கதுப்பும் பழ நலம் இழந்து பசலை பாய இன் உயிர் பெரும்பிறிது ஆயினும் என்னதூஉம் புலவேன் – கண்களும் தோள்களும் மெல்லிய நறிய கூந்தலும் பழைய அழகு கெட்டுப் பசலை உடலில் பரவவும் என்னுடைய இனிய உயிர் இறந்துபடுவது ஆனாலும் சிறிதும் அவனிடம் ஊடல் கொள்ள மாட்டேன் நான் (என்னதூஉம் – அளபெடை), வாழி – நீடு வாழ்வாயாக, அசைநிலை, தோழி – தோழி, சிறு கால் அலவனொடு பெயரும் புலவுத் திரை நளி கடல் பெருமீன் கொள்ளும் சிறுகுடிப் பரதவர் கங்குல் மாட்டிய கனை கதிர் ஒண் சுடர் முதிரா ஞாயிற்று எதிர் ஒளி கடுக்கும் கானல் அம் பெருந்துறைச் சேர்ப்பன் தானே யானே புணர்ந்தமாறே – சிறிய கால்களையுடைய நண்டுகளுடன் நகர்ந்து போகும் புலால் நாற்றமுடைய அலைகளையுடைய செறிந்த கடலில் பெரிய மீன்களைப் பிடிக்கும் சிறுகுடியில் உள்ள மீனவர்கள் இரவில் கொளுத்திய செறிந்த கதிர்களுடன் ஒளிரும் விளக்குகள் இள ஞாயிற்றின் எதிரே தோன்றிய ஒளிக்கு ஒப்பாகும் கடற்கரைச் சோலைகளையுடைய பெரிய துறையையுடைய தலைவன் தனியாக வந்து என்னைக் கூடியதனால் (புணர்ந்தமாறே – மாறு – ஏதுப்பொருளில் (காரணப் பொருள்) வரும் இடைச்சொல், ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 220, குண்டுகட் பாலியாதனார், குறிஞ்சித் திணை  – தலைவன் தோழியிடம் சொன்னது
சிறு மணி தொடர்ந்து பெருங்கச்சு நிறீஇக்,
குறு முகிழ் எருக்கங்கண்ணி சூடி,
உண்ணா நல் மாப் பண்ணி, எம்முடன்
மறுகுடன் திரிதரும் சிறு குறுமாக்கள்
பெரிதும் சான்றோர் மன்ற, விசி பிணி  5
முழவுக் கண் புலரா விழவுடை ஆங்கண்,
ஊரேம் என்னும் இப் பேர் ஏமுறுநர்
தாமே ஒப்புரவு அறியின், தேமொழிக்
கயல் ஏர் உண்கண் குறுமகட்கு
அயலோர் ஆகல் என்று எம்மொடு படலே.  10

பாடல் பின்னணி:  தலைவன் ஆற்றானாய்க் கூறியது அல்லது தோழி தலைவியிடம் கூறியது.

பொருளுரை:  உணவு உண்ணாத பனை மடலால் செய்த நல்ல குதிரைக்குச் சிறிய மணிகளைக் கோத்து அணிந்து, பெரிய கச்சினை அதன் உடலில் போர்த்தி, சிறிய அரும்புகளைக் கொண்ட எருக்க மலர் மாலைச் சூடி, நான் தெருவிற்கு வந்தால், எம்முடன் தெருவில் திரியும் சிறுவர்கள் உறுதியாக மிகுந்த அறிவுடையவர்கள் ஆவார்கள்.  இறுக்கமாகப் பிணித்துக் கட்டிய முழவின் கண் உலராத அளவிற்குத் தொடர்ந்து விழாக்கள் உடைய இங்கு, ‘இந்த ஊரினர் நாங்கள்’ என்று கூறும் பெரிய மகிழ்ச்சியையுடைய அவர்கள் உலக நடை அறிந்திருப்பார்கள் ஆயின், இனிமையான சொற்களையும், கயல் மீன் போன்ற மையிட்ட கண்களையுமுடைய இளைய பெண்ணிற்கு, அயலோர் ஆகுவர்.  அவர்கள் எம் கருத்திற்கு ஒத்துப் பேசுவார்கள்.

குறிப்பு:  ஊரேம் என்னும் இப் பேர் ஏமுறுநர் (6) – ஒளவை துரைசாமி உரை – யாவிரென வினவுவோர்க்கு இவ்வூரினேம் என்று சொல்லிப் பெருமகிழ்ச்சிக் கொள்ளும் சிறுவர்கள், பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – இவ்வூரினேம் என்று கூறும் பெரிய மயக்கமுடையவர்கள் தாம்.  மடல் ஏறுதல் – சங்க இலக்கியத்தில் மொத்தம் 16 பாடல்களில் மடல் ஏறுதல் பற்றிய குறிப்புகள் உள்ளன – குறுந்தொகை 14, 17, 32, 173, 182, நற்றிணை 146, 152, 220, 342, 377, கலித்தொகை 58, 61, 138, 139, 140, 141.  கலித்தொகை 138, 139, 140, 141 பாடல்களில் மட்டுமே தலைவன் மடல் குதிரையின் மீது செல்கின்றான்.  கலித்தொகை 138, 141 ஆகிய பாடல்களில் மடல் ஏறியதால் தலைவியை அடைகின்றான்.

சொற்பொருள்:  சிறு மணி தொடர்ந்து – சிறிய மணிகளைக் கோத்து, பெருங்கச்சு நிறீஇ – பெரிய கச்சினை உடலில் போர்த்தி (நிறீஇ – செய்யுளிசை அளபெடை), குறு முகிழ் எருக்கங் கண்ணி சூடி – சிறிய அரும்புகளைக் கொண்ட எருக்க மலர் மாலைச் சூடி, உண்ணா நல் மாப் பண்ணி – உணவு உண்ணாத பனை மட்டையால் செய்த நல்ல குதிரை, எம்முடன் மறுகுடன் திரிதரும் – எம்முடன் தெருவில் திரியும், சிறு குறுமாக்கள் – சிறுவர்கள், பெரிதும் சான்றோர் – மிகுந்த அறிவுடையவர்கள், மிகுந்த மகிழ்ச்சியை உடையவர்கள்,  மன்ற – உறுதியாக, விசி பிணி முழவு – இறுக்கமாகக் கட்டிய முழவு, கண் புலரா – கண் உலராத, விழவுடை ஆங்கண் – விழாக்கள் உடைய அங்கே, ஊரேம் என்னும் – இந்த ஊரினர் நாங்கள் என்று கூறும், இப் பேர் ஏமுறுநர் – இப்பெரிய மயக்கமுடையவர்கள், தாமே ஒப்புரவு அறியின் – அவர்கள் உலக நடை அறிந்திருப்பார்கள் ஆயின், தேமொழி – இனிமையான சொற்கள், கயல் ஏர் – கயல் மீன் போன்ற, உண்கண் குறுமகட்கு – மையிட்ட கண்களையுடைய இளைய பெண்ணிற்கு, அயலோர் ஆகல் என்று – அயலோர் ஆகுவர் என்று, எம்மொடு படலே – எம் கருத்திற்கு ஒத்து பேசுகின்றனர் (படலே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 221, இடைக்காடனார், முல்லைத் திணை – தலைவன் தேர்ப்பாகனிடம் சொன்னது
மணி கண்டன்ன மா நிறக் கருவிளை
ஒண் பூந்தோன்றியொடு தண் புதல் அணியப்,
பொன் தொடர்ந்தன்ன தகைய நன் மலர்க்
கொன்றை ஒள் இணர் கோடுதொறும் தூங்க,
வம்பு விரித்தன்ன செம் புலப் புறவில்,  5
நீர் அணிப் பெருவழி நீள் இடைப் போழச்,
செல்க பாக நின் செய் வினை நெடுந்தேர்,
விருந்து விருப்புறூஉம் பெருந்தோள் குறுமகள்
மின் ஒளிர் அவிர் இழை நல் நகர் விளங்க,
நடை நாட் செய்த நவிலாச் சீறடிப்  10
பூங்கண் புதல்வன் உறங்குவயின் ஒல்கி,
‘வந்தீக எந்தை’ என்னும்
அம் தீம் கிளவி கேட்கம் நாமே.

பாடல் பின்னணி:  வினை முடித்து மீளும் தலைவன் தேர்ப்பாகனிடம் கூறியது.

பொருளுரை:  பாகனே!  நீலமணியைக் கண்டாற்போல் கரிய நிறக் கருவிளை மலர்கள் ஒளிரும் மலர்களான தோன்றியுடன் தண்ணிய புதர்கள்தோறும் அழகு செய்யவும், பொற்காசுகளை இணைத்துத் தொங்கவிட்டாற்போன்ற தோற்றத்தையுடைய நல்ல மலர்களான கொன்றையின் ஒளிரும் மலர்க்கொத்துக்கள் மரக்கிளைகள்தோறும் தொங்கவும், நறுமணத்தைப் பரப்பினாற்போன்ற சிவந்த நிலமாகிய காட்டில், நீரையுடைய பெரிய வழியில் நீண்ட இடங்கள் பிளவுப்படச் செலுத்துவாயாக, உன்னுடைய இயங்கும் தொழிலையுடைய நெடிய தேரை.  விருந்தோம்பலை விரும்பும் பெரிய தோள்களையுடைய இளையவளான என் மனைவி, மின்னல் போன்று ஒளிரும் விளங்கும் அணிகலன்களால் எம் நல்ல இல்லம் விளங்க, விடியற்காலையில் நடை பயின்ற மழலை பேசுகின்ற சிறிய அடிகளையும் பூப்போன்ற கண்களையுமுடைய புதல்வன் உறங்குமிடத்திற்குச் சென்று அவனை நெருங்கி ‘வருக எந்தாய்’ என மொழியும் இனிய அழகிய சொற்களை நாம் கேட்டு மகிழ்வோம்.

குறிப்பு:  வந்தீக (12) – ஒளவை துரைசாமி உரை – வருக என்னும் பொருட்டாய முற்றுவினை திரிசொல்.  கேட்கம் (13) – ஒளவை துரைசாமி உரை – அம் ஈறு பெற்ற தன்மைப் பன்மை வினைமுற்று.  ககரம் எதிர்காலம் பற்றி வந்தது என்பர் நச்சினார்க்கினியர்.  கருவிளை – Mussel shell creeper, Clitoria ternatea, தோன்றி – Malabar glory lily, Gloriosa superba, கொன்றை – Laburnum, Golden Shower tree, Cassia sophera.

சொற்பொருள்:  மணி கண்டன்ன மா நிறக் கருவிளை ஒண் பூந்தோன்றியொடு தண் புதல் அணியப் பொன் தொடர்ந்தன்ன தகைய நன் மலர்க் கொன்றை ஒள் இணர் கோடுதொறும் தூங்க வம்பு விரித்தன்ன செம் புலப் புறவில் நீர் அணிப் பெருவழி நீள் இடைப் போழச் செல்க – நீலமணியைக் கண்டாற்போல் கரிய நிறக் கருவிளை மலர்கள் ஒளிரும் மலர்களான தோன்றியுடன் தண்ணிய புதர்கள்தோறும் அழகு செய்யவும் பொற்காசுகளை இணைத்துத் தொங்கவிட்டாற்போன்ற தோற்றத்தையுடைய நல்ல மலர்களான கொன்றையின் ஒளிரும் மலர்க்கொத்துக்கள் மரக்கிளைகள்தோறும் தொங்கவும் நறுமணத்தைப் பரப்பினாற்போன்ற சிவந்த நிலமாகிய காட்டில் நீரையுடைய பெரிய வழியில் நீண்ட இடங்கள் பிளவுப்படச் செலுத்துவாயாக, பாக – பாகனே (அண்மை விளி), நின் செய் வினை நெடுந்தேர் – உன்னுடைய இயங்கும் தொழிலையுடைய நெடிய தேரை, விருந்து விருப்புறூஉம் பெருந்தோள் குறுமகள் – விருந்தோம்பலை விரும்பும் பெரிய தோள்களையுடைய இளையவளான என் மனைவி (விருப்புறூஉம் – செய்யுளிசை அளபெடை), மின் ஒளிர் அவிர் இழை நல் நகர் விளங்க – மின்னல் போன்று ஒளிரும் விளங்கும் அணிகலன்களால் எம் நல்ல இல்லம் விளங்க, நடை நாள் செய்த நவிலாச் சீறடிப் பூங்கண் புதல்வன் உறங்குவயின் ஒல்கி ‘வந்தீக எந்தை’ என்னும் அம் தீம் கிளவி கேட்கம் நாமே – விடியற்காலையில் நடை பயின்ற மழலை பேசுகின்ற சிறிய அடிகளையும் பூப்போன்ற கண்களையுமுடைய புதல்வன் உறங்குமிடத்திற்குச் சென்று அவனை நெருங்கி ‘வருக எந்தாய்’ என மொழியும் இனிய அழகிய சொற்களை நாம் கேட்டு மகிழ்வோம் (நாமே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 222, கபிலர், குறிஞ்சித் திணை  – தோழி தலைவியிடம் சொன்னது
கருங்கால் வேங்கைச் செவ்வீ வாங்கு சினை
வடுக் கொளப் பிணித்த விடுமுரி முரற்சிக்
கை புனை சிறு நெறி வாங்கி பையென,
விசும்பு ஆடு ஆய் மயில் கடுப்ப யான் இன்று
பசுங்காழ் அல்குல் பற்றுவன் ஊக்கிச்  5
செலவுடன் விடுகோ தோழி, பலவுடன்
வாழை ஓங்கிய வழை அமை சிலம்பில்
துஞ்சு பிடி மருங்கின் மஞ்சுபட காணாது
பெருங்களிறு பிளிறும் சோலை அவர்
சேண் நெடுங்குன்றம், காணிய நீயே.  10

பாடல் பின்னணி:  தலைவன் வரைவு அறிந்து உரைத்தது.  வரைவு கடாயது.

பொருளுரைதோழி! அவருடைய அழகிய மலை வாழை மரங்களையும், பலா மரங்களையும் உயரமான சுரப் புன்னை மரங்களையும் உடையது. அங்குத் தூங்கும் பெண் யானையை மஞ்சு மறைத்துள்ளது. தன் பெண் யானையைக் காணாத ஆண் யானை பிளிறுகின்றது. அவருடைய மலையைக் கண்டால் உன்னுடைய துயரம் தணியும். கரிய அடிப்பகுதியை உடைய சிவந்த மலர்களையுடைய வேங்கை மரத்தின் அழகிய வளைந்த கிளைகளில் வடு ஏற்படும் படி இறுக்கமாகப் பின்னப்பட்ட கயிற்றினால் செய்த சிறிய ஊஞ்சலில் நீ அமர்ந்தால், அதை இழுத்து மெல்ல ஆட்டி விடுவேனா?  உன் அடி வயிற்றின் மேல் கிடக்கும் பொன்னால் ஆகிய வடத்தைப் பற்றி ஆட்டும் பொழுது நீ ஆகாயத்தில் பறக்கும் அழகிய மயிலைப் போல் விளங்குவாய். அவ்வாறு ஊஞ்சலை ஆட்டும் பொழுது தொலைவில் உள்ள உன் தலைவரின் மலையைக் காண்பாயாக.

குறிப்பு:  உள்ளுறை – ஒளவை துரைசாமி உரை – சிலம்பின்கண் துஞ்சுகின்ற பிடியை மஞ்சு பரந்து மறைத்தமையின், களிறு அறியாது பிளிறி வருந்தும் என்றது, மனையின் கண் நின்னை நினைத்திருக்கும் தலைமகள் இற்செறிப்புண்டாளாகலின் அதனை அறியாது நீ கொன்னே இவண் போந்து நின்று வறிதே வருந்துகின்றனை என உள்ளுறுத்தவாறு.  பிடி – பிடி என் பெண் பெயர் யானை மேற்றே (தொல்காப்பியம், மரபியல் 52).

சொற்பொருள்:  கருங்கால் – கரிய அடிப்பகுதி, வேங்கை – வேங்கை மரம் (kino tree, Pterocarpus marsupium), செவ்வீ – சிவந்த மலர்கள், வாங்கு சினை – வளைந்தக் கிளை, வடுக் கொள – வடு ஏற்படும் மாதிரி, பிணித்த – கட்டிய, விடு புரி முரற்சி – இறுக்கமாக பின்னப்பட்ட கயிறு, கை புனை – கையால் செய்த, சிறு நெறி – சிறிய ஊஞ்சல், வாங்கி – இழுத்து, பையென – மெதுவாக, விசும்பு – வானம், ஆடு – ஆடு, ஆய் – அழகிய,  மயில் கடுப்ப – மயிலைப் போன்று (கடுப்ப –உவமை உருபு), யான் – நான், இன்று – இன்று, பசுங் காழ் – பொன் அணிகலன்கள், அல்குல் – இடுப்பு, இடுப்புக்கு கீழே உள்ள பகுதி, பற்றுவனன் ஊக்கி – பற்றிக்கொண்டு தள்ளி விட்டு, செலவுடன் – சென்றால், விடுகோ – ஆட்டி விடுவேனா (விடுகு + ஓ, விடுகு – தன்மை ஒருமை வினைமுற்று, ஓ அசைநிலை), தோழி – தோழி, பலவுடன் – பலா மரங்களுடன், வாழை – வாழை மரங்கள், ஓங்கிய வழை – உயர்ந்த சுரப் புன்னை மரங்கள், அமை சிலம்பில் – திருத்தமான மலையில், துஞ்சு  – வாழும், பிடி – பெண் யானை, மருங்கின் – அருகில், மஞ்சு பட காணாது – மஞ்சு உள்ளதால் காண முடியாமல், பெருங் களிறு பிளிறும் – பெரிய ஆண் யானை பிளிரும், சோலை – சோலை, அவர் – அவர், சேண் – தொலைவில் உள்ள, நெடுங்குன்றம் – உயர்ந்தக் குன்றம், காணிய நீயே – நீ காண்பாயாக (நீயே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 223, உலோச்சனார், நெய்தல் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
இவள் தன் காமம் பெருமையின், காலை என்னாள்; நின்
அன்பு பெரிது உடைமையின், அளித்தல் வேண்டிப்,
பகலும் வருதி, பல் பூங்கானல்;
இன்னீர் ஆகலோ இனிதால் எனின், இவள்
அலரின் அருங்கடிப் படுகுவள்; அதனால்  5
எல்லி வம்மோ, மெல்லம்புலம்ப!
சுறவினம் கலித்த நிறை இரும் பரப்பின்
துறையினும் துஞ்சாக் கண்ணர்
பெண்டிரும் உடைத்து இவ் அம்பல் ஊரே.

பாடல் பின்னணி:  பகற்குறி வந்து மீள்வானைத் தோழி இரவுக்குறி நேர்வாள் போன்று அதுவும் மறுத்து வரைவு கடாயது.

பொருளுரை:  மெல்லிய கடற்கரையின் தலைவனே!  இவள் தன்னுடைய காதல் மிகுதியால் காலைப் பொழுது எனக் கருதாள் ஆகி நின் அன்பைப் பெரிதும் பாராட்டுவதால், இவளுக்கு அருள் செய்ய வேண்டி நீ பகலிலும் வருகின்றாய், நிறைய மலர்களையுடைய கடற்கரைச் சோலைக்கு.  இவ்வாறு நீவிர் இருவரும் களவில் ஒழுகுதல் இனிது என்றால், ஊரார் கூறும் பழிமொழியினால் இவள் இற்செறிக்கப்படுவாள்.  அதனால் இரவில் வருவாயாக.  சுறா மீன்கள் மிக்க நீர் நிறைந்த கடற்பரப்பினை உடைய துறையிலும் துயிலாத கண்களையுடைய பெண்களை உடையது இந்தப் பழிமொழியைக் கூறும் ஊர்.

குறிப்பு:  இறைச்சி – கு. வெ. பாலசுப்பிரமணியன் உரை – சுறா மீன் இருக்கும் கடல் துறையில் துஞ்சாத இயல்புடைய பெண்டிர் கொண்டது ஊர் என்றது, தலைவியிருக்கும் மனையில் துஞ்சாத இயல்புடைய அன்னையும் உளள் என்பதைக் குறித்தது.  காமம் பெருமையின் (வரி 1) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – காம மிகுதியாலே, ஒளவை துரைசாமி உரை – காதற் காமம் மிக்கிருத்தலை.  அகநானூறு 239–9 – காமம் பெருமை – பொ. வே. சோமசுந்தரனார் உரை – காமத்தையும் சிறப்பையும்.  சுறா சுறவு என வந்தது. குறியதன் இறுதிச் சினை கெட உகரம் அறிய வருதல் செய்யுளுள் உரித்தே (தொல்காப்பியம், உயிர் மயங்கியல் 32).  காமம் – கமம் என்னும் சொல்லின் முதல் நீண்ட வடிவம், ‘நிறைந்த அன்பு’ என்பது இச்சொல்லின் பொருள் – பேரறிஞர் கு.வெ. பாலசுப்பிரமணியன் அவர்களின் விளக்கம், (கமம் நிறைந்து இயலும் – தொல்காப்பியம், சொல்லியல் 355).  மோ – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம், சொல்லதிகாரம், இடையியல் 26).

சொற்பொருள்:  இவள் தன் காமம் பெருமையின் காலை என்னாள் நின் அன்பு பெரிது உடைமையின் – இவள் தன்னுடைய காதல் மிகுதியால் காலைப் பொழுது எனக் கருதாள் ஆகி நின் அன்பைப் பெரிதும் பாராட்டுவதால், அளித்தல் வேண்டிப் பகலும் வருதி பல் பூங்கானல் – இவளுக்கு அருள் செய்ய வேண்டி நீ பகலிலும் வருகின்றாய் நிறைய மலர்களையுடைய கடற்கரைச் சோலைக்கு, இந் நீர் ஆகலோ இனிதால் எனின் – இவ்வாறு நீவிர் இருவரும் களவில் ஒழுகுதல் இனிது என்றால் (ஆகலோ – ஓகாரம் அசைநிலை, இனிதால் – இனிது ஆல், ஆல் அசைச்சொல்), இவள் அலரின் அருங்கடிப் படுகுவள் – ஊரார் கூறும் பழிமொழியினால் இவள் இற்செறிக்கப்படுவாள், அதனால் எல்லி வம்மோ – அதனால் இரவில் வருவாயாக (வம்மோ – மோ முன்னிலை அசை), மெல்லம்புலம்ப – மெல்லிய கடற்கரையின் தலைவனே (அம் – சாரியை, புலம்பு – கடற்கரை), சுறவினம் கலித்த நிறை இரும் பரப்பின் துறையினும் துஞ்சாக் கண்ணர் பெண்டிரும் உடைத்து இவ் அம்பல் ஊரே – சுறா மீன்கள் மிக்க நீர் நிறைந்த கடற்பரப்பினை உடைய துறையிலும் துயிலாத கண்களையுடைய பெண்களை உடையது இந்தப் பழிமொழியைக் கூறும் ஊர் (சுறவு – சுறா சுற என்றாகி உகரம் ஏற்றது, ஊரே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 224, சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோ, பாலைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
அன்பினர், மன்னும் பெரியர்; அதன்தலை
பின்பனி அமையம் வரும் என முன்பனிக்
கொழுந்து முந்துறீஇக் குரவு அரும்பினவே;
‘புணர்ந்தீர் புணர்மினோ’ என இணர் மிசைச்
செங்கண் இருங்குயில் எதிர் குரல் பயிற்றும்  5
இன்ப வேனிலும் வந்தன்று; நம் வயின்
பிரியலம் என்று தெளித்தோர் தேஎத்து
இனி எவன் மொழிகோ யானே, கயன் அறக்
கண் அழிந்து உலறிய பல் மா நெடு நெறி
வில் மூசு கவலை விலங்கிய  10
வெம்முனை அருஞ்சுரம் முன்னியோர்க்கே?

பாடல் பின்னணி:  தலைவன் பொருள்வயின் பிரிந்ததைத் தோழி மூலம் அறிந்த தலைவி வருந்தி உரைத்தது.

பொருளுரைநம் காதலர் நம் மேல் அன்புடையவர். மிகவும் சான்றோர். அதற்குமேலும், பின்பனி காலம் வரும் என்று முன்பனியின் கொழுந்தை முற்பட விட்டு குரவ மரங்கள் அரும்புகளைத் தோற்றுவித்தன. “காதலில் இணைந்தவர்கள் பிரிவின்றிக் கூடியிருப்பீர்களாக” என்று மாமரத்தின் பூங்கொத்துக்களை உடைய கிளைகளின் மீது அமர்ந்து, சிவந்த கண்களையுடைய கருங்குயில்கள் எதிர் எதிரே இருந்து இனிய குரலில் கூவும் இன்ப வேனில் காலமும் வந்துவிட்டது. “நம்வயின் யான் பிரிய மாட்டேன்” என என்னிடம் கூறியபின், குளங்கள் நீர் இல்லாது அழிந்து வற்றிய பல வழிகளையுடைய வில்லேந்திய ஆறலை கள்வர்கள் உடைய, பிரிந்த வழிகளையுடைய கொடிய இடமான கிடைத்தற்கரிய பாலை நிலத்தின்கண் சென்றவர் பொருட்டு, இனி யான் என்ன கூற மாட்டேன்?

குறிப்பு:  இணர் மிசை (4) – ஒளவை துரைசாமி உரை – மாமரத்தின் இணர் தாங்கிய கொம்புகளில் தங்கி, பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – மாவின் பூங்கொத்து மீதிருந்து.  மன் – கழிவே ஆக்கம் ஒழியிசைக் கிளவி என்று அம் மூன்று என்ப மன்னைச் சொல்லே (தொல்காப்பியம், இடையியல் 4).  ஒப்புமை:  அகநானூறு 229 – போது அவிழ் அலரி கொழுதித் தாது அருந்து அம் தளிர் மாஅத்து அலங்கல் மீமிசைச் செங்கண் இருங்குயில் நயவரக் கூஉம் இன் இளவேனிலும் வாரார்.

சொற்பொருள்:  அன்பினர் – நம் காதலர் நம் மேல் அன்புடையவர், மன்னும் பெரியர் – மிகவும் சான்றோர், அதன்தலை – அதற்குமேல், பின்பனி அமையம் வரும் என முன்பனிக் கொழுந்து முந்துறீஇக் குரவு அரும்பினவே – பின்பனி காலம் வரும் என்று முன்பனியின் கொழுந்தை முற்பட விட்டு குரவ மரங்கள் அரும்புகளைத் தோற்றுவித்தன (முந்துறீஇ – செய்யுளிசை அளபெடை, குரவம் – Bottle Flower Tree, Webera Corymbosa), ‘புணர்ந்தீர் புணர்மினோ’ என இணர் மிசைச் செங்கண் இருங்குயில் எதிர் குரல் பயிற்றும் இன்ப வேனிலும் வந்தன்று – காதலில் இணைந்தவர்கள் பிரிவின்றிக் கூடியிருப்பீர்களாக என்று மாமரத்தின் பூங்கொத்துக்களை உடைய கிளைகளின் மீது அமர்ந்து சிவந்த கண்களையுடைய கருங்குயில்கள் எதிர் எதிரே இருந்து இனிய குரலில் கூவும் இன்ப வேனில் காலமும் வந்துவிட்டது (புணர்மின் + ஓ, மின் – முன்னிலைப் பன்மை வினைமுற்று விகுதி, ஓகாரம் அசைநிலை), நம் வயின் பிரியலம் என்று தெளித்தோர் – நம்வயின் யான் பிரிய மாட்டேன் என என்னிடம் கூறியவர், தேஎத்து – பொருட்டு (அளபெடை), இனி எவன் மொழிகோ யானே– இனி நான் என்ன கூற மாட்டேன் (மொழிகு – தன்மை ஒருமை வினைமுற்று, ஓ அசைநிலை, யானே– ஏகாரம் அசைநிலை), கயன் அறக் கண் அழிந்து உலறிய பல் மா நெடு நெறி வில் மூசு கவலை விலங்கிய வெம்முனை அருஞ்சுரம் முன்னியோர்க்கே – குளங்கள் நீர் இல்லாது அழிந்து வற்றிய பல வழிகளையுடைய வில்லேந்திய ஆறலை கள்வர்கள் உடைய பிரிந்த வழிகளையுடைய கொடிய இடமான கிடைத்தற்கரிய பாலை நிலத்தின்கண் சென்றவர் பொருட்டு (முன்னியோர்க்கே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 225, கபிலர், குறிஞ்சித் திணை – தலைவி தோழியிடம் சொன்னது, அல்லது பரத்தை தலைவியின் தோழியர் கேட்குமாறு சொன்னது
முருகு உறழ் முன்பொடு கடுஞ்சினம் செருக்கிப்
பொருத யானை வெண்கோடு கடுப்ப
வாழை ஈன்ற வை ஏந்து கொழு முகை,
மெல்லியல் மகளிர் ஓதி அன்ன
பூவொடு துயல்வரும் மால் வரை நாடனை  5
இரந்தோர் உளர் கொல் தோழி, திருந்திழைத்
தொய்யில் வன முலை வரி வனப்பு இழப்பப்
பயந்து எழு பருவரல் தீர,
நயந்தோர்க்கு உதவா நார் இல் மார்பே?

பாடல் பின்னணி:  தலைவனின் பிரிவால் வருந்திய தலைவியை வற்புறுத்திய தோழியிடம் தலைவி கூறியது.  பரத்தை தலைவியின் பாங்காயினர் கேட்கும்படி கூறியதுமாம்.

பொருளுரை:  முருகனை ஒத்த வலிமையோடு மிக்க சினம்கொண்டு போரிட்ட யானையின் வெள்ளை நிற மருப்பை (தந்தத்தை, கோட்டினை) ஒத்த வாழை மரம் ஈன்ற கூரிய கொழுத்த அரும்பு, மெல்லிய இயல்பையுடைய மகளிர் கூந்தல் போல அதன் மலர்களுடன் அசையும் பெரிய மலையின் தலைவனிடம் சென்று இரந்து கேட்டவர்கள் உள்ளனரோ, திருத்தமாகச் செய்யப்பட்ட அணிகலன்களை அணிந்த தொய்யில் வரையப்பட்ட முலைகளில் உள்ள வரிகளின் அழகு கெடுமாறு பசந்து தோன்றிய துன்பம் தீருமாறு, விரும்பியர்களுக்கு உதவாத அன்பில்லாத மார்பை?

குறிப்பு:  ஒப்புமை:  சிறுபாணாற்றுப்படை 21–22 – மால் வரை ஒழுகிய வாழை வாழைப் பூ எனப் பொலிந்த ஓதி.  தொய்யில் வன முலை வரி வனப்பு இழப்ப (7) – ஒளவை துரைசாமி உரை – தொய்யில் எழுதுவதால் பிறக்கும் அழகை வனமுலைகள் இழக்குமாறு, தொய்யில் எழுதுவதை வரித்தல் என்பவாகலின் தொய்யில் எழுதப் பிறக்கும் வனப்பைத் தொய்யில் வரி வனப்பு என்றார், H. வேங்கடராமன் உரை – தொய்யிற் குழம்பால் எழுதப்பட்ட வன முலையின்கண் உள்ள இரேகையின் அழகு கெடும்படி.  வை– வையே கூர்மை (தொல்காப்பியம், உரியியல் 91).

சொற்பொருள்:  முருகு உறழ் முன்பொடு கடுஞ்சினம் செருக்கிப் பொருத யானை வெண்கோடு கடுப்ப வாழை ஈன்ற வை ஏந்து கொழு முகை மெல்லியல் மகளிர் ஓதி அன்ன பூவொடு துயல்வரும் மால் வரை நாடனை இரந்தோர் உளர் கொல் தோழி – முருகனை ஒத்த வலிமையோடு மிக்க சினம்கொண்டு போரிட்ட யானையின் வெள்ளை நிற மருப்பை (தந்தத்தை, கோட்டினை) ஒத்த வாழை மரம் ஈன்ற கூரிய கொழுத்த அரும்பு மெல்லிய இயல்பையுடைய மகளிர் கூந்தல் போல அதன் மலர்களுடன் அசையும் பெரிய மலையின் தலைவனிடம் சென்று இரந்து கேட்டவர்கள் உள்ளனரோ (உறழ் – உவம உருபு, கடுப்ப – உவம உருபு, உள்ளனரோ – ஓகாரம் ஐயப்பொருட்டு), திருந்திழைத் தொய்யில் வன முலை வரி வனப்பு இழப்பப் பயந்து எழு பருவரல் தீர நயந்தோர்க்கு உதவா நார் இல் மார்பே – திருத்தமாகச் செய்யப்பட்ட அணிகலன்களை அணிந்த தொய்யில் வரையப்பட்ட முலைகளில் உள்ள வரிகளின் அழகு கெடுமாறு பசந்து தோன்றிய துன்பம் தீருமாறு விரும்பியர்களுக்கு உதவாத அன்பில்லாத மார்பை (மார்பே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 226, கணியன் பூங்குன்றனார், பாலைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
மரம் சா மருந்தும் கொள்ளார் மாந்தர்;
உரம் சாச் செய்யார் உயர்தவம்; வளம் கெடப்
பொன்னும் கொள்ளார் மன்னர் நன்னுதல்!
நாம் தம் உண்மையின் உளமே; அதனால்
தாம் செய் பொருள் அளவு அறியார், தாம் கசிந்து  5
என்றூழ் நிறுப்ப நீள் இடை ஒழிய
சென்றோர் மன்ற நம் காதலர்; என்றும்
இன்ன நிலைமைத்து என்ப;
என்னோரும் அறிப இவ்வுலகத் தானே.

பாடல் பின்னணி:  பொருள் ஈட்டுவதற்காகத் தலைவன் பிரிந்தபோது, தலைவனின் பிரிவால் வருந்திய தலைவியை வற்புறுத்திய தோழியிடம் தலைவி கூறியது.

பொருளுரை:  நல்ல நெற்றியை உடையவளே!  மரம் சாகும்படி (பட்டுப்போகும்படி) முற்றிலும் அதைக் கொள்ள மாட்டார்கள் மரத்திலிருந்து மருந்துப்பொருளை எடுப்பவர்கள்.  தவம் புரிபவர்கள் தங்கள் வலிமை முற்றிலும் கெடுமாறு தவம் செய்ய மாட்டார்கள்.  மன்னர்கள் தங்கள் குடிகளின் வளம் கெடும்படி அவர்களிடமிருந்து பொன்னையும் பொருளையும் வரியாகக் கொள்ள மாட்டார்கள்.  இந்த உண்மையை அறிந்தும், தாம் ஈட்டும் பொருளுக்காகச் செல்பவர் என்னுடைய துன்பத்தின் அளவை அறியவில்லை.  தாம் மனம் வருந்தி வெயிலின் வெம்மை நிலைக்கும் நீண்ட வழி பின் செல்லுமாறு சென்றார் நம் தலைவர்.  என்றும் இந்த நிலைமையே ஆடவரின் இயற்கை எனக் கூறுவார்கள் சான்றோர்கள்.  உலகில் உள்ளவர்கள் இதை அறிந்துள்ளனர்.  அவர் பிரியாது இருந்தால் நாம் உயிருடன் இருப்போம்.

குறிப்பு:  புலவரின் பெயர்:  பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் உரையில் நற்றிணை இப்பாடலை எழுதியவர் கணி புன்குன்றனார் என உள்ளது.  ஒளவை துரைசாமி உரையில் கணியன் பூங்குன்றனார் என உள்ளது.  ஒளவை துரைசாமி உரை – சாவக் கொள்ளார், சாவச் செய்யார் என்பன சாக் கொள்ளார், சாச் செய்யார் என வந்தன.  ‘சாவ என்னும் செயவென் எச்சத்து இறுதி வகரம் கெடுதலும் உரித்தே’ (தொல்காப்பியம், எழுத்ததிகாரம் 209).  மன்ற – மன்றவென் கிளவி தேற்றஞ்செய்யும் (தொல்காப்பியம், இடையியல் 17).  என்றூழ் – கதிரவனின் முதிர்ந்த கதிர்கள், எல் (கதிரவன்) + ஊழ் (முதிர்ச்சி).  பேரறிஞர் கு. வெ. பாலசுப்பிரமணியன் அவர்களின் விளக்கம்.

சொற்பொருள்:  மரம் சா மருந்தும் கொள்ளார் மாந்தர் – மரம் சாகும்படி (பட்டுப்போகும்படி) அதை மருந்துக்காக முற்றிலும் கொள்ள மாட்டார்கள் மக்கள், உரம் சாச் செய்யார் உயர் தவம் – வலிமை முற்றிலும் கெடுமாறு தவம் செய்ய மாட்டார்கள் தவம் புரிபவர்கள், வளம் கெடப் பொன்னும் கொள்ளார் மன்னர் – மன்னர்கள் தங்கள் குடிகளின் வளம் கெடும்படி அவர்களிடமிருந்து பொன்னையும் பொருளையும் கொள்ள மாட்டார்கள், நன்னுதல் – நல்ல நெற்றியை உடையவளே (அன்மொழித்தொகை விளியேற்று நின்றது), நாம் தம் உண்மையின் உளமே – அவர் பிரியாது இருந்தால் நாம் உயிருடன் இருப்போம், அதனால் – அதனால், தாம் செய் பொருள் அளவு அறியார் – தாம் ஈட்டும் பொருளுக்காகச் செல்பவர் என்னுடைய துன்பத்தின் அளவை அறியவில்லை, தாம் கசிந்து என்றூழ் நிறுப்ப நீள் இடை ஒழிய சென்றோர் மன்ற நம் காதலர் – மனம் வருந்தி வெயிலின் வெம்மை நிலைக்கும் நீண்ட வழி பின் செல்லும்படி சென்றார் நம் தலைவர், என்றும் இன்ன நிலைமைத்து என்ப என்னோரும் அறிப – என்றும் இந்த நிலைமையே ஆடவரின் இயற்கை எனக் கூறுவார்கள்,  இ உலகத்தானே – இந்த உலகத்தில் (உலகத்தானே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 227, தேவனார், நெய்தல் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
அறிந்தோர் அறன் இலர் என்றலின், சிறந்த
இன் உயிர் கழியினும் நனி இன்னாதே;
புன்னையம் கானல் புணர் குறி வாய்த்த
பின் ஈர் ஓதி என் தோழிக்கு, அன்னோ!
படுமணி யானைப் பசும்பூண் சோழர்  5
கொடி நுடங்கு மறுகின் ஆர்க்காட்டு ஆங்கண்,
கள்ளுடைத் தடவில் புள் ஒலித்து ஓவாத்
தேர் வழங்கு தெருவின் அன்ன,
கௌவை ஆகின்றது ஐய, நின் அருளே.

பாடல் பின்னணி:  வரையாது களவுப் புணர்ச்சியையே கருதி வந்து ஒழுகும் தலைவனிடம் தோழி கூறியது.  வரைவு கடாயது.

பொருளுரைஐயனே!  புன்னை மரங்கள் உடைய கானலில் புணர்தற்கு நீ கூறிய குறியிடம் வந்து நின்ற, பின்னிய குளிர்ந்த கூந்தலையுடைய என் தோழிக்கு நீ காட்டிய அருள், ஒலிக்கும் மணிகளையுடைய யானைகளையுடைய பசிய அணிகலன்களை அணிந்த சோழரின் கொடிகள் அசையும் தெருக்களையுடைய ஆர்க்காட்டில், கள்ளுடைய பானைகளில் வண்டு ஒலித்து நீங்காத தேர்கள் செல்லும் தெருவைப் போன்று பெரிய ஆரவாரம் ஆகிவிட்டது.  அறிந்தவர் என்று கூறும் அவர் அறநெறியில் நிற்பவர் அல்லர் என்ற பழிச்சொல் எங்கும் பரவியது.  அவளுடைய சிறந்த இனிய உயிர் போனாலும் பெரும் துன்பத்தைத் தருகின்ற தன்மையுடையது.  ஐயோ!

குறிப்பு:  ஒளவை துரைசாமி உரை – புன்னையங்கானல் கூறினமையின் இது பகற்குறி என்க.  அறிந்தோர் (1) – ஒளவை துரைசாமி உரை – களவும் கற்புமாகிய கைகோளின் அறப்பண்பை அறிந்தவர்.  தேர் வழங்கு தெரு: – அகநானூறு 16 – தேர் வழங்கு தெருவில், நற்றிணை 227 – தேர் வழங்கு தெருவின், மதுரைக்காஞ்சி 648 – தேர் வழங்கு தெருவில்.

சொற்பொருள்:  அறிந்தோர் – அறிந்தவர், அறன் இலர் என்றலின் – அவர் அறம் இல்லாதவர் என்றதால் (அறன் – அறம் என்பதன் போலி), சிறந்த இன் உயிர் கழியினும் – சிறந்த இனிய உயிரைத் துறந்தாலும், நனி இன்னாதே – துன்பம் மிகுதியானது, புன்னையம் கானல் புணர் குறி வாய்த்த – புன்னை மரங்கள் நின்ற கானலில் புணர்தற்கு நீ கூறிய குறியிடம் வந்து நின்ற, பின் ஈர் ஓதி என் தோழிக்கு – பின்னிய குளிர்ந்த கூந்தலையுடைய என் தோழிக்கு, அன்னோ – ஐயோ, படுமணி யானைப் பசும்பூண் சோழர் கொடி நுடங்கு மறுகின் ஆர்க்காட்டு – ஒலிக்கும் மணிகளையுடைய யானைகளையுடைய பசிய அணிகலன்களை அணிந்த சோழரின் கொடிகள் அசையும் தெருக்களையுடைய ஆர்க்காட்டில், ஆங்கண் – அங்கே, கள்ளுடைத் தடவில் புள் ஒலித்து – கள்ளுடைய பானைகளில் வண்டு ஒலித்து, ஓவாத் தேர் வழங்கு தெருவின் அன்ன – விடாமல் தேர்கள் செல்லும் தெருவைப் போன்று, கௌவை ஆகின்றது – அலர் ஆகின்றது, ஐய – ஐயனே, நின் அருளே – உன்னுடைய அருள்

நற்றிணை 228, முடத்திருமாறனார், குறிஞ்சித் திணை – தோழி தலைவியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
என் எனப்படுமோ தோழி, மின்னு வசிபு
அதிர் குரல் எழிலி முதிர் கடன் தீர,
கண் தூர்பு விரிந்த கனை இருள் நடுநாள்,
பண்பு இல் ஆர் இடை வரூஉம் நம் திறத்து
அருளான் கொல்லோ தானே, கானவன்  5
சிறுபுறம் கடுக்கும் பெருங்கை வேழம்
வெறி கொள் சாபத்து எறி கணை வெரீஇ,
அழுந்துபட விடரகத்து இயம்பும்,
எழுந்து வீழ் அருவிய மலை கிழவோனே?

பாடல் பின்னணி:  வரைவு கடாயது.

பொருளுரைதோழி!  காட்டில் வாழ்பவனின் சிறிய முதுகைப் போன்ற பெரிய தும்பிக்கையையுடை களிற்று யானை அச்சமுறுத்தும் வில்லிலிருந்து செலுத்தப்படும் அம்பிற்கு அஞ்சி, ஆழ்ந்திருக்கும் மலைப் பிளவிற்குச் சென்று பிளிறும், குதித்து விழும் அருவிகளையுடைய மலையின் தலைவன், மின்னலால் இருளைப் பிளந்து கொண்டு முழங்கும் குரலையுடைய முகில் தன் சூல் முதிர்ந்ததால் (நீர் மிகக் கொண்டதால்) அக்கடன் தீருமாறு கண் மறையும்படி படர்ந்த, மிக்க இருளுடைய நடு இரவில், நல்ல இயல்பு இல்லாத செல்லுவதற்கு அரிய வழியில் வரும் நம் தலைவன் நமக்கு அருள் புரிவானோ?  அவன் அருளாமை எதனால் எனக் கூறப்படுமோ?

குறிப்பு:  இறைச்சி – கு. வெ. பாலசுப்பிரமணியன் உரை – முதிர் கடன் தீரக்கண் தூர்பு விரிந்த என்பது, மேகம் தான் உண்ட நீரை மழையாகப் பொழிந்து தன் கடமையைச் செய்வது போலத் தலைவனும் தலைவியின் நலன் உண்டு பெற்ற இன்பத்தைக் கருதியவனாய் விரைவில் மணம் முடிக்கும் கடமையை மேற்கொள்ள வேண்டும் எனக் குறித்தது.  மின்னல் பிளத்தல்:  மின்னு வசிபு – அகநானூறு 162, 212, 322, நற்றிணை 228, 261, மலைபடுகடாம் 97, மின்னு வசி – நற்றிணை 334.

சொற்பொருள்:  என் எனப்படுமோ தோழி – என்னவென்று கூறப்படுமோ தோழி (எனப்படுமோ – ஓகாரம் அசைநிலை), மின்னு வசிபு அதிர் குரல் எழிலி முதிர் கடன் தீர கண் தூர்பு விரிந்த கனை இருள் நடுநாள் – மின்னலால் இருளைப் பிளந்து கொண்டு முழங்கும் குரலையுடைய முகில் தன் சூல் முதிர்ந்ததால் (நீர் மிகக் கொண்டதால்) அக்கடன் தீருமாறு கண் மறையும்படி படர்ந்த மிக்க இருளுடைய நடு இரவில், பண்பு இல் ஆர் இடை வரூஉம் நம் திறத்து அருளான் கொல்லோ – நல்ல இயல்பு இல்லாத செல்லுவதற்கு அரிய வழியில் வரும் நம் தலைவன் அருள் புரிவானோ (வரூஉம் – செய்யுளிசை அளபெடை, கொல்லோ – கொல் ஐயப்பொருட்டு, ஓ அசைநிலை), தானே – தான், ஏ அசைநிலைகள், கானவன் சிறுபுறம் கடுக்கும் பெருங்கை வேழம் வெறி கொள் சாபத்து எறி கணை வெரீஇ அழுந்துபட விடரகத்து இயம்பும் எழுந்து வீழ் அருவிய மலை கிழவோனே – காட்டில் வாழ்பவனின் சிறிய முதுகைப் போன்ற பெரிய தும்பிக்கையையுடை களிற்று யானை அச்சமுறுத்தும் வில்லிலிருந்து செலுத்தப்படும் அம்பிற்கு அஞ்சி ஆழ்ந்திருக்கும் மலைப் பிளவிற்குச் சென்று பிளிறும் குதித்து விழும் அருவிகளையுடைய மலையின் தலைவன் (வெரீஇ  – செய்யுளிசை அளபெடை, அருவிய – பெயரெச்சக் குறிப்பு, கிழவோனே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 229, பாடியவர் பெயர் கிடைக்கவில்லை, பாலைத் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
‘சேறும், சேறும்’ என்றலின், பல புலந்து
‘சென்மின்’ என்றல் யான் அஞ்சுவலே;
‘செல்லாதீம்’ எனச் செப்பின் பல்லோர்
நிறத்து எறி புன்சொலின் திறத்து அஞ்சுவலே;
அதனால் சென்மின்; சென்று வினை முடிமின்; சென்றாங்கு  5
அவண் நீடாதல் ஓம்புமின்; யாமத்து
இழை அணி ஆகம் வடுக் கொள முயங்கி,
உழையீராகவும் பனிப்போள் தமியே
குழைவான், கண்ணிடத்து ஈண்டித் தண்ணென,
ஆடிய இள மழைப் பின்றை,  10
வாடையும் கண்டிரோ வந்து நின்றதுவே.

பாடல் பின்னணி:  1. தலைவனால் பிரிவு உணர்த்தப்பட்ட தோழி, தலைவனை ஆற்றுவித்துச் செல்ல உடன்பட்டது.  2. செலவு அழுங்குவித்ததுமாம்.

பொருளுரை‘யாம் செல்வோம் யாம் செல்வோம்’ என நீர் கூறியதால் அதற்கு மறுமொழியாகப் பலமுறை ஊடி ‘நீர் செல்லுவீராக’ என யான் கூறுவதற்கு அஞ்சுகிறேன். ‘நீர் செல்லாதீர்’ எனக் கூறினால் பலரும் கூறும் மார்பில் தைக்கும் அன்பு போன்ற சிறுமை சொற்களினால் பழி வருமோ என அஞ்சுகிறேன்.  அதனால், நீர் சென்று பணியை முடிப்பீராக! சென்ற அவ்விடத்தில் நெடுங்காலம் தங்குதலைத் தவிர்ப்பீராக! இரவில், அணிகலன்களை அணிந்த இவளுடைய மார்பில் தழும்புபட நீர் அணைத்து அருகில் இருந்தாலும் நடுங்குவாள் இவள். தனியே இருந்து வருந்துமாறு, அகன்ற இடத்தில் இங்குக் குளிர்ந்து இயங்குகின்ற இள முகில்களைத் தொடர்ந்து வந்து நின்ற வாடைக் காற்றையும் நீர் கண்டீர் அல்லவா?

குறிப்பு:  ஒப்புமை:  குறுந்தொகை 325 – சேறும் சேறும் என்றலின் பண்டைத்தன் மாயச் செலவாச் செத்து மருங்கு அற்று மன்னிக் கழிக என்றேனே.  இழை அணி ஆகம் வடுக் கொள முயங்கி (7) – ஒளவை துரைசாமி உரை – இழை அணிந்த இவளது ஆகம் வடுப்படுமாறு தழுவி, பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – கலன் அணிந்த மார்பிலே தழும்புகொள்ளுமாறு முயங்கி. ஒப்புமை:   அகநானூறு 100 – நல் அகம் வடுக் கொள முயங்கி.  கண்டிரோ (11) – ஒளவை துரைசாமி உரை – காண்பீராக, பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – கண்டீரன்றோ.

சொற்பொருள்:  ‘சேறும் சேறும்’ என்றலின் பல புலந்து ‘சென்மின்’ என்றல் யான் அஞ்சுவலே – ‘யாம் செல்வோம் யாம் செல்வோம்’ என நீர் கூறியதால் அதற்கு மறுமொழியாகப் பலமுறை ஊடி ‘நீர் செல்லுவீராக’ என யான் கூறுவதற்கு அஞ்சுகிறேன் (சென்மின் – மின் முன்னிலைப் பன்மை வினைமுற்று விகுதி), ‘செல்லாதீம்’ எனச் செப்பின் பல்லோர் நிறத்து எறி புன்சொலின் திறத்து அஞ்சுவலே – ‘நீர் செல்லாதீர்’ எனக் கூறினால் பலரும் கூறும் மார்பில் தைக்கும் அன்பு போன்ற சிறுமைச் சொற்களினால் பழி வருமோ என அஞ்சுகிறேன் (செல்லாதீம் – முன்னிலைப் பன்மை வியங்கோள் வினைமுற்று), அதனால் – அதனால், சென்மின் – நீர் செல்வீராக (சென்மின் – மின் முன்னிலைப் பன்மை வினைமுற்று விகுதி), சென்று வினை முடிமின் – சென்று பணியை முடிப்பீராக, சென்றாங்கு அவண் நீடாதல் ஓம்புமின் – சென்ற அவ்விடத்தில் நெடுங்காலம் தங்குதலைத் தவிர்ப்பீராக, யாமத்து இழை அணி ஆகம் வடுக் கொள முயங்கி உழையீராகவும் பனிப்போள் – இரவில் அணிகலன்களை அணிந்த இவளுடைய மார்பில் தழும்புபட நீர் அணைத்து அருகில் இருந்தாலும் நடுங்குவாள் இவள், தமியே குழைவான் கண் இடத்து ஈண்டித் தண்ணென ஆடிய இள மழைப் பின்றை வாடையும் கண்டிரோ வந்து நின்றதுவே – தனியே இருந்து வருந்துமாறு அகன்ற இடத்தில் இங்கு குளிர்ந்து இயங்குகின்ற இள முகில்களைத் தொடர்ந்து வந்து நின்ற வாடைக் காற்றையும் நீர் கண்டீர் அல்லவா (நின்றதுவே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 230, ஆலங்குடி வங்கனார், மருதத் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
முயப் பிடிச் செவியின் அன்ன பாசடைக்
கயக் கணக் கொக்கின் அன்ன கூம்பு முகை,
கணைக் கால் ஆம்பல் அமிழ்து நாறு தண் போது,
குணக்குத் தோன்று வெள்ளியின், இருள் கெட விரியும்
கயல் கணம் கலித்த பொய்கை ஊர!  5
முனிவு இல் பரத்தையை எற் துறந்து அருளாய்;
நனி புலம்பு அலைத்த எல்லை நீங்கப்,
புதுவறம் கூர்ந்த செறுவில் தண்ணென
மலி புனல் பரத்தந்தாஅங்கு,
இனிதே தெய்ய, நின் காணுங்காலே.  10

பாடல் பின்னணி:  தோழி வாயில் மறுத்தது.  பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – இது தலைவியைத் தானாகக் கூறியது.

பொருளுரைநெருங்கிய பிடியானையின் செவி போன்ற பசிய இலைகளையும் குளங்களில் கூட்டமாக வாழும் கொக்குகளைப் போல் கூம்பிய அரும்புகளையும் திரண்ட தண்டினையுமுடைய ஆம்பலின் தேன் மணம் கமழும் மலர்கள், கிழக்கில் தோன்றும் வெள்ளி என்னும் மீன் போல இருள் கெடுமாறு மலரும் கயல்மீன்கள் கூட்டம் பெருகிய பொய்கையை உடைய ஊரனே!  வெறுப்பு இல்லாத உன் பரத்தையை அடைந்து, எம்மைத் துறந்து அருள்வாயாக!  கோடையால் மிகவும் துன்பம் அடைந்த வேளையில் கதிரவனின் வெப்பம் நீங்குமாறு புதிதாக வறண்ட வயலில் குளிர்ச்சியான புதுவெள்ளம் பரவினாற்போல் நின்னைக் காணும்பொழுது எமக்கு இனிமையாக உள்ளது.

குறிப்பு:  இறைச்சி – கு. வெ. பாலசுப்பிரமணியன் உரை – விடியலில் தோன்றும் வெள்ளி போல தலைவிக்குச் செய்யும் அருள் போலப் பரத்தைக்கும் அருள் செய்கின்றனன்.  ஆயினும் ஆம்பல் வெள்ளியாகாதது போல பரத்தையும் தலைவியாகாள் என்று குறிப்பித்தது.  நனி – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3).  நற்றிணை 280 – கொக்கின் கூம்பு நிலை அன்ன முகைய ஆம்பல்.  எல்லை (7) – சில உரை நூல்களில் ‘வேலை’ என உள்ளது. ‘எல்லை’, ‘வேலை’ ஆகிய இரண்டிற்கும் காலம், பொழுது என்னும் பொருளும் உண்டு.  முய (1) – பொ.வே. சோமசுந்தரனார் உரை – முயா என்னும் குறியதின் இறுதிச் சினை கெட்டு உகரம் பெறாது நின்றது. பிடி – பிடி என் பெண் பெயர் யானை மேற்றே (தொல்காப்பியம், மரபியல் 52).

சொற்பொருள்:  முயப் பிடிச் செவியின் அன்ன பாசடைக் கயக் கணக் கொக்கின் அன்ன கூம்பு முகை கணைக் கால் ஆம்பல் அமிழ்து நாறு தண் போது குணக்குத் தோன்று வெள்ளியின் இருள் கெட விரியும் கயல் கணம் கலித்த பொய்கை ஊர – நெருங்கிய பிடியானையின் செவி போன்ற பசிய இலைகளையும் குளங்களில் கூட்டமாக வாழும் கொக்குகளைப் போல் கூம்பிய அரும்புகளையும் திரண்ட தண்டினையுமுடைய ஆம்பலின் தேன் மணம் கமழும் மலர்கள் கிழக்கில் தோன்றும் வெள்ளி என்னும் மீன் போல இருள் கெடுமாறு மலரும் கயல்மீன்கள் கூட்டம் பெருகிய பொய்கையை உடைய ஊரனே (கொக்கின் – இன் சாரியை, வெள்ளியின் – இன் ஒப்புப் பொருளது, ஐந்தாம் வேற்றுமை உருபு, ஊர – அண்மை விளி), முனிவு இல் பரத்தையை எற் துறந்து அருளாய் – வெறுப்பு இல்லாத உன் பரத்தையை அடைந்து எம்மைத் துறந்து அருள்வாயாக, நனி புலம்பு அலைத்த எல்லை நீங்கப் புதுவறம் கூர்ந்த செறுவில் தண்ணென மலி புனல் பரத்தந்தாஅங்கு இனிதே தெய்ய நின் காணுங்காலே – கோடையால் மிகவும் துன்பம் அடைந்த வேளையில் கதிரவனின் வெப்பம் நீங்குமாறு புதிதாக வறண்ட வயலில் குளிர்ச்சியான புதுவெள்ளம் பரவினாற்போல் நின்னைக் காணும்பொழுது இனிமையாக உள்ளது (பரத்தந்தாஅங்கு – செய்யுளிசை அளபெடை, தெய்ய – அசைநிலை, காணுங்காலே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 231, இளநாகனார், நெய்தல் திணை – தோழி தலைவியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
மை அற விளங்கிய மணி நிற விசும்பில்
கைதொழும் மரபின் எழுமீன் போல,
பெருங்கடற் பரப்பின் இரும் புறம் தோயச்,
சிறுவெண்காக்கை பலவுடன் ஆடும்
துறை புலம்பு உடைத்தே தோழி, பண்டும்  5
உள் ஊர்க் குரீஇக் கரு உடைத்தன்ன,
பெரும் போது அவிழ்ந்த கருந்தாள் புன்னைக்
கானல் அம் கொண்கன் தந்த
காதல் நம்மொடு நீங்காமாறே.

பாடல் பின்னணி:  வரைவு கடாயது.

பொருளுரைஇதற்கு முன்னும், ஊர்க்குருவியின் முட்டையை உடைத்தாற் போன்று பெரிய அரும்பு மலர்ந்த கரிய அடியையுடைய புன்னை மரங்களையுடைய கடற்கரையின் தலைவன் கொடுத்த காதல் நம்மை விட்டு நீங்காமையாலே, குற்றமற்று விளங்கும் நீலமணியின் நிறத்தையுடைய வானத்தில், கையால் தொழப்படும் மரபையுடைய ஏழு விண்மீன்களைப் போல, பெரிய கடற் பரப்பின்கண் கரிய முதுகு நனையும்படி சிறிய வெள்ளை நீர்க்காக்கை ஒரு சேர நீரைக் குடையும் துறையானது, இன்னாமை உடையதாக உள்ளதே, தோழி!

குறிப்பு:  இறைச்சி – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – சிறுவெண்காக்கை தாம் ஆணும் பெண்ணும் பல ஒருசேர ஆடுதலை நோக்கினகாலை நாமும் அங்ஙனம் ஆடற்கில்லையே என வருந்தாநிற்கும் (வருந்தும்) என்றதாம்.  எழுமீன் (2) – ஒளவை துரைசாமி உரை – சாலி என்னும் விண்மீன் கூட்டம், எழுகின்ற மீன் என்னாது ஏழாகிய மின் கூட்டத்தோடே காணப்படும் வடமீன், பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – உத்திரதுருவத்தை சூழ்ந்து வரும் ஏழு முனிவர் எனப்படும் எழுமீன்கள்.

சொற்பொருள்:  மை அற விளங்கிய மணி நிற விசும்பில் – குற்றமற்று விளங்கிய நீலமணியின் நிறத்தையுடைய வானத்தில், கைதொழும் மரபின் எழுமீன் போல – கையால் தொழப்படும் மரபையுடைய ஏழு விண்மீன்களைப் போல, பெருங்கடற் பரப்பின் இரும் புறம் தோயச் சிறுவெண்காக்கை பலவுடன் ஆடும் துறை – பெரிய கடற் பரப்பின்கண் கரிய முதுகு நனையும்படி சிறிய வெள்ளை நீர்க்காக்கை ஒரு சேர நீரைக் குடையும் துறை, புலம்பு உடைத்தே – இன்னாமை உடையதாக உள்ளது (உடைத்தே – ஏ அசை நிலை), தோழி – தோழி, பண்டும் உள் ஊர்க் குரீஇக் கரு உடைத்தன்ன – இதற்கு முன்னும் ஊர்க்குருவியின் முட்டையை உடைத்தாற் போன்று (குரீஇ – இயற்கை அளபெடை), பெரும் போது அவிழ்ந்த கருந்தாள் புன்னைக் கானல் அம் கொண்கன் – பெரிய அரும்பு மலர்ந்த கரிய அடியையுடைய புன்னை மரங்களையுடைய கடற்கரையின் தலைவன், தந்த காதல் நம்மொடு நீங்காமாறே – கொடுத்த காதல் நம்மை விட்டு நீங்காமையாலே (நீங்காமாறே – ஏ அசை நிலை)

நற்றிணை 232, முதுவெங்கண்ணனார், குறிஞ்சித் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
சிறுகண் யானைப் பெருங்கை ஈர் இனம்
குளவித் தண் கயம் குழையத் தீண்டிச்,
சோலை வாழை முணைஇ அயலது
வேரல் வேலிச் சிறுகுடி அலறச்,
செங்காற் பலவின் தீம் பழம் மிசையும்  5
மா மலை நாட! காமம் நல்கென
வேண்டுதும் வாழிய, எந்தை வேங்கை
வீ உக வரிந்த முன்றில்,
கல் கெழு பாக்கத்து அல்கினை செலினே.

பாடல் பின்னணி:  பகற்குறியில் வந்தொழுகும் தலைவனை இரவில் வா என்றது.

பொருளுரைசிறிய கண்களையும் பெரிய தும்பிக்கையையும் உடைய களிறும் பிடியுமாகிய இரண்டையுமுடைய யானையின் இனம், குளவி மலர்களையுடைய குளிர்ந்த குளத்தில் மெய் தளரக் கூடி மகிழ்ந்து, சோலையில் உள்ள வாழையை வெறுத்து, அருகில் உள்ள மூங்கிலை வேலியாகக் கொண்ட சிறுகுடியில் உள்ளவர்கள் அலறுமாறு சிவந்த அடியையுடைய பலா மரத்தின் பழங்களை உண்ணும் மலைநாடனே!  நீ நீடு வாழ்வாயாக!  காதலை நீ இவளுக்கு நல்குவாய் என வேண்டுகின்றோம்.  எம் தந்தையின் வேங்கை மலர்கள் உதிர்ந்து கோலஞ்செய்த முன் முற்றங்களையுடைய பாக்கத்தில் தங்கிச் செல்வாயாக!

குறிப்பு:  வேரல் வேலி (4) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – மூங்கில் முள்ளால் மிடைந்த வேலியையுடைய. உ. வே. சாமிநாதையர் உரை (குறுந்தொகை 18) சிறு மூங்கிலாகிய வாழ் வேலி உடைய, மலைச் சாரலில் இயல்பாகவே வளர்ந்த மூங்கிலே பலா மரத்திற்கு வேலியாயிற்று.  இத்தகைய வேலியை வாழ்வேலி என்பர் பெரும்பாணாற்றுப்படை 126 – வாழ் முள் வேலிச் சூழ் மிளைப் படப்பை.  நல்கென (6) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – நல்கு என, ஒளவை துரைசாமி உரை – நல்க என, வியங்கோள்.  உள்ளுறை – கு. வெ. பாலசுப்பிரமணியன் உரை – யானையின் இனம் குழையத் தீண்டி இன்புறும், வாழையை வெறுக்கும், சிறுகுடி அலற பலாப்பழம் உண்ணும் என்பது, இயற்கைப் புணர்ச்சியில் கூடியதும் பின் களவினை வெறுத்ததும் அயற்பெண்டிர் கூறும் அலர்மொழி நீங்கி அவர் வாயடங்கத் தலைவன் மணம்புரிந்து இல்லறங் காப்பீர் என்பதை உள்ளுறுத்திற்று.  காமம் – கமம் என்னும் சொல்லின் முதல் நீண்ட வடிவம், ‘நிறைந்த அன்பு’ என்பது இச்சொல்லின் பொருள் – பேரறிஞர் கு.வெ. பாலசுப்பிரமணியன் அவர்களின் விளக்கம், (கமம் நிறைந்து இயலும் – தொல்காப்பியம், சொல்லியல் 355).  முணைஇ – இச்சொல் முனைஇ என்றும் எழுதப்படும்.

சொற்பொருள்:  சிறுகண் யானைப் பெருங்கை ஈர் இனம் குளவித் தண் கயம் குழையத் தீண்டிச் சோலை வாழை முணைஇ அயலது வேரல் வேலிச் சிறுகுடி அலறச் செங்காற் பலவின் தீம் பழம் மிசையும் மா மலை நாட – சிறிய கண்களையும் பெரிய தும்பிக்கையையும் உடைய களிறும் பிடியுமாகிய இரண்டையுமுடைய யானையின் இனம் குளவியுடைய (மலைப்பச்சை, காட்டு மல்லிகை) குளிர்ந்த குளத்தில் மெய் தளரக் கூடி மகிழ்ந்து சோலையில் உள்ள வாழையை வெறுத்து அருகில் உள்ள மூங்கிலை வேலியாகக் கொண்ட சிறுகுடியில் உள்ளவர்கள் அலறுமாறு சிவந்த அடியையுடைய பலா மரத்தின் பழங்களை உண்ணும் மலைநாடனே (முணைஇ – அளபெடை), காமம் நல்கு என வேண்டுதும் – காதலை இவளுக்கு நல்குவாய் என வேண்டுகின்றோம், வாழிய – நீ நீடு வாழ்வாயாக, எந்தை வேங்கை வீ உக வரிந்த முன்றில் கல் கெழு பாக்கத்து அல்கினை செலினே – எம் தந்தையின் வேங்கை மலர்கள் உதிர்ந்து கோலஞ்செய்த முன் முற்றங்களையுடைய பாக்கத்தில் தங்கிச் சொல்க (பாக்கம் – கடற்கரை ஊர், செலினே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 233, அஞ்சில் ஆந்தையார், குறிஞ்சித் திணை – தோழி தலைவியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
கல்லாக் கடுவன் நடுங்க முள் எயிற்று
மட மா மந்தி மாணா வன் பறழ்,
கோடு உயர் அடுக்கத்து ஆடு மழை ஒளிக்கும்
பெருங்கல் நாடனை அருளினை ஆயின்,
இனி என கொள்ளலை மன்னே கொன் ஒன்று  5
கூறுவென் வாழி தோழி, முன்னுற
நாருடை நெஞ்சத்து ஈரம் பொத்தி,
ஆன்றோர் செல் நெறி வழாஅச்
சான்றோன் ஆதல் நன்கு அறிந்தனை தெரிமே.

பாடல் பின்னணி:  தலைவன் களவு நீட்டித்து வரையாது ஒழுகினதால் தலைவி வருந்தினாள்.

பொருளுரைதோழி!  நீ நீடு வாழ்வாயாக!  தன் தொழிலன்றிப் பிற எதுவும் கற்காத ஆண் குரங்கு நடுங்குமாறு, கூரிய பற்களையும் இளமையையும் உடைய கரிய மந்தியையும் வளர்ச்சியடையாத வலிய குட்டியையும், உயர்ந்த உச்சியையுடைய மலைப்பக்கத்தில் அசையும் முகில்கள் மறைக்கும் பெரிய மலையின் தலைவனுக்கு நீ அருள் புரிந்தாய் ஆதலால், நான் கூறுவதை நீ ஏற்கவில்லை. நான் கூறுவது பயன் தராது என்றாலும் ஒன்றை யான் கூறுவேன்.  அவன் இங்குப் பலமுறை வருவதால், அன்புடைய நெஞ்சத்தில் அருள் பொருந்தி மேன்மக்கள் சென்ற நெறியிலிருந்து வழுவாத சால்புடையவன் என்பதை நீ நன்கு அறிந்து தெளிவாயாக!

குறிப்பு:  உள்ளுறை – கு. வெ. பாலசுப்பிரமணியன் உரை – கடுவன் மனம் நடுங்குமாறு மந்தியும் குட்டியும் மலைப்பக்கத்தில் இயங்கும் மேகத்தில் ஒளியும் என்றது, தலைவன் வரும்போது தலைவியும் தோழியும் இங்கு ஓரிடத்தில் மறைந்து கொண்டு அவன் காணாது மயங்குவான் என்பதாம்.  இதனால் இங்ஙனம் நேரிடும் குறி இடையீட்டால் விரைந்து மணம் முடிக்கக் கருதுவன் என்பதனைக் குறித்தனள்.  அது கண்ட தோழி, தலைவன் அருகில் இருப்பதை உணர்ந்து உரைத்தது.  கல்லாக் கடுவன் (1) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – தன்னுடைய தொழிலையன்றி பிறவற்றைக் கல்லாத கடுவன்.  கொன் – அச்சம், பயம் இலி, காலம், பெருமை, என்று அப் பால் நான்கே கொன்னைச் சொல்லே (தொல்காப்பியம், இடையியல் 6).  கடுவன் – போத்தும் கண்டியும் கடுவனும் பிறவும் யாத்த ஆண்பாற் பெயர் என மொழிப (தொல்காப்பியம், மரபியல் 2).  மந்தி – மந்தியும் பாட்டியும் பிணையும் பிணவும் அந்தம் சான்ற பிடியொடு பெண்ணே (தொல்காப்பியம், மரபியல் 3).  மன் – கழிவே ஆக்கம் ஒழியிசைக் கிளவி என்று அம் மூன்று என்ப மன்னைச் சொல்லே (தொல்காப்பியம், இடையியல் 4).

சொற்பொருள்:  கல்லாக் கடுவன் நடுங்க முள் எயிற்று மட மா மந்தி மாணா வன் பறழ் கோடு உயர் அடுக்கத்து ஆடு மழை ஒளிக்கும் பெருங்கல் நாடனை அருளினை ஆயின் – தன் தொழிலன்றிப் பிற எதுவும் கற்காத ஆண் குரங்கு நடுங்குமாறு கூரிய பற்களையும் இளமையையும் உடைய கரிய மந்தியும் வளர்ச்சியடையாத வலிய குட்டியும் உயர்ந்த உச்சியையுடைய மலைப்பக்கத்தில் அசையும் முகில்கள் மறைக்கும் பெரிய மலையின் தலைவனுக்கு நீ அருள் புரிந்தாய் ஆயின், இனி என கொள்ளலை – இனி நான் கூறுவதை நீ ஏற்கவில்லை, மன்னே கொன் ஒன்று கூறுவென் – நான் கூறுவது பயன் தராது என்றாலும் ஒன்றை யான் கூறுவேன் (மன்னே – கழிவுக்குறிப்பு, ஏகாரம் அசைநிலை), வாழி – நீ நீடு வாழ்வாயாக, அசைநிலை, தோழி – தோழி, முன்னுற – இங்கு வருவதால், நாருடை நெஞ்சத்து ஈரம் பொத்தி ஆன்றோர் செல் நெறி வழாஅச் சான்றோன் ஆதல் – அன்புடைய நெஞ்சத்தில் அருள் பொருந்தி மேன்மக்கள் சென்ற நெறியிலிருந்து வழுவாத சால்புடையவன் என்பதை (வழாஅ – செய்யுளிசை அளபெடை), நன்கு அறிந்தனை தெரிமே – நீ நன்கு அறிந்து தெளிவாயாக (தெரிமே – உம் ஈற்று முன்னிலை வினை ஈற்றுமிசை உகரம் மெய்யொடுங் கெட்டது, ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 234 – இப்பாட்டு மறைந்து விட்டதுஒளவை துரைசாமி உரை – புதுப்பேட்டு ஏடு 233 ஆம் பாட்டின் இறுதியில் ‘இதனை அடுத்து வரும் பாட்டு இறந்தது’ என்று கூறுகின்றது.  தேவர் ஏடு ‘இப்பாட்டு இறந்தது’ என்று குறிக்கிறது.

நற்றிணை 235, பாடியவர் பெயர் கிடைக்கவில்லை, நெய்தல் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
உரவுத் திரை பொருத பிணர்படு தடவு முதல்,
அரவு வாள் வாய முள் இலைத் தாழை
பொன் நேர் தாதின் புன்னையொடு கமழும்
பல் பூங்கானல் பகற்குறி வந்து, நம்
மெய் கவின் சிதையப் பெயர்ந்தனன் ஆயினும்,  5
குன்றின் தோன்றும் குவவு மணல் ஏறிக்,
கண்டனம் வருகம், சென்மோ தோழி,
தண் தார் அகலம் வண்டு இமிர்பு ஊத,
படுமணிக் கலி மாக் கடைஇ,
நெடு நீர்ச் சேர்ப்பன் வரூஉம் ஆறே.  10

பாடல் பின்னணி:  தலைவன் தன்னை மணம் புரிந்து கொள்ளாததால் தலைவி வருந்தியிருக்கையில் தோழி அவளிடம் கூறியது.

பொருளுரைதோழி! வலிமையான கடல் அலைகள் மோத சருச்சரை (சொரசொரப்பு)  உடைய வளைந்த அடியையுடைய அராவுகின்ற ரம்பத்தின் வாய்போன்ற முள்ளையுடைய இலைகளையுடைய தாழையின் மலர்கள் பொன் போன்ற தாதினை உடைய புன்னையின் மலர்களுடன் சேர்ந்து கமழும் பல மலர்களையுடைய கடற்கரைச் சோலைக்குக் குறிப்பிட்ட இடத்திற்குப் பகலில் வந்து, நம் உடலின் அழகு பாழ்படும்படி சென்றான் ஆயினும், குளிர்ந்த மாலையை அணிந்த மார்பில் வண்டுகள் ஒலித்து ஊத, ஒலிக்கும் மணிகள் அணிந்த குதிரைகளைச் செலுத்தி நெடிய நீராகிய கடலின் சேர்ப்பன் வருவதை, குன்றுபோல் தோன்றுகின்ற குவிந்த மணலாகிய திடர் மீது ஏறி கண்டு வருவோம்.  நாம் செல்வோமாக!

குறிப்பு:  புலவர் பெயர் – பிற உரை நூல்களில் புலவரின் பெயர் குறிக்கப்படவில்லை.  ஒளவை துரைசாமி உரையில் புலவரின் பெயர் வெள்ளிவீதியார் என்று உள்ளது.  ஒப்புமை:  நற்றிணை 182 – மென்மெல கண்டனம் வருகம் சென்மோ தோழி, குறுந்தொகை 275 – முல்லை ஊர்ந்த கல் உயர் ஏறிக் கண்டனம் வருகம் சென்மோ தோழி.  இறைச்சி – கு. வெ. பாலசுப்பிரமணியன் உரை – தாழையும் புன்னையும் சேர்ந்து மணம் வீசுகின்ற சோலை என்றது, மணம் புரியக் கருதி வரும் தலைவனுடன் கூடி இல்லறம் புரிந்து சேரி விளங்குமாறு திகழ்வர் என்பதாம்.  தட – தடவும் கயவும் நளியும் பெருமை (தொல்காப்பியம், உரியியல் 24), அவற்றுள், தட என் கிளவி கோட்டமும் செய்யும் (தொல்காப்பியம், உரியியல் 25).  மோ – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம், சொல்லதிகாரம், இடையியல் 26).  உ. வே. சாமிநாதையர் உரை – குறுந்தொகை 275 – ‘கண்டனம் வருகம் சென்மோ’, என்பதற்கு ‘கண்டு வருவோம் வருவாயாக’ என உள்ளது.  மோ – முன்னிலை அசை என உள்ளது. கண்டனம் வருகம், சென்மோ (7)பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – கண்டு வருவதற்கு நாமே பையச் செல்லலாமோ.

சொற்பொருள்:  உரவுத் திரை பொருத பிணர்படு தடவு முதல் அரவு வாள் வாய முள் இலைத் தாழை பொன் நேர் தாதின் புன்னையொடு கமழும் பல் பூங்கானல் பகற்குறி வந்து – வலிமையான கடல் அலைகள் மோத சருச்சரை (சொரசொரப்பு) உடைய வளைந்த அடியையுடைய அராவுகின்ற ரம்பத்தின் வாய்போன்ற முள்ளையுடைய இலைகளையுடைய தாழையின் மலர்கள் பொன் போன்ற தாதினை உடைய புன்னையின் மலர்களுடன் சேர்ந்து கமழும் பல மலர்களையுடைய கடற்கரைச் சோலைக்குக் குறிப்பிட்ட இடத்திற்குப் பகலில் வந்து (புன்னை – Laurel Tree, Mast wood Tree, Calophyllum inophyllum), நம் மெய் கவின் சிதையப் பெயர்ந்தனன் ஆயினும் – நம் உடலின் அழகு பாழ்படும்படி சென்றான் ஆயினும், குன்றின் தோன்றும் குவவு மணல் ஏறிக் கண்டனம் வருகம் – குன்றுபோல் தோன்றுகின்ற குவிந்த மணலாகிய திடர் மீது ஏறி கண்டு வருவோம் (குன்றின் – இன் ஒப்புப்பொருளில் வந்தது, ஐந்தாம் வேற்றுமை உருபு), சென்மோ – நீ வருவாயாக (மோ – முன்னிலை அசை), செல்லுவோமாக, தோழி – தோழி, தண் தார் அகலம் வண்டு இமிர்பு ஊத படுமணிக் கலி மாக் கடைஇ நெடு நீர்ச் சேர்ப்பன் வரூஉம் ஆறே – குளிர்ந்த மாலையை அணிந்த மார்பில் வண்டுகள் ஒலித்து ஊத ஒலிக்கும் மணிகள் அணிந்த குதிரைகளைச் செலுத்தி நெடிய நீராகிய கடலின் சேர்ப்பன் வரும் வழி (கடைஇ – வினையெச்சம், அளபெடை, வரூஉம் – செய்யுளிசை அளபெடை, ஆறே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 236, நம்பி குட்டுவனார், குறிஞ்சித் திணை – தலைவி தோழியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
நோயும் கைம்மிகப் பெரிதே; மெய்யும்
தீ உமிழ் தெறலின் வெய்தாகின்றே;
ஒய்யெனச் சிறிது ஆங்கு உயிரியர் ‘பையென
முன்றில் கொளினே, நந்துவள் பெரிது’ என,
நிரைய நெஞ்சத்து அன்னைக்கு உய்த்து ஆண்டு  5
உரை, இனி வாழி தோழி! புரை இல்
நுண் நேர் எல் வளை நெகிழ்த்தோன் குன்றத்து
அண்ணல் நெடுவரை ஆடி, தண்ணென
வியல் அறை மூழ்கிய வளி என்
பயலை ஆகம் தீண்டிய சிறிதே.  10

பாடல் பின்னணி:  இற்செறிக்கப்பட்ட தலைவி, வற்புறுத்தும் தோழியிடம் கூறியது.

பொருளுரைதோழி!  நீ நீடு வாழ்வாயாக!  என் காதல் நோயும் அளவு கடந்து மிகுதியாக ஆகிவிட்டது.  என் உடலும் நெருப்பில் தோன்றி வீசும் அனலைப் போன்றுள்ளது.  நீ விரைவாகச் சென்று “சிறிது அங்கு உயிர்த்திருக்க மெல்ல முன் முற்றத்திற்கு இவளைக் கொண்டு வந்தால் பெரிதும் நலம் பெறுவாள்” என்று, நரகம் போன்ற கொடிய நெஞ்சத்தை உடைய அன்னைக்கு இப்பொழுதே உரைப்பாயாக.  என் குற்றம் இல்லாத (திருத்தமான) நுண்ணிய ஒளிரும் வளையல்களை நெகிழச் செய்தவனின் மலையில் உயர்ந்த நெடிய உச்சியில் உலவி குளிர்ச்சியுடன் அகன்ற பாறையில் பரவிய காற்று, என் பசலை படர்ந்த உடலில் சிறிது பட வேண்டும்.

குறிப்பு:  ஒளவை துரைசாமி உரை – ‘வரைவிடை வைத்த காலத்து வருந்தினும்’ (தொல்காப்பியம், களவியல் 22) என்ற நூற்பாவின்கண் ‘வரைவிடை வைத்த காலத்து வருந்தினும்’ என்பதனைத் தொகுத்த மொழியான் வகுத்தனர் கோடல் என்னும் தந்திரவுத்தியாகக் கொண்டு, அதன்கண் வேறுபட வருவன எல்லாம் கொள்க என்றுரைத்து, இப்பாட்டைக்காட்டி, ‘இது வரைவிடை ஆற்றாமை மிக்குழி அவன் வரையின் முள்கிய காற்று என் மெய்க்கட் படினும் ஆற்றலாம் என்றது’ என்பர் நச்சினார்க்கினியர்.  இறைச்சி – கு. வெ. பாலசுப்பிரமணியன் உரை – சிகரத்தில் காற்று அளாவிச் சூழ்தல் போலத் தன்னுள்ளம் தலைவனுடைய தோளில் தோய்ந்து அளாவிச் சூழ்ந்து விளங்குகின்றது என்று தலைவி குறித்தனள்.  தீ உமிழ் தெறலின் வெய்தாகின்றே (2) – ஒளவை துரைசாமி உரை – என் மெய்யும் தீ உமிழ் வெம்மையினும் வெய்தாய் உள்ளது, பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – என் உடம்பு தீயை உமிழ்கின்ற கொதிப்பினால் வெப்பமுடையதாகியது, ச. வே. சுப்பிரமணியன் உரை – நெருப்பில் தோன்றும் அனலைப் போன்ற வெப்பத்தை என் உடலும் உடையதாயிற்றது.  உயிரியர் (3) – கு. வெ. பாலசுப்பிரமணியன் உரை – உயிர்த்திருக்க.  உய்த்து (5) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – நீ சென்று, H. வேங்கடராமன் உரை – என்னைக் கொண்டுபோய் விட்டு.  எல் – எல்லே இலக்கம் (தொல்காப்பியம், இடையியல் 21).  உயிர்த்தல் – உயிர் பெற்று எழுதல், பெருமூச்சு விடுதல்.

சொற்பொருள்:  நோயும் கைம்மிகப் பெரிதே – என் காதல் நோயும் அளவு கடந்து மிகுதியாக ஆகிவிட்டது (பெரிதே – ஏகாரம் அசைநிலை), மெய்யும் தீ உமிழ் தெறலின் வெய்தாகின்றே – என் உடலும் நெருப்பில் தோன்றி வீசும் அனலைப் போன்றுள்ளது (தெறலின் – இன் ஒப்புப்பொருளில் வந்தது, ஐந்தாம் வேற்றுமை உருபு, வெய்தாகின்றே – ஏகாரம் அசைநிலை), ஒய்யெனச் சிறிது ஆங்கு உயிரியர் ‘பையென முன்றில் கொளினே நந்துவள் பெரிது’ என – விரைவாகச் சென்று சிறிது அங்கு உயிர்த்திருக்க மெல்ல முன் முற்றத்திற்கு இவளைக் கொண்டு வந்தால் பெரிதும் நலம் பெறுவாள் என்று (ஒய்யென – விரைவுக்குறிப்பு, முன்றில் – இல்முன்), நிரைய நெஞ்சத்து அன்னைக்கு உய்த்து ஆண்டு உரை இனி – நரகம் போன்ற கொடிய நெஞ்சத்தை உடைய அன்னைக்கு இப்பொழுதே உரைப்பாயாக, வாழி – நீ நீடு வாழ்வாயாக, தோழி – தோழி, புரை இல் நுண் நேர் எல் வளை நெகிழ்த்தோன் குன்றத்து அண்ணல் நெடுவரை ஆடி தண்ணென வியல் அறை மூழ்கிய வளி என் பயலை ஆகம் தீண்டிய சிறிதே – குற்றம் இல்லாத (திருத்தமான) நுண்ணிய  ஒளிரும் வளையல்களை நெகிழச் செய்தவனின் மலையில் உயர்ந்த நெடிய உச்சியில் உலவி குளிர்ச்சியுடன் அகன்ற பாறையில் பரவிய காற்று என் பசலை படர்ந்த உடலில் சிறிது பட வேண்டும் (ஆகம் மார்பு – உடலுக்கு ஆகுபெயர், புரை இல் – குற்றம் இல்லாத, ஒப்பு இல்லாத எனவும் கொள்ளலாம் புரை உவம உருபு எனக் கொண்டால், பயலை – பசலை என்பதன் போலி, செய்யிய என்னும் வினையெச்சம், சிறிதே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 237, காரிக்கண்ணனார், பாலைத் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
நனி மிகப் பசந்து தோளும் சாஅய்ப்,
பனி மலி கண்ணும் பண்டு போலா,
இன் உயிர் அன்ன பிரிவு அருங்காதலர்
நீத்து நீடினர் என்னும் புலவி
உட்கொண்டு, ஊடின்றும் இலையோ மடந்தை?  5
உவக்காண்! தோன்றுவ ஓங்கி வியப்புடை
இரவலர் வரூஉம் அளவை, அண்டிரன்
புரவு எதிர்ந்து தொகுத்த யானை போல,
உலகம் உவப்ப ஓது அரும்
வேறு பல் உருவின், ஏர்தரும் மழையே.  10

பாடல் பின்னணி:  தலைவன் பிரிவைத் தலைவி ஆற்றாள் எனக் கருதித் தோழி தேறுதல் மொழி உரைத்தாள்.  அப்பொழுது தலைவி ஆற்றியிருக்கும் திறங்கண்டு வியந்தவளாய்த் தோழி உரைத்தது.

பொருளுரை:  மடந்தையே!  நெற்றியும் மிகவும் பசந்து, தோள்களும் மெலிந்து, கண்ணீர் வடிகின்ற கண்களும் முன்பு போன்று இல்லாது வேறுபட, “இனிய உயிர் போன்ற பிரிதற்கு அரிய காதலர் என்னிடமிருந்து விலகி நெடுந்தூரம் சென்றனர்” எனக் கூறிச் சினம் கொண்டு நீ ஊடியதும் இல்லையோ?  அங்கே பார்!  ஓங்கித் தோன்றுவதைக் காண்பாய், வியக்கத்தக்க புலமையுடைய இரவலர் வரும் பொழுது ஆய் அண்டிரன் என்ற மன்னன் கொடையாகக் கொடுப்பதற்கு என வைத்திருக்கும் யானையின் திரள் போல், உலகத்தில் வாழும் உயிர்கள் மகிழ்ச்சி அடைய விவரிப்பதற்கு அரிய வேறு பல உருவங்களுடன் எழுகின்ற முகில்கள்!  பிரிந்த காதலர் வருவதாகக் குறித்த பருவம் இது.

குறிப்பு:  வரலாறு:  ஆய் அண்டிரன்.  கடையெழு வள்ளல்கள் – ஆய், பாரி, காரி, ஓரி, அதிகன், பேகன், நள்ளி.  நற்றிணை 167 – ஆஅய் வண் மகிழ் நாளவைப் பரிசில் பெற்ற பண் அமை நெடுந்தேர்.  நனி – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3). நனி மிகப் பசந்து (1) – ஒளவை துரைசாமி உரை – நுதல் மிகவும் பசலைப் பாய்ந்து.

சொற்பொருள்:  நனி மிகப் பசந்து தோளும் சாஅய்ப் பனி மலி கண்ணும் பண்டு போலா இன் உயிர் அன்ன பிரிவு அருங்காதலர் நீத்து நீடினர் என்னும் புலவி உட்கொண்டு ஊடின்றும் இலையோ – நெற்றியும் மிகவும் பசந்து தோள்களும் மெலிந்து கண்ணீர் வடிகின்ற கண்களும் முன்பு போன்று இல்லாது வேறுபட இனிய உயிர் போன்ற பிரிதற்கு அரிய காதலர் என்னிடமிருந்து விலகி நெடுந்தூரம் சென்றனர் எனக் கூறிச் சினம் கொண்டு நீ ஊடியதும் இல்லையோ (நனி மிக – ஒரு பொருட் பன்மொழி, சாஅய் – அளபெடை, இலை – இல்லை என்பதன் விகாரம்), மடந்தை – மடந்தையே (அண்மை விளி), உவக்காண் தோன்றுவ ஓங்கி – ஓங்கித் தோன்றுவதைக் காண்பாய், வியப்பு உடை இரவலர் வரூஉம் அளவை அண்டிரன் புரவு எதிர்ந்து தொகுத்த யானை போல – வியக்கத்தக்க புலமையுடைய இரவலர் வரும் பொழுது ஆய் அண்டிரன் என்ற மன்னன் கொடையாகக் கொடுப்பதற்கு என வைத்திருக்கும் யானையின் திரள் போல் (வரூஉம் – செய்யுளிசை அளபெடை), உலகம் உவப்ப ஓது அரும் வேறு பல் உருவின் ஏர்தரும் மழையே – உலகத்தில் வாழும் உயிர்கள் மகிழ்ச்சி அடைய விவரிப்பதற்கு அரிய வேறு பல உருவங்களுடன் எழுகின்ற முகில்கள் (உலகம் – ஆகுபெயர் உலகில் வாழும் மக்களுக்கு, மழையே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 238, கந்தரத்தனார், முல்லைத் திணை – தலைவி முகிலிடம் சொன்னது
வறங்கொல வீந்த கானத்து குறும் பூங்
கோதை மகளிர் குழூஉ நிரை கடுப்ப,
வண்டு வாய் திறப்ப விண்ட பிடவம்,
மாலை அந்தி மால் அதர் நண்ணிய
பருவம் செய்த கருவி மா மழை!  5
‘அவர் நிலை அறிமோ ஈங்கு’ என வருதல்
சான்றோர்ப் புரைவதோ அன்றே; மான்று உடன்
உர உரும் உரறும் நீரின், பரந்த
பாம்பு பை மழுங்கல் அன்றியும் மாண்ட
கனியா நெஞ்சத்தானும், 10
இனிய அல்ல, நின் இடி நவில் குரலே.

பாடல் பின்னணி:  பொருள் தேடிச் சென்ற தலைவன் குறித்த பருவத்தில் வராததால் வருந்திய தலைவி, முகிலிடம் சொன்னது.

பொருளுரைகோடை பாழ்படுத்தியதால் பட்டுப்போன காட்டில் சிறிய மலர்மாலை அணிந்த மகளிர் கூட்டத்தின் வரிசையை ஒப்ப, வண்டுகள் வாய் திறந்து தேன் உண்ணுமாறு மலர்ந்த பிடவங்களை உடைய அந்தி மாலையில் என் காதல் நோய் மிகக் கொள்ளும்படி கார்ப்பருவத்தைச் செய்த மின்னல் இடி முதலிய தொகுதிகளைக் கொண்ட கரிய முகிலே!   ‘அவர் நிலைமையை நீ அறிவாயாக’ என நீ இங்கு வருவது சான்றோரின் செய்கையை ஒத்தது அல்ல.  மயங்கி ஒருசேர குரல் வலிமையான இடியாக முழங்கும் தன்மையால், எங்கும் பரவிய பாம்புகளின் படம் மழுங்குதல் மட்டும் அல்லாது, மாட்சிமையுடைய என் தலைவனின் நெஞ்சை இளகச் செய்யாததோடு எனக்கும் இனிமையானது இல்லை நின் இடித்து முழங்கும் குரல்.

குறிப்பு:  புலவர் பெயர் – ஒளவை துரைசாமி உரை – அச்சுப்பிரதிகளில் இவர் பெயர் கந்தரத்தினார் என்றே காணப்படுகின்றது.  ஏடுகளில் கருவூர்க் கந்தரத்தினார் என்றே காணப்படுகின்றது.  இதனால் இவர் கந்தரத்தினாரின் வேறு என்றே கொள்ளல் வேண்டும்.  வண்டு வாய் திறப்ப (3) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – வண்டுகள் வாய்திறந்து தேனைப் பருகும்படி, ஒளவை துரைசாமி உரை – வண்டினம் கிளர்வதால் இதழ் முறுக்கு அவிழ்ந்து மலர்ந்த. கருவி மா மழை (5) – H. வேங்கடராமன் உரை – மின்னல் இடி போன்ற கருவிகளைக் கொண்ட மேகங்கள்.  மான்று (7) – ஒளவை துரைசாமி உரை – மால் என்னும் உரிச் சொல்லடியாகப் பிறந்த வினையெச்சம்.  இடி பாம்புகளை வருத்தவும் கொல்லவும் செய்யும் என்னும் செய்தி உள்ள பாடல்கள் – அகநானூறு 92, 119, 182, 202, 274, 323, 328, கலித்தொகை 45, 113, குறுந்தொகை 158, 190, 268, 391, நற்றிணை 37, 51, 114, 129, 238, 255, 264, 347, 383, புறநானூறு 17, 37, 58, 126, 211, 366, 369.  கருவி – கருவி தொகுதி (தொல்காப்பியம், உரியியல் 58).  மோ – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம், சொல்லதிகாரம், இடையியல் 26).

சொற்பொருள்:  வறங்கொல வீந்த கானத்து குறும் பூங் கோதை மகளிர் குழூஉ நிரை கடுப்ப – கோடை பாழ்படுத்தியதால் பட்டுப்போன காட்டில் சிறிய மலர்மாலை அணிந்த மகளிர் கூட்டத்தின் வரிசையை ஒப்ப (கொல – கொல்ல என்பதன் இடைக்குறை, குழூஉ – அளபெடை, நிரை – வரிசை, கடுப்ப – உவம உருபு), வண்டு வாய் திறப்ப விண்ட பிடவம் மாலை அந்தி மால் அதர் நண்ணிய பருவம் செய்த கருவி மா மழை – வண்டுகள் வாய் திறந்து தேன் உண்ணுமாறு மலர்ந்த பிடவங்களை உடைய அந்தி மாலையில் என் காதல் நோய் மிகக் கொள்ளும்படி கார்ப்பருவத்தைச் செய்த மின்னல் இடி முதலிய தொகுதிகளைக் கொண்ட கரிய முகிலே (மழை – முகில், அண்மை விளி), அவர் நிலை அறிமோ ஈங்கு என வருதல் சான்றோர்ப் புரைவதோ அன்றே – அவர் நிலைமையை நீ அறிவாயாக என இங்கு வருவது சான்றோர் செய்கையை ஒத்தது அல்ல (புரை – உவம உருபு), மான்று உடன் உர உரும் உரறும் நீரின் பரந்த – மயங்கி ஒருசேர குரல் வலிமையான இடியாக முழங்கும் தன்மையால் (நீர்மை – தன்மை), பரவிய பாம்பு பை மழுங்கல் அன்றியும் மாண்ட கனியா நெஞ்சத்தானும் இனிய அல்ல நின் இடி நவில் குரலே – பரவிய பாம்புகளின் படம் மழுங்குதல் மட்டும் அல்லாது மாட்சிமையுடைய தலைவனின் நெஞ்சை இளகச் செய்யாததோடு எனக்கும் இனிமையானது இல்லை நின் இடித்து முழங்கும் குரல் (குரலே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 239, குன்றியனார், நெய்தல் திணை – தோழி தலைவியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
ஞான்ற ஞாயிறு குட மலை மறைய,
மான்ற மாலை மகிழ்ந்த பரதவர்
இனிது பெறு பெரு மீன் எளிதினின் மாறி,
அலவன் ஆடிய புலவு மணல் முன்றில்
காமர் சிறுகுடிச் செல் நெறி வழியின்,  5
ஆய் மணி பொதி அவிழ்ந்தாங்கு, நெய்தல்
புல் இதழ் பொதிந்த பூத் தப மிதிக்கும்
மல்லல் இருங்கழி மலி நீர்ச் சேர்ப்பற்கு
அமைந்து தொழில் கேட்டு அன்றோ இலமே; ‘முன் கை
வார் கோல் எல் வளை உடைய வாங்கி  10
முயங்கு’ எனக் கலுழ்ந்த இவ்வூர்
எற்று ஆவது கொல், யாம் மற்றொன்று செயினே?

பாடல் பின்னணி:  களவில் வந்தொழுகும் தலைவன் வரையாது இருந்தான்.  அவன் அருகில் இருப்பதை அறிந்த தோழி, அவனை மணம் புரியத் தூண்டுவாளாய் உரைத்தது.

பொருளுரை:  மாலை நேரத்தில் கதிரவன் மேற்குத் திசையில் உள்ள மலையின் பின் மறைந்தது.  மீனவர்கள் கள் குடித்து மகிழ்ந்தனர்.  பிடித்த பெரிய மீன்களை எளிதாக விற்றனர்.  நண்டுகள் விளையாடும் மீன் நாற்றமுடைய மணலில் உள்ள அவர்களது அழகிய சிறுகுடியில், வீட்டு முற்றங்களில் உள்ள வழிகளில் நீலமணிகளைப் போன்ற குவளை மலர்கள் குவிந்துக் கிடக்கும். மெல்லிய இதழ்களையுடைய அந்த மலர்கள் கெடுமாறு மிதித்துச் செல்கின்றான் வளமான பெரிய (கரிய) உப்பங்கழியை உடைய நெய்தல் நிலத் தலைவன்.  அவன் மனதிற்குப் பொருந்தும்படியாக நாம் நடக்கவில்லை.  நெடிய வேலைப்பாட்டுடன் உள்ள ஒளியுடைய வளையல்களை முன்னம் கையில் அணிந்த உன்னை ‘வளையல்கள் உடையுமாறு அவனை அணைத்து இணைவாயாக’  எனப் புலம்பி அழுகின்றது இந்த ஊர்.  நாம் அவனுக்குப் பொருந்திய செயல்களைச் செய்தால் என்ன ஆகும்?

குறிப்பு:  உள்ளுறை – கு. வெ. பாலசுப்பிரமணியன் உரை – குடித்து மயங்கிய பரதவர் தாம் பெற்ற பெரிய மீனை எளிதில் விற்று நீலமலரை மிதித்துச் செல்வர் என்றது, காமத்தால் மயக்கமுற்ற தலைவன் மணம்புரி கொடையாய் மிகுதியான பொருள் தந்து தலைவியைப் பெற்றவனாய் அயலார் எடுத்த அலர்மொழியெல்லாம் தாழ மிதித்து அடக்கித் தன் ஊருக்கு உடன்கொண்டு பெயர்வான் என்பதனை உள்ளுறுத்திற்று.  பூத் தப மிதிக்கும் (7) – கு. வெ. பாலசுப்பிரமணியன் உரை – கெடுமாறு மிதித்துச் செல்கின்றார் நம் தலைவர், ஒளவை துரைசாமி உரை – செல்வோர் கால்பட்டு மிதியுண்டு கெடும்.  எல் – எல்லே இலக்கம் (தொல்காப்பியம், இடையியல் 21).  வார்தல் போகல் ஒழுகல் மூன்றும் நேர்பும் நெடுமையும் செய்யும் பொருள (தொல்காப்பியம், உரியியல் 21).

சொற்பொருள்:  ஞான்ற – மறையும்,  ஞாயிறு – கதிரவன், குடமலை மறைய – மேற்குத் திசையில் உள்ள மலையின் பின் மறைய, மான்ற மாலை – மயங்கிய மாலை வேளையில், மகிழ்ந்த பரதவர் – மகிழ்ந்த மீனவர்கள், இனிது – இனிமையாக, பெறு பெரு மீன் – பெற்றப் பெரிய மீனை, எளிதினின் மாறி – எளிதாக விற்று, அலவன் ஆடிய – நண்டு ஆடிய, புலவு மணல் – நாற்றமுடைய மணல், முன்றில் – இல் முன், வீட்டு முற்றத்தில், காமர் சிறுகுடி – அழகியச் சிறுகுடி, செல்நெறி வழியின் – செல்லும் வழியின் (நெறி வழி – ஒருபொருட் பன்மொழி), ஆய் மணி – அழகிய நீலமணி, பொதி அவிழ்ந்தாங்கு – குவியலாக இருப்பதுப் போன்று, நெய்தல் – குவளை மலர்கள், புல் இதழ் பொதிந்த பூ – மெல்லிய இதழ்களை உடைய மலர்களை, தப மிதிக்கும் – கெட மிதிக்கும், மல்லல் – வளமான, இருங்கழி – பெரிய உப்பங்கழி,   உப்பங்கழி, மலி – நிறைந்த, நீர்ச் சேர்ப்பற்கு – நெய்தல் நிலத் தலைவனுக்கு, அமைந்து தொழில் கேட்டன்றோ – மனம் பொருந்தும் வழியில் கேட்க, இலமே – இல்லை (ஏகாரம் அசைநிலை), முன்கை – முன் கை, வார் – நெடிய, கோல் – உருண்ட, வேலைப்பாட்டுடன் செய்யப்பட்ட, எல் வளை  – ஒளி பொருந்திய வளையல்கள், உடைய – உடையுமாறு, வாங்கி – தழுவி, முயங்கு – இணைவாய், என – என்று, கலுழ்ந்த இவ்வூர்– அழுகின்றது இந்த ஊர், எற்று ஆவது கொல் – என்ன ஆவது (கொல் – அசைநிலை), யாம் மற்றொன்று செயினே – நான் வேறு ஒன்றும் செய்தால் (செயினே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 240, நப்பாலத்தனார், பாலைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
ஐதே கம்ம, இவ் உலகு படைத்தோனே,
வை ஏர் வால் எயிற்று ஒண்ணுதல் குறுமகள்
கை கவர் முயக்கம் மெய்யுறத் திருகி,
ஏங்கு உயிர்ப்பட்ட வீங்கு முலை ஆகம்
துயில் இடைப்படூஉம் தன்மையது ஆயினும்,  5
வெயில் வெய்துற்ற பரல் அவல் ஒதுக்கில்,
கணிச்சியில் குழித்த கூவல் நண்ணி
ஆன் வழிப்படுநர் தோண்டிய பத்தல்
யானை இன நிரை வெளவும்
கானம் திண்ணிய மலை போன்றிசினே.  10

பாடல் பின்னணி:  பிரிவிடை மெலிந்த தலைவி தோழியிடம் கூறியது.  உள்ளம் பொருளை விரும்பியும் தலைவியைப் பிரிவதற்கு அஞ்சிய தலைவன் தன் நெஞ்சிடம் கூறியதுமாம்.

பொருளுரை:  கூரிய எழுந்த வெள்ளை நிறப் பற்களையும் ஒளிரும் நெற்றியையுமுடைய இளமகளே!  நம் தலைவர் என்னைக் கையால் அணைத்து முயங்குதலையும் மெய்யுடன் பொருந்தி அமைவதையும் வேண்டாது வெறுத்து நீங்கியதால் ஏங்குகின்ற பெருமூச்சுடன் பொருந்திய பெரிய முலைகளையுடைய என் உடல் தனியே துயில்வதால் துன்பப்படும் தன்மையுடையது ஆயினும், வெயிலால் வெப்பம் அடைந்த பரல் உடைய பள்ளத்தின் ஒரு புறத்தில், குந்தாலியால் தோண்டப்பட்ட கிணற்றை அடைந்து பசுவின் கூட்டத்தைக் காக்கும் ஆயர்கள் தோண்டிய குழியில் உள்ள நீரை யானைகளின் கூட்டம் வரிசையாகச் சென்று உண்ணும், காடு திண்மையான மலை போன்று உள்ளது.  கொடிய இந்தப் பாலை நிலத்தின்கண் பையச் சென்று வருந்துவானாக இந்த உலகைப் படைத்தவன்!

குறிப்பு:  இறைச்சி – கு. வெ. பாலசுப்பிரமணியன் உரை – ஆனிரையை உண்பிக்கும் பத்தலின் நீரை யானை வௌவும் என்றது, தலைவன் கொள்ளவேண்டிய தலைவியின் நலனையெல்லாம் பசலை உண்டொழிக்கும் என்பதாம்.  போன்றிசினே – படர்க்கைக்கண் வந்தது,  ‘இகுமும் சின்னும் ஏனை இடத்தொடும் தகுநிலை உடையன என்மனார் புலவர்’ (தொல்காப்பியம், இடையியல் 27).  சின் – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம், சொல்லதிகாரம், இடையியல் 26, சின் என்பது இசின் என்பதன் முதற்குறை – ச. பாலசுந்தரம் உரை), அவற்றுள், இகுமும் சின்னும் ஏனை இடத்தொடும் தகு நிலை உடைய என்மனார் புலவர் (தொல்காப்பியம், இடையியல் 27).  வை– வையே கூர்மை (தொல்காப்பியம், உரியியல் 91).

சொற்பொருள்:  ஐது ஏகு அம்ம  இவ் உலகு படைத்தோனே – பையச் சென்று வருந்துவானாக இந்த உலகைப் படைத்தவன் (ஏகு – வியங்கோள் முற்றுவினை), வை ஏர் வால் எயிற்று ஒள் நுதல் குறுமகள்– கூரிய எழுந்த வெள்ளை நிறப் பற்களையும் ஒளிரும் நெற்றியையுமுடைய இளமகளே (அம்ம – வியப்பு இடைச்சொல், குறுமகள் – அண்மை விளி), கை கவர் முயக்கம் மெய்யுறத் திருகி ஏங்கு உயிர்ப்பட்ட வீங்கு முலை ஆகம் துயில் இடைப்படூஉம் தன்மையது ஆயினும் – கையால் அணைத்து முயங்குதலையும் மெய்யுடன் பொருந்தி அமைவதையும் வேண்டாது வெறுத்து நீங்கியதால் ஏங்குகின்ற பெருமூச்சுடன் பொருந்திய பெரிய முலைகளையுடைய என் உடல் தனியே துயில்வதால் துன்பப்படும் தன்மையுடையது ஆயினும் (திருகி – மாறுபட்டு, இடைப்படூஉம் – அளபெடை), வெயில் வெய்துற்ற பரல் அவல் ஒதுக்கில் – வெயிலால் வெப்பம் அடைந்த பரல் உடைய பள்ளத்தின் ஒரு புறத்தில், கணிச்சியில் குழித்த கூவல் நண்ணி ஆன் வழிப்படுநர் தோண்டிய பத்தல் யானை இன நிரை வெளவும் கானம் திண்ணிய மலை போன்றிசினே – குந்தாலியால் தோண்டப்பட்ட கிணற்றை அடைந்து பசுவின் கூட்டத்தைக் காக்கும் ஆயர்கள் தோண்டிய குழியில் உள்ள நீரை யானைகளின் கூட்டம் வரிசையாகச் சென்று உண்ணும் காடு திண்மையான மலை போன்று உள்ளது (போன்றிசினே – சின் படர்க்கைக்கண் வந்தது, ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 241, மதுரைப் பெருமருதனார், பாலைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
உள்ளார் கொல்லோ தோழி, கொடுஞ்சிறைப்
புள் அடி பொறித்த வரியுடைத் தலைய
நீர் அழி மருங்கின் ஈர் அயிர் தோன்ற
வளரா வாடை உளர்பு நனி தீண்டலின்
வேழ வெண்பூ விரிவன பலவுடன்  5
வேந்து வீசு கவரியின் பூம்புதல் அணிய,
மழை கழி விசும்பின் மாறி ஞாயிறு
விழித்து இமைப்பது போல் விளங்குபு மறைய,
எல்லை போகிய பொழுதின் எல் உறப்
பனிக்கால் கொண்ட பையுள் யாமத்துப்,  10
பல்லிதழ் உண்கண் கலுழ,
நில்லாப் பொருட்பிணிப் பிரிந்திசினோரே?

பாடல் பின்னணி:  பொருள்வயின் பிரிந்த தலைவனின் பிரிவை ஆற்றியிரு என்று வற்புறுத்திய தோழியிடம் தலைவி கூறியது.

பொருளுரை:  தோழி! வளைந்த சிறகுகளையுடைய பறவைகளின் காலடிச் சுவடுகள் பதிந்து வரிகளுடன் அமைந்த நீர் வற்றிய இடங்களில், குளிர்ந்த நுண்மணல் தோன்ற, மென்மையாக வீசும் வாடைக் காற்றானது இதழ்களைப் பிரித்து மிகவும் தீண்டுவதால், வேழத்தின் வெள்ளை மலர்கள் மலர்ந்து வேந்தனுக்கு வீசப்படும் சாமரைபோல் தோன்றி மெல்லிய புதர்கள்தோறும் அழகாக இருக்க, முகில்கள் நீங்கிச் சென்ற வானத்தில் கதிரவன் கண்களைத் திறந்து மூடி இமைத்தாற்போல் விளங்கி மறைய, பகற்பொழுது கழிந்த பொழுதில் இரவு நேரம் வர, பனி விழுந்து துன்பம் செய்யும் நள்ளிரவில் பல இதழ்களுடைய மலர்போன்ற மையிட்ட எம் கண்கள் கலங்குமாறு, நிலையில்லாத பொருள் மேல் உள்ள விருப்பத்தால் நம்மைப் பிரிந்து சென்ற தலைவர் நம்மை நினைப்பாரா?

குறிப்பு:  ஒப்புமை:  நற்றிணை 241 வரிகள் 5–6 – வேழ வெண்பூ விரிவன பலவுடன் வேந்து வீசு கவரியின், அகநானூறு 335 – புதுப் பூ வார் உறு கவரியின் வண்டு உண விரிய.  சின் – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம், சொல்லதிகாரம், இடையியல் 26, சின் என்பது இசின் என்பதன் முதற்குறை – ச. பாலசுந்தரம் உரை), அவற்றுள், இகுமும் சின்னும் ஏனை இடத்தொடும் தகு நிலை உடைய என்மனார் புலவர் (தொல்காப்பியம், இடையியல் 27).  நனி – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3).  பல்லிதழ் – மலர்க்கு ஆகுபெயர், அகரம் கெட்டுக் ‘குறியதன் முன்னர்த் தன்னுரு இரட்டலும்’ – தொல்காப்பியம், எழுத்ததிகாரம் 160, என்றதனால் லகரம் இரட்டித்துப் பல்லிதழ் என முடிந்தது.

சொற்பொருள்:  உள்ளார் கொல்லோ – என்னை நினைப்பாரா (கொல் – ஐயப்பொருட்டு, ஓ – அசைநிலை), தோழி – தோழி, கொடுஞ்சிறைப் புள் அடி பொறித்த வரியுடைத் தலைய நீர் அழி மருங்கின் ஈர் அயிர் தோன்ற வளரா வாடை உளர்பு நனி தீண்டலின் வேழ வெண்பூ விரிவன பலவுடன் வேந்து வீசு கவரியின் பூம்புதல் அணிய – வளைந்த சிறகுகளையுடைய பறவைகளின் காலடிச் சுவடுகள் பதிந்து வரிகளுடன் அமைந்த நீர் வற்றிய இடங்களில் குளிர்ந்த நுண்மணல் தோன்ற மென்மையாக வீசும் வாடைக் காற்றானது இதழ்களைப் பிரித்து மிகவும் தீண்டுவதால் வேழத்தின் வெள்ளை மலர்கள் மலர்ந்து வேந்தனுக்கு வீசப்படும் சாமரைபோல் தோன்றி மெல்லிய புதர்கள்தோறும் அழகாக இருக்க (கவரியின் – இன் உருபு ஒப்புப் பொருளது, ஐந்தாம் வேற்றுமை உருபு), மழை கழி விசும்பின் மாறி ஞாயிறு விழித்து இமைப்பது போல் விளங்குபு மறைய எல்லை போகிய பொழுதின் எல் உறப் பனிக்கால் கொண்ட பையுள் யாமத்துப் பல்லிதழ் உண்கண் கலுழ நில்லாப் பொருட்பிணிப் பிரிந்திசினோரே – முகில்கள் நீங்கிச் சென்ற வானத்தில் கதிரவன் கண்களைத் திறந்து மூடி இமைத்தாற்போல் விளங்கி மறைய பகற்பொழுது கழிந்த பொழுதில் இரவு நேரம் வர பனி விழுந்து துன்பம் செய்யும் நள்ளிரவில் பல இதழ்களுடைய மலர்போன்ற மையிட்ட கண்கள் கலங்குமாறு நிலையில்லாத பொருள் மேல் உள்ள விருப்பத்தால் நம்மைப் பிரிந்து சென்ற தலைவர் (பல்லிதழ் – மலர்க்கு ஆகுபெயர்), பிரிந்திசினோரே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 242, விழிக்கட்பேதைப் பெருங்கண்ணனார், முல்லைத் திணை – தலைவன் தேர்ப்பாகனிடம் சொன்னது
இலை இல பிடவம் ஈர் மலர் அரும்ப,
புதல் இவர் தளவம் பூங்கொடி அவிழப்,
பொன் எனக் கொன்றை மலர மணி எனப்
பல் மலர் காயாங் குறுஞ்சினை கஞலக்,
கார் தொடங்கின்றே; காலை வல் விரைந்து  5
செல்க பாக நின் தேரே! உவக்காண்!
கழிப் பெயர் களரில் போகிய மட மான்
விழிக் கட் பேதையொடு இனன் இரிந்து ஓடக்,
காமர் நெஞ்சமொடு அகலா,
தேடூஉ நின்ற இரலை ஏறே.  10

பாடல் பின்னணி:  வினைமுற்றி மீளும் தலைவன் தேர்ப்பாகனிடம் கூறியது.

பொருளுரைமழைக்காலம் தொடங்கிய இந்த வேளையில் இலைகள் இல்லாத பிடவம் மென்மையான மலர்களைத் தரும் அரும்புகளை ஈன்றுள்ளது. புதர்களின் மேல் படர்ந்திருக்கும் தளவத்தின் கொடிகளில் மலர்கள் பூத்துள்ளன. பொன்னைப் போன்ற கொன்றை மலர்கள் மலர்ந்துள்ளன. நீலமணியைப் போன்று நிறையக் காயா மலர்கள் குறுகிய மரக் கிளைகளில் பூத்துள்ளன. மிகவும் விரைவாக உன் தேரை ஓட்டுவாயாக, பாகனே!  அங்கே பார்!  கழி நீர் பெயர்ந்த களர் நிலத்தில் விழித்த கண்களையுடைய தன் குட்டியுடன் ஒரு பெண் மான் தன் கூட்டத்திலிருந்து பிரிந்து ஓட, அதனுடைய ஆண் மான் காதல் நெஞ்சுடன் அதைத் தேடுகின்றது.

குறிப்பு:  பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – ஆண்மாண் பெண்மானையும் குட்டியையுந் தேடாநின்றதனைப் பார் எனவே யான் என் காதலியையும் புதல்வனையுங் காண மிக விருப்பம் உடையேன் என்பதனைப் பிறிதொன்றன் மேல் வைத்து அறிவுறுத்தினான்.  இது குறிப்பெச்சம்.  காயாவும் கொன்றையும் கார்காலத்தில் மலர்தல் – நற்றிணை 242 – பல் மலர் காயாங் குறுஞ்சினை கஞலக் கார் தொடங்கின்றே, நற்றிணை 371 – காயாங்குன்றத்துக் கொன்றை போல மா மலை விடர் அகம் விளங்க மின்னி மாயோள் இருந்த தேஎம் நோக்கி வியல் இரு விசும்பு அகம் புதையப் பாஅய்ப் பெயல் தொடங்கினவே, ஐங்குறுநூறு 420 – பொன் என மலர்ந்த கொன்றை, மணி எனத் தேம்படு காயா, மலர்ந்த தோன்றியொடு நன்னலம் எய்தினை புறவே.

சொற்பொருள்:  இலை இல பிடவம் – இலைகள் இல்லாத பிடவம், ஈர் மலர் அரும்ப – குளிர்ச்சியான மலர்களைத் தரும் அரும்புகளை ஈன, மென்மையான மலர்களைத் தரும் அரும்புகளை ஈன, புதல் இவர் தளவம் – புதர் மேல் படர்ந்திருக்கும் தளவம், பூங்கொடி அவிழ – மலர்க் கொடிகள் மலர, பொன் எனக் கொன்றை மலர – பொன்னைப் போன்று கொன்றை மலர்கள் மலர்ந்திருந்தன, மணி எனப் பல் மலர் காயா – நீலமணியைப் போன்று பல காயா மலர்கள் பூத்தன, குறுஞ்சினை – குறுகிய மரக்கிளைகளில், கஞல – நெருங்கி இருந்தன, கார் தொடங்கின்றே காலை – மழைக்காலம் தொடங்கிய காலம், வல் விரைந்து செல்க பாக – மிக வேகமாக ஓட்டிச் செல்வாயாகப் பாகனே (பாக – அண்மை விளி), நின் தேரே – உன் தேரை (தேரே – ஏகாரம் அசைநிலை), உவக்காண் – அங்கே பார், கழிப் பெயர் களரில் – கழிந்து பெயர்கின்ற களர் நிலத்தில், கழி நீர் பெயர்ந்த களர் நிலத்தில், போகிய மட மான் – சென்ற பெண்மான், விழிக் கட் பேதையொடு – விழித்த கண்களையுடைய தன் குட்டியுடன்,  மருண்ட கண்களையுடைய தன் குட்டியுடன், இனன் இரிந்து ஓட – தன்னுடைய கூட்டத்தினின்று பிரிந்து ஓட, காமர் நெஞ்சமொடு – காதல் நெஞ்சுடன், அன்பு நெஞ்சத்துடன், அகலா – செல்லாத, தேடூஉ நின்ற – தேடி நின்ற, இரலை ஏறே – ஆண் மான் (தேடூஉ – அளபெடை, ஏறே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 243, காமக்கணிப் பசலையார், பாலைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
தேம்படு சிலம்பில் தெள் அறல் தழீஇய
துறுகல் அயல தூ மணல் அடைகரை,
அலங்கு சினை பொதுளிய நறு வடி மாஅத்துப்
பொதும்பு தோறு அல்கும் பூங்கண் இருங்குயில்,
‘கவறு பெயர்த்தன்ன நில்லா வாழ்க்கை இட்டு  5
அகறல் ஓம்புமின் அறிவுடையீர்!’ எனக்
கையறத் துறப்போர்க் கழறுவ போல,
மெய்யுற இருந்து மேவர நுவல,
இன்னாது ஆகிய காலை பொருள்வயிற்
பிரியல் ஆடவர்க்கு இயல்பு எனின்,  10
அரிது மன்றம்ம, அறத்தினும் பொருளே.

பாடல் பின்னணி:  பிரிவிடை மெலிந்த தலைவி தோழியிடம் கூறியது.

பொருளுரைதேன் உடைய மலைப் பக்கத்தில் தெளிவான நீர் சூழ்ந்த பாறையின் அருகில் தூய மணல் அடைந்த கரையில் அசைகின்ற கிளைகளில் தளிர்த்துள்ள வடுக்களையுடைய மாமரங்கள் கொண்ட சோலைகள்தோறும் தங்கி வாழும் அழகிய கண்களையுடைய கரிய குயில்கள் “சூதாடு கருவி உருண்டு ஓடுவதை ஒத்த நிலையில்லாத பொருளை ஈட்டும் வாழ்க்கையை முன்னிட்டு உங்கள் தலைவியரை விட்டுப் பிரிதலைச் செய்யாதீர்கள், அன்புடையவர்களே” எனத் துணைவியர் செயலறும்படி துறப்பவர்களிடம் இடித்து உரைப்பது போல, ஆண் குயிலும் பெண் குயிலும் கூடி இருந்து விருப்பம் உண்டாகக் கூவித் துன்பம் தருவதாகிய இந்த வேளையில், பொருளுக்காகப் பிரிவது ஆடவரின் தன்மை என்றால், அறத்தைவிடவும் பொருள் உறுதியாக அரிது போலும். 

குறிப்பு:  புலவரின் பெயர் – ஒளவை துரைசாமி உரை– காமக்காணி நப்பசலையார், நப்பசலையார் என்பது இவரது இயற்பெயர்.  ஏடு எழுதியவர்கள் பிழையாக காமக்கணி என்று எழுதி விட்டனர்.  காமக்காணி என்பது பண்டைநாளில் அரசர்களால் தரப்பட்ட காணியாட்சிச் சிறப்புகளுள் ஒன்று.  கூத்தர்க்குக் கூத்தாட்டுக் காணி என்றும் தச்சர்க்குத் தச்சர்க்காணி என்றும் வழங்கினாற் போல, அரசன் விரும்புவனற்றை அவன் விரும்பியவாறே செய்த செயல் நலம் கருதி வியந்து அவன் அளிக்க வரும் காணி உரிமையாகலின் அது காமக்காணி எனக் கருதப்பட்டது.  அறத்தினும் (11) – உம் இடைச்சொல் சிறப்புப் பொருளில் வந்தது.  மன்றம்ம:   பொ. வே. சோமசுந்தரனார் உரை, அகநானூறு 367–13 – மன்ற அம்ம, மன்ற – தேற்றமாக, அம்ம கேட்பித்தற்பொருட்டு. தேனுடைய மலை (நற்றிணையில்):  104 – தேம் கமழ் சிலம்பின், 147 – தேம்படு சாரல், 185 – தேனுடை நெடு வரை, 188 – குன்றத்துத் தேம் முதிர், 243 – தேம்படு சிலம்பில், 259 – தேம் கமழ் சாரல், 389 – தேம்படு நெடு வரை, 395 – தேன் தூங்கு உயர்வரை.  தேம்படு சிலம்பில், தேம்படு நெடுவரை – ஆகிவற்றிற்கு தேன் உண்டாகின்ற பக்கமாலையிலே, தேன் மணம் மிக்க நெடிய மலை என்றே விளக்கியுள்ளார் பின்னத்தூர் நாராயணசாமி ஐயர்.

சொற்பொருள்:  தேம்படு சிலம்பில் தெள் அறல் தழீஇய துறுகல் அயல தூ மணல் அடைகரை அலங்கு சினை பொதுளிய நறு வடி மாஅத்துப் பொதும்புதோறு அல்கும் – தேன் உடைய மலைப் பக்கத்தில் தெளிவான நீர் சூழ்ந்த பாறையின் அருகில் தூய மணல் அடைந்த கரையில் அசைகின்ற கிளைகளில் தளிர்த்துள்ள வடுக்களையுடைய மாமரங்கள் உடைய சோலைகள்தோறும் தங்கி வாழும் (தழீஇய – செய்யுளிசை அளபெடை, மாஅத்து – அத்துச் சாரியை), பூங்கண் இருங்குயில் ‘கவறு பெயர்த்தன்ன நில்லா வாழ்க்கை இட்டு அகறல் ஓம்புமின் அறிவுடையீர்’ எனக் கையறத் துறப்போர்க் கழறுவ போல – அழகிய கண்களையுடைய கரிய குயில்கள் ‘சூதாடு கருவி உருண்டு ஓடுவதை ஒத்த நிலையில்லாத பொருளை ஈட்டும் வாழ்க்கையை முன்னிட்டு உங்கள் தலைவியரை விட்டுப் பிரிதலைச் செய்யாதீர்கள் அன்புடையவர்களே’ எனத் துணைவியர் செயலறும்படி துறப்பவர்களிடம் இடித்து உரைப்பது போல, மெய்யுற இருந்து மேவர நுவல இன்னாது ஆகிய காலை பொருள்வயிற் பிரியல் ஆடவர்க்கு இயல்பு எனின் அரிது மன்ற – ஆண் குயிலும் பெண் குயிலும் கூடி இருந்து விருப்பம் உண்டாகக் கூவித் துன்பம் தருவதாகிய இந்த வேளையில் பொருளுக்காகப் பிரிவது ஆடவரின் தன்மை என்றால் இது உறுதியாக அரிது, அம்ம – வியப்பைக் குறித்தது, கேட்பாயாக, அறத்தினும் பொருளே – அறத்தைவிட பொருள் (பொருளே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 244, கூற்றங்குமரனார், குறிஞ்சித் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
விழுந்த மாரிப் பெருந்தண் சாரல்
கூதிர்க் கூதளத்து அலரி நாறும்
மாதர் வண்டின் நயவரும் தீங்குரல்
மணம் நாறு சிலம்பின் அசுணம் ஓர்க்கும்
உயர் மலை நாடற்கு உரைத்தல் ஒன்றோ,  5
துயர் மருங்கு அறியா அன்னைக்கு, ‘இந்நோய்
தணியுமாறு இது’ என உரைத்தல் ஒன்றோ,
செய்யாய் ஆதலின் கொடியை தோழி!
மணி கெழு நெடு வரை அணிபெற நிவந்த
செயலை அம் தளிர் அன்ன, என்  10
மதன் இல் மா மெய்ப் பசலையும் கண்டே.

பாடல் பின்னணி:  தலைவன் வரையாது காலம் தாழ்த்துவதால் தலைவி வருந்தினாள்.  தோழி அன்னையிடம் அறத்தொடு நிற்கக் கருதினாள்.  தோழியிடம் தலைவி உரைத்தது.

பொருளுரை:  தோழி!  நீலமணிகள் இருக்கும் பெரிய மலையில் உள்ள அழகான உயர்ந்த அசோக மரத்தின் அழகிய தளிர் போன்ற என் வலிமையற்ற மாமை நிற மேனியில் (மாந்தளிர் நிற மேனியில்), படர்ந்த பசலையைக் கண்டும், மழை பெய்த பெரிய குளிர்ந்த மலைப்பக்கத்தில் கூதிர்க்காலத்தின் கூதள மலர்களின் மணம் வீசுகின்ற அழகிய வண்டுகளின் விருப்பம் தரும் இனிய குரலை, நறுமணம் வீசும் மலையில் யாழோசை என எண்ணி அசுணம் கேட்கும் உயர்ந்த மலையின் தலைவனிடம், நீ என் நிலையை உரைக்கவில்லை.  என் துன்பத்தை அறியாத அன்னையிடம், “இந்தத் துன்ப நோய் தணியும் வழி இது தான்” என்றும் நீ கூறுதலைச் செய்யாததால், நீ கொடியவள்.

குறிப்பு:  ஒளவை துரைசாமி உரை – ‘அறத்தொடு நிற்கும் காலத்தன்றி, அறத்தியல் மரபிலள் தோழி என்ப’ (தொல்காப்பியம், பொருளியல் 11) என்ற நூற்பா உரையில் இப்பாட்டைக் காட்டி, இது ‘தலைவி அறத்தொடு நிற்குமாறு என்பர் இளம்பூரணர்.  இனி நச்சினார்க்கினியர் ‘உயிரினும் சிறந்தன்று நாணே (தொல்காப்பியம், களவியல் 23) என்ற நூற்பா உரையில் இதனைக் காட்டி, ‘இஃது அறத்தொடு நிற்குமாறு’ தோழிக்குத் தலைவி கூறியது என்பர்.  உள்ளுறை – H. வேங்கடராமன் உரை – கூதள மலரில் வீழ்வதால் மணம் நாறுகின்ற வண்டு பாடும் ஓசையை, யாழிசை என்று கருதி அசுணம் ஆராயும் என்றது, தலைவன் தழுவ அதனால் ஏற்பட்ட வேறுபாட்டைக் கண்டு தாய் அணங்கு தீண்டியது போலும் என்று ஆராயா நிற்கும் என்றதாம்.  அசுணம் (4) – ஒளவை துரைசாமி உரை – அசுணம் என்னும் புள்.  விலங்கு வகை என்றலும் உண்டு.  நல்லிசையின் நலம் கண்டு இன்புறும் இயல்பு இதற்கு உண்டென்பது வழக்கு.  அசுணம் – அசுணம் 88 – அகநானூறு – இருஞ்சிறைத் தொழுதி ஆர்ப்ப யாழ் செத்து இருங்கல் விடர் அளை அசுணம் ஓர்க்கும், நற்றிணை 244 – மாதர் வண்டின் நயவரும் தீங்குரல் மணம் நாறு சிலம்பின் அசுணம் ஓர்க்கும், நற்றிணை 304 – அசுணம் கொல்பவர் கை போல்.   மணி கெழு நெடு வரை (9) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – நீலமணி போன்ற நீண்ட மலையில், ஒளவை துரைசாமி உரை – மணிகள் கிடந்தது மிளிரும் நெடிய மலை.

சொற்பொருள்:  விழுந்த மாரிப் பெருந்தண் சாரல் கூதிர்க் கூதளத்து அலரி நாறும் மாதர் வண்டின் நயவரும் தீங்குரல் மணம் நாறு சிலம்பின் அசுணம் ஓர்க்கும் உயர் மலை நாடற்கு – மழை பெய்த பெரிய குளிர்ந்த மலைப்பக்கத்தில் கூதிர்க்காலத்தின் கூதள மலர்களின் மணம் வீசுகின்ற அழகிய வண்டுகளின் விருப்பம் தரும் இனிய குரலை நறுமணம் வீசும் மலையில் யாழோசை என எண்ணி அசுணம் கேட்கும் உயர்ந்த மலையின் தலைவனுக்கு (கூதளம் – Convolvulus ipome, a three–lobed nightshade vine), உரைத்தல் ஒன்றோ – உரைத்தல் ஒன்றை (ஒன்றோ – ஒன்று எண்ணுப்பொருளைக் காட்டும் இடைச்சொல், ஓகாரம் அசைநிலை), துயர் மருங்கு அறியா அன்னைக்கு – என் துன்பத்தை அறியாத அன்னைக்கு, ‘இந்நோய் தணியுமாறு இது’ என உரைத்தல் ஒன்றை செய்யாய் ஆதலின் கொடியை – இந்தத் துன்ப நோய் தணியும் வழி இது தான் என்று கூறுதல் ஒன்றை நீ செய்யாய் ஆதலால் நீ கொடியவள் (ஒன்றோ – ஒன்று எண்ணுப்பொருளைக் காட்டும் இடைச்சொல், ஓகாரம் அசைநிலை), தோழி – தோழி, மணி கெழு நெடு வரை அணிபெற நிவந்த செயலை அம் தளிர் அன்ன என் மதன் இல் மா மெய்ப் பசலையும் கண்டே – நீலமணிகள் இருக்கும் பெரிய மலையில் உள்ள அழகான உயர்ந்த அசோக மரத்தின் அழகிய தளிர் போன்ற என் வலிமையற்ற மாமை நிற மேனியில் (மாந்தளிர் நிற மேனியில்) படர்ந்த பசலையைக் கண்டு (செயலை – அசோக மரம், Saraca indica,  Asoka tree,  கண்டே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 245, அல்லங்கீரனார், நெய்தல் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
நகையாகின்றே தோழி, ‘தகைய
அணி மலர் முண்டகத்து ஆய் பூங்கோதை
மணி மருள் ஐம்பால் வண்டு படத் தைஇத்,
துணி நீர்ப் பௌவம் துணையோடு ஆடி,
ஒழுகு நுண் நுசுப்பின் அகன்ற அல்குல்  5
தெளி தீம் கிளவி யாரையோ, என்
அரிது புணர் இன் உயிர் வவ்விய நீ?’ என,
பூண் மலி நெடுந்தேர்ப் புரவி தாங்கித்
தான் நம் அணங்குதல் அறியான், நம்மின்
தான் அணங்குற்றமை கூறி, கானல்  10
சுரும்பு இமிர் சுடர் நுதல் நோக்கிப்,
பெருங்கடற் சேர்ப்பன் தொழுது நின்றதுவே.

பாடல் பின்னணி:  தலைவனின் குறை நேர்ந்த தோழி தலைவியிடம் நகையாடிக் கூறியது.

பொருளுரை:  தோழி!  மிக்க அழகிய மலர்களை உடைய முண்டகத்தின் அழகிய மலர்மாலையை, நீலமணி போன்ற ஐந்து பகுதியாக உள்ள கூந்தலில் வண்டுகள் மொய்க்கச் சூடி, நாம் தெளிந்த நீரையுடைய கடலில் தோழியருடன் நீராடிய வேளையில், “நேரான நுண்ணிய இடையையும் அகன்ற அல்குலையும் தெளிவான இனிய சொற்களையும் உடையவளே!  நீ யாரோ, என் அரிதாக அமைந்துள்ள இனிய உயிரைக் கைப்பற்றியவள்” என அணிகலன் நிரம்பிய நெடிய தேரில் பூட்டிய குதிரையுடன் வந்து, நம்மால் தான் வருந்தியதைக் கூறினான்.  நாம் துன்புறுதலை அவன் அறியான்.  கடற்கரைச் சோலையில் வண்டுகள் சூழ்ந்து இசைக்கும் நம் ஒளிரும் நெற்றியை நோக்கிப் பெரிய கடலின் தலைவன் கைகூப்பி வணங்கி நின்றது, நகைப்பைத் தருகின்றது.

குறிப்பு:  யாரையோ (6) – இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – அகநானூறு 46 – ம் பாடலின் உரையில் கூறியது) ஐகாரம் முன்னிலைக்கண் வந்தது, சாரியையுமாம்.   நீலமணிபோல் பெண்ணின் கூந்தல்:  அகநானூறு 8 – மணி ஏர் ஐம்பால், நற்றிணை 10 – மணியின் தாழ்ந்த நல் நெடுங்கூந்தல், நற்றிணை 133 – மணி ஏர் ஐம்பால், 214 – மணி இருங்கதுப்பு, 245 – மணி மருள் ஐம்பால், 337 – மணி மருள் ஐம்பால், 366 – மணி ஏர் ஐம்பால், 374 – வீழ் மா மணிய புனை நெடுங்கூந்தல், கலித்தொகை 22 – மணி ஒளி விட்டன்ன ஐவகை, கலித்தொகை 77 – மாசு அற மண்ணுற்ற மணி ஏசும் இருங்கூந்தல், பரிபாடல் 10, குறிஞ்சிப்பாட்டு 69 – பொன் எறி மணியின் சிறுபுறம் தாழ்ந்த எம் பின்னிருங் கூந்தல்.

சொற்பொருள்:  நகையாகின்றே – நகைப்பைத் தருகின்றது, தோழி – தோழி, தகைய அணி மலர் முண்டகத்து ஆய் பூங்கோதை மணி மருள் ஐம்பால் வண்டு படத் தைஇத் துணி நீர்ப் பௌவம் துணையோடு ஆடி – மிக்க அழகிய மலர்களை உடைய முண்டகத்தின் அழகிய மலர்மாலையை நீலமணி போன்ற ஐந்து பகுதியாக உள்ள கூந்தலில் வண்டுகள் மொய்க்கச் சூடி தெளிந்த நீரையுடைய கடலில் தோழியருடன் நீராடி (முண்டகம் – நீர் முள்ளி, Hygrophila, தைஇ – சொல்லிசை அளபெடை), ‘ஒழுகு நுண் நுசுப்பின் அகன்ற அல்குல் தெளி தீம் கிளவி யாரையோ என் அரிது புணர் இன் உயிர் வவ்விய நீ?’ என பூண் மலி நெடுந்தேர்ப் புரவி தாங்கித் தான் நம் அணங்குதல் அறியான் – நேரான நுண்ணிய இடையையும் அகன்ற அல்குலையும் தெளிவான இனிய சொற்களையும் உடையவளே நீ யாரோ என் அரிதாக அமைந்துள்ள இனிய உயிரைக் கைப்பற்றிய நீ’ என அணிகலன் நிரம்பிய நெடிய தேரில் பூட்டிய குதிரையுடன் வந்து நாம் துன்புறுதலை அறியான் (அல்குல் – இடைக்குக் கீழ் உள்ள பகுதி, தெளி தீம் கிளவி – அன்மொழித்தொகை), நம்மின் தான் அணங்குற்றமை கூறி – நம்மால் தான் வருந்தியதைக் கூறி, கானல் சுரும்பு இமிர் சுடர் நுதல் நோக்கிப் பெருங்கடற் சேர்ப்பன் தொழுது நின்றதுவே – கடற்கரைச் சோலையில் வண்டுகள் சூழ்ந்து இசைக்கும் நம் ஒளிரும் நெற்றியை நோக்கிப் பெரிய கடலின் தலைவன் தொழுது நின்றது (நின்றதுவே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 246, காப்பியஞ்சேந்தனார், பாலைத் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
இடூஉ ஊங்கண் இனிய படூஉம்;
நெடுஞ்சுவர்ப் பல்லியும் பாங்கில் தேற்றும்;
மனை மா நொச்சி மீமிசை மாச் சினை,
வினை மாண் இருங்குயில் பயிற்றலும் பயிற்றும்;
உரம் புரி உள்ளமொடு சுரம் பல நீந்திச்,  5
செய் பொருட்கு அகன்றனர் ஆயினும் பொய்யலர்,
வருவர், வாழி தோழி! புறவின்
பொன் வீக் கொன்றையொடு பிடவுத் தளை அவிழ,
இன்னிசை வானம் இரங்கும்; அவர்
வருதும் என்ற பருவமோ இதுவே.  10

பாடல் பின்னணி:  பிரிவிடை மெலிந்த தலைவியிடம் தோழி கூறியது.

பொருளுரை:  தோழி!  நீ நீடு வாழ்வாயாக!  நாம் குறிப்பிட்ட இடத்தில் இனியவை நல்ல நிமித்தமாக நிகழ்கின்றன.  நெடிய சுவரின் மீது உள்ள பல்லியும் அருகிலிருந்து ஒலித்துத் தேற்றும்.  மனையில் உள்ள உயர்ந்த நொச்சி மரத்தின் மேல் உள்ள பெரிய கிளையில் இருந்து, கூவுவதில் மாட்சிமை உடைய கரிய குயில் கூவுதலையும் செய்யும். வலிமை மிக்க உள்ளத்துடன் பல சுரங்களைக் கடந்து நம் தலைவர் பொருள் ஈட்டச் சென்றார் ஆயினும், அவர் பொய் கூறுபவர் அல்லர்.  தான் குறித்தபடி வருவார்.  காட்டில் உள்ள பொன் நிறமுடைய கொன்றை மலர்களுடன் பிடவமும் கட்டு அவிழ்ந்து மலர, இனிய குரலையுடைய முகில்கள் முழங்குகின்றன.  அவர் வருவதாகக் கூறிய பருவம் இது தான்.

குறிப்பு:  மனை நொச்சி – அகநானூறு 21 – மனை இள நொச்சி, அகநானூறு 23 – மனைய தாழ்வின் நொச்சி, அகநானூறு 367 – மனை வளர் நொச்சி, நற்றிணை 246 – மனை மா நொச்சி, பொருநராற்றுப்படை 185 – மனை நொச்சி.  நிமித்தம்:  பறவை நிமித்தம் – நற்றிணை 161, குறுந்தொகை 218, கலித்தொகை 11, பல்லி நிமித்தம் – அகநானூறு 9, 88, 151, 289, 351, 387, நற்றிணை 98, 169, 246, 333, குறுந்தொகை 16, 140.  பெண்கள் நல்ல நிமித்தத்திற்காகக் காத்து நிற்றல் – நற்றிணை 40, முல்லைப்பாட்டு 11.

சொற்பொருள்:  இடூஉ ஊங்கண் இனிய படூஉம் – நாம் குறிப்பிட்ட இடத்தில் இனியவை நல்ல நிமித்தமாக நிகழ்கின்றன (இடூஉ – அளபெடை, படூஉம் – அளபெடை), நெடுஞ்சுவர்ப் பல்லியும் பாங்கில் தேற்றும் – நெடிய சுவரின் மீது உள்ள பல்லியும் அருகிலிருந்து ஒலித்துத் தேற்றும், மனை மா நொச்சி மீமிசை மாச் சினை வினை மாண் இருங்குயில் பயிற்றலும் பயிற்றும் – மனையில் உள்ள உயர்ந்த நொச்சி மரத்தின் மேல் உள்ள பெரிய கிளையில் இருந்து கூவுவதில் மாட்சிமை உடைய கரிய குயில் கூவுதலையும் செய்யும் (நொச்சி மரம் – Vitex leucoxylon, Chaste tree, மீமிசை – ஒருபொருட் பன்மொழி), உரம் புரி உள்ளமொடு சுரம் பல நீந்திச் செய் பொருட்கு அகன்றனர் ஆயினும் பொய்யலர் – வலிமை மிக்க உள்ளத்துடன் பல சுரங்களைக் கடந்து நம் தலைவர் பொருள் ஈட்டச்  சென்றார் ஆயினும் அவர் பொய் கூறுபவர் அல்லர், வருவர் – வருவார், வாழி – நீடு வாழ்வாயாக, அசைநிலை, தோழி – தோழி, புறவின் பொன் வீக் கொன்றையொடு பிடவுத் தளை அவிழ – காட்டில் உள்ள பொன் நிறமுடைய கொன்றை மலர்களுடன் பிடவமும் கட்டு அவிழ்ந்து மலரும் (கொன்றை – சரக்கொன்றை, கடுக்கை – Laburnum, Golden Shower Tree, Cassia fistula, பிடவம் – காட்டு மல்லிகை, wild jasmine, Randia malabarica), இன்னிசை வானம் இரங்கும் – இனிய குரலையுடைய முகில்கள் முழங்கும் (வானம் – ஆகுபெயர் முகிலுக்கு), அவர் வருதும் என்ற பருவமோ இதுவே – அவர் வருவதாகக் கூறிய பருவம் இது தான் (இதுவே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 247, பரணர், குறிஞ்சித் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
தொன்றுபடு துப்பொடு முரண் மிகச் சினைஇக்
கொன்ற யானைச் செங்கோடு கழாஅ
அழிதுளி பொழிந்த இன் குரல் எழிலி,
எஃகுறு பஞ்சிற்று ஆகி வைகறைக்
கோடு உயர் நெடு வரை ஆடும் நாட! நீ  5
நல்காய் ஆயினும், நயன் இல செய்யினும்,
நின் வழிப்படூஉம் என் தோழி நன்னுதல்
விருந்து இறைகூடிய பசலைக்கு
மருந்து பிறிது இன்மை நன்கு அறிந்தனை சென்மே.

பாடல் பின்னணி:  களவில் வந்தொழுகும் தலைவன் வினைவயிற் பிரியும் காலத்தில் தோழி அவனிடம் கூறியது.  வரைவு கடாயது.

பொருளுரைபழமையிலிருந்து வந்த வலிமையுடன் பகைமை மிகுந்ததால் புலியைக் கொன்ற யானையானது தன் குருதி படிந்த கோட்டை (மருப்பை, தந்தத்தை) கழுவும்படி வீழ்கின்ற மழையைப் பெய்கின்ற இனிய முழக்கத்தையுடைய முகில்கள், வில்லால் அடிக்கப்பட்ட பஞ்சு போல் ஆகி, விடியற்காலையில் உச்சி உயர்ந்த நெடிய மலையில் அசையும் நாடனே!  நீ அருள் செய்யாவிடினும், அவள் விரும்பாதவற்றைச் செய்தாலும், நீ விரும்பும்படி நடக்கும் என் தோழியின் நெற்றியில் புதிதாகத் தோன்றி நிலைத்திருக்கும் பசலைக்கு மருந்து உன்னை அன்றி வேறு இல்லை என்பதை நன்கு அறிந்து, அதன்பின் அவளைப் பிரிந்து செல்வாயாக.

குறிப்பு:  உள்ளுறை – ஒளவை துரைசாமி உரை – தான் கொண்ட நீரை மிகைபடச் சொரிந்து யானைக் கோட்டின் குருதிக்கறை நீங்க இரவிற் பெய்த மழை முகில் வைகறைப் போதில் பஞ்சிபோற் பரந்து மலை முடியில் தவழும் என்றதால், தான் பேணி வளர்த்த நலமெல்லாம் கனவின்கண் நின்குறை நீங்கக் கூடி நல்கிய யாம், வரைவால் மாண்புறுதற்குரிய செவ்விக்கண் பசலையால் விளர்ந்து வருந்துவேம் ஆயினோம் எனத் தோழி உள்ளுறைத்தாள்.  வில்லால் அடிக்கப்பட்ட பஞ்சு – அகநானூறு 133 – வில் எறி பஞ்சியின், அகநானூறு 217 – பொங்கல் வெண்மழை எஃகுறு பஞ்சித் துய்ப்பட்டன்ன, நற்றிணை 247 – இன் குரல் எழிலி எஃகுறு பஞ்சிற்று ஆகி, நற்றிணை 299 – வில் எறி பஞ்சி போல.  புலியைக் கொன்ற பின் யானை தன் மருப்பைக் கழுவுதல். – நற்றிணை 151 – இரும்புலி அரும் புழைத் தாக்கிச் செம் மறுக் கொண்ட வெண்கோட்டு யானை கல் மிசை அருவியின் கழூஉம், நற்றிணை 247 – தொன்று படு துப்பொடு முரண் மிகச் சினைஇக் கொன்ற யானைச் செங்கோடு கழாஅ.

சொற்பொருள்:  தொன்றுபடு துப்பொடு முரண் மிகச் சினைஇக் கொன்ற யானைச் செங்கோடு கழாஅ அழிதுளி பொழிந்த இன் குரல் எழிலி எஃகுறு பஞ்சிற்று ஆகி வைகறைக் கோடு உயர் நெடு வரை ஆடும் நாட – பழமையிலிருந்து வந்த வலிமையுடன் பகைமை மிகுந்ததால் புலியைக் கொன்ற யானையானது தன் குருதி படிந்த கோட்டை (மருப்பை, தந்தத்தை) கழுவும்படி வீழ்கின்ற மழையைப் பெய்கின்ற இனிய முழக்கத்தையுடைய முகில்கள் வில்லால் அடிக்கப்பட்ட பஞ்சு போல் ஆகி விடியற்காலையில் உச்சி உயர்ந்த நெடிய மலையில் அசையும் நாடனே (சினைஇ – அளபெடை, கழாஅ – செய்யுளிசை அளபெடை, எஃகுறுதல் – பஞ்சியை வில் என்ற இரும்புக் கருவியால் தூய்மைப்படுத்துதல்), நீ நல்காய் ஆயினும் நயன் இல செய்யினும் நின் வழிப்படூஉம் என் தோழி நன்னுதல் விருந்து இறைகூடிய பசலைக்கு மருந்து பிறிது இன்மை நன்கு அறிந்தனை சென்மே – நீ அருள் செய்யாவிடினும் அவள் விரும்பாதவற்றைச் செய்தாலும் நீ விரும்பும்படி நடக்கும் என் தோழியின் நெற்றியில் புதிதாகத் தோன்றி நிலைத்திருக்கும் பசலைக்கு மருந்து உன்னை அன்றி வேறு இல்லை என்பதை நன்கு அறிந்து அவளைப் பிரிந்து செல்வாயாக (இல – இல்லை என்பதன் இடைக்குறை விகாரம், வழிப்படூஉம் – அளபெடை, இறைகூடிய – நிலைபெற்று இருக்கும், சென்மே – ஏகார ஈற்று முன்னிலை வினைச்சொல், மகர மெய்யூர்ந்து வந்தது)

நற்றிணை 248, காசிபன் கீரனார், முல்லைத் திணை – தோழி முகிலிடம் சொன்னது
‘சிறு வீ முல்லைத் தேம் கமழ் பசு வீ
பொறி வரி நல் மான் புகர் முகம் கடுப்பத்
தண் புதல் அணிபெற மலர வண் பெயல்
கார்வரு பருவம்’ என்றனர் மன், இனிப்
பேர் அஞர் உள்ளம் நடுங்கல் காணியர்,  5
அன்பு இன்மையின் பண்பு இல பயிற்றும்
பொய் இடி அதிர் குரல் வாய் செத்து ஆலும்
இன மயில் மடக் கணம் போல,
நினை மருள்வேனோ வாழியர் மழையே.

பாடல் பின்னணி:  பருவங்கண்டு ஆற்றாளாகிய தலைமகளைத் தோழி மழைமேல் வைத்து பருவம் மறுத்தது.

பொருளுரைமுகிலே!  “சிறிய மலர்களையுடை முல்லைக்கொடியின் தேன் மணம் கமழும் பசிய மலர்கள் புள்ளிகளையும் வரிகளையும் உடைய நல்ல யானையின் முகத்தை ஒப்ப குளிர்ந்த புதர்களில் அழகுற மலரும் மிக்க மழையுடைய பருவத்தில் யான் வருவேன்” எனக் கூறிச் சென்றார் எம் தலைவர்.  இப்பொழுது பெரிய துன்பத்தால் எம் உள்ளம் நடுங்குவதைக் காணும் பொருட்டு நீ பண்பு இல்லாது மேற்கொள்ளும் பொய்யாக இடிக்கின்ற முழங்கும் குரலை வாய்மை என எண்ணி ஆரவாரிக்கும் மயில் கூட்டத்தைப் போல, நின்னைக் கண்டவுடன் யான் கலங்குவேனா?  தலைவர் உண்மையான கார்காலத்தில் வருவார்.  நீ நீடு வாழ்வாயாக!

குறிப்பு:  நல் மான் (2) – நல்ல யானை என்ற பொருளில் வருகின்றது இச்சொல்.  பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – நல் மான், ஒளவை துரைசாமி உரை – நல் மா.  மழையே (9) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – மேகமே, ஒளவை துரைசாமி உரை – மழையே.  வாழியர் (9) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை– இகழ்ச்சிக்குறிப்பு, ஒளவை துரைசாமி உரை – குறிப்பு மொழி.  இது கார்ப்பருவம் இல்லை என மறுப்பது – குறுந்தொகை 21, 66, 94, 220, 289, 391, நற்றிணை 248.

சொற்பொருள்:  சிறு வீ முல்லைத் தேம் கமழ் பசு வீ பொறி வரி நல் மான் புகர் முகம் கடுப்பத் தண் புதல் அணிபெற மலர வண் பெயல் கார்வரு பருவம் என்றனர் – சிறிய மலர்களையுடை முல்லைக்கொடியின் தேன் மணம் கமழும் பசிய மலர்கள் புள்ளிகளையும் வரிகளையும் உடைய நல்ல யானையின் முகத்தை ஒப்ப குளிர்ந்த புதர்களில் அழகுற மலரும் மிக்க மழையுடைய பருவத்தில் வருவேன் எனக் கூறிச் சென்றார் (கடுப்ப – உவம உருபு, தேம் தேன் என்றதன் திரிபு), மன் – அசைநிலை, இனிப் பேர் அஞர் உள்ளம் நடுங்கல் காணியர் அன்பு இன்மையின் பண்பு இல பயிற்றும் பொய் இடி அதிர் குரல் வாய் செத்து ஆலும் இன மயில் மடக் கணம் போல நினை மருள்வேனோ – இப்பொழுது பெரிய துன்பத்தால் உள்ளம் நடுங்குவதைக் காணும் பொருட்டு பண்பு இல்லாது மேற்கொள்ளும் பொய்யாக இடிக்கின்ற முழங்கும் குரலை வாய்மை என எண்ணி ஆரவாரிக்கும் மயில் கூட்டத்தைப் போல நின்னைக் கண்டவுடன் யான் கலங்குவேனா (இல – இல்லை என்பதன் இடைக்குறை விகாரம்), வாழியர் மழையே – நீ நீடு வாழ்வாயாக மழையே (மழையே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 249, உலோச்சனார், நெய்தல் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
இரும்பின் அன்ன கருங்கோட்டுப் புன்னை
நீலத்து அன்ன பாசிலை அகந்தொறும்;
வெள்ளி அன்ன விளங்கு இணர் நாப்பண்
பொன்னின் அன்ன நறுந்தாது உதிரப்,
புலிப் பொறிக் கொண்ட பூ நாறு குரூஉச் சுவல்  5
வரி வண்டு ஊதலின் புலி செத்து வெரீஇப்,
பரியுடை வயங்கு தாள் பந்தின் தாவத்
தாங்கவும் தகை வரை நில்லா ஆங்கண்,
மல்லல் அம் சேரி கல்லெனத் தோன்றி,
அம்பல் மூதூர் அலர் எழ  10
சென்றது அன்றோ, கொண்கன் தேரே?

பாடல் பின்னணி:  வரைவதற்குப் பொருள் தேடிப் பிரிந்தான் தலைவன்.  வருந்திய தலைவி உரைத்தது.

பொருளுரைஇரும்பைப் போன்ற கரிய கிளைகளையுடைய புன்னை மரங்களில் உள்ள இலைகள் நீலமணிகளைப் போல் பசுமையாக உள்ளன.  புன்னை மரங்களின் மலர்கள் வெள்ளியைப் போன்ற நிறத்தை உடையன.  அம் மலர்களுக்கு நடுவில் உள்ள உதிரும் நறுமணம் நிறைந்த பூந்தாதுக்கள் பொன்னை ஒத்து இருந்தன.  புலியின் புள்ளிகளையும், முதுகில் அழகிய நிறங்களுடன் உள்ள வரிகளையும் கொண்ட வண்டுகள் நறுமணம் மிகுந்த புன்னை மலர்களை மொய்த்து மிகுந்த ஒலியுடன் இசைத்தன.  தலைவனின் தேரில் இணைக்கப்பட்ட குதிரை அந்த ஒலியைக் கேட்டு அது புலியின் உறுமல் என்று நினைத்து அஞ்சி, பந்து போல் தாவி, கட்டுக்கு அடங்காமல் வேகமாகச் சென்றது.  வளம் நிறைந்த பழமையான எங்கள் ஊரில் உள்ள வளமான சேரியில் வம்புப் பேச்சு தோன்றியது.  பழி எழுமாறு சென்று விட்டானே நெய்தல் நிலத் தலைவன்!

குறிப்பு:  பூ நாறு குரூஉச் சுவல் (5) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – அழகு விளங்கிய நல்ல நிறமுற்ற மேற்புறத்தையுடைய (வண்டுகள்), ஒளவை துரைசாமி உரை – பூவின் மணம் கமழும் நிறம் பொருந்திய மணல் மேடு.  இரும்பு – 29 சங்கப் பாடல்களில் இரும்பு பற்றின குறிப்புகள் உள்ளன.  குரு – குருவும் கெழுவும் நிறன் ஆகும்மே (தொல்காப்பியம், உரியியல் 5).  மல்லல் – மல்லல் வளனே (தொல்காப்பியம், உரியியல் 7).  பாசிலை அகந்தொறும் (2) – ஒளவை துரைசாமி உரை – பசிய இலையிடந்தோறும், பொ. வே. சோமசுந்தரனார் உரை – பசிய இலையிடமெங்கும்.  குதிரையின் பந்து அன்ன ஓட்டம்:  அகநானூறு 105 – பந்து புடைப்பு அன்ன பாணிப் பல்லடிச் சில் பரிக் குதிரை, நற்றிணை 249 – வரி வண்டு ஊதலின் புலி செத்து வெரீஇப் பரியுடை வயங்கு தாள் பந்தின் தாவ.  பந்து – அகநானூறு 17–1, 48–12, 49–1, 105–9, 153–3, 219–2, 275–3, நற்றிணை 12–6, 24–3, 123–8, 140–7, 179–2, 249–7, 305–1, 324–7, குறுந்தொகை 396–1, ஐங்குறுநூறு 295–5, 377–4, கலித்தொகை 40–22, 51–3, 104–58, பரிபாடல் 9–47, 10–107, புறநானூறு 33–13, பெரும்பாணாற்றுப்படை 333, திருமுருகாற்றுப்படை 68.

சொற்பொருள்:  இரும்பின் அன்ன – இரும்பைப் போன்ற கரிய நிறம் (இரும்பு அன்ன, இரும்பின் – இன் சாரியை), கருங்கோட்டுப் புன்னை – கருமையான கிளைகளை உடைய புன்னை மரங்கள் – நாகம் – Laurel Tree, Mast wood Tree, Calophyllum inophyllum, நீலத்து அன்ன – நீல மணியைப் போல் (நீலத்து – நீலம், அத்துச் சாரியை), பாசிலை – பசுமையான இலைகள், அகம் தொறும் – அதன் மீது, வெள்ளி அன்ன – வெள்ளியைப் போன்று, விளங்கு இணர் – விளங்கும் மலர் கொத்துக்கள், நாப்பண் – நடுவே, பொன்னின் அன்ன – பொன்னைப் போன்ற,  நறுந் தாது உதிர – நறுமணமுள்ள தாது உதிரும், புலிப் பொறிக் கொண்ட – புலியின் பொறியைக் கொண்ட, பூ நாறு – பூ மணக்கும், குரூஉச் சுவல் – நிறமுடைய முதுகுடைய (குரூஉ – செய்யுளிசை அளபெடை), வரி வண்டு – வரியுடைய வண்டுகள், ஊதலின் – ஊதுவதால், புலி செத்து – அது புலி என்று நினைத்து, வெரீஇ – அஞ்சி (செய்யுளிசை அளபெடை), பரியுடை வயங்கு தாள் – குதிரையின் வேகமான வளைந்த கால்கள்,  பந்தின் தாவ – பந்தைப் போன்று தாவ, தாங்கவும் – கட்டுப்படுத்தவும், தகை – நிறுத்தவும், வரை – எல்லை, நில்லா – நிற்காமல், ஆங்கண் – அங்கே, மல்லல் – வளமான,  அம் சேரி – சேரி (அம் – சாரியை), கல்லெனத் தோன்றி – ஒலியுடன் தோன்றியது (கல்லென – ஒலிக்குறிப்பு), அம்பல் – வம்புப் பேச்சு, மூதூர் – பழமையான ஊர், அலர் எழ – பழி எழ,  சென்றது அன்றோ – சென்று விட்டது அல்லவா, கொண்கன் தேரே – நெய்தல் நிலத்தலைவனின் தேர் (தேரே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 250, மதுரை ஓலைக் கடையத்தார் நல்வெள்ளையார், மருதத் திணை – தலைவன் பாணனிடம் சொன்னது
நகுகம் வாராய் பாண! பகுவாய்
அரி பெய் கிண்கிணி ஆர்ப்ப, தெருவில்
தேர் நடை பயிற்றும் தேமொழிப் புதல்வன்,
பூ நாறு செவ்வாய் சிதைத்த சாந்தமொடு
காமர் நெஞ்சம் துரப்ப யாம் தன்  5
முயங்கல் விருப்பொடு குறுகினேம் ஆகப்,
பிறை வனப்பு உற்ற மாசு அறு திரு நுதல்
நாறு இருங்கதுப்பின் எம் காதலி வேறு உணர்ந்து,
வெரூஉம் மான் பிணையின் ஒரீஇ,
யாரையோ என்று இகந்து நின்றதுவே.  10

பாடல் பின்னணி:  புதல்வனொடு புகுந்த தலைவன் ஆற்றானாய்ப் பாணனிடம் உரைத்தது.

பொருளுரைபாணனே! இங்கு வருவாயாக!  பிளந்த வாயையுடைய பரல் இடப்பட்ட கிண்கிணி (கொலுசு) ஒலிக்கத் தெருவில் சிறுதேரைப் பற்றிக்கொண்டு நடை பயிலும் இனிய சொற்களையுடை எம் புதல்வனை யாம் அணைத்ததால் அவனுடைய பூவின் நறுமணம் கொண்ட சிவந்த வாயிலிருந்து நீர் ஒழுகி என் மார்பில் பூசிய சந்தனம் சிதைந்து, விருப்பம் கொண்ட எம் உள்ளம் செலுத்த, காதலியை அணைக்கும் விருப்பத்துடன் யாம் நெருங்கினோம் ஆக, பிறை நிலவின் அழகையுடைய மாசில்லாத சிறந்த நெற்றியையும் நறுமணம் கொண்ட கரிய கூந்தலையும் உடைய எம் காதலி தன் உள்ளத்தில் வேறாக எண்ணி, அஞ்சி ஓடும் பெண் மான் போன்று எம்மிடமிருந்து நீங்கி “நீவிர் யார்?” எனக் கூறி விலகியிருந்ததை நினைக்கும்போது நாம் நகைக்கலாம்.

குறிப்பு:  ஒளவை துரைசாமி உரை – ‘கரணத்தின் அமைந்து முடிந்த காலை’ (தொல்காப்பியம், கற்பியல் 5) எனத் தொடங்கும் நூற்பாவில், ‘அழியல் அஞ்சல் என்று ஆயிரு பொருளினும் தான் அவட் பிழைத்த பருவத்தானும்’ என்பதற்கு இப்பாட்டைக் காட்டுவர் இளம்பூரணர்.  நச்சினார்க்கினியர், இந்நூற்பாவில் வரும் ‘ஏனைவாயில் எதிரொடு தொகைஇ’ என்றதற்கு இதனைக் காட்டி, ‘இஃது ஏனை வாயிலாகிய பாணற்கு உரைத்தது’ என்பர்.  ஒப்புமை: பதிற்றுப்பத்து 52 – யாரையோ எனப் பெயர்வோள்.  செவ்வாய் (4) – ஒளவை துரைசாமி உரை – சிவந்த வாயினின்று ஒழுகும் உமிழ் நீர், ஆகுபெயர்.  யாரையோ (10) – இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை (அகநானூறு 46 – ம் பாடலின் உரையில் கூறியது) ஐகாரம் முன்னிலைக்கண் வந்தது, சாரியையுமாம்.

சொற்பொருள்:  நகுகம் – நகைக்கலாம் நாம், வாராய் பாண – வருக பாணனே, பகுவாய் அரி பெய் கிண்கிணி ஆர்ப்ப தெருவில் தேர் நடை பயிற்றும் தேமொழிப் புதல்வன் பூ நாறு செவ்வாய் சிதைத்த சாந்தமொடு காமர் நெஞ்சம் துரப்ப யாம் தன் முயங்கல் விருப்பொடு குறுகினேம் ஆக – பிளந்த வாயையுடைய பரல் இடப்பட்ட கிண்கிணி (கொலுசு) ஒலிக்கத் தெருவில் சிறுதேரைப் பற்றிக்கொண்டு நடை பயிலும் இனிய சொற்களையுடை புதல்வனை அணைத்ததால் அவனுடைய பூவின் நறுமணம் கொண்ட சிவந்த வாயிலிருந்து நீர் ஒழுகி என் மார்பில் பூசிய சந்தனம் சிதைந்து விருப்பம் கொண்ட எம் உள்ளம் செலுத்த காதலியை அணைக்கும் விருப்பத்துடன் நெருங்கினோம் ஆக, பிறை வனப்பு உற்ற மாசு அறு திரு நுதல் நாறு இருங்கதுப்பின் எம் காதலி வேறு உணர்ந்து வெரூஉம் மான் பிணையின் ஒரீஇ யாரையோ என்று இகந்து நின்றதுவே – பிறை நிலவின் அழகையுடைய மாசில்லாத சிறந்த நெற்றியையும் நறுமணம் கொண்ட கரிய கூந்தலையும் உடைய எம் காதலி வேறாக எண்ணி அஞ்சி ஓடும் பெண் மான் போன்று எம்மிடமிருந்து நீங்கி ‘நீவிர் யார்?’ எனக் கூறி விலகியிருந்தது (வெரூஉம் – செய்யுளிசை அளபெடை, ஒரீஇ – செய்யுளிசை அளபெடை, நின்றதுவே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 251, மதுரைப் பெருமருதன் இளநாகனார், குறிஞ்சித் திணை – தோழி தினைச் செடியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
நெடுநீர் அருவிய கடும் பாட்டு ஆங்கண்,
பிணி முதல் அரைய பெருங்கல் வாழைக்
கொழு முதல் ஆய் கனி மந்தி கவரும்
நல் மலை நாடனை நயவா யாம், அவன்
அளி பேர் அன்பின் நின் குரல் ஓப்பி,  5
நின் புறங்காத்தலும் காண்போய் நீ? என்
தளிர் ஏர் மேனித் தொல் கவின் அழிய,
பலி பெறு கடவுள் பேணி கலி சிறந்து
தொடங்கு நிலைப் பறவை உடங்கு குரல் கவரும்,
தோடு இடம் கோடாய் கிளர்ந்து,  10
நீடினை விளைமோ! வாழிய தினையே.

பாடல் பின்னணி:  தலைவியைத் தானாகக் கொண்டு கூறியது.  களவில் வந்தொழுகும் தலைவனிடம் தலைவியைத் தமர் இற்செறித்தர் எனக் கூறியது.  வரைவு கடாயது.  தன் உறு வேட்கை கிழவன் முன் கிளத்தல் எண்ணும் காலை கிழத்திக்கு இல்லை (தொல்காப்பியம், களவியல் 28).

பொருளுரைமிக்க நீரையுடைய அருவிகளின் ஓசையை உடைய இடத்தில் பிணிப்புடைய அடியையுடைய, மலையில் வளரும் வாழை மரத்தின் கொழுத்த பருத்த இனிய கனியை மந்திகள் கொள்ளும் நல்ல மலை நாடனை விரும்பி, யாம் அவனது அருள்மிக்க அன்பினால் உன்னுடைய கதிர்க்கொத்துக்களைக் கிளிகள் கொய்யாதபடி, உன்னைக் காத்திருப்பதையும் நீ காண்பாய்.  என்னுடைய மாந்தளிர் போன்ற மேனியின் பழைய அழகு அழிய, முருகக் கடவுளுக்குப் பலி கொடுத்து என்னை அன்னை இற்செறித்தால் இனி உன்னைக் காக்க என்னால் இயலாது.  நன்றாகத் தழைத்து வளர்ந்து, தொடர்ந்து பறவைகள் உடன் சேர்ந்து உன் கதிர்க்கொத்துக்களைக் கவரும் ஆதலால், அதற்கு இடம் கூடாது, உன் கதிர்களுடன் சாயாது நிமிர்ந்து நின்று நெடு நாட்கள் விளைவாயாக, தினையே! நீ நீடு வாழ்வாயாக!

குறிப்பு:  உள்ளுறை – H. வேங்கடராமன் உரை – அருவி ஒலிக்கின்ற இடத்துத் தோன்றிய வாழையின் கனியை மந்தி கவரும் என்றது, தமரெல்லாம் கூடி மகிழ்கின்ற இடத்து வரைவொடு புகுந்து தலைவன் தலைவியை உவகையுடன் துய்ப்பான் என்றதாம்.  நயவா – நயந்து என்பது பொருள்.  செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம்.  எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது.  நனி – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3).  மோ – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம்.  சொல்லதிகாரம்.  இடையியல் 26).  மந்தி – பேடையும் பெடையும் பெட்டையும் பெண்ணும் மூடும் நாகும் கடமையும் அளகும் மந்தியும் பாட்டியும் பிணையும் பிணவும் அந்தம் சான்ற பிடியொடு பெண்ணே (தொல்காப்பியம், மரபியல் 3).

சொற்பொருள்:  நெடுநீர் அருவிய கடும் பாட்டு ஆங்கண் பிணி முதல் அரைய பெருங்கல் வாழைக் கொழு முதல் ஆய் கனி மந்தி கவரும் நல் மலை நாடனை நயவா யாம் – மிக்க நீரையுடைய அருவிகளின் ஓசையை உடைய அங்கு பிணிப்புடைய அடியையுடைய மலையில் வளரும் வாழை மரத்தின் கொழுத்த பருத்த இனிய கனியை மந்திகள் கொள்ளும் நல்ல மலை நாடனை விரும்பி யாம், அவன் அளி பேர் அன்பின் நின் குரல் ஓப்பி நின் புறங்காத்தலும் காண்போய் நீ – அவனது அருள்மிக்க அன்பினால் உன்னுடைய கதிர்க்கொத்துக்களைக் கிளிகள் கொய்யாதபடி உன்னைக் காத்திருப்பதையும் நீ காண்பாய், என் தளிர் ஏர் மேனித் தொல் கவின் அழிய பலி பெறு கடவுள் பேணி – என்னுடைய மாந்தளிர் போன்ற மேனியின் பழைய அழகு அழிய முருகக் கடவுளுக்குப் பலி கொடுத்து (ஏர் – உவம உருபு), கலி சிறந்து தொடங்கு நிலைப் பறவை உடங்கு குரல் கவரும் தோடு இடம் கோடாய் கிளர்ந்து நீடினை விளைமோ – நன்றாகத் தழைத்து வளர்ந்து தொடர்ந்து பறவைகள் உடன் சேர்ந்து உன் கதிர்க்கொத்துக்களைக் கவரும் ஆதலால் உன் கதிர்களுடன் சாயாது நிமிர்ந்து நின்று நெடு நாட்கள் விளைவாயாக (விளைமோ – மோ முன்னிலை அசை), வாழிய – நீ நீடு வாழ்வாயாக, தினையே – தினையே (ஏகாரம் – அசைநிலை)

நற்றிணை 252, அம்மெய்யன் நாகனார், பாலைத் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
உலவை ஓமை ஒல்கு நிலை ஒடுங்கிச்,
சிள்வீடு கறங்கும் சேய் நாட்டு அத்தம்,
திறம் புரி கொள்கையொடு இறந்து செயின் அல்லது
அரும் பொருட் கூட்டம் இருந்தோர்க்கு இல் என,
வலியா நெஞ்சம் வலிப்ப, சூழ்ந்த  5
வினை இடை விலங்கல போலும், புனை சுவர்ப்
பாவை அன்ன பழி தீர் காட்சி
ஐது ஏய்ந்து அகன்ற அல்குல், மை கூர்ந்து
மலர் பிணைத்தன்ன மா இதழ் மழைக் கண்,
முயல் வேட்டு எழுந்த முடுகு விசைக் கத நாய்  10
நல் நாப் புரையும் சீறடிப்,
பொம்மல் ஓதி, புனை இழை குணனே.

பாடல் பின்னணி:  தலைவன் பொருள்வயின் பிரிவான் என்னும் குறிப்பறிந்து தலைவி வருந்தினாள்.  அவளிடம் தோழி உரைத்தது.

பொருளுரை:  சுவரில் வரையப்பட்ட அழகிய பாவையைப் போன்ற குற்றமற்ற தோற்றத்தையும், மென்மைப் பொருந்திய அகன்ற அல்குலையும், மை தீட்டப்பட்ட மலர்களைச் சேர்த்து கட்டினாற்போல் கரிய இமைகளையுடைய குளிர்ந்த கண்களையும், முயலை வேட்டையாடுவதற்கு விரும்பி எழுந்த ஓட்டமும் சினமுமுடைய நாயின் நல்ல நாக்கைப் போன்ற சிறிய அடியையும் அடர்ந்த கூந்தலையும் புனைந்த அணிகலன்களையுமுடைய இவளுடைய நல்ல தன்மைகளாலும், உலர்ந்த ஓமை மரங்களின் பட்டுப்போன கிளைகளின் பொந்துகளில் தங்கிச் சிள்வீடு ஒலிக்கும் தொலைவில் உள்ள நாட்டிற்குச் செல்லும் வழிகளில் திறமையான கொள்கையுடன் சென்று முயற்சி செய்தால், ஒழிய பெறுதற்கு அரிய பொருளை ஈட்டுவது இல்லத்தில் சோம்பி இருப்பவர்களுக்கு இல்லை என்று, இதுவரையில் உடன்படாத நெஞ்சம் உடன்படுவதால் ஆராய்ந்து நம் தலைவர் செய்த பொருள் ஈட்டும் வினையை, இடையில் தடுத்தல் இயலாது போலும்.  ஆதலால், நாம் ஆற்றியிருத்தல் தவிர்த்துச் செயற்குரியது வேறு இல்லை.

குறிப்பு:  ஒல்கு நிலை (1) – ஒளவை துரைசாமி உரை – ஓமை மரத்தின் கொம்பு நீங்கிய இடங்களில் உண்டான ஒடுக்கங்கள் ஒல்கு நிலை எனப்பட்டன.  இவற்றைப் பொந்து எனவும் புரை எனவும் வழங்குப.  இவற்றில் பல்வகைப் பூச்சிகள் வாழ்தல் இயல்பாகலின் இந்த ஓமையின் பொந்துகளில் ஒலி மிக்குத்தோன்றும்.  நாயின் நாக்கு அன்ன அடி:  நற்றிணை 252 – கத நாய் நல் நாப் புரையும் சீறடி, மலைபடுகடாம் 42–43 – ஞமலி நாவின் அன்ன துளங்கு இயல் மெலிந்த கல்பொரு சீறடி, பொருநராற்றுப்படை 42– வருந்து நாய் நாவின் பெருந்தகு சீறடி, சிறுபாணாற்றுப்படை 17–18 – உயங்கு நாய் நாவின் நல் எழில் அசைஇ வயங்கு இழை உலறிய அடியின் அடி.  உள்ளுறை (1) – கு. வெ. பாலசுப்பிரமணியன் உரை – சிள்வீடு மரத்தில் பட்ட கிளையொடு மறைந்து உள் ஒடுங்கி ஒலிக்கும் என்றது, தலைவியின் காமமும் கற்பின் மிகுதியால் வெளிப்படத் தோன்றாது உள்ளத்தே நின்று வருந்தும் என்பதனைக் குறிப்பித்தது, உள்ளுறை (2) – ஒளவை துரைசாமி உரை – ஓமையின் ஒல்குநிலை ஒடுங்கிச் சிள்வீடு கறங்கும் என்றதனால், ‘இனி நாம் நம் மனைக்கண் ஒடுங்கி நமக்குரிய அறம் புரிந்து ஒழுகுவதே கடன்.

சொற்பொருள்:  உலவை ஓமை ஒல்கு நிலை ஒடுங்கிச் சிள்வீடு கறங்கும் சேய் நாட்டு அத்தம் திறம் புரி கொள்கையொடு இறந்து செயின் அல்லது அரும் பொருட் கூட்டம் இருந்தோர்க்கு இல் என – உலர்ந்த ஓமை மரங்களின் பட்டுப்போன கிளைகளின் பொந்துகளில் தங்கிச் சிள்வீடு ஒலிக்கும் தொலைவில் உள்ள நாட்டிற்குச் செல்லும் வழிகளில் திறமையான கொள்கையுடன் சென்று முயற்சி செய்தால் ஒழிய பெறுதற்கு அரிய பொருளை ஈட்டுவது சோம்பி இருப்பவர்களுக்கு இல்லை என்று (ஓமை – Toothbrush Tree, Dillenia indica), வலியா நெஞ்சம் வலிப்ப சூழ்ந்த வினை இடை விலங்கல போலும் – உடன்படாத நெஞ்சம் உடன்படுவதால் ஆராய்ந்து செய்த பொருள் ஈட்டும் வினையை இடையில் தடுத்தல் இயலாது போலும், புனை சுவர்ப் பாவை அன்ன பழி தீர் காட்சி – சுவரில் வரையப்பட்ட அழகிய பாவையைப் போன்ற குற்றமற்ற தோற்றத்தையும், ஐது ஏய்ந்து அகன்ற அல்குல் – மென்மைப் பொருந்திய அகன்ற அல்குலையும் (ஏய்ந்து – பொருந்தி, அல்குல் – இடை, இடைக்குக் கீழ் உள்ள பகுதி), மை கூர்ந்து மலர் பிணைத்தன்ன மா இதழ் மழைக் கண் – மை தீட்டப்பட்ட மலர்களைச் சேர்த்து கட்டினாற்போல் கரிய இமைகளையுடைய குளிர்ந்த கண்களையும், முயல் வேட்டு எழுந்த முடுகு விசைக் கத நாய் நல் நாப் புரையும் சீறடிப் பொம்மல் ஓதி புனை இழை குணனே – முயலை வேட்டையாடுவதற்கு விரும்பி எழுந்த ஓட்டமும் சினமுமுடைய நாயின் நல்ல நாக்கைப் போன்ற சிறிய அடியையும் அடர்ந்த கூந்தலையும் புனைந்த அணிகலன்களையுமுடைய இவளுடைய நல்ல இயல்புகள் (முடுகு – விரைதல், புனை இழை – பண்புத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை, புரை – உவம உருபு, குணனே – குணன் குணம் என்றதன் போலி, ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 253, கபிலர், குறிஞ்சித் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
புள்ளுப் பதி சேரினும், புணர்ந்தோர்க் காணினும்,
பள்ளி யானையின் வெய்ய உயிரினை,
கழிபட வருந்திய எவ்வமொடு பெரிது அழிந்து
எனவ கேளாய் நினையினை நீ, நனி
உள்ளினும் பனிக்கும் ஒள் இழைக் குறுமகள்,  5
பேர் இசை உருமொடு மாரி முற்றிய,
பல் குடைக் கள்ளின் வண் மகிழ்ப் பாரி
பலவு உறு குன்றம் போலப்,
பெருங்கவின் எய்திய அருங்காப்பினளே.

பாடல் பின்னணி:  தலைவி இற்செறிக்கப்பட்டாள் என்பதைக் கூறி வரைவு கடாயது.

பொருளுரைபறவைகள் தங்கள் கூடுகளை அடைந்து தங்கள் துணையுடன் இணைந்தாலும், தலைவனும் தலைவியுமாகக் கூடினவர்களைக் கண்டாலும் படுத்திருக்கும் யானையைப் போல் பெருமூச்சு விடுவாய் ஆயினை நீ. மிகுதியான துன்பத்துடன் மிகவும் அழிந்து, யான் கூறினவற்றைக் கேளாது, மிகவும் எண்ணும் தன்மை உடையையாய் ஆயினை.  இவள் களவு ஒழுக்கத்தை நினைத்தாலும் நடுங்கும் தன்மையுடையவள் ஆக உள்ளாள்.  ஒளிரும் அணிகலன்களை அணிந்த இளையவளான இத்தலைவி, பெரிய இடியின் முழக்கத்துடன் மழைமுகில் சூழ்ந்த, பல பனங்குடைகளில் இட்டு உண்ணும் கள்ளையுடைய வள்ளன்மை மிக்க வேள் பாரியின் பலா மரங்கள் மிகுந்த பறம்பு மலை போலப் பேரழகு உடையவள், அரிய காவலுடன் இற்செறிக்கப்பட்டுள்ளாள்.

குறிப்பு:  கடையெழு வள்ளல்கள் – ஆய், பாரி, காரி, ஓரி, அதிகன், பேகன், நள்ளி.  ஒப்புமை:  நற்றிணை 190 – மாரி வண் மகிழ்த் திதலை எஃகின் சேந்தன் தந்தை தேம் கமழ் விரி தார் இயல் தேர் அழிசி.  உள்ளினும் பனிக்கும்.  ஒளவை துரைசாமி உரை – பிறர் கொள்வற்காகாத பெருங்காவல் பாரியின் பறம்பு மலையில் இருந்து வந்தமையின், அதனையே இங்கு விதந்து, பலவுறு குன்றம் போல என உவமம் செய்தார்.  வரலாறு:  பாரி.  நனி – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3). கழி – உள்ளது சிறக்கும் (தொல்காப்பியம், உரியியல் 18).  உறு – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3).

சொற்பொருள்:  புள்ளுப் பதி சேரினும் புணர்ந்தோர்க் காணினும் பள்ளி யானையின் வெய்ய உயிரினை – பறவைகள் தங்கள் கூடுகளை அடைந்து தங்கள் துணையுடன் இணைந்தாலும் தலைவனும் தலைவியுமாகக் கூடினவர்களைக் கண்டாலும் படுத்திருக்கும் யானையைப் போல் பெருமூச்சு விடுவாய் ஆயினை, கழிபட வருந்திய எவ்வமொடு பெரிது அழிந்து எனவ கேளாய் நினையினை நீ நனி – மிகுதியான துன்பத்துடன் மிகவும் அழிந்து யான் கூறினவற்றைக் கேளாது மிகவும் எண்ணும் தன்மை உடையையாய் ஆயினை (கழி – மிகுதி, எனவ – அ விரித்தல் விகாரம், பலவறி சொல்), உள்ளினும் பனிக்கும் – நினைத்தாலும் நடுங்கும், ஒள் இழைக் குறுமகள் பேர் இசை உருமொடு மாரி முற்றிய பல் குடைக் கள்ளின் வண் மகிழ்ப் பாரி பலவு உறு குன்றம் போலப் பெருங்கவின் எய்திய அருங்காப்பினளே – ஒளிரும் அணிகலன்களை அணிந்த இளையவளான தலைவி பெரிய இடியின் முழக்கத்துடன் மழைமுகில் சூழ்ந்த பல பனங்குடைகளில் இட்டு உண்ணும் கள்ளையுடைய வள்ளன்மை மிக்க வேள் பாரியின் பலா மரங்கள் மிகுந்த பறம்பு மலை போல பேரழகு உடைய இவள் அரிய காவலுடன் இற்செறிக்கப்பட்டாள் (அருங்காப்பினளே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 254, உலோச்சனார், நெய்தல் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
வண்டல் தைஇயும், வருதிரை உதைத்தும்,
குன்று ஓங்கு வெண்மணற் கொடி அடும்பு கொய்தும்,
துனி இல் நல்மொழி இனிய கூறியும்,
சொல் எதிர் பெறாஅய் உயங்கி மெல்லச்
செலீஇய செல்லும் ஒலி இரும் பரப்ப!  5
உமணர் தந்த உப்பு நொடை நெல்லின்
அயினி மா இன்று அருந்த, நீலக்
கணம் நாறு பெருந்தொடை புரளும் மார்பின்
துணை இலை தமியை சேக்குவை அல்லை,
நேர்கண் சிறுதடி நீரின் மாற்றி 10
வானம் வேண்டா உழவின் எம்
கானல்அம் சிறுகுடிச் சேந்தனை செலினே.

பாடல் பின்னணிதலைவன் பின்னின்று தன் குறையை உரைத்தான்.  அது நிறைவேறாததால் வருந்திய தலைவனிடம் தோழி கூறியது. 

பொருளுரைவண்டல் மணலில் சிறுவீடு கட்டியும், வரும் அலைகளை உதைத்தும், குன்று போல் உயர்ந்த வெண்மணல் மேட்டில் வளரும் அரும்புக் கொடியின் மலர்களைப் பறித்தும், வெறுப்பு இல்லாத நல்ல சொற்களை இனிதாகக் கூறியும், நீ கூறியவற்றிற்கும் மறுமொழி பெறாதவனாக வருந்தி மெல்ல நும் ஊர்க்குச் செல்லும் பொருட்டுச் செல்லும் ஒலிக்கும் கடல் பரப்பையுடைய தலைவனே!  உப்பு வணிகர்கள் உப்பை விற்றுக் கொண்டு வந்த நெல்லினால் சமைத்த அரிசிச் சோற்றை நின் தேரின் குதிரைகள் உண்ண, நெய்தல் மலர்களின் கூட்டத்தால் நறுமணம் கமழும் பெரிய மாலைப் புரளும் மார்பை அணைக்கும் துணை இல்லாது தனியாகத் தங்கமாட்டாய், ஒழுங்கான உப்புப்பாத்தியில் கடல் நீரைப் பாய்ச்சி உப்பு விளைவிக்கும் மழையை விரும்பாத தொழில் உடைய, எம்முடைய கடற்கரைச் சூழ்ந்த சிறுகுடியில் தங்கிச் சென்றால். தலைவியை அணைத்து உறங்கப் பெறுவாய்.

குறிப்பு:  நேர்கண் (10) – ஒளவை துரைசாமி உரை – சதுரம், பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – நேர்மையான இடம், H. வேங்கடராமன் உரை – ஒழுங்கு.  வானம் வேண்டா உழவின் (11) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – மழையை விரும்பாத வேளாண்மையுடைய.

சொற்பொருள்:  வண்டல் தைஇயும் வருதிரை உதைத்தும் குன்று ஓங்கு வெண்மணற் கொடி அடும்பு கொய்தும் துனி இல் நல்மொழி இனிய கூறியும் சொல் எதிர் பெறாஅய் உயங்கி மெல்லச் செலீஇய செல்லும் ஒலி இரும் பரப்ப – வண்டல் மணலில் சிறுவீடு கட்டியும் வரும் அலைகளை உதைத்தும் குன்று போல் உயர்ந்த வெண்மணல் மேட்டில் வளரும் அரும்புக் கொடியின் மலர்களைப் பறித்தும் வெறுப்பு இல்லாத நல்ல சொற்களை இனிதாகக் கூறியும் நீ கூறியவற்றிற்கும் மறுமொழி பெறாதவனாக வருந்தி மெல்ல நும் ஊர்க்குச் செல்லும் பொருட்டுச் செல்லும் ஒலிக்கும் கடல் பரப்பையுடைய தலைவனே (தைஇயும் – சொல்லிசை அளபெடை, அடும்பு – Ipomoea pes caprae, செலீஇய – அளபெடை, பெறாஅய் – அளபெடை), உமணர் தந்த உப்பு நொடை நெல்லின் அயினி மா இன்று அருந்த – உப்பு வணிகர்கள் உப்பை விற்றுக் கொண்டு வந்த நெல்லினால் சமைத்த அரிசிச் சோற்றை நின் தேரின் குதிரைகள் உண்ண, நீலக் கணம் நாறு பெருந்தொடை புரளும் மார்பின் துணை இலை தமியை சேக்குவை அல்லை – நெய்தல் மலர்களின் கூட்டத்தால் நறுமணம் கமழும் பெரிய மாலைப் புரளும் மார்பை அணைக்கும் துணை இல்லாது தனியாகத் தங்கமாட்டாய் (இலை – இல்லை என்பதன் விகாரம்), நேர்கண் சிறுதடி நீரின் மாற்றி வானம் வேண்டா உழவின் – ஒழுங்கான உப்புப்பாத்தியில் கடல் நீரைப் பாய்ச்சி உப்பு விளைவிக்கும் மழையை விரும்பாத தொழில், எம் கானல் அம் சிறுகுடிச் சேந்தனை செலினே – எம்முடைய கடற்கரைச் சூழ்ந்த சிறுகுடியில் தங்கிச் சென்றால் (செலினே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 255, ஆலம்பேரி சாத்தனார், குறிஞ்சித் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
கழுது கால் கிளர ஊர் மடிந்தன்றே;
உருகெழு மரபின் குறிஞ்சி பாடி
கடியுடை வியல் நகர்க் கானவர் துஞ்சார்;
வயக் களிறு பொருத வாள்வரி உழுவை
கல் முகைச் சிலம்பில் குழுமும்; அன்னோ!  5
மென் தோள் நெகிழ்ந்து நாம் வருந்தினும், இன்று அவர்
வாரார் ஆயினோ நன்று மன், தில்ல,
உயர்வரை அடுக்கத்து ஒளிறுபு மின்னிப்
பெயல் கால் மயங்கிய பொழுது கழி பானாள்,
திருமணி அரவுத் தேர்ந்து உழல, 10
உருமுச் சிவந்து எறியும் ஓங்கு வரை ஆறே.

பாடல் பின்னணிகளவினை நீட்டியாது, மணங் கொள்ளத் தலைவி விரும்பினாள்.  தோழியிடம் தலைவன் வரும் வழியில் உள்ள துன்பத்தைக் கூறி அவனை விரைந்து மணம் புரியத் தூண்டுக எனக் கூறியது.

பொருளுரைபேய்கள் காற்றில் கலந்து இயங்க ஊரில் உள்ளவர்கள் உறங்குகின்றனர்.  கேட்பவர்களுக்கு அச்சம் தரும் மரபையுடைய குறிஞ்சிப் பண்ணில் பாடிக் கொண்டு காவலுடைய பெரிய இல்லத்தில் கானவர்கள் உறங்காது உள்ளனர்.  வலிமையான களிற்று யானையுடன் பொருத ஒளியுடைய வரிகளையுடைய புலி (வாள் போன்ற வரிகளையுடை புலி) கற்கள் மிகுந்த குகைகளுடைய மலைப்பக்கத்தில் இருந்து உறுமும்.  ஐயோ!  மெல்லிய தோள்கள் தளர்ந்து நாம் வருந்துவது ஆயினும், இன்று அவர் வராது இருப்பது நல்லது.  உயர்ந்த மலைப்பக்கத்தில் ஒளியுடன் மின்னி மழையும் காற்றும் கலந்து பெய்ததால் காலம் நீட்டித்த இரவு வேளையில் தன்னுடைய மணியை உமிழ்ந்து துன்புற இடிகள் சினந்து முழங்கும் உயர்ந்த மலையின் வழியில்.

குறிப்பு:  ஒளவை துரைசாமி உரை – ‘நாற்றமும் தோற்றமும்’ (தொல்காப்பியம், களவியல் 24) என்ற நூற்பாவில் ‘ஆற்றது தீமை அறிவுறு கலக்கமும்’ என்பதற்கு இதனைக் காட்டி, ‘இரவுக்குறி வரவால் தலைவி வருந்துவள் என்றது’ என்பர் நச்சினார்க்கினியர்.  வாள்வரி (4) – ஒளவை துரைசாமி உரை – ஒளியுடைய வரி,  பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – வாள் போலும் கோடுகள்.  இடி பாம்புகளை வருத்தவும் கொல்லவும் செய்யும் என்னும் செய்தி உள்ள பாடல்கள் – அகநானூறு 92, 119, 182, 202, 274, 323, 328, கலித்தொகை 45, 113, குறுந்தொகை 158, 190, 268, 391, நற்றிணை 37, 51, 114, 129, 238, 255, 264, 347, 383, புறநானூறு 17, 37, 58, 126, 211, 366, 369.  பாம்பு மணியை உமிழ்த்தல் – புறநானூறு 294, அகநானூறு 72, 92, 138, 192, 372, குறுந்தொகை 239, நற்றிணை 255.   ஒப்புமை:  அகநானூறு 319 – அணங்கு கால் கிளரும் மயங்கு இருள் நடுநாள்.

சொற்பொருள்:  கழுது கால் கிளர ஊர் மடிந்தன்றே – பேய்கள் காற்றில் கலந்து இயங்க ஊரில் உள்ளவர்கள் உறங்குகின்றனர் (ஊர் – ஆகுபெயர் ஊரில் உள்ள மக்களுக்கு, மடிந்தன்றே – ஏகாரம் அசைநிலை), உருகெழு மரபின் குறிஞ்சி பாடி கடியுடை வியல் நகர்க் கானவர் துஞ்சார் – கேட்பவர்களுக்கு அச்சம் தரும் மரபையுடைய குறிஞ்சிப் பண்ணில் பாடிக் கொண்டு காவலுடைய பெரிய இல்லத்தில் கானவர்கள் உறங்காது உள்ளனர், வயக் களிறு பொருத வாள்வரி உழுவை கல் முகைச் சிலம்பில் குழுமும் – வலிமையான களிற்று யானையுடன் பொருத ஒளியுடைய வரிகளையுடைய புலி (வாள் போன்ற வரிகளையுடை புலி) கற்கள் மிகுந்த குகைகளுடைய மலைப்பக்கத்தில் இருந்து உறுமும், அன்னோ – ஐயோ, மென் தோள் நெகிழ்ந்து நாம் வருந்தினும் இன்று அவர் வாரார் ஆயினோ நன்று மன் தில்ல – மெல்லிய தோள்கள் தளர்ந்து நாம் வருந்துவது ஆயினும் இன்று அவர் வராது இருப்பது நல்லது (மன் – மிகுதிக் குறிப்பு, தில்ல – தில் விழைவின்கண் (விருப்பத்தின்கண்) வந்த இடைச்சொல், ஈறு திரிந்து வந்தது), உயர்வரை அடுக்கத்து ஒளிறுபு மின்னிப் பெயல் கால் மயங்கிய பொழுது கழி பானாள் திருமணி அரவுத் தேர்ந்து உழல உருமுச் சிவந்து எறியும் ஓங்கு வரை ஆறே – உயர்ந்த மலைப்பக்கத்தில் ஒளியுடன் மின்னி மழையும் காற்றும் கலந்து பெய்ததால் காலம் நீட்டித்த இரவு வேளையில் தன்னுடைய மணியை உமிழ்ந்து துன்புற இடிகள் சினந்து முழங்கும் உயர்ந்த மலையின் வழி (ஆறே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 256, சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோ, பாலைத் திணை – தலைவன் தலைவியிடம் சொன்னது
நீயே பாடல் சான்ற பழி தபு சீறடி,
அல்கு பெருநலத்து அமர்த்த கண்ணை;
காடே நிழல் கவின் இழந்த அழல் கவர் மரத்த,
புலம்பு வீற்றிருந்து நலம் சிதைந்தனவே,
இந்நிலை தவிர்ந்தனம் செலவே வைந்நுதிக்  5
களவுடன் கமழ, பிடவுத் தளை அவிழக்,
கார் பெயல் செய்த காமர் காலை,
மடப் பிணை தழீஇய மா எருத்து இரலை
காழ் கொள் வேலத்து ஆழ் சினை பயந்த
கண் கவர் வரி நிழல் வதியும்  10
தண்படு கானமும் தவிர்ந்தனம் செலவே.

பாடல் பின்னணி:  தலைவன் பொருள்வயின் பிரிய எண்ணுவதை அறிந்து வருந்துகின்ற தலைவியைத் தலைவன் ஆற்றியது.

பொருளுரை:  நீ புலவர்களால் பாடுவதற்கு ஏற்ற குற்றமற்ற சிறிய அடிகளையும் பெரிய அழகு பொருந்திய கண்களையுமுடையவள்.  காடு நிழல் இல்லாததால் தன் அழகை இழந்து, தீப்பற்றி எரிந்த மரங்களை உடையதாக, மக்கள் செல்லாததால் தனிமையில் இருந்தது, அழகு பாழ்பட்டு.  இந்த நிலையினால் செல்லுதலை யாம் தவிர்த்தோம்.  கூரிய முனையை உடைய களா மரத்தின் மலர்கள் மணம் கமழ, பிடவத்தின் கட்டு அவிழ்ந்த அரும்புகள் மலர, மழை பெய்தல் தொடங்கிய அழகிய கார்ப்பருவத்தில், இளைய பெண்மானைத் தழுவிய பெரிய கழுத்தையுடைய ஆண்மான் வைரம் பொருந்திய (செறிவு மிகுந்த) வேல மரத்தின் தாழ்ந்த கிளை ஈன்ற இடத்தில் கண்ணைக் கவரும் வரிகளையுடைய நிழலில் தங்கும் குளிர்ச்சியுடையக் காட்டையும் தவிர்த்தோம் செல்லுவதற்கு.  இருவகைக் காலத்திலும் நின்னை யாம் பிரியாது இருப்பேம்.

குறிப்பு:  பாடல் சான்ற (1) – ஒளவை துரைசாமி உரை – புகழ் அமைந்த, பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – புலவராலே பாடுதற்கு அமைந்த.  புலம்பு – புலம்பே தனிமை (தொல்காப்பியம், உரியியல் 35).  வை – வையே கூர்மை (தொல்காப்பியம், உரியியல் 91).  காழ் – அகக் காழனவே மரம் என மொழிப (தொல்காப்பியம், மரபியல் 87).

சொற்பொருள்:  நீயே பாடல் சான்ற பழி தபு சீறடி அல்கு பெருநலத்து அமர்த்த கண்ணை – நீ புலவர்களால் பாடுவதற்கு ஏற்ற குற்றமற்ற சிறிய அடிகளையும் பெரிய அழகு பொருந்திய கண்களையுமுடையை (கண்ணை – கண்களையுடையாய், முற்றெச்சம்), காடே நிழல் கவின் இழந்த அழல் கவர் மரத்த புலம்பு வீற்றிருந்து நலம் சிதைந்தனவே – காடு நிழல் இல்லாததால் அழகை இழந்து தீப்பற்றி எரிந்த மரங்களையுடையதாக மக்கள் செல்லாததால் தனிமையில் இருந்தது அழகு பாழ்பட்டு (சிதைந்தனவே – ஏகாரம் அசைநிலை), இந்நிலை தவிர்ந்தனம் செலவே – இந்த நிலையினால் செல்லுதலை யாம் தவிர்த்தோம், வைந்நுதிக் களவுடன் கமழ பிடவுத் தளை அவிழக் கார் பெயல் செய்த காமர் காலை – கூரிய முனையை உடைய களா மரத்தின் மலர்கள் மணம் கமழ பிடவத்தின் கட்டு அவிழ்ந்த அரும்புகள் மலர மழை பெய்தல் தொடங்கிய அழகிய கார்ப்பருவத்தில் (களா மரம் – Corinda tree flowers, Bengal Currant, பிடவம் – Randia malabarica), மடப் பிணை தழீஇய மா எருத்து இரலை காழ் கொள் வேலத்து ஆழ் சினை பயந்த கண் கவர் வரி நிழல் வதியும் தண்படு கானமும் தவிர்ந்தனம் செலவே – இளைய பெண்மானைத் தழுவிய பெரிய கழுத்தையுடைய ஆண்மான் வைரம் பொருந்திய (செறிவு மிகுந்த) வேல மரத்தின் தாழ்ந்த கிளை ஈன்ற இடத்தில் கண்ணைக் கவரும் வரிகளையுடைய நிழலில் தங்கும் குளிர்ச்சியுடைய காட்டையும் தவிர்த்தோம் செல்லுவதற்கு (தழீஇய – செய்யுளிசை அளபெடை, வேல மரம் – வெள்வேலம் – Panicled Babool, Acacia leucophloea, செலவே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 257, வண்ணக்கன் சோருமருங்குமரனார், குறிஞ்சித் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
விளிவு இல் அரவமொடு தளி சிறந்து உரைஇ
மழை எழுந்து இறுத்த நளிர் தூங்கு சிலம்பின்,
கழை அமல்பு நீடிய வான் உயர் நெடுங்கோட்டு
இலங்கு வெள்ளருவி வியன் மலைக் கவாஅன்,
அரும்பு வாய் அவிழ்ந்த கருங்கால் வேங்கைப்  5
பொன் மருள் நறு வீ கல்மிசைத் தாஅம்
நல் மலை நாட! நயந்தனை அருளாய்!
இயங்குநர் மடிந்த அயம் திகழ் சிறு நெறிக்
கடு மா வழங்குதல் அறிந்தும்
நடுநாள் வருதி, நோகோ யானே.  10

பாடல் பின்னணி:  தோழி தலைவனின் ஏதம் சொல்லி வரைவு கடாயது.

பொருளுரைஇடைவிடாத முழக்கத்துடன் மழை பொழிந்து இடித்து முகில்கள் உயர்ந்துச் சென்று மழையைப் பெய்யத் தொடங்கிய குளிர்ச்சி மிக்க மலையில், மூங்கில்கள் நெருங்கி உயர்ந்த, வான் அளவு உயர்ந்த மலை உச்சியிலிருந்து ஒளிரும் வெள்ளை அருவிகளை உடைய அகன்ற மலைப்பக்கத்தில் அரும்புகள் மலர்ந்த கரிய அடியையுடைய வேங்கை மரத்தின் பொன் போன்ற நறுமணமான மலர்கள் பாறைகளின் மேல் உதிர்ந்து பரவியிருக்கும் நல்ல மலையின் தலைவனே!  நீ எம்மை விரும்பி அருள் செய்யாது உள்ளாய்!  வழிப்போக்கர் யாரும் இல்லாத, நீர் திகழும் சிறிய வழியில் கொடிய விலங்குகள் இயங்குவதை அறிந்தும் நடு இரவில் நீ வருகின்றாய்.  நான் வருந்துகின்றேன்.

குறிப்பு:  புலவர் பெயர் – ஒளவை துரைசாமி உரை – வண்ணக்கன் சேரிக் குமரங்குமரனார், பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – சொருமருங்குமரனார்.  உரைஇ (1) – H. வேங்கடராமன் உரை – இடிஇடித்து, ஒளவை துரைசாமி உரை – உலாவி, பரந்து.  அயம் திகழ் சிறு நெறி (8) – ஒளவை துரைசாமி உரை – நீர் பெருகி நிற்கும் சிறுவழி.  தண்ணீர் நிறைந்து இருந்து போக்குத் தெரியாதபடி வழி மறைந்துள்ளது.

சொற்பொருள்:  விளிவு இல் அரவமொடு தளி சிறந்து உரைஇ மழை எழுந்து இறுத்த நளிர் தூங்கு சிலம்பின் – இடைவிடாத முழக்கத்துடன் மழை பொழிந்து இடித்து முகில்கள் உயர்ந்துச் சென்று மழையைப் பெய்யத் தொடங்கிய குளிர்ச்சி மிக்க மலையில் (உரைஇ – அளபெடை), கழை அமல்பு நீடிய வான் உயர் நெடுங்கோட்டு இலங்கு வெள்ளருவி வியன் மலைக் கவாஅன் – மூங்கில்கள் நெருங்கி உயர்ந்த வான் அளவு உயர்ந்த மலை உச்சியிலிருந்து ஒளிரும் வெள்ளை அருவிகளை உடைய அகன்ற மலைப்பக்கத்தில் (கவாஅன் – அளபெடை), அரும்பு வாய் அவிழ்ந்த கருங்கால் வேங்கைப் பொன் மருள் நறு வீ கல்மிசைத் தாஅம் நல் மலை நாட – அரும்புகள் மலர்ந்த கரிய அடியையுடைய வேங்கை மரத்தின் பொன் போன்ற நறுமணமான மலர்கள் பாறைகளின் மேல் உதிர்ந்து பரவியிருக்கும் நல்ல மலையின் தலைவனே (வேங்கை மரம் – Kino Tree, Pterocarpus marsupium, தாஅம் – செய்யுளிசை அளபெடை), நயந்தனை அருளாய் – எம்மை விரும்பி அருள் செய்யாது உள்ளாய், இயங்குநர் மடிந்த அயம் திகழ் சிறு நெறிக் கடு மா வழங்குதல் அறிந்தும் நடுநாள் வருதி – வழிப்போக்கர் யாரும் இல்லாத நீர் திகழும் சிறிய வழியில் கொடிய விலங்குகள் இயங்குவதை அறிந்தும் நடு இரவில் நீ வருகின்றாய், நோகோ யானே – நான் வருந்துகின்றேன் (நோகு – செய்கென்னும் தன்மை வினை, ஓ அசைநிலை, இரக்கக் குறிப்புயானே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 258, நக்கீரர், நெய்தல் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
பல் பூங்கானல் பகற்குறி மரீஇச்
செல்வல் கொண்க! செறித்தனள் யாயே,
கதிர் கால் வெம்பக் கல் காய் ஞாயிற்றுத்
திருவுடை வியல் நகர் வருவிருந்து அயர்மார்,
பொற்றொடி மகளிர் புறங்கடை உகுத்த  5
கொக்கு உகிர் நிமிரல் மாந்தி எல் பட,
அகல் அங்காடி அசை நிழல் குவித்த
பச்சிறாக் கவர்ந்த பசுங்கண் காக்கை
தூங்கல் வங்கத்துக் கூம்பில் சேக்கும்
மருங்கூர்ப்பட்டினத்து அன்ன இவள் 10
நெருங்கு ஏர் எல் வளை ஓடுவ கண்டே.

பாடல் பின்னணி:  பகற்குறி வந்த தலைவனிடம் தலைவியை அன்னை இற்செறித்து காவவல் உட்படுத்தினாள் என்று கூறி வரைவு கடாயது.

பொருளுரைநெய்தல் நிலத் தலைவனே!  பல மலர்களையுடைய கானலிடத்தே, உன்னிடம் கூறுவதற்காக நான் பகற்குறியிடம் வந்து, இப்பொழுது இல்லம் திரும்புகிறேன்.  கதிர்கள் தாக்கியதால் மக்களின் கால்கள் வெம்பும்படி கீழ்த் திசையின் மலையில் தோன்றிய கதிரவன் இயங்கும் வேளையில், செல்வம் மிகுந்த இல்லத்தின்கண் வரும் விருந்தினரை ஓம்புவதற்குப் பொன்னால் செய்த வளையல்களை அணிந்த பெண்கள் சமைத்து புறங்கடையில் எறிந்த, கொக்கின் கால் நகம் போன்ற சோற்றை உண்டு, பொழுது மறையும் மாலை நேரத்தில், அகன்ற அங்காடித் தெருவின் அசையும் நிழலில் குவித்த, பச்சை இறாமீனைக் கவர்ந்து உண்ட பச்சைக் கண்ணையுடைய காக்கை, அசையும் கப்பலின் கம்பத்தில் போய்ச் சேரும், மருங்கூர்ப்பட்டினத்தைப் போன்ற அழகுடைய இவளின் நெருங்க அணிந்த ஒளியுடைய வளையல்கள் கழன்று ஓடுவது கண்டு, தாய் அவளை மனையின்கண் செறித்தாள்.

குறிப்பு:  உள்ளுறை – கு. வெ. பாலசுப்பிரமணியன் உரை – மகளிரிட்ட பலிச்சோற்றை உண்ட காக்கை, அங்காடியில் இறா மீனைக் கவர்ந்து கூம்பில் சென்று தங்கும் என்றது, பாங்கற் கூட்டத்தில் தலைவியுடன் இன்பம் துய்த்துப் பின் பாங்கியிற் கூட்டத்திலும் கூடி இன்புற்ற தலைவன் சிறிதும் மனக் கவற்சியின்றித் தன்னூர் சென்றான் என்பதை உள்ளுறுத்தி நிற்கும்.  அகல் அங்காடி (7) – ஒளவை துரைசாமி உரை – அகன்ற அங்காடித் தெரு, பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரைகு. வெ. பாலசுப்பிரமணியன் உரை – அகன்ற மீன் கடை.  வரலாறு:  மருங்கூர்ப்பட்டினம்.  கொக்கு உகிர் நிமிரல் – புறநானூறு 395, 398.  கல் காய் ஞாயிற்று (3) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – கீழ்த்திசையில் தோன்றிக் காய்கின்ற ஞாயிற்றுனுடைய, H. வேங்கடராமன் உரை – கற்களும் வெடிப்புறும்படி ஞாயிறு தாக்குவதாலும்.  காக்கைக்கு உணவு அளித்தல் – நற்றிணை 258, 281, 293, 343, 367, குறுந்தொகை 210, ஐங்குறுநூறு 391.  எல் பட (6) – ஒளவை துரைசாமி உரை – பொழுது மறையும் மாலையில், பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – பொழுது படும்பொழுதில், கு. வெ. பாலசுப்பிரமணியன் உரை – பொழுது சாயும் வேளையில்.

சொற்பொருள்:  பல் பூங்கானல் பகற்குறி மரீஇ – பல மலர்களையுடைய கானலிடத்தே பகற்குறியிடம் நான் வந்து (மரீஇ – செய்யுளிசை அளபெடை), செல்வல் – மனைக்குச் செல்கின்றேன், கொண்க – நெய்தல் நிலத் தலைவனே, செறித்தனள் யாயே – தாய் அவளை மனையின்கண் செறித்தாள், கதிர் – கதிர்கள், கால் வெம்ப – மக்களின் கால்கள் வெப்பத்தால் வெம்பும்படி, கல் காய் ஞாயிற்று – கீழ்த் திசையின் மலையில் தோன்றி கதிரவன் காயும் வேளையில், திருவுடை வியல் நகர் வருவிருந்து அயர்மார் – செல்வம் மிகுந்த இல்லத்தின்கண் வரும் விருந்தினரை ஓம்புவதற்கு, பொற்றொடி மகளிர் – பொன்னால் செய்த வளையல்களை அணிந்த பெண்கள், புறங்கடை உகுத்த – புறங்கடையில் எறிந்த, கொக்கு உகிர் நிமிரல் மாந்தி – கொக்கின் கால் நகம் போன்ற சோற்றை உண்டு, எல் பட – பொழுது மறையும் வேளையில், மாலை நேரத்தில், அகல் அங்காடி அசை நிழல் குவித்த – அகன்ற அங்காடித் தெருவின் அசையும் நிழலில் குவித்த, பச்சிறாக் கவர்ந்த பசுங்கண் காக்கை – பச்சை இறாமீனைக் கவர்ந்த பச்சைக் கண்ணையுடைய காக்கை, தூங்கல் வங்கத்துக் கூம்பில் சேக்கும் – அசையும் கப்பலின் கம்பத்தில் போய் சேரும், மருங்கூர்ப்பட்டினத்து அன்ன – மருங்கூர்ப்பட்டினத்தைப் போன்ற, இவள் – இவளின், நெருங்கு ஏர் எல் வளை ஓடுவ கண்டே – நெருங்க அணிந்த ஒளியுடைய வளையல்கள் கழன்று ஓடுவது கண்டு (கண்டே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 259, கொற்றங்கொற்றனார், குறிஞ்சித் திணை – தோழி தலைவியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
யாங்குச் செய்வாம் கொல் தோழி? பொன் வீ
வேங்கை ஓங்கிய தேம் கமழ் சாரல்,
பெருங்கல் நாடனொடு இரும் புனத்து அல்கிச்,
செவ்வாய்ப் பைங்கிளி ஓப்பி, அவ்வாய்ப்
பெருவரை அடுக்கத்து அருவி ஆடிச்,  5
சாரல் ஆரம் வண்டு பட நீவி,
பெரிது அமர்ந்து இயைந்த கேண்மை சிறு நனி
அரிய போலக் காண்பேன், விரி திரைக்
கடல் பெயர்ந்தனைய ஆகி
புலர் பதம் கொண்டன ஏனல் குரலே.  10

பாடல் பின்னணி:  களவில் வந்து கூடும் தலைவன் திருமணம் புரிய வேண்டும் என்று எண்ணிய தோழி, தலைவியிடம் வருந்திக் கூறியது.  வரைவு கடாயது.

பொருளுரைதோழி!  பொன் போன்ற மலர்களையுடைய வேங்கை மரங்கள் உயர்ந்து வளர்ந்துள்ள தேனின் நறுமணம் கமழும் மலைச்சரிவை உடைய பெரிய மலைநாடனுடன் பெரிய தினைப்புனத்தில் தங்கிச் சிவந்த வாயையுடைய பச்சைக்கிளிகளை விரட்டி, அங்குள்ள பெரிய மலையின் பக்கத்திலிருந்து விழும் அருவியில் விளையாடி, மலைச்சரிவில் உள்ள சந்தன மரத்தின் சந்தனக் குழம்பை வண்டுகள் வந்து மொய்க்கும்படி உடலில் பூசி, பெரிதும் விரும்பி உருவாகிய நட்பானது, மிகவும் சிறியதாகி இல்லை என்பது போல் ஆவதைக் காண்பேன்.  தினைப்புனம் விரிந்த அலைகளையுடைய கடல் நீர் இல்லாது வற்றினாற்போல் ஆகி, உலர்ந்த கொய்யும் நிலையை அடைந்துள்ளன தினையின் கதிர்க்கொத்துக்கள்.  இனி நாம் என்ன செய்ய முடியும்?

குறிப்பு:  H. வேங்கடராமன் உரை – தினைகள் முற்றின,  இனி இற்செறிப்பு நிகழும்.  களவு இனி கைகூடாது.  தலைவன் வரைதலைத் தவிர (மணம் புரிவதைத் தவிர) வேறு வழி இல்லை.  தினையைக் கொய்யும் வேளையில் வேங்கை மரத்தின் பூக்கள் மலர்தல் – அகநானூறு 132, நற்றிணை 125, 259, 313, 389.  நனி – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3).  தேனுடைய மலை (நற்றிணையில்):  104 – தேம் கமழ் சிலம்பின், 147 – தேம்படு சாரல், 185 – தேனுடை நெடு வரை, 188 – குன்றத்துத் தேம் முதிர், 243 – தேம்படு சிலம்பில், 259 – தேம் கமழ் சாரல், 389 – தேம்படு நெடு வரை, 395 – தேன் தூங்கு உயர்வரை.  தேம்படு சிலம்பில், தேம்படு நெடுவரை – ஆகிவற்றிற்கு தேன் உண்டாகின்ற பக்கமாலையிலே, தேன் மணம் மிக்க நெடிய மலை என்றே விளக்கியுள்ளார் பின்னத்தூர் நாராயணசாமி ஐயர்.

சொற்பொருள்:  யாங்குச் செய்வாம் கொல் – நாம் என்ன செய்ய முடியும் (கொல்  – அசைநிலை), தோழி – தோழி, பொன் வீ வேங்கை ஓங்கிய தேம் கமழ் சாரல் பெருங்கல் நாடனொடு – பொன் போன்ற மலர்களையுடைய வேங்கை மரங்கள் உயர்ந்து வளர்ந்துள்ள தேனின் நறுமணம் கமழும் மலைச்சரிவை உடைய பெரிய மலைநாடனுடன் (வேங்கை மரம் – kino tree, Pterocarpus marsupium, தேம் தேன் என்றதன் திரிபு), இரும் புனத்து அல்கிச் செவ்வாய்ப் பைங்கிளி ஓப்பி – பெரிய தினைப்புனத்தில் தங்கிச் சிவந்த வாயையுடைய பச்சைக்கிளிகளை விரட்டி, அவ்வாய்ப் பெருவரை அடுக்கத்து அருவி ஆடிச் சாரல் ஆரம் வண்டு பட நீவி பெரிது அமர்ந்து இயைந்த கேண்மை – அங்குள்ள பெரிய மலையின் பக்கத்திலிருந்து விழும் அருவியில் விளையாடி மலைச்சரிவில் உள்ள சந்தன மரத்தின் சந்தனக் குழம்பை வண்டுகள் வந்து மொய்க்கும்படி பூசி பெரிதும் விரும்பி உருவாகிய நட்பு , சிறு நனி அரிய போலக் காண்பேன் – மிகவும் சிறியதாகி இல்லை என்பது போல் ஆவதைக் காண்பேன், விரி திரைக் கடல் பெயர்ந்தனைய ஆகி புலர் பதம் கொண்டன ஏனல் குரலே – விரிந்த அலைகளையுடைய கடல் வற்றினாற்போல் ஆகி உலர்ந்த கொய்யும் நிலையை அடைந்துள்ளன தினையின் கதிர்க்கொத்துக்கள் (குரலே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 260, பரணர், மருதத் திணை – தலைவி தலைவனிடம் சொன்னது
கழுநீர் மேய்ந்த கருந்தாள் எருமை
பழனத் தாமரைப் பனிமலர் முணைஇத்,
தண்டு சேர் மள்ளரின் இயலி, அயலது
குன்று சேர் வெண்மணல் துஞ்சும் ஊர!
வெய்யை போல முயங்குதி; முனை எழத்  5
தெவ்வர்த் தேய்த்த செவ்வேல் வயவன்
மலி புனல் வாயில் இருப்பை அன்ன என்
ஒலி பல் கூந்தல் நலம் பெறப் புனைந்த
முகை அவிழ் கோதை வாட்டிய
பகைவன் மன், யான் மறந்து அமைகலனே.  10

பாடல் பின்னணி:  ஊடல் மறுத்த தலைவி உரைத்தது.

பொருளுரைகழுநீர் மலர்களை மேய்ந்த கரிய (பெரிய) கால்களையுடைய எருமை, குளத்தில் உள்ள தாமரையின் குளிர்ந்த பூக்களை வெறுத்துவிட்டுத் தடியைக் கொண்ட மள்ளரைப் போல் நடந்து, அருகில் உள்ள குன்றுபோல் குவிந்த வெள்ளை மணல் மேட்டில் உறங்கும் ஊரனே!  என் மீது விருப்பம் உள்ளவன் போல் என்னைத் தழுவிக் கொள்கின்றாய் நீ. பகைமையுடன் வந்த பகைவரை அழித்த சிவந்த வேலையுடைய வலிமை மிக்க விராஅன் என்பவனின் நீர்நிலை பொருந்திய இருப்பை என்னும் ஊரை ஒத்த, தழைத்த அடர்ந்த என் கூந்தல் அழகு உண்டாக அணிந்த அரும்புகள் பூத்த மலர்மாலை வாடும்படி, என்னைப் பிரிந்த பகைவன் நீ.  உன் செயலை யான் மறக்க மாட்டேன்.

குறிப்பு:  உள்ளுறை – கு. வெ. பாலசுப்பிரமணியன் உரை – தாமரை மலரை வெறுத்துக் கழுநீரை மேய்ந்த எருமை மணற் குன்றில் சென்றுறங்கும் என்பது, தலைவி நலனை வெறுத்துத் காதற் பரத்தையிடம் கூடி இன்புற்ற தலைவன் அவளிடத்தும் தங்காது பரத்தையின் இல்லம் சென்று உறங்கும் தன்மையன் என்பதனை உள்ளுறுத்தி நின்றது.  ஒப்புமை:  அகநானூறு 316 – அரி மலர் ஆம்பல் மேய்ந்த நெறி மருப்பு ஈர்ந்தண் எருமைச் சுவல்படு முது போத்துத் தூங்கு சேற்று அள்ளல் துஞ்சிப் பொழுதுபடப் பைந்நிண வராஅல் குறையப் பெயர்தந்து குரூஉக்கொடிப் பகன்றை சூடி மூதூர்ப் போர்ச்செறி மள்ளரிற் புகுதரும் ஊரன்.  இருப்பை (7) – ஒளவை துரைசாமி உரை – இருப்பையூர்.  இப்போது விராலிமலைக்கு அணிமையில் உள்ளது.  விராஅனது இம்மலை இன்று விராலிமலை என விளங்குகிறது.  முணைஇ – இச்சொல் முனைஇ என்றும் எழுதப்படும்.

சொற்பொருள்:  கழுநீர் மேய்ந்த கருந்தாள் எருமை பழனத் தாமரைப் பனிமலர் முணைஇத் தண்டு சேர் மள்ளரின் இயலி அயலது குன்று சேர் வெண்மணல் துஞ்சும் ஊர – கழுநீர் மலர்களை மேய்ந்த கரிய (பெரிய) கால்களையுடைய எருமை குளத்தில் உள்ள தாமரையின் குளிர்ந்த பூக்களை வெறுத்துவிட்டுத் தடியைக் கொண்ட மள்ளரைப் போல் நடந்து அருகில் உள்ள குன்றுபோல் குவிந்த வெள்ளை மணல் மேட்டில் உறங்கும் ஊரனே (மள்ளரின் – இன் உருபு ஒப்புப் பொருளது, ஐந்தாம் வேற்றுமை உருபு, முணைஇ – அளபெடை), வெய்யை போல முயங்குதி – என் மீது விருப்பம் உள்ளவன் போல் என்னைத் தழுவிக் கொள்கின்றாய் (வெய்யை – வேண்டல் பொருட்டாய வெம்மை என்னும் உரிச்சொல்லடியாகப் பிறந்த முன்னிலை வினைக்குறிப்பு முற்று), முனை எழத் தெவ்வர்த் தேய்த்த செவ்வேல் வயவன் மலி புனல் வாயில் இருப்பை அன்ன என் ஒலி பல் கூந்தல் நலம் பெறப் புனைந்த முகை அவிழ் கோதை வாட்டிய பகைவன் மன் யான் மறந்து அமைகலனே – பகைமை மிகுந்த பகைவரை அழித்த சிவந்த வேலையுடைய வலிமை மிக்க விராஅன் என்பவனின் நீர்நிலை பொருந்திய இருப்பை என்னும் ஊரை ஒத்த தழைத்த அடர்ந்த என் கூந்தல் அழகு உண்டாக அணிந்த அரும்புகள் பூத்த மலர்மாலை வாடும்படி என்னைப் பிரிந்த என் பகைவனான உன் செயலை யான் மறக்க மாட்டேன் (மன் – அசை, அமைகலனே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 261, சேந்தன் பூதனார், குறிஞ்சித் திணை  – தோழி தலைவியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
அருளிலர், வாழி தோழி, மின்னு வசிபு
இருள் தூங்கு விசும்பின் அதிரும் ஏறொடு
வெஞ்சுடர் கரந்த கமஞ்சூல் வானம்,
நெடும் பல் குன்றத்துக் குறும் பல மறுகித்
தா இல் பெரும் பெயல் தலைஇய யாமத்துக்,  5
களிறு அகப்படுத்த பெருஞ்சின மாசுணம்
வெளிறு இல் காழ் மரம் பிணித்து நனி மிளிர்க்கும்
சாந்தம் போகிய தேங்கமழ் விடர் முகை,
எருவை நறும் பூ நீடிய
பெருவரைச் சிறுநெறி வருதலானே. 10

பாடல் பின்னணி:  இரவுக்குறி விலக்கி வரைவு கடாயது.  தலைவனை இகழ்ந்த தோழியிடம் தலைவி கூறியதுமாம்.

பொருளுரைதோழி!  நீ நீடு வாழ்வாயாக! அருள் இல்லாதவர் நம் தலைவர், மின்னல் பிளந்து இருள் நிறைந்த வானில் அதிர்கின்ற இடியோடு ஞாயிறு தோன்றாதபடி அதை மறைத்த சூலுடைய (நீர் நிறைந்த) முகில்கள் நெடிய பல மலையிடத்துச் சிறிய பலவாக இயங்கி, குற்றமற்ற பெருமழை பெய்த நடுஇரவில், களிற்று யானையை அகப்படுத்திய பெருஞ்சினத்தையுடைய பெரிய பாம்பு உள்ளே வெண்மையில்லாத வைரம் பாய்ந்த சந்தன மரத்தை புரட்ட, அம்மரத்தின் சந்தன நறுமணம் கமழும் மலைப்பிளவின்கண், கொறுக்கச்சியின் நறுமணமான மலர்கள் நீண்டு வளரும் பெரிய மலையில் அமைந்த சிறிய பாதையில் அவர் வருவதால்.

குறிப்பு:  மின்னல் பிளத்தல்:  மின்னு வசிபு – அகநானூறு 162, 212, 322, நற்றிணை 228, 261, மலைபடுகடாம் 97, மின்னு வசி – நற்றிணை 334.  களிறு (6) – ஒளவை துரைசாமி உரை – ஆண் யானை.  ஆண் காட்டுப் பன்றியுமாம்.  விடர்முகை (8) – ஒளவை துரைசாமி உரை – மலைப்பிளவு, பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – மலைப்பிளவினையுடைய துறுகல்.  காழ் – அகக் காழனவே மரம் என மொழிப (தொல்காப்பியம், மரபியல் 87).

சொற்பொருள்:  அருளிலர் – அருள் இல்லாதவர் நம் தலைவர், வாழி தோழி – நீடு வாழ்வாயாக தோழி, மின்னு வசிபு இருள் தூங்கு விசும்பின் அதிரும் ஏறொடு – மின்னல் பிளந்து இருள் நிறைந்த வானில் அதிர்கின்ற இடியோடு, வெஞ்சுடர் கரந்த கமஞ்சூல் வானம் – ஞாயிறு தோன்றாதபடி அதை மறைத்த சூலுடைய முகில்கள், நெடும் பல் குன்றத்துக் குறும் பல மறுகி – நெடிய பல மலையிடத்துச் சிறிய பலவாக இயங்கி, தா இல் பெரும் பெயல் தலைஇய யாமத்து – குற்றமற்ற பெரு மழை பெய்த நடுஇரவில் (தலைஇய – அளபெடை), களிறு அகப்படுத்த பெருஞ்சின மாசுணம் – களிற்று யானையைப் பற்றிச் சுற்றிக்கொண்ட பெருஞ் சினத்தையுடைய பெரிய பாம்பு, வெளிறு இல் காழ் மரம் பிணித்து நனி மிளிர்க்கும் – உள்ளே வெண்மையில்லாத வைரம் பாய்ந்த சந்தன மரத்தை புரட்டும், சாந்தம் போகிய தேங்கமழ் விடர் முகை – சந்தன மரத்தின் மணம் கமழ்கின்ற மலைப்பிளவின்கண், எருவை நறும் பூ நீடிய பெருவரைச் சிறுநெறி வருதலானே – கொறுக்கச்சியின் நறுமணமான மலர்கள் நீண்டு வளரும் பெரிய மலையில் அமைந்த சிறிய பாதையில் வருவதால் (வருதலானே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 262, பெருந்தலைச் சாத்தனார், பாலைத் திணை – தலைவன் சொன்னது
தண் புனக் கருவிளைக் கண் போல் மா மலர்
ஆடு மயில் பீலியின் வாடையொடு துயல்வர,
உறை மயக்குற்ற ஊர் துஞ்சு யாமத்து,
நடுங்கு பிணி நலிய நல் எழில் சாஅய்த்,
துனி கூர் மனத்தள் முனி படர் உழக்கும்  5
பணைத்தோள் அரும்பிய சுணங்கின், கணைக் கால்
குவளை நாறும் கூந்தல் தேமொழி
இவளின் தீர்ந்தும் ஆள் வினை வலிப்பப்
பிரிவன் நெஞ்சு என்னும் ஆயின்,
அரிது மன்றம்ம இன்மையது இளிவே.  10

பாடல் பின்னணி:  பொருளுக்காக தலைவன் பிரிவான் என்று அஞ்சிய தலைவியின் உள்ளத்தை அறிந்த தலைவன் வருந்திச் செலவு அழுங்கியது.

பொருளுரைகுளிர்ந்த புனத்தில் கண்கள் போல் தோன்றும் கருவிளை மலர்கள் ஆடுகின்ற மயில்போல் வாடைக்காற்றில் அசையுமாறு, மழைத்துளிகள் காற்றுடன் கலந்து விழ, ஊரில் உள்ளவர்கள் உறங்கும் நடு இரவில், நடுக்கம் செய்யும் காதல் நோய் துன்புறுத்துவதால் நல்ல அழகு அழிந்து வருத்தம் மிகுந்த உள்ளத்தை உடையவளாக, வெறுப்புடன் துன்பத்தில் இருக்கும், மூங்கில்போன்ற (பருத்த) தோள்களில் தோன்றிய தேமலையும், திரண்ட அடியையுடைய குவளையின் மணம் வீசும் கூந்தலையும், இனிய சொற்களையுமுடைய இவளைப் பிரிந்து பொருள் ஈட்டும் முயற்சி மிக்க ஈர்த்ததால், என் நெஞ்சு இவளைப் பிரிவேன் எனக் கூறினால், வறுமையால் வரும் இளிவு உறுதியாக மிகவும் கொடியது.

குறிப்பு:  மன்றம்ம:  ஒளவை துரைசாமி உரை – மன்ற – தெளிவாக, அம்ம – உரையசை, H. வேங்கடராமன் உரை – மன்றம்ம – மன் + அம்ம, மன் – மிகுதி, அம்ம – உறுதியாக.

சொற்பொருள்:  தண் புனக் கருவிளைக் கண் போல் மா மலர் ஆடு மயில் பீலியின் வாடையொடு துயல்வர உறை மயக்குற்ற ஊர் துஞ்சு யாமத்து – குளிர்ந்த புனத்தில் கண்கள் போல் தோன்றும் கருவிளை மலர்கள் ஆடுகின்ற மயில்போல் வாடைக்காற்றில் அசையுமாறு மழைத்துளிகள் காற்றுடன் கலந்து விழ ஊரில் உள்ளவர்கள் உறங்கும் நடு இரவில் (கருவிளை – சங்குப்பூ, Clitoria ternatia, உறை – மழைத்துளி, மயக்குற்ற – கலந்த), நடுங்கு பிணி நலிய நல் எழில் சாஅய்த் துனி கூர் மனத்தள் – நடுக்கம் செய்யும் காதல் நோய் துன்புறுத்துவதால் நல்ல அழகு அழிந்து வருத்தம் மிகுந்த உள்ளத்தை உடையவள் (சாஅய் – அளபெடை), முனி படர் உழக்கும் – வெறுப்புடன் துன்பத்தில் இருக்கும், பணைத்தோள் அரும்பிய சுணங்கின் கணைக் கால் குவளை நாறும் கூந்தல் தேமொழி இவளின் தீர்ந்தும் ஆள் வினை வலிப்ப – மூங்கில்போன்ற (பருத்த) தோள்களில் தோன்றிய தேமலையும் திரண்ட அடியையுடைய குவளையின் மணம் வீசும் கூந்தலையும் இனிய சொற்களையுமுடைய இவளைப் பிரிந்து பொருள் ஈட்டும் முயற்சி மிக்க ஈர்த்ததால், பிரிவன் நெஞ்சு என்னும் ஆயின்– என் நெஞ்சு இவளைப் பிரிவேன் எனக் கூறினால், அரிது மன்ற அம்ம இன்மையது இளிவே – வறுமையால் வரும் இளிவு உறுதியாக மிகவும் கொடியது (இளிவே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 263, இளவெயினனார், நெய்தல் திணை – தோழி தலைவியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
பிறை வனப்பு இழந்த நுதலும், யாழ நின்
இறை வரை நில்லா வளையும், மறையாது
ஊர் அலர் தூற்றும் கௌவையும், நாண் விட்டு,
உரை அவற்கு உரையாம் ஆயினும் இரை வேட்டுக்
கடுஞ்சூல் வயவொடு கானல் எய்தாது  5
கழனி ஒழிந்த கொடுவாய்ப் பேடைக்கு,
முட முதிர் நாரை கடல் மீன் ஒய்யும்
மெல்லம்புலம்பற் கண்டு நிலைசெல்லாக்
கரப்பவும் கரப்பவும் கைம்மிக்கு,
உரைத்த தோழி, உண்கண் நீரே.  10

பாடல் பின்னணி:  தோழித் தலைவனை வரைவு கடாயது.

பொருளுரைதோழி!  பிறை நிலவு போன்ற அழகை இழந்த நெற்றியையும் நின் முன்னங்கையிலிருந்து கழலும் வளையல்களையும் மறைத்துக் கூறாது நேரில் கூறும் ஊராரின் அலர் கூறும் பழிச் சொற்களையும் நாம் நாணத்தினால் தலைவனிடம் கூறாதுவிட்டோம் ஆயினும், இரையை விரும்பிய முதிர்ந்த கர்ப்பத்தை உடைய, துன்பத்துடன் கடற்கரைச் சோலையில் இயங்காது வயலில் இருந்த வளைந்த வாயையுடைய தன் பெண் நாரைக்கு, முடம் முதிர்ந்த நாரை கடல் மீனைக் கொண்டுக் கொடுக்கும் மெல்லிய கடற்கரையின் தலைவனைக் கண்டு ஒரு நிலையில் நிற்காமல் நாம் மறைக்கவும் மறைக்கவும், உன் மையிட்ட கண்களில் உள்ள கண்ணீர் உன்னுடைய காதல் துன்பத்தை உரைத்து விட்டன.

குறிப்பு:  ஒளவை துரைசாமி உரை – ‘மறைந்தவற் காண்டல்’ (தொல்காப்பியம், களவியல் 21) எனத் தொடங்கும் நூற்பாவில் வரும் ‘நிறைந்த காதலின் சொல் எதிர் மழுங்கல்’ என்றதற்கு இப்பாட்டைக் காட்டி, ‘இஃது யாம் உரையாமாயினும் கண் உரைத்தன என்றலின் இரண்டும் கூறினாள்’ என்பர் நச்சினார்க்கினியர்.   உள்ளுறை – கு. வெ. பாலசுப்பிரமணியன் உரை – வயலில் தங்கியப் பேடை நாரைக்கு ஆண் நாரை கடல் மீன் கொண்டு விரையும் என்றது, தலைவன் தலைவியை மணப்பதற்குரிய கொடைப்பொருள் பலவற்றுடன் விரைவான் என்பதாம்.  செல்லா (8) – ஒளவை துரைசாமி உரை – செல்லாது என்பது செல்லா என ஈறு கெட்டது.

சொற்பொருள்:  பிறை வனப்பு இழந்த நுதலும் யாழ நின் இறை வரை நில்லா வளையும் மறையாது ஊர் அலர் தூற்றும் கௌவையும் நாண் விட்டு உரை அவற்கு உரையாம் ஆயினும் – பிறை நிலவு போன்ற அழகை இழந்த நெற்றியையும் நின் முன்னங்கையிலிருந்து கழலும் வளையல்களையும் மறைத்துக் கூறாது நேரில் கூறும் ஊராரின் அலர் கூறும் பழிச் சொற்களையும் நாம் நாணத்தினால் தலைவனிடம் கூறாதுவிட்டோம் ஆயினும் (ஊர் – ஆகுபெயர் ஊரில் உள்ளோர்க்கு), இரை வேட்டுக் கடுஞ்சூல் வயவொடு கானல் எய்தாது கழனி ஒழிந்த கொடுவாய்ப் பேடைக்கு முட முதிர் நாரை கடல் மீன் ஒய்யும் மெல்லம்புலம்பற் கண்டு நிலைசெல்லாக் கரப்பவும் கரப்பவும் கைம்மிக்கு உரைத்த – இரையை விரும்பிய முதிர்ந்த கர்ப்பத்தை உடைய துன்பத்துடன் கடற்கரைச் சோலையில் இயங்காது வயலில் இருந்த வளைந்த வாயையுடைய பெண் நாரைக்கு முடம் முதிர்ந்த நாரை கடல் மீனைக் கொண்டுக் கொடுக்கும் மெல்லிய கடற்கரையின் தலைவனைக் கண்டு ஒரு நிலையில் நிற்காமல் நாம் மறைக்கவும் மறைக்கவும் அவை உரைத்து விட்டன, தோழி – தோழி, உண்கண் நீரே – மையிட்ட கண்களில் உள்ள கண்ணீர் (நீரே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 264, ஆவூர்க் காவிதிகள் சாதேவனார், பாலைத் திணை – தலைவன் தலைவியிடம் சொன்னது
பாம்பு அளைச் செறிய முழங்கி, வலன் ஏர்பு
வான் தளி பொழிந்த காண்பின் காலை,
அணி கிளர் கலாவம் ஐது விரித்து இயலும்
மணி புரை எருத்தின் மஞ்ஞை போல, நின்
வீ பெய் கூந்தல் வீசு வளி உளர  5
ஏகுதி மடந்தை, எல்லின்று பொழுதே,
வேய் பயில் இறும்பில் கோவலர் யாத்த
ஆ பூண் தெண் மணி இயம்பும்,
உதுக்காண் தோன்றும், எம் சிறு நல் ஊரே.

பாடல் பின்னணி:  உடன்போக்கில் தலைவன் தலைவியிடம் கூறியது.

பொருளுரை:  மடந்தையே!  ஞாயிறு மேற்குத் திசையில் சென்று மறைந்து ஒளி மழுங்கியது.  அங்கே பார்!  மூங்கில் நிறைந்த சிறிய மலையில், கோவலர் தங்கள் பசுக்களின் கழுத்தில் கட்டிய தெளிந்த ஓசையையுடைய மணிகள் ஒலிக்கும் எம்முடைய சிறிய நல்ல ஊர் தோன்றுகின்றது.  பாம்பு புற்றில் அடங்கி இருக்குமாறு முழங்கி, வலமாக எழுந்து முகில்கள் மழையைப் பொழியும் காண்பதற்கு இனிமையான இந்தப் பொழுதிலே, அழகு விளங்கும் தோகையை மெல்ல விரித்து நீலமணி போன்ற கழுத்தினையுடைய ஆடும் மயில் போல், மலர் அணிந்த உன்னுடைய கூந்தலை, வீசும் காற்று உளரி விரிக்குமாறு, விரைந்து செல்வாயாக.

குறிப்பு:  காண்பின் காலை (2) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – காட்சியையுடைய காலைப் பொழுதிலே, கு. வெ. பாலசுப்பிரமணியன் உரை – காண்பதற்கு இனிதாக விளங்கும் பொழுதில்.  வலன் ஏர்பு – அகநானூறு 43, 84, 188, 278, 298, 328, நற்றிணை 37, 264, 328, குறுந்தொகை 237, ஐங்குறுநூறு 469, பதிற்றுப்பத்து 24, 31, நெடுநல்வாடை 1, பட்டினப்பாலை 67, முல்லைப்பாட்டு 4, திருமுருகாற்றுப்படை 1.  இடி பாம்புகளை வருத்தவும் கொல்லவும் செய்யும் என்னும் செய்தி உள்ள பாடல்கள் – அகநானூறு 92, 119, 182, 202, 274, 323, 328, கலித்தொகை 45, 113, குறுந்தொகை 158, 190, 268, 391, நற்றிணை 37, 51, 114, 129, 238, 255, 264, 347, 383, புறநானூறு 17, 37, 58, 126, 211, 366, 369.

சொற்பொருள்:  பாம்பு அளைச் செறிய முழங்கி – பாம்பு புற்றில் அடங்கி இருக்குமாறு முழங்கி, வலன் ஏர்பு வான் தளி பொழிந்த காண்பு இன் காலை – வலமாக எழுந்து முகில்கள் மழையைப் பொழியும் காண்பதற்கு இனிமையான பொழுதிலே, அணிகிளர் கலாவம் ஐது விரித்து இயலும் மணி புரை எருத்தின் மஞ்ஞை போல – அழகு விளங்கும் தோகையை மெல்ல விரித்து நீலமணி போன்ற கழுத்தினையுடைய மயில் போல (புரை – உவம உருபு), நின் வீ பெய் கூந்தல் வீசு வளி உளர – உன்னுடைய மலர் அணிந்த கூந்தல் வீசும் காற்று உளர, ஏகுதி மடந்தை – விரைந்து செல்க மடந்தாய், எல்லின்று பொழுதே – ஞாயிறு மேற்குத் திசையில் சென்று ஒளி மழுங்கியது, வேய் பயில் இறும்பில் – மூங்கில் நிறைந்த சிறிய மலையில், கோவலர் யாத்த ஆ பூண் தெண் மணி இயம்பும் – கோவலர் தங்கள் பசுக்களின் கழுத்தில் கட்டிய தெளிந்த ஓசையையுடைய மணிகள் ஒலிக்கும், உதுக்காண் – அங்கே பார், தோன்றும் – தோன்றும், எம் சிறு நல் ஊரே – எம்முடைய சிறிய நல்ல ஊர் (ஊரே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 265, பரணர், குறிஞ்சித் திணை – தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது
இறுகு புனம் மேய்ந்த அறு கோட்டு முற்றல்
அள்ளல் ஆடிய புள்ளி வரிக் கலை
வீளை அம்பின் வில்லோர் பெருமகன்,
பூந்தோள் யாப்பின் மிஞிலி காக்கும்
பாரத்து அன்ன, ஆர மார்பின்  5
சிறு கோல் சென்னி ஆரேற்றன்ன,
மாரி வண் மகிழ் ஓரி கொல்லிக்
கலி மயில் கலாவத்து அன்ன, இவள்
ஒலி மென் கூந்தல் நம் வயினானே.

பாடல் பின்னணி:  பின்னின்ற தலைவன் உரைத்தது.

பொருளுரை:  உலர்ந்த புனத்தில் மேய்ந்த உடைந்த கொம்பையுடைய, முற்றிய சேற்றில் படிந்த புள்ளிகளையும் வரிகளையும் உடைய ஆண்மானின் மீது எய்யப்பட்ட, ஒலியுடைய அம்பினையும் வில்லையுமுடைய வேட்டுவர்கள் தலைவனான பூமாலை அணிந்த தோளில் வட்ட அணிகலனான வலயம் அணிந்த மிஞிலி என்பவன் காக்கும் பாரம் என்னும் ஊரைப் போலவும், ஆத்தி மாலையை மார்பில் அணிந்த சில ஊர்களை ஆட்சி செய்த செங்கோலையுடைய சோழனின் ஆரேற்று என்னும் ஊரைப் போலவும், மழைபோல் கொடையையும் கள்ளையுமுடைய ஓரி என்னும் மன்னனின் கொல்லி மலையில் உள்ள செருக்கிய மயிலின் தோகையைப் போலவும் உள்ளது இவளுடைய தழைத்த மென்மையான கூந்தல்.  இவள் நம்மிடம் அன்புடையவள்.

குறிப்பு:  வரலாறு:  மிஞிலி, பாரம், ஓரி, கொல்லி, ஆறேற்று.  கடையெழு வள்ளல்கள் – ஆய், பாரி, காரி, ஓரி, அதிகன், பேகன், நள்ளி.  ஒப்புமை: அகநானூறு 152 – இசை நல் ஈகைக் களிறு வீசு வண் மகிழ்ப் பாரத்துத் தலைவன் ஆர நன்னன்.  ஓரி பற்றின குறிப்புகள் – அகநானூறு 208–21, 209–14, நற்றிணை 6–9, 52–9, 265–7, 320–5, குறுந்தொகை 100–5, 199–3, சிறுபாணாற்றுப்படை 111, புறநானூறு 152–12, 204–12.

சொற்பொருள்:  இறுகு புனம் மேய்ந்த அறு கோட்டு முற்றல் அள்ளல் ஆடிய புள்ளி வரிக் கலை வீளை அம்பின் வில்லோர் பெருமகன் பூந்தோள் யாப்பின் மிஞிலி காக்கும் பாரத்து அன்ன – உலர்ந்த புனத்தில் மேய்ந்த உடைந்த கொம்பையுடைய முற்றிய சேற்றில் படிந்த புள்ளிகளையும் வரிகளையும் உடைய ஆண்மானின் மீது எய்யப்பட்ட ஒலியுடைய அம்பினையும் வில்லையுமுடைய வேட்டுவர்கள் தலைவனான பூமாலை அணிந்த தோளில் வட்ட அணிகலனான வலயம் அணிந்த மிஞிலி என்பவன் காக்கும் பாரம் என்னும் ஊரை ஒத்த, ஆர மார்பின் சிறு கோல் சென்னி ஆரேற்றன்ன – ஆத்தி மாலையை மார்பில் அணிந்த சில ஊர்களை ஆட்சி செய்த செங்கோலையுடைய சோழனின் ஆரேற்று என்னும் ஊரை ஒத்த, மாரி வண் மகிழ் ஓரி கொல்லிக் கலி மயில் கலாவத்து அன்ன இவள் ஒலி மென் கூந்தல் – மழைபோல் கொடையையும் கள்ளையுமுடைய ஓரி என்னும் மன்னனின் கொல்லி மலையில் உள்ள செருக்கிய மயிலின் தோகையை ஒத்த இவளுடைய தழைத்த மென்மையான கூந்தல் (கலாவத்து – கலாவம், அத்துச் சாரியை), நம் வயினானே – நம்மிடம் அன்புடையவள் (வயினானே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 266, கச்சிப்பேட்டு இளந்தச்சனார், முல்லைத் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
கொல்லைக் கோவலர் குறும் புனம் சேர்ந்த
குறுங்கால் குரவின் குவி இணர் வான் பூ
ஆடுடை இடைமகன் சூடப் பூக்கும்
அகலுள் ஆங்கண் சீறூரேமே,
அதுவே சாலும் காமம் அன்றியும்  5
எம் விட்டு அகறிர் ஆயின், கொன் ஒன்று
கூறுவல் வாழியர் ஐய, வேறுபட்டு
இரீஇய காலை இரியின்
பெரிய அல்லவோ பெரியவர் நிலையே.

பாடல் பின்னணி:  தலைவன் வினைவயிற் பிரிய எண்ணியபொழுது தோழி சொன்னது.

பொருளுரைஐயா!  நீடு வாழ்வீராக!  கொல்லையில் (புன்செய் நிலத்தில்) கோவலர்களின் சிறிய புனத்தில் உள்ள குறுகிய அடியையுடைய குரவ மரத்தின் குவிந்த கொத்துக்களில் உள்ள வெள்ளை மலர்கள், ஆடுகளை மேய்க்கும் இடையன் சூடுமாறு மலர்கின்ற, அகன்ற இடைத்தையுடைய சிற்றூரில் உள்ளோம் நாங்கள்.  அதுவே பொருத்தமாக உள்ளது எம் விருப்பத்திற்கு.  அல்லாமலும், எம்மை விட்டு நீங்குவீர் ஆனால், பயன் இல்லாவிட்டாலும் ஒன்றை யான் கூறுகின்றேன்.  எம்மைப் பிரிய எண்ணிச் செல்லும் பிரியும் வேளையில், எம்மை இல்லத்தில் இருக்கச் செய்ததற்கு, அத்துன்பத்தைத் தாங்கிப் பொறுத்தல் அல்லவோ பெருங்குடியில் பிறந்தவர்களின் பண்பாகும்!

குறிப்பு:  அல்லவோ (9) – ஒளவை துரைசாமி உரை – அல்லவோ என்புழி எதிர்மறை ஓகாரம் புணர்ந்து உடன்பாட்டுப் பொருள் பயப்பித்தது, பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – அலலாமன்றோ?  கொன் – அச்சம், பயம் இலி, காலம், பெருமை, என்று அப் பால் நான்கே கொன்னைச் சொல்லே (தொல்காப்பியம், இடையியல் 6).  எம் விட்டு அகறிர் ஆயின் – தலைவியும் தோழியும் மிக நெருங்கிய நட்பு உடையவர்கள் என்பதாலும், தலைவியின் களவு ஒழுக்கத்திற்குத் தோழி உதவுவதாலும், தலைவனைத் தோழி நன்கு அறிந்தவள் என்பதாலும், தலைவியின் பொருட்டு இவ்வாறு பன்மையாற் கூறினாள்.

சொற்பொருள்:  கொல்லைக் கோவலர் குறும் புனம் சேர்ந்த குறுங்கால் குரவின் குவி இணர் வான் பூ ஆடுடை இடைமகன் சூடப் பூக்கும் அகலுள் ஆங்கண் சீறூரேமே – கொல்லையில் (புன்செய் நிலத்தில்) கோவலர்களின் சிறிய புனத்தில் உள்ள குறுகிய அடியையுடைய குரவ மரத்தின் குவிந்த கொத்துக்களில் உள்ள வெள்ளை மலர்கள் ஆடுகளை மேய்க்கும் இடையன் சூடுமாறு மலர்கின்ற அகன்ற இடைத்தையுடைய சிற்றூரில் உள்ளோம் நாங்கள் (குரவ மரம்  – common bottle flower tree), அதுவே சாலும் காமம் – அதுவே பொருத்தமாக உள்ளது எம் விருப்பத்திற்கு, அன்றியும் எம் விட்டு அகறிர் ஆயின் – அல்லாமலும் எம்மை விட்டு நீங்குவீர் ஆனால், கொன் ஒன்று கூறுவல் – பயன் இல்லாவிட்டாலும் ஒன்றை யான் கூறுகின்றேன் (கொன் – பயனின்மை என்ற பொருளில் வரும் இடைச்சொல்), வாழியர் – நீடு வாழ்வீராக, ஐய – ஐயா, வேறுபட்டு இரீஇய காலை இரியின் பெரிய அல்லவோ பெரியவர் நிலையே – எம்மைப் பிரிய எண்ணிச் செல்லும் வேளையில் எம்மை இல்லத்தில் இருக்கச் செய்ததற்கு அதைத் தாங்கிப் பொறுத்தல் அல்லவோ பெருங்குடியில் பிறந்தவர்களின் பண்பாகும் (இரீஇய – செய்யுளிசை அளபெடை, நிலையே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 267, கபிலர், நெய்தல் திணை – தோழி தலைவியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
நொச்சி மா அரும்பு அன்ன கண்ண
எக்கர் ஞெண்டின் இருங்கிளைத் தொழுதி,
இலங்கு எயிற்று ஏஎர் இன்னகை மகளிர்
உணங்கு தினை துழவும் கை போல், ஞாழல்
மணம் கமழ் நறு வீ வரிக்கும் துறைவன்  5
தன்னொடு புணர்த்த இன் அமர் கானல்,
தனியே வருதல் நனி புலம்பு உடைத்து என
வாரேன் மன் யான், வந்தனென் தெய்ய,
சிறு நா ஒண் மணித் தெள் இசை கடுப்ப,
இன மீன் ஆர்கை ஈண்டு புள் ஒலிக்குரல்  10
‘இவை மகன்’ என்னா அளவை,
வயமான் தோன்றல் வந்து நின்றனனே.

பாடல் பின்னணி:  தலைவி இற்செறிக்கப்பட்ட வேளையில் தோழி கூறியது.  வரைவு கடாயது.

பொருளுரை:  நொச்சி மரத்தின் கரிய (பெரிய) அரும்புகள் போன்ற கண்களையுடைய மணல் மேட்டின்கண் உள்ள நண்டின் பெரிய சுற்றத்துடன் கூடிய கூட்டம், ஒளிரும் பற்களையும் அழகிய இனிய புன்னகையையும் உடைய மகளிர் காய வைத்த தினையைத் துழாவும் கைகள் போல், நறுமணம் வீசும் ஞாழல் மரத்தின் உதிர்ந்த மலர்ளைக் கால்களால் வரித்துக் கோலம் செய்யும் துறைவன், அவனுடன் நட்பு கொண்ட இனிய விருப்பத்தையுடைய கடற்கரைச் சோலைக்குத் தனியே வருவது மிகவும் துன்பமுடையது என்று நான் வருவதில்லை.  ஆனால் ஒரு நாள் வந்தேன். சிறிய நாக்கையுடைய ஒளிரும் மணிகளின் தெளிந்த ஒலியை ஒப்ப உள்ள மீன் கூட்டத்தை உண்ணுவதற்கு வந்து சேரும் பறவைகளின் ஒலியைக் கேட்டு ‘இவை தலைவனின் தேர் மணிகளின் ஓசையோ’ எனக் கருதும் முன்னர் அவன் வந்து நின்றான்.

குறிப்பு:  இறைச்சி – கு. வெ. பாலசுப்பிரமணியன் உரை – ஞாழல் மரத்தின் பூவை நண்டுகள் வரிக்கும் என்றது. தலைவனிடம் சேராது பிரித்த இல்வயிற் செறிக்கப்பட்ட தலைவியை அயலார் அலர் கூறி வருத்துவர் என்பதைக் குறித்தது.  நனி – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3).

சொற்பொருள்:  நொச்சி மா அரும்பு அன்ன கண்ண எக்கர் ஞெண்டின் இருங்கிளைத் தொழுதி இலங்கு எயிற்று ஏஎர் இன்னகை மகளிர் உணங்கு தினை துழவும் கை போல் ஞாழல் மணம் கமழ் நறு வீ வரிக்கும் துறைவன் – நொச்சி மரத்தின் கரிய (பெரிய) அரும்புகள் போன்ற கண்களையுடைய மணல் மேட்டின்கண் உள்ள நண்டின் பெரிய சுற்றத்துடன் கூடிய கூட்டம் ஒளிரும் பற்களையும் அழகிய இனிய புன்னகையையும் உடைய மகளிர் காய வைத்த தினையைத் துழாவும் கைகள் போல் நறுமணம் வீசும் ஞாழல் மரத்தின் உதிர்ந்த மலர்ளைக் கால்களால் வரித்துக் கோலம் செய்யும் துறைவன் (நொச்சி – Vitex leucoxylon, Chaste tree, ஞெண்டின் – ஞெண்டு நண்டு என்பதன் போலி, ஏஎர் – அளபெடை, ஞாழல் – புலிநகக்கொன்றை, tigerclaw tree,  Cassia Sophera), தன்னொடு புணர்த்த இன் அமர் கானல் தனியே வருதல் நனி புலம்பு உடைத்து என வாரேன் மன் யான் – அவனுடன் நட்பு கொண்ட இனிய விருப்பத்தையுடைய கடற்கரைச் சோலைக்குத் தனியே வருவது மிகவும் துன்பமுடையது என்று நான் வருவதில்லை (மன் – ஒழியிசை இடைச்சொல்), வந்தனென் – ஒரு நாள் வந்தேன், தெய்ய – அசைநிலை, சிறு நா ஒண் மணித் தெள் இசை கடுப்ப இன மீன் ஆர்கை ஈண்டு புள் ஒலிக்குரல் ‘இவை மகன்’ என்னா அளவை வயமான் தோன்றல் வந்து நின்றனனே – சிறிய நாக்கையுடைய ஒளிரும் மணிகளின் தெளிந்த ஒலியை ஒப்ப உள்ள மீன் கூட்டத்தை உண்ணுவதற்கு வந்து சேரும் பறவைகளின்  ஒலியைக் கேட்டு இவை தலைவனின் தேர் மணிகளின் ஓசை எனக் கருதும் முன்னர் வந்து நின்றான் (கடுப்ப – உவம உருபு, நின்றனனே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 268, வெறி பாடிய காமக்கண்ணியார், குறிஞ்சித் திணை – தோழி தலைவியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
சூருடை நனந்தலைச் சுனை நீர் மல்க
மால் பெயல் தலைஇய மன் நெடுங்குன்றத்துக்,
கருங்காற் குறிஞ்சி மதன் இல் வான் பூ,
ஓவுக் கண்டன்ன இல் வரை இழைத்த
நாறு கொள் பிரசம் ஊறு நாடற்குக்  5
காதல் செய்தலும் காதல் அன்மை
யாதெனிற் கொல்லோ தோழி? வினவுகம்,
பெய்ம் மணல் முற்றம் கடி கொண்டு
மெய்ம் மலி கழங்கின் வேலன் தந்தே.

பாடல் பின்னணி:  தலைவி இற்செறிக்கப்பட்ட பொழுது தோழி அவளிடம் கூறியது.  வரைவு கடாயது.

பொருளுரை:  தோழி!  மணல் பரப்பிய இல்லத்தின் முற்றத்தில் சிறப்புச் செய்து உண்மையைக் கூறுகின்ற கழங்கை இட்டுக் குறிகூறும் வேலனை அன்னை அழைத்து வந்ததால், அச்சம் செய்யும் அகன்ற இடத்தில் உள்ள சுனைகளில் நீர் நிறையுமாறு முகில்கள் மழை பெய்துவிட்ட மிக்க உயரமான குன்றத்தில், கரிய காம்பையுடைய  குறிஞ்சியின் வலிமையில்லாத மெல்லிய வெள்ளை மலர்களில், ஓவியன் தீட்டிய ஓவியம் போல் தோன்றும் வேடவர்களின் இல்லங்களில் இழைக்கப்பட்ட நறுமணம் உடைய தேனடைக்கு வேண்டிய அளவு தேன் இருக்கும் நாடனிடம், நாம் அன்புகாட்டியும் அவன் நம் மேல் அன்பு காட்டாதது எதனால் என நாம் அன்னை அழைத்து வந்த வேலனிடம் வினவி வருவோம்.

குறிப்பு:  புலவரின் பெயர் – ஒளவை துரைசாமி உரையில் இப்புலவரின் பெயர் வெறிபாடிய காமக் காணியார் என உள்ளது.  நற்றிணைக்கு முதல் உரை எழுதிய பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரையில் வெறி பாடிய காமக்கண்ணியார் என உள்ளது.  சூருடை நனந்தலைச் சுனை – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – அச்சம் செய்தலையுடைய இடம் அகன்ற சுனை, ஒளவை துரைசாமி உரை – அச்சம்பொருந்திய இடத்தின்கண் உள்ள சுனைகள்.  நற்றிணை 7ம் பாடலில் உரைகள் – ஒளவை துரைசாமி உரை – தெய்வம் உறையும் அகன்ற இடத்தின்கண் உள்ள சுனைகள், சூர் தெய்வம், அச்சமுமாம், பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – அச்சத்தை உடைய இடம் அகன்ற சுனை.  உள்ளுறை – கு. வெ. பாலசுப்பிரமணியன் உரை – கரிய காம்பினையுடைய வன்மையில்லாத பூ வீட்டில் இழைத்த தேனடைக்கு மிகுந்த தேனைக் கொடுக்கும் என்றது, குறவர் மகளாகிய தலைவி தலைவனிடம் மிகுந்த அன்பைக் காட்டினள் என்பது உணர்த்தி அவ்வன்பை அவன் உணரான் என்று மேலும் பொருள் தந்து நின்றது.  கடி கொண்டு (8) – ஒளவை துரைசாமி உரை – விளக்கம் உறுவித்து, பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – சிறப்புச் செய்து.  வேலன் – நச்சினார்க்கினியர் உரை திருமுருகாற்றுப்படை 222 – பிள்ளையார் வேலைத் (பிள்ளையான முருகனின் வேலை) தனக்கு அடையாளமாகக் கொண்டு திரிதலின் வேலன் என்றார்.  நனந்தலை – அகன்ற இடம், நனம் – நனவே களனும் அகலமும் செய்யும் (தொல்காப்பியம், உரியியல்  80).  கடி – கடி என் கிளவி வரைவே கூர்மை காப்பே புதுமை விரைவே விளக்கம் மிகுதி சிறப்பே அச்சம் முன்தேற்று ஆயீர் ஐந்தும் மெய்ப்படத் தோன்றும் பொருட்டு ஆகும்மே (தொல்காப்பியம், உரியியல் 87).

சொற்பொருள்:  சூருடை நனந்தலைச் சுனை நீர் மல்க மால் பெயல் தலைஇய மன் நெடுங்குன்றத்துக் கருங்காற் குறிஞ்சி மதன் இல் வான் பூ ஓவுக் கண்டன்ன இல் வரை இழைத்த நாறு கொள் பிரசம் ஊறு நாடற்கு – அச்சம் செய்யும் அகன்ற இடத்தில் உள்ள சுனைகளில் நீர் நிறையுமாறு முகில்கள் மழை பெய்துவிட்ட மிக்க உயரமான குன்றத்தில் கரிய காம்பையுடைய  குறிஞ்சியின் வலிமையில்லாத மெல்லிய வெள்ளை மலர்களில் ஓவியன் தீட்டிய ஓவியம் போல் தோன்றும் வேடவர்களின் இல்லங்களில் இழைக்கப்பட்ட நறுமணம் உடைய தேனடைக்கு வேண்டிய அளவு தேன் இருக்கும் நாடனுக்கு (தலைஇய – அளபெடை, குறிஞ்சி – Strobilanthes Kunthiana), காதல் செய்தலும் காதல் அன்மை யாது எனின் கொல்லோ – நாம் அன்புகாட்டியும் அவன் அன்பு காட்டாதது எதனால் என (கொல்லோ – கொல் ஐயப்பொருட்டு, ஓ அசைநிலை), தோழி – தோழி, வினவுகம் – நாம் வினவுவோம், பெய்ம் மணல் முற்றம் கடி கொண்டு மெய்ம் மலி கழங்கின் வேலன் தந்தே – மணல் பரப்பிய முற்றத்தில் சிறப்புச் செய்து உண்மையைக் கூறுகின்ற கழங்கை இட்டுக் குறிகூறும் வேலனை அன்னை அழைத்து (கழங்கு – molucca seeds, Molucca, Caesalpinia crista, தந்தே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 269, எயினந்தை மகன் இளங்கீரனார், பாலைத் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
குரும்பை மணிப் பூண் பெருஞ்செங்கிண்கிணிப்
பால் ஆர் துவர் வாய்ப் பைம் பூண் புதல்வன்
மாலைக் கட்டில் மார்பு ஊர்பு இழிய,
அவ்வெயிறு ஒழுகிய வெவ்வாய் மாண் நகைச்
செயிர் தீர் கொள்கை நம் உயிர் வெங்காதலி  5
திருமுகத்து அலமரும் கண் இனைந்து அல்கலும்,
பெரும வள்ளியின் பிணிக்கும் என்னார்,
சிறு பல் குன்றம் இறப்போர்,
அறிவார் யார் அவர் முன்னியவ்வே?

பாடல் பின்னணி:  பரத்தையிற் பிரிந்து வந்த தலைவனுக்கு வாயில் மறுத்தது.  பொருள்வயின் பிரியக் கருதும் தலைவனைச் செலவு அழுங்கச் செய்ததுமாம்.

பொருளுரை:  பெருமானே!  குரும்பை போன்ற மணிகளை உடைய அணிகலனாகிய பெரிய செம்மையான கிண்கிணியையும் பால் பருகும் சிவந்த வாயையும் பசிய (புதிய) அணிகலன்களையும் உடைய புதல்வன், அவளுடைய மாலை அணிந்த மார்பில் ஊர்ந்து இறங்க, அழகிய பற்களில் வெளிப்பட்ட விருப்பமுற்ற மாட்சிமைப்பட்ட புன்னகையையும் குற்றமற்ற கொள்கையையுமுடைய நம் விருப்பம் மிக்க காதலியின் அழகிய முகத்தில் சுழலும் கண்கள் துன்புற்று, நாள்தோறும் வள்ளிக்கொடியினால் பிணித்துக் கட்டியது போல் நம்மைப் பிணிக்கும் என எண்ணாதவராய், சிறிய பல குன்றங்களைக் கடந்து செல்பவர் எண்ணியதை யார் அறிவார்?

குறிப்பு:  குரும்பை – தெங்கு பனை முதலியவற்றின் இளம் காய்.  கிண்கிணி – கொலுசு.  ஒப்புமை:  குரும்பை மணிப்பூண் – அருந்ததி அனைய கற்பின் குரும்பை மணிப் பூண் புதல்வன் தாயே – ஐங்குறுநூறு 442, சிறுவர் கிண்கிணி அணிதல் – மடவோள் பயந்த மணி மருள் அவ்வாய்க் கிண்கிணிப் புதல்வர் பொலிக – புறநானூறு 198.  குன்றம் (8) – ஒளவை துரைசாமி உரை – குன்றம் என்புழி உம்மை விகாரத்தால் தொக்கது.

சொற்பொருள்:  குரும்பை மணிப் பூண் பெருஞ் செங்கிண்கிணிப் பால் ஆர் துவர் வாய்ப் பைம் பூண் புதல்வன் மாலைக் கட்டில் மார்பு ஊர்பு இழிய – குரும்பை போன்ற மணிகளை உடைய அணிகலனாகிய பெரிய செம்மையான கிண்கிணியையும் பால் பருகும் சிவந்த வாயையும் பசிய (புதிய) அணிகலன்களையும் உடைய புதல்வன் மாலை அணிந்த மார்பில் ஊர்ந்து இறங்க, அ எயிறு ஒழுகிய வெவ்வாய் மாண் நகைச் செயிர் தீர் கொள்கை நம் உயிர் வெங்காதலி திருமுகத்து அலமரும் கண் இனைந்து அல்கலும்  – அழகிய பற்களில் வெளிப்பட்ட விருப்பமுற்ற மாட்சிமைப்பட்ட புன்னகையையும் குற்றமற்ற கொள்கையையுமுடைய நம் விருப்பம் மிக்க காதலியின் அழகிய முகத்தில் சுழலும் கண்கள் துன்புற்று நாள்தோறும், பெரும – பெருமானே, வள்ளியின் பிணிக்கும் என்னார் – வள்ளிக்கொடியினால் பிணித்துக் கட்டியது போல் நம்மைப் பிணிக்கும் என எண்ணாதவராய் (வள்ளியின் – இன் ஒப்புப்பொருளில் வந்தது, ஐந்தாம் வேற்றுமை உருபு), சிறு பல் குன்றம் இறப்போர் அறிவார் யார் அவர் முன்னியவ்வே – சிறிய பல குன்றங்களைக் கடந்துச் செல்பவர் எண்ணியதை யார் அறிவார் (முன்னியவ்வே – விரிக்கும் வழி விரித்தல், முன்னுதல் – கருதுதல்)

நற்றிணை 270, பரணர், நெய்தல் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
தடந்தாள் தாழைக் குடம்பை நோனாத்
தண்டலை கமழும் வண்டுபடு நாற்றத்து
இருள் புரை கூந்தல் பொங்கு துகள் ஆடி,
உருள் பொறி போல எம் முனை வருதல்
அணித்தகை அல்லது பிணித்தல் தேற்றாப்  5
பெருந்தோள் செல்வத்து இவளினும், எல்லா,
எற்பெரிது அளித்தனை நீயே பொற்புடை
விரி உளைப் பொலிந்த பரியுடை நன் மான்
வேந்தர் ஓட்டிய ஏந்து வேல் நன்னன்
கூந்தல் முரற்சியின் கொடிதே  10
மறப்பல் மாதோ நின் விறல் தகைமையே.

பாடல் பின்னணி:  நெய்தலுள் மருதம்.  பரத்தையிற் பிரிந்து வந்த தலைவனிடம் தோழி உரைத்தது.

பொருளுரை:  ஏடா!  பெரிய (வளைந்த) அடிப்பகுதியையுடைய தாழையின் தூறுகளால் வேயப்பட்ட எங்கள் சிறு மனையில், பொறுக்க இயலாத நிலையில் சோலையில் உள்ள மணம் கமழும் வண்டுகள் மொய்க்கும் நறு நாற்றத்தையுடைய இருள் போன்ற கூந்தலில் மிக்க துகள் படும்படி வருந்துவாள்.  நிலத்தில் உருளும் சக்கரம் போல இவள் துன்புறுகின்றாள் எம் முன்.  அழகு இழந்த நிலை அன்றி, நின்னைத் தன்னுடன் பிணித்தலை அறியாத பெரிய தோளை உடைய செல்வ மகளாகிய இவளைவிடவும், என்னிடம் மிகவும் அன்பு உடையை நீ.  அழகுடைய விரிந்த பிடரி மயிர் பொலிந்த விரைந்த ஓட்டத்தையுடைய நல்ல குதிரைகளையுடைய பகை மன்னர்களைத் தோற்கடித்த, ஏந்திய வேலையுடைய நன்னன் என்னும் மன்னன், பகை மன்னர்களின் மனைவியரின் கூந்தலைக் கொய்து கயிறாகத் திரித்ததை விடவும் கொடியது உன் செயல்.  ஆதலால் நான் மறந்து விடுவேன் உன்னுடைய வலிமையான தகைமையை.

குறிப்பு:  தடந்தாள் (1) – ஒளவை துரைசாமி உரை தட என்பது உரிச்சொல், வளைந்த தாள் என்றுமாம்.  தட – தடவும் கயவும் நளியும் பெருமை (தொல்காப்பியம், உரியியல் 25), அவற்றுள், தட என் கிளவி கோட்டமும் செய்யும் (தொல்காப்பியம், உரியியல் 26).  குடம்பை (1) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – குடிசை, ஒளவை துரைசாமி உரை – கூடு.  ஒளவை துரைசாமி உரை – தாழையின்கண் அமைந்த கூடு தாங்கமாட்டாமையால், சோலையிடத்தே சுற்றித் திரியும் வண்டினம் ஊதுதலால் எழும் மணம் பொருந்திய இருள் போல் கரிய கூந்தல், பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – தாழைப் புதலினாலே கட்டப்பட்ட எமது சிறிய வீட்டின்கண் பொறுக்க முடியாதபடி சோலையிலுள்ள மலரை முடித்ததால் வண்டுகள் மொய்க்கின்ற இருள் ஒத்த கூந்தல்.  வரலாறு:  நன்னன்.  பொற்பு – பொற்பே பொலிவு (தொல்காப்பியம், உரியியல் 39).

சொற்பொருள்:  தடந்தாள் தாழைக் குடம்பை நோனாத் தண்டலை கமழும் வண்டுபடு நாற்றத்து இருள் புரை கூந்தல் பொங்கு துகள் ஆடி– பெரிய (வளைந்த) அடிப்பகுதியையுடைய தாழையின் தூறுகளால் வேயப்பட்ட எங்கள் சிறு மனையில் பொறுக்க இயலாத நிலையில் சோலையில் உள்ள மணம் கமழும் வண்டுகள் மொய்க்கும் நறு நாற்றத்தையுடைய இருள் போன்ற கூந்தலில் மிக்க துகள் படிய (புரை – உவம உருபு), உருள் பொறி போல – நிலத்தில் உருளும் சக்கரம் போல, எம் முனை வருதல் – எம் முன் வருதல் (முனை – முன், ஐ சாரியை), அணித்தகை அல்லது – அழகு இழந்த நிலை அன்றி (அல்லது – இல்லாது), பிணித்தல் தேற்றாப் பெருந்தோள் செல்வத்து இவளினும் – நின்னைத் தன்னுடன் பிணித்தலை அறியாத பெரிய தோளை உடைய செல்வ மகளாகிய இவளைவிடவும், எல்லா – ஏடா, எற்பெரிது அளித்தனை நீயே – என்னிடம் மிகவும் அன்பு உடையை நீ, பொற்புடை விரி உளைப் பொலிந்த பரியுடை நன் மான் வேந்தர் ஓட்டிய ஏந்து வேல் நன்னன் கூந்தல் முரற்சியின் கொடிதே – அழகுடைய விரிந்த பிடரி மயிர் பொலிந்த விரைந்த ஓட்டத்தையுடைய நல்ல குதிரைகளையுடைய பகை மன்னர்களைத் தோற்கடித்த ஏந்திய வேலையுடைய நன்னன் என்னும் மன்னன் பகை மன்னர்களின் மனைவியரின் கூந்தலைக் கொய்து கயிறாகத் திரித்ததை விடவும் கொடியது, மறப்பல் மாதோ நின் விறல் தகைமையே – மறந்து விடுவேன் உன்னுடைய வலிமையான தகைமையை (கொடிதே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 271, பாடியவர் பெயர் கிடைக்கவில்லை, பாலைத் திணை – தலைவியின் தாய் சொன்னது
இரும் புனிற்று எருமைப் பெருஞ்செவிக் குழவி
பைந்தாது எருவின் வைகு துயில் மடியும்
செழுந்தண் மனையோடு எம் இவண் ஒழியச்,
செல் பெருங்காளை பொய்ம் மருண்டு சேய் நாட்டுச்
சுவைக் காய் நெல்லிப் போக்கு அரும் பொங்கர்  5
வீழ் கடைத் திரள் காய் ஒருங்குடன் தின்று,
வீ சுனைச் சிறு நீர் குடியினள், கழிந்த
குவளை உண்கண் என் மகள் ஓரன்ன,
செய் போழ் வெட்டிய பொய்தல் ஆயம்
மாலை விரி நிலவில் பெயர்பு புறங்காண்டற்கு, 10
மா இருந்தாழி கவிப்ப
தா இன்று கழிக எற் கொள்ளாக் கூற்றே.

பாடல் பின்னணி:  தலைவனுடன் உடன்போக்கு மேற்கொள்ளுதலும் ஓர் அறநெறியே என்பது உணரினும், அயலார் அலர் கூறுவதால் வருந்திய தலைவியின் தாய் (நற்றாய்) மருட்சியுடன் கூறியது.

பொருளுரைபெரிய பெண் எருமை ஈன்ற கருமையான, பெரிய காதுகளை உடைய இளம் கன்று மலர் தாதின் மேல் விடியற்காலையில் படுத்து உறங்கும் செழுமையும் குளிர்ச்சியும் உள்ள இல்லத்தில் இருக்கும் எங்களை விட்டு விலகி, இளைஞன் ஒருவனின் பொய்யில் மயங்கி, அவனுடன் சென்று விட்டாள், என் மகள்.  தொலைவில் உள்ள நாட்டில் செல்லுவதற்கு அரிய வழியில் உள்ள நெல்லி மரக் கிளைகள் உதிர்த்த சுவையான காய்களைத் தின்று விட்டு, சுனையில் உள்ள சிறிய அளவான நீரைக் குடிக்கின்றாள்.  அவளுடைய மையிட்ட கண்கள் குவளை மலர்களைப் போன்றன.  பனை ஓலையைக் கிழித்து அவளுடன் சிற்றில் விளையாடிய பெண்கள் விளையாடும் இடத்திற்கு நிலவு ஒளியில் தேடிச் சென்றேன்.  என்னை தாழியில் இடுமாறு, சாவை எனக்கு தராத கூற்றுவன், தன் வலிமையை இழந்து அழியட்டும்!

குறிப்பு:  தாழி (11) – ஒளவை துரைசாமி உரை – இதனை ஈமத்தாழி எனவும் முதுமூத்தார் தாழி எனவும் வழங்குப.  தவஞ் செய்து உயர்ந்தோர்க்கும் இத்தாழி கவிக்கப்படுதலின் இதனைத் தவத்தாழி என மலைநாட்டார் வழங்குவர்.  ஈமத்தாழி – புறநானூறு 228–12, 238–1, 256–5, நற்றிணை 271–11, பதிற்றுப்பத்து 44–22.  தாழி பெரிய பானை என்ற பொருளில் வருதல் – அகநானூறு 129–7, 165–11, 275–1.  குழவி – மாற்ற அருஞ் சிறப்பின் மரபு இயல் கிளப்பின் பார்ப்பும் பறழும் குட்டியும் குருளையும் கன்றும் பிள்ளையும் மகவும் மறியும் என்று ஒன்பதும் குழவியொடு இளமைப் பெயரே (தொல்காப்பியம், மரபியல் 1).  இறைச்சி – கு. வெ. பாலசுப்பிரமணியன் உரை – எருமை கன்று தாதிலே துயிலும் என்றது, உடன் கொண்டு சென்ற தலைவன் இனிய தன் மார்பில் துயிலுமாறு உள்ளம் மகிழத் தலைவி இருப்பாள் என்பது உணர்த்திற்று.  தாது எரு – அகநானூறு 165 – தாது எரு மறுகின் மூதூர், குறுந்தொகை 46 – மன்றத்து எருவின் நுண் தாது, நற்றிணை – 271 பைந்தாது எருவின் வைகு, கலித்தொகை 103 – தாது எரு மன்றத்து, கலித்தொகை 108 – தாது உக்கன்ன தாது எரு மன்றத்து, புறநானூறு 33 – தாது எரு மறுகின், புறநானூறு 215 – தாது எரு மறுகின், புறநானூறு 311 – தாது எரு மறுகின், பதிற்றுப்பத்து 13–17 – தாது எரு மறுத்த கலி அழி மன்றத்து மலைபடுகடாம் 531 – தாது எருத் ததைந்த முற்றம்.  புனிறு – புனிறு என் கிளவி ஈன்றணிமைப் பொருட்டே (தொல்காப்பியம், உரியியல் 79).

சொற்பொருள்:  இரும் புனிற்று எருமை – பெரிய பெண் எருமை ஈன்ற, பெருஞ் செவிக் குழவி – கருமையான பெரிய காதுகளை உடைய கன்று, பைந் தாது எருவின் வைகு துயில் மடியும் – புதிய மலர்த் தாதில் விடியற்காலையில் படுத்து உறங்கும், செழுந் தண் மனையோடு – பெரும் குளிர்ச்சியுடைய மாளிகையில், எம் இவண் ஒழிய – எங்களை இங்கே விட்டு விட்டு, செல் – செல்லும், பெருங் காளை – இளைஞன் ஒருவன், பொய்ம் மருண்டு – பொய்யில் மயங்கி, சேய் நாட்டு – தொலைவில் உள்ள நாட்டின், சுவைக் காய் நெல்லி – சுவையான நெல்லிக்காய், போக்கு அரும் – செல்லுவதற்கு அரிய, பொங்கர் – கிளைகள், வீழ் கடைத் திரள் காய் ஒருங்குடன் தின்று – கீழே விழுந்த திரண்ட காயைத் தின்று, வீ சுனைச் சிறு நீர் குடியினள் – சுனையில் உள்ள சிறிது நீரைக் குடித்து, கழிந்த – சென்ற, குவளை – குவளை மலர்கள், உண்கண் – மை இட்ட கண்கள், என் மகள் – என்னுடைய மகள், ஓரன்ன – போன்ற, செய் போழ் வெட்டிய – பனை இலைகளை வெட்டி,  பொய்தல் ஆயம் – சிற்றில் கட்டி விளையாடிய பெண்களோடு, மாலை விரி நிலவில் – மாலை நேரத்தில், நிலவு ஒளியில், பெயர்பு புறங்காண்டற்கு – காணச் சென்றேன், மா இருந் தாழி கவிப்ப – என்னை தாழியில் இட, தா இன்று – வலிமை இன்றி, கழிக – அழியட்டும், எற் கொள்ளாக் கூற்றே – என் உயிரை கொண்டுப் போகாத கூற்றுவன் (கூற்றே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 272, முக்கல் ஆசான் நல்வெள்ளையார், நெய்தல் திணை – தோழி தலைவியிடம் சொன்னது சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி, அல்லது தலைவி தோழியிடம் சொன்னது,
கடல் அம் காக்கைச் செவ்வாய்ச் சேவல்,
படிவ மகளிர் கொடி கொய்து அழித்த
பொம்மல் அடும்பின் வெண்மணல் ஒரு சிறைக்,
கடுஞ்சூல் வதிந்த காமர் பேடைக்கு,
இருஞ்சேற்று அயிரை தேரிய தெண் கழிப்  5
பூவுடைக் குட்டம் துழவும் துறைவன்
நல்காமையின், நசை பழுதாக,
பெருங்கையற்ற என் சிறுமை, பலர் வாய்
அம்பல் மூதூர் அலர்தந்து,
நோய் ஆகின்று; அது நோயினும் பெரிதே.  10

பாடல் பின்னணி:  தலைவன் வரையாது வந்தொழுக ஆற்றாளாகிய தலைவி உரைத்தது.  தோழி தலைவிக்குச் சொல்லுவாளாய்த் தலைவன் கேட்பச் சொல்லியதுமாம். தோழியின் கூற்று  எனின் இந்நூற்பா பொருந்தும் – தன் உறு வேட்கை கிழவன் முன் கிளத்தல் எண்ணும் காலை கிழத்திக்கு இல்லை (தொல்காப்பியம், களவியல் 28).

பொருளுரை:  கடற்காக்கையின் சிவந்த வாயையுடைய ஆண் பறவை, நோன்பு கொண்ட மகளிர் கொய்து அழித்த மிக்க தழைத்த அடும்புக்கொடியுடைய வெள்ளை மணலில் ஒரு புறம் முற்றிய கருவுடன் (முட்டைகளுடன்) தங்கிய தன்னால் விரும்பப்பட்ட தன் பெண் பறவைக்குக் கரிய சேற்றில் அயிரை மீன்களைத் தேர்ந்தெடுக்க வேண்டித் தெளிந்த உப்பங்கழியில் மலர்கள் உதிர்ந்து இருக்கும் ஆழமான இடத்தில் துழாவும் கடற்கரையின் தலைவன், அருள் செய்யாததால் விருப்பம் பாழ்பட்டுப் பெரிதாகச் செயலற்ற என் காதல் துன்பம், பலர் கூறும் பழிமொழியாக இந்தப் பழைய ஊரில் வெளிப்பட்டு, எனக்குத் துன்பம் தருவதாக உள்ளது.  முன்பு நான் கொண்ட வருத்தத்தைவிடவும் இது பெரியதாக உள்ளது.

குறிப்பு:  உள்ளுறை – கு. வெ. பாலசுப்பிரமணியன் உரை – நீர்க்காக்கையின் ஆண் பறவை சூலொடு தங்கிய பெண் பறவைக்கு அயிரை மீனைத் தேடும் என்றது, தன்னைத் தலைவன் மணம் புரிந்து வேற்று நாட்டிலிருந்து பொருள் ஈட்டி வந்து மனையறம் சிறக்குமாறு ஒழுகுவான் என்பதை உள்ளுறுத்திற்று.  தேரிய (5) – ஒளவை துரைசாமி உரை – செய்யிய என்னும் வினையெச்சம்,  பொ. வே. சோமசுந்தரனார் உரை – செய்யிய என்னும் வாய்ப்பாட்டெச்சம்.  அலர்தந்து (9) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – ஒருசொல், அலர்ந்து என்றவாறு.  சேவல் – சேவல் பெயர்க்கொடை சிறகொடு சிவணும் மா இருந் தூவி மயில் அலங்கடையே (தொல்காப்பியம், மரபியல் 49).

சொற்பொருள்:  கடல் அம் காக்கைச் செவ்வாய்ச் சேவல் படிவ மகளிர் கொடி கொய்து அழித்த பொம்மல் அடும்பின் வெண்மணல் ஒரு சிறைக் கடுஞ்சூல் வதிந்த காமர் பேடைக்கு இருஞ்சேற்று அயிரை தேரிய தெண் கழிப் பூவுடைக் குட்டம் துழவும் துறைவன் – கடற்காக்கையின் சிவந்த வாயையுடைய ஆண் பறவை நோன்பு கொண்ட மகளிர் கொய்து அழித்த மிக்க தழைத்த அடும்புக்கொடியுடைய வெள்ளை மணலில் ஒரு புறம் முற்றிய கருவுடன் (முட்டைகளுடன்) தங்கிய தன்னால் விரும்பப்பட்ட தன் பெண் பறவைக்குக் கரிய சேற்றில் அயிரை மீன்களைத் தேர்ந்தெடுக்க வேண்டித் தெளிந்த உப்பங்கழியில் மலர்கள் உதிர்ந்து இருக்கும் ஆழமான இடத்தில் துழாவும் கடற்கரையின் தலைவன் (கடல் அம் காக்கை – அம் சாரியை, கடலில் வாழும் அழகிய காக்கை என்றுமாம், அடும்பு – Ipomoea pes caprae), நல்காமையின் நசை பழுதாக பெருங்கையற்ற என் சிறுமை பலர் வாய் அம்பல் மூதூர் அலர் தந்து நோய் ஆகின்று – அருள் செய்யாததால் விருப்பம் பாழ்பட்டுப் பெரிதாகச் செயலற்ற என் காதல் துன்பம் பலர் கூறும் பழிமொழியாக இந்தப் பழைய ஊரில் வெளிப்பட்டு எனக்குத் துன்பம் தருவதாக உள்ளது, அது நோயினும் பெரிதே – முன்பு நான் கொண்ட வருத்தத்தைவிடவும் இது பெரியதாக உள்ளது (பெரிதே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 273, மதுரை இளம்பாலாசிரியன் சேந்தன் கூத்தனார், குறிஞ்சித் திணை – தோழி தலைவியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
இஃது எவன் கொல்லோ தோழி, மெய் பரந்து
எவ்வம் கூர்ந்த ஏமுறு துயரம்
வெம்மையின் தான் வருத்துறீஇ, நம் வயின்
அறியாது அயர்ந்த அன்னைக்கு, ‘வெறி’ என
வேலன் உரைக்கும் என்ப ஆகலின்,  5
வண்ணம் மிகுந்த அண்ணல் யானை
நீர் கொள் நெடுஞ்சுனை அமைந்து, வார்ந்து உறைந்து, என்
கண் போல் நீலம் தண் கமழ் சிறக்கும்
குன்ற நாடனை உள்ளுதொறும்,
நெஞ்சு நடுக்குறூஉம், அவன் பண்புதரு படரே?  10

பாடல் பின்னணி:  தலைவன் வரவு உணர்ந்த தோழி, வெறியாட்டம் நிகழும் என்பதை அவனுக்குத் தெரியப்படுத்த தலைவியிடம் கூறுபவளாய் உரைத்தது.

பொருளுரை:  தோழி!   உன் உடல் எங்கும் பரவி வருத்தம் மிகுந்த மயங்கிய துன்பத்தை நோக்கி, நம்பால் உள்ள விருப்பத்தால் தானும் வருந்தி, வெறியாட்டத்தை நிகழ்த்திய அன்னைக்கு. “இது முருகனால் ஏற்பட்டது” என வேலன் உரைப்பான் எனக் கூறுகின்றனர்.  ஆதலால், நிறம் மிகுந்த பெரிய யானை நீரைக் கொள்ளும் நீண்ட சுனையில் இருந்து நீண்டு என் கண்கள் போல் இருக்கும் நீலமலர்கள் குளிர்ச்சியாக மணம் கமழும் மலை நாடனை நினைக்கும் பொழுதெல்லாம், என் நெஞ்சு நடுங்கும்.  அவன் இயல்பாகத் தந்த துன்பம் இது.  இனி என்னவாகுமோ?

குறிப்பு:  உள்ளுறை – ஒளவை துரைசாமி உரை – யானை நீர்கொள்ளும் சுனையிடத்து நீலம் தண்கமழ் சிறக்கும் என்றது, தலைமகன் தலைமகளை வரைந்து கோடற்கமைந்த எம் குடியில் உள்ளார் மகிழ்சிறப்பர் என உள்ளுறைத்தவாறு, பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – யானை தலைவனாகவும் சுனை நமது குடியாகவும் நீர் தலைவியாகவும் அவ் யானை உண்ணுதல் தலைவன் தலைவியை மணந்து நலன் நுகர்தலாகவும் நீலம் மலர்தல் இருமுதுகுரவரும் மகிழ்வதாகவுங் கொள்க.  வேலன் – நச்சினார்க்கினியர் உரை திருமுருகாற்றுப்படை 222 – பிள்ளையார் வேலைத் (பிள்ளையான முருகனின் வேலை) தனக்கு அடையாளமாகக் கொண்டு திரிதலின் வேலன் என்றார்.  வார்தல் போகல் ஒழுகல் மூன்றும் நேர்பும் நெடுமையும் செய்யும் பொருள (தொல்காப்பியம், உரியியல் 21).

சொற்பொருள்:  இஃது எவன் கொல்லோ – இது என்னவாகுமோ (கொல்லோ – கொல், ஓ – அசைநிலைகள்),  தோழி – தோழி, மெய் பரந்து எவ்வம் கூர்ந்த ஏமுறு துயரம் வெம்மையின் தான் வருத்துறீஇ நம் வயின் அறியாது அயர்ந்த அன்னைக்கு ‘வெறி’ என வேலன் உரைக்கும் என்ப ஆகலின் – உன் உடல் எங்கும் பரவி துன்பம் மிகுந்த மயங்கிய துன்பத்தை நோக்கி நம்பால் உள்ள விருப்பத்தால் தானும் வருந்தி வெறியாட்டத்தை நிகழ்த்திய அன்னைக்கு இது முருகனால் ஏற்பட்டது என வேலன் உரைப்பான் எனக் கூறுகின்றனர் ஆதலால் (வருத்துறீஇ – செய்யுளிசை அளபெடை), வண்ணம் மிகுந்த அண்ணல் யானை நீர் கொள் நெடுஞ்சுனை அமைந்து வார்ந்து உறைந்து என் கண் போல் நீலம் தண் கமழ் சிறக்கும் குன்ற நாடனை உள்ளுதொறும் நெஞ்சு நடுக்குறூஉம் – நிறம் மிகுந்த பெரிய யானை நீரைக் கொள்ளும் நீண்ட சுனையில் இருந்து நீண்டு என் கண்கள் போல் இருக்கும் நீலமலர்கள் குளிர்ச்சியாக மணம் கமழும் மலை நாடனை நினைக்கும் பொழுதெல்லாம்  என் நெஞ்சு நடுங்கும் (நடுக்குறூஉம் – செய்யுளிசை அளபெடை), அவன் பண்புதரு படரே – அவன் இயல்பாகத் தந்த துன்பம் (படரே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 274, காவன்முல்லைப் பூதனார், பாலைத் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
நெடுவான் மின்னி குறுந்துளி தலைஇப்,
படுமழை பொழிந்த பகுவாய்க் குன்றத்து
உழைமான் பிணை தீண்டலின், இழை மகள்
பொன் செய் காசின் ஒண் பழம் தாஅம்
குமிழ் தலைமயங்கிய குறும் பல் அத்தம்,  5
‘எம்மொடு வருதியோ பொம்மல் ஓதி?’ எனக்
கூறின்றும் உடையரோ மற்றே, வேறுபட்டு
இரும்புலி வழங்கும் சோலை
பெருங்கல் வைப்பின் சுரன் இறந்தோரே.

பாடல் பின்னணி:  தலைவன் பொருள்வயின் பிரிய, தலைவி வருந்தினாள்.  காட்டு வழியில் உடன் செல்ல உன்னை அழைத்தார் அவர் எனக்கூறித் தோழி அவளை ஆற்றுப்படுத்துகின்றாள்.

பொருளுரை:  நெடிய முகில்கள் மின்னிச் சிறிய துளிகளைப் பெய்யத்தொடங்கி மிக்க மழை பெய்த பிளவுகளை உடைய மலையில், உழையாகிய பெண் மான் உரசுவதால், அணிகலன்கள் அணிந்த பெண்ணின் பொற்காசுகள் போன்ற நிறமுடைய ஒளிரும் பழங்கள் கீழே பரவிய குமிழ மரங்கள் நிறைந்த சிறிய பல வழிகளில் எம்முடன் வருகின்றாயா அடர்ந்த கூந்தலையுடையாய்? எனக் கூறிய சொல்லை உடையவர், பெரிய புலிகள் தம்முள் மாறுபட்டு உலவும் சோலைகளையுடைய பெரிய மலையில் உள்ள சுரத்தின்கண் சென்ற நம் தலைவர்.  நீ அங்கு வேனில் துன்புறுத்தும் என்று எண்ணி வருந்த வேண்டாம்.

குறிப்பு:  ஒளவை துரைசாமி உரை:  பொம்மல் – பெருத்தல்.  பொங்குதல் வீங்குதல் முதலிய மிகுதிப் பொருட்டாய் உரிச்சொல்.  பொ. வே. சோமசுந்தரனார் உரை – மழை பெய்திருப்பதோடு அந்நெறிகளும் சிறிய தூரங்களையுடைய அன்றிக் கடத்தற்கரிய பெரிய அல்ல என்பாள், குறும்பல் அத்தம் என்றாள்.  நீர் மிக்கு இருப்பதோடு நிழலும் நன்குடையது என்பாள் சோலை வைப்பிற் சுரம் என்றாள்.  இறைச்சி – கு. வெ. பாலசுப்பிரமணியன் உரை – மான் சென்று தீண்ட, உடனே குமிழ மரம் பழத்தை உதிர்க்கும் என்றது, தலைவனும் பொருளீட்டத் தொடங்கும்போதே பொருள் கைவந்து முற்றுப்பெறும்; எனவே தலைவனும் உடன் வருவான் என்று குறித்தது.

சொற்பொருள்:  நெடு வான் மின்னி குறுந்துளி தலைஇப் படுமழை பொழிந்த பகுவாய்க் குன்றத்து – நெடிய முகில்கள் மின்னிச் சிறிய துளிகளைப் பெய்யத்தொடங்கி மிக்க மழை பெய்த பிளவுகளை உடைய மலையில் (தலைஇ – அளபெடை), உழைமான் பிணை தீண்டலின் – உழையாகிய பெண் மான் உரசுவதால் (உழைமான் – இரு பெயரொட்டு), இழை மகள் பொன் செய் காசின் ஒண் பழம் தாஅம் குமிழ் தலைமயங்கிய குறும் பல் அத்தம் – அணிகலன்கள் அணிந்த பெண்ணின் பொற்காசுகள் போன்ற நிறமுடைய ஒளிரும் பழங்கள் கீழே பரவிய குமிழ மரங்கள் நிறைந்த சிறிய பல வழிகள் (காசின் – இன் ஒப்புப்பொருளில் வந்தது, ஐந்தாம் வேற்றுமை உருபு, தாஅம் – செய்யுளிசை அளபெடை, குமிழ மரம் – Gmelina arborea), ‘எம்மொடு வருதியோ பொம்மல் ஓதி’ எனக் கூறின்றும் உடையரோ – எம்முடன் வருகின்றாயா அடர்ந்த கூந்தலையுடையாய் எனக் கூறிய சொல்லை உடையவர் (பொம்மல் ஓதி – அன்மொழித்தொகை விளியேற்று நின்றது, உடையரோ – ஓகாரம் அசைநிலை), மற்றே – மற்று, ஏ அசைநிலைகள், வேறுபட்டு இரும்புலி வழங்கும் சோலை பெருங்கல் வைப்பின் சுரன் இறந்தோரே – பெரிய புலிகள் தம்முள் மாறுபட்டு உலவும் சோலைகளையுடைய பெரிய மலையில் உள்ள சுரத்தின்கண் சென்ற நம் தலைவர் (இறந்தோரே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 275, அம்மூவனார், நெய்தல் திணை – தலைவி சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
செந்நெல் அரிநர் கூர் வாள் புண்ணுறக்
காணார் முதலொடு போந்தென, பூவே
படையொடும் கதிரொடும் மயங்கிய படுக்கைத்
தன்னுறு விழுமம் அறியா, மென்மெல,
தெறு கதிர் இன் துயில் பசுவாய் திறக்கும்  5
பேதை நெய்தற் பெருநீர்ச் சேர்ப்பற்கு,
யான் நினைந்து இரங்கேனாக நோய் இகந்து
அறனிலாளன் புகழ, எற்
பெறினும் வல்லேன் மன் தோழி, யானே.

பாடல் பின்னணி:  தலைவன் அருகில் இருப்பதை அறிந்த தோழி ‘வருந்தாதே, அவன் வருவான்’ என்று கூறியபோது, தலைவி உரைத்தது.

பொருளுரை:  சிவந்த நெற்கதிர்களை அறுக்கும் உழவர்களின் கூரிய வாளால் புண்பட்டு, அதை அவர்கள் அறியாதவர்களாகத் தண்டுகளுடன் நீக்கியதால், அறிவாளுடனும் நெற்கதிர்களுடனும் கலங்கித் தரையில் விழுந்து, தான் அடைந்த துன்பத்தை அறியாமல், வெப்பமுடைய ஞாயிற்றின் கதிர்களால் இனிய துயில் நீங்கி மெல்ல மெல்ல பசிய வாயைத் திறக்கும் பேதைமை உடைய நெய்தல் மலர்களை உடைய பெரிய கடல் நிலத் தலைவன் பொருட்டு, யான் அவனது அருளாமையை நினைத்து வருந்தவில்லை.  அவன் செய்த துன்ப நோயை மறந்து, அறம் இல்லாத அவன் எல்லோரும் புகழும்படி என்னைப் பெற்றாலும் உடன்படவும் செய்வேன்.

குறிப்பு:  ஒப்புமை:  குறுந்தொகை 309 – கைவினை மாக்கள் தம் செய் வினை முடிமார் சுரும்பு உண மலர்ந்த வாசம் கீழ்ப்பட நீடின வரம்பின் வாடிய விடினும் கொடியோர் நிலம் பெயர்ந்து உறைவேம் என்னாது பெயர்த்தும் கடிந்த செறுவில் பூக்கும்.  உள்ளுறை – கு. வெ. பாலசுப்பிரமணியன் உரை – அரிநரால் அரியப்பட்ட நெய்தல் மலர் நெற்கதிருடன் கலந்து வாடியபோது தன் துயர் உணராது கதிரவனைக் காணுங்கால் மலரும் என்றது, அயலார் கூறும் பழிச் சொல்லாலே தலையெடாதபடி வாடிக் கிடந்தபோதும் தலைவி தலைவனைக் கண்ட அளவில் முகம் மலர நின்று அவனுக்கு இசைவாய் இருப்பாள் என்பதை உள்ளுறுத்திற்று.  செந்நெல் (1) – ஒளவை துரைசாமி உரை – வெண்ணெல் என வேறுண்மையின் செந்நெல் என்றார்.  அறனிலாளன் (8) – ஒளவை துரைசாமி உரை – அறன் இன்மையை ஆள்பவன்.  ஈண்டு இது சேர்ப்பனொடு இயைதலின், சுட்டு எனக் கொள்க, பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – தஞ்சமென்று அடைந்த தன்னைக் கைவிட்டமையின் அறனிலாளன் என்றாள்.  விழுமம் – விழுமம் சீர்மையும் சிறப்பும் இடும்பையும் (தொல்காப்பியம், உரியியல்  57).

சொற்பொருள்:  செந்நெல் அரிநர் கூர் வாள் புண்ணுறக் காணார் முதலொடு போந்தென பூவே படையொடும் கதிரொடும் மயங்கிய படுக்கைத் தன்னுறு விழுமம் அறியா மென்மெல தெறு கதிர் இன் துயில் பசுவாய் திறக்கும் பேதை நெய்தற் பெருநீர்ச் சேர்ப்பற்கு – சிவந்த நெற்கதிர்களை அறுக்கும் உழவர்களின் கூரிய வாளால் புண்பட்டு அதை அவர்கள் அறியாதவர்களாகத் தண்டுகளுடன் நீக்கியதால் மலர்கள் அறிவாளுடனும் நெற்கதிர்களுடனும் கலங்கித் தரையில் விழுந்து தான் அடைந்த துன்பத்தை அறியாமல் மெல்ல மெல்ல வெப்பமுடைய ஞாயிற்றின் கதிர்களால் இனிய துயில் நீங்கிப் பசிய வாயைத் திறக்கும் பேதைமை உடைய நெய்தல் மலர்களை உடைய பெரிய கடல் நிலத் தலைவன் பொருட்டு (படை – கருவியாகிய அரிவாள், போந்தென – செய்தென என்னும் வினையெச்சம்), யான் நினைந்து இரங்கேனாக – யான் அவனது அருளாமையை நினைத்து வருந்தவில்லை, நோய் இகந்து அறனிலாளன் புகழ எற் பெறினும் வல்லேன் மன் – அவன் செய்த துன்ப நோயை மறந்து அறம் இல்லாத அவன் எல்லோரும் புகழும்படி என்னைப் பெற்றாலும் உடன்படவும் செய்வேன் (மன் – அசைநிலை), தோழி – தோழி, யானே – யான், ஏகாரம் அசைநிலை

நற்றிணை 276, தொல் கபிலர், குறிஞ்சித் திணை  – தோழி தலைவனிடம் சொன்னது
‘கோடு துவையா, கோள்வாய் நாயொடு,
காடு தேர்ந்து நசைஇய வயமான் வேட்டு
வயவர் மகளிர்’ என்றி ஆயின்,
குறவர் மகளிரேம், குன்று கெழு கொடிச்சியேம்,
சேணோன் இழைத்த நெடுங்கால் கழுதில்  5
கான மஞ்ஞை கட்சி சேக்கும்
கல் அகத்தது எம் ஊரே; செல்லாது
சேந்தனை சென்மதி நீயே, பெருமலை
வாங்கு அமைப் பழுனிய நறவு உண்டு
வேங்கை முன்றில் குரவையும் கண்டே.  10

பாடல் பின்னணி:  பகற்குறி வந்து பெயரும் தலைவனிடம் உலகியல் உரைத்தது.

பொருளுரை:  கொம்பை ஊதி ஒலித்து, கொள்ளுதல் வல்ல நாய்களுடன், காட்டின்கண் தேர்ந்து விரும்பி வலிமையான மிருகங்களை வேட்டையாடும் வேடவர்களின் பெண்கள் நாங்கள் என எம்மைக் கருதுகின்றீர் ஆயின், நாங்கள் மலையில் வாழும் குறமகளிர்.  தினைப்புனத்தின் காவலன் செய்த உயரமான அடியையுடைய பரணில், காட்டு மயில்கள் தங்கும் இடமாகக் கொள்ளும் மலையிடத்து உள்ளது எங்கள் ஊர்.  இங்கிருந்து அகலாது எங்கள் ஊரில் நீ தங்கி, பெரிய மலையின்கண் உள்ள வளைந்த மூங்கிலால் ஆக்கிய குழாயில் முதிர்ந்த கள்ளைக் குடித்து விட்டு, வேங்கை மரங்களுடைய முற்றத்தில் நாங்கள் ஆடும் குரவைக் கூத்தைப் பார்த்து விட்டு, அதன் பின் உன் ஊருக்குச் செல்வாயாக.

குறிப்பு:  சேணோன் – உ. வே. சாமிநாதையர் உரை, குறுந்தொகை 150ம் பாடலில் – வேங்கை மரத்தின் மீது கட்டப்பட்ட பரணிலும் யானைகளாலும் எட்ட முடியாத குன்றின் மீது கட்டப்பட்ட பரணிலும் இருப்பவன் ஆதலின் இவன் சேணோன் எனப்பட்டான்.  மூங்கிலில் விளைந்த கள்:  அகநானூறு 348 – ஆடு அமைப் பழுநிக் கடுந்திறல் பாப்புக் கடுப்பு அன்ன தோப்பி, அகநானூறு 368 – அம் பணை விளைந்த தேக் கள் தேறல், நற்றிணை 276 – வாங்கு அமைப் பழுனிய நறவு உண்டு, பதிற்றுப்பத்து 81 – தூம்பு அகம் பழுனிய தீம் பிழி, திருமுருகாற்றுப்படை 195 – நீடு அமை விளைந்த தேக் கள் தேறல், மலைபடுகடாம் 171 – வேய்ப் பெயல் விளையுள் தேக்கட் தேறல், மலைபடுகடாம் 522 – திருந்து அமை விளைந்த தேக் கள் தேறல்.  கோள்வாய் நாயொடு (1) – கு. வெ. பாலசுப்பிரமணியன் உரை – கொல்லும் இயல்புடைய வேட்டை நாயுடன், ஒளவை துரைசாமி உரை – கொள்ளுதல் வல்ல வேட்டை நாயுடன், பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – கவ்விக் கொல்லும் நாயுடன்.  ஒப்புமை:  அகநானூறு 318 – நின் கல் கெழு சிறுகுடி எய்திய பின்றை ஊதல் வேண்டுமால் சிறிதே, வேட்டொடு வேய் பயில் அழுவத்துப் பிரிந்த நின் நாய் பயிர் குறி நிலை கொண்ட கோடே.  மதி – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம், சொல்லதிகாரம், இடையியல் 26).  துவையா – துவைத்து (ஒலித்து) என்பது பொருள்.  செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம்.  எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது.  பழுனிய – ஒளவை துரைசாமி உரை – பழுநிய என்றும் எழுதப்படும்.

சொற்பொருள்:  கோடு துவையா – கொம்பை ஒலித்து, கோள் வாய் நாயொடு – கொள்ளுதல் வல்ல நாய்களுடன், வாயினால் கொள்ளும் நாய்களுடன், காடு தேர்ந்து – காட்டின்கண் தேர்ந்து, நசைஇய – விரும்பிய (அளபெடை), வயமான் – வலிமையான மிருகங்கள், வேட்டு வயவர் மகளிர் – வேடவர்களின் பெண்கள், என்றி ஆயின் – என எம்மைக் கருதுகின்றீர் ஆயின், குறவர் மகளிரேம் – நாங்கள் குறமகளிர், குன்று கெழு கொடிச்சியேம் – மலையில் வாழும் பெண்கள் நாங்கள், சேணோன் இழைத்த – தினைப்புனத்தின் காவலன் செய்த, நெடுங்கால் கழுதில் – உயரமான அடியையுடைய பரணில், கான மஞ்ஞை கட்சி சேக்கும் – காட்டு மயில்கள் தங்கும் இடமாகக் கொள்ளும், கல் அகத்தது எம் ஊரே – மலையிடத்து உள்ளது எங்கள் ஊர், செல்லாது – இங்கிருந்து அகலாது, சேந்தனை – எங்கள் ஊரில் தங்கி, சென்மதி – பிறகு உன் ஊருக்குச் செல்வாயாக (மதி – முன்னிலை அசை), நீயே – நீ (ஏகாரம் அசைநிலை), பெருமலை – பெரிய மலை, வாங்கு அமைப் பழுனிய நறவு உண்டு – வளைந்த மூங்கிலால் ஆக்கிய குழாயில் முற்றிய கள்ளைக் குடித்து (நறவு – நறா நற என்றாகி உகரம் ஏற்றது), வேங்கை முன்றில் – வேங்கை மரங்களுடைய முற்றத்தில் (முன்றில் – இல்முன், வேங்கை மரம் – Kino Tree, Pterocarpus marsupium), குரவையும் கண்டே – எங்கள் குரவைக் கூத்தைக் கண்டு (கண்டே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 277, தும்பி சேர் கீரனார், பாலைத் திணை – தலைவி தும்பியிடம் சொன்னது
கொடியை, வாழி தும்பி! இந்நோய்
படுக தில் அம்ம, யான் நினக்கு உரைத்தென,
மெய்யே கருமை அன்றியும், செவ்வன்
அறிவும் கரிதோ அறன் இலோய்? நினக்கே
மனை உறக் காக்கும் மாண் பெருங்கிடக்கை  5
நுண் முள் வேலித் தாதொடு பொதுளிய
தாறுபடு பீரம் ஊதி, வேறுபட
நாற்றம் இன்மையின், பசலை ஊதாய்;
சிறு குறும் பறவைக்கு ஓடி, விரைவுடன்
நெஞ்சு நெகிழ் செய்ததன் பயனோ, அன்பு இலர்  10
வெம்மலை அருஞ்சுரம் இறந்தோர்க்கு
என் நிலை உரையாய் சென்று அவண் வரவே?

பாடல் பின்னணி:  வரையாது பொருள் ஈட்டுவதற்குத் தலைவன் சென்றதனால், ஆற்றாளாகிய தலைவி தும்பியிடம் உரைத்தது.

பொருளுரை:  தும்பியே! நீ கொடியை!  நீடு வாழ்வாயாக!  நான் அடைந்த துன்ப நோயை நீயும் அடைவாயாக! யான் நின்னிடம் உரைத்த நிலைமையை நீ கருதவில்லை.  உன் உடல் தான் கரியது அன்றியும் செவ்விதான அறிவும் நின்னிடம் கரியதாக உள்ளதோ? நீ அறம் இல்லாதோய். எம் மனையைச் சுற்றி காவலாக இருக்கும், மாட்சிமையுடைய பெரிதாக அமைத்த நுண்ணிய முள்ளால் செய்த வேலியில், பூந்தாதுடன் தழைத்த கொத்தாக மலர்ந்த பீர்க்கை மலர்களை ஊதி, வேறுபடத் தனித்த மணம் இல்லாததால் என் மேல் உள்ள பசலையை நீ ஊதாய்.  சிறிய குறுகிய நின் பெடையுடன் பறந்து சென்று அப்பெடையின் நெஞ்சை நெகிழச் செய்ததின் பயனாலோ, அன்பு இல்லாதவராய் வெம்மையான மலையில் உள்ள கடத்தற்கு அரிய சுரத்திற்குச் சென்ற என் தலைவரிடம் சென்று அவர் விரைந்து வருமாறு என் நிலையை நீ கூறவில்லை.

குறிப்பு:  இந்நோய் படுக (1) – ஒளவை துரைசாமி உரை – நான் எய்தி வருந்தும் இந்நோயை நீயும் படுவாயாக, பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – இந்நோயிலே பட்டு இப்பொழுதே இறப்பேனாக.  தில் (2) – கு. வெ. பாலசுப்பிரமணியன் உரை – முன்னிலையசை, ஒளவை துரைசாமி உரை – அசைநிலை, பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – காலத்தின் மேலது.  அம்ம (2) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – கேட்பித்தற்கண் வந்தது, ஒளவை துரைசாமி உரை – அசைநிலை.  உரைத்தென (2) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – கூறியதனாலே, H. வேங்கடராமன் உரை – சொன்னவை யாவும்.  செவ்வன் அறிவு (3) – ஒளவை துரைசாமி உரை – செவ்விதாக இருக்கும் அறிவு, செப்பமுடைய அறிவு.  நற்றிணையின் தூது பாடல்கள் – தலைவியின் தூது, பறவை மூலமும் வண்டு மூலமும் தலைவனுக்கு அனுப்பியன – 54, 70, 102, 277, 376.  தோழி ஆந்தையிடம் கூறியது, தலைவன் கேட்கும்படிநற்றிணை 83பறவை – இச்சொல் சங்கப்பாடல்களில் இன்றைய பயன்பாட்டில் உள்ளவாறும் உள்ளது.  தேனீ, வௌவால், தும்பி ஆகிவற்றைக் குறிக்கவும் பயன்படுத்தப்பட்டுள்ளது.  தேனீ – அகநானூறு 4–11, 132–10, 332–8, 371–13, நற்றிணை 55–5, 161–4, 185–9, ஐங்குறுநூறு 82–3, கலித்தொகை 22–7, பரிபாடல் 7–6, புறநானூறு 70–11, பதிற்றுப்பத்து 66–16, பெரும்பாணாற்றுப்படை 183, 229, வௌவால் – அகநானூறு 244–2, குறுந்தொகை 201–3, 352–2, புறநானூறு 370–11, தும்பி – நற்றிணை 277–9.

சொற்பொருள்:  கொடியை – நீ கொடியை, வாழி – நீடு வாழ்வாயாக, தும்பி – தும்பியே (அண்மை விளி), இந்நோய் படுக – நான் அடைந்த துன்ப நோயை நீயும் அடைவாயாக, தில் – அசைநிலை, அம்ம – அசைநிலை, கேட்பாயாக, யான் நினக்கு உரைத்து என – யான் நின்னிடம் உரைத்த நிலைமையை, மெய்யே கருமை அன்றியும் செவ்வன் அறிவும் கரிதோ – உன் உடல் தான் கரியது அன்றியும் செவ்விதான அறிவும் நின்னிடம் கரியதாக உள்ளதோ, அறன் இலோய் – நீ அறம் இல்லாதோய், நினக்கே மனை உறக் காக்கும் மாண் பெருங்கிடக்கை நுண் முள் வேலித் தாதொடு பொதுளிய தாறுபடு பீரம் ஊதி வேறுபட நாற்றம் இன்மையின் பசலை ஊதாய் – மனையைச் சுற்றி காவலாக இருக்கும் மாட்சிமையுடைய பெரிதாக அமைத்த நுண்ணிய முள்ளால் செய்த வேலியில் பூந்தாதுடன் தழைத்த கொத்தாக மலர்ந்த பீர்க்கை மலர்களை ஊதி வேறுபடத் தனித்த மணம் இல்லாததால் என் மேல் உள்ள பசலையை நீ ஊதாய், சிறு குறும் பறவைக்கு ஓடி விரைவுடன் நெஞ்சு நெகிழ் செய்ததன் பயனோ – சிறிய குறுகிய நின் பெடையுடன் பறந்து சென்று அப்பெடையின் நெஞ்சை நெகிழச் செய்ததின் பயனோ (பயனோ – ஓகாரம் ஐயப்பொருட்டு வந்தது), அன்பு இலர் வெம்மலை அருஞ்சுரம் இறந்தோர்க்கு என் நிலை உரையாய் – அன்பு இல்லாதவராய் வெம்மையான மலையில் உள்ள கடத்தற்கு அரிய சுரத்திற்குச் சென்றவர்க்கு என் நிலையை நீ கூறவில்லை, சென்று அவண் வரவே – அங்கு சென்று அவர் வருமாறு (வரவே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 278, உலோச்சனார், நெய்தல் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
படுகாழ் நாறிய பராஅரைப் புன்னை,
அடு மரல் மொக்குளின் அரும்பு வாய் அவிழப்,
பொன்னின் அன்ன தாதுபடு பல் மலர்
சூடுநர் தொடுத்த மிச்சில், கோடுதொறும்
நெய் கனி பசுங்காய் தூங்கும் துறைவனை  5
இனி அறிந்திசினே, கொண்கன் ஆகுதல்,
கழிச் சேறு ஆடிய கணைக் கால் அத்திரி
குளம்பினும் சேயிறா ஒடுங்கின,
கோதையும் எல்லாம் ஊதை வெண்மணலே.

பாடல் பின்னணி:  பொருள்வயின் பிரிந்த தலைவன் வராததால் வருந்திய தலைவியிடம் தோழி கூறியது.

பொருளுரை:  தானாக விழுந்த விதையினால் முளைத்து வளர்ந்த பருத்த அடியையுடை புன்னை மரத்தை அடுத்து உள்ள மரலின் அரும்புகளைப் போல் உள்ள புன்னை அரும்புகள் மலர்ந்து இதழ் விரிய, பொன்னை ஒத்த பூந்தாது உடைய பல மலர்களை அணிபவர்கள் கொய்து தொடுத்து எஞ்சியவை, கிளைகள்தோறும் நெய் மிக்க பசிய காய்களாகக் காய்த்துத் தொங்கும் துறையின் தலைவன், உப்பங்கழியின் அருகில் உள்ள சேறுபட்ட திரண்ட கால்களையுடைய அவன் தேரில் கட்டிய கோவேறு கழுதையின் குளம்புகளில் எல்லாம் சிவந்த இறாமீன்கள் மிதிபட்டு அழியும்படியும், அவனது மாலையில் காற்றால் வெண்மணல் படியும்படியும் விரைந்து வந்ததால், அவன் உனக்குக் கணவனாக ஆகுதலை இப்பொழுது தான் நான் அறிந்தேன்.

குறிப்பு:  படுகாழ் நாறிய பராஅரைப் புன்னை (1) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – வயிரம் விளங்கிய பருத்த அடியையுடைய புன்னை, ஒளவை துரைசாமி உரை – தானாக வீழ்ந்த விதையிடத்து முளைத்து வளர்ந்த பருமையான அடியையுடைய புன்னை.  உள்ளுறை – கு. வெ. பாலசுப்பிரமணியன் உரை – கொய்தன போக எஞ்சிய புன்னை மலர்கள் நெய்கனிந்து காயாகத் தூங்குமென்றது, இனி ஊரார் அலரால் துன்புற்று நீங்க இனி அன்புமிக்க இல்லறத்தில் மகிழ்க என்பது உணர்த்தவாம்.  கொண்கன் (6) – ஒளவை துரைசாமி உரை – கொண்கன் என்பது பொதுவாக நெய்தல் நிலத் தலைவனைக் குறிக்கும் பெயராயினும் ‘கோடற்குரியவன்’ என்னும் பொருள்பட அமைந்திருத்தல் பற்றிக் கொண்கன் ஆகுதல் என்றார் போலும்.  சின் – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம், சொல்லதிகாரம்.  இடையியல் 26, சின் என்பது இசின் என்பதன் முதற்குறை – ச. பாலசுந்தரம் உரை), அவற்றுள், இகுமும் சின்னும் ஏனை இடத்தொடும் தகு நிலை உடைய என்மனார் புலவர் (தொல்காப்பியம், இடையியல் 27).  காழ் – அகக் காழனவே மரம் என மொழிப (தொல்காப்பியம், மரபியல் 87).

சொற்பொருள்:  படுகாழ் நாறிய பராஅரைப் புன்னை அடு மரல் மொக்குளின் அரும்பு வாய் அவிழப் பொன்னின் அன்ன தாதுபடு பல் மலர் சூடுநர் தொடுத்த மிச்சில் – தானாக விழுந்த விதையினால் முளைத்து வளர்ந்த (வயிரம் பாய்ந்த விளங்கும், காழ் – விதை, திண்மை) பருத்த அடியையுடை புன்னை மரத்தை அடுத்து உள்ள மரலின் அரும்புகளைப் போல் உள்ள புன்னை அரும்புகள் மலர்ந்து இதழ் விரிய பொன்னை ஒத்த பூந்தாது உடைய பல மலர்களை அணிபவர்கள் தொடுத்து எஞ்சியவை (பராஅரை – அளபெடை, பராஅரை – பருத்த அடி, புன்னை மரம் – Laurel Tree, Mast wood Tree, Calophyllum inophyllum, மரல் – Bowstring hemp, பொன்னின் – இன் சாரியை), கோடுதொறும் நெய் கனி பசுங்காய் தூங்கும் துறைவனை – கிளைகள்தோறும் நெய் மிக்க பசிய காய்கள் தொங்கும் துறையின் தலைவனை, இனி அறிந்திசினே கொண்கன் ஆகுதல் – இப்பொழுது அறிந்தேன் உனக்குக் கணவனாக ஆகுதலை (அறிந்திசினே – சின் தன்மை அசைநிலை, ஏகாரம் அசைநிலை), கழிச் சேறு ஆடிய கணைக் கால் அத்திரி குளம்பினும் சேயிறா ஒடுங்கின – உப்பங்கழியின் அருகில் உள்ள சேறுபட்ட திரண்ட கால்களையுடைய கோவேறு கழுதையின் குளம்புகளில் எல்லாம் சிவந்த இறாமீன்கள் மிதிபட்டு அழிந்தன, கோதையும் எல்லாம் ஊதை வெண்மணலே – அவனது மாலையிலும் காற்றால் வெண்மணல் படிந்துள்ளன (வெண்மணலே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 279, கயமனார், பாலைத் திணை – தலைவியின் தாய் சொன்னது
வேம்பின் ஒண் பழம் முணைஇ, இருப்பைத்
தேம் பால் செற்ற தீம் பழம் நசைஇ,
வைகு பனி உழந்த வாவல், சினைதொறும்,
நெய் தோய் திரியின் தண் சிதர் உறைப்ப,
நாட் சுரம் உழந்த வாள் கேழ் ஏற்றையொடு 5
பொருத யானைப் புட் தாள் ஏய்ப்ப,
பசிப் பிடி உதைத்த ஓமைச் செவ்வரை
வெயில் காய் அமையத்து இமைக்கும் அத்தத்து,
அதர் உழந்து அசையின கொல்லோ, ததர்வாய்ச்
சிலம்பு கழீஇய செல்வம்  10
பிறருழைக் கழிந்த என் ஆயிழை அடியே?

பாடல் பின்னணி:  மகட்போக்கிய தாய் சொன்னது.  தோழி செவிலியிடம் உடன்போக்குச் செய்தியைக் கூற, அவள் நற்றாயிடம் கூறுகின்றாள்.  அவள் வருந்தி உரைத்தது.

பொருளுரை:  வேப்ப மரத்தின் ஒளிரும் பழத்தை வெறுத்து இருப்பை மரத்தின் தேன் போலும் பால் (சாறு) வற்றிய  பழத்தை விரும்பி, உறைக்கும் பனியால் வருந்திய வௌவால்கள், மரக் கிளைகள்தோறும் செல்வதால், அவற்றின் மேல் நெய்யில் தோய்த்த திரியைப் போன்று குளிர்ந்த நீர்த்துளிகள் விழும்.  விடியற்காலையில் பாலை நிலத்திற்குச் சென்று திரிந்த ஒளி பொருந்திய நிறத்தையுடைய ஆண் புலியுடன் போரிட்ட யானையின் புண்பட்ட காலடி போல், பசியுடன் இருந்த பெண் யானையின் காலால் உதைக்கப்பட்ட ஓமை மரத்தின் சிவந்த அடி, வெயில் காயும் வேளையில் விளங்கித் தோன்றும் சுரத்தில், வழியில் சென்று வருந்துகின்றனவோ, செறிந்த வாயினையுடைய சிலம்பை நீக்கும் விழாவை நான் காணாது பிறர் கண்டு மகிழும்படி சென்ற என்னுடைய அழகிய அணிகலன்களை அணிந்த மகளின் காலடிகள்?

குறிப்பு:  உழந்த வாள் கேழ் ஏற்றையொடு (5) – ஒளவை துரைசாமி உரை – திரிந்த ஒளிபொருந்திய நிறத்தையுடைய ஆண்புலி, பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – வருந்திய வாள் போலும் நிறமுற்ற வரியுடைய ஆண்புலி.  இறைச்சி (1) – கு. வெ. பாலசுப்பிரமணியன் உரை – வேப்பம்பழத்தை வெறுத்து இருப்பைப் பழம் விரும்பி வாவல் பனியில் வைகுமென்றது, தந்தை செல்வத்தை வெறுத்துத் தன் கொழுநன் செல்வம் விரும்பிச் சென்ற என் மகள் பிறர் இல்லத்தே எங்ஙனம் இருப்பாளோ என்பதாம்.  இறைச்சி (2) – கு. வெ. பாலசுப்பிரமணியன் உரை – பிடியால் தாக்கப்பெற்ற ஓமை ஞாயிற்று ஒளியில் விளங்கித் தோன்றும் என்றது, மகளால் வெறுத்து நீக்கப்பட்ட யான் பொழுது புலர்ந்த பின் பலராலும் தூற்றப்பட்டேன் என்பதாம்.  திருமணத்திற்கு முன் மணமகளின் சிலம்புகளை நீக்கும் விழா பற்றின குறிப்புகள் உள்ள பாடல்கள்– நற்றிணை 279, ஐநூறுநூறு 399, அகநானூறு 315, 369, 385.   உடன்போக்கிற்கு முன் தலைவி சிலம்பைக் கழற்றியது – நற்றிணை 12, அகநானூறு 321.  பிடி – பிடி என் பெண் பெயர் யானை மேற்றே (தொல்காப்பியம், மரபியல் 52).  ஏற்றை – ஆற்றலொடு புணர்ந்த ஆண்பாற்கு எல்லாம் ஏற்றைக் கிளவி உரித்து என மொழிப (தொல்காப்பியம், மரபியல் 50).  முணைஇ – இச்சொல் முனைஇ என்றும் எழுதப்படும்.

சொற்பொருள்:  வேம்பின் ஒண் பழம் முணைஇ இருப்பைத் தேம் பால் செற்ற தீம் பழம் நசைஇ வைகு பனி உழந்த வாவல் சினைதொறும் நெய் தோய் திரியின் தண் சிதர் உறைப்ப – வேப்ப மரத்தின் ஒளியுடைய பழத்தை வெறுத்து இருப்பை மரத்தின் தேன் போலும் பால் (சாறு) வற்றிய  பழத்தை விரும்பி உறைக்கும் பனியால் வருந்திய வௌவால் கிளைகள் தோறும் செல்வதால் அவற்றின் மேல் நெய்யில் தோய்த்த திரியைப் போன்று குளிர்ந்த நீர்த்துளிகள் விழ (முணைஇ – அளபெடை, நசைஇ – அளபெடை, திரியின் – இன் உருபு ஒப்புப் பொருளது, ஐந்தாம் வேற்றுமை உருபு, வேப்ப மரம் – Azadirachta indica, இருப்பை – iruppai tree, South Indian Mahua, Indian Butter Tree), நாட் சுரம் உழந்த வாள் கேழ் ஏற்றையொடு பொருத யானைப் புட் தாள் ஏய்ப்ப பசிப் பிடி உதைத்த ஓமைச் செவ்வரை வெயில் காய் அமையத்து இமைக்கும் அத்தத்து – விடியற்காலையில் பாலை நிலத்திற்குச் சென்று திரிந்த ஒளிரும் நிறத்தையுடைய ஆண் புலியுடன் போரிட்ட யானையின் புண்பட்ட காலடி போல் பசியுடன் இருந்த பெண் யானையின் காலால் உதைக்கப்பட்ட ஓமை மரத்தின் சிவந்த அடி வெயில் காயும் வேளையில் விளங்கித் தோன்றும் சுரத்தில் (ஏய்ப்ப – உவம உருபு, Toothbrush Tree, Dillenia indica), அதர் உழந்து அசையின கொல்லோ – வழியில் சென்று வருந்துகின்றனவோ (கொல்லோ – கொல் ஐயப்பொருட்டு, ஓகாரம் அசைநிலை), ததர்வாய்ச் சிலம்பு கழீஇய செல்வம் பிறர் உழைக் கழிந்த என் ஆயிழை அடியே – செறிந்த வாயினையுடைய சிலம்பை நீக்கும் விழாவை பிறர் கண்டு மகிழும்படி சென்ற என்னுடைய அழகிய அணிகலன்களை அணிந்த மகளின் காலடிகள் (கழீஇய – செய்யுளிசை அளபெடை, ஆயிழை – அன்மொழித்தொகை, அடியே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 280, பரணர், மருதத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
‘கொக்கினுக்கு ஒழிந்த தீம் பழம் கொக்கின்
கூம்பு நிலை அன்ன முகைய ஆம்பல்
தூங்கு நீர்க் குட்டத்து துடுமென வீழும்
தண் துறை ஊரன் தண்டாப் பரத்தமை
புலவாய்’ என்றி தோழி! புலவேன்,  5
பழன யாமைப் பாசடைப் புறத்து
கழனி காவலர் சுரி நந்து உடைக்கும்,
தொன்று முதிர் வேளிர் குன்றூர் அன்ன என்
நல் மனை நனி விருந்து அயரும்
கைதூவு இன்மையின் எய்தாமாறே.  10

பாடல் பின்னணி:  வாயில் வேண்டிச் சென்ற தோழிக்குத் தலைவி மறுத்து மொழிந்தது.  தலைவனை ஏற்றுக்கொண்டு வழிப்பட்டவளைப் புகழ்ந்து புக்க தோழிக்குத் தலைவி சொல்லியதுமாம்.

பொருளுரை:  மாமரத்திலிருந்து விழுந்த இனிய பழம் கொக்கினது குவிந்த நிலையையுடைய அரும்புகளையுடைய ஆம்பல் மிகுந்த அசைகின்ற நீர்நிலையின்கண் துடும் என விழும் குளிர்ச்சியுடைய துறைகளையுடைய ஊரனின் நீங்காத பரத்தமை செய்கையைக் கண்டும், ” ஊடல் கொள்ளாதே நீ” என்கின்றாய் தோழி.  நான் ஊடவில்லை.  வயலில் உள்ள ஆமையின் பசிய முதுகாகிய ஓட்டின் மேல் வைத்து வயலைக் காவல் செய்யும் காவலர்கள் தாம் சுடுகின்ற நத்தையை உடைத்து உண்ணும் பழமை முதிர்ந்த வேளிருடைய குன்றூர் போன்ற என்னுடைய நல்ல மனைக்கு வரும் விருந்தினரை ஓம்புவதில் கையொழிந்தமையால், நான் அவனை எதிர்ப்படவில்லை.  இல்லாவிடின் எனக்கு மிகும் ஊடலில் நான் அவனை இங்கு வரவிட மாட்டேன்.

குறிப்பு:  உள்ளுறை – கு. வெ. பாலசுப்பிரமணியன் உரை – மரத்திலிருந்து வீழும்பழம் பொய்கையை விரைந்து சேரும் என்றது, பரத்தையின் நீங்கிய தலைவன் விரைந்து நின்னைச் சேர்வான் என்பது உணர்த்திற்று.  இறைச்சி – கு. வெ. பாலசுப்பிரமணியன் உரை – உழவர் சிறப்பற்ற நத்தையை ஆமையின் முதுகில் வைத்து உடைத்து உண்பர் என்றது, தலைவன் சிறப்பற்ற பரத்தையை நயந்து ஒழுகுவன் என்பதாம்.  வரலாறு:  வேளிர் குன்றூர்.  கொக்கினுக்கு ஒழிந்த தீம் பழம் (1) – ஒளவை துரைசாமி உரை – மாமரத்தினின்று காம்பற்று வீழ்ந்த இனிய பழம், பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – கொக்கு வந்திருந்தனவால் கிளை அசைதலின் உதிர்ந்த மாங்கனி.  எய்தாமாறே (10) – கு. வெ. பாலசுப்பிரமணியன் உரை – நான் அவனை இங்கு வர விட்டேன், ச. வே. சுப்பிரமணியன் உரை – நான் அங்கு அவனை வரவிட மாட்டேன், பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – அவனை எதிர்ப்படப் பெற்றிலேன்.

சொற்பொருள்:  கொக்கினுக்கு ஒழிந்த தீம் பழம் – மாமரத்திலிருந்து விழுந்த இனிய பழம், கொக்கு அமர்ந்ததால் விழுந்த பழம், கொக்கின் கூம்பு நிலை அன்ன முகைய ஆம்பல் – கொக்கினது குவிந்த நிலையையுடைய அரும்புகளையுடைய ஆம்பல், தூங்கு நீர்க் குட்டத்து துடுமென வீழும் – அசைகின்ற நீர்நிலையின்கண் துடும் என விழும், தண் துறை ஊரன் தண்டாப் பரத்தமை – ஊரனின் நீங்காத பரத்தமை செய்கையைக் கண்டும், புலவாய் என்றி தோழி – ஊடல் கொள்ளாதே என்கின்றாய் தோழி (என்றி – முன்னிலை ஒருமை முற்றுவினைத் திரிசொல்), புலவேன் – நான் ஊடவில்லை, பழன யாமைப் பாசடைப் புறத்து கழனி காவலர் சுரி நந்து உடைக்கும் – வயலில் உள்ள ஆமையின் பசிய முதுகாகிய ஓட்டின் மேல் வைத்து வயலைக் காவல் செய்யும் காவலர்கள் தாம் சுடுகின்ற நத்தையை உடைத்து உண்ணும், தொன்று முதிர் வேளிர் குன்றூர் அன்ன – பழமை முதிர்ந்த வேளிருடைய குன்றூர் போன்ற, என் நல் மனை நனி விருந்து அயரும் கைதூவு இன்மையின் – என்னுடைய நல்ல மனைக்கு வரும் விருந்தினரை ஓம்புவதில் கையொழிந்தமையால், எய்தாமாறே – நான் அவனை எதிர்ப்படவில்லை (எய்தாமாறே – ஏகாரம் அசைநிலை, மாறு – மூன்றாம் வேற்றுமை ஏதுப் பொருள்பட வந்த சொல்லுருபு)

நற்றிணை 281, கழார்க்கீரன் எயிற்றியார், பாலைத் திணை – தோழி தலைவியிடம் சொன்னது அல்லது தலைவி தோழியிடம் சொன்னது
மாசு இல் மரத்த பலி உண் காக்கை
வளி பொரு நெடுஞ்சினை தளியொடு தூங்கி,
வெல் போர்ச் சோழர் கழாஅர்க் கொள்ளும்
நல் வகை மிகு பலிக் கொடையோடு உகுக்கும்
அடங்காச் சொன்றி, அம் பல் யாணர் 5
விடக்குடைப் பெருஞ்சோறு உள்ளுவன இருப்ப,
மழை அமைந்து உற்ற மால் இருள் நடுநாள்,
தாம் நம் உழையராகவும், நாம் நம்
பனிக் கடுமையின் நனி பெரிது அழுங்கி
துஞ்சாம் ஆகலும் அறிவோர்  10
அன்பிலர் தோழி, நம் காதலோரே.

பாடல் பின்னணி:  தலைவன் குறித்த பருவத்தில் வராததால் தலைவி வருந்துகின்றாள்.  அவன் வரும் வரையில் பொறுத்திரு எனக் கூறிய தோழியிடம் தலைவி உரைத்தது.  தோழி தலைவியிடம் சொல்லியதுமாம்.

பொருளுரை:  தோழி!   குற்றமற்ற மரத்தில் உள்ளனவாகி மக்கள் இடும் உணவை உண்ணும் காக்கை, காற்று மோதும் நெடிய மரக்கிளையில் மழைத்துளிகளுடன் அசைந்துகொண்டு, போரில் வெற்றியுடைய சோழர்களின் கழார் என்னும் ஊரில் மக்களிடம் கொள்ளும் நல்ல வகையாக மிகுந்த பலி உணவுடன் கொடுக்கப்படும் அளவில்லாத சோற்றுடன், அழகிய பல புதிய தசையுடன் பெரிய சோற்றை எண்ணியிருக்குமாறு, மழை பெய்த மயக்கத்தையுடைய இருண்ட நடுஇரவில், அவர் நம் அருகில் இருந்தாலும் கூட நாம் நம் குளிரின் கடுமையால் மிகப் பெரிது வருந்தி உறங்காது இருப்பதை அறிந்திருந்தும் வராத நம் தலைவர் அன்பில்லாதவர்.

குறிப்பு:  இறைச்சி – கு. வெ. பாலசுப்பிரமணியன் உரை – பலியுண்ட காக்கை விடக்கு உண்ண காத்திருக்குமாறு, நாமும் அவருடன் கூடி வாழ்தலுக்காகக் காத்துள்ளோம் என்பதை உணர்த்தியது.  வரலாறு:  சோழர், கழாஅர்.  காக்கைக்கு உணவு அளித்தல் – நற்றிணை 258, 281, 293, 343, 367, குறுந்தொகை 210, ஐங்குறுநூறு 391.  யாணர் – புதிதுபடற் பொருட்டே யாணர்க் கிளவி (தொல்காப்பியம், உரியியல் 83).  நனி – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3).  அடங்காச் சொன்றி (5) – ஒளவை துரைசாமி உரை – பலி வகையில் அடங்காத சோறு, பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – சொல்லில் அடங்காத சோறு.  நம் காதலோர் – தலைவியும் தோழியும் மிக நெருங்கிய நட்பு உடையவர்கள் என்பதாலும், தலைவியின் களவு ஒழுக்கத்திற்குத் தோழி உதவுவதாலும், தலைவனைத் தோழி நன்கு அறிந்தவள் என்பதாலும், இவ்வாறு பன்மையாற் கூறினாள்.

சொற்பொருள்:  மாசு இல் மரத்த பலி உண் காக்கை வளி பொரு நெடுஞ்சினை தளியொடு தூங்கி வெல் போர்ச் சோழர் கழாஅர்க் கொள்ளும் நல் வகை மிகு பலிக் கொடையோடு உகுக்கும் அடங்காச் சொன்றி – குற்றமற்ற மரத்தில் உள்ளனவாகி மக்கள் இடும் உணவை உண்ணும் காக்கை காற்று மோதும் நெடிய மரக்கிளையில் மழைத்துளிகளுடன் அசைந்துகொண்டு, போரில் வெற்றியுடைய சோழர்களின் கழார் என்னும் ஊரில் கொள்ளும் நல்ல வகையாக மிகுந்த பலி உணவுடன் கொடுக்கப்படும் அளவில்லாத சோறு (கழாஅர் – செய்யுளிசை அளபெடை), அம் பல் யாணர் விடக்குடைப் பெருஞ்சோறு உள்ளுவன இருப்ப – அழகிய பல புதிய தசையுடன் பெரிய சோற்றை எண்ணியிருக்குமாறு (விடக்கு – ஊன், தசை), மழை அமைந்து உற்ற மால் இருள் நடுநாள் – மழை பெய்த மயக்கத்தையுடைய இருண்ட நடுஇரவில், தாம் நம் உழையராகவும் நாம் நம் பனிக் கடுமையின் நனி பெரிது அழுங்கி துஞ்சாம் ஆகலும் அறிவோர் அன்பிலர் – அவர் நம் அருகில் இருந்தாலும் நாம் நம் குளிரின் கடுமையால் மிகப் பெரிது வருந்தி உறங்காது இருப்பதை அறியும் அவர் அன்பில்லாதவர், தோழி – தோழி, நம் காதலோரே – நம் தலைவர் (காதலோரே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 282, நல்லூர்ச் சிறு மேதாவியார், குறிஞ்சித் திணை – தோழி தலைவியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
தோடு அமை செறிப்பின் இலங்கு வளை ஞெகிழக்,
கோடு ஏந்து அல்குல் அவ்வரி வாட,
நன்னுதல் சாய படர் மலி அரு நோய்
காதலன் தந்தமை அறியாது உணர்த்த,
அணங்குறு கழங்கின் முதுவாய் வேலன்  5
கிளவியின் தணியின், நன்று மன், சாரல்
அகில் சுடு கானவன் உவல் சுடு கமழ் புகை,
ஆடு மழை மங்குலின் மறைக்கும்
நாடு கெழு வெற்பனொடு அமைந்த நம் தொடர்பே.

பாடல் பின்னணி:  இற்செறித்தமை அறிவுறுத்தி வரைவு கடாயது.

பொருளுரை:  தொகுதியாக அமைந்த செறிந்த ஒளியுடைய வளையல்கள் நெகிழவும், பக்கம் உயர்ந்த அல்குலில் உள்ள அழகிய வரிகள் வாடவும், நல்ல நெற்றியின் அழகு கெடவும் செய்த, துன்பம் மிகுந்த நீங்குவதற்கு அரிய காதல் நோயைக் காதலன் தந்ததை அறியாது அன்னை நோயை வேலனுக்கு எடுத்துரைக்க, முருகனை வழிபட்டுக் கழற்சிக்காயால் குறிசொல்லும் வேலன் கூறும் சொற்களால் இந்நோய் தணிந்தால் மிகவும் நல்லது.  ஆனால் வெறியாட்டம் நிகழாது நாம் இல்லத்தில் செறிக்கப்பட்டதால், மலைப்பக்கத்தில் அகில் கட்டைகளை எரிக்கும் கானவன் சருகுகளைக் கொளுத்துவதால் எழும் நறுமணப் புகை அசைகின்ற மழைமுகில் போல் மறைக்கும் நாட்டின் தலைவனுடன் பொருந்திய நம் உறவு கழிந்தது போலும்.

குறிப்பு:  அவ்வரி வாட (2) – H. வேங்கடராமன் உரை – அழகிய வரிகள் வாட, ஒளவை துரைசாமி உரை – அழகிய வரிகள் சுருங்க.  உள்ளுறை – ஒளவை துரைசாமி உரை – சுட எழுந்த புகை மழை முகில் போல வானத்திற் படர்ந்து மறைக்கும் என்றது, வேலன் உரைக்கும் கிளவி இவள் உற்ற நோய் தீரு மருந்து போல் பரவி, அது தலைமகனால் உளதாயிற்று என்பதை மறைக்கும் என்றவாறு.  வேலன் – நச்சினார்க்கினியர் உரை திருமுருகாற்றுப்படை 222 – பிள்ளையார் வேலைத் (பிள்ளையான முருகனின் வேலை) தனக்கு அடையாளமாகக் கொண்டு திரிதலின் வேலன் என்றார்.  அணங்குறு – (5) – ஒளவை துரைசாமி உரை – தெய்வத் தன்மையுடைய, பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – முருகவேளின் முன்பு இடப்பட்ட.  நம் தொடர்பே – தலைவியும் தோழியும் மிக நெருங்கிய நட்பு உடையவர்கள் என்பதாலும், தலைவியின் களவு ஒழுக்கத்திற்குத் தோழி உதவுவதாலும், தலைவனைத் தோழி நன்கு அறிந்தவள் என்பதாலும், இவ்வாறு பன்மையாற் கூறினாள்.

சொற்பொருள்:  தோடு அமை செறிப்பின் இலங்கு வளை ஞெகிழக் கோடு ஏந்து அல்குல் அவ்வரி வாட நன்னுதல் சாய படர் மலி அரு நோய் காதலன் தந்தமை அறியாது உணர்த்த – தொகுதியாக அமைந்த செறிந்த ஒளியுடைய வளையல்கள் நெகிழவும் பக்கம் உயர்ந்த அல்குலில் உள்ள அழகிய வரிகள் வாடவும் நல்ல நெற்றியின் அழகு கெடவும் துன்பம் மிகுந்த நீங்குவதற்கு அரிய காதல் நோயைக் காதலன் தந்ததை அறியாது அன்னை நோயை வேலனுக்கு எடுத்துரைக்க (அல்குல் – இடுப்பு, இடுப்பிற்குக் கீழ் உள்ள பகுதி), அணங்குறு கழங்கின் முதுவாய் வேலன் கிளவியின் தணியின் நன்று மன் – முருகனை வழிபட்டுக் கழற்சிக்காயால் குறிசொல்லும் வேலன் கூறும் சொற்களால் தணிந்தால் மிகவும் நல்லது (கழங்கு – Molucca, Caesalpinia crista, மன் மிகுதியை உணர்த்தியது), சாரல் அகில் சுடு கானவன் உவல் சுடு கமழ் புகை ஆடு மழை மங்குலின் மறைக்கும் நாடு கெழு வெற்பனொடு அமைந்த நம் தொடர்பே – மலைப்பக்கத்தில் அகில் கட்டைகளை எரிக்கும் கானவன் சருகுகளைக் கொளுத்துவதால் எழும் நறுமணப் புகை அசைகின்ற மழைமுகில் போல் மறைக்கும் நாட்டின் தலைவனுடன் பொருந்திய நம் உறவு (மங்குலின் – இன் ஒப்புப் பொருளது, ஐந்தாம் வேற்றுமை உருபு, தொடர்பே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 283, மதுரை மருதன் இளநாகனார், நெய்தல் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
ஒண்ணுதல் மகளிர் ஓங்கு கழிக் குற்ற
கண் நேர் ஒப்பின கமழ் நறு நெய்தல்
அகல் வரிச் சிறு மனை அணியும் துறைவ!
வல்லோர் ஆய்ந்த தொல் கவின் தொலைய
இன்னை ஆகுதல் தகுமோ, ஓங்கு திரை  5
முந்நீர் மீமிசைப் பலர் தொழத் தோன்றி,
ஏமுற விளங்கிய சுடரினும்
வாய்மை சான்ற நின் சொல் நயந்தோர்க்கே?

பாடல் பின்னணி:  பகற்குறி வந்த தலைவனைத் தோழி வரைவு கடாயது.

பொருளுரை:  ஒளியுடைய நெற்றியையுடைய பெண்கள், உயர்ந்த கரையையுடைய உப்பங்கழியில் கொய்த கண்களை ஒத்த மணங்கமழும் நெய்தல் மலர்களால், அகன்ற கோலம் செய்த சிறு மனையை ஒப்பனைச் செய்யும் துறையை உடைய தலைவனே!  அறிவுடையவர்கள் ஆராய்ந்து கண்ட எம் பண்டைய அழகு கெடும்படி நீ இத்தன்மை உடையையாய் இருப்பது தகுமோ, உயர்ந்த அலைகளையுடைய கடலின் மீது பலர் தொழும்படித் தோன்றி யாவரும் மகிழும்படி விளங்கிய கதிரவனைக் காட்டிலும் வாய்மை உடைய நின் சொற்களை விரும்பியவர்களிடம்?

குறிப்பு:  உள்ளுறை – கு. வெ. பாலசுப்பிரமணியன் உரை – மகளிர் கொய்த நெய்தல், வீட்டை அணி செய்யும் என்றது, தலைவியை மணந்து இல்லத்தை அணி செய்க எனத் தலைவனுக்கு உணர்த்தியதாம்.  அகல் வரிச் சிறு மனை (3) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் – அகன்ற கையால் கோலஞ்செய்த சிறிய மனை, ஒளவை துரைசாமி உரை – அகன்ற வரிகள் பொருந்த மணலால் அமைந்த சிறு வீடு. கோலம் பற்றின குறிப்பு உள்ள பாடல்கள் – நற்றிணை 123, 283, 378.  முந்நீர் – தமிழகம் கிழக்கு தெற்கு மேற்கு ஆகிய மூன்று திசையானும் நீர்வளைவுண்டது.  முந்நீர் என்னும் தமிழ்க்கிளவி இம்முப்புறக் கடலமைப்பைச் சுட்டுவது – வ. சுப. மாணிக்கனாரின் ‘தமிழ்க்காதல்’ நூல், ஆற்று நீரும் ஊற்று நீரும் மழை நீரும் உடமையான் முந்நீர் – ஒளவை துரைசாமி புறநானூறு 9 உரை, நிலத்தைப் படைத்தலும் காத்தலும் அழித்தலுமாகிய நீர் – நச்சினார்க்கினியர் மதுரைக்காஞ்சி 75 உரை.

சொற்பொருள்:  ஒள் நுதல் மகளிர் ஓங்கு கழிக் குற்ற கண் நேர் ஒப்பின கமழ் நறு நெய்தல் அகல் வரிச் சிறு மனை அணியும் துறைவ – ஒளியுடைய நெற்றியையுடைய பெண்கள் உயர்ந்த கரையையுடைய உப்பங்கழியில் கொய்த கண்களை ஒத்த மணங்கமழும் நெய்தல் மலர்களால் அகன்ற கோலம் செய்த சிறு மனையை ஒப்பனைச் செய்யும் துறையை உடைய தலைவனே (துறைவ – அண்மை விளி), வல்லோர் ஆய்ந்த தொல் கவின் தொலைய இன்னை ஆகுதல் தகுமோ– அறிவுடையவர்கள் ஆராய்ந்து கண்ட பண்டைய அழகு கெடும்படி நீ இத்தன்மை உடையையாய் இருப்பது தகுமோ, ஓங்கு திரை முந்நீர் மீமிசைப் பலர் தொழத் தோன்றி ஏமுற விளங்கிய சுடரினும் வாய்மை சான்ற நின் சொல் நயந்தோர்க்கே – உயர்ந்த அலைகளையுடைய கடலின் மீது பலர் தொழும்படித் தோன்றி யாவரும் மகிழும்படி விளங்கிய கதிரவனைக் காட்டிலும் வாய்மை உடைய நின் சொற்களை விரும்பியவர்களிடம் (மீமிசை – ஒருபொருட் பன்மொழி, நயந்தோர்க்கே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 284, தேய்புரிப் பழங்கயிற்றினார், பாலைத் திணை – தலைவன் சொன்னது
புறம் தாழ்பு இருண்ட கூந்தல், போதின்
நிறம் பெறும் ஈர் இதழ்ப் பொலிந்த உண்கண்,
உள்ளம் பிணிக்கொண்டோள் வயின், நெஞ்சம்
‘செல்லல் தீர்கம் செல்வாம்’ என்னும்,
‘செய்வினை முடியாது எவ்வம் செய்தல்  5
எய்யாமையோடு இளிவு தலைத்தரும்’ என,
உறுதி தூக்கத் தூங்கி, அறிவே,
‘சிறிது நனி விரையல்’ என்னும், ஆயிடை
ஒளிறு ஏந்து மருப்பின் களிறு மாறு பற்றிய
தேய் புரிப் பழங்கயிறு போல,  10
வீவது கொல் என் வருந்திய உடம்பே?

பாடல் பின்னணிபொருள்வயின் பிரிந்த தலைவன் கூறியது.

பொருளுரை:  முதுகில் தாழ்ந்து விழுந்த கரிய கூந்தலையும் நெய்தல் மலரின் நிறம் பொருந்திய குளிர்ந்த இதழ்களால் பொலிந்த மையிட்ட கண்களையும் உடைய என் உள்ளத்தைப் பிணித்துக் கொண்டவளிடத்து, என் நெஞ்சம், ‘நாம் சென்று அவளுடைய வருத்தத்தைத் தீர்ப்போம்’ என்றும் கூறுகின்றது.  ‘மேற்கொண்ட வினையை முடிக்காது விட்டு விடுவது அறியாமையை அளிப்பதுடன் இளிவையும் தரும்’ என உறுதி தரும் உணர்வு கூறுவதால் கலங்கி, என் அறிவானது, ‘சில பொழுது மிகவும் விரையாதே’ என்கின்றது.  இந்த மாறுபாட்டுடன், என் உடல், ஒளிரும் தந்தங்களைக் கொண்ட (மருப்புகளைக் கொண்ட) களிற்று யானை மாறுபட்டுப் பற்றி இழுத்ததால் தேய்ந்து புரி அறுபடும் பழைய கயிற்றைப் போல் வருந்துகின்றது.

குறிப்பு:  ஒளவை துரைசாமி உரை – ‘நோயும் இன்பமும் இரு வகை நிலையில்’ (தொல்காப்பியம், பொருளியல் 2) எனத் தொடங்கும் நூற்பா உரையில், இப்பாட்டைக் காட்டி, ‘இஃது உணர்வுடையது போல இளிவரல்பற்றிக் கூறியது’ என்பர் நச்சினார்க்கினியர்.  ‘ஞாயிறு திங்கள் அறிவே நாணே’ (தொல்காப்பியம், செய்யுளியல் 192) என்ற நூற்பா உரையில் இப்பாட்டின், ‘உறுதி தூக்கத் தூங்கியறிவே, சிறுநனி விரையலென்னும்’ என்ற அடிகளைக் காட்டுவர் இளம்பூரணர்.  தூங்கி (9) – ஒளவை துரைசாமி உரை – தெளிவு பெறாது கலங்கி. மாறு பற்றிய (9) – ஒளவை துரைசாமி உரை – இருதலையும் தனித்தனியே பற்றி இழுத்ததால், H. வேங்கடராமன் உரை – ஒன்றோடு ஒன்று மாறுபட்டுக் கைப்பற்றி இழுத்த.  செல்லல் – செல்லல் இன்னல் இன்னாமையே (தொல்காப்பியம், உரியியல் 6). நனி – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3).

சொற்பொருள்:  புறம் தாழ்பு இருண்ட கூந்தல் போதின் நிறம் பெறும் ஈர் இதழ்ப் பொலிந்த உண்கண் உள்ளம் பிணிக்கொண்டோள் வயின் – முதுகில் தாழ்ந்து விழுந்த கரிய கூந்தலையும் நெய்தல் மலரின் நிறம் பொருந்திய குளிர்ந்த இதழ்களால் பொலிந்த மையிட்ட கண்களையும் உடைய என் உள்ளத்தைப் பிணித்துக் கொண்டவளிடத்து, நெஞ்சம் ‘செல்லல் தீர்கம் செல்வாம்’ என்னும் – என் நெஞ்சம் ‘நாம் சென்று அவளுடைய வருத்தத்தைத் தீர்ப்போம்’ என்றும் கூறும், ‘செய்வினை முடியாது எவ்வம் செய்தல் எய்யாமையோடு இளிவு தலைத்தரும்’ என உறுதி தூக்கத் தூங்கி – ‘மேற்கொண்ட வினையை முடிக்காது விட்டு விடுவது அறியாமையை அளிப்பதுடன் இளிவையும் தரும்’ என உறுதி தரும் உணர்வு கூறுவதால் கலங்கி, அறிவே ‘சிறிது நனி விரையல்’ என்னும் – என் அறிவானது ‘சில பொழுது மிகவும் விரையாதே’ என்கின்றது,  ஆயிடை – இந்த மாறுபாட்டுடன், ஒளிறு ஏந்து மருப்பின் களிறு மாறு பற்றிய தேய் புரிப் பழங்கயிறு போல வீவது கொல் என் வருந்திய உடம்பே – ஒளிரும் தந்தங்களைக் கொண்ட (மருப்புகளைக் கொண்ட) களிற்று யானை மாறுபட்டுப் பற்றி இழுத்ததால் தேய்ந்து புரி அறுபடும் பழைய கயிற்றைப் போல் என் வருந்திய உடல் (உடம்பே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 285, மதுரைக் கொல்லன் வெண்ணாகனார், குறிஞ்சித் திணை – தோழி தலைவியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
அரவு இரை தேரும் ஆர் இருள் நடுநாள்
இரவின் வருதல் அன்றியும், உரவுக் கணை
வன் கைக் கானவன் வெஞ்சிலை வணக்கி,
உளமிசைத் தவிர்த்த முளவுமான் ஏற்றையொடு,
மனைவாய் ஞமலி ஒருங்கு புடை ஆட,  5
வேட்டு வலம்படுத்த உவகையன், காட்ட
நடு கால் குரம்பைத் தன் குடிவயிற் பெயரும்
குன்ற நாடன் கேண்மை நமக்கே
நன்றால் வாழி தோழி, என்றும்
அயலோர் அம்பலின் அகலான்,  10
பகலின் வரூஉம் எறி புனத்தானே.

பாடல் பின்னணி:  இரவுக்குறியையும் பகற்குறியையும் மறுத்து வரைவு கடாயது.

பொருளுரை:  தோழி!  நீ நீடு வாழ்வாயாக!  பாம்புகள் இரை தேடும் மிக்க இருளுடைய நடு இரவில் வருவது மட்டும் அல்லாது, கொடிய அம்புகளையும் வலிய கைகளையுமுடைய கானவன், கொடிய வில்லை வளைத்து அம்பினை நெஞ்சிலே எய்து கொன்ற ஆண் முள்ளம்பன்றியுடன், மனையில் உள்ள நாய்கள் ஒரு பக்கத்தில் விளையாட, வேட்டையால் தான் பெற்ற வெற்றியால் உவகை அடைந்தவனாக, காட்டில் நட்டிய கால்களால் கட்டப்பட்ட குடில்களை உடைய தன் குடியிருப்பிற்குச் செல்லும் மலைநாடனின் நட்பு, நமக்கு நல்லது.  எப்பொழுதும் அயலவர் பேசும் பழிமொழிக்கு அஞ்சி அகன்று செல்லாதவனாகி, பகல் நேரத்தில் உழுது விதைத்த தினைப்புறத்தின்கண் வருகின்றான்.

குறிப்பு:  ஒப்புமை:  அகநானூறு 182 – பூங்கண் வேங்கைப் பொன் இணர் மிலைந்து வாங்கு அமை நோன் சிலை எருத்தத்து இரீஇ, தீம் பழப் பலவின் சுளை விளை தேறல் வீளை அம்பின் இளையரொடு மாந்தி ஓட்டு இயல் பிழையா வய நாய் பிற்பட வேட்டம் போகிய குறவன் காட்ட குளவித் தண் புதல் குருதியொடு துயல்வர முளவுமாத் தொலைச்சும் குன்ற நாட!  உள்ளுறை – கு. வெ. பாலசுப்பிரமணியன் உரை – கானவன் எய்து பெற்ற முள்ளம்பன்றியோடு நாய்கள் சூழத் தன் குடியிருப்பை அடைவான் என்றது, தலைவன் தலைவியைத் தன் ஊர்க்குக் கொண்டு சென்று தமர் மகிழ மணம் புணர்வானாக என்பது உணர்த்தியது.  வலம்படுத்த (6) – ஒளவை துரைசாமி உரை – தாக்கப்பட்ட விலங்கின் வலியை அழித்தல்.  ஏற்றை – ஆற்றலொடு புணர்ந்த ஆண்பாற்கு எல்லாம் ஏற்றைக் கிளவி உரித்து என மொழிப (தொல்காப்பியம், மரபியல் 50).

சொற்பொருள்:  அரவு இரை தேரும் ஆர் இருள் நடுநாள் இரவின் வருதல் அன்றியும் – பாம்புகள் இரை தேடும் மிக்க இருளுடைய நடு இரவில் வருவது மட்டும் அல்லாது, உரவுக் கணை வன் கைக் கானவன் வெஞ்சிலை வணக்கி உளமிசைத் தவிர்த்த முளவுமான் ஏற்றையொடு மனைவாய் ஞமலி ஒருங்கு புடை ஆட வேட்டு வலம்படுத்த உவகையன் காட்ட நடு கால் குரம்பைத் தன் குடிவயிற் பெயரும் குன்ற நாடன் – கொடிய அம்புகளையும் வலிய கைகளையுமுடைய கானவன் கொடிய வில்லை வளைத்து நெஞ்சிலே எய்து கொன்ற முள்ளம்பன்றியின் ஆணுடன் மனையில் உள்ள நாய்கள் ஒரு பக்கத்தில் விளையாட வேட்டையால் தான் பெற்ற வெற்றியால் உவகை அடைந்தவனாக காட்டில் நட்டிய கால்களால் கட்டப்பட்ட குடில்களை உடைய தன் குடியிருப்பிற்குச் செல்லும் மலைநாடன், கேண்மை நமக்கே நன்றால் – நட்பு நமக்கு நல்லது, வாழி – நீடு வாழ்வாயாக (நன்றால் – நன்று + ஆல், ஆல் அசைநிலை), தோழி – தோழி, என்றும் அயலோர் அம்பலின் அகலான் பகலின் வரூஉம் எறி புனத்தானே – எப்பொழுதும் அயலவர் பேசும் பழிமொழிக்கு அஞ்சி அகன்று செல்லாதவனாகி பகல் நேரத்தில் வருகின்றான் உழுது விதைத்த தினைப்புறத்தின்கண் (வரூஉம் – செய்யுளிசை அளபெடை, புனத்தானே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 286, துறைக்குறுமாவிற் பாலங்கொற்றனார், பாலைத் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
‘ஊசல் ஒண் குழை உடை வாய்த்தன்ன
அத்தக் குமிழின் ஆய் இதழ் அலரி
கல் அறை வரிக்கும் புல்லென் குன்றம்
சென்றோர் மன்ற, செலீஇயர் என் உயிர்’ எனப்
புனை இழை நெகிழ விம்மி, நொந்து நொந்து  5
இனைதல் ஆன்றிசின் ஆயிழை! நினையின்,
நட்டோர் ஆக்கம் வேண்டியும் ஒட்டிய
நின் தோள் அணிபெற வரற்கும்
அன்றோ தோழி, அவர் சென்ற திறமே?  9

பாடல் பின்னணி:  தலைவனின் பிரிவினால் வருந்திய தலைவியைத் தோழி வற்புறுத்தியது.

பொருளுரை:  ஆராய்ந்த அணிகலன்களை அணிந்தவளே!  மகளிரின் ஒளிரும் காதணியில் பொருந்திய மேலும் கீழும் ஆடும் ஊசல் போல், வழியில் இருக்கும் குமிழ மரத்தின் அழகிய இதழ்களையுடை மலர்கள், கல்லென்ற ஓசையுடன் உதிர்ந்து அழகு செய்யும் பொலிவு இழந்த குன்றத்திற்குச் சென்றார் தலைவர் என்பதால், ‘உறுதியாக என் உயிர் ஒழிவதாக’ என்று அணிந்த அணிகலன்கள் கழன்று விழும்படி அழுது மிகவும் நொந்தி வருந்துதலை பொறுப்பாயாக!  ஆராய்ந்தால், தலைவர் சென்ற தன்மை, தம்மிடம் நட்புக் கொண்டவர்களுக்குப் பொருள் உதவி செய்வதற்கும், அவருடன் பொருந்திய உன் தோள்கள் அணிகலன்களைப் பெறுவதற்கும் அல்லவா தோழி?

குறிப்பு:  ஒளவை துரைசாமி உரை – ‘மேவிய சிறப்பின் ஏனோர் படிமைய’ (தொல்காப்பியம், அகத்திணையியல் 30) என்ற நூற்பா உரையில், ‘நட்டோர் ஆக்கம் வேண்டியும் ஒட்டிய நின்றோள் அணிபெற வரற்குமன்றோ, தோழியவர் சென்ற திறமே’ என்பதைக் காட்டி, இதனுள் ‘அணி என்றது பூணினை’ என்பர் நச்சினார்க்கினியர்.  ஒட்டிய நின் தோள் (7–8) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – அடைக்கலமாகப் புகுந்த நின்னுடைய தோள்கள், ஒளவை துரைசாமி உரை – உயிரோடு கலந்த காதலியாகிய நின் தோள்கள், கு. வெ. பாலசுப்பிரமணியன் உரை – அடைக்கலமாக அவரை அணுகிய நின் தோள்கள்.  மன்ற – மன்றவென் கிளவி தேற்றஞ்செய்யும் (தொல்காப்பியம், இடையியல் 17).  சின் – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம், சொல்லதிகாரம்.  இடையியல் 26, சின் என்பது இசின் என்பதன் முதற்குறை – ச. பாலசுந்தரம் உரை).

சொற்பொருள்:  ஊசல் ஒண் குழை உடை வாய்த்தன்ன – மகளிரின் ஒளிரும் காதணியில் பொருந்திய மேலும் கீழும் ஆடும் ஊசல் போல், அத்தக் குமிழின் ஆய் இதழ் அலரி கல் அறை வரிக்கும் – வழியில் இருக்கும் குமிழ மரத்தின் அழகிய இதழ்களையுடை மலர்கள் கல்லென்ற ஓசையுடன் உதிர்ந்து அழகு செய்யும் (கல் அறை – கல்லென்ற ஓசை), வழியில் இருக்கும் குமிழ மரத்தின் அழகிய இதழ்களையுடை மலர்கள் கற்பாறைகளை அழகு செய்யும் (கல் அறை – கற்பாறை, குமிழ மரம் – Gmelina arborea), புல்லென் குன்றம் சென்றோர் – பொலிவு இழந்த குன்றத்திற்குச் சென்றவர், மன்ற செலீஇயர் என் உயிர்’ எனப் புனை இழை நெகிழ விம்மி நொந்து நொந்து  இனைதல் ஆன்றிசின் – ‘உறுதியாக என் உயிர் ஒழிவதாக’ என்று அணிந்த அணிகலன்கள் கழன்று விழும்படி அழுது மிகவும் நொந்தி வருந்துதலை பொறுப்பாயாக (செலீஇயர் – வியங்கோள் வினைமுற்று விகுதி, இகழ்ச்சிப் பொருளில் வந்தது, அளபெடை), ஆயிழை – ஆராய்ந்த அணிகலன்களை அணிந்தவளே, அழகிய அணிகலன்களை அணிந்தவளே (அன்மொழித்தொகை விளியேற்று நின்றது), நினையின் நட்டோர் ஆக்கம் வேண்டியும் ஒட்டிய நின் தோள் அணிபெற வரற்கும் அன்றோ தோழி அவர் சென்ற திறமே – ஆராய்ந்தால் தம்மிடம் நட்புக் கொண்டவர்களுக்குப் பொருள் உதவி செய்வதற்கும் அவருடன் பொருந்திய உன் தோள்கள் அணிகலன்களைப் பெறுவதற்கும் அல்லவா தோழி தலைவர் பொருள் கருதிப் பிரிந்தது (திறமே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 287, உலோச்சனார், நெய்தல் திணை – தலைவி சொன்னது
விசும்பு உறழ் புரிசை வெம்ப முற்றிப்,
பைங்கண் யானை வேந்து புறத்து இறுத்த,
‘நல் எயிலுடையோர் உடையம்’ என்னும்
பெருந்தகை மறவன் போல, கொடுங்கழிப்
பாசடை நெய்தல் பனி நீர்ச் சேர்ப்பன்  5
நாம முதலை நடுங்கு பகை அஞ்சான்,
காமம் பெருமையின் வந்த ஞான்றை,
அருகாது ஆகி அவன்கண் நெஞ்சம்
நள்ளென் கங்குல் புள் ஒலி கேட்டொறும்,
‘தேர் மணித் தெள் இசை கொல்?’ என  10
ஊர் மடி கங்குலும் துயில் மறந்ததுவே.

பாடல் பின்னணி:  காப்பு மிகுதிக்கண் ஆற்றாளாகிய தலைவி கூறியது.

பொருளுரை:  வானில் நீண்டு உயர்ந்த மதிலின் உள்ளே இருப்பவர்கள் நடுங்கும்படி முற்றுகையிட்டு பசிய கண்களையுடைய யானைப் படையுடன் பகை வேந்தன் புறத்தில் தங்கிய வேளையில், நல்ல கோட்டையைப் பகைவர் பற்றாதவாறு காப்பவர்கள் நம்மிடம் உள்ளனர் எனப் பெருமிதத்துடன் இருக்கும் பெரிய தகைமையுடைய மறவன் போல், வளைந்த உப்பங்கழியில் பசிய இலைகளையுடைய நெய்தல் மலர்கள் இருக்கும் குளிர்ந்த கடலின் தலைவன் அச்சம் தரும் முதலையின் நடுங்குதலைச் செய்யும் பகைமைக்கு அஞ்சாதவனாகக் காதலின் மிகுதியால் இங்கு வந்த பொழுது, குன்றாது அவனிடம் செல்லும் என் நெஞ்சம், இருள்மிக்க இரவில் பறவைகளின் ஒலியைக் கேட்கும் பொழுதெல்லாம், ‘இது தலைவனின் தேர் மணியின் தெளிவான ஓசையோ?’ என ஊரினர் உறங்கும் இரவிலும் உறங்குதலை மறந்தது

குறிப்புகாமம் பெருமையின் (7) – ஒளவை துரைசாமி உரை, பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – காதல் மிகுதியால்.  அகநானூறு 239–9 – காமம் பெருமை – பொ. வே. சோமசுந்தரனார் உரை – காமத்தையும் சிறப்பையும்.  முதலை வழங்கும் வழியில் தலைவன் வருதல் – குறுந்தொகை 324 – கொடுங்கால் முதலைக் கோள் வல் ஏற்றை வழி வழக்கு அறுக்கும் கானலம் பெருந்துறைஇன மீன் இருங்கழி நீந்தி நீ நின் நயன் உடைமையின் வருதி, நற்றிணை 292 – ஒளிறு வான் பளிங்கொடு செம்பொன் மின்னும் கருங்கல் கான் யாற்று அருஞ்சுழி வழங்கும் கராஅம் பேணாய், குறிஞ்சிப்பாட்டு 256–258 – ஒடுங்கு இருங் குட்டத்து அருஞ்சுழி வழங்கும் கொடுந்தாள் முதலையும், இடங்கரும் கராமும் நூழிலும் இழுக்கும் ஊழ் அடி முட்டமும்.  நாம் – பேம் நாம் உரும் என வரூஉம் கிளவி ஆ முறை மூன்றும் அச்சப் பொருள (தொல்காப்பியம், உரியியல் 69).  காமம் – கமம் என்னும் சொல்லின் முதல் நீண்ட வடிவம், ‘நிறைந்த அன்பு’ என்பது இச்சொல்லின் பொருள் – பேரறிஞர் கு.வெ. பாலசுப்பிரமணியன் அவர்களின் விளக்கம், (கமம் நிறைந்து இயலும் – தொல்காப்பியம், சொல்லியல் 355).

சொற்பொருள்:  விசும்பு உறழ் புரிசை வெம்ப முற்றிப் பைங்கண் யானை வேந்து புறத்து இறுத்த ‘நல் எயில் உடையோர் உடையம்’ என்னும் பெருந்தகை மறவன் போல – வானில் நீண்டு உயர்ந்த மதிலின் உள்ளே இருப்பவர்கள் நடுங்கும்படி முற்றுகையிட்டு பசிய கண்களையுடைய யானைப் படையுடன் பகை வேந்தன் புறத்தில் தங்கிய வேளையில் நல்ல கோட்டையைப் பகைவர் பற்றாதவாறு காப்பவர்கள் நம்மிடம் உள்ளனர் எனப் பெருமிதத்துடன் இருக்கும் பெரிய தகைமையுடைய மறவன் போல் (உறழ் – ஓங்கி உயர்ந்த), கொடுங்கழிப் பாசடை நெய்தல் பனி நீர்ச் சேர்ப்பன் நாம முதலை நடுங்கு பகை அஞ்சான் காமம் பெருமையின் வந்த ஞான்றை – வளைந்த உப்பங்கழியில் பசிய இலைகளையுடைய நெய்தல் மலர்கள் இருக்கும் குளிர்ந்த கடலின் தலைவன் அச்சம் தரும் முதலையின் நடுங்குதலைச் செய்யும் பகைமைக்கு அஞ்சாதவனாகக் காதலின் மிகுதியால் இங்கு வந்த பொழுது (நாம – நாம் என்னும் உரிச்சொல் ஈறு திரிந்தது), அருகாது ஆகி அவன்கண் நெஞ்சம் நள்ளென் கங்குல் புள் ஒலி கேட்டொறும் ‘தேர் மணித் தெள் இசை கொல்?’ என ஊர் மடி கங்குலும் துயில் மறந்ததுவே – குன்றாது அவனிடம் செல்லும் என் நெஞ்சம் இருள்மிக்க இரவில் பறவைகளின் ஒலியைக் கேட்கும் பொழுதெல்லாம் தலைவனின் தேர் மணியின் தெளிவான ஓசையோ என ஊரினர் உறங்கும் இரவிலும் உறங்குதலை மறந்தது (ஊர் – ஆகுபெயர் ஊரில் உள்ளவர்களுக்கு, மறந்ததுவே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 288, குளம்பனார், குறிஞ்சித் திணை – தோழி தலைவியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
அருவி ஆர்க்கும் அணங்குடை நெடுங்கோட்டு
ஞாங்கர் இள வெயில் உணீஇய, ஓங்கு சினைப்
பீலி மஞ்ஞை பெடையோடு ஆலும்
குன்ற நாடன் பிரிவின் சென்று,
நன்னுதல் பரந்த பசலை கண்டு அன்னை  5
செம் முது பெண்டிரொடு நெல் முன் நிறீஇக்,
கட்டின் கேட்கும் ஆயின், வெற்பில்
ஏனல் செந்தினைப் பால் ஆர் கொழுங்குரல்
சிறு கிளி கடிகம் சென்றும், ‘இந்
நெடுவேள் அணங்கிற்று’ என்னும் கொல் அதுவே?  10

பாடல் பின்னணிவரைவு கடாயது.

பொருளுரை:  அருவிகள் ஒலிக்கும் அச்சம்தரும் நெடிய மலை உச்சியின் அருகில், இளவெயிலில் காய வேண்டி, உயர்ந்த மரக்கிளையில் உள்ள தோகையுடைய ஆண் மயில் தன் பெண் மயிலுடன் ஆடும் மலைநாடன் பிரிந்து சென்றதால், உன் நல்ல நெற்றியில் பரவிய பசலையைக் கண்டு, அன்னை செம்மை மனம் உடைய முதிய கட்டுவிச்சியருடன் நெல்லை முற்படச் சிதறிக் கட்டின் வாயிலாகக் குறி கேட்பாள் ஆனால், மலையில் ஏனலாகிய சிவந்த தினையின் பால் நிரம்பிய (மாவு நிரம்பிய) கொழுத்த கதிர்களை உண்ண வரும் சிறுகிளிளை விரட்ட நாம் சென்றிருந்தும் அதை அறியாது, ‘நெடுவேளான முருகனால் அணங்கு ஆயிற்று’ எனக் கூறுமோ அக்கட்டு?

குறிப்பு:  அணங்குடை நெடுங்கோட்டு (1) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – அச்சமுடைய நெடிய கொடுமுடியின், ஒளவை துரைசாமி உரை – தெய்வங்கள் உறைதலையுடைய பெரிய மலையின்.  இள வெயில் (2) – ஒளவை துரைசாமி உரை – நாட்காலையில் தோன்றும் எழு ஞாயிற்றின் ஒளியை இளவெயில் என்ப.  அவ்வெயில்பட இருப்பதை வெயில் உண்டல் என்றனர்.  இதனைப் பச்சை வெயில் என்பர் அடியார்க்கு நல்லார்.  உணீஇய (2) – H. வேங்கடராமன் உரை – காய வேண்டி, ஒளவை துரைசாமி உரை – பெறும்பொருட்டு.  நெல் முன் நிறீஇ (6) – ஒளவை துரைசாமி உரை – சுளகில் நெல் முற்படச் சிதறி, பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – முன்னர் முறத்தில் நெல்லைப் பரப்பிக் கட்டு வைத்து நம்மை எதிரே நிறுத்தி.  கட்டு (7) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – கட்டு, சேரியின் முதுபெண்டாகிக் குறி சொல்லும் மாதரை மனையகத்துக் கொணர்ந்து வைத்து, முறத்திலே பிடி நெல்லையிட்டு எதிரே தலைமகளை நிறுத்தித் தெய்வத்துக்குப் பிரப்பிட்டு வழிபாடு செய்த அந்நெல்லை நந்நான்காக எண்ணி எஞ்சியவை ஒன்றிரண்டு மூன்றளவும் முருகு அணங்கெனவும் நான்காயின் பிறிதொரு நோயெனவும் கூறப்படுவது, ஒளவை துரைசாமி உரை – கட்டு, சுளகில் நெல் எறிந்து குறி பார்க்கும் வகை.  கட்டுக் காண்டல் விரிச்சி ஓர்த்தல் முதலியன பண்டையோரிடத்து நிலவிய குறி வகைகள்.  செம்மை மனம் உடைய முது பெண்டிரோடு கூடிக் கட்டுவிச்சிபால் சென்று சுளகில் நெல் முற்படச் சிதறி கட்டின் வாயிலாக தலைவியின் வேறுபாட்டிற்குரிய காரணத்தைக் கேட்பது.  பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – ஏனலாகிய தினை – இரு பெயரொட்டு.  ஒப்புமை:  முல்லைப்பாட்டு 88–11 – நெல்லொடு நாழி கொண்ட நறு வீ முல்லை அரும்பு அவிழ் அலரி தூஉய்க் கைதொழுது பெருமுது பெண்டிர் விரிச்சி நிற்ப.  உள்ளுறை – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – இளவெயில் உண்ண வேண்டி மயில் பெடையோடு கோட்டின் பக்கஞ் சென்று அங்கு ஆடும் என்றது, காம இன்பம் துய்த்து இல்லறம் நிகழ்த்த வேண்டிய தலைமகன் தலைமைகளைக் கொண்டு தலைக் கழித்து மணந்து வைகுவானாக என்பதாம்.

சொற்பொருள்:  அருவி ஆர்க்கும் அணங்குடை நெடுங்கோட்டு ஞாங்கர் இள வெயில் உணீஇய ஓங்கு சினைப் பீலி மஞ்ஞை பெடையோடு ஆலும் குன்ற நாடன் பிரிவின் சென்று நன்னுதல் பரந்த பசலை கண்டு – அருவிகள் ஒலிக்கும் அச்சம்தரும் நெடிய மலை உச்சியின் அருகில் இளவெயிலில் காய வேண்டி உயர்ந்த மரக்கிளையில் உள்ள தோகையுடைய மயில் தன் பெண் மயிலுடன் ஆடும் மலைநாடன் பிரிந்து சென்றதால் நல்ல நெற்றியில் பரவிய பசலையைக் கண்டு (உணீஇய – அளபெடை), அன்னை செம் முது பெண்டிரொடு நெல் முன் நிறீஇக் கட்டின் கேட்கும் ஆயின் – அன்னை செம்மை மனம் உடைய முதிய கட்டுவிச்சியருடன் நெல்லை முற்படச் சிதறிக் கட்டின் வாயிலாகக் குறி கேட்கும் ஆனால் (நிறீஇ – செய்யுளிசை அளபெடை), வெற்பில் ஏனல் செந்தினைப் பால் ஆர் கொழுங்குரல் சிறு கிளி கடிகம் சென்றும் ‘இந் நெடுவேள் அணங்கிற்று’ என்னும் கொல் அதுவே – மலையில் ஏனலாகிய சிவந்த தினையின் பால் நிரம்பிய (மாவு நிரம்பிய) கொழுத்த கதிர்களை உண்ண வரும் சிறுகிளிளை விரட்ட நாம் சென்றிருந்தும் அதை அறியாது ‘நெடுவேளான முருகனால் அணங்கு ஆயிற்று’ எனக் கூறுமோ அது (ஏனல் செந்தினை – இருபெயரொட்டு, அதுவே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 289, மருங்கூர்ப் பட்டினத்துச் சேந்தன் குமரனார், முல்லைத் திணை தலைவி தோழியிடம் சொன்னது
அம்ம வாழி தோழி! காதலர்
நிலம் புடை பெயர்வது ஆயினும், கூறிய
சொல் புடை பெயர்தலோ இலரே; வானம்
நளி கடல் முகந்து செறிதக இருளி
கனை பெயல் பொழிந்து கடுங்குரல் பயிற்றிக்,  5
கார் செய்து என் உழையதுவே ஆயிடைக்,
கொல்லைக் கோவலர் எல்லி மாட்டிய
பெருமர ஒடியல் போல,
அருள் இலேன் அம்ம, அளியேன் யானே.

பாடல் பின்னணி:  தலைவன் கூறிய பருவத்தில் வராததால் தலைவி வருந்திக் கூறியது.

பொருளுரை:  தோழி!  நீடு வாழ்வாயாக!  யான் கூறுவதைக் கேட்பாயாக!  நம் தலைவர், நிலம் தன் நிலையிலிருந்து பெயர்ந்தாலும் தான் கூறிய சொல்லிலிருந்து மாறுபடுபவர் இல்லை.  முகில்கள் நெருங்கிய கடல் நீரை முகந்து ஒன்றோடு ஒன்று நெருங்கி இருண்டு, மிக்க மழையைப் பொழிந்து பெருமுழக்கத்தைச் செய்து கார்காலத்தைச் செய்து என் முன் தோன்றின.  அவ்விடத்தில், புன்செய்க் காட்டுக் கொல்லையில், இடையர்கள் இரவில் கொளுத்திய பெரிய மரத்தின் வேரடிக் கட்டையைப் போல் அருள் இல்லாது உள்ளேன்.  யான் அளியத்தக்கவள்!

குறிப்பு:  செறிதக (4) – ஒளவை துரைசாமி உரை – செறிவுதக எனற்பாலது செறிதக என நின்றது.  ஆயிடை (6) – ஒளவை துரைசாமி உரை – அவ்விடை ஆயிடை எனச் சுட்டு நீண்டது.  அம்ம – அம்ம கேட்பிக்கும் (தொல்காப்பியம், இடையியல் 28).

சொற்பொருள்:  அம்ம – யான் கூறுவதைக் கேட்பாயாக, வாழி – நீடு வாழ்வாயாக, தோழி – தோழி, காதலர் – நம் தலைவர், நிலம் புடை பெயர்வது ஆயினும் கூறிய சொல் புடை பெயர்தலோ இலரே – நிலம் தன் நிலையிலிருந்து பெயர்ந்தாலும் தான் கூறிய சொல்லிலிருந்து மாறுபடுபவர் இல்லை (இலரே – ஏகாரம் அசைநிலை), வானம் நளி கடல் முகந்து செறிதக இருளி கனை பெயல் பொழிந்து கடுங்குரல் பயிற்றிக் கார் செய்து என் உழையதுவே – முகில்கள் நெருங்கிய கடல் நீரை முகந்து நெருங்கி இருண்டு மிக்க மழையைப் பொழிந்து பெருமுழக்கத்தைச் செய்து கார்காலத்தைச் செய்து என் முன் தோன்றியன, ஆயிடைக் கொல்லைக் கோவலர் எல்லி மாட்டிய பெருமர ஒடியல் போல அருள் இலேன் – அவ்விடத்தில் புன்செய்க் காட்டுக் கொல்லையில் இடையர்கள் இரவில் கொளுத்திய பெரிய மரத்தின் வேரடிக் கட்டையைப் போல் அருள் இல்லாது உள்ளேன், அம்ம – அசைநிலை, அளியேன் யானே – யான் அளியத்தக்கவள் (யானே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 290, மதுரை மருதன் இளநாகனார், மருதத் திணை – பரத்தை விறலியிடம் சொன்னது தலைவி கேட்கும்படியாக, அல்லது தோழி தலைவியிடம் சொன்னது பாணன் கேட்கும்படியாக
வயல் வெள் ஆம்பல் சூடுதரு புதுப் பூக்
கன்றுடைப் புனிற்று ஆ தின்ற மிச்சில்,
ஓய் நடை முது பகடு ஆரும் ஊரன்
தொடர்பு நீ வெஃகினை ஆயின், என் சொல்
கொள்ளல் மாதோ, முள் எயிற்றோயே!  5
நீயே பெருநலத்தகையே அவனே
‘நெடு நீர்ப் பொய்கை நடுநாள் எய்தித்,
தண் கமழ் புது மலர் ஊதும்
வண்டு என மொழிப மகன்’ என்னாரே.  9

பாடல் பின்னணி: 1. பரத்தை விறலிமேல் வைத்துத் தலைமகளை நெருங்கிச் சொல்லியது.  ஊரனின் உறவை நீ வேண்டுவாயாயின் நான் கூறுவதை நீ கேட்பாயாக என்பதாம்.  2. வாயிலாகக் புகுந்த பாணன் கேட்பத் தோழி சொல்லியதுமாம்.

பொருளுரை:  முள் போன்று கூரிய பற்களை உடையவளே!  வயல்களில் வளர்ந்துள்ள வெள்ளை ஆம்பலின் சூடப்படும் புதிய மலர்களைக் கன்றுகளை அணிமையில் ஈன்ற பசுக்கள் தின்று எஞ்சிய மீதியை ஓய்ந்த நடையையுடைய முதிய எருதுகள் மேய்ந்து உண்ணும் ஊரனின் தொடர்பை நீ விரும்பினாய் ஆயின், என்னுடைய சொற்களை ஏற்றுக்கொள்வாயாக!  நீ மிக்கப் பெண்மை நலம் உடையவள்.  அவன் ஆழ்ந்த நீரையுடைய குளத்தில் நடு இரவில் சென்று குளிர்ந்த நறுமணம் கமழும் புதிய மலர்களில் தேன் உண்ணும் வண்டு எனக் கூறுவார்கள். அவனை நல்ல ஆண்மகன் எனக் கூறமாட்டார்கள்.

குறிப்பு:  ஒளவை துரைசாமி உரை – ‘தாய் போல் கழறித் தழீஇக் கோடல்’ (தொல்காப்பியம், கற்பியல் 32) எனத் தொடங்கும் நூற்பா உரையில் இப்பாட்டைக் காட்டுவர் இளம்பூரணர்.  ‘புல்லுதல் மயக்கும் புலவிக்கண்ணும்’ எனத் தொடங்கும் நூற்பாவின் உரையில் இப்பாட்டைக் காட்டி, ‘இதனுள் நீ இளமைச் செவ்வியெல்லாம் நுகர்ந்து புதல்வற் பயந்த பின்னர், உழுதுவிடு பகடு எச்சிலை அயின்றாற் போலப் பிறர் அவனை நுகர்ந்தமை நினக்கு இழுக்கன்று எனவும், அவனோடு கூட்டம் நெடுங்காலம் நிகழ்த்த வேண்டும் நீ.  அவள் அவனோடு கட்டில் வரை எய்தியிருக்கின்றாளென்று ஊரார் கூறுகின்ற சொல்லை என்னைப் போல வேறுபட்டுக் கொள்ளாதே.  கொள்வது நின் இளமைக்கும் எழிலுக்கும் ஏலாதெனவும், அவனை வண்டு என்பதன்றி மகன் என்னாராதலின் இவன் கடப்பாட்டைண்மை அதுவென்னும் கூறினான்’ என்றும் ‘என் சொற் கொள்ளன் மாதோ என்பதற்கு என் வார்த்தையைக் கேட்டால் நினக்கு விருப்பமோ, விருப்பமாகில் யான் கூறுகின்றதனைக் கொள்க’ என்றும் கூறுவார் நச்சினார்க்கினியர்.  உள்ளுறை – கு. வெ. பாலசுப்பிரமணியன் உரை – புனிற்றா தின்ற மிச்சிலை உழுது ஓய்ந்த பகடு தின்றது போல தலைவி இளமைக் காலத்துத் தலைவனோடு இன்பம் நுகர்ந்து மகவு பெற்ற பின் உண்டொழி மிச்சில் அனைய அவனைப் பிறர் நுகர்வது தலைவிக்கு இழுக்காகாது என்பது உணர்த்தவாம். புனிறு – புனிறு என் கிளவி ஈன்றணிமைப் பொருட்டே (தொல்காப்பியம், உரியியல் 79).

சொற்பொருள்:  வயல் வெள் ஆம்பல் சூடுதரு புதுப் பூக் கன்றுடைப் புனிற்று ஆ தின்ற மிச்சில் ஓய் நடை முது பகடு ஆரும் ஊரன் தொடர்பு நீ வெஃகினை ஆயின் – வயல்களில் வளர்ந்துள்ள வெள்ளை ஆம்பலின் சூடப்படும் புதிய மலர்களைக் கன்றுகளை அணிமையில் ஈன்ற பசுக்கள் தின்று எஞ்சிய மீதியை ஓய்ந்த நடையையுடைய முதிய எருதுகள் மேய்ந்து உண்ணும் ஊரனின் தொடர்பை நீ விரும்பினாய் ஆயின், என் சொல் கொள்ளல் மாதோ – என்னுடைய சொற்களை ஏற்றுக்கொள்வாயாக (கொள்ளல் – அல் ஈற்று வியங்கோள் முற்று, மாதோ – மாது ஓ அசைநிலைகள்), முள் எயிற்றோயே – முள் போன்று கூரிய பற்களை உடையவளே, நீயே பெருநலத்தகையே – நீ மிக்கப் பெண்மை நலம் உடையவள், அவனே நெடு நீர்ப் பொய்கை நடுநாள் எய்தித் தண் கமழ் புது மலர் ஊதும் வண்டு என மொழிப – அவன் ஆழ்ந்த நீரையுடைய குளத்தில் நடு இரவில் சென்று குளிர்ந்த நறுமணம் கமழும் புதிய மலர்களில் தேன் உண்ணும் வண்டு எனக் கூறுவார்கள் (அவனே – ஏகாரம் அசைநிலை), மகன் என்னாரே – நல்ல ஆண்மகன் எனக் கூறமாட்டார்கள் (என்னாரே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 291, கபிலர், நெய்தல் திணை – தோழி பாணனிடம் சொன்னது
நீர் பெயர்ந்து மாறிய செறி சேற்று அள்ளல்
நெய்த்தலைக் கொழு மீன் அருந்த, இனக் குருகு
குப்பை வெண்மணல் ஏறி அரைசர்
ஒண் படைத் தொகுதியின் இலங்கித் தோன்றும்,
தண் பெரும் பௌவ நீர்த் துறைவற்கு, நீயும்  5
கண்டாங்கு உரையாய்; கொண்மோ பாண!
மா இரு முள்ளூர் மன்னன் மா ஊர்ந்து,
எல்லித் தரீஇய இன நிரைப்
பல் ஆன் கிழவரின் அழிந்த இவள் நலனே.

பாடல் பின்னணி:  வாயிலாக புக்க பாணற்குத் தோழி தலைவியின் குறிப்பறிந்து நெருங்கிச் சொல்லியது.  வாயில் மறுத்தல்.

பொருளுரை:  பாணனே!  மிகப் பெரிய முள்ளூர் மன்னனான மலையமான் திருமுடிக்காரி குதிரை மேல் சென்று இரவில் கவர்ந்துக் கொண்டு வந்த ஆநிரைக்கு உரியவர் அழிந்தாற்போல் அழிந்த இவள் அழகை நீ கண்கூடாகக் கண்டும், நீர் தன் இடத்திலிருந்து ஓடி வற்றிய அடர்ந்த அள்ளலாகிய சேற்றில் கொழுப்பை உடைய கொழுத்த மீன்களை உண்ட (உண்ண வேண்டி) குருகின் தொகுதி குவிந்த வெள்ளை மணலில் ஏறி, அரசரின் காலாட்படையின் கூட்டம் போல் விளங்கித் தோன்றும் குளிர்ந்த பெரிய கடல்நீர்த் துறைவற்கு, அதை நீ உரைக்கவில்லை என்பதை ஏற்றுக்கொள்.

குறிப்பு:  உள்ளுறை – கு. வெ. பாலசுப்பிரமணியன் உரை – குருகுகள் கூட்டமாக இருத்தல்போலத் தலைவனிடம் பயன் கொள்ளவேண்டிய பாணர் விறலியர் கூட்டமாக இருப்பதை உள்ளுறுத்திப் பெற்றது. குருகுகள் கூட்டமாக இருப்பினும் படையாகாவாறு நீவிரும் வாயில்கள் ஆகமாட்டீர் என்றனள்.  வரலாறு:  முள்ளூர் மன்னன்.  மலையமான் பற்றின குறிப்புகள் உள்ள நற்றிணைப் பாடல்கள் – 77, 100, 170, 291, 320. அருந்த (2) – ஒளவை துரைசாமி உரை – ஆர்ந்த என்பது அருந்த என வந்தது, பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – அருந்த வேண்டி.  மா ஊர்ந்து (7) – ஒளவை துரைசாமி உரை – காரியின் குதிரை காரி எனப்படுதலால் மா ஊர்ந்து என வாளா கூறினார் போலும்.  மோ – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம்.  சொல்லதிகாரம்.  இடையியல் 26).

சொற்பொருள்:  நீர் பெயர்ந்து மாறிய செறி சேற்று அள்ளல் நெய்த்தலைக் கொழு மீன் அருந்த இனக் குருகு குப்பை வெண்மணல் ஏறி அரைசர் ஒண் படைத் தொகுதியின் இலங்கித் தோன்றும் தண் பெரும் பௌவ நீர்த் துறைவற்கு – நீர் தன் இடத்திலிருந்து ஓடி வற்றிய அடர்ந்த அள்ளலாகிய சேற்றில் கொழுப்பை உடைய கொழுத்த மீன்களை உண்ட (உண்ண வேண்டி) குருகின் தொகுதி குவிந்த வெள்ளை மணலில் ஏறி அரசரின் காலாட்படையின் கூட்டம் போல் விளங்கித் தோன்றும் குளிர்ந்த பெரிய கடல்நீர்த் துறைவற்கு (சேறு அள்ளல் – இருபெயரொட்டு, தொகுதியின் – இன் ஒப்புப் பொருளது, ஐந்தாம் வேற்றுமை உருபு), நீயும் கண்டாங்கு உரையாய் கொண்மோ – நீயும் கண்கூடாகக் கண்டதை உரைக்கவில்லை என்பதை ஏற்றுக்கொள் (கொண்மோ – மோ முன்னிலை அசை), பாண – பாணனே, மா இரு முள்ளூர் மன்னன் மா ஊர்ந்து எல்லித் தரீஇய இன நிரைப் பல் ஆன் கிழவரின் அழிந்த இவள் நலனே – மிகப் பெரிய முள்ளூர் மன்னனான மலையமான் திருமுடிக்காரி குதிரை மேல் சென்று இரவில் கவர்ந்துக் கொண்டு வந்த ஆநிரைக்கு உரியவர் அழிந்தாற்போல் அழிந்த இவள் அழகை (தரீஇய – செய்யுளிசை அளபெடை, கிழவரின் – இன் ஒப்புப்பொருளில் வந்தது, ஐந்தாம் வேற்றுமை உருபு,  நலனே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 292, நல்வேட்டனார், குறிஞ்சித் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
நெடுந்தண் ஆரத்து அலங்கு சினை வலந்த
பசுங்கேழ் இலைய நறுங்கொடித் தமாலம்
தீம் தேன் கொள்பவர் வாங்குபு பரியும்,
யாணர் வைப்பின் கானம் என்னாய்;
களிறு பொரக் கரைந்த கயவாய்க் குண்டு கரை  5
ஒளிறு வான் பளிங்கொடு செம்பொன் மின்னும்
கருங்கல் கான் யாற்று அருஞ்சுழி வழங்கும்
கராஅம் பேணாய்; இரவரின்
வாழேன் ஐய, மை கூர் பனியே.

பாடல் பின்னணி:  இரவுக்குறி மறுத்தது.  தலைவி கூற்றைத் தோழி தன் கூற்றாகக் கூறியது.

பொருளுரை:  ஐயா!  உயர்ந்த தண்ணிய சந்தன மரத்தின் அசைகின்ற கிளைகளைச் சுற்றிய பசிய நிறம் பொருந்திய இலைகளையுடைய நறுமணம் உடைய தமாலக்கொடியை, இனிய தேனை எடுத்துக் கொள்பவர்கள் இழுத்து அறுக்கும் வளமையான இடத்தையுடைய கானம் என்று நீ கருதவில்லை.  களிற்று யானைகள் ஒன்றோடு ஒன்று போரிட்டு இடித்து உடைத்த பெரிய பள்ளங்கள் உடைய கரையில் ஒளிபொருந்திய பளிங்குக் கற்களும் சிவந்த பொன்னும் மின்னும் கருங்கற்கள் உடைய காட்டு ஆற்றில், நீந்துவதற்கு அரிய நீர்ச்சுழிகளில் முதலைகள் இருப்பதை நீ கருதவில்லை.  இருள் நிறைந்த பனிக்காலத்தில், நீ இரவில் வந்தால் நான் உயிர் வாழ மாட்டேன்.

குறிப்பு:  இறைச்சி – கு. வெ. பாலசுப்பிரமணியன் உரை – தேன் கொள்ளும் வேடர் தமாலக் கொடியை அறுப்பவர் என்றது, தலைவியின் நலன் நுகர வரும் நீ அவளது கவலையை நீக்குமாறு வரைந்து கொள்க என்பதை உணர்த்தியது.  இரவரின் (8) – ஒளவை துரைசாமி உரை – இரவு வரின் என்பது இரவரின் என வந்தது.  இர என்றே கொண்டு இரவு எனப் பொருள் கோடலும் முறை.  தலைவன் முதலை இருக்கும் நீரில் நீந்தி வருதல் – குறுந்தொகை 324 – கொடுங்கால் முதலைக் கோள் வல் ஏற்றை வழி வழக்கு அறுக்கும் கானலம் பெருந்துறை இன மீன் இருங்கழி நீந்தி நீ நின் நயன் உடைமையின் வருதி, குறிஞ்சிப்பாட்டு 257 – கொடுந் தாள் முதலையும், இடங்கரும், கராமும் ,,,,,,,,,அவர் குழுமலை விடர் அகம் உடையவால் எனவே.  யாணர் – புதிதுபடற் பொருட்டே யாணர்க் கிளவி (தொல்காப்பியம், உரியியல் 83).  தலைவி கூறுவதுபோல் தோழி கூறுதல் – அகநானூறு 362, நற்றிணை 28, 98, 124, 132, 175, 178, 191, 211, 251, 292, கலித்தொகை 18, 70, குறுந்தொகை 236, 238, ஐங்குறுநூறு 45.

சொற்பொருள்:  நெடுந்தண் ஆரத்து அலங்கு சினை வலந்த பசுங்கேழ் இலைய நறுங்கொடித் தமாலம் தீம் தேன் கொள்பவர் வாங்குபு பரியும் யாணர் வைப்பின் கானம் என்னாய் – உயர்ந்த தண்ணிய சந்தன மரத்தின் அசைகின்ற கிளைகளைச் சுற்றிய பசிய நிறம் பொருந்திய இலைகளையுடைய நறுமணம் உடைய தமாலக்கொடியை இனிய தேனை எடுத்துக் கொள்பவர்கள் இழுத்து அறுக்கும் வளமையான இடத்தையுடைய கானம் என்று நீ கருதவில்லை, களிறு பொரக் கரைந்த கயவாய்க் குண்டு கரை ஒளிறு வான் பளிங்கொடு செம்பொன் மின்னும் கருங்கல் கான் யாற்று அருஞ்சுழி வழங்கும் கராஅம் பேணாய் – களிற்று யானைகள் ஒன்றோடு ஒன்று போரிட்டு உடைத்த பெரிய பள்ளங்கள் உடைய கரையில் ஒளிபொருந்திய பளிங்குக் கற்களும் சிவந்த பொன்னும் மின்னும் கருங்கற்கள் உடைய காட்டு ஆற்றில் நீந்துவதற்கு அரிய நீர்ச்சுழிகளில் முதலைகள் இருப்பதை நீ கருதவில்லை (கராஅம் – ஒரு வகை முதலை, அளபெடை); இர வரின் வாழேன் – நீ இரவில் வந்தால் நான் உயிர் வாழ மாட்டேன் (இர – இரா, இறுதியினின்ற ஆகாரம் குறுகி இர என நின்றது), ஐய – ஐயா, மை கூர் பனியே – இருள் நிரம்பிய பனிக்காலத்தில் (பனியே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 293, கயமனார், பாலைத் திணை – தலைவியின் தாய் சொன்னது
மணிக் குரல் நொச்சித் தெரியல் சூடி,
பலிக்கள் ஆர் கைப் பார் முது குயவன்
இடு பலி நுவலும் அகன்தலை மன்றத்து,
விழவுத் தலைக்கொண்ட பழ விறல் மூதூர்ப்
பூங்கண் ஆயம் காண்தொறும், எம் போல்  5
பெருவிதுப்புறுக மாதோ, எம் இல்
பொம்மல் ஓதியைத் தன் மொழிக் கொளீஇக்,
கொண்டு உடன் போக வலித்த
வன்கண் காளையை ஈன்ற தாயே.

பாடல் பின்னணி:  தாய் மனை மருண்டு சொல்லியது.

பொருளுரை:  நீலமணி நிறப் பூங்கொத்துக்கள் உடைய நொச்சியின் மலர்மாலையை அணிந்து பலிகளைப் புரியும் பெரிய கையையுடைய பருத்த முதிய குயவன் இடுகின்ற பலியை உண்ண அழைக்கும் அகன்ற இடத்தையுடைய மன்றத்தில், திருவிழாக்களை மேற்கொண்ட பழமையான வெற்றிகரமான பண்டைய ஊரில், மலர்போன்ற கண்களையுடைய அவள் தோழியரைக் காணும்பொழுதெல்லாம் நான் துன்புறுகின்றேன்.  எம் இல்லத்திலிருந்து அடர்ந்த கூந்தலையுடைய எம் மகளைத் தன் சொற்களால் மயக்கி உடன் அழைத்துச் சென்ற துணிந்த வலிமையுடைய (கொடிய) இளைஞனைப் பெற்ற தாய், எம்மைப்போல் பெரிதாக நடுங்கட்டும்.

குறிப்பு:  காக்கைக்கு உணவு அளித்தல் – நற்றிணை 258, 281, 293, 343, 367, குறுந்தொகை 210, ஐங்குறுநூறு 391.  ஒப்புமை:  நற்றிணை 184 – மணி ஏர் நொச்சி, நற்றிணை 293 – மணிக் குரல் நொச்சி.  பார் முது குயவன் (2) – ஒளவை துரைசாமி உரை – பாரில் மக்கள் இனத்துள் தோன்றிய முதுகுடிகளுள் குயவன் உண்கலம் சமைத்துத் தருவதால் சிறந்தமையின் பார் முது குயவன் என்றார், பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் – பரிய முதிய குயவன்.

சொற்பொருள்:  மணிக் குரல் நொச்சித் தெரியல் சூடி பலிக்கள் ஆர் கைப் பார் முது குயவன் இடு பலி நுவலும் அகன்தலை மன்றத்து விழவுத் தலைக்கொண்ட பழ விறல் மூதூர்ப் பூங்கண் ஆயம் காண்தொறும் – நீலமணி நிறப் பூங்கொத்துக்கள் உடைய நொச்சியின் மலர்மாலையை அணிந்து பலிகளைப் புரியும் பெரிய கையையுடைய பருத்த (பெரிய) முதிய குயவன் இடுகின்ற பலியை உண்ண அழைக்கும் அகன்ற இடத்தையுடைய மன்றத்தில் திருவிழாக்களை மேற்கொண்ட பழமையான வெற்றிகரமான பண்டைய ஊரில் மலர்போன்ற கண்களையுடைய அவள் தோழியரைக் காணும்பொழுதெல்லாம், எம் போல் பெரு விதுப்பு உறுக – எம்மைப்போல் பெரிதாக நடுங்கட்டும், மாதோ – மாது ஓ அசைநிலைகள், எம் இல் பொம்மல் ஓதியைத் தன் மொழிக் கொளீஇக் கொண்டு உடன் போக வலித்த வன்கண் காளையை ஈன்ற தாயே – எம் இல்லத்திலிருந்து அடர்ந்த கூந்தலையுடைய எம் மகளைத் தன் சொற்களால் மயக்கி உடன் அழைத்துச் சென்ற துணிந்த வலிமையுடைய  (கொடிய) இளைஞனைப் பெற்ற தாய் (பொம்மல் ஓதி – பண்புத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை, தாயே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 294, புதுக்கயத்து வண்ணக்கன் கம்பூர் கிழார், குறிஞ்சித் திணை தோழி தலைவியிடம் சொன்னது
தீயும் வளியும் விசும்பு பயந்தாங்கு,
நோயும் இன்பமும் ஆகின்று மாதோ,
மாயம் அன்று தோழி, வேய் பயின்று
எருவை நீடிய பெருவரை அகந்தொறும்,
தொன்று உறை துப்பொடு முரண் மிகச் சினைஇக்  5
கொன்ற யானைக் கோடு கண்டன்ன,
செம்புடைக் கொழு முகை அவிழ்ந்த காந்தள்
சிலம்புடன் கமழும் சாரல்
இலங்கு மலை நாடன் மலர்ந்த மார்பே.

பாடல் பின்னணி:  மண மனையில் புக்க தோழி தலைவியின் கவின் கண்டு சொல்லியது.

பொருளுரை:  தோழி!  மூங்கில் அடர்ந்து கொறுக்கச்சி நெடிது வளர்ந்த பெரிய மலையிடம் எங்கும், தொன்று தொட்டு வரும் பகையினால் மாறுபாடு மிகுந்து சினத்துடன் புலியைக் கொன்ற யானையின் மருப்பைக் (கோட்டை, தந்தத்தை) கண்டாற்போல், சிவந்த புற இதழ்களையுடைய கொழுத்த அரும்புகள் அவிழ்ந்த காந்தள் பூக்கள் மலையெங்கும் கமழும் ஒளிரும் மலைநாடனின் அகன்ற மார்பு, தீயையும் காற்றையும் வானம் தந்தாற்போல் களவுக்காலத்தில் துன்பத்தையும் மணவாழ்க்கையில் இன்பத்தையும் முறையே தந்துள்ளது.  இது பொய் அன்று

குறிப்பு:  உள்ளுறை 1 – ஒளவை துரைசாமி உரை – பகைவென்று சிவந்த யானைக்கோடு போன்ற காந்தள் சிலம்பகம் எங்கும் மணங்கமழும் என்றது, அலர் கூறுவார் தலை மடங்கத் தலைமகளை மணந்து கொண்ட தலைவனது அன்பொழுக்கம் மலையகம் முழுவதும் பரவி மாண்புறுத்துகின்றது என்பது. உள்ளுறை 2 – கு. வெ. பாலசுப்பிரமணியன் உரை – மலையெங்கும் காந்தள் கமழும் என்றது தலைவனின் அன்பு தலைவியின் உறவினர் எல்லார்க்கும் மகிழ்ச்சி பயக்கும் என்பதுணர்த்தி நின்றது.  ஒப்புமை: நற்றிணை 247 – தொன்றுபடு துப்பொடு முரண் மிகச் சினைஇக் கொன்ற யானை.

சொற்பொருள்:  தீயும் வளியும் விசும்பு பயந்தாங்கு நோயும் இன்பமும் ஆகின்று – தீயையும் காற்றையும் வானம் தந்தாற்போல் துன்பமும் இன்பமும் முறையே உள்ளன, மாதோ – மாது, ஓ அசைநிலைகள், மாயம் அன்று – இது பொய் அன்று, தோழி – தோழி, வேய் பயின்று எருவை நீடிய பெருவரை அகந்தொறும் தொன்று உறை துப்பொடு முரண் மிகச் சினைஇக் கொன்ற யானைக் கோடு கண்டன்ன – மூங்கில் அடர்ந்து கொறுக்கச்சி நெடிது வளர்ந்த பெரிய மலையிடம் எங்கும் தொன்று தொட்டு வரும் பகையினால் மாறுபாடு மிகுந்து சினத்துடன் புலியைக் கொன்ற யானையின் மருப்பைக் (கோட்டை, தந்தத்தை) கண்டாற்போல் (வேய் – மூங்கில், எருவை – Arundo donax, Bamboo reed, சினைஇ – அளபெடை), செம்புடைக் கொழு முகை அவிழ்ந்த காந்தள் சிலம்புடன் கமழும் சாரல் இலங்கு மலை நாடன் மலர்ந்த மார்பே – சிவந்த புற இதழ்களையுடைய கொழுத்த அரும்புகள் அவிழ்ந்த காந்தள் பூக்கள் மலையெங்கும் கமழும் ஒளிரும் மலைநாடனின் அகன்ற மார்பு (மார்பே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 295, ஒளவையார், நெய்தல் திணை – தோழி சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி 
முரிந்த சிலம்பின் எரிந்த வள்ளியின்
புறன் அழிந்து ஒலிவரும் தாழ் இருங்கூந்தல்
ஆயமும் அழுங்கின்று, யாயும் அஃது அறிந்தனள்,
அருங்கடி அயர்ந்தனள் காப்பே, எந்தை
வேறு பல் நாட்டுக் கால் தர வந்த  5
பல வினை நாவாய் தோன்றும் பெருந்துறைக்
கலிமடைக் கள்ளின் சாடி அன்ன, எம்
இள நலம் இற்கடை ஒழியச்
சேறும் வாழியோ முதிர்கம் யாமே.

பாடல் பின்னணி:  தலைவி இற்செறிக்கப்பட்டாள் என்பதை அறிவுறுத்தி வரைவு கடாயது.

பொருளுரை:  மேல்பகுதி சரிந்த மலைப்பக்கத்தில் கருகிய வள்ளிக்கொடியைப் போல் முதுகில் அழகு அழிந்த அடர்ந்த தாழ்ந்த கரிய கூந்தலையுடைய தோழியர் கூட்டமும் வருந்தியது.  தாயும் அதை அறிந்தவளாய் இற்செறித்துக் கடத்தற்கு அரிய காவலை அமைத்தாள்.  எம் தந்தை வேறு பல நாட்டிலிருந்து காற்றுச் செலுத்துவதால் வந்த பல தொழிலால் சிறப்புற்ற கப்பல்கள் தோன்றும் பெரிய துறையில், உண்ணுவதற்குச் செருக்குடன் சேர்த்து வைத்திருக்கும் கள்ளின் சாடி போன்ற எம்முடைய இளமை அழகு இல்லில் இருக்கும்படியாக, யாம் எம் இல்லம் சேர்வோம்.  அம்மனையிலிருந்து யாம் முதிர்வோம்.  எம்மை இந்நிலைக்கு ஆளாக்கிய நீ நீடு வாழ்வாயாக!

குறிப்பு:  முரிந்த சிலம்பின் எரிந்த வள்ளியின் புறன் அழிந்து ஒலிவரும் தாழ் இருங்கூந்தல் ஆயமும் அழுங்கின்று (1–3) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – தலை சரிந்த மலைப்பக்கத்தில் முதலொடு கருகிய வள்ளிக்கொடி போல, மேலின் அழகெல்லாம் அழிந்து தழைந்த தாழ்ந்த கரிய கூந்தலையுடைய தோழியர் குழாமும் வருந்தி அழுங்காநின்றது.  புறன் (2) – ஒளவை துரைசாமி உரை – முதுகு.   கலிமடை (7) – ஒளவை துரைசாமி உரை – மென்மேலும் உண்ணப்படும் கள், பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – செருக்கு மிகுகின்ற கள்.   கடி – கடி என் கிளவி வரைவே கூர்மை காப்பே புதுமை விரைவே விளக்கம் மிகுதி சிறப்பே அச்சம் முன்தேற்று ஆயீர் ஐந்தும் மெய்ப்படத் தோன்றும் பொருட்டு ஆகும்மே (தொல்காப்பியம், உரியியல் 87).  வாழி (9) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – இகழ்ச்சிக் குறிப்பு.

சொற்பொருள்:  முரிந்த சிலம்பின் எரிந்த வள்ளியின் புறன் அழிந்து ஒலிவரும் தாழ் இருங்கூந்தல் ஆயமும் அழுங்கின்று – மேல்பகுதி சரிந்த மலைப்பக்கத்தில் கருகிய வள்ளிக்கொடியைப் போல் முதுகில் அழகு அழிந்த அடர்ந்த தாழ்ந்த கரிய கூந்தலையுடைய தோழியர் கூட்டமும் வருந்தியது (வள்ளியின் – இன் உருபு ஒப்புப் பொருளில் வந்தது, ஐந்தாம் வேற்றுமை உருபு), யாயும் அஃது அறிந்தனள் அருங்கடி அயர்ந்தனள் காப்பே – தாயும் அதை அறிந்தவளாய் இற்செறித்துக் கடத்தற்கு அரிய காவலை அமைத்தாள் (அறிந்தனள் – முற்றெச்சம்), எந்தை வேறு பல் நாட்டுக் கால் தர வந்த பல வினை நாவாய் தோன்றும் பெருந்துறைக் கலிமடைக் கள்ளின் சாடி அன்ன எம் இள நலம் இற்கடை ஒழியச் சேறும்  எம் தந்தை வேறு பல நாட்டிலிருந்து காற்றுச் செலுத்துவதால் வந்த பல தொழிலால் சிறப்புற்ற கப்பல்கள் தோன்றும் பெரிய துறையில் உண்ணுவதற்குச் செருக்குடன் சேர்த்து வைத்திருக்கும் கள்ளின் சாடி போன்ற எம்முடைய இளமை அழகு இல்லில் இருக்கும்படியாக யாம் எம் இல்லம் சேர்வோம், வாழியோ – நீ நீடு வாழ்வாயாக (ஓகாரம் அசைநிலை), முதிர்கம் யாமே – மனையிலிருந்து யாம் முதிர்வோம் (யாமே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 296, குதிரைத் தறியனார், பாலைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
என் ஆவது கொல் தோழி? மன்னர்
வினை வல் யானைப் புகர் முகத்து அணிந்த
பொன் செய் ஓடைப் புனை நலம் கடுப்பப்,
புழற் காய்க் கொன்றைக் கோடு அணி கொடி இணர்
ஏ கல் மீமிசை மேதக மலரும்,  5
பிரிந்தோர் இரங்கும் அரும் பெறல் காலையும்,
வினையே நினைந்த உள்ளமொடு துனைஇச்
செல்ப என்ப காதலர்,
ஒழிதும் என்ப நாம் வருந்து படர் உழந்தே.  9

பாடல் பின்னணி:  தோழியால் பிரிவு உணர்த்தப்பட்ட தலைவி உரைத்தது.

பொருளுரை:  அரசர்களின் போர்த்தொழிலில் வல்ல யானையின் புள்ளிகளையுடைய முகத்தில் அணிந்த பொன்னால் செய்யப்பட்ட பட்டத்தின் ஒப்பனை அழகை ஒத்த, உள்ளே உட்துளையுடைய காய்களைக் கொண்ட கொன்றை மரத்தின் கிளைகளில் அழகிய கொடிபோன்ற பூங்கொத்துக்கள், பெரிய மலையின் மிக உயர்ந்த இடத்தில் மிகவும் சிறப்பாக மலர்கின்ற, பிரிந்தவர்கள் வருந்தும் பெறுவதற்கு அரிய வேளையாகிய கார்காலத்திலும், தாம் செய்யவேண்டிய வினையை நினைத்த உள்ளத்துடன் நம் தலைவர் விரைந்து செல்வார் எனக் கூறுகின்றனர், நம்மை வருத்துகின்ற துன்பத்தில் ஆழ்த்தி.  இனி எவ்வாறு முடியுமோ?

குறிப்பு:  இறைச்சி – கு. வெ. பாலசுப்பிரமணியன் உரை – கார்காலத்தில் கொன்றையானையது நெற்றிப்பட்டம் போல மலருமென்றது, தலைவற்கு இல்லறக் கிழத்தியாக உரிமை பூண்டு ஒழுகியவள், கார் நீக்கத்தில் கொன்றை மலர் உதிர்வதுபோல உயிரிழப்பேன் எனக் கூறியதை உணர்த்தியது.  துனை – கதழ்வும் துனைவும் விரைவின் பொருள் (தொல்காப்பியம், உரியியல் 19).  – ஏ பெற்று ஆகும் (தொல்காப்பியம், உரியியல் 8).  பெற்று – பெருக்கம்.  என்ப (8, 9) – பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் உரை – என்ப இரண்டும் அசை, ஒளவை துரைசாமி உரை – என்ப என்பது ‘எனக் கூறுவர்’.

சொற்பொருள்:  என் ஆவது கொல் – இனி எவ்வாறு முடியுமோ (கொல் – அசைநிலை), தோழி – தோழி, மன்னர் வினை வல் யானைப் புகர் முகத்து அணிந்த பொன் செய் ஓடைப் புனை நலம் கடுப்பப் புழற் காய்க் கொன்றைக் கோடு அணி கொடி இணர் ஏ கல் மீமிசை மேதக மலரும் பிரிந்தோர் இரங்கும் அரும் பெறல் காலையும் – அரசர்களின் போர்த்தொழிலில் வல்ல யானையின் புள்ளிகளையுடைய முகத்தில் அணிந்த பொன்னால் செய்யப்பட்ட பட்டத்தின் ஒப்பனை அழகை ஒத்த உள்ளே உட்துளையுடைய காய்களைக் கொண்ட கொன்றை மரத்தின் கிளைகளில் அழகிய கொடிபோன்ற பூங்கொத்துக்கள் பெரிய மலையின் மிக உயர்ந்த இடத்தில் மிகவும் சிறப்பாக மலரும் பிரிந்தவர்கள் வருந்தும் பெறுவதற்கு அரிய வேளையும் (கடுப்ப – உவம உருபு, மீமிசை – ஒருபொருட் பன்மொழி, அரும் பெறல் – பெறல் அரும், பெறுவதற்கு அரிய), வினையே நினைந்த உள்ளமொடு – தாம் செய்யவேண்டிய வினையை நினைத்த உள்ளத்துடன்,  துனைஇச் செல்ப என்ப – விரைந்து செல்வார் எனக் கூறுகின்றனர் (துனைஇ – அளபெடை), காதலர் ஒழிதும் என்ப – நம் தலைவர் செல்வார் எனக் கூறுகின்றனர், நாம் வருந்து படர் உழந்தே – நம்மை வருத்துகின்ற துன்பத்தில் ஆழ்த்தி (உழந்தே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 297, மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார், குறிஞ்சித் திணை – தோழி தலைவியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
பொன் செய் வள்ளத்துப் பால் கிழக்கு இருப்ப,
நின் ஒளி ஏறிய சேவடி ஒதுங்காய்;
பல் மாண் சேக்கைப் பகை கொள நினைஇ,
மகிழா நோக்கம் மகிழ்ந்தனை போன்றனை;
‘எவன் கொல்?’ என்று நினைக்கலும் நினைத்திலை;  5
நின்னுள் தோன்றும் குறிப்பு நனி பெரிதே;
சிதர் நனை முணைஇய சிதர் கால் வாரணம்
முதிர் கறி யாப்பில் துஞ்சும் நாடன்
மெல்ல வந்து, நல் அகம் பெற்றமை
மையல் உறுகுவள் அன்னை;  10
ஐயம் இன்றிக் கடுங்கூவினளே.

பாடல் பின்னணி:  தலைவன் வரையாது வந்து ஒழுகுகின்றான்.  தோழி அவனிடம் குறிப்பால் வரைவு வேண்டினாள்.

பொருளுரை:  பொன்னால் செய்த கிண்ணத்தில் உள்ள பால் உன்னால் உண்ணப்படாமல் கீழே இருக்கின்றது.  உன் மேனியில் ஒளியுடைய பசலைத் தோன்றியுள்ளது.  சிவந்த உன் காலடியை எடுத்து வைத்து நீ நடக்கவில்லை.  பல மாட்சிமையுடைய உன் படுக்கையை நீ பகையாக எண்ணி, மகிழ்ந்த பார்வையையுடைய கள் குடித்தவனின் தோற்றம் போல் மயங்கி உள்ளாய்.  எதனால் இவ்வாறு உள்ளாய் என்று நீ நினைக்கவும் இல்லை.  உன்னிடத்தில் தோன்றும் எண்ணம் மிகப் பெரியதாக உள்ளது.  வண்டுகள் மொய்க்கின்ற மலரும் பருவத்திலிருக்கும் அரும்புகளை வெறுத்த மெல்லிய கால்களையுடைய காட்டுக்கோழி, முதிர்ந்த மிளகுக் கொடிகள் ஒன்றோடொன்று பின்னியிருக்கும் இடத்தில் உறங்கும் நாடன் மெல்ல வந்து, உன் நல்ல மார்பினைத் தழுவியதை அறிந்து, அன்னைமனம் கலங்கினவளாகி, ஐயம் இல்லாது, கடுமையான குரலில் கத்துகின்றாள்.

குறிப்பு:  உள்ளுறை – கு. வெ. பாலசுப்பிரமணியன் உரை – கோழி மலரை வெறுத்து மிளகுக்கொடியில் துயிலும் என்றது தலைவியை விடுத்துத் தலைவன் தன்னூரில் மறைந்து வாழ்கிறான் என்பதை உணர்த்திற்று.  மகிழா – மகிழ்ந்த என்பது பொருள்.  செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம்.  எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது.  நனி – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3).  மகிழா நோக்கம் (4) – ஒளவை துரைசாமி உரை – கள்ளுண்டார் எய்தும் மையல் நோக்கம், H. வேங்கடராமன் உரை – மகிழ்ந்த பார்வை.  முணைஇய – இச்சொல் முனைஇய என்றும் எழுதப்படும்.

சொற்பொருள்:  பொன் செய் வள்ளத்துப் பால் கிழக்கு இருப்ப – பொன்னால் செய்த கிண்ணத்தில் பால் கீழே இருக்க, நின் ஒளி ஏறிய – உன் மேனியில் ஒளியுடைய பசலைத் தோன்றியுள்ளது, சேவடி ஒதுங்காய் – சிவந்த உன் காலடியை எடுத்து வைத்து நீ நடக்கவில்லை, பல் மாண் சேக்கைப் பகை கொள நினைஇ மகிழா நோக்கம் மகிழ்ந்தனை போன்றனை – பல மாட்சிமையுடைய படுக்கையை நீ பகையாக எண்ணி மகிழ்ந்த பார்வையையுடைய கள் குடித்தவனின் தோற்றம் போல் மயங்கி உள்ளாய் (நினைஇ – அளபெடை), எவன் கொல் என்று நினைக்கலும் நினைத்திலை – எதனால் என்று நீ நினைக்கவும் இல்லை (கொல் – அசைநிலை), நின்னுள் தோன்றும் குறிப்பு நனி பெரிதே – உன்னிடத்தில் தோன்றும் எண்ணம் மிகப் பெரியதாக உள்ளது (நனி பெரிதே – ஒருபொருட் பன்மொழி, பெரிதே – ஏகாரம் அசைநிலை), சிதர் நனை முணைஇய சிதர் கால் வாரணம் முதிர் கறி யாப்பில் துஞ்சும் நாடன் மெல்ல வந்து – வண்டுகள் மொய்க்கின்ற மலரும் பருவத்திலிருக்கும் அரும்புகளை வெறுத்த மெல்லிய கால்களையுடைய காட்டுக்கோழி முதிர்ந்த மிளகுக் கொடிகள் ஒன்றோடொன்று பின்னியிருக்கும் இடத்தில் உறங்கும் நாடன் மெல்ல வந்து (முணைஇய – அளபெடை), நல் அகம் பெற்றமை – உன் நல்ல மார்பினைத் தழுவியதை, மையல் உறுகுவள் – கலங்கினவளாகி, அன்னை ஐயம் இன்றிக் கடுங்கூவினளே – அன்னை ஐயம் இல்லாது கடுமையான குரலில் கத்துகின்றாள் (கடுங்கூவினளே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 298, விற்றூற்று வண்ணக்கன் தத்தனார், பாலைத் திணை – தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது
வம்ப மாக்கள் வருதிறம் நோக்கிச்,
செங்கணை தொடுத்த செயிர் நோக்கு ஆடவர்
மடி வாய்த் தண்ணுமைத் தழங்குகுரல் கேட்ட
எருவைச் சேவல் கிளைவயிற் பெயரும்
அருஞ்சுரக் கவலை, அஞ்சுவரு நனந்தலைப்  5
பெரும் பல் குன்றம் உள்ளியும், மற்று இவள்
கரும்புடைப் பணைத்தோள் நோக்கியும், ஒரு திறம்
பற்றாய் வாழி எம் நெஞ்சே! நல் தார்ப்
பொற்தேர்ச் செழியன் கூடல் ஆங்கண்,
ஒருமை செப்பிய அருமை வான் முகை  10
இரும் போது கமழுங் கூந்தல்,
பெருமலை தழீஇயும் நோக்கு இயையுமோ மற்றே?

பாடல் பின்னணிதோழி தலைவனை நெருங்கி ‘நீ பொருளீட்டி வருக’ என்று கூறினாள்.  தலைவன் தன் நெஞ்சிற்குச் சொல்லி செலவு அழுங்கியது.

பொருளுரை:  நீடு வாழ்வாயாக என் நெஞ்சே!  புதிய வழிபோக்கர்கள் வரும் நிலையை நோக்கி சிவந்த அம்பைச் செலுத்திய, சினத்துடன் நோக்கும் ஆறலை கள்வர்களின் தோல் மடிக்கப்பட்ட மேல் பகுதியையுடைய தண்ணுமையின் ஓசையைக் கேட்ட பருந்தின் ஆண்பறவை, தன் சுற்றத்துடன் அஞ்சி விலகும் கடத்தற்கு அரிய பாலை நிலத்தின் பிரிவுகளையுடை அச்சம் தரும் அகன்ற இடங்களையுடைய பெரிய பல குன்றங்களை எண்ணியும், இவளுடைய தொய்யில் வரையப்பட்ட மூங்கில் போன்ற (பருத்த) தோள்களை நோக்கியும், இரண்டிலும் யாதேனும் ஒரு முறையை நீ கடைப்பிடிக்காது உள்ளாய்.  நல்ல மாலையை அணிந்தவனும், பொன்னால் செய்த தேரையுமுடைய பாண்டியனின் கூடலில், ஒரு தன்மையால் இவளுடைய தோழி (யாம்) கூறிய அருமையான சொற்களால், வெள்ளை அரும்புகள் பெரிய மலர்களால் மலர்ந்து நறுமணம் கமழும் கூந்தலையுடைய தலைவியைப் பெரிய மலைக்கு வந்தவிடத்தும் காண முடியுமோ?

குறிப்பு:  ஒருமை செப்பிய அருமை (10) – ஒளவை துரைசாமி உரை – பண்டு யாம் ஒருதலையாய்த் தெளிய உரைத்த அரிய மொழியினை நினைந்து, பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – இவள் தோழி ஒருதன்மையாகப் பொருள்வயிற் செல்லும்படி உறுதிப்படுத்திக் கூறிய அருமையான மொழியினால்.  இறைச்சி – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – எருவை சேவல் தண்ணுமை அஞ்சித் தன் சுற்றத்திடத்துப் பெயர்ந்து செல்லாநிற்கும் என்றது, யாம் பொருள்வயின் சென்றாலும் ஈண்டு இவள் படும் ஏதத்தைக் கருதின் அஞ்சி மீண்டு எய்துவாம் போலும்.  வரலாறு:  செழியன், கூடல்.  நனந்தலை – அகன்ற இடம், நனம் – நனவே களனும் அகலமும் செய்யும் (தொல்காப்பியம், உரியியல் 80).  சேவல் – சேவல் பெயர்க்கொடை சிறகொடு சிவணும் மா இருந் தூவி மயில் அலங்கடையே (தொல்காப்பியம், மரபியல் 49).

சொற்பொருள்:  வம்ப மாக்கள் வருதிறம் நோக்கிச் செங்கணை தொடுத்த செயிர் நோக்கு ஆடவர் மடி வாய்த் தண்ணுமைத் தழங்குகுரல் கேட்ட எருவைச் சேவல் – புதிய வழிபோக்கர்கள் வரும் நிலையை நோக்கி சிவந்த அம்பைச் செலுத்திய சினத்துடன் நோக்கும் ஆறலை கள்வர்களின் தோல் மடிக்கப்பட்ட மேல் பகுதியையுடைய தண்ணுமையின் ஓசையைக் கேட்ட பருந்தின் ஆண்பறவை (தழங்குகுரல் – வினைத்தொகை), கிளைவயிற் பெயரும் அருஞ்சுரக் கவலை அஞ்சுவரு நனந்தலைப் பெரும் பல் குன்றம் உள்ளியும் – தன் சுற்றத்துடன் அஞ்சி விலகும் கடத்தற்கு அரிய பாலை நிலத்தின் பிரிவுகளையுடை அச்சம் தரும் அகன்ற இடங்களையுடைய பெரிய பல குன்றங்களை எண்ணியும், மற்று இவள் கரும்புடைப் பணைத்தோள் நோக்கியும் – இவளுடைய தொய்யில் வரையப்பட்ட மூங்கில் போன்ற (பருத்த) தோள்களை நோக்கியும் (மற்று – அசை நிலை), ஒரு திறம் பற்றாய் – இரண்டிலும் யாதேனும் ஒரு முறையை நீ கடைப்பிடிக்காது உள்ளாய், வாழி எம் நெஞ்சே – நீடு வாழ்வாயாக என் நெஞ்சே, நல் தார்ப் பொற்தேர்ச் செழியன் கூடல் ஆங்கண் ஒருமை செப்பிய அருமை வான் முகை இரும் போது கமழுங் கூந்தல் பெருமலை தழீஇயும் நோக்கு இயையுமோ மற்றே – நல்ல மாலை அணிந்த பொன்னால் செய்த தேரையுடைய பாண்டியனின் கூடலில் ஒரு தன்மையால் இவளுடைய தோழி கூறிய (யாம் கூறிய) அருமையான சொற்களால் வெள்ளை அரும்புகள் பெரிய மலர்களால் மலர்ந்து நறுமணம் கமழும் கூந்தலையுடைய தலைவியைப் பெரிய மலைக்கு வந்தவிடத்தும் காண முடியுமோ (தழீஇயும் – செய்யுளிசை அளபெடை, வான் முகை இரும் போது கமழுங் கூந்தல் – அன்மொழித்தொகை, மற்றே – மற்று, ஏகாரம் அசைநிலைகள்)

நற்றிணை 299, வடம வண்ணக்கன் பேரிசாத்தனார், நெய்தல் திணை – தோழி தலைவியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
உருகெழு யானை உடை கோடு அன்ன
ததர் பிணி அவிழ்ந்த தாழை வான் பூ,
தயங்கு இருங்கோடை தூக்கலின் நுண் தாது
வயங்கிழை மகளிர் வண்டல் தாஅம்
காமர் சிறுகுடி புலம்பினும், அவர் காண்,  5
நாம் இலம் ஆகுதல் அறிதும் மன்னோ,
வில் எறி பஞ்சி போல, மல்கு திரை
வளி பொரு வயங்கு பிசிர் பொங்கும்
நளி கடற் சேர்ப்பனொடு நகாஅ ஊங்கே.

பாடல் பின்னணி:  வரைவு கடாயது.

பொருளுரை:  அச்சம் தரும் யானையின் மருப்பு (கோடு, தந்தம்) அன்ன நெருங்கிய பிணிப்பு அவிழ்ந்த தாழையின் வெள்ளை மலர்களின் மேல் இயங்கும் கடிய மேல்காற்று மோதுவதால், அவற்றின் நுண்ணிய மலர்த்தாதுக்கள், விளங்குகின்ற அணிகலன்களை அணிந்த மகளிரின் வண்டல் விளையாட்டு விளையாடும் இடங்களில் உதிர்ந்து பரவி இருக்கும் அழகிய சிறிய குடியில் நாம் தனிமையுற்று வருந்தினாலும், அவரைக் காணாத நாம் வாழும் தன்மையை உடையவர்கள் இல்லை என்பதை அறிவோம், வில்லால் அடித்த பஞ்சுபோல் பெருகிய அலைகளில் காற்று மோதுவதால் ஒளிரும் நீர்த்துவலைகள் பொங்கி எழுகின்ற நெருங்கிய கடலின் தலைவனுடன் மகிழ்ந்து கூடாத நாட்களில்.

குறிப்பு:  உள்ளுறை – பொ. வே. சோமசுந்தரனார் உரை – தாழை வான்பூவனைக் காற்று மோதுதலானே அதன் தாது மகளிர் ஆடல் அரங்கத்தே பரவும் என்றது, தலைவன் தலைவியைக் களவு மணம் செய்துகொண்ட செய்தியை அம்பல் பெண்டிர் தூற்றலின், ஊர் எங்கும் அலர் பரவிற்று என்பது.  ஒப்புமை: அகநானூறு 133 – வில் எறி பஞ்சியின், அகநானூறு 217 – பொங்கல் வெண்மழை எஃகுறு பஞ்சித் துய்ப்பட்டன்ன, நற்றிணை 247 – இன் குரல் எழிலி எஃகுறு பஞ்சிற்று ஆகி, நற்றிணை 299 – வில் எறி பஞ்சி போல.  நகாஅ – செய என்னும் வாய்பாட்டு வினையெச்சம்.  உருகெழு (1) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – அச்சத்தைச் செய்கின்ற, H. வேங்கடராமன் உரை – அச்சத்தைத் தருகின்ற, ஒளவை துரைசாமி உரை – நன்னிறம் பொருந்திய.  சிறுகுடி புலம்பினும் (5) – கு. வெ. பாலசுப்பிரமணியன் உரை – சிறிய குடியிருப்பு நம்மைத் தனிமைப்படுத்துவது ஆயினும், பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – சிறிய நம்மூர் வருத்தமுறுவதாயினும், ஒளவை துரைசாமி உரை – இச்சீறூர்க்கண் யாம் தனிமையுற்று வருந்தியவிடத்தும், H. வேங்கடராமன் உரை – சிறிய நம்மூர் வருந்திப் புலம்புவதாயினும்.  புலம்பு – புலம்பே தனிமை (தொல்காப்பியம், உரியியல் 35).

சொற்பொருள்:  உருகெழு யானை உடை கோடு அன்ன ததர் பிணி அவிழ்ந்த தாழை வான் பூ தயங்கு இருங்கோடை தூக்கலின் – அச்சம் தரும் யானையின் மருப்பு (கோடு, தந்தம்) அன்ன நெருங்கிய பிணிப்பு அவிழ்ந்த தாழையின் வெள்ளை மலர்களின் மேல் இயங்கும் கடிய மேல்காற்று மோதுவதால், நுண் தாது வயங்கிழை மகளிர் வண்டல் தாஅம் காமர் சிறுகுடி புலம்பினும் – நுண்ணிய மலர்த்தாதுக்கள் விளங்குகின்ற அணிகலன்களை அணிந்த மகளிரின் வண்டல் விளையாட்டு விளையாடும் இடங்களில் உதிர்ந்து பரவி இருக்கும் அழகிய சிறிய குடியில் நாம் தனிமையுற்று வருந்தினாலும் (தாஅம் – செய்யுளிசை அளபெடை), அவர் காண் நாம் இலம் ஆகுதல் அறிதும் – அவரைக் காணாத நாம் வாழும் தன்மையை உடையவர்கள் இல்லை என்பதை அறிவோம், மன்னோ – மன், ஓ அசைநிலைகள், வில் எறி பஞ்சி போல மல்கு திரை வளி பொரு வயங்கு பிசிர் பொங்கும் நளி கடற் சேர்ப்பனொடு நகாஅ ஊங்கே – வில்லால் அடித்த பஞ்சுபோல் பெருகிய அலைகளில் காற்று மோதுவதால் ஒளிரும் நீர்த்துவலைகள் பொங்கி எழுகின்ற நெருங்கிய கடலின் தலைவனுடன் மகிழ்ந்து கூடாத நாளில் (நகாஅ – செய்யுளிசை அளபெடை, ஊங்கே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 300, பரணர், மருதத் திணை – காமக்கிழத்தியின் தோழியான விறலி பாணனிடம் சொன்னது அல்லது தோழி பாணனிடம் சொன்னது
சுடர்த் தொடிக் கோமகள் சினந்தென, அதன் எதிர்
மடத் தகை ஆயம் கைதொழுதாஅங்கு,
உறு கால் ஒற்ற ஒல்கி ஆம்பல்
தாமரைக்கு இறைஞ்சும் தண் துறை ஊரன்,
சிறுவளை விலை எனப் பெருந்தேர் பண்ணி, எம்  5
முன்கடை நிறீஇச் சென்றிசினோனே!
நீயும், தேரொடு வந்து பேர்தல் செல்லாது,
நெய் வார்ந்தன்ன துய் அடங்கு நரம்பின்
இரும் பாண் ஒக்கல் தலைவன்! பெரும் புண்
ஏஎர் தழும்பன் ஊணூர் ஆங்கண்,  10
பிச்சை சூழ் பெருங்களிறு போல, எம்
அட்டில் ஓலை தொட்டனை நின்மே.

பாடல் பின்னணி:  வாயில் மறுத்தது.  வரைவு கடாயதுமாம், மாற்றோர் நொதுமலாளர் வரைவின் மேலிட்டு.  மருதத்துக் களவு.  மருதத்துள் குறிஞ்சி.

பொருளுரை:  ஒளியுடைய வளையல்களை அணிந்த அரசகுமாரி சினந்ததால் அதற்கு எதிராக மடப்பத்தையுடைய அவள் தோழியர் கைதொழுது வணங்கினாற்போல் மிக்க காற்று வீசுவதால் குவிந்து தாமரைமலரிடத்து வந்து சாய்ந்து வணங்கும் குளிர்ந்த துறையின் ஊரன், ‘சிறு வளையல்களை அணிந்த இவளுக்கு விலை இது’ என்று பெரிய தேரை ஒப்பனித்து எம் இல்லின் முன் நிறுத்தி விட்டுச் சென்றான். நீயும் அவனுடைய தேருடன் வந்து அவனுடன் போகுதலைச் செய்யாது, நெய்யை வார்த்தாற்போல் பிசிர் நீங்கிய யாழையுடைய பெரிய பாணர்களின் சுற்றத்தின் தலைவனாகிய, போரில் பெரிய புண்ணை அடைந்து அழகு பெற்ற தழும்பன் என்பவனின் ஊணூரில் பிச்சைக்கு வந்த பெரிய களிற்று யானையைப் போல் எம்முடைய உணவுச் சாலையின் கூரையைத் தொட்டு நின்றாய்.

குறிப்பு:  ஒளவை துரைசாமி உரை – பரத்தைத் தலைவி பாணற்கு வாயில் மறுத்தது.  சென்றிசினோனே (6)  – தலைவன் வேறு ஒரு பரத்தைபாற் சென்றான், அல்லது அயலான் ஒருவன் தலைவியைத் திருமணம் செய்யும்பொருட்டு.  பரிசாகத் தன்னுடைய தேரை விட்டுச் சென்றுள்ளான்.  ஒளவை துரைசாமி உரை – ‘இரவுக் குறியே இல்லகத்துள்ளும்’ (தொல்காப்பியம், களவியல் 41) என்ற நூற்பா உரையில், இப்பாட்டின் ‘அட்டில் ஓலை தொட்டனை நின்மே’ என்ற அடியைக் காட்டி, இது ‘மனையோர் கிளவி கேட்கும் வழியது’ என்பர் நச்சினார்க்கினியர்.  உள்ளுறை – கு. வெ. பாலசுப்பிரமணியன் உரை – ஆம்பல் மலர்கள் காற்றினால் மோதப் பெற்றுத் தாமரையிடத்துத் தாழும் என்றது, தலைவன்  பாணனை வாயிலாக ஏவ அவன் வந்து பணிந்து நிற்றலை உணர்த்தும்.  கு. வெ. பாலசுப்பிரமணியன் உரை – பாணன் கலை வல்லவனாயினும் அவன் வந்த தூது இழிவுடையது என்பது காட்ட ‘பிச்சை சூழ் பெருங்களிறு’ என்றாள்.  பொ. வே. சோமசுந்தரனார் உரை – களிறு பிச்சைக்குச் சூழ்ந்து வரும் என்றது, அற நிலையங்கட்கு அரிசி முதலிய ஏற்றற்கு யானை தெருவிலே வரும் வழக்கத்தைக் குறித்தவாறு போலும்.  வரலாறு:  தழும்பன், ஊணூர்.  ஒப்புமை:  புறநானூறு 135 – புரி அடங்கு நரம்பின், சிறுபாணாற்றுப்படை 227 – அடங்கு புரி நரம்பின், பெரும்பாணாற்றுப்படை 15 – புரிஅடங்கு நரம்பின்.  உறு – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3).

சொற்பொருள்:  சுடர்த் தொடிக் கோமகள் சினந்தென அதன் எதிர் மடத் தகை ஆயம் கைதொழுதாஅங்கு உறு கால் ஒற்ற ஒல்கி ஆம்பல் தாமரைக்கு இறைஞ்சும் தண் துறை ஊரன் – ஒளியுடைய வளையல்களை அணிந்த அரசகுமாரி சினந்ததால் அதற்கு எதிராக மடப்பத்தையுடைய அவள் தோழியர் கைதொழுது வணங்கினாற்போல் மிக்க காற்று வீசுவதால் குவிந்து தாமரைமலரிடத்து வந்து சாய்ந்து வணங்கும் குளிர்ந்த துறையின் ஊரன் (கைதொழுதாஅங்கு – செய்யுளிசை அளபெடை, தாமரைக்கு இறைஞ்சும் – தாமரையிடம் இறைஞ்சும், வேற்றுமை மயக்கம்), சிறுவளை விலை எனப் பெருந்தேர் பண்ணி எம் முன்கடை நிறீஇச் சென்றிசினோனே – சிறு வளையல்களை அணிந்த இவளுக்கு விலை இது என்று பெரிய தேரை ஒப்பனித்து எம் இல்லின் முன் நிறுத்தி விட்டுச் சென்றான் (சிறுவளை  – அன்மொழித்தொகை, நிறீஇ – செய்யுளிசை அளபெடை, சென்றிசினோனே – சின் படர்க்கையின்கண் வந்தது, ஏகாரம் அசைநிலை), நீயும் தேரொடு வந்து பேர்தல் செல்லாது – நீயும் அவனுடைய தேருடன் வந்து அவனுடன் போகுதலைச் செய்யாது, நெய் வார்ந்தன்ன துய் அடங்கு நரம்பின் இரும் பாண் ஒக்கல் தலைவன் பெரும் புண் ஏஎர் தழும்பன் ஊணூர் ஆங்கண் பிச்சை சூழ் பெருங்களிறு போல எம் அட்டில் ஓலை தொட்டனை நின்மே – நெய்யை வார்த்தாற்போல் பிசிர் நீங்கிய யாழையுடைய பெரிய பாணர்களின் சுற்றத்தின் தலைவன் போரில் பெரிய புண்ணை அடைந்து அழகு பெற்ற தழும்பன் என்பவனின் ஊணூரில் பிச்சைக்கு வந்த பெரிய களிற்று யானையைப் போல் எம்முடைய உணவுச் சாலையின் கூரையைத் தொட்டு நின்றாய் (நின்மே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 301, பாண்டியன் மாறன் வழுதி, குறிஞ்சித் திணை – தோழி சொன்னது
நீள் மலைக் கலித்த பெருங்கோல் குறிஞ்சி
நாள் மலர் புரையும் மேனி பெருஞ்சுனை
மலர் பிணைத்தன்ன மா இதழ் மழைக் கண்,
மயில் ஓரன்ன சாயல், செந்தார்க்
கிளி ஓரன்ன கிளவி, பணைத்தோள்,  5
பாவை அன்ன வனப்பினள் இவள் எனக்
காமர் நெஞ்சமொடு பல பாராட்டி,
யாய் மறப்பு அறியா மடந்தை,
தேம் மறப்பு அறியாக் கமழ் கூந்தலளே.

பாடல் பின்னணி:  தோழி தன்னுள்ளே சொல்லியது.  தலைவன் தலைவியை விரைந்து வரைந்து கொள்ள வேண்டி, ‘அவன் வேண்டுகோளுக்கு இயையாது மறுத்துக் கூறினோம்.  அவன் படும் துன்பமும் அறிந்தோம்.  அன்னையோ தலைவியைப் பலகாலும் புகழ்கின்றாள்.  நாம் தலைவியைத் தலைவனுடன் கூட்டுவிப்பதை அறியின், அன்னை எத்தன்மையள் ஆவாளோ’ என வருந்திக் கூறியது.

பொருளுரை:  “நீண்ட மலையில் தழைத்த பெரிய தண்டையுடைய குறிஞ்சியின் அன்று மலர்ந்த மலர் போன்ற மேனியையும், பெரிய சுனையில் உள்ள நீலமலர்களை இணைத்தாற்போல் கரிய இமைகளைக் கொண்ட குளிர்ந்த கண்களையும், மயிலின் ஒரு தன்மையை ஒத்த மென்மையான சாயலையும், கழுத்தில் சிவந்த கோடுகளையுடைய கிளியின் சொற்கள் போன்ற சொற்களையும், மூங்கில் போன்ற தோள்களையும் பாவை போன்ற (கொல்லிப்பாவை போன்ற) அழகையும் உடையவள் இவள்”, என்று விருப்பமுடைய நெஞ்சத்துடன் பலவாகப் பாராட்டி, தாய் இவளை ஒருபோதும் மறக்க மாட்டாள், வண்டினம் மறவாது மொய்க்கும் மணம் கமழ்கின்ற கூந்தலை உடைய இவளை.  தலைவனுடன் இவளை நான் கூட்டுவித்தலை அறிந்தால் என்ன செய்வாளோ?

குறிப்பு:  சாயல் – சாயல் மென்மை (தொல்காப்பியம், உரியியல் 29).  பாவை அன்ன வனப்பினள் (6) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – கொல்லிப் பாவை போன்ற அழகுடையவள், ஒளவை துரைசாமி உரை – பாவை போன்ற வனப்பையுடையவள்.

சொற்பொருள்:  நீள் மலைக் கலித்த பெருங்கோல் குறிஞ்சி நாள் மலர் புரையும் மேனி – நீண்ட மலையில் தழைத்த பெரிய தண்டையுடைய குறிஞ்சியின் அன்று மலர்ந்த மலர் போன்ற மேனி (குறிஞ்சி  – Strobilanthes kunthiana, புரை – உவம உருபு), பெருஞ்சுனை மலர் பிணைத்தன்ன மா இதழ் மழைக் கண் – பெரிய சுனையில் உள்ள நீலமலர்களை இணைத்தாற்போல் கரிய இமைகளைக் கொண்ட குளிர்ந்த கண்கள், மயில் ஓர் அன்ன சாயல் – மயிலின் ஒரு தன்மையை ஒத்த சாயல், செந்தார்க் கிளி ஓர் அன்ன கிளவி – கழுத்தில் சிவந்த கோடுகளையுடைய கிளியின் சொற்கள் போன்ற சொற்கள், பணைத்தோள் பாவை அன்ன வனப்பினள் இவள் – மூங்கில் போன்ற (பருத்த) தோள்களையும் பாவை போன்ற (கொல்லிப்பாவை போன்ற) அழகையும் உடையவள் இவள், எனக் காமர் நெஞ்சமொடு பல பாராட்டி – என்று விருப்பமுடைய நெஞ்சத்துடன் பலவாகப் பாராட்டி, யாய் மறப்பு அறியா மடந்தை – தாய் இவளை ஒருபோதும் மறக்க மாட்டாள், தேம் மறப்பு அறியாக் கமழ் கூந்தலளே – வண்டினம் மறவாது மொய்க்கும் மணம் கமழ்கின்ற கூந்தலை உடையவள், நறுமணம் வீசும் எண்ணையை தடவிக் கொள்வதை மறக்காத மணம் கமழ்கின்ற கூந்தலை உடையவள் (கூந்தலளே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 302, மதுரை மருதன் இளநாகனார், பாலைத் திணை – தலைவி சொன்னது
இழை அணி மகளிரின் விழைதகப் பூத்த
நீடு சுரி இணர சுடர் வீக் கொன்றைக்
காடு கவின் பூத்த ஆயினும், நன்றும்
வருமழைக்கு எதிரிய மணி நிற இரும் புதல்
நரை நிறம்படுத்த நல் இணர்த் தெறுழ் வீ   5
தாஅம் தேரலர் கொல்லோ, சேய் நாட்டுக்
களிறு உதைத்து ஆடிய கவிழ்கண் இடு நீறு
வெளிறு இல் காழ வேலம் நீடிய
பழங்கண் முது நெறி மறைக்கும்,
வழங்கு அருங்கானம் இறந்திசினோரே?  10

பாடல் பின்னணி:  பொருள்வயின் பிரிந்த தலைவன் குறித்த பருவத்தில் வராததால் வருந்திய தலைவி கூறியது.

பொருளுரை:  பொன் அணிகலன்களை அணிந்த மகளிரைப்போன்று கண்டவர்கள் விரும்பி நோக்குமாறு பூத்த நீண்ட சுரிந்த கொத்துக்களையுடைய ஒளியுடைய மலர்களைக் கொண்ட கொன்றை மரங்கள் காடு அழகுபெறுமாறு பூத்தாலும், பெரிதும் மழையை நோக்கி இருக்கும் நீலமணியின் நிறமுடைய கரிய புதர்களில் தன் நிறம் மாறி வெளிறி இருக்கும் நல்ல கொத்துக்களை உடைய தெறுழ் கொடியின் மலர்கள் இருப்பதை அறியவில்லையா, தொலைவில் உள்ள நாட்டில் களிற்று யானைகள் தங்கள் கால்களால் உதைத்து விளையாடியதால் மேல்கீழாக எழுந்த துகள், வெளிறு இல்லாத வைரம் பாய்ந்த வேல மரங்கள் ஓங்கிய பழைய வழியை மறைத்து வழிப்போக்கர்களுக்குத் துன்பம் தரும் அரிய காட்டிற்குச் சென்ற தலைவர்?

குறிப்பு:  சின் – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம், சொல்லதிகாரம்.  இடையியல் 26, சின் என்பது இசின் என்பதன் முதற்குறை – ச. பாலசுந்தரம் உரை), அவற்றுள், இகுமும் சின்னும் ஏனை இடத்தொடும் தகு நிலை உடைய என்மனார் புலவர் (தொல்காப்பியம், இடையியல் 27).  குறுந்தொகை 27 – வண்டுபடத் ததைந்த கொடி இணர் இடையிடுபு பொன் செய் புனை இழை கட்டிய மகளிர் கதுப்பின் தோன்றும் புதுப் பூங்கொன்றை.  நன்று – நன்று பெரிது ஆகும் (தொல்காப்பியம், உரியியல் 45).

சொற்பொருள்:  இழை அணி மகளிரின் விழைதகப் பூத்த நீடு சுரி இணர சுடர் வீக் கொன்றைக் காடு கவின் பூத்த ஆயினும் – பொன் அணிகலன்களை அணிந்த மகளிரைப்போன்று கண்டவர்கள் விரும்பி நோக்குமாறு பூத்த நீண்ட சுரிந்த கொத்துக்களையுடைய ஒளியுடைய மலர்களைக் கொண்ட கொன்றை மரங்கள் காடு அழகுபெறுமாறு பூத்தாலும் (மகளிரின் – இன் ஒப்புப்பொருளில் வந்தது, ஐந்தாம் வேற்றுமை உருபு, கொன்றைமரம் – Laburnum, Golden Shower Tree, Cassia fistula), நன்றும் வருமழைக்கு எதிரிய மணி நிற இரும் புதல் நரை நிறம்படுத்த நல் இணர்த் தெறுழ் வீ தாஅம் தேரலர் கொல்லோ – பெரிதும் மழையை நோக்கி இருக்கும் நீலமணியின் நிறமுடைய கரிய புதர்களில் தன் நிறம் மாறி வெளிறி இருக்கும் நல்ல கொத்துக்களை உடைய தெறுழ் கொடியின் மலர்கள் இருப்பதை அறியவில்லையா (தெறுழ் – ஒரு காட்டுக்கொடிவகை, தாஅம் – செய்யுளிசை அளபெடை, கொல்லோ – கொல் ஐயப்பொருட்டு, ஓகாரம் அசைநிலை), சேய் நாட்டுக் களிறு உதைத்து ஆடிய கவிழ்கண் இடு நீறு வெளிறு இல் காழ வேலம் நீடிய பழங்கண் முது நெறி மறைக்கும் வழங்கு அருங்கானம் இறந்திசினோரே – தொலைவில் உள்ள நாட்டில் களிற்று யானைகள் கால்களால் உதைத்து விளையாடியதால் மேல்கீழாக எழுந்த துகள் வெளிறு இல்லாத வைரம் பாய்ந்த வேல மரங்கள் ஓங்கிய பழைய வழியை மறைத்து வழிப்போக்கர்களுக்குத் துன்பம் தரும் செல்லுவதற்கு அரிய காட்டிற்குச் சென்ற தலைவர் (கவிழ்கண் – மேல் கீழாக, காழ – வைரம் பாய்ந்த, வேல மரம் – Panicled babool, Acacia leucophloea, மிகுந்த உறுதியான, இறந்திசினோரே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 303, மதுரை ஆருலவியநாட்டு ஆலம்பேரி சாத்தனார், நெய்தல் திணை – தலைவி தோழியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
ஒலி அவிந்து அடங்கி யாமம் நள்ளெனக்
கலி கெழு பாக்கம் துயில் மடிந்தன்றே;
தொன்று உறை கடவுள் சேர்ந்த பராரை
மன்றப் பெண்ணை வாங்கு மடல் குடம்பைத்
துணை புணர் அன்றில் உயவுக் குரல் கேட்டொறும்,  5
‘துஞ்சாக் கண்ணள், துயர் அடச் சாஅய்,
நம் வயின் வருந்தும் நன்னுதல்’ என்பது
உண்டு கொல், வாழி தோழி, தெண் கடல்
வன் கைப் பரதவர் இட்ட செங்கோல்
கொடு முடி அவ் வலை பரியப் போக்கிக்,  10
கடு முரண் எறி சுறா வழங்கும்
நெடு நீர்ச் சேர்ப்பன் தன் நெஞ்சத்தானே?

பாடல் பின்னணி:  தலைவன் மீது உண்டாய காதலானது கைகடந்து பெருகிப்போனது.  அதைத் தாங்க இயலாத தலைவி, தோழியிடம் வருந்தி உரைத்தது.

பொருளுரை:  தோழி!  நீடு வாழ்வாயாக!  ஆரவாரம் அடங்கிச் செறிந்த இருளுடைய இரவில் ஓசை மிக்க கடற்கரை ஊரில் உள்ளவர்கள் உறங்கும் நேரத்தில், பண்டு முதல் உள்ள கடவுள் இருக்கும் பருத்த அடியை உடைய ஊர் மன்றத்தில் உள்ள பனை மரத்தின் வளைந்த மடலில் கட்டப்பட்ட கூட்டிலிருந்து தன் துணையுடன் கூடும் அன்றிலின் வருத்தம் மிகுந்த குரலைக் கேட்கும்பொழுதெல்லாம், ‘உறங்காத கண்களை உடையவளாகத் துயர் அடைந்து மெலிந்து நம்பொருட்டு வருந்துவாள் நல்ல நெற்றியை உடைய நம் தலைவி’ என்று எண்ணம் உண்டாகுமா, தெளிந்த கடலில் வலிய கைகளையுடைய மீனவர்கள் இட்ட சிவந்த கோலுடைய வளைந்த முடிச்சு உடைய அழகிய வலைகள் அறுபடுமாறு அச்சம் தரும் வலிமையையுடைய கொல்லும் சுறா மீன்கள் இயங்கும் நீண்ட நீர்த்துறைத் தலைவனின் நெஞ்சில்?

குறிப்பு:  ஒளவை துரைசாமி உரை – ‘மறைந்தவற் காண்டல்’ (தொல்காப்பியம், களவியல் 21) எனத் தொடங்கும் நூற்பாவின்கண் வரும் ‘காமஞ் சிறப்பினும்’ என்பதற்கு இதனைக் காட்டுவர் நச்சினார்க்கினியர்.  உள்ளுறை (1) – கு. வெ. பாலசுப்பிரமணியன் உரை – பரதவரின் வலையைக் கிழித்துக்கொண்டு சென்று சுறா இயங்கும் என்றது தலைவி தன் அன்பினால் பிணிக்கவும் தலைவன் தங்காது செல்லும் இயல்பினன் என்பதுணர்த்தவாம்.  உள்ளுறை (2) – ஒளவை துரைசாமி உரை – அவர் தெளித்த சொல்லாகிய வலைப்பட்டு அதன்கண்ணே நிற்றற்குரிய என் நெஞ்சம் அத்தனையும் கிழித்துக்கொண்டு துயருற்று வருந்துகின்றது; என் செய்வேன் என்பாள், வெளிப்பட உரைத்தலைப் பெண்மை தடுத்தலின், கடுமுரண் எறிசுறாவின் மேல் வைத்து உள்ளுறைத்தாள்.  வலையின் செங்கோல்:  அகநானூறு 60 – செங்கோல் அவ் வலை நெடுந்திமில் தொழிலொடு, அகநானூறு 220 – இருங்கழி முகந்த செங்கோல் அவ்வலை, நற்றிணை 214 – செங்கால் கொடு முடி அவ் வலை,  நற்றிணை 303 – பரதவர் இட்ட செங்கோல் கொடு முடி அவ் வலை.  கலி – கம்பலை சும்மை கலியே அழுங்கல் என்று இவை நான்கும் அரவப் பொருள (தொல்காப்பியம், உரியியல் 53).

சொற்பொருள்:  ஒலி அவிந்து அடங்கி யாமம் நள்ளெனக் கலி கெழு பாக்கம் துயில் மடிந்தன்றே – ஆரவாரம் அடங்கிச் செறிந்த இருளுடைய இரவில் ஓசை மிக்க கடற்கரை ஊரில் உள்ளவர்கள் உறங்கினார்கள் (பாக்கம் – ஆகுபெயர் அங்கு உள்ளவர்களுக்கு, மடிந்தன்றே – ஏகாரம் அசைநிலை), தொன்று உறை கடவுள் சேர்ந்த பராரை மன்றப் பெண்ணை வாங்கு மடல் குடம்பைத் துணை புணர் அன்றில் உயவுக் குரல் கேட்டொறும் – பண்டு முதல் உள்ள கடவுள் இருக்கும் பருத்த அடியை உடைய ஊர் மன்றத்தில் உள்ள பனை மரத்தின் வளைந்த மடலில் கட்டப்பட்ட கூட்டிலிருந்து துணையுடன் கூடும் அன்றிலின் வருத்தம் மிகுந்த குரலைக் கேட்கும்பொழுதெல்லாம் (பராரை – பரு அரை பராரை எனப் புணர்ந்தது), ‘துஞ்சாக் கண்ணள் துயர் அடச் சாஅய் நம் வயின் வருந்தும் நன்னுதல்’ என்பது உண்டு கொல் – உறங்காத கண்களை உடையவளாகத் துயர் அடைந்து மெலிந்து நம்பொருட்டு வருந்துவாள் நல்ல நெற்றியை உடைய நம் தலைவி என்பது உண்டாகுமா (சாஅய் – அளபெடை, கொல் – ஐயப்பொருட்டு, நன்னுதல் – பண்புத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை), வாழி – நீடு வாழ்வாயாக, அசைநிலை, தோழி – தோழி, தெண் கடல் வன் கைப் பரதவர் இட்ட செங்கோல் கொடு முடி அவ் வலை பரியப் போக்கிக் கடு முரண் எறி சுறா வழங்கும் நெடு நீர்ச் சேர்ப்பன் தன் நெஞ்சத்தானே – தெளிந்த கடலில் வலிய கைகளையுடைய மீனவர்கள் இட்ட சிவந்த கோலுடைய வளைந்த முடிச்சு உடைய அழகிய வலைகள் அறுபடுமாறு அச்சம் தரும் வலிமையையுடைய கொல்லும் சுறா மீன்கள் இயங்கும் நீண்ட நீர்த்துறைத் தலைவனின் நெஞ்சில் (நெஞ்சத்தானே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 304, மாறோக்கத்து நப்பசலையார், குறிஞ்சித் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
வாரல் மென் தினைப் புலவுக் குரல் மாந்திச்,
சாரல் வரைய கிளைஉடன் குழீஇ,
வளி எறி வயிரின் கிளி விளி பயிற்றும்
நளி இருஞ்சிலம்பின் நல் மலை நாடன்
புணரின் புணருமார் எழிலே, பிரியின்  5
மணி மிடை பொன்னின் மாமை சாய என்
அணி நலம் சிதைக்குமார் பசலை, அதனால்
அசுணம் கொல்பவர் கை போல் நன்றும்
இன்பமும் துன்பமும் உடைத்தே,
தண் கமழ் நறுந்தார் விறலோன் மார்பே.  10

பாடல் பின்னணிதலைவன் வரையாது களவில் வந்தொழுகுகின்றான்.  அந்நிலையில் வருந்திய தலைவியை ஆற்றுப்படுத்த முயலுகின்றாள் தோழி.  அவளிடம் தலைவி கூறியது.

பொருளுரை:  நீண்ட மெல்லிய தினையின் உலர்ந்த கொத்துக்களை உண்டு மலைச் சரிவுகள் பொருந்திய மலையில் சுற்றத்துடன் சேர்ந்து காற்றினால் ஒளி எழுப்பும் வயிர் என்னும் இசைக்கருவி போல் கிளிகள் ஒன்றை ஒன்று அழைக்கும் பெரிய பக்க மலைகளையுடை மலைநாடனுடன் கூடினால், அழகு என்னிடம் பொருந்தும்.  அவனிடமிருந்து நான் பிரிந்தால், நீலமணி இடையில் உள்ள பொன் போல், மாந்தளிர் அன்ன என் மேனி கெட, என் மிக்க அழகு பாழ்பட்டுப் பசலைப் படர்ந்து அசுணத்தைக் கொல்பவர்களின் கை போல் ஆகும்.  மிக்க இன்பத்தையும் துன்பத்தையும் உடையது, குளிர்ச்சி பொருந்திய மணம் கமழும் நறுமணமுடைய மாலை அணிந்த வெற்றி வாய்ந்த தலைவனின் மார்பு.

குறிப்பு:  ஒளவை துரைசாமி உரை – ‘அவன் அறிவு ஆற்ற அறியும் ஆகலின்’ (தொல்காப்பியம், கற்பியல் 6) எனத் தொடங்கும் நூற்பாவின்கண் ‘இன்பமும் இடும்பையும் ஆகிய இடத்தும்’ என்பதற்கு இதனைக் காட்டுவர் நச்சினார்க்கினியர்.  உள்ளுறை – கு. வெ. பாலசுப்பிரமணியன் உரை – கிளிகள் கூட்டமாக வந்து தினையை உண்டு விளி பயிற்றும் நாடன் என்றது, தலைவன் தன் சுற்றத்தாரோடு வந்து என்னை மணந்து நலம் துய்த்து மகிழ்வானாக என்பதுணர்த்திற்று.  அசுணம் (நற்றிணை 244) – ஒளவை துரைசாமி உரை – அசுணம் என்னும் புள்.  விலங்கு வகை என்றலும் உண்டு.  நல்லிசையின் நலம் கண்டு இன்புறும் இயல்பு இதற்கு உண்டென்பது வழக்கு  அசுணம் – அசுணம் 88 – அகநானூறு – இருஞ்சிறைத் தொழுதி ஆர்ப்ப யாழ் செத்து இருங்கல் விடர் அளை அசுணம் ஓர்க்கும், நற்றிணை 244 – மாதர் வண்டின் நயவரும் தீங்குரல் மணம் நாறு சிலம்பின் அசுணம் ஓர்க்கும், நற்றிணை 304 – அசுணம் கொல்பவர் கை போல்.  நன்று – நன்று பெரிது ஆகும் (தொல்காப்பியம், உரியியல் 45).  வார் – வார்தல் போகல் ஒழுகல் மூன்றும் நேர்பும் நெடுமையும் செய்யும் பொருள (தொல்காப்பியம், உரியியல் 19).

சொற்பொருள்:  வாரல் மென் தினைப் புலர்வுக் குரல் மாந்திச் சாரல் வரைய கிளைஉடன் குழீஇ வளி எறி வயிரின் கிளி விளி பயிற்றும் நளி இருஞ்சிலம்பின் நல் மலை நாடன் புணரின் புணருமார் எழிலே – நீண்ட மெல்லிய தினையின் உலர்ந்த கொத்துக்களை உண்டு மலைச் சரிவுகள் பொருந்திய மலையில் சுற்றத்துடன் சேர்ந்து காற்றினால் ஒளி எழுப்பும் வயிர் என்னும் இசைக்கருவி போல் கிளிகள் ஒன்றை ஒன்று அழைக்கும் பெரிய பக்க மலைகளையுடை மலைநாடனுடன் கூடினால் அழகு என்னிடம் பொருந்தும் (குழீஇ – செய்யுளிசை அளபெடை, வயிரின் – இன் ஒப்புப்பொருளில் வந்தது, ஐந்தாம் வேற்றுமை உருபு, புணருமார் – ஆர் அசைநிலை, எழிலே – ஏகாரம் அசைநிலை), பிரியின் – பிரிந்தால், மணி மிடை பொன்னின் மாமை சாய என் அணி நலம் சிதைக்குமார் பசலை அதனால் அசுணம் கொல்பவர் கை போல் நன்றும் இன்பமும் துன்பமும் உடைத்தே – நீலமணி இடையில் உள்ள பொன் போல் மாந்தளிர் அன்ன என் மேனி கெட மிக்க அழகு பாழ்பட்டுப் பசலைப் படர்ந்து அசுணத்தைக் கொல்பவர்களின் கை போல் மிக்க இன்பத்தையும் துன்பத்தையும் உடையது (அணிநலம் – ஒரு பொருட்பன்மொழி, சிதைக்குமார் – ஆர் அசைநிலை, பொன்னின் – இன் ஒப்புப்பொருளில் வந்தது, ஐந்தாம் வேற்றுமை உருபு), தண் கமழ் நறுந்தார் விறலோன் மார்பே – குளிர்ச்சி பொருந்திய மணம் கமழும் நறுமணமுடைய மாலை அணிந்த வெற்றி வாய்ந்த தலைவனின் மார்பு (மார்பே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 305, கயமனார், பாலைத் திணை – தலைவியின் தாய் தோழியிடம் சொன்னது
வரி அணி பந்தும், வாடிய வயலையும்,
மயில் அடி அன்ன மாக் குரல் நொச்சியும்,
கடியுடை வியல் நகர் காண்வரத் தோன்றத்
தமியே கண்ட தண்டலையும் தெறுவர
நோய் ஆகின்றே மகளை! நின் தோழி  5
எரி சினம் தணிந்த இலை இல் அம் சினை
வரிப் புறப் புறவின் புலம்பு கொள் தெள் விளி
உருப்பு அவிர் அமையத்து அமர்ப்பனள் நோக்கி
இலங்கு இலை வென்வேல் விடலையை,
விலங்கு மலை ஆர் இடை, நலியும் கொல் எனவே?  10

பாடல் பின்னணி:  தலைவியை உடன்போக்கில் தலைவன் கூட்டிச் சென்று விட்டான் என்பதை அறிந்த நற்றாய் தோழியிடம் சொல்லியது.

பொருளுரை:  வரிப் பந்தையும், வாடிய வயலைக் கொடியையும், மயிலின் அடியைப் போன்ற இலைகளையுடைய கரிய நிறத்தில் உள்ள மலர்க் கொத்துக்களையுடைய நொச்சி மரத்தையும், காவலையுடைய பெரிய இல்லத்தில் நான் காணும்பொழுது வருந்துகின்றேன்.  அவள் இல்லாமல் தனியாக நான் காணும் சோலையும் எனக்கு வருத்தத்தைத் தருகின்றது.  மன நோயினால் வருந்துகின்றேன்.  மகளே!  உன்னுடைய தோழி, கதிரவனின் சினம் தணிந்த வேளையில், இலைகள் இல்லாத அழகிய மரக்கிளைகளில் அமர்ந்தபடி வரிகளை முதுகில் கொண்ட புறாக்களின் வருந்தும் தெளிவான கூவுதலைக் கேட்டு, வெப்பம் மிகுந்த பொழுதில், விலக்குகின்ற மலையின் கடத்தற்கு அரிய பாதையில், போரிடுபவள் போல நோக்கி, விளங்கும் இலையை உடைய வெற்றிகரமான வேலையுடைய தன்னுடைய காதலனை, வருத்துவாளோ?

குறிப்பு:  நலியும் (10) – ஒளவை துரைசாமி உரை – வேண்டாத வினாக்களை எழுப்பி வருத்துதல், பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – துன்புறுத்தல்.  மயிலடி அன்ன இலை – நற்றிணை 305 – மயில் அடி அன்ன மாக் குரல் நொச்சியும், நற்றிணை 115 – மயில் அடி இலைய மாக் குரல் நொச்சி, குறுந்தொகை 138 – மயில் அடி இலைய மா குரல் நொச்சி.  திருமுருகாற்றுப்படை 68 – வரிப் புனை பந்து – பொ. வே. சோமசுந்தரனார் உரை – நூலால் வரிந்து புனையப்பட்ட பந்து, நச்சினார்க்கினியர் உரை – நூலால் வரிந்து புனையப்பட்ட பந்து, வை. மு. கோபாலகிருஷ்ணமாச்சாரி  உரை – நூலால் வரிந்து புனையப்பட்ட பந்து.  மதுரைக்காஞ்சி 333 – பொ. வே. சோமசுந்தரனார் உரை – நூலால் வரியப்பட்ட பந்து, நச்சினார்க்கினியர் உரை – நூலால் வரிதலையுடைய பந்து, வை. மு. கோபாலகிருஷ்ணமாச்சாரி உரை – நூலால் வரிதலையுடைய பந்து.  கலித்தொகை 51 – வரிப் பந்து – நச்சினார்க்கினியர் உரை – வரியினையுடைய பந்து.  தலைவி பந்துடன் விளையாடுதல் – புலவர் கயமனார் எழுதிய நற்றிணை 12, 305, 324 மற்றும் குறுந்தொகை 396 ஆகிய பாடல்களில் தலைவி பந்துடன் விளையாடும் குறிப்பு உள்ளது.  மகளை – ஐகாரம் முன்னிலை அசை.

சொற்பொருள்:  வரி அணி பந்தும் – ஒப்பனையுடைய பந்தும், வரிகள் உடைய பந்தும், வாடிய வயலையும் – வாடிய வயலைக் கொடியும், மயில் அடி அன்ன மாக் குரல் நொச்சியும் – மயிலின் அடியைப் போன்ற இலைகளையுடைய கரிய நிறத்தில் உள்ள மலர்க் கொத்துக்களையுடைய நொச்சி மரமும், கடியுடை வியல் நகர் – காவலையுடைய பெரிய இல்லம், காண்வரத் தோன்ற – நான் காணுமாறு தோன்ற, தமியே – தனியாக, கண்ட – நான் கண்ட, தண்டலையும் – சோலையும், தெறுவர நோய் ஆகின்றே – வருத்தம் தருகின்றன, மகளை – மகளே (அண்மை விளி), நின் தோழி – உன்னுடைய தோழி (என் மகள்), எரி சினம் தணிந்த – கதிரவனின் சினம் தணிந்த, இலை இல் அம் சினை – இலைகள் இல்லாத அழகிய மரக்கிளை, வரிப் புறப் புறவின் – வரிகளை முதுகில் கொண்ட புறாக்களின், புலம்புகொள் தெள் விளி – வருந்தும் தெளிவான கூவுதல், உருப்பு அவிர் அமையத்து – வெப்பம் விளங்கும் பொழுது, அமர்ப்பனள் நோக்கி – போரிடுபவள் போல் நோக்கி, இலங்கு இலை – விளங்கும் இலை வடிவமாகிய, வென்வேல் – வெற்றிகரமான வேல், விடலையை – இளைஞனை, விலங்கு மலை – விலக்குகின்ற மலை, தடுப்பாக உள்ள மலை, ஆர் இடை –  கடத்தற்கு அரிய பாதை, நலியும் கொல் எனவே – வருத்துவாளோ என்று (எனவே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 306, உரோடோகத்துக் கந்தரத்தனார், குறிஞ்சித் திணை – தோழி சொன்னது சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி, அல்லது தலைவன் சொன்னது
தந்தை வித்திய மென் தினை பைபயச்
சிறு கிளி கடிதல் பிறக்கு யாவணதோ,
‘குளிர்படு கையள் கொடிச்சி! செல்க!’ என
நல்ல இனிய கூறி மெல்லக்
கொயல் தொடங்கினரே கானவர்; கொடுங்குரல்  5
சூல் பொறை இறுத்த கோல்தலை இருவி
விழவு ஒழி வியன் களம் கடுப்பத் தெறுவரப்,
பைதல் ஒரு நிலை காண வைகல்
யாங்கு வருவது கொல்லோ, தீஞ்சொல்
செறி தோட்டு எல் வளைக் குறுமகள்  10
சிறு புனத்து அல்கிய பெரும் புற நிலையே?

பாடல் பின்னணி:  தலைவியை இற்செறிப்பில் வைத்ததைத் தலைவன் அறியும்படி உரைத்து வரைவு கடாயது.  தலைவன் கொல்லையின் வேலிப்புறத்திலிருந்து கூறியதுமாம்.

பொருளுரை:  “கிளிகளை ஓட்டும் குளிர் என்னும் கருவியைக் கையில் கொண்ட கொடிச்சியே!   நீ தினைப் புனத்திலிருந்து நீங்கி மனைக்குச் செல்வாயாக” என நல்ல இனிய சொற்களைக் கூறி, தினைக் கதிர்களை மெல்லக் கொய்யத் தொடங்கினர் கானவர்.  அவள் தந்தை விதைத்த மெல்லிய தினையைக் கொய்து கொண்டு போகும்பொருட்டு மெல்ல மெல்ல வருகின்ற சிறு கிளிகளை ஓட்டுதல் இனி என்னவாகும்?  வளைந்த கதிர்க்கொத்துக்கள் ஆகிய முதிர்ந்த தினையின் பாரத்தை அறுவடை செய்த பின்னர்த் திரண்ட மேல்பகுதியை உடைய தினையின் அடியானது மட்டுமே இருப்பதால், திருவிழா முடிந்த அழகு இழந்த பெரிய களம் போல் தோன்றி எம்மை வருத்தும் நிலைமையை தினைப்புனம் அடைந்ததால், காண்பதற்கு அமைந்த காலையில், இனிய சொற்களை உடைய செறிந்த தொகுதியான ஒளிரும் வளையல்களை அணிந்த தலைவி சிறுதினைப் புனத்திற்கு வந்து காவல் காக்கும் பொருட்டுப் பரண் மேல் தங்கி உயர்ந்த புறத்தில் இருந்து காவல் காத்த நிலைமை இனி எவ்வாறு அமையும்?

குறிப்பு:  ஒளவை துரைசாமி உரை – ‘தன்னும் அவனும் அவளும் சுட்டி’ (தொல்காப்பியம், அகத்திணையியல் 39) எனத் தொடங்கும் நூற்பாவின்கண் வரும் ‘தோழி தேஎத்தும்’ என்பதற்கு இதனைக் காட்டி, இது தோழி வெகுண்டு கூறுவதெனக் கொள்வர் நச்சினார்க்கினியர்.  உள்ளுறை – ஒளவை துரைசாமி உரை – கானவர் கொயல் தொடங்கினர் என்றது, இனித் தலைமகளைத் தலைப்படுதல் அரிது என்பது தோன்றித் தலைவனை வருத்துவதாயிற்று.  அதன் மேல் கொய்யப்பட்ட தினைப்புனம் விழவொழி வியன் களம் கடுப்பத் தோன்றும் எனத் தோழி கூறியது, தலைவி ஆறாது மேனி வேறுபட்டு மெலிவு எய்தியதைக் குறித்தது.  யாங்கு வருவது கொல்லோ (9) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – தலைவன் எவ்வாறு வருவது இயலுமோ, ஒளவை துரைசாமி உரை – தலைவி காவல் புரிந்த நிலை இனி இக்காலத்து வருமோ.   ஒப்புமை:  இறுத்த கோல்தலை இருவி – அகநானூறு 38.  எல் – எல்லே இலக்கம் (தொல்காப்பியம், இடையியல் 21).

சொற்பொருள்:  தந்தை வித்திய மென் தினை பைபயச் சிறு கிளி கடிதல் பிறக்கு யாவணதோ – தந்தை விதைத்த மெல்லிய தினையைக் கொய்து கொண்டு போகும்பொருட்டு மெல்ல மெல்ல வருகின்ற சிறு கிளிகளை ஓட்டுதல் (விரட்டுதல்) இனி என்னவாகும் (பிறக்கு – அசைநிலை, யாவணதோ – ஓகாரம் அசைநிலை), ‘குளிர்படு கையள் கொடிச்சி செல்க’ என நல்ல இனிய கூறி – கிளிகளை ஓட்டும் குளிர் என்னும் கருவியைக் கையில் கொண்ட கொடிச்சியே நீ தினைப் புனத்திலிருந்து செல்வாயாக என நல்ல இனிய சொற்களைக் கூறி (கொடிச்சி – குறத்தி, விளி), மெல்லக் கொயல் தொடங்கினரே கானவர் – தினைக் கதிர்களை மெல்லக் கொய்யத் தொடங்கினர் கானவர் (கொடிச்சி – மலையில் வாழும் பெண், கொயல் – கொய்யல் என்பதன் இடைக்குறை விகாரம், தொடங்கினரே – அசைநிலை), கொடுங்குரல் சூல் பொறை இறுத்த கோல்தலை இருவி விழவு ஒழி வியன் களம் கடுப்பத் தெறுவரப் பைதல் ஒரு நிலை காண வைகல் யாங்கு வருவது கொல்லோ – வளைந்த கதிர்க்கொத்துக்கள் ஆகிய முதிர்ந்த தினையின் பாரத்தை அறுவடை செய்த பின்னர்த் திரண்ட மேல்பகுதியை  உடைய தினையின் அடியானது மட்டுமே இருப்பதால் திருவிழா முடிந்த பெரிய களம் போல் தோன்றி எம்மை வருத்தும் நிலையைக் காணும் பொழுது எவ்வாறு காலையில் வரமுடியும் (சூல் – கரு, பொறை – பாரம், இருவி – தினையின் தாள், கடுப்ப – உவம உருபு, கொல்லோ – கொல் ஐயப்பொருட்டு, ஓகாரம் அசைநிலை), தீஞ்சொல் செறி தோட்டு எல் வளைக் குறுமகள் சிறு புனத்து அல்கிய பெரும் புற நிலையே – இனிய சொற்களை உடைய செறிந்த தொகுதியான ஒளிரும் வளையல்களை அணிந்த தலைவி சிறுதினைப் புனத்திற்கு வந்து பரண் மேல் தங்கி உயர்ந்த புறத்தில் இருந்த நிலை (நிலையே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 307, அம்மூவனார், நெய்தல் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
கவர் பரி நெடுந்தேர் மணியும் இசைக்கும்,
பெயர்பட இயங்கிய இளையரும் ஒலிப்பர்,
கடல் ஆடு வியல் இடைப் பேர் அணிப் பொலிந்த
திதலை அல்குல் நலம் பாராட்டிய
வருமே தோழி, வார் மணல் சேர்ப்பன்,  5
இற்பட வாங்கிய முழவு முதல் புன்னை
மா அரை மறைகம் வம்மதி, பானாள்
பூ விரி கானல் புணர் குறி வந்து, நம்
மெல் இணர் நறும் பொழில் காணா
அல்லல் அரும் படர் காண்கம் நாம் சிறிதே.  10

பாடல் பின்னணி:  தலைவன் குறித்த இடத்திற்கு வராது காலம் தாழ்த்தினான்.  அவன் வருவதை அறிந்துத் தோழி உரைத்தது.

பொருளுரை:  தோழி!  ஓட்டத்தில் விருப்பமுடைய குதிரைகள் பூட்டிய நெடிய தேரில் உள்ள மணிகள் ஒலிக்கும்.  உடன் விரைந்து வரும் ஏவல் இளையவர்களும் ஆரவாரம் செய்வார்கள். மகளிர் கடலில் நீராடுகின்ற அகன்ற இடத்தில் அணிகலன்களால் பொலிந்த திதலை உடைய அல்குலைப் பாராட்ட வருவான், நீண்ட மணல் படர்ந்த நெய்தல் நிலத்தின் தலைவன்.  நம் இல்லத்திற்கு அருகில் உள்ள வளைந்த முழவு போன்ற அடியையுடைய புன்னை மரத்தின் பெரிய அடியின் பின் மறைந்து கொள்ளலாம். நீ வருவாயாக. நடு இரவில் பூக்கள் மலர்ந்திருக்கும் கடற்கரைச் சோலையில் கூடுதற்குச் செய்த குறியின்பொருட்டு வந்து மெல்லிய கொத்துக்களையுடைய மலர்களின் நறுமணம் மிக்க சோலையில் நம்மைக் காணாது அவன் அடையும் அல்லல் மிக்க பெரும் துயரத்தை நாம் சிறிது காணலாம்.

குறிப்பு:  ஒளவை துரைசாமி உரை – ‘நாற்றமும் தோற்றமும் (தொல்காப்பியம், களவியல் 24) என்ற நூற்பாவின்கண் ‘நன்னயம் பெற்றுழி நயம்புரியிடத்தினும்’ என வருவதனுள், ‘நயம்புரியிடத்தினும்’ என்றதனால், ‘களவொழுக்கம் நிகழா நின்றுழிக் கூறும் கூற்றும் ஈண்டே கொள்க’ எனக் கூறி, இப்பாட்டைக் காட்டி இது வருகின்றான் எனக் கூறியது என்பர் இளம்பூரணர்.  நச்சினார்க்கினியரும் இதனைக் காட்டி. ‘இது தோழி தலைவிக்குப் பகற்குறிக்கண் தலைவன் வருகின்றமை காட்டி அவன் வருத்தம் காண யாம் மறைந்து நிற்பாம் வம்மோ எனக் கூறியது’ என்பர்.  கவர்வு – கவர்வு விருப்பு ஆகும் (தொல்காப்பியம் களவியல் 66).  வார் – வார்தல் போகல் ஒழுகல் மூன்றும் நேர்பும் நெடுமையும் செய்யும் பொருள (தொல்காப்பியம், உரியியல் 21).

சொற்பொருள்:  கவர் பரி நெடுந்தேர் மணியும் இசைக்கும் – ஓட்டத்தில் விருப்பமுடைய குதிரைகள் பூட்டிய நெடிய தேரில் உள்ள மணிகள் ஒலிக்கும், பெயர்பட இயங்கிய இளையரும் ஒலிப்பர் – உடன் விரைந்து வரும் (பெயர்ந்துச் செல்லும்) ஏவல் இளையவர்களும் ஆரவாரம் செய்வார்கள், கடல் ஆடு வியல் இடைப் பேர் அணிப் பொலிந்த திதலை அல்குல் நலம் பாராட்டிய வருமே – மகளிர் கடலில் நீராடுகின்ற அகன்ற இடத்தில் அணிகலன்களால் பொலிந்த (அழகால் பொலிந்த) திதலை உடைய அல்குலைப் பாராட்ட வருவான் (அல்குல் – இடை, இடைக்குக் கீழ் உள்ள பகுதி), தோழி – தோழி, வார் மணல் சேர்ப்பன் – நீண்ட மணல் படர்ந்த நெய்தல் நிலத்தின் தலைவன், இற்பட வாங்கிய முழவு முதல் புன்னை மா அரை மறைகம் – இல்லத்திற்கு அருகில் உள்ள வளைந்த முழவு போன்ற அடியையுடைய புன்னை மரத்தின் பெரிய அடியின் பின் மறைந்து கொள்ளலாம் (புன்னை மரம் – Laurel Tree, Mast wood Tree, Calophyllum inophyllum), வம்மதி – வருவாயாக (மதி முன்னிலை அசை), பானாள் பூ விரி கானல் புணர் குறி வந்து நம் மெல் இணர் நறும் பொழில் காணா அல்லல் அரும் படர் காண்கம் நாம் சிறிதே – நடு இரவில் பூக்கள் மலர்ந்திருக்கும் கடற்கரைச் சோலையில் கூடுதற்குச் செய்த குறியின்பொருட்டு வந்து மெல்லிய கொத்துக்களையுடைய மலர்களின் நறுமணம் மிக்க சோலையில் நம்மைக் காணாது அவன் அடையும் அல்லல் மிக்க பெரும் துயரத்தை நாம் சிறிது காணலாம் (சிறிதே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 308, எயினந்தை மகன் இளங்கீரனார், பாலைத் திணை – தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது
செல விரைவுற்ற அரவம் போற்றி
மலர் ஏர் உண்கண் பனி வர ஆயிழை,
யாம் தற் கரையவும், நாணினள் வருவோள்,
வேண்டாமையின் மென்மெல வந்து,
வினவலும் தகைத்தலும் செல்லாள் ஆகி  5
வெறி கமழ் துறு முடி தயங்க நல் வினைப்
பொறி அழி பாவையின் கலங்கி, நெடிது நினைந்து,
ஆகம் அடைதந்தோளே, அது கண்டு
ஈர் மண் செய்கை நீர்படு பசுங்கலம்
பெருமழைப் பெயற்கு ஏற்றாங்கு, எம்  10
பொருள் மலி நெஞ்சம் புணர்ந்து உவந்தன்றே.

பாடல் பின்னணி:  பொருள்வயின் பிரிய எண்ணிய தலைவன், தலைவியின் வருத்தத்தைக் கண்டு தன் நெஞ்சிடம் கூறியது.  செலவு அழுங்கியது.

பொருளுரை:  தேர்ந்தெடுத்த அணிகலன்களை அணிந்த தலைவி பொருள்வயின் யாம் பிரிவதால் விரைவாகக் கூறிவற்றை விரும்பிக் கேட்ட பின், மலர்களை ஒத்த அவளுடைய மையிட்டக் கண்களில் கண்ணீர் தோன்ற, யாம் அவளைப் பாராட்டி வினவவும் நாணம் அடைந்து வருபவள், யாம் பிரிவதை விரும்பாது, மெல்ல மெல்ல வந்து வினவுதலும் தடுத்தலும் செய்யாதவள் ஆகி, நறுமணம் கமழ்கின்ற அடர்ந்த கூந்தல் முடித்த கொண்டை அசைய, நல்ல வேலைப்பாடு அமைந்த இயந்திரம் அழிந்த பாவையைப் போல் கலங்கி, நெடும்பொழுது நினைந்து, என் மார்பின் மீது விழுந்தாள்.  அதைக் கண்டு, ஈர மண்ணால் செய்யப்பட்ட ஈரம் காயாத மண் கலம் பெருமழையில் கரைந்து ஓடினாற்போல், எம் பொருள்வயின் பிரிய எண்ணிய நெஞ்சம் அவளுடன் ஒன்றிவிட்டது.

குறிப்பு:  ஒப்புமை:  குறுந்தொகை 29 – பெயல் நீர்க்கு ஏற்ற பசுங்கலம் போல உள்ளம் தாங்கா வெள்ளம் நீந்தி அரிது அவா உற்றனை நெஞ்சே.  நல் வினைப் பொறி அழி பாவையின் (7) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – நல்ல சித்திரத் தொழிலமைந்த இயங்கும் இயந்திர மற்றழிந்த பாவை, விசைக் கயிறு அறுபட்ட நல்ல வேலைப்பாடமைந்த பாவை.

சொற்பொருள்:  செல விரைவுற்ற அரவம் போற்றி – பொருள்வயின் யாம் பிரிவதால் விரைவாகக் கூறிவற்றை விரும்பிக் கேட்டு (செல – செல்ல என்பதன் இடைக்குறை), மலர் ஏர் உண்கண் பனி வர – மலர்களை ஒத்த மையிட்டக் கண்களில் கண்ணீர் தோன்ற (ஏர் – உவம உருபு), ஆயிழை – அழகிய (தேர்ந்தெடுத்த, ஆராய்ந்த) அணிகலன்களை அணிந்த தலைவி (அன்மொழித்தொகை), யாம் தற் கரையவும் நாணினள் வருவோள் – யாம் அவளைப் பாராட்டி வினவவும் நாணம் அடைந்து வருபவள், வேண்டாமையின் மென்மெல வந்து வினவலும் – யாம் பிரிவதை விரும்பாது மெல்ல மெல்ல வந்து வினவுதலும், தகைத்தலும் செல்லாள் ஆகி – தடுத்தலும் செய்யாதவள் ஆகி, வெறி கமழ் துறு முடி தயங்க நல் வினைப் பொறி அழி பாவையின் கலங்கி – நறுமணம் கமழ்கின்ற அடர்ந்த கூந்தல் முடித்த கொண்டை அசைய நல்ல வேலைப்பாடு அமைந்த இயந்திரம் அழிந்த பாவையைப் போல் கலங்கி (பாவையின் – இன் உருபு ஒப்புப் பொருளது), நெடிது நினைந்து ஆகம் அடைதந்தோளே – நெடும்பொழுது நினைந்து என் மார்பின் மீது விழுந்தாள், அது கண்டு ஈர் மண் செய்கை நீர்படு பசுங்கலம் பெருமழைப் பெயற்கு ஏற்றாங்கு – அதைக் கண்டு ஈர மண்ணால் செய்யப்பட்ட ஈரம் காயாத மண் கலம் பெருமழையில் கரைந்து ஓடினாற்போல், எம் பொருள் மலி நெஞ்சம் புணர்ந்து உவந்தன்றே – எம் பொருள்வயின் பிரிய எண்ணிய நெஞ்சம் அவளுடன் ஒன்றிவிட்டது (உவந்தன்றே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 309, கபிலர், குறிஞ்சித் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
நெகிழ்ந்த தோளும், வாடிய வரியும்,
தளிர் வனப்பு இழந்த என் நிறனும் நோக்கி,
‘யான் செய்தன்று இவள் துயர்’ என, அன்பின்
ஆழல், வாழி தோழி, ‘வாழைக்
கொழுமடல் அகல் இலைத் தளிதலைக் கலாவும்  5
பெருமலை நாடன் கேண்மை, நமக்கே
விழுமமாக அறியுநர் இன்று’ எனக்
கூறுவை மன்னோ நீயே,
தேறுவன் மன் யான் அவருடை நட்பே.

பாடல் பின்னணி:  தலைவன் வரையாது களவில் வந்தொழுகுகின்றான்.  அந்நிலையில் தலைவி வருந்துவாள் என்று தோழி கவலையுற்றாள்.  அவளிடம் ‘நான் பொறுமையுடன் இருப்பேன்.  நீ வருந்தாதே’ எனத் தலைவி கூறியது.

பொருளுரை:  தோழி!  நீ நீடு வாழ்வாயாக!  என்னுடைய தளர்ந்த (மெலிந்த) தோள்களையும், வாடிய திதலை வரிகளையும், மாந்தளிர் போன்ற என் மேனியின் இழந்த நிறத்தையும் நோக்கி ‘என்னால் ஏற்பட்டது இவளின் துன்பம்’ என்று அன்பினால் அழாதே!  “வாழையின் கொழுத்த மடலிடத்தில் உள்ள அகன்ற இலைகளில் மழைத்துளிகள் கலந்து தங்கும் பெரிய மலைநாடனாகிய நம் தலைவனின் நட்பு நமக்குத் துன்பம் தருவதை அறிபவர்கள் இல்லை” என நீ கூறுவாய் ஆயினும், யான் உறுதியாக அறிந்திருக்கின்றேன் அவருடைய நட்பை.  நான் ஆற்றியிருப்பேன்.

குறிப்பு:  ஒளவை துரைசாமி உரை – ‘உயிரினும் சிறந்தன்று நாணே’ (தொல்காப்பியம், களவியல் 23) எனத் தொடங்கும் நூற்பா உரையில் தோழியைத் தலைவி ஆற்றுவிப்பதற்கு இப்பாட்டினைக் காட்டுவர் நச்சினார்க்கினியர்.  உள்ளுறை – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – வாழை மடலிலே நீர் தங்கிக் கலந்திருக்கும் என்றது, என் உள்ளத்தில் அவர் எப்பொழுதும் கலந்திருப்பாராதலால், யான் வருந்தேன் என்பதாம்.  வாடிய வரி (1) – ஒளவை துரைசாமி உரை – திதலை வரிகள், பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – இரேகை.  தளிர் வனப்பு (2) – ஒளவை துரைசாமி உரை – மாந்தளிர் போன்ற அழகு, பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – மாந்தளிர் போன்ற தன்மை.  விழுமம் – விழுமம் சீர்மையும் சிறப்பும் இடும்பையும் (தொல்காப்பியம், உரியியல்  57).  மன் – கழிவே ஆக்கம் ஒழியிசைக் கிளவி என்று அம் மூன்று என்ப மன்னைச் சொல்லே (தொல்காப்பியம், இடையியல் 4).

சொற்பொருள்:  நெகிழ்ந்த தோளும் வாடிய வரியும் தளிர் வனப்பு இழந்த என் நிறனும் நோக்கி ‘யான் செய்தன்று இவள் துயர்’ என அன்பின் ஆழல் – என்னுடைய தளர்ந்த (மெலிந்த) தோள்களையும் வாடிய திதலை வரிகளையும் மாந்தளிர் போன்ற என் மேனியின் இழந்த நிறத்தையும் நோக்கி ‘என்னால் ஏற்பட்டது இவளின் துன்பம்’ என்று அன்பினால் அழாதே (நிறன் – நிறம் என்பதன் போலி, செய்தன்று – செய்தது என்பது பொருள், இறந்தகால முற்றுவினை, ஆழல் – நீட்டல் விகாரம், அல் ஈற்று எதிர்மறை வியங்கோள்), வாழி – நீடு வாழ்வாயாக, தோழி – தோழி, ‘வாழைக் கொழுமடல் அகல் இலைத் தளிதலைக் கலாவும் பெருமலை நாடன் கேண்மை நமக்கே விழுமமாக அறியுநர் இன்று’ எனக் கூறுவை மன்னோ நீயே– வாழையின் கொழுத்த மடலிடத்தில் உள்ள அகன்ற இலைகளில் மழைத்துளிகள் கலந்து தங்கும் பெரிய மலைநாடனாகிய நம் தலைவனின் நட்பு நமக்குத் துன்பம் தருவதை அறிபவர்கள் இல்லை’ எனக் கூறுவாய் நீ (மன்னோ – மன் ஓ அசைநிலைகள், நீயே – ஏகாரம் அசைநிலை), தேறுவன் மன் யான் அவருடை நட்பே – யான் உறுதியாக அறிந்திருக்கின்றேன் அவருடைய நட்பை (நட்பே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 310, பரணர், மருதத் திணை – தோழி விறலியிடம் சொன்னது அல்லது பரத்தை விறலியிடம் சொன்னது
விளக்கின் அன்ன சுடர்விடு தாமரைக்,
களிற்றுச் செவி அன்ன பாசடை தயங்க,
உண்துறை மகளிர் இரிய, குண்டு நீர்
வாளை பிறழும் ஊரற்கு, நாளை
மகட்கொடை எதிர்ந்த மடம் கெழு பெண்டே ! 5
தொலைந்த நாவின் உலைந்த குறுமொழி
உடன்பட்டு ஓராத் தாயரொடு ஒழிபு உடன்
சொல்லலை கொல்லோ நீயே, வல்லைக்
களிறு பெறு வல்சிப் பாணன் கையதை
வள் உயிர்த் தண்ணுமை போல, 10
உள் யாதும் இல்லது ஓர் போர்வை அம் சொல்லே.

பாடல் பின்னணி:  வாயில் மறுத்தது.

பொருளுரை:  விளக்கைப் போன்ற ஒளிவீசும் தாமரை மலர்களின் களிற்று யானையின் செவியைப் போன்ற பசிய இலைகள் அசையுமாறு நீர்த்துறையில் பெண்கள் அஞ்சி விலக, ஆழமான நீரில் வாளை மீன்கள் துள்ளிப் பாயும் ஊரனுக்கு, வரும் நாளிலும் பரத்தையைக் கொண்டு வந்து கொடுக்கும் செயலை மேற்கொண்ட அறிவில்லாத விறலியே!  மெய்மை இல்லாத நாவினால் நிலைகுலைந்த உன் சொற்களுக்கு உடன்பட்ட பரத்தையின் தாய்மாரை நீ அடைந்துக் கூறுகின்றாய் அல்லவா விரைந்து, களிற்று யானையைப் பரிசாகப் பெற்று உண்ணும் பாணன் கையில் உள்ள பெரிதாக ஒலிக்கும் தண்ணுமை போல் உள்ளே ஒன்றும் இல்லாது போர்த்தப்பட்டது உன் சொற்களை?

குறிப்பு:  ஒளவை துரைசாமி உரை – ‘பெறற்கு அரும் பெரும் பொருள்’ (தொல்காப்பியம், கற்பியல் 9) எனத் தொடங்கும் நூற்பாவின்கண், ‘பாணர் கூத்தர் விறலியர் என்று இவர் பேணிச் சொல்லிய குறைவினை எதிரும்’ என்புழிக் கூறிய உரையில் இப்பாட்டைக் காட்டி ‘இது விறலிக்கு வாயில் மறுத்தது’ என்பர் நச்சினார்க்கினியர்.  இறைச்சி – கு. வெ. பாலசுப்பிரமணியன் உரை – மகளிர் அஞ்சி ஓடுமாறு தாமரை வருந்த வாளைமீன் பிறழும் என்றது, தலைவன் தலைவி வருந்தவும், காமக்கிழத்தியர் அஞ்சி ஓடுமாறு பரத்தையிடம் சென்று சேர்கின்றனன் என்று உணர்த்தவாம்.   உள்ளுறை – ஒளவை துரைசாமி உரை – தாமரையின் பாசடை தயங்க உண்டுறை மகளிர் மருண்டு நீங்கவும், மனைக்கு விளக்காகிய தலைமகளைச் சூழ்ந்துரையும் சுற்றமும் யாமும் வருந்த தலைமகன் பரத்தையர் சேரிக்கண் புறத்தொழுக்கிற் கழிக்கின்றான்.  அவன் பொருட்டு வாயில் வேண்டி வருதலைத் தவிர்ப்பாயாக என்பதாம்.  ஒழிபு (17) – ஒளவை துரைசாமி உரை – கைவிட்டு, பொ. வே. சோமசுந்தரனார் உரை – எய்தி.  பாணர் – ஊர் ஊராகச் சென்று தமிழ் வளர்த்த நம் பாணர்களைத் தமிழ் மன்னர்கள் மிக உயர்ந்த நிலையில் வைத்திருந்தனர்.  சங்க நூல்கள் எனத் தொகுத்தவர்களும் அவ்வாறே எண்ணியிருக்கக் கூடும்.  18 சங்க நூல்களில் 4 நூல்கள் பாணர்களைச் சிறப்பிக்கும் பாணாற்றுப்படை ஆக உள்ளன.  களிறு பெறு வல்சிப் பாணன் (9) – ஒளவை துரைசாமி உரை – களிற்றைப் பரிசிலாகப் பெற்று வாழும் பாணன்.  பாணனது வரிசை உணர்த்தி நின்றது, பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – ‘கன்று பெறு வாசிப் பாணன்’ என உள்ளது.  அவர் ‘கன்றை உரித்து உணவாகக் கொள்ளுகின்ற பாணன்’ எனப் பொருள் கொடுத்துள்ளார்.  களிறு பெறு வல்சிப் பாணன் – அகநானூறு 106, பொ. வே. சோமசுந்தரனார் உரை – களிற்று யானையைப் பரிசாகப் பெறுவதனால் உண்டு வாழ்கின்ற பாணன்.   குறுந்தொகை 295 – ஓர் ஆன் வல்சி… வாழ்க்கை – உ. வே. சாமிநாதையர் உரை – ஒரு பசுவினால் வரும் ஊதியத்தைக் கொண்டு உண்ணும் …..வாழ்க்கை.  பாணர்கள் பசுவையோ அல்லது கன்றையோ உண்டதாக சங்கப் பாடல்களில் எங்கும் இல்லை. பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை நூலில் உள்ள ‘ளி’ என்பது ஓலை ஏட்டின் எழுத்துப் பிழையாக ‘ன்’ என வந்திருக்கக் கூடும்.  பாண்கடன் – புறநானூறு 201–14 – பாண்கடன் ஆற்றிய ஒலியற் கண்ணிப் புலிகடிமாஅல், புறநானூறு 203–11 – பாண் கடன் இறுக்கும் வள்ளியோய்.  பாணர்களுக்கு மன்னர்கள் கொடுத்த பரிசுகள்:  யானை – புறநானூறு 12, 151, 233, 369.  பொன்னால் செய்த தாமரை மலர் – புறநானூறு 12, 29, 126, 141, 244, 319, 361, 364, பொன் அணிகலன் – புறநானூறு 160, மிக்க உணவு – புறநானூறு 33, 34, 180, 212, 320, 326, 327, 328, 332, 334, 376, 382, பயிர்த்தொழில் ஊர் – புறநானூறு 302, கள் – புறநானூறு 115, 170, 224, 239. ஆறலை கள்வர்கள் பசுவைத் தின்றல் – அகநானூறு 97 – நிரை பகுத்து இருங்கல் முடுக்கர்த் திற்றி கெண்டும் கொலை வில் ஆடவர், அகநானூறு 129 – கொழுப்பு ஆ தின்ற கூர்ம் படை மழவர், அகநானூறு 265 – இன் சிலை எழில் ஏறு கெண்டிப் புரைய நிணம் பொதி விழுத்தடி நெருப்பின் வைத்து எடுத்து அணங்கரு மரபின் பேஎய் போல விளர் ஊன் தின்ற வேட்கை நீங்கத் துகள் உற விளைந்த தோப்பி பருகித் குலாஅ வல் வில் கொடு நோக்கு ஆடவர்,  அகநானூறு 309 – கடுங்கண் மழவர் அம்பு சேண் படுத்து வன் புலத்து உய்த்தெனத் தெய்வம் சேர்ந்த பராரை வேம்பில் கொழுப்பு ஆ எறிந்து.

சொற்பொருள்:  விளக்கின் அன்ன சுடர்விடு தாமரைக் களிற்றுச் செவி அன்ன பாசடை தயங்க உண்துறை மகளிர் இரிய குண்டு நீர் வாளை பிறழும் ஊரற்கு – விளக்கைப் போன்ற ஒளிவீசும் தாமரை மலர்களின் களிற்று யானையின் செவியைப் போன்ற பசிய இலைகள் அசையுமாறு நீர்த்துறையில் பெண்கள் அஞ்சி விலக ஆழமான நீரில் வாளை மீன்கள் துள்ளிப் பாயும் ஊரனுக்கு (விளக்கின் – இன் சாரியை), நாளை மகட்கொடை எதிர்ந்த மடம் கெழு பெண்டே – நாளைக்கும் பரத்தையைக் கொண்டு வந்து கொடுக்கும் செயலை மேற்கொண்ட அறிவில்லாத விறலியே, தொலைந்த நாவின் உலைந்த குறுமொழி உடன்பட்டு ஓராத் தாயரொடு ஒழிபு உடன் சொல்லலை கொல்லோ நீயே – மெய்மை இல்லாத நாவினால் நிலைகுலைந்த உன் சொற்களுக்கு உடன்பட்ட பரத்தையின் தாய்மாரை நீ அடைந்துக் கூறுகின்றாய் அல்லவா (கொல்லோ – கொல் ஐயப்பொருட்டு, ஓ அசைநிலை, நீயே – ஏகாரம் அசைநிலை), வல்லை – விரைந்து, களிறு பெறு வல்சிப் பாணன் கையதை வள் உயிர்த் தண்ணுமை போல உள் யாதும் இல்லது ஓர் போர்வை அம் சொல்லே – களிற்று யானையைப் பரிசாகப் பெற்று உண்ணும் பாணன் கையில் உள்ள பெரிதாக ஒலிக்கும் தண்ணுமை போல் உள்ளே ஒன்றும் இல்லாது போர்த்தப்பட்டது உன் சொற்கள் (கையதை – ஐ சாரியை, சொல்லே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 311, உலோச்சனார், நெய்தல் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
பெயினே, விடு மான் உளையின் வெறுப்பத் தோன்றி,
இருங்கதிர் நெல்லின் யாணரஃதே
வறப்பின் மா நீர் முண்டகம் தாஅய்ச் சேறு புலர்ந்து,
இருங்கழிச் செறுவின் வெள் உப்பு விளையும்
அழியா மரபின் நம் மூதூர் நன்றே,  5
கொழு மீன் சுடு புகை மறுகினுள் மயங்கிச்,
சிறு வீ ஞாழல் துறையுமார் இனிதே,
ஒன்றே தோழி நம் கானலது பழியே,
கருங்கோட்டுப் புன்னை மலர்த் தாது அருந்தி,
இருங்களிப் பிரசம் ஊத, அவர் 10
நெடுந்தேர் இன் ஒலி கேட்டலோ அரிதே.

பாடல் பின்னணி:  அலர் கூறப்பட்டு ஆற்றாளாகிய தலைவியைத் தோழி ஆற்றுவித்தது.

பொருளுரை:  தோழி!  மழை பெய்தால், துள்ளி ஓடும் குதிரைகளின் உளை மயிரைப் போல் செறிந்துத் தோன்றும் பெரிய கதிர்களையுடைய நெல்லின் வளமை உடையதாகவும், மழை பெய்யாது நிலம் வறண்டு போனால், பெரிய உப்பங்கழியில் முண்டக மலர்கள் உதிர்ந்து சேறு எல்லாம் புலர்ந்து கரிய கழியில் வெள்ளை உப்பு விளையும் நிலைமை உடையதாகவும் உள்ள அழியாத மரபினையுடைய நம்முடைய பண்டைய ஊர் நல்லது.  கொழுத்த மீனைச் சுடும் புகை தெருவில் கலந்து சிறிய சிறிய மலர்களையுடை ஞாழல் மரங்கள் உள்ள துறையும் இனிமையானது.  நம் கடற்கரைச் சோலை ஒன்று மட்டுமே பழியை உடையது.  கரிய கிளைகளை உடைய புன்னை மலர்களின் தாதை உண்டு கரிய வண்டுகள் களிப்புடன் தேனை உண்டு ஊதுவதால், அந்த ஒலியில், தலைவர் வரும் நெடிய தேரின் இனிய ஒலியைக் கேட்பது அரிதாக உள்ளது.

குறிப்பு:  மான் உளை (1) – ஒளவை துரைசாமி உரை – குதிரையின் உளை மயிர்.  அழியா மரபின் (5) – ஒளவை துரைசாமி உரை – நம் ஊர் அழியா மரபிற்று என்றது, ஊரவர் அலர் கூறினாலும் கூறாது ஒழியினும் நாம் நம் மனத்திண்மை அழிதல் கூடாது என வற்புறுத்தியவாறு.

சொற்பொருள்:  பெயினே – மழை பெய்தால், விடு மான் உளையின் வெறுப்பத் தோன்றி இருங்கதிர் நெல்லின் யாணர் அஃதே – துள்ளி ஓடும் குதிரைகளின் உளை மயிரைப் போல் செறிந்துத் தோன்றும் பெரிய கதிர்களையுடைய நெல்லின் வளமை உள்ளது (உளையின் – இன் ஒப்புப்பொருளில் வந்தது, ஐந்தாம் வேற்றுமை உருபு), வறப்பின் – மழை பெய்யாது நிலம் வறண்டு போனால், மா நீர் முண்டகம் தாஅய்ச் சேறு புலர்ந்து இருங்கழிச் செறுவின் வெள் உப்பு விளையும் – பெரிய (கரிய) உப்பங்கழியில் முண்டக மலர்கள் உதிர்ந்து சேறு எல்லாம் புலர்ந்து கரிய கழியில் வெள்ளை உப்பு விளையும் (முண்டகம் – நீர் முள்ளி, Hygrophila spinosa, தாஅய் – செய்யுளிசை அளபெடை), அழியா மரபின் நம் மூதூர் நன்றே – அழியாத மரபினையுடைய நம்முடைய பண்டைய ஊர் நல்லது (நன்றே – ஏகாரம் அசைநிலை), கொழு மீன் சுடு புகை மறுகினுள் மயங்கிச் சிறு வீ ஞாழல் துறையுமார் இனிதே – கொழுத்த மீனைச் சுடும் புகை தெருவில் கலந்து சிறிய சிறிய மலர்களையுடை ஞாழல் மரங்கள் உள்ள துறையும் இனிமையானது (ஞாழல் மரம் – tigerclaw tree, புலிநகக்கொன்றை, Cassia Sophera), ஒன்றே – ஒன்று மட்டுமே, தோழி – தோழி, நம் கானலது பழியே – நம் கடற்கரைச் சோலை மட்டுமே பழியை உடையது, கருங்கோட்டுப் புன்னை மலர்த் தாது அருந்தி இருங்களிப் பிரசம் ஊத அவர் நெடுந்தேர் இன் ஒலி கேட்டலோ அரிதே – கரிய கிளைகளை உடைய புன்னை மலர்களின் தாதை உண்டு கரிய வண்டுகள் களிப்புடன் தேனை உண்டு ஊதுவதால் தலைவர் வரும் நெடிய தேரின் இனிய ஒலியைக் கேட்பது அரிதாக உள்ளது (புன்னை மரம் – Laurel Tree, Mast wood Tree, Calophyllum inophyllum, அரிதே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 312, கழார்க்கீரன் எயிற்றியார், பாலைத் திணை – தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது
நோகோ யானே நோம், என் நெஞ்சே,
‘பனிப் புதல் ஈங்கை அம் குழை வருடச்,
சிறை குவிந்திருந்த பைதல் வெண்குருகு,
பார்வை வேட்டுவன் காழ் களைந்து அருள,
மாரி நின்ற மையல் அற்சிரம்,  5
யாம் தன் உழையம் ஆகவும், தானே,
எதிர்த்த தித்தி முற்றா முலையள்,
கோடைத் திங்களும் பனிப்போள்,
வாடைப் பெரும் பனிக்கு என்னள் கொல்?’ எனவே.

பாடல் பின்னணி:  பொருள்வயின் பிரிய எண்ணிய தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது.

பொருளுரை:  வருந்தும் என் நெஞ்சமே ! தோன்றிப் படர்ந்த தேமலையும் இள முலைகளையுமுடைய நம் காதலி, யாம் அருகில் இருந்தாலும், கோடைத் திங்களிலும் நடுங்குபவள்.  குளிர்ந்த புதரில் ஈங்கையின் அழகிய தளிர் வருட, தன் சிறகைக் குவித்து ஒடுங்கியிருந்த துன்பம் மிக்கப் பார்வையாக இருந்த வெண்குருகின் கட்டுக்களை நீக்கி வேட்டுவன் அருள் செய்யும், மழை விடாமல் பெய்வதால் இரவு பகல் எனத் தெளிவில்லாத மயக்கமுடைய முன்பனிக்காலத்திலும், வாடைக் காற்று வீசும் குளிர்ந்த பனிக்காலத்திலும் என்ன ஆவாளோ என்று வருந்துகின்றேன் யான்.

குறிப்பு:  உள்ளுறை – கு. வெ. பாலசுப்பிரமணியன் உரை – வேட்டுவனால் பார்வையாகப் பிடித்து வைக்கப்பட்டிருக்கும் குருகு ஈங்கையின் குழை வருட வருந்தும் என்றது, வீட்டில் தங்குமாறு தலைவி வருந்தித் தோழி தேற்றவும் மாரிக்காலத்தைக் கழிப்பாள் என்று உணர்த்திற்று.  வெண்குருகு பார்வை வேட்டுவன் (4–5) – ஒளவை துரைசாமி உரை – பிற குருகுகளைப் பிடிப்பதற்கெனப் பயிற்றப்பட்ட குருகினைப் பார்வைக் குருகு எனல் வழக்கு.  பார்வை:  பார்வை வேட்டுவன் நற்றிணை 212–1, 312–4, பார்வைப் போர் – கலித்தொகை 95–17, பார்வை யாத்த – பெரும்பாணாற்றுப்படை 95, பார்வை மடப் பிணை 20–4.

சொற்பொருள்:  நோகோ யானே – வருந்துகின்றேன் யான் (நோகோ – நோகு செய்கென்னும் தன்மை வினை, ஓ அசைநிலை, யானே – ஏகாரம் அசைநிலை), நோம் என் நெஞ்சே – வருந்தும் என் நெஞ்சமே, பனிப் புதல் ஈங்கை அம் குழை வருடச் சிறை குவிந்திருந்த பைதல் வெண்குருகு பார்வை வேட்டுவன் காழ் களைந்து அருள – குளிர்ந்த புதரில் ஈங்கையின் அழகிய தளிர் தன்னை வருட சிறகைக் குவித்து ஒடுங்கியிருந்த துன்பம் மிக்கப் பார்வையாக இருந்த வெண்குருகின் கட்டுக்களை நீக்கி வேட்டுவன் அருள் செய்ய (ஈங்கை – Mimosa Pudica, பார்வை – ஒன்றைப் பயன்படுத்தி இன்னொன்றைப் பிடித்தல்), மாரி நின்ற மையல் அற்சிரம் – மழை விடாமல் பெய்வதால் இரவு பகல் எனத் தெளிவில்லாத மயக்கமுடைய முன்பனிக்காலத்தில், யாம் தன் உழையம் ஆகவும் – யாம் அருகில் இருந்தாலும், தானே – தான், ஏகாரம் அசைநிலை, எதிர்த்த தித்தி முற்றா முலையள் கோடைத் திங்களும் பனிப்போள் வாடைப் பெரும் பனிக்கு என்னள் கொல் – தோன்றிப் படர்ந்த தேமலையும் இள முலைகளையுமுடைய நம் தலைவி கோடைத் திங்களிலும் நடுங்குபவள் வாடைக் காற்று வீசும் குளிர்ந்த பனிக்காலத்தில் என்ன ஆவாளோ (கொல் – ஐயப்பொருட்டு வந்த இடைச்சொல்), எனவே – என்று, ஏகாரம் அசைநிலை

நற்றிணை 313, தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார், குறிஞ்சித் திணை – தோழி தலைவியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
கருங்கால் வேங்கை நாள் உறு புதுப் பூப்
பொன் செய் கம்மியன் கை வினை கடுப்பத்,
தகை வனப்புற்ற கண்ணழி கட்டு அழித்து
ஒலி பல் கூந்தல் அணிபெறப் புனைஇக்,
காண்டற் காதல் கைம்மிக கடீஇயாற்கு  5
யாங்கு ஆகுவம் கொல் தோழி, காந்தள்
கமழ் குலை அவிழ்ந்த நயவருஞ்சாரல்
கூதள நறும் பொழில் புலம்ப, ஊர்வயின்
மீள்குவம் போலத் தோன்றும் தோடு புலர்ந்து
அருவியின் ஒலித்தல் ஆனா,  10
கொய் பதம் கொள்ளும் நாம் கூஉம் தினையே?

பாடல் பின்னணி:  தலைவன் அருகில் இருப்பதை அறிந்த தோழி தலைவியிடம் உரைத்தது.  வரைவு கடாவுதல்.

பொருளுரை:  தோழி!  மேல் இலைகள் காய்ந்து அருவிகள் போல் ஒலித்து, ஒலிகள் குறையாமல், கொய்யும் பதத்தை அடைந்துள்ளது, நாம் கூவிக் கிளிகளை விரட்டும் தினைப்புனம்.  காந்தளின் மணம் கமழும் மலர்க்குலைகள் அவிழ்ந்த, விருப்பம் மிகும் பக்க மலையில், கூதள மலர்களையுடைய நறுமணப் பொழில் தனிமையுற, நம் ஊர்க்கு நாம் திரும்பிச் செல்வோம் போல் தோன்றுகின்றது.  தடை முழுவதையும் அழித்து, கரிய அடியையுடைய வேங்கை மரத்தின் நாட்காலையில் மலரும் புதிய மலர்கள், பொன் தொழில் செய்யும் பொற்கொல்லனின் கை வேலையை ஒத்த பேரழகுடையதாக இருக்கும்.  அவற்றை நம்முடைய மிக அடர்ந்த கூந்தலில் அழகுபெற சூட்டி, காண்பதற்கு அளவு கடந்த விருப்பத்தினால் நம்மிடமிருந்து விலகியவனை, எவ்வாறு நாம் அடைவோம்?

குறிப்பு:  கூஉம் தினையே (11) – ஒளவை துரைசாமி உரை – கூவிக்காக்கும் வினையை கூஉம் என்றார்.  பெயரெச்சம் செயப்படு பொருட்பெயர் கொண்டது; எழுதும் ஓலை என்றாற் போல.  தினையைக் கொய்யும் வேளையில் வேங்கை மரத்தின் பூக்கள் மலர்தல் – அகநானூறு 132, நற்றிணை 125, 259, 313, 389.  புலம்பு – புலம்பே தனிமை (தொல்காப்பியம், உரியியல் 35).  உறு – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3).

சொற்பொருள்:  கருங்கால் வேங்கை நாள் உறு புதுப் பூப் பொன் செய் கம்மியன் கை வினை கடுப்ப – கரிய அடியையுடைய வேங்கை மரத்தின் நாட்காலை மலரும் புதிய மலர்களை பொன் தொழில் செய்யும் பொற்கொல்லனின் கை வேலையை ஒத்திருக்கும் (வேங்கை மரம் – Kino Tree, Pterocarpus marsupium, கடுப்ப – உவம உருபு), தகை வனப்புற்ற – மிகுந்த அழகுடைய, கண்ணழி கட்டு அழித்து – தடை முழுவதையும் அழித்து, ஒலி பல் கூந்தல் அணிபெறப் புனைஇ – மிக அடர்ந்த கூந்தலில் அழகுபெற சூட்டி (ஒலி பல் – ஒருபொருட் பன்மொழி, புனைஇ – அளபெடை), காண்டற் காதல் கைம்மிக கடீஇயாற்கு – காண்பதற்கு அளவு கடந்த விருப்பத்தினால் நம்மிடமிருந்து விலகியவனை (கடீஇயாற்கு – செய்யுளிசை அளபெடை), யாங்கு ஆகுவம் கொல் – எவ்வாறு நாம் அடைவோம் (கொல் – அசைநிலை), தோழி – தோழி, காந்தள் கமழ் குலை அவிழ்ந்த நயவருஞ் சாரல் கூதள நறும் பொழில் புலம்ப – காந்தள் மணம் கமழும் குலைகள் அவிழ்ந்த விருப்பம் மிகும் பக்க மலையில் கூதள மலர்களையுடைய நறுமணப் பொழில் தனிமையுற (கூதளம் – Convolvulus ipome vine, a three–lobed nightshade vine), ஊர்வயின் மீள்குவம் போலத் தோன்றும் – நம் ஊர்க்கு நாம் திரும்பிச் செல்வோம் போல் தோன்றும், தோடு புலர்ந்து அருவியின் ஒலித்தல் ஆனா கொய் பதம் கொள்ளும் நாம் கூஉம் தினையே – மேல் இலைகள் காய்ந்து அருவிகள் போல் ஒலித்து ஒலிகள் குறையாமல் கொய்யும் பதம் கொள்ளும் நாம் கூவிக் கிளிகளை விரட்டும் தினைப்புனம் (தினை – ஈண்டு தினைப்புனத்தைக் குறிக்கின்றது, கூஉம் – செய்யுளிசை அளபெடை, தினையே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 314, முப்பேர் நாகனார், பாலைத் திணை – தலைவி சொன்னது
‘முதிர்ந்தோர் இளமை அழிந்தும் எய்தார்,
வாழ் நாள் வகை அளவு அறிஞரும் இல்லை,
மாரிப் பித்திகத்து ஈர் இதழ் அலரி
நறுங்காழ் ஆரமொடு மிடைந்த மார்பில்,
குறும்பொறிக் கொண்ட கொம்மை அம் புகர்ப்பின்  5
கருங்கண் வெம்முலை ஞெமுங்கப் புல்லிக்
கழிவதாக கங்குல்’ என்று தாம்
மொழி வன்மையின் பொய்த்தனர், வாழிய,
நொடி விடுவன்ன காய்விடு கள்ளி
அலங்கல் அம் பாவை ஏறி, புலம்பு கொள்  10
புன் புறா வீழ் பெடைப் பயிரும்
என்றூழ் நீளிடைச் சென்றிசினோரே.

பாடல் பின்னணிபிரிவிடை வருந்திய தலைவி கூறியது. 

பொருளுரை:  “முதுமை அடைந்தவர்கள் இளமை கழிந்த பின் அதை மீண்டும் பெற மாட்டார்கள்.  தாம் வாழும் நாட்களின் வகை அளவை அறிந்தவர்களும் இல்லை. மழைக்காலத்தின் பிச்சியின் ஈர இதழ்களையுடைய மலர் மாலையை அணிந்த நறுமண வைரம் முற்றிய (மிகவும் வலிமையுடைய) சந்தனத்தின் கலவையைப் பூசிய எம் மார்பில், சிறு பொறிகளைக் கொண்ட திரண்ட அழகிய நிறத்தையுடைய கரிய கண்கள் பொருந்திய விருப்பம்தரும் உன் முலைகள் அழுந்துமாறு அணைத்துக் கழிவதாக நம் இரவுகள்” என்று தன் சொல் வன்மையால் பொய்யைக் கூறினார், விரல்களை நொடித்தாற்போன்ற ஒலியுடன் காய்கள் தெறிக்கின்ற கள்ளியின் அசைகின்ற தலைக் கிளைகளில் ஏறி தனியே இருந்து வருந்தும் ஆண் புறா தான் விரும்பும் பெடையை அழைக்கும், வெயில் காய்கின்ற நீண்ட வழியில் சென்றவர். அவர் நீடு வாழ்வாராக!

குறிப்பு:  குறுந்தொகை 174 – கள்ளிக் காய்விடு கடு நொடி.  நொடி விடுவன்ன காய்விடு கள்ளி (9) – ஒளவை துரைசாமி உரை – நெரித்து வளைத்து விட்டாற்போலக் காய்கள் காய்த்து விளங்கும் கள்ளி, H. வேங்கடராமன் உரை – விரல்களை நொடித்து விட்டாற்போன்று காய்கள் ஒலி எழுப்பி தெறிக்கின்ற கள்ளி.  பித்திகம் (3) – ஒளவை துரைசாமி உரை – இக்காலத்தே இதனைப் பிச்சிப்பூ என்பர். பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – சிறு சண்பகம்.  பித்திகம் – உ. வே. சாமிநாதையர் உரை, குறுந்தொகை 94 – பிச்சி.  இது மழைக்காலத்து அரும்பி மலரும் என்பது ‘மாரிப் பித்திக்கத்து நீர்வார் கொழு முகை’ (குறுந்தொகை 168, 222) என்பதனால் விளங்கும்.  அலங்கல் அம் பாவை (10) – ஒளவை துரைசாமி உரை – அசைதலையுடைய தலைப்பகுதி, பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – அசைகின்ற அழகிய பாவை போன்ற மரக்கிளை.   சின் – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம், சொல்லதிகாரம்.  இடையியல் 26, சின் என்பது இசின் என்பதன் முதற்குறை – ச. பாலசுந்தரம் உரை), அவற்றுள், இகுமும் சின்னும் ஏனை இடத்தொடும் தகு நிலை உடைய என்மனார் புலவர் (தொல்காப்பியம், இடையியல் 27).  புலம்பு – புலம்பே தனிமை (தொல்காப்பியம், உரியியல் 35).  என்றூழ் – கதிரவனின் முதிர்ந்த கதிர்கள், எல் (கதிரவன்) + ஊழ் (முதிர்ச்சி).  பேரறிஞர் கு. வெ. பாலசுப்பிரமணியன் அவர்களின் விளக்கம்.  காழ் – அகக் காழனவே மரம் என மொழிப (தொல்காப்பியம், மரபியல் 87).

சொற்பொருள்:  முதிர்ந்தோர் இளமை அழிந்தும் எய்தார் – முதுமை அடைந்தவர்கள் இளமை கழிந்த பின் அதை மீண்டும் பெற மாட்டார்கள், வாழ் நாள் வகை அளவு அறிஞரும் இல்லை – தாம் வாழும் நாட்களின் வகை அளவை (எத்துணை நாட்கள் என்னும் வகை எல்லையை) அறிந்தவர்களும் இல்லை, மாரிப் பித்திகத்து ஈர் இதழ் அலரி நறுங்காழ் ஆரமொடு மிடைந்த மார்பில் – மழைக்காலத்தின் பிச்சியின் ஈர இதழ்களையுடைய மலர் மாலையை அணிந்த நறுமண வைரம் முற்றிய (மிகவும் வலிமையுடைய) சந்தனத்தின் கலவையைப் பூசிய மார்பில், குறும்பொறிக் கொண்ட கொம்மை அம் புகர்ப்பின் கருங்கண் வெம்முலை ஞெமுங்கப் புல்லிக் கழிவதாக கங்குல் – சிறு பொறிகளைக் கொண்ட திரண்ட அழகிய நிறத்தையுடைய கரிய கண்கள் பொருந்திய விருப்பம்தரும் முலைகள் அழுந்துமாறு அணைத்துக் கழிவதாக இரவுகள், என்று தாம் மொழி வன்மையின் பொய்த்தனர் – என்று தன் சொல் வன்மையால் பொய்யைக் கூறினார், வாழிய – அவர் நீடு வாழ்வாராக, நொடி விடுவன்ன காய்விடு கள்ளி அலங்கல் அம் பாவை ஏறி புலம்பு கொள் புன் புறா வீழ் பெடைப் பயிரும் என்றூழ் நீளிடைச் சென்றிசினோரே – விரல்களை நொடித்தாற்போன்ற ஒலியுடன் காய்கள் தெறிக்கின்ற கள்ளியின் அசைகின்ற தலைக் கிளைகளில் ஏறி தனியே இருந்து வருந்தும் ஆண் புறா தான் விரும்பும் பெடையை அழைக்கும் வெயில் காய்கின்ற நீண்ட வழியில் சென்றவர் (சென்றிசினோரே – ஏகாரம் அசைநிலை, சென்றிசினோர் – இறந்தகாலத்தெரிநிலை வினைத்திரிசொல்)

நற்றிணை 315, அம்மூவனார், நெய்தல் திணை – பரத்தை தலைவனிடம் சொன்னது
ஈண்டு பெருந்தெய்வத்து யாண்டு பல கழிந்தெனப்,
பார்த்துறைப் புணரி அலைத்தலின், புடை கொண்டு
மூத்து வினை போகிய முரிவாய் அம்பி,
நல் எருது நடை வளம் வைத்தென உழவர்
புல்லுடைக் காவில் தொழில் விட்டாங்கு,  5
நறு விரை நன் புகை கொடாஅர், சிறு வீ
ஞாழலொடு கெழீஇய புன்னை அம் கொழு நிழல்
முழவு முதல் பிணிக்கும் துறைவ, நன்றும்
விழுமிதின் கொண்ட கேண்மை நொவ்விதின்
தவறும் நன்கு அறியாய் ஆயின், எம் போல்  10
ஞெகிழ் தோள் கலுழ்ந்த கண்ணர்,
மலர் தீய்ந்தனையர் நின் நயந்தோரே.

பாடல் பின்னணி:  தலைவனைப் பரத்தை நொந்து உரைத்தது.  நெய்தலுள் மருதம்.

பொருளுரை:  அடுத்தடுத்துப் பெரிய கடவுள்களின் பெயர்களை உடைய ஆண்டுகள் பல கழிந்ததாலும், பாறைகள் பொருந்திய துறையில் அலைகள் அலைத்ததாலும் தாக்குண்டு, முதுமை அடைந்து, கடலில் செல்லும் வினைக்கு உதவாத விளிம்பு முறிந்துவிட்ட தோணிகளை, நல்ல எருதுகள் நடையின் வளமை நீங்கி முதுமை அடைந்ததால் உழவர்கள் புல் வளரும் தோட்டத்தில் தொழில் செய்யாதபடி அவற்றை விட்டாற்போல், நறுமணம் உடைய நல்ல அகில் போன்றவற்றின் புகையைக் காட்டி வழிபடாது, சிறிய மலர்களையுடைய ஞாழல் மரங்களுடன் பொருந்திய புன்னை மரங்களின் அடர்ந்த நிழலில் முழவு போன்ற மரங்களின் அடியில் அவற்றைக் கட்டி வைக்கும் துறைவனே!  பெரிதும் சிறப்பு உடைய நட்பின்கண் சிறிது அளவும் பிழை நேராது இருத்தலை நீ நன்கு அறியவில்லை ஆனால், எம்மைப் போல் நெகிழ்ந்த தோள்களையும் கலங்கிய கண்களையும் உடையவர்களாக ஆகி, கருகிய மலர்களை ஒப்பர் உன்னை விரும்பும் பெண்கள்.

குறிப்பு:  ஒளவை துரைசாமி உரை – ‘புல்லுதல் மயக்கும் புலவிக்கண்ணும்’ (தொல்காப்பியம், கற்பியல் 10) எனத் தொடங்கும் நூற்பாவின் உரையில் இப்பாட்டைக் காட்டி, ‘இதனுள் மூத்து வினை போகிய அம்பி போலப் பருவஞ்சென்ற பிணிக்கப்பட்ட எம்மைப் போலாது இவள் இப்பருவத்தே இனையளாகற்பாலளோ, மலர்ந்த செவ்வியான் முறைவீயாய்க் கழியாது இடையே எரிந்து கரிவுற்ற பூவினைப் போல எனத் தலைவனுக்குக் காமக்கிழத்தி கூறியவாறு காண்க’ என்பர் நச்சினார்க்கினியர்.  பெருந்தெய்வத்து யாண்டு (1) – ஒளவை துரைசாமி உரை – ஒரு பெருங்கடவுளின் ஆணைக்கேற்ப அடுத்தடுத்து வரும் யாண்டுகள், பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – பெரிய தெய்வமென பெயர் கொண்ட ஆண்டுகள், பொ. வே. சோமசுந்தரனார் உரை – தெய்வம் = வருடம், தெய்வத்துயாண்டு, இருபெயரொட்டு.  பார்த்துறை (2) – ஒளவை துரைசாமி உரை – பாறைகள் பொருந்திய துறை, பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – கரையை அடுத்த துறை, முரிவாய் அம்பி (3) – ஒளவை துரைசாமி உரை – விளிம்பு முரிந்து கெட்ட தோணி, முரிந்த வாயை உடைய படகு.  உள்ளுறை – கு. வெ. பாலசுப்பிரமணியன் உரை – அம்பி முதிர்ந்தபின் புன்னையின் கீழ்ச் சேர்ப்பர் என்றது, தலைவனை வாய்ந்த மாதர் வயது முதிர்ந்தபின் கைவிடப்பெறுவர் என்பது உணர்த்தவாம்.  விழுமம் – விழுமம் சீர்மையும் சிறப்பும் இடும்பையும் (தொல்காப்பியம், உரியியல்  57).  நன்று – நன்று பெரிது ஆகும் (தொல்காப்பியம், உரியியல் 45).

சொற்பொருள்:  ஈண்டு பெருந்தெய்வத்து யாண்டு பல கழிந்தெனப் பார்த்துறைப் புணரி அலைத்தலின் புடை கொண்டு மூத்து வினை போகிய முரிவாய் அம்பி – அடுத்தடுத்துப் பெரிய கடவுள்களின் பெயர்களை உடைய ஆண்டுகள் பல கழிந்ததாலும் பாறைகள் பொருந்திய துறையில் அலைகள் அலைத்ததாலும் தாக்குண்டு முதுமை அடைந்து கடலில் செல்லும் வினைக்கு உதவாத விளிம்பு முறிந்துவிட்ட தோணிகளை, (ஈண்டு – தொடர்ந்து வரும், அடுத்தடுத்து வரும்), நல் எருது நடை வளம் வைத்தென உழவர் புல்லுடைக் காவில் தொழில் விட்டாங்கு நறு விரை நன் புகை கொடாஅர் – நல்ல எருதுகள் நடையின் வளமை நீங்கி முதுமை அடைந்ததால் உழவர்கள் புல் வளரும் தோட்டத்தில் தொழில் செய்யாதபடி அவற்றை விட்டாற்போல் நறுமணம் உடைய நல்ல அகில் போன்றவற்றின் புகையைக் காட்டி வழிபட மாட்டார்கள் (வைத்தென – நீங்கியபடியால், கொடாஅர் – அளபெடை), சிறு வீ ஞாழலொடு கெழீஇய புன்னை அம் கொழு நிழல் முழவு முதல் பிணிக்கும் துறைவ – சிறிய மலர்களையுடைய ஞாழல் மரங்களுடன் பொருந்திய புன்னை மரங்களின் அடர்ந்த நிழலில் முழவு போன்ற மரங்களின் அடியில் கட்டி வைக்கும் துறைவனே (ஞாழல் மரம் – புலிநகக்கொன்றை, tigerclaw tree, Cassia sophera, புன்னை – Laurel Tree, Mast wood Tree, Calophyllum inophyllum, கெழீஇய – செய்யுளிசை அளபெடை), நன்றும் விழுமிதின் கொண்ட கேண்மை நொவ்விதின் தவறும் நன்கு அறியாய் ஆயின் – பெரிதும் சிறப்பு உடைய நட்பின்கண் சிறிது அளவும் பிழை நேராது இருத்தலை நீ நன்கு அறியவில்லை ஆனால், எம் போல் ஞெகிழ் தோள் கலுழ்ந்த கண்ணர் மலர் தீய்ந்தனையர் நின் நயந்தோரே – எம் போல் நெகிழ்ந்த தோள்களையும் கலங்கிய கண்களையும் உடையவர்களாக ஆகி கருகிய மலர்களை ஒப்பர் உன்னை விரும்பும் பெண்கள் (நயந்தோரே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 316, இடைக்காடனார், முல்லைத் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
மடவது அம்ம, மணி நிற எழிலி,
மலரின் மௌவல் நலம்வரக் காட்டிக்,
‘கயல் ஏர் உண்கண் கனங்குழை, இவை நின்
எயிறு ஏர் பொழுதின் ஏய்தருவேம்’ என
கண் அகன் விசும்பின் மதி என உணர்ந்த நின்  5
நன்னுதல் நீவிச் சென்றோர், தம் நசை
வாய்த்துவரல் வாரா அளவை அத்தக்
கல் மிசை அடுக்கம் புதையக் கால் வீழ்த்து,
தளிதரு தண் கார் தலைஇ
விளி இசைத்தன்றால் வியல் இடத்தானே.  10

பாடல் பின்னணி:  பிரிவிடை வருந்திய தலைவியைத் தோழி வற்புறுத்தியது.

பொருளுரை:  தோழி!  கேட்பாயாக!  முல்லை மலரை அழகாக எடுத்துக்காட்டி “கயல்மீன் போன்ற மையுண்ட கண்களையும் கனமான குழைகளையும் அணிந்தவளே!  இம்முல்லைகள் நின் பற்கள் போல் அரும்பை ஈனும் பொழுது மீண்டும் வருவோம்” என்று, இடம் அகன்ற வானில் பிறை நிலா எனக் கொள்ளத்தக்க நின் நல்ல நெற்றியைத் தடவிச் சென்றவர், தாம் விரும்பிய பொருள் ஈட்டும் வினை முற்றி மீண்டு வருவதற்குரிய காலத்திற்கு முன்பே, சுரத்து வழியுடைய மலையின் மேலிடமும் மலை அடுக்கமும் மறையுமாறு நீர்க்கால் இறங்கி, மழைத்துளிகளைப் பெய்கின்ற குளிர்ந்த கார்காலத்தைச் செய்து இடி முழக்கத்தை அகன்ற வானில் செய்வதால், அறியாமை உடையன, நீலமணி நிறத்தையுடைய முகில்கள்.

குறிப்பு:  பற்களைப் போன்ற அரும்பு:  குறுந்தொகை 126 – முல்லைத் தொகு முகை இலங்கு எயிறாக, குறுந்தொகை 162 – சிறு வெண்முகையின் முறுவல் கொண்டனை, குறுந்தொகை 186 – முல்லை மென் கொடி எயிறு என முகையும், நற்றிணை 316 – மௌவல் நலம்வரக் காட்டி கயல் ஏர் உண்கண் கனங்குழை இவை நின் எயிறு ஏர் பொழுதின் ஏய்தருவேம் என, கலித்தொகை 27 – மாதரார் முறுவல் போல் மண மௌவல் முகை ஊழ்ப்ப.  ஏய்தருவேம் (4) – ச. வே. சுப்பிரமணியன் உரை, கு. வெ. பாலசுப்பிரமணியன் உரை – ஏய்தருவேம், பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை, ஒளவை துரைசாமி உரை – எய்தருவேம் (எய்தல், ஏய்தல் – அடைதல்).  நசை (6) – ஒளவை துரைசாமி உரை – ஆகுபெயராய் வினை மேலும் பொருள் மேலும் நின்றது.  கால் வீழ்த்து (8) – ஒளவை துரைசாமி உரை – அடிவானத்தே நிலம் தொட நிற்கும் கார் மழை கால்வீழ்த்தது என்னும் வழக்குப்பற்றிக் கால்வீழ்த்து என்றார்.  அடுக்கம் (8) – ஒன்றின் மேல் ஒன்று அடுக்கியது போலத் தோன்றும் மலைக்கூட்டம் அடுக்கம் எனப்பட்டது.  இசைத்தன்றால் (10) – ஒளவை துரைசாமி உரை – முழங்கியது, H. வேங்கடராமன் உரை – குழுமி உள்ளது.  அம்ம – அம்ம கேட்பிக்கும் (தொல்காப்பியம், இடையியல் 28).

சொற்பொருள்:  மடவது – அறியாமை உடையன, அம்ம – கேட்பாயாக, மணி நிற எழிலி – நீலமணி நிறத்தையுடைய முகில்கள், மலரின் மௌவல் நலம்வரக் காட்டிக் ‘கயல் ஏர் உண்கண் கனங்குழை’ இவை நின் எயிறு ஏர் பொழுதின் ஏய்தருவேம்’ என கண் அகன் விசும்பின் மதி என உணர்ந்த நின் நன்னுதல் நீவிச் சென்றோர் – முல்லை மலரை அழகாக எடுத்துக்காட்டி ‘கயல்மீன் போன்ற மையுண்ட கண்களையும் கனமான குழைகளையும் அணிந்தவளே’ இம்முல்லைகள் நின் பற்கள் போல் அரும்பை ஈனும் பொழுது மீண்டும் வருவோம்’ என்று இடம் அகன்ற வானில் பிறை நிலா எனக் கொள்ளத்தக்க நின் நல்ல நெற்றியைத் தடவிச் சென்றவர் (மௌவல் – Jasminum angustifolium, Wild jasmine, கனங்குழை – அன்மொழித்தொகை விளியேற்று நின்றது, ஏர் – உவம உருபு), தம் நசை வாய்த்துவரல் வாரா அளவை – தாம் விரும்பிய பொருள் ஈட்டும் வினை முற்றி மீண்டு வருவதற்குரிய காலத்திற்கு முன்பே, அத்தக் கல் மிசை அடுக்கம் புதையக் கால் வீழ்த்து தளிதரு தண் கார் தலைஇ விளி இசைத்தன்றால் வியல் இடத்தானே – சுரத்து வழியுடைய மலையின் மேலிடமும் மலை அடுக்கமும் மறையுமாறு நீர்க்கால் இறங்கி மழைத்துளிகளைப் பெய்கின்ற குளிர்ந்த கார்காலத்தைச் செய்து இடி முழக்கத்தை அகன்ற வானில் செய்வதால் (தலைஇ – அளபெடை, இசைத்தன்றால் – இசைத்தன்று + ஆல், ஆல் அசைநிலை, இடத்தானே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 317, மதுரைப் பூவண்ட நாகன் வேட்டனார், குறிஞ்சித் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
நீடு இருஞ்சிலம்பின் பிடியொடு புணர்ந்த
பூம்பொறி ஒருத்தல் ஏந்து கை கடுப்பத்,
தோடுதலை வாங்கிய நீடு குரல் பைந்தினை,
பவளச் செவ்வாய்ப் பைங்கிளி கவரும்
உயர்வரை நாட! நீ நயந்தோள் கேண்மை  5
அன்னை அறிகுவள் ஆயின், பனி கலந்து,
என் ஆகுவ கொல் தானே, எந்தை
ஓங்கு வரைச் சாரல் தீஞ்சுனை ஆடி,
ஆயமொடு குற்ற குவளை
மா இதழ் மா மலர் புரைஇய கண்ணே?  10

பாடல் பின்னணி:  வரைவு கடாயது.

பொருளுரை:  நீண்ட பெரிய மலையில் தன் பிடி யானையுடன் கூடிய, அழகிய புள்ளிகளையுடைய களிற்று யானையின் உயர்த்திய தும்பிக்கையை ஒப்ப, மேல் இலைகளிலிருந்து வளர்ந்து வளைந்த நீண்ட கொத்துக்களாக உள்ள பசிய தினையை, பவளம் போன்ற சிவந்த வாயையுடைய பச்சைக்கிளிகள் கொய்து கொண்டு செல்லும் உயர்ந்த மலையின் நாடனே!  உன்னால் விரும்பப்படுபவளான இவள்பால் நீ கொண்ட நட்பை அன்னை அறிவாள் ஆயின், கண்ணீரை வடித்து என்ன நிலையை அடையுமோ, எம் தந்தையின் உயர்ந்த மலைப்பக்கத்தில் உள்ள இனிய சுனையில் நீராடித் தோழியருடன் கொய்த குவளையின் கரிய இதழ்களையுடைய பெரிய மலர் போன்ற இவளுடைய கண்கள்?

குறிப்பு:  உள்ளுறை – பொ. வே. சோமசுந்தரனார் உரை – தோட்டினின்றும் தலை வளைந்து பக்குவமுற்றவுடன் பசிய கிளி கவர்ந்துகொண்டு போவது போல் நீயும் தமரினின்றும் வேறுபட்டு நின் பகுதியாளாக ஆகிவிட்ட தலைவியை வரைந்து கொண்டு நின் மனைக்குச் செல்வாயாக என்பது.  உள்ளுறை – கு. வெ. பாலசுப்பிரமணியன் உரை – கிளி கொண்டு செல்லும் தினைக்கதிர்கள் கிளிக்கு உணவாகுமேயன்றிப் புனத்திற்குப் பயன்படாதது போல தலைவியும் தலைவனுக்குப் பயன் தருவாளேயன்றி பிறந்த இல்லத்திற்குப் பயன்படாள் என்பதாம்.  பிடி – பிடி என் பெண் பெயர் யானை மேற்றே (தொல்காப்பியம், மரபியல் 52).

சொற்பொருள்:  நீடு இருஞ்சிலம்பின் பிடியொடு புணர்ந்த பூம்பொறி ஒருத்தல் ஏந்து கை கடுப்பத் தோடுதலை வாங்கிய நீடு குரல் பைந்தினை பவளச் செவ்வாய்ப் பைங்கிளி கவரும் உயர்வரை நாட – நீண்ட பெரிய (கரிய) மலையில் தன் பிடியுடன் (பெண் யானையுடன்) புணர்ந்த அழகிய புள்ளிகளையுடைய களிற்று யானையின் உயர்த்திய தும்பிக்கையை ஒப்ப மேல் இலைகளிலிருந்து வளர்ந்து வளைந்த நீண்ட கொத்துக்களாக உள்ள பசிய தினையை பவளம் போன்ற சிவந்த வாயையுடைய பச்சைக்கிளிகள் கொய்து கொண்டு செல்லும் உயர்ந்த மலையின் நாடனே (கடுப்ப – உவம உருபு, நாட – அண்மை விளி), நீ நயந்தோள் கேண்மை அன்னை அறிகுவள் ஆயின் – உன்னால் விரும்பப்படுபவளான இவள்பால் நீ கொண்ட நட்பை அன்னை அறிவாள் ஆயின், பனி கலந்து என் ஆகுவ கொல் தானே – கண்ணீரை வடித்து என்ன நிலையை அடையுமோ (கொல் – அசைநிலை, தானே – தான் ஏ அசைநிலைகள்), எந்தை ஓங்கு வரைச் சாரல் தீஞ்சுனை ஆடி ஆயமொடு குற்ற குவளை மா இதழ் மா மலர் புரைஇய கண்ணே – எம் தந்தையின் உயர்ந்த மலைப்பக்கத்தில் உள்ள இனிய சுனையில் நீராடித் தோழியருடன் கொய்த குவளையின் கரிய இதழ்களையுடைய பெரிய மலர் போன்ற இவளுடைய கண்கள் (புரைஇய – அளபெடை, புரை – உவம உருபு, கண்ணே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 318, சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோ, பாலைத் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
நினைத்தலும் நினைதிரோ ஐய, அன்று நாம்
பணைத் தாள் ஓமைப் படுசினை பயந்த,
பொருந்தாப் புகர் நிழல் இருந்தனெமாக
நடுக்கம் செய்யாது நண்ணுவழித் தோன்றி,
ஒடித்து மிசைக் கொண்ட ஓங்கு மருப்பு யானை  5
பொறிபடு தடக்கை சுருக்கி பிறிது ஓர்
ஆறு இடையிட்ட அளவைக்கு, வேறு உணர்ந்து
என்றூழ் விடர் அகம் சிலம்பப்
புன்தலை மடப் பிடி புலம்பிய குரலே?

பாடல் பின்னணி:  பிரிவு உணர்த்தப்பட்ட தோழி சொல்லியது.

பொருளுரை:  ஐயா!  அன்று நாம் பருத்த அடியையுடைய ஓமை மரத்தின் தாழ்ந்த கிளைகள் தந்த அடர்த்தி இல்லாது புள்ளியாக உள்ள நிழலில் இருந்தோம் ஆக, நமக்கு அச்சம் விளைவிக்காது தான் வரும் வழியில் தோன்றி தழைகளை ஒடித்துத் தின்னுதலைக் கொண்ட உயர்ந்த கோட்டினை (தந்தத்தை, மருப்பை) உடைய யானை தன் புள்ளிகளையுடைய நீண்ட தும்பிக்கையைச் சுருக்கி வேறு வேறு ஒரு வழியில் சென்று மறைந்ததற்கு, அதை வேறாக எண்ணி வெயில் படர்ந்த பிளவிடங்களில் எல்லாம் ஒலிக்கும்படியாகப் புல்லிய தலையை உடைய இளம் பெண்யானையின் கதறிய குரலை, நீவிர் நினைத்தலையும் செய்வீரோ?  நினைப்பீர் ஆயின், கொடிய சுரத்து வழியில் இவளை நீங்கிச் செல்லாதீர்.

குறிப்பு:  இறைச்சி – பொ. வே. சோமசுந்தரனார் உரை – களிறு வேறொன்றினைக் கருதித் தாழ்ந்தமையால் அதை மாறுபாடாக உணர்ந்து பிடி யானை புலம்பும் என்றது, நீயிர் சென்ற இடத்துத் தாழ்ப்பின் இவள் புலம்பி இறந்துபடும் என்றதாம்.  ஒளவை துரைசாமி உரை – உடன்போக்கின்கண் தோழியும் உடன்சேறல் இல்லையாயினும், தலைவிக்கும் தோழிக்கும் உள்ள ஒருமையுளப்பாடு கருதி ‘நாம்’ என்றார்.  இவ்வாறு வருவனற்றை, ‘ஒன்றித் தோன்றும் தோழி மேன’ (தொல்காப்பியம், பொருள் 39) என்பதனால் அமைப்பர் நச்சினார்க்கினியர்.  இடையிட்ட அளவைக்கு (7) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – இடையீடுப்பட்டு பிளிற்றியவுடன், ச. வே. சுப்பிரமணியன் உரை – வழியில் கண்டது போலப் பிளிறியது, ஒளவை துரைசாமி உரை – மறைந்த அவ்வளவிற்கு.  தட – தடவும் கயவும் நளியும் பெருமை (தொல்காப்பியம், உரியியல் 24).  என்றூழ் – கதிரவனின் முதிர்ந்த கதிர்கள், எல் (கதிரவன்) + ஊழ் (முதிர்ச்சி).  பேரறிஞர் கு. வெ. பாலசுப்பிரமணியன் அவர்களின் விளக்கம்.  பிடி – பிடி என் பெண் பெயர் யானை மேற்றே (தொல்காப்பியம், மரபியல் 52).

சொற்பொருள்:  நினைத்தலும் நினைதிரோ – நினைத்தலையும் செய்வீரோ, ஐய – ஐயா, அன்று நாம் பணைத் தாள் ஓமைப் படுசினை பயந்த பொருந்தாப் புகர் நிழல் இருந்தனெமாக – அன்று நாம் பருத்த அடியையுடைய ஓமை மரத்தின் தாழ்ந்த கிளைகள் தந்த அடர்த்தி இல்லாது புள்ளியாக உள்ள நிழலில் இருந்தோம் ஆக (ஓமை மரம் – Toothbrush Tree, Dillenia indica), நடுக்கம் செய்யாது நண்ணுவழித் தோன்றி ஒடித்து மிசைக் கொண்ட ஓங்கு மருப்பு யானை – நமக்கு அச்சம் விளைவிக்காது தான் வரும் வழியில் தோன்றி தழைகளை ஒடித்துத் தின்னுதலைக் கொண்ட உயர்ந்த கோட்டினை (தந்தத்தை, மருப்பை) உடைய யானை, பொறிபடு தடக்கை சுருக்கி பிறிது ஓர் ஆறு இடையிட்ட அளவைக்கு – தன் புள்ளிகளையுடைய நீண்ட தும்பிக்கையைச் சுருக்கி வேறு ஒன்றினை வழியில் கண்டாற்போல் பிளிறியதால், தன் புள்ளிகளையுடைய நீண்ட தும்பிக்கையைச் சுருக்கி வேறு ஒரு வழியில் சென்று மறைந்ததற்கு, வேறு உணர்ந்து என்றூழ் விடர் அகம் சிலம்பப் புன்தலை மடப் பிடி புலம்பிய குரலே – அதை வேறாக எண்ணி வெயில் படர்ந்த பிளவிடங்களில் எல்லாம் ஒலிக்கும்படியாகப் புல்லிய தலையை உடைய இளம் பெண்யானையின் கதறிய குரலை (குரலே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 319, வினைத்தொழில் சோகீரனார், நெய்தல் திணை – தலைவன் சொன்னது
ஓதமும் ஒலி ஓவின்றே, ஊதையும்
தாது உளர் கானல் தவ்வென்றன்றே,
மணன் மலி மூதூர் அகல் நெடுந்தெருவில்
கூகைச் சேவல் குராலோடு ஏறி,
ஆர் இருஞ்சதுக்கத்து அஞ்சுவரக் குழறும்,  5
அணங்கு கால் கிளரும் மயங்கு இருள் நடுநாள்
பாவை அன்ன பலர் ஆய் வனப்பின்
தட மென் பணைத்தோள் மடம் மிகு குறுமகள்
சுணங்கு அணி வன முலை முயங்கல் உள்ளி,
மீன் கண் துஞ்சும் பொழுதும்,  10
யான் கண் துஞ்சேன்; யாது கொல் நிலையே?

பாடல் பின்னணி:  தலைவி இற்செறிக்கப்பட்டாள்.  அதனை அறிந்து ஆற்றானாகியத் தலைவன் தனக்குத் தானே கூறியது.

பொருளுரை:  கடலின் ஓசை அடங்கிவிட்டது.  ஊதைக்காற்றும் பூந்தாதை உதிர்த்துப் பரவியதால் கடற்கரைச் சோலையும் பொலிவை இழந்தது.  மணல் நிறைந்த பண்டைய ஊரின் அகன்ற நெடிய தெருவில் கூகைச் சேவல் தன் பெடையாகிய குராலுடன் ஆத்தி மரம் இருக்கும் சதுக்கம் சென்று, அம்மரத்தில் ஏறி அச்சம் உண்டாகும்படி கூவும், பேய்கள் இயங்கும் மயங்குதற்குரிய நடு இரவில், பாவையை (கொல்லிப் பாவையை) ஒத்த பலரால் ஆராயப்படும் அழகையும் பெரிய மெல்லிய மூங்கில் போன்ற தோள்களையும் உடைய மடப்பம் மிக்க இளையவளான என் காதலியின் தேமல் படர்ந்த அழகிய மார்பைத் தழுவ எண்ணி, மீன்கள் உறங்கும் பொழுதும், யான் கண் உறங்காது உள்ளேன்.  என் நிலைமை எவ்வாறு முடியுமோ?

குறிப்பு:  ஒளவை துரைசாமி உரை – ‘பண்பிற் பெயர்ப்பினும்’ (தொல்காப்பியம், களவியல் 12) எனத் தொடங்கும் நூற்பாவில், ‘பரிவுற்று மெலியினும்’ என்றதற்கு இப்பாட்டைக் காட்டி, இஃது இரவுக் குறியிற் பரிவுற்றது என்பர் நச்சினார்க்கினியர்.  ஒப்புமை:  நெடுநல்வாடை 85 – தவ்வென்று அசைஇ தா துளி, குறுந்தொகை 356–4 தவ்வெனக் குடிக்கிய.  ஆர் இருஞ்சதுக்கத்து (2) – ஒளவை துரைசாமி உரை – ஆத்தி மரம் நின்ற பெரிய சதுக்கத்தில், பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – மக்கள் இயங்காத பெரிய நாற்சந்தி கூடுமிடத்தில், கு. வெ. பாலசுப்பிரமணியன் உரை – மக்கள் புழக்கம் இல்லாத பெரிய நாற்சந்தி கூடுமிடத்தில். பாவை (7) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – கொல்லிப்பாவை, ஒளவை துரைசாமி உரை – பாவை.  ஒப்புமை:  நற்றிணை 255 – கழுது கால் கிளர ஊர் மடிந்தன்றே.  தட – தடவும் கயவும் நளியும் பெருமை (தொல்காப்பியம், உரியியல் 24), அவற்றுள், தட என் கிளவி கோட்டமும் செய்யும் (தொல்காப்பியம், உரியியல் 25).  சேவல் – சேவல் பெயர்க்கொடை சிறகொடு சிவணும் மா இருந் தூவி மயில் அலங்கடையே (தொல்காப்பியம், மரபியல் 49).

சொற்பொருள்:  ஓதமும் ஒலி ஓவின்றே – கடலின் ஓசை அடங்கிவிட்டது (ஓவின்றே – ஏகாரம் அசைநிலை), ஊதையும் தாது உளர் கானல் தவ்வென்றன்றே – ஊதைக்காற்றும் பூந்தாதை உதிர்த்துப் பரவியதால் கடற்கரைச் சோலையும் பொலிவை இழந்தது (தவ்வென்றன்றே – ஏகாரம் அசைநிலை), மணன் மலி மூதூர் அகல் நெடுந்தெருவில் கூகைச் சேவல் குராலோடு ஏறி ஆர் இருஞ்சதுக்கத்து அஞ்சுவரக் குழறும் – மணல் நிறைந்த பண்டைய ஊரின் அகன்ற நெடிய தெருவில் கூகைச் சேவல் தன் பெடையாகிய குராலுடன் ஆத்தி மரம் இருக்கும் சதுக்கம் சென்று அம்மரத்தில் ஏறி அச்சம் உண்டாகும்படி கூவும் (மணன் – மணல் என்பதன் போலி), அணங்கு கால் கிளரும் மயங்கு இருள் நடுநாள்  – பேய்கள் இயங்கும் மயங்குதற்குரிய நடு இரவில், பாவை அன்ன பலர் ஆய் வனப்பின் தட மென் பணைத்தோள் மடம் மிகு குறுமகள் சுணங்கு அணி வன முலை முயங்கல் உள்ளி மீன் கண் துஞ்சும் பொழுதும் யான் கண் துஞ்சேன் – பாவையை (கொல்லிப் பாவையை) ஒத்த பலரால் ஆராயப்படும் அழகையும் பெரிய மெல்லிய மூங்கில் போன்ற தோள்களையும் உடைய மடப்பம் மிக்க இளையவளின் தேமல் படர்ந்த அழகிய மார்பைத் தழுவ எண்ணி மீன்கள் உறங்கும் பொழுதும் யான் கண் உறங்காது உள்ளேன், யாது கொல் நிலையே – என் நிலைமை எவ்வாறு முடியுமோ (கொல் – ஐயப்பொருட்டு, நிலையே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 320, கபிலர், மருதத் திணை – பரத்தை சொன்னது
‘விழவும் உழந்தன்று, முழவும் தூங்கின்று,
எவன் குறித்தனள் கொல்?’ என்றி ஆயின்,
தழை அணிந்து அலமரும் அல்குல், தெருவின்
இளையோள் இறந்த அனைத்தற்கு பழ விறல்
ஓரிக் கொன்ற ஒரு பெருந்தெருவில்  5
காரி புக்க நேரார் புலம் போல்
கல்லென்றன்றால், ஊரே அதற்கொண்டு,
காவல் செறிய மாட்டி, ஆய் தொடி
எழில் மா மேனி மகளிர்
விழுமாந்தனர், தம் கொழுநரைக் காத்தே.  10

பாடல் பின்னணி:  பரத்தையைப் பிரிந்த தலைவன் அவளை நீங்கிப் புதிய பரத்தையிடம் சென்றான்.  அதை அறிந்த முதல் பரத்தை சினந்து, தலைவன் கேட்குமாறு, தன்னுடைய தோழியரிடம் இவ்வாறு கூறுகின்றாள்.

பொருளுரை:  ஊரில் திருவிழாக்கள் முடிந்து விட்டன.  முழவு ஒலியும் அடங்கி விட்டது.  இவள் என்ன கருதினாளோ என்று கேட்பாயாயின், தழை ஆடையை அணிந்து, அசையும் இடையுடன் தெருவில் இந்த இளையவள் சென்ற அந்த காரணத்திற்காக, பழமையான வெற்றியை உடைய வல்வில் ஓரியைக் கொன்ற ஒரு பெரிய தெருவில், மலையமான் திருமுடிக் காரி புகுந்தபொழுது, பகைவர் நிலம் பெரும் இரைச்சல் அடைந்தாற்போல், கல்லென்ற ஆரவாரமுடையதாக இருந்தது ஊர்.  அதனால், ஆராய்ந்த வளையல்களை அணிந்த அழகிய கருமையான மேனியை உடைய பெண்கள், மேன்மை அடைந்தனர், தங்கள் கணவன்மாரை இவளிடமிருந்து பாதுகாத்து.

குறிப்பு:  விழுமாந்தனர் (10) – ஒளவை துரைசாமி உரை – விழுமம் என்னும் உரிச்சொல்லடியாகப் பிறந்த தெரிநிலை வினைமுற்று.  விழுமம் – விழுமம் சீர்மையும் சிறப்பும் இடும்பையும் (தொல்காப்பியம், உரியியல் 55).

சொற்பொருள்:  விழவும் மூழ்த்தன்று – திருவிழாக்களும் முடிந்து விட்டன, முழவும் தூங்கின்று – முழவு ஒலியும் அடங்கி விட்டது, எவன் குறித்தனள் கொல் – இவள் என்ன கருதினாளோ (கொல் – அசைநிலை), என்றி ஆயின் – என்று கேட்பாயாயின், தழை அணிந்து – தழை ஆடையை அணிந்து, அலமரும் – அசையும், அல்குல் – இடை, தெருவின் – தெருவில், இளையோள் இறந்த – இளையவள் சென்ற, அனைத்தற்கு – அந்த காரணத்திற்காக, பழ விறல் ஓரிக் கொன்ற – பழைய வெற்றியை உடைய வல்வில் ஓரியைக் கொன்ற, ஒரு பெருந் தெருவில் – ஒரு பெரிய தெருவில், காரி – மலையமான் திருமுடிக் காரி, புக்க – புகுந்தபொழுது, நேரார் – பகைவர், புலம் போல் – நிலம் போல, கல்லென்றன்றால் ஊரே – கல்லென்ற ஆரவாரமுடையதாக இருந்தது ஊர் (கல்லென்று – ஒலிக்குறிப்பு), அதற்கொண்டு – அதனால், காவல் செறிய மாட்டி – நன்கு காவலிட்டு, ஆய் தொடி – அழகிய வளையல்கள், ஆராய்ந்து அணிந்த வளையல்கள், எழில் மா மேனி மகளிர் – அழகிய கருமையான மேனியை உடைய பெண்கள், விழுமாந்தனர் – மேன்மை அடைந்தனர், தம் கொழுநரைக் காத்தே – தங்கள் கணவர்களைக் காத்து (காத்தே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 321, மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார், முல்லைத் திணை – தலைவன் தேர்ப்பாகனிடம் சொன்னது
செந்நிலப் புறவின் புன் மயிர்ப் புருவை
பாடு இன் தெள் மணித் தோடு தலைப்பெயரக்,
கான முல்லைக் கயவாய் அலரி
பார்ப்பன மகளிர் சாரல் புறத்து அணியக்,
கல் சுடர் சேரும் கதிர் மாய் மாலை,  5
புல்லென் வறுமனை நோக்கி, மெல்ல
வருந்தும் கொல்லோ திருந்திழை அரிவை?
வல்லைக் கடவுமதி தேரே, சென்றிக,
குருந்து அவிழ் குறும் பொறை பயிற்றப்
பெருங்கலி மூதூர் மரம் தோன்றும்மே.  10

பாடல் பின்னணி:  வினை முற்றி மீளும் தலைவன் தேர்ப்பாகனிடம் சொன்னது.

பொருளுரை:  செம்மண் நிலமாகிய முல்லைக் காட்டில் புல்லிய மயிரையுடைய ஆட்டு இனத்தின் இனிய தெளிந்த ஓசையையுடை மணிகள் கட்டப்பட்ட கூட்டம் தொழுவம் நோக்கி நகர, கானத்தில் உள்ள முல்லையின் இதழ் விரிந்த மலர்களை, மலைச்சாரலின் புறத்தே உள்ள பார்ப்பன மகளிர் அணிய, மேற்கு மலையில் சென்று அடையும் கதிரவனின் கதிர்கள் மறையும் மாலை நேரத்தில், பொலிவில்லாத, யாம் இல்லாததால் வறிதாகிய மனையை நோக்கி வருந்துவாள் திருத்தமாகப் புனையப்பட்ட அணிகலன்களை அணிந்த எம் காதலி.  விரைவாகத் தேரைச் செலுத்துவாயாக.  குருந்த மலர்கள் மலர்கின்ற சிறு குன்றுகள் மிகுந்த பெரிய ஆரவாரமுடைய பழைய ஊரில் மரங்கள் தோன்றுகின்றன.  ஆதலால் நின் தேர் செல்வதாக!

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – மரம் தோன்றுவதால் ஊரின் அண்மை கூறினான்.  பார்ப்பன மகளிர் தங்கள் கேள்வரை உடைமையிற் பிரியப்பெறார் ஆதலின் அம்மகளிர் மலர் அணிந்தமை கூறுமுகத்தால் அவர் போல் காதலியும் பிரியாது உறையக் கருதுமே எனக் குறிப்பித்தான்.  குறும் பொறை (9) – ஒளவை துரைசாமி உரை – குறுகிய குன்றங்கள், பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – காடு.

சொற்பொருள்:  செந்நிலப் புறவின் புன் மயிர்ப் புருவை பாடு இன் தெள் மணித் தோடு தலைப்பெயர – செம்மண் நிலமாகிய முல்லைக் காட்டில் புல்லிய மயிரையுடைய ஆட்டு இனத்தின் இனிய தெளிந்த ஓசையையுடை மணிகள் கட்டப்பட்ட கூட்டம் தொழுவம் நோக்கி நகர (புருவை – ஆடு), கான முல்லைக் கயவாய் அலரி பார்ப்பன மகளிர் – கானத்தில் உள்ள முல்லையின் அகன்ற வாயை உடைய மலர்களை (இதழ் விரிந்த மலர்களை) பார்ப்பன மகளிர், சாரல் புறத்து – மலைச்சாரலின் புறத்தே உள்ள, அணிய – அணிய, கல் சுடர் சேரும் கதிர் மாய் மாலை – மேற்கு மலையில் சென்று அடையும் கதிரவனின் கதிர்கள் மறையும் மாலை நேரத்தில், புல்லென் வறுமனை நோக்கி மெல்ல வருந்தும் கொல்லோ திருந்திழை அரிவை – பொலிவில்லாத யாம் இல்லாததால் வறிதாகிய மனையை நோக்கி வருந்துவாள் திருத்தமாகப் புனையப்பட்ட அணிகலன்களை அணிந்த எம் காதலி (கொல்லோ – கொல் ஓ அசைநிலைகள்), வல்லைக் கடவுமதி தேரே – விரைவாகத் தேரைச் செலுத்துவாயாக (கடவுமதி – மதி முன்னிலை அசை), சென்றிக – செல்க (செல்க என்னும் வியங்கோள் வினைதிரிசொல்), குருந்து அவிழ் குறும் பொறை பயிற்றப் பெருங்கலி மூதூர் மரம் தோன்றும்மே – குருந்த மலர்கள் மலர்கின்ற சிறு குன்றுகள் மிகுந்த பெரிய ஆரவாரமுடைய பழைய ஊரில் மரங்கள் தோன்றுகின்றன (குருந்தம் – wild orange, citrus indica, தோன்றும்மே – செய்யுளோசை நோக்கி மகர ஒற்று விரிந்தது)

நற்றிணை 322, மதுரைப் பாலாசிரியன் சேந்தன் கொற்றனார், குறிஞ்சித் திணை – தோழி தலைவியிடம் சொன்னது அல்லது தலைவி தோழியிடம் சொன்னது
ஆங்கனம் தணிகுவது ஆயின், யாங்கும்
இதனின் கொடியது பிறிது ஒன்று இல்லை,
வாய் கொல், வாழி தோழி, வேய் உயர்ந்து
எறிந்து செறித்தன்ன பிணங்கு அரில் விடர் முகை,
ஊன் தின் பிணவின் உயங்கு பசி களைஇயர்,  5
ஆள் இயங்கு அரும் புழை ஒற்றி, வாள் வரிக்
கடுங்கண் வயப் புலி ஒடுங்கும் நாடன்
தண் கமழ் வியல் மார்பு உரிதினின் பெறாது,
நன்னுதல் பசந்த படர் மலி அரு நோய்
அணங்கு என உணரக் கூறி, வேலன்  10
இன் இயம் கறங்கப் பாடிப்,
பல் மலர் சிதறிப் பரவுறு பலிக்கே.

பாடல் பின்னணி:  களவில் வந்தொழுகும் தலைவன் சிறைப்புறமாக இருக்கும்போது கூறியது.  தலைவியின் கூற்று.  தோழியின் கூற்றுமாம்.  வரைவு கடாயது.

பொருளுரை:  தோழி, நீ நீடு வாழ்வாயாக!  உயர்ந்து வளர்ந்த மூங்கில்களை வெட்டி நெருக்கி வைத்தாற்போன்று புதர்கள் பின்னப்பட்டு இருக்கும் மலைப்பிளவில், ஊன் உண்ணும் பெண் புலியின் வருத்துகின்ற பசியை நீக்கும் பொருட்டு மக்கள் இயங்கும் அரிய வழியை அடுத்து, ஒளியுடைய வரிகளையும் கொடிய கண்களையுமுடைய வலிமையான புலி பதுங்கியிருக்கும் நாடனின் குளிர்ச்சியுடைய நறுமணமான அகன்ற மார்பை உரியதாகப் பெறாமையால், நல்ல நெற்றியில் பசலை படர்ந்த நினைத்தல் மிக்க நீக்குதற்கு அரிய நோயானது முருகனால் ஏற்பட்டது எனத் தாயர் ஏற்றுக்கொள்ளுமாறுக் கூறி, வேலன் இனிய இசைக்கருவிகள் ஒலிக்கப் பாடி பல மலர்களைச் சிதறித் துதித்துக் கொடுக்கும் பலிக்குத் தணியுமானால், எங்கும் இதைவிடவும் கொடியது வேறு இல்லை என்பது உண்மை தானா?

குறிப்பு:  உள்ளுறை – கு. வெ. பாலசுப்பிரமணியன் உரை – ஆண்புலி பெண்புலியுற்ற பசிபோக்கச் சுரத்திடைச் சென்று மறைந்திருக்குமென்றது, தலைவியின் பிரிவுத் துயர் போக்க வரைந்தெய்துதற்கு வேண்டும் பொருளைத் தலைவன் ஈட்டச் சென்று வருவானாக என்பதை உள்ளுறுத்தது.  வேலன் – நச்சினார்க்கினியர் உரை திருமுருகாற்றுப்படை 222 – பிள்ளையார் வேலைத் (பிள்ளையான முருகனின் வேலை) தனக்கு அடையாளமாகக் கொண்டு திரிதலின் வேலன் என்றார்.  அண்மையில் ஈன்ற துணைக்கு உணவு தேடல்:  புலி – நற்றிணை 29, 148, 332, 383, அகநானூறு 112, 147, 238, கழுகு – அகநானூறு 3, செந்நாய் – அகநானூறு 21, அகநானூறு 85, புறா – நற்றிணை 384, யானை – நற்றிணை 393, நாரை – நற்றிணை 263.

சொற்பொருள்:  ஆங்கனம் தணிகுவது ஆயின் – அவ்வாறு தணியுமானால் (ஆங்கனம் – முதல் நீண்டது), யாங்கும் இதனின் கொடியது பிறிது ஒன்று இல்லை வாய் கொல் – எங்கும் இதைவிடவும் கொடியது வேறு இல்லை என்பது உண்மை தானா, வாழி – நீ நீடு வாழ்வாயாக, தோழி – தோழி, வேய் உயர்ந்து எறிந்து செறித்தன்ன பிணங்கு அரில் விடர் முகை – மூங்கில்கள் உயர்ந்து வளர்ந்து அவற்றை வெட்டி நெருக்கி வைத்தாற்போன்று புதர்கள் பின்னப்பட்டு இருக்கும் மலைப்பிளவு, ஊன் தின் பிணவின் உயங்கு பசி களைஇயர் ஆள் இயங்கு அரும் புழை ஒற்றி வாள் வரிக் கடுங்கண் வயப் புலி ஒடுங்கும் நாடன் – ஊன் (தசை) உண்ணும் பெண் புலியின் வருத்துகின்ற பசியை நீக்கும் பொருட்டு மக்கள் இயங்கும் அரிய வழியை அடுத்து ஒளியுடைய (வாள் போலும்) வரிகளையும்  கொடிய கண்களையுமுடைய வலிமையான புலி பதுங்கியிருக்கும் நாடன் (களைஇயர் – சொல்லிசை அளபெடை), தண் கமழ் வியல் மார்பு உரிதினின் பெறாது – குளிர்ச்சியுடைய நறுமணமான அகன்ற மார்பை உரியதாகப் பெறாமையால், நன்னுதல் பசந்த படர் மலி அரு நோய் அணங்கு என உணரக் கூறி – நல்ல நெற்றியில் பசலை படர்ந்த நினைத்தல் மிக்க நீக்குதற்கு அரிய நோய் முருகனால் ஏற்பட்டது எனத் தாயர் ஏற்றுக்கொள்ளுமாறுக் கூறி, வேலன் இன் இயம் கறங்கப் பாடிப் பல் மலர் சிதறிப் பரவுறு பலிக்கே – வேலன் இனிய இசைக்கருவிகள் ஒலிக்கப் பாடி பல மலர்களைச் சிதறித் துதித்துக் கொடுக்கும் பலிக்கு (பலிக்கே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 323, வடம வண்ணக்கன் பேரிசாத்தனார், நெய்தல் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
ஓங்கித் தோன்றும் தீம் கள் பெண்ணை
நடுவணதுவே தெய்ய, மடவரல்
ஆயமும் யானும் அறியாது அவணம்
மாய நட்பின் மாண் நலம் ஒழிந்து, நின்
கிளைமை கொண்ட வளை ஆர் முன் கை  5
நல்லோள் தந்தை சிறுகுடிப் பாக்கம்;
புலி வரி எக்கர்ப் புன்னை உதிர்த்த
மலி தாது ஊதும் தேனோடு ஒன்றி,
வண்டு இமிர் இன் இசை கறங்க திண் தேர்த்
தெரி மணி கேட்டலும் அரிதே,  10
வரும் ஆறு ஈது, அவண் மறவாதீமே.

பாடல் பின்னணி:  தோழி இரவுக்குறி நேர்ந்தது.

பொருளுரை:  தன் மாட்சிமையுடைய இனிய நலத்தை நீக்கி, உன்னுடன் உறவு கொண்ட வளையல் அணிந்த முன்னங்கையை உடைய நல்லவளின் தந்தையின் சிறு குடிகளை உடைய கடற்கரை ஊரில் உயர்ந்து தோன்றும், இனிய கள்ளைக் கொண்ட பனை மரங்களின் நடுவில், மடப்பம் பொருந்திய தோழியர் கூட்டமும் யானும் ஒருவரை ஒருவர் அறியாதபடி இருப்போம்.  புலியின் வரிகள் போன்று மணல் நிறைந்த திடரில் புன்னை மரத்தின் உதிர்ந்த மிக்கப் பூந்தாதினை உண்ணும் பெண் வண்டுகளுடன் ஆண் வண்டுகளும் சேர்ந்து இனிய ஓசையை ஒலித்ததால் உன் திண்ணிய தேரின் தெளிவான மணியோசையைக் கேட்பது அரிது.  நீ அங்கு வருவதற்கு வழி இதுவாகும்.  அதை நீ மறந்துவிடாதே.

குறிப்பு:  இறைச்சி – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – புன்னை உதிர்ந்த தாதினை வண்டுகள் இமிர்ந்து உண்ணும் என்றதனால், தலைவியின் நலத்தை அஞ்சாது உண்டு, மகிழ்ந்திருக்கலாம் என்பது.  தேனோடு (8) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – பெண் வண்டுகளுடனே.  வண்டு (9) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – ஆண் வண்டு.

சொற்பொருள்:  ஓங்கித் தோன்றும் தீம் கள் பெண்ணை நடுவணதுவே தெய்ய மடவரல் ஆயமும் யானும் அறியாது அவணம் – உயர்ந்து தோன்றும் இனிய கள்ளைக் கொண்ட பனை மரங்களின் நடுவில் மடப்பம் பொருந்திய தோழியர் கூட்டமும் யானும் ஒருவரை ஒருவர் அறியாதபடி அங்கு இருப்போம் (தெய்ய – அசைநிலை), மாய நட்பின் மாண் நலம் ஒழிந்து நின் கிளைமை கொண்ட வளை ஆர் முன் கை நல்லோள் தந்தை சிறுகுடிப் பாக்கம் – தன் மாட்சிமையுடைய இனிய நலத்தை நீக்கி உன்னுடன் உறவு கொண்ட வளையல் அணிந்த முன்னங்கையை உடைய நல்லவளின் தந்தையின் சிறு குடிகளை உடைய கடற்கரை ஊர், புலி வரி எக்கர்ப் புன்னை உதிர்த்த மலி தாது ஊதும் தேனோடு ஒன்றி வண்டு இமிர் இன் இசை கறங்க திண் தேர்த் தெரி மணி கேட்டலும் அரிதே – புலியின் வரிகள் போன்று மணல் நிறைந்த திடரில் புன்னை மரத்தின் உதிர்ந்த மிக்கப் பூந்தாதினை உண்ணும் பெண் வண்டுகளுடன் ஆண் வண்டுகளும் சேர்ந்து இனிய ஓசையை ஒலித்ததால் உன் திண்ணிய தேரின் தெளிவான மணியோசையைக் கேட்பது அரிது (புன்னை மரம் – Laurel Tree, Mast wood Tree, Calophyllum inophyllum), வரும் ஆறு ஈது – நீ வருவதற்கு வழி இதுவாகும் (இது, ஈது எனச் சுட்டு நீண்டது), அவண் – அங்கு, மறவாதீமே – மறந்துவிடாதே (ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 324, கயமனார், குறிஞ்சித் திணை அல்லது பாலைத் திணை – தலைவன் தோழனிடம் சொன்னது, அல்லது தலைவியை வழியில் கண்டோர் சொன்னது

அந்தோ! தானே அளியள் தாயே!
நொந்து அழி அவலமொடு என் ஆகுவள் கொல்,
பொன் போல் மேனித் தன் மகள் நயந்தோள்?
கோடு முற்று யானை காடுடன் நிறைதர,
நெய் பட்டன்ன நோன் காழ் எஃகின்   5
செல்வத் தந்தை இடனுடை வரைப்பின்,
ஆடு பந்து உருட்டுநள் போல ஓடி,
அம் சில் ஓதி இவள் உறும்
பஞ்சி மெல் அடி நடை பயிற்றும்மே.

பாடல் பின்னணி:  ஒளவை துரைசாமி உரை – இஃது இடைச் சுரத்து கண்டோர் சொல்லியது.  பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – தலைமகன் பாங்கற்குச் சொல்லியது, இடைச்சுரத்துக் கண்டோர் சொல்லியதூஉமாம்.

பொருளுரை:  மருப்புகள் (தந்தங்கள்) முற்றிய யானைகள் நிறைய இருக்கும் காட்டில், நெய் பூசினாற்போல் உள்ள வலிய காம்பு பொருந்திய வேலை உடைய செல்வத் தந்தையின் அகன்ற இல்லத்தில் விளையாட்டுப் பந்தை உருட்டுபவள் போல் ஓடிய, அழகிய சிலவாகிய கூந்தலை உடைய இவளுடைய பஞ்சு போன்ற மிகவும் மெல்லிய அடிகள் தொடர்ந்து நடப்பதால், பொன் போன்ற மேனியையுடைய தன் மகளை விரும்பும் இவளுடைய தாய் இரங்கத்தக்கவள். ஐயோ!  நொந்து அழிக்கும் துன்பத்துடன் அவள் இனி என்ன அவாளோ?

குறிப்பு:  ஒளவை துரைசாமி உரை – தந்தையின் இடனுடைப் பெருமனை வாழ்வும் பெருஞ் செல்வமுமாகிய இவற்றிடையே இருத்தலினும், தன் காதற் கணவனாகிய தலைமகனுடன் காட்டிடை கல் அதர் அத்தத்தில் நடந்து செல்வது மிக்க இன்பம் தருவதொன்று என்ற நல்லறம் இக்கூற்றின்கண் அமைந்திருப்பது கயமனார் புலமை உள்ளத்திற்கு மிக்க மகிழ்ச்சி நல்குவது காண்க.  தலைவியும் பந்தும், புலவர் கயமனார் பாடல்கள் – நற்றிணை 12, 305, 324, குறுந்தொகை 396. தலைவி பந்துடன் விளையாடுதல் – புலவர் கயமனார் எழுதிய நற்றிணை 12, 305, 324 மற்றும் குறுந்தொகை 396 ஆகிய பாடல்களில் தலைவி பந்துடன் விளையாடும் குறிப்பு உள்ளது.

சொற்பொருள்:  அந்தோ – ஐயோ,  தானே அளியள் தாயே – இரங்கத்தக்கவள் இவளின் தாய் (தாயே – ஏகாரம் அசைநிலை), நொந்து அழி அவலமொடு என் ஆகுவள் கொல் – நொந்து அழிக்கும் துன்பத்துடன் என்ன அவாளோ (கொல் – அசைநிலை), பொன் போல் மேனித் தன் மகள் நயந்தோள் – பொன் போன்ற மேனியையுடைய தன் மகளை விரும்புபவள், கோடு முற்று யானை காடுடன் நிறைதர – மருப்புகள் (தந்தங்கள்) முற்றிய யானைகள் காட்டில் நிறைய இருக்கும், நெய் பட்டன்ன நோன் காழ் எஃகின் செல்வத் தந்தை இடனுடை வரைப்பின் ஆடு பந்து உருட்டுநள் போல ஓடி அம் சில் ஓதி இவள் உறும் பஞ்சி மெல் அடி நடை பயிற்றும்மே – நெய் பூசினாற்போல உள்ள வலிய காம்பு பொருந்திய வேலை உடைய செல்வத் தந்தையின் அகன்ற இடத்தில் விளையாட்டுப் பந்தை உருட்டுபவள் போல் ஓடி அழகிய சிலவாகிய கூந்தலை உடைய இவளுடைய பஞ்சு போன்ற மிகவும் மெல்லிய அடிகள் தொடர்ந்து நடக்கும் (இடன் – இடம் என்பதன் போலி, உறும் – மிகுதி, பயிற்றும்மே – செய்யுளோசை நோக்கி மகர ஒற்று விரிந்தது)

நற்றிணை 325, மதுரைக் காருலவியங்கூத்தனார், பாலைத் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
கவிதலை எண்கின் பரூஉ மயிர் ஏற்றை
இரை தேர் வேட்கையின் இரவில் போகி,
நீடு செயல் சிதலைத் தோடு புனைந்து எடுத்த
அர வாழ் புற்றம் ஒழிய, ஒய்யென
முரவாய் வள் உகிர் இடப்ப வாங்கும்,  5
ஊக்கு அருங்கவலை நீந்தி, மற்று இவள்
பூப்போல் உண்கண் புது நலம் சிதைய,
வீங்கு நீர் வாரக் கண்டும்,
தகுமோ பெரும? தவிர்க நும் செலவே.

பாடல் பின்னணி:  தோழி செலவு அழுங்குவித்தது.

பொருளுரை:  பெருமானே!  இவளுடைய மலர்போன்ற மையிட்ட கண்களின் புதிய அழகு பாழ்படுமாறு அவற்றிலிருந்து மிக்க கண்ணீர் வடியக் கண்டும், கவிந்த தலையையுடைய கரடியின் பருத்த மயிரையுடைய ஆண், இரை தேடும் விருப்பத்துடன் இரவில் சென்று, நீண்ட நாட்களின் செயலாகிய கறையான் கூட்டம் செய்து உயர்த்திய பாம்புகள் வாழும் புற்றுகள் பாழ்படுமாறு, விரைவாக வலிய மடிந்த (ஒடிந்த) முனையையுடைய பெரிய நகங்களால் பறித்து உள் இருக்கும் புற்றாஞ்சோறு முதலியவற்றை உறிஞ்சி எடுத்து உண்ணும், நினைத்தற்கும் அரிய பிரிவுகளை உடைய வழியில் நீவிர் செல்வது தகுமோ?  தகாது.  செல்லுவதை நீவிர் தவிர்ப்பீராக!

குறிப்பு:  முரவாய் வள் உகிர் (5) – ஒளவை துரைசாமி உரை – மடிந்த வாயும் கூர்மையும் உடைய நகங்களால் தோன்றி, பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – ஒடிந்த வாயையுடைய பெரிய நகங்களாலே பறித்து.  இறைச்சி – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – கரடி இரைதேடும் வேட்கையால் புற்று அகழ்ந்து உண்ணும் என்றது, தலைவியின் காமம் தலைவனைக் கூடும் விருப்பத்தின் மிகுதியால் இவள் உயிர் உண்ணும் என்பது உணர்த்தற்காம்.  கரடிகள் கரையான் புற்றுக்களைத் தாக்குதல் – நற்றிணை 125, 325, 336, அகநானூறு 8, 72, 81, 88, 112, 149, 247, 257, 307.  ஏற்றை – ஆற்றலொடு புணர்ந்த ஆண்பாற்கு எல்லாம் ஏற்றைக் கிளவி உரித்து என மொழிப (தொல்காப்பியம், மரபியல் 50).

சொற்பொருள்:  கவிதலை எண்கின் பரூஉ மயிர் ஏற்றை இரை தேர் வேட்கையின் இரவில் போகி நீடு செயல் சிதலைத் தோடு புனைந்து எடுத்த அர வாழ் புற்றம் ஒழிய ஒய்யென முரவாய் வள் உகிர் இடப்ப வாங்கும் ஊக்கு அருங்கவலை நீந்தி – கவிந்த தலையையுடைய கரடியின் பருத்த மயிரையுடைய ஆண் இரை தேடும் விருப்பத்துடன் இரவில் சென்று நீண்ட நாட்களின் செயலாகிய கறையான் கூட்டத்தின் செய்து உயர்த்திய பாம்புகள் வாழும் புற்றுகள் பாழ்படுமாறு விரைவாக வலிய மடிந்த (ஒடிந்த) முனையையுடைய பெரிய நகங்களால் பறித்து உள் இருக்கும் புற்றாஞ்சோறு முதலியவற்றை உறிஞ்சி எடுத்து உண்ணும் நினைத்தற்கும் அரிய பிரிவுகளை உடைய வழியில் சென்று (எண்கு – கரடி, ஏற்றை – ஆண், பரூஉ – செய்யுளிசை அளபெடை, புற்றம் – அம் சாரியை, ஒய்யென – விரைவுக்குறிப்பு), மற்று – அசைநிலை, இவள் பூப்போல் உண்கண் புது நலம் சிதைய வீங்கு நீர் வாரக் கண்டும் தகுமோ – இவளுடைய மலர்போன்ற மையிட்ட கண்களின் புதிய அழகு பாழ்படுமாறு மிக்க கண்ணீர் வடியக் கண்டும் நீவிர் செல்வது தகுமோ (தகுமோ – ஓகாரம் எதிர்மறை), பெரும – பெருமானே, தவிர்க நும் செலவே – செல்லுவதை நீவிர் தவிர்ப்பீராக (செலவே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 326, மதுரை மருதன் இளநாகனார், குறிஞ்சித் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
கொழுஞ்சுளைப் பலவின் பயங்கெழு கவாஅன்,
செழுங்கோள் வாங்கிய மாச் சினைக் கொக்கு இனம்
மீன் குடை நாற்றம் தாங்கல் செல்லாது
துய்த்தலை மந்தி தும்மும் நாட!
நினக்கும் உரைத்தல் நாணுவல், இவட்கே 5
நுண் கொடிப் பீரத்து ஊழ் உறு பூ எனப்
பசலை ஊரும் அன்னோ; பல் நாள்
அறி அமர் வனப்பின் எம் கானம் நண்ண,
வண்டு எனும் உணராவாகி,
மலர் என மரீஇ வரூஉம் இவள் கண்ணே.  10

பாடல் பின்னணி:  களவு ஒழுக்கத்தின்கண் வந்து ஒழுகும் தலைவனிடம் வரைவு கடாயது.

பொருளுரை:  கொழுத்த சுளைகளையுடைய பலா மரத்தின், பயன் பொருந்திய பக்கமலையில் செழித்துக் காய்த்த குலைகளை உடைய வளைந்த பெரிய கிளைகளில் வந்து தங்கிய கொக்கின் கூட்டம் மீனைக் குடைந்து உண்ணுவதால் உண்டாகிய புலவு நாற்றத்தைத் தாங்க முடியாத துய் போல் (பஞ்சு போல்) தலை மயிருடைய மந்தி தும்மும் நாடனே!  இதை நான் உன்னிடம் சொல்வதற்கு வெட்கம் உடையவளாக உள்ளேன்.  பல நாட்களாக உன்னால் அறியப்பட்ட விருப்பத்தையுடைய அழகிய எம் கானமாகிய தினைப்புனத்திற்கு நீ தொடர்ந்து வந்தாலும், நுண்ணியப் பீர்க்கைக் கொடியின் முதல் நாள் மலர்ந்து அடுத்த நாள் உதிர்ந்த பூவின் நிறத்தில் பசலை பரவியுள்ளது இவள் மேனியில்.  வண்டினம் உண்மை உணராது மலர் என எண்ணி, மொய்க்க வருகின்றன இவளுடைய கண்களை.  ஐயோ!

குறிப்பு:  உள்ளுறை – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – பலா மரம் தினைப்புனமாகவும், கொக்குத் தலைவனாகவும், மீன் தலைவியாகவும், குடைதல் இன்பம் துய்த்தலாகவும், நாற்றம் அலராகவும், மந்தி அன்னையாகவும் கொண்டு, பலாமரத்தின் மீது கொக்கு இருந்து மீனைத் தின்னுதலால் ஆகிய நாற்றத்தைத் தாங்கமாட்டாது மந்தி தும்முதல் போல, “தினைப்புனத்து நீ வந்து இவளைக் கலந்து செல்லுதலால் உண்டாகிய அலரைத் தாங்கமாட்டாது அன்னை சினந்து பலகாலும் நோற்காநிற்கும் என்பதாம்.  மந்தி – பேடையும் பெடையும் பெட்டையும் பெண்ணும் மூடும் நாகும் கடமையும் அளகும் மந்தியும் பாட்டியும் பிணையும் பிணவும் அந்தம் சான்ற பிடியொடு பெண்ணே (தொல்காப்பியம், மரபியல் 3).

சொற்பொருள்:  கொழுஞ்சுளைப் பலவின் பயங்கெழு கவாஅன் செழுங்கோள் வாங்கிய மாச் சினைக் கொக்கு இனம் மீன் குடை நாற்றம் தாங்கல் செல்லாது துய்த்தலை மந்தி தும்மும் நாட – கொழுத்த சுளைகளையுடைய பலா மரத்தின் பயன் பொருந்திய பக்கமலையில் செழித்துக் காய்த்த குலைகளை உடைய வளைந்த பெரிய கிளைகளில் வந்து தங்கிய கொக்கின் கூட்டம் மீனைக் குடைந்து உண்ணுவதால் உண்டாகிய புலவு நாற்றத்தைத் தாங்க முடியாத துய் போல் (பஞ்சு போல்) தலை மயிருடைய மந்தி தும்மும் நாடனே (கவாஅன் – அளபெடை), நினக்கும் உரைத்தல் நாணுவல் – உன்னிடம் சொல்வதற்கு வெட்கம் உடையவளாக நான் உள்ளேன் (நாணுவல் – தன்மை ஒருமை வினைமுற்று), இவட்கே – இவளின் (ஏகாரம் அசைநிலை), நுண் கொடிப் பீரத்து ஊழ் உறு பூ எனப் பசலை ஊரும் – நுண்ணியப் பீர்க்கைக் கொடியின் முதல் நாள் மலர்ந்து அடுத்த நாள் உதிர்ந்த பூவின் நிறத்தில் பசலை பரவியுள்ளது, அன்னோ – ஐயோ, பல் நாள் அறி அமர் வனப்பின் – பல நாட்களாக உன்னால் அறியப்பட்ட விருப்பத்தையுடைய அழகிய, எம் கானம் நண்ண – எம் கானமாகிய தினைப்புனத்திற்கு நீ வரவும், வண்டு எனும் உணராவாகி மலர் என மரீஇ வரூஉம் இவள் கண்ணே – வண்டினம் மலர் அல்ல என உணராது மலர் என எண்ணி பொருந்தி வரும் இவள் கண்களிடம் (மரீஇ – செய்யுளிசை அளபெடை, வரூஉம் – செய்யுளிசை அளபெடை, கண்ணே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 327, அம்மூவனார், நெய்தல் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
நாடல் சான்றோர் நம்புதல் பழி எனின்,
பாடு இல கலுழும் கண்ணொடு சாஅய்ச்
சாதலும் இனிதே, காதல் அம் தோழி,
அந்நிலை அல்ல ஆயினும், ‘சான்றோர்
கடன் நிலை குன்றலும் இலர்’ என்று உடன் அமர்ந்து,  5
உலகம் கூறுவது உண்டு என, நிலைஇய
தாயம் ஆகலும் உரித்தே, போது அவிழ்
புன்னை ஓங்கிய கானல்
தண்ணந்துறைவன் சாயல் மார்பே.

பாடல் பின்னணி:  தலைவன் வரையாது நெடுங்காலம் வந்தொழுகினான்.  அது கண்டு ஆற்றுக என்றுரைத்த தோழியிடம் தலைவி கூறியது.

பொருளுரை:  அன்பு மிக்க தோழியே!  நம்மை நாடி வரும் பெரும் சான்றோராகிய நம் தலைவரை நம்புதல் குற்றம் என்றால், உறக்கம் இல்லாது அழும் கண்களுடன் மேனி மெலிவுற்று சாதல் இனிதாகும்.  அவ்வாறு இறப்பது இல்லை என்றாலும், ‘சான்றோர் தம் கடமையிலிருந்து தவற மாட்டார்கள்’ என்று உடன் சேர்ந்து உலகில் உள்ளவர்கள் கூறுவது உண்டு என்பதனால், அரும்புகள் மலர்கின்ற புன்னை மரங்கள் ஓங்கி வளர்ந்த கடற்கரைச் சோலையில் குளிர்ந்த அழகிய நீர்த்துறையை உடைய தலைவனின் மென்மை வாய்ந்த மார்பையும், நிலையாக உள்ள உரிமைகளையும் பெறத்தக்க தன்மை உடையேம்.  அது உரியதே ஆகும்.

குறிப்பு:  இறைச்சி – கு. வெ. பாலசுப்பிரமணியன் உரை – புன்னை போது அவிழ்கின்றது என்றது, தம்மை நயன்தாரைக் கைவிடும் தலைவனது கடற்கரையில் புன்னை போது அவிழ்வது எங்ஙனம் என வியந்தது என உணர்த்திற்று.  சாயல் – சாயல் மென்மை (தொல்காப்பியம், உரியியல் 29).  நாடல் சான்றோர் (1) – ஒளவை துரைசாமி உரை – ஆராய்ந்து மனதாற் கொள்ளப்பட்டவர், பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் உரை, பொ. வே. சோமசுந்தரனார் உரை – விரும்பி வந்து முயங்கும் சான்றோராகிய தலைவர், H. வேங்கடராமன் உரை – தேடி வந்து களவில் முயங்கும் சான்றோனாகிய தலைவன்.  சாதலும் (3) – ஒளவை துரைசாமி உரை – சாதல் இன்னாதாகலின் உம்மை எதிர்மறை.

சொற்பொருள்:  நாடல் சான்றோர் நம்புதல் பழி எனின் பாடு இல கலுழும் கண்ணொடு சாஅய்ச் சாதலும் இனிதே – நம்மை நாடி வரும் பெரும் சான்றோராகிய நம் தலைவரை நம்புதல் குற்றம் என்றால் உறக்கம் இல்லாது அழும் கண்களுடன் மேனி மெலிவுற்று சாதல் இனிதாகும் (இல – இல்லை என்பதன் இடைக்குறை, சாஅய் – அளபெடை, இனிதே – ஏகாரம் அசைநிலை), காதல் அம் தோழி – அன்பு மிக்க தோழியே, அந்நிலை அல்ல ஆயினும் – அவ்வாறு இறப்பது இல்லை என்றாலும், ‘சான்றோர் கடன் நிலை குன்றலும் இலர்’ என்று உடன் அமர்ந்து உலகம் கூறுவது உண்டு என – சான்றோர் தம் கடமையிலிருந்து தவற மாட்டார் என்று உடன் சேர்ந்து உலகில் உள்ளவர்கள் கூறுவது உண்டு என்று (உலகம் – ஆகுபெயர் உலகில் வாழும் மக்களுக்கு), நிலைஇய தாயம் ஆகலும் உரித்தே – நிலையாக உள்ள உரிமைகளைப் பெறுவதும் உரியதே ஆகும் (நிலைஇய – அளபெடை), போது அவிழ் புன்னை ஓங்கிய கானல் தண்ணந்துறைவன் சாயல் மார்பே – அரும்புகள் மலர்கின்ற புன்னை மரங்கள் ஓங்கி வளர்ந்த கடற்கரைச் சோலையில் குளிர்ந்த அழகிய நீர்த்துறையை உடைய தலைவனின் மென்மை வாய்ந்த மார்பை (புன்னை – Laurel Tree, Mast wood Tree, Calophyllum inophyllum, தண்ணந்துறைவன்  – தண்டுறைவன் என்பது தண்ணந்துறைவன் ஆவது, அம் – சாரியை, விரிக்கும் வழி விரித்தல், சாயல் – மென்மை, மார்பே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 328, தொல்கபிலர், குறிஞ்சித் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
கிழங்கு கீழ் வீழ்ந்து, தேன் மேல் தூங்கிச்,
சிற்சில வித்திப் பற்பல விளைந்து
தினை கிளி கடியும் பெருங்கல் நாடன்
பிறப்பு ஓரன்மை அறிந்தனம் அதனால்,
அது இனி வாழி தோழி, ஒரு நாள்  5
சிறு பல் கருவித்து ஆகி வலன் ஏர்பு
பெரும் பெயல் தலைக புனனே இனியே
எண் பிழி நெய்யொடு வெண்கிழி வேண்டாது,
சாந்து தலைக்கொண்ட ஓங்கு பெருஞ்சாரல்
விலங்கு மலை அடுக்கத்தானும்,  10
கலம் பெறு விறலி ஆடும் இவ்வூரே.

பாடல் பின்னணி:  தோழி வரைவிடை ஆற்றாளாகிய தலைவியை வற்புறுத்தியது.

பொருளுரை:  தோழி!  வள்ளிக் கிழங்குகள் நிலத்திற்குக் கீழ் சிறக்க, தேனடைகள் மரங்களின் மேலே கட்டப்பட்டுத் தொங்க, மிகச் சில தினையை விதைத்து அவை மிகப் பலச் செடிகளாக வளர்ந்து அவை ஈன்ற தினையைக் கிளிகள் கொள்ளாதபடி காவல் காப்போர் அவற்றை விரட்டும் பெரிய மலைநாடனின் பிறப்பு பெரும் சிறப்புடையது என்பதை அறிந்தோம் ஆதலால், அப்பிறப்பு என்றும் வாழ்வதாக!  எள்ளைப் பிழிந்து எடுக்கும் நெய்யையும் வெள்ளை ஆடையையும் விரும்பாது, சந்தன மரங்கள் மிகுதியாக உள்ள ஓங்கிய பெரிய சரிவில் குறுக்கிட்ட மலையில் இருக்கும் அணிகலன்கள் பெறும் விறலியர் ஆடும் இந்த ஊரில் உள்ள நம் தினைப்புனத்தில், ஒரு நாள் சிறிய பல மின்னல் முதலிய தொகுதிகளை உடையதாகி முகில்கள் வலிமையுடன் எழுந்து (வலது புறமாக எழுந்து) பெரும் மழையாகப் பொழியட்டும்!  அப்பொழுது அவன் வருவான்.  ஆதலால் நீ வருந்தாதே!

குறிப்பு:  உள்ளுறை – ஒளவை துரைசாமி உரைநிலத்தின் கீழும் மேலும் இடையும் முறையே கிழங்கும் தேனும் தினையும் விளையப்பெறும் பெருங்கல் நாடன் என்றது, இக்களவுக் காலத்தும் நாளை கற்புக்காலத்தும் இடை நிகழும் வதுவை நாளினும் பேரன்பு செய்து நின்னைப் பேணும் பெருவாய்மையன் என வற்புறுத்தியதாகக் கொள்க.  உள்ளுறை – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – (1) – கிழங்கு கீழ்வீழ்ந்து தேன் மேல்தூங்கி என்றது, அவன் நம்பால் வைத்த கீழாக வேரூன்றி இறங்கி, மேலே காணும்போதெல்லாம் தேனினும் இனிமை செய்கின்றது என்பது.  (2) – சிற்சில வித்தி பற்பல விளைந்தென்றது, ஒரோ ஒருகால் இயற்கைப் புணர்ச்சியிலே நீ இன்பம் நல்க அதனைப் பெற்றான் ஆதலின், அதற்கீடாகப் பல்லாயிரம் நன்மையை நினக்கு அளிக்க நாடியிருப்பவன் என்பது.  (3) – கிளி கடியமென்றது, அவ்வன்பு கெடாதபடி பாதுகாக்குமென்பது.   (4) – எண்ணெய் கிழி வேண்டாது விறலி ஆடுமென்றது, அவன் பெருந்தகைமை நோக்கவே, அருங்கலம் முதலாயின வேண்டாது நம் சுற்றத்தார் நின்னைக் கொடுக்க உடன்படுவர் என்பது.  வலன் ஏர்பு – அகநானூறு 43, 84, 188, 278, 298, 328, நற்றிணை 37, 264, 328, குறுந்தொகை 237, ஐங்குறுநூறு 469, பதிற்றுப்பத்து 24, 31, நெடுநல்வாடை 1, பட்டினப்பாலை 67, முல்லைப்பாட்டு 4, திருமுருகாற்றுப்படை 1.  கருவி – கருவி தொகுதி (தொல்காப்பியம், உரியியல் 58).  பிறப்பு ஓரன்மை (4) – ஒளவை துரைசாமி உரை – பிறப்பால் ஏனை மக்களோடு ஒப்பானாயினும் வாய்மை ஒழுக்கத்தால் ஒப்பற்றவன், பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – உயர்பிறப்பினன் ஆதலின் நம்மோடு ஒத்த தன்மையதன்று.

சொற்பொருள்:  கிழங்கு கீழ் வீழ்ந்து தேன் மேல் தூங்கிச் சிற்சில வித்திப் பற்பல விளைந்து தினை கிளி கடியும் பெருங்கல் நாடன் பிறப்பு ஓரன்மை அறிந்தனம் அதனால் – வள்ளிக் கிழங்குகள் நிலத்திற்குக் கீழ் சிறக்க தேனடைகள் மரங்களின் மேலே கட்டப்பட்டுத் தொங்க மிகச் சில தினையை விதைத்து அவை மிகப் பலச் செடிகளாக வளர்ந்து அவை ஈன்ற தினையைக் கிளிகள் கொள்ளாதபடி காவல் காப்போர் அவற்றை விரட்டும் பெரிய மலைநாடனின் பிறப்பு பெரும் சிறப்புடையது என்பதை அறிந்தோம் ஆதலால் அப்பிறப்பு என்றும் வாழ்வதாக (ஓர் அன்மை – ஒப்பு அன்மை, ஒரே தன்மை அல்லாமை), தோழி – தோழி, ஒரு நாள் சிறு பல் கருவித்து ஆகி வலன் ஏர்பு பெரும் பெயல் தலைக புனனே – ஒரு நாள் சிறிய பல மின்னல் முதலிய தொகுதிகளை உடையதாகி வலிமையுடன் எழுந்து (வலது புறமாக எழுந்து) பெரும் மழையாகப் பொழியட்டும் நம் தினைப்புனத்தில், இனியே – இனியே (ஏகாரம் அசைநிலை), எண் பிழி நெய்யொடு வெண்கிழி வேண்டாது சாந்து தலைக்கொண்ட ஓங்கு பெருஞ்சாரல் விலங்கு மலை அடுக்கத்தானும் கலம் பெறு விறலி ஆடும் இவ்வூரே – எள்ளைப் பிழிந்து எடுக்கும் நெய்யையும் வெள்ளை ஆடையையும் விரும்பாது சந்தன மரங்கள் மிகுதியாக உள்ள ஓங்கிய பெரிய சரிவில் குறுக்கிட்ட மலையில் இருக்கும் அணிகலன்கள் பெறும் விறலியர் ஆடும் இந்த ஊர் (ஊரே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 329, மதுரை மருதங்கிழார் மகனார் சொகுத்தனார், பாலைத் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
வரையா நயவினர் நிரையம் பேணார்
கொன்று ஆற்றுத் துறந்த மாக்களின் அடு பிணன்
இடு முடை மருங்கில், தொடும் இடம் பெறாஅது,
புனிற்று நிரை கதித்த பொறிய முது பாறு
இறகு புடைத்து இற்ற பறைப் புன் தூவி  5
செங்கணைச் செறித்த வன்கண் ஆடவர்
ஆடு கொள் நெஞ்சமோடு அதர் பார்த்து அல்கும்,
அத்தம் இறந்தனர் ஆயினும், நத் துறந்து
அல்கலர் வாழி தோழி, உதுக்காண்,
இரு விசும்பு அதிர மின்னி,  10
கருவி மா மழை கடல் முகந்தனவே.

பாடல் பின்னணி:  பிரிவிடை மெலிந்த தலைவியைத் தோழி பருவம் காட்டி வற்புறுத்தியது.

பொருளுரை:  தோழி!  நீ நீடு வாழ்வாயாக!  நம் தலைவர் அளவில்லாத அன்புடையவர். நரகம் போன்ற தீய நெறிகளைக் கைக்கொள்ளாதவர்.  பாலை நிலத்தில் கொல்லப்பட்டவர்களின் பிணங்களின் தீநாற்றமுடைய இடத்தில் அருகில் சென்று உண்ணுவதற்கு இடம் பெறாததால் வெறுத்த, அண்மையில் ஈன்ற புள்ளியுடைய முதிய பருந்து, தன் சிறகுகளை அடித்துக் கொள்ளுவதால் உதிர்ந்த பறத்தலையுடைய மெல்லிய இறகினை சிவந்த அம்பில் கட்டிய வலிமையான மறவர் வெற்றிகொள்ளும் கருத்துடன், வழியைப் பார்த்து ஒழுகும் மலை வழியில் சென்றார் ஆயினும், நம்மைத் துறந்து அங்கு தங்குபவர் இல்லை அவர். அங்கே பார்! கரிய வானம் அதிரும்படி இடித்து மின்னி இடி மின்னல் முதலிய தொகுதிகளையுடைய கருமுகில்கள் கடல் நீரை முகந்துள்ளன.  நம் தலைவர் விரைவில் வந்துவிடுவார்.

குறிப்பு:  இறைச்சி – கு. வெ. பாலசுப்பிரமணியன் உரை – (1) பருந்துகள் பிணத்தின் ஊனைத் தின்ன மாட்டாமல் விலகி இருக்கும் என்றது, தலைவியின் நெற்றியில் உள்ள பசலை அவர் வரும் நாளில் தானே அகலும் என்பது.  (2) – மறவர் தம் கணையுடன் அதர் பார்த்திருப்பர் என்றது, ஊர்ப்பெண்டிர் அலர் தூற்ற அற்றம் பார்த்திருப்பர் என்பது குறித்தவாறு.  கருவி மா மழை (11) – இடி மின்னல் முதலாய தொகுதிகளையுடைய கரிய மேகங்கள்.  கருவி – கருவி தொகுதி (தொல்காப்பியம், உரியியல் 58).  புனிற்று நிரை கதித்த பொறிய முது பாறு (4) – பொ. வே. சோமசுந்தரனார் உரை, பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை, H. வேங்கடராமன் உரை – ஈன்ற அணிமையால் நெருங்காது வெறுத்துக் கடந்து போன புள்ளிகளையுடைய முதிய பருந்து.

சொற்பொருள்:  வரையா நயவினர் – அளவில்லாத அன்புடையவர், நிரையம் பேணார் – நரகம் போன்ற தீய நெறிகளைக் கைக்கொள்ளாதவர், கொன்று ஆற்றுத் துறந்த மாக்களின் அடு பிணன் இடு முடை மருங்கில் – பாலை நிலத்தில் கொல்லப்பட்டவர்களின் பிணங்களின் தீநாற்றமுடைய இடத்தில் (பிணன் – பிணம் என்பதன் போலி), தொடும் இடம் பெறாஅது – அருகில் சென்று உண்ணுவதற்கு இடம் பெறாது (பெறாஅது – அளபெடை), புனிற்று நிரை கதித்த பொறிய முது பாறு – அண்மையில் ஈன்ற புள்ளியுடைய வெறுத்த முதிய பருந்து, இறகு புடைத்து இற்ற பறைப் புன் தூவி – தன் சிறகுகளை அடித்துக் கொள்ளுவதால் உதிர்ந்த பறத்தலையுடைய மெல்லிய இறகு, செங்கணைச் செறித்த வன்கண் ஆடவர் – சிவந்த அம்பில் கட்டிய வலிமையான மறவர், ஆடு கொள் நெஞ்சமோடு அதர் பார்த்து அல்கும் அத்தம் இறந்தனர் ஆயினும் – வெற்றிகொள்ளும் கருத்துடன் வழியைப் பார்த்து ஒழுகும் மலை வழியில் சென்றார் ஆயினும், நத் துறந்து அல்கலர் – நம்மைத் துறந்து அங்கு தங்குபவர் இல்லை, வாழி – நீ நீடு வாழ்வாயாக, தோழி – தோழி, உதுக்காண் – அங்கே பார், இரு விசும்பு அதிர மின்னி கருவி மா மழை கடல் முகந்தனவே – கரிய வானம் அதிரும்படி இடித்து மின்னி இடி மின்னல் முதலிய தொகுதிகளையுடைய கரிய முகில் கடல் நீரை முகந்துள்ளன (முகந்தனவே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 330, ஆலங்குடி வங்கனார், மருதத் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
தட மருப்பு எருமைப் பிணர்ச் சுவல் இரும் போத்து
மட நடை நாரைப் பல் இனம் இரிய,
நெடு நீர்த் தண் கயம் துடுமெனப் பாய்ந்து,
நாள் தொழில் வருத்தம் வீட சேண் சினை
இருள் புனை மருதின் இன் நிழல் வதியும்  5
யாணர் ஊர! நின் மாண் இழை மகளிரை
எம் மனைத் தந்து நீ தழீஇயினும், அவர் தம்
புன் மனத்து உண்மையோ அரிதே, அவரும்
பைந்தொடி மகளிரொடு சிறுவர்ப் பயந்து
நன்றி சான்ற கற்பொடு 10
எம் பாடு ஆதல், அதனினும் அரிதே.

பாடல் பின்னணி:  தோழி தலைவனுக்கு வாயில் மறுத்தது.

பொருளுரை:  பெரிய (வளைந்த) கொம்பையுடைய எருமையின் சொரசொரப்பான பிடரியையுடைய கரிய (பெரிய) ஆண், மென்மையான நடையைக் கொண்ட நாரையின் பல தொகுதிகள் அஞ்சி ஓடுமாறு, ஆழ்ந்த நீரை உடைய குளிர்ந்த குளத்தில் துடும் என ஓசையுண்டாகப் பாய்ந்து, நாள் பொழுதில் உழவுத் தொழில் செய்த தளர்ச்சி நீங்க, நீண்ட கிளைகளையுடைய மருத மரத்தின் இருள் அடர்ந்த இனிய நிழலில் தங்கும் வளமையையுடைய ஊரின் தலைவனே!  உன்னுடை மாட்சிமையுடைய அணிகலன்களை அணிந்த பெண்களை எம் மனைக்கு நீ அழைத்து வந்து அவர்களைத் தழுவினாலும், அவர்களுடைய புல்லிய மனதில் உண்மையான அன்பு இருப்பது அரிது.  அவர்களும் பசிய தொடியை அணியும் சிறுமிகளையும் சிறுவர்களையும் பெற்றார் ஆயினும், நன்மை உடைய கற்புடன் எம் போல் குலமகளிர் ஆகுதல் அதைவிடவும் அரிது.

குறிப்பு:  எம் பாடு ஆதல் (11) – ஒளவை துரைசாமி உரை – எம்போலும் குலமகளிர் எய்தும் பெருமையை உடையராதல், பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – எம் பக்கத்து அமர்தல்.  உள்ளுறை – கு. வெ. பாலசுப்பிரமணியன் உரை – எருமைக்கடா நாரையினம் இரியப் பொய்கையில் பாய்ந்து வருத்தம் நீங்கிய பின் தொழுவம் புகாது மருத மர நிழலிலே தங்கும் என்றது, தலைவன் காமக்கிழத்தியரைத் துய்த்து, பின்னர் அவரை அஞ்சி அகலுமாறு வெறுத்துச் சேரிப் பரத்தையிடம் முயங்கிக் கிடந்து பின்னும் பாணன் கூட்டிய புதிய பரத்தையிடம் தங்கியிருந்தான் என்பதனை உள்ளுறுத்திற்று.  யாணர் – புதிதுபடற் பொருட்டே யாணர்க் கிளவி (தொல்காப்பியம், உரியியல் 83).  புன் மனத்து உண்மையோ அரிதே (8) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – புல்லிய மனதில் கரவில்லாதபடி மெய்ம்மை தோன்றுவது அரிது, H. வேங்கடராமன் உரை – இழிந்த உள்ளத்தில் உள் அன்பைக் காண்பது என்பது அரிது, ஒளவை துரைசாமி உரை – புல்லிய மனத்தின்கண் உண்மையான அன்பு உளதாதல் அரிது.  தட – தடவும் கயவும் நளியும் பெருமை (தொல்காப்பியம், உரியியல் 24), அவற்றுள், தட என் கிளவி கோட்டமும் செய்யும் (தொல்காப்பியம், உரியியல் 25).

சொற்பொருள்:  தட மருப்பு எருமைப் பிணர்ச் சுவல் இரும் போத்து மட நடை நாரைப் பல் இனம் இரிய நெடு நீர்த் தண் கயம் துடுமெனப் பாய்ந்து நாள் தொழில் வருத்தம் வீட சேண் சினை இருள் புனை மருதின் இன் நிழல் வதியும் யாணர் ஊர – பெரிய (வளைந்த) கொம்பையுடைய எருமையின் சொரசொரப்பான பிடரியையுடைய கரிய (பெரிய) ஆண் மென்மையான நடையைக் கொண்ட நாரையின் பல தொகுதிகள் அஞ்சி ஓடுமாறு ஆழ்ந்த நீரை உடைய குளிர்ந்த குளத்தில் துடும் என ஓசையுண்டாகப் பாய்ந்து நாள் பொழுதில் உழவுத் தொழில் செய்த தளர்ச்சி நீங்க நீண்ட கிளைகளையுடைய மருத மரத்தின் இருள் அடர்ந்த இனிய நிழலில் தங்கும் வளமையையுடைய ஊரின் தலைவனே (மருத மரம் – Terminalia arjuna, ஊர – அண்மை விளி), நின் மாண் இழை மகளிரை எம் மனைத் தந்து நீ தழீஇயினும் – உன்னுடை மாட்சிமையுடைய அணிகலன்களை அணிந்த பெண்களை எம் மனைக்கு நீ அழைத்து வந்து அவர்களைத் தழுவினாலும் (தழீஇயினும் – செய்யுளிசை அளபெடை), அவர் தம் புன் மனத்து உண்மையோ அரிதே – அவர்களுடைய புல்லிய மனதில் உண்மையான அன்பு இருப்பது அரிது (அரிதே – ஏகாரம் அசைநிலை), அவரும் பைந்தொடி மகளிரொடு சிறுவர்ப் பயந்து நன்றி சான்ற கற்பொடு எம் பாடு ஆதல் அதனினும் அரிதே – அவர்களும் பசிய தொடியை அணியும் சிறுமிகளையும் சிறுவர்களையும் பெற்றார் ஆயினும் நன்மை உடைய கற்புடன் எம் போல் குலமகளிர் ஆகுதல் அதைவிடவும் அரிது (அரிதே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 331, உலோச்சனார், நெய்தல் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
உவர் விளை உப்பின் உழாஅ உழவர்
ஒழுகை உமணர் வருபதம் நோக்கிக்,
கானல் இட்ட காவற் குப்பை
புலவு மீன் உணங்கல் படுபுள் ஓப்பி,
மட நோக்கு ஆயமொடு உடன் ஊர்பு ஏறி,  5
‘எந்தை திமில் இது, நுந்தை திமில்’ என
வளை நீர் வேட்டம் போகிய கிளைஞர்
திண் திமில் எண்ணும் தண் கடற் சேர்ப்ப!
இனிதே தெய்ய, எம் முனிவு இல் நல்லூர்;
இனி வரின் தவறும் இல்லை; எனையதூஉம்  10
பிறர் பிறர் அறிதல் யாவது
தமர் தமர் அறியாச் சேரியும் உடைத்தே.

பாடல் பின்னணி:  தோழி இரவுக்குறிக்கு உடன்பட்டது.

பொருளுரை:  உவர் நிலத்தில் விளையும் ஏர் கொண்டு உழாது விளைவிக்கும் உப்பை, உப்பை விளைவிப்பவர்கள், அந்த உப்பைப் பெற மாட்டு வண்டியுடன் வரும் உப்பு வணிகர்கள் வரும் காலத்தை நோக்கி கடற்கரையில் வைத்திருக்கும் காவலுடைய குவியலில், புலவு நாற்றம் வீசும் மீன் வற்றலைக் கவர வரும் பறவைகளை விரட்டி, மடப்பம் பொருந்திய நோக்கினை உடைய தோழியருடன் மெல்ல அந்த உப்புக் குவியலில் ஏறி “எம் தந்தையின் படகு இது.  நும் தந்தையின் படகு இது” என்று வளைந்த கடலில் மீன் பிடிக்கச் சென்ற சுற்றத்தாரின் வலிமையான படகுகளை எண்ணும் குளிர்ந்த கடலின் தலைவா!   எம்முடைய வெறுப்பு இல்லாத நல்ல ஊர் இனியது.  நீ அங்கு வந்தால் தவறு இல்லை.  தெருக்களில் அயலார் எவ்வளவேனும் ஒருவரை ஒருவர் அறிவது எவ்வாறு, சுற்றத்தார் ஒருவரை ஒருவர் அறியாத பொழுது?  ஆதலால் நீ அச்சம் இல்லாது எம் ஊர்க்கு வருவாயாக!

குறிப்பு:  உழாஅ உழவர் (1) – ஒளவை துரைசாமி உரை – பொருள் விளைவிக்கும் தொழிலுக்கெல்லாம் உழவு பொதுவாகலின், உப்பு விளைவிப்போரையும் உழவர் என்பர்.  ஆயினும் ஏரால் நிலத்தை உழுவோரின் வேறுபடுத்தற்கு ‘உழாஅ உழவர்’ என்றார்.  சேரி (12) – ஒளவை துரைசாமி உரை – ஊரைச் சேர இருக்கும் குடியிருப்புச் சேரி எனப்படும்.  குறுந்தொகை 231 – உ. வே. சாமிநாதையர் உரை – தெரு, பொ. வே. சோமசுந்தரனார் உரை – தெரு.

சொற்பொருள்:  உவர் விளை உப்பின் உழாஅ உழவர் ஒழுகை உமணர் வருபதம் நோக்கிக் கானல் இட்ட காவற் குப்பை புலவு மீன் உணங்கல் படுபுள் ஓப்பி – உவர் நிலத்தில் விளையும் ஏர் கொண்டு உழாது விளைவிக்கும் உப்பை பரதவ மக்கள் மாட்டு வண்டியுடன் வரும் உப்பு வணிகர்கள் வரும் காலத்தை நோக்கி கடற்கரையில் வைத்திருக்கும் காவலுடைய குவியலில் புலவு நாற்றம் வீசும் மீன் வற்றலைக் கவர வரும் பறவைகளை விரட்டி (உழாஅ – செய்யுளிசை அளபெடை), மட நோக்கு ஆயமொடு உடன் ஊர்பு ஏறி ‘எந்தை திமில் இது, நுந்தை திமில்’ என – மடப்பம் பொருந்திய நோக்கினை உடைய தோழியருடன் மெல்ல உப்புக் குவியலில் ஏறி ‘எம் தந்தையின் படகு இது நும் தந்தையின் படகு இது’ என்று, வளை நீர் வேட்டம் போகிய கிளைஞர் திண் திமில் எண்ணும் தண் கடற் சேர்ப்ப – வளைந்த கடலில் மீன் பிடிக்கச் சென்ற சுற்றத்தாரின் வலிமையான படகுகளை எண்ணும் குளிர்ந்த கடலின் தலைவா (சேர்ப்ப – அண்மை விளி), இனிதே – இனிது (ஏகாரம் அசைநிலை), தெய்ய – அசைநிலை, எம் முனிவு இல் நல்லூர் இனி வரின் தவறும் இல்லை – எம்முடைய வெறுப்பு இல்லாத நல்ல ஊர்க்கு இனி நீ வந்தால் தவறு இல்லை, எனையதூஉம்  பிறர் பிறர் அறிதல் யாவது – அயலார் எவ்வளவேனும் ஒருவரை ஒருவர் அறிவது எவ்வாறு (எனையதூஉம் – அளபெடை), தமர் தமர் அறியாச் சேரியும் உடைத்தே – சுற்றத்தார் ஒருவரை ஒருவர் அறியாத தெருக்களும் உடையது (உடைத்தே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 332, குன்றூர் கிழார் மகன் கண்ணத்தனார், குறிஞ்சித் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
இகுளைத் தோழி! இஃது என் எனப்படுமோ,
‘குவளை குறுநர் நீர் வேட்டாங்கு,
நாளும் நாள் உடன் கவவவும் தோளே
தொல் நிலை வழீஇய நின் தொடி’ எனப் பல் மாண்
உரைத்தல் ஆன்றிசின் நீயே, விடர் முகை  5
ஈன் பிணவு ஒடுக்கிய இருங்கேழ் வயப் புலி
இரை நசைஇப் பரிக்கும் மலை முதல் சிறு நெறி,
தலைநாள் அன்ன பேணலன் பல நாள்,
ஆர் இருள் வருதல் காண்பேற்கு,
யாங்கு ஆகும்மே, இலங்கு இழை செறிப்பே?  10

பாடல் பின்னணி:  பிரிவிடை மெலிந்த தலைவியைத் தோழி களவுக் காலத்து வற்புறுத்த, அதற்கு மறுமொழியாகத் தலைவி கூறியது.

பொருளுரை:  தோழி!  இது யாதாய்க் கருதப்பட்டு எவ்வாறு முடியுமோ?  “நீரில் இறங்கி நின்று குவளை மலர்களைக் கொய்பவர்கள் நீர் குடிக்கும் வேட்கையால் துன்புறுவது போல், நாள்தோறும் உன் தோள்கள் உன் காதலனின் தோள்களைத் தழுவிய போதும், முன்பு இருந்த நிலையிலிருந்து உன் வளையல்கள் கீழே இறங்குகின்றன” என்று பலமுறை மாட்சிமையுடன் என்னிடம் கூறுகிறாய் நீ.  மலைப் பிளவில் குட்டியை ஈன்ற பெண் புலியை இருத்திவிட்டு, அதன் பசியைப் போக்க வேண்டி கரிய நிறம் பொருந்திய வலிமையான ஆண் புலி இரையை விரும்பிப் பதுங்கியிருக்கும் மலைப்பக்கத்தில் உள்ள சிறு வழியைக் கடந்து முதல் நாள் வந்தாற்போல், தன்னைப் பேணாதவனாக நம் தலைவன் பல நாட்கள் அடர்ந்த இருளில் வருவதைக் காணும் எனக்கு, எவ்வாறு ஆகும், ஒளிரும் அணிகலன்களின் செறிப்பு?

குறிப்புஇறைச்சி – கு. வெ. பாலசுப்பிரமணியன் உரை – பெண்புலியின் பசியைப் போக்க வேண்டி இரை தேடியவாறு ஆண்புலி பதுங்கியிருக்கும் என்றது, இத்தகைய வழியில் வந்து புலியின் இயல்பினை அறிந்தபோதும் தலைவியின் துயர் நீங்குமாறு மணம் முடிக்க கருதிலன் எனக் குறித்தது.  இகுளை (1) – ஒளவை துரைசாமி உரை – தோழி என்னும் பொருள்பட  வழங்கும் பெயர்த் திரிசொல், இகுளைத் தோழி (1) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – இருபெயரொட்டு.  தலைநாள் அன்ன பேணலன் (8) – ச. வே. சுப்பிரமணியன் உரை – இயற்கை இணைவுக் காலம் போன்ற அன்பினைக் கொள்ளாது வருகின்றான், பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – இயற்கைப் புணர்ச்சிக் காலத்து இருந்தாற்போல் விருப்ப மிகுதியுடையவனாய் வருகின்றான், ஒளவை துரைசாமி உரை – தன் உயிரையையும் பொருளெனக் கருதாமல் இரவுக் குறி வரைந்த அத் தலை நாளில் வந்தாற்போல்.  யாங்காகும்மே (10) – ஒளவை துரைசாமி உரை – ஏகாரம் எதிர்மறைப் பொருட்டு.  அண்மையில் ஈன்ற துணைக்கு உணவு தேடல்:  புலி – நற்றிணை 29, 148, 332, 383, அகநானூறு 112, 147, 238, கழுகு – அகநானூறு 3, செந்நாய் – அகநானூறு 21, அகநானூறு 85, புறா – நற்றிணை 384, யானை – நற்றிணை 393, நாரை – நற்றிணை 263.  சின் – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம், சொல்லதிகாரம்.  இடையியல் 26, சின் என்பது இசின் என்பதன் முதற்குறை – ச. பாலசுந்தரம் உரை).

சொற்பொருள்:  இகுளைத் தோழி – தோழி (இருபெயரொட்டு), இஃது என் எனப்படுமோ – இது யாதாய்க் கருதப்பட்டு எவ்வாறு முடியுமோ (எனப்படுமோ – ஓகாரம் அசைநிலை), குவளை குறுநர் நீர் வேட்டாங்கு நாளும் நாள் உடன் கவவவும் தோளே தொல் நிலை வழீஇய நின் தொடி’ எனப் பல் மாண் உரைத்தல் ஆன்றிசின் நீயே – நீரில் இறங்கி நின்று குவளை மலர்களைக் கொய்பவர்கள் நீர் குடிக்கும் வேட்கையால் துன்புறுவது போல் நாள்தோறும் உன் தோள்கள் உன் காதலனின் தோள்களைத் தழுவிய போதும் முன்பு இருந்த நிலையிலிருந்து உன் வளையல்கள் கீழே இறங்குகின்றன என்று பலமுறை மாட்சிமையுடன் கூறுகின்றாய் நீ (வழீஇய – செய்யுளிசை அளபெடை, சின் – முன்னிலை அசை), விடர் முகை ஈன் பிணவு ஒடுக்கிய இருங்கேழ் வயப் புலி இரை நசைஇப் பரிக்கும் – மலைப் பிளவில் குட்டியை ஈன்ற பெண் புலியை இருத்திவிட்டு அதன் பசியைப் போக்க வேண்டி கரிய நிறம் பொருந்திய வலிமையான ஆண் புலி இரையை விரும்பிப் பதுங்கியிருக்கும் (நசைஇ – அளபெடை), மலை முதல் சிறு நெறி தலைநாள் அன்ன பேணலன் பல நாள் ஆர் இருள் வருதல் காண்பேற்கு யாங்கு ஆகும்மே – மலைப்பக்கத்தில் உள்ள சிறு வழியைக் கடந்து முதல் நாள் வந்தாற்போல் தன்னைப் பேணாதவனாக நம் தலைவன் பல நாட்கள் அடர்ந்த இருளில் வருவதைக் காணும் எனக்கு எவ்வாறு ஆகும் (ஆகும்மே – ஆகுமே என்பதன் விரித்தல் விகாரம், செய்யுளோசை நோக்கி மகர ஒற்று விரிந்தது), இலங்கு இழை செறிப்பே – ஒளிரும் அணிகலன்களின் செறிப்பு (செறிப்பு – வழுக்கி விழாது இறுக்கமாக இருப்பதுசெறிப்பே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 333, கள்ளிக்குடிப் பூதம் புல்லனார், பாலைத் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
மழை தொழில் உலந்து மா விசும்பு உகந்தென,
கழை கவின் அழிந்த கல் அதர்ச் சிறு நெறிப்
பரல் அவல் ஊறல் சிறு நீர் மருங்கின்,
பூ நுதல் யானையொடு புலி பொருது உண்ணும்
சுரன் இறந்து அரிய என்னார், உரன் அழிந்து  5
உள் மலி நெஞ்சமொடு வண்மை வேண்டி
அரும் பொருட்கு அகன்ற காதலர் முயக்கு எதிர்ந்து
திருந்திழைப் பணைத்தோள் பெறுநர் போலும்;
நீங்குக மாதோ நின் அவலம், ஓங்கு மிசை,
உயர் புகழ் நல் இல் ஒண் சுவர்ப் பொருந்தி  10
நயவரு குரல பல்லி
நள்ளென் யாமத்து உள்ளுதொறும் படுமே.

பாடல் பின்னணி:  பொருள்வயின் பிரிவின்கண் ஆற்றாளாகிய தலைவியைத் தோழி வற்புறுத்தியது.

பொருளுரை:  மழை முகில்கள், தம் பெய்யும் தொழிலைச் செய்யாது வறண்டு பெரிய வானில் உயர்ந்து அகன்றதால், மூங்கில்களின் அழகு அழிந்த மலையில் உள்ள வழியாகிய சிறிய நெறியில், பரல் கற்கள் உடைய பள்ளத்தில் ஊறிய சிறு அளவான நீர் உடைய இடத்தில், பொலிவடைந்த நெற்றியையுடைய யானையுடன் புலி போரிட்டு, வென்று விட்டு, அங்கு இருந்து நீரை அருந்தும் பாலை நிலம் கடத்தற்கு அரிது எனக் கருதாதவராய், ஆராயும் வலிமை அழிந்து உள்ளே விருப்பமுடைய நெஞ்சத்துடன் வளமையை வேண்டிப் பெறுதற்கு அரிய பொருளுக்காகச் சென்ற காதலர், உன்னை அணைத்தலை எதிர்நோக்கி திருத்தமான அணிகலன்களை அணிந்த உன் மூங்கில் போன்ற (பருத்த) தோள்களைப் பெறுவார் போல் தோன்றுகின்றது.  உயர்ந்த புகழையுடைய நல்ல இல்லத்தில், மிக உயர்ந்த, ஒளியுடைய சுவரில் பொருந்தி, விரும்பத்தக்க குரலையுடைய பல்லி இருள் செறிந்த இரவில் காதலரை நினைக்கும் பொழுதெல்லாம் நல்ல நிமித்தமாக ஒலிக்கின்றது.  இனி உன்னுடைய துன்பம் நீங்கட்டும்.

குறிப்பு:  பூ நுதல் (4) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – பொலிவுபெற்ற நெற்றி, ஒளவை துரைசாமி உரை – மெல்லிய நெற்றி.  உரன் அழிந்து (5) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – இச்செய்யுளில் உரன் அழிந்து என்பதற்கு ‘நல்லறிவு அழிந்து’ எனப் பொருள் கொள்க.  இறைச்சி – கு. வெ. பாலசுப்பிரமணியன் உரை – பள்ளத்து நீரை யானையுடன் புலி போர்செய்து உண்ணும் என்றது, அயல்நாட்டினரைப் போரில் வென்று தலைவன் பொருளீட்டி வருவான் என்பதைக் குறிப்பித்தது. ஒப்புமை:  கலித்தொகை 11 – கானம் சென்றோர் புனை நலம் வாட்டுநர் அல்லர்; மனைவயின் பல்லியும் பாங்கு ஒத்து இசைத்தன.  நிமித்தம்:  பறவை நிமித்தம் – நற்றிணை 161, குறுந்தொகை 218, கலித்தொகை 11, பல்லி நிமித்தம் – அகநானூறு 9, 88, 151, 289, 351, 387, நற்றிணை 98, 169, 246, 333, குறுந்தொகை 16, 140.  பெண்கள் நல்ல நிமித்தத்திற்காகக் காத்து நிற்றல் – நற்றிணை 40, முல்லைப்பாட்டு 11.

சொற்பொருள்:  மழை தொழில் உலந்து மா விசும்பு உகந்தென கழை கவின் அழிந்த கல் அதர்ச் சிறு நெறிப் பரல் அவல் ஊறல் சிறு நீர் மருங்கின் பூ நுதல் யானையொடு புலி பொருது உண்ணும் சுரன் இறந்து அரிய என்னார் – மழை முகில்கள் பெய்யும் தொழிலைச் செய்யாது வறண்டு பெரிய வானில் உயர்ந்து அகன்றதால் மூங்கில்களின் அழகு அழிந்த மலையில் உள்ள வழியாகிய சிறிய நெறியில் பரல் கற்கள் உடைய பள்ளத்தில் ஊறிய சிறு அளவான நீர் உடைய இடத்தில் பொலிவடைந்த நெற்றியையுடைய யானையுடன் புலி  போரிட்டு அந்நீரை உண்ணும் பாலை நிலம் கடத்தற்கு அரிது எனக் கருதார் (சுரன் – சுரம் என்பதன் போலி), உரன் அழிந்து உள் மலி நெஞ்சமொடு வண்மை வேண்டி அரும் பொருட்கு அகன்ற காதலர் – ஆராயும் வலிமை அழிந்து உள்ளே விருப்பமுடைய நெஞ்சத்துடன் வளமையை வேண்டிப் பெறுதற்கு அரிய பொருளுக்காகச் சென்ற காதலர், முயக்கு எதிர்ந்து திருந்திழைப் பணைத்தோள் பெறுநர் போலும் – உன்னை அணைத்தலை எதிர்நோக்கி திருத்தமான அணிகலன்களை அணிந்த உன் மூங்கில் போன்ற (பருத்த) தோள்களைப் பெறுவார் போலும், நீங்குக மாதோ நின் அவலம் – உன்னுடைய துன்பம் நீங்கட்டும் (மாதோ – மாது, ஓ – அசைநிலைகள்), ஓங்கு மிசை – மிக உயர்ந்த (ஒரு பொருட்பன்மொழி), உயர் புகழ் நல் இல் ஒண் சுவர்ப் பொருந்தி நயவரு குரல பல்லி நள்ளென் யாமத்து உள்ளுதொறும் படுமே – உயர்ந்த புகழையுடைய நல்ல இல்லத்தில் ஒளியுடைய சுவரில் பொருந்தி விரும்பத்தக்க குரலையுடைய பல்லி இருள் செறிந்த இரவில் காதலரை நினைக்கும் பொழுதெல்லாம் ஒலிக்கின்றது (படுமே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 334, ஐயூர் முடவனார், குறிஞ்சித் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
கரு விரல் மந்திச் செம்முகப் பெருங்கிளை
பெருவரை அடுக்கத்து அருவி ஆடி,
ஓங்கு கழை ஊசல் தூங்கி வேங்கை
வெற்பு அணி நறு வீ கல் சுனை உறைப்பக்,
கலையொடு திளைக்கும் வரையக நாடன்,  5
மாரி நின்ற ஆர் இருள் நடுநாள்
அருவி அடுக்கத்து ஒரு வேல் ஏந்தி,
மின்னு வசி விளக்கத்து வருமெனின்,
என்னோ தோழி நம் இன் உயிர் நிலையே?

பாடல் பின்னணி:  களவுக் காலத்தில் தலைவன் இரவுக்குறி வேண்டித் தோழியை இரந்தான்.  அதற்கு இசைந்த தோழித் தலைவியிடம் கூறியது.

பொருளுரை:  தோழி!  கரிய விரல்களையும் சிவந்த முகத்தையுமுடைய பெரிய சுற்றத்தையுடைய பெண் குரங்கு, பெரிய அடுக்கு மலைப்பக்கத்தில் உள்ள அருவியில் விளையாடி உயர்ந்த மூங்கில்களில் தொங்கி ஊஞ்சல் ஆடி, மலையில் உள்ள வேங்கை மரத்தின் அழகிய நறுமண மலர்கள் மலைச் சுனையில் விழும்படி கிளைகளில் ஏறி தன் துணையான ஆண் குரங்குடன் கூடும் மலையின் தலைவன், மழை பெய்த மிக்க இருளுடைய நடு இரவில் அருவிகளையுடைய மலைப்பக்கத்தில், ஒரு வேலை ஏந்தி, இருளைப் பிளக்கும் மின்னலின் ஒளியில் வருவதாகக் கருதினான் என்றால், என்ன ஆகும், நம்முடை இனிய உயிரின் நிலை?

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – இது தோழி இரவுக்குறி முகம் புக்கது.  புணர்ச்சி வேண்டினும் (தொல்காப்பியம், களவியல் 23) என்னும் விதி கொள்க.  இனி, பொழுதும் ஆறும் புரைவது அன்மையின் அழிவுதலை வந்த சிந்தைக் கண்ணும் (தொல்காப்பியம், களவியல் 20) என்னும் விதியால் தலைவி தோழிக்குக் கூறியது எனினுமாம்.  உள்ளுறை – கு. வெ. பாலசுப்பிரமணியன் உரை – மந்தி அருவியாடியும் ஊசலில் தொங்கியாடியும் நறுமலர் சுனையில் உதிருமாறு ஆண் குரங்குடன் புணரும் என்றது, தலைவியும் பகலிலே அருவியாடியும் ஊசலாடியும் மகிழ்ந்து இரவுக்குறியிலே காமவேட்கை தனியுமாறு தலைவனுடன் கூடுதல் இயலும் என்பது உணர்த்தும் உள்ளுறையாம்.  மின்னல் பிளத்தல்:  மின்னு வசிபு – அகநானூறு 162, 212, 322, நற்றிணை 228, 261, மலைபடுகடாம் 97, மின்னு வசி – நற்றிணை 334.  மந்தி – பேடையும் பெடையும் பெட்டையும் பெண்ணும் மூடும் நாகும் கடமையும் அளகும் மந்தியும் பாட்டியும் பிணையும் பிணவும் அந்தம் சான்ற பிடியொடு பெண்ணே (தொல்காப்பியம், மரபியல் 3).

சொற்பொருள்:  கருவிரல் மந்திச் செம்முகப் பெருங்கிளை பெருவரை அடுக்கத்து அருவி ஆடி ஓங்கு கழை ஊசல் தூங்கி வேங்கை வெற்பு அணி நறு வீ கல் சுனை உறைப்பக் கலையொடு திளைக்கும் வரையக நாடன் – கரிய விரல்களையும் சிவந்த முகத்தையுமுடைய பெரிய சுற்றத்தையுடைய பெண் குரங்கு பெரிய அடுக்கு மலைப்பக்கத்தில் உள்ள அருவியில் விளையாடி உயர்ந்த மூங்கில்களில் தொங்கி ஊஞ்சல் ஆடி மலையில் உள்ள வேங்கை மரத்தின் அழகிய நறுமண மலர்கள் மலைச் சுனையில் விழும்படி கிளைகளில் ஏறி தன் துணையான ஆண் குரங்குடன் கூடும் மலையின் தலைவன், மாரி நின்ற ஆர் இருள் நடுநாள் அருவி அடுக்கத்து ஒரு வேல் ஏந்தி மின்னு வசி விளக்கத்து வரும் எனின் என்னோ – மழை பெய்த மிக்க இருளுடைய நடு இரவில் அருவிகளையுடைய மலைப்பக்கத்தில் ஒரு வேலை ஏந்தி இருளைப் பிளக்கும் மின்னலின் ஒளியில் வருவதாகக் கருதினான் என்றால் என்ன ஆகும், தோழி – தோழி, நம் இன் உயிர் நிலையே – நம்முடை இனிய உயிரின் நிலையே (நிலையே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 335, வெள்ளிவீதியார், நெய்தல் திணை – தலைவி சொன்னது
திங்களும் திகழ் வான் ஏர்தரும், இமிழ் நீர்ப்
பொங்கு திரைப் புணரியும் பாடு ஓவாதே,
ஒலி சிறந்து ஓதமும் பெயரும், மலி புனல்
பல் பூங்கானல் முள் இலைத் தாழை
சோறு சொரி குடையின் கூம்பு முகை அவிழ,  5
வளி பரந்து ஊட்டும் விளிவு இல் நாற்றமொடு,
மை இரும் பனை மிசைப் பைதல உயவும்
அன்றிலும் என்புற நரலும், அன்றி
விரல் கவர்ந்து உழந்த கவர்வின் நல் யாழ்
யாமம் உய்யாமை நின்றது,  10
காமம் பெரிதே, களைஞரோ இலரே.

பாடல் பின்னணி:  தலைவன் மீது காதல் வேட்கை மிகுந்ததால், துன்புற்ற தலைவி கூறியது.

பொருளுரை:  நிலவும் விளங்கும் வானில் எழுந்து தோன்றும்.  ஒலிக்கும் நீரையுடைய பொங்கி எழும் அலைகளையுடைய கடலிலும் ஒலி அடங்காது.  ஒலி மிகுந்து பெருகிய கடல் நீரும் கரையில் மோதிச் செல்லும்.  நிறைந்த நீர் சூழ்ந்த, பல மலர்களை உடைய கடற்கரைச் சோலையில், முள் பொருந்திய இலைகளை உடைய தாழையின், சோற்றை எடுத்து சொரியும் அகப்பையைப் போல் கூம்பிய அரும்பு மலர, காற்று அம்மலர்களுள் புகுந்து பரவி வந்து வீசும் கெடாத நறுமணத்துடன், கரிய பெரிய பனை மரத்திலிருந்து துன்புறும் அன்றில் பறவையும் என்னருகில் (எலும்பு உருகுமாறு) ஒலிக்கும்.  அது மட்டும் அல்லாது, விரல்கள் தழுவி வருந்தி இசையெழுப்பிய நல்ல யாழ் நடு இரவில் விடாமல் இசைக்கின்றது.  என்னுடைய காதல் நோய் மிகுதியானது.  அதை நீக்கும் என் காதலர் அருகில் இல்லை.  இனி எவ்வாறு உய்வேன்?

குறிப்பு:  ஒளவை துரைசாமி உரை – வார்தல், உறழ்தல், வடித்தல், உந்தல், உருட்டல், தெருட்டல், அள்ளல், பட்டடை என்பன எட்டு வகைப்படும் இசைக் காரணம் என்பர்.  ஊட்டும் (6) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை, பொ. வே. சோமசுந்தரனார் உரை – வீசுகின்ற, ஒளவை துரைசாமி உரை – வந்து அளிக்கும், H. வேங்கடராமன் உரை – ஒலிக்கும்.  என்புற (8) – ஒளவை துரைசாமி உரை – என்பு (எலும்பு) உருகுமாறு, பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – என் பக்கத்தில்.  கவர்வு – கவர்வு விருப்பு ஆகும் (தொல்காப்பியம் களவியல் 66).  காமம் – கமம் என்னும் சொல்லின் முதல் நீண்ட வடிவம், ‘நிறைந்த அன்பு’ என்பது இச்சொல்லின் பொருள் – பேரறிஞர் கு.வெ. பாலசுப்பிரமணியன் அவர்களின் விளக்கம், (கமம் நிறைந்து இயலும் – தொல்காப்பியம், சொல்லியல் 355).

சொற்பொருள்:  திங்களும் திகழ் வான் ஏர்தரும் – நிலவும் விளங்கும் வானில் எழுந்து தோன்றும், இமிழ் நீர்ப் பொங்கு திரைப் புணரியும் பாடு ஓவாதே – ஒலிக்கும் நீரையுடைய பொங்கி எழும் அலைகளையுடைய கடலிலும் ஒலி அடங்காது (ஓவாதே – ஏகாரம் அசைநிலை), ஒலி சிறந்து ஓதமும் பெயரும் – ஒலி மிகுந்து பெருகிய கடல் நீரும் கரையில் மோதிச் செல்லும், மலி புனல் பல் பூங்கானல் முள் இலைத் தாழை சோறு சொரி குடையின் கூம்பு முகை அவிழ – நிறைந்த நீர் சூழ்ந்த பல மலர்களை உடைய கடற்கரைச் சோலையில் முள் பொருந்திய இலைகளை உடைய தாழையின் சோற்றை எடுத்து சொரியும் அகப்பையைப் போல் கூம்பிய அரும்பு மலர (குடையின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), வளி பரந்து ஊட்டும் விளிவு இல் நாற்றமொடு – காற்று அம்மலர்களுள் புகுந்து பரவி வந்து வீசும் கெடாத நறுமணத்துடன், மை இரும் பனை மிசைப் பைதல உயவும் அன்றிலும் என்புற நரலும் – கரிய பெரிய பனை மரத்திலிருந்து துன்புறும் அன்றில் பறவையும் என்னருகில் (எலும்பு உருகுமாறு) ஒலிக்கும், அன்றி – அன்றியும், விரல் கவர்ந்து உழந்த கவர்வின் நல் யாழ் யாமம் உய்யாமை நின்றது – விரல்கள் தழுவி வருந்தி இசையெழுப்பிய நல்ல யாழ் நடு இரவில் விடாமல் இசைக்கின்றது, காமம் பெரிதே – என்னுடைய காதல் நோய் மிகுதியானது, களைஞரோ இலரே – அதை நீக்கும் காதலர் இங்கு இல்லை (இலரே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 336, கபிலர், குறிஞ்சித் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
பிணர்ச் சுவல் பன்றி தோல் முலைப் பிணவொடு
கணைக் கால் ஏனல் கைம்மிகக் கவர்தலின்,
கல் அதர் அரும் புழை அல்கி கானவன்
வில்லின் தந்த வெண்கோட்டு ஏற்றைப்,
புனை இருங்கதுப்பின் மனையோள் கெண்டிக்  5
குடி முறை பகுக்கும் நெடு மலை நாட!
உரவுச் சின வேழம் உறு புலி பார்க்கும்
இரவின் அஞ்சாய், அஞ்சுவல், அரவின்
ஈர் அளைப் புற்றம் கார் என முற்றி,
இரை தேர் எண்கு இனம் அகழும்  10
வரை சேர் சிறு நெறி வாராதீமே.

பாடல் பின்னணி:  இரவுக்குறி மறுத்து வரைவு கடாயது.

பொருளுரை:  சொரசொரப்பான பிடரியையுடைய பன்றி, தோலாய் முலை வற்றிய தன் பெண் பன்றியுடன் சென்று திரண்ட அடியையுடைய தினைக் கதிரை மிகுதியாகத் தின்றதால், மலையின் வழியில் உள்ள செல்லுதற்கு அரிய சிறிய இடத்தில் பதுங்கியிருந்து, கானவன் வில்லினால் கொன்ற வெள்ளை மருப்புகளை (கோடுகளை, தந்தங்களை) உடைய ஆண் பன்றியை, ஒப்பனைச் செய்த கரிய கூந்தலையுடைய அவன் மனைவி அறுத்து முறையுடன் தங்கள் குடியில் உள்ளவர்களுக்குப் பகுத்து கொடுக்கும் உயர்ந்த மலையின் தலைவனே!  வலிமையையும் சினத்தையுமுடைய களிற்று யானை அங்கு வருகின்ற புலியின் வரவை எதிர்பார்த்து நிற்கும் இரவு என்று நீ அஞ்சாது உள்ளாய்.  யான் அஞ்சுகின்றேன்.  பாம்பின் ஈரமான புற்றை முகில்கள் சூழ்வது போல் சூழ்ந்து, இரை தேடும் கரடி இனம் தோண்டும், மலையில் உள்ள சிறிய வழியில் வராதீர்!

குறிப்பு:  உள்ளுறை – ஒளவை துரைசாமி உரை – தினையைக் கைம்மிகக் கவர்ந்தமை பற்றித் தன் வில்லாற் கொன்று கானவன் கொணர்ந்த பன்றியை மனையவள் குடிமுறை பகுக்கும் என்றது, நீ இவளை மணந்து கொண்டு செய்யும் மனைவாழ்வில், மிகை செய்த பகைவரை வென்று நீ கொணரும் பெரும்பொருளைச் சுற்றமும் துணையும் பெற்று இன்புறுமாறு இவள் பகுத்து அளித்துண்ணும் பண்பு மேம்படுபவள் என்பது.  கரடிகள் ஈயல் புற்றைத் தாக்குதல் – நற்றிணை 125, 325, 336, அகநானூறு 8, 72, 81, 88, 112, 149, 247, 257, 307.  ஏற்றை – ஆற்றலொடு புணர்ந்த ஆண்பாற்கு எல்லாம் ஏற்றைக் கிளவி உரித்து என மொழிப (தொல்காப்பியம், மரபியல் 50).  கானவர் பன்றி வேட்டையாடல் – நற்றிணை 75, 82, 119, 336, அகநானூறு 248.

சொற்பொருள்:  பிணர்ச் சுவல் பன்றி தோல் முலைப் பிணவொடு கணைக் கால் ஏனல் கைம்மிகக் கவர்தலின் – சொரசொரப்பான பிடரியையுடைய பன்றி தோலாய் முலை வற்றிய தன் பெண் பன்றியுடன் சென்று திரண்ட அடியையுடைய தினைக் கதிரை மிகுதியாகத் தின்றதால், கல் அதர் அரும் புழை அல்கி கானவன் வில்லின் தந்த வெண்கோட்டு ஏற்றைப் புனை இருங்கதுப்பின் மனையோள் கெண்டிக் குடி முறை பகுக்கும் நெடு மலை நாட – மலையின் வழியில் உள்ள செல்லுதற்கு அரிய சிறிய இடத்தில் பதுங்கியிருந்து கானவன் வில்லினால் கொன்ற வெள்ளை மருப்புகளை (கோடுகளை, தந்தங்களை) உடைய ஆண் பன்றியை ஒப்பனைச் செய்த கரிய கூந்தலையுடைய அவன் மனைவி அறுத்து முறையுடன் தங்கள் குடியில் உள்ளவர்களுக்குப் பகுத்து கொடுக்கும் உயர்ந்த மலையின் தலைவனே (கெண்டி – வெட்டி), உரவுச் சின வேழம் உறு புலி பார்க்கும் இரவின் அஞ்சாய் – வலிமையையும் சினத்தையுமுடைய களிற்று யானை அங்கு வருகின்ற புலியின் வரவை எதிர்பார்த்து நிற்கும் இரவு என்று நீ அஞ்சாது உள்ளாய் (உறு – வருகின்ற), அஞ்சுவல் – யான் அஞ்சுகின்றேன், அரவின் ஈர் அளைப் புற்றம் கார் என முற்றி இரை தேர் எண்கு இனம் அகழும் – பாம்பின் ஈரமான புற்றை முகில்கள் சூழ்வது போல் சூழ்ந்து இரை தேடும் கரடி இனம் தோண்டும் (புற்றம் – அம் சாரியை), வரை சேர் சிறு நெறி வாராதீமே – மலையில் உள்ள சிறிய வழியில் வராதீர் (வாராதீமே – முன்னிலை எதிர்மறை முற்றுவினைத் திரிசொல், ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 337, சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோ, பாலைத் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
உலகம் படைத்த காலை தலைவ,
மறந்தனர் கொல்லோ சிறந்திசினோரே,
முதிரா வேனில் எதிரிய அதிரல்
பராரைப் பாதிரிக் குறு மயிர் மா மலர்,
நறு மோரோடமொடு உடன் எறிந்து அடைச்சிய  5
செப்பு இடந்தன்ன நாற்றம் தொக்கு உடன்,
அணி நிறம் கொண்ட மணி மருள் ஐம்பால்
தாழ் நறுங்கதுப்பில் பையென முள்கும்
அரும் பெறல் பெரும் பயம் கொள்ளாது,
பிரிந்து உறை மரபின் பொருள் படைத்தோரே?  10

பாடல் பின்னணி:  பொருள்வயின் பிரிய எண்ணிய தலைவனிடம் தோழி கூறியது.

பொருளுரை:  தலைவனே!  இளவேனில் காலத்தை எதிர்நோக்கி மலர்ந்த அதிரல் மலர்களையும் பருத்த அடியையுடைய பாதிரியின் குறுகிய மயிர்போன்ற துய் உடைய மலர்களையும், நறுமணமுடைய மோரோட மலர்களுடன் ஒன்றாகச் சேர்த்து அடைத்து வைத்த பூங்கிண்ணத்தைத் திறந்து வைத்தாற்போன்ற மணம் அமைந்த, அழகிய நிறத்தையுடைய நீலமணி போலும் ஐந்து பகுதியாக முடிக்கப்பட்ட தாழ்ந்த நறுமணமுடைய கூந்தலை உடையவர்களை, மென்மையாக அணைக்கும் பெறுவதற்கு அரிய பெரிய பயனைக் கொள்ளாது, பிரிந்து உறையும் மரபின்படி பொருளை ஈட்டி வாழ்பவர்கள், உலகம் படைக்கப்பட்ட வேளை முதல் உள்ள அறம் பொருள் இன்பம் ஆகிய நெறிகளை மறந்து விட்டார்களா, அறிவாற்றல் உடைய பெரியவர்கள்?

குறிப்பு:  முதிரா வேனில் எதிரிய அதிரல் (3) – ஒளவை துரைசாமி உரை – இளவேனிற் பருவத்தில் மலரும் அதிரற்பூ, பொ. வே. சோமசுந்தரனார் உரை – முற்றாத இளவேனிற் காலத்தை எதிர்நோக்கிய காட்டு மல்லிகை மலர்.  ஐம்பால் (7) – ஒளவை துரைசாமி உரை – ஐந்து வகையாக முடித்துப் புனையப்படும் கூந்தல்.  ஐம்பாலாவன குழல், அளகம், கொண்டை, பனிச்சை, துஞ்சை என நச்சினார்க்கினியர் கூறுகின்றார்.  பையென முள்கும் (8) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – கதுப்பில் முள்குவதாவது கதுப்பில் முகம் புதைத்து அதனை நுகர்ந்து மகிழ்தல்.  சின் – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம், சொல்லதிகாரம்.  இடையியல் 26, சின் என்பது இசின் என்பதன் முதற்குறை – ச. பாலசுந்தரம் உரை), அவற்றுள், இகுமும் சின்னும் ஏனை இடத்தொடும் தகு நிலை உடைய என்மனார் புலவர் (தொல்காப்பியம், இடையியல் 27).  நீலமணிபோல் பெண்ணின் கூந்தல்:  அகநானூறு 8 – மணி ஏர் ஐம்பால், நற்றிணை 10 – மணியின் தாழ்ந்த நல் நெடுங்கூந்தல், நற்றிணை 133 – மணி ஏர் ஐம்பால், 214 – மணி இருங்கதுப்பு, 245 – மணி மருள் ஐம்பால், 337 – மணி மருள் ஐம்பால், 366 – மணி ஏர் ஐம்பால், 374 – வீழ் மா மணிய புனை நெடுங்கூந்தல், கலித்தொகை 22 – மணி ஒளி விட்டன்ன ஐவகை, கலித்தொகை 77 – மாசு அற மண்ணுற்ற மணி ஏசும் இருங்கூந்தல், பரிபாடல் 10, குறிஞ்சிப்பாட்டு 69 – பொன் எறி மணியின் சிறுபுறம் தாழ்ந்த எம் பின்னிருங் கூந்தல்.

சொற்பொருள்:  உலகம் படைத்த காலை – உலகம் படைக்கப்பட்ட வேளை, தலைவ – தலைவனே (அண்மை விளி), மறந்தனர் கொல்லோ – மறந்து விட்டார்களா (கொல் – ஐயப்பொருட்டு, ஓகாரம் அசைநிலை), சிறந்திசினோரே – அறிவாற்றல் உடைய பெரியவர்கள் (சின் – படர்க்கையின் கண் வந்தது, ஏகாரம் அசைநிலை), முதிரா வேனில் எதிரிய அதிரல் பராரைப் பாதிரிக் குறு மயிர் மா மலர் நறு மோரோடமொடு உடன் எறிந்து அடைச்சிய செப்பு இடந்தன்ன நாற்றம் தொக்கு உடன் அணி நிறம் கொண்ட மணி மருள் ஐம்பால் தாழ் நறுங்கதுப்பில் பையென முள்கும் – இளவேனில் காலத்தை எதிர்நோக்கி மலர்ந்த அதிரல் மலர்களையும் பருத்த அடியையுடைய பாதிரியின் குறுகிய மயிர்போன்ற துய் உடைய மலர்களையும் நறுமணமுடைய மோரோட மலர்களுடன் ஒன்றாகச் சேர்த்து அடைத்து வைத்த பூங்கிண்ணத்தைத் திறந்து வைத்தாற்போன்ற மணம் அமைந்த அழகிய நிறத்தையுடைய நீலமணி போலும் ஐந்து பகுதியாக முடிக்கப்பட்ட தாழ்ந்த நறுமணமுடைய கூந்தலை உடையவர்களை மென்மையாக அணைக்கும் (பராரை – பரு அரை பராரை எனப் புணர்ந்தது), அரும் பெறல் பெரும் பயம் கொள்ளாது பிரிந்து உறை மரபின் பொருள் படைத்தோரே – பெறுவதற்கு அரிய பெரிய பயனைக் கொள்ளாது பிரிந்து உறையும் மரபின்படி பொருளை ஈட்டி வாழ்பவர்கள் (அரும் பெறல் – பெறல் அரும் – பெறுவதற்கு அரிய, படைத்தோரே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 338, மதுரை ஆருலவியநாட்டு ஆலம்பேரிசாத்தனார், நெய்தல் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
கடுங்கதிர் ஞாயிறு மலை மறைந்தன்றே;
அடும்பு கொடி துமிய ஆழி போழ்ந்து, அவர்
நெடுந்தேர் இன் ஒலி இரவும் தோன்றா;
இறப்ப எவ்வம் நலியும் நின் நிலை;
‘நிறுத்தல் வேண்டும்’ என்றி, நிலைப்ப  5
யாங்ஙனம் விடுமோ மற்றே, மால் கொள
வியல் இரும் பரப்பின் இரை எழுந்து அருந்துபு,
புலவு நாறு சிறுகுடி மன்றத்து ஓங்கிய
ஆடு அரைப் பெண்ணைத் தோடு மடல் ஏறிக்,
கொடுவாய்ப் பேடைக் குடம்பைச் சேரிய,  10
உயிர் செலக் கடைஇப் புணர் துணைப்
பயிர்தல் ஆனா, பைதல் அம் குருகே.

பாடல் பின்னணிஆற்றுப்படுத்திய தோழியிடம் தலைவி சொல்லியது.  

பொருளுரைகடிய கதிர்களையுடைய ஞாயிறு மேற்கில் உள்ள மலையின் பின் சென்று மறைந்தது.  அடும்பின் கொடிகள் துண்டித்து விழுமாறு தேர்க்கால்கள் நிலத்தைப் பிளந்தவாறு வரும் அவருடைய நெடிய தேரின் இனிய ஒலிகள் இரவில் தோன்றவில்லை.  காதல் துன்பத்தால் கலங்கி வருந்தும் ஆண் குருகு ஒன்று, அகன்ற பெரிய பரப்பில் இரையை விரும்பிச் சென்று உண்டு விட்டு, புலவு நாறும் சிறுகுடியின் மன்றத்தின் உயர்ந்த அசைகின்ற அடியையுடைய பனை மரத்தின் தொகுதியாக உள்ள மடல் மீது ஏறி, வளைந்த வாயையுடைய தன் பெண் குருகு கூட்டில் தன்னுடன் கூடுமாறு, என் உயிர் போகும்படி கடிந்து, தான் புணரும் துணையை அழைக்கின்ற, விடாது ஒலிக்கும் கூவுதலை நிறுத்தாது உள்ளது.  நீ என்னிடம் “எல்லையைக் கடந்து துன்பம் தரும் உன் நிலையை நிறுத்த வேண்டும்” என்கின்றாய்.  இனி இக் காதல் நோய் என்னைவிட்டு எவ்வாறு நீங்குமோ?

குறிப்பு:  மறைந்தன்று (1) – ஒளவை துரைசாமி உரை – குற்றுகரவீற்று அஃறிணை முற்றுவினை.  நின் நிலை நிறுத்தல் வேண்டும் என்றி (4–5) – ஒளவை துரைசாமி உரை – நினது அழுகையை நிறுத்த வேண்டும் என்று சொல்லுகின்றாய், H. வேங்கடராமன் உரை – நீ படும் துன்பத்தை அயலவர் அறியாதபடி மறைத்து ஒழுக வேண்டும் என்கின்றாய்.  நிலைப்ப யாங்ஙனம் விடுமோ (6) – ஒளவை துரைசாமி உரை – என் மனம் பொறையுற்று நிற்க யாங்ஙனம் விடும், H. வேங்கடராமன் உரை – என் உயிர் நிலைத்து நிற்ப இந்நோய் எப்படி என்னை விட்டு ஒழியுமோ.  உள்ளுறை – ஒளவை துரைசாமி உரை – கடற்பரப்பில் இரை மேய்ந்துண்ட குருகு, பனையின் மடலேறிப் பேடை குடம்பை சேர்தற்பொருட்டுப் பயிர்தல் ஆனாதாகவும், கடமை மேற்கொண்டு சென்ற நம் காதலர் அதனை முடித்துக் கொண்டு போந்து நம்மை வரைந்து கோடலை நினையாராயினர் என்று துனியுறு கிளவியால் உள்ளுறுத்துரைத்தவாறு அறிக.

சொற்பொருள்:  கடுங்கதிர் ஞாயிறு மலை மறைந்தன்றே – கடிய கதிர்களையுடைய ஞாயிறு மேற்கில் உள்ள மலையின் பின் சென்று மறைந்தது, அடும்பு கொடி துமிய ஆழி போழ்ந்து அவர் நெடுந்தேர் இன் ஒலி இரவும் தோன்றா – அடும்பின் கொடிகள் துண்டித்து விழுமாறு தேர்க்கால்கள் நிலத்தைப் பிளந்தவாறு வரும் அவருடைய நெடிய தேரின் இனிய ஒலிகள் இரவில் தோன்றவில்லை (அடும்பு – Ipomoea pes caprae), இறப்ப எவ்வம் நலியும் நின் நிலை ‘நிறுத்தல் வேண்டும் என்றி – எல்லையைக் கடந்து துன்பம் தரும் உன் நிலையை நிறுத்த வேண்டும் என்கின்றாய், நிலைப்ப யாங்ஙனம் விடுமோ மற்றே – இனி இக் காதல் நோய் என்னைவிட்டு எவ்வாறு நீங்குமோ, மால் கொள வியல் இரும் பரப்பின் இரை எழுந்து அருந்துபு புலவு நாறு சிறுகுடி மன்றத்து ஓங்கிய ஆடு அரைப் பெண்ணைத் தோடு மடல் ஏறிக் கொடுவாய்ப் பேடைக் குடம்பைச் சேரிய உயிர் செலக் கடைஇப் புணர் துணைப் பயிர்தல் ஆனா பைதல் அம் குருகே – காதல் துன்பத்தால் கலங்கி அகன்ற பெரிய பரப்பில் இரையை விரும்பிச் சென்று உண்ட புலவு நாறும் சிறுகுடியின் மன்றத்தில் உயர்ந்த அசைகின்ற அடியையுடைய பனை மரத்தின் தொகுதியாக உள்ள மடல் மீது ஏறி வளைந்த வாயையுடைய தன் பெண் பறவை கூட்டில் தன்னுடன் கூடுமாறு என் உயிர் போகும்படி கடிந்து தான் புணரும் துணையை அழைக்கின்ற விடாது ஒலிக்கும் கூவுதலை நிறுத்தவில்லை துன்புறும் ஆண் குருகு  (கடைஇப் – அளபெடை, குருகே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 339, சீத்தலைச் சாத்தனார், குறிஞ்சித் திணை – தோழி தலைவியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
தோலாக் காதலர் துறந்து நம் அருளார்
அலர்வது அன்று கொல் இது என்று, நன்றும்
புலரா நெஞ்சமொடு புதுவ கூறி,
இருவேம் நீந்தும் பருவரல் வெள்ளம்
அறிந்தனள் போலும் அன்னை, சிறந்த  5
சீர் கெழு வியல் நகர் வருவனள் முயங்கி,
‘நீர் அலைக் கலைஇய ஈர் இதழ்த் தொடையல்
ஒண்ணுதல் பெதும்பை நல் நலம் பெறீஇ,
மின் நேர் ஓதி இவளொடு நாளைப்
பல் மலர் கஞலிய வெறி கமழ் வேலித்  10
தெண் நீர் மணிச் சுனை ஆடின்,
என்னோ மகளிர் தம் பண்பு’ என்றோளே.

பாடல் பின்னணி:  வரைவு கடாயது (திருமணம் வேண்டியது).

பொருளுரை:  சிறந்த அழகு பொருந்திய நம் பெரிய இல்லத்தில், அன்னை என்னை நோக்கி வந்துத் தழுவி, “நீர் அலைத்ததால் கலைந்த குளிர்ச்சியான மாலையையும், ஒளிரும் நெற்றியையும், பெதும்பைப் பருவத்தின் நல்ல அழகையும் பெற்று, மின்னலை ஒத்த கூந்தலையும் உடைய இவளுடன், நாளைப் பொழுதில், பலவாகிய மலர்கள் நெருங்கிய மணம் வீசுகின்ற சோலையை (கரையை) வேலியாகக் கொண்ட தெளிந்த நீர் உடைய நீலமணி போன்ற சுனையில் ஆடினால் என்ன ஆகும் மகளிரின் பண்பு?” என்றாள்.  போரில் தோல்வியுறாத நம் காதலர் நம்மைத் துறந்து, அருள் செய்யாதவர் ஆகினார் ஆதலால், ‘அலராகாது இது’ என்று பெரிதும் வாட்டமுற்ற நெஞ்சத்துடன் தாயர்க்குப் புதிய காரணங்களைக் கூறி, நாம் இருவரும் படும் பெரும் துன்பத்தை அன்னை அறிந்தாள் போலும்.

குறிப்பு:  புலரா (3) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – வாட்டமுற்று, செய்யா என்னும் உடன்பாட்டு வினையெச்சம், பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – வாட்டமுற்ற, ஒளவை துரைசாமி உரை – அன்பு புலராத.  மின் நேர் ஓதி (9) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – கூந்தலையுடைய மின்னலைப் போன்ற இவள், பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – கூந்தலையுடைய மின்னலைப் போன்ற இவள்.  அகநானூறு 234 உரைகளில் – இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – மின்னலை ஒத்த கூந்தல், பொ. வே. சோமசுந்தரனார் உரை – மின்னல் போன்று மெலிந்த எம் காதலியின் கூந்தல்.  மணிச் சுனை (11) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – அழகிய சுனை, ஒளவை துரைசாமி உரை – அழகிய சுனை, மணிபோல் சுனை, கு. வெ. பாலசுப்பிரமணியன் உரை – நீலமணி போன்ற சுனை.  நன்று – நன்று பெரிது ஆகும் (தொல்காப்பியம், உரியியல் 45).

சொற்பொருள்:  தோலாக் காதலர் துறந்து நம் அருளார் – தோல்வியுறாத காதலர் நம்மைத் துறந்து அருள் செய்யார், அலர்வது அன்று கொல் இது என்று நன்றும் புலரா நெஞ்சமொடு புதுவ கூறி – அலராகாது இது என்று பெரிதும் வாட்டமுற்ற நெஞ்சத்துடன் தாயர்க்குப் புதிய காரணங்களைக் கூறி, இருவேம் நீந்தும் பருவரல் வெள்ளம் அறிந்தனள் போலும் அன்னை – இருவரும் படும் பெரும் துன்பத்தை அறிந்தாள் போலும் அன்னை, சிறந்த சீர் கெழு வியல் நகர் வருவனள் முயங்கி ‘நீர் அலைக் கலைஇய ஈர் இதழ்த் தொடையல் ஒண்ணுதல் பெதும்பை நல் நலம் பெறீஇ மின் நேர் ஓதி இவளொடு நாளைப் பல் மலர் கஞலிய வெறி கமழ் வேலித் தெண் நீர் மணிச் சுனை ஆடின் என்னோ மகளிர் தம் பண்பு’ என்றோளே – சிறந்த அழகு பொருந்திய நம் பெரிய இல்லத்தில் என்னை நோக்கி வந்துத் தழுவி ‘நீர் அலைத்ததால் கலைந்த குளிர்ச்சியான மாலையையும் ஒளிரும் நெற்றியையும் பெதும்பைப் பருவத்தின் நல்ல அழகையும் பெற்று மின்னலை ஒத்த கூந்தலையும் உடைய இவளுடன் நாளைப் பொழுதில் பலவாகிய மலர்கள் நெருங்கிய மணம் வீசுகின்ற சோலையை (கரையை) வேலியாகக் கொண்ட தெளிந்த நீர் உடைய நீலமணி போன்ற சுனையில் ஆடினால் என்ன ஆகும் மகளிரின் பண்பு ‘ என்றாள் (கலைஇய – அளபெடை, பெறீஇ – செய்யுளிசை அளபெடை, என்றோளே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 340, நக்கீரர், மருதத் திணை – தலைவி தலைவனிடம் சொன்னது
புல்லேன் மகிழ்ந, புலத்தலும் இல்லேன்,
கல்லா யானைக் கடுந்தேர்ச் செழியன்
படை மாண் பெருங்குளம் மடை நீர் விட்டெனக்,
கால் அணைந்து எதிரிய கணைக் கோட்டு வாளை
அள்ளல் அம் கழனி உள் வாய் ஓடிப்,  5
பகடு சேறு உதைத்த புள்ளி வெண்புறத்துச்
செஞ்சால் உழவர் கோல் புடை மதரிப்,
பைங்கால் செறுவின் அணை முதல் பிறழும்
வாணன் சிறுகுடி அன்ன என்
கோள் நேர் எல் வளை நெகிழ்த்த நும்மே.  10

பாடல் பின்னணி:  பரத்தையிடம் சென்று மீண்டு வந்த தலைவனிடம் தலைவி நொந்து சொல்லியது.  வாயில் மறுத்தது.

பொருளுரைதலைவனே!   பாகன் கூறும் குறிப்பின்றி வேறு எதுவும் கற்காத யானையையும் விரைந்து செல்லும் தேரையுமுடைய பாண்டிய மன்னனின் பெயரால் வெட்டப்பட்ட மாண்புடைய பெரிய குளத்தில், மடை வழியாக நீரை விட்டதால், கால்வாயை அடைந்து நீரை எதிர்த்துப் போகும் திரண்ட கொம்பையுடைய வாளை மீன், சேற்றினையுடைய வயலுக்குள் சென்று அங்கு உழுகின்ற எருமைக் கடாவின் (எருதின்) கால் சேறு பட்ட புள்ளிகளையும் வெள்ளைப் புறத்தையும் உடைய நேரிய சால் உண்டாக உழும் உழவரின் கைக்கோலால் அடிக்கவும் செருக்குற்று பசுமையான வயலின் வரம்பு அடியில் புரளும், வாணன் என்பவனின் சிறுகுடியை ஒத்த, என் தொழில் நுட்பம் அமைந்த ஒளிரும் வளையல்களை நெகிழ்த்திய நும்மை நான் தழுவ மாட்டேன்.  நும்முடன் ஊடியிருக்கவும் மாட்டேன்.

குறிப்பு:  ஒளவை துரைசாமி உரை – ‘அவன் அறிவு ஆற்ற அறியும் ஆகலின்’ (தொல்காப்பியம், கற்பியல் 6) என்ற நூற்பா உரையில் இப்பாட்டைக் காட்டி, ‘இஃது ஆற்றாமை வாயிலாகச் சென்றாற்குக் கூறியது’ என்பர் இளம்பூரணர்; நச்சினார்க்கினியரும் இதுவே கூறுவர்.  உள்ளுறை – கு. வெ. பாலசுப்பிரமணியன் உரை – குளத்தை உடைத்து சென்ற நீருடன் கால்வாய் வழியே சென்ற வாளை வயலுக்கு ஓடி சேறு புறத்தே சிதற, உழவர்க்கும் அஞ்சாது வரம்பு அடியிலே சென்று தங்கும் என்றதால், மனையகத்தினின்று புறப்பட்ட தலைவன் பாணன் சென்ற வழியே சென்று பரத்தை ஒருத்தியிடம் புகுந்து, ஏனையோர் கூறிய பழி மொழியையும் கேட்டுக் கொண்டு அங்குத் தங்கினான் என்பதும், பரத்தையர் பலரும் விரும்பி அழைக்க அவரிடம் செல்லாது ஒருத்தி இல்லத்தே கிடந்து துயின்று வந்தனன் என்பதும் உள்ளுறுத்தி நின்றது.  வரலாறு:  செழியன், வாணன், சிறுகுடி.  கல்லா யானை (2) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – பாகன் கூறு மொழிக் குறிப்பன்றிப் பிறவற்றைக் கற்றறியாத யானை.  படை மாண் பெருங்குளம் (3) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் – செழியன் பெயராலே செய்த மாட்சிமைப்பட்ட பெரிய குளம்,  புலியூர் கேசிகன் உரை – செழியனின் படையினைப் போலப் பரப்பினாலே மாட்சி பெற்ற பெருங்குளம், செழியன் படைத்த மாண்போடு கூடிய பெருங்குளம்.  கால் அணைந்து எதிரிய கணைக் கோட்டு வாளை  (4) – ஒளவை துரைசாமி உரை – கால்வழியாகச் சென்று நீரை எதிர்த்துப் போதரும், பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – குளத்தினின்றும் புறம் போந்து கால்வாயை அடைந்து சென்று திரும்பிய.  செஞ்சால் உழவர் (7) – ஒளவை துரைசாமி உரை – நேரிய சால் உண்டாக உழும் உழவர், பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – செவ்விய பலபடியாக மறித்து உழுகின்ற உழவர்.  சிறுகுடி என்னும் பெயருடைய ஊர் – அகநானூறு 54 (பண்ணன் என்பவனின் ஊர்), அகநானூறு 117, 204, 269, நற்றிணை 340 (வாணன் என்பவனின் ஊர்), நற்றிணை 367 (அருமன் என்பவனின் ஊர்).  சிறிய குடியிருப்பு என்னும் பொருளில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் வந்துள்ளது.  எல் – எல்லே இலக்கம் (தொல்காப்பியம், இடையியல் 21).  கோள் நேர் (10) – ஒளவை துரைசாமி உரை – கோடற்கு அமைந்த, பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – கோல் தொழில் அமைந்த, கு. வெ. பாலசுப்பிரமணியன் உரை – செறிந்து கொண்டிருந்தும் நேர்த்தி உடையதும்.  கோள் நேர் (நற்றிணை 77ம் பாடலின் உரை) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – வளைந்த அழகிய, ஒளவை துரைசாமி உரை – பொருந்திய நேரிய.

சொற்பொருள்:  புல்லேன் – நான் தழுவ மாட்டேன், மகிழ்ந – தலைவனே, புலத்தலும் இல்லேன் – ஊடியிருக்கவும் மாட்டேன், கல்லா யானைக் கடுந்தேர்ச் செழியன் படை மாண் பெருங்குளம் மடை நீர் விட்டெனக் கால் அணைந்து எதிரிய கணைக் கோட்டு வாளை – பாகன் கூறும் குறிப்பின்றி வேறு எதுவும் கற்காத யானையையும் விரைந்து செல்லும் தேரையுமுடைய பாண்டிய மன்னனின் பெயரால் வெட்டப்பட்ட மாண்புடைய பெரிய குளத்தில் மடை வழியாக நீரை விட்டதால் கால்வாயை அடைந்து நீரை எதிர்த்துப் போகும் திரண்ட கொம்பையுடைய வாளை மீன், அள்ளல் அம் கழனி உள் வாய் ஓடிப் பகடு சேறு உதைத்த புள்ளி வெண்புறத்துச் செஞ்சால் உழவர் கோல் புடை மதரிப் பைங்கால் செறுவின் அணை முதல் பிறழும் வாணன் சிறுகுடி அன்ன என் கோள் நேர் எல் வளை நெகிழ்த்த நும்மே – சேற்றினையுடைய வயலுக்குள் சென்று அங்கு உழுகின்ற எருமைக் கடாவின் (எருதின்) கால் சேறு பட்ட புள்ளிகளையும் வெள்ளைப் புறத்தையும் உடைய நேரிய சால் உண்டாக உழும் உழவரின் கைக்கோலால் அடிக்கவும் செருக்குற்று பசுமையான வயலின் வரம்பு அடியில் புரளும் வாணன் என்பவனின் சிறுகுடியை ஒத்த என் தொழில் நுட்பம் அமைந்த ஒளிரும் வளையல்களை நெகிழ்த்திய நும்மை (அணை – வரம்பு, நும்மே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 341, மதுரை மருதன் இளநாகனார், குறிஞ்சித் திணை – தலைவன் காதலர் இருவரைக் கண்ட வேளையில் சொன்னது
வங்க வரிப் பாறைச் சிறு பாடு முணையின்,
செம்பொறி அரக்கின் வட்டு நா வடிக்கும்
விளையாடு இன்னகை அழுங்கா பால் மடுத்து,
அலையா உலவை ஓச்சி சில கிளையாக்
குன்றக் குறவனொடு குறு நொடி பயிற்றும்,  5
துணை நன்கு உடையள் மடந்தை; யாமே
வெம்பகை அரு முனைத் தண் பெயல் பொழிந்தென,
நீர் இரங்கு அரை நாள் மயங்கி கூதிரொடு
வேறு புல வாடை அலைப்ப,
துணை இலேம், தமியேம், பாசறையேமே.  10

பாடல் பின்னணி:  வினைவயிற் பிரிந்து ஆற்றானாகிய தலைவன் சொல்லியது.  முல்லையுள் குறிஞ்சி.

பொருளுரை:  வெள்ளி போன்ற வெள்ளை நிற வரிகள் உடைய பாறையில் விளையாடி, அதில் சிறிது வெறுப்பு அடைந்ததால், சிவந்த பொறிகளையுடை அரக்கினால் செய்த கிண்ணத்தில் காய்ச்சி வடிக்கப்பட்ட விளையாட்டு மகிழ்ச்சி நீங்கப்பெறாத கள்ளைக் குடித்து, மரத்தின் கிளையைச் சுழற்றி வீசி, குன்றில் வாழும் தன் கணவனுடன் சிறு நொடிகளைக் கூறும் துணைவனை நல்ல முறையில் பெற்றுள்ளாள் இப்பெண்.  யாம் கொடிய அரிய போர்முனையில் குளிர்ந்த மழை பெய்ததால் நீர் மிகுந்த ஒலித்தலுடைய நடு இரவில் கூதிருடன் கலந்து வேற்றுப் புலத்தில் உள்ள வாடைக்காற்றுத் துன்புறுத்த துணை இல்லாது தனியாகப் பாசறையில் உள்ளேம்.

குறிப்பு:  செம்பொறி – சிவந்த வரிகள், சிவந்த புள்ளியுமாம்.  பின்னத்தூர் . நாராயணசாமி ஐயர் உரை – குறவனொடு நொடி பயிற்றலும் பிறவுங் கணவனைப் பிரிந்தார்க்கு இன்மையின் ஈண்டுத் தன் காதலியைக் கூறியதல்லாமை தெளிக, பொ. வே. சோமசுந்தரனார் உரை – இச்செய்யுள் தெளிவின்றிக் கிடக்கின்றது.  இதன் உரையும் பொருந்திய உரையாகக் காணப்படவில்லை.  இதன்கண் மடந்தை என்றது பிறள் ஒருத்தியை என்று கோடல் சிறப்பாகத் தோன்றவில்லை.  ஒருவாறு மடந்தை (தலைவி) யேனும் இல்லத்தின்கண் குன்றகக் குறவனோடு நொடி பயிற்றும் துணையுடையவள், அதாவது நம் குன்றிற்கு உரிமையுடையோனாகிய நம் புதல்வனோடு நொடி பயிற்றும் துணை ஒன்றனையுடையவள் என்றவாறு என்க.  இச் செய்யுளின் உண்மையான பாடம் கிடைக்கவில்லை என்றே கொள்ளல் வேண்டும்.  அலையா – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை, H. வேங்கடராமன் உரை – சுழன்று, ஒளவை துரைசாமி உரை – துன்பம் செய்யாத.   முணைவு – முனைவு (முணைவு) முனிவு ஆகும் (தொல்காப்பியம், உரியியல் 88).  அலையா – அலைத்து என்பது பொருள். செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம்.  எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது.  கிளையா – கிளைத்து என்பது பொருள். செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம்.  எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது.  பால் (3) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – சாராயத்திற்கு ஒரு பெயர்.  கள்ளை மரத்துப்பால் எனக் கூறும் வழக்குண்மையின் அறிக.

சொற்பொருள்:  வங்க வரிப் பாறைச் சிறு பாடு முணையின் – வெள்ளி போன்ற வெள்ளை நிற வரிகள் உடைய பாறையில் விளையாடி அதில் சிறிது வெறுப்பு அடைந்ததால், செம்பொறி அரக்கின் வட்டு நா வடிக்கும் விளையாடு இன்னகை அழுங்கா பால் மடுத்து அலையா உலவை ஓச்சி சில கிளையாக் குன்றக் குறவனொடு குறு நொடி பயிற்றும் துணை நன்கு உடையள் மடந்தை – சிவந்த பொறிகளையுடை அரக்கினால் செய்த கிண்ணத்தில் காய்ச்சி வடிக்கப்பட்ட விளையாட்டு மகிழ்ச்சி நீங்கப்பெறாத கள்ளைக் குடித்து மரத்தின் கிளையைச் சுழற்றி வீசி குன்றில் வாழும் தன் கணவனுடன் சிறு நொடிகளைக் கூறும் துணைவனை நல்ல முறையில் பெற்றுள்ளாள் இப்பெண் (அலையா – அலைத்து, பால் – இங்கு கள்ளைக் குறிக்கின்றது, கிளையா – கிளைத்து, சொற்களைக் கூறி), யாமே வெம்பகை அரு முனைத் தண் பெயல் பொழிந்தென நீர் இரங்கு அரை நாள் மயங்கி கூதிரொடு வேறு புல வாடை அலைப்ப துணை இலேம் தமியேம் பாசறையேமே – யாம் கொடிய அரிய போர்முனையில் குளிர்ந்த மழை பெய்ததால் நீர் மிகுந்த ஒலித்தலுடைய நடு இரவில் கூதிருடன் கலந்து வேற்றுப் புலத்தில் உள்ள வாடைக்காற்றுத் துன்புறுத்த துணை இல்லாது தனியாகப் பாசறையில் உள்ளேம் (யாமே – ஏகாரம் அசைநிலை, பாசறையேமே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 342, மோசிகீரனார், நெய்தல் திணை – தோழி சொன்னது
‘மா என மதித்து மடல் ஊர்ந்து, ஆங்கு
மதில் என மதித்து வெண்தேர் ஏறி,
என் வாய் நின் மொழி மாட்டேன் நின் வயின்
சேரி சேரா வருவோர்க்கு, என்றும்
அருளல் வேண்டும் அன்பு உடையோய்!’ என,  5
கண் இனிதாகக் கோட்டியும் தேரலள்;
யானே, எல் வளை, யாத்த கானல்
வண்டு உண் நறு வீ நுண்ணிதின் வரித்த
சென்னிச் சேவடி சேர்த்தின்,
என்னெனப்படுமோ என்றலும் உண்டே.  10

பாடல் பின்னணி:  தலைவனுக்குக் குறை நேர்ந்த தோழி, ஆற்றாளாய்த் தனக்குள்ளே சொல்லியது.

பொருளுரை:  நான் அவளிடம், “அன்புடைய தோழியே!  குதிரை என்று கருதி பனை மடலில் வந்து, காவலுடைய மதில் என்று எண்ணி கானல் நீரைத் தாண்டி, நம்முடைய தெருவிற்கு உன்னுடைய உறவை நாடி வரும் தலைவனுக்கு நீ அருள வேண்டும். அவனிடம் ‘உன் சொற்களை நான் அவளிடம் கூற மாட்டேன்.  நீயே உன் குறையை அவளிடம் கூறு’ எனக் கூறினேன்”, என்று என் தலையைச் சாய்த்து, என் கண்களினால் இனிமையை வெளிப்படுத்திக் கூறினேன்.  ஆனாலும் ஒளியுடைய வளையல்களை அணிந்த அவள் தெளிவு அடையவில்லை.  வண்டுகள் நறுமணமான மலர்களை உண்டு அவற்றை நுண்ணியக் கோலமாக உதிர்த்த வேலியை உடையக் கடற்கரைச் சோலையில், என் தலையை அவளது சிவந்த அடியில் பொருத்தி அவளிடம் கேட்டால், அவள் ஒரு வேளை சூழ்நிலையைப் பற்றிக் கேட்க வாய்ப்பு உள்ளது.  அப்பொழுது நிகழ்ந்தவற்றை நான் கூறுவேன்.

குறிப்பு:  சேரா – சேர என்பது பொருள். செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம்.  எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது.  என் வாய் நின் மொழி மாட்டேன் (3) – ஒளவை துரைசாமி உரை – என் வாயால் நீ கூறற்குரியவற்றை கூற வல்லேனல்லேன்.  எல் – எல்லே இலக்கம் (தொல்காப்பியம், இடையியல் 21).  மடல் ஏறுதல் – சங்க இலக்கியத்தில் மொத்தம் 16 பாடல்களில் மடல் ஏறுதல் பற்றிய குறிப்புகள் உள்ளன – குறுந்தொகை 14, 17, 32, 173, 182, நற்றிணை 146, 152, 220, 342, 377, கலித்தொகை 58, 61, 138, 139, 140, 141.  கலித்தொகை 138, 139, 140, 141 பாடல்களில் மட்டுமே தலைவன் மடல் குதிரையின் மீது செல்கின்றான்.  கலித்தொகை 138, 141 ஆகிய பாடல்களில் மடல் ஏறியதால் தலைவியை அடைகின்றான். தொல்காப்பியம் பொருள் அதிகாரம் – எத்திணை மருங்கினும் மகடூஉ மடல் மேல் பொற்புடை நெறிமை இன்மையான.   திருக்குறள் – கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப் பெண்ணின் பெருந்தக்கது இல் (1137), திருமங்கை ஆழ்வார் சிறிய திருமடல் பெருந்தெருவெ ஊரார் இகழிலும் ஊராது ஒழியேன் நான் வாரார் பூம் பெண்ணை மடல், திருமங்கை ஆழ்வார் பெரிய திருமடல் – உன்னியுலவா உலகறிய ஊர்வன் நான், முன்னி முளைத்து எழுந்தோங்கி ஒளி பரந்த, மன்னியம் பூம் பெண்ணை மடல், நம்மாழ்வார்  திருவாய்மொழி (3371) நாணும் நிறையும் கவர்ந்து, என்னை நல் நெஞ்சம் கூவிக்கொண்டு, சேண் உயர் வானத்து இருக்கும் தேவ பிரான் தன்னை ஆணை என் தோழீ! உலகு தோறு அலர் தூற்றி, ஆம் கோணைகள் செய்து  திரியாய் மடல் ஊர்துமே! நம்மாழ்வார்  திருவாய்மொழி (3372) யாம் மடல் ஊர்ந்தும் எம் ஆழி அங்கைப் பிரான் உடை தூ மடல் தண் அம் துழாய் மலர் கொண்டு சூடுவோம், ஆம் மடம் இன்றி, தெருவுதோறு அயல் தையலார் நா மடங்காப் பழி தூற்றி, நாடும் இரைக்கவே.  மாணிக்கவாசகர் திருக்கோவையார் – (75) அண்ணல் மடங்கல் அதள் அம் பலவன் அருளிலர்போல் பெண்ணை மடன் மிசை யான்வரப் பண்ணிற்று ஓர் பெண்கொடியே, மாணிக்கவாசகர் திருக்கோவையார் – (76) கழிகின்ற என்னையும் நின்ற நின் கார்மயில் தன்னையும் யான் கிழியன்ற நாடி எழுதிக் கைக் கொண்டென் பிறவிகெட்டின்(று) அழிகின்ற(து) ஆக்கிய தாள் அம்பலவன் கயிலையந்தேன் பொழிகின்ற சாரல் நும் சீறூர்த் தெருவிடைப் போதுவனே.  எல் – எல்லே இலக்கம் (தொல்காப்பியம், இடையியல் 21).

சொற்பொருள்: மா என மதித்து – குதிரை என்று கருதி, மடல் ஊர்ந்து – பனை மடலில் வந்து, ஆங்கு மதில் என மதித்து – காவலுடைய மதில் என்று எண்ணி, வெண்தேர் ஏறி – கானல் நீரைத் தாண்டி, பேய்த்தேரைத் தாண்டி, என் வாய் – என் வாயால் கூற, நின்மொழி – உன்னுடைய சொற்களை, மாட்டேன் – நான் கூற மாட்டேன், நின் வயின் – உனக்காக, சேரி சேரா வருவோர்க்கு – நம்முடைய தெருவிற்கு உன்னுடைய உறவை நாடி வரும் தலைவனுக்கு, என்றும் அருளல் வேண்டும் – நீ அருள வேண்டும், அன்பு உடையோய் – அன்பு உடையவளே, என – என்று, கண் இனிதாகக் கோட்டியும் – கண்ணினால் இனிமையான குறிப்பை தலையைச் சாய்த்துக் காட்டியும், தேரலள் – அவள் அறியவில்லை, யானே – நான், எல் வளை – ஒளியுடைய வளையல்களை அணிந்தவள் (எல் வளை – அன்மொழித்தொகை), யாத்த கானல் – வேலிச் சூழ்ந்தக் கடற்கரைச் சோலை, வண்டு உண் – வண்டுகள் உண்ணும், நறு வீ – நறுமணமான மலர்கள், நுண்ணிதின் வரித்த – நுண்ணிதாகக் கோலம் செய்த, சென்னி – தலை, சேவடி – சிவந்த அடி, சேர்த்தின் – சேர்த்தால், என் எனப்படுமோ – சூழ்நிலை இப்பொழுது எவ்வாறு உள்ளது (எனப்படுமோ – ஓகாரம் அசைநிலை), என்றலும் உண்டே – என்று வினவுவதும் உண்டாகும் (உண்டே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 343, கருவூர்க் கதப்பிள்ளைச் சாத்தனார், பாலைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
முல்லை தாய கல் அதர்ச் சிறு நெறி
அடையாது இருந்த அம் குடிச் சீறூர்த்
தாது எரு மறுகின் ஆ புறம் தீண்டும்
நெடு வீழ் இட்ட கடவுள் ஆலத்து,
உகு பலி அருந்திய தொகு விரல் காக்கை  5
புன்கண் அந்திக் கிளை வயின் செறியப்,
படையொடு வந்த பையுள் மாலை
இல்லை கொல், வாழி தோழி, நம் துறந்து
அரும் பொருட் கூட்டம் வேண்டிப்
பிரிந்து உறை காதலர் சென்ற நாட்டே?  10

பாடல் பின்னணி:  பிரிவிடை ஆற்றாளாய தலைவி தோழியிடம் சொல்லியது.

பொருளுரைதோழி!  நீடு வாழ்வாயாக!  முல்லைக் கொடிகள் பரவிய சிறிய வழியில் இல்லாது, அதிலிருந்து விலகி இருந்த அழகிய குடிகளையுடைய சிற்றூரில் பூந்தாதுக்கள் எருவாக உதிர்ந்திருக்கும் தெருவில், ஆநிரைகளின் முதுகினை வருடும் நீண்ட விழுதையுடைய கடவுள் உறையும் ஆலமரத்தின் கீழ் சொரியப்படும் பலிச்சோற்றை உண்ட காக்கை, துன்பமுடைய அந்தி நேரத்தில் தம் சுற்றம் இருக்கும் இடத்தை அடைய, தென்றல் காற்று, கோவலரின் குழலிசை, நிலவு, ஆகிய படையுடன் வந்து பிரிந்தவர்களை வருத்தும் மாலை இல்லையா, நம்மைத் துறந்து அரிய பொருளை ஈட்டுவதற்காகப் பிரிந்து வாழும் காதலர் சென்ற நாட்டில்?

குறிப்பு:  படை (7) – போர்க்கருவி என்பது பொருள்.  ஒளவை துரைசாமி உரை – மாலை மதியமும் தென்றலும் குழலிசையும் காதல் நோய் உற்றார்க்கு நோய் மிகுவித்துத் துன்புறுத்துவது பற்றி படை என்றார்.  இறைச்சி (1) – கு. வெ. பாலசுப்பிரமணியன் உரை – ஆலமரத்தின் கீழ் இடும் பலியுணவைத் தின்ற காக்கை தம் இனத்துடன் தங்கும் என்றது, தலைவியின் நலனுண்ட பசலை நெற்றியிலே தங்கியது என்பதனைக் குறித்தது.  இறைச்சி (2) – கு. வெ. பாலசுப்பிரமணியன் உரை – ஆலமரத்தின் விழுது பசுவின் முதுகை வருடும் என்றது தோழி அருகிருந்து ஆற்றுவதால் தான் உயிர் வாழ்ந்திருப்பதாய் குறிப்பித்தற்காம்.  தாது எரு மறுகின் (2) – ஒளவை துரைசாமி உரை – புழுதி நிறைந்த தெருக்களில், பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – மலரின் தாதுக்களே எருவாக உதிர்ந்த தெருவின்கண், ச. வே. சுப்பிரமணியன் உரை – மகரந்தத் தாதுக்கள் எருவாகக் கிடக்கும் தெருக்களில்.  தாது எரு – அகநானூறு 165 – தாது எரு மறுகின் மூதூர், குறுந்தொகை 46 – மன்றத்து எருவின் நுண் தாது, நற்றிணை – 271 பைந்தாது எருவின் வைகு, கலித்தொகை 103 – தாது எரு மன்றத்து, கலித்தொகை 108 – தாது உக்கன்ன தாது எரு மன்றத்து, புறநானூறு 33 – தாது எரு மறுகின், புறநானூறு 215 – தாது எரு மறுகின், புறநானூறு 311 – தாது எரு மறுகின், பதிற்றுப்பத்து 13–17 – தாது எரு மறுத்த கலி அழி மன்றத்து மலைபடுகடாம் 531 – தாது எருத் ததைந்த முற்றம்.  ஆலமரத்தின் அடியில் சிவபெருமான் – புறநானூறு 198 ஆல் அமர் கடவுள், கலித்தொகை 81 – ஆல் அமர் செல்வன், கலித்தொகை 83, ஆல் அமர் செல்வன், திருமுருகாற்றுப்படை 256 – ஆல் அமர் கடவுள், சிறுபாணாற்றுப்படை 97 – ஆல் அமர் செல்வற்கு.  காக்கைக்கு உணவு அளித்தல் – நற்றிணை 258, 281, 293, 343, 367, குறுந்தொகை 210, ஐங்குறுநூறு 391.

சொற்பொருள்:  முல்லை தாய கல் அதர்ச் சிறு நெறி அடையாது இருந்த அம் குடிச் சீறூர்த் தாது எரு மறுகின் ஆ புறம் தீண்டும் நெடு வீழ் இட்ட கடவுள் ஆலத்து உகு பலி அருந்திய தொகு விரல் காக்கை – முல்லைக் கொடிகள் பரவிய சிறிய வழியில் இல்லாது விலகி இருந்த அழகிய குடிகளையுடைய சிற்றூரில் பூந்தாதுக்கள் எருவாக உதிர்ந்திருக்கும் தெருவில் ஆநிரைகளின் முதுகினை வருடும் நீண்ட விழுதையுடைய கடவுள் உறையும் ஆலமரத்தின் கீழ் சொரியப்படும் பலிச்சோற்றை உண்ட காக்கை, புன்கண் அந்திக் கிளை வயின் செறியப் படையொடு வந்த பையுள் மாலை இல்லை கொல் – துன்பமுடைய அந்தி நேரத்தில் தம் சுற்றம் இருக்கும் இடத்தை அடைய பிரிந்தவர்களை வருத்தும் படையுடன் வரும் மாலை இல்லையா (படை – கருவி, இங்கு துன்புறுத்தும் தென்றல் காற்று, கோவலரின் குழலிசை, நிலவு போன்றவை, கொல் – ஐயப்பொருட்டு வந்தது), வாழி – நீடு வாழ்வாயாக, அசைநிலை, தோழி – தோழி, நம் துறந்து அரும் பொருட் கூட்டம் வேண்டிப் பிரிந்து உறை காதலர் சென்ற நாட்டே – நம்மைத் துறந்து அரிய பொருளை ஈட்டுவதற்காகப் பிரிந்து வாழும் காதலர் சென்ற நாட்டில் (நாட்டே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 344 , மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார், குறிஞ்சித் திணை – தோழி தலைவியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
அணி வரை மருங்கின் ஐது வளர்ந்திட்ட
மணி ஏர் தோட்ட மை ஆர் ஏனல்
இரும் பிடித் தடக் கையின் தடைஇய பெரும் புனம்
காவல் கண்ணினம் ஆயின், ஆயிழை,
நம் நிலை இடை தெரிந்து உணரான், தன் மலை  5
ஆரம் நீவிய அணி கிளர் ஆகம்
சாரல் நீள் இடைச் சால வண்டு ஆர்ப்ப,
செல்வன் செல்லும் கொல் தானே, உயர்வரைப்
பெருங்கல் விடரகம் சிலம்ப இரும்புலி
களிறு தொலைத்து உரறும் கடி இடி மழை செத்துச்  10
செந்தினை உணங்கல் தொகுக்கும்,
இன் கல் யாணர்த் தம் உறைவின் ஊர்க்கே?

பாடல் பின்னணி:  வரைவு கடாயது.

பொருளுரை:  ஆராய்ந்த அணிகலன்களை அணிந்தவளே!  அழகிய மலைப்பக்கத்தில், மென்மையாக (வியக்குமாறு) வளர்ந்துள்ள நீலமணி போன்ற தோட்டினை உடைய கருமை நிரம்பிய தினைக்கதிர்கள், பெரிய பிடியானையின் பருத்த தும்பிக்கையைப் போல் வளைந்து தோன்றும் தினைப்புனத்தைக் காப்பதற்கு நாம் கருதினோம் ஆயின், நம்முடைய நிலையை இடையே அறியாதவனாகத், தன்னுடைய மலையின் சந்தனம் தடவிய அழகு விளங்கும் மார்பின்கண் வண்டுகள் மொய்த்து ஒலிக்கத் தலைவன் மலையின் நெடி வழியில் செல்லுவானோ, உயர்ந்த உச்சியையுடைய பெரிய மலையின் பிளவுகளில்  எதிரொலிக்குமாறு பெரிய (கரிய) புலி களிற்று யானையைக் கொன்று உறுமும் பெரிய ஒலியைக் கேட்டு, மழைமுகிலின் முழக்கம் என எண்ணி, சிவந்த தினையை உலர வைத்தவர்கள் அவற்றைத் தொகுக்கும் இனிய மலையில் உள்ள வளம் உடைய தாம் உறையும் ஊர்க்கு?

குறிப்பு:  உள்ளுறை – கு. வெ. பாலசுப்பிரமணியன் உரை – யானையைப் புலி கொன்று முழங்கிய முழக்கத்தை இடி முழக்கமெனக் கருதிக் காய வைத்த தினையைத் தொகுப்பர் என்றது, தலைவனை வர இயலாதபடி ஊரினர் அலரெடுத்து மொழியவும், வேறுபட்ட தலைவியைக் கண்ட அன்னை கட்டு கழங்கு முதலியவற்றால் வேறுபட உணர்ந்து, தினைப்புனம் காக்கும் தலைவியை இல்வயிற் செறித்து வெறி அயர்வள் என்பதனை உள்ளுறுத்திற்று.  ஐது (1) – கு. வெ. பாலசுப்பிரமணியன் உரை – மென்மை, பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – வியப்புடையது.  யாணர் – புதிதுபடற் பொருட்டே யாணர்க் கிளவி (தொல்காப்பியம், உரியியல் 83).  தட – தடவும் கயவும் நளியும் பெருமை (தொல்காப்பியம், உரியியல் 24), அவற்றுள், தட என் கிளவி கோட்டமும் செய்யும் (தொல்காப்பியம், உரியியல் 25).  கடி – கடி என் கிளவி வரைவே கூர்மை காப்பே புதுமை விரைவே விளக்கம் மிகுதி சிறப்பே அச்சம் முன்தேற்று ஆயீர் ஐந்தும் மெய்ப்படத் தோன்றும் பொருட்டு ஆகும்மே (தொல்காப்பியம், உரியியல் 87).  பிடி – பிடி என் பெண் பெயர் யானை மேற்றே (தொல்காப்பியம், மரபியல் 52).

சொற்பொருள்:  அணி வரை மருங்கின் ஐது வளர்ந்திட்ட மணி ஏர் தோட்ட மை ஆர் ஏனல் இரும் பிடித் தடக் கையின் தடைஇய பெரும் புனம் காவல் கண்ணினம் ஆயின் – அழகிய மலைப்பக்கத்தில் மென்மையாக (வியக்குமாறு) வளர்ந்துள்ள நீலமணி போன்ற தோட்டினை உடைய கருமை நிரம்பிய தினைக்கதிர்கள் பெரிய பிடியானையின் பருத்த தும்பிக்கையைப் போல் வளைந்து தோன்றும் தினைப்புனத்தைக் காப்பதற்கு நாம் கருதினோம் ஆயின் (ஏர் – உவம உருபு, தடைஇய – அளபெடை), ஆயிழை – ஆராய்ந்த அணிகலன்களை அணிந்தவளே (அன்மொழித்தொகை விளியேற்று நின்றது), நம் நிலை இடை தெரிந்து உணரான் – நம்முடைய நிலையை இடையே அறியாதவனாக உள்ளான், தன் மலை ஆரம் நீவிய அணி கிளர் ஆகம் சாரல் நீள் இடைச் சால வண்டு ஆர்ப்ப செல்வன் செல்லும் கொல் – தன்னுடைய மலையின் சந்தனம் தடவிய அழகு விளங்கும் மார்பின்கண் மலையின் நெடிய வழியில் வண்டுகள் மொய்த்து ஒலிக்கத் தலைவன் செல்லுவானோ (கொல் – ஐயப்பொருட்டு வந்த இடைச்சொல்), தானே – தான் ஏ அசைநிலைகள், உயர்வரைப் பெருங்கல் விடரகம் சிலம்ப இரும்புலி களிறு தொலைத்து உரறும் கடி இடி மழை செத்துச் செந்தினை உணங்கல் தொகுக்கும் இன் கல் யாணர்த் தம் உறைவின் ஊர்க்கே – உயர்ந்த உச்சியையுடைய பெரிய மலையின் பிளவுகளில் எதிரொலிக்குமாறு பெரிய (கரிய) புலி களிற்று யானையைக் கொன்று உறுமும் பெரிய ஒலியைக் கேட்டு மழைமுகிலின் முழக்கம் என எண்ணி சிவந்த தினையை உலர வைத்தவர்கள் அவற்றைத் தொகுக்கும் இனிய மலையில் உள்ள வளம் உடைய தாம் உறையும் ஊர்க்கு (ஊர்க்கே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 345, நம்பி குட்டுவனார், நெய்தல் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
கானல் கண்டல் கழன்று உகு பைங்காய்
நீல் நிற இருங்கழி உட்பட வீழ்ந்தென,
உறு கால் தூக்க தூங்கி ஆம்பல்
சிறுவெண்காக்கை ஆவித்தன்ன
வெளிய விரியும் துறைவ! என்றும்  5
அளிய பெரிய கேண்மை நும் போல்,
சால்பு எதிர்கொண்ட செம்மையோரும்
தேறா நெஞ்சம் கையறுபு வாட,
நீடின்று விரும்பார் ஆயின்,
வாழ்தல் மற்று எவனோ? தேய்கமா தெளிவே!  10

பாடல் பின்னணி:  பிரிவிடை ஆற்றாது வருந்திய தலைவியிடம் ‘விரைவில் மணம் புரிவேன்’ என்று தெரிவிக்கக் கருதினான்.  அப்பொழுது தோழி கடிந்து உரைத்தது.

பொருளுரை:  பெரிய காற்று அசைப்பதால் அசைந்து, கடற்கரைச் சோலையின் கண்டல் மரத்திலிருந்து கழன்று விழும் பசிய காய் நீல நிறமுடைய பெரிய உப்பங்கழியில் உள்ளே பொருந்துமாறு விழ, அதனால் ஆம்பல் மலர்கள் சிறுவெண்காக்கை கொட்டாவி விட்டாற்போன்று வெள்ளை இதழ்களை விரிக்கும் துறைவனே!  எக்காலத்திலும் அருள் புரிய பெரிய நட்பையுடைய நும்மை போல் சால்பை எதிர்கொண்ட நல்ல பண்புடையவர்களும், அதை உணராது நட்புடையோர் நெஞ்சம் வருந்தும்படி, நெடுங்காலம் விரும்பாமல் இருப்பாரானால், உயிர் வாழ்வது எவ்வாறு? நும் தெளிவு ஒழிக! இவள் துன்புற்று அழிக!

குறிப்பு:  ஒளவை துரைசாமி உரை – ‘நாற்றமும் தோற்றமும்’ (தொல்காப்பியம், களவியல் 24) என்ற நூற்பா உரையில், இப்பாட்டைக் காட்டி ‘இஃது ஆற்றாத தலைவியைக் கடிதின் வரைவேன் என்று தலைவன் தெரிவிக்கப் புக்குழித் தோழி தெளிவிடை விலக்கியது’ என்பர் நச்சினார்க்கினியர்.  உள்ளுறை – ஒளவை துரைசாமி உரை – உறுகால் தூக்கக் கண்டலின் கழன்று உகு காய்கள் கழிநீருள் வீழ்ந்தமையால் ஆம்பல் வெளிய விரியும் என்றது, தலைவன்  பிரிவு அலைத்தலால் தலைவி மேனி மெலிந்து வேறுபடுவது கண்டு ஏதிலாட்டியர் வாய் விரிந்து அலர் தூற்றுகின்றனர் என்பது.  பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – துறைவ நும் போல் என்றது பன்மை ஒருமை மயக்கம்.  உறு – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3).

சொற்பொருள்:  கானல் கண்டல் கழன்று உகு பைங்காய் நீல் நிற இருங்கழி உட்பட வீழ்ந்தென உறு கால் தூக்க தூங்கி ஆம்பல் சிறுவெண்காக்கை ஆவித்தன்ன வெளிய விரியும் துறைவ – பெரிய காற்று அசைப்பதால் அசைந்து கடற்கரைச் சோலையின் கண்டல் மரத்திலிருந்து கழன்று விழும் பசிய காய் நீல நிறமுடைய பெரிய உப்பங்கழியில் உள்ளே பொருந்துமாறு விழுந்ததால் ஆம்பல் மலர்கள் சிறுவெண்காக்கை கொட்டாவி விட்டாற்போன்று வெள்ளை இதழ்களை விரிக்கும் துறைவனே (துறைவ – அண்மை விளி), என்றும் அளிய பெரிய கேண்மை நும் போல் சால்பு எதிர்கொண்ட செம்மையோரும் – எக்காலத்திலும் அருள் புரிய பெரிய நட்பையுடைய நும்மைப் போல் சால்பை எதிர்கொண்ட நல்ல பண்புடையவர்களும், தேறா நெஞ்சம் கையறுபு வாட – அதை உணராது நட்புடையோர் நெஞ்சம் வருந்தும்படி, நீடின்று விரும்பார் ஆயின் – நெடுங்காலம் விரும்பாமல் இருப்பாரானால், வாழ்தல் மற்று எவனோ – உயிர் வாழ்வது எவ்வாறு (மற்று – அசைநிலை, எவனோ – ஓகாரம் அசைநிலை), தேய்கமா தெளிவே – நும் தெளிவு ஒழிக, இவள் துன்புற்று அழிக (தேய்கமா – மா வியங்கோள் அசைநிலை, தெளிவே – ஏகாரம் அசைநிலை)    

நற்றிணை 346, எயினந்தை மகன் இளங்கீரனார், பாலைத் திணை – தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது
குணகடல் முகந்து குடக்கு ஏர்பு இருளித்
தண் கார் தலைஇய நிலம் தணி காலை,
அரசு பகை நுவலும் அரு முனை இயவின்
அழிந்த வேலி அம் குடிச் சீறூர்
ஆள் இல் மன்றத்து, அல்கு வளி ஆட்டத்,  5
தாள் வலி ஆகிய வன்கண் இருக்கை,
இன்று நக்கனை மன் போலா என்றும்
நிறையுறு மதியின் இலங்கும் பொறையன்
பெருந்தண் கொல்லிச் சிறு பசுங்குளவிக்
கடி பதம் கமழும் கூந்தல்  10
மட மா அரிவை தட மென்தோளே.

பாடல் பின்னணி:  பொருள்வயிற் பிரிந்த தலைவன் ஆற்றானாய்த் தன் நெஞ்சிடம் கூறியது.

பொருளுரைநெஞ்சே!  கிழக்குக்கடலின் நீரை உண்டு மேற்குத் திசையில் எழுந்து இருண்டு, குளிர்ந்த கார்மழையைப் பெய்ததனால் நிலம் குளிர்ந்த வேளையில், அரசரின் பகைமை கூறி போரிடும் நெருங்குவதற்கு அரிய போர்முனையை அடுத்த வழியில், பாழ்பட்ட வேலியையுடைய அழகிய குடிகள் வாழ்ந்த சிற்றூரின் ஆள் இல்லாத மன்றத்தில், நெருங்கிய காற்று வீச, முயற்சியைக் கருதி உறைகின்ற இருக்கையின்கண் இருந்து, இப்பொழுது நினைத்து மகிழ்கின்றனை போலும், எப்பொழுதும் நிறைந்த முழு நிலவுபோல் விளங்கும் சேரனின் பெரிய குளிர்ந்த கொல்லி மலையில் உள்ள சிறிய பசிய குளவி (காட்டு மல்லி) மலர்களைச் சூடுவதால் மணம் மிகுந்த கூந்தலையுடைய இளமையையும் அழகையும் உடைய பெண்ணின் வளைந்த (பருத்த) மெல்லிய தோள்களை!

குறிப்பு:  மட மா அரிவை (11) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – இளைய அழகிய மடந்தை, ஒளவை துரைசாமி உரை – இளமையையும் அழகையுமுடைய அரிவை.  மட மா அரிவை – உ. வே. சாமிநாதையர் உரை, குறுந்தொகை 378 – மடப்பத்தையும் மாமையையுமுடைய தலைவி, ஒளவை துரைசாமி உரை, நற்றிணை 42 – இளமையும் மாமையையுமுடைய அரிவை.  தட – தடவும் கயவும் நளியும் பெருமை (தொல்காப்பியம், உரியியல் 25), அவற்றுள், தட என் கிளவி கோட்டமும் செய்யும் (தொல்காப்பியம், உரியியல் 26).

சொற்பொருள்:  குணகடல் முகந்து குடக்கு ஏர்பு இருளித் தண் கார் தலைஇய நிலம் தணி காலை அரசு பகை நுவலும் அரு முனை இயவின் அழிந்த வேலி அம் குடிச் சீறூர் ஆள் இல் மன்றத்து – கிழக்குக்கடலின் நீரை உண்டு மேற்குத் திசையில் எழுந்து இருண்டு குளிர்ந்த கார்மழையைப் பெய்ததனால் நிலம் குளிர்ந்த வேளையில் அரசரின் பகைமை கூறி போரிடும் நெருங்குவதற்கு அரிய போர்முனையை அடுத்த வழியில் பாழ்பட்ட வேலியையுடைய அழகிய குடிகள் வாழ்ந்த சிற்றூரின் ஆள் இல்லாத மன்றத்தில் (தலைஇய – அளபெடை, நுவலும் – கூறும், இயவு – வழி), அல்கு வளி ஆட்ட – நெருங்கிய காற்று வீச (அல்கு – செறிந்த, நெருங்கிய), தாள் வலி ஆகிய வன்கண் இருக்கை இன்று நக்கனை மன் போலா – முயற்சியைக் கருதி உறைகின்ற இருக்கையின்கண் இருந்து இப்பொழுது நினைத்து மகிழ்கின்றனை போலும் (மன் – அசைநிலை), என்றும் நிறையுறு மதியின் இலங்கும் பொறையன் பெருந்தண் கொல்லிச் சிறு பசுங்குளவிக் கடி பதம் கமழும் கூந்தல் மட மா அரிவை தட மென்தோளே – எப்பொழுதும் நிறைந்த முழு நிலவுபோல் விளங்கும் பொறையனின் (சேரனின்) பெரிய குளிர்ந்த கொல்லி மலையில் உள்ள சிறிய பசிய குளவி (காட்டு மல்லி) மலர்களைச் சூடுவதால் மணம் மிகுந்த கூந்தலையுடைய இளமையையும் அழகையும் உடைய பெண்ணின் வளைந்த (பருத்த) மெல்லிய தோள்களை (மதியின் – இன் ஒப்புப்பொருளில் வந்தது, ஐந்தாம் வேற்றுமை உருபு, மென்தோளே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 347, பெருங்குன்றூர் கிழார், குறிஞ்சித் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
முழங்கு கடல் முகந்த கமஞ்சூல் மா மழை
மாதிர நனந்தலை புதையப் பாஅய்,
ஓங்கு வரை மிளிர ஆட்டி பாம்பு எறிபு,
வான் புகு தலைய குன்றம் முற்றி,
அழிதுளி தலைஇய பொழுதில் புலையன்  5
பேழ்வாய்த் தண்ணுமை இடம் தொட்டன்ன,
அருவி இழிதரும் பெருவரை நாடன்,
‘நீர் அன நிலையன், பேர் அன்பினன்’, எனப்
பல் மாண் கூறும் பரிசிலர் நெடுமொழி,
வேனில் தேரையின் அளிய,  10
காண விடுமோ தோழி, என் நலனே?

பாடல் பின்னணி:  தலைவன் வரையாது நெடுங்காலம் வந்தொழுக, ஆற்றாளாகிய தலைவியைத் தோழி பொறுத்திரு என வற்புறுத்திய வேளையில், தலைவி நொந்து உரைத்தது.

பொருளுரை:  முழங்குகின்ற கடல் நீரைக் குடித்து நிறைந்த நீருடன் சூலுற்ற கரிய மழைமுகில்கள், எல்லாத் திசைகளின் அகன்ற இடங்கள் மறையும்படி பரவி உயர்ந்து, மலைகள் உடைந்து விழுமாறு செய்து, பாம்புகளைத் தாக்கி, வானளவு உயர்ந்த உச்சிகளையடையக் குன்றங்களைச் சூழ்ந்து, மிக்க மழையைப் பொழிந்த காலத்தில், புலையன் அகன்ற வாயையுடைய தண்ணுமை முரசினைக் கொட்டும்பொழுது எழும் ஒலி போன்று அருவிகள் கீழே வடியும் பெரிய மலைநாடன், “நீர் போன்ற இனிய நிலையை உடையவன், மிகுந்த அன்புடையவன்” எனப் பலவாக மாண்புடன் கூறும் பரிசில் பெறுவோரின் சிறந்த மொழிகளைக் கண்டும் கேட்டும் மகிழும் காலம் வரை என்னை உயிருடன் விடுமோ, வேனில் காலத்தில் மண்ணில் மூழ்கி மறைந்திருக்கும் தேரையைப்போல் உள்ள என் நலன்கள்? அவை இரங்கத்தக்கன.

குறிப்பு:  இறைச்சி – கு. வெ. பாலசுப்பிரமணியன் உரை – மலையிடத்து பெய்யும் மழையால் அருவி தண்ணுமை போல முழங்கிப் பெருகும் என்றது, தலைவன் வந்து சென்றவுடன் பறை முழங்கியது போல ஊரெங்கும் அலர் எழுந்தது எனக் குறித்தது.  உள்ளுறை – ஒளவை துரைசாமி உரை – மாமழை மாதிரம் புதையப் பாஅய் என்றது தலைவன் சான்றோர் சூழ்தர எழுவதாகவும், பாம்பு எறிபு என்றது ஏதிலார் கூறும் அலர் சிதைப்பதாகவும், குன்றம் முற்றித் தலைஇய பொழுதில் என்றது மனையகம் போந்து வரைபொருள் தந்து மணம் பேசுங்காலையும், தண்ணுமை போல முழங்கி அருவி இழிதரும் என்றது தலைவனுடைய தலைமை நலம் பலர் அறிந்து பாராட்ட விளங்குவதாகவும் உள்ளுறை கொள்ளப்படும்.  வெள்ளிப்படைக் கூற்றில் காண விடுமோ தோழி என் நலனே என்று மறுத்தாள்.  புலையன் (5) – ஒளவை துரைசாமி உரை – புலைத் தொழில் செய்பவன்.  இடி பாம்புகளை வருத்தவும் கொல்லவும் செய்யும் என்னும் செய்தி உள்ள பாடல்கள் – அகநானூறு 92, 119, 182, 202, 274, 323, 328, கலித்தொகை 45, 113, குறுந்தொகை 158, 190, 268, 391, நற்றிணை 37, 51, 114, 129, 238, 255, 264, 347, 383, புறநானூறு 17, 37, 58, 126, 211, 366, 369.  கமம் – கமம் நிறைந்தியலும் (தொல்காப்பியம், உரியியல் 57).  நனந்தலை – அகன்ற இடம், நனம் – நனவே களனும் அகலமும் செய்யும் (தொல்காப்பியம், உரியியல் 80).

சொற்பொருள்:  முழங்கு கடல் முகந்த கமஞ்சூல் மா மழை மாதிர நனந்தலை புதையப் பாஅய் ஓங்கு வரை மிளிர ஆட்டி பாம்பு எறிபு வான் புகு தலைய குன்றம் முற்றி அழிதுளி தலைஇய பொழுதில் – முழங்குகின்ற கடல் நீரைக் குடித்து நிறைந்த நீருடன் சூலுற்ற கரிய மழைமுகில்கள் எல்லாத் திசைகளின் அகன்ற இடங்கள் மறையும்படி பரவி உயர்ந்து மலைகள் உடைந்து விழுமாறு செய்து பாம்புகளைத் தாக்கி வானளவு உயர்ந்த உச்சிகளையடையக் குன்றங்களைச் சூழ்ந்து மிக்க மழையைப் பொழிந்த காலத்தில் (கம என்னும் உரிச்சொல் நிறைவுப் பொருளில் வந்தது, பாஅய் – செய்யுளிசை அளபெடை, தலைஇய – அளபெடை), புலையன் பேழ்வாய்த் தண்ணுமை இடம் தொட்டன்ன அருவி இழிதரும் பெருவரை நாடன் – புலையன் அகன்ற வாயையுடைய தண்ணுமை முரசினைக் கொட்டும்பொழுது எழும் ஒலி போன்று அருவிகள் கீழே வடியும் பெரிய மலைநாடன், நீர் அன நிலையன் பேர் அன்பினன் எனப் பல் மாண் கூறும் பரிசிலர் நெடுமொழி – ‘நீர் போன்ற இனிய நிலையை உடையவன்’ ‘மிகுந்த அன்புடையவன்’ எனப் பலவாக மாண்புடன் கூறும் பரிசில் பெறுவோரின் சிறந்த மொழிகள் (அன – அன்ன என்பதன் இடைக்குறை, உவம உருபு), வேனில் தேரையின் – வேனில் காலத்தில் மண்ணில் மூழ்கி மறைந்திருக்கும் தேரையைப்போல் (தேரையின் – இன் உருபு ஒப்புப் பொருளது, ஐந்தாம் வேற்றுமை உருபு), அளிய – அவை இரங்கத்தக்கன, காண விடுமோ – காணவும் கேட்கவும் மகிழவும் விடுமோ, தோழி – தோழி, என் நலனே – என் நலன்கள் (நலனே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 348, வெள்ளிவீதியார், நெய்தல் திணை – தலைவி சொன்னது
நிலவே நீல் நிற விசும்பில் பல் கதிர் பரப்பிப்,
பால் மலி கடலின் பரந்து பட்டன்றே;
ஊரே ஒலிவரும் சும்மையொடு மலிபு தொகுபு ஈண்டிக்,
கலி கெழு மறுகின் விழவு அயரும்மே;
கானே பூ மலர் கஞலிய பொழில் அகம் தோறும் 5
தாம் அமர் துணையொடு வண்டு இமிரும்மே;
யானே புனை இழை ஞெகிழ்த்த புலம்பு கொள் அவலமொடு
கனை இருங்கங்குலும் கண்படை இலெனே;
அதனால் என்னொடு பொருங் கொல் இவ்வுலகம்?
உலகமொடு பொருங் கொல், என் அவலம் உறு நெஞ்சே?  10

பாடல் பின்னணி:  தலைவிக்கு தலைவன்பால் வேட்கை பெருகிற்று.  அது தாங்க இயலாது, அவள் கூறியது.

பொருளுரை:  நிலவு நீல நிற வானில் பல கதிர்களைப் பரப்பிப் பால் நிறைந்த கடலைப் போல் ஒளியைப் பரப்பி விளங்குகின்றது. ஊர் மக்கள் பெரும் ஆரவாரத்துடன் ஒன்றாகக் கூடி ஓசை மிக்க தெருவெங்கும் விழா கொண்டாடுகின்றனர்.  கானத்தில் பூக்கள் மலர்ந்து விளங்கிய சோலைகள்தோறும் தாம் விரும்பும் பெடை வண்டுகளுடன் ஆண் வண்டுகள் கூடி இசைக்கின்றன. யான் அணிந்துள்ள அணிகலன்களை நெகிழச் செய்யும் தனிமை துயரத்துடன் செறிந்த நீடிய இரவில் உறக்கம் இல்லாது உள்ளேன். அதனால் இந்த உலகம் என்னுடன் போர் செய்யுமோ? உலகத்துடன் போர் செய்யுமோ என் துன்புறும் நெஞ்சம்?

குறிப்பு:  நீல் (1) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – நீலம் என்பது குறைந்து நின்றது.  குறுந்தொகை 6 – நனந்தலை உலகமும் துஞ்சும் ஓர் யான் மன்ற துஞ்சாதேனே.  சும்மை, கலி – கம்பலை சும்மை கலியே அழுங்கல் என்று இவை நான்கும் அரவப் பொருள (தொல்காப்பியம், உரியியல் 53).  புலம்பு – புலம்பே தனிமை (தொல்காப்பியம், உரியியல் 35).  உலகம், உலகமொடு (9, 10) – உலகம் ஆகுபெயர் உலகில் வாழும் மக்களுக்கு.  பூ மலர் – பூக்கள் மலர்ந்த, இரு பெயரொட்டுமாம்.

சொற்பொருள்:  நிலவே நீல் நிற விசும்பில் பல் கதிர் பரப்பிப் பால் மலி கடலின் பரந்து பட்டன்றே – நிலவு நீல நிற வானில் பல கதிர்களைப் பரப்பிப் பால் நிறைந்த கடலைப் போல் ஒளியைப் பரப்பி விளங்குகின்றது (நிலவே – ஏகாரம் அசைநிலை, பட்டன்றே – ஏகாரம் அசைநிலை), ஊரே ஒலிவரும் சும்மையொடு மலிபு தொகுபு ஈண்டிக் கலி கெழு மறுகின் விழவு அயரும்மே – ஊர் மக்கள் பெரும் ஆரவாரத்துடன் ஒன்றாகக் கூடி ஓசை மிக்க தெருவெங்கும் விழா கொண்டாடுகின்றனர் (ஊரே – ஏகாரம் அசைநிலை, ஊர் ஆகுபெயர் ஊர் மக்களுக்கு, அயரும்மே – செய்யுளோசை நோக்கி மகர ஒற்று விரிந்தது), கானே பூ மலர் கஞலிய பொழில் அகம் தோறும் தாம் அமர் துணையொடு வண்டு இமிரும்மே – கானத்தில் பூக்கள் மலர்ந்து விளங்கிய சோலைகள்தோறும் தாம் விரும்பும் பெடை வண்டுகளுடன் ஆண் வண்டுகள் கூடி இசைக்கின்றன (இமிரும்மே – செய்யுளோசை நோக்கி மகர ஒற்று விரிந்தது), யானே புனை இழை ஞெகிழ்த்த புலம்பு கொள் அவலமொடு கனை இருங்கங்குலும் கண்படை இலெனே – யான் அணிந்துள்ள அணிகலன்களை நெகிழச் செய்யும் தனிமை துயரத்துடன் செறிந்த நீடிய இரவில் உறக்கம் இல்லாது உள்ளேன் (யானே – பிரிநிலை, இலெனே – ஏகாரம் அசைநிலை), அதனால் – அதனால், என்னொடு பொருங் கொல் இவ்வுலகம் உலகமொடு – இந்த உலகம் என்னுடன் போர் செய்யுமோ (கொல் – ஐயப்பொருட்டு வந்தது), பொருங் கொல் என் அவலம் உறு நெஞ்சே – உலகத்துடன் போர் செய்யுமோ என் துன்புறும் நெஞ்சம் (கொல் – ஐயப்பொருட்டு வந்தது, நெஞ்சே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 349, மிளை கிழார் நல்வேட்டனார், நெய்தல் திணை – தலைவன் தனக்குள் சொன்னது, தோழி கேட்கும்படியாக
கடுந்தேர் ஏறியும், காலில் சென்றும்
கொடுங்கழி மருங்கின் அடும்பு மலர் கொய்தும்,
கைதை தூக்கியும், நெய்தல் குற்றும்
புணர்ந்தாம் போல, உணர்ந்த நெஞ்சமொடு
வைகலும் இனையம் ஆகவும், செய் தார்ப்  5
பசும்பூண் வேந்தர் அழிந்த பாசறை
ஒளிறு வேல் அழுவத்துக் களிறு படப் பொருத
பெரும் புண் உறுநர்க்குப் பேஎய் போலப்,
பின்னிலை முனியா நம் வயின்,
என் என நினையும் கொல், பரதவர் மகளே?  10

பாடல் பின்னணி:  தன்னைத் தலைவி எவ்வாறு எண்ணுகிறாளோ என வருந்திச் சொல்லியது.

பொருளுரை:  விரைந்த செல்லுதலையுடைய தேரில் ஏறிச் சென்றும் காலால் நடந்துச் சென்றும், வளைந்த உப்பங்கழியின் அருகில் அடும்பின் மலர்களைக் கொய்தும், தாழம்பூவைத் தலைவி பறிக்குமாறு அவளைத் தூக்கியும், நெய்தல் மலர்களைக் கொய்தும் காதலியுடன் இணைந்தாற்போன்ற உணர்ந்த நெஞ்சத்துடன், நாள்தோறும் இவ்வாறு யாம் இருக்கவும், புனைந்த மாலையை அணிந்த பசிய அணிகலன்களை உடைய வேந்தர்கள் அழிந்த பாசறையில் விளங்கும் வேல்களையுடைய போர்க்களத்தில், களிற்று யானைகள் வீழும்படி போர் செய்ததால் பெரிய புண்களை அடைந்தவர்களைப் பேய்கள் காப்பதுபோல், தோழியின் பின்னின்று வெறுப்படையாது ஏவல் செய்யும் நம்மை, எவ்வாறு எண்ணுகின்றாளோ நம் காதலியான பரதவரின் மகள்?

குறிப்பு:  பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – தன் செல்வமிகுதி அறிவுறுத்துவான் தேரிலேறி போந்தமைக் கூறினான்.  தான் வந்தது ஆங்குப் புறத்தார்க்குப் புலனாகாது அறிவுறுத்துவான் காலினால் நடந்து போந்தமையாற் கூறினான்.  தனது தேரை நிலவு மணல் கான்யாற்றில் நிற்கப் பணித்து வந்தான் என்றவாறு. மலர் கொய்தல் முதலாயினவற்றால் தன் பணிவுடைமை கூறினான். ஒளவை துரைசாமி உரை – மெய்தொட்டு பயிறல் (தொல்காப்பியம், களவியல் 11) என்ற நூற்பா உரையில் இப்பாட்டைக்காட்டித் ‘தோழி நம்வயிற் பரதவர் மகளை என்னென நினையும் கொல் என்றது’ என்பர் நச்சினார்க்கினியர்.  காலில் சென்றும் (1) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – காலால் நடந்து சென்றும், ஒளவை துரைசாமி உரை – வண்டியிற் போந்தும். பேஎய் – ஏமச் சுற்றம் இன்றிப் புண்ணோன் பேஎய் ஓம்பிய பேஎய்ப் பக்கமும் (தொல்காப்பியம், பொருளதிகாரம் 79).  அழுவம் (7) – ஒளவை துரைசாமி உரை – பள்ளம்; ஈண்டு கடல் மேற்று.  ஆழம் அழுவம் என வந்தது, கு. வெ. பாலசுப்பிரமணியன் உரை – போர்க்களம்.

சொற்பொருள்:  கடுந்தேர் ஏறியும் காலில் சென்றும் கொடுங்கழி மருங்கின் அடும்பு மலர் கொய்தும் கைதை தூக்கியும் நெய்தல் குற்றும் புணர்ந்தாம் போல உணர்ந்த நெஞ்சமொடு – விரைந்த செல்லுதலையுடைய தேரில் ஏறிச் சென்றும் காலால் நடந்துச் சென்றும் வளைந்த உப்பங்கழியின் அருகில் அடும்பின் மலர்களைக் கொய்தும் தாழம்பூவைத் தலைவி பறிக்குமாறு அவளைத் தூக்கியும் நெய்தல் மலர்களைக் கொய்தும் காதலியுடன் இணைந்தாற்போன்ற உணர்ந்த நெஞ்சத்துடன் (அடும்பு – Ipomoea pes caprae), வைகலும் இனையம் ஆகவும் செய் தார்ப் பசும்பூண் வேந்தர் அழிந்த பாசறை ஒளிறு வேல் அழுவத்துக் களிறு படப் பொருத பெரும் புண் உறுநர்க்குப் பேஎய் போலப் பின்னிலை முனியா நம் வயின் – நாள்தோறும் இவ்வாறு யாம் இருக்கவும் புனைந்த மாலையை அணிந்த பசிய அணிகலன்களை உடைய வேந்தர்கள் அழிந்த பாசறையில் விளங்கும் வேல்களையுடைய போர்க்களத்தில் களிற்று யானைகள் வீழும்படி போர் செய்ததால் பெரிய புண்களை அடைந்தவர்களைப் பேய்கள் காப்பதுபோல் பின்னின்று வெறுப்படையாது ஏவல் செய்யும் நம்மை (பேஎய் – செய்யுளிசை அளபெடை), என் என நினையும் கொல் பரதவர் மகளே – எவ்வாறு எண்ணுகின்றாளோ நம் காதலியான பரதவரின் மகள் (கொல் – அசைநிலை, மகளே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 350, பரணர், மருதத் திணை, தலைவி தலைவனிடம் சொன்னது
வெண்ணெல் அரிநர் தண்ணுமை வெரீஇப்
பழனப் பல் புள் இரிய கழனி
வாங்கு சினை மருதத் தூங்கு துணர் உதிரும்
தேர் வண் விராஅன் இருப்பை அன்ன என்
தொல் கவின் தொலையினும் தொலைக சார  5
விடேஎன் விடுக்குவென் ஆயின் கடைஇக்
கவவுக் கை தாங்கும் மதுகைய குவவு முலை
சாடிய சாந்தினை வாடிய கோதையை
ஆகில் கலம் கழீஇ அற்று,
வாரல் வாழிய கவைஇ நின்றோளே.  10

பாடல் பின்னணி:  பரத்தையிற் பிரிந்து வந்த தலைவனிடம் கூறியது.

பொருளுரை:  வெள்ளை நெற்கதிர்களை அறுக்கும் உழவர்கள் எழுப்பும் தண்ணுமையின் ஓசைக்கு அஞ்சி, வயலில் உள்ள பலவாகிய பறவைகள் அங்கிருந்து ஓடி, வயலருகில் உள்ள வளைந்த கிளைகளையுடைய மருத மரத்தில் தங்குவதால், அதில் உள்ள தொங்கும் பூங்கொத்துக்கள் உதிரும், இரவலர்க்குத் தேரைக் கொடுக்கும் வள்ளன்மை உடைய விரான் என்பவனின் இருப்பை ஊர் போன்ற என்னுடைய பண்டைய அழகு கெடுவதாயினும் கெடுக!  நான் உன்னை என் அருகில் நெருங்க விடமாட்டேன்.  உன்னை நெருங்க விட்டேன் ஆனால், தாவி என்னை அணைக்கும் நின் கைகள், யான் விலகாதவாறு தடுக்கும் வலிமையுடையன.  உன் பரத்தையின் குவிந்த முலைகள் தாக்கிய சந்தனத்தை மார்பில் உடையை நீ.  அவளை அணைத்ததால் வாடிய மாலையை உடையை நீ.  ஆகையால், கழித்து எறிந்த மண் கலத்தைத் தொட்டதுபோல் ஆகும் உன்னைத் தொடுவது.  நீ வராதே எம் மனைக்கு.  உன்னை அணைத்த பரத்தை நீடு வாழ்வாளாக!

குறிப்பு:  கடைஇக் கவவுக் கை தாங்கும் மதுகைய (6) – ஒளவை துரைசாமி உரை – தாவி என்னை மார்பகத்தே இடும் நின் கைகள் யான் மீளாவாறு தாங்கும் வன்மை உடையன.  கவவு (7) – கவவு அகத்திடுமே (தொல்காப்பியம், சொல்லதிகாரம் 357).  உள்ளுறை (1) – கு. வெ. பாலசுப்பிரமணியன் உரை – உழவரின் தண்ணுமைக்கு அஞ்சிப் பறவைகள் அகன்று மருத மரத்திற் செறியப் பூக்கள் உதிருமென்றது, தலைவியிடத்து அன்பின்றி பழப்பதற்கு அஞ்சித் தலைவன் அவளை நாடி வருவதாகத் தலைவி கருதுவதை உணர்த்திற்று.  உள்ளுறை (1) – ஒளவை துரைசாமி உரை – நெல் அரிவோர் எழுப்பும் தண்ணுமை முழக்கத்துக்கு அஞ்சிப் புள்ளினம் இரிதலால் மருதின் துணர் உதிரும் என்றதனால், நின் மார்பின் நலன் நுகரும் பரத்தையின் ஆரவாரம் கேட்டு ஏனை நின் பெண்டிர் அஞ்சி நீங்கினராக, அதனால் பிறந்த அலர் ஊர் எங்கும் பரவி விட்டது.  அதனை மறைத்து என்பால் வருதல் என்னை (எதற்காக) என உள்ளுறை கொள்ளப்படும்.  அறுவடை நேரத்தில் தண்ணுமை முரசை ஒலித்தல் – அகநானூறு 40, 204, நற்றிணை 350.  ஆனிரைகளைக் கவரும்பொழுது தண்ணுமை முரசு ஒலிக்கப்படுவதாக சில பாடல்கள் உள்ளன.  ஆறலை கள்வர்கள் தண்ணுமை முரசை ஒலிப்பதாகவும் பாடல்கள் உள்ளன.

சொற்பொருள்:  வெண்ணெல் அரிநர் தண்ணுமை வெரீஇப் பழனப் பல் புள் இரிய கழனி வாங்கு சினை மருதத் தூங்கு துணர் உதிரும் தேர் வண் விராஅன் இருப்பை அன்ன என் தொல் கவின் தொலையினும் தொலைக – வெள்ளை நெற்கதிர்களை அறுக்கும் உழவர்கள் எழுப்பும் தண்ணுமையின் ஓசைக்கு அஞ்சி வயலில் உள்ள பலவாகிய பறவைகள் அங்கிருந்து ஓடி வயலருகில் உள்ள வளைந்த கிளைகளையுடைய மருத மரத்தில் தங்குவதால் அதில் உள்ள தொங்கும் பூங்கொத்துக்கள் உதிரும் இரவலர்க்குத் தேரைக் கொடுக்கும் வள்ளன்மை உடைய விரான் என்பவனின் இருப்பை ஊர் போன்ற என்னுடைய பண்டைய அழகு கெடுவதாயினும் கெடுக (வெரீஇ – செய்யுளிசை அளபெடை, விராஅன் – அளபெடை), சார விடேஎன் – நெருங்க விடமாட்டேன் (விடேஎன் – அளபெடை), விடுக்குவென் ஆயின் – உன்னை நெருங்க விட்டேன் ஆனால், கடைஇக் கவவுக் கை தாங்கும் மதுகைய – தாவி என்னை அணைக்கும் நின் கைகள் யான் விலகாதவாறு தடுக்கும் வலிமையுடையன (கடைஇ – அளபெடை), குவவு முலை சாடிய சாந்தினை – குவிந்த முலைகள் தாக்கிய சந்தனத்தை மார்பில் உடையை நீ (சாந்தினை – முன்னிலை ஒருமை வினைமுற்று), வாடிய கோதையை – அவளை அணைத்ததால் வாடிய மாலையை உடையை நீ (கோதையை – முன்னிலை ஒருமை வினைமுற்று), ஆகில் கலம் கழீஇ அற்று – ஆகையால் கழித்து எறிந்த மண் கலத்தைத் தொட்டதுபோல் ஆகும் (கழீஇ – செய்யுளிசை அளபெடை), வாரல் – வராதே, வாழிய கவைஇ நின்றோளே – உன்னை அணைத்த பரத்தை நீடு வாழ்வாளாக (கவைஇ – அளபெடை, நின்றோளே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 351, மதுரைக் கண்ணத்தனார், குறிஞ்சித் திணை – தோழி தலைவியின் தாயிடம் சொன்னது
‘இளமை தீர்ந்தனள் இவள்’ என வள மனை
அருங்கடிப்படுத்தனை; ஆயினும் சிறந்து இவள்
பசந்தனள் என்பது உணராய்; பல் நாள்
எவ்வ நெஞ்சமொடு தெய்வம் பேணி
வருந்தல் வாழி வேண்டு அன்னை! கருந்தாள்  5
வேங்கை அம் கவட்டிடைச் சாந்தில் செய்த
களிற்றுத் துப்பு அஞ்சாப் புலி அதள் இதணத்துச்,
சிறு தினை வியன் புனம் காப்பின்,
பெறுகுவள் மன்னோ என் தோழி, தன் நலனே.

பாடல் பின்னணி:  தலைவி இற்செறிக்கப்பட்டாள்.  அன்னை வெறியாட்டு நிகழ்த்த எண்ணினாள்.

பொருளுரை:  அன்னையே!  நீ நீடு வாழ்வாயாக.  நான் கூறுவதைக் கேட்பாயாக!  ‘இவள் பெதும்பைப் பருவத்தைக் கடந்தவள்’ என்று, வளமையுடைய நம் இல்லத்தில் என் தோழியை நீ அரிய காவலில் வைத்தாய் ஆனாலும், இவள் பசலை அடைந்தாள் என்பதை நீ உணரவில்லை.  பல நாட்களாக, துன்புறும் நெஞ்சத்துடன் முருகக் கடவுளை வழிபட்டு நீ வருந்தாதே.  கரிய அடியையுடைய வேங்கை மரங்களின் கிளைகளின் இடையே சந்தன மரத்தின் கட்டைகளைக் கொண்டு செய்த, களிற்று யானையின் வலிமைக்கு அஞ்சாத புலியின் தோல் பரப்பிய பரணில் இருந்து, சிறு தினை விளையும் அகன்ற புனத்தைக் காவல் காத்தலைச் செய்தால் தன் அழகை மீண்டும் பெறுவாள் என் தோழி.

குறிப்பு:  அகநானூறு 48 – அன்னாய் வாழி வேண்டு அன்னை நின் மகள் பாலும் உண்ணாள் பழங்கண் கொண்டு நனி பசந்தனள் என வினவுதி.  குறிஞ்சிப்பாட்டு 1–7 – அன்னாய் வாழி வேண்டு அன்னை ஒண்ணுதல் ஒலி மென் கூந்தல் என் தோழி மேனி விறல் இழை நெகிழ்த்த வீவு அரும் கடு நோய் அகலுள் ஆங்கண் அறியுநர் வினாயும் பரவியும் தொழுதும் விரவு மலர் தூயும் வேறு பல் உருவில் கடவுள் பேணி நறையும் விரையும் ஓச்சியும் அலவுற்று எய்யா மையலை நீயும் வருந்துதி.   இளமை (1) – கு. வெ. பாலசுப்பிரமணியன் உரை – ஈண்டு ஆகுபெயராகப் பெதும்பைப் பருவத்தைக் குறித்தது.  பெதும்பை – எட்டு முதல் பதினொரு வயதுவரையுள்ள பெண்.  ஒப்புமை:  அகநானூறு 7 – பேதை அல்லை மேதை அம் குறுமகள்! பேதை அல்லை மேதை அம் குறுமகள்!  பெதும்பைப் பருவத்து ஒதுங்கினை புறத்து பெதும்பைப் பருவத்து ஒதுங்கினை புறத்து.  தெய்வம் பேணி வருந்தல் (4) – H. வேங்கடராமன் உரை – முருகக் கடவுளை வழிபட்டு வருந்தாதே.  வெறியாட்டு ஆடல் வேண்டாம்.  அன்னை வருந்துதல்:  குறிஞ்சிப்பாட்டு 1 –8 – அன்னாய் வாழி! வேண்டு அன்னை! ஒண்ணுதல் ஒலி மென் கூந்தல் என் தோழி மேனி விறல் இழை நெகிழ்த்த வீவு அரும் கடு நோய் அகலுள் ஆங்கண் அறியுநர் வினாயும், பரவியும் தொழுதும் விரவு மலர் தூயும், வேறு பல் உருவில் கடவுள் பேணி, நறையும் விரையும் ஓச்சியும் அலவுற்று, எய்யா மையலை நீயும் வருந்துதி.  அகநானூறு 156 – கள்ளும் கண்ணியும் கையுறையாக நிலைக் கோட்டு வெள்ளை நாள் செவிக் கிடாஅய் நிலைத் துறைக் கடவுட்கு உளப்பட ஓச்சித் தணி மருங்கு அறியாள் யாய் அழ மணி மருள் மேனி பொன் நிறம் கொளலே.  அகநானூறு 48 – அன்னாய் வாழி! வேண்டு அன்னை! நின் மகள் பாலும் உண்ணாள் பழங்கண் கொண்டு நனி பசந்தனள் என வினவுதி!

சொற்பொருள்:  இளமை தீர்ந்தனள் இவள் என வள மனை அருங்கடிப்படுத்தனை ஆயினும் சிறந்து இவள் பசந்தனள் என்பது உணராய் – இவள் பெதும்பைப் பருவத்தைக் கடந்தவள் என்று வளமையுடைய நம் இல்லத்தில் அரிய காவலில் வைத்தாய் ஆனாலும் இவள் பசலை அடைந்தாள் என்பதை நீ உணரவில்லை (உணராய் – முற்றெச்சம்), பல் நாள் எவ்வ நெஞ்சமொடு தெய்வம் பேணி வருந்தல் – பல நாட்களாக துன்புறும் நெஞ்சத்துடன் கடவுளை வழிபட்டு வருந்தாதே (வருந்தல் – அல்லீற்று எதிர்மறை வியங்கோள்), வாழி – நீடு வாழ்வாயாக, வேண்டு அன்னை – நான் கூறுவதைக் கேட்பாயாக அன்னையே, கருந்தாள் வேங்கை அம் கவட்டிடைச் சாந்தில் செய்த களிற்றுத் துப்பு அஞ்சாப் புலி அதள் இதணத்துச் சிறு தினை வியன் புனம் காப்பின் பெறுகுவள் மன்னோ என் தோழி தன் நலனே – கரிய அடியையுடைய வேங்கை மரங்களின் கிளைகளின் இடையே சந்தன மரத்தின் கட்டைகளைக் கொண்டு செய்த களிற்று யானையின் வலிமைக்கு அஞ்சாத புலியின் தோல் பரப்பிய பரணில் இருந்து சிறு தினை விளையும் அகன்ற புனத்தைக் காவல் காத்தலைச் செய்தால் தன் அழகை மீண்டும் பெறுவாள் என் தோழி (வேங்கை மரம் – kino tree, Pterocarpus marsupium, மன்னோ – மன், ஓ அசைநிலைகள், நலனே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 352, மதுரைப் பள்ளிமருதங்கிழார் மகனார் சொகுத்தனார், பாலைத் திணை தலைவன் தனக்குள் சொன்னது
இலை மாண் பகழிச் சிலை மாண் இரீஇய
அன்பு இல் ஆடவர் அலைத்தலின், பலருடன்
வம்பலர் தொலைந்த அஞ்சுவரு கவலை,
அழல் போல் செவிய சேவல் ஆட்டி,
நிழலொடு கதிக்கும் நிணம் புரி முது நரி  5
பச்சூன் கொள்ளை மாந்தி, வெய்துற்று,
தேர் திகழ் வறும்புலம் துழைஇ நீர் நயந்து
பதுக்கை நீழல் ஒதுக்கு இடம் பெறாஅ
அருஞ்சுரக் கவலை வருதலின், வருந்திய
நமக்கும் அரிய ஆயின; அமைத் தோள்  10
மாண்புடைக் குறுமகள் நீங்கி
யாங்கு வந்தனள் கொல்? அளியள் தானே.

பாடல் பின்னணி:  பொருள்வயிற் பிரிந்த தலைவன் சுரத்தில், காதலியின் உருவத்தை உள்ளத்தில் நினைத்து, மெய்யாகவே அவளைக் கண்டதாக எண்ணி, ஆற்றானாய்த் தனக்குள் சொல்லியது.

பொருளுரை:  இலை வடிவாக உள்ள மாட்சிமையுடைய அம்பை வில்லில் மாண்புடன் இருத்திய, அன்பு இல்லாத கொடிய ஆறலை கள்வர்கள் துன்புறுத்திக் கொன்றதால், புதியவர்களாக வழியில் செல்பவர்கள் பலரும் ஒருசேர இறந்து கிடந்த அச்சம் தருகின்ற கவர்த்த (பிரிவுகளையுடைய) வழியில், பிணங்களைத் தின்ன வந்த, நெருப்பைப் போன்ற சிவந்த செவியையுடைய கழுகின் ஆண் பறவையை விரட்டிய பின், தன் நிழலுடன் மகிழ்ந்து விளையாடும் தசையை உண்ண விரும்பும் முதிய நரி, பசிய ஊனை வேண்டிய அளவிற்கு மேல் உண்டு விட்டு, வாய் வறண்டு நீரை விரும்பி, கற்குவியல்களின் நிழலில் ஒதுங்குவதற்கு இடம் பெறாது இருக்கும், அஞ்சத்தக்க கவர்த்த அவ்வழிகளில் வருவதால், வருந்திய நமக்கும் கடத்தற்கு அவை அரியதாக ஆயின. மூங்கில் போன்ற தோள்களையுடைய மாட்சிமையுடைய நம் காதலி தன் மனையிலிருந்து நீங்கி எவ்வாறு என்னுடன் இக்கொடிய வழியில் வந்தாள்? அவள் இரங்கத்தக்கவள்.

குறிப்பு:  இறைச்சி – கு. வெ. பாலசுப்பிரமணியன் உரை – ஆறலை கள்வர் கொன்றொழித்த பிணங்களைக் கழுகு உண்ணாதவாறு விரட்டி நரி உண்டு பின் நீர் பெறாது வருந்தும் சுரம் என்றது, தலைவியைப் பசலை உண்ணாதவாறு தலைவன் நுகர்ந்து, இல்லறம் செய்ய வேண்டும் பொருள் பெறாது வருந்துதலைக் குறித்தது.  சேவல் – சேவல் பெயர்க்கொடை சிறகொடு சிவணும் மா இருந் தூவி மயில் அலங்கடையே (தொல்காப்பியம், மரபியல் 49).

சொற்பொருள்:  இலை மாண் பகழிச் சிலை மாண் இரீஇய அன்பு இல் ஆடவர் அலைத்தலின் பலருடன் வம்பலர் தொலைந்த அஞ்சுவரு கவலை – இலை வடிவாக உள்ள மாட்சிமையுடைய அம்பை வில்லில் மாண்புடன் இருத்திய அன்பு இல்லாத ஆறலை கள்வர்கள் துன்புறுத்திக் கொன்றதால் புதியவர்களாக வழியில் செல்பவர்கள் பலரும் ஒருசேர இறந்து கிடந்த அச்சம் தருகின்ற கவர்த்த (பிரிவுகளையுடைய) வழி (இரீஇய – செய்யுளிசை அளபெடை), அழல் போல் செவிய சேவல் ஆட்டி நிழலொடு கதிக்கும் நிணம் புரி முது நரி பச்சூன் கொள்ளை மாந்தி வெய்துற்று தேர் திகழ் வறும்புலம் துழைஇ நீர் நயந்து பதுக்கை நீழல் ஒதுக்கு இடம் பெறாஅ அருஞ்சுரக் கவலை வருதலின் – நெருப்பைப் போன்ற சிவந்த செவியையுடைய கழுகின் ஆண் பறவையை விரட்டிய பின் தன் நிழலுடன் மகிழ்ந்து விளையாடும் தசையை உண்ண விரும்பும் முதிய நரி பசிய ஊனை வேண்டிய அளவிற்கு மேல் உண்டு விட்டு வாய் வறண்டு நீரை விரும்பி கற்குவியல்களின் நிழலில் ஒதுங்குவதற்கு இடம் பெறாத அஞ்சத்தக்க கவர்த்த (பிரிவுகளையுடைய) வழிகளில் வருவதால் (துழைஇ – அளபெடை, நீழல் – நிழல் என்பதன் நீட்டல் விகாரம், பச்சூன் – பசிய ஊன், பெறாஅ – அளபெடை), வருந்திய நமக்கும் அரிய ஆயின – வருந்திய நமக்கும் கடத்தற்கு அரியதாக ஆயின, அமைத் தோள் மாண்புடைக் குறுமகள் நீங்கி யாங்கு வந்தனள் கொல் – மூங்கில் போன்ற தோள்களையுடைய மாட்சிமையுடைய நம் காதலி தன் மனையிலிருந்து நீங்கி எவ்வாறு இக்கொடிய வழியில் வந்தாள், அளியள் தானே – அவள் இரங்கத்தக்கவள் (தானே – தான் ஏ அசைநிலைகள்)

நற்றிணை 353, கபிலர், குறிஞ்சித் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
ஆள் இல் பெண்டிர் தாளின் செய்த
நுணங்கு நுண் பனுவல் போல கணம் கொள,
ஆடு மழை தவழும் கோடு உயர் நெடு வரை,
முட முதிர் பலவின் குடம் மருள் பெரும்பழம்
கல் கெழு குறவர் காதல் மடமகள்  5
கரு விரல் மந்திக்கு வருவிருந்து அயரும்,
வான் தோய் வெற்ப சான்றோய் அல்லை, எம்
காமம் கனிவது ஆயினும், யாமத்து
இரும்புலி தொலைத்த பெருங்கை யானை
வெஞ்சின உருமின் உரறும்  10
அஞ்சுவரு சிறு நெறி வருதலானே.

பாடல் பின்னணி:  இரவில் வந்தொழுகும் தலைவனிடம் வரைவு கடாயது.

பொருளுரை:  துணைவர்கள் உடன் இல்லாத பெண்கள் முயன்று நூற்ற மிகவும் நுண்ணிய பஞ்சுபோல் தோன்றிக் கூட்டமாக அசைகின்ற மழைமுகில்கள் தவழும் உச்சி உயர்ந்த நெடிய மலையில், அடி வளைந்து முதிர்ந்த பலா மரத்தின் குடம் போன்ற பெரிய பழத்தை, மலைகள் பொருந்திய இடத்தில் வாழும் குறவரின் அன்பான இளைய மகள், கரிய விரல்களையுடை பெண் குரங்கை வருகின்ற விருந்தினராக ஏற்றுக்கொண்டு விருந்து அளிக்கும் வானைத் தொடும் மலைகளையுடைய தலைவனே! எம் காதல் மிகுதியாக இருப்பினும், இரவில் பெரிய (கரிய) புலியைக் கொன்ற பெரிய தும்பிக்கையை உடைய யானை, கொடிய சினத்தையுடைய இடிபோல் முழங்கும் அச்சத்தைத் தரும் சிறு வழியில் வருவதால், நீ சான்றோன் இல்லை. ஆதலால், இவ்வாறு வருவதை நீக்கி, விரைந்து வந்து தலைவியை மணம் புரிவாயாக!

குறிப்பு:  உள்ளுறை (1) – ஒளவை துரைசாமி உரை – குறவர் மகள் மடவளாயினும் மந்திக்குப் பெரும்பழம் வருவிருந்து அயரும் என்றது, இளையளாயினும் தலைமகள் கற்பும் காமமும் நற்பாலொழுக்கமும் விருந்து புறந்தருதலுமாகிய மாண்புகள் பலவும் உடையவள் என்பது.  உள்ளுறை (2) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – குறவர் மடமகள் பலவின் பழத்துச் சுளையை மந்தியை விருந்தாகக் கொண்டு ஓம்பும் என்றது, நீ மணஞ்செய்து கொள்ள வரின் எஞ்சுற்றத்தார் நின்னை மணமகனாக ஏற்று மகட்கொடை நேர்வர் என்றதாம்.  காமம் – கமம் என்னும் சொல்லின் முதல் நீண்ட வடிவம், ‘நிறைந்த அன்பு’ என்பது இச்சொல்லின் பொருள் – பேரறிஞர் கு.வெ. பாலசுப்பிரமணியன் அவர்களின் விளக்கம், (கமம் நிறைந்து இயலும் – தொல்காப்பியம், சொல்லியல் 355).  எம் காமம் – தலைவியும் தோழியும் மிக நெருங்கிய நட்பு உடையவர்கள் என்பதாலும், தலைவியின் களவு ஒழுக்கத்திற்குத் தோழி உதவுவதாலும், தலைவனைத் தோழி நன்கு அறிந்தவள் என்பதாலும், இவ்வாறு பன்மையாற் கூறினாள்.  மந்தி – பேடையும் பெடையும் பெட்டையும் பெண்ணும் மூடும் நாகும் கடமையும் அளகும் மந்தியும் பாட்டியும் பிணையும் பிணவும் அந்தம் சான்ற பிடியொடு பெண்ணே (தொல்காப்பியம், மரபியல் 3).

சொற்பொருள்:  ஆள் இல் பெண்டிர் தாளின் செய்த நுணங்கு நுண் பனுவல் போல கணம் கொள ஆடு மழை தவழும் கோடு உயர் நெடு வரை – துணைவர்கள் இல்லாத பெண்கள் முயன்று நூற்ற மிகவும் நுண்ணிய பஞ்சுபோல் தோன்றிக் கூட்டமாக அசைகின்ற மழைமுகில்கள் தவழும் உச்சி உயர்ந்த நெடிய மலையில், முட முதிர் பலவின் குடம் மருள் பெரும்பழம் கல் கெழு குறவர் காதல் மடமகள் கரு விரல் மந்திக்கு வருவிருந்து அயரும் வான் தோய் வெற்ப – வளைந்து முதிர்ந்த பலா மரத்தின் குடம் போன்ற பெரிய பழத்தை மலைகள் பொருந்திய இடத்தில் வாழும் குறவரின் அன்பான இளைய மகள் கரிய விரல்களையுடை பெண் குரங்கை வருகின்ற விருந்தினராக ஏற்றுக்கொண்டு விருந்து அளிக்கும் வானைத் தொடும் மலைகளையுடைய தலைவனே, சான்றோய் அல்லை – நீ சான்றோன் இல்லை, எம் காமம் கனிவது ஆயினும் யாமத்து இரும்புலி தொலைத்த பெருங்கை யானை வெஞ்சின உருமின் உரறும் அஞ்சுவரு சிறு நெறி வருதலானே – எம் காதல் மிகுதியாக இருப்பினும் இரவில் பெரிய (கரிய) புலியைக் கொன்ற பெரிய தும்பிக்கையை உடைய யானை கொடிய சினத்தையுடைய இடிபோல் முழங்கும் அச்சத்தைத் தரும் சிறு வழியில் வருவதால் (உருமின் – இன் ஒப்புப்பொருளில் வந்தது, ஐந்தாம் வேற்றுமை உருபு, வருதலானே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 354, உலோச்சனார், நெய்தல் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
தான் அது பொறுத்தல் யாவது? கானல்
ஆடு அரை ஒழித்த நீடு இரும் பெண்ணை
வீழ் கா ஓலைச் சூழ் சிறை யாத்த
கானல் நண்ணிய வார் மணல் முன்றில்,
எல்லி அன்ன இருள் நிறப் புன்னை  5
நல் அரை முழுமுதல் அவ் வயின் தொடுத்த
தூங்கல் அம்பித் தூவல் அம் சேர்ப்பின்,
கடு வெயில் கொதித்த கல் விளை உப்பு
நெடு நெறி ஒழுகை நிரை செலப் பார்ப்போர்
அளம் போகு ஆகுலம் கடுப்பக்,  10
கௌவை ஆகின்றது ஐய நின் நட்பே.

பாடல் பின்னணி:  தலைவி இற்செறிக்கப்பட்டாள் என்பதை உணர்த்தி வரைவு கடாயது.  மனையிடத்தே தோழியைத் தலைவன் புகழ்ந்தபோது அவள் சொல்லியதுமாம்.

பொருளுரை:  கடற்கரைச் சோலையில் காற்றால் அசைகின்ற அடிப்பகுதியில் உள்ளவை வெட்டப்பட்டதால், நெடிய கரிய பனைமரத்தின் கீழே விழுகின்ற முற்றிய ஓலைகளைச் சூழ்கின்ற வேலியில் கட்டிய கடற்கரைச் சோலையை அடுத்த நீண்ட மணற்பரப்பை உடைய இல்லத்தின் முன், இரவு போன்ற இருண்ட நிறத்தையுடைய புன்னை மரத்தின் நல்ல பெரிய அடியில் பிணித்துக் கட்டிய, அலைகளால் அசைகின்ற தோணிகளை உடைய, நீர்த் துவலைகள் தெறித்து விழும் கடற்கரையில், மிகுந்த வெயிலினால் கொதிக்கின்ற கல்லாக விளைந்த உப்பை வண்டிகளில் ஏற்றிக்கொண்டு நீண்ட வழியில் வரிசையாகச் செல்லும் உப்பு வணிகர்கள் உப்பளத்திற்குச் செல்லும் ஆரவாரம் போல் அலராகியது ஐயா, நின் நட்பால்.  அதை நாங்கள் எவ்வாறு பொறுப்பது?

குறிப்பு:  உள்ளுறை – ஒளவை துரைசாமி உரை – பனையின் ஆடு அரை ஒழித்த வீழோலைகொண்டு சிறை சூழப்படுதல் கூறியது, நின் புணர்வு பிரிவுகளினிடையே நீ உரைத்த சொற்களையே தனக்கு அரணாகக் கொண்டு தலைவி உயிர் வாழ்கின்றாள் என்றும், புன்னையின் முழுமுதல் நின்ற அவ்விடத்தே கட்டப்பட்ட தோணி காற்றால் அசைந்து தூவலால் நனைந்திருக்கும் என்றது நின்பால் உள்ளம் பிணிப்புண்ட இவள், வேட்கையால் அலைப்புண்டு நின்னைத் தலைக்கூடப் பெறாமையால் கண்ணீர் நனைப்ப வருந்துகின்றாள் என்று உள்ளுறை கொள்க.  இறைச்சி – கு. வெ. பாலசுப்பிரமணியன் உரை – ஓலைகளை வைத்துக் கட்டிய வேலி என்பதும், புன்னை மரத்தின் அடியில் பிணித்த தோணி என்பதும் தலைவி இற்செறிக்கப்பட்டமை உணர்த்தின.  புன்னை மரங்களில் தோணிகளைக் கட்டுதல் – நற்றிணை 315, 354.  கா ஓலை (3) – ஒளவை துரைசாமி உரை – முற்றிய ஓலை, பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – காவிக் கொணர்ந்த ஓலை, வெட்டி வீழ்த்திய ஓலை.  கா ஓலை (நற்றிணை 38வது பாட்டின் உரை) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – முற்றிய ஓலை, முற்றிக் காய்ந்த ஓலையுமாம், ச. வே. சுப்பிரமணியன் உரை – முற்றிய ஓலை.  வார்தல் போகல் ஒழுகல் மூன்றும் நேர்பும் நெடுமையும் செய்யும் பொருள (தொல்காப்பியம், உரியியல் 21).

சொற்பொருள்:  தான் – அசைநிலை, அது பொறுத்தல் யாவது – அதை நாங்கள் எவ்வாறு பொறுப்பது, கானல் ஆடு அரை ஒழித்த நீடு இரும் பெண்ணை வீழ் கா ஓலைச் சூழ் சிறை யாத்த கானல் நண்ணிய வார் மணல் முன்றில் – கடற்கரைச் சோலையில் காற்றால் அசைகின்ற அடிப்பகுதியில் உள்ளவை வெட்டப்பட்டதால் நெடிய கரிய பனைமரத்தின் கீழே விழுகின்ற முற்றிய ஓலைகளைச் சூழ்கின்ற வேலியில் கட்டிய கடற்கரைச் சோலையை அடுத்த நீண்ட மணற்பரப்பை உடைய இல்லத்தின் முன், எல்லி அன்ன இருள் நிறப் புன்னை நல் அரை முழுமுதல் அவ் வயின் தொடுத்த தூங்கல் அம்பித் தூவல் அம் சேர்ப்பின் – இரவு போன்ற இருண்ட நிறத்தையுடைய புன்னை மரத்தின் நல்ல பெரிய அடியில் பிணித்துக் கட்டிய அலைகளால் அசைகின்ற தோணிகளை உடைய நீர்த் துவலைகள் தெறித்து விழும் கடற்கரையில், கடு வெயில் கொதித்த கல் விளை உப்பு நெடு நெறி ஒழுகை நிரை செலப் பார்ப்போர் அளம் போகு ஆகுலம் கடுப்பக் கௌவை ஆகின்றது ஐய நின் நட்பே – மிகுந்த வெயிலினால் கொதிக்கின்ற கல்லாக விளைந்த உப்பை ஏற்றிக்கொண்டு நீண்ட வழியில் செல்லும் வண்டிகளில் வரிசையைக் கொண்டு செல்லும் வணிகர்கள் உப்பளத்திற்குச் செல்லும் ஆரவாரம் போல் அலராகியது ஐயா நின் நட்பால் (கடுப்ப – உவம உருபு, புன்னை மரம் – Laurel Tree, Mast wood Tree, Calophyllum inophyllum, செல – செல்ல என்பதன் இடைக்குறை, நட்பே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 355, பாடியவர் பெயர் கிடைக்கவில்லை, குறிஞ்சித் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
புதல்வன் ஈன்ற பூங்கண் மடந்தை
முலை வாய் உறுக்கும் கை போல், காந்தள்
குலைவாய் தோயும் கொழு மடல் வாழை
அம் மடல் பட்ட அருவித் தீம் நீர்
செம்முக மந்தி ஆரும் நாட! 5
முந்தை இருந்து நட்டோர் கொடுப்பின்,
நஞ்சும் உண்பர் நனி நாகரிகர்;
அம் சில் ஓதி என் தோழி தோள் துயில்
நெஞ்சின் இன்புறாய் ஆயினும், அது நீ
என் கண் ஓடி அளிமதி, 10
நின் கண் அல்லது பிறிது யாதும் இலளே.

பாடல் பின்னணி:  தோழி தலைவியின் ஆற்றாமை கண்டு, வரைவு கடாயது.

பொருளுரை:  மகனைப் பெற்ற, நீலமலர்கள் போன்ற கண்களையுடைய மடந்தை, தன் கொங்கை முனையைக் கையால் பிடித்து அம்மகன் வாயில் அதை வைக்க அம்மகன் பாலைப் பருகுவது போல், காந்தளின் பூங்கொத்துக்களுடன் பொருந்திய கொழுத்த மடலையுடைய வாழைப் பூவின் மடலில் உள்ள அருவி போல் பெருகி வரும் இனிய நீரை சிவந்த முகத்தையுடைய மந்தி பருகும் நாடனே!  முன் நின்று நண்பர்கள் கொடுத்தால் நஞ்சையும் உண்பார்கள் நல்ல கண்ணோட்டமுடைய சான்றோர்.  அழகிய மென்மையாகிய (சிலவாகிய) கூந்தலையுடைய என் தோழியின் தோள்களில் துயில்வதை நீ விரும்பாய் ஆயினும், என்பால் கண்ணோட்டம் செய்து அவளுடைய தோளில் துயில்வதை இன்பமாகக் கொண்டு அருள் புரிவாயாக.  உன் அருள் அன்றி வேறு பற்றுக்கோடு எதுவம் இல்லாதவள் இவள்.

குறிப்பு:  பொ. வே. சோமசுந்தரனார் உரை – வாழைப்பூவிற்கு மடந்தை முலையும் காந்தட் பூவிற்கு அவள் கையும் மந்திக்குப் புதல்வனும் தீநீர்க்குப் பாலும் உவமைகள்.  உள்ளுறை – ஒளவை துரைசாமி உரை – காந்தட் குலைவாய் தோய்ந்து அசையும் வாழைப்பூவின் மடலில் ஒழுகும் நீர், ஒரு தாய் புதல்வர்க்குத் தன்முலை நல்குதல் போல்வது கண்டு மந்தி அம்மடலில் தன் வாய் வைத்து அருந்தும் என்றது, பகல் இரவு என்ற இருபோதும் குறியிடம் போந்து நீ நீங்கியது, தன்னை மெய்யே தலையளி செய்வது போன்றமை கண்டு, என் தோழியாகிய தலைவி அதையே தன் நெஞ்சின்கண் நினைந்து வாழ்கின்றாள் என்றவாறு.  நனி – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3).  மதி – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம், இடையியல் 26).  மந்தி – பேடையும் பெடையும் பெட்டையும் பெண்ணும் மூடும் நாகும் கடமையும் அளகும் மந்தியும் பாட்டியும் பிணையும் பிணவும் அந்தம் சான்ற பிடியொடு பெண்ணே (தொல்காப்பியம், மரபியல் 3).

சொற்பொருள்:  புதல்வன் ஈன்ற பூங்கண் மடந்தை முலை வாய் உறுக்கும் கை போல் காந்தள் குலைவாய் தோயும் கொழு மடல் வாழை   மடல் பட்ட அருவித் தீம் நீர் செம்முக மந்தி ஆரும் நாட – மகனைப் பெற்ற நீலமலர்கள் போன்ற கண்களையுடைய மடந்தை தன் கொங்கை முனையைக் கையால் பிடித்து அம்மகன் வாயில் கையால் வைக்க அம்மகன் பாலைப் பருகுவது போல் காந்தளின் பூங்கொத்துக்களுடன் பொருந்திய கொழுத்த மடலையுடைய வாழைப் பூவின் அம்மடலில் உள்ள அருவி போல் பெருகி வரும் இனிய நீரை சிவந்த முகத்தையுடைய மந்தி பருகும் நாடனே, முந்தை இருந்து நட்டோர் கொடுப்பின் நஞ்சும் உண்பர் நனி நாகரிகர் – முன் நின்று நண்பர்கள் கொடுத்தால் நஞ்சையும் உண்பார்கள் நல்ல கண்ணோட்டமுடைய சான்றோர், அம் சில் ஓதி என் தோழி தோள் துயில் நெஞ்சின் இன்புறாய் ஆயினும் – அழகிய மென்மையாகிய (சிலவாகிய) கூந்தலையுடைய என் தோழியின் தோள்களில் துயில்வதை நீ விரும்பாய் ஆயினும், அது நீ என் கண் ஓடி அளிமதி – என்பால் கண்ணோட்டம் செய்து அவளுக்கு அளிப்பாயாக (அளிமதி – மதி முன்னிலை அசை), நின் கண் அல்லது பிறிது யாதும் இலளே – உன் அருள் அன்றி வேறு பற்றுக்கோடு எதுவம் இல்லாதவள் இவள் (இலளே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 356, பரணர், குறிஞ்சித் திணை – தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது
நிலம் தாழ் மருங்கின், தெண் கடல் மேய்ந்த
விலங்கு மென் தூவிச் செங்கால் அன்னம்,
பொன்படு நெடுங்கோட்டு இமயத்து உச்சி
வானர மகளிர்க்கு மேவல் ஆகும்
வளராப் பார்ப்பிற்கு அல்கு இரை ஒய்யும்  5
அசைவு இல் நோன் பறை போல, செல வர
வருந்தினை வாழி என் உள்ளம் ஒரு நாள்
காதலி உழையளாக,
குணக்குத் தோன்று வெள்ளியின், எமக்குமார் வருமே.

பாடல் பின்னணி:  தலைவியின் தமரால் வரைவு மறுக்கப்பட்ட தலைவன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.

பொருளுரை:  நீடு வாழ்வாயாக என் உள்ளம்!  நிலத்தின் மிகத் தாழ்ந்த இடமான தெளிந்த கடலில் இரை உண்ட, விலகிய மென்மையான சிறகினையும் சிவந்த கால்களையும் உடைய அன்னம், பொன் பொருந்திய நெடிய உச்சியையுடைய இமய மலையின் உச்சியில் உள்ள வானர மகளிற்கு விருப்பத்துடன் விளையாடுவதற்குப் பயன்படும் வளராத இளம் குஞ்சுகளுக்கு, வைத்து உண்ணும் உணவைக் கொடுக்கும்பொருட்டு செல்லும்பொழுது தளர்வு இல்லாத தாய் அன்னத்தின் வலிய சிறகுபோல், செல்லுதலும் வருதலும் ஆகிய செயல்களைச் செய்து, நீ வருந்தினாய்.  ஒரு நாள் நம் காதலி அருகில் உள்ளவளாக, கீழ்த்திசையில் விடியற்காலையில் தோன்றும் வெள்ளி என்னும் கோளினைப் போல் என்னிடம் வருவாள்.

குறிப்பு:  வானர மகளிர்க்கு மேவல் ஆகும் வளராப் பார்ப்பிற்கு (4–5) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – தேவர் உலகின்கண் வாழும் தெய்வ மகளிர்க்கு விருப்பத்தோடு விளையாடுதற்காய சிறகு முளைத்து வளராத தன் இளம் பார்ப்புகளுக்கு.  எமக்குமார் வருமே (9) – ஒளவை துரைசாமி உரை – எம்பால் வருவளாகலான் வருந்துதல் ஒழிக, பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – நம் காதலி நம் அருகில் வைகுமாறு நமக்குக் கிடைக்குமோ?  ஏ – வினா.  ஒளவை துரைசாமி உரை – பொன்படு நெடுங்கோட்டு இமயத்துச்சி என்றது தலைவியின் மனைச் சிறப்பும், செங்காலன்னம் என்றது காதல் ஒழுக்கம் பூண்ட தலைவனின் மனநிலையும், வளராப் பார்ப்பு என்றது தலைவியால் பேணப்படும் காதலுறவும், அன்னத்தின் நோன் பறையியக்கம் தலைவனுடைய வரவும் செலவும் குறித்து நின்றன.  இக்குறிப்புகளால் அல்கிரை உண்ட பார்ப்பு வளர்ச்சி முற்றியதும் தாய் அன்னத்தோடு பறந்து செல்லுமாறு போலத் தலைவியும் போக்குடன்பட்டு வருவாள் என்பதும் உணரக் கூறியவாறு காண்க.  பார்ப்பு – பார்ப்பும் பிள்ளையும் பறப்பவற்று இளமை (தொல்காப்பியம், மரபியல் 4).

சொற்பொருள்:  நிலம் தாழ் மருங்கின் தெண் கடல் மேய்ந்த விலங்கு மென் தூவிச் செங்கால் அன்னம் – நிலத்தின் மிகத் தாழ்ந்த இடமான தெளிந்த கடலில் இரை உண்ட விலகிய மென்மையான சிறகினையும் சிவந்த கால்களையும் உடைய அன்னம், பொன்படு நெடுங்கோட்டு இமயத்து உச்சி வானர மகளிர்க்கு மேவல் ஆகும் வளராப் பார்ப்பிற்கு அல்கு இரை ஒய்யும் அசைவு இல் நோன் பறை போல – பொன் பொருந்திய நெடிய உச்சியையுடைய இமய மலையின் உச்சியில் உள்ள வானர மகளிற்கு விருப்பத்துடன் விளையாடுவதற்குப் பயன்படும் வளராத இளம் குஞ்சுகளுக்கு வைத்து உண்ணும் உணவைக் கொடுக்கும்பொருட்டு செல்லும்பொழுது தளர்வு இல்லாத தாய் அன்னத்தின் வலிய சிறகுபோல், செல வர வருந்தினை – செல்லுதலும் வருதலும் ஆகிய செயல்களைச் செய்து நீ வருந்தினாய் (செல – செல்ல என்பதன் இடைக்குறை), வாழி என் உள்ளம் – நீடு வாழ்வாயாக என் உள்ளம், ஒரு நாள் காதலி உழையளாக குணக்குத் தோன்று வெள்ளியின் எமக்கும் ஆர் வருமே – ஒரு நாள் நம் காதலி அருகில் உள்ளவளாக கீழ்த்திசையில் விடியற்காலையில் தோன்றும் வெள்ளி என்னும் கோளினைப் போல் என்னிடம் வருவாள் (வெள்ளியின் – இன் ஒப்புப் பொருளது, ஐந்தாம் வேற்றுமை உருபு, ஆர் – அசைநிலை, வருமே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 357, குறமகள் குறியெயினி, குறிஞ்சித் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
நின் குறிப்பு எவனோ தோழி? என் குறிப்பு
என்னொடு நிலையாது ஆயினும், என்றும்
நெஞ்சு வடுப்படுத்துக் கெட அறியாதே,
சேண் உறத் தோன்றும் குன்றத்துக் கவாஅன்,
பெயல் உழந்து உலறிய மணிப் பொறிக் குடுமிப்  5
பீலி மஞ்ஞை ஆலும் சோலை,
அம் கண் அறைய அகல்வாய்ப் பைஞ்சுனை
உண்கண் ஒப்பின் நீலம் அடைச்சி,
நீர் அலைக் கலைஇய கண்ணிச்
சாரல் நாடனொடு ஆடிய நாளே.  10

பாடல் பின்னணி:  தலைவன் வரைவு நீடிய இடத்து வருந்தாது, அவன் வரைந்துக் கொள்வான் எனக் கருதிய தலைவி, தோழியிடம் அவள் எண்ணத்தை வினவியது.

பொருளுரை:  தோழி! என் கருத்து என்னுடன் பொருந்தி நிலையாக இல்லாவிட்டாலும் என்றும் என் நெஞ்சம் புண்பட்டு கெடுவதை அறியாது என்பது, மிகவும் உயர்ந்து தோன்றும் மலையின் பக்கத்தில், மழையில் நனைந்து உலர்ந்த நீலமணி போன்ற புள்ளிகளையும் குடுமியையும் தோகையையும் உடைய மயில் ஆடுகின்ற சோலையில், அழகிய இடம் பொருந்திய பாறையில் அமைந்த அகன்ற வாயையுடைய பசிய சுனையில் உள்ள, மகளிரின் மையுண்ட கண்களை ஒத்த நீல நிறக் குவளை மலர்களைச் சூடிக் கொண்டு சுனை நீர் அலைத்ததால் கலைந்த மாலையை உடைய மலைநாடனுடன் ஆடிய நாளை எண்ணி நான் துன்பம் அடைவதில்லை. நின் கருத்து யாது?

குறிப்பு:  இறைச்சி – கு. வெ. பாலசுப்பிரமணியன் உரை – மழை பெய்ய மயில் நனைந்து சோலையில் உலாவி வரும் என்றது, தலைவன் முன்பொருகால் அன்பு செய்ததால் மகிழ்ந்த தலைவியின் உள்ளம் இப்போதும் சோர்வடையாமல் உள்ளதைக் குறித்தது.  உள்ளுறை – ஒளவை துரைசாமி உரை – பெயல் உழந்து உலறிய குடுமியும் பீலியுமுடையதாயினும், மஞ்ஞை, பெயற்குரிய மழை முகிலை நினைந்து ஆலும் என்றது, வரையாது நீட்டித்ததால், மேனி வேறுபட்டு வருந்தக் கடவேமாயினும், அவனோடு ஆடிய நாளை நினைந்து ஆற்றியிருத்தலே தகும் என்ற கருத்தை உள்ளுறுத்து உரைத்தவாறு அறிக.

சொற்பொருள்:  நின் குறிப்பு எவனோ – நின் கருத்து யாது (எவனோ – ஓகாரம் அசைநிலை), தோழி – தோழி, என் குறிப்பு என்னொடு நிலையாது ஆயினும் என்றும் நெஞ்சு வடுப்படுத்துக் கெட அறியாதே – என் கருத்து என்னுடன் பொருந்தி நிலையாக இல்லாவிட்டாலும் என்றும் நெஞ்சம் புண்பட்டு கெடுவதை அறியாது (அறியாதே – ஏகாரம் அசைநிலை), சேண் உறத் தோன்றும் குன்றத்துக் கவாஅன் பெயல் உழந்து உலறிய மணிப் பொறிக் குடுமிப் பீலி மஞ்ஞை ஆலும் சோலை அம் கண் அறைய அகல்வாய்ப் பைஞ்சுனை உண்கண் ஒப்பின் நீலம் அடைச்சி நீர் அலைக் கலைஇய கண்ணிச் சாரல் நாடனொடு ஆடிய நாளே – மிகவும் உயர்ந்து தோன்றும் மலையின் பக்கத்தில் மழையில் நனைந்து உலர்ந்த நீலமணி போன்ற புள்ளிகளையும் குடுமியையும் தோகையையும் உடைய மயில் ஆடுகின்ற சோலையில் அழகிய இடம் பொருந்திய பாறையில் அமைந்த அகன்ற வாயையுடைய பசிய சுனையில் உள்ள மகளிரின் மையுண்ட கண்களை ஒத்த நீல நிறக் குவளை மலர்களைச் சூடிக் கொண்டு சுனை நீர் அலைத்ததால் கலைந்த மாலையை உடைய மலைநாடனுடன் ஆடிய நாள் (கவாஅன் – அளபெடை, கலைஇய – அளபெடை, நாளே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 358, நக்கீரர், நெய்தல் திணை – தலைவி தோழியிடம் சொன்னது அல்லது தோழி தலைவியிடம் சொன்னது
பெருந்தோள் நெகிழ, அவ்வரி வாடச்,
சிறு மெல் ஆகம் பெரும் பசப்பு ஊர,
இன்னேம் ஆக, எற் கண்டு, நாணி,
நின்னொடு தெளித்தனர், ஆயினும், என்னதூஉம்
அணங்கல் ஓம்புமதி வாழிய நீ! எனக்  5
கணம் கெழு கடவுட்கு உயர் பலி தூஉய்,
பரவினம் வருகம் சென்மோ தோழி!
பெருஞ்சேய் இறவின் துய்த்தலை முடங்கல்
சிறுவெண்காக்கை நாள் இரை பெறூஉம்
பசும்பூண் வழுதி மருங்கை அன்ன, என்  10
அரும் பெறல் ஆய் கவின் தொலைய
பிரிந்து ஆண்டு உறைதல் வல்லியோரே.

பாடல் பின்னணி:  பொருள்வயின் தலைவன் பிரிந்த பொழுது ஆற்றாளாக இருந்த தலைவி தோழிக்குச் சொல்லியது.  தலைவியை ஆற்றும்பொருட்டுத் தோழி கூறியதுமாம்.

பொருளுரை:  தோழி!  பெரிய தோள்கள் மெலியவும், அழகிய வரிகள் வாடவும், சிறிய மெல்லிய மார்பில் பெரும் பசலைப் பரவி நாம் இத்தன்மையேம் ஆகவும், என்னைக் கண்டு நாணம் அடைந்து, உன்னிடம் தெளிவாகக் கூறிச் சென்றார் ஆயினும், சிறிதளவும் வருந்துதலை நீ நீக்குவாயாக.  பெரிய சிவந்த இறால் மீனின் துய் பொருந்திய தலையையுடைய முடங்கிய உடலை சிறுவெண்காக்கை நாட்காலை உணவாகப் பெரும் பசும்பூண் வழுதியின் மருங்கை என்னும் ஊரைப் போன்ற என் பெறுவதற்கு அரிய நுண்ணிய அழகு தொலையும்படி என்னைவிட்டுப் பிரிந்து அங்குத் தங்குவதற்கு வல்லவர் பொருட்டு, ‘நீ நீடு வாழ்வாயாக” எனக் கூறி, பூத கணங்களையுடைய கடவுளுக்குப் பலியைப் படைத்து வழிபட்டு வருவதற்கு நாம் செல்வோம்.

குறிப்பு:  தெளித்தனர் (4) – ஒளவை துரைசாமி உரை – தெளிவித்துச் சென்றனர், பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – சூளுற்றனர்.  சென்மோ (7) – ஒளவை துரைசாமி உரை – செல்வேமோ – சென்மோ என வந்தது.  இது தொகுக்கும்வழித் தொகுத்தல்.  உ. வே. சாமிநாதையர் உரை – குறுந்தொகை 275 – ‘கண்டனம் வருகம் சென்மோ’, என்பதற்கு ‘கண்டு வருவோம் வருவாயாக’ என உள்ளது.  மோ – முன்னிலை அசை என உள்ளது. முடங்கல் (8) – ஒளவை துரைசாமி உரை – ஒடுங்கிக்கொண்டு இருத்தல், H. வேங்கடராமன் உரை – வற்றல்உள்ளுறை – கு. வெ. பாலசுப்பிரமணியன் உரை – இறாவின் முடங்கலை நாட்காலையில் காக்கை இரையாகப் பெறும் என்றது, பொருள் ஈட்டச் சென்ற தலைவன் அவ்வினை முடிந்தவுடன் மீண்டு வருவன் என்பதை உணர்த்திற்று.  வரலாறு:  வழுதி, மருங்கை.  அல்குல் அவ்வரி வாட – அகநானூறு 183, 307, நற்றிணை 282, குறுந்தொகை 180, ஐங்குறுநூறு 306, 316.  அல்குல் வரிகள் – அகநானூறு 117–2, 183–2, 307–2, 342–13, 387–8, நற்றிணை 282–1, 370–5, குறுந்தொகை 180–6, ஐங்குறுநூறு 306–2, 316–2, 481–1, புறநானூறு 344–9.

சொற்பொருள்:  பெருந்தோள் நெகிழ அவ்வரி வாடச் சிறு மெல் ஆகம் பெரும் பசப்பு ஊர இன்னேம் ஆக – பெரிய தோள்கள் மெலியவும் அழகிய வரிகள் வாடவும் சிறிய மெல்லிய மார்பில் பெரும் பசலைப் பரவி நாம் இத்தன்மையேம் ஆகவும், எற் கண்டு நாணி நின்னொடு தெளித்தனர் ஆயினும் – என்னைக் கண்டு நாணம் அடைந்து உன்னிடம் தெளிவாகக் கூறிச் சென்றார் ஆயினும், என்னதூஉம் அணங்கல் ஓம்புமதி – சிறிதளவும் வருந்துதலை நீக்குவாயாக (என்னதூஉம் – அளபெடை, ஓம்புமதி – மதி முன்னிலையசை), வாழிய நீ – நீ நீடு வாழ்வாயாக, என – என்று, கணம் கெழு கடவுட்கு உயர் பலி தூஉய் பரவினம் வருகம் சென்மோ – பூத கணங்களையுடைய கடவுளுக்குப் பலியைப் படைத்து வழிபட்டு வருவதற்கு நாம் செல்வோம் (தூஉய் – அளபெடை, பரவினம் – முற்றெச்சம், செல்வேமோ – சென்மோ என வந்தது), தோழி – தோழி, பெருஞ்சேய் இறவின் துய்த்தலை முடங்கல் சிறுவெண்காக்கை நாள் இரை பெறூஉம் பசும்பூண் வழுதி மருங்கை அன்ன – பெரிய சிவந்த இறால் மீனின் துய் பொருந்திய தலையையுடைய முடங்கிய உடலை சிறுவெண்காக்கை நாட்காலை உணவாகப் பெரும் பசும்பூண் வழுதியின் மருங்கை என்னும் ஊரைப் போன்ற (துய் – பஞ்சு போன்றது, பெறூஉம் – செய்யுளிசை அளபெடை), என் அரும் பெறல் ஆய் கவின் தொலைய பிரிந்து ஆண்டு உறைதல் வல்லியோரே – என் பெறுவதற்கு அரிய நுண்ணிய அழகு தொலையும்படி என்னைவிட்டுப் பிரிந்து அங்குத் தங்குவதற்கு வல்லவர் (வல்லியோரே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 359, கபிலர், குறிஞ்சித் திணை – தோழி சொன்னது
சிலம்பின் மேய்ந்த சிறு கோட்டுச் சேதா
அலங்கு குலைக் காந்தள் தீண்டித் தாது உகக்,
கன்று தாய் மருளும் குன்ற நாடன்
உடுக்கும் தழை தந்தனனே; யாம் அஃது
உடுப்பின் யாய் அஞ்சுதுமே; கொடுப்பின்  5
கேளுடைக் கேடு அஞ்சுதுமே; ஆயிடை
வாடல கொல்லோ தாமே, அவன் மலைப்
போருடை வருடையும் பாயா,
சூருடை அடுக்கத்தது கொயற்கு அருந்தழையே?

பாடல் பின்னணி:  தலைவன் கொடுத்த கையுறையைத் தோழி ஏற்றுக்கொண்டு தலைவியிடம் சென்றாள்.  தழையுடை வாடாமலிருக்க வேண்டும் என்று தலைவியின் குறிப்பறிந்து ஒழுகுபவள் போலக் கூறியது.

பொருளுரை:  மலையில் மேயச் சென்ற சிறிய கொம்புகளை உடைய சிவந்த பசு, அசைகின்ற கொத்தை உடைய காந்தள் செடியினை உரசியதால் அக்காந்தள் செடியின் மலர்களில் உள்ள தாது அதன் மேல் உதிர்வதால் அதன் கன்று, நிறம் வேறுபட்டுத் தோன்றும் தன் தாயை அடையாளம் கொள்ளாமல் மருளும் மலைநாடன், உடுத்திக்கொள்ளத் தழை ஆடையைத் தந்தான்.  நாம் அதை உடுத்தினால், அன்னை சினம் கொள்வாள் என அஞ்சுகின்றோம்.  அதைத் தலைவனிடம் திருப்பிக் கொடுப்போமாயின், அவன் துன்புறுவான் என அஞ்சுகின்றோம்.  அவ்விடத்து, வாடுதல் அடையலாமா, தலைவனின் மலையில் ஒன்றோடு ஒன்று போரிடும் மலை ஆடுகளும் பாய்வதற்கு அஞ்சும், கடவுள் வாழும், மலைப் பக்கத்தில் உள்ள கொய்வதற்குக் கடினமான இலைகள்?

குறிப்பு:  உள்ளுறை – கு. வெ. பாலசுப்பிரமணியன் உரை – தாது உகப் பெற்ற கன்று மருளும் என்றது, தலைவி இத் தழையுடை கொணரக்கண்டு நாண மிக மயங்கினாள் என்பது உணர்த்தவாம்.  ஒப்புமை:  ஐங்குறுநூறு 211 – செயலையம் பகைத்தழை வாடும்.  ஆயிடை (6) – ஒளவை துரைசாமி உரை – அவ்விடை:  ஆயிடை எனச் சுட்டு நீண்டு இடையே யகரம் பெற்றது.  வாடல கொல்லோ (7) – ஒளவை துரைசாமி உரை – வாடாவோ என நின்று வாடிவிடும் என்ற பொருள் தந்தது, பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – வாடுதலையுடைய ஆகலாமோ.

சொற்பொருள்:  சிலம்பின் மேய்ந்த சிறு கோட்டுச் சேதா – மலையில் மேயச் சென்ற சிறிய கொம்புகளை உடைய சிவந்த பசு, அலங்கு குலைக் காந்தள் தீண்டித் தாது உக – அசைகின்ற கொத்தை உடைய காந்தள் செடியினை உரசி அக்காந்தள் செடியின் மலர்களில் உள்ள தாது அதன் மேல் உதிர, கன்று தாய் மருளும் – அதன் கன்று நிறம் வேறுபட்டுத் தோன்றும் தன் தாயை அடையாளம் கொள்ளாமல் மருளும், குன்ற நாடன் – மலைநாடன், உடுக்கும் தழை தந்தனனே – உடுத்திக்கொள்ளத் தழை ஆடையைத் தந்தான், யாம் அஃது உடுப்பின் – நாம் அதை உடுத்தினால், யாய் அஞ்சுதுமே – அன்னை சினம் கொள்வாள் என அஞ்சுகின்றோம் (அஞ்சுதுமே – ஏகாரம் அசைநிலை), கொடுப்பின் – தலைவனிடம் கொடுப்போமாயின், கேளுடைக் கேடு அஞ்சுதுமே – அவன் துன்புறுவான் என அஞ்சுகின்றோம், ஆயிடை – அவ்விடத்து, வாடல கொல்லோ – அவை வாடுதல் அடையலாமா, தாமே – தாம் ஏ அசைநிலைகள், அவன் மலைப் போருடை வருடையும் பாயா – தலைவனின் மலையில் ஒன்றோடு ஒன்று போரிடும் மலை ஆடும் பாய்வதற்கு அஞ்சும், சூருடை அடுக்கத்தது கொயற்கு அருந்தழையே – கடவுள் வாழும் மலைப் பக்கத்தில் உள்ள கொய்வதற்குக் கடினமான இலைகள் (அருந்தழையே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 360, ஓரம்போகியார், மருதத் திணை – தோழி தலைவனிடம் சொன்னது, அல்லது தலைவி தலைவனிடம் சொன்னது
முழவு முகம் புலர்ந்து முறையின் ஆடிய
விழவு ஒழி களத்த பாவை போல,
நெருநைப் புணர்ந்தோர் புது நலம் வெளவி
இன்று தருமகளிர் மென்தோள் பெறீஇயர்,
சென்றீ பெரும! சிறக்க நின் பரத்தை  5
பல்லோர் பழித்தல் நாணி, வல்லே
காழின் குத்திக் கசிந்தவர் அலைப்பக்
கை இடை வைத்தது மெய்யிடைத் திமிரும்
முனியுடைக் கவளம் போல, நனி பெரிது
உற்ற நின் விழுமம் உவப்பென்;  10
மற்றும் கூடும் மனை மடி துயிலே.

பாடல் பின்னணி:  பரத்தையிற் பிரிந்து வந்த தலைவனுக்குத் தோழி வாயில் மறுத்தது.  தலைவி ஊடிச் சொல்லியதுமாம்.

பொருளுரை:  பெருமானே!  முழவின் மார்ச்சனை புலர்ந்து, முறைப்படி நடனம் ஆடிய திருவிழா முடிந்த களத்தில் உள்ள ஆடும் பெண் போல் அழகுடைய, நேற்று நீ கூடிய பரத்தையரின் புதிய அழகை கொள்ளைகொண்டு, இன்று கொண்டு வரப்படும் புதிய பரத்தையரின் மெல்லிய தோள்களைப் பெறும்படி நீ செல்வாயாக.  சிறப்பாக வாழட்டும் நின்னைக் கூடும் பரத்தை!  பலரும் பழிப்பதால் நாணம் அடைந்து, விரைந்து இரும்பு முள்ளால் குத்தி மனம் கசிந்த பாகர் துன்புறுத்த, தன் தும்பிக்கை இடையில் வைத்த கவளத்தைத் தன் உடல் முழுவதும் பூசிக் கொள்ளும் யானைக் கன்றுக்கு இட்ட கவளம் போல், நீ பெரிதாக அடைந்த சீர்மையைக் கண்டு நான் மகிழ்வேன்.  நீ மனையில் துயில்வது வேறொரு காலத்தில் நிகழக்கூடும்.

குறிப்பு:  முழவு முகம் புலர்ந்து (1) – ஒளவை துரைசாமி உரை – முழவின் மார்ச்சனை புலர்ந்து, பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – மத்தள முகத்து வைத்த மார்ச்சனை வறந்து.  முழவு முகம் புலரா – அகநானூறு பாடல்கள் 206, 222, 397 – வேங்கடசாமி நாட்டார், வேங்கடாசலம் பிள்ளை உரை – முழவின் ஒலி ஓயாத, பொ. வே. சோமசுந்தரனார் உரை – முழவின் முழக்கம் ஒழியாத.  உள்ளுறை – ஒளவை துரைசாமி உரை – பாகர் காழிற் குத்திக் கதழ்ந்து அலைப்பதால், இளங்களிறு கையுடைக் கவளத்தை மெய்யுறத் திமிருவது போலப் பல்லோர் பழிப்புரை தாக்கி அலைப்பதால், கைப்பட்டிருந்த பரத்தையர் பரந்து நீங்க விலகிப் போந்தனை என்றும், யானை முனிவுற்ற உள்ளத்தால் கவளத்தை எறிந்தது போல நீயும் மிகப் பெரிய விழுமத்தால் இவண் போந்தனை என்றும் கூறியவாறாகக் கொள்க.  நனி – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3).  விழுமம் – விழுமம் சீர்மையும் சிறப்பும் இடும்பையும் (தொல்காப்பியம், உரியியல்  57).

சொற்பொருள்:  முழவு முகம் புலர்ந்து முறையின் ஆடிய விழவு ஒழி களத்த பாவை போல – முழவின் மார்ச்சனை புலர்ந்து முறைப்படி நடனம் ஆடிய திருவிழா முடிந்த களத்தில் உள்ள ஆடும் பெண் போல், நெருநைப் புணர்ந்தோர் புது நலம் வெளவி இன்று தருமகளிர் மென்தோள் பெறீஇயர் சென்றீ – நேற்று நீ கூடிய பரத்தையரின் புதிய அழகை கொள்ளைகொண்டு இன்று கொண்டு வரப்படும் புதிய பரத்தையரின் மெல்லிய தோள்களைப் பெறும்படி செல்வாயாக (பெறீஇயர் – செய்யுளிசை அளபெடை, சென்றீ – முன்னிலை ஒருமை வினைத்திரி சொல்), பெரும – பெருமானே, சிறக்க நின் பரத்தை – சிறப்பாக வாழட்டும் நின்னைக் கூடும் பரத்தை (சிறக்க – வியங்கோள் வினைமுற்று), பல்லோர் பழித்தல் நாணி வல்லே காழின் குத்திக் கசிந்தவர் அலைப்பக் கை இடை வைத்தது மெய்யிடைத் திமிரும் முனியுடைக் கவளம் போல – பலரும் பழிப்பதால் நாணம் அடைந்து விரைந்து இரும்பு முள்ளால் குத்தி மனம் கசிந்த பாகர் துன்புறுத்த தும்பிக்கை இடையில் வைத்த கவளத்தைத் தன் உடல் முழுவதும் பூசிக் கொள்ளும் யானைக் கன்றுக்கு இட்ட கவளம் போல் (முனி – யானையின் கன்று), நனி பெரிது உற்ற நின் விழுமம் உவப்பென் – நீ பெரிதாக அடைந்த சீர்மையைக் கண்டு நான் மகிழ்வேன் (நனி பெரிது – மிக மிக, ஒரு பொருட் பன்மொழி), மற்றும் கூடும் மனை மடி துயிலே – நீ மனையில் துயில்வது வேறொரு காலத்தில் நிகழும் (துயிலே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 361, மதுரைப் பேராலவாயர், முல்லைத் திணை – தோழி வாயில்களிடம் சொன்னது
சிறு வீ முல்லைப் பெரிது கமழ் அலரி
தானும் சூடினன், இளைஞரும் மலைந்தனர்,
விசும்பு கடப்பன்ன பொலம் படைக் கலி மாப்,
படுமழை பொழிந்த தண் நறும் புறவில்,
நெடு நா ஒண் மணி பாடு சிறந்து இசைப்ப,  5
மாலை மான்ற மணன் மலி வியல் நகர்த்
தந்தன நெடுந்தகை தேரே, என்றும்
அரும் படர் அகல நீக்கி
விருந்து அயர் விருப்பினள் திருந்திழையோளே.

பாடல் பின்னணி:  தலைவன் வினை முடிந்து திரும்புகிறான்.  தலைவியின் துன்பம் நீங்கப்பட்டதைத் தோழி வாயில்களிடம் கூறியது.

பொருளுரை:  சிறிய மலர்களையுடைய முல்லையின் மிக்க மணம் வீசுகின்ற மலர்களைத் தலைவனும் சூடியிருந்தான்.  அவனுடன் வந்த இளைஞர்களும் சூடியிருந்தனர்.  வானைக் கடந்தாற்போன்ற விரைந்த ஓட்டத்தையுடைய பொன்னால் ஆன கலனை அணிந்த செருக்கான (கனைக்கும்) குதிரைகள், மிக்க மழைபொழிந்த குளிர்ந்த நறுமணம் வீசும் காட்டில் நீண்ட நாவுடைய ஒளிரும் மணிகள் மிக்கு ஒலிக்க, மாலை ஒளி மயங்கிய மணல் பரந்த அகன்ற மனையில் கொண்டு வந்து நிறுத்தின, பெரும் தகைமையுடைய தலைவனின் தேரை.  எந்நாளும் அவன் பிரிவால் கொண்டிருந்த மிக்க துன்பம் முழுக்க நீங்கி, விருந்து அயரும் விருப்பம் உடையவள் ஆயினாள், திருத்தமான அணிகலன்களை அணிந்த எம் தலைவி.

குறிப்பு:  பொலம் படை மா:  அகநானூறு 114 – பொலம்படைக் கலி மா, அகநானூறு 124 – பொன் இயல் புனை படைக் கொய் சுவல் புரவி, நற்றிணை 78 – பொலம் படைக் கலி மா, நற்றிணை 361 – பொலம் படைக் கலி மா, புறநானூறு 116 – பொலம் படைக் கலி மா, புறநானூறு 135 – ஒளிறு படைப் புரவிய தேரும், புறநானூறு 359 – பொலம் படைய மா, மலைபடுகடாம் 574 – பொலம் படைப் பொலிந்த கொய் சுவற் புரவி.  மான்ற (6) – ஒளவை துரைசாமி உரை – மால் என்பதன் அடியாகப் பிறந்த பெயரெச்சவினை.

சொற்பொருள்:  சிறு வீ முல்லைப் பெரிது கமழ் அலரி தானும் சூடினன் – சிறிய மலர்களையுடைய முல்லையின் மிக்க மணம் வீசுகின்ற மலர்களைத் தலைவனும் சூடியிருந்தான், இளைஞரும் மலைந்தனர் – அவனுடன் வந்த இளைஞர்களும் சூடியிருந்தனர், விசும்பு கடப்பன்ன பொலம் படைக் கலி மாப் படுமழை பொழிந்த தண் நறும் புறவில் நெடு நா ஒண் மணி பாடு சிறந்து இசைப்ப – வானைக் கடந்தாற்போன்ற விரைந்த ஓட்டத்தையுடைய பொன்னால் ஆன கலனை அணிந்த செருக்கான (கனைக்கும்) குதிரைகள் மிக்க மழைபொழிந்த குளிர்ந்த நறுமணம் வீசும் காட்டில் நீண்ட நாவுடைய ஒளிரும் மணிகள் மிக்கு ஒலிக்க, மாலை மான்ற மணன் மலி வியல் நகர்த் தந்தன நெடுந்தகை தேரே – மாலை ஒளி மயங்கிய மணல் பரந்த அகன்ற மனையில் கொண்டு வந்து நிறுத்தின பெரும் தகைமையுடைய தலைவனின் தேரை (மான்ற – மால் என்பதன் அடியாகப் பிறந்த பெயரெச்சவினை, மால் – மயக்கம், மணன் – மணல் என்பதன் போலி, தேரே – ஏகாரம் அசைநிலை), என்றும் அரும் படர் அகல நீக்கி விருந்து அயர் விருப்பினள் திருந்திழையோளே – எந்நாளும் கொண்டிருந்த மிக்க துன்பம் முழுக்க நீங்கி விருந்து அயரும் விருப்பம் உடையவள் ஆயினாள் திருத்தமான அணிகலன்களை அணிந்தவள் (திருந்திழையோளே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 362, மதுரை மருதன் இளநாகனார், பாலைத் திணை – தலைவன் தலைவியிடம் சொன்னது
வினை அமை பாவையின் இயலி, நுந்தை
மனை வரை இறந்து வந்தனை; ஆயின்
தலைநாட்கு எதிரிய தண் பத எழிலி
அணி மிகு கானத்து அகன் புறம் பரந்த
கடுஞ்செம்மூதாய் கண்டும் கொண்டும்  5
நீ விளையாடுக சிறிதே; யானே,
மழ களிறு உரிஞ்சிய பராரை வேங்கை
மணல் இடு மருங்கின் இரும் புறம் பொருந்தி,
அமர் வரின் அஞ்சேன், பெயர்க்குவென்;
நுமர் வரின் மறைகுவென், மாஅயோளே.  10

பாடல் பின்னணி:  தலைவனும் தலைவியும் உடன்போக்கு மேற்கொண்டனர்.  சுரத்தில் தலைவன் தலைவியிடம் சொன்னது.

பொருளுரை:  மாமை நிறம் உடையவளே!  இயந்திரம் அமைந்த கொல்லிப்பாவை போல் நடந்து, உன் தந்தையின் இல்லத்தின் எல்லையைக் கடந்து என்னுடன் வந்தனை ஆதலால், கார்காலத்தின் முதல் மழையைப் பெய்த குளிர்ந்த முகில்களால் மிகுந்த அழகை அடைந்த காட்டில், அகன்ற இடங்களில் படர்ந்த, விரைந்த செலவினையுடைய சிவந்த தாம்பூலப் பூச்சிகளைக் கண்டும், அவற்றைப் பிடித்தும், நீ சிறிது நேரம் விளையாடுக. யான் இளைய களிற்று யானை உரசிய பருத்த அடியையுடைய வேங்கை மரத்தின் மணல் பரப்புடைய பெரிய புறத்தில் மறைந்து, ஆறலை கள்வர்கள் போரிட வந்தால் அஞ்சாது, அவர்களை ஓடச் செய்வேன். உன்னைத் தேடி உன் உறவினர்கள் வந்தால், நான் மறைந்துகொள்வேன்.

குறிப்பு:  இறைச்சி – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – மழ களிறு உறிஞ்சிய வேங்கை அங்ஙனம் உறிஞ்சுதலானே கெடாதவாறு போல, எத்தகைய பகைவர் வந்து மோதினும் அஞ்சேன் என்றதாம்.  வினை அமை பாவையின் இயலி (1) – ஒளவை துரைசாமி உரை – நல்ல தொழிற்பாடு அமையச் செய்த பாவையொன்று நடப்பதுபோல நடந்து, பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – இயந்திரம் அமைந்த கொல்லிப் பாவைப் போல இயங்கா நின்று.  ஒப்புமை:  நற்றிணை 48 – கிடின் என இடிக்கும் கோல் தொடி மறவர் வடி நவில் அம்பின் வினையர் அஞ்சாது அமர் இடை உறுதர நீக்கி, நீர் எமர் இடை உறுதர ஒளித்த காடே.   எதிரிய (3) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – பெய்யத் தொடங்கிய, ஒளவை துரைசாமி உரை – பெய்த, H. வேங்கடராமன் உரை – மேலே எழுந்து.  கடுஞ்செம்மூதாய் (3) – ஒளவை துரைசாமி உரை – மிகச் சிவந்த தாம்பூலப்பூச்சி, பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை, பொ. வே. சோமசுந்தரனார் உரை – விரைந்த செலவினையுடைய ஈயலின் மூதாய்.  மூதாய் உள்ள பாடல்கள் – அகநானூறு 14, 54, 74, 134, 283, 304, 374, கலித்தொகை 85, நற்றிணை 362. மழ – மழவும் குழவும் இளமைப் பொருள (தொல்காப்பியம், உரியியல் 15).

சொற்பொருள்:  வினை அமை பாவையின் இயலி நுந்தை மனை வரை இறந்து வந்தனை – இயந்திரம் அமைந்த கொல்லிப்பாவை போல் நடந்து உன் தந்தையின் இல்லத்தின் எல்லையைக் கடந்து வந்தனை, ஆயின் – ஆதலால், தலைநாட்கு எதிரிய தண் பத எழிலி அணி மிகு கானத்து அகன் புறம் பரந்த கடுஞ்செம்மூதாய் கண்டும் கொண்டும் நீ விளையாடுக சிறிதே – கார்காலத்தின் முதல் மழையைப் பெய்த குளிர்ந்த முகில்களால் மிகுந்த அழகை அடைந்த காட்டில் அகன்ற இடங்களில் படர்ந்த விரைந்த செலவினையுடைய சிவந்த தாம்பூலப் பூச்சிகளைக் கண்டும் அவற்றைப் பிடித்தும் நீ சிறிது நேரம் விளையாடுக (சிறிதே – ஏகாரம் அசைநிலை, இந்திர கோபம், பட்டுப்பூச்சி, Trombidium grandissimum), யானே மழ களிறு உரிஞ்சிய பராரை வேங்கை மணல் இடு மருங்கின் இரும் புறம் பொருந்தி அமர் வரின் அஞ்சேன் பெயர்க்குவென்  – யான் இளைய களிற்று யானை உரசிய பருத்த அடியையுடைய வேங்கை மரத்தின் மணல் பரப்புடைய பெரிய புறத்தில் மறைந்து ஆறலை கள்வர்கள் போரிட வந்தால் அஞ்சாது அவர்களை ஓடச் செய்வேன் (வேங்கை மரம் – Kino Tree, Pterocarpus marsupium), நுமர் வரின் மறைகுவென் – மறைவேன் உன் உறவினர்கள் வந்தால் (பராரை – பரு அரை பராரை எனப் புணர்ந்தது, மாஅயோளே – மாமை நிறம் உடையவளே (அளபெடை, ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 363, உலோச்சனார், நெய்தல் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
‘கண்டல் வேலிக் கழி சூழ் படப்பைத்
தெண் கடல் நாட்டுச் செல்வென் யான்’ என
வியங்கொண்டு ஏகினை ஆயின், எனையதூஉம்
உறு வினைக்கு அசாவா உலைவு இல் கம்மியன்
பொறி அறு பிணைக் கூட்டும் துறை மணல் கொண்டு  5
வம்மோ தோழி மலி நீர்ச் சேர்ப்ப,
பைந்தழை சிதைய, கோதை வாட,
நன்னர் மாலை நெருநை நின்னொடு
சில விளங்கு எல் வளை ஞெகிழ,
அலவன் ஆட்டுவோள் சிலம்பு ஞெமிர்ந்து எனவே.  10

பாடல் பின்னணி:  பகற்குறி வந்து நீங்கும் தலைவனிடம் கூறியது.  யான் ஆற்றுவிக்கும் இடத்துக் கவன்றால் நீ ஆற்றுவி எனச் சொல்லியது.  கையுறை நேர்ந்த தோழி தலைவனிடம் கூறியதுமாம்.

பொருளுரை:  மிக்க நீர் பொருந்திய கடலின் தலைவனே!   உடுத்தியிருந்த பசிய தழை ஆடை சிதைய, மலர்மாலை வாட, நல்ல மாலை நேரத்தில் நேற்று உன்னுடன், தன்னுடைய சில விளங்கிய ஒளிரும் வளையல்கள் நெகிழ, நண்டை அலைத்து விளையாடிய என் தோழியின் சிலம்புகள் உடைந்தன ஆதலால்,  ‘கண்டல் மரங்களை வேலியாகவும் உப்பங்கழி சூழ்ந்த தோப்புக்களையுடைய தெளிந்த கடலையுடைய என் நாட்டிற்கு யான் செல்வேன்’ எனத் தேரைச் செலுத்திச் செல்லுவதை உறுதியாக நீ மேற்கொள்வாய் ஆயின், எத்துணை அளவேனும், செய்தற்கு உற்ற வினையில் சோர்வு இல்லாமல் கெடுதல் இல்லாத பொற்கொல்லன் அணிகலனின் பொறி அறுந்துப் போனதைப் பிணைத்துக் கூட்டுவதற்கு, உன் துறையில் உள்ள மண்ணை நீ கொண்டு வருவாயாக.

குறிப்பு:  வியம் (3) – ஒளவை துரைசாமி உரை – ஏவல்.  ஈண்டு வியங்கொளல் என்புழிப் போலத் தேரைச் செலுத்துதல் மேற்று.  ஒளவை துரைசாமி உரை – களிப்பும் உலர்ந்தவழி வெடிக்காத பண்பும் உடைய மண்ணே வார்ப்பு அச்சுகட்கு வேண்டப்படுவது.  அஃது எல்லாவிடத்துமின்றி சிற்சில நீர்த்துறைகளிலே காணப்படும்.  ஆட்டுவோள் (10) – ஒளவை துரைசாமி உரை – ஆட்டுதலை உடையவள். செய்யுளாகலின் ‘ஆ’ ‘ஓ’ ஆயிற்று.   எல் – எல்லே இலக்கம் (தொல்காப்பியம், இடையியல் 21).  உறு – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3).

சொற்பொருள்:  ‘கண்டல் வேலிக் கழி சூழ் படப்பைத் தெண் கடல் நாட்டுச் செல்வென் யான்’ என வியம் கொண்டு ஏகினை ஆயின் – ‘கண்டல் மரங்களை வேலியாகவும் உப்பங்கழி சூழ்ந்த தோப்புக்களையுடைய தெளிந்த கடலையுடைய நாட்டிற்கு யான் செல்வேன்’ எனத் தேரைச் செலுத்திச் செல்லுவதை உறுதியாக நீ மேற்கொள்வாய் ஆயின் (கண்டல் – Rhizophora mucronate which is a mangrove tree or Pandanus odoratissimus, University of Madras Lexicon), எனையதூஉம் உறு வினைக்கு அசாவா உலைவு இல் கம்மியன் பொறி அறு பிணைக் கூட்டும் துறை மணல் கொண்டு வம்மோ – எத்துணை அளவேனும் செய்தற்கு உற்ற வினையில் சோர்வு இல்லாமல் கெடுதல் இல்லாத பொற்கொல்லன் அணிகலனின் பொறி அறுந்துப் போனதைப் பிணைத்துக் கூட்டுவதற்கு உன் துறையில் உள்ள மண்ணை நீ கொண்டு வருவாயாக (வம்மோ – மோ முன்னிலை அசை, எனையதூஉம் – அளபெடை), தோழி – என் தோழி, மலி நீர்ச் சேர்ப்ப – மிக்க நீர் பொருந்திய கடலின் தலைவனே, பைந்தழை சிதைய கோதை வாட நன்னர் மாலை நெருநை நின்னொடு சில விளங்கு எல் வளை ஞெகிழ அலவன் ஆட்டுவோள் சிலம்பு ஞெமிர்ந்து எனவே – உடுத்தியிருந்த பசிய தழை ஆடை சிதைய மலர்மாலை வாட நல்ல மாலை நேரத்தில் நேற்று உன்னுடன் சில விளங்கிய ஒளிரும் வளையல்கள் நெகிழ நண்டை அலைத்து விளையாடிய என் தோழியின் சிலம்புகள் உடைந்தன ஆதலால் (நன்னர் – நல்ல, ஆட்டுவோள் – செய்யுள் ஆகலின் ‘ஆ’ ஓவாயிற்று, எனவே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 364, கிடங்கில் காவிதிப் பெருங்கொற்றனார், முல்லைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
சொல்லிய பருவம் கழிந்தன்று; எல்லையும்
மயங்கு இருள் நடுநாள் மங்குலோடு ஒன்றி,
ஆர்கலி வானம் நீர் பொதிந்து இயங்கப்,
பனியின் வாடையொடு முனிவு வந்து இறுப்ப,
இன்ன சில் நாள் கழியின், பல் நாள்  5
வாழலென் வாழி தோழி! ஊழின்
உரும் இசை அறியாச் சிறு செந்நாவின்
ஈர் மணி இன் குரல் ஊர் நனி இயம்பப்,
பல் ஆ தந்த கல்லாக் கோவலர்
கொன்றை அம் தீம் குழல் மன்று தோறு இயம்ப, 10
உயிர் செலத் துனைதரும் மாலை
செயிர் தீர் மாரியொடு ஒருங்கு தலைவரினே.

பாடல் பின்னணி:  பிரிவிடை வருந்தி உரைத்தது.

பொருளுரை:  தோழி!  நீடு வாழ்வாயாக!  “திரும்பி வருவேன் யான்” எனத் தலைவர் கூறிய பருவமும் கழிந்துவிட்டது.  பகற்பொழுதும் இருள் கலந்த நள்ளிரவு போல் கார் முகிலுடன் பொருந்தி, ஆரவாரத்தையுடைய மழை நீர் நிறைந்து பெய்ய, பனி கலந்த வாடைக்காற்றுடன் வெறுப்பு (சினம்) என்னை அடைய, முறையாகத் தோன்றும் இடியின் ஓசையை அறிந்து, சிறிய செவ்விய நாவையுடைய மணியின் குளிர்ந்த இனிய ஓசை ஊரின்கண் ஒலிக்கும்படி, பல ஆநிரைகளைச் செலுத்தி வந்த தம் தொழிலன்றி வேறு எதுவும் கற்காத இடையர்கள், கொன்றை நெற்றினால் (விதைக்கூட்டினால்) செய்த புல்லாங்குழலின் இசை மன்றங்கள்தோறும் ஒலிக்க, உயிர் நீங்கும்படி விரைந்து வந்த மாலை நேரம் குற்றமில்லாத மழையுடன் ஒன்றுசேர வருமானால், இவ்வாறு சில நாட்கள் கழிந்தால், நான் பல நாட்கள் உயிர் வாழ மாட்டேன்.

குறிப்பு:  கொன்றை விதைக் குழல்:  அகநானூறு 54 – கோல் கைக் கோவலர் கொன்றை அம் குழலர், நற்றிணை 364 – கல்லாக் கோவலர் கொன்றை அம் தீம் குழல் மன்று தோறு இயம்ப, கலித்தொகை 106 – கொன்றைத் தீம் குழல் முரற்சியர் வழூஉ சொல் கோவலர்.  துனை – கதழ்வும் துனைவும் விரைவின் பொருள் (தொல்காப்பியம், உரியியல் 19).  அறியா – அறிந்து என்பது பொருள். செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம்.  எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது.  கலி – கம்பலை சும்மை கலியே அழுங்கல் என்று இவை நான்கும் அரவப் பொருள (தொல்காப்பியம், உரியியல் 53).  நனி – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3).  ஊழின் உரும் இசை அறியா (7) – ஒளவை துரைசாமி உரை – முறையாகத் தோன்றும் இடியும் மின்னும் வருவதறிந்து, பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – முறையிலே இடிமுழக்கம் விசும்பிலே கேட்கப்படாத.

சொற்பொருள்:  சொல்லிய பருவம் கழிந்தன்று – தலைவர் ‘திரும்பி வருவேன் யான்’ எனக் கூறிய பருவமும் கழிந்துவிட்டது, எல்லையும் மயங்கு இருள் நடுநாள் மங்குலோடு ஒன்றி ஆர்கலி வானம் நீர் பொதிந்து இயங்கப் பனியின் வாடையொடு முனிவு வந்து இறுப்ப – பகற்பொழுதும் இருள் கலந்த நள்ளிரவு போல் கார் முகிலுடன் பொருந்தி ஆரவாரத்தையுடைய மழை நீர் நிறைந்து பெய்ய பனி கலந்த வாடைக்காற்றுடன் வெறுப்பு (சினம்) என்னை அடைய (எல்லை – பகற்பொழுது, முனிவு – சினத்தல், வெறுத்தல், இறுப்ப – தங்க), இன்ன சில் நாள் கழியின் பல் நாள் வாழலென் – இவ்வாறு சில நாட்கள் கழிந்தால் நான் பல நாட்கள் உயிர் வாழ மாட்டேன், வாழி – நீடு வாழ்வாயாக, அசைநிலை, தோழி – தோழி, ஊழின் உரும் இசை அறியாச் சிறு செந்நாவின் ஈர் மணி இன் குரல் ஊர் நனி இயம்பப் பல் ஆ தந்த கல்லாக் கோவலர் கொன்றை அம் தீம் குழல் மன்று தோறு இயம்ப – முறையாகத் தோன்றும் இடியின் ஓசையை அறிந்து சிறிய செவ்விய நாவையுடைய மணியின் குளிர்ந்த இனிய ஓசை ஊரின்கண் ஒலிக்கும்படி பல ஆநிரைகளைச் செலுத்தி வந்த தம் தொழிலன்றி வேறு எதுவும் கற்காத இடையர்கள் கொன்றை நெற்றினால் (விதைக்கூட்டினால்) செய்த புல்லாங்குழலின் இசை மன்றங்கள்தோறும் ஒலிக்க (அறியா – அறிந்து, கொன்றை மரம் – Golden Shower Tree, Cassia fistula), உயிர் செலத் துனைதரும் மாலை செயிர் தீர் மாரியொடு ஒருங்கு தலைவரினே – உயிர் நீங்கும்படி விரைந்து வந்த மாலை நேரம் குற்றமில்லாத மழையுடன் ஒன்றுசேர வருமானால் (தலைவரினே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 365, கிள்ளிமங்கலங்கிழார் மகனார் சேரகோவனார், குறிஞ்சித் திணை – தோழி தலைவியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
அருங்கடி அன்னை காவல் நீவி,
பெருங்கடை இறந்து மன்றம் போகிப்,
பகலே பலரும் காண, வாய்விட்டு
அகல்வயற் படப்பை அவன் ஊர் வினவிச்,
சென்மோ, வாழி தோழி, பல் நாள்  5
கருவி வானம் பெய்யாது ஆயினும்,
அருவி ஆர்க்கும் அயம் திகழ் சிலம்பின்
வான் தோய் மா மலைக் கிழவனை,
‘சான்றோய் அல்லை’ என்றனம் வரற்கே.

பாடல் பின்னணி:  களவில் வந்தொழுகும் தலைவன் சிறைப்புறத்தானாக இருப்பதை அறிந்த தோழி, அவன் விரைவில் வந்து தலைவியை மணம் புரிய வேண்டும் என்று எண்ணி, அவனது இயல்பை இகழ்கின்றாள்.

பொருளுரை:  தோழி!  நீடு வாழ்வாயாக!  இற்செறித்த நம் அன்னையின் காவலைக் கடந்து, பெரிய மனையின் வாயிலைத் தாண்டிச் சென்று, பகலில் பலரும் காணும்படியாக வாயைத் திறந்து, அகன்ற வயல்களையும் தோப்புக்களையும் உடைய அவன் ஊர் எங்கு உள்ளது எனக் கேட்டு அறிந்து சென்று வரலாமா, பல நாட்கள் இடி மின்னல் முதலிய தொகுதிகளையுடைய முகில்கள் பெய்யாது ஆயினும், அருவிகள் ஒலியுடன் விழும் நீர் நிறைந்த பக்க மலைகள் பொருந்திய வானைத் தொடும் பெரிய மலையின் தலைவனை நேரில் கண்டு, “நீ சான்றோன் இல்லை” எனக் கூறி வருவதற்கு?

குறிப்பு:  கருவி வானம் (6) – H. வேங்கடராமன் உரை – இடி மின்னல் முதலிய தொகுதிகளையுடைய மேகங்கள்.  கருவி – கருவி தொகுதி (தொல்காப்பியம், உரியியல் 58).  ஒப்புமை: குறுந்தொகை 102 – சான்றோர் அல்லர் யாம் மரீஇயோரே.  உள்ளுறை – ஒளவை துரைசாமி உரை – வானம் பெய்யாதாயினும் அருவி அயம் திகழும் என்றது, தலைமகன் வரைபொருளோடு வாராது சான்றோரை விடுப்பினும் நம் தமர் மகட்கொடை நேர்வர் எனத் தோழி உள்ளுறுத்து உரைத்தாள் எனக் கொள்க.  கடி – கடி என் கிளவி வரைவே கூர்மை காப்பே புதுமை விரைவே விளக்கம் மிகுதி சிறப்பே அச்சம் முன்தேற்று ஆயீர் ஐந்தும் மெய்ப்படத் தோன்றும் பொருட்டு ஆகும்மே (தொல்காப்பியம், உரியியல் 87).

சொற்பொருள்:  அருங்கடி அன்னை காவல் நீவி பெருங்கடை இறந்து மன்றம் போகிப் பகலே பலரும் காண வாய்விட்டு அகல் வயற் படப்பை அவன் ஊர் வினவிச் சென்மோ – இற்செறித்த நம் அன்னையின் காவலைக் கடந்து பெரிய மனையின் வாயிலைத் தாண்டிச் சென்று பகலில் பலரும் காணும்படியாக வாயைத் திறந்து அகன்ற வயல்களையும் தோப்புக்களையும் உடைய அவன் ஊர் எங்கு உள்ளது எனக் கேட்டு அறிந்து சென்று வரலாமா (மோ – முன்னிலை அசை, சென்மோ – செல்வேமோ சென்மோ என வந்தது), வாழி – நீடு வாழ்வாயாக, அசைநிலை, தோழி – தோழி, பல் நாள் கருவி வானம் பெய்யாது ஆயினும் அருவி ஆர்க்கும் அயம் திகழ் சிலம்பின் வான் தோய் மா மலைக் கிழவனை ‘சான்றோய் அல்லை’ என்றனம் வரற்கே – பல நாட்கள் இடி மின்னல் முதலிய தொகுதிகளையுடைய முகில்கள் பெய்யாது ஆயினும் அருவிகள் ஒலியுடன் விழும் நீர் நிறைந்த பக்க மலைகள் பொருந்திய வானைத் தொடும் பெரிய மலையின் தலைவனை நேரில் கண்டு  ‘நீ சான்றோன் இல்லை’ எனக் கூறி வருவதற்கு (வரற்கே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 366, மதுரை ஈழத்துப் பூதன் தேவனார், பாலைத் திணை – தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது
அரவுக் கிளர்ந்தன்ன விரவுறு பல் காழ்
வீடுறு நுண் துகில் ஊடு வந்து இமைக்கும்
திருந்திழை அல்குல், பெருந்தோள் குறுமகள்
மணி ஏர் ஐம்பால் மாசு அறக் கழீஇக்,
கூதிர் முல்லைக் குறுங்கால் அலரி  5
மாதர் வண்டொடு சுரும்பு பட முடித்த
இரும் பல் மெல் அணை ஒழிய, கரும்பின்
வேல் போல் வெண்முகை விரியத் தீண்டி,
முதுக்குறைக் குரீஇ முயன்று செய் குடம்பை
மூங்கில் அம் கழைத் தூங்க ஒற்றும்  10
வட புல வாடைக்குப் பிரிவோர்
மடவர் வாழி இவ் உலகத்தானே.

பாடல் பின்னணி:  பொருள்வயின் பிரிய எண்ணிய நெஞ்சிடம் கூறியது.

பொருளுரை:  பாம்பு படமெடுத்து எழுந்தாற்போல், பல மணிகள் சேர்த்த மேகலை அணிந்த ஒதுங்கிய நுண்ணிய ஆடையின் இடையே விளங்கும் திருத்தமான அணிகலன்களையுடைய அல்குலையும், பெரிய தோள்களையும் உடைய இளைய தலைவியின், நீலமணி போன்ற ஐந்து பகுதிகளாக முடிக்கப்படும் கூந்தலை மாசு இல்லாதவாறு கழுவி, குளிர்கால முல்லையின் குறிய காம்பையுடைய மலர்களைப் பெண் வண்டும் ஆண் வண்டும் மொய்க்குமாறு முடித்த, கரிய அடர்ந்த மெல்லிய அக்கூந்தல் படுக்கையை ஒழித்து, கரும்பின் வேலை ஒத்த வெள்ளை அரும்புகள் விரியுமாறு அவற்றைத் தீண்டி அறிவு மிகுந்த தூக்கணாங்குருவி முயன்று செய்த கூட்டை, மூங்கிலின் அழகிய கழை அசைந்து உரசுமாறு வீசும் வடதிசையிலிருந்து வரும் வாடைக் காற்று நிலவும் காலத்தில் பிரிபவர்கள் அறியாமையுடையவர்கள் இந்த உலகத்தில்.

குறிப்பு:  உள்ளுறை – ஒளவை துரைசாமி உரை – கரும்பின் வெண்முகையிடத்துப் பிரிவின்றி இருக்கும் இதழை வாடை தீண்டிப் பிரிவிக்கும் என்றது, பிரிவின்றி இயலும் எமது வாழ்க்கையில் பொருள் வேட்கை தோன்றி என்னைப் பிரியச் செய்கிறது என்றும், முதுகுரீஇ முயன்று செய் குடம்பையை மூங்கிற் கழை அசைத்து அலைப்பது போல யாம் அரிதின் முயன்று பெற்ற காதலின்ப நுகர்ச்சியைப் பொருட் பிரிவு தோன்றி வருத்துகிறது என்றும் உள்ளுறை கொள்க.  இறைச்சி (1) – கு. வெ. பாலசுப்பிரமணியன் உரை – மணமற்ற கரும்பின் முகையை வாடை தீண்டும் என்றது, தலைவன் நிலையில்லாத பொருளை விரும்பி முயல்கின்றான் என்பதாம்.  இறைச்சி (2) – கு. வெ. பாலசுப்பிரமணியன் உரை – தூக்கணாங்குருவிக் கூட்டை வாடை மூங்கிலால் மோதச் செய்யுமென்றது, பொருள் விருப்பத்தால் வருந்துமாறு நெஞ்சம் தலைவனை அலைக்காநின்றது என்பது உணர்த்தவாம்.  இமைக்கும் திருந்திழை அல்குல் (2–3) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – அரவு சீறி எழுந்தாற்போன்ற அல்குல்.  நுண்ணிய வெளிய துகிலை உடுத்தவழி அத்துகில் அசையுந்தோறும் உள்ளிருந்து கண் இமைத்தல் போலுதலானே இமைக்கும் அல்குல் என்றானுமாம்.  ஒப்புமை: கலித்தொகை 125 – தட அரவு அல்குல், நற்றிணை 366 – அரவுக் கிளர்ந்தன்ன விரவுறு பல் காழ் வீடுறு நுண் துகில் ஊடு வந்து இமைக்கும் திருந்திழை அல்குல், குறிஞ்சிப்பாட்டு 102 – பை விரி அல்குல்.   நீலமணிபோல் பெண்ணின் கூந்தல்:  அகநானூறு 8 – மணி ஏர் ஐம்பால், நற்றிணை 10 – மணியின் தாழ்ந்த நல் நெடுங்கூந்தல், நற்றிணை 133 – மணி ஏர் ஐம்பால், 214 – மணி இருங்கதுப்பு, 245 – மணி மருள் ஐம்பால், 337 – மணி மருள் ஐம்பால், 366 – மணி ஏர் ஐம்பால், 374 – வீழ் மா மணிய புனை நெடுங்கூந்தல், கலித்தொகை 22 – மணி ஒளி விட்டன்ன ஐவகை, கலித்தொகை 77 – மாசு அற மண்ணுற்ற மணி ஏசும் இருங்கூந்தல், பரிபாடல் 10, குறிஞ்சிப்பாட்டு 69 – பொன் எறி மணியின் சிறுபுறம் தாழ்ந்த எம் பின்னிருங் கூந்தல்.

சொற்பொருள்:  அரவுக் கிளர்ந்தன்ன விரவுறு பல் காழ் வீடுறு நுண் துகில் ஊடு வந்து இமைக்கும் திருந்திழை அல்குல் பெருந்தோள் குறுமகள் – பாம்பு படமெடுத்து எழுந்தாற்போல் பல மணிகள் சேர்த்த மேகலை அணிந்த ஒதுங்கிய நுண்ணிய ஆடையின் இடையே விளங்கும் திருத்தமான அணிகலன்களையுடைய அல்குலையும் பெரிய தோள்களையும் உடைய இளைய தலைவியின் (அல்குல் – இடை, இடைக்குக் கீழ் உள்ள பகுதி), மணி ஏர் ஐம்பால் மாசு அறக் கழீஇக் கூதிர் முல்லைக் குறுங்கால் அலரி மாதர் வண்டொடு சுரும்பு பட முடித்த இரும் பல் மெல் அணை ஒழிய – நீலமணி போன்ற ஐந்து பகுதிகளாக முடிக்கப்படும் கூந்தலை மாசு இல்லாதவாறு கழுவி குளிர்கால முல்லையின் குறிய காம்பையுடைய மலர்களைப் பெண் வண்டும் ஆண் வண்டும் மொய்க்குமாறு முடித்த கரிய அடர்ந்த மெல்லிய அக்கூந்தல் படுக்கையை ஒழித்து (கழீஇ – செய்யுளிசை அளபெடை), கரும்பின் வேல் போல் வெண்முகை விரியத் தீண்டி முதுக்குறைக் குரீஇ முயன்று செய் குடம்பை மூங்கில் அம் கழைத் தூங்க ஒற்றும் வட புல வாடைக்குப் பிரிவோர் மடவர் வாழி இவ் உலகத்தானே – கரும்பின் வேலை ஒத்த வெள்ளை அரும்புகள் விரியுமாறு அவற்றைத் தீண்டி அறிவுமிகுந்த தூக்கணாங்குருவி முயன்று செய்த கூட்டை மூங்கிலின் அழகிய கழை அசைந்து உரசுமாறு வீசும் வடதிசையிலிருந்து வரும் வாடைக் காற்று நிலவும் காலத்தில் பிரிபவர்கள் அறியாமையுடையவர்கள் இந்த உலகத்தில் (குரீஇ – இயற்கை அளபெடை, வாழி – அசைநிலை, உலகத்தானே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 367, நக்கீரர், முல்லைத் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
கொடுங்கண் காக்கைக் கூர்வாய்ப் பேடை
நடுங்கு சிறைப் பிள்ளை தழீஇ, கிளை பயிர்ந்து,
கருங்கண் கருனைச் செந்நெல் வெண்சோறு
சூருடைப் பலியொடு கவரிய குறுங்கால்
கூழுடை நல் மனைக் குழுவின இருக்கும்  5
மூதில் அருமன் பேர் இசைச் சிறுகுடி
மெல்லியல் அரிவை! நின் பல் இருங்கதுப்பின்
குவளையொடு தொடுத்த நறு வீ முல்லைத்
தளை அவிழ் அலரித் தண் நறுங்கோதை
இளையரும் சூடி வந்தனர்; நமரும் 10
விரி உளை நன் மாக் கடைஇ,
பரியாது வருவர் இப் பனிபடு நாளே.

பாடல் பின்னணி:  வரவு மலிந்தது.  தலைவன் குறித்த பருவத்தில் வருகின்றான் என்பதை அறிவுறுத்தியது.

பொருளுரை:  வளைந்த (கொடிய) கண்களையும் கூரிய வாயையும் உடைய பெடைக்காக்கை, நடுங்கும் சிறகையுடைய தன் பிள்ளையைத் தழுவிக்கொண்டு தன் சுற்றமாகிய காக்கைகளை அழைத்துக் கரிய கண்ணையுடைய கருனைக் கிழங்கின் பொரிக்கறியோடு செந்நெல்லின் அரிசியால் ஆக்கிய வெள்ளைச் சோற்றினைக் கடவுளுக்கு இட்ட பலியுடன் ஒருங்கே கவரும்பொருட்டு, குறுகிய கால்களை நாட்டிக் கட்டிய மிக்க உணவையுடைய மனையின்கண் கூடியிருக்கும், முதிய இல்லங்களையுடை அருமன் என்பவனின் பெரும் புகழையுடை சிறுகுடியில் வாழும் மென்மையான இயல்புகளை உடைய அரிவையே!  உன் அடர்ந்த கரிய கூந்தலில் சூடிய மாலை போலக் குவளை மலர்களுடன் தொடுத்த நறுமணம் வீசும் மலர்களையுடைய முல்லையின் இதழ்கள் விரியும் மலர்கள் உடைய குளிர்ந்த நறுமண மாலையை இளைஞர்களும் சூடி வந்தனர்.  நம் தலைவரும் விரிந்த பிடரி மயிரையுடைய நல்ல குதிரைகளைச் செலுத்திக்கொண்டு, வருந்தாது வருவார் இந்தப் பனியுடைய நாளில்.

குறிப்பு:  உள்ளுறை – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – காக்கையின் பெடை தன் பார்ப்பைத் தழுவிக் கொண்டு சோற்றுப்பலியைக் கவர வேண்டி, கிளையை அழைத்து மனையின்கண்ணே சூழ்ந்திருக்கும் என்றது, நீயும் நின் மகவினைத் தழுவினையாகிக் கேள்வன் கொணருகின்ற நிதியத்தை ஆர்த்துமாறு சுற்றத்தாரை அழைத்துச் சூழ இருத்தி மனையறம் நிகழ்த்துவாயாக என்றதாம்.  சிறுகுடி என்னும் பெயருடைய ஊர் – அகநானூறு 54 (பண்ணன் என்பவனின் ஊர்), அகநானூறு 117, 204, 269, நற்றிணை 340 (வாணன் என்பவனின் ஊர்), நற்றிணை 367 (அருமன் என்பவனின் ஊர்).  சிறிய குடியிருப்பு என்னும் பொருளில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் வந்துள்ளது.  கருங்கண் கருனை (3) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – கரிய கண்ணையுடைய கருனைக் கிழங்கின் பொரிக்கறி, ஒளவை துரைசாமி உரை – கரிய கண்போன்ற கடுகு பொரிக்கப்பெற்ற.  கொடுங்கண் காக்கை (1) – கு. வெ. பாலசுப்பிரமணியன் உரை – வளைந்த கண்கள், பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – வட்டமாகிய கண்கள், ஒளவை துரைசாமி உரை – கொடிய கண்கள்.  காக்கைக்கு உணவு அளித்தல் – நற்றிணை 258, 281, 293, 343, 367, குறுந்தொகை 210, ஐங்குறுநூறு 391.

சொற்பொருள்:  கொடுங்கண் காக்கைக் கூர்வாய்ப் பேடை நடுங்கு சிறைப் பிள்ளை தழீஇ கிளை பயிர்ந்து கருங்கண் கருனைச் செந்நெல் வெண்சோறு சூருடைப் பலியொடு கவரிய – வளைந்த (கொடிய) கண்களையும் கூரிய வாயையும் உடைய பெடைக்காக்கை நடுங்கும் சிறகையுடைய தன் பிள்ளையைத் தழுவிக்கொண்டுத் தன் சுற்றமாகிய காக்கைகளை அழைத்துக் கரிய கண்ணையுடைய கருனைக் கிழங்கின் பொரிக்கறியோடு செந்நெல்லின் அரிசியால் ஆக்கிய வெள்ளைச் சோற்றினைக் கடவுளுக்கு இட்ட பலியுடன் ஒருங்கே கவரும்பொருட்டு (தழீஇ – செய்யுளிசை அளபெடை), குறுங்கால் கூழுடை நல் மனைக் குழுவின இருக்கும் மூதில் அருமன் பேர் இசைச் சிறுகுடி – குறுகிய கால்களை நாட்டிக் கட்டிய மிக்க உணவையுடைய மனையின்கண் கூடியிருக்கும் முதிய இல்லங்களையுடை அருமன் என்பவனின் பெரும் புகழையுடைய சிறுகுடி, மெல்லியல் அரிவை – மென்மையான இயல்புகளை உடைய அரிவையே (அரிவை – அண்மை விளி),  நின் பல் இருங்கதுப்பின் குவளையொடு தொடுத்த நறு வீ முல்லைத் தளை அவிழ் அலரித் தண் நறுங்கோதை இளையரும் சூடி வந்தனர் – உன் அடர்ந்த கரிய கூந்தலில் சூடிய மாலை போலக் குவளை மலர்களுடன் தொடுத்த நறுமணம் வீசும் மலர்களையுடைய முல்லையின் இதழ்கள் விரியும் மலர்கள் உடைய குளிர்ந்த நறுமண மாலையை இளைஞர்களும் சூடி வந்தனர், நமரும் விரி உளை நன் மாக் கடைஇ பரியாது வருவர் இப் பனிபடு நாளே – நம் தலைவரும் விரிந்த பிடரி மயிரையுடைய நல்ல குதிரைகளைச் செலுத்திக்கொண்டு வருந்தாது வருவார் இந்தப் பனியுடைய நாளில் (கடைஇ– அளபெடை, நாளே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 368, கபிலர், குறிஞ்சித் திணை,  தோழி தலைவனிடம் சொன்னது  
பெரும்புனம் கவரும் சிறு கிளி ஓப்பி,
கருங்கால் வேங்கை ஊசல் தூங்கி,
கோடு ஏந்து அல்குல் தழை அணிந்து நும்மொடு
ஆடினம் வருதலின் இனியதும் உண்டோ,
நெறி படு கூழைக் கார் முதிர்பு இருந்த  5
வெறி கமழ் கொண்ட நாற்றமும் சிறிய
பசலை பாய்தரு நுதலும் நோக்கி,
வறிது உகு நெஞ்சினள் பிறிது ஒன்று சுட்டி
வெய்ய உயிர்த்தனள் யாயே.
ஐய! அஞ்சினம், அளியம் யாமே.  10

பாடல் பின்னணி:  தலைவியைத் தாய் இற்செறிப்பாள் என்பதனை உணர்ந்து வரைவு கடாயது.

பொருளுரை:  ஐயா!  பெரிய புனத்தில் தினையை உண்ண வரும் சிறுகிளிகளை விரட்டி விட்டு, இடையில் நீண்ட உயர்ந்த அல்குல் மேல் இலை ஆடைகளை அணிந்து, கரிய அடியை உடைய வேங்கை மரத்தில் உள்ள ஊஞ்சலில் விளையாடி, பின் உன்னுடன் அருவியில் விளையாடுவதை விட இனியது வேறு எதுவும் உண்டா?   இவளுடைய அடர்ந்த கரிய கூந்தலில் உள்ள நறுமணத்தையும் சிறிய நெற்றியில் உள்ள பசலையையும் வருத்தத்துடன் நோக்கி, பெருமூச்சு விட்டாள் அன்னை.  அவளை வீட்டை விட்டுச் செல்ல முடியாதப்படிக் காவலில் வைத்து விடுவாள்.  நானும் என் தோழியும் அஞ்சுகின்றோம்.  அளிக்கத்தக்கவர்கள் நாங்கள்.  அருள்வாயாக!

குறிப்பு:  ஒளவை துரைசாமி உரை – ஈண்டு இற்செறிப்பின் மேற்று யாய், நற்றாய்.  கூழைக் கார் முதிர்பு இருந்த வெறி கமழ் கொண்ட நாற்றம் – பொ. வே. சோமசுந்தரனார் உரை – கருமை முதிர்ந்திருந்த கூந்தலில் நறுமணங் கமழ்தலைக் கொண்ட நல்ல புது நாற்றம், ஒளவை துரைசாமி உரை – கருமுகில் நிறம் கறுத்து நீர் நிறைந்திருத்தல் போல மணம் நிறைந்துள்ளது என்பார் கூழைக் கார் முதிர்பு இருந்த வெறி என்றார்.  வறிது – வறிது சிறிது ஆகும் (தொல்காப்பியம், உரியியல் 40).

சொற்பொருள்:  பெரும்புனம் – பெரிய புனம்,  கவரும் – உண்ண வரும்,  சிறு கிளி – சிறுகிளிகள், ஓப்பி – விரட்டி, கருங்கால் வேங்கை – கரிய அடியை உடைய வேங்கை மரங்கள், ஊசல் – ஊஞ்சல், தூங்கி – ஆடி, கோடு ஏந்து அல்குல் – நீண்ட உயர்ந்த அல்குல் (அல்குல் – இடை, இடைக்குக் கீழே உள்ள பகுதி),  தழை அணிந்து – இலை ஆடைகளை அணிந்து, நும்மொடு – உன்னுடன், ஆடினம் வருதலின் – அருவியில் விளையாடுவதை விட,  இனியதும் உண்டோ – இனியது வேறு எதுவும் உண்டா? நெறி படு – அடர்ந்த, கூழைக் கார் முதிர்பு இருந்த – முதிர்ந்த கருமையான கூந்தலில் இருந்த, வெறி கமழ் கொண்ட – நிறைய மணம் கொண்ட (கமழ்  – கமழ்தல், முதனிலைத் தொழிற்பெயர்), நாற்றமும் – மனமும், சிறிய – சிறிய, பசலை பாய்தரு நுதலும் நோக்கி – பசலைப் பாய்ந்த நெற்றியையும் நோக்கி, வறிது உகு நெஞ்சினள் – வருத்தத்துடன் நோக்கினாள் (தாய்), பிறிது ஒன்று சுட்டி – அதை சுட்டிக் காட்டி, வெய்ய உயிர்த்தனள் யாயே – பெருமூச்சு விட்டாள் தாய், ஐய – ஐயா, அஞ்சினம் – நாங்கள் அஞ்சுகின்றோம்,  அளியம் யாமே – அளிக்கத்தக்கவர்கள் நாங்கள்

நற்றிணை 369, மதுரை ஓலைக் கடையத்தார் நல்வெள்ளையார், நெய்தல் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
சுடர் சினம் தணிந்து குன்றம் சேர
நிறை பறைக் குருகினம் விசும்பு உகந்து ஒழுக,
எல்லை பைபயக் கழிப்பி, முல்லை
அரும்பு வாய் அவிழும் பெரும் புன் மாலை
இன்றும் வருவது ஆயின், நன்றும்   5
அறியேன், வாழி தோழி! அறியேன்,
ஞெமை ஓங்கு உயர்வரை இமையத்து உச்சி,
வாஅன் இழிதரும் வயங்கு வெள்ளருவிக்
கங்கை அம் பேர் யாற்றுக் கரை இறந்து இழிதரும்
சிறை அடு கடும் புனல் அன்ன, என்  10
நிறை அடு காமம் நீந்துமாறே.

பாடல் பின்னணி:  வரைந்து கொள்ளாது தலைவன் பொருள்வயின் பிரிந்த வேளையில் தோழியிடம் கூறியது.

பொருளுரை:  தோழி!  நீ நீடு வாழ்வாயாக!  கதிரவன் தன் வெப்பத்தைத் தணிந்து மேற்கு மலையை அடைய, நிறைந்த சிறகுகளுடைய குருகுகள் வானில் உயர்ந்து பறக்க, பகல் பொழுதை மெல்ல மெல்ல போக்கி முல்லை அரும்புகள் கட்டு அவிழ்ந்து மலரும் பெரிய புல்லிய (பொலிவில்லாத) மாலை நேரம் இன்றும் வருவதனால், ஞெமை மரங்கள் உயர்ந்து வளர்ந்த உயர்ந்த மலையாகிய இமையத்தின் உச்சியில் வானிலிருந்து கீழே வரும் ஒளியுடைய வெள்ளை அருவி பாயும் கங்கை ஆற்றின் பெரிய கரையைத் தாண்டி ஓடி, அணையை உடைத்துச் செல்லும் விரைந்த நீர் வெள்ளம் போன்ற, என்னுடைய மிகுந்த அழித்துப் பெருகும் காதல் வெள்ளத்தை நீந்தும் வழியைப் பெரிதும் நான் அறியேன்.

குறிப்பு:  வரலாறு:  கங்கை.  காமம் – கமம் என்னும் சொல்லின் முதல் நீண்ட வடிவம், ‘நிறைந்த அன்பு’ என்பது இச்சொல்லின் பொருள் – பேரறிஞர் கு.வெ. பாலசுப்பிரமணியன் அவர்களின் விளக்கம், (கமம் நிறைந்து இயலும் – தொல்காப்பியம், சொல்லியல் 355).  நன்று – நன்று பெரிது ஆகும் (தொல்காப்பியம், உரியியல் 45).

சொற்பொருள்:  சுடர் சினம் தணிந்து குன்றம் சேர நிறை பறைக் குருகினம் விசும்பு உகந்து ஒழுக எல்லை பைபயக் கழிப்பி முல்லை அரும்பு வாய் அவிழும் பெரும் புன் மாலை இன்றும் வருவது ஆயின் – கதிரவன் தன் வெப்பத்தைத் தணிந்து மேற்கு மலையை அடைய நிறைந்த சிறகுகளுடைய குருகுகள் வானில் உயர்ந்து பறக்க பகல் பொழுதை மெல்ல மெல்ல போக்கி முல்லை அரும்புகள் கட்டு அவிழ்ந்து மலரும் பெரிய புல்லிய (பொலிவில்லாத) மாலை நேரம் இன்றும் வருவதனால் (பைபய – பையப்பைய பைபய என மருவியது), நன்றும் அறியேன் – பெரிதும் அறியேன், வாழி – நீடு வாழ்வாயாக, தோழி – தோழி, அறியேன் – அறியேன், ஞெமை ஓங்கு உயர்வரை இமையத்து உச்சி வாஅன் இழிதரும் வயங்கு வெள்ளருவிக் கங்கை அம் பேர் யாற்றுக் கரை இறந்து இழிதரும் சிறை அடு கடும் புனல் அன்ன, என் நிறை அடு காமம் நீந்துமாறே – ஞெமை மரங்கள் உயர்ந்து வளர்ந்த உயர்ந்த மலையாகிய இமையத்தின் உச்சியில் வானிலிருந்து கீழே வரும் ஒளியுடைய வெள்ளை அருவி பாயும் கங்கை ஆற்றின் பெரிய கரையைத் தாண்டி ஓடி அணையை உடைத்துச் செல்லும் விரைந்த நீர் வெள்ளம் போன்ற என்னுடைய மிகுந்த அழித்துப் பெருகும் காதல் வெள்ளத்தை நீந்தும் வழியை (வாஅன் – அளபெடை, ஞெமை மரம், Anogeissus latifolia, நீந்துமாறே, நீந்தும் ஆறே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 370, உறையூர்க் கதுவாய்ச் சாத்தனார், மருதத் திணை – தலைவன் பாணனிடம் சொன்னது
வாராய் பாண, நகுகம்! நேரிழை
கடும்புடைக் கடுஞ்சூல் நம் குடிக்கு உதவி,
நெய்யோடு இமைக்கும் ஐயவித் திரள் காழ்
விளங்கு நகர் விளங்கக் கிடந்தோள் குறுகி,
‘புதல்வன் ஈன்றெனப் பெயர் பெயர்த்து, அவ்வரித்  5
திதலை அல்குல் முது பெண்டு ஆகி,
துஞ்சுதியோ மெல் அம் சில் ஓதி?’ எனப்,
பல் மாண் அகட்டில் குவளை ஒற்றி,
உள்ளினென் உறையும் எற் கண்டு, மெல்ல
முகை நாள் முறுவல் தோற்றி,  10
தகை மலர் உண்கண் கை புதைத்ததுவே.

பாடல் பின்னணி:  பரத்தையிற் பிரிந்து வந்த தலைவனைத் தலைவி ஊடி நின்றாள்.  தலைவன் இதைப் பாணனிடம் கூறியது.

பொருளுரை:  பாணனே!  என் அருகில் வருவாயாக!  நான் கூறுவதைக் கேட்டு நாம் நகைக்கலாம்.  நேரிய அணிகலன்களை அணிந்த என் மனைவி, எம் சுற்றத்தார் சூழ்ந்திருக்கத் தலைச்சூல் உடையவளாக நம் குடிக்கு மகவைப் பெற்று உதவி, நெய்யுடன் ஒளிரும் சிறு வெண்கடுகின் திரண்ட விதைக்குழைவை விளங்கும் இல்லம் விளங்கும்படியாகப் பூசி, படுக்கையில் படுத்திருந்தவளை அணுகி, “புதல்வனைப் பெற்றதால், முந்தைய பெயர் நீங்கித் தாய் என்னும் பெயரைப் பெற்று, அழகிய வரிகளையும் திதலையையும் அல்குலில் பெற்ற முதிய பெண்ணின் தன்மையைப் பெற்று உறங்குகின்றாயோ?  மெல்லிய அழகிய சிலவாகிய கூந்தலை உடையவளே!” எனக் கூறி, பலவாக மாட்சிமைப்பட்ட அவளுடைய வயிற்றை என் கையில் உள்ள குவளை மலரால் தடவி எண்ணியவாறு இருந்த என்னைக் கண்டு, மெல்ல முல்லையின் நாள் அரும்பு போல் முறுவல் செய்து, குவளை மலர் போன்ற தன்னுடைய மையிட்ட கண்களைத் தன் கைகளால் மூடினாள்.

குறிப்பு:  ஒளவை துரைசாமி உரை – மகப்பேற்றுக்கு முன் இளையள் குறுமகள் என வழங்கும் பெயர்கள்.  மகப் பெற்றவள் இளமை கழிந்து முதுபெண்டு எனப்படுத்தல் பற்றிப் பெயர் பெயர்த்து என்றார்.  பெயர்த்தல் – நீக்குதல்.  ஒப்புமை: கலித்தொகை 118 – முகை முகம் திறந்தன்ன முறுவலும்.

சொற்பொருள்:  வாராய் – என் அருகில் வருவாயாக, பாண – பாணனே, நகுகம் – நாம் நகைக்கலாம், நேரிழை கடும்புடைக் கடுஞ்சூல் நம் குடிக்கு உதவி – நேரிய அணிகலன்களை அணிந்த என் மனைவி எம் சுற்றத்தார் சூழ்ந்திருக்கத் தலைச்சூல் உடையவளாக நம் குடிக்கு மகவைப் பெற்று உதவி (நேரிழை – அன்மொழித்தொகை), நெய்யோடு இமைக்கும் ஐயவித் திரள் காழ் விளங்கு நகர் விளங்கக் கிடந்தோள் குறுகி – நெய்யுடன் ஒளிரும் சிறு வெண்கடுகின் திரண்ட விதைக்குழைவை விளங்கும் இல்லம் விளங்கும்படியாகப் பூசி படுக்கையில் படுத்திருந்தவளை அணுகி, புதல்வன் ஈன்றெனப் பெயர் பெயர்த்து அவ்வரித் திதலை அல்குல் முது பெண்டு ஆகி துஞ்சுதியோ மெல் அம் சில் ஓதி – புதல்வனைப் பெற்றதால் முந்தைய பெயர் நீங்கித் தாய் என்னும் பெயரைப் பெற்று அழகிய வரிகளையும் திதலையையும் அல்குலில் பெற்ற முதிய பெண்ணின் தன்மையைப் பெற்று உறங்குகின்றாயோ மெல்லிய அழகிய சிலவாகிய கூந்தலை உடையவளே (அல்குல் – இடை, இடைக்குக் கீழ் உள்ள பகுதி, மெல் அம் சில் ஓதி – அன்மொழித்தொகை விளியேற்று நின்றது), எனப் பல் மாண் அகட்டில் குவளை ஒற்றி உள்ளினென் உறையும் எற் கண்டு – எனக் கூறி பலவாக மாட்சிமைப்பட்ட அவளுடைய வயிற்றை என் கையில் உள்ள குவளை மலரால் தடவி எண்ணியவாறு இருந்த என்னைக் கண்டு, மெல்ல முகை நாள் முறுவல் தோற்றி தகை மலர் உண்கண் கை புதைத்ததுவே – மெல்ல முல்லையின் நாள் அரும்பு போல் முறுவல் செய்து குவளை மலர் போன்ற தன்னுடைய மையிட்ட கண்களைத் தன் கைகளால் மூடினாள் (புதைத்ததுவே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 371, ஒளவையார், முல்லைத் திணை – தலைவன் தேர்ப்பாகனிடம் சொன்னது
காயாங்குன்றத்துக் கொன்றை போல
மா மலை விடர் அகம் விளங்க மின்னி,
மாயோள் இருந்த தேஎம் நோக்கி,
வியல் இரு விசும்பு அகம் புதையப் பாஅய்ப்,
பெயல் தொடங்கினவே பெய்யா வானம்;  5
நிழல் திகழ் சுடர்த் தொடி ஞெகிழ ஏங்கி
அழல் தொடங்கினளே ஆயிழை, அதன் எதிர்
குழல் தொடங்கினரே கோவலர்,
தழங்கு குரல் உருமின் கங்குலானே.

பாடல் பின்னணி:  வினை முற்றி மீளும் தலைவன் தேர்ப்பாகனிடம் கூறியது.

பொருளுரை:  பெய்யாதிருந்த முகில்கள், காயா மரங்களுடைய மலையில் இடையிடையே சரக்கொன்றை மலர்ந்தாற்போல், பெரிய மலைப் பிளப்புகளில் எல்லாம் ஒளிரும்படி மின்னி, மாமை நிறமுடைய தலைவி இருக்கும் இடம் நோக்கி, அகன்று இருந்த வானத்தின் இடம் மறையும்படி பரவி, மழை பெய்யத்தொடங்கி விட்டன.  ஒளி திகழும் வளையல்கள் கழன்று விழ, ஏங்கி அழுதலை மேற்கொண்டாள், ஆராய்ந்த அணிகலன்களை அணிந்த தலைவி.  அதற்கு எதிராகக் கோவலர் தங்கள் இடிபோல் முழங்கும் குழலை ஊதத் தொடங்கிவிட்டனர் இரவில்.

குறிப்பு:  தழங்குகுரல் உருமின் கங்குலானே (9) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – இராப்பொழுதில் முழங்குகின்ற இடியோசை போல, பிரிந்தோர்க்கு குழலோசை இடியை ஒக்குமென்றது வெளிப்படை, ஒளவை துரைசாமி உரை – முழங்கும் ஓசையையுடை இடிகள் தோன்றும் இரவின்கண்.  ஒப்புமை: அகநானூறு 214 – ஓங்கு விடைப் படு சுவல் கொண்ட பகுவாய்த் தெள் மணி ஆ பெயர் கோவலர் ஆம்பலொடு அளைஇப் பையுள் நல் யாழ் செவ்வழி வகுப்ப ஆருயிர் அணங்கும் தெள் இசை மாரி மாலையும் தமியள் கேட்டே.  காயாவும் கொன்றையும் கார்காலத்தில் மலர்தல் – நற்றிணை 242 – பல் மலர் காயாங் குறுஞ்சினை கஞலக் கார் தொடங்கின்றே, நற்றிணை 371 – காயாங்குன்றத்துக் கொன்றை போல மா மலை விடர் அகம் விளங்க மின்னி மாயோள் இருந்த தேஎம் நோக்கி வியல் இரு விசும்பு அகம் புதையப் பாஅய்ப் பெயல் தொடங்கினவே, ஐங்குறுநூறு 420 – பொன் என மலர்ந்த கொன்றை, மணி எனத் தேம்படு காயா, மலர்ந்த தோன்றியொடு நன்னலம் எய்தினை புறவே.

சொற்பொருள்:  காயாங் குன்றத்துக் கொன்றை போல மா மலை விடர் அகம் விளங்க மின்னி – காயா மரங்களுடைய மலையில் இடையில் சரக்கொன்றை மலர்ந்தாற்போல் பெரிய மலைப் பிளப்புகளில் எல்லாம் ஒளிரும்படி மின்னி (காயா மரம் – Memecylon edule, கொன்றை மரம் – laburnum with golden yellow flowers, Golden shower tree, Cassia fistula), மாயோள் இருந்த தேஎம் நோக்கி – மாமை நிறமுடைய தலைவி இருக்கும் இடம் நோக்கி (தேஎம் – அளபெடை), வியல் இரு விசும்பு அகம் புதையப் பாஅய்ப் பெயல் தொடங்கினவே – அகன்று இருந்த வானத்தின் இடம் மறையும்படி பரவி மழை பெய்யத்தொடங்கி விட்டது (பாஅய் – செய்யுளிசை அளபெடை, தொடங்கினவே – ஏகாரம் அசைநிலை), பெய்யா வானம் – பெய்யாதிருந்த முகில்கள், நிழல் திகழ் சுடர்த் தொடி ஞெகிழ ஏங்கி அழல் தொடங்கினளே ஆயிழை – ஒளி திகழும் வளையல்கள் கழன்று விழ ஏங்கி அழுதலை மேற்கொண்டாள் ஆராய்ந்த அணிகலன்களை அணிந்த தலைவி, அதன் எதிர் குழல் தொடங்கினரே கோவலர் தழங்கு குரல் உருமின் கங்குலானே – அதற்கு எதிராகக் கோவலர் தங்கள் இடிபோல் முழங்கும் குழலை ஊதத் தொடங்கிவிட்டனர் இரவில் (தொடங்கினரே – ஏகாரம் அசைநிலை, உருமின் – இன் ஒப்புப்பொருளில் வந்தது, ஐந்தாம் வேற்றுமை உருபு, கங்குலானே – இரவில், ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 372, உலோச்சனார், நெய்தல் திணை – தோழி தலைவியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
அழிதக்கன்றே தோழி, கழி சேர்பு
கானல் பெண்ணைத் தேனுடை அழி பழம்,
வள் இதழ் நெய்தல் வருந்த மூக்கு இறுபு,
அள்ளல் இருஞ்சேற்று ஆழப் பட்டெனக்,
கிளைக் குருகு இரியும் துறைவன் வளைக் கோட்டு  5
அன்ன வெண்மணற்று அகவயின், வேட்ட
அண்ணல் உள்ளமொடு அமர்ந்து, இனிது நோக்கி
அன்னை தந்த அலங்கல் வான்கோடு
உலைந்து ஆங்கு நோதல் அஞ்சி, ‘அடைந்ததற்கு
இனையல் என்னும்’ என்ப, மனை இருந்து,  10
இருங்கழி துழவும் பனித்தலைப் பரதவர்
திண் திமில் விளக்கம் எண்ணும்
கண்டல் வேலிக் கழி நல்லூரே.

பாடல் பின்னணி:  தாய் இற்செறிப்பாள் என அஞ்சிய தலைவியிடம் தோழி கூறியது.

பொருளுரை:  தோழி!  நீ மனம் வருந்தி அழிவது தக்கது அன்று.  உப்பங்கழியைச் சேர்ந்த கடற்கரைச் சோலையில் பனையின் சாறு மிகுந்த முதிய பழம், பெரிய இதழ்களுடைய நெய்தல் மலர்கள் வருந்துமாறு காம்பு உடைந்து, அள்ளலாகிய கரிய சேற்றில் ஆழ்ந்து புதையுமாறு விழுந்ததால், சுற்றத்துடன் அங்குக் கூடிய குருகுகள் அஞ்சி நீங்கும் துறையின் தலைவன், வளைந்த கோடுகள் (சங்குகள்) போன்ற வெள்ளை மணலையுடைய இடத்தில் நின் பெருந்தகைமை உடைய உள்ளத்துடன் பொருந்துமாறு, உன்னை  இனிமையாக நோக்கி அன்னை கிளிகளை விரட்டுவதற்கு உன்னிடம் தந்த அசைகின்ற வெண்மையான கோல் ஒடிந்து விடுவதற்கு நீ வருந்துகின்றாய் என அஞ்சி, “நிகழ்ந்ததற்கு நீ வருந்தாதே” என்பார்கள், இல்லத்திலிருந்து கரிய (பெரிய) உப்பங்கழியில் மீனைத் தேடுகின்ற குளிரால் நடுங்குதலையுடைய பரதவரின் திண்ணிய படகில் உள்ள விளக்குகளை எண்ணும் கண்டல் வேலியாக உள்ள உப்பங்கழியுடைய நல்ல ஊர் மக்கள்.

குறிப்பு:  உள்ளுறை – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – பனம்பழம் நெய்தல் வருந்தச் சேற்றில் விழக்கண்டு குருகினம் இரியுமென்றது, தலைமகன் களவொழுக்கெங் கெட நின்னை மணப்பின் அலர்வாய்ப் பெண்டிர் இரிந்தொழிவர் என்பதாம்.  இறைச்சி – கு. வெ. பாலசுப்பிரமணியன் உரை – மகளிர் தம் மனையிலிருந்து திமில் விளக்குகளை எண்ணுவர் என்றது, தலைவியும் தோழியும் இல்லிருந்து தலைவன் தந்த துன்பங்கள் எண்ணுவாராயினர் என்பது உணர்த்தவாம்.  மூக்கு – பொ. வே. சோமசுந்தரனார் உரை, ஐங்குறுநூறு 213 – மூக்கு = காம்பு.  வளைக் கோட்டு (5) – ஒளவை துரைசாமி உரை – சங்குகள் நிறைந்த, பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – வளையாகிய சங்கு போன்ற.   மணற்று (6) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – மணலையுடையது என்னும் முற்றெச்சம்.  வான்கோடு (8) – ஒளவை துரைசாமி உரை – தலையுடைய மெல்லிய கோல், பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – குழையுடைய பெரிய கோடு.  ஒப்புமை:  நற்றிணை 6 – அத்தக் குமிழின் கொடு மூக்கு விளை கனி, நற்றிணை 24 – விளவின் ஆட்டு ஒழி பந்தின் கோட்டு மூக்கு இறுபு, நற்றிணை 372 – பெண்ணைத் தேனுடை அழி பழம் வள் இதழ் நெய்தல் வருந்த மூக்கு இறுபு அள்ளல் இருஞ்சேற்று ஆழப் பட்டென, ஐங்குறுநூறு 213 – நறு வடி மாஅத்து மூக்கு இறுபு உதிர்த்த.

சொற்பொருள்:  அழிதக்கன்றே – நீ மனம் வருந்தி அழிவது தக்கது அன்று, தோழி – தோழி, கழி சேர்பு கானல் பெண்ணைத் தேனுடை அழி பழம் வள் இதழ் நெய்தல் வருந்த மூக்கு இறுபு அள்ளல் இருஞ்சேற்று ஆழப் பட்டெனக் கிளைக் குருகு இரியும் துறைவன் – உப்பங்கழியைச் சேர்ந்த கடற்கரைச் சோலையில் பனையின் சாறு மிகுந்த முதிய பழம் பெரிய இதழ்களுடைய நெய்தல் மலர்கள் வருந்துமாறு காம்பு உடைந்து அள்ளலாகிய கரிய சேற்றில் ஆழ்ந்து புதையுமாறு விழுந்ததால் அங்குக் கூடிய குருகுகள் அஞ்சி நீங்கும் துறையின் தலைவன், வளைக் கோட்டு அன்ன வெண்மணற்று அகவயின் வேட்ட அண்ணல் உள்ளமொடு அமர்ந்து – வளைந்த கோடுகள் (சங்குகள்) போன்ற வெள்ளை மணலையுடைய இடத்தில் நின் பெருந்தகைமை உடைய உள்ளத்துடன் பொருந்துமாறு (மணற்று – மணலையுடையது என்னும் முற்றெச்சம்), இனிது நோக்கி அன்னை தந்த அலங்கல் வான்கோடு உலைந்து ஆங்கு நோதல் அஞ்சி – இனிமையாக நோக்கி அன்னை தந்த அசைகின்ற வெண்மையான கோல் ஒடிந்து விடுவதற்கு நீ வருந்துகின்றாய் என அஞ்சி, ‘அடைந்ததற்கு இனையல் என்னும்’ என்ப – ‘நிகழ்ந்ததற்கு நீ வருந்தாதே’ என்பார்கள், மனை இருந்து இருங்கழி துழவும் பனித்தலைப் பரதவர் திண் திமில் விளக்கம் எண்ணும் கண்டல் வேலிக் கழி நல்லூரே – இல்லத்திலிருந்து கரிய (பெரிய) உப்பங்கழியில் மீனைத் தேடுகின்ற குளிரால் நடுங்குதலையுடைய பரதவரின் திண்ணிய படகில் உள்ள விளக்குகளை எண்ணும் கண்டல் வேலியாக உள்ள உப்பங்கழியுடைய நல்ல ஊர் மக்கள் (கண்டல் – Rhizophora mucronate which is a mangrove tree or Pandanus odoratissimus, University of Madras Lexicon, நல்லூரே – ஏகாரம் அசைநிலை, ஊர் ஆகுபெயர் ஊரில் உள்ள மக்களுக்கு, அன்மொழித்தொகையுமாம்)

நற்றிணை 373, கபிலர், குறிஞ்சித் திணை, தோழி தலைவியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
முன்றில் பலவின் படுசுளை மரீஇப்,
புன்தலை மந்தி தூர்ப்ப தந்தை
மைபடு மால் வரை பாடினள் கொடிச்சி,
ஐவன வெண்ணெல் குறூஉம் நாடனொடு
சூருடைச் சிலம்பின் அருவி ஆடிக்,  5
கார் அரும்பு அவிழ்ந்த கணிவாய் வேங்கைப்
பா அமை இதணம் ஏறி, பாசினம்
வணர் குரற் சிறு தினை கடிய,
புணர்வது கொல்லோ நாளையும் நமக்கே?

பாடல் பின்னணி:  அன்னை இற்செறிக்க எண்ணுகின்றாள் எனக் குறிப்பால் கூறியது.

பொருளுரை:  மெல்லிய தலையையுடைய பெண் குரங்கு ஒன்று, வீட்டின் முன் முற்றத்தில் உள்ள பலா மரத்தின் பழத்தைக் கிழித்து, அதன் சுளைகளை உண்டு விட்டு, அதன் கொட்டைகளைக் கீழே எறிய, தன்னுடைய தந்தையின் முகில் சூழ்ந்த உயர்ந்த மலையைப் பற்றிப் பாடி வெள்ளை மலை நெல்லைக் குத்துகின்றாள் அருகில் உள்ள மலைப் பெண் ஒருத்தி.  அந்த மலையின் தலைவன், கடவுள்களையுடைய மலை அருவியில் விளையாடி, கரிய அரும்பிலிருந்து மலர்ந்த பூக்களையுடைய பின்னால் நடப்பதைக் கூறும் வேங்கை மரத்தின் மேல் அமைத்த பரந்த பரணில் ஏறி, வளைந்த கொத்துக்களை உடைய சிறு தினையைக் கிளிகளிடமிருந்து காத்து அவற்றை விரட்ட, நம்மோடு வருவானா நாளைக்கு?

குறிப்பு:  உள்ளுறை – ஒளவை துரைசாமி உரை – முன்றிலிடத்து நின்ற பலவின் முது சுளையைப் பொருந்தி மந்தி உண்ணக் கொடிச்சி மால்வரை பாடி ஐவன நெல்லைக் குறுவள் என்றது, யாம் தலைமகனோடு இருந்து இன்புறுவேமாகத் தமர் தினை விளைவு பேசி அதனைக் கொய்தற்குச் சூழ்வாராயினர் என்பது.  கணிவாய் வேங்கை – வேங்கை மரம் கணிப்பதால் (பின்னால் வருபவற்றைக் கூறுவதால்) சோதிடன் என்று கருதப்படும். வேங்கையில் அரும்புகள் மலரும் வேளையில் தினைப் புனத்தில் தினை முற்றும். மலையில் வாழ்பவர்கள் வேங்கையின் அரும்புகள் அவிழ்வதைப் பார்த்ததும் அறுவடையைத் துவங்குவார்கள். அவ்வேளையில் தாய் தலைவியை இல்லத்தில் சிறைப்படுத்தல் வழக்கம்.  சூர் (5) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – அச்சம்.  ஒளவை துரைசாமி உரை – சிறு தெய்வம்.  மந்தி – பேடையும் பெடையும் பெட்டையும் பெண்ணும் மூடும் நாகும் கடமையும் அளகும் மந்தியும் பாட்டியும் பிணையும் பிணவும் அந்தம் சான்ற பிடியொடு பெண்ணே (தொல்காப்பியம், மரபியல் 3).

சொற்பொருள்:  முன்றில் பலவின் – வீட்டின் முன் முற்றத்தில் உள்ள பலா மரத்திலிருந்து (முன்றில் – இல் முன்), படுசுளை மரீஇ – அதன் பழத்தை கிழித்து (மரீஇ – செய்யுளிசை அளபெடை), புன்தலை மந்தி – மெல்லிய தலையையுடைய பெண் குரங்கு, தூர்ப்ப – கீழே எறிய, தந்தை மைபடு மால் வரை பாடினள் கொடிச்சி – தன்னுடைய தந்தையின் முகில் சூழ்ந்த உயர்ந்த மலையைப் பற்றி பாடினாள் மலைப் பெண், ஐவன வெண்ணெல் குறூஉம் நாடனொடு – வெள்ளை மலை நெல்லைக் குத்துகின்ற நாடனுடன் (குறூஉம் – செய்யுளிசை அளபெடை), சூருடைச் சிலம்பின் அருவி ஆடி – கடவுள்களையுடைய மலை அருவியில் விளையாடி, அச்சத்தைத் தரும் மலையின் அருவியில் விளையாடி, கார் அரும்பு அவிழ்ந்த – கரிய அரும்பு மலர்ந்த, கணிவாய் வேங்கை – பின்னால் நடப்பதைக் கூறும் வேங்கை மரம் (வேங்கை மரம் – kino tree, Pterocarpus marsupium), பா அமை – பரப்பு அமைந்த, இதணம் ஏறி – பரணில் ஏறி, பாசினம் – கிளியினம், வணர் குரற் சிறு தினை – வளைந்த கொத்துக்களை உடைய சிறு தினை, கடிய – விரட்ட, புணர்வது கொல்லோ – பொருந்துமோ (கொல்லோ – கொல் ஐயப்பொருட்டு, ஓகாரம் அசைநிலை), நாளையும் நமக்கே – நமக்கு நாளைக்கு (நமக்கே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 374, வன்பரணர், முல்லைத் திணை – தலைவன் வழியில் கண்டோரிடம் சொன்னது
முரம்புதலை மணந்த நிரம்பா இயவின்
ஓங்கித் தோன்றும் உமண் பொலி சிறுகுடிக்
களரிப் புளியின் காய் பசி பெயர்ப்ப
உச்சிக் கொண்ட ஓங்கு குடை வம்பலீர்!
முற்றையும் உடையமோ மற்றே, பிற்றை  5
வீழ் மா மணிய புனை நெடுங்கூந்தல்
நீர் வார் புள்ளி ஆகம் நனைப்ப,
விருந்து அயர் விருப்பினள் வருந்தும்
திருந்திழை அரிவைத் தேமொழி நிலையே.

பாடல் பின்னணி:  வினை முற்றி மீளும் தலைவன் வழியில் கண்டோரிடம் கூறியது.

பொருளுரைபரல் மிக்க மேட்டு நிலத்தில் பொருந்திய மக்கள் செல்லுதற்கு அமையாத வழியில், உயர்ந்து தோன்றும் உப்பு வணிகர்கள் நிறைந்திருக்கும் சிறுகுடிகளை உடைய களர் நிலத்தில் விளைந்த புளியங்காயை உண்டு பசியை நீக்கும், தலைமேல் பிடித்த குடையை உடைய புதிய வழிப்போக்கர்களே!  இதற்கு முன்பும் யாம் பெற்றோம், விரும்பும் நீலமணியின் தன்மையையுடைய, ஒப்பனித்த நீண்ட கூந்தலையும், கண்கள் கண்ணீர் வடிப்பதால் நனைந்த தேமலுடைய மார்பையும் உடைய, எமக்கு விருந்து செய்யும் விருப்பத்துடன் வருந்தியிருக்கும் திருத்தமான அணிகலன்கள் அணிந்த இனிய மொழியையுடைய தலைவியின் நிலையை.  இப்பொழுதும் யாம் பெறுவோம்.

குறிப்பு:   நிரம்பா இயவின் (1) – ஒளவை துரைசாமி உரை – சிறுகிய வழியின்கண், பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – சென்று சேர்தற்கு இயலாத நெறி, முற்றை (5) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – பின்பு பிற்றை என்பது போல முன்பு முற்றை எனத் திரிந்தது போலும்.  உடையமோ (5) – ஒளவை துரைசாமி உரை – உடையம், ஓகாரம் அசைநிலை, முன்பும் பெற்றுடையம், பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – முன்பும் இவ்வாறு இருக்க முழுதும் பெற்றுடையோமோ?  இல்லை கண்டீர்.  இப்பொழுது தான் பெறலாகியதே!  இஃது என்ன வியப்பு.  முற்றை (5) – ஒளவை துரைசாமி உரை – முற்றை என்பது முன்றை என்பதன் விகாரம், பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – பின்பு பிற்றை என்பது போல முன்பு முற்றையெனத் திரிந்தது போலும்.  அருகிய வழக்கு.  நீலமணிபோல் பெண்ணின் கூந்தல்:  அகநானூறு 8 – மணி ஏர் ஐம்பால், நற்றிணை 10 – மணியின் தாழ்ந்த நல் நெடுங்கூந்தல், நற்றிணை 133 – மணி ஏர் ஐம்பால், 214 – மணி இருங்கதுப்பு, 245 – மணி மருள் ஐம்பால், 337 – மணி மருள் ஐம்பால், 366 – மணி ஏர் ஐம்பால், 374 – வீழ் மா மணிய புனை நெடுங்கூந்தல், கலித்தொகை 22 – மணி ஒளி விட்டன்ன ஐவகை, கலித்தொகை 77 – மாசு அற மண்ணுற்ற மணி ஏசும் இருங்கூந்தல், பரிபாடல் 10, குறிஞ்சிப்பாட்டு 69 – பொன் எறி மணியின் சிறுபுறம் தாழ்ந்த எம் பின்னிருங் கூந்தல்.

சொற்பொருள்:  முரம்புதலை மணந்த நிரம்பா இயவின் ஓங்கித் தோன்றும் உமண் பொலி சிறுகுடிக் களரிப் புளியின் காய் பசி பெயர்ப்ப உச்சிக் கொண்ட ஓங்கு குடை வம்பலீர் – பரல் மிக்க மேட்டு நிலத்தில் பொருந்திய மக்கள் செல்லுதற்கு அமையாத வழியில் உயர்ந்து தோன்றும் உப்பு வணிகர்கள் நிறைந்திருக்கும் சிறுகுடிகளை உடைய களர் நிலத்தில் விளைந்த புளியங்காயை உண்டு பசியை நீக்கும் தலைமேல் பிடித்த குடையை உடைய புதிய வழிப்போக்கர்களே (பொலி – நிறைந்த, முரம்பு – பரற்கற்களுடைய மேட்டு நிலம்), முற்றையும் உடையமோ மற்றே – இதற்கு முன்பும் பெற்றோம் (உடையம் – தன்மைப் பன்மை, ஓகாரம் அசைநிலை, மற்றே – மற்று ஏ அசைநிலைகள்), பிற்றை – அதன் பின் (பிற்றை பின்றை என்பதன் விகாரம்), வீழ் மா மணிய புனை நெடுங்கூந்தல் நீர் வார் புள்ளி ஆகம் நனைப்ப விருந்து அயர் விருப்பினள் வருந்தும் திருந்திழை அரிவைத் தேமொழி நிலையே – விரும்பும் நீலமணியின் தன்மையையுடைய ஒப்பனித்த நீண்ட கூந்தலையும் கண்கள் கண்ணீர் வடிப்பதால் தேமலுடைய மார்பு நனைய விருந்து செய்யும் விருப்பத்துடன் வருந்தியிருக்கும் திருத்தமான அணிகலன்களை அணிந்த இனிய மொழியையுடைய தலைவியின் நிலை (நிலையே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 375, பொதும்பில் கிழார் மகனார் வெண்கண்ணி, நெய்தல் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
நீடு சினைப் புன்னை நறும் தாது உதிரக்,
கோடு புனை குருகின் தோடு தலைப்பெயரும்
பல் பூங்கானல் மல்கு நீர்ச் சேர்ப்ப!
அன்பு இலை, ஆதலின், தன் புலன் நயந்த
என்னும் நாணும் நன்னுதல் உவப்ப,  5
வருவை ஆயினோ நன்றே, பெருங்கடல்
இரவுத்தலை மண்டிலம் பெயர்ந்தென, உரவுத் திரை
எறிவன போல வரூஉம்
உயர் மணல் படப்பை எம் உறைவின் ஊரே.

பாடல் பின்னணி:  தலைவன் வரையாது நெடுங்காலம் வந்தொழுக, தலைவியின் நிலையை உணர்த்தி வரைவு கடாயது.

பொருளுரைநீண்ட கிளைகளையுடைய புன்னை மரங்களின் நறுமணமுடைய பூந்தாதுக்கள் உதிருமாறு, அக்கிளைகளின் மேல் இருந்த குருகுகளின் தொகுதி அங்கிருந்து நீங்கும் பல கடற்கரைச் சோலைகளையுடைய, மிக்க நீரையுடைய நெய்தல் நிலத்தின் தலைவனே!  நீ அன்புடையை இல்லை ஆதலால், தன் அறிவின்படி ஒழுகும் என்னிடத்திலும் நாணும் நல்ல நெற்றியை உடையவள் மகிழும்படி, நீ வந்தால் நன்று.  பெரிய கடலில் இரவில் நிலவு எழுந்ததால் வலிமையான அலைகள் மோதுவன போல் வரும் உயர்ந்த மணல் நிரம்பிய தோப்புகளை உடையது யாம் உறையும் ஊர்.

குறிப்பு:  மண்டிலம் (7) – ஒளவை துரைசாமி உரை – வட்டம், ஈண்டு முழுத் திங்கள் மேற்று.  உள்ளுறை – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – புன்னைக் கிளைகளில் வைகிய குருகினம் அதன் மகரந்தம் உதிருமாறு கொம்பை அலைத்தெழுந்து செல்லுஞ்சேர்ப்பன் என்றதனால், களவொழுக்கம் மேற்கொண்டு தலைவிபால் வைகிய நீ அவள் அழுது கண்ணீர் வடிக்குமாறு கையகன்று போயினை.  இனி அங்கனமின்றி பிரியாது உறைவாயாக என்பதாம்.  இறைச்சி – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – திங்களைக் கண்டு கடல் பொங்கி அலை எழுந்து ஆரவாரிக்கும் என்றது, நீ வரைவொடு வருதல் கண்டு எமர் எதிர்கொண்டு மகிழ்ந்து ஆரவாரிப்பர் என்றதாம்.

சொற்பொருள்:  நீடு சினைப் புன்னை நறும் தாது உதிரக் கோடு புனை குருகின் தோடு தலைப்பெயரும் பல் பூங்கானல் மல்கு நீர்ச் சேர்ப்ப – நீண்ட கிளைகளையுடைய புன்னை மரங்களின் நறுமணமுடைய பூந்தாதுக்கள் உதிர அக்கிளைகளின் மேல் இருந்த குருகுகளின் தொகுதி அங்கிருந்து நீங்கும் பல கடற்கரைச் சோலைகளையுடைய மிக்க நீரையுடைய நெய்தல் நிலத்தின் தலைவனே (புன்னை மரம் – Laurel Tree, Mast wood Tree, Calophyllum inophyllum), அன்பு இலை ஆதலின் – நீ அன்புடையை இல்லை ஆதலால், தன் புலன் நயந்த என்னும் – தன் அறிவின்படி ஒழுகும் என்னிடத்திலும், நாணும் நன்னுதல் உவப்ப வருவை ஆயினோ நன்றே – நாணும் நல்ல நெற்றியை உடையவள் மகிழ நீ வந்தால் நன்று (ஆயினோ – ஓகாரம் அசைநிலை, நன்றே – ஏகாரம் அசைநிலை), பெருங்கடல் இரவுத்தலை மண்டிலம் பெயர்ந்தென உரவுத் திரை எறிவன போல வரூஉம் உயர் மணல் படப்பை எம் உறைவின் ஊரே – பெரிய கடலில் இரவில் நிலவு எழுந்ததால் வலிமையான அலைகள் மோதுவன போல் வரும் உயர்ந்த மணல் நிரம்பிய தோப்புகளை உடையது யாம் உறையும் ஊர் (வரூஉம் – செய்யுளிசை அளபெடை, ஊரே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 376, கபிலர், குறிஞ்சித் திணை – தோழி கிளிகளிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
முறஞ்செவி யானைத் தடக் கையின் தடைஇ
இறைஞ்சிய குரல பைந்தாட் செந்தினை,
வரையோன் வண்மை போல பல உடன்
கிளையோடு உண்ணும் வளைவாய்ப் பாசினம்,
குல்லை குளவி கூதளம் குவளை  5
இல்லமொடு மிடைந்த ஈர்ந்தண் கண்ணியன்,
சுற்று அமை வில்லன், செயலைத் தோன்றும்
நல் தார் மார்பன், காண்குறின், சிறிய
நன்கு அவற்கு அறிய உரைமின், பிற்றை
அணங்கும் அணங்கும் போலும், அணங்கி  10
வறும்புனம் காவல் விடாமை
அறிந்தனிர் அல்லிரோ, அறன் இல் யாயே?

பாடல் பின்னணி:  களவில் வந்தொழுகும் தலைவன் சிறைப்புறமாக இருப்பதை அறிந்த தோழி, தலைவி இற்செறிக்கப்பட்டாள் என்பதை அவனுக்கு அறிவுறுத்தி, விரைவில் மணம் செய்யுமாறு வேண்டுகின்றாள்.

பொருளுரைமுறம் போன்ற காதுகளை உடைய யானையின் வளைந்த (பெரிய)  தும்பிக்கையைப் போன்று வளைந்து (பெரியதாகி) தலை சாய்ந்த கதிர்களையும், பசிய அடித்தண்டையும் உடைய சிவந்த தினையை, எல்லையில்லாது கொடுப்பவனின் கொடையைப் பெறும் பரிசிலர் போல், பலவாகிய சுற்றத்துடன் வந்து உண்ணும் வளைந்த வாயையுடைய பச்சைக் கிளிகளே!  அறம் இல்லாத எங்கள் தாய், எம்மை வருத்திக் காவல் இல்லாத தினைப்புனத்தைக் காவல் செய்ய விடாது இருப்பதை நீயிர் அறிந்தீர்கள் அல்லவா?  அதன்பின் தாய் வெறியாட்டம் நிகழ்த்துவாள் ஆதலால், முருகவேளும் எம்மை வருத்தும் போலும்.  குல்லை குளவி கூதளம் குவளை இல்லம் ஆகிய மலர்களை இணைத்துக் கட்டிய மிகக் குளிர்ந்த மாலையை அணிந்தவனும், சுற்றி வரிந்து கட்டப்பட்ட வில்லை ஏந்தியவனும், அசோக மரத்தடியில் வந்து நிற்கும் நல்ல மாலை அணிந்த மார்பை உடையவனுமான எம் தலைவனைக் கண்டால், இங்கு நிகழ்ந்துள்ள சிலவற்றை அவனுக்கு நன்றாக நீங்கள் கூறுவீர்களாக.

குறிப்பு:  வறும்புனம் (11) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – காவல் இன்றி அழிகின்ற தினைப்புனம், ஒளவை துரைசாமி உரை – தினை அறுக்கப்பட்ட கொல்லை.  நற்றிணையின் தூது பாடல்கள் – தலைவியின் தூது, பறவை மூலமும் வண்டு மூலமும் தலைவனுக்கு அனுப்பியன – 54, 70, 102, 277, 376.  தோழி ஆந்தையிடம் கூறியது, தலைவன் கேட்கும்படிநற்றிணை 83.  யானையின் முறம் போன்ற செவி – நற்றிணை 376 புறநானூறு 339, நற்றிணை 376, கலித்தொகை 52 – முறஞ்செவி யானை, கலித்தொகை 42 – முறஞ்செவி வாரணம்.   அறன் இல் யாய் – குறுந்தொகை 244, 262, நற்றிணை 63, 145, 376.  தட – தடவும் கயவும் நளியும் பெருமை (தொல்காப்பியம், உரியியல் 24), அவற்றுள், தட என் கிளவி கோட்டமும் செய்யும் (தொல்காப்பியம், உரியியல் 25).

சொற்பொருள்:  முறஞ்செவி யானைத் தடக் கையின் தடைஇ இறைஞ்சிய குரல பைந்தாட் செந்தினை வரையோன் வண்மை போல – முறம் போன்ற காதுகளை உடைய யானையின் வளைந்த (பெரிய) தும்பிக்கையைப் போன்று வளைந்து (பெரியதாகி) தலை சாய்ந்த கதிர்களையும் பசிய அடித்தண்டையும் உடைய சிவந்த தினையை எல்லையில்லாது கொடுப்பவனின் கொடையைப் பெறும் பரிசிலர் போல் (கையின் – இன் உருபு ஒப்புப் பொருளது, தடைஇ – தட என்னும் உரிச்சொல் அடியாகப் பிறந்த வினையெச்சம், அளபெடை, குரல – குறிப்புப் பெயரெச்சம்), பல உடன் கிளையோடு உண்ணும் வளைவாய்ப் பாசினம் – பலவாகிய சுற்றத்துடன் வந்து உண்ணும் வளைந்த வாயையுடைய பச்சைக் கிளிகளே, குல்லை குளவி கூதளம் குவளை இல்லமொடு மிடைந்த ஈர்ந்தண் கண்ணியன் சுற்று அமை வில்லன் செயலைத் தோன்றும் நல் தார் மார்பன் காண்குறின் – குல்லை குளவி கூதளம் குவளை இல்லம் ஆகிய மலர்களை இணைத்துக் கட்டிய மிகக் குளிர்ந்த குளிர்ந்த மாலையை அணிந்தவனும் சுற்றி வரிந்து கட்டப்பட்ட வில்லை ஏந்தியவனும் அசோக மரத்தடியில் வந்து நிற்கும் நல்ல மாலை அணிந்த மார்பை உடையவனைக் கண்டால் (ஈர்ந்தண் – ஒருபொருட் பன்மொழி – குல்லை – marijuana or basil, குளவி – malai malli, panneer poo, Millingtonia hortensis, கூதளம் – koothalam, Convolvulus ipome, a three–lobed nightshade vine, குவளை – blue waterlilies, இல்லம் – சில்லம், தேற்றா மரம், Strychnos potatorum Linn), சிறிய நன்கு அவற்கு அறிய உரைமின் – சிலவற்றை அவனுக்கு நன்றாக நீங்கள் கூறுவீர்களாக (உரைமின் – முன்னிலைப் பன்மை ஏவல் வினைமுற்று விகுதி), பிற்றை அணங்கும் அணங்கும் போலும் – பின்பு முருகவேளும் எம்மை வருத்தும் போலும் (பிற்றை பின்றை என்பதன் விகாரம்), அணங்கி வறும்புனம் காவல் விடாமை அறிந்தனிர் அல்லிரோ – எம்மை வருத்திக் காவல் இல்லாத தினைப்புனத்தைக் காவல் செய்ய விடாது இருப்பதை நீயிர் அறிந்தீர்கள் அல்லவா, அறன் இல் யாயே – அறம் இல்லாத தாய் (அறன் – அறம் என்பதன் போலி, யாயே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 377, மடல் பாடிய மாதங்கீரனார், குறிஞ்சித் திணை – தலைவன் தோழி கேட்பத் தன்னுள்ளே கூறியது
மடல் மா ஊர்ந்து மாலை சூடிக்,
கண் அகன் வைப்பின் நாடும் ஊரும்
ஒண்ணுதல் அரிவை நலம் பாராட்டி,
பண்ணல் மேவலமாகி அரிது உற்று,
அது பிணி ஆக, விளியலம் கொல்லோ,  5
அகல் இரு விசும்பின் அரவுக் குறைபடுத்த
பசுங்கதிர் மதியத்து அகல் நிலாப் போல,
அளகம் சேர்ந்த சிறுநுதல்,
கழறுபு மெலிக்கும் நோய் ஆகின்றே?

பாடல் பின்னணி:  தலைவியைச் சந்திக்கத் தலைவன் தோழியை அணுகுகின்றான்.  அவன் வரைந்து கொள்ள வேண்டும் என்பதால் அவள் மறுத்துக் கூறவே, தலைவன் கூறியது.

பொருளுரைஅகன்ற இருண்ட வானில் இராகு என்னும் பாம்பு சிறிது பற்றிக் கொண்டதனால் குறைபட்டு விளங்கும் பசிய கதிர்களுடைய விரிந்த நிலவுபோல், கூந்தல் சேர்ந்த சிறிய நெற்றியையுடைய தலைவி எம்மை இடித்துறைக்குமாறு வருத்தும் நோயைச் செய்ததனால், பனை மடலால் செய்த குதிரையின் மேல் அமர்ந்துச் செலுத்தி, ஆவிரை எருக்கம் பூளை உழிஞை ஆகியவற்றால் கட்டிய மலர்மாலையை அணிந்து, அகன்ற இடத்தில் உள்ள நாடுகளிலும் ஊர்களிலும் ஒளியுடைய நெற்றியையுடைய தலைவியின் அழகைப் பாராட்டி, எம் காதலை யாவரும் அறியப்படுதலை விரும்பி, எம் உள்ளத்தை அரிதாக நிலைநிறுத்தி, அது எமக்கு நோயாக இருந்து இறந்துபடுவோம்.

குறிப்பு:  விளியலம் (5) – ஒளவை துரைசாமி உரை – விளியலம் என்ற எதிர்மறை முற்று ஓகார எதிர்மறை புணர்ந்து விளிகுவம் என்ற உடன்பாட்டுப் பொருள் தந்தது. விளியலம் கொல்லோ – ஒளவை துரைசாமி உரை – இறவாது ஒழிகுவமோ, இறந்து படுவேம். அரவு நுங்கு மதி: குறுந்தொகை 395 – அரவு நுங்கு மதியினுக்கு, அகநானூறு 114 – அரவு நுங்கு மதியின், அகநானூறு 313 – அரவு நுங்கு மதியின், நற்றிணை 377 – அரவுக் குறைபடுத்த பசுங்கதிர் மதியத்து, புறநானூறு 260 – பாம்பின் வை எயிற்று உய்ந்த மதியின், கலித்தொகை 15 – பாம்பு சேர் மதி போல, கலித்தொகை 104 – பால் மதி சேர்ந்த அரவினை, பரிபாடல் 10–76 – அரவு செறி உவவு மதியென, பரிபாடல் 11 – பாம்பு ஒல்லை மதியம் மறையவரு நாளில், சிறுபாணாற்றுப்படை 185 – மதி சேர் அரவின்.  மடல் ஏறுதல் – சங்க இலக்கியத்தில் மொத்தம் 16 பாடல்களில் மடல் ஏறுதல் பற்றிய குறிப்புகள் உள்ளன – குறுந்தொகை 14, 17, 32, 173, 182, நற்றிணை 146, 152, 220, 342, 377, கலித்தொகை 58, 61, 138, 139, 140, 141.  கலித்தொகை 138, 139, 140, 141 பாடல்களில் மட்டுமே தலைவன் மடல் குதிரையின் மீது செல்கின்றான்.  கலித்தொகை 138, 141 ஆகிய பாடல்களில் மடல் ஏறியதால் தலைவியை அடைகின்றான்.

சொற்பொருள்:  மடல் மா ஊர்ந்து மாலை சூடிக் கண் அகன் வைப்பின் நாடும் ஊரும் ஒண்ணுதல் அரிவை நலம் பாராட்டி – பனை மடலால் செய்த குதிரையின் மேல் அமர்ந்துச் செலுத்தி ஆவிரை எருக்கம் பூளை உழிஞை ஆகியவற்றால் கட்டிய மலர்மாலையை அணிந்து அகன்ற இடத்தில் உள்ள நாடுகளிலும் ஊர்களிலும் ஒளியுடைய நெற்றியையுடைய தலைவியின் அழகைப் பாராட்டி, பண்ணல் மேவலமாகி அரிது உற்று அது பிணி ஆக விளியலம் கொல்லோ – எம் காதலை யாவரும் அறியப்படுதலை விரும்பி எம் உள்ளத்தை அரிதாக நிலைநிறுத்தி அது எமக்கு நோயாக இருந்து இறந்துபடுவோம் (விளியலம் – தன்மைப் பன்மை, கொல்லோ – கொல் அசைநிலை, ஓகாரம் எதிர்மறை), அகல் இரு விசும்பின் அரவுக் குறைபடுத்த பசுங்கதிர் மதியத்து அகல் நிலாப் போல அளகம் சேர்ந்த சிறுநுதல் கழறுபு மெலிக்கும் நோய் ஆகின்றே – அகன்ற இருண்ட வானில் இராகு என்னும் பாம்பு சிறிது பற்றிக் கொண்டதனால் குறைபட்டு விளங்கும் பசிய கதிர்களுடைய விரிந்த நிலவுபோல் கூந்தல் சேர்ந்த சிறிய நெற்றியையுடைய தலைவி எம்மை இடித்துறைக்குமாறு வருத்தும் நோயைச் செய்தது (ஆகின்றே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 378, வடம வண்ணக்கன் பேரி சாத்தனார், நெய்தல் திணை – தோழி தலைவியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
யாமமும் நெடிய கழியும் காமமும்
கண்படல் ஈயாது பெருகும், தெண் கடல்
முழங்கு திரை முழவின் பாணியின் பைபயப்
பழம் புண் உறுநரின் பரவையின் ஆலும்,
ஆங்கு அவை நலியவும் நீங்கியாங்கும்  5
இரவு இறந்து எல்லை தோன்றலது, அலர்வாய்
அயல் இல் பெண்டிர் பசலை பாட
ஈங்கு ஆகின்றால் தோழி, ஓங்கு மணல்
வரி ஆர் சிறு மனை சிதைஇ வந்து
பரிவுதரத் தொட்ட பணி மொழி நம்பிப்,  10
பாடு இமிழ் பனி நீர்ச் சேர்ப்பனொடு
நாடாது இயைந்த நண்பினது அளவே.

பாடல் பின்னணி:  தலைவன் பிரிவால் வருந்திய தலைவியைத் தோழி ஆற்றுவித்தும், அவள் ஆற்றாளாயினள்.  களவில் வந்தொழுகும் தலைவன் ஒரு புறம் இருக்கின்றான் என்பதை அறிந்து, தலைவியிடம் தோழி கூறியது.

பொருளுரைதோழி!  இரவும் நெடும்பொழுதாகிக் கழியும்.  காதலும் உன்னை உறங்கவிடாது பெருகும்.  தெளிந்த கடலின் முழங்கும் அலைகள் முழவின் ஓசையைப் போல் மெல்ல மெல்ல ஒலித்து, நீண்ட நாட்கள் புண் அடைந்தவர்களைப் போல் அக்கடலில் அசைகின்றன.  அங்கு அவை இவ்வாறு வருத்தவும், ஒருவாறாக அவை நீங்கியவிடத்தும், இரவைக் கடந்து பகற்பொழுது தோன்றவில்லை.  உயர்ந்த மணல் மேட்டில் கோலம் இட்ட நம் சிறிய மனையைச் சிதைத்து, வந்து நம்மிடம் அன்புடன் கூறிய சொற்களை நம்பி, ஒலிக்கும் குளிர்ச்சி மிக்க நீரையுடைய கடற்கரைத் தலைவனுடன் ஆராயாது செய்துகொண்ட நட்பின் தன்மையினால், பழிச்சொற்களைக் கூறும் வாயையுடைய அயல் மனைப் பெண்கள் உன் மேனியில் ஏற்பட்ட பசைலையைக் குறித்துப் பேசுமாறு இங்கு நிலைமை ஆகியது.

குறிப்பு:  ஒப்புமை: கலித்தொகை 51– தெருவில் நாம் ஆடும் மணல் சிற்றில் காலின் சிதையா அடைச்சிய கோதை பரிந்து வரிப் பந்து கொண்டு ஓடி நோதக்க செய்யும் சிறு பட்டி.  புறநானூறு 209 – தெண் கடல் படு திரை இன் சீர்ப் பாணி தூங்கும்.  வரி ஆர் சிறு மனை (9) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – கோலமிட்ட சிறிய மணல் சிற்றில், ஒளவை துரைசாமி உரை – கோலமிட்ட சிறு மணல் வீடு.  கோலம் பற்றின குறிப்பு உள்ள பாடல்கள் – நற்றிணை 123, 283, 378.  காமம் – கமம் என்னும் சொல்லின் முதல் நீண்ட வடிவம், ‘நிறைந்த அன்பு’ என்பது இச்சொல்லின் பொருள் – பேரறிஞர் கு.வெ. பாலசுப்பிரமணியன் அவர்களின் விளக்கம், (கமம் நிறைந்து இயலும் – தொல்காப்பியம், சொல்லியல் 355).

சொற்பொருள்:  யாமமும் நெடிய கழியும் – இரவும் நெடும்பொழுதாகிக் கழியும், காமமும் கண்படல் ஈயாது பெருகும் – காதலும் உறங்கவிடாது பெருகும், தெண் கடல் முழங்கு திரை முழவின் பாணியின் பைபயப் பழம் புண் உறுநரின் பரவையின் ஆலும் – தெளிந்த கடலின் முழங்கும் அலைகள் முழவின் ஓசையைப் போல் மெல்ல மெல்ல ஒலித்து நீண்ட நாட்கள் புண் அடைந்தவர்களைப் போல் அக்கடலில் அசைகின்றன (பாணியின் – இன் உருபு ஒப்புப் பொருளது, ஐந்தாம் வேற்றுமை உருபு, பையப்பைய பைபய என மருவியது, உறுநரின் – இன் ஒப்புப் பொருளில் வந்தது, ஐந்தாம் வேற்றுமை உருபு), ஆங்கு அவை நலியவும் – அங்கு அவை இவ்வாறு வருத்தவும், நீங்கியாங்கும் – ஒருவாறாக அவை நீங்கியவிடத்தும், இரவு இறந்து எல்லை தோன்றலது – இரவைக் கடந்து பகற்பொழுது தோன்றவில்லை, அலர்வாய் அயல் இல் பெண்டிர் பசலை பாட ஈங்கு ஆகின்றால் – பழிச்சொற்களைக் கூறும் வாயையுடைய அயல் மனைப் பெண்கள் உன் மேனியில் ஏற்பட்ட பசைலையைக் குறித்துப் பேசுமாறு இங்கு நிலைமை ஆகியது (ஆகின்றால் – ஆகின்று + ஆல், ஆல் அசைநிலை), தோழி – தோழி, ஓங்கு மணல் வரி ஆர் சிறு மனை சிதைஇ வந்து பரிவுதரத் தொட்ட பணி மொழி நம்பிப் பாடு இமிழ் பனி நீர்ச் சேர்ப்பனொடு நாடாது இயைந்த நண்பினது அளவே – உயர்ந்த மணல் மேட்டில் கோலம் இட்ட சிறிய மனையைச் சிதைத்து வந்து நம்மிடம் அன்புடன் கூறிய சொற்களை நம்பி ஒலிக்கும் குளிர்ச்சி மிக்க நீரையுடைய கடற்கரைத் தலைவனுடன் ஆராயாது செய்துகொண்ட நட்பின் இயல்பு (சிதைஇ – செய்யுளிசை அளபெடை, அளவே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 379, குடவாயிற் கீரத்தனார், குறிஞ்சித் திணை – தோழி தலைவியிடம் சொன்னது அல்லது தலைவி தோழியிடம் சொன்னது
புன்தலை மந்தி கல்லா வன்பறழ்
குன்று உழை நண்ணிய முன்றில் போகாது,
எரி அகைந்தன்ன வீ ததை இணர
வேங்கை அம் படுசினைப் பொருந்தி, கைய
தேம்பெய் தீம்பால் வெளவலின், கொடிச்சி   5
எழுது எழில் சிதைய அழுத கண்ணே,
தேர் வண் சோழர் குடந்தைவாயில்
மாரி அம் கிடங்கின் ஈரிய மலர்ந்த
பெயல் உறு நீலம் போன்றன; விரலே
பாஅய் அவ் வயிறு அலைத்தலின், ஆனாது  10
ஆடு மழை தவழும் கோடு உயர் பொதியில்
ஓங்கு இருஞ்சிலம்பில் பூத்த
காந்தள் அம் கொழு முகை போன்றன சிவந்தே.

பாடல் பின்னணி:  தோழி தலைவியின் மடமை கூறியது.  இல்லத்தில் காப்பு கைம்மிக்க காலத்தில் தலைவி தோழிக்குச் சொல்லியதுமாம்.

பொருளுரைபுல்லிய தலையையுடைய பெண் குரங்கின் தன் தொழிலைக் கற்காத வலிய குட்டி, குன்றில் பொருந்திய இல்லத்தின் முற்றத்திலிருந்து அகலாமல், அழல் தழைத்தாற்போல மலர்கள் நெருங்கிய கொத்துக்களையுடைய வேங்கை மரத்தின் தாழ்ந்த கிளையில் இருந்து, தன் கையில் இருந்த தேன் பெய்து கலந்த இனிய பாலைக் கவர்ந்துக் கொண்டதால், குறமகளாகிய தலைவி ஓவியர் எழுதினாற்போல் உள்ள தன் அழகு சிதையுமாறு அழுத அவளுடைய கண்கள் இரவலர்களுக்குப் பரிசாகத் தேர்களைத் தரும் சோழ மன்னற்குரிய குடந்தைவாயில் என்னும் ஊரின் மழை விழுந்து நிரம்பிய கிடங்கில் உள்ள, குளிர்ந்த பெய்யும் மழை நீரை ஏற்ற நீலமலர்களை ஒத்தன. அவளுடைய விரல்களோ, தன்னுடைய அழகிய வயிற்றில் பரவலாக அவள் அடித்ததனால், விடாது முகில்கள் தவழும் மலை உச்சிகள் பொருந்திய பொதியில் மலையின் உயர்ந்த பெரிய பக்கத்தில் மலர்ந்த காந்தளின் அழகிய கொழுவிய அரும்புகள் போன்றுள்ளன சிவந்து.

குறிப்பு:  தேம்பெய் தீம்பால் (5) – ஒளவை துரைசாமி உரை – தேன் பெய் தீம்பால் தேம்பெய் தீம்பால் என வந்தது.  தேனென் கிளவி முன் வல்லெழுத்து இயையின்……மெல்லெழுத்து மிகினும் மானமில்லை – தொல்காப்பியம், எழுத்ததிகாரம் 132.  எழுது எழில் (6) – ஒளவை துரைசாமி உரை – கையெழுதப் பிறந்த அழகு, பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – ஓவியர் எழுதற்குரிய அழகு.   வயிற்றில் அடித்தல் – நற்றிணை 179 – அவ் வயிறு அலைத்த என் செய் வினைக் குறுமகள், நற்றிணை 379 – அவ் வயிறு அலைத்தலின், நற்றிணை 398 – அவ் வயிறு அலைப்ப உடன் இயைந்து ஓரை மகளிரும், அகநானூறு 106 –பாணன் எறியும் தண்ணுமை கண்ணின் அலைஇயர் தன் வயிறே.  வரலாறு:  சோழர், குடந்தைவாயில்.  தேம்பெய் – தேனென் கிளவி வல்லெழுத்து இயையின் மேல் நிலை ஒத்தலும் வல்லெழுத்து மிகுதலும் ஆ முறை இரண்டும் உரிமையும் உடைத்தே வல்லெழுத்து மிகு வழி இறுதி இல்லை.  மெல்லெழுத்து மிகினும் மானம் இல்லை (தொல்காப்பியம், புள்ளிமயங்கியல் 46).  மந்தி – பேடையும் பெடையும் பெட்டையும் பெண்ணும் மூடும் நாகும் கடமையும் அளகும் மந்தியும் பாட்டியும் பிணையும் பிணவும் அந்தம் சான்ற பிடியொடு பெண்ணே (தொல்காப்பியம், மரபியல் 3).

சொற்பொருள்:  புன்தலை மந்தி கல்லா வன்பறழ் குன்று உழை நண்ணிய முன்றில் போகாது எரி அகைந்தன்ன வீ ததை இணர வேங்கை அம் படுசினைப் பொருந்தி கைய தேம்பெய் தீம்பால் வெளவலின் – புல்லிய தலையையுடைய பெண் குரங்கின் தன் தொழிலைக் கற்காத வலிய குட்டி குன்றில் பொருந்திய இல்லத்தின் முற்றத்திலிருந்து அகலாமல் அழல் தழைத்தாற்போல மலர்கள் நெருங்கிய கொத்துக்களையுடைய வேங்கை மரத்தின் தாழ்ந்த கிளையில் இருந்து கையில் இருந்த தேன் பெய்து கலந்த இனிய பாலைக் கவர்ந்துக் கொண்டதால் (வேங்கை மரம் – kino tree, Pterocarpus marsupium, கைய – குறிப்புப் பெயரெச்சம், தேம் தேன் என்றதன் திரிபு), கொடிச்சி எழுது எழில் சிதைய அழுத கண்ணே – குறமகளாகிய தலைவி ஓவியர் எழுதினாற்போல் உள்ள அழகு சிதைய அழுத அவளுடைய கண்கள் (கண்ணே – ஏகாரம் அசைநிலை), தேர் வண் சோழர் குடந்தைவாயில் மாரி அம் கிடங்கின் ஈரிய மலர்ந்த பெயல் உறு நீலம் போன்றன – இரவலர்களுக்குப் பரிசாகத் தேர்களைத் தரும் சோழ மன்னற்குரிய குடந்தைவாயில் என்னும் ஊரின் மழை விழுந்து நிரம்பிய கிடங்கில் உள்ள குளிர்ந்த பெய்யும் மழை நீரை ஏற்ற நீலமலர்களை ஒத்தன, விரலே பாஅய் அவ் வயிறு அலைத்தலின் ஆனாது ஆடு மழை தவழும் கோடு உயர் பொதியில் ஓங்கு இருஞ்சிலம்பில் பூத்த காந்தள் அம் கொழு முகை போன்றன சிவந்தே – அவளுடைய விரல்களோ அழகிய வயிற்றில் பரவலாக அடித்ததனால் விடாது முகில்கள் தவழும் மலை உச்சிகள் பொருந்திய பொதியில் மலையின் உயர்ந்த பெரிய பக்கத்தில் மலர்ந்த காந்தளின் அழகிய கொழுவிய அரும்புகள் போன்றுள்ளன சிவந்து (விரலே – ஏகாரம் அசைநிலை, பாஅய் – செய்யுளிசை அளபெடை, சிவந்தே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 380, கூடலூர்ப் பல்கண்ணனார், மருதத் திணை – தோழி தலைவனின் தூதுவனாக வந்த பாணனிடம் சொன்னது
நெய்யும் குய்யும் ஆடி மையொடு
மாசு பட்டன்றே கலிங்கமும்; தோளும்
திதலை மென் முலைத் தீம் பால் பிலிற்ற
புதல்வற் புல்லிப் புனிறு நாறும்மே;
வால் இழை மகளிர் சேரித் தோன்றும்  5
தேரோற்கு ஒத்தனெம் அல்லேம்; அதனால்
பொன் புரை நரம்பின் இன் குரல் சீறியாழ்
எழாஅல் வல்லை ஆயினும் தொழாஅல்;
கொண்டு செல் பாண நின் தண்துறை ஊரனைப்,
பாடு மனைப் பாடல் கூடாது நீடு நிலைப்  10
புரவியும் பூண் நிலை முனிகுவ
விரகு இல மொழியல், யாம் வேட்டது இல்வழியே.

பாடல் பின்னணி:  பாணற்குத் தோழி வாயில் மறுத்தது.

பொருளுரைநெய்யும் தாளிப்புப் புகையும் படிந்து எம் ஆடை அழுக்கு அடைந்துள்ளது. தேமல் பொருந்திய எம் மென்மையான முலைகளில் இனிய பால் சுரப்ப மகனை அணைப்பதால் முடை நாற்றம் வீசுகின்றது தோள்களில்.  தூய அணிகலன்களை அணிந்த பரத்தையரின் தெருவில் தோன்றும் தேரையுடைய தலைவனுக்கு, கூடுவதற்கு யாம் தகுதி உடையேம் அல்லேம்.  அதனால், பொன்னைப் போன்ற நரம்புடைய சிறிய யாழை நீ எடுத்து இன்னிசை எழுப்ப வல்லவன் ஆனாலும், இங்கு எம்மைத் தொழுது நீ பாடாதே.  பரத்தையர் இல்லத்திற்குக் கொண்டு செல் பாணனே நின் குளிர்ந்த துறையின் தலைவனை.  சிறந்த எம் மனையில் பாடாதபடி, நீண்ட நேரம் நிற்கின்ற தேரில் பூட்டிய குதிரைகளும் தம்மைக் கட்டியிருத்தலை வெறுக்கின்றன.  பயனற்ற சொற்களை எம்மிடம் கூறாதே, யாம் விரும்பாத இடத்து.

குறிப்பு: புனிறு – புனிறு என் கிளவி ஈன்றணிமைப் பொருட்டே, தொல்காப்பியம், உரியியல் 79.  ஒத்தனெம் அல்லேம், யாம் வேட்டது – தலைவியும் தோழியும் மிக நெருங்கிய நட்பு உடையவர்கள் என்பதாலும், தலைவியின் களவு ஒழுக்கத்திற்குத் தோழி உதவுவதாலும், தலைவனைத் தோழி நன்கு அறிந்தவள் என்பதாலும், தலைவியின் பொருட்டு இவ்வாறு பன்மையாற் கூறினாள்.

சொற்பொருள்:  நெய்யும் குய்யும் ஆடி மையொடு மாசு பட்டன்றே கலிங்கமும் – நெய்யும் தாளிப்புப் புகையும் படிந்து ஆடை அழுக்கு அடைந்துள்ளது, தோளும் திதலை மென் முலைத் தீம் பால் பிலிற்ற புதல்வற் புல்லிப் புனிறு நாறும்மே – தேமல் பொருந்திய மென்மையான முலைகளில் இனிய பால் சுரப்ப மகனை அணைப்பதால் முடை நாற்றம் வீசுகின்றது தோள்களில் (நாறும்மே – செய்யுளோசை நோக்கி மகர ஒற்று விரிந்தது), வால் இழை மகளிர் சேரித் தோன்றும் தேரோற்கு ஒத்தனெம் அல்லேம் – தூய அணிகலன்களை அணிந்த பரத்தையரின் தெருவில் தோன்றும் தேரையுடைய தலைவனுக்கு கூடுவதற்கு யாம் தகுதி உடையேம் அல்லேம் (ஒத்தனெம் – தன்மைப் பன்மை வினைமுற்று), அதனால் – அதனால், பொன் புரை நரம்பின் இன் குரல் சீறியாழ் எழாஅல் வல்லை ஆயினும் தொழாஅல்  – பொன்னைப் போன்ற நரம்புடைய சிறிய யாழை நீ எடுத்து இன்னிசை எழுப்ப வல்லவன் ஆனாலும் இங்கு எம்மைத் தொழுது நீ பாடாதே (புரை – உவம உருபு, எழாஅல் – செய்யுளிசை அளபெடை, தொழாஅல் – செய்யுளிசை அளபெடை), கொண்டு செல் பாண நின் தண்துறை ஊரனை – பரத்தையர் இல்லத்திற்குக் கொண்டு செல் பாணனே நின் குளிர்ந்த துறையின் தலைவனை, பாடு மனைப் பாடல் கூடாது நீடு நிலைப் புரவியும் பூண் நிலை முனிகுவ – சிறந்த எம் மனையில் பாடாதபடி நீண்ட நேரம் நிற்கின்ற தேரில் பூட்டிய குதிரைகளும் தம்மைக் கட்டியிருத்தலை வெறுக்கின்றன, விரகு இல மொழியல் யாம் வேட்டது இல்வழியே – பயனற்ற சொற்களை எம்மிடம் கூறாதே யாம் விரும்பாத இடத்து (இல்வழியே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 381, ஒளவையார், முல்லைத் திணை – தலைவி சொன்னது
அருந்துயர் உழத்தலின் உண்மை சான்ம் எனப்
பெரும்பிறிது இன்மையின் இலேனும் அல்லேன்;
கரை பொருது இழிதரும் கான் யாற்று இகு கரை
வேர் கிளர் மராஅத்து அம் தளிர் போல,
நடுங்கல் ஆனா நெஞ்சமொடு, இடும்பை  5
யாங்கனம் தாங்குவென் மற்றே? ஓங்கு செலல்
கடும் பகட்டு யானை நெடுமான் அஞ்சி,
ஈர நெஞ்சமோடு இசை சேண் விளங்கத்,
தேர் வீசு இருக்கை போல,
மாரி இரீஇ மான்றன்றால் மழையே.  10

பாடல் பின்னணி:  பிரிவிடை ஆற்றாளாகிய தலைவி பருவ வரவின்கண் கூறியது.

பொருளுரைதாங்குதற்கு இயலாத துன்பத்தில் உழல்வதால், அதற்குச் சான்றாக நான் இறந்தால், அவர் மேல் அன்புடையேன் என்பது உண்மையாகும்.  அவ்வாறு இறக்காதலால், நான் அன்பு இல்லாதவள் இல்லை. நான் அவர் மேல் அன்புடையவள். கரையில் மோதி ஓடிவரும் காட்டு ஆற்றின் இடிந்த கரையில் வேர்கள் கிளர்ந்த (வெளிப்பட்ட) கடம்ப மரத்தின் அழகிய தளிர் போல் நடுங்குதல் நீங்காத நெஞ்சத்துடன், துன்பத்தை எவ்வாறு நான் தாங்குவேன்?  ஓங்கிய நடையையும் மிக்க பெருமையையுமுடைய யானைகளை உடைய நெடுமான் அஞ்சியின் அருள்மிக்க நெஞ்சுடன் தன் புகழ் தொலைவில் விளங்கும்படி தேர்களை இரவலர்க்கு வழங்கும் திருவோலக்கம் (அரச அவை) காண்பவர்களை மயக்க வைப்பதுபோல் முகில்கள் மழைபெய்யத் தொடங்கி என்னை மயக்குகின்றன.

குறிப்பு:  வரலாறு:  அதியமான் நெடுமான் அஞ்சி.  உண்மை சான்ம் என (1) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – இறந்தொழியின் அவர்பால் அன்புடையேன் என்பது உண்மையாகும், ஒளவை துரைசாமி உரை – அன்பு உண்மைக்கு அதுவே அமையும் என.  சான்ம் – ஒளவை துரைசாமி உரை – சாலும் என்பது ஈற்றசை உகரம் கெட்டுச் சான்ம் என நின்றது.  ஈற்று மகரமெய் மகரக்குறுக்கம்.  மான்றன்றால் (10) – ஒளவை துரைசாமி உரை – மயக்குகின்றது ஆகலான், பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – ஒரு தன்மையாய் பெய்யாநின்றது.  மான்றன்று – அகநானூறு 300 – வேங்கடசாமி நாட்டார் உரை – மயங்கிவிட்டது, பொ. வே. சோமசுந்தரனார் உரை – மயங்கியது, அகநானூறு 340 – வேங்கடசாமி நாட்டார் உரை – மயங்கியது, பொ. வே. சோமசுந்தரனார் உரை – மயங்கியது.  கடையெழு வள்ளல்கள் – ஆய், பாரி, காரி, ஓரி, அதிகன், பேகன், நள்ளி.

சொற்பொருள்:  அருந்துயர் உழத்தலின் – தாங்குதற்கு இயலாத துன்பத்தில் உழல்வதால், உண்மை சான்ம் என – சான்றாக நான் இறந்தால் அவர்மேல் அன்புடையேன் என்பது உண்மையாகும், அன்பு உண்மைக்கு அதுவே அமையும் என, பெரும்பிறிது இன்மையின் – அவ்வாறு இறக்காதலால் (பெரும்பிறிது – சாவு), இலேனும் அல்லேன் – நான் அன்பு இல்லாதவள் இல்லை, நான் அவர் மேல் அன்புடையவள், கரை பொருது இழிதரும் கான் யாற்று இகு கரை வேர் கிளர் மராஅத்து அம் தளிர் போல நடுங்கல் ஆனா நெஞ்சமொடு – கரையில் மோதி ஓடிவரும் காட்டு ஆற்றின் இடிந்த கரையில் வேர்கள் கிளர்ந்த (வெளிப்பட்ட) கடம்ப மரத்தின் அழகிய தளிர் போல் நடுங்குதல் நீங்காத நெஞ்சத்துடன் (மராஅத்து – அளபெடை, மராம் மரம் – கடம்ப மரம், Anthocephalus cadamba, Kadampa Oak), இடும்பை யாங்கனம் தாங்குவென் – துன்பத்தை எவ்வாறு நான் தாங்குவேன், மற்றே – மற்று, ஏகாரம் அசைநிலை, ஓங்கு செலல் கடும் பகட்டு யானை நெடுமான் அஞ்சி ஈர நெஞ்சமோடு இசை சேண் விளங்கத் தேர் வீசு இருக்கை போல மாரி இரீஇ மான்றன்றால் மழையே – ஓங்கிய நடையையும் மிக்க பெருமையையுமுடைய யானைகளை உடைய  நெடுமான் அஞ்சியின் அருள்மிக்க நெஞ்சுடன் தன் புகழ் தொலைவில் விளங்கும்படி தேர்களை இரவலர்க்கு வழங்கும் திருவோலக்கம் (அரச அவை) காண்பவர்களை மயக்க வைப்பதுபோல் முகில்கள் மழைபெய்யத் தொடங்கி என்னை மயக்குகின்றன (செலல் – செல்லல் என்பதன் இடைக்குறை, மாரி – முகில், இரீஇ – செய்யுளிசை அளபெடை, மான்றன்றால் – மான்றன்று, மால் என்பதன் அடியாகப் பிறந்த இறந்தகால முற்றுவினைத் திரிசொல், ஆல் – அசைநிலை, மழையே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 382, நிகண்டன் கலைக்கோட்டுத் தண்டனார், நெய்தல் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
கானல் மாலைக் கழி நீர் மல்க,
நீல் நிற நெய்தல் நிரை இதழ் பொருந்த
ஆனாது அலைக்கும் கடல் மீன் அருந்திப்,
புள்ளினம் குடம்பை உடன் சேர்பு உள்ளார்
துறந்தோர் தேஎத்து இருந்து, நனி வருந்தி,  5
ஆர் உயிர் அழிவது ஆயினும் நேரிழை,
கரத்தல் வேண்டுமால் மற்றே பரப்பு நீர்த்
தண்ணந்துறைவன் நாண,
நண்ணார் தூற்றும் பழி தான் உண்டே.

பாடல் பின்னணி:  களவில் வந்தொழுகும் தலைவன் வராததால் வருந்திய தலைவியை ஆற்றுப்படுத்துகின்றாள் தோழி.  அவளிடம் தலைவி கூறியது.

பொருளுரைநேர்த்தியான அணிகலன்களை அணிந்தவளே!  மாலை நேரத்தில், உப்பங்கழியின் நீர் பெருகிக் கடற்கரைச் சோலையெங்கும் பரவ, நீல நிற நெய்தலின் வரிசையாக உள்ள இதழ்கள் குவிய, அமையாது அலைகள் அசையும் கடலில், மீன்களை உண்ட பறவைகள் கூட்டம் தங்கள் கூடுகளுக்கு ஒன்று சேர்ந்து செல்லும் என்பதை எண்ணாதவராய், நம்மைத் துறந்த நம் தலைவர் முன்பு நம்முடன் இருந்த இடத்தில் இருந்து மிகவும் வருந்தி, பெறுதற்கு அரிய நம் உயிர் அழிவது ஆனாலும், நம் துன்பம் பிறர்க்குப் புலனாகாதவாறு அதை மறைக்க வேண்டும்.  அதை மறைக்காவிட்டால், பரந்த கடல் நீரின் குளிர்ந்த துறையின் தலைவன் நாணும்படி, அவரைப் பகைவர்கள் தூற்றும் பழி தான் ஏற்படும்.

குறிப்பு:  தேஎத்து (5) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – தங்கியிருந்த இடத்து, ஒளவை துரைசாமி உரை – பிரிந்து சென்ற காதலர் பொருட்டு, தேஎத்து என ஏழாவதன் பொருள்பட வருவதாயினும் ஈண்டு நான்காவதற்குரிய பொருட்டுப் பொருள்பட வந்தது.  நனி – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3).

சொற்பொருள்:  கானல் மாலைக் கழி நீர் மல்க நீல் நிற நெய்தல் நிரை இதழ் பொருந்த ஆனாது அலைக்கும் கடல் மீன் அருந்திப் புள்ளினம் குடம்பை உடன் சேர்பு உள்ளார் – மாலை நேரத்தில் உப்பங்கழியின் நீர் பெருகிக் கடற்கரைச் சோலையெங்கும் பரவ நீல நிற நெய்தலின் வரிசையாக உள்ள இதழ்கள் குவிய அமையாது அலைகள் அசையும் கடலில் மீன்களை உண்ட பறவைகள் கூட்டம் தங்கள் கூடுகளுக்கு ஒன்று சேர்ந்து செல்லும் என்பதை எண்ணாது இருக்கின்றார் (நீல் – கடைக்குறை, உள்ளார் – முற்றெச்சம்), துறந்தோர் தேஎத்து இருந்து நனி வருந்தி ஆர் உயிர் அழிவது ஆயினும் – துறந்த நம் தலைவர் முன்பு நம்முடன் இருந்த இடத்து இருந்து மிகவும் வருந்தி பெறுதற்கு அரிய உயிர் அழிவது ஆனாலும் (துறந்தோர் – ஒருமை பன்மை மயக்கம், தேஎத்து – அளபெடை, தேஎம் – இடம்), நேரிழை – நேர்த்தியான அணிகலன்களை அணிந்தவளே (அண்மை விளி), கரத்தல் வேண்டுமால் – மறைக்க வேண்டும் (வேண்டுமால் – வேண்டும் + ஆல், ஆல் அசைநிலை), மற்றே – மற்று வினை மாற்றின்கண் வந்தது, ஏகாரம் அசைநிலை, பரப்பு நீர்த் தண்ணந்துறைவன் நாண நண்ணார் தூற்றும் பழி தான் உண்டே – பரந்த கடல் நீரின் குளிர்ந்த துறையின் தலைவன் நாணும்படி பகைவர்கள் தூற்றும் பழி தான் உண்டு (தண்டுறைவன் என்பது தண்ணந்துறைவன் ஆவது, அம் – சாரியை, விரிக்கும் வழி விரித்தல், உண்டே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 383, கோளியூர்கிழார் மகனார் செழியனார், குறிஞ்சித் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
கல் அயல் கலித்த கருங்கால் வேங்கை
அலங்கல் அம் தொடலை அன்ன குருளை
வயப் புனிற்று இரும் பிணப் பசித்தென, வயப் புலி
புகர் முகம் சிதையத் தாக்கி, களிறு அட்டு,
உரும் இசை உரறும் உட்குவரு நடுநாள்  5
அருளினை போலினும், அருளாய் அன்றே,
கனை இருள் புதைத்த அஞ்சுவரும் இயவில்
பாம்பு உடன்று இரிக்கும் உருமோடு
ஓங்கு வரை நாட, நீ வருதலானே.

பாடல் பின்னணி:  களவில் வந்தொழுகும் தலைவனை வழியில் உள்ள ஏதம் கருதித் தோழி உரைத்தது.

பொருளுரைஉயர்ந்த மலையின் நாடனே!  மலையின் அருகில் தழைத்த கரிய அடியையுடைய வேங்கை மரத்தின் அசைதல் உடைய பூமாலையைப் போன்ற மலர்க்கொத்துக்களை ஒத்த குட்டிகளை அண்மையில் ஈன்ற வய நோய் பொருந்திய கரிய பெண்புலி பசியால் வருந்தியதால், வலிமையுடைய அதன் ஆண்புலி, புள்ளிகளையுடைய முகம் சிதையும்படித் தாக்கிக் களிற்று யானையைக் கொன்று இடி போல் உறுமும், அச்சம் தரும் நடு இரவில், எம்மை அருள்வாய் போல் நீ வந்தாலும், அருள் உடையை இல்லை நீ, அடர்ந்த இருள் மறைத்த அஞ்சத்தக்க வழியில் பாம்பின் மேல் விழுந்துக் கொல்லும் இடி முழங்கும் வேளையில் நீ வருவதால்.

குறிப்பு:  இறைச்சி – கு. வெ. பாலசுப்பிரமணியன் உரை – ஆண்புலி தன் பிணவுக்காகக் களிறு அடும் என்றது, தலைவியை வரைந்து கொள்ளக் கடிதின் முயன்று பொருள் ஈட்டி வெற்றியோடு வருக எனத் தலைவற்கு உணர்த்தவாம்.  அன்று (6) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – அசைநிலை, ஒளவை துரைசாமி உரை – அன்றே என்றவிடத்து அன்றென்னும் எதிர்மறைக் குறிப்பும் எதிர்மறை ஏகாரமும் புணர்ந்து ஆம் என உடன்பாட்டுப் பொருள் தந்தன.  இடி பாம்புகளை வருத்தவும் கொல்லவும் செய்யும் என்னும் செய்தி உள்ள பாடல்கள் – அகநானூறு 92, 119, 182, 202, 274, 323, 328, கலித்தொகை 45, 113, குறுந்தொகை 158, 190, 268, 391, நற்றிணை 37, 51, 114, 129, 238, 255, 264, 347, 383, புறநானூறு 17, 37, 58, 126, 211, 366, 369.  ஆண் புலி புதிதாக ஈன்ற தன் பெண் புலிக்கு உணவாக வழியில் செல்பவர்களைக் கொல்ல விரும்புதல் – நற்றிணை 29, 148, 332, 383, அகநானூறு 112, 147, 238.  அண்மையில் ஈன்ற துணைக்கு உணவு தேடல்:  புலி – நற்றிணை 29, 148, 332, 383, அகநானூறு 112, 147, 238, கழுகு – அகநானூறு 3, செந்நாய் – அகநானூறு 21, அகநானூறு 85, புறா – நற்றிணை 384, யானை – நற்றிணை 393, நாரை – நற்றிணை 263. சாயல் – சாயல் மென்மை (தொல்காப்பியம், உரியியல் 29).  புனிறு – புனிறு என் கிளவி ஈன்றணிமைப் பொருட்டே (தொல்காப்பியம், உரியியல் 79).  குருளை – மாற்ற அருஞ் சிறப்பின் மரபு இயல் கிளப்பின் பார்ப்பும் பறழும் குட்டியும் குருளையும் கன்றும் பிள்ளையும் மகவும் மறியும் என்று ஒன்பதும் குழவியொடு இளமைப் பெயரே (தொல்காப்பியம், மரபியல் 1).  நாயே பன்றி புலி முயல் நான்கும் ஆயும் காலை குருளை என்ப (தொல்காப்பியம், மரபியல் 8).  நாயே பன்றி புலி முயல் நான்கும் ஆயும் காலை குருளை என்ப (தொல்காப்பியம், மரபியல் 8).

சொற்பொருள்:  கல் அயல் கலித்த கருங்கால் வேங்கை அலங்கல் அம் தொடலை அன்ன குருளை வயப் புனிற்று இரும் பிணப் பசித்தென – மலையின் அருகில் தழைத்த கரிய அடியையுடைய வேங்கை மரத்தின் அசைதல் உடைய பூமாலையைப் போன்ற மலர்க்கொத்துக்களை ஒத்த குட்டிகளை அண்மையில் ஈன்ற வய நோய் பொருந்திய கரிய பெண்புலி பசியால் வருந்தியதால் (வேங்கை மரம் – kino tree, Pterocarpus marsupium), வயப் புலி புகர் முகம் சிதையத் தாக்கி களிறு அட்டு உரும் இசை உரறும் – வலிமையுடைய ஆண்புலி புள்ளிகளையுடைய முகம் சிதையும்படித் தாக்கிக் களிற்று யானையைக் கொன்று இடி போல் உறுமும், உட்குவரு நடுநாள் அருளினை போலினும் – அச்சம் தரும் நடு இரவில் எம்மை அருள்வாய் போல் வந்தாலும், அருளாய் அன்றே – நீ அருள் உடையை இல்லை, கனை இருள் புதைத்த அஞ்சுவரும் இயவில் பாம்பு உடன்று இரிக்கும் உருமோடு ஓங்கு வரை நாட – அடர்ந்த இருள் மறைத்த அஞ்சத்தக்க வழியில் பாம்பின் மேல் விழுந்துக் கொல்லும் இடியையுடைய உயர்ந்த மலையின் நாடனே, நீ வருதலானே – நீ வருவதால் (வருதலானே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 384, சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோ, பாலைத் திணை – தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது
வண்புறப் புறவின் செங்கால் சேவல்
களரி ஓங்கிய கவை முட் கள்ளி
முளரி அம் குடம்பை ஈன்று இளைப்பட்ட
உயவு நடைப் பேடை உணீஇய, மன்னர்
முனை கவர் முது பாழ் உகு நெல் பெறூஉம்  5
அரண் இல் சேய் நாட்டு அதர் இடை மலர்ந்த
நன்னாள் வேங்கைப் பொன் மருள் புதுப் பூப்
பரந்தன நடக்க, யாம் கண்டனம் மாதோ,
காண் இனி, வாழி என் நெஞ்சே, நாண் விட்டு
அருந்துயர் உழந்த காலை  10
மருந்து எனப்படூஉம் மடவோளையே.

பாடல் பின்னணி:  உடன்போக்கின் பொழுது தலைவன் கூறியது.

பொருளுரைஎன் நெஞ்சே!  நீ நீடு வாழ்வாயாக!  நான் நாணத்தைக் கைவிட்டு காதல் நோயால் பெரும் துன்பமுற்ற வேளையில், மருந்தாக உள்ள இளையவளாகிய நம் தலைவி, வளமான புறத்தையும் சிவந்த கால்களையும் கொண்ட புறாவின் சேவல் ஒன்று, பிளவுபட்ட முட்களையுடைய கள்ளியின் மேல் சுள்ளியால் அமைத்த கூட்டில் பிள்ளைகளை ஈன்று தளர்ந்த வருந்திய நடையையுடைய தன் பெண் புறா உண்ணுவதற்காக, பகை மன்னர் போரில் தோற்கடித்துக் கொள்ளைக் கொண்டதால், முதிர்ந்த பாழ்பட்ட நிலத்தில் தானே உதிர்ந்து விழுந்த நெற்கதிர்களைப் பெறுகின்ற, பாதுகாப்பு இல்லாத தொலை நாட்டிற்குச் செல்லும் வழியில், நல்ல விடியற்காலையில் மலர்ந்த வேங்கை மரத்தின் கீழே உதிர்ந்த பொன் போன்ற புது மலர்களின் பரப்பில் நடப்பதை யாம் கண்டோம்.  இதை நீ கண்டு மகிழ்வாயாக.

குறிப்பு:  ஈன்று இளைப்பட்ட (3) – பிள்ளைகளை ஈன்று அவற்றைக் காவல் செய்யுமாறு பொருந்திய, H. வேங்கடராமன் உரை – பிள்ளைகளைப் பெற்று அவற்றைக் காத்தலால் சோர்வுற்றுத் தளர்ந்த.  ஈன்று இளைப்பட்ட – அகநானூறு 3, 21, 238, நற்றிணை 384.  நன்னாள் வேங்கை (7) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – நல்ல நாட்காலையில் மலர்ந்த வேங்கை, ஒளவை துரைசாமி உரை – திருமணக் காலம் நோக்கி மலர்ந்த வேங்கை.  அண்மையில் ஈன்ற துணைக்கு உணவு தேடல்:  புலி – நற்றிணை 29, 148, 332, 383, அகநானூறு 112, 147, 238, கழுகு – அகநானூறு 3, செந்நாய் – அகநானூறு 21, அகநானூறு 85, புறா – நற்றிணை 384, யானை – நற்றிணை 393, நாரை – நற்றிணை 263.  சேவல் – சேவல் பெயர்க்கொடை சிறகொடு சிவணும் மா இருந் தூவி மயில் அலங்கடையே (தொல்காப்பியம், மரபியல் 49).

சொற்பொருள்:  வண்புறப் புறவின் செங்கால் சேவல் களரி ஓங்கிய கவை முட் கள்ளி முளரி அம் குடம்பை ஈன்று இளைப்பட்ட உயவு நடைப் பேடை உணீஇய – வளமான புறத்தையும் சிவந்த கால்களையும் கொண்ட புறாவின் சேவல் பிளவுபட்ட முட்களையுடைய கள்ளியின் மேல் சுள்ளியால் அமைத்த கூட்டில் பிள்ளைகளை ஈன்று தளர்ந்த வருந்திய நடையையுடைய தன் பெண் புறா உண்ணுவதற்காக (உணீஇய – அளபெடை), மன்னர் முனை கவர் முது பாழ் உகு நெல் பெறூஉம் – பகை மன்னர் போரில் தோற்கடித்துக் கொள்ளைக் கொண்டதால் முதிர்ந்த பாழ்பட்ட நிலத்தில் தானே உதிர்ந்து விழுந்த நெற்கதிர்களைப் பெறும் (பெறூஉம் – செய்யுளிசை அளபெடை), அரண் இல் சேய் நாட்டு அதர் இடை மலர்ந்த நன்னாள் வேங்கைப் பொன் மருள் புதுப் பூப் பரந்தன நடக்க – பாதுகாப்பு இல்லாத தொலை நாட்டிற்குச் செல்லும் வழியில் நல்ல விடியற்காலையில் மலர்ந்த வேங்கை மரத்தின் பொன் போன்ற புது மலர்களின் பரப்பில் நடக்க (வேங்கை மரம் – Kino Tree, Pterocarpus marsupium), யாம் கண்டனம் – யாம் கண்டோம், மாதோ – மாது ஓ அசைநிலைகள், காண் இனி – இப்பொழுது காண்பாயாக, வாழி – வாழ்வாயாக, அசைநிலை, என் நெஞ்சே – என் நெஞ்சே, நாண் விட்டு அருந்துயர் உழந்த காலை மருந்து எனப்படூஉம் மடவோளையே – நாணத்தைக் கைவிட்டு காதல் நோயால் பெரும் துன்பமுற்ற வேளையில் மருந்தாக உள்ள இளையவளாகிய தலைவியை (எனப்படூஉம் – அளபெடை, மடவோளையே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 385, பாடியவர் பெயர் கிடைக்கவில்லை, நெய்தல் திணை – பாடல் முழுவதும் கிடைக்கவில்லை
எல்லை சென்ற பின் மலரும் கூம்பின,
புலவு நீர் அடைகரை யாமைப் பார்ப்போடு
அலவனும் அளைவயிற் செறிந்தன கொடுங்கழி
இரை நசை வருத்தம் வீட மரமிசைப்
புள்ளும் பிள்ளையொடு வதிந்தன, அதனால்  5
பொழுதன்று ஆதலின் தமியை வருதி,
எழுது எழில் மழைக்கண் – – – – – – – –
– – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – –.

பாடல் பின்னணி:  தோழியின் கூற்று என்பது போல் தெரிகின்றது.

பொருளுரைபகல் மறைந்த பின் மலர்களும் கூம்பின.  புலால் நாற்றம் வீசும் நீர் நிறைந்த கடற்கரையில் ஆமையின் குட்டிகளுடன் நண்டுகளும் புற்றுக்களில் சென்று பதுங்கின.   வளைந்த உப்பங்கழியில் இரைத் தேடும் விருப்பம் கெடுமாறு மரங்களின் மேல் பறவைகளும் தங்கள் குஞ்சுகளுடன் தங்கின.  ஆதலால் வருகின்ற பொழுது இல்லை என்றாலும் நீ தனியாக வருகிறாய், ஓவியத்தில் எழுதப்பட்ட அழகான ஈரக் கண்களையுடைய இவள் – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – –

குறிப்பு:  ஒளவை துரைசாமி உரை – இப்பாட்டை இவ்வளவில் முடித்து, இறுதியில் ‘இவ்வஞ்சிலாந்தையார் பாட்டு இறந்தது’ என்றொரு குறிப்புத் தமிழ்ச் சங்க ஏட்டில் உள்ளது.  

சொற்பொருள்:  எல்லை சென்ற பின் மலரும் கூம்பின – பகல் மறைந்த பின் மலர்களும் கூம்பின, புலவு நீர் அடைகரை யாமைப் பார்ப்போடு அலவனும் அளைவயிற் செறிந்தன – புலால் நாற்றம் வீசும் நீர் நிறைந்த கடற்கரையில் ஆமையின் குட்டிகளுடன் நண்டுகளும் புற்றுக்களில் சென்று பதுங்கின, கொடுங்கழி இரை நசை வருத்தம் வீட மரமிசைப் புள்ளும் பிள்ளையொடு வதிந்தன – வளைந்த உப்பங்கழியில் இரைத் தேடும் விருப்பம் கெடுமாறு மரங்களின் மேல் பறவைகளும் தங்கள் குஞ்சுகளுடன்  தங்கின, அதனால் பொழுதன்று ஆதலின் தமியை வருதி – ஆதலால் வருகின்ற பொழுது இல்லை என்றாலும் நீ தனியாக வருகிறாய், எழுது எழில் மழைக்கண் – ஓவியத்தில் எழுதப்பட்ட அழகான ஈரக் கண்களையுடைய இவள் – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – –

நற்றிணை 386, தங்கால் ஆத்திரேயன் செங்கண்ணனார், குறிஞ்சித் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
சிறுகண் பன்றிப் பெருஞ்சின ஒருத்தல்,
துறுகண் கண்ணிக் கானவர் உழுத
குலவுக் குரல் ஏனல் மாந்தி ஞாங்கர்,
விடர் அளைப் பள்ளி வேங்கை அஞ்சாது,
கழை வளர் சாரல் துஞ்சும் நாடன்  5
அணங்குடை அரும் சூள் தருகுவென் என நீ
நும்மோர் அன்னோர் துன்னார் இவை எனத்
தெரிந்து அது வியந்தனென் தோழி, பணிந்து நம்
கல் கெழு சிறுகுடிப் பொலிய
வதுவை என்று அவர் வந்த ஞான்றே.  10

பாடல் பின்னணி:  பரத்தையிற் பிரிந்து தலைவியிடம் வருகின்றான் தலைவன்.  அவள் ஊடுகின்றாள்.  தோழியிடம் அவன் இரந்து நிற்க, அவளும் உடன்பட்டாள்.  தோழி, தலைவன் முன்றிலில் வந்து நிற்கின்றான் என்பதைத் தலைவியிடம் உள்ளுறையால் கூறுகின்றாள்.

பொருளுரைதோழி!  சிறிய கண்களையுடை பன்றியின் பெரிய சினமுடைய ஆண் கொடிய கண்களையுடைய மாலையணிந்த கானவர் உழுது விளைவித்த, வளைந்த கொத்துக்களையுடைய தினையை உண்டு விட்டு அருகில் உள்ள மலைப் பிளவைத் தன் இடமாகக் கொண்ட புலிக்கு அஞ்சாது மூங்கில்கள் வளரும் மலைச் சாரலில் உறங்கும் நாடன், உன்னிடம் வந்து “கடவுளைச் சுட்டி அரிய உறுதிமொழியை நான் உனக்குத் தருவேன்” எனக் கூறினான்.  நீ அவனிடம் “நும் போல் பெருந்தகைமை உடையவர்கள் இதுபோல் சூளுரைகளைச் செய்யமாட்டார்கள்” எனக் கூறினாய்.  அவன் பணிந்து, நம் மலைகள் பொருந்திய சிறுகுடி பொலியுமாறு உன்னைத் திருமணம் செய்ய வந்த அன்று, அவர் வாய்மையை அறிந்து நான் வியந்தேன்.

குறிப்பு:  புலவர் பெயர் – ஒளவை துரைசாமி உரை – தண்கால் ஆத்திரையன் செங்கண்ணனார்.  உள்ளுறை – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – பன்றி குறவருடைய ஏனற் கதிரைத் தின்று வேங்கைக்கு அஞ்சாது சாரலிலே துஞ்சும் என்றது, தலைமகன் பரத்தையரின்பம் துய்த்து உலகம் இகழும் இகழ்ச்சிக்கு அஞ்சாது நின் முன்றிலில் காத்து வைகினான் என்பதாம்.  அணங்கு (6) – ஒளவை துரைசாமி உரை – வருத்தம், தெய்வமுமாம், பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – முருகவேள் முதலாயினர்.  பணிந்து (8) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – பணிந்து என்னுஞ்சொல் உரையில் (பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரையில்) வாளா விடப்பட்டது.  அதனை நம் ஏவற்குப் பணிந்து வதுவை அவர் வந்த ஞான்றென இயைத்துக் கொள்க.  ஒளவை துரைசாமி உரை – வியந்து பணிந்தேன் என மாற்றுக (தோழி பணிந்ததாகக் கொள்கின்றார்).  கடவுள் முன் சூளுரைத்தல் – அகநானூறு 110 – கொடுஞ்சுழிப் புகாஅர்த் தெய்வம் நோக்கிக் கடுஞ்சூள் தருகுவன் நினக்கே, அகநானூறு 266 – திரு மணி விளக்கின் அலைவாய்ச் செருமிகு சேஎயொடு உற்ற சூளே, அகநானூறு 396 – தெறல் அரும் கடவுள் முன்னர்த் தேற்றி மெல் இறை முன் கை பற்றிய சொல் இறந்து, நற்றிணை 386 – அணங்குடை அரும் சூள் தருகுவென் என, குறுந்தொகை 53 – நேர் இறை முன்கை பற்றிச் சூரர மகளிரோடு உற்ற சூளே, கலித்தொகை 108 – மலையொடு மார்பு அமைந்த செல்வன் அடியைத் தலையினால் தொட்டு உற்றேன் சூள், கலித்தொகை 124 – பிரிவு இல்லாய் போல நீ தெய்வத்தின் தெளித்தக்கால் அரிது என்னாள்.

சொற்பொருள்:  சிறுகண் பன்றிப் பெருஞ்சின ஒருத்தல் துறுகண் கண்ணிக் கானவர் உழுத குலவுக் குரல் ஏனல் மாந்தி ஞாங்கர் விடர் அளைப் பள்ளி வேங்கை அஞ்சாது கழை வளர் சாரல் துஞ்சும் நாடன் – சிறிய கண்களையுடை பன்றியின் பெரிய சினமுடைய ஆண் கொடிய கண்களையுடைய மாலையணிந்த கானவர் உழுது விளைவித்த வளைந்த கொத்துக்களையுடைய தினையை உண்டு விட்டு அருகில் உள்ள மலைப் பிளவைத் தன் இடமாகக் கொண்ட புலிக்கு அஞ்சாது மூங்கில்கள் வளரும் மலைச் சாரலில் உறங்கும் நாடன் (விடர் அளை – இருபெயரொட்டு), அணங்குடை அரும் சூள் தருகுவென் – கடவுளைச் சுட்டி (பொய்த்தால் துன்பம் தரும்) அரிய உறுதிமொழியை நான் தருவேன், என – எனக் கூறினான், நீ நும்மோர் அன்னோர் துன்னார் இவை – நும் போல் பெருந்தகைமை உடையவர்கள் இதுபோல் சூளுரைகளைச் செய்யமாட்டார்கள், எனத் தெரிந்து அது வியந்தனென் – என அறிந்து நான் வியந்தேன், தோழி – தோழி, பணிந்து நம் கல் கெழு சிறுகுடிப் பொலிய வதுவை என்று அவர் வந்த ஞான்றே – பணிந்து நம் மலைகள் பொருந்திய சிறுகுடி பொலியுமாறு உன்னைத் திருமணம் செய்ய அவர் வந்த அன்று (ஞான்றே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 387, பொதும்பில் கிழார் மகனார், பாலைத் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
நெறி இருங்கதுப்பும், நீண்ட தோளும்,
அம்ம நாளும் தொல் நலம் சிதைய,
ஒல்லாச் செந்தொடை ஒரீஇய கண்ணிக்
கல்லா மழவர் வில்லிடை விலங்கிய
துன் அருங்கவலை அருஞ்சுரம் இறந்தோர்  5
வருவர், வாழி தோழி, செரு இறந்து
ஆலங்கானத்து அஞ்சுவர இறுத்த
வேல் கெழு தானைச் செழியன் பாசறை
உறை கழி வாளின் மின்னி, உதுக்காண்,
நெடும் பெருங்குன்றம் முற்றி  10
கடும் பெயல் பொழியும், கலி கெழு வானே.

பாடல் பின்னணி:  பிரிவிடை வருந்தியத் தலைவியைத் தோழி பருவம் காட்டி வற்புறுத்தியது.

பொருளுரைதோழி!  நீ நீடு வாழ்வாயாக!  நான் கூறுவதைக் கேட்பாயாக.  உன்னுடைய நெறித்த (வளைந்த) கரிய கூந்தலும், நீண்ட தோள்களும், நாள்தோறும் பழைய அழகு கெட்டுப் பாழ்பட்டுள்ளன.  பயிலாது ஏந்திய அம்புகளை, அணியாது விலக்கப்பட்ட மாலையை உடைய, தம் மறத்தொழில் அன்றி வேறு எதுவும் கற்காத மறவர்கள், வில்லில் பூட்டிச் செலுத்துவதால், குறுக்கிட்ட, நெருங்குவதற்கு அரிய பிரிவுகளையுடை கொடிய சுரத்தைக் கடந்துச் சென்ற நம் தலைவர் விரைந்து வருவார்.  அங்கே பார்!  போரில் வென்று ஆலங்கானத்தில் அச்சம்வரும்படி தங்கி இருந்த வேற்படை உடைய தானைகளையுடைய பாண்டியனின் பாசறையில், உறையிலிருந்து நீக்கிய வாள்போல் மின்னி, உயர்ந்த பெரிய மலையைச் சூழ்ந்து விரைந்து மழையைப் பொழிகின்றன முழக்கத்தையுடைய முகில்கள்.

குறிப்பு:  பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் சேரனையும் சோழனையும் (சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை, சோழன் கிள்ளிவளவன்), ஐந்து வேளிர் குறுநில மன்னர்களையும் (திதியன், எழினி, எருமையூரன், இருங்கோ வேண்மான், பொருநன்) சோழ நாட்டில் உள்ள தலையாலங்கானத்தில் தோற்கடித்தான்.  வரலாறு:  செழியன், ஆலங்கானம்.  தலையாலங்கானம் போர் – புறநானூறு 19, 23, 25, 76, நற்றிணை 387, அகநானூறு 36, 175 and 209, மதுரைக்காஞ்சி 55, 127.  கலி – கம்பலை சும்மை கலியே அழுங்கல் என்று இவை நான்கும் அரவப் பொருள (தொல்காப்பியம், உரியியல் 53).  ஆலங்கானம் – சோழ நாட்டின் ஊர், பாண்டியன் நெடுஞ்செழியன் சேர, சோழ மன்னர்களையும் வேளிர் மன்னர்களான திதியன், எழினி, எருமையூரன், பொருநன், இருங்கோ வேண்மான் ஆகியவர்களையும் இங்குப் போரில் தோல்வியுறச் செய்தான்.  அம்ம – அம்ம கேட்பிக்கும் (தொல்காப்பியம், இடையியல் 28).

சொற்பொருள்:  நெறி இருங்கதுப்பும் நீண்ட தோளும் அம்ம நாளும் தொல் நலம் சிதைய – நெறித்த (வளைந்த) கரிய கூந்தலும் நீண்ட தோள்களும் நாள்தோறும்  பழைய அழகு கெட்டுப் பாழ்பட (அம்ம – உரையசை, கேட்பாயாக என்னும் பொருளில் வந்தது) ஒல்லாச் செந்தொடை ஒரீஇய கண்ணிக் கல்லா மழவர் வில்லிடை விலங்கிய துன் அருங்கவலை அருஞ்சுரம் இறந்தோர் வருவர் – பயிலாது ஏந்திய அம்புகளையும் அணியாது விலக்கப்பட்ட மாலையையும் உடைய தம் மறத்தொழில் அன்றி வேறு எதுவும் கற்காத மறவர்கள் வில்லில் பூட்டிச் செலுத்துவதால் குறுக்கிட்ட நெருங்குவதற்கு அரிய பிரிவுகளையுடை கொடிய சுரத்தைக் கடந்துச் சென்ற நம் தலைவர் வருவார் (ஒரீஇய – செய்யுளிசை அளபெடை), வாழி – நீடு வாழ்வாயாக, அசைநிலை, தோழி – தோழி, செரு இறந்து ஆலங்கானத்து அஞ்சுவர இறுத்த வேல் கெழு தானைச் செழியன் பாசறை உறை கழி வாளின் மின்னி – போரில் வென்று ஆலங்கானத்தில் அச்சம்வரும்படி தங்கி இருந்த வேற்படை உடைய தானைகளையுடைய பாண்டியனின் பாசறையில் உறையிலிருந்து நீக்கிய வாள்போல் மின்னி (வாளின் – இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), உதுக்காண் – அங்கே பார் (உது – இடைச்சுட்டு), நெடும் பெருங்குன்றம் முற்றி கடும் பெயல் பொழியும், கலி கெழு வானே – உயர்ந்த பெரிய மலையைச் சூழ்ந்து விரைந்து மழையைப் பொழிகின்றன முழக்கத்தையுடைய முகில்கள் (வானே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 388, மதுரை மருதங்கிழார் மகனார் பெருங்கண்ணனார், நெய்தல் திணை – தலைவி தோழியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
அம்ம வாழி தோழி, நன்னுதற்கு
யாங்கு ஆகின்று கொல் பசப்பே, நோன் புரிக்
கயிறு கடை யாத்த கடு நடை எறி உளித்
திண் திமில் பரதவர் ஒண் சுடர்க் கொளீஇ,
நடுநாள் வேட்டம் போகி, வைகறைக்  5
கடல் மீன் தந்து கானல் குவைஇ,
ஓங்கு இரும் புன்னை வரி நிழல் இருந்து
தேம் கமழ் தேறல் கிளையொடு மாந்திப்,
பெரிய மகிழும் துறைவன் எம்
சிறிய நெஞ்சத்து அகல்வு அறியானே?  10

பாடல் பின்னணி:  தலைவன் மணம் புரியாது களவு நீட்டித்து ஒழுகுவதால் தலைவி வருந்துவாள் எனக் கவலை கொண்ட தோழியிடம் கூறியது.

பொருளுரைதோழி!  நீ நீடு வாழ்வாயாக!  நான் கூறுவதைக் கேட்பாயாக!  வலிய புரிகளால் முறுக்குண்ட கயிற்றின் அடியில் கட்டிய, விரைவாக எறியப்படும் தைக்கும் கூரிய முனையையுடை உளிகளைக் கொண்ட திண்மையான படகில் செல்லும் மீனவர்கள், ஒளிரும் விளக்குகளைக் கொளுத்தி நடு இரவில் மீன் வேட்டைக்குச் சென்று, விடியற்காலையில் கடலில் பிடித்த மீன்களைக் கொண்டு வந்து கடற்கரைச் சோலையில் குவித்து வைத்துவிட்டு, உயர்ந்த பெரிய புன்னை மரத்தின் நிழலில் இருந்து, தேன் மணம் வீசும் தெளிந்த கள்ளை உறவினர்களுடன் கூடிக் குடித்து மிக்க மகிழும் துறையின் தலைவன், எம் சிறிய நெஞ்சிலிருந்து நீங்குதலை அறியான்.  என்னுடைய நல்ல நெற்றியில் எவ்வாறு உண்டாகியது பசப்பு?

குறிப்பு:  உள்ளுறை – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – பரதவர் திமிலொடு சென்று மீன் பிடித்துக் கானலின் கண்ணே குவித்துப் புன்னையின் நிழலிலிருந்து கிளையொடு தேறலை மாந்தி மகிழுந் துறை என்றது, தலைமகன் தேரொடு வேற்று நாட்டுச் சென்று பொருளீட்டி வந்து முன்றிலிலே குவித்து எம்மனைக்கண் சுற்றத்தாரொடு மகிழ்ந்து என்னை மணந்து என் நலனை நுகர்ந்து மகிழ்வானாக என்றதாம்.  தேம் கமழ் தேறல் (8) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – தேன் மணம் வீசும் தெளிந்த கள், ஒளவை துரைசாமி உரை – தேன் கலந்த கட்தெளிவு, இது தேன் கலந்து உண்ணப்படுவது.  அம்ம – அம்ம கேட்பிக்கும் (தொல்காப்பியம், இடையியல் 28).

சொற்பொருள்:  அம்ம – நான் கூறுவதைக் கேட்பாயாக, வாழி – நீடு வாழ்வாயாக, தோழி – தோழி, நன்னுதற்கு யாங்கு ஆகின்று கொல் பசப்பே – நல்ல நெற்றியில் எவ்வாறு உண்டாகியது பசப்பு (கொல் – அசைநிலை, பசப்பே – ஏகாரம் அசைநிலை), நோன் புரிக் கயிறு கடை யாத்த கடு நடை எறி உளித் திண் திமில் பரதவர் ஒண் சுடர்க் கொளீஇ நடுநாள் வேட்டம் போகி – வலிய புரிகளால் முறுக்குண்ட கயிற்றின் அடியில் கட்டிய விரைவாக எறியப்படும் உளியையுடைய திண்மையான படகில் செல்லும் மீனவர்கள் ஒளிரும் விளக்குகளைக் கொளுத்தி நடு இரவில் மீன் வேட்டைக்குச் சென்று (கொளீஇ – அளபெடை), வைகறைக் கடல் மீன் தந்து கானல் குவைஇ ஓங்கு இரும் புன்னை வரி நிழல் இருந்து தேம் கமழ் தேறல் கிளையொடு மாந்திப் பெரிய மகிழும் துறைவன் – விடியற்காலையில் கடலில் பிடித்த மீன்களைக் கொண்டு வந்து கடற்கரைச் சோலையில் குவித்து வைத்துவிட்டு உயர்ந்த பெரிய புன்னை மரத்தின் நிழலில் இருந்து தேன் மணம் வீசும் தெளிந்த கள்ளை உறவினர்களுடன் கூடிக் குடித்து மிக்க மகிழும் துறையின் தலைவன் (குவைஇ – அளபெடை, புன்னை மரம் – Laurel Tree, Mast wood Tree, Calophyllum inophyllum, தேம் – தேன் என்றதன் திரிபு), எம் சிறிய நெஞ்சத்து அகல்வு அறியானே – எம் சிறிய நெஞ்சிலிருந்து நீங்குதலை அறியான் (அறியானே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 389, காவிரிப் பூம்பட்டினத்துச் செங்கண்ணனார், குறிஞ்சித் திணை – தோழி தலைவியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
வேங்கையும் புலி ஈன்றன, அருவியும்
தேம்படு நெடு வரை மணியின் மானும்,
அன்னையும் அமர்ந்து நோக்கினளே, என் ஐயும்
களிற்று முகம் திறந்த கல்லா விழுத் தொடை
ஏவல் இளையரொடு மா வழிப்பட்டெனச்,  5
‘சிறு கிளி முரணிய பெருங்குரல் ஏனல்
காவல் நீ’ என்றோளே, சேவலொடு
சிலம்பின் போகிய சிதர் கால் வாரணம்
முதைச் சுவல் கிளைத்த பூழி, மிகப் பல
நன் பொன் இமைக்கும் நாடனொடு,  10
அன்புறு காமம் அமைக நம் தொடர்பே.

பாடல் பின்னணி:  பகற்குறி வந்தொழுகும் தலைவன் கேட்பச் சொல்லியது.

பொருளுரைவேங்கை மரங்களும் புலிபோன்ற புள்ளிகளை உடைய மலர்களைப் பூத்தன.  அருவிகளும் தேனுடைய உயர்ந்த மலையில் நீலமணி போன்ற நிறத்தினைக் கொண்டு விளங்குகின்றன.  அன்னையும் என்னை விருப்பத்துடன் நோக்கினாள்.  என் தந்தையும் களிற்று யானையின் முகத்தைப் பிளந்த சிறந்த அம்பையுடைய, தங்கள் தொழில் தவிர வேறு எதுவும் கற்காத இளைஞர்களுடன், விலங்குகளை வேட்டையாடச் சென்றான்.  “சிறிய கிளிகளால் கொய்து அழிக்கப்படுகின்ற தினையைக் காவல் புரிய சொல்லுக நீ” என்றாள் அன்னை.  தன் சேவலுடன் மலையில் சென்றுப் புழுதியைக் கிண்டும் கால்களுடைய வாரணம் பழைய கொல்லையில் கிண்டியதால் மேல் எழுந்த மிகப் பல பொன் ஒளிரும் நாடனுடன், அன்புமிக்க காதலால் அமைந்த நம் நட்பு எவ்வாறு முடியுமோ?

குறிப்பு:  இறைச்சி – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – கோழி கிளைத்த பூழிடத்து நன்பொன் இமைக்கும் என்றது, செல்வக் குறைபாடு இலனாதலால் எமர்க்கு வேண்டும் பொருள் கொடுத்து என்னை மணம் புரிந்துக்கொண்டான் இல்லையே என்று இரங்கியதாம். வேங்கை மலரும் புலியும் – அகநானூறு 12 – வேங்கை தாஅய தேம்பாய் தோற்றம் புலி செத்து வெரீஇய புகர் முக வேழம், அகநானூறு 141 – புலிக்கேழ் உற்ற பூ இடைப் பெருஞ்சினை நரந்த நறும்பூ நாள் மலர் உதிரக் கலை பாய்ந்து உகளும் கல் சேர் வேங்கை, அகநானூறு 227 – புலிக் கேழ் வேங்கை, அகநானூறு 228 – வேங்கை ஒள் வீப் புலிப் பொறி கடுப்பத் தோன்றலின், நற்றிணை 389 – வேங்கையும் புலி ஈன்றன, குறுந்தொகை 47 – வேங்கை வீ உகு துறுகல் இரும்புலிக் குருளையின் தோன்றும், ஐங்குறுநூறு 396 – புலிப் பொறி வேங்கைப் பொன் இணர்.  புலி (1) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – மலர்க்கு உவமை ஆகுபெயர்.   வேங்கை மலர்ந்தவுடன் தினை கொய்தலும் தலைவியை இல்வயிற் செறித்தலும் வழக்காதலானே தொடர்பற்று விட்டது என்று இரங்கினாள் தலைவனைப் பிரிப்பதற்குக் காரணமாயிருத்தலின், அதன் கொடுமை தோன்றப் புலியென்ற பெயரால் கூறினாள்.  சிறு கிளி முரணிய பெருங்குரல் ஏனல் (6) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – கிளிகள் கொய்து அழிக்கின்ற பெரிய கதிர்கள், சிறு பசுங்கிளிகள் நமக்கு மாறாகப் படிந்துண்ணும் பெரிய கதிர்கள்.  தினையைக் கொய்யும் வேளையில் வேங்கை மரத்தின் பூக்கள் மலர்தல் – அகநானூறு 132, நற்றிணை 125, 259, 313, 389.  விழு (விழுமம்) – விழுமம் சீர்மையும் சிறப்பும் இடும்பையும் (தொல்காப்பியம், உரியியல்  57).  காமம் – கமம் என்னும் சொல்லின் முதல் நீண்ட வடிவம், ‘நிறைந்த அன்பு’ என்பது இச்சொல்லின் பொருள் – பேரறிஞர் கு.வெ. பாலசுப்பிரமணியன் அவர்களின் விளக்கம், (கமம் நிறைந்து இயலும் – தொல்காப்பியம், சொல்லியல் 355).  தேனுடைய மலை (நற்றிணையில்):  104 – தேம் கமழ் சிலம்பின், 147 – தேம்படு சாரல், 185 – தேனுடை நெடு வரை, 188 – குன்றத்துத் தேம் முதிர், 243 – தேம்படு சிலம்பில், 259 – தேம் கமழ் சாரல், 389 – தேம்படு நெடு வரை, 395 – தேன் தூங்கு உயர்வரை.  தேம்படு சிலம்பில், தேம்படு நெடுவரை – ஆகிவற்றிற்கு தேன் உண்டாகின்ற பக்கமாலையிலே, தேன் மணம் மிக்க நெடிய மலை என்றே விளக்கியுள்ளார் பின்னத்தூர் நாராயணசாமி ஐயர்.

சொற்பொருள்:  வேங்கையும் புலி ஈன்றன – வேங்கை மரங்களும் புலிபோன்ற புள்ளிகளை உடைய மலர்களைப் பூத்தன,  அருவியும் தேம்படு நெடு வரை மணியின் மானும் – அருவிகளும் தேனுடைய உயர்ந்த மலையில் நீலமணி போன்ற நிறத்தினைக் கொண்டு விளங்குகின்றன (தேம் – தேன் என்றதன் திரிபு, மணியின் – இன் உருபு ஒப்புப் பொருளது, ஐந்தாம் வேற்றுமை உருபு), அன்னையும் அமர்ந்து நோக்கினளே – அன்னையும் என்னை விருப்பத்துடன் நோக்கினாள் (நோக்கினளே – ஏகாரம் அசைநிலை), என் ஐயும் களிற்று முகம் திறந்த கல்லா விழுத் தொடை ஏவல் இளையரொடு மா வழிப்பட்டென – என் தந்தையும் களிற்று யானையின் முகத்தைப் பிளந்த சிறந்த அம்பையுடைய தங்கள் தொழில் தவிர வேறு எதுவும் கற்காத இளைஞர்களுடன் விலங்குகளை வேட்டையாடச் சென்றானாக, ‘சிறு கிளி முரணிய பெருங்குரல் ஏனல் காவல் நீ’ என்றோளே – சிறிய கிளிகளால் கொய்து அழிக்கப்படுகின்ற தினையைக் காவல் புரிய சொல்லுக நீ என்றாள் (என்றோளே – ஏகாரம் அசைநிலை), சேவலொடு சிலம்பின் போகிய சிதர் கால் வாரணம் முதைச் சுவல் கிளைத்த பூழி மிகப் பல நன் பொன் இமைக்கும் நாடனொடு – தன் சேவலுடன் மலையில் சென்றுப் புழுதியைக் கிண்டும் கால்களுடைய வாரணம் பழைய கொல்லையில் கிண்டி மேல் எழுந்த மிகப் பல பொன் ஒளிரும் நாடனுடன், அன்புறு காமம் அமைக நம் தொடர்பே – அன்புமிக்க காதலால் அமைந்த நம் நட்பு (தொடர்பே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 390, ஒளவையார், மருதத் திணை – பரத்தை தன்னுடைய தோழியிடம் சொன்னது, அல்லது தலைவி தோழியிடம் சொன்னது
வாளை வாளின் பிறழ, நாளும்
பொய்கை நீர்நாய் வைகு துயில் ஏற்கும்
கைவண் கிள்ளி வெண்ணி சூழ்ந்த
வயல் வெள் ஆம்பல் உருவ நெறித் தழை
ஐது அகல் அல்குல் அணிபெறத் தைஇ,  5
விழவின் செலீஇயர் வேண்டும் மன்னோ,
யாணர் ஊரன் காணுநன் ஆயின்,
வரையாமையோ அரிதே வரையின்
வரை போல் யானை, வாய்மொழி முடியன்
வரை வேய் புரையும் நல் தோள்  10
அளிய தோழி, தொலையுந பலவே.

பாடல் பின்னணி:  1. பாங்காயினரான வாயில்கள் கேட்கும்படி, பரத்தை நெருங்கிச் சொன்னது. 2. தலைவி தோழிக்கு உரைப்பாளாய், வாயில்களாக வந்தவர்களிடம் சொன்னது.

பொருளுரைதோழி!  வாளை மீன்கள் வாள்போல் ஒளிகொண்டு பிறழ, நாள்தோறும் பொய்கையில் உள்ள நீர்நாய் அவற்றை உண்ணாது விடியற்காலையில் தங்கி உறங்கும், கொடைத் தன்மையுடைய கிள்ளிவளவனின் வெண்ணி என்னும் ஊரைச் சூழ்ந்த வயலில் உள்ள வெள்ளை ஆம்பலின் நெறிப்பையுடைய அழகிய தழையை மெல்லியதாக அகன்ற அல்குலின் மேல் அழகாக உடுத்திக்கொண்டு யானும் இந்த விழாவிற்குச் செல்ல வேண்டும்.  வளமையான ஊரின் தலைவன் புதிய பரத்தையைக் காண்பான் ஆனால், அவன் ஏனையோரைக் காணாது, இவளையே மணம் புரிவான்.  இவளை மணம் புரிந்தால், மலை போன்ற யானைகளையும் நல்ல மெய்மையையும் உடைய முடியன் என்பவனின் மலையில் உள்ள மூங்கிலைப் போன்ற பெண்களின் நல்ல தோள்கள் இரங்கத்தக்கன.  அவற்றின் நலம் பெரிதும் கெடுவன ஆகும்.

குறிப்பு:  உள்ளுறை – கு. வெ. பாலசுப்பிரமணியன் உரை – பொய்கையில் வாளை பிறழ அதனைக் கொள்ளாத நீர்நாய் உறங்கும் என்றது, தலைவன் விழாக்களத்தே ஒருத்தியைக் கொள்ளவும் அவளைக் கடிந்து போக்காது பரத்தை தன் மனையகத்து இருந்தனள் என்பதாம்.  உள்ளுறை தலைவி கூற்றிற்கும் பொருந்தும்.  முடியன் (9) – ஒளவை துரைசாமி உரை – தென் ஆர்க்காடு மாவட்டத்துத் திருக்கோவலூர் வட்டத்தின் தென் பகுதியில் வாழ்ந்த ஒரு வள்ளல், பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – முடியன் என்றது மலையமான் திருமுடிக்காரியை.  வரலாறு:  கிள்ளி, வெண்ணி.  வெண்ணி – சோழ மன்னன் கரிகாலன் சேரமான் பெருஞ்சேரலாதலையும் 11 வேளிர் மன்னர்களையும் இங்கு நிகழ்ந்த போரில் தோல்வியுறச் செய்தான். இப்போர் பற்றின குறிப்பு உள்ள பாடல்கள் – அகநானூறு 55, 246, புறநானூறு 66, பொருநராற்றுப்படை 147.  யாணர் – புதிதுபடற் பொருட்டே யாணர்க் கிளவி (தொல்காப்பியம், உரியியல் 83).

சொற்பொருள்:  வாளை வாளின் பிறழ நாளும் பொய்கை நீர்நாய் வைகு துயில் ஏற்கும் கைவண் கிள்ளி வெண்ணி சூழ்ந்த வயல் வெள் ஆம்பல் உருவ நெறித் தழை ஐது அகல் அல்குல் அணிபெறத் தைஇ – வாளை மீன்கள் வாள்போல் ஒளிகொண்டு பிறழ நாள்தோறும் பொய்கையில் உள்ள நீர்நாய் அவற்றை உண்ணாது விடியற்காலையில் தங்கி உறங்கும் கொடைத் தன்மையுடைய கிள்ளிவளவனின் வெண்ணி என்னும் ஊரைச் சூழ்ந்த வயலில் உள்ள வெள்ளை ஆம்பலின் நெறிப்பையுடைய அழகிய தழையை மெல்லியதாக அகன்ற அல்குலின் மேல் அழகாக உடுத்தி (வாளின் – இன் உருபு ஒப்புப் பொருளது, ஐந்தாம் வேற்றுமை உருபு, ஐது – மென்மை, அல்குல் – இடை, இடைக்குக் கீழ் உள்ள பகுதி, தைஇ – சொல்லிசை அளபெடை), விழவின் செலீஇயர் வேண்டும் – விழாவிற்குச் செல்ல வேண்டும் (செலீஇயர் – அளபெடை), மன்னோ – மன், ஓ அசைநிலைகள், யாணர் ஊரன் காணுநன் ஆயின் – வளமையான ஊரின் தலைவன் காண்பான் ஆனால், வரையாமையோ அரிதே – இவளை மணம் புரியாதது அரிது (அரிதே – ஏகாரம் அசைநிலை), வரையின் – மணம் புரிந்தால், வரை போல் யானை வாய்மொழி முடியன் வரை வேய் புரையும் நல் தோள் அளிய – மலை போன்ற யானைகளையும் நல்ல மெய்மையையும் உடைய முடியன் என்பவனின் மலையில் உள்ள மூங்கிலைப் போன்ற நல்ல தோள்கள் இரங்கத்தக்கன (புரை – உவம உருபு), தோழி – தோழி, தொலையுந பலவே – அவற்றின் நலம் பெரிதும் கெடுவன ஆகும் (பலவே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 391, சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோ, பாலைத் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
ஆழல் மடந்தை, அழுங்குவர் செலவே,
புலிப் பொறி அன்ன புள்ளி அம் பொதும்பின்
பனிப் பவர் மேய்ந்த மா இரு மருப்பின்
மலர்தலைக் காரான் அகற்றிய தண்ணடை
ஒண் தொடி மகளிர் இழை அணிக் கூட்டும்,  5
பொன்படு கொண்கான நன்னன் நல் நாட்டு
ஏழில் குன்றம் பெறினும், பொருள் வயின்
யாரோ பிரிகிற்பவரே, குவளை
நீர் வார் நிகர் மலர் அன்ன, நின்
பேர் அமர் மழைக் கண் தெண் பனி கொளவே.  10

பாடல் பின்னணி:  பிரிவு உணர்த்தப்பட்டு ஆற்றாளாகிய தலைவியைத் தோழி வற்புறுத்தியது.  தலைவன் மணம் புரியும் கருத்தினன் என்பதை உணர்த்தினாள்.

பொருளுரைஅழாதே மடந்தையே!  செல்லுதலை நம் தலைவர் தவிர்ப்பார்.  புலியின் பொறிகள் போன்ற புள்ளிகள் அமைந்த நிழலையுடைய சோலையில் உள்ள குளிர்ந்த கொடியை மேய்ந்த, பெரிய கரிய கொம்புகளையுடைய அகன்ற தலையையுடைய எருமைகள் நீக்கிய குளிர்ந்த இலைகளை, ஒளிரும் வளையல்களை அணிந்த மகளிர் தங்கள் அணிகலன்களுக்கு அழகு உண்டாகுமாறுச் சேர்க்கும் பொன் விளையும்  கொண்கானம் என்னும் இடத்தில் உள்ள நன்னன் என்னும் மன்னனின் நல்ல நாட்டிலுள்ள ஏழில் குன்றத்தைப் பெற்றாலும், பொருளின் பொருட்டு யார் பிரிவார், குவளையில் நீர் வடிகின்ற ஒளிபொருந்திய மலர்கள் போன்ற உன் பெரிய கண்களிலிருந்து தெளிந்த கண்ணீர் வடியும்படி?

குறிப்பு:  உள்ளுறை – கு. வெ. பாலசுப்பிரமணியன் உரை – எருமை நின்றொழித்த மலைப்பச்சை மகளிர் இழையணியாகக் கூட்டும் என்றது, தலைவன் ஈட்டும் பொருள் தலைவி இல்லறம் நிகழ்த்தி எஞ்சிடஉலகத்தார்க்குப் பயன்பட்டு நிற்கும் என்பதனை உள்ளுறுத்தி நின்றது.  புலிப் பொறி அன்ன புள்ளி அம் பொதும்பின் (2) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – புலியினது புள்ளி போன்ற புள்ளிகள் அமைந்த நிழலுடைய மரங்கள் செறிதலினிடையே, ஒளவை துரைசாமி உரை – புலியின் பொறி போன்ற புள்ளி பொருந்திய புதர்களின்கண் படர்ந்திருக்கும்.  தண்ணடை, தண் அடை (4) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – மலைப்பச்சையின் இலைகள், ஒளவை துரைசாமி உரை – தண்ணிய குழைகள்.  ஏழில் குன்றம் (7) – ஒளவை துரைசாமி உரை – இதனை இந்நாளில் எலிமலை என வழங்குகின்றனர். ஏழில் மலை – அகநானூறு 152–13, 345–7, 349–9, நற்றிணை 391–7, குறுந்தொகை 138–2. வரலாறு:  கொண்கானம், நன்னன், ஏழில் குன்றம்.

சொற்பொருள்:  ஆழல் மடந்தை – அழாதே மடந்தையே (ஆழல் – நீட்டல் விகாரம், அல் ஈற்று எதிர்மறை வியங்கோள்), அழுங்குவர் செலவே – செல்லுதலை அவர் தவிர்ப்பார் (செலவே – ஏகாரம் அசைநிலை), புலிப் பொறி அன்ன புள்ளி அம் பொதும்பின் பனிப் பவர் மேய்ந்த மா இரு மருப்பின் மலர்தலைக் காரான் அகற்றிய தண்ணடை – புலியின் பொறிகள் போன்ற புள்ளிகள் அமைந்த நிழலையுடைய சோலையில் உள்ள குளிர்ந்த கொடியை மேய்ந்த பெரிய கரிய கொம்புகளையுடைய அகன்ற தலையையுடைய எருமைகள் நீக்கிய குளிர்ந்த இலைகளை (காரான் – எருமை), ஒண் தொடி மகளிர் இழை அணிக் கூட்டும் பொன்படு கொண்கான நன்னன் நல் நாட்டு ஏழில் குன்றம் பெறினும் – ஒளிரும் வளையல்களை அணிந்த மகளிர் தங்கள் அணிகலன்களுக்கு அழகு உண்டாகுமாறுச் சேர்க்கும் பொன் விளையும்  கொண்கானம் என்னும் இடத்தில் உள்ள நன்னன் என்னும் மன்னனின் நல்ல நாட்டிலுள்ள ஏழில் குன்றத்தைப் பெற்றாலும், பொருள் வயின் யாரோ பிரிகிற்பவரே – பொருளின் பொருட்டு யார் பிரிவார் (பிரிகிற்பவரே – ஏகாரம் அசைநிலை), குவளை நீர் வார் நிகர் மலர் அன்ன நின் பேர் அமர் மழைக் கண் தெண் பனி கொளவே – குவளையில் நீர் வடிகின்ற ஒளிபொருந்திய மலர்கள் போன்ற உன் பெரிய கண்களிலிருந்து தெளிந்த கண்ணீர் வடியும்படி (நிகர் – ஒளி, கொளவே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 392, மதுரை மருதன் இளநாகனார், நெய்தல் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
கடுஞ்சுறா எறிந்த கொடுந்தாள் தந்தை
புள் இமிழ் பெருங்கடல் கொள்ளான் சென்றென,
மனை அழுது ஒழிந்த புன்தலைச் சிறாஅர்
துனையதின் முயன்ற தீங்கண் நுங்கின்
பணை கொள் வெம்முலை பாடு பெற்று உவக்கும்,  5
பெண்ணை வேலி உழைகண் சீறூர்
நன் மனை அறியின், நன்று மன் தில்ல,
செம்மல் நெஞ்சமொடு தாம் வந்து பெயர்ந்த
கானலொடு அழியுநர் போலாம், பானாள்
முனி படர் களையினும் களைப,  10
நனி பேர் அன்பினர் காதலோரே.

பாடல் பின்னணி:  தலைவன் இரவுக்குறி வேண்டினான்.  அதற்கு உடன்பட்ட தோழி தலைவியிடம் கூறியது.  தலைவன் மணம் புரியக் காலம் தாழ்த்தினான் என வருந்திய தலைவியிடம் கூறியதுமாம்.

பொருளுரைவிரைதலையுடைய சுறா மீனைப் பிடிக்கின்ற கொடிய முயற்சியையுடைய தந்தை, பறவைகள் ஒலிக்கும் பெரிய கடலின்கண் தங்களை வேட்டைக்கு அழைத்துப் போகாமல் சென்றான் என்பதால், மனையில் தங்கி அழுது இருந்த புல்லிய தலையையுடைய சிறுவர்கள், விரைவாக முயன்று அடைந்த இனிய கண்களையுடைய நுங்கின் பருத்த விருப்பம் தரும் முலைகளின் பயனைப்பெற்று உவக்கும், பனை மரங்களை வேலியாகக் கொண்ட சிறிய ஊரில் உள்ள நம் மனையை நம் தலைவர் அறிந்தால் நல்லது.  மாட்சிமையுடை உள்ளத்துடன் வந்து உன்னைக் கூடிச் சென்றவர் இப்பொழுது கடற்கரைச் சோலையில் வருந்துகிறார்.  நடு இரவில் நாம் படும் துன்பத்தைப் போக்கினாலும் போக்குவார், மிகப் பெரும் அன்புடைய அவர்.

குறிப்பு:  இறைச்சி – கு. வெ. பாலசுப்பிரமணியன் உரை – தந்தையுடன் செல்ல முயன்றும் செல்லாது, சிறார் பனை நுங்கைப் பெற்று மகிழ்வர் என்றது, தலைவனை மணந்து அவனுடன் கூடி அவன் மாளிகையில் இல்லறம் நிகழ்த்த விரும்பும் தலைவி, அதற்கு இயலாமையின் தன் மனையகத்தே அவனுடன் கூடும் இன்பத்தைப் பெறுவள் என்பதனைக் குறித்தது.  துனை – கதழ்வும் துனைவும் விரைவின் பொருள் (தொல்காப்பியம், உரியியல் 19).  நனி – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3).

சொற்பொருள்:  கடுஞ்சுறா எறிந்த கொடுந்தாள் தந்தை புள் இமிழ் பெருங்கடல் கொள்ளான் சென்றென மனை அழுது ஒழிந்த புன்தலைச் சிறாஅர் – விரைதலையுடைய சுறா மீனைப் பிடிக்கின்ற கொடிய முயற்சியையுடைய தந்தை பறவைகள் ஒலிக்கும் பெரிய கடலின்கண் வேட்டைக்கு அழைத்துப் போகாமல் சென்றான் என்று மனையில் தங்கி அழுது இருந்த புல்லிய தலையையுடைய சிறுவர்கள் (புல்லிய – பொலிவில்லாத, சிறிய, சிறாஅர் – அளபெடை), துனையதின் முயன்ற தீங்கண் நுங்கின் பணை கொள் வெம்முலை பாடு பெற்று உவக்கும் – விரைவாக முயன்று அடைந்த இனிய கண்களையுடைய நுங்கின் பருத்த விருப்பம் தரும் முலைகளின் பயனைப்பெற்று உவக்கும், பெண்ணை வேலி உழைகண் சீறூர் நன் மனை அறியின் – பனை மரங்களை வேலியாகக் கொண்ட சிறிய ஊரில் உள்ள நம் மனையை அறிந்தால், நன்று – நல்லது, மன் – அசைநிலை, தில்ல – தில் விழைவின்கண் (விருப்பத்தின்கண்) வந்த இடைச்சொல், ஈறு திரிந்து வந்தது, செம்மல் நெஞ்சமொடு தாம் வந்து பெயர்ந்த கானலொடு அழியுநர் போலாம்  – மாட்சிமையுடை உள்ளத்துடன் வந்து உன்னைக் கூடிச் சென்றவர் இப்பொழுது கடற்கரைச் சோலையில் வருந்துகிறார் போல், பானாள் முனி படர் களையினும் களைப – நடு இரவில் நாம் படும் துன்பத்தைப் போக்கினாலும் போக்குவார், நனி பேர் அன்பினர் காதலோரே – மிகப் பெரும் அன்புடையவர் நம் தலைவர் (நனி பேர் – ஒருபொருட் பன்மொழி, காதலோரே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 393, கோவூர் கிழார், குறிஞ்சித் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
நெடுங்கழை நிவந்த நிழல்படு சிலம்பின்
கடுஞ்சூல் வயப்பிடி கன்று ஈன்று உயங்கப்,
பால் ஆர் பசும் புனிறு தீரிய களி சிறந்து,
வாலா வேழம் வணர் குரல் கவர்தலின்,
கானவன் எறிந்த கடுஞ்செலல் ஞெகிழி  5
வேய் பயில் அடுக்கம் சுடர மின்னி,
நிலை கிளர் மின்னின் தோன்றும் நாடன்
இரவின் வரூஉம் இடும்பை நாம் உய,
வரைய வந்த வாய்மைக்கு ஏற்ப,
நமர் கொடை நேர்ந்தனர் ஆயின் அவருடன்  10
நேர்வர் கொல், வாழி தோழி, நம் காதலர்
புதுவர் ஆகிய வரவும் நின்
வதுவை நாண் ஒடுக்கமும் காணுங்காலே?

பாடல் பின்னணி:  வரைவு மலிந்தது.  தலைவன் தலைவியை மணம் புரிய இருப்பதை அறிந்த தோழி உரைத்தது.

பொருளுரைதோழி!  நீ நீடு வாழ்வாயாக!  நீண்ட மூங்கில்கள் உயர்ந்து வளர்ந்த நிழலையுடைய மலையில், தலைச்சூலால் வயவு நோய் கொண்ட தன் பெண் யானை கன்றினை ஈன்று வருந்தி, அக்கன்று பால் அருந்துவதால் அடைந்த மிக்க புனிற்று நிலை தீரும் பொருட்டு, அது உண்ணுவதற்காக, களிப்பு மிகுந்த, வெண்மையற்ற கரிய களிற்று யானை வளைந்த தினைக் கொத்துக்களைக் கவர்வதால், கானவன் எறிந்த விரைந்துச் செல்லும் கொள்ளிக்கட்டை, மூங்கில்கள் மிகுந்து இருந்த மலைப்பக்கம் எல்லாம் ஒளிருமாறு மின்னி வானில் நிலையில்லாத மின்னலைப் போல் தோன்றும் நாடன், இரவில் வரும் துன்பத்திலிருந்து நாம் விடுபட, புதியவர் போல் வரவும், உன் திருமணத்திற்காக நீ நாணி ஒடுங்கி இருப்பதைக் காணும்பொழுது, உன்னை மணம் புரிதற்கு அவர் வந்த உண்மைக்கு ஏற்ப, நம் உறவினர்கள் உன்னை அவர்க்குக் கொடுக்க ஒப்புதல் அளிப்பார்கள் போலும்.  அவருடன் மகிழ்ந்துப் பேசுவார்களா?

குறிப்பு:  வயப்பிடி (2) – ஒளவை துரைசாமி உரை – வயவுப்பிடி வயப்பிடி என வந்ததுவயவு பிள்ளைப் பேற்றுக்காலத்தில் உண்டாகும் வேட்கை நோய்.  உள்ளுறை – கு. வெ. பாலசுப்பிரமணியன் உரை – பிடியானையின் பசியைப் போக்கவேண்டி களிறு தினைக்கதிரை அழித்தலை நோக்கிய கானவன் எறிந்த எரி கொள்ளி எங்கும் சுடர் வீசித் தோன்றும் என்றது, தலைவி படும் காம நோயை ஆற்றும்பொருட்டு தோழி தலைவனைப் பழித்துரைக்க, அதனால் ஆற்றாத தலைவன் தலைவியைப் பெறுமாறு தலைவியின் சுற்றத்தார்க்கு அளிக்கக் கொணர்ந்த நிதியமும் கலனும் எங்கும் விளங்கித் தோன்றும் என்பதாம்.  ஒப்புமை:  அகநானூறு 112 – கண் கொள் நோக்கி நொதுமல் விருந்தினம் போல இவள் புது நாண் ஒடுக்கமும் காண்குவம் யாமே.  கலித்தொகை 52 – புதுவை போலும் நின் வரவும் இவள் வதுவை நாண் ஒடுக்கமும் காண்குவல் யானே.  நிலை கிளர் மின்னின் – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரையில் இவ்வாறே உள்ளது. பொ. வே. சோமசுந்தரனார் உரை – ‘நிலை கிளர் மீனின் தோன்றும்’ என்றும் பாடமாம்.  இதுவே சிறந்த பாடமாம். தன் நிலையிலே ஒளி வீசும் விண்மீன் போலத் தோன்றும் என்றவாறு.  புனிறு – புனிறு என் கிளவி ஈன்றணிமைப் பொருட்டே, தொல்காப்பியம், உரியியல் 79.  பிடி – பிடி என் பெண் பெயர் யானை மேற்றே (தொல்காப்பியம், மரபியல் 52).  அண்மையில் ஈன்ற துணைக்கு உணவு தேடல்:  புலி – நற்றிணை 29, 148, 332, 383, அகநானூறு 112, 147, 238, கழுகு – அகநானூறு 3, செந்நாய் – அகநானூறு 21, அகநானூறு 85, புறா – நற்றிணை 384, யானை – நற்றிணை 393, நாரை – நற்றிணை 263.

சொற்பொருள்:  நெடுங்கழை நிவந்த நிழல்படு சிலம்பின் கடுஞ்சூல் வயப்பிடி கன்று ஈன்று உயங்கப் பால் ஆர் பசும் புனிறு தீரிய களி சிறந்து வாலா வேழம் வணர் குரல் கவர்தலின் – நீண்ட மூங்கில்கள் உயர்ந்து வளர்ந்த நிழலையுடைய மலையில் தலைச்சூலால் வயவு நோய் கொண்ட தன் பெண் யானை கன்றினை ஈன்று வருந்தி, அக்கன்று பால் அருந்துவதால் அடைந்த மிக்க புனிற்று நிலை தீரும் பொருட்டு களிப்பு மிகுந்த வெண்மையற்ற கரிய களிற்று யானை வளைந்த தினைக் கொத்துக்களைக் கவர்வதால் (வால் – வெண்மை, வாலா – வெண்மையற்ற), கானவன் எறிந்த கடுஞ்செலல் ஞெகிழி வேய் பயில் அடுக்கம் சுடர மின்னி நிலை கிளர் மின்னின் தோன்றும் நாடன் – கானவன் எறிந்த விரைந்துச் செல்லும் கொள்ளிக்கட்டை மூங்கில்கள் மிகுந்து இருந்த மலைப்பக்கம் எல்லாம் ஒளிருமாறு மின்னி வானில் நிலையில்லாத மின்னலைப் போல் தோன்றும் நாடன் (செலல் – செல்லல் என்பதன் இடைக்குறை, மின்னின் – இன் ஒப்புப் பொருளது, ஐந்தாம் வேற்றுமை உருபு), இரவின் வரூஉம் இடும்பை நாம் உய – இரவில் வரும் துன்பத்திலிருந்து நாம் விடுபட (வரூஉம் – செய்யுளிசை அளபெடை, உய – உய்ய என்பதன் இடைக்குறை), வரைய வந்த வாய்மைக்கு ஏற்ப நமர் கொடை நேர்ந்தனர் ஆயின் – மணம் புரிதற்கு வந்த உண்மைக்கு ஏற்ப நம் உறவினர்கள் உன்னை அவர்க்குக் கொடுக்க ஒப்புதல் அளிப்பார்கள் போலும், அவருடன் நேர்வர் கொல் – அவருடன் உடன்படுவார்களா (கொல் – ஐயப்பொருட்டு வந்தது), வாழி – நீடு வாழ்வாயாக, அசைநிலை, தோழி – தோழி, நம் காதலர் புதுவர் ஆகிய வரவும் – நம் தலைவர் புதியவர் போல் வரவும், நின் வதுவை நாண் ஒடுக்கமும் காணுங்காலே – உன் திருமணத்திற்காக நீ நாணி ஒடுங்கி இருப்பதைக் காணும்பொழுது (காணுங்காலே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 394, ஒளவையார், முல்லைத் திணை – தோழி சொன்னது, அல்லது வழியில் தலைவனைக் கண்டோர் சொன்னது
மரம் தலைமணந்த நனந்தலைக் கானத்து
அலந்தலை ஞெமையத்து இருந்த குடிஞை,
பொன் செய் கொல்லனின் இனிய தெளிர்ப்பப்,
பெய்ம் மணி ஆர்க்கும் இழை கிளர் நெடுந்தேர்,
வன் பரல் முரம்பின் நேமி அதிரச்,  5
சென்றிசின், வாழியோ, பனிக் கடு நாளே,
இடைச் சுரத்து எழிலி உரைத்தென, மார்பின்
குறும் பொறிக் கொண்ட சாந்தமொடு
நறுந்தண்ணியன் கொல்? நோகோ யானே.

பாடல் பின்னணி:  வினை முற்றி மீளும் தலைவனிடம் கண்டார் ஒருவர் கூறியது.  தோழி உவந்து கூறியதுமாம்.

பொருளுரைமரங்கள் மிக நெருங்கிப் பொருந்திய இடம் அகன்ற காட்டில், வாடிய ஞெமை மரத்தின் மேல் இருந்த பேராந்தை, பொன் வேலை செய்யும் கொல்லன் பொன்னைத் தட்டுவது போல் இனிதாக ஒலிக்க, பூட்டிய மணிகள் ஒலிக்கும் அணிகளால் புனையப்பட்ட நெடிய தேர் மேட்டு நிலத்தில் அதிர முன்பனி நாளில் சென்றான். சுரத்திடையே முகில்கள் எழுந்து ஒலித்ததால், மார்பில் சிறிய புள்ளிகள் அமைந்த சந்தனத்துடன் நறிய குளிர்ச்சியுடையவனாக வருகின்றான்.  இவன் வாழ்வானாக!  இதற்கு நான் வருந்துவேனா?  வருந்த மாட்டேன்.

குறிப்பு:  வாழியோ (6) – ஒளவை துரைசாமி உரை – அவன் செல்வதற்கு முன்னர்க் கழிந்த பனி மிக்க நாட்கள் வாழ்க, பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – இவன் வாழ்வானாக.  உரைத்தென (9) – ஒளவை துரைசாமி உரை – வரவு தெரிவித்தன, பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – உலவின. நோகோ யானே (9) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – இதற்கு நோவேனா? நோவேன் அல்லேன், ஒளவை துரைசாமி உரை – ஒருதலையாகத் தெளிய மாட்டாமையின் யான் மனம் நோவாநின்றேன்.  சின் – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம், சொல்லதிகாரம்.  இடையியல் 26, சின் என்பது இசின் என்பதன் முதற்குறை – ச. பாலசுந்தரம் உரை) , அவற்றுள், இகுமும் சின்னும் ஏனை இடத்தொடும் தகு நிலை உடைய என்மனார் புலவர் (தொல்காப்பியம், இடையியல் 27).  நனந்தலை – அகன்ற இடம், நனம் – நனவே களனும் அகலமும் செய்யும் (தொல்காப்பியம், உரியியல்  80).

சொற்பொருள்:  மரம் தலைமணந்த நனந்தலைக் கானத்து அலந்தலை ஞெமையத்து இருந்த குடிஞை – மரங்கள் மிக நெருங்கிப் பொருந்திய இடம் அகன்ற காட்டில் வாடிய ஞெமை மரத்தின் மேல் இருந்த பேராந்தை (அலந்த தலை அலந்தலை என வந்தது, அலத்தல் – துன்புறுதல், அலந்த என்பது வாடிய ஞெமை மரத்திற்கு அடைமொழி ஆயிற்று), பொன் செய் கொல்லனின் இனிய தெளிர்ப்பப் பெய்ம் மணி ஆர்க்கும் இழை கிளர் நெடுந்தேர் வன் பரல் முரம்பின் நேமி அதிரச் சென்றிசின் – பொன் வேலை செய்யும் கொல்லன் பொன்னைத் தட்டுவது போல் இனிதாக ஒலிக்க பூட்டிய மணிகள் ஒலிக்கும் அணிகளால் புனையப்பட்ட நெடிய தேர் மேட்டு நிலத்தில் அதிரச் சென்றான் (சென்றிசின் – படர்க்கை வினைமுற்றுத் திரிசொல்), வாழியோ – நீடு வாழ்க (ஓகாரம் அசைநிலை), பனிக் கடு நாளே – பனி மிகுந்த நாட்கள், இடைச் சுரத்து எழிலி உரைத்தென மார்பின் குறும் பொறிக் கொண்ட சாந்தமொடு நறுந்தண்ணியன் கொல் – சுரத்திடையே முகில்கள் எழுந்து ஒலித்ததால் மார்பில் சிறிய புள்ளிகள் அமைந்த சந்தனத்துடன் நறிய குளிர்ச்சியுடையவனாக வருகின்றான் (கொல் – அசைநிலை), நோகோ யானே – நான் இதற்கு வருந்துவேனா, மனம் வருந்துகிறேன் (நோகு – செய்கென்னும் தன்மை வினை, ஓ அசைநிலை, யானே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 395, அம்மூவனார், நெய்தல் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
யாரை எலுவ? யாரே நீ எமக்கு,
யாரையும் அல்லை, நொதுமலாளனை,
அனைத்தால் கொண்க எம் இடையே நினைப்பின்,
கடும் பகட்டு யானை நெடுந்தேர்க் குட்டுவன்
வேந்து அடு களத்து முரசு அதிர்ந்தன்ன,  5
ஓங்கல் புணரி பாய்ந்து ஆடு மகளிர்
அணிந்திடு பல் பூ மரீஇ, ஆர்ந்த
ஆ புலம் புகுதரு பேர் இசை மாலைக்
கடல் கெழு மரந்தை அன்ன, எம்
வேட்டனை அல்லையால், நலம் தந்து சென்மே.  10

பாடல் பின்னணி:  வரைவு கடாயது.

பொருளுரைநண்பனே!  யாரை நீ நட்பாகக் கொள்கின்றாய்?  நீ எமக்கு யார்?  நீ எமக்கு நண்பரும் இல்லை.  நீ அயலான் ஆயினை.  எம்மிடத்தில் நீ நடந்து கொள்ளும் முறையைக் கருதினால், அயலான் ஆகிய தன்மையை உடையது தலைவனே! கடிய பெரிய யானைகளையும் நெடிய தேர்களையும் உடைய சேர மன்னன் பகை வேந்தரை வென்ற போர்க்களத்தில் முரசுகள் ஒலித்தாற்போல் ஒலிக்கும், உயர்ந்த அலைகளையுடைய கடலில் பாய்ந்து நீராடும் மகளிர் அணிந்து விட்டு எறிந்த பல மலர்களைப் பொருந்தி உண்ட பசுக்கள், தாங்கள் வாழும் இடத்திற்குப் போகின்ற, பெரிய ஒலிகளையுடைய மாலைப் பொழுதை உடைய கடற்கரை அருகில் உள்ள மரந்தை என்னும் ஊரைப் போன்ற எம் நலத்தை, எம் மேல் விருப்பம் இல்லாததால், தந்துவிட்டு நீ செல்வாயாக!

குறிப்பு:  உள்ளுறை – கு. வெ. பாலசுப்பிரமணியன் உரை – மகளிர் சூடி வீசிய மலரைப் பசு தின்னும் என்றது, தலைவன் களவில் கூடிப் பின்னர்க் கைவிட்ட தலைவியை அயலவர் வந்து மணம் புரிய விரும்பி நின்றனர் என்று உணர்த்தி நிற்கும்.  யாரை – ஒளவை துரைசாமி உரை – முன்னிலை குறிப்பு வினை, இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை (அகநானூறு 46 – ம் பாடலின் உரையில் கூறியது) ஐகாரம் முன்னிலைக்கண் வந்தது, சாரியையுமாம்.  ஓங்கல் புணரி (6) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – அலை உயர்ந்து வருகின்ற கடல், ஒளவை துரைசாமி உரை – மலைபோன்ற அலைகள்.  வரலாறு:  குட்டுவன், மரந்தை.  எம் ….. நலம் தந்து சென்மே – தலைவியும் தோழியும் மிக நெருங்கிய நட்பு உடையவர்கள் என்பதாலும், தலைவியின் களவு ஒழுக்கத்திற்குத் தோழி உதவுவதாலும், தலைவனைத் தோழி நன்கு அறிந்தவள் என்பதாலும், இவ்வாறு பன்மையாற் கூறினாள் தோழி.  எம் நலத்தைத் தா என்றல்:  குறுந்தொகை 236தந்தனை சென்மோ, தண் கடல் சேர்ப்ப, நீ உண்ட என் நலனே. குறுந்தொகை 238தொண்டி அன்ன என் நலம் தந்து, கொண்டனை சென்மோ மகிழ்ந நின் சூளே, குறுந்தொகை 349 – தண்ணந்துறைவன் தொடுத்து, நம் நலம் கொள்வாம் என்றி தோழி, நற்றிணை 395 – எம் வேட்டனை அல்லையால், நலம் தந்து சென்மே, அகநானூறு 376 – மரந்தை அன்ன என் நலம் தந்து சென்மே, அகநானூறு 396 – வஞ்சியன்ன என் நலம் தந்து சென்மே, ஐங்குறுநூறு 159 – தந்தனை சென்மோ கொண்ட இவள் நலனே.  தேனுடைய மலை (நற்றிணையில்):  104 – தேம் கமழ் சிலம்பின், 147 – தேம்படு சாரல், 185 – தேனுடை நெடு வரை, 188 – குன்றத்துத் தேம் முதிர், 243 – தேம்படு சிலம்பில், 259 – தேம் கமழ் சாரல், 389 – தேம்படு நெடு வரை, 395 – தேன் தூங்கு உயர்வரை.  தேம்படு சிலம்பில், தேம்படு நெடுவரை – ஆகிவற்றிற்கு தேன் உண்டாகின்ற பக்கமாலையிலே, தேன் மணம் மிக்க நெடிய மலை என்றே விளக்கியுள்ளார் பின்னத்தூர் நாராயணசாமி ஐயர்.

சொற்பொருள்:  யாரை – யாரை நீ நட்பாகக் கொள்கின்றாய், எலுவ – நண்பனே, யாரே – நீ எமக்கு யார், நீ எமக்கு யாரையும் அல்லை – நீ எமக்கு நண்பரும் இல்லை, நொதுமலாளனை – நீ அயலான் ஆயினை (நொதுமலாளனை – ஐ சாரியை), அனைத்து ஆல் கொண்க – அத்தன்மையுடையது தலைவனே (ஆல் – அசைநிலை), எம் இடையே நினைப்பின் – எம்மிடத்தில் நீ நடந்து கொள்ளும் முறையைக் கருதினால், கடும் பகட்டு யானை நெடுந்தேர்க் குட்டுவன் வேந்து அடு களத்து முரசு அதிர்ந்தன்ன ஓங்கல் புணரி பாய்ந்து ஆடு மகளிர் அணிந்து இடு பல் பூ மரீஇ ஆர்ந்த ஆ புலம் புகுதரு பேர் இசை மாலைக் கடல் கெழு மரந்தை அன்ன எம் வேட்டனை அல்லையால் நலம் தந்து சென்மே – கடிய பெரிய யானைகளையும் நெடிய தேர்களையும் உடைய சேர மன்னன் பகை வேந்தரை வென்ற போர்க்களத்தில் முரசுகள் ஒலித்தாற்போல் ஒலிக்கும் உயர்ந்த அலைகளையுடைய கடலில் பாய்ந்து நீராடும் மகளிர் அணிந்து விட்டு எறிந்த பல மலர்களைப் பொருந்தி உண்ட பசுக்கள் தாங்கள் வாழும் இடத்திற்குப் போகின்ற பெரிய ஒலிகளையுடைய மாலைப் பொழுதை உடைய கடற்கரை அருகில் உள்ள மரந்தை என்னும் ஊரைப் போன்ற எம் நலத்தை எம் மேல் விருப்பம் இல்லாததால் தந்துவிட்டு நீ செல்வாயாக (மரீஇ – செய்யுளிசை அளபெடை, சென்மே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 396, பாடியவர் பெயர் கிடைக்கவில்லை, குறிஞ்சித் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
பெய்து போகு எழிலி வைகு மலை சேரத்
தேன் தூங்கு உயர்வரை அருவி ஆர்ப்ப,
வேங்கை தந்த வெற்பு அணி நன்னாள்,
பொன்னின் அன்ன பூஞ்சினை துழைஇக்,
கமழ் தாது ஆடிய கவின் பெறு தோகை  5
பாசறை மீமிசைக் கணம் கொள்பு, ஞாயிற்று
உறு கதிர் இள வெயில் உண்ணும் நாடன்!
நின் மார்பு அணங்கிய செல்லல் அரு நோய்
யார்க்கு நொந்து உரைக்கோ யானே, பல் நாள்
காமர் நனி சொல் சொல்லி,  10
ஏமம் என்று அருளாய் நீ மயங்கினையே?

பாடல் பின்னணி:  வரைவு கடாயது.  வரைவு உணர்த்தப்பட்டு அவன் முன்பு இவ்வாறு கூறிய அதன்படி நடக்கவில்லை என்று ஆற்றாளாயச் சொல்லியதுமாம்.  இரவுக்குறி மறுத்ததுமாம்.

பொருளுரைமழைபெய்து நீங்கும் முகில்கள் தாங்கள் தங்கும்  மலையை அடைய, தேனடை தொங்கும் உயர்ந்த மலையிலிருந்து அருவிகள் ஒலிக்க, வேங்கை மரங்கள் மலர்ந்த அழகிய மலையில் நல்ல விடியற்காலையில், அம்மரங்களின் பொன் போன்றுள்ள பூக்களையுடைய கிளைகளை அசைத்ததால், மணம் கமழும் தாது படிந்த அழகான மயில்கள் பசிய கற்பாறையின் மேல் தம் கூட்டத்துடன் கூடி, கதிரவனின் மிக்க கதிரையுடைய இள வெயிலைத் துய்க்கும் நாடனே!  உன்னுடைய மார்பு வருத்தியதால் ஏற்பட்ட, தாங்குதற்கு அரிய நோயை யாரிடத்து நொந்து நான் உரைப்பேன்?  பல நாட்கள் விருப்பம் தரும் நல்ல சொற்களைக் கூறி, அது தலைவிக்குக் காப்புடையது என்று நீ அருள் புரியாது மயக்கம் உற்றனை.

குறிப்பு:  உள்ளுறை – கு. வெ. பாலசுப்பிரமணியன் உரை– மயில் வேங்கை மலரின் தாதினை அளாவி, தன் இனத்துடன் ஞாயிற்றின் இளவெயிலைத் துய்க்கும் என்றது, தலைவனும் தலைவியை மணந்து இன்பம் நுகர்ந்து தன் சுற்றத்துடன் வாழ வேண்டும் என்பதனை உள்ளுறுத்தி நின்று வரைவு கடாயதாம்.  செல்லல் – செல்லல் இன்னல் இன்னாமையே (தொல்காப்பியம், உரியியல் 6).  நனி – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3).

சொற்பொருள்:  பெய்து போகு எழிலி வைகு மலை சேர – மழைபெய்து நீங்கும் முகில்கள் தாங்கள் தங்கும்  மலையை  அடைய, தேன் தூங்கு உயர்வரை அருவி ஆர்ப்ப – தேனடை தொங்கும் உயர்ந்த மலையிலிருந்து அருவிகள் ஒலிக்க, வேங்கை தந்த வெற்பு அணி நன்னாள் பொன்னின் அன்ன பூஞ்சினை துழைஇக் கமழ் தாது ஆடிய கவின் பெறு தோகை பாசறை மீமிசைக் கணம் கொள்பு – வேங்கை மரங்கள் மலர்ந்த அழகிய மலையில் நல்ல விடியற்காலையில் பொன் போன்றுள்ள பூக்களையுடைய கிளைகளை அசைத்ததால் மணம் கமழும் தாது படிந்த அழகான மயில்கள் பசிய கற்பாறையின் மேல் தம் கூட்டத்துடன் கூடி (பொன்னின் – இன் சாரியை, துழைஇ அளபெடை, மீமிசை – ஒருபொருட் பன்மொழி), ஞாயிற்று உறு கதிர் இள வெயில் உண்ணும் நாடன் – கதிரவனின் மிக்க கதிரையுடைய இள வெயிலைத் துய்க்கும் நாடனே (உறு – மிக்க), நின் மார்பு அணங்கிய செல்லல் அரு நோய் யார்க்கு நொந்து உரைக்கோ யானே – உன்னுடைய மார்பு வருத்தியதால் ஏற்பட்ட தாங்குதற்கு அரிய நோயை யாரிடத்து நொந்து நான் உரைப்பேன் (உரைக்கோ – உரைக்கு தன்மை வினைமுற்று, ஓ அசைநிலை, யானே – ஏகாரம் அசைநிலை), பல் நாள் காமர் நனி சொல் சொல்லி ஏமம் என்று அருளாய் நீ மயங்கினையே – பல நாட்கள் விருப்பம் தரும் நல்ல சொற்களைக் கூறி அது தலைவிக்குக் காப்புடையது என்று நீ அருள் புரியாது மயக்கம் உற்றனை (மயங்கினையே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 397, அம்மூவனார், பாலைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
தோளும் அழியும் நாளும் சென்றென,
நீள் இடை அத்தம் நோக்கி வாள் அற்றுக்
கண்ணும் காட்சி தௌவின, என் நீத்து
அறிவும் மயங்கி பிறிது ஆகின்றே,
நோயும் பெருகும் மாலையும் வந்தன்று,  5
யாங்கு ஆகுவென் கொல் யானே? ஈங்கோ
சாதல் அஞ்சேன், அஞ்சுவல் சாவின்
பிறப்புப் பிறிது ஆகுவது ஆயின்
மறக்குவேன் கொல் என் காதலன் எனவே

பாடல் பின்னணி:  குறித்த பருவத்தில் தலைவன் வரவில்லை என்று வருந்திய தலைவியைத் தோழி ஆற்றியிருக்குமாறு கூறுகின்றாள்.  அவளிடம் தலைவி சொல்லியது.

பொருளுரைஎன் தோள்களும் மெலிந்து அழகு இழந்தன.  தலைவன் திரும்பி வருவேன் எனக் குறித்த பருவமும் சென்று விட்டது.  நீண்ட சுரத்து வழியைப் பார்த்து, ஒளி இல்லாது என் கண்கள் தங்கள் பொலிவை இழந்தன.  என்னுடைய அறிவும் என்னைவிட்டு நீங்கி மயங்கி (குழப்பம் அடைந்து) ஆனது வேறாகித் திரிந்து நின்றது.  என்னுடைய காதல் நோய் பெருகியது. என்னைத் துன்புறுத்தும் மாலை நேரமும் வந்தது.  என்ன ஆவேன் நான்? இங்கு நான் சாவிற்கு அஞ்சவில்லை, நான் அஞ்சுவது யாது எனின், சாவிற்குப் பின் என்னுடைய மறுபிறப்பு வேறாகும்பொழுது என் தலைவனை நான் மறந்து விடுவேனோ என்பது தான்.

குறிப்பு:  ஒளவை துரைசாமி உரை – ‘இம்மை மாறி மறுமை ஆயினும் நீயாகியர் எம் கணவனை, யானாகியர் நின் நெஞ்சு நேர்பவளே’ (குறுந்தொகை 49) இவ்வாசிரியரே கூறுதல் காண்க.  ஆதலால் அவர் பிரிவை ஆற்றியிருப்பேன்.  நீ கவலற்க என்பது குறிப்பெச்சம்.  தோழி கேட்டு ஆற்றாமை தீர்வாளாவது பயன் என்க.

சொற்பொருள்:  தோளும் அழியும் – என் தோள்களும் மெலிந்து அழகு இழந்தன, நாளும் சென்றென – தலைவன் திரும்பி வருவேன் எனக் குறித்த பருவமும் சென்றது, நீள் இடை அத்தம் நோக்கி – நீண்ட சுரத்து வழியைப் பார்த்து, வாள் அற்றுக் கண்ணும் காட்சி தௌவின – ஒளி இல்லாது என் கண்கள் பொலிவு இழந்தன, என் நீத்து அறிவும் மயங்கி பிறிது ஆகின்றே – என்னுடைய அறிவும் என்னைவிட்டு நீங்கி மயங்கி (குழப்பம் அடைந்து) ஆனது வேறாகித் திரிந்து நின்றது, நோயும் பெருகும் – என்னுடைய காதல் நோய் பெருகியது, மாலையும் வந்தன்று – மாலை நேரமும் வந்தது, யாங்கு ஆகுவென் கொல் யானே – என்ன ஆவேன் நான், ஈங்கோ சாதல் அஞ்சேன் – இங்கு நான் சாவிற்கு அஞ்சவில்லை (ஈங்கோ – ஓகாரம் அசைநிலை), அஞ்சுவல் – நான் அஞ்சுவது யாதெனின் (அஞ்சுவல் – தன்மையொருமை வினைமுற்று), சாவின் பிறப்புப் பிறிது ஆகுவது ஆயின் மறக்குவேன் கொல் என் காதலன் எனவே – சாவிற்குப் பின் என்னுடைய மறுபிறப்பு வேறாகும்பொழுது என் தலைவனை நான் மறந்து விடுவேனோ என்று (கொல் – ஐயம் என்ற பொருளில் வந்த இடைச்சொல், எனவே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 398, உலோச்சனார், நெய்தல் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
உருகெழு தெய்வமும் கரந்து உறையின்றே,
விரி கதிர் ஞாயிறும் குடக்கு வாங்கும்மே,
நீர் அலைக் கலைஇய கூழை வடியாச்
சாஅய் அவ் வயிறு அலைப்ப உடன் இயைந்து
ஓரை மகளிரும் ஊர் எய்தினரே,  5
பல் மலர் நறும் பொழில் பழிச்சி “யாம் முன்
சென்மோ சேயிழை?” என்றனம், அதன் எதிர்
சொல்லாள் மெல்லியல் சிலவே, நல்லகத்து
யாணர் இள முலை நனைய
மாண் எழில் மலர்க் கண் தெண் பனி கொளவே.  10

பாடல் பின்னணி:  பகற்குறி வந்து மீளும் தலைவனிடம் தோழி கூறியது.  வரைவு வேண்டியது.

பொருளுரைகண்டார்க்கு அச்சம் தரும் கடவுள்களும் மறைந்து இராது இயங்கும். விரிந்த கதிர்களையுடைய கதிரவனும் மேற்குத் திசையில் சென்று மறையும்.  நீரை அலைத்ததால் கலைந்த கூந்தலைப் பிழிந்து நீரை வடித்துத் தளர்ந்து, அழகிய வயிற்றை அறைந்து, உடன் சேர்ந்து ஓரை விளையாடும் மகளிரும் ஊரை அடைந்தனர்.  பல மலர்களையுடைய மணம் வீசும் சோலையில், அவளைப் பாராட்டி “யாம் முன்னே செல்லலாம், செவ்விய அணிகலன்களை அணிந்தவளே”‘ எனக் கூறினேம்.  அதற்கு மறுமொழியாகச் சில சொற்களைக் கூறவில்லை மெல்லிய தன்மையுடைய அவள்.  அழகிய மார்பின்கண் உள்ள வளமான இளமுலை நனையும்படி, மாட்சிமையுடைய மலரை ஒத்த அவளுடைய கண்களிலிருந்து தெளிந்த கண்ணீர் வடிந்தது.  நீயே அவளை ஆற்றுவித்துச் செல்வாயாக!

குறிப்பு:  வயிற்றில் அடித்தல் – நற்றிணை 179 – அவ் வயிறு அலைத்த என் செய் வினைக் குறுமகள், நற்றிணை 379 – அவ் வயிறு அலைத்தலின், நற்றிணை 398 – அவ் வயிறு அலைப்ப உடன் இயைந்து ஓரை மகளிரும், அகநானூறு 106 – பாணன் எறியும் தண்ணுமை கண்ணின் அலைஇயர் தன் வயிறே.  ஓரை விளையாட்டு – நற்றிணை 68, 143, 155, 398.  யாணர் – புதிதுபடற் பொருட்டே யாணர்க் கிளவி (தொல்காப்பியம், உரியியல் 83).  வடியா – வடித்து என்பது பொருள்.  செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம்.  எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது.  பழிச்சும் – பரவும் பழிச்சும் வழுத்தின் பொருள (தொல்காப்பியம், உரியியல் 86).

சொற்பொருள்:  உருகெழு தெய்வமும் கரந்து உறையின்றே – கண்டார்க்கு அச்சம் தரும் கடவுள்களும் மறைந்து இராது இயங்கும், விரி கதிர் ஞாயிறும் குடக்கு வாங்கும்மே – விரிந்த கதிர்களையுடைய கதிரவனும் மேற்குத் திசையில் சென்று மறையும், நீர் அலைக் கலைஇய கூழை வடியாச் சாஅய் அவ் வயிறு அலைப்ப உடன் இயைந்து ஓரை மகளிரும் ஊர் எய்தினரே – நீரை அலைத்ததால் கலைந்த கூந்தலைப் பிழிந்து நீரை வடித்துத் தளர்ந்து அழகிய வயிற்றை அறைந்து உடன் சேர்ந்து ஓரை விளையாடும் மகளிரும் ஊரை அடைந்தனர் (கலைஇய – அளபெடை, சாஅய் – அளபெடை), பல் மலர் நறும் பொழில் பழிச்சி “யாம் முன் சென்மோ சேயிழை” என்றனம் – பல மலர்களையுடைய மணம் வீசும் சோலையில் அவளைப் பாராட்டி ‘யாம் முன்னே செல்லலாம் செவ்விய அணிகலன்களை அணிந்தவளே ‘ எனக் கூறினேம் (சேயிழை – அன்மொழித்தொகை விளியேற்று நின்றது), அதன் எதிர் சொல்லாள் மெல்லியல் சிலவே – அதற்கு மறுமொழியாகச் சில சொற்களைக் கூறவில்லை மெல்லிய தன்மையுடைய அவள், நல்லகத்து யாணர் இள முலை நனைய மாண் எழில் மலர்க் கண் தெண் பனி கொளவே – அழகிய மார்பின்கண் உள்ள வளமான இளமுலை நனையும்படி மாட்சிமையுடைய மலரை ஒத்த கண்களில் தெளிந்த கண்ணீர் கொள்ள (கொளவே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 399, தொல்கபிலர், குறிஞ்சித் திணைதோழி தலைவியிடம் சொன்னது, அல்லது தலைவி தோழியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி
அருவி ஆர்க்கும் பெருவரை அடுக்கத்துக்
குருதி ஒப்பின் கமழ் பூங்காந்தள்
வரி அணி சிறகின் வண்டு உண மலரும்
வாழை அம் சிலம்பில் கேழல் கெண்டிய
நிலவரை நிவந்த பல உறு திரு மணி  5
ஒளி திகழ் விளக்கத்து ஈன்ற மடப் பிடி,
களிறு புறங்காப்ப கன்றொடு வதியும்
மா மலை நாடன் நயந்தனன் வரூஉம்
பெருமை உடையள் என்பது
தருமோ தோழி, நின் திரு நுதல் கவினே?  10

பாடல் பின்னணி:  தலைவன் வரையாது களவில் வந்தொழுகுகின்றான் என வருந்திய தலைவியிடம் தோழி கூறியது.  தலைவி தோழியிடம் கூறியதுமாம்.

பொருளுரைதோழி!  அருவிகள் ஒலிக்கும் பெரிய மலைப்பக்கத்தில் குருதி போல் சிவந்த நிறமுடையனவாய் மணம் வீசும் காந்தள் மலர்கள், வரிகளையுடைய அழகிய சிறகுடைய வண்டுகள் உண்ணுமாறு மலரும், வாழை மரங்கள் உடைய மலையில், பன்றி தன் கோட்டினால் கிண்டிய நிலத்தில் தோன்றி மேலே கிடக்கும் மிகப் பல அழகிய மணிகளின் ஒளி வீசுகின்ற விளக்கத்தில், கன்றினை பெற்ற இளைய பெண் யானையை அதன் களிற்று யானை அருகில் நின்று பாதுகாத்துத் தன் கன்றுடன் வாழும், பெரிய மலையின் தலைவன், விருப்பம் உடையவனாக வருகின்றான் என்ற பெருமையை உடையவள், என்பதை வெளிப்படுத்தும் அன்றோ, உன் சிறப்பான நெற்றியின் அழகு?

குறிப்பு:  இறைச்சி – கு. வெ. பாலசுப்பிரமணியன் உரை – வண்டு வந்து உண்ணுமாறு காந்தள் மலரும் என்றது, தலைவன் தலைவியின் நலன் நுகர வருங்காலத்துத் தலைவியும் வெறுத்திடாது மகிழ்ந்திருத்தல் வேண்டிக் குறிப்பித்ததாம்.  உள்ளுறை – ஒளவை துரைசாமி உரை – மணியின் விளக்கத்தில் கன்று ஈன்ற பிடி களிறு புறம் காப்ப அதனோடு வதியும் என்றது, தலைவற்கு மகட்கொடை நேர்தற்குத் தமர் நேர்ந்த உள்ளத்தராக இருப்பினும், தலைவியின் வேறுபாடு பயந்த அலர்க்கு அஞ்சி தன்னையர் புறங்காப்ப தாய் தலைவியைப் பிரியாது உடனுறைவது என்பது.  உறு – உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3).  கன்று – யானையும் குதிரையும் கழுதையும் கடமையும் மானொடு ஐந்தும் கன்று எனற்கு உரிய (தொல்காப்பியம், மரபியல் 15).  பிடி – பிடி என் பெண் பெயர் யானை மேற்றே (தொல்காப்பியம், மரபியல் 52).

சொற்பொருள்:  அருவி ஆர்க்கும் பெருவரை அடுக்கத்துக் குருதி ஒப்பின் கமழ் பூங்காந்தள் வரி அணி சிறகின் வண்டு உண மலரும் வாழை அம் சிலம்பில் – அருவிகள் ஒலிக்கும் பெரிய மலைப்பக்கத்தில் குருதி போல் சிவந்த நிறமுடையனவாய் மணம் வீசும் காந்தள் மலர்கள் வரிகளையுடைய அழகிய சிறகுடைய வண்டுகள் உண்ணுமாறு மலரும் வாழை மரங்கள் உடைய மலையில் (உண உண்ண என்பதன் விகாரம்), கேழல் கெண்டிய நிலவரை நிவந்த பல உறு திரு மணி ஒளி திகழ் விளக்கத்து ஈன்ற மடப் பிடி களிறு புறங்காப்ப கன்றொடு வதியும் – பன்றி தன் கோட்டினால் கிண்டிய நிலத்தில் தோன்றி மேலே கிடக்கும் மிகப் பல அழகிய மணிகளின் ஒளி வீசுகின்ற விளக்கத்தில் கன்றினை பெற்ற இளைய பெண் யானையை அதன் களிற்று யானை அருகில் நின்று பாதுகாத்துத் தன் கன்றுடன் வாழும் (உறு – மிக்க), மா மலை நாடன் – பெரிய மலையின் தலைவன், நயந்தனன் வரூஉம் பெருமை உடையள் – விருப்பம் உடையவனாக வருகின்றான் என்ற பெருமையை உடையவள் (வரூஉம் – செய்யுளிசை அளபெடை), என்பது தருமோ – என்று தருமோ, தோழி – தோழி, நின் திரு நுதல் கவினே – உன் சிறப்பான நெற்றியின் அழகு (கவினே – ஏகாரம் அசைநிலை)

நற்றிணை 400, ஆலங்குடி வங்கனார், மருதத் திணை – பரத்தை தலைவனிடம் சொன்னது
வாழை மென் தோடு வார்புறுபு ஊக்கும்
நெல் விளை கழனி நேர் கண் செறுவின்,
அரிவனர் இட்ட சூட்டு அயல் பெரிய
இருஞ்சுவல் வாளை பிறழும் ஊர!
நினின்று அமைகுவென் ஆயின், இவண் நின்று,  5
இன்னா நோக்கமொடு எவன் பிழைப்பு உண்டோ?
மறங்கெழு சோழர் உறந்தை அவையத்து,
அறங்கெட அறியாதாங்கு, சிறந்த
கேண்மையொடு அளைஇ நீயே
கெடு அறியாய் என் நெஞ்சத்தானே.  10

பாடல் பின்னணி:  பரத்தை தலைவனைப் புகழ்ந்தது.

பொருளுரைவாழையின் மெல்லிய தோடுகள் நீண்டு தொங்கி இருப்பதைத் தீண்டி உயர்த்தும் நெற்கதிர்கள் விளையும் கழனியில், கண்ணுக்கு இனிய சேற்றில், தினையை அறுப்பவர்கள் நெற்கதிர்களின் குவியல் அருகில் பெரிய கரிய கழுத்தையுடைய வாளை மீன்கள் துள்ளும் ஊரனே!  உன்னை நினையாமல் வாழ்வேன் என்றால், இங்கிருந்து துன்ப நோக்கத்துடன் வாழ்வதனால் என்ன பிழைப்பு உண்டாகும்?  மறம் மிக்க சோழரின் உறந்தை அவையில் அறம் சிதையாமல் இருப்பது போல், சிறந்த நட்புடன் என்னுடன் பொருந்தி என் நெஞ்சத்திலிருந்து நீங்குதலை நீ அறியாய்.

குறிப்பு:  உள்ளுறை – கு. வெ. பாலசுப்பிரமணியன் உரை – வாழையின் பூவை அசைக்கும் நெற்கதிரை மள்ளர்கள் அரிந்திட்ட அரிச்சூட்டருகே வாளை பிறழும் என்றது, தலைவியின் நெஞ்சை வருத்தும் காதற்பரத்தையின் செயல்கள் வாயில்கள் அடக்கவும் அவள் நெஞ்சிடத்துத் தலைவன் நீங்காதே இருக்கின்றான் என்பதாம்.  வரலாறு:  சோழர், உறந்தை.  வார்தல் போகல் ஒழுகல் மூன்றும் நேர்பும் நெடுமையும் செய்யும் பொருள (தொல்காப்பியம், உரியியல் 21).

சொற்பொருள்:  வாழை மென் தோடு வார்புறுபு ஊக்கும் நெல் விளை கழனி நேர் கண் செறுவின் அரிவனர் இட்ட சூட்டு அயல் பெரிய இருஞ்சுவல் வாளை பிறழும் ஊர – வாழையின் மெல்லிய தோடுகள் நீண்டு தொங்கி இருப்பதைத் தீண்டி உயர்த்தும் நெற்கதிர்கள் விளையும் கழனியில் கண்ணுக்கு இனிய சேற்றில் தினையை அறுப்பவர்கள் நெற்கதிர்களின் குவியல் அருகில் பெரிய கரிய கழுத்தையுடைய வாளை மீன்கள் துள்ளும் ஊரனே (ஊர – அண்மை விளி), நின் இன்று அமைகுவென் ஆயின் – உன்னை நினையாமல் வாழ்வேன் என்றால், இவண் நின்று இன்னா நோக்கமொடு எவன் பிழைப்பு உண்டோ – இங்கிருந்து துன்ப நோக்கத்துடன் வாழ்வதனால் என்ன பிழைப்பு உண்டாகும், மறங்கெழு சோழர் உறந்தை அவையத்து அறங்கெட அறியாதாங்கு சிறந்த கேண்மையொடு அளைஇ நீயே கெடு அறியாய் என் நெஞ்சத்தானே – மறம் மிக்க சோழரின் உறந்தை அவையில் அறம் சிதையாமல் இருப்பது போல் சிறந்த நட்புடன் என்னுடன் பொருந்தி என் நெஞ்சத்திலிருந்து நீங்குதலை அறியாய் (அளைஇ – அளாவி, கலந்து, சொல்லிசை அளபெடை, நெஞ்சத்தானே – ஏகாரம் அசைநிலை)